Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காங்கோ குடியரசு (ப்ரஜாவில்)

காங்கோ குடியரசு (ப்ரஜாவில்)

காங்கோ குடியரசு (ப்ரஜாவில்)

பார்சலை திறந்ததுமே, ஊதா நிற புத்தகத்தின் அட்டையில் “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற தலைப்பு தகதகவென மின்னியது. ஏட்டியெனின் முகத்தில் குழப்ப ரேகை படர்ந்தது. அந்தப் பார்சல் அவருக்குத்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏனெனில் அந்தத் தபாலில், ஏட்டியென் எங்கோயுயெங்கோயு, பாங்குய் அரசு அலுவலக தலைமை வரைவாளர், பிரெஞ்சு ஈக்குவிடோரியல் ஆப்பிரிக்கா என்ற விலாசம் இருந்தது. ஆனால் அந்தப் புத்தகத்தை அவர் ஆர்டர் செய்யவே இல்லை, அனுப்புநர் முகவரியில் குறிப்பிடப்பட்டிருந்த சுவிட்சர்லாந்தின் உவாட்ச் டவர் என்ற பெயரையும் கேள்விப்பட்டதில்லை. அந்தப் புத்தகத்தில் பொதிந்திருந்த பைபிள் சத்தியம் அவருடைய வாழ்க்கையை அடியோடு மாற்றும் என்பதை அவர் அப்போது துளிகூட எண்ணிப் பார்க்கவில்லை. பொய் மதம், இன தப்பெண்ணங்கள், படிப்பறிவின்மை ஆகியவற்றிலிருந்து அவருடைய சக ஆப்பிரிக்கர்கள் ஆயிரக்கணக்கானோரையும் அந்த சத்தியம் விடுதலையாக்கும். சிறந்த அரசியல் மாற்றங்கள், அதைத் தொடர்ந்து வரவிருந்த ஏமாற்றங்கள் ஆகியவற்றால் இழுப்புண்டு போவதிலிருந்தும் அது அநேகரை பாதுகாக்கும். படுபயங்கரமான காலகட்டத்தில் அது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் தரும். பிறருக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக தங்களுடைய உயிரையே பணயம் வைப்பதற்கும் தேவபயமுள்ள மக்களைத் தூண்டும். இந்தச் சம்பவங்களைப் பற்றிய வரலாறு உங்களை உந்துவிக்கும், உற்சாகப்படுத்தும். ஆனால் அடுத்து ஏட்டியென் என்ன செய்தார் என்பதை நாம் அறிந்து கொள்வதற்கு முன்னர், தனது தாயகம் என அவர் அழைத்த ஆப்பிரிக்க தேசத்தைப் பற்றிய பின்னணி தகவல்கள் சிலவற்றை இப்பொழுது சிந்திக்கலாம்.

1492-⁠ல் அமெரிக்காவுக்கு கிறிஸ்டோபர் கொலம்பஸ் தனது புகழ்பெற்ற கடற்பயணத்தை மேற்கொள்வதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னர், டியோகு காவுன் என்பவர் தலைமையில் போர்த்துகீசிய மாலுமிகள் மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ ஆற்று முகத்துவாரத்தில் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் பயணம் செய்திருந்த அந்த ஆறு பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமானது என்பதை அப்போது அவர்கள் அறியவில்லை.

உள்ளூர் மக்களை, அதாவது செழித்தோங்கிவரும் காங்கோ ராஜ்யத்தின் குடிமக்களை போர்த்துகீசியர்கள் சந்தித்தனர். இதற்குப் பின் பல நூற்றாண்டுகளாக போர்த்துகீசியர்களும் மற்ற ஐரோப்பிய வணிகர்களும் கடற்கரை ஓரத்தில் வாழ்ந்து வந்த ஆப்பிரிக்கர்களிடமிருந்து தந்தங்களையும் நீக்ரோ அடிமைகளையும் வாங்கி வந்தனர். 1800-களின் பிற்பகுதி வரை உள்நாட்டிற்குள் ஐரோப்பியர் நுழையத் துணியவில்லை. இந்தப் பிராந்தியத்திற்குள் ஆய்வுப்பயணம் செய்த மனிதர்களில் மிகவும் பிரபலமானவர் பையெர் சாவார்நியான் டா ப்ரஜா; இவர் பிரெஞ்சு கப்பற்படையில் ஓர் அதிகாரியாக பணிபுரிந்தவர். 1880-⁠ல், உள்ளூர் அரசர் ஒருவருடன் இவர் ஓர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டார். அதன்படி, காங்கோ ஆற்றுக்கு வடக்கே உள்ள பிராந்தியம் பிரான்சின் கட்டுப்பாட்டில் வந்தது. பிற்பாடு இந்தப் பிராந்தியம் பிரெஞ்சு ஈக்குவிடோரியல் ஆப்பிரிக்காவாக ஆனது. இதன் தலைநகரம் ப்ரஜாவில்.

இன்று காங்கோ குடியரசு என அழைக்கப்படும் இந்நாட்டில், ப்ராஜாவில் தலைநகரமாகவும் பெருநகரமாகவும் திகழ்கிறது. இந்நகரம் காங்கோ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பாறைகள் மற்றும் மலைத்தொடர்கள் வழியாக கடலை நோக்கி கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர் தூரம் வரை இந்த ஆறு பாய்ந்தோடுகிறது; இது கடலில் சங்கமிக்கும் இடத்தில்தான் காவுன் தனது ஆய்வுப் பயணத்தின்போது நங்கூரம் பாய்ச்சி கப்பலை நிறுத்தினார். ப்ரஜாவில் நகரிலிருந்து ஆற்றின் அப்புறத்திலுள்ள தொடுவானில் கின்ஷாசாவை நீங்கள் காணலாம்; காங்கோ மக்கள் குடியரசின் தலைநகரே இந்த கின்ஷாசா. இரு நாடுகளும் அந்த ஆற்றின் பெயரை தாங்கியிருப்பதால், அவற்றை காங்கோ (ப்ரஜாவில்) மற்றும் காங்கோ (கின்ஷாசா) என அழைப்பது சகஜம்.

ப்ரஜாவில்லைத் தாண்டி நீரோட்டம் வேகமாக இருப்பதாலும் இடையிடையே நீர்வீழ்ச்சிகள் இருப்பதாலும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு ஆற்றின் வழியாக பயணிப்பது சாத்தியமற்றது. என்றாலும், ப்ரஜாவில்லுக்கும் பாய்ன்ட் நாய்ர் என்ற கடலோர நகரத்திற்கும் இடையே இருப்புப்பாதை இணைப்பு இருக்கிறது. காங்கோ வாசிகள் பெரும்பாலோர் இவ்விரு நகரங்களைச் சுற்றியே வாழ்கிறார்கள். கடலோர பட்டணங்கள் மற்றும் நகரங்கள் சில வடக்குப் பகுதியில் சற்று தூரத்தில் அமைந்திருக்கிற போதிலும், இந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மிகுந்த வெப்பமாகவும் அடர்ந்த காடுகளாகவும் இருப்பதால் மக்கள் ஆங்காங்கேதான் குடியிருக்கிறார்கள்.

சத்தியம் மனிதரை விடுதலையாக்க ஆரம்பிக்கிறது

இப்பொழுது நாம் மறுபடியும் ஏட்டியெனின் கதைக்கு வரலாம். 1947-⁠ம் ஆண்டில் அப்புத்தகத்தை அவர் தபாலில் பெற்றார். அதே நாளில், அதிலுள்ள முதல் சில அதிகாரங்களை வாசித்துவிட்டார்; தான் வாசித்த விஷயத்தைப் பக்கத்து வீட்டிலிருந்த ஒருவருடன் பேசவும் ஆரம்பித்தார். இருவரும் சத்தியத்தின் தொனியை உணர்ந்து கொண்டார்கள். ஆகவே அடுத்துவந்த ஞாயிற்றுக்கிழமையில் அப்புத்தகத்தை வாசித்து வேதவசனங்களுடன் ஒத்துப்பார்ப்பதற்காக நண்பர்கள் சிலரை அழைத்தார்கள். வந்தவர்களும் தாங்கள் கற்றுக்கொண்ட விஷயத்தைக் குறித்து சந்தோஷப்பட்டு, அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் சந்திக்கத் தீர்மானித்தார்கள். இரண்டாவது சந்திப்பின்போது, கஸ்டம்ஸ் ஆபீஸராக வேலை பார்த்து வந்த அகஸ்டன் பயன் என்பவரும் ஆஜராயிருந்தார். ஏட்டியெனைப் போல அவரும் ப்ரஜாவில்லைச் சேர்ந்தவர், மெய்யான விடுதலையைத் தரும் சத்தியத்தைப் பரப்புவதில் அவரும் ஆர்வமடைந்தார்.

அடுத்த வாரத்தில் ஏட்டியெனுக்கு இரண்டு கடிதங்கள் வந்தன. ஒரு கடிதம், கேமரூனில் வசிக்கும் ஒருவரிடமிருந்து வந்திருந்தது; ஏட்டியெனுக்கு மதத்தில் ஆர்வம் இருந்ததை அவர் அறிந்திருந்தார். ஏட்டியெனுடைய பெயரை சுவிட்சர்லாந்திலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு அனுப்பியிருந்ததாக அதில் அவர் எழுதியிருந்தார். இரண்டாவது கடிதம், சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருந்தது; ஏட்டியெனுக்கு ஒரு புத்தகத்தை அனுப்பி வைத்திருப்பதாகவும், அப்புத்தகத்தை வாசித்து அதை அவரது குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுமாறும் அதில் எழுதப்பட்டிருந்தது. கூடுதலான தகவலை பெற்றுக்கொள்வதற்கு பிரான்சு நாட்டு விலாசம் ஒன்றும் அதில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தப் புத்தகம் தனக்கு கிடைத்த காரணத்தை இப்பொழுது ஏட்டியென் அறிந்துகொண்டார். விரைவில், பிரான்சிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துடன் தவறாமல் கடிதத் தொடர்பு வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்.

சில வருடங்களுக்குள், ஏட்டியெனும் அகஸ்டனும் ப்ரஜாவில் நகருக்குத் திரும்பினார்கள். ஆனால் அதற்கு முன்பு, ப்ரஜாவில்லில் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய டிமாட்டே மியிமுன்வா என்ற தனது நண்பருக்கு ஏட்டியென் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தின் தொடக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “நாம் இதுவரை கடைப்பிடித்து வந்திருக்கிற மதம் சத்திய மார்க்கம் அல்ல. யெகோவாவின் சாட்சிகளிடம்தான் சத்தியம் இருக்கிறது என்பதை உனக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.” அதைத் தொடர்ந்து தான் கற்றுக்கொண்டதை ஏட்டியென் விளக்கி எழுதியிருந்தார். “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற புத்தகத்தையும் அத்துடன் சேர்த்து அனுப்பினார். ஏட்டியெனையும் அகஸ்டனையும் போல, பைபிள் செய்திக்கு டிமாட்டே சாதகமாக பிரதிபலித்தார். இவர்களே முதன்முதலில் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட காங்கோ நாட்டவர்; இவர்கள் ஒவ்வொருவரும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள இன்னும் அநேகருக்கு உதவ ஆரம்பித்தார்கள்.

மாலை வேளைகளில் பைபிள் சம்பாஷணையில் கலந்துகொள்வதற்காக அந்தத் தொழில்நுட்பக் கல்லூரியில் தங்கிப் பயின்ற மாணவர்களையும் டிமாட்டே அழைத்தார். கூடுதலாக பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களை அனுப்பி வைக்கும்படியும் கடிதம் எழுதினார். அந்தச் சிறு தொகுதியினர் கூட்டங்களை நடத்தவும் தங்களால் இயன்றளவு பிரசங்கிக்கவும் ஆரம்பித்தனர். நோயி மிக்வீஸா, சீமோன் மாம்பூயா போன்ற மாணவர்கள் சிலர், பிற்காலத்தில் யெகோவாவின் அமைப்பில் கண்காணிகளாக சேவை செய்யும் சிலாக்கியத்தைப் பெற்றார்கள்.

1950-⁠ல், தென் ரோடீஷியாவில் (தற்போதைய ஜிம்பாப்வே) வசித்துவந்த எரிக் குக் என்ற மிஷனரி பங்குய் மற்றும் ப்ரஜாவில்லில் இருந்த ஆர்வமுள்ள சிறு தொகுதியினரை சந்தித்து உற்சாகப்படுத்த வந்தார். ஆனால் சகோதரர் குக்கிற்கு பிரெஞ்சு மொழி தெரியாதது ஒரு பிரச்சினையாக இருந்தது. ஏட்டியென் கூறுகிறார்: “மனத்தாழ்மையும் கரிசனையுமிக்க இந்தச் சகோதரர் ஒரு சிறிய ஆங்கில-பிரெஞ்சு டிக்ஷ்னரியை வைத்திருந்தார், அதை வைத்தே ராஜ்ய பிரசங்கிப்பு வேலையையும் தேவராஜ்ய ஒழுங்கமைப்பையும் பற்றி எங்களுக்கு விளக்குவதற்கு முடிந்தளவு எல்லா முயற்சியும் செய்தார். சிலசமயங்களில், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை நாங்களாகவே ஊகித்துக்கொள்ள வேண்டியிருந்தது.”

கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன

சகோதரர் குக்கின் சந்திப்பு சரியான நேரத்தில் அமைந்துவிட்டது. ஏனென்றால் ஜூலை 24, 1950-⁠ல், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை இறக்குமதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் குடியேற்ற நாட்டு அதிகாரங்களின் மேலாணையர் தடை விதித்தார். அடுத்த ஆண்டில், பிரெஞ்சு ஈக்குவிடோரியல் ஆப்பிரிக்காவில் வசித்துவந்த பிரஸ்தாபிகள் 468 முறை பொதுக் கூட்டங்களை நடத்தியபோதிலும் ஆறு பிரசுரங்களை மட்டுமே விநியோகித்திருந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1952 (ஆங்கிலம்) சகோதரர்களின் நிலைமையை புரிந்துகொள்ளுதலோடும் அனுதாபத்தோடும் இவ்வாறு விவரித்தது: “வெறும் 37 பிரஸ்தாபிகளையே கொண்ட பரந்த பிராந்தியத்தில் நீங்கள் வசிப்பதாக கற்பனை செய்து பாருங்கள்; அவர்கள் ஆங்காங்கே சிதறியிருக்கிறார்கள். உங்களுடைய சொந்த ஊரிலுள்ள சாட்சிகளில் சிலரைத் தவிர வேறொருவரையும் நீங்கள் ஒருபோதும் சந்தித்ததில்லை. சத்தியத்தையும் சாட்சி கொடுப்பதற்கான முறையையும் பற்றி உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் பிரசுரங்களிலிருந்தும் சங்கத்திடமிருந்து வந்த சில கடிதங்களிலிருந்தும் படித்ததுதான். [இப்படிப்பட்ட நிலைமைதான்] பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்ட ஆப்பிரிக்காவிலுள்ள சகோதரர்களுக்கு இருக்கிறது.”

பிற்பாடு, இந்தத் தொகுதியினரை உற்சாகப்படுத்துவதற்கும் கூடுதலான பயிற்சி அளிப்பதற்கும் ஷாக் மீஷெல் என்பவர் பிரான்சிலிருந்து வந்தார். தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களில் ஒருவராகிய நோயி மிக்வீஸா சொல்கிறபடி, அந்தத் தொகுதியினரின் மனதில் ஒரு கேள்வி இருந்தது. “திராட்சைரசம் குடிப்பது தவறா?” என அவர்கள் கேட்டார்கள். சகோதரர் மீஷெல் தன்னுடைய பைபிளை சங்கீதம் 104:15-⁠க்குத் திருப்பினார்; எல்லாருடைய கண்களும் அவர் மீதே பதிந்திருந்தன. அந்த வசனத்தை வாசித்தபின், திராட்சைரசம் கடவுள் தந்த ஒரு பரிசு, என்றாலும் அதை அளவுக்கு அதிகமாய் குடிக்கக் கூடாது என ஷாக் விளக்கினார்.

ப்ரஜாவில்லில் புதிதாக முழுக்காட்டப்பட்ட சகோதரர்கள் மற்றவர்களிடம் வைராக்கியமாய் சாட்சி கொடுத்தார்கள். வாரயிறுதி நாட்களில், கின்ஷாசாவில் பிரசங்கிப்பதற்காக வழக்கமாக படகில் ஏறி ஆற்றைக் கடந்து செல்வார்கள். 1952-⁠ல், ஆற்றுக்குத் தெற்கே வசித்துவந்த முதல் காங்கோ நாட்டவர்கள் முழுக்காட்டுதல் பெற்றார்கள். அந்த ஆரம்ப காலங்களில் கின்ஷாசாவில் இருந்தவர்களுக்கு இந்தச் சகோதரர்கள் அதிக உதவி செய்தார்கள். பிற்பாடு இந்நிலை தலைகீழாக மாறியது.

டிசம்பர் 1954-⁠ல், ப்ரஜாவில்லில் சகோதரர்கள் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தார்கள். அந்த மாநாட்டில் 650 பேர் கலந்து கொண்டார்கள், அவர்களில் 70 பேர் முழுக்காட்டப்பட்டார்கள். சத்தியம் அதிகமதிகமானோரை பொய் மதத்திலிருந்து விடுதலையாக்கியது. அதே சமயத்தில், கிறிஸ்தவமண்டல மதத் தலைவர்கள் இதைக் குறித்து சந்தோஷப்படவில்லை, யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக அரசாங்க அதிகாரிகளை கிளப்பிவிட முயன்றார்கள். டிமாட்டே மியிமுன்வாதான் சாட்சிகளின் தலைவர் என போலீஸ் நினைத்தார்கள், ஆகவே போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும்படி அவருக்கு அடிக்கடி ‘சம்மன்’ அனுப்பினார்கள். அவரை அச்சுறுத்தினார்கள், அடித்தார்கள். இது அவரையும் சோர்வடையச் செய்யவில்லை, ப்ரஜாவில்லிலிருந்த மற்ற யெகோவாவின் ஜனங்களையும் பயமுறுத்தவில்லை. பைபிள் சத்தியத்தின் மீதிருந்த ஆர்வக் கனல் தொடர்ந்து பற்றியெரிந்தது.

அதற்குப் பிறகு, அதிகாரிகள் மேலுமான நடவடிக்கைகள் எடுத்தார்கள். டிமாட்டே மியிமுன்வாவும், சத்தியத்தை ஏற்றுக்கொண்ட முன்னாள் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களில் ஒருவராகிய ஆரோன் டியாமானிகாவும் அரசாங்க வேலையில் அமர்த்தப்பட்டிருந்தார்கள். 1955-⁠ல் அரசாங்கம் அவர்களை தொலைதூரத்திலிருந்த நகரங்களுக்கு மாற்றியது. ஜாம்பாலா நகருக்கு டிமாட்டே மாற்றப்பட்டார், இம்ப்ஃபான்டா நகருக்கு ஆரோன் மாற்றப்பட்டார். பிரசங்க வேலையை குலைப்பதற்கு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை முற்றிலும் தோல்வி கண்டது. ப்ரஜாவில்லிலிருந்த சகோதரர்கள் சிறிதும் சளைக்காமல் வைராக்கியத்​தோடு தொடர்ந்து தங்களுடைய வேலையை செய்தார்கள், அதே​சமயத்தில் டிமாட்டேயும் ஆரோனும் தங்கள் புதிய பிராந்தியங்களில் பிரசங்கம் செய்து சபைகளை ஸ்தாபித்தார்கள். அந்தச் சகோதரர்கள் வைராக்கியமாய் இருந்தபோதிலும், மற்ற நாடுகளிலுள்ள சகோதரர்களின் உதவி கிடைக்காதா என ஏங்கினார்கள். அது விரைவில் கிடைக்கவிருந்தது.

மார்ச் 1956-⁠ல், பிரான்சிலிருந்து முதலாவதாக நான்கு மிஷனரிகள் வந்தார்கள். ஷான் மற்றும் ஈடா சானியாபாஸ், கிளாட் மற்றும் சீமோன் டியூபான்ட் என்பவர்களே இவர்கள். ஜனவரி 1957-⁠ல், கிளை அலுவலகம் ஒன்று ப்ரஜாவில்லில் ஸ்தாபிக்கப்பட்டது; அது பிரெஞ்சு ஈக்குவிடோரியல் ஆப்பிரிக்காவில் சாட்சிபகரும் வேலையை கவனித்துக்கொண்டது. சகோதரர் சானியாபாஸ் கிளை அலுவலகக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். ஆனால் கொஞ்ச காலத்திற்குள் விபரீத சம்பவம் நடந்தது; அவரது மனைவி ஈடா ஒரு கார் விபத்தில் இறந்துபோனார்; இப்பொழுது மத்திய ஆப்பிரிக்க குடியரசு என அழைக்கப்படும் நாட்டிலிருந்த சபைகளுக்கு இந்தத் தம்பதியர் விஜயம் செய்து கொண்டிருந்தபோதுதான் விபத்து நிகழ்ந்தது. இருந்தாலும் ஷான் தொடர்ந்து இந்த நியமிப்பில் சேவை செய்தார்.

உள்நாட்டில் பிரசங்கித்தல்

இதற்குள் அகஸ்டன் பயன் வட்டாரக் கண்காணியாக ஆனார். அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்த கிராமங்களுக்கும், நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் ஆப்பிரிக்க குள்ளர்கள் வசித்து வந்த இடங்களுக்கும் அகஸ்டன் விஜயம் செய்தார். இவர் அடிக்கடியும் வெகு தூரமும் நடந்ததால், “நடை ராஜா” என அந்த வட்டாரம் முழுவதும் அழைக்கப்பட்டார். சில சமயங்களில், ஷான் சானியாபாஸும் சகோதரர் பயனுடன் சென்றார். நிலநடுக்கோட்டு காட்டுவாசிகள்கூட தாங்கள் வரப்போவதை முன்னரே அறிந்திருந்ததைக் கண்டு ஷான் ஆச்சரியப்பட்டார். “‘நடை ராஜா’ வெள்ளைக்காரருடன் வருகிறார்” என்ற செய்தி முரசு கொட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சுற்றுப் பயணங்கள் மிகுந்த பலன்களைத் தந்தன. இதற்கு முன்னர், யெகோவாவின் சாட்சிகள் காங்கோவில் (ப்ரஜாவில்லில்) மட்டுமே இருப்பதாக மக்கள் கூறினார்கள். ஆனால் சகோதரர் சானியாபாஸும் மற்ற மிஷனரிகளும் வந்த பிறகும், புதிய உலக சமுதாயம் செயலில் (ஆங்கிலம்) என்ற படத்தை பார்த்த பிறகும் அவர்கள் உண்மையை புரிந்துகொண்டார்கள்.

பைபிள் சத்தியம் கிராமங்களுக்குள்ளும் ஊடுருவிப் பரவியதால் ஆவியுலக பழக்கங்களிலும் குல வேறுபாடுகளிலும் கட்டுண்டிருந்த மக்கள் விடுதலை அடைந்தார்கள். இந்தப் பகுதியில் வாழ்ந்த சகோதரர்கள் பெரும்பாலோருக்கு கல்வியறிவு இல்லை. அவர்களிடம் கடிகாரம் இல்லாததால், சூரியனின் நிலையை வைத்து கூட்டங்களுக்குப் போகும் நேரத்தை தீர்மானித்தார்கள். வெளி ஊழியத்தில் செலவழித்த நேரத்தை கணக்கிடுவதற்கு, அவர்கள் சிறு சிறு குச்சிகளைப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு தடவையும் யாரிடமாவது சாட்சி கொடுத்த பிறகு ஒரு குச்சியை கைக்குட்டைக்குள் சுருட்டி வைத்துக்கொள்வார்கள். நான்கு குச்சிகள் சேர்ந்தால் ஒரு மணிநேரம் என கணக்கிட்டார்கள். இவ்வாறு, அவர்கள் மாதக் கடைசியில் தங்களுடைய வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்க முடிந்தது. ஆனால் உண்மையில் அந்தச் சகோதரர்கள் அறிக்கை செய்த மணிநேரத்தைவிட அதிக மணிநேரம் பிரசங்கித்தார்கள், ஏனென்றால் சத்தியமே அவர்களுடைய அன்றாட உரையாடல்களின் முக்கிய பொருளாக இருந்தது.

சட்டப்பூர்வ முன்னேற்றங்களும் அரசியல் மாற்றங்களும்

1950-⁠ல், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் இறக்குமதி செய்யப்படுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். ஆனால் நாம் பார்த்தபடி, இது சீஷராக்கும் வேலையை தடுத்து நிறுத்தவில்லை. கிறிஸ்தவமண்டல பாதிரிமார்கள் ஏமாற்றமடைந்ததால், யெகோவாவின் சாட்சிகளை கம்யூனிஸவாதிகள் என்று பொய்யாக குற்றஞ்சுமத்தி அரசு நிர்வாக அதிகாரியிடம் புகார் செய்தார்கள். அதன் விளைவாக, 1956-⁠ல் வியாழக்கிழமை அன்று அதிகாலை ஐந்து மணிக்கு பத்து சகோதரர்கள் கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் கைது செய்யப்பட்ட செய்தி காட்டுத் தீ போல வேகமாக பரவியது; மத விரோதிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள். நீதிமன்றத்தில் அதே நாளில் விசாரணை நடந்தது, அதைப் பார்க்க வந்திருந்த சகோதரர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நோயி மிக்வீஸா இவ்வாறு கூறுகிறார்: “நாங்கள் கம்யூனிச வாதிகள் அல்ல, ஆனால் மத்தேயு 24:14-⁠ல் எழுதப்பட்டுள்ளதை நிறைவேற்றும் கிறிஸ்தவர்கள், கடவுளுடைய ஊழியர்கள் என்பதை விசாரணையின்போது நிரூபித்தோம். எல்லாரும் யெகோவாவின் சாட்சிகளைப் போலிருந்தால் சட்ட விரோதிகள் யாருமே இருக்க மாட்டார்கள் என நமது பிரசுரங்களை வாசித்திருந்த நம்முடைய வக்கீல் கூறினார். அதே நாள் பிற்பகலில் நாங்கள் நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எங்களுக்கு ஒரே சந்தோஷம், அன்று சாயங்காலம் மீட்டிங் இருந்ததால் டிரெஸ் மாற்றிக்கொள்ள நாங்கள் எல்லாரும் அவசர அவசரமாக வீட்டிற்கு வந்தோம். நாங்கள் கைது செய்யப்பட்ட செய்தி நகரமெங்கும் பரவியிருந்தது, அதனால் நாங்கள் விடுதலை செய்யப்பட்டதை எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்பினோம். கூட்டத்தில் எங்களால் முடிந்தவரை சத்தமாக ராஜ்ய பாடல்களைப் பாடினோம். நாங்கள் பாடுவதைக் கேட்ட அநேகர் அதிர்ச்சியடைந்தார்கள். ஏனென்றால் நாங்கள் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்போம் என அவர்கள் நினைத்திருந்தார்கள்.”

ஆகஸ்ட் 15, 1960-⁠ல், காங்கோ குடியரசுக்கு சுதந்திரம் கிடைத்தது. அரசியல் வன்முறை வெடித்தது. கிறிஸ்தவ மண்டல பாதிரிமார்கள் இவற்றில் மும்முரமாக இருக்கையில், யெகோவாவின் சாட்சிகளோ தொடர்ந்து தங்களுடைய பிரசங்க வேலையில் ஈடுபட்டார்கள். 1960-⁠ல், மொத்தம் 3,716 பேர் ப்ரஜாவில்லில் நடைபெற்ற வட்டார மாநாட்டில் கலந்து கொண்டார்கள். வடக்கே இருந்த ஜனங்களும் சபைகளுக்கு திரண்டு வந்தார்கள். உதாரணமாக, 70 பிரஸ்தாபிகள் வசிக்கும் ஒரு பகுதியில், சுமார் ஆயிரம் பேர் சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டார்கள்.

டிசம்பர் 1961-⁠ல், லே டேம்வென் டெ ஷெயோவா என்ற பெயரில் சட்டப்பூர்வ ஸ்தாபனம் ஒன்றை சாட்சிகள் பதிவு செய்தார்கள். சட்டப்பூர்வ அங்கீகாரத்தால் பல நன்மைகள் கிடைத்தன, ஆனால் இவற்றின் மீது முழுமையாக சார்ந்திருப்பது ஞானமானதல்ல என்பதை சகோதரர்கள் அறிந்திருந்தார்கள். சீக்கிரத்திலேயே என்ன சம்பவித்தது என்பதை சகோதரர் சானியாபாஸ் விவரிக்கிறார்: “பாதுகாப்பு அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் எனக்கு ‘சம்மன்’ அனுப்பினார்; அவர் நம்முடைய கிறிஸ்தவ நடுநிலை வகிப்பை கண்டனம் செய்தார். நாட்டை விட்டு என்னை வெளியேற்றி விடுவதாக பயமுறுத்தினார். அப்படி செய்துவிடுவாரோ என பயந்தேன், ஏனென்றால் அவருக்கு அப்படிப்பட்ட அதிகாரம் இருந்தது. ஆனால் அடுத்த நாள் மாரடைப்பால் இறந்துவிட்டார்.”

1960-களில் மிஷனரி வாழ்க்கை

பிப்ரவரி 1963-⁠ல், ஃபிரெட் லூக்கஸும் மாக்ஸ் டானிலேகோவும் ஹெய்டியிலிருந்து வந்தார்கள். ஃபிரெட் கலியாணம் செய்துகொண்ட பிறகு, வட்டாரக் கண்காணியாக சேவை செய்தார். ஆரம்பத்தில், சபைகளை சந்தித்தபோது, ஒவ்வொரு குடும்பத்திலுள்ள அங்கத்தினர்கள் யார் யார் என்பதை அடையாளம் கண்டுபிடிப்பதே அவருக்கு சிரமமாக இருந்தது. அவர் சொல்வதாவது: “மூப்பர்களுடைய மனைவிகள் யார் யாரென்றே எனக்குத் தெரியவில்லை, அவர்களுடைய பிள்ளைகள் யார் என்பதையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் மத்திய ஆப்பிரிக்க பழக்கத்தின்படி, திருமணம் செய்த பிறகும் மனைவிகள் தங்களுடைய முந்தைய பெயர்களையே வைத்துக் கொண்டார்கள், பிள்ளைகளுக்கோ உறவினர் அல்லது குடும்ப நண்பருடைய பெயரை வைத்தார்கள்.

“ராஜ்ய மன்றத்தில் முதல் நாள் ராத்திரி விஜயம் செய்தபோது அங்கிருந்த சகோதர சகோதரிகள் அமைதலாக இருந்தார்கள், எங்களிடம் பேசக்கூட தயங்கினார்கள். கூட்டம் ஆரம்பித்தவுடனே, வினோதமான ஒன்றை நாங்கள் கவனித்தோம். சகோதரர்களும் பெரிய பையன்களும் மன்றத்தின் ஒரு புறத்தில் உட்கார்ந்தார்கள்; சிறு பிள்ளைகளும் சகோதரிகளுமோ மறுபுறத்தில் உட்கார்ந்தார்கள். முதலில் சகோதரர்கள் உட்கார்ந்திருந்த பக்கம் நிரம்பி வழிந்தது, சகோதரிகள் இருந்த பக்கத்தில் சிலரே அமர்ந்திருந்தார்கள். ஆனால் பாதிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, இன்னுமதிக சகோதரிகள் தங்கள் சின்னஞ்சிறுசுகளுடன் வந்து சேர்ந்தார்கள்; பைபிள்களையும் புத்தகங்களையும் தலைமீது ஒய்யாரமாக வைத்துக்கொண்டு வந்தார்கள்.

“சபையாரை வரவேற்பதற்கும் என்னையும் என்னுடைய மனைவியையும் அறிமுகப்படுத்திக் கொள்வதற்கும் நான் மேடைக்குச் சென்றேன். உளங்கனிந்த வரவேற்பு கொடுத்தபின், நான் சற்று நிறுத்தி, ஆண்கள் உட்கார்ந்திருந்த பக்கத்தை நோட்டமிட்டு, ‘சகோதரர்களே, பத்து நிமிடம் தருகிறேன், அதற்குள் உங்களுடைய மனைவி பிள்ளைகளை கண்டுபிடியுங்கள். இதுமுதல், உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் ஜனங்கள் செய்வது போல எல்லாரும் தயவுசெய்து குடும்பமாக சேர்ந்து உட்காருங்கள்’ என்று சொன்னேன். அவர்கள் சந்தோஷத்துடன் அதற்கு கீழ்ப்படிந்தார்கள்.”

பொதுப் போக்குவரத்தும்கூட பெரும் பிரச்சினையாக இருந்தது. சகோதரர் லூக்கஸின் மனைவி லியா சொல்கிறார்: “சிறிய மடக்கு கட்டில், கொசு வலை, ஒரு பக்கெட், வாட்டர் ஃபில்டர், துணிமணிகள், புத்தகங்கள், பத்திரிகைகள், பைபிள் சம்பந்தமான ஃபில்ம்கள் ஆகியவற்றை நாங்கள் ‘பேக்’ பண்ணுவோம். ஃபில்ம்கள் காட்ட வேண்டுமானால், நாங்கள் எலக்ட்ரிக் ஒயர்களையும் பல்புகளையும் படச்சுருள்களையும் ஸ்கிரிப்ட்டுகளையும் சிறிய ஜெனரேட்டரையும் ஒரு கேனில் எண்ணெயையும் கொண்டுபோக வேண்டும். இவையெல்லாவற்றையும் நாங்கள் ஒரு டிரக்கில் கொண்டு வந்தோம். டிரைவர் இருக்கும் முன்பகுதியில் இடம் பிடிக்க, நாங்கள் காலையில் இரண்டு மணிக்கே ஸ்டாப்புக்கு வந்துவிட வேண்டியிருந்தது. இல்லையென்றால், மொட்டை வெயிலில் காய்ந்துகொண்டு ஆடுமாடு, மூட்டை முடிச்சு, சக பயணிகளுடன் நெருக்கத்தில் டிரக்கின் பின்னாடிதான் உட்கார வேண்டியிருந்தது.

“ஒரு தடவை, வெயிலில் கால்கடுக்க பல மணிநேரம் நடந்தபின் நாங்கள் தங்கியிருந்த சிறு மண்குடிசைக்கு ஒடிந்துபோய் வந்து சேர்ந்தபோது இராணுவ எறும்புகள் படையெடுத்திருந்ததைப் பார்த்தோம். அவை தண்ணீர் பக்கெட்டில் ஏறி, அவற்றின் உடல்களாலேயே பாலம் அமைத்து, ஒரு சிறிய கேனில் இருந்த மார்கரைனையெல்லாம் ‘திருடித்’ தின்றிருந்தன. அன்றைக்கு ராத்திரி சாப்பாட்டுக்கு வெறும் காய்ந்த டோஸ்ட்டும் பாதி கேனில் இருந்த மீனும்தான் எங்களுக்கு மிஞ்சியது. எங்களுக்கு ரொம்ப களைப்பாக இருந்தது, எங்களைப் பார்த்து எங்களுக்கே சற்று பரிதாபமாகவும் இருந்தது, இருந்தாலும் நாங்கள் படுக்கைக்குச் சென்றோம்; வெளியில் சகோதரர்கள் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு மெல்லிய குரலில் ராஜ்ய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். தூங்குவதற்கு ஏற்றாற்போல் இந்தச் சூழல் எவ்வளவு இதமாகவும் சுகமாகவும் இருந்தது!”

உண்மை தவறா மிஷனரிகளும் உள்ளூர் மூப்பர்களும்

1956 முதல் 1977 வரை 20-⁠க்கும் மேற்பட்ட மிஷனரிகள் காங்கோவில் (ப்ரஜாவில்) சேவை செய்திருக்கிறார்கள். அங்கே அவர்களுக்கு வாழ்க்கை வசதியாக அமையாவிட்டாலும் ராஜ்ய பிரசங்க வேலை சம்பந்தமாக அவர்கள் எல்லாருமே மதிப்புமிக்க சேவை செய்தார்கள். உதாரணத்திற்கு, கிளை அலுவலக ஊழியர்களாக சேவை செய்தவர்கள் எல்லாருமே மிஷனரிகளாக இருந்தார்கள். 1962-⁠ல் சகோதரர் சானியாபாஸ் பிரான்சுக்கு திரும்பிச் சென்றபோது, பிரசங்க வேலையை கண்காணிப்பதற்காக லாரி ஹோமஸ் நியமிக்கப்பட்டார். 1965-⁠ல் லாரியும் அவருடைய மனைவி ஆட்ரியும் மிஷனரி சேவையை விட்டுவிட்டபோது, சகோதரர் லூக்கஸ் கிளை அலுவலக ஊழியரானார்.

முன்னின்று வழிநடத்துவதில் அநேக உள்ளூர் சகோதரர்களும்கூட தலைசிறந்த முன்மாதிரிகளாக விளங்கினார்கள். 1976-⁠ல் கிளை அலுவலகக் குழு என்ற ஏற்பாடு ஒழுங்கமைக்கப்பட்டபோது அதன் அங்கத்தினர்களாக மூன்று சகோதரர்களை ஆளும் குழு நியமித்தது. ஜாக் யோஹன்சன், பல்லா பையெர் என்ற இரண்டு மிஷனரிகளும், மார்ஸலன் ங்காலா என்ற உள்ளூர் சகோதரருமே அதன் அங்கத்தினர்கள்.

1962-⁠ல் அகஸ்டன் பயன்​—⁠நடை ராஜா​—⁠கிலியட் பள்ளியின் 37-⁠ம் வகுப்பில் கலந்துகொண்டார். பட்டம் பெற்ற பிறகு அவர் மத்திய ஆப்பிரிக்க குடியரசுக்குச் சென்றார். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற புத்தகத்தை அவர் அங்குதான் வாசித்திருந்தார். பிற்பாடு, அகஸ்டனுக்கு திருமணமாகி பிள்ளைகளும் பிறந்ததால் அவர் ப்ரஜாவில்லுக்குத் திரும்பினார். அங்கே தன்னுடைய வீட்டில் கிறிஸ்தவ கூட்டங்கள் நடத்த இடமளித்தார். பிறகு, தன்னுடைய நிலத்தில் ஒரு பகுதியை ராஜ்ய மன்றம் கட்டுவதற்கு நன்கொடையாக வழங்கினார், பிற்பாடு அதில் ஒரு ராஜ்ய மன்றம் கட்டப்பட்டது.

அகஸ்டன் பயனும் டிமாட்டே மியிமுன்வாவும் இறந்துவிட்டார்கள். டிமாட்டே மரிப்பதற்கு முன்பு தனது அனுபவங்கள் சிலவற்றை எழுதி வைத்தார். அதன் முடிவில், எபிரெயர் 10:39-ஐ அவர் குறிப்பிட்டிருந்தார். “நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்” என அந்த வசனம் சொல்கிறது. காங்கோவில் முதன்முதலாக சத்தியத்தை ஏற்றுக்கொண்ட மூன்று பேரில் ஒருவரான ஏட்டியென் எங்கோயுயெங்கோயுவுக்கு இப்போது கிட்டத்தட்ட 90 வயது ஆகிறது. உண்மை தவறா சேவைக்கு இந்தச் சகோதரர்கள் எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரிகள்!

சோதனைக் காலம்

ஆகஸ்ட் 1970-⁠ல், கம்யூனிஸத்தைப் போன்ற ஒரு அரசாங்கத்தை காங்கோ குடியரசு ஸ்தாபித்தது. ஒரு காலத்தில், நம் சகோதரர்களுக்கு அதிகாரிகள் பல தொல்லைகளைக் கொடுத்து கம்யூனிஸவாதிகள் என அவர்களை குற்றம் சாட்டியது உங்களுக்கு நினைவிருக்கும். இப்போதோ, கம்யூனிஸவாதிகளான புது அதிகாரிகள், சகோதரர்கள் கம்யூனிஸவாதிகளாக இல்லாததால் குற்றம் கண்டுபிடித்தார்கள்.

ஆனால், இந்தப் புதிய அரசாங்கம் சிறிது காலத்திற்கு யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையில் தலையிடவில்லை. மாநாடுகளும் கூட்டங்களும் யாவரறிய பகிரங்கமாக நடத்தப்பட்டன, நாட்டில் புதிய மிஷனரிகள் அனுமதிக்கப்பட்டனர். என்றாலும், நாளடைவில் கம்யூனிஸ ஆட்சியின் பாதிப்புகளை சகோதரர்கள் உணர ஆரம்பித்தார்கள். முதலில், அதிகாரிகள் சிலர் மிஷனரிகளை உளவாளிகள் என்று சொல்லி குற்றம் சாட்டினார்கள். பிறகு ஜனவரி 3, 1977-⁠ல் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. மிஷனரிகள் ஒவ்வொருவராக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; கடைசியில் ஜாக் மற்றும் லின்டா யோஹன்சன் மட்டுமே அங்கு இருந்தார்கள். இந்தச் சமயத்தைப் பற்றி ஜாக் இவ்வாறு சொல்கிறார்: “கிளை அலுவலகத்தில் நாங்கள் தனியாக இருந்த அந்தச் சில மாதங்கள்தான் எங்கள் விசுவாசத்திற்குப் பெரும் சோதனைக் காலமாகவும், அதேசமயத்தில் விசுவாசத்தை பலப்படுத்தும் காலமாகவும் இருந்தது என்று சொல்லலாம். எங்களுடைய மிஷனரி சேவையில் இதற்குமுன் இப்படியொரு அனுபவம் எங்களுக்கு ஏற்பட்டதே இல்லை. அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையைச் சேர்ந்த உளவாளிகளாக நாங்கள் சந்தேகிக்கப்பட்டோம். மதத் தலைவர்கள் உட்பட, அரசாங்கத்தின் விரோதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். ஆகவே, எங்களுடைய உயிர் பெரும் ஆபத்தில் இருப்பதை அறிந்தோம். ஆனால், யெகோவாவின் கரம் எங்களை பாதுகாப்பதை உணர்ந்தோம், அது எங்களுடைய விசுவாசத்தை பலப்படுத்தியது.”

ஜாக்கையும் லின்டாவையும் இந்நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டுமென கேட்டு பிரதம மந்திரிக்கு நோயி மிக்வீஸா மனு கொடுத்தார். அந்த மனு புறக்கணிக்கப்பட்டது. ஆகவே அவர்களும் நாட்டை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று. கிளை அலுவலக சொத்துக்களும் ராஜ்ய மன்றங்களும் அபகரிக்கப்பட்டன, கிளை அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. சிறிது காலத்திற்கு, பிரசங்க வேலையை மேற்பார்வை செய்யும் பொறுப்பை பிரான்சு கிளை அலுவலகம் கவனித்துக் கொண்டது; ஆனால் பிற்பாடு, அந்தப் பொறுப்பு கின்ஷாசா கிளை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சகோதரர்களுக்கு சில விதங்களில் கட்டுப்பாடுகள் இருந்தபோதும், பிற நாடுகளில் உள்ள சாட்சிகள் சகிக்க வேண்டியிருந்ததைப் போன்ற கடுமையான துன்புறுத்தலை அவர்கள் அனுபவிக்கவில்லை. என்றாலும், சில சகோதரர்கள் அரண்டு போனார்கள், அவர்களுடைய பயம் மற்றவர்களையும் தொற்றியது. எப்போதும் போல் கூட்டங்களை அவர்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள், என்றாலும் வீட்டுக்கு வீடு ஊழியம் ஏறக்குறைய நின்று போனது. ஆகவே கின்ஷாசா கிளை அலுவலகம் ஆற்றுக்கு அப்புறத்திலிருந்த சகோதரர்களை உற்சாகப்படுத்தவும் பலப்படுத்தவும் மூப்பர்களை அனுப்பியது.

இந்த மூப்பர்களில் ஒருவர்தான் ஆன்ட்ரே கிட்டூலா. 1981-⁠ல் இவர் ஒரு வட்டாரக் கண்காணியாக ப்ரஜாவில்லில் இருந்த 12 சபைகளுக்கு விஜயம் செய்ய ஆரம்பித்தார். அந்நகரத்தில் உள்ள ஒரு சபைக்கு அவர் முதலாவதாக விஜயம் செய்தபோது, செவ்வாய்க்கிழமை நடந்த தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்கும் ஊழியக் கூட்டத்திற்கும் சகோதரர்கள் வந்திருந்து ஆதரித்ததை அவர் கண்டார். ஆனால், புதன்கிழமை காலை வெளி ஊழியக் கூட்டத்திற்கு ஒரு பிரஸ்தாபிகூட வரவில்லை. ஆகவே ஆன்ட்ரே தனியாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அப்போது ஒரு வீட்டுக்காரர் அவரைப் பார்த்த ஆச்சரியத்தில், “யெகோவாவின் சாட்சிகள்தான் எங்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லிட்டிருந்தாங்க, ஆனா இப்போ அவங்க யாரும் ஆள் அட்ரஸே இல்லையே!” என்று சொன்னார்.

அன்று காலை ஆன்ட்ரே தொடர்ந்து ஊழியம் செய்து கொண்டிருந்தபோது ஒரு சகோதரரை சந்தித்தார். “வீடு வீடாக ஊழியம் செய்கிற பழக்கமெல்லாம் எங்களுக்கு இல்லாமல் போய் விட்டது” என்று அந்தச் சகோதரர் சொன்னார். அதன் பிறகு, ஆன்ட்ரே இப்படி ஊழியம் செய்ததைப் பற்றி மற்ற பிரஸ்தாபிகளிடம் அந்தச் சகோதரர் சொன்னார். அதனால் மதிய வெளி ஊழியக் கூட்டத்திற்கு நிறைய சகோதரிகள் வந்தார்கள். ப்ரஜாவில்லில் விரைவிலேயே வீட்டுக்கு வீடு ஊழிய வேலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. ஆன்ட்ரேவும் அவரது மனைவி க்ளெமான்டினும் அங்கு சேவை செய்த மூன்று வருட காலத்தில் ஒரு சகோதரர்கூட கைது செய்யப்படவில்லை. தலைநகருக்கு வெளியே இருந்த சகோதரர்களும் இந்த விஷயங்களை அறிந்து கொண்டார்கள். ப்ரஜாவில்லில் உள்ள சகோதரர்களே பயப்படாமல் வீடு வீடாக ஊழியத்திற்கு செல்கிறார்கள் என்றால் தாங்கள் பயப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

கின்ஷாசா கிளை அலுவலகம், முக்கியமாக ஆற்றுக்கு அப்புறத்தில் உள்ளவர்களுக்கு உதவ சகோதரர்களை ஏன் மனமுவந்து அனுப்பியது என்பதை அப்போது அந்தக் கிளை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த டேவிட் நாவெஜ் இவ்வாறு விளக்குகிறார்: “ப்ரஜாவில்லைச் சேர்ந்த சகோதரர்கள்தான் கின்ஷாசாவில் சத்தியம் வேர்விட காரணமாக இருந்தவர்கள். பிற்பாடு, கம்யூனிஸ ஆட்சியின் காரணமாக அங்குள்ள வேலை மந்தமானதால் சகோதரர்களுக்கு உதவ இங்குள்ள சாட்சிகள் சென்றார்கள். ‘ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்’ என்று பிரசங்கி 4:9, 10-⁠ல் சொல்லப்பட்டுள்ள வசனங்களின் ஞானம் விளங்கியது. இதை எங்களுக்குப் பொருத்தி சகோதரர்கள் இவ்வாறு சொல்வார்கள்: ‘ஒரு காங்கோ இருப்பதைக் காட்டிலும் இரு காங்கோ இருப்பது நலம்.’”

அரசியல் மாற்றத்தின் மத்தியிலும் முன்னேற்றம்

1991-⁠ஆம் ஆண்டு அரசியலில் மாற்றங்களும் கிளர்ச்சிகளும் ஏற்பட்டன. ஒரேவொரு கட்சித் தொகுதியாக இருந்த காங்கோ (ப்ரஜாவில்) பல கட்சித் தொகுதியானது. அதை வரவேற்று தெருவெல்லாம் ஒரே கொண்டாட்டமாக இருந்தபோதிலும், சங்கீதம் 146:3-⁠ல் காணப்படும் எச்சரிப்பின் வார்த்தைகளை சகோதரர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டார்கள். “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்” என அந்த வசனம் சொல்கிறது. அந்த வசனம் உண்மை என்பது சீக்கிரத்திலேயே வெளிப்பட்டது.

இருந்தாலும், இந்த அரசியல் மாற்றங்களால் யெகோவாவின் ஜனங்களுக்கு நன்மைகள் விளைந்தன. யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு போடப்பட்டிருந்த தடையை நீக்குவது பற்றி நவம்பர் 12, 1991 அன்று உள்துறை அமைச்சர் ஓர் ஆணை பிறப்பித்தார். அபகரிக்கப்பட்ட ராஜ்ய மன்றங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன, என்றாலும் கிளை அலுவலக கட்டடம் மட்டும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. ஜனாதிபதியின் பந்தோபஸ்து படையை சேர்ந்த காவலரே அதை இன்னும் ஆக்கிரமித்துள்ளனர். 15 ஆண்டுகளில் முதன்முறையாக, ஆகஸ்ட் 1992-⁠ல் ப்ரஜாவில்லிலும் பாய்ன்ட் நாய்ரிலும் மாவட்ட மாநாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டன. அந்த ஆண்டில் பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை 5,675-ஆக உயர்ந்துவிட்டது; இது பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம்!

இதற்கிடையே, அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தால் மிஷனரிகள் மீண்டும் வருவதற்கு வழி திறக்கப்பட்டது. விசேஷ பயனியர்கள் நியமிக்கப்பட்டு, நாட்டின் வடபகுதிக்கு அனுப்பப்பட்டார்கள்; அப்பகுதியில் கூட்டங்களுக்கு வருவோரில் பெரும்பாலோர் படிப்பறிவற்றவர்களாக இருந்தார்கள். நகரங்களில் இருந்த சபையினர், வாசிக்கவும் எழுதவும் அநேகருக்கு கற்றுக் கொடுப்பதில் வெற்றி கண்டார்கள். அந்நாட்டில் வசிப்பவர்களின் கல்வியறிவை முன்னேற்றுவிக்க தீவிரமாய் உழைக்க வேண்டிய சமயமாக அது இருந்தது.

1993-ம் ஆண்டில் நடந்த தேர்தல்கள் அரசாங்கத்தில் மற்றொரு மாற்றத்தை ஏற்படுத்தின. எதிர் கட்சியினர் அதிருப்தி தரும் வதந்தியை பரப்பிவிட்டதால் பல வாரங்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டது. ஆயுத தாக்குதல்கள், போராட்டங்கள், ஊரடங்கு சட்டங்கள், சாலை மறியல்கள், கொள்ளையடித்தல் இவை யாவும் அன்றாட வாழ்க்கையின் பாகமாயிற்று. மக்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது தவித்தனர். பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்தன. 1991-⁠ல் ஏற்பட்ட நம்பிக்கையெல்லாம் குலைந்தது.

அரசியல் கொந்தளிப்புகள் ஒருபுறம், இனப் பிரச்சினைகள் மறுபுறம் என போட்டிப் போட்டுக்கொண்டு நடந்தன. இனக் கலவரத்தால் சகோதரர்கள் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு குடிமாற வேண்டியதாயிற்று. இதனால், சில சபைகளை மூட வேண்டியதாயிற்று. இதற்கிடையே, இனப் பகைமையிலிருந்து சத்தியம் தங்களை விடுவித்திருப்பதை சகோதரர்கள் தொடர்ந்து காண்பித்துக்கொண்டே இருந்தார்கள். குழப்பம் நிறைந்த அந்தச் சமயத்தில், சகோதரர்கள் எந்த இனப் பின்னணியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் உதவினார்கள், பாதுகாப்பளித்தார்கள். மெய்யான பாதுகாப்பை யெகோவாவால் மட்டுமே தர முடியும் என்பதை அநேகர் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

கின்ஷாசா கிளை அலுவலகம் ஆலோசனைகளையும் உற்சாகத்தையும் அளித்தது. 1996-⁠ம் ஆண்டின் முடிவில் நாட்டின் சூழ்நிலைமைகள் மாறி மீண்டும் அமைதி நிலவியது; அதனால் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 3,935-⁠க்கு உயர்ந்தது. மிஷனரி இல்லத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ப்ரஜாவில்லில் சேவை செய்தார்கள். இன்னும் இரு மிஷனரி தம்பதியர் வந்ததால் ஏப்ரல் 1997-⁠ல் பாய்ன்ட் நாய்ரில் மற்றொரு புதிய மிஷனரி இல்லம் திறக்கப்பட்டது.

காங்கோவில் (ப்ரஜாவில்) ஆற்றின் வட பகுதியில், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை சுமூகமாக ஓடியது. அதனால் பிரசங்க வேலையும் நன்கு நடைபெற்றது. இதற்கிடையே பக்கத்திலுள்ள காங்கோவில் (கின்ஷாசா) போர் மூண்டது. கின்ஷாசாவில் போர் நடக்க ஆரம்பித்தபோது, மிஷனரிகள் அங்கிருந்து வெளியேற வேண்டியதாயிற்று. ஆகவே மே மாத இறுதியில் இந்த கின்ஷாசா மிஷனரிகள் ப்ரஜாவில்லிலும் பாய்ன்ட் நாய்ரிலும் உள்ள மிஷனரிகளோடு சேர்ந்துகொண்டு வைராக்கியமாக சேவை செய்தார்கள். ஆனால் சில நாட்களில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடக்கப் போகிறது என்பதை யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை.

உள்நாட்டுப் போர் வெடிக்கிறது

திடீரென ஜூன் 5, 1997-⁠ல், ப்ரஜாவில்லில் போர் வெடித்தது. அப்பொழுது பதவி வகித்த ஜனாதிபதியின் தலைமையிலான படையினருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாயிருந்த படையினருக்கும் இடையே இந்தப் போர் மூண்டது. ராட்சத பீரங்கிகள் நகரத்தையும் புறநகர்ப் பகுதியையும் தகர்த்தன. அதில் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். திரும்பிய பக்கமெல்லாம் சடலங்கள் சிதறிக்கிடந்தன. அந்நகரில் கூச்சலும் குழப்பமும் தலைவிரித்தாடின. எதிரெதிர் படையினரை அடையாளம் கண்டுகொள்வது கஷ்டமாக இருந்தது. இத்தனை காலமாக ப்ரஜாவில் அனுபவித்து வந்த ஸ்திரத்தன்மை தவிடுபொடியானது. கின்ஷாசாவுக்கு சென்றுவந்த படகுகளின் பயணம் நிறுத்தப்பட்டது. அநேகர் தலைதெறிக்க தப்பியோடி காட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர், மற்றவர்களோ கட்டுமரங்களில் தொற்றிக்கொண்டு ஆற்றின் மத்தியிலுள்ள சிறு சிறு தீவுகளுக்குச் சென்றனர். இன்னும் சிலரோ கின்ஷாசாவுக்குச் செல்லும் காங்கோ ஆற்றைக் கடந்துசெல்ல முயன்றனர். கின்ஷாசாவுக்கு அருகில் சண்டை நடந்து கொண்டிருந்தபோதிலும், ப்ரஜாவில்லில் நடைபெற்ற சண்டையுடன் ஒப்பிட இது தீவிரம் குறைந்ததாகவே இருந்தது.

இந்தப் போர் மற்ற எல்லாருக்கும் போலவே சகோதரர்களுக்கும் பிரச்சினைகளைக் கொண்டுவந்தது, ஆனால் கடவுளுடைய ஊழியர்களின் மனதிலும் இதயத்திலும் சத்தியம் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது! சங்கீதம் 46:1-3-⁠ல் உள்ள வார்த்தைகளில் அவர்கள் முழு நம்பிக்கை வைத்திருந்தார்கள், அது இவ்வாறு சொல்கிறது: “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச் சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், . . . நாம் பயப்படோம்.”

சகோதரர்கள் பலர் ஒருவழியாக கின்ஷாசாவை அடைந்தனர், அங்கே அவர்களுக்கு உணவும் தங்குமிடமும் மருத்துவ சிகிச்சையும் வழங்க கிளை அலுவலகக் குழு ஏற்பாடு செய்தது. கின்ஷாசாவிலிருந்த குடும்பங்கள் ப்ரஜாவில்லிலிருந்து வந்திருந்த சக விசுவாசிகளுக்கு மகிழ்ச்சியோடும் அன்போடும் உபசரித்தனர்.

தப்பிச்செல்ல முடியாமல் திண்டாடியவர்களுக்கு உதவ சகோதரர்கள் சிலர் ப்ரஜாவில்லிலேயே தங்கியிருந்தனர். ஜீன் டேயாடோர் ஆட்னியும் ஒழுங்கான பயனியராக சேவை செய்துவந்த அவருடைய மனைவி ஷானும் இவர்களில் அடங்குவர். ஆகஸ்ட் மாதத்தில், வெடிகுண்டு அவர்களுடைய வீட்டை சின்னாபின்னமாக்கியது. சகோதரி ஷானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது; அவரை உடனடியாக கின்ஷாசாவுக்கு அழைத்துச் செல்ல ஜீன் முயன்றார், ஆனால் பலனில்லை. “சாகும் வரை ஊழியத்தை ஷான் ரொம்ப நேசித்தாள். விலாசங்கள் எழுதி வைத்திருந்த அவளுடைய நோட்டுப் புத்தகத்தை என்னிடம் கொடுத்து, ‘என்னுடைய பைபிள் மாணாக்கர்கள் அனைவரையும் நீங்கள் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும், அவர்கள் எனக்கு ரொம்ப முக்கியமானவர்கள்’ என்று சொன்னாள். நான் அவளை கட்டித் தழுவினேன், மறுபடியும் அவளுடைய முகத்தைப் பார்த்தபோது அவள் மூச்சு அடங்கிவிட்டிருந்தது” என ஜீன் சொல்கிறார். ஜீனும் அவரைப் போல அநேகரும், உயிர்த்தெழுதல் நம்பிக்கையில் முழு விசுவாசம் வைத்து, தொடர்ந்து வைராக்கியத்துடன் யெகோவாவுக்கு சேவை செய்திருக்கிறார்கள்.

இரு தலைநகரங்களுக்கும் இடையே வழக்கமாக நடந்துவந்த படகு சேவை தடைபட்டுவிட்டதால், சிறு சிறு மோட்டார் படகுகளை வைத்திருந்தவர்கள் ப்ரஜாவில்லிலிருந்து தப்பிச்செல்ல விரும்புகிற மக்களுக்கு சவாரி அளித்தார்கள். லூயி-நாயல் மாட்டுலா, ஷான்-மாரி லூபாக்கி, சம்ஃபாரியன் பாக்கிபா ஆகியோர் உட்பட, தைரியமுள்ள சகோதரர்கள் காணாமற்போன சகோதரர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும் இன்னும் ப்ரஜாவில்லிலேயே தங்கியிருக்கிற சகோதரர்களுக்கு உதவி செய்வதற்கும் முன்வந்தார்கள். இதற்காக, இந்தச் சகோதரர்கள் சிறிய படகில் பெரிய காங்கோ ஆற்றின் வேகமான நீரோட்டத்தை சமாளித்துச் சென்று சிறு தீவுகளிலும் கடற்கரைகளிலும் இருப்பவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ப்ரஜாவில்லில் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்குள் நுழைந்து செல்லவும் வேண்டியிருந்தது; அங்குதான் பயங்கர அட்டூழியங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அதோடு, சகோதரர்களுக்காக தங்களுடைய உயிரையே பணயம் வைக்க வேண்டியிருந்தது.

உள்நாட்டுப் போர் நடந்துவந்த சமயத்தில், ஆற்றை கடப்பதில் அதிக அனுபவமிக்க சம்ஃபாரியன் பல தடவை கடந்து சென்றார். சில சமயங்களில், ப்ரஜாவில்லில் இருந்தவர்களுக்கு உதவி அளிப்பதற்காகவே ஆற்றைக் கடந்து சென்றார். உதாரணமாக, ப்ரஜாவில்லில் ஓரளவு பாதுகாப்புடன் வசித்துவந்த சில சகோதரர்களுக்காக ஒரு தடவை பத்து மூட்டை அரிசியுடன் சென்றார். ஆற்றைக் கடப்பதே சவாலான காரியம், அப்படியிருக்கையில் கொள்ளையர்களுடைய கண்ணில் படாமல் அரிசி மூட்டைகளை கொண்டு சேர்ப்பது அதைவிட சவாலானது. அப்போது அவரோடு பயணித்தவர்களில் விஐபி போல் காட்சியளித்த ஒருவர், அரிசியை எங்கே கொண்டு போகிறாய் என சம்ஃபாரியனிடம் கேட்டார். பைபிள் நம்பிக்கையை பகிர்ந்துகொள்வதற்கு அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தான் செய்யும் காரியத்தைக் குறித்து அந்த நபரிடம் சம்ஃபாரியன் விளக்கிக் கூறினார். படகு கரைக்குப் போய்ச் சேர்ந்தபோது, தான் ஓர் உயர் அதிகாரி என்பதை அவர் வெளிப்படுத்தினார். படைவீரர்களில் இருவரைக் கூப்பிட்டு, அரிசியைக் கொண்டு சேர்க்க சம்ஃபாரியனுக்கு ஒரு கார் கிடைக்கும் வரை அந்த அரிசி மூட்டைகளைப் பாதுகாக்கும்படி சொன்னார்.

பொதுவாக, ப்ரஜாவில்லிலிருந்து தப்பிச்செல்ல சகோதரர்களுக்கு உதவி செய்வதற்கே சம்ஃபாரியன் ஆற்றைக் கடந்து சென்றார். ஆனால் ஒருமுறை ஆற்றை கடந்து சென்ற சம்பவத்தை அவர் மறக்கவே மாட்டார். அவர் சொல்கிறார்: “காங்கோ ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டது, ஆனால் படகு வைத்திருந்த பெரும்பாலோருக்கு பயங்கரமான சுழல்களில் மாட்டிக்கொள்ளாமல் எப்படி படகை பாதுகாப்பாக செலுத்துவதென்பது தெரியும். ஒருசமயம் படகில் ஏழு சகோதரர்களுடனும் மற்ற ஐந்து ஆட்களுடனும் சேர்ந்து ப்ரஜாவில்லைவிட்டு கிளம்பினோம். நட்டாற்றுக்குச் சென்றவுடன் படகில் எண்ணெய் தீர்ந்து போய்விட்டது. படகை நிறுத்துவதற்கு தோதாக ஒரு சிறிய தீவிற்கு எப்படியோ சமாளித்து ஒருவழியாக சென்றுவிட்டோம். அப்பொழுது ஒரு சிறு படகு வந்ததைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டோம், அந்தப் படகிலிருந்த மாஸ்டர் எங்களுக்காக கின்ஷாசாவிலிருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டு வருவதாக சொன்னார். அவர் திரும்பி வரும்வரை ஒன்றரை மணிநேரம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தோம், அது எங்களுக்கு யுகம் போல தோன்றியது.”

விரைவில், கின்ஷாசாவிலுள்ள கிளை அலுவலகம் சுமார் 1,000 சகோதர சகோதரிகளையும் அவர்களுடைய குடும்பங்களையும் ஆர்வம் காண்பித்தவர்களையும் கவனித்து வந்தது. அக்டோபர் 1997-⁠க்குள் சண்டை முடிவுக்கு வந்தது, அகதிகளும் ப்ரஜாவில்லிற்குத் திரும்ப ஆரம்பித்தார்கள்.

போரின் காரணமாக ப்ரஜாவில்லிலும் பாய்ன்ட்-நாய்ரிலும் சேவை செய்துவந்த எல்லா மிஷனரிகளும் வெளியேற்றப்பட்டிருந்தார்கள். சிலர் தங்களுடைய தாய் நாடாகிய பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் திரும்பிச் சென்றிருந்தார்கள், வேறு சிலரோ பெனினுக்கும் கோட் டீவாருக்கும் சென்றிருந்தார்கள். ஓரளவு அமைதி திரும்பியபோது, சிலர் காங்கோவில் (ப்ரஜாவில்) தங்களுடைய நியமிப்புகளுக்குத் திரும்பிச் சென்றார்கள். அதோடு, டிசம்பர் 1998-⁠ல், பிரான்சிலிருந்து மூன்று தம்பதியர்களும் திருமணமாகாத ஒரு சகோதரரும் வருவதாக திட்டமிட்டிருந்தார்கள். கின்ஷாசா கிளை அலுவலகத்தில் சேவை செய்துவந்த எடி மே, பமீலா மே என்ற அனுபவமிக்க மிஷனரிகள் ப்ரஜாவில்லிற்கு மாற்றப்பட்டார்கள், புதிய மிஷனரி இல்லமும் திறக்கப்பட்டது.

மீண்டும் உள்நாட்டுப் போர்

1999-⁠ல் ப்ரஜாவில்லில் மீண்டும் உள்நாட்டுப் போர் மூண்டது. அநேக சாட்சிகள் உட்பட, மறுபடியும் ஆயிரக்கணக்கானோர் மடிந்தனர். அங்கு புதிதாக கால் வைத்திருந்த பெரும்பாலான மிஷனரிகள் அண்டை நாடான கேமரூனிலிருந்த மிஷனரி இல்லங்களுக்குச் சென்றனர். கடற்கரையிலுள்ள பாய்ன்ட்-நாய்ருக்கு போர் பரவுமென்ற புரளி கிளம்பியபோதிலும், மிஷனரிகளில் மூவர் அங்கேயே இருந்தனர். கடைசியில், மே 1999-⁠ல் உள்நாட்டுப் போர் ஓய்ந்தது.

சாட்சிகளில் அநேகர் தப்பிச்செல்ல வேண்டியிருந்ததால், அந்நாட்டில் இருந்த சபைகளின் எண்ணிக்கை 108-லிருந்து 89-⁠க்கு வந்துவிட்டது. ப்ரஜாவில்லில் இப்பொழுது 23 சபைகளில் 1,903 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். பாய்ன்ட்-நாய்ரில் 24 சபைகளில் 1,949 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். இரு உள்நாட்டுப் போர்களின்போதும், வேறு இடங்களிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்கு பொருளாதார உதவி அளித்தார்கள். வழக்கம் போல, இத்தகைய நிவாரண திட்டத்தால் யெகோவாவின் சாட்சிகள் அல்லாதவர்களும் பயனடைந்தார்கள்.

போர், பஞ்சம், வியாதி, இன்னும் பல பிரச்சினைகள் மத்தியிலும், காங்கோவிலுள்ள (ப்ரஜாவில்) சாட்சிகள் மாதத்திற்கு சராசரியாக 16.2 மணிநேரத்தை வெளி ஊழியத்தில் செலவழித்தார்கள். ஏப்ரல் 1999-⁠ல், இரண்டாம் உள்நாட்டுப் போர் முடிவடைந்து கொண்டிருந்தபோது, பிரஸ்தாபிகளில் 21 சதவீதத்தினர் ஏதாவது ஒருவகை முழுநேர சேவையில் ஈடுபட்டார்கள்.

சத்தியத்தில் களிகூருதல்

போர்கள் நாட்டையே சூறையாடியதால் கிட்டத்தட்ட எல்லா இடங்களும் நாசமடைந்தன. ப்ரஜாவில்லை திரும்ப சீரமைக்கும் வேலை நடைபெற்று வந்தாலும் செய்வதற்கு இன்னும் நிறைய வேலைகள் இருந்தன. மிக முக்கியமான கட்டுமான திட்டங்களில் ஒன்றுதான் ராஜ்ய மன்றங்களைக் கட்டுவது; அங்கே பைபிள் சத்தியத்தை மக்கள் கற்றுக்கொள்கிறார்கள். பிப்ரவரி 2002-⁠ல் பாய்ன்ட் நாய்ரில் இரண்டு, ப்ரஜாவில்லில் இரண்டு என நான்கு ராஜ்ய மன்றங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

ப்ரஜாவில்லில் நடந்த பிரதிஷ்டை நிகழ்ச்சி ஒன்றின்போது, 15 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்த சமயத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒரு வயதான சகோதரர் விவரித்தார். ஒரு காலி இடத்தில் ஜனவரி 1-⁠ம் தேதி ஒரு நாள் விசேஷித்த மாநாட்டை நடத்த சகோதரர்கள் தீர்மானித்திருந்தார்கள். ஜனங்கள் வருஷப் பிறப்பை கொண்டாடுவதில் மூழ்கியிருப்பார்கள், அதனால் எந்த இடையூறும் இல்லாமல் மாநாட்டை நடத்த முடியும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், காலை நிகழ்ச்சி முடிந்த பிறகு, போலீஸார் வந்து மாநாட்டை நடத்த விடாமல் கலைத்து விட்டார்கள். அந்தச் சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் கவலைக் கண்ணீருடன் அந்த இடத்தை விட்டுப் போனோம். இன்றோ ஆனந்தக் கண்ணீருடன் அதே இடத்தில் மீண்டும் ஒன்று கூடியிருக்கிறோம். ஏனென்றால் புதிதாக கட்டப்பட்ட ராஜ்ய மன்றத்தின் பிரதிஷ்டைக்காக இங்கு கூடிவந்துள்ளோம்.” ஆம், அன்று காலியாக கிடந்த அந்த இடத்தில்தான் பிரமாதமான இந்தப் புதிய மன்றம் கட்டப்பட்டுள்ளது!

“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற புத்தகத்தின் உதவியுடன் ஏட்டியென் எங்கோயுயெங்கோயு, அகஸ்டன் பயன், டிமாட்டே மியிமுன்வா ஆகியோர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு இப்போது 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அந்தக் காலப்பகுதியில், காங்கோவிலிருந்த (ப்ரஜாவில்) ஆயிரக்கணக்கானோர் இவர்களுடைய விசுவாசத்தின் முன்மாதிரியைப் பின்பற்றினார்கள்; இன்னும் தொடர்ந்து அநேகர் அவர்களைப் பின்பற்றுவதால் எதிர்காலத்தில் அதிக வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது. 15,000-⁠க்கும் அதிகமான பைபிள் படிப்புகள் அங்கு நடத்தப்படுகின்றன, அது அங்குள்ள பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட மூன்றரை மடங்கு அதிகம்! 2003-⁠ல் நினைவு ஆசரிப்புக்கு உச்சநிலை எண்ணிக்கையாக 21,987 பேர் கூடிவந்தார்கள். 2003 ஊழிய ஆண்டின் இறுதியில், 15 மிஷனரிகள் உட்பட, 4,536 பிரஸ்தாபிகள் வைராக்கியமாக சேவை செய்து கொண்டிருந்தார்கள். மற்றவர்களும் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு விடுதலை பெற அவர்கள் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்கள்.​—யோவா. 8:31, 32.

[பக்கம் 143-ன் சிறு குறிப்பு]

“நடை ராஜா வெள்ளைக்காரருடன் வருகிறார்” என்ற செய்தி முரசு கொட்டி அறிவிக்கப்பட் டிருந்தது

[பக்கம் 144-ன் சிறு குறிப்பு]

அவர்களிடம் கடிகாரம் இல்லாததால், சூரியனின் நிலையை வைத்து கூட்டங்களுக்குப் போகும் நேரத்தை தீர்மானித்தார்கள்

[பக்கம் 151-ன் சிறு குறிப்பு]

“நாங்கள் படுக்கைக்குச் சென்றோம்; வெளியில் சகோதரர்கள் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு மெல்லிய குரலில் ராஜ்ய பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். தூங்குவதற்கு ஏற்றாற்போல் இந்தச் சூழல் எவ்வளவு இதமாகவும் சுகமாகவும் இருந்தது!”

[பக்கம் 140-ன் பெட்டி]

காங்கோ (ப்ரஜாவில்)​—⁠ஒரு கண்ணோட்டம்

நிலம்: காபோன், காமரூன், மத்திப ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ மக்கள் குடியரசு ஆகியவற்றின் மத்தியில் காங்கோ குடியரசு அமைந்துள்ளது. இது, பின்லாந்து அல்லது இத்தாலியைவிட பெரியது. கரையோர சமவெளிப் பகுதி சுமார் 60 கிலோமீட்டர் உள்நாட்டை நோக்கி பரந்திருக்கிறது; அதற்கு பிறகு 2,500 அடிக்கும் அதிகமான உயரமுடைய பீடபூமி பகுதிகள் இங்கே உள்ளன. அடர்ந்த காடுகளும் பெரிய ஆறுகளும் இந்நாட்டின் மற்ற முக்கிய அம்சங்களாகும்.

மக்கள்: 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்நாட்டில் அநேக பழங்குடிகள் இருக்கின்றன. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆப்பிரிக்க குள்ளர்கள் வசிக்கிறார்கள்.

மொழி: பிரெஞ்சு அதிகாரப்பூர்வ மொழி, என்றாலும் லிங்கால மொழி வடபகுதிகளில் பரவலாக பேசப்படுகிறது. மோனோகூட்டூபா தெற்கில் பேசப்படுகிறது.

பிழைப்பு: உவர்நீரிலும் நன்னீரிலும் மீன்பிடித்தல், விவசாயம் ஆகியவை அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இந்தக் காடுகளில் வனவிலங்குகள் நிறைந்துள்ளன; இதனால் திறமைமிக்க வேட்டைக்காரர்களுக்கு எளிதில் இரை கிடைத்துவிடுகிறது.

உணவு: பெரும்பாலும் மரவள்ளிக் கிழங்கை அல்லது அரிசியை விரும்புகிறார்கள். இதனுடன் மீன் அல்லது கோழி இறைச்சியை மசாலா சேர்த்து பரிமாறுகிறார்கள். மாம்பழம், அன்னாச்சிப்பழம், பப்பாளிப்பழம், ஆரஞ்சுப்பழம், அவொகெடொ போன்ற நிறைய பழவகைகள் உள்ளன.

சீதோஷ்ணம்: காங்கோ வெப்பமண்டல பிரதேசம், வருடமுழுவதும் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கிறது. இரண்டு மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவுகிறது: மழைக் காலம், மார்ச் முதல் ஜூன் வரை நீடிக்கிறது, வறட்சிக் காலம், ஜூன் முதல் அக்டோபர் வரை நீடிக்கிறது.

[பக்கம் 148, 149-ன் அட்டவணை/​வரைபடம்]

காங்கோ (ப்ரஜாவில்) கால வரலாறு

1940

1947:“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற புத்தகம் முதன்முதல் ஆர்வக்கனலை பற்றவைத்தது

1950:எரிக் கூக் என்ற மிஷனரி ப்ரஜாவில் செல்கிறார். யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட புத்தகங்கள் மீது அதிகாரிகள் தடை விதிக்கின்றனர்.

1956:மார்ச் மாதத்தில், பிரான்சிலிருந்து முதல் மிஷனரிகள் வருகின்றனர்.

1957:ஜனவரியில் கிளை அலுவலகம் திறக்கப்படுகிறது.

1960

1961:டிசம்பர் 9-⁠ல் சட்டப்பூர்வ கூட்டுறவாக பதிவு செய்யப்படுகிறது, என்றாலும் பிரசுரங்கள் மீது விதிக்கப்பட்ட தடை மற்றொரு ஆண்டு வரை தொடர்கிறது.

1977:யெகோவாவின் சாட்சிகள் தடை செய்யப்படுகின்றனர். கிளை அலுவலக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மிஷனரிகள் வெளியேற்றப்படுகின்றனர்.

1980

1981:ப்ரஜாவில் பிரசங்க வேலையை மீண்டும் உயிர்ப்பிக்க ஆன்ரே கிட்டூலா உதவுகிறார்.

1991:உள்துறை அமைச்சர் தடையை நீக்குகிறார். 15 வருடத்தில் முதன்முறையாக மாவட்ட மாநாடுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

1993:சமுக மற்றும் அரசியல் கிளர்ச்சி அவசர நிலைமைக்கு வழிநடத்துகிறது.

1997:ஜூன் 5-⁠ல் உள்நாட்டுப் போர் வெடிக்கிறது. மிஷனரிகள் வெளியேற்றப்படுகின்றனர். கின்ஷாசாவில் உள்ள கிளை அலுவலகம் 1,000 அகதிகளுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை ஏற்பாடு செய்கிறது.

1999:மற்றொரு உள்நாட்டுப் போர் வெடிக்கிறது. மீண்டும் மிஷனரிகள் வெளியேற்றப்படுகின்றனர்.

2002:முதன்முதலில் புதிதாக கட்டப்பட்ட நான்கு ராஜ்ய மன்றங்கள் பிப்ரவரியில் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

2003:காங்கோவில் (ப்ரஜாவில்) 4,536 பிரஸ்தாபிகள் இருக்கின்றனர்.

[வரைபடம்]

(பிரசுரத்தைக் காண்க)

மொத்த பிரஸ்தாபிகள்

மொத்த பயனியர்கள்

5,000

2,500

1940 1960 1980 2000

[பக்கம் 141-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

மத்திய ஆப்பிரிக்க குடியரசு

கேமரூன்

ஈக்குவிடோரியல் கினி

காபோன்

காங்கோ குடியரசு

இம்ப்ஃபான்டா

ஜாம்பாலா

ப்ரஜாவில்

பாய்ன்ட் நாய்ர்

காங்கோ நதி

காங்கோ மக்கள் குடியரசு

கின்ஷாசா

அங்கோலா

[பக்கம் 134-ன் முழுபக்க படம்]

[பக்கம் 138-ன் படங்கள்]

1949-⁠ன் ஆரம்பத்தில் பைபிள் படித்த குழுவினர்; பெயர்கள் இடமிருந்து வலமாக: ஜீன்-சேத் மௌன்ட்ஸம்போதே, டிமாட்டே மற்றும் ஓடில் மியிமுன்வா, நோயி மிக்வீஸா

[பக்கம் 139-ன் படம்]

ஏட்டியென் எங்கோயுயெங்கோயு

[பக்கம் 142-ன் படம்]

காங்கோவின் உள்நாட்டுப் பகுதியில் ஷான் சானியாபாஸ் பயணம் செய்தார்; படகுகளில் ஆற்றைக் கடந்து சபைகளை சந்தித்தார்

[பக்கம் 147-ன் படம்]

அகஸ்டன் பயனின் வீட்டில் கூடிவந்த சபையாருடன் ஃபிரெட்டும் லியா லூக்கஸும் (மத்தியில்)

[பக்கம் 150-ன் படம்]

பாய்ன்ட் நாய்ரில் அட்லாண்டிக் பெருங்கடலில் முழுக்காட்டுதல்

[பக்கம் 152-ன் படம்]

நடை ராஜா என அழைக்கப்பட்ட அகஸ்டன் பயன் 1962-⁠ல் கிலியட் பள்ளியின் 37-⁠ம் வகுப்பில் கலந்து கொண்டார்

[பக்கம் 153-ன் படம்]

1967 முதல் 1977 வரை கிளை அலுவலகமாக செயல்பட்ட கட்டடம்

[பக்கம் 155-ன் படம்]

நோயி மிக்வீஸா

[பக்கம் 158-ன் படங்கள்]

லூயி-நாயல் மாட்டுலா, ஷான்-மாரி லூபாக்கி, சம்ஃபாரியன் பாக்கிபா