அதிகாரம் 6
ஸ்தேவான்—‘கடவுளுடைய கருணையும் வல்லமையும் நிறைந்தவர்’
நியாயசங்கம் முன்பு தைரியமாகச் சாட்சி கொடுத்த ஸ்தேவானிடமிருந்து கற்றுக்கொள்ளும் பாடம்
அப்போஸ்தலர் 6:8–8:3-ன் அடிப்படையில்
1-3. (அ) ஸ்தேவான் எப்படிப்பட்ட சூழலைச் சந்திக்கிறார், அதற்கு அவர் எப்படிப் பிரதிபலிக்கிறார்? (ஆ) என்ன கேள்விகளை நாம் பார்க்கப் போகிறோம்?
யூத உச்ச நீதிமன்றத்தின் முன் கம்பீரமாக நிற்கிறார் ஸ்தேவான். எருசலேம் ஆலயத்தின் பக்கத்தில் இருக்கும் ஒரு பிரமாண்டமான கூடத்தில் 71 ஆண்கள் அரைவட்ட வடிவில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த நியாயசங்கம், அதாவது நீதிமன்றம், ஸ்தேவானை நியாயந்தீர்க்க இன்று கூடிவந்திருக்கிறது. இங்குள்ள நீதிபதிகள் அதிகாரமும் செல்வாக்கும் படைத்தவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இயேசுவின் சீஷரான ஸ்தேவானை இளக்காரமாகப் பார்க்கிறார்கள். சொல்லப்போனால், சில மாதங்களுக்கு முன் இயேசு கிறிஸ்துவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோது நியாயசங்கத்துக்குத் தலைமை தாங்கிய அதே காய்பாதான் இப்போதும் இந்த நீதிமன்றத்தை கூடிவரச் செய்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ஸ்தேவான் பயந்துவிட்டாரா?
2 இந்தத் தருணத்தில் ஸ்தேவானின் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிகிறது. நீதிபதிகள் அவரையே உற்றுப் பார்க்கையில் அவரது முகம் “தேவதூதரின் முகம்போல்” இருக்கிறது. (அப். 6:15) யெகோவா அருளும் செய்தியை அறிவிப்பதால் தேவதூதர்களின் முகம் எப்படி எந்த கலக்கமும் இல்லாமல் சாந்தமாக, அமைதலாக இருக்குமோ அதுபோல் ஸ்தேவானின் முகமும் இருக்கிறது. பகைமை நிறைந்த அந்த நீதிபதிகளால்கூட அதைப் பார்க்க முடிகிறது. ஸ்தேவானால் எப்படி அவ்வளவு அமைதலாக இருக்க முடிகிறது?
3 இந்தக் கேள்விக்கான பதிலிலிருந்து கிறிஸ்தவர்கள் இன்றைக்கு நிறைய கற்றுக்கொள்ளலாம். அதோடு, ஸ்தேவான் நீதிமன்ற படியேற காரணமாக இருந்த சூழல் என்ன... இதற்கு முன்பு தன் விசுவாசத்தை அவர் எப்படிக் காட்டியிருந்தார்... நாம் எப்படி அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றலாம்... என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
‘மக்களை . . . தூண்டிவிட்டார்கள்’ (அப். 6:8-15)
4, 5. (அ) ஸ்தேவான் எப்படிச் சபைக்குப் பொக்கிஷமாக இருந்தார்? (ஆ) எந்த அர்த்தத்தில் ஸ்தேவான் ‘கடவுளுடைய கருணையும் வல்லமையும் நிறைந்தவராக’ இருந்தார்?
4 தவழும் பருவத்தில் இருந்த கிறிஸ்தவ சபைக்கு ஸ்தேவான் ஒரு பொக்கிஷமாக இருந்தார் என்று ஏற்கெனவே பார்த்தோம். அப்போஸ்தலர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி உதவ முன்வந்த அந்த ஏழு பேரில் இவரும் ஒருவராக இருந்தார் என்று முந்தின அதிகாரத்தில் படித்தோம். இவருக்குக் கொடுக்கப்பட்ட வரங்களை யோசித்துப் பார்க்கும்போது இவர் மனத்தாழ்மைக்கு உதாரணமாக விளங்கியது தெரிகிறது. சில அப்போஸ்தலர்களைப் போல “பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும்” செய்யும் வரத்தை இவரும் பெற்றிருந்தார் என்று அப்போஸ்தலர் 6:8-ல் வாசிக்கிறோம். அதுமட்டுமா, அவர் ‘கடவுளுடைய கருணையும் வல்லமையும் நிறைந்தவர்’ என்றும் வாசிக்கிறோம். அதற்கு என்ன அர்த்தம்?
5 ‘கடவுளுடைய கருணை’ என்பதற்கான கிரேக்க வார்த்தையை “தயவு” என்றும் மொழிபெயர்க்கலாம். மக்களின் மனதைக் கொள்ளைகொள்ளும் கருணையும் மென்மையும் ஸ்தேவானின் சுபாவத்தில் கலந்திருந்தது. கேட்போரின் மனதைத் தூண்டும் விதத்தில் பேசினார், அதனால் அவர் சொன்னதெல்லாம் உண்மையானவை, உள்ளப்பூர்வமானவை, உபயோகமானவை என்பதை மக்கள் உணர்ந்துகொண்டார்கள். அவர் வல்லமை நிறைந்தவராக இருந்ததற்குக் காரணம், யெகோவாவின் சக்தி அவர்மேல் தங்கியிருந்தது, அதன் வழிநடத்துதலுக்கு அவரும் தாழ்மையுடன் அடிபணிந்தார். தான் பெற்றிருந்த வரங்களையும் திறமைகளையும் நினைத்து தலைக்கனம் அடையாமல் எல்லா புகழையும் யெகோவாவுக்கே கொடுத்தார். தான் பேசுவதைக் கேட்ட மக்கள்மீது அன்பும் அக்கறையும் காட்டினார். இதையெல்லாம் பார்க்கும்போது எதிரிகளுக்கு ஸ்தேவான் அச்சுறுத்தலாக இருந்ததில் ஆச்சரியமே இல்லை!
6-8. (அ) ஸ்தேவானுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் என்ன, அவை ஏன் சுமத்தப்பட்டன? (ஆ) இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஸ்தேவானின் முன்மாதிரி ஏன் பயனுள்ளது?
6 நிறைய ஆட்கள் ஸ்தேவானோடு வாக்குவாதம் செய்தார்கள். ஆனால், “ஞானத்தாலும் கடவுளுடைய சக்தியாலும் பேசிய அவரை அவர்களால் ஜெயிக்க முடியவில்லை.” a அதனால் விரக்தியடைந்து, இயேசுவின் இந்தச் சீஷர்மீது... கள்ளங்கபடமில்லாத இந்த நபர்மீது... குற்றங்களைச் சுமத்துவதற்காக சிலரை ‘ரகசியமாகக் கூப்பிட்டார்கள்.’ அதோடு, “மக்களையும் பெரியோர்களையும் வேத அறிஞர்களையும் தூண்டிவிட்டார்கள்.” உடனே அவர்கள் ஸ்தேவானை பலவந்தமாக இழுத்துவந்து நியாயசங்கம் முன்பு நிறுத்தினார்கள். (அப். 6:9-12) எதிரிகள் இரண்டு குற்றச்சாட்டுகளை அவர்மீது சுமத்தினார்கள்; அதாவது, கடவுளையும் மோசேயையும் நிந்தனை செய்தார் என்று குற்றம் சாட்டினார்கள். எப்படி?
7 “இந்தப் பரிசுத்த இடத்துக்கு எதிராக,” அதாவது எருசலேமில் இருந்த ஆலயத்துக்கு எதிராக, ஸ்தேவான் பேசியதால் அவர் கடவுளையே நிந்தித்ததாக அந்தப் பொய் சாட்சிகள் கூறினார்கள். (அப். 6:13) மோசேயின் திருச்சட்டத்தை அவர் எதிர்த்து பேசியதாக, அதாவது மோசே வகுத்த பாரம்பரிய பழக்கங்களை மாற்றியதாக, பழி சுமத்தி மோசேயை நிந்தித்ததாகக் குற்றம் சாட்டினார்கள். இது ஒரு பயங்கரமான குற்றச்சாட்டு. ஏனென்றால், ஆலயத்தின்மீது... மோசேயின் திருச்சட்டத்தில் பொதிந்திருந்த விவரங்கள்மீது... அந்தத் திருச்சட்டத்துடன் இணைக்கப்பட்ட வாய்மொழி சட்டங்கள்மீது... யூதர்கள் அந்தச் சமயத்தில் பெரும் மதிப்பு மரியாதை வைத்திருந்தார்கள். அதனால், அவர்கள் சுமத்திய இந்தக் குற்றச்சாட்டின்படி, ஸ்தேவான் ஆபத்தான மனிதன்... மரண தண்டனைக்குப் பாத்திரமானவன்!
8 இப்படிப்பட்ட தந்திரங்களைப் பயன்படுத்தி கடவுளுடைய ஊழியர்கள்மீது மத வெறியர்கள் களங்கம் சுமத்துவது ஒன்றும் புதிதல்ல. இன்று வரைக்கும் யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்த அரசியல் தலைவர்களை மத வெறியர்கள் உசுப்பிவிடுகிறார்கள். திரித்துக்கூறப்படும் குற்றச்சாட்டுகள்... பொய் குற்றச்சாட்டுகள்... அம்புகள் போல் நம்மீது பாய்ந்து வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? ஸ்தேவானிடமிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
‘மகிமையான கடவுளை’ பற்றித் தைரியமாகச் சாட்சி கொடுத்தார் (அப். 7:1-53)
9, 10. நியாயசங்கம் முன்பு ஸ்தேவான் பேசியதைப் பற்றி விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள், நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
9 இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் பார்த்தபடி, ஸ்தேவானின் காதில் குற்றச்சாட்டுகள் வந்து விழ... அவருடைய முகம் தேவதூதரின் முகத்தைப் போல சாந்தமாகக் காட்சியளித்தது. காய்பா இப்போது ஸ்தேவான் பக்கம் திரும்பி, “இதெல்லாம் உண்மையா?” என்று கேட்டார். (அப். 7:1) ஸ்தேவான் தன்னுடைய தரப்பில் பேச வேண்டிய நேரம் வந்தது. அவரும் பேசினார்!
10 ஸ்தேவானின் பேச்சை விமர்சகர்கள் சிலர் தாக்கியிருக்கிறார்கள்; நீண்ட உரையாற்றியும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு அவர் பதிலளிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், நம் விசுவாசத்தைப் பற்றி யாராவது கேள்வி கேட்டால் சரியான “பதில் சொல்ல” ஸ்தேவான் நமக்கு நல்ல முன்மாதிரியைத்தான் வைத்துவிட்டுப் போனார். (1 பே. 3:15) ஆலயத்துக்கு எதிராகப் பேசி கடவுளை நிந்தனை செய்ததாக... திருச்சட்டத்துக்கு எதிராகப் பேசி மோசேயை நிந்தனை செய்ததாக... ஸ்தேவான்மீது எதிரிகள் குற்றம் சாட்டினார்கள் என்பதை மனதில் வையுங்கள். ஸ்தேவான் பதில் சொன்னபோது, இஸ்ரவேல் சரித்திரத்தை மூன்று பாகங்களாக எடுத்து சொன்னார், அதிலும் சில விஷயங்களை நன்றாக வலியுறுத்திக் காட்டினார். இப்போது சரித்திரத்தின் இந்த மூன்று பாகத்தையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்க்கலாம்.
11, 12. (அ) ஆபிரகாமின் உதாரணத்தை ஸ்தேவான் எப்படித் திறமையாகப் பயன்படுத்தினார்? (ஆ) யோசேப்பைப் பற்றி ஸ்தேவான் பேசியது ஏன் பொருத்தமாக இருந்தது?
11 மூதாதையர்களின் சகாப்தம். (அப். 7:1-16) விசுவாசத்தின் தந்தை என்று யூதர்களால் போற்றப்பட்ட ஆபிரகாமைப் பற்றி முதலில் ஸ்தேவான் பேச ஆரம்பித்தார். யூதர்களுக்கும் அவருக்கும் இருந்த பொதுவான இந்த விஷயத்தைப் பேச ஆரம்பித்தபோது, ‘மகிமையான கடவுளான’ யெகோவா மெசொப்பொத்தாமியாவில் முதன்முதலில் ஆபிரகாமுக்குத் தன்னை வெளிப்படுத்திய விஷயத்தை ஸ்தேவான் வலியுறுத்திக் காட்டினார். (அப். 7:2) சொல்லப்போனால், வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்தில் ஆபிரகாம் ஒரு அந்நியராகவே வாழ்ந்து வந்தார். அந்தச் சமயத்தில் ஆபிரகாமுக்கு ஆலயமும் இல்லை, மோசேயின் திருச்சட்டமும் இல்லை. அப்படியிருக்கும்போது, இவையெல்லாம் இருந்தால்தான் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியுமென எப்படி அடித்துச் சொல்ல முடியும்?
12 ஸ்தேவானின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள், ஆபிரகாமின் சந்ததியில் வந்த யோசேப்பையும் உயர்வாய் மதித்தார்கள். ஆனால், யோசேப்பின் சொந்த சகோதரர்களே... இஸ்ரவேலின் கோத்திரத் தலைவர்களே... அந்த நல்ல மனிதனைத் துன்புறுத்தி அடிமையாக விற்றுவிட்டார்கள் என்பதை அவர்களுக்கு ஸ்தேவான் நினைப்பூட்டினார். இருந்தாலும், பஞ்சத்திலிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்ற கடவுள் யோசேப்பை அற்புதமாகப் பயன்படுத்தினார். யோசேப்புக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்ததை ஸ்தேவான் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். ஆனால், அவையில் கேட்டுக்கொண்டிருந்தவர்களின் கவனத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக முடிந்தளவு அதைப் பற்றிய பேச்சை எடுக்காமல் இருந்தார்.
13. மோசேயைப் பற்றி ஸ்தேவான் சொன்ன விளக்கம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எப்படிப் பதில் தந்தது, எந்த முக்கியப் பொருளை விரிவாக்க இது உதவியாக இருந்தது?
13 மோசேயின் காலம். (அப். 7:17-43) மோசேயைப் பற்றி ஸ்தேவான் விவரமாகப் பேசினார். அதற்குக் காரணமும் இருந்தது. ஏனென்றால், நியாயசங்கத்தில் சதுசேயர்களே அதிகம் இருந்தனர்; பைபிளில் மோசே எழுதிய புத்தகங்களை மட்டுமே அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். மோசேயை ஸ்தேவான் நிந்தனை செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டியதையும் நாம் மறந்துவிட கூடாது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஸ்தேவானின் வார்த்தைகள் நேரடியான பதிலைத் தந்தன. ஏனென்றால், மோசேயின் மீதும் திருச்சட்டத்தின் மீதும் தான் ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததை அவர் காட்டினார். (அப். 7:38) மோசேயும்கூட 40 வயதாயிருந்தபோது தன் சொந்த ஜனங்களால்... தான் காப்பாற்ற நினைத்த ஜனங்களால்... ஒதுக்கித்தள்ளப்பட்டதையும், 40 வருஷங்கள் உருண்டோடிய பிறகு நிறைய சந்தர்ப்பங்களில் அவருடைய தலைமையை எதிர்த்து அவர்கள் கலகம் பண்ணியதையும் ஸ்தேவான் சொன்னார். b இப்படி ஸ்தேவான் படிப்படியாக முக்கியமான ஒரு பொருளை விரிவாக்கிக்கொண்டே வந்தார். அது: தங்களை வழிநடத்த யெகோவா நியமித்தவர்களை கடவுளுடைய மக்கள் திரும்பத்திரும்ப ஒதுக்கித்தள்ளினார்கள்.
14. மோசேயின் உதாரணம் ஸ்தேவானின் பேச்சிற்கு எப்படி வலுசேர்த்தது?
14 ஸ்தேவான் இன்னொரு விஷயத்தையும் அந்த அவையில் இருந்தவர்களுக்கு ஞாபகப்படுத்தினார், அதாவது மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலில் தோன்றுவார் என்று மோசே முன்னறிவித்ததைப் பற்றியும் ஞாபகப்படுத்தினார். யார் அந்தத் தீர்க்கதரிசி, மக்கள் அவரை எப்படி வரவேற்பார்கள் போன்ற கேள்விகளுக்கான பதிலை ஸ்தேவான் கடைசியில்தான் சொன்னார். அவர் சொன்ன இன்னொரு முக்கியமான குறிப்பு இது: எரிகிற புதரிலிருந்து யெகோவா பேசியதால், எந்த இடத்தையும் பரிசுத்தமான இடமாக யெகோவாவால் மாற்ற முடியும் என்பதை மோசே தெரிந்திருந்தார். அதனால், ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான், உதாரணத்துக்கு எருசலேமிலிருக்கும் ஆலயத்தில் மட்டும்தான், யெகோவாவை வழிபட வேண்டும் என்று யாராவது சொல்ல முடியுமா? அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
15, 16. (அ) வழிபாட்டுக் கூடாரத்தைப் பற்றிய விளக்கம் ஸ்தேவானின் விவாதத்துக்கு ஏன் முக்கியமாக இருந்தது? (ஆ) சாலொமோனின் ஆலயத்தைப் பற்றி ஸ்தேவான் என்ன சொன்னார்?
15 வழிபாட்டுக் கூடாரமும் ஆலயமும். (அப். 7:44-50) எருசலேமில் ஆலயம் கட்டப்படுவதற்கு முன்பு ஒரு வழிபாட்டுக் கூடாரத்தை, அதாவது எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு கூடாரத்தை, கட்டும்படி மோசேயிடம் கடவுள் சொல்லியிருந்தார் என்பதை நியாயசங்கத்துக்கு ஸ்தேவான் ஞாபகப்படுத்தினார். மோசேயே அந்த வழிபாட்டுக் கூடாரத்தில் வழிபட்டிருக்கும்போது, அது ஆலயத்துக்கு ஈடாகாது என்று யாராவது துணிந்து சொல்ல முடியுமா?
16 பிற்காலத்தில், எருசலேம் ஆலயத் திறப்பு விழாவின்போது சாலொமோன் ஒரு ஜெபம் செய்தார்; அந்த ஜெபத்தில் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார். அதைத்தான் ஸ்தேவான்... “கைகளால் கட்டப்பட்ட ஆலயங்களில் உன்னதமான கடவுள் குடியிருப்பதில்லை” என்று சொன்னார். (அப். 7:48; 2 நா. 6:18) யெகோவா தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற ஒரு ஆலயத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் அதை மட்டுமே கொண்டு தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவார் என்று சொல்ல முடியாது. அப்படியானால், கைகளால் கட்டப்பட்ட கட்டிடத்தில்தான் கடவுளை வணங்க வேண்டுமென ஏன் சொல்ல வேண்டும்? கடைசியில், ஏசாயா புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி ஸ்தேவான் தன் விவாதத்துக்கு வலிமை சேர்த்தார்: “பரலோகம் என் சிம்மாசனம், பூமி என் கால்மணை. அப்படியிருக்கும்போது, எனக்காக எப்படிப்பட்ட ஆலயத்தை கட்டுவீர்கள்? நான் தங்குவதற்கு எப்படிப்பட்ட இடத்தைத் தருவீர்கள்? இவை எல்லாவற்றையும் என் கையால்தானே படைத்தேன்? என்று யெகோவா கேட்கிறார்.”—அப். 7:49, 50; ஏசா. 66:1, 2.
17. ஸ்தேவானின் பேச்சு எப்படி... (அ) அவையில் இருந்தவர்களின் உள்நோக்கத்தை வெளிக்காட்டியது? (ஆ) அவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் தந்தது?
17 நியாயசங்கம் முன்னால் ஸ்தேவான் இதுவரை செய்த வாதத்தை யோசித்துப் பார்க்கும்போது, தன்மீது குற்றம் சாட்டியவர்களின் உள்நோக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டினார் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள், இல்லையா? யெகோவா பிடிவாதமானவர் கிடையாது; பாரம்பரியமோ சூழ்நிலையோ அவரை கட்டுப்படுத்தாது. தன்னுடைய விருப்பத்தை ஏற்றவேளையில் நிறைவேற்ற மாற்றங்கள் செய்பவர், வளைந்து கொடுப்பவர் என்பதை ஸ்தேவான் உணர்த்தினார். அழகிய எருசலேம் ஆலயத்தையும் திருச்சட்டத்தோடு பின்னிப்பிணைந்த பழக்கவழக்கங்களையும் பாரம்பரியங்களையுமே கட்டிக்கொண்டு அழுதவர்கள் திருச்சட்டம் மற்றும் ஆலயத்தின் உண்மையான நோக்கத்தை உணரத் தவறிவிட்டார்கள்! ஸ்தேவானுடைய பேச்சு ஒரு முக்கியமான கேள்வியை அவர்கள் முன் நிறுத்தியது: யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதைவிட, திருச்சட்டத்தையும் ஆலயத்தையும் கௌரவிப்பதற்கு வேறு ஏதாவது சிறந்த வழி இருக்க முடியுமா? உண்மையில், ஸ்தேவானின் வார்த்தைகளுக்கு அவருடைய செயல்களே சாட்சியாக இருந்தன; ஏனென்றால், தன்னால் முடிந்தளவு யெகோவாவுக்கு அவர் கீழ்ப்படிந்து நடந்தார்.
18. ஸ்தேவானை நாம் என்னென்ன விதங்களில் பின்பற்றலாம்?
18 ஸ்தேவானின் பேச்சிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? வேதவசனங்களை அவர் கரைத்துக் குடித்திருந்தார். ‘சத்திய வார்த்தையைச் சரியாய்ப் பயன்படுத்துகிறவர்களாக’ இருக்க வேண்டுமென்றால் நாமும் கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாகப் படிக்க வேண்டும். (2 தீ. 2:15) ஸ்தேவானிடமிருந்து கருணையையும் சாதுரியத்தையும் கற்றுக்கொள்ளலாம். அவருடைய எதிராளிகள் ரொம்ப மூர்க்கமானவர்களாக இருந்தார்கள். இருந்தாலும், அவர்கள் உயர்வாக மதித்த விஷயங்களையே முடிந்தளவு பொதுவாக வைத்துப் பேசினார். அதுமட்டுமல்ல, அவர்களிடம் மரியாதையுடன் பேசினார், மூப்பர்களை “தகப்பன்மார்களே” என்று சொல்லி அழைத்தார். (அப். 7:2) நாமும் கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற சத்தியங்களை “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” பேச வேண்டும்.—1 பே. 3:15.
19. நியாயசங்கத்தின் முன்னால் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்திகளை ஸ்தேவான் எப்படித் தைரியமாகச் சொன்னார்?
19 ஆனால், மக்கள் மனம் புண்பட்டுவிடுமோ என்று நினைத்து கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற சத்தியங்களைப் பேசாமல் இருந்துவிடக் கூடாது; யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்திகளின் வலிமையையும் குறைத்துவிடக் கூடாது. அதற்கு ஸ்தேவான் ஒரு சிறந்த உதாரணம். நியாயசங்கம் முன்பு அவர் எடுத்துவைத்த எந்த அத்தாட்சியும் கல்நெஞ்சம் கொண்ட அந்த நீதிபதிகளைத் துளியும் அசைக்கவில்லை என்பதை ஸ்தேவான் உணர்ந்துகொண்டார். அதனால், யோசேப்பையும் மோசேயையும் அனைத்து தீர்க்கதரிசிகளையும் புறக்கணித்த அவர்களுடைய முன்னோர்களுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அவர்களுடைய முகத்துக்கு நேராகவே தைரியமாகச் சொன்னார். (அப். 7:51-53) சொல்லப்போனால், மோசேயும் மற்ற தீர்க்கதரிசிகளும் முன்னுரைத்த மேசியாவையே அந்த நீதிபதிகள் கொலை செய்திருந்தார்கள். இவர்களைப் போல் வேறு யாருமே திருச்சட்டத்தை இந்தளவு மீறி நடந்திருக்க மாட்டார்கள்!
“எஜமானாகிய இயேசுவே, என் உயிரை ஏற்றுக்கொள்ளுங்கள்” (அப். 7:54–8:3)
20, 21. ஸ்தேவான் சொன்னதைக் கேட்டு நியாயசங்கத்தார் எப்படி நடந்துகொண்டார்கள், யெகோவா எப்படி ஸ்தேவானைப் பலப்படுத்தினார்?
20 மறுக்க முடியாத இந்த உண்மைகளைக் கேட்டவுடன் அந்த நீதிபதிகள் கோபத்தில் கொந்தளித்தார்கள். கண்ணியமற்ற விதத்தில் நடந்துகொண்டார்கள், ஸ்தேவானைப் பார்த்து பற்களை நறநறவென கடித்தார்கள். இயேசுவுக்கு எப்படி அவர்கள் துளிகூட இரக்கம் காட்டவில்லையோ அதேபோல் தனக்கும் காட்டமாட்டார்கள் என்பதை ஸ்தேவான் உணர்ந்திருக்க வேண்டும்.
21 தனக்கு நடக்கவிருந்ததை சந்திக்க ஸ்தேவானுக்குத் தைரியம் தேவைப்பட்டது; அந்தச் சமயத்தில், யெகோவா அன்புடன் காட்டிய தரிசனத்தைப் பார்த்து அவர் நிச்சயம் பலம் பெற்றிருப்பார். கடவுளுடைய மகிமையை ஸ்தேவான் கண்டார்; இயேசு தன்னுடைய தகப்பனுடைய வலதுபக்கத்தில் நிற்பதையும் கண்டார். ஸ்தேவான், தான் பார்த்த தரிசனத்தை விவரித்தபோது அந்த நீதிபதிகள் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டார்கள். ஏன்? இயேசு கொஞ்ச காலத்துக்கு முன்புதான், தாமே மேசியா என்றும் சீக்கிரத்தில் தகப்பனுடைய வலதுபக்கத்தில் உட்காருவார் என்றும் இதே நீதிமன்றத்தில் நின்று சொல்லியிருந்தார். (மாற். 14:62) இயேசு சொன்னது உண்மை என்பதை ஸ்தேவான் பார்த்த தரிசனம் நிரூபித்தது. சொல்லப்போனால், அந்த நியாயசங்கத்தைச் சேர்ந்தவர்கள் மேசியாவை ஏற்றுக்கொள்ளாமல் கொலை செய்திருந்தார்கள்! இப்போது ஸ்தேவானை கல்லெறிந்து கொல்ல அவர்கள் எல்லாரும் ஆவேசமாகத் திரண்டு வந்திருக்கிறார்கள். c
22, 23. ஸ்தேவானின் மரணத்துக்கும் அவரது எஜமானின் மரணத்துக்கும் என்ன ஒற்றுமைகள், ஸ்தேவானைப் போல இன்று கிறிஸ்தவர்கள் எப்படி உறுதியுடன் இருக்கலாம்?
22 ஸ்தேவான் தன் எஜமானைப் போலவே தனக்கு மரண தண்டனை கொடுத்தவர்களை மன்னிக்கும்படி மன்றாடி, மன அமைதியோடும் கடவுள்மீது நம்பிக்கை நிறைந்த நெஞ்சோடும் உயிரைவிட்டார். இறக்கும் முன்பு, “எஜமானாகிய இயேசுவே, என் உயிரை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்; மனிதகுமாரன் யெகோவாவோடு நிற்பதை அவர் இன்னும் தரிசனத்தில் பார்த்துக்கொண்டிருந்ததால் ஒருவேளை அப்படிச் சொல்லியிருக்கலாம். “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்ற இயேசுவின் வார்த்தைகள் அந்தச் சமயத்தில் நிச்சயம் ஸ்தேவானின் மனதில் ஒலித்திருக்கும். (யோவா. 11:25) கடைசியாக, “யெகோவாவே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதீர்கள்” என்று சத்தமாகச் சொல்லிய பின்பு உயிரைவிட்டார்.—அப். 7:59, 60.
23 கிறிஸ்துவின் வழியில் நடந்தவர்களில் ஸ்தேவானே முதல் உயிர்த்தியாகி. (“ எந்த அர்த்தத்தில் ‘உயிர்த்தியாகி’?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) ஆனால் அவரே கடைசி அல்ல என்பதுதான் நெஞ்சை உலுக்கும் செய்தி. இந்நாள்வரை யெகோவாவின் ஊழியர்களில் சிலர் மத வெறியர்களால்... அரசியல் வெறியர்களால்... வேறுசில பயங்கரமான எதிரிகளால்... கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும், ஸ்தேவானைப் போல் நாமும் நம்பிக்கையுடன் இருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது. ஏனென்றால், இயேசு இப்போது அரசராக ஆளுகிறார்... தன்னுடைய தகப்பன் தந்த மாபெரும் வல்லமையைப் பயன்படுத்தி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். உண்மையுள்ள சீஷர்களை அவர் உயிர்த்தெழுப்பும்போது யாரும் குறுக்கே நிற்க முடியாது.—யோவா. 5:28, 29.
24. ஸ்தேவானின் கொலைக்கு சவுல் எப்படி உடந்தையாக இருந்தார், ஸ்தேவானின் மரணம் கிறிஸ்தவர்கள்மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது?
24 இவை எல்லாவற்றையும் ஓர் இளம் நபர் நோட்டமிட்டுக்கொண்டிருந்தார். அவர்தான் சவுல். ஸ்தேவானைக் கல்லெறிந்து கொல்வதற்கு இவரும் துணைபோயிருந்தார். சொல்லப்போனால், கல்லெறிந்து கொன்றவர்களின் அங்கிகளைக்கூட காவல் காத்துக்கொண்டிருந்தார். சீக்கிரத்திலேயே, துன்புறுத்துதல் என்ற தீயைப் பற்றவைத்தார். ஆனால் ஸ்தேவானின் மரணம், கிறிஸ்தவர்களின் மனதைவிட்டு அவ்வளவு சுலபமாக மறைந்துவிடாது. அதற்குப் பதிலாக, அவருடைய நல்ல முன்மாதிரி, கிறிஸ்தவர்கள் உண்மையுடன் நிலைத்திருக்கவும் விசுவாசப் போரில் வெற்றிபெறவும் தெம்பு தரும். அதுமட்டுமல்ல, ஸ்தேவானின் சாவுக்கு உடந்தையாக இருந்ததை நினைத்து நினைத்து பவுலாக மாறிய சவுலும்கூட வேதனைப்படுவார். (அப். 22:20) ஸ்தேவானைக் கல்லெறிந்தவர்களுடன் அவர் கைகோர்த்துக்கொண்டிருந்தாலும், “நான் துன்புறுத்துகிறவனாகவும், கடவுளை நிந்திக்கிறவனாகவும், திமிர்பிடித்தவனாகவும் இருந்தேன்” என்று சொல்லி பிற்காலத்தில் வருத்தப்படுவார். (1 தீ. 1:13) ஸ்தேவானையும் அவருடைய வலிமைமிக்க பேச்சையும் பவுல் என்றைக்குமே மறக்க மாட்டார். சொல்லப்போனால், பிற்பாடு பவுலின் சில பேச்சுகளிலும் எழுத்துக்களிலும் ஸ்தேவான் சொன்ன குறிப்புகள் ஆங்காங்கே இருந்தன. (அப். 7:48; 17:24; எபி. 9:24) காலப்போக்கில், விசுவாசத்துக்கும் தைரியத்துக்கும் முன்மாதிரியாக விளங்கிய ஸ்தேவானை... ‘கடவுளுடைய கருணையும் வல்லமையும் நிறைந்த’ ஸ்தேவானை... பவுல் முழுமையாகப் பின்பற்றினார். அப்படியானால், நாம்?
a அந்த எதிரிகளில் சிலர், “விடுதலை பெற்றவர்களின் ஜெபக்கூடம்” என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒருகாலத்தில் ரோமர்களால் சிறைபிடிக்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்ட யூதர்களாய் இருந்திருக்கலாம்; அல்லது, யூத மதத்துக்கு மாறிய இவர்கள் ஒருகாலத்தில் அடிமைகளாக இருந்து பிறகு விடுதலை செய்யப்பட்டவர்களாக இருந்திருக்கலாம். தர்சு பட்டணத்து சவுலைப் போல அவர்களில் சிலர் சிலிசியாவிலிருந்து வந்தவர்கள். ஆனால், ஸ்தேவானிடம் விவாதம் செய்து தோற்றுப்போன அந்த சிலிசியா மக்கள் மத்தியில் சவுல் இருந்தார் என்று பதிவு சொல்வதில்லை.
b பைபிளில் வேறெந்த இடத்திலும் சொல்லப்படாத சில விவரங்களை, உதாரணத்துக்கு எகிப்தில் மோசே கல்வி கற்றது... எகிப்திலிருந்து அவர் ஓடி வந்தபோது அவருக்கு எத்தனை வயது... மீதியான் தேசத்தில் அவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார்... போன்ற விவரங்களை, ஸ்தேவானின் பேச்சில் பார்க்கலாம்.
c ரோம சட்டத்தின்படி, ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க நியாயசங்கத்துக்கு அதிகாரம் இருந்ததா என்பதே சந்தேகம்தான். (யோவா. 18:31) எப்படியிருந்தாலும் சரி, சட்டம் அல்ல, கோபத்தில் கொதித்தெழுந்த ஒரு கும்பல்தான் ஸ்தேவானை கொலை செய்ததாகத் தெரிகிறது.