Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 24

“தைரியமாயிரு!”

“தைரியமாயிரு!”

தன்னைக் கொல்வதற்கான சதித்திட்டத்திலிருந்து பவுல் தப்பிக்கிறார், பேலிக்ஸ்முன் தன்னுடைய தரப்பில் வாதாடுகிறார்

அப்போஸ்தலர் 23:11–24:27-ன் அடிப்படையில்

1, 2. எருசலேமில் தான் சந்தித்த துன்புறுத்தல்களைக் கண்டு பவுல் ஏன் ஆச்சரியப்படுவதில்லை?

 எருசலேமில் வெறித்தனமான ஒரு கும்பலின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்ட பவுல், இப்போது மறுபடியும் காவலில் இருக்கிறார். வைராக்கியமான இந்த அப்போஸ்தலன், தான் எதிர்ப்படுகிற துன்புறுத்தல்களைக் கண்டு ஆச்சரியப்படுவதில்லை. ஏனென்றால், இந்த நகரத்தில் “சிறைவாசத்தையும் உபத்திரவத்தையும்” அனுபவிப்பார் என்று அவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. (அப். 20:22, 23) என்ன நடக்கும் என்ற நுணுக்கமான விவரங்கள் தனக்குத் தெரியாவிட்டாலும், இயேசுவின் பெயருக்காகத் தான் தொடர்ந்து துன்பப்பட வேண்டியிருக்கும் என்பதை பவுல் தெரிந்திருக்கிறார்.—அப். 9:16.

2 கை கால்கள் கட்டப்பட்டு அவர் ‘மற்ற தேசத்து மக்களின் கைகளில் ஒப்படைக்கப்படுவார்’ என்று கிறிஸ்தவத் தீர்க்கதரிசிகளும்கூட எச்சரித்திருந்தார்கள். (அப். 21:4, 10, 11) சமீபத்தில்தான், யூதர்கள் அவரைக் கொல்ல முயற்சி செய்தார்கள்; மறுநாள், அவர் சொன்னதைப் பற்றி வாக்குவாதம் செய்த நியாயசங்க உறுப்பினர்கள், அவரை ‘பிய்த்து விடுமளவுக்கு’ போனார்கள். இப்போது, பவுல் ரோமப் படைவீரர்களின் காவலில் இருக்கிறார்; விசாரணைகளும் குற்றச்சாட்டுகளும் அவருக்குத் தொடர்கதையாக இருக்கப்போகின்றன. (அப். 21:31; 23:10) அதனால், பவுலுக்கு உண்மையிலேயே உற்சாகம் தேவைப்படுகிறது.

3. பிரசங்க வேலையில் தொடர்ந்து ஈடுபட நாம் எப்படி உற்சாகத்தைப் பெறுகிறோம்?

3 இந்தக் கடைசி நாட்களின்போது, “கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகக் கடவுள்பக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்” என்பதை நாம் தெரிந்திருக்கிறோம். (2 தீ. 3:12) அதனால், பிரசங்க வேலையில் தொடர்ந்து ஈடுபட நமக்கும் அவ்வப்போது உற்சாகம் தேவை. பிரசுரங்கள், கூட்டங்கள் ஆகியவற்றின் மூலம் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” தருகிற காலத்துக்கேற்ற, தெம்பூட்டும் வார்த்தைகளுக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! (மத். 24:45) நல்ல செய்தியை எதிர்க்கிறவர்கள் யாருமே வெற்றிபெற மாட்டார்கள் என்று யெகோவா உறுதியளித்திருக்கிறார். அதனால், அவர்களால் அவருடைய ஊழியர்களை அடியோடு அழிக்க முடியாது, பிரசங்க வேலையையும் நிறுத்த முடியாது. (ஏசா. 54:17; எரே. 1:19) ஆனால், அப்போஸ்தலன் பவுலுடைய விஷயத்தைப் பற்றி என்ன? எதிர்ப்பின் மத்தியிலும் ஊழியத்தில் தொடர்ந்து ஈடுபட அவருக்கு உற்சாகம் கிடைத்ததா? கிடைத்தது என்றால், எப்படி? அதன்பின் அவர் என்ன செய்தார்?

சதிகாரர்களின் “சபதம்” நிறைவேறாமல் போகிறது (அப். 23:11-34)

4, 5. பவுலுக்கு எப்படி உற்சாகம் கிடைத்தது, அது ஏன் சரியான சமயத்தில் கிடைத்த உற்சாகமாக இருந்தது?

4 நியாயசங்க உறுப்பினர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட இரவன்று அப்போஸ்தலன் பவுலுக்கு அதிக பலம் கிடைத்தது. பதிவு இப்படிச் சொல்கிறது: “பவுலுக்குப் பக்கத்தில் எஜமான் வந்து நின்று, ‘தைரியமாயிரு! எருசலேமில் நீ என்னைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுத்துவந்திருப்பது போலவே, ரோமிலும் சாட்சி கொடுக்க வேண்டும்’ என்று சொன்னார்.” (அப். 23:11) இயேசுவின் தைரியமான வார்த்தைகளைக் கேட்ட பவுலுக்கு விடுதலை நிச்சயம் என்ற உறுதி கிடைத்தது. எருசலேமிலிருந்து உயிர்தப்பி ரோமுக்குப் போய் சாட்சி கொடுக்கிற பாக்கியம் தனக்குக் கிடைக்கப்போகிறது என்பதை பவுல் புரிந்துகொண்டார்.

“அவர்களுடைய ஆட்களில் 40 பேருக்கும் அதிகமானவர்கள் அவரைக் கொலை செய்யக் காத்திருக்கிறார்கள்.”​—அப்போஸ்தலர் 23:21

5 தக்க சமயத்தில்தான் அவருக்கு அந்த உற்சாகம் கிடைத்தது. ஏனென்றால் அடுத்த நாள், 40-க்கும் அதிகமான யூத ஆண்கள் அவருக்கு எதிராக “சதித்திட்டம் போட்டார்கள்; ‘பவுலைக் கொலை செய்யும்வரை சாப்பிடவோ குடிக்கவோ மாட்டோம்’ என்று சொல்லி சபதமும் செய்தார்கள்.” பவுலைக் கொலை செய்ய அந்த யூதர்கள் எந்தளவு தீவிரமாயிருந்தார்கள் என்பதை அவர்களுடைய “சபதம்” காட்டியது. இந்தச் சபதத்தை நிறைவேற்றாவிட்டால், தங்களுக்குச் சாபம் வரும் என்று அவர்கள் நினைத்தார்கள். (அப். 23:12-15) பவுலை விசாரணை செய்து விவரங்களைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற சாக்கில், அவரை மறுபடியும் நியாயசங்கத்துக்கு வரச்சொல்லி, வழியிலேயே தீர்த்துக்கட்ட அவர்கள் திட்டம் போட்டார்கள்; இந்தத் திட்டத்துக்கு, முதன்மை குருமார்களும் பெரியோர்களும் உடந்தையாக இருந்தார்கள்.

6. பவுலைக் கொல்வதற்கான சதித்திட்டம் எப்படித் தெரியவந்தது, இன்றைய இளைஞர்கள் பவுலின் சகோதரி மகனுடைய உதாரணத்தை எப்படிப் பின்பற்றலாம்?

6 ஆனால், பவுலுடைய சகோதரியின் மகன் இந்தச் சதித்திட்டத்தைக் கேள்விப்பட்டு, பவுலிடம் தெரிவித்தான். அதைக் கேட்ட அவர், ரோமப் படைத் தளபதியான கிலவுதியு லீசியாவிடம் போய்த் தெரிவிக்கும்படி சொன்னார். (அப். 23:16-22) பெயரிடப்படாத இந்த இளைஞனைப் போல் தைரியமாகச் செயல்படுகிற இளைஞர்களை யெகோவா நிச்சயம் நேசிக்கிறார்; அவர்கள் தங்களுடைய நலனைவிட தங்கள் சகோதரர்களின் நலனுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள், ஊழியத்தை ஆதரிப்பதற்காக முடிந்ததையெல்லாம் செய்கிறார்கள்.

7, 8. பவுலின் பாதுகாப்புக்கு கிலவுதியு லீசியா என்னவெல்லாம் செய்தார்?

7 பவுலைக் கொல்வதற்கான சதித்திட்டத்தைக் கேள்விப்பட்ட உடனேயே, கிலவுதியு லீசியா தன் கட்டுப்பாட்டிலிருந்த 1,000 வீரர்களில் 470 பேரை—படைவீரர்கள், ஈட்டிவீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோரை—நியமித்து பவுலை ராத்திரியோடு ராத்திரியாக எருசலேமிலிருந்து செசரியாவுக்குப் பத்திரமாக அழைத்துச் செல்லும்படி கட்டளை கொடுத்தார். அங்கே போனதும், அவரை ஆளுநர் பேலிக்சிடம் ஒப்படைக்கும்படியும் கட்டளை கொடுத்தார். a ரோமர்கள் செசரியாவிலிருந்துதான் யூதேயாவை ஆட்சி செய்தார்கள்; செசரியாவில் யூதர்கள் பெருமளவு குடியிருந்தபோதிலும், யூதராக இல்லாதவர்களின் எண்ணிக்கைதான் அங்கே அதிகமாக இருந்தது. மதவெறிச் செயல்களும் கலவரங்களும் அடிக்கடி நடைபெற்றுவந்த எருசலேமோடு ஒப்பிட்டால், அங்கே அதிக அமைதியும் ஒழுங்கும் இருந்தது. அதோடு, யூதேயாவின் ரோமப் படைகளுடைய முக்கியத் தலைமையகமாக செசரியா செயல்பட்டது.

8 ரோமச் சட்டத்துக்கு இணங்கி, பேலிக்சுக்கு லீசியா ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதில், பவுலைப் பற்றிய வழக்கை விளக்கினார். பவுல் ஒரு ரோமக் குடிமகன் என்று தெரிந்துகொண்டதும், யூதர்கள் அவரை ‘கொலை செய்துவிடாதபடி’ பார்த்துக்கொண்டதாக அதில் எழுதினார். அதோடு, “மரண தண்டனையோ சிறைத் தண்டனையோ கொடுக்கும் அளவுக்கு அவர் எந்தக் குற்றமும் செய்திருப்பதாக” தனக்குத் தெரியவில்லை என்றும், அவருக்கு எதிராகச் செய்யப்பட்ட சதித்திட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டதால் அவரை பேலிக்சிடம் அனுப்பி வைப்பதாகவும் எழுதினார்; குற்றம்சாட்டுபவர்களை பேலிக்சே விசாரித்துத் தீர்ப்பு வழங்கும்படி கேட்டு அதில் எழுதினார்.—அப். 23:25-30.

9. (அ) பவுலின் ரோமக் குடியுரிமையை லீசியா எப்படி மதித்து நடக்கவில்லை? (ஆ) நமக்கு இருக்கிற குடியுரிமைகளை நாம் ஏன் பயன்படுத்திக்கொள்ளலாம்?

9 லீசியா எழுதியது எந்தளவு உண்மையாக இருந்தது? ஓரளவுதான். தன்மேல் நல்ல அபிப்பிராயம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அவர் சில விஷயங்களைத் திரித்தும் மறைத்தும் எழுதியிருந்தார். உதாரணத்துக்கு, பவுல் ஒரு ரோமக் குடிமகன் என்று தெரிந்துகொண்டதால்தான் அவரைக் காப்பாற்றியதாக எழுதியது உண்மை அல்ல. அதோடு, பவுலை ‘இரண்டு சங்கிலிகளால் கட்டும்படியும்,’ பிற்பாடு “முள்சாட்டையால் அடித்து விசாரிக்கும்படியும்” கட்டளையிட்டதைப் பற்றி குறிப்பிடவே இல்லை. (அப். 21:30-34; 22:24-29) லீசியா உண்மையில் பவுலின் ரோமக் குடியுரிமையை மதித்து நடக்கவில்லை. இன்றுகூட சாத்தான், மதவெறி என்ற எண்ணெயை ஊற்றித் துன்புறுத்தல் என்ற தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்கிறான்; அன்று போலவே இன்றும் வணக்க சம்பந்தமான விஷயத்தில் நமக்கு இருக்கிற உரிமைகளை எதிரிகள் பறிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் நாம் பவுலைப் போலவே நமக்கு இருக்கிற குடியுரிமைகளைப் பயன்படுத்தி, சட்ட ரீதியாகப் பாதுகாப்புப் பெற்றுக்கொள்ளலாம்.

“என்னுடைய வாதத்தை உங்கள் முன்னால் வைப்பதில் சந்தோஷப்படுகிறேன்” (அப். 23:35–24:21)

10. பவுலுக்கு எதிராக என்ன பயங்கரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன?

10 பவுல்மீது குற்றம்சாட்டியவர்கள் எருசலேமிலிருந்து வரும்வரை, செசரியாவிலே ‘ஏரோதுவின் மாளிகையில் அவர் காவல் வைக்கப்பட்டார்.’ (அப். 23:35) ஐந்து நாட்கள் கழித்து, தலைமைக் குருவான அனனியாவும், வழக்கறிஞரான தெர்த்துல்லுவும், சில பெரியோர்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். யூதர்களுக்கென்று பேலிக்ஸ் செய்துவந்த காரியங்களுக்காக தெர்த்துல்லு முதலில் அவரைப் புகழ்ந்தான்; அவரை உச்சிகுளிர வைப்பதற்காகவும், அவருடைய தயவைப் பெறுவதற்காகவும் அப்படிப் புகழ்ந்திருக்கலாம். b அதன்பின், விஷயத்துக்கு வந்தான்; பவுலைப் பற்றி இப்படிக் குற்றம்சாட்டினான்: “இந்த ஆள் ஒரு விஷமி. நாசரேத்தூராரின் மதப்பிரிவுக்குத் தலைவன்; உலகம் முழுவதும் இருக்கிற யூதர்கள் மத்தியில் தேசத் துரோகச் செயல்களைத் தூண்டிவிடுகிறான். ஆலயத்தின் புனிதத்தைக் கெடுப்பதற்கும் முயற்சி செய்தான்; அதனால்தான் இவனைப் பிடித்தோம்.” தெர்த்துல்லு இப்படிச் சொன்னதும் அங்கிருந்த மற்ற யூதர்கள் “அவனோடு சேர்ந்துகொண்டு, அவன் சொன்னதெல்லாம் உண்மைதான் என்று சாதித்தார்கள்.” (அப். 24:5, 6, 9) தேசத் துரோகச் செயல்களைத் தூண்டிவிடுவது... ஆபத்தான ஒரு மதப்பிரிவுக்குத் தலைவனாக இருப்பது... ஆலயத்தின் புனிதத்தைக் கெடுப்பது... இவையெல்லாம் மரண தண்டனைக்குரிய கொடிய குற்றங்களாக இருந்தன.

11, 12. தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறென பவுல் எப்படி நிரூபித்தார்?

11 அதன்பின், பவுலைப் பேசச் சொல்லி ஆளுநர் தலையசைத்தார். “இப்போது என்னுடைய வாதத்தை உங்கள் முன்னால் வைப்பதில் சந்தோஷப்படுகிறேன்” என்று சொல்லி பவுல் பேச ஆரம்பித்தார். தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்தார். ஆலயத்தின் புனிதத்தைக் கெடுக்கவில்லை என்றும், எந்தத் தேசத் துரோகச் செயல்களையும் தூண்டிவிடவில்லை என்றும் சொன்னார். சொல்லப்போனால், “பல வருஷங்களுக்குப் பின்பு” இப்போதுதான் எருசலேமுக்கு வந்திருப்பதாகவும், பஞ்சத்தினாலும் துன்புறுத்தலினாலும் வறுமையில் வாடிய கிறிஸ்தவர்களுக்காக “பண உதவி” செய்ய வந்திருப்பதாகவும் சொன்னார். ஆலயத்துக்குள் போவதற்குமுன் தான் “தூய்மைச் சடங்கு” செய்திருந்ததாகவும், “கடவுளுக்கும் மனுஷர்களுக்கும் முன்னால் சுத்தமான மனசாட்சியோடு” இருக்க அதிக முயற்சி எடுத்துவந்ததாகவும் சொன்னார்.—அப். 24:10-13, 16-18.

12 ஆனாலும், “மதப்பிரிவு என்று இவர்கள் சொல்கிற வணக்கமுறையின்படி” தன் முன்னோர்களின் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்து வந்ததை ஒப்புக்கொண்டார். ஆனால், “திருச்சட்டத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும்” நான் நம்புகிறேன் என்று அடித்துச்சொன்னார். அதோடு, “நீதிமான்களும் அநீதிமான்களும் உயிரோடு எழுப்பப்படுவார்கள்” என்று அந்த யூதர்கள் நம்புவது போலவே தானும் நம்புவதாகச் சொன்னார். அதன்பின், தன்மீது குற்றம்சாட்டியவர்களிடம் இப்படி சவால்விட்டார்: “நான் நியாயசங்கத்தார் முன்னால் நின்றபோது என்னிடம் என்ன குற்றத்தைக் கண்டார்கள் என இங்கே இருப்பவர்களாவது சொல்லட்டும். அவர்கள் மத்தியில் நின்று, ‘இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்று நான் நம்புவதால்தான் இன்று உங்கள் முன்னால் நியாயம் விசாரிக்கப்படுகிறேன்!’ என்று சத்தமாகச் சொன்னதைத் தவிர, வேறென்ன குற்றத்தை இவர்கள் என்னிடம் கண்டார்கள்?”—அப். 24:14, 15, 20, 21.

13-15. அரசு அதிகாரிகள்முன் தைரியமாகச் சாட்சி கொடுப்பதில் பவுல் எப்படி நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார்?

13 கலகக்காரர்கள், தேசத் துரோகிகள், ஆபத்தான மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் அரசு அதிகாரிகள்முன் நாம் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டால், பவுலின் நல்ல முன்மாதிரியைப் பின்பற்றலாம். பவுல், தெர்த்துல்லுவைப் போல் ஆளுநருடைய தயவைப் பெறுவதற்காக உச்சிகுளிர வைக்கும் விதத்தில் பேசவில்லை. அமைதியாக, மரியாதையாகப் பேசினார். தெளிவாக, கவனமாக, சாதுரியமாக உண்மைகளை எடுத்துச்சொன்னார். ஆலயத்தின் புனிதத்தைக் கெடுத்ததாகத் தன்மீது குற்றம்சாட்டியவர்களே, அதாவது ‘ஆசிய மாகாணத்திலிருந்த சில யூதர்களே,’ நேரடியாக வந்து தங்கள் குற்றச்சாட்டுகளைச் சொல்வதுதான் சட்டப்படி சரியாக இருக்கும் என்று சொன்னார்.—அப். 24:18, 19.

14 எல்லாவற்றுக்கும் மேலாக, பவுல் தன் நம்பிக்கைகளைப் பற்றிச் சாட்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. உதாரணத்துக்கு, நியாயசங்கத்தில் எந்த நம்பிக்கையைப் பற்றிப் பேசும்போது பெரிய அமளி ஏற்பட்டதோ அந்த நம்பிக்கையைப் பற்றியே பவுல் மறுபடியும் தைரியமாகப் பேசினார். (அப். 23:6-10) அதாவது, அவர் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை வலியுறுத்திப் பேசினார். ஏன்? இயேசுவைப் பற்றியும், அவருடைய உயிர்த்தெழுதலைப் பற்றியும் தான் கொடுத்துவந்த சாட்சியைத் தன்னுடைய எதிரிகள் ஏற்றுக்கொள்ளாததால் அப்படி வலியுறுத்திப் பேசினார். (அப். 26:6-8, 22, 23) அப்படியென்றால், பிரச்சினையே உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கைதான், சரியாகச் சொன்னால், இயேசுவையும் அவருடைய உயிர்த்தெழுதலையும் பற்றிய நம்பிக்கைதான்.

15 பவுலைப் போலவே நாமும் தைரியமாகச் சாட்சி கொடுக்கலாம்; அதோடு, இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்ன இந்த வார்த்தைகளிலிருந்து பலம் பெறலாம்: “நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்; ஆனால், முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்.” ஆனாலும், அதிகாரிகள்முன் என்ன பேசுவதென்று நாம் கவலைப்பட வேண்டுமா? வேண்டாம், ஏனென்றால் இயேசுவே இப்படி உறுதியளிக்கிறார்: “அவர்கள் உங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோகும்போது, என்ன பேசுவதென்று நினைத்துக் கவலைப்படாதீர்கள்; அந்த நேரத்தில் உங்களுக்கு என்ன அருளப்படுகிறதோ அதையே பேசுங்கள்; ஏனென்றால் பேசுவது நீங்கள் அல்ல, கடவுளுடைய சக்தியே.”—மாற். 13:9-13.

“பேலிக்ஸ் பயந்துபோனார்” (அப். 24:22-27)

16, 17. (அ) பவுலுடைய விஷயத்தில் பேலிக்ஸ் என்ன செய்தார்? (ஆ) பேலிக்ஸ் ஏன் பயந்துபோயிருக்கலாம், ஆனாலும் எதற்காக பவுலை அவர் அடிக்கடி வரவழைத்துப் பேசினார்?

16 ஆளுநர் பேலிக்ஸ் கிறிஸ்தவ நம்பிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்டது இது ஒன்றும் முதல் தடவை அல்ல. பதிவு இப்படிச் சொல்கிறது: “பேலிக்சுக்கு இந்த மார்க்கத்தை பற்றிய [ஆரம்பகால கிறிஸ்தவத்தைப் பற்றிய] உண்மைகள் நன்றாகத் தெரிந்திருந்ததால், ‘படைத் தளபதி லீசியா வரும்போது இந்த வழக்கு சம்பந்தமாக முடிவெடுப்பேன்’ என்று சொல்லி வழக்கை ஒத்தி வைத்தார். பின்பு படை அதிகாரியிடம், ‘இவனைக் காவலில் வையுங்கள். ஆனால் இவனுக்குக் கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள்; இவனுடைய ஆட்கள் இவனுக்குத் தேவையான உதவிகள் செய்வதைத் தடுக்க வேண்டாம்’ என்று உத்தரவிட்டார்.”—அப். 24:22, 23.

17 சில நாட்களுக்குப் பின், பேலிக்ஸ் தன் யூத மனைவி துருசில்லாளுடன் வந்தார்; பின்பு, பவுலை வரவழைத்து “கிறிஸ்து இயேசுவைப் பற்றிய நம்பிக்கையைக் குறித்து அவர் சொன்ன விஷயங்களைக் கவனித்துக் கேட்டார்.” (அப். 24:24) ஆனால், “நீதியையும் சுயக்கட்டுப்பாட்டையும் வரப்போகிற நியாயத்தீர்ப்பையும் பற்றி [பவுல்] சொன்னபோது பேலிக்ஸ் பயந்துபோனார்”; தன்னுடைய பொல்லாத செயல்களின் காரணமாக மனம் குறுகுறுத்ததால் அவர் பயந்துபோயிருக்கலாம். அதனால் அவர், “நீ இப்போது போகலாம். சமயம் வரும்போது உன்னை மறுபடியும் வரச் சொல்லி ஆள் அனுப்புகிறேன்” என்று சொல்லி பவுலை அனுப்பிவிட்டார். இருந்தாலும், அடிக்கடி அவரை வரவழைத்து அவரோடு பேசிவந்தார், சத்தியத்தைக் கற்றுக்கொள்கிற நோக்கத்தில் அல்ல, ஆனால் அவரிடமிருந்து லஞ்சம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்!—அப். 24:25, 26.

18. பவுல் ஏன் பேலிக்சிடமும் அவருடைய மனைவியிடமும் “நீதியையும் சுயக்கட்டுப்பாட்டையும் வரப்போகிற நியாயத்தீர்ப்பையும்” பற்றிப் பேசினார்?

18 பவுல் ஏன் பேலிக்சிடமும் அவருடைய மனைவியிடமும் “நீதியையும் சுயக்கட்டுப்பாட்டையும் வரப்போகிற நியாயத்தீர்ப்பையும்” பற்றிப் பேசினார்? “கிறிஸ்து இயேசுவைப் பற்றிய நம்பிக்கையை” குறித்துத் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பினார்கள். அவர்களுடைய ஒழுக்கக்கேடான, மூர்க்கத்தனமான, அநியாயமான நடத்தையைப் பற்றித் தெரிந்திருந்த பவுல், இயேசுவின் சீஷர்களாக ஆவதற்கு ஒருவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஒளிவுமறைவில்லாமல் விளக்கினார். கடவுளுடைய நீதியான நெறிமுறைகளுக்கும் அந்த இரண்டு பேருடைய வாழ்க்கை முறைக்கும் இடையே இருந்த மாபெரும் வித்தியாசத்தை பவுலுடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டின. என்ன சிந்திக்கிறோம், என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி எல்லாருமே கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை பவுலுடைய வார்த்தைகளிலிருந்து அந்த இரண்டு பேரும் புரிந்திருக்க வேண்டும்; அதோடு, பவுலுக்கு என்ன தீர்ப்பு வழங்குவது என்று யோசிப்பதைவிட, தங்களுக்குக் கடவுள் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறார் என்று யோசிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்கள் புரிந்திருக்க வேண்டும். பேலிக்ஸ் ‘பயந்துபோனதில்’ ஆச்சரியமே இல்லை!

19, 20. (அ) ஏதோவொரு சுயநல எண்ணத்தோடு ஆர்வம் காட்டுகிறவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? (ஆ) பேலிக்ஸ், பவுலின் நண்பனாக இருக்கவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?

19 நாம் ஊழியம் செய்யும்போது, பேலிக்ஸ் போன்ற ஆட்களைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. முதலில், அவர்கள் ஆர்வம் காட்டுவதுபோல் நமக்குத் தெரியலாம், ஆனால் உண்மையில் அவர்கள் ஏதோவொரு சுயநல எண்ணத்தோடு ஆர்வம் காட்டலாம். அப்படிப்பட்டவர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனாலும், கடவுளுடைய நீதியான நெறிமுறைகளைப் பற்றி அவர்களிடம் பவுலைப் போலவே நாம் சாதுரியமாகப் பேசலாம். அப்போது சத்தியம் அவர்களுடைய இருதயத்தைத் தொடலாம். இருந்தாலும், பாவ வழியைவிட்டு மனந்திரும்ப அவர்களுக்குத் துளிகூட விருப்பமில்லை என்பது தெரியவரும்போது, அவர்களை விட்டுவிட்டு சத்தியத்துக்காக உண்மையிலேயே ஏங்குகிறவர்களை நாம் தேடிக் கண்டுபிடிக்கலாம்.

20 “இரண்டு வருஷங்களுக்குப் பின்பு, பேலிக்சுக்கு அடுத்து பொர்க்கியு பெஸ்து பதவிக்கு வந்தார். பேலிக்ஸ் யூதர்களுடைய தயவைப் பெற விரும்பியதால் பவுலைச் சிறையிலேயே விட்டுவிட்டுப் போனார்” என்று பதிவு சொல்கிறது. (அப். 24:27) இதிலிருந்து, பேலிக்சின் உள்நோக்கம் தெரிகிறது. பேலிக்ஸ் நிச்சயமாகவே பவுலின் நண்பனாக இருக்கவில்லை. ‘இந்த மார்க்கத்தை’ சேர்ந்தவர்கள் தேசத் துரோகிகளும் அல்ல, புரட்சிக்காரர்களும் அல்ல என்பதை அவர் தெரிந்திருந்தார். (அப். 19:23) அதோடு, பவுல் எந்த ரோமச் சட்டத்தையும் மீறவில்லை என்பதை தெரிந்திருந்தார். ஆனாலும், “யூதர்களுடைய தயவைப் பெற விரும்பியதால்” பவுலைச் சிறையிலேயே விட்டுவிட்டார்.

21. பொர்க்கியு பெஸ்து ஆளுநராகப் பதவியேற்ற பின்பு பவுலுக்கு என்ன நடந்தது, பவுல் எப்படித் தொடர்ந்து பலம் பெற்றார்?

21 பேலிக்சுக்குப் பின்னர் பொர்க்கியு பெஸ்து ஆளுநராகப் பதவியேற்ற சமயத்தில், பவுல் இன்னமும் சிறையிலேயே இருந்தார் என்பதை அப்போஸ்தலர் 24-ம் அதிகாரத்தில் இருக்கிற கடைசி வசனம் காட்டுகிறது. அதன்பின், பவுல் தொடர்ச்சியாக விசாரணை செய்யப்பட்டார், நிறைய அதிகாரிகள்முன் நிறுத்தப்பட்டார். இந்தத் தைரியமான அப்போஸ்தலர் “ராஜாக்களுக்கும் ஆளுநர்களுக்கும்” முன்னால் கொண்டுசெல்லப்பட்டார். (லூக். 21:12) அதன்பின், நாம் பார்க்கப்போகிறபடி, அன்றைய உலகப் பேரரசரிடம் சாட்சி கொடுத்தார். எந்தச் சந்தர்ப்பத்திலுமே அவர் தன்னுடைய விசுவாசத்திலிருந்து விலகவில்லை. “தைரியமாயிரு!” என்று இயேசு கொடுத்த உற்சாகத்திலிருந்து அவர் தொடர்ந்து பலம் பெற்றார் என்பதில் சந்தேகமில்லை.

a பேலிக்ஸ்—யூதேயாவின் ஆளுநர்” என்ற பெட்டியை, பக்கம் 193-ல் பாருங்கள்.

b யூதேயாவில் ‘மிகுந்த சமாதானம்’ நிலவச் செய்ததற்காக பேலிக்சுக்கு தெர்த்துல்லு நன்றி சொன்னான். உண்மையில் பேலிக்சின் ஆட்சியின்கீழ் அங்கே அமைதியே இருக்கவில்லை; சொல்லப்போனால், ரோமுக்கு எதிராகக் கலகம் மூண்ட சமயம்வரை வேறெந்த ஆளுநரின் கீழும் நிலைமை அந்தளவு மோசமாக இருக்கவில்லை. அதோடு, பேலிக்ஸ் செய்த சீர்திருத்தங்களுக்காக யூதர்கள் “மிகவும் நன்றியோடு” இருக்கிறார்கள் என்று அவன் சொன்னது அப்பட்டமான பொய். உண்மையில், பெரும்பாலான யூதர்கள் பேலிக்சை வெறுத்தார்கள்; ஏனென்றால், அவர் அந்தளவு அவர்களைக் கொடூரமாக ஒடுக்கியிருந்தார், அவருக்கு எதிராக அவர்கள் செய்த கலகங்களை மூர்க்கத்தனமாக அடக்கியிருந்தார்.—அப். 24:2, 3.