Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவிடமிருந்து வந்துள்ள கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து வந்துள்ள கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து வந்துள்ள கடிதம்

அன்புள்ள சகோதர சகோதரிகளே:

“நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.” (1 கொ. 1:3) உயிருள்ள யாவும் யெகோவாவுக்குச் சேர வேண்டிய மகிமையை அவருக்கு செலுத்தப்போகும் அந்த நாளைக் காண நாம் எவ்வளவாய் ஏங்குகிறோம்! (சங். 150:6) அந்த மகத்தான நாளுக்காக நாம் காத்திருக்கும் இவ்வேளையில் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை அறிவிப்பதிலும் சீஷர்களை உண்டாக்குவதிலும் நாம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

யெகோவா பூமியில் செய்யப்பட்டு வருகிற தம்முடைய வேலைகளில் சுவிசேஷ வேலைக்கே இன்று அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். (மாற். 13:10) இந்த வேலையின் மீது யெகோவாவுக்கு மிகுந்த அக்கறை இருக்கிறது என்பதை நாம் நன்கு அறிந்திருக்கிறோம்; எனவே, மனிதர் ஒவ்வொருவரும் கிரய பலி ஏற்பாட்டிலிருந்து பயனடைய வாய்ப்பு இருக்கிறது என்ற உணர்வுடன் இந்த வேலையை ஜெபசிந்தையோடு செய்கிறோம். (வெளி. 14:6, 7, 14, 15) கஷ்டமான சூழ்நிலைமைகளை நாம் எதிர்ப்படுவது உண்மைதான், ஆனாலும் இந்த ஊழியத்தை நிறைவேற்ற ‘உன்னதத்திலிருந்து வரும் வல்லமையால் நிரப்பப்படுவதற்காக’ நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!​—⁠லூக். 24:49, NW.

யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களைப் பயன்படுத்தி கடந்த ஊழிய ஆண்டில் நிறைவேற்றியுள்ள காரியங்களை மறுபார்வை செய்வது திருப்தி அளிக்கிறது. பரிசுத்த ஆவியால் பலப்படுத்தப்பட்ட கடவுளுடைய ஜனங்கள் கிறிஸ்து காட்டியதைப் போன்ற அன்பை வெளிக்காட்டியிருப்பதால் உலகெங்கும் பகைமையை சமாளித்திருக்கிறார்கள். அத்தகைய அன்பு நம்முடைய மாநாடுகளில் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. 2003 ஜூன் முதல் டிசம்பர் வரை, ஆறு கண்டங்களில் நடைபெற்ற 32 சர்வதேச மாநாடுகளில் நூற்றுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள். மிஷனரிகள், சர்வதேச ஊழியர்கள், அயல் நாடுகளில் சேவை செய்யும் பெத்தேல் அங்கத்தினர்கள் ஆகியோர் மாவட்ட மாநாடுகளிலும் சர்வதேச மாநாடுகளிலும் பேட்டி காணப்பட்டார்கள்.

இந்த மாவட்ட மாநாடுகளில் ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்,’ பெரிய போதகரிடம் கற்றுக்கொள் ஆகிய பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டோம். அதோடு, 2004 ஊழிய ஆண்டின் முடிவில் திருத்தியமைக்கப்பட்ட பயனியர் ஊழியப் பள்ளி பாடப்புத்தகத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் ஏற்கெனவே பங்கேற்ற நீண்ட கால பயனியர்களும்கூட காலப்போக்கில் இவ்வகுப்புகளில் கலந்துகொள்வார்கள்.

வசதிவாய்ப்பற்ற நாடுகளிலும் அநேக ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டிருக்கின்றன; இதற்கு கடவுளுடைய ஆதரவும் ஜனங்களுடைய தாராள மனப்பான்மையும்தான் காரணம். ஆவிக்குரிய உணவுக்கான தேவை உலகெங்கும் அதிகரித்து வருவதால் அநேக நாடுகளில் கிளை அலுவலக விரிவாக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! சிற்றேடு இப்போது 299 மொழிகளில் மொத்தம் 13 கோடியே 90 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளது; நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு 161 மொழிகளில் 9 கோடியே 30 லட்சம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளது; கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? சிற்றேடு 267 மொழிகளில் 20 கோடிக்கும் அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளது.

கடந்த ஊழிய ஆண்டில் தங்கள் ஒப்புக்கொடுத்தலை முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்திக் காட்டிய 2,58,845 பேரை மனதார வரவேற்கிறோம்! கடவுளுடைய ராஜ்யத்திற்கு ஆதரவு காட்டுவதால் நீங்கள் சாத்தானின் பகைமைக்கு முக்கிய குறியிலக்காக ஆகியிருக்கிறீர்கள்; அதேசமயத்தில், ஆவிக்குரிய பந்தயத்தில் ஓடும் நீங்கள், யெகோவாவின் ஆசீர்வாதத்தையும் ஆவிக்குரிய பாதுகாப்பையும் விசேஷித்த விதத்தில் பெறுகிறவர்களாகவும் ஆகியிருக்கிறீர்கள். (எபி. 12:1, 2; வெளி. 12:17) ஆம், “உன்னைக் காக்கிறவர் உறங்கார்” என்ற வாசகம் நூற்றுக்கு நூறு உண்மையென்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.​—⁠சங். 121:3.

“தொடர்ந்து விழித்திருங்கள். . . . ஆயத்தமாயிருங்கள்” என்ற 2004-⁠ன் வருடாந்தர வசனம் காலத்திற்கேற்ற ஒன்று. (மத். 24:42, 44, NW) அழிந்துவரும் இந்த ஒழுங்குமுறையில் கிறிஸ்தவர்கள் தற்காலிகக் குடிகளைப் போலிருக்கிறார்கள் என கடவுளுடைய வார்த்தை விவரிக்கிறது. (1 பே. 2:11; 4:7) எனவே நாம் தொடர்ந்து ஆவிக்குரிய காரியங்களில் கவனத்தை ஒருமுகப்படுத்தவும், நம் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொள்ளவும், நம்முடைய இருதயங்களை கவனமாக பரிசோதித்துப் பார்க்கவும் வேண்டும். “பெரிய வலுசர்ப்பம்” நம்மை விழுங்கிப்போட விரும்புகிறது, அதன் ஒழுங்குமுறையோடு நாம் இரண்டறக் கலக்கும்படி செய்யவும் விரும்புகிறது.​—⁠வெளி. 12:9.

ஆகையால், நாம் விழிப்புள்ளவர்களாக இருப்பதற்கு தினந்தோறும் பைபிளை வாசிப்பது மிக முக்கியம். கடவுளுக்கு நம்மை ஒப்புக்கொடுத்த சமயத்தில் நாம் சொன்ன, ‘ஆம் என்பது ஆம் என இருப்பதற்கும்,’ “நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவு பரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்”பதற்கும் அது நமக்கு உதவும். (யாக். 5:12, NW; எபி. 3:14) மேலும், அவ்வாறு பைபிள் வாசிப்பது கடவுளுடைய மாறாத தராதரங்களிலிருந்து இந்த உலகம் எந்தளவுக்கு வழிவிலகி சென்றிருக்கிறது என்பதை மனதில் வைப்பதற்கும் உதவும். (மல். 3:6; 2 தீ. 3:1, 13) அதுமட்டுமல்ல, “தந்திரமான கட்டுக்கதைகளை” தவிர்ப்பதற்கும் யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்திருப்பதற்கும் பைபிள் அறிவு நமக்கு உதவும்.​—⁠2 பே. 1:16; 3:11.

பெற்றோர்களே, யெகோவாவுக்கு ஏற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும் பிள்ளைகளை வளர்க்கையில் அவர்கள் ஆவிக்குரிய இலக்குகளை வைப்பதற்கும் ‘தொடர்ந்து விழித்திருப்பதற்கும்’ நீங்கள் உதவுகிறீர்கள். (எபே. 6:4, NW) எக்காலத்திலும் வாழ்ந்தவர்களுள் தலைசிறந்த ஞானம் படைத்தவர் தம் எதிர்காலத்தை எப்படி நோக்கினாரோ அதே விதமாக உங்கள் பிள்ளைகளும் நோக்குவதற்கு நீங்கள் அவர்களைப் பயிற்றுவிக்கிறீர்களா? இயேசு எக்காலத்திலும் வாழ்ந்தவர்களுள் மிகச் சிறந்த தச்சனாகவோ, அறிவியல் ஆய்வாளராகவோ, மருத்துவராகவோ ஆகியிருக்க முடியும், ஆனால் அதற்கு மாறாக அவர் முழுநேர ஊழியராக ஆவதையே விரும்பினார். பிள்ளைகள் ராஜ்ய அக்கறைகளை தங்கள் வாழ்க்கையில் முதலிடத்தில் வைக்க நீங்கள் உதவுவதற்கு அவருடைய உதாரணம் உங்களை ஊக்குவிப்பதாக.

‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்க’ வேண்டிய எங்கள் பொறுப்பை நிறைவேற்ற ‘திரள் கூட்டத்தாராகிய’ நீங்கள் செய்யும் உதவிக்கு, உண்மையுள்ள அடிமை வகுப்பைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஆளும் குழுவிலுள்ள எங்கள் இதயம் நன்றியுணர்வால் நிரம்பி இருக்கிறது. (வெளி. 7:9; மத். 24:14, 45) அன்புக்குரியவர்களே, “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும்” மறக்கப்போவதில்லை என யெகோவா உங்களுக்கு உறுதி அளிக்கிறார். (எபி. 6:10) பின்வரும் பக்கங்களில் ஆர்வத்தைத் தூண்டும் அனுபவங்களை வாசிக்கையிலும் உங்களுடைய ஒன்றுபட்ட முயற்சிகளால் விளைந்த பலன்களைக் கவனிக்கையிலும் உலகளாவிய சாட்சி கொடுத்தலில் நீங்கள் முக்கிய பங்கை கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

‘இனிவரும் பலன்மேல் [தொடர்ந்து] நோக்கமாயிருக்கையில்,’ அதைப் பெறாதபடி மனிதரோ பிசாசுகளோ உங்களை தடுப்பதற்கு இடங்கொடாமல் எதிர்காலத்தைத் தைரியமாக சந்திப்பீர்களாக. (எபி. 11:26; கொலோ. 2:19) ஆம், யெகோவா மீது நம்பிக்கை வையுங்கள், அவரை நேசிக்கிற அனைவரும் நித்திய வாழ்வைப் பெறுவதற்கு அவர் உதவுவார் என உறுதியாய் இருங்கள்.​—⁠யோவா. 6:48-54.

யெகோவாவுடைய மகிமையின் துதிக்காக உங்களுடன் சேர்ந்து சேவிப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

உங்கள் சகோதரர்கள்,

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு