Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 7

“இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை” அறிவிப்பது

“இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை” அறிவிப்பது

நற்செய்தியாளரான பிலிப்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்

அப்போஸ்தலர் 8:4-40-ன் அடிப்படையில்

1, 2. முதல் நூற்றாண்டில், எதிரிகளால் நல்ல செய்தியின் குரலை நசுக்கிப்போட முடிந்ததா? விளக்குங்கள்.

 ராட்சத அலைபோல் துன்புறுத்தல் திடீரென சீறி எழுகிறது. சவுல் களமிறங்கி கிறிஸ்தவ சபையை ‘கொடூரமாகத் துன்புறுத்த’ தொடங்குகிறார். மூல மொழியில் இந்த வார்த்தைக்கு மிருகத்தனமாகத் துன்புறுத்துவது என்று அர்த்தம். (அப். 8:3) சீஷர்கள் சிதறி ஓடுகிறார்கள், கிறிஸ்தவ மதத்தை முளையிலேயே கிள்ளியெறிய துடிக்கும் சவுலின் லட்சியம் நிறைவேறிவிட்டது போல் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், கிறிஸ்தவர்கள் எட்டுத்திக்கும் சிதறிப்போவதால் எதிர்பாராத பலன்கள் கிடைக்கின்றன. அது என்ன?

2 சிதறிப்போனவர்கள் கால்பதித்த இடமெங்கும் “கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய நல்ல செய்தியை” அறிவிக்கிறார்கள். (அப். 8:4) கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! துன்புறுத்தலால் நல்ல செய்தியின் குரலை நசுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக, அதை எங்கும் ஒலிக்க வைத்திருக்கிறது. சீஷர்களைச் சிதறடிக்க செய்வதன் மூலம் தூர இடங்களிலும் நல்ல செய்தியின் விதை பரவ எதிரிகள் வழி செய்தார்கள். அதுவும் தங்களுக்கே தெரியாமல்! நம்முடைய நாளிலும் இதுபோன்ற ஒன்றுதான் நிகழ்ந்திருக்கிறது. அதைத்தான் நாம் பார்க்கப்போகிறோம்.

“சிதறிப்போனவர்கள்” (அப். 8:4-8)

3. (அ) பிலிப்பு யார்? (ஆ) சமாரியாவின் பெரும்பாலான இடங்களுக்கு ஏன் நல்ல செய்தி எட்டவில்லை, ஆனால் அந்தப் பகுதியைப் பற்றி இயேசு முன்கூட்டியே என்ன சொல்லியிருந்தார்?

3 அப்படி “சிதறிப்போன” சீஷர்களில் ஒருவர்தான் பிலிப்பு. a (அப். 8:4; “ பிலிப்பு—‘நற்செய்தியாளர்’” என்ற பெட்டியைப் பாருங்கள்.) அவர் சமாரியாவுக்குப் போனார். அந்த நகரத்தில் நல்ல செய்தி பெரும்பாலும் சென்றெட்டவில்லை. ஏனென்றால், “சமாரியர்களுடைய எந்த நகரத்துக்குள்ளும் நுழையாதீர்கள். வழிதவறிப்போன ஆடுகளைப் போல் இருக்கிற இஸ்ரவேல் தேசத்தாரிடமே போங்கள்” என்று அப்போஸ்தலர்களுக்கு இயேசு முன்பு அறிவுரை கொடுத்திருந்தார். (மத். 10:5, 6) ஆனால் காலப்போக்கில், சமாரியாவிலும் நல்ல செய்தி முழுமையாகப் பிரசங்கிக்கப்படும் என்பதை இயேசு தெரிந்திருந்தார். அதனால்தான், பரலோகத்துக்கு ஏறிப் போவதற்கு முன்பு, “எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று சொன்னார்.—அப். 1:8.

4. பிலிப்பு பிரசங்கித்தபோது சமாரியர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், இதற்கு எது காரணமாக இருந்திருக்கலாம்?

4 சமாரியா ‘அறுவடைக்குத் தயாராக இருப்பதை’ பிலிப்பு தெரிந்துகொண்டார். (யோவா. 4:35) அதிகாலையில் வீசும் தூய தென்றல் காற்றைப் போல் இப்போதுதான் நல்ல செய்தி அங்கிருந்தவர்களைச் செல்லமாக வருட ஆரம்பித்தது. ஏனென்றால், யூதர்களுக்கு சமாரியர்களுடன் அந்தச் சமயத்தில் எந்தவொரு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், யூதர்கள் அவர்களை இளக்காரமாகத்தான் பார்த்தார்கள். ஆனால், நல்ல செய்தியோ இன வேறுபாடுக்கு அப்பாற்பட்டது... பரிசேயர்களுடைய குறுகிய மனப்பான்மைக்கு முற்றிலும் மாறுபட்டது... என்பதை அந்தச் சமாரியர்கள் தெரிந்துகொண்டார்கள். ஓரவஞ்சனையின்றி உற்சாகமாக சமாரியர்களுக்கு பிலிப்பு சாட்சி கொடுத்ததன் மூலம் அவர்களைத் தாழ்வாகப் பார்த்தவர்களிடம் ஒட்டியிருந்த தப்பெண்ணம் தன்னிடம் துளிகூட இல்லை என்பதைக் காட்டினார். அதனால் பிலிப்பு சொன்ன செய்தியை சமாரியர்கள் ‘எல்லாரும்’ காதுகொடுத்துக் கேட்டதில் ஆச்சரியமேதுமில்லை.—அப். 8:6.

5-7. கிறிஸ்தவர்கள் போன இடமெல்லாம் நல்ல செய்தி பரவியது என்பதற்கு உதாரணங்கள் சொல்லுங்கள்.

5 முதல் நூற்றாண்டைப் போல, இன்றைக்கும் துன்புறுத்தலால் கடவுளுடைய மக்களின் பிரசங்க வேலையை நிறுத்த முடியவில்லை. கிறிஸ்தவர்கள் அடிக்கடி சிறைச்சாலைக்கோ வேறொரு நாட்டுக்கோ செல்லும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால், அங்குள்ள மக்களுக்கு நல்ல செய்தி அறிமுகமாகத்தான் அது வழி செய்திருக்கிறது. உதாரணத்துக்கு, இரண்டாம் உலகப் போரின்போது நாசி சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களுக்கு யெகோவாவின் மக்களால் சிறப்பாக சாட்சி கொடுக்க முடிந்தது. அங்கே சாட்சிகளைச் சந்தித்த ஒரு யூதர் சொல்கிறார், “சிறையில் இருந்த யெகோவாவின் சாட்சிகளின் உறுதியைப் பார்த்தபோது அவர்களுடைய விசுவாசம் பைபிளை ஆதாரமாகக்கொண்டது என்பதை உணர்ந்துகொண்டேன். அதனால் நானும் ஒரு சாட்சியாக ஆனேன்.”

6 சில சந்தர்ப்பங்களில், சாட்சிகளைத் துன்புறுத்தியவர்களும்கூட பிற்பாடு அவர்களுடைய செய்தியைக் கேட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஃபிரான்ஸ் டெஷ் என்ற சாட்சி ஆஸ்திரியாவில் உள்ள கூஸன் சித்திரவதை முகாமிற்கு மாற்றப்பட்டபோது SS அதிகாரி ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்தினார். பல வருஷங்களுக்குப் பிறகு, நம்முடைய மாநாடு ஒன்றில் அந்த இரண்டு பேரும் சாட்சிகளாய் சந்தித்துக்கொண்டபோது அவர்கள் அடைந்த சந்தோஷத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!

7 துன்புறுத்தலின் காரணமாக கிறிஸ்தவர்கள் நாடுவிட்டு நாடு போனபோது இதேபோன்ற அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. உதாரணத்துக்கு, 1970-களில் மலாவி சாட்சிகள் மொசம்பிக்குக்கு ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டபோது அங்கே மிகப் பெரிய அளவில் சாட்சி கொடுக்கப்பட்டது. பிற்பாடு, மொசம்பிக்கில் எதிர்ப்பு என்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தபோதிலும் பிரசங்க வேலை மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதைப் பற்றி ஃபிரான்சிஸ்கோ கோயானா சொல்லும்போது... “உண்மைதான், பிரசங்க வேலையில் ஈடுபட்டதால் எங்களில் சிலர் பல தடவை கைது செய்யப்பட்டோம். இருந்தாலும், நல்ல செய்திக்கு அநேகர் செவிகொடுத்தபோது, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குக் கடவுள் எப்படி உறுதுணையாக இருந்தாரோ அதேபோல் எங்களுக்கும் உறுதுணையாக இருக்கிறார் என்பதில் நம்பிக்கையாய் இருந்தோம்” என்றார்.

8. அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் பிரசங்க வேலைமீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன?

8 வெளிநாடுகளில் கிறிஸ்தவம் வேரூன்றி தழைப்பதற்கு துன்புறுத்தல் மட்டுமே காரணம் அல்ல. சமீப வருஷங்களில், அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் ஏற்பட்ட மாற்றங்களும்கூட பல்வேறு மொழியினருக்கு... தேசத்தினருக்கு... நல்ல செய்தி பரவ வழிவகுத்து கொடுத்திருக்கின்றன. போரினாலும் பொருளாதார வீழ்ச்சியினாலும் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஓரளவு சுமூகமான இடங்களுக்கு ஓடிவந்திருக்கும் சிலர் பைபிளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அகதிகளாக மக்கள் வந்து குடியேறியிருப்பதால் அந்த நாடுகளில் வேறு மொழி ஊழியப் பகுதிகள் முளைத்திருக்கின்றன. அப்படியென்றால், ‘எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்களுக்கு’ சாட்சி கொடுக்க உங்கள் ஊழியப் பகுதியில் நீங்கள் முயற்சி செய்கிறீர்களா?—வெளி. 7:9.

“எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்” (அப். 8:9-25)

அப்போஸ்தலர்கள் ‘கைகளை வைத்தபோது அவர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைப்பதை சீமோன் பார்த்து, அவர்களிடம் பணத்தைக் கொண்டுவந்தான்.’—அப்போஸ்தலர் 8:18

9. சீமோன் யார், பிலிப்புவிடம் அவரைக் கவர்ந்தது எது?

9 சமாரியாவில் பிலிப்பு நிறைய அற்புதங்களைச் செய்தார். உதாரணமாக, ஊனமாக இருந்தவர்களை குணப்படுத்தினார், பேய்களையும் விரட்டினார். (அப். 8:6-8) பிலிப்புவிடம் இருந்த அற்புத வரங்களைப் பார்த்து ஒருவர் ரொம்பவே அசந்துபோனார். அவர்தான் சீமோன்; பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு மந்திரவாதி. “சக்திபடைத்த தெய்வப் பிறவி” என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் புகழ் பெற்றிருந்தார். இப்போது கடவுளின் உண்மையான சக்தியை பிலிப்பு செய்த அற்புதங்கள் மூலம் சீமோன் பார்த்தபோது விசுவாசியாக மாறினார். (அப். 8:9-13) ஆனால் பிற்பாடு, சீமோனின் உள்நோக்கம் அம்பலமானது. எப்படி?

10. (அ) சமாரியாவில் பேதுருவும் யோவானும் என்ன செய்தார்கள்? (ஆ) புதிய சீஷர்கள்மீது பேதுருவும் யோவானும் கைகளை வைத்தபோது அவர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்ததைப் பார்த்து சீமோன் என்ன செய்தார்?

10 சமாரியாவில் ஏற்படும் வளர்ச்சியைக் கேள்விப்பட்ட அப்போஸ்தலர்கள் உடனே பேதுருவையும் யோவானையும் அங்கு அனுப்பி வைத்தார்கள். (“ பேதுரு கையில் ‘அரசாங்கத்தின் சாவிகள்’” என்ற பெட்டியைப் பாருங்கள்.) அவர்கள் வந்து சேர்ந்தவுடன், புதிய சீஷர்கள்மீது கைகளை வைத்தார்கள்; ஒவ்வொருவரும் கடவுளுடைய சக்தியைப் பெற்றார்கள். b சீமோன் அதைப் பார்த்து வாயடைத்துப் போனார். “எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்” என்று அப்போஸ்தலர்களிடம் கேட்டார். ‘நானும் யார்மேல் கைகளை வைக்கிறேனோ அவர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைக்க’ வேண்டும் என்றார். அந்தப் புனித பாக்கியத்தை விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைத்து அவர்களுக்கு சீமோன் பணமும் கொடுத்தார்.—அப். 8:14-19.

11. சீமோனுக்கு பேதுரு என்ன அறிவுரை கொடுத்தார், அப்போது சீமோன் எப்படி நடந்துகொண்டார்?

11 சீமோனிடம் பேதுரு அழுத்தம் திருத்தமாக இப்படிச் சொன்னார்: “கடவுள் தரும் இலவச அன்பளிப்பைப் பணம் கொடுத்து வாங்கலாம் என்று நீ நினைத்ததால் உன் பணம் உன்னோடு அழிந்துபோகட்டும். உன் உள்ளம் கடவுளுடைய பார்வையில் நேர்மையாக இல்லாததால், இதில் உனக்குப் பங்கும் கிடையாது, பாகமும் கிடையாது.” உடனடியாக மனம் திருந்தி மன்னிப்புக்காக மன்றாடும்படி சீமோனிடம் பேதுரு சொன்னார். “உன் உள்ளத்தில் தோன்றிய பொல்லாத எண்ணத்துக்காக மன்னிப்பு கேட்டு யெகோவாவிடம் மன்றாடு” என்றார். அதற்காக, சீமோனை முழுக்க முழுக்க கெட்டவர் என்று முத்திரை குத்திவிட முடியாது. சரியானதைச் செய்யவே அவர் விரும்பினார்; ஆனால், அது தவறு என்று அந்தச் சமயத்தில் அவருக்குத் தெரியவில்லை. அதனால்தான், “நீங்கள் சொன்ன எதுவும் எனக்கு நடந்துவிடாதபடி தயவுசெய்து எனக்காக யெகோவாவிடம் மன்றாடுங்கள்” என்று அப்போஸ்தலர்களிடம் கெஞ்சினார்.—அப். 8:20-24.

12. “சைமனி” என்றால் என்ன, கிறிஸ்தவமண்டலத்துக்கு இது எப்படி ஒரு கண்ணியாக இருந்திருக்கிறது?

12 அன்று சீமோனைக் கண்டித்து பேதுரு சொன்ன வார்த்தைகள் இன்று கிறிஸ்தவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கின்றன. சொல்லப்போனால், “சைமனி” என்ற ஆங்கில வார்த்தை இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் பிறந்தது. முக்கியமாக மத வட்டாரங்களில், அதிகாரத்தை வாங்குவதையும் விற்பதையும் இந்த வார்த்தை குறிக்கிறது. விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலத்தின் சரித்திரத்தைப் புரட்டினால், இந்தப் பழக்கம் சர்வ சாதாரணமாக இருந்திருப்பதைப் பார்க்கலாம். சொல்லப்போனால், என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா (1878) ஒன்பதாம் பதிப்பு இப்படிச் சொல்கிறது: “போப்புகளுக்கான தேர்தலைப் பற்றி சரித்திரத்தில் படிக்கும் எவரும், சைமனி இல்லாமல் எந்தத் தேர்தலுமே நடந்ததில்லை என்பதைப் பட்டென புரிந்துகொள்வார். அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட தேர்தலில்தான் பணத்தைக் கொடுத்து பதவியை வாங்கும் பழக்கம் மிகவும் வெட்கங்கெட்ட விதத்தில், மகா மோசமான விதத்தில், படுகேவலமான விதத்தில் நடந்திருக்கிறது என்பதையும் அறிந்துகொள்வார்.”

13. “பணத்தை” கொடுத்து “பதவியை” வாங்குவதைக் குறித்து கிறிஸ்தவர்கள் எந்தெந்த விதங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

13 சைமனியைக் குறித்து, அதாவது “பணத்தை” கொடுத்து “பதவியை” வாங்கும் பாவத்தைக் குறித்து, கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, சபையில் கூடுதல் பொறுப்புகள் அடைவதற்காக பொறுப்பில் இருப்பவர்களுக்குப் பரிசு மழை பொழிவதோ புகழாரம் சூட்டுவதோ கூடாது. அதேசமயத்தில், பொறுப்பில் இருப்பவர்களும்கூட பணக்காரர்களுக்குத் தனி சலுகை காட்டுவதைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவை இரண்டுமே ஒருவகையில் “சைமனிதான்.” சொல்லப்போனால், கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருமே தங்களை ‘சிறியவர்களாக’ நடத்திக்கொள்ள வேண்டும்; யெகோவாவின் சக்தியால் நியமிக்கப்படும்வரை காத்திருக்க வேண்டும். (லூக். 9:48) ‘தனக்குத் தானே புகழ் தேடுகிறவர்களுக்கு’ யெகோவாவின் அமைப்பில் இடமில்லை.—நீதி. 25:27.

“நீங்கள் வாசிப்பது உங்களுக்குப் புரிகிறதா?” (அப். 8:26-40)

14, 15. (அ) “எத்தியோப்பிய அதிகாரி” யார், அவரை பிலிப்பு எப்படிச் சந்தித்தார்? (ஆ) பிலிப்பு விளக்கிய விஷயங்களைக் கேட்டு எத்தியோப்பிய அதிகாரி என்ன செய்தார், அவர் உணர்ச்சிவசப்பட்டு ஞானஸ்நானம் எடுக்கவில்லை என்று எப்படிச் சொல்லலாம்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

14 இப்போது, எருசலேமிலிருந்து காஸாவுக்குச் செல்லும் பாதையில் போகும்படி பிலிப்புவிடம் யெகோவாவின் தூதர் சொன்னார். ‘தேவதூதர் ஏன் என்னை காஸாவுக்குப் போகச் சொல்கிறார்’ என்று பிலிப்பு ஒருவேளை யோசித்திருக்கலாம். ஆனால், ‘ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தைச் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்த’ எத்தியோப்பிய அதிகாரியை வழியில் சந்தித்தபோது அவருக்குப் பதில் கிடைத்துவிட்டது. (“ எந்த அர்த்தத்தில் ‘அண்ணகர்’?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) அந்த அதிகாரியின் ரதத்துக்கு அருகில் செல்ல யெகோவாவின் சக்தி பிலிப்புவைத் தூண்டியது. உடனே அவர் ரதத்தோடு சேர்ந்து ஓட ஆரம்பித்தார்; “நீங்கள் வாசிப்பது உங்களுக்குப் புரிகிறதா?” என்று ஓடிக்கொண்டே கேட்டார். அதற்கு அந்த எத்தியோப்பிய அதிகாரி, “ஒருவர் கற்றுக்கொடுக்காவிட்டால் எனக்கு எப்படிப் புரியும்?” என்றார்.—அப். 8:26-31.

15 ரதத்தில் ஏறிக்கொள்ளும்படி பிலிப்புவிடம் அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! ஏசாயா தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டுள்ள ‘ஆடு,’ அதாவது ‘ஊழியர்,’ யார் என்பது வெகு காலமாக மர்மமாகவே இருந்தது. (ஏசா. 53:1-12) ஆனால் போகும் வழியில், அந்தத் தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது என்பதை எத்தியோப்பிய அதிகாரிக்கு பிலிப்பு விளக்கிக் காட்டினார். கி.பி. 33 பெந்தெகொஸ்தே அன்று ஞானஸ்நானம் பெற்றவர்களைப் போல, தான் என்ன செய்ய வேண்டுமென்பதை எத்தியோப்பிய அதிகாரி சட்டெனப் புரிந்துகொண்டார்; ஏனென்றால், அவர் ஏற்கெனவே யூத மதத்துக்கு மாறியிருந்தார். “இதோ, இங்கே தண்ணீர் இருக்கிறது! ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை?” என்று பிலிப்புவிடம் கேட்டார். உடனே பிலிப்பு அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்! c (“ தண்ணீருக்குள் இறங்கி ஞானஸ்நானம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) அதற்குப் பிறகு, ஆசோத்துக்குப் போகும்படி யெகோவாவின் சக்தி பிலிப்புவுக்குச் சொன்னது; அங்கு அவர் நல்ல செய்தியை அறிவித்து வந்தார்.—அப். 8:32-40.

16, 17. இன்று பிரசங்க வேலையில் தேவதூதர்கள் எப்படி உதவுகிறார்கள்?

16 பிலிப்பு செய்ததைப் போன்ற வேலையைச் செய்ய இன்று கிறிஸ்தவர்கள் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். மக்களுக்குச் சந்தர்ப்ப சாட்சி கொடுக்க, உதாரணத்துக்கு, பயணம் செய்யும்போது சாட்சி கொடுக்க, அவர்களுக்கு அடிக்கடி வாய்ப்பு கிடைக்கிறது. பல சந்தர்ப்பங்களில், நல்மனமுள்ள நபர்களை அவர்கள் சந்திப்பதெல்லாம் ஏதோ எதேச்சையாக நடக்கும் ஒன்று கிடையாது. இது நாம் எதிர்பார்க்க வேண்டியதுதான். ஏனென்றால், “எல்லா தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும் இனத்தினருக்கும்” நல்ல செய்தியைக் கொண்டுசெல்லும் வேலையை தேவதூதர்கள் வழிநடத்துகிறார்கள் என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (வெளி. 14:6) பிரசங்க வேலையை தேவதூதர்கள் வழிநடத்துவார்கள் என்று இயேசு மிகச் சரியாகவே சொல்லியிருந்தார். அறுவடைக்காலத்தில், அதாவது இந்தச் சகாப்தத்தின் இறுதிக்கட்டத்தில், “அறுவடை செய்கிறவர்கள், தேவதூதர்கள்” என்று இயேசு கோதுமையும் களைகளும் பற்றிய உதாரணத்தில் சொன்னார். ‘அக்கிரமம் செய்கிற எல்லாரையும் அவருடைய அரசாங்கத்திலிருந்து இவர்கள் பிரித்தெடுப்பார்கள்’ என்றும் சொன்னார். (மத். 13:37-41) அதேசமயம் பரலோகத்தில் ஆட்சி செய்யப் போகிறவர்களையும், ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த ‘திரள் கூட்டத்தாரையும்’ கூட்டிச் சேர்க்க யெகோவா தேவதூதர்களைப் பயன்படுத்துகிறார்.—வெளி. 7:9; யோவா. 6:44, 65; 10:16.

17 ஊழியத்தில் நாம் சந்திக்கும் அநேகர், கடவுளிடம் உதவி கேட்டு ஜெபித்துக்கொண்டிருந்ததாகச் சொல்வதைக் கேட்கும்போது பிரசங்க வேலைக்குத் தேவதூதர் துணை நிற்பதை நாம் தெரிந்துகொள்கிறோம். இந்த அனுபவத்தைக் கவனியுங்கள். ஒருநாள் காலையில் இரண்டு பிரஸ்தாபிகள் ஒரு சின்ன பையனுடன் ஊழியத்துக்குப் போனார்கள். ஊழியத்தை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பலாம் என்று நினைத்தபோது என்றைக்கும் இல்லாமல் அந்த பையன் அடுத்த வீட்டுக்கும் போகலாமே என்று ஆசைப்பட்டான். உடனே போய் கதவையும் தட்டிவிட்டான்! ஒரு இளம் பெண் கதவைத் திறந்தார். அவரிடம் போய் அந்தப் பிரஸ்தாபிகள் சாட்சி கொடுத்தார்கள். பைபிளைப் புரிந்துகொள்ள யாரையாவது அனுப்பும்படி கடவுளிடம் அப்போதுதான் ஜெபம் செய்ததாகவும் அதற்குள் அவர்கள் வந்து நிற்பதாகவும் அந்தப் பெண் சொன்னார். அதைக் கேட்டு அவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. உடனே அவருக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது!

“கடவுளே, நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள்”

18. ஊழியத்தை நாம் ஏன் ஒருபோதும் லேசாக எடுத்துக்கொள்ள கூடாது?

18 இன்று சரித்திரம் காணாத அளவில் பிரசங்க வேலை நடந்துகொண்டிருக்கிறது. அதனால், தேவதூதர்களுடன் சேர்ந்து உழைப்பது கிறிஸ்தவ சபையின் பாகமாக இருக்கும் நமக்குக் கிடைத்த பெரிய பாக்கியம். இந்தப் பாக்கியத்தை ஒருபோதும் லேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். “இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை” அறிவிக்கும் வேலையில் முழுமூச்சுடன் ஈடுபடும்போது அளவிலா ஆனந்தம் அடைவீர்கள்!—அப். 8:35.

a இவர் அப்போஸ்தலன் பிலிப்பு அல்ல. மாறாக, இந்தப் புத்தகத்தின் 5-ம் அதிகாரத்தில் பார்த்தபடி, ‘நல்ல பெயரெடுத்தவர்களாக இருந்த ஏழு ஆண்களில்’ ஒருவர். அதாவது, எருசலேமில் எபிரெய மொழி பேசிய விதவைகளுக்கும் கிரேக்க மொழி பேசிய விதவைகளுக்கும் உணவைப் பகிர்ந்தளிக்க நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர்.—அப். 6:1-6.

b அந்தக் காலத்தில் ஞானஸ்நானம் எடுத்தபோது புதிய சீஷர்கள் பொதுவாகக் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டார்கள், அதாவது கடவுளுடைய சக்தியைப் பெற்றார்கள். இதனால், பரலோகத்தில் இயேசுவுடன் சேர்ந்து ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்யும் பாக்கியம் அவர்களுக்குக் கிடைத்தது. (2 கொ. 1:21, 22; வெளி. 5:9, 10; 20:6) ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில், புதிய சீஷர்கள் ஞானஸ்நானம் எடுத்தபோது அபிஷேகம் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக, பேதுருவும் யோவானும் அவர்கள்மீது கைகளை வைத்தபோதுதான் கடவுளுடைய சக்தியைப் பெற்றார்கள். அதோடு, அற்புத வரங்களையும் பெற்றார்கள்.

c இது உணர்ச்சிவசப்பட்டு செய்த செயல் அல்ல. எத்தியோப்பிய அதிகாரி யூத மதத்துக்கு மாறியவராக இருந்ததால் ஏற்கெனவே வேதவசனங்களைத் தெரிந்திருந்தார்; மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களையும் தெரிந்திருந்தார். இப்போது கடவுளுடைய விருப்பத்தில் இயேசுவின் பாகத்தைத் தெரிந்துகொண்டதால் உடனே ஞானஸ்நானம் பெற்றார்.