Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 15

‘சபைகளைப் பலப்படுத்தினார்கள்’

‘சபைகளைப் பலப்படுத்தினார்கள்’

சபைகள் விசுவாசத்தில் பலப்பட பயணக் கண்காணிகள் உதவுகிறார்கள்

அப்போஸ்தலர் 15:36–16:5-ன் அடிப்படையில்

1-3. (அ) பவுலின் புதிய பயண நண்பர் யார், அவர் எப்படிப்பட்டவர்? (ஆ) இந்த அதிகாரத்தில் நாம் எதையெல்லாம் சிந்திப்போம்?

 கரடுமுரடான பாதை. பவுல் ஒரு இளைஞருடன் நடந்து செல்கிறார். அந்த இளைஞரைப் பற்றிய எண்ணமே அவருடைய மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த இளைஞர்தான் தீமோத்தேயு. இளமைத் துடிப்புடன் இருக்கும் தீமோத்தேயுவுக்கு ஏறக்குறைய 20 வயது. தன் சொந்த ஊரையும் உறவையும்விட்டுப் போய்க்கொண்டிருக்கிறார். அந்தி சாயும் நேரத்துக்குள் லீஸ்திரா, இக்கோனியா பகுதியைவிட்டு அவர்கள் வெகு தூரம் வந்துவிடுகிறார்கள். இனி என்ன நடக்கப்போகிறது? பவுலால் ஓரளவு ஊகிக்க முடிகிறது; காரணம், இது அவருடைய இரண்டாம் மிஷனரி பயணம். ஆபத்துகளும் பிரச்சினைகளும் நிறைய வருமென்று அவருக்குத் தெரியும். அதையெல்லாம் இந்த இளைஞர் எப்படிச் சமாளிக்கப்போகிறார்?

2 தாழ்மையுள்ள தீமோத்தேயுவுக்குத் தன்மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, பவுலுக்கு தீமோத்தேயுமீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. சமீபத்தில் நடந்த சம்பவங்களின் காரணமாக, தனக்குச் சரியான ஒரு பயண நண்பர் வேண்டுமென்று பவுல் தீர்மானிக்கிறார். பயணக் கண்காணிகள் உறுதியான மனப்பான்மையுடனும் ஒற்றுமையுடனும் இருந்தால்தான் சபைகளைச் சந்தித்து சகோதரர்களைப் பலப்படுத்த முடியும் என்று அவர் நினைக்கிறார். ஏன் இப்படி நினைக்கிறார்? முன்பு ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் அவரும் பர்னபாவும் பிரிந்து போனது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

3 கருத்துவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான சிறந்த வழியைப் பற்றி இந்த அதிகாரத்தில் சிந்திப்போம். பவுல் ஏன் தீமோத்தேயுவைத் தன் பயண நண்பராகத் தேர்ந்தெடுத்தார் என்றும் பார்ப்போம். அதோடு, இன்று பயணக் கண்காணிகள் வகிக்கும் முக்கியப் பங்கைப் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்வோம்.

‘இப்போது திரும்பிப் போய், அங்கிருக்கிற சகோதரர்களைச் சந்திக்கலாம்’ (அப். 15:36)

4. என்ன காரணங்களுக்காக பவுல் இரண்டாவது மிஷனரி பயணத்தைச் செய்தார்?

4 முந்தின அதிகாரத்தில் பார்த்தபடி பவுல், பர்னபா, யூதாஸ், சீலா ஆகிய நான்கு பேரும் விருத்தசேதனம் பற்றி ஆளும் குழு எடுத்த தீர்மானத்தை அந்தியோகியா சபைக்குச் சொல்லி, சகோதரர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதன் பிறகு பவுல் என்ன செய்தார்? தன்னுடைய அடுத்த பயணத் திட்டத்தை மனதில் வைத்து பர்னபாவிடம், “யெகோவாவின் வார்த்தையைப் பற்றி நாம் அறிவித்த ஒவ்வொரு நகரத்துக்கும் இப்போது திரும்பிப் போய், அங்கிருக்கிற சகோதரர்களைச் சந்தித்து அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்” என்று சொன்னார். (அப். 15:36) புதிதாகக் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய அந்தச் சகோதரர்களை வெறுமென நலம் விசாரித்துவிட்டு வருகிற எண்ணத்தில் அவர் அப்படிச் சொல்லவில்லை. அவர் என்ன காரணங்களுக்காக இரண்டாவது மிஷனரி பயணத்தை செய்தார் என்பதைப் பற்றி அப்போஸ்தலர் புத்தகம் தெளிவாக விளக்குகிறது. முதலாவது, ஆளும் குழு எடுத்திருந்த தீர்மானங்களைச் சபைகளுக்குத் தொடர்ந்து தெரியப்படுத்த விரும்பினார். (அப். 16:4) இரண்டாவது, தான் ஒரு பயணக் கண்காணியாக இருந்ததால் சபைகளை உற்சாகப்படுத்தி, சகோதரர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். (ரோ. 1:11, 12) அப்போஸ்தலர்கள் வைத்த முன்மாதிரியை இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பு எப்படிப் பின்பற்றுகிறது?

5. இன்றுள்ள ஆளும் குழு சபைகளுக்கு வழிநடத்துதலையும் உற்சாகத்தையும் எப்படி தருகிறது?

5 இன்று இயேசு கிறிஸ்து தனது சபையை வழிநடத்த யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவைப் பயன்படுத்துகிறார். பரலோக நம்பிக்கையுடைய இந்த உண்மையுள்ளவர்கள், உலகம் முழுவதும் இருக்கிற சபைகளுக்கு வழிநடத்துதலையும் உற்சாகத்தையும் தருகிறார்கள்; அதற்காகக் கடிதங்கள், அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள், ஆன்லைனில் வெளிவரும் பிரசுரங்கள், கூட்டங்கள் என்று பல வழிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதோடு, ஒவ்வொரு சபையோடும் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ள முழுமுயற்சி எடுக்கிறார்கள். அதைச் செய்ய, பயணக் கண்காணிகளின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கிறார்கள். உலகெங்கும் உள்ள தகுதிவாய்ந்த மூப்பர்களில் ஆயிரக்கணக்கானவர்களை வட்டாரக் கண்காணிகளாக அவர்களே நேரடியாக நியமிக்கிறார்கள்.

6, 7. வட்டாரக் கண்காணிகளின் சில பொறுப்புகள் என்ன?

6 இன்று பயணக் கண்காணிகள் தாங்கள் சந்திக்கும் சபையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்தி, பைபிளிலிருந்து உற்சாகமளிக்க முயற்சி செய்கிறார்கள். எப்படி? பவுலைப் போன்ற முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை அவர்கள் பின்பற்றுகிறார்கள். பவுல் தன்னுடன் சேவை செய்த கண்காணியிடம், “கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கி; சாதகமான காலத்திலும் சரி, பாதகமான காலத்திலும் சரி, அவசர உணர்வோடு பிரசங்கி; கற்பிக்கும் கலையைப் பயன்படுத்தி பொறுமையோடு கண்டித்துப் பேசு, கடுமையாக எச்சரி, அறிவுரை சொல். . . . நற்செய்தியாளரின் வேலையைச் செய்” என்று சொன்னார்.—2 தீ. 4:2, 5.

7 இந்த வார்த்தைகளுக்கு இசைவாக, வட்டாரக் கண்காணிகளும் (திருமணமாகியிருந்தால்) அவர்களுடைய மனைவிகளும் சபை பிரஸ்தாபிகளுடன் சேர்ந்து பிரசங்க வேலையின் பல்வேறு அம்சங்களில் ஈடுபடுகிறார்கள். இந்தக் கண்காணிகள் ஊழியத்தில் வைராக்கியமாக பங்குகொள்கிறார்கள், கற்றுக்கொடுப்பதில் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். இப்படி, மந்தைக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறார்கள். (ரோ. 12:11; 2 தீ. 2:15) வட்டாரக் கண்காணிகள், அன்பால் தூண்டப்பட்டு தியாகங்கள் செய்கிறார்கள். பயண வேலைக்காகத் தங்களையே அர்ப்பணிக்கிறார்கள்; வெயில், மழை என்று பார்ப்பதில்லை, ஆபத்தான ஊழியப் பகுதிகள் என்றும் பார்ப்பதில்லை. (பிலி. 2:3, 4) அவர்கள் செல்கிற ஒவ்வொரு சபையிலும் பைபிள் அடிப்படையில் பேச்சுகளைக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள், கற்றுக்கொடுக்கிறார்கள், புத்திசொல்கிறார்கள். சபையிலுள்ள எல்லாரும் அவர்களுடைய நல்ல நடத்தையைக் கூர்ந்து கவனித்து அவர்களைப் பின்பற்றும்போது நன்மை அடைகிறார்கள்.—எபி. 13:7.

“கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது” (அப். 15:37-41)

8. பவுல் சொன்ன ஆலோசனையைப் பற்றி பர்னபா எப்படி உணர்ந்தார், என்ன செய்ய உறுதியாக இருந்தார்?

8 ‘திரும்பிப் போய், அங்கிருக்கிற சகோதரர்களைச் சந்திக்கலாம்’ என்று பவுல் சொன்னபோது, பர்னபா சந்தோஷமாகச் சம்மதித்தார். (அப். 15:36) பயண வேலையில் இவர்கள் இரண்டு பேரும் தோளோடு தோள் சேர்ந்து உழைத்திருந்தார்கள்; போகவிருந்த இடங்களைப் பற்றியும் அங்கே இருந்தவர்களைப் பற்றியும் நன்றாக அறிந்திருந்தார்கள். (அப். 13:2–14:28) அதனால், மீண்டும் அந்த வேலையில் இருவருமாகச் சேர்ந்து ஈடுபடுவது ஞானமானதாகவும் நடைமுறையானதாகவும் அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. “மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவானைக் கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்பதில் பர்னபா உறுதியாக இருந்தார்” என்று அப்போஸ்தலர் 15:37 சொல்கிறது. தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனான மாற்குவை ‘கூட்டிக்கொண்டு போகலாமா?’ என்று பர்னபா ஆலோசனை கேட்கவில்லை, ஆனால் கூட்டிக்கொண்டு போக “உறுதியாக இருந்தார்” என்பதைக் கவனியுங்கள்.

9. பர்னபாவின் தீர்மானத்தை பவுல் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?

9 பவுல் இதற்குச் சம்மதிக்கவில்லை. ஏன்? “மாற்கு முன்பு பம்பிலியாவில் அவர்களைவிட்டுப் பிரிந்து ஊழியம் செய்ய வராமல் இருந்ததால், அவரைக் கூட்டிக்கொண்டு போக பவுல் விரும்பவில்லை” என்று பதிவு சொல்கிறது. (அப். 15:38) முதல் மிஷனரி பயணத்தின்போது பவுலோடும் பர்னபாவோடும் மாற்கு போயிருந்தார், ஆனால் கடைசிவரை அவர்களோடு இருக்கவில்லை. (அப். 12:25; 13:13) அந்தப் பயணத்தின் ஆரம்பத்திலேயே, அதாவது பம்பிலியாவில் இருந்தபோதே, தன் பயண வேலையை விட்டுவிட்டு எருசலேமுக்குத் திரும்பினார். அதற்கான காரணத்தை பைபிள் சொல்வதில்லை, ஆனால் மாற்கு பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் என்று பவுல் நினைத்திருக்கலாம். மாற்குவை இனி நம்பிப் பிரயோஜனம் இல்லை என்றும் யோசித்திருக்கலாம்.

10. பர்னபாவுக்கும் பவுலுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் என்ன நடந்தது, அதன் விளைவு என்ன?

10 இருந்தாலும், மாற்குவை கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்பதில் பர்னபா பிடிவாதமாக இருந்தார். ஆனால், அவரைக் கூட்டிக்கொண்டு போக கூடாது என்பதில் பவுல் பிடிவாதமாக இருந்தார். அதனால், “பவுலுக்கும் பர்னபாவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது; அவர்கள் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்துபோனார்கள்” என்று அப்போஸ்தலர் 15:39 சொல்கிறது. பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு தன் சொந்த ஊரான சீப்புரு தீவுக்குப் போக கப்பலேறினார். பவுலோ, “சீலாவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். சகோதரர்கள் பவுலை யெகோவாவின் கையில் ஒப்படைத்து, அவருடைய அளவற்ற கருணை பவுல்மேல் இருக்கும்படி ஜெபம் செய்தார்கள். அதன் பின்பு, அவர் அங்கிருந்து புறப்பட்டு” போனார். (அப். 15:40) பவுலும் சீலாவும் ‘சீரியா, சிலிசியா வழியாகப் போய், அங்கிருந்த சபைகளைப் பலப்படுத்தினார்கள்.’—அப். 15:41.

11. நமக்கும் நம்மைப் புண்படுத்தியவர்களுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் நீடிக்காமலிருக்க என்ன குணங்களைக் காட்டுவது அவசியம்?

11 பவுல், பர்னபா பற்றிய பதிவு, நம்முடைய பாவத்தால் ஏற்படும் குறைபாடுகளை நினைப்பூட்டலாம். அவர்கள் ஆளும் குழுவின் விசேஷப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். பவுல்கூட பிற்பாடு அந்தக் குழுவின் ஒரு அங்கத்தினராக ஆகியிருக்கலாம். இருந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்தில் பவுல், பர்னபா இருவருமே தங்கள் அபூரணத்துக்கு இடமளித்துவிட்டார்கள். ஆனால், தங்கள் நட்பில் ஏற்பட்ட விரிசல் நீடிக்க அவர்கள் விட்டுவிட்டார்களா? இல்லை, அவர்களிடம் குறைகள் இருந்தாலும், மனத்தாழ்மையுள்ளவர்களாக, கிறிஸ்துவின் சிந்தையைப் பெற்றவர்களாக இருந்தார்கள். அதனால், அவர்கள் பிற்பாடு சகோதர அன்பை காட்டினார்கள், ஒருவரையொருவர் மன்னித்தார்கள். (எபே. 4:1-3) சில காலம் கழித்து, பவுலும் மாற்குவும் ஒன்றுசேர்ந்து இன்னும் நிறைய ஊழிய நியமிப்புகளை செய்தார்கள். aகொலோ. 4:10.

12. பவுலையும் பர்னபாவையும் போல் இன்றைய கண்காணிகள் எப்படிப்பட்ட குணங்களைக் காட்ட வேண்டும்?

12 பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையே ஒருமுறை சண்டை ஏற்பட்டது என்பதற்காக, அவர்கள் சண்டைக்காரர்கள் என்று நாம் முடிவுகட்டிவிடக் கூடாது. பர்னபா அன்பானவர், தாராள குணமுள்ளவர் என்றெல்லாம் பெயரெடுத்திருந்தார்; அதனால்தான் அப்போஸ்தலர்கள், யோசேப்பு என்ற அவருடைய சொந்த பெயரை வைத்து அழைக்காமல், பர்னபா என்று அழைத்தார்கள்; பர்னபா என்பதற்கு “ஆறுதலின் மகன்” என்று அர்த்தம். (அப். 4:36) பவுலும்கூட மென்மையானவர், கனிவானவர் என்றெல்லாம் பெயரெடுத்திருந்தார். (1 தெ. 2:7, 8) இன்று வட்டாரக் கண்காணிகள் உட்பட கிறிஸ்தவக் கண்காணிகள் எல்லாருமே பவுலையும் பர்னபாவையும் போல் மனத்தாழ்மை காட்ட எப்போதும் முயற்சியெடுக்க வேண்டும்; சக மூப்பர்களையும் மந்தை முழுவதையும் மென்மையாக நடத்த வேண்டும்.—1 பே. 5:2, 3.

‘உயர்வாகப் பேசப்பட்டு வந்தார்’ (அப். 16:1-3)

13, 14. (அ) தீமோத்தேயு யார், பவுல் எந்தச் சந்தர்ப்பங்களில் அவரைச் சந்தித்திருப்பார்? (ஆ) தீமோத்தேயு எப்படி பவுலுடைய கவனத்தைக் கவர்ந்தார்? (இ) தீமோத்தேயுவுக்கு என்ன பொறுப்பு கொடுக்கப்பட்டது?

13 பவுல் தன்னுடைய இரண்டாவது மிஷனரி பயணத்தின்போது ரோம மாகாணமான கலாத்தியாவுக்குப் போனார்; அங்கே ஏற்கெனவே உருவாகியிருந்த சில சபைகளைச் சந்தித்தார். கடைசியாக, “தெர்பைக்கும் பின்பு லீஸ்திராவுக்கும் வந்துசேர்ந்தார்.” மேலும் பதிவு இப்படிச் சொல்கிறது: “அங்கே தீமோத்தேயு என்ற ஒரு சீஷர் இருந்தார். அவருடைய அம்மா இயேசுவைப் பின்பற்றிய ஒரு யூதப் பெண், ஆனால் அப்பா ஒரு கிரேக்கர்.”—அப். 16:1. b

14 சுமார் கி.பி. 47-ல் லீஸ்திராவுக்கு பவுல் முதல்முறை போனபோது தீமோத்தேயுவின் குடும்பத்தைச் சந்தித்திருப்பார். அதன்பின், 2 அல்லது 3 வருஷங்களுக்குப் பிறகு, இரண்டாம் முறையாக அங்கே போனபோது, இளம் தீமோத்தேயு அவருடைய கவனத்தைக் கவர்ந்தார். காரணம்? அங்கே “இருந்த சகோதரர்கள் தீமோத்தேயுவைப் பற்றி உயர்வாகப் பேசினார்கள்.” தீமோத்தேயு, தன்னுடைய சொந்த சபையிலிருந்த சகோதரர்களின் மதிப்புமரியாதையை மட்டுமல்ல, மற்ற சகோதரர்களின் மதிப்புமரியாதையையும் சம்பாதித்திருந்தார். சொல்லப்போனால், லீஸ்திராவில் மட்டுமல்ல, சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த இக்கோனியாவில் வாழ்ந்த சகோதரர்களும் அவரைப் பாராட்டிப் பேசினார்கள் என்று அதே பதிவு சொல்கிறது. (அப். 16:2) சபை மூப்பர்கள் கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்பட்டு இளம் தீமோத்தேயுவுக்கு முக்கியப் பொறுப்பு ஒன்றைக் கொடுத்தார்கள், அதாவது பவுலுக்கும் சீலாவுக்கும் பயண நண்பராக இருக்கிற பொறுப்பைக் கொடுத்தார்கள்.—அப். 16:3.

15, 16. தீமோத்தேயுவுக்கு எது நல்ல பெயரை வாங்கித்தந்தது?

15 இளம் வயதிலேயே தீமோத்தேயு எப்படி இந்தளவு நல்ல பெயரைச் சம்பாதித்தார்? அவருடைய அறிவினாலா? அழகினாலா? திறமைகளாலா? பொதுவாக, இதையெல்லாம் பார்த்து மக்கள் மயங்குவார்கள். தீர்க்கதரிசி சாமுவேல்கூட ஒருசமயம் வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தப்புக்கணக்கு போட்டார். ஆனால், கடவுள் அவரிடம், “மனிதன் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை. மனிதன் வெளித்தோற்றத்தை மட்டும்தான் பார்க்கிறான். ஆனால், யெகோவாவாகிய நான் இதயத்தைப் பார்க்கிறேன்” என்று சொன்னார். (1 சா. 16:7) தீமோத்தேயுவுக்கு மற்ற கிறிஸ்தவர்களிடமிருந்து நல்ல பெயரை வாங்கித்தந்தது அவருக்கு இருந்த திறமைகள் அல்ல, அவருடைய குணங்களே!

16 பல வருஷங்கள் கழித்து, தீமோத்தேயுவின் நல்ல குணங்கள் சிலவற்றை அப்போஸ்தலன் பவுல் சொன்னார். ஊழிய வேலையில் அவர் காட்டிய நல்ல மனப்பான்மையையும், சுயநலம் இல்லாத அன்பையும், அவருடைய கடின உழைப்பையும் பற்றி சொன்னார். (பிலி. 2:20-22) தீமோத்தேயு “வெளிவேஷமில்லாத” விசுவாசத்தைக் காட்டியதற்காகவும் பெயர்பெற்றவராக இருந்தார்.—2 தீ. 1:5.

17. இளைஞர்கள் இன்று தீமோத்தேயுவைப் போலவே எப்படி நடந்துகொள்ளலாம்?

17 இன்று, நிறைய இளைஞர்கள் தீமோத்தேயுவைப் போலவே கடவுளுக்கு பிடித்த குணங்களை வளர்த்துக்கொள்கிறார்கள். இதனால் சின்ன வயதிலேயே யெகோவாவிடமிருந்தும் அவருடைய மக்களிடமிருந்தும் நல்ல பெயர் சம்பாதிக்கிறார்கள். (நீதி. 22:1; 1 தீ. 4:15) வெளிவேஷமில்லாத விசுவாசத்தைக் காட்டுகிறார்கள், இரட்டை வாழ்க்கை வாழ்வதைத் தவிர்க்கிறார்கள். (சங். 26:4) இவர்கள் பிரஸ்தாபிகளாகத் தகுதிபெற்று, யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் பெறும்போது அவரை வணங்கும் எல்லாரும் எவ்வளவு உற்சாகம் பெறுகிறார்கள்! இப்படிப்பட்ட இளைஞர்கள், எதிர்காலத்தில் தீமோத்தேயுவைப் போல் சபையில் முக்கியப் பங்கு வகிக்க முடியும்.

“சபையில் இருந்தவர்கள் விசுவாசத்தில் பலப்பட்டு வந்தார்கள்” (அப். 16:4, 5)

18. (அ) பயணக் கண்காணிகளான பவுலும் தீமோத்தேயுவும் என்ன ஊழியப் பொறுப்புகளைப் பெற்றிருந்தார்கள்? (ஆ) சபைகள் எப்படிப் பலனடைந்தன?

18 பவுலும் தீமோத்தேயுவும் வருஷக்கணக்காக ஒன்றுசேர்ந்து ஊழிய வேலையில் ஈடுபட்டார்கள். பயணக் கண்காணிகளான அவர்கள், ஆளும் குழுவின் சார்பில் பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றினார்கள். “அவர்கள் நகரம் நகரமாகப் போனபோது, எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் தீர்மானித்த கட்டளைகளை அங்கே இருந்தவர்களிடம் தெரிவித்து, அவற்றைக் கடைப்பிடிக்கும்படி சொன்னார்கள்” என்று பைபிள் பதிவு சொல்கிறது. (அப். 16:4) அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் கொடுத்த ஆலோசனைகளை சபைகளும் கடைப்பிடித்து நடந்தன. இத்தகைய கீழ்ப்படிதலின் காரணமாக, “சபையில் இருந்தவர்கள் விசுவாசத்தில் பலப்பட்டு வந்தார்கள், அவர்களுடைய எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வந்தது.”—அப். 16:5.

19, 20. தங்களை ‘வழிநடத்துகிறவர்களின்’ அறிவுரைக்குக் கிறிஸ்தவர்கள் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?

19 அவ்வாறே, இன்று யெகோவாவின் சாட்சிகள் தங்களை ‘வழிநடத்துகிறவர்களின்’ அறிவுரைக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடப்பதால் ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள். (எபி. 13:17) இந்த உலகத்தின் காட்சி மாறிக்கொண்டே இருப்பதால், “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” அளிக்கிற ஆன்மீக உணவை நாம் உடனுக்குடன் உட்கொண்டு, அதன்படி நடப்பது ரொம்ப முக்கியம். (மத். 24:45; 1 கொ. 7:29-31) அப்படிச் செய்யும்போது, சத்தியத்தைவிட்டு விலகாமலும் இந்த உலகத்தினால் கறைபடாமலும் இருப்போம்.—யாக். 1:27.

20 உண்மைதான், பவுல், பர்னபா, மாற்கு போன்ற முதல் நூற்றாண்டு மூப்பர்களைப் போல் இன்று ஆளும் குழுவில் இருக்கிறவர்களும் கிறிஸ்தவக் கண்காணிகளும் குறையுள்ளவர்கள்தான். (ரோ. 5:12; யாக். 3:2) ஆனால், ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் கடவுளுடைய வார்த்தையை அச்சுப்பிசகாமல் கடைப்பிடிப்பதாலும், அப்போஸ்தலர்களின் முன்மாதிரியை அப்படியே பின்பற்றுவதாலும் நம்பகமானவர்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள். (2 தீ. 1:13, 14) இதன் விளைவாக, சபைகள் விசுவாசத்தில் பலப்பட்டு வருகின்றன.

a மாற்கு பெற்ற ஊழியப் பொறுப்புகள்” என்ற பெட்டியை, பக்கம் 118-ல் பாருங்கள்.

b “தீமோத்தேயு ‘ நல்ல செய்தியை அறிவிப்பதில்’ கடினமாக உழைக்கிறார்” என்ற பெட்டியை, பக்கம் 121-ல் பாருங்கள்.