அதிகாரம் 23
“என்னுடைய வாதத்தைக் கேளுங்கள்”
வெறித்தனமான கும்பல்களுக்கு முன்பாகவும், நியாயசங்கத்துக்கு முன்பாகவும் பவுல் சத்தியத்துக்காக வாதாடுகிறார்
அப்போஸ்தலர் 21:18–23:10-ன் அடிப்படையில்
1, 2. அப்போஸ்தலன் பவுல் எருசலேமுக்கு ஏன் வந்திருக்கிறார், என்ன பிரச்சினைகளைச் சந்திக்கப்போகிறார்?
பவுல் மறுபடியும் எருசலேம் நகரத்தின் குறுகலான, கூட்டமான வீதிகளில் நடந்துகொண்டிருக்கிறார். யெகோவாவின் மக்களுடைய சரித்திரத்தில் விசேஷ இடம் பிடித்த ஒரு நகரம் அது. எருசலேம் நகரவாசிகளில் பெரும்பாலான மக்கள் அதன் மகத்தான சரித்திரத்தை நினைத்து பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். அங்கிருக்கிற கிறிஸ்தவர்களில் நிறைய பேர்கூட கடந்தகால பாரம்பரியங்களுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்களே தவிர, யெகோவா செய்கிற புதிய மாற்றங்களுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள்; இது பவுலுக்குத் தெரியும். அதனால், எருசலேமுக்குத் திரும்பிப் போய் அவர்களுக்குப் பொருளாதார உதவி செய்வதற்கு முன்பு (எபேசுவில் இருந்தபோது) தீர்மானித்ததைப் போலவே இப்போது ஆன்மீக உதவியையும் தர முடிவு செய்கிறார். (அப். 19:21) அதனால்தான், தனக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று தெரிந்தும் எருசலேமுக்கு வந்திருக்கிறார்.
2 எருசலேமில் அவர் என்ன பிரச்சினைகளை எல்லாம் சந்திக்கப்போகிறார்? தன்னைப் பற்றிய வதந்திகளைக் கேட்டுக் குழம்பிப்போயிருக்கிற சில கிறிஸ்தவர்களிடமிருந்து ஒரு பிரச்சினையைச் சந்திக்கப்போகிறார். அதோடு, கிறிஸ்துவின் எதிரிகளிடமிருந்து இன்னும் பெரிய பிரச்சினைகளை எதிர்ப்படப்போகிறார். பல முறை அபாண்டமாகப் பழி சுமத்தப்படப்போகிறார், அடிக்கப்படப்போகிறார், கொலை மிரட்டலுக்கு ஆளாகப்போகிறார். படுபயங்கரமான இந்தச் சம்பவங்களின்போது தன்னுடைய தரப்பில் வாதாடவும்போகிறார். பிரச்சினைகளை அவர் மனத்தாழ்மையோடும், தைரியத்தோடும், விசுவாசத்தோடும் சமாளிக்கிற விதம் இன்று நமக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது. எப்படியென்று பார்க்கலாம்.
“கடவுளை மகிமைப்படுத்தினார்கள்” (அப். 21:18-20அ)
3-5. (அ) எருசலேமில் பவுல் யாரைச் சந்தித்தார், அவர்களிடம் என்ன பேசினார்? (ஆ) பவுல் எருசலேமிலிருந்த மூப்பர்களைச் சந்தித்துப் பேசியதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
3 பவுலும் அவருடைய நண்பர்களும் எருசலேமுக்கு வந்த மறுநாள், அங்கிருந்த மூப்பர்களைப் பார்க்கப் போனார்கள். ஆனால், அப்போஸ்தலர்கள் அங்கிருந்ததாகப் பதிவு சொல்வதில்லை; ஒருவேளை, ஊழியம் செய்வதற்காக இவர்கள் பல்வேறு நாடுகளுக்குப் போயிருக்கலாம். ஆனாலும், இயேசுவின் சகோதரரான யாக்கோபு மட்டும் அங்கே இருந்தார். (கலா. 2:9) அதனால், “மூப்பர்கள் எல்லாரும்” ஒன்றுகூடியிருந்த அந்தக் கூட்டத்துக்கு யாக்கோபு தலைமைதாங்கி இருக்கலாம்.—அப். 21:18.
4 பவுல் அந்த மூப்பர்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, “தன் ஊழியத்தின் மூலம் மற்ற தேசத்து மக்கள் மத்தியில் கடவுள் செய்த காரியங்களைப் பற்றி விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்.” (அப். 21:19) சகோதரர்கள் அந்த விஷயங்களைக் கேட்டு எவ்வளவு உற்சாகம் பெற்றிருப்பார்கள்! அதேபோல், இன்று நாமும் மற்ற நாடுகளின் ஊழிய அறிக்கைகளைக் கேட்கும்போது எவ்வளவு பூரித்துப்போகிறோம்!—நீதி. 25:25.
5 பவுல் அந்த மூப்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஐரோப்பாவிலிருந்து தான் கொண்டுவந்திருந்த நன்கொடைத் தொகையைப் பற்றியும் சொல்லியிருப்பார். தூரமான நாடுகளிலிருந்த சகோதரர்களின் அன்பும் அக்கறையும் அந்த மூப்பர்களுடைய மனதை நிச்சயம் நெகிழ வைத்திருக்கும். அதனால்தான், அவர்கள் “கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.” (அப். 21:20அ) அதே மாதிரி, இன்று இயற்கைப் பேரழிவுகளாலோ பயங்கர நோய்களாலோ பாதிக்கப்படுகிற சகோதரர்கள், மற்ற சகோதரர்களிடமிருந்து உதவியையும் உற்சாகத்தையும் பெறும்போது நெகிழ்ந்துபோகிறார்கள்.
நிறைய பேர் இன்னமும் “திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் வைராக்கியமாக இருக்கிறார்கள்” (அப். 21:20ஆ, 21)
6. என்ன பிரச்சினையைப் பற்றி பவுல் கேள்விப்பட்டார்?
6 யூதேயாவில் இருந்த ஒரு பிரச்சினையைப் பற்றி அந்த மூப்பர்கள் பவுலிடம் சொன்னார்கள்; அது பவுலோடு சம்பந்தப்பட்டதாக இருந்தது. அவர்கள் அவரிடம், “சகோதரரே, யூதர்களில் எத்தனையோ ஆயிரம் பேர் இயேசுவின் சீஷர்களாகியிருப்பது உங்களுக்கே தெரியும்; அவர்கள் எல்லாரும் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் வைராக்கியமாக இருக்கிறார்கள். ஆனால், மற்ற தேசத்து மக்கள் மத்தியில் வாழும் யூதர்களிடம் அவர்களுடைய பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யவோ நம்முடைய சம்பிரதாயங்களின்படி நடக்கவோ கூடாது என்று சொல்லி, மோசேயின் திருச்சட்டத்தைவிட்டு விலகுமாறு நீங்கள் கற்பிக்கிறீர்கள் என்ற வதந்தியை அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். a—அப். 21:20ஆ, 21.
7, 8. (அ) யூத விசுவாசிகளில் நிறைய பேர் எதைப் புரிந்துகொள்ளவில்லை? (ஆ) அதைப் புரிந்துகொள்ளவில்லை என்பதற்காக அவர்களை விசுவாசதுரோகிகள் என்று ஏன் முத்திரை குத்திவிடக் கூடாது?
7 திருச்சட்டம் நீக்கப்பட்டு 20 வருஷங்களுக்கு மேலான பிறகும், ஏன் அநேக கிறிஸ்தவர்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வைராக்கியமாக இருந்தார்கள்? (கொலோ. 2:14) கி.பி. 49-ல், எருசலேமில் ஒன்றுகூடிய அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சபைகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள்; அதில், மற்ற தேசத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இனி விருத்தசேதனம் செய்ய வேண்டியதில்லை என்றும், திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க தேவையில்லை என்றும் சொல்லியிருந்தார்கள். (அப். 15:23-29) ஆனால், அந்தக் கடிதத்தில் யூத கிறிஸ்தவர்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லை; அதனால், யூத கிறிஸ்தவர்களும் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்பது அந்தக் கிறிஸ்தவர்களில் நிறைய பேருக்குப் புரியவில்லை.
8 அவர்களுக்கு அது புரியவில்லை என்பதற்காக, கிறிஸ்தவர்களாக இருக்கிற தகுதியையே இழந்துவிட்டார்களா? இல்லை. ஏனென்றால், அவர்கள் ஒன்றும் பொய் மதச் சடங்குகளைப் பின்பற்ற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இல்லை, யெகோவா கொடுத்திருந்த திருச்சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதில்தான் பிடிவாதமாக இருந்தார்கள். திருச்சட்டத்தில் எதுவுமே பேய்த்தனமானதாக இருக்கவில்லை, தவறானதாகவும் இருக்கவில்லை. அது வெறுமனே பழைய ஒப்பந்தத்தோடு சம்பந்தப்பட்டிருந்தது. ஆனால், கிறிஸ்தவர்கள் புதிய ஒப்பந்தத்தின்கீழ் வந்திருந்தார்கள். அதனால், உண்மை வணக்கத்தில் திருச்சட்டத்துக்கு இனி இடமில்லாமல் போயிருந்தது; யூத கிறிஸ்தவர்களுக்கு இது புரியாததாலும், கிறிஸ்தவச் சபைமீது முழு நம்பிக்கை ஏற்படாததாலும்தான் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் வைராக்கியமாக இருந்தார்கள். அதனால், கடவுள் படிப்படியாக வெளிப்படுத்திய சத்தியங்களை ஏற்றுக்கொள்ள அவர்கள் தங்களுடைய மனதைப் பக்குவப்படுத்த வேண்டியிருந்தது. b—எரே. 31:31-34; லூக். 22:20.
“வெறும் வதந்தி” (அப். 21:22-26)
9. திருச்சட்டத்தைப் பற்றி பவுல் என்ன கற்றுக்கொடுத்தார்?
9 பவுல் மற்ற தேசத்து மக்கள் மத்தியில் வாழ்ந்த யூதர்களிடம், அவர்கள் தங்களுடைய “பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யவோ [தங்களுடைய] சம்பிரதாயங்களின்படி நடக்கவோ கூடாது” என்று சொன்னதாகப் பரப்பப்பட்ட வதந்திகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். பவுல் உண்மையில் என்ன கற்றுக்கொடுத்தார்? பவுல் மற்ற தேசத்து மக்களுக்கு அப்போஸ்தலனாக இருந்தார்; அவர்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க தேவையில்லை என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதோடு, திருச்சட்டத்துக்குக் கட்டுப்பட்டு விருத்தசேதனம் செய்யும்படி யூதராக இல்லாத விசுவாசிகளைத் தூண்டுகிறவர்கள் தவறு செய்கிறார்கள் என்றும் சொன்னார். (கலா. 5:1-7) அதேசமயம், அவர் போன இடங்களிலிருந்த யூதர்களிடமும் நல்ல செய்தியைப் பிரசங்கித்தார். அப்போது, இயேசுவின் மரணம் திருச்சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது என்றும், திருச்சட்டத்தின் செயல்களினால் அல்ல, விசுவாசத்தினால்தான் கடவுளுக்குமுன் நீதிமானாக இருக்க முடியும் என்றும் நிச்சயம் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்திருப்பார்.—ரோ. 2:28, 29; 3:21-26.
10. திருச்சட்டம் மற்றும் விருத்தசேதனம் விஷயத்தில் பவுல் எப்படிச் சமநிலையோடு இருந்தார்?
10 ஆனாலும், ஓய்வுநாளன்று வேலை செய்யக் கூடாது... சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது... போன்ற யூத பாரம்பரியங்கள் சிலவற்றைக் கடைப்பிடித்துவந்த சகோதரர்களுடைய மனநிலையை அவர் புரிந்திருந்தார். (ரோ. 14:1-6) விருத்தசேதனத்தைப் பற்றி அவர் சட்டங்களைப் போடவில்லை. சொல்லப்போனால், தீமோத்தேயுவுக்கு விருத்தசேதனம் செய்தார்; ஏன்? தீமோத்தேயுவின் தகப்பன் ஒரு கிரேக்கர் என்று தெரிந்திருந்த யூதர்கள் தேவையில்லாமல் அவர்மீது குறை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக. (அப். 16:3) விருத்தசேதனம் செய்வதா வேண்டாமா என்பது அவரவருடைய தனிப்பட்ட தீர்மானமாக இருந்தது. கலாத்தியர்களிடம் பவுல் இப்படி சொன்னார்: “விருத்தசேதனம் செய்துகொள்வதும் முக்கியமல்ல, விருத்தசேதனம் செய்துகொள்ளாமல் இருப்பதும் முக்கியமல்ல. அன்பினால் விசுவாசத்தைக் காட்டுவதுதான் முக்கியம்.” (கலா. 5:6) ஆனால், திருச்சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காக விருத்தசேதனம் செய்வது... அல்லது யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற கட்டாயம் விருத்தசேதனம் செய்ய வேண்டும் என்று சொல்வது... விசுவாசமற்ற செயல்.
11. மூப்பர்கள் பவுலிடம் என்ன செய்யச் சொன்னார்கள், அதில் என்ன உட்பட்டிருந்தது? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
11 அதனால், பவுலைப் பற்றிய வதந்திகள் முழுக்க முழுக்க பொய்யாக இருந்தபோதிலும், யூத கிறிஸ்தவர்களுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது. அதனால், மூப்பர்கள் பவுலைப் பார்த்து, “கடவுளிடம் நேர்ந்துகொண்ட நான்கு ஆண்கள் இப்போது எங்களோடு இருக்கிறார்கள். அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களோடு சேர்ந்து நீங்களும் தூய்மைச் சடங்கு செய்துகொள்ளுங்கள். அவர்கள் தலைச்சவரம் செய்துகொள்வதற்கு ஆகும் எல்லா செலவுகளையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிச் செய்தால் உங்களைப் பற்றிச் சொல்லப்பட்ட விஷயமெல்லாம் வெறும் வதந்தி என்பதையும், நீங்கள் நல்ல நடத்தை உள்ளவர் என்பதையும், திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பவர் என்பதையும் எல்லாரும் புரிந்துகொள்வார்கள்” c என்று சொன்னார்கள்.—அப். 21:23, 24.
12. பவுல் எப்படி வளைந்துகொடுப்பவராக, மூப்பர்களோடு ஒத்துழைப்பவராக இருந்தார்?
12 உண்மையில், பிரச்சினை தன்னைப் பற்றிய வதந்திகள் அல்ல, ஆனால் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் யூத கிறிஸ்தவர்கள் காட்டிய வைராக்கியம்தான் என்று பவுல் அந்த மூப்பர்களிடம் அடித்துச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை, வளைந்துகொடுப்பவராக இருந்தார்; கடவுளுடைய நியமங்களுக்கு விரோதமாக இல்லாதவரை அந்த மூப்பர்கள் சொன்னவற்றைச் செய்ய மனமுள்ளவராக இருந்தார். முன்னொரு சமயம் கொரிந்து சபையில் இருந்தவர்களுக்கு அவர் இப்படி எழுதியிருந்தார்: “திருச்சட்டத்தின்கீழ் நான் இல்லாதபோதிலும், திருச்சட்டத்தின்கீழ் இருப்பவர்களைக் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவர திருச்சட்டத்தின்கீழ் இருப்பவனைப் போல் ஆனேன்.” (1 கொ. 9:20) இந்தச் சமயத்தில், பவுல் எருசலேமிலிருந்த மூப்பர்களோடு ஒத்துழைத்து, ‘திருச்சட்டத்தின்கீழ் இருப்பவனைப் போலானார்.’ அதனால், பவுலுடைய நல்ல முன்மாதிரியைப் பின்பற்றி, நாமும் பிடிவாதமாக இல்லாமல் வளைந்துகொடுப்பவர்களாக இருக்க வேண்டும், மூப்பர்களோடு ஒத்துழைக்க வேண்டும்.—எபி. 13:17.
“இவன் உயிரோடே இருக்கக் கூடாது!” (அப். 21:27–22:30)
13. (அ) சில யூதர்கள் ஆலயத்தில் ஏன் கலவரம் உண்டாக்கினார்கள்? (ஆ) பவுல் எப்படி உயிர்தப்பினார்?
13 ஆலயத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிற நாட்கள் முடிவடைந்தபோது, ஆசியாவிலிருந்து வந்திருந்த யூதர்கள் பவுலைப் பார்த்து, யூதராக இல்லாதவர்களை ஆலயத்துக்கு அழைத்துக்கொண்டு வந்ததாகப் பொய்யாகக் குற்றம் சுமத்தினார்கள், கூட்டத்தைக் கூட்டி கலவரம் செய்தார்கள். ரோமப் படைத் தளபதி மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், பவுலை அவர்கள் அடித்தே கொலை செய்திருப்பார்கள். ஆனாலும், படைத் தளபதி அவரைச் சங்கிலிகளில் கட்டும்படி கட்டளையிட்டார். அன்றிலிருந்து நான்கு வருஷங்களுக்கு மேல் அவர் கைதியாகவே இருந்தார். அவருக்கு வந்த ஆபத்து அதோடு முடியவில்லை. பவுலை ஏன் அடிக்கிறீர்கள் என்று யூதர்களிடம் தளபதி கேட்டபோது, ஆளாளுக்கு ஒவ்வொன்றைச் சொல்லிக் கத்தினார்கள். அந்தக் கூச்சலில் தளபதியால் ஒன்றுமே புரிந்துகொள்ள முடியவில்லை. கடைசியில், படைவீரர்கள் பவுலைத் தூக்கிக்கொண்டு போக வேண்டியிருந்தது. அவர்கள் படைவீரர்களின் குடியிருப்புக்குள் போகவிருந்த சமயத்தில், பவுல் படைத் தளபதியைப் பார்த்து, “இந்த மக்களிடம் பேச இப்போது எனக்கு அனுமதி கொடுக்கும்படி உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்” என்றார். (அப். 21:39) தளபதி அனுமதி கொடுத்தார், பின்பு பவுல் தைரியமாகத் தன் விசுவாசத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
14, 15. (அ) யூதர்களிடம் பவுல் என்ன விளக்கினார்? (ஆ) யூதர்களுடைய கோபத்துக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள ரோமப் படைத் தளபதி என்ன செய்தார்?
14 “என்னுடைய வாதத்தைக் கேளுங்கள்” என்ற வார்த்தைகளுடன் பவுல் தன் பேச்சை ஆரம்பித்தார். (அப். 22:1) கூடியிருந்த மக்களிடம் எபிரெயு மொழியில் பேசியபோது, அவர்கள் அப்படியே அமைதியானார்கள். அதன்பின்பு, தான் கிறிஸ்துவின் சீஷராக ஆனதற்கான காரணங்களை ஒளிவுமறைவில்லாமல் விளக்க ஆரம்பித்தார். அவை உண்மைதானா என்பதை, விருப்பப்பட்டால் யூதர்களே உறுதிப்படுத்திக்கொள்வதற்காகச் சில விவரங்களைச் சேர்த்து சொன்னார். உதாரணத்துக்கு, பேரும் புகழும் பெற்ற கமாலியேலின் காலடியில் தான் கல்வி கற்றதைப் பற்றியும், கிறிஸ்துவின் சீஷர்களைத் துன்புறுத்தியதைப் பற்றியும் சொன்னார்; அங்கிருந்த சிலருக்கு இது தெரிந்திருக்கலாம். பின்பு, தான் தமஸ்குவுக்குப் போகும் வழியில், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு ஒரு தரிசனத்தில் தனக்குக் காட்சியளித்து, தன்னிடம் பேசியதாக சொன்னார். அதோடு, தன்னுடன் வந்தவர்கள் பிரகாசமான ஒரு ஒளியைப் பார்த்ததாகவும், ஒரு குரலைக் கேட்டதாகவும் சொன்னார், ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சொன்னார். (அப். 9:7; 22:9) அந்தச் சமயத்தில் தன்னுடைய பார்வை பறிபோனதாகவும், தன்னோடு வந்தவர்கள் தன்னைக் கைத்தாங்கலாக தமஸ்குவுக்கு கூட்டிக்கொண்டு போனதாகவும் சொன்னார். அங்கிருந்த யூதர்களுக்கு நன்றாக தெரிந்திருந்த அனனியா என்பவர் தனக்கு அற்புதமாகப் பார்வை அளித்ததாக சொன்னார்.
15 அதன்பின், தான் எருசலேமுக்குப் போனபோது, ஆலயத்தில் இயேசு தனக்குக் காட்சி அளித்ததாகச் சொன்னார். அவர் இப்படிச் சொன்னதுமே, யூதர்களுக்குக் கோபம் தலைக்கேறியது; “இவனை ஒழித்துக்கட்டுங்கள், இவன் உயிரோடே இருக்கக் கூடாது!” என்று வெறித்தனமாகக் கத்தினார்கள். (அப். 22:22) பவுலைக் காப்பாற்றுவதற்காக ரோமப் படைத் தளபதி அவரைப் படைவீரர்களின் குடியிருப்புக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டார். யூதர்களுடைய கோபத்துக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள பவுலை முள்சாட்டையால் அடித்து விசாரிக்கும்படியும் கட்டளையிட்டார். ஆனால், பவுல் தன்னுடைய ரோமக் குடியுரிமையைப் பயன்படுத்தி சட்ட ரீதியாகப் பாதுகாப்புப் பெற முயற்சி செய்தார். இன்றும் யெகோவாவின் சாட்சிகள் வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகத் தங்களுடைய உரிமைகளைப் பயன்படுத்தி சட்ட ரீதியாகப் பாதுகாப்புப் பெற முயற்சி எடுக்கிறார்கள். (“ ரோமச் சட்டங்களும் ரோமக் குடிமக்களும்” என்ற பெட்டியை, பக்கம் 184-ல் பாருங்கள். அதோடு, “ நீதிமன்ற வழக்குகள்—இன்றைக்கு” என்ற பெட்டியை, பக்கம் 186-ல் பாருங்கள்.) பவுல் ஒரு ரோமக் குடிமகன் என்று தெரிந்ததும், அவரிடமிருந்து வேறு வழியில்தான் தகவல்களைப் பெற முடியும் என்று அந்தத் தளபதி புரிந்துகொண்டார். அதனால் அடுத்த நாளே யூதர்களின் உச்ச நீதிமன்றமான நியாயசங்கத்தை அவசரமாகக் கூட்டி பவுலை அங்கே நிறுத்தினார்.
“நான் ஒரு பரிசேயன்” (அப். 23:1-10)
16, 17. (அ) நியாயசங்கத்துக்கு முன்பு பவுல் பேசியபோது என்ன நடந்தது என்பதை விவரியுங்கள். (ஆ) பவுல் அடிவாங்கிய சமயத்தில் மனத்தாழ்மைக்கு எப்படி முன்மாதிரியாக இருந்தார்?
16 நியாயசங்கத்துக்கு முன்பு பவுல் தன் தரப்பு வாதத்தை இப்படித் தொடங்கினார்: “சகோதரர்களே, இந்த நாள்வரை கடவுளுக்கு முன்னால் முற்றிலும் சுத்தமான மனசாட்சியோடு நடந்து வந்திருக்கிறேன்.” (அப். 23:1) அவர் இப்படிச் சொல்லி வாயை மூடவில்லை, அதற்குள் “தலைமைக் குருவான அனனியா, பவுலின் வாயில் அடிக்கச் சொல்லி தன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் கட்டளையிட்டார்.” (அப். 23:2) எப்பேர்ப்பட்ட அவமானம்! பவுல் சொன்னது உண்மையா இல்லையா என்று விசாரித்துத் தெரிந்துகொள்வதற்கு முன்பே ஒரு பொய்யனைப் போல் அவரை நடத்தியது வெறுப்பின் உச்சத்தைக் காட்டியது! அதனால்தான் பவுல், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, கடவுள் உன்னை அடிக்கப்போகிறார். சட்டப்படி என்னை நியாயம் விசாரிக்க உட்கார்ந்திருக்கிற நீயே சட்டத்தை மீறி என்னை அடிக்கச் சொல்லிக் கட்டளை கொடுக்கிறாயா?”என்றார்.—அப். 23:3.
17 அங்கிருந்த சிலர் ஒரு நொடி அதிர்ந்துபோனார்கள்; பவுல் அடிவாங்கியதைப் பார்த்து அல்ல, பவுல் சொன்னதைக் கேட்டு! அதனால் “கடவுளுக்குச் சேவை செய்யும் தலைமைக் குருவையே அவமதிக்கிறாயா?” என்றார்கள். அதற்கு பவுல், “சகோதரர்களே, அவர் தலைமைக் குரு என்று எனக்குத் தெரியாது. ‘உங்கள் மக்களின் தலைவரை நீங்கள் மரியாதையில்லாமல் பேசக் கூடாது’ என எழுதப்பட்டிருக்கிறதே’” என்றார். d (அப். 23:4, 5; யாத். 22:28) இப்படிச் சொன்னதன் மூலம் மனத்தாழ்மையும் திருச்சட்டத்துக்கு மரியாதையும் காட்டுவதில் அவர் முன்மாதிரியாக இருந்தார். அடுத்து பவுல் ஒரு புதிய யுக்தியைப் பயன்படுத்தினார். நியாயசங்கத்தில் ஒரு தொகுதி சதுசேயர்கள், மற்றொரு தொகுதி பரிசேயர்கள் என்பதைத் தெரிந்திருந்த அவர், “சகோதரர்களே, நான் ஒரு பரிசேயன். ஆம், பரிசேயர்களுடைய மகன். இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று நான் நம்புவதால்தான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன்” என்று சொன்னார்.—அப். 23:6.
18. பவுல் ஏன் தன்னை ஒரு பரிசேயன் என்று சொன்னார், சில சந்தர்ப்பங்களில் நாமும் அவர் பயன்படுத்தியதைப் போன்ற முறைகளை எப்படிப் பயன்படுத்தலாம்?
18 பவுல் தன்னை ஒரு பரிசேயன் என்று ஏன் சொன்னார்? ஏனென்றால், அவர் “பரிசேயர்களுடைய மகன்,” அதாவது பரிசேய குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் அந்தச் சமயத்தில்கூட அநேகர் அவரை ஒரு பரிசேயராகப் பார்த்தார்கள். e ஆனால், பரிசேயர்களுக்கு இருந்த உயிர்த்தெழுதல் நம்பிக்கை தனக்கும் இருந்ததுபோல் அவரால் எப்படிச் சொல்ல முடிந்தது? உடல் செத்தாலும் ஆத்துமா சாகாது என்றும், நல்லவர்களுடைய ஆத்துமா மறுபிறவி எடுக்கும் என்றும் பரிசேயர்கள் நம்பினார்கள். பவுல் அவற்றைத் துளியும் நம்பவில்லை. இயேசு கற்றுக்கொடுத்த உயிர்த்தெழுதலைத்தான் நம்பினார். (யோவா. 5:25-29) ஆனாலும், இறந்தபின் மீண்டும் உயிர் வாழும் நம்பிக்கை பரிசேயர்களுக்கு இருந்ததைப் போல் தனக்கும் இருப்பதாக ஒத்துக்கொண்டார். சதுசேயர்களுக்கோ அந்த நம்பிக்கை இல்லை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் பேசும்போது நாமும் இதேபோன்ற முறைகளைப் பயன்படுத்தலாம். அவர்கள் தங்களுடைய கடவுள்களை நம்புகிறார்கள், நாமோ பைபிளில் சொல்லப்பட்டுள்ள கடவுளை நம்புகிறோம். ஆனால் ஒரு ஒற்றுமை, இரண்டு பேருக்குமே கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அதனால், அவர்களைப் போல் நமக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்று அவர்களிடம் சொல்லலாம்.
19. நியாயசங்கம் ஏன் பிளவுபட்டது?
19 பவுல் அப்படிச் சொன்னதும் நியாயசங்கம் பிளவுபட்டது. “அங்கே பயங்கர கூச்சல் உண்டானது. பரிசேயப் பிரிவைச் சேர்ந்த வேத அறிஞர்களில் சிலர் எழுந்து, ‘இந்த மனுஷன் எந்தக் குற்றமும் செய்திருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு பேயோ தேவதூதரோ அவனிடம் பேசியிருந்தால்,——’ என்று காரசாரமாக வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள்.” (அப். 23:9) பவுலிடம் ஒரு தேவதூதர் பேசியிருக்கலாம் என்ற விஷயம் சதுசேயர்களுக்கு எரிச்சல் உண்டாக்கியது; ஏனென்றால், அவர்கள் தேவதூதர்களையே நம்பவில்லை. (“ சதுசேயர்களும் பரிசேயர்களும்” என்ற பெட்டியை கீழே பாருங்கள்.) கூடியிருந்தவர்களிடையே வாக்குவாதம் முற்றியபோது அவர்களிடமிருந்து பவுலை ரோமப் படைத் தளபதி மீண்டும் காப்பாற்றினார். (அப். 23:10) என்றாலும், பவுல் ஆபத்திலிருந்து முழுவதுமாகத் தப்பிக்கவில்லை. அதன்பின் அவருக்கு என்ன நடந்தது? அடுத்த அதிகாரத்தில் பார்ப்போம்.
a ஆயிரக்கணக்கான யூத கிறிஸ்தவர்கள் இருந்ததால், அநேகருடைய வீடுகளில் சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கும்.
b சில வருஷங்கள் கழித்து, அப்போஸ்தலன் பவுல் எபிரெயர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்; அதில் பழைய ஒப்பந்தத்தைவிட புதிய ஒப்பந்தமே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டினார். அதோடு, புதிய ஒப்பந்தம் பழைய ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டினார். பவுலின் வலிமைமிக்க குறிப்புகள், திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தே ஆக வேண்டுமென்று வாதாடிய யூதர்களிடம் தர்க்க ரீதியாகப் பேச யூத கிறிஸ்தவர்களுக்கு உதவின; அதோடு, திருச்சட்டத்துக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவந்த சில கிறிஸ்தவர்களின் புரிந்துகொள்ளுதலைச் சரிசெய்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தின.—எபி. 8:7-13.
c அந்த நான்கு ஆண்கள் நசரேய விரதம் மேற்கொண்டிருந்தார்கள் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். (எண். 6:1-21) திருச்சட்டமும் அதன் ஒரு அம்சமான நசரேய விரதமும் அப்போது முடிவுக்கு வந்துவிட்டது என்பது உண்மைதான்; ஆனாலும், அந்த ஆண்கள் யெகோவாவிடம் நேர்ந்துகொண்ட விரதத்தை நிறைவேற்றுவதில் தவறில்லை என்று பவுல் நினைத்திருக்கலாம். அதனால், அந்த நான்கு பேரோடு போவதும், அவர்களுடைய செலவுகளைக் கவனித்துக்கொள்வதும் தவறில்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். அது என்ன விரதம் என்று நமக்குச் சரியாகத் தெரியாது; அது என்னவாக இருந்திருந்தாலும் சரி, பவுல் நிச்சயம் (நசரேயர்கள் செய்ததுபோல) மிருக பலிகளைப் பாவநிவாரண பலியாகச் செலுத்துவதற்கு ஒத்துக்கொண்டிருக்க மாட்டார். ஏன்? இயேசு கிறிஸ்து பரிபூரண பலியைச் செலுத்தியிருந்ததால், மிருகங்களைப் பாவநிவாரண பலிகளாகச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போயிருந்தது. அதனால், பவுல் அந்தச் சமயத்தில் என்ன செய்தார் என்று நமக்குச் சரியாகத் தெரியாவிட்டாலும், அவர் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்திருக்க மாட்டார் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்.
d சிலர் சொல்கிறபடி, பவுலுக்குக் கண் பார்வை மங்கியிருந்ததால் தலைமைக் குருவை அவரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம். அல்லது, அவர் எருசலேமுக்குப் போய் ரொம்ப நாள் ஆகியிருந்திருந்ததால் அப்போதிருந்த தலைமைக் குரு அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது, யார் அந்தக் கட்டளையைக் கொடுத்ததென அந்தக் கூட்டத்தில் அவரால் பார்க்க முடியாமல் போயிருக்கலாம்.
e யூதர்களாக இல்லாதவர்கள் திருச்சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டுமா வேண்டாமா என்று அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் கி.பி. 49-ல் கலந்துபேசிக்கொண்டிருந்த சமயத்தில், “பரிசேய மதப்பிரிவிலிருந்து விலகி இயேசுவின் சீஷர்களாக ஆகியிருந்த சிலர்” அங்கிருந்தார்கள். (அப். 15:5) அப்படியென்றால், ஏதோவொரு விதத்தில் அவர்கள் இன்னமும் பரிசேயப் பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள் என்று தெரிகிறது.