அதிகாரம் 19
“பேசிக்கொண்டே இரு, அமைதியாகிவிடாதே”
பவுல் தன் தேவைகளுக்காக வேலை செய்கிறார், ஆனால் ஊழியத்துக்கே முதலிடம் தருகிறார்
அப்போஸ்தலர் 18:1-22-ன் அடிப்படையில்
1-3. அப்போஸ்தலன் பவுல் ஏன் கொரிந்துவுக்கு வந்திருக்கிறார், அவர் என்ன சவால்களைச் சந்திக்கிறார்?
இன்னும் சில மாதங்களில் கி.பி. 50-ம் வருஷம் முடியப்போகிறது. அப்போஸ்தலன் பவுல் கொரிந்துவில் இருக்கிறார். இது வர்த்தக மையமாகக் கொடிகட்டிப் பறக்கிறது. ஏராளமான கிரேக்கர்களும் ரோமர்களும் யூதர்களும் இங்கே வாழ்கிறார்கள். a பவுல் வியாபாரம் செய்யவோ வேலை செய்யவோ இங்கே வரவில்லை. அதைவிட முக்கியமான ஒரு காரணத்துக்காக வந்திருக்கிறார்; அதாவது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சாட்சி கொடுப்பதற்காக வந்திருக்கிறார். இருந்தாலும், தங்குவதற்கு அவருக்கு ஒரு இடம் தேவைப்படுகிறது; தன்னுடைய செலவுகளுக்காக மற்றவர்களை நம்பியிருக்க அவர் விரும்புவதில்லை. மற்றவர்களுடைய தயவில் வாழ்கிற ஊழியக்காரன் என்று பெயரெடுக்கவும் விரும்புவதில்லை. இப்போது அவர் என்ன செய்வார்?
2 பவுலுக்குத் தெரிந்த ஒரு கைத்தொழில், கூடாரத் தொழில். அது சுலபமான தொழில் கிடையாது; இருந்தாலும், சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக அதைச் செய்ய அவர் தயாராக இருக்கிறார். ஜன சந்தடிமிக்க இந்த நகரத்தில் அவருக்கு வேலை கிடைக்குமா? தங்குவதற்குத் தகுந்த இடம் கிடைக்குமா? இந்தச் சவால்கள் மத்தியிலும் பவுல் தன் ஊழியத்தில் கண்ணாக இருக்கிறார்.
3 பவுல் கொரிந்துவில் சில காலம் தங்கினார்; அவருடைய ஊழியத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. அவர் கொரிந்துவில் செய்த ஊழியத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நம்முடைய ஊழியப் பகுதியில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி முழுமையாகச் சாட்சி கொடுக்க அது நமக்கு எப்படி உதவும்?
“அவர்கள் கூடாரத் தொழில் செய்பவர்கள்” (அப். 18:1-4)
4, 5. (அ) கொரிந்துவில் பவுல் எங்கே தங்கியிருந்தார், அவர் என்ன வேலை செய்தார்? (ஆ) பவுலுக்கு எப்படிக் கூடாரத் தொழில் தெரிந்திருந்தது?
4 பவுல், கொரிந்துவுக்கு வந்துசேர்ந்த சில நாட்களுக்குப் பிறகு ஆக்கில்லா என்ற யூதரையும் அவரது மனைவி பிரிஸ்கில்லாளையும் சந்தித்தார்; அவர்கள் உபசரிக்கும் குணம் உள்ளவர்கள். “யூதர்கள் எல்லாரையும் ரோமைவிட்டுப் போகச் சொல்லி” கிலவுதியு அரசன் கட்டளையிட்டிருந்ததால் இந்தத் தம்பதியர் கொரிந்துவுக்குக் குடிமாறி வந்திருந்தார்கள். (அப். 18:1, 2) அன்புள்ளம்கொண்ட இவர்கள் தங்களுடைய வீட்டில் தங்கும்படியும், தங்களோடு சேர்ந்து தொழில் செய்யும்படியும் பவுலைக் கேட்டுக்கொண்டார்கள். “அவர்கள் கூடாரத் தொழில் செய்பவர்கள். பவுலும் அதே தொழில் செய்கிறவராக இருந்ததால் அவர்களுடைய வீட்டில் தங்கி அவர்களோடு வேலை பார்த்தார்.” (அப். 18:3) கொரிந்துவில் பவுல் ஊழியம் செய்த காலம் முழுவதும் இந்தத் தம்பதியின் வீட்டில்தான் தங்கியிருந்தார். பைபிளின் பாகமாக ஆகியிருக்கும் சில கடிதங்களை பவுல் இவர்களோடு தங்கியிருந்த சமயத்தில் எழுதியிருக்கலாம். b
5 ‘கமாலியேலின் காலடியில் கல்வி கற்ற’ பவுலுக்கு எப்படிக் கூடாரத் தொழில் தெரிந்திருந்தது? (அப். 22:3) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூதர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கைத்தொழில் கற்றுத்தருவதை மதிப்புக் குறைவாக நினைக்கவில்லை; அவர்களில் சிலர் அப்படிக் கைத்தொழில் கற்றுத்தந்ததோடு மேல்படிப்புப் படிக்கவும் வைத்தார்கள். பவுலுடைய விஷயத்திலும் இது உண்மையாக இருந்திருக்கலாம். அவர் பிறந்த தர்சு நகரம் சிலிசியாவில் இருந்தது; அது கூடாரங்கள் செய்யப் பயன்படுத்தப்பட்ட சிலிசியம் என்ற துணிக்குப் பேர்போனதாக இருந்தது; அதனால், சிறுவயதிலிருந்தே அவர் கூடாரத் தொழிலைக் கற்றிருந்திருக்கலாம். கூடாரம் செய்வதில் என்ன உட்பட்டிருந்தது? கூடாரத் துணியை நெசவு செய்ய வேண்டியிருந்தது அல்லது மொடமொடப்பான அந்த முரட்டுத் துணியை வெட்டித் தைக்க வேண்டியிருந்தது. இவை இரண்டுமே சக்கையாகப் பிழிந்தெடுக்கும் வேலைகள்.
6, 7. (அ) கூடாரத் தொழிலை பவுல் எப்படிப் பார்த்தார், ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவரைப் போலவே அதைப் பார்த்தார்கள் என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) பவுல், ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் ஆகியவர்களுடைய உதாரணத்தை இன்றிருக்கும் கிறிஸ்தவர்கள் எப்படிப் பின்பற்றுகிறார்கள்?
6 பவுல், கூடாரத் தொழிலைத் தன்னுடைய முழுநேரத் தொழிலாக நினைக்கவில்லை. மற்றவர்களுக்கு “எந்தச் செலவும்” வைக்காமல் ஊழியம் செய்வதற்காகவே அவர் அந்தத் தொழிலைச் செய்தார். (2 கொ. 11:7) ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அந்தத் தொழிலை எப்படிப் பார்த்தார்கள்? கிறிஸ்தவர்களான அவர்கள் நிச்சயம் பவுல் மாதிரியேதான் அதைப் பார்த்திருப்பார்கள். சொல்லப்போனால், பவுல் கி.பி. 52-ல் கொரிந்துவை விட்டுப் போனபோது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவரோடு சேர்ந்து எபேசுவுக்குக் குடிமாறிப் போனார்கள்; அங்கே அவர்களுடைய வீட்டில் கூட்டங்கள் நடந்தன. (1 கொ. 16:19) பின்பு, அவர்கள் ரோமுக்குத் திரும்பினார்கள், அதன்பின் மீண்டும் எபேசுவுக்கு வந்தார்கள். பக்திவைராக்கியமுள்ள இந்தத் தம்பதி ஊழிய வேலைக்கே முதலிடம் கொடுத்தார்கள், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகத் தங்களை மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்; அதனால், “மற்ற தேசத்தாரின் எல்லா சபைகளும்” அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தன.—ரோ. 16:3-5; 2 தீ. 4:19.
7 பவுல், ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள் ஆகியவர்களுடைய உதாரணத்தை இன்று இருக்கும் கிறிஸ்தவர்கள் பின்பற்றுகிறார்கள். “யாருக்கும் பெரிய பாரமாக இல்லாதபடி” இந்தப் பக்திவைராக்கியமுள்ள ஊழியர்கள் கடினமாக உழைக்கிறார்கள். (1 தெ. 2:9) முழுநேர ஊழியம் செய்யும் அநேகர் தங்கள் செலவுகளுக்காகப் பகுதிநேர வேலையைச் செய்கிறார்கள், அல்லது வருஷத்தில் சில மாதங்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள். அவர்களை உண்மையிலேயே பாராட்ட வேண்டும்! ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் போல் அன்புள்ளம் படைத்த அநேகர் இன்று தங்களுடைய வீட்டில் வட்டாரக் கண்காணிகளைத் தங்க வைக்கிறார்கள். இப்படி ‘உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்கிறவர்கள்,’ அது எந்தளவுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருகிறது என்பதைத் தெரிந்திருக்கிறார்கள்.—ரோ. 12:13.
‘கொரிந்து நகர மக்கள் பலர் எஜமான்மேல் விசுவாசம் வைத்தார்கள்’ (அப். 18:5-8)
8, 9. யூதர்கள் எதிர்த்தபோது பவுல் என்ன செய்தார், அதன்பின் அவர் எங்கே போய்ப் பிரசங்கித்தார்?
8 மற்றவர்களுக்குப் பாரமாக இல்லாமல் ஊழியம் செய்யத்தான் பவுல் கூடாரத் தொழில் செய்தார் என்று முன்பே பார்த்தோம்; சீலாவும் தீமோத்தேயுவும் அவருக்குத் தேவையான பொருள்களை மக்கெதோனியாவிலிருந்து அன்பளிப்பாகக் கொண்டுவந்ததிலிருந்து அது உறுதியாகிறது. (2 கொ. 11:9) அவர்கள் வந்த உடனேயே அவர் “கடவுளுடைய வார்த்தையை முழு மூச்சோடு பிரசங்கிக்க . . . ஆரம்பித்தார்.” (அப். 18:5) இருந்தாலும், யூதர்கள் அவரைக் கடுமையாக எதிர்த்தார்கள். கிறிஸ்துவைப் பற்றிய உயிர்காக்கும் செய்திக்கு அவர்கள் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டதால், அவர் தன்னுடைய உடையை உதறி, “இனி உங்களுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு, நான் பொறுப்பல்ல. இனி நான் மற்ற தேசத்து மக்களிடம் போகிறேன்” என்று சொன்னார்.—அப். 18:6; எசே. 3:18, 19.
9 அப்படியென்றால், பவுல் அதன்பின் எங்கே போய்ப் பிரசங்கித்தார்? ஜெபக்கூடத்துக்குப் பக்கத்தில் இருந்த தீத்தியு யுஸ்து என்பவர் (இவர் யூத மதத்துக்கு மாறியவராக இருக்கலாம்) தன் வீட்டில் பவுலுக்கு இடம் கொடுத்தார். அதனால், பவுல் ஜெபக்கூடத்தில் பிரசங்கிக்காமல் யுஸ்துவின் வீட்டிலிருந்து பிரசங்கிக்க ஆரம்பித்தார். (அப். 18:7) அதுவே அவருடைய ஊழிய வேலைக்கு மைய இடமானது. ஆனாலும், அவர் ஆக்கில்லா-பிரிஸ்கில்லாளின் வீட்டில்தான் தங்கினார்.
10. பவுல் யூதர்களையும் யூத மதத்துக்கு மாறியவர்களையும் அப்படியே ஒதுக்கிவிடவில்லை என்பதை எது காட்டுகிறது?
10 பவுல் மற்ற தேசத்து மக்களிடம் போய்ப் பிரசங்கிப்பதாகச் சொன்னது உண்மைதான்; ஆனால், அதற்காக யூதர்களையும் யூத மதத்துக்கு மாறியவர்களையும் அப்படியே ஒதுக்கிவிட்டார் என்று அர்த்தமா? அவர்களில் ஆர்வம் காட்டியவர்களைக்கூட ஒதுக்கிவிட்டார் என்று அர்த்தமா? இல்லை, அவர்களிடமும் பிரசங்கித்தார். அதன் விளைவாக, “ஜெபக்கூடத்தின் தலைவரான கிறிஸ்பு என்பவரும் அவருடைய வீட்டிலிருந்த எல்லாரும் எஜமானின் சீஷர்களானார்கள்.” அதுமட்டுமா, ஜெபக்கூடத்தைச் சேர்ந்த இன்னும் ஏராளமானவர்களும் விசுவாசம் வைத்தார்கள்; அதனால்தான் பைபிள் இப்படி சொல்கிறது: “நல்ல செய்தியைக் கேட்ட கொரிந்து நகர மக்கள் பலரும் எஜமான்மேல் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் எடுத்தார்கள்.” (அப். 18:8) கொரிந்துவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவச் சபையின் கூட்டங்கள் தீத்தியு யுஸ்துவின் வீட்டில்தான் நடந்தன. இந்தப் பதிவை லூக்கா தன்னுடைய வழக்கமான பாணியில் எழுதியிருந்தால், அதாவது காலவரிசைப்படி எழுதியிருந்தால், பவுல் தன் உடையை உதறிய பிறகுதான் யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்களும் விசுவாசிகளாக ஆகியிருக்க வேண்டும். பவுல் எந்தளவு வளைந்துகொடுப்பவர் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு அத்தாட்சி.
11. கிறிஸ்தவமண்டலத்தை சேர்ந்தவர்களிடம் பிரசங்கிக்கும்போது யெகோவாவின் சாட்சிகள் பவுலின் முன்மாதிரியை எப்படிப் பின்பற்றுகிறார்கள்?
11 இன்று அநேக நாடுகளில், கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் நன்றாக வேரூன்றியிருக்கின்றன; அவற்றின் அங்கத்தினர்கள்மீது பலமான செல்வாக்கு செலுத்திவருகின்றன. சில இடங்களில் கிறிஸ்தவமண்டல மிஷனரிகள், ஏராளமான மக்களை மதம் மாற்றியிருக்கிறார்கள். அன்று கொரிந்துவிலிருந்த யூதர்களைப் போல் இன்று கிறிஸ்தவமண்டலத்தாரும் பாரம்பரியங்களை உடும்புபோல் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகளாகிய நாம் பவுலைப் போலவே அப்படிப்பட்ட ஆட்களிடம் ஆர்வத்தோடு பிரசங்கித்து, பைபிளைச் சரியாகப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுகிறோம். அவர்களோ சர்ச் தலைவர்களோ நம்மை எதிர்த்தாலும் சரி துன்புறுத்தினாலும் சரி, நாம் நம்பிக்கை இழப்பதில்லை. ஏனென்றால், “கடவுள்மீது பக்திவைராக்கியம்” இருந்தாலும் “திருத்தமான அறிவுக்கேற்ற வைராக்கியம்” இல்லாத அப்படிப்பட்ட ஆட்கள் மத்தியில் மனத்தாழ்மையுள்ளவர்கள் நிறையப் பேர் இருக்கலாம்; அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது நம் கடமை.—ரோ. 10:2.
“இந்த நகரத்தில் என்னுடைய மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்” (அப். 18:9-17)
12. இயேசு ஒரு தரிசனத்தில் பவுலுக்கு என்ன நம்பிக்கையைக் கொடுத்தார்?
12 கொரிந்துவில் தன்னுடைய ஊழியத்தைத் தொடர்வதா வேண்டாமா என்ற குழப்பம் பவுலுக்கு ஒருவேளை இருந்திருந்தால், இயேசு அவருக்குத் தரிசனமான இரவில் அது தெளிவாகியிருக்கும். அந்தத் தரிசனத்தில் இயேசு அவரிடம், “பயப்படாதே, பேசிக்கொண்டே இரு, அமைதியாகிவிடாதே. நான் உன்னோடு இருக்கிறேன், யாரும் உன்னைத் தாக்க மாட்டார்கள். இந்த நகரத்தில் என்னுடைய மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்” என்றார். (அப். 18:9, 10) அந்தத் தரிசனம் எவ்வளவு உற்சாகத்தை தந்திருக்கும்! பவுலைப் பாதுகாப்பதாகவும் கொரிந்துவில் இன்னும் நிறைய நல்மனம் படைத்த மக்கள் இருப்பதாகவும் இயேசுவே நம்பிக்கை அளித்தார். அந்தத் தரிசனத்துக்குப் பிறகு பவுல் என்ன செய்தார்? “அங்கே ஒன்றரை வருஷம் தங்கியிருந்து, கடவுளுடைய வார்த்தையை அவர்களுக்குக் கற்பித்துவந்தார்.”—அப். 18:11.
13. நியாயத்தீர்ப்பு மேடைக்கு வந்தபோது பவுலுக்கு யாருடைய ஞாபகம் வந்திருக்கலாம், ஆனால் அவர் கொலை செய்யப்பட மாட்டார் என்று ஏன் உறுதியாக நம்பினார்?
13 கிட்டத்தட்ட ஒரு வருஷம் கொரிந்துவில் தங்கிவிட்ட பிறகு இயேசுவின் ஆதரவு தனக்கு இருந்ததற்கான கூடுதல் அத்தாட்சியை பவுல் பெற்றார். ‘பவுலுக்கு எதிராக யூதர்கள் ஒன்றுதிரண்டு, அவரை நியாயத்தீர்ப்பு மேடைக்குக் கொண்டுபோனார்கள்.’ (அப். 18:12) சிலருடைய கருத்துப்படி, அந்த நியாயத்தீர்ப்பு மேடை செதுக்கு வேலைப்பாடுகள் நிறைந்த நீல, வெள்ளை சலவைக் கற்களாலான ஒரு உயர்ந்த மேடையாக இருந்தது; அந்நகர சந்தைவெளியின் நடுவில் அது இருந்தது. நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்னே ஏராளமானவர்கள் நிற்கும் அளவுக்கு ஒரு பெரிய மைதானம் இருந்தது. ஜெபக்கூடத்திலிருந்தும் யுஸ்துவின் வீட்டிலிருந்தும் சில அடி தூரத்தில்தான் அந்த மேடை இருந்தது என்று தொல்பொருள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. பவுல் அந்த மேடைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவருக்கு ஒருவேளை ஸ்தேவானின் ஞாபகம் வந்திருக்கலாம் (ஸ்தேவான், உயிர்த்தியாகம் செய்த முதல் கிறிஸ்தவர் என்று சிலசமயம் குறிப்பிடப்படுகிறார்). அவர் ஸ்தேவானின் ‘கொலைக்கு’ உடந்தையாக இருந்திருந்தார். (அப். 8:1) பவுலும் இப்போது கொலை செய்யப்படுவாரா? இல்லை. ஏனென்றால், “யாரும் உன்னைத் தாக்க மாட்டார்கள்” என்று அவருக்கு இயேசு வாக்கு கொடுத்திருந்தார்.—அப். 18:10.
14, 15. (அ) யூதர்கள் பவுல்மீது என்ன குற்றம் சாட்டினார்கள், கல்லியோன் ஏன் அந்த வழக்கை ரத்து செய்தார்? (ஆ) சொஸ்தேனேக்கு என்ன நடந்தது, அது என்ன நல்ல விளைவை ஏற்படுத்தியிருக்கலாம்?
14 பவுல் நியாயத்தீர்ப்பு மேடைக்குப் போனபோது என்ன நடந்தது? அகாயா மாநிலத்தின் ஆளுநரான கல்லியோன் அந்தச் சமயத்தில் நீதிபதியாக இருந்தார். இவர் ரோம தத்துவ ஞானியான செனிகாவின் அண்ணன். கல்லியோனுக்குமுன் யூதர்கள் பவுல்மீது இப்படிக் குற்றம் சாட்டினார்கள்: “சட்டத்துக்கு முரணான விதத்தில் கடவுளை வணங்கச் சொல்லி இந்த ஆள் மக்களைத் தூண்டுகிறான்.” (அப். 18:13) அதாவது, பவுல் சட்டவிரோதமாக மதம் மாற்றிவந்ததாக அவர்கள் சொல்லாமல் சொன்னார்கள். இருந்தாலும், பவுல் எந்த “தவறோ பெரிய குற்றமோ” செய்ததாக கல்லியோனுக்குத் தெரியவில்லை. (அப். 18:14) யூதர்களுடைய சச்சரவுகளில் மூக்கை நுழைக்கவும் அவர் விரும்பவில்லை. சொல்லப்போனால், பவுல் தன் சார்பில் வாதாட ஆரம்பிப்பதற்கு முன்பே கல்லியோன் இந்த வழக்கை ரத்து செய்தார்! யூதர்கள் கோபத்தில் கொதித்தார்கள். அந்தக் கோபத்தையெல்லாம் சொஸ்தேனேமீது காட்டினார்கள். (இவர் ஒருவேளை கிறிஸ்புவுக்குப் பதிலாக ஜெபக்கூடத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கலாம்.) சொஸ்தேனேயைப் பிடித்து “நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்னால் அடிக்க ஆரம்பித்தார்கள்.”—அப். 18:17.
15 கூட்டத்தார் சொஸ்தேனேயை அடித்தபோது கல்லியோன் ஏன் தடுத்து நிறுத்தவில்லை? சொஸ்தேனேதான் பவுலுக்கு விரோதமாகக் கூட்டம் சேர்த்திருப்பார் என்றும், அதற்காக அவர் அடிவாங்குவதில் தவறில்லை என்றும் கல்லியோன் நினைத்திருக்கலாம். அவர் அப்படி நினைத்தாரோ இல்லையோ, அந்தச் சம்பவத்தினால் நல்லதே நடந்ததாகத் தெரிகிறது. பல வருஷங்கள் கழித்து, பவுல் கொரிந்து சபைக்கு எழுதிய முதல் கடிதத்தில் சொஸ்தேனே என்ற ஒருவரைச் சகோதரர் என்று சொன்னார். (1 கொ. 1:1, 2) கொரிந்துவில் அடிவாங்கிய சொஸ்தேனேயும் இவரும் ஒருவர்தானா? அப்படியிருந்தால், அந்தக் கசப்பான அனுபவம் கிறிஸ்தவராக மாற அவருக்கு உதவியிருக்கலாம்.
16. “பேசிக்கொண்டே இரு, அமைதியாகிவிடாதே. நான் உன்னோடு இருக்கிறேன்” என்ற இயேசுவின் வார்த்தைகள் ஊழியத்தில் நமக்கு எப்படி உற்சாகம் தருகின்றன?
16 பவுலுடைய பிரசங்க வேலைக்கு யூதர்கள் எதிர்ப்புத் தெரிவித்த பிறகுதான் இயேசு அவரிடம், “பயப்படாதே, பேசிக்கொண்டே இரு, அமைதியாகிவிடாதே. நான் உன்னோடு இருக்கிறேன்” என்று சொல்லி நம்பிக்கை கொடுத்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். (அப். 18:9, 10) இந்த வார்த்தைகளை நாம் மனதில் பதிய வைக்க வேண்டும், அதுவும் நம் செய்திக்கு எதிர்ப்பு வரும்போது! யெகோவா இதயத்தைப் பார்த்து, நல்மனமுள்ள ஆட்களைத் தன்னுடைய பக்கம் இழுத்துக்கொள்கிறார் என்ற உண்மையையும் நாம் மனதில் பதிய வைக்க வேண்டும். (1 சா. 16:7; யோவா. 6:44) ஊழியத்தில் சுறுசுறுப்பாக இருக்க இது நமக்கு எப்பேர்ப்பட்ட தூண்டுகோல்! ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான மக்கள், அதாவது ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள், ஞானஸ்நானம் பெறுகிறார்கள். ‘எல்லாத் தேசத்தாரையும் சீஷர்களாக்குங்கள்’ என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு இயேசு இந்த நம்பிக்கையை கொடுக்கிறார்: “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்.”—மத். 28:19, 20.
அப். 18:18-22)
“யெகோவாவுக்கு விருப்பம் இருந்தால்” (17, 18. பவுல் எபேசுவுக்குப் போய்க்கொண்டிருந்தபோது எதைப் பற்றி யோசித்திருப்பார்?
17 பவுலை எதிர்த்த யூதர்களை கல்லியோன் ஆதரிக்காததால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கொரிந்து சபைக்கு அவர்கள் சில காலம் பிரச்சினை தராமல் இருந்திருக்கலாம்; ஆனால், இதை உறுதியாகச் சொல்ல முடியாது. இருந்தாலும், பவுல் கொரிந்துவில் ‘பல நாட்கள் தங்கினார்.’ கி.பி. 52, வசந்த காலத்தில் (கொரிந்துவிலிருந்து கிட்டத்தட்ட 11 கிலோமீட்டர் தள்ளியிருந்த) கெங்கிரேயா துறைமுகத்துக்குப் போய் அங்கிருந்து சீரியாவுக்குப் போகத் திட்டமிட்டார். ஆனால், கெங்கிரேயாவிலிருந்து புறப்படுவதற்குமுன் பவுல் “தலைமுடியை ஒட்ட வெட்டிக்கொண்டார்”; ஏனென்றால், அவருக்கு ஒரு “நேர்த்திக்கடன்” இருந்தது. c (அப். 18:18) அதன்பின் அவர் ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் அழைத்துக்கொண்டு ஈஜியன் கடல் வழியாக ஆசியா மைனரில் இருந்த எபேசுவுக்குப் போனார்.
18 பவுல் கெங்கிரேயாவைவிட்டுச் போய்க்கொண்டிருந்தபோது கொரிந்துவில் நடந்ததையெல்லாம் தன் மனதில் ஓடவிட்டிருப்பார். அவருக்குப் பல இனிய நினைவுகள் இருந்தன, மனநிறைவான அனுபவங்களும் கிடைத்திருந்தன. 18 மாதங்கள் அங்கே அவர் செய்த ஊழியத்துக்கு நல்ல பலன்கள் கிடைத்திருந்தன. கொரிந்துவில் முதல் சபை உருவாகி யுஸ்துவின் வீட்டில் கூட்டங்கள் நடத்தப்பட்டுவந்தன. யுஸ்து, கிறிஸ்பு மற்றும் அவருடைய வீட்டில் இருந்தவர்கள் என நிறைய பேர் இயேசுவின் சீஷர்களாக ஆனார்கள். அப்படி ஆவதற்கு பவுல் உதவியதால், அவர்களை உயிருக்கு உயிராக நேசித்தார். பிறகு அவர்களுக்குக் கடிதம் எழுதியபோது அவர்களைத் தன் இதயத்தில் எழுதப்பட்ட சிபாரிசுக் கடிதங்கள் என்று சொன்னார். நம்முடைய பைபிள் மாணவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்போது நாமும் அவர்களை நெஞ்சார நேசிக்கிறோம், இல்லையா? உயிருள்ள “சிபாரிசுக் கடிதங்களை” பார்க்கும்போது நமக்கு எவ்வளவு மனநிறைவு கிடைக்கிறது!—2 கொ. 3:1-3.
19, 20. எபேசுவுக்குப் போனதும் பவுல் என்ன செய்தார், ஆன்மீக குறிக்கோள்களை அடைவதில் பவுலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
19 எபேசுவை அடைந்ததும் அவர் ஊழிய வேலையில் முழுமூச்சுடன் இறங்கினார். “ஜெபக்கூடத்துக்குப் போய் யூதர்களிடம் நியாயங்காட்டிப் பேசினார்.” (அப். 18:19) இந்தத் தடவை கொஞ்சம் காலம்தான் எபேசுவில் தங்கினார். இன்னும் கொஞ்சக் காலம் தங்கும்படி சகோதரர்கள் கேட்டுக்கொண்டபோதிலும் அவர் “சம்மதிக்கவில்லை.” அவர்களைவிட்டு புறப்பட்டபோது, “யெகோவாவுக்கு விருப்பம் இருந்தால் மறுபடியும் உங்களிடம் வருவேன்” என்றார். (அப். 18:20, 21) எபேசுவில் ஊழிய வேலை அதிகம் இருந்ததென பவுலுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால் அவர் திரும்பி வர நினைத்தார், ஆனாலும் யெகோவாவின் விருப்பத்தின்படி நடக்கவே விரும்பினார். இந்த விஷயத்தில் பவுல் நமக்கு அருமையான உதாரணம், இல்லையா? ஆன்மீக குறிக்கோள்களை அடைய நாம் முதலில் முயற்சி எடுக்க வேண்டும் என்றாலும், எப்போதும் யெகோவாவின் வழிநடத்துதலை சார்ந்திருந்து அவருடைய விருப்பத்துக்கு இசைய நடக்க வேண்டும்.—யாக். 4:15.
20 ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் எபேசுவிலேயே விட்டுவிட்டு பவுல் செசரியாவுக்குப் போனார். பின்பு, அவர் எருசலேமுக்குப் போய், சபையில் இருந்தவர்களை சந்தித்து வாழ்த்துச் சொன்னார். (அப். 18:22) அதன்பிறகு, சீரியாவின் அந்தியோகியாவில் தான் தங்கியிருந்த வீட்டுக்குப் போனார். அவருடைய இரண்டாம் மிஷனரி பயணம் நல்லபடியாக முடிவடைந்தது. ஆனால், அவருடைய கடைசி மிஷனரி பயணம் எப்படி இருக்கப்போகிறது?
a “ கொரிந்து—இரண்டு கடல்களின் ராணி” என்ற பெட்டியை, பக்கம் 149-ல் பாருங்கள்.
b “ கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட உற்சாகமூட்டும் கடிதங்கள்” என்ற பெட்டியை, பக்கம் 150-ல் பாருங்கள்.
c “ பவுலின் நேர்த்திக்கடன்” என்ற பெட்டியை, பக்கம் 152-ல் பாருங்கள்.