Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 28

“பூமியின் எல்லைகள் வரையிலும்...”

“பூமியின் எல்லைகள் வரையிலும்...”

கி.பி. முதல் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் ஆரம்பித்த வேலையை யெகோவாவின் சாட்சிகள் இன்றுவரை தொடர்ந்து செய்கிறார்கள்

1. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கும் இன்று யெகோவாவின் சாட்சிகளுக்கும் இருக்கிற ஒற்றுமைகள் என்ன?

 ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பக்திவைராக்கியமாக சாட்சி கொடுத்தார்கள். கடவுளுடைய சக்தியின் உதவியையும் வழிநடத்துதலையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள். துன்புறுத்தல் மத்தியிலும் பிரசங்கித்தார்கள். கடவுளுடைய அளவற்ற ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள். இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய விஷயத்திலும் இதுவே உண்மை.

2, 3. அப்போஸ்தலர் புத்தகத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

2 அப்போஸ்தலர் புத்தகத்தில் இருக்கிற விறுவிறுப்பான பதிவுகளைப் படித்தது உங்கள் மனதுக்கு நிச்சயம் உற்சாகமாக இருந்திருக்கும்! உங்கள் விசுவாசத்தையும் பலப்படுத்தியிருக்கும்! அப்போஸ்தலர் புத்தகம் ஒருவிதத்தில் தனித்துவம் வாய்ந்தது; ஏனென்றால், ஆரம்பகால கிறிஸ்தவத்தின் சரித்திரத்தைப் பற்றிக் கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட ஒரே புத்தகம் இதுதான்.

3 அப்போஸ்தலர் புத்தகம் 95 நபர்களையும், 32 தேசங்களையும், 54 நகரங்களையும், 9 தீவுகளையும் பற்றிச் சொல்கிறது. சாதாரண மக்கள்... திமிர்பிடித்த மதத்தலைவர்கள்... அகங்காரமான அரசியல்வாதிகள்... வில்லங்கமான விஷமிகள்... என சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் இருக்கிற நிஜக் கதையை விவரிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உங்களுடைய சகோதர சகோதரிகளைப் பற்றி விவரிக்கிறது; தினசரி வாழ்க்கையில் அவர்கள் பலவிதமான சவால்களை எதிர்ப்பட்டதோடு நல்ல செய்தியை வைராக்கியமாகப் பிரசங்கித்தார்கள்.

4. பவுல், தபீத்தாள் போன்ற உண்மையுள்ள சாட்சிகளை ஏன் நம்முடைய நெருங்கிய சொந்தங்களாகப் பார்க்கிறோம்?

4 ஆர்வத்துடிப்புள்ள அப்போஸ்தலர்களான பேதுரு மற்றும் பவுல், அன்பான மருத்துவரான லூக்கா, தாராள குணம்படைத்த பர்னபா, தைரியசாலியான ஸ்தேவான், அன்புள்ளம் கொண்ட தபீத்தாள், உபசரிக்கும் குணம் படைத்த லீதியாள் என எத்தனை எத்தனையோ உண்மையுள்ள சாட்சிகளைப் பற்றி அப்போஸ்தலர் புத்தகத்தில் வாசிக்கிறோம்; இவர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட 2,000 வருஷங்களுக்குமுன் வாழ்ந்தவர்கள். ஆனாலும், இவர்களை வெறுமனே சரித்திர கதாபாத்திரங்களாகப் பார்க்காமல் நம்முடைய நெருங்கிய சொந்தங்களாகப் பார்க்கிறோம். ஏன்? ஏனென்றால், அவர்களைப் போலவே நாமும் சீஷராக்கும் வேலையைச் செய்து வருகிறோம். (மத். 28:19, 20) இந்த வேலையைச் செய்வது எவ்வளவு பெரிய பாக்கியம்!

“பூமியின் எல்லைகள் வரையிலும்...”—அப்போஸ்தலர் 1:8

5. இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் எங்கே சாட்சி கொடுக்க ஆரம்பித்தார்கள்?

5 இயேசு தன் சீஷர்களுக்குக் கொடுத்த வேலையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். “கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று சொன்னார். (அப். 1:8) கடவுளுடைய சக்தியினால் பலம் பெற்ற அந்தச் சீஷர்கள் முதலாவதாக ‘எருசலேமில்’ சாட்சி கொடுத்தார்கள். (அப். 1:1–8:3) அடுத்ததாக, கடவுளுடைய சக்தியின் உதவியோடு “யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும்” சாட்சி கொடுத்தார்கள். (அப். 8:4–13:3) அதன்பின், “பூமியின் எல்லைகள் வரையிலும்” சாட்சி கொடுத்தார்கள்.—அப். 13:4–28:31.

6, 7. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களிடம் இல்லாத என்ன உபகரணங்கள் இன்று நம்மிடம் இருக்கின்றன?

6 முதல் நூற்றாண்டிலிருந்த உங்கள் சகோதர சகோதரிகளிடம், ஊழியத்தில் பயன்படுத்த முழு பைபிள் இருக்கவில்லை. சுமார் கி.பி. 41-ல்தான் மத்தேயுவின் சுவிசேஷம் எழுதி முடிக்கப்பட்டது. அதன்பின், பவுலுடைய சில கடிதங்கள் எழுதப்பட்டன. சுமார் கி.பி. 61-ல் அப்போஸ்தலர் புத்தகம் எழுதி முடிக்கப்பட்டது. ஆரம்பகால கிறிஸ்தவர்களிடம் சொந்தமாக முழு பைபிளும் இருக்கவில்லை, ஊழியத்தில் கொடுக்க விதவிதமான பிரசுரங்களும் இருக்கவில்லை. அவர்களில் யூத கிறிஸ்தவர்கள், விசுவாசிகளாவதற்கு முன்பு ஜெபக்கூடத்தில் எபிரெய வேதாகமம் வாசிக்கப்பட்டதைக் கேட்டிருந்தார்கள். (2 கொ. 3:14-16) ஆனாலும், வேதவசனங்களை அவர்கள் நன்றாகத் தெரிந்துவைத்திருப்பது அவசியமாக இருந்தது; ஏனென்றால், ஊழியத்தின்போது தங்களுடைய ஞாபகத்திலிருந்தே வசனங்களை அவர்கள் சொல்ல வேண்டியிருந்திருக்கலாம்.

7 ஆனால், இன்று நம்மில் நிறைய பேருக்கு சொந்தமாக பைபிளும் ஏராளமான பைபிள் பிரசுரங்களும் இருக்கின்றன. நாம் 240 நாடுகளில் பல மொழிகளில் நல்ல செய்தியை அறிவித்து சீஷர்களை உருவாக்கி வருகிறோம்.

கடவுளுடைய சக்தி தரும் பலம்

8, 9. (அ) கடவுளுடைய சக்தி என்ன செய்ய இயேசுவின் சீஷர்களுக்கு உதவியது? (ஆ) இன்று உண்மையுள்ள அடிமை கடவுளுடைய சக்தியின் உதவியோடு என்ன செய்கிறார்கள்?

8 சாட்சி கொடுக்கும் வேலையை இயேசு தன் சீஷர்களுக்குக் கொடுத்த சமயத்தில், ‘கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெறுவீர்கள்’ என்று சொன்னார். அப்படியென்றால், இயேசுவின் சீஷர்கள் பூமியெங்கும் சாட்சி கொடுக்க கடவுளுடைய சக்தி உதவ இருந்தது. அந்தச் சக்தியின் உதவியால் பேதுருவும் பவுலும் நோய்களைக் குணப்படுத்தினார்கள், பேய்களை விரட்டினார்கள், இறந்தவர்களை உயிர்த்தெழுப்பினார்கள்! இருந்தாலும், இன்னும் முக்கியமான ஒன்றைச் செய்ய கடவுளுடைய சக்தி அவர்களுக்கு உதவியது. முடிவில்லாத வாழ்வுக்கு வழிநடத்துகிற திருத்தமான அறிவைக் கற்றுக்கொடுக்க அவர்களுக்கும் மற்ற சீஷர்களுக்கும் அது உதவியது.—யோவா. 17:3.

9 கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாள் அன்று, இயேசுவின் சீஷர்கள் ‘கடவுளுடைய சக்தியின் . . . உதவியால் வெவ்வேறு மொழிகளில் பேச ஆரம்பித்தார்கள்.’ இப்படி, “கடவுளுடைய மகத்தான செயல்களைப் பற்றி” சாட்சி கொடுத்தார்கள். (அப். 2:1-4, 11) இன்று, வெவ்வேறு மொழிகளில் பேசும் அற்புத வரம் நமக்கு இல்லை. இருந்தாலும், உண்மையுள்ள அடிமை கடவுளுடைய சக்தியின் உதவியோடு பல மொழிகளில் பைபிள் பிரசுரங்களை வெளியிடுகிறார்கள். உதாரணத்துக்கு, ஒவ்வொரு மாதமும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை லட்சக்கணக்கில் அச்சிடுகிறார்கள். அதோடு, jw.org வெப்சைட்டில் 1000-க்கும் அதிகமான மொழிகளில் பைபிள் பிரசுரங்களும் வீடியோக்களும் கிடைக்கின்றன. எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் மொழிகளையும் சேர்ந்த ஆட்களிடம் “கடவுளுடைய மகத்தான செயல்களைப் பற்றி” அறிவிக்க அவை நமக்கு உதவுகின்றன.—வெளி. 7:9.

10. உண்மையுள்ள அடிமை 1989 முதல் என்ன செய்து வருகிறார்கள்?

10 உண்மையுள்ள அடிமை 1989 முதல், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைப் பல மொழிகளில் வெளியிடுவதற்கு அதிக கவனம் கொடுத்து வருகிறார்கள். இந்த பைபிள் ஏற்கெனவே 200-க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கோடிக்கணக்கில் அச்சிடப்பட்டுள்ளது, அச்சிடப்படவும் உள்ளது. இந்த இமாலயப் பணியின் வெற்றிக்கு ஒரே காரணம் கடவுளுடைய சக்திதான்.

11. யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் எப்படி மொழிபெயர்க்கப்படுகின்றன?

11 ஆயிரக்கணக்கான வாலண்டியர்கள், 150-க்கும் அதிகமான நாடுகளில் மொழிபெயர்ப்பு வேலையை இன்று செய்து வருகிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; ஏனென்றால், யெகோவாவையும், அவர் நியமித்திருக்கிற ராஜாவையும், அவர் ஏற்படுத்தியிருக்கும் பரலோக அரசாங்கத்தையும் பற்றி உலகம் முழுவதும் ‘முழுமையாகச் சாட்சி கொடுக்க’ கடவுளுடைய சக்தி வேறெந்த அமைப்பையும் பயன்படுத்துவதில்லை!—அப். 28:23.

12. பவுலாலும் மற்ற கிறிஸ்தவர்களாலும் எப்படிச் சாட்சி கொடுக்க முடிந்தது?

12 பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவில் பவுல் யூதர்களிடமும் யூதராக இல்லாதவர்களிடமும் பிரசங்கித்தபோது, “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு இருந்தவர்கள் இயேசுவின் சீஷர்களானார்கள்.” (அப். 13:48) அப்போஸ்தலர் புத்தகத்தில் லூக்கா முடிவாக எழுதி இருக்கும் வார்த்தைகளின்படி, பவுல் ‘எந்தத் தடையும் இல்லாமல் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி . . . பிரசங்கித்துவந்தார்.’ (அப். 28:31) எங்கே? அன்றைய உலக வல்லரசின் தலைநகரமான ரோமில்! சொற்பொழிவுகள் மூலமாகவும் வேறு வழிகளிலும் சாட்சி கொடுத்த ஆரம்பகால சீஷர்கள் கடவுளுடைய சக்தியின் உதவியோடும் வழிநடத்துதலோடும்தான் அப்படிச் சாட்சி கொடுத்தார்கள்.

துன்புறுத்தல் இருந்தாலும் விடாமுயற்சி

13. துன்புறுத்தப்படும்போது நாம் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?

13 இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் துன்புறுத்தப்பட்டபோது, தைரியம் தரும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தார்கள். விளைவு? கடவுளுடைய சக்தியினால் நிரப்பப்பட்டு அவருடைய வார்த்தையைத் தைரியமாகப் பேச ஆரம்பித்தார்கள். (அப். 4:18-31) துன்புறுத்தல் இருந்தாலும் தொடர்ந்து பிரசங்கிப்பதற்கு ஞானமும் பலமும் தரும்படி நாமும்கூட யெகோவாவிடம் ஜெபம் செய்கிறோம். (யாக். 1:2-8) அவருடைய சக்தியும் ஆசீர்வாதமும் நமக்குக் கிடைப்பதால் தொடர்ந்து பிரசங்கிக்கிறோம். மற்றவர்கள் கடுமையாக எதிர்த்தாலும் சரி கொடூரமாகத் துன்புறுத்தினாலும் சரி, ஊழியத்தை நாம் நிறுத்துவதில்லை. அப்படி நாம் துன்புறுத்தப்படும்போது, கடவுளுடைய சக்திக்காகவும் நல்ல செய்தியை அறிவிப்பதற்கான தைரியத்துக்காகவும் ஞானத்துக்காகவும் ஜெபம் செய்வது அவசியம்.—லூக். 11:13.

14, 15. (அ) “ஸ்தேவானுடைய மரணத்துக்குப் பின்பு துன்புறுத்தல் வந்ததால்” என்ன நடந்தது? (ஆ) நம்முடைய காலத்தில், சைபீரியாவிலிருந்த நிறைய பேர் எப்படிச் சத்தியத்தைக் கற்றுக்கொண்டார்கள்?

14 எதிரிகளால் கொல்லப்படுவதற்கு முன்பு ஸ்தேவான் தைரியமாகச் சாட்சி கொடுத்தார். (அப். 6:5; 7:54-60) அந்தச் சமயத்தில் “கடுமையான துன்புறுத்தல்” வந்தபோது, அப்போஸ்தலர்களைத் தவிர மற்ற சீஷர்கள் யூதேயா, சமாரியா பகுதிகள் எங்கும் சிதறிப்போனார்கள். ஆனால், ஊழிய வேலை நின்றுவிடவில்லை. பிலிப்பு என்பவர் சமாரியாவுக்குப் போய் “கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்,” அருமையான பலன்களையும் கண்டார். (அப். 8:1-8, 14, 15, 25) “ஸ்தேவானுடைய மரணத்துக்குப் பின்பு துன்புறுத்தல் வந்ததால், பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா ஆகிய இடங்கள்வரை சீஷர்கள் சிதறிப்போயிருந்தார்கள். அவர்கள் யூதர்களுக்கு மட்டுமே கடவுளுடைய வார்த்தையைப் பற்றி அறிவித்தார்கள். ஆனால் அவர்களில் சீப்புரு, சிரேனே ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் அந்தியோகியாவுக்கு வந்து எஜமானாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியைக் கிரேக்க மொழி பேசிய மக்களுக்குச் சொல்ல ஆரம்பித்தார்கள்” என்றும் வாசிக்கிறோம். (அப். 11:19, 20) இதிலிருந்து என்ன தெரிகிறது? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி பரவுவதற்குத் துன்புறுத்தலே காரணமானது.

15 நம்முடைய காலத்திலும் அதுபோன்ற ஒன்று முன்னாள் சோவியத் யூனியனில் நடந்தது. குறிப்பாக, 1950-களில், ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதால் அந்தப் பெரிய ஊழியப் பகுதியில் நல்ல செய்தி பரவிக்கொண்டே இருந்தது. அவ்வளவு தூரத்திலிருந்த, அதாவது கிட்டத்தட்ட 10,000 கிலோமீட்டர் தூரத்திலிருந்த, சைபீரியாவுக்குச் சாட்சிகளால் சொந்த செலவில் போயிருக்கவே முடியாது! ஆனால், அரசாங்கமே அவர்களை அங்கே அனுப்பி வைத்தது! “சைபீரியாவிலிருந்த நல்மனமுள்ள ஆட்களில் ஆயிரக்கணக்கானோர் சத்தியத்தைக் கேட்பதற்காக அரசாங்கமே வழிசெய்ததுபோல் இருந்தது” என்று ஒரு சகோதரர் சொன்னார்.

யெகோவாவின் அளவில்லாத ஆசீர்வாதங்கள்

16, 17. யெகோவாவின் ஆசீர்வாதத்தால் ஏற்பட்ட வளர்ச்சிக்கு, அப்போஸ்தலர் புத்தகத்தில் இருக்கிற பதிவுகள் எப்படி அத்தாட்சி தருகின்றன?

16 ஆரம்பகால கிறிஸ்தவர்களை யெகோவா ஆசீர்வதித்தார் என்பதில் சந்தேகமே இல்லை. பவுலும் மற்றவர்களும் நட்டார்கள், தண்ணீர் ஊற்றினார்கள், “ஆனால், கடவுள்தான் வளர வைத்தார்.” (1 கொ. 3:5, 6) யெகோவாவின் ஆசீர்வாதத்தால் ஏற்பட்ட வளர்ச்சிக்கு அப்போஸ்தலர் புத்தகம் அத்தாட்சி தருகிறது. உதாரணத்துக்கு, “கடவுளுடைய வார்த்தை பரவிக்கொண்டே வந்தது; எருசலேமில் சீஷர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வந்தது” என அது சொல்கிறது. (அப். 6:7) நல்ல செய்தி பரவியபோது “யூதேயா, கலிலேயா, சமாரியா முழுவதிலும் இருந்த சபை சமாதானக் காலத்தை அனுபவித்தது, விசுவாசத்திலும் பலப்பட்டு வந்தது. அதோடு, யெகோவாவுக்கு பயந்து நடந்ததாலும், அவருடைய சக்தியின் மூலம் ஆறுதல் பெற்று அதன்படி நடந்ததாலும் சபை வளர்ந்துகொண்டே போனது.”—அப். 9:31.

17 சீரியாவின் அந்தியோகியாவில் இருந்த தைரியமான கிறிஸ்தவர்கள் யூதர்களிடமும் கிரேக்கர்களிடமும் பிரசங்கித்தார்கள். “யெகோவாவின் கை அவர்களோடு இருந்தது. ஏராளமான மக்கள் எஜமானின் சீஷர்களானார்கள்” என்று அந்தப் பதிவு சொல்கிறது. (அப். 11:21) அந்த நகரத்தில் ஏற்பட்ட கூடுதலான வளர்ச்சியைப் பற்றி இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது: “யெகோவாவின் வார்த்தை அதிகமதிகமாகப் பரவிவந்தது, நிறைய பேர் விசுவாசம் வைத்தார்கள்.” (அப். 12:24) அதோடு, பவுலும் மற்றவர்களும் யூதராக இல்லாத மற்ற தேசத்து மக்களிடம் முழுமூச்சோடு பிரசங்கித்ததால், “யெகோவாவின் வார்த்தை மாபெரும் விதத்தில் பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்தது.”—அப். 19:20.

18, 19. (அ) “யெகோவாவின் கை” நம்மோடு இருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) யெகோவா தன்னுடைய மக்களுக்கு உதவுகிறார் என்பதற்கு ஒரு அனுபவத்தைச் சொல்லுங்கள்.

18 “யெகோவாவின் கை” நம்மோடும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் ஏராளமானவர்கள் கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் பெற்று, இயேசுவின் சீஷர்களாக ஆகிறார்கள். அதுமட்டுமல்ல, கடவுளுடைய உதவியும் ஆசீர்வாதமும் இருப்பதால்தான், பவுலையும் மற்ற ஆரம்பகால கிறிஸ்தவர்களையும் போலவே நாமும் கடுமையான துன்புறுத்தலைத் தாங்கிக்கொண்டு தொடர்ந்து பிரசங்கிக்கிறோம். (அப். 14:19-21) யெகோவா தேவன் எப்போதும் நம் பக்கம் இருக்கிறார். எல்லா விதமான சோதனைகளிலும் அவருடைய ‘கைகள் என்றென்றும் நம்மை தாங்கும்’ என்பது நிச்சயம்! (உபா. 33:27) யெகோவா தன்னுடைய மகத்தான பெயருக்காக தன்னுடைய மக்களைக் கைவிடுவதே இல்லை என்பதையும் நாம் மறந்துவிட வேண்டாம்.—1 சா. 12:22; சங். 94:14.

19 இந்த அனுபவத்தைக் கவனியுங்கள்: இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், சகோதரர் ஹாரால்ட் ஆப்ட் சாட்சி கொடுப்பதை நிறுத்தாததால் நாசிக்கள் அவரை சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமுக்கு அனுப்பி வைத்தார்கள். 1942, மே மாதத்தில் அவரது மனைவி எல்சாவை, கெஸ்டாப்போ ரகசிய போலீஸார் கைது செய்தார்கள், அவர்களுடைய பெண் குழந்தையையும் பறித்துக்கொண்டு போனார்கள். எல்சா பல சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார். அவர் இப்படிச் சொன்னார்: “ஜெர்மனியின் சித்திரவதை முகாம்களில் பல வருஷங்களைச் செலவிட்டபோது அருமையான ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். பயங்கரமான சோதனையின்போது யெகோவாவின் சக்தி நம்மை எந்தளவு பலப்படுத்தும் என்பதைக் கற்றுக்கொண்டேன்! நான் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஒரு சகோதரியின் கடிதத்தை வாசித்திருந்தேன்; அதில், கடும் சோதனையின்போது யெகோவாவின் சக்தி தனக்கு மன அமைதி தந்ததாக அவர் சொல்லியிருந்தார். அவர் ஏதோ மிகைப்படுத்துவதுபோல் தோன்றியது. ஆனால் எனக்கே சோதனைகள் வந்தபோதுதான், அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்தேன். அனுபவித்தால்தான் அது புரியும். நான் அதை அனுபவித்தேன்.”

முழுமையாகச் சாட்சிக் கொடுப்பதை விட்டுவிடாதீர்கள்!

20. பவுல் வீட்டுக்காவலில் இருந்தபோது என்ன செய்தார், அவருடைய முன்மாதிரி நம் சகோதர சகோதரிகள் சிலரை எப்படி உற்சாகப்படுத்தலாம்?

20 பவுல் வைராக்கியத்துடன் “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி . . . பிரசங்கித்துவந்தார்” என்ற குறிப்போடு அப்போஸ்தலர் புத்தகம் முடிகிறது. (அப். 28:31) அவர் ரோமில் வீட்டுக்காவலில் இருந்ததால், வீடு வீடாகப் போய் பிரசங்கிக்க முடியவில்லை. இருந்தாலும், தன்னைப் பார்க்க வந்த எல்லாரிடமும் அவர் தொடர்ந்து சாட்சி கொடுத்தார். இன்று, நம்முடைய அன்பான சகோதர சகோதரிகளில் சிலர் முதுமை, நோய் போன்றவற்றால் படுத்த படுக்கையாக இருக்கிறார்கள் அல்லது முதியோர் இல்லங்களில் முடங்கியிருக்கிறார்கள். ஆனாலும், கடவுள்மேல் இருக்கும் அன்பும், சாட்சி கொடுப்பதற்கான ஆர்வமும் அவர்களுடைய மனதில் இன்னும் கொழுந்துவிட்டு எரிகின்றன. அவர்களுக்காக நாம் ஜெபம் செய்யலாம்; யெகோவாவையும் அவருடைய அருமையான நோக்கங்களையும் பற்றித் தெரிந்துகொள்ள ஏங்குகிறவர்களை அவர்களிடம் வழிநடத்தும்படி ஜெபத்தில் கேட்கலாம்.

21. நாம் ஏன் அவசர உணர்வோடு சாட்சி கொடுக்க வேண்டும்?

21 நம்மில் பெரும்பாலானவர்களால் வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் சீஷராக்கும் வேலையிலும் ஈடுபட முடிகிறது. அதனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி “பூமியின் எல்லைகள் வரையிலும்” சாட்சி கொடுப்பதில் முழுமூச்சோடு செயல்படுவோம்! இந்த வேலையை அவசர உணர்வோடு நாம் செய்ய வேண்டும்; ஏனென்றால், கிறிஸ்துவுடைய பிரசன்னத்தின் “அடையாளம்” தெளிவாகத் தெரிகிறது. (மத். 24:3-14) நேரத்தை வீணாக்க இது சமயமல்ல. இப்போதே “நம் எஜமானுடைய வேலையை அதிகமதிகமாகச் செய்கிறவர்களாக” இருக்க வேண்டும்.—1 கொ. 15:58.

22. யெகோவாவின் நாளுக்காகக் காத்திருக்கும் வேளையில் நாம் என்ன செய்யத் தீர்மானமாய் இருக்க வேண்டும்?

22 அதனால், யெகோவாவுடைய “படுபயங்கரமான மகா நாள் வருவதற்கு” காத்திருக்கும் இந்தச் சமயத்தில், தைரியத்தோடும் விசுவாசத்தோடும் தொடர்ந்து சாட்சி கொடுக்க நாம் தீர்மானமாக இருக்கலாம். (யோவே. 2:31) ‘கடவுளுடைய வார்த்தைகளை மிகுந்த ஆர்வத்தோடு கேட்ட’ பெரோயா நகரத்தில் இருந்த யூதர்களைப் போன்ற மக்கள் இன்னமும் நிறைய பேர் இருக்கிறார்கள். (அப். 17:10, 11) அதனால், “சபாஷ்! உண்மையுள்ள நல்ல அடிமையே” என்ற பாராட்டு நம் காதுகளில் ஒலிக்கும்வரை தொடர்ந்து சாட்சி கொடுக்கலாம். (மத். 25:23) சீஷராக்கும் வேலையில் நம் பங்கை வைராக்கியத்துடன் செய்து யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்திருந்தால், என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்போம்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுப்பதில்’ நமக்குக் கிடைத்த அருமையான பங்கை நினைத்து என்றென்றும் ஆனந்தமாக இருப்போம்!