Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 17

“வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார்”

“வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார்”

திறமையாகக் கற்றுக்கொடுக்க பைபிளே அடிப்படை; பெரோயா மக்களின் அருமையான முன்மாதிரி

அப்போஸ்தலர் 17:1-15-ன் அடிப்படையில்

1, 2. பிலிப்பியிலிருந்து தெசலோனிக்கே நகருக்கு யாரெல்லாம் பயணம் செய்கிறார்கள், அவர்கள் எதைப் பற்றி யோசிப்பதுபோல் தெரிகிறது?

 கரடுமுரடான மலைகளுக்கு இடையே வளைந்து செல்லும் நெடுஞ்சாலை... போக்குவரத்து அதிகமுள்ள சாலை... ரோம பொறியியல் வல்லுநர்களின் கைவண்ணம்... அந்தச் சாலையின் கனமான கற்கள்மீது செல்லும் ரதங்களின் “கடகட” சத்தமும், கழுதைகள் கனைக்கிற சத்தமும், படைவீரர், வியாபாரிகள், கைவினைஞர் என்று பலதரப்பட்டவர்களின் பேச்சுச் சத்தமும் அதன் வழிநெடுக காற்றில் அவ்வப்போது கலந்து வருகின்றன... அந்த நெடுஞ்சாலை வழியாக பவுல், சீலா, தீமோத்தேயு ஆகிய மூன்று பேரும் பிலிப்பியிலிருந்து தெசலோனிக்கே நகருக்கு 130-க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரம் பயணம் செய்கிறார்கள். இந்தப் பயணம் குறிப்பாக பவுலுக்கும் சீலாவுக்கும் அவ்வளவு சுலபமாக இல்லை; காரணம், அவர்கள் பிலிப்பியில் பிரம்படி வாங்கியதால் ஏற்பட்ட காயங்கள் இன்னமும் ஆறவில்லை.—அப். 16:22, 23.

2 அவர்கள் இன்னும் ரொம்ப தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது; இந்தச் சவாலைச் சமாளிக்க எது உதவுகிறது? ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டே போவது உதவுகிறது. பிலிப்பியில் கிடைத்த அருமையான அனுபவம் அவர்களுடைய மனதில் இன்னும் பசுமையாக இருக்கிறது; ஆம், சிறைக்காவலனும் அவனுடைய வீட்டில் இருந்தவர்களும் விசுவாசிகளாக ஆனதை அவர்களால் மறக்க முடியுமா? கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும் என்ற அவர்களது தீர்மானத்தை அந்த அனுபவம் உறுதியாக ஆக்கியிருக்கிறது. என்றாலும், கடலோரத்தில் இருக்கிற தெசலோனிக்கே நகரை நெருங்கும்போது, அங்கே இருக்கும் யூதர்களிடமிருந்து தங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்குமோ என்று அவர்கள் யோசிப்பதுபோல் தெரிகிறது. அவர்கள் எதிர்க்கப்படுவார்களா, பிலிப்பியில் அடிக்கப்பட்டதுபோல் அடிக்கப்படுவார்களா?

3. பிரசங்கிப்பதற்காகத் தைரியத்தை வரவழைத்துக்கொள்ள பவுல் என்ன செய்தார், அவருடைய உதாரணம் நமக்கு எப்படி உதவும்?

3 அந்தச் சமயத்தில் பவுல் எப்படி உணர்ந்தார் என்பதை தெசலோனிக்கேய சபையாருக்குப் பிற்பாடு அவர் கடிதம் எழுதியபோது தெரியப்படுத்தினார்: “நீங்கள் அறிந்திருக்கிறபடி, முன்பு பிலிப்பியில் நாங்கள் துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாலும், மிகுந்த எதிர்ப்பின் மத்தியில் நம் கடவுளுடைய நல்ல செய்தியை உங்களுக்குச் சொல்வதற்காக அவருடைய உதவியால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டோம்.” (1 தெ. 2:2) குறிப்பாக பிலிப்பியில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு, தெசலோனிக்கே நகருக்குப் போவது பற்றி அவருக்குக் கொஞ்சம் நடுக்கம் இருந்ததென அவருடைய வார்த்தைகள் காட்டுகின்றன. பவுலுடைய உணர்ச்சிகளை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? நல்ல செய்தியைப் பிரசங்கிப்பது கடினமாக இருப்பதுபோல் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? பவுல், பலத்துக்காக யெகோவாமீது சார்ந்திருந்தார்; தைரியத்தை வரவழைத்துக்கொள்வதற்காக அவருடைய உதவியை நாடினார். அதனால், பவுலுடைய உதாரணத்தை ஆராய்ந்து பார்ப்பது அவரைப் பின்பற்ற உங்களுக்கு உதவும்.—1 கொ. 4:16.

“வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார்” (அப். 17:1-3)

4. பவுல் மூன்று வாரங்களுக்குமேல் தெசலோனிக்கேயில் தங்கியிருந்திருக்க வேண்டுமென எப்படிச் சொல்கிறோம்?

4 பவுல் தெசலோனிக்கேயில் இருந்தபோது, மூன்று ஓய்வுநாட்களுக்கு ஜெபக்கூடத்தில் பிரசங்கித்தார் என்று பதிவு சொல்கிறது. அப்படியானால், அவர் அந்த நகரில் வெறும் மூன்று வாரங்கள்தான் தங்கியிருந்தாரா? அப்படிச் சொல்ல முடியாது. அங்கே போய் எவ்வளவு நாட்களுக்குப் பின் அவர் ஜெபக்கூடத்துக்குப் போக ஆரம்பித்தார் என்று நமக்குத் தெரியாது. அதுமட்டுமல்ல, தெசலோனிக்கேயில் இருந்தபோது, அவரும் அவருடைய நண்பர்களும் தங்களுடைய அன்றாடத் தேவைகளுக்காக வேலை செய்தார்கள் என்று அவருடைய கடிதங்கள் காட்டுகின்றன. (1 தெ. 2:9; 2 தெ. 3:7, 8) அதோடு, அவர் அங்கே தங்கியிருந்தபோது பிலிப்பி சகோதரர்கள் இரண்டு முறை அவருக்கு வேண்டிய பொருள்களை அனுப்பி வைத்தார்கள். (பிலி. 4:16) அதனால், அவர் மூன்று வாரங்களுக்குமேல் தெசலோனிக்கேயில் தங்கியிருந்திருக்க வேண்டும்.

5. பவுல் என்ன செய்ய முயற்சி செய்தார்?

5 பிரசங்கிப்பதற்குத் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட பவுல், ஜெபக்கூடத்தில் கூடியிருந்தவர்களிடம் பேசத் தொடங்கினார். தன்னுடைய வழக்கப்படியே, “வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார். கிறிஸ்து பாடுகள் படுவதும், பின்பு உயிரோடு எழுந்திருப்பதும் அவசியமாக இருந்ததென்றும், தான் அறிவித்த இயேசுதான் அந்தக் கிறிஸ்து என்றும் நிரூபிக்கிற விதத்தில் மேற்கோள்கள் காட்டி விளக்கினார்.” (அப். 17:2, 3) தான் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தவர்களுடைய உணர்ச்சிகளை அல்ல, சிந்திக்கும் திறனையே தட்டியெழுப்ப பவுல் முயற்சி செய்தார் என்பதைக் கவனியுங்கள். ஜெபக்கூடத்துக்கு வந்தவர்கள் வேதவசனங்களை அறிந்திருந்தார்கள், அவற்றை மதித்தார்கள், ஆனால் அவற்றைச் சரியாகப் புரிந்திருக்கவில்லை என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால், வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசினார்; நாசரேத்தூர் இயேசுதான் முன்னறிவிக்கப்பட்ட மேசியா, அதாவது கிறிஸ்து, என்பதை நிரூபிக்கும் விதத்தில் மேற்கோள் காட்டி விளக்கினார்.

6. வேதவசனங்களிலிருந்து இயேசு எப்படி விளக்கிக் காட்டினார், அதன் விளைவு என்ன?

6 பவுல் வேதவசனங்களை அடிப்படையாக வைத்தே மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார், இதில் இயேசு அவருக்கு முன்மாதிரியாக இருந்தார். உதாரணத்துக்கு, இயேசு தன்னுடைய சீஷர்களிடம், ‘மனிதகுமாரன் பாடுகள் பட வேண்டும், கொல்லப்பட வேண்டும், பின்பு உயிர்த்தெழுப்பப்பட வேண்டும்’ என்பதை வேதவசனங்களின் அடிப்படையில் விளக்கிக் காட்டினார். (மத். 16:21) உயிர்த்தெழுந்த பிறகு, அவர் தன்னுடைய சீஷர்களுக்குக் காட்சி அளித்தார். அவர் உண்மையைப் பேசியிருந்தார் என்பதற்கு அந்த ஒரு அத்தாட்சியே போதுமானதாக இருந்திருக்கும்; ஆனாலும் அவர் இன்னும் அதிகமான அத்தாட்சிகளை அளித்தார். “மோசேயின் புத்தகங்கள்முதல் எல்லா தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்வரை வேதவசனங்களில் தன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றையும் [சீஷர்கள் இரண்டு பேருக்கு] விளக்கினார்.” இதன் விளைவு? “வழியில் அவர் நம்மோடு பேசி, வேதவசனங்களை முழுமையாக விளக்கிக் காட்டியபோது, நம் இதயம் கொழுந்துவிட்டு எரிந்தது, இல்லையா?” என்று சொல்லி அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.—லூக். 24:13, 27, 32.

7. வேதவசனங்களின் அடிப்படையில் கற்பிப்பது ஏன் முக்கியம்?

7 கடவுளுடைய வார்த்தைக்கு வல்லமை இருக்கிறது. (எபி. 4:12) அதனால், இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவையும் பவுலையும் மற்ற அப்போஸ்தலர்களையும் போல் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையிலேயே கற்றுக்கொடுக்கிறோம். ஆம், வேதவசனங்களுடைய அர்த்தத்தை மக்களுக்கு விளக்குகிறோம், அதிலிருந்து நியாயங்காட்டிப் பேசுகிறோம், மேற்கோள் காண்பித்து நம்முடைய போதனைகள் உண்மை என்று நிரூபிக்கிறோம். காரணம், நாம் கற்றுக்கொடுக்கிற விஷயங்கள் நம்முடையவை கிடையாது, கடவுளுடையவை! பைபிளைத் தாராளமாகப் பயன்படுத்துவதன் மூலம், நாம் நம்முடைய சொந்த கருத்துகளை அல்ல, கடவுளுடைய போதனைகளையே கற்றுக்கொடுக்கிறோம் என்பதை மக்களுக்குக் காட்டுகிறோம். அதேசமயம், நம்முடைய செய்தி கடவுளுடைய வார்த்தையில் ஆழமாக வேரூன்றியிருப்பதால் அது முழுக்க முழுக்க நம்பகமானது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். அப்படிச் செய்தால், பவுலைப் போலவே நம்பிக்கையோடும் தைரியத்தோடும் நம்மால் பிரசங்கிக்க முடியும்.

‘சிலர் இயேசுவின் சீஷர்களானார்கள்’ (அப். 17:4-9)

8-10. (அ) தெசலோனிக்கேயில் நல்ல செய்திக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்தது? (ஆ) பவுல்மீது ஏன் சில யூதர்கள் பொறாமைப்பட்டார்கள்? (இ) யூத எதிரிகள் என்ன செய்தார்கள்?

8 “அடிமை தன் எஜமானைவிட உயர்ந்தவன் அல்ல. அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால் உங்களையும் துன்புறுத்துவார்கள்; என் வார்த்தையின்படி நடந்திருந்தால் உங்கள் வார்த்தையின்படியும் நடப்பார்கள்” என்று இயேசு சொல்லியிருந்தது எவ்வளவு உண்மை என்பதை பவுல் அனுபவத்தில் பார்த்திருந்தார். (யோவா. 15:20) தெசலோனிக்கேயிலும் அவருக்கு அதே அனுபவம் ஏற்பட்டது; அவர் சொன்ன வார்த்தைகளைச் சிலர் ஆர்வமாக ஏற்றுக்கொண்டார்கள், வேறு சிலர் எதிர்த்தார்கள். ஆர்வம் காட்டியவர்களைப் பற்றி லூக்கா இப்படி எழுதுகிறார்: “அவர்களில் சிலர் [சில யூதர்கள்] இயேசுவின் சீஷர்களாகி பவுலோடும் சீலாவோடும் சேர்ந்துகொண்டார்கள். அதேபோல், கடவுளை வணங்கிய கிரேக்கர்களில் ஏராளமான ஆட்களும், முக்கியமான பெண்களில் நிறைய பேரும் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.” (அப். 17:4) வேதவசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டபோது இந்தப் புதிய சீஷர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்!

9 ஒருசிலர் பவுலுடைய வார்த்தைகளை மனதார ஏற்றுக்கொண்டாலும், வேறு சிலர் அவர்மீது கோபவெறி கொண்டார்கள். ‘கிரேக்கர்களில் ஏராளமான ஆட்களை’ பவுல் தன் பக்கம் சேர்த்துக்கொண்டதைப் பார்த்து தெசலோனிக்கேய யூதர்கள் சிலர் பொறாமைப்பட்டார்கள். அந்த யூதர்கள் யூதர்களாக இல்லாத கிரேக்கர்களுக்கு எபிரெய வேதாகமத்திலிருந்து கற்றுக்கொடுத்து அவர்களை யூதர்களாக மாற்றுவதில் குறியாக இருந்தார்கள், அவர்களைத் தங்களுடைய ஆடுகளாகப் பார்த்தார்கள். இப்போதோ அந்த ஆடுகளை பவுல் திடுதிப்பென்று திருடிக்கொண்டு போவதாக நினைத்தார்கள்; அதுவும் தங்களுடைய தொழுவத்திலிருந்தே, அதாவது ஜெபக்கூடத்திலிருந்தே, திருடிக்கொண்டு போவதாக நினைத்தார்கள். அதனால் அவர்களுக்குக் கோபம் தலைக்கேறியது.

‘பவுலையும் சீலாவையும் அந்தக் கும்பலிடம் இழுத்து வருவதற்கு முயற்சி செய்தார்கள்.’​—அப்போஸ்தலர் 17:5

10 அடுத்து என்ன நடந்ததென்று லூக்கா சொல்கிறார்: “யூதர்கள் பொறாமைப்பட்டு, சந்தையில் வெட்டியாகத் திரிந்துகொண்டிருந்த மோசமான ஆட்கள் சிலரைக் கும்பலாகச் சேர்த்துக்கொண்டு நகரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தார்கள். பின்பு, பவுலையும் சீலாவையும் அந்தக் கும்பலிடம் இழுத்து வருவதற்காக யாசோன் என்பவருடைய வீட்டைத் தாக்கி உள்ளே புகுந்தார்கள். அவர்களை அங்கே கண்டுபிடிக்க முடியாததால், யாசோனையும் வேறு சில சகோதரர்களையும் நகரத் தலைவர்களிடம் இழுத்துக்கொண்டுபோய், ‘உலகமெங்கும் அமளி உண்டாக்குகிற ஆட்கள் இங்கேயும் வந்துவிட்டார்கள். இவர்களை யாசோன் தன்னுடைய வீட்டில் விருந்தாளிகளாகத் தங்க வைத்திருக்கிறான். இவர்கள் எல்லாரும் இயேசு என்ற வேறொரு ராஜா இருப்பதாகச் சொல்லி, ரோம அரசனுடைய கட்டளைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்’ என்று கூச்சல் போட்டார்கள்.” (அப். 17:5-7) இந்த முரட்டுக் கும்பலின் தாக்குதல் காரணமாக பவுலும் அவருடைய நண்பர்களும் ஊழியத்தை நிறுத்திவிட்டார்களா?

11. பவுலுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் எதிராக என்ன குற்றங்கள் சுமத்தப்பட்டன, எந்தக் கட்டளையை மனதில் வைத்து எதிரிகள் குற்றம் சாட்டியிருக்கலாம்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

11 கும்பல் என்றாலே அது பயங்கரமானது. கட்டுக்கடங்காத காட்டாறு போன்றது. கண்மூடித்தனமாகச் சீறிப்பாய்வது. பவுலையும் சீலாவையும் ஒழித்துக்கட்டுவதற்காக யூதர்கள் பயன்படுத்திய ஆயுதம் அது. அந்த யூதர்கள் “நகரத்தில் ஆர்ப்பாட்டம்” செய்தார்கள்; பவுலும் அவருடைய நண்பர்களும் படுமோசமான குற்றங்கள் செய்திருப்பதாகச் சொல்லி நகரத் தலைவர்களை அவர்கள் நம்ப வைக்க முயற்சி செய்தார்கள். அவர்கள் சுமத்திய முதல் குற்றம்: பவுலும் அவருடைய நண்பர்களும் ‘உலகமெங்கும் அமளி உண்டாக்குகிறார்கள்,’ அதாவது கலகம் செய்துவருகிறார்கள். (உண்மையில், இவர்கள் தெசலோனிக்கேயில்கூட எந்த அமளியையும் உண்டுபண்ணவில்லை!) யூதர்கள் சுமத்திய இரண்டாவது குற்றம் அதைவிட பயங்கரமானது: இந்தக் கிறிஸ்தவர்கள், இயேசு என்ற வேறொரு ராஜா இருக்கிறாரென அறிவித்து, ரோம அரசனுடைய கட்டளைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். a

12. தெசலோனிக்கேயில் இருந்த கிறிஸ்தவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கடும் தண்டனைக்குரியவையாகக் கருதப்பட்டன என்பதை எது காட்டுகிறது?

12 இதேபோன்ற குற்றச்சாட்டை மதத் தலைவர்கள் இயேசுமீது சுமத்தினார்கள் என்பது ஞாபகம் இருக்கிறதா? பிலாத்துவிடம் அவர்கள், “இந்த மனுஷன் எங்களுடைய மக்களைக் கலகம் செய்யத் தூண்டுகிறான். . . . தான்தான் கிறிஸ்துவாகிய ராஜா என்றும் சொல்லிக்கொள்கிறான்” என்றார்கள். (லூக். 23:2) தேசத் துரோகச் செயலைக் கண்டும்காணாமலும் விட்டுவிடுவதாகத் தன்னைப் பற்றி ரோம அரசன் நினைத்துவிடுவாரோ என்று பிலாத்து பயந்திருக்கலாம், அதனால் அவன் இயேசுவுக்கு மரண தண்டனை கொடுத்தான். அதேபோல், தெசலோனிக்கேயில் இருந்த கிறிஸ்தவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கடும் தண்டனைக்குரியவையாகக் கருதப்பட்டன. இதைப் பற்றி ஒரு புத்தகம் இப்படி சொல்கிறது: “அந்தக் குற்றச்சாட்டுகள் ரொம்பவே பயங்கரமானவை; ‘ரோம அரசர்களுக்கு எதிராகச் செயல்படுவதாக யார் மீதாவது துளி சந்தேகம் ஏற்பட்டால்கூட, அவர்கள் உயிரோடு இருப்பது கஷ்டம்.’” அப்படியென்றால், அந்தக் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கொடூரத் தாக்குதல் வெற்றி பெற்றதா?

13, 14. (அ) கலகக்கார கும்பலினால் ஏன் பிரசங்க வேலையை நிறுத்த முடியவில்லை? (ஆ) கிறிஸ்துவின் ஆலோசனைப்படி பவுல் எப்படி ஜாக்கிரதையாக நடந்துகொண்டார், அவருடைய முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

13 தெசலோனிக்கேயில் நடந்த பிரசங்க வேலையை அந்தக் கலகக்கார கும்பலினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஏன்? ஒரு காரணம், பவுலையும் சீலாவையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டாவது காரணம், அந்தக் கும்பல் சுமத்திய குற்றச்சாட்டுகள் உண்மை என்று நகரத் தலைவர்கள் நம்பவில்லை. தங்கள்முன் கொண்டுவரப்பட்ட யாசோனிடமிருந்தும் மற்ற சகோதரர்களிடமிருந்தும் “ஜாமீன் தொகையை வாங்கிக்கொண்டு” அவர்களை விடுதலை செய்தார்கள். (அப். 17:8, 9) “பாம்புகளைப் போல் ஜாக்கிரதையாகவும் புறாக்களைப் போல் கள்ளம்கபடம் இல்லாமலும் நடந்துகொள்ளுங்கள்” என்று இயேசு கொடுத்த ஆலோசனைப்படி பவுல் ஆபத்தை விலைக்கு வாங்காமல், வேறொரு இடத்துக்கு போய் தன் பிரசங்க வேலையைத் தொடர்ந்தார். (மத். 10:16) பவுலுக்குத் தைரியம் இருந்தபோதிலும் அவர் துணிச்சலோடு செயல்படவில்லை என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்கிறோம். அவருடைய முன்மாதிரியைக் கிறிஸ்தவர்கள் இன்று எப்படிப் பின்பற்றலாம்?

14 இன்றைக்கும், கிறிஸ்தவமண்டலத் தலைவர்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராகப் பலமுறை கலகக் கும்பல்களை ஏவிவிட்டிருக்கிறார்கள். தேசத் துரோகச் செயல்களில் ஈடுபடுவதாக அவர்கள்மீது குற்றம்சாட்டி, அரசியல் தலைவர்களை அவர்களுக்கு எதிராகச் செயல்படும்படி செய்திருக்கிறார்கள். முதல் நூற்றாண்டு எதிரிகளைப் போலவே, இன்றிருக்கும் எதிரிகள்கூட பொறாமையினால்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள். என்ன நடந்தாலும் சரி, உண்மைக் கிறிஸ்தவர்கள் வலியப் போய் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்வதில்லை. தங்கள் ஊழியத்துக்குத் தடங்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காக மூர்க்கத்தனமான, கண்மூடித்தனமான கும்பல்களை முடிந்தளவு அவர்கள் தவிர்க்கிறார்கள். சிலசமயம், பிரச்சினை நடந்த பகுதியில் அமைதி திரும்பிய பிறகு, அங்கே போய் தங்கள் ஊழியத்தைத் தொடர்கிறார்கள்.

“பரந்த மனப்பான்மை உள்ளவர்களாக இருந்தார்கள்” (அப். 17:10-15)

15. பெரோயர்கள் நல்ல செய்தியை எப்படி ஏற்றுக்கொண்டார்கள்?

15 பாதுகாப்புக் கருதி, பவுலும் சீலாவும் சுமார் 65 கிலோமீட்டர் தள்ளியிருந்த பெரோயா நகரத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அங்கே போனதும், பவுல் ஜெபக்கூடத்துக்கு போய் கூடியிருந்தவர்களிடம் பேச ஆரம்பித்தார். காதுகொடுத்துக் கேட்ட ஆட்களைக் கண்டு அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்! லூக்கா இப்படி எழுதினார்: “தெசலோனிக்கேயில் இருந்த யூதர்களைவிட பெரோயாவில் இருந்த யூதர்கள் பரந்த மனப்பான்மை உள்ளவர்களாக இருந்தார்கள். ஏனென்றால், கடவுளுடைய வார்த்தைகளை அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டு, அவையெல்லாம் சரிதானா என்று தினமும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தார்கள்.” (அப். 17:10, 11) பெரோயாவில் இருந்த யூதர்களைப் பற்றி லூக்கா இப்படி எழுதினார் என்பதற்காக, தெசலோனிக்கேயில் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட யூதர்களை அவர் மதிப்புக்குறைவாக நினைத்தார் என்று அர்த்தமா? இல்லவே இல்லை! பவுல் பிற்பாடு அவர்களுக்கு இப்படி எழுதினார்: “நீங்கள் கடவுளுடைய வார்த்தையை எங்கள் மூலம் கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனிதர்களுடைய வார்த்தையாக அல்ல கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டீர்கள். இதற்காக நாங்கள் எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். அது உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதான். விசுவாசிகளாகிய உங்களுக்குள் அது செயல்பட்டும் வருகிறது. “ (1 தெ. 2:13) ஆனால், பெரோயாவில் இருந்த யூதர்கள் எப்படிப் பரந்த மனப்பான்மை உள்ளவர்களாக இருந்தார்கள்?

16. பெரோயர்கள் ‘பரந்த மனப்பான்மை உள்ளவர்கள்’ என்று விவரிக்கப்படுவது ஏன் பொருத்தமானது?

16 பெரோயர்கள் புதிய விஷயங்களைக் கேட்டபோதிலும், அவற்றை அவர்கள் சந்தேகிக்கவோ கடுமையாக விமர்சிக்கவோ இல்லை, அதேசமயம் காதில் விழுவதை எல்லாம் வெகுளித்தனமாக நம்பவும் இல்லை. பவுல் விளக்கிய குறிப்புகளை முதலில் கவனமாகக் கேட்டார்கள். அதன்பின், அவை சரிதானா என்று வேதவசனங்களைத் திறந்து பார்த்தார்கள். அதோடு, கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாகப் படித்தார்கள், ஓய்வுநாளன்று மட்டுமல்ல தினந்தோறும்! பவுல் கற்றுக்கொடுத்த புதிய போதனைகளைப் பற்றி வேதவசனங்கள் என்ன சொல்கின்றன என்பதை ஆராய்ந்து பார்க்க அவற்றை “மிகுந்த ஆர்வத்தோடு” படித்தார்கள். படித்த விஷயங்களுக்கு ஏற்ப மனத்தாழ்மையோடு மாற்றங்களைச் செய்தார்கள்; ஆம், “அவர்களில் பலர் இயேசுவின் சீஷர்களானார்கள்.” (அப். 17:12) அவர்கள் “பரந்த மனப்பான்மை உள்ளவர்களாக இருந்தார்கள்” என்று லூக்கா சொன்னதில் ஆச்சரியமே இல்லை!

17. பெரோயர்களுடைய உதாரணம் ஏன் மெச்சத்தக்கது, நாம் எவ்வளவு காலமாக சத்தியத்தில் இருந்தாலும் அவர்களுடைய உதாரணத்தை எப்படி பின்பற்றலாம்?

17 நல்ல செய்தியைப் பரந்த மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்வதில், பெரோயர்கள் அருமையான உதாரணமாக இருக்கிறார்கள்; இந்த விஷயம் கடவுளுடைய வார்த்தையில் பதிவுசெய்யப்படும் என்று அவர்கள் கொஞ்சம்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பவுல் எதிர்பார்த்தபடியே... யெகோவா விரும்பியபடியே... அவர்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களைப் பின்பற்றும்படி நாம் மக்களை ஊக்கப்படுத்துகிறோம், அதாவது பைபிளைக் கவனமாக ஆராய்ந்து, அதன் அடிப்படையில் தங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளும்படி ஊக்கப்படுத்துகிறோம். என்றாலும், நாம் ஏற்கெனவே இயேசுவின் சீஷராக ஆகிவிட்டோம் என்பதற்காக இனி பரந்த மனப்பான்மையோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லையா? அப்படியில்லை; சொல்லப்போனால், நாம் யெகோவாவிடமிருந்து ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு, அவருடைய போதனைகளை உடனுக்குடன் கடைப்பிடிப்பது முன்பைவிட இப்போது மிக முக்கியமாக இருக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம், யெகோவா அவருடைய விருப்பத்தின்படி நம்மைச் செதுக்குவதற்கும் பயிற்றுவிப்பதற்கும் அனுமதிக்கிறோம். (ஏசா. 64:8) இப்படி நாம் எப்போதுமே நம் பரலோகத் தகப்பனுக்குப் பிரயோஜனமானவர்களாகவும் பிரியமானவர்களாகவும் இருக்கிறோம்.

18, 19. (அ) பவுல் ஏன் பெரோயாவைவிட்டுப் போனார், இருந்தாலும் தொடர்ந்து ஊழியம் செய்வதில் அவர் எப்படி முன்மாதிரி வைத்தார்? (ஆ) பவுல் அடுத்து யாரிடம் பிரசங்கிக்கப் புறப்பட்டார்?

18 பவுல் பெரோயாவில் ரொம்ப நாள் தங்கவில்லை. நாம் இப்படி வாசிக்கிறோம்: “பவுல் கடவுளுடைய வார்த்தையை பெரோயாவிலும் அறிவித்து வருகிறார் என்று தெசலோனிக்கேயில் இருந்த யூதர்கள் கேள்விப்பட்டபோது, மக்களைத் தூண்டி கலகம் உண்டாக்க அங்கேயும் வந்தார்கள். சகோதரர்கள் உடனே பவுலைக் கடற்கரைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், சீலாவும் தீமோத்தேயுவும் பெரோயாவிலேயே தங்கிவிட்டார்கள். பவுலோடு போனவர்கள் அத்தேனே நகரம்வரை கூடவே போனார்கள். பின்பு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சீலாவும் தீமோத்தேயுவும் தன்னிடம் வரவேண்டுமென்ற கட்டளையை பவுலிடமிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டு திரும்பி வந்தார்கள்.” (அப். 17:13-15) எதிரிகள் எந்தளவு தீவிரமாயிருந்தார்கள் என்று பார்த்தீர்களா? பவுலை தெசலோனிக்கேயிலிருந்து விரட்டிவிட்டது மட்டுமல்ல, பெரோயாவுக்கும் போய் அதேபோல் பிரச்சினையைக் கிளப்ப முயற்சி செய்தார்கள்; ஆனால், அவர்களுடைய திட்டம் பலிக்கவில்லை. தன்னுடைய ஊழியப் பகுதி மிகவும் பெரியதென்று தெரிந்திருந்த பவுல் அமைதியாக வேறொரு இடத்துக்கு போய் தன் ஊழியத்தைத் தொடர்ந்தார். இன்று ஊழியத்தைத் தடுத்து நிறுத்தப்பார்க்கிறவர்களுடைய முயற்சிகளை முறியடிக்க அவரைப் போலவே நாமும் உறுதியாக இருக்கலாம்!

19 தெசலோனிக்கே மற்றும் பெரோயாவில் இருந்த யூதர்களிடம் பவுல் முழுமையாகச் சாட்சி கொடுத்த பிறகு, தைரியமாகப் பிரசங்கிப்பதும் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுவதும் எவ்வளவு முக்கியம் என்பதை நன்றாகக் கற்றுக்கொண்டார். நாமும் கற்றுக்கொண்டோம். அடுத்ததாக, பவுல் அத்தேனே நகரத்திலிருந்த யூதரல்லாதவர்களிடம் பிரசங்கிக்கப் புறப்பட்டார். அந்த நகரத்தில் அவருக்கு என்ன காத்திருந்தது? அடுத்த அதிகாரத்தில் பார்ப்போம்.

a “ஆட்சி செய்யும் ராஜாவை மாற்றீடு செய்ய அல்லது நியாயந்தீர்க்க ஒரு புதிய ராஜா வரப்போகிறார் என்றோ, ஒரு புதிய அரசாங்கம் வரப்போகிறது என்றோ” யாரும் முன்னறிவிக்கக் கூடாது என்று ரோம அரசன் அந்தச் சமயத்தில் கட்டளை போட்டிருந்ததாக ஒரு அறிஞர் சொல்கிறார். அப்போஸ்தலர்கள் அந்த கட்டளைக்கு விரோதமாகச் செயல்படுவதாக பவுலுடைய எதிரிகள் குற்றம் சாட்டியிருக்கலாம். “ ரோம அரசர்களும் அப்போஸ்தலர் புத்தகமும்” என்ற பெட்டியை, பக்கம் 137-ல் பாருங்கள்.