Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 2

கவலைகள்​—“எல்லா விதத்திலும் பயங்கரமாக நெருக்கப்படுகிறோம்”

கவலைகள்​—“எல்லா விதத்திலும் பயங்கரமாக நெருக்கப்படுகிறோம்”

“கல்யாணம் ஆகி 25 வருஷத்துக்கு அப்புறம் எங்களுக்கு விவாகரத்து ஆயிடுச்சு. என் பிள்ளைங்களும் சத்தியத்தவிட்டு போயிட்டாங்க. என் உடல்நிலையும் மோசமாயிடுச்சு. மனச்சோர்வால கஷ்டப்பட்டேன். அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்ததால இடிஞ்சி போயிட்டேன், என்ன செய்றதுனே தெரியல. கூட்டங்களுக்குப் போறத நிறுத்திட்டேன். கடைசியில, சபைய விட்டே போயிட்டேன்.”—ஜூன்.

கவலைகள் எல்லாரையும் வாட்டிவதைக்கிறது. யெகோவாவின் மக்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘கவலைகள் என்னைத் திணறடித்தது’ என்று சங்கீதக்காரர் ஒருவர் எழுதினார். (சங்கீதம் 94:19) கடைசி நாட்களில் ‘வாழ்க்கைக் கவலைகள்’ நம்மைத் திணறடிக்கும் என்பதால், யெகோவாவுக்குச் சேவை செய்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம் என்று இயேசுவும் சொன்னார். (லூக்கா 21:34) உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? பணக்கஷ்டம், குடும்பப் பிரச்சினைகள், உடல்நல பிரச்சினைகள் ஆகியவை உங்களைத் திணறடிக்கின்றனவா? ஆனால், இதையெல்லாம் சமாளிக்க யெகோவா உதவுவார். எப்படி?

‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியைக் கொடுக்கிறார்’

கவலைகளைச் சமாளிக்க கண்டிப்பாக நமக்கு உதவி தேவை. பவுலுக்கும் நிறைய கவலைகள் இருந்தன. “நாங்கள் எல்லா விதத்திலும் பயங்கரமாக நெருக்கப்படுகிறோம், . . . குழம்பித் தவிக்கிறோம், . . . தள்ளப்படுகிறோம்” என்றெல்லாம் அவர் சொன்னார். இருந்தாலும், நாங்கள் “முடங்கிப்போவதில்லை, . . . வழி தெரியாமல் திண்டாடுவதில்லை, . . . அழிந்துபோவதில்லை” என்று சொன்னார். அப்படியென்றால், கவலைகளைச் சமாளிக்க எது நமக்கு உதவும்? “இயல்புக்கு மிஞ்சிய சக்தி” உதவும். சர்வ வல்லமையுள்ள கடவுளான யெகோவா தரும் சக்திதான் அது!​—2 கொரிந்தியர் 4:7-9.

அந்தச் சக்தியை யெகோவா உங்களுக்கு எப்படியெல்லாம் தந்திருக்கிறார் என்று யோசித்துப்பாருங்கள். கூட்டங்களில் ஒரு பேச்சைக் கேட்டபோது, “அது எனக்காகவே தந்த மாதிரி இருந்துச்சு” என்று நினைத்திருக்கிறீர்களா? அதுபோன்ற சமயங்களில், யெகோவா உங்கள்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்திருப்பீர்கள். பூஞ்சோலை பூமியைப் பற்றி மற்றவர்களிடம் சொன்னபோது, யெகோவாமீது இருக்கிற விசுவாசம் இன்னும் அதிகமாகியிருக்கும். கூட்டங்களுக்குப் போகும்போதும், நம்முடைய நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போதும், கவலைகளைச் சமாளிப்பதற்கான பலம் கிடைக்கும் என்பது எவ்வளவு உண்மை! இதையெல்லாம் செய்தால், நிம்மதியோடும் சந்தோஷத்தோடும் யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியும்.

“யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்”

தன்னுடைய அரசாங்கத்துக்கு நாம் முதலிடம் தர வேண்டும் என்றும், ஆன்மீக விஷயங்களை தவறவிடக் கூடாது என்றும் யெகோவா எதிர்பார்க்கிறார். (மத்தேயு 6:33; லூக்கா 13:24) ஆனால், நாலாபக்கத்திலிருந்தும் பிரச்சினைகள் வரும்போது இதைச் செய்வது கஷ்டமாக இருக்கலாம். உதாரணத்துக்கு, மற்றவர்களிடமிருந்து எதிர்ப்பு வரலாம், உங்கள் உடல்நிலை மோசமாகலாம், குடும்பப் பிரச்சினைகள் உங்களை நெருக்கலாம். அல்லது, யெகோவாவுக்கென்று செலவு செய்ய வேண்டிய நேரத்தை உங்களுடைய வேலை எடுத்துக்கொள்ளலாம். இவ்வளவு பிரச்சினை இருப்பதால், “எனக்கு நேரமே பத்தல. உடம்புலயும் தெம்பே இல்ல” என்று நினைத்து நீங்கள் சோர்ந்துவிடலாம். ஒருவேளை, யெகோவா உங்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கிறார் என்றுகூட நினைக்க ஆரம்பித்துவிடலாம்.

உங்களால் செய்ய முடியாததை யெகோவா எதிர்பார்ப்பதில்லை. உங்கள் சூழ்நிலையை அவர் புரிந்துகொள்கிறார். உடல் ரீதியிலும் மன ரீதியிலும் ஏற்பட்ட சோர்விலிருந்து மீண்டு வர கொஞ்சம் காலம் எடுக்கும் என்பதை அவர் புரிந்துகொள்கிறார்.​—சங்கீதம் 103:13, 14.

தீர்க்கதரிசியான எலியாவுக்கு யெகோவா எப்படி உதவினார் என்று கவனியுங்கள். ஒருசமயம், எலியா சோர்ந்துபோயிருந்தார். அதோடு, உயிருக்குப் பயந்து வனாந்தரத்துக்கு ஓடிப்போனார். அப்போது யெகோவா அவரைத் திட்டினாரா? அல்லது, ‘முதல்ல நான் கொடுத்த வேலைய போய் செய்’ என்று சொன்னாரா? இல்லவே இல்லை. ஒரு தேவதூதரை அவரிடம் இரண்டு தடவை அனுப்பினார். அந்தத் தேவதூதர், எலியாவை மென்மையாகத் தட்டி எழுப்பி சாப்பாடு கொடுத்தார். இதெல்லாம் நடந்து 40 நாட்கள் கழித்தும், எலியா பயத்தில்தான் இருந்தார். அப்போதும் யெகோவா அவருக்கு எப்படிப் பக்கபலமாக இருந்தார்? முதலாவதாக, தன்னால் எலியாவைக் காப்பாற்ற முடியும் என்பதைக் காட்டினார். இரண்டாவதாக, ‘அமைதியான, மென்மையான ஒரு குரலில்’ எலியாவை ஆறுதல்படுத்தினார். மூன்றாவதாக, தன்னை வணங்குகிற ஆயிரக்கணக்கான ஆட்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்றும், எலியா தனியாள் கிடையாது என்றும் சொன்னார். இதையெல்லாம் கேட்ட எலியா, மறுபடியும் சுறுசுறுப்பாக யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார். (1 ராஜாக்கள் 19:1-19) நமக்கு என்ன பாடம்? எலியா கவலையில் மூழ்கிப்போயிருந்த சமயத்தில், யெகோவா அவரிடம் பொறுமையோடும் கரிசனையோடும் நடந்துகொண்டார். இன்றும் யெகோவா மாறவில்லை, நம்மிடமும் அதேபோல்தான் நடந்துகொள்கிறார்.

இப்போது உங்களால் யெகோவாவுக்கு என்ன செய்ய முடியுமென்று யதார்த்தமாக யோசித்துப்பாருங்கள். முன்பு செய்ததுபோல செய்ய முடியவில்லையே என நினைத்து கவலைப்படாதீர்கள். இந்த உதாரணத்தை யோசியுங்கள்: ஒரு ஓட்டப் பந்தய வீரர் பல மாதங்களாக அல்லது பல வருஷங்களாக ஓடுவதையே நிறுத்திவிட்டார். இப்போது, அவரால் முன்பு போல ஓட முடியுமா? முடியாது! முன்பு இருந்த தெம்பைத் திரும்பவும் பெறும்வரை அவர் சின்னச் சின்ன இலக்குகளை வைத்து, அதை அடைய முயற்சி செய்வார். கிறிஸ்தவர்களும் ஓட்டப்பந்தய வீரர்களைப் போல்தான் இருக்கிறார்கள். தெளிவான ஒரு இலக்கை நோக்கி அவர்கள் ஓடுகிறார்கள். (1 கொரிந்தியர் 9:24-27) அதனால், நீங்களும் ஏன் ஒரு இலக்கை வைக்கக் கூடாது? முதலில், கூட்டங்களுக்குப் போக வேண்டும் என்ற இலக்கை வைக்கலாம். அதை அடைவதற்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தம் பலமாகும்போது, ‘அவர் நல்லவர் என்பதை [நீங்களே] ருசித்துப் பார்ப்பீர்கள்.’ (சங்கீதம் 34:8) யெகோவாவுக்காக நீங்கள் செய்யும் சின்ன விஷயத்தையும் அவர் பெரிதாக நினைக்கிறார்.​—லூக்கா 21:1-4.

உங்களால் செய்ய முடியாததை யெகோவா எதிர்பார்ப்பதில்லை

“எனக்கு தேவையான தெம்பு கிடைச்சுது”

ஜூனுக்கு யெகோவா எப்படி உதவினார்? “எனக்கு உதவி செய்யுங்கனு தொடர்ந்து யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சேன். அந்த சமயத்துல, என்னோட ஊர்ல நடக்கப்போற மாநாட்ட பத்தி என் மருமக என்கிட்ட சொன்னா. ஒரு நாள் மட்டும் அதுல கலந்துக்கலாம்னு நினைச்சேன். அந்த மாநாட்டுல, மறுபடியும் சகோதர சகோதரிகளோட ஒண்ணா இருந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அந்த மாநாட்டுலதான் எனக்கு தேவையான தெம்பு கிடைச்சுது. இப்போ, மறுபடியும் யெகோவாவுக்கு சந்தோஷமா சேவை செய்றேன். என்னோட வாழ்க்கைக்கே இப்பதான் ஒரு அர்த்தம் கிடைச்சிருக்கு. தனியா இந்த உலகத்தோட போராட முடியாதுனும், சகோதர சகோதரிகளோட உதவி தேவைனும் என் அனுபவத்துல இருந்து கத்துக்கிட்டேன். இந்த உலகத்த யெகோவா இவ்வளவு நாள் விட்டுவெச்சிருந்ததுனாலதான் என்னால திரும்பி வர முடிஞ்சிது. அதுக்காக அவருக்கு ரொம்ப நன்றி சொல்றேன்” என்கிறார் ஜூன்.