அதிகாரம் 25
“ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!”
நல்ல செய்திக்காக வழக்காடுவதில் பவுல் முன்மாதிரி வைக்கிறார்
அப்போஸ்தலர் 25:1–26:32-ன் அடிப்படையில்
1, 2. (அ) பவுல் எதிர்ப்பட்ட சூழ்நிலைகள் என்ன? (ஆ) பவுல் ரோம அரசனிடம் மேல்முறையீடு செய்தது என்ன கேள்வியை எழுப்புகிறது?
பவுல் இன்னமும் செசரியாவிலே பலத்த காவலில் இருக்கிறார். இரண்டு வருஷங்களுக்குமுன் அவர் மறுபடியும் யூதேயாவுக்குப் போயிருந்தார்; அப்போது, சில நாட்களுக்குள் குறைந்தது மூன்று முறை யூதர்கள் அவரைக் கொல்ல முயற்சி செய்திருந்தார்கள். (அப். 21:27-36; 23:10, 12-15, 27) ஆனால், அவர்களுடைய முயற்சிகளெல்லாம் தோல்வி அடைந்திருந்தன; இருந்தாலும், அவர்கள் விடுவதாக இல்லை. அந்த யூதர்களிடம் தான் மறுபடியும் ஒப்படைக்கப்படலாம் என்று பவுலுக்குத் தோன்றுகிறது; அதனால், ரோம ஆளுநரான பெஸ்துவை பார்த்து, “ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!” என்று சொல்கிறார்.—அப். 25:11.
2 ரோம அரசனிடம் மேல்முறையீடு செய்வது பற்றி பவுல் எடுத்த முடிவை யெகோவா ஆதரித்தாரா? இந்தக் கடைசி நாட்களில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுத்துவருகிற நாம் இதற்கான பதிலைத் தெரிந்துகொள்வது முக்கியம். ‘நல்ல செய்திக்காக வழக்காடி அதைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவதில்’ பவுல் வைத்த முன்மாதிரியைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியம்.—பிலி. 1:7.
“நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்னால் நிற்கிறேன்” (அப். 25:1-12)
3, 4. (அ) பவுலை எருசலேமுக்கு அழைத்து வரும்படி யூதர்கள் வைத்த வேண்டுகோளுக்குப் பின்னால் என்ன சதித்திட்டம் ஒளிந்திருந்தது, பவுல் எப்படி உயிர்தப்பினார்? (ஆ) யெகோவா அன்று பவுலைப் பாதுகாத்தது போலவே இன்று எப்படித் தன்னுடைய ஊழியர்களைப் பாதுகாக்கிறார்?
3 பெஸ்து, யூதேயாவின் ரோம ஆளுநராகப் பதவியேற்று மூன்று நாட்கள் கழித்து எருசலேமுக்குப் போனார். a அங்கே முதன்மை குருமார்களும் பிரபலமான யூத ஆண்களும் பவுலைப் பற்றிய குற்றச்சாட்டுக்களை அவரிடம் அடுக்கிக்கொண்டே போனார்கள். இந்தப் புதிய ஆளுநர் தங்களோடும் மற்ற எல்லா யூதர்களோடும் சுமுகமான உறவைக் காத்துக்கொள்ளும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால், பவுலை எருசலேமுக்குக் கொண்டுவந்து அங்கே அவரை விசாரிக்கும்படி பெஸ்துவிடம் அவர்கள் கேட்டார்கள். இந்த வேண்டுகோளுக்குப் பின்னால் ஒரு கொடிய திட்டமே ஒளிந்திருந்தது. செசரியாவிலிருந்து எருசலேமுக்கு வருகிற வழியிலேயே பவுலைத் தீர்த்துக்கட்ட அந்த எதிரிகள் சதித்திட்டம் போட்டார்கள். ஆனால், பெஸ்து இந்த வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. “[பவுல்] ஏதாவது தவறு செய்திருந்தால், உங்கள் தலைவர்கள் என்னோடு வந்து அவன்மேல் குற்றம்சாட்டட்டும்” என்று அவர்களிடம் சொன்னார். (அப். 25:5) இதனால், பவுல் இன்னொரு தடவை உயிர்தப்பினார்.
4 இந்த மாதிரி கஷ்டமான காலம் முழுவதும் பவுலை இயேசு கிறிஸ்து மூலமாக யெகோவா காத்து வந்தார். இயேசு ஒருசமயம் அவருக்குக் காட்சி அளித்து “தைரியமாயிரு!” என்று சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். (அப். 23:11) இன்றுகூட கடவுளுடைய ஊழியர்களான நமக்கு நிறைய எதிர்ப்புகளும் மிரட்டல்களும் வருகின்றன. எந்தப் பிரச்சினைகளும் நமக்கு வராதபடி யெகோவா தடுப்பதில்லை; ஆனாலும், அவற்றைச் சகிப்பதற்குப் பலத்தையும் ஞானத்தையும் தருகிறார். அதனால், நம்முடைய அன்பான கடவுள் அளிக்கிற ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியில்’ நாம் எப்போதும் சார்ந்திருக்கலாம்.—2 கொ. 4:7.
5. பவுலின் விஷயத்தில் பெஸ்து என்ன செய்ய முடிவு செய்தார்?
5 பெஸ்து சில நாட்கள் கழித்து, செசரியாவிலிருந்த ‘நியாயத்தீர்ப்பு மேடையில் உட்கார்ந்தார்.’ b பவுலும் பவுலுடைய எதிரிகளும் அவருக்கு முன்னால் நின்றிருந்தார்கள். ஆதாரமில்லாத அவர்களுடைய குற்றச்சாட்டுகளைப் பற்றி பவுல் இப்படிச் சொன்னார்: “யூதர்களுடைய திருச்சட்டத்துக்கோ ஆலயத்துக்கோ ரோம அரசனுக்கோ விரோதமாக நான் எந்தப் பாவமும் செய்யவில்லை.” அப்போஸ்தலன் பவுல் ஒரு நிரபராதி என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பெஸ்து என்ன செய்ய முடிவு செய்தார்? யூதர்களின் தயவைச் சம்பாதிக்க விரும்பியதால் அவர் பவுலிடம், “நீ எருசலேமுக்கு வந்து, அங்கே என் முன்னால் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பற்றி விசாரிக்கப்பட விரும்புகிறாயா?” என்று கேட்டார். (அப். 25:6-9) என்ன ஒரு முட்டாள்தனமான ஆலோசனை! பவுல் மட்டும் எருசலேமுக்குப் போயிருந்தால், அவருடைய யூத எதிரிகள் அவரை நியாயந்தீர்த்து, நிச்சயம் அவருக்கு மரண தண்டனை கொடுத்திருப்பார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் பெஸ்து அரசியல் ஆதாயத்துக்காக நீதி நியாயத்தை அடகு வைத்தார். பல வருஷங்களுக்குமுன் ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்துவும் பவுலைவிட முக்கியமான ஒரு கைதியிடம் இதுபோலவே நடந்திருந்தார். (யோவா. 19:12-16) இன்றுகூட சில நீதிபதிகள் அரசியல்வாதிகளிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக நீதி நியாயத்தை மறந்து தீர்ப்பு வழங்கலாம். அதனால், யெகோவாவின் சாட்சிகளாகிய நாம், நம்முடைய வழக்குகளில் அநியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படுவதைப் பார்த்து ஆச்சரியப்படத் தேவையில்லை.
6, 7. பவுல் ஏன் ரோம அரசரிடம் மேல்முறையீடு செய்தார், இன்று கிறிஸ்தவர்களுக்கு அவர் எந்த விதத்தில் முன்மாதிரியாக இருக்கிறார்?
6 யூதர்களின் தயவைப் பெற விரும்பி பெஸ்து செய்ய நினைத்த காரியம் பவுலுடைய உயிருக்கே உலை வைத்திருக்கும். அதனால், பவுல் தன்னுடைய ரோமக் குடியுரிமையைப் பயன்படுத்தினார். அவர் பெஸ்துவிடம், “நான் ரோம அரசனுடைய நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்னால் நிற்கிறேன். இங்குதான் என்னை விசாரிக்க வேண்டும். யூதர்களுக்கு நான் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. இது உங்களுக்கே நன்றாகத் தெரியவந்திருக்கும். . . . ரோம அரசனிடம் நான் மேல்முறையீடு செய்கிறேன்!” என்றார். பொதுவாக, இப்படி மேல்முறையீடு செய்துவிட்டால் அதை வாபஸ் பெற முடியாது. பெஸ்து இதை வலியுறுத்தி, “ரோம அரசனிடம் நீ மேல்முறையீடு செய்திருக்கிறாய். அதனால் ரோம அரசனிடமே நீ போகலாம்” என்று சொன்னார். (அப். 25:10-12) பவுல் மேல்முறையீடு செய்ததன் மூலம் உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நமக்கு முன்மாதிரியாக இருக்கிறார். நம்முடைய எதிரிகள் ‘சட்டத்தின் பெயரில் பிரச்சினை உண்டாக்க’ நினைக்கும்போது நமக்கிருக்கும் சட்டப்பூர்வ உரிமைகளைப் பயன்படுத்தி நல்ல செய்திக்காக வழக்காடுகிறோம். c—சங். 94:20.
7 எந்தத் தவறும் செய்யாமல் இரண்டு வருஷங்களுக்கு மேல் சிறைவாசத்தை அனுபவித்திருந்த பவுலுக்குத் தன்னுடைய வழக்கை ரோம அரசர் முன்னால் வைக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவரைச் சந்திப்பதற்குமுன் மற்றொரு அரசர் அவரைப் பார்க்க விரும்பினார்.
“நான் உடனடியாகக் கீழ்ப்படிந்தேன்” (அப். 25:13–26:23)
8, 9. அகிரிப்பா ராஜா ஏன் செசரியாவுக்கு வந்தார்?
8 பவுல் ரோம அரசரிடம் மேல்முறையீடு செய்து சில நாட்கள் கழித்து, புதிதாகப் பதவியேற்றிருந்த பெஸ்துவை அகிரிப்பா ராஜாவும் அவருடைய சகோதரி பெர்னீக்கேயாளும் “சந்தித்து வாழ்த்துச் சொல்ல செசரியாவுக்கு வந்தார்கள்.” d ரோமர்களுடைய காலத்தில், புதிதாகப் பதவியேற்கும் ஆளுநர்களை அதிகாரிகள் சந்திக்க வருவது வழக்கமாக இருந்தது. பெஸ்துவுக்கு வாழ்த்துச் சொல்வதன் மூலம் அரசியல் ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் அவரோடு சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள அகிரிப்பா முயற்சி செய்தார்; இது எதிர்காலத்தில் தனக்கு உதவும் என்று நினைத்தார்.—அப். 25:13.
9 பெஸ்து, பவுலைப் பற்றிச் சொன்னபோது அவரைப் பார்க்க அகிரிப்பா விரும்பினார். அடுத்த நாள் இந்த இரண்டு ஆட்சியாளர்களும் நியாயத்தீர்ப்பு மேடையில் உட்கார்ந்தார்கள். ஆனால், இவர்களுடைய அதிகாரமும் ஆடம்பரமும் அந்தக் கைதியின் பேச்சுக்கு முன்னால் அடிபட்டுப் போகவிருந்தது.—அப். 25:22-27.
10, 11. அகிரிப்பாவுக்கு பவுல் எப்படி மரியாதை காட்டினார், தன் கடந்த காலத்தைப் பற்றி என்ன விஷயங்களை அவர் அகிரிப்பாவுக்குத் தெரிவித்தார்?
10 அகிரிப்பா முன்னால் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்ததற்காக பவுல் அவருக்கு மரியாதையுடன் நன்றி சொன்னார். யூதர்களுடைய சம்பிரதாயங்களையும் அவர்கள் மத்தியில் இருந்த சர்ச்சைகளையும் அகிரிப்பா ராஜா நன்றாகத் தெரிந்து வைத்திருந்ததாகச் சொன்னார். அதன்பின், பவுல் தன் கடந்த காலத்தைப் பற்றி இப்படிச் சொன்னார்: “எங்கள் மதத்தின் மிகக் கண்டிப்பான பரிசேயப் பிரிவின்படி பரிசேயனாக வாழ்ந்தேன்.” (அப். 26:5) பவுல் பரிசேயனாக இருந்ததால் மேசியாவின் வருகையை எதிர்பார்த்திருந்தார். இப்போது, ஒரு கிறிஸ்தவராக ஆகியிருந்ததால் இயேசு கிறிஸ்துதான் காலங்காலமாக எதிர்பார்க்கப்பட்ட மேசியா என்று தைரியமாகச் சொன்னார். தனக்கும் தன்னுடைய எதிரிகளுக்கும் இருந்த பொதுவான நம்பிக்கைக்காகத்தான், அதாவது மேசியாவைப் பற்றித் தங்கள் முன்னோர்களுக்குக் கடவுள் தந்த வாக்குறுதி நிறைவேறும் என்ற நம்பிக்கைக்காகத்தான், அன்று விசாரிக்கப்படுவதாகச் சொன்னார். பவுல் கொடுத்த விளக்கத்தைக் கேட்ட அகிரிப்பாவுக்கு இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. e
11 கிறிஸ்தவர்களைக் கொடூரமாக நடத்தியதை பவுல் ஒத்துக்கொண்டார்; “நாசரேத்தூர் இயேசுவின் பெயருக்கு விரோதமாக எத்தனையோ காரியங்கள் செய்ய வேண்டும் என்பதில் நானும்கூட உறுதியாக இருந்தேன். . . . அவர்கள்மேல் [கிறிஸ்துவின் சீஷர்கள்மேல்] பயங்கர வெறியோடு இருந்ததால் வேறு நகரங்களுக்கும் போய் அவர்களைத் துன்புறுத்தினேன்” என்றார். (அப். 26:9-11) பவுல் இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை. கிறிஸ்தவர்களை அவர் எந்தளவு கொடுமைப்படுத்தினார் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருந்தது. (கலா. 1:13, 23) ஆனால், இப்போது அவர் இந்தளவு மாறியிருப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று அகிரிப்பா யோசித்திருக்கலாம்.
12, 13. (அ) தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை பவுல் எப்படி விவரித்தார்? (ஆ) பவுல் எப்படி “தார்க்கோலை உதைத்துக்கொண்டே” இருந்தார்?
12 பவுல் அடுத்ததாகச் சொன்ன வார்த்தைகள் அந்தக் காரணத்தை அவருக்குத் தெளிவாக்கியிருக்கும்: “முதன்மை குருமார்களிடமிருந்து அதிகாரமும் உத்தரவும் பெற்றுக்கொண்டு தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். போகும் வழியில், மத்தியான நேரத்தில், ராஜாவே, சூரிய ஒளியைவிட மிகப் பிரகாசமான ஒரு ஒளி வானத்திலிருந்து வந்து, என்னையும் என்னோடு இருந்தவர்களையும் சுற்றிப் பிரகாசித்தது. நாங்கள் எல்லாரும் தரையில் விழுந்தோம். அப்போது ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? தார்க்கோலை உதைத்துக்கொண்டே இருப்பது உனக்குத்தான் கேடு’ என்று எபிரெய மொழியில் சொல்வதைக் கேட்டேன். அதற்கு நான், ‘எஜமானே, நீங்கள் யார்?’ என்று கேட்டேன். அப்போது அவர், ‘நீ துன்புறுத்துகிற இயேசு நான்தான்’” என்றார். f—அப். 26:12-15.
13 இந்த அற்புதமான தரிசனம் கிடைப்பதற்கு முன்பு பவுல் அடையாள அர்த்தத்தில் ‘தார்க்கோலை உதைத்துக்கொண்டே இருந்தார்.’ சுமை தூக்கும் ஒரு மிருகம், தார்க்கோலின் கூர்மையான நுனியில் உதைத்தால் அது தேவையில்லாமல் தன்னையே காயப்படுத்திக்கொள்ளும்; அதேபோல், பவுலும் கடவுளுடைய விருப்பத்தை எதிர்ப்பதன் மூலம் ஆன்மீக ரீதியில் தன்னையே காயப்படுத்திக்கொண்டார். அவருக்குப் பக்திவைராக்கியம் இருந்தது, ஆனால் திருத்தமான அறிவுக்கேற்ற பக்திவைராக்கியம் இல்லை. ஆனாலும், தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்த வழியில் அவருக்குக் காட்சி அளித்ததன் மூலம் இயேசு அவருடைய எண்ணத்தை அடியோடு மாற்ற உதவினார்.—யோவா. 16:1, 2.
14, 15. தன் வாழ்க்கையில் செய்த மாற்றங்களைப் பற்றி பவுல் என்ன சொன்னார்?
14 பவுல் தன் வாழ்க்கையில் பெரிய பெரிய மாற்றங்களைச் செய்தார். அகிரிப்பாவிடம் அவர், “வானத்திலிருந்து தோன்றிய காட்சியைப் பார்த்தபோது எனக்குக் கிடைத்த கட்டளைக்கு நான் உடனடியாகக் கீழ்ப்படிந்தேன். அதனால், மனம் திருந்த வேண்டுமென்றும், மனம் திருந்தியதைச் செயலில் காட்டி கடவுள் பக்கம் வர வேண்டுமென்றும் அறிவித்தேன். முதலில் தமஸ்குவிலும், பின்பு எருசலேமிலும், அதன்பின் யூதேயா தேசத்தார் எல்லாருக்கும், மற்ற தேசத்தாருக்கும் அறிவித்தேன்” என்று சொன்னார். (அப். 26:19, 20) இயேசு கிறிஸ்து அவருக்குக் காட்சி அளித்தபோது தந்த கட்டளையை அவர் பல வருஷங்களாக நிறைவேற்றி வந்திருந்தார். பலன்? பவுல் அறிவித்த நல்ல செய்தியைக் கேட்டவர்கள் தங்களுடைய ஒழுக்கமற்ற, நேர்மையற்ற வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டு கடவுளிடம் திரும்பினார்கள். நல்ல குடிமக்களாக ஆனார்கள்; நாட்டின் சட்ட ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு நடந்தார்கள்.
15 பவுலுடைய எதிரிகள் இந்த நன்மைகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பவுல் இப்படிச் சொன்னார்: “இதனால்தான், யூதர்கள் என்னை ஆலயத்தில் பிடித்துக் கொல்லப் பார்த்தார்கள். ஆனாலும், கடவுள் எனக்கு உதவி செய்ததால் இந்த நாள்வரை சாதாரண ஆட்களுக்கும் பெரிய ஆட்களுக்கும் சாட்சி கொடுத்து வருகிறேன்.”—அப். 26:21, 22.
16. நீதிபதிகளிடமும் அதிகாரிகளிடமும் பேசும்போது பவுலுடைய முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
16 உண்மைக் கிறிஸ்தவர்களான நாம் நம்முடைய “நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்கிறவர்களுக்கு . . . பதில் சொல்ல எப்போதும் தயாராக” இருக்க வேண்டும். (1 பே. 3:15) அகிரிப்பாவிடமும் பெஸ்துவிடமும் பவுல் பேசியதைப் போலவே நாமும் நீதிபதிகளிடமும் அதிகாரிகளிடமும் பேச முயற்சி செய்யலாம். பைபிள் சத்தியங்களின்படி நடந்ததால் நம்முடைய வாழ்க்கையிலும் மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் என்ன நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன என்பதை நாம் மரியாதையுடன் சொல்வது, அந்த அதிகாரிகளின் மனதைத் தொடலாம்.
அப். 26:24-32)
“இப்படிப் பக்குவமாகப் பேசிப்பேசி . . . என்னையும் கிறிஸ்தவனாக மாற்றிவிடுவாய் போலிருக்கிறதே” (17. பவுலுடைய பேச்சைக் கேட்டு பெஸ்து எப்படிப் பிரதிபலித்தார், இன்றும் நிறைய பேருக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை இருக்கிறது?
17 பவுலுடைய பக்குவமான பேச்சு அந்த ஆட்சியாளர்கள் இரண்டு பேரையும் ரொம்பவே பாதித்தது. பிறகு என்ன நடந்தது என்று கவனியுங்கள்: “பவுல் இப்படித் தன் தரப்பில் பேசிக்கொண்டிருந்தபோது, பெஸ்து சத்தமாக, ‘பவுலே, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது! அதிக படிப்பு உன்னைப் பைத்தியக்காரனாக்கிவிட்டது!’ என்று சொன்னார்.” (அப். 26:24) பெஸ்துவுக்கு இருந்த மனப்பான்மைதான் இன்று அநேகருக்கு இருக்கிறது. பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொடுக்கிற ஆட்களை அவர்கள் மதவெறியர்களாகப் பார்க்கிறார்கள். உலக ஞானத்தில் ஊறிப்போயிருப்பவர்களுக்கு பைபிள் சொல்லும் உயிர்த்தெழுதல் நம்பிக்கை பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது.
18. பெஸ்துவுக்கு பவுல் எப்படிப் பதிலளித்தார், கடைசியில் அகிரிப்பா என்ன சொன்னார்?
18 ஆளுநர் பெஸ்து அப்படிக் கோபமாகப் பிரதிபலித்ததும் பவுல், “மாண்புமிகு பெஸ்து அவர்களே, எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை, நான் சத்திய வார்த்தைகளைத்தான் பேசுகிறேன், தெளிவாக யோசித்துதான் பேசுகிறேன். உண்மையில், இந்த விஷயங்களைப் பற்றி ராஜாவுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், தயக்கமில்லாமல் அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். . . . அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்களா? நம்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்” என்றார். அப்போது அகிரிப்பா, “இப்படிப் பக்குவமாகப் பேசிப்பேசி கொஞ்ச நேரத்தில் என்னையும் கிறிஸ்தவனாக மாற்றிவிடுவாய் போலிருக்கிறதே” என்று சொன்னார். (அப். 26:25-28) அவர் இதை மனதார சொன்னாரோ இல்லையோ பவுலுடைய வார்த்தைகள் அவரை ரொம்பவே பாதித்திருந்ததையே இது காட்டுகிறது.
19. பவுலைப் பற்றி பெஸ்துவும் அகிரிப்பாவும் என்ன முடிவுக்கு வந்தார்கள்?
19 விசாரணை முடிந்துவிட்டது என்பதைத் தெரிவிக்கும் விதத்தில் அகிரிப்பாவும் பெஸ்துவும் எழுந்து நின்றார்கள். கூடியிருந்த அனைவரும் “அங்கிருந்து வெளியே போய், ‘இந்த மனிதன் மரண தண்டனைக்கோ சிறைத் தண்டனைக்கோ உரிய எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை’ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். பெஸ்துவிடம் அகிரிப்பா, ‘இந்த மனிதன் ரோம அரசனிடம் மேல்முறையீடு செய்திருக்காவிட்டால் இவனை விடுதலை பண்ணியிருக்கலாம்’ என்றார்.” (அப். 26:31, 32) அப்படியானால், விசாரணை செய்யப்பட்ட மனிதன் நிரபராதி என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இந்தச் சம்பவத்துக்குப்பின், கிறிஸ்தவர்களை ஒரு நல்ல கண்ணோட்டத்தில் அவர்கள் பார்க்க ஆரம்பித்திருக்கலாம்.
20. உயர் அதிகாரிகளிடம் பவுல் சாட்சிகொடுத்ததால் என்ன நன்மைகள் விளைந்தன?
20 அதிகாரம் படைத்த பெஸ்துவும் சரி அகிரிப்பாவும் சரி, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அப்படியென்றால், அப்போஸ்தலன் பவுல் அவர்கள்முன் ஆஜரானதில் ஏதாவது பிரயோஜனம் இருந்ததா? இருந்தது! பவுல், யூதேயாவில் இருந்த “ராஜாக்களுக்கும் ஆளுநர்களுக்கும் முன்னால்” ஆஜரானதால்தான் ரோம அதிகாரிகளிடம் சாட்சிகொடுக்க முடிந்தது; மற்றபடி அவர்களிடம் சாட்சிகொடுக்க வாய்ப்பே இருந்திருக்காது. (லூக். 21:12, 13) அதோடு, துன்ப காலத்தில் பவுல் காட்டிய உண்மைத்தன்மையும் அவருக்குக் கிடைத்த அனுபவங்களும் சகோதர சகோதரிகளுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கும்.—பிலி. 1:12-14.
21. நாம் பிரசங்க வேலையில் தொடர்ந்து ஈடுபடுவதால் என்ன நன்மைகளைப் பெறலாம்?
21 இன்றும் இதுவே உண்மை. பிரச்சினைகள், எதிர்ப்புகள் மத்தியிலும் நாம் தொடர்ந்து பிரசங்க வேலையில் ஈடுபடும்போது பல நன்மைகளைப் பெறலாம். சந்திப்பதற்குக் கடினமான உயர் அதிகாரிகளைக்கூட சந்தித்துச் சாட்சி கொடுக்கலாம். அதுமட்டுமல்ல, நம்முடைய உண்மைத்தன்மையைப் பார்க்கிற சகோதர சகோதரிகள் உற்சாகமடைந்து, முன்பைவிட அதிக தைரியமாகவும் முழுமையாகவும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சாட்சி கொடுக்கலாம்.
a “ பொர்க்கியு பெஸ்து—யூதேயாவின் ஆளுநர்” என்ற பெட்டியை, பக்கம் 199-ல் பாருங்கள்.
b “நியாயத்தீர்ப்பு மேடை” என்பது உயரமான மேடைமீது போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியைக் குறித்தது. நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பே முடிவான தீர்ப்பு என்பதையும், அதை மதிக்க வேண்டும் என்பதையும் காட்டவே அது உயரமான மேடையில் வைக்கப்பட்டது. இயேசுவுக்குத் தீர்ப்பு வழங்கும் சமயத்தில் பிலாத்து நியாயத்தீர்ப்பு மேடையில்தான் உட்கார்ந்திருந்தார்.
c “ உண்மை வணக்கத்துக்காக செய்யப்பட்ட மேல்முறையீடுகள்—இன்றைய காலகட்டத்தில்!” என்ற பெட்டியை, பக்கம் 200-ல் பாருங்கள்.
d “ இரண்டாம் ஏரோது அகிரிப்பா ராஜா” என்ற பெட்டியை, பக்கம் 201-ல் பாருங்கள்.
e பவுல் ஒரு கிறிஸ்தவராக இருந்ததால் இயேசுதான் மேசியா என்று நம்பினார். ஆனால், யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால் பவுலை விசுவாசதுரோகியாக பார்த்தார்கள்.—அப். 21:21, 27, 28.
f “மத்தியான நேரத்தில்” என்று பவுல் சொன்னதைப் பற்றி பைபிள் அறிஞர் ஒருவர் இப்படிச் சொல்கிறார்: “பயணம் செய்கிறவர்கள் பொதுவாக மத்தியான வேளையில்... சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில்... ஓய்வெடுப்பார்கள். அவசர வேலையாக இருந்தால் மட்டுமே ஓய்வெடுக்காமல் போவார்கள். அதனால், கிறிஸ்தவர்களை ஒழித்துக்கட்டுவதில் பவுல் எந்தளவு தீவிரமாக இருந்தார் என்பது நன்றாகத் தெரிகிறது.”