Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவிடமிருந்து வந்துள்ள கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து வந்துள்ள கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து வந்துள்ள கடிதம்

புதிய உலகத்தின் வாசலில் நாம் நிற்கையில், யெகோவாவிற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பது அவசரமானது. (செப். 3:8) தானியேல் தீர்க்கதரிசி இவ்வாறு குறிப்பிட்டார்: “மறைபொருள்களை வெளிப்படுத்துகிற . . . தேவன் கடைசி நாட்களில் சம்பவிப்பதை . . . தெரிவித்திருக்கிறார்.” (தானி. 2:28) முன்னறிவிக்கப்பட்ட அந்தக் கடைசி நாட்களின் முடிவில் வாழ்வதும், இப்போது யெகோவா வெளிப்படுத்தி வரும் தெய்வீக ரகசியங்களைப் புரிந்துகொள்வதும் எப்பேர்ப்பட்ட பாக்கியம்!

பிரச்சினைகள் நிறைந்த இந்தக் “கடைசி நாட்களில்,” தமது வணக்கத்தாராகிய சர்வதேச ‘திரள் கூட்டத்தாரை’ கூட்டிச்சேர்க்கும் நோக்கத்தைப் பற்றி ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பார் மூலம் யெகோவா படிப்படியாக வெளிப்படுத்தியிருக்கிறார். (2 தீ. 3:1; வெளி. 7:9; மத். 24:45, NW) உலகளாவிய இந்தக் கூட்டிச்சேர்க்கும் வேலை “கடைசி நாட்களில்” நடக்குமென ஏசாயா 2:2, 3 விவரிக்கிறது. இந்த உலகில் கலவரமும் வன்முறையும் பெருகியிருந்த போதிலும் ஒவ்வொரு வருடமும் அதிகரிப்பு ஏற்படுகிறது.

2004-⁠ம் ஆண்டின்போது, “தொடர்ந்து விழித்திருங்கள் . . . ஆயத்தமாயிருங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதன் அவசியம் நமக்கு நன்கு உணர்த்தப்பட்டது. (மத். 24:42, 44, NW) நிச்சயமாகவே, இன்று உலகில் நடக்கும் சம்பவங்கள் கிறிஸ்தவர்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை; “காலங்களின் அடையாளங்களை” அவர்கள் பகுத்துணர்ந்து அதற்கேற்ப செயல்படுகிறார்கள். (மத். 16:1-3) எப்படிப்பட்ட எதிர்ப்பு வந்தாலும், யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிறபடியே, தேவராஜ்ய முறைப்படி ஒழுங்கமைக்கப்பட்ட தமது மக்களுக்கு எப்போதும் துணை நிற்பார்.

ராஜ்ய பிரசங்கிப்பு வேலையைத் தடுக்க அல்லது நிறுத்த சிலர் முயற்சிகள் எடுக்கிற போதிலும், நம் சகோதரர்கள் தொடர்ந்து சத்தியத்தை அறிவிக்கிறார்கள், ஒன்றுகூடி வருகிறார்கள். (அப். 5:19, 20; எபி. 10:24, 25) ரஷ்யாவில், ஜூன் 2004-⁠ல், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளைத் தடை செய்யவும் அவர்களது சட்டப்பூர்வ நிறுவனத்தை மூடவும் வேண்டுமென்ற கீழ்மன்றத் தீர்ப்பை அப்பீல் நீதிமன்றமும் ஆமோதித்தது. இருந்தாலும், சகோதரர்கள் சோர்ந்துவிடவில்லை; யெகோவா தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்தவர்களாக, மனிதருக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் அவருக்கே கீழ்ப்படிகிறார்கள். (அப். 5:29) கடும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் யெகோவா தமது ஊழியர்களை வழிநடத்துவார் என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக ஜார்ஜியா குடியரசில் சகோதரர்கள் தங்கள் சொத்துக்களைப் பறிகொடுத்திருக்கிறார்கள், கும்பலாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள், கண்களுக்கு முன்பாகவே பிரசுரங்கள் எரிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள எந்த ஆயுதமும் பயனற்றதாகப் போயிருக்கிறது. (ஏசா. 54:17) 2004-⁠ம் ஊழிய ஆண்டின்போது, ஜார்ஜியாவில் யெகோவாவின் சாட்சிகள் மறுபடியும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டார்கள். எவ்வித இடையூறுகளும் இல்லாமல் மாநாடுகள் நடத்தப்பட்டன; இப்போது பிரசுரங்கள் நாட்டினுள் தங்கு தடையின்றி தருவிக்கப்படுகின்றன. பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையும் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோரின் எண்ணிக்கையும் புதிய உச்சநிலையை எட்டியிருப்பதாக அறிக்கை செய்யப்பட்டது.

ஆர்மீனியா, எரிட்ரியா, கொரிய குடியரசு, துர்க்மேனிஸ்தான், ருவாண்டா ஆகிய இடங்களில், விசுவாசத்தின் காரணமாக சகோதரர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மோசமாக நடத்தப்படுகிற போதிலும், இத்தகைய சோதனைகளுக்கான வேதப்பூர்வ காரணத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இது, இரட்சிப்பிற்காக யெகோவாவை நோக்கியிருக்கையில் உத்தமத்தைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு உதவுகிறது.​—1 பே. 1:6; 2 பே. 2:⁠9.

கடந்த ஆண்டின் சிறப்பம்சங்களை வாசித்து 2004-⁠ம் ஆண்டின் உலகளாவிய அறிக்கையை ஆராயும்போது, யெகோவா செய்யும் நன்மைகளைக் கண்டு நீங்கள் களிகூருவீர்கள். (சங். 31:19; 65:11) கடவுளுக்குப் பிரியமான வழியில் தொடர்ந்து நடப்பதற்கு இப்புத்தகம் உங்களை உற்சாகப்படுத்தும் என நம்புகிறோம்.​—1 தெ. 4:⁠1.

எல்லா வகையான மக்களுக்கும் சத்தியத்தைத் தொடர்ந்து அறிவிக்க பெரும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, காது கேளாதோருக்கும் பார்வையற்றோருக்கும் ஆன்மீக உதவி அளிக்க வீடியோக்கள், DVD-⁠க்கள், சைகை மொழி பதிப்புகள், பிரெய்ல் மொழி பிரசுரங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அநேக ராஜ்ய பிரஸ்தாபிகள் தங்கள் சபை பிராந்தியத்தில் வந்து குடியேறியிருப்பவர்களின் பாஷைகளைக் கற்றிருக்கிறார்கள்.

அதோடு, ஒதுக்குப்புற இடங்களில் நூற்றுக்கணக்கான தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒரு கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில் 300-⁠க்கும் அதிகமான அப்படிப்பட்ட தொகுதிகள் செயல்படுகின்றன, இவற்றில் 7,000-⁠க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். புதிய சபைகள் உருவாவதற்கு எப்பேர்ப்பட்ட வாய்ப்பு! அதுமட்டுமல்ல, கடந்த ஊழிய ஆண்டில் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்த 1,67,60,607 பேரில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் சாட்சிகள் அல்லாதவர்கள். இன்னுமதிக பயிர் அறுவடைக்குத் தயாராயிருப்பதற்கு இதுவே பலமான அத்தாட்சி.

யெகோவா நம்மை அபரிமிதமாய் ஆசீர்வதித்திருப்பதற்காகவும் தினமும் அன்போடு பராமரித்து வருவதற்காகவும் நன்றி சொல்கிறோம். (நீதி. 10:22; மல். 3:10; 1 பே. 5:7, NW) இந்தக் கடைசி நாட்களில் நாம் தோளோடு தோள் சேர்ந்து முன்னேறுகையில், யெகோவாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். எப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்தித்தாலும் சரி, “யெகோவாவிடமிருந்து எனக்கு உதவி வரும்” என்ற 2005-ஆம் ஆண்டின் வருடாந்தர வசனத்தை மனதில் வைப்போமாக. (சங். 121:2, NW) எங்கள் அன்பை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.

உங்கள் சகோதரர்கள்,

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு