Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 27

‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’

‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’

ரோமில் பவுல் காவல் வைக்கப்படுகிறார், அப்போதும் தொடர்ந்து பிரசங்கிக்கிறார்

அப்போஸ்தலர் 28:11-31-ன் அடிப்படையில்

1. பவுலுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் என்ன நம்பிக்கை இருந்தது, ஏன்?

 சுமார் கி.பி. 59-ஆம் வருஷம். “சீயுசின் மகன்களுடைய” சின்னத்தைக் கொண்ட கப்பல் ஒன்று மத்தியதரைக் கடலில் இருந்த மெலித்தா தீவிலிருந்து இத்தாலிக்குப் பயணம் செய்துகொண்டிருக்கிறது; அது ஒரு பெரிய தானியக் கப்பலாக இருந்திருக்கலாம். அப்போஸ்தலன் பவுல் ஒரு கைதியாக அந்தக் கப்பலில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்; நண்பர்களான லூக்காவும் அரிஸ்தர்க்குவும் அவரோடு இருக்கிறார்கள். (அப். 27:2) கப்பலிலுள்ள மற்றவர்களைப் போல் அவர்கள், கிரேக்க தெய்வமான சீயுஸின் மகன்களிடம் (காஸ்டர், போலக்ஸ் என்ற இரட்டையர்களிடம்) பாதுகாப்புக்காக வேண்டிக்கொள்வதில்லை. (அப். 28:11, அடிக்குறிப்பு) அதற்குப் பதிலாக, உண்மைக் கடவுளான யெகோவாவிடம் வேண்டிக்கொள்கிறார்கள்; பவுல் ரோமில் சத்தியத்தைப் பற்றி சாட்சி கொடுப்பார் என்றும், ரோம அரசர்முன் நிற்பார் என்றும் யெகோவாதான் தெரியப்படுத்தியிருந்தார்.—அப். 23:11; 27:24.

2, 3. பவுல் பயணம் செய்த கப்பல் எந்த வழியில் போனது, ஆரம்பத்திலிருந்தே அவருக்கு ஆதரவாக இருந்தவர் யார்?

2 அந்தக் கப்பல் சீரகூசாவை அடைந்தது; அது அத்தேனே, ரோம் ஆகிய நகரங்களுக்கு இணையான, அழகான சிசிலிய நகரமாகும். கப்பல் அங்கே மூன்று நாட்கள் நின்றபின், தெற்கு இத்தாலியாவிலிருந்த ரேகியு நகரை அடைந்தது. பின்பு, தென்திசைக் காற்று வீசியதால் அது வழக்கத்தைவிட வேகமாகப் போனது; 320 கிலோமீட்டர் தூரம் பயணித்து, (இன்றைய நேபிள்ஸ் நகரத்துக்குப் பக்கத்தில் இருக்கும்) புத்தேயோலி என்ற இத்தாலியத் துறைமுகத்துக்கு இரண்டாவது நாள் போய் சேர்ந்தது.—அப். 28:12, 13.

3 பவுல் இப்போது ரோமை நோக்கிய பயணத்தின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறார்; அங்கே ரோம அரசரான நீரோவுக்குமுன் நிற்கப்போகிறார். “எல்லா விதமான ஆறுதலின் கடவுள்” இந்தப் பயணத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை பவுலோடு இருந்திருக்கிறார். (2 கொ. 1:3) நாம் பார்க்கப்போகிறபடி, பவுல் கடவுளுடைய ஆதரவைத் தொடர்ந்து பெற்றார்; அதுமட்டுமல்ல, தன்னுடைய பக்திவைராக்கியத்தை இழந்துவிடாமல் தொடர்ந்து ஒரு மிஷனரியாகச் சேவை செய்தார்.

“பவுல் . . . கடவுளுக்கு நன்றி சொல்லி, தைரியம் அடைந்தார்” (அப். 28:14, 15)

4, 5. (அ) புத்தேயோலியில் பவுலுக்கும் அவருடைய தோழர்களுக்கும் எப்படிப்பட்ட உபசரிப்பு கிடைத்தது, அவருக்கு ஏன் அந்தளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டது? (ஆ) சிறையிலிருக்கும்போதுகூட, கிறிஸ்தவர்கள் தங்களுடைய நல்ல நடத்தை காரணமாக எப்படி நன்மை அடையலாம்?

4 புத்தேயோலியில், பவுலும் அவருடைய நண்பர்களும் ‘சகோதரர்களைச் சந்தித்தார்கள்’; அந்தச் சகோதரர்கள் அவர்களை, “ஏழு நாட்கள் தங்களோடு தங்கும்படி . . . கேட்டுக்கொண்டார்கள்.” (அப். 28:14) கிறிஸ்தவ உபசரிப்புக்கு எப்பேர்ப்பட்ட அருமையான முன்மாதிரிகள்! இதற்குக் கைமாறாக, பவுலிடமிருந்தும் அவருடைய நண்பர்களிடமிருந்தும் நிச்சயம் அவர்கள் பலமடங்கு ‘ஆன்மீக உபசரிப்பை’ பெற்றிருப்பார்கள். ஆனால், கண்காணிப்பிலிருந்த ஒரு கைதிக்குச் சகோதரர்களோடு தங்கும் அளவுக்கு ஏன் சுதந்திரம் வழங்கப்பட்டது? அவர் ரோமப் படைவீரர்களின் நம்பிக்கையை சம்பாதித்திருந்தது அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

5 இன்றைக்குக்கூட, யெகோவாவின் சாட்சிகள் சிறையிலோ சித்திரவதை முகாம்களிலோ இருக்கும்போது, நல்ல நடத்தை காரணமாக விசேஷ சலுகைகளைப் பெற்றிருக்கிறார்கள்; சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ருமேனியாவில் திருட்டுக் குற்றத்துக்காக 75 வருடங்கள் சிறைத்தண்டனை தீர்ப்புப் பெற்ற ஒருவர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார்; இதன் விளைவாக, தன் சுபாவத்தையே அடியோடு மாற்றிக்கொண்டார். இதைப் பார்த்த சிறை அதிகாரிகள், சிறைக்குத் தேவையான பொருள்களை ஊருக்குள் போய் வாங்கிவர, அதுவும் காவலர்கள் தன்னோடு இல்லாமல் தனியாகப் போய் வாங்கிவர, அவருக்கு அனுமதி கொடுத்தார்கள்! நம்முடைய நடத்தை யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.—1 பே. 2:12.

6, 7. ரோமிலிருந்து வந்த சகோதரர்கள் அன்பை எப்படிக் காட்டினார்கள்?

6 பவுலும் அவருடைய தோழர்களும் புத்தேயோலியிலிருந்து ரோமுக்குப் போன அப்பியன் நெடுஞ்சாலையில் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் நடந்துபோய் கப்புவாவை அடைந்திருக்கலாம். பெரிய பெரிய எரிமலைப் பாளங்களால் அமைக்கப்பட்ட இந்தப் பிரபல சாலையிலிருந்து இத்தாலியின் அழகிய நாட்டுப்புறக் காட்சிகளைப் பார்க்க முடிந்தது; சில இடங்களிலிருந்து மத்தியதரைக் கடலின் கண்கொள்ளாக் காட்சியைக் காண முடிந்தது. இந்தச் சாலை, ரோமிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் முன்பு அமைந்திருந்த பொண்ட்டைன் மார்ஷஸ் என்ற சதுப்பு நிலப்பகுதி வழியாகவும், அப்பியு சந்தைவெளி வழியாகவும் போனது. “நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு” ரோமிலிருந்த சகோதரர்கள் அப்பியு சந்தைவெளி வரைக்கும்கூட வந்தார்கள் என்று லூக்கா எழுதினார்; அவர்களில் சிலர், ரோமிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மூன்று சத்திரம் என்ற இடம்வரை வந்து காத்திருந்தார்கள். எப்பேர்ப்பட்ட அன்பு!—அப். 28:15.

7 ஓய்வெடுப்பதற்காக வருகிற களைப்பான பயணிகளுக்கு அந்த அப்பியு சந்தைவெளி மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. அங்கே “ஒரு பக்கம் மாலுமிகளின் கூட்டமும், இன்னொரு பக்கம் முரட்டுத்தனமான சத்திரக்காரர்களும்” இருந்தார்கள். இது ரொம்பவே வெறுப்பூட்டுவதாக இருக்கும் என ரோம எழுத்தாளரான ஹோரேஸ் விவரித்தார். “இந்தளவு நாற்றம்பிடித்த தண்ணீர் வேறு எங்கேயும் இல்லை” என்றும் அவர் சொன்னார். அந்த இடத்தில் உட்கார்ந்து சாப்பிடக்கூட அவர் மறுத்துவிட்டாராம்! இத்தனை அசௌகரியங்கள் இருந்தபோதிலும், ரோமிலிருந்து வந்த சகோதரர்கள் அந்த இடத்தில் பவுலுக்காகவும் அவருடைய நண்பர்களுக்காகவும் சந்தோஷமாகக் காத்திருந்தார்கள். அவர்களை ரோமுக்கு அழைத்துச் செல்வதற்காகக் காத்திருந்தார்கள்!

8. சகோதரர்களை “பார்த்ததும்” பவுல் ஏன் கடவுளுக்கு நன்றி சொன்னார்?

8 “பவுல் அவர்களைப் [அதாவது, அந்தச் சகோதரர்களை] பார்த்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லி, தைரியம் அடைந்தார்” என்று பதிவு சொல்கிறது. (அப். 28:15) அன்பான சகோதரர்களைப் பார்த்த அந்த நொடியே பவுல் பலம் பெற்றார், ஆறுதல் அடைந்தார்; அவர்களில் சிலர் அவருக்குத் தெரிந்தவர்களாக இருந்திருக்கலாம். பவுல் ஏன் கடவுளுக்கு நன்றி சொன்னார்? சுயநலம் இல்லாத அன்பு கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களில் ஒன்று என்பதை அவர் தெரிந்திருந்தார். (கலா. 5:22) இன்றும்கூட, மற்றவர்களுக்காகத் தியாகம் செய்வதற்கும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் தருவதற்கும் கடவுளுடைய சக்தி கிறிஸ்தவர்களைத் தூண்டுகிறது.—1 தெ. 5:11, 14.

9. பவுலைச் சந்தித்த சகோதரர்கள் காட்டிய மனப்பான்மையை நாமும் எப்படிக் காட்டலாம்?

9 உதாரணத்துக்கு, யெகோவாவுக்கு முழுமையாக சேவை செய்வதற்காகப் பெரிய தியாகங்கள் செய்திருக்கிற வட்டாரக் கண்காணிகள், மிஷனரிகள் போன்ற முழுநேர ஊழியர்களை வரவேற்று உபசரிப்பதற்குக் கடவுளுடைய சக்தி சகோதரர்களைத் தூண்டியெழுப்புகிறது. அதனால், ‘வட்டாரக் கண்காணியுடைய சந்திப்புக்கு என்னுடைய பங்கில் இன்னும் அதிக ஆதரவைக் காட்ட முடியுமா, அவருக்கும் அவருடைய மனைவிக்கும் உபசரிப்பு காட்ட முடியுமா? அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்ய முடியுமா?’ என்றெல்லாம் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அப்படிச் செய்தீர்களென்றால், அதிகமான ஆசீர்வாதங்களை நீங்கள் பெறலாம். உதாரணமாக, பவுலும் அவருடைய நண்பர்களும் சொன்ன உற்சாகமான அனுபவங்களைக் கேட்ட அந்தச் சகோதரர்கள் எந்தளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.—அப். 15:3, 4.

“எல்லா இடங்களிலும் இந்த மதப்பிரிவுக்கு விரோதமாகவே பேசப்படுகிறது” (அப். 28:16-22)

10. ரோமில் பவுல் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தார், அங்கே வந்துசேர்ந்ததும் என்ன செய்தார்?

10 பவுலும் அவரோடு இருந்த சகோதரர்கள் எல்லாரும் கடைசியாக ரோமுக்கு வந்துசேர்ந்தார்கள்; அப்போது, “ஒரு படைவீரனுடைய காவலில் தனி வீட்டில் தங்கியிருக்க பவுலுக்கு அனுமதி கிடைத்தது.” (அப். 28:16) இப்படி வீட்டுக்காவலில் வைக்கப்படும் கைதிகள் தப்பித்துப்போகாமல் இருக்க காவல்காக்கும் வீரர்களோடு சேர்ந்து சங்கிலியால் இணைக்கப்பட்டார்கள். பவுலும்கூட அப்படிச் சங்கிலியால் இணைக்கப்பட்டார்; ஆனாலும், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர் பிரசங்கித்துவந்தார்; அவருடைய கைக்குத்தான் சங்கிலி போட முடிந்ததே தவிர, வாய்க்கு அல்ல. அதனால், பவுல் பயணக் களைப்பிலிருந்து ஓய்வெடுத்த மூன்றே நாட்களுக்குள், ரோமிலிருந்த பிரபல யூத ஆண்களைத் தன் இடத்துக்கு வரவழைத்து, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார், அவர்களுக்குச் சாட்சியும் கொடுத்தார்.

11, 12. யூதர்களுடைய மனதிலிருந்த தவறான எண்ணத்தைத் தகர்த்தெறிய பவுல் எப்படி முயற்சி செய்தார்?

11 கூடிவந்த யூதர்களிடம் பவுல், “சகோதரர்களே, நம் மக்களுக்கு விரோதமாகவோ நம் முன்னோர்களின் சம்பிரதாயங்களுக்கு விரோதமாகவோ நான் எதுவும் செய்யவில்லை. ஆனாலும் எருசலேமில் கைது செய்யப்பட்டு, ரோமர்களுடைய கையில் ஒப்படைக்கப்பட்டேன். அவர்கள் என்னை விசாரணை செய்த பின்பு, மரண தண்டனை கொடுக்குமளவுக்கு எந்தக் குற்றத்தையும் என்னிடம் பார்க்காததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள். யூதர்கள் அதை எதிர்த்ததால், ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் தேசத்தார்மேல் ஏதோவொரு குற்றச்சாட்டைச் சுமத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு நான் அப்படிச் செய்யவில்லை” என்றார்.—அப். 28:17-19.

12 பவுல் அந்த யூதர்களை “சகோதரர்களே” என்று சொன்னதன் மூலம் தானும் அவர்களில் ஒருவன் என்ற உணர்வை ஏற்படுத்தி, அவர்களுடைய மனதிலிருந்த தவறான எண்ணத்தைத் தகர்த்தெறிய முயற்சி செய்தார். (1 கொ. 9:20) மற்ற யூதர்களைக் குற்றம்சாட்ட அல்ல, ரோம அரசரிடம் மேல்முறையீடு செய்வதற்கே தான் அங்கே வந்திருப்பதை அவர்களிடம் தெளிவுபடுத்தினார். ஆனால், அவர் மேல்முறையீடு செய்திருந்த விஷயம் ரோமிலிருந்த யூதர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. (அப். 28:21) யூதேயாவிலிருந்த யூதர்கள் ஏன் இந்த விஷயத்தை ரோமிலிருந்த யூதர்களிடம் தெரிவிக்கவில்லை? ஒரு புத்தகம் இப்படிச் சொல்கிறது: “பவுல் பயணம் செய்த கப்பல் குளிர்காலத்துக்குப் பிறகு இத்தாலிக்கு வந்த முதல் கப்பலாக இருந்திருக்க வேண்டும்; அதனால், எருசலேமிலிருந்த யூத அதிகாரிகளின் பிரதிநிதிகள் அதற்குமுன் அங்கே போயிருக்க வாய்ப்பில்லை, அல்லது அந்த விஷயத்தைப் பற்றிய கடிதம் அங்கே போய்ச் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை.”

13, 14. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய பேச்சை பவுல் எப்படி எடுத்தார், நாம் எப்படி அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றலாம்?

13 அதன்பின், பவுல் அந்த யூதர்களுடைய ஆர்வத்தைத் தூண்டுகிற ஒரு குறிப்பைச் சொல்லி, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய பேச்சை எடுத்தார். “இஸ்ரவேலர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தவரின் காரணமாகத்தான் இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்று சொல்லி, “இதனால்தான் உங்களைப் பார்த்துப் பேசுவதற்காக இங்கே வரும்படி உங்களைக் கேட்டுக்கொண்டேன்” என்றார். (அப். 28:20) மேசியாவையும் அவருடைய அரசாங்கத்தையுமே இஸ்ரவேலர்கள் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தார்கள்; அதைப் பற்றித்தான் கிறிஸ்தவச் சபையில் இருந்தவர்கள் அறிவித்துவந்தார்கள். பவுலிடம் அந்த யூத மூப்பர்கள், “உங்களுடைய கருத்துகளை உங்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்வதுதான் சரி என்று நினைக்கிறோம். ஏனென்றால், எல்லா இடங்களிலும் இந்த மதப்பிரிவுக்கு விரோதமாகவே பேசப்படுகிறது என்று எங்களுக்குத் தெரியும்” என்று சொன்னார்கள்.—அப். 28:22.

14 நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிற ஒரு வாய்ப்புக் கிடைக்கும்போது, நாமும் பவுலைப் போலவே கேட்கிறவர்களின் சிந்தனையைத் தூண்டுகிற வார்த்தைகளை அல்லது ஆர்வத்தைத் தூண்டுகிற கேள்விகளைப் பயன்படுத்த வேண்டும். இதற்கு உதவும் அருமையான ஆலோசனைகள் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற புத்தகத்திலும், தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் என்ற புத்தகத்திலும் வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள் என்ற சிறு புத்தகத்திலும் இருக்கின்றன. பைபிள் படிப்புக்கு உதவுகிற இப்படிப்பட்ட கருவிகளை நீங்கள் நன்றாகப் பயன்படுத்தி வருகிறீர்களா?

‘முழுமையாகச் சாட்சி கொடுப்பதில்’ நமக்கு ஒரு முன்மாதிரி (அப். 28:23-29)

15. பவுல் சாட்சி கொடுத்ததில் என்ன நான்கு அம்சங்கள் பளிச்சென்று தெரிகின்றன?

15 அந்த உள்ளூர் யூதர்கள் பவுலைச் சந்திக்க ஒரு நாளைக் குறித்துக்கொண்டு, “அவர் தங்கியிருந்த வீட்டுக்கு” போனார்கள்; அதுவும் “ஏராளமான ஆட்கள்” போனார்கள். அப்போது, “காலையிலிருந்து சாயங்காலம்வரை, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களிடம் முழுமையாகச் சாட்சி கொடுத்தார். மோசேயின் திருச்சட்டத்திலிருந்தும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவைப் பற்றிய விஷயங்களைப் பக்குவமாக விளக்கிச் சொன்னார்.” (அப். 28:23) பவுல் இப்படிச் சாட்சி கொடுத்ததில் நான்கு அம்சங்கள் பளிச்சென்று தெரிகின்றன. முதலாவது, அவர் கடவுளுடைய அரசாங்கத்தை மையமாக வைத்துப் பேசினார். இரண்டாவது, “காலையிலிருந்து சாயங்காலம்வரை” சாட்சி கொடுத்ததன் மூலம் சுயநலம் இல்லாத மனப்பான்மையைக் காட்டினார். மூன்றாவது, வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார். நான்காவது, விஷயங்களை ‘பக்குவமாக விளக்கிச் சொல்லி’ கேட்கிறவர்களின் மனதைத் தொட முயற்சி செய்தார். எவ்வளவு அருமையான ஒரு முன்மாதிரி! அவர் இப்படிச் சாட்சி கொடுத்ததன் பலன் என்ன? “சிலர் அவர் சொன்ன விஷயங்களை நம்பினார்கள்”; சிலர் நம்பவில்லை. இதனால், ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, “அந்த இடத்தைவிட்டுப் போக ஆரம்பித்தார்கள்” என்று லூக்கா எழுதுகிறார்.—அப். 28:24, 25அ.

16-18. ரோமில் யூதர்கள் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து பவுல் ஏன் ஆச்சரியப்படவில்லை, மக்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளாதபோது நாம் எப்படி உணர வேண்டும்?

16 அந்த யூதர்கள் அப்படி நடந்துகொண்டதைப் பார்த்து பவுல் ஆச்சரியப்படவில்லை; ஏனென்றால், முன்பும்கூட சிலர் அப்படித்தான் நடந்திருந்தார்கள், அதை பைபிள் தீர்க்கதரிசனமும் முன்கூட்டியே சொல்லியிருந்தது. (அப். 13:42-47; 18:5, 6; 19:8, 9) அதனால், அங்கிருந்து கிளம்பிய யூதர்களிடம் பவுல் இப்படிச் சொன்னார்: “ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கடவுளுடைய சக்தி மிகச் சரியாகவே உங்கள் முன்னோர்களிடம் இப்படிச் சொன்னது: ‘“காதால் கேட்டாலும் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டீர்கள்; கண்ணால் பார்த்தாலும் ஒருபோதும் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள். . . . [உங்கள்] இதயம் இறுகிப்போயிருக்கிறது. . . . ” என்று நீ இந்த ஜனங்களிடம் போய்ச் சொல்.’” (அப். 28:25ஆ-27) “இறுகிப்போயிருக்கிறது” என்பதன் மூலமொழி வார்த்தை “தடித்துப்போயிருக்கிற” அல்லது “கொழுத்துப்போயிருக்கிற” இதயத்தைக் குறிக்கிறது; அப்படிப்பட்ட இதயத்தில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி உள்ளே போவது கஷ்டம். எவ்வளவு வருத்தகரமான நிலைமை!

17 மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களோ அந்த யூதர்களைப் போல் இல்லாமல் நல்ல செய்தியை “நிச்சயம் காதுகொடுத்துக் கேட்பார்கள்” என்று பவுல் கடைசியாகச் சொன்னார். (அப். 28:28; சங். 67:1; ஏசா. 11:10) மற்ற தேசத்தைச் சேர்ந்த நிறைய பேர் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டதை அவர் கண்ணாரப் பார்த்திருந்ததால் அந்த விஷயத்தைப் பற்றி அவரால் இந்தளவு உறுதியாக பேச முடிந்தது!—அப். 13:48; 14:27.

18 மக்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளாததைப் பார்த்து பவுல் கோபப்படவில்லை; இந்த விஷயத்திலும் நாம் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றலாம். வாழ்வுக்குப் போகிற பாதையைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்தான் என்பது நமக்குத் தெரிந்ததுதானே! (மத். 7:13, 14) நல்மனமுள்ளவர்கள் உண்மை வணக்கத்தின் பக்கம் வருவதைப் பார்த்து நாம் சந்தோஷப்படுகிறோம், மனதார அவர்களை வரவேற்கிறோம்.—லூக். 15:7.

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி . . . பிரசங்கித்துவந்தார்” (அப். 28:30, 31)

19. வீட்டுக்காவலில் இருந்தபோதுகூட பவுல் தன் நேரத்தை எப்படி நல்ல விதத்தில் பயன்படுத்தினார்?

19 பவுலின் அன்பையும் நம்பிக்கையான மனப்பான்மையையும் பற்றிச் சொல்லி லூக்கா தன்னுடைய பதிவை முடிக்கிறார்: “பவுல் தன்னுடைய வாடகை வீட்டில் இரண்டு வருஷங்கள் தங்கியிருந்தார். தன்னைப் பார்க்க வந்த எல்லாரையும் அன்பாக வரவேற்று, எந்தத் தடையும் இல்லாமல் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களுக்குப் பிரசங்கித்துவந்தார். அதோடு, எஜமானாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய விஷயங்களைக் கொஞ்சமும் தயக்கமில்லாமல் கற்பித்துவந்தார்.” (அப். 28:30, 31) உபசரிக்கும் குணம்... விசுவாசம்... பக்திவைராக்கியம்... இந்த மூன்றிலுமே பவுல் சிறந்த முன்மாதிரியாக இருந்தார்.

20, 21. ரோமில் பவுல் செய்த ஊழியத்திலிருந்து பயனடைந்த சிலருடைய உதாரணங்களைச் சொல்லுங்கள்.

20 பவுல் அன்பாக வரவேற்ற ஆட்களில் ஒநேசிமு என்பவரும் ஒருவர்; இவர் கொலோசெ நகரத்திலிருந்து ஓடிவந்திருந்த ஓர் அடிமை. ஒநேசிமு ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கு பவுல் உதவினார்; இவர் பவுலுக்கு “நம்பிக்கைக்குரிய அன்புச் சகோதரராக” ஆனார். சொல்லப்போனால், “எனக்குப் பிள்ளை போலான ஒநேசிமு” என்றுகூட பவுல் சொன்னார். (கொலோ. 4:9; பிலே. 10-12) ஒநேசிமு சத்தியத்தை ஏற்றுக்கொண்டது பவுலை நிச்சயமாகவே உற்சாகப்படுத்தியிருக்கும்! a

21 மற்றவர்களும்கூட பவுலுடைய அருமையான முன்மாதிரியிலிருந்து பயனடைந்தார்கள். பிலிப்பியர்களுக்கு அவர் இப்படி எழுதினார்: “என்னுடைய சூழ்நிலை நல்ல செய்தி பரவுவதற்கு உதவியாக இருந்ததே தவிர, தடையாக இருக்கவில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். நான் கிறிஸ்துவுக்காகத்தான் கைதியாக இருக்கிறேன் என்பது ரோம அரசனின் மெய்க்காவலர்கள் அனைவருக்கும் மற்ற எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது. நான் கைதியாக இருப்பதைப் பார்த்து, நம் எஜமானுக்கு ஊழியம் செய்கிற சகோதரர்களில் பெரும்பாலோருக்கு உறுதியான நம்பிக்கை கிடைத்திருக்கிறது. அதனால், கடவுளுடைய வார்த்தையைப் பயமில்லாமல் இன்னும் தைரியமாக அறிவித்து வருகிறார்கள்.”—பிலி. 1:12-14.

22. ரோமில் கைதியாக இருந்த சமயத்தை பவுல் எப்படிப் பயன்படுத்திக்கொண்டார்?

22 ரோமில் கைதியாக இருந்த சமயத்தை பவுல் நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொண்டார்; தற்போது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் பாகமாக இருக்கிற முக்கியக் கடிதங்களை அந்தச் சமயத்தில் அவர் எழுதினார். b அந்தக் கடிதங்கள் அன்று வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு பிரயோஜனமாக இருந்தன. இன்று நாமும் அவற்றிலிருந்து நன்மையடைகிறோம். கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு கொடுக்கப்பட்ட இந்த ஆலோசனைகள் அன்று எந்தளவுக்கு நடைமுறையாக இருந்ததோ அதேபோல் இன்றும் இருக்கின்றன.—2 தீ. 3:16, 17.

23, 24. இன்று யெகோவாவின் சாட்சிகளில் நிறைய பேர் அநியாயமாகச் சிறையில் அடைக்கப்பட்டபோதிலும், பவுலைப் போலவே எப்படிச் சந்தோஷத்தை இழக்காமல் தொடர்ந்து பிரசங்கித்து வந்திருக்கிறார்கள்?

23 பவுல் விடுதலை செய்யப்பட்டதைப் பற்றிய விவரம் அப்போஸ்தலர் புத்தகத்தில் இல்லை; ஆனால், அவர் சுமார் நான்கு வருஷங்கள் கைதியாக இருந்திருந்தார்—இரண்டு வருஷங்கள் செசரியாவிலும், இரண்டு வருஷங்கள் ரோமிலும்! c (அப். 23:35; 24:27) நல்ல செய்திக்காக அவர் இந்தளவு கஷ்டப்பட்டபோதிலும், கடவுளுடைய சேவையில் சந்தோஷத்தை இழக்காமல் தொடர்ந்து பிரசங்கித்துவந்தார். அதேபோல், இன்று யெகோவாவின் சாட்சிகளில் நிறைய பேர், தங்களுடைய விசுவாசத்துக்காக அநியாயமாகச் சிறையில் அடைக்கப்பட்டபோதிலும், சந்தோஷத்தை இழக்காமல் தொடர்ந்து பிரசங்கித்து வந்திருக்கிறார்கள். ஆடோல்ஃபோ என்பவரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; நடுநிலையாக இருந்ததால் அவர் ஸ்பெயின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அவரிடம் ஒரு அதிகாரி இப்படிச் சொன்னார்: “உன்னைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை கஷ்டம் கொடுத்தோம், எவ்வளவு மோசமாக நடத்தினோம்! ஆனாலும், நீ சிரித்த முகமாகவே இருந்தாய், அன்பாகவே பேசினாய்.”

24 போகப்போக, ஆடோல்ஃபோ சிறை அதிகாரிகளின் நம்பிக்கையைச் சம்பாதித்தார்; அதனால், அவருடைய சிறைக்கதவுகூடத் திறந்தே விடப்பட்டது. பைபிள் விஷயங்களைக் கேட்பதற்காகக் காவலர்கள் அவரைச் சந்திக்க வந்தார்கள். அவர்களில் ஒருவர் பைபிளை வாசிப்பதற்காக ஆடோல்ஃபோவின் சிறை அறைக்குப் போவார்; அவர் வாசித்துக்கொண்டிருக்கும்போது யாராவது வருகிறார்களா என்று ஆடோல்ஃபோ பார்த்துக்கொள்வார். ஒரு காவலரை ஒரு கைதி “காவல் காத்தார்!” இப்படிப்பட்ட உண்மையுள்ள சாட்சிகளின் அருமையான உதாரணம் ‘கடவுளுடைய வார்த்தையைப் பயமில்லாமல் இன்னும் தைரியமாக அறிவிக்க’ நம்மைத் தூண்டட்டும், எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் அப்படிச் செய்ய நம்மைத் தூண்டட்டும்!

25, 26. சுமார் 30 வருஷங்களுக்குள், அற்புதமான என்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியதை பவுல் பார்த்தார், நம்முடைய நாளில் அது எப்படி நிறைவேறி வருகிறது?

25 கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல் வீட்டுக்காவலில் இருந்தபோது தன்னைச் சந்திக்க வந்த எல்லாரிடமும் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி . . . பிரசங்கித்துவந்தார்.’ விறுவிறுப்பான அப்போஸ்தலர் புத்தகம் இதயத்தைத் தொடும் இந்த வார்த்தைகளோடு முடிவுக்கு வருகிறது. இயேசு தன்னுடைய சீஷர்களுக்குக் கொடுத்த வேலையைப் பற்றி அதன் முதல் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம்: “கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.” (அப். 1:8) அவர் அப்படிச் சொல்லி 30 வருஷங்களுக்குள், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி “வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டது.” d (கொலோ. 1:23) கடவுளுடைய சக்தியின் வல்லமைக்கு எப்பேர்ப்பட்ட அத்தாட்சி!—சக. 4:6.

26 அதே சக்தி இன்று, 240 நாடுகளில் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி . . . முழுமையாகச் சாட்சி கொடுக்க’ கிறிஸ்துவின் சகோதரர்களில் இப்போது பூமியில் இருக்கிறவர்களையும், ‘வேறே ஆடுகளான’ அவர்களுடைய நண்பர்களையும் பலப்படுத்தி வருகிறது! (யோவா. 10:16; அப். 28:23) அந்த வேலையில் நீங்கள் முழுமையாக ஈடுபடுகிறீர்களா?

a ஒநேசிமுவைத் தன்னோடு வைத்துக்கொள்ள பவுல் விரும்பினார், ஆனால் அது ரோமச் சட்டத்துக்கு விரோதமாகவும், ஒநேசிமுவின் எஜமானரான பிலேமோனுடைய உரிமைகளைப் பறிப்பதாகவும் இருந்திருக்கும். அதனால், அவர் ஒநேசிமுவை பிலேமோனிடமே திருப்பி அனுப்பினார்; அப்போது, பிலேமோனுக்கு பவுல் ஒரு கடிதத்தை எழுதி ஒநேசிமுவிடம் கொடுத்தனுப்பினார்; ஒநேசிமுவை ஒரு கிறிஸ்தவச் சகோதரராக அன்போடு ஏற்றுக்கொள்ளும்படி பிலேமோனை உற்சாகப்படுத்தி அதில் எழுதியிருந்தார்.—பிலே. 13-19.

c பவுல்—கி.பி. 61-க்குப் பிறகு...” என்ற பெட்டியை, பக்கம் 214-ல் பாருங்கள்.