Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 8

“சபை சமாதானக் காலத்தை அனுபவித்தது”

“சபை சமாதானக் காலத்தை அனுபவித்தது”

தீவிரமாகத் துன்புறுத்திய சவுல் தீவிரமாகப் பிரசங்கிக்கிறார்

அப்போஸ்தலர் 9:1-43-ன் அடிப்படையில்

1, 2. தமஸ்குவில் சவுல் என்ன செய்யவிருந்தார்?

 கடுகடுப்பான முகத்துடன்... பகைமை நிறைந்த பார்வையுடன்... கொடூர எண்ணத்துடன்... தமஸ்குவை நோக்கி நடைபோடுகிறார்கள் சிலர்—இயேசுவின் சீஷர்களை வீடுகளிலிருந்து தரதரவென்று இழுத்து, கேவலப்படுத்தி, அவர்களுடைய கைகளைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவந்து நியாயசங்கம் முன்பு நிறுத்துவதற்காக.

2 இந்தக் கும்பலின் தலைவர் சவுல், ஏற்கெனவே இரத்தக்கறை படிந்தவர். a சமீபத்தில், இயேசுவின் பக்தியுள்ள சீஷரான ஸ்தேவானை சக தீவிரவாதிகள் கல்லெறிந்து கொன்றபோது இவர் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். (அப். 7:57–8:1) எருசலேமிலிருந்த இயேசுவின் சீஷர்களைத் துன்புறுத்தியதோடு திருப்தியாகாமல் துன்புறுத்தல் என்ற தீப்பந்தத்தை எல்லா இடங்களுக்கும் எடுத்துக்கொண்டு போய் தீ வைக்கிறார். ஆபத்தானதென கருதப்பட்ட “மார்க்கத்தை” சேர்ந்த அனைவரையும் அடியோடு அழிக்க ஆக்ரோஷமாக அலைகிறார்.—அப். 9:1, 2; “ தமஸ்குவில் சவுலின் அதிகாரம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

3, 4. (அ) சவுலுக்கு என்ன நடந்தது? (ஆ) என்ன கேள்விகளை நாம் பார்க்கப்போகிறோம்?

3 திடீரென்று சவுலை ஒரு பயங்கரமான வெளிச்சம் சூழ்ந்துகொள்கிறது. அவரது கூட்டாளிகள் அந்த வெளிச்சத்தைக் கண்டு அதிர்ச்சியில் திடுக்கிட்டுப் போகிறார்கள். பார்வை பறிபோக... நிலைகுலைந்து கீழே விழுகிறார் சவுல். கண் தெரியாத சவுலுக்கு வானத்திலிருந்து ஒரு குரல் கேட்கிறது: “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” அதிர்ச்சியில் உறைந்துபோய், “எஜமானே, நீங்கள் யார்?” என்று சவுல் கேட்கிறார். “நீ துன்புறுத்துகிற இயேசு நான்தான்” என்று சவுலுக்குக் கிடைத்த பதில், உச்சிமுதல் உள்ளங்கால்வரை அவரை உலுக்கி எடுத்திருக்கும்.—அப். 9:3-5; 22:9.

4 சவுலிடம் இயேசு முதன் முதலில் சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? சவுல் மதம் மாறியபோது நடந்த சம்பவங்களை யோசித்துப் பார்ப்பதன் மூலம் நாம் எப்படி நன்மையடையலாம்? சவுல் மதம் மாறிய பிறகு இருந்த அமைதியான காலத்தை சபை பயன்படுத்திக்கொண்ட விதத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

“நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” (அப். 9:1-5)

5, 6. சவுலிடம் இயேசு சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5 தமஸ்குவுக்குப் போகும் சாலையில் சவுலை இடைமறித்து, “நீ ஏன் என் சீஷர்களைத் துன்புறுத்துகிறாய்?” என்று இயேசு கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, “நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்றே கேட்டார். (அப். 9:4) ஆமாம், சீஷர்களுக்கு வரும் சோதனைகளை தனக்கே வரும் சோதனைகள் போல் இயேசு நினைக்கிறார்.—மத். 25:34-40, 45.

6 கிறிஸ்துமீது கொண்ட விசுவாசத்தின் காரணமாக நீங்கள் ஒடுக்கப்பட்டால், தளர்ந்துவிடாதீர்கள். ஏனென்றால், யெகோவாவும் இயேசுவும் உங்கள் நிலைமையைப் புரிந்துகொள்கிறார்கள். (மத். 10:22, 28-31) உங்கள் கஷ்டம் உடனே நீங்கிவிடாமல் இருக்கலாம். ஆனால் இதை மறந்துவிடாதீர்கள்: ஸ்தேவான் கொலைக்கு சவுல் உடந்தையாக இருந்ததை... எருசலேமிலிருந்த உண்மையுள்ள சீஷர்களை வீடுகளிலிருந்து சவுல் தரதரவென்று இழுத்து வந்ததை... இயேசு கவனித்துக்கொண்டிருந்தார். (அப். 8:3) இருந்தாலும், அந்தச் சமயத்தில் குறுக்கிட்டு அவர் எதுவும் செய்யவில்லை. ஆனால், ஸ்தேவானும் மற்ற சீஷர்களும் உண்மையுடன் இருக்க கிறிஸ்துவின் மூலம் யெகோவா பலம் தந்தார்.

7. துன்புறுத்தலைச் சகித்திருக்க நீங்கள் என்ன படிகளை எடுக்க வேண்டும்?

7 உங்களாலும் துன்புறுத்தலைச் சகித்திருக்க முடியும், இந்தப் படிகளை எடுத்தால்: (1) எது வந்தாலும் சரி, உண்மையுடன் நிலைத்திருக்க உறுதியாக இருங்கள். (2) யெகோவாவிடம் உதவி கேளுங்கள். (பிலி. 4:6, 7) (3) பழிவாங்குவதை யெகோவாவின் கையில் விட்டுவிடுங்கள். (ரோ. 12:17-21) (4) சோதனையை நீக்கும்வரை சகித்திருக்க யெகோவா பலம் தருவார் என்பதில் நம்பிக்கையாக இருங்கள்.—பிலி. 4:12, 13.

‘சவுலே, சகோதரனே, . . . எஜமான் என்னை அனுப்பியிருக்கிறார்’ (அப். 9:6-17)

8, 9. தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைப் பற்றி அனனியா எப்படி உணர்ந்தார்?

8 “எஜமானே, நீங்கள் யார்?” என்று சவுல் கேட்டதற்கு இயேசு பதில் சொன்ன பிறகு, “நீ எழுந்து நகரத்துக்குள் போ; நீ என்ன செய்ய வேண்டுமென்று அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார். (அப். 9:6) பார்வையிழந்த சவுல் கைத்தாங்கலாய் தமஸ்குவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு ஒரு வீட்டில் மூன்று நாள் விரதமிருந்து ஜெபித்தார். இதற்கிடையில், அந்த நகரத்தில் இருந்த ஒரு சீஷரிடம், அதாவது ‘யூதர்கள் எல்லாராலும் உயர்வாகப் பேசப்பட்ட’ அனனியாவிடம், சவுலைப் பற்றி இயேசு பேசினார்.—அப். 22:12.

9 அனனியாவின் மனதில் ஓடிய உணர்ச்சி பிழம்புகளைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! சபையின் தலைவரே... உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவே... ஒரு நியமிப்புக்காக அவரைத் தேர்ந்தெடுத்து நேரடியாக அவரிடம் பேசினார். அவருக்குக் கிடைத்தது சாதாரண கௌரவமா, அதேசமயம் சாதாரண வேலையா? சவுலிடம் போய் பேச வேண்டும் என்று இயேசு சொன்னதும், “எஜமானே, இந்த மனுஷன் எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்த எல்லா கொடுமைகளைப் பற்றியும் பல பேரிடமிருந்து கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பெயரில் நம்பிக்கை வைக்கிற எல்லாரையும் கைது செய்ய முதன்மை குருமார்கள் அவனுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள்” என்று அனனியா சொன்னார்.—அப். 9:13, 14.

10. அனனியாவிடம் இயேசு பேசிய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

10 அனனியா அப்படிச் சொன்னதற்காக இயேசு அவரைத் திட்டவில்லை. ஆனால், அவர் என்ன செய்ய வேண்டும், ஏது செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னார். அதுமட்டுமல்ல, இந்தக் கடினமான வேலையை ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தையும் சொல்லி அவரைக் கௌரவப்படுத்தினார். சவுலைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “மற்ற தேசத்து மக்களுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும் என்னுடைய பெயரை அறிவிப்பதற்கு அவனை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். என் பெயருக்காக அவன் எவ்வளவு கஷ்டப்பட வேண்டுமென்பதை நான் அவனுக்குத் தெளிவாகக் காட்டுவேன்.” (அப். 9:15, 16) அனனியா மறுபேச்சில்லாமல் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். துரத்தி துரத்தி துன்புறுத்திய சவுலைத் தேடிக் கண்டுபிடித்து, “சவுலே, சகோதரனே, நீ வந்துகொண்டிருந்த வழியில் உனக்குக் காட்சி கொடுத்த எஜமானாகிய இயேசுதான் என்னை அனுப்பியிருக்கிறார், உனக்கு மறுபடியும் பார்வை கிடைப்பதற்காகவும் நீ கடவுளுடைய சக்தியால் நிரப்பப்படுவதற்காகவும் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்” என்றார்.—அப். 9:17.

11, 12. இயேசு, அனனியா, சவுல் ஆகியவர்களைச் சுற்றி நடந்த சம்பவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

11 இயேசு... அனனியா... சவுல்... இவர்களைச் சுற்றி நடந்த சம்பவங்களிலிருந்து பல உண்மைகள் தெரியவருகின்றன. உதாரணத்துக்கு, வாக்குறுதி கொடுத்தபடியே பிரசங்க வேலையை இயேசு முன்னின்று சுறுசுறுப்பாக வழிநடத்துகிறார். (மத். 28:20) இன்றைக்கு அவர் யாரிடமும் நேரடியாகப் பேசாவிட்டாலும் உண்மையும் விவேகமும் உள்ள அடிமையின் மூலமாக, அதாவது தன் வீட்டார்மீது நியமித்திருப்பவர்கள் மூலமாக, பிரசங்க வேலையை வழிநடத்துகிறார். (மத். 24:45-47) ஆளும் குழுவின் வழிநடத்துதலின் கீழ் பிரஸ்தாபிகளும் பயனியர்களும் கிறிஸ்துவைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க அனுப்பப்படுகிறார்கள். கடந்த அதிகாரத்தில் பார்த்தபடி, ஆர்வமுள்ளவர்களில் பலர் கடவுளிடம் உதவி கேட்டு மன்றாடியிருக்கிறார்கள். அதனால், யெகோவாவின் சாட்சிகள் அவர்களைப் போய் சந்தித்திருக்கிறார்கள்.—அப். 9:11.

12 அனனியா தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் கீழ்ப்படிதலோடு ஏற்றுக்கொண்டார், அதனால் ஆசீர்வாதத்தையும் பெற்றார். முழுமையாகச் சாட்சி கொடுக்க வேண்டுமென்ற கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா? உங்களுக்குப் பயமாக இருந்தாலும் கீழ்ப்படிகிறீர்களா? சிலருக்கு, வீட்டுக்கு வீடு போய் முன்பின் தெரியாதவர்களைச் சந்திப்பது பயமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு வியாபார பகுதிகளில், தெருக்களில், தொலைபேசியில், கடிதம் வழியில் சாட்சி கொடுப்பது என்றால் பயமாக இருக்கலாம். அனனியாவுக்கும் பயம் இருந்தது, ஆனால் அதைச் சமாளித்தார். அதனால் கடவுளுடைய சக்தியை சவுல் பெறுவதற்கு உதவும் பாக்கியத்தைப் பெற்றார். b இயேசுமீது அனனியா நம்பிக்கை வைத்ததாலும், சவுலைத் தன் சகோதரனாகப் பார்த்ததாலும்தான் அவரால் அந்தப் பயத்தை வெல்ல முடிந்தது. பிரசங்க வேலையை இயேசு வழிநடத்துகிறார் என்பதில் நம்பிக்கை வைத்தால்... மக்கள்மீது இரக்கம் காட்டினால்... பயங்கரமான விரோதிகளையும் வருங்கால சகோதரர்களாகப் பார்த்தால்... நாமும் அனனியாவைப் போல் பயத்தை வெல்லலாம்.—மத். 9:36.

அவர் இயேசுவைப் பற்றி “உடனடியாகப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்” (அப். 9:18-30)

13, 14. நீங்கள் இன்னும் ஞானஸ்நானம் எடுக்கவில்லை என்றால் சவுலுடைய முன்மாதிரியிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

13 சவுல், தான் கற்றுக்கொண்ட விஷயங்களின்படி உடனடியாகச் செயல்பட்டார். அவர் குணமாக்கப்பட்ட பிறகு, ஞானஸ்நானம் பெற்று தமஸ்குவில் இருந்த சீஷர்களுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார். ஆனால், அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. “இயேசுதான் கடவுளுடைய மகன் என்று ஜெபக்கூடங்களில் உடனடியாகப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.”—அப். 9:20.

14 ஒருவேளை நீங்கள் இன்னும் பைபிளைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் ஆனால் ஞானஸ்நானம் எடுக்கவில்லை என்றால், சவுலைப் போல நீங்களும் கற்றுக்கொண்ட விஷயங்களின்படி உடனடியாகச் செயல்படுவீர்களா? உண்மைதான், கிறிஸ்து செய்த அற்புதத்தை சவுல் தன் சொந்த அனுபவத்திலேயே பார்த்தார்; அது அவரைச் செயல்பட தூண்டியது. ஆனால், மற்றவர்களும்தான் இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்தார்கள். உதாரணத்துக்கு, சூம்பிய கையுடைய ஒருவனை இயேசு குணப்படுத்தியதை பரிசேயர்கள் சிலர் பார்த்தார்கள். அதோடு, லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பிய விஷயத்தை யூதர்கள் பெரும்பாலோர் தெரிந்திருந்தார்கள். ஆனாலும், அவர்களில் அநேகர் கல்லாகத்தான் இருந்தார்கள், ஏன், குறையும் சொன்னார்கள். (மாற். 3:1-6; யோவா. 12:9, 10) சவுலோ அவர்களைப் போல் இருக்கவில்லை, மனம் மாறினார். மற்றவர்களைப் போல் இல்லாமல், சவுல் மட்டும் ஏன் உடனடியாகச் செயல்பட்டார்? ஏனென்றால், மனிதர்களைவிட கடவுளுக்கே பயந்தார், தனக்கு கிறிஸ்து காட்டியிருந்த கருணையைப் பெரிதாக மதித்தார். (பிலி. 3:8) அதுபோல் நீங்களும் நடந்தால், பிரசங்க வேலையில் ஈடுபடுவதற்கும், ஞானஸ்நானம் எடுப்பதற்கும் யாரும் உங்களுக்குத் தடையாக இருக்க அனுமதிக்க மாட்டீர்கள்.

15, 16. ஜெபக்கூடங்களில் சவுல் என்ன செய்தார், தமஸ்குவில் இருந்த யூதர்கள் என்ன செய்தார்கள்?

15 ஜெபக்கூடத்தில் இயேசுவைப் பற்றி சவுல் பிரசங்கம் செய்தபோது மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஆச்சரியத்தை... அதிர்ச்சியை... ஆத்திரத்தை... உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? “எருசலேமில் இயேசுவின் பெயரில் நம்பிக்கை வைக்கிறவர்களை கொடூரமாகத் துன்புறுத்தியவன் இவன்தானே?” என்று அவர்கள் கேட்டார்கள். (அப். 9:21) இயேசுவைப் பற்றித் தனக்கு இருந்த எண்ணத்தை ஏன் மாற்றிக்கொண்டார் என்பதைப் பற்றி சவுல் மக்களுக்கு விளக்கினார். அப்போது, ‘இயேசுதான் கிறிஸ்து என்று . . . தர்க்கரீதியில் நிரூபித்துக் காட்டினார்.’ (அப். 9:22) ஆனால், தர்க்கரீதியில் பேசுவது எல்லா இடங்களிலும் செல்லாது, வெல்லாது. பாரம்பரியத்தால் பூட்டப்பட்ட நெஞ்சங்களையும், பெருமையினால் விலங்கிடப்பட்ட இதயங்களையும் தர்க்கரீதியான விளக்கங்களால் தகர்க்க முடியாது. இருந்தாலும், சவுல் தன் முயற்சியைக் கைவிட்டுவிடவில்லை.

16 மூன்று வருஷங்களுக்குப் பிறகும், தமஸ்குவில் இருந்த யூதர்கள் சவுலை எதிர்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். கடைசியில், அவரைத் தீர்த்துக்கட்ட முடிவுகட்டினார்கள். (அப். 9:23; 2 கொ. 11:32, 33; கலா. 1:13-18) விஷயம் கசிந்தபோது, சவுல் ஞானமாகச் செயல்பட்டு அந்த இடத்தைவிட்டு கிளம்பினார். நகரத்தின் மதில்சுவரில் இருந்த ஜன்னல் வழியாக கூடையில் இறங்கி தப்பித்துப் போனார். அன்று இரவு சவுல் தப்பிக்க ‘அவருடைய [சவுலுடைய] சீஷர்கள்’ அவருக்கு உதவியதாக லூக்கா சொல்கிறார். (அப். 9:25) தமஸ்குவில் சவுலின் பிரசங்கத்தைக் கேட்ட சிலர் மனம்மாறி கிறிஸ்துவின் சீஷர்களாக ஆகியிருக்கலாம் என்று இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.

17. (அ) பைபிள் சத்தியத்துக்கு மக்கள் எப்படிப் பிரதிபலிக்கிறார்கள்? (ஆ) நாம் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும், ஏன்?

17 உங்கள் குடும்பத்துக்கு... நண்பர்களுக்கு... இன்னும் பலருக்கு... முதல் முதலில் பைபிள் சத்தியங்களை நீங்கள் சொன்னபோது அவை நியாயமாக இருப்பதைப் பார்த்து உடனே அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். அப்படிச் சிலர் ஏற்றுக்கொண்டும் இருக்கலாம். ஆனால், அநேகர் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், உங்கள் சொந்த குடும்பத்தாரே உங்களை ஒரு எதிரியைப் போல் பார்த்திருக்கலாம். (மத். 10:32-38) ஆனால், வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசும் திறமையை நீங்கள் தொடர்ந்து வளர்த்து வந்தால், கிறிஸ்தவ நடத்தையைக் காத்துக்கொண்டால், உங்களை எதிர்ப்பவர்களும்கூட ஒருநாள் மனக் கதவைத் திறப்பார்கள்.—அப். 17:2; 1 பே. 2:12; 3:1, 2, 7.

18, 19. (அ) சவுலுக்கு ஆதரவாக பர்னபா பேசியதால் ஏற்பட்ட விளைவு என்ன? (ஆ) பர்னபாவையும் சவுலையும் நாம் எப்படிப் பின்பற்றலாம்?

18 எருசலேமுக்குள் சவுல் காலடி எடுத்து வைத்தபோது, அவர் கிறிஸ்துவின் சீஷரா என்று அங்கிருந்த சீஷர்கள் சந்தேகப்பட்டார்கள். ஆனால், அவரும் ஒரு சீஷர்தான் என்பதை பர்னபா எடுத்துச் சொன்னபோது அப்போஸ்தலர்கள் அவரை ஏற்றுக்கொண்டார்கள், அவரும் சிலகாலம் அவர்களுடன் தங்கியிருந்தார். (அப். 9:26-28) சவுல் விவேகமாக நடந்துகொண்டார், ஆனால் நல்ல செய்தியைப் பற்றி சொல்ல வெட்கப்படவில்லை. (ரோ. 1:16) எருசலேமில் தைரியமாகப் பிரசங்கித்தார்; இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு எதிராக எங்கே கொடூரமாகத் தாக்குதல் நடத்தினாரோ... அங்கேயே தைரியமாகப் பிரசங்கித்தார். தங்களுக்கு வலது கையாக இருந்தவர் இப்போது கட்சி மாறிவிட்டதைக் கண்டு எருசலேமிலிருந்த யூதர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்; அதனால் அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டினார்கள். “சகோதரர்களுக்கு இது தெரியவந்தபோது, [சவுலை] செசரியாவுக்குக் கூட்டிக்கொண்டுபோய் அங்கிருந்து தர்சுவுக்கு அனுப்பி வைத்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (அப். 9:30) இப்போது சபை மூலம் இயேசு கொடுத்த ஆணைக்கு சவுல் அடிபணிந்தார். அதனால் சவுலும் பயனடைந்தார், சபையும் பயனடைந்தது.

19 சவுலுக்கு ஆதரவாகப் பேச பர்னபா முன்வந்தார் என்பதைக் கவனியுங்கள். பர்னபா செய்த இந்த அன்பான உதவி பக்திமிக்க இந்த இரண்டு ஊழியர்களுக்கு இடையில் நிச்சயம் நட்பையும் பாசத்தையும் வளர்த்திருக்கும். நீங்களும் சபையில் உள்ள புதியவர்களுக்கு பர்னபாவைப் போல உதவிக்கரம் நீட்டுகிறீர்களா? அவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்து, ஆன்மீக ரீதியில் முன்னேற அவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கிறீர்களா? அப்படிச் செய்தால் நிச்சயம் பல மடங்கு ஆசீர்வதிக்கப்படுவீர்கள். நீங்கள் ஒரு புது பிரஸ்தாபியாக இருந்தால், உங்களுக்குக் கிடைக்கும் உதவியை சவுலைப் போல ஏற்றுக்கொள்கிறீர்களா? அனுபவமுள்ள பிரஸ்தாபிகளுடன் சேர்ந்து ஊழியம் செய்யும்போது, ஊழியத்தில் உங்கள் திறமை பட்டைத் தீட்டப்படும், உங்கள் மகிழ்ச்சி பெருகும், என்றும் வாடாத நட்பும் கிடைக்கும்.

“நிறைய பேர் எஜமானின் சீஷர்களானார்கள்” (அப். 9:31-43)

20, 21. அன்றும் இன்றும் “சமாதானக் காலத்தை” கடவுளுடைய ஊழியர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொண்டார்கள்?

20 சவுல் மதம் மாறி பாதுகாப்புடன் போன பிறகு, “யூதேயா, கலிலேயா, சமாரியா முழுவதிலும் இருந்த சபை சமாதானக் காலத்தை அனுபவித்தது.” (அப். 9:31) இந்தச் சாதகமான காலத்தைச் சீஷர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொண்டார்கள்? (2 தீ. 4:2) அவர்கள் ‘விசுவாசத்தில் பலப்பட்டு வந்ததாக’ பதிவு சொல்கிறது. அப்போஸ்தலர்களும் பொறுப்பிலிருந்த மற்ற சகோதரர்களும் சீஷர்களின் விசுவாசத்துக்கு உரம் சேர்த்தார்கள். ‘யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவருடைய சக்தியின் மூலம் ஆறுதல் பெற்று’ முன்னேறி வந்த சபையை முன்னின்று வழிநடத்தினார்கள். உதாரணத்துக்கு, சாரோனின் சமவெளியில் உள்ள லித்தா பட்டணத்துச் சீஷர்களைப் பலப்படுத்த பேதுரு அந்தச் சாதகமான காலத்தைப் பயன்படுத்திக்கொண்டார். அந்த நகரத்தைச் சுற்றி வாழ்ந்த நிறைய பேர் அவருடைய போதனைகளைக் கேட்டு “எஜமான்மேல்” விசுவாசம் வைத்தார்கள். (அப். 9:32-35) சீஷர்கள் தங்களுடைய சொந்த விஷயங்களில் மூழ்கிவிடாமல் நல்ல செய்தியைச் சுறுசுறுப்பாகப் பிரசங்கித்தார்கள், ஒருவரையொருவர் அக்கறையாகக் கவனித்துக்கொண்டார்கள். அதன் விளைவாக, சபை நாளுக்கு நாள் “வளர்ந்துகொண்டே” வந்தது.

21 அதேபோல், 20-ம் நூற்றாண்டின் முடிவில் நிறைய நாடுகளைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் “சமாதானக் காலத்தை” அனுபவித்தார்கள். பல பத்தாண்டுகளாக கடவுளுடைய மக்களை அடக்கி ஒடுக்கிவந்த வல்லரசுகள் திடீரென வீழ்ச்சியடைந்தன. பிரசங்க வேலைமீது போடப்பட்ட தடைகள் தளர்த்தப்பட்டன அல்லது தகர்க்கப்பட்டன. பிரசங்கிக்க கிடைத்த வாய்ப்புகளை லட்சக்கணக்கான சாட்சிகள் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதனால், அற்புதமான பலன்களையும் அள்ளினார்கள்.

22. உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை எப்படி நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்?

22 உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை நீங்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்களா? மத சுதந்திரம் இருக்கும் ஒரு நாட்டில் நீங்கள் வாழ்ந்துவந்தால் கடவுளுடைய அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட காரியங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாகச் சொத்துசுகங்களை நாடுவதிலேயே மூழ்கியிருக்கும்படி சாத்தான் உங்களைத் தூண்டுவான். (மத். 13:22) திசை மாறிப் போய்விடாதீர்கள். இப்போது நீங்கள் அனுபவிக்கும் ஓரளவு அமைதி காலத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். முழுமையாகச் சாட்சிக் கொடுப்பதற்குக் கிடைத்த வாய்ப்பாக... சபையைப் பலப்படுத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பாக... அதைப் பாருங்கள். மறந்துவிடாதீர்கள்... திடீரென்று உங்களுடைய சூழ்நிலை மாறிவிடலாம்.

23, 24. (அ) தபீத்தாளைப் பற்றிய பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) என்ன செய்ய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்?

23 தபீத்தாள், அதாவது தொற்காள், என்ற சிஷ்யைக்கு என்ன நடந்தது என்பதை யோசித்துப் பாருங்கள். இவள் யோப்பா நகரத்தில் வாழ்ந்துவந்தாள். அது லித்தாவிலிருந்து கொஞ்ச தூரத்தில்தான் இருந்தது. உண்மையுள்ள இந்தச் சகோதரி தன்னுடைய நேரத்தையும் செல்வத்தையும் ஞானமாகப் பயன்படுத்தி, “நல்ல காரியங்களையும் தானதர்மங்களையும் செய்துவந்தாள்.” ஆனால் திடீரென வியாதிப்பட்டு இறந்துவிட்டாள். c அதனால் யோப்பாவிலிருந்த சீஷர்கள்... முக்கியமாக தபீத்தாளின் நல்ல செயல்களால் நன்மையடைந்த விதவைகள்... உடைந்துபோய் உட்கார்ந்துவிட்டார்கள். அடக்கம் செய்யப்படுவதற்காக அவளுடைய உடல் தயார் செய்யப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் பேதுரு வீட்டிற்குள் நுழைந்து ஒரு அற்புதத்தைச் செய்தார். அதுபோன்ற அற்புதத்தை இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் யாருமே அதுவரை செய்ததில்லை. பேதுரு ஜெபம் செய்து தபீத்தாளை உயிர்த்தெழுப்பினார்! பின்பு, விதவைகளையும் சீஷர்களையும் அழைத்து தபீத்தாளை அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது அவர்களுடைய உள்ளத்தில் பெருக்கெடுத்த சந்தோஷத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். வருங்காலத்தில் வரவிருந்த சோதனைகளைச் சந்திக்க இந்தச் சம்பவங்கள் சீஷர்களை நிச்சயம் பலப்படுத்தியிருக்கும்! “யோப்பா நகரம் முழுவதும் இந்தச் செய்தி பரவியது; நிறைய பேர் எஜமானின் சீஷர்களானார்கள்.”—அப். 9:36-42.

நீங்கள் எப்படி தபீத்தாளைப் பின்பற்றலாம்?

24 தபீத்தாளைப் பற்றிய இந்தப் பதிவிலிருந்து இரண்டு முக்கியமான குறிப்புகளைக் கற்றுக்கொள்கிறோம். (1) நமக்கு எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அப்படியென்றால், உயிர் இருக்கும்போதே கடவுளிடம் நல்ல பெயர் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியம்! (பிர. 7:1) (2) உயிர்த்தெழுதல் நம்பிக்கை ஒருபோதும் பொய் ஆகாது. தபீத்தாள் செய்த எண்ணற்ற நல்ல செயல்களை யெகோவா கவனித்தார், பலனும் தந்தார். நம்முடைய நல்ல செயல்களையும் அவர் நிச்சயம் ஞாபகத்தில் வைப்பார், அர்மகெதோனுக்கு முன்பு நாம் இறந்துவிட்டால் நம்மை உயிர்த்தெழுப்புவார். (எபி. 6:10) அதனால், இப்போது நாம் ‘பாதகமான காலத்தை’ பொறுத்து வந்தாலும் சரி, “சமாதானக் காலத்தை” அனுபவித்து வந்தாலும் சரி, கிறிஸ்துவைக் குறித்து முழுமையாகச் சாட்சி கொடுப்பதில் மும்முரமாகச் செயல்படுவோமாக!—2 தீ. 4:2.

a சவுல் என்ற பரிசேயர்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

b பொதுவாக, கடவுளுடைய சக்தியின் வரங்கள் அப்போஸ்தலர்கள் மூலமே கொடுக்கப்பட்டன. ஆனால் இந்த சந்தர்ப்பத்தில், சவுலுக்கு அனனியா வரங்களைக் கொடுக்க இயேசு அதிகாரம் கொடுத்ததாகத் தெரிகிறது. சவுல் மதம் மாறிய பிறகு, கொஞ்சக் காலத்துக்கு 12 அப்போஸ்தலர்களுடன் தொடர்புகொள்ளாமல் இருந்தார். இருந்தாலும், இந்தக் காலப்பகுதி முழுவதும் அவர் சுறுசுறுப்பாகவே செயல்பட்டுவந்திருக்கலாம். அதனால்தான், சவுல் பிரசங்க வேலையைச் செய்வதற்குத் தேவையான பலத்தைப் பெறும்படி இயேசு பார்த்துக்கொண்டார்.