உலகளாவிய அறிக்கை
உலகளாவிய அறிக்கை
◼ ஐரோப்பா
நாடுகளின் எண்ணிக்கை: 46
மக்கள் தொகை: 72,81,62,887
பிரஸ்தாபிகள்: 14,76,554
பைபிள் படிப்புகள்: 6,97,044
சத்தியத்திற்கு வர சிலருக்கு நீண்ட காலம் எடுக்கலாம். 1951-ல் ஸ்டெப்போனஸ் என்பவர் கஸக்ஸ்தான் முகாமில் ஓர் அரசியல் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். அங்கே எட்வார்டஸ் என்பவருடன் அவர் பணிபுரிந்தார். எட்வார்டஸ் லிதுவேனியாவைச் சேர்ந்த ஓர் இளம் யெகோவாவின் சாட்சி; காவற்கோபுர பத்திரிகையை அச்சிட்டதால் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எட்வார்டஸ் பைபிள் அடிப்படையிலான தன் நம்பிக்கை பற்றி ஸ்டெப்போனஸிடம் சொன்னபோது இதுதான் சத்தியம் என்பது அவருக்கு உறுதியாயிற்று. 1955-ல் ஸ்டெப்போனஸ் விடுதலை செய்யப்பட்டார். பிரியாவிடை பெறுகையில், “ஒருவேளை நாம் என்றைக்காவது மீண்டும் சந்திப்போம்” என்று எட்வார்டஸ் சொன்னார். ஸ்டெப்போனஸ் முழுக்காட்டுதல் பெற்றிராவிட்டாலும், அவரை ஒரு யெகோவாவின் சாட்சி என்றே சோவியத் அரசின் பாதுகாப்பு கமிட்டி நினைத்தது. ஆகவே,
அவரது அபார்ட்மென்ட்டை போலீஸ் சோதனையிட்டு சகோதரர்களின் விலாசங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்த பேப்பர்களை பறிமுதல் செய்தது. அதனால் கடவுளுடைய ஜனங்களோடு அவரால் தொடர்புகொள்ள முடியாமல் போனது.நாற்பத்தேழு ஆண்டுகள் உருண்டோடின. இந்த ஆண்டுகளில் வடக்கு லிதுவேனியாவிலுள்ள ஒரு குக்கிராமத்தில் ஸ்டெப்போனஸ் வாழ்ந்து வந்தார்; அங்கு யெகோவாவின் சாட்சிகள் யாரும் கிடையாது. பிற்பாடு 2002 இளவேனிற்காலத்தில் அவருக்கு எப்படியோ சில பிரசுரங்கள் கிடைத்தன. குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தை அனுப்புமாறு கேட்டு ஒரு கூப்பனை லிதுவேனியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அவர் அனுப்பினார். “சகோதரர்களோடு உள்ள தொடர்பை மீண்டும் புதுப்பிக்க முடியும் என்று நினைத்துதான் கூப்பனை அனுப்பினேன்” என்று அவர் சொல்கிறார். அவரை சந்தித்து, பைபிள் படிப்பு நடத்துவதற்கு விசேஷ பயனியர்களான ஒரு தம்பதியர் வந்தார்கள். ஒரு வருடத்திற்குள்ளாகவே ஸ்டெப்போனஸ் முழுக்காட்டுதல் பெற்றார்; அப்போது அவருக்கு 80 வயது.
ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு, “ஒருவேளை நாம் என்றைக்காவது மீண்டும் சந்திப்போம்” என்று எட்வார்டஸ் சொல்லியிருந்தாரே, அவரை எப்போதாவது சந்திக்க முடிந்ததா? ஆம், சந்திக்க முடிந்தது! அவர் முழுக்காட்டுதல் பெற்ற அடுத்த நாளே அவர்கள் இருவரும் சந்தித்தனர். இப்போது ஆவிக்குரிய சகோதரர்களாக ஒருவரையொருவர் மீண்டும் சந்திக்க முடிந்த சந்தோஷத்தில் அவர்கள் கட்டித் தழுவினர்.
பிரிட்டனில் 11 வயது டிம்மும் சாமும் டிம்முடைய அம்மாவுடன் வெளி ஊழியம் செய்து கொண்டிருந்தார்கள். இந்த இரண்டு சிறுவர்களுமே முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள். பைபிளையும் பிரசுரங்களையும் எடுத்துச் செல்வதற்கு இந்த சிறுவர்களுக்கு புது பை தேவைப்பட்டது; ஆனால் பணம்தான் பிரச்சினையாக இருந்தது. அன்றைக்கு ஊழியத்திற்கு கிளம்புவதற்கு முன்பு, இந்த இரண்டு பிள்ளைகளுடைய அம்மாமாரும் இந்த விஷயத்தைக் குறித்து ஜெபம் செய்தார்கள். அன்று காலை சந்தித்த கடைசி வீட்டில், வீட்டுக்காரரிடம் டிம் பேசி, பைபிளிலிருந்து ஒரு வசனத்தையும் வாசித்துக் காட்டினான். அந்தப் பெண் குறுக்கிட்டு அவன் எந்த மதத்தை சேர்ந்தவன் என்று கேட்டாள். தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று டிம் பதிலளித்தபோது, அவனை கோபமாக திட்டினாள்; பிறகு அவனுடைய அம்மாவைப் பார்த்து, யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பிள்ளைகளுக்கு இரத்தம் ஏற்ற சம்மதிக்காமல் ஏன் அவர்களை கொல்கிறார்கள் என்றுதான் தனக்குப் புரியவில்லை என்று சொன்னாள்.
டிம்முடைய அம்மாவோ, அதைப் பற்றி அந்தப் பிள்ளைகள் எப்படி நினைக்கிறார்கள் என்று அவர்களிடமே கேட்டுப் பார்க்கும்படி அந்தப் பெண்ணிடம் சொன்னார்; அப்படியே அவளும் அவர்களிடம் கேட்டாள். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாய்
நடப்பதற்கு பதிலாக மாற்று சிகிச்சையை பெற்றுக்கொள்ளவே தான் எப்போதும் விரும்புவதாக டிம் விளக்கினான். தன்னுடைய அக்காவுக்கு மாற்று சிகிச்சை கொடுத்ததால், இரத்தம் ஏற்றிக்கொண்ட மற்றவர்களைவிட சீக்கிரத்தில் நல்ல சுகத்தை பெற்றாள் என சாம் சொன்னான்.அந்தப் பெண் மறுபடியும் டிம்முடைய அம்மா பக்கம் திரும்பினாள். இந்த முறை, சின்ன பிள்ளைகளை இப்படி வீடு வீடாக கூட்டிக்கொண்டு வருவது தவறு என்று அவள் சொன்னாள். வீடு வீடாக போய் பிரசங்கிப்பது தங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்பதாகவும் தங்களுடைய வயதிலுள்ள மற்றவர்களைப் போல தெருக்களில் சுற்றுவதைவிட இதை விரும்புவதாகவும் இந்த இரண்டு சிறுவர்களும் சொன்னார்கள். அவர்களுடைய சமர்த்தான பதில்களைக் கேட்டு அசந்துபோன அந்தப் பெண், கொஞ்சம் நில்லுங்கள் என்று சொல்லி வீட்டிற்குள் போனாள். என்னே ஆச்சரியம், அவள் திரும்பி வந்து சிறுவர் இருவருக்கும் ஆளுக்கொரு அழகான புது லெதர் பையை கொடுத்தாள்; ஊழியத்தில் எடுத்துச் செல்வதற்கு அது கச்சிதமாக இருந்தது! லெதர் பைகளை விற்பதுதான் அவளது வேலை. அவளுடைய மனநிலை மாறியதைக் கண்ட இந்த சிறுவர்கள் அவளை மீண்டும் வந்து சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் அங்கிருந்து புறப்படும்போது, உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் 94 வயது அம்மா, வாசலருகே வந்து தன்னுடைய வீட்டிற்கு வரும்படி டிம்முடைய அம்மாவிடம் சொன்னார்.
போர்ச்சுகலில், இரண்டு சகோதரிகள் வெளி ஊழியம் செய்யும்போது பஸ் ஸ்டாப்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இவ்வாறு எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள்: “மூடநம்பிக்கை என்ற பொருளின் பேரில் ஒரு ஆய்வுக் கட்டுரையை தயாரித்துக் கொண்டிருக்கும் ஒரு உளவியல் மாணவி நான். எனக்கு உதவ முடிந்தால், பின்வரும் ஈ-மெயில் விலாசத்திற்கு தயவுசெய்து பதில் அனுப்புங்கள் . . .” அன்று மதியம் இந்த சகோதரிகள், காவற்கோபுரத்தில் வெளிவந்த “மூடநம்பிக்கைகள் உங்கள் வாழ்க்கையை ஆட்டிப்படைக்கின்றனவா?” என்ற கட்டுரையை சிறப்பித்துக் காட்டி பத்திரிகைகளை அளித்து வந்திருந்தார்கள். ஆகவே, அந்த ஈ-மெயில் விலாசத்திற்கு பதில் அனுப்பவும் இந்தப் பத்திரிகையை அளிக்கவும் அவர்கள் தீர்மானித்தார்கள்.
போஸ்டரில் அந்தத் தகவலை அளித்த மாணவி ஒரு வாரம் கழித்து இவ்வாறு பதில் அனுப்பினாள்: “என்னுடைய போஸ்டருக்கு கவனம் செலுத்தியதற்காக நன்றி. உங்களுக்கு பதில் அனுப்ப தாமதித்ததற்கு வருந்துகிறேன். நீங்கள் குறிப்பிட்டிருந்த பத்திரிகையை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். சமீபத்தில், யெகோவாவின் சாட்சிகள் என்னை பலமுறை சந்தித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் வேலைக்கு அவசர அவசரமாக போய்க்கொண்டிருந்தேன் அல்லது பஸ்ஸைப் பிடிப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தேன்; அதனால் அவர்களிடம் பேசுவதற்கே வாய்ப்பு கிடைக்கவில்லை. நீங்கள் பைபிள் படிப்புகளை நடத்துவதைப் பற்றி எனக்கு தெரியும், எனக்கும் பைபிள் படிப்பு நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
அந்த சகோதரிகள் இவ்வாறு சொன்னார்கள்: “அந்த மாணவியை நாங்கள் முதலில் சந்தித்தபோது, அவள் நிறைய கேள்விகளைக் கேட்டாள். அவளிடம் அறிவு புத்தகத்தைக் கொடுத்து பைபிள் படிப்புக்கும் ஏற்பாடு செய்தோம். பைபிள் படிப்புக்கு அவள் எப்போதும் முன்கூட்டியே தயாரித்து ரெடியாக இருக்கிறாள், இப்போது எல்லா சபைக் கூட்டங்களுக்கும் வருகிறாள்.”
தெற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு நகரத்தில் லீனா என்ற பிரஸ்தாபி தெரு ஊழியம் செய்துகொண்டிருந்தபோது டாட்யானா என்ற பெண் இவரிடம் வந்தார். “என்னை யாருனு அடையாளம் தெரியுதா?” என்று டாட்யானா கேட்டார். தெரியவில்லையே என்று லீனா பதிலளித்தார். “நாம ஒரேயொரு முறைதான் சந்திச்சிருக்கோம், அதுவும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி. அதனால மறந்து போறதில ஆச்சரியம் ஒண்ணும் இல்ல” என்று டாட்யானா சொன்னார். “1998 இளவேனிற்காலத்துல ரோட்டில் வைத்து என்னை சந்திச்சு கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? சிற்றேட்டை எனக்கு தந்தீங்க. அப்போ நான் உங்க கிட்டே சிடுசிடுனு பேசினேன், ஆனா நீங்க ரொம்ப அமைதியாவும் அன்பாவும் பேசினதால் அந்த சிற்றேட்டை வாங்கி வீட்டுல போய் படிச்சுப் பார்த்தேன். அதிலுள்ள விஷயங்கள் என்னை ரொம்பவே தொட்டுவிட்டது.” பிற்பாடு, லீனாவுக்கு பழக்கமில்லாத இரண்டு யெகோவாவின் சாட்சிகள் டாட்யானாவின் வீட்டிற்கு வந்தார்கள். சிற்றேட்டை டாட்யானா ஏற்கெனவே வாசித்திருந்ததால் தனக்கு பைபிள் படிப்பு நடத்த சம்மதித்தார். 2003-ல் லீனாவை டாட்யானா மறுபடியும் சந்தித்த சமயத்தில் அவர் ஏற்கெனவே ஒரு முழுக்காட்டப்பட்ட சாட்சியாக இருந்தார். சொல்லப்போனால், அவர்கள் இருவரும் அந்த மாதத்தில் துணைப் பயனியர் செய்து கொண்டிருந்தார்கள்!
ரஷ்யாவில் பெஸ்கோவ்விலுள்ள ஒரு சகோதரி, ஒதுக்குப்புறமான இடத்தில் வசிக்கும் ஒருவரது விலாசத்தை கிளை அலுவலகத்திலிருந்து பெற்றார். இந்த இடத்திற்கு போய் சேர அவருக்கு அதிக நேரம் பிடித்தது. ஒருவழியாக அங்கு போய் சேர்ந்தபோதுதான், அந்த வீட்டுக்காரர் தனக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி தன்னையறியாமலே கேட்டு எழுதியிருந்த விஷயம் அந்த சகோதரிக்கு தெரியவந்தது. எப்படியெனில், பெட்டிக்கடையிலிருந்து அவர் ஒரு பத்திரிகை வாங்கியிருந்தார். நம்முடைய துண்டுப்பிரதி ஒன்றிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு கூப்பன் அதில் புக்மார்க் மாதிரி வைக்கப்பட்டிருந்தது. ஏதோ பரிசு கொடுக்கிறார்கள் போலிருக்கிறது, ஜெயித்தால் தனக்கு பரிசு கிடைக்கும் என நினைத்து இந்தக் கூப்பனை அனுப்பி வைத்ததாக அவர் சொன்னார். “ஆமாம், ஒரு இலவச பைபிள் படிப்பைதான் பரிசாக வென்றிருக்கிறீர்கள்!” என்று அந்த சகோதரி பதிலளித்தார். அவரும் அவருடைய குடும்பத்தாரும் ஆர்வம் காட்டினார்கள். அவர்களுக்கு பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் குடும்பத்தாரின் வீடு சகோதரியின் வீட்டிலிருந்து அதிக தொலைவில் இருப்பதால் மாதத்தில் இரண்டு முறை படிப்பு நடத்துகிறார்.
◼ ஓசியானியா
நாடுகளின் எண்ணிக்கை: 30
மக்கள் தொகை: 3,43,55,946
பிரஸ்தாபிகள்: 93,718
பைபிள் படிப்புகள்: 47,270
பதினான்கு வயது அலிஸ் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறாள். பள்ளியில் கட்டுரைகளை எழுதுவதற்கு நமது பத்திரிகைகளிலுள்ள விஷயங்களை அவள் பயன்படுத்தினாள். இப்படியாக ஒரு வாரம், “இந்த உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினாள். பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி நம்முடைய காலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அந்தக் கட்டுரையில் விவரித்தாள். அவள் எந்த மதத்தைச் சேர்ந்தவள் என டீச்சர் கேட்டார். அதற்கு அலிஸ், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்துக்கொண்டிருப்பதாக சொல்லி, நம்முடைய பத்திரிகைகள் சிலவற்றை வாசிக்கும்படி டீச்சரிடம் கொடுத்தாள்.
இந்தப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் அந்த டீச்சர் விரும்பி படித்தார்; ஆனால் யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்பு வைக்க வேண்டாம் என சொல்லி மற்றொரு டீச்சர் அவரை தடுத்தார். என்றாலும்,
அலிஸின் நல்நடத்தையை இந்த டீச்சர் சில மாதங்களாகவே உற்று கவனித்த பிறகு, இன்னும் சில விஷயங்களை தெரிந்துகொள்ள அவர் தீர்மானித்தார். ஆபத்தான ஒரு மதப்பிரிவில் அலிஸ் சேர்ந்திருப்பாளோ என்ற கவலையில் அவர் நூலகத்திற்கு சென்று யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை எடுத்து வந்தார். சனி, ஞாயிற்றுக் கிழமைக்குள்ளாக அந்த முழு புத்தகத்தையும் படித்து விட்டார்! இதுதான் சத்தியம் என்று உறுதியானபோது, அலிஸின் அம்மாவுக்கு அவர் போன் செய்து இன்னும் சில பிரசுரங்களைக் கேட்டார். சாட்சிகளோடு பைபிளை படிக்கவும் ஆரம்பித்தார். ஒரு மாதத்திற்குள் எல்லா கூட்டங்களிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தார்; ஞாயிற்றுக் கிழமை கூட்டங்களுக்கு வரும்படி தன்னுடைய கணவனையும் அம்மாவையும் அழைத்தார். அவர்களும்கூட பைபிளை படித்து முன்னேறி வருகிறார்கள். மூன்று மாதங்களுக்குள் அந்த டீச்சர் ஒரு முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஆகி, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் முதன் முதலாக மாணாக்கர் பேச்சையும் கொடுத்தார். சில மாதங்களுக்குப் பிறகு, அலிஸும் அவளுடைய டீச்சர் லின்டாவும் ஒரே நாளில் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.யெகோவாவின் சாட்சிகள் யாருமே இல்லாத ஒரு தீவில் நீங்கள் மட்டுமே வசிப்பதாக இருந்தால் எப்படியிருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! ஒரு சகோதரியின் நிலை அப்படித்தான் ஆகிவிட்டது. மார்ஷல் தீவுகளில் உள்ள மெஜாட்டோ என்ற பவழத் திட்டில் தன் கணவருக்கு வேலை கிடைத்ததால், அந்த சகோதரியின் நிலைமை கஷ்டத்திற்குள்ளாகி விட்டது. அக்கம்பக்கத்தார் அந்த சகோதரியை புராட்டஸ்டன்ட் சர்ச்சுக்கு வரும்படி அழைத்தார்கள், அவரோ மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, என்னுடைய பைபிள் கதை புத்தகத்தைப் பயன்படுத்தி தன் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் அவர் கவனம் செலுத்தினார். அதோடு, கடைசி குழந்தையை தூக்கிக்கொண்டு வீடு வீடாக சென்று தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி சொல்லவும் தொடங்கினார். இதனால் பிற்பாடு சிலர் ஆர்வம் காட்டினர்; யெகோவாவின் சாட்சிகள் யாருமின்றி தன்னந்தனியாக வாழும் அந்த சகோதரி இப்போது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை பயன்படுத்தி அநேக பைபிள் படிப்புகளை நடத்துகிறார். ஒவ்வொரு மாதமும் தான் முன்பிருந்த சபைக்கு வெளி ஊழிய அறிக்கையை அனுப்பி வைக்கிறார். நினைவு நாள் ஆசரிப்பிலும் அசெம்பிளிகளிலும் கலந்துகொள்வதற்காக தன் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு ஈபை என்ற தீவிற்கு நீண்ட தூரம் படகில் பயணிக்கிறார். ஈபை சபையினர், அவருக்கு கடிதங்களை எழுதி உற்சாகப்படுத்துகிறார்கள்; வெளி ஊழிய அனுபவங்களையும், சபை கூட்டங்களில் தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களையும் அதில் எழுதுகிறார்கள். தன்னந்தனியாக உண்மையுடன் சேவிக்கும்
அந்த சகோதரியின் முன்மாதிரியிலிருந்து அவர்களும் ஊக்கத்தைப் பெறுகிறார்கள்.பாப்புவா-நியூ கினியில் உள்ள ஒதுக்குப்புறமான பல கிராமங்களில் மின்சார வசதியே இல்லை. ஆகவே அங்குள்ள ஜனங்கள் ஜெனரேட்டர்களை அல்லது பாட்டரிகளை பயன்படுத்தி மின்கருவிகளை இயக்குகிறார்கள். புதிதாக முழுக்காட்டப்பட்ட ஒரு சகோதரி தன் கிராமத்து மக்கள் பைபிளைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்வதற்கு, யெகோவாவின் சாட்சிகள் தயாரித்த வீடியோக்கள் சிலவற்றை போட்டுக் காட்ட விரும்பினார். ஆகவே, தான் பயிரிட்ட உணவுப் பொருட்களை விற்று பணம் சேர்த்த பிறகு, டிவி, விசிஆர், ஜெனரேட்டர் ஆகியவற்றை வாடகைக்கு விடும் ஒரு பெண்ணிடம் சென்று அவற்றை வாடகைக்கு தரும்படி கேட்டார். ஆவிக்குரிய விதத்தில் உதவும் பைபிள் சம்பந்தமான சில வீடியோக்களை கிராமத்திலுள்ள எல்லாருக்கும் போட்டுக் காட்ட விரும்புவதாக அந்தப் பெண்ணிடம் சொன்னார். உடனே அந்தப் பெண் வாடகை பணத்தை வெகுவாக குறைத்து, தானும் அந்த வீடியோக்களை பார்க்க விரும்புவதாக கூறினார். அவற்றைப் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட முழு கிராமமே திரண்டு வந்தது. பார்த்து முடித்த பிறகு, யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை இந்தளவுக்கு விரிவாக நடைபெறுவதைப் பற்றி தங்களுக்கு இதுவரை தெரியாது என்று அவர்களில் பலர் சொன்னார்கள். தங்களுடைய சர்ச்சில் இதுவரை பார்க்காத ஓர் உலகளாவிய சகோதரத்துவம் யெகோவாவின் சாட்சிகளுடைய மத்தியில் இருப்பதும்கூட அவர்களை வெகுவாய் கவர்ந்தது. ஒருசமயம் யெகோவாவின் சாட்சிகளிடம் பேசுவதற்கு விருப்பம் காட்டாதிருந்த பலர் இப்போது அவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள விரும்பியதால் தங்களுடைய வீடுகளுக்கு வரும்படி அந்த சகோதரியைக் கேட்டுக்கொண்டார்கள்.
சமோவாவின் மிகப்பெரிய தீவாகிய ஸவையி தீவில் இருந்த சமுதாய தலைவர்கள் சிலர் தங்களுடைய கிராமங்களில் பிரசங்கிக்கக் கூடாது என யெகோவாவின் சாட்சிகளை தடை செய்திருந்தனர். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு சகோதரி, தன் மகனுடைய சவ அடக்கத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தான் கற்ற சத்தியத்தின்படி செய்வதில் உறுதியாக இருந்தார். சவ அடக்கப் பேச்சு அவருடைய வீட்டில் வைத்து கொடுக்கப்பட இருந்தது; ஆகவே அத்தீவில் உள்ள இரண்டு சபைகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் அவரது வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்வதற்கும் ஜெனரேட்டருக்கு ஏற்பாடு செய்வதற்கும் உதவினார்கள். அவர்கள் அனைவரும் அன்புடன் இவ்வாறு உதவுவதை அந்த கிராமத்து மக்கள் கவனித்தார்கள். சவ அடக்கத்தை சகோதரர்கள் ஒழுங்குபடுத்தி நடத்திய விதம் சமோவா மக்களின் வழக்கத்திற்கு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.
சவ அடக்கம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த கிராமத்தின் ஊராட்சி ஒன்றியம் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில் இந்த சம்பவத்தைப் பற்றி கலந்து பேசியது. சவ அடக்கத்திற்கு முன்பும் பின்பும் அந்த வீட்டாருக்கு சாட்சிகள் உதவியதைக் கண்டு அதன் உறுப்பினர்கள் அசந்து போயிருந்தனர். சவ அடக்க ஏற்பாடுகள் நடத்தப்பட்ட விதம் கிராம அதிகாரிகளைக் கவர்ந்துவிட்டதால் தங்களுடைய சவ அடக்க முறைகளை ‘ஃபாய மாலிமாவ் ஆ யெஓவா’ முறைப்படி (யெகோவாவின் சாட்சிகளுடைய முறைப்படி) மாற்றுவதற்கு ஏகமனதாக ஒப்புக்கொண்டார்கள். இரண்டு நாட்களுக்குப் பிறகு, சில கிலோமீட்டர் அப்பால் உள்ள ஒரு சிறிய ராஜ்ய மன்றத்தில் கிறிஸ்துவுடைய மரண நினைவு ஆசரிப்பு நாள் அனுசரிக்கப்பட்டது. அதில் கலந்துகொள்வதற்கு இந்த கிராமத்திலிருந்து மூன்று லாரிகளில் ஆட்கள் சென்றார்கள். இத்தீவின் மிகப் பெரிய கிராமங்களில் ஒன்றான இங்கு நம் சகோதர சகோதரிகளால் இப்போது எந்தவித தடையுமின்றி சாட்சி கொடுக்க முடிகிறது. இரண்டு விசேஷ பயனியர்கள் இங்கு ஆறு பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். ஆர்வமுள்ள கிராம மக்கள் மட்டுமல்ல, ஒரு கிராம அதிகாரியும்கூட சபை புத்தகப் படிப்பில் கலந்து கொள்கிறார்.
பிஜியில் ஒரு வாலிபர் தன்னுடைய வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றி யோசித்துக்கொண்டு ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். வழிப்போக்கர் ஒருவரை அழைத்து தன்னருகே உட்காரச் சொன்னார். அந்த வழிபோக்கர் ஒரு சகோதரராக இருந்தார். அவர் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த வாலிபருக்கு சாட்சி கொடுத்தார். பரதீஸ் பூமியைப் பற்றிய பைபிளின் வாக்குறுதியை அந்த வாலிபர் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த போதிலும், இந்த சகோதரரோடு பேசியவுடன் அவரது ஆர்வம் தூண்டப்பட்டது. ஆகவே அவருடைய தாய் வசித்து வந்த தீவிற்கு திரும்பிச் சென்று பைபிளைப் படிக்கத் தீர்மானித்தார். ஆனால் அங்கு போய்ச் சேர்ந்தவுடன், அவரது புதிய மதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவருடைய குடும்பத்தார், அவர் ஏற்கெனவே விவசாயம் செய்திருந்த நிலத்துப் பயிர்களையெல்லாம் அழித்துப் போட்டனர். அந்தக் கிராமத் தலைவர்கள், தங்களுடைய மதத்தவரைத் தவிர வேறு யாருக்கும் அங்கே வசிக்க அனுமதி இல்லை என்று சொல்லி அங்கிருந்து போய்விடும்படி அவருக்கு கட்டளையிட்டனர். அதனால், அடுத்ததாக மற்றொரு சிறிய தீவில் உள்ள தன் தகப்பனாரின் கிராமத்திற்கு சென்றார். அங்கே அவர் பழைய இரும்புத் தகட்டினால் ஒரு தோணியை கட்டி, சாட்சிகளை சந்திப்பதற்காக ஒவ்வொரு வாரமும் கொந்தளிக்கும் கடலில் பல கிலோமீட்டர் பயணித்தார். குடும்பத்தாரின் எதிர்ப்பு தொடர்ந்தது. அதனால் அத்தீவின் ஒதுக்குப்புறமான இடத்தில் துறவிபோல் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசியில் ஒருவழியாக அத்தீவின் முக்கிய பகுதிக்கு, அதாவது ஒரு பெரிய சபை இருக்கும் இடத்திற்கு அவர் குடிமாறிச் செல்ல முடிந்தது. ஒரு முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக அவர் தொடர்ந்து ஆவிக்குரிய விதத்தில் முன்னேறி வருகிறார்.
◼ வட, மத்திப, தென் அமெரிக்கா
நாடுகளின் எண்ணிக்கை: 56
மக்கள் தொகை: 85,71,37,983
பிரஸ்தாபிகள்: 30,95,083
பைபிள் படிப்புகள்: 28,98,369
அமெரிக்காவில், செப்டம்பர் 2002, ஞாயிறு காலை கடைக்காரர் ஒருவரிடம் மறுசந்திப்பு செய்வதற்காக ஒரு சகோதரி சென்றார். அந்த சமயத்தில் அவர் கடையில் சாமான்களை கொடுத்துக் கொண்டு பிஸியாக இருந்ததால், அந்த சகோதரி கடைக்கு வெளியே இங்குமங்குமாக நடந்துகொண்டிருந்தார். மாலா வாங்குவதற்காக ஒரு பெண் வேகமாக கடைக்கு செல்வதை அந்த சகோதரி கவனித்தார்; கத்தோலிக்கரின் ஜெபமாலையைப் போல இந்துக்கள் பயன்படுத்தும் மாலை அது. அந்தப் பெண்ணின் பெயர் ஷே. அவர் விரும்பிய விதமான மாலா கிடைத்ததுபோல் தெரிந்தது. அந்த சந்தோஷத்தில் திரும்பும்போதுதான் அந்த சகோதரி அவரை அணுகி, “ஏங்க, இந்த மாலா சந்தனத்தில் செய்ததா?” என்று கேட்டார்.
“ஆமா, எனக்கு ஒரு நல்ல மாலா வேணும்னு ரொம்ப நாளா பிரார்த்தனை செய்துட்டிருந்தேன், இன்னிக்குதான் அது எனக்கு கிடைச்சுது. முகந்து பாருங்க!”
“ஓ, வாசனை கமகமன்னு இருக்குதே! இத வச்சு எந்தக் கடவுள் கிட்டே பிரார்த்தனை செய்யப் போறீங்க?”
“சில சமயங்கள்ல கணேச சுவாமி கிட்டேயோ சிவ பெருமான் கிட்டேயோ துர்கா தேவி கிட்டேயோ பிரார்த்தனை செய்வேன். இந்த மாலா-வை வச்சு அந்த தெய்வங்ககிட்ட ஜெபம் சொல்லப் போறேன்.”
“நான் ஒண்ணு கேட்கிறேன், தெய்வங்கள்ல யார் ரொம்ப பெரியவர்னு உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கா?”
“அது எனக்கே குழப்பமா இருக்கு. தெய்வங்கள்ல யார் ரொம்ப பெரியவர்னு எனக்கு தெரியல.”
“நான் இந்துவா இருந்த சமயத்துல இந்த தெய்வங்களயெல்லாம் கும்பிட்டிருக்கேன். அப்போ எனக்கும்கூட குழப்பமாதான் இருந்தது. ஆனா, எல்லாம் வல்ல இறைவன் யாருன்னு இப்போ நான் தெரிஞ்சிகிட்டேன். அது யாருன்னு உங்களுக்கு காட்டுறேன். [சங்கீதம் 83:17-ஐ வாசித்துக் காட்டுகிறார்.] பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் யெகோவா தேவனே. சிவன், கணேசன், துர்கா இவர்கள் எல்லாரைவிட அவரே பெரியவர். இந்த எல்லாம் வல்ல இறைவனை பற்றி உங்களுக்கு இலவசமா சொல்லித் தர்றேன்.”
“நிஜமாவா, உண்மையான கடவுள பற்றி நீங்க எனக்கு சொல்லித் தருவீங்களா? என்னோட எல்லா வேண்டுதலுக்கும் இன்னிக்கு பதில் கிடைச்சிருச்சி!”
“எப்படி சொல்றீங்க?”
“ஒரு நல்ல மாலா கிடைச்சா அத வச்சு உண்மையான கடவுளை கண்டுபிடிக்கலாம்னு நினைச்சு அதுக்காகவே நாள் தவறாம வேண்டிக்கிட்டிருந்தேன். எனக்கு ஃப்ரெண்ட் யாரும் கிடையாது, அதனால எனக்கு உதவி செய்ற ஒரு உண்மையான ஃப்ரெண்ட் வேணும்னுகூட வேண்டினேன். உங்க பேர் என்ன?”
“என்னோட பேர் மாலா, நான் கண்டிப்பா உங்க ஃப்ரென்டா இருந்து பைபிள பற்றி சொல்லித் தருவேன்.”
“என்னால நம்பவே முடியல, ஒரு உயிருள்ள மாலாவையே கடவுள் எனக்கு தந்துட்டாரே!”
தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்து படிப்பதற்காக இவர்கள் இருவரும் ஏற்பாடு செய்தார்கள். இப்போது ஷே தவறாமல் கூட்டங்களுக்கு வருகிறார், சீக்கிரத்தில் முழுக்காட்டுதல் பெறுவதற்கும் இலக்கு வைத்திருக்கிறார்.
ஹோண்டுராஸில் ஸ்பானிஷ் மொழியை கஷ்டப்பட்டு கற்று வந்த ஒரு மிஷனரி சகோதரி, அலுவலகக் கட்டடம் ஒன்றிற்குள் நுழைந்து ரிஸப்ஷனிஸ்ட்டிடம் பத்திரிகைகளை அளித்தார். அப்போது அலுவலக ஃபோன் ஒலித்தது. ரிஸப்ஷனிஸ்ட் தன்னை உட்கார சொல்கிறார் என்று நினைத்து இந்த மிஷனரி சகோதரி அங்கே உட்கார்ந்து விட்டார். அவர் தவறாக புரிந்துகொண்டிருந்தார். அங்கிருந்து வெளியே போகும்படியே அந்த ரிஸப்ஷனிஸ்ட் அவரிடம் சொல்லியிருந்திருக்கிறார். இதற்கிடையே ரிஷப்ஷனை அடுத்து இருந்த அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு பெண், ரிஸப்ஷனிஸ்ட்டிடம் இந்த சகோதரி பேசின சத்தத்தைக் கேட்டாள்; தன்னுடைய ஜெபத்துக்கு பதில் கிடைத்து விட்டது என்ற நம்பிக்கை அவளுக்குப் பிறந்தது. ஏனெனில் மணமான ஒருவருடன் தான் வைத்திருந்த கள்ளத் தொடர்பை துண்டிப்பதற்கும் கடவுள் ஏற்றுக்கொள்ளும் விதமாக அவரை வணங்குவது எப்படி என்பதை கற்றுக்கொள்வதற்கும் உதவும்படி ஜெபம் செய்துவந்திருந்தாள். என்றாலும், அந்த சகோதரியை போகும்படி அந்த ரிஸப்ஷனிஸ்ட் சொன்னதை அவள் கேட்டபோது தான் போய் சந்திப்பதற்குள் அவர் அங்கிருந்து போய்விட்டிருப்பாரோ என்று பயந்தாள். ஆனால், அந்த மிஷனரி பிற்பாடு இவ்வாறு சொன்னார்: “அந்த ரிஸப்ஷனிஸ்ட் சொன்னதை நான் தவறாக புரிந்துகொண்டதால், அந்தப் பெண் என்னைப் பார்க்க அவசரமாக வந்தபோது நான் அங்குதான் இருந்தேன். இது யெகோவாவுடைய ஏற்பாடுதான் என்பதை நாங்கள் இருவருமே ஒப்புக்கொண்டோம்.” இந்தப் பெண் சில வருடங்களுக்கு முன்பு யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களைப் படித்திருக்கிறாள், இப்போது ஆவிக்குரிய காரியங்களுக்கு முழு கவனமும் செலுத்த அவள் தீர்மானித்து விட்டாள். அத்துடன் அந்த ஆளுடன் வைத்திருந்த கள்ளத் தொடர்பையும் துண்டித்து விட்டாள். இப்போது பைபிளை படித்து தவறாமல் கூட்டங்களுக்கு வருகிறாள்.
எல் சால்வடாரில் விசேஷ பயனியராக இருந்த ஒரு சகோதரி வேறொரு சபைக்கு நியமிக்கப்பட்டார். அந்தப் பிராந்தியத்திலுள்ள ஆட்கள் யாருமே சத்தியத்தில் விருப்பம் காட்டவில்லை. ஆகவே, ஆர்வமுள்ள ஆட்களை கண்டுபிடிக்க உதவும்படி யெகோவாவிடம் அவர் ஜெபம் செய்தார். ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை, ஒரு வாலிபரை அவர் சந்தித்தார்; அந்த வாலிபரிடம் பைபிளைப் பற்றி அவர் பேசினார். அவர் அறிவு புத்தகத்தைப் பெற்று மறுசந்திப்புக்கு ஒத்துக்கொண்டார். அந்த சகோதரி பலமுறை அவருடைய வீட்டிற்கு சென்றார், அவ்வாறு செல்லும்போதெல்லாம் அவர் அங்கு இருப்பதே இல்லை. அவர் இல்லாவிட்டாலும் அவருடைய மனைவி வீட்டில் இருந்தார். மனைவிக்கோ பைபிளில் அந்தளவு அக்கறை இருக்கவில்லை. ஐந்தாவது முறை சென்றபோது, “பத்து நிமிஷம் மட்டும் பேசலாம்” என்று சொல்லி அவருடைய மனைவி அந்த
சகோதரியை வீட்டிற்குள் அழைத்துப் போனார். கணவரிடம் கொடுத்திருந்த அறிவு புத்தகத்தை எடுக்க முடியுமா என சகோதரி அவரிடம் கேட்டார். அவர் அதைத் தேடி எடுத்துக் கொண்டுவந்தார்; அதிலுள்ள சில விஷயங்களை சுருக்கமாக அவரிடம் சொல்லி, பைபிள் படிப்பு ஏற்பாட்டை நடித்துக் காட்டினார். மூன்று மாதம் படித்த பின்பு, அந்தப் பெண் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார், சத்தியத்தில் உண்மையிலேயே முன்னேற்றம் காண்பித்தார். அவருடைய கணவரைப் பற்றி என்ன? கொஞ்ச காலத்திற்கு பிறகு அவரும் பைபிள் படிப்பில் சேர்ந்து கொண்டார். அதன் பிறகு குடும்பமாக கூட்டங்களுக்கு வரத் தொடங்கினார். இந்தத் தம்பதியர் தங்களுடைய திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய இப்போது முயன்று கொண்டிருக்கிறார்கள். விடாமுயற்சியும் ஜெபமும் சிறந்த பலன்களை அளித்தன.மார்காரிட்டா மெக்சிகோவில் வசிக்கிறாள்; சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் வெற்றி கண்டதைப் பற்றி அவள் சொல்கிறாள்: “தையல் கிளாஸில் என்னோடு பயின்ற பெண்ணிடம் பைபிளைப் பற்றி பேசினேன். அப்போது அவள், யெகோவாவின் சாட்சிகள் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பதால் அவர்களுடைய குடும்பங்கள் சந்தோஷமாய் இருக்கின்றனவென்று தான் நினைத்ததாக சொன்னாள். அவள் அப்படி நினைத்தது சரிதான் என்றும் யெகோவாவை நம்பி, பைபிள் நியமங்களுக்கு ஏற்ப வாழும்போது உண்மையான சந்தோஷம் கிடைக்கிறது என்றும் நான் சொன்னேன்.” மார்காரிட்டா அந்தப் பெண்ணோடு பைபிள் படிக்க ஆரம்பித்தாள். இப்போது அவள் கூட்டங்களுக்கு தவறாமல் வருகிறாள், சத்தியத்தைப் பற்றிய அறிவிலும் முன்னேறி வருகிறாள்.
டொமினிகன் குடியரசில் ஆனா என்பவர் கவலையில் ஆழ்ந்திருந்த ஒரு ஆளிடம் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை கொடுத்தார். அந்த ஆளின் மனைவி கேன்ஸர் ஆப்ரேஷனுக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். இது போன்ற புத்தகத்தை தன் மனைவி விரும்பி படிப்பதால் இந்த சிற்றேட்டை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வதாக அவர் சொன்னார். பிற்பாடு அவருடைய மனைவியை ஆனா சந்தித்தபோது, “நாம் இப்போதே படிக்க ஆரம்பிக்கலாம், நான் ரெடி” என்று அவர் சொன்னார். ஆஸ்பத்திரியில் இருந்தபோது உண்மையான மதத்தை தனக்கு காட்டும்படி கடவுளிடம் கெஞ்சினாராம். அந்த சமயத்தில்தான் அவருடைய கணவர் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை எடுத்துச் சென்றிருந்தாராம். அதை அவர் படித்தார், தன்னுடைய ஜெபத்திற்கு கடவுள் கொடுத்த பதில்தான் இது என்று புரிந்துகொண்டார். ஆகவே ஒரு யெகோவாவின் சாட்சி ஆக வேண்டும் என்ற இலக்கை உடனடியாக வைத்தார். ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு போய்வர இரண்டு மணிநேரம் அவர் நடக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் அவர் சத்தியத்தில் வேகமாக முன்னேறி சீக்கிரத்தில் ஒரு பிரஸ்தாபி ஆனார். “கடவுளோடு
செய்துள்ள பொருத்தனையை இப்போது என்னால் நிறைவேற்ற முடியும்” என்று அவர் சொன்னார். ஆறு மாதங்களுக்குள்ளாகவே அவர் படித்து முடித்து ஒரு மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றார். இப்போது அவர் மகிழ்ச்சியோடு யெகோவாவை தொடர்ந்து சேவித்து வருகிறார்.மார்டின் என்ற 13 வயது முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி பராகுவேயில் வசிக்கிறான். சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். ஒருநாள் ஸ்கூலிலிருந்து வரும்போது வழியில் செல்வோரிடம் சாட்சி கொடுத்துக்கொண்டே வந்தான். அப்போது தெருவில் ஒரு சிறிய பொட்டலம் கிடப்பதை கவனித்தான். மார்டின் அதை எடுத்துப் பார்த்தபோது அதில் பணம் இருந்தது. யாரும் அதைத் தேடி வரவும் இல்லை. அதனால் அதைத் தன் பாக்கெட்டுக்குள் போட்டான். அப்படியே நடந்து போய்க்கொண்டிருக்கும்போது அவனுக்கு இப்படியொரு யோசனை வந்தது: ‘இந்தப் பணத்தை வைத்து நான் கொடுக்க வேண்டிய மூன்று மாத டியூஷன் ஃபீஸை கட்டிவிடலாம், அம்மா அப்பாவுக்கு செலவுக்கும் கொடுக்கலாம்.’ இப்படி யோசித்துக்கொண்டே போகையில் தன்னை அறியாமலேயே வேறொரு தெருவுக்கு திரும்பினான்; பொதுவாக அந்தத் தெரு வழியாக அவன் செல்வதில்லை. அங்கே ஒரு ஆள் எதையோ தேடிக்கொண்டிருப்பது போல் தெரிந்தது. 115,000 கௌரானியை (18.25 ஐ.மா. டாலரை) தொலைத்துவிட்டதாக அவர் சொல்வது அவனுக்கு கேட்டது. அந்த மாத செலவுக்காக அவர் வைத்திருந்த மொத்தப் பணமுமே அதுதானாம். முழுக்காட்டுதலுக்கான கேள்விகளைக் கேட்ட ஒரு மூப்பர் சொன்ன விஷயம் சட்டென மார்டினுக்கு ஞாபகம் வந்தது. அந்த மூப்பர் இவ்வாறு சொல்லியிருந்தார்: “நீ பல பரீட்சைகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியிருக்கும், அதுவும் இப்போது நீ முழுக்காட்டுதல் எடுக்கப் போவதால் இன்னும் நிறைய பரீட்சைகள் வரும்.”
மார்டினுக்கு பணம் ரொம்பவே தேவையாக இருந்தது. அன்றைக்கு மதிய சாப்பாட்டுக்கே அவனிடம் பணம் இருக்கவில்லை, டியூஷன் ஃபீஸ்வேறு கட்ட வேண்டியிருந்தது. இருந்தாலும் தான் செய்யவிருப்பது சரியான காரியம் என்ற நம்பிக்கையோடு, அந்த ஆளிடம் அவர் தொலைத்த பணம் எவ்வளவு என்று கேட்டான். அவர் சொன்ன அதேயளவு பணமே மார்டினின் கையில் இருந்தது. மார்டின் அந்தப் பணத்தையும் அதோடு ஒரு துண்டுப்பிரதியையும் அவருக்குக் கொடுத்து தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று சொன்னான். அவருக்கு சந்தோஷம் தாளவில்லை, அவனுக்கு திரும்பத் திரும்ப நன்றி சொல்லி அவனைக் கட்டித் தழுவினார். அவரை மீண்டும் வந்து சந்திப்பதற்காக மார்டினிடம் அவரது விலாசத்தைக் கொடுத்தார். சமீபத்தில் நடந்த வட்டார மாநாட்டில் மார்ட்டின் தன் பெற்றோருடன் முழுக்காட்டுதல் பெற்றான்.
◼ ஆசியாவும் மத்திய கிழக்கு நாடுகளும்
நாடுகளின் எண்ணிக்கை: 47
மக்கள் தொகை: 393,15,74,927
பிரஸ்தாபிகள்: 5,68,370
பைபிள் படிப்புகள்: 4,17,308
ஜப்பானில், டோக்கியோ நகருக்கு அருகே வசிக்கிறார் குமிகோ என்ற பயனியர் சகோதரி. உடல்நல பிரச்சினை காரணமாக அவரால் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அதிகமாக ஈடுபட முடியவில்லை. ஆகவே, கடிதம் மூலம் சாட்சி கொடுப்பதில் அவர் அதிக நேரம் செலவிட்டார். வீடுகளில் பெரும்பாலும் சந்திக்க முடியாதவர்களின் விலாசங்களை அவருடைய சபையை சேர்ந்தவர்கள் அவரிடம் கொடுத்தார்கள். அவர் எழுதிய கடிதங்களை சபையிலுள்ள பிரஸ்தாபிகள் அந்தந்த வீடுகளில் கொண்டு போய் போட்டனர். ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அவருடைய கடிதங்களுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை. என்றாலும், அவர் விடாமல் உண்மையோடு கடிதம் எழுதி வந்தார். கடைசியில், சுமார் 1,500 கடிதங்களை எழுதிய பிறகு, அவருக்கு ஒரு போஸ்ட்கார்டு வந்தது. அதில் இவ்வாறு
எழுதியிருந்தது: “தங்கள் கடிதத்திற்கு நன்றி. தாங்கள் எழுதியிருந்த விஷயத்தைப் பற்றி அறிந்துகொள்ள நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். கீழே எழுதியிருக்கும் நாட்களில் நான் வீட்டில் இருப்பேன், தங்கள் வருகைக்காக காத்திருப்பேன்.” அதை வாசித்ததும் அவர் ஆனந்தக் கண்ணீர் விட்டார். அந்த நபரை அவர் நேரில் சந்தித்து, உடனடியாக பைபிள் படிப்பையும் ஆரம்பித்தார். அந்த சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “முதலில், கடிதம் எழுத எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால், செம்மறியாடுகளைப் போன்றோருக்காக நாம் பொறுமையோடு தேடினால், நமது முயற்சிகளை நிச்சயமாகவே யெகோவா ஆசீர்வதிப்பார் என்ற உறுதி எனக்கு இப்போது இருக்கிறது.”இந்தியாவில், ஒருநாள் காலை ஒரு சகோதரி வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருக்கையில் ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். வாடிய முகத்துடன் ஒரு பெண் கதவைத் திறந்தார். இரண்டு சிறு பிள்ளைகள் காலி தட்டுகளை கையில் வைத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்திருந்தார்கள். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் அதன் ஆசீர்வாதங்களைப் பற்றியும் நம் சகோதரி அந்தப் பெண்ணிடம் சொன்னார். அவரும் நன்கு கவனித்துக் கேட்டார். இதற்கிடையே, பசியாக இருக்கும் அந்தப் பிள்ளைகள் சாப்பாடு தரும்படி அம்மாவிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அவரோ கொடுக்கவில்லை. பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் வரை காத்திருக்க தயார் என்பதாக இந்த சகோதரி சொன்னார். உடனே, அந்தப் பெண் அழத் தொடங்கி விட்டார், உணவில் விஷத்தை கலந்திருப்பதாக சொன்னார். பிள்ளைகளுக்கு அதைக் கொடுக்கப் போகும் சமயத்தில்தான் கதவைத் தட்டும் சத்தம் அவர் காதில் விழுந்தது. வீட்டில் பிரச்சினைகள்; அதோடு, கணவன் ஒரு குடிகாரன், அதனால் தானும் தன்னோடு கூடவே பிள்ளைகளும் செத்துவிட வேண்டும் என முடிவு கட்டியிருந்தார். இதைக் கேட்டதும் இந்த சகோதரி உணவை எடுத்து வெளியே கொட்டி, பக்கத்து கடைக்கு விரைந்து சென்று சாப்பாட்டுக்கு தேவையானவற்றை வாங்கி வந்தார். அவர்கள் இருவருமாய் சேர்ந்து சமைத்து பிள்ளைகளுக்கு உணவைப் பரிமாறினார்கள். ராஜ்ய செய்தியானது இந்தப் பெண்ணுக்கு மிகுந்த ஆறுதலை அளித்தது. பைபிள் படிப்புக்கு அவர் ஒத்துக்கொண்டார், இப்போது அவர் முழுக்காட்டப்பட்டு ஒரு சாட்சியாக இருக்கிறார். பிள்ளைகள் இருவரும் அவருடன் சேர்ந்து கூட்டங்களுக்கு வருகிறார்கள். சமீபத்தில் அவருடைய கணவரும் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்திருக்கிறார், சிறந்த முன்னேற்றங்களையும் செய்கிறார்.
சார்ஸ்! தைவானில் இந்தப் பெயரைக் கேட்டாலே அநேகருக்கு வயிற்றில் புளியை கரைத்ததுபோல் இருக்கும். ஹாங்காங்கை இந்த
வியாதி எப்படி பாதித்திருக்கிறது என்ற செய்தி அறிக்கைகளை கவனித்த மக்கள் கலக்கமடைந்தனர். அடுத்ததாக, இது தைவானை தாக்கியது! இந்த வியாதி படுவேகமாக பரவியதால், அநேக மருத்துவமனைகளில் இந்நோயாளிகளை தனியாக ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது. அடுத்து தங்களையும் இந்நோய் தொற்றிவிடுமோ என நினைத்து பலரும் பீதியடைந்தார்கள். கூட்டங்களுக்கு வந்திருப்போருக்கு காய்ச்சல் இருக்கிறதா இல்லையா என பரிசோதித்துப் பார்க்க தெர்மாமீட்டர்களை சபைகள் வாங்கி வைத்துக்கொள்வதற்கு கிளை அலுவலகம் உதவியது; இது சம்பந்தமான அரசாங்க ஆணை அமலுக்கு வருவதற்கு முன்பே சபைகள் அவற்றை வாங்கி வைத்து விட்டன.அடுத்ததாக, சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட எல்லா மதங்களும் குறிப்பிட்ட சில குடியிருப்பு பகுதிகளில் பிரசங்கிக்கக் கூடாது என அரசாங்கம் கேட்டுக்கொண்டது. ஆகவே ஒரு விசேஷித்த ஊழியக் கூட்டம் நடத்தப்பட்டது; பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு தங்களுடைய ஊழிய வேலைகளில் சில மாற்றங்களை செய்துகொள்வது எப்படி என்பதை புரிந்துகொள்ள அக்கூட்டம் சகோதரர்களுக்கு உதவியது. தடை செய்யப்படாத பகுதிகளில் சிறிதளவே ஆர்வம் காட்டியவர்களைக்கூட மீண்டும் போய் சந்திக்குமாறு அக்கூட்டத்தில் கொடுக்கப்பட்ட ஆலோசனையின்படி ஒரு விசேஷித்த பயனியர் சகோதரி செய்தார். அதன் பலனாக, அவர் நடத்திய பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. புதிதாக பைபிள் படிக்கும் இவர்களில் பலரும் இப்போது சிறந்த முன்னேற்றங்களை செய்து வருகிறார்கள். அவர் இவ்வாறு கூறினார்: “இந்த மாதிரியான ஒரு பிரச்சினை எழும்பினாலும், ஊழியம் செய்வதற்கு அது எனக்கு ரொம்ப வசதியாக அமைந்து விட்டது.”
சைப்ரஸில், ஒரு சகோதரி வெளி ஊழியம் செய்துகொண்டிருக்கையில் ஒரு பெண்மணியை சந்தித்தார். அவரோ ரொம்ப பிஸியாய் இருப்பதாக சொன்னார். இந்த சகோதரி, சமையலறை ஜன்னல் வழியாக சுருக்கமாக பேசி, சங்கீதம் 72:12-14 வசனங்களை வாசித்துக் காட்டினார். அவருக்கு வசதியான சமயத்தில் மீண்டும் வந்து சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தார். இந்த சகோதரி அவருடைய வீட்டிற்கு சென்றபோது, தன்னுடைய வருகைக்காக அவர் மிகுந்த ஆவலோடு காத்துக்கொண்டிருந்ததாக சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். ஏன் அவ்வளவு ஆவலாக இருந்தாராம்? சகோதரி வாசித்துக் காட்டிய அந்த வசனங்கள் அவருக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததாம், நாள் பூராவும் அதைப் பற்றியே அவர் சிந்தித்தாராம். இந்த சகோதரி ஒரு பைபிள் படிப்புக்கு ஏற்பாடு செய்தார்; அவரும் உடனே அதற்கு சம்மதித்தார். இப்போது கடவுளுடைய வார்த்தையிலிருந்து அவர் கற்றுக்கொள்ளும் காரியங்களுக்கு போற்றுதல் காட்டி வருகிறார்.
கம்போடியாவில், போலோ என்பவர் ஒரு மிஷனரியிடம் பைபிளைப் படிக்க ஆரம்பித்து, நன்கு முன்னேறினார். நாம்பென் என்ற இடத்தில் நடக்கும் ஐந்து சபைக் கூட்டங்களுக்கும் அவர் தவறாமல் போய்க் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு வேலை சம்பந்தமாக அவருடைய முதலாளி பாட்டாம்பாங் என்ற நகரத்திற்கு செல்லும்படி சொன்னதால், அவர் அந்த நகரத்திற்கு குடிமாறினார்; அது தாய்லாந்தின் எல்லைக்கருகே உள்ளது. அங்கே எந்த சபையும் இல்லாததால் தன்னுடைய மொபைல் போன் நம்பரை பைபிள் படிப்பு நடத்திய மிஷனரியிடம் கொடுத்தார்; போன் மூலமாக பைபிள் படிப்பு தொடர்ந்தது. இப்படி ஒவ்வொரு புதன் கிழமையும் வெள்ளிக் கிழமையும் 30 நிமிடங்கள் பைபிள் படிப்பு நடந்தது. காவற்கோபுர படிப்பில் குறிப்புகளை சொல்லவும் போலோ ஆசைப்பட்டார். சபையானது வெகு தொலைவில் இருப்பதால், ஒவ்வொரு வாரமும் படிக்கப்போகும் கட்டுரையின் மூன்று அல்லது நான்கு கேள்விகளுக்கான பதிலை எழுதி அதை அந்த வார கூட்டத்தில் வாசிப்பதற்காக சபை புத்தகப் படிப்பு கண்காணியிடம் கொடுத்து விடுவார். அவர் காட்டும் வைராக்கியம் சபை பிரஸ்தாபிகளை ஊக்குவிக்கிறது. சந்திக்கும் ஆட்களிடம் எல்லாம் சாட்சி கொடுக்கவும் அவர் முயலுகிறார். நாம்பென்னிற்கு பஸ்ஸில் போய் வருகையில், பலருக்கும் அவர் சாட்சி கொடுத்து, கூட்டங்களுக்கு வரும்படி உற்சாகப்படுத்துகிறார். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆவதே அவருடைய அடுத்த இலக்கு.
மங்கோலியாவில், சுமார் 30 வயதுடைய ஒருவரை இரண்டு சகோதரிகள் சந்தித்தார்கள். அவர்களை கொஞ்சம் பொறுக்கும்படி சொல்லி, வீட்டிற்குள்ளே போய் கடவுளைத் தேடி என்ற புத்தகத்தையும் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தையும் அவர் எடுத்து வந்தார். 12 வருடங்களுக்கு முன்பு போலந்தில் யெகோவாவின் சாட்சிகளுடன் அவர் பைபிளை படித்ததாக சொன்னார். 1993-ல் மங்கோலியாவுக்கு திரும்ப வந்தவுடன், சாட்சிகள் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டு உடனே கடிதம் எழுதினார். ஆனால், அந்த சமயத்தில் மங்கோலியாவில் சாட்சிகள் யாரும் இருக்கவில்லை. ஆகவே யாரும் வந்து அவரை சந்திக்கவில்லை. பிற்பாடு கல்லூரி படிப்பிற்காக இந்தியா சென்றார், அங்கு ஐந்து வருடங்கள் தங்கினார். 1994 முதல் 1998 வரையான அந்த வருடங்களிலும் யெகோவாவின் சாட்சிகளை சந்திக்க முடியவில்லை. படிப்பை முடித்த பிறகு மங்கோலியாவுக்கே திரும்பச் சென்றார், கடைசியில் இந்த சகோதரிகள் மூலமாக யெகோவாவின் சாட்சிகளோடு மீண்டும் தொடர்பு கொள்ள முடிந்தது. மறுபடியும் பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, ஏப்ரல் 2003-ல் அவர் முதன் முறையாக கூட்டத்தில் கலந்துகொண்டார். இப்போது அவர் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்து சந்தோஷமாக படித்து வருகிறார்.
இலங்கையில், புத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பெண் இரண்டு சாட்சிகளை அன்போடு வரவேற்றார். தன்னுடைய ஜெபத்திற்கு விடையாகத்தான் அவர்கள் வந்திருப்பதாக சொன்னபோது சாட்சிகள் ஆச்சரியப்பட்டார்கள். தன்னுடைய இளம் மகளை தண்டித்ததால் சமீபத்தில் அவள் தற்கொலை செய்துகொண்டதாக அவர் சொன்னார். ஆறுதலுக்காக புத்தமத சாமியாரிடம் அவர் சென்றபோது, இறந்துபோன தன்னுடைய மகள் இப்போது மறுபடியும் பிறந்து தன்னை பழிவாங்கப் போவதாக சொன்னாராம். அது அவருக்கு பீதியை ஏற்படுத்தியது. இந்த மாதிரி விஷயங்களை கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை என்று அவருடைய ஒரு தோழி சொன்னார். ஆகவே கத்தோலிக்கர்கள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என நினைத்துக்கொண்டு, உண்மையான ஒரு கிறிஸ்தவரை சந்திக்க வேண்டுமென இந்தப் பெண் ஜெபம் செய்தார். அதற்கு பதிலாக இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அவரை சந்தித்து பைபிள் சத்தியத்தை சொல்லி அவரை ஆறுதல்படுத்தினார்கள். புத்தமத சாமியாரின் எதிர்ப்பின் மத்தியிலும் அவர் இப்போது பைபிளை படிக்கிறார்.
கிர்கிஸ்தானில் ஓர் இளம் பெண் பல வருடங்களாகவே எவாஞ்சலிக்கல் சர்ச்சுக்கு போய்க் கொண்டிருந்தார். அவர் பைபிளை வாசிக்கையில், அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்கும் சர்ச்சில் போதிக்கப்படும் விஷயங்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதைக் கண்டார். உதாரணமாக, இயேசு கிறிஸ்து பிதாவாகவும் குமாரனாகவும் இருக்கிறார் என சர்ச் போதிப்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. குமாரனுக்கு கண்டிப்பாக ஒரு தகப்பன் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், தன்னுடைய கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க உதவும்படி இயேசு கிறிஸ்துவின் தகப்பனிடத்தில் உள்ளப்பூர்வமாக ஜெபம் செய்தார். அடுத்த நாள் இரண்டு யெகோவாவின் சாட்சிகள் அவரை சந்தித்தனர். அவர்கள் கேட்டது இதுதான்: “யாரை நோக்கி ஜெபம் பண்ணும்படி சீஷர்களுக்கு இயேசு கற்றுக்கொடுத்தார், யாருடைய பெயரை பரிசுத்தப்படுத்தும்படி அவர்களிடம் அவர் சொன்னார்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” இதே கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்க உதவும்படிதானே இயேசு கிறிஸ்துவின் தகப்பனிடத்தில் முந்தின நாள் ஜெபம் செய்தோம் என நினைத்தபோது அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. உரையாடலுக்குப் பிறகு, இது தன்னுடைய ஜெபத்திற்கு கிடைத்த பதில்தான் என்பது அவருக்கு ஊர்ஜிதமாயிற்று. இந்த சகோதரிகளுடன் தவறாமல் பைபிளை படிப்பதற்கு அவர் ஒத்துக்கொண்டார், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தார். இயேசுவின் தகப்பனுடைய பெயர் யெகோவா என்பதை அறிந்தது முதற்கொண்டு அந்தப் பெயரை பயன்படுத்தி ஜெபிக்க ஆரம்பித்தார். இப்போது ஆவிக்குரிய விதத்தில் அவர் முன்னேறி வருகிறார், தான் கற்றுக்கொண்ட விஷயங்களை உறவினர்களிடத்திலும் பகிர்ந்து கொள்கிறார்.
◼ ஆப்பிரிக்கா
நாடுகளின் எண்ணிக்கை: 56
மக்கள் தொகை: 75,51,45,559
பிரஸ்தாபிகள்: 9,50,321
பைபிள் படிப்புகள்: 16,66,518
ஜாம்பியாவில், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரம் செல்லும் அநேக பஸ்களில் பயணிகள் கண்டுகளிப்பதற்காக வீடியோக்கள் போட்டு காட்டப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலும் வன்முறை காட்சிகளும், ஆபாசக் காட்சிகளுமே மலிந்திருக்கும். தலைநகருக்கு பஸ்ஸில் சென்றுகொண்டிருந்த ஒரு மிஷனரி தம்பதியர், பைபிள்—உங்கள் வாழ்க்கையில் அதன் சக்தி (ஆங்கிலம்) என்ற வீடியோ கேஸட்டை டிரைவரிடம் காட்டி அதைப் போட முடியுமா என்று கேட்டனர். டிரைவரும் அதற்கு ஓ.கே. சொன்னார். “நாங்கள் சுற்றி முற்றிப் பார்த்தபோது, பயணிகள் எல்லாரும் கண் இமைக்காமல் அதைப் பார்த்தவாறே, கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு நாங்கள் அந்தப் பயணிகளிடம் பேசி, துண்டுப்பிரதிகளையும் பத்திரிகைகளையும் கொடுத்தோம். அவர்கள் ரொம்ப ஆர்வமாக கேட்டார்கள்” என அந்த மிஷனரி சகோதரி ரூத் சொன்னார். அந்த வீடியோவை
இன்னொரு முறை போட முடியுமா என டிரைவரிடம் அந்தத் தம்பதியர் கேட்டனர். அவர் கொஞ்ச நேரம் கழித்து போடுவார் என அவர்கள் நினைத்தனர். ஆனால் அவரோ அதை உடனடியாக ரீவைன்ட் செய்து மீண்டும் போட்டார். அந்த மிஷனரி சகோதரர் ரிச்சர்ட் இவ்வாறு சொல்கிறார்: “இரண்டாவது தடவையும் பயணிகள் அந்த வீடியோவைப் பார்த்து மகிழ்ந்தார்கள். இந்த வீடியோவை போடும்படி டிரைவரிடம் கேட்டுக்கொண்டது நல்லதாகிப் போனதை நினைத்து நாங்கள் சந்தோஷப்பட்டோம்.”மலாவியில், மிரன்டா என்ற டீனேஜ் மாணவி இடைவேளையின்போது தன் வகுப்புத் தோழியிடம் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தை காட்டி பேசிக்கொண்டிருந்தாள். இவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்ட வாத்தியார், மிரன்டாவை தன்னுடைய அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தார். கல்யாணம் செய்துகொள்ளும்படி தோழியிடம் அவள் ஏன் சொன்னாள் என்பதாக அவர் கேட்டார். தோழியிடம் கல்யாணம் செய்யும்படி சொல்லவில்லை, ஆனால் குடும்பங்கள் உண்மையான சந்தோஷத்தை கண்டடைய அந்தப் புத்தகம் எப்படி உதவும் என்றே சொன்னதாக மிரன்டா பதிலளித்தாள். கொதித்துப்போன அந்த வாத்தியார், “கல்யாணம் பற்றி ஆலோசனை கொடுக்க உனக்கு வயசு பத்தாது” என்று கத்தினார்.
கைகாலெல்லாம் வெடவெடத்துப்போய் அலுவலகத்தை விட்டு கவலையோடு மிரன்டா வெளியே வந்தாள். இரண்டு நாள் கழித்து அந்த வாத்தியார் திரும்பவும் அவளை அலுவலகத்திற்கு கூப்பிட்டார். என்ன நடந்தது என்பதை மிரன்டாவே சொல்கிறாள்: “கோபத்தில் கத்தியதுக்கு வருந்துறேன்னு எங்க வாத்தியார் சொன்னார். அவருக்கும் அவரோட மனைவிக்கும் எப்பவும் சண்டை வருமாம், அதனால ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டதா சொன்னார். என்னோட ஃப்ரென்டுக்கு காட்டிய அந்தப் புத்தகம் ஒண்ணு தனக்கும் வேணும்னு கேட்டார். அந்தப் புஸ்தகத்தை அவருக்கு கொடுத்தது எனக்கு சந்தோஷமா இருந்தது. ரெண்டு வாரம் கழிச்சு, அந்தப் புஸ்தகம் தனக்கு உதவியா இருந்ததாவும் அதிலுள்ள விஷயங்கள மனைவி கிட்டே சொன்னதாவும் அவர் சொன்னார். அதுக்கப்புறம் அவரும் மனைவியும் திரும்பவும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க.”
தென் ஆப்பிரிக்காவில், எரிக் என்ற முதியவர் யெகோவாவின் சாட்சிகளுடன் பல வருடங்களாக பைபிள் படித்திருக்கிறார். ஆனால் அவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததால் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதற்கு அது தடையாக இருந்தது. தன்னுடைய மனைவி முழுக்காட்டுதல் பெற்ற பிறகு, தானும் முழுக்காட்டுதல் பெற வேண்டுமென தீர்மானித்தார். ஆகவே, 2 கொரிந்தியர் 7:1-ம் வசனத்தை கொட்டை எழுத்துக்களில் எழுதி நிறைய பிரதிகள் எடுத்தார். அந்த வசனம் இப்படி சொல்கிறது: ‘இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.’ கண்ணில் படும்படி வீடு முழுக்க முக்கியமான இடங்களில் அவற்றை வைத்தார். சிகரெட்டை பற்ற வைக்கத் தோணும் போதெல்லாம் அவர் அந்த வசனத்தைப் பார்ப்பார், புகைப்பதை நிறுத்துவதற்கு உதவும்படியும் யெகோவாவிடம் ஜெபிப்பார். விளைவு? அவர் புகைப்பதை நிறுத்தி இப்போது பத்து மாதங்களுக்கும் மேல் ஆகிறது. எரிக் இப்போது ஒரு முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக இருக்கிறார், அடுத்த மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டுதல் பெறுவதற்கு தயாராகி வருகிறார்.
ஸேசேல்ஸ் தீவுகளில், ஒரு மிஷனரி சகோதரி படகில் செல்வதற்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண் தன்னந்தனியாக உட்கார்ந்திருப்பதை கவனித்தார். அன்று முழுவதும் ஊழியம் செய்து களைத்துப் போயிருந்தாலும், அவர் அந்தப் பெண்ணிடம் சென்று ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்தார். அவர் அதை வாங்கிக்கொண்டு, தான் ஒரு இந்து என்று சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் ஒரு தெருவில் மீண்டும் சந்தித்தார்கள். பைபிள் படிப்பு நடத்துவதற்கு இன்ன நாளில் வருவதாக அந்த சகோதரி சொன்னார். அந்தப் பெண்மணியின் கணவர் ஒரு டாக்டர்; அவர் கத்தோலிக்கராய் இருந்தாலும் கடவுளைத் தேடி என்ற புத்தகத்தையும் அறிவு புத்தகத்தையும் வாசித்த பிறகு அவரும் பைபிள் படிப்பில் கலந்துகொள்ள சம்மதித்தார். ஒருநாள் சாயங்காலம் அந்த தம்பதியர் இந்த சகோதரியையும் அவரது கணவரையும் ஒரு விசேஷித்த பார்பெக்யூ (barbecue) விருந்துக்கு அழைத்தார்கள். அவர்கள் இருவரும் வைத்திருந்த மத உருவச்சிலைகளை எரித்து, அந்த நெருப்பில் உணவை சமைத்தார்கள்! அதன் பிறகு சீக்கிரத்தில் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள், வெளி ஊழியத்திலும் பங்குகொள்ள ஆரம்பித்தார்கள். முழுக்காட்டுதல் பெற்ற பிறகு அவர்கள் இருவரும் துணைப் பயனியர் சேவை செய்ய தொடங்கினார்கள். அது சிறிய தீவாக இருந்ததால், அந்த சகோதரரை அங்குள்ள எல்லாருக்கும் நன்றாக தெரிந்திருந்தது. “டாக்டர் இப்போ பாதிரி ஆயிட்டார்” என்று சொல்லி சிலர் கிண்டல் அடிப்பார்கள். அவர் இப்போது உதவி ஊழியராக சேவை செய்கிறார், மனைவியும் மகிழ்ச்சியோடு ஒழுங்கான பயனியராக சேவிக்கிறார்.
ஜிம்பாப்வேயில் உள்ள காது கேளாதோர் சத்தியத்தை அறிந்துகொள்வதற்காக இஷ்மயேல் என்ற சகோதரர் சைகை மொழியைக் கற்றார். ஒருநாள் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கையில், காது கேளாத ஒரு பெண் பயணிகளிடம் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பதை அவர் கவனித்தார். அந்தப் பெண்ணுக்கு இஷ்மயேல் சாட்சி கொடுத்து, அவரை மீண்டும் சந்திப்பதற்காக ஏற்பாடு செய்தார். மீண்டும் சந்தித்தபோது, அவருக்கு காது கேளாத காரணத்தைப் பற்றி அவருடைய சர்ச் என்ன சொல்லித் தருகிறதென கேட்டார். அதற்கு அந்தப் பெண், “நான் செவிடாய் இருக்கணுங்கிறதுதான் கடவுளுடைய சித்தம்னு அவங்க சொல்றாங்க” என்று பதிலளித்தார். ஜனங்கள் செவிடாய் இருக்க வேண்டுமென்பது கடவுளுடைய சித்தமல்ல, ஆனால் பாவத்தையும் அபூரணத்தையும் மனிதன் சுதந்தரித்ததால்தான் இதுபோன்ற
நிலைமைகள் என்று இஷ்மயேல் விளக்கினார். இந்தக் குறைபாடுகளை எல்லாம் கடவுள் சீக்கிரத்தில் நீக்கி விடுவார் என்றும் அவர் விளக்கமாக கூறினார். “சர்ச்சுல ஏன் இப்படி பொய்யெல்லாம் சொல்லித் தர்றாங்கனு நான் கண்டுபிடிக்கணும்” என்று அந்தப் பெண் சொன்னார். மூன்றாம் முறை இஷ்மயேல் அந்தப் பெண்ணை சந்தித்தபோது, “இன்னையிலிருந்து நீங்க நம்புறததான் நானும் நம்புவேன். சர்ச்சுல சொல்ற பொய்யையெல்லாம் இனி நான் நம்பப் போறதில்ல” என்று சொன்னார். அந்தப் பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்தப்பட்டு வருகிறது, சபைக் கூட்டங்களுக்கும் தவறாமல் வந்துகொண்டிருக்கிறார்; சீக்கிரத்தில் ஒரு முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆவதற்கும் விரும்புகிறார்.கானாவில், வாழ்க்கையை ஓட்டுவதற்காக மக்கள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருப்பதால் ஆவிக்குரிய காரியங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கவே அவர்களுக்கு நேரமிருப்பதில்லை. வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் ஒழுங்கான பயனியர் சேவை செய்யும் ஒரு சகோதரி ஒரு இளம் நபரை சந்தித்தார். வெறும் ஐந்து நிமிடங்களை ஒதுக்கினால் போதும் பைபிளிலிருந்து பேசலாம் என அந்த சகோதரி கேட்டுக்கொண்டார். அதற்கு அவர், “பகல் முழுக்க வேலை பார்ப்பேன். ராத்திரி எட்டு மணிக்குப் பிறகுதான் தூங்க வீட்டுக்கு வருவேன்” என்று பதிலளித்தார்.
“பைபிளை படிக்க உங்க தூக்க நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்க முடியுமா?” என்று அந்த சகோதரி கேட்டார்.
“நீங்க எட்டு மணிக்கப்புறம் வந்தால் மட்டும்தான் முடியும்” என்று அவர் சொன்னார். அடுத்த நாள், அந்த சகோதரியும் அவருடைய கணவரும் அந்த நபரின் வீட்டிற்கு இரவு சரியாக எட்டு மணிக்கு போனார்கள். அவர் அப்போதுதான் வேலையை முடித்து வீட்டிற்கு வந்திருந்தார். அவருடன் பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. சீக்கிரத்தில் அவர் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார். பிற்பாடு முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியானார், அதன் பிறகு முழுக்காட்டுதலும் பெற்றார். அவர் தன் வாழ்க்கையில் செய்த மாற்றங்களைக் கண்டு மிகவும் நெகிழ்ந்துபோன அவரது மனைவியும் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். அவரும் விரைவிலேயே முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஆனார். அவரது அக்கம்பக்கத்தாரும் அவருடைய கடந்த கால வாழ்க்கைப் பாணியை அறிந்த பலரும் அவர் வீடு வீடாக பிரசங்கிப்பதைக் கண்டு தங்களுடைய கண்களையே நம்பமுடியாமல் திகைத்தனர். குடி, திருட்டு, போதைப் பொருள் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கெல்லாம் பேர்போனவராக இருந்த இவரை எது மாற்றியது என்பதை அறிந்துகொள்ள பலரும் விரும்பினார்கள். இதன் விளைவாக, அந்த டவுனில் உள்ள 22 பேர் தங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார்கள். அவர்களில் 12 பேர் ஏற்கெனவே கூட்டங்களுக்கு தவறாமல் வந்துகொண்டிருக்கிறார்கள், சீக்கிரத்தில் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாகவும் அவர்கள் ஆகிவிடலாம்.
[பக்கம் 43-ன் படம்]
லிதுவேனியாவில் ஸ்டெப்போனஸ்ஸும் எட்வார்டஸும்
[பக்கம் 47-ன் படம்]
ஆஸ்திரேலியாவில், அலிஸும் அவளுடைய டீச்சரும்
[பக்கம் 51-ன் படம்]
மாலா, அமெரிக்கா
[பக்கம் 56-ன் படம்]
ஜப்பானைச் சேர்ந்த குமிகோ
[பக்கம் 61-ன் படம்]
ஜாம்பியாவில், ரூத்தும் ரிச்சர்டும்