Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜனநாயக காங்கோ குடியரசு (கின்ஷாசா)

ஜனநாயக காங்கோ குடியரசு (கின்ஷாசா)

ஜனநாயக காங்கோ குடியரசு (கின்ஷாசா)

‘நாங்கள் ஆப்பிரிக்க சோள மூட்டையில் உள்ள மணிகளைப் போன்றவர்கள். ஒவ்வொன்றாக எங்கு சிந்தப்பட்டாலும், இறுதியில் மழை வரும்போது முளைத்துப் பெருகுவோம்.’ 50 வருடங்களுக்கு முன்பு யெகோவாவின் விசுவாசமுள்ள சாட்சி ஒருவர் இப்படி சொன்னார்; அப்போதைய பெல்ஜிய காங்கோவின் அதிகாரிகளால் கொடூரமாக நடத்தப்பட்டவர் இவர். யெகோவாவின் ஆசீர்வாதம் புத்துணர்ச்சியூட்டும் மழை போல் காங்கோ முழுவதும் ராஜ்ய பிரஸ்தாபிகளை வியக்கத்தக்க விதத்தில் எப்படி முளைக்கச் செய்திருக்கிறது என்பதை பின்வரும் பக்கங்களில் கற்றுக்கொள்வீர்கள்.

ஜனநாயக காங்கோ குடியரசு அல்லது காங்கோ (கின்ஷாசா) என்று அழைக்கப்படும் நாடு ஆப்பிரிக்காவின் மத்தியில் அமைந்துள்ளது. a பூமத்திய ரேகையின் இரு புறமும் அமைந்த இந்நாடு அடர்த்தியான காடுகளால் போர்த்தப்பட்டிருக்கிறது. பரந்து விரிந்திருக்கும் அதன் காடுகளும் சவானாக்களும் வகை தொகையில்லா ஜீவராசிகளுக்கு இடமளிக்கின்றன. இயற்கை வளங்கள் மிகுந்த இந்நாடு வெகு காலமாகவே சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது; அங்கு படையெடுப்புகளும் உள்நாட்டுப் போர்களும் ஏராளமாக நடந்திருக்கின்றன.

காங்கோ சுதந்திர நாடு 1885-⁠ல் ஸ்தாபிக்கப்பட்டது; பெல்ஜியத்தின் அரசர் இரண்டாம் லியோபோல்ட் இதன் பேரரசராகவும் தனியுரிமையாளராகவும் இருந்தார். ஆனாலும் காங்கோ நாட்டு மக்களுக்கு சுதந்திரமே இருக்கவில்லை. தந்தத்தையும் ரப்பரையும் சூறையாட லியோபோல்ட்டின் ஆட்கள் கொத்தடிமை முறையையும் மிதமிஞ்சிய கொடூரத்தையும் கையாண்டார்கள். பெல்ஜியத்தை சூழ்ந்திருந்த ஐரோப்பிய நாடுகள் பயங்கரமாக கொதித்தெழுந்ததால் லியோபோல்ட் இறுதியில் அடிபணிந்தார். 1908-⁠ல் காங்கோ சுதந்திர நாடு கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக குடியேற்ற நாடாகிய பெல்ஜிய காங்கோ பிறந்தது. அது பெல்ஜிய நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1960-⁠ல் காங்கோ சுதந்திரம் பெற்றது.

காங்கோ நாட்டு மக்கள் மிகவும் மதப்பற்றுள்ளவர்கள். அங்கே சர்ச்சுகளும், செமினரிகளும், இறையியல் கல்லூரிகளும் ஏராளமாக இருக்கின்றன. அநேகர் பைபிள் வசனங்களை சரளமாக ஒப்பிப்பார்கள். என்றாலும், மற்ற இடங்களைப் போலவே இங்கும் மெய் கிறிஸ்தவத்தை நிலைநாட்டுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. குறிப்பாக காங்கோவில் அது ஒரு பெரிய போராட்டமாக இருந்தது; ஏனென்றால் கிட்டாவாலா என்ற மத இயக்கத்தையும் யெகோவாவின் சாட்சிகளையும் மக்கள் சில காலம் குழப்பிக்கொண்டார்கள்.

அடையாளத்தில் குழப்பம்

“கிட்டாவாலா” என்பது ஸ்வாஹிலி பதத்திலிருந்து வந்திருக்கிறது; அதற்கு அர்த்தம் “ஆதிக்கம் செலுத்துவது, இயக்குவது, அல்லது ஆளுவது.” பெயருக்கு ஏற்றபடி அந்த இயக்கத்தின் குறிக்கோள் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த ஒன்றாகவே இருந்தது; அதாவது பெல்ஜியத்திடமிருந்து எப்படியாவது சுதந்திரம் பெற வேண்டும் என்பதாக இருந்தது. மதம் என்ற போர்வையின் கீழ் அந்தக் குறிக்கோளை எப்படியும் அடைந்துவிடலாம் என்று சிலர் நியாயப்படுத்தினார்கள். வருத்தகரமாக கிட்டாவாலா பிரிவினர் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை பெற்றார்கள், படித்தார்கள், ஏன் விநியோகிக்கவும் செய்தார்கள். அவர்களுடைய கூட்டங்கள் நடைபெற்ற இடங்களில் “உவாட்ச் டவர்” என்ற பெயர்ப்பலகையை தொங்கவிட்டிருந்தார்கள். யெகோவாவின் சாட்சிகள் தென்கிழக்கு காங்கோவிலுள்ள கடங்கா மாநிலத்தில் கால் பதிப்பதற்கு வெகு முன்னரே இந்த “உவாட்ச் டவர் இயக்கங்கள்” பிரபலமாகியிருந்தன. கிட்டாவாலா பிரிவினர்தான் யெகோவாவின் சாட்சிகள் என்று பல பத்தாண்டுகளாக மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது நிஜமல்ல.

கிட்டாவாலா பிரிவினர் தங்கள் அரசியல் கருத்துக்களையும் மூடத்தனமான பழக்கவழக்கங்களையும் ஒழுக்கக்கேடான வாழ்க்கை முறையையும் ஆதரிப்பதற்காக பைபிள் போதகங்களை திரித்துவிட்டார்கள். அதோடு வரிகள் செலுத்த மறுத்தார்கள், ஆட்சியாளர்களையும் எதிர்த்தார்கள். அவர்களில் சில தொகுதியினர் ஆயுதங்களோடு அதிகாரிகளை எதிர்த்து கலகம் செய்தார்கள். அந்தப் பிரிவினரை பெல்ஜிய அரசாங்கம் தடை செய்ததில் ஆச்சரியமே இல்லை.

1956-⁠ல் பெல்ஜிய காங்கோவின் மாவட்ட ஆணையர், செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினார்; கிட்டாவாலா பிரிவினரின் பின்னணியை அது வெளிப்படுத்தியது. நியாசாலாந்தை (இப்போது மலாவி) சேர்ந்த டோமோ நிரென்டா என்பவனைப் பற்றி அந்தக் கட்டுரை குறிப்பிட்டது; அவன் வட ரோடீஷியாவில் (இப்போது ஜாம்பியா) வசித்து வந்தான். தென் ஆப்பிரிக்காவிலுள்ள கேப் டவுனில், பைபிள் மாணாக்கர்களோடு (இப்போது யெகோவாவின் சாட்சிகள்) கூட்டுறவு கொண்டிருந்த யாரோ ஒருவரால் நிரென்டா போதிக்கப்பட்டிருந்தார். அந்தக் கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “[நிரென்டா] 1925-⁠ல் கடங்காவிற்குள் [காங்கோ] ஊடுருவி, தன்னை மவானா லிசா, அதாவது ‘கடவுளின் மைந்தன்’ என சொல்லிக்கொண்டு திரிந்தான். அங்கிருந்தவர்கள் பில்லிசூனியத்தைக் குறித்து காலங்காலமாகவே பயந்து நடுங்கியதால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டான். தன்னைப் பின்பற்றுபவர்கள் சூனியக்காரர்களிடமிருந்து விடுபடுவதோடு, அரசாங்கமும் சர்ச்சும் விதிக்கிற எல்லா வரிகளிலிருந்தும் சட்டங்களிலிருந்தும்கூட விடுபட முடியும் என உறுதியளித்தான். அவன் பேச்சை கேட்காதவர்கள் சூனியக்காரர்களாக அறிவிக்கப்பட்டு, நினைவிழக்கும் வரை அடிக்கப்பட்டு, கட்டாய ‘முழுக்காட்டுதல்’ என்ற பெயரில் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்டார்கள். (ஓர் ஆற்றில் 55 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.) ஒரு கிராமத்தின் துணைத்தலைவர் அவனை வெளிப்படையாக கண்டனம் செய்த பிறகு, அவன் எப்படியோ அங்கிருந்து தப்பி ரோடீஷியாவுக்கே திரும்பினான். அவன் செய்த கொலைகளுக்காக ரோடீஷிய அதிகாரிகள் அவனை வலைவீசி தேடி, இறுதியில் கைது செய்து, தீர்ப்பளித்து, தூக்கிலிட்டார்கள்.”

பெல்ஜிய அதிகாரிகளின்படி, அந்த மவானா லிசா 1923 முதல் 1925 வரை கடங்காவிற்குள் திடுதிப்பென்று ஊடுருவியதானது, காங்கோவில் கிட்டாவாலா இயக்கம் துவங்குவதற்கு அடிக்கல் நாட்டியது. அதற்குப் பிறகு பல பத்தாண்டுகள் கழித்துதான் யெகோவாவின் சாட்சிகளுக்கு அந்த நாட்டினுள் நுழைவதற்கும் அங்கே தங்குவதற்கும் அனுமதி கிடைத்தது.

யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் யார் என்று தெரியாமல் ஏன் மக்கள் குழம்பினார்கள் என புரிந்துகொள்ள ஒரு விஷயத்தை நாம் அறிந்திருக்க வேண்டும்: ஆப்பிரிக்காவில் சுயேட்சையான சர்ச்சுகள் ஏராளமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட சர்ச்சுகள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக சிலர் கணக்கிடுகின்றனர். ஆப்பிரிக்க மதங்களின் நிபுணரான ஜான் எஸ். மபிட்டி இவ்வாறு எழுதினார்: “ஆப்பிரிக்காவில் கிறிஸ்தவ மதத்திற்கு உள்ள முக்கிய பிரச்சினை, பெரும் எண்ணிக்கையான பிரிவுகளும் வகுப்புகளும் தொகுதிகளும் உட்பிரிவுகளும் இருப்பதுதான். இவற்றில் அநேகம் வெளிநாடுகளில் தோன்றியவை. இன்னும் அநேகம் ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டவை; ஏனென்றால், வெளிநாட்டு மிஷனரிகளின் கட்டுப்பாட்டில் எப்போதும் இருக்க அவர்கள் விரும்பவில்லை; மற்றொரு காரணம், அவர்களுக்கு பதவி ஆசை இருந்தது; அதோடு, ஆப்பிரிக்க கலாச்சாரத்திற்கும் பிரச்சினைகளுக்கும் கிறிஸ்தவம் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்பினார்கள்; இன்னும் எத்தனையோ காரணங்களும் இருந்தன.”

இவ்வாறு, அநேக சுயேட்சை சர்ச்சுகள் இருந்தன; இவற்றில் பெரும்பாலானவை நன்கு ஸ்தாபிக்கப்பட்ட ஒரு மதத்திலிருந்து போதகங்களைப் பெற்றன அல்லது அவற்றிலிருந்து பிரிந்தன. கிட்டாவாலா இயக்கமும் இப்படித்தான் உருவானது. இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகள் காங்கோவை அண்டாதிருக்கச் செய்ய கிறிஸ்தவமண்டலத்திற்கு விசேஷ வாய்ப்பளித்தது கிட்டாவாலா இயக்கம். சாட்சிகளுக்கும் கிட்டாவாலா பிரிவினருக்கும் வித்தியாசம் இருப்பதை சர்ச் தலைவர்கள் அறிந்திருந்தும், இரண்டும் ஒன்றுதான் என்ற தவறான கருத்தை வேண்டுமென்றே பரப்பினார்கள்.

சர்ச்சுகளின் அதிகாரமிக்க ஸ்தானம் அந்தப் பொய்யை பரப்ப வசதியாகிவிட்டது. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள், கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள், குறிப்பாக கத்தோலிக்க சர்ச், பெல்ஜியன் காங்கோவில் மிகுந்த அதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருந்தது. ஆனால் யெகோவாவின் சாட்சிகளோ அங்கே அங்கீகரிக்கப்படவில்லை; ஒருபோதும் அவர்கள் அங்கீகாரத்தைப் பெறக் கூடாது என்றுதான் கிறிஸ்தவமண்டல குருமார் விரும்பினார்கள். ஆகவே தங்கள் மதத்திற்கு மாறியவர்களை கவனமாக பொத்திப் பாதுகாத்தார்கள், அதில் யெகோவாவின் சாட்சிகள் எவ்விதத்திலும் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை.

போராட்டங்கள், கலகங்கள், இனச் சண்டைகள் ஆகிய அனைத்திற்கும் உவாட்ச் டவர் இயக்கம் என பெரும்பாலும் அழைக்கப்பட்ட கிட்டாவாலா இயக்கத்தின் மீது பழி சுமத்தப்பட்டது. உவாட்ச் டவர் என்ற பெயரைக் கேட்டாலே அரசாங்க அதிகாரிகளுக்கு வெறுப்பாக இருந்தது. ஆகவே காங்கோவில், யெகோவாவை சேவிக்க விரும்பியவர்களுக்கு இது பெரிய போராட்டமாக இருந்தது.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பு, மற்ற நாடுகளிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் காங்கோவின் அதிகாரிகளுக்கு திரும்பத் திரும்ப கடிதங்கள் அனுப்பினார்கள்; உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டிக்கும் உவாட்ச் டவர் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதில் விளக்கினார்கள். இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு, அந்நாட்டில் தோன்றிய இந்த மத இயக்கத்தின் நடவடிக்கைகளையும் யெகோவாவின் மக்களது வேலையையும் அதிகாரிகள் குழப்பிக்கொண்டார்கள். யெகோவாவின் சாட்சிகள் காங்கோவிற்கு வர பலமுறை முயன்றும் பயனில்லாமல் போனது.

சாட்சிகள் அந்நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாததால், ஏற்கெனவே அந்நாட்டில் இருந்த உண்மையான சாட்சிகளைப் பற்றி அதிக விவரங்கள் தெரியவில்லை. இருந்தாலும் காங்கோவைப் பற்றி அருகேயிருந்த கிளை அலுவலகங்கள் தயாரித்த அறிக்கைகளைப் பார்க்கும்போது, அந்தக் கடினமான ஆரம்ப காலங்களில் நடந்த ஆர்வத்திற்குரிய விஷயங்களை ஓரளவு அறிந்துகொள்ளலாம். 30 ஆண்டுகால சரித்திரம் அடங்கிய இந்த காங்கோ டைரியிலிருந்து சில பகுதிகளையும் அவற்றுடன் நாங்கள் சேர்த்துள்ள கூடுதலான சில விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.

காங்கோ டைரி​—⁠நாட்டின் அறிக்கைகளிலிருந்து சில பகுதிகள் 1930-60

1930:பெல்ஜிய காங்கோவிலிருந்து . . . பிரசுரங்கள் சம்பந்தமாக தகவல் கேட்டு கடிதங்கள் வந்திருக்கின்றன.

1932:பெல்ஜிய காங்கோவிலும் மத்திப ஆப்பிரிக்காவின் மற்ற பகுதிகளிலும் இனிவரும் காலங்களிலாவது பிரசங்க ஊழியம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

1932 மே மாதம் முதல், தென் ஆப்பிரிக்காவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது கிளை அலுவலகம், முழுநேர ஊழியர்களை காங்கோவிற்குள் அனுமதிக்கும்படி கேட்டு பெல்ஜிய அதிகாரிகளுக்கு திரும்பத் திரும்ப கோரிக்கைகள் அனுப்பியது. ஆனால் அவை நிராகரிக்கப்பட்டன. காங்கோவிலிருந்து வட ரோடீஷியாவிற்கும், வட ரோடீஷியாவிலிருந்து காங்கோவிற்கும் மக்கள் குடிபெயர்ந்து சென்றதால், ரோடீஷியாவை சேர்ந்த சில சகோதரர்கள் கொஞ்ச காலத்திற்கு அவ்வப்போது காங்கோ செல்ல முடிந்தது.

1945:[பெல்ஜியன் காங்கோவில்] கடவுள் சார்பாகவும் அவரது தேவராஜ்ய அரசாங்கத்தின் சார்பாகவும் நிலைநிற்கை எடுக்க ஒருவருக்கு தைரியம் வேண்டும். ஊழியமும் பிரசுரங்களும் முழுமையாக தடைசெய்யப்பட்டிருக்கின்றன; அதுமட்டுமல்ல, எங்களோடு கூட்டுறவு கொள்வதாக சொல்லும் காங்கோ ஆப்பிரிக்கர்கள் வேறொரு இடத்திற்கு அனுப்பப்படுவார்கள்; அங்கே ஒருவித தடுப்புக்காவலில் வருடக்கணக்காக சிலசமயம் இருக்க வேண்டும். காங்கோவிலிருந்து அனுப்பப்படும் கடிதங்கள் இங்கே [வட ரோடீஷியாவிற்கு] வந்து சேருவது அரிதாக இருக்கிறது, இங்கிருந்து அனுப்பப்படும் கடிதங்களும் சேர வேண்டியவர்களிடம் போய் சேருவதாக தெரியவில்லை; ஆனால் . . . ஏராளமான பாதிரியார்கள் இருக்கும் இந்த நாட்டில் சக ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு முடிந்தளவு உதவி செய்யப்படுகிறது.

1948:இந்தப் பிராந்தியத்தில் இரண்டு ராஜ்ய பிரஸ்தாபிகள் வசிக்கிறார்கள், ப்ருஸ்ஸெல்ஸில் உள்ள அலுவலகத்திற்கு அவர்கள் சில அறிக்கைகளை அனுப்பி வருகிறார்கள். இந்தப் பரந்த பிராந்தியத்தில் ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்க என்றாவது ஒரு நாள் வாய்ப்பு கிட்டும் என்று நம்புகிறோம்.

1949:கத்தோலிக்கர்கள் பெருமளவு வசிக்கும் இந்த பிராந்தியத்தில் மிகுந்த சிரமங்கள் மத்தியிலும் பிரசங்க ஊழியம் பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. முன்பெல்லாம், யெகோவாவின் சாட்சியாக இருப்பவர்களுக்கு தண்டனையாக பாதிரியார்கள் சில சமயங்களில் ஒரு பெரிய உப்புக் கட்டியைக் கொடுத்து தண்ணீர் இல்லாமல் விழுங்கச் சொல்வார்கள். இப்போதெல்லாம் அவர்கள் கையாளும் முறைகள், ஸ்பானிய ஒடுக்குமுறையோடு மிகவும் ஒத்திருக்கின்றன. தங்கள் சார்பாக அரசாங்கமே சாட்சிகளை கடுமையாக ஒடுக்க வேண்டுமென்பது அவர்கள் எண்ணம். பல வருடங்களாக ஆப்பிரிக்க பிரஸ்தாபிகள் சிறையில் இருக்கிறார்கள்; சாட்சி கொடுத்ததற்காக கால வரையறையின்றி சிறைவாசம் அனுபவிக்கிறார்கள்; போதாததற்கு, எலிசபெத்வில் [தற்போது லுபும்பாஷி] மாவட்டத்திலிருந்து சுமார் [500] கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காசாஜிலுள்ள விசேஷ சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்படுகிறார்கள். அங்கே சிறிய நிலப்பகுதிகளில் அவர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது; அதுவும் தன்னந்தனியாக அல்லது தனி குடும்பமாக மட்டும் இருக்க வேண்டியிருக்கிறது. . . . பத்து வருடங்கள் வரையாகக்கூட அவர்கள் அப்படி அங்கு இருக்க வேண்டியுள்ளது. உத்தமத்தை விட்டுக்கொடுத்தால் தவிர மற்றபடி விடுதலையோ நீதியோ கிடைக்குமென்ற நம்பிக்கை துளியும் இல்லாமல் அவர்கள் அவ்வளவு காலம் தனிமையின் கொடுமையை சகிக்க வேண்டியுள்ளது.

இதன் காரணமாக சகோதரர்கள் ரகசியமாக ஊழியம் செய்கிறார்கள்; கூட்டங்களும் ரகசியமாக நடத்தப்படுகின்றன; கைது செய்யப்படும் பயத்தில் கூட்டங்கள் நடக்கும் இடங்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே பரிச்சயமானவர்களிடமும் அவர்களுடைய நண்பர்களிடமும் மட்டுமே பெரும்பாலும் சாட்சி கொடுக்கப்படுகிறது. ஆனால் அப்போதும் நிறைய பேர் பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டு காசாஜ் முகாமிற்கு உடனடியாக கொண்டு செல்லப்படுகிறார்கள்.

கிட்டத்தட்ட இந்த சமயத்தில்தான், வட ரோடீஷிய கிளை அலுவலகத்தை சேர்ந்த லவெல்லன் ஃபிலிப்ஸ், பெல்ஜியன் காங்கோவில் துன்புறுத்தப்பட்ட சாட்சிகளின் சார்பாக நடவடிக்கை எடுக்க அங்கு சென்றார். ராஜ்ய பிரசங்கிப்பு வேலையைப் பற்றியும் சாட்சிகளுடைய நம்பிக்கைகளுக்கும் கிட்டாவாலா பிரிவினரின் நம்பிக்கைகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் பற்றியும் அவர் விளக்கியபோது, கவர்னர் ஜெனரலும் மற்ற அரசாங்க அதிகாரிகளும் காதுகொடுத்துக் கேட்டார்கள். ஒரு கட்டத்தில், “உங்களுக்கு உதவி செய்தால் எனக்கு என்ன நடக்கும் என்றுதான் யோசிக்கிறேன்” என கவர்னர் ஜெனரல் ஆதங்கத்தோடு சொன்னார். ரோமன் கத்தோலிக்க சர்ச்சுக்கு அந்த நாட்டில் பெரும் செல்வாக்கு இருந்ததை அறிந்தே அவ்வாறு சொன்னார்.

1950:கடந்த வருடம்தான் படுமோசமாக இருந்தது. பெல்ஜிய காங்கோவில் வசித்த சகோதரர்கள் படாத பாடு பட்டார்கள். ஊழிய ஆண்டின் ஆரம்பத்தில், அவர்களுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்களும் கடிதங்களும் அவர்கள் கையில் கிடைக்கவில்லை; அவர்களோடு இருந்த தொடர்பும் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டது. அடுத்ததாக, ஜனவரி 12-⁠ம் தேதியன்று, கவர்னர் ஜெனரல் சொஸைட்டியின் வேலைகளுக்கு தடை விதித்தார். சொஸைட்டியின் அங்கத்தினர்களாக இருப்பவர்களுக்கு, சொஸைட்டியோடு கூட்டுறவு கொள்கிறவர்களுக்கு, அல்லது எவ்விதத்திலாவது சொஸைட்டியை ஆதரிப்பவர்களுக்கு இரண்டு மாத சிறை தண்டனையையும் 2,000 ஃபிராங்க் அபராதத்தையும் விதித்தார். கத்தோலிக்க செய்தியாளர்கள் இந்த தீர்மானத்தை ‘கைதட்டி’ வரவேற்றார்கள். அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டார்கள். எலிசபெத்வில்லில் முன்பு [சபை] ஊழியராக இருந்த ஒருவரிடமிருந்து சென்ற வருடம் பெறப்பட்ட பட்டியல்களை வைத்து, சொஸைட்டியோடு கூட்டுறவு கொண்டிருந்த நூற்றுக்கணக்கானவர்களும் அவர்களுடைய மனைவிகளும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். வட ரோடீஷிய ஆப்பிரிக்கர்கள் தங்கள் தண்டனைக் காலத்தை சிறையில் கழித்த பிறகு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள்; ஆனால் காங்கோ நாட்டை சேர்ந்தவர்களோ பெரும்பாலும் காசாஜ் சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள்; அது, எலிசபெத்வில்லிலிருந்து [சுமார் 500] கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இப்போதும் சில சகோதரர்கள் அங்கிருக்கிறார்கள். நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட சில சகோதரர்களுக்கு மிகக் குறைவான உணவு கொடுக்கப்பட்டது; பிரயாணத்தின் கடைசிக் கட்டத்தில், அதாவது சாக்கானியாவிலிருந்து வட ரோடீஷியாவின் எல்லை வரை 30 கிலோமீட்டர் அவர்கள் நடந்தே செல்ல வேண்டியிருந்தது.

சமீபத்தில் ஏராளமான ரகசிய போலீஸார் நடமாடுகின்றனர். பைபிளை யாராவது வைத்திருந்தாலே போதும், அவர் ஒரு யெகோவாவின் சாட்சி என சந்தேகிக்கப்படுகிறார்.

சற்று முன்னர்தான், எலிசபெத்வில் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஐரோப்பிய சகோதரிகளைப் பற்றி தகவல் கிடைத்தது; உவாட்ச்டவர் பத்திரிகையை வைத்திருந்ததாலும் பிரசங்கம் செய்ததாலும் அவர்களுக்கு 45 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் நன்னடத்தை நிபந்தனையின் பேரில் மூன்று ஆண்டுகளுக்கு அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. (அப்படியென்றால், அவர்களால் கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியாது.) எந்நிமிடமும் அவர்கள் நாடுகடத்தப்படலாம்.

1951:பெல்ஜிய நாட்டு செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும் ஏராளமான கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன; யெகோவாவின் சாட்சிகளது உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு, பெல்ஜியன் காங்கோவிலுள்ள “கிட்டாவாலா” மத வெறி இயக்கத்துடன் சம்பந்தம் இருப்பதாக குறிப்பிட்டு அவை கடுமையாக தாக்கிப் பேசின. பெல்ஜிய நாட்டு சட்டப்படி, செய்தித்தாளிலோ பத்திரிகையிலோ வெளிவந்த கட்டுரைக்கு யாரேனும் விமரிசனம் அனுப்பினால் அதை அந்த செய்தித்தாள் அல்லது பத்திரிகை கட்டாயம் பிரசுரிக்க வேண்டும். இந்த உரிமையை நாங்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அவதூறான கட்டுரைகளை எதிர்த்து, ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் சார்பாக வாதாடினோம். நாங்கள் அனுப்பிய விமரிசனங்கள் பிரசுரிக்கப்பட்டன.

ஜனவரி [12], 1949 முதல் பெல்ஜியன் காங்கோவில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் வேலை தடை செய்யப்பட்டுள்ளது; பொய்யான அறிக்கைகளின் காரணமாக யெகோவாவின் உண்மையான சாட்சிகள் துன்பப்பட வேண்டியிருந்திருக்கிறது. குடியேற்ற நாடுகளின் அமைச்சரிடம் எழுத்து மூலம் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன; தேசவிரோத “கிட்டாவாலா” இயக்கத்துடன் யெகோவாவின் சாட்சிகளுக்கும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகள் வேறு அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பெல்ஜியன் காங்கோவில் ‘கடவுளுடைய வார்த்தை பிரசங்கிக்கப்படுவதை’ அடியோடு நிறுத்துவதற்காக, தவறான தகவல்களை பரப்புவது, துன்புறுத்துவது, அபராதங்கள் விதிப்பது, அடிப்பது, சிறையில் தள்ளுவது, நாடுகடத்துவது போன்ற உத்திகள் கையாளப்பட்டிருக்கின்றன.

1952:மத்திய ஆப்பிரிக்காவிலும் “இரும்புத் திரை” உண்டு! யெகோவாவின் சாட்சிகளைப் பொறுத்தவரை அது பெல்ஜியன் காங்கோவின் எல்லைகளை சூழ்ந்திருக்கிறது. பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கர்கள் வாழும் இந்நாட்டில் ஊழியத்திற்கு விதிக்கப்பட்ட தடை சிறிதும் தளரவில்லை.

இந்நாட்டிலிருந்து அவ்வப்போது வரும் சில அறிக்கைகளின்படி ஆப்பிரிக்க பிரஸ்தாபிகள் நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர், சிறையில் தள்ளப்பட்டிருக்கின்றனர், அடிக்கப்பட்டிருக்கின்றனர், மற்ற இழப்புகளை சந்தித்திருக்கின்றனர். அநேக பகுதிகளில் சாட்சிகளுக்கு எதிரான கடும் விரோதம் அதிகரித்திருப்பதாக தெரிகிறது. அந்நாட்டினர் சாட்சி கொடுக்கும்போது அல்லது உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்களை வைத்திருக்கும்போது பிடிபட்டால் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். யாராவது பைபிளை வைத்திருந்தாலே போதும், அவர் யெகோவாவின் சாட்சி என கருதப்படுகிறார்.

சகோதரர்களின் வீடுகள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுகின்றன, அடிக்கடி சோதனை செய்யப்படுகின்றன. இதை அறிக்கை செய்த ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “[பெல்ஜியன் காங்கோவின் போலீஸார்] கண் மூடுவதேயில்லை. யெகோவாவின் சாட்சிகளை மட்டுமே குறிவைத்து, வலைவீசி தேடுகிறார்கள். முன்பைவிட அதிக உன்னிப்புடன் தேடுகிறார்கள்.”

30 பிரஸ்தாபிகளுடைய ஆகஸ்ட் மாத அறிக்கை ஒன்று வழக்கத்திற்கு மாறாக இந்த அலுவலகத்திற்கு வந்திருக்கிறது; அடிக்குறிப்பில், “சகோதரர்களே, தொடர்ந்து எங்களுக்காக ஜெபம் செய்யுங்கள்” என்ற 1 தெசலோனிக்கேயர் 5:25 (NW) வசனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பு குறிப்பிட்டபடி, வட ரோடீஷியாவைச் சேர்ந்த ஆப்பிரிக்க சாட்சிகள் காங்கோவிற்கு சென்றனர். இருந்தாலும் அவர்கள் போலீஸின் கண்ணில் பட்டபோது கைது செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். பெரும்பாலானவர்கள் குறுகிய காலம் சிறைத்தண்டனை அனுபவித்தபோதும், சில சகோதரர்கள் பல ஆண்டுகளுக்கு கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். ஒரு சகோதரர் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் காங்கோவின் பல்வேறு சிறைகளில் இருந்தார். கைது செய்தவர்கள் அடிக்கடி அவரை அடித்து உதைத்தார்கள். சாட்சி கொடுப்பதை நிறுத்தும்வரை விடுதலை செய்யப்போவதில்லை என்றும் அவரிடம் சொன்னார்கள்.

1952-⁠ல்தான் விசுவாசமிக்க ஒரு சகோதரர் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘நாங்கள் ஆப்பிரிக்க சோள மூட்டையில் உள்ள மணிகளைப் போன்றவர்கள். ஒவ்வொன்றாக எங்கு சிந்தப்பட்டாலும், இறுதியில் மழை வரும்போது முளைத்துப் பெருகுவோம்.’ இது சம்பந்தமாக வட ரோடீஷியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது கிளை அலுவலகம் இவ்வாறு எழுதியது: “சகோதரர்களின் துன்புறுத்தல் மத்தியிலும், சொல்லப்போனால் அதன் காரணமாகவும், ‘ஆப்பிரிக்க சோள மூட்டையில் உள்ள மணிகள்’ காங்கோவில் நிஜமாகவே சிதறப்படுகின்றன. கோல்வேஸி பகுதியில் சாட்சிகளோடு நூற்றுக்கணக்கானவர்கள் கூட்டுறவு கொள்வதாக லுஸாகாவிலுள்ள கிளை அலுவலகத்திற்கு ஒருசமயம் அறிக்கைகள் வந்தன. ஆனால் இப்போதோ அவர்களில் அநேகர் காங்கோவின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.” இவ்வாறு சகோதரர்கள் சிதறியது, சீஷராக்கும் வேலை விரிவடைய உதவியது.

நாட்டின் தென் கிழக்குப் பகுதியில் சகோதரர்கள் தொடர்ந்து ஊழியத்தை கடினமாக செய்துவந்த சமயத்தில், லேயபோல்ட்வில்லில் (தற்போது கின்ஷாசா) சத்தியம் அறிமுகப்படுத்தப்பட்டது. ப்ரஜாவிலிலுள்ள சகோதரர்கள் வேகமாக ஆவிக்குரிய முன்னேற்றம் செய்தார்கள், சத்தியத்தை வைராக்கியமாக அறிவித்தார்கள். சிலர் லேயபோல்ட்வில்லில் பிரசங்கிப்பதற்காக படகில் காங்கோ நதியைக் கடந்துசெல்ல ஆரம்பித்தார்கள். 1952-⁠ல், விக்டர் கூபாக்கானியும் அவரது மனைவியும் முழுக்காட்டப்பட்டார்கள். கின்ஷாசாவில் முதன்முதலாக சாட்சிகளானவர்கள் இவர்களே. விரைவில் அங்கு ஒரு சபை உருவானது.

1953:நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 250 சகோதரர்கள் பிரசங்க வேலையில் கொஞ்சமாவது பங்கு பெறுவதாக அறிக்கைகள் காட்டுகின்றன; இந்த எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம். சகோதரர்கள் வெறுமனே [மறுசந்திப்புகள் செய்து,] பைபிள் படிப்புகள் நடத்துகிறார்கள். அதுவும் ஒருசில பிரசுரங்களையே கொண்டு போகிறார்கள் அல்லது எந்தப் பிரசுரங்களையும் கொண்டு போவதில்லை. ஏனென்றால் தங்கள் வீடுகள் எந்நேரத்திலும் சோதனையிடப்படலாம் என அறிந்திருக்கிறார்கள். ஒரு சகோதரர் இரண்டு சிறுபுத்தகங்களை வைத்திருந்ததாக அவரது “நண்பர்களில்” ஒருவர் புகார் செய்துவிட்டார், இதனால் அந்த சகோதரர் எலிசபெத்வில்லில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இரண்டு மாதங்கள் வைக்கப்பட்டார்.

1954:சொஸைட்டிக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கும் விதிக்கப்பட்ட கெடுபிடித் தடை பெல்ஜியன் காங்கோவில் தொடர்கிறது . . . உண்மையுள்ள சாட்சிகள் சிறைச்சாலையில் மற்ற கைதிகளிடம் தொடர்ந்து பிரசங்கித்திருக்கிறார்கள். அந்தக் கைதிகள் கையில் கிடைத்த துண்டுக் காகிதங்களில் சிறிய பென்சில்களால் குறிப்புகள் எழுதிக்கொண்டார்கள். சிறைச்சாலை தங்களுக்கு அளித்த பைபிள்களிலிருந்து வசனங்களை எடுத்துப் பார்க்க உதவியாக அவற்றை எழுதிக்கொண்டார்கள். இதனால்தான் சில சிறைச்சாலைகளில் யெகோவாவின் சாட்சிகள் மற்ற கைதிகளிலிருந்து பிரிக்கப்பட்டு தனியாக வைக்கப்படுகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

யெகோவாவின் சாட்சிகள், கிட்டாவாலா ஆகிய இரு பிரிவினரின் வேலைகளுமே தடை செய்யப்பட்டன. நாட்டிற்குள் அனுப்பப்பட்ட பைபிள் பிரசுரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் கைக்கு தப்பிய பிரசுரங்கள் சிலசமயம் கிட்டாவாலா பிரிவினரால் இடைமறிக்கப்பட்டு அவர்களுடைய வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டன. யெகோவாவின் சாட்சிகளும் சரி கிட்டாவாலா பிரிவினரும் சரி கைது செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, சித்திரவதை முகாம்களுக்கு கொண்டு போகப்பட்டனர். இருந்தாலும், “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என இயேசு அறிவித்தார். (மத். 7:16) சகோதரர்களின் நன்னடத்தையை அரசாங்க அதிகாரிகள் கவனித்து, அவர்களுக்கும் கிட்டாவாலா பிரிவினருக்கும் இடையே இருந்த வித்தியாசத்தை உணர ஆரம்பித்தார்கள்.

1955:இந்நாட்டில் ஊழியத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது; சமீபத்தில் அது நீக்கப்படுவதற்கு அறிகுறிகளே இல்லை. இருந்தாலும் இது, யெகோவாவை நேசித்து அவரை சேவிப்பவர்களின் வைராக்கியத்தை குறைத்துவிடவில்லை. கடந்த வருடத்தில் அநேக சகோதரர்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள், நாடுகடத்தப்பட்டார்கள்; என்றாலும் அவர்கள் தளர்ந்துவிடவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது சாத்தியம் இல்லை, ஆகவே [மறுசந்திப்புகளுக்கும்] பைபிள் படிப்புகளுக்கும் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. “அர்மகெதோன் யுத்தத்திற்கு முன்பு இந்நாட்டில் நற்செய்தியை வீடு வீடாக பிரசங்கிக்க யெகோவா எங்களை அனுமதிப்பாரா என்று தெரியாது” என்றாலும், இந்த விதத்திலும் ஊழியம் செய்ய பிரஸ்தாபிகள் விரும்புகிறார்கள் என ஒரு சபை கடிதம் எழுதியிருக்கிறது.

1957:கடந்த வருடத்தில்தான் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு ஊழியம் மற்றவர்களின் கவனத்தை​—⁠முக்கியமாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களின் கவனத்தை—⁠ஈர்த்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. கடந்த நவம்பர் மாதத்தில் லேயபோல்ட்வில்லில் இருந்த பெல்ஜிய காங்கோ அரசாங்கத்தை [மில்டன் ஜி.] ஹென்ஷெல் நேரடியாக அணுகினார்; சொஸைட்டிக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் எதிரான தடையை நீக்குமாறு கேட்டு மனுவை சமர்ப்பித்தார். அதன்பின் மறுபடியும் ஒருமுறை லேயபோல்ட்வில்லுக்கு சென்றார், பிறகு நியு யார்க்கிலும் ப்ருஸ்ஸெல்ஸிலும் முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன. பிற்பாடு, ஆப்பிரிக்க விவகாரங்களின் வல்லுநர் ஒருவர் பெல்ஜியத்திலிருந்து வட ரோடீஷிய கிளை அலுவலகத்திற்கு வந்தார்; நம்முடைய வேலையையும் செய்தியையும் பற்றி அவரிடம் விவரமாக சொல்ல அந்த சந்தர்ப்பம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

இன்னமும் தடையுத்தரவு தொடர்கிறது. பெல்ஜிய காங்கோவில் உள்ள சகோதரர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் ஊழியம் செய்ய வேண்டியிருக்கிறது. இருநூற்றுப் பதினாறு பேர் நினைவு ஆசரிப்பிற்கு வந்திருந்தார்கள், என்றாலும் அவர்கள் சிறு சிறு தொகுதிகளாக கூடியிருந்தார்கள்.

1958:கடந்த வருடத்தில், நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலை தொடர்ந்து தடை செய்யப்பட்டு, சகோதரர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இருந்தபோதிலும் ராஜ்ய செய்திக்கு அதிகளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

1959:சகோதரர்கள் சபைக் கூட்டங்களை நடத்துவதற்கு உள்ளூர் அரசாங்க அதிகாரிகளிடமிருந்து முதன்முதலாக வாய்மொழி அனுமதி பெற்றார்கள்; சட்டப்பூர்வ தடையுத்தரவு நீக்கப்படாதபோதும் இந்த அனுமதி பெற்றார்கள். இதுவரை சபைக் கூட்டங்களை நடத்த முடியவில்லை, பைபிளைப் படிக்க சிறு தொகுதிகளாக மட்டும் வீடுகளில் கூடிவந்திருக்கிறார்கள். முதல் சபைக்கூட்டமாக நினைவு ஆசரிப்பை அனுசரிக்க சகோதரர்கள் மும்முரமாக ஏற்பாடு செய்தார்கள். ஐந்து லேயபோல்ட்வில் [சபைகளில்] மொத்தம் 1,019 பேர் ஆஜராகியிருந்தார்கள். அதைக் கண்ட அனைவரும் அசந்துபோனார்கள்; கூட்டங்கள் முதன்முறையாக நடந்ததால் மட்டுமல்ல, சகோதரர்களின் சந்தோஷமான கிறிஸ்தவ கூட்டுறவை பார்த்ததாலும்தான் வியந்துபோனார்கள். சாட்சிகள் ‘ஒருவருக்கொருவர் அன்பு காட்டியதை’ கண்டு, அவர்கள் மற்ற மதத்தவரிலிருந்து மிகவும் வித்தியாசமானவர்கள் என்பதை அநேகர் உடனடியாக புரிந்துகொண்டார்கள்.

காங்கோவிற்குள் மிஷனரிகள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், ஜூன் 10, 1958 அன்று கையெழுத்திடப்பட்ட சகிப்புத்தன்மை ஆணையின்படி “நான்கு சுவர்களுக்குள் கூட்டங்கள் நடத்த” யெகோவாவின் சாட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இனி சுதந்திரமாக ஒன்றுகூட முடிந்ததைக் குறித்து சகோதரர்கள் ஆனந்தமடைந்தார்கள். சிலசமயங்களில் செக்யூரிட்டி ஏஜென்டுகள் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டார்கள்; சகோதரர்களின் நன்நடத்தையையும் ஒழுங்கையும் கண்டு மெச்சினார்கள்.

இன்னும் சாதகமான மாற்றங்களும் நிகழ்ந்தன. 1956 வரை, எல்லா பள்ளிகளையும் மத நிறுவனங்களே நடத்தி வந்தன. அதன் பிறகு பரந்த மனப்பான்மை கொண்ட ஒரு புதிய அமைச்சர் அரசாங்க பள்ளிகளை ஸ்தாபித்தார்; சிறுபான்மை தொகுதியினரை பரந்த மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஊக்குவித்தார். யெகோவாவின் சாட்சிகளுக்கும் கிட்டாவாலா பிரிவினருக்கும் இடையே நிலவிய குழப்பம் மெதுமெதுவாக தெளிவடைந்தது; அவர்களுக்கு இடையிலான வித்தியாசத்தை அதிகாரிகள் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். சிந்தப்பட்ட சோள மணிகள் மீது புத்துணர்ச்சியூட்டும் மழைச்சாரல் அடித்தது போல் இருந்தது. எல்லா இடங்களிலும் மக்கள் யெகோவாவின் சாட்சிகளை ஆதரிக்க தொடங்கினார்கள்.

அந்தச் சமயத்தில் ஒரு கிராமத் தலைவர் அநேக சாட்சிகளை கைது செய்து, விசாரணைக்காக மண்டல ஆட்சியருக்கு முன்பாக அவர்களை கொண்டு சென்றார். அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என ஆட்சியர் கேட்டார். அந்தத் தலைவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆகவே ஆட்சியர் அந்தத் தலைவரை கோபமாக திட்டினார், பிறகு சகோதரர்களை விடுதலை செய்தார்; மேலும் சகோதரர்களை வாகனத்தில் அழைத்துச் சென்று அவர்களுடைய வீடுகளில் விடும்படியும் கட்டளையிட்டார்.

1960:பெல்ஜியன் காங்கோவில் கடந்த வருடம் வேலை அருமையான விதத்தில் முன்னேறியது. அந்நாட்டில் பிரச்சினைகளின் மத்தியிலும் சரி, ஊழியம் தொடர்ந்து தடை செய்யப்பட்டிருப்பதன் மத்தியிலும் சரி, சகோதரர்களால் ராஜ்ய மன்றங்களில் தவறாமல் கூட்டங்களை நடத்த முடிந்திருக்கிறது.

தலைநகராகிய லேயபோல்ட்வில்லில் நினைவு ஆசரிப்பின் சமயத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. அந்நகரிலுள்ள ஆறு [சபைகள்] ஞாயிற்றுக்கிழமையன்று பொதுப் பேச்சிற்கு ஒன்றாக கூடிவரும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. அன்று கூடிவந்த 1,417 பேரும் பூரிப்படைந்தார்கள். [கண்காணிகளில்] ஒருவர் இவ்வாறு எழுதினார்: “நாங்கள் சந்தோஷத்தில் மிதந்தோம், ஏனென்றால் முதன்முறையாக அப்படிப்பட்ட ஏற்பாட்டை செய்திருந்தோம்; யெகோவாவின் தூதர்கள் நாலா பக்கமும் எங்களை சூழ்ந்து பாதுகாத்தார்கள்.”

காங்கோவின் இந்த 30 ஆண்டுகால டைரி, அருகிலுள்ள கிளை அலுவலகங்கள் அனுப்பிய அறிக்கைகளின் அடிப்படையில், அங்கு நடந்த ஊழியத்தை சுருக்கமாக விவரிக்கிறது. அதன் பிறகு என்னவெல்லாம் நடந்தன என்பதை இப்போது பார்க்கலாம்.

தேசிய சுதந்திரம் அருகில்

1950-களின் முடிவிற்குள், காங்கோவில் வட ரோடீஷிய கிளை அலுவலகத்தால் மேற்பார்வை செய்யப்பட்ட ராஜ்ய பிரசங்கிப்பு வேலை அதிகாரப்பூர்வமாக சகித்துக்கொள்ளப்பட்டது, ஆனாலும் அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதற்கிடையே புதிய பிரச்சினைகளும் அநிச்சயமான சூழ்நிலைகளும் உருவாயின. தேசப்பற்று அதிகரித்தது, அதேபோல் அரசாங்க அதிகாரத்திற்கு எதிர்ப்பும் அதிகமாக கிளம்பியது. ஜனவரி 1959-⁠ல் கலகக்காரர்கள் லேயபோல்ட்வில்லில் உள்ள கடைகளை சூறையாடி, தீக்கொளுத்தினார்கள். சர்ச்சுகளையும் அவர்கள் கொள்ளையடித்து, அங்கிருந்த விக்கிரகங்களை தெருக்களில் வீசியெறிந்தார்கள். இதனால் பெல்ஜிய அதிகாரிகளும் உள்ளூர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் மாநாடு நடத்த வேண்டியதாயிற்று. தேசிய சுதந்திரம் வழங்க அவர்கள் ஒரு தேதியை தேர்ந்தெடுத்தார்கள்; அதுதான் ஜூன் 30, 1960. என்றாலும், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர்கூட போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.

அரசியல் கட்சிகள் நாடெங்கும் தலைதூக்க ஆரம்பித்தன. அவற்றின் அங்கத்தினர்கள் மத்தியில் இருந்த ஒற்றுமைக்கு முக்கிய காரணம், இனப் பின்னணியே அன்றி அரசியல் கொள்கையல்ல. பார்ட்டி கார்டுகளை வாங்கும்படி சகோதரர்களை அவர்கள் மிகவும் வற்புறுத்தினார்கள். ஒரு வருடத்திற்கு முன்பு முழுக்காட்டுதல் பெற்ற பயெர் மாஃப்வா இவ்வாறு குறிப்பிட்டார்: “1960, ஜூன் மாதத்தில் ஒரு சனிக்கிழமை அன்று இது நடந்தது. மத்தியானம் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். லேயபோல்ட்வில்லின் பழைய விமான நிலையத்தை நான் கடந்தபோது, ஒரு ஆள் வாளும் கையுமாக என்னிடம் வந்தான். ‘உன் பார்ட்டி கார்டு எங்கே?’ என்றான் அதட்டலாக. நான் பதில் சொல்லவில்லை. உடனே வாளால் என் முகத்தை தாக்கினான், என் மூக்கு அறுந்தது. திரும்பத் திரும்ப வாளால் தாக்கினான். நான் ஓடிவிடப் பார்த்தேன், ஆனால் கீழே விழுந்துவிட்டேன். என் மனைவியையும் ஆறு பிள்ளைகளையும் மறுபடியும் பார்ப்பதற்கு உயிர்த்தெழுதலின் போது என்னை நினைவுகூர வேண்டுமென யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். நான் ஜெபம் செய்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. படைவீரர்கள் அந்த ஆளின் கால் முட்டிகளை குறிபார்த்து சுட்டார்கள், அவன் சரிந்து விழுந்தான். ஒரு போலீஸ்காரர் என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார், அங்கே சிகிச்சை பெற்றேன். பைபிள் வசனங்கள் அப்போது எனக்கு பெரிதும் ஆறுதல் அளித்தன.”

ஆரம்ப மிஷனரிகளின் வருகையும் கிளை அலுவலகத்தின் துவக்கமும்

நாம் பார்த்தபடி, யெகோவாவின் சாட்சிகளுடைய பிரதிநிதிகள் காங்கோவிற்குள் நுழைய எடுக்கப்பட்ட முயற்சிகள் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தன. இருந்தாலும் அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டபோது எர்னெஸ்ட் ஹாய்ஸ் ஜூனியரால் அங்கு செல்ல முடிந்தது.

சகோதரர் எர்னெஸ்ட், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வாட்டசாட்டமானவர். கருகருவென்ற சுருள் முடி உடையவர். அஞ்சா நெஞ்சம் படைத்தவர்; என்றாலும், காங்கோவில் வாழ்வது தனக்கும் தன் மனைவி ஏலெனுக்கும் 11 வயது மகள் டான்யலுக்கும் அவ்வளவு சுலபமாக இருக்காது என்பதை அறிந்திருந்தார். எனினும் அவரது பின்னணியாலும் அனுபவத்தாலும், அந்தச் சூழ்நிலையை சமாளிப்பதற்கு பொருத்தமானவராக இருந்தார். அவர் 1947-⁠ல் ப்ருஸ்ஸெல்ஸ் பெத்தேலில் சேர்ந்திருந்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு திருமணம் செய்துகொண்டு, தன் மனைவியோடு பயனியர் ஊழியத்தில் ஈடுபட்டார். பிற்பாடு, விசேஷமாக தயாரிக்கப்பட்ட ஒரு சிற்றேட்டுடன் வக்கீல்களையும் அதிகாரிகளையும் சந்திக்கும்படி அவரிடம் சொல்லப்பட்டது; அந்த சிற்றேடு கிட்டாவாலா பிரிவினருக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் உள்ள வித்தியாசங்களை எடுத்துக் காட்டியது. அதன் பிறகு எர்னஸ்ட் வட்டாரக் கண்காணியாக சேவித்தார்.

காங்கோவிற்கு செல்ல சட்டப்பூர்வ ஆவணங்களைப் பெறுவதற்கு எர்னெஸ்ட் பல முறை முயற்சி செய்தார்; பெல்ஜிய நாட்டு அரசருக்கு நேரடியாக கோரிக்கை ஒன்றையும் அனுப்பினார். அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு, காங்கோவிற்குள் நுழைய “தகுதியற்றவர்களாக” கருதப்பட்டோரின் பட்டியலில் எர்னெஸ்ட்டின் பெயரும் சேர்க்கப்பட்டது.

எர்னெஸ்ட் விடாமுயற்சியுடன் செயல்பட்டார். ஆப்பிரிக்காவிற்கு சென்று, அண்டை நாடுகள் வழியாக காங்கோவிற்குள் நுழைய முயற்சி செய்தார். எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தன. கடைசியில், காங்கோ குடியரசின் தலைநகராகிய ப்ரஜாவில்லுக்கு செல்ல அவருக்கு விசா கிடைத்தது. அதன் பிறகு படகில் ஆற்றைக் கடந்து லேயபோல்ட்வில்லுக்கு சென்றார். இதனால் அதிகாரிகளிடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. தகுதியற்றவர்கள் பட்டியலில் எர்னெஸ்ட்டின் பெயரும் இருந்ததால் அவருக்கு விசா கொடுக்கக் கூடாது என்று சில அதிகாரிகள் சொன்னார்கள். இறுதியில் சிரில் அடூலா என்ற ஒரு அதிகாரி​—⁠பிற்பாடு பிரதம மந்திரியானவர்​—⁠காங்கோவிற்குள் நுழைய எர்னெஸ்ட் முயற்சிகள் எடுத்ததைப் பற்றி தான் அறிந்திருந்ததாக சொன்னார். அதோடு, முந்தைய அரசாங்க அதிகாரிகள் எர்னெஸ்ட்டை வெறுத்தார்களென்றால் அவர் உண்மையில் காங்கோவின் நண்பராகத்தான் இருக்க வேண்டும் என்று அந்த அதிகாரி நியாயப்படுத்தினார். ஆகவே எர்னெஸ்ட்டிற்கு தற்காலிக விசா கொடுக்கப்பட்டது, பிற்பாடு நிரந்தர விசா வழங்கப்பட்டது. இவ்வாறு, மே 1961-⁠ல், காங்கோவில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க ஊழியத்தை மேற்பார்வை செய்ய ஒரு பிரதிநிதி வந்துசேர்ந்தார்.

தன் மனைவியும் மகளும் காங்கோவிற்கு வர எர்னெஸ்ட் ஏற்பாடு செய்தார்; செப்டம்பர் மாதத்திற்குள் அவருடைய மகள் டான்யல் லேயபோல்ட்வில்லிலிருந்த ஸ்கூலுக்கு போக ஆரம்பித்திருந்தாள். ஜூன் 8, 1962 அன்று தலைநகரில் முதல் கிளை அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. அலுவலகமும் வசிப்பிடமும் அவென்யூ வான் ஏட்வெல்டாவில் (இப்போது அவென்யூ டியூ மார்ஷே) இருந்த அப்பார்ட்மென்ட்டின் மூன்றாவது மாடியில் இருந்தன. போதுமான இடம் இல்லாததால் பிரசுரங்கள் தனியாக ஒரு டிப்போவில் வைக்கப்பட்டன. இது வசதிப்படவில்லையென்றாலும், இடம் கிடைப்பது பெரும்பாடாக இருந்ததால் பிரச்சினையைத் தீர்க்க அதுதான் சரியான வழியாக இருந்தது.

சகோதரர் எர்னெஸ்ட் உடனடியாக களத்தில் இறங்கினார். ப்ரஜாவில் கிளை அலுவலகத்திலிருந்து ஒரு புரொஜக்டரையும் ஒரு இயங்கு படத்தையும் கேட்டு வாங்கினார். பிறகு, புதிய உலக சமுதாயத்தின் மகிழ்ச்சி என்ற அந்த இயங்கு படத்தை லேயபோல்ட்வில்லில் இருந்த சபைகளுக்கு போட்டுக் காட்டினார்; சில அரசாங்க அதிகாரிகளுக்கும் காட்டினார். சமாதானத்தோடும் சந்தோஷத்தோடும் வாழும் சாட்சிகளிடையே சர்வதேச சகோதரத்துவம் நிலவுவதை சகோதரர்களும் ஆர்வமுள்ளவர்களும் கண்கூடாக பார்த்தார்கள். கறுப்பு இனத்தைச் சேர்ந்த சகோதரர் ஐரோப்பியர்களுக்கு முழுக்காட்டுதல் தருவதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்தார்கள். லேயபோல்ட்வில்லின் மேயரும் அந்த இயங்கு படத்தை மிகவும் ரசித்துப் பார்த்துவிட்டு, “[யெகோவாவின் சாட்சிகளுடைய] இந்த வேலையை முடிந்தளவுக்கு ஊக்குவிக்க வேண்டும்” என்று சொன்னார். முதல் நான்கு முறை அந்த இயங்கு படத்தைப் போட்டுக் காட்டியபோது மொத்தம் 1,294 பேர் அதைப் பார்த்தார்கள்.

உதவியை எதிர்பார்த்து ஆண்டுக்கணக்கில் காத்திருந்த சகோதரர்களுக்கு கடைசியில் ஒருவர் வந்து சேர்ந்தது மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. அதற்கு முன் ஐரோப்பிய சகோதரர்களின் பெயர்களைத்தான் கேட்டிருந்தார்கள். அவர்கள் உண்மையிலேயே இருக்கிறார்களா என்றுகூட சிலர் சந்தேகித்தார்கள்; ஏனென்றால் பெல்ஜியத்தில் யெகோவாவின் சாட்சிகளே இல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் அடித்துச் சொல்லியிருந்தார்கள். எப்படியோ, சகோதரர் எர்னெஸ்ட் வந்ததைக் குறித்து சகோதரர்கள் பூரித்தார்கள்.

சத்தியத்தைக் கடைப்பிடித்தல்​—⁠ஒரு சவால்

சத்தியத்தை கடைப்பிடிப்பதில் சகோதரர்களுக்கு உதவ அரும்பாடுபட வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, இனப் பகைமை அவர்களை இன்னமும் தொற்றியிருந்தது; சபைக் கண்காணிகள் சிலருக்கு இடையே பேச்சுவார்த்தை இருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கும் ஒரு சபையில் வேறு இனத்தைச் சேர்ந்த யாரேனும் சபை நீக்கம் செய்யப்பட்டபோது, இன்னொரு சபையின் மூப்பர்கள் அவரை ஏற்றுக்கொண்டனர்; அந்தச் சபையில் இவரது இனத்தைச் சேர்ந்த சகோதரர்களே பெரும்பாலும் இருந்தனர். ஒரு சபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்னொரு சபையில் ஏற்கப்படவில்லை. அனுதினமும் இன சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன; சபைகளில் இன சிந்தனையே மேலிட்டது.

இன சம்பிரதாயங்களின் காரணமாக மற்ற பிரச்சினைகளும் எழும்பின. சில இனங்களில் கணவன் மனைவிக்கு இடையிலான உறவு இனப் பற்றின் அடிப்படையில் அமைந்திருந்தது. பொதுப்படையில், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் அன்னியோன்னியம் இருக்கவில்லை. திருமணம் என்பது இனத்தவரால் செய்யப்பட்ட ஏற்பாடாகவே பெரும்பாலும் கருதப்பட்டது. ஒருவரது திருமணத்தை அவரது இனத்தவர்கள் அங்கீகரிக்கவில்லை என்றால், அந்த மனைவியை ஒதுக்கித் தள்ளிவிட்டு தாங்கள் தேர்ந்தெடுக்கும் இன்னொரு பெண்ணை மணம் செய்யும்படி அவரை வற்புறுத்துவார்கள்.

கணவன் இறந்துவிட்டால் பயங்கர விளைவுகள் ஏற்படும். பெரும்பாலும், வீட்டிலுள்ள எல்லாவற்றையும் கணவனின் குடும்பத்தார் அபகரித்துக்கொள்வார்கள்; மனைவியும் பிள்ளைகளுமோ நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைக்கு விடப்படுவார்கள். சில இனங்களில், மனைவி இறந்துவிட்டால் அதற்கு கணவன் பொறுப்பாளியாக கருதப்படுகிறான்; மனைவியின் குடும்பத்தார் அவனுக்கு அபராதம் விதிப்பார்கள்.

வேறு பல பிரச்சினைகளும் இருந்தன. யாருமே இயற்கையாக சாவதில்லை என இன்றுவரை காங்கோ மக்கள் நம்பிவருகின்றனர். ஆகவே அடக்கம் செய்யப்படும் சமயத்தில் சடங்குகள் நடத்துகின்றனர்; சாவுக்கு காரணமானவரை அச்சடங்குகள் அடையாளம் காட்டுவதாக நம்பப்படுகிறது. தலை மொட்டையடிக்கப்படுகிறது, இன்னும் பல சடங்குகளும் செய்யப்படுகின்றன. சில இனங்களில், கணவன் இறந்துவிட்டால், சுத்திகரிப்பு சடங்காக அவனுடைய இனத்தைச் சேர்ந்த ஓர் ஆண் அந்த மனைவியோடு உடலுறவு கொள்கிறான். உடல் செத்த பிறகு ஆத்துமா அல்லது ஆவி தொடர்ந்து வாழும் என்ற நம்பிக்கை இருப்பதால் ஈமச்சடங்குகளின்போது இறந்தவரிடம் சில குறிப்புகள் சொல்லப்படுகின்றன. இப்படிப்பட்ட பழக்கவழக்கங்களிலேயே ஊறிப்போனவர்கள் உண்மை வணக்கத்தை பின்பற்ற விரும்பியபோது என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் என்பதை நம்மால் சுலபமாக கற்பனை செய்துபார்க்க முடிகிறது. உண்மை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட மற்றவர்கள் இந்தப் பழக்கங்களை எல்லாம் முழுமையாக விட்டு விலகவில்லை, போதாததற்கு அவற்றை கிறிஸ்தவ சபைக்குள் திணிக்கவும் முயன்றார்கள்.

காரியங்களை சரிசெய்ய தைரியமும் நேர்மையும் உள்ள கண்காணிகள் தேவைப்பட்டார்கள். யெகோவாவை நேசித்தவர்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் தேவையான மாற்றங்களை செய்யவும் மனமுள்ளவர்களாக இருந்தார்கள். தாங்கள் ஏற்கெனவே சத்தியத்தை அறிந்திருந்ததாக தப்புக்கணக்கு போட்டவர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியிருந்த கருத்துக்களை அகற்றுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆனாலும் எல்லாவற்றையும்விட மிகப் பெரிய பிரச்சினை, யெகோவாவின் சாட்சிகளையும் கிட்டாவாலா பிரிவினரையும் மக்கள் குழப்பிக்கொண்டதுதான்.

ஒரு கிளை அலுவலகம் புதிதாக திறக்கப்பட்ட செய்தி நாடு முழுவதும் பரவியபோது, சகோதரர்களின் அநேக தொகுதிகள் தங்களை சபைகளாக அங்கீகரிக்கும்படி எழுதிக் கேட்டார்கள். கிட்டாவாலா பிரிவினரும் அதையே செய்தார்கள். ஓர் அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “யெகோவாவின் சாட்சிகளாக அங்கீகரிக்கப்பட விரும்பியவர்களின் பெயர்கள் அடங்கிய நீண்ட பட்டியல்களை எடுத்துக்கொண்டு சிலர் 2,300 கிலோமீட்டர் தூரம் வரை பிரயாணம் செய்து வந்தார்கள். இந்தப் பட்டியல்கள் சிலசமயம் 70 சென்ட்டிமீட்டர் அகலமும் 90 சென்ட்டிமீட்டர் நீளமும் கொண்ட பேப்பரில் எழுதப்பட்டன; சில பட்டியல்களில் இரண்டு அல்லது மூன்று கிராமங்களைச் சேர்ந்த அனைவரது பெயர்களும் இருந்தன.”

தனி நபர்களை அல்லது தொகுதிகளை யெகோவாவின் சாட்சிகளாக அங்கீகரிப்பதற்கு முன்பு, அவர்களில் உண்மை கிறிஸ்தவர்கள் யார் கிட்டாவாலா பிரிவினர் யார் என்பதை உறுதிசெய்ய வேண்டியிருந்தது. இதைக் கண்டறிய சகோதரர் எர்னெஸ்ட் முதிர்ச்சியுள்ள சகோதரர்களை அனுப்பினார். இவர்கள் பல வருடங்களாக இப்பணியில் ஈடுபட்டார்கள். உண்மையுள்ள இந்த சகோதரர்கள் சிலரின் அனுபவங்களை இப்போது கவனிக்கலாம்.

கிட்டாவாலா பிரிவினரை நேருக்கு நேர் சந்தித்தல்

1960-⁠ல், பான்ட்டியென் மூகாங்கா என்ற சகோதரர் காங்கோவின் முதல் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். அவர் சற்று ஒல்லியானவர்; சாந்தமானவர். காங்கோவில் (ப்ரஜாவில்) பயிற்சி பெற்ற பிறகு, லேயபோல்ட்வில்லில் இருந்த சபைகளையும் அருகிலிருந்த சில ஒதுக்குப்புற தொகுதிகளையும் சந்தித்தார். ஆனால் அதைவிட மிகக் கடினமான வேலை, அதாவது கிட்டாவாலா பிரிவினரை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய வேலை காத்திருந்தது.

சகோதரர் மூகாங்கா முதன்முதலாக சென்ற இடங்களில் ஒன்று கிஸங்கனி (அப்போது ஸ்டான்லிவில்); தலைநகரிலிருந்து அது 1,600-⁠க்கும் அதிக கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. அவர் ஏன் அங்கு செல்ல வேண்டியிருந்தது? வெளி ஊழியத்தில் சகோதரர் எர்னெஸ்ட் சந்தித்த ஒரு ஐரோப்பியர் அவரிடம் போட்டோ ஒன்றைக் காண்பித்தார். சுதந்திரம் கிடைத்த புதிதில் ஸ்டான்லிவில்லில் எடுக்கப்பட்ட போட்டோ அது. அதில், ரயில்வே நிலையத்திற்கு முன்பாக ஒரு பெரிய பலகை தெரிந்தது; அந்தப் பலகையில் பைபிள் திறந்திருப்பது போன்ற ஒரு படம் இருந்தது; அதோடு, “உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி​—⁠சர்வதேச பைபிள் மாணாக்கர் சங்கம்​—⁠காங்கோ மக்களின் கிட்டாவாலா மதம்​—⁠பாட்ரிஸ் ஈ. லூமூம்பா நீடூழி வாழ்க​—⁠ஆன்ட்வான் கிசாங்கா நீடூழி வாழ்க​—⁠எம்.என்.ஸி. அரசாங்கம் நீடூழி வாழ்க” என்று எழுதப்பட்டிருந்தது. கிஸங்கனியிலிருந்த கிட்டாவாலா பிரிவினர் யெகோவாவின் சாட்சிகளுடைய சட்டப்பூர்வ நிறுவனங்களின் பெயர்களை தவறாக பயன்படுத்தியது தெளிவாக தெரிந்தது.

கிஸங்கனியில் உண்மையான யெகோவாவின் சாட்சிகள் இருந்தார்களா? அதைக் கண்டுபிடிக்க சகோதரர் மூகாங்கா அங்கே அனுப்பப்பட்டார். சாமுவேல் சிக்காகா என்பவரைப் பற்றிய தகவல் மட்டுமே கிளை அலுவலகத்திடம் இருந்தது; அவர் பூம்பாவில் சத்தியத்தைப் பற்றி கேள்விப்பட்டு, 1957-⁠ல் கிஸங்கனிக்கு திரும்பியிருந்தார். கிட்டாவாலா பிரிவுகள் எதனுடனும் சாமுவேல் கூட்டுறவு கொள்ளவில்லை, மாறாக சகோதரர் மூகாங்காவிற்கு உதவிசெய்ய விரும்பினார். சகோதரர் மூகாங்கா பிற்பாடு இவ்வாறு எழுதினார்: “உவாட்ச் டவர் என்ற பெயரை பயன்படுத்தியவர்களை விசாரிக்க சாமுவேலுடன் நான் சென்றேன். அவர்களுடைய பாஸ்டரை சந்திக்க சென்றோம். அவர் தன்னுடைய பிரிவைப் பற்றி சொன்னார். அவர்களில் சிலர் பைபிளைப் பயன்படுத்தினாலும் ஆத்துமா சாவதில்லை என அவர்கள் அனைவருமே நம்பியது தெரியவந்தது. மனைவிகளை பரிமாற்றம் செய்துகொள்வதன் மூலம் அன்பு காட்டுவதைப் பற்றி அவர்கள் போதித்தார்கள்.

“நான் அந்த நகருக்கு சென்ற கொஞ்ச நாளிலேயே, போலீஸ் அங்கிருந்த கிட்டாவாலா பிரிவினரை கைது செய்ய முயன்றது. கிட்டாவாலா பிரிவினர் எதிர்த்துப் போராடினர். கூடுதல் உதவிக்காக படைவீரர்களை போலீஸ் வரவழைத்தது. கிட்டாவாலா பிரிவினரில் அநேகர் கொல்லப்பட்டனர். அடுத்த நாள் பிரேதங்களையும் காயப்பட்டவர்களையும் சுமந்துகொண்டு ஒரு படகு ஆற்றைக் கடந்து வந்தது. பாஸ்டரின் செயலரும் படகில் இருந்தார்; என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டார்; இரண்டு நாட்களுக்கு முன்பு பாஸ்டரை சந்தித்தவன் நான்தான் என்று புரிந்துகொண்டார். ஆகவே அவர்களை அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்ததாக என் மீது பழிசுமத்தினார். சண்டையில் அவ்வளவு பேர் இறந்ததற்கு நான்தான் காரணம் என்று பொய்க் குற்றஞ்சாட்டினார். என்னை தப்பவிடாமல் பார்த்துக்கொள்ளும்படி தன் கிட்டாவாலா நண்பர்களிடம் சொன்னார். ஆனால் அவர்கள் கையில் சாகாமல் எப்படியோ நான் தப்பித்துவிட்டேன்.”

இந்த சம்பவத்தை பெல்ஜிய செய்தித்தாள்கள், “யெகோவாவின் சாட்சிகளுக்கும் போலீஸுக்கும் மோதல்” என்ற தலைப்பில் பிரசுரித்தன. இருந்தாலும் கிட்டாவாலாவிற்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை அறிந்திருந்த காங்கோ நாட்டு அதிகாரிகள் உண்மையான அறிக்கையை வெளியிட்டனர். சாட்சிகள் இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாக காங்கோவின் ஒரு செய்தித்தாள்கூட குறிப்பிடவில்லை!

சாமுவேல் சிக்காகாவிற்கு என்ன ஆனது? அவர் இன்னமும் சத்தியத்தில் இருக்கிறார்; கிஸங்கனி ச்சாபா-எஸ்ட் என்ற சபையில் மூப்பராக சேவிக்கிறார். கிஸங்கனியில் தற்போது 22 சபைகளில் 1,536 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். சாமுவேலின் மகன் லாட்டாமா வட்டாரக் கண்காணியாக சேவிக்கிறார்; இதே சேவையைத்தான் சுமார் 40 வருடங்களுக்கு முன்பு பான்ட்டியென் மூகாங்காவும் செய்தார்.

காரியங்களை சரிசெய்த வட்டாரக் கண்காணி

சாட்சிகளுக்கும் கிட்டாவாலாவினருக்கும் இடையிலான வித்தியாசத்தை தெளிவுபடுத்துவதற்கு உழைத்த மற்றொரு வட்டாரக் கண்காணி ஃபிரான்ஸ்வா டான்டா என்பவர். அவர் இவ்வாறு விளக்குகிறார்: “ஒரே கஷ்டமும் குழப்பமுமான காலமாக அது இருந்தது. கிட்டாவாலா பிரிவினர் தங்கள் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் எப்போதும் ‘உவாட்ச் டவர்’ என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்தார்கள். நம்முடைய பிரசுரங்கள் அனைத்திலும், எந்த மொழியாக இருந்தாலும், பிரசுரிப்பாளர்களின் பக்கத்தில் ‘உவாட்ச் டவர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆகவே, யாராவது ஒருவர் நம் பிரசுரங்களை படித்துவிட்டு கடவுளுடைய மக்களை தேடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். ‘யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம்’ என்று உள்ளூர் மொழியில் எழுதப்பட்டிருக்கும் ஒரு மன்றத்தையும் ‘உவாட்ச் டவர்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் ஒரு மன்றத்தையும் அவர் பார்த்தால் எங்கே போவார்? எப்பேர்ப்பட்ட குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

“அநேக சகோதரர்களுக்கு திருத்தமான அறிவு இருக்கவில்லை, வெகுசில பிரசுரங்களே அப்போது கிடைத்தன. ஆகவே சபைகள் கிட்டாவாலா பிரிவு போதகங்களை சத்தியத்தோடு கலப்படம் செய்தன, முக்கியமாக திருமணத்தின் புனிதத்தன்மை சம்பந்தமாக அவ்வாறு செய்தன. நான் சென்ற ஒரு நகரத்தில் 1 பேதுரு 2:17-ஐ சகோதரர்கள் தவறாக புரிந்துகொண்டிருந்தார்கள்; ‘முழு சகோதர கூட்டுறவிலும் அன்பு காட்ட வேண்டும்’ என்பது, சபையிலுள்ள எந்த சகோதரரும் எந்த சகோதரிகளோடும் உடலுறவு கொள்ளலாம் என்று அர்த்தப்படுத்துவதாக நினைத்தார்கள். ஒரு சகோதரி, தன் கணவன் அல்லாத வேறொரு சகோதரரால் கர்ப்பமாகும்போது, அந்தப் பிள்ளையை அவளது கணவன் தன் சொந்த பிள்ளையாக ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. முதல் நூற்றாண்டில் நடந்ததைப் போலவே, “கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும்” வேதவசனங்களை திரித்தார்கள்.​—2 பே. 3:⁠16.

“திருமணம் உட்பட யெகோவாவின் தராதரங்கள் பற்றி பைபிள் அடிப்படையில் ஒளிவுமறைவற்ற பேச்சுக்களைக் கொடுத்தேன். சில விஷயங்களை பொறுமையோடு கொஞ்சம் கொஞ்சமாக சரிசெய்ய வேண்டும் என்றாலும் மனைவிகளை பரிமாற்றம் செய்துகொள்ளும் விஷயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சொன்னேன். சரியான வேதப்பூர்வ கண்ணோட்டத்தை சகோதரர்கள் புரிந்து, ஏற்றுக்கொண்டது சந்தோஷமான விஷயம். அந்த நகரிலிருந்த சில கிட்டாவாலா பிரிவினரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.”

மூகாங்கா, டான்டா போன்ற அநேக சகோதரர்களின் முயற்சியால் யெகோவாவின் சாட்சிகளுக்கும் கிட்டாவாலா பிரிவினருக்கும் இடையிலான வித்தியாசத்தை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டார்கள். இன்று “கிட்டாவாலா” என்ற வார்த்தையையும் “உவாட்ச் டவர்” என்ற வார்த்தையையும் ஒருவரும் சம்பந்தப்படுத்துவதில்லை. இன்றும் கிட்டாவாலா பிரிவினர் இருக்கிறார்கள், ஆனாலும் முன்பு போல் அவ்வளவு பிரபலமாக அல்லது செல்வாக்குடன் இல்லை. அநேக இடங்களில் அவர்கள் சுவடு தெரியாமல் மறைந்துவிட்டார்கள்.

மேம்பட்ட ஒழுங்கமைப்பினால் அதிகரிப்பு

1962 ஊழிய ஆண்டின் முடிவிற்குள், காங்கோ முழுவதும் 2,000-⁠க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் மிகுந்த ஆர்வத்தோடு யெகோவாவை சேவித்து வந்தார்கள். இருந்தாலும் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்பதற்குரிய வேதப்பூர்வ தகுதிகள் சில சகோதரர்களுக்கே இருந்தன. அதற்கு ஒரு காரணம் அவர்களுக்கு​—⁠முக்கியமாக வயதானவர்களுக்கு​—⁠படிப்பறிவு இருக்கவில்லை. இன்னொரு காரணம், கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களை கடைப்பிடிக்க அவர்களில் அநேகருக்கு வெகு காலம் எடுத்தது; ஏனென்றால் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் அவர்களுக்கு மிகப் பெரிய தடைக்கற்களாக இருந்தன. அதோடு, கிட்டாவாலா பிரிவினருடன் முன்பு கூட்டுறவு கொண்டிருந்தவர்கள் அநேக ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஊழிய சிலாக்கியங்களைப் பெற்றார்கள்.

இருந்தாலும் சிறந்த வேதப்பூர்வ போதனையும் யெகோவாவின் ஆவியும், சபைகளில் கண்காணிகளாகும் தகுதியைப் பெற படிப்படியாக சகோதரர்களுக்கு உதவின. நாடு முழுவதும், தைரியமிக்க வட்டாரக் கண்காணிகளும் பயனியர்களும், சகோதரர்களை பலப்படுத்தவும் பயிற்றுவிக்கவும் மிகுந்த முயற்சி எடுத்தார்கள். கிட்டத்தட்ட அந்த சமயத்தில், ஜாம்பியாவில் பயிற்றுவிக்கப்பட்ட வட்டாரக் கண்காணிகளும் விசேஷ பயனியர்களும்கூட கடங்காவிற்கும் தென் கஸாயிற்கும் வந்தார்கள்; அதற்கு முன்பு இப்பகுதிகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்தன.

சுதந்திரத்திற்கு பின்பு​—⁠மத சகிப்புத்தன்மையின் காலம்

முன்பு குறிப்பிட்டபடி, 1958-⁠ல் சகிப்புத்தன்மை சம்பந்தமாக வழங்கப்பட்ட அரசு ஆணை சகோதரர்களுக்கு ஓரளவு மத சுதந்திரத்தை அளித்தது. 1960-களின் ஆரம்பத்தில், சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும்படி சகோதரர்கள் தொடர்ந்து கோரிக்கை செய்தார்கள். அவர்கள் அரசு மானியங்களையோ மற்ற பண உதவியையோ கேட்கவில்லை, ஆனால் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை மட்டுமே கேட்டார்கள். தொல்லையில்லாமல் நற்செய்தியைப் பிரசங்கிக்க அது அவர்களுக்கு தேவைப்பட்டது. அதுவும் அவசரமாக தேவைப்பட்டது, ஏனென்றால் அநேக இடங்களில் உள்ளூர் அதிகாரிகளே சகோதரர்களை தாக்க ஏற்பாடு செய்தார்கள். கூட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு தீ வைத்தார்கள்; சகோதரர்களை அடித்து, கைது செய்து, சிறையில் தள்ளினார்கள். நீதித்துறையிடம் சகோதரர்கள் முறையிட்டபோது, ஒரே பதில்தான் எப்போதும் கிடைத்தது: ‘ஸாரி, உங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.’

போதாததற்கு, உள்நாட்டுப் பகுதிகளில் குழப்பமும் கலவரமும் நிலவியது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மத்திய அரசின் அதிகாரம் செல்லுபடி ஆகவில்லை. சில இடங்களில், உள்ளூர் அதிகாரிகள் கிளை அலுவலகத்திடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றவுடனேயே சகோதரர்களை சிறையிலிருந்து விடுதலை செய்தார்கள். இருந்தாலும் கடும் எதிர்ப்பு நிலவிய இடங்களில், சகோதரர்களை துன்புறுத்தலிலிருந்தும் சிறைக்காவலிலிருந்தும் பாதுகாக்க ஒன்றும் செய்ய முடியவில்லை.

கின்ஷாசாவில் சகோதரர்கள் அதிகமான எதிர்ப்பை சந்திக்கவில்லை. முன்பு, திருமணங்களுக்காகவும் ஈமச்சடங்குகளுக்காகவும் மட்டுமே அந்நகரில் பெரும் திரளாக கூடினார்கள். ஆனால் 1964-⁠ல், இரண்டு வட்டார மாநாடுகளை அங்கு நடத்த கிளை அலுவலகம் திட்டமிட்டது. இது பெரும்பாலான சகோதரர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கவிருந்தது. மாநாட்டில் பேச்சுக்களை கொடுப்பதற்கும், வெவ்வேறு மாநாட்டு இலாகாக்களை ஒழுங்கமைப்பதற்கும் பயிற்சியளிக்க விசேஷ கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மாநாடு நடக்கப்போகும் சந்தோஷத்தில் அதைப் பற்றி சகோதரர்கள் எல்லாரிடமும் பேசினார்கள்; எனவே அப்போதைய லேயபோல்ட்வில் மாநிலத்தின் ஆளுநருடைய காதுக்கும் அச்செய்தி எட்டியது. அவருக்கு யெகோவாவின் சாட்சிகளைக் கண்டாலே பிடிக்காது. ஆகவே உள்ளூர் அதிகாரிகளுக்கு அனுப்புவதற்காக ஒரு கடிதத்தை ஸ்டென்ஸிலில் தயாரித்தார். எந்த சாட்சியாவது பிரசங்கித்தால் அல்லது வணக்கத்திற்காக கூடிவந்தால் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதம் குறிப்பிட்டது. இருந்தாலும் அந்தக் கடிதத்தை நகல் எடுக்கும் வேலை தற்செயலாக ஒரு சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகலெடுக்கும் பேப்பர் அவரிடம் வெகு குறைவாக இருந்தது; லேயபோல்ட்வில்லின் கடைகளிலும் அது தீர்ந்துபோயிருந்ததை அவர் அறிந்திருந்தார். எனவே கடிதத்தின் நகல்களை சூப்பர்வைஸர் கேட்டபோது, அவர் காலியான ஷெல்ஃபுகளைக் காட்டினார்​—⁠பேப்பர் இல்லை!

இதற்கிடையே, இந்த விஷயத்தைப் பற்றி சகோதரர்கள் யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபம் செய்தார்கள். என்ன நடந்தது? திடீரென, சில புதிய மாநிலங்களை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டது, சாட்சிகளை எதிர்த்த ஆளுநரின் மாநிலமோ கலைக்கப்பட்டது! பல ஆண்டுகளாக, கடவுளுடைய மக்களை துன்புறுத்த அல்லது அழிக்க அநேகர் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு மிஞ்சியதெல்லாம் ஏமாற்றமே.​—ஏசா. 54:⁠17.

இன்னுமதிக மிஷனரிகளின் வருகை

1960-களில், காங்கோவிற்கு மிஷனரிகளை அனுப்பும் வாய்ப்பை அமைப்பு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. கின்ஷாசாவில் ஒரு சிறிய மிஷனரி இல்லம் ஏற்படுத்தப்பட்டது. மார்ச் 1964-⁠ல், மிஷனரிகளான ஜூல்யன் மற்றும் மாட்லென் கிஸல் கனடாவிலிருந்து வந்தார்கள். நாற்பது வருடங்களுக்குப் பிற்பாடு, அவர்கள் இன்னமும் கின்ஷாசாவின் பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களாக யெகோவாவை உண்மையோடு சேவித்து வருகிறார்கள்.

1960-களின் பிற்பகுதியில் வந்த சில மிஷனரிகள் இப்போது மற்ற நாடுகளில் வசிக்கிறார்கள். 1965-⁠ல், ஹெய்டி நாட்டில் சேவித்துக் கொண்டிருந்த ஸ்டான்லி மற்றும் பர்தா போகஸ், காங்கோவிற்கு நியமிக்கப்பட்டார்கள். பயணக் கண்காணியாகிய சகோதரர் போகஸ், உடல்நலப் பிரச்சினைகளின் காரணமாக 1971-⁠ல் ஐக்கிய மாகாணங்களுக்குத் திரும்பினார். 1965-⁠ன் முடிவிற்குள், காங்கோவிலிருந்த மிஷனரிகளோடு சேர்ந்து சேவை செய்ய மைக்கேல் மற்றும் பார்பரா பாட்டிஜ் சென்றனர். தற்போது அவர்கள் பிரிட்டன் பெத்தேலில் இருக்கிறார்கள். வில்லியம் மற்றும் ஆன் ஸ்மித் 1966-⁠ல் காங்கோவிற்கு நியமிக்கப்பட்டார்கள்; அவர்கள் பெரும்பாலும் கடங்காவில் சேவித்தார்கள். தடையுத்தரவின் காரணமாக 1986-⁠ல் அவர்கள் மறுபடியும் கென்யாவிற்கு அனுப்பப்பட்டார்கள். கிலியட் பள்ளியின் 44-வது வகுப்பில் பட்டம் பெற்ற, ஜெர்மனியைச் சேர்ந்த மான்ஃப்ரேட் டோனாக் காங்கோவில் பயணக் கண்காணியாக சேவித்தார். தடை வந்தபோது கென்யாவிற்கு அனுப்பப்பட்டார். இப்போது அவர் எத்தியோப்பியாவில் கிளைக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக சேவிக்கிறார். 1969-⁠ல் கிலியட்டின் 47-வது வகுப்பில் பட்டம் பெற்ற பிறகு டாரல் மற்றும் சூசான் ஷார்ப் காங்கோவிற்கு வந்தார்கள். அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, ஜாம்பியாவில் சேவை செய்ய நியமிக்கப்பட்டார்கள்; அதுமுதல் லுஸாகா பெத்தேலில் சேவை செய்து வருகிறார்கள். மற்ற மிஷனரிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களில் இருவரான ரைன்ஹார்ட் மற்றும் ஹைடி ஸ்பேர்லிக் ஒரு விமான விபத்தில் இறந்துபோனார்கள். அவர்களை அறிந்த எல்லாருக்கும் அது பேரிடியாக இருந்தது.

1966-⁠ல் முதன்முதலாக கின்ஷாசாவிற்கு வெளியே, நாட்டின் தென்கிழக்கில் உள்ள லுபும்பாஷியில் ஒரு மிஷனரி இல்லம் திறக்கப்பட்டது. பிற்பாடு, லுபும்பாஷியின் வடமேற்கிலுள்ள கோல்வெசியிலும் கஸாயிலுள்ள கனங்காவிலும் (அப்போது லூலுவாபர்க்) மிஷனரி இல்லங்கள் திறக்கப்பட்டன. சத்தியத்தைக் கடைப்பிடிக்க சகோதரர்களுக்கு உதவுவதில் மிஷனரிகள் உறுதுணையாக இருந்தார்கள். உதாரணத்திற்கு கஸாயில் சகோதரர்களுக்கு இடையே இனப் பகைமை தொடர்ந்து நிலவியது. மிஷனரிகள் அங்கிருந்த எந்த இனத்தையும் சேராதவர்களாக இருந்ததால் நடுவர்களாக இருந்து பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும் நியாயவிசாரணைகளில் பட்சபாதம் காட்டாமல் தீர்ப்பளிக்கவும் முடிந்தது.

1968 முதல் 1986 வரை, 60-⁠க்கும் அதிகமான மிஷனரிகள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் சேவை செய்தார்கள். சிலர் ஐக்கிய மாகாணங்களில் நடந்த உவாட்ச் டவர் பைபிள் கிலியட் பள்ளியிலும் மற்றவர்கள் ஜெர்மனியில் நடந்த கிலியட் எக்ஸ்டன்ஷன் பள்ளியிலும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றிருந்தார்கள். கூடுதலாக, பிரெஞ்சு மொழி பேசிய பயனியர்கள் நேரடியாகவே மிஷனரிகளாக காங்கோவிற்கு வந்தார்கள். அநேகர் உள்ளூர் மொழிகளைக் கற்றுக்கொண்டார்கள், ராஜ்ய நற்செய்தியை அறிவிப்பதன் மூலம் மக்களுக்கு ஆறுதலளிக்க அவர்கள் அனைவரும் கடினமாக முயற்சி செய்தார்கள்.

1960-களில் ராஜ்ய மன்றங்கள்

மாநகரங்களில் நான்கு பக்கமும் திறப்புள்ள கட்டடங்களில் பொதுவாக கூட்டங்கள் நடத்தப்பட்டன. அங்கு நிலவிய உஷ்ணத்திற்கும் பயங்கர புழுக்கத்திற்கும் இவ்வித கட்டடங்களே சரிப்பட்டு வந்தன; சூடு அதிகம் இல்லாத சாயங்கால அல்லது அதிகாலை வேளைகளில்தான் கூட்டங்கள் பெரும்பாலும் நடத்தப்பட்டன. மழை பெய்யாதபோது பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் மழைக் காலத்தில் கூட்டங்களை வேறொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டியிருந்தது.

முதல் ராஜ்ய மன்றம் 1962-⁠ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அது கின்ஷாசாவிலுள்ள கிம்பான்செக்கெயில் இருந்தது. அன்றிருந்த ஆறு சபைகளில் ஒன்றிற்கு சொந்தமானது அது. அப்போதுமுதல், காங்கோவிலிருந்த சபைகள் தாங்களாகவே முன்வந்து ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்திருக்கின்றன. இருந்தாலும் அவ்வப்போது சட்டப்பூர்வ பிரச்சினைகள் தலைதூக்கின. சிலசமயங்களில் ஒரு சகோதரர் தன் நிலத்தை ராஜ்ய மன்றம் கட்டுவதற்காக சபைக்கு கொடுத்துவிடுவார், ஆனால் அது சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்காது. ஆகவே அந்தச் சகோதரர் இறந்த பிறகு, அவரது உறவினர்கள் வந்து மன்றத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் பறிமுதல் செய்துவிடுவார்கள். இதை எந்த விதத்திலும் தடுக்க முடியவில்லை. பிற்பாடு, தடையுத்தரவு காலங்களில், அநேக மன்றங்களை உள்ளூர் அதிகாரிகள் பறிமுதல் செய்து தங்கள் சொந்த வேலைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தப் பிரச்சினைகளால் ராஜ்ய மன்றங்களை அதிகளவில் கட்ட முடியவில்லை.

இருந்தாலும் நாடெங்கும் ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை எளிய கட்டடங்கள் என்றாலும், அவை அனைத்துமே கட்டியவர்களின் விசுவாசத்தை பறைசாற்றின. 1960-களின் பிற்பகுதியில் இருந்த ராஜ்ய மன்றங்களை ஒரு மிஷனரி எவ்வாறு விவரித்தார் என்று கவனியுங்கள்.

“லேயபோல்ட்வில்லில் உள்ள ஒரு ராஜ்ய மன்றத்திற்கு செல்ல, சொரசொரப்பான காங்க்ரீட் வீடுகள் இருபுறமும் அமைந்திருந்த பாதையில் நடந்து போக வேண்டியுள்ளது. சின்னப் பிள்ளைகள் கூட்டமாக எங்கள் பின்னால் வருகிறார்கள். காங்க்ரீட் சுவர் சூழ்ந்த முற்றத்திற்குள் நுழைகிறோம். சகோதரர்கள் தங்கியிருக்கும் ஒரு வீட்டிற்கு பின்புறத்தில், நான்கு பக்கமும் திறப்புள்ள ராஜ்ய மன்றம் இருக்கிறது. அவர்கள் ராஜ்ய பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குரலைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போகிறோம்! அவ்வளவு இருதயப்பூர்வமாக பாடுகிறார்கள். மன்றத்தை சூழ்ந்துள்ள பெரிய மரங்கள் வெயிலுக்கு குடை விரித்தாற்போல் இருக்கின்றன. அந்த மன்றம் சுமார் 200 பேர் உட்காரும் வசதியுள்ளது. அதன் மேடை காங்க்ரீட்டால் கட்டப்பட்டிருக்கிறது, நெளிவுள்ள இரும்புத் தகட்டால் கூரை அமைக்கப்பட்டிருக்கிறது. பேச்சாளர் உயரமாக இருந்தால் கொஞ்சம் குனிய வேண்டும். கிளை அலுவலகத்திலிருந்து வரும் கடிதங்களையும் சபையாருக்கான நியமிப்புகளையும் பார்ப்பதற்கு வசதியாக அறிவிப்புப் பலகை ஒன்று உள்ளது. பிரசுரங்களை வைக்க ஒரு டேபிள் போடப்பட்டிருக்கிறது. சகோதரர்கள் மேடையின் ஒரு பக்கத்தில் செடிகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் சாயங்காலங்களில் கூட்டங்களை நடத்தும்போது வெளிச்சத்திற்காக அரிக்கன் விளக்குகளை பயன்படுத்துகிறார்கள். நாங்கள் அங்கிருந்து விடைபெறுகிறோம், வெளியே அந்தப் பிள்ளைகள் பட்டாளம் இன்னமும் எங்களுக்காக காத்திருக்கிறது. மறுபடியும் மெயின் ரோடு வரை ‘பந்தோபஸ்தாக’ எங்களோடு வருகிறார்கள்.

“இப்போது காங்கோவின் உட்புற பகுதிக்கு செல்கிறோம். வைக்கோல் குடிசைகள் உள்ள கிராமத்திற்குள் நுழைந்தவுடன் எங்கள் கண்களைக் கவருவது ஒரு ராஜ்ய மன்றம். இலைகளாலான தடித்த கூரையை ஒன்பது கம்பங்கள் தாங்கிப் பிடித்தவாறு நிற்கின்றன. மன்றத்தின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் வரை தரையில் சிறு சிறு குழிகள் தோண்டப்பட்டிருக்கின்றன. நாங்கள் தரையில் உட்கார்ந்து அந்தக் குழிகளில் கால்களை போடுகிறோம்; என்ன ஆச்சரியம், அப்படியொன்றும் அசௌகரியமாக இல்லை. கூட்டத்தை நடத்தும் சகோதரரின் தலைக்கு மேலே, ‘ராஜ்ய மன்றம்’ என்று உள்ளூர் மொழியில் கையால் எழுதப்பட்ட பலகை தொங்குகிறது. சுமார் 30 பேர் கூட்டத்திற்கு வருகிறார்கள். அவர்களில் பாதி பேர்தான் பிரஸ்தாபிகளாக இருப்பார்கள். அவர்களுக்கு சில ராஜ்ய பாடல்கள் தெரியும். அவர்கள் இசை ஞானத்தில் குறைவுபட்டாலும் உற்சாகத்தில் சளைத்தவர்கள் அல்ல. நாங்கள் எல்லாரும் முழு இருதயத்தோடு பாடுகிறோம்.

“இப்போது நாங்கள் நாட்டின் வட பகுதிக்கு செல்கிறோம். எங்கள் ஃபோர்-வீல்-டிரைவ் மோட்டார் வாகனத்தை நிறுத்தி, கிராமத்தை பார்க்கிறோம். வைக்கோல் குடிசைகள் ஒரு கூட்டமாக தெரிகின்றன; அவற்றிற்கு பின்னே ஏகாந்தமாக ஒரு கட்டடம் தெரிகிறது. தடித்த மூங்கில்கள் ஒன்றோடொன்று இறுக்கமாக சேர்ந்து கட்டப்பட்டிருக்கின்றன. மூங்கில் சுவரில் ஜன்னல்களும் ஒரு கதவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. வைக்கோலால் கூரை வேயப்பட்டிருக்கிறது. முன்பக்கம் அழகான புல்தரையும் குறுகலான நடைபாதையும் இருக்கிறது; புல்தரையில் ஒரு சிறிய பலகை நாட்டி வைக்கப்பட்டிருக்கிறது; அதில் ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. நடைபாதை வழியாக நாங்கள் ராஜ்ய மன்றத்திற்கு செல்கிறோம். சகோதரர்கள் சந்தோஷத்தோடு எங்களை வரவேற்கிறார்கள். உள்ளே நெட்டுக்குத்தலாக நிற்கும் மூங்கில் கம்பங்கள் மீது கிடைமட்டமாக மூங்கில் கட்டைகள் வைக்கப்பட்டிருக்கின்றன; இவைதான் உட்காருவதற்கான பெஞ்சுகள். ராஜ்ய மன்றத்தில் நீர்புகாத கூரை போட்டிருப்பது பாராட்டத்தக்கது! இல்லையென்றால் பெரிய பிரச்சினை ஏற்படும்: மூங்கில் கம்பங்கள் தண்ணீரில் நனைந்து, வேர்விட்டு, கிடுகிடுவென வளர ஆரம்பிக்கும். பிறகென்ன, 30 சென்டிமீட்டர் உயரத்தில் இருக்க வேண்டிய உங்கள் பெஞ்ச் இன்னும் படு உயரமாக ஆகிவிட்டிருக்கும். மன்றத்தில் ஒரு அறிவிப்பு பலகையும் உள்ளது; கூட்டங்கள் நடக்கும் நேரங்களும் கிளை அலுவலகத்திலிருந்து வரும் கடிதங்களும் அதில் காணப்படுகின்றன. மூங்கில் துண்டுகள் கோரைப்புல்லால் ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டப்பட்டு ஒரு டேபிள் போல் செய்து வைக்கப்பட்டிருக்கின்றன; அதன் மீதுள்ள பிரசுரங்களை சகோதரர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

“நாங்கள் தெற்கே கடங்காவிற்கு செல்கிறோம். சூரியன் இப்போதுதான் அஸ்தமித்துக் கொண்டிருக்கிறது. இந்த இடம் சற்று குளுகுளுவென்று இருக்கிறது; கதகதப்பான துணிகளை போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு கிராமத்திற்கு போய் சேருகிறோம். அங்கே ராஜ்ய மன்றத்தை நெருங்கும்போது சகோதரர்களின் பாட்டுச் சத்தம் கேட்கிறது. கிராமத்து சகோதரர்களிடம் பொதுவாக கைக்கடிகாரம் இருக்காது. ஆகவே சூரியனை பார்த்து கூட்டங்களுக்கான நேரங்களை தோராயமாக கணக்கிடுவார்கள். முதலில் செல்பவர்கள், பெரும்பாலானோர் வரும்வரை பாடிக் கொண்டிருப்பார்கள், பிறகு கூட்டம் தொடங்கும். உட்காருவதற்காக அடிமரம் இரண்டாக அறுக்கப்பட்டு, இரண்டு ஆதாரங்கள் மேல் வைக்கப்பட்டிருக்கிறது; கூட்டத்தார் மத்தியில் நுழைந்து அப்படிப்பட்ட ஓர் இருக்கையில் அமருகிறோம். பிரசுரங்கள் ஒரு பழைய அலமாரியில் வைக்கப்பட்டிருக்கின்றன; ஆனால் நிறைய நாட்களுக்கு அங்கே வைக்க முடியாது, ஏனென்றால் கரப்பான்பூச்சிகளும் கரையான்களும் பேப்பரை தின்றுவிடும். கூட்டம் முடிந்த பிறகு, தங்கள் மன்றத்தை சுற்றிப்பார்க்க சகோதரர்கள் எங்களை அழைக்கிறார்கள். சுவர்களைப் பார்க்கிறோம்: சிறு கிளைகள் கோரைப்புற்களால் கட்டப்பட்டு களிமண்ணால் பூசப்பட்டிருக்கின்றன. நீர்புகாதவாறு வைக்கோலால் கூரை வேயப்பட்டிருக்கிறது.”

யெகோவா தம் ஊழியர்களை பாதுகாக்கிறார்

1960-களின்போது உள்நாட்டுப் போர்களும் அடிதடிகளும் சர்வசாதாரணமாக நடந்தன. யெகோவாவின் ஜனங்கள் உட்பட அநேகர் தங்கள் உயிரை இழந்தார்கள். சகோதரர்கள் ஒன்றுகூடி வருவதற்கு விசுவாசமும் தைரியமும் அவசியமாக இருந்தது; ஏனென்றால் அவர்கள் அரசியல் கூட்டம் நடத்துவதாக சிலசமயம் தவறாக நினைக்கப்பட்டது. ஏக்வாட்டோர் மாநிலத்தில், ஆயுதம் தரித்த போர்வீரர்கள் ஒரு ராஜ்ய மன்றத்திற்கு சென்றார்கள்; அங்கே சகோதரர்கள் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அரசியல் காரணத்திற்காக அல்ல, ஆனால் கடவுளை வணங்குவதற்காக கூடியிருக்கிறார்கள் என்பதை அந்தப் போர்வீரர்கள் கொஞ்ச நேரத்தில் புரிந்துகொண்டார்கள். ஆகவே தாங்கள் மதத்தையும் எதிர்க்கவில்லை கடவுளையும் எதிர்க்கவில்லை என்று சொல்லி அங்கிருந்து சென்று விட்டார்கள்.

இன்னொரு சமயம், கிஸங்கனியில், பர்னர் மாயூங்காவையும் வேறு சில பிரஸ்தாபிகளையும் கலகக்காரர்கள் சூழ்ந்துகொண்டார்கள்; அவர்கள் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளை கொலை செய்வதற்காக தேடிக்கொண்டிருந்தார்கள். சகோதரர் பர்னர் எந்த இனத்தை சேர்ந்தவர் என அவர்கள் கேட்டபோது, “நான் ஒரு யெகோவாவின் சாட்சி” என்று அவர் பதிலளித்தார். கலகக் கும்பலின் தலைவன் ஆச்சரியப்பட்டு, அதற்கான விளக்கத்தைக் கேட்டான். பர்னர் பைபிள் வசனங்களைக் காட்டி சாட்சி கொடுத்தார். அதன் பிறகு அந்தத் தலைவன், “எல்லாரும் உங்களைப் போல் இருந்தால் போர்களே நடக்காது” என்றான். பர்னரும் மற்ற சாட்சிகளும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஒருவழியாக சட்டப்பூர்வ அங்கீகாரம்!

1965 வரை, கின்ஷாசாவின் மையப்பகுதியில் இருந்த ஒரு அப்பார்ட்மென்ட்டில் காங்கோ பெத்தேல் இயங்கி வந்தது. அந்த இடம் சிறியதாகவும் இடுக்கமாகவும் இருந்தது. ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது, ஆகவே பெரிய கிளை அலுவலகம் தேவைப்பட்டது. சகோதரர்கள் மிக மும்முரமாக இடம் தேடினார்கள்; ஒருவழியாக 764 அவென்யூ டெசேலேஃபான், லிமெடெ, கின்ஷாசா என்ற முகவரியில் ஒரு வீடு கிடைத்தது. அது கட்டப்பட்டு ஆறே ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. அது இரண்டு மாடி கட்டடம், நான்கு பெட்ரூம்கள் இருந்தன. சகோதரர்கள் முதல் மாடியிலிருந்த பெரிய ஹாலையும் டைனிங் ரூமையும் ஆபீஸாக மாற்றும் வேலையில் இறங்கினார்கள். கார் ஷெட்டை சரக்குகள் வைப்பதற்கும் மிமியோகிராஃபிங் செய்வதற்கும் பயன்படுத்தினார்கள். 1972-⁠ல் இந்தக் கட்டடம் விரிவாக்கப்பட்டது.

நவம்பர் 1965-⁠ல், திடீர் அரசியல் புரட்சியால் ஷோசெஃப்-டேசிரே மோபூட்டூ குடியரசுத் தலைவரானார். சட்டப்பூர்வ அங்கீகாரத்திற்காக மறுபடியும் கிளை அலுவலகம் விண்ணப்பம் செய்தது; ஜூன் 9, 1966 அன்று, குடியரசுத் தலைவரான மோபூட்டூ அந்த அங்கீகாரம் வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டார். அதுமுதல், காங்கோவில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மற்ற மதத்தவர்கள் அனுபவித்த உரிமைகளையும் சலுகைகளையும் யெகோவாவின் மக்களும் அனுபவித்தார்கள். 1932 முதல் சகோதரர்கள் எதற்காக பாடுபட்டார்களோ, எதற்காக ஜெபித்தார்களோ, அது ஒருவழியாக கிடைத்துவிட்டது. பகிரங்கமாக பிரசங்கிக்கவும் பெரிய அசெம்பிளிகளை நடத்தவும் சொத்துக்களை பெற்றிருக்கவும் அவர்களுக்கு உரிமை கிடைத்தது. இருந்தாலும் அந்த சுதந்திரம் ஆறே ஆண்டுகளுக்குத்தான் நீடிக்கவிருந்தது.

மாநாடுகள் பிரமாண்டமான அளவில் சாட்சி பகருகின்றன

சட்டப்பூர்வ ஆணையின் பாதுகாப்போடு வட்டார மாநாடுகளை ஏற்பாடு செய்ததில் சகோதரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி! முதல் சுற்றில் 11 மாநாடுகள் நடத்தப்பட்டன; மொத்தம் 11,214 பேர் ஆஜராகியிருந்தார்கள், 465 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்.

மாநாடுகளைக் குறித்து உள்ளூர் சர்ச்சுகள் ஆவேசம் அடைந்தன. யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க குருமார் தீவிரமாக போராடியிருந்தார்கள்; வளமான இந்தப் பிராந்தியத்தை தங்கள் ‘ராஜ்யமாக’ கருதினார்கள். கஸாய் மாநிலத்திலுள்ள கான்டாஜிக்காவில் மதத் தலைவர்கள் மேயரிடம் கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால் அவர்களுடைய பயமுறுத்தலுக்கு மேயர் மசியாததால், மாநாட்டை கலைக்க சில வாலிபர்களை அனுப்பினார்கள். இருந்தாலும், மாநாட்டில் பைபிள் சம்பந்தமான ஒரு படக்காட்சி காட்டப்பட்டதால் அதைப் பார்க்க மிகப் பெரிய கூட்டம் கூடியிருந்தது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம், கூட்டத்தைக் கலைக்கப் போன வாலிபர்களும் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து படக்காட்சியை பார்த்து ரசிக்க ஆரம்பித்தார்கள். அது அவர்கள் மனதைத் தொட்டது. ஒவ்வொரு ரீல் மாற்றப்பட்டபோதும், ஆயிரக்கணக்கில் கூடியிருந்த அனைவரும், “யெகோவாவின் சாட்சிகள் நீடூழி வாழ்க!” என்று கோஷமிட்டார்கள்.

பெரிய மாநாடுகளை நடத்த யெகோவாவின் சாட்சிகளுக்கு அனுமதி கிடைத்துவிட்டபோதும், அதற்கு முன்பு நிறைய ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது. பைபிள் நாடகங்களை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது, அவற்றிற்கு தேவையான உடைகளை தயாரிக்க வேண்டியிருந்தது. ஒலிபெருக்கி சாதனங்களை பொருத்தவும் இயக்கவும் வேண்டியிருந்தது. சாட்சிகள் மனமுவந்து வேலை செய்யவும் கற்றுக்கொள்ளவும் விரும்பியதால்தான் இவை அனைத்தையும் சாதிக்க முடிந்தது.

வட்டார மாநாடுகளில் சேவை செய்ய பயணித்தல்

1964-⁠ல் காங்கோவில் இரண்டு மாவட்டங்களை உருவாக்கும் அளவுக்கு போதிய வட்டாரங்கள் இருந்தன. 1969-⁠ம் வருடம் கஸாயில் மூன்றாவது மாவட்டம் உருவாக்கப்பட்டது, 1970-⁠க்குள் நான்காவது மாவட்டமும் உருவானது. ரோடுகள் சரியாக இல்லாததால் மாநாடுகளுக்கு செல்வது மாவட்டக் கண்காணிகளுக்கும் மற்றவர்களுக்கும் வெகு சிரமமாக இருந்தது. உதாரணத்திற்கு, மாவட்டக் கண்காணியான வில்லியம் ஸ்மித் ஒரு வட்டார மாநாட்டிற்கு போன கதையை அவரே சொல்ல இப்போது கேட்போம்.

“கிராமப்புறம் எங்கும் வெள்ளக்காடாக இருந்தது, ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நாங்கள் கமினாவிற்கு போக வேண்டியிருந்தது; அங்குதான் வட்டார மாநாடு நடக்கவிருந்தது. அது 320-⁠க்கும் அதிகமான கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. பலத்த மழையினால் சில பாதைகளில் ஒரே சேறும் சகதியுமாக இருந்தது; மற்ற இடங்களில் ரோடுகள் கண்ணில் தெரியாதவாறு தண்ணீரில் மூழ்கிப்போயிருந்தன. பள்ளத்தாக்காக இருந்த ஒரு இடம் ஏரியாகிவிட்டது. திரும்பிய பக்கமெல்லாம் கார்களும் லாரிகளும் அரசு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன; தண்ணீர் வடிவதற்காக மக்கள் காத்திருந்தார்கள். இரண்டு வாரங்களுக்கு அப்படியே காத்திருக்க வேண்டுமென அநேகர் நினைத்தார்கள்.

“மாநாட்டு நிகழ்ச்சிகளை சகோதரர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள் என்பது எனக்கு தெரியும். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிலர் பல நாட்கள் நடந்து வந்திருப்பார்கள் என்றும் தெரியும். பள்ளத்தாக்கை கடந்துசெல்வதற்கு வேறு ஏதாவது வழியிருக்கிறதா என்று சிலரிடம் விசாரித்தேன். யெகோவாவின் சாட்சிகள் ஒரு சிறிய பாதையை அமைத்திருந்ததாக அவர்கள் சொன்னபோது எனக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது; ஆனால் மண் மிகவும் கொழகொழவென்று இருந்ததால் தங்கள் மாவட்டக் கண்காணி கமினாவிற்கு செல்லும்வரை அது வழியாக வேறு யாரையும் சாட்சிகள் அனுமதிப்பதில்லை என்றார்கள்.

“இரண்டு கிராமங்களைச் சேர்ந்த சகோதரர்கள் ஒருநாள் காலையிலிருந்து அடுத்த நாள் காலை வரை ஓயாமல் வேலை செய்து அந்தப் புதிய பாதையை அமைத்திருந்தார்கள்; சாலையின் கடக்க முடியாத பகுதியைச் சுற்றி செல்ல இந்தப் பாதை அமைத்திருந்தார்கள். சீக்கிரத்தில் சகோதரர்களை என்னால் சந்திக்க முடிந்தது. அவர்கள் அமைத்திருந்த பாதை வழியாக ஜீப்பை ஓட்டிச்செல்ல தயாரானேன். ஜீப் செல்லுமா என்று பார்க்க நிறைய பேர் கூடியிருந்தார்கள். அந்தப் புதிய சாலையில் சில மீட்டர் தூரம் செல்வதற்குள்ளாகவே ஜீப் பொதுபொதுவென்றிருந்த மண்ணில் இறங்கியது; எங்களுக்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டது!

“சகோதரர்கள் ஜீப்பை தள்ளியும் அது நகரவேயில்லை. பட்ட பாடெல்லாம் வீணாகிப்போன ஏமாற்றத்தில் அவர்கள் முகம் சுருங்கிப்போனது. ஆனால் மாவட்டக் கண்காணியை மாநாட்டிற்கு அனுப்பும் தீர்மானத்தில் அவர்கள் தளரவே இல்லை. அந்தப் புதிய பாதை அனுகூலமாய் இருப்பதற்கு பதிலாக ஆபத்தாய் இருந்ததாக நினைத்து மற்றவர்கள் தங்கள் வாகனங்களுக்குத் திரும்பிச் சென்றார்கள். சகோதரர்களோ மறுபடியும் முயற்சி செய்ய தீர்மானித்தார்கள். இம்முறை ஜீப்பிலிருந்த எல்லாவற்றையும்​—⁠பிரசுரங்கள், ஒலிபெருக்கி சாதனம், ஜெனரேட்டர் போன்ற கனமான எல்லாவற்றையும்​—⁠வெளியே எடுத்தார்கள். பிறகு சக்கரங்களுக்கு அடியிலிருந்த சகதியை தோண்டியெடுத்துவிட்டு ஜீப்பை தள்ளினார்கள். சக்கரங்கள் மெதுவாக சுழல ஆரம்பித்தன.

“ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, வண்டி பொதுபொதுவென்றிருந்த மண்ணைக் கடந்து சாதனை புரிந்தது. அதைக் கொண்டாடும் விதத்தில் சகோதரர்கள் ராஜ்ய பாடல்களைப் பாடி, சந்தோஷமாக ஆர்ப்பரித்தார்கள். தங்கள் வாகனங்களில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தவர்கள் எது நடக்கவே நடக்காது என்று நினைத்தார்களோ அதை சகோதரர்கள் நடத்திக் காட்டிவிட்டார்கள். சகோதரர்களின் கடின உழைப்பால் மாநாடும் நல்லபடியாக நடந்தேறியது. யெகோவா தம் மக்களோடு இருந்து, தம் சித்தத்தை செய்ய அவர்களுக்கு உதவினார்.”

புதிய அரசாங்கம் செய்த மாற்றங்கள்

பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள மழைக்காடுகளும் சமதளப் புல்வெளிகளுமான ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பில் அங்குமிங்குமாய் சிதறியிருக்கும் மக்களை சந்திப்பது எளிதாக இருக்கவில்லை. மிஷனரிகள் மாநகரங்களில் பிரசங்கித்தார்கள், விசேஷ பயனியர்களாக சேவித்த உள்ளூர் சகோதர சகோதரிகளோ கிராமப்புற பகுதிகளுக்குப் போய் பிரசங்கித்தார்கள். ஆனால் கிராமவாசிகளில் அநேகர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால் ஆவிக்குரிய விதத்தில் பலமான சபைகளை உருவாக்குவது கஷ்டமாக இருந்தது. மேலும், நாட்டின் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் சகோதரர்களின் வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்கியது.

1970-ஆம் ஆண்டில் ஒரே-கட்சி அரசியல் அமைப்பு ஆரம்பமானது. அது, பாப்புலர் மூவ்மன்ட் ஆஃப் த ரெவல்யூஷன் (பிரெஞ்சு மொழியில், மூவ்மென் பாப்பூயலெர் ட லா ரேவாலூஸ்யான்), அல்லது MPR என்று அழைக்கப்பட்டது. பழங்கால மதிப்பீடுகளை திரும்ப ஸ்தாபிப்பதே அதன் கொள்கையாக இருந்தது, டவுன்கள் மற்றும் நகரங்களின் பெயரை மாற்றுவதும் அதில் உட்பட்டிருந்தது. ஸ்டான்லிவில் என்பது கிஸங்கனி என்று ஏற்கெனவே பெயரிடப்பட்டிருந்தது, எலிசபெத்வில் என்பது லுபும்பாஷி என்று பெயரிடப்பட்டது. 1971-⁠ல் அந்த அரசாங்கம் காங்கோ என்ற நாட்டின் பெயரையும் அதன் முக்கிய நதியின் பெயரையும் ஜயர் என்று மாற்றியது. நாட்டின் நாணயம் பிராங்க்கிலிருந்து ஜயராக மாற்றப்பட்டது. மக்கள் தங்கள் பெயரையும் மாற்றிக்கொள்ள வேண்டுமென்று அரசாங்கம் கட்டளையிட்டது; கிறிஸ்தவ பெயர்களாக கருதப்பட்டவை அதிகாரப்பூர்வ ஆப்பிரிக்க பெயர்களாக மாற்றப்பட வேண்டியிருந்தது. கழுத்தில் ‘டை’ அணியக்கூடாது என்று சொல்லப்பட்டது; ஏனென்றால் அது ஐரோப்பியர்களின் பாணியாக கருதப்பட்டது. இந்த எல்லா விஷயங்களிலும் சகோதரர்கள் அரசாங்கத்திற்கு மரியாதையோடு கீழ்ப்படிந்தார்கள்.​—மத். 22:⁠21.

அரசியல் கொள்கைப்படி காங்கோவில் பிறந்த எல்லாருமே MPR-⁠ன் மும்முர அங்கத்தினர்களாக கருதப்பட்டார்கள். வேலையை இழக்காதிருக்க, பள்ளிக்கு செல்ல, அல்லது மார்க்கெட்டில் விற்பனை செய்ய, கட்சி அட்டையை மக்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டியிருந்தது. அதோடு, அரசியல் கட்சியின் பேட்ஜை அணிந்துகொள்ள வேண்டியிருந்தது; முக்கியமாக அரசாங்க அலுவலகத்திற்குள் நுழையும்போது. யெகோவாவின் மக்களுக்கு அது கடினமான காலமாக இருந்தது. சகோதரர்கள் தங்கள் வேலையை இழந்தார்கள், பிள்ளைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

இருந்தாலும் சில அரசாங்கத் தலைவர்கள் யெகோவாவின் சாட்சிகளது நிலைநிற்கையை புரிந்துகொண்டார்கள். உள்துறை அமைச்சர், தன்னிடம் வேலை பார்த்த ஒரு சகோதரரிடம், பேட்ஜ் அணியாததற்கான காரணத்தை கேட்டார். அந்தச் சகோதரர் வேதப்பூர்வ காரணங்களை விளக்கினார். அதற்கு அமைச்சர், “எங்களுக்கு உங்களைப் பற்றி நன்றாக தெரியும், நாங்கள் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் கொடுக்க மாட்டோம்; ஆனால் இளைஞர் இயக்கம்தான் உங்களை சும்மா விடாது” என்றார்.

யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக அநேக புகார்களை கேட்ட பிறகும்கூட, குடியரசுத் தலைவர் மோபூட்டூ இவ்வாறு தன் கட்சிக்காரர்களிடம் ஒரு கூட்டத்தில் சொன்னதாக அறிக்கை செய்யப்பட்டது: ‘எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதற்கு யெகோவாவின் சாட்சிகள் காரணமாக இருக்க மாட்டார்கள். இயேசுவை யார் காட்டிக்கொடுத்தது என்பதை நினைத்துப் பாருங்கள். அவரது சீஷர்களில் ஒருவனான யூதாஸ்தான் காட்டிக் கொடுத்தான். என்னை யாராவது காட்டிக்கொடுப்பதாக இருந்தால், அது என்னோடு சேர்ந்து சாப்பிடுகிறவர்களில் ஒருவராகத்தான் இருக்கும்.’

தேவைகளை சமாளிக்க பெத்தேல் விரிவாக்கம்

புரூக்ளின் தலைமையகத்தைச் சேர்ந்த நேதன் எச். நார், ஜனவரி 1971-⁠ல் காங்கோவிற்கு விஜயம் செய்தார். பெத்தேல் வீடு மற்றும் அலுவலக கட்டடங்களை விரிவாக்குவது சம்பந்தமாகவும் அப்போது அவர் பேசினார். 1970-⁠க்குள்ளாக கிட்டத்தட்ட 14,000 பிரஸ்தாபிகளும் 194 சபைகளும் 200-⁠க்கும் அதிகமான ஒதுக்குப்புற தொகுதிகளும் இருந்தன. காங்கோவில் பிரசுரங்களுக்கு அதிகமதிகமாக தேவை ஏற்பட்டதால் பெத்தேலில் இருந்த புத்தக சேமிப்பறை கொஞ்சமும் போதுமானதாக இருக்கவில்லை. இன்னொரு புதிய கட்டடம் கட்டப்படும் என்று சகோதரர் நார் சொன்னதும் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவேயில்லை! நவீன இரண்டு மாடி கட்டடத்தை புதிதாய் கட்டுவதற்கான ப்ளானை கட்டடக் கலைஞர் தயாரித்தார். அப்போதிருந்த கட்டடத்தைவிட அது இரு மடங்கு பெரிது. ஒரு பெரிய அலுவலகம், பெரிய புத்தக சேமிப்பறை, கூடுதலான பெட்ரூம்கள் ஆகியவை அந்தப் பிளானில் இருந்தன.

ஜூன் 1971-⁠ல் ப்ளான்களுக்கு ஒப்புதல் கிடைத்தது, வேலையும் ஆரம்பிக்கப்பட்டது. கட்டுமானத்தில் உதவி செய்ய டாஹோமியிலிருந்து (தற்போது பெனின்) சகோதரர் டான் வார்ட் அனுப்பப்பட்டார். கின்ஷாசாவின் 39 சபைகளிலிருந்து அநேக வாலண்டியர்கள் உதவி செய்ய வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கட்டுமான திட்டத்தை முடித்தார்கள். இவ்வாறு நாடெங்கும் ஏற்பட்ட அதிகரிப்பும் பெத்தேலில் செய்யப்பட்ட விரிவாக்கமும் கிறிஸ்தவமண்டல மதத்தவருக்கு மேலும் எரிச்சலூட்டியது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

1970-கள்​—⁠தைரியமும் ஜாக்கிரதையும் தேவைப்பட்ட காலம்

டிசம்பர் 1971-⁠ல், நாடெங்கும் உருவாகிக் கொண்டிருந்த அநேக புதிய மதங்களையும் ஜெபத் தொகுதிகளையும் கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. அந்தப் புதிய சட்டத்தின்படி, ரோமன் கத்தோலிக்க சர்ச், புராட்டஸ்டன்ட் சர்ச், உள்ளூர் மதமாகிய கிம்பாங்குவிஸ்ட் சர்ச் ஆகிய மூன்று மதங்கள் மட்டுமே சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டன. 1972-⁠ல் இஸ்லாம் மதம், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மதம், யூத மதம் ஆகியவையும் அங்கீகரிக்கப்பட்டன. அநேக சிறிய மதத் தொகுதிகள் புராட்டஸ்டன்ட் மதப் பிரிவின் கீழ் சேர்ந்துகொண்டன.

இவ்வாறு, 1971 முதல் 1980 வரை, ஒருவித தளர்த்தப்பட்ட தடை நிலவியது; இது கடவுளுடைய மக்களின் வேலைகளை சில விதங்களில் பாதித்தது. யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாதபோதும், மிஷனரிகளை வெளியேற்ற உத்தரவு எதுவும் போடப்படவில்லை; பெத்தேல் வேலைகளுக்கு எவ்வித தடங்கலும் ஏற்படவில்லை. கனங்காவிலிருந்த ஒரு மிஷனரி இல்லம் மூடப்பட்டது; ஆனால் புக்காவு, கிஸங்கனி, கோல்வேஸி, லுபும்பாஷி ஆகிய இடங்களில் இருந்தவை மூடப்படவில்லை. பெரிய மாவட்ட மாநாடுகளை அதன் பிறகு சகோதரர்களால் நடத்த முடியவில்லை. இருந்தாலும் அநேக இடங்களில் சகோதரர்கள் தங்கள் ராஜ்ய மன்றங்களில் கூடினார்கள். சற்று பெரிய மன்றங்களில் வட்டார மாநாடுகளை சிறிய அளவில் நடத்தினார்கள். உள்ளூர் அதிகாரிகளின் மனப்பான்மையைப் பொறுத்தே பெரும்பாலான காரியங்கள் நடந்தன. கடும் எதிர்ப்பு நிலவிய பகுதிகளில், துன்புறுத்தலையும் சிறைவாசத்தையும் அனுபவிக்க வேண்டிவரும் என சகோதரர்கள் எதிர்பார்த்தார்கள். நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் உள்ளூர் அதிகாரிகள் சாதகமாக இருந்தபோது, சகோதரர்களால் தங்கள் மத நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபட முடிந்தது.

கட்டுப்பாடுகளின் மத்தியிலும் சாட்சிகள் தொடர்ந்து தைரியமாக பிரசங்கித்தார்கள். ஒருமுறை, சாட்சி கொடுப்பதற்காக மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் சேர்ந்து மார்க்கெட்டிற்கு சென்றார்கள். இரண்டு ஆட்கள் அவர்களிடம் வந்தார்கள்; ஆர்வம் காட்டிய ஒருவரிடம் புத்தகத்தைக் கொடுத்த சகோதரரை அந்த ஆட்கள் கைது செய்தார்கள். அந்த சகோதரரை அரசியல் கட்சித் தலைமையகத்திற்கு கொண்டு சென்று, கட்சித் தலைவர் வரும்வரை ஒரு ரூமில் வைத்தார்கள். கட்சித் தலைவர் உள்ளே நுழைந்தபோது, சகோதரர் அந்த ரூமிலிருந்த இன்னொருவரிடம், மனிதன் தோன்றியது பரிணாமத்தினாலா படைப்பினாலா? என்ற ஆங்கில புத்தகத்தை காட்டிக் கொண்டிருந்தார்.

“இங்கேயுமா நீ பிரச்சாரம் செய்கிறாய்?” என்றார் கட்சித் தலைவர்.

அதற்கு அந்த சகோதரர், “‘மனிதன் தோன்றியது பரிணாமத்தினாலா படைப்பினாலா?’ என்று யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?” என்றார்.

கட்சித் தலைவர் பதிலே சொல்லவில்லை. மாறாக, சகோதரரை கைது செய்தவர்களிடம், “இவரை விட்டுவிடுங்கள். இவர் சட்டவிரோதமாக ஒன்றையும் செய்யவில்லை” என்று கூறினார்.

சகோதரர் மறுபடியும் மார்க்கெட்டிற்கு சென்று சாட்சி கொடுக்க தொடங்கினார். பிற்பாடு கட்சித் தலைவர் அந்தப் பக்கமாக சென்றபோது தற்செயலாக சகோதரரைப் பார்த்தார். அவரை காட்டி, “ரொம்ப தைரியசாலி, இல்லையா?” என்று தன்னுடன் இருந்தவர்களிடம் சொன்னார்.

1974-⁠ல் கிளை அலுவலகக் கண்காணியான எர்னெஸ்ட் ஹாய்ஸ், டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் மறுபடியும் பெல்ஜியத்திற்கு திரும்ப வேண்டியிருந்தது. அவர் கொஞ்ச காலமாக நுரையீரல் காற்றேற்ற நோயால் அவதிப்பட்டு வந்தார்; அடிக்கடி மலேரியா காய்ச்சலுக்கு ஆளானதால் அவர் உடல்நிலை மோசமானது. சகோதரர்கள் ஹாய்ஸ் குடும்பத்தாரிடம் மிகவும் பிரியமாக இருந்தார்கள்; ஊழியத்தில் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களித்திருந்தார்கள். பெல்ஜியத்தில் அவர்கள் தொடர்ந்து யெகோவாவை வைராக்கியமாக சேவித்தார்கள். 1986-⁠ல் எர்னெஸ்ட் இறந்துவிட்டார்; எட்டு வருடங்களுக்குப் பிறகு அவரது மனைவி ஏலென் இறந்தார். கின்ஷாசாவில் கிளை அலுவலகக் கண்காணிப்பு வேலை திமத்தி ஏ. ஹோம்ஸிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் 1966 முதல் மிஷனரியாக பணியாற்றி வந்திருந்தார்.

1980-⁠ல் மீண்டும் சட்டப்பூர்வ அங்கீகாரம்

ஏப்ரல் 30, 1980-⁠ல் குடியரசுத் தலைவர், யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பிற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டார். முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அநேகர் சத்தியத்திடம் ஆர்வம் காட்டினார்கள். 90,226 பேர் நினைவு ஆசரிப்பில் கலந்துகொண்டார்கள். ஆர்வம் காட்டிய சுமார் 35,000 பேருக்கு அவர்களுடைய வீட்டில் பைபிள் படிப்பு நடத்தப்பட்டது. பிரஸ்தாபிகள் மற்றும் பயனியர்களின் எண்ணிக்கை புதிய உச்சநிலையை எட்டியது. பிராந்தியத்தின் தேவைகளை இன்னும் திறம்பட பூர்த்திசெய்வதற்கு பெரிய கிளை அலுவலகம் தேவைப்பட்டது. ஆகவே அப்போதைய காங்கோ கிளை அலுவலகத்தின் நிலத்தைவிட இரண்டரை மடங்கு பெரிய நிலத்தை வாங்க ஆளும் குழு ஒப்புதல் அளித்தபோது சகோதரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். இருந்தாலும், நாம் பார்க்கப் போகிற பிரகாரம், பிரச்சினைகள் எழும்பின.

பல ஆண்டுகளாக சகோதரர்களால் பெரிய மாவட்ட மாநாடுகளை ஏற்பாடு செய்து நடத்த முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. 1980-⁠ல் “தெய்வீக அன்பு” மாவட்ட மாநாடுகள் நாடெங்கும் ஐந்து இடங்களில் நடத்தப்பட்டன. சிலர் தொலைதூரத்திலிருந்து மாநாட்டிற்கு வந்தார்கள். அநேக குடும்பங்கள் 400-⁠க்கும் அதிக கிலோமீட்டர் தூரம் பிரயாணம் செய்தன. மிகவும் ஒதுக்குப்புறமான பகுதியில் ஊழியம் செய்த இரண்டு விசேஷ பயனியர்கள் 700-⁠க்கும் அதிக கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்தார்கள்; இரு வாரமாக ஆழமான மணல் பரப்புகளையும் மழைக்காட்டையும் கடந்து வந்தார்கள். சிலர் காங்கோ (ப்ரஜாவில்), புரூண்டி, ருவாண்டா ஆகிய இடங்களிலிருந்தும் வந்தார்கள்.

பின்வந்த ஆண்டுகளில் மாவட்ட மாநாடுகளை இன்னுமநேக இடங்களில் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. சகோதரர்களுக்கு மத சுதந்திரம் இருந்தது உண்மைதான், ஆனால் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்தன. அன்றாட பிழைப்புக்கே அநேகர் படாத பாடுபட வேண்டியிருந்தது. விலைவாசி கிடுகிடுவென ஏறிக்கொண்டே போனது, சம்பளமோ ஏறுவதாக தெரியவில்லை. தொலைதூரம் பிரயாணம் செய்வது பெரும்பாலான சகோதரர்களுக்கு கட்டுப்படியாகவில்லை. ஆகவே அதிகமான சகோதரர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே மாநாடுகளை நடத்தும்படி கிளை அலுவலகம் கரிசனையுடன் ஏற்பாடு செய்தது.

காங்கோவின் சாலைகளில் பயணம் செய்யும்போது தொடர்ந்தாற்போல் பல தடைகளை எதிர்ப்பட வேண்டியிருக்கலாம்: வீழ்ந்துபோன மரங்கள், பழுதடைந்த பாலங்கள், ஆழமான மணல் பரப்புகள், சேற்றுக் குழிகள் ஆகியவை சர்வ சகஜம். அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் உதவிபுரிய வரும் கிளை அலுவலக பிரதிநிதிகளும் அவர்களுடைய மனைவிகளும் எப்போதும் சுயதியாக மனப்பான்மையைக் காட்டியிருக்கிறார்கள். இருந்தாலும் நாட்கணக்காக நடந்து சென்று, திறந்தவெளியில் படுத்து உறங்கிய உண்மையுள்ள உள்ளூர் சகோதர சகோதரிகள் அவர்களைவிட அதிக தியாகம் செய்கிறார்கள். இப்போதும் மாவட்ட மாநாடுகளுக்காக சகோதரர்கள் 50-150 கிலோமீட்டர் தூரம் நடந்துவருவது சகஜம்.

புதிய மிஷனரி இல்லங்கள் திறக்கப்படுகின்றன

1980-⁠ல் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம், புதிய மிஷனரிகள் நாட்டிற்குள் வர வழிவகுத்தது. 1981-⁠ல் கோமாவில் (கிவு மாநிலம்) ஒரு புதிய மிஷனரி இல்லம் திறக்கப்பட்டது. அடுத்த இரு ஆண்டுகளில், லிகாசி (கடங்கா), முபுஜி-மாயி (கஸாய்), கிக்விட் (பண்டுன்டு), துறைமுகப் பட்டணமாகிய மாடாடி (கீழ் காங்கோ) ஆகிய இடங்களிலும் இல்லங்கள் திறக்கப்பட்டன. மூடப்பட்டிருந்த மிஷனரி இல்லங்கள் மறுபடியும் திறக்கப்பட்டன. இறுதியாக, 1986-⁠ல் இஸிரா (ஓரியன்டேல் மாநிலம்) என்ற இடத்தில் ஓர் இல்லம் திறக்கப்பட்டது. ஆக மொத்தம் 11 மிஷனரி இல்லங்கள் நாடு முழுவதிலும் இருந்தன. இவை பிரசுர டிப்போக்களாகவும் சேவித்தன. மிஷனரிகள் கிளை அலுவலகத்தையும் பிராந்தியத்தையும் இணைக்கும் பாலமாக இருந்தார்கள். அவர்களிடமிருந்து பெற்ற உற்சாகத்தையும் பயிற்சியையும் உள்ளூர் சகோதர சகோதரிகள் பெரிதும் போற்றினார்கள். 1981-⁠ம் ஊழிய ஆண்டில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 25,753 என்ற உச்சநிலையை எட்டியது. இன்னும் அதிகரிப்பு ஏற்பட பெருமளவு வாய்ப்பிருந்தது.

கிம்பிலிக்கிட்டி பீதி இனியில்லை

கிம்பிலிக்கிட்டி என்பது ரெகா குலத்தவர்கள் வழிபடும் ஆவியின் பெயர். அவர்கள் நாட்டின் கிழக்கத்திய மத்திப பகுதியின் அடர்ந்த காடுகளில் வசிக்கிறார்கள். பெரும்பாலும் வேட்டைக்காரர்களாகவும், விவசாயிகளாகவும், மீனவர்களாகவும் இருக்கும் இவர்களது வாழ்க்கை, கிம்பிலிக்கிட்டியோடு சம்பந்தப்பட்ட மத நம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இம்மக்களின் மதப்பிரிவு மர்மங்கள் நிறைந்தது; இவர்களுடைய பூசாரிகள், அந்த ஆவியின் பயத்தில் வாழ்வோரை ஆட்டிப் படைக்கிறார்கள்.

கிம்பிலிக்கிட்டியைக் குறித்து இப்பகுதியில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் பயப்படுவதில்லை, ஏனென்றால் யெகோவாவே ஒரே உண்மையான கடவுள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். கிம்பிலிக்கிட்டி பூசாரிகள், ஆடுகளை அல்லது கோழிகளை தாங்கள் சாப்பிடுவதற்காக, அவற்றை பலிகொடுக்கும்படி மற்றவர்களிடம் கேட்பார்கள். அப்படிப்பட்ட கோரிக்கைகளுக்கு மசியாதவர்கள் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே.

1978 முதல், யெகோவாவின் சாட்சிகளை அந்த மதப்பிரிவினர் பகிரங்கமாக துன்புறுத்த ஆரம்பித்தார்கள். அநேக ராஜ்ய மன்றங்களை எரித்து சாம்பலாக்கினார்கள், சில சகோதரர்களை அவர்களது வீட்டிலிருந்து விரட்டினார்கள், அவர்களது உடைமைகளை பறித்துக் கொண்டார்கள். சகோதரர்களுக்கு தீமை செய்ய பில்லிசூனியத்தையும் பயன்படுத்தினார்கள், ஆனால் அவர்களது சூழ்ச்சி தோல்வியடைந்தது. பிறகு ஆகஸ்ட் 1983-⁠ல், அந்த விஷமிகளின் கொடூரமான ஒரு சதித்திட்டம் பலித்தது; பாங்கி கிராமத்திற்கு அருகே அவர்கள் எட்டு சகோதரர்களை கொடூரமாக கொலை செய்தார்கள்.

அந்தக் கோர சம்பவம் சபையை உலுக்கியது; முக்கியமாக அன்புக் கணவரையோ தகப்பனையோ பறிகொடுத்தவர்களுக்கு அது பேரிடியாக இருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆவிக்குரிய விதத்திலும் பொருளாதார ரீதியிலும் உதவி செய்ய கிளை அலுவலக சகோதரர்களும் உள்ளூர் சகோதரர்களும் திரண்டு சென்றார்கள்.

இதற்கிடையே, இந்த ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் தாங்கள் பாதுகாப்போடு பதுங்கியிருந்ததாக கொலையாளிகள் நினைத்தார்கள். ஆனால் இறுதியில் அவர்கள் பிடிபட்டார்கள். கின்டூ நகர மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. கிம்பிலிக்கிட்டி ஆவிதான் கொலை செய்யும்படி தங்களை உந்துவித்ததாக அந்தக் கொலையாளிகள் சொன்னார்கள். இருந்தாலும் உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை அரசாங்க வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். அவர் சொன்னதாவது: “[ரெகா குலத்தவர்களில்] சிலர் முன்பு கிம்பிலிக்கிட்டி சடங்குகளில் கலந்துகொண்டு அதன் மர்மங்களை தெரிந்து வைத்திருந்தார்கள்; இப்போது யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் அவர்கள், அந்த மர்மங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முக்கியமாக கிம்பிலிக்கிட்டி என்று அழைக்கப்படும் ஓர் ஆவி இல்லவே இல்லை என்பது சம்பந்தமான மர்மங்களை அம்பலமாக்கியிருக்கிறார்கள். இதன் மூலம், அந்த ஆவி பலிகளைக் கேட்பதாக சொல்லப்படுவதெல்லாம் சுத்த பொய் என்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்கள்; யெகோவாவின் சாட்சிகளின்படி, அது சடங்குகளை நடத்தும் முதியவர்களுடைய ஏமாற்று வேலையே.”

ஆகவே குற்றத்திற்குக் காரணம் அந்த கிம்பிலிக்கிட்டி ஆவி அல்ல, ஆனால் அந்த கொலையாளிகளே என்பது தெளிவானது. வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டபோது, அந்தக் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென்பதை புக்காவுவிலிருந்த உயர்நீதிமன்றம் ஊர்ஜிதப்படுத்தியது. கிம்பிலிக்கிட்டி வணக்கத்தார் யெகோவாவின் சாட்சிகளை இனி தாக்கினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அரசு வழக்கறிஞர்கள் எச்சரித்தார்கள். b

அதுமுதல் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக வேறு சம்பவங்களும் நடந்திருக்கின்றன; என்றாலும் அவற்றையெல்லாம் காட்டுக்குள்ளேயே மூடிமறைத்திட முடியாதென்றும், கற்பனைக் கதாபாத்திரமான கிம்பிலிக்கிட்டியால் தங்களை பாதுகாக்க முடியாதென்றும் அந்த மதப்பிரிவினர் உணர்ந்திருக்கிறார்கள். இதற்கிடையே, இந்த மதப்பிரிவிலிருந்து விடுபட்டு வர யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்கள். இவர்களது முயற்சிகளை யெகோவா அன்போடு ஆசீர்வதித்திருக்கிறார். இப்போது இந்தப் பகுதியிலுள்ள சபைகளில் 300-⁠க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் வைராக்கியத்தோடு சேவித்து வருகிறார்கள். அவர்கள் யெகோவாவை நேசிக்கிறார்கள்; கிம்பிலிக்கிட்டி ஆவிக்கு பயப்படுவதில்லை.

வேலைக்குத் தடை

1985-⁠க்குள் காங்கோவில் ராஜ்ய வேலை தழைத்தோங்க ஆரம்பித்தது. 1980-⁠ல் வாங்கப்பட்ட நிலத்தில் புதிய பெத்தேலைக் கட்டும் பணி தொடங்கியிருந்தது. அப்பணியில் உதவி புரிய சுமார் 60 வாலண்டியர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். ஊழிய ஆண்டின் முடிவில் கிட்டத்தட்ட 35,000 பிரஸ்தாபிகள் இருந்தார்கள், பயனியர்களின் எண்ணிக்கை புதிய உச்சநிலையை எட்டியது. நாடெங்கும் 60 மிஷனரிகள் வைராக்கியமாக பிரசங்கித்து வந்தார்கள். சபை மூப்பர்களையும் பயனியர்களையும் பயணக் கண்காணிகள் பயிற்றுவித்தார்கள். மிகப் பிரமாண்டமான அளவில் அதிகரிப்பு ஏற்படுவதற்கு சூழ்நிலைகள் அனைத்தும் சாதகமாய் இருந்தது போல தோன்றியது.

என்றாலும் கடவுளுடைய மக்களின் ஆவிக்குரிய மற்றும் பொருளாதார செழுமையைக் கண்டு எல்லாரும் சந்தோஷப்படவில்லை. அரசியல்வாதிகள் மூலம் சகோதரர்களின் வேலைகளை தடைசெய்ய குருமார் முயற்சி செய்தார்கள். மார்ச் 12, 1986-⁠ல், யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்தை தடைசெய்யும் தீர்ப்பாணையில் குடியரசுத் தலைவரான மோபூட்டு கையெழுத்திட்டார். அடுத்த நாள், அத்தடையுத்தரவு தேசிய வானொலியில் அறிவிக்கப்பட்டது. “இனி [காங்கோவில்] யெகோவாவின் சாட்சிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடுவார்கள்” என ஓர் அறிவிப்பாளர் சொன்னார். அவரது வார்த்தைகள் எந்தளவு பொய்யாகிப் போகவிருந்தன!

மாவட்டக் கண்காணிகளாக சேவித்துக் கொண்டிருந்த நான்கு மிஷனரிகள் மறுபடியும் கிளை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்கள்; அவர்களுக்குப் பதிலாக மாவட்ட ஊழியம் செய்வதற்கு உள்ளூர் சகோதரர்கள் நியமிக்கப்பட்டார்கள். மிஷனரிகளால் அதன் பிறகும் பகிரங்கமாக பிரசங்கிக்க முடியாததால் வீட்டுக் காவலில் இருந்ததைப் போல் உணர்ந்தார்கள். உள்ளூர் சகோதரர்களோ மிகுந்த ஜாக்கிரதையோடு பிரசங்கம் செய்தார்கள். (மத். 10:16) வருத்தகரமாக, ஆர்வம் காட்டிய அநேகர் பயந்துபோய் படிப்பதை நிறுத்திவிட்டார்கள். சில ராஜ்ய மன்றங்கள் மூடப்பட்டன அல்லது தகர்க்கப்பட்டன. மற்றவை அரசியல் கட்சியால் பறிமுதல் செய்யப்பட்டன. சகோதரர்கள் சிறு சிறு தொகுதிகளாக ஒன்றுகூட வேண்டியிருந்தது. அவர்கள் இரவு வேளையில் வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டார்கள், அவர்களுடைய உடைமைகள் திருட்டுப்போயின.

ஏக்வாட்டோர் மாநிலத்தில் அநேக சகோதரர்கள் அடிக்கப்பட்டு சிறையில் போடப்பட்டார்கள். ஒரு விசேஷ பயனியர் பயங்கரமாக அடிக்கப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டார். இதெல்லாம் அந்த வானொலி அறிவிப்பின் விளைவே. அந்தச் சமயம் வரை, தடையுத்தரவை அமல்படுத்த எந்த அதிகாரப்பூர்வ ஆணையும் வழங்கப்படவில்லை. தடையுத்தரவு அறிவிக்கப்பட்ட கொஞ்ச காலத்திலேயே சகோதரர்கள் முறையீடு செய்தார்கள், ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பிறகு ஜூன் 1986-⁠ல், குடியரசுத் தலைவர் பொதுமக்களுக்கு முன் பேசியபோது, சாட்சிகளை கண்டனம் செய்தார்; தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும் அதிகாரத்தை அவமதிப்பவர்கள் என்றும் அவர்களை குற்றப்படுத்தினார்.

நிலைமைகள் எத்தனை வேகமாக மாறிவிட்டன! மதிப்புமரியாதையோடு நடத்தப்பட்டவர்கள் திடீரென்று கேவலமாக நடத்தப்பட்டார்கள். புதிய கிளை அலுவலகத்தின் கட்டுமானம் நின்றுபோனது, கலகலவென்று வேலை நடந்துகொண்டிருந்த இடம் திடீரென அமைதியானது. வெளிநாட்டு வாலண்டியர்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது; கட்டுமான சாதனங்கள் விற்கப்பட வேண்டியிருந்தது. பிறகு, உள்ளூர் சகோதரர்கள் சுமார் 20 பேர் அந்நிலத்தை காவல் காக்கும் நிலை ஏற்பட்டது.

அதன்பின் சற்றும் எதிர்பாராத விதமாக, ஜூன் 26, 1986 தேதியிட்ட ஒரு கடிதம் சீஃப் செக்யூரிட்டியிடமிருந்து வந்தது; எல்லா மிஷனரிகளும் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தடை, 1972-⁠ல் கொண்டு வரப்பட்ட தடையிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது; ஏனென்றால் அப்போது தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும் மிஷனரிகளால் அங்கேயே தங்க முடிந்தது. இப்போதோ, புறப்பட தயாரான மிஷனரிகளுடைய பெட்டி படுக்கைகள் ஷிப்பிங் இலாகா முழுவதும் நிரம்பி வழிந்ததைப் பார்த்து நெஞ்சம் கனத்தது! ஜூலை மாதத்தில், 23 மிஷனரிகள் வேறு நாடுகளுக்கு சென்றார்கள். அதே சமயத்தில் விடுமுறைக்காக நாட்டைவிட்டு சென்றிருந்தவர்கள் திரும்பி வரவே இல்லை. காங்கோவில் புடமிடும் காலம் மறுபடியும் ஆரம்பமானது.

ரகசிய வேலைக்காக மீண்டும் ஒழுங்கமைத்தல்

யெகோவாவின் மக்களை தளர வைக்க அல்லது ஒழித்துக்கட்ட முடியும் என்று எதிரிகள் நினைத்திருந்தால், அது மிகப் பெரிய தப்புக்கணக்கு. யெகோவாவின் பரிசுத்த ஆவியுடைய வல்லமையையும் அவரது மக்களின் மனவுறுதியையும் அவர்கள் தவறாக எடைபோட்டார்கள். அனுபவமிக்க மிஷனரிகளில் ஒருசிலர் எப்படியோ நாட்டில் தங்கிவிட்டார்கள். கிளை அலுவலக ஊழியர்கள் ராஜ்ய பிரசங்க வேலையை கண்காணிக்கும் பணியை சகோதரர் பலருடைய வீடுகளில் இருந்தபடியே செய்தார்கள். பயனியர் ஊழியப் பள்ளியையும் நாடெங்கும் பல்வேறு வீடுகளில் சகோதரர்கள் நடத்தினார்கள்.

ஆவிக்குரிய உணவிற்கு பஞ்சமே இருக்கவில்லை. பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களை சகோதரர்கள் தொடர்ந்து அச்சிட்டு விநியோகித்தார்கள். மாவட்ட மாநாட்டிற்கும் வட்டார மாநாட்டிற்குமான பேச்சுக் குறிப்புத்தாள்களை கிளை அலுவலகம் எல்லா சபைகளுக்கும் அனுப்பியது; அந்தக் குறிப்புத்தாள்களின் அடிப்படையில் பேச்சுக்கள் கொடுக்கப்பட்டன. வட்டாரக் கண்காணிகள் சபைகளை விஜயம் செய்தபோது, உள்ளூர் மொழிகளில் பதிவு செய்யப்பட்ட மாநாட்டு நாடகங்களை போட்டுக் காட்டினார்கள். 1986 முதல் தடை நீக்கப்படும் வரை ஒவ்வொரு வருடமும் இவ்வாறு செய்தார்கள். இதற்கெல்லாம் அதிக வேலை செய்ய வேண்டியிருந்தது என்றாலும், சகோதரர்கள் பெரிதும் பயனடைந்தார்கள்.

இதற்கிடையே, அரசாங்க அதிகாரிகளை மூப்பர்கள் சந்தித்தார்கள்; அரசியலில் சாட்சிகள் நடுநிலைமை வகிக்கிறார்கள் என்றும், அதற்காக தேசதுரோக செயல்களில் அவர்கள் ஈடுபடுவதாக அர்த்தமில்லை என்றும் தெளிவாக விளக்குவதற்கே அந்த முயற்சியெடுத்தார்கள். இவ்விதத்தில் யெகோவாவின் பெயரும் நோக்கமும், நாட்டிலுள்ள உயர் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் தெரிய வந்தது. யெகோவாவின் மக்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக​—⁠நடுநிலைமையை விட்டுக்கொடுக்காதவர்களாக, அதேசமயம் கலகம் செய்யாமல் அமைதியை நாடுபவர்களாக⁠—⁠விளங்கினார்கள்.

ராஜ்ய அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையில் இறக்கமும் ஏற்றமும்

1987-⁠ம் ஆண்டின் ஊழிய அறிக்கைப்படி பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்தது. அவர்களில் சிலர், தடை செய்யப்பட்ட அமைப்பின் அங்கத்தினர்களாக இருக்க பயப்பட்டார்கள். அநேக பகுதிகளில் கடும் துன்புறுத்தல் ஆரம்பமானது.

என்றாலும் எதிர்ப்பு சிலசமயங்களில் நன்மையில் முடிவடைந்தது. உதாரணத்திற்கு, உள்ளூர் தலைவர் ஒருவர், யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக பேசுவதற்கென்றே ஒரு விசேஷ கூட்டத்தை நடத்தினார். என்னுடைய பைபிள் கதை புத்தகம் ஒன்றை அந்தத் தலைவர் எல்லாருக்கும் காட்டி, அந்தப் புத்தகத்தை யார் விநியோகித்தாலும் கைது செய்ய வேண்டுமென்று மக்களிடம் சொன்னார். அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தால்தான் பிற்பாடு அதை அடையாளம் கண்டுகொள்ள முடியுமென்று மக்கள் சொன்னதால் அதை அவர்களிடம் காட்ட சம்மதித்தார். அதைப் புரட்டிப் பார்த்த அவர்களுக்கோ அது மிகவும் பிடித்துவிட்டது. அதனால் மற்றொரு கிராமத்திலிருந்த ஒரு விசேஷ பயனியரிடம் அந்தப் புத்தகத்தின் பிரதிகளை சிலர் கேட்டு வாங்கிக்கொண்டார்கள். அந்த விசேஷ பயனியர் இவ்வாறு சொல்கிறார்: “நான் பத்து பைபிள் படிப்புகளை ஆரம்பித்தேன். அந்தத் தலைவரின் கிராமத்தில் நான் அதுவரை பிரசங்கித்ததே இல்லை. அவர் மட்டும் சாட்சிகளுக்கு எதிராக பேசியிருக்காவிட்டால், அந்த மக்கள் சத்தியத்தை கற்றுக்கொள்ள ஒருவேளை வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்!”

புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப சகோதரர்கள் நடந்துகொண்டார்கள். பல விதங்களில் அவர்களுக்கு வரையறைகள் இருந்தபோதும், “அசைய முடியாதபடி அவர்கள் நெருக்கப்படவில்லை.” (2 கொ. 4:8, NW) 1988-⁠ம் ஊழிய ஆண்டில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்தது. சுமார் 60,000 பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன. பெத்தேலிலுள்ள ஊழிய இலாகாவை சேர்ந்த சகோதரர்கள், உற்சாகத்தை அளிப்பதற்காகவும் உள்ளூர் மூப்பர்களையும் பயணக் கண்காணிகளையும் சந்திப்பதற்காகவும் மாநகரங்களுக்கு விஜயம் செய்தார்கள். இதற்கிடையே, கிளை அலுவலகம் அண்டை நாடுகளாகிய புரூண்டியிலும் காங்கோவிலும் (ப்ரஜாவில்) நடந்த வேலைகளை தொடர்ந்து மேற்பார்வை செய்து வந்தது. இந்தக் காங்கோவிலும் ஊழியம் தடை செய்யப்பட்டிருந்தது.

கோல்வேஸியில் பள்ளித் தலைமை ஆசிரியராக பணியாற்றிய ஒரு சகோதரர் அரசியல் உறுதிமொழி ஒன்றை எடுக்க மறுத்தார். இதற்காக பயங்கரமாக அடிக்கப்பட்டு, லுபும்பாஷிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கே அவர் கொல்லப்படுவார் என்று எதிரிகள் நினைத்தார்கள். சகோதரர் தான் நடுநிலைமை வகித்ததற்கான காரணத்தைக் குறித்து சாந்தமாக விளக்கினார். அவர் விடுதலை பெற்று மீண்டும் கோல்வேஸிக்கு திரும்பினார். அவரை அடித்தவர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஆணையிடப்பட்டது! அதோடு, அவர் மறுபடியும் ஆசிரியர் பணியில் சேர்க்கப்பட்டு, மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டார்!

அக்டோபர் 1988-⁠ல், உள்ளூர் தலைவர்கள் கின்ஷாசாவில் பெத்தேல் கட்டப்படவிருந்த நிலத்தை கைப்பற்றி, டன்கணக்கில் பைபிள் பிரசுரங்களை பறிமுதல் செய்தார்கள். ராணுவத்தினர் எப்போதும் புத்தகங்களையும் பைபிள்களையும் கணக்குவழக்கில்லாமல் திருடிச் சென்றார்கள்; பின்பு அவற்றை உள்ளூர் மார்க்கெட்டுகளில் விற்றார்கள். மக்கள் அவற்றை வாங்கினார்கள்; இவ்வாறு சகோதரர்கள் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு வாய்ப்புகள் காத்திருந்தன. c

1989-⁠க்குள், தடையின் மத்தியிலும் ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 40,707-ஐ எட்டியது. யெகோவாவின் சாட்சிகளுடைய மத எதிரிகள் கோபத்தில் கொதித்தார்கள். கத்தோலிக்க சர்ச்சின் ஆதரவாளராக நன்கு அறியப்பட்ட அப்போதைய நீதித்துறை அமைச்சர், காங்கோவிலிருந்த எல்லா அரசு வழக்கறிஞர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பினார்; யெகோவாவின் மக்கள் தொடர்ந்து ஊழியம் செய்வதைக் குறித்து தான் அதிக கலக்கமடைந்திருப்பதாக அதில் அவர் தெரிவித்தார். எனவே, யெகோவாவின் சாட்சிகளை தண்டித்து, அவர்களுடைய ராஜ்ய மன்றங்களை இழுத்து மூட வேண்டுமென்று சொன்னார். பிற்பாடு, மதத் தலைவர்களிடம் பேசியபோது அவர் யெகோவாவின் மக்களை “வடிகட்டின பிசாசுகள்” என்று விவரித்தார். இதனால் அந்த அமைச்சரின் சொந்த மாநிலமான பண்டுன்டுவில் சாட்சிகளுக்கு ஓரளவு துன்புறுத்தல் இருந்தது.

சிறுபிள்ளைகள் சிறையில் தள்ளப்பட்டார்கள்

அந்த சமயத்தில், சில அரசியல் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள மறுத்ததற்காக யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் சிலர் பள்ளியில் கைது செய்யப்பட்டார்கள். ஒருமுறை, இரண்டு இளம் மகன்களோடு சேர்த்து தகப்பனும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். அவர்களுக்கு சாப்பாடே கொடுக்கக் கூடாது என்று சிறைக் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. “இந்தச் சிறைச்சாலையில் கொலையாளிகளும் திருடர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் சாப்பாடு கொடுக்கிறோம். இவர்கள் மூன்று பேருக்கு மட்டும் ஏன் கொடுக்கக் கூடாது?” என்று ஒரு காவலர் ஆச்சரியத்தோடு கேட்டார். இந்தக் கேள்விக்கு திருப்தியான பதில் கிடைக்காததால் அவரே அவர்களுக்கு உணவு கொடுத்தார். அந்த இரண்டு பிள்ளைகளும் 11 நாட்கள் சிறையில் இருந்தார்கள்; விசேஷ பயனியரான அவர்களுடைய தந்தை 7 நாட்கள் அங்கிருந்தார். இந்தச் சோதனையால் அவர்கள் எந்த விதத்திலும் தளரவில்லை.

கிட்விட்டில், சாட்சியாக இருந்த ஒரு பெண்ணும் அவளுடைய இரண்டு மகள்களும் சிறையில் போடப்பட்டார்கள்; அப்பெண்ணின் அவிசுவாசியான கணவரும் அதன் பிறகு கைது செய்யப்பட்டார். அவர் தனது மனைவியின் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெரிந்தவுடன் அதிகாரிகள் அவரை விடுதலை செய்தார்கள். ஆனால் அவரோ தன் மனைவியையும் பிள்ளைகளையும் விட்டுச் செல்ல மாட்டேன் என்று சொல்லி சிறைச்சாலையிலேயே இருந்தார். கடைசியில் குடும்பமாக சேர்ந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர் பைபிளை படிக்க ஆரம்பித்து முழுக்காட்டுதல் பெற்றார். இப்போது அவர் ஒரு சபையில் மூப்பராக சேவிக்கிறார்.

உள்நாட்டுக் கலவரம்

செப்டம்பர் 1991-⁠ல் கின்ஷாசாவில் ஒரு ராணுவ கிளர்ச்சி ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து எல்லா இடங்களிலும் பொருட்கள் சூறையாடப்பட்டன. இதனால் உணவிற்கும் எரிபொருளுக்கும் பயங்கர பஞ்சம் ஏற்பட்டது; ஏராளமானவர்கள் வேலையில்லாமல் திண்டாடினார்கள், பணவீக்கமும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது. தென் ஆப்பிரிக்காவிலும் பிரான்ஸிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகங்கள் நிவாரணப் பொருட்களை அனுப்பின.

காங்கோ கிளை அலுவலகம் அந்த நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்க போராடிக் கொண்டிருந்த அதேசமயத்தில் அண்டை நாடுகளான அங்கோலாவிலிருந்தும் சூடானிலிருந்தும் வந்த அகதிகளையும் கவனித்து வந்தது. வடகிழக்கு காங்கோவில், அப்போது பயணக் கண்காணியாக இருந்த செகரியா பெலெமா, சூடானிலிருந்து அகதிகளாக வந்திருந்த சகோதரர்களின் ஒரு தொகுதியை சந்தித்தார். தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் அவர் பேச்சு கொடுத்தார்; அது அரபிக்கில் மொழிபெயர்க்கப்பட்டது. தான் பேசியது சகோதரர்களுக்கு எந்தளவு புரிந்ததோ என்று செகரியா நினைத்தார். சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு பெத்தேலை சுற்றிப் பார்க்க வந்த இரண்டு வாலிபர்கள் அவரை அணுகி, “எங்களை ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். பிறகு, “அகதி முகாமில் நாங்களும் உங்கள் பேச்சைக் கேட்டோம். நீங்கள் கொடுத்த உற்சாகத்தையெல்லாம் ஞாபகம் வைத்து, பைபிளை படிக்க ஆரம்பித்தோம்” என்றார்கள். பிற்பாடு அந்த இரு வாலிபர்களும் யெகோவாவிற்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.

இனப்பிரிவுகளுக்கு இடையே நிலவிய சச்சரவுகள், நாட்டில் தொடர்ந்து நீடித்த இன்னொரு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. அநேகர் கஸாயிலிருந்து தெற்கே கடங்காவிற்கு வந்திருந்தார்கள். 1992-லும் 1993-லும் அவர்களை கடங்கா மக்கள் அங்கிருந்து வெளியேற்றினார்கள். கஸாயைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தங்கள் வேலைகளையும் உடைமைகளையும் வீடுகளையும் இழக்க வேண்டியிருந்தது. அவர்கள் உயிருக்கு பயந்து முகாம்களுக்கும் வேறு இடங்களுக்கும் தப்பியோடினார்கள்; அங்கே ஒன்றுசேர்ந்து வசிப்பது பாதுகாப்பாக இருக்குமென்று நினைத்தார்கள். 1,00,000-⁠க்கும் அதிகமானவர்கள் சொந்த ஊரான கஸாயிற்கு திரும்பினார்கள். அவர்களில் சுமார் 4,000 பேர் யெகோவாவின் சாட்சிகள். அருகில் வசித்த சகோதரர்கள் வசதியில்லாதவர்கள்; அங்கு உணவு தட்டுப்பாடு வேறு இருந்தது; அப்படியிருந்தும், அவர்கள் தங்களால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்தார்கள். கடங்காவிற்கு வடக்கே சென்ற முக்கிய பாதையில் அமைந்திருந்த ஒரு சபையை சேர்ந்த சகோதரர்கள், அங்கு வந்துசேர்ந்த ஒவ்வொரு லாரியிலும் சாட்சிகள் யாரேனும் இருக்கிறார்களா என தேடிப் பார்த்தார்கள். அவர்களை கண்டுபிடித்தபோது, நன்கு கவனித்துக் கொண்டார்கள்.

வீடுவாசலை இழந்து முகாம்களில் காத்திருந்த சகோதரர்களுக்கு லாரி லாரியாக உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகம் அனுப்பி வைத்தது. இந்த நிவாரணப் பணி பலருடைய உயிரைக் காப்பாற்றியது. அதோடு, சகோதரர்கள் குடும்பமாக கஸாயிற்கு மறுபடியும் சென்று தங்கள் வயல்களில் விவசாயம் செய்யும்படியும் அதற்காக உணவு, மருந்து, மண்வெட்டி, மண்வாரி போன்றவற்றை வாங்கும்படியும் கின்ஷாசாவில் இருந்த சகோதரர்களுக்கு ஆளும் குழு அறிவுரை வழங்கியது.

பிற மாற்றங்கள்

ஏப்ரல் 24, 1990 அன்று குடியரசுத் தலைவர் செய்தியாளர்களோடு நடத்திய கூட்டத்தில் உரையாற்றினார்; அதில், யெகோவாவின் சாட்சிகளைக் குறித்த அதிகாரிகளின் மனப்பான்மை குறிப்பிடத்தக்க விதத்தில் மாறும் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தினார். தேசிய மற்றும் அயல்நாட்டு பத்திரிகையாளர்களுடன் நடத்திய அந்தக் கூட்டத்தில், எழுத்துரிமை, மத உரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் அரசாங்கம் ஆதரிக்கும் என்று குடியரசுத் தலைவர் உறுதியளித்தார். இதனால் சகோதரர்கள் வெளியரங்கமாக பிரசங்கிக்கவும் ஒன்றுகூடி கூட்டம் நடத்தவும் முடிந்தது. சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

இனி காங்கோவில் யெகோவாவின் சாட்சிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடுவார்கள் என 1986-⁠ல் ஒரு வானொலி அறிவிப்பாளர் உறுதியோடு சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அவரது வார்த்தைகள் பொய்யாகிவிட்டன. 1986-⁠ல் தடை போடப்பட்டபோது காங்கோவில் 34,207 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். 1990 ஊழிய ஆண்டின் முடிவிற்குள், அந்த எண்ணிக்கை 50,677-ஆக உயர்ந்தது; அதோடு, 1,56,590 பேர் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தார்கள். எதிர்ப்பு, அவதூறு, துன்புறுத்தல், மத மற்றும் அரசியல் தலைவர்களின் உக்கிரம் ஆகியவற்றின் மத்தியிலும் ஆப்பிரிக்க சோள மூட்டையில் இருந்த மணிகள் பெருகின. 1997-⁠ல் குடியரசுத் தலைவர் மோபூட்டுவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது, யெகோவாவின் சாட்சிகள் அல்ல, ஆனால் அந்த வானொலி அறிவிப்பாளரே நாட்டைவிட்டு தப்பியோட வேண்டியிருந்தது.

மறுபடியும் சுதந்திரம்

1986-⁠ல் குடியரசுத் தலைவர் வழங்கிய தீர்ப்பாணையின்படி யெகோவாவின் சாட்சிகளுடைய எல்லா நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டன; அவர்களது சட்டப்பூர்வ நிறுவனமும் அந்நாட்டில் கலைக்கப்பட்டது. இருந்தாலும் ஜனவரி 8, 1993-⁠ல், ஜயர் (காங்கோ) உச்சநீதிமன்றம், யெகோவாவின் சாட்சிகள் Vs. ஜயர் குடியரசு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. குடியரசுத் தலைவரின் தீர்ப்பாணை நியாயமற்றது என்று சொல்லி நீதிமன்றம் அதை ரத்து செய்தது. இது சகோதரர்களுக்கு எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி தந்தது!

அந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியது; ஏனென்றால் குடியரசுத் தலைவரும் அவரை ஆதரித்தவர்களும் ஏற்றுக்கொள்ளாத ஒரு புதிய, இடைக்கால அரசியலமைப்பின் அடிப்படையில் அத்தீர்ப்பு வழங்கப்பட்டது. அது எதிர்கால தீர்ப்புகளுக்கும் ஒரு முன்னோடியாய் அமைந்துவிடுமென மற்றவர்கள் நினைத்தார்கள். அந்த சர்ச்சையில் இரு தரப்பினருக்கும் இடையில் யெகோவாவின் சாட்சிகள் மாட்டிக்கொண்டார்கள், ஆனால் யெகோவாவின் பெயருக்கு மகிமை உண்டாகும் விதத்தில் எப்பேர்ப்பட்ட சாட்சியாக அது அமைந்தது! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு சம்பந்தமாக அநேக செய்தித்தாள்கள் கட்டுரைகளை வெளியிட்டன. அதன்பின், மத நடவடிக்கைகளில் ஈடுபட யெகோவாவின் சாட்சிகளுக்கு மறுபடியும் சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படுவதாக பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்களிடம் நீதித்துறை தெரிவித்தது. யெகோவாவின் மக்களுக்கும் உண்மை வணக்கத்திற்கும் எப்பேர்ப்பட்ட வெற்றி!

காங்கோவின் பல்வேறு பகுதிகளுக்கு பிரசுரங்களை அனுப்பும் சவால்கள்

காங்கோ மிகப் பரந்த நாடு. இருந்தாலும், பாஸ்-காங்கோவின் ஒரு சிறிய கரையோரப் பகுதியைத் தவிர மற்றபடி அந்நாடு நாலாபக்கமும் நிலத்தால் சூழப்பட்டிருக்கிறது. பெருவாரியாக அனுப்பப்படும் சரக்குகள் பெரும்பாலும் மடடி துறைமுகத்திற்கு வந்திறங்குகின்றன. மடடிக்கும் தலைநகருக்கும் இடையே சுமார் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு ரயில்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது, ஒரு சாலையும் போடப்பட்டிருக்கிறது.

ஐரோப்பாவிலுள்ள கிளை அலுவலகங்கள் காங்கோ கிளை அலுவலகத்திற்கு சில ஃபோர்-வீல்-டிரைவ் லாரிகளை அனுப்பி வைத்தன; பிரசுரங்களை வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்காகவும் கட்டுமான வேலைகளுக்காகவும் அவை சிறந்த விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 1999 முதற்கொண்டு, மடடியில் பெத்தேலுக்கு சொந்தமான ஒரு கிடங்கு இயங்கி வருகிறது. இது பெருமளவு உதவியாக இருந்திருக்கிறது; எப்படியென்றால் பிரசுரங்கள் நேரடியாக கப்பல்களிலிருந்து இறக்கப்பட்டு கிடங்கில் வைக்கப்படுகின்றன; பிறகு கிளை அலுவலகத்திலிருந்து ஒரு ட்ரக் வந்து அவற்றை கின்ஷாசாவிற்கு எடுத்துச் செல்கிறது.

1980-களில் கின்ஷாசாவிலிருந்து லுபும்பாஷிக்கு, அதாவது நாட்டின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு லாரிகளை அனுப்புவது சாத்தியமாக இருந்தது; கனங்காவிலும் முபுஜி-மாயிலும் இருந்த மிஷனரி இல்லங்களின் கிடங்குகளில் இடையிடையே அந்த லாரிகள் நிற்க வேண்டியிருந்தது. கின்ஷாசாவிலிருந்து லுபும்பாஷிக்கு பறந்து செல்ல ஜெட் விமானத்திற்கு சுமார் இரண்டு மணிநேரம் எடுத்தது, சரக்குகள் ஏற்றப்பட்ட லாரிக்கோ இரண்டு வாரங்கள் எடுத்தது! அதுவும் வருடங்கள் செல்லச் செல்ல சாலைகளின் நிலைமை படு மோசமானதால் அவற்றில் செல்லவே முடியவில்லை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்யக்கூடிய ஆறுகள் இருப்பது உண்மைதான்; என்றாலும், கின்ஷாசாவிலிருந்து நாட்டிற்குள்ளே செல்லும் படகுகள் நம்பத்தகுந்தவையாக இல்லை. இந்தப் பிரச்சினைகள் போதாதென்று, சில பகுதிகளில் அரசியல் கலவரம் நீடிக்கிறது. இதனால் கின்ஷாசாவின் சுற்றுப்புற பகுதிகளுக்குள் ஓரளவுதான் பெத்தேல் வாகனங்களால் செல்ல முடிகிறது. கிளை அலுவலகத்திலிருந்து தொலைதூர இடங்களுக்கு பிரசுரங்களை அனுப்புவதற்கான சிறந்த வழி விமானம்தான்.

சகோதரர்களுக்கு பிரசுரங்களை அனுப்புவதில் மற்ற கிளை அலுவலகங்கள் ஒத்துழைப்பு தந்திருக்கின்றன. கேமரூன் கிளை அலுவலகமானது, மத்திய ஆப்பிரிக்க குடியரசு வழியாக வட காங்கோவிற்கு பிரசுரங்களை லாரியில் அனுப்பி வைக்கிறது. ருவாண்டா மற்றும் கென்யா கிளை அலுவலகங்கள் நாட்டின் கிழக்குப் பகுதிகளுக்கு பிரசுரங்களை வழங்குகின்றன. தெற்கேயுள்ள சில சபைகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்தும் ஜாம்பியாவிலிருந்தும் பிரசுரங்களைப் பெறுகின்றன.

ஊழியப் பயிற்சிப் பள்ளி—⁠சபைகளுக்கு ஓர் ஆசீர்வாதம்

1995-⁠ல் ஊழியப் பயிற்சிப் பள்ளியின் முதல் வகுப்பு கின்ஷாசாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏப்ரல் 2003-⁠க்குள், 400-⁠க்கும் மேற்பட்ட சகோதரர்கள் 16 வகுப்புகளில் பயிற்றுவிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஐந்து பேர் மாவட்டக் கண்காணிகளாக பணியாற்றுகிறார்கள், 60-⁠க்கும் அதிகமானவர்கள் வட்டாரக் கண்காணிகளாக சேவிக்கிறார்கள். மேலும் 50 பேர் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சகோதரர்கள், பிரசங்க ஊழியத்தில் மற்றவர்களின் ஆர்வத்தைத் தூண்டிவிடுவதில் சிறந்த பங்காற்றுகிறார்கள்.

சிலருக்கு இந்தப் பள்ளியில் கலந்துகொள்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஷார்ஷ் மூடாம்பா என்ற சகோதரர், பள்ளியில் கலந்துகொள்ளும்படி அழைப்பைப் பெற்றபோது, அரசாங்க எதிரி படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியில் வசித்து வந்தார். அவர் 400 கிலோமீட்டர் தூரத்திலிருந்த கமினாவிற்கு சைக்கிளில் போக வேண்டியிருந்தது; அங்கிருந்து, பள்ளி நடக்கவிருந்த கின்ஷாசாவிற்கு விமானத்தில் செல்ல வேண்டியிருந்தது. மூன்று நாட்கள் மழையில் அவர் பயணிக்க வேண்டியிருந்தது, அதோடு 16 ராணுவ சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. குற்றச்செயல் பெருகியிருந்த பகுதி வழியாகவும் அவர் செல்ல வேண்டியிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில், கொள்ளைக்காரர்கள் இவரை சைக்கிளில் துரத்த ஆரம்பித்தார்கள். திடீரென்று அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவனின் சைக்கிள் டயர் வெடிக்கவே, அவர்கள் அனைவரும் நின்றுவிட்டார்கள். ஷார்ஷின் தோற்றத்தைப் பார்த்தே அவர் ஒரு சாட்சி என அந்தக் கொள்ளைக் கூட்டத்தார் புரிந்திருக்க வேண்டும். ஆகவே, அவரது கடவுள் யெகோவா அவரோடு இருப்பது தங்களுக்கு தெளிவாக தெரிவதால் இனியும் அவரை துரத்தப் போவதில்லை என உரக்க சொன்னார்கள்.

தேவராஜ்ய அதிகரிப்பிற்கு ஏற்ற கட்டட வசதிகள்

1965 முதற்கொண்டு கிளை அலுவலகம் 764 அவென்யூ டெசேலேஃபான், லிமெடெ, கின்ஷாசா என்ற விலாசத்தில் இயங்கி வந்தது. 1991-⁠ல் நகரின் தொழிற்சாலைப் பகுதியில் ஒரு நிலம் வாங்கப்பட்டது. அந்நிலத்திலிருந்த மூன்று பெரிய கட்டடங்களில் முன்பு ஒரு துணிக் கம்பெனி இருந்தது; பிற்பாடு அங்கு ரிப்பேர் கடைகள் இருந்தன. ஒரே இடத்திலிருந்து கிளை அலுவலக வேலைகளை செய்வதற்காக அந்தக் கட்டடங்களை சகோதரர்கள் புதுப்பித்தார்கள். பாதுகாப்பும் ஸ்திரமும் இல்லாத அரசியல் நிலவரத்தின் காரணமாக அவ்வேலை தாமதமானது என்றாலும், 1993-⁠ல் சர்வதேச ஊழியர்கள் வந்ததும் புதிய கிளை அலுவலக கட்டடப் பணி ஆரம்பமானது. ஏப்ரல் 1996-⁠ல் கிளை அலுவலக உறுப்பினர்கள் அவென்யூ டெசேலேஃபானிலிருந்து இந்தப் புதிய கட்டடங்களில் குடிபுகுந்தார்கள். அதன் பிறகு ஒரு பெத்தேல் மூப்பர் இவ்வாறு குறிப்பிட்டார்: “பெத்தேல் குடும்பத்தார் அனைவரும் மறுபடியுமாக ஒன்றுசேர்ந்திருப்பதைப் பார்ப்பது, பத்து வருடங்களுக்கு முன்பு ஊழியம் தடை செய்யப்பட்ட காலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. இந்த அருமையான கட்டடங்களுக்காக யெகோவா தேவனுக்கும் அவரது காணக்கூடிய அமைப்பிற்கும் மனமார்ந்த நன்றி சொல்கிறோம்.” அக்டோபர் 1996-⁠ல் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 1,00,000 என்ற புதிய உச்சநிலையை எட்டியது. மேலுமான அதிகரிப்பு ஏற்படவிருந்ததை எண்ணி சகோதரர்கள் பூரிப்படைந்தார்கள்.

கைகொடுக்க மிஷனரிகள் வருகிறார்கள்

1990-களில் மிஷனரிகளை மறுபடியும் நாட்டிற்கு வரவழைப்பது சாத்தியமானது; எப்படியோ தடையுத்தரவு காலம் முழுவதும் அங்கு தங்கிவிட்ட ஏழு மிஷனரிகளோடு அவர்கள் சேர்ந்துகொண்டார்கள். ஜூலை 1995-⁠ல், செனிகலில் ஊழியம் செய்துவந்த சேபாஸ்டியன் ஜான்சனும் அவரது மனைவி கிசெலாவும் காங்கோவிற்கு நியமிக்கப்பட்டார்கள். சீக்கிரத்தில் மற்ற மிஷனரிகளும் வந்தார்கள். சிலர் கிலியட் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு ஐக்கிய மாகாணங்களிலிருந்து வந்தார்கள்; மற்றவர்கள் பெல்ஜியம், பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகளிலிருந்து வந்தார்கள். மார்ச் 1998-⁠ல், க்ரிஸ்டியன் மற்றும் ஜூலியட் பேலோட்டி தம்பதியினர் பிரெஞ்சு கயானாவிலிருந்து வந்தார்கள். ஜனவரி 1999-⁠ல், பீட்டர் வில்ஹெல்மும் அவரது மனைவி ஆனா-லிஸெயும் செனிகலிலிருந்து இங்கு அனுப்பப்பட்டார்கள். பிற்பாடு, கேமரூன், செனிகல், மாலி ஆகிய இடங்களிலிருந்து கூடுதலான மிஷனரிகள் காங்கோவிற்கு வந்தார்கள்.

டிசம்பர் 1999-⁠ல் கின்ஷாசாவின் குடியிருப்புப் பகுதியில் ஒரு புதிய மிஷனரி இல்லம் திறக்கப்பட்டது. பன்னிரண்டு மிஷனரிகள் இந்த இல்லத்தில் வசிக்கிறார்கள். லுபும்பாஷியில் 1965 முதற்கொண்டு ஒரு மிஷனரி இல்லம் தொடர்ந்து இயங்கி வருகிறது. இரண்டாவது இல்லம் அங்கே 2003-⁠ல் திறக்கப்பட்டது. தற்போது நான்கு தம்பதிகள் அந்த இல்லத்தில் சேவித்து வருகிறார்கள். மே 2002-⁠ன்போது நாட்டின் கிழக்கே கோமாவில் ஒரு புதிய மிஷனரி இல்லம் திறக்கப்பட்டது; அங்கே நான்கு மிஷனரிகள் நியமிக்கப்பட்டார்கள். இந்தப் பரந்த, வளமிக்க பிராந்தியத்தில் மிஷனரிகள் தொடர்ந்து மற்றவர்களுக்கு பிரயோஜனமாக இருந்து வருகிறார்கள்.

போரின்போது கிறிஸ்தவ நடுநிலைமை

மிஷனரிகளில் பெரும்பாலானவர்கள், நாட்டில் கலவரமும் மாற்றமும் நிகழ்ந்த காலத்தில் வந்தார்கள். அக்டோபர் 1996-⁠ல் நாட்டின் கிழக்குப் பகுதியில் போர் மூண்டு, வேகமாக மற்ற பகுதிகளுக்குப் பரவியது. குடியரசுத் தலைவர் மோபூட்டுவின் ஆட்சியைக் கவிழ்ப்பதே அந்தப் போரின் நோக்கமாக இருந்தது. மே 17, 1997-⁠ல், லாரன்-டேசிரே காபிலாவின் படைகள் கின்ஷாசாவிற்குள் புகுந்தன; அவர் குடியரசுத் தலைவரானார்.

உலகெங்கும் இருந்த டிவி நேயர்கள், பசியாலும் வியாதியாலும் வாடி வதங்கிய அகதிகளின் கோரக் காட்சிகளை பார்த்த சமயத்தில், யெகோவாவின் மக்கள் நம்பிக்கையும் ஆறுதலும் அடங்கிய பைபிள் செய்தியை தொடர்ந்து அறிவித்தார்கள். வருத்தகரமாக, சுமார் 50 சாட்சிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் போரில் இறந்தார்கள். அப்போரின் விளைவாக பரவிய காலராவும் மற்ற வியாதிகளும் அநேகரின் உயிரை காவுகொண்டன.

போரின் காரணமாக பெரும்பாலான மக்களிடம் அடையாள அட்டைகள் இல்லை. ஊழியத்திற்காக பிரயாணம் செய்யும் சகோதரர்களுக்கு இது பிரச்சினையாக இருக்கிறது. சாலைகளில் அநேக ராணுவ சோதனைச் சாவடிகள் இருக்கின்றன. ஒருமுறை, ஒரு சபையைச் சேர்ந்த பிரஸ்தாபிகளிடம் அடையாள அட்டைகள் இல்லாததால் சகோதரர்கள் தங்கள் மருத்துவ முன்கோரிக்கை/விடுப்பு அட்டைகளை காட்டும்படி மூப்பர் ஆலோசனை கொடுத்தார்; அவர்களும் அப்படியே செய்தார்கள். ஒரு சோதனைச் சாவடியில், “நாங்கள் இதைக் கேட்கவில்லை, ஒவ்வொரு குடிமகனும் வைத்திருக்க வேண்டிய தேசிய அடையாள அட்டையைக் கேட்கிறோம்!” என சிப்பாய்கள் சொன்னார்கள்.

“எங்களை யெகோவாவின் சாட்சிகளாக அடையாளம் காட்டும் அட்டை இதுதான்” என்று சகோதரர்கள் பதிலளித்தார்கள். சிப்பாய்கள் அவர்களை அனுப்பிவிட்டார்கள்.

கிஸங்கனியில், அரசாங்க படைகளுக்காக போரிட்ட அயல்நாட்டு கூலிப்படை வீரர்கள் நான்கு இளம் சகோதரர்களை சிறையில் அடைத்தார்கள். எதிரிகளுக்கு தகவல் அளித்ததாக அந்தச் சகோதரர்கள்மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த கூலிப்படை வீரர்கள் பத்து கைதிகளை தேர்ந்தெடுத்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று, அவர்களை கொலை செய்தார்கள். ஒரு நாள் காலையில் எட்டு கைதிகளோடு இரண்டு சகோதரர்களையும் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு காட்டுக்கு புறப்பட்டார்கள். வழியில் ஒரு பிணம் ரோட்டில் கிடந்ததால் லாரி நின்றது. பிணத்தை புதைக்கும்படி வீரர்கள் அந்த இரண்டு சகோதரர்களிடம் சொன்னார்கள். பிறகு லாரி அங்கிருந்து சென்றுவிட்டது. சகோதரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடித்துவிட்டு, போன லாரி திரும்பி வருவதற்காக காத்திருந்தார்கள். அங்கிருந்து தப்பிச் சென்றுவிட அது நல்ல வாய்ப்பாக இருந்தபோதும் அவர்கள் அப்படி செய்யவில்லை; ஏனென்றால் சிறையில் இருந்த மற்ற இரண்டு சகோதரர்களின் உயிரை ஆபத்திற்குள்ளாக்க அவர்கள் விரும்பவில்லை. லாரி திரும்பியது; கைதிகள் ஒருவரும் அதில் இல்லை; அவர்கள் எட்டு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்கள். அந்த இரண்டு சகோதரர்கள் உயிரோடு திரும்பி வந்ததைப் பார்த்து சிறைச்சாலையில் இருந்த அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டார்கள். அதன் பிறகு கொஞ்ச காலத்தில், எதிரி படைகள் நகரை கைப்பற்றியபோது சிறைச்சாலைக் கதவு குண்டுவெடிப்பில் தகர்ந்தது. கூலிப்படை வீரர்கள் தப்பியோடிவிட்டார்கள், சகோதரர்களோ விடுதலையானார்கள்.

கடின காலங்களில் ஐரோப்பிய கிளை அலுவலகங்கள் உதவுகின்றன

1996 முதற்கொண்டு காங்கோவின் பெரும்பாலான பகுதிகளில் போர் நடந்திருக்கிறது; திரளான ஜனங்கள் தங்கள் வீடுவாசலை விட்டு செல்ல வேண்டியிருந்திருக்கிறது. காங்கோவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சகோதரர்கள் டான்ஜானியாவிலும் ஜாம்பியாவிலும் இருந்த அகதிகள் முகாம்களுக்கு தப்பியோடினார்கள். எதிரி படைகள் அதிகமதிகமான பகுதிகளை ஆக்கிரமித்தபோது, அப்பகுதிகளில் இருந்த சகோதரர்களோடு தொடர்புகொள்வதும் அவர்களை கவனிப்பதும் கிளை அலுவலகத்திற்கு மேலும் கடினமானது. பொருளாதார உதவி அளிப்பதற்காக முக்கிய நகரங்களில் நிவாரண குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. பெத்தேல் குடும்பத்தினர் மனப்பூர்வமாகவும் சுயதியாக மனப்பான்மையோடும் ராத்திரி வெகு நேரம் வரை நிவாரண பொருட்களை விநியோகிப்பதில் உதவி செய்தார்கள். பெல்ஜியம், பிரான்சு, சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் டன் கணக்கில் உணவு, உடை, மருந்து ஆகியவற்றையும் 18,500 ஜோடி ஷூ, 1,000 கம்பளங்கள் ஆகியவற்றையும் விமானத்தில் காங்கோவிற்கு அனுப்பி வைத்தார்கள். நிவாரணப் பணி தொடர்கிறது. துயர் பெருமளவில் துடைக்கப்படுகிறது. யெகோவாவின் சாட்சிகளும் மற்றவர்களும் பயனடைகிறார்கள்.

அக்டோபர் 1998-⁠ல் கின்ஷாசா செய்தித்தாளில் ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. அது இவ்வாறு குறிப்பிட்டது: “பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளது கிறிஸ்தவ சபைகள், காங்கோ-கின்ஷாசாவிற்கும் காங்கோ-⁠ப்ரஜாவில்லுக்கும் அனுப்புவதற்காக 400-⁠க்கும் அதிகமான டன் நிவாரணப் பொருட்களை ஒன்றுதிரட்டின. இங்கிலாந்து, பிரான்சு, சுவிட்சர்லாந்து ஆகிய இடங்களை சேர்ந்த வாலண்டியர்களின் ஒத்துழைப்பினால், 37 டன் அரிசி, பால் பவுடர், பீன்ஸ், விட்டமின் பிஸ்கட்டுகள் ஆகியவை ஏற்கெனவே கின்ஷாசாவிற்கு அனுப்பப்பட்டுவிட்டன. பெல்ஜியம், ஆஸ்டென்ட்டிலிருந்து விமானத்தில் அனுப்பப்பட்ட அவை, கின்ஷாசாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தேசிய தலைமையகத்திற்கு வந்துசேர்ந்தன. இன்னொரு விமானம் . . . 38 டன் உணவுப் பொருட்களுடன் . . . வரப்போகிறது.

“ருவாண்டாவில் இனப்படுகொலை நடந்த சமயம் முதற்கொண்டே, கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள அகதிகளைக் காப்பாற்ற யெகோவாவின் சாட்சிகள் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. . . . நன்கொடையாக வந்த 200-⁠க்கும் அதிகமான டன் உணவுப் பொருட்களும் மருந்துகளும் காலரா கொள்ளைநோயை சமாளிக்க உதவியதாக யெகோவாவின் சாட்சிகளுடைய சார்புப்பேச்சாளர் அறிவித்தார். அச்சமயத்தில், பிரான்சையும் பெல்ஜியத்தையும் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள், முகாம்களிலிருந்த அகதிகளுக்கு உதவுவதற்காக பல குழுக்களை ஏற்பாடு செய்தார்கள். கிழக்கு ஐரோப்பாவிலும் போஸ்னியாவிலும் உள்ள வறியவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் தந்திருக்கும் நன்கொடைகளைப் பற்றியும் அந்த சார்புப்பேச்சாளர் குறிப்பிட்டார்.”

ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு போர் தடையாக இல்லை

செப்டம்பர் 1998-⁠ல், கின்ஷாசாவின் புறநகர்ப் பகுதியாகிய இன்ஜிலியை கலகக்காரர்கள் தாக்கினார்கள். அந்தக் கலவரத்தின் போது சில சகோதரர்கள், வட்டாரக் கண்காணி தங்கியிருந்த ஒரு வீட்டிற்குள் தஞ்சம் புகுந்தார்கள். வட்டாரக் கண்காணி அவர்கள் அனைவரின் சார்பாகவும் ஜெபம் செய்துவிட்டு ஏசாயா 28:16-ஐ வாசித்தார். ‘விசுவாசிக்கிற யாரும் பதற மாட்டார்கள்’ என்று அந்த வசனம் சொல்கிறது. ஆகவே பதற்றப்படாமல் அமைதியாக இருந்து வழிகாட்டுதலுக்காக யெகோவாவை சார்ந்திருக்குமாறு அவர் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

மேம்பாலம் வழியாக இன்ஜிலியிலிருந்து வெளியேறலாம் என்று சிலர் யோசனை கூறினார்கள், மற்றவர்களோ ரயில்பாதை வழியாக செல்லலாம் என்றார்கள். ஆனால் கடைசியில், அங்கேயே தங்கிவிட சகோதரர்கள் முடிவு செய்தார்கள். மூன்று நாட்களுக்குப் பிறகு அரசாங்க படைகள் மறுபடியும் அப்பகுதியை கைப்பற்றின. முன்பு நினைத்தபடி சகோதரர்கள் எந்த வழியாக வெளியேற முயன்றிருந்தாலும் கலவரத்தில் மாட்டியிருப்பார்கள் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

கடங்காவிலுள்ள மூசெக்கா கிபூஸி சபையைச் சேர்ந்த ஒரு சகோதரர் சில போர்வீரர்களிடம் மீன்களை விற்றுக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு போர்வீரர் அவரை எதிர்க்கட்சி உளவாளி என குற்றம்சாட்டினார். பிறகு அந்த வீரர்கள் சகோதரரை கட்டிப்போட்டு, அடியோ அடியென்று அடித்து, அப்பகுதியிலிருந்த ராணுவ தலைமையகத்திற்கு இழுத்துச் சென்றார்கள். அங்கு சேர்ந்தபோது ராத்திரி ஆகிவிட்டது. தங்களுக்கு முன்பாக டான்ஸ் ஆடும்படி அவரை அந்த போர்வீரர்கள் அதட்டினார்கள். “இந்த இருட்டு நேரத்தில் எப்படி என் டான்ஸைப் பார்த்து ரசிப்பீர்கள்?” என்று சகோதரர் கேட்டார்.

“சரி, ஒரு பாட்டு பாடு” என்றார்கள். “யெகோவாவின் மேல் உன் பாரத்தை வைத்துவிடு” என்ற பாடலை சகோதரர் முழு இருதயத்தோடு பாடினார். அந்தப் பாடல் வரிகளால் மனம் நெகிழ்ந்துபோன போர்வீரர்கள் மறுபடியும் அப்பாட்டைப் பாடுமாறு கேட்டார்கள். சகோதரர் இன்னொரு முறை அப்பாடலைப் பாடினார். வேறொரு பாடலைப் பாடுமாறு ஒரு போர்வீரன் கேட்டான். இம்முறை, “யெகோவாவே, உமக்கு நன்றி” என்ற பாடலை தன் தாய் பாஷையாகிய கிலூபாவில் சகோதரர் பாடினார். அவர் பாடி முடித்ததும் வீரர்கள் அவரை கட்டவிழ்த்துவிட்டார்கள். அடுத்த நாள் காலை அவரை மறுபடியும் நகருக்கு அழைத்துச் சென்று, அவரது அக்கம்பக்கத்தாரிடம் விசாரித்து, அவர் உளவாளி இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்கள். பிறகு, “நீ எங்கள் கையில் செத்திருப்பாய், ஆனால் உன் மதம் உன் உயிரைக் காப்பாற்றிவிட்டது! நீ பாடிய அந்த இரண்டு பாட்டுகளும் எங்கள் மனதை ரொம்பவும் தொட்டுவிட்டன. உன் கடவுளுக்கு சேவை செய்வதை விட்டுவிடாதே!” என்று சொல்லி விடைபெற்றார்கள்.

ராஜ்ய மன்ற கட்டுமானம் யெகோவாவிற்கு துதி சேர்க்கிறது

சமீப ஆண்டுகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு, வசதியில்லாத சகோதரர்கள் வசிக்கும் இடங்களில் ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதில் உதவி புரிய விசேஷ முயற்சி எடுத்திருக்கிறது. காங்கோவை சேர்ந்த சகோதரர்கள் இந்த ஏற்பாட்டை வரவேற்றார்கள், ஏனென்றால் அங்கு ராஜ்ய மன்றங்கள் மிக அவசரமாக தேவைப்பட்டன. உதாரணத்திற்கு, கின்ஷாசாவில் 298 சபைகள் இருந்தபோதிலும் உருப்படியான மன்றங்கள் 20 கூட இருக்கவில்லை. நாடெங்கும் நூற்றுக்கணக்கான மன்றங்கள் தேவைப்பட்டன. ஏப்ரல் 1999-⁠ல் ராஜ்ய மன்ற கட்டுமான வேலைகள் கின்ஷாசாவில் துவங்கின. பிற்பாடு காங்கோவின் மற்ற மாநிலங்களிலும் அவை ஆரம்பமாயின. 2003-⁠ன் ஆரம்பத்திற்குள் இரண்டு காங்கோவிலும் சுமார் 175 ராஜ்ய மன்றங்கள் கட்டி முடிக்கப்பட்டிருந்தன.

1950-⁠ம் ஆண்டு முதற்கொண்டே சத்தியத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்த ஒரு நபர், தன் வீட்டிற்கு எதிரே ஒரு ராஜ்ய மன்றம் கட்டப்பட்டதைப் பார்த்து நெகிழ்ந்துபோனார். “நான் சாட்சிகளுடைய வேலையில் ஆர்வம் காட்டியதே இல்லை. இப்போதோ அவர்களுடைய முயற்சிகளின் பலனைப் பார்க்கிறேன். என் தம்பியுடைய வீட்டிற்குப் பக்கத்தில் அவர்கள் ஒரு ராஜ்ய மன்றம் கட்டினார்கள், இப்போது என் வீட்டிற்கு எதிராகவே ஒரு மன்றத்தைக் கட்டுகிறார்கள். நான் எங்கு சென்றாலும் சாட்சிகள் என்னை பின்தொடருவதாக தெரிகிறது!” என அவர் குறிப்பிட்டார். கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கும் இந்தப் புதிய ராஜ்ய மன்றத்தின் பிரதிஷ்டைக்கும் அவர் வந்திருந்தார். இப்போது தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

மாடெட்டெயில் இருந்த மூன்று சபைகள், பாழடைந்த ஒரு கட்டடத்தில் தங்கள் கூட்டங்களை நடத்தின; அந்தக் கட்டடம் 1994-⁠ல் வாங்கப்பட்டது. பழுதுபார்க்க சகோதரர்களிடம் பணமே இல்லாததால் அதே நிலைமையில் அது ஆறு வருடங்களுக்கு இருந்தது. அந்தக் கட்டடத்திற்கு எதிரே ஒரு பெரிய சர்ச் இருந்தது. அந்த சர்ச் கட்டப்பட்டபோது, யெகோவாவின் சாட்சிகள் சீக்கிரத்தில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடுவார்கள் என பாதிரி சொன்னார். அதோடு, சகோதரர்கள் கூடுவதற்கு ஒரு நல்ல இடம் இல்லாததைப் பார்த்து அக்கம்பக்கத்தவர்கள் பரிகாசம் செய்தார்கள். ஒரு புதிய ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்காக கட்டடப் பொருட்களை தயாரிக்க ஆரம்பித்த பிறகுகூட அக்கம்பக்கத்திலிருந்த சிலர் தொடர்ந்து கேலி கிண்டல் செய்தார்கள். ஆனால் மன்றம் கட்டி முடிக்கப்பட்டபோது அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்! இப்போது, அந்தப் பகுதியிலேயே சிறந்த கட்டடம் யெகோவாவின் சாட்சிகளுடையதுதான் என்று சொல்கிறார்கள். அங்கிருந்த ஒரு பெண்மணி சாட்சிகளோடு பேசக்கூட விரும்பியதே இல்லை; ஆனால் இப்போது சாட்சிகள் புரிந்த சாதனையைப் பார்த்து அசந்துபோனார். கட்டுமான இடத்திற்கு வந்தார், அடுத்த முறை சாட்சிகள் தன்னை சந்திக்கும்போது கண்டிப்பாக அவர்கள் சொல்வதைக் கேட்பதாகவும் கூறினார்.

வேறொரு ராஜ்ய மன்றம் கட்டப்பட்ட இடத்தில், வேலை செய்தவர்களுக்காக உணவு தயாரித்துக் கொண்டிருந்த ஒரு சகோதரியை ஒரு பெண் அணுகினார். “நீங்கள் ஒரு சர்ச்சை கட்டுகிறீர்களா?” என கேட்டார்.

“எங்களுடைய ராஜ்ய மன்றத்தைக் கட்டுகிறோம்” என சகோதரி பதிலளித்தார்.

“இந்தக் கட்டடம் உங்களைப் போலவே இருக்கும். நீங்கள் எப்போதுமே சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறீர்கள். உங்கள் சர்ச் உங்களைப் போலவே இருக்கும்!” என்றார்.

கிளை நிர்வாகத்தில் மாற்றங்கள்

பிராந்தியத்தின் தேவைகளை கவனிப்பதற்காக உள்ளூர் கிளைக் குழுவை மறுசீரமைப்பது தேவையாக இருந்தது. மே 1996-⁠ல் ஆளும் குழு சில மாற்றங்களை செய்தது. மே 20, 1996-⁠ல் சகோதரர் சேபாஸ்டியன் ஜான்சன் கிளைக் குழு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அவரும், இரண்டு மாதங்களுக்கு முன்னர் கிளைக் குழுவில் சேர்க்கப்பட்ட பீட்டர் லூட்விக்கும் சிறியளவிலான கிளைக் குழுவாக சேவித்து, ஊழியத்தை மேற்பார்வை செய்தனர். பின்வந்த வருடங்களில் டேவிட் நாவெஜ், க்ரிஸ்டியன் பேலோட்டி, பென்ஜமின் பான்டிவிலா, பீட்டர் வில்ஹெல்ம், ராபர்ட் எலாங்கா, டெல்ஃபன் காவூசா, யூனா நில்சான் ஆகியவர்களும் நியமிக்கப்பட்டார்கள். உடல்நிலை காரணமாக பீட்டர் லூட்விக்கும் அவரது மனைவி பேட்ராவும் ஜெர்மனிக்கு திரும்ப வேண்டியதாயிற்று; இப்போது அங்குள்ள கிளை அலுவலகத்தில் அவர்கள் சேவித்து வருகிறார்கள்.

பிராந்தியமெங்கும் தேவராஜ்ய வழிநடத்துதலை அளிக்க கிளைக் குழுவின் அங்கத்தினர்கள் கடினமாக உழைக்கிறார்கள். அதோடு, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய இடங்களிலிருந்து யெகோவாவின் ஊழியர்கள் காங்கோவிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்; சர்வதேச ஊழியர்களாகவும், அயல்நாட்டு பெத்தேல் ஊழியர்களாகவும், மிஷனரிகளாகவும் அவர்கள் சேவித்திருக்கிறார்கள். 2003 ஊழிய ஆண்டின்போது கின்ஷாசா பெத்தேல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 250-ஐத் தாண்டியது. அவர்களுடைய சராசரி வயது 34.

இன்னுமதிக வேலை இருக்கிறது

பூர்வ காலத்தைச் சேர்ந்த ஒரு தீர்க்கதரிசி இவ்வாறு எழுதினார்: “யெகோவாவில் நம்பிக்கை வைத்து, யெகோவாவையே தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷனோ பாக்கியவான்.” (எரே. 17:7, தி.மொ.) காங்கோவின் பல்வேறு பகுதிகளில் போர் தொடர்ந்து நடந்துவருகிற போதிலும், சகோதரர்கள் ராஜ்ய நற்செய்தியை மற்றவர்களுக்கு விடாமல் அறிவித்து வருகிறார்கள். உள்நாட்டுப் போரின் காரணமாக கிளை அலுவலகத்தால் நாடெங்கும் உள்ளவர்களுக்கு ஆவிக்குரிய உதவி அளிக்க முடியாமல் போனாலும், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 1,22,857 என்ற புதிய உச்சநிலையை எட்டியிருப்பது உற்சாகமளிக்கிறது.

காங்கோவைச் சேர்ந்த உண்மையுள்ள ஊழியர்களின் அனுபவங்களை இதுவரை விவரித்தோம். காங்கோவில் நற்செய்திக்காக போராடி அதை சட்டப்பூர்வமாக ஸ்தாபிப்பதில் பங்காற்றிய சகோதர சகோதரிகள் அனைவரின் பெயர்களையும் குறிப்பிடுவது சாத்தியமல்ல. இருந்தாலும், யெகோவாவின் ஆசீர்வாதம் அவர்கள் அனைவருக்கும் நிச்சயம் உண்டு. அப்போஸ்தலன் பவுல் உடன் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.”​—எபி. 6:⁠10.

செய்வதற்கு இன்னும் ஏராளம் ஏராளம் இருக்கிறது. புதிய பிராந்தியங்களில் பிரசங்கிக்க வேண்டியிருக்கிறது. ராஜ்ய மன்றங்களைக் கட்ட வேண்டியிருக்கிறது. கிளை அலுவலக கட்டடங்களை விஸ்தரிக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும், காங்கோவில் 50-⁠க்கும் அதிகமான ஆண்டுகளாக நடைபெற்ற தேவராஜ்ய காரியங்களைப் பற்றி சிந்தித்த பிறகு, 1952-⁠ல் ஒரு சகோதரர் சொன்னதை நாமும் ஒப்புக்கொள்கிறோம்: ‘நாங்கள் ஆப்பிரிக்க சோள மூட்டையில் உள்ள மணிகளைப் போன்றவர்கள். ஒவ்வொன்றாக எங்கு சிந்தப்பட்டாலும், இறுதியில் மழை வரும்போது முளைத்துப் பெருகுவோம்.’ நம் பரலோக தகப்பனாகிய யெகோவா தேவன் எந்தளவுக்கு ராஜ்ய விதையை முளைக்கச் செய்வார் என்பதை பார்க்க மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறோம்.​—1 கொ. 3:⁠6.

[அடிக்குறிப்புகள்]

a பல வருடங்களாக இந்நாடு பற்பல பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கிறது; காங்கோ சுதந்திர நாடு, பெல்ஜியன் காங்கோ, காங்கோ, ஜயர், மேலும் 1997 முதற்கொண்டு ஜனநாயக காங்கோ குடியரசு என்றெல்லாம் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகம் முழுவதிலும் காங்கோ என்ற பெயரே பயன்படுத்தப்படும்.

b ஆங்கில காவற்கோபுரம், மார்ச் 1, 1985, பக்கங்கள் 3-10-ஐக் காண்க.

c பறிமுதல் செய்யப்பட்ட நிலத்திற்கான உரிமையை உச்சநீதிமன்றம் ஒருவழியாக மறுபடியும் சகோதரர்களுக்கு வழங்கியது; அந்நிலத்தில்தான் 1980-களின் ஆரம்பத்தில் பெத்தேல் கட்டுமானப் பணி துவங்கியிருந்தது. ராணுவத்தினர் பிற்பாடு அதை ஆக்கிரமித்தார்கள். இருந்தாலும் அவர்கள் 2000-⁠ம் ஆண்டில் அங்கிருந்து ஒருவழியாக வெளியேறிய போது உள்ளூர் அதிகாரிகள் அந்நிலத்தை சிறிய துண்டுகளாக பிரித்து சட்டவிரோதமாக விற்பனை செய்தார்கள். இப்போது நூற்றுக்கணக்கானவர்கள் அத்துமீறி அங்கே குடியிருக்கிறார்கள். இப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.

[பக்கம் 229-ன் சிறு குறிப்பு]

“இனி [காங்கோவில்] யெகோவாவின் சாட்சிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடுவார்கள்”

[பக்கம் 249-ன் சிறு குறிப்பு]

“நீ எங்கள் கையில் செத்திருப்பாய், ஆனால் உன் மதம் உன் உயிரைக் காப்பாற்றிவிட்டது!”

[பக்கம் 168-ன் பெட்டி]

காங்கோ (கின்ஷாசா)​—⁠ஒரு கண்ணோட்டம்

நிலம்: பூமத்திய ரேகையின் இரு புறங்களிலும் அமைந்திருக்கும் ஜனநாயக காங்கோ குடியரசு, அண்டை நாடாகிய காங்கோவைவிட (ப்ரஜாவில்) ஆறு மடங்கு பெரிது. காங்கோவின் வடபகுதியை பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகள் போர்த்தியிருக்கின்றன. அக்காடுகள் மிக அடர்த்தியாக இருப்பதால் சூரிய ஒளி மண்ணை எட்டுவதே இல்லை. இந்நாட்டின் கிழக்குப் பகுதியில் மலைகளும் எரிமலைகளும் இருக்கின்றன. இதன் மேற்குப் பகுதி, அட்லாண்டிக் பெருங்கடலின் கரையோரமாக 37 கிலோமீட்டர் நீண்டிருக்கிறது.

மக்கள்: காங்கோவில் ஐந்தரை கோடி மக்கள் வசிக்கிறார்கள்; இவர்கள் 200-⁠க்கும் அதிகமான ஆப்பிரிக்க இனப்பிரிவுகளை சேர்ந்தவர்கள். இவர்களில் 50 சதவீதத்தினர் கத்தோலிக்கர்; 20 சதவீதத்தினர் புராட்டஸ்டன்ட்டினர்; 10 சதவீதத்தினர் கிம்பாங்குவினர்; 10 சதவீதத்தினர் இஸ்லாமியர்.

மொழி: அநேக மொழிகள் பேசப்படுகின்றன. ஆட்சிமொழி பிரெஞ்சு; என்றாலும் லிங்கால, கிங்வானா, ஸ்வாஹிலி, காங்கோ, டிஷிலூபா ஆகிய முக்கிய ஆப்பிரிக்க மொழிகளும் பேசப்படுகின்றன.

பிழைப்பு: காங்கோ இயற்கை வளங்கள் மிகுந்த நாடு. பெட்ரோலியம், வைரம், தங்கம், வெள்ளி, யுரேனியம் ஆகியவை ஏராளமாக கிடைக்கின்றன. ஆனால் சமீபத்திய உள்நாட்டுப் போரின் காரணமாக ஏற்றுமதி பெருமளவு குறைந்துவிட்டது, இதனால் வெளிநாட்டுக் கடன் அதிகரித்திருக்கிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்கள் ஒரு வகை மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், அரிசி போன்றவற்றை பயிர் செய்து சாப்பிடுகின்றனர்.

விலங்குகள்: கணக்குவழக்கில்லா வன விலங்குகள் வாழ்கின்றன. பபூன்களும், கொரில்லாக்களும், குரங்குகளும் காட்டுப் பகுதிகளில் ஏராளமாக வசிக்கின்றன. திறந்தவெளிப் பகுதிகளில் மான், சிறுத்தை, சிங்கம், காண்டாமிருகம், வரிக்குதிரை ஆகியவை காணப்படுகின்றன. ஆறுகளில் முதலைகளும் நீர்யானைகளும் வாழ்கின்றன.

[பக்கம் 173, 174-ன் பெட்டி/​படம்]

சத்தியத்தைத் தேடிக் கண்டுபிடித்தார்

ஆன்றி கானாமா என்பவர் ல்வேனாவில் இருக்கும் எவாஞ்சலிக்கல் சர்ச்சின் அங்கத்தினராக இருந்தார். ஆனால் அந்த மதத்தில் சத்தியம் இல்லை என்பதை உணர ஆரம்பித்தார். ஜெபம் செய்வதற்கும் தியானிப்பதற்கும் அடிக்கடி மலைகளுக்குச் சென்றார். அங்கே ஒரு தொகுதியினரை சந்தித்தார். பார்க்க முடியாத ஆவிகளோடு தாங்கள் தொடர்பு வைத்திருப்பதாக அந்தத் தொகுதியினர் சொன்னார்கள். மேலும், கடவுள் எங்கோ தொலைவில் இருப்பதாகவும் அது எந்த இடம் என தங்களுக்கு தெரியாது என்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

ஆன்றி உண்மைக் கடவுளை தேட ஆரம்பித்தார். ஒருநாள், இவரிடம் பிரெஞ்சு மொழியில் விழித்தெழு! பத்திரிகையை ஒருவர் கொடுத்தார். அதில் பைபிள் சத்தியம் இருந்ததை புரிந்துகொள்ள ஆன்றிக்கு வெகு காலம் எடுக்கவில்லை. அதைத்தானே அவர் தேடிக் கொண்டிருந்தார்! அந்தப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டிருந்த முகவரியில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எழுதினார். சில நாட்களிலேயே, தபால் மூலம் பைபிளை படித்து மகிழ ஆரம்பித்தார். இறுதியில் ஆன்றியும் அவரது மனைவி எலிசபெத்தும் அவர்களுக்கு பரிச்சயமான சிலரும், முழுக்காட்டுதல் பெற என்ன செய்ய வேண்டுமென கேட்டு எழுதினார்கள். அண்டை நாடுகளிலுள்ள கிளை அலுவலகங்களோடு தொடர்பு கொள்ளும்படி சொல்லி அவர்களுக்கு பதில் வந்தது. அந்த அலுவலகங்களில் பெரும்பாலானவை வெகு தூரத்தில் இருந்தன.

ஆன்றி, எலிசபெத், இப்பாலிட் பான்சா, அவரது மனைவி ஜூல்யென் ஆகியோர் வட ரோடீஷியா (தற்போது ஜாம்பியா) நாட்டிற்கு போக தீர்மானித்தார்கள். ஆக, சத்தியத்தைப் பற்றி இன்னுமதிகமாக தெரிந்துகொள்ள சிபெம்பா மொழியைக் கற்க வேண்டுமென்பது அவர்கள் அனைவருக்கும் புரிந்திருந்தது. செல்லும் செலவைக் கணக்கிட்டு பார்த்த பின் அவர்கள் அந்நாட்டிற்கு போனார்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு 1956-⁠ல் அவர்கள் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.

அதே வருடம் அவர்கள் மீண்டும் காங்கோவிற்குத் திரும்பினார்கள்; அங்கே நற்செய்தியை மற்றவர்களுக்கு வைராக்கியமாக அறிவித்தார்கள். 1961-⁠ல் ஆன்றியும் அவரது நண்பர்கள் சிலரும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். உள்ளூர் தலைவர் ஒருவரைக் கொல்ல திட்டம் தீட்டியிருந்த மற்றொரு தலைவரைக் கொன்ற கிட்டாவாலா பிரிவினர் என அவர்கள் குற்றம் சாட்டப்பட்டார்கள். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இருக்கவில்லை, ஆகவே பிற்பாடு அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஆன்றியும் எலிசபெத்தும் பயனியர் சேவை செய்யத் தொடங்கினார்கள். அதன் பிறகு விசேஷ பயனியர்களாக ஆனார்கள், பின்னர் வட்டார ஊழியம் செய்தார்கள். 1991-⁠ல் ஆன்றி இறந்துவிட்டார், ஆனாலும் எலிசபெத் இன்னமும் ஒழுங்கான பயனியர் சேவையை செய்து வருகிறார். அவர்களுடைய மகன்களில் ஒருவரான இலூகா வட்டார ஊழியம் செய்கிறார்.

[பக்கம் 178-ன் பெட்டி/​படங்கள்]

ஆல்பர் லூயினூ​—⁠விசுவாசமுள்ள சாட்சி

ஆல்பர் 1951-⁠ல் சத்தியத்தைப் பற்றி முதன்முதலாக கேட்டார். அவருடன் வேலை செய்த, காங்கோவை (ப்ரஜாவில்) சேர்ந்த சிமோன் மாம்பூயா என்பவரே சத்தியத்தைப் பற்றி அவரிடம் பேசினார். காங்கோ நாட்டவரில் முதன்முதலாக பல் டாக்டராகும் சிறப்பை பெற்றவர் ஆல்பர். அப்படிப்பட்ட உயர்ந்த சமூக அந்தஸ்தில் இருந்ததால், சத்தியத்தின் சார்பாக நிலைநிற்கை எடுப்பது அவருக்கு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. 1954-⁠ல் கர்த்தரின் நினைவு ஆசரிப்பிற்குப் பிறகு அவரும் அவரது மனைவியும் முழுக்காட்டுதல் பெற்றார்கள். அந்த சமயத்தில் சாட்சிகளின் வேலை தடை செய்யப்பட்டிருந்ததால் இரவு நேரத்தில் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.

1958 முதல் 1996 வரை யெகோவாவின் சாட்சிகளுடைய அசோசியேஷனின் சட்டப்பூர்வ பிரதிநிதியாக ஆல்பர் சேவித்தார்; அது சாட்சிகளுடைய சட்டப்பூர்வ நிறுவனம். 1,800 பேருக்கு முன்பாக சகோதரர் ஹாய்ஸ் அளித்த திருமணப் பேச்சை மொழிபெயர்த்த சந்தர்ப்பம் இன்னும் ஆல்பருக்கு நினைவிருக்கிறது. முதலில் கிறிஸ்தவ மனைவிமாரின் பொறுப்புகள் அப்பேச்சில் குறிப்பிடப்பட்டன. ‘ஆஹா, சகோதரிகளுக்குத் தேவையான ஆலோசனைதான்’ என்ற பாங்கில் ஆல்பர் தலை நிமிர்ந்து நின்றபடி தன் மனைவியையும் மற்ற சகோதரிகளையும் பார்த்தாராம். இருந்தாலும் கிறிஸ்தவ கணவன்மாரின் கடமைகளைப் பற்றி சொல்லப்பட்டபோது முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வது என்று தெரியவில்லையாம். பேச்சு முடிவதற்குள் கூனிக் குறுகாத குறைதானாம்!

[படங்கள்]

ஆல்பர் மற்றும் எமிலி லூயினூ

[பக்கம் 191-193-ன் பெட்டி/​படம்]

பான்ட்டியென் மூகாங்கா தரும் பேட்டி

பிறந்தது: 1929

முழுக்காட்டப்பட்டது: 1955

பின்னணிக் குறிப்பு: காங்கோவில் வட்டாரக் கண்காணியாக சேவித்த முதல் நபர்.

1955-⁠ல் நான் பல் வலி காரணமாக ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். பல் மருத்துவரான ஆல்பர் லூயினூ எனக்கு சிகிச்சை அளித்தார். பிறகு வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ எனக்குக் காட்டினார். வலியே இல்லாத காலம் வரப்போவதாக அங்கு சொல்லப்பட்டிருந்தது. நான் அவரிடம் என் விலாசத்தைக் கொடுத்துவிட்டு சென்றேன். அதே நாள் சாயங்காலம் அவர் என்னைத் தேடி வந்தார். ஆவிக்குரிய விஷயங்களில் நான் வேகமாக முன்னேற்றம் செய்து, அதே வருடத்தில் முழுக்காட்டுதல் பெற்றேன்.

1960-⁠ல் காங்கோ முழுவதற்கும் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். வட்டார ஊழியம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஏராளமான சரக்குகள் ஏற்றப்பட்ட லாரிகளில் நாட்கணக்காகவும் வாரக்கணக்காகவும்கூட நான் பயணம் செய்தேன்; அதுவும் சாலைகள் பயங்கர கரடுமுரடாக இருந்தன, வெயில் மண்டையை பிளந்தது. இரவில் கொசுக்கள் பிய்த்துப் பிடுங்கின. லாரிகள் அடிக்கடி மக்கர் செய்தன, ரிப்பேர் செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. வழிகாட்டும் பலகைகள் ஏதும் இல்லாத பாதைகளில் தனியாக நடந்து சென்றேன், சிலசமயங்களில் தொலைந்தும்போனேன்.

ஒருமுறை, காங்கோவின் வடக்குப் பகுதியிலிருந்த ஒரு பட்டணத்திற்கு சென்றேன். லேயோன் ஆங்சாப்பா என்ற சகோதரர் என்னோடு இருந்தார். 120-⁠க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரத்திலிருந்த இன்னொரு பட்டணத்திற்கு நாங்கள் சைக்கிளில் சென்றோம். வழி மாறி எங்கோ போய்விட்டதால் கோழிக் கூடத்தில் ஒரு இரவு தங்க வேண்டியிருந்தது. கோழிகள்மீது இருந்த பூச்சிகள் எல்லாம் எங்களைக் கடிக்க ஆரம்பித்துவிட்டன. எனவே கோழிக் கூடத்தின் சொந்தக்காரர், அந்தக் கூடத்தின் நடுவே கொஞ்சம் நெருப்பை மூட்டினார். அங்கு ஜன்னல்களே இல்லாததால் எங்கள் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அந்த இரவு, கோழிக் கூடத்தின் சொந்தக்காரருடைய மகனுக்கும் கிராமத்துக்காரர்களுக்கும் சண்டை வந்துவிட்டது. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அந்த சொந்தக்காரரும் சண்டையில் சேர்ந்துகொண்டார். அவர் மட்டும் தோற்றுவிட்டால் எங்கள் கதி அதோகதிதான் என்று நினைத்தோம். இவ்வாறு, பூச்சிக்கடி ஒரு பக்கமும், புகை மண்டலம் ஒரு பக்கமும், சண்டைக் களம் இன்னொரு பக்கமும் இருக்க எப்படித்தான் தூங்குவது? ராத்திரி முழுக்க கொட்ட கொட்ட விழித்திருந்தோம்.

விடிவதற்குள் எங்கள் சைக்கிள்களில் நைசாக அங்கிருந்து நழுவிவிட்டோம். ஆனால் கொஞ்ச தூரம் போனதும் மறுபடியுமாக வழி மாறி எங்கோ சென்றுவிட்டோம். ஆனாலும் எங்கும் நிற்காமல், ஆள் நடமாட்டமே இல்லாத வெறிச்சோடிய சாலையில் போய்க்கொண்டே இருந்தோம். சாயங்காலமான போது பசி மயக்கத்திலும் சோர்விலும் லேயோன் சைக்கிளிலிருந்து கீழே தவறி விழுந்துவிட்டார். அவரது முகம் ஒரு பாறையில் மோதியதில் அவரது மேல் உதடு கிழிந்தது. காயம் ஆழமாக இருந்ததால் இரத்தம் பயங்கரமாக கொட்டியது. ஆனாலும் மறுபடியும் சைக்கிளில் எப்படியோ ஒரு கிராமத்திற்குப் போய் சேர்ந்தோம். லேயோனைப் பார்த்ததும், யார் அவரை அடித்துக் காயப்படுத்தியது என்று அந்தக் கிராமத்துவாசிகள் கேட்டார்கள். அவர் சைக்கிளிலிருந்து விழுந்துவிட்டதை நாங்கள் விளக்கினோம். ஆனால் அவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை, நான்தான் அவரை அடித்துக் காயப்படுத்தியிருப்பேன் என்று சொன்னார்கள். அந்த இரவும் நாங்கள் தூங்கவில்லை; லேயோன் வலியில் துடித்துக்கொண்டிருந்தார், தண்டனையாக என்னை அடித்துக் காயப்படுத்த வேண்டுமென கிராமத்துவாசிகள் பேசிக்கொண்டார்கள். அடுத்த நாள் காலை அங்கிருந்து எப்படியோ நழுவி இன்னொரு கிராமத்திற்கு போய் சேர்ந்தோம். அங்கே கொஞ்சம் மருந்து கிடைத்தது. ஆன்ட்டிசெப்டிக் மருந்தை லேயோனின் உதடுகள் மீது தடவி, ஆறு க்ளாம்ப்புகள் போட்டு தைத்தார்கள். பிறகு இன்னொரு 80 கிலோமீட்டர் பயணம் செய்து கெமெனா என்ற பட்டணத்தை அடைந்தோம். அங்கே சிகிச்சைக்காக ஒரு சிறிய ஆஸ்பத்திரியில் லேயோனை ஒருவழியாக விட்டுவிட்டு நான் மட்டும் தனியாக பயணத்தைத் தொடர்ந்தேன். இறுதியில் என் மனைவி இருந்த இடத்தை சென்றடைந்தேன். பிறகு நாங்கள் இருவரும் நதியோரப் பகுதிகளில் ஊழியம் செய்தவாறே கின்ஷாசாவிற்கு வந்து சேர்ந்தோம்.

பான்ட்டியெனின் மனைவி மேரி இப்படிப்பட்ட பயணங்களில் பெரும்பாலும் அவரோடு சேர்ந்துகொண்டார். அவர் 1963-⁠ல் இறந்தார். 1966-⁠ல் பான்ட்டியென் மறுமணம் செய்தார். 1969 வரை வட்டார ஊழியம் செய்தார். இன்றும் அவர் ஒழுங்கான பயனியராக முழுநேர ஊழியம் செய்கிறார்.

[பக்கம் 195, 196-ன் பெட்டி/​படம்]

ஃபிரான்ஸ்வா டான்டா தரும் பேட்டி

பிறந்தது: 1935

முழுக்காட்டப்பட்டது: 1959

பின்னணிக் குறிப்புகள்: 1963 முதல் 1986 வரை பயணக் கண்காணி. 1986 முதல் 1996 வரை காங்கோ பெத்தேலின் அங்கத்தினர். இப்போது மூப்பராகவும் விசேஷ பயனியராகவும் இருக்கிறார்.

1974-⁠ல் பண்டுன்டு என்ற மாநிலத்தில், கெங்கெ நகரிலுள்ள ஒரு சபைக்கு விஜயம் செய்தேன். அங்கே, ஆளும் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் எங்களில் ஏழு பேரை கைது செய்தார்கள். அரசியல் விழாக்களில் கலந்துகொள்ள மறுப்பதன் மூலம் தேசத் தலைவரை அவமதிப்பதே நாங்கள் செய்த பெருங்குற்றம் என சொல்லப்பட்டது. ஜன்னல்கள் இல்லாத ஓர் இருட்டறையில் எங்களை அடைத்து வைத்தார்கள்; அந்த அறையின் நீளம் ஏழு அடி, அகலம் ஏழு அடி. ஒருவராலும் உட்காரவோ படுக்கவோ முடியவில்லை. ஒருவர்மேல் ஒருவர் சாயத்தான் முடிந்தது. ஒரு நாளில் இரு முறைதான் அந்த அறையை விட்டு வெளியே செல்ல அனுமதித்தார்கள். இப்படியே 45 நாட்கள் அந்த சிறையில் இருந்தோம். நடந்ததை என் மனைவி ஆன்ரியெட் கேள்விப்பட்டபோது, கின்ஷாசாவிலிருந்து 290 கிலோமீட்டர் தூரத்திலிருந்த என்னை பார்க்க வந்தாள். இருந்தாலும் வாரத்தில் ஒருமுறை மட்டுமே என்னை பார்க்க அவளை அனுமதித்தார்கள்.

ஒருநாள் அரசு வக்கீல் சிறைச்சாலைக்கு வந்திருந்தார். அவரை கௌரவிக்க ஒரு அரசியல் விழா கொண்டாடப்பட்டது. எங்களைத் தவிர மற்ற எல்லாரும் அரசியல் பாட்டுக்களை பாடினார்கள், கட்சி வாசகங்களை திரும்பத் திரும்ப சொன்னார்கள். வக்கீலுக்கு எங்கள் மேல் கோபம் பொத்துக்கொண்டு வந்தது; மற்ற ஆறு சகோதரர்களையும் பாடச் சொல்லும்படி அவர் என்னைப் பார்த்து கத்தினார். அவர்கள் மீது எனக்கு அதிகாரம் இல்லை என்றும், பாடுவதா வேண்டாமா என்பது அவரவர் தீர்மானம் என்றும் நான் சொல்லி வாய் மூடுவதற்குள் எனக்கு அடி விழுந்தது.

பிறகு, ஒரு வேனில் பின்பக்கம் நாங்கள் ஏற்றப்பட்டோம். எங்களுக்கு காவலாக இரண்டு வீரர்கள் ஏறிக்கொண்டார்கள், அந்த வக்கீலும் டிரைவரும் முன் சீட்டில் உட்கார்ந்தார்கள். பண்டுன்டு மாநிலத்தின் தலைநகரான பண்டுன்டு நகருக்கு அந்த வேன் மின்னல் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது. இறுகப் பிடித்துக்கொள்ளும்படி நான் மற்ற சகோதரர்களிடம் சொன்னேன், பிறகு நான் ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். ஜெபத்தை முடிக்கும் சமயத்தில் வேன் ஒரு இடத்தில் வேகமாக திரும்பியபோது பல்டியடித்தது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் நாங்கள் ஒருவரும் உயிரிழக்கவில்லை, எங்களுக்கு காயம்கூட ஏற்படவில்லை. யெகோவாவே எங்களை பாதுகாத்ததாக உணர்ந்தோம். வேனை தூக்கி நிறுத்தியபோது, எங்களை மறுபடியும் சிறைக்கு நடத்தியே கூட்டிச்செல்லும்படி அந்த இரண்டு வீரர்களிடம் வக்கீல் சொன்னார். பிறகு வேன் பண்டுன்டுவிற்கு சென்றது.

நாங்கள் சிறைக்குத் திரும்பியவுடன் நடந்ததை அந்த வீரர்கள் அதிகாரிகளிடம் சொன்னதோடு எங்களை விடுதலை செய்துவிடும்படியும் கெஞ்சிக் கேட்டார்கள். சிறைச்சாலை இயக்குநர் மிகவும் நெகிழ்ந்து போனார். கடவுள்தான் எங்களைக் காப்பாற்றியதாக எங்களைப் போலவே அவரும் நம்பினார். அடுத்த சில நாட்களுக்கு எங்களை பொது சிறையில் வைத்தார்கள், மற்ற கைதிகளோடு முற்றத்தில் உலாவவும் அனுமதித்தார்கள். பிறகு விடுதலை செய்தார்கள்.

ஃபிரான்ஸ்வாவும் ஆன்ரியெட்டும் வட்டார ஊழியத்தில் 24 ஆண்டுகள் செலவிட்ட பிறகு, பெத்தேலுக்கு அழைக்கப்பட்டார்கள். பத்து வருடங்களுக்குப் பிற்பாடு அவர்கள் விசேஷ பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆகஸ்ட் 16, 1998-⁠ல் ஆன்ரியெட் காலமானார்.

[பக்கம் 200-202-ன் பெட்டி/​படம்]

மைக்கேல் பாட்டிஜ் தரும் பேட்டி

பிறந்தது: 1939

முழுக்காட்டப்பட்டது: 1956

பின்னணிக் குறிப்புகள்: மைக்கேல், பார்பரா தம்பதியினர் காங்கோவில் 29 ஆண்டுகளாக சேவித்தார்கள். இப்போது பிரிட்டன் பெத்தேலில் இருக்கி​றார்​கள். லண்டனில் லிங்கால மொழி சபையில் மைக்கேல் மூப்பராக சேவிக்கிறார்.

உள்ளூர் பாஷையில் பேசக் கற்றுக்கொள்வதுதான் எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது. முதலில் காங்கோவின் ஆட்சிமொழியாகிய பிரெஞ்சு மொழியை சரளமாக கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதுதான் ஆரம்பம். அதன் பிறகு கடங்காவில் ஸ்வாஹிலி மொழியையும், கனங்காவில் சிலூப மொழியையும், கின்ஷாசாவிற்கு சென்றபோது அங்கு லிங்கால மொழியையும் கற்றுக்கொண்டோம்.

இந்த மொழிகளையெல்லாம் கற்றுக்கொண்டது மிகவும் பிரயோஜனமாக இருந்தது. அதனால் கிடைத்த முதல் நன்மை, சகோதரர்கள் சீக்கிரத்தில் எங்களிடம் ஒட்டிக்கொண்டார்கள். அவர்களுடைய மொழிகளில் பேச நாங்கள் கடினமாக முயற்சி செய்ததைக் கண்டு, அவர்கள்மீது உண்மையான அன்பும் அக்கறையும் எங்களுக்கு இருந்ததை புரிந்துகொண்டார்கள். இரண்டாவது நன்மை, ஊழியத்தில் அதிக பலன் கிடைத்தது. வீட்டுக்காரர்களின் மொழியில் நாங்கள் பேசியபோது முதலில் அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள், பிறகு சந்தோஷப்பட்டார்கள், அதன்பின் நாங்கள் சொன்னதை மதிப்பு மரியாதையோடு ஆர்வமாக கேட்டார்கள்.

மாவட்ட ஊழியம் செய்தபோது, உள்ளூர் மொழிகளை அறிந்திருந்ததால் ஆபத்தான சூழ்நிலைகளில் தப்பிக்க முடிந்திருக்கிறது. கலவரக் காலங்களில் ராணுவத்தார் அல்லது அரசியல் கட்சிகள் சாலையடைப்புகளை ஏற்பாடு செய்வது சகஜமாக இருந்தன. பணத்தை சுரண்டுவதற்கு அவை சௌகரியமாக இருந்தன. குறிப்பாக வெளிநாட்டுக்காரர்களின் தலையில் மிளகாய் அரைக்க அங்கு ஆட்கள் காத்திருந்தார்கள். அப்படி அடைக்கப்பட்ட சாலைகளில் நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டபோதெல்லாம், அங்கிருந்த காவலர்களுக்கு உள்ளூர் மொழியில் வணக்கம் சொல்வோம். அவர்களுக்கு ஆச்சரியம் தாள முடியாது. பிறகு எங்களைப் பற்றி விசாரிப்பார்கள். வெறும் வணக்கத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், உண்மையில் என்ன வேலை செய்கிறோம் என்பதை அவர்கள் மொழியில் விளக்கும்போது பொதுவாக அவர்கள் நன்கு கேட்பார்கள், பிரசுரங்களை வாங்கிக்கொள்வார்கள், கடவுளுடைய ஆசீர்வாதத்தோடு பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு வாழ்த்தி அனுப்புவார்கள்.

ஆப்பிரிக்க சகோதரர்கள் உள்ளப்பூர்வமாக காட்டிய சுயதியாக அன்பு பல முறை எங்கள் நெஞ்சத்தைத் தொட்டது. அநேக வருடங்களாக காங்கோவில் ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டுமே இருந்தது; அது யெகோவாவின் சாட்சிகளையும் அவர்களைப் போல் நடுநிலைமை வகித்த மற்ற தொகுதியினரையும் தீவிரமாக, சிலசமயங்களில் கொடூரமாக எதிர்த்தது. இந்தச் சூழ்நிலையில்தான் ஜீப்பில் அசெம்பிளிகளுக்கு சென்று மாவட்ட ஊழியம் செய்தோம்.

ஒரு மாநாட்டின்போது நடந்த சம்பவம் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. கடைசி நாள் பிற்பகல் நிகழ்ச்சியின் போது அரசியல் கட்சியின் உள்ளூர் தலைவர் மேடைக்குப் பின்புறம் வந்தார். குடிபோதையில் கண்டபடி பேசினார்; எல்லாரும் கட்சி அட்டையை வாங்க வேண்டுமென தான் மேடையேறி சொல்ல வேண்டுமென ஒற்றைக் காலில் நின்றார். நாங்கள் அவரை அனுமதிக்காததால் ஆவேசத்தோடு வாய்க்கு வந்தபடி எங்களை திட்டினார். யெகோவாவின் சாட்சிகள் அரசாங்கத்தின் விரோதிகள் என்றும் அவர்களை கைது செய்ய வேண்டுமென்றும் கத்தினார். சில சகோதரர்கள் அவரிடம் எப்படியோ நைசாகப் பேசி அங்கிருந்து அனுப்பிவிட பார்த்தார்கள். அவரும் ஒருவழியாக இடத்தை காலிசெய்தார்; ஆனால் நிர்வாகியிடம் எங்களைப் பற்றி புகார் செய்துவிட்டு மறுபடியும் வந்து எங்கள் ஜீப்பிற்கும் வைக்கோல் குடிசைக்கும் தீ வைக்கப்போவதாக கத்திக்கொண்டே போனார். வெறும் பூச்சாண்டி காட்டுவதற்காக அவர் அப்படி சொல்லவில்லை என்பது எங்களுக்கு தெரியும்.

அங்கிருந்த சகோதரர்களை எப்படி மெச்சுவதென்றே தெரியவில்லை. பயந்து ஓடிவிடுவதற்குப் பதிலாக அவர்கள் எங்களை சூழ்ந்துகொண்டு உற்சாகப்படுத்தினார்கள்; யெகோவா மீது நம்பிக்கை வைத்து அவர் கையில் எல்லாவற்றையும் விட்டுவிடும்படி சொன்னார்கள். பிறகு ராத்திரி முழுவதும் எங்கள் கூரை வீட்டையும் ஜீப்பையும் அவர்கள் மாறி மாறி காவல் காத்தார்கள். அது எங்கள் நெஞ்சை அப்படியே உருக்கிவிட்டது. எங்களைப் பாதுகாக்க அந்த சகோதரர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்தார்கள்; அதுமட்டுமல்ல, நாங்கள் சென்ற பிறகு, கட்சி அட்டையை வாங்க மறுத்ததற்காக எப்படிப்பட்ட கொடூர தாக்குதலையும் சந்திக்க தயாராக இருந்தார்கள். இத்தகைய சுயதியாக கிறிஸ்தவ அன்பின் வெளிக்காட்டை எங்களால் மறக்கவே முடியாது; காங்கோவில் தங்கிய பல வருடங்களாக சகோதரர்கள் எங்களுக்கு செய்த மற்ற அநேக அன்புச் செயல்களும் எங்கள் இருதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்டன.

[பக்கம் 211-213-ன் பெட்டி/​படம்]

டெரன்ஸ் லாதம் தரும் பேட்டி

பிறந்தது: 1945

முழுக்காட்டப்பட்டது: 1964

பின்னணிக் குறிப்புகள்: 12 வருடங்களாக மிஷனரி சேவை செய்தார். பிரெஞ்சு, லிங்கால, ஸ்வாஹிலி ஆகிய மொழிகளைக் கற்றார். தற்போது ஸ்பெயினில் தன் மனைவியோடும் இரு பிள்ளைகளோடும் சேவை செய்கிறார்.

1969-⁠ல் ரேமன்ட் நோல்ஸும் நானும் கிஸங்கனி நகருக்கு சென்றோம். அப்போது அங்கு சுமார் 2,30,000 பேர் குடியிருந்தார்கள்; காங்கோவின் வடகிழக்கு மாநிலத்தின் தலைநகராக அது இருந்தது.

அந்தப் பகுதியிலிருந்த ஒருசில பிரஸ்தாபிகளும் ஆர்வமுள்ள அநேகரும் எங்களை மிக அன்பாக வரவேற்றார்கள்! பப்பாளி, அன்னாசி, வாழை, அதோடு நாங்கள் பார்த்திராத மற்ற அநேக பழ வகைகள் அனைத்தையும் எங்களுக்கு வாரி வழங்கினார்கள். சிலர் கோழிகளையும் ஆமைகளையும் உயிரோடு கொண்டு வந்து கொடுத்தார்கள். நாங்கள் தங்குவதற்கு சாமுவேல் ஷிகாகா என்பவர் தன் வீட்டில் இடம் கொடுத்தார். கொஞ்ச நாட்களிலேயே வாடகைக்கு வேறு வீடு பார்த்தோம். அங்கே நிக்கலஸ் மற்றும் மேரி ஃபானும், பால் மற்றும் மாரிலின் ஈவன்ஸும் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள். எங்களுக்கு அளவில்லா சந்தோஷம்! எல்லாரும் சேர்ந்து, கிஸங்கனியிலிருந்த அந்த முதல் மிஷனரி இல்லத்தை சுத்தம் செய்து பெயின்ட் அடித்தோம். காட்டுத் திராட்சைச் செடிகளும் உயரமான புல்லும் அங்கே மண்டிக்கிடந்தன. வீட்டின் பரணை சுத்தம் செய்கையில்தான் தெரிந்தது, அங்கே இரண்டு புனுகுப்பூனைகள் குடித்தனம் நடத்துவது. அவற்றை அங்கிருந்து விரட்டி அடித்தோம். பிற்பாடு பீட்டர் மற்றும் ஆன் பார்ன்ஸ் அந்த மிஷனரி இல்லத்தில் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள். இல்லத்திற்கு வந்த அடுத்த நபர், நான் மணம் முடித்த ஆன் ஹார்க்னஸ்.

கிஸங்கனியில் பிரசங்கம் செய்த முதல் நான்கு வருடங்களின்போது லிங்கால, ஸ்வாஹிலி மொழிகளைக் கற்றுக்கொண்டோம்; நன்கு பழகி, அன்புடன் உபசரிக்கும் அவ்வூர் மக்களிடம் எங்களுக்கு நெருக்கம் ஏற்பட்டது. எங்களோடு நிறைய பேர் பைபிளைப் படித்ததால் அதிகாலையிலிருந்து இரவு வரை அவர்களோடு படிப்புகள் நடத்தினோம். நாங்கள் கிஸங்கனியில் தங்கியிருந்த வருடங்களில், பத்தே பிரஸ்தாபிகள் கொண்ட தொகுதி எட்டு சபைகளாக வளர்ந்தது.

ஒருமுறை இட்டூரி சாலை வழியாக நாங்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது எங்களில் சிலர் குள்ளர்களின் ஒரு கிராமத்தைப் பார்த்தோம். அந்தக் குள்ளர்களிடம் பிரசங்கிக்க விரும்பினோம். அவர்கள் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அனைத்தையுமே காடுகளில் பெறுவதால் அவற்றை தங்கள் தாயாக அல்லது தகப்பனாக அழைப்பதாய் சில அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆக, குள்ளர்கள் காடுகளை புனிதமானதாக கருதுகிறார்கள்; மாலிமோ என்ற விழாவின் மூலம் அவற்றோடு உரையாட முடியும் என்று நம்புகிறார்கள். இந்த விழாவில் ஒரு நெருப்பைச் சுற்றி ஆடிப் பாடுவார்கள். நடனத்திற்கு பின்னணியாக மாலிமோ எக்காளம் ஊதப்படும்; இசையையும் மிருகங்களின் ஒலிகளையும் உண்டாக்க நீளமான இந்த மரக் குழலில் ஊதுவார்கள்.

அந்த நாடோடிகளின் குடியிருப்புகளிடம் மனதை பறிகொடுத்தோம். அவர்கள் பொதுவாக ஒரு மாதம் போல்தான் ஒரு இடத்தில் தங்குவார்கள். இளஞ்செடிகளையும் இலைகளையும் கொண்டு தேன்கூடு போன்ற வடிவில் சிறு குடில்களை கட்டியிருந்தார்கள். அவற்றில் ஒரேவொரு வாயில்தான் இருந்தது, இரண்டு மணிநேரத்திற்குள் கட்டி முடித்துவிடலாம். உடலைக் குறுக்கிப் படுத்தால் அவை ஒவ்வொன்றிலும் சில நபர்கள்வரை தாராளமாக படுத்து உறங்கலாம். சில பிள்ளைகள் ஓடிவந்து எங்கள் உடம்பையும் முடியையும் தொட்டுப் பார்த்தார்கள்; அதற்கு முன் வெள்ளை நிறத்தவர்களை அவர்கள் பார்த்ததே இல்லையாம். காட்டுப்பகுதியை சேர்ந்த அந்த சிநேகப்பான்மையான மக்களை சந்தித்து அவர்களிடம் பிரசங்கித்தது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! அவர்கள் கூடாரம் போட்டிருந்த இடத்திற்குப் பக்கத்திலிருந்த கிராமங்களிலிருந்து சில சாட்சிகள் வந்து அவர்களை ஏற்கெனவே சந்தித்திருந்ததாக அவர்கள் சொன்னார்கள்.

[பக்கம் 215, 216-ன் பெட்டி/​படம்]

டேவிட் நாவெஜ் தரும் பேட்டி

பிறந்தது: 1955

முழுக்காட்டப்பட்டது: 1974

பின்னணிக் குறிப்புகள்: காங்கோ பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவரிலும் மிக அதிக காலம் சேவித்திருப்பவர். கிளைக் குழுவின் அங்கத்தினராகவும் சேவிக்கிறார்.

1976-⁠ல் பெத்தேலுக்கு வரும்படி அழைப்பு வந்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். “அவசரம்,” “உடனடியாக” என்ற வார்த்தைகள் அக்கடிதத்தில் கோடிடப்பட்டிருந்தன. நான் கின்ஷாசாவிலிருந்து 2,450 கிலோமீட்டர் தூரத்திலிருந்த கோல்வேஸியில் வசித்துவந்தேன். வீட்டைவிட்டு வருவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆனால் ஏசாயாவைப் போல, “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று சொல்லவே விரும்பினேன்.​—⁠ஏசா. 6:⁠8.

நான் பெத்தேலுக்கு சென்றபோது, சகோதரர்கள் என்னிடம் ஒரு டைப்ரைட்டரைக் காட்டி, டைப் அடிக்கத் தெரியுமா என்று கேட்டார்கள். நான் தையற்காரர் என்பதால் தையல் மெஷினைத் தவிர வேறொன்றையும் தொட்டதில்லை என்றேன். இருந்தாலும் ஒரே மூச்சாக உட்கார்ந்து, டைப் அடிக்கக் கற்றுக்கொண்டேன். அந்த சமயத்தில் நான் மொழிபெயர்ப்பு இலாகாவிலும் ஊழிய இலாகாவிலும் வேலை செய்தேன்.

பிற்பாடு அஞ்சல் இலாகாவிற்கு நியமிக்கப்பட்டேன். சிலர் பிரசுரங்களிலுள்ள கூப்பன்களை பூர்த்தி செய்து அதை வெட்டி சொஸைட்டிக்கு அனுப்புவார்கள்; அப்படிப்பட்ட கூப்பன்களுக்கு பதிலளிப்பது என்னுடைய வேலைகளில் ஒன்றாக இருந்தது. பொதுவாக, வேறு பிரசுரங்களை கேட்டு கூப்பன்களை அனுப்புவார்கள். அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க பிரசுரங்களை அனுப்பி வைப்போம்; ஆனால் பிரசுரங்களைப் படித்த பிறகு அவர்கள் எப்படி பிரதிபலித்திருப்பார்கள், மேற்கொண்டு என்ன செய்திருப்பார்கள் என்று அடிக்கடி யோசிப்பேன். ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் என்ன நடந்தது என்று எனக்கு தெரிய வந்தது. இரண்டு பேர் நன்கு முன்னேற்றம் செய்தார்கள். பிற்பாடு ஒழுங்கான பயனியர்களாகவும், விசேஷ பயனியர்களாகவும் ஆனார்கள். அதன் பிறகு பெத்தேலுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் என் ரூம்மேட்டாக வந்தார்.

பணம் கேட்டுகூட சிலர் பெத்தேலுக்கு கடிதம் எழுதினார்கள். அவர்களுக்கு பதிலளிப்பதற்கென்றே ஒரு கடிதம் தயாரித்து வைக்கப்பட்டது. நம் ஊழியம் நன்கொடைகளின் உதவியால் செய்யப்படுவதை விளக்கி பைபிள் படிக்குமாறு அந்த நபரை உற்சாகப்படுத்தும் விதத்தில் அக்கடிதம் தயாரிக்கப்பட்டிருந்தது. கொஞ்ச நாளுக்கு முன்பு ஒரு சகோதரர் அப்படிப்பட்ட கடிதத்தால்தான் சத்தியத்திற்கு வந்ததாக என்னிடம் சொன்னார். அந்தக் கடிதத்தை அவர் பத்திரமாக வைத்திருந்தார், என்னிடமும் காட்டினார். பல வருடங்களுக்கு முன்பு, பணம் தருமாறு கெஞ்சிக் கேட்டு அவர் பெத்தேலுக்கு கடிதம் எழுதியிருந்தார். பெத்தேல் அனுப்பிய அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு அவர் சத்தியத்திற்கு வந்திருந்தார்.

பிற்பாடு சட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனித்துக் கொண்டேன். ஒருமுறை, கட்சியின் பேட்ஜ் அணியாததாக குற்றம் சாட்டப்பட்ட சில உள்ளூர் சகோதரர்களுக்கு உதவினேன். நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அதிகாரிகளிடம் இப்படிச் சொன்னேன்: “பேட்ஜில் என்ன இருக்கிறது? இப்போதுதான் உள்நாட்டுப் போர் முடிந்திருக்கிறது, நீங்கள் யாரோடு சண்டை போட்டீர்களோ அவர்கள் எல்லாரும்கூட பேட்ஜ் அணிந்திருந்தார்களே. ஆக பேட்ஜில் ஒன்றும் இல்லை; ஒருவர் உண்மையில் என்ன நினைக்கிறார் என்பதை அது காட்டுவதில்லை. ஒருவரின் மனதில் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம். யெகோவாவின் சாட்சிகள் ஒருபோதும் உள்நாட்டுப் போரை தூண்டாத குடிமக்கள். சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் இந்த மனப்பான்மைதான் பேட்ஜைவிட முக்கியம்.” அதன் பிறகு சகோதரர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எப்போதும் யெகோவா எங்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்.

நான் 27 வருடங்களுக்கும் மேலாக பெத்தேலில் சேவை செய்து வருகிறேன். எனக்கு கொஞ்சம் சரீர உபாதைகள் இருந்தாலும், பெரிய படிப்பு எதுவும் படிக்காவிட்டாலும், யெகோவாவினால் பயன்படுத்தப்படுவதற்காக முடிந்தவரை கடினமாக உழைக்கிறேன். இன்றும்கூட பெத்தேலில் அவசரமான, உடனடியான தேவைகள் உள்ளன!

[பக்கம் 219, 220-ன் பெட்டி/​படம்]

காட்ஃப்ரி பின்ட் தரும் பேட்டி

பிறந்தது: 1945

முழுக்காட்டப்பட்டது: 1956

பின்னணிக் குறிப்புகள்: கிலியட் பள்ளியின் 47-வது வகுப்பில் பட்டம் பெற்றவர். காங்கோவில் 17 வருடங்களாக சேவை செய்தார். தற்போது ருவாண்டாவின் பெத்தேலில் கிளைக் குழு அங்கத்தினராக இருக்கிறார். அவர் ஆங்கிலம், பிரெஞ்சு, லிங்கால, ஸ்வாஹிலி, சிலூப ஆகிய மொழிகளை அறிந்தவர்.

1973-⁠ல் கனங்காவில் ஓர் உள்ளூர் சகோதரரோடு நான் வெளி ஊழியம் செய்து வந்தேன். நாங்கள் பைபிள் படிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் அந்த வீட்டிற்குள் வந்து எங்களை கைது செய்தார்கள். அடுத்த இரு வாரங்கள் சிறையில் இருந்தோம். அந்த சமயத்தில் என் மிஷனரி பார்ட்னர் மைக் கேட்ஸ் எங்களுக்கு உணவு கொண்டு வந்தார். ஏனென்றால் சிறைச்சாலையில் உணவு வழங்கப்படவில்லை. கடைசியில் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். மூன்று மாதங்களுக்குப் பிற்பாடு, மைக்கும் நானும் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள இங்கிலாந்திற்கு விமானத்தில் செல்லவிருந்த நாளில், அருகிலிருந்த சபையின் சகோதரர்கள் எல்லாரும் கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டோம். உணவை எடுத்துக்கொண்டு அவர்களைப் போய் சந்திக்க தீர்மானித்தோம். ஆனால் சகோதரர்களை பார்க்க அனுமதி கேட்டபோது, எங்களையும் கைது செய்யுமாறு மாஜிஸ்ட்ரேட் ஆணையிட்டார்; நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். சிறைச்சாலைக்கு எங்களை கொண்டு செல்ல சிறைச்சாலையின் வேனுக்காக காத்திருந்தபோது, நாங்கள் போக வேண்டியிருந்த விமானம் புறப்படும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும் அப்படியே மனமொடிந்து போனோம்!

சிறையில், மூன்று மாதங்களுக்கு முன்பு நான் சந்தித்த கைதிகளில் அநேகரை பார்த்தேன். எனக்கு அப்போது உணவு கொண்டுவந்த என் பார்ட்னர் இப்போது என்னோடு சிறையில் இருந்ததால், “இந்த முறை உங்களுக்கு யார் சாப்பாடு கொண்டு வருவார்கள்?” என அவர்கள் கேட்டார்கள்.

எங்கள் சகோதரர்கள் சாப்பாடு கொண்டு வருவார்கள் என்று நாங்கள் பதிலளித்தோம். ஆனால் அவர்கள் கொஞ்சமும் நம்பவில்லை. அந்தப் பகுதியில் ஐரோப்பிய சாட்சிகள் வேறு யாருமே இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் அடுத்தநாள் அந்தக் கைதிகளுக்கும் சாப்பிடக் கொடுக்கும் அளவுக்கு ஏராளமாக உணவை காங்கோ நாட்டு சகோதரர்கள் கொண்டு வந்ததைப் பார்த்து அவர்களுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்! நம் சர்வதேச சகோதரத்துவத்திற்கும் நம்மை இணைக்கும் அன்பிற்கும் அது தலைசிறந்த சாட்சியாக அமைந்தது. அந்த அருமை சகோதரர்கள் தாங்கள் கைது செய்யப்படும் ஆபத்து இருப்பதை அறிந்தும் அதைப் பொருட்படுத்தாமல் எங்களுக்கு உணவு எடுத்து வந்தார்கள். ஐந்து நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டோம். பிறகு இங்கிலாந்திற்கு சென்றோம், மாநாடு நடக்கும் நேரத்திற்கு சரியாக போய் சேர்ந்தோம்.

[பக்கம் 224-226-ன் பெட்டி/​படம்]

ங்ஸெயி காட்டாசி பாங்டி தரும் பேட்டி

பிறந்தது: 1945

முழுக்காட்டப்பட்டது: 1971

பின்னணிக் குறிப்புகள்: திருமணத்திற்கு முன்பு, கடினமான பிராந்தியங்களில் பயப்படாமல் ஊழியம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு 1988 முதல் 1996 வரை கணவரோடு சேர்ந்து பயண ஊழியத்தில் ஈடுபட்டார். இப்போது கின்ஷாசாவில் விசேஷ முழுநேர ஊழியம் செய்துவருகிறார்.

1970-⁠ல் கின்ஷாசாவில் வசித்த சமயம், ஒருநாள் நான் பைபிளை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ வீட்டின் கதவைத் தட்டினார்கள். ஒரு சின்னப் பையனோடு ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அந்தப் பையன் பைபிளைப் பற்றி என்னோடு பேச ஆரம்பித்தான். பிறகு என் பைபிளை மத்தேயு 24:14-⁠க்கு திருப்பும்படி சொன்னான். எனக்கு அதிக மதப்பற்று இருப்பதாக அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் பைபிளைத் திறந்து அந்த வசனத்தை எடுக்கவே எனக்கு தெரியவில்லை. அந்தப் பையன் எனக்கு அதை எடுத்துக் காட்டினான். பிறகு சுவாரஸ்யமாக உரையாடினோம்.

எனக்கு ஆர்வம் இருந்ததை அந்த சகோதரர் கவனித்தார். ஆகவே அந்த ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த கூட்டத்திற்கு என்னை அழைத்தார். அப்போது ஊழியம் தடை செய்யப்பட்டிருந்ததால் ஒரு சகோதரரின் வீட்டிற்குப் பின்னால் கூட்டம் நடந்தது. அங்கு கொடுக்கப்பட்ட பேச்சு எனக்குப் பிடித்திருந்தது, ஆகவே காவற்கோபுர படிப்பிலும் கலந்துகொண்டேன். அதேநாள் சாயங்காலம் சகோதரர்கள் என் வீட்டிற்கு வந்து என்னோடு பைபிள் படிப்பை ஆரம்பித்தார்கள்.

பிறகு முழுக்காட்டுதல் பெற்று முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தேன். நாட்டின் மற்ற பகுதிகளில் ஊழியத்திற்கு அதிக தேவை இருந்ததைப் பற்றி நம் ராஜ்ய ஊழியத்தில் படித்தேன். ஆகவே பண்டுன்டு மாநிலத்தில் கென்கெ என்ற இடத்திற்கு போகட்டுமா என்று கேட்டேன். சகோதரர்கள் ஒத்துக்கொண்டார்கள். ஆனால் அங்கு ஏற்கெனவே சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக சொல்லி எச்சரித்தார்கள். ‘எல்லாரையும் கைது செய்வார்களா என்ன?’ என்று நினைத்தேன். ஆகவே அங்கு செல்ல தீர்மானித்தேன்.

மாலையில் அங்கு போய் சேர்ந்தேன். வட்டாரக் கண்காணி ஃபிரான்ஸ்வா டான்டா அன்று சபையை விஜயம் செய்யவிருந்ததைக் கேட்டு சந்தோஷப்பட்டேன். அடுத்த நாள் காலை வெளி ஊழிய கூட்டத்திற்காக சென்றேன். ஆனால் சகோதரர் ஃபிரான்ஸ்வாவும் இன்னும் நிறைய சகோதரர்களும் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. சீஃப் செக்யூரிட்டி ஒருவர் என்னிடம் பேச விரும்பினார். “நீங்கள் யெகோவாவின் சாட்சி என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் விருப்பப்பட்டால் கென்கெயில் தங்கலாம், ஆனால் பையும் கையுமாக நீங்கள் சுற்றிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் கைது செய்துவிடுவோம்” என்று அவர் எச்சரித்தார்.

அந்த சீஃப் செக்யூரிட்டி மீதும் அவரது ஏஜென்டுகள் மீதும் அந்த ஊர்க்காரர்களுக்கு ஒரே கோபம். யெகோவாவின் சாட்சிகள் யாருக்கும் தீங்கு செய்யாதது அவர்களுக்கு தெரியும். ஆகவே, செக்யூரிட்டி ஏஜென்டுகள் யெகோவாவின் சாட்சிகளைப் பிடிப்பதில் நேரத்தை வீணாக்காமல் குற்றவாளிகளைப் பிடிக்க முயல வேண்டுமென அவர்கள் சொன்னார்கள்; அதுவும் குற்றவாளிகளுக்கா அங்கு பஞ்சம் என கேட்டார்கள். கடைசியில் சகோதரர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

1975-⁠ல் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டேன். அநேக பட்டணங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்றேன். ஒவ்வொரு இடத்திலும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குத் தங்கினேன். விரைவில், ஆர்வமுள்ளவர்கள் அடங்கிய ஆறு தொகுதிகள் ஸ்தாபிக்கப்பட்டன. அந்தத் தொகுதிகளை கண்காணிக்கவும் கவனிக்கவும் சகோதரர்களை அனுப்புமாறு கேட்டு கிளை அலுவலகத்திற்கு கடிதம் எழுதினேன்.

ஷான்-பாடிஸ்ட் பாங்டி என்ற சகோதரரை சந்தித்தேன். அவரும் விசேஷ பயனியர். திருமணத்தைப் பற்றியும் முழுநேர ஊழியத்தைப் பற்றியும் நான் முன்பு மிஷனரிகளோடு பேசியிருந்தேன். நீண்ட காலம் முழுநேர ஊழியம் செய்ய வேண்டுமானால் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது நல்லது என்று அவர்கள் என்னிடம் சொல்லியிருந்தார்கள். ஷான்-பாடிஸ்ட் அதற்கு ஒத்துக்கொண்டதால் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். பிள்ளைகள் இருந்தால் வயதான காலத்தில் பாதுகாப்பு என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் காலங்கள் மாறிவிட்டன; எத்தனையோ பெற்றோர் ஏமாற்றம் அடைந்திருப்பதை நானே பார்த்திருக்கிறேன். என் கணவரும் நானும் எந்த விதத்திலும் ஏமாற்றமடையவில்லை.

பல வருடங்களாக அநேகர் சத்தியத்திற்கு வருவதை பார்த்திருக்கிறோம். முக்கியமாக என் குடும்பத்தார் சத்தியத்திற்கு வந்ததில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. சத்தியத்தை ஏற்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மட்டுமல்ல, என் நான்கு தம்பிகளுக்கும் ஒரு தங்கைக்கும்கூட உதவினேன்.

“நற்செய்தியை பிரசங்கிக்கும் பெண்களின் கூட்டம் மிகுதி” என்று சங்கீதம் 68:11 (NW) சொல்கிறது. ஆகவே சகோதரிகளுக்கு பெரிய பொறுப்பு இருப்பதால் தங்களால் முடிந்தளவுக்கு பிரயாசப்பட வேண்டும் என்பது தெரிகிறது. நானும் அதில் ஒரு பங்கு வகிக்க வாய்ப்பளிப்பதற்காக யெகோவாவிற்கு அதிக நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

[பக்கம் 240-ன் பெட்டி]

ஆவிக்குரிய உணவின் மொழிபெயர்ப்பு

காங்கோவின் ஆட்சிமொழி பிரெஞ்சு என்றாலும் கின்ஷாசாவிலும் காங்கோ நதியோரமாகவும் பேசப்படும் முக்கிய மொழி லிங்கால. இம்மொழியில் அநேக வார்த்தைகள் இல்லாவிட்டாலும், மிக அர்த்தம் பொதிந்த சொற்றொடர்கள் சில இருக்கின்றன. உதாரணத்திற்கு, “மனந்திரும்புதல்” என்பதற்கு காபோங்காலா மாடெமா என்று சொல்வார்கள். அதன் நேரடி அர்த்தம், “இதயத்தை திருப்புவது” ஆகும். இதயத்தோடும் உணர்ச்சிகளோடும் சம்பந்தப்பட்ட இன்னொரு சொற்றொடர் காக்கிடிசா மாடெமா. இதன் நேரடி அர்த்தம், “இதயத்தை கீழே வைப்பது,” அல்லது வேறு வார்த்தைகளில், “அமைதியாவது.”

லிங்கால மொழியில் காவற்கோபுரம் பல ஆண்டுகளாக மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கிறது. தற்போது, காங்கோவில் பேசப்படும் பின்வரும் மொழிகளில் பிரசுரங்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன: உரூன்ட், ஓட்டிடீலா, கிசோங்கா, கிட்டூபா, கிபென்டெ, கிலூபா, கினான்டெ, சிலூப, நபாகா, மாஷி, மோனோகூட்டூபா, லிங்காம்பி, லிங்கால, லோமாங்கோ, ஸ்வாஹிலி (காங்கோ).

[பக்கம் 247-ன் பெட்டி]

ஊனத்தின் மத்தியிலும் வைராக்கியம்

இருபது வயது நிரம்பிய ரிஷார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 15 வருடங்களாக படுத்த படுக்கையாக இருக்கிறார். தலையை மட்டும்தான் அவரால் அசைக்க முடியும். இருந்தாலும் ஜனவரி 1997-⁠ல் அவர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியானார். தன்னை சந்திக்க வருவோரிடம் அவர் எப்போதும் பிரசங்கிக்கிறார். அதுவும் திட நம்பிக்கை தொனிக்க பேசுகிறார். சராசரியாக மாதந்தோறும் பத்து மணிநேரம் பிரசங்கிக்கிறார். ஏப்ரல் 12, 1998 அன்று அவரது வீட்டிற்கு பக்கத்திலிருக்கும் ஒரு ஆற்றிற்கு ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்டு முழுக்காட்டப்பட்டார். இப்போது தவறாமல் கூட்டங்களுக்கு செல்கிறார். உறவினர் ஒருவருக்கும் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கிறார்; அந்த உறவினர் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு தவறாமல் வந்து, நல்ல முன்னேற்றம் செய்திருக்கிறார். இந்த சகோதரர் உடலளவில் பலவீனமாக இருந்தாலும், கடவுளுடைய ஆவியின் உதவியால் தெம்புடன் இருக்கிறார்.

[பக்கம் 248-ன் பெட்டி]

“இந்த உலகத்தின் பாகமல்ல”

எஸ்தருக்கு 12 வயது; ஒருநாள் பள்ளியில் டீச்சர் எல்லா மாணவர்களையும் ஒவ்வொருவராக வகுப்புக்கு முன் அழைத்து தேசிய கீதத்தைப் பாடச் சொன்னபோது அவள் அதிர்ச்சியடைந்தாள். டீச்சர் அவளை கூப்பிட்டபோது, தன்னால் பாட முடியாது என்று மரியாதையோடு தெரிவித்தாள். அதன் பிறகு என்ன நடந்ததென்று அவளே சொல்கிறாள்:

“டீச்சருக்கு கோபம் வந்தது. நான் வேறு ஏதாவது பாட்டு பாடட்டுமா என்று கேட்டேன். அவர் சம்மதித்தார். ‘இந்த உலகத்தின் பாகமல்ல’ என்ற பாட்டைப் பாடினேன். பிறகு வகுப்புப் பிள்ளைகள் எல்லாரையும் கைதட்ட சொன்னார், அவர்களும் கைதட்டினார்கள்.

“வகுப்பு முடிந்த பிறகு டீச்சர் என்னை அழைத்து, அந்தப் பாட்டை மிகவும் ரசித்ததாக சொன்னார். முக்கியமாக அதன் வரிகள் அவருக்கு பிடித்ததாம். பிறகு, ‘யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே உலகத்திலிருந்து பிரிந்திருப்பவர்கள். வகுப்பில் நீ நடந்துகொள்ளும் விதமும் இதைக் காட்டுகிறது’ என்றார்.

“என் வகுப்பில் இருந்த ஒரு பிள்ளைக்கும் அந்தப் பாட்டு ரொம்ப பிடித்துவிட்டது. அவள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள், அவற்றிற்கு பதிலளித்தேன். அவ்வருட முடிவில் நாங்கள் பிரிய வேண்டியிருந்தது. ஆனால் அவள் செல்லும் இடத்தில் யெகோவாவின் சாட்சிகளை சந்திக்கும்படி அவளை உற்சாகப்படுத்தினேன். அவள் அதைச் செய்தாள், இப்போது அவளும் நம் கிறிஸ்தவ சகோதரி.”

[பக்கம் 251-ன் பெட்டி]

நேர்மை கடவுளை மகிமைப்படுத்துகிறது

ஒரு சகோதரர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். ஒருநாள், ஷிப்ட்டில் வேலை பார்த்தவர்கள் செய்த தவறினால் இயந்திரத்தின் ஒரு பாகம் கெட்டுவிட்டது. அந்த ஷிப்ட்டில்தான் சகோதரரும் வேலை செய்திருந்தார். அவர்கள் அனைவரையும் வேலை நீக்கம் செய்யும்படி இயக்குநர் முடிவெடுத்தார். சம்பளத்தை கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார். ஆனால் வீட்டிற்கு வந்த பிறகுதான் அந்த சகோதரர் சம்பள தொகையை பார்த்தார்; 500 பிராங்க் (1.00 அமெரிக்க டாலருக்கு சற்று அதிகம்) கூடுதலாக இருந்தது. ஆகவே பணத்தைத் திருப்பிக் கொடுக்க சென்றார். அந்தச் சந்தர்ப்பத்தை சாட்சிகொடுக்க பயன்படுத்திக் கொண்டார். சகோதரரின் நேர்மையைக் கண்டு அந்த இயக்குநர் அசந்துபோனார். ஆகவே மறுபடியும் வேலையில் சேர்த்துக்கொண்டார்.

[பக்கம் 176, 177-ன் அட்டவணை/​வரைபடம்]

காங்கோ (கின்ஷாசா) கால வரலாறு

1932:யெகோவாவின் சாட்சிகளை காங்கோவிற்கு அனுப்ப முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

1940

1949:யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற தடையை வலுவாக்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

1960

1960:காங்கோ சுதந்திரம் பெறுகிறது, மத சகிப்புத்தன்மை நிலவும் காலம் ஆரம்பிக்கிறது.

1962:லேயபோல்ட்வில் (இப்போது கின்ஷாசா) நகரில் கிளை அலுவலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. மிஷனரிகள் முதன்முதல் கால்பதிக்கிறார்கள்.

1966:யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

1971:சட்டப்பூர்வ அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.

1980

1980:மீண்டும் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

1986:யெகோவாவின் சாட்சிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

1990:மத சுதந்திரம் அதிகாரப்பூர்வமற்ற விதத்தில் அங்கீகரிக்கப்படுகிறது.

1993:முன்பு 1986-⁠ல் விதிக்கப்பட்ட தடையை உச்சநீதி மன்றம் ரத்து செய்கிறது. புதிய கிளை அலுவலகத்தில் வேலை ஆரம்பமாகிறது.

2000

2003:காங்கோவில் (கின்ஷாசா) 1,22,857 பிரஸ்தாபிகள் மும்முரமாக ஊழியம் செய்கிறார்கள்.

[வரைபடம்]

(பிரசுரத்தைக் காண்க)

மொத்த பிரஸ்தாபிகள்

மொத்த பயனியர்கள்

120,000

80,000

40,000

1940 1960 1980 2000

[பக்கம் 169-ன் தேசப்படங்கள்]

சூடான்

மத்திய ஆப்பிரிக்க குடியரசு

காங்கோ குடியரசு

ப்ரஜாவில்

ஜனநாயக காங்கோ குடியரசு

இஸிரோ

பூம்பா

காங்கோ நதி

கிஸங்கனி

கோமா

புக்காவு

பண்டுன்டு

கின்ஷாசா

கஸாய்

கென்கெ

கிக்விட்

மடடி

கனங்கா

முபுஜி-மாயி

கடங்கா

கமினா

ல்வேனா

கோல்வேஸி

லிகாசி

லுபும்பாஷி

அங்கோலா

ஜாம்பியா

[பக்கம் 162-ன் முழுபக்க படம்]

[பக்கம் 185-ன் படம்]

1960-களில் கின்ஷாசாவில் ஏலென், எர்னெஸ்ட் மற்றும் டான்யல் ஹாய்ஸ்

[பக்கம் 186-ன் படங்கள்]

சர்வதேச மாநாடுகளில் நடைபெற்ற முழுக்காட்டுதல் காட்சிகளை “புதிய உலக சமுதாயத்தின் மகிழ்ச்சி” என்ற இயங்கு படத்தில் பார்த்த அநேக காங்கோ மக்கள் மனங்கவரப்பட்டார்கள்

[பக்கம் 199-ன் படம்]

மாட்லென் மற்றும் ஜூல்யன் கிஸல்

[பக்கம் 205-ன் படம்]

எளிமையான ராஜ்ய மன்றங்கள் நாடெங்கும் கட்டப்பட்டன

[பக்கம் 207-ன் படம்]

கின்ஷாசா கிளை அலுவலகம், 1965

[பக்கம் 208-ன் படம்]

கோல்வேஸியில் மாநாடு, 1967

[பக்கம் 209-ன் படம்]

மோசமான சாலைகளில் பயணிப்பது கடினமாயிருந்தது

[பக்கம் 221-ன் படம்]

1980-⁠ம் ஆண்டு கின்ஷாசாவில் நடந்த “தெய்வீக அன்பு” மாவட்ட மாநாடு, எட்டு வருடங்களில் நடந்த முதல் பெரிய மாநாடு

[பக்கம் 223-ன் படம்]

மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக அநேகர் உணவையும் மற்ற பொருட்களையும் சுமந்துகொண்டு நாட்கணக்காக நடந்து செல்கிறார்கள்

[பக்கம் 228-ன் படம்]

டிசம்பர் 1985-⁠ல், கடும் தடை விதிக்கப்படுவதற்கு மூன்றே மாதங்களுக்கு முன்பு, கின்ஷாசாவில் “உத்தமத்தைக் காப்போர்” மாநாடு நடைபெற்றது

[பக்கம் 230-ன் படம்]

தடையின்போது சிறையிலடைக்கப்பட்டு கொடூரமாக அடிக்கப்பட்டதை சகோதரர்கள் சகித்தார்கள்

[பக்கம் 235-ன் படம்]

பயணக் கண்காணியாக சேவிக்கும் செகரியா பெலெமா, சூடானிலிருந்து அகதிகளாக வந்திருந்த சகோதரர்களை சந்திக்கிறார்

[பக்கம் 25-ன் படங்கள்]

கரடுமுரடான சாலைகள் வழியாக பிரசுரங்களை அனுப்ப கட்டுறுதி வாய்ந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன

[பக்கம் 238-ன் படம்]

1995-⁠ல் காங்கோவில் (கின்ஷாசா) நடந்த ஊழியப் பயிற்சிப் பள்ளியின் முதல் வகுப்பு

[பக்கம் 241-ன் படம்]

கிசெலா மற்றும் சேபாஸ்டியன் ஜான்சன்

[பக்கம் 243-ன் படம்]

பன்னிரண்டு மிஷனரிகள் கின்ஷாசாவிலுள்ள இந்த இல்லத்தில் வசிக்கிறார்கள்

[பக்கம் 244, 245-ன் படங்கள்]

1998-⁠ல், ஐரோப்பாவிலிருந்து வந்த நிவாரணப் பொருட்கள், தேவையில் இருந்தவர்களுக்கு அளிக்கப்பட்டன

[பக்கம் 246-ன் படங்கள்]

இலுங்கா கனாமா (கீழே இடது), சகோதரர் மசேலா மிட்டலெஸி (உள்படம், இடது) போன்ற பயணக் கண்காணிகள், போரால் பீடிக்கப்பட்ட பகுதிகளில் பல சவால்களை எதிர்ப்படுகிறார்கள்

[பக்கம் 252, 253-ன் படங்கள்]

(1) கின்ஷாசா பெத்தேல் கட்டடங்கள்

(2-4) சமீபத்தில் கட்டப்பட்ட ராஜ்ய மன்றங்கள்

(5) ராஜ்ய மன்றத்தை கட்டுவதில் ஒரு சகோதரர் உதவுகிறார்

[பக்கம் 254-ன் படம்]

கிளைக் குழுவினர், இடமிருந்து வலம்: பீட்டர் வில்ஹெல்ம், பென்ஜமின் பான்டிவிலா, க்ரிஸ்டியன் பேலோட்டி, டேவிட் நாவெஜ், டெல்ஃபன் காவூசா, ராபர்ட் எலாங்கா, சேபாஸ்டியன் ஜான்சன், யூனா நில்சான்