Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 16

‘மக்கெதோனியாவுக்கு வாருங்கள்’

‘மக்கெதோனியாவுக்கு வாருங்கள்’

ஒரு நியமிப்பை ஏற்கும்போது... துன்புறுத்தலைச் சந்தோஷமாகச் சகிக்கும்போது... ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன

அப்போஸ்தலர் 16:6-40-ன் அடிப்படையில்

1-3. (அ) பவுலையும் அவருடைய நண்பர்களையும் கடவுளுடைய சக்தி எப்படி வழிநடத்தியது? (ஆ) என்ன சம்பவங்களை நாம் இப்போது பார்க்கப்போகிறோம்?

 மக்கெதோனியாவில் இருக்கிறது பிலிப்பி நகரம். சில பெண்கள் கூட்டமாக நகரத்தைவிட்டு நடந்து வருகிறார்கள். கொஞ்ச நேரத்திலேயே காங்கிட்டிஸ் என்ற குறுகலான நதிக்கு வந்து சேர்கிறார்கள். வழக்கப்படியே, நதிக்கரையில் உட்கார்ந்து இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார்கள். யெகோவா அவர்களைக் கூர்ந்து கவனிக்கிறார்.—2 நா. 16:9; சங். 65:2.

2 இதற்கிடையே, பிலிப்பியிலிருந்து கிழக்கே 800-க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரத்தில், அதாவது கலாத்தியாவின் தென்பகுதியில் இருக்கிற லீஸ்திரா நகரத்தைவிட்டுச் சில ஆண்கள் நடந்து வருகிறார்கள். நாட்கள் உருண்டோடுகின்றன; அந்த ஆண்கள்—பவுல், சீலா, மற்றும் தீமோத்தேயு—மேற்கு நோக்கிப் போகிற ரோம நெடுஞ்சாலைக்கு போய் சேர்கிறார்கள். ஆசிய மாகாணத்தில் அதிக மக்கள்தொகை இருக்கிற பகுதிக்குச் செல்கிற சாலை அது. அந்த நெடுஞ்சாலை வழியாகப் போய், கிறிஸ்துவைப் பற்றிக் கேள்விப்படாத ஆயிரக்கணக்கானோர் வாழ்கிற எபேசு நகரத்துக்கும் மற்ற நகரங்களுக்கும் போக அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், அந்தப் பயணத்தைத் துவங்குவதற்கு முன்பே, கடவுளுடைய சக்தியால் ஏதோவொரு விதத்தில் அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். ஆம், ஆசியாவில் பிரசங்க வேலை செய்யாதபடி அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். ஏன்? ஏனென்றால், கடவுளுடைய சக்தியின் மூலம் அவர்களை வேறொரு இடத்துக்கு வழிநடத்த இயேசு விரும்புகிறார். அதாவது, ஆசியா மைனர் வழியாக, ஈஜியன் கடலைத் தாண்டி, காங்கிட்டிஸ் என்ற சிறிய நதியின் கரையோரத்துக்கு வழிநடத்த விரும்புகிறார்.

3 பவுலையும் அவருடைய நண்பர்களையும் இயேசு மக்கெதோனியாவுக்கு வழிநடத்திய விதத்திலிருந்து நாம் இன்று அருமையான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். அதனால், கி.பி. 49 வாக்கில் தொடங்கிய பவுலின் இரண்டாம் மிஷனரி பயணத்தின்போது நடந்த சில சம்பவங்களை நாம் இப்போது பார்க்கலாம்.

“கடவுள் எங்களை அழைத்திருக்கிறார்” (அப். 16:6-15)

4, 5. (அ) பவுலும் அவருடைய நண்பர்களும் பித்தினியா அருகே போனபோது என்ன நடந்தது? (ஆ) அவர்கள் என்ன செய்தார்கள், அதன் விளைவு என்ன?

4 ஆசியாவில் பிரசங்கிக்காதபடி பவுலும் அவருடைய நண்பர்களும் தடுக்கப்பட்டதால், பித்தினியாவில் இருக்கிற நகரங்களில் பிரசங்கிக்க அவர்கள் வடக்கு நோக்கிப் போகிறார்கள். அப்போது, ஜன நெருக்கடி இல்லாத பிரிகியா மற்றும் கலாத்தியா பகுதிகளுக்கு இடையே கரடுமுரடான பாதைகளில் நாள்கணக்காக அவர்கள் நடந்திருக்கலாம். என்றாலும், பித்தினியாவை அவர்கள் நெருங்கியபோது, கடவுளுடைய சக்தியின் மூலம் இயேசு மறுபடியும் அவர்களைத் தடுத்தார். (அப். 16:6, 7) அந்தச் சமயத்தில் அவர்கள் குழம்பிப்போயிருப்பார்கள். ஏனென்றால், எதைப் பிரசங்கிக்க வேண்டும், எப்படிப் பிரசங்கிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது, ஆனால் எங்கே பிரசங்கிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்கள் ஆசியாவின் கதவைத் தட்டினார்கள், அது திறக்கப்படவில்லை. பித்தினியாவின் கதவைத் தட்டினார்கள், அதுவும் திறக்கப்படவில்லை. என்றாலும், தொடர்ந்து வேறு கதவுகளைத் தட்ட பவுல் தீர்மானமாயிருந்தார். பிற்பாடு அந்த மூன்று பேரும் விநோதமாகத் தோன்றிய ஒன்றைச் செய்தார்கள். மேற்கு நோக்கி நடந்து, பல நகரங்களைக் கடந்து, 550 கிலோமீட்டர் தூரத்திலிருந்த துரோவா துறைமுகத்தை அடைந்தார்கள்; அங்கிருந்து அவர்களால் மக்கெதோனியாவுக்குப் போக முடிந்தது. (அப். 16:8) இப்போது பவுல் மக்கெதோனியாவின் கதவைத் தட்டினார், இந்த முறை கதவு அகலத் திறந்தது!

5 துரோவாவில் பவுலோடும் அவருடைய நண்பர்களோடும் சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா சேர்ந்துகொண்டார்; அப்போது என்ன நடந்ததென அவர் பதிவு செய்திருக்கிறார்: “அங்கே ராத்திரி நேரத்தில் பவுல் ஒரு தரிசனத்தைப் பார்த்தார். அந்தத் தரிசனத்தில், மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒருவன் வந்து நின்று, ‘மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்று அவரைக் கெஞ்சிக் கேட்டான். அவர் அந்தத் தரிசனத்தைப் பார்த்ததும், மக்கெதோனியர்களுக்கு நல்ல செய்தியைச் சொல்ல கடவுள் எங்களை அழைத்திருக்கிறார் என்று நாங்கள் முடிவு பண்ணி, உடனே அங்கே போக ஏற்பாடுகள் செய்தோம்.” a (அப். 16:9, 10) கடைசியாக பவுலுக்கு எங்கே பிரசங்கிக்க வேண்டுமெனத் தெரிந்துவிட்டது! தொடங்கிய பயணத்தைப் பாதியிலேயே நிறுத்தாமல் போனதை நினைத்து பவுல் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்! காலம் தாழ்த்தாமல் அந்த நான்கு பேரும் மக்கெதோனியாவுக்குக் கப்பலேறினார்கள்.

‘நாங்கள் துரோவாவில் கப்பல் ஏறினோம்.’—அப்போஸ்தலர் 16:11

6, 7. (அ) பவுலுடைய பயணத்தின்போது நடந்த சம்பவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) பவுலுடைய அனுபவத்திலிருந்து நமக்கு என்ன உறுதி கிடைக்கிறது?

6 இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இதைக் கவனியுங்கள்: ஆசியாவுக்குப் போக பவுல் புறப்பட்ட பிறகுதான், கடவுளுடைய சக்தி குறுக்கிட்டது; அவர் பித்தினியாவை நெருங்கிய பிறகுதான் இயேசு தலையிட்டார்; பவுல் துரோவாவுக்கு போய் சேர்ந்த பிறகுதான் அவரை இயேசு மக்கெதோனியாவுக்கு வழிநடத்தினார். கிறிஸ்தவச் சபையின் தலைவரான இயேசு நம்மையும்கூட இன்று அப்படி வழிநடத்தலாம். (கொலோ. 1:18) உதாரணத்துக்கு, பயனியராகச் சேவை செய்வது பற்றியோ, தேவை அதிகமுள்ள இடத்துக்குப் போவதை பற்றியோ நாம் கொஞ்சக் காலமாகச் யோசித்துக்கொண்டிருக்கலாம். என்றாலும், அந்தக் குறிக்கோளை அடைவதற்குத் திட்டவட்டமான படிகளை எடுத்த பிறகுதான் கடவுளுடைய சக்தியின் மூலம் இயேசு நம்மை வழிநடத்துவார். ஏன்? இதை யோசித்துப் பாருங்கள்: கார் ஓடிக்கொண்டிருந்தால்தான் டிரைவரால் அதை இடது பக்கமாகவோ வலது பக்கமாகவோ திருப்ப முடியும். அதேபோல், நாம் ஓடிக்கொண்டிருந்தால்தான், அதாவது ஊக்கமான முயற்சி எடுத்துக்கொண்டிருந்தால்தான், ஊழியத்தில் அதிகமாகச் செய்ய இயேசு நம்மை வழிநடத்துவார்.

7 ஆனால், நம்முடைய முயற்சிகளுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? கடவுளுடைய சக்தி நம்மை வழிநடத்தவில்லை என்று நினைத்துக்கொண்டு நம்முடைய முயற்சியை விட்டுவிட வேண்டுமா? கூடாது. பவுலுக்கும் தடைகள் வந்தன என்பதை மறந்துவிடாதீர்கள். என்றாலும், கதவு திறக்கப்படும்வரை அவர் தட்டிக்கொண்டே இருந்தார். அதேபோல் நாமும்கூட ஆர்வம் குறையாமல் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும், அப்போதுதான் “ஊழியம் செய்வதற்கான வாய்ப்பு என்ற பெரிய கதவு” திறக்கப்படும்.—1 கொ. 16:9.

8. (அ) பிலிப்பி நகரத்தை விவரியுங்கள். (ஆ) ‘ஜெபம் செய்கிற இடத்தில்’ பவுல் பிரசங்கித்தபோது, என்ன மகிழ்ச்சியான சம்பவம் நடந்தது?

8 மக்கெதோனியா மாகாணத்துக்கு போய் சேர்ந்த பிறகு, பவுலும் அவருடைய நண்பர்களும் பிலிப்பி நகரத்துக்குப் போனார்கள். அந்த நகரத்தில் வாழ்ந்தவர்கள் தாங்கள் ரோம குடிமக்கள் என்பதில் பெருமைப்பட்டுக்கொண்டார்கள். அங்கே வசித்துவந்த ஓய்வுபெற்ற ரோம வீரர்களுக்கு அந்த நகரம் ஒரு குட்டி இத்தாலி போல்... மக்கெதோனியாவில் இருந்த சிறிய ரோம மாகாணம் போல்... இருந்தது. பவுலும் அவரது நண்பர்களும் நகர வாசலுக்கு வெளியே, குறுகலான ஒரு நதிக்கு அருகே போனார்கள்; அது ‘ஜெபம் செய்கிற இடமாக’ இருக்குமென நினைத்தார்கள். b ஓய்வுநாளன்று அந்த இடத்துக்குப் போனார்கள், அங்கே பல பெண்கள் கடவுளை வணங்குவதற்காக ஒன்றுகூடியிருந்தார்கள். உடனே அந்தச் சீஷர்கள் அங்கு உட்கார்ந்துகொண்டு அவர்களிடம் பேச ஆரம்பித்தார்கள். அவர்களில் லீதியாள் என்ற பெண்ணும் இருந்தாள்; அவள் “கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். . . . யெகோவா அவளுடைய இருதயத்தை முழுமையாகத் திறந்தார்.” அவள் கேட்ட விஷயங்கள் அவளுடைய மனதை அந்தளவுக்குத் தொட்டதால், அவளும் அவளுடைய வீட்டில் இருந்தவர்களும் ஞானஸ்நானம் எடுத்தார்கள். அதன்பின், பவுலையும் அவருடைய நண்பர்களையும் தன்னுடைய வீட்டில் விருந்தினராகத் தங்கும்படி கெஞ்சிக் கேட்டு, அவர்களைச் சம்மதிக்க வைத்தாள். cஅப். 16:13-15.

9. பவுலுடைய உதாரணத்தை இன்று நிறைய பேர் எப்படிப் பின்பற்றியிருக்கிறார்கள், இதனால் என்ன ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள்?

9 லீதியாளின் ஞானஸ்நானம் எந்தளவு மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்குமென யோசித்துப் பாருங்கள்! ‘மக்கெதோனியாவுக்கு வாருங்கள்’ என்ற அழைப்பை ஏற்றுக்கொண்டதற்காக பவுல் ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பார்! அதுமட்டுமல்ல, தேவபக்தியுள்ள பெண்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பதற்காகத் தன்னையும் தன் நண்பர்களையும் யெகோவா பயன்படுத்தியதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்! இன்றும்கூட இளைஞர்கள், வயதானவர்கள், கல்யாணமானவர்கள், கல்யாணமாகாதவர்கள் என்று ஏராளமான சகோதர சகோதரிகள், தேவை அதிகமுள்ள இடங்களுக்குப் போய் ஊழியம் செய்கிறார்கள். இதற்காக அவர்கள் பல கஷ்டங்களைச் சந்திக்கிறார்கள், ஆனாலும் லீதியாள் போன்ற ஆட்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்போது கிடைக்கிற மனத்திருப்தியோடு ஒப்பிடும்போது அவையெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நினைக்கிறார்கள். தேவை அதிகமுள்ள இடங்களுக்குப் போவதற்காக உங்களால் சில மாற்றங்களைச் செய்ய முடியுமா? அப்படிச் செய்தீர்களென்றால், ஆசீர்வாதம் நிச்சயம்! உதாரணத்துக்கு, கிட்டத்தட்ட 25 வயது இருக்கும் ஏரென் என்ற ஒரு சகோதரரை எடுத்துக்கொள்ளுங்கள்; அவர் மத்திய அமெரிக்க நாடு ஒன்றுக்குக் குடிமாறிப் போனார். அவர் சொல்கிறார்: “வெளிநாட்டில் நான் செய்கிற சேவை ஆன்மீக ரீதியில் முன்னேற எனக்கு உதவியிருக்கிறது, யெகோவாவோடு இருக்கிற பந்தத்தையும் பலமாக்கியிருக்கிறது. வெளி ஊழியம் அருமையிலும் அருமை! இப்போது எட்டு பைபிள் படிப்புகளை நடத்தி வருகிறேன்!” வெளிநாட்டில் சேவை செய்கிற இன்னும் நிறைய பேர் அவரைப் போல்தான் உணருகிறார்கள்.

‘மக்கெதோனியாவுக்கு வாருங்கள்’ என்ற அழைப்பை இன்று நாம் எப்படி ஏற்றுக்கொள்ளலாம்?

“கூட்டத்தார் அந்த இரண்டு பேருக்கும் எதிராகத் திரண்டெழுந்தார்கள்” (அப். 16:16-24)

10. பவுலும் அவருடைய நண்பர்களும் பேய்களுடைய மறைமுகத் தாக்குதலுக்கு எப்படி ஆளானார்கள்?

10 சாத்தான் தன் பேய்களோடு சேர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்த இடத்தில் நல்ல செய்தி வேர் பிடிக்கத் தொடங்கியதால், அவனுக்கு நிச்சயமாகக் கோபம் தலைக்கேறியிருக்கும். பவுலும் அவருடைய நண்பர்களும் பேய்களுடைய மறைமுகத் தாக்குதலுக்கு ஆளானதில் ஆச்சரியமே இல்லை! அவர்கள் ஜெபம் செய்கிற இடத்துக்குப் போனபோதெல்லாம், பேய்பிடித்த ஒரு வேலைக்காரப் பெண் அவர்களுக்கு பின்னால் போய், “இவர்கள் உன்னதமான கடவுளின் ஊழியர்கள், மீட்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறவர்கள்” என்று கத்திக்கொண்டே இருந்தாள். அவளுக்குள் இருந்த பேய் இந்த வார்த்தைகளைச் சொல்ல அவளைத் தூண்டியதன் மூலம், அவள் சொல்கிற குறிகளும் பவுலுடைய போதனைகளும் ஒரே இடத்திலிருந்து, அதாவது கடவுளிடமிருந்து, வருவதுபோல் தோன்றச் செய்திருக்கலாம். கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் யாரெனத் தெரிந்துகொள்ளாதபடி பொதுமக்களைக் குழப்புவதற்காக அப்படிச் செய்திருக்கலாம். அதனால், பவுல் அந்தப் பேயை அவளிடமிருந்து விரட்டி, அவள் இனி குறிசொல்லாதபடி செய்தார்.—அப். 16:16-18.

11. வேலைக்காரப் பெண்ணிடமிருந்து பேயை விரட்டிய பிறகு, பவுலுக்கும் சீலாவுக்கும் என்ன நடந்தது?

11 குறிசொல்லும் இந்த வேலைக்காரப் பெண்ணினால் அவளுடைய எஜமான்கள் அதுவரை சுலபமாக லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள்; இப்போதோ, தங்களுடைய பிழைப்பில் மண் விழுந்துவிட்டதால் கோபத்தில் கொந்தளித்தார்கள். பவுலையும் சீலாவையும் சந்தைவெளிக்கு இழுத்துக்கொண்டு போனார்கள்; அங்கேதான் பொது நிர்வாக அதிகாரிகள், அதாவது ரோமை பிரதிநிதித்துவம் செய்த அதிகாரிகள், நீதிவிசாரணை செய்துவந்தார்கள். அவர்களுடைய தேசப்பற்றை உசுப்பிவிடும் விதத்தில் அந்த எஜமான்கள், ‘ரோமர்களான நாம் ஏற்றுக்கொள்ளவோ கடைப்பிடிக்கவோ கூடாத சம்பிரதாயங்களை இந்த யூதர்கள் கற்பிக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டினார்கள். இந்த வார்த்தைகளைக் கேட்டதுமே, சந்தைவெளியிலிருந்த “கூட்டத்தார் அந்த இரண்டு பேருக்கும் [பவுலுக்கும் சீலாவுக்கும்] எதிராகத் திரண்டெழுந்தார்கள்.” அப்போது நடுவர்கள், “அவர்களைப் பிரம்புகளால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.” அதன்பின், அவர்கள் இரண்டு பேரும் சிறைச்சாலைக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள். அடிபட்ட அவர்களைச் சிறைக்காவலர் உட்சிறையில் தள்ளி, அவர்களுடைய கால்களைத் தொழுமரங்களில் பூட்டினார். (அப். 16:19-24) சிறைக் கதவை அவர் பூட்டியபோது, அந்த உட்சிறை கும்மிருட்டானது, பவுலும் சீலாவும் ஒருவரை ஒருவர் பார்ப்பதுகூடக் கடினமாக இருந்தது. ஆனால், யெகோவா அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.—சங். 139:12.

12. (அ) கிறிஸ்துவின் சீஷர்கள் துன்புறுத்தலைப் பற்றி என்ன புரிந்துகொண்டார்கள்? (ஆ) சாத்தானும் அவனுடைய ஆட்களும் இன்று என்ன சூழ்ச்சிகளைப் பயன்படுத்துகிறார்கள்?

12 பல வருஷங்களுக்கு முன்பு இயேசு தன்னுடைய சீஷர்களிடம், ‘அவர்கள் . . . உங்களைத் துன்புறுத்துவார்கள்’ என்று சொல்லியிருந்தார். (யோவா. 15:20) அதனால், பவுலும் அவருடைய நண்பர்களும் மக்கெதோனியாவுக்குப் போனபோது, எதிர்ப்பைச் சந்திக்கத் தயாராக இருந்தார்கள். துன்புறுத்தல் வந்தபோது, அது யெகோவாவின் கோபத்தினால் அல்ல, சாத்தானின் கோபத்தினாலேயே வந்தது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அன்று பிலிப்பியில் பயன்படுத்திய அதே சூழ்ச்சிகளை சாத்தானின் ஆட்கள் இன்றும்கூடப் பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணத்துக்கு, பள்ளியிலும் வேலையிடத்திலும் ஏமாற்றுப்பேர்வழிகள் நம்மைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி, எதிர்ப்பைக் கிளப்பிவிடுகிறார்கள். சில நாடுகளிலுள்ள மதவெறி பிடித்தவர்கள் நீதிமன்றத்துக்குப் போய், ‘மதப்பற்றுள்ளவர்களாகிய எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத முறைமைகளை இந்தச் சாட்சிகள் கற்றுக்கொடுத்து பயங்கரக் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்’ என்று நம்மீது குற்றம் சாட்டுகிறார்கள். வேறு சில நாடுகளில், நம்முடைய சகோதர சகோதரிகள் அடிக்கப்படுகிறார்கள், சிறையில் தள்ளப்படுகிறார்கள். இருந்தாலும், யெகோவா அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.—1 பே. 3:12.

“தாமதிக்காமல் உடனடியாக ஞானஸ்நானம் எடுத்தார்கள்” (அப். 16:25-34)

13. “மீட்புப் பெற நான் என்ன செய்ய வேண்டும்” என்று சிறைக்காவலன் கேட்டதுக்குக் காரணம் என்ன?

13 அன்றைய தினம் நடந்த அதிர்ச்சியான சம்பவங்களை ஜீரணிக்க பவுலுக்கும் சீலாவுக்கும் கொஞ்ச நேரம் எடுத்திருக்கும். இருந்தாலும் நடுராத்திரிக்குள், தாங்கள் வாங்கிய அடிகளையெல்லாம் மறந்து, “ஜெபம் செய்துகொண்டும் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டும் இருந்தார்கள்.” அப்போது, திடீரென்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது, சிறைச்சாலையே ஆட்டங்கண்டது! சிறைக்காவலன் எழுந்து, சிறைக் கதவுகள் திறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். கைதிகள் தப்பியோடிவிட்டதாக நினைத்துக் கதிகலங்கினான். அவர்கள் தப்பிவிட்டதால் தனக்கு நிச்சயம் தண்டனை கிடைக்குமென நினைத்து, “தன் வாளை உருவித் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தான்.” ஆனால் பவுல் சத்தமாக, “உன்னை நீயே எதுவும் செய்துகொள்ளாதே! நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம்!” என்றார். நடுநடுங்கியபடி சிறைக்காவலன், “மதிப்புக்குரியவர்களே, மீட்புப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். தங்களால் அல்ல, இயேசுவால் மட்டுமே மீட்பு அளிக்க முடியும் என்பதை அறிந்த பவுலும் சீலாவும், “எஜமானாகிய இயேசுவை நம்பு, அப்போது நீயும் உன் வீட்டில் இருப்பவர்களும் மீட்புப் பெறுவீர்கள்” என்று சொன்னார்கள்.—அப். 16:25-31.

14. (அ) சிறைக்காவலருக்கு பவுலும் சீலாவும் எப்படி உதவினார்கள்? (ஆ) பவுலும் சீலாவும் துன்புறுத்தலைச் சந்தோஷமாகச் சகித்ததால் என்ன ஆசீர்வாதத்தை அனுபவித்தார்கள்?

14 சிறைக்காவலன் மனப்பூர்வமாகத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டானா? பவுல் அதைச் சந்தேகப்படவில்லை. அந்தச் சிறைக்காவலன் ஒரு யூதன் கிடையாது; வேதவசனங்கள் அவனுக்கு தெரியாது. அவன் கிறிஸ்தவனாக ஆவதற்கு வேதவசனங்களிலிருந்து அடிப்படை சத்தியங்களைத் தெரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டியிருந்தது. அதனால், பவுலும் சீலாவும் “யெகோவாவின் வார்த்தையை எடுத்துச் சொன்னார்கள்.” கற்றுக்கொடுப்பதிலேயே மூழ்கியிருந்த அவர்கள் தங்களுடைய வலிகளையெல்லாம் மறந்துபோயிருப்பார்கள்; சிறைக்காவலன் அவர்களுடைய முதுகிலிருந்த வெட்டுக் காயங்களைக் கவனித்து, கழுவினான். அதன்பின், அவனும் அவனுடைய வீட்டிலிருந்த எல்லாரும் “தாமதிக்காமல் உடனடியாக ஞானஸ்நானம் எடுத்தார்கள்.” பவுலும் சீலாவும் துன்புறுத்தலைச் சந்தோஷமாகச் சகித்ததால் எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதத்தை அனுபவித்தார்கள்!—அப். 16:32-34.

15. (அ) பவுல் மற்றும் சீலாவின் உதாரணத்தை இன்று நிறைய சாட்சிகள் எப்படிப் பின்பற்றியிருக்கிறார்கள்? (ஆ) நம் ஊழியப் பகுதியில் இருக்கிற மக்களை நாம் ஏன் மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டும்?

15 இன்று நிறைய யெகோவாவின் சாட்சிகள் விசுவாசத்தின் காரணமாகச் சிறையில் இருக்கும்போது பவுலையும் சீலாவையும் போலவே சாட்சி கொடுத்திருக்கிறார்கள்; இதனால் நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. உதாரணத்துக்கு, பிரசங்க வேலை தடை செய்யப்பட்ட ஒரு நாட்டிலிருந்த சாட்சிகளில் 40 சதவீதத்தினர் சிறையில் இருந்தபோதுதான் சத்தியத்தைக் கற்றுக்கொண்டார்கள்! (ஏசா. 54:17) இந்தக் குறிப்பைக் கவனியுங்கள்: பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகுதான் சிறைக்காவலன் உதவி கேட்டான். அதேபோல், இன்றும் நல்ல செய்திக்குத் தங்கள் காதுகளை அடைத்துக்கொள்கிற சிலர் தங்களுடைய வாழ்க்கையில் திடீரென்று நிலநடுக்கம் போன்ற பிரச்சினை ஏற்பட்ட பிறகுதான் நல்ல செய்தியை ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால், நம் ஊழியப் பகுதியில் இருக்கிற மக்களை மீண்டும் மீண்டும் சந்திப்பதன் மூலம் அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.

“இப்போது ரகசியமாக எங்களை வெளியே அனுப்பப் பார்க்கிறார்களா?” (அப். 16:35-40)

16. அடுத்த நாள் காலை, எப்படி நிலைமை தலைகீழாக மாறியது?

16 அடுத்த நாள் காலை, பவுலையும் சீலாவையும் விடுதலை செய்யும்படி கட்டளையிட்டார்கள். ஆனால் பவுல், “நாங்கள் ரோமக் குடிமக்கள். எங்களுக்கு முறைப்படி தீர்ப்பளிக்காமலேயே எல்லாருக்கும் முன்னால் அடித்துச் சிறையில் தள்ளினார்கள். இப்போது ரகசியமாக எங்களை வெளியே அனுப்பப் பார்க்கிறார்களா? அது நடக்கவே நடக்காது! அவர்களே வந்து எங்களை வெளியே கூட்டிக்கொண்டு போகட்டும்” என்றார். அவர்கள் இரண்டு பேரும் ரோமக் குடிமக்கள் என்பதை அந்த நடுவர்கள் தெரிந்துகொண்டபோது, தாங்கள் அத்துமீறி நடந்ததற்காக “பயந்துபோனார்கள்.” d நிலைமை தலைகீழாக மாறியது. ஆம், முன்பு சீஷர்கள், எல்லார் முன்பாகவும் அடி வாங்க வேண்டியிருந்தது; இப்போதோ அந்த நடுவர்கள், எல்லார் முன்பாகவும் மன்னிப்புக் கேட்க வேண்டியிருந்தது! அதன்பின், பவுலையும் சீலாவையும் பிலிப்பியைவிட்டுப் போகும்படி அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இரண்டு பேரும் சம்மதித்தார்கள்; ஆனால், புதிய சீஷர்கள் அனைவரையும் சந்தித்து உற்சாகப்படுத்திய பிறகே அங்கிருந்து போனார்கள்.

17. பவுலும் சீலாவும் தண்டனையைச் சகித்துக்கொண்டதைப் பார்த்து, புதிய சீஷர்கள் என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டிருப்பார்கள்?

17 தாங்கள் ரோமக் குடிமக்கள் என்பதை பவுலும் சீலாவும் முன்பே சொல்லியிருந்தால், அடி வாங்கியிருக்க மாட்டார்கள். (அப். 22:25, 26) ஆனால், அவர்கள் அப்படிச் சொல்லியிருந்தால், பிலிப்பியிலிருந்த சகோதரர்களுக்கு எப்படிப்பட்ட அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கும்? அவர்கள் இரண்டு பேரும் தங்கள் உரிமையைப் பயன்படுத்தி, கிறிஸ்துவுக்காகப் பட வேண்டிய பாடுகளைத் தவிர்த்துவிட்டார்கள் என்றுதானே நினைத்திருப்பார்கள்? ரோமக் குடிமக்களாக இல்லாத கிறிஸ்தவர்களுடைய விசுவாசத்தை அது எப்படிப் பாதித்திருக்கும்? ரோமச் சட்டங்களைக் காட்டி அடிவாங்குவதிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியாதே! அதனால், பவுலும் சீலாவும் தண்டனையைச் சகித்துக்கொண்டதன் மூலம், துன்புறுத்தல் மத்தியில்கூட கிறிஸ்தவர்களால் உறுதியாக இருக்க முடியும் என்பதைப் புதிய சீஷர்களுக்கு நிரூபித்துக் காட்டினார்கள். அதுமட்டுமல்ல, தங்கள் குடியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் மூலம், நடுவர்கள் தங்களுடைய சட்டவிரோதச் செயலை எல்லார் முன்பாகவும் ஒத்துக்கொள்ளும்படி செய்தார்கள். அவர்கள் அப்படிச் செய்தது மற்ற கிறிஸ்தவர்கள் இனி அந்த நடுவர்களால் துன்புறுத்தப்படாமல் இருப்பதற்கும், அப்படிப்பட்ட தாக்குதல்களிலிருந்து சட்ட ரீதியில் ஓரளவு பாதுகாப்பைப் பெறுவதற்கும் உதவியிருக்கலாம்.

18. (அ) இன்று கிறிஸ்தவக் கண்காணிகள் பவுலுடைய உதாரணத்தை எப்படிப் பின்பற்றுகிறார்கள்? (ஆ) இன்று நாம் “நல்ல செய்திக்காக வழக்காடி, அதற்கான சட்டப்பூர்வ உரிமையை” எப்படி பெறுகிறோம்?

18 இன்று கிறிஸ்தவச் சபையிலுள்ள கண்காணிகளும் தங்கள் உதாரணத்தின் மூலம் நல்ல வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். சகோதர சகோதரிகளிடம் எதையெல்லாம் எதிர்பார்க்கிறார்களோ அதையெல்லாம் தாங்களும் செய்ய விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள். பவுலைப் போலவே நாமும் பாதுகாப்புப் பெறுவதற்காக நம்முடைய சட்ட உரிமைகளை எப்படி, எப்போது பயன்படுத்த வேண்டுமெனக் கவனமாக யோசித்துப் பார்க்கிறோம். வணக்க விஷயத்தில் சட்டப்படி பாதுகாப்பைப் பெறுவதற்காக, தேவைப்பட்டால், உள்ளூர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றங்களிலும், ஏன் சர்வதேச நீதிமன்றங்களிலும்கூட மனுதாக்கல் செய்கிறோம். சமுதாயத்தைச் சீர்திருத்த வேண்டுமென்பது நம்முடைய குறிக்கோள் கிடையாது, ஆனால், ‘நல்ல செய்திக்காக வழக்காடி, அதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெறுவதே’ நம்முடைய குறிக்கோள்; பவுல் இதைத்தான், பிலிப்பி சிறையில் அடைக்கப்பட்டு சுமார் பத்து வருஷங்கள் கழித்து, அந்த நகரத்திலிருந்த சபைக்குக் கடிதம் எழுதியபோது சொன்னார். (பிலி. 1:7) நீதிமன்றத் தீர்ப்புகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி, பவுலையும் அவருடைய நண்பர்களையும் போலவே நாம் கடவுளுடைய சக்தி வழிநடத்துகிற இடங்களிலெல்லாம் தொடர்ந்து “நல்ல செய்தியைச் சொல்ல” உறுதியாக இருக்கிறோம்.—அப். 16:10.

a லூக்கா—அப்போஸ்தலர் புத்தகத்தின் எழுத்தாளர்” என்ற பெட்டியை, பக்கம் 128-ல் பாருங்கள்.

b ஓய்வுபெற்ற ரோம வீரர்களின் செல்வாக்கு காரணமாக பிலிப்பியில் ஜெபக்கூடத்தை நிறுவ யூதர்களுக்குத் தடை இருந்திருக்கலாம். அல்லது, ஒரு ஜெபக்கூடத்தை நிறுவ அந்த நகரத்தில் பத்து யூத ஆண்கள்கூட இல்லாதிருந்திருக்கலாம் (ஒரு ஜெபக்கூடத்தை நிறுவ குறைந்தது பத்து ஆண்களாவது இருக்க வேண்டியிருந்தது).

c லீதியாள்—ஊதா நிறச் சரக்குகளை விற்றவள்” என்ற பெட்டியை, பக்கம் 132-ல் பாருங்கள்.

d ரோமச் சட்டத்தின்படி, அந்த நாட்டுக் குடிமக்களை எப்போதுமே முறைப்படிதான் விசாரணை செய்ய வேண்டியிருந்தது, அப்படிச் செய்யாமல் பகிரங்கமாகத் தண்டனை வழங்க யாருக்கும் அனுமதி இருக்கவில்லை.