Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 3

மனம் புண்படுதல்​—“ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால்”

மனம் புண்படுதல்​—“ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால்”

“என்னோட சபையில இருக்கிற ஒரு சகோதரி, அவங்களோட பணத்தை நான் திருடிட்டேனு என்மேல பழி போட்டாங்க. சபையில இருக்கிற மத்தவங்களுக்கும் விஷயம் தெரிய ஆரம்பிச்சுது. சிலர் அவங்க பக்கம் சேர்ந்துக்கிட்டாங்க. ஆனா பணத்த நான் திருடலனு சீக்கிரத்திலேயே அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க. என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டாங்க. இருந்தாலும் நடந்தத என்னால மறக்கவே முடியல. அவங்கள மன்னிக்கிறதுக்கு மனசே வரல.”​—லிண்டா.

லிண்டாவின் விஷயத்தில் நடந்ததுபோல, சகோதர சகோதரிகள் யாராவது உங்களுடைய மனதைப் புண்படுத்தியிருக்கிறார்களா? வருத்தமான விஷயம் என்னவென்றால், மற்றவர்கள் நடந்துகொள்ளும் விதத்தால் சிலர் ரொம்பவே பாதிக்கப்படுகிறார்கள். ஏன், ஆன்மீக விஷயங்கள் தடையாகும் அளவுக்கு மனமுடைந்து போய்விடுகிறார்கள். உங்களுக்கும் அப்படி நடந்திருக்கிறதா?

‘கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து [யாராலும்] நம்மைப் பிரிக்க முடியாது’

சபையில் இருப்பவர்கள் நம் மனதைக் காயப்படுத்தினால், நாம் அப்படியே இடிந்துபோய்விடுவோம். அந்த வலியை நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது. (சங்கீதம் 55:12) அவரை மன்னிப்பது நமக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கலாம். ஆனால், கிறிஸ்தவர்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.​—யோவான் 13:34, 35.

அதேசமயத்தில், சபையில் இருப்பவர்களோடு பழகும்போது ‘மனக்குறைகள்’ ஏற்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:13) நம்முடைய மனதை யாராவது புண்படுத்திவிட்டால், அவர்களை மன்னிப்பதும் அதை மறப்பதும் கஷ்டமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில் என்ன செய்வது? அது சம்பந்தமான மூன்று நியமங்களை இப்போது பார்க்கலாம்.

நம் பரலோகத் தந்தைக்கு எல்லாமே தெரியும். நம் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் யெகோவா கவனிக்கிறார். நமக்கு ஏதாவது அநியாயம் நடந்தாலோ, அதனால் வருகிற கஷ்டங்களை நாம் அனுபவித்தாலோ யெகோவா அதை கவனிக்கிறார். (எபிரெயர் 4:13) அதுமட்டுமல்ல, அதைப் பார்த்து அவர் வேதனைப்படுகிறார். (ஏசாயா 63:9) ‘உபத்திரவமோ, வேதனையோ’ அல்லது வேறு ஏதாவது விஷயமோ, “கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க” முடியாது. ஏன், நம்முடைய சகோதர சகோதரிகள்கூட நம்மைப் பிரிக்க முடியாது. அப்படிப் பிரிப்பதற்கு யெகோவா ஒருபோதும் விட மாட்டார். (ரோமர் 8:35, 38, 39) அதேபோல், யெகோவாவைவிட்டு நம்மைப் பிரிப்பதற்கு வேறு யாருக்கும் எதற்கும் நாம் இடம்கொடுக்கக் கூடாது, இல்லையா?

மன்னிப்பது என்பது தவறைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவதைக் குறிப்பதில்லை. ஒருவர் செய்த தவறை நாம் மன்னிக்கிறோம் என்றால், அந்தத் தவறைக் குறைவாக எடைபோடுகிறோம் என்றோ, அதை நியாயப்படுத்துகிறோம் என்றோ, அதைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறோம் என்றோ அர்த்தம் கிடையாது. ஏனென்றால், தவறு செய்வதை யெகோவாவும் ஏற்றுக்கொள்வதில்லை! ஆனால், மன்னிப்பதற்கு நியாயமான காரணம் இருந்தால் தவறு செய்தவரை அவர் மன்னிப்பார். (சங்கீதம் 103:12, 13; ஆபகூக் 1:13) மன்னிக்கும் விஷயத்தில் நாம் அவரைப் போலவே நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அதாவது, நாம் “என்றென்றும் கோபத்தோடு இருக்க” கூடாது என்று அவர் எதிர்பார்க்கிறார்.​—சங்கீதம் 103:9; மத்தேயு 6:14.

மறப்பதும் மன்னிப்பதும் நமக்குத்தான் நல்லது. எப்படி? இந்த உதாரணத்தை யோசித்துப்பாருங்கள்: நீங்கள் ஒரு சின்ன கல்லை எடுத்து கையில் தூக்கிப் பிடித்திருக்கிறீர்கள். அதை எவ்வளவு நேரம் பிடித்திருக்க முடியும்? ஒருவேளை 5 நிமிடம், 10 நிமிடம் என்றால் பரவாயில்லை. மணிக்கணக்காக, நாள்கணக்காக பிடித்திருக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது, கை வலிக்க ஆரம்பித்துவிடும். அந்தச் சின்ன கல்கூட ஒரு பெரிய பாறாங்கல்லைப் போல் இருக்கும். மனதில் கோபத்தை வைத்திருப்பதும் இப்படித்தான்! அது சின்ன விஷயமாக இருந்தாலும் அதை ரொம்ப நாள் மனதிலேயே வைத்திருந்தால் நமக்குப் பெரிய பாரமாக இருக்கும். அதனால்தான், மற்றவர்களைத் தாராளமாக மன்னிக்கும்படி யெகோவா சொல்கிறார். அப்படிச் செய்வது நமக்குத்தான் நல்லது.​—நீதிமொழிகள் 11:17.

மறப்பதும் மன்னிப்பதும் நமக்குத்தான் நல்லது

“யெகோவாவே என்கிட்ட சொல்ற மாதிரி இருந்துச்சு”

கோபத்தை மறக்கவும் மன்னிக்கவும் லிண்டா நிறைய முயற்சிகளை எடுத்தார். அதில் ஒன்று, மன்னிப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைப் படித்ததும், அதை நன்றாக யோசித்துப்பார்த்ததும்தான்! (சங்கீதம் 130:3, 4) நாம் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்கும்போது யெகோவா நம்முடைய பாவங்களைத் தாராளமாக மன்னிக்கிறார் என்று கற்றுக்கொண்டது அவருடைய மனதைத் தொட்டது. (எபேசியர் 4:32–5:2) “நான் என்ன செய்யணும்னு யெகோவாவே என்கிட்ட சொல்ற மாதிரி இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார்.

காலப்போக்கில், லிண்டா அந்தச் சகோதரியை மன்னித்தார். இப்போது அவர்கள் இரண்டு பேரும் இணைபிரியா தோழிகள்! மறுபடியும் லிண்டா யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாகச் சேவை செய்ய ஆரம்பித்தார். மற்றவர்களை மன்னிப்பதற்கு யெகோவா உங்களுக்கும் உதவுவார்.