Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மால்டோவா

மால்டோவா

மால்டோவா

கார்பேத்தியன் மலைகளின் பெரிய வளைவுக்கு கிழக்கே வளமிக்க நாடாகிய மால்டோவா அமைந்துள்ளது; அது, சமவெளிகளையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும், மலைச் சந்துகளையும், அடர்ந்த மரங்கள் போர்த்தப்பட்ட மலைச் சரிவுகளையும் உடைய இடமாகும். இந்த பலதரப்பட்ட நில அமைப்புகளைக் கொண்ட, 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நாட்டில், நரிகள், ஓநாய்கள், முயல்கள், வளைகரடிகள், மான்கள், கீரிகள், மரநாய்கள், காட்டுப் பன்றிகள் போன்ற பல்வேறு வகை மிருகங்கள் குடிகொண்டுள்ளன.

பழ வகைகள், தானியங்கள், காய்கறிகள் ஆகியவை அமோகமாக விளைவதற்கும், வேறுபல பண்ணைப் பொருட்கள் ஏராளமாக உற்பத்தி செய்வதற்கும் இப்பிரதேசத்தின் வளமான கரிசல் மண்ணும், பொதுவாக நிலவுகிற மிதமான சீதோஷ்ணமும் பெரியளவில் உதவுகின்றன. இங்குள்ள 2,200 இயற்கை நீரூற்றுகளும் 3,000 ஆறுகளும் நீரோடைகளும் நீர்ப்பாசன, வடிகால் வசதிகளுக்குப் போதுமான நீரை கொடுக்கின்றன; இவையெல்லாம் தெற்கே ஓடி கருங்கடலில் கலக்கின்றன. சீறிப் பாய்ந்தோடும் நீஸ்டர் நதி மால்டோவாவின் முக்கிய நதியாகும்; கிட்டத்தட்ட மால்டோவா குடியரசு முழுவதிலும் கப்பல் போக்குவரத்திற்கு இதுவே ஏற்றதாக உள்ளது. இந்நதியின் பெரும் பகுதி, மால்டோவாவுக்கு வடக்கே, கிழக்கே மற்றும் தெற்கே உள்ள உக்ரைன் நாட்டின் எல்லையாக அமைகிறது அல்லது அதற்கு இணையாக ஓடுகிறது. டேன்யூப் நதியின் உப நதியான ப்ரூட் நதி, மால்டோவா நாட்டின் மேற்கு எல்லையாக உள்ளது; இது மால்டோவாவை ருமேனியாவிலிருந்து பிரிக்கிறது.

மால்டோவாவின் கொந்தளிப்புமிக்க சரித்திரம்

நீஸ்டர் நதிக்கும் ப்ரூட் நதிக்கும் இடைப்பட்ட இப்பிரதேசம்​—⁠நூற்றாண்டுகளாக ஒரு பகுதி பெஸரேபியா என்றும் அதன் மற்றொரு பகுதி மால்டேவியா என்றும் அறியப்பட்ட இப்பிரதேசம்​—⁠ஐரோப்பாவுக்கு செல்லும் முக்கிய தரை மார்க்கத்தில் அமைந்திருக்கிறது. பொ.ச.மு. 1000-⁠ம் ஆண்டிலிருந்து பொ.ச.மு. 1-⁠ம் ஆண்டு வரைக்கும் இந்தப் பகுதி சீத்தியாவின் பாகமாக இருந்தது. பிற்பாடு, இப்பகுதியின் மீது ரோம சாம்ராஜ்யம் ஓரளவுக்கு ஆதிக்கம் செலுத்தி வந்தது. காத்தியர், ஹன்னியர், மங்கோலியர் போன்ற பலர் தொடர்ச்சியாக இதன் மேல் படையெடுத்து வந்ததும் இதன் கொந்தளிப்பு நிறைந்த சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளது. மால்டேவியா, 13-⁠ம், 14-⁠ம் நூற்றாண்டுகளில் மங்கோலியருக்கு அடிமைப்பட்டிருந்தது; 16-⁠ம் நூற்றாண்டில் அது துருக்கிய சாம்ராஜ்யத்தின் பாகமானது. 1812-⁠ம் ஆண்டின் புகாரெஸ்ட் ஒப்பந்தத்தின்படி, துருக்கியர் பெஸரேபியாவையும், பாதி மால்டேவியாவையும் ரஷ்யாவிடம் ஒப்படைத்தனர்; அச்சமயத்தில் அந்த முழு பகுதியும் பெஸரேபியா என்று அழைக்கப்பட்டது.

பெஸரேபியா, 1918-⁠ல் ருமேனியப் பெருநாட்டின் பாகமானது. ஆனால் 1940-⁠ல் தற்காலிகமாக அது ரஷ்யாவின் உடைமையானது, பிறகு 1944-⁠ல், மறுபடியுமாக அது ரஷ்யர்களின் கைக்கு வந்தது. சோவியத் யூனியனின் கீழிருந்த இந்தப் பிராந்தியம் மால்டேவியன் சோவியத் சோஷியலிஸ்ட் ரிப்பப்ளிக் (SSR) என்றழைக்கப்பட்டது. இறுதியில், சோவியத் கம்யூனிஸ ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு மால்டேவியன் SSR, மாஸ்கோவிடமிருந்த தன் உறவைத் துண்டித்துக் கொண்டு, ஆகஸ்ட் 27, 1991-⁠ல் மால்டோவா சுதந்திர குடியரசானது. a முன்பு கிஷினேவ் என்றழைக்கப்பட்ட கீஷினாவ் இதன் தலைநகரமானது.

1960-களில், மால்டோவாவின் ஜனத்தொகை மளமளவென்று பெருகியது, ஆனால் பிறகு அது குறைந்து, 1970-லிருந்து சீராகவே இருந்து வந்திருக்கிறது. தற்போது சுமார் 43 லட்சம் பேர் உள்ளனர். மால்டோவியர்களில் அநேகர், இந்நாட்டின் முக்கிய தொழிலான ஒயின் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறார்கள்; உலகமெங்கும் தயாரிக்கப்படுகின்ற ஒயின்களில் ஏறக்குறைய 3 சதவீதம் இங்கு தயாரிக்கப்படுகிறது. மால்டோவிய ஒயின்கள் குறிப்பாக ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பிரபலமானவை. (பக்கம் 71-⁠ல் உள்ள பெட்டியை காண்க.) ஆனால், இதைவிட சிறந்த திராட்சத் தோட்டம் மால்டோவாவுக்கு வளமூட்டியிருக்கிறது; அந்தத் தோட்டம் எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த கனியை, அதாவது யெகோவாவுக்கு இனிய துதியை விளைவிக்கிறது.

“நல்ல திராட்ச ரசத்தைத் தரும் திராட்சத் தோட்டம்”

ஆவிக்குரிய இஸ்ரவேலை “நல்ல திராட்ச ரசத்தைத் தரும் திராட்சத் தோட்டம்” என்பதாக ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா வர்ணித்தார். முன்னறிவித்தது போலவே, அடையாள அர்த்தமுள்ள திராட்சத் தோட்டமானது ஆரோக்கியமளிக்கும் ஆவிக்குரிய உணவை அளித்து ‘உலகத்தை தன் பலனால் நிரப்பியிருக்கிறது.’ (ஏசா. 27:2-6) இதன் விளைவாக, காலப்போக்கில் லட்சக்கணக்கான ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தோர், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களோடு ஒன்றிணைந்திருக்கிறார்கள்.​—யோவா. 10:16.

அந்த அருமையான தீர்க்கதரிசன நிறைவேற்றத்தில் பங்கு கொள்வதில், மால்டோவாவில் உள்ள யெகோவாவின் ஜனங்கள் பரவசம் அடைந்திருக்கிறார்கள். யெகோவாவின் அமைப்பு இடைவிடாமல் அளிக்கும் ஆவிக்குரிய உணவின் காரணமாக, இன்று மால்டோவாவில் 229 குடிமக்களுக்கு 1 பிரஸ்தாபி என்ற விகிதாச்சாரம் இருக்கிறது. சொல்லப்போனால், ஒரு கிராமத்தில், நான்கு நபர்களில் ஒருவர் யெகோவாவின் சாட்சியாக இருக்கிறார்.

ஆனால், நாம் பார்க்கப்போகும் விதமாக, கடும் சோதனைகளுக்குப் பிறகுதான் இத்தகைய வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 70 வருடங்களுக்கு, ருமேனிய மன்னர் ஆட்சியும், ஃபாசிஸ ஆட்சியும், கம்யூனிஸ ஆட்சியும் கடவுளுடைய ஜனங்களுக்கு தடை விதித்தன, துன்புறுத்தின, சிறையில் அடைத்தன. இருந்தாலும், மற்ற இடங்களைப் போலவே, மால்டோவாவிலும் ‘நல்ல திராட்ச ரசத்தைத் தரும் தம்முடைய ஆவிக்குரிய திராட்சத் தோட்டத்தைப்’ பற்றிய தீர்க்கதரிசன வார்த்தைகளை யெகோவா உண்மையாக்கி இருக்கிறார். ஏசாயா மூலம் அவர் இவ்வாறு சொன்னார்: “கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப் பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும் பகலும் காத்துக்கொள்வேன்.” (ஏசா. 27:2, 3) மால்டோவாவிலுள்ள யெகோவாவின் ஜனங்களுடைய சரித்திரத்தை நீங்கள் சிந்தித்துப் பார்க்கையில், யெகோவாவுக்கு துதி சேர்க்கின்ற விதத்தில் தொடர்ந்து அரும்பெரும் கனிகளை பிறப்பிக்க வேண்டும் என்ற உங்கள் தீர்மானம் பலப்படுவதாக; உங்களுடைய பாதையில் எதிராளியான சாத்தான் எப்பேர்ப்பட்ட இடைஞ்சல்களை வைத்தாலும் அவர்களுடைய தைரியமான முன்மாதிரியும் விசுவாசமும் உங்கள் தீர்மானத்தை பலப்படுத்துவதாக.

சகோதரர் ரஸல் ஆவிக்குரிய தோட்டத்தை பார்வையிடுகிறார்

ஒரு திராட்சக் கொடியிலுள்ள கனிதரும் கிளைகள் முதலில் சிறு முளைகளாகத்தான் துளிர்க்க ஆரம்பிக்கின்றன. அதைப் போலவே மால்டோவாவில் தோன்றிய ஆவிக்குரிய வளர்ச்சியும் இருந்தது. அந்த இளந்தளிரை, இன்று நாம் மால்டோவாவில் காண்கிறபடி, கனிதரும் உறுதியான திராட்சக் கொடியாக யெகோவா எப்படி ஆக்கினார் என்பதை பார்க்கலாம். (1 கொ. 3:6) நம்முடைய ஆராய்ச்சி, 19-⁠ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கு நம்மை பின்னோக்கி கொண்டு செல்கிறது; அதாவது பைபிள் மாணாக்கரான சார்ல்ஸ் டேஸ் ரஸல் தன் ஐரோப்பிய பயணத்தின்போது இந்த நாட்டுக்கு விஜயம் செய்த சமயத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

ஸயன்ஸ் உவாட்ச் டவர் அண்டு ஹெரால்டு ஆஃப் கிறைஸ்ட்ஸ் பிரசன்ஸ் என்ற பத்திரிகையின் 1891, செப்டம்பர் இதழில், யூத வழக்கறிஞரும் கிறிஸ்தவருமான ஜோஸஃப் ரபினோவிக் என்பவரை தான் சந்தித்தது பற்றி ரஸல் பின்வருமாறு எழுதினார்: “இதுவரை கிடைத்த அனுபவங்களிலேயே மிக மிக ஆர்வத்திற்குரிய ஒன்று சகோதரர் ஜோஸஃப் ரபினோவிக்கை ரஷ்யாவிலுள்ள கிஷினேவ்விலிருந்த [இப்போது, கீஷினாவ், மால்டோவா] அவருடைய வீட்டில் சந்தித்ததுதான். அவரும் அவருடைய குடும்பத்தாரும் அன்போடு எங்களை வரவேற்றார்கள்; அவர்களெல்லாரும் கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்தவர்கள். . . . உதயம் [ஆயிரமாண்டு உதயம் (ஆங்கிலம்)] என்ற புத்தக தொகுப்பிலிருந்த போதனைகளை ரபினோவிக் நன்கு அறிந்திருந்ததையும் அந்த போதனைகளை அவர் ஏற்றுக் கொண்டிருந்ததையும் நாங்கள் கண்டோம்.” சகோதரர் ரஸலும் ரபினோவிக்கும் தங்களுடைய பைபிள் கலந்தாலோசிப்பின்போது, அநேக வேதப்பூர்வ குறிப்புகளில் ஒத்துப்போனார்கள்; தன்னுடைய மால்டோவிய சிநேகிதனை “சகோதரர் ரபினோவிக்” என்று ரஸல் அழைத்ததிலிருந்தே இது நன்கு தெரிகிறது.

கீஷினாவ்வில் அப்போது 50,000-⁠க்கும் அதிகமான யூதர்கள் இருந்தனர்; இயேசுவையும் மேசியானிய நம்பிக்கையையும் அந்த யூதர்கள் ஏற்றுக்கொள்வதற்காக ரபினோவிக்கும் அவருடைய குடும்பத்தினரும் அவர்களுக்கு மும்முரமாக உதவியளித்து வந்தனர். ரபினோவிக்கின் வீட்டையும் ஆபீஸையும் தொட்டாற்போல “சுமார் நூற்று இருபத்தைந்து பேர் உட்கார முடிந்த புதிய, நேர்த்தியான ஒரு ஜெப வீடு” இருந்ததாக ரஸல் விவரித்தார். ரபினோவிக்கிடம் கையினால் இயக்கப்படும் புதிய அச்சு இயந்திரம் ஒன்று இருந்தது; அதைப் பயன்படுத்தி அவர் யூதர்களுக்கென்றே பிரத்தியேகமான துண்டுப்பிரதிகளை தயாரித்து அச்சிட்டார். சுமார் ஆறு வருடங்களுக்கு பின்னர், 1897-⁠ல், சகோதரர் ரஸலுக்கு ரபினோவிக் இவ்வாறு எழுதினார்: “பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய சகோதரர் ரஸல் அவர்களுக்கு: உங்களுடைய பெருமதிப்பிற்குரிய ஸயன்ஸ் உவாட்ச் டவர் பத்திரிகையை நான் தொடர்ந்து பெற்று வருகிறேன்; இந்தப் பத்திரிகைகள் மூலமாக எனக்கு ஆன்மீக இன்பத்தை நீங்கள் அளித்து வருகிறீர்கள்; ஆகவே, இந்த ஆண்டு முடியப்போகும் தறுவாயில், அந்தப் பத்திரிகைகளுக்காக உங்களுக்கு பெரிதும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தூர தேசத்திலிருந்து ஆன்மீக உணவை சுமந்து வரும் வணிகக் கப்பலைப் போல அவற்றை கருதுகிறேன்.” பைபிள் சத்தியத்தின் மீது இந்த யூதருக்கு அந்தளவு அன்பும் பக்தி வைராக்கியமும் இருந்தபோதிலும், 30 வருடங்களுக்கு பிறகுதான் மால்டோவாவில் ராஜ்ய விதை உறுதியாக வேரூன்றத் தொடங்கி, கனி கொடுக்க ஆரம்பித்தது.​—மத். 13:1-8, 18-23.

முதல் உலகப் போர் பலரை மனந்தளரச் செய்தது

முதல் உலகப் போரின்போது, ஐரோப்பாவில் திடீரென ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மால்டோவாவில் ராஜ்ய விதை வளருவதற்கு ஏதுவான வளமிக்க நிலத்தை உருவாக்கித் தந்தன. அந்த மகா யுத்தம்​—⁠அப்போது அது அப்படித்தான் அழைக்கப்பட்டது​—⁠முடிவுக்கு வந்தபோது, கம்யூனிஸக்காரர்கள் கைப்பற்றியிருந்த ரஷ்யாவிடமிருந்து மால்டோவா பிரிந்து, ருமேனியாவோடு இணைந்தது. அநேக மால்டோவிய போர்வீரர்கள் போரின் கோரக் காட்சிகளை கண்கூடாகப் பார்த்து மிகவும் மனந்தளர்ந்து வீடு திரும்பினார்கள். அவர்களில் பெரும்பாலோர் சிறுபிராயத்திலிருந்து ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிடம் அதிக பற்றுறுதியோடு இருந்து வந்தவர்கள். ஆனால் இப்போதோ அந்தச் சர்ச்சின் போதனைகளைக் குறித்து அவர்கள் மனதில் பல சந்தேகங்கள் எழ ஆரம்பித்தன.

அப்படிப்பட்ட நபர்களில் யான் ஆன்ட்ரோனிக் என்பவரும் ஒருவர்; தன் சொந்த ஊரான கோர்ஷெயூட்ஸுக்கு 1919-⁠ல் திரும்பி வந்தவர். இவர் போர்க் கைதியாக இருந்த சமயத்தில் அட்வன்ட்டிஸ்ட்களுடனும் பாப்டிஸ்ட்களுடனும் பேச்சுக் கொடுத்ததில் பைபிளைப் பற்றிய ஆவல் இவருக்கு அதிகரித்தது. சிறை முகாமிலிருந்து ஒரு பைபிளை வீட்டுக்கு எடுத்து வந்தார்; அதிலுள்ள விஷயங்களை தன் குடும்பத்தோடும், பக்கத்து வீட்டுக்காரர்களோடும் கலந்து பேசி அவர்களுடைய ஆர்வத்தையும் தூண்டினார்.

இலியா க்ரோஸா என்பவர் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்களில் ஒருவர். போர் நடந்த வருடங்களின்போது அவர் ஐக்கிய மாகாணங்களில் இருந்தார்; வீடு திரும்புகையில் பைபிளின் ‘புதிய ஏற்பாட்டின்’ ஒரு பிரதியையும் கையோடு எடுத்து வந்திருந்தார்; பல இடங்களுக்கு பிரயாணம் செய்த சமயத்தில் அதை வாங்கியிருந்தார். ஆன்ட்ரோனிக்கின் குடும்பத்தாரும் க்ரோஸாவின் குடும்பத்தாரும் மிக அன்யோன்யமாக இருந்ததால், கடவுளுடைய வார்த்தையை அவர்கள் ஒன்றுசேர்ந்து கலந்தாலோசிக்க ஆரம்பித்தார்கள். பைபிள் மாணாக்கரிடமிருந்து​—⁠யெகோவாவின் சாட்சிகள் அப்போது அப்படித்தான் அறியப்பட்டிருந்தார்கள்​—⁠பிரசுரங்களையும் வாங்கிப் படித்தார்கள்.

இலியா க்ரோஸாவின் மகள் யோவானா இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் குடும்பம் முதன்முதலில் பைபிள் மாணாக்கரிடமிருந்து பிரசுரங்களை பெற்றுக்கொண்டபோது எனக்கு ஆறு வயதுதான் இருக்குமென நினைக்கிறேன். அந்தப் பிரசுரங்களை எங்கிருந்து பெற்றுக்கொண்டோம் என்று சரியாக நினைவில்லை, ஆனால் அவற்றிலிருந்த தெளிவான வேதப்பூர்வ விளக்கங்களை என் பெற்றோரும் என் அக்காமாரும் படு ஆர்வத்துடன் கலந்தாலோசித்தது இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது.”

பிற்பாடு, யான் ஆன்ட்ரோனிக் யெகோவாவுக்கு தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்காமலேயே இருந்துவிட்டார். ஆனால் அவருடைய குடும்பத்தாரும் க்ரோஸா குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலானோரும் அவ்வாறு இருந்துவிடவில்லை. யோவானா சொல்கிறார்: “ஆரம்பத்தில், எங்கள் இரு குடும்பங்கள் மட்டும்தான் பைபிள் கூட்டங்களில் கலந்துகொண்டன. என் பெற்றோருக்கு நாங்கள் நான்கு பெண்கள், ஆன்ட்ரோனிக் குடும்பத்தில் நிறைய மகன்களும் மகள்களும் இருந்தனர். அவர்களில் ஒரு மகனான வாசிலெ ஆன்ட்ரோனிக்கிற்கும் என் அக்கா ஃபியோடோலினாவிற்கும் இடையே சீக்கிரத்திலேயே காதல் மலர்ந்தது, பிறகு அவர்கள் கல்யாணம் செய்துகொண்டனர்.

“கொஞ்ச காலத்திலேயே, எங்கள் தூரத்து சொந்தக்காரரான ட்யூடார் க்ரோஸா என்பவரும் அவர் மனைவி டாரியா க்ரோஸாவும் எங்கள் பைபிள் படிப்பு கூட்டத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். ட்யூடார் பைபிளை கற்றுக்கொள்வதில் படு ஆர்வம் காட்டினார். பிரசுரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும் பைபிளைப் பற்றி தனக்கிருந்த அநேக கேள்விகளுக்கான விடைகளை பெறுவதற்காகவும் அவர் ருமேனியாவின் க்ளுஜ்-நாப்போக்காவிலிருந்த கிளை அலுவலகத்திற்குக்கூட சென்றார். பின்னான வருடங்களின்போது, எங்கள் சின்ன சபைக்கு பலமான ஆன்மீக தூணாக விளங்கினார்.

“எங்கள் வீட்டில் நடந்த பைபிள் கலந்தாலோசிப்புகளின்போது, அதே ஏரியாவில் வசித்த யாக்கூபாய் குடும்பமும் கலந்து கொண்டது. அந்தக் குடும்ப தலைவரான பெட்ரூ யாக்கூபாய், பைபிள்களை விநியோகித்த ஒருவரை முன்பு ஒருமுறை அவருடைய வீட்டிற்கு அழைத்து உபசரித்திருந்தார். அந்த விருந்தாளி, பெட்ரூவின் மனதில் வேத வசனங்களைப் பற்றிய ஆர்வத்தை தூண்டிவிட்டிருந்தார். பாப்டிஸ்ட்களுடைய போதனைகளை பெட்ரூ சிறிது காலத்திற்கு ஆராய்ந்த பிறகு, சத்தியத்தை இனி வேறு இடத்தில்தான் தேட வேண்டுமென்ற முடிவுக்கு வந்திருந்தார். அந்த சமயத்தில்தான், எண்ணிக்கையில் பெருகி வந்த பைபிள் மாணாக்கர்களின் கூட்டத்தில் எங்களோடு வந்து கலந்துகொண்டார்.

“கற்றுவந்த காரியங்களால் மனம் உந்தப்பட்டவர்களாய், நாங்கள் எங்களுடைய எல்லா நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்​—⁠அவர்களில் பெரும்பாலோர் எங்கள் கிராமத்திலும் பக்கத்து கிராமங்களிலும் வசித்து வந்தார்கள்​—⁠ராஜ்ய நற்செய்தியை வைராக்கியமாக பிரசங்கித்தோம்.”

காவற்கோபுர பத்திரிகையின் 1921, டிசம்பர் 15 இதழில், மால்டோவாவில் ராஜ்ய செய்தி எந்தளவு விரைவாக பரவியது என்பதை வலியுறுத்திக் காட்டிய ஓர் அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது: “பெஸரேபியாவில், [மால்டோவாவின் அப்போதைய பெயர்] சமீப காலம் வரை ஒரு அட்வன்ட்டிஸ்ட் பிரசங்கியாக இருந்த ஒரு சகோதரர் இவ்வாறு எழுதுகிறார்: ‘இந்த கிராமத்திலும், சுற்று வட்டாரத்திலுள்ள அநேக கிராமங்களிலும் சுமார் 200 பேர் சத்தியத்தை ஏற்றிருக்கிறார்கள்.’”

1920-களின் ஆரம்பப் பகுதியில், ஷிரயூட்ஸ் என்ற கிராமத்திலிருந்த ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் அதிக ஈடுபாடு காட்டி வந்த இலாரியான் பூகாயான் என்பவர் சத்தியத்தின் அறிவை பெற்றுக்கொண்டார். இவர் சாகும்வரை யெகோவாவுக்கு உத்தமராக விளங்கினார். மொய்ஸா சோபானூ என்ற ஒரு பைபிள் மாணாக்கர் ஜெர்மனியிலிருந்து பல்ட்ஸ் என்ற நகருக்கு திரும்பினார். முதல் உலகப் போரின்போது, ஜெர்மனியிலுள்ள சிறையிலிருக்கையில் அவர் சத்தியத்தை கற்றிருந்தார். சீக்கிரத்திலேயே, பல்ட்ஸ் நகரில் ஒரு தொகுதி உருவானது, பிற்பாடு அதுவே அங்கு முதல் சபையானது.

ருமேனிய சாட்சிகள் கைகொடுக்கிறார்கள்

பிராந்தியத்தில் இன்னுமதிக வளர்ச்சி ஏற்படுவதற்காகவும் கடவுளுடைய ஜனங்களோடு கூட்டுறவு கொள்கிற புதியவர்களை பலப்படுத்துவதற்காகவும், 1920-களில் ருமேனிய கிளை அலுவலகம் தகுதி வாய்ந்த சகோதரர்களை மால்டோவாவுக்கு அனுப்பியது. அந்த ஆரம்ப கால சுவிசேஷகர்களில் ட்ரான்ஸில்வேன்யாவை சேர்ந்த வாசிலெ சூகாஷ் என்பவரும் ஒருவர். அவருக்கு ருமேனிய பாஷையும் ஹங்கேரி பாஷையும் பேசத் தெரிந்திருந்தது. வாசிலெ, கோர்ஷெயூட்ஸிலிருந்த புதிய சபைக்கு விஜயம் செய்யும்போதெல்லாம் இலியா க்ரோஸாவோடும் அவர் குடும்பத்தோடும்தான் தங்கினார். அந்த சந்திப்புகளை ஆசை ஆசையாக நினைத்துப் பார்க்கிறார் யோவானா: “எனக்கு அப்போது எட்டு வயது இருக்குமென நினைக்கிறேன், ஆனால் சகோதரர் சூகாஷ் வந்துபோன சமயங்கள் இன்னும் என் மனக்கண்ணை விட்டு நீங்கவில்லை. பாசத்தை பொழிவதில் உண்மையிலேயே அவருக்கு நிகர் அவர்தான்; அதுமட்டுமல்ல கேட்க கேட்க அலுக்காத சுவாரஸ்யமான கதைகளை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார், எங்களுக்கு படுக்கைக்குப் போகக்கூட மனசே வராது! அவர் பக்கத்தில் உட்காருவதற்கு நானும் என் அக்காவும் போட்டி போடுவோம்.”

ருமேனியாவிலிருந்து வந்திருந்த சாட்சிகளும் ஆர்வமிக்க உள்ளூர் பிரஸ்தாபிகளும் சேர்ந்து பக்கத்து கிராமங்களுக்கு சென்று நற்செய்தியை தொடர்ந்து பரப்பினார்கள். கோர்ஷெயூட்ஸிலிருந்து 11 கிலோமீட்டர் தூரமுள்ள டாபானி என்ற கிராமத்தில், காஸிமிர் சிஸ்லின்ஸ்கி என்பவர் பைபிளிலிருந்து தான் கற்றுக்கொண்ட அருமையான விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டார். ருமேனிய படையில் பணியாற்றிய காலத்தில் அவர் ராஜ்ய செய்தியை கேட்டிருந்தார். டாபானி கிராமத்தில், காஸிமிரின் பிரசங்கத்திற்கு, முதன்முதலாக நல்ல விதத்தில் பிரதிபலித்த ஆட்களில் டூமிட்ரூ கோரோபெட்ஸ் என்பவரும் ஒருவர்; அவர் உண்மையிலேயே உற்சாகமுள்ள பைபிள் மாணாக்கராக இருந்தார். டூமிட்ரூ மற்றும் அவரைப் போன்றவர்களின் வைராக்கியத்தினால்தான் 3,270 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் 475 யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள்.

1920-களில், ராஜ்ய செய்தி காராகூஷினி என்ற கிராமத்தையும் எட்டியது; இது கோர்ஷெயூட்ஸிலிருந்து 3-4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு முதன்முதல் சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்களில் வ்லாடிமிர் லுங்கூ என்பவரும் ஒருவர்; இவர் 1927-⁠ல் முழுக்காட்டப்பட்டார். தன்னுடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்காக பயங்கரமான துன்புறுத்தல்களை சகித்தார்; 2002-⁠ல் காலமானார்; கடைசிவரை யெகோவாவுக்கு உத்தமராக நிலைத்திருந்தார். தன் வாழ்நாள் காலத்தில், அந்தக் கிராமத்திலிருந்த எத்தனையோ பேர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டதை அவர் பார்த்திருந்தார்; 4,200 பேர் வசிக்கும் அந்த காராகூஷினி கிராமத்தில் இன்று, நால்வருக்கு ஒருவர் என்ற வீதத்தில் யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

ஆலெக்சான்ட்ரூ மிகிட்காவ் என்ற இன்னொரு சகோதரர், 1929-⁠ல், யாஷ் என்ற ருமேனிய நகருக்கு சென்றிருந்தபோது முதன்முதலில் சத்தியத்தை கற்றார். அவரது மகன் ஈவான் இப்படி சொல்கிறார்: “எங்கள் சொந்த ஊரான ஸாவூலுக்கு அப்பா திரும்பி வந்தவுடனேயே நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்; சீக்கிரத்திலேயே கிறிஸ்தவ கூட்டங்களை எங்கள் வீட்டில் நடத்தத் தொடங்கினோம்.”

ஈவான் தொடர்கிறார்: “ருமேனியாவிலிருந்த கிளை அலுவலகத்தோடு அப்பா எப்போதும் தொடர்பு வைத்திருந்தார்; அதுமட்டுமல்ல, ருமேனியாவிலிருந்து முதிர்ச்சி வாய்ந்த சகோதரர்கள் வந்து எங்களை அவ்வப்போது சந்திப்பார்கள். வருத்தகரமாக, 1931-⁠ல், அவர்கள் அப்படி எங்களை வந்து சந்தித்த சமயத்தில் குழந்தையாக இருந்த என் தங்கை மரித்துப்போனாள். எல்லாருக்கும் எங்கள் குடும்பத்தைப் பற்றி நன்கு தெரிந்திருந்ததால், ஏராளமான கிராமவாசிகள் சவ அடக்கத்தில் கலந்துகொண்டனர். ருமேனியாவிலிருந்து எங்களை சந்திக்க வந்திருந்த சகோதரர் வனிக்கா, சவ அடக்க பேச்சை கொடுத்தார். பைபிள் மாணாக்கர் கண்ணியமான விதத்தில் சவ அடக்க நிகழ்ச்சியை நடத்துவதில்லை என்று பாதிரிமார்கள் கிளப்பிவிட்டிருந்த புரளி பொய்யென்பதை பகிரங்கப்படுத்தி மிக அருமையாக அப்போது சாட்சி கொடுத்தார். அதுமட்டுமா, உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றிய தெளிவான விளக்கத்தை அளித்த அவரது பேச்சு, அங்கு கூடிவந்திருந்த சிலரது மனதில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. விரைவிலேயே, இவர்களும்கூட பைபிள் சத்தியத்திற்காக உறுதியான நிலைநிற்கையை எடுத்தார்கள்.

“சகோதரர் வனிக்கா கொடுத்த ஆவிக்குரிய உற்சாகம் எங்கள் குடும்பத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. உதாரணத்திற்கு, என் அண்ணன் டூமிட்ரூ, தான் ஒரு கோல்போர்ட்டர் (முழுநேர ஊழியர்) ஆக வேண்டுமென தீர்மானித்தார். எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு உதவுவதற்காக மால்டோவாவில் ஊழியம் செய்திராத இடங்களுக்குப் போய் பிரசங்கிப்பதற்காக சீக்கிரத்திலேயே வீட்டைவிட்டுப் புறப்பட்டார். அவருடைய தீர்மானத்திற்கு முழு மனதுடன் குடும்பமாக நாங்கள் ஆதரவு தெரிவித்தோம். ஆனால், என் அண்ணனின் பிரிவை என்னால் தாங்க முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். மறுபட்சத்தில், அவர் எங்களை சந்திக்க வந்தபோதெல்லாம், ஆச்சரியமும் அற்புதமுமான வெளி ஊழிய அனுபவங்களை சொல்லக் கேட்டு எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியடைந்தோம்!”

பாதிரிகளின் எதிர்ப்பு அதிகரிக்கிறது

ஆரம்பத்திலிருந்தே, ஆர்த்தடாக்ஸ் சர்ச் பாதிரிமார்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை எதிர்த்தார்கள். அவர்களுடைய சர்ச் அங்கத்தினர்கள் பைபிள் சத்தியத்தை கற்றுக்கொண்ட பின், சிலுவைக் குறி போடவும் தங்கள் குழந்தைகளுக்கு சர்ச்சில் ஞானஸ்நானம் கொடுக்கவும் மறுப்பதைப் பார்த்த பின்னரோ இன்னுமதிக கொதிப்படைந்தார்கள்.

யோவானா க்ரோஸாவுக்கு சுமார் பத்து வயதாக இருந்தபோது, உள்ளூரிலிருந்த ஒரு ஆர்த்தடாக்ஸ் சர்ச் பாதிரி, அவருடைய நம்பிக்கைகளை கைவிடும்படி வற்புறுத்தினார். க்ரோஸா சொல்கிறார்: “சிலுவைக் குறி போடுவது பைபிளுக்கு முரணானதென்று பிள்ளைகளான எங்களுக்கு அப்பா சொல்லித் தந்திருந்தார். ஆனால் பள்ளியிலிருந்த பாதிரியோ நாங்கள் சிலுவைக் குறியை போட்டே தீர வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார். அந்த ஆளைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருந்தது, அதே சமயத்தில் அப்பாவுக்கு பிடிக்காத மாதிரி நடந்துகொள்வதைக் குறித்தும் பயமாக இருந்தது. அதனால் பள்ளிக்குப் போவதற்கு பதிலாக, களஞ்சியத்தில் போய் ஒளிந்துகொள்வேன். இப்படி நான் பள்ளிக்கு மட்டம் போடுவது பல நாள் கழித்து அப்பாவுக்கு தெரிய வந்தது. என்றாலும், அவர் என்னை திட்டவில்லை; மாறாக நான் ஏன் அப்படி செய்தேன் என்பதை சொல்லும்படி அன்புடன் கேட்டார். அந்தப் பாதிரியைக் கண்டு நான் பயப்படுவதை அவரிடம் சொன்னபோது, நேராக அந்த ஆளின் வீட்டிற்கே அப்பா என் கையைப் பிடித்து கூட்டிச்சென்றார்.

“உறுதி தொனித்த குரலில் அப்பா அந்தப் பாதிரியிடம்: ‘என் மகளுக்கு வேண்டிய சாப்பாடு, துணிமணி, வீடு, இதெல்லாம் நீங்களா கொடுக்கறீங்க? அப்படி நீங்க கொடுத்திருந்தீங்கன்னா மத விஷயங்களில் அவ எப்படி நடந்துக்கணும்னு சொல்லித் தர்றதுக்கு உங்களுக்கு உரிமை இருந்திருக்கலாம். ஆனா அதையெல்லாம் நீங்க ஒன்னும் அவளுக்கு கொடுக்கறதில்ல, அதனால் என் மகளுக்கு நான் சொல்லித் தருகிற விஷயங்களில் இனிமே நீங்க தலையிடாதீங்க’ என்றாரே பார்க்கலாம்! அதற்குப் பிறகு, நான் ஸ்கூலில் இருந்த மீதி நாளெல்லாம் அந்தப் பாதிரி எனக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை.”

பொதுவாக, அந்தச் சமுதாயத்திலேயே பாதிரிமார்களுக்குத்தான் மிகுந்த செல்வாக்கு இருந்தது. இயேசுவின் நாளிலிருந்த மதத் தலைவர்களைப் போல, இவர்களும் யெகோவாவின் ஊழியர்களின் நற்பெயரை கெடுக்க தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தினார்கள்; எதற்காக? அப்படியாவது தங்கள் சர்ச் அங்கத்தினர்கள் யெகோவாவின் சாட்சிகளை வெறுத்து ஒதுக்கட்டும், அவர்களிடம் பேச பயப்படட்டும் என்பதற்காக. அரசியல் பகைமைகளை தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்வதே பாதிரிகளுக்கு பிடித்தமான ஒரு விஷயம். உதாரணத்திற்கு, சோவியத் யூனியனில் எல்லை முழுக்க இருந்த கம்யூனிஸக்காரர்களின் “அச்சுறுத்தலைக்” கண்டு மக்கள் அஞ்சி நடுங்கினார்கள், அவர்கள் மீது அவநம்பிக்கை கொண்டிருந்தார்கள். இந்த பயத்தை ஆர்த்தடாக்ஸ் பாதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பைபிள் மாணாக்கர்கள் கம்யூனிஸக்காரர்களாக இருப்பதால்தான் அவர்கள் சிலுவைக் குறி போட மறுக்கிறார்கள் என்ற அவதூறைப் பரப்பினார்கள்.

ஆனால், பாதிரிகளின் சதித்திட்டங்கள் அதோடு நின்றுவிடவில்லை. கடவுளுடைய மக்களை எதிர்க்கும்படி அரசாங்க அதிகாரிகளை தூண்டி விடுவதன் மூலமும் இவர்கள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்கள்; இதைப் போலவேதான் இயேசுவின் நாளிலிருந்த வேதபாரகரும் பரிசேயரும் செய்தார்கள்.​—யோவா. 18:28-30; 19:4-6, 12-16.

மால்டோவா 1918-லிருந்து 1940 வரையாக ருமேனியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது; அப்போது ருமேனியா முடியரசு நாடாக இருந்தது. இந்த ருமேனிய அரசாங்கம் மத உட்பிரிவுத்துறை அமைச்சர் ஒருவரை நியமித்தது; எல்லா விதமான மத விஷயங்கள் மீதும் அந்த அமைச்சருக்கு அதிகாரம் இருந்தது. ஆர்த்தடாக்ஸ் மதத்திற்கு அடிபணிந்த அந்த அமைச்சர் பைபிள் மாணாக்கரின் வேலையை எதிர்த்தார்; அதோடு அவர்களையும் அவர்களுடைய பைபிள் பிரசுரங்களையும் தடை செய்ய முற்பட்டார்; சகோதரர்கள் கம்யூனிஸக்காரர்களின் கூட்டாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்ததே அதற்குக் காரணம்.

யெகோவாவின் மக்கள் மீது அரசாங்கம் காட்டிய வெறுப்பின் காரணமாக மால்டோவாவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், தலைமை போலீஸ் ஆபீஸர் ஒருவருக்கு 1925, ஏப்ரல் 25 தேதியிட்ட அரசாங்க ஆணை ஒன்றை அனுப்பினார். அதில்: “போலீஸ் பாதுகாப்பு கட்டளை எண் 17274/925-⁠ன்படி, சர்வதேச ‘பைபிள் மாணாக்கர்களின்’ பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த உள்துறை அமைச்சரவை முடிவு செய்திருப்பதை உங்களுக்கு அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்; அதை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்” என்றிருந்தது.

இத்தகைய அரசாங்க எதிர்ப்பினால் சகோதரர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதை ருமேனிய கிளை அலுவலகம் உலக தலைமை அலுவலகத்திற்கு அக்டோபர் 17, 1927-⁠ல் அனுப்பிய ஓர் அறிக்கை தெளிவாக காட்டுகிறது. சபைக் கூட்டங்கள் நிறுத்தப்பட்டு தடை செய்யப்பட்டதென்றும், ‘இராணுவ மற்றும் உரிமையியல் நீதிமன்றத்திற்கு முன் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் ஆஜரானார்கள்’ என்றும் சுருக்கமாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. மேலும்: ‘கோடை காலத்தின்போது, சபைக் கூட்டங்களை நடத்துவதே அதிக கஷ்டமாக இருந்தது; ஏனென்றால், புலனாய்வு அதிகாரிகளும் போலீஸாரும், சபைகளை கண்காணித்து வந்தார்கள்; இன்னமும்​—⁠குறிப்பாக அநேக சபைகளிருக்கும் கிராமங்களில்​—⁠மிக உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள்; அதனால், கூட்டங்கள் பெரும்பாலும் காட்டுக்குள், பாதுகாப்பான மறைவிடங்களில் நடத்தப்படுகின்றன’ என்றும் அதில் இருந்தது.

அந்த அறிக்கை மேலும் இவ்வாறு தொடர்ந்தது: ‘மார்ச் மாதத்திலிருந்து, பயணக் கண்காணிகளின் வேலையும் நிறுத்தப்பட்டது. அதே மாதத்தில், கோல்போர்ட்டர்களை தேடிக் கண்டுபிடித்து அந்த எல்லா “பிரச்சாரக்காரர்களையும்” கைது செய்யச் சொல்லி உள்துறை அமைச்சர் கெடுபிடியான இரகசிய ஆணையையும் பிறப்பித்தார். குறுகிய காலத்திற்குள், கிட்டத்தட்ட எல்லா கோல்போர்ட்டர்களும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். இந்த நாட்டில் பிரசங்க வேலை ஆரம்பிக்கப்பட்டது முதற்கொண்டு எத்தனையோ எதிர்ப்புகளை சகித்திருந்த நாங்களும் சகோதரர்களும் இதைக் கண்டு அஞ்சவில்லையென்றாலும், இந்த தடவை எங்களை நசுக்கிப்போட பயங்கர கெடுபிடிகள் இருப்பதால் பிரசங்க வேலையில் பங்கு கொள்வது பெரும் சவாலாகவே இருக்கிறது.’

1920-களின் இறுதிப் பகுதியின்போது, தைரியமிக்க நபர்களும் குடும்பங்களும் தொடர்ந்து ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைவிட்டு விலகி, பைபிள் சத்தியத்திற்காக உறுதியான நிலைநிற்கை எடுத்து வந்தார்கள். 1928-⁠ல், ஒரு கிராமத்திலிருந்த பாதிரி தன் மேலதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் அந்த உண்மை பளிச்சிட்டது. ஷிரயூட்ஸ் கிராமத்திலிருந்த அந்தப் பாதிரியின் சர்ச்சை சேர்ந்த பெரியவர்கள், சிறியவர்கள் என மொத்தம் 43 பேரின் பெயர்கள் அந்த கடிதத்தில் இருந்தன. அதில்: “‘பைபிள் மாணாக்கர்கள்’ என்ற மதப் பிரிவினரின் பெயர் பட்டியலை இத்தோடு அனுப்பியுள்ளோம். என்னதான் பிரயாசப்பட்டாலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை, அவர்களுக்கு ஒரு சர்ச்சுகூட இல்லை. தனியார் வீடுகளில்தான் கூட்டம் நடத்துகிறார்கள்” என எழுதியிருந்தார்.

பார்க்கப் போனால், பைபிள் மாணாக்கருக்கு “வெற்றி கிடைக்கவில்லை” என்ற அந்தப் பாதிரியின் கூற்றை அவருடைய பெயர் பட்டியலே பொய்யென்று காட்டிக்கொடுத்தது; ஏனெனில், அந்த 43 பேரில் பெரும்பாலோர் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் முன்னாள் அங்கத்தினர்கள். அந்தப் பட்டியலில் கொடுக்கப்பட்ட பெயர்களில் ஆக்ரிப்பினா பார்பூட்ஸா என்ற சிறுமியின் பெயரும் இருந்தது; இவருக்கு இப்போது 80 வயது, இன்னமும் யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார்.

பொது இடங்களில் பிரசங்கிப்பது கடினமானபோது, சகோதரர்கள் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் முழு கவனம் செலுத்தினார்கள், விசேஷமாக தங்கள் உற்றார் உறவினர்களுக்கு சாட்சி கொடுப்பதில் கவனம் செலுத்தினார்கள். அந்தக் காலத்திலெல்லாம் உறவினர்கள் நிறைய நேரம் ஒன்றுசேர்ந்து பொழுதைக் கழிப்பார்கள். சகோதரர்கள், இந்த வழக்கத்தை பயன்படுத்தி தங்கள் உறவினர்களிடம் நற்செய்தியை பகிர்ந்து கொண்டார்கள். குடும்ப அங்கத்தினர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதை எந்தச் சட்டமும் தடை செய்ய முடியாதே!

பிரசங்க வேலையை சட்டப்பூர்வமாக்க முயற்சிகள்

1925-⁠ல் பிரசங்க வேலை தடை செய்யப்பட்ட பிறகு, ருமேனியா, க்ளுஜ்-நாப்போக்காவிலுள்ள கிளை அலுவலகத்திலிருந்த சகோதரர்கள் 50-பக்க அறிக்கை ஒன்றை டைப் செய்து, மத உட்பிரிவுத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தார்கள். அதில் நம்முடைய போதனைகளையும் நம்பிக்கைகளையும் பற்றி சுருக்கமாக குறிப்பிட்டிருந்ததுடன், தடையுத்தரவை நீக்கும்படியான கோரிக்கை மனுவையும் சேர்த்திருந்தார்கள். அதன்பின் 1927, செப்டம்பர் மாதத்தில் மூன்று வெவ்வேறு சமயங்களில் அந்த அமைச்சரை சந்தித்துப் பேச சகோதரர்களில் ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடைசி சந்திப்பின் முடிவில், வணக்க சுதந்திரத்தின் சார்பாக அந்தச் சட்டம் மாற்றப்படும் என்ற நம்பிக்கையோடு அவர் விடைபெற்று வந்தார். ஆனால், வருத்தகரமாக, சகோதரர்களின் மனுவை அரசாங்கம் தள்ளுபடி செய்தது. சொல்லப்போனால், அதிகாரிகள் சட்டங்களின் உதவியுடன் யெகோவாவின் மக்களுடைய நிலைமையை மேம்படுத்துவதற்கு பதிலாக, நிலைமையை இன்னும் மோசமாக்கி அதிகப்படியான தொந்தரவுகளைத்தான் அவர்களுக்கு கொடுத்தார்கள். (சங். 94:20; தானி. 6:5-9) இதன் சம்பந்தமாக, சர்வதேச பைபிள் மாணாக்கர்களின் “எல்லா விதமான செயல்களும் முழுக்க முழுக்க தடை செய்யப்பட்டிருக்கின்றன” என்று மே 29, 1932 என தேதியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் ஒன்று குறிப்பிட்டது.

என்றாலும், ருமேனியா மற்றும் மால்டோவாவிலுள்ள கடவுளுடைய மக்களுக்கு எதிரான இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எதிரிகள் ஒன்றுசேர்ந்து ஐக்கியத்தோடு எடுக்கவில்லை. உள்ளூர் அரசாங்கங்களும் அதிகாரிகளும் பைபிள் மாணாக்கர்கள் சம்பந்தமாக தாங்களே ஓரளவுக்கு தீர்மானங்களை எடுத்தார்கள். சகோதரர்கள், “நற்செய்திக்காக வழக்காடி அதை” அவர்களுடைய உள்ளூர் பிராந்தியங்களிலாவது ‘நிலைநாட்டுவதற்கு’ அந்த அதிகாரிகளை அணுகினார்கள்.​—பிலி. 1:7, பொது மொழிபெயர்ப்பு.

இப்படி செய்தது சில இடங்களில் பலனளித்தது. ருமேனிய கிளை அலுவலகம் க்ளுஜ்-நாப்போக்காவிலிருந்து புகாரெஸ்ட்டுக்கு மாற்றப்பட்ட பிறகு அவ்வாறே பலன் கிடைத்தது. நீண்ட கால போராட்டத்திற்குப் பின், கடைசியில் 1933-⁠ல், புகாரெஸ்ட்டில் யெகோவாவின் சாட்சிகளது பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டிக்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை கிளை அலுவலகம் பெற்றது.

பெரிய பெரிய நீதிபதிகள்கூட கடவுளுடைய மக்கள் மீது சுமத்தப்பட்டிருந்த தடைகளை தாங்கள் ஆமோதிக்காததை பகிரங்கமாக அறிவித்தது சுவாரஸ்யமான விஷயம். உதாரணத்திற்கு, யெகோவாவின் சாட்சிகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு சட்ட விரோதமானதென்று மே 8, 1935-⁠ல், க்ளுஜ்-நாப்போக்காவிலிருந்த மேல்முறையீட்டு நீதிமன்றம் தைரியமாக தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பில் மேலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “கைப்பற்றப்பட்ட சிறு புத்தகங்கள் [யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை] ஒருவருக்கொருவரிடம் உள்ள அன்பை தூண்டிவிடுகின்றன, அதோடு கடவுள் மீதும் கிறிஸ்துவின் மீதும் நம்பிக்கையை வளர்க்கின்றன. ஆகவே, அரசாங்கத்தை கவிழ்க்கக்கூடிய எந்தவொரு குணாம்சமும் இச்சிறு புத்தகங்களில் இருப்பதாக சொல்வது சரியல்ல; இவை தேசத்தின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவதில்லை.”

நியாயமான தீர்ப்பு அடிபட்டுப் போனது

என்றபோதிலும், அதிகாரிகள் கடவுளுடைய மக்களின் வேலையை பொதுவாய் எதிர்த்தவாறே இருந்தார்கள். உதாரணத்திற்கு, மால்டோவாவிலுள்ள ஸராக்கா என்ற ஊரின் பாதுகாப்பு அலுவலக முதல்வர், மார்ச் 28, 1934-⁠ல், தன்னுடைய மேலதிகாரியான கீஷினாவ்விலிருந்த வட்டார போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கடிதம் மூலம் இவ்வாறு முறையிட்டார்: 1927-⁠ல், ஸராக்காவுக்கு பக்கத்திலுள்ள ஒரு கிராமத்தில் “இரண்டு குடும்பத்தினர் மட்டுமே இந்த மத உட்பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தனர், ஆனால் இன்னும் 33 குடும்பங்களை . . . அவர்கள் மதம் மாற்றியுள்ளார்கள்.” யெகோவாவின் சாட்சிகள் “சர்ச்சையும்” அதன் “மத பாரம்பரியங்களையும் வழக்கங்களையும் நிராகரிக்கிறார்கள்” என்றும், “பாதிரிகளை பூசை செய்யச் சொல்வதற்கு பதிலாக அவர்களே சொந்தமாக ஒரு வணக்கமுறையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்” என்றும் எழுதினார். தன் கடிதத்தின் முடிவில்: “[யெகோவாவின் சாட்சிகள்] தொடர்ந்து புதிது புதிதாக நிறைய பேரை மதம் மாற்றி வருகிறார்கள், இதனால் தேசத்தின் பாதுகாப்பும் ஒழுங்கும் குலைக்கப்படும் அபாயம் இருக்கிறது” என்று எழுதினார்.

சட்ட விரோதமான மத உட்பிரிவுகளின் பெயர் பட்டியலிலிருந்து தங்கள் பெயரை நீக்க வேண்டுமென கோரி, ஸராக்கா மாவட்டத்தைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் மே 6, 1937-⁠ல், அதே மாவட்டத்தின் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். ஸராக்கா மாவட்டத்தின் முதல்வர் அந்த மாவட்ட அதிகாரிக்கு எழுதிய ஒரு கடிதம் அரசாங்கத்தின் பிரதிபலிப்பை தெளிவுபடுத்தியது. ஜூன் 15, 1937 தேதியிடப்பட்ட அந்தக் கடிதம் இவ்வாறு சொன்னது: “மத உட்பிரிவு மற்றும் கலைத்துறை அமைச்சரவை . . . [யெகோவாவின் சாட்சிகளது] வேலையை தடை செய்திருக்கிறது. ஆகவே, [சட்ட விரோதமான] மத உட்பிரிவுகளின் பெயர் பட்டியலிலிருந்து தங்கள் பெயரை நீக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியாது, ஏனெனில் அவர்கள் இன்னும் அந்த மத உட்பிரிவை முன்னேற்றுவிக்க மும்முரமாக உழைத்து வருகிறார்கள்.”

அந்தப் பகைமையான நிலைநிற்கையை ஆமோதிக்கும் விதத்தில் ஜூலை 12, 1939 தேதியிட்ட மோனிடோரூல் ஆஃபிசியால் என்ற அதிகாரப்பூர்வ அரசாங்க பத்திரிகை, யெகோவாவின் சாட்சிகளுக்கும் அவர்கள் பயன்படுத்துகிற அனைத்து சட்டப்பூர்வ நிறுவனங்களுக்கும் “முழுக்க முழுக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என சொன்னது. முன்னர் குறிப்பிட்டபடி, மால்டோவா அப்போது ருமேனிய பேரரசின் கீழிருந்தது; இது கிழக்கு ஆர்த்தடாக்ஸ் நாடாகவும் முடியரசு நாடாகவும் இருந்தது. அநேக அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளை தடை செய்தும் திருப்திப்படவில்லை, அவர்களை கொடூரமாக நடத்தும்படி மதத்தின் மீதிருந்த வெறுப்பு அந்த அதிகாரிகளைத் தூண்டியது.

அதிகாரிகள் மூர்க்கமடைகிறார்கள்

பிரசங்க வேலைக்கான எதிர்ப்பு கொழுந்துவிட்டு எரிவதற்கு ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை தீவிரமாக ஆதரிக்கும் அதிகாரிகளின் மத வெறுப்புதான் பெரும்பாலும் காரணமாக இருந்ததென்பதை டூமிட்ரூ கோரோபெட்ஸ் மற்றும் காஸிமிர் சிஸ்லின்ஸ்கி என்பவர்களின் அனுபவம் காட்டுகிறது. டூமிட்ரூவும் கஸிமிரும் டாபானி என்ற கிராமத்திலிருந்தபோது முதன்முதலில் பைபிள் சத்தியத்தை கற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய நற்பண்புகளாலும் ஊழியத்தில் காட்டிய வைராக்கியத்தாலும் விரைவிலேயே எல்லாருக்கும் நன்கு பரிச்சயமானார்கள்; அதோடு சகோதரர்களின் நேசத்தையும் சம்பாதித்தார்கள். பிற்பாடு, 1936-⁠ல், அவர்கள் கைது செய்யப்பட்டு கட்டீன் என்ற ஊரிலிருந்த (இப்போது உக்ரைனில் இருக்கிறது) போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போகப்பட்டார்கள்.

முதலில், போலீஸார் டூமிட்ரூவையும் கஸிமிரையும் மூர்க்கத்தனமாக அடித்தார்கள். பிறகு, சிலுவைக் குறி போடச் சொல்லி அவர்களை கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், தொடர்ச்சியாக அடிவாங்கிக் கொண்டிருந்தாலும் அந்த இருவரும் உறுதியோடு இருந்தார்கள். கடைசியில், போலீஸார் தங்கள் முயற்சியை கைவிட்டார்கள். அவ்விருவரையும் வீட்டுக்குப் போகவும் அனுமதித்தார்கள். ஆனால், விசுவாசமிக்க அந்த இரு சகோதரர்களும் அனுபவித்த சோதனைகள் அத்தோடு முடிந்து விடவில்லை. ஃபாசிஸ ஆட்சியிலும் கம்யூனிஸ ஆட்சியிலும், நற்செய்தியின் நிமித்தம் அவர்கள் மேலும் பல உபத்திரவங்களை சகிக்க வேண்டியிருந்தது. 1976-⁠ன் முற்பகுதியிலேயே ரஷ்யாவிலுள்ள டோம்ஸ்க் என்ற நகரிலிருந்தபோது டூமிட்ரூ காலமானார். காஸிமிர், மால்டோவாவில் இருந்தபோது நவம்பர் 1990-⁠ல் காலமானார்.

1930-களில், மால்டோவாவில் நடந்த பிரசங்க வேலையை ருமேனிய கிளை அலுவலகம் மேற்பார்வை செய்தது. 1922-⁠ல் முழுக்காட்டுதல் பெற்ற மார்ட்டின் மஜராஷி என்பவர் அப்போது கிளை அலுவலக ஊழியராக இருந்தார். சகோதரர்கள் படும் பாடுகளை கருத்தில்கொண்டு, அவர்கள் மீதிருந்த அன்பான அக்கறையினால் இவரும் இவருடைய மருமகனான பாம்ஃபில் ஆல்பூவும் வட மால்டோவாவில் இருந்த சபைகளை சந்தித்து அங்குள்ள கடவுளுடைய மக்களை திடப்படுத்தி ஊக்கமூட்டினார்கள். அந்த சந்திப்புகள் காலத்துக்கேற்றவையாக நிரூபிக்கவிருந்தன என்பதில் துளியும் சந்தேகமில்லை! ஏன் அவ்வாறு சொல்லலாம்? ஏனெனில், ஐரோப்பா சீக்கிரத்திலேயே இரண்டாம் உலகப் போரின் மையமாக ஆக இருந்தது. அதோடு, வல்லமைமிக்க அயல் நாட்டு எதிராளிகள் மால்டோவாவை தங்கள் வசமாக்கிக்கொள்ள பெரிதும் விரும்பியதால், அவர்கள் கைகளில் மால்டோவா தொடர்ச்சியாக மாறி மாறி சிக்கிக்கொள்ள இருந்தது.

இரண்டாம் உலகப் போரில் சின்னாபின்னமான ஐரோப்பா

ஆகஸ்ட் 23, 1939-⁠ல், சோவியத் யூனியனும் ஜெர்மனியின் நாசி அரசாங்கமும் அனாக்கிரமிப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. ஒரு வாரம் கழித்து, செப்டம்பர் 1, 1939-⁠ல், போலந்து மீது ஜெர்மனி படையெடுத்து, இரண்டாம் உலகப் போரை முடுக்கிவிட்டது. பிறகு, ஜூன் 26, 1940-⁠ல், பெஸரேபியா என அப்போது அழைக்கப்பட்ட இடத்தை ருமேனிய அரசாங்கம் சோவியத் யூனியனிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டுமென சோவியத்தின் வெளியுறவு அமைச்சரான வ்யிகிஸ்லாஃப் மாலடாஃப் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கைக்கு ருமேனியா அடிபணிந்தது; ஆகவே, ஜூன் 28, 1940-⁠ல், சோவியத் துருப்புகள் மால்டோவாவுக்குள் நுழைந்தன. ஆகஸ்ட் 1940-⁠ல், சோவியத் நாட்டவர் மால்டேவியன் SSR-ஐ உருவாக்கி, கீஷினாவ்வை அதன் தலைநகரமாக்கினர்.

என்றாலும், கொஞ்ச காலத்திற்கு மட்டுமே மால்டோவா சோவியத்தின் பிடியில் இருந்தது. 1939-⁠ம் ஆண்டில் செய்யப்பட்ட அனாக்கிரமிப்பு ஒப்பந்தத்தை மீறி, ஜூன் 22, 1941-⁠ல் ரஷ்யாவின் மீது ஜெர்மனி படையெடுத்தது. இந்த திடீர் திருப்பங்களை ருமேனியா தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தான் ஜெர்மனியை ஆதரிப்பதாக பிரகடனம் செய்தது. அதோடு மால்டேவியன் SSR-ஐ சோவியத்தினிடமிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ள முயன்றது.

இந்தத் திட்டம் வெற்றியடைந்தது; ஏனெனில், 1941, ஜூலை 26-⁠க்குள்ளாக, ருமேனிய படை ரஷ்யர்களை நீஸ்டர் நதிக்கு அப்பால் துரத்தியடித்திருந்தது. இவ்வாறு, ஒரு வருடத்திற்கும் சற்று அதிகமாக சோவியத் ஆட்சியின் கீழ் இருந்த மால்டோவா மறுபடியும் ருமேனிய ஆட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. என்றாலும், இந்த முறை ருமேனியா, செப்டம்பர் 1940-⁠லிருந்து படு தீவிர தேசியத்தைத் தூண்டும் ஃபாசிஸ அரசாங்கத்தினால் ஆட்சி செய்யப்பட்டது; சர்வாதிகாரியான ஜெனரல் யான் அன்டனெஸ்கு அதற்கு தலைமை வகித்தார். அவருடைய சர்வாதிகார ஆட்சி, அரசியலில் நடுநிலை வகித்த கடவுளுடைய ராஜ்யத்தின் பற்றுறுதியுள்ள ஆதரவாளர்களை சகித்துக்கொள்ளவில்லை.

ஃபாசிஸ ஆட்சியின்கீழ் கடுஞ்சோதனை

சீக்கிரத்திலேயே, அன்டனெஸ்குவின் ஃபாசிஸ ஆட்சி, ஹிட்லரோடும் அச்சு நாடுகளோடும் கூட்டுச்சேர்ந்து கொண்டு யெகோவாவின் சாட்சிகளை துன்புறுத்தியது. 1919-⁠ல் பிறந்த ஆன்ட்டான் புவென்டெயாவின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு டீனேஜராக இருந்தபோது சத்தியத்தை கற்றார்; வீட்டுக்கு வீடு ஊழியத்தை வைராக்கியமாக செய்து வந்தார். அவர் ஒரு ருமேனிய குடிமகனாக இருந்ததால், தன்னுடைய விசுவாசத்தைப் பற்றி பேச தனக்கு உரிமை இருக்கிறதென்று தைரியமாகவும் உறுதியோடும் சொல்லி சொல்லியே நிறைய முறை அடிவாங்காமல் தப்பித்துக்கொண்டார்; கொஞ்ச காலத்திற்கு சரீரப்பிரகாரமாக வதைக்கப்படுவதிலிருந்து எப்படியோ தப்பித்துக்கொண்டாலும் கடைசியில் போலீஸாரிடம் மாட்டிக்கொண்டார். ஃபாசிஸ அதிகாரிகள் அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு தர தரவென்று இழுத்துக்கொண்டு போய், இரா முழுக்க அடித்து நொறுக்கினர்; பிறகு, ஆச்சரியகரமாக அவரை விடுதலை செய்தனர். சகோதரர் புவென்டெயாவுக்கு இப்போது 84 வயதாகிறது, யெகோவாவுக்கு உத்தமமாய் நடக்க இன்னமும் உறுதியோடு இருக்கிறார்.

உண்மைப் பற்றுறுதியோடிருந்த இன்னொரு நபர், பார்ஃபின் பாலாமார்சூக்; இவர் மால்டோவாவில் இருக்கும்போது, 1920-களில் பைபிள் சத்தியத்தை கற்றார். இவரும்கூட நற்செய்தியை வைராக்கியமாக பிரசங்கித்தார், அதற்காக அடிக்கடி வாரக்கணக்கில் வீட்டைவிட்டு நகரங்களிலும் கிராமங்களிலும் பிரசங்கிப்பதற்காக உக்ரைனிலுள்ள செர்னோவ்ட்ஸி தொடங்கி லவோவ் வரையிலும் சென்றார். பார்ஃபின் இராணுவத்தில் சேர மறுத்ததால், 1942-⁠ல், ஃபாசிஸ ஆட்கள் அவரை கைது செய்து, செர்னோவ்ட்ஸியில் இராணுவ விசாரணை நடத்தினார்கள்.

அன்று நடந்ததைப் பற்றி பார்ஃபினின் மகன் நிக்காலை இவ்வாறு சொல்கிறார்: “இந்த இராணுவ நீதிமன்றம் மொத்தம் 100 சகோதரர்களுக்கு மரண தண்டனை தீர்ப்பளித்தது. இந்த தண்டனைத் தீர்ப்பை உடனடியாக நிறைவேற்றும்படியும் சொல்லியது. அந்த அதிகாரிகள் எல்லா சகோதரர்களையும் ஒன்றாக நிற்க வைத்து, சுட்டுக்கொல்வதற்காக பத்துப் பேரை முதலில் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், அதற்கு முன், இந்த பத்துப் பேரையும் தங்கள் சவக்குழிகளை தாங்களே தோண்டும்படி செய்தார்கள்; மற்ற 90 பேரும் அதைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருந்தது. என்றாலும், சகோதரர்களை சுடுவதற்கு முன், விசுவாசத்தை மறுதலித்து இராணுவத்தில் சேருவதற்கு மறுபடியும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பளித்தார்கள். இருவர் இணங்கிவிட்டார்கள். மற்ற எட்டு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பிறகு, மற்றொரு பத்துப் பேர் வரிசையாக நிற்க வைக்கப்பட்டார்கள். ஆனால், கொல்லப்படுவதற்கு முன், இவர்கள் இறந்துபோனவர்களை புதைக்க வேண்டியிருந்தது.

“அந்த சகோதரர்கள் சவக்குழிகளை மூடிக்கொண்டிருந்தபோது, உயர் அதிகாரி ஒருவர் அங்கு வந்தார். யெகோவாவின் சாட்சிகளில் எத்தனை பேர் தங்கள் மனதை மாற்றியிருந்தார்கள் என கேட்டார். இருவர் மட்டுமே என்று அவரிடம் சொல்லப்பட்டபோது, அப்படியானால், 20 பேர் இராணுவத்தில் சேருவதற்காக 80 பேர் மரிக்க வேண்டியிருந்தால், அதைவிட மீதியிருக்கும் 92 பேரை கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்புவதே அதிக லாபமானதென்று குறிப்பிட்டார். இதன் காரணமாக, மரண தண்டனைத் தீர்ப்பைக் குறைத்து, அதற்குப் பதிலாக கட்டாய உழைப்பு முகாம்களில் 25 வருடம் வேலை செய்ய வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. என்றாலும், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், படையெடுத்து வந்த சோவியத் துருப்பு, ருமேனிய முகாம்களிலிருந்து யெகோவாவின் சாட்சிகளை விடுவித்தது. இத்தகைய கடும் சோதனைகளிலிருந்தும், அதைவிட அதிகப்படியான சோதனைகளிலிருந்தும் என் அப்பா உயிர்தப்பினார். 1984-⁠ல் மரிக்கும் வரையில் யெகோவாவுக்கு உத்தமமாக நிலைத்திருந்தார்.”

ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுடன் ஒத்துப்போகாதது ஒரு குற்றம்!

வாசிலெ கெர்மான் மணமான வாலிபர். டிசம்பர் 1942-⁠ல், ஃபாசிஸ ஆட்கள் அவரை கைது செய்த சமயத்தில்தான் அவர் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. இரண்டு குற்றங்களை செய்ததாக வாசிலெ மீது குற்றம் சுமத்தப்பட்டது​—⁠ஒன்று, இராணுவத்தில் சேர மறுத்தது; இரண்டாவது, தன் மகளுக்கு ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் ஞானஸ்நானம் கொடுக்காதது. நடந்ததை அவர் கூறுகிறார்: “பிப்ரவரி 1943-⁠ல், என்மீது தொடரப்பட்ட வழக்கு, விசுவாசமுள்ள மற்ற 69 சகோதரர்களுடைய வழக்கோடு சேர்த்து, செர்னோவ்ட்ஸியிலிருந்த இராணுவ கோர்ட்டில் விசாரிக்கப்படவிருந்தது. தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு முன், ஆறு குற்றவாளிகள் படுகொலை செய்யப்படுவதை நாங்கள் நேருக்குநேர் பார்க்கும்படி அதிகாரிகள் எங்களை பலவந்தப்படுத்தினார்கள். அதனால், இனி அடுத்து நிச்சயமாய் எங்களையும் கொல்லப் போகிறார்கள் என நினைத்தோம்.

“இதைப் பற்றி எங்களுக்குள்ளே கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தோம், அதாவது விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருந்து, அந்த சோதனை முடிவுறும் வரைக்கும் மகிழ்ச்சியான மனநிலையோடு இருப்பதற்கு கடும் முயற்சி எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். யெகோவாவின் உதவியோடு எங்களால் அப்படி இருக்க முடிந்தது. எதிர்பார்த்தபடியே, எங்கள் 70 பேருக்கும் மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது; நீதியின் நிமித்தம்தான் அவ்வாறு துன்பப்படுகிறோம் என்றே அச்சமயத்தில் எங்களுக்குப் பட்டது. நாங்கள் யாருமே மனம் தளரவில்லை; இதைப் பார்த்த எதிராளிகள் இன்னும் எரிச்சலடைந்தார்கள். அதன் பிறகு ஆச்சரியமான ஒன்று நடந்தது. மரண தண்டனைக்கு பதிலாக, ருமேனியாவிலுள்ள ஆயூட் என்ற ஊரிலிருந்த முகாமில் 25 வருடங்களுக்கு கட்டாய உழைப்பு முகாமில் வேலை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தீர்ப்பு வழங்கினார்கள். ஆனால், அந்தத் தீர்ப்புகூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை; ஏனென்றால், சரியாக 18 மாதங்கள் கழித்து, ஆகஸ்ட் 1944-⁠ல், படையெடுத்து வந்த சோவியத் துருப்பு முகாமிலிருந்தவர்களை விடுவித்தது.”

1942-⁠ல் ஜெனரல் அன்டனெஸ்குவின் படையில் பணிபுரிவதற்காக, மால்டோவாவிலுள்ள ஷிரயூட்ஸ் என்ற கிராமத்திலிருந்து சுமார் 800 பேரை ஃபாசிஸ ஆட்கள் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களில், நிக்கோலை ஆனிஸ்கெவிச் என்பவர் உட்பட ஏராளமான யெகோவாவின் சாட்சிகளும் இருந்தார்கள். நிக்கோலை இவ்வாறு சொன்னார்: “வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் ஒரு மத சடங்கில் நாங்கள் பங்குகொள்ள வேண்டுமென்று போலீஸார் கட்டளையிட்டார்கள். ஆனால், சாட்சிகளான நாங்கள் அதில் பங்குகொள்ள மறுத்தோம். ஆயுதங்களையும் தொட மறுத்தோம். அதனால், கம்யூனிஸவாதிகள் என பழிசுமத்தி எங்களை கைது செய்தார்கள். என்றாலும், சிறையில் அடைப்பதற்கு முன், எல்லார் முன்பாகவும் எங்களுடைய நடுநிலைமைக்கான காரணத்தை விளக்க அனுமதித்தார்கள்.

“அந்த மாவட்டத்தில் நீதித்துறையின் மையமாக இருந்த ப்ரிசெனி என்ற ஊருக்கு அடுத்த நாள் எங்களை மாற்றினார்கள். இங்கு நாங்கள் போட்டிருந்த துணிமணிகளையெல்லாம் அவிழ்த்து முழுவதுமாக சோதித்தார்கள். உயர் இராணுவ அதிகாரியாயிருந்த பாதிரி ஒருவர் எங்களை விசாரிக்க ஆரம்பித்தார். அவர் தயவாக நடந்துகொண்டார், இராணுவத்தில் சேர மறுக்கும் எங்கள் நிலைநிற்கையை புரிந்துகொண்டார்; அதுமட்டுமல்ல உணவுக்காக ஏற்பாடும் செய்தார். அதையெல்லாம்விட, இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையினால்தான் யெகோவாவின் சாட்சிகள் ஆயுதங்களை ஏந்த மறுக்கிறார்கள் எனவும் எழுதிக்கொடுத்தார்.

“ப்ரிசெனியிலிருந்து லிப்கானி என்ற ஊரிலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு எங்களை கொண்டு போனார்கள். அங்கு போலீஸார் எங்களை ஈவிரக்கமில்லாமல் அடித்துக்கொண்டே இருந்தார்கள்​—⁠இருட்டின பிறகும்கூட. அதன் பின் எங்களை சிறையில் தள்ளினார்கள்; அந்தச் சிறையில் வேறு இரண்டு சகோதரர்களும் இருந்தார்கள், அவர்களோடு ஒரு பெண்ணும் இருந்தது ஆச்சரியமாக இருந்தது; அவள் ஓர் உளவாளியாக இருந்தது பிற்பாடு தெரிய வந்தது. நாட்கணக்காக தினந்தோறும் அடிக்கப்பட்டோம். கடைசியில், செர்னோவ்ட்ஸியில் இராணுவ விசாரணைக்காக அனுப்பப்பட்டேன். அங்கு எனக்காக வாதாட ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார்; அவர் எனக்கு ரொம்பவே உதவி செய்தார். நான் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டிருந்ததால் என் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததைப் பார்த்த இராணுவ அதிகாரிகள் நான் இறந்து போய்விடுவேனோ என நினைத்தார்கள். கடைசியில், எந்தத் தண்டனையும் வழங்காமல் என்னை வீட்டுக்கே அனுப்பிவிட தீர்மானித்தார்கள்.”

தைரியமிக்க சகோதரிகள் உத்தமத்தை காத்துக் கொள்கின்றனர்

ஃபாசிஸ ஆட்சியின் கோபக்கனல் சகோதரிகளையும் பொசுக்கித் தள்ளியது. அவர்களில் ஒருவர் மாரியா கெர்மான் (இவர் வாசிலெ கெர்மானுக்கு சொந்தமல்ல, ஆனால் அதே சபையை சேர்ந்தவர்). இவர் 1943-⁠ல், கைது செய்யப்பட்டு, பாலாசினிஷ்டியிலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டார். நடந்ததை அவர் கூறுகிறார்: “நான் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்குப் போக மறுத்ததால் போலீஸார் என்னை கைது செய்தார்கள். முதலில், மால்டோவாவிலுள்ள லிப்கானிக்கு என்னை மாற்றினார்கள், பிறகு உக்ரைனிலுள்ள செர்னோவ்ட்ஸிக்கு மாற்றினார்கள்; இங்குதான் எனக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

“என்ன காரணத்திற்காக நான் சர்ச்சுக்குப் போக மறுத்தேன் என்று நீதிபதி என்னிடம் கேட்டார். யெகோவாவை மட்டுமே நான் வணங்கி வருவதாக அவரிடம் சொன்னேன். இந்தக் ‘குற்றத்திற்காக’ எனக்கும் வேறு 20 சகோதரிகளுக்கும் 20 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே 30 பேர் அடைக்கப்பட்டிருந்த மிகச் சிறிய சிறைக்குள் எங்களில் சிலரைப் போட்டு பூட்டினார்கள். ஆனால், காலை நேரங்களில், வீட்டு வேலை செய்வதற்காக என்னை பெரிய பணக்கார வீடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். சிறை அதிகாரிகளைவிட இந்த வீட்டுக்காரர்கள் எவ்வளவோ தேவலை என்றே சொல்வேன்​—⁠போதியளவு சாப்பாடாவது தந்தார்களே!

“காலம் செல்லச் செல்ல சிறைச்சாலையின் மற்றொரு பகுதியிலிருந்த சகோதரர்களை சந்தித்துப் பேச முடிந்தது. இப்படிப்பட்ட சந்திப்புகள் பிரயோஜனமாக இருந்தன, ஏனென்றால் சகோதரர்களுக்கு சரீர உணவையும் ஆன்மீக உணவையும் எங்களால் கொடுக்க முடிந்தது.”

மால்டோவாவிலிருந்த மற்ற யெகோவாவின் சாட்சிகளைப் போலவே, உத்தமத்தைக் காத்துக்கொண்ட இந்த சகோதரிகளும் ஃபாசிஸ ஆட்சியின்கீழ் இன்னல்களை சகித்த கையோடு தங்கள் விசுவாசத்தின் மீது இன்னொரு தாக்குதலையும் எதிர்ப்பட வேண்டியிருந்தது. அடுத்து ஆட்சியைப் பிடித்த கம்யூனிஸ ரஷ்யாவிடமிருந்து வந்ததுதான் அந்தத் தாக்குதல்.

சோவியத் ஆட்களின் சூழ்ச்சி​—⁠நாடுகடத்துதல்

1944-⁠ல், இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கட்டத்தில் ஜெர்மனி தோல்வியுறும் நிலை ஏற்பட்டபோது, மிஹை என்ற ராஜா ஆண்ட ருமேனிய அரசாங்கத்திலிருந்த சிலர், அன்டனெஸ்குவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். அதன் பின் ருமேனியா, அச்சு நாடுகளோடு தனக்கிருந்த கூட்டணியை முறித்துவிட்டு ரஷ்யாவோடு சேர்ந்து கொண்டது. முன்னேறி வந்து கொண்டிருந்த சோவியத் படை அதே வருடத்தில் அப்பகுதியை தன்வசமாக்கி, மால்டோவாவை திரும்பவும் சோவியத் யூனியனோடு ஒருங்கிணைத்து மால்டேவியன் SSR-ஆக உருவாக்கியது.

மால்டோவாவிலிருந்த கம்யூனிஸ ஆட்சியாளர்கள் ஆரம்பத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய விஷயத்தில் தலையிடவில்லை. ஆனால் இந்த அமைதி கொஞ்ச நாள்தான் நீடித்தது. சீக்கிரத்திலேயே, கிறிஸ்தவ நடுநிலை வகிப்பும் உள்ளூர் தேர்தல்களில் யெகோவாவின் சாட்சிகள் வாக்களிக்க மறுத்ததும் திரும்பவும் காரசாரமான விவாதமானது. அரசியல் நடுநிலை வகிப்பை சோவியத் அரசு கொஞ்சமும் அனுமதிக்கவில்லை. ஆகவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண யெகோவாவின் சாட்சிகளையும் “விரும்பத்தகாத” வேறு பலரையும் 1949 தொடங்கி நாடுகடத்த அரசாங்கம் திட்டமிட்டது.

மால்டேவியன் SSR-லிருந்து யார் யார் நாடுகடத்தப்படுவார்கள் என்பதைப் பற்றி “கம்யூனிஸ்ட் கட்சியின் மையக் குழுவின் செயற்குழு எடுத்த தீர்மானத்தை” அதிகாரப்பூர்வ ஆவணம் ஒன்று வெளியிட்டது. நாடுகடத்தப்படுவோரில், “முன்னாள் நில உரிமையாளர்கள், பெரிய வணிகர்கள், ஜெர்மன் படையுடன் கூட்டணி அமைத்தவர்கள், ஜெர்மன் மற்றும் ருமேனிய போலீஸ் அதிகாரிகளோடு ஒத்துழைத்தவர்கள், ஃபாசிஸ ஆட்சியை ஆதரித்த கட்சி மற்றும் அமைப்புகளின் அங்கத்தினர்கள், வைட் கார்ட் எனப்பட்ட குழு அங்கத்தினர்கள், சட்டவிரோதமான மதப் பிரிவுகளை சேர்ந்தவர்கள், அதோடு பட்டியலிடப்பட்டுள்ள எல்லா தொகுதியினருடைய குடும்ப அங்கத்தினர்கள்” ஆகியோர் அடங்குவர். இவர்களெல்லாரும் “கால வரையறையின்றி” மேற்கு சைபீரியாவுக்கு நாடுகடத்தப்படவிருந்தனர்.

இரண்டாம் முறையாக, ஆட்கள் 1951-⁠ல் நாடுகடத்தப்பட்டார்கள், ஆனால் இந்த தடவை யெகோவாவின் சாட்சிகள் மாத்திரமே குறி வைக்கப்பட்டார்கள். ஸ்டாலினே இவர்களை நாடுகடத்துமாறு கட்டளை பிறப்பித்தார்; இது ஆப்ரேஷன் நார்த் என்றழைக்கப்பட்டது. 720-⁠க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பங்கள்​—⁠சுமார் 2,600 பேர்⁠—⁠மால்டோவாவிலிருந்து ஏறக்குறைய 4,500 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் மேற்கு சைபீரியாவிலுள்ள டோம்ஸ்க் நகரத்திற்கு அனுப்பப்பட்டார்கள்.

நாடுகடத்தப்படுமுன், தங்கள் உடைமைகளையெல்லாம் எடுத்துக்கொள்ள அவர்களுக்கு போதியளவு நேரம் கொடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்க ஆணைகள் குறிப்பிட்டன. அதுமட்டுமல்ல, ரயில் பெட்டிகள் “மனிதர்கள் பயணிப்பதற்கு ஏற்றபடி நல்ல வசதியுடன் இருக்க வேண்டும்” என்றும் அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு நேர்மாறாகத்தான் நடந்தது.

நட்ட நடு இராத்திரியில், ஏழெட்டு இராணுவ வீரர்களும் அதிகாரிகளும் யெகோவாவின் சாட்சிகளுடைய வீடுகளுக்கு முன் திடுதிப்பென்று வந்து இறங்கினார்கள்; வீட்டிலுள்ளவர்களை எழுப்பி, நாடுகடத்தப்படுவதற்கான உத்தரவை காண்பித்தார்கள். காத்திருந்த ரயில்களில் ஏற்றிவிடுமுன், அவர்களுடைய உடைமைகளை எடுத்துக்கொள்ள ஒரு சில மணிநேரமே அவகாசம் கொடுத்தார்கள்.

ரயில் வண்டிகளுக்கு பதிலாக குட்ஸ் வண்டிகளில் அவர்களை ஏற்றினார்கள். ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் பெரியோர் சிறியோர் என கிட்டத்தட்ட 40 பேர் அடைக்கப்பட்டார்கள்; இந்த நிலையில் அவர்கள் இரண்டு வாரம் பயணிக்க வேண்டியிருந்தது. உட்கார சீட்களும் இருக்கவில்லை, குளிர்காய எவ்வித வசதிகளும் இருக்கவில்லை. அந்தப் பெட்டியின் மூலையிலிருந்த ஒரு ஓட்டைதான் கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது. சகோதரர்கள் நாடுகடத்தப்படுமுன், அவர்கள் ஒவ்வொருவருடைய உடைமைகளையும் உள்ளூர் அதிகாரிகள் பதிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால், பெரும்பாலும், விலை குறைந்த சாமான்களை மட்டுமே அவர்கள் பதிவு செய்தார்கள்; விலைமதிப்புள்ள சாமான்கள் அப்படியே “மாயமாய் மறைந்தன.”

இத்தகைய எல்லா அநீதியையும் இன்னல்களையும் அனுபவித்தாலும், சகோதரர்கள் தங்கள் கிறிஸ்தவ மகிழ்ச்சியை மட்டும் இழக்கவில்லை. ஆம், யெகோவாவின் சாட்சிகளை ஏற்றிச் சென்ற ரயில்கள், ரயில் நிலைய சந்திப்புகளில் நின்றபோது, மற்ற குட்ஸ் வண்டிகளிலிருந்து எழுந்த ராஜ்ய பாடல்களின் சத்தத்தை கேட்க முடிந்தது. பாடும் சத்தத்தை வைத்து, தாங்கள் மட்டுமே தனியாக நாடுகடத்தப்படவில்லை, ஆனால் நூற்றுக்கணக்கான சக விசுவாசிகளோடு சேர்த்துதான் நாடுகடத்தப்படுகிறார்கள் என்பதை எல்லா ரயில்களிலும் இருந்த சகோதரர்கள் புரிந்துகொண்டார்கள். அப்படிப்பட்ட கடும் சோதனைமிக்க சூழ்நிலையிலும் ஒவ்வொருவரும் காண்பித்த மகிழ்ச்சியான மனநிலையைப் பார்த்ததும், அவர்கள் பாடியதைக் கேட்டதும் அவர்கள் எல்லாரையும் உற்சாகப்படுத்தியது; அதுமட்டுமல்ல என்ன நேர்ந்தாலும் யெகோவாவுக்கு விசுவாசமாக இருப்பதற்கான அவர்களுடைய திடத்தீர்மானத்தையும் பலப்படுத்தியது.​—யாக். 1:2, 3.

பின்பற்றத்தக்க விசுவாசம்

சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்களில் ஈவான் மிக்கிட்கவ் என்பவரும் ஒருவர். ஈவான் மால்டோவாவில் இருக்கும்போது, மற்ற சாட்சிகளோடு சேர்த்து முதன்முறையாக 1951-⁠ல் கைது செய்யப்பட்டு, டோம்ஸ்க் நகருக்கு நாடுகடத்தப்பட்டார். அவர் சைபீரியாவிலுள்ள ஊசியிலைக் காடுகளில் மரங்களை அறுக்கும் வேலை செய்ய வேண்டியிருந்தது. கட்டாய உழைப்பு முகாமில் அவர் இருக்கவில்லை என்றாலும், அவரால் சுதந்திரமாக எங்கும் போய்வர முடியவில்லை; ஏனெனில், இரகசிய போலீஸார் எப்போதும் அவரை நோட்டமிட்டு வந்தார்கள். இருந்தபோதிலும், கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி, அவரும் அவருடைய ஆவிக்குரிய சகோதரர்களும் மற்றவர்களுக்கு சாட்சி கொடுத்தார்கள்.

ஈவான் சொல்கிறார்: “கடினமான அந்தப் புதிய சூழ்நிலையிலும் சபைகளை உருவாக்கி, எங்களை நாங்களே ஒழுங்கமைத்துக் கொண்டோம். பிரசுரங்களைக்கூட சொந்தமாக நாங்களே நகலெடுத்துக் கொண்டோம். நாங்கள் சாட்சி கொடுத்தவர்களில் சிலர் காலப்போக்கில் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு முழுக்காட்டுதல் பெற்றார்கள். ஆனால், அதிகாரிகள் எப்படியோ எங்கள் நடவடிக்கைகளை கண்டுபிடித்து விட்டார்கள்; ஆகவே எங்களில் சிலரை கட்டாய உழைப்பு முகாம்களில் போட்டார்கள்.

“நானும், என் சக விசுவாசிகளான பவ்யில் டான்டாரா, மினா கோராஷ், வாசிலெ ஷார்பான் ஆகியோரும் கெடுபிடிமிக்க மேற்பார்வையின் கீழ் கட்டாய உழைப்பு முகாமில் 12 வருடம் வேலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டோம். இவ்வாறு கடுமையாக தண்டிக்கப்பட்டால்தான் மற்ற எல்லா சாட்சிகளுடைய வாயையும் மூட முடியும் என அதிகாரிகள் நினைத்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை. சகோதரர்கள் எங்கு அனுப்பப்பட்டாலும், அவர்கள் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டுதான் இருந்தார்கள். தண்டனைத் தீர்ப்பை முழுமையாக நிறைவேற்றிய பின், 1966-⁠ல் விடுதலையானேன். டோம்ஸ்க் நகருக்கு திரும்பிப்போய் மூன்று வருடங்கள் அங்கேயே தங்கினேன்.

“1969-⁠ல், டோனெட்ஸ் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிக்கு இடமாறினேன்; விசுவாசமும் வைராக்கியமுமிக்க மரியா என்ற சகோதரியை அங்கு சந்தித்தேன்; அவளையே மணமுடித்தேன். 1983-⁠ல், மறுபடியும் கைது செய்யப்பட்டேன். இந்த முறை இரட்டிப்பான தீர்ப்பு எனக்கு வழங்கப்பட்டது—⁠ஐந்து வருட சிறைதண்டனையும் ஐந்து வருட நாடுகடத்தப்படுதலும். இந்தத் தீர்ப்பு முந்தின தீர்ப்பைவிட கடுமையானதென்று உணர்ந்தேன், ஏனெனில் இந்த முறை என் மனைவியையும் குழந்தையையும் விட்டுப் பிரிய வேண்டியிருக்குமே; அவர்களும்கூட பல உபத்திரவங்களை சகிக்க வேண்டியிருந்தது. ஆனால், அந்தத் தண்டனையை முழுமையாக நிறைவேற்ற தேவையில்லாமல் போனது; எவ்வளவு சந்தோஷம்! ஆம், 1987-⁠ல், மிக்கயில் கோர்பஷேவ் சோவியத் கம்யூனிஸ கட்சியின் பொதுச் செயலராக ஆன பிறகு நான் விடுதலை செய்யப்பட்டேன். உக்ரைனுக்கும், பிற்பாடு மால்டோவாவுக்கும் திரும்பிப் போக அனுமதியும் கிடைத்தது.

“மால்டோவாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பல்ட்ஸுக்கு நான் திரும்பி வந்த சமயத்தில், 370 பிரஸ்தாபிகள் அடங்கிய மூன்று சபைகள் அங்கு இருந்தன. இன்றோ 1,700-⁠க்கும் அதிகமான பிரஸ்தாபிகளுடன் 16 சபைகள் இருக்கின்றன!”

“வாசிலெவுக்கு வந்த கதி உனக்கும் வரணும்னு விரும்புறியா?”

முகாம் நிர்வாகிகளும் கேஜிபி (சோவியத் மாநகர பாதுகாப்பு குழு) ஏஜென்ட்டுகளும் சகோதரர்களுடைய உத்தமத்தை பலவீனமாக்க குரூரமான சில வழிகளை கையாண்டார்கள். கான்ஸ்டான்டின் இவானோவிச் ஷோபெ என்பவர் தன் தாத்தா கான்ஸ்டான்டின் ஷோபெக்கு நேர்ந்ததைப் பற்றி கூறுகிறார்: “1952-⁠ல், சைபீரியாவிலுள்ள பைக்கால் ஏரியின் கிழக்கே அமைந்த சிடா மாவட்டத்திலிருந்த கட்டாய உழைப்பு முகாம் ஒன்றில் என் தாத்தா தண்டனைத் தீர்ப்பை அனுபவித்துக் கொண்டிருந்தார். தங்கள் விசுவாசத்தை கைவிடவில்லை என்றால், தாத்தாவையும் அங்கிருந்த மற்ற யெகோவாவின் சாட்சிகளையும் சுட்டுக் கொல்லப்போவதாக முகாம் அதிகாரிகள் பயமுறுத்தினார்கள்.

“சகோதரர்கள் அடிபணிய மறுத்ததால், ஒரு காட்டின் எல்லையோரத்திலிருந்த அந்த முகாமுக்கு வெளியே அவர்களை கூடிவரச் செய்தார்கள். இருட்டிக்கொண்டு வந்த அந்த சமயத்தில், தாத்தாவின் உயிர் நண்பரான வாசிலெவை அந்த அதிகாரிகள் சற்று தொலைவாக காட்டுக்குள் அழைத்துப் போனார்கள்; அவரை சுட்டுக் கொல்லப்போவதாக அறிவித்தார்கள். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என சகோதரர்கள் கதிகலங்கிப்போய் காத்திருந்தார்கள். கொஞ்ச நேரத்திற்குள், ஓரிரு துப்பாக்கி குண்டுகளின் ஓசை அந்த மாலை வேளையின் மயான அமைதியை குலைத்துப்போட்டது.

“அந்தக் காவலாளிகள் திரும்பி வந்தார்கள், அடுத்ததாக என் தாத்தாவை அந்தக் காட்டுக்குள் அழைத்துப் போனார்கள். கொஞ்ச தூரம் நடந்து சென்ற பின்னர், மரங்கள் வெட்டி அகற்றப்பட்டிருந்த ஓர் இடம் வந்ததும் அங்கு நின்றார்கள். நிறைய சவக்குழிகள் அங்கு வெட்டப்பட்டிருந்தன, அதில் ஒரு குழி மட்டும் மூடப்பட்டிருந்தது. அந்தக் குழியை காண்பித்தவாறு, அந்தக் கமாண்டர் என் தாத்தாவை பார்த்து, ‘வாசிலெவுக்கு வந்த கதி உனக்கும் வரணும்னு விரும்புறியா, இல்ல ஒரு சுதந்திர மனுஷனா திரும்பவும் வீட்டுக்கே போக விரும்புறியா? மனசை மாத்திக்க உனக்கு இரண்டு நிமிஷம் டைம் தர்றேன்’ என்றார். முடிவுசெய்ய தாத்தாவுக்கு இரண்டு நிமிஷம்கூட தேவைப்படவில்லை. மறுவிநாடியே இப்படி பதிலளித்தார்: ‘நீங்க சுட்டுக்கொன்ற வாசிலெவை எனக்கு பல வருஷமா தெரியும். புதிய உலகில் உயிர்த்தெழுதலின்போது திரும்பவும் அவரோட இணையப்போற வாய்ப்புக்காக இப்ப காத்திட்டிருக்கேன். வாசிலெவோட நான் புதிய உலகத்தில இருக்கப்போறேங்கற முழு நம்பிக்கை எனக்கு இருக்கு. ஆனா நீங்க அங்க இருப்பீங்களா?’

“அப்படியொரு பதில் வருமென்று கமாண்டர் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. பிறகு, அவர் தாத்தாவையும் மற்றவர்களையும் திரும்பவும் முகாமிற்கே நடத்திக்கொண்டு போனார். வாசிலெவை உயிர்த்தெழுதலில் பார்க்கும் வரை தாத்தா காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. உண்மையில் நடந்தது எல்லாமே வெறும் ஒரு நாடகமாக, சகோதரர்களுடைய உத்தமத்தை முறித்துப் போடுவதற்கென கொடூரமாக நடத்தப்பட்ட ஒரு நயவஞ்சக சூழ்ச்சியாக அது இருந்தது.”

கம்யூனிஸ பிரச்சாரம்​—⁠தன் தலையிலேயே மண்ணை போட்டுக்கொள்கிறது

யெகோவாவின் சாட்சிகள் மீது வெறுப்பும் சந்தேகமும் ஏற்படுவதற்காக புத்தகங்கள், சிற்றேடுகள், திரைப்படங்கள் ஆகியவற்றை கம்யூனிஸவாதிகள் தயாரித்தார்கள். ஒரு சிற்றேட்டின் தலைப்பு டபுள் பாட்டம் (இரட்டை அடிப்புறம்) என்பதாகும்; அதாவது, பிரசுரங்களை இரகசியமாக வைப்பதற்கென்றே தங்கள் சூட்கேஸ்கள் மற்றும் பைகளின் அடிப்புறத்தில் இன்னொரு அறையை சகோதரர்கள் அமைத்திருந்ததைத்தான் அத்தலைப்பு குறித்தது. அந்த முகாமின் தலைமை அதிகாரி, இந்தச் சிற்றேட்டை வைத்து மற்ற சிறைக்கைதிகளுக்கு முன் தன்னை எப்படி அவமானப்படுத்த முயன்றார் என்பதை நிக்காலை வோலோஷானாவ்ஸ்கி என்ற சகோதரர் சொல்கிறார்:

“அந்த முகாமின் கமாண்டர் எல்லா கைதிகளையும் அங்கிருந்த ஒரு அறையில் கூடிவரச் செய்தார். பிறகு, டபுள் பாட்டம் என்ற அந்தச் சிற்றேட்டில் என்னைப் பற்றி தரக்குறைவாக எழுதப்பட்டிருந்த பகுதிகள் உட்பட பல பகுதிகளிலிருந்து வாசித்துக்காட்டினார். அவர் பேசி முடித்ததும், சில கேள்விகளை கேட்பதற்கு அவரிடம் அனுமதி கேட்டேன். என்னை கேலி செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்குமென நினைத்தாரோ என்னவோ கேள்விகளை கேட்க என்னை அனுமதித்தார்.

“அந்த கட்டாய உழைப்பு முகாமிற்கு நான் முதன்முதலாக வந்தபோது என்னிடம் கேள்விகள் கேட்டது ஞாபகம் இருக்கிறதா என அவரைப் பார்த்துக் கேட்டேன். ஞாபகம் இருக்கிறது என்றார். முகாமில் சேருவதற்கான தாள்களை பூர்த்தி செய்வதற்காக, எந்த நாட்டில் பிறந்தேன், எந்த நாட்டு குடியுரிமை இருக்கிறது போன்ற கேள்விகளெல்லாம் அவர் என்னிடம் கேட்டது ஞாபகம் இருக்கிறதா என இன்னொரு கேள்வியை கேட்டேன். அதற்கும் ஆம் என்று சொல்லிவிட்டு, அந்த சமயத்தில் நான் அளித்த பதில்களையும் கூடியிருந்தவர்களிடம் சொன்னார். அப்படி அவர் சொன்ன பிறகு, அந்தத் தாள்களில் உண்மையில் அவர் என்ன எழுதி வைத்திருந்தார் என்பதை வாசித்துக்காட்ட சொன்னேன். நான் சொல்லியிருந்த பதிலும் அந்தத் தாள்களில் அவர் எழுதி வைத்திருந்ததும் ஒன்றுபோல இல்லை என்பதை அப்போது அவர் ஒப்புக்கொண்டார். அதன்பின், அங்கிருந்தவர்களைப் பார்த்து, ‘பாருங்க, இதே மாதிரி தப்புத் தப்பாகத்தான் இந்தச் சிற்றேடும் எழுதப்பட்டிருக்கு’ என்றேன். உடனே கைதிகள் எல்லாரும் கைதட்டினார்கள், அந்தத் தலைமை அதிகாரியோ முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க அத்தனை கோபமாக அங்கிருந்து வெளியேறினார்.’”

பிளவுண்டாக்கி வெற்றி காண சதி

எரிச்சலடைந்த சோவியத் அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒற்றுமையை குலைப்பதற்காக 1960-களில் புதிய உத்திகளை கையாள முயன்றார்கள். 1999-⁠ல் பிரசுரிக்கப்பட்ட பட்டயமும் கேடகமும் என்ற ஆங்கில புத்தகம், அரசாங்க ஆவணங்களிலிருந்த முன்னாள் இரகசிய கேஜிபி பதிவுகள் சிலவற்றைப் பற்றி கலந்தாலோசிக்கிறது. அது இவ்வாறு குறிப்பிடுகிறது: “‘ஜெஹோவிஸ்ட்களுக்கு [யெகோவாவின் சாட்சிகள்] எதிரான போராட்டத்தில்’ முன்னணி வகிக்கும் கேஜிபியின் உயர் அதிகாரிகள் மார்ச் 1959-⁠ல் ஒரு மாநாட்டை நடத்தினார்கள்; அதில் ‘பிளவுகளை உண்டாக்கி, தொடர்ந்து அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே’ மிகச் சிறந்த திட்டம் என்பதாக முடிவு செய்யப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் பிளவுகளை உண்டாக்கி, அவர்களுக்குள் இருக்கும் ஒழுங்கை குலைத்து, அவர்களுடைய நற்பெயரை கெடுத்து, பெரிய பெரிய பொறுப்பிலிருக்கும் அவர்களுடைய தலைவர்கள் மீது பொய்க் குற்றம் சுமத்தி கைது செய்வதற்காக கேஜிபி தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது.”

‘பிளவுகளை உண்டாக்கும் முயற்சிகளில்’ ஒன்று, சோவியத் யூனியனெங்குமுள்ள சகோதரர்களின் மனதில் அவநம்பிக்கையை விதைப்பதற்கான ஓர் திட்டமாக இருந்தது. அவ்வாறு பிளவுகளை உண்டாக்குவதற்காக கேஜிபி அதிகாரிகள் விஷமமான வதந்திகளை பரப்பினார்கள், அதாவது முக்கிய பொறுப்பிலுள்ள அநேக சகோதரர்கள் தேசிய பாதுகாப்பு சேவை நிறுவனங்களுக்கு உதவ ஆரம்பித்திருப்பதாக ஒரு வதந்தியை கிளப்பினார்கள். கேஜிபி ஆட்கள் அத்தனை தந்திரமாக நம்பும் விதத்தில் பொய்களை பரப்பிவிட்டதால், அநேக யெகோவாவின் சாட்சிகளுக்கு யாரை நம்புவதென்று ஒரே குழப்பமாக இருந்தது.

கேஜிபியினர் மற்றொரு சூழ்ச்சித் திட்டத்தை வகுத்தனர்; அதன்படி “சுறுசுறுப்பான” யெகோவாவின் சாட்சிகளைப் போல நடிக்க சில ஏஜென்ட்டுகளுக்கு விசேஷ பயிற்சியளித்தனர். அந்த ஏஜென்டுகளின் வேலை கடவுளுடைய அமைப்பில் முக்கிய பொறுப்புகளை பெற முயலுவதாகும். அதுமட்டுமல்ல, அமைப்பில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் இந்த ஒற்றர்கள் ஒன்றுவிடாமல் கேஜிபியினரிடம் தெரிவிக்க வேண்டியிருந்தது. அதோடு, இந்த கேஜிபி ஆட்கள் உண்மையான யெகோவாவின் சாட்சிகளை இரகசியமாக அணுகி தங்களோடு ஒத்துழைப்பதற்கு கத்தை கத்தையாக லஞ்சம் கொடுக்கவும் முயன்றனர்.

சகோதரர்களுக்கு இடையே இருந்த ஒற்றுமையை​—⁠மால்டோவாவிலிருந்த சகோதரர்களுடைய ஒற்றுமையையும்​—⁠குலைத்துப் போடுவதில் இத்தகைய முறைகேடான வழிமுறைகள் ஓரளவு வெற்றி பெற்றன என்பதுதான் வருத்தகரமான விஷயம். இதனால், எல்லாருமே எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட ஆரம்பித்தார்கள். சில சகோதரர்கள் அமைப்பை விட்டுவிலகி, தனியாக ஒரு மதப்பிரிவை உருவாக்கினார்கள்; அந்தச் சிறு பிரிவு எதிர்க்கட்சி என அழைக்கப்பட்டது.

அச்சம்பவங்களெல்லாம் நடப்பதற்கு முன்பு சோவியத் யூனியனிலிருந்த சகோதரர்கள், யெகோவா தம் அமைப்பையும், அது தயாரிக்கும் ஆன்மீக உணவையும், அது நியமிக்கும் பொறுப்புள்ள சகோதரர்களையுமே உபயோகித்து வழிநடத்துகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இப்போது அந்த வழிநடத்துதலைப் பற்றிய குழப்பமும் சந்தேகமும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தக் குழப்பத்தை சகோதரர்கள் எவ்வாறு போக்கினார்கள்? சோவியத் அரசாங்கத்தின் உதவியை வைத்தே அந்தக் குழப்பத்தை போக்கினார்கள் என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஆம், தாங்கள் ஏற்படுத்திய பிரச்சினைகளை தாங்களே தீர்த்து வைப்பதற்கு அந்தச் சதிகாரர்கள் உதவினார்கள். எப்படி?

கடவுளுடைய ஆவியை புரிந்துகொள்ள தவறினார்கள்

1960-களின் ஆரம்பப் பகுதியின்போது, சோவியத் யூனியன் எங்குமிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய “தலைவர்கள்” நிறைய பேரை மார்ட்வினியா என்ற குடியரசிலிருந்த முகாம் ஒன்றில் சோவியத் அதிகாரிகள் ஒன்றாக போட்டார்கள்; அது மேற்கு ரஷ்யாவிலுள்ள சாரன்ஸ்க் என்ற நகரிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது. அதற்கு முன்னர், சகோதரர்கள் தூர தூரமாக வெவ்வேறு இடங்களில் இருந்ததால் சரியாக பேச்சுத்தொடர்பு கொள்ள முடியாமல் போனது, இதனால் அவர்களுக்கிடையே கருத்துவேறுபாடுகளும் அதிகரித்திருந்தது. இப்போதோ எதிர்க்கட்சி என்றழைக்கப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களும் அதை சேராதவர்களும் அங்கு ஒன்றாக இருந்ததால் அவர்கள் நேருக்கு நேராக பேசி, உண்மை எது பொய் எது என்பதை வேறுபடுத்தி பார்க்க முடிந்தது. அந்த அதிகாரிகள் ஏன் எல்லா சகோதரர்களையும் ஒன்றாக போட்டார்கள்? அவர்கள் ஒன்றாக இருந்தால் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டு, அதன் காரணமாக அவர்களிடையே உள்ள விரிசல் இன்னும் அதிகமாகும் என நினைத்து அவ்வாறு செய்திருப்பதாக தெரிகிறது. இந்தச் சதித்திட்டம் புத்திசாலித்தனமாக தோன்றினாலும், யெகோவாவுடைய ஆவியின் ஒன்றிணைக்கும் வல்லமையை அவர்கள் புரிந்துகொள்ள தவறினார்கள்.​—⁠1 கொரி. 14:33.

மார்டிவினியாவிலிருந்த சிறையில் அடைக்கப்பட்ட சகோதரர்களில் கியார்கே கோரோபெட்ஸ் என்பவரும் ஒருவர். அவர் சொல்கிறார்: “நான் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட கொஞ்ச நாளிலேயே எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு சகோதரர் எங்களோடு சிறைப்படுத்தப்பட்டார். பொறுப்புள்ள சகோதரர்கள் இன்னும் சிறைப்படுத்தப்பட்டிருந்ததை பார்த்து, அந்த சகோதரர் ஆச்சரியப்பட்டார்; ஏனெனில் நாங்கள் எல்லாரும் கேஜிபியின் பண உதவியைப் பெற்றுக்கொண்டு சுதந்திரப் பறவைகளைப் போல சொகுசான வாழ்க்கை வாழ்வதாக அவருக்கு சொல்லப்பட்டிருந்தது!”

சகோதரர் கோரோபெட்ஸ் மேலும் தொடர்கிறார்: “நான் சிறையில் இருந்த முதல் வருடத்தின்போது, 700-⁠க்கும் அதிகமானோர் மத சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் யெகோவாவின் சாட்சிகள்தான். நாங்கள் எல்லாரும் ஒரு தொழிற்சாலையில் ஒன்றாக வேலை பார்த்ததால், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களிடத்தில் பேசுவதற்கு எங்களுக்கு போதிய நேரம் கிடைத்தது. இப்படி பேசியதால்தான், 1960-61 வருடங்களின்போது, அநேக விஷயங்கள் தெள்ளத்தெளிவாயின. கடைசியாக 1962-⁠ல், சோவியத் யூனியனிலிருந்த ஆலோசனைக் குழுவை சேர்ந்த சகோதரர்கள் அந்தக் கட்டாய உழைப்பு முகாமிலிருந்தே ஒரு கடிதத்தை எழுதினார்கள். அந்தக் கடிதம் சோவியத் யூனியன் முழுவதிலுமுள்ள சபைகளுக்கு அனுப்பப்பட்டது; கேஜிபியின் பொய்ப் பிரச்சாரம் ஏற்படுத்தியிருந்த அநேக பாதிப்புகளை அந்தக் கடிதம் சரிசெய்ய ஆரம்பித்தது.”

உண்மையான வழியை அடையாளம் காணுதல்

ஜூன் 1964-⁠ல், சகோதரர் கோரோபெட்ஸ் கட்டாய உழைப்பு முகாமிலிருந்து விடுதலையாகி, உடனடியாக மால்டோவாவிற்கு திரும்பினார். டாபானி என்ற ஊருக்கு வந்துசேர்ந்தபோது அங்கிருந்த அநேக யெகோவாவின் சாட்சிகள் இன்னும் குழப்பத்திலேயே இருந்ததை​—⁠அதாவது யெகோவா தம் ஜனங்களுக்கு ஆன்மீக உணவை கொடுப்பதற்காகவும் வழிநடத்துவதற்காகவும் யாரை பயன்படுத்தி வருகிறார் என தெரியாமல் குழப்பத்தில் இருந்ததை​—⁠பார்த்தார். இந்தக் குழப்பத்தினால் அநேக சகோதரர்கள் பைபிளை மட்டுமே படித்து வந்தார்கள்.

விஷயங்களை தெளிவுபடுத்துவதற்காக, ஆவிக்குரிய முதிர்ச்சி பெற்றிருந்த மூன்று சகோதரர்கள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அவர்கள் செய்த முதல் காரியம், மால்டோவாவின் வடக்கே இருந்த சபைகளுக்கு விஜயம் செய்ததாகும்; அங்குதான் பெரும்பாலான சாட்சிகள் இருந்தார்கள். இந்த சகோதரர்களும் மற்ற கிறிஸ்தவ கண்காணிகளும் இத்தனை துன்புறுத்தல்களை அனுபவித்தபோதிலும் விசுவாசத்தில் உறுதியோடு நிலைத்திருந்ததைப் பார்த்த அநேகருக்கு ஒரு விஷயம் தெளிவானது, அதாவது யெகோவா தங்களுக்கு சத்தியத்தை போதிப்பதற்காக ஆரம்பத்தில் பயன்படுத்திய அதே அமைப்பைத்தான் இன்னமும் பயன்படுத்தி வருகிறார் என்ற விஷயம் தெளிவானது.

துன்புறுத்தல்களோ மற்ற சூழ்ச்சிகளோ எதுவுமே பலிக்காமல், பிரசங்க வேலை தொடர்ந்து முன்னேறி வருவதை 1960-களின் இறுதிப் பகுதியின்போது கேஜிபி அதிகாரிகள் கண்கூடாகப் பார்த்தார்கள். பட்டயமும் கேடகமும் என்ற புத்தகம் கேஜிபியின் பிரதிபலிப்பைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டது: “கட்டாய உழைப்பு முகாம்களில்கூட, ‘யெகோவா பிரிவின் தலைவர்களும் அதிகாரிகளும் தங்கள் பைபிள் நம்பிக்கைகளை கைவிடாமல் அந்த முகாமிலேயே தங்கள் வேலையை தொடர்ந்து செய்தது’ பற்றிய அறிக்கைகள் [கேஜிபி] மையத்தையே ஒரு கலக்கு கலக்கின. யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வந்த கேஜிபி அதிகாரிகள் நவம்பர் 1967-⁠ல், [கீஷினாவ்வில்] மாநாடு ஒன்றை கூட்டினார்கள்; ‘இந்த மதப்பிரிவின் தேசவிரோத வேலை’யையும் ‘கம்யூனிஸ கொள்கைக்கு விரோதமாயிருக்கும் அவர்களுடைய போதனை’களையும் தடுக்க புதிய வழிகளை கையாளுவது பற்றி அந்த மாநாட்டில் கலந்தாலோசித்தார்கள்.”

முன்னாள் சகோதரர்களால் வந்த உபத்திரவம்

வருத்தகரமாக, இத்தகைய ‘புதிய வழிகளால்’ சிலர் மோசம் போனார்கள்; அதோடு, கேஜிபி சொன்னதையெல்லாம் அப்படியே செய்யவும் ஆரம்பித்தார்கள். சிலர் பேராசைக்கு அடிமையானார்கள் அல்லது மனித பயத்திற்கு அடிபணிந்து போனார்கள்; சபையைவிட்டு விலகியிருந்த இன்னும் சிலரோ சகோதரர்கள் மீது தொடர்ந்து வெறுப்பை காட்டினார்கள். உண்மையுள்ள சகோதரர்களின் உத்தமத்தை முறித்துப் போடுவதற்காக இந்த நபர்களை கேஜிபி அதிகாரிகள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். கடும் வேதனையளித்த விஷயங்களில் ஒன்று, முன்னாள் சகோதரர்களால்—⁠அவர்களில் சிலர் இப்போது விசுவாச துரோகிகள்​—⁠வந்த சிரமங்களை அனுபவித்ததுதான் என சிறைகளிலும் கட்டாய உழைப்பு முகாம்களிலும் சகித்திருந்த அநேக சாட்சிகள் சொன்னார்கள்.

ஏராளமான விசுவாச துரோகிகள் முன்பு குறிப்பிடப்பட்ட அந்த எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். கேஜிபி பரப்பிய பொய் தகவல்களால் குழம்பிப்போயிருந்த சிலரே ஆரம்பத்தில் இந்தக் கட்சியின் அங்கத்தினர்களாக இருந்தார்கள். ஆனால் 1960-களின் பிற்பகுதி வரைக்கும் அந்த எதிர்க்கட்சியோடு கூட்டுறவு வைத்திருந்தவர்கள், பொல்லாத அடிமை வகுப்பாரின் தீய மனப்பான்மையை வெளிக்காட்டினவர்களாக இருந்தார்கள். அவர்கள், இயேசுவின் எச்சரிப்பை சிறிதும் மதிக்காமல் அலட்சியம் செய்து, “[தங்கள்] உடன் வேலைக்காரரை அடிக்கத்” தொடங்கினார்கள்.​—மத். 24:48, 49.

என்றபோதிலும், கடவுளுடைய மக்களிடையே பிளவுகளை உண்டாக்கி வெற்றி காணும் சதித்திட்டம் தோல்வியுற்றது; கேஜிபி அதிகாரிகளிடமிருந்தும் அவர்களுடைய கையாட்களிடமிருந்தும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து அழுத்தங்கள் வந்தபோதிலும் அத்திட்டம் வெற்றி பெறவில்லை. 1960-களின் ஆரம்பக் கட்டத்தில், உண்மையுள்ள சகோதரர்கள் மால்டோவாவில் கடவுளுடைய அமைப்பை ஒன்றிணைக்கும் முயற்சியை ஆரம்பித்தபோது, அங்கிருந்த அநேக சகோதரர்கள் எதிர்க்கட்சியின் அங்கத்தினர்களாக இருந்தார்கள். ஆனால், 1972-⁠க்குள் பெரும்பாலான சகோதரர்கள், யெகோவாவின் அமைப்போடு உண்மையுடன் வேலை செய்வதற்காக மறுபடியும் கூட்டுறவு கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.

துன்புறுத்தியவர் பாராட்டு தெரிவிக்கிறார்

கம்யூனிஸ சகாப்தத்தின்போது மால்டோவாவிலே தங்கிவிட்ட உண்மையுள்ள சகோதரர்கள் தங்களால் முடிந்தளவுக்கு பிரசங்க வேலையில் தொடர்ந்து முழுமையாக ஈடுபட்டார்கள். தங்கள் குடும்பத்தார், நண்பர்கள், பள்ளித்தோழர்கள், சக பணியாளர்கள் ஆகியோருக்கு சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் சர்வ ஜாக்கிரதையாக இருந்தார்கள், ஏனெனில் மால்டோவாவில் இருந்த அநேக கட்சித் தலைவர்கள் கம்யூனிஸ கொள்கை வெறியர்களாக இருந்தார்கள். என்றபோதிலும், எல்லா கம்யூனிஸவாதிகளுமே யெகோவாவின் சாட்சிகளை வெறுக்கவில்லை.

சிமியான் வோலோஷானாவ்ஸ்கி என்பவர் சொல்கிறார்: “எங்கள் வீட்டை போலீஸார் சோதனையிட்டு, ஏகப்பட்ட பிரசுரங்களை கைப்பற்றினார்கள்; பொறுப்பிலிருந்த அதிகாரி அவற்றையெல்லாம் பட்டியலிட்டுச் சென்றார். பிற்பாடு, தான் எழுதிய பட்டியலோடு திரும்பி வந்து, எழுதியவற்றை என்னை சரிபார்க்கும்படி சொன்னார். பட்டியலை சரிபார்க்கும்போது, ஒரு பத்திரிகையை மட்டும்​—⁠குடும்பத்தைப் பற்றியும் குடும்ப வாழ்க்கையை எப்படி சந்தோஷமாக்குவது என்பதைப் பற்றியும் கலந்தாலோசித்த காவற்கோபுர பத்திரிகையை மட்டும்​—⁠அவர் பதிவு செய்யாமல் விட்டுவிட்டிருந்ததை கவனித்தேன். அதைப் பற்றி அவரிடம் கேட்டேன். அப்போது ஒருமாதிரியாக அசடு வழிந்தபடி, ‘ஓ . . . அதுவா . . . அதை நான் வீட்டுக்கு எடுத்துப்போனேன், குடும்பமா சேர்ந்து அதை வாசிச்சோம்’ என்று சொன்னார். ‘படிச்சது உங்களுக்கு பிடிச்சிருந்ததா’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஓ . . . உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்தது!’ என்றார்.”

எதிர்ப்பு தளர்கிறது, வளர்ச்சி தொடர்கிறது

யெகோவாவின் ஜனங்களை கைது செய்து நாடுகடத்தும் கொள்கையை கம்யூனிஸ அதிகாரிகள் 1970-களின்போது கைவிட்டனர். இருந்தாலும், சாட்சி கொடுத்ததற்காக அல்லது கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொண்டதற்காக தனிப்பட்ட சகோதரர்களை கைது செய்து, விசாரணை நடத்தினர். ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்பு அத்தனை கடுமையானதாக இருக்கவில்லை.

சபையில் மூப்பர்களை நியமிக்கும் ஏற்பாடு 1972-⁠ல் எல்லா இடங்களிலும் ஆரம்பிக்கப்பட்டது போல மால்டோவாவிலும் ஆரம்பிக்கப்பட்டது. கியார்கே கோரோபெட்ஸ் சொல்கிறார்: “இந்தப் புதிய ஏற்பாட்டை சகோதரர்கள் மிகுந்த சந்தோஷத்துடன் வரவேற்றார்கள்; யெகோவாவின் ஆவி செயல்படுகிறது என்பதற்கான கூடுதல் அத்தாட்சியாக அதைக் கருதினார்கள். அதுமட்டுமல்ல, நியமிக்கப்பட்ட சகோதரர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், மால்டோவாவிலிருந்த சபைகள் ஆவிக்குரிய விதத்திலும் எண்ணிக்கையிலும் அதிகரிக்கத் தொடங்கின.”

இதற்குள்ளாக, பிரசங்க வேலையை ஒழுங்கமைப்பதிலும் பைபிள் பிரசுரங்களை ஜாக்கிரதையாக அச்சடிப்பதிலும் சகோதரர்கள் கணிசமானளவு அனுபவம் அடைந்திருந்தார்கள். கம்யூனிஸ அடக்குமுறை ஆரம்பித்தபோது, மால்டோவாவில் இரண்டு இடங்களில் பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டன; கடும் துன்புறுத்துதல் இருந்த அந்த பல ஆண்டுகளின்போது, இரவு நேரங்களில் மட்டுமே அவை இயக்கப்பட்டன. ஆக, அதில் வேலை செய்தவர்கள் இரண்டு விதமான வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது​—⁠ஒன்று, காலை வேளையில் மற்ற ஜனங்களைப் போல அன்றாட வேலைகளில் ஈடுபட வேண்டியிருந்தது; மற்றொன்று, இரவு வேளையில் சபைகளுக்காக பிரசுரங்களை தயாரிக்கும் வேலையில் விடியும் வரை பாடுபட வேண்டியிருந்தது.

எதிர்ப்பும் கண்காணிப்பும் தளர்ந்தபோதோ இந்த நிலைமை மாறியது. இரகசியமாக இயங்கி வந்த அச்சு இயந்திரங்களை சகோதரர்களால் இப்போது இன்னும் திறம்பட்ட விதத்தில் இயக்க முடிந்தது, மேலும், கூடுதலான வாலண்டியர்களை அந்த வேலைக்காக நியமிக்க முடிந்தது. இதன் விளைவாக, தயாரிக்கப்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

அதுமட்டுமல்ல, சகோதரர்கள் தங்களது அச்சு வேலையின் நுட்பங்களையும் மேம்படுத்தினார்கள். உதாரணத்திற்கு, டைப் ரைட்டர் உதவியோடு தயாரிக்கப்பட்ட விசேஷ மாதிரிப் படிவங்களை உபயோகித்தார்கள். அதோடு, அச்சு இயந்திரங்களையும் மாற்றியமைத்து, காகிதத்தின் இருபுறமும் ஒரே நேரத்தில் அச்சடித்தார்கள். இவ்வாறெல்லாம் செய்த முன்னேற்றங்களால் பிரசுரங்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு பெருகியது. பைபிள் பிரசுரங்கள் கைகளால் எழுதப்பட்ட காலம் ஒருவழியாக மலையேறிப் போனது!

அதிகளவில் பிரசுரங்கள் கிடைத்ததால் சகோதரர்கள் தனிப்பட்ட பைபிள் படிப்பை அதிகளவில் செய்ய முடிந்தது. இதுவும் இத்தோடு சேர்ந்து அதிநவீனமாக்கப்பட்ட தொலைத்தொடர்புகளும், முன்பு ஏற்பட்டிருந்த குழப்பங்களை சுவடு தெரியாமல் ஒழிக்க உதவின. என்றாலும், இத்தகைய முன்னேற்றங்கள், மால்டோவாவிலிருந்த யெகோவாவின் ஜனங்களுக்கு இன்னும் மேம்பட்ட காரியங்கள் வரவிருந்ததன் முன்நிழலாக மட்டுமே இருந்தன.

மெய் வணக்கம் செழிக்கிறது

சோவியத் கம்யூனிஸம் அதன் உச்சாணியிலிருந்த சமயத்தில் அரசியல் மற்றும் இராணுவத்தில் கோலியாத் போல அசுர பலங்கொண்டிருந்தபோதிலும், மெய் வணக்கத்தை அதுவால் அழித்துப்போட முடியவில்லை. சொல்லப்போனால், சோவியத் ஆட்கள் தங்களது நாடுகடத்தும் திட்டத்தின் மூலம் தங்களை அறியாமலேயே ‘பூமியின் கடைசி பரியந்தத்திலுள்ள’ சில பாகங்களில் நற்செய்தியைப் பரப்புவதற்கு உதவினார்கள். (அப். 1:8) ஏசாயா மூலம் யெகோவா இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: ‘உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் . . . இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறது.’ (ஏசா. 54:17) இவ்வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவையாய் நிரூபித்திருக்கின்றன!

1985-⁠ல், வேறு அரசாங்கம் வந்தபின், சோவியத் யூனியனிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு வாழ்க்கை எவ்வளவோ எளிதாகிப்போனது. இனியும் இரகசிய போலீஸ் அவர்களை பின்தொடரவில்லை, மத கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு அபராதமும் விதிக்கப்படவில்லை. மால்டோவாவிலிருந்த சகோதரர்கள் தங்கள் கூட்டங்களை சிறு தொகுதிகளாக, பத்து அல்லது அதற்கும் குறைவானோர் மட்டும் உள்ள சிறு தொகுதிகளாக நடத்தி வந்தபோதிலும், திருமணம், சவ அடக்கம் போன்ற விசேஷ சந்தர்ப்பங்களை சிறிய வட்டார மாநாடுகள் நடத்துவதற்கு பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

பிறகு 1989-⁠ம் ஆண்டின் கோடை காலத்தின்போது காஷூஃப் (காட்டவிட்சாவுக்கு அருகிலுள்ளது), போஜ்னன், வார்ஸா ஆகிய போலந்து நாட்டு நகரங்களில் மூன்று சர்வதேச மாநாடுகள் நடைபெற்றன; இந்த மாநாடுகள் பிரசங்க வேலையை துரிதப்படுத்திய ஊக்க மருந்துகளாக சேவித்தன. மால்டோவாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் அந்த மாநாடுகளில் கலந்துகொள்ள வந்திருந்தார்கள். இரகசியமாகவும் சிறு சிறு தொகுதிகளாகவும் மட்டுமே கூடிவந்து பழகிப்போயிருந்த விசுவாசமிக்க இந்தச் சகோதரர்களுக்கு, உலகெங்கும் இருந்து வந்திருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மகிழ்ச்சி பொங்கிய பெருங்கூட்டத்தில் இருந்தது எவ்வளவாய் நெகிழச் செய்திருக்கும்! அதுவும் எல்லாரும் சேர்ந்து யெகோவாவை வழிபட்டது இன்னும் எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அளித்திருக்கும்!

மால்டோவாவின் ஊழிய சரித்திரத்திலேயே முதன்முறையாக 1991-⁠ல் வட்டார மாநாடுகளை சகோதரர்கள் வெளியரங்கமாக நடத்தினார்கள்; இது அவர்களுக்கு மற்றுமொரு ஆன்மீக விருந்தாக இருந்தது. 1992-⁠ம் ஆண்டு இன்னொரு மைல்கல்லாக அமைந்தது​—⁠ரஷ்யாவிலுள்ள செ. பீட்டர்ஸ்பர்க்கில் சர்வதேச மாநாடு அந்த வருடத்தில் நடைபெற்றது. 1989-⁠ல் போலந்தில் நடைபெற்ற மூன்று மாநாடுகளுக்கு வந்திருந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைவிட இந்த மாநாட்டுக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக இருந்தது. ஆம், யெகோவா வானத்தின் பலகணிகளை திறந்து, பற்றுறுதியும் நன்றியுமுள்ள தம் ஊழியர்களின் மீது ஆசிக்கு மேல் ஆசியாக தொடர்ந்து பொழிய ஆரம்பித்திருந்தார்.

பயணக் கண்காணிகளுக்கு பயிற்சி

அதிக சுதந்திரம் கிடைத்ததால் சோவியத் யூனியனிலிருந்த ஆலோசனைக் குழுவுக்கும் பயணக் கண்காணிகளுக்கும் இடையே இருந்த தொடர்பும் அதிக நெருக்கமானது. அப்போது இருந்த ஆவிக்குரிய முதிர்ச்சி பெற்ற இந்த 60 சகோதரர்களும் டிசம்பர் 1989-⁠ல் சில அறிவுரைகள் பெறுவதற்காக உக்ரைனிலுள்ள லவோவ் என்ற நகரத்தில் கூடினார்கள். அங்கு கூடியிருந்த அத்தனை பேருமே சிறைச்சாலைகளிலும், கட்டாய உழைப்பு முகாம்களிலும், வேறு பல துன்புறுத்தல்களிலும் சகித்து நிலைத்திருந்தவர்கள்; அப்படிப்பட்டவர்களுக்கு அந்த வகுப்பு எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியையும் பலத்தையும் அளித்திருக்கும்! சொல்லப்போனால், அவர்களில் அநேகர் அந்தக் கொடிய காலங்களின்போதே நெருங்கிய நண்பர்களாக ஆகியிருந்தவர்கள்.

அந்த வகுப்பில் கலந்துகொண்ட பயணக் கண்காணிகளில் நான்கு பேர் மால்டோவாவை சேர்ந்தவர்கள். அவர்கள் திரும்பி வந்த பிறகு, லவோவ் நகரத்தில் பெற்ற ஞானமான அறிவுரைகளை சபைகளுக்கு தெரிவித்தார்கள், குறிப்பாக பிரசங்க வேலையைப் பற்றிய அறிவுரைகளைப் பற்றி சொன்னார்கள். உதாரணத்திற்கு, இப்போது சுதந்திரம் கிடைத்திருந்தாலும்கூட கடவுளுடைய வார்த்தையை முன்பு போலவே ஜாக்கிரதையாக பிரசங்கிக்க வேண்டுமென்று சகோதரர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினார்கள். (மத். 10:16) இப்படி முன்ஜாக்கிரதையுடன் பிரசங்கிப்பது ஏன் இன்னும் அவசியமானதாக இருந்தது? ஏனென்றால், தடையுத்தரவு இன்னமும் முழுமையாக நீக்கப்படாதிருந்தது.

ராஜ்ய மன்றங்களுக்கான அவசர தேவை

மால்டோவாவில் முதன்முதலாக பிரசங்க வேலை ஆரம்பமானதிலிருந்தே தங்களுக்கென்று சொந்தமான ராஜ்ய மன்றங்கள் தேவை என சகோதரர்கள் உணர்ந்திருந்தார்கள். சொல்லப்போனால், 1922-⁠ல், கோர்ஷெயூட்ஸ் கிராமத்திலிருந்த பைபிள் மாணாக்கர்கள் தங்கள் சொந்த செலவிலும் முயற்சியிலும் ஒரு மன்றத்தை கட்டினார்கள். கூட்டங்கள் நடக்கும் இல்லம் என அழைக்கப்பட்ட அது, பல ஆண்டுகளுக்கு அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்தது.

1980-களின் இறுதிப் பகுதியில், அரசாங்கத்திடமிருந்து வந்த எதிர்ப்பு கணிசமானளவு தளர ஆரம்பித்தபோது, அநேக ஊர்களிலும் கிராமங்களிலும் நூற்றுக்கணக்கான பிரஸ்தாபிகளை உடைய சபைகள் இருந்தன. இச்சபைகள் சிறுசிறு தொகுதிகளாக தனிப்பட்டோரின் வீடுகளில் நடத்தப்பட்டன. ஆக, ராஜ்ய மன்றங்களை கட்ட ஆரம்பிப்பதற்கான நேரம் வந்திருந்ததா? பல்வேறு கிராம நிர்வாகிகளை சகோதரர்கள் அணுகி இதைப் பற்றி விசாரித்தார்கள்.

இந்த அதிகாரிகளில் சிலர் பெரிதும் ஒத்துழைத்தார்கள். வட மால்டோவாவில், 3,150 பேர் உள்ள ஃபட்டெஷ்ட் என்ற கிராமத்திலிருந்த அதிகாரிகளின் விஷயத்திலும் இது உண்மையாக இருந்தது. ஜனவரி 1990-⁠ல், அங்கிருந்த சகோதரர்கள் அந்தக் கிராமத்தின் மேயரை சந்தித்தார்கள்; தன்னுடைய கிராமத்தில் சாட்சிகள் எந்தவொரு தடையுமில்லாமல் தாராளமாக ஊழியம் செய்யலாம் என அவர் அப்போது தெரிவித்தார். ஆனால் உஷாராக இருந்த சகோதரர்களால் மேயர் சொன்னதை நம்பவே முடியவில்லை. ஆகவே, ஒரு சகோதரரின் வீட்டை ஒரு சிறிய ராஜ்ய மன்றமாக உபயோகிப்பதற்கு அதை சற்று மாற்றியமைக்க அனுமதி தருமாறு அவரிடம் கேட்டார்கள்; அவர்களது சபையில் இருந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையோ 185!

அந்தத் திட்டத்திற்கு மேயர் அனுமதி வழங்கினார், அதனால் சகோதரர்கள் கட்டட வேலையை துவக்கினார்கள். என்றாலும், அவர்களுக்கு முன் பெரும் முட்டுக்கட்டை இருந்ததை விரைவிலேயே உணர்ந்தார்கள். அதாவது, கட்டட வேலை தொடர்ந்து நடைபெறுவதற்கு குறிப்பிட்ட ஒரு சுவரை தகர்க்க வேண்டியிருந்தது, ஆனால் அதைத் தகர்த்தால் ஒருவேளை முழு வீடுமே தரைமட்டமாகிவிடும் அபாயம் இருந்தது! ஆக, கட்டுமான வேலை திடீரென நின்றுபோனது. இனி அவர்கள் என்ன செய்வார்கள்? திரும்பவும் மேயரை அணுகி, பிரச்சினையை விளக்க முடிவு செய்தார்கள். ஒரு புத்தம் புதிய ராஜ்ய மன்றத்தை கட்டுவதற்கு அவர் அனுமதி வழங்கியபோது, அவர்கள் புல்லரித்துப் போனார்கள்! உடனடியாக, அந்தக் கட்டுமான பணிக்காக சபையார் தங்களையே அர்ப்பணித்து, 27 நாட்களில் அதைக் கட்டி முடித்தார்கள்.

இப்புதிய ராஜ்ய மன்றத்தில் இட நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காக ஃபட்டெஷ்ட் சபை இரண்டாக பிரிக்கப்பட்டது. என்றாலும், ஏராளமான புதிய பிரஸ்தாபிகள் இன்னும் முழுக்காட்டப்படாமல் இருந்தார்கள். ஆகவே, மன்றப் பிரதிஷ்டை செய்யும் நாளிலேயே ஏன் முழுக்காட்டுதலும் கொடுக்கக்கூடாது என சகோதரர்கள் நினைத்தார்கள்; இத்திட்டத்தை செயல்படுத்தவே தீர்மானித்தார்கள். ஆக, முழுக்காட்டுதல் பேச்சு முடிந்த பிறகு, பக்கத்திலிருந்த ஒரு ஆற்றுக்கு எல்லாருமே போனார்கள்; யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்ததற்கு அடையாளமாக 80 பேர் அங்கே முழுக்காட்டுதல் பெற்றார்கள்.

உண்மைதான், மற்ற பல சபைகளுக்கும் ஒரு ராஜ்ய மன்றம் மிக அவசரமாக தேவைப்பட்டது. ராஜ்ய மன்றங்களின் படங்களை பிரசுரங்களில் பார்த்துவிட்டு, அதே போன்ற மன்றங்களை தங்களாலும் கட்ட முடியும் என்று சில சபைகள் முடிவு செய்தன. அதற்காக சபையார் தங்களுடைய வளங்களையெல்லாம் சேகரிக்க ஆரம்பித்தார்கள், தாங்களாகவே முன்வந்து எக்கச்சக்க முயற்சிகளை எடுத்தார்கள், ராஜ்ய மன்றத்தை கட்டவும் தொடங்கினார்கள். இவர்களைப் போலவே இன்னும் அநேக சபைகளும் ராஜ்ய மன்றங்களை கட்ட ஆரம்பித்தன. 1990-லிருந்து 1995-⁠க்குள், சகோதரர்கள் 30-⁠க்கும் அதிகமான ராஜ்ய மன்றங்களை கட்டி முடித்திருந்தார்கள்​—⁠எல்லாமே உள்ளூர் சகோதரர்களின் உழைப்பையும் பணத்தையும் வைத்து.

குறிப்பிட்ட சில ராஜ்ய மன்றங்களில் வட்டார மாநாடுகளும் நடத்தப்பட்டன. என்றாலும், மாநாடுகளின்போது அநேகர் அந்த மன்றத்திற்கு வெளியே நின்றவாறுதான் நிகழ்ச்சிகளை கேட்க முடிந்தது, அந்தளவுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக, அசெம்பிளி ஹால் ஒன்றை கட்டுவது பற்றி சகோதரர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். இந்த முறையும் அவர்கள் தாமதிக்காமல் காரியத்தில் இறங்கினார்கள். 1992-⁠ல், வெறும் மூன்று மாதத்திற்குள்ளாக, மால்டோவாவிலுள்ள கோர்ஷெயூட்ஸில் முதல் அசெம்பிளி ஹால் ஒன்றை கட்டினார்கள்; 800 பேர் உட்காரும் வசதி உடையதாக அது இருந்தது. அடுத்த வருடமும், தங்கள் உழைப்பையும் வளங்களையும் ஒன்று திரட்டி 1,500 பேர் உட்காரும் வசதியுள்ள அசெம்பிளி ஹால் ஒன்றை சாட்சிகள் ஃபட்டெஷ்ட் ஊரில் கட்டினார்கள்.

இந்தக் கட்டட வேலை நடைபெற்றது ஏற்றவொரு தருணமாக இருந்தது போல் தோன்றியது, ஏனெனில் 1990-களின் மத்திபத்தில் நேரிட்ட அரசியல் மாற்றமும் பொருளாதார வீழ்ச்சியும் மால்டோவா நாட்டு பணத்தின் மதிப்பு குறைய காரணமாயின. இதனால், 1990-களின் ஆரம்பப் பகுதியில் ஒரு முழு ராஜ்ய மன்றத்தை கட்டுவதற்கு போதுமானதாக இருந்த பணம், சில வருடங்களுக்குப் பின், சேர்களை வாங்குவதற்குக்கூட போதாததாக ஆனது!

தென்பகுதியில் ராஜ்ய மன்ற கட்டுமானம்

மால்டோவாவின் வடபகுதியிலிருந்த சபைகளுக்கு அநேக ராஜ்ய மன்றங்கள் இருந்தன; தென்பகுதியிலிருந்த சபைகளுக்கோ அந்தளவு ராஜ்ய மன்றங்கள் இருக்கவில்லை. இதனால், 1990-களின்போது, ராஜ்ய வேலை படுவேகமாக வளர்ந்து வந்த சமயத்தில், கூட்டங்களை நடத்த தகுந்த இடங்களை கண்டுபிடிப்பது தெற்கிலிருந்த அநேக புதிய சபைகளுக்கு பிரச்சினையாக இருந்தது. பொதுப் பள்ளிக்கூடங்கள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இவற்றிற்கு வாடகை கொடுப்பது மிகவும் சிரமமானது.

சகோதரர்களுக்கு உதவுவதற்காக யெகோவா இந்த முறையும் தம் அமைப்பின் மூலம் உதவினார். ஏற்ற வேளையிலே, ராஜ்ய மன்ற நிதி ஏற்பாட்டின் வாயிலாக ராஜ்ய மன்றங்களை கட்டுவதற்குத் தேவையான நிதியுதவி கிடைக்க ஆளும் குழு வழி செய்தது; இந்த நிதி மால்டோவா போன்ற நாடுகளிலுள்ள பணவசதி குறைந்த சபைகளுக்கு ராஜ்ய மன்றங்கள் கட்ட உதவியது.

இந்த ஏற்பாட்டை சகோதரர்கள் சிறந்த விதத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு கீஷினாவ்விலிருந்த சகோதரர்கள் அருமையான முன்மாதிரியாக திகழ்கிறார்கள். இத்தலைநகரில் 1999-⁠ம் வருடம் ஒரு ராஜ்ய மன்றம்கூட இருக்கவில்லை. ஆனால், ஜூலை 2002-⁠க்குள்ளாக, பத்து ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டன, இவை இந்நகரத்திலுள்ள 37 சபைகளில் 30 சபைகளின் தேவையை பூர்த்தி செய்தன; மேலும் மூன்று மன்றங்கள் கட்டப்பட்டு வந்தன.

ஒருவழியாய் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது!

ஆகஸ்ட் 27, 1991-⁠ல், மால்டோவா ஒரு சுதந்திர குடியரசானது. யெகோவாவின் சாட்சிகளது வேலையின் மீது சோவியத் ஆட்சி விதித்திருந்த தடையுத்தரவு மால்டோவாவில் இனிமேலும் செல்லுபடி ஆகவில்லை. என்றாலும், அச்சமயத்திலிருந்த சுமார் 4,000 யெகோவாவின் சாட்சிகள் ஒரு மத அமைப்பாக இன்னமும் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை.

ஆளும் குழுவிடமிருந்து உபயோகமான அறிவுரைகளைப் பெற்ற பிறகு, மால்டோவாவில் யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதற்காக, சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளை கிளை அலுவலகத்திலிருந்த சகோதரர்கள் உடனடியாக அணுகினார்கள். அப்போதிருந்த புதிய அரசாங்கம் இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்தது. சட்டப்படி தேவையானவற்றை செய்து முடிக்க கொஞ்ச காலமெடுத்தது என்றாலும், ஒருவழியாக, ஜூலை 27, 1994-⁠ல், அதிகாரப்பூர்வ பதிவு ஆவணத்தை கிளை அலுவலகம் பெற்றது.

அந்த நாள் மால்டோவாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு மறக்க முடியாத நாள்! ஏறக்குறைய 60 ஆண்டுகளாக தடையுத்தரவிலும், துன்புறுத்தலிலும், சிறையிலும் பாடுகளை சகித்த அவர்கள், இப்போது யெகோவாவை பகிரங்கமாக வணங்கவும் முடியும், நற்செய்தியை பிரசங்கிக்கவும் முடியும். அதுமட்டுமல்ல, அங்கேயே மாவட்ட மாநாடுகளை நடத்தவும் முடியும். ஆம், ஆகஸ்ட் 1994-⁠ல், சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற அடுத்த மாதமே, யெகோவாவின் சாட்சிகள் கீஷினாவ்விலிருந்த மிகப் பெரிய ஸ்டேடியத்தில் மாவட்ட மாநாட்டை நடத்தினார்கள்; இது மால்டோவாவில் நடைபெற்ற முதல் மாவட்ட மாநாடாகும். அடடா, எப்பேர்ப்பட்ட சிலிர்ப்பூட்டும் சமயமாக அது இருந்தது!

பெத்தேல் விரிவாக்கம்

1995-⁠க்குள், ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 10,000-⁠ஐயும் தாண்டியது. கீஷினாவ்விலிருந்த ஒரு சிறிய அலுவலகம் மால்டோவாவில் நடைபெற்ற பிரசங்க வேலையின் சில அம்சங்களை கவனித்துக்கொண்டது; ஆனால் சுமார் 2,000 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ரஷ்ய கிளை அலுவலகம்தான் அங்கு நடந்த மற்ற எல்லா காரியங்களையும் மேற்பார்வை செய்து வந்தது. என்றாலும், ருமேனிய கிளை அலுவலகமோ வெறும் 500 கிலோமீட்டர் தூரத்திலிருந்தது, அதோடு பெரும்பாலான மால்டோவியர்கள் ருமேனிய பாஷையைத்தான் பேசினார்கள். சொல்லப்போனால், ருமேனிய மொழி மால்டோவா குடியரசின் ஆட்சி மொழியாக்கப்பட்டது. ஆகவே, எல்லா விஷயங்களையும் நன்றாக அலசிப் பார்த்த பிறகு, மால்டோவாவில் நடைபெறும் வேலையை ருமேனிய கிளை அலுவலகமே கவனித்துக்கொள்ளும்படி ஆளும் குழு பரிந்துரைத்தது.

இதற்கிடையே, கீஷினாவ் கிளை அலுவலகம்​—⁠சிறிய அப்பார்ட்மென்ட் ஒன்றில் செயல்பட்டுக் கொண்டிருந்த அலுவலகம்​—⁠தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்த வேலையை சமாளிக்க முடியாமல் திணறியது. ஒரு பெத்தேல் குடும்பத்தை நிறுவுவதற்கான வேளை வந்துவிட்டதென்பது தெளிவாக தெரிந்தது. அந்த பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினர்களாக முதன்முதல் வந்த சிலரில் யான் ருசு லுலியா ருசு என்ற தம்பதியும் இருந்தார்கள். 1991-லிருந்து 1994 வரைக்கும் சகோதரர் ருசு துணை வட்டாரக் கண்காணியாக சேவித்திருந்தார். சகோதரர் கியார்கே கோரோபெட்ஸ் பெத்தேல் குடும்பத்தின் மற்றொரு அங்கத்தினர்; இவர் இந்தப் புதிய நியமிப்பை பெறுவதற்கு முன் மாவட்டக் கண்காணியாக சேவித்தவர். இவர் பெத்தேலுக்கு வெளியே தங்கி, தினமும் அங்கு வந்து வேலை பார்த்துவிட்டு போனார். கிலியட் பள்ளியின் 67-வது வகுப்பில் பட்டம் பெற்ற குன்ட்டர் மாட்ஸூராவும் அவர் மனைவி ரோஸாரியா மாட்ஸூராவும் பல வருடம் ருமேனியாவில் சேவித்த பிறகு, மே 1, 1996-⁠ல் இங்கு வந்தார்கள்.

பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, பெத்தேல் ஊழியர்களின் எண்ணிக்கையும் உயர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் இடம்தான் போதவில்லை. அதுமட்டுமா, 1998-⁠க்குள்ளாக, மால்டோவா பெத்தேல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வெவ்வேறு இடங்களிலிருந்த ஐந்து அப்பார்ட்மென்ட்களில் குடியிருந்தார்கள்! ஆகவே, எல்லாரும் ஒரே இடத்தில் தங்கி வேலை செய்வதற்கேற்ற ஒரு பெத்தேல் வளாகத்திற்கான இடத்தை தேடும் படலம் ஆரம்பமானது. கீஷினாவ்வின் அரசாங்க அதிகாரிகள் சகோதரர்களுக்கு அந்நகரத்தின் மையப் பகுதியிலிருந்த 32,000 சதுரடி நிலத்தை அன்போடு அளித்தார்கள்; சகோதரர்களும் அதை நன்றியோடு பெற்றுக்கொண்டார்கள். எதிர்காலத்தில் பெத்தேல் இன்னும் விரிவடையும் என்பதை மனதில் வைத்து, அந்நிலத்திற்கு அடுத்தாற்போல் அமைந்திருந்த இன்னொரு நிலத்தையும் சகோதரர்கள் வாங்கினார்கள்.

வெளிப்புற கட்டட அமைப்பை மட்டும் கட்டுவதற்கு உள்ளூர் ஸ்தாபனம் ஒன்றுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. மீதமிருந்த வேலைகளை சர்வதேச வாலண்டியர்களும் உள்ளூர் சகோதர சகோதரிகளும் பார்த்துக்கொண்டார்கள். செப்டம்பர் 1998-⁠ல் கட்டுமான வேலை தொடங்கியது; பிறகு வெறும் 14 மாதங்களுக்குள், பெத்தேல் குடும்பத்தினர் தங்கள் புதிய வீட்டிற்கு மகிழ்ச்சி பொங்க குடிபுகுந்தார்கள்; ஒருவழியாய் எல்லாரும் சேர்ந்து இருக்கப்போவதால் தலைகால் புரியாதளவுக்கு பூரித்துப்போனார்கள்.

அந்தப் புதிய பெத்தேல் வளாகம் செப்டம்பர் 16, 2000-⁠ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதில் கலந்துகொண்டார்கள். அடுத்த நாளன்று, 10,000-⁠க்கும் அதிகமானோர் கூடிவந்திருந்த உள்ளூர் விளையாட்டு அரங்கு ஒன்றில் ஆளும் குழுவைச் சேர்ந்த ஜெரிட் லாஷ் சொற்பொழிவாற்றினார். உலகெங்குமுள்ள யெகோவாவின் மக்களை ஒன்றிணைக்கும் அனலான அன்பின் பிணைப்பை அங்கிருந்த அனைவருமே உணர்ந்தார்கள்.

தற்போது, மால்டோவா பெத்தேலில் 26 பேர் உள்ளார்கள். பெத்தேல் அங்கத்தினர்களாக சேவை செய்ய சிலர் வெளிநாட்டு பெத்தேல்களிலிருந்து வந்தார்கள்; இப்படித்தான் டேவிட் க்ரோஸெஸ்கூவும் அவர் மனைவி மிரியம் க்ரோஸெஸ்கூவும் இங்கு வந்தார்கள். என்னோ ஷலென்ட்ஸிக் என்பவரைப் போன்ற மற்றவர்களோ, தங்கள் சொந்த நாட்டிலேயே ஊழியப் பயிற்சி பள்ளியை முடித்த பிறகு, மால்டோவாவில் வெளிநாட்டு நியமிப்பை பெற்று வந்தார்கள். இந்த பெத்தேல் குடும்பம் அளவில் சிறியதுதான், ஆனால் அந்தக் குறையை பூரணமாக ஈடுகட்டும் விதத்தில் பல்வேறு தேசத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களே!

அறுவடைக்காரர்களுக்கான பயிற்சி

தடையுத்தரவு போடப்பட்டிருந்த ஆண்டுகளின்போதும், துன்புறுத்தல் தலைவிரித்தாடிய ஆண்டுகளின்போதும், மால்டோவாவிலிருந்த யெகோவாவின் மக்கள் முன்ஜாக்கிரதையோடு மற்றவர்களுக்கு நற்செய்தியை பிரசங்கித்தார்கள், ஆம், சந்தர்ப்ப சாட்சி மூலமாகத்தான். ஆனால் இப்போதோ பகிரங்கமாக வீட்டுக்கு வீடு சாட்சி கொடுப்பதற்கும் தெரு ஊழியம் செய்வதற்குமான வேளை வந்திருந்தது. ஊழியத்தின் இத்தகைய அம்சங்களில் சகோதரர்கள் கீழ்ப்படிதலோடு ஈடுபட்டார்கள், குறிப்பாக தெரு ஊழியத்தை எல்லாரும் விரும்பி செய்தார்கள். என்றாலும், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை பெருகி வந்தபோது, சமநிலையாக செயல்பட வேண்டியிருந்தது. ஆதலால், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்துமாறு சபைகளுக்கு உற்சாகமளிக்கப்பட்டது; சகோதரர்களும் அவ்வாறே உண்மையோடு செய்தார்கள்.

மெய்யான ஆன்மீக உணவுக்காக தங்கள் அயலகத்தார் எவ்வளவு பசிதாகத்துடன் இருந்தார்கள் என்பதை பிரஸ்தாபிகள் முன்பு எப்போதையும்விட அந்த சமயத்திலே அதிகமாக உணர ஆரம்பித்தார்கள். அந்தத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், யெகோவாவின் அமைப்பானது காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையும், வேறுபல பைபிள் படிப்பு உபகரணங்களையும் ருமேனிய, ரஷ்ய மொழிகளில் கிடைக்கும்படி செய்தது. அதே நேரத்தில், நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டிருந்த அளிப்புகளை உபயோகித்து, தங்கள் ஊழியத்தின் தரத்தை மேம்படுத்த பிரஸ்தாபிகளும் கடினமாக உழைத்தார்கள். அதோடு, தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் மூலமாக கிடைத்து வந்த பயிற்சியையும் அவர்கள் நல்ல விதத்தில் பயன்படுத்தினார்கள்.

வேறு நாடுகளிலிருந்து வந்த முதிர்ச்சி வாய்ந்த, அனுபவமுள்ள சகோதரர்கள் மேலுமான உதவியளித்தார்கள், விசேஷமாக அமைப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உதவினார்கள். கனிதரும் திராட்சக் கொடிகளுக்கு முட்டுக் கொடுக்கும் மரத்தட்டிகளைப் போல, திறன் படைத்த இந்த சகோதரர்கள் சபைகளுக்கு பக்கபலமாக இருந்து, அவற்றை ஸ்திரப்படுத்தினார்கள்; இதை மனப்பூர்வமாய் செய்தார்கள்.

அசுர வேக வளர்ச்சிக் காலம்

மால்டோவாவில் சீஷர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்திருப்பது, 6,62,000 பேர் குடியிருக்கும் அதன் தலைநகரமான கீஷினாவ்வில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறுவதற்கு முன், ஜனவரி 1991-⁠ல், கீஷினாவ்வில் இரண்டு சபைகள் மட்டுமே இருந்தன; அவற்றில் சுமார் 350 பிரஸ்தாபிகள் இருந்தனர். ஆனால், ஜனவரி 2003-⁠க்குள்ளாக, 37 சபைகளாகவும் 3,870-⁠க்கும் அதிகமான பிரஸ்தாபிகளாகவும் அந்த எண்ணிக்கை உயர்ந்தது! ஒரு சபையில் வெறும் ஒன்பது மாதங்களுக்குள் 101 பைபிள் மாணாக்கர்கள் புதிய பிரஸ்தாபிகளாக ஆனார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இப்படிப்பட்ட அசுர வளர்ச்சியின் காரணமாக, ஏறக்குறைய இரண்டே ஆண்டுகளுக்குப் பிறகு, இந்நகரத்திலிருந்த சபைகள் பிரிக்கப்பட்டு, புதுப் புது சபைகள் உருவாவது சகஜமானது.

ஆகஸ்ட் 1993-⁠ல், மால்டோவா முழுவதிலும் 6,551 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். ஆனால், மார்ச் 2002-⁠க்குள்ளாக அந்த எண்ணிக்கை 18,425 பிரஸ்தாபிகள் என்று உயர்ந்தது; ஒன்பது வருடங்களில் 280 சதவீத அதிகரிப்பு இது! அதே காலப்பகுதியில், ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கை 28-லிருந்து 1,232 ஆக உயர்ந்தது.

துணை மேயர் பயனியர் ஆகிறார்

யெகோவாவைப் பற்றிய அறிவை பெற்றுக்கொண்டவர்களில், அநேக முன்னாள் கம்யூனிஸவாதிகளும் அடங்குவர்; அவர்களில் சிலர் அரசாங்க அதிகாரிகளாகக்கூட இருந்தார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் வாலெரியூ முயெர்ஸா; சுமார் 39,000 பேர் உள்ள ஸராக்கா என்ற ஊரின் முன்னாள் துணை மேயர். விசேஷ நிகழ்ச்சிகளில் படை அணிவகுப்பு நடைபெறும்போது, மேடையில் அமர்ந்திருக்கும் பெரிய பெரிய புள்ளிகளைப் பார்த்து அணிவகுப்பினர் சல்யூட் அடிப்பார்கள்; அந்தப் பெரிய புள்ளிகளில் வாலெரியூவும் ஒருவராக இருந்தார். ஆகவே, அந்நகரத்தில் அவர் மிகப் பிரபலமானவராக இருந்தார்.

என்றாலும், காலப்போக்கில் அவர் பைபிளைப் படிக்க ஆரம்பித்து, முழுக்காட்டுதலும் பெற்றார். அவர் சாட்சி கொடுத்தபோது, ஜனங்கள் எப்படி பிரதிபலித்தார்கள்? “சொல்லப்போனால், எல்லாருமே என்னை வீட்டுக்குள் அழைத்துப் பேசினார்கள்” என்கிறார் சகோதரர் முயெர்ஸா. “பிரசங்கிப்பதற்கு எப்பேர்ப்பட்ட அருமையான வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன; எனக்கும் என் மனைவிக்கும் எங்கள் ஊர் எப்பேர்ப்பட்ட பலன்தரும் பிராந்தியமாக இருந்தது!” அதன்பின், சீக்கிரத்திலேயே சகோதரர் முயெர்ஸா விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டார். அவரும் அவர் மனைவியும் ஒரு வருடத்திற்கு பெத்தேலில்கூட சேவை செய்தார்கள். இப்போது, வட்டார வேலையில் பங்கு கொள்ளும் சிலாக்கியத்தை பெற்றிருக்கிறார்கள்.

பயனியர்கள் உதவுகிறார்கள்

தற்போது, ஐரோப்பாவில் பிரஸ்தாபிகளுக்கும் ஜனத்தொகைக்கும் இடையே உள்ள விகிதம் அதிகமாய் உள்ள நாடுகளில் மால்டோவாவும் ஒன்று. என்றபோதிலும், அநேக கிராமங்களிலும் சிறிய ஊர்களிலும் ஒரேவொரு யெகோவாவின் சாட்சிகூட இப்போது இல்லை. கடினமான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பெரும்பாலான பிரஸ்தாபிகளாலும் பயனியர்களாலும் தேவை அதிகமுள்ள பிராந்தியங்களுக்கு சென்று சேவை செய்ய முடிவதில்லை. இப்பகுதியெங்கும் உள்ள மக்களுக்கு நற்செய்தி எப்படியாவது சென்றெட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் ருமேனிய கிளை அலுவலகம் கிட்டத்தட்ட 50 விசேஷ பயனியர்களை மால்டோவாவில் நியமித்திருக்கிறது. இவர்களில், 20-⁠க்கும் அதிகமானோர், ருமேனியா, ரஷ்யா மற்றும் உக்ரைனில் நடைபெற்ற ஊழியப் பயிற்சி பள்ளியிலிருந்து பயிற்சி பெற்றவர்கள்.

கடுமையாக உழைக்கும் இந்த சுவிசேஷகர்கள் மிகச் சிறந்த பலன்கள் சிலவற்றை அறுவடை செய்து வருகிறார்கள். உதாரணத்திற்கு, விசேஷ பயனியர்களான செர்கே ஸிகெல் என்பவரும் அவர் மனைவி அக்ஸானா ஸிகெலும் 1995-⁠ல் கவுஷெனி என்ற ஊரில் நியமிக்கப்பட்டார்கள்; அங்கு 15 பிரஸ்தாபிகளையுடைய ஒரேவொரு தொகுதி மட்டுமே அப்போது இருந்தது. உள்ளூர் சகோதரர்கள் ஏராளமான பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு இந்தப் பயனியர் தம்பதிகள் உதவினார்கள். அதோடு அவர்கள் பயனியர் ஊழியத்தில் மகிழ்ச்சியான மனநிலையை வெளிக்காட்டியதால், இன்னும் அநேகர் முழுநேர ஊழியத்தில் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். இப்போது கவுஷெனியில் இரண்டு சபைகளும் சுமார் 155 பிரஸ்தாபிகளும் இருக்கிறார்கள்​—⁠ஏழே வருடத்திற்குள் பத்து மடங்கு அதிகரிப்பு! இதற்கிடையே, ஸிகெல் தம்பதியினர் வட்டார வேலையில் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார்கள்; இதனால் மேலும் அநேக சபைகளுக்கு அவர்களால் உதவ முடிகிறது.

சுதந்திரத்தின் மத்தியிலும் இன்னல்கள்

மனித ஆட்சிமுறையில்​—⁠அது எப்படிப்பட்ட ஆட்சியாக இருந்தாலும்சரி​—⁠பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். ருமேனிய மன்னர் ஆட்சியிலும், ஃபாசிஸ சர்வாதிகாரத்திலும், கம்யூனிஸ ஆட்சியிலும் மால்டோவாவிலிருந்த யெகோவாவின் மக்கள் பாதிரிகளின் எதிர்ப்பையும், தடையுத்தரவையும், துன்புறுத்தலையும், நாடுகடத்தப்படுதலையும் கஷ்டப்பட்டு சமாளிக்க வேண்டியிருந்தது. இப்போதோ, அவர்கள் தங்கள் அயலகத்தாரைப் போல பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது; இந்தப் பொருளாதார கஷ்டத்தினால் குடும்பத்திலுள்ள கணவன், மனைவி இருவருமே வேலைக்கு போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. மற்றவர்களுக்கோ வேலை தேடித்தேடியே பிராணன் போய்விடுகிறது.

அதே நேரத்தில், பொருளாசையினாலும் ஒழுக்க சீர்குலைவினாலும் குற்றச்செயல் மற்றும் ஊழல் அதிகரித்து வருகிறது. யெகோவாவின் மக்கள் தங்கள் ஆவிக்குரிய தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் இத்தகைய மறைமுக அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக சமாளிக்க முடியுமா? ஆம், கண்டிப்பாக! பிரச்சினைகளையும் சோதனைகளையும் எதிர்ப்படும்போது, உதவிக்காக யெகோவாவை நோக்கி மன்றாடும் உத்தமர்களை அவர் ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதை அனுபவப்பூர்வமாக அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.​—2 தீ. 3:1-5; யாக். 1:2-4.

இன்றைய சூழ்நிலை, வெளிப்படுத்துதல் 14-⁠ம் அதிகாரத்தை நம் நினைவுக்கு கொண்டு வருகிறது; அதில் இரண்டு விதமான அடையாள அறுவடை வேலையைப் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று, “பூமியின் திராட்சக் கொடிகளை,” அதாவது தீய பயிர்களை அறுவடை செய்வதாகும்; தீர்க்கதரிசனத்தில் உரைக்கப்பட்டபடியே, இக்கடைசி நாட்களின்போது இத்தீய பயிர் படுவேகமாக பெருகி வருகிறது. (வெளி. 14:17-20, NW; சங். 92:7) சீக்கிரத்தில் இந்தத் ‘திராட்சக் கொடியும்’ அதன் அழுகிப்போன பழங்களும் வேரோடு பிடுங்கப்பட்டு, “தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே” வீசியெறியப்படும். அந்த நாளுக்காக யெகோவாவின் ஊழியர்கள் எவ்வளவாய் ஏங்குகிறார்கள்!

அதே நேரத்தில், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களுடைய தோழர்களும் தங்களுடைய ஆவிக்குரிய செழிப்பைக் குறித்து மகிழ்கிறார்கள். ஆம், யெகோவாவுடைய “நல்ல திராட்ச ரசத்தைத் தரும் திராட்சத் தோட்டம்” சத்துள்ள ஆன்மீக உணவை அபரிமிதமாக தொடர்ந்து விளைவித்து, செம்மறியாடு போன்ற ஜனங்களை தன்னிடம் தொடர்ந்து கவர்ந்திழுக்கும். இதைக் குறித்து கடவுளுடைய மக்கள் ஏன் அவ்வளவு நிச்சயமாய் இருக்கலாம்? ஏனெனில், யெகோவா தாமே தம் அருமையான திராட்சத் தோட்டத்தை பேணிப் பாதுகாக்கிறார். (ஏசா. 27:2-4) மால்டோவாவைப் பொறுத்தவரை இது எவ்வளவு உண்மை! துன்புறுத்தல், நாடுகடத்துதல், பொய்ப் பிரச்சாரம், அல்லது கள்ள சகோதரர்கள் என சாத்தான் பயன்படுத்தியிருக்கும் அநேக சதித்திட்டங்கள் கடவுளுடைய மக்களுக்கு பல இன்னல்களை உண்டுபண்ணியிருப்பது என்னவோ நிஜம்தான், ஆனால் அவை யாவுமே ஆவிக்குரிய ரீதியில் அவர்களை முறியடிக்க முடியாமல் போனது.​—ஏசா. 54:17.

ஆம், “சோதனையைச் சகிக்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்; அவன் உத்தமனென்று விளங்கின பின்பு, தம்மீது தொடர்ந்து அன்பு செலுத்துகிறவர்களுக்காக யெகோவா வாக்கு கொடுத்திருக்கும் ஜீவகிரீடத்தைப் பெற்றுக் கொள்வான்.” (யாக். 1:12, NW) இந்தப் பொன்னான வார்த்தைகளை மனதில் வைத்து, மால்டோவாவிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தை வாசிக்கையில், யெகோவாவை ‘தொடர்ந்து நேசிக்கவும்,’ ‘சோதனையை சகிக்கவும்,’ ‘மிகுந்த கனிகளை கொடுத்துக்கொண்டே இருக்கவும்’ தூண்டப்படுவீர்களாக.​—யோவா. 15:8.

[அடிக்குறிப்பு]

a சூழமைவு தேவைப்படுத்தினால் தவிர, பெஸரேபியா மற்றும் மால்டேவியா என்ற பெயர்களுக்கு பதிலாக மால்டோவா என்ற பெயரே பயன்படுத்தப்படும். என்றாலும், தற்போதைய மால்டோவாவின் எல்லைகளும் பழைய பெஸரேபியா மற்றும் மால்டேவியாவின் எல்லைகளும் ஒன்றல்ல என்பதை நினைவில் வையுங்கள். உதாரணத்திற்கு, பெஸரேபியாவின் ஒரு பகுதி, இப்போது உக்ரைனில் இருக்கிறது; மேலும், மால்டேவியாவின் ஒரு சிறு பகுதி ருமேனியாவில் இருக்கிறது.

[பக்கம் 71-ன் பெட்டி/​படம்]

ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் ஒயின் கிடங்கு

மால்டோவாவின் நீண்ட கோடை காலமும், அதன் வளமான நிலங்களும் ஒயின் தயாரிப்புக்கு ஏற்றவையாக அமைந்துள்ளன; ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு ஒயின் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்த ஜனங்கள், பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் கிரேக்கர்களோடும், பிற்பாடு பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில் ரோமர்களோடும் தொடர்பு வைத்துக்கொண்டபோது ஒயின் தயாரிப்பு பன்மடங்கு அதிகரித்தது.

இன்று, மால்டோவாவில் ஒயின் தயாரிப்புதான் முக்கிய தொழிலாக இருக்கிறது; இங்குள்ள கிட்டத்தட்ட 130 ஒயின் தொழிற்சாலைகளில் ஒவ்வொரு ஆண்டும் 140 மில்லியன் லிட்டர் ஒயின் தயாரிக்கப்படுகிறது. முக்கியமாக ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் ஏறத்தாழ 90 சதவீத ஒயின் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது; இவற்றில் ஏறக்குறைய 80 சதவீதத்தை ரஷ்யாவும் ஏறக்குறைய 7 சதவீதத்தை உக்ரைனும் இறக்குமதி செய்கின்றன.

[பக்கம் 72-ன் பெட்டி]

மால்டோவா​—⁠ஒரு கண்ணோட்டம்

நிலம்: மால்டோவாவின் மத்திய பகுதியும் வடக்குப் பகுதியும் காட்டுப்பிரதேசமாக இருக்கின்றன; இங்கு பச்சைப்பசேலென்ற மேட்டுப் பகுதிகளும், பரந்த புல்வெளிகளும் உள்ளன. தென் பகுதியிலுள்ள பரந்த புல்வெளிகள் பெரும்பாலும் விளைநிலமாக இருக்கின்றன.

மக்கள்: ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பகுதியினர் பூர்வீக மால்டோவ இனத்தவர்கள். மீதமுள்ளவர்களில் பெரும் பகுதியினர் ரஷ்யர்கள்; தவிர, உக்ரைன் நாட்டவர்கள், காகொஸ் என்றழைக்கப்படும் துருக்கியர்கள், பல்கேரியர்கள், யூதர்கள் ஆகியோரும் இங்கே இருக்கிறார்கள்; இப்பட்டியல் ஜனத்தொகைக்கேற்ப வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மால்டோவிய மக்களில் பெரும்பாலோர் ஈஸ்டர்ன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை சேர்ந்தவர்கள்.

மொழி: ருமேனிய மொழி இந்நாட்டின் ஆட்சி மொழியாகும். அநேகர் ரஷ்ய மொழியும் பேசுகிறார்கள்​—⁠குறிப்பாக நகர்ப்புறங்களில். இவ்விரண்டு மொழிகளும் பொதுவாக பேசப்படுகின்றன.

பிழைப்பு: விவசாயமும், உணவு பதப்படுத்தும் தொழிலும் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கின்றன. தொழில்துறை இப்போது வளர்ச்சியடைந்து வருகிறது.

உணவு: திராட்சை, கோதுமை, சோளம், சர்க்கரைவள்ளி, சூரியகாந்திப்பூ ஆகியவை பயிரிடப்படுகின்றன. கால்நடைகள் முக்கியமாக இறைச்சிக்காகவும் பால்பண்ணைப் பொருட்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன; பன்றிகளும் உணவுக்காக வளர்க்கப்படுகின்றன.

சீதோஷ்ணம்: ஜனவரியில் தட்பவெப்ப நிலை -4 டிகிரி செல்சியஸ் இருக்கும், பிறகு மெதுமெதுவாக ஜூலையில் சுமார் 21 டிகிரி செல்சியஸ் வரை உஷ்ணம் அதிகரிக்கும். குளிர் காலத்தில் இங்கு ஓரளவுக்குத்தான் குளிர் இருக்கிறது; ஆக, சீதோஷ்ணம் வெதுவெதுப்பானது என்றே சொல்லலாம். சராசரியாக ஓர் ஆண்டில் சுமார் 50 சென்டிமீட்டர் மழை பெய்கிறது.

[பக்கம் 83-85-ன் பெட்டி]

கிறிஸ்தவ நடுநிலைமைக்கு தலைசிறந்த முன்மாதிரிகள்

ஷுர்ஷ் வாக்கார்ச்சூக்: சகோதரர் வாக்கார்ச்சூக் ஒரு யெகோவாவின் சாட்சியாக வளர்க்கப்பட்டிருந்தார். டிசம்பர் 1942-⁠ல் ஃபாசிஸ அரசாங்கம் அவரை இராணுவத்தில் சேரும்படி அழைத்தது. அவரோ இராணுவத்தில் சேர மறுத்தார். அதனால் கும்மிருட்டான ஒரு சிறையில் 16 நாட்களுக்கு அவரை அடைத்து வைத்தார்கள், அதுமட்டுமல்ல சாப்பிடுவதற்கு மிகக் குறைந்தளவு உணவையே தந்தார்கள். அதிகாரிகள் அவரை திரும்பவும் அழைத்து, இராணுவத்தில் சேர்ந்தால் அவருடைய தண்டனைத் தீர்ப்பை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள்; ஆனால், அந்தத் தீர்ப்பை அதுவரை அவரிடம் படித்துக் காட்டவே இல்லை. இந்த முறையும் அவர் மறுத்தார்.

இதன் காரணமாக, ஷுர்ஷுக்கு 25 வருட சிறைதண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 25, 1944-⁠ல் சோவியத் துருப்புகள் வந்தபோது, அவர் விடுதலையாக்கப்பட்டார். என்றாலும், இரண்டு மாதத்திற்குள்ளாகவே, சோவியத் ஆட்கள் அவரை கட்டாய இராணுவ சேவையில் ஈடுபடுத்த முனைந்தார்கள். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சிக்கு விரோதமாக அவர் செயல்படாததால், பத்து வருடங்களுக்கு பல்வேறு கட்டாய உழைப்பு முகாம்களில் அவர் வேலை செய்ய வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஒரு வருட காலத்திற்கு அவர் எங்கிருந்தார் என்றே அவருடைய குடும்பத்தாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐந்து வருடங்களுக்குப் பிறகு, டிசம்பர் 5, 1949-⁠ல் விடுவிக்கப்பட்டார். கோர்ஷெயூட்ஸிலிருந்த அவருடைய வீட்டிற்கு திரும்பினார். மார்ச் 12, 1980-⁠ல் மரிக்கும் வரையாக உத்தமத்தை காத்துக்கொண்டார்.

பார்ஃபின் கோரியாசாக்: இவர் 1900-⁠ல் பிறந்தார்; 1925-லிருந்து 1927 வரையிலான வருடங்களின்போது, க்லினா என்ற கிராமத்தில், சகோதரர் கொரியசியுக் பைபிள் சத்தியத்தை அறிந்துகொண்டார். நிக்காலை, யான் ஆகிய தன் இரு சகோதரர்களோடு சேர்ந்து, அந்தக் கிராமத்திலிருந்த முதல் பைபிள் மாணாக்கர்களான டாமியான் ரோஷூ, ஆலெக்சான்ட்ரூ ரோஷூ என்பவர்களிடம் சத்தியத்தை படித்தார்.

1933-⁠ல், மற்ற சாட்சிகளோடு சேர்ந்து பார்ஃபின் கைது செய்யப்பட்டு, கோட்டின் என்ற பட்டணத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்; அங்கு விசாரணை நடந்தது, பிறகு பிரசங்கம் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டார். 1939-⁠ல், அந்தக் கிராமத்திலிருந்த ஒரு பாதிரியின் தூண்டுதலால், பக்கத்து கிராமமான கிலாவட்ஸிலுள்ள காவல்நிலையத்திற்கு அவர் கொண்டு வரப்பட்டார். இங்கு போலீஸார் அவரை குப்புறப்படுக்க வைத்து ஒரு மரக்கட்டிலில் கட்டிப்போட்டு அவருடைய உள்ளங்காலில் திரும்பத் திரும்ப அடித்தார்கள்.

ஃபாசிஸ ஆட்சி தொடங்கியதும், பார்ஃபின் மறுபடியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அதே வருடம், சோவியத் ஆட்கள் அவரை விடுவித்தார்கள்; என்றாலும், இராணுவத்தில் சேர மறுத்தபோது திரும்பவும் அவரை கைது செய்தார்கள். கீஷினாவ்விலிருந்த சிறைச்சாலையில் பல மாதங்கள் அவரை வைத்திருந்தார்கள், பிற்பாடு விடுதலையாக்கினார்கள்.

1947-⁠ல், சோவியத் ஆட்கள் இன்னொரு முறை பார்ஃபினை கைது செய்தார்கள், இந்த முறை கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கம் செய்ததற்காக எட்டு வருடங்கள் நாடுகடத்தப்பட்டார். 1951-⁠ல், அவருடைய பிள்ளைகள் சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்கள். என்றாலும், அவர்கள் தங்கள் தந்தையோடு ஒன்று சேர முடியவில்லை. சொல்லப்போனால், அவர்கள் மறுபடியும் அவரை பார்க்கவே இல்லை. நாடு கடத்தப்பட்டிருந்த சமயத்தில் பார்ஃபினின் உடல்நிலை படு மோசமானது; 1953-⁠ல் மரித்தார், கடைசிவரை உத்தமத்தில் நிலைத்திருந்தார்.

வாசிலெ பாடூரெட்ஸ்: கோர்ஷெயூட்ஸில் 1920-⁠ம் வருடம் பிறந்தார். 1941-⁠ல், ஃபாசிஸ சகாப்தத்தின்போது, சகோதரர் படுரிட் சத்தியத்தை கற்றுக்கொண்டார். எனவே, ஃபாசிஸவாதிகளிடமும் சோவியத் ஆட்களிடமும் மாட்டிக்கொண்டு இவரும் தவிக்க வேண்டியிருந்தது. சோவியத் ஆட்களிடம் தைரியமாக இவ்வாறு சொன்னார்: “நான் கம்யூனிஸ ஆட்களை சுட்டுக் கொல்லவில்லை, ஃபாசிஸ ஆட்களையும் கொல்லப்போவதில்லை.”

பைபிளில் சொல்லப்பட்டதற்கு இசைய வாசிலெ இராணுவத்தில் சேர மறுத்ததால், அவரை பத்து வருடங்களுக்கு சோவியத்தின் கட்டாய உழைப்பு முகாமில் போட வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், அவருடைய தண்டனைத் தீர்ப்பு ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது; ஆகஸ்ட் 5, 1949-⁠ல், வீடு திரும்பினார். மூன்றாவது முறையாக அவர் கைது செய்யப்பட்டபோது, ஆப்ரேஷன் நார்த் தொடங்கியிருந்தது. ஆகவே, ஏப்ரல் 1, 1951-⁠ல், வாசிலெவும் அவர் குடும்பத்தாரும் குட்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். ஐந்து வருடங்கள் அங்கிருந்த பிறகு, மால்டோவாவிலுள்ள கோர்ஷெயூட்ஸுக்கே திரும்பிப் போவதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். வாசிலெ யெகோவாவுக்கு உத்தமமாக இருந்து, ஜூலை 6, 2002-⁠ல், இந்தக் கட்டுரை தயாரிக்கப்பட்டு வந்த சமயத்தில் மரித்தார்.

[பக்கம் 89, 90-ன் பெட்டி/​படம்]

‘ஊழியத்திற்கென அர்ப்பணித்த என் வாழ்க்கையை வேறு எதற்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்’

யான் சாவா ஊர்சாய்

பிறந்தது: 1920

முழுக்காட்டப்பட்டது: 1943

பின்னணி குறிப்பு: கம்யூனிஸ சகாப்தத்தின்போது வட்டாரக் கண்காணியாக சேவை செய்தவர்.

மால்டோவாவிலுள்ள காராகூஷினி என்ற ஊரில் நான் பிறந்தேன்; இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பே நான் சத்தியத்தை கற்றுக்கொண்டேன். 1942-⁠ல் என் மனைவி இறந்துபோனாள். அவளுடைய சவ அடக்கத்தின்போது, ஒரு கும்பல் என்னை கல்லறைத் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டது. காரணம்? நான் மதம் மாறியிருந்தேன். அதே வருட பிற்பகுதியில், ஃபாசிஸ அரசாங்கம் என்னை கட்டாயத்தின்பேரில் இராணுவத்தில் சேர்க்க முயற்சி செய்தது. அரசியலில் நடுநிலை வகிக்க விரும்பியதால் இராணுவத்தில் சேர மறுத்தேன். இதனால் எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் பிறகு அது 25 வருட சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாம் என என்னை மாற்றிக்கொண்டே இருந்தார்கள். ருமேனியாவிலுள்ள க்ரயோவாவில் நான் சிறையில் கிடந்தபோது, சோவியத் படை வந்து எங்களை விடுவித்தது.

நான் வெளியே வந்து, சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதற்குள்ளாகவே கம்யூனிஸக்காரர்கள் திரும்பவும் என்னை சிறையில் அடைத்தார்கள். ரஷ்யாவிலுள்ள கலினனுக்கு என்னை அனுப்பினார்கள். இரண்டு வருடம் கழித்து, 1946-⁠ல், என் சொந்த கிராமத்திற்கே போக விட்டார்கள்; அங்கு போன பிறகு, பிரசங்க வேலையை சீரமைக்க உதவினேன். பிற்பாடு, 1951-⁠ல், சோவியத் படையினர் மறுபடியும் என்னை கைது செய்தார்கள். இந்த முறை, ஏராளமான மற்ற சாட்சிகளோடு சேர்த்து என்னை சைபீரியாவுக்கு நாடு கடத்தினார்கள். 1969 வரை நான் வீடு திரும்பவே இல்லை.

கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும்போது, என் உத்தமத்தை காத்துக்கொள்ள யெகோவா என்னை பலப்படுத்திய எத்தனையோ சம்பவங்கள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. என்னை படைத்தவருக்கு ஊழியம் செய்வதற்கென அர்ப்பணித்த வாழ்க்கையை இவ்வுலகிலுள்ள வேறு எதற்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன். இப்போது வயோதிகத்தின் பிடியிலும், மோசமாகி வரும் உடல்நிலையிலும் சிக்கிக்கொண்டு தவிக்கிறேன். ஆனால், நான் மீண்டும் இளமைக்கு திரும்பும் அந்தப் புதிய உலகத்தைப் பற்றிய உறுதியான நம்பிக்கை, “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல்” இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாயிருக்க என்னை பலப்படுத்துகிறது.​—⁠கலா. 6:9.

[பக்கம் 100-102-ன் பெட்டி/​படம்]

பாடறதுக்கு நிறைய விஷயம் என்கிட்ட இருக்கு

ஆலிக்ஸான்ட்ரா கார்டன்

பிறந்தது: 1929

முழுக்காட்டப்பட்டது: 1957

பின்னணி குறிப்பு: சோவியத் ஆட்சியின் கீழ் துன்பப்பட்டவர், தற்போது சபையில் ஒரு பிரஸ்தாபியாக இருக்கிறார்.

பாட்டுப் பாடுவது என்றால் எனக்கு உயிர்; சத்தியத்தை கண்டடைவதற்கும், பிற்பாடு என்னுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டபோது ஆவிக்குரிய விதத்தில் உறுதியோடு இருப்பதற்கும் பாட்டுப் பாடுவது எனக்கு உதவியது. என் கதை ஆரம்பமானது இப்படிதான்: 1940-களில் நான் ஒரு டீனேஜராக இருந்த சமயத்தில், ராஜ்ய பாடல்கள் பாடுவதிலும், பைபிளைப் பற்றி கலந்தாலோசிப்பதிலும் சந்தோஷமாக தங்கள் ஓய்வு நேரத்தை கழித்த ஒரு இளைஞர் கூட்டத்தை கோர்ஷெயூட்ஸில் சந்தித்தேன். அந்த பைபிள் கலந்தாலோசிப்புகளிலிருந்தும் அங்கு பாடிய பாடல்களிலிருந்தும் நான் கற்றுக்கொண்ட ஆன்மீக சத்தியங்கள் என் மனதில் அழியா முத்திரைகளை பதித்தன.

சீக்கிரத்திலேயே நற்செய்தியை பிரசங்கிக்கும் ஒரு பிரஸ்தாபி ஆனேன். இதன் காரணமாக, 1953-⁠ல், பத்து சாட்சிகளோடு சேர்த்து என்னையும் கைது செய்தார்கள். வழக்கு விசாரணைக்காக நான் காத்துக்கொண்டிருந்தபோது, கீஷினாவ்விலிருந்த ஒரு சிறையில் என்னை அடைத்து வைத்தார்கள். ராஜ்ய பாடல்களைப் பாடுவதன் மூலம் என் ஆவிக்குரிய பலத்தை காத்துக்கொண்டேன்; இப்படி நான் பாடியது சிறைக் காவலர் ஒருவருக்கு எரிச்சலாக இருந்தது; அதனால்: “இங்க பாரு, நீ இப்போ இருக்கிறது ஜெயில், கச்சேரி நடத்துற இடமில்ல!” என்று கத்தினார்.

அதற்கு நான், “என் வாழ்நாளெல்லாம் பாட்டு பாடிட்டே இருந்திருக்கேன். இப்ப மட்டும் நான் ஏன் பாடறதை நிறுத்தனும்? நீங்க என்னை ஜெயில்ல போட்டு பூட்டி வைக்கலாம், ஆனா என்னோட வாய்க்கு பூட்டுப் போட உங்களால முடியாது. என் மனசு சுதந்திரமா இருக்கு, யெகோவாவை நான் நேசிக்கிறேன். அதனால பாடுறதுக்கு நிறைய விஷயம் என்கிட்ட இருக்கு” என்று பதிலளித்தேன்.

ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகில், இன்டா என்ற ஊரிலிருந்த கட்டாய உழைப்பு முகாமில் 25 வருடங்கள் நான் வேலை செய்ய வேண்டுமென்று தீர்ப்பளிக்கப்பட்டேன். குறுகிய கோடை கால மாதங்களின்போது, நானும் மற்ற சாட்சிகளும் பக்கத்திலிருந்த காடுகளுக்குப் போய் வேலை பார்த்தோம். மனப்பாடமாக தெரிந்திருந்த பெரும்பாலான ராஜ்ய பாடல்களை பாடியது இந்த முறையும் ஆவிக்குரிய விதத்தில் உறுதியாக இருக்க எங்களுக்கு உதவியது; அதுமட்டுமல்ல, இப்படி பாடியது மனதளவில் நாங்கள் சுதந்திரமாக இருப்பதை உணர்த்தியது. அதோடு, கீஷினாவ்விலிருந்த அந்தக் காவலரைப் போல் இல்லாமல், இங்கிருந்த காவலர்கள் எங்களை பாடும்படி ஊக்குவித்தார்கள்.

இன்டா முகாமில் நான் மூன்று வருடம், மூன்று மாதம், மூன்று நாட்கள் இருந்தேன். பிற்பாடு, பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் விடுதலையாக்கப்பட்டேன். மால்டோவாவிலிருந்த என் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படாததால், ரஷ்யாவிலுள்ள டோம்ஸ்க் நகருக்கு சென்றேன். நான்கு வருடங்களுக்கு பிறகு, அங்கே என் கணவரோடு மறுபடியும் ஒன்று சேர்ந்தேன்; அவரும் சிறைவாசம் அனுபவித்திருந்தார்.

அதுவரை நான் கைதியாகவே இருந்ததால், முழுக்காட்டுதல் மூலம் என் ஒப்புக்கொடுத்தலை தெரியப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் டோம்ஸ்க்கிலுள்ள சகோதரர்களை அணுகி இதைப் பற்றி கேட்டேன். இன்னும் அநேகரும் முழுக்காட்டுதல் பெற விரும்பியதால், அந்த சகோதரர்கள் தாமதிக்காமல் முழுக்காட்டுதலுக்கு ஏற்பாடு செய்தார்கள். என்றாலும், தடையுத்தரவு இருந்ததால், அருகிலுள்ள காட்டில், இராத்திரி வேளையில் முழுக்காட்டுதல் கொடுக்க தீர்மானித்தார்கள்.

குறிக்கப்பட்ட நேரத்தில், ஜோடி ஜோடியாக​—⁠சந்தேகம் வராமல் இருப்பதற்காக​—⁠டோம்ஸ்க்கின் புறநகர்ப் பகுதியை விட்டு காட்டிற்குள் நடந்து போனோம். ஒவ்வொரு ஜோடியும் தங்களுக்கு முன் சென்று கொண்டிருந்த ஜோடியை பின்பற்றி, பத்திரமாக குளத்தண்டைக்கு வந்து சேர வேண்டியிருந்தது. நாங்கள் போட்ட திட்டம் அதுதான். ஆனால், எங்கள் முன் சென்று கொண்டிருந்த வயதான இரண்டு சகோதரிகள் போக வேண்டிய வழியை விட்டுவிட்டு திசைமாறி சென்று கொண்டிருந்தார்கள். அது தெரியாமல், நாங்களும் அதே வழியில் பின் தொடர்ந்தோம், எங்கள் பின் வந்து கொண்டிருந்தவர்களும் எங்களை நம்பி எங்களுக்குப் பின்னாலேயே வந்துகொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்திற்குள்ளாக நாங்கள் சுமார் பத்து பேர் இருட்டுக்குள் வழி தவறி வேறெங்கோ போய் மாட்டிக்கொண்டோம். ஈரமான காட்டுப் புதர்களுக்குள் நடந்து வந்ததால் எங்கள் உடம்பு முழுதும் நனைந்திருந்தது; குளிரில் நடுநடுங்கிக் கொண்டிருந்தோம். அந்த இடத்தில்தான் கரடிகளும் ஓநாய்களும் இரைதேடி அலையும் என்பதால், அவை எங்கள் மனக்கண்களில் தோன்றி பயமுறுத்தின; நாங்கள் அந்தளவு வெடவெடத்துப் போயிருந்ததால், விசித்திரமான எந்த சத்தமும் எங்களை உறைய வைத்தது.

பயத்தில் நடுங்காமலும் மனதை தளரவிடாமலும் இருப்பது ரொம்ப முக்கியம் என்பதை உணர்ந்தவளாக, நான் ஒரு ஆலோசனை வழங்கினேன்; அதாவது, அங்கேயே அமைதியாக நின்று, ராஜ்ய பாடல் ஒன்றின் ட்யூனை விசிலடிக்கலாம் என்றேன்; அப்போது விசில் சத்தத்தை மற்றவர்கள் கேட்க முடியுமென நம்பினேன். அதோடு, ஊக்கமாகவும் ஜெபித்தோம். நாங்கள் விசிலடித்த அதே ட்யூன் வேறு எங்கிருந்தோ அந்த கும்மிருட்டையும் துளைத்துக்கொண்டு எங்கள் காதுகளில் வந்து ஒலித்தபோது நாங்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்போம் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! ஆம், எங்களுடைய விசில் சத்தம் சகோதரர்கள் காதுகளுக்கு எட்டியிருந்தது! நாங்களெல்லாரும் அவர்கள் இருந்த இடத்திற்கு செல்ல வசதியாக உடனே டார்ச் லைட்டை அடித்தார்கள். அதன் பிறகு, அங்கிருந்த ஐஸ் தண்ணீரில் நாங்கள் முழுக்காட்டுதல் பெற்றோம்; எங்களுக்கு ஒரே சந்தோஷமாக இருந்தது, தண்ணீர் படு ஜில்லென்று இருந்ததுகூட எங்களுக்கு உறைக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

எனக்கு இப்போது 74 வயது; முதன்முதலில் எனக்கு எந்த இடத்தில் சத்தியம் கிடைத்ததோ அந்த கோர்ஷெயூட்ஸில்தான் இப்போது வசிக்கிறேன். எனக்கு வயசாகிக்கொண்டே போனாலும், பாடுவதற்கு இன்னமும் என்னிடம் நிறைய விஷயம் இருக்கிறது, குறிப்பாக நம் பரலோக தந்தையைப் போற்றி பாடுவதற்கு.

[பக்கம் 104-106-ன் பெட்டி/​படங்கள்]

என் பெற்றோரின் முன்மாதிரியை பின்பற்ற முயன்றேன்

வாசிலெ ஊர்சூ

பிறந்தது: 1927

முழுக்காட்டப்பட்டது: 1941

பின்னணி குறிப்பு: சபை ஊழியராக சேவை செய்தவர், பிரசுரங்களை இரகசியமாக தயாரித்தவர்.

என் அப்பா சிமியான் ஊர்சூவும், அம்மா மரியா ஊர்சூவும் 1929-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றார்கள். ஐந்து குழந்தைகளில் நான் மூத்தவன். ஃபாசிஸ சகாப்தத்தின்போது, அப்பாவும் அம்மாவும் நடுநிலை வகித்ததால் கைது செய்யப்பட்டு, கட்டாய உழைப்பு முகாமில் 25 வருடங்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்கள். ஆகவே, கோர்ஷெயூட்ஸுக்கு அருகில் இருந்த சபையிலுள்ள சகோதர சகோதரிகள் பிள்ளைகளான எங்களை கவனித்துக் கொண்டார்கள், அதோடு எங்கள் பண்ணையையும் பராமரித்தார்கள். அதனால், சாப்பாட்டு விஷயத்தில் எங்களுக்கு ஒரு குறையும் இருக்கவில்லை. சத்தியத்தில் இல்லாத வயதான எங்கள் பாட்டியும் எங்களை கவனித்துக் கொண்டார். அப்போது எனக்கு வயது 14.

என் பெற்றோரின் நல்ல முன்மாதிரியை பின்பற்றி, என் கூடப்பிறந்தவர்களின் ஆவிக்குரிய தன்மையை பராமரிப்பதற்கு கடினமாக பிரயாசப்பட்டேன். அதற்காக, பைபிள் பிரசுரங்களின் சில பகுதிகளை தினந்தோறும் ஒன்றுசேர்ந்து கலந்தாலோசிக்க அவர்களை சீக்கிரமாகவே எழுப்பி விடுவேன். விடிந்தும் விடியாமல் படுக்கையைவிட்டு எழுவதற்கு அவர்கள் அவ்வளவாக இஷ்டப்படவில்லை என்றாலும், கட்டாயப்படுத்தி அவர்களை எழ வைத்தேன். தவறாமல் பைபிள் படிப்பதன் அவசியத்தை நான் உணர்ந்தேன். அதன் விளைவாக, 1944-⁠ல் அம்மாவும் அப்பாவும் சீக்கிரமாகவே விடுதலையாகி வெளியே வந்தபோது, நாங்கள் ஆவிக்குரிய ரீதியில் ஆரோக்கியமாக இருந்ததைப் பார்த்து உச்சி குளிர்ந்துபோனார்கள். குடும்பமாக அப்படி ஒன்றிணைந்தது எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை அளித்தது! ஆனால், எங்கள் சந்தோஷம் நெடுநாள் நீடிக்கவில்லை.

அதற்கடுத்த வருடம் சோவியத் படையினர் அப்பாவை கைது செய்து, ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல், சைபீரியாவிலுள்ள நோரில்ஸ்க் என்ற நகரின் சிறையில் போட்டார்கள். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எமிலியாவை மணம் செய்தேன்; அவள் கலகலவென்று பழகுபவளாகவும் ஆன்மீக சிந்தையுடையவளாகவும் இருந்தாள். சிறு வயதிலிருந்தே நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வளர்ந்திருந்ததால் அவளைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனால், மணமுடித்து ஒரு வருடம்கூட ஆகவில்லை, அதற்குள் நான் கைது செய்யப்பட்டேன், அம்மாவும் என்னோடு சேர்த்து கைது செய்யப்பட்டார்; நாங்கள் கீஷினாவ்விற்கு அனுப்பப்பட்டோம், அங்கே 25 வருட காலத்திற்கு கட்டாய உழைப்பு முகாமில் வேலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டோம். பெற்றோரையும் இழந்து, இப்போது தங்கள் அண்ணனையும் இழந்திருந்த என் கூடப்பிறந்தவர்களை எமிலியா அன்போடு கவனித்துக் கொண்டாள்.

காலப்போக்கில், வோர்குடா என்ற ஊரிலிருந்த நிலக்கரி சுரங்கத்திற்கு அனுப்பப்பட்டேன்; ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே மிக மோசமான கட்டாய உழைப்பு முகாமாக அது இருந்தது. இரண்டு வருடம் கழித்து 1951-⁠ல், எமிலியாவும் என் தங்கையும் மூன்று தம்பிகளும், மேற்கு சைபீரியாவிலுள்ள டோம்ஸ்க் நகருக்கு நாடு கடத்தப்பட்டார்கள். எமிலியா என்னுடன் இருப்பதற்காக தன்னை ட்ரான்ஸ்ஃபர் செய்யும்படி 1955-⁠ல் கோரினாள். இங்குதான் எங்கள் மூன்று குழந்தைகளில் முதல் குழந்தையை பெற்றெடுத்தாள்; எங்கள் முதல் பெண் குழந்தைக்கு டமாரா என பெயர் வைத்தோம்.

செப்டம்பர் 1957-⁠ல், பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் நாங்கள் விடுதலையாக்கப்பட்டோம். ஆனால், ஒரு மாதம் கழித்து மீண்டும் நான் கைது செய்யப்பட்டேன். இந்த முறை ரஷ்யாவிலுள்ள சாரன்ஸ்க் நகருக்கு அருகிலுள்ள மார்ட்வினியாவிலிருந்த கட்டாய உழைப்பு முகாமில் ஏழு வருடம் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டேன். ஏராளமான மற்ற சகோதரர்களும் அங்கு அடைக்கப்பட்டிருந்தனர், இன்னும் நிறைய சகோதரர்கள் அங்கு வர இருந்தனர். எங்கள் மனைவிமார்கள் எங்களை பார்ப்பதற்காக அங்கு வரும்போதெல்லாம் பிரசுரங்களை எப்படியோ எங்கள் கைகளில் இரகசியமாக கொண்டுவந்து சேர்த்தனர்; அந்தப் பிரசுரங்களை பொக்கிஷம் போல் கருதி படித்து மகிழ்ந்தோம். மேற்கு சைபீரியாவிலுள்ள குர்கானில், எமிலியாவின் பெற்றோரோடு இருந்த எங்கள் மகள் டமாராவை கவனித்துக் கொள்ள டிசம்பர் 1957-⁠ல் எமிலியா அங்கு சென்றாள். இதனால் நானும் எமிலியாவும் ஏழு வருடங்களுக்கு பிரிந்திருக்க வேண்டியிருந்தது. இருந்தபோதிலும், அரசு பயிலகத்திற்கு டமரா அனுப்பப்படாமல் இருப்பதற்கு இதுதான் ஒரே வழியாக இருந்தது.

1964-⁠ல், நான் விடுவிக்கப்பட்டபோதிலும், மால்டோவாவிலிருந்த என் வீட்டிற்கு போக அனுமதிக்கப்படவில்லை. அப்போதும் அதிகாரிகள் என் மீது சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தார்கள், என்றாலும்கூட, குர்கானுக்கு சென்று என் மனைவி மகளுடன் என்னால் சேர முடிந்தது; அங்குள்ள சபையில் புத்தகப் படிப்பு நடத்துனராக சேவை செய்தேன். 1969-⁠ல், காகஸஸிலுள்ள கிரஸ்னோடார் என்ற இடத்திற்கு குடிபெயர்ந்தோம். அங்கு எட்டு வருடங்களுக்கு சேவை செய்த பின், உஸ்பெகிஸ்தானிலுள்ள சிர்சிக் என்ற ஊருக்கு குடிமாறினோம். அங்கே இரகசியமாக இயங்கி வந்த அச்சு அலுவலகத்தில் வேலை செய்தேன். கடைசியாக, 1984-⁠ல், மால்டோவாவுக்கே நாங்கள் திரும்பிப் போக அனுமதிக்கப்பட்டோம். 1,60,000 பேர் உள்ள டிகினா என்ற நகரில் நாங்கள் குடியேறினோம்; அந்த நகரில் 18 பிரஸ்தாபிகளே இருந்தனர். இத்தனை வருடங்களில், அந்த சிறு தொகுதி, இப்போது கிட்டத்தட்ட 1,000 பிரஸ்தாபிகளும் பயனியர்களும் கொண்ட ஒன்பது சபைகளாக வளர்ந்திருக்கிறது.

கர்த்தருக்காக கட்டாய உழைப்பு முகாம்களிலும் சிறைகளிலும் அத்தனை வருடங்கள் இருந்ததை நினைத்து நான் வருத்தப்படுகிறேனா? இல்லவே இல்லை! மனிதருக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் தெரிவு, 14 வயதில் நான் முழுக்காட்டப்பட்ட சமயத்திலிருந்தே எனக்கு தெளிவாக புரிந்தது: ஒன்று கடவுளை நேசிக்க வேண்டும், இல்லையென்றால் உலகத்தை நேசிக்க வேண்டும்! யெகோவாவை சேவிக்க நான் தீர்மானித்தபடியால், அதை விட்டுக்கொடுக்க கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை.​—⁠யாக். 4:4.

[படங்கள்]

இடது: வாசிலெ ஊர்சூ

இடது கோடியில்: வாசிலெ, தன் மனைவி எமிலியாவுடனும், மகள் டமாராவுடனும்

[பக்கம் 108-110-ன் பெட்டி/​படங்கள்]

பூவை கொடுத்த சிறுவன் என் இருதயத்தை தொட்டான்

வாலன்டினா காஜாகாரூ

பிறந்தது: 1952

முழுக்காட்டப்பட்டது: 1997

பின்னணி குறிப்பு: சோவியத் ஆட்சியிலிருந்த ஒரு ஆசிரியை; நாஸ்திகத்தையும் கற்றுக் கொடுத்தவர்.

1978-⁠ல், மால்டோவாவிலுள்ள ஃபட்டெஷ்ட் என்ற ஊரில் கின்டர் கார்டன் டீச்சராக இருந்தேன். நான் ஒரு நாஸ்திகவாதியும்கூட. எங்கள் பள்ளியில் நடந்த ஒரு ஸ்டாஃப் மீட்டிங்கில், யெகோவாவின் சாட்சிகளது பிள்ளைகளுக்கு நாஸ்திகத்தை கற்றுக் கொடுப்பதில் முக்கிய கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டோம். இது ஒரு நல்ல ஐடியா என்று நினைத்துக்கொண்டேன். அதனால் யெகோவாவின் சாட்சிகளாக இருந்த மாணவர்களின் இருதயத்தை எட்டும் விதத்தில் இதை சொல்லித் தருவதற்காக புதுப் புது வழிகளை யோசிக்கத் தொடங்கினேன். எனக்கு ஒரு அருமையான ஐடியா உதித்தது, அதுவே சரியானது என்றும் தோன்றியது.

வகுப்பு பிள்ளைகளிடம் இரண்டு மலர்ப் பாத்திகளை அமைக்கும்படி சொன்னேன். ஒரு பாத்தியில், அந்தப் பிள்ளைகள் பூச்செடிகளை நாட்டி, நீர்ப் பாய்ச்சி, களைகளை எடுக்க வேண்டும். ஆனால் மற்றொன்றில், அவர்கள் எதுவுமே செய்யக் கூடாது. அது கடவுளுக்கு சொந்தமானது என அவர்களிடம் சொன்னேன். அந்த மலர்ப் பாத்தியை அவரே கவனித்துக் கொள்வார் என்றேன். இந்த வேலையை பிள்ளைகள் ஆர்வமாக செய்யத் தொடங்கினார்கள். பிள்ளைகள் தங்கள் பாத்தியில் செடியை நட்டு, அதற்கு நீர்ப் பாய்ச்சி, களையெடுத்தார்கள், ஆனால் “கடவுளின் குட்டித் தோட்டத்திலோ” எக்கச்சக்கமான களைகளே மண்டியிருந்தன.

பிற்பாடு, சூரியன் பளிச்சென்று பிரகாசித்த ஒரு காலை வேளையில், அந்த இரு மலர்ப் பாத்திகளுக்கு முன் வகுப்பு பிள்ளைகளை கூடிவரச் செய்தேன். அந்தப் பிள்ளைகள் நல்ல விதத்தில் வேலை செய்ததற்காக அவர்களை பாராட்டிய பின், ஏற்கெனவே நான் நன்கு தயாரித்திருந்தபடியே பேசத் தொடங்கினேன். “கடவுள் தன்னுடைய மலர்ப் பாத்தியில் ஒன்றுமே செய்யாததை கவனித்தீர்களா?” என அவர்களிடம் கேட்டேன். “இந்த மலர்ப் பாத்தி யாருக்கும் சொந்தமில்லை என்பது இதிலிருந்தே நன்றாக தெரிகிறதல்லவா?” என்றேன்.

அப்படித்தான் தோன்றுவதாக பிள்ளைகளும் ஒப்புக்கொண்டார்கள். பிறகு இப்படி ஒரு போடு போட்டேன்: “இங்க பாருங்க பிள்ளைகளே, கடவுள் இருக்கிறார் என்பதெல்லாம் ஜனங்களோட வெறும் கற்பனை. அதனால்தான் இந்த மலர்ப் பாத்தி இப்படி இருக்கிறது, ஆகவே கடவுள் என்ற ஒருவர் இல்லவே இல்லையென்றால், பூக்களாகட்டும் வேறு எதுவாகட்டும், அவரால் எப்படி கவனிக்க முடியும்?”

இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பிள்ளைகளின் முகத்தை நோட்டமிட்டேன். ஒரு சிறு பையன்​—⁠அவன் பெற்றோர் யெகோவாவின் சாட்சிகள்​—⁠கொஞ்சம் கொஞ்சமாக அமைதி இழந்து வருவதை கவனித்தேன். பொறுத்துப் பொறுத்து, கடைசியில் தாங்க முடியாதவனாக அந்த சிறுவன் ஓடிப்போய், அருகிலிருந்த நிலத்தில் வளர்ந்து கிடந்த ஒரு மஞ்சள் நிற காட்டுப் பூவை பிடுங்கிக்கொண்டு வந்து என் கையில் கொடுத்து இப்படி சொன்னான்: “கடவுள் இல்லையென்றால் இந்தப் பூவை பூக்கச் செய்தது யாரு? நம்மில் ஒருவருமே அதைக் கவனித்துக் கொள்ளவில்லையே.” அவனுடைய நியாயமான பேச்சு என்னை ஒரு கலக்கு கலக்கியது. அந்தப் பிள்ளை மறுக்க முடியாத உண்மையை சொன்னான் என்பதை உள்ளூர உணர்ந்தேன்.

கம்யூனிஸத்திலேயே நான் ஊறிப்போயிருந்ததால், அடுத்த படியெடுப்பதற்கு, அதாவது பைபிளை ஆராய்வதற்கு எனக்கு பல வருடங்கள் பிடித்தன. என்றாலும் 1995-⁠ல், உள்ளூரிலிருந்த யெகோவாவின் சாட்சிகளை அணுகி, பைபிளை கற்றுத் தருமாறு கேட்டேன். என்னுடைய முன்னாள் மாணவன் ஒருத்தன் இப்போது எனக்கு டீச்சராக இருக்கப் போகிறான் என்பதை அறிந்தபோது எந்தளவு பூரித்துப் போயிருப்பேன் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்!

உண்மைதான், கம்யூனிஸ ஒழுங்குமுறை எனக்கு உலகப்பிரகாரமாக சிறந்த கல்வியை புகட்டியது. ஆனால் வாழ்க்கையின் மிக முக்கியமான பாடங்களை கற்றுத் தர தவறியிருந்தது. யெகோவாவின் உதவியாலும் தைரியமான ஒரு சிறுவனின் உதவியாலுமே, என் ஆன்மீக அறிவையும் உலக அறிவையும் பயன்படுத்தி இன்று மற்றவர்களுக்கு உதவி வருகிறேன்; அதாவது, கடவுள் உண்மையிலேயே இருக்கிறார் என்பதையும் தம்முடைய மனித சிருஷ்டியின் மீது அவர் அளவுகடந்த அக்கறையோடிருக்கிறார் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள உதவி வருகிறேன்.

[பக்கம் 113-115-ன் பெட்டி/​படம்]

நாடு கடத்தப்பட்ட சமயத்தில் பிறந்தேன்

லிடியா செவாஸ்டியான்

பிறந்தது: 1954

முழுக்காட்டப்பட்டது: 1995

பின்னணி குறிப்பு: யெகோவாவின் சாட்சியான தாயாலும், சத்தியத்தில் இல்லாத தந்தையாலும் வளர்க்கப்பட்ட இவர், பல வருடங்களுக்கு யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு கொள்ள முடியாமல் போனது.

1940-களின் ஆரம்பத்தில், என் அம்மாவும் பாட்டியும் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். என் அப்பா ரொம்ப நல்லவர், ஆனாலும் பைபிள் சத்தியத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. 1951-⁠க்குள், அம்மாவுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள், அதோடு இரட்டைக் குழந்தைகளையும் வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார். அந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில், அதிகாரிகள் எங்கள் குடும்பத்தை பிரிக்க முயன்றார்கள். அப்பா வேலைக்கு போன பிறகு, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த என் அம்மாவையும் இரண்டு பிள்ளைகளையும் சைபீரியாவுக்கு கிளம்பிக்கொண்டிருந்த ரயிலில் ஏற்றினார்கள். ஆனால் அதற்குள் அப்பாவுக்கு எப்படியோ தகவலை அம்மா அனுப்பிவிட்டார்; அப்பாவும் அவசர அவசரமாக வீட்டிற்கு வந்தார். அவர் ஒரு சாட்சியாக இல்லாவிட்டாலும்கூட தன் குடும்பத்தோடு நாடுகடத்தப்பட அவரும் ரயிலேறினார்.

சைபீரியாவுக்கு போகும் வழியில், இரட்டைக் குழந்தைகளை பிரசவிப்பதற்காக அம்மா ஆஸினோ என்ற ஊரில் கொஞ்ச நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தில் மீதி பேர் டோம்ஸ்க் மாவட்டத்திற்கு செல்ல வேண்டியிருந்தது, அங்கே தங்குவதற்கான ஏற்பாடுகளை அப்பா செய்தார். சகோதரர்களோடு வேலை செய்ய அப்பா நியமிக்கப்பட்டார். சில வாரங்களுக்கு பின்னர், அம்மாவும் பச்சைக் குழந்தைகளும் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்தனர். ஆனால் விசனகரமாக, அங்கு நாங்கள் வாழ்ந்த சூழ்நிலை படு மோசமாக இருந்ததால் அந்த இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன.

என்றாலும், நாடு கடத்தப்பட்டிருந்த சமயத்தின்போது என்னையும் என்னோடு பிறந்த என் இரட்டை சகோதரனையும் சேர்த்து அம்மாவுக்கு இன்னும் நான்கு பிள்ளைகள் பிறந்தன. எங்கள் எல்லாரையும் அப்பா பொறுப்போடு கவனித்துக் கொண்டார். கடைசியில், 1957-⁠ல், எங்கள் சொந்த கிராமத்திற்கே திரும்பிப் போக அனுமதிக்கப்பட்டோம். இரகசிய போலீஸ் அம்மாவை கண்காணித்து வந்தபோதிலும், பைபிள் நியமங்களை அவர் தொடர்ந்து எங்கள் மனதில் பதிய வைத்தார்.

மறுபட்சத்தில் அப்பா, நல்ல உலகப்பிரகாரமான கல்வியை பிள்ளைகள் பெற வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அதனால், என்னுடைய 16-⁠ம் வயதில் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக கீஷினாவ்விற்கு சென்றேன். பிற்பாடு, திருமணம் செய்துகொண்டு கஸக்ஸ்தானில் குடியேறியதால் என் பெற்றோரிடமிருந்து மட்டுமல்ல, யெகோவாவின் அமைப்பிலிருந்தும் தூரமாக சென்றுவிட்டேன். 1982-⁠ல், கீஷினாவ்விற்கு திரும்பினேன்; வந்ததும் வராததுமாக யெகோவாவின் சாட்சிகளது ராஜ்ய மன்றத்தை தேட ஆரம்பித்தேன், ஆனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அந்த நகரத்தில் யெகோவாவை வணங்க விரும்பிய ஒரே நபர் நான்தான் என்றே அடுத்த எட்டு வருடங்களுக்கு நினைத்திருந்தேன்.

பிறகு, ஒருநாள் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தபோது, இரண்டு பெண்கள் யெகோவாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. அவர்கள் பேசுவதை இன்னும் கொஞ்சம் தெளிவாக கேட்பதற்காக அவர்கள் பக்கம் சற்று நெருங்கி சென்றேன். நான் ஒரு கேஜிபி ஏஜென்ட் என்று நினைத்துக்கொண்டு அந்தப் பெண்கள் பேச்சை மாற்றி வேறு விஷயத்தை பேச ஆரம்பித்தார்கள். அந்த இடத்தைவிட்டு அவர்கள் நகர ஆரம்பித்ததும், பின்னாலேயே நானும் சென்றேன்; அவர்கள் பயந்துபோனதை சொல்லவா வேண்டும்? அதனால் அவசரமாக அவர்களை அணுகினேன், சிறிது நேரம் பேசிய பின்பு என் உண்மையான நோக்கத்தைப் பற்றி அவர்களுக்கு புரிய வைத்தேன். யெகோவாவின் அமைப்போடு கூட்டுறவு கொள்ள வேண்டும் என்ற என் நெடுநாள் கனவு ஒருவழியாக பலித்துவிட்டது! ஆனால், என் கணவர் என்னுடைய நிலைநிற்கையை எதிர்த்ததுதான் வருத்தமான விஷயம்.

அதற்குள், எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. 1992-⁠ல், என் முதுகுத்தண்டில் ஆப்ரேஷன் ஒன்று நடந்தது, அதனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக கிடக்க வேண்டியிருந்தது. வாழ்க்கையின் மிகுந்த துன்பகரமான அந்த நிலையில், அருமையான ஒன்று நடந்தது: என் மகன் பவ்யில், யெகோவாவுக்காக நிலைநிற்கை எடுத்து, 1993-⁠ல் கீவ்வில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றான். காலப்போக்கில், மறுபடியும் நடக்கும் அளவுக்கு நல்லபடியாக குணமானேன். அதனால், 1995-⁠ல், யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றேன்.

இன்று, என் குடும்பத்தில் நிறைய பேர் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள், இதற்காக நான் யெகோவாவுக்கும் என் அம்மாவுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்; அம்மாவின் உறுதியான முன்மாதிரி எப்போதும் என் மனதில் நிலைத்திருந்தது. குடும்பத்தை மிக அருமையாக கவனித்துக்கொண்ட என் அப்பா இறப்பதற்கு முன், அவரும் யெகோவாவின் ஊழியர்களில் ஒருவரானார் என சொல்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

[பக்கம் 117, 118-ன் பெட்டி/​படம்]

யெகோவாவின் தியாகத்தோடு ஒப்பிட நம் தியாகமெல்லாம் ஒன்றுமே இல்லை

மிஹை உர்சாய்

பிறந்தது: 1927

முழுக்காட்டப்பட்டது: 1945

பின்னணி குறிப்பு: ஃபாசிஸ, கம்யூனிஸ ஆட்களால் துன்புறுத்தப்பட்டவர்.

1941-⁠ல், நற்செய்தியின் அறிவிப்பாளராக ஆனேன். 1942-⁠ல், எனக்கு 15 வயதாக இருந்தபோது உள்ளூர் பள்ளி ஒன்றில் நான் இராணுவ பயிற்சி பெற வேண்டியிருந்தது. வகுப்பறையில் ருமேனிய மன்னர் மைக்கலின் படமும், ஜெனரல் அன்டனெஸ்குவின் படமும், கன்னி மரியாளின் படமும் மாட்டப்பட்டிருந்தன. நாங்கள் வகுப்பறைக்குள் நுழையும்போது அந்தப் படங்களுக்கு முன் தலைவணங்கி, சிலுவைக் குறி போட வேண்டியிருந்தது. எங்களில் மூன்று பேர் அதைச் செய்ய மறுத்தோம்.

அதனால் உள்ளூர் போலீஸார் எங்களை அடித்து உதைத்தார்கள். அந்த இரவு நாங்கள் பள்ளியிலேயே தங்கினோம். அடுத்த நாள் காலை, கோர்ஷெயூட்ஸுக்கு எங்களை அனுப்பினார்கள், அங்கு மறுபடியும் எங்களை பலமாக அடித்தார்கள். கோர்ஷெயூட்ஸிலிருந்து எங்களை வேறு சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள்; கடைசியாக, இராணுவ விசாரணை செய்யவிருந்த இடத்திற்கு சுமார் 100 கிலோமீட்டர் தூரம் எங்களை நடத்திச் சென்றார்கள். அவ்வளவு தூரம் நடந்து நடந்து என் பாதங்களில் இரத்தமே வந்துவிட்டது. இறுதியில், தண்டனைத்தீர்ப்பு வழங்கப்படாமலேயே வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்; இதற்கு ஒருவேளை என் வயது காரணமாக இருந்திருக்கலாம்.

எனக்கு 18 வயதானபோது, இராணுவத்தில் சேர சோவியத் அதிகாரிகள் என்னை தேர்ந்தெடுத்தார்கள். மீண்டும் என் நடுநிலைமையை விட்டுக்கொடுக்க மறுத்தேன், அதனால் கண்மண் தெரியாமல் அடிக்கப்பட்டேன்; என் நண்பன் கியார்கே நிமென்கோவும் அடிக்கப்பட்டான். சொல்லப்போனால், அவனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் ஆறு வாரங்களுக்குப் பின் செத்தே போனான். என் வயது காரணமாகவோ என்னவோ திரும்பவும் என்னை வீட்டுக்கே அனுப்பினார்கள். 1947-⁠ல், சோவியத் ஆட்கள் மறுபடியும் என்னை கைது செய்தார்கள், இந்த முறை நான் இராணுவத்தில் சேர மறுத்தால் என்னை சுட்டுக் கொன்றுவிடுவதாக பயமுறுத்தினார்கள். ஆனால், அப்படி செய்வதற்கு பதிலாக என்னை இரண்டு மாதத்திற்கு தனிச் சிறையில் போட்டார்கள், பிற்பாடு வால்கா-டான் கால்வாய் கட்டுமான பணி நடந்த இடத்தில் கட்டாய வேலை செய்வதற்காக என்னை அனுப்பினார்கள். அது மிக ஆபத்தான வேலையாக இருந்தது, நிறைய பேர் அந்த வேலை செய்யும்போது இறந்து போனார்கள். அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் பலர் மாண்டார்கள், நானோ மயிரிழையில் உயிர் தப்பினேன், பிறகு மால்டோவாவிற்கே அனுப்பப்பட்டேன்.

அங்கு திருமணம் செய்து கொண்டேன். கர்ப்பமாக இருந்த என் மனைவி வியெராவும் நானும் 1951-⁠ல் நாடுகடத்தப்பட்டோம்; முதலில் ரயிலிலும், பிறகு ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகிலுள்ள சைபீரியன் டெய்கா என்ற மிகப் பெரிய காட்டுப் பகுதிக்கு படகிலும் சென்றோம்; அங்கு நான் மரங்களை அறுக்க வேண்டியிருந்தது. வியெராவும் நானும் ஒரு சிறிய குடிலில் 16 குடும்பங்களோடு சேர்ந்து வசித்தோம். சந்தோஷகரமாக, 1959-⁠ல், நாங்கள் மால்டோவாவிற்கு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டோம்.

அந்தக் கடினமான வருடங்களிலும் அதற்கு பின்னரும் ஏராளமான காரியங்கள் என்னை பலப்படுத்தியிருக்கின்றன. அவற்றில் ஒன்று என் அண்ணன் யானின் விசுவாசமான முன்மாதிரி. (பக்கம் 89-ஐக் காண்க.) அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், தன் தண்டனைத்தீர்ப்பு குறைக்கப்படவிருந்ததை அறியாதிருந்த போதிலும், அவர் அடிபணிந்து போகவில்லை. யெகோவாவுடைய பெயருக்காக நானும், பிற்பாடு என் மனைவியும் சோதனைகளை சகித்திருந்தபோது, யெகோவா எப்படி எங்களை கைவிடாமல் கவனித்துக் கொண்டார் என்பதை நினைத்துப் பார்க்கையில் இப்போதும் எனக்கு புதுத்தெம்பு கிடைக்கிறது. என்றாலும், நம்மை மீட்பதற்கு தம் குமாரனையே பலியாக கொடுத்த யெகோவாவின் தியாகத்தோடு ஒப்பிட நம் தியாகமெல்லாம் ஒன்றுமே இல்லை. இந்த மகத்தான தியாகத்தை குறித்து ஆழ்ந்து சிந்திப்பது, ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியோடு சந்திக்க எனக்கு உதவுகிறது.

[பக்கம் 121-123-ன் பெட்டி/​படம்]

யெகோவாவின் அரவணைப்பை உணர்ந்தேன்

மிஹாயிலினா கியோர்கிட்ஸா

பிறந்தது: 1930

முழுக்காட்டப்பட்டது: 1947

பின்னணி குறிப்பு: தடையுத்தரவு இருந்த வருடங்களின்போது பிரசுரங்களை எடுத்து செல்பவராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் வேலை செய்தவர்.

1945-⁠ல் சத்தியத்தை கற்றுக்கொண்டேன்; என் பிறந்த ஊரான க்லோடினியிலும் பக்கத்து ஊரான பெட்ரூன்யாவிலும் இருந்தவர்களிடம் சந்தோஷமாக நற்செய்தியை பகிர்ந்துகொண்டேன். பள்ளியில் சாட்சி கொடுத்ததால், பள்ளி அதிகாரிகள் எனக்கு டிப்ளமோ கொடுக்க மறுத்தார்கள். இருந்தாலும், என் கல்வியறிவை பயன்படுத்தி ருமேனிய, உக்ரைன் மொழிகளிலிருந்த பைபிள் பிரசுரங்களை ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கும் வேலையை மிகவும் சந்தோஷமாக செய்தேன்.

நான் முழுக்காட்டுதல் பெற்ற கொஞ்ச காலத்திலேயே, மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது கையும்களவுமாக பிடிபட்டேன்; ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கிலுள்ள வோர்குடாவில் 25 வருடங்களுக்கு கட்டாய உழைப்பு முகாமில் வேலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டேன்; அங்கு ஏற்கெனவே நிறைய சகோதரிகள் இருந்தார்கள். கடினமான சூழ்நிலை மத்தியிலும், நாங்கள் எல்லாரும் தொடர்ந்து பிரசங்கித்து வந்தோம். பிரசுரங்களையும் எப்படியோ பெற்றுக்கொண்டோம். உண்மையை சொன்னால், எங்கள் சொந்த உபயோகத்திற்காக அங்கேயே, அந்த முகாமிலேயே சில பிரசுரங்களை நகல் எடுத்துக்கொண்டோம்.

ஒருநாள் அங்கு ஒரு இளம் பெண்ணை சந்தித்தேன்; அவளும் ஒரு யெகோவாவின் சாட்சி என அதிகாரிகள் தவறாக நினைத்து கைது செய்திருந்தார்கள். கடவுளுடைய வார்த்தையை அவள் ஆராய்ந்து பார்க்கும்படி ஆலோசனை கூறினேன், ஏனெனில் தம் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பது யெகோவாவின் நோக்கமாக இருந்தால் அதை செய்வதற்கான வல்லமை அவருக்கு இருக்கிறது என்றேன். இறுதியில், அவள் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டாள், பிற்பாடு நம் ஆவிக்குரிய சகோதரியானாள். அதன் பின், சீக்கிரமாகவே முகாமிலிருந்து விடுதலை பெற்றாள்.

பிற்பாடு, கஸக்ஸ்தானிலுள்ள காரகான்டாவுக்கு மாற்றப்பட்டேன். கடைசியில், ஜூலை 5, 1956-⁠ல் நானும் விடுதலையானேன். அங்கிருந்து டோம்ஸ்க் நகருக்கு குடிபோனேன்; அங்கு ஆலெக்சான்ட்ரூ கியோர்கிட்டா என்பவரை சந்தித்தேன்; தன் விசுவாசத்திற்காக ஆறு வருடங்கள் சிறையில் இருந்த அவரையே மணமுடித்தேன். இரகசிய போலீஸார் இன்னும் எங்களை கண்காணித்து வருகிறார்கள் என்பதை நன்கு தெரிந்திருந்தும், நாங்கள் இருவரும் சைபீரியாவின் பரந்த பிராந்தியத்தில் தொடர்ந்து பிரசங்கித்து வந்தோம். அடுத்து இர்குட்ஸ்க் நகருக்கு போனோம்; இது பைக்கல் ஏரிக்கு சற்று மேற்கே அமைந்திருந்தது. அங்கு இரகசியமாக பிரசுரங்களை தொடர்ந்து தயாரித்து வந்தோம். பிறகு, கிர்கிஸ்தானிலுள்ள பிஷ்கெக் என்ற நகரிலும் நாங்கள் சேவை செய்தோம். பிரசங்கிக்கும்போது ஜாக்கிரதையாக இருந்தபோதிலும், என் கணவர் ஆலெக்சான்ட்ரூ பிடிபட்டார்; பத்து ஆண்டு சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு வரும்வரையில், நான் ஆலெக்சான்ட்ரூவை ஜெயிலில் போய் சந்திக்கலாம் என அரசாங்க வக்கீல் சொன்னார். பொதுவாக யாருமே இப்படி போய்ப் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், அதனால் எனக்கு மட்டும் ஏன் இந்த கருணை என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், “நீங்கள் இளம் தம்பதிகள், உங்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. உங்கள் தீர்மானத்தை ஒருவேளை நீங்கள் மறுபரிசீலனை செய்து பார்ப்பீர்கள்” என்றார். யெகோவாவை சேவித்து விசுவாசமாக நிலைத்திருக்க நானும் ஆலெக்சான்ட்ரூவும் எப்போதோ தீர்மானமெடுத்து விட்டோம் என அந்த வக்கீலிடம் சொன்னேன். அதற்கு அவர், “ஏன், செத்த சிங்கத்தைவிட உயிருள்ள நாய் எவ்வளவோ மேல் என்று உங்கள் பைபிள்கூட சொல்கிறதே” என கூறினார். (பிர. 9:4) அதற்கு நான், “உண்மைதான், ஆனால் நீங்கள் விவரிக்கிற மாதிரியான உயிருள்ள நாய் கடவுளுடைய புதிய உலகத்தில் வாழ முடியாது” என்றேன்.

ஆலெக்சான்ட்ரூ தன் பத்து வருட சிறை தண்டனையை முழுமையாக முடித்தார், அதோடு ஒரு வருடம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவருடைய விடுதலைக்குப் பின், நாங்கள் கஸக்ஸ்தானுக்கு போனோம், பிறகு பிரசங்க வேலைக்கு உதவுவதற்காக அங்கிருந்து உஸ்பெகிஸ்தானுக்கு போனோம். கடைசியில், வெவ்வேறு இடங்களிலுள்ள நல்மனமுள்ளவர்களுக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக் கொடுக்க உதவிய நிகரற்ற சிலாக்கியம் எங்களுக்கு கிடைத்த சந்தோஷத்தில் திரும்பவும் மால்டோவாவை 1983-⁠ல் வந்தடைந்தோம்.

கடந்த கால நினைவுகளை அலசிப் பார்க்கையில், என்னுடைய வாழ்க்கை அவ்வளவு லேசுப்பட்டதாக இருக்கவில்லை என்பதை முதலில் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் சத்தியத்தில் இல்லாத அயலகத்தார் விஷயத்திலும் இதுதானே உண்மை. அவர்களும் ஏகப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருந்திருக்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால், நாங்கள் துன்பங்களை அனுபவித்திருப்பது நற்செய்தியின் நிமித்தமே. அதனால்தான், யெகோவாவின் கனிவான பாதுகாப்பையும் அக்கறையையும் நாங்கள் உணர்ந்திருக்கிறோம். மேலும், எல்லா சோதனைகளுக்கும் அப்பால் மகத்தான நித்திய எதிர்காலம் இருப்பதை எங்கள் மனக்கண்களால் பார்க்க முடிகிறது.

[பக்கம் 80, 81-ன் அட்டவணை/​வரைபடம்]

மால்டோவா கால வரலாறு

1891:பெஸரேபியாவிலுள்ள கிஷினேவ்வுக்கு (இப்போது கீஷினாவ், மால்டோவா) சி. டி. ரஸல் விஜயம் செய்கிறார்.

1921:200-⁠க்கும் அதிகமானோர் பைபிள் சத்தியத்தை ஏற்றிருக்கிறார்கள் என்று வருடாந்தர அறிக்கை காண்பிக்கிறது.

1922:கோர்ஷெயூட்ஸில், “கூட்டங்களுக்கான இல்லம்” ஒன்று முதன்முதலாக கட்டப்படுகிறது.

1925:பைபிள் மாணாக்கரின் வேலை தடை செய்யப்படுகிறது.

1940:ருமேனியா பெஸரேபியாவை USSR-ரிடம் ஒப்படைக்கிறது, பிறகு அது மால்டேவியன் SSR என்று பெயர் மாற்றப்படுகிறது.

1941:மால்டோவாவை ருமேனியா திரும்ப எடுத்துக்கொள்கிறது. ஃபாசிஸ ஆட்சியின் காரணமாகவும் போர் வெறி காரணமாகவும் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்படுகிறார்கள்.

1944:USSR மறுபடியும் மால்டோவாவை கைப்பற்றுகிறது. துன்புறுத்தல் தொடர்கிறது.

1949:யெகோவாவின் சாட்சிகளையும் மற்றவர்களையும் சோவியத் ஆட்கள் நாடுகடத்த ஆரம்பிக்கிறார்கள்.

1951:ஆப்ரேஷன் நார்த்தை ஸ்டாலின் தொடங்குகிறார்.

1960-கள்:கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் குழப்பத்தையும் பிரிவினையையும் உண்டுபண்ண கேஜிபி முயலுகிறது.

1989:கூடுதல் மத சுதந்திரத்தை சாட்சிகள் அனுபவிக்கிறார்கள். மால்டோவாவை சேர்ந்த பிரதிநிதிகள் போலந்தில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்துகொள்கிறார்கள்.

1991:மால்டேவியன் SSR-க்கு மால்டோவா குடியரசு என்று பெயர் மாற்றப்படுகிறது. வட்டார மாநாடுகள் முதன்முறையாக நடத்தப்படுகின்றன. தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு பிரதிநிதி முதல் தடவையாக மண்டல விஜயம் செய்கிறார்.

1994:யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறுகிறார்கள். முதல் மாவட்ட மாநாடு கீஷினாவ்வில் நடைபெறுகிறது.

2000:கீஷினாவ்வில் புதிய பெத்தேல் வீடு பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

2003:18,473 பிரஸ்தாபிகள் மால்டோவாவில் இருக்கிறார்கள்.

[வரைபடம்]

(பிரசுரத்தைக் காண்க)

மொத்த பிரஸ்தாபிகள்

மொத்த பயனியர்கள்

20,000

10,000

1895 1930 1965 2000

[பக்கம் 73-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

உக்ரைன்

மால்டோவா

ப்ரிசெனி

டாபானி

லிப்கானி

ஷிரயூட்ஸ்

கோர்ஷெயூட்ஸ்

ஸாவூல்

ஃபட்டெஷ்ட்

ஸராக்கா

பல்ட்ஸ்

பெட்ரூனியா

கீஷினாவ்

கொசினி

நீஸ்டர் நதி

ப்ரூட் நதி

ருமேனியா

யாஷ்

[பக்கம் 66-ன் முழுபக்க படம்]

[பக்கம் 74-ன் படம்]

இலியா க்ரோஸா, மால்டோவாவிலிருந்த ஆரம்பகால சாட்சிகளில் ஒருவர்

[பக்கம் 75-ன் படம்]

ட்யூடார் க்ரோஸா

[பக்கம் 78-ன் படம்]

யோவானா க்ரோஸா

[பக்கம் 92-ன் படங்கள்]

பார்ஃபின் பாலாமார்சூக்கும் அவர் மகன் நிக்காலையும்

[பக்கம் 93-ன் படம்]

வாசிலெ கெர்மான்

[பக்கம் 94-ன் படம்]

நிக்கோலை ஆனிஸ்கெவிச்

[பக்கம் 95-ன் படம்]

மாரியா கெர்மான்

[பக்கம் 96-ன் படங்கள்]

சைபீரியாவுக்கு சாட்சிகளை நாடுகடத்த பயன்படுத்தப்பட்ட குட்ஸ் வண்டிகள்

[பக்கம் 98-ன் படம்]

ஈவான் மிக்கிட்கவ்

[பக்கம் 99-ன் படம்]

கான்ஸ்டான்டின் ஷோபெ

[பக்கம் 107-ன் படங்கள்]

நிக்காலை வோலோஷானாவ்ஸ்கியும் “டபுள் பாட்டம்” என்ற சிற்றேடும்

[பக்கம் 111-ன் படம்]

கியார்கே கோரோபெட்ஸ்

[பக்கம் 126-ன் படம்]

ஃபட்டெஷ்ட்டிலுள்ள அசெம்பிளி ஹால்

[பக்கம் 131-ன் படம்]

மால்டோவா ஆலோசனை குழுவினர், இடமிருந்து வலம்: டேவிட் க்ரோஸெஸ்கூ, ஆனாட்டோலி க்ராவிஸியுக், டைபெரியு கோவாக்ஸ்