Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்

கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்

கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்

ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடி என இவ்வுலகம் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது, ஆனால் கடவுளுடைய ஜனங்களோ வளர்ந்துவரும் மிக அழகிய, வளமான ஆன்மீக தேசத்தை அனுபவித்து மகிழ்கிறார்கள். (மல். 3:12, 18) இயேசு பரலோகத்திற்கு ஏறிச்செல்வதற்கு சற்று முன்பு, “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று தமது சீஷர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்; அதைத்தான் இந்தச் சீரான வளர்ச்சி நமக்கு நினைப்பூட்டுகிறது.​—மத். 28:⁠20.

இயேசு கொடுத்த ஆறுதலளிக்கும் அந்த வாக்குறுதி நிஜமாகி வருகிறது என்பதற்கு கடந்த ஆண்டில் செய்யப்பட்ட ஊழியம் கூடுதலான அத்தாட்சி அளிக்கிறது. முதலாவதாக, “கடவுளோடு நடவுங்கள்” மாவட்ட மாநாட்டில் யெகோவாவின் ஊழியர்கள் அனுபவித்து மகிழ்ந்த ஆன்மீக விருந்தை இப்பொழுது மனதில் அசைபோடலாம்.

“கடவுளோடு நடவுங்கள்” மாநாடுகள்

‘சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் நடப்போம்’ என்று மீகா தீர்க்கதரிசி முன்னுரைத்தபோது நீதிமானுக்கும் அநீதிமானுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை காட்டினார். (மீகா 4:5) முக்கிய பேச்சில் பேச்சாளர் விளக்கியபடி, கொந்தளிப்புமிக்க காலங்களில் கடவுளோடு நடந்துவந்த உண்மையுள்ள முற்பிதாக்களான ஏனோக்கு மற்றும் நோவாவின் மனப்பான்மையை இந்த வார்த்தைகள் இரத்தினச் சுருக்கமாக உரைக்கின்றன. (ஆதி. 5:22-24; 6:9, 22) அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கும் எப்பேர்ப்பட்ட பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது!

தொடர்ந்து ‘யெகோவாவின் நாமத்தில் நடக்க’ வேண்டுமென்ற உங்களுடைய தீர்மானத்தை அந்த மாவட்ட மாநாடு பலப்படுத்தியதா? மாநாட்டில் நீங்கள் எடுத்த குறிப்புகளை ஏன் மீண்டும் எடுத்துப் பார்க்கக்கூடாது? அது உங்கள் நினைவுகளைத் தட்டியெழுப்பி, அந்நிகழ்ச்சியிலிருந்து நிரந்தர பலனைப் பெற உதவும்.

மாநாட்டு வெளியீடு

உங்களுடைய சபை பிராந்தியம் பன்மொழிப் பிராந்தியமா? அப்படியானால், சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிறு புத்தகத்தை நீங்கள் ஏற்கெனவே பயன்படுத்தியிருப்பீர்கள். 32, 64, 96 பக்கங்களைக் கொண்ட மூன்று பதிப்புகளாக இது தயாரிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு நாட்டில் பேசப்படும் மொழிகளுக்கு ஏற்றவாறு இச்சிறு புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இப்புதிய கருவியை உங்களுடைய ஊழியப் பையில் எடுத்துச் செல்ல மறவாதீர்கள். உங்களுக்குப் புரியாத பாஷை பேசுகிற ஒருவரை சந்திக்கும்போது, இச்சிறு புத்தகத்தில் 2-⁠ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று படிகளையும் தயவுசெய்து பின்பற்றுங்கள். அது உயிர்களைக் காப்பாற்றலாம்!

“தொடர்ந்து விழித்திருங்கள். . . . ஆயத்தமாயிருங்கள்” என்ற 2004-⁠ம் ஆண்டின் வருடாந்தர வசனத்திற்கு இசைவாக, விழிப்புடன் இருங்கள்! என்ற சிற்றேட்டை மாநாட்டின் இரண்டாம் நாளில் கடைசிப் பேச்சாளர் வெளியிட்டார். (மத். 24:42, 44, NW) நாம் வாழும் காலத்தின் அவசரத் தன்மையை உணர்ந்து கொள்ளவும், எதிர்காலத்தையும் நிகழப்போகும் பயங்கர சம்பவங்களையும் பற்றி கருத்தாய் சிந்தித்துப் பார்க்கவும் இப்பிரசுரம் அநேகருக்கு உதவி செய்வதாக. அதோடு, பேச்சாளர் அறிவித்தபடி, வாழ்க்கையின் பிரச்சினைகளையும் கவலைகளையும் சமாளிப்பதற்கும் சோதனைகளை எதிர்ப்படுகையில் நமது ஆன்மீக சமநிலையைக் காத்துக்கொள்வதற்கும் நம் ஒவ்வொருவருக்கும்கூட இது உதவி செய்வதாக.

பயணக் கண்காணிகளுக்கான பள்ளி

கடந்த ஆறு ஆண்டுகளாக, அ.ஐ.மா., நியு யார்க், பாட்டர்ஸனில் உள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்தில் பயணக் கண்காணிகளுக்காக 13 வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன; அலாஸ்கா, ஐக்கிய மாகாணங்கள், கனடா, ஹவாய் ஆகிய இடங்களிலிருந்து வந்த 600-⁠க்கும் அதிகமான வட்டார மற்றும் மாவட்டக் கண்காணிகள் இவற்றில் கலந்து கொண்டார்கள். 2004 ஊழிய ஆண்டில், இப்பள்ளி விரிவாக்கப்பட்டு இன்னும் 87 கிளை அலுவலகங்களில் நடத்தப்பட்டது; இவற்றில் 23 கிளை அலுவலகங்களில், வேறு நாடுகளிலிருந்து வந்த மாணவர்களும் வகுப்புகளில் கலந்து கொண்டார்கள். உதாரணமாக, ஆஸ்திரியா, இஸ்ரேல், சுவிட்சர்லாந்து, துருக்கி, மாசிடோனியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சகோதரர்களை ஜெர்மனி அழைத்தது. லக்ஸம்பர்க்கிலிருந்தும், அஸோர்ஸ், கேப் வெர்டி, சாவோ டோம், பிரின்சிப், மெடீரா போன்ற அநேக தீவுகளிலிருந்தும் வந்த மாணவர்கள் போர்ச்சுகலில் நடைபெற்ற பள்ளியில் கலந்து கொண்டார்கள். உகாண்டா, எத்தியோப்பியா, டான்ஜானியா, ருவாண்டா, இன்னும் வேறுசில ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்திருந்த பயணக் கண்காணிகளை கென்யா வரவேற்றது.

வட்டார மற்றும் மாவட்டக் கண்காணிகளுடைய வேலையின் எல்லா அம்சங்களும் இப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. கடினமாக உழைக்கும் இந்தச் சகோதரர்கள் தங்களுடைய அநேக பொறுப்புகளை​—⁠சபைகளிலும் மாநாடுகளிலும் கற்பித்தல், சுவிசேஷ வேலையில் முன்நின்று வழிநடத்துதல் போன்ற அநேக பொறுப்புகளை​—⁠நிறைவேற்றுவதில் அதிக திறம்பட்டவர்களாக விளங்குவதற்கு உதவி புரிவதே இதன் இலக்காகும். (2 தீ. 2:2; 4:5; 1 பே. 5:2, 3) அவர்கள் தங்களுடைய சொந்த ஆவிக்குரியத் தன்மையைக் காத்துக்கொள்வதற்கும் பிறருக்கு உதவி செய்யும்போது பகுத்துணர்வுடனும் உட்பார்வையுடனும் வேதவசனங்களைப் பயன்படுத்துவதற்கும் இப்பாடத் திட்டம் அவர்களை உற்சாகப்படுத்தியது.

பெரும்பாலான வகுப்புகள் கிளை அலுவலகங்களில் நடத்தப்பட்டன. அதனால், பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிமார்களும் பெத்தேல் வாழ்க்கையை ருசித்துப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள். ஒரு வகுப்பினர் இவ்வாறு எழுதினார்கள்: “பெத்தேல் வாழ்க்கை எங்களுக்கு ஆன்மீக ரீதியில் பயனளித்தது. பைபிள் வாசிப்பும் இயர்புக் வாசிப்பும் கொண்ட காலை வழிபாட்டை முழுமையாக அனுபவித்து மகிழ்ந்தோம். எங்களுக்குக் கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடங்கள் மத்தியிலும், திங்கட்கிழமை மாலை நடைபெறும் பெத்தேல் குடும்பத்தின் காவற்கோபுர படிப்பிலும் கலந்து கொண்டோம், ஆரோக்கியமான கூட்டுறவிலிருந்தும் நாங்கள் நன்மை அடைந்தோம்.”

அந்தச் சகோதரர்களில் சிலர், ஒவ்வொரு நாளும் மதிய உணவிற்குப்பின் ஒரு மணிநேரம் சுற்றுமுறையில் ஊழிய இலாகாவில் பணி புரிந்தார்கள். கிளை அலுவலகத்தோடு எப்படி இன்னும் நன்கு ஒத்துழைப்பது, கொடுக்கப்படும் வழிநடத்துதலை எப்படி அதிக திறம்பட பின்பற்றுவது, அறிக்கைகளை அதிக திருத்தமாகவும் அர்த்தமுள்ள விதத்திலும் எப்படித் தயாரிப்பது போன்றவற்றை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆற்றப்படும் ஒரு சொற்பொழிவுக்கு அந்த மாணவர்களுடைய மனைவிமார்களும் ஆஜரானார்கள். உண்மையுள்ள இத்தகைய சகோதரிகளுக்காகவே விசேஷமாக தயாரிக்கப்பட்ட இந்தச் சொற்பொழிவு ஆன்மீக உற்சாகத்தை அளித்தது. உதாரணமாக, மனைவிகள் கீழ்ப்பட்டிருப்பதில் தொடர்ந்து சிறந்த முன்மாதிரி வைப்பதற்கு கொடுக்கப்பட்ட நினைப்பூட்டுதல்களிலிருந்து பயனடைந்தார்கள், சபைகளிலுள்ள சகோதரிகளுடன் சேர்ந்து ஊழியம் செய்வதன் மூலம் தங்களுடைய கணவர்மார்களை ஆதரிப்பதற்கு அறிவுரைகள் பெற்றார்கள். ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்பட்ட இந்தச் சொற்பொழிவுகளை “மிகச் சிறந்த ஆன்மீக இனிப்புக்கு” வட்டாரக் கண்காணி ஒருவர் ஒப்பிட்டார்.

இந்தப் பள்ளியில் பைபிளுக்கு​—⁠முக்கியமாக, பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு​—⁠துணைக்குறிப்புகளுடன் என்ற பைபிளுக்கு​—⁠அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “என்னுடைய தனிப்பட்ட படிப்பிலும் சபை கூட்டங்களிலும் இந்த ரெஃபரன்ஸ் பைபிளை பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறேன். இதன் மதிப்பை இப்பொழுதுதான் முழுமையாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.” கடவுளுடைய வார்த்தைக்குக் கவனம் செலுத்துவதன் மூலம் தனது ஆவிக்குரியத் தன்மையும் போதிக்கும் திறமையும் முன்னேறியிருப்பதாக பிரிட்டனில் வெகு காலம் பயணக் கண்காணியாக சேவை செய்யும் ஒருவர் உணர்ந்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “பேச்சு கொடுக்கும்போது ஒரு நல்ல உதாரணத்தைப் பயன்படுத்துவது நல்லது என்றாலும், வேதவசனங்களை வாசித்து விளக்குவது அதைவிட அதிக முக்கியம் என்பதை நான் கற்றுக்கொண்டேன்.”

மாணவர்கள் அநேகர் அந்தப் பள்ளிக்குப் போற்றுதல் தெரிவித்து எழுதினார்கள். ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “எங்களை உற்சாகப்படுத்தியதற்காகவும் எங்களுடைய வேலையைத் திறம்பட செய்ய எங்களைத் தயார்படுத்தியதற்காகவும் யெகோவாவின் மீதும் அவருடைய அமைப்பின் மீதுமுள்ள நன்றியுணர்வு எங்கள் இதயத்திலிருந்து பொங்கி வழிகிறது. யெகோவாவின் வழிகளுக்கு ஆழ்ந்த போற்றுதலும் அவருடைய அருமையான ஆடுகள் மீது அதிக அன்பும் கொண்டு, நாம் அதிக உறுதியுடன் விடாமல் தொடர்ந்து சேவை செய்வோமாக.” பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு மாணவர் இவ்வாறு எழுதினார்: “நம் சகோதர சகோதரிகளை அதிக அன்புடன் நடத்துவதைக் குறித்து இன்னுமதிக உணர்வுடன் இருப்பதற்கும், யெகோவாவின் சேவையில் அவர்கள் மகிழ்ச்சியைக் கண்டடைய நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கும் இப்பள்ளி எனக்கு உதவியது.” போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பயணக் கண்காணி ஒருவர் அநேகருடைய உணர்ச்சிகளை இவ்வாறு சுருக்கியுரைத்தார்: “என்னுடைய தேவராஜ்ய பணியில் இப்பள்ளி மிகவும் பலன்தரும் அனுபவமாக இருந்தது.”

மற்றொரு குறிப்பு போதனையாளரிடமிருந்து வருகிறது. “போதிப்பது உண்மையிலேயே ஒரு சிலாக்கியம், அதுவும் அந்தப் போதனையைப் பெறுகிறவர்கள் ஆயிரமாயிரம் சகோதர சகோதரிகளுடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதை நினைக்கும்போது அது மாபெரும் உத்தரவாதமாகவும் இருக்கிறது. யெகோவாவின் ஆசீர்வாதத்தால் இந்தப் பள்ளியிலிருந்து நிரந்தர நன்மைகள் கிடைக்குமென நாங்கள் நம்புகிறோம்.”​—யாக். 3:⁠1.

2004 ஊழிய ஆண்டின் முடிவில், 1,700-⁠க்கும் அதிகமான பயணக் கண்காணிகள் இப்பள்ளிக்கு ஆஜராகியிருந்தார்கள், இது 14 மொழிகளில் நடத்தப்பட்டது. 2005 ஊழிய ஆண்டில் பெரிய கிளை அலுவலகங்களில் இப்பள்ளி தொடர்ந்து நடத்தப்படும்.

சட்ட ரீதியில் முன்னேற்றங்கள்

மே 19, 2004-⁠ல், பிரான்சில் ஸ்ட்ராஸ்பர்கிலுள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் (ECHR) லாட்டர் Vs பல்கேரியா வழக்கு சம்பந்தமான தீர்ப்பை வெளியிட்டது. யெகோவாவின் சாட்சிகளுடைய முன்னாள் மிஷனரிகளான லாட்டர்ஸ் இந்த வழக்கை தொடுத்திருந்தார்கள், ஏனென்றால் அவர்களுடைய மதத்தின் நிமித்தம் பல்கேரியா அரசாங்கம் அவர்களை நாடுகடத்த முயன்றது. வழக்குத் தொடுத்தவர்களுக்கு நஷ்டயீடு வழங்குவதாகவும் அவர்களிடமிருந்து பறித்த “ரெஸிடன்ஸி பர்மிட்”டுகளைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் பல்கேரியா நாட்டு அதிகாரிகள் ஒப்புக்கொண்டார்கள். பல்கேரியாவில் 1998-⁠ல் அதிகாரப்பூர்வமாக ரெஜிஸ்டர் செய்திருந்த யெகோவாவின் சாட்சிகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கி, தங்களுடைய தெளிவான சம்மதத்தை பிரசுரிப்பதாகவும்கூட அந்த அதிகாரிகள் ஒப்புக்கொண்டார்கள்.

டிசம்பர் 16, 2003-⁠ல், செராஃபின் பலாவ்-மார்டினேத்துக்கு ஆதரவாக ECHR தீர்ப்பு வழங்கியது. ஆறுக்கு ஒன்று என்ற தீர்ப்பில், குடும்பம் சம்பந்தமாக சகோதரி பலாவ்-மார்டினேத்தின் உரிமைகளை பிரான்சு அரசாங்கம் மீறியதாக அந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்தச் சகோதரி தனது இரண்டு பிள்ளைகளை வளர்க்கும் உரிமையை இழந்தபோது ECHR-⁠ல் வழக்குத் தொடுத்திருந்தார். ஏனென்றால் “யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய . . . பிள்ளைகள் மீது கொடூரமான, சகிக்க முடியாத சட்ட திட்டங்களைச் சுமத்துகிறார்கள்; அத்தகைய சட்ட திட்டங்களுக்குப் [பிள்ளைகளை] அடிபணிய வைக்காதிருப்பதே” மிகவும் நல்லது என பிரான்சு மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் தீர்மானித்திருந்தன. பிள்ளைகளின் உண்மையான வாழ்க்கை சூழல்களையும் அவர்களுடைய மிகச் சிறந்த நலன்களையும் பற்றி சிந்திக்காமல் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும் இத்தீர்ப்பு மதப் பாகுபாட்டை வெளிக்காட்டுவதாகவும் ECHR தீர்ப்புக் கூறியது.

பல ஆண்டு காலமாக மத வெறியர்களின் கும்பல் தாக்குதல்களை சகித்து வந்த ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள், “கடவுளோடு நடவுங்கள்” மாவட்ட மாநாட்டிற்கு எந்தப் பிரச்சினையுமின்றி சுமுகமாய் போய்வந்தார்கள்; தாக்குதல்களுக்கு காரணமாயிருந்த மத வெறியர்களில் சிலர் இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஜார்ஜியன் மொழியில் வெளியிடப்பட்டது, இது அவர்களுக்கு ஒரு “விசேஷ விருந்தாக” இருந்தது. அதோடு, நவம்பர் 28, 2003-⁠ல், ஜார்ஜியா நாட்டின் நீதித் துறை அமைச்சகம் உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் உள்ளூர் கிளை அலுவலகத்தைப் பதிவு செய்தது. யெகோவாவின் சாட்சிகளால் அப்போது பயன்படுத்தப்பட்ட நிறுவனத்தை ரத்து செய்து 1998-⁠ல் ஜார்ஜிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த போதிலும், இப்புதிய நிறுவனத்திற்கு இப்பொழுது அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது; இது சகோதரர்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறது.

என்றாலும், ஜார்ஜியா நாட்டின் மீது தொடுக்கப்பட்ட ஏகப்பட்ட வழக்குகள் இன்னும் ECHR-⁠ல் நிலுவையில் உள்ளன. இருந்தபோதிலும், நம் சகோதரர்களுடைய சூழ்நிலை இப்பொழுது அங்கே முன்னேற்றம் அடைந்து வருவதைப் பார்ப்பது திருப்தியளிக்கிறது.

பொது நிறுவனங்கள் என்ற சட்டத்தின்கீழ் நம்முடைய மத அமைப்பை பதிவு செய்ய ஜெர்மனியில் உள்ள சகோதரர்கள் 1990 முதல் முயற்சி செய்து வந்திருக்கிறார்கள், ஆனால் எந்தப் பலனுமில்லை. சட்டம் கேட்பதைவிட “இராயனுக்கு” அதிக விசுவாசமாக இருக்க வேண்டுமென கூட்டரசு நிர்வாக நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டபோது, இத்தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என கூட்டரசு அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து மறுவிசாரணைக்கு அனுப்பிவிட்டது. (மாற். 12:17) மார்ச் 25, 2004-⁠ல், கூட்டரசு நிர்வாக நீதிமன்றம் இந்த வழக்கை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது. இரத்தம், பிள்ளை வளர்ப்பு, சபைநீக்கம், நடுநிலைமை ஆகியவை சம்பந்தமாக கூடுதலான தகவலை நீதிமன்றம் கேட்டது. புள்ளிவிவரங்கள், அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் போன்ற நம்பகமான அத்தாட்சிகளின் பேரில் அரசாங்க வழக்கு அமைந்திருக்க வேண்டும்; இன்டர்நெட்டிலிருந்து பெற்ற சந்தேகத்திற்குரிய மேற்கோள்களின் பேரிலோ தனிப்பட்ட விதமாக வஞ்சம் கொண்டுள்ள நபர்களிடமிருந்து பெற்ற கடிதங்களின் பேரிலோ சார்ந்திருக்கக் கூடாது என தலைமை தாங்கிய நீதிபதி குறிப்பிட்டார்.

கிரீஸில் இராணுவத்திற்கு ஆளெடுப்பது சம்பந்தமாக ஒரு படிவம் பயன்படுத்தப்பட்டது, அதில் “சிலியஸ்ட் அல்லது ஜெஹோவிஸ்ட்” என மதங்களின் பட்டியலில் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அவதூறாக கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் கிரீஸ் நாட்டு கிளை அலுவலகம் புகார் ஒன்றை பாதுகாப்பு அமைச்சகத்தில் தாக்கல் செய்தது. அவமதிப்பு செய்யும் எந்த எண்ணமும் தங்களுக்கு இல்லை என்றும் “அந்தத் தவறான வார்த்தையை உடனடியாகத் திருத்துவதற்கு ஏற்கெனவே [அமைச்சகம்] நடவடிக்கை எடுத்துவிட்டது” என்றும் குறிப்பிட்டு, மார்ச் 24, 2004-⁠ல் பாதுகாப்பு அமைச்சகம் யெகோவாவின் சாட்சிகளுக்கு கடிதம் எழுதியது. திருத்தப்பட்ட வாசகம்: “கிறிஸ்டியன் விட்னஸஸ் ஆஃப் ஜெஹோவா.”

பல ஆண்டுகளாக யெகோவாவின் சாட்சிகளை அதிகாரப்பூர்வமான ஒரு மதமாக பெரு அங்கீகரித்திருந்தது. ஆனால் நவம்பர் 1997-⁠ல், நமது பிரசுரங்களுக்கு வரிவிலக்கு அளிக்கும்படி கேட்டபோது, கல்வி அமைச்சகம் அதை நிராகரித்துவிட்டது; அதோடு இந்தப் பிரசுரங்களை கஸ்டம்ஸ் ஆபீஸிலிருந்து வெளியில் எடுப்பதற்கு முன்பு பெருந்தொகை செலுத்த வேண்டும் என்றும் சொன்னது. இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. டிசம்பர் 11, 2003-⁠ல், யெகோவாவின் சாட்சிகளுக்கு ஆதரவாக நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அமைச்சகத்தின் நடவடிக்கைகள் “பொறுப்பற்றவை, அபத்தமானவை, புரிந்துகொள்ள முடியாதவை” என அவர் அறிவித்தார். அதிகாரிகளுடைய நடத்தை “பாரபட்சமானது, வெறுக்கத்தக்கது” என அவர் கூறினார். பிரசுரங்களை இறக்குமதி செய்வது சம்பந்தமான பிரச்சினைகள் வேகமாக தீர்க்கப்பட்டன.

ஐக்கிய மாகாணங்களுடன் சேர்ந்து சுயாட்சி நடத்தும் காமன்வெல்த் நாடான பியூர்டோ ரிகோவில் ஒரு சட்டம் அமலில் இருக்கிறது; பொது இடங்களை கதவுகள், சுவர்கள் கொண்டு மூடவும் பாதுகாவலர்களைக் கொண்டு காவல் செய்யவும் அச்சட்டம் அனுமதி அளிக்கிறது. இத்தடைகள் நம்முடைய வெளி ஊழியத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பிரஸ்தாபிகளை இப்படிப்பட்ட சில இடங்களிலிருந்து போலீசார் வெளியே அனுப்பியிருக்கிறார்கள். நீதிமன்றத்திற்குப் போகாமலேயே இந்த விஷயத்தைத் தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டன. இது மத சுதந்திரத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் ஒடுக்குகிறது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்கும்படி கேட்டு, பியூர்டோ ரிகோ மாகாணத்திற்கான கூட்டரசு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது.

அக்டோபர் 28, 2003-⁠ல், புகாரெஸ்ட் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு (எண் 1756) வழங்கியது; அதாவது ருமேனியா அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட மதங்களின் வரிவிலக்கு பட்டியலில் யெகோவாவின் சாட்சிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென கூறியது. பிப்ரவரி 6, 2004-⁠ல், “ருமேனியாவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மதங்களின்” பட்டியல் ஒன்றை அரசு ஆணை எண் 112 வெளியிட்டது. அதில் யெகோவாவின் சாட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 21, 2004-⁠ல், கொரிய குடியரசில் உள்ள சியோல் மாவட்ட நீதிமன்றம், மத காரணங்களின் நிமித்தம் இராணுவத்தில் சேர மறுத்ததற்காக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று சகோதரர்களை விடுதலை செய்தது. மனசாட்சியின் நிமித்தம் இராணுவ சேவை செய்ய மறுப்பதை ஒரு சிவில் உரிமையாக முதல் தடவை இந்நாட்டு நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. கொரியாவிலுள்ள நூற்றுக்கணக்கான நமது சகோதரர்கள் ‘தங்களுடைய பட்டயங்களை கலப்பைகளாக அடித்த’ “குற்றத்திற்காக” தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். (ஏசா. 2:4, NW) கொரிய அரசியலமைப்புச் சட்டத்தில் மத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, நமது சகோதரர்களைப் பாதுகாக்க இச்சட்டத்தைப் பொருத்துவதற்கு உச்ச நீதிமன்றமும் அரசியலமைப்பு நீதிமன்றமும் மறுத்துவிட்டது வருந்தத்தக்க விஷயம். என்றாலும், இராணுவ சேவைக்குரிய வயதை எட்டும் தகுதியுடைய எல்லா பிரஜைகளுக்கும் படைத்துறை சாராத வேலை தருவதற்கு கொரிய சட்டமன்றம் சமீபத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.​—நீதி. 21:⁠1.

உவாட்ச்டவர் . . . Vs ஸ்ட்ரேட்டன் கிராமம் வழக்கில், வீட்டுக்கு வீடு ஊழியத்தை யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து செய்யும் வகையில் ஐ.மா. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. உதாரணமாக, அ.ஐ.மா., நியு யார்க் மாநிலத்திலுள்ள ஒரு சமுதாயத்தில், யெகோவாவின் சாட்சிகள் வெளி ஊழியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு அனுமதி பெற வேண்டுமென போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். என்றாலும், இந்தச் சூழ்நிலையையும் நீதிமன்ற தீர்ப்பையும் பற்றி தெரிவிக்கப்பட்ட பிறகு முதன்மை போலீஸ் அதிகாரி இவ்வாறு எழுதினார்: “இந்த விஷயத்தில் என்னுடைய போலீஸ் அதிகாரிகளுடைய செயல்கள் தனிப்பட்ட விதமாக எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டன. இதனால் ஏற்பட்ட எந்தவொரு அசெளகரியத்திற்காகவும் உங்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.”

“யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு செல்வதற்கு முன்பு அனுமதி பெற வேண்டியதில்லை” என ஐ.மா. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால், ரோந்து பணி செய்கிறவர்களுக்கும் மற்ற அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தும்படி இல்லினாய்ஸ் மாகாணத்திலுள்ள ஒரு சமுதாயம் போலீஸ் இலாகாவுக்கு சொன்னது. “அவர்கள் பிரசங்கிக்க போகும்போது நமக்கு தெரியப்படுத்த வேண்டியதில்லை” என்றும் அது கூறியது.

லெஸ்டர் கேம்ப்பெல் இரத்தமேற்க மறுத்தது சம்பந்தமான வழக்கில், அக்டோபர் 8, 2003-⁠ல் அயோவா உச்ச நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இரத்தமேற்க மறுத்து எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் தெரிவித்த போதிலும் ஆபரேஷனுக்குப் பிறகு தனது சொந்த இரத்தத்தை ஏற்றியதற்காக நஷ்டயீடு கேட்டு சகோதரர் கேம்ப்பெல் வழக்கு தொடுத்திருந்தார். அறுவை சிகிச்சை நிபுணருக்கும் மருத்துவமனைக்கும் ஆதரவாக கீழ் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் அயோவா உச்ச நீதிமன்றம் கீழ் கோர்ட் தீர்ப்பை மாற்றி, கேம்ப்பெல் ஒப்புதல் அளிக்காததால் அவருக்கு இரத்தமேற்றுவது தரமான மருத்துவ கவனிப்பு அல்ல என்பதை நிரூபிக்க மருத்துவ நிபுணர் அவசியமில்லை என தீர்ப்பளித்தது. அவருக்கு நஷ்டயீடு கொடுக்க வேண்டுமென்றும் அது தீர்ப்பளித்தது.

மாஸ்கோ தடையுத்தரவும் அதன் விளைவும்

மாஸ்கோவில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளின் மீது தடை விதித்து அவர்களுடைய சட்டப்பூர்வ அமைப்பை கலைக்கும்படி ரஷ்யாவில் இருக்கும் கலவின்ஸ்கீ இன்டர்-முனிசிபல் மாவட்ட நீதிமன்றம் மார்ச் 26, 2004 அன்று தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. ஜூன் 16, 2004-⁠ல், கீழ் கோர்ட் தீர்ப்பை மாஸ்கோ சிட்டி கோர்ட் ஆதரித்தது, அதனால் இந்தத் தடையுத்தரவும் அமைப்பை கலைப்பதும் சட்டப்படியாக ஆனது. சகோதரர்கள் ECHR-க்கு முறையீடு செய்திருக்கிறார்கள். இந்தத் தடையுத்தரவால் அநேக கஷ்டங்கள் உண்டாவதால் சீக்கிரத்தில் இது விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும், இந்தத் தடையுத்தரவு சகோதரர்களுடைய உற்சாகத் தீயை அணைத்துப் போடவில்லை. சொல்லப்போனால், யெகோவாவின் சேவையில் இன்னும் அதிகமாக செய்வதற்கு அநேகரை இது தூண்டியிருக்கிறது. ரோமில் அப்போஸ்தலன் பவுல் சிறைக்கைதியாக இருந்தபோது, “எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று” சொன்ன வார்த்தைகளை அவர்களுடைய வைராக்கியம் நினைவுபடுத்துகிறது.​—பிலி. 1:⁠12.

உதாரணமாக, மார்ச் 2004-⁠ல், என்றுமில்லாத அளவுக்கு 1,36,034 பிரஸ்தாபிகள், 1,36,903 பைபிள் படிப்புகள் என்ற உச்சநிலையை எட்டியது. கடந்த ஏழு ஆண்டுகளில் முதல் தடவையாக பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையை பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை விஞ்சிவிட்டது! மார்ச் முதல் ஜூன் வரை, ஒழுங்கான பயனியர் சேவைக்கு 1,000-⁠க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிளை அலுவலகத்திற்கு வந்திருக்கின்றன. என்றுமில்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் உச்சநிலை எண்ணிக்கையாக 15,489 பேர் ஒழுங்கான பயனியராக சேவை செய்தார்கள். “ஜூன் 16-⁠ல் வழங்கப்பட்ட தீர்ப்பும் நம்முடைய சகோதரர்கள் அதிகமாக ஊழியத்தில் ஈடுபடுவதற்கே அவர்களைத் தூண்டியிருக்கிறது” என கிளை அலுவலகம் அறிக்கை செய்கிறது. கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு இது மற்றவர்களையும்​—⁠விசுவாசத்தில் இல்லாத சில கணவர்களையும்—⁠உந்துவித்திருக்கிறது.

ஜூன் மாத தீர்ப்பு வழங்கப்பட்ட சமயத்தில் ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த யுனிவர்சிட்டி மாணவர் ஒருவர் ரஷ்யாவில் இருந்தார். “இந்தச் சூழ்நிலையைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்கு செ. பீட்டர்ஸ்பர்க் புறநகர்ப் பகுதியிலுள்ள பெத்தேலுக்குச் செல்ல இவர் விசேஷ முயற்சி எடுத்தார். கிளை அலுவலகக் கட்டிடங்கள் சுத்தமாக இருப்பதையும் அவருக்குக் கிடைத்த வரவேற்பையும் கண்டு அவர் மனங்கவரப்பட்டார்” என கிளை அலுவலகம் எழுதுகிறது. யெகோவாவின் சாட்சிகள் மீது ஏன் ஒருவர் தடைவிதிக்க விரும்புகிறார் என்பதைக் குறித்து ஆச்சரியப்பட்டு, மத ஆராய்ச்சித் துறையிலுள்ள தனது பேராசிரியர்களுக்குக் காண்பிக்க பிரசுரங்களையும் வீடியோக்களையும் கலிபோர்னியாவுக்கு எடுத்துச் செல்வதற்கு வாங்கிக்கொண்டார்.

மாஸ்கோ மாநாடுகள் அமைதலாக நடக்கின்றன

அப்பீல் கோர்ட் பாதகமான தீர்ப்பு வழங்குவதற்கு சற்று முன்பு, ஜூன் 11 முதல் 13 வரை, “கடவுளோடு நடவுங்கள்” என்ற தலைப்பில் இரு மாநாடுகள் மாஸ்கோவில் நடைபெற்றன, அவற்றில் ஒன்று ரஷ்யன் சைகை மொழியில் நடத்தப்பட்டது. ஆரம்பத்தில், மாநாடுகள் வழக்கு விசாரணைக்குப் பின் நடத்தப்படவிருந்தன, ஆனால் கிளை அலுவலகக் குழு இந்த வழக்கைத் தள்ளிப்போடுவதில் வெற்றி கண்டது. இதனால் மாநாடுகள் எந்தத் தடங்கலுமின்றி சுமுகமாக நடைபெற்றன, நகர அதிகாரிகளும் அதற்கு ஒத்துழைத்தனர் என சகோதரர்கள் கூறுகின்றனர். சொல்லப்போனால், ஸ்டேடியத்திற்குச் செல்லும் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்த போலீசாருக்கு மேலதிகாரிகள் இவ்வாறு கட்டளையிட்டார்கள்: “நீங்கள் ஆட்களை உள்ளே விடும்போது புகைப்பிடிக்காதீர்கள், கெட்ட வார்த்தைகள் பேசாதீர்கள்.”

மாஸ்கோ சுரங்கப் பாதையில், சிறு தொகுதியாக இருந்த சகோதரிகள் தனது பணத்தை திருடிவிட்டதாக ஒருவன் பொய்க் குற்றம் சாட்டினான். போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தன்னுடன் வரவேண்டுமென வற்புறுத்தினான். அந்தச் சகோதரிகளை மட்டுமல்ல, அந்தப் “பிரிவினைவாதிகள்” எல்லாரையுமே அவன் குற்றம் சாட்டினான், அதாவது ஆட்களிடமிருந்து திருட வேண்டும் என்பதற்காகவே போக்குவரத்து நெரிசலை உண்டாக்குவதாக குற்றம் சாட்டினான். அப்பொழுது, அந்தப் போலீஸ்காரர் சகோதரிகளிடம் திரும்பி, “நீங்கள் யார்?” என கேட்டார்.

தங்களுடைய பேட்ஜ் கார்டுகளைக் காட்டி, “நாங்கள் யெகோவாவின் சாட்சிகள், எங்களுடைய மாநாட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்” என அவர்கள் கூறினார்கள்.

பிறகு, குற்றம் சாட்டிய அந்த ஆளைப் பார்த்து, “யெகோவாவின் சாட்சிகள் திருட மாட்டார்கள். அவர்களை அவமானப்படுத்தியதற்காக நீ அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என அந்தப் போலீஸ்காரர் கூறினார். பின்பு சகோதரிகளிடம் திரும்பி, “மாநாட்டிற்குச் சீக்கிரம் போங்க” என்று அவர்களை அனுப்பி வைத்தார். அந்த ஆளைப் பார்த்து, “ஆனால் நீ இங்கேயே இரு. உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்” என்று கூறினார்.

இந்த ஸ்டேடியத்தில் நடத்தப்பட்ட மாநாட்டிற்கு வருகை தந்தவர்களுடைய உச்சநிலை எண்ணிக்கை 21,291; முழுக்காட்டுதல் பெற்றவர்கள் 497 பேர். ராஜ்ய மன்றத்தில் நடைபெற்ற சைகை மொழி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடைய எண்ணிக்கை 929-ஐ எட்டியது, 19 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்!

ஹெய்டியில் சோதனைகளை சமாளித்தல்

2004-⁠ம் ஆண்டில், அரசியல் கொந்தளிப்பு, வன்முறை, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை, விலைவாசி ஏற்றம் ஆகியவை தீவு தேசமான ஹெய்டியை பாதித்தன. இந்தத் துயரங்களோடு, மே மாதத்தில் பயங்கர வெள்ளம் வந்து 1,500-⁠க்கும் அதிகமான மக்களை வாரிக்கொண்டு போய்விட்டது, ஆயிரக்கணக்கானோர் வீடின்றி தவித்தார்கள். சாட்சிகள் யாரும் மரிக்கவில்லை, ஆனால் அநேகர் வீடு வாசல் அனைத்தையும் இழந்தார்கள்.

என்றாலும், யெகோவாவின் உதவிக்கரத்திற்கும் வழிநடத்துதலுக்கும் தெளிவான அத்தாட்சியாக விளங்கிய காரியங்களும், ஆளும் குழுவின் அன்பான அக்கறையும், சர்வதேச சகோதரத்துவமும் சகோதரர்களை வெகுவாய் பலப்படுத்தின. பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளுதவி அளிப்பதன் மூலம் அந்த அன்பு நடைமுறையில் காண்பிக்கப்பட்டது. அதேசமயத்தில், உணவும் தேவையான மற்ற பொருட்களும் வாங்குவதற்கு உள்ளூர் சகோதரர்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்தார்கள்.

சபைகளுக்கு சிறந்த வழிநடத்துதல் அளிப்பதற்காக நாட்டு நடப்புகளுக்கு ஹெய்டி கிளை அலுவலகம் கூர்ந்த கவனம் செலுத்தியது. உதாரணமாக, தலைநகர் போர்ட் ஆ பிரின்ஸில் வன்முறை தலைவிரித்தாடியபோது, பிப்ரவரி 29 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த கூட்டங்களை ஒருநாள் முன்னதாக வைக்கும்படி மூப்பர்களுக்கு கிளை அலுவலகக் குழு அறிவுரை கூறியது. அந்த ஆலோசனை ஞானமானதாக இருந்தது, ஏனென்றால் அலைக்கழிக்கப்பட்ட ஹெய்டி அதிபர் அந்த ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு ஓடிவிட்டார். “தலைநகரமெங்கும் துப்பாக்கி வெடிச்சத்தம் முழங்கியது, பெரும் குழப்பமும் கொந்தளிப்பும் நிலவியது” என ஒரு செய்தி அறிக்கை குறிப்பிட்டது. அந்தக் கிளை அலுவலகம் இவ்வாறு எழுதுகிறது: “இந்த மாதிரி சம்பவங்களெல்லாம் நடக்குமென ஒருவருமே எதிர்பார்க்கவில்லை. அந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களுக்குப் போகும் சாத்தியமே இருந்திருக்காது. நம் சகோதரர்களுடைய பாதுகாப்பிற்காக நாங்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறோம்.”

ஆபத்தான அந்தக் காலப்பகுதியில், போலீசும் கலக இராணுவத்தினர்களும் கொள்ளைக்காரர்களும் சாலைகளில் வழி மறிப்பு செய்தனர், அதனால் அரசாங்கம் இராமுழுவதும் ஊரடங்கு உத்தரவு போட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவு போடுவதற்கு முன்பு, இருட்டுவதற்கு முன்னரே எல்லாரும் பாதுகாப்பாக வீடு திரும்ப வசதியாக சபைகள் தங்களுடைய கூட்ட நேரங்களை மாற்றியமைத்துக் கொண்டன. கூட்டங்களுக்கு ஆஜரானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டதை பல சபைகள் அறிக்கை செய்தன!

சகோதரர்கள் வெளி ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்டார்கள், அது அக்கம்பக்கத்தாரைக் கவர்ந்தது. “யெகோவாவின் சாட்சிகளாகிய நீங்கள் எப்பொழுதும் போல தொடர்ந்து பிரசங்க வேலை செய்வதை பார்ப்பது நம்பிக்கையூட்டுகிறது” என சிலர் கூறினர். அதேசமயத்தில், பிரஸ்தாபிகள் அதிக ஜாக்கிரதையாக இருந்தார்கள், வெளி ஊழியம் செய்வதற்கு எங்கு சூழ்நிலைமைகள் நன்றாக இருக்கிறது என்பதை ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொண்டார்கள்.

நமது கிறிஸ்தவ அடையாளம்​—⁠ஒரு பாதுகாப்பு

ஹெய்டி கிளை அலுவலகம் இவ்வாறு எழுதுகிறது: “நம்மைப் பற்றி அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கெல்லாம் நன்கு தெரிந்திருந்தது; நாம் அரசியலில் நடுநிலை வகித்ததையும் அவர்கள் அறிந்திருந்தார்கள்; இதனால் நம் சகோதரர்கள் அடிவாங்கவில்லை, அவர்களுடைய பொருளுடைமைகளும் சூறையாடப்படாமல் பாதுகாக்கப்பட்டன.” உதாரணமாக, ஆயுதம் ஏந்திய கும்பல்கள் மிஷனரி தம்பதியரை மூன்று இடங்களில் வழி மறித்தன. அந்தத் தம்பதியர் இரண்டு காரியங்களைச் செய்தார்கள்: தாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என சொன்னார்கள், அதோடு மௌனமாகவும் சத்தமாகவும் ஜெபம் செய்தார்கள். அந்த மூன்று இடங்களிலும், அந்தக் கும்பலிலிருந்த ஒருவர் அவர்கள் சார்பாக பேசினார், யெகோவாவின் சாட்சிகள் நல்லவர்கள், அவர்கள் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று சொன்னார். அந்தத் தம்பதியர் வீட்டிற்குப் பாதுகாப்பாக வந்துசேர்ந்தார்கள்.

பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களையும் ஆயுதம் ஏந்திய கும்பல்கள் வழி மறித்தார்கள். அந்த மிஷனரிகளைப் போலவே இந்தச் சகோதரர்களும் தங்களை யெகோவாவின் சாட்சிகள் என்று அடையாளம் காட்டினார்கள், ஜெபம் செய்தார்கள், அதே பலன்களைப் பெற்றார்கள். ஒரு சந்தர்ப்பத்தில், கொள்ளைக்காரன் ஒருவன் இவ்வாறு கூறினான்: “நிம்மதியா போங்க, எங்களுக்காக ஜெபிங்க!” மற்றொரு பெத்தேல் ஊழியரை சாலை மறிப்பில் போலீஸ் நிறுத்தி, அவருடைய காருக்குள் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று அதிகாரிகள் சோதனை செய்ய நினைத்தார்கள். “என்னிடமிருக்கிற ஆயுதங்களெல்லாம் பைபிள், காவற்கோபுரம், விழித்தெழு!-தான்” என்று அந்தச் சகோதரர் கூறினார். அந்தப் போலீஸ்காரர் புன்னகைத்துவிட்டு, அவரை போகச் சொல்லி கையசைத்தார். அதற்குப்பின் அவருடைய காரை தூரத்திலிருந்து வரும்போதே அடையாளம் கண்டுகொண்டு, அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்காமலேயே அனுப்பிவிட்டார்கள்.

அதற்குப்பின் வந்த மாதங்களில், காரியங்களெல்லாம் ஓரளவுக்கு சுமுகமாக சென்றதாக அந்தக் கிளை அலுவலகம் அறிக்கை செய்தது. ஆனால் பிரச்சினைகளும் கொந்தளிப்புகளும் தொடர்ந்து இருந்தன. ஆகவே, சகோதரர்கள் எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருந்தார்கள்.

ஐக்கிய மாகாண அச்சகங்களில் முன்னேற்றம்

2002-⁠ம் ஆண்டில், ஆளும் குழுவின் வழிநடத்துதலின்படி, முக்கியமான ஐந்து இடங்களில்​—⁠ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களில்​—⁠அச்சு சம்பந்தமான வேலைகள் மீண்டும் ஒழுங்கமைக்கப்படும் பணி ஆரம்பமானது. கிளை அலுவலகங்களை அதிக திறம்பட பயன்படுத்துவதற்கு இந்த ஏற்பாடு வழிவகுத்திருக்கிறது. இதில் ஐக்கிய மாகாணங்களும் அடங்கும், இப்பொழுது இங்கே வேலைப் பளு குறைந்திருக்கிறது.

ஐக்கிய மாகாணங்களிலுள்ள பிரிண்டிங், பைண்டிங், ஷிப்பிங் வேலைகள் அனைத்தும் 2004-⁠ம் ஆண்டில் நியு யார்க்கிலுள்ள வால்கிலில் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஆகஸ்ட் 6, 2002-⁠ல் பொதுவான திட்டமும் குறிக்கோளும் நகர திட்ட வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டன. செப்டம்பர் 3-⁠ல் பொது விசாரணை நடத்தப்பட்டு, கடைசியில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அக்டோபர் 5, 2002-⁠ல் நடைபெற்ற உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் வருடாந்தர கூட்டத்தில், எல்லா வேலைகளையும் வால்கிலில் ஒருங்கிணைப்பதற்குரிய அங்கீகாரத்தை ஆளும் குழு வழங்கியதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு புதிய மேன் ரோலண்ட் லித்தோமன் ரோட்டரி பிரஸ்கள் ஆர்டர் செய்யப்பட்டன, அவற்றை நிறுவுவதற்கு கூடுதலாக தேவைப்படும் கட்டிடம் பிப்ரவரி 2004-⁠க்குள் தயாராவதற்கும் அட்டவணை போடப்பட்டது.

இந்த இமாலய திட்டம் எப்படி பதினான்கே மாதங்களில் நிறைவேற்றப்படும்? காரியங்களை வழிநடத்துவதற்கும் தனிநபர்கள் தங்களையே மனமுவந்து அளிப்பதற்கு அவர்களை உந்துவிப்பதற்கும் சகோதரர்கள் யெகோவாவையே நோக்கியிருந்தார்கள். இந்த நம்பிக்கை வீண்போகவில்லை. பிப்ரவரி 2003-⁠ல் களப்பணி ஆரம்பிக்கப்பட்டு, செப்டம்பர் மாதத்திற்குள் அச்சகத்திற்கான கட்டிடம் தயாரானது. தற்சமயம் வால்கிலில் இருந்த மூன்று அச்சு இயந்திரங்களில் முதலாவது இயந்திரம் கழற்றப்பட்டு, டிசம்பர் மாதத்தில் புதிய விரிவாக்க கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இரண்டு புதிய அச்சு இயந்திரங்களும் ஏப்ரல் மற்றும் மே 2004-⁠ல் வந்துசேர்ந்தன, ஜூன் மற்றும் ஜூலையில் உற்பத்தி ஆரம்பமானது. செப்டம்பர் மாதத்திற்குள் ஐந்து அச்சு இயந்திரங்களும் செயல்படத் தயாராக இருந்தன.

இதற்கு முன்பு, புரூக்ளினில் ஆடம்ஸ் தெரு வளாகத்தின் மூன்று கட்டிடங்களில் 11 தளங்களை பைண்டிங் இலாகா ஆக்கிரமித்திருந்தது. இப்பொழுது முழு பைண்டிங் இலாகாவும் வால்கிலில் ஒரேவொரு தளத்தில் மட்டுமே உள்ளது, 58 சதவீதம் குறைவான இடத்தையே இப்பொழுது ஆக்கிரமிப்பு செய்கிறது. ‘பேப்பர்பேக்’ புத்தக பைண்டிங் ஜூலை 2004-⁠ல் ஆரம்பமானது. பிற்பாடு அந்த மாதத்தில், முதல் ‘ஹார்டுகவர்’ புத்தகங்கள் சங்கிலித் தொடர் போன்ற புதிய பைண்டிங் மெஷினில் தயாரிக்கப்பட்டன. இந்தச் சங்கிலித் தொடர் சுமார் 400 மீட்டர் நீளமுடையது, 70 ‘கன்வேயர் பெல்ட்’டுகளால் இணைக்கப்பட்ட 33 மெஷின்கள் உள்ளன. புத்தகத்தின் பாகங்களெல்லாம், இந்தச் சங்கிலித் தொடரின் ஆரம்பத்தில் ஒரேவொரு முறை கையால் சேர்க்கப்படுகின்றன. நிமிடத்திற்கு 120 புத்தகங்கள் என்ற வேகத்தில் பைண்டிங் செய்யப்படுகிறது, ‘ஹார்டுகவர்’ மெஷினை இயக்குவதற்கு 25 ஆப்பரேட்டர்களே தேவைப்படுகிறார்கள்​—⁠66 சதவீதம் ஆட்கள் குறைக்கப்பட்டுள்ளனர். பைண்டிங் மெஷின் வேலைகள் அனைத்தும் அக்டோபர் 2004-⁠ல் முழுமையாக செயல்படத் துவங்கிவிட்டன.

நவம்பர் 2004 தேதியின்படி, புதிய வால்கில் ஷிப்பிங் இலாகா, சபை லிட்ரேச்சர் ஆர்டர்களை புதிய கம்ப்யூட்டர் முறையில் கவனிக்கத் துவங்கிவிட்டது. இது, முன்பு புரூக்ளினில் இருந்த கம்ப்யூட்டர் ஆக்கிரமித்த இடத்தில் 45 சதவீதம் குறைவான இடத்தையே இப்பொழுது ஆக்கிரமிக்கிறது. அனுப்ப வேண்டிய சரக்குகளின் அளவை கம்ப்யூட்டரே கணக்கிட்டு, பொருத்தமான அட்டைப் பெட்டியையும் தேர்ந்தெடுத்து விடுகிறது. ஆர்டர்களை அனுப்புவதற்குத் தயாராக இருக்கும் ஒரு விசேஷ மேடைக்கு எல்லா பார்சல்களும் 800 மீட்டர் நீளமுடைய ‘கன்வேயர்’ மூலம் சென்றுவிடுகின்றன. உள்ளூர் சபைகள் கார் அல்லது டிரக்கிலேயே வந்து தங்களுடைய ஆர்டர்களை எடுத்துக்கொள்வதற்கு வசதியான இடமும் இருக்கிறது.

இத்திட்டத்திற்கு உதவிய சகோதர சகோதரிகளுக்கு எங்களுடைய இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதில் வேலை செய்தவர்களில் பெத்தேல் ஊழியர்களும் தற்காலிக வாலண்டியர்களும் ஐந்து மாகாணங்களைச் சேர்ந்த மண்டல கட்டுமான குழுக்களின் ஆலோசனைப்படி செயல்பட்ட சகோதரர்களுடைய தொகுதிகளும் அடங்குவர். தங்களுடைய சொந்த வியாபாரத்திலிருந்து கட்டுமான பொருட்களையும் கருவிகளையும் தாராளமாய் நன்கொடையாக வழங்கிய சகோதரர்களும் இதில் அடங்குவர். “உற்சாகமாய்” நிதியுதவி அளித்த அனைவருக்கும் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.​—2 கொ. 9:7, 11.

புரூக்ளினில் மாற்றங்கள்

பிரிண்டிங், பைண்டிங், ஷிப்பிங் வேலைகளை வால்கிலுக்கு இடம் மாற்றியதால் புரூக்ளின் பெத்தேலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 29, 2004-⁠ல் நிகழ்ந்த சம்பவம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும் மனதை நெகிழச் செய்வதாகவும் இருந்தது. அன்று மாலையில், 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக அச்சகத்தின் கண்காணியாக சேவை செய்த மேக்ஸ் லார்சன் புரூக்ளினிலிருந்த கடைசி பிரிண்டிங் பிரெஸை மூடியபோது, அனைவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இங்கு 84 வருடமாக தொடர்ந்து அச்சு வேலை நடைபெற்று வந்தது முடிவடைந்தது. சில வாரங்களுக்குப் பிறகு பைண்டிங் இலாகா மூடப்பட்டது.

இந்த மாற்றங்களால் புரூக்ளின் கட்டிடங்களில் இடம் காலியாகும் என்பதை அறிந்து, 360 ஃபர்மன் தெருவிலிருந்த கட்டிடத்தை விற்பதற்கு ஜூன் 2003-⁠ல் ஆளும் குழு அறிவிப்பு செய்தது. வெள்ளிக்கிழமை ஜூன் 18, 2004-⁠ல் இந்தக் கான்ட்ராக்ட் தீர்மானிக்கப்பட்டது. பத்து லட்சம் சதுர அடி இடத்திலிருந்த லாண்டரி, ஆபீஸ்கள், ஒர்க்‍ஷாப்கள் ஆகியவை 117 ஆடம்ஸ் தெரு வளாகத்திலுள்ள காலியிடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது.

அதோடு, 107 கொலம்பியா ஹைட்ஸ் கட்டிடத்திலும் புதுப்பிக்கும் வேலைகள் பெரியளவில் நடைபெற்று வருகின்றன. 2005-⁠ம் ஆண்டின் பிற்பகுதியில், குடியிருப்பு பகுதியை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முழு திட்டமும் செப்டம்பர் 2006-⁠ல் முடிவடையும். புதுப்பிக்கப்படும் இந்தக் கட்டிடத்தில் 300-⁠க்கும் அதிகமான பெத்தேல் குடும்ப அங்கத்தினர்கள் தங்க முடியும்; இதில் ‘கமிஸரி’யும் ராஜ்ய மன்றமும் நூலகமும் லாபியும் ஆபீஸ்களும் பர்ஸனல் லாண்டரியும் அத்துடன் புதிய முற்றத்தில் தோட்டமும் இருக்கும்.

உலகளாவிய அதிகரிப்புக்குத் தயாராகுதல்

தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், பிரேசில், மெக்சிகோ, ஜப்பான் ஆகிய கிளை அலுவலகங்களும் புதிய மேன் ரோலண்ட் லித்தோமன் அச்சு இயந்திரத்தைப் பெற்றுள்ளன. பிரிட்டன் கிளை அலுவலகமே இந்தப் புதிய இயந்திரத்தை முதன் முதலில் நிறுவியது, ஜூலை 2003-⁠ல் இந்த இயந்திரம் வந்துசேர்ந்தது, அக்டோபரில் உற்பத்தியை ஆரம்பித்துவிட்டது. நாளொன்றுக்கு 7,50,000 பத்திரிகைகளை இது அச்சிடுகிறது​—⁠இரண்டு ஷிப்டுகளில் இந்த எண்ணிக்கை 15 லட்சமாகிறது​—⁠முன்பிருந்த இயந்திரத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.

பைபிளுக்கும் மற்ற பிரசுரங்களுக்குமுரிய பாகங்களையும் இப்புதிய அச்சு இயந்திரங்களால் அச்சிட முடியும். உதாரணமாக, தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகம் ஏற்கெனவே புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளுக்குரிய பாகங்களை ஸிஸோதோ என்ற தென் ஆப்பிரிக்க மொழியில் அச்சடித்துவிட்டது. முன்பெல்லாம் சிறிய புத்தகங்களை அச்சடிப்பதிலிருந்து பெரிய புத்தகங்களுக்கு மாற்றும்போது கிட்டத்தட்ட ஒரு முழு நாளாகிவிடும் என ஜப்பான் கிளை அலுவலகம் அறிக்கை செய்கிறது. இப்பொழுது ஒரு மணிநேரமே ஆகிறது. முன்பு, பத்து லட்சம் துண்டுப்பிரதிகள் அச்சிட பத்து நாட்கள் ஆனது, ஆனால் இப்பொழுதோ ஐந்து மணிநேரங்களே ஆகின்றன. முதல் மூன்று மாதங்களில், ஜப்பானிலுள்ள பிரெஸ் 1.2 கோடி துண்டுப்பிரதிகளையும்; 1.2 கோடி பத்திரிகைகளையும் சிற்றேடுகளையும்; 2,40,000 புத்தகங்களையும்; 48,000 பைபிள்களையும் அச்சிட்டது.

வேறுசில தானியங்கி இயந்திரங்கள் பிரசுரங்களை ‘டிரிம்’ செய்து, எண்ணி, அடுக்கி, லேபில் ஒட்டி, அனுப்புவதற்கு தயார் செய்துவிடுகின்றன. ‘கம்ப்யூட்டர்-டு-பிளேட்’ என்ற தொழில்நுட்ப முறையில் பிரிண்டிங் பிளேட்டுகள் இப்பொழுது அதிக திறம்படவும் துல்லியமாகவும் தயாரிக்கப்படுகின்றன. இந்த முறையைப் பயன்படுத்துவதால் பிலிம் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த முன்னேற்றங்களால் உற்பத்தி அதிகரித்தது மட்டுமல்லாமல், அநேக வேலையாட்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது என பிரிட்டன் கிளை அலுவலகம் அறிக்கை செய்கிறது.

பயிற்சிக்காக ஜெர்மனிக்கு ஒரு பயணம்

பிரெஸ் டிரெய்னிங்குக்காக ஆறு கிளை அலுவலகங்களிலிருந்து ஜெர்மனியிலுள்ள மேன் ரோலண்ட் கம்பெனிக்கு குழுக்கள் சென்றன. சாட்சிகளல்லாத பிரெஸ் ஆட்களுக்குப் பயிற்சி கொடுத்த அனுபவத்திலிருந்து, சகோதரர்களும் தங்களுடைய நேரத்தை விடுமுறை நாள் போலத்தான் கருதுவார்கள் என பயிற்சியாளர்கள் நினைத்தார்கள். ஆனால் சகோதரர்கள் கவனமாக கருத்தூன்றி கற்றுக்கொண்டதைப் பார்த்து பயிற்சியாளர்கள் வியந்துபோனார்கள், கவரப்பட்டார்கள். சொல்லப்போனால், இந்தப் பயிற்சியிலிருந்து அதிக பயனடைய வேண்டும் என்பதற்காக சீக்கிரத்திலேயே ஆரம்பித்து அதிக நேரம் வரை வேலை செய்ய சாட்சிகள் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.

பயிற்சி பெற்ற சிலருக்கு மொழி ஒரு பிரச்சினையாக இருந்தது, ஏனென்றால் வாய்மொழி போதனையும் மெஷின் சம்பந்தப்பட்ட கையேடுகளும் ஆங்கிலத்தில் இருந்தன. இதை முன்னரே யோசித்து, ஜப்பானிலிருந்து வந்த சகோதரர்கள் ஜெர்மனி போவதற்கு முன்பே தங்களுடைய ஆங்கில மொழித் திறனை முன்னேற்றுவிக்க கடினமாக முயற்சி செய்தார்கள். அநேகர் தற்காலிகமாக ஆங்கில மொழி சபைகளுக்கும்கூட மாறிக் கொண்டார்கள்.

பெத்தேல் ஊழியர்கள் சிறந்த சாட்சி கொடுக்கிறார்கள்

பிரெஸ்கள் எல்லாம் கிளை அலுவலகங்களுக்கு வந்துசேர்ந்த பிறகு, பெத்தேல் பணியாளர்களுடைய உதவியுடன் மேன் ரோலண்ட் பொறியியலாளர்கள் அவற்றை மாட்டினார்கள். ஆறு கிளை அலுவலகங்கள் அனைத்திலும் நிலவிய மகிழ்ச்சியான, ஆரோக்கியமான சூழல் சாட்சிகளல்லாத வேலையாட்கள் மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்தியது. லண்டனில் மெஷின்களை மாட்டிக்கொண்டிருந்த ஒருவர் சகோதரர்களிடம் இவ்வாறு கூறினார்: “நேற்றைக்கு ராத்திரி நான் வீட்டிற்குப் போனபோது என்னுடைய அண்டை வீட்டுக்காரரை அவருடைய தோட்டத்தில் பார்த்தேன். எனக்கு அவரைப் பிடிக்கவே பிடிக்காது, ஆனால் நேற்றைக்கு இராத்திரி அவரிடம் 20 நிமிஷம் பேசினேன், அவர் உண்மையிலேயே ரொம்ப தங்கமான மனுஷர் என்று அப்பொழுதுதான் எனக்குத் தெரிஞ்சது.” தனது மனப்பான்மையிலும் நடந்துகொள்ளும் விதத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தனது மனைவி கவனித்ததாக இதே டெக்னீஷியன் கூறினார். “நீங்க நட்புடன் பழகுறீங்க, சிரித்த முகத்துடன் இருக்கிறீங்க, எல்லாரையும் வரவேற்கிறீங்க” என அவள் கூறினாளாம்.

“யெகோவாவின் சாட்சிகளுடன் ஆறு வாரங்களாக நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். கடந்த இரண்டு வாரங்களில், ஒரு தடவைகூட நான் யாரையும் திட்டவில்லை. சொல்லப்போனால், இனிமேல் அப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தவே மாட்டேன்” என அவர் பதிலளித்தார்.

லண்டன் கிளை அலுவலகத்தில் வேலைகள் முடிந்தபோது, கம்பெனி வேலையாட்களை சகோதரர்கள் கவனித்துக்கொண்ட விதத்தைக் குறித்து நன்றி சொல்ல மேன் ரோலண்ட் எக்ஸிகியூட்டிவ் ஒருவர் கிளை அலுவலகத்தினரை போனில் அழைத்தார். இது எந்தக் குறையுமில்லாத வேலை என அவர் கூறினார்.

புதிய மெஷின்களை மாட்டியவர்களுக்கு அவர்கள் வேலை செய்த இடத்திலேயே சில கிளை அலுவலகங்கள் டைனிங் ரூம் ஏற்பாடு செய்தன. நேர்த்தியாக உடை உடுத்திய வெயிட்டர்கள் மதிய உணவு பரிமாறியது அநேகருக்கு, முக்கியமாக சாட்சிகள் அல்லாதவர்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது. ஜப்பானிலுள்ள ஒரு டெக்னீஷியன் இதுபோன்ற சுத்தத்தையோ அந்தக் கிளை அலுவலகத்திலிருந்ததைப் போன்ற நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அச்சகத்தையோ ஒருநாளும் பார்த்ததில்லை. “வேலை செய்வதற்கு இதைவிட சிறந்த இடம் வேறெதுவும் இந்த உலகத்தில் இல்லை” என்று அவர் சொன்னார். சகோதரர்களுடைய நேர்மையையும் அவர் மெச்சினார். யாரும் திருட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தன்னுடைய கருவிகளை வேறெங்கும் கவனிப்பாரற்று போட்டுவிட்டுச் செல்லவே முடியாது என்றார். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினார், அநேக பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டார், கிளை அலுவலகத்தையும் சுற்றிப் பார்த்தார்.

மெக்சிகோவைச் சேர்ந்த சகோதரர்கள் மேன் ரோலண்ட் டெக்னீஷியன்களை நினைவு ஆசரிப்புக்கு அழைத்தார்கள். நான்கு பேர் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்களிடம் தகுந்த உடை இல்லை. ஆகவே அந்த ஆட்கள் டிரெஸ் வாங்குவதற்கு விரும்பினார்கள், பெத்தேல் ஊழியர் ஒருவர் அவர்களை கடைக்கு அழைத்துச் சென்றார். சகோதரர்கள் அவர்களுக்கு பைபிள்கள் கொடுத்தார்கள், நினைவு ஆசரிப்பு பேச்சின்போது வேதவசனங்களை எடுத்துப் பார்க்க உதவினார்கள். கூட்டம் முடிந்தப்பின், அந்த டெக்னீஷியன்கள் போட்டோ எடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவ்வளவு நன்றாக புன்முறுவல் பூத்ததைப் பார்த்து அவர்களெல்லாரும் ஜெர்மனியிலிருந்து வந்திருந்த பெத்தேல் ஊழியர்கள் என்றே சபையாரில் அநேகர் நினைத்துக்கொண்டார்கள்.

எல்லா கிளை அலுவலகங்களிலும், உள்ளூர் கான்ட்ராக்டர்களுக்கும் சப்ளையர்களுக்கும்கூட நன்கு சாட்சி கொடுக்கப்பட்டது. ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “உங்களுடைய அமைப்பின் தரம், முக்கியமாக அங்குள்ள ஆட்கள் என்னுடைய மனதை மிகவும் கவர்ந்துவிட்டார்கள். உங்களுடைய கட்டுமான திட்டத்தில் வேலை செய்தபோது நான் அனுபவித்து மகிழ்ந்தது போல வேறெங்கும் அனுபவிக்கவில்லை என்றே சொல்வேன். மனிதகுலத்திற்கு எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையை உங்களுடைய அமைப்பு எனக்குத் தந்திருக்கிறது. உற்சாகத்தையும் கவனிப்பையும் பாட்டிலில் போட்டு விற்க முடிந்தால், நிச்சயம் உங்களுடைய ஆட்கள் உற்பத்தி செய்வதையே எல்லாரும் வாங்குவார்கள்.”

மெக்சிகோவில் புதிய பிரெஸ்ஸுக்குத் தேவையான பைப்புகளை சப்ளை செய்த ஒருவர் கிளை அலுவலகத்தில் நிலவிய ரம்மியமான சூழலைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அவர் அநேக கேள்விகள் கேட்டார், இப்பொழுது அவரும் அவருடைய குடும்பத்தினர்களும் பைபிள் படித்து வருகிறார்கள், நல்ல முன்னேற்றமும் செய்து வருகிறார்கள். உள்ளூர் கான்ட்ராக்டர்களைச் சேர்ந்த ஃபோர்மேன் ஒருவர் விசித்திரமான வேண்டுகோள் விடுத்தார். “எங்களுடைய வேலைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வழக்கமாக ஆட்கள் ‘டிப்ஸ்’ கொடுப்பார்கள். ஆனால் அதற்குப் பதிலாக, எங்கள் ஒவ்வொருவருக்கும் பைபிள் கொடுப்பீர்களா? இங்குள்ள எல்லாவற்றையும் பார்த்தால், பணத்தைவிட பைபிள் அறிவே அதிக மதிப்பு வாய்ந்தது என்று நினைக்கிறேன்.”

இந்திய கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது

“நெடுங்காலமாக காத்திருந்த நாள் கடைசியில் டிசம்பர் 7, 2003-⁠ல் வந்தது” என இந்திய கிளை அலுவலகம் எழுதியுள்ளது. “இந்தியாவின் தென்-மத்திப பகுதியிலுள்ள பெங்களூரில் புதிதாக கட்டப்பட்ட எங்களுடைய கிளை அலுவலகம் இந்த நாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.”

இது 43 ஏக்கர் நிலப் பரப்பளவில் அமைந்துள்ளது, 3,20,000 சதுர அடி கொண்ட இந்தக் கிளை அலுவலகம் ஒரு சிறிய நகரம் போல இருக்கிறது. இதுதான் உலகிலேயே முதன்முதலாக தனியார் நிறுவனத்தினால் கட்டப்பட்ட பெரிய கிளை அலுவலகம். இங்கே குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் கழிவுநீர் சுத்திகரிப்பு-சுழற்சிமுறை நிலையமும் உள்ளன; சொந்தமாகவே மின் உற்பத்தி செய்கிற ஜெனரேட்டர்களும் உள்ளன. இந்த வளாகத்தில் 122 அலுவலக அறைகள் உள்ளன, இதில் மொழிபெயர்ப்பாளர்களுக்குரிய 80 அறைகளும் அடங்கும்; அழகிய ராஜ்ய மன்றமும் பெரிய அச்சகமும் உள்ளன. சௌகரியமான அறைகள் கொண்ட மூன்று குடியிருப்பு கட்டிடங்கள் இருக்கின்றன; லாண்டரியும், டைனிங் ஹாலும், சகல வசதிகளும் கொண்ட ஒரு சமையலறையும் இருக்கின்றன. உள்ளூர் கட்டுமான பொருட்களைப் பயன்படுத்தி, இந்த முழு திட்டமும் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்பட்டது.

இந்தியாவில் 1905-⁠ல் ராஜ்ய வேலை ஆரம்பமானது. இப்பொழுது 26 இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பும் அச்சடிப்பும் செய்யப்படுகின்றன. பிரதிஷ்டை நிகழ்ச்சியின்போது, இந்தியாவில் பல ஆண்டுகளாக சேவை செய்த மிஷனரிகள் உற்சாகமூட்டும் அனுபவங்களைச் சொன்னார்கள். ஆளும் குழுவைச் சேர்ந்த ஸ்டீவன் லெட் என்பவர் பிரதிஷ்டை சொற்பொழிவை ஆற்றினார். 25 நாடுகளிலிருந்து வந்திருந்த 150 பேர் உட்பட, 2,933 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

பிலிப்பைன்ஸ் கிளை அலுவலக பிரதிஷ்டை

“உவாட்ச் டவர் மாதிரி அழகிய வேலைப்பாடுமிக்க கட்டிடம் எங்களுக்கும் வேண்டும்!” பிலிப்பைன்ஸ் கிளை அலுவலகத்தின் அழகிய வேலைப்பாட்டைக் கண்டு இப்படித்தான் மணிலாவிலுள்ள சாட்சிகளல்லாத கட்டிடக்காரர்கள் சிலர் சொன்னார்கள். சொல்லப்போனால், கட்டிட விதிமுறைகள் சம்பந்தமாக குறும்படத்தை தயாரிக்கும் டெலிவிஷன் பணியாளர்கள் நகர பொறியியலாளரை சந்தித்தபோது, அந்தப் பொறியியலாளர் அவர்களிடம் இவ்வாறு கூறினார்: “நுணுக்கமாக கட்டிட விதிமுறைகளைப் பின்பற்றுகிற ஓர் இடத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், உவாட்ச் டவருக்குப் போங்கள்.”

புதிய பத்துமாடி குடியிருப்பு ஒன்றையும் துணைக் கட்டிடங்கள் சிலவற்றையும் சகோதரர்கள் கட்டினார்கள்; அதோடு, 1991-⁠ல் கட்டப்பட்ட தற்போதுள்ள பத்துமாடி குடியிருப்புக் கட்டிடத்தையும் புதுப்பித்தார்கள். இந்த விஸ்தரிப்பு ஏன் தேவைப்பட்டது? 1991 முதல் 2003 வரை, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 34,000 அதிகரிப்பு ஏற்பட்டது; இதனால் 1,44,000-⁠த்திற்கும் சற்று அதிகமான ராஜ்ய பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலை ஏற்பட்டுள்ளது!

நவம்பர் 1, 2003-⁠ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரகாசமான அந்த சனிக்கிழமை காலையில், பெத்தேல் குடும்பத்தினர், முன்னாள் மிஷனரிகள், 13 நாடுகளிலிருந்து வந்திருந்த விருந்தினர்கள் பிலிப்பைன்ஸிலிருந்து வந்திருந்த 2,000-⁠க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் என மொத்தமாக 2,540 பேர் ஆஜரானார்கள். “யெகோவாவின் கடந்தகால மற்றும் தற்கால வழிபாட்டு இடங்களை உயர்வாக மதித்தல்” என்ற பொருளில் ஸ்டீவன் லெட் பேசினார். அடுத்த நாளில், உள்ளூர் பயனியர்கள், மூப்பர்கள், அவர்களுடைய மனைவிமார்கள் என மொத்தமாக 8,151 பேர் மெட்ரோ மணிலா அசெம்பிளி ஹாலில் விசேஷ நிகழ்ச்சிநிரலை அனுபவித்து மகிழ்ந்தார்கள்.

இத்தகைய கிளை அலுவலகங்களில் உலகமுழுவதிலும் மொத்தமாக 20,092 ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ முழுநேர ஊழியர்களின் உலகளாவிய அணியைச் சேர்ந்த அங்கத்தினர்கள் ஆவர்.

[பக்கம் 21, 22-ன் பெட்டி]

பட்டப்பகலில் கடத்தல்

ஹெய்டி நாட்டில் பேட்யான்வில் என்ற ஊரில் வசிக்கும் கார்ல் என்ற யெகோவாவின் சாட்சிக்கு 20 வயது; மார்ச் 19, 2004, வெள்ளிக்கிழமை நண்பகல் வேளையில், நெரிசல்மிக்க ஒரு தெருவில் அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். திடீரென, கறுப்பு உடையில் ஆயுதத்துடன் வந்த சிலர் கார்லை பிக்கப் டிரக்குக்குள் இழுத்து, அவரது முகத்தை மூடினர். வண்டி மின்னல் வேகத்தில் சென்றது. நடந்ததைக் கார்ல் சொல்கிறார்:

வண்டி நின்றதும் என்னை இறக்கி ஒரு ரூமுக்கு இழுத்துச் சென்றார்கள். அங்கே என்னைப் போல இன்னும் நிறைய பேர் இருந்தார்கள். அவர்கள் அரசியல் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட யூனிவர்ஸிட்டி மாணவர்கள் என நினைக்கிறேன். எங்களைக் கடத்தியவர்கள் பயங்கர வெறியோடு துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார்கள். கடத்தப்பட்ட நபர் ஒருவர் சுருண்டு விழுந்தார். அவரது தலை என் பாதத்திற்கு அருகே இருப்பதை உணர முடிந்தது. அதன் பின் அவர்கள் என்னை விசாரிக்க ஆரம்பித்தார்கள், மிரட்டினார்கள். எரிச்சலோடு என்னை அடித்து, அங்குக் கிடந்த பிணத்தின் மீது தூக்கிப் போட்டார்கள்.

“நாங்கள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்!” என அவர்களுடைய தலைவன் மிரட்டினான்.

“எனக்கு அரசியலைப் பற்றி ஒன்றுமே தெரியாதே” என்றேன்.

“அப்படியென்றால் இப்போதே உன்னைக் கொல்லப் போகிறேன்!” என அவன் கத்தினான்.

“கொஞ்சம் பொறுங்கள், என் கடவுளாகிய யெகோவாவிடம் ஜெபம் செய்வதற்கு மட்டும் அவகாசம் கொடுங்கள்; என் பெற்றோருக்கும் கூடப்பிறந்தவர்களுக்கும் பலம் தரும்படி அவரிடம் ஜெபிக்க வேண்டும்; ஏனென்றால் இனி அவர்கள் என்னை பார்க்க மாட்டார்களே” என்றேன்.

“சரி சரி, சீக்கிரம்! எனக்கு நேரமில்லை” என்றான்.

நான் சப்தமாக ஜெபம் செய்ய ஆரம்பித்தவுடன், அவன் ரூமை விட்டு வெளியே போனான். அவன் திரும்பி வந்தபோது, ‘கார்ல், இனி அவ்வளவுதான். சாகத் தயாராகிக்கோ’ என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ஆனால் மிக ஆச்சரியமான ஒன்று நடந்தது.

“உன் பெயர் கார்ல் ____________ தானே?” என்று அவன் கேட்டான்.

அவனுக்கு எப்படி என் பெயர் தெரிந்தது என யோசித்துக்கொண்டே “ஆமாம்” என்றேன்.

நான் அவனுக்குப் பலமுறை என் காரில் லிஃப்ட் கொடுத்திருக்கிறேன் என்றும், இப்போது என்னை அடையாளம் தெரிந்துகொண்டதால் கொலை செய்யப் போவதில்லை என்றும் விளக்கினான். என் முகம் மூடப்பட்டிருந்தபோதும், நான் ஜெபிக்கையில் சொன்ன விஷயங்களை வைத்து என்னை அடையாளம் கண்டுகொண்டான் என நினைக்கிறேன். அவன் மறுபடியும் வெளியே போனான். அவனுக்கும் அவனுடைய கூட்டாளிகளுக்கும் காரசாரமான விவாதம் நடந்தது. கடைசியில், யாரோ ஒருவன் என்னை மறுபடியும் வண்டியில் ஏற்றிக்கொண்டு போனான், பிறகு எங்கோ ரோட்டில் தள்ளிவிட்டான். அது குலைநடுங்க வைக்கும் அனுபவம்; ஆனால் யெகோவாவின் மீதும் ஜெபத்திற்கு இருக்கும் வல்லமையின் மீதும் என் நம்பிக்கையை மிகவும் அதிகரிக்கச் செய்த அனுபவம்.

[பக்கம் 12, 13-ன் அட்டவணை/படங்கள்]

2004 ஊழிய ஆண்டின் முக்கிய சம்பவங்கள்

செப்டம்பர் 1, 2003

செப்டம்பர்: 2004 ஊழிய ஆண்டின்போது பயணக் கண்காணிகளுக்கான பள்ளி 88 கிளை அலுவலகங்களில் நடத்தப்பட்டது.

அக்டோபர்: பிரிட்டன் கிளை அலுவலகம், மேன் ரோலண்ட் லித்தோமன் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தது.

அக்டோபர் 28: அங்கீகரிக்கப்பட்ட மதங்களின் வரிச் சலுகை பட்டியலில் யெகோவாவின் சாட்சிகளையும் சேர்க்கும்படி ருமேனியாவிலுள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நவம்பர் 1: பிலிப்பைன்ஸ் கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

நவம்பர் 28: ஜார்ஜியாவின் நீதித்துறை அமைச்சகம் யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் கிளை அலுவலகத்தைச் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்தது.

டிசம்பர் 7: இந்திய கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஜனவரி 1, 2004

மார்ச் 26: மாஸ்கோவில் கலவின்ஸ்கீ நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகள் மீது தடையுத்தரவு விதித்தது. வழக்கு அப்பீல் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல்: ரஷ்யாவில் ஒழுங்கான பயனியர்களின் எண்ணிக்கை 15,489 என்ற உச்சநிலையை எட்டியது.

ஏப்ரல் 29: புரூக்ளினில் 84 ஆண்டுகளாகத் தொடர்ந்து இயங்கிய அச்சகம் மூடப்பட்டது. புதிய அச்சகம் வால்கிலில் இயங்குகிறது.

மே 1, 2004

மே: ஹெய்டியில் அரசியல் கலவரம் ஒருபுறமிருக்க, வெள்ளப்பெருக்கு மறுபுறம் பெரும் நாசத்தை ஏற்படுத்தியது. சகோதரர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை.

ஜூன் 16: மாஸ்கோ நகர நீதிமன்றம் மார்ச் 26 தீர்ப்பை ஆமோதித்தது, தடையுத்தரவு அமலுக்கு வந்தது. இந்த வழக்கு மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31, 2004

[பக்கம் 11-ன் படம்]

ஜார்ஜியன் மொழியில் “கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்” வெளியிடப்படுகிறது

[பக்கம் 27-ன் படங்கள்]

அ.ஐ.மா., நியு யார்க்கில் வால்கிலிலுள்ள புதிய இரண்டு மேன் பிரெஸ்களில் ஒன்றை சகோதரர்கள் இயக்குகிறார்கள்

[பக்கம் 29-ன் படம்]

இந்தியாவில் பெங்களூரில் சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கிளை அலுவலகம்

[பக்கம் 30-ன் படம்]

விஸ்தரிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் கிளை அலுவலகம்