Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 1

‘புறப்பட்டுப் போய், . . . சீஷர்களாக்குங்கள்’

‘புறப்பட்டுப் போய், . . . சீஷர்களாக்குங்கள்’

அப்போஸ்தலர் புத்தகம்—ஒரு கண்ணோட்டம்... நமக்கு சொல்லித் தரும் பாடம்...

1-6. யெகோவாவின் சாட்சிகள் பல்வேறு சூழ்நிலைகளிலும் நல்ல செய்தியைப் பரப்புகிறார்கள் என்பதற்குச் சில அனுபவங்களைச் சொல்லுங்கள்.

 கானாவில் வசிக்கும் ரெபேக்காளுக்குப் பள்ளிக்கூடம்தான் அவளுடைய பிராந்தியம். அவளுடைய ஸ்கூல் பையில் எப்போதுமே பைபிள் பிரசுரங்கள் தஞ்சம் புகுந்திருக்கும். இடைவேளை வந்துவிட்டால் போதும்... சக மாணவர்களுக்குச் சாட்சிகொடுக்க சந்தர்ப்பம் தேடிக்கொண்டிருப்பாள். இப்படியே வகுப்புத் தோழர்கள் பலருக்கு பைபிள் படிப்பு ஆரம்பித்திருக்கிறாள்.

2 ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரை அருகில்தான் மடகாஸ்கர் தீவு மிதந்துகொண்டிருக்கிறது. சுட்டுப் பொசுக்கும் வெயில்... சுமார் 25 கிலோமீட்டர் தூரம்... குக்கிராமம்... இவை எதையும் பாராமல் அங்குள்ள பயனியர்கள் இருவர் பலருக்கு பைபிள் படிப்புகள் நடத்த நடந்தே செல்கிறார்கள்.

3 பராகுவே, பாரானா நதியோர வாசிகளின் காதில் நல்ல செய்தியை ஒலிப்பதற்காக 15 நாடுகளைச் சேர்ந்த வாலண்டியர்களுடன் சேர்ந்து பராகுவே சாட்சிகள் ஒரு பெரிய படகைக் கட்டினார்கள்; இந்தப் படகில் 12 பேர் தங்கலாம். துடிப்புமிக்க இந்தச் சாட்சிகள் மிதக்கும் இந்த வீட்டைப் பயன்படுத்தி, செல்ல முடியாதிருந்த இடங்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டுசென்றிருக்கிறார்கள்.

4 வடகோடியில் வாழும் அலாஸ்கா சாட்சிகள்... கோடையில் சுற்றுலா வரும் பயணிகளுக்குச் சாட்சி கொடுக்க கிடைக்கும் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களைச் சுமந்து வரும் சுற்றுலா கப்பல்கள் துறைமுகத்தில் வந்தபோது, சாட்சிகள் வெவ்வேறு மொழி பிரசுரங்களுடன் அவர்களை வரவேற்றார்கள். அதே அலாஸ்காவில்... தொலைதூர கிராமங்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு செல்ல ஒரு விமானம் உதவியாக இருந்தது. அதனால் அலியூட், அத்தபாஸ்கான், ஷிம்ஷியன், கிலிங்கெட் சமுகத்தினர்மீது சத்திய ஒளி பிரகாசித்திருக்கிறது.

5 அமெரிக்கா, டெக்ஸஸில் வசிக்கும் லாரி என்பவருக்குப் பிரத்தியேகமான ஒரு பிராந்தியம் இருந்தது. அதுதான் அவர் இருந்த நர்ஸிங் ஹோம்! எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தினால் சக்கர நாற்காலியே கதியென்று ஆகிவிட்டார். ஆனாலும் சுறுசுறுப்பாக, கண்ணில் படுகிற அனைவரிடமும் கடவுளது அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை... தான் காலூன்றி நடக்கும் நாள் கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையான செய்தியை... பகிர்ந்துகொண்டார்.—ஏசா. 35:5, 6.

6 ஒரு சமயம் வடக்கு மியான்மாரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொள்ள... சாட்சிகள் சிலர் மாண்டலேயிலிருந்து மூன்று நாள் படகு பயணம் மேற்கொண்டார்கள். நல்ல செய்தியை அறிவிக்கும் ஆர்வம் உள்ளத்தில் பொங்கிவழிய... கையோடு சில பிரசுரங்களையும் அள்ளிச் சென்றார்கள், சக பயணிகளுக்குக் கொடுப்பதற்காக. ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் படகு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தபோது இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அந்த ஊர் மக்களுக்குப் பிரசுரங்களைக் கொடுக்க துள்ளிக் குதித்து ஓடினார்கள். இதற்கிடையே, படகில் புது முகங்கள் வந்து குவிய... திரும்பி வந்த சாட்சிகளுக்குக் கிடைத்துவிட்டது “புதுப் பிராந்தியம்!”

7. எந்தெந்த விதங்களில் யெகோவாவின் ஊழியர்கள் நல்ல செய்தியை அறிவிக்கிறார்கள், அவர்களுடைய இலக்கு என்ன?

7 எட்டுத் திக்கிலும் வசிக்கும் யெகோவாவின் ஊழியர்கள் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி . . . முழுமையாகச் சாட்சி கொடுக்கிறார்கள்’ என்பதை இந்த அனுபவங்கள் காட்டுகின்றன. (அப். 28:23) வீடு வீடாகச் சென்று... வீதிகளில் நின்று... கடிதங்கள் எழுதி... தொலைபேசி எண்களை அழுத்தி... நல்ல செய்தியைப் பரப்புகிறார்கள். அதுமட்டுமா, பேருந்தில் செல்லும்போது... பூங்காவில் உலாவும்போது... பணியிடத்தில் இடைவேளை கிடைக்கும்போது... என எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ஆர்வத்துடன் அறிவிக்கிறார்கள். பேசும் இடம்... விதம்... மாறினாலும் அவர்களுடைய இலக்கு மாறுவதில்லை. ஆம், எங்கெல்லாம் மக்கள் தென்படுகிறார்களோ அங்கெல்லாம் நல்ல செய்தியை முழங்குகிறார்கள்.—மத். 10:11.

8, 9. (அ) இன்று பிரமாண்டமான அளவில் நடைபெறும் பிரசங்க வேலையை ஏன் ஓர் அற்புதம் என்று சொல்லலாம்? (ஆ) மனதில் எழும் கேள்வி என்ன, அதற்கு விடை காண நாம் என்ன செய்ய வேண்டும்?

8 அன்பான வாசகர்களே! இன்று 235-க்கும் அதிகமான தேசங்களில் சுறுசுறுப்பாக நல்ல செய்தியை அறிவிப்பவர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால், பிரமாண்டமான அளவில் நடைபெறும் இந்தப் பிரசங்க வேலையில் நீங்களும் பங்கு வகிக்கிறீர்கள்! உலகம் எனும் மேடையில் நடைபெறும் இந்தச் சாதனைகள் எல்லாம் ஓர் அற்புதமே!! மலைபோன்ற சோதனைகள் எழுந்தாலும்... பயங்கரமான சவால்கள் வந்தாலும்... ஏன், அரசாங்கமே தடை போட்டாலும்... அதிரடி தாக்குதல் நடத்தினாலும்... எல்லா தேசத்தாருக்கும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் முழுமையாகச் சாட்சி கொடுக்கிறார்கள்.

9 மனதில் எழும் கேள்வி என்னவென்றால், ஏன் எந்தவொரு தடையும்... சாத்தானுடைய எதிர்ப்பும்கூட... முன்னோக்கிச் செல்லும் பிரசங்க வேலைக்கு முட்டுக்கட்டை போட முடியவில்லை? இந்தக் கேள்விக்கு விடை காண முதல் நூற்றாண்டு சரித்திரத்தைப் புரட்டிப் பார்க்க வேண்டும். சொல்லப்போனால், ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் தொடங்கி வைத்த வேலையைத்தான் இன்று நாம் தொடர்கிறோம்.

பிரமாண்டமான ஒரு வேலை

10. எந்த வேலைக்காக இயேசு தன்னையே அர்ப்பணம் செய்தார், அதைப் பற்றி என்ன தெரிந்திருந்தார்?

10 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கும் வேலைக்கு கிறிஸ்தவ சபையின் தலைவர் இயேசு கிறிஸ்து தன்னையே அர்ப்பணம் செய்தார். அதுவே அவருடைய உயிர் மூச்சாக இருந்தது. “நான் . . . கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று ஒருமுறை சொன்னார். (லூக். 4:43) தான் ஆரம்பித்து வைக்கும் வேலையை தன்னால் செய்து முடிக்க முடியாது என்பதை இயேசு தெரிந்திருந்தார். இருந்தாலும், நல்ல செய்தி “எல்லா தேசத்தாருக்கும்” அறிவிக்கப்படும் என்று இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு கூறினார். (மாற். 13:10) அப்படியானால், இது யாரால்... எப்படி... செய்யப்படும்?

‘புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்குங்கள்.’—மத்தேயு 28:19

11. சீஷர்களுக்கு இயேசு கொடுத்த பெரிய பொறுப்பு என்ன, அதை நிறைவேற்ற அவர்களுக்கு என்ன ஆதரவு கிடைக்கும்?

11 இயேசு உயிர்த்தெழுந்து சீஷர்களுக்குக் காட்சியளித்தபோது இந்தப் பெரிய பொறுப்பை அவர்கள் கையில் ஒப்படைத்தார்: “புறப்பட்டுப் போய், எல்லாத் தேசத்தாரையும் சீஷர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். இதோ! இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்.” (மத். 28:19, 20) “நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்ற வார்த்தைகள் எதைக் காட்டின? பிரசங்க வேலையில்... சீஷராக்கும் வேலையில்... இயேசுவின் ஆதரவுக் கரம் சீஷர்களுக்கு எப்போதும் இருக்கும் என்பதையே காட்டின. இயேசுவின் ஆதரவுக் கரம் அவர்களுக்கு நிச்சயம் தேவை; ஏனென்றால், “எல்லா தேசத்து மக்களும் [அவர்களை] வெறுப்பார்கள்” என்று அவர் அப்போதே சொன்னார். (மத். 24:9) சீஷர்களுக்கு இன்னொரு விதத்திலும் ஆதரவு கிடைக்கும். அதுதான் கடவுளுடைய பரிசுத்த சக்தி. ஏனென்றால், பரலோகத்துக்குப் போவதற்கு சற்று முன்பு “பூமியின் எல்லைகள் வரையிலும்” அவருக்குச் சாட்சிகளாக இருப்பதற்கு இந்தச் சக்தி அவர்களுக்குப் பலமளிக்கும் என்று இயேசு சொல்லியிருந்தார்.—அப். 1:8.

12. என்னென்ன கேள்விகள் நம் மனதில் எழலாம், அவற்றுக்கு நாம் பதில் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

12 இப்போது நம் மனதில் சில கேள்விகள் எழலாம்: இயேசுவின் அப்போஸ்தலர்களும் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மற்ற சீஷர்களும் இந்த வேலையைப் பொறுப்புடன் செய்தார்களா? அந்தச் சிறு தொகுதியினர் கடும் துன்புறுத்தல் மத்தியிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுத்தார்களா? சீஷராக்கும் வேலையில் யெகோவா, இயேசு கிறிஸ்து மற்றும் தூதர்களின் ஆதரவும்... கடவுளுடைய சக்தியின் துணையும்... அவர்களுக்கு இருந்ததா? இந்தக் கேள்விகளுக்கும் இன்னும் பல கேள்விகளுக்கும் அப்போஸ்தலர் புத்தகம் பதில் அளிக்கிறது. நாம் அந்தப் பதில்களைத் தெரிந்துகொள்வது மிக மிக முக்கியம். ஏன்? ஏனென்றால், பிரசங்க வேலை “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை” நீடிக்கும் என்று இயேசு சொன்னார். அப்படியென்றால், உண்மைக் கிறிஸ்தவர்கள் அனைவரும்... முடிவு காலத்தில் வாழும் நாமும்கூட... அந்த வேலையைச் செய்ய வேண்டும். அதனால்தான், அப்போஸ்தலர் புத்தகத்தின் வரலாற்றுப் பதிவுகளை வாசித்துப் பார்க்க நாம் ஆசையாக இருக்கிறோம்.

அப்போஸ்தலர் புத்தகம்—ஒரு கண்ணோட்டம்

13, 14. (அ) அப்போஸ்தலர் புத்தகத்தை எழுதியது யார், அவருக்குத் தகவல்கள் எப்படிக் கிடைத்தன? (ஆ) என்னென்ன விஷயங்கள் அதில் அடங்கியுள்ளன?

13 அப்போஸ்தலர் புத்தகத்தை எழுதியது யார்? எழுத்தாளரின் பெயரை அந்தப் புத்தகம் குறிப்பிடுவதில்லை. ஆனால், லூக்கா புத்தகத்தை எழுதியவர்தான் அப்போஸ்தலர் புத்தகத்தையும் எழுதியிருக்க வேண்டும் என்பதை அந்தப் புத்தகத்தின் ஆரம்ப வரிகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. (லூக். 1:1-4; அப். 1:1, 2) அதனால்தான், ‘அன்பான மருத்துவரும்’ ஆழ்ந்து ஆராயும் சரித்திர ஆசிரியருமான லூக்காவே அப்போஸ்தலர் புத்தகத்தை எழுதியிருக்க வேண்டுமென்ற கருத்து ஆரம்பக் காலத்திலிருந்தே நிலவுகிறது. (கொலோ. 4:14) இந்தப் புத்தகத்தில் சுமார் 28 வருஷக் கால சரித்திரம் அடங்கியிருக்கிறது. அதாவது, கி.பி. 33-ல் இயேசு பரலோகத்துக்கு ஏறிச் சென்றது முதல்... சுமார் கி.பி. 61-ல் பவுலுடைய சிறைவாசம் முடியும் வரை நடைபெற்ற சம்பவங்கள் அடங்கியுள்ளன. லூக்கா இந்தப் புத்தகத்தை எழுதும்போது முதலில் “அவர்கள்” என்று குறிப்பிடுகிறார்; ஆனால் பிற்பாடு “நாங்கள்” என்று சொல்கிறார். இதிலிருந்து அநேக சம்பவங்களை அவரே நேரடியாகப் பார்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. (அப். 16:8-10; 20:5; 27:1) நுணுக்கமான ஆராய்ச்சியாளரான லூக்கா, தான் பதிவு செய்த தகவல்களை பவுல், பர்னபா, பிலிப்பு ஆகியோரிடமிருந்தும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களிடமிருந்தும் நேரடியாகவே பெற்றிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

14 அப்போஸ்தலர் புத்தகத்தில் என்னென்ன விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன? இயேசு சொன்ன... செய்த... காரியங்களை ஏற்கெனவே சுவிசேஷ புத்தகத்தில் லூக்கா பதிவு செய்திருந்தார். அதனால், அப்போஸ்தலர் புத்தகத்தில் இயேசுவின் சீஷர்கள் சொன்ன... செய்த... காரியங்களைப் பதிவு செய்தார். அப்படியென்றால், அப்போஸ்தலர் புத்தகத்தில் இருப்பதெல்லாம் இமாலய சாதனைகள் படைத்தவர்களைப் பற்றிய பதிவுகள். இவர்களுடைய அருமை தெரியாதவர்கள்தான் இவர்களை “கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்” என்றார்கள். (அப். 4:13) சுருங்கச் சொன்னால், கிறிஸ்தவ சபை எப்படிப் பிறந்தது... எப்படி வளர்ந்தது... என்பதைப் பற்றிய விவரங்களை இந்தப் புத்தகம் அளிக்கிறது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பிரசங்கித்த முறைகளை... அவர்களுடைய மனப்பான்மையை... பற்றியும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. (அப். 4:31; 5:42) நல்ல செய்தி உலகம் எங்கும் பரவுவதில் கடவுளுடைய சக்தியின் பங்கையும் அது சிறப்பித்துக் காட்டுகிறது. (அப். 8:29, 39, 40; 13:1-3; 16:6; 18:24, 25) பைபிளின் முக்கியப் பொருளை, அதாவது கிறிஸ்துவை அரசராகக் கொண்ட தனது அரசாங்கம் எப்படிக் கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறது என்ற விஷயத்தை, அப்போஸ்தலர் புத்தகம் சிறப்பித்துக் காட்டுகிறது. அதோடு, புயல்போல் வந்த எதிர்ப்பின் மத்தியிலும் அந்த அரசைப் பற்றிய செய்தி நாலா பக்கமும் பரவியதைப் பற்றிய விவரங்களையும் அந்தப் புத்தகம் வழங்குகிறது.—அப். 8:12; 19:8; 28:30, 31.

15. அப்போஸ்தலர் புத்தகத்தை அலசி ஆராய்வதால் நமக்கு என்ன பயன்?

15 அப்போஸ்தலர் புத்தகத்தைப் படிக்க படிக்க பரவசம் நம்மைப் பற்றிக்கொள்ளும்! நம் விசுவாசம் எனும் நங்கூரம் உறுதியாகும்!! கிறிஸ்துவின் ஆரம்பக் கால சீஷர்களுடைய அஞ்சா நெஞ்சத்தையும் ஆர்வத் துடிப்பையும் மனத்திரையில் ஓடவிடும்போது நாம் நிச்சயம் நெகிழ்ந்துபோவோம். முதல் நூற்றாண்டு சகோதர சகோதரிகளின் விசுவாசத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற ஆர்வத் தீ நமக்குள்ளும் பற்றியெரியும். அப்போது, ‘புறப்பட்டுப் போய், . . . சீஷர்களாக்குங்கள்’ என்ற கட்டளையை நாம் இன்னும் சிறப்பாக நிறைவேற்றுவோம். உங்கள் கையில் தவழும் இப்புத்தகம் அப்போஸ்தலர் புத்தகத்தை அலசி ஆராய்வதற்காகவே தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இது ஒரு பைபிள் கையேடு

16. என்ன மூன்று காரணங்களுக்காக இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது?

16 மொத்தத்தில், இந்தப் புத்தகம் எதற்காக எழுதப்பட்டுள்ளது? முக்கியமான மூன்று காரணங்களுக்காக... (1) பிரசங்க வேலையையும் சீஷராக்கும் வேலையையும் தன்னுடைய சக்தியின் மூலம் யெகோவா வழிநடத்துகிறார் என்பதில் நம் நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்கு, (2) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்துவின் சீஷர்களுடைய முன்மாதிரியைச் சிந்திக்க வைத்து ஊழியத்தில் நம் ஆர்வத்தைத் தட்டி எழுப்புவதற்கு, (3) யெகோவாவின் அமைப்புமீது... பிரசங்கிப்பதிலும் சபையைக் கண்காணிப்பதிலும் முன்னின்று வழிநடத்துகிறவர்கள்மீது... நம் மதிப்பு மரியாதையை அதிகரிப்பதற்கு.

17, 18. இப்புத்தகம் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, இதிலுள்ள என்ன அம்சங்கள் தனிப்பட்ட பைபிள் படிப்புக்கு உதவும்?

17 இப்புத்தகம் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது? இது எட்டுப் பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு பாகமும் அப்போஸ்தலர் புத்தகத்தின் ஒரு பகுதியை அலசுகிறது. வசனத்துக்கு வசனம் விளக்கம் கொடுப்பது இந்தப் புத்தகத்தின் நோக்கமல்ல. அப்போஸ்தலர் புத்தகம் விவரிக்கும் சம்பவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள... அவற்றைத் தனிப்பட்ட விதமாகப் பொருத்தி பயன்படுத்த... நமக்கு உதவுவதே இதன் நோக்கம். ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்புக்கும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வரிகள் அந்த அதிகாரத்தின் சுருக்கத்தைச் சொல்கிறது. அதற்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களோ அப்போஸ்தலர் புத்தகத்தில் சிந்திக்கப்படும் பகுதியைச் சுட்டிக்காட்டுகிறது.

18 தனிப்பட்ட பைபிள் படிப்புக்கு உதவ இந்தப் புத்தகத்தில் வேறு சில அம்சங்களும் இருக்கின்றன. அதில் இருக்கிற அழகிய படங்கள் அப்போஸ்தலர் புத்தகத்தின் சுவாரஸ்யமான சம்பவங்களை மனக்கண்ணில் ஓடவிட உதவும். அநேக அதிகாரங்களில் பெட்டி செய்திகளும் இருக்கும்; கூடுதல் விவரங்களை அவை அளிக்கின்றன. சில பெட்டிகளில், முன்னுதாரணமாகத் திகழ்ந்த பைபிள் கதாபாத்திரத்தின் பின்னணித் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிலவற்றில், அப்போஸ்தலர் புத்தகத்தில் வரும் இடங்களை, சம்பவங்களை, பழக்கவழக்கங்களை, வேறு சில கதாபாத்திரங்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள் உள்ளன.

உங்களுடைய பிராந்தியத்தில் அவசர உணர்வோடு பிரசங்கியுங்கள்

19. அவ்வப்போது நம்மையே எவ்வாறு சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?

19 திறந்த மனதுடன் சுயபரிசோதனை செய்வதற்கு இப்புத்தகம் உங்களுக்குப் பேருதவியாக இருக்கும். நீங்கள் எவ்வளவு காலமாக பிரசங்க வேலையைச் செய்து வந்தாலும்சரி, வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுக்கிறீர்கள்... கிறிஸ்தவ ஊழியத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்... என்பதை அவ்வப்போது சற்று நிறுத்தி சிந்தித்துப் பார்ப்பது நல்லது. (2 கொ. 13:5) உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எப்போதும் அவசர உணர்வுடன் ஊழியத்தைச் செய்கிறேனா? (1 கொ. 7:29-31) உறுதியான நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் நல்ல செய்தியை அறிவிக்கிறேனா? (1 தெ. 1:5, 6) பிரசங்கிக்கும் வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் என்னால் முடிந்தளவு முழுமையாக ஈடுபடுகிறேனா?’—கொலோ. 3:23.

20, 21. நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வேலையை ஏன் அவசர உணர்வோடு செய்ய வேண்டும், என்ன செய்ய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்?

20 நமக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆம், பிரசங்கித்து சீஷராக்கும் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. ஒவ்வொரு நாளும் கரைய கரைய... அந்த வேலையை நாம் இன்னும் அவசர உணர்வோடு செய்ய வேண்டும். சாத்தானின் உலகத்துக்கு முடிவு விரைந்து வந்துகொண்டிருக்கிறது. சரித்திரத்திலேயே வேறெந்த காலக்கட்டத்திலும் மனித உயிர்கள் இந்தளவு ஆபத்தில் இருந்ததில்லை. இன்னும் எத்தனை பேர் நம்முடைய செய்திக்குச் செவிசாய்ப்பார்கள் என்று நமக்குத் தெரியாது. (அப். 13:48) ஆனால், காலம் கடந்துவிடும்முன் அவர்களுக்கெல்லாம் சத்தியத்தைச் சொல்வது நம் கடமை.—1 தீ. 4:16.

21 அப்படியானால், முதல் நூற்றாண்டில் வாழ்ந்த வைராக்கியமுள்ள பிரசங்கிப்பாளர்களின் முன்மாதிரியை நாம் பின்பற்றுவது முக்கியம். இன்னுமதிக ஆர்வத்தோடு... தைரியத்தோடு... பிரசங்கிக்க இப்புத்தகம் உங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக! “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி . . . முழுமையாகச் சாட்சி” கொடுக்க வேண்டுமென்ற உங்கள் தீர்மானத்தைப் பலப்படுத்துவதாக!!—அப். 28:23.