Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 26

“நீங்கள் யாருமே உயிரை இழக்க மாட்டீர்கள்”

“நீங்கள் யாருமே உயிரை இழக்க மாட்டீர்கள்”

பவுல் பயணம் செய்த கப்பல் சேதமடைகிறது, அந்தச் சமயத்தில் அவர் பலமான விசுவாசத்தையும் மற்ற பயணிகளின் மேல் அன்பையும் காட்டுகிறார்

அப்போஸ்தலர் 27:1–28:10-ன் அடிப்படையில்

1, 2. பவுல் எப்படிப்பட்ட பயணத்தைச் செய்யப்போகிறார், அது அவருடைய மனதில் என்ன கேள்விகளை எழுப்பியிருக்கலாம்?

 “ரோம அரசனிடமே நீ போகலாம்.” ஆளுநர் பெஸ்து சொன்ன இந்த வார்த்தைகள் பவுலின் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன; இந்த வார்த்தைகள் அவருடைய எதிர்காலத்தையே தீர்மானிக்க இருக்கின்றன. (அப். 25:12) இப்போது அவர் ரோமுக்குப் போக இருக்கிறார்; இரண்டு வருஷங்களாகச் சிறையிலேயே அடைந்து கிடந்த பவுலுக்கு, இந்த நீண்ட தூரப் பயணம் ஒரு நல்ல மாறுதலாக இருக்கும். முந்தைய கப்பல் பயணங்களின்போது, அவருக்குப் புத்துயிர் தந்த இனிய தென்றல் காற்றும் அழகிய அடிவானமும் அவருடைய மனதில் பசுமையாக இருக்கிறபோதிலும், மரண வாசலைத் தொட்டுவந்த நினைவுகளும் அவருடைய கண்ணில் நிழலாடுகின்றன. ரோம அரசனுக்குமுன் ஆஜராவதற்காக செய்யப்போகிற இந்தப் பயணம் பல கேள்விகளை அவருடைய மனதில் எழுப்பியிருக்கலாம்.

2 பவுல் நிறைய தடவை “கடலில் . . . ஆபத்துகளை” சந்தித்திருந்தார்; மூன்று முறை கப்பல் விபத்தில் சிக்கியிருந்தார், ஒரு இரவும் பகலும் நடுக்கடலில் தத்தளித்திருந்தார். (2 கொ. 11:25, 26) இருந்தாலும், முந்தைய பயணங்களின்போது ஒரு மிஷனரியாக, சுதந்திரமாக இருந்தார்; ஆனால் இந்தப் பயணத்தில் ஒரு கைதியாகப் பயணம் செய்யப்போகிறார். செசரியாவிலிருந்து ரோமுக்கு ரொம்ப தூரம், அதாவது 3,000-க்கும் அதிகமான கிலோமீட்டர், பயணம் செய்யப்போகிறார்! அவர் ரோமுக்குப் பத்திரமாகப் போய்ச் சேருவாரா? அப்படியே போய்ச் சேர்ந்தாலும், தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவாரா? சாத்தானுடைய உலகத்தின் மகா வல்லரசருக்குமுன் நியாயந்தீர்க்கப்படுவது சாதாரண விஷயம் இல்லையே!

3. பவுலுடைய தீர்மானம் என்ன, இந்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றி கலந்துபேச போகிறோம்?

3 பவுலைப் பற்றி ஏராளமான விஷயங்களைத் தெரிந்துகொண்ட பிறகு நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தனக்கு என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று நினைத்து அவர் கவலைப்பட்டிருப்பாரா? நம்பிக்கை இழந்திருப்பாரா? இல்லவே இல்லை! கஷ்டங்கள் வருமென்று அவர் தெரிந்திருந்தார், ஆனால் எந்த ரூபத்தில் வருமென்று தெரிந்திருக்கவில்லை. ஊழியம் செய்வதால் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிப்பதை விட்டுவிட்டு அவர் ஏன் கவலைக் கடலில் கரைந்துபோக வேண்டும்? அதுவும், தன் கையில் எதுவும் இல்லை என்று தெரிந்த பிறகு? (மத். 6:27, 34) சாமானியர்கள்முதல் அரசர்கள்வரை எல்லாரிடமும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும் என்பது யெகோவாவின் விருப்பம் என்று பவுல் தெரிந்திருந்தார். (அப். 9:15) எந்தக் கஷ்டம் வந்தாலும் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற பவுல் தீர்மானமாயிருந்தார். நம்முடைய தீர்மானமும் அதுதானே? அதனால், பவுலுடைய உதாரணத்திலிருந்து நாம் எப்படி நன்மை அடையலாம் என்பதைச் சிந்தித்தபடியே இந்த முக்கியப் பயணத்தில் அவரோடு சேர்ந்து பயணம் செய்யலாம் வாருங்கள்!

“எதிர்க்காற்று வீசியதால் . . . ” (அப். 27:1-7அ)

4. பவுல் எப்படிப்பட்ட கப்பலில் பயணம் செய்தார், அவருடன் போன நண்பர்கள் யார்?

4 பவுலும் வேறுசில கைதிகளும் ரோமப் படை அதிகாரியான யூலியுவின் கண்காணிப்பில் விடப்பட்டார்கள்; செசரியாவுக்கு வந்திருந்த வணிகக் கப்பலில் அனைவரும் ஏற வேண்டுமென யூலியு முடிவு செய்தார். ஆசியா மைனரின் மேற்குக் கரையோரத் துறைமுகமான அதிரமித்தியத்திலிருந்து அந்தக் கப்பல் வந்திருந்தது. அதிரமித்தியம், லெஸ்வோஸ் தீவிலிருந்த மித்திலேனே நகருக்கு அப்பால் இருந்தது. பொதுவாக, இந்தக் கப்பல் வடக்கு நோக்கியும், பின்பு மேற்கு நோக்கியும் பயணம் செய்தது; வழியில் சரக்குகளை இறக்கிக்கொண்டும் ஏற்றிக்கொண்டும் போனது. அத்தகைய கப்பல்கள் சரக்குக் கப்பல்கள் என்பதால், அவை பயணிகளுக்கு ஏற்ற கப்பல்களாக இருக்கவில்லை, கைதிகளுக்குச் சொல்லவே வேண்டாம்! (“ கப்பல் பயணங்களும் வணிகப் போக்குவரத்தும்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) அந்தக் கைதிகளுக்கு நடுவே பவுலுடன் குறைந்தது இரண்டு கிறிஸ்தவர்களாவது இருந்தார்கள்; அரிஸ்தர்க்குவும் லூக்காவும் இருந்தார்கள். லூக்காதான் இந்தப் பயணத்தின் விவரங்களையெல்லாம் எழுதியவர். இந்த உண்மை நண்பர்கள் இரண்டு பேரும் பணம் கட்டி கப்பலில் ஏறினார்களா அல்லது பவுலுடைய பணிவிடைக்காரர்கள் என்று சொல்லி ஏறினார்களா என்பது தெரியவில்லை.—அப். 27:1, 2.

5. சீதோனில் பவுலை யார் உபசரித்தார்கள், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5 ஒரு நாள் முழுவதும் பயணம் செய்த பிறகு, அதாவது சுமார் 110 கிலோமீட்டர் வடக்கு நோக்கிப் பயணம் செய்த பிறகு, அவர்கள் எல்லாரும் சீரியாவின் கரையோரத்திலுள்ள சீதோன் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். யூலியு மற்ற கைதிகளை நடத்துவதுபோல் பவுலை நடத்தவில்லை; பவுல் ஒரு ரோமக் குடிமகன் என்பதையும், குற்றவாளி என்று தீர்க்கப்படாதவர் என்பதையும் அவர் தெரிந்திருந்தது அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். (அப். 22:27, 28; 26:31, 32) மற்ற கிறிஸ்தவர்களைப் போய்ச் சந்திக்க அவர் பவுலுக்கு அனுமதி அளித்தார். நீண்டகால சிறைவாசத்துக்குப் பின்பு வெளியே வந்திருந்த அந்த அப்போஸ்தலனைச் சகோதர சகோதரிகள் எத்தனை சந்தோஷமாக வரவேற்று உபசரித்திருப்பார்கள்! அவர்களைப் போலவே நீங்களும் அன்போடு உபசரிப்பதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறீர்களா? அதன் மூலம் உற்சாகம் பெறுகிறீர்களா?—அப். 27:3.

6-8. சீதோனிலிருந்து கினீதுவரை பவுலின் கப்பல் பயணம் எப்படி இருந்தது, சாட்சி கொடுப்பதற்கு பவுல் என்ன வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டார்?

6 கப்பல் சீதோனைவிட்டுப் புறப்பட்டு, கரையோரமாகப் பயணித்து, பவுலின் சொந்த ஊரான தர்சுவுக்கு அருகே போய், சிலிசியாவைக் கடந்தது. எங்கெல்லாம் கப்பல் நின்றது என்பது பற்றிய தகவல்களை லூக்கா சொல்வதில்லை; ஆனால், ‘எதிர்க்காற்று வீசியது’ என்று சொல்வதன் மூலம் அவர்களுடைய பயணம் ஆபத்தானதாக இருந்ததெனத் தெரிவிக்கிறார். (அப். 27:4, 5) அப்படிப்பட்ட சூழ்நிலையில்கூட, பவுல் தனக்குக் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி மற்றவர்களிடம் சாட்சி கொடுப்பதை நம் மனத்திரையில் பார்க்க முடிகிறது. கப்பலில் இருந்த கைதிகள், மாலுமிகள், படைவீரர்கள், துறைமுகங்களிலிருந்த மக்கள் என்று எல்லாரிடமும் அவர் கண்டிப்பாகச் சாட்சி கொடுத்திருப்பார். நாமும்கூட, கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி மற்றவர்களிடம் சாட்சி கொடுக்கிறோமா?

7 கப்பல் அதன்பின் ஆசியா மைனரின் தெற்குக் கரையோரத்திலிருந்த மீறா துறைமுகத்துக்கு வந்துசேர்ந்தது. அங்கே பவுலும் மற்றவர்களும் ரோமுக்குப் போகிற வேறொரு கப்பலில் ஏற வேண்டியிருந்தது. (அப். 27:6) அந்தக் காலத்தில், எகிப்திலிருந்துதான் ரோமுக்கு அதிகளவு தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டன; எகிப்தின் தானியக் கப்பல்கள் மீறா துறைமுகத்தில் நின்றன. யூலியு அத்தகைய கப்பல்களில் ஒன்றைக் கண்டு, அதில் ஏறும்படி படைவீரர்களிடமும் கைதிகளிடமும் கட்டளை கொடுத்தார். இந்தக் கப்பல் முந்தைய கப்பலைவிட மிகப் பெரியதாக இருந்திருக்க வேண்டும். அதில் ஏராளமான கோதுமை மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன; அதோடு மாலுமிகள், படைவீரர்கள், கைதிகள், ரோமுக்குப் போகவிருந்த மற்ற பயணிகள் என்று மொத்தம் 276 பேர் ஏறியிருந்தார்கள். அப்படியானால், பவுலின் ஊழியப் பகுதி இப்போது இன்னும் பெரியதாக ஆனது என்று சொல்லலாம்; பவுல் தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை நிச்சயம் நழுவ விட்டிருக்க மாட்டார்.

8 கப்பல் அடுத்ததாக ஆசியா மைனரின் தென்மேற்கில் இருந்த கினீது நகரத்தில் நின்றது. காற்று சாதகமாக இருந்திருந்தால் ஒரே நாளில் அங்கே போயிருக்க முடியும். ஆனால், “பல நாட்கள் மெதுவாகவே பயணம் செய்த பின்பு, கஷ்டப்பட்டு கினீது நகரத்துக்கு வந்துசேர்ந்தோம்” என்று லூக்கா சொல்கிறார். (அப். 27:7அ) அப்படியானால், சீதோஷ்ண நிலை மோசமாக இருந்ததெனத் தெரிகிறது. (“ மத்தியதரைக் கடலில் எதிர்க்காற்று” என்ற பெட்டியை, பக்கம் 208-ல் பாருங்கள்.) பலத்த புயல்காற்றினாலும் கொந்தளிக்கும் கடல்நீரினாலும் கப்பல் அலைக்கழிக்கப்பட்டபோது, பயணிகள் எப்படிப் பயந்துபோயிருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.

‘புயல்காற்று எங்களைப் பயங்கரமாக அலைக்கழித்தது’ (அப். 27:7ஆ-26)

9, 10. கிரேத்தா தீவுக்குப் பக்கத்தில் பயணிகள் என்ன கஷ்டங்களை எதிர்ப்பட்டார்கள்?

9 கினீது நகரிலிருந்து மேற்கு நோக்கிப் பயணத்தைத் தொடர வேண்டுமென்று கப்பல் தலைவர் முடிவெடுத்தார்; ஆனால், ‘எதிர்க்காற்று வீசியதால் தொடர்ந்து போக முடியவில்லை’ என்று கண்கண்ட சாட்சியான லூக்கா சொல்கிறார். (அப். 27:7ஆ) கப்பல் கடலுக்குள் போகப் போக, கரையோர நீரோட்டம் இல்லாமல்போனது; அதன் பிறகு, வடமேற்கிலிருந்து பலத்த புயல்காற்று அடித்தது; இதனால் கப்பல் தெற்கு நோக்கிப் படுவேகமாகத் தள்ளப்பட்டது. முன்பு இந்தக் கப்பலை எதிர்க்காற்றிலிருந்து சீப்புரு தீவு பாதுகாத்தது, இப்போது கிரேத்தா தீவு பாதுகாத்தது. கப்பல் கிரேத்தா தீவின் கிழக்கு எல்லையிலிருந்த சல்மோனே முனையைக் கடந்ததுமே நிலைமை சற்று முன்னேறியது. ஏன்? காற்று அதிகம் அடிக்காத பக்கமாக, அதாவது அந்தத் தீவின் தெற்குப் பக்கமாக, கப்பல் போனதால் ஓரளவு பாதுகாப்புக் கிடைத்தது. கப்பலில் இருந்தவர்கள் ஆரம்பத்தில் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். ஆனால், குளிர்காலம் நெருங்குவதை நினைத்து அவர்கள் கவலைப்பட்டார்கள்.

10 லூக்கா துல்லியமான ஒரு விவரத்தைச் சொல்கிறார்: ‘[கிரேத்தாவின்] கரையோரமாகவே கஷ்டப்பட்டுப் பயணம் செய்தோம்.’ காற்று அதிகம் அடிக்காத பக்கமாகப் பயணம் செய்தும், கப்பலைச் செலுத்துவது அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. ஒரு சிறிய விரிகுடாவில் நங்கூரத்தை இறக்குவதற்கு ஏற்ற ஓர் இடத்தைக் கண்டார்கள். “‘நல்ல துறைமுகம்’ என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தோம்” என்று லூக்கா சொல்கிறார். கரை வடக்கு நோக்கித் திரும்புகிற முனையில் அந்த இடம் இருந்ததாகக் கருதப்படுகிறது. அந்த இடத்தில் அவர்கள் எவ்வளவு நாட்கள் இருந்தார்கள்? “பல நாட்கள்” என்று லூக்கா சொல்கிறார்; பயணத்தைத் தொடர்வதற்கு அவை சாதகமான நாட்களாக இருக்கவில்லை. செப்டம்பர்/அக்டோபரில் கப்பல் பயணம் செய்வது அதிக ஆபத்தானதாக இருந்தது.—அப். 27:8, 9.

11. கப்பலில் இருந்தவர்களுக்கு பவுல் என்ன ஆலோசனை கொடுத்தார், ஆனாலும் என்ன முடிவு எடுக்கப்பட்டது?

11 மத்தியதரைக் கடலில் பயணம் செய்த அனுபவம் பவுலுக்கு இருந்ததால், சில பயணிகள் அவரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம். தொடர்ந்து பயணம் செய்ய வேண்டாம் என்று அப்போது அவர் ஆலோசனை சொன்னார். அப்படிப் பயணம் செய்தால், “பயங்கர சேதமும் இழப்பும் ஏற்படும்” என்று எச்சரித்தார்; உயிர்ச்சேதம்கூட ஏற்படலாமெனச் சொன்னார். ஆனால், பயணத்தைத் தொடர வேண்டுமெனக் கப்பல் தலைவரும் கப்பல் உரிமையாளரும் முடிவு செய்தார்கள்; பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிப்பது அவசரமென அவர்கள் ஒருவேளை நினைத்திருக்கலாம். யூலியுவையும் சம்மதிக்க வைத்தார்கள். இந்தத் துறைமுகத்திலிருந்து கொஞ்சம் தள்ளி அமைந்திருந்த பேனிக்ஸ் துறைமுகத்துக்கு எப்படியாவது போய்ச் சேர வேண்டுமென்று நிறைய பேர் நினைத்தார்கள். குளிர்காலத்தில் தங்குவதற்கு வசதியான பெரிய துறைமுகமாக அது இருந்திருக்கலாம். அதனால், தென்திசைக் காற்று மென்மையாக வீசியபோது, தங்கள் எண்ணம் கைகூடியதாக நினைத்து, பயணத்தைத் தொடர்ந்தார்கள்.—அப். 27:10-13.

12. கிரேத்தாவைவிட்டுப் புறப்பட்ட பிறகு, கப்பலில் இருந்தவர்கள் என்ன ஆபத்துகளைச் சந்தித்தார்கள், பேராபத்தைத் தவிர்க்க மாலுமிகள் என்ன செய்தார்கள்?

12 அதன் பிறகுதான் பெரிய பிரச்சினை வந்தது; வடகிழக்கிலிருந்து “கடும் புயல்காற்று” வீச ஆரம்பித்தது. அதனால், “கிலவுதா என்ற சின்னத் தீவைச் சுற்றி,” காற்று அதிகம் அடிக்காத பக்கமாகப் பயணம் செய்தார்கள். (இந்தத் தீவு ‘நல்ல துறைமுகத்திலிருந்து’ சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.) ஆனாலும், கப்பல் தெற்கு நோக்கித் தள்ளப்பட்டு, ஆப்பிரிக்காவின் கரையோரத்திலிருந்த சிர்ட்டிஸ் மணற்திடலில் மோதும் ஆபத்து ஏற்பட்டது. அதைத் தவிர்க்கும் அவசரத்தில், மாலுமிகள் கப்பலுக்குப் பின்னால் இணைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய படகைத் தூக்கினார்கள். ஆனால், அதைத் தூக்கி வைப்பதற்குள் அவர்களுக்குப் பெரும் பாடாகிவிட்டது; அந்தப் படகு தண்ணீரால் நிரம்பியிருந்தது அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பின்பு, அந்தப் பெரிய கப்பல் உடைந்துபோகாதபடி, கயிறு அல்லது சங்கிலியை வைத்து அதைச் சுற்றிக் கட்ட ஆரம்பித்தார்கள். அதன் பிறகு, கப்பற்பாயின் கயிறுகளை அவிழ்த்து, அதை இறக்கி, காற்றின் போக்கிலேயே கப்பலைப் போகும்படி விட்டுவிட்டார்கள். எவ்வளவு திகிலூட்டும் அனுபவமாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! கப்பலை “புயல்காற்று . . . பயங்கரமாக அலைக்கழித்ததால்” அவர்கள் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் போதவே இல்லை. மூன்றாம் நாள், கப்பலின் எடையைக் குறைப்பதற்காகக் கப்பற்பாய்ச் சாதனங்களைக் கடலில் வீசியெறிந்தார்கள்.—அப். 27:14-19.

13. புயல்காற்றின்போது கப்பலில் இருந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

13 எல்லாரும் குலை நடுங்கிப்போயிருப்பார்கள். ஆனால், பவுலும் அவருடைய நண்பர்களும் தைரியமாக இருந்தார்கள். ஏனென்றால், பவுல் ரோமில் சாட்சி கொடுப்பார் என்று எஜமானாகிய இயேசு அவருக்கு உறுதியளித்திருந்தார்; பிற்பாடு ஒரு தேவதூதரும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். (அப். 19:21; 23:11) இருந்தாலும், இரண்டு வாரங்களுக்கு இராப்பகலாகக் கடும் புயல்காற்று அடித்துக்கொண்டே இருந்தது. விடாமல் பெய்த அடைமழை காரணமாகவும், சூரிய சந்திர நட்சத்திரங்களை மூடிமறைத்த கருமேகங்கள் காரணமாகவும் கப்பல் எந்த இடத்தில் இருக்கிறது, எந்தத் திசையில் போகிறது என்பதைக் கப்பல் தலைவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. கப்பலில் இருந்தவர்களால் ஒரேவொரு வேளை உணவுகூடச் சாப்பிட முடியவில்லை. குளிர்... மழை... குமட்டல்... வாந்தி... பயம்... இதெல்லாம் வாட்டி வதைக்கும்போது யாருக்காவது சாப்பிடத் தோன்றுமா?

14, 15. (அ) பவுல் ஏன் தான் முன்பு கொடுத்த எச்சரிக்கையை நினைப்பூட்டினார்? (ஆ) பவுல் சொன்ன நம்பிக்கையான செய்தியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 பவுல் எல்லாருக்கும்முன் எழுந்து நின்றார். தான் முன்பு கொடுத்த எச்சரிப்பை ஞாபகப்படுத்தினார்; ஆனால், ‘நான் அப்போதே சொன்னேன், கேட்டீர்களா?’ என்று குறை சொல்லும் தொனியில் பேசவில்லை. ஆனாலும், பவுல் சொன்னதைக் கேட்டிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் என்பதை நடந்த சம்பவங்கள் அங்கிருந்தவர்களுக்கு உணர்த்தியிருக்கும். அவர்களிடம் பவுல், “தைரியமாக இருக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் யாருமே உயிரை இழக்க மாட்டீர்கள், கப்பல் மட்டும்தான் சேதமடையும்” என்று சொன்னார். (அப். 27:21, 22) இந்த வார்த்தைகள் அவர்களுக்கு எந்தளவு ஆறுதலாக இருந்திருக்கும்! இப்படிப்பட்ட நம்பிக்கையான செய்தியைச் சொல்வதற்கான வாய்ப்பை யெகோவா தனக்குக் கொடுத்ததை நினைத்து பவுலும்கூட எந்தளவு சந்தோஷப்பட்டிருப்பார்! ஒவ்வொரு மனித உயிரும் யெகோவாவின் கண்களில் அருமையானது என்பதை நாம் நினைவில் வைப்பது அவசியம். ஒவ்வொரு நபரும் அவருக்கு முக்கியமானவர். “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று [யெகோவா] விரும்புகிறார்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (2 பே. 3:9) அப்படியானால், யெகோவா அளிக்கும் நம்பிக்கையான செய்தியை எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு சொல்ல நாம் முயற்சி எடுப்பது எவ்வளவு அவசியம்! எவ்வளவு அவசரம்!! மக்களின் உயிர் இன்று ஆபத்தில் இருக்கிறதே!

15 ‘கடவுள் கொடுத்த வாக்குறுதியை’ பற்றிக் கப்பலிலிருந்த நிறைய பேரிடம் பவுல் சாட்சி கொடுத்துவந்திருக்கலாம். (அப். 26:6; கொலோ. 1:5) கப்பல் விபத்து ஏற்பட்டாலும், அவர்களுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என்று நம்புவதற்கு பலமான ஆதாரத்தை பவுல் கொடுத்தார்; அவர் இப்படிச் சொன்னார்: “கடவுள் தன்னுடைய தூதரை அனுப்பினார். அவர் நேற்று ராத்திரி என் பக்கத்தில் வந்து நின்று, ‘பவுலே, பயப்படாதே. நீ ரோம அரசனுக்கு முன்னால் நிற்க வேண்டும். இதோ! உன்னோடு பயணம் செய்கிற எல்லாருடைய உயிரையும் கடவுள் காப்பாற்றுவார்’ என்று சொன்னார். அதனால் நண்பர்களே, தைரியமாக இருங்கள். கடவுள்மேல் நான் நம்பிக்கையாக இருக்கிறேன், என்னிடம் சொல்லப்பட்டபடியே நடக்கும். ஆனாலும், நாம் ஏதாவது ஒரு தீவில் தள்ளப்படுவோம்.”—அப். 27:23-26.

“எல்லாருமே பத்திரமாகக் கரைசேர்ந்தோம்” (அப். 27:27-44)

‘எல்லாருக்கும் முன்னால் கடவுளுக்கு நன்றி சொன்னார்.’​—அப்போஸ்தலர் 27:35

16, 17. (அ) பவுல் எந்தச் சூழ்நிலையில் ஜெபம் செய்தார், அதைக் கேட்டவர்கள் எப்படி உணர்ந்தார்கள்? (ஆ) பவுல் சொன்னபடியே என்ன நடந்தது?

16 திகிலாக இருந்த அந்த இரண்டு வாரங்களில், காற்றினால் கப்பல் சுமார் 870 கிலோமீட்டர் தள்ளப்பட்டிருந்தது; அப்போது, திடீர்த் திருப்பம் ஒன்று ஏற்பட்டது; கரையில் அலைகள் மோதுகிற சத்தத்தை மாலுமிகள் கேட்டார்கள். கப்பல் வேறு திசையில் அடித்துச் செல்லப்படக் கூடாது என்பதற்காகவும், கப்பலைக் கரைசேர்ப்பதற்காக அதன் முன்பக்கத்தைக் கரையை நோக்கித் திருப்ப வேண்டும் என்பதற்காகவும், அதன் பின்புறத்திலிருந்து நங்கூரத்தை அவர்கள் இறக்கினார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் கப்பலிலிருந்து தப்பிக்க முயற்சி செய்தார்கள், ஆனால் படைவீரர்கள் அவர்களைத் தப்பிக்க விடவில்லை. அப்போது, பவுல் படை அதிகாரியிடமும் படைவீரர்களிடமும், “இந்த ஆட்கள் கப்பலிலேயே இருந்தால்தான் உங்களால் தப்பிப்பிழைக்க முடியும்” என்று சொன்னார். கப்பல் சற்று நிதானத்துக்கு வந்தவுடன், எல்லாரையும் சாப்பிடும்படி பவுல் சொன்னார், எல்லாரும் உயிர்தப்புவார்கள் என்று மீண்டும் உறுதியளித்தார். பின்பு, ‘எல்லாருக்கும் முன்னால் கடவுளுக்கு நன்றி சொன்னார்.’ (அப். 27:31, 35) போற்றுதலோடு அவர் அப்படி ஜெபம் செய்தது அன்று லூக்காவுக்கும் அரிஸ்தர்க்குவுக்கும் இன்று கிறிஸ்தவர்களுக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறது. மற்றவர்கள்முன் நீங்கள் செய்கிற ஜெபங்கள் அவர்களை உற்சாகப்படுத்துவது போலவும் ஆறுதல்படுத்துவது போலவும் இருக்கின்றனவா?

17 பவுலின் ஜெபத்தைக் கேட்ட பிறகு, “அவர்கள் எல்லாரும் தைரியமடைந்து, சாப்பிட ஆரம்பித்தார்கள்.” (அப். 27:36) கப்பலுடைய எடையை இன்னும் குறைப்பதற்காக, கோதுமை மூட்டைகளைக் கடலுக்குள் வீசியெறிந்தார்கள். பொழுது விடிந்ததும், கப்பலைச் செலுத்திக் கரைசேர்ப்பதற்காக மாலுமிகள் நங்கூரங்களை அறுத்துவிட்டார்கள்; கப்பலின் பின்புறத்திலிருந்த சுக்கான் துடுப்புகளின் கட்டுகளை அவிழ்த்துவிட்டார்கள், முன்புறப் பாயை உயர்த்திக் கட்டினார்கள். ஆனால், அப்போது கப்பலின் முன்பக்கம் மண்ணுக்குள் புதைந்தது; பின்பக்கமோ அலைகளின் வேகத்தால் துண்டுதுண்டாக உடைய ஆரம்பித்தது. கைதிகள் எல்லாம் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காகப் படைவீரர்கள் சிலர் அவர்களைக் கொல்ல நினைத்தார்கள், ஆனால் அப்படிச் செய்யாதபடி யூலியு தடுத்தார். நீந்தியோ எதையாவது பிடித்துக்கொண்டோ கரைசேரும்படி எல்லாருக்கும் கட்டளையிட்டார். பவுல் சொன்னபடியே நடந்தது—276 பேரும் உயிர்தப்பினார்கள். ‘எல்லாருமே பத்திரமாகக் கரைசேர்ந்தார்கள்.’ ஆனால், எந்த இடத்தில் கரைசேர்ந்தார்கள்?—அப். 27:44.

“அளவுகடந்த மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டார்கள்” (அப். 28:1-10)

18-20. மெலித்தா தீவுவாசிகள் எப்படி “அளவுகடந்த மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டார்கள்,” பவுலின் மூலம் கடவுள் என்ன அற்புதத்தைச் செய்தார்?

18 உயிர்தப்பியவர்கள் சிசிலியாவின் தெற்கே இருந்த மெலித்தா தீவில் கரைசேர்ந்தார்கள். (“ மெலித்தா—எங்கே இருந்தது?” என்ற பெட்டியைப் பாருங்கள்.) வேறு மொழி பேசிய அந்தத் தீவு மக்கள் “அளவுகடந்த மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டார்கள்.” (அப். 28:2) தொப்பலாக நனைந்து நடுநடுங்கியபடி கரைசேர்ந்தவர்களுக்காக, அதுவும் முன்பின் தெரியாதவர்களுக்காக, தீவு மக்கள் நெருப்பு மூட்டி, குளிர்காய உதவினார்கள். மழையிலும் குளிரிலும் அந்த நெருப்பு அவர்களுக்கு இதமாக இருந்தது. அதோடு, ஓர் அற்புதம் நிகழ்வதற்கும் காரணமாக இருந்தது.

19 எல்லாரும் குளிர்காய்வதற்கு பவுலும் உதவி செய்தார். விறகுக் குச்சிகளை எடுத்து வந்து நெருப்புக்குள் போட்டார். அப்படிப் போட்டபோது, ஒரு விரியன் பாம்பு வெளியே வந்து அவருடைய கையைக் கவ்விக்கொண்டு கடித்தது. அதனால், அந்தத் தீவுவாசிகள் அவர் ஏதோ தெய்வக் குற்றம் செய்திருக்க வேண்டும் என்று முடிவுகட்டினார்கள். a

20 பவுலைப் பாம்பு கடித்துவிட்டதால், அவருக்கு “வீக்கம் ஏற்படும்” என்று அந்தத் தீவில் இருந்தவர்கள் நினைத்தார்கள். “வீக்கம்” என்பதற்கான மூலமொழி வார்த்தை “ஒரு மருத்துவச் சொல்” என்று ஒரு புத்தகம் சொல்கிறது. “மருத்துவரான லூக்கா” இப்படியொரு வார்த்தையைச் சொன்னதில் ஆச்சரியமே இல்லை. (அப். 28:6; கொலோ. 4:14) பவுல் அந்த விஷப் பாம்பை உதறிவிட்டார், அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை.

21. (அ) துல்லியமான விவரங்களை லூக்கா பதிவு செய்திருக்கிறார் என்பதற்கு இந்தப் பதிவில் இருக்கிற சில உதாரணங்கள் என்ன? (ஆ) பவுல் என்ன அற்புதங்களைச் செய்தார், இதைப் பார்த்த மெலித்தா தீவு மக்கள் என்ன செய்தார்கள்?

21 புபிலியு என்ற பணக்காரர் மெலித்தாவில் வாழ்ந்துவந்தார்; அவர் நிறைய நிலங்களுக்குச் சொந்தக்காரர். அங்கே அவர் ஒரு பிரபலமான ரோம அதிகாரியாக இருந்திருக்கலாம். அவர் ‘அந்தத் தீவின் முக்கியத் தலைவர்’ என்று லூக்கா விவரித்தார்; மெலித்தாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளில் அதே பட்டப்பெயர் உள்ளது. பவுலையும் அவருடைய நண்பர்களையும் அவர் மூன்று நாட்களுக்கு அன்போடு உபசரித்தார். புபிலியுவின் தகப்பனோ நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். அது எந்த விதமான நோய் என்று லூக்கா மிகத் துல்லியமாக விவரித்தார்; “காய்ச்சலாலும் சீதபேதியாலும் அவதிப்பட்டுப் படுக்கையில் கிடந்தார்” என்று சொன்னார். பவுல் ஜெபம் செய்து, அவர்மீது கைகளை வைத்து அவரைக் குணமாக்கினார். இந்த அற்புதத்தைக் கண்டு அசந்துபோன தீவு மக்கள், தீவில் இருந்த மற்ற நோயாளிகளை அங்கே கூட்டிக்கொண்டுவர ஆரம்பித்தார்கள்; அதோடு, பவுலுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் தேவையான பொருள்களை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.—அப். 28:7-10.

22. (அ) ரோமுக்கு போன பயணத்தைப் பற்றிய லூக்காவின் பதிவை ஒரு பேராசிரியர் எப்படிப் பாராட்டியிருக்கிறார்? (ஆ) அடுத்த அதிகாரத்தில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

22 பவுலுடைய பயணத்தைப் பற்றிய இந்தப் பதிவு எந்தளவு துல்லியமாகவும் உண்மையாகவும் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்த்தோம். ஒரு பேராசிரியர் இப்படிச் சொன்னார்: “பைபிள் பதிவுகளிலேயே . . . மிகமிகத் தத்ரூபமாக விவரிக்கப்பட்ட பதிவு லூக்கா எழுதிய பதிவுதான். முதல் நூற்றாண்டு கப்பல் பயணத்தைப் பற்றி மிகத் துல்லியமான விவரங்களும், கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியின் நிலைமைகளைப் பற்றிய விவரங்களும் மிகமிகச் சரியாக இருப்பதால் [அவை ஒருவருடைய டைரியின் அடிப்படையில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.]” பவுலோடு பயணம் செய்துகொண்டிருந்தபோதே லூக்கா இந்தக் குறிப்புகளை எல்லாம் எழுதி வைத்திருக்கலாம். அப்படியென்றால், அவர்களுடைய பயணத்தின் அடுத்த கட்டத்தைப் பற்றியும் நிறைய விஷயங்களை அவர் எழுதியிருப்பார். ஒருவழியாக அவர்கள் ரோமுக்குப் போய்ச் சேர்ந்தபோது பவுலுக்கு என்ன நடந்தது? பார்க்கலாம்...

a விரியன் பாம்புகளைப் பற்றி மெலித்தா தீவுவாசிகளுக்குத் தெரிந்திருந்ததால், அந்தக் காலத்தில் அவை அந்தத் தீவிலே இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், இந்தக் காலத்தில் அவை அங்கே இல்லை. இத்தனை நூற்றாண்டுகளில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். அல்லது, அந்தத் தீவில் ஜனத்தொகை அதிகரித்ததால் விரியன் பாம்புகள் இல்லாமல் போயிருக்கலாம்.