Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 1

“தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்”

“தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்”

ஒரு ஆட்டுக்குட்டி புல்ல மேய்ஞ்சிட்டே, வழிமாறி போயிடுது. மேய்ப்பனயும் ஆடுகளயும் விட்டுட்டு எங்கேயோ வந்துட்ட விஷயம் ரொம்ப தூரம் போனதுக்கு அப்புறம்தான் அதுக்கு தெரியிது. இருட்ட ஆரம்பிச்சதும், மிருகங்கள் உறுமுற சத்தத்த கேட்டு பயப்படுது. என்ன பண்றதுனே தெரியாம முழிக்குது. அப்போ, மேய்ப்பனோட சத்தம் கேட்குது. அவர் ஆட்டுக்குட்டிய தேடி வர்றார். அத பார்த்த உடனே, ஓடி வந்து... அதை தூக்கி... மடியில வச்சுக்கிறார். சால்வைய அது மேல போர்த்தி, பத்திரமா தூக்கிட்டு போறார்.

இந்த மேய்ப்பனைப் போல்தான் யெகோவா இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. “நானே போய் என்னுடைய ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன். நானே அவற்றைக் கவனித்துக்கொள்வேன்” என்று சொல்கிறார்.​—எசேக்கியேல் 34:11, 12.

‘நான் அக்கறையோடு மேய்க்கிற என்னுடைய ஆடுகள்’

யெகோவாவின் மேல் அன்பு வைத்து அவரை வணங்கும் மக்கள்தான் அவருடைய ஆடுகள்! “[நாம்] அவரை வணங்குவோம்; அவர்முன் தலைவணங்குவோம். நம்மைப் படைத்த யெகோவாவுக்குமுன் மண்டிபோடுவோம். ஏனென்றால், அவர்தான் நம் கடவுள். நாம் அவருடைய ஜனங்களாகவும், அவர் அக்கறையோடு மேய்க்கிற ஆடுகளாகவும் இருக்கிறோம்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 95:6, 7) மேய்ப்பன் சொல்வதை ஆடுகள் கேட்கும். அதேபோல், நாமும் நம் மேய்ப்பரான யெகோவா சொல்வதைக் கேட்டு நடக்க ஆசைப்படுகிறோம். ஆனால், “சிதறிப்போன,” “தொலைந்துபோன,” “வழிதவறித் திரிகிற” ஆடுகளைப் போல சிலசமயங்களில் நாம் ஆகிவிடுகிறோம். (எசேக்கியேல் 34:12, 16; 1 பேதுரு 2:25) இருந்தாலும், யெகோவா நம்மைக் கைவிடுவதில்லை. நாம் கண்டிப்பாகத் திரும்பி வருவோம் என்று காத்திருக்கிறார்.

யெகோவாதான் என்னோட மேய்ப்பர்” என்று இப்போதும் நினைக்கிறீர்களா? யெகோவா இன்று எப்படி ஒரு அன்பான மேய்ப்பரைப் போல இருக்கிறார்? இந்த மூன்று விதங்களில்...

அருமையான புல்வெளிகளில் மேய்க்கிறார். “பச்சைப்பசேல் என்றிருக்கும் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். . . . நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவை படுத்துக்கொள்ளும். . . . அருமையான புல்வெளிகளில் அவை மேயும்” என்று யெகோவா சொல்கிறார். (எசேக்கியேல் 34:14) நமக்குத் தேவையான விஷயங்களைச் சரியான நேரத்தில் யெகோவா சொல்லித் தருகிறார். நாம் செய்யும் ஜெபத்துக்கு ஏதாவது ஒரு கட்டுரையில்... பேச்சில்... வீடியோவில்... பதில் தருகிறார். உங்களுக்கு அப்படிப் பதில் கிடைத்திருக்கிறதா? அப்படியென்றால், உங்கள்மேல் யெகோவாவுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறது!

நம்மைக் கவனித்துக்கொள்கிறார். “வழிமாறிப்போனதைக் கண்டுபிடித்துக் கொண்டுவருவேன், காயப்பட்டதுக்குக் கட்டு போடுவேன், துவண்டுபோனதைத் தெம்பாக்குவேன்” என்று யெகோவா சொல்கிறார். (எசேக்கியேல் 34:16) சோர்ந்துபோய் இருப்பவர்களையும் கவலையில் மூழ்கியிருப்பவர்களையும் யெகோவா பலப்படுத்துகிறார். காயப்பட்ட மனதுக்கு மருந்து போட்டு குணப்படுத்துகிறார். (ஒருவேளை, சபையில் இருப்பவர்களால் காயப்படுத்தப்பட்டிருக்கலாம்.) வழிமாறிப்போனவர்களையும், ‘நான் எதுக்குமே லாயக்கில்ல’ என்று நினைப்பவர்களையும் தேடிக் கண்டுபிடித்து, சபைக்குள் கொண்டுவருகிறார்.

நம்மைக் கைவிட மாட்டார். “சிதறிப்போன என் ஆடுகளை எல்லா இடங்களிலிருந்தும் காப்பாற்றிக் கொண்டுவருவேன்” என்று யெகோவா சொல்கிறார். “தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்” என்றும் சொல்கிறார். (எசேக்கியேல் 34:12, 16) தொலைந்துபோன ஆட்டை அவர் அப்படியே விட்டுவிடுவதில்லை. எந்த ஆடு தொலைந்துபோனாலும் அவருக்குத் தெரியும். அதைத் தேடிப்போய் கண்டுபிடிக்கிறார்; திரும்ப கிடைத்ததும் ரொம்ப சந்தோஷப்படுகிறார். (மத்தேயு 18:12-14) அவரை வணங்கும் மக்களை “என் ஆடுகளே, நான் அக்கறையோடு மேய்க்கிற என்னுடைய ஆடுகளே” என்று அழைக்கிறார். (எசேக்கியேல் 34:31) நீங்களும் அவருடைய மந்தையைச் சேர்ந்த ஒரு ஆடுதான்!

தொலைந்துபோன ஆட்டை யெகோவா அப்படியே விட்டுவிடுவதில்லை. அதைத் தேடிக் கண்டுபிடிக்கிறார்; திரும்பக் கிடைத்ததும் சந்தோஷப்படுகிறார்

“பழையபடி எங்களை நன்றாக வாழ வையுங்கள்”

யெகோவா ஏன் உங்களைத் தேடுகிறார்? நீங்கள் திரும்பி வர வேண்டும் என்று ஏன் ஆசைப்படுகிறார்? ஏனென்றால், நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். தன்னுடைய ஆடுகளின் மேல் ‘ஆசீர்வாதங்களை மழை போலக் கொட்டுவதாக’ சொல்கிறார். (எசேக்கியேல் 34:26) நீங்களும் அவரிடமிருந்து நிறைய ஆசீர்வாதங்களை அனுபவித்திருப்பீர்கள்.

முதன்முதலில் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது? கடவுளுடைய பெயர் என்ன, மனிதர்களை அவர் ஏன் படைத்தார் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டபோது எப்படி இருந்தது? மாநாடுகளில் உங்கள் நண்பர்களோடு பேசிப் பழகியதை மறக்க முடியுமா? ஆர்வமாகக் கேட்ட ஒருவரிடம் யெகோவாவைப் பற்றி சொல்லிக்கொடுத்த சந்தோஷமான அனுபவத்தை மறக்க முடியுமா?

அந்தச் சந்தோஷம் உங்களுக்குத் திரும்பவும் கிடைக்கும். “யெகோவாவே, மறுபடியும் எங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் உங்களிடமே திரும்பி வந்துவிடுகிறோம். பழையபடி எங்களை நன்றாக வாழ வையுங்கள்” என்று ஒரு ஊழியர் ஜெபம் செய்தார். (புலம்பல் 5:21) அந்த ஜெபத்தை யெகோவா கேட்டார். தன்னுடைய மக்கள் திரும்பி வந்து, சந்தோஷமாக தன்னை வணங்குவதற்கு உதவினார். (நெகேமியா 8:17) இன்றும் யெகோவா உங்கள் ஜெபங்களைக் கேட்பார்.

“யெகோவாகிட்ட திரும்பி வந்துடுறேன்” என்று சொல்வது சுலபம். ஆனால், அதைச் செய்வது கஷ்டம். அப்படியென்றால், அதில் என்னென்ன கஷ்டங்கள் இருக்கலாம்? அதை எப்படிச் சமாளிக்கலாம்? இதைப் பற்றி இந்தச் சிற்றேட்டில் பார்ப்போம்.