Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கயானா

கயானா

கயானா

“தண்ணீர் தேசம்”​—⁠“கயானா” என்ற பெயரின் அர்த்தம் அதுதான். இது தென் அமெரிக்காவிலுள்ள ஒரு நாடு; இதன் தென் எல்லை பூமத்தியரேகைக்கு வடக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நாட்டிற்கு கயானா என்ற பெயர் ஏக பொருத்தமே! ஏனென்றால் இங்கு 40-⁠க்கும் அதிகமான நதிகளும், எண்ணிலடங்கா உபநதிகளும் பாய்ந்தோடுகின்றன; கயானாவின் நிலப்பரப்பான 2,15,000 சதுர கிலோமீட்டரில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள மழைக்காடுகளும் வனங்களுமே இவற்றிற்குத் தண்ணீரை வழங்குகின்றன. இந்நதிகளில் சில பிரேசில், சூரினாம், வெனிசுவேலா ஆகிய அண்டை நாடுகளுக்கு எல்லைகளாய் அமைகின்றன. உள்நாட்டிலுள்ள ஆறுகளின் கரையோரங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் கிராமங்களுக்கும் பண்ணைகளுக்கும் இவை வாழ்வளிக்கின்றன. சொல்லப்போனால் கயானாவின் வாணிபத்திற்கும் சரித்திரத்திற்கும், ஏன், யெகோவாவின் ஜனங்களுடைய சரித்திரத்திற்கும்கூட இந்த நீர்நிலைகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

இஸகிபோ, டெமராரா, பர்பிஸ், கோரன்டைன் ஆகியவை இந்நாட்டில் பாயும் முக்கிய நதிகளாகும். அவற்றில் மிக நீண்ட நதியான இஸகிபோவின் நீளம் 1,000 கிலோமீட்டர்; அது கடலில் கலக்கும் இடத்தில் அதன் குறுக்களவு 30 கிலோமீட்டர், அந்நதியில் 365 தீவுகள் உள்ளன. டச்சு குடியேற்றத்தின்போது இத்தீவுகளில் ஒன்றான ஃபோர்ட் ஐலண்டில்தான் மத்திய அரசின் தலைமையகம் அமைந்திருந்தது. இந்த முக்கிய நதிகள் உள்நாட்டின் தெற்கேயுள்ள மலைகளில் உற்பத்தியாகின்றன. அங்கிருந்து அவை வளைந்து நெளிந்து வடக்கே குறுகலான கடற்கரை சமவெளி வழியாகப் பாய்ந்தோடி கடைசியில் அட்லாண்டிக் பெருங்கடலில் சங்கமிக்கின்றன. அப்படிச் செல்லும் வழியில், உலகிலேயே மிகவும் அற்புதமான சில நீர்வீழ்ச்சிகளாக உருவெடுத்து கண்களுக்கு விருந்தளிக்கின்றன; உதாரணமாக, 120 மீட்டர் அகலமுடைய போடாரோ ஆறு, கையட்டுர் நீர்வீழ்ச்சியில் முதன்முறையாக 226 மீட்டர் பள்ளத்திற்குள் விழுகிறது; இது பின்னர் இஸகிபோ நதியில் போய் சேர்கிறது.

இயற்கையில் கொட்டிக் கிடக்கும் இத்தனை அழகுடன் மிளிரும் இந்த கயானா, இயற்கை பிரியர்களுக்கு ஒரு பரதீஸே. இதன் தண்ணீரில் இராட்சத நீர்நாய்கள், கரும் முதலைகள், பிராருகூ, அதாவது அராபைமா மீன்​—⁠இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றிலேயே மிகப் பெரிய நன்னீர் மீன்—⁠ஆகியவை வாழ்கின்றன. மாமிச பட்சிணிகளான இந்த இராட்சதர்கள் மூன்று மீட்டர் நீளம் 220 கிலோ எடை வரையில் வளரக்கூடியவை. அடர்ந்த காடுகளில் சிறுத்தைகள் பதுங்கிச் சென்று இரை தேடுகின்றன; அங்குள்ள மரங்களிலோ ஹௌலர் குரங்குகள் கத்துகின்றன. அதுமட்டுமா, ஹார்ப்பி கழுகுகள், பார்வையை ஈர்க்கும் பஞ்சவர்ணக் கிளிகள், டுக்கான்கள் ஆகியவற்றையும் சேர்த்து 700-⁠க்கும் மேற்பட்ட பறவையினங்கள் அந்த மரங்களில் குடியிருக்கின்றன.

கயானாவில் சுமார் 7,70,000 பேர் வாழ்கிறார்கள். இந்தியாவிலிருந்து கான்ட்ராக்ட் அடிப்படையில் வேலைக்காரர்களாகக் கொண்டுவரப்பட்டவர்களின் வாரிசுகளும், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட கறுப்பர்களின் சந்ததிகளும், செவ்விந்தியர்களும் (அரவாக், கரீப், வாபிஸியானா, வராவூ), கலப்பு இனத்தவரும் இதில் அடங்குவர். இங்கு கிரியோல் மொழி பரவலாகப் பேசப்படுகிறது. என்றாலும் ஆங்கிலமே இந்நாட்டின் ஆட்சி மொழியாகும். இதனால், தென் அமெரிக்காவிலேயே ஆங்கிலம் பேசும் ஒரே நாடாக கயானா தனித்து விளங்குகிறது.

கயானாவில் சத்திய தண்ணீர் பாய்கிறது

சுமார் 1900-வது ஆண்டின்போது, ஜனங்களின் ஆவிக்குரிய தாகத்தைத் தணிக்கும் ஜீவ “தண்ணீர்” கயானாவில் சிற்றோடை போல் ஓட ஆரம்பித்தது. (யோவான் 4:14) கோரன்டைன் நதியருகே மரம் அறுக்கும் முகாமில் வேலை செய்து வந்த பீட்டர் ஜோஹாஸ்ஸன் என்பவருக்கு ஸயன்ஸ் உவாட்ச் டவர் அண்டு ஹெரல்ட் ஆஃப் கிரைஸ்ட்ஸ் பிரசன்ஸ் என்ற பத்திரிகையின் ஒரு பிரதி கிடைத்தது. அதில் படித்த விஷயங்களை எல்கின் என்பவரிடம் அவர் பகிர்ந்துகொண்டார். அவரோ, த டிவைன் ப்ளான் ஆஃப் த ஏஜஸ் என்ற புத்தகத்தையும் வேறு பல புத்தகங்களையும் அனுப்பி வைக்குமாறு கேட்டு உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதினார். கற்றுக்கொண்ட சத்தியத்தில் எல்கின் நிலைத்திருக்கவில்லை; ஆனால் மற்றவர்கள் சத்தியத்தில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள அவர் வழி செய்தார். இதன் விளைவாக, பர்பிஸ் நதி கடலோடு சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள புதிய ஆம்ஸ்டெர்டாம் நகரில் ஒரு சிறிய தொகுதி உருவானது.

இதற்கிடையில், கயானாவின் தலைநகரான ஜார்ஜ் டவுனில் எட்வர்ட் ஃபிலிப்ஸ் என்பவர் சர்வதேச பைபிள் மாணாக்கர் வெளியிட்ட பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டார்; அப்போது யெகோவாவின் சாட்சிகள் சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் என அழைக்கப்பட்டார்கள். கற்றுக்கொள்பவற்றை மற்றவர்களிடம் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் ஃபிலிப்ஸ் தன்னுடைய உறவினர்களையும் நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்து தனக்கு தெரிந்த விதத்தில் பைபிள் கலந்தாலோசிப்புகளைத் தவறாமல் நடத்தி வந்தார். 1908-⁠ல் பிரதிநிதி ஒருவரை கயானாவுக்கு அனுப்பும்படி கேட்டு உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு அவர் கடிதம் எழுதினார்; அப்போது கயானா, பிரிட்டிஷ் கயானா என அழைக்கப்பட்டது. a நான்கு வருடங்களுக்குப் பின், இவான்டர் ஜெ. காயர்ட் இங்கு வந்தார். அவர் ஜார்ஜ் டவுனிலும் புதிய ஆம்ஸ்டெர்டாமிலும் உள்ள டவுன் ஹால்களில் கூடிவந்த நூற்றுக்கணக்கானோருக்கு பைபிள் பேச்சுகளைக் கொடுத்தார்.

இப்படி காயர்ட் வந்து சந்தித்த சம்பவம், ஃபிலிப்ஸின் மகனான ஃப்ரெடெரிக்கின் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது. அவர் இவ்வாறு எழுதுகிறார்: “சகோதரர் காயர்ட் வந்து கொஞ்ச காலத்திற்குள்ளாகவே ஜார்ஜ் டவுனில் பிரபலமாகிவிட்டார். அவர் பிரசங்கித்த செய்தியில் ஆர்வம் காட்டியவர்கள் எங்களுடைய பைபிள் மாணாக்கர் தொகுதியில் சேர ஆரம்பித்தார்கள். அந்தக் காலத்தில் நாங்கள் த டிவைன் ப்ளான் ஆஃப் த ஏஜஸ், த நியூ கிரியேஷன் ஆகிய புத்தகங்களையும் இன்னும் சில புத்தகங்களையும் ஒன்றாகச் சேர்ந்து படித்தோம். சீக்கிரத்திலேயே எங்கள் வீடு கூட்டம் நடத்த போதாமல் ஆகிவிட்டது, அதனால் 1913-⁠ல் ஜார்ஜ் டவுனிலுள்ள சமர்செட் வீட்டில் ஒரு மாடி அறையை வாடகைக்கு எடுத்தோம். 1958-⁠ம் ஆண்டு வரையில் அங்குச் சபைக் கூட்டங்களை நடத்தினோம்.” 1914-⁠ல், எட்வர்ட் ஃபிலிப்ஸ் மீண்டும் தன்னுடைய வீட்டைக் கொடுத்தார், இந்த முறை அது கயானாவின் முதல் கிளை அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதன் அலுவலகக் கண்காணியாக எட்வர்ட் ஃபிலிப்ஸ் நியமிக்கப்பட்டார், 1924-⁠ல் அவர் மரிக்கும் வரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.

1916-⁠ல் “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற படக்காட்சியைக் காட்டியது பிரசங்க வேலையை முடுக்கிவிட்டது; இது புகைப்பட ஸ்லைடுகளும் இயங்கு படங்களும் ஒருசேர அமைந்த தயாரிப்பாகும். “அந்தச் சமயத்தில் நாங்கள் சமாதானத்தையும் ஆவிக்குரிய செழுமையையும் அனுபவித்து மகிழ்ந்தோம். அப்போது பைபிள் மாணாக்கர்களை முன்நின்று நடத்திய சார்ல்ஸ் டி. ரஸல் கொடுத்த பல பிரசங்கங்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்பட்டன” என எழுதுகிறார் ஃப்ரெடெரிக்.

1917-⁠க்குள், கயானாவில் நிலைமை மாறியிருந்தது. மொத்த நாடும் போரின் பிடியில் சிக்கியிருந்தது; அங்கிருந்த பிரபல பாதிரியார், பிரிட்டிஷ்காரர்களுக்காகவும் அவர்களுடைய நேச நாடுகளுக்காகவும் ஜெபிக்கும்படி பொதுமக்களை தூண்டினார். செய்தித் துறைக்கு காயர்ட் எழுதிய கடிதத்தில், பைபிள் தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் உலக நிலைமைகளை விளக்கினார். அதுமட்டுமல்ல, ஜார்ஜ் டவுனிலுள்ள டவுன் ஹாலில் “பாபிலோனின் சுவர்களைத் தகர்த்துப் போடுதல்” என்ற தலைப்பில் வலிமையான ஒரு பேச்சையும் அவர் கொடுத்தார்.

இதனால், “மிகவும் கொதித்துப் போன பாதிரிமார், நாட்டை விட்டு சகோதரர் காயர்ட்டை வெளியேற்றவும், நம்முடைய பல பிரசுரங்களைத் தடை செய்யவும் அதிகாரிகளைத் தூண்டிவிட்டார்கள். அந்தத் தடை 1922 வரை நீடித்தது” என அக்டோபர் 1, 1983 ஆங்கில காவற்கோபுரத்தில் வெளிவந்த ஓர் அறிக்கை சொல்கிறது. என்றாலும், சாட்சி கொடுத்தலில் காயர்ட்டின் தைரியத்தைக் கண்ட அநேகர் அவரை உயர்வாக மதித்தனர். சொல்லப்போனால், அவரை வழியனுப்ப சென்ற கூட்டத்தார் கப்பல்துறை மேடையில் நின்றுகொண்டு, “சத்தியத்தைப் பிரசங்கித்த ஒரே ஆள் இவர் மட்டும்தான்” என கோஷம் போட்டார்கள். காயர்ட்டை வெளியேற்றுவதை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்யப் போவதாக துறைமுக வேலையாட்கள் பயமுறுத்தினர், ஆனால் அவ்வாறு செய்யாதிருக்கும்படி அவர்களைச் சகோதரர்கள் அமைதிப்படுத்தினார்கள்.

முதல் உலகப் போருக்குப் பின், பைபிள் மாணாக்கர்கள் சூழ்ச்சிமிக்க பரீட்சை ஒன்றை எதிர்ப்பட்டார்கள். அது சிறிது காலத்திற்கு ராஜ்ய சத்தியம் பரவவிடாமல் தடுத்தது. ஒரு சமயம் புரூக்ளின் தலைமை காரியாலய உறுப்பினராக இருந்து பிற்பாடு விசுவாச துரோகியாக மாறிய ஒருவர் பல முறை கயானாவுக்கு வந்தார்; பைபிள் மாணாக்கர்களை அமைப்பை விட்டு விலகச் செய்யும் நோக்கத்துடனே வந்தார்.

அதனால், “அந்நாட்டிலிருந்த பைபிள் மாணக்கர்கள் சிறிது காலத்திற்கு மூன்று தொகுதிகளாகப் பிரிந்தனர்; அதாவது அமைப்புக்கு உண்மையுள்ளவர்கள் அடங்கிய ஒரு தொகுதி, விசுவாச துரோகிகளாக மாறியவர்கள் அடங்கிய இன்னொரு தொகுதி, என்ன செய்வதென்றே தெரியாதிருந்தவர்கள் அடங்கிய மற்றொரு தொகுதி என பிரிந்தனர். என்றாலும், உண்மையுள்ளவர்கள் அடங்கிய தொகுதியின் மீது மட்டுமே யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்தது தெளிவாகத் தெரிந்தது; அதனால் அந்தத் தொகுதி வளர்ச்சியடைந்தது” என மேற்குறிப்பிடப்பட்ட காவற்கோபுரம் சொல்கிறது. அவ்வாறு உண்மையோடிருந்தவர்களில், 1915-⁠ல் முழுக்காட்டுதல் பெற்ற மால்கம் ஹால் என்பவரும் 1916-⁠ல் முழுக்காட்டுதல் பெற்ற ஃபிலிக்ஸ் பாலெட் என்பவரும் இருந்தனர். இவர்கள் ஆர்வமிக்க ஊழியர்களாக யெகோவாவுக்குச் சேவை செய்து 90 வயதுக்கும் மேல் வாழ்ந்தனர்.

உண்மையுள்ள ஊழியர்களை மேலும் உற்சாகப்படுத்துவதற்காக 1922-⁠ல் ஜார்ஜ் யங் என்ற சகோதரர் உலக தலைமை காரியாலயத்திலிருந்து கயானாவுக்கு வந்தார்; அங்கே சுமார் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். “அவர் தளரா உழைப்பாளி” என ஃபிலிக்ஸ் பாலெட் சொன்னார். சகோதரர் யங்கிற்கு இருந்த பைபிள் அறிவும், கணீரென்ற குரலும், இயல்பாக வெளிப்படும் சைகைகளும், போதிப்பதற்கு அவர் பயன்படுத்திய உபகரணங்களும் கடவுளுடைய வார்த்தையை நன்கு ஆராய்வதற்கு அநேகரை உந்துவித்தன. சகோதரர் யங் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், ஜனவரி 1, 1923 ஆங்கில காவற்கோபுரம் இவ்வாறு அறிவித்தது: “உலகின் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் சத்தியத்திடம் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள், மன்றங்கள் நிரம்பி வழியுமளவுக்குப் பொதுப் பேச்சு அனைத்திற்கும் ஏராளமானோர் வருகிறார்கள், அதேபோல் சகோதரர்கள் மத்தியில் ஆர்வமும் தேவ பக்தியும் அதிகரித்திருக்கிறது.” உதாரணமாக, அந்தச் சமயத்தில் 25 ராஜ்ய பிரஸ்தாபிகளே இருந்தபோதிலும் சமர்செட் வீட்டில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு சராசரியாக 100 பேர் வந்தார்கள்.

1923-⁠க்குள் உள்நாட்டிலேயே தொலைதூரத்தில் வசிக்கும் மக்களிடம் பிரசங்கிப்பதற்கும்கூட சகோதரர்கள் முயற்சி எடுத்தார்கள். உபசரிக்கும் குணம் படைத்த அம்மக்கள் சாப்பிடுவதற்கு ஏதாவது தருவார்கள் என்ற நம்பிக்கையில் மரத்தில் கட்டும் தொட்டிலையும் பிரசுரங்களையும் மட்டுமே அவர்கள் பெரும்பாலும் எடுத்துச் சென்றார்கள். தங்குவதற்கு யாராவது இடம் கொடுக்கையில் அன்றிரவை அங்கேயே கழித்தார்கள். அப்படிக் கிடைக்காதபோது, தொட்டிலை மரத்தில் கட்டி வெளியிலேயே இரவைக் கழித்தார்கள், அப்போது கொசு பட்டாளத்தின் தொல்லையை சகிக்க வேண்டியிருந்தது. அடுத்த நாள் காலையில், யெகோவாவின் அமைப்பு வெளியிட்ட டெய்லி ஹெவன்லி மன்னா என்ற சிறுபுத்தகத்திலிருந்து பைபிள் வசனத்தை அவர்கள் கலந்தாலோசித்தபின் ஒற்றையடிப் பாதை வழியாக நடந்தோ மற்றவர்களின் படகில் பயணம் செய்தோ அடுத்த இடத்திற்குச் சென்றார்கள்.

இரண்டாம் உலகப் போர் துவங்கும் வரை தொலைதூர இடங்களுக்கு இப்படிச் சென்று பிரசங்கித்தார்கள்; அதற்குப் பிறகோ, பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக அதிக தூரம் பிரயாணம் செய்ய முடியவில்லை. இதற்கிடையே, 1931-⁠ல் பைபிள் மாணாக்கர் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றார்கள். கரையோரப் பகுதி முழுக்க பரவிக் கிடந்த பைபிள் மாணாக்கர்களின் பல சிறிய தொகுதியினர் இப்புதிய பெயரை குதூகலத்துடன் ஏற்றுக்கொண்டார்கள், ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதன் மூலம் தங்கள் ஆர்வத்தை வெளிக்காட்டினார்கள். 1930-களின் பிற்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட பைபிள் பேச்சுகளை ஃபோனோகிராஃப்பின் உதவியோடு பிரஸ்தாபிகள் ஊழியத்தில் போட்டுக் காட்டினார்கள். அப்போது கிளை அலுவலக மேற்பார்வையாளராக இருந்த ஃப்ரெடெரிக் ஃபிலிப்ஸ் அதைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்: “அந்தக் காலத்தில் கிராமங்களில் ரேடியோவே கிடையாது. அமைதியான அந்தப் பகுதியில் எங்களுடைய ஒலிபெருக்கியிலிருந்து ஒலிக்கும் இன்னிசையே நாங்கள் அங்கு வந்திருப்பதை முதலில் அறிவித்தது. அதன் பிறகு, பேச்சுக்களை ஒலிபரப்புவோம். கிட்டத்தட்ட அந்த இடத்திலுள்ள எல்லாருமே எங்களைச் சுற்றி கூடிவிடுவார்கள். சிலர் பைஜாமா உடையில் வந்து நிற்பார்கள்.”

நற்செய்தியைப் பரப்புவதற்கு வானொலி நிலையங்களும் உதவின. கயானாவிலிருந்த ஒரு வானொலி நிலையம் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் ராஜ்ய செய்தியை ஒலிபரப்பியது. ஆனால், இவை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த சாத்தான், இதைத் தடுப்பதற்கு இரண்டாம் உலகப் போரினால் எழுந்த தேசியவாத உணர்வுகளை பயன்படுத்தினான்.

இரண்டாம் உலகப் போரும் அதற்குப் பின்னும்

1941-⁠ல் இரண்டாம் உலகப் போரின் போது, கயானாவில் 52 ராஜ்ய பிரஸ்தாபிகள் சுறுசுறுப்பாகச் சேவை செய்து வந்தார்கள். அதே ஆண்டில் காவற்கோபுரம், ஆறுதல் (இப்போது விழித்தெழு!) ஆகிய பத்திரிகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. 1944-⁠ல் யெகோவாவின் ஜனங்களுடைய அனைத்துப் பிரசுரங்கள் மீதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “பிற பைபிள் சொஸைட்டிகளின் பைபிள்களையும்கூட யெகோவாவின் சாட்சிகள் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை” என ஜூலை 1, 1946 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரத்தில் வெளிவந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

ஏப்ரல் 1946-⁠ல் உலகத் தலைமை காரியாலயத்திலிருந்து சகோதரர் நேதன் நார் கயானாவுக்கு வந்தார். அவருடன் அப்போதுதான் கிலியட் பட்டம் பெற்றிருந்த வில்லியம் டிரேஸி என்பவரும் வந்தார். சகோதரர்களை உற்சாகப்படுத்துவதற்கும் தடையை நீக்கும்படி அரசாங்கத்திடம் மேல் முறையீடு செய்வதற்கும்தான் அவர்கள் வந்தார்கள். ஜார்ஜ் டவுனில் நடந்த ஒரு கூட்டத்தில் சகோதரர் நார் கொடுத்த பேச்சை கேட்க 180 சகோதரர்களும் ஆர்வம் காட்டிய ஆட்களும் வந்திருந்தார்கள்; அப்போது, இயேசுவின் ஆரம்பகால சீஷர்கள் ஊழியத்திற்குச் சென்ற சமயத்தில் அவர்களிடம் பைபிள்களோ புத்தகங்களோ இருக்கவில்லை என அவர் சொன்னார். இருந்தாலும் யெகோவாவின் ஆசீர்வாதத்தால் அவர்கள் எண்ணிக்கையில் பெருகினார்கள். எப்படி? அவர்கள் தொடர்ந்து பிரசங்கித்ததால் பெருகினார்கள். ஆகவே, இன்றைய ஊழியர்களும் தொடர்ந்து பிரசங்கித்து வந்தால் அதேபோல் கடவுள் ஆசீர்வதிக்க மாட்டாரா? கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்!

இதற்கிடையில், தடை நீக்கப்படுவதற்கு சகோதரர்கள் தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். உதாரணமாக, போர் முடிந்து ஒரு வருடத்திற்குள்ளாக, தடையை நீக்கக் கோரி எழுதப்பட்ட மனுவில் 31,370 பேரிடம் கையெழுத்துக்களை அவர்கள் பெற்றனர். அதற்குப் பின் அரசாங்கத்திடம் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அது தவிர, கயானாவில் உள்ளவர்கள் தெளிவாகத் தெரிந்துகொள்வதற்காக, உண்மைகளை பிட்டுபிட்டு வைக்கும் ஒரு துண்டுப்பிரதியை யெகோவாவின் அமைப்பு பிரசுரித்தது. அதன் தலைப்பு இவ்வாறு இருந்தது: “பிரிட்டிஷ் கயானாவில் பரிசுத்த வேதாகமத்திற்கு தடை​—⁠சுமார் 31,000 பேர் கையெழுத்திட்ட மனு ஆளுநரிடம் தாக்கல்; மத பாகுபாடின்றி இந்தக் காலனியிலுள்ள எல்லாருக்கும் வணக்க சுதந்திரத்தை மீண்டும் அளிப்பதற்காக கோரி தாக்கல் செய்யப்பட்டது.”

அதுமட்டுமல்ல, தடையை நீக்குவது சம்பந்தமாக, குடியேற்ற செயலர் டபிள்யு. எல். ஹிப் என்பவரைச் சகோதரர் நார் சந்தித்தார். 30 நிமிட உரையாடலின் முடிவில், “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற ஆங்கில புத்தகத்தை திரு. ஹிப்பிடம் சகோதரர் நார் கொடுத்துவிட்டு, அதை கவனமாக வாசிக்கும்படி கேட்டுக்கொண்டார். திரு. ஹிப்பும் அதற்குச் சம்மதித்தார். அதோடு, நம் பிரசுரத்தின் மீதான தடையைச் செயற்குழுவின் ஒன்பது உறுப்பினர்கள் அந்தச் சமயத்தில் மறுபரிசீலனை செய்துகொண்டிருப்பதாகவும் சகோதரர் நாரிடம் அவர் தெரிவித்தார்! அவர் சொன்னது உண்மையே, ஏனென்றால், ஜூன் 1946-⁠ல் தடை உத்தரவை நீக்கும் ஓர் அறிக்கையை ஆளுநர் விடுத்தார்.

அதன் பிறகு, சீக்கிரத்திலேயே 11,798 புத்தகங்களும் சிறு புத்தகங்களும் அடங்கிய தூசி படிந்த 130 அட்டைப் பெட்டிகள் சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீண்டும் பிரசுரங்களை வினியோகிக்க முடிந்ததை எண்ணி சகோதரர்களுக்கு ஒரே சந்தோஷம். அப்போது அங்கிருந்த 70 ராஜ்ய பிரஸ்தாபிகளும் அந்தப் பிரசுரங்களை எல்லாம் பத்தே வாரங்களுக்குள் வினியோகித்து முடித்துவிட்டார்கள். ஆகஸ்ட் மாதத்தில் சகோதரர்கள் மீண்டும் தெரு ஊழியம் செய்யத் தொடங்கினார்கள், அதனால் சிறந்த பலன்கள் கிடைத்தன. “பத்திரிகைகள் எல்லாம் செய்தித்தாள்களைப் போல அவ்வளவு வேகமாக வினியோகிக்கப்பட்டன” என கிளை அலுவலகம் அறிக்கை செய்கிறது.

பிரசுரங்கள் தடை செய்யப்பட்டிருந்த காலத்திலும்கூட, மதிப்புமிக்க ஆவிக்குரிய உணவு சகோதரர்களுக்குத் தவறாமல் கிடைத்தது. ஜார்ஜ் டவுனில் பொது அஞ்சல் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஒரு சகோதரர் உதவியதும் அதற்கு ஓரளவு காரணமாக இருந்தது. அவர் இவ்வாறு எழுதுகிறார்: “காவற்கோபுரம் பத்திரிகைகள் எப்படியாவது கிளை அலுவலகத்திற்குப் போய்ச் சேர வேண்டும் என்ற கடமையுணர்ச்சி எனக்கு இருந்தது. சகோதரிகளின் உதவியோடு, சபைக் கூட்டங்களில் பயன்படுத்துவதற்காக அப்பத்திரிகைகளில் உள்ள படிப்புக் கட்டுரைகள் டைப் செய்யப்பட்டோ ஸ்டென்ஸில் எடுக்கப்பட்டோ எல்லா குடும்பங்களுக்கும் வினியோகிக்கப்பட்டன.”

புதிய மிஷனரிகள் வேலையை முடுக்கி விடுகிறார்கள்

வேகமாக ஓடும் காரின் கியரை மாற்றும்போது அதன் வேகம் இன்னும் அதிகரிக்கும். கயானாவில் நடைபெற்று வந்த பிரசங்க வேலையிலும் இப்படி ‘கியர் மாற்றப்பட்டது,’ 1940-களின் மத்திபத்தில் கிலியட் பயிற்சி பெற்ற மிஷனரிகள் வந்தபோது இது நடந்தது. கிலியட் பள்ளியின் மூன்றாம் வகுப்பு பட்டதாரியான வில்லியம் டிரேஸியும், ஐந்தாம் வகுப்பு பட்டதாரிகளான ஜான் ஹெமவே, டெய்ஸி ஹெமவே தம்பதியர், ரூத் மில்லர், ஆலிஸ் மில்லர் ஆகியோர் அந்த மிஷனரிகளாவர். ஆர்வமிக்க இவர்கள் கிலியட் பள்ளியில் தாங்கள் கற்றுக்கொண்ட மிக அருமையான விஷயங்களை அங்கிருந்த சகோதரர்களோடு பகிர்ந்து கொண்டனர், வெளி ஊழியத்திலும் சிறந்த முன்மாதிரி வைத்தனர்.

தொலைதூர பகுதிகளில் வாழ்கிறவர்களைப் போய் சந்திப்பதில் சகோதரர் டிரேஸி ஆர்வம் காட்டினார். “நான் கடற்கரை பகுதிகளுக்கும் நதிப் பகுதிகளுக்கும் அடிக்கடி சென்றேன்; ஒதுக்குப்புறங்களில் ஏற்கெனவே அக்கறை காட்டியவர்களை சந்திக்கவும், இன்னும் ஆர்வமுள்ளவர்களைக் கண்டுபிடிக்கவும் இப்படி நாடு முழுக்க பயணித்தேன். கரையோர ரயில், பஸ், சைக்கிள், பெரிய படகு, சிறிய படகு, ஏன் தோணியிலும்கூட பயணித்தேன்” என அவர் எழுதினார்.

அங்குள்ள பயனியர்கள் கிரமமாக தங்களுடைய வேலையைச் செய்வதற்கும் மிஷனரிகள் உதவினார்கள். அதனால் பிராந்தியத்தில் அவர்கள் முறைப்படி ஊழியம் செய்ய முடிந்தது; சூழ்நிலைக்கேற்ப இன்னும் முயற்சி எடுத்து, இதுவரை எட்டிப் பார்த்திராத பிராந்தியங்களுக்கும் சென்று சேவை செய்ய முடிந்தது. ஒரு விஷயத்தை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும், அதாவது 1946-⁠ல் கயானாவில் ஐந்து சபைகள் மட்டுமே இருந்தன, ராஜ்ய பிரஸ்தாபிகளும் அதிகபட்ச எண்ணிக்கையாக 91 பேர்தான் இருந்தார்கள். ஆனால் கடவுளுடைய ஆவியின் உதவியைப் பெற்றவர்களால் எந்தவொரு சவாலையும் சமாளிக்க முடியும்.​—சக. 4:6.

முதன்முதலில், மிஷனரிகளோடு சேர்ந்து ஊழியம் செய்த பயனியர்கள் வயதானவர்களாக இருந்தார்கள். வயதானவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் ஊழியத்தில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள். ஐசக் கிரேவ்ஸ், ஜார்ஜ் ஹெட்லி, லெஸ்லி மைர்ஸ், ராக்லிஃப் போலர்ட், ஜார்ஜ் இயர்வுட் ஆகிய இவர்கள் எல்லாருமே வயதான சகோதரர்கள். மார்க்ரட் டூக்னி, ஐவி ஹைன்ட்ஸ், ஃப்ரான்ஸஸ் ஜோர்டன், ஃபிளாரன்ஸ் டாம், அட்டாலன்டா வில்லியம்ஸ், பிரின்ஸஸ் வில்லியம்ஸ் (உறவினர்கள் அல்ல) ஆகிய இவர்கள் எல்லாரும் வயதான சகோதரிகள். ராஜ்ய செய்தியை அறிவிப்பதற்காகப் புத்தகங்கள், சிறு புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாவற்றையும் சுமந்துகொண்டு அவர்கள் வெகு தூரம் சென்றார்கள்.

ஐவி ஹைன்ட்ஸும் (இப்போது வையட்) ஃபிளாரன்ஸ் டாமும் (இப்போது ப்ரிசெட்) இஸகிபோ நதிப் பகுதியில் உள்ள பார்திகா நகரில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார்கள், இது உள்நாட்டில் ஏறக்குறைய 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரமே உள்நாட்டு தங்க வயல்களுக்கும் வைர வயல்களுக்கும் நுழைவாயிலாக திகழ்கிறது. தன்னந்தனியாக ஒரு சகோதரர் அங்கு வாழ்ந்து வந்தார். கிளை அலுவலகக் கண்காணியாகவும் வட்டாரக் கண்காணியாகவும் அப்போது சேவை செய்து வந்த ஜான் பான்டிங் இவ்வாறு எழுதுகிறார்: “இரண்டு மாதங்களுக்குள் 20 பேர் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தனர், நினைவு ஆசரிப்புக்கு 50 பேர் வந்தனர்.” அங்கு முதன்முதலில் சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவருடைய பெயர் ஜரோம் ஃபிளேவியஸ். அவருக்குச் சுத்தமாக இரண்டு கண்ணும் தெரியாது. “சீக்கிரத்திலேயே அவர் எந்த உதவியுமே இல்லாமல் பேச்சுகளைக் கொடுக்க ஆரம்பித்தார்; அதற்காக, பேச்சு குறிப்புகளைச் சகோதரி ஐவி ஹைன்ட்ஸ் பலமுறை அவருக்கு வாசித்துக் காட்டினார்” என ஜான் கூறுகிறார்.

பயனியர் செய்து வந்த எஸ்தர் ரிச்மண்ட், ஃப்ரான்ஸஸ் ஜோர்டன் என்ற இரு சகோதரிகளுக்கும் கிட்டத்தட்ட எழுபது வயதானபோதிலும் நிறைய இடங்களுக்குப் போய் ஊழியம் செய்வதற்காக இருவருமே சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டார்கள். “மார்க்ரட் டூக்னி என்ற சகோதரி எத்தனை வருஷமாகப் பயனியராகச் சேவை செய்தார் என்பதையே மறந்துவிட்டிருந்தார். அவர் ரொம்பவே களைத்து சோர்ந்துவிடும் அளவுக்கு நடப்பார்; அதனால் சில சமயங்களில் அவர் பார்க் பெஞ்சில் உட்கார்ந்தபடியே அயர்ந்து தூங்குவதை பார்த்திருக்கிறோம். இப்படிப்பட்டவர்களை நாங்கள் மறக்கவே முடியாது” என சகோதரர் பான்டிங் கூறுகிறார்.

இந்த மிஷனரிகளும் வயதான பயனியர்களும் வைத்த முன்மாதிரியால் ஊக்கம் பெற்ற அநேக இளைஞர்கள் பயனியர் சேவை செய்ய ஆரம்பித்தனர். இந்த எல்லா முயற்சிகளின் பலனாக, அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிதாகத் தொகுதிகளும் சபைகளும் ஆரம்பிக்கப்பட்டன. 1948-⁠ல் கயானாவில் 220 பிரஸ்தாபிகள் இருந்தனர். 1954-⁠ல் அந்த எண்ணிக்கை 434 ஆக உயர்ந்தது. இதற்கிடையே சமர்செட் வீட்டில் கூடி வந்த கிட்டி-நியூடவுனைச் சேர்ந்த சகோதரர்களின் ஒரு தொகுதி, ஒரு சபையாக பிரியுமளவுக்கு வளர்ந்தது. இச்சபை நியூடவுன் சபை என அழைக்கப்பட்டது, இது தலைநகரில் உருவான இரண்டாவது சபையாகும். இன்று ஜார்ஜ் டவுனில் ஒன்பது சபைகள் உள்ளன.

ஒலிபெருக்கியுடன் கட்டை வண்டிகள், சைக்கிள்கள், கழுதைகள்

1950-களின் ஆரம்பத்தில் கிளை அலுவலகம் அளித்த ஆலோசனைப்படி, ஜார்ஜ் டவுன் முழுவதும் திறந்த வெளிகளில் பொதுப் பேச்சுகள் கொடுக்கப்பட்டன; பொதுவாக சனிக்கிழமை சாயங்கால வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை மதிய வேளைகளிலும் இப்பேச்சுகள் கொடுக்கப்பட்டன. தாங்களாகவே உண்டாக்கிய கட்டை வண்டிகளில் ஒலிபெருக்கியைப் பொருத்தி அவற்றை பயன்படுத்தினர். ஆற்றல்மிக்க ஆம்ப்ளிஃபையர், இரண்டு பெரிய ஸ்பீக்கர்கள், ஸ்பீக்கர் ஸ்டாண்டுகள், ஒயர்கள் இவற்றையெல்லாம் அவற்றில் எடுத்துச் சென்றனர். 1949-⁠ல் முழுக்காட்டுதல் பெற்ற ஆல்பர்ட் ஸ்மால் இவ்வாறு கூறுகிறார்: “பகல் நேரத்தில், கூட்டம் நடக்கும் இடத்தில் விளம்பரப் பலகை ஒன்று வைக்கப்பட்டது. ‘பைபிள் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படும்’ என அதில் எழுதப்பட்டிருந்தது, கூட்ட நேரம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பேச்சுகளைக் கேட்க அநேகர் வந்தனர், அதில் சிலர் பிற்பாடு சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர்.”

1954-⁠ன் ஆரம்பத்தில் நேதன் நாரும் அவருடைய உதவியாளரான மில்டன் ஹென்ஷலும் ஜார்ஜ் டவுனில் உள்ள க்ளோப் சினிமா என்ற அரங்கத்தில் பேச்சுகள் கொடுத்தபோது அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பிருப்பதைக் குறிப்பிட்டார்கள். ஜான் பான்டிங் அங்கு வந்திருந்தார். அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அங்கிருந்த 1,400 சீட்டுகளும் நிரம்பிவிட்டன, கனத்த மழை பெய்ததால் வெளியே நின்று ஸ்பீக்கர் மூலம் பேச்சைக் கவனித்துக்கொண்டிருந்த 700 பேரில் அநேகரும்கூட உள்ளே வந்து நெருக்கி விட்டார்கள். இந்த நிகழ்ச்சிக்காக, நாங்கள் விளம்பர அட்டைகளை அணிந்து சைக்கிளில் அணிவகுத்து சென்று பிரச்சாரம் செய்தோம். இருட்டிய பிறகு, விளக்குகள் பொருத்தப்பட்ட ஒரு பெரிய விளம்பர பலகையை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினோம். அதை ஒரு கழுதை இழுத்துச் செல்ல, ஒரு சகோதரர் இந்நிகழ்ச்சியைப் பற்றி ஆம்ப்ளிஃபையரில் அறிவித்துக்கொண்டே நடந்து சென்றார்.”

உள்நாட்டிற்குள் பயணங்கள்

கிளை அலுவலகக் கண்காணியாக வில்லியம் டிரேஸி சேவை செய்கையில் தொலைதூரப் பிராந்தியங்களில் வாழ்வோரிடம் சென்று பிரசங்கிப்பதற்குச் சகோதரர்களை உற்சாகப்படுத்தினார். அதோடு அவரும்கூட இஸகிபோ, பர்பிஸ் நதிக்கு அருகேயுள்ள இடங்களுக்குச் சென்று பிரசங்கித்தார்; அந்த இடங்களிலுள்ள சிறு தொகுதிகளோடும் சபைகளோடும் சேர்ந்து வட்டார மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்தார். பொதுவாக, சினிமா கொட்டகைகளிலும் பள்ளிகளிலுமே மாநாடுகள் நடத்தப்பட்டன; பெரும்பாலும் சினிமா கொட்டகைகளே பெரிய இடமாக இருந்ததால் அங்கேயே நடத்தப்பட்டன. 1949-⁠ல் இஸகிபோ நதி சங்கமிக்கும் இடத்தில் ஸடி என்ற கிராமத்திலுள்ள சினிமா கொட்டகையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. “நரகம்​—⁠ஒரு பூச்சாண்டி” என்ற தலைப்பில் அங்கு கொடுக்கப்பட்ட பொதுப் பேச்சு அழியா முத்திரையை பதித்துவிட்டது. அதனால், யெகோவாவின் சாட்சிகளை சிலர் நரகம் இல்லா சர்ச்சுக்காரர்கள் என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

1950-⁠ல் அப்போதுதான் வில்லியம் டிரேஸிக்குத் திருமணமாகியிருந்தது; அவர் ஐக்கிய மாகாணங்களில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார். அதனால் அவருடைய வேலையை, அதாவது கிளை அலுவலகக் கண்காணியாகவும் பயணக் கண்காணியாகவும் செய்து வந்த வேலையை ஜான் பான்டிங் ஏற்றார். நதிக்கு அருகேயுள்ள சில பிராந்தியங்களில் செய்யப்படும் ஊழியத்திலும் ஜான் பான்டிங் உதவினார். போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களில் சகோதரர்கள் செல்வார்கள். இவை நடமாடும் அஞ்சல் அலுவலகங்களாகவும் செயல்பட்டன. கிராம வாசிகள் தங்களுடைய தபால்களை கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தோணிகளில் இந்த அஞ்சல் அலுவலகங்களுக்கு வருவார்கள். அப்போது சகோதரர்கள் தங்களையும் அந்தத் தோணிகளில் ஏற்றிக்கொண்டு அவர்களுடைய கிராமத்திற்கு அழைத்துச் செல்லும்படி கேட்பார்கள். யாராவது சாப்பாடும் தங்குமிடமும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் அங்குச் செல்வார்கள். அந்தக் கிராமத்தில் அவர்கள் சாட்சி கொடுப்பார்கள், இரவில் யாராவது அவர்களை உபசரிப்பார்கள். மறுநாள் அடுத்த கிராமத்தில் சாட்சி கொடுப்பதற்காக யாராவது அவர்களை தோணியில் கொண்டுபோய் விடுவார்கள். ஒரு நாள் மதியம், மரம் வெட்டும் ஒரு தொழிற்சாலைக்கு போய் சாட்சி கொடுத்தார்கள். அதன் முதலாளி வேலையை நிறுத்திவிட்டு தொழிலாளிகள் எல்லாரையும் கூடிவரும்படி சொன்னார். அவர்களிடம் 15 நிமிடத்திற்கு ஒரு பேச்சு கொடுக்கவும் அவர் அனுமதி அளித்தார். அவர்கள் எல்லாருமே பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டார்கள்.

ஜூலை 1952-⁠ல், கிலியட் பள்ளியின் 19-⁠ம் வகுப்பு பட்டதாரியான தாமஸ் மார்க்விக் என்பவர் கயானாவில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார். அவரும்கூட நற்செய்தி சென்றெட்டாத பிராந்தியங்களுக்குச் சென்று பிரசங்கித்தார். “ராஜ்ய செய்தியையே கேள்விப்பட்டிராத ஒருவரிடம் அதைச் சொல்லும்போது கிடைக்கும் சந்தோஷமே தனிதான். ஆனால் சில சமயங்களில் கொஞ்சமும் எதிர்பார்க்காத காரியம்கூட நடந்துவிடுகிறது; எனக்கும் அப்படி நடந்திருக்கிறது. ஒரு சமயம் நான் படகில் டெமராரா நதியைக் கடந்து உள்ளே தள்ளியிருந்த காட்டுக்குள் சென்றேன். அங்கே ஒரு சிறிய குடிசையைப் பார்த்தேன். அந்த வீட்டுக்காரர் எனக்கு வணக்கம் சொல்லி உள்ளே அழைத்து உட்கார வைத்தார். நான் சொன்னதை எல்லாம் காதுகொடுத்து கேட்டார். நான் சுற்றிலும் கண்ணை ஓடவிட்ட போது, எனக்கு ஒரே ஆச்சரியம்! அந்தக் குடிசையின் சுவர் முழுவதிலும் காவற்கோபுரம் பத்திரிகையின் தாள்கள் ஒட்டப்பட்டிருந்தன. எல்லாமே 1940-களில் வந்த பத்திரிகைகளின் பக்கங்கள்! படகில் பயணிக்கும் போதோ, ஜார்ஜ் டவுன் அல்லது மெக்கன்ஜி ஊரில் வைத்தோ அவர் ராஜ்ய செய்தியைக் கேட்டிருக்க வேண்டும்.”

தரை மார்க்கமாய் கஷ்டப்பட்டு பயணம் செய்து கையட்டுர் நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற முதல் மிஷனரி டானல்ட் போலிங்கர் ஆவார். அங்கே அமெரிக்க இந்தியர்களுக்குச் சாட்சி கொடுக்கையில், அவர்களுடன் வேலை பார்த்து வந்த அரசாங்க அதிகாரி ஒருவரை சந்தித்தார். கடைசியில் அவர் தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தார், பிற்பாடு அங்கு உருவான ஒரு தொகுதியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் ஏற்றார். சில பிரஸ்தாபிகள் அவர்களது தொழில் காரணமாக, ஒதுக்குப்புற பகுதிகளுக்கு, அதாவது வைர சுரங்கம், அல்லது தங்க சுரங்கம் அமைந்துள்ள பகுதிகளுக்குக் குடிமாறினார்கள். அப்படிப் பிரிந்து போனாலும் அங்கு முகாம்களிலிருந்த எல்லா குடிசைகளுக்கும் சென்று பிரசங்கித்தார்கள். ஆவிக்குரிய காரியங்களில் நிலைத்திருப்பதற்கு எது அவர்களுக்கு உதவியது? ஆராய்ந்து படிப்பதற்கும் பிரசங்க வேலை செய்வதற்கும் நடைமுறையான அட்டவணை ஒன்றை வைத்திருந்ததே அவர்களுக்கு உதவியது.

‘மகிழ்ச்சியும் திருப்தியும்’ தரும் சேவை

மிஷனரிகளான ஜான் ஹெமவே, டெய்ஸி ஹெமவே தம்பதியர் 1946 முதல் 1961 வரை கயானாவில் சேவை செய்தார்கள். அவர்கள் சில சமயங்களில் இரண்டு வாரம் விடுமுறையில் வெனிசுவேலா நாட்டுக்கு அருகேயுள்ள வடமேற்கு மாகாணத்திற்குச் செல்வது வழக்கம். அங்கே கரீப், அரவாக் இனத்தவரும் வேறு சில பழங்குடியினரும் வாழ்ந்து வந்தார்கள். ஒரு சமயம் இப்படி விடுமுறையில் சென்றிருந்தபோது அவர்கள் அரவாக் மக்களுக்கு ஏகப்பட்ட பிரசுரங்களை அளித்தார்கள். ஆனால் அங்கு ஸ்கூல் வைத்து நடத்தி வந்த கத்தோலிக்க கன்னிகாஸ்திரீகளுக்கு அது பிடிக்கவில்லை. அப்பள்ளியில் படித்த பிள்ளைகளிடம் அவர்களுடைய பெற்றோர் ஏதாவது பிரசுரத்தை வாங்கியிருக்கிறார்களா என்றும்கூட அவர்கள் கேட்டார்கள். பிள்ளைகளிடம் இப்படிக் கேட்டது பெற்றோருக்குத் தெரிந்தபோது அவர்களுக்கு ஒரே கோபம். தங்களுக்கு எது விருப்பமோ அதைப் படிக்க விடும்படி பாதிரியிடம் போய் சொன்னார்கள். எதற்கும் மசியாத அந்தப் பாதிரி, ஞாயிற்றுக்கிழமை பூசையின் போது நீங்கள் பூமியில் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ முடியுமா? என்ற சிறு புத்தகத்தைப் பற்றி தாக்கிப் பேசினார்; அந்தச் சிறு புத்தகத்தைப் பலரும் வாங்கியிருந்ததால் அப்படிப் பேசினார். ஆனால் இந்தத் திட்டமும் பலிக்கவில்லை, சாதகமான விளைவையே ஏற்படுத்தியது; எப்படியென்றால், ஹெமவே தம்பதியர் அங்கிருந்து புறப்பட்ட தினத்தன்று அந்தக் கிராம வாசிகள் அநேகர் அவர்களிடம் வந்து அதே சிறு புத்தகத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.

இந்தப் பகுதி உள்நாட்டில் 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது; அங்குச் செல்ல ஹெமவே தம்பதியர் படகிலும், ரயிலிலும், டிரக்கிலும் பயணம் செய்தார்கள். அவர்கள் உணவுப் பொருட்களையும் எடுத்துச் சென்றார்கள்; அதோடு பிரசுரங்களையும் சைக்கிளையும் எடுத்துச் சென்றார்கள்; மண் பாதைகளைக் கடந்து இந்தியர்கள் அமைத்திருந்த ஒற்றையடிப் பாதைகளில் செல்வதற்கு இந்தச் சைக்கிள் தேவைப்பட்டது. “இந்த ஒற்றையடிப் பாதைகள் எல்லாப் பக்கமும் பிரிந்து செல்வதால் ஒருவர் பத்திரமாகத் திரும்பி வருவதற்கு பாதையை ஞாபகம் வைக்க வேண்டும் அல்லது மரக் கிளைகளை ஒடித்து வைக்க வேண்டும். போகும் வழியில் சிங்கம், புலி போன்ற ஏதாவது மிருகத்தைப் பார்த்தால் அப்படியே அசையாமல் நின்று அதை நேருக்கு நேர் பார்க்க வேண்டும். அப்போது அது அமைதியாக அங்கிருந்து போய்விடும். உயரமான மரங்களில் தாவிச் செல்லும் குரங்குகள் அத்துமீறி செல்பவர்களிடம் எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கத்தும், தூங்குமூஞ்சி தேவாங்கோ தலைகீழாகத் தொங்கிக்கொண்டு கடந்து போகிறவர்களைப் பார்க்கும். மரங்கள் அதிகம் இல்லாத பகுதிகளில் இங்குமங்கும் டூக்கான் பறவைகள் பப்பாளி பழங்கள் சாப்பிடுவதைப் பார்க்கலாம்.”

கயானாவில் 15 வருடங்கள் மிஷனரி சேவை செய்த சகோதரராகிய ஜான் ஹெமவே தான் எப்படி உணர்ந்தார் என்பதைத் தெரிவித்தார்: “ஆ, எவ்வளவு மகிழ்ச்சியும் திருப்தியும் தரும் சேவை அது! ஓலைக் குடிசையில் மண் தரையில் உட்கார்ந்து அமெரிக்க இந்தியர்களிடம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பேசும்போதும், புதிய வாழ்க்கை முறையைப் பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்போதும் கிடைக்கும் திருப்தியே தனிதான். எளிமையான அந்த மக்கள் பைபிள் போதனைக்கு இசைய தங்களுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டு, கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுப்பதைக் காண்பது ஒருபோதும் நெஞ்சைவிட்டு நீங்காது.”

உள்ளூர் பயனியர்கள் கிலியட் செல்கிறார்கள்

உள்ளூர் பயனியர்கள் அநேகருக்குக் கிலியட் பள்ளியில் கலந்துகொள்ளும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. பிறகு அவர்களில் சிலர் கயானாவிலேயே ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார்கள். அவர்களில் சிலர்: ஃபிளாரன்ஸ் டாம் (இப்போது ப்ரிசெட்) 1953-⁠ல் 21-⁠ம் வகுப்பில் கலந்துகொண்டார்; ஆல்பர்ட் ஸ்மால், ஷீலா ஸ்மால் தம்பதியர் 1958-⁠ல் 31-⁠ம் வகுப்பில் கலந்துகொண்டார்கள்; ஃப்ரெடெரிக் மக்கால்மன் 1970-⁠ல் 48-⁠ம் வகுப்பில் கலந்துகொண்டார்.

ஃபிளாரன்ஸ் ப்ரிசெட் இவ்வாறு சொல்கிறார்: “வெளிநாட்டில் ஊழியம் செய்ய நியமிக்கப்படுவேன் என நினைத்தேன், ஆனால் கயானாவிலேயே ஸ்கெல்டன் கிராமத்தில் ஊழியம் செய்ய நியமிப்பைப் பெற்றது யெகோவாவிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதமே. ஏனென்றால் என்னோடு பள்ளியில் படித்த தோழிகள், ஆசிரியர்கள், நண்பர்கள், பழக்கப்பட்டவர்கள் என எல்லாருமே என்னை அறிந்திருந்ததால் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார்கள். சொல்லப்போனால், சிலர் அவர்களாகவே வந்து பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டார்கள்! அவர்களில் ஒருவர்தான் எட்வர்ட் கிங், அவருடைய மனைவிக்கு ஏற்கெனவே பைபிள் படிப்பு நடத்தி வந்தேன். ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், எட்வர்ட்டின் மனைவிக்கு பைபிள் படிப்பு நடத்துவது ஆங்கிலிக்கன் பாதிரிக்குத் தெரிந்துவிட்டது. அதனால் அவர் எட்வர்ட்டை அழைத்து பைபிள் படிப்பை நிறுத்தும்படி கட்டளையிட்டார். ஆனால் பாதிரியின் பேச்சைக் கேட்பதற்கு பதிலாக, அவரும் படிக்க ஆரம்பித்து விட்டார்.”

ஸ்மால் தம்பதியர் கிலியட் பள்ளியில் தேர்ச்சி பெற்று வந்த பிறகு, ஆல்பர்ட் ஸ்மால் பல வருடங்கள் கிளை அலுவலகக் குழுவின் உறுப்பினராகவும் வட்டாரக் கண்காணியாகவும் சேவை செய்தார். இப்போது உடல்நல பிரச்சினைகளின் மத்தியிலும் அவர்கள் இருவரும் உள்ளூர் சபையில் விசேஷ பயனியர்களாக சேவை செய்கிறார்கள், சகோதரர் ஆல்பர்ட் ஸ்மால் மூப்பராகவும்கூட சேவை செய்கிறார். கயானாவிலிருந்து கிலியட்டுக்கு சென்ற எல்லாருக்குமே சொந்த நாட்டில் ஊழிய நியமிப்பு கிடைக்கவில்லை. உதாரணமாக, 48-⁠ம் வகுப்பு பட்டதாரியான லினெட் பீட்டர்ஸ், சியர்ரா லியோன் என்ற நாட்டிற்கு நியமிக்கப்பட்டார். அந்தச் சகோதரி இப்போதும் அங்கேயே உண்மையுடன் சேவை செய்து வருகிறார்.

படக்காட்சி ஆர்வத்தைத் தூண்டுகிறது

புதிய உலக சமுதாயம் செயலில் என்ற தலைப்பிலான ஆங்கிலப் படக்காட்சியை 1950-களில் யெகோவாவின் சாட்சிகள் அடிக்கடி போட்டுக் காட்டினார்கள். அது புரூக்ளினில் உள்ள தலைமை அலுவலகத்தையும் 1953-⁠ல் நியு யார்க் நகரிலுள்ள யாங்கி ஸ்டேடியத்தில் நடந்த பெரிய மாநாட்டையும் சிறப்பித்துக் காட்டியது. அது சாட்சிகளுக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது. யெகோவாவின் அமைப்பையும் அதன் நோக்கத்தையும் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவியது. அடர்ந்த மழைக் காட்டில் வசித்தவர்களின் மனதில் அது நீங்கா இடம் பிடித்தது என்பதில் சந்தேகமே இல்லை; அவர்களில் பலரும் படக்காட்சி என்ற ஒன்றை அதுவரை பார்த்ததே இல்லை!

பெரும்பாலும் இந்தப் படக்காட்சி ஒரு பெரிய காம்பவுண்டில் வெட்டவெளியில் காட்டப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக ஆட்கள் பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து நடந்து வந்தார்கள். ‘ஆனால் மின்வசதி இல்லாத இடங்களில் இந்தச் சகோதரர்கள் இதை எப்படிக் காட்டினார்கள்?’ என நீங்கள் கேட்கலாம். ஆலன் ஜான்ஸ்டோன் என்ற கிலியட் பட்டதாரி பல சந்தர்ப்பங்களில் இதைக் காண்பித்திருக்கிறார்; அவர் 1957-⁠ல் கயானாவுக்கு வந்து வட்டாரக் கண்காணியாக சேவை செய்தவர். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “மின்வசதி இல்லாத இடங்களில் அந்த ஊர்காரர்களிடமிருந்து ஜெனரேட்டர்களை இரவல் வாங்கிப் பயன்படுத்தினோம்; அவர்கள் தங்களுடைய கடைகளில் இரவில் பயன்படுத்துவதற்காக அவற்றை வைத்திருந்தார்கள். ஒரு பெரிய பெட்ஷீட்டை இரண்டு மரங்களுக்கு இடையே கட்டி திரை போல் உபயோகித்தோம்.”

இப்படி ஒரு முறை படக்காட்சி முடிந்து ஜான் ஹெமவே, டெய்ஸி ஹெமவே தம்பதியர் தங்கள் வீட்டிற்குப் போவதற்காக ஒரு நீராவிப் படகில் ஏறினார்கள். அதிலிருந்த அநேகர் அப்படக்காட்சியைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அதைப் பார்க்க விரும்பினார்கள். அதனால் கேப்டனின் அனுமதியோடு ஹெமவே தம்பதியர் கப்பல் தளத்தில் திரையைக் கட்டினார்கள். பொருத்தமான இடத்தில் ஜன்னல் இருந்த ஒரு கேபினில் புரொஜக்டரை வைத்தார்கள். “படகில் கத்தோலிக்க பாதிரிமாரும் ஆங்கிலிக்கன் பாதிரிமாரும் இருந்தார்கள். ஊருக்குள் படக்காட்சி நடக்கையில் இதைப் பார்க்க அவர்களுக்கு மனமிருக்கவில்லை, ஆனால் இப்போது படகில் வேறு வழியில்லாமல் இதைப் பார்த்தார்கள். சொல்லப்போனால், அவர்கள் இருந்த கேபினிலிருந்தே இப்படத்தை நாங்கள் இயக்கினோம். அதன் பிறகு பயணிகள் அந்தப் பாதிரிகளிடம் பல கேள்விகளைச் சரமாரியாக கேட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் யெகோவாவின் சாட்சி ஒருவரால் மட்டுமே அவற்றிற்கெல்லாம் பதிலளிக்க முடியும்” என ஜான் ஹெமவே எழுதுகிறார்.

அந்தப் படக்காட்சி ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி ஜான் பான்டிங் இவ்வாறு எழுதுகிறார்: “அந்தக் காலத்தில் யெகோவாவின் சாட்சிகள் சிலரே இருந்த இடங்களில், அதுவும் அவர்கள் அற்பமானவர்களாகக் கருதப்பட்ட இடங்களில் இப்படக்காட்சியைக் காட்டுவது ரொம்பவே பயனுள்ளதாக இருந்தது. பல இனத்தாருள்ள உலகளாவிய அமைப்பைப் பார்ப்பதற்குச் சந்தேகவாதிகளுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் எங்கள் மீது அவர்கள் அதிக மதிப்பு வைக்க ஆரம்பித்தனர். இப்படக்காட்சி அநேகருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புக்கட்டமாக அமைந்தது; அதைப் பார்த்தவர்கள் தங்களுக்கும் வந்து பைபிளைக் கற்றுக்கொடுக்கும்படி கேட்டனர். இவர்களில் சிலர் பிற்பாடு மூப்பர்கள் ஆயினர். ஒரு வட்டாரக் கண்காணி இரண்டே வாரங்களில் 17 தடவை இப்படக்காட்சியைக் காட்டினார்; பெரும்பாலும் திறந்த வெளிகளில் காட்டப்பட்ட இதைப் பார்ப்பதற்கு 5,000 பேர் வந்தார்கள்.

“மற்றொரு வட்டாரக் கண்காணி ஒரு முறை இதைக் காட்டுவதற்காகச் சென்றபோது, வேகமாகப் பாய்ந்தோடும் நதியில் இரண்டு நாட்களும் அதன் பிறகு காட்டில் ஒற்றையடிப் பாதையிலும் பயணிக்க வேண்டியிருந்தது. அவருடைய முயற்சிக்குக் கைமாறாக அங்கிருந்த அநேக அமெரிக்க இந்தியர்கள் அதைப் பார்த்து மகிழ்ந்தார்கள். வாழ்க்கையில் முதன்முறையாக அவர்கள் பார்த்த படக்காட்சி இதுதான். அடுத்த நாள், அநேக கிராமவாசிகள் எங்களிடமிருந்து பத்திரிகைகளைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் பிரஸ்பிட்டேரியன் மதத்தவர்கள். இந்தச் சந்திப்பின் விளைவாக யெகோவாவின் ஜனங்களைப் பற்றிய அந்தக் கிராமத்தாரின் மனப்பான்மை அடியோடு மாறியது.”

1953-லிருந்து 1966 வரை கயானாவில் அரசியல் போராட்டங்களும் இனக் கலவரங்களும் நடந்தன. 1961-64-⁠ல்தான் நிலைமை படுமோசமானது. கலவரம், கொள்ளை, கொலை, வேலை நிறுத்தம் என எல்லாம் நடந்தன. பொது போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது, எங்கும் பதட்டநிலை நிலவியது. நேரடியாகச் சகோதரர்கள் துன்புறுத்தப்படாவிட்டாலும், சூழ்நிலை காரணமாக அப்போது சிலர் பாதிக்கப்பட்டனர். உதாரணமாக, இரண்டு சகோதரர்கள் அடிக்கப்பட்டனர், சகோதரர் ஆல்பர்ட் ஸ்மாலுக்கும் மற்றொருவருக்கும் சிறு துப்பாக்கியினால் குண்டடிபட்டது; அவற்றை அகற்றுவதற்கு அவர்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக வேண்டியதாயிற்று. நிலைமை அந்தளவிற்கு மோசமானதால் பிரிட்டிஷ் துருப்புகள் தலையிட வேண்டிவந்தது.

கொந்தளிப்பான அந்தக் காலத்தில் புதிய உலக சமுதாயம் செயலில் படக்காட்சியைக் காட்டியது எவ்வளவு பொருத்தமாக இருந்தது! அது எல்லா நாடுகளையும் சேர்ந்த, அமைதியையும் ஒற்றுமையையும் கட்டிக்காக்கிற ஒரு ஜனத்தைச் சுட்டிக்காட்டியது. அதுமட்டுமல்ல, பொது போக்குவரத்து ஸ்தம்பித்தாலும் கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் செல்வதை சகோதரர்கள் நிறுத்திவிடவில்லை. எப்போதையும்விட இன்னும் கொஞ்ச தூரம் நடந்தோ சைக்கிளிலோ அவர்கள் சென்றார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையான கிறிஸ்தவ அன்பைக் காட்டினார்கள். “அவர்கள் ஒருவருக்கொருவர் கரிசனையோடு பொருட்களைப் பகிர்ந்து கொண்டார்கள்” என ஆல்பர்ட் ஸ்மால் சொன்னார்.

சகோதரிகள் முன்னின்று செயல்பட்டார்கள்

சகோதரிகளும், தொலைதூர இடங்களுக்கு சென்று ராஜ்ய செய்தியைப் பிரசங்கித்தார்கள். உதாரணமாக, ஒரு காட்டின் கடைக்கோடியில் அமைந்துள்ள பார்திகா நகரில் ஐவி ஹைன்ட்ஸும் ஃபிளாரன்ஸ் டாமும் விசேஷ பயனியர்களாக ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார்கள். மஹடியோ என்ற ஒரேயொரு பிரஸ்தாபி மட்டும் அந்த இடத்தில் தன் மனைவி ஜமெலாவுடன் வசித்து வந்தார். அந்தக் காலத்து பெரும்பாலான கிழக்கிந்திய பெண்களைப் போலவே ஜமெலாவும் ஸ்கூலுக்கு போனதே இல்லை; அவளுக்கு வாசிக்கவோ எழுதவோ தெரியாது. இருந்தாலும், பைபிளை தானாகவே வாசிக்க அவளுக்கு ஆசை, சிறுவர்களாக இருந்த தங்கள் இரண்டு மகன்களுக்கும் பைபிளைக் கற்றுக்கொடுக்க விரும்பினாள். “யெகோவாவின் ஆசீர்வாதத்தோடும் என்னுடைய உதவியோடும் அவள் விரைவிலேயே வாசிக்கவும் எழுதவும் மற்றவர்களுக்குச் சாட்சி கொடுக்கவும் கற்றுக்கொண்டாள்” என ஃபிளாரன்ஸ் சொன்னார்.

ஃபிளாரன்ஸும் ஐவியும் அந்த இடத்திற்குப் போய் சேர்ந்து இரண்டு மாதங்களாகியும் குடியிருக்க நல்ல வீடு ஒன்று கிடைக்கவில்லை. அவர்கள் ஏற்கெனவே பத்து பைபிள் படிப்புகளை நடத்தி வந்ததால் கூட்டங்கள் நடத்துவதற்கும் ஓர் இடம் தேவைப்பட்டது. வட்டாரக் கண்காணி சந்திக்க வரப்போகிறார் என்ற செய்தி கிடைத்த போது அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதுமட்டுமல்ல, அவர் வரவிருந்த அதே வாரத்தில்தான் உள்நாட்டில் வேலைசெய்த தொழிலாளிகளும் ஜார்ஜ் டவுனைச் சேர்ந்த எக்கச்சக்கமான விலைமாதர்களும் பார்திகா நகரில் கூடிவருவதற்கு திட்டமிட்டிருந்தார்கள்; அப்படியானால் நகரில் ஜனக்கூட்டம் மும்மடங்காகி விடுமே!

ஆனால் யெகோவாவின் கை குறுகினதல்ல. ஃபிளாரன்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “வட்டாரக் கண்காணி வந்து சேருவதற்கு முந்தின நாள் சாயங்காலம், நாங்கள் பண்ணையார் ஒருவரைப் போய்ச் சந்தித்தோம். நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்குத் தர அவர் சம்மதித்தார். இது இரண்டு பெட் ரூம்கள் உடைய சிறிய வீடு. நாங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு அந்த வீட்டின் சுவரை கழுவி, சுத்தம் செய்து, பெயின்ட் அடித்து, தரையை பாலிஷ் செய்தோம். கர்டன்கள் மாட்டி, சேர், டேபிள் எல்லாவற்றையும் கொண்டு வந்து உரிய இடத்தில் வைத்து அழகுபடுத்தினோம். பொழுது புலருவதற்குள் இந்த எல்லா வேலைகளையும் செய்து முடித்தோம். அந்த இரவை மறக்கவே முடியாது! வட்டார ஊழியராக வந்த ஜான் பான்டிங்கிடம் இதையெல்லாம் சொன்ன போது அவர் அசந்து போய்விட்டார். அவருடைய சந்திப்பின் முதல் நாள் கூட்டத்திற்கு 22 பேர் வந்திருந்தார்கள். பார்திகாவில் சீக்கிரத்திலேயே ஒரு சபை உருவாகும் என்பதற்கு ஓர் அச்சாரமாக அது இருந்தது.”

கிங்டம் புரொக்ளேமர்களில் பயணித்தல்

ஆரம்பத்தில் சகோதரர்கள் நதியருகே குடியிருந்தவர்களைச் சந்திப்பதற்காக ஏதாவதொரு படகிலோ தோணியிலோ ஏறிச் சென்றார்கள். பிற்பாடு தங்களுக்குச் சொந்தமாக ஐந்து படகுகளை வாங்கினார்கள், அவற்றிற்கு கிங்டம் புரொக்ளேமர் 1, 2, 3 என வரிசையாகப் பெயர் வைத்தார்கள். (முதல் இரண்டு படகுகளும் இப்போது உபயோகத்தில் இல்லை.)

ஃப்ரெடெரிக் மக்கால்மன் இவ்வாறு சொல்கிறார்: “அலையின் போக்கிலே துடுப்பைப் போட்டு பாமரூன் நதியின் கிழக்குக் கரையோரமாய் பிரசங்கித்துக்கொண்டே ஹாக்னி கிராமம் வரை செல்வோம்; பாமரூன் நதி கடலில் கலக்கும் இடத்திலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கிராமம் அமைந்துள்ளது. அங்கே டிகாம்ப்ரா என்ற சகோதரியின் வீட்டில் இரவை நன்கு கழிப்போம். அவர் அப்போது அந்த ஏரியாவில் பிரசவம் பார்க்கும் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். அடுத்த நாள் காலையிலேயே, மேற்குக் கரைக்குக் கடப்பதற்கு முன்பாக, அந்த நதி கடலில் கலக்கும் இடம் வரைக்கும் போய் பிரசங்கிப்போம். பிறகு நதியின் ஓட்டத்திற்கு எதிர்த்திசையில் 34 கிலோமீட்டர் தூரம் பயணித்து சேரிட்டிக்கு திரும்புவோம்.” 6-ஹார்ஸ்பவர் சக்தி படைத்த மோட்டார் ஒன்றை சகோதரர்கள் செகண்ட்ஹேன்டில் வாங்கும் வரைக்கும், ஐந்து வருஷங்களுக்குச் துடுப்புப் படகில்தான் பாமரூன் நதியில் அங்கும் இங்கும் பயணித்தார்கள்.

படகில் பயணிக்கையில் பொதுவாக எந்த ஆபத்துகளும் ஏற்படவில்லை. ஆனால் சகோதரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் வேறு படகுகளும் அந்நதியில் பயணித்தன. கிங்டம் புரொக்ளேமர் 1 மற்றும் 2 துடுப்புப் படகுகளாக இருந்ததால் அவை மெதுவாகவே சென்றன. ஃப்ரெடெரிக் இவ்வாறு சொல்கிறார்: “ஒருநாள் சனிக்கிழமை மதியம், பாமரூன் நதியோரத்திலிருந்த பகுதியில் ஊழியம் செய்துவிட்டு வீடு திரும்புகையில், படுவேகத்தில் வந்த பெரிய சரக்குப் படகு ஒன்று என் படகின் மேல் மோதியது. கேப்டனும் மற்றவர்களும் குடி போதையில் இருந்ததால் கவனமில்லாமல் ஓட்டி வந்தார்கள். மோதிய வேகத்தில் நான் கிங்டம் புரொக்ளேமர் 1 படகிலிருந்து கீழே விழுந்தேன், அவர்களுடைய படகுக்கு அடியில் போய்விட்டேன். அங்குக் கீழே இருட்டில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தேன். மேலே வர முயன்ற போதெல்லாம் என்னுடைய தலை படகின் அடிபாகத்தில் இடித்தது, அதன் சக்தி வாய்ந்த புரொப்பலருக்கும் எனக்கும் சில சென்டிமீட்டர் இடைவெளிதான் இருந்தது. அந்தப் படகில் இருந்த ஓர் இளைஞன், நான் உயிருக்குப் போராடுவதைப் பார்த்துத் தண்ணீருக்குள் குதித்து என்னைக் காப்பாற்றினான். அடிபட்டிருந்ததால் பல வாரங்களுக்கு வலி இருந்தது, ஆனால் உயிர்பிழைத்ததற்காக நன்றியுள்ளவனாய் இருந்தேன்!”

இந்த விபத்தால் ஃப்ரெடெரிக் சோர்ந்துவிடவில்லை. “நதிக்கு அருகேயுள்ள பகுதியிலிருந்தவர்களுக்கு பைபிளைப் பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருந்ததால் பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்யத் தீர்மானித்தேன். சேரிட்டியிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் சிரிகி என்ற கிராமத்தில் புத்தகப் படிப்பு தொகுதி ஒன்று இருந்தது. அதை நான்தான் நடத்தி வந்தேன்.”

வட்டாரக் கண்காணியோடு ஒரு வாரம்

கயானாவின் கிராமப்புறங்களில் பயணக் கண்காணியாகச் சேவை செய்வது ஒருவருடைய மன உரத்தைப் பதம்பார்த்து விடும். வட்டாரக் கண்காணிகளுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும், நதிகளிலும் மண் சாலைகளிலும் காட்டுப் பாதைகளிலும் பயணிப்பது மட்டுமே சவாலாக இருக்கவில்லை; சில சமயங்களில் கொசுக்கள், பூச்சிகள், சிங்கம், புலி போன்ற மிருகங்கள் ஆகியவற்றையும், கடும் மழையையும், இன்னும் சில பகுதிகளில் திருடர்கள் போன்றவர்களையும்கூட சமாளிக்க வேண்டியிருந்தது. வெப்பமண்டல பிரதேசங்களில் காணப்படுகிற மலேரியா, டைஃபாய்ட் போன்ற வியாதிகள் தொற்றிக்கொள்ளும் அபாயமும் அவர்களுக்கு இருந்தது.

டெமராரா நதிக்கு அருகேயுள்ள பகுதியில் ஒதுக்குப்புறத்திலிருந்த சில பிரஸ்தாபிகளைச் சந்திக்கப் போனதைப் பற்றி ஒரு பயணக் கண்காணி விவரிக்கிறார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “மக்கன்ஸி சபையைச் சந்தித்தப் பிறகு திங்கட்கிழமை யருனி என்ற கிராமத்திலிருந்த ஒரு சகோதரரைப் பார்ப்பதற்கு மோட்டார் படகில் சென்றோம். அந்தக் கிராமம் டெமராரா நதிக்கு அருகேயுள்ள பகுதியிலேயே மக்கன்ஸியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்குப் போன பிறகு நாங்கள் தோணியில் ஏறி மக்கன்ஸியின் திசையில் நீரின் போக்கிலேயே சென்று நதியின் இருகரைகளிலும் வசிப்பவர்களிடம் பிரசங்கித்தோம்.

“அந்த மக்கள் உபசரிக்கும் குணமுடையவர்களாக இருந்தார்கள், எங்களுக்கு அவர்கள் பழங்களைத் தந்தார்கள், உணவருந்த வீட்டிற்கும் அழைத்தார்கள். வெள்ளிக்கிழமை நீராவிப் படகில் ஏறுவதற்காகச் சிறிய படகில் சென்றோம். ஸூஸ்டைக் என்ற இடம் வந்ததும் நீராவிப் படகிலிருந்து தோணியில் ஏறி கரையை அடைந்தோம். அங்கு ஒரு சகோதரர் எங்களை சந்தித்தார், டெமராரா நதிக்கு அக்கரையிலுள்ள ஜார்ஜியா கிராமத்திலிருந்த தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அன்று சாயங்காலம் அந்தக் குடும்பத்தாரோடு ஒரு கூட்டம் நடத்தினோம்.

“அடுத்த நாள் நாங்கள் எல்லாருமே டெமராரா நதியைக் கடந்து ஸூஸ்டைக்குக்கு வந்தோம். அங்குள்ள பிராந்தியத்திலும் டிமெரி விமான நிலையத்திற்கு அருகே ஜனங்கள் அதிகமாக குடியிருக்கும் இடத்திலும் ஊழியம் செய்தோம். மணற்குன்றுகள் இருந்த இடத்திற்கும் நாங்கள் சென்றோம். அங்கே ஆட்கள் மணலை ஜார்ஜ் டவுனுக்கு எடுத்துச் செல்வதற்காக டிரக்குகளில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். சனிக்கிழமை இரவு ஜார்ஜியாவிலிருந்த குடும்பத்தாரோடு சேர்ந்து கூட்டம் நடத்தினோம். மறுநாள் நாங்கள் எல்லாருமே நதியைக் கடந்து ஸூஸ்டைக்குக்கு வந்து காலையில் அங்கே வெளி ஊழியம் செய்தோம், மதியம் ஒரு போஸ்ட் ஆபிஸுக்கு சொந்தமான திறந்தவெளி வராண்டாவில் பொதுப் பேச்சை கொடுக்க ஏற்பாடு செய்தோம். அத்துடன் அந்த வாரம் முடிந்தது.” அப்படிப்பட்ட விசுவாசமுள்ள வட்டாரக் கண்காணிகளின் மற்றும் அவர்களுடைய மனைவிகளின் கடின உழைப்பு வீண்போகவில்லை, ஏனென்றால் ஸூஸ்டைக்கில் இப்போது வளர்ந்துவரும் ஒரு சபை இருக்கிறது. அங்குள்ள சகோதரர்கள் தங்களுக்குச் சொந்தமாக ஒரு ராஜ்ய மன்றத்தை 1997-⁠ல் கட்டி முடித்தார்கள்.

வட்டாரக் கண்காணிகளுக்கும்கூட சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஜெரி, டெல்மா முரே தம்பதியர் மோட்டார் சைக்கிளில் ஒரு வாய்க்காலுக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த மரப்பாலத்திற்கு அருகே வந்தார்கள்; அது தனித்தனி பலகைகள் ஒன்றாக சேர்த்து கட்டி வைக்கப்பட்டிருந்தது. அப்பாலத்தை மோட்டார் சைக்கிளில் ஜெரி கடக்கும் வரை டெல்மா காத்திருந்தார். ஆனால், அப்படிக் கடக்கும்போது என்ன ஆனது என்று தெரியவில்லை. திடீரென ஜெரியும் மோட்டார் சைக்கிளும் அதிலிருந்த சூட்கேஸும் பாலத்திலிருந்து கீழே கலங்கலான தண்ணீருக்குள் விழுந்தபோது, எதையுமே பார்க்க முடியாமல் போய்விட்டது. டெல்மா கத்திக் கூச்சல் போட, கிராமவாசிகள் காப்பாற்றுவதற்கு ஓடி வந்தார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் சோகம் சந்தோஷமாக மாறியது; “உடம்பெல்லாம் பாசியோடு, ஷூ முழுக்க சேற்றோடு இந்த வெள்ளைக்காரர் சகதியிலிருந்து தட்டுத் தடுமாறி நடந்து கரை சேர்ந்தார்” என அவரைப் பற்றி ஒரு சகோதரர் எழுதினார்.

அமெரிக்க இந்தியர்கள் நற்செய்திக்குச் செவிசாய்க்கிறார்கள்

1970-களின் ஆரம்பத்தில் சேரிட்டியிலுள்ள மார்க்கெட் பகுதியில் சாட்சி கொடுத்தபோது மானிக்கா ஃபிட்ஸ்ஸலன் என்ற அமெரிக்க இந்தியப் பெண்மணிக்கு காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை ஃப்ரெடெரிக் மக்கால்மன் அளித்தார். (பக்கம் 176-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.) அமெரிக்க இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வசித்த மானிக்கா அப்பத்திரிகைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அவர் சுகமில்லாமல் இருந்த சமயத்தில் அவற்றைப் படித்தார், உடனே இதுதான் சத்தியம் என்பதை அறிந்துகொண்டார். சீக்கிரத்திலேயே அவர் ஒரு பிரஸ்தாபி ஆகி, 1974-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றார். அப்பகுதியில் அவர் மட்டுமே யெகோவாவின் சாட்சியாக இருந்தார்.

மானிக்கா இவ்வாறு கூறுகிறார்: “வீட்டுக்கு வீடு ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்டேன், புதிதாகக் கற்றுக்கொண்ட சத்தியத்தை என் சமுதாயத்தினரிடம் சொல்வதில் சந்தோஷப்பட்டேன். அவர்களுடைய வீடுகளுக்குப் போவதற்கு, நதிகளிலும் சிற்றோடைகளிலும் படகில் பயணிக்க வேண்டியிருந்தது. நிறைய பேர் ஆர்வம் காட்ட ஆரம்பித்த போது, அவர்களுக்காகக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தேன்; பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தை நாங்கள் வாசித்து, கலந்தாலோசித்தோம்.”

மானிக்காவினுடைய கடின உழைப்புக்குப் பலன் கிடைத்ததா? கிடைத்தது என்பதில் சந்தேகமே இல்லை. அவருடைய கணவர், மகன், மருமகள், பேத்தி என இப்போது மொத்தம் 13 பிரஸ்தாபிகளின் கூட்டுறவை அவர் அனுபவித்து மகிழ்கிறார். இந்தச் சிறிய தொகுதியினர் சிறிது காலத்திற்கு முன்பு வரை கூட்டங்களில் கலந்துகொள்ள 12 மணிநேரம் தோணியில் பயணித்து சேரிட்டிக்குப் போனார்கள்; ஏனெனில் பக்கத்தில் இருந்த ஒரே சபை அது மட்டும்தான். ஆனால், இப்போது தங்கள் ஊரிலேயே அவர்கள் கூட்டங்களை நடத்துகிறார்கள்; பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிக ஆட்கள் வருகிறார்கள்!

அதே சமயத்தில், சேரிட்டி சபையும்கூட வளர்ச்சியடைந்தது. அங்கு இப்போது 50 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்; அவர்களில் பலரும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக பாமரூன் நதியைக் கடக்க வேண்டியுள்ளது. கூட்டங்களுக்கு, சராசரியாக 60-⁠க்கும் அதிகமானோர் வருகிறார்கள்; 2004-⁠ம் ஆண்டு நினைவு ஆசரிப்புக்கு 301 பேர் வந்திருந்தார்கள். ஒரு புதிய ராஜ்ய மன்றத்தையும் சேரிட்டி சபை கட்டியுள்ளது.

பாராமிட்டாவில் மாபெரும் வளர்ச்சி

கயானாவில் அநேக பழங்குடியினர் ராஜ்ய செய்திக்குச் செவிசாய்த்த மற்றொரு பகுதி பாராமிட்டா ஆகும். கயானாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பாராமிட்டாவில் கரீப் இந்தியர் வசிக்கிறார்கள். இவர்கள் கரீபியன் பிரதேசத்தைச் சேர்ந்த பண்டைய குடிகளாவர். கரீப் என்ற பெயர் இவர்களிடமிருந்தே வந்தது. இவர்களுடைய பாஷையும்கூட கரீப் என்றே அழைக்கப்படுகிறது.

கரீப் இனத்தைச் சேர்ந்த ரூபிக்கு 1975-⁠ம் வருஷம் தன்னுடைய பாட்டியிடமிருந்து ஒரு துண்டுப்பிரதி கிடைத்தது; அதிலுள்ள சத்தியத்தைப் படித்ததும் ஆர்வமானார். (பக்கம் 181-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.) அப்போது ரூபிக்கு 16 வயது. அவர் ஆவிக்குரிய ரீதியில் முன்னேறி 1978-⁠ல் “வெற்றிகரமான விசுவாசம்” என்ற மாநாட்டில் முழுக்காட்டுதல் எடுத்தார். அதற்குப் பிறகு சீக்கிரத்திலேயே பிஸினஸ் காரணமாக அவருடைய குடும்பம் ஜார்ஜ் டவுனுக்குக் குடிமாறியது. அங்கே, யூஸ்டஸ் ஸ்மித் என்பவரை அவர் மணந்தார். யூஸ்டஸுக்கு கரீப் பாஷை தெரியாது, இருந்தாலும், ரூபியின் சொந்தக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் ராஜ்ய செய்தியை அறிவிப்பதற்காக இருவரும் பாராமிட்டாவுக்கு குடிமாற விரும்பினார்கள். “எங்களுடைய ஆசையை யெகோவா அறிந்து எங்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளித்தார், அதனால் 1992-⁠ல் நாங்கள் பாராமிட்டாவுக்குப் போனோம்” என ரூபி சொல்கிறார்.

அவர் தொடர்ந்து சொல்வதாவது: “போய்ச் சேர்ந்ததும் அங்குள்ள மக்களிடம் பிரசங்கிக்க ஆரம்பித்தேன். எங்களுடைய சிறிய வீட்டிற்கு கீழே கூட்டங்களை நடத்தினோம், அது தரையிலிருந்து சுமார் ஒன்றரை மீட்டர் உயரத்தில் இருந்தது. சீக்கிரத்திலேயே கூட்டங்களுக்கு அநேகர் வர ஆரம்பித்ததால் அந்த இடமும் போதுமானதாக இருக்கவில்லை. ஆகவே மற்றவர்களுடைய கூடாரங்களை இரவலாக வாங்கி பயன்படுத்தினோம். கூட்டங்கள் நடத்துவது பற்றிய செய்தி பரவினதும், வருவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமானது. நாளடைவில் சுமார் 300 பேர் கூட்டத்திற்கு வர ஆரம்பித்தார்கள்! எனக்கு கரீப் பாஷை நன்கு தெரிந்திருந்ததால், காவற்கோபுரத்தை அந்தப் பாஷையில் மொழிபெயர்க்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை எல்லாரும் எப்படிக் கேட்க முடிந்தது? விலை குறைந்த எஃப்.எம். மைக்ரோஃபோன் டிரான்ஸ்மிட்டரை நாங்கள் பயன்படுத்தினோம், அதே சமயத்தில் வந்திருந்தோர் பலரும்கூட தங்களுடைய ரேடியோவை எடுத்து வந்து அதை சரியான அலைவரிசைக்குத் திருப்பி வைத்து நிகழ்ச்சியைக் கேட்டார்கள்.

“இந்த சமயத்திற்குள் இந்தத் தொகுதிக்குக் கண்டிப்பாக ஒரு ராஜ்ய மன்றம் தேவை என நானும் யூஸ்டஸும் நினைத்தோம். ஆகவே அதற்காகும் செலவையும் பிளானையும் பற்றி மற்றவர்களிடம் கலந்து பேசிய பிறகு வேலையைத் தொடங்கினோம். கட்டடத்திற்குத் தேவையான பொருட்களை எல்லாம் என்னுடைய அண்ணன் சிஸல் பேய்ர்ட் கொடுத்தார், மற்றவர்களோ கட்டுமான வேலையில் உதவினார்கள். ஜூன் 1992-⁠ல் வேலை ஆரம்பமாகி, மறு வருடத் துவக்கத்தில் கட்டி முடிக்கப்பட்டது; நினைவு ஆசரிப்பை நடத்துவதற்கு வசதியாக ஏற்ற சமயத்தில் முடிக்கப்பட்டது. நினைவு ஆசரிப்பு பேச்சைப் பயணக் கண்காணியான ஜோர்டன் டானியல்ஸ் கொடுத்தார். அதைக் கேட்க 800 பேர் வந்திருந்ததைப் பார்த்து நாங்கள் மலைத்துப் போனோம்.

“ஏப்ரல் 1, 1996-⁠ல் பாராமிட்டா தொகுதி ஒரு சபையாக ஆனது; மே 25 அன்று ராஜ்ய மன்றம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது முதற்கொண்டு வட்டார மாநாடுகள், விசேஷ மாநாட்டு தினங்கள் ஆகியவற்றை நடத்துமளவுக்கு இந்த மன்றம் விஸ்தரிக்கப்பட்டதால் இப்போது 500-⁠க்கும் அதிகமானோர் அங்கு வசதியாக உட்கார முடியும். சொல்லப்போனால், சொற்ப எண்ணிக்கையினரோடு ஆரம்பிக்கப்பட்ட ஒரு தொகுதி, இன்று சுமார் 100 பிரஸ்தாபிகள் உடைய ஒரு சபையாகத் திகழ்கிறது; பொதுப் பேச்சுக்கோ சராசரியாக 300 பேர் வருகிறார்கள். நினைவு ஆசரிப்புக்கு 1,416 பேர் வரை வந்திருக்கிறார்கள்!”

பிரமாண்டமான திருமணம்!

பாராமிட்டா மாவட்டத்தில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த பல தம்பதியர், பைபிள் தராதரங்களுக்கு இசைவாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்கள் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக பதிவு செய்தார்கள். என்றாலும், பிறப்புச் சான்றிதழ் போன்ற அவசியமான ஆவணங்களைப் பெறுவதில் சிலருக்குச் சிக்கல் இருந்தது. பிறந்த தேதியையும், மற்ற தகவல்களையும் உறுதி செய்து கொள்ள சகோதரர்கள் உதவினார்கள். இத்தனை சிரமங்களுக்குப் பின்னர் இந்தத் தம்பதியரால் திருமணம் செய்து கொள்ள முடிந்தது.

ஒரு சந்தர்ப்பத்தில், 79 தம்பதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்தது. கிளை அலுவலகக் குழு அங்கத்தினரான எடின் சில்ஸ் திருமணப் பேச்சைக் கொடுத்தார். மூன்று நாட்களுக்குப் பின், 41 பேர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆக வேண்டுமென்ற தங்கள் ஆவலைத் தெரியப்படுத்தினார்கள். அவர்களில் பெரும்பாலானோர் புதிதாகத் திருமணம் ஆனவர்கள்.

பாராமிட்டாவில் உள்ள அநேகர் கடவுளுடைய வார்த்தையில் ஆர்வம் காட்டியதால் அந்த முழு சமுதாயமும் குறிப்பிடத்தக்க விதத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அங்கே ராஜ்ய மன்றம் பிரதிஷ்டை செய்யப்பட்ட போது, ஒரு மூப்பர் இவ்விதமாகக் குறிப்பிட்டார்: “இப்போது பாராமிட்டா ஓர் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. ஏனெனில் இந்தச் சமுதாயத்தில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான ஆட்கள் தவறாமல் கூட்டங்களுக்கு வருகிறார்கள்.”

பாராமிட்டா மாவட்டம் 1995-⁠ல் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது. யெகோவாவின் ஜனங்கள் எப்படி சமாளித்தார்கள்? பள்ளி ஆசிரியையான கில்யன் பர்சாத் அப்போது பாராமிட்டாவில் வேலை பார்த்து வந்தார். ஒருசமயம், பக்கத்திலுள்ள சிறிய விமான நிலையத்தில் ஒரு குட்டி விமானம் தரையிறங்கும் சத்தம் அவருக்குக் கேட்டது. உடனே, வேக வேகமாக ஓடி, புறப்படவிருந்த விமானியை தடுத்து நிறுத்தி, தன்னை ஜார்ஜ் டவுனுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். விமானியும் சம்மதித்தார். அங்குச் சென்றவுடன் நேராகக் கிளை அலுவலகத்திற்குப் போய் சகோதரர்கள் படும் கஷ்டத்தை எடுத்துச் சொன்னார்.

அச்சமயத்தில் கிளை அலுவலகக் குழு அங்கத்தினரில் ஒருவராக இருந்த ஜேம்ஸ் தாம்ஸன் இவ்விதமாக விவரிக்கிறார்: “விமானம் மூலமாக உணவையும் தேவைப்பட்ட மற்ற பொருட்களையும் எடுத்துச் செல்ல ஆளும் குழு எங்களுக்கு அனுமதியளித்தது. அதுமட்டுமா, மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக 36 பிரஸ்தாபிகளை ஜார்ஜ் டவுனுக்கு அழைத்துச் செல்லவும் எங்களால் முடிந்தது. அவர்களில் பலருக்கு ஒரு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டது முதல் அனுபவம்.”

ஊழியப் பயிற்சிப் பள்ளி

1987-⁠ல் ஊழியப் பயிற்சிப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அதில் பயிற்சி பெற்ற மணமாகாத மூப்பர்களாலும் உதவி ஊழியர்களாலும் பல நாடுகள் நன்மை அடைந்திருக்கின்றன. அவற்றுள் கயானாவும் ஒன்று. அருகிலுள்ள ட்ரினிடாட் தீவில் நடந்த பயிற்சிப் பள்ளியில் கலந்து கொண்ட பிறகு, உள்ளூர் சகோதரர்கள் பலர் கயானாவில் ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்கு அதிக ஆதரவை அளித்திருக்கின்றனர். அவர்களில் சிலர் தற்போது ஒழுங்கான பயனியர்களாகவும், விசேஷ பயனியர்களாகவும், சபை மூப்பர்களாகவும் சேவை செய்கின்றனர். தங்களுடைய சொந்த சபைகளுக்குத் திரும்பி சென்ற மற்ற சகோதரர்கள் யெகோவாவின் ஆடுகளைப் பாதுகாக்க அரும்பாடு படுகின்றனர்.

ஊழியப் பயிற்சிப் பள்ளி பட்டதாரிகள் அநேகரால் கூடுதல் பொறுப்புகளை ஏற்க முடிந்திருக்கிறது. உதாரணத்திற்கு, அண்ணன் தம்பியான ஃப்லாய்ட் டேனியல்ஸும் லாவானி டேனியல்ஸும் மூப்பர்கள் அதிகம் தேவைப்பட்ட சபைகளில் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டனர். டேவிட் பர்சாத் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்யும் சிலாக்கியத்தைப் பெற்றார். இன்னொரு மாணவரான எட்சல் ஹேசல், கயானா கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்ய நியமிக்கப்பட்டார். பயிற்சிப் பள்ளியில் கலந்து கொண்ட சிலரைப் பற்றி வட்டாரக் கண்காணி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “அவர்கள் ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்து கொண்ட பிறகு ஆவிக்குரிய ரீதியில் நன்கு முன்னேறி இருப்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.”

தேவை அதிகமிருக்கும் இடத்தில் சேவை

1970-களின் பிற்பகுதியில், இஸகிபோ நதிக்கு மேற்கே உள்ள அட்லாண்டிக் கடலோரத்தில் சுமார் 30,000 மக்கள் குடியிருந்தார்கள். ஆனால் பிரஸ்தாபிகளோ 30 பேர் மட்டுமே அங்கிருந்தார்கள். ஆகையால், கிளை அலுவலகம் அவ்வப்போது அந்தப் பிராந்தியத்தில் ஒரு மாதத்திற்கு ஊழியம் செய்ய விசேஷ பயனியர்களை அனுப்பியது. அப்படிச் சென்ற ஒரு குழுவை கவனித்துக்கொண்ட சகோதரர் இவ்வாறு கூறினார்: “சகோதரர்கள் இந்தப் பிராந்தியம் முழுக்க சாட்சி கொடுத்து 1,835 புத்தகங்களை வினியோகித்துள்ளார்கள். நிறைய மறுசந்திப்புகளைச் செய்து, பல வேதப்படிப்புகளை ஆரம்பித்துள்ளார்கள்.”

மற்றொரு சகோதரர் இவ்விதமாகச் சொன்னார்: “இரண்டு மணிநேரம் எங்களுடைய சிறு படகில் பயணித்து 27 கி.மீ. தூரத்தைக் கடந்தோம். சில சமயத்தில், முழங்கால் அளவு சேற்றில் எங்கள் படகை இழுக்கவோ, தள்ளவோ வேண்டியிருந்தது. இப்படியெல்லாம் நாங்கள் கஷ்டப்பட்டது வீண்போகவில்லை, ஏனெனில் வீட்டுக்காரர்கள் உபசரிப்பவர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர், இசை வாத்தியார். அவர் இசைப் பயிற்சி அளிக்க நம்முடைய பாட்டு புத்தகத்தைப் பயன்படுத்தி வந்தார். அப்புத்தகத்தில் இசை அமைக்கப்பட்டிருந்த விதத்தை வெகுவாகப் பாராட்டிவிட்டு, இரண்டு பாடல்களை எங்களுக்கு இசைத்துக் காண்பித்தார். பின்னர், எங்களிடமிருந்து ஆறு புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார்.”

தேவை அதிகமிருக்கும் இடங்களில் சேவை செய்ய மற்ற சகோதர சகோதரிகளும் முன்வந்தார்கள். ஷெர்லாக், ஜூலியட் பாஹாலான் தம்பதியினரின் உதாரணத்தைக் கவனியுங்கள். “1970-⁠ல் ஜார்ஜ் டவுனுக்கு தெற்கே டெமராரா நதியோரம் உள்ள எக்கல்ஸ் சபையில் சேவை செய்யும்படி நாங்கள் அழைப்பைப் பெற்றோம். அந்தச் சபையில் சில பிரச்சினைகள் இருந்தன. அதோடு, சிலரை சபை நீக்கம் செய்ய வேண்டியிருந்தது. இதன் பிறகு, அந்தச் சபையில் 12 சுறுசுறுப்பான பிரஸ்தாபிகளும் அவர்களுடைய பிள்ளைகளுமே மீதமிருந்தனர். கொஞ்ச காலத்திற்கு என்னைத் தவிர வேறு மூப்பர்களே அங்கிருக்கவில்லை. கூடுதலாக, ஒதுக்குப்புறமாக இருந்த மோக்கா கிராமத்திலுள்ள ஒரு சிறிய தொகுதியும் எங்களுடைய சபையின் மேற்பார்வையில் வந்தது. திங்கட்கிழமை மாலையில் சபை புத்தகப் படிப்பை மோக்காவிலும் பின்பு எக்கல்ஸிலும் நடத்தினேன்.

“காவற்கோபுர படிப்பையும்கூட நானே நடத்தினேன். பொதுவாக, ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி கொடுக்குமளவிற்குப் பத்திரிகைகள் இருக்காது. அதனால் அப்போதிருந்த வழக்கத்திற்கு மாறாக, முதலில் ஒவ்வொரு பாராவையும் வாசித்துவிட்டு பின்பு கேள்வி கேட்போம். அடிக்கடி மின் தடை ஏற்பட்டதால் கூட்டங்களுக்கு மெழுகுவர்த்திகளை எடுத்துச் செல்வோம்; மழைக் காலத்தில் கொசுப் பட்டாளத்தின் தாக்குதலை நாங்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில், பெரும்பாலான சகோதரர்கள் கூட்டங்களுக்கும், வெளி ஊழியத்துக்கும் நடந்தோ சைக்கிளிலோ தான் சென்றார்கள். இப்படித்தான் மோக்கா சபை பிரஸ்தாபிகளும் எக்கல்ஸுக்கு வந்தார்கள். கூட்டம் முடிந்த பின், கூடியமட்டும் எத்தனை பேரை என்னுடைய சிறிய வேனில் ஏற்ற முடியுமோ, அத்தனை பேரையும் திணித்துக்கொண்டு மோக்காவிற்கு அழைத்துச் சென்றேன்.”

இந்த முயற்சிக்கெல்லாம் ஏதாவது பலனிருந்ததா? கடந்த காலத்தைப் பின்னோக்கி பார்ப்பவராய், சகோதரர் ஷெர்லாக் பாஹாலான் இவ்வாறு எழுதுகிறார்: “எக்கல்ஸில் இருக்கையில், நானும் என் மனைவியும் அநேகருக்கு பைபிள் படிப்பு நடத்தினோம். அவர்களில் பலர் இன்றும் குடும்பமாகச் சத்தியத்தில் இருக்கிறார்கள். சில ஆண்கள் இப்போது சபையில் மூப்பர்களாகச் சேவை செய்கிறார்கள். இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களுக்கு ஈடிணையே இல்லை!”

“பயனியர்களின் பரதீஸில்” சேவை செய்தல்!

கடந்த சில வருடங்களாக அயர்லாந்து, ஐக்கிய மாகாணங்கள், கனடா, பிரான்சு, பிரிட்டன் போன்ற இடங்களிலிருந்து கிட்டத்தட்ட 50 சகோதர சகோதரிகள் இந்தத் தண்ணீர் தேசத்திற்கு வந்து, “வா . . .  விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன்” என்ற அழைப்பை விடுப்பதில் சேர்ந்து கொண்டுள்ளனர். (வெளி. 22:17) இவர்களில் பெரும்பாலானோர் பயனியர்கள். சில மாதங்களே அங்குச் சிலரால் தங்க முடிந்திருக்கிறது; மற்றவர்களோ, வருடக்கணக்கில் அங்குத் தங்கி சேவை செய்ய முடிந்திருக்கிறது. கையிலிருந்த காசு குறைகையில் அநேகர் தங்களுடைய தாயகத்திற்குச் சென்று, சிறிது காலம் வேலை செய்வார்கள். கையில் பணத்தோடு மறுபடியும் கயானாவுக்கு வந்து பயனியர் சேவையைத் தொடருவார்கள். அவர்களில் பலர் கயானாவில் சேவை செய்ததைப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறார்கள். அதிலும் விசேஷமாக, பைபிளிடம் ஆழ்ந்த போற்றுதலைக் காட்டும் ஜனங்களோடு ஆவிக்குரிய காரியங்களைக் கலந்தாலோசிப்பதை அதிகம் வரவேற்றிருக்கிறார்கள். கிறிஸ்தவரல்லாத அநேக ஆட்களும்கூட யெகோவாவின் சாட்சிகளோடு ஆர்வமாக உரையாடுகிறார்கள். கூடுதலாக, வீட்டுக்காரர்கள் சிலசமயம் சகோதரர்களுக்கு உணவளித்து உபசரிப்பார்கள். “அதனால், கயானாவைப் பயனியர்களின் பரதீஸ் என்றால் அது மிகையாகாது” என தற்போதைய கிளை அலுவலகக் குழு ஒருங்கிணைப்பாளரான ரிக்கார்டோ ஹைன்ட்ஸ் குறிப்பிடுகிறார்.

கிளை அலுவலகத்தில் தன்னுடைய கணவர் எட்சல்லோடு சேவை செய்யும் ஆர்லின் ஹேசல், கயானாவின் கிராமப்புறத்தில் கிடைத்த அனுபவங்களை இவ்வாறு நினைவுகூருகிறார்: “1997-⁠ல் கிளை அலுவலகத்தோடு தொடர்புகொண்ட பிறகு, தொலைதூரத்தில், கிட்டத்தட்ட பிரேசிலின் எல்லையில் உள்ள லெதம் என்ற நகரத்தில் சேவை செய்வதற்கான நியமிப்பைப் பெற்றோம். கனடாவைச் சேர்ந்த ராபர்ட் வெல்ச், ஜோனா வெல்ச் தம்பதியர், சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்காவிலிருந்து லெதமுக்கு வந்திருந்த சாரா டீயான் என்ற சகோதரி ஆகியோரோடு சேர்ந்து சேவை செய்தோம். அச்சமயத்தில், கால்நடை மருத்துவரான ரிச்சர்ட் ஆக்கி என்ற சகோதரர் அந்தப் பிராந்தியத்தில் வசித்து வந்தார். முன்பு பைபிள் படித்து வந்த 20 நபர்களின் பெயர்ப் பட்டியலை கிளை அலுவலகம் எங்களிடத்தில் கொடுத்திருந்தது. ஆனால், அதில் பெரும்பாலானோர் அதிக ஆர்வம் காட்டவில்லை. என்றாலும், இரண்டு பேர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆக விரும்பினார்கள்.

“ஒரு மாமரத்தின் கீழ் நாங்கள் நடத்திய முதல் கூட்டத்திற்கு பயனியர்களான எங்கள் ஆறு பேரையும் சேர்த்து 12 பேர் வந்திருந்தோம். சில மாதங்களுக்குப் பிற்பாடு முதன்முறையாக நடைபெற்ற நினைவு ஆசரிப்பிற்கு 60 பேர் வந்தார்கள். இதற்கிடையில், பயனியர்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்தது. இருந்தாலும், 40 பைபிள் படிப்புகளையும் நடத்த முயன்றோம்! அதனால், கூட்டங்களுக்கு வராதவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்துவதை நிறுத்தும்படி வட்டாரக் கண்காணி அறிவுரை கூறினார். அதற்கு நல்ல பலனிருந்தது. ஏனெனில், நாங்கள் தொடர்ந்து படிப்பு நடத்தியவர்கள் எல்லாரும் அருமையாக முன்னேறினார்கள்.”

உண்மையில், நான்கு வருடங்களுக்குப் பிறகு, லெதம் 14 பிரஸ்தாபிகள் உடைய சபையாக வளர்ந்தது. லெதமில் நடந்த விசேஷ மாநாட்டு தினங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்தது. தம்முடைய ஊழியக்காரர் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகிறது. அவர்கள் சகிக்கும் இன்னல்களோடு ஒப்பிட ஆசீர்வாதங்களே அதிகம்.

வாடகை மன்றங்களும், “அடித்தள வீடுகளும்”

கயானாவில் ஊழியம் தொடங்கியது முதற்கொண்டு, தகுந்த வணக்க ஸ்தலங்களைக் கண்டுபிடிப்பது ஒரு பெரிய சவாலாகவே இருந்து வந்தது. 1913-⁠ல் ஜார்ஜ் டவுனில் இருந்த சொற்ப எண்ணிக்கையான சகோதரர்கள் சமர்செட் வீட்டிலிருந்த ஓர் அறையை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். 45 ஆண்டுகளுக்கு அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. 1970-⁠க்குள், ஜார்ஜ் டவுனில் இருந்த சார்ல்ஸ் டவுன் சபை, பர்பிஸில் இருந்த பல்மைரா சபை ஆகியவற்றிற்கு மட்டுமே சொந்த ராஜ்ய மன்றங்கள் இருந்தன. ஆனாலும், மூன்று வருடங்களுக்கு முன்பு, கயானாவில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையோ 1,000 என்ற இலக்கைத் தாண்டியது! அதனால் பெரும்பாலான சபைகள் அவ்வளவாக வசதியில்லாத வாடகை இடங்களில் தான் கூட்டங்களை நடத்தின.

உதாரணத்திற்கு, 1950-⁠ன் பிற்பகுதியில் டெமராரா ஆற்றின் மீது அமைந்திருந்த விஸ்மார் சபை அந்தளவு வளர்ந்ததால், கூட்டங்கள் நடத்துவதற்கு சகோதரர்கள் பொருத்தமான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள். ஐலான்டர் ஹால் என்ற இடத்தைப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. வாரத்தின் மத்திபத்தில் தேவராஜ்ய ஊழியப் பள்ளி, ஊழியக் கூட்டம் ஆகியவற்றிற்காகவும், ஞாயிற்றுக்கிழமை மாலையில் பொதுப் பேச்சு, காவற்கோபுர படிப்பு ஆகியவற்றிற்காகவும் கூடிவந்தார்கள். ஆனால் அந்த இடத்தைக் கூட்டம் நடத்துவதற்காக தயார் செய்வதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது. எப்படியென்றால், மக்கன்ஸியிலிருந்து விஸ்மாருக்கு செல்ல சிறிய படகில் டெமராரா ஆற்றை முதலில் கடக்க வேண்டும். ஒரு சகோதரர் பத்திரிகைகள் அடங்கிய அட்டைப் பெட்டியையும், மற்றொருவர் பிரசுரங்கள் அடங்கிய பெட்டியையும், மூன்றாவது நபர் பல்வேறு ஃபார்ம்களையும், நன்கொடை பெட்டியையும் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டும். இத்தனையும் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகச் செய்ய வேண்டியவை. கூட்டம் முடிந்த பிறகு, பழையபடி அனைத்தையும் ஆற்றின் அக்கரைக்குத் திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும்.

அடித்தள வீடுகள் என்று அழைக்கப்படுபவற்றில்கூட கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவை ஒரு வீட்டின் கீழ் உள்ள இடங்களாகும். வெள்ளப் பெருக்குக்குப் பயந்து கயானாவில் உள்ள வீடுகள், மரக்கட்டை, கான்கிரீட் தூண்கள், கம்பம் போன்றவற்றைப் பயன்படுத்தி தரையில் இருந்து உயர்த்திக் கட்டப்படுகின்றன. இத்தகைய அமைப்பு, சபை கூட்டங்களை நடத்துவது போன்ற மற்ற வேலைகளை செய்வதற்கு இடமளித்தது. என்றபோதிலும், தகுந்த வணக்க ஸ்தலம் ஒரு மதத்திற்கு இல்லாவிட்டால், அதற்குக் கடவுளின் ஆசி இல்லை என்பது கயானா மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கூடுதலாக, சில சமயங்களில் அடித்தள வீடுகளில் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஏற்படும் இடைஞ்சல்கள் நிகழ்ச்சியின் மதிப்பைக் குறைப்பதாக இருந்தன. ஒரு சமயம், நாயைப் பார்த்து மிரண்ட கோழி ஒன்று கூட்டம் நடக்கும் இடத்திற்குப் பறந்து வந்து ஆறு வயது சிறுமி ஒருத்தியின் மேல் விழ, அவளுடைய அலறல் சத்தத்தைக் கேட்ட அனைவரும் ஆடிப் போயினர். கூட்டம் முடிந்த பின், விஷயத்தை அறிந்து எல்லாரும் கொஞ்சம் சிரித்தபோதிலும், தகுந்த வணக்க ஸ்தலத்துக்கான அவசியத்தை இது மறுபடியும் வலியுறுத்தியது. அதுமட்டுமல்ல, அக்கறை காட்டுபவர்கள்கூட அடித்தள வீடுகளில் நடத்தப்பட்ட கூட்டங்களுக்கு வரவிரும்பவில்லை.

ராஜ்ய மன்ற கட்டுமானம்

“சேரிட்டி சபையில் நான் இருந்த 32 வருடங்களில், ஐந்து அடித்தள வீடுகளை நாங்கள் வாடகைக்கு எடுத்திருக்கிறோம். வீட்டின் அடித்தளத்தில் இருந்ததனால், தெரியாமல்கூட உத்திரத்தில் தலை இடித்துவிடாதபடி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியிருந்தது. ஒரு சகோதரி தன்னுடைய குழந்தையைத் தூக்கிக்கொண்டு போனபோது, சரியாக குனிந்து போகாததால் குழந்தையின் தலை உத்திரத்தில் பலமாக மோதிவிட்டது. இதைப் பற்றி சத்தியத்தில் இல்லாத தன் அப்பாவிடம் அவள் சொன்னாள். அந்தச் சபையினருக்கு சொந்தமாக ஒரு வணக்க ஸ்தலம் வேண்டுமென்று அவளுடைய பெற்றோர் முடிவெடுத்தார்கள். சொல்லப்போனால், சபைக்காக ஒரு நிலத்தைத் தருவதற்கு அவளுடைய தாய் முன்வந்தாள். அவளுடைய தந்தையும், ராஜ்ய மன்ற கட்டுமான செலவைக் கவனித்துக் கொள்வதாகச் சொன்னார். அவர்கள் சொன்ன மாதிரியே செய்தார்கள். பலமுறை மாற்றி கட்டப்பட்ட அந்த ராஜ்ய மன்றமே இன்றும் அந்த ஏரியாவில் உண்மை வணக்கத்தின் மையமாகத் திகழ்கிறது. அந்த வட்டாரத்தின் ஒரு சிறிய மாநாட்டு மன்றமாகவும் அது இருக்கிறது” என்று ஃபிரெட்ரிக் மக்கால்மன் சொல்கிறார்.

ஆரம்ப காலங்களில், ராஜ்ய மன்றங்கள் கட்டி முடிக்கப்படுவதற்குப் பல மாதங்கள் எடுத்தன. எக்கல்ஸிலுள்ள ராஜ்ய மன்றமும் அப்படித்தான் கட்டி முடிக்கப்பட்டது. “கூட்டங்கள் ஒரு பள்ளியில் நடத்தப்பட்டன. எங்களுக்கென்று சொந்தமாக ராஜ்ய மன்றம் இருந்தால், நிறைய பேர் சத்தியத்திற்கு வருவார்களென்று நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால் எக்கல்ஸிலிருந்த கொஞ்ச பிரஸ்தாபிகளும் ஏழைபாழைகள். ஆனாலும்கூட எல்லாரும் சேர்ந்து ஒரு மன்றத்தைக் கட்ட வேண்டுமென்ற தீர்மானத்தை எடுத்தார்கள். அதற்காகப் பிராந்தியத்திற்குள்ளாகவே ஏற்ற இடத்தைத் தேடினேன். ஆனால் எந்தப் பலனுமில்லை” என்று அந்தச் சமயத்தில் எக்கல்ஸில் மூப்பராக இருந்த ஷெர்லாக் பாஹாலான் கூறுகிறார்.

“இதற்கிடையே, ஜார்ஜ் டவுனிலுள்ள சகோதரர்கள் இரண்டு அச்சுகளை கொடுத்து, கான்கிரீட் பிளாக்குகளை உண்டாக்கும் விதத்தை எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். ஆரம்பத்தில், வெறுமனே 12 பிளாக்குகளைச் செய்ய எங்களுக்கு பல மணிநேரம் எடுத்தது. ஆனால் பழகப் பழக நாங்கள் திறமையாகச் செய்தோம், முக்கியமாகச் சகோதரிகள் அதில் திறமைசாலிகள். சிமெண்ட் கிடைப்பது மற்றொரு பிரச்சினையாக இருந்தது. ஏனென்றால், அந்தச் சமயத்தில் சிமெண்ட்டும் ரேஷனில்தான் கொடுக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட அளவு வாங்குவதற்கு, நான் முன்னதாகவே அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மொத்த சிமெண்டும் கிடைக்கிறதாவென்று பார்க்க, அதிகாலையிலே கப்பல் துறைக்குச் சென்று வரிசையில் காத்திருப்பேன். அடுத்ததாக சிமெண்ட் மூட்டைகளை எல்லாம் ஏற்றிக்கொண்டு எக்கல்ஸுக்குப் போகும் டிரக்கைத் தேட வேண்டியிருந்தது. ஒவ்வொரு சமயத்திலும் யெகோவா எங்களுக்கு உதவினார். ஆனால் எங்களுக்கேற்ற இடம் இன்னும் கிடைக்கவில்லை.

“1972-⁠ல் நானும் ஜூல்யட்டும் விடுமுறைக்காக கனடா போயிருந்தோம். அங்கு என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனைச் சந்தித்தோம்; அவர் யெகோவாவின் சாட்சி அல்ல. எக்கல்ஸில் அவருக்கு இரண்டு பிளாட்டு நிலம் இருந்ததையும், உறவினர்கள் அதைச் சரியாகப் பராமரிக்காததையும் பற்றி சொன்னார். எனவே அதற்காக என்னிடம் உதவி கேட்டார். நான் உதவ ரெடி என்றேன். எக்கல்ஸில் ராஜ்ய மன்றத்திற்காக நிலம் தேடி வருவதைப் பற்றியும் அவரிடம் எடுத்துச் சொன்னேன். மறுயோசனையின்றி, அவருடைய இரண்டு பிளாட்டுகளில் ஒன்றை எடுத்துக்கொள்ளும்படிச் சொன்னார்.

“கட்டட வேலையின்போதும் கடவுளுடைய உதவியை இன்னும் பல விதங்களில் உணர்ந்தோம். சிமெண்ட் உட்பட பல கட்டடப் பொருட்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டமாயிருந்தாலும், அவற்றிற்குப் பதிலாக கையில் கிடைத்த வேறு பொருட்களைப் பயன்படுத்தி ஒருவழியாக வேலையை முடித்தோம். மேலுமாக ஒருசில சகோதரர்களே வேலைகளைச் செய்வதற்கான திறமை பெற்றிருந்தார்கள். வேலை நடக்கும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு வாலண்டியர்களை அழைத்து வர ஏற்பாடும் செய்ய வேண்டியிருந்தது. என்னுடைய சிறிய வேனில், சகோதரர்களை அழைத்து வருவதும் போவதுமாக பல நூறு கிலோமீட்டர் பயணித்தோம். கடைசியில் ராஜ்ய மன்றம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. ஆளும் குழுவின் அங்கத்தினராயிருக்கும் கார்ல் க்ளைன் பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுத்தார். நிகழ்ச்சி அருமையிலும் அருமையாய் இருந்தது!” என்று ஷெர்லாக் பாஹாலான் தொடர்ந்து கூறினார்.

துரிதமாக கட்டப்பட்ட ராஜ்ய மன்றங்கள்

1995 வரையில் கயானாவிலுள்ள பாதிக்கும் மேலான சபைகள் வாடகை கட்டடங்களிலேயே கூட்டம் நடத்தி வந்தன. அடித்தள வீடுகளிலும் கூட்டம் நடத்தின. எனவே, தேவைகளைக் கவனிப்பதற்குக் கிளை அலுவலகம் தேசிய கட்டடக் குழுவை நியமித்தது. அந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே, மஹைக்கோனி ஆற்றின் அருகேயுள்ள ஜார்ஜ் டவுனிலிருந்து கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மஹைக்கோனி என்ற இடத்தில், சகோதரர்கள் துரித கட்டுமான முறையில் முதல் ராஜ்ய மன்றத்தைக் கட்டினார்கள். யெகோவாவின் சாட்சிகள் ஒரு ராஜ்ய மன்றத்தை நான்கு வார இறுதி நாட்களில் கட்டி முடிக்கப் போகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டபோது, அருகே வசித்துவந்த ஒருவர் இவ்வாறு சொன்னார்: “ஒரு கோழிக் கூட்டை உருவாக்கப் போவதைப் பற்றி பேசுறீங்கன்னா ஓ.கே. ஆனால், ஒரு கான்கிரீட் கட்டடத்தை நிச்சயமாகக் கட்டி முடிக்க முடியாது.” தான் தப்புக்கணக்குப் போட்டதை அவர் சீக்கிரத்தில் புரிந்துகொண்டார்.

சில சமயங்களில் இனப் பகைமை தீவிரம் காட்டிய இந்த நாட்டிலும்கூட, இனம், தேசம் என்ற எந்தப் பேதமும் இல்லாத உண்மையான கிறிஸ்தவ ஒற்றுமையோடு யெகோவாவின் சாட்சிகள் வேலை செய்வதை ராஜ்ய மன்ற கட்டுமானத் திட்டங்கள் அனைவருக்கும் நிரூபித்திருக்கின்றன. மஹைக்கோனியில் நடைபெற்ற வேலையைப் பார்த்த வயதான பெண்மணி இவ்வாறு ஒரு வட்டாரக் கண்காணியிடம் கூறினாள்: “ஆறு வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அங்கு வேலை செய்ததை நான் கவனிச்சேன்!”

கிளை அலுவலகக் கட்டுமானம்

1914-⁠ல் சகோதரர் ஃபிலிப்ஸின் வீட்டில்தான் கயானாவின் முதல் கிளை அலுவலகம் இருந்தது. அது 1946 வரையாக அங்குச் செயல்பட்டு வந்தது. அந்த வருடத்தில் அங்கு 91 பிரஸ்தாபிகள் இருந்தனர். 1959-⁠ல் அந்த எண்ணிக்கை 685-ஆக உயர்ந்தது, ஊழியம் தொடர்ந்து முன்னேறியது. எனவே ஜூன் 1960-⁠ல் ஜார்ஜ் டவுனிலுள்ள ‘50 பிரிக்டாம்’ என்ற தெருவில் சகோதரர்கள் ஒரு கட்டடத்தை வாங்கினார்கள். சில மாற்றங்களை செய்த பிறகு அந்தக் கட்டடங்கள் கிளை அலுவலகமாகவும், மிஷனரி இல்லமாகவும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் 1986-⁠க்குள்ளாக, இந்தக் கட்டடங்களும் போதுமானதாக இருக்கவில்லை. எனவே ஆளும் குழுவின் அங்கீகாரத்தோடு, அந்த இடத்திலேயே ஒரு புதிய கிளை அலுவலகம் கட்டப்பட்டது. உள்ளூர் சகோதரர்களுடைய உதவியோடு சர்வதேச ஊழியர்கள் 1987-⁠ல் கட்டட வேலையை முடித்தார்கள்.

எருசலேம் சுவர்களின் ஒரு பகுதியைத் திரும்ப எடுத்துக் கட்ட தங்கள் தகப்பனுக்கு உதவிய சல்லூமின் குமாரத்திகளைப் போலவே, கிளை அலுவலகக் கட்டுமானத்தில் சகோதரிகளும் முக்கிய பங்கு வகித்தார்கள். (நெ. 3:12) உதாரணமாக, சுமார் பத்து குழுக்களாகப் பிரிந்து, 120 சகோதரிகள் கட்டுமானத்துக்குத் தேவையான 12,000 கான்கிரீட் பிளாக்குகளை உருவாக்கினார்கள். 16 அச்சுகளை பயன்படுத்தி 55 நாட்களில் இந்த வேலையை அவர்கள் செய்து முடித்தார்கள். அது லேசுப்பட்ட வேலையல்ல! சிமெண்ட் இறுகி கட்டியாக ஆவதற்கு சரியான அளவில் ஈரத்தன்மை வேண்டும். அதிக ஈரத்தன்மை இருந்தால், அச்சிலிருந்து வெளியே எடுக்கும்போது பிளாக்குகள் விழுந்து உடைந்துவிட வாய்ப்பிருக்கிறது; ஆகவே அதை சரியான விகிதத்தில் கலக்க வேண்டியிருந்தது.

உள்ளூர் சகோதரர்கள் பெரும்பாலும் வேலையிலிருந்து நேரடியாகவே கட்டுமான இடத்திற்கு வந்து ‘நைட் வாட்ச்மேன்களாக’ வேலை செய்தார்கள். மற்றவர்கள் சர்வதேச ஊழியர்களோடு சேர்ந்து வேலை செய்தார்கள். அந்த ஊழியர்கள் அநேக கட்டுமான கலைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். அவர்களோடு வேலை செய்த ஹரீநரைன் (இன்டால்) பர்சாத் என்ற இளம் சகோதரர் இவ்வாறு சொன்னார்: “ஜன்னலின் அடிக்கட்டைகளில் வேலைப்பாடுகள் கொண்ட மரத் துண்டுகளைப் பொருத்துவதுதான் என்னுடைய வேலை. இதுக்கு முன்னாடி இந்த வேலையை செய்ததே இல்லை. அதைச் சரியாக பொருத்தும் வரையில் தொடர்ந்து பிரயாசப்பட்டேன். அதை பொருத்திய பிறகு, வேலையை மேற்பார்வையிட்டு வந்த கண்காணி, என்னோட முயற்சியைப் பாராட்டி, ‘இப்போது கிளை அலுவலகத்திலுள்ள எல்லா ஜன்னலின் அடிக்கட்டைகளிலும் பொருத்துவது உன்னோட வேலை’ என்று சொன்னார்.” ராஜ்ய மன்ற கட்டுமானப் பணிகளின்போது தான் கற்றுக்கொண்டவற்றை இன்று மற்றவர்களுக்கு கற்றுத் தருகிறார் இந்த இளம் சகோதரர்.

சில பொருட்களை வேறு இடங்களிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்ததால், அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பும் சகோதரர்களுக்குத் தேவைப்பட்டது. அதனால், குடியரசுத் தலைவராயிருந்த ஃபோர்பஸ் எல். பர்னமும் அவருடைய உதவியாளர்களும் உட்பட, அநேக அதிகாரிகள் கட்டட வேலை நடக்கும் இடத்திற்கே வந்தார்கள். எல்லாரும் வேலைப்பாட்டைக் கண்டு வியந்தார்கள். உள்ளூர் தச்சர் ஒருவரும் அசந்துவிட்டார்; அவர் இவ்வாறு சொன்னார்: “உங்கள் கட்டட வேலை தரமான வேலையாக இருக்க வேண்டுமென்பதில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள்.” ஜனவரி 14, 1988-⁠ல் மண்டலக் கண்காணியாக புரூக்ளினிலிருந்து வந்த டான் ஏடம்ஸ் பிரதிஷ்டைப் பேச்சு கொடுத்தார்.

பிப்ரவரி 12, 2001-⁠ல் ஒரு புதிய இடத்தில் மீண்டும் கட்டட வேலை தொடங்கப்பட்டது. மறுபடியுமாக உள்ளூர் சகோதரர்களின் உதவியோடு சர்வதேச ஊழியர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டார்கள். பிப்ரவரி 15, 2003 சனிக்கிழமையன்று, இந்தப் புதிய கிளை அலுவலகத்தின் பிரதிஷ்டை நடைபெற்றது. கூடியிருந்த 332 பேரும், ஜெர்மனி கிளை அலுவலகத்திலிருந்து வந்த ரிச்சர்ட் கெல்சி கொடுத்த பிரதிஷ்டைப் பேச்சைக் கேட்டார்கள்.

முன்னாள் மிஷனரிகள் அநேகர், இந்த நிகழ்ச்சிக்காகப் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக கயானா வந்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை நடந்த விசேஷக் கூட்டத்திற்கு 12 நாடுகளிலிருந்து 4,752 பேர் வந்திருந்தனர். இது கயானாவிலுள்ள பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.

புதிய உத்திகளைத் தேவைப்படுத்திய மாநாடுகள்

பொதுவாகவே வட்டார மாநாடுகளுக்காகவும் விசேஷ மாநாட்டு தினங்களுக்காகவும் சகோதரர்கள் மன்றங்களை வாடகைக்குத் தான் எடுத்து வந்தார்கள். கிராமப்புறங்களிலோ, மாநாடுகள் நடத்துவதற்கான இடத்தை அவர்களாகவே அமைத்துவிடுவார்கள். 1952-லிருந்து 1956 வரையாக கயானாவில் சேவை செய்து வந்த தாமஸ் மார்க்விக் இவ்வாறு கூறுகிறார்: “டெமராரா நதியிலுள்ள ஜார்ஜ் டவுனில் இருந்து 60 கிலோமீட்டர் உள்ளே தள்ளியிருக்கும் ஊருக்குள் எங்களுடைய மாநாடு நடைபெற்றது. உள்ளூர் சகோதரர்களுக்கு ஆதரவளிக்க இந்த நகரத்திலிருந்து இருநூறு சாட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பினர். எனவே உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை வைத்து ஒரு தற்காலிக மாநாட்டு மன்றத்தைக் கட்ட தீர்மானித்தோம். தூண்களுக்காகவும் இருக்கைகளுக்காகவும் மூங்கிலையும், கூரைக்காக வாழை இலைகளையும் பயன்படுத்த தீர்மானித்தோம்.

“அதற்காக பொருட்களைச் சேகரித்து ஒரு சிறிய ரயில்வே வண்டியில் ஏற்றிச் செங்குத்தான பாதையில் மெதுவாகக் கொண்டு சென்றோம். ஆனால் ஒரு வளைவில் அந்த வண்டி எங்கள் கைகளிலிருந்து நழுவி, புரண்டு விழுந்தது; அதிலிருந்த எல்லாப் பொருட்களும் ஆற்றிலே கொட்டிவிட்டன. எனினும் பொருட்கள் கட்டட வேலை நடக்கும் இடத்திற்கே நேராக மிதந்து சென்றுவிட்டன! எனவே அந்த விபரீதம்கூட எங்களுக்கு நன்மையாகவே முடிந்தது. மாநாடு தொடங்கியதும், மூன்று-நாள் நிகழ்ச்சிகளுக்காக வந்திருந்த நூற்றுக்கணக்கான கிராமத்தாரைக் கண்டு மாநாட்டுக்கு விஜயம் செய்த சகோதரர்கள் மெய்சிலிர்த்தனர்.”

தாமஸ் மேலும் சொல்வதாவது: “மாநாட்டுக்குப்பின் நாங்கள் அனைவரும் சேர்ந்து அருகிலிருந்த சில நியமிக்கப்படாத பிராந்தியங்களில் ஊழியம் செய்தோம். ஒரு கிராமத்தில் பொதுப் பேச்சைக் கொடுத்தோம். அதைக் கேட்க ஊரே திரண்டு வந்தது. ஒருவருடைய வளர்ப்புக் குரங்கும் அங்கு வந்திருந்தது. அது கொஞ்ச நேரம் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தது. பின்பு எல்லாவற்றையும் பார்ப்பதற்கு வசதியான ஓர் இடத்தில் உட்கார நினைத்தது போலும். அதனால் இங்கும் அங்குமாகத் தாவி கடைசியில் என் தோளில் வந்து உட்கார்ந்து கொண்டது. கொஞ்ச நேரம் சுற்றி முற்றிப் பார்த்தது, பிறகு தாவிக் குதித்துத் தன்னுடைய எஜமானரிடம் சென்றுவிட்டது. பின்னர் பேச்சு முடியும் வரை அது அங்கே உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும்தான் எனக்கு ‘உயிரே’ வந்தது.”

மாநாடுகள்

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், பெரும்பாலும் உலக தலைமையகத்திலிருந்து சகோதரர்களான காயர்ட், யங் போன்ற விசேஷ பிரதிநிதிகள் வரும்போதுதான் பெரிய மாநாடுகள் நடத்தப்பட்டன. 1954-⁠ல் புதிய உலக சமுதாயம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேதன் நார், மில்டன் ஹென்ஷல் ஆகியோர் கயானாவுக்கு வந்தார்கள். அந்த மாநாட்டிற்கு 2,737 பேர் வந்திருந்தார்கள்.

பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, 1999-⁠ல் கயானாவில் நடந்த இரு மாநாடுகளில் 7,100-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். ஒரு மாநாடு ஜார்ஜ் டவுனிலும் மற்றொன்று பர்பிஸிலும் நடத்தப்பட்டது. ஜார்ஜ் டவுன் மாநாட்டில் கடைசி நேரத்தில் நிறைய மாறுதல்கள் செய்ய நேர்ந்ததால், சகோதரர்களுக்கு உண்மையிலேயே அது ஒரு சோதனையாக அமைந்தது. “இந்தியாவிலிருந்து பிரபல நடிகர் ஒருவரும் அவருடைய நடன குழுவினரும் வந்திருந்தார்கள். நாங்கள் முன்னதாகவே இடத்தை புக் செய்திருந்த போதிலும், அந்தச் சினிமா நட்சத்திரத்தின் நிகழ்ச்சியைத் தள்ளி வைக்க முடியாது என தேசிய பூங்கா கமிஷன் கைவிரித்து விட்டது” என கிளை அலுவலகம் குறிப்பிடுகிறது.

“கிரிக்கெட் மைதானம் ஒன்றை ஏற்பாடு செய்துவிட்டு, அந்த மாற்றத்தை உடனடியாகச் சபைகளுக்குத் தெரிவித்தோம். மாநாட்டுக்கு இன்னும் எட்டே நாள்தான் இருந்தது! ஆனால், பிரச்சினைகள் தொடர்ந்தன. கரீபியனில், கிரிக்கெட் மைதானங்களைப் புனிதமானவையாக கருதும் அளவிற்கு அவ்விளையாட்டுக்குப் பெரும் மதிப்பு இருந்தது. எனவே நாங்கள் மைதானத்தின் புற்கள் மேல் நடப்பது போன்ற எதையும் நிர்வாகத்தாரால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அப்படி இருக்கையில், நாங்கள் நாடகத்தை எப்படி நடத்துவது? மேடையை எங்கே அமைப்பது?

“இருப்பினும், யெகோவா உதவுவார் என்ற திடநம்பிக்கையுடன் எங்கள் வேலையைத் தொடர்ந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை! மேடையையும், அதற்குச் செல்லும் பாதையையும் தரையில் இருந்து ஒரு குறிப்பிட்ட உயரத்தில் அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு, புல்வெளியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார்கள். இரவோடு இரவாக வேலையை முடிக்க அனைவரும் ஊக்கமாய் உழைத்தோம். இரவு முழுவதும் மழை பெய்து இயற்கையும் எங்களுடன் ஒத்துழைக்க மறுத்தது. இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் நிகழ்ச்சி ஏறக்குறைய குறித்த நேரத்தில் ஆரம்பமானது.

“மாநாடு நல்லபடியாக நடந்தது. மழையும் பெய்யவில்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை மழை கொட்டத் தொடங்கியது. அந்தச் சத்தத்தைக் கேட்டுதான் எழுந்தோம். சீக்கிரத்தில், மரப் பலகைகளால் அமைத்த மேடைக்கும் நடைபாதைக்கும் கீழே 5 செ.மீ. உயரத்திற்கு மைதானத்தில் தண்ணீர் தேங்கிவிட்டது. நிகழ்ச்சி ஆரம்பமாவதற்குச் சற்று முன்பாக மழை நின்றது. நல்லவேளையாக, மின்சார ஒயர்களைத் தரையில் விட்டுவிடாமல், மரப் பலகைகளுக்கு அடிப்புறத்தில் பொருத்தியிருந்தோம். இப்படியாக, மேடையையும் நடைபாதையையும் உயரமாக அமைத்தது நன்மையாகவே முடிந்தது!”

மாநாட்டிற்கு வந்திருந்த 6,088 பேரும் பிரகாசமான சூரிய ஒளியில் நாடகத்தைக் கண்டுகளித்தார்கள். இரண்டு வாரங்களுக்குப் பிற்பாடு, பர்பிஸில் நடந்த இரண்டாவது மாநாட்டிற்கு 1,038 பேர் வந்திருந்தார்கள். மாநாட்டிற்கு ஆஜரானவர்களுடைய எண்ணிக்கையில் 7,126 பேர் என்ற அப்போதைய புதியதோர் உச்சநிலையை கயானா எட்டியது. சமீப காலங்களில் கூடிவருவோருடைய எண்ணிக்கை சுமார் 10,000-ஐ எட்டியிருக்கிறது.

ஒளிமயமான எதிர்கால வாய்ப்புகள்

யெகோவாவின் திரும்ப நிலைநாட்டப்பட்ட, மகிமையான ஆலயத்தை எசேக்கியேல் தன்னுடைய தீர்க்கதரிசனத்தில் கண்டார். அந்த ஆலயத்திலிருந்து வழிந்தோடிய தண்ணீர் வெள்ளப்பெருக்கு ஆகும் வரை அதன் ஆழமும், அகலமும் அதிகரித்தது. உப்பான, உயிர்கள் வாழ முடியாத சவக்கடலும்கூட அதினால் ஆரோக்கியம் அடைந்தது.​—எசே. 47:1-12.

1919 முதற்கொண்டு உண்மை வணக்கம் தொடர்ந்து முன்னேறுகையில் இத்தீர்க்கதரிசனம் நிறைவேறுவதை கடவுளுடைய ஜனங்கள் கண்டிருக்கிறார்கள். நம் நாளில் பைபிள்கள், பைபிள் பிரசுரங்கள், கூட்டங்கள், மாநாடுகள் போன்ற ஏற்பாடுகளால் ஆன ஓர் உண்மையான ஆவிக்குரிய நதி உலகமெங்குமுள்ள லட்சக்கணக்கான ஆட்களின் ஆவிக்குரிய தாகத்தைத் தணித்து வருகிறது.

கயானாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் அந்தத் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தில் தங்களுக்கும் ஒரு பங்கிருப்பதை சிலாக்கியமாகக் கருதுகிறார்கள். அதுமட்டுமல்ல, இந்தத் தண்ணீர் தேசத்தில் “நித்திய ஜீவனுக்கான சரியான மனச்சாய்வு” உடையவர்கள் எங்கேயிருந்தாலும் உயிரளிக்கும் ஆவிக்குரிய உணவை அவர்களுக்குக் கொண்டு செல்ல சொல்லர்த்தமாகவே நதிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்.​—அப். 13:48, NW.

[அடிக்குறிப்புகள்]

a மே 1966-⁠ல் பிரிட்டிஷ் கயானா சுதந்திரம் பெற்றபோது அதன் பெயர் கயானா என மாற்றப்பட்டது. சூழமைவு காரணமாக வேறு பெயர் உபயோகிக்கப்படலாம், என்றாலும் பொதுவாக இப்பெயரே இதில் பயன்படுத்தப்படும்.

[பக்கம் 140-ன் பெட்டி]

கயானா​—⁠ஒரு கண்ணோட்டம்

நிலம்: கடற்கரை பிரதேசம் வண்டல் மண் நிறைந்தது; இதன் பெரும்பகுதி கடல் மட்டத்திற்குக் கீழே உள்ளதால் 230 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர் வெள்ளப்பெருக்கைத் தடுக்கிறது. உள்நாட்டின் மேட்டு நிலப்பகுதிகள் உட்பட சுமார் 80 சதவீத நிலப்பரப்பைக் காடுகள் ஆக்கிரமித்துள்ளன; இவையே கயானாவில் பாயும் பெரும்பாலான நதிகளின் உற்பத்தி ஸ்தலங்களாகும்.

மக்கள்: மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி கிழக்கிந்தியர்கள், 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஆப்பிரிக்க கறுப்பர்கள் அல்லது கலப்பினத்தவர்கள், சுமார் 5 சதவீதத்தினர் அமெரிக்க இந்தியர்கள். சுமார் 40 சதவீதத்தினர் கிறிஸ்தவமண்டலத்தார்; 34 சதவீதத்தினர் இந்துக்கள்; 9 சதவீதத்தினர் இஸ்லாமியர்.

மொழி: ஆங்கிலம் இந்நாட்டின் ஆட்சி மொழியாகும். கிரியோல் மொழியும் பரவலாகப் பேசப்படுகிறது.

பிழைப்பு: சுமார் 30 சதவீதத்தினர் விவசாயத்திலும், மீதிப்பேர் மீன்பிடித்தல், காடு வளர்ப்பு, சுரங்கத்தொழில் ஆகியவற்றிலும் ஈடுபடுகிறார்கள்.

உணவு: நெல், ககாவு (கொக்கோ), சிட்ரஸ் பழங்கள், தேங்காய், காபி, மக்காச்சோளம், மெனியாக் (மரவள்ளிக் கிழங்கு), கரும்பு ஆகியவையும் வெப்பமண்டல பழங்களும் காய்கறிகளும் முக்கியமாகப் பயிரிடப்படுகின்றன. ஆடு மாடு, பன்றி, கோழி ஆகியவை உணவாக உட்கொள்ளப்படுகின்றன. கடல் பிராணிகளில் மீன்களும் இறால்களும் முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சீதோஷ்ணம்: கயானாவில் வெப்பமண்டல சீதோஷ்ணம் நிலவுகிறது. பருவ காலங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. கடற்கரை பிரதேசங்களில் ஆண்டுக்கு 150-200 செ.மீ. மழை பெய்கிறது. கயானா நாடு பூமத்தியரேகைக்கு அருகே அமைந்திருந்தாலும் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து எப்போதும் காற்று வீசிக்கொண்டிருப்பதால் இங்கு மிதமான சீதோஷ்ணம் நிலவுகிறது.

[பக்கம் 143-145-ன் பெட்டி/​படம்]

அவரது வாயை யாராலும் “அடைக்க” முடியவில்லை

மால்கம் ஹால்

பிறந்தது: 1890

முழுக்காட்டப்பட்டது: 1915

பின்னணிக் குறிப்பு: லேக்வான் தீவுதான் இவரது சொந்த ஊர்; அங்கு முதன்முதலாக நற்செய்தியைப் பிரசங்கித்தவரும் அங்கு உருவான தொகுதியைக் கவனித்து வந்தவரும் இவரே.

அவருடைய அண்ணனின் பேத்தி, இவான் ஹால் இவ்வாறு சொல்கிறார்:

ஒரு சமயம் தேர்தல் அதிகாரி ஒருவர் தாத்தாவிடம், “நீங்க ஓட்டு போட மாட்டீங்களாமே, அது உண்மையா? அப்படீன்னா, உங்களை உள்ளே தள்ளி அடைச்சிடுவோம், உங்க பைபிளையும் பிடுங்கிடுவோம்” என்று சொன்னார். அப்போது தாத்தா அவரை நேருக்கு நேர் பார்த்து இப்படிக் கேட்டார்: “ஆனால் என் வாய்க்கு நீங்க என்ன செய்யப் போறீங்க? உங்க பாதிரியார் எல்லாம் இவ்வளவு காலமாக சொல்லாமல் மறைச்சு வைச்சிருந்த சத்தியத்தை நான் சொல்லுறதினால என் வாயை உங்களால் அடைக்க முடியுமா என்ன?” அதைக் கேட்ட அந்த அதிகாரியால் பதில் சொல்ல முடியவில்லை; “உங்களை அப்புறம் கவனிச்சுக்கிறேன்” என்று மட்டும்தான் சொல்ல முடிந்தது.

தாத்தா 1915-⁠ல் முழுக்காட்டுதல் எடுத்தவர், கயானாவில் ஆரம்ப காலத்தில் ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கித்தவர்களில் அவரும் ஒருவர். அவர் “சத்தியத்திற்காக உண்மையிலேயே போராடினார்” என ஒரு சகோதரர் சொன்னார். ஜார்ஜ் டவுனில் தங்கி வேலை பார்த்து வந்த சமயத்தில்தான் தாத்தாவுக்கு சத்தியம் கிடைத்தது. சமர்செட் வீட்டில் கொடுக்கப்பட்ட ஒரு பொதுப் பேச்சைக் கேட்டவுடனே இதுதான் சத்தியம் என்பதை தாத்தா அறிந்துகொண்டார். சொல்லப்போனால், அவர் வீட்டுக்குப் போய் அங்கு கேட்ட எல்லா வசனங்களையும் தன்னுடைய பைபிளில் எடுத்துப் பார்த்தார்.

அதற்குப் பிறகு லேக்வானுக்குத் திரும்பினார், உடனடியாக மற்றவர்களுக்குச் சாட்சி கொடுக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அங்கு ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள், அவருடைய கூடப்பிறந்த சகோதரிகளும், அண்ணன் பிள்ளைகளில் சிலரும்தான். தாத்தாவின் வீட்டில் கூடிவந்த தொகுதிக்கு அஸ்திவாரமாக இருந்தவர்களும் அவர்களே.

அந்தக் காலத்தில் தீவு வாசிகள், மத குருமாரின் இரும்புப் பிடிக்குள் சிறைப்பட்டிருந்தார்கள்; அதனால் நற்செய்தியைக் காதுகொடுத்து கேட்க வைப்பது பெரும்பாடாய் இருந்தது. குருமார் தாத்தாவைப் பார்த்து, “பைத்தியம், பைபிள் பைத்தியம்” என்று சொல்வார்களாம். ஆனால் அது அவருடைய ஆர்வக் கனலை அணைத்துப் போடவில்லை. உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டு வாசலில் ஃபோனோகிராஃபை வைத்து, பைபிள் பேச்சுக்களை ஒலிபரப்புவார். ஆட்கள் அடிக்கடி தெருவில் நின்றுகொண்டு அவற்றைக் கேட்பார்கள்.

போகப் போக சிலர் நற்செய்திக்குச் செவிசாய்க்க ஆரம்பித்தார்கள். அதை, முக்கியமாக நினைவு ஆசரிப்புக்கு வந்தவர்களின் எண்ணிக்கை காட்டியது; தாத்தாவின் வீட்டு மாடியில் இடம் கொள்ளாதளவுக்கு நிறைய பேர் வந்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சிக்கு சேர்மனும், பேச்சாளரும் சின்னங்களில் பங்கேற்ற ஒரே நபரும் தாத்தாதான். அவரிடம் பைபிள் படிப்பு படித்தவர்களில் ஒருவரான லிராய் டென்போ பயனியர் சேவையை ஆரம்பித்தார், சிறிது காலத்திற்கு வட்டாரக் கண்காணியாகவும்கூட சேவை செய்தார்.

இஸகிபோ நதியில் ஓடிய ஒரு கப்பலில் வரவு செலவுக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றிய தாத்தா ஓய்வு பெற்ற பிறகு பயனியர் சேவையை ஆரம்பித்தார்; லேக்வான் தீவிலும் அதன் அருகிலுள்ள வாக்கனாம் தீவிலும் அவர் பிரசங்க வேலை செய்தார். அவர் காலையில் 4:30 மணிக்கெல்லாம் எழுந்து வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விடுவார்; மாடுகளைப் பால் கறப்பது, பன்றிகளைக் கவனிப்பது ஆகிய வேலைகளை முடித்துவிட்டு 7:30 மணிக்கெல்லாம் குளித்து ரெடியாகி விடுவார். தினவசனத்தையும் பைபிளையும் வாசித்த பிறகு உணவருந்தி ஊழியத்திற்குத் தயாரிக்க ஆரம்பிப்பார். கிளம்புவதற்கு முன் சைக்கிள் டயர்களில் அவர் காற்றடைக்கும் காட்சி இன்னும் என் நினைவில் நிற்கிறது. ஒரு நாளைக்கு 20 கிலோமீட்டர் தூரமாவது அவர் பயணிப்பார்.

தாத்தாவுடைய பூமிக்குரிய வாழ்க்கை நவம்பர் 2, 1985-⁠ல் முடிவடைந்தது. அவர் சுமார் 70 வருஷம் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்தார். அவர் ஊழியம் செய்த காலமெல்லாம் எவராலுமே அவருடைய வாயை “அடைக்க” முடியவில்லை. அதன் விளைவாக, லேக்வான் தீவிலும் வாக்கனாம் தீவிலும் இப்போது ஒவ்வொரு சபை உள்ளது.

[பக்கம் 155-158-ன் பெட்டி/​படம்]

பால்ய வயது கேள்விகளுக்குக் கிடைத்த பதில்கள் வாழ்க்கையை மாற்றின

ஆல்பர்ட் ஸ்மால்

பிறந்தது: 1921

முழுக்காட்டப்பட்டது: 1949

பின்னணிக் குறிப்பு: 1953-⁠ல் பயனியர் சேவையை ஆரம்பித்தார். தன் மனைவி ஷீலாவுடன் 1958-⁠ல் கிலியட் பள்ளிக்குச் சென்றார், அவர்கள் கயானாவிலேயே ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார்கள்.

“கடவுள் உன்னை உண்டாக்கினார்”​—⁠நான் சிறுவனாக இருந்தபோது இப்படித்தான் எப்போதும் எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால், நான்கு பிள்ளைகளில் நான்தான் ரொம்ப மோசம் என்று அம்மா சொன்னபோது, கடவுள் மூன்று பிள்ளைகளை நல்லவர்களாகவும் என்னைக் கெட்டவனாகவும் படைத்திருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தேன்.

எனக்குப் பத்து வயதிருக்கும்போது ஸண்டே ஸ்கூல் டீச்சரிடம், “கடவுளை யார் உண்டாக்கினார்?” என்று கேட்டேன். அதற்கு அவர் பதிலே சொல்லவில்லை. இருந்தாலும், நான் பெரியவனான பிறகு பிரஸ்பிட்டேரியன் சர்ச்சுக்குப் போக ஆரம்பித்தேன். அந்தக் காலத்தில் ஓரளவு பெரியவர்களானதும் பலரும் அப்படித்தான் ஏதாவதொரு சர்ச்சுக்குப் போக ஆரம்பிப்பார்கள். இப்படிச் சர்ச்சுக்குப் போய் வந்தபோதிலும் என்னுடைய பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவே இல்லை. உதாரணமாக, சர்ச்சில் நாங்கள் பாடிய ஒரு பாட்டின் சில வரிகள் என்ன சொன்னதென்றால்: “பணக்காரன் மாளிகையில் இருக்கிறான், ஏழையோ அவன் வாசலில் நிற்கிறான். அவர்களை உயர்ந்தவனாகவும் தாழ்ந்தவனாகவும் உண்டாக்கியவர் கடவுளே; அவர்கள் எப்படியிருக்க வேண்டுமென தீர்மானித்தவரும் அவரே.” ‘அவர்கள் “எப்படியிருக்க வேண்டுமென” தீர்மானித்தவர் உண்மையில் கடவுள்தானா?’ என யோசித்தேன். ஒரு சமயம் பாதிரியாரிடம் கேட்டேன், “ஆதாம் ஏவாள் இரண்டு பேரைத்தானே கடவுள் படைத்தார், அப்படியென்றால் இந்த எல்லா இனங்களும் எங்கிருந்து வந்தன?” இரத்தினச் சுருக்கமாக அவர் சொன்ன பதில்: ஆதியாகம புத்தகம் ஒரு கட்டுக்கதை.

அடுத்து, இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் போர் வீரர்களுக்காக ஜெபிக்கும்படி எங்களிடம் சொல்லப்பட்டது. கடைசியில் நான் பைபிளில் வாசித்தவற்றிற்கு எதிர்மாறான காரியங்களையே சர்ச்சில் சொல்லித் தருகிறார்கள் என்று எனக்கே தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது. இருந்தாலும், ‘வேறு எங்கே போவது?’ என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். வேறு வழியில்லாமல், அந்தச் சர்ச்சுக்கே போய்க்கொண்டிருந்தேன். 24 வயதில் ஷீலாவை மணந்தேன்.

ஒரு நாள் அப்போதுதான் சர்ச்சிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன், ஒரு யெகோவாவின் சாட்சி வீட்டிற்கு வந்தார். பொதுவாக யெகோவாவின் சாட்சிகளை நரகம் இல்லா சர்ச்சுக்காரர்கள் என்று அழைத்தோம்; அவர்கள் சொல்கிற எதையுமே கேட்க நான் இஷ்டப்படவில்லை. அவர்கள் வீடுகளில்தான் கூட்டம் நடத்துவார்கள், அதோடு பாதிரியார் போல அவர்கள் அங்கி அணிவதில்லை. அதுமட்டுமல்ல, வாழ்க்கையில் சில நல்ல காரியங்கள் நடந்திருந்ததால் கடவுள் எனக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை என நினைத்தேன்; எனக்கு அருமையான மனைவி கிடைத்திருந்ததும் அந்த நல்ல காரியங்களில் ஒன்று.

சாட்சியான நெஸிப் ராபின்ஸன் எங்கள் வீட்டுக்கு வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது பஞ்சரான சைக்கிள் டயரை ஒட்டிக்கொண்டிருந்தேன். “டயர் பஞ்சராகி விட்டது, நீங்க ஒரு கிறிஸ்தவரென்றால் இதை எனக்குச் சரிசெய்து கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு விர்-என்று வீட்டுக்குள் போய்விட்டேன். அடுத்த வாரம், சர்ச்சுக்குப் போவதற்காக பைபிளும் கையுமாக வெளியே இறங்கும்போது, நெஸிப் படியேறி வந்துகொண்டிருந்தார். “உங்க மதத்தில எனக்கு ஆர்வம் இல்ல. என் மனைவி உள்ளே இருக்கிறா. அவளிடம் வேண்டுமென்றால் பேசுங்க” என்று சொல்லிவிட்டு சர்ச்சுக்குப் போய்விட்டேன்.

சர்ச்சில் பாஸ்டர் சொன்னது எதுவும் காதில் விழவில்லை; ஏன்தான் ராபின்ஸனிடம் அப்படிச் சொல்லிவிட்டு வந்தேனோ என மனம் அடித்துக்கொண்டது. ஏனென்றால், ‘அவரும் என் மனைவியும் பேச ஆரம்பித்து, கடைசியில் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலான சூப் ரெடியாகாவிட்டால் என்ன செய்வது’ என அதையே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்தளவுக்கு கவலைப்பட்டிருக்க வேண்டாம், ஏனென்றால் வீட்டிற்குப் போனதும் சூப் ரெடியாக இருந்தது. ரொம்ப ஆர்வத்தோடு ஷீலாவிடம், “நீ அந்த ராபின்ஸனிடம் பேசினாயா?” என்று கேட்டேன். “பேசினேன், அவர் உட்கார்ந்து சொன்னதை எல்லாம் சமையல் செய்துகொண்டே கேட்டேன்” என்று சொன்னாள்.

அதற்குப் பின் சீக்கிரத்திலேயே பைபிள் படிப்புக்கு ஷீலா ஒத்துக்கொண்டாள். எங்களுக்கு தலைப் பிள்ளை இறந்தே பிறந்தது. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என ராபின்ஸனிடம் கேட்டேன். அதற்கு அவர், இதற்காக கடவுளைக் குற்றப்படுத்த முடியாது என்றும், ஆதாம் ஏவாள் கீழ்ப்படியாமல் போனதாலும், அவர்களிடமிருந்து நாம் அபூரணத்தைச் சொத்தாகப் பெற்றதாலுமே இப்படி நடக்கிறது என்றும் பதிலளித்தார். அந்தப் பதில் என்னுடைய சந்தேகத்தைப் போக்கியது.

நான் ஃபர்னிச்சர் கடை வைத்திருந்தேன், ராபின்ஸன் அடிக்கடி அங்கு வந்து என்னிடம் பேசுவார். பேச்சு முழுவதும் என்னுடைய தொழிலைப் பற்றியே இருக்கும். ஆனாலும் பைபிளிலிருந்து எப்படியாவது ஒரு குறிப்பைச் சொல்லிவிட்டுத்தான் அங்கிருந்து அவர் கிளம்புவார். போகப் போக, ஃபர்னிச்சரைப் பற்றி பேசுவதைக் குறைத்துக்கொண்டு, கடவுளுடைய வார்த்தையைப் பற்றி அதிகம் பேச ஆரம்பித்தோம். ஒரு நாள் அவரிடம் என் மனதை சதா உறுத்திக்கொண்டிருந்த ஓரிரண்டு கேள்விகளைக் கேட்கத் தீர்மானித்தேன். இந்தக் கேள்விகளைக் கேட்ட மாத்திரத்தில் அவர் வாயடைத்துப் போய்விடுவார், “பெரிய பெரிய” பாதிரிமார்களையே பதம் பார்த்த கேள்விகள் அல்லவா என மனதில் நினைத்துக் கொண்டேன்.

பைபிளிலிருந்துதான் ராபின்ஸன் பதில் சொல்ல வேண்டும் என்பதை வலியுறுத்திய பிறகு, என்னுடைய முதல் கேள்விக் கணையை தொடுத்தேன், “கடவுளை யார் உண்டாக்கினார்?” சங்கீதம் 90:2-ஐ கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பிலிருந்து நெஸிப் வாசித்துக் காட்டினார். அது இவ்வாறு சொல்கிறது: “பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.” அவர் என்னைப் பார்த்து “இது என்ன சொல்கிறது பார்த்தீங்களா? யாருமே கடவுளை உண்டாக்கவில்லை; அவர் எப்போதும் இருக்கிறார்” என்றார். இந்தத் தெளிவான, நியாயமான பதில் என்னை வியக்க வைத்தது. அதனால், இத்தனை வருஷமாக என்னுள் புதைந்து கிடந்த கேள்விகளை எல்லாம் மடை திறந்த வெள்ளம் போல வரிசையாக கேட்க ஆரம்பித்தேன். பைபிளிலிருந்து அவர் கொடுத்த பதில்கள், முக்கியமாக இந்தப் பூமியைப் பரதீஸாக மாற்றுவதைப் பற்றிய கடவுளுடைய நோக்கம் என் மனதுக்கு இதமளித்தது; இதற்குமுன் இப்படிப்பட்ட சந்தோஷத்தை நான் அனுபவித்ததே இல்லை.

ராஜ்ய மன்றத்திற்கு முதன்முதலில் சென்றதுதான் என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. எப்படி? கூட்டத்திற்கு வந்திருந்தோர் பதில் சொன்னதைப் பார்த்தபோது மலைத்துப் போனேன்; இது போன்ற ஒன்றை சர்ச்சில் பார்த்ததே இல்லை. என் மனைவி ஊரில் இல்லாதிருந்ததால் கூட்டங்களுக்கு வரவில்லை. இதைப் பற்றி அவளிடம் சொன்னபோது, “இரண்டு பேரும் சேர்ந்து போவோம்” என்று சொன்னாள். இப்போது 55 வருஷங்களாக நாங்கள் தவறாமல் அவ்வாறே போய்க்கொண்டிருக்கிறோம்!

ஷீலாவும் நானும் 1949-⁠ல் அட்லாண்டிக் பெருங்கடலில் முழுக்காட்டுதல் பெற்றோம். 1953-⁠ல் நான் பயனியர் சேவையை ஆரம்பித்தேன். இரண்டு வருஷத்திற்குப் பிறகு ஷீலாவும் பயனியர் செய்ய ஆரம்பித்தாள். அன்றிலிருந்து இன்று வரை 50 வருஷங்களாக நாங்கள் முழுநேர சேவை செய்து வருகிறோம். 1958-⁠ல் நாங்கள் கிலியட் பள்ளியின் 31-⁠ம் வகுப்பில் கலந்துகொள்வதற்கு அழைப்பைப் பெற்றோம். அதன் பிறகு கயானாவிலேயே ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டோம். நாங்கள் 23 வருஷம் பயண ஊழியத்தில் சேவை செய்தோம், பிறகு விசேஷ பயனியர்களாக இன்று வரை சேவை செய்து வருகிறோம். ஆம், பால்ய வயது கேள்விகளுக்குக் கிடைத்த பதில்களுக்காக மட்டுமல்ல, அவருக்குச் சேவை செய்ய என்னையும் என் மனைவியையும் அனுமதித்ததற்காகவும் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்.

[பக்கம் 163-166-ன் பெட்டி/​படம்]

“இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்”

ஜாஸ்லின் ரமால்யோ (முன்பு ரோச்)

பிறந்தது: 1927

முழுக்காட்டப்பட்டது: 1944

பின்னணிக் குறிப்பு: இப்போது விதவையாக இருக்கும் இவர் தன் கணவருடன் பயண ஊழியத்தில் ஈடுபட்டதையும் சேர்த்து 54 வருஷம் முழுநேர சேவை செய்திருக்கிறார்.

நெவிஸ் என்ற கரீபியன் தீவில் பிறந்தேன். என் அம்மா மெத்தடிஸ்டு சர்ச்சைச் சேர்ந்தவர், ஒற்றைப் பெற்றோரான அவர் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். கடவுளைப் பற்றி எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அம்மாவுடைய வேலை காரணமாக, நாங்கள் அத்தீவிலுள்ள ஒரு குக்கிராமத்திற்குக் குடிமாறினோம். அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள மெத்தடிஸ்டு சர்ச்சுக்குப் போய் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தோம். கொஞ்ச நேரத்தில் அந்த இடத்திலிருந்து எழுந்துபோய் வேறெங்காவது உட்காரும்படி எங்களிடம் சொன்னார்கள், ஏனென்றால் அந்த பெஞ்சின் “சொந்தக்காரர்கள்” வந்துவிட்டார்களாம். இன்னொருவர் இரக்கப்பட்டு “அவருடைய” பெஞ்சில் உட்காருவதற்கு இடம் கொடுத்தார், இருந்தாலும் இனிமேல் இந்தச் சர்ச்சு பக்கமே போகக் கூடாதென அம்மா முடிவு செய்தார். எனவே ஆங்கிலிக்கன் சர்ச்சில் சேர்ந்து கொண்டோம்.

1940-களின் ஆரம்பத்தில் ஒரு ஃபிரெண்டைப் பார்க்க அம்மா போயிருந்தபோது செ. கிட்ஸ் தீவைச் சேர்ந்த ஒரு சாட்சியைச் சந்தித்தார்; அவர் சில பிரசுரங்களை அம்மாவிடம் கொடுத்தார். புத்தகப் புழுவான அம்மா அவற்றை ஆர்வமாகப் படித்தார், இதுதான் சத்தியம் என்பதையும் புரிந்துகொண்டார். அதற்குப் பிறகு சீக்கிரத்தில் அம்மா கல்யாணம் செய்துகொண்டார், அதனால் ட்ரினிடாட் தீவுக்கு எல்லாரும் குடிமாறினோம். அந்தச் சமயத்தில் நம் பிரசுரங்களுக்கு அங்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது, ஆனாலும் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக ராஜ்ய மன்றங்களுக்குப் போக முடிந்தது. சீக்கிரத்திலேயே ஆங்கிலிக்கன் சர்ச்சுக்குப் போவதை அம்மா நிறுத்திவிட்டு, யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்; என்னுடைய மாற்றான் தகப்பனான ஜேம்ஸ் ஹான்லியும் அதையே செய்தார்.

ட்ரினிடாட்டில் ரோஸ் கஃப்பி என்ற இளம் சகோதரியை நான் சந்தித்தேன். 11 வருஷங்களுக்குப் பிறகு மிஷனரி ஊழியத்தில் ரோஸ் என்னுடைய பார்ட்னராக இருப்பார் என அப்போது நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதற்கிடையே, யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற என் ஆசை அதிகரித்தது. முதன்முறையாக தனியே ஊழியத்திற்கு சென்றது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. முதல் வீட்டில் பேசப் போனபோது அந்த வீட்டுக்காரர் வெளியே வந்தாரோ இல்லையோ என் வாயிலிருந்து வார்த்தையே வெளிவரவில்லை. எவ்வளவு நேரம் அப்படியே நின்றுகொண்டிருந்தேன் என்று எனக்கே தெரியாது, அதற்குப் பிறகு பைபிளைத் திறந்து தானியேல் 2:44-ஐ வாசித்து விட்டு உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டேன்!

1950-⁠ல் நான் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன்; சுமார் இரண்டு வருஷத்திற்குப் பிறகு, கிலியட் பள்ளியின் 21-⁠ம் வகுப்பில் கலந்துகொள்ள அழைப்பைப் பெற்றபோது பூரித்துப் போனேன். மாணாக்கர்களில் மூன்று பேர் கயானாவுக்கு நியமிக்கப்பட்டோம்: ஒன்று நான்; கயானாவைச் சேர்ந்த ஃபிளாரன்ஸ் டாம்; என்னுடைய ரூம்மேட்டாக இருந்த லின்டர் லூரய். நவம்பர் 1953-⁠ல் நாங்கள் அங்குப் போய்ச் சேர்ந்தோம்; ஜார்ஜ் டவுனிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்கெல்டன் நகரில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டோம், இது கோரன்டைன் நதி கடலில் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. அங்கே ஒதுக்குப்புறத்திலிருந்த ஒரு சிறிய தொகுதி எங்கள் வரவை ஆவலோடு எதிர்நோக்கி இருந்தது.

ஸ்கெல்டன் பகுதியிலிருந்த பெரும்பாலோர் கிழக்கிந்தியர்கள், அவர்கள் இந்துக்களாகவோ இஸ்லாமியராகவோ இருந்தார்கள். பெரும்பாலும் படிக்காதவர்கள்தான்; அதனால் அவர்களிடம் நாங்கள் பேசும்போது அடிக்கடி இவ்வாறு சொல்வார்கள்: “சுருக்கமா, புரியுற மாதிரி சொல்லும்மா.” ஆரம்பத்தில் 20 முதல் 30 பேர் வரை கூட்டங்களுக்கு வந்தார்கள்; ஆனால் சிலருக்கு உண்மையான ஆர்வம் இல்லாததால் வருவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் எண்ணிக்கை குறைந்தது.

இந்தச் சமயத்தில் ஒரு பெண் சத்தியத்தில் நன்கு முன்னேறினாள்; வெளி ஊழியத்தில் கலந்து கொள்ள ஆசைப்பட்டாள். அவளை அழைத்துச் செல்ல குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்குப் போனபோதோ, அவளுடைய 14 வயது மகன்தான் டிரஸ் பண்ணிக்கொண்டு, என்னுடன் வருவதற்கு ரெடியாக இருந்தான். “மிஸ் ரோச், எனக்குப் பதிலாக ஃப்ரெடெரிக்கைக் கூட்டிட்டுப் போங்க” என்று அவனுடைய அம்மா சொன்னாள். ஆங்கிலிக்கன் சர்ச்சில் அதிக ஈடுபாடுள்ள அவளுடைய அப்பா அவளைப் பயங்கரமாக எதிர்த்ததைப் பிற்பாடு நாங்கள் தெரிந்துகொண்டோம். என்றாலும், அவளுடைய மகன் ஃப்ரெடெரிக் மக்கால்மன் ஆன்மீக விதத்தில் நன்கு முன்னேறினார். பிறகு, கிலியட் பள்ளியிலும் கலந்துகொண்டார்.​—⁠பக்கம் 170-⁠ல் உள்ள பெட்டியைக் காண்க.

பிற்பாடு ஹென்ரீட்டா என்ற இடத்தில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டேன். அங்கு பிரஸ்தாபியாக ஒரேயொரு சகோதரரே இருந்தார். அந்தப் பகுதி, சேரிட்டி சபையின் மேற்பார்வையின் கீழ் இருந்தது. ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட ரோஸ் கஃப்பி என்பவர் இங்கு என்னுடைய பயனியர் பார்ட்னரானார். ரோஸும் நானும் வாரத்தில் நான்கு நாட்கள் ஹென்ரீட்டாவில் ஊழியம் செய்வோம். வெள்ளிக்கிழமைகளில் காலையிலே சைக்கிளில் சேரிட்டி சபைக்குக் கிளம்பி விடுவோம்; அங்கு நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக மண் ரோட்டில் 30 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் பயணிப்போம். சமைத்து சாப்பிடுவதற்கான பொருட்களையும், பெட்ஷீட், கம்பளி, கொசு வலை எல்லாம் எடுத்துச் செல்வோம்.

போகும் வழியில் சாட்சி கொடுத்துக்கொண்டே செல்வோம், ஒதுக்குப்புறத்தில் இருந்த சில பிரஸ்தாபிகளையும் செயலற்ற ஒரு சகோதரியையும் உற்சாகப்படுத்துவதற்காக இடையில் பயணத்தை நிறுத்தி அவர்களது வீடுகளுக்குச் செல்வோம். நாங்கள் அவர்களோடு சேர்ந்து காவற்கோபுரத்தைப் படிப்பது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை ஹென்ரீட்டாவுக்குத் திரும்பி வந்து எங்களுடைய பைபிள் மாணாக்கர் எல்லாரையும் ஒன்று சேர்த்து காவற்கோபுர படிப்பை நடத்துவோம். எங்களுக்கு எந்தவித பெரிய அசம்பாவிதங்களும் நடந்ததே இல்லை, எப்போதாவது சைக்கிள் டயரில் காற்று இறங்குவது, மழையில் மாட்டிக்கொண்டு நனைந்துவிடுவது போன்ற சிறிய பிரச்சினைகள் இருக்கும், அவ்வளவுதான்.

எங்களுடைய சந்தோஷம் கொஞ்சமும் குறைவுபடாமல் இருந்தது. சொல்லப்போனால், ஒருநாள் எங்களிடம் ஒரு பெண் இப்படி சொன்னாள்: “நீங்க எப்போதும் சந்தோஷமாகவே இருக்கிறீங்க, உங்களுக்கு எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியலயே.” சந்தோஷத்தை மட்டுமல்ல ஊழியத்தில் அருமையான பலன்களையும் யெகோவா எங்களுக்குத் தந்தார். நாங்கள் சந்தித்த அந்தச் செயலற்ற சகோதரியும்கூட மீண்டும் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார். ஏறக்குறைய 50 வருஷத்திற்குப் பிறகு இப்போதும் அவர் உண்மையோடு சேவை செய்து வருகிறார்.

நவம்பர் 10, 1959-⁠ல் இம்மானுவல் ரமால்யோ என்ற ஒரு பயனியரை மணந்தேன். நாங்கள் இருவரும் ஸடி என்ற இடத்தில் சேவை செய்தோம், இது ஹென்ரீட்டாவிலிருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு இருக்கையில் நான் கர்ப்பமானேன், ஆனால் கருச்சிதைவு ஏற்பட்டது. ஊழியத்தில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொண்டதால் இந்த வேதனையை என்னால் சமாளிக்க முடிந்தது. பிற்பாடு எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். என்றாலும் தொடர்ந்து பயனியர் சேவை செய்து வந்தோம்.

1995-⁠ல் இம்மானுவல் இறந்து போனார். நாங்கள் இருவரும் சேர்ந்து பல பிராந்தியங்களில் யெகோவாவுக்குச் சேவை செய்திருக்கிறோம். சில சிறிய தொகுதிகள், மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் உடைய பெரிய சபைகளாக, அதுவும் சொந்த ராஜ்ய மன்றங்களை உடைய சபைகளாக வளர்ந்ததைக் காணும் பாக்கியத்தையும் பெற்றோம்! பயண வேலையில்கூட பத்து வருஷம் நாங்கள் செலவிட்டோம். இம்மானுவல் இல்லாததை நினைத்து ரொம்பவே கவலைப்பட்டாலும் யெகோவாவின் அன்பான ஆதரவும் சபையின் ஆதரவும் எனக்கு தொடர்ந்து அருமருந்தாய் இருந்து வருகிறது.

தமக்குச் சேவை செய்வதற்காக யெகோவா அழைத்தபோது ஏசாயா தீர்க்கதரிசி, “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று சொன்னார். (ஏசா. 6:8) தீர்க்கதரிசியின் இந்தச் சிறந்த மனப்பான்மையைப் பின்பற்ற நானும் இறந்துபோன என் கணவரும் அரும்பாடுபட்டோம். ஆம், ஏசாயாவைப் போல கஷ்டத்தையும் மனச்சோர்வையும்கூட நாங்கள் சகித்தோம். ஆனால் அவற்றோடு ஒப்பிட நாங்கள் அனுபவித்த சந்தோஷம் ஏராளம்.

[பக்கம் 170-173-ன் பெட்டி/​படம்]

என்னுடைய சொந்த நாட்டில் மிஷனரியாக

ஃப்ரெடெரிக் மக்கால்மன்

பிறந்தது: 1942

முழுக்காட்டப்பட்டது: 1958

பின்னணிக் குறிப்பு: கிலியட் பள்ளியில் கலந்துகொண்ட பிறகு கயானாவிலேயே ஊழிய நியமிப்பைப் பெற்றார். அவரும் அவரது மனைவி மார்ஷலின்டும் இப்போது ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்கிறார்கள்.

எனக்கு 12 வயதிருக்கும் போது ஜாஸ்லின் ரோச் (இப்போது ரமால்யோ) என்ற மிஷனரி என்னுடைய அம்மாவுக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார். நானும் அவர்களோடு பைபிள் படிப்பில் கலந்துகொண்டேன். பைபிள் படிப்பதை அம்மா பாதியிலே நிறுத்தி விட்டார், ஆனால் நானோ தொடர்ந்து படித்தேன், எல்லாக் கூட்டங்களுக்கும் போக ஆரம்பித்தேன். எனக்கு 14 வயதிருக்கும்போது சகோதரி ரோச்சும் மற்ற மிஷனரிகளான ரோஸ் கஃப்பி, லின்டர் லூரய் ஆகியோரும் என்னை ஊழியத்திற்குச் சைக்கிளில் அழைத்துச் செல்வார்கள். மிஷனரி ஊழியத்தில் அவர்களுக்கிருந்த ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டது; அதை அப்போது நான் உணரவேயில்லை.

யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து படிக்க ஆரம்பித்த சமயத்தில், ஆங்கிலிக்கன் சர்ச்சில் திடப்படுத்தல் பெறுவதற்காகவும் தயாராகிக் கொண்டிருந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில், “புனித” திரித்துவத்தைப் பற்றி பாதிரியார் கஷ்டப்பட்டு விளக்கிக் கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கொஞ்ச நேரம் கேட்ட பிறகு, ஒரு பைபிள் கோட்பாடாக இதை என்னால் நம்ப முடியாதென வெளிப்படையாகவே சொன்னேன். அவர் கொதித்துப்போய்: “நீ ஏதோ புஸ்தகங்களை வாசிக்கிறேன்னு எனக்குத் தெரியும், அதை வாசிச்சா உனக்குத்தான் ஆபத்து. அதை வாசிக்கிறதை நிறுத்து. திரித்துவத்த நீ நம்பித்தான் ஆகணும்” என்று சொன்னார். அன்றோடு கடைசி, ஆங்கிலிக்கன் சர்ச்சுப் பக்கம் போகவே இல்லை, ஆனால் யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்ந்து படித்தேன். 1958-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றேன்.

செப்டம்பர் 1963-⁠ல் விசேஷ பயனியராகச் சேவை செய்யும்படி கிளை அலுவலகத்திலிருந்து எனக்குக் கடிதம் வந்தது. அதை ஏற்றுக்கொண்டேன். கோரன்டைன் நதிக்கு அருகிலுள்ள ஃபைரைஷ் சபை பகுதியில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டேன், வால்டர் மக்பின் என்பவர் என்னுடைய பார்ட்னராக இருந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து அந்தப் பகுதி முழுவதிலும் ஊழியம் செய்தோம். அது அடுத்த நியமிப்புக்குச் செல்ல எங்களைத் தயார்படுத்தியது; அதாவது பாரடைஸ் சபைக்கு நாங்கள் மாற்றப்பட்டோம், 1964-⁠ல் நாங்கள் அங்குச் சென்றபோது பத்துப் பிரஸ்தாபிகளே இருந்தனர். நாங்கள் நான்கு வருஷத்திற்கும் மேல் அங்குப் பயனியர் ஊழியம் செய்தோம், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்ததையும் கண்டோம்.

1969-⁠ல் கிலியட் பள்ளியின் 48-⁠ம் வகுப்பில் கலந்துகொள்வதற்கு அழைப்பைப் பெற்றேன். அதே வருஷத்தில் புரூக்ளின் பெத்தேலில் ஒரு ‘கெஸ்ட்’ ஆக தங்கி “பூமியில் சமாதானம்” என்ற 1969-⁠ம் வருட சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தபோது பூரித்துப் போனேன். உத்தம சகோதர சகோதரிகள் பலரைச் சந்தித்தேன்; அது எப்பேர்ப்பட்ட ஆன்மீக மகிழ்ச்சி தரும் சந்தர்ப்பமாக இருந்தது! ஆளும் குழு உறுப்பினரான ஃப்ரெடெரிக் டபிள்யூ. ஃபிரான்ஸ் எங்களை அவருடைய ரூமுக்கு அழைத்ததை என்னால் மறக்கவே முடியாது. அவரிடம் எக்கச்சக்கமான புத்தகங்கள் இருந்ததால் அவர் எங்குப் படுப்பார் என யோசித்தேன்! கடவுளுடைய வார்த்தையில் தேறிய மற்றொரு மாணாக்கர், யுலிஸிஸ் கிளாஸ் என்பவர்; இவர் கிலியட் பள்ளி ஆசிரியர்களில் ஒருவர். “திறம்பட எழுதுவதற்கும் போதிப்பதற்கும் அடிப்படையாக இருப்பவை மூன்று: திருத்தம், சுருக்கம், தெளிவு ஆகியவையே” என அவர் சொன்னது இன்னும் என் காதில் எதிரொலிக்கிறது.

கயானாவிலேயே ஊழிய நியமிப்பைப் பெறப் போவதை அறிந்ததும் சோர்ந்து போனது என்னவோ உண்மைதான். என்னைப் பொறுத்தவரை கயானா என்னுடைய வீடுபோல் இருந்தது, இங்கு ஊழியம் செய்வது ஓர் அயல் நாட்டில் ஊழியம் செய்வதுபோல் இருக்காது. ஆனாலும், சகோதரர் கிளாஸ் என்னைத் தனியே அழைத்துக்கொண்டு போய், காரியங்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு உதவினார். கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்ததே ஒரு பெரிய சிலாக்கியம் என்பதை அவர் எனக்கு நினைப்பூட்டினார்; அதோடு கயானாவின் வேறொரு பகுதியில் எனக்கு ஊழிய நியமிப்பு கிடைத்தால் அது அயல்நாடு மாதிரிதானே இருக்கும் என்றும் சொன்னார். அவர் சொன்னது முழுக்க முழுக்க சரி; ஏனென்றால் பாமரூன் நதிக்கு அருகேயுள்ள பகுதியில் சேரிட்டி சபையுடன் சேர்ந்து ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டேன். அந்தச் சமயத்தில் அச்சபையில் ஐந்து பிரஸ்தாபிகளே இருந்தனர்.

எனக்கும் என்னுடைய பார்ட்னரான ஆல்பர்ட் டால்பட்டுக்கும் நதியில் பயணம் செய்து பழக்கமில்லை, ஆகவே நாங்கள் படகு ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இதைக் கற்றுக்கொள்வது ரொம்ப எளிது என்பதுபோல் தோன்றலாம், ஆனால் அது படுகஷ்டம். நீரோட்டத்தையும் காற்றையும் கவனத்தில் வைத்து படகை ஓட்டாவிட்டால் ஒரே இடத்தில்தான் இருந்துகொண்டிருப்போம், அல்லது ஏதோவொரு திசையில் போய்க்கொண்டிருப்போம். நல்ல வேளையாக, எங்களுக்கு அருமையான உதவி கிடைத்தது; அந்த ஊரில் இருந்த ஒரு சகோதரி நாங்கள் நன்கு கற்றுக்கொள்ள பெரிதும் உதவினார்.

பத்து வருஷம் நாங்கள் துடுப்பு வலித்து படகை ஓட்டி பிரயாணம் செய்தோம். அதற்குப் பின் உள்ளூர்வாசி ஒருவர் தன்னுடைய மோட்டாரை சபைக்கு விற்க முன்வந்தார், ஆனால் அதை வாங்க எங்களிடம் போதுமான பணம் இருக்கவில்லை. அச்சமயத்தில் அதை வாங்குவதற்கென்றே ஒரு ‘செக்’கை கிளை அலுவலகம் அனுப்பியபோது நாங்கள் எந்தளவுக்குச் சந்தோஷப்பட்டிருப்போம் என்பதை உங்களாலும் கற்பனை செய்து பார்க்க முடியும். சொல்லப்போனால், பல சபைகளைச் சேர்ந்தவர்களும் எங்களுடைய தேவையைப் பற்றி கேள்விப்பட்டு எங்களுக்கு உதவ விரும்பினார்களாம். பிற்பாடு, இன்னும் சில படகுகளை வாங்கினோம்; அவை எல்லாவற்றிற்கும் கிங்டம் புரொக்ளேமர் என்று பெயரிட்டு, ஒவ்வொன்றையும் அடையாளம் கண்டுகொள்வதற்காக அதற்கு 1, 2, 3 என்று வரிசையாக நம்பரும் கொடுத்தோம்.

பல பயனியர் பார்ட்னர்களுடன் ஊழியம் செய்த பிறகு கடைசியில் நிரந்தர வாழ்க்கைப் பார்ட்னரைச் சந்தித்தேன். அவளுடைய பெயர் மார்ஷலின்ட் ஜான்சன், மக்கன்ஸி சபையில் விசேஷ பயனியராக ஊழியம் செய்து வந்தாள். அவளுடைய அப்பா யூஸ்டஸ் ஜான்சன், கயானாவில் பிரபலமானவர்; மரிப்பதற்கு முன்பு வரை சுமார் பத்து வருஷம் பயணக் கண்காணியாக அவர் சேவை செய்திருந்தார். இப்போது மார்ஷலின்டும் நானும் ஒழுங்கான பயனியர்களாகச் சேவை செய்து வருகிறோம். நாங்கள் இருவரும் சேர்ந்து மொத்தம் 72 வருஷம் முழுநேர சேவை செய்திருக்கிறோம், அதில் 55 வருஷம் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்திருக்கிறோம். அந்தக் காலப் பகுதியில் எங்களுக்கு ஆறு பிள்ளைகள் பிறந்தனர், அவர்களையும் வளர்த்து ஆளாக்கினோம்.

ஊழியத்திலும்கூட எங்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். உதாரணமாக, 1970-களின் ஆரம்பத்தில், பாமரூன் ஆற்றோரத்தில் சாட்சி கொடுக்கையில் ஓர் இளம் டெய்லரை சந்தித்தோம், பைபிள் படிப்புக்கு அவர் ஒத்துக்கொண்டார். நன்கு படித்தார். பைபிள் புத்தகங்களின் பெயர்களை மனப்பாடம் செய்யும்படி அவரிடம் சொன்னோம். ஒரு வாரத்திலேயே அவற்றை எல்லாம் மனப்பாடம் செய்துவிட்டார், அதுமட்டுமா அவற்றின் பக்க எண்களைக்கூட பாராமல் சொன்னார்! அவரும் அவரது மனைவியும், அவர்களுடைய ஒன்பது பிள்ளைகளில் ஏழு பேரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். நானும் அந்தச் சகோதரரும் சேரிட்டி சபையில் மூப்பர்களாகச் சேவை செய்கிறோம். ஆரம்பத்தில் ஆர்வமுள்ள அந்த மிஷனரிகள் மட்டும் அருமையான முன்மாதிரி வைத்திருக்காவிட்டால் இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை நான் கனவிலும்கூட நினைத்துப் பார்த்திருக்க முடியாது.

[பக்கம் 176-177-ன் பெட்டி/​படம்]

கடிதம் மூலம் கடவுளுடைய வார்த்தையைப் படித்தேன்

மானிக்கா ஃபிட்ஸ்ஸலன்

பிறந்தது: 1931

முழுக்காட்டப்பட்டது: 1974

பின்னணிக் குறிப்பு: ஒதுக்குப்புற பகுதியில் வசித்த இவர் இரண்டு வருடங்கள் கடிதம் மூலம் பைபிளைப் படித்தார். படித்தவற்றை அங்கிருந்த அமெரிக்க இந்தியர்கள் எல்லாரிடமும் சொன்னார். இப்போது கண்பார்வை இழந்த இவர் ஊழியத்திற்காக பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்கிறார்.

அமெரிக்க இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாராமூரி என்ற இடத்தில் நான் குடியிருக்கிறேன். இந்த இடம் கயானாவின் வடமேற்கு மாவட்டத்தில் மாரூக்கா நதியோரப் பகுதியில் உள்ளது. 1970-களின் ஆரம்பத்தில் நான் சத்தியத்தைப் படிக்க ஆரம்பித்த சமயத்தில் பாமரூன் நதிப் பகுதியிலிருந்த சேரிட்டி சபைதான் பக்கத்தில் இருந்த சபை. அங்குப் போய் சேருவதற்கு ஒரு விசேஷ படகில் 12 மணிநேரம் பயணிக்க வேண்டும்.

சேரிட்டியில் நான் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தபோது, யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தேன். ஃப்ரெடெரிக் மக்கால்மன் எனக்கு காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைத் தந்தார். நான் அதை வாங்கி, வீட்டிற்குக் கொண்டுபோய் அலமாரியில் வைத்து விட்டேன்; இரண்டு வருஷம் அது அங்கே அப்படியே இருந்தது. பிற்பாடு ஒருசமயம் எனக்குச் சுகமில்லாமல் போய்விட்டது; கொஞ்ச காலத்திற்கு படுத்த படுக்கையாகி விட்டேன், அதனால் ரொம்பவே மனமொடிந்து போனேன். அப்போதுதான் இந்தப் பத்திரிகைகளைப் பற்றிய ஞாபகம் வந்தது. அவற்றைப் படித்தேன், இதுதான் சத்தியம் என்பதை உடனடியாகப் புரிந்துகொண்டேன்.

கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில்தான் என் கணவர் யூஜினுக்கும் வேலையில்லாமல் இருந்தது. அதனால் அவர் வேலை தேடி சேரிட்டிக்குப் போக நினைத்தார். அதற்குள் என் உடல்நிலையும் கொஞ்சம் தேற ஆரம்பித்திருந்தது, அதனால் நானும் அவருடன் போனேன். என்றாலும், என்னுடைய முக்கிய குறிக்கோள் யெகோவாவின் சாட்சிகளைக் கண்டுபிடிப்பதுதான். அவர்களுக்காக நான் ரொம்ப தேடி அலைவதற்கு அவசியம் இருக்கவில்லை, நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கே யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரு பெண்மணி வந்தார். “நீங்கள் காவற்கோபுரம் பத்திரிகை கொடுக்கும் ஆட்களா?” என்று கேட்டேன். ஆம், என்று பதிலளித்ததும், இரண்டு வருஷத்திற்கு முன் மார்க்கெட்டில் நான் சந்தித்த அந்த நபரைப் பற்றி விசாரித்தேன். உடனே அந்தப் பெண்மணி பக்கத்தில் சில பிரஸ்தாபிகளோடு ஊழியம் செய்துகொண்டிருந்த ஃப்ரெடெரிக் மக்கால்மனைக் கண்டுபிடித்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்.

அவர்கள் இருவரும் நான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார்கள். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பு நடத்தும் விதத்தை சகோதரர் மக்கால்மன் எனக்குச் செய்து காட்டினார். நான் பைபிள் படிப்பதற்குச் சம்மதித்தேன். நானும் யூஜினும் வாராமூரிக்குத் திரும்ப வேண்டியிருந்ததால், கடிதம் மூலம் பாடங்களைப் படித்தேன். இப்படியாக சத்தியம் புத்தகத்தையும் “கடவுள் பொய்ச் சொல்லக் கூடாததாயுள்ள காரியங்கள்” என்ற புத்தகத்தையும் படித்தேன். சத்தியம் புத்தகத்தைப் படிக்கும்போது ஆங்கிலிக்கன் சர்ச்சிலிருந்து விலகிக்கொள்வதாகக் கடிதம் எழுதிக்கொடுத்தேன், அதன் பிறகு முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியானேன். ஆனால் சர்ச் பாதிரியார், “யெகோவாவின் சாட்சிகள் சொல்வதைக் கேட்க வேண்டாம். அவர்களுக்கு பைபிளைப் பற்றி ஒன்றும் தெரியாது. இதைப் பற்றி நேரில் வந்து பேசுகிறேன்” என பதில் கடிதம் எழுதி அனுப்பினார். ஆனால் அவர் வரவே இல்லை.

அந்த ஒதுக்குப்புற பகுதியில் இருந்த ஒரே பிரஸ்தாபி நான்தான்; எனவே கற்றுக்கொண்ட விஷயங்களை அக்கம்பக்கத்தாரிடம் சொன்னேன். என் கணவரிடமும் சொன்னேன். நான் முழுக்காட்டுதல் பெற்ற மறுவருஷமே அவரும் முழுக்காட்டுதல் பெற்றார் என்பதைச் சொல்வதில் எனக்குச் சந்தோஷம். இன்று இங்குள்ள 14 பிரஸ்தாபிகளில் யூஜினும் ஒருவர்.

சமீபத்தில் க்ளாக்கோமா, கேட்டராக்ட் இரண்டும் என் கண்களைப் பாதித்ததால் பார்வை இழந்தேன். அதனால் ஊழியத்திற்காக இப்போது பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்கிறேன். இருந்தாலும், யெகோவாவுக்கு இன்னும் சேவை செய்ய முடிகிறதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

[பக்கம் 181-183-ன் பெட்டி/​படங்கள்]

என் “இருதயத்தின் வேண்டுதல்களுக்கு” யெகோவா பதிலளித்தார்

ரூபி ஸ்மித்

பிறந்தது: 1959

முழுக்காட்டப்பட்டது: 1978

பின்னணிக் குறிப்பு: கரீப் இனத்தை சேர்ந்த இவர் அமெரிக்க இந்தியர்​களுக்கு ஒதுக்கப்பட்ட இடமான பாராமிட்டாவில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் முக்கிய பங்காற்றினார். இந்த இடம் கயானா நாட்டின் உட்புறத்தில் அமைந்துள்ளது.

1975-⁠ல்தான் முதன்முதலாக யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு ஏற்பட்டது. அப்போது எனக்கு 16 வயது. என் பாட்டிக்கு, அவருடைய மாற்றான் மகன் மூலம் ஒரு துண்டுப்பிரதி கிடைத்தது. அது ஆங்கிலத்தில் இருந்ததால் அதை மொழிபெயர்த்து சொல்லும்படி என்னிடம் பாட்டி கேட்டார். பைபிள் வாக்குறுதிகளைப் பற்றி அதில் சொல்லப்பட்டிருந்ததைப் பார்த்து எனக்கு ஒரே ஆச்சரியம்! அதிலிருந்த கூப்பனைப் பூர்த்தி செய்து கிளை அலுவலகத்திற்கு அனுப்பினேன். கேட்டு எழுதியிருந்த பிரசுரங்கள் எல்லாம் கிடைத்ததும் அவற்றைப் படித்தேன்; அவற்றிலிருந்து தெரிந்துகொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பித்தேன். முதலில் பாட்டியிடமும் சித்தியிடமும் சொன்னேன். ஆனால் நான் இப்படி செய்ததெல்லாம் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை.

சீக்கிரத்தில், பாட்டியும் சித்தியும் சாட்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். இதனால், பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதற்குக் கிராமவாசிகள் சிலர் எங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். இதற்கிடையே நான் விஷயங்களை அதிகமாகக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது, யெகோவாவுக்குப் பிரியமான விதத்தில் வாழ்வதற்கு நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டேன். ஆகவே, அப்பாவுடைய ஒர்க் ஷாப்பிலிருந்து ஒரு பொருளை நான் திருடியிருந்ததால் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது; சண்டை போட்டிருந்த என் தம்பியோடு மீண்டும் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருந்தது. அதற்காக நான் ரொம்ப ஜெபம் செய்தேன், கடைசியில் அந்த இரண்டு காரியங்களையும் என்னால் செய்ய முடிந்தது.

இதற்கிடையில் எங்களுடைய ஏரியாவில் ஊழியம் செய்ய ஷீக் பாக்ஷ் என்ற ஒரு விசேஷ பயனியரை கிளை அலுவலகம் நியமித்திருந்தது. என்றாலும் சகோதரர் பாக்ஷால் அதிகக் காலம் இங்குத் தங்க முடியவில்லை; ஆகவே அவரும் சகோதரர் யூஸ்டஸ் ஸ்மித்தும் கடிதம் மூலம் எனக்குப் படிப்பு நடத்தினார்கள்; பிற்பாடு ஸ்மித் என் கணவரானார்.

1978-⁠ல் “வெற்றிகரமான விசுவாசம்” என்ற மாநாட்டில் கலந்துகொள்ள ஜார்ஜ் டவுனுக்குப் போனேன். அங்குப் போய்ச் சேர்ந்ததும், நேராக கிளை அலுவலகத்திற்குச் சென்று நான் முழுக்காட்டுதல் எடுக்க விரும்புவதாகச் சொன்னேன். முழுக்காட்டுதல் எடுக்க விரும்புவோரிடம் கலந்தாலோசிக்கப்படும் கேள்விகளை என்னோடு கலந்தாலோசிக்க ஆல்பர்ட் ஸ்மால் என்பவரை கிளை அலுவலகத்தார் ஏற்பாடு செய்தார்கள். யெகோவாவின் ஊழியக்காரியாக முழுக்காட்டுதல் பெற்று பாராமிட்டாவுக்குத் திரும்பியபோது எவ்வளவாய் சந்தோஷப்பட்டேன்!

மிகுந்த ஆர்வத்தோடு நான் உடனடியாக பிரசங்க வேலையில் இறங்கினேன். நிறைய பேர் அக்கறை காட்ட ஆரம்பித்தார்கள், ஆகவே வணக்கத்திற்காகக் கூடிவருவதற்கு ஒரு சிறிய இடம் கட்டுவதைப் பற்றி அவர்களில் சிலரிடம் சொன்னேன். அங்கே, எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆங்கில காவற்கோபுரத்தை நான் கரீப் பாஷையில் மொழிபெயர்த்தேன். என்றாலும், நான் செய்தது எதுவுமே அப்பாவுக்குப் பிடிக்கவில்லை, ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டை விட்டு வெளியே போகவே கூடாது என்று அவர் கண்டித்தார். அதனால் கட்டுரைகளை இரகசியமாக டேப் செய்தேன். என்னுடைய அண்ணன் அவற்றைக் கூட்டங்களில் போட்டுக் காட்டினார். அதற்குள்ளாகச் சுமார் 100 பேர் தவறாமல் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள்.

அதன் பிறகு சீக்கிரத்திலேயே பிசினஸ் காரணமாக எங்கள் குடும்பம் ஜார்ஜ் டவுனுக்கு குடிமாறியது. பாட்டியோ மாத்யூஸ் ரிஜ் என்ற கிராமத்திற்குக் குடிமாறிப் போனார். என்னுடைய சித்தி பாராமிட்டாவிலேயே தங்கிவிட்டார், ஆனால் நற்செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வதை நிறுத்திவிட்டார். ஆகவே அங்குப் பிரசங்க வேலை சிறிது காலத்திற்கு முடங்கிவிட்டது.

ஜார்ஜ் டவுனில் யூஸ்டஸ் ஸ்மித்தை நேரில் சந்தித்தேன், கொஞ்சக் காலத்திற்குப் பிறகு நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். யூஸ்டஸுக்கு கரீப் பாஷை தெரியாது, இருந்தாலும் அவரும் நானும் பாராமிட்டாவுக்குப் போய் அங்குள்ளவர்களின் ஆர்வத்தை மீண்டும் தூண்டுவதற்கு விரும்பினோம். 1992-⁠ல் எங்களுடைய ஆசை நிறைவேறியது. நாங்கள் அங்குப் போய்ச் சேர்ந்ததுமே ஊழியத்தில் மும்முரமாக இறங்கினோம், கூட்டங்களை நடத்தினோம். சீக்கிரத்திலேயே கிட்டத்தட்ட 300 பேர் கூடிவர ஆரம்பித்தார்கள்!

காவற்கோபுர படிப்புக்குப் பிறகு எழுதப் படிக்க கற்றுக்கொடுக்கும் வகுப்பையும் நடத்தினோம். பாடம் நடத்துவதற்கு எங்களுடைய முதல் மகள் யோலன்ட் உதவினாள். அப்போது அவளுக்கு 11 வயதுதான், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாகவும் இருந்தாள். இன்று, அவளும் எங்களுடைய இரண்டாவது மகள் மெலிசாவும் ஒழுங்கான பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள்.

1993-⁠ல் யெகோவாவின் ஆசீர்வாதத்தால் பாராமிட்டாவில் ஒரு ராஜ்ய மன்றம் கட்டப்பட்டது. கரீப் பாஷை பேச முடிகிற, சபையை முன்னின்று வழிநடத்த முடிகிற ‘மனிதரில் வரங்களையும்’ அவர் எங்களுக்கு அளித்தார். (எபே. 4:⁠8) ஏப்ரல் 1, 1996 முதற்கொண்டு நாங்கள் பாராமிட்டா சபை அங்கத்தினரானோம். என்னுடைய அம்மா, பாட்டி, அண்ணன், தங்கை, தம்பிமார் எல்லாரும் அந்தச் சபையில்தான் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். உண்மையிலேயே என் “இருதயத்தின் வேண்டுதல்களுக்கு” யெகோவா பதிலளித்தார்.​—⁠சங். 37:4.

[படங்கள்]

இன்று நானும் யூஸ்டஸும்

[பக்கம் 148-149-ன் அட்டவணை/​படம்]

கயானா கால வரலாறு

1900: சீயோனின் காவற்கோபுரத்தையும் பிற பைபிள் பிரசுரங்களையும் ஆட்கள் வாசிக்கவும் கலந்தாலோசிக்கவும் ஆரம்பிக்கிறார்கள்.

1910

1912: ஜார்ஜ் டவுனிலும் புதிய ஆம்ஸ்டெர்டாமிலும் கூடிவந்த நூற்றுக்கணக்கானோருக்கு முன்பு இ. ஜெ. காயர்ட் பேச்சுகள் கொடுக்கிறார்.

1913: கூட்டம் நடத்துவதற்கு சமர்செட் வீட்டில் ஓர் அறை வாடகைக்கு எடுக்கப்படுகிறது. 1958 வரை அது பயன்படுத்தப்படுகிறது.

1914: ஜார்ஜ் டவுனில் முதல் கிளை அலுவலகம் ஆரம்பிக்கப்படுகிறது.

1917: குருமாரின் வற்புறுத்தலால் சில பிரசுரங்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கிறது.

1922: தடை நீக்கப்படுகிறது. ஜார்ஜ் யங் சந்திக்கிறார்.

1940

1941: காவற்கோபுரம், ஆறுதல் (இப்போது விழித்தெழு!) ஆகிய பத்திரிகைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

1944: யெகோவாவின் சாட்சிகளுடைய எல்லாப் பிரசுரங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

1946: ஜூன் மாதத்தில் தடை நீக்கப்படுகிறது. முதன்முதலாக கிலியட் மிஷனரிகள் வருகிறார்கள்.

1950-கள்:கயானா நாடு முழுவதிலும் புதிய உலக சமுதாயம் செயலில் என்ற ஆங்கில படக்காட்சி காட்டப்படுகிறது.

1960: கிளை அலுவலகம் ஜார்ஜ் டவுனில் ஒரு கட்டடத்தை வாங்குகிறது. அது கிளை அலுவலகமாகவும் மிஷனரி இல்லமாகவும் செயல்பட ஆரம்பிக்கிறது.

1967: பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 1,000-தைத் தாண்டுகிறது.

1970

1988: அதே இடத்தில் புதிய கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

1995: துரித கட்டுமான திட்டத்தில் முதல் ராஜ்ய மன்றம் கட்டி முடிக்கப்படுகிறது.

2003: ஒரு புதிய இடத்தில் தற்போதைய கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

2004: கயானாவில் 2,163 பிரஸ்தாபிகள் சுறுசுறுப்பாக ஊழியம் செய்கிறார்கள்.

[வரைபடம்]

(பிரசுரத்தைக் காண்க)

மொத்த பிரஸ்தாபிகள்

மொத்த பயனியர்கள்

2,000

1,000

1910 1940 1970 2000

[பக்கம் 141-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கயானா

பாராமிட்டா

ஹாக்னி

சேரிட்டி

ஹென்ரீட்டா

ஸடி

ஜார்ஜ் டவுன்

மஹைக்கோனி

சோயஸ்டிக்

பார்திகா

யருனி

புதிய ஆம்ஸ்டெர்டாம்

மக்கன்ஸி

விஸ்மர்

ஸ்கெல்டன்

பர்பிஸ்

ஒரியல்லா

லெதம்

இஸகிபோ

டெமராரா

பர்பிஸ்

கோரன்டைன்

வெனிசுவேலா

பிரேசில்

சூரினாம்

[பக்கம் 134-ன் முழுபக்க படம்]

[பக்கம் 137-ன் படம்]

இவான்டர் ஜே. காயர்ட்

[பக்கம் 138-ன் படம்]

கயானாவில் ஜார்ஜ் டவுனிலுள்ள சமர்செட் வீடு, 1913 முதல் 1958 வரை கூட்டம் நடத்தப்பட்ட இடம்

[பக்கம் 139-ன் படம்]

ஜார்ஜ் யங்

[பக்கம் 146-ன் படம்]

1946-⁠ல் ஃப்ரெடெரிக் ஃபிலிப்ஸ், நேதன் நார், வில்லியம் டிரேஸி

[பக்கம் 147-ன் படம்]

ஜூன் 1946-⁠ல் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது, அத்துடன் கயானாவில் நமது பிரசுரங்கள் மீதான தடை நீக்கப்பட்டது

[பக்கம் 152-ன் படம்]

1954-⁠ல் நேதன் நார், ரூத் மில்லர், மில்டன் ஹென்ஷல், ஆலிஸ் டிரேஸி (முன்பு மில்லர்), டெய்ஸி ஹெமவே, ஜான் ஹெமவே தம்பதியர்

[பக்கம் 153-ன் படம்]

ஜான் பான்டிங்

[பக்கம் 154-ன் படம்]

ஜெரால்டின், ஜேம்ஸ் தாம்ஸன் இருவரும் 26 வருடங்கள் கயானாவில் சேவை செய்தனர்

[பக்கம் 168-ன் படம்]

படகில் தொகுதியாகச் சென்று சாட்சி கொடுத்தல்

[பக்கம் 169-ன் படம்]

“கிங்டம் புரொக்ளேமர் 3”-⁠ல் சென்று மாரூக்கா நதியோரங்களில் பிரசங்கிக்கிறார்கள்

[பக்கம் 175-ன் படம்]

ஜெரி முரேயும் டெல்மா முரேயும்

[பக்கம் 178-ன் படம்]

ஃப்ரெடெரிக் மக்கால்மனும் யூஜினும் மானிக்கா ஃபிட்ஸ்ஸலனும் படகை பழுதுபார்க்கும் ஓர் அமெரிக்க இந்தியருக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள்

[பக்கம் 184-ன் படம்]

2003-⁠ல் பாராமிட்டாவில் வட்டார மாநாடு

[பக்கம் 185-ன் படங்கள்]

பாராமிட்டா மாவட்டத்தில் அநேகர் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்

[பக்கம் 186-ன் படம்]

விசேஷ தோணியில் சென்று சாட்சி கொடுக்கிறார்கள்

[பக்கம் 188-ன் படம்]

ஷெர்லாக் பாஹாலானும் ஜூலியட் பாஹாலானும்

[பக்கம் 191-ன் படங்கள்]

கயானா​—⁠“பயனியர்களின் பரதீஸ்”

[பக்கம் 194-ன் படம்]

கயானாவில், ஓரியெல்லாவிலுள்ள ராஜ்ய மன்றம்

[பக்கம் 197-ன் படம்]

ஜார்ஜ் டவுனில், ‘50 பிரிக்டாம்’ தெருவிலிருந்த பழைய கிளை அலுவலகம், 1987-⁠ல் கட்டி முடிக்கப்பட்டது

[பக்கம் 199-ன் படம்]

கிளை அலுவலகக் குழு, இடமிருந்து வலமாக: எட்சல் ஹேசல், ரிக்கார்டோ ஹைன்ட்ஸ், எடின் சில்ஸ்

[பக்கம் 200, 201-ன் படம்]

கயானாவில் புதிதாகக் கட்டப்பட்ட கிளை அலுவலகம்