Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்

கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்

கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்

ஜனங்கள் “கடைசி நாட்களில்” தம்மால் போதிக்கப்படுவதற்கென தமது அடையாளப்பூர்வமான மலைக்கு திரண்டு வருவார்கள் என யெகோவா முன்னறிவித்தார். (மீ. 4:1, 2) கடந்த ஆண்டிலும் அந்தத் தீர்க்கதரிசனம் தொடர்ந்து நிறைவேறியது; “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்ற 2003 வருடாந்தர வசனத்தின்படி அதிகமதிகமானோர் செயல்பட்டிருக்கிறார்கள். (யாக். 4:8) யெகோவாவிடம் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்வதற்கு அநேகருக்கு உதவிய ஒரு முக்கியமான ஏற்பாடு, “தேவனை மகிமைப்படுத்துங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட மற்றும் சர்வதேச மாநாடுகளாகும்.

“தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாநாடுகள்

இந்த தலைப்பில் நடத்தப்பட்ட மாநாடுகளில் கொடுக்கப்பட்ட ஒரு பேச்சில், ‘உயிரற்ற படைப்புகளே யெகோவாவை துதிக்கையில், சிந்திக்கவும் பேசவும் முடிகிற படைப்புகளாகிய நாம் நம் மகத்தான படைப்பாளரை எந்தளவு அதிகமாக மகிமைப்படுத்த வேண்டும்!’ என பேச்சாளர் உணர்ச்சி பொங்க கூறினார். அதற்குப் பிறகு வெளிப்படுத்துதல் 4:11-ஐ அவர் மேற்கோள் காட்டினார். அது இவ்வாறு சொல்கிறது: “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”

சர்வதேச அளவில் 32 மாநாடுகள் நடத்தப்பட்டன; ஆகவே, “தேவனை மகிமைப்படுத்துங்கள்” என்ற தலைப்பிலான இந்த மாநாடுகள் யெகோவாவைத் துதிப்பதற்கு சிறந்ததோர் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. ஆஸ்திரேலியா, உக்ரைன், ஐக்கிய மாகாணங்கள், கனடா, கானா, சிலி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, ஜப்பான், ஹவாய், ஹங்கேரி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இம்மாநாடுகள் நடந்தன. இந்த மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக வெளிநாடுகளில் நியமனம் செய்யப்பட்ட மிஷனரிகளும் மற்றவர்களும் தங்களுடைய தாய் நாடுகளுக்கு செல்ல முடிந்தது; தொலை தூர இடங்களில் அவர்கள் செய்யும் ராஜ்ய வேலை சம்பந்தமாக அவர்களிடம் பேட்டி காணப்பட்டது. ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் இம்மாநாடுகளில் கலந்துகொண்டனர்.

சர்வதேச பிரதிநிதிகள் தாங்கள் அழைக்கப்பட்ட நாடுகளில் உள்ள கிளை அலுவலகங்களை பார்வையிட்டது அவர்கள் அனுபவித்த மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயம். ஐக்கிய மாகாண கிளை அலுவலகம் 36 நாடுகளிலிருந்து வந்திருந்த 6,750-⁠க்கும் அதிகமான பிரதிநிதிகளை உபசரித்தது; கிட்டத்தட்ட 15,000 சாப்பாடுகள் பரிமாறப்பட்டன! தென் ஆப்பிரிக்காவிலிருந்து கும்பலாக வந்திருந்த சகோதர சகோதரிகள் ஒரு நாள் மதிய உணவுக்குப் பிறகு பெத்தேல் குடும்பத்தினருக்காக நான்கு ஸ்வர வரிசையில் ஆங்கிலம், ஆப்பிரிக்கான்ஸ், செப்பெடி, ஜூலு, ஸிஸோதோ, ஸோஸா ஆகிய ஆறு மொழிகளில் பாடினர். கேட்டுக் கொண்டிருந்த அநேகருடைய கண்கள் கலங்கும் அளவுக்கு அவர்கள் நெக்குருகப் பாடினர்.

கிளை அலுவலகத்தை சுற்றிப் பார்க்க வந்த மற்றொரு குழுவினரில் ஒருவர் மிக தூரத்திலிருந்து, அதாவது பூமியின் அரைவாசி தூரத்தை கடந்து வந்தவர் என்பதை அவருடைய பேட்ஜ் கார்டு காட்டியது; அவர் சொன்னதாவது: “ஆவிக்குரிய சகோதர சகோதரிகளோடு இப்படி நேரம் செலவழிப்பது வாழ்க்கையில் ஒரு முறைதான் கிடைக்கும் அனுபவம். இதை என்னால் மறக்கவே முடியாது. புதிய உலகம் எப்படி இருக்கும் என்று என்னால் இப்போதே ருசித்து பார்க்க முடிகிறது.” 17 வயதில் சத்தியத்தை விட்டு விலகிப் போன ஒரு சகோதரர் சமீபத்தில் மீண்டும் சத்தியத்திற்கு வந்துவிட்டார்; பிரிட்டனைச் சேர்ந்த இந்த சகோதரர் கெட்ட குமாரனைப் பற்றி சித்தரிக்கும் ஒரு ஓவியத்தை பார்த்தபோது நெகிழ்ந்து போனார். பிற்பாடு, புரூக்ளின் பெத்தேல் குடும்பத்தாருடன் மதிய உணவு சாப்பிடுகையில், யெகோவா காண்பித்திருக்கும் இரக்கத்தைப் பற்றி அவர் பேசினார். அப்போது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. ஸ்பெயினை சேர்ந்த ஒரு சகோதரர், டெக்ஸஸிலுள்ள ஹௌஸ்டன் சர்வதேச விமான நிலையத்தில் சாட்சிகள் ஆரவாரத்தோடு அவருடைய குழுவினரை வரவேற்றபோது அழுதேவிட்டார். அவரது 29 வருட தாம்பத்திய வாழ்க்கையில் மனைவி காண அவர் கண்ணீர் சிந்தியது இதுவே முதல் முறையாம்.

பெரிய பெரிய மாநாடுகளை நடத்துவதற்கு தகுந்த இடங்கள் நியாயமான வாடகைக்கு கிடைப்பது கடினமாக இருக்கலாம். என்றாலும், யெகோவாவின் சாட்சிகள் கடந்த காலங்களின்போது நல்ல பெயரை எடுத்திருப்பது தகுந்த இடங்கள் கிடைப்பதற்கு பெரும்பாலும் உதவியிருக்கிறது. இதைப் பற்றி ஒரு கிளை அலுவலகம் இவ்வாறு அறிவித்தது: “மாநாட்டிற்கு சுமார் 50,000 பிரதிநிதிகள் வரலாமென எதிர்பார்த்ததால் அதற்கேற்ற இடங்களுக்காக கஷ்டப்பட்டு தேடி அலைந்தபின் ஒரேவொரு இடம் எங்களுக்கு கிடைத்தது. ஆனால், ஸ்டேடியத்தின் அதிகாரிகளிடம் பேசிய பிறகுதான் தெரிந்தது அதன் வாடகை மிகவும் அதிகம் என்று. சில நாட்களுக்குப் பிறகு அதே அதிகாரிகள் கிளை அலுவலகத்திற்கு வந்து அந்த விஷயத்தைப் பற்றி பேச மறுபடியும் அழைத்தனர். பிற்பாடு, அவர்களில் ஒரு சீனியர் மானேஜர் இவ்வாறு சொன்னார்: ‘ஆரம்பத்தில் நீங்கள் வேறு ஏதோ காரியத்திற்காக கேட்கிறீர்கள் என்று நினைத்தோம். ஆனால், உங்களுடைய மாநாடுகளைப் பற்றியும் மற்ற சர்வீஸ்களுக்கு எல்லாம் நீங்களே ஏற்பாடு செய்வதைப் பற்றியும் எங்களுக்கு தெரியவந்தபோது ஆச்சரியமாகி விட்டது. சிறந்த விதத்தில் ஒழுங்கமைப்பது, சிறிய காரியங்களைக்கூட சரியாக திட்டமிடுவது, எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்வது இவையெல்லாம் எங்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.’” அதன் விளைவாக, மாநாடு நடத்துவதற்காக அந்த ஸ்டேடியத்தை யெகோவாவின் சாட்சிகள் நியாயமான வாடகைக்கு பெற்றனர்.

மாநாட்டு வெளியீடுகள்

நீங்கள் கடவுளுடைய வார்த்தையை ஆர்வமாக படிக்கும் ஒரு மாணாக்கரா? அப்படியானால், ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற 36 பக்க வர்ண சிற்றேட்டை பெற்றுக்கொள்வதில் நீங்கள் நிச்சயமாகவே மகிழ்ந்திருப்பீர்கள். விளக்கப்படங்கள், வரைபடங்கள், ஃபோட்டோக்கள், கம்ப்யூட்டர் சித்திரங்கள் ஆகியவற்றுடன் இன்னும் பல அம்சங்களும் உங்களுடைய தனிப்பட்ட படிப்புக்கு வளமூட்டும். ஆகவே, ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற சிற்றேட்டின் ஒரு பிரதியை நீங்கள் அன்றாடம் வாசிக்கும் பைபிளுடனும் பைபிள் படிப்புக்கு உதவும் மற்ற பிரசுரங்களுடனும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, சபைக் கூட்டங்களில் பைபிள் தேசங்கள் சம்பந்தமான பேச்சுக்களோ கலந்தாலோசிப்புகளோ நடத்தப்படுகையிலும் இந்த சிற்றேட்டை எடுத்துச் செல்லுங்கள்.

“நம் பிள்ளைகள்​—⁠அருமையான செல்வங்கள்” என்ற பேச்சின் போது பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற அழகான படங்களையுடைய 256 பக்க புத்தக வெளியீட்டைப் பற்றி பேச்சாளர் அறிவித்தார். கடவுள் தரும் இந்தச் செல்வங்களுக்கு போற்றுதல் காட்டும் பெற்றோர் அவர்களுடன் சேர்ந்து இந்த அருமையான புதிய பிரசுரத்தை படித்து மகிழ்வர். “பிள்ளைகளுக்கு ஒழுக்க சம்பந்தமான வழிகாட்டுதல் தேவை. வாழ்க்கைக்கு நன்னெறிகள் தேவை. இதெல்லாம் பிஞ்சு வயதிலிருந்தே அவர்களுக்கு தேவை. காலாகாலத்தில் உதவி செய்ய தவறினால், நெஞ்சை பிளக்கும் விபரீதங்கள் நிகழலாம். அவை உண்மையில் நிகழ்ந்திருக்கின்றன” என அப்புத்தகம் சொல்கிறது.

பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தில் 230-⁠க்கும் அதிகமான படங்கள் உள்ளன; இது, பைபிள் கதை புத்தகத்திலுள்ள படங்களைவிட இருமடங்கு அதிகமாகும். தனித்தனி படத்திற்கும், பல படங்கள் சேர்ந்த கூட்டுப் படத்திற்கும் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றில் பெரும்பாலானவை கேள்வி வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான பதிலை பெரும்பாலும் அதே பக்கத்தில் கண்டுபிடிக்க முடியும். இக்கேள்விகளும் இப்புத்தகம் முழுவதிலும் காணப்படும் பிற கேள்விகளும் உரையாடலுக்கு சிறந்த தூண்டுகோலாக இருக்கும், அதன் மூலம் பிள்ளைகளும் மனந்திறந்து பேச முடியும். உதாரணமாக, 101-⁠ம் பக்கத்திலுள்ள படத்தின் தலைப்பில் “ஏன் மறக்காமல் நன்றி சொல்ல வேண்டும்?” என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பெற்றோரே, “பிள்ளைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டியவை” என்ற முன்னுரையை வாசிக்கத் தவறாதீர்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றுவீர்களானால், பைபிளைப் படிப்பதற்கு உதவும் இந்த அருமையான புத்தகத்திலிருந்து உங்கள் குடும்பம் மிகுந்த நன்மையை பெற்றுக்கொள்ளும்.

காது கேளாதோருக்கு வீடியோ​—⁠வரவேற்பு

1915-⁠ம் ஆண்டு சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் என்று அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு ஐக்கிய மாகாணங்களில் நடந்தபோது காதுகேளாதோர் சிலர் அதில் கலந்து கொண்டனர். அவர்களுக்காக ஜான் ஏ. கலெஸ்பி என்ற பயணக் கண்காணி சைகை மொழியில் பாட்டுகளை பாடினார். இன்று உலகம் முழுவதிலும் பிரஸ்தாபிகளாகவும் ஆர்வம் காட்டுவோராகவும் இருக்கும் காது கேளாதவர்களைக் கொண்ட 1,200-⁠க்கும் மேலான சபைகளும் தொகுதிகளும் உள்ளன. அவர்களுக்கு ஆவிக்குரிய போஷாக்கு எப்படி அளிக்கப்படுகிறது?

தற்போது பைபிள் படிப்புக்கு உதவும் பிரசுரங்கள் 18 சைகை மொழிகளில் கிடைக்கின்றன; இன்னும் அதிகமான சைகை மொழிகளில் தயார் செய்யப்பட்டும் வருகின்றன. அமெரிக்க சைகை மொழியை (ASL) உபயோகிப்போர் செப்டம்பர் 2002-⁠ல் ஒரு விசேஷித்த பரிசை பெற்றார்கள். அதுதான் காவற்கோபுர படிப்புக் கட்டுரைகளின் வீடியோ; அந்த மாதம் முதற்கொண்டு ஒரு மாதாந்தர பதிப்பாக அது கிடைக்க ஆரம்பித்தது. மற்றவர்கள் பெரிதும் பொருட்படுத்தாத காரியங்களில்கூட இந்த வீடியோ காதுகேளாதோருக்கு உதவுகிறது.

உதாரணத்திற்கு இதை கவனியுங்கள்: கேட்கும் திறனுடைய பெரும்பாலான சாட்சிகளுக்கு நிறைய பைபிள் வசனங்கள் மனப்பாடமாகத் தெரியும். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அதே வார்த்தைகளை அவர்கள் கேட்கிறார்கள் அல்லது வாசிக்கிறார்கள். ஆனால், காதுகேளாதோர் எல்லா சமயத்திலும் ஒரேவிதமான வார்த்தைகளை “கேட்க” முடிவதில்லை. ஏன்? ஏனென்றால் அமெரிக்க சைகை மொழியில் பைபிள் கிடையாது; அதுமட்டுமல்ல சபைக் கூட்டங்களில் பேச்சு கொடுக்கப்படும்போது பைபிள் வசனங்களின் வார்த்தைகளுக்கு எப்போதுமே ஒரே விதமாக சைகை செய்யப்படுவதில்லை. ஆனால், அமெரிக்க சைகை மொழி வீடியோக்கள் வந்தபோது இந்தப் பிரச்சினை தீர ஆரம்பித்தது. இப்போது காவற்கோபுர படிப்புக் கட்டுரையின் வீடியோவும் கிடைக்க ஆரம்பித்திருப்பதால் பைபிள் வசனங்களின் பதங்கள் எப்போதும் ஒரே விதமான சைகைகளாக மொழிபெயர்க்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட முடியும்.

அதுமட்டுமல்ல, ASL சபைகளிலும் தொகுதிகளிலும் காவற்கோபுர படிப்பின் போது சைகை முறையில் வாசிப்போருக்கான அவசியம் இனி இல்லை. கேட்கும் திறனுடையோர் கூடிவரும் சபைகளில் காவற்கோபுரத்தை வாசிப்பதற்கு நியமிக்கப்படுபவர் ஒரு மணிநேரமோ சற்று கூடுதலாகவோ நேரம் செலவழித்து அதை வாசித்துப் பழக வேண்டியிருக்கும். ஆனால், காதுகேளாத பிரஸ்தாபிகளையுடைய ஒரு சபையில் ஒரு படிப்புக் கட்டுரைக்கு சைகை முறையில் வாசிக்க நியமிக்கப்படுபவரோ பெரும்பாலும் அதற்காக பல மணிநேரங்களை செலவழித்து பழகிப் பார்க்க வேண்டியிருக்கும். அந்தப் பொன்னான நேரத்தையெல்லாம் இப்போது ஆவிக்குரிய பிற காரியங்களுக்காக செலவிட முடிகிறது. இந்தப் புதிய ஏற்பாட்டைப் பற்றி சகோதர சகோதரிகள் எப்படி உணருகிறார்கள்?

அ.ஐ.மா., ரோட்ஐலண்ட் மாகாணத்திலுள்ள காதுகேளாதோரின் ஒரு தொகுதி இவ்வாறு எழுதியது: “காவற்கோபுரத்தின் வீடியோ கிடைக்கப்போவதைப் பற்றிய அறிவிப்பைக் கேட்டபோது எங்களுக்கு சந்தோஷம் தாளவில்லை. சொல்லப்போனால் பிரஸ்தாபிகள் சிலரின் கண்கள் குளமாயின.” குறிப்பு சொல்கையில், “யாரிடம் பதில் கேட்பது என்று திணற வைக்குமளவுக்கு பல கைகளைப் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது!” என ப்ளோரிடாவில் காவற்கோபுர படிப்பு நடத்துபவர் சொன்னார். “முன்பைவிட இப்போது அதிக தரமான குறிப்புகளை அவர்கள் சொல்கிறார்கள்” என்றும் அவர் கூறினார். மற்றொரு மூப்பர் இவ்வாறு எழுதினார்: “இதன் பலன்கள் அபாரம்! ஆழமான விஷயங்களையும்கூட புரிந்துகொள்ள முடிவது அருமையிலும் அருமை.” ஆம், யெகோவாவின் அபரிமிதமான ஆசீர்வாதத்தால், அவரை அறிந்து மகிமைப்படுத்துவதற்கு கிடைத்த பாக்கியத்தை எண்ணி அதிகமதிகமான காதுகேளாதோர் மகிழ்ச்சியடைகிறார்கள்.​—ரோமர் 10:10.

மொழிபெயர்ப்போருக்கு உதவி

உண்மையுள்ள விசாரணைக்கார வகுப்பால் தயார் செய்யப்படும் ஆவிக்குரிய உணவு இப்போது கிட்டத்தட்ட 390 மொழிகளில் கிடைக்கிறது. (லூக்கா 12:42) ஆகவே, மொழிபெயர்ப்பது யெகோவாவுடைய அமைப்பில் நடைபெற்று வரும் வேலையின் முக்கியமான பாகமாக திகழ்கிறது; தொடர்ந்து முன்னேறி வரும் பாகமாகவும் இருக்கிறது.

சரியான மொழிபெயர்ப்பு என்பது, மூல வாக்கியத்தை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை சொல்லர்த்தமாக மொழிபெயர்ப்பது அல்ல. மாறாக, கருத்துக்களை துளியும் மாறாமல் தெரிவிப்பதே. அப்படியானால், மொழியாக்கம் செய்வதற்கு முன்பு மொழிபெயர்ப்போர் மூல வாக்கியத்தின் கருத்தை நன்கு புரிந்துகொள்வது அவசியம். சில சமயங்களில் இதை புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம்.

ஆகவே மொழிபெயர்ப்பாளர்களை பயிற்றுவிக்க, ஆளும் குழுவின் ஆலோசனைப்படி இம்ப்ரூவ்ட் இங்லிஷ் காம்ப்ரிஹென்ஷன் கோர்ஸ் என்ற புரோகிராம் ஏற்பாடு செய்யப்பட்டது. மொழிபெயர்ப்பாளர்களை பயிற்றுவிப்பதற்கு தகுதிபெற்ற சகோதரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். நியூ யார்க், பேட்டர்ஸனில் உள்ள உவாட்ச் டவர் கல்வி மையத்தில் அந்தக் கோர்ஸ் நடத்தப்பட்டது; அந்தக் கோர்ஸில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற சகோதரர்கள் 2002, 2003 ஊழிய ஆண்டுகளின் போது உலகம் முழுவதிலுமுள்ள மொழிபெயர்ப்புக் குழுக்களை சந்தித்தனர். அவர்கள் ஒவ்வொரு குழுவுடனும் மூன்று மாதங்கள் செலவிட்டு அந்தக் கோர்ஸை நடத்தினர்; மொழிபெயர்ப்பு வேலைக்கு கைகொடுக்கும் நடைமுறையான உதவியையும் அளித்தனர். இத்திட்டத்தின் உதவியால், மொழிபெயர்ப்பாளர்கள் இப்போது ஆங்கில வாக்கியங்களை முழுமையாக கிரகித்துக்கொள்ள முடிவதாக உணருகிறார்கள்.

ஒரு மொழிபெயர்ப்புக் குழு இவ்வாறு சொன்னது: “எங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையை சிறந்த முறையில் செய்வதற்கு யெகோவா அன்புடன் உதவியிருக்கிறார். இப்போது இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கை பிறந்துவிட்டதைப் போல உணருகிறோம். யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு, நல்ல பலன்கள் கிடைக்குமென எதிர்பார்க்கிறோம்.” மொழிபெயர்ப்புக் குழு கண்காணி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “முன்பெல்லாம் கஷ்டமான ஆங்கில வார்த்தைகளையும் வாக்கியங்களையும் புரிந்துகொள்வதற்கு நாங்கள் பல மணிநேரம் மண்டையை உடைத்துக் கொண்டிருப்போம். இதனால் வேலையை விரைவாக செய்ய முடியாமலிருந்தது. இம்ப்ரூவ்ட் இங்லிஷ் காம்ப்ரிஹென்ஷன் கோர்ஸ் எங்களுக்கு ரொம்பவே பயனுள்ளதாக இருந்திருக்கிறது. ஆங்கில வாக்கியத்தை முறைப்படி ஆராய்வது எப்படி என்பதை இது எங்களுக்கு காண்பித்தது. கடினமான வாக்கியத்தை புரிந்துகொள்ள உதவும் பயனுள்ள உத்திகளையும் அது எங்களுக்கு கற்பித்தது. இதனால் எங்களுடைய பாரமெல்லாம் குறைந்துவிட்டது, இன்னும் திருத்தமாகவும் விரைவாகவும் மொழிபெயர்க்க முடிகிறது.”

மற்றொரு குழு இவ்வாறு எழுதியது: “இந்த கோர்ஸ் இதுபோன்ற உலகப்பிரகாரமான மற்ற எந்தக் கல்வியை விடவும் அதிக நடைமுறையானதாக இருந்தது; ஏனென்றால், எங்களுடைய குறிப்பிட்ட தேவைகளுக்காகவே தயார் செய்யப்பட்டிருந்தது. உலகம் முழுவதுமுள்ள மொழிபெயர்ப்பாளர்களுக்கு இந்த கோர்ஸ் பெரிதும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்; ஏனெனில் செம்மறியாடுகளைப் போன்றோர் சத்தியத்தின் ‘கருத்தை புரிந்துகொள்வதை’ இது எளிதாக்குகிறது.”​—மத். 13:23, NW.

இதுவரை, 150-⁠க்கும் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யும் சுமார் 1,660 மொழிபெயர்ப்பாளர்கள் இந்த கோர்ஸ் மூலம் பயனடைந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சைகை மொழிகளில் மொழியாக்கம் செய்வோருக்கும் ஸ்பானிய கட்டுரைகளை மத்திய மற்றும் தென் அமெரிக்க உள்ளூர் மொழிகளில் மொழியாக்கம் செய்வோருக்கும் ஏற்ற விதத்தில் இந்தக் கோர்ஸ் சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

சிறந்த போதகர்களாக தகுதிபெறுதல்

யெகோவாவும் அவரது ஒரேபேறான குமாரனாகிய ‘வார்த்தையும்’ பேச்சுத்தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். (யோவா. 1:1, 14; 3:16; வெளி. 19:13) அதே மனப்பான்மையை காட்டுபவர்களாய், உண்மையுள்ள அடிமை வகுப்பாரும் பிரசங்கித்து கற்றுக்கொடுக்கும் திறமைகளில் கடவுளுடைய ஜனங்கள் முன்னேறுவதற்கு உதவ கடுமையாக உழைத்து வருகிறார்கள். அந்தக் குறிக்கோளை மனதில் வைத்துத்தான் தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் என்ற புத்தகத்தை யெகோவாவின் அமைப்பு தயாரித்துள்ளது. ஜனவரி 2003 முதல் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் இந்தப் பாடப் புத்தகம் பயன்படுத்தப்பட்டு வருவதால் பிரஸ்தாபிகள் அநேகர் இதற்கு தங்களுடைய போற்றுதலை தெரிவித்திருக்கிறார்கள்.

“சிறியோரும் பெரியோருமாகிய தங்களுடைய அங்கத்தினர்களிடம் அக்கறை காட்டி அவர்கள் திறம்பட பேசுவதற்கு உதவுகிற இதுபோன்ற மதம் வேறு எதுவும் இல்லை” என பிலிப்பைன்ஸிலுள்ள ஒரு மூப்பர் எழுதினார். பிரேசிலைச் சேர்ந்த ஒரு மூப்பர் இவ்வாறு சொன்னார்: “போதிக்கும் வேலை சம்பந்தப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தில் ஜனவரி 2003 ஒரு மைல்கல்லாக இருந்தது.” மற்றொரு மூப்பர் இவ்வாறு குறிப்பிட்டார்: “சபையிலுள்ள இளைஞர்கள் ஊழியப் பள்ளியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுவதை நான் கவனித்திருக்கிறேன். சிலரோ இந்தப் பாடப் புத்தகத்திலுள்ள பாகங்கள் ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படுவதற்கு முன்பே முழு புத்தகத்தையும் படித்து அதிலுள்ள பயிற்சிகளையும் செய்து முடித்துவிட்டார்கள்!” பயணக் கண்காணி ஒருவர் மேய்ப்பு சந்திப்புகளின்போது ஊழியப் பள்ளி புத்தகத்தை நன்கு பயன்படுத்தியிருக்கிறார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “‘சிரத்தையோடு வாசியுங்கள்,’ ‘படிப்பு பலன் தரும்,’ ‘எப்படி பதிலளிக்க வேண்டுமென அறிதல்’ போன்ற அதிகாரங்கள் கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் தயாரிக்க பெரிதும் உதவுகின்றன.”

“அந்தப் புத்தகத்தில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருப்பது சிறந்த கற்பிக்கும் முறையாகும். ஊழியப் பள்ளியில் கற்றுத் தரும் பேச்சுப் பண்புகளை வளர்த்துக்கொள்ள விரும்பினால், அவற்றை நடைமுறை வாழ்க்கையில் நாம் பயன்படுத்துவது அவசியம். அதற்கு இந்தப் பயிற்சிகள் அதிக உதவியாக இருக்கின்றன” என பிரிட்டனைச் சேர்ந்த ஒரு சகோதரி சொன்னார். திக்கிப் பேசுபவரான ஜப்பான் நாட்டு சகோதரர் ஒருவர் இவ்வாறு எழுதுகிறார்: “வாசிக்கும் நியமிப்பு கிடைக்கும் ஒவ்வொரு சமயமும், மேடையில் நின்று திக்காமல் சரியாக வாசிக்க முடியுமோ என்னவோ என நினைத்து ரொம்ப பயப்படுவேன். நான் விபரீதமாக யோசிக்கும்போதுதான் நிலைமை ரொம்ப மோசமாக போய்விடுகிறது என்பதை உணர்ந்தேன். அதனால், சமீபத்தில் எனக்கு நியமிப்பு கிடைத்தபோது ஊழியப் பள்ளி புத்தகத்தில் ‘தெளிவாக பேசுவது எப்படி,’ (பக்கங்கள் 87, 88) ‘திக்குவதை சமாளித்தல்’ (பக்கம் 95) ஆகிய உபதலைப்புகளின் கீழுள்ள குறிப்புகளை நான் எழுதி வைத்துக்கொண்டேன். திக்கிப் பேசும் பிரச்சினையை உடனடியாக சமாளித்துவிட முடியுமென நான் எதிர்பார்க்கவில்லைதான், ஆனாலும் என்னுடைய முயற்சியை கைவிடக்கூடாது என்று தீர்மானித்திருக்கிறேன்!”

“புரூண்டியில் உள்ள சகோதரர்கள் இந்தப் புதிய பாடப் புத்தகம் இப்போது கிருண்டி மொழியில் கிடைப்பதால் அதற்கு தங்களுடைய போற்றுதலை தெரிவித்திருக்கிறார்கள். இந்த நாட்டில் அநேகருக்கு போதிய கல்வியறிவு இல்லை; இருந்தாலும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்துகொள்ளும் மாணாக்கரால் இப்போது ஆலோசனை குறிப்புகளை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. அதனால், தங்களுடைய பேச்சுக்களை அதிக உற்சாகமாக கொடுக்கிறார்கள்” என கென்யா கிளை அலுவலகம் அறிவிக்கிறது.

எழுத்து திறமையை வளர்ப்பதற்கும்கூட சிலருக்கு இப்புத்தகம் உதவியுள்ளது. மெக்சிகோவில், சுகவீனமாக இருக்கும் ஒரு வயதான சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “கடிதம் எழுதுவதற்கு சில நடைமுறையான ஆலோசனைகளை ஊழியப் பள்ளி புத்தகத்தில் 71 முதல் 73 பக்கங்களில் நான் பார்த்தேன். என்னுடைய சுகவீனத்தின் காரணமாக நான் இந்த முறையில்தான் சாட்சி கொடுத்து வருகிறேன். இருந்தாலும், என்னுடைய சொந்தபந்தங்களுக்கு கடிதம் எழுதும் பழக்கம் எனக்கு கிடையாது. ஆனால், இந்தப் புதிய புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைப்படி, அவர்களுக்கும்கூட இப்போது கடிதம் மூலம் நல்ல முறையில் சாட்சி கொடுக்க முடிகிறது.” தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு மாவட்டக் கண்காணி இவ்வாறு கூறினார்: “இது உண்மையிலேயே ஒரு தலைசிறந்த கையேடு. இது பேச்சு பண்புகளின் நடைமுறை நுட்பங்களை மட்டுமே விளக்கும் ஒரு புத்தகமல்ல, ஆனால் ஆவிக்குரிய நுட்பங்களை விளக்கும் ஒரு புத்தகம்; எப்படியெனில், பேச்சு பண்புகள் எவ்வாறு பிறர் மீதுள்ள கிறிஸ்தவ அன்பினாலும் அக்கறையினாலும் பிறக்கின்றன என்பதை இது காட்டுகிறது.”

சட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்

ஜூன் 17, 2002-⁠ல் உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் நியு யார்க், இன்க். v. ஸ்ட்ராட்டான் கிராமம் என்ற வழக்கில் ஐக்கிய மாகாணங்களின் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வெளியிட்டது, ஒன்பது பேர் கொண்ட நீதிபதிக் குழுவில் ஒருவரைத் தவிர எட்டு பேர் அத்தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர்; அத்தீர்ப்பின்படி பிரச்சாரம் செய்வதற்கோ நன்கொடை கேட்பதற்கோ அனுமதி பெற வேண்டும் என்ற ஆணை சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் கருதியது; யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழிய வேலைக்கும் இது பொருந்தும் என கருதியது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஐக்கிய மாகாண கிளை அலுவலகத்தின் சட்ட இலாகா அந்நாட்டிலுள்ள எல்லா நகராட்சியுடனும் தொடர்பு கொண்டது. ஏனெனில் பிரச்சாரம் செய்வது அல்லது நன்கொடை கேட்பது சம்பந்தமான ஆணையை பயன்படுத்தி நம்முடைய பிரசங்க வேலையை தடுக்க அந்த நகராட்சிகள் முயன்று கொண்டிருந்தன. ஆனால் ஸ்ட்ராட்டான் தீர்மானத்தின் பலனாக, 238 நகராட்சிகளில் பிரசங்க வேலைக்கு இருந்த இடையூறுகள் அகற்றப்பட்டன. அதுமட்டுமல்ல, மற்ற 216 நகராட்சிகளில் உள்ள ராஜ்ய பிரஸ்தாபிகள் வெளி ஊழியத்தில் ஈடுபடுவதற்கு முன் போலீஸிடமோ நகர அதிகாரிகளிடமோ தெரிவிக்க வேண்டிய அவசியம் அதன் பிறகு இருக்கவில்லை. இத்தகைய இடையூறுகள் அனைத்தையும் யெகோவா தொடர்ந்து தரைமட்டமாக்குவாராக.​—ஏசா. 40:4; மத். 24:14.

மனசாட்சி காரணமாக இராணுவ சேவையில் ஈடுபட மறுப்பதால் ஆர்மீனியாவில் உள்ள சகோதரர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டும் சிறையில் தள்ளப்பட்டும் வருகிறார்கள். தலைநகரான ஏரேவனை சேர்ந்த வழக்குரைஞர், சகோதரர்கள் பலரின் மீது விதிக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனை காலத்தை இன்னும் நீட்டிக்க வேண்டுமென அப்பீல் செய்திருக்கிறார். நீதிபதிகள் அவருடைய அப்பீல்களை ஏற்றுக்கொண்டு கடுமையான தண்டனைகளையும் விதித்திருக்கிறார்கள்.

முன்பு மிஷனரிகளாக இருந்த யெகோவாவின் சாட்சிகள் இருவர் தங்களுடைய வழக்கை விசாரணை செய்யும்படி தாக்கல் செய்திருந்த மனு ஏற்றுக்கொள்ளத்தக்கது என பிப்ரவரி 2003-⁠ல் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்தது. 1995-⁠ல் பல்கேரியாவை விட்டு வெளியேறும்படி அந்த தம்பதியர் கட்டளையிடப்பட்ட போது, தங்களுடைய மத சுதந்திரமும் பாகுபாட்டிற்கு எதிரான சுதந்திரமும் மீறப்பட்டதாக உணர்ந்தார்கள். அவர்கள் கொடுத்த புகாருக்கு “ஆதாரம் இல்லாமல் இல்லை” என நீதிமன்றம் உணர்ந்தது.

எரிட்ரியாவிலுள்ள அஸ்மராவில் கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்பு நிகழ்ச்சி முடிந்து சற்று நேரத்திற்குள் கூட்டம் நடந்த இடத்தை போலீஸார் சூழ்ந்து கொண்டனர். அங்கு கூடிவந்திருந்த ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் உட்பட 164 பேரையும் போக விடாமல் தடுத்தனர். அவர்களை காவலில் வைத்து இரவு முழுவதும் விசாரணை நடத்தினர். மறுநாள் பிள்ளைகளையும், பெரும்பாலான சகோதரிகளையும் கூட்டத்திற்கு வந்திருந்த ஆர்வமுள்ளோரையும் அதிகாரிகள் விடுதலை செய்தனர். மற்றவர்களோ அஸ்மராவிலுள்ள மிகப்பெரிய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே சிலர் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரையிலும் அடைத்து வைக்கப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். மேலும், மனசாட்சி காரணமாக இராணுவ சேவையில் சேர மறுத்ததால் பத்து சகோதரர்கள் இன்னும் காவல் முகாமில் இருக்கிறார்கள். அவர்களில் மூன்று பேருக்கு ஒன்பது ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜியாவில், நம் சகோதரர்கள் தொடர்ந்து மூர்க்கத்தனமாக துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். உள்ளூர் அதிகாரிகளும் ஆயுதந்தரித்த போலீசும் மாவட்ட மாநாடுகள் நடந்துகொண்டிருக்கும் போதே பலவந்தமாக உள்ளே நுழைந்து நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள். மேடையை ஆக்கிரமித்து, அங்கு கூடிவந்திருந்தோரை வெளியேறும்படி உத்தரவிட்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில், சகோதரர்கள் மாநாட்டிற்கு போவதை தடுப்பதற்காக மாநாட்டு தலத்திற்கு பக்கத்திலுள்ள சாலைகளை அவர்கள் மறித்துவிட்டார்கள். அங்கு யெகோவாவின் சாட்சிகளை துன்புறுத்துகிற முக்கிய புள்ளி இனிமேல்தான் விசாரணை செய்யப்படப் போகிறான், அவன் இன்னமும் காவலில் வைக்கப்படவில்லை. அவன் மீதான விசாரணை குறைந்தபட்சம் 19 தடவையாவது ஒத்திப்போடப்பட்டிருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் அவனுடைய ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் அத்துமீறி நுழைந்து சகோதரர்களை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள், கடும் வார்த்தைகளால் தாக்கியிருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து பிரசுரங்களைப் பெறுவதற்கும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்கும் தேவையாக இருந்த வரிப் பதிவு எண் சம்பந்தமாக முன்னர் கொடுத்த ஒப்புதலை வரித் துறை ரத்து செய்துவிட்டது.

கோஸாவோ மற்றும் ருமேனியாவிலிருந்து நல்ல செய்தி வந்திருக்கிறது. மே 20, 2003-⁠ல் கோஸாவோவில் உள்ள 90 ராஜ்ய பிரஸ்தாபிகளும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டனர், அவர்களுடைய தனியுரிமை சாசனமும் பதிவு செய்யப்பட்டது. அவ்வாறே மே 22, 2003-⁠ல் ருமேனியா அரசின் ஓர் அமைச்சகம் யெகோவாவின் சாட்சிகளை அதிகாரப்பூர்வ மதமாக ஏற்று ஆணை பிறப்பித்தது. அந்த ஆணையின் பிரிவு 3 இவ்வாறு குறிப்பிடுகிறது: “அங்கீகரிக்கப்பட்ட மதங்களுக்கென ருமேனிய அரசு சட்டப்படி வழங்கும் எல்லா உரிமைகளும் கடமைகளும் ‘யெகோவாவின் சாட்சிகளின் மத அமைப்பாகிய’ இந்தக் கிறிஸ்தவ மதத்தினருக்கும் உண்டு.” 2000-⁠ம் ஆண்டில் ருமேனிய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இணங்க இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ரஷ்யாவில், மாஸ்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு தடையுத்தரவு விதிக்க கோரும் வழக்கு விசாரணை மே 22, 2003-⁠ல் கால வரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளின் போது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பிரசுரங்களுக்கு மனரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி எந்தளவு இருந்திருக்கிறது என்பதை கண்டறிய மற்றுமொரு “நிபுணத்துவ” ஆராய்ச்சியை நடத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார்; அதற்கு எந்தக் கால வரம்பும் அவர் அறிவிக்கவில்லை. அப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் விஞ்ஞானப்பூர்வமாக எந்தளவு உண்மையானவை என்பது சந்தேகத்திற்குரியதே. இதற்கிடையே, சகோதரர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் பரிசீலனை செய்ய ஆரம்பித்திருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக மாஸ்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை நீதிமன்றத்தார் பட்சபாதமாக நடத்தி தொல்லை கொடுத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டதே அந்த மனு.

சைப்ரஸின் வட பகுதியைச் சேர்ந்த அமைச்சர் குழு அதன் ஆகஸ்ட் 8, 2002 தேதியிட்ட தீர்மானம் எண் இ-1516-2002-⁠ன்படி யெகோவாவின் சாட்சிகள் அத்தீவின் வடபகுதிக்கு செல்லக்கூடாது என போடப்பட்டிருந்த தடையுத்தரவை நீக்கிப்போட்டது. 1997-⁠ல் தடையுத்தரவு போடப்பட்ட சமயத்தில் பயனியர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டிருந்தனர். பறிமுதல் செய்யப்பட்டிருந்த இரண்டு ராஜ்ய மன்றங்கள் சகோதரர்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டன.

உஸ்பெகிஸ்தானில், மாராட் மூடாரிஸாஃப் என்பவர் “மதப் பகைமையை தூண்டிவிடுவதாகவும் இளம் வயதினரை [தன்னுடைய மதத்திற்கு] இழுப்பதாகவும்” குற்றம்சாட்டப்பட்டார். அவருக்கு நிபந்தனையின் பேரிலான தீர்ப்பு (suspended sentence) வழங்கப்பட்டது. அக்கம்பக்கத்தாருக்கு நற்செய்தியை பிரசங்கித்ததும் சபைக் கூட்டங்களில் வாராந்தர பைபிள் கலந்தாலோசிப்புகளை நடத்தியதுமே உண்மையில் அவர் செய்த “குற்றமாக” கருதப்பட்டது. சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் ஒரு அப்பீல் தாக்கல் செய்யப்பட்டது; அதன்படி சகோதரர் மூடாரிஸாஃப்புக்கு அளிக்கப்பட்ட அநியாயமான தீர்ப்பு நீக்கிப் போடப்பட்டது.

சோதனைகளை சமாளித்தல்

இந்த ஒழுங்குமுறை அதன் முடிவை நெருங்க நெருங்க, வன்முறை பெருகிக்கொண்டே வருகிறது, அரசியல் நிலைமையும் தொடர்ந்து ஆட்டங்காண்கிறது; அதனால் பெரும்பாலும் அதிக நெருக்கடிகள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டின் போது லைபீரியாவும் அதன் தலைநகரான மன்ரோவியாவும் உள்நாட்டுப் போரால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளானது. “தெருக்களில் ஒரு வாரத்திற்கு சண்டைகள் தீவிரமாக நடந்தன, நகரம் முழுவதுமே பெருங்குழப்பத்தில் மூழ்கிக் கிடந்தது” என குறிப்பிடுகிறது ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கை. “கருத்து வேறுபாட்டாளர்கள் பின்வாங்கிய பிறகு, ‘புயலுக்குப் பின் அமைதி’ நிலவியது போல் இருந்தது. ஆனால் ஜூன் 24 அன்று முன்பைவிட மிகவும் தீவிரமான ஒரு புதிய தாக்குதல் ஆரம்பமானது; அது நகரின் உள்கட்டமைப்பையும் மனித உயிரையும் பரந்த அளவில் சின்னாபின்னமாக்கியது” என்றும் அது குறிப்பிடுகிறது. நகரத்தின் ஒரு பகுதியில், துப்பாக்கி குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளின் தாக்குதல் காரணமாக சகோதரர்கள் தங்களுடைய ராஜ்ய மன்றத்தின் ஈரத் தரையில் நெடுஞ்சாண்கிடையாய் படுக்க வேண்டியதாயிற்று என கிளை அலுவலகம் தெரிவித்தது. “அந்த நகரத்திற்கு ஏற்பட்ட நாசங்கள் படுபயங்கரமானவை. எங்கும் பிரேதங்களின் துர்நாற்றம் வீசியது” என சகோதரர்கள் எழுதினார்கள். படுவேகமாக பரவிய காலரா நோய் இன்னும் பலரின் உயிரை காவுகொண்டது.

ஆயுதம் தரித்த ஆட்கள் ஓயாமல் வீடுகளையும் ராஜ்ய மன்றங்களையும் கொள்ளையிட்டார்கள். விலையுயர்ந்த பொருட்களை வைத்திருந்தால் அவற்றையெல்லாம் அபகரித்துவிடுவார்கள் என்பதை சகோதரர்கள் அறிந்திருந்ததால், அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே வைத்துக்கொண்டதாக மன்ரோவியாவிலுள்ள ஒரு மிஷனரி தம்பதியர் கூறினர். தங்களுடைய கட்டில்கள் பறிபோனபோதிலும்கூட அதற்கு பதிலாக வேறு கட்டில்களை வாங்காமல் தரையில் பாய்களை விரித்து அவற்றில் படுத்தார்கள். தங்களுடைய வீடுகளுக்கு திரும்ப முடியாமல் போனவர்கள் அகதிகளாக காலந்தள்ளினார்கள் அல்லது பக்கத்து நாடுகளுக்கு தப்பிச் சென்றார்கள்.

“மக்கள் அன்றன்றைக்குரிய பாடுகளை மட்டும் கவனித்துக்கொள்கிறார்கள். இருந்தாலும் சூழ்நிலைகள் அனுமதிக்கிற சமயங்களில் எல்லாம் கூட்டங்களுக்கு செல்வதற்கும் வெளி ஊழியத்தில் பங்கு கொள்வதற்கும் சகோதரர்கள் ஆர்வமாக இருப்பதைக் காண்பது அதிக உற்சாகத்தை அளிக்கிறது” என கிளை அலுவலகம் தெரிவிக்கிறது. நிவாரண பொருட்கள் வந்து சேரும்போது, “சகோதரர்கள் முதலில் கேட்பது பைபிள் பிரசுரங்களைத்தான், சிலரோ தங்களுடைய ஹேண்ட்பேக் பறிபோய் விட்டதால் ஊழியத்திற்கு எடுத்துச் செல்ல ஹேண்ட்பேக் வேண்டுமென கேட்கிறார்கள்” என முன்பு குறிப்பிட்ட அந்த மிஷனரிகள் சொன்னார்கள்.

மண்டல வாரியான அச்சடிப்பு

செப்டம்பர் 1, 2001-⁠ல் அச்சடிப்பு ஆய்வுக் குழு என்ற ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு அதில் சேவை செய்வதற்கு உலகின் பல பகுதிகளிலிருந்து ஏழு சகோதரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். உலகம் முழுவதுமுள்ள அனைத்து அச்சிடும் கிளை அலுவலகங்களை ஆய்வு செய்யும்படியும் அங்கு ஏற்கெனவே பயன்படுத்தி வரும் வளாகத்தை இன்னும் அதிக அளவில் எப்படி பயன்படுத்தலாம் என்பதை பரிந்துரைக்கும்படியும் இந்த சகோதரர்களை ஆளும் குழு கேட்டுக் கொண்டது. இந்த ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளின்படி அக்டோபர் 17, 2001 அன்று மண்டல வாரியாக அச்சடிப்பு செய்வதற்கு, அதாவது அந்தந்த மண்டலத்தின் தேவைகளை அந்தந்த மண்டலங்களே கவனித்துக்கொள்வதற்கு ஆளும் குழு ஒப்புதல் அளித்தது. ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவை அந்த ஒப்புதலை பெற்ற மண்டலங்களாகும்.

இப்புதிய ஏற்பாடு 2002-⁠ம் ஆண்டின் ஆரம்பம் முதல் அமலுக்கு வந்தது. இதனால் நல்ல விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு புத்தக அச்சடிப்பை எடுத்துக்கொள்ளுங்கள். 2000-⁠ம் ஆண்டில் ஐக்கிய மாகாண கிளை அலுவலகம் உலகம் முழுவதற்குமாக சுமார் 50 சதவீத புத்தகங்களை அச்சிட்டது. ஆனால், இப்போதோ அந்தந்த மண்டலங்களே அச்சிடும் ஏற்பாட்டின்படி, அது 26 சதவீதம் மட்டுமே அச்சிடுகிறது. இதனால் ஷிப்பிங் செலவும் பணியாளர்கள் மற்றும் மெஷின்களின் தேவையும் குறைந்துள்ளது; ஐக்கிய மாகாண அச்சகத்தில் இடமும் மிச்சமாகி உள்ளது. அத்துடன் பிற நாடுகளில் உள்ள வளாகங்களை மிகச் சிறந்த முறையில் முழுமையாக பயன்படுத்துவதற்கும் இது வாய்ப்பளித்துள்ளது.

அந்தந்த மண்டலங்களில் அச்சடிப்பதற்கான ஒப்புதலை அளித்ததோடு MAN ரோலன்ட் லித்தோமன் என்ற ஏழு புதிய அச்சு இயந்திரங்களை வாங்குவதற்கும் ஆளும் குழு ஒப்புதல் அளித்தது. திறன் குறைந்த பழைய இயந்திரங்களுக்கு பதிலாக இந்தப் புதிய இயந்திரங்கள் நிறுவப்படும்; எதிர்காலத்தில் அதிகமான பிரசுரங்களை அச்சிடுவதற்கு இவை உதவும். இவற்றில் ஐந்து அச்சு இயந்திரங்கள் தென் ஆப்பிரிக்கா, பிரேசில், பிரிட்டன், மெக்சிகோ, ஜப்பான் ஆகிய நாடுகளுக்காக வாங்கப்பட்டவை; சில ஏற்கெனவே நிறுவப்பட்டுவிட்டன. இன்னும் இரண்டு அச்சு இயந்திரங்கள் நியு யார்க், வால்க்கில்லில் உள்ள அச்சகத்திற்காக வாங்கப்பட்டவை; ஏப்ரல்-மே 2004-⁠ல் அவை நிறுவப்படும். இவை ஒவ்வொன்றும் 40 மீட்டர் நீளமுடையவை; பத்திரிகைகளை, அல்லது புத்தகங்களுக்குரிய பத்திரிகை அளவிலான தாள்களை (signatures) மணிக்கு 90,000 (நொடிக்கு 25) வீதம் அச்சடித்துவிடும், எல்லா பக்கங்களையும் முழு வர்ணத்துடனும் அச்சடித்துவிடும்.

புரூக்ளினிலும் வால்க்கில்லிலும் கூடுதலான மாற்றங்கள்

வால்க்கில்லில் புதிய அச்சு இயந்திரங்கள் நிறுவப்படுவதோடு பைண்டிங் கருவியும் நிறுவப்படும். இக்கருவி தடித்த அட்டையுடைய புத்தகங்களையும் டீலக்ஸ் பைபிள்களையும் நிமிடத்திற்கு 120 வீதம் பைண்ட் செய்துவிடும். ஆகவே ஷிப்பிங் டிபார்ட்மென்ட் புரூக்ளினிலிருந்து வால்க்கில்லுக்கு மாற்றப்படும்; அங்கே புத்தகங்களை சேமித்து வைப்பதற்கு பல அடுக்குகளை உடைய உயரமான இடம் அமைக்கப்பட்டுள்ளது; இது புருக்ளினில் புத்தகங்களை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்திய இடத்தைவிட பாதிக்கும் குறைவானது.

புரூக்ளினில் இப்போது காலியாக இருக்கும் இந்தக் கட்டடங்கள் வேறு காரியங்களுக்காக பயன்படுத்தப்படும். அது தவிர, 360 ஃபர்மன் தெருவில் அமைந்துள்ள 95,000 சதுர மீட்டர் பரப்பளவுள்ள கட்டடத்தை விற்கப் போவதாக ஜூன் 2003-⁠ல் ஆளும் குழு அறிவித்தது. இந்தக் கட்டடத்தில்தான் ஷிப்பிங் டிபார்ட்மென்ட்டுகளும் பிற டிபார்ட்மென்ட்டுகளும் இருந்தன. இந்தக் கட்டடத்திலுள்ள பிற டிபார்ட்மென்டுகள் புரூக்ளின் வளாகத்திலுள்ள பல பகுதிகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன, சில சீக்கிரத்தில் மாற்றப்படும்.

ராஜ்ய மன்ற கட்டுமானம்

கடந்த 2003 ஊழிய ஆண்டில் உலகம் முழுவதிலும் 2,340 ராஜ்ய மன்றங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அப்படியானால் ஒரு மாதத்திற்கு சராசரியாக 195 மன்றங்கள் அல்லது ஒரு நாளுக்கு 6-⁠க்கும் சற்று அதிகமான மன்றங்கள் கட்டப்பட்டுள்ளன! வசதி குறைந்த நாடுகளில் ராஜ்ய மன்றங்களைக் கட்டும் இந்த ஏற்பாடு நவம்பர் 1999-⁠ல் ஆரம்பிக்கப்பட்டது முதற்கொண்டு 7,730 ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டுள்ளன. பல இடங்களில், இவ்வாறு புதிய ராஜ்ய மன்றங்கள் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயருகிறது, சீக்கிரத்தில் அம்மன்றங்கள் நிரம்பி வழிகின்றன.

ஆப்பிரிக்காவில் இந்தக் கட்டுமான ஏற்பாடு ஆரம்பமான சமயத்தில் அக்கண்டத்திலுள்ள 38 நாடுகளில் 550 பொருத்தமான ராஜ்ய மன்றங்களே இருந்தன. நான்கு ஆண்டுகளுக்குள் அதே 38 நாடுகளில் 5,060-⁠க்கும் அதிகமான ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டன​—⁠சராசரியாக ஒரு ராஜ்ய மன்றத்தை மூன்று அல்லது நான்கு சபைகள் பயன்படுத்துகின்றன. ராஜ்ய மன்ற கட்டுமான திட்டங்கள் மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிய அறிக்கையில் மலாவியிலுள்ள கிறிஸ்தவ இலக்கிய சங்கம் ஒன்று வெளியிட்ட ஒரு புதிய அகராதியைப் பற்றி மலாவி கிளை அலுவலகம் குறிப்பிட்டது. “அந்த அகராதி யெகோவாவின் சாட்சிகளுடைய பெயரை சிச்சேவா மொழியில் சரியாக மொழிபெயர்த்துள்ளது. அந்தப் பெயரை ஒரு வாக்கியத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு உதாரணமாக ‘யெகோவாவின் சாட்சிகள் அநேக சர்ச்சுகளை கட்டியுள்ளனர்’ என்றும் குறிப்பிட்டுள்ளது” என கிளை அலுவலகம் அறிவிக்கிறது.

மற்றொரு ஆப்பிரிக்க நாட்டின் கிளை அலுவலகம் இவ்வாறு எழுதியது: “ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு ஓர் அதிகாரியின் அலுவலகத்திற்கு சகோதரர்கள் சென்றபோது அவர் அந்தப் பேப்பர்களை கிழித்து எறிந்து விட்டார். மூன்றாவது முறையும் இப்படி நடந்தபோது, சகோதரர்கள் இந்த விஷயத்தை யெகோவாவின் கையில் விட்டுவிட்டனர். இந்த சம்பவம் நடந்து கொஞ்ச காலத்தில், குறிப்பிட்ட சில கடன்களை அரசாங்க அலுவலர்களுக்கு அளிக்கும் பொறுப்பை இந்த சகோதரர்களில் ஒருவரிடம் நிர்வாக அதிகாரிகள் ஒப்படைத்தனர்; அவர் நேர்மைக்கு பெயர் பெற்றவராக இருந்தார்.

நம்முடைய பேப்பர்களை கிழித்தெறிந்த அந்த அதிகாரி கடன் பெறுவதற்காக விண்ணப்பித்தவருள் ஒருவர். இந்த சகோதரரை அவர் பார்த்தவுடன் அலுவலகத்தை விட்டு வெளியேறிவிட்டார், ஒரு வாரம் கழித்து வந்தால் இவருக்கு பதிலாக வேறு அலுவலர் இருப்பார் என நினைத்தார். ஆனால், இந்த முறை அவர் வந்ததும் நம் சகோதரர் அவரை அணுகி அவருடைய விண்ணப்பத்தைத் தரும்படி கேட்டு, கடனை வழங்க ஒப்புதல் அளித்தார். வெட்கத்தால் கூனிக்குறுகிப்போன அந்த அதிகாரி, சகோதரர்கள் தங்களுடைய பேப்பர்களை திரும்பவும் சமர்ப்பிக்கும்படி சொன்னார். அவரே தன்னுடைய மேலதிகாரியிடம் அந்தப் பேப்பர்களை சமர்ப்பித்து ஒப்புதல் வாங்கித் தந்தார், ராஜ்ய மன்றத்திற்கான நில மானியத்தையும் வாங்கித் தந்தார். யெகோவாவின் சாட்சிகளுக்கு தனி மரியாதை காட்டி, ‘அவர்கள் தீமைக்குத் தீமை செய்யாதவர்கள்’ என்று சொன்னார்.”

உக்ரைன் கிளை அலுவலகம் இவ்வாறு அறிவிக்கிறது: “நிலத்திற்காக தேடி அலையும் சமயத்தில் ஆர்ட்ஸிஸ் என்ற நகரத்தில் மண்டல கட்டடக் கலைஞராக இருக்கும் ஒரு பெண்ணை சகோதரர்கள் சந்தித்துப் பேசினார்கள். கட்டி முடிக்கப்பட்ட ராஜ்ய மன்றங்களின் புகைப்படங்களை அவரிடம் காட்டினார்கள். அதைக் கண்டு கவரப்பட்ட அவர், ‘இப்படிப்பட்ட ராஜ்ய மன்றம் நகரத்தின் மையத்தை அலங்கரிக்கும் என்பதால் அது எங்களுடைய மாவட்ட ஆட்சி பகுதிக்கு அருகிலேயே கட்டப்பட வேண்டும்’ என்று சொன்னார். அதன் பிறகு ஒரு பிளாட் நிலம் இருப்பதைப் பற்றி அவர்களிடம் தெரிவித்தார். பிற்பாடு, அந்த மண்டலத்தின் முக்கிய கட்டடக் கலைஞரும் இவ்வாறு சொன்னார்: ‘கட்டட வேலையை துவங்குவதற்கு முன்பாக அதன் வரைப்படத் திட்டங்களை ஒன்று சேர்ந்து தீர்மானித்த ஒரு மத சமுதாயத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக பார்த்திருக்கிறேன். பொதுவாக, இதற்கு நேர்மாறாகவே நடக்கிறது.’”

லிஸிசான்ஸ்க் என்ற நகரத்தில் ராஜ்ய மன்ற கட்டுமான வேலை நடக்கும் இடத்தில், பக்கத்து நகரை சேர்ந்த ஒரு பெண் வியாபாரி இவ்வாறு குறிப்பிட்டார்: “நான் கொஞ்ச நாளாகவே உங்களுடைய வேலைகளை கவனிச்சுட்டிருக்கேன். இதே மாதிரி ஒரு ராஜ்ய மன்றத்தை எங்க சிட்டிலேயும் நீங்க கட்டினா நல்லாயிருக்கும். ஒரு நல்ல இடம் வாங்குவதானாலும் அதற்கும்கூட உங்களோடு சேர்ந்து நானும் முயற்சி செய்றேன்.” அதற்கு நம் சகோதரர்கள், அந்தப் பகுதியில் ஐந்து சாட்சிகள் மட்டுமே இருக்கிறார்கள் என்றும் ஒரு சபையை ஏற்படுத்தி ராஜ்ய மன்றம் கட்டுவதற்கு அந்த எண்ணிக்கை போதாது என்றும் சொன்னார்கள். “அப்படின்னா உங்களுக்கு எத்தனை பேர் வேணும்? ஆறாவது ஆளா என்னை சேர்த்துக்கோங்க” என்று அவர் கூறினார். அவர் ஒருவேளை விளையாட்டாக சொல்லியிருக்கலாம், இருந்தாலும் பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டார்.

புதிய அசெம்பிளி மன்றங்கள்

கடந்த ஊழிய ஆண்டில் பல இடங்களில் அசெம்பிளி மன்றங்கள் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவையாவன: நியான்டியரா மற்றும் காயியனியா, பிரேசில்; எல் ட்ரிபோல், சாண்டியாகோ, சிலி; மார்னே டான்யல், டொமினிகா; மசாலா, ஈக்வடார்; சிரக்யூஸ், சிசிலி, இத்தாலி; கெரஹு, பாப்புவா-நியூ கினி, லோமே, டோகோ; நியூபர்க், நியு யார்க் மற்றும் வெஸ்ட் பாம் பீச், ப்ளோரிடா, அ.ஐ.மா. ஒரு தொழிலதிபர் நியூபர்க்கில் நடந்த கட்டுமான வேலையைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “உங்களுடைய அமைப்பு அற்புதத்திலும் அற்புதமானது! வித்தியாசமான பின்னணி, திறமைகள் உடைய வாலண்டியர்களை வைத்து நீங்க வேலை செய்றீங்க. எல்லாருமே ஒற்றுமையா வேலை செய்றீங்க. இது மாதிரி நான் எங்கேயும் பார்த்ததில்ல!” உள்ளூர் கட்டட மேற்பார்வையாளர் ஒருவர் ராஜ்ய மன்ற கட்டடத்தின் வேலைப்பாட்டை மட்டுமல்ல சகோதர சகோதரிகளையும் பார்த்து அசந்து போனார். “இங்கே வர்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. உங்க மத்தியில இருக்கத்தான் எனக்கு பிடிச்சிருக்கு” என்று அவர் சொன்னார்.

நியூபர்க்கில் கட்டட வேலை முடியப்போகும் சமயத்தில் தீப்பிடித்து விட்டது, அதனால் கட்டடத்தில் சுமார் 20 சதவீதம் சேதமடைந்தது. மனமொடிந்து போவதற்கு பதிலாக, அதைத் திரும்பவும் புதுப்பிப்பதற்கு சகோதரர்கள் முழு மூச்சுடன் ஒத்துழைத்தார்கள். இதன் பலனாக, ஒரு மாதத்திற்குள் புதுப்பிக்கும் வேலை முடிக்கப்பட்டது; திட்டமிட்டபடி அக்டோபர் 19, 2002-லேயே பிரதிஷ்டையையும் நடத்த முடிந்தது. அங்கு வேலை செய்த வாலண்டியர்களைக் குறித்து உள்ளூர் செய்தித்தாள் ஒன்று இவ்வாறு சொன்னது: “5,600 சதுர மீட்டர் கட்டடத்தில் சுமார் ஐந்தில் ஒரு பாகத்தை எரித்துப்போட்ட நெருப்பைவிட அவர்களுடைய விசுவாசம் அதிக சக்திவாய்ந்தது.” கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் காணப்படும் ஒப்பற்ற ஒற்றுமையை உணர்ந்தவர்களாய், அசெம்பிளி மன்றத்திற்கு செல்லும் ரோட்டிற்கு யூனிட்டி ப்ளேஸ் (ஒற்றுமை தெரு) என்று பெயர் சூட்ட சகோதரர்கள் அனுமதி வாங்கினார்கள்.

கிளை அலுவலக பிரதிஷ்டைகள்

உள்நாட்டு சண்டைகள், அரசியல் சச்சரவுகள் ஆகியவற்றின் மத்தியிலும் கோட் டீவாரில் உள்ள சகோதரர்கள், அபித்ஜன் நகர் கிளை அலுவலகத்தின் புதிய கட்டடங்களை பிரதிஷ்டை செய்வதற்கு மார்ச் 29, 2003 அன்று அமைதியாக கூடிவந்தார்கள். பெரிய டைனிங் ரூம், கிச்சன், லாண்டரி, ஸ்டோர்கள், மெயின்டனென்ஸ் ஷாப்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கட்டடமும், இரண்டு குடியிருப்பு கட்டடங்களும், ஒரு புதிய ராஜ்ய மன்றமும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1982-⁠ல் முதலாவது கட்டப்பட்ட கிளை அலுவலகத்திற்கு எதிரே இப்புதிய கட்டடங்கள் உள்ளன. 15 நாடுகளிலிருந்து வந்த வாலண்டியர்கள் உள்ளூர் கட்டுமானக் குழுவின் 110 அங்கத்தினர்களுக்கு உதவினர். இந்த வாலண்டியர்களில் பலரும் தங்களுடைய சொந்த செலவில் அங்கு வந்தனர். கிளை அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்த மண்டலக் கண்காணி செபாஸ்டியன் ஜான்சன், “தூய வணக்கத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள்” என்ற தலைப்பில் பிரதிஷ்டை பேச்சு கொடுத்தார்.

பிப்ரவரி 15, 2003 சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட கயானாவின் புதிய கிளை அலுவலக பிரதிஷ்டைக்கு 332 பேர் வந்திருந்தனர். ஜெர்மனி கிளை அலுவலகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் கெல்ஸி பிரதிஷ்டை பேச்சு கொடுத்தார். பிரபஞ்சத்தின் தலைசிறந்த கட்டடக் கலைஞர் யெகோவாவே என்ற விஷயத்தில் அவர் கவனத்தை ஒருமுகப்படுத்தினார். என்றாலும், யெகோவாவின் மிகப் பெரிய படைப்பும் முதல் படைப்பும் மகத்தான ஆவி சிருஷ்டியாகிய ஒரேபேறான குமாரனே என்றும் சகோதரர் கெல்ஸி குறிப்பிட்டார். அங்கு சேவை செய்திருந்த பழைய மிஷனரிகள் பலரும் இந்த பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர், அவர்களில் சிலர் 40 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக அங்கு வந்திருந்தனர். 2,000 பிரஸ்தாபிகள் மட்டுமே இருக்கும் கயானாவில், ஞாயிற்றுக்கிழமை நடந்த விசேஷ நிகழ்ச்சிக்கு 12 நாடுகளிலிருந்து 4,752 பேர் வந்திருந்ததைப் பார்த்து எல்லாரும் பூரித்துப் போயினர்.

ஹெய்டியில் பெத்தேல் விரிவாக்க கட்டடங்களின் திறப்பு விழாவுக்கு, பல வருடங்களாக அங்கு சேவை செய்திருந்த ஜார்ஜ் கார்வன் வந்திருந்தார். போர்ட் ஆ பிரின்ஸ் நகருக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள செ. மார்க் துறைமுக பட்டணத்திற்கு அவர் சமீபத்தில் விஜயம் செய்ததைப் பற்றி உணர்ச்சி பொங்க பேசினார். 40 ஆண்டுகளுக்கு முன்பு செ. மார்க்கில் மிஷனரியாக அவர் சேவை செய்த காலத்தில் அங்கு முதன்முதலாக ஒரு சபையை உருவாக்க உதவினார். இப்போதோ அங்கு நான்கு பெரிய சபைகள் உள்ளன. அவரிடம் பைபிளைப் படித்த மாணாக்கர்கள் இப்போது உண்மையும் உறுதியுமுள்ள சாட்சிகளாக இருக்கிறார்கள்; இவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார்கள். ஹெய்டிக்கு சகோதரர் கார்வன் வந்த சமயத்தில் அங்கு 900-⁠க்கும் குறைவான பிரஸ்தாபிகளே இருந்தார்கள்; வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு சிறிய வீட்டில்தான் கிளை அலுவலகம் இயங்கி வந்தது, அங்கு இரண்டு பேர் சேவை செய்து வந்தார்கள்.

1986-⁠ம் ஆண்டு ஹெய்டியில் புதிய கிளை அலுவலகம் கட்டப்பட்டது, அதுவும்கூட போதாமல் ஆகிவிட்டது. இப்போது புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கிளை அலுவலகம் 40 பெத்தேல் அங்கத்தினருக்கு போதுமானது; இவர்கள் அந்நாட்டிலுள்ள 12,000-⁠க்கும் மேற்பட்ட பிரஸ்தாபிகளின் தேவைகளை கவனிக்கிறார்கள். ஆஸ்திரேலியா, ஐக்கிய மாகாணங்கள், கனடா, டென்மார்க், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த வாலண்டியர்கள் இந்தக் கட்டுமான வேலையில் கலந்துகொண்டார்கள். அவர்கள் ஹெய்டியைச் சேர்ந்த வாலண்டியர்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுமான கலைகளில் பயிற்சியும் அளித்தார்கள்.

கட்டுமானப் பொருட்களும் சாதனங்களும் உள்ளூரில் கிடைக்காததால், கனரக சாதனங்களையும் கட்டுமானப் பொருட்கள் அனைத்தையும் இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. இதனால் சில சமயங்களில் வேலை தாமதமானது, ஆனாலும் நின்றுவிடவில்லை. கடைசியில் பிரதிஷ்டை நாளும் வந்துவிட்டது. நவம்பர் 23, 2002 சனிக்கிழமையன்று, 13 நாடுகளைச் சேர்ந்த 240 பிரதிநிதிகள் உட்பட 3,122 பேர் பிரதிஷ்டைக்கு வந்தனர். ஆளும் குழுவின் அங்கத்தினரான டேவிட் ஸ்பிளேன் பிரதிஷ்டை பேச்சு கொடுத்தார். மறுநாள், போர்ட் ஆ பிரின்ஸில் உள்ள ஸில்வியோ காட்டர் என்ற ஸ்டேடியத்தில் நடத்தப்பட்ட விசேஷித்த நிகழ்ச்சியில் 20,000-⁠க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

“எழுந்து கட்டுவோம் வாருங்கள்.” (நெ. 2:18) நெகேமியாவின் காலத்து உண்மையுள்ள யூதர்கள் கூறிய இந்த உற்சாகமூட்டும் வார்த்தைகள் ஹங்கேரியில் வெளியிடப்பட்ட ஜூன் 2000 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் காணப்பட்டன. புடாபெஸ்ட்டில் கட்டப்போகும் புதிய கிளை அலுவலக வளாகத்தின் கட்டுமானப் பணியில் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டிலுள்ள யெகோவாவின் ஜனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்நாட்டின் 251 சபைகளின் சார்பாக 13,741 வாலண்டியர்கள் அந்தக் கட்டுமானப் பணியில் பங்குகொண்டார்கள்; அந்த வேலை இரண்டு ஆண்டுகள் பிடித்தது, ஒரு பழைய இராணுவ கட்டடத்தைப் புதுப்பித்து கட்டுவதும் அதில் உட்பட்டிருந்தது. அதன் பிரதிஷ்டை மே 10, 2003-⁠ல் நடந்தது, 22 நாடுகளைச் சேர்ந்த 554 விருந்தினர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். “யெகோவா தொடர்ந்து விளையச் செய்கிறார்” என்ற தலைப்பில் ஆளும் குழுவின் அங்கத்தினரான கை பியர்ஸ் பிரதிஷ்டை பேச்சு கொடுத்தார்.

மெக்சிகோவில் கிளை அலுவலக விரிவாக்கம் பலமுறை நடந்திருக்கிறது. 1974, 1985, 1989 ஆகிய ஆண்டுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டதுபோக, மார்ச் 15, 2003-⁠ல் 14 புதிய கட்டடங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. புதிய கட்டடங்களுக்காக 80,000 சதுர மீட்டர் அளவுக்கு அஸ்திவாரம் போடுவதில் ஒரு பிரத்தியேக சிக்கல் இருந்தது; அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அது ஓர் ஏரி இருந்த இடம்; அதனால் ஒரு பெரிய கட்டடத்தை தாங்கும் அளவுக்கு அந்த மண் உறுதியற்றிருந்தது. இரண்டாவதாக, அந்தப் பகுதியில் பூமியதிர்ச்சிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். ஆகவே, பாதுகாப்பான, உறுதியான அஸ்திவாரத்தை போடுவதற்கு தரைக்குள் 3,261 பில்லர்களை போட வேண்டியிருந்தது; அவை ஒவ்வொன்றும் சுமார் 24 மீட்டர் ஆழம் வரை சென்றன! திட்டமிட்டு கட்டுவதற்கு 12 ஆண்டுகள் எடுத்தன; மெக்சிகோவைச் சேர்ந்த 28,600 வாலண்டியர்களும் வெளிநாடுகளிலிருந்து வந்த 734 வாலண்டியர்களும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர்.

ஆளும் குழுவின் மூன்று அங்கத்தினர்கள் இதன் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் பங்குகொண்டனர். யெகோவாவுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொள்வதால் கிடைக்கும் பெரும் மகிழ்ச்சியைப் பற்றி கை பியர்ஸ் பேசினார். இந்த முடிவின் காலத்தில் கிறிஸ்தவர்கள் எதிர்ப்படும் சோதனைகளோடு ஒப்பிட கடவுளுடைய சேவையில் உண்மையுடன் ஈடுபடும்போது கிடைக்கும் ஆசீர்வாதங்கள் எவ்வளவு அதிகம் என்பதைப் பற்றி தியோடர் ஜாரக்ஸ் விளக்கினார். “சத்தியத்தின் கடவுளை வணங்குங்கள்!” என்ற தலைப்பில் ஸ்பானிய மொழியில் கெரட் லோயிஷ் பிரதிஷ்டை பேச்சு கொடுத்தார்.

நவம்பர் 23, 2002-⁠ல் பெரு கிளை அலுவலகம் பிரமாதமான புதிய ஐந்து மாடி அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டடம் உட்பட பல புதிய கட்டடங்களை பிரதிஷ்டை செய்தது. “விரிவாக்கம் யெகோவாவுக்கு துதி சேர்க்கிறது” என்ற தலைப்பில் கெரட் லோயிஷ் பிரதிஷ்டை பேச்சு கொடுத்தார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை லிமா நகரத்திலுள்ள சான் மார்க்கஸ் என்ற ஸ்டேடியத்தில் நடத்தப்பட்ட விசேஷித்த நிகழ்ச்சிக்கு 59,940 பேர் கூடிவந்தனர்; பெருவில் நடைபெற்று வரும் ராஜ்ய வேலையை யெகோவா மிகுதியாய் ஆசீர்வதித்திருப்பதைப் பற்றி அந்நிகழ்ச்சியில் பேசப்பட்டது. அந்த ஆசீர்வாதம் எவ்வளவு வெளிப்படையாக தெரிகிறது! 1946-⁠ல் ராஜ்ய வேலையை முன்னின்று வழிநடத்த முதன் முதலாக மிஷனரிகள் வந்தபோது அந்நாட்டில் பிரஸ்தாபிகளும் ஆர்வம் காட்டுவோரும் வெகுசிலரே இருந்தனர். இப்போதோ 916 சபைகளில் மொத்தம் 87,318 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்.

ரஷ்ய கிளை அலுவலகத்தின் புதிய குடியிருப்பு கட்டடங்களும், அலுவலகங்களும், சேமிப்புக் கிடங்குகளும் மே 17, 2003-⁠ல் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த நிகழ்ச்சிக்கு 600 விருந்தினரும் 350 பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களும் கூடிவந்தனர்; இவர்கள் 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தக் கிளை அலுவலகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் ஒரு பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது, அதற்குள்ளாக இவ்வளவு சீக்கிரத்தில் மீண்டும் விரிவுபடுத்துவதற்கான அவசியம் என்ன?

ரஷ்ய கிளை அலுவலகம் செ. பீட்டர்ஸ்பர்க்கின் எல்லைப் பகுதியில் உள்ள ஸோல்னிச்னாயி என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது பத்து நாடுகளில் நடைபெறும் ராஜ்ய பிரசங்க வேலையை கவனித்துக் கொள்கிறது. இந்தப் பரந்த பிராந்தியத்தில் 100-⁠க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன; 11 கால மண்டலங்களும் இந்த பிராந்தியத்தில் உட்படுகின்றன. ஆகவே, மொழிபெயர்ப்பு செய்வது இக்கிளை அலுவலகத்தின் முக்கியமான வேலையாகவும், விரிவடைந்து வரும் வேலையாகவும் இருக்கிறது. இப்போது, இக்கிளை அலுவலகத்தில் பைபிள் பிரசுரங்களை 34 மொழிகளில் சகோதரர்கள் மொழிபெயர்க்கிறார்கள். அதுமட்டுமல்ல, கடந்த பிரதிஷ்டைக்குப் பிற்பாடு, இப்பிராந்தியத்திலுள்ள பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை முன்பைவிட 40,000-⁠க்கும் மேலாக அதிகரித்துள்ளது​—⁠ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட 7,000 பேர் அதிகம்! “இந்த அதிகரிப்பு தொடர்ந்து முன்னேறிக்கொண்டே போகிறது” என கிளை அலுவலகம் அறிவிக்கிறது. யெகோவா அருளிய அபரிமிதமான ஆசீர்வாதங்களுக்கு நன்றிக்கடனாக ரஷ்ய சகோதரர்கள் மகிழ்ச்சியோடு ‘தங்களுடைய கூடாரத்தின் கயிறுகளை நீளமாக்கினார்கள்.’​—ஏசா. 54:2.

சனிக்கிழமை நடந்த பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு முதியவர்களான அநேக உண்மையுள்ள சாட்சிகளும் வந்திருந்தனர்; அவர்கள் சோவியத் ஆட்சியின்போது அதிக துன்புறுத்தலை அனுபவித்தவர்கள். ஆகாய் 2:7-⁠ல் “இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன்” என சொல்லப்பட்டிருப்பதன் அடிப்படையில் டேவிட் ஸ்பிளேன் பிரதிஷ்டை பேச்சு கொடுத்தபோது அனைவரும் அதற்கு கூர்ந்த கவனம் செலுத்தினர். இந்தப் புதிய கட்டடங்கள் அழகாக, கடவுளுக்கு புகழ் சேர்ப்பதாக இருந்தாலும், கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரின் தெய்வீக நடத்தையும் ஆவிக்குரிய குணங்களும்தான் முக்கியமாக யெகோவாவை மகிமைப்படுத்தி மெய் வணக்கத்தை அலங்கரிக்கின்றன என அவர் விளக்கினார். சில்லென்ற மழைத்தூறலையும் பொருட்படுத்தாது செ. பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள கிராஃப் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விசேஷ நிகழ்ச்சியில் 9,800 பேர் கலந்துகொண்டார்கள்.

உலகம் முழுவதிலும் உள்ள இப்படிப்பட்ட கிளை அலுவலகங்களில் மொத்தமாக 19,848 நியமிக்கப்பட்ட ஊழியர்கள் சேவை செய்கிறார்கள். இவர்கள் எல்லாரும் யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ முழுநேர ஊழியர்களின் உலகளாவிய அணியைச் சேர்ந்த அங்கத்தினர்கள்.

[பக்கம் 12, 13-ன் அட்டவணை/​படங்கள்]

2003 ஊழிய ஆண்டின் முக்கிய சம்பவங்கள்

செப்டம்பர் 1, 2002

செப்டம்பர் 1: காவற்கோபுர படிப்புக் கட்டுரைகளின் அமெரிக்க சைகை மொழி வீடியோ கேஸட் கிடைக்க ஆரம்பித்தது.

நவம்பர் 23: ஹெய்டியிலும் பெருவிலும் கிளை அலுவலகப் பிரதிஷ்டை.

ஜனவரி 1, 2003

ஜனவரி 1: தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் என்ற புதிய புத்தகத்தை சபைகள் பயன்படுத்த ஆரம்பித்தன.

பிப்ரவரி 15: கயானா கிளை அலுவலகப் பிரதிஷ்டை.

மார்ச் 15, 29: மெக்சிகோவிலும் கோட்டீவாரிலும் கிளை அலுவலகப் பிரதிஷ்டை.

ஏப்ரல் 16: நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்த 164 பேரை எரிட்ரியாவிலுள்ள அஸ்மராவைச் சேர்ந்த போலீஸ் காவலில் வைத்தது.

மே 1, 2003

மே 10, 17: ரஷ்யாவிலும் ஹங்கேரியிலும் கிளை அலுவலகப் பிரதிஷ்டை.

மே 20: கோஸாவோவில் யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்.

மே 22: ருமேனிய அரசு யெகோவாவின் சாட்சிகளை ஒரு அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக்கொண்டது. மாஸ்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு தடை விதிப்பதைக் குறித்த விசாரணை வரையறையற்ற காலத்திற்கு ஒத்திப்போடப்பட்டது.

ஆகஸ்ட்: பிரிட்டன் கிளை அலுவலகத்தில் புதிய MAN ரோலன்ட் லித்தோமன் அச்சு இயந்திரம் நிறுவப்பட்டது.

ஆகஸ்ட் 31, 2003

ஆகஸ்ட் 31: நவம்பர் 1999 முதற்கொண்டு வளரும் நாடுகளில் 7,730 ராஜ்ய மன்றங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 235 நாடுகளிலுள்ள பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 64,29,351

[படங்கள்]

ஹெய்டி

பெரு

[பக்கம் 11-ன் வரைபடம்]

(பிரசுரத்தைக் காண்க)

மொழிகளில் அதிகரிப்பு:

அனைத்து பிரசுரங்கள்

“காவற்கோபுரம்”

“விழித்தெழு!”

400

300

200

100

1880 1920 1960 2000

[பக்கம் 14-ன் படம்]

இம்ப்ரூவ்ட் இங்லிஷ் காம்ப்ரிஹென்ஷன் கோர்ஸின் பயிற்சியாளர்களும் அவர்களுடைய மனைவிமாரும்

[பக்கம் 22, 23-ன் படம்]

சிட்டி பஸ்ஸோடு ஒப்பிடுகையில் அச்சு இயந்திரம்

அச்சு இயந்திரத்தின் விவரம்:

நீளம்: 40 மீட்டர்

உயரம்: 5.5 மீட்டர்

எடை: 201 டன்

[பக்கம் 28, 29-ன் படங்கள்]

சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கிளை அலுவலக கட்டடங்கள் (1) கயானா, (2) ஹங்கேரி, (3) கோட் டீவார்