Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகளாவிய அறிக்கை

உலகளாவிய அறிக்கை

உலகளாவிய அறிக்கை

◼ ஆசியாவும் மத்திய கிழக்கு நாடுகளும்

நாடுகளின் எண்ணிக்கை: 47

மக்கள் தொகை: 389,61,82,946

பிரஸ்தாபிகள்: 5,82,360

பைபிள் படிப்புகள்: 4,53,069

கிர்கிஸ்தான்: ஸ்வெட்லானா என்ற சகோதரி துணைப் பயனியர் ஊழியம் செய்துவந்தார்; தனது பிராந்தியத்தில் ஒரு வீட்டில் மட்டும் யாரையுமே ஒருபோதும் அவரால் சந்திக்க முடியவில்லை. ஒருநாள் அந்த வீட்டுப் பக்கமாகப் போனபோது, யாருமே வீட்டில் இருக்க மாட்டார்கள் என்பதால் அங்கே போவதில் எந்தப் பிரயோஜனமுமில்லை என நினைத்தார். என்றாலும், மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாமென தீர்மானித்து அந்த வீட்டுக்குச் சென்றார். அங்கே ஓர் இளம் பெண்ணைப் பார்த்ததும் அவருக்கு ஒரே ஆச்சரியம், சந்தோஷம். நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று அறிந்ததும் அந்த இளம் பெண் பூரித்துப்போனாள்; அவள் இதற்குமுன் பைபிள் படித்து வந்ததாகவும், ஆனால் சகோதரர்களுடைய தொடர்பில்லாமல் போனதாகவும் கூறினாள். தவறாமல் பத்திரிகைகள் படிக்க விருப்பமா என அந்தப் பெண்ணிடம் ஸ்வெட்லானா கேட்டார், வெறுமனே பத்திரிகைகள் தருவது மட்டுமல்ல, தவறாமல் பைபிள் படிப்பும் நடத்த வேண்டுமென்று அவள் சொன்னாள்! உடனடியாக படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, இப்பொழுது கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் தவறாமல் வருகிறாள்.

ஜப்பான்: இரண்டு சகோதரிகள் பிஸினஸ் பிராந்தியத்தில் ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் பிரபலமான வக்கீல் ஒருவருடைய ஆபீஸுக்குள் நுழைந்தார்கள். அங்கிருந்த ஒரு பெண் பிஸியாக இருப்பதாக சொன்னாள், என்றாலும் பத்திரிகைகளை வாங்கிக்கொண்டு அவர்களை உடனடியாக வெளியே அனுப்பிவிட்டாள். அந்தப் பெண்ணை எப்படியும் சந்தித்துப் பேச வேண்டும் என்பதற்காக மீண்டும் சென்றபோது அவள் தனியாக இருந்தாள். அவளுக்கு வணக்கம் சொல்வதற்குள், அவள் கோபமாக இவ்வாறு கேட்டாள்: “ஏன் அப்பாவி பிள்ளைகள் கொலை செய்யப்படுகிறார்கள்? ஏன் இந்த உலகம் இப்படி இருக்கிறது? எனக்கு நம்பகமான பதில் தேவை! உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்!” சர்வலோக பேரரசுரிமை பற்றிய விவாதத்தை ஒருமணி நேரமாக பேசிக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் மனநிலை படிப்படியாக மாறியது. ஒருவருமே பதில் சொல்ல முடியாது என்று அவள் நினைத்திருந்த கேள்விகளுக்கு பைபிளைப் பயன்படுத்தி பதில் சொன்னதற்கு நன்றி கூறினாள். அந்தச் சகோதரிகள் அங்கிருந்து கிளம்பியபோது, அந்தப் பெண் தனது வீட்டு விலாசத்தையும் தொலைபேசி எண்ணையும் அவர்களிடம் கொடுத்து இவ்வாறு கூறினாள்: “பொதுவாக, எனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே நான் இதை கொடுப்பேன், ஆனால் நீங்கள் வித்தியாசமானவர்கள். நான் உங்களிடம் மீண்டும் பேச விரும்புகிறேன். நாம் பேசிய விஷயங்கள் சாதாரண விஷயங்கள் அல்ல.” பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

நேப்பாளம்: ஒரு பெண்மணி பல வருடங்களாக சர்ச்சுக்குப் போய்வந்தாள், ஆனால் அங்குள்ள அங்கத்தினர்கள் மத்தியில் பேராசையும் சண்டை சச்சரவுகளும் நிறைந்திருந்ததைப் பார்த்து சோர்ந்து போயிருந்தாள். அவளுடைய கணவர் ஒரு பாஸ்டராக இருந்தார், ஆனால் ஒரு சமயத்தில் காணிக்கைகளைக் குறித்து சச்சரவு எழுந்ததால், சர்ச்சைவிட்டு அவர் நீக்கப்பட்டார். அவர் பயங்கரமாக குடிக்க ஆரம்பித்தார், குடும்பத்தை கவனிப்பதையும் நிறுத்திவிட்டார். அந்தப் பெண்மணியோ சத்தியத்தைத் தேடுவதில் தீவிரமாக இருந்தாள், ஒவ்வொரு நாளும் ஜெபம் செய்துவந்தாள். குடும்பத்தை நடத்துவதற்கு, ‘வேஸ்ட் பேப்பர்’ கடை ஒன்றில் வேலை செய்ய ஆரம்பித்தாள். ஒருநாள் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் செய்தித்தாள்களையும் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தபோது, ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் என்ற புத்தகத்தைக் கண்டாள். அதை தன்னுடைய துணிக்குள் ஒளித்துவைத்து வீட்டுக்குக் கொண்டுசென்றாள். அந்தப் புத்தகத்தை ஒவ்வொரு நாளும் படித்தாள், தொடர்ந்து ஜெபமும் செய்துவந்தாள். பிஷ்னு என்ற விசேஷ பயனியர் சகோதரி ஒருநாள் அவளுடைய வீட்டின் கதவைத் தட்டினாள். பிஷ்னு சொல்வதைக் கேட்க விரும்பி, அவளை வீட்டுக்குள் அழைத்தாள். பிஷ்னு சொன்ன விஷயங்களும் அந்தப் புத்தகத்தில் படித்த விஷயங்களும் ஒரே மாதிரி இருப்பதை அந்தப் பெண்மணி கவனித்தாள். கடைசியில் அந்தப் புத்தகத்தை பிஷ்னுவிடம் அவள் காண்பித்தாள், அந்தப் புத்தகம் நம்முடைய புத்தகங்களில் ஒன்று என்பதை அறிந்தபோது அந்தப் பெண்மணிக்கு சந்தோஷமாக இருந்தது. இப்பொழுது அவள் தவறாமல் பைபிள் படித்து வருகிறாள், தன்னுடைய பிள்ளைகளுடன் எல்லா கூட்டங்களுக்கும் ஆஜராகிறாள்.

இலங்கை: பூன்ச்சிபான்டா என்பவர் முழுக்காட்டப்படாத ஒரு பிரஸ்தாபி. அவர் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ராஜ்ய செய்தியை மற்றவர்களிடம் பேச தீர்மானித்தார். தெருவில் பிச்சையெடுக்கும் ஒருவரிடம் அவர் பேசினார். அப்பொழுது அந்தப் பிச்சைக்காரர், தனது மூத்த மகள் ஒரு வியாதியால் கஷ்டப்பட்டு கடைசியில் இறந்துவிட்டதாக கூறினார். அற்புதமாய் சுகம் கிடைக்கும் என்று நம்பி, ‘அசெம்பிளி ஆஃப் காட்’ சர்ச்சுக்குப் போனதாகவும், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்றும் அவர் கூறினார். இன்றைக்கு அற்புத சுகமளித்தல் எதுவும் கடவுள் நடப்பிப்பதில்லை என்றும், ஆனால் கடவுளுடைய ராஜ்யத்தில் எல்லா நோய்களும் குணப்படுத்தப்படும் என்றும் பூன்ச்சிபான்டா விளக்கினார். அந்தப் பிச்சைக்காரருக்கு இந்த விஷயத்தின் பேரில் பத்திரிகைகள் சிலவற்றைக் கொடுத்தார். பிற்பாடு, அந்த மனிதனை ராஜ்ய மன்றத்திற்கு அழைத்தார். இதைப் பற்றி தனது குடும்பத்தாருக்கு அந்தப் பிச்சைக்காரர் சொன்னார், அந்தப் பத்திரிகைகளையும் காண்பித்தார். உடனே அவருடைய மனைவி, அந்தப் பத்திரிகைகளும் ராஜ்ய மன்றத்திற்கு வரும்படியான அழைப்பும் தனக்குக் கிடைத்ததாக கூறினாள். முதலாவதாக, அவர் மட்டுமே ராஜ்ய மன்றத்திற்குப் போய் வருவதாக தீர்மானித்தார். அங்கே சகோதரர்களும் சகோதரிகளும் அவரை அன்புடன் வரவேற்றார்கள். இப்பொழுது, அவரும் அவருடைய மனைவியும் அவர்களுடைய மகனும் இரண்டு மகள்களும் எல்லா கூட்டங்களுக்கும் வருகிறார்கள், யெகோவாவின் மக்களுடன் கூட்டுறவு கொள்வதில் மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.

லெபனான்: பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்த விசேஷ பயனியர் சகோதரி இவ்வாறு கூறுகிறாள்: “தெரு ஊழியம் செய்துகொண்டிருந்தபோது பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்மணியைச் சந்தித்தேன். வேலை செய்யுமிடத்தில் அவளைப் போய் சந்தித்து, அவளுடன் பைபிள் படிப்பு நடத்தினேன். அவளுக்கு அநேக கேள்விகள் இருந்தன; சில சமயங்களில், ஒரு கேள்விக்குப் பதிலளித்து முடிப்பதற்குள் அடுத்த கேள்வியைக் கேட்பாள். ஆனால், பிற்பாடு, சர்ச்சில் தீவிர ஈடுபாடுள்ள அவளுடைய நெருங்கிய நண்பர்களிடமிருந்து அவளுக்கு எதிர்ப்பு வந்தது. வருத்தகரமாக, படிப்பை விட்டுவிடாதபடி நான் அவளை ஊக்குவித்தபோதிலும், எதிர்ப்புக்கு அடிபணிந்து பைபிள் படிப்பதை நிறுத்திவிட்டாள். என்றாலும், ‘செம்மறியாடு போன்ற ஆளாக இருந்தால், கண்டிப்பாக ஒருநாள் படிப்பை மீண்டும் தொடருவாள்’ என எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஒரு வருடம் சென்றது, அவளைப் பற்றி இன்னும் நினைத்துக்கொண்டே இருந்தேன். ஆகவே அவளுக்கு ஒரு கடிதம் எழுதத் தீர்மானித்தேன், அவள்மீது எனக்கு அக்கறை இருப்பதையும், அவளை மீண்டும் சந்திக்க அதிக ஆவலாக இருப்பதையும் கடிதத்தில் தெரிவித்தேன். அவள் எனக்கு போன் செய்தாள், நான் அவளைப் போய் பார்த்தேன். இந்தத் தடவை முன்பைவிட அதிக ஆர்வமாக இருப்பதைக் கண்டேன். முன்பு அவளிடம் பேசிய விஷயங்கள் இன்னும் அவளுடைய மனதில் இருந்தன, அவற்றை அவள் நெஞ்சார நேசித்தாள். அநேக சர்ச்சுகளுக்குச் சென்றதாகவும் ஆனால் ஒன்றுமே சத்தியத்தைப் போதிக்கவில்லை என்றும் என்னிடம் கூறினாள். ஆகவே, மீண்டும் படிக்க ஆரம்பித்தாள், முன்னேறி வந்தாள், இப்பொழுது முழுக்காட்டுதலும் பெற்றுவிட்டாள். 12 வயதுடைய அவளுடைய மகன் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக இருக்கிறான்.”

இந்தியா: ஒரு சகோதரி இவ்வாறு எழுதுகிறாள்: “வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஒரு சிறுமி எங்களைப் பார்த்ததுமே வீட்டுக்குள் ஓடிப்போனதை நாங்கள் கவனித்தோம். அப்போது ஓர் ஆளை சந்தித்தோம், அவர் எங்களை அங்கிருந்து போய்விடும்படி உத்தரவிட்டார். நாங்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறியபோது, அந்த ஆளிடம் அந்தச் சிறுமி பேசிக்கொண்டிருந்ததை கவனித்தோம். பிறகு, நாங்கள் பஸ்ஸுக்காக காத்துக்கொண்டிருந்த சமயத்தில், அந்தச் சிறுமி ஒரு சைக்கிளில் வந்து எங்களைச் சந்தித்தாள். ‘யெகோவாதான் உண்மையான கடவுள் என்று எனக்குத் தெரியும். தயவுசெய்து எனக்கு பைபிளைப் பற்றி சொல்லிக்கொடுங்கள். உங்களைக் கூப்பிடுவதற்காகத்தான் வீட்டுக்குள் போனேன், ஆனால் வீட்டு ஓனருக்குப் பிடிக்கவில்லை’ என்று அவள் கூறினாள். யெகோவாவே உண்மையான கடவுள் என்று எப்படி தெரியுமென நாங்கள் கேட்டோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு, பஸ்ஸில் சென்றுகொண்டிருந்தபோது, கிறிஸ்தவர்களுடைய ஒரு பெரிய கூட்டம் நடப்பதை பார்த்ததாக அவள் சொன்னாள். அது நம்முடைய மாவட்ட மாநாடுகளில் ஒன்று. அவள் உடனே பஸ்ஸைவிட்டு இறங்கி மூன்று நாள் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டாள். யெகோவாவின் சாட்சிகள் தன் வீட்டுக்கு வருவார்களென எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தாள். அவளுடைய ஆர்வத்தைப் பார்த்து, ஒரு சகோதரியின் வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்று, பைபிள் படிப்பு ஆரம்பித்தோம். தவறாமல் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தாள், ஆன்மீக ரீதியில் நல்ல முன்னேற்றமும் செய்துவருகிறாள்.”

◼ ஆப்பிரிக்கா

நாடுகளின் எண்ணிக்கை: 56

மக்கள் தொகை: 78,17,67,134

பிரஸ்தாபிகள்: 10,15,718

பைபிள் படிப்புகள்: 18,20,540

உகாண்டா: லூஸி என்பவள் ஒரு யெகோவாவின் சாட்சி, அவள் ஒரு பெரிய மருந்தகத்தில் வேலை பார்க்கிறாள். அங்கு ‘ஆடிட்’ செய்யப்பட்டபோது பெருந்தொகை காணாமல் போனது தெரியவந்தது. பணத்தை எடுக்கவில்லை என்பதை சக பணியாளர்களோடு லூஸியும் சத்தியம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டாள். தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை பைபிளில் கையை வைத்து லூஸி சொல்ல வேண்டிய முறை வந்தபோது, உடனே நீதிமொழிகள் 15:3-ஐ எடுத்து, “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது” என சத்தமாய் வாசித்தாள். அந்த அறையில் சில கணம் நிசப்தம் நிலவியது, பின்பு குற்றவாளி தனது மேற்பார்வையாளரிடம் சென்று தவறை ஒப்புக்கொண்டாள். வருங்காலத்தில் எல்லாரும் “லூஸியின் வசனத்தை” ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படி அந்த மேற்பார்வையாளர் கூறினார். பிற்பாடு லூஸியின் சம்பளம் உயர்த்தப்பட்டது, மருந்தகத்தின் சாவியை வைத்துக்கொள்ளும் பொறுப்பும் அவளிடம் கொடுக்கப்பட்டது.

பெனின்: பள்ளியில் அதிகமான கேலிகிண்டல்களை ஜோஸ்வே சகித்து வந்திருக்கிறான். ஒருசமயம் வகுப்பில் தவறான பதிலைச் சொன்னபோது, “யெகோவாவின் ஊழியனே, நீ எப்படித் தவறு செய்யலாம்?” என்று சொல்லி வகுப்புத் தோழர்கள் சிலர் பரிகாசம் பண்ணினார்கள். “எப்பொழுதும் பிரீஃப்கேஸும் கையுமாகவே திரிந்துகொண்டிருக்கிறான்” என்று பலவாறு அவனை கேலி செய்வதில் மற்றவர்களும் சேர்ந்துகொண்டார்கள்.

“அந்த வாரயிறுதியில் ஊழியத்திற்குப் போகும்போது என்னுடைய வகுப்புத் தோழர்களைப் பார்ப்பேனோ என்று பயந்தேன்” என ஜோஸ்வே ஒப்புக்கொள்கிறான். இந்த விஷயத்தைப் பற்றி அவன் ஜெபம் செய்தான், பிறகு ஒரு மூப்பரிடமும் கலந்துபேசினான். வெளி ஊழியத்தில் இன்னும் அதிகமான நேரம் செலவிடுவதன் மூலமும் தனது வகுப்புத் தோழர்களிடம் பிரசுரங்களைக் கொடுப்பதன் மூலமும் தீவிர நடவடிக்கை எடுக்கும்படி ஜோஸ்வேவை அந்த மூப்பர் ஊக்கமூட்டினார். ஜோஸ்வே மூன்று அம்சங்களில் வெற்றி பெற்றதாக கூறுகிறான். அவன் சொல்கிறான்: “நான் இப்பொழுது அடிக்கடி துணைப் பயனியர் சேவை செய்கிறேன். என்னை அடிக்கடி கேலி செய்த இரண்டு வகுப்புத் தோழர்கள் இப்பொழுது என்னுடைய பைபிள் மாணவர்கள். என்னுடைய படிப்பிலும் நான் நன்கு முன்னேறியிருக்கிறேன்.”

எத்தியோப்பியா: இரண்டு வருடங்களுக்கு முன்பு, அஸ்நாகெச் என்ற சகோதரி டிரைவர் லைசென்ஸ் ஒன்றைக் கண்டெடுத்தார், அதன் உரிமையாளரான எல்ஸா என்பவரிடம் அதைக் கொடுக்க அப்பாயின்ட்மெண்ட் வாங்கினார். அஸ்நாகெச்சின் நேர்மையைக் கண்டு வியந்து, அவருக்குப் பரிசாக கொஞ்சம் பணம் கொடுக்க விரும்பினாள். அஸ்நாகெச் பணம் வாங்க மறுத்துவிட்டு, கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டைக் கொடுத்தார். அடுத்த நாள், எல்ஸா பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். யெகோவா என்ற பெயர் நான் கேள்விப்படாதது அல்ல, ஏனென்றால் என்னுடைய அப்பா ஒரு பாதிரியார், அந்தப் பெயரைப் பற்றி எனக்கு சொல்லியிருக்கிறார் என்று எல்ஸா கூறினாள். அவளுடைய முழு குடும்பத்தாரும் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, அவளுடைய கணவரும் பைபிள் படிக்க ஆரம்பித்தார். ஆனால், பாதிரியாரான அவளுடைய அப்பா இதைக் கேள்விப்பட்டபோது அதிக கோபாவேசமடைந்தார், யெகோவாவின் சாட்சிகளை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று அழைத்தார். ஆனால் எல்ஸா பைபிள் படிப்பதை விட்டுவிடாமல் உறுதியுடன் இருந்தார், சாட்சிகள் அந்த மாதிரியான ஆட்கள் அல்ல என்று தன் அப்பாவிடம் மரியாதைக்குரிய விதத்தில் எடுத்துக்கூறினாள். அவளுடைய அப்பா ஏமாற்றமடைந்து, தனது மகள் வைத்திருந்த தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அவளுக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டார். அதை பல தடவை வாசித்தார், அதிலுள்ள விஷயங்கள் அவருடைய மனதைத் தொட்டன. அதற்குப்பின், வழியில் போகிற வருகிற ஆட்களுக்கு வழக்கமாக திரித்துவத்தின் பெயரில் ஆசி வழங்கி வந்ததை நிறுத்திவிட்டார். அதனால் “விசுவாசதுரோகி” என அவர் முத்திரை குத்தப்பட்டார், அவரை அடிக்க வேண்டும் என்றும்கூட சிலர் நினைத்தார்கள். அதனால், அடிஸ் அபாபா என்ற இடத்திற்குக் குடிமாறிச் சென்றார், அங்கே சென்று அவரும் பைபிள் படிக்க ஆரம்பித்தார். இப்பொழுது, எல்ஸாவும் அவளுடைய குடும்பத்தினர் ஏழு பேரும் முழுக்காட்டுதல் பெற்ற சாட்சிகளாக இருக்கிறார்கள். அவளுடைய கணவரும் சிறு பையனும்கூட நல்ல முன்னேற்றம் செய்து வருகிறார்கள்.

கோட் டீவார்: தவறாமல் பைபிள் வாசிக்கிற ஒரு கடைக்காரரிடம், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை ஆன்டர்ஸன் கொடுத்துவிட்டு வந்தார். விரைவில் ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. “கடவுளைப் பிரியப்படுத்துகிற குடும்ப வாழ்க்கை” என்ற பாடம் குறிப்பாக அவரைக் கவர்ந்தது. அவர் இவ்வாறு சொன்னார்: “திருமணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு இருப்பதே இதுவரை எனக்குத் தெரியாது. நான் வீட்டுக்கு ‘லேட்’டாக வந்தால், என்னுடைய மனைவி சொல்கிற எந்த விஷயங்களையும் பொறுத்துக்கொள்ள மாட்டேன். ‘நான் ஆம்பிளை, என் இஷ்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் போவேன்; நீ என் மனைவி, வீட்டை பார்த்துக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு’ என்று சொல்வேன். இப்பொழுதோ, வேலை முடிந்தவுடன் வீட்டுக்குத் திரும்பிவிடுகிறேன், வீட்டு வேலைகளைச் செய்ய என் மனைவிக்கு ஒத்தாசையும் பண்ணுகிறேன்.”

கென்யா: இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுவன் வட்டாரக் கண்காணியின் விஜயம் வரப்போவதைப் பற்றி கேள்விப்பட்டான். ஒரு வாரத்திற்கு முன்பே பள்ளி தலைமை ஆசிரியரைச் சந்தித்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறும் கூட்டத்திற்குச் செல்ல அனுமதி கேட்டான். அனுமதி வழங்கப்பட்டது. என்றாலும், அடுத்த நாள் பள்ளியிலிருந்து அந்தச் சிறுவனை வீட்டுக்கு அனுப்பி, அவனுடைய பெற்றோர்களையும் விஜயம் செய்யும் அந்த நபரையும் அழைத்து வரச் சொல்லிவிட்டார்கள். அதனால், வட்டார விஜயத்தின்போது, அந்தப் பையனுடைய தகப்பனாருடன் சேர்ந்து அந்தக் கண்காணியும் பள்ளிக்குச் சென்றார். அந்தக் கண்காணி உண்மையிலேயே பார்க்க வந்ததைக் கண்டு தலைமை ஆசிரியருக்கு ஒரே அதிர்ச்சி, அதுவும் தன்னை சந்திப்பதற்காக செங்குத்தான மலைமீது ஏறி ஒரு மணிநேரம் பயணம் செய்து வந்திருந்தார்! அவர் பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டார், அதுமுதல் நட்புடன் பழகுகிறார், ஒத்துழைப்பும் தருகிறார்.

மலாவி: சகோதரர் ஒருவர் வெளி ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, ஓர் ஆள் சைக்கிளில் வந்து எப்பொழுதும் அவருக்குத் தொல்லை கொடுத்து வந்தார். அந்தச் சகோதரர் பிரசங்கம் செய்வதைப் பார்த்து, அந்த ஆள் சைக்கிளை நிறுத்திவிட்டு, வாக்குவாதம் செய்ய வருவார். அந்தச் சகோதரருடைய பைபிளை பிடுங்குவதற்கும்கூட அவர் முயன்றிருக்கிறார். ஒருநாள் அந்தச் சகோதரர் பைபிள் படிப்பு நடத்திக் கொண்டிருந்தபோது, அந்த ஆள் சைக்கிளில் வந்தார். தன்னுடைய சைக்கிளில் ஏதோ ‘அட்ஜஸ்ட்’ செய்ய கையை நீட்டியபோது, முன்பக்க சக்கரத்தில் அவருடைய கை சிக்கிக்கொண்டு, விரல்களில் நன்றாக காயம் ஏற்பட்டுவிட்டது. அவர் வலியில் துடித்தபோதிலும், அந்தச் சமயத்தில் அவருக்கு உதவ வந்தவர் அந்தச் சகோதரர் மட்டும்தான், அவருடைய கைக்குக் கட்டுப்போட்டு, அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்ல அந்தச் சகோதரர் ஏற்பாடு செய்தார். பிற்பாடு, அந்தச் சகோதரர் அந்த ஆளின் வீட்டுக்குப் போய் அவரைப் பார்த்தார். அந்த ஆள் தனது நடத்தையைக் குறித்து வெட்கப்பட்டு, பொய் வதந்திகளால் தன்னுடைய மனோபாவம் மாறியிருந்ததை ஒப்புக்கொண்டார். அவர் இவ்வாறு கூறினார்: “நீங்கதான் ஒரே உண்மையான கடவுளை வணங்குகிறீர்கள். நான் உங்களிடம் ரொம்ப மோசமாக நடந்துகொண்டபோதிலும் நீங்க எனக்கு இந்தளவு அன்பு காட்டுவீர்கள் என்று நான் துளிகூட நினைத்துப் பார்க்கவில்லை.”

கேமருன்: கூட்டம் நிறைந்த மருத்துவமனையில் வெயிட்டிங் ரூமில் இளம் சகோதரி ஒருவர் உட்கார்ந்து கொண்டிருந்தார், அப்பொழுது வியாதியாயிருந்த வயதான ஒருவர் வந்தார். எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் உட்கார்ந்திருந்ததால், அந்தப் பெரியவர் நின்றுகொண்டிருக்க வேண்டியதாயிற்று. அந்தச் சகோதரி சொல்கிறார்: “நான் பரிதாபப்பட்டு என்னுடைய இருக்கையை அவருக்கு விட்டுக்கொடுத்தேன். இது, அறையிலிருந்த எல்லோர் மத்தியிலும் அதிக சலசலப்பை ஏற்படுத்தியது, ஏனென்றால் என்னுடைய இருக்கையை விட்டுக்கொடுத்ததால் டாக்டரை சந்திக்கும் என்னுடைய முறை போய்விடும். விரைவில் ஒரு பெண்மணி என்னை அணுகி, நான் எந்த மதத்தைச் சேர்ந்தவரென கேட்டார். நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று சொன்னேன். அவள் என்னைப் பாராட்டினாள், ஏனென்றால் அவளைப் பொறுத்தவரை, வேறெந்த இளைஞரும் இப்படிப்பட்ட செயலை செய்ய மாட்டார்கள். என்னிடமிருந்த சில துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தி, அவளுக்கும் மற்றவர்களுக்கும் சாட்சி கொடுக்க இந்தச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன். அநேக கேள்விகளுக்குப் பதிலும் அளித்தேன். சிலர் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தங்களுடைய அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டார்கள், அவர்களை வீட்டில் சந்திப்பதற்கும் அதிக விருப்பம் தெரிவித்தார்கள்.”

டோகோ: ஒதுக்குப்புற பிராந்தியத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஓர் இளைஞனை சகோதரர்கள் சிலர் சந்தித்தார்கள். இவர்களைப் பார்த்ததில் தனக்கு அதிக மகிழ்ச்சி என்று அந்த இளைஞன் கூறினான். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தில் உள்ள அனைத்தையும், “எல்லாவற்றையும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்” என்ற புத்தகத்தின் சில பகுதிகளையும் அப்படியே கைப்பட நோட்புத்தகங்களில் எழுதி வைத்திருந்ததை அவர்களிடம் அந்த இளைஞன் காண்பித்தான். இவாஞ்சலிக்கல் பாதிரியார் ஒருவருடைய வீட்டில் சில காலம் தங்கியிருந்த சமயத்தில் இந்தப் புத்தகங்களை அவன் பார்த்திருந்தான். அந்தப் பாதிரியாரிடம் இரண்டு புத்தக அலமாரிகள் இருந்தன, ஒன்று அவருக்குப் பிரியமான புத்தகங்கள் கொண்ட அலமாரி, மற்றொன்று “முக்கியமல்லாத” புத்தகங்கள் கொண்ட அலமாரி. நம்முடைய புத்தகங்கள் இரண்டாவது அலமாரியில் இருந்ததை அந்த இளைஞன் பார்த்தான். ஒரு புத்தகத்தில் சில பக்கங்களை வாசித்தபிறகு, அதிலுள்ள விஷயங்கள் அவனை மிகவும் கவர்ந்துவிட்டன. அந்தப் புத்தகத்தை எடுத்துச்செல்ல முடியாததாலும் இதுபோன்ற ஒரு பிரதி எங்கே கிடைக்குமென தெரியாததாலும் அதிலுள்ளவற்றை அப்படியே எழுதிக்கொண்டான். தான் வாசித்தவற்றை மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பித்தபோது அவனுடைய அம்மாவும் அந்தப் பாதிரியாரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இப்பொழுது அந்தச் சகோதரர்கள் அவனுக்கு சில பிரசுரங்களைக் கொடுத்து, ஆன்மீக ரீதியில் முன்னேற அவனுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

தென் ஆப்பிரிக்கா: மண வாழ்க்கையில் பிரச்சினைகள் கொண்ட பெல்லா என்ற சக பணியாளரிடம் பேசும்படி டான்டி என்ற சாட்சியை அவரது முதலாளி அம்மா கேட்டுக்கொண்டார். பெல்லாவின் கணவர் ஒரு போலீஸ்காரர், அவளை உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் கொடுமைப்படுத்தியிருந்தார், ஆகையால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தாள். குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தின் இரண்டு பிரதிகளை பெல்லாவிடம் கொடுத்து, ஒன்றை அவளுடைய கணவரிடம் கொடுக்கும்படி டான்டி ஊக்குவித்தார். ஒரு வாரத்திற்குப்பின், அந்தப் பெண்ணிடம் டான்டி பேசியபோது, அவளுடைய கணவர் அந்தப் புத்தகத்தை வாசிப்பதையும் குடும்பத்தில் சமாதானம் வந்திருப்பதையும் தெரிந்துகொண்டார். ஜெபத்தின் மூலமாகவும் குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தின் மூலமாகவும் கடவுள் தனது மணவாழ்க்கையை காப்பாற்றிவிட்டார் என்று மூன்று மாதங்களுக்குப்பின் டான்டியிடம் பெல்லா கூறினாள். இதைப் பற்றி பெல்லாவின் முதலாளி அம்மா கேள்விப்பட்டபோது, அந்தப் புத்தகத்தை 2,000 பணியாளர்களும் வாங்கும்படி சிபாரிசு செய்தார். இதுவரை, குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தில் 96 பிரதிகளை சக பணியாளர்களுக்கு டான்டி விநியோகித்திருக்கிறார். யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு அந்தக் கம்பெனி நன்கொடை அளித்தது.

◼ அமெரிக்க நாடுகள்

நாடுகளின் எண்ணிக்கை: 56

மக்கள் தொகை: 87,90,73,403

பிரஸ்தாபிகள்: 31,99,835

பைபிள் படிப்புகள்: 30,22,276

வெனிசுவேலா: சாட்சிகளாயிருந்த ஒரு குடும்பத்தினர் சமீபத்தில் புதிய தொலைபேசி இணைப்பையும் புதிய எண்ணையும் தங்களுடைய வீட்டிற்குப் பெற்றார்கள். ஆனால், உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்திலிருந்த ஒரு பெண் சோதிடருக்குப் போகவேண்டிய போன் கால்களெல்லாம், தொழில்நுட்ப கோளாறினால், இவர்களுடைய வீட்டிற்கு வர ஆரம்பித்தன. அந்தக் குடும்பத்தினர் இச்சூழ்நிலையை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தார்கள். அதற்காக வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் உதவியால் சில தகவல்களையும் பைபிள் வசனங்களையும் தயாரித்தார்கள். கிராஸியெல்லா என்ற அந்தத் தாய் இதில் நன்கு தேர்ச்சி பெற்றவரானார். ஒருநாள் போனில் பேசிய ஒருவர் “ஹலோ, நீங்க நட்சத்திர தேவதையா?” என்று கேட்டார்.

“ஹலோ. என்னோட பெயர் கிராஸியெல்லா, உங்க பெயரென்ன?”

“கார்மென்.”

“கார்மென், நீங்க ஏன் நட்சத்திர தேவதையிடம் பேச விரும்புறீங்க? உங்களுக்கு உதவியோ ஆலோசனையோ வேணுமா?”

கார்மென் தனது சங்கடமான பிரச்சினையைப் பற்றி நம்முடைய சகோதரியிடம் பேச ஆரம்பித்தார். மிகச் சிறந்த ஆலோசனையை எங்கே பெறலாம் என்று கனிவான குரலில் சொல்லி, பைபிளிலிருந்து கார்மெனுக்கு சில வசனங்களை வாசித்துக் காண்பித்தார். பிறகு அந்தச் சகோதரி இவ்வாறு கேட்டார்: “இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி, நம்பகமான ஆலோசனைக்கு, நம்முடைய படைப்பாளரிடம் செல்ல வேண்டுமென நீங்க நினைக்கலையா?” பின்பு, கடந்த காலத்தில் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்ததாக கார்மென் ஒப்புக்கொண்டார்; ஆகவே இப்பொழுது மீண்டும் படிப்பை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்குப் பிறகு, உதவி தேடி போன் செய்த அநேகரிடம் கிராஸியெல்லாவின் குடும்பத்தினர் பேசியிருக்கிறார்கள், இதனால் நல்ல சாட்சி கொடுத்தார்கள், யெகோவாவின் சாட்சிகள் சந்திக்கும்போது அவர்கள் சொல்வதை செவிகொடுத்துக் கேட்கும்படி ஊக்குவித்தார்கள், உள்ளூர் ராஜ்ய மன்றத்திற்குச் செல்லும்படியும் சொன்னார்கள்.

கொலம்பியா: மார்ச் 2005-⁠ல், கலி என்ற இடத்தில் வசிக்கும் ஒரு சகோதரியின் கார் களவுபோய்விட்டது. சில நாட்களுக்குப்பின் அது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் வரும்வரை அவளும் அவிசுவாசியான அவளுடைய கணவரும் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள், ஆனால் போலீசார் வந்துசேர காலதாமதம் ஆனது, அதனால் அந்தக் காரை தாங்களே எடுத்துச்செல்ல அந்தத் தம்பதியர் தீர்மானித்தார்கள். ஆனால் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு அந்தக் கார் பயன்படுத்தப்பட்டிருந்ததால், போலீசார் அந்தத் தம்பதியினரை தடுத்துநிறுத்தி, அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். சிறையில் நுழைந்தவுடன், அந்தச் சகோதரி பிரசங்கிக்க ஆரம்பித்தார், குறுகிய காலத்திலேயே அநேக பைபிள் படிப்புகளைத் தொடங்கினார். அவருடன் பைபிள் படித்தவர்களில் ஒருத்தி விடுதலையாகி வெளியில் வந்துவிட்டாள், அந்தச் சகோதரி விடுதலையானவுடன் தனக்குத் தொடர்ந்து படிப்பு நடத்தும்படி அவரைக் கேட்டுக்கொண்டாள். அதோடு தான் சேர்ந்து வாழ்ந்துவந்த மனிதனிடம், கடவுளைப் பிரியப்படுத்த நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறினாள்.

பிரசங்கிப்பதற்குத் தனக்கு அதிக நேரம் கிடைக்க வேண்டுமென சமீபத்தில் கடவுளிடம் அந்தச் சகோதரி ஜெபம் செய்திருந்தார், ஆனால் அது ஜெயிலில் கிடைக்குமென அவர் நினைத்துப் பார்க்கவே இல்லை! சிறையிலிருந்து சீக்கிரத்திலேயே விடுதலை பெற அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனாலும் யெகோவாவின் பாதுகாப்பு இருப்பதை உணர்ந்ததாலும் பிரசங்கிப்பதில் திருப்தியைப் பெற்றதாலும் அந்த வாய்ப்பை அவள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள். சிறையில் 45 நாட்கள் செலவழித்தபின், அவளும் அவளுடைய கணவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். தனது விசுவாசம் பலப்படுத்தப்பட்டிருப்பதாக அவள் கூறினாள். சிறையிலிருந்த காலப்பகுதியில், சகோதரர்கள் வந்து அவளுடைய கணவரைப் பார்த்தார்கள், அவருக்கு உதவியும் செய்தார்கள். 20 வருஷமாக ஆன்மீக விஷயத்திற்கு எந்த அக்கறையும் காண்பிக்காமல் இருந்தார், ஆனால் இப்பொழுது கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்துவிட்டார், பைபிளைப் படிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். இப்பொழுது பெண் கைதிகள் நான்கு பேருக்கு பைபிள் படிப்பு நடத்த அந்தச் சகோதரி தவறாமல் சிறைக்குச் செல்கிறாள். தனது ஜெபத்திற்கு யெகோவா பதிலளித்ததற்காகவும் பல்வேறு வழிகளில் அவளுக்கு பலனளித்ததற்காகவும் அவள் நன்றியுள்ளவளாக இருக்கிறாள்.

பிரேசில்: பார்வையிழந்த ரெனில்டோ என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை தனது ஊரிலுள்ள மார்கெட்களிலும் அருகிலுள்ள நகரங்களிலும் பிச்சை எடுத்து வந்தார். ஊனமுற்றோருக்குக் கிடைக்கும் உதவித் தொகை போதாததால் இதையும் செய்துவந்தார், ஏனென்றால் பிச்சையெடுப்பது இலாபகரமான தொழிலாக இருந்தது; சொந்தமாக காரும் அழகிய ஃபர்னிச்சர்களுடன் ஒரு வீடும் ஏராளமான உணவுப் பொருட்களையும்​—⁠ஏழ்மையான அந்த இடத்தில் வாழும் சாதாரண ஜனங்களால் பொதுவாக வாங்க முடியாத உணவுப் பொருட்களையும்​—⁠அவரால் வாங்க முடிந்தது. யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்தபோது அவருக்கு வாழ்க்கையில் படிப்படியாக ஆன்மீக கண்ணோட்டம் பிறந்தது; தைரியமாகத் தீர்மானம் எடுப்பதற்கும் இது அவரை உந்துவித்தது. குறைந்த வருவாயை வைத்து வாழ்வது பற்றி தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் சேர்ந்து குடும்பமாகக் கலந்துபேசினார்; அதன் பிறகு பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டார். சீக்கிரத்தில், அவரும் அவருடைய குடும்பத்தினரும் ஆன்மீக முன்னேற்றம் செய்து, ஒரு மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றார்கள். இப்பொழுது, ரெனில்டோ ஒரு பிச்சைக்காரராக அல்ல, ஆனால் வைராக்கியமாக நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஒருவராக அறியப்பட்டிருக்கிறார், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 40 மணிநேரத்தை ஊழியத்தில் செலவிடுகிறார்.

ஈக்வடார்: பயனியர் சகோதரர் ஒருவர் ரெஸ்டாரண்ட் முதலாளிக்குச் சீன மொழியில் தவறாமல் பத்திரிகைகள் கொடுத்து வந்தார். இவருடைய நண்பரும் சொந்தமாக ரெஸ்டாரண்ட் வைத்திருக்கிறார், இவரை சந்திப்பதற்கு அந்த நண்பர் அடிக்கடி வருவார். அப்போது, இந்தப் பத்திரிகைகளைப் பார்த்து அவற்றை வாசித்தார். அவர் அந்தளவுக்கு ஆர்வமாக இருந்ததால், கூடுதலான பத்திரிகைகளும், பைபிளும், யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகமும் வேண்டுமென கேட்டு ஹாங்காங் கிளைக்கு கடிதம் எழுதினார். ஒரு பைபிள் படிப்புக்கு ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுக்கொண்டார். ஹாங்காங் கிளை ஈக்வடார் கிளையைத் தொடர்புகொண்டது, ஆர்வம்காட்டிய அந்த நபரை சந்திக்க அவர் கேட்ட பிரசுரங்களுடன் பயனியர்கள் விரைவில் அவருடைய வீட்டிற்குச் சென்றார்கள். நான்கு நாட்களுக்குப்பின் அவர்கள் மீண்டும் சென்றார்கள். அந்தப் பிரசுரங்களை அவர் வாசித்திருந்தாரா? அவர் கூறினார்: “ஆதியாகமத்திலிருந்து வாசிக்கத் தொடங்கி இப்பொழுது எசேக்கியேல் புத்தகத்திற்கு வந்துவிட்டேன், ஆனால் எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன. மனிதர்களான நம்மிடம் ஏன் யெகோவா மிகவும் தயவுள்ளவராக இருக்கிறார்? எல்லாமே அவருக்குச் சொந்தம்; அப்படியிருக்க, மனிதருக்கு உதவ ஏன் அவ்வளவு முயற்சி எடுக்கிறார்? அதனால் அவருக்கு என்ன லாபம்?” பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, உடனடியாக கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்ள ஆரம்பித்தார். புகைப்பிடிப்பதையும் சூதாட்டங்களுக்குப் போவதையும் நிறுத்திவிட்டார். கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தன்னுடைய ரெஸ்டாரண்டை சீக்கிரமாகவே அடைத்துவிடுகிறார். இப்பொழுது இவர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆகும் நிலையில் இருக்கிறார், இந்நாட்டில் சீனமொழி பேசும் பிறருக்கு உதவ விரும்பும் உள்ளூர் சகோதரர்களுக்கு சீன மொழியைக் கற்றுக்கொடுத்தும் வருகிறார்.

ஹோண்டுராஸ்: ஜனவரி 2005-⁠ல், குவாதமாலாவில் சர்க்கஸ் கோமாளியாக இருக்கும் 15-வயது செபாஸ்டியனுக்கு புளார் என்ற சகோதரி சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார். அவன் ஆர்வம் காட்டினான், ஆனால் பேசுவதற்கு அதிக நேரமில்லை. ஒருநாள் சர்க்கஸ் கூடாரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டான், அதனால் மாவுகட்டு போடப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தான். ஆன்மீக விஷயங்களைப் பற்றி சிந்திக்க இப்பொழுது அவனுக்கு நிறைய நேரம் இருந்தது. அவன் கேட்கும் அநேக கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக ஒவ்வொரு நாளும் புளார் அவனைச் சந்தித்தார். அவனுடைய அம்மாவான டாரிஸ் கயிற்றில் நடப்பவர், அவரும் ஆர்வம் காட்டியதால் அவருக்கும் புளார் பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார். ஊஞ்சலில் ஆடும் டாலீலா என்ற கலைஞரும் கடந்த காலத்தில் சாட்சிகளுடன் படித்துவந்த சோஃபியா என்ற நடனக் கலைஞரும் தங்களுடைய மகள்களுடன் இந்தப் படிப்பில் கலந்துகொண்டார்கள். எனவே, இப்பொழுது அது ஏழு பேர் கொண்ட ஒரு தொகுதியாக ஆனது. இரண்டு மாதங்களாக வாரத்தில் ஐந்து முதல் ஏழு தடவை அவர்கள் அனைவருடனும் புளார் படிப்பு நடத்தினார்.

சர்க்கஸ் கொட்டகை ஹோண்டுராஸுக்கு இடம் மாறிச் செல்லும் சமயம் வந்தபோது, அவர்கள் செல்லும் நகரங்களில் யெகோவாவின் சாட்சிகளைக் கண்டுபிடித்து தொடர்ந்து படித்துவரும்படியும் கூட்டங்களுக்கு ஆஜராகும்படியும் புளார் ஊக்குவித்தார். கோப்பான் என்ற நகரத்திற்கு அவர்கள் சென்றபோது, அந்தப் பகுதியிலுள்ள விசேஷ பயனியர்கள் சிலர் அவர்களுக்கு பைபிள் படிப்பை மீண்டும் தொடங்கினார்கள். கிராஸியாஸ் என்ற இடத்திற்கு அவர்கள் இடம் மாறிச்சென்றபோது, மற்றொரு விசேஷ பயனியர் அந்தப் படிப்பை நடத்தினார். சான்டா ரோஸா தே கோப்பான் என்ற நகரத்திற்கு அவர்கள் இடம் மாறிச்செல்லும் சமயம் வந்தபோது, அடுத்துவரும் மூன்று வாரங்களுக்குப் படிப்பு நடத்த அங்கிருந்த மிஷனரி தம்பதியருக்கு போன் கால் வந்தது.

அது தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு படிப்பு, ஏனென்றால் ஏழு முதல் பத்து பேர் அந்தப் பெரிய சர்க்கஸ் கொட்டகையில் கூடிவருவார்கள். வாரத்திற்கு இருமுறை படிக்கிறார்கள், அதற்காக நன்கு தயாரிக்கிறார்கள்; மிகவும் சிறுமியான ஒன்பது வயது ஹூலியட்கூட படிப்பிற்காக நன்கு தயாரிக்கிறாள்; அவள் ஊஞ்சல் ஆடுவதில் திறமைசாலி. அந்தத் தொகுதியினர் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதெல்லாம், அடுத்த காட்சி ஆரம்பிக்கும் முன்பு சரியான நேரத்தில் அங்கு இருப்பதற்காக அவர்கள் பெரும்பாலும் அவசர அவசரமாக கிளம்பிச் சென்று தங்களுடைய உடைகளை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும் அவர்கள் இந்த முயற்சியை சந்தோஷத்துடன் செய்கிறார்கள்.

◼ ஓசியானியா

நாடுகளின் எண்ணிக்கை: 30

மக்கள் தொகை: 3,52,37,787

பிரஸ்தாபிகள்: 93,961

பைபிள் படிப்புகள்: 47,864

நியு ஜீலாந்து: மதிய இடைவேளையில் சிசிலியா என்ற இளம் சகோதரி பைபிள் சம்பந்தமான ஒரு சிற்றேட்டை வாசித்துக் கொண்டிருந்தபோது, சக பணியாளர் ஒருவர் அவரிடம் வந்து அதில் என்ன இருக்கிறது என்று கேட்டார். அதைப் பற்றி சிசிலியா விளக்கியபோது, அதைக் கேட்பதற்கு அவளுடைய முதலாளி உட்பட, 15 பேர் கூடிவிட்டார்கள். பிற்பாடு அவளுடைய முதலாளி அவளை தனது ஆபீஸுக்கு அழைத்தார். தான் கேள்விப்பட்ட விஷயம் தன்னை மிகவும் கவர்ந்தது என்று அவர் கூறினார். இனிமேல் ‘லன்ச் ரூம்’ பைபிளைப் பற்றி பேசுவதற்குரிய ரூமாக இருக்கும் என்றும் வேலையாட்களிடம் கூறினார். சிசிலியா சாப்பிட்டுவிட்டு பைபிளைப் பற்றி விவாதிப்பதற்கு வசதியாக, சாப்பாட்டு நேரத்தை 30 நிமிடத்திலிருந்து 60 நிமிடமாக மாற்றினார். நான்கு வாரங்களாக, 9 முதல் 15 பேர் வரை இந்த விவாதத்தில் கலந்துகொண்டார்கள். அவர்களில் இரு பெண்கள் இப்பொழுது தவறாமல் பைபிள் படித்து வருகிறார்கள், நன்கு முன்னேறியும் வருகிறார்கள், குடும்ப அங்கத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் சாட்சி கொடுக்கிறார்கள்.

துவாலூ: தமிழில் “தேவனுடைய வீடு” என்ற அர்த்தமுடைய பெட்டெலி என்ற 14-வயது பெண்ணுக்கு சுத்தமாக காது கேட்காது. அவளுடைய உறவினர்கள் யெகோவாவின் சாட்சிகள், அதனால் அவர்களுடைய கூட்டங்கள் சிலவற்றிற்கு ஆஜராகியிருக்கிறாள். ஆனால் காது கேட்காததாலும் வாசிக்க முடியாததாலும் அவ்வளவாக பயனடைய முடியவில்லை. பெட்டெலி தனது சொந்த முயற்சியால் உதட்டசைவைப் படிக்கக் கற்றுக்கொண்டாள். சமீபத்தில் டேல் என்ற மிஷனரி சகோதரி, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற சிற்றேட்டைப் பயன்படுத்தி அவளுடன் படிக்க ஆரம்பித்தார். பெட்டெலிக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்க படங்களையும், வாசிக்க கற்றுக்கொள்ள வேத வசனங்களையும் டேல் பயன்படுத்தினார். இது டேலுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, ஏனென்றால் அவரே இன்னும் மொழி கற்றுக்கொண்டிருந்த ஒரு புதிய மிஷனரி. அதோடு, வார்த்தைகளை சரியாக உச்சரிப்பதற்கு நாவைச் சரியாகப் பயன்படுத்த பெட்டெலிக்கு உதவி தேவைப்பட்டது. பெட்டெலி ஆர்வமிக்கவள், ஊக்கமாக முயற்சி செய்பவள். மூன்றே மாதங்களில் அவள் வாசிக்கக் கற்றுக்கொண்டாள். அவளும் அந்த மிஷனரியும் கூட்டங்களுக்காக குறிப்புகளை ஒன்றுசேர்ந்து தயாரிக்கிறார்கள். பெட்டெலி முன்னதாகவே கவனமாய் பழகிப்பார்க்கிறாள், கூட்டத்தில் பெருமிதத்துடன் குறிப்புகளும் சொல்கிறாள். பேச்சாளருடைய உதட்டசைவை கூர்ந்து கவனிப்பதற்காக ராஜ்ய மன்றத்தில் முதல் வரிசையில் உட்கார்ந்துகொள்கிறாள். டேல் இவ்வாறு எழுதுகிறார்: “பெட்டெலிக்கு யெகோவா ஒரு நிஜமான நண்பராக ஆகிவருகிறார், ‘செவிடரின் செவிகள் திறவுண்டுபோகும்’ காலத்தைப் பற்றி நாங்கள் பேசும்போது அவளுடைய கண்கள் குளமாகின்றன.”​—ஏசாயா 35:⁠5.

சமோவா: எலினா என்ற பயனியர் சகோதரி மெத்தடிஸ்ட் சபையைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு பைபிள் படிப்பு நடத்திவந்தார்; அந்தப் பெண்ணின் வீடு உள்ளூர் பாஸ்டருடைய வீட்டிற்கு நேரெதிரே இருந்தது. வீட்டின் திறந்தவெளிப் பகுதியில், அந்தப் படிப்பு நடத்தப்பட்டது, பாஸ்டருடைய வீட்டிலிருந்து பார்த்தால் படிப்பு நடத்துவது நன்றாகத் தெரியும். ஒருநாள் அவர்கள் படித்துக் கொண்டிருந்தபோது, அந்த பாஸ்டர் அங்கு வந்தார். அப்போது, என்ன வேண்டுமென அந்தப் பெண்மணி கேட்டாள். அதற்கு அந்த பாஸ்டர் இவ்வாறு பதிலளித்தார்: “என்னுடைய பன்றிக்குட்டியை தேடிக்கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு மாதமாக அதை நான் பார்க்கவில்லை.” பின்பு எலினாவிடம் திரும்பி, “என்னுடைய பன்றிக்குட்டி ஏன் என்னைவிட்டு ஓடிப்போய்விட்டது என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார். உண்மையாகவே ஒரு பன்றிக்குட்டியைப் பற்றித்தான் கேட்டுக்கொண்டிருக்கிறார் என நினைத்துக்கொண்டு, எல்லா சமயத்திலும் ஒரே மாதிரியான உணவையே போடுவது காரணமாக இருக்கலாம், வேறு ஏதாவது கொடுத்துப் பார்க்கலாம் என்று அவள் சொன்னாள். “அவள்தான் என்னுடைய பன்றிக்குட்டி!” என்று பைபிள் மாணாக்கரைச் சுட்டிக்காட்டி அந்த பாஸ்டர் சொன்னபோது, எலினாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் மேலும் இவ்வாறு கூறினார்: “நீ அவளை என்னிடமிருந்து திருடிவிட்டாய். இந்தப் படிப்பை நீ உடனடியாக நிறுத்த வேண்டும், இனிமேல் நடத்தக்கூடாது.” (சமோவாவின் கிராமங்களில் சர்ச் பாஸ்டர்களுக்கு பெரும் செல்வாக்கு இருக்கிறது.) அந்தப் பெண் அழுதாள். எலினா அவளை சமாதானப்படுத்த முயன்றார், பைபிள் படிப்பவர்களுக்கு இதுபோல் நடக்குமென ஏற்கெனவே பைபிள் முன்னறிவித்திருக்கிறது என்று அவளுக்கு விளக்கினார்.

பைபிள் படிப்பு நடத்தும் நாளையும் நேரத்தையும் இடத்தையும் மாற்றுவதற்கு எலினா ஏற்பாடுகள் செய்தார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “வீட்டின் முன்பக்கம் படிப்பை நடத்துவதற்குப் பதிலாக, வீட்டின் பின்புறத்திலுள்ள ஒரு சிறிய அறையில் படித்தோம். அந்த இடம் ரொம்ப அனலாக இருந்தது, ஆனால் எப்படியோ அந்தப் படிப்பு தொடர்ந்து நடந்தது. இப்படி இரண்டு மாதங்கள் படித்து வந்தோம். ஒருநாள் ஆரம்ப ஜெபத்திற்குப் பிறகு, எதிர்பாராத விதமாக அந்த பாஸ்டர் அங்கு வந்தார். படிப்பை நிறுத்த வந்திருக்கிறார் என நான் நினைத்தேன், ஆனால் அவர் மனம் மாறியிருந்தார்.”

படிப்பில் அவரும் உட்கார்ந்தார், கேள்விகளும்கூட கேட்டார். பின்பு படிப்பு முடிந்தவுடன், அந்தப் பெண்ணிடம் திரும்பி, “நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நேற்றைக்கு இராத்திரி நாங்கள் டவுனுக்குப் போயிருந்தோம், ஆனால் வீடு திரும்பும் வழியில் ஒரு கிராமத்திற்குப் பக்கத்தில் எங்களுடைய கார் ரிப்பேராகிவிட்டது. ஓர் இளம் தம்பதியரும் வேறொரு இளைஞனும் எங்களுடைய காரை சரிசெய்ய வந்தார்கள். ஆனால் கார் ஸ்டார்ட் ஆகவில்லை, அதனால் அவர்களுடைய காரிலேயே எங்களை வீட்டில் கொண்டுவந்து விட்டார்கள், நான் என்னுடைய காரை அவர்களுடைய வீட்டில் விட்டுவிட்டேன். காரில் உட்கார்ந்தபோது, காவற்கோபுரம் பத்திரிகைகளையும் மற்ற பிரசுரங்களையும் நான் பார்த்தேன். உன்னை வந்து சந்திக்கிற பெண்ணுடைய சர்ச்சை சேர்ந்தவர்களாகத்தான் இவர்களும் இருக்க வேண்டுமென நினைத்தேன்.”

அப்பொழுது அந்தப் பெண் சொன்னாள்: “நீங்கள் சொன்னது சரி. அவர்கள் எலினாவின் பிள்ளைகள்தான்.” அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, “நீங்கள் செய்யும் வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள். யெகோவாவின் சாட்சிகள் ரொம்ப நல்லவர்கள், அன்பானவர்கள் என்பதை இப்பொழுது நான் தெரிந்துகொண்டேன். நான் பேசியதை மன்னித்துவிடுங்கள். இதுபோன்ற பைபிள் படிப்பு என்னுடைய சர்ச் ஆட்களும் தங்களுடைய மனோபாவங்களை மாற்றிக்கொள்ள உதவும்.” அந்நாள் முதல், வீட்டின் பின்புறமுள்ள அனலான சிறிய அறையில் படிப்பை நடத்துவதற்குப் பதிலாக, பாஸ்டருக்கு நன்கு தெரிகிற மாதிரி, வீட்டின் முன்புறம் குளிர்ச்சியாக இருக்கும் திறந்தவெளி பகுதியிலேயே படிப்பை அவர்கள் நடத்துகிறார்கள். இப்பொழுது அந்த பாஸ்டர் எதுவும் சொல்வதில்லை.

சைபான்: இந்தத் தீவில் வசிக்கும் ஹெலன் என்ற பெண்ணின் இதயத்தை கடவுளுடைய ராஜ்ய சத்தியம் ஆழமாகத் தொட்டது. மிஷனரி ஒருவருடைய உதவியுடன் இந்தப் பெண் பைபிள் படித்து வந்தாள்; தான் கற்ற காரியங்களுக்கு நன்றி காட்டவும் விரும்பினாள். ஒருநாள் படிப்பின் முடிவில், ஒரு சிறிய துணி-பையை அந்த மிஷனரியிடம் கொடுத்து இவ்வாறு சொன்னாள்: “என்னிடம் அதிகமாக ஒன்றுமில்லை, ஆனால் பிரசங்க வேலைக்கு நன்கொடையாக இதைக் கொடுக்க விரும்புகிறேன்.” அவளுடைய சொந்த ஊரான போன்பே என்ற தீவிலிருந்து கிடைத்த ஓர் அழகிய முத்து அந்தப் பையில் இருந்தது. அந்த முத்தை விற்று நன்கொடையாக எடுத்துக்கொள்ளும்படி ஹெலன் கூறினாள். அது உயர்தர முத்து, நகைக் கடை வியாபாரி ஒருவர் அதை 100 டாலருக்குச் சந்தோஷத்துடன் வாங்கிக்கொண்டார். நன்கொடையாக எவ்வளவு கொடுப்பது என்பதை ஹெலனே தீர்மானிப்பதற்காக அந்தப் பணம் அவளிடம் கொடுக்கப்பட்டது, ஆனால் அவளோ அந்தப் பணத்தை கையில் வாங்காமல், “அதை அப்படியே பெட்டியில் போட்டுவிடுங்கள்” என்று சொன்னாள். அவளுடைய தாராள குணத்திற்கு என்ன காரணம்? இயேசு ஒருமுறை கூறிய உவமையின்படி, ராஜ்ய நம்பிக்கை என்ற அதிக விலையுயர்ந்த முத்தை ஹெலன் கண்டுபிடித்திருந்தாள்.​—மத். 13:45, 46.

◼ ஐரோப்பா

நாடுகளின் எண்ணிக்கை: 46

மக்கள் தொகை: 73,15,36,437

பிரஸ்தாபிகள்: 14,98,142

பைபிள் படிப்புகள்: 7,17,797

பெலாரூஸ்: விசேஷ பயனியர்களாக சேவை செய்யும் பாவெல், மய்யா தம்பதியர் ஒரு பயனியர் பள்ளியில் கலந்துகொண்டிருந்தார்கள். ஒருநாள் மாலையில் இருவரும் சேர்ந்து ‘வாக்கிங்’ போய்விட்டு வரலாம் என நினைத்தார்கள், பிரசங்க வேலையில் ஈடுபட வேண்டுமென்ற ஐடியா அவர்களுக்கு இருக்கவில்லை. என்றாலும், சகல தேசத்து மக்களுக்கும் நற்செய்தி என்ற சிறுபுத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். வெளிநாட்டைச் சேர்ந்த இருவரை பார்த்தவுடன், அவர்களுக்குச் சாட்சிகொடுக்கத் தீர்மானித்தார்கள். அவர்கள் இருவரும் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்பதையும் உருது பேசுகிறவர்கள் என்பதையும் கண்டுபிடித்தார்கள். உடனே, தாங்கள் வைத்திருந்த அந்தச் சிறுபுத்தகம் அவர்களுடைய நினைவுக்கு வந்தது, அதை எடுத்து அவர்களிடம் வாசிக்கக் கொடுத்தார்கள். அவர்களில் ஒருவர் ஆர்வம் காட்டினார், பைபிள் படிக்கவும் ஒத்துக்கொண்டார். அதே வாரத்தில் சபை கூட்டத்திற்கும் வந்தார். யெகோவாவின் மக்களுடன் கூட்டுறவு கொண்டது அவருக்கு அதிக உற்சாகத்தைத் தந்தது, அதோடு, “மின்ஸ்கில் தங்கியிருந்த இந்த மூன்று வருஷத்தில், உண்மையான கிறிஸ்தவர்களைக் கண்டுபிடித்தது இதுவே முதல்முறை” என்று சொல்லும்படியும் அவரை உந்துவித்தது. அந்த மனிதர் தொடர்ந்து பைபிள் படித்து வருகிறார்.

பிரிட்டன்: ரிச்சர்டு என்பவர் ஒரு மூப்பர், அவருக்குக் கண் பார்வை அற்றவர், இர்வின் என்ற ஒரு நாயை வழிகாட்டியாக வைத்திருக்கிறார். அவர் சந்தித்த ஒவ்வொரு இடத்தையும் ஞாபகத்தில் வைக்க விசேஷமாக பயிற்றுவிக்கப்பட்டிருந்ததால், வீட்டுக்கு வீடு ஊழியம் இர்வினுக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது. அந்த நாயைக் கொடுத்தவர்களிடம் இந்தச் சூழ்நிலையைப் பற்றி ரிச்சர்டு கூறியபோது, இப்படிப்பட்ட ஊழியம் இர்வினுக்கு அதிக கஷ்டமாக இருக்குமென கூறினார்கள். பிசினஸ் பிராந்தியத்திற்கு ரிச்சர்டுடன் இர்வினும் சென்றால் நல்லது, அப்பொழுது அவர் அடிக்கடி செல்லும் பல்வேறு இடங்கள் அந்த நாய்க்கு பரிச்சயமாக ஆகுமென அவர்கள் சொன்னார்கள். பிசினஸ் பிராந்தியத்தில் சாட்சி கொடுப்பது ரிச்சர்டுக்கு எப்பொழுதும் அதிக கஷ்டமாக இருந்தது, ஆனால் இர்வினுடைய உதவியால் இத்தகைய சாட்சிகொடுக்கும் முறைக்கும் சீக்கிரத்தில் அவர் பழகிக்கொண்டார்.

ஹங்கேரி: வட்டாரக் கண்காணி ஒருவர் இவ்வாறு எழுதுகிறார்: “மே 2004-⁠ல், தோட்ட வேலை செய்துவந்த சாபா என்பவரை நாங்கள் சந்தித்தோம். சர்ச் கவுன்சிலில் ஓர் அங்கத்தினராக இருப்பதாக அவர் கூறினார். கொஞ்சநேரம் பேசிவிட்டு நாங்கள் கிளம்பிவந்துவிட்டோம். இரண்டு நாட்களுக்குப்பின் அறிவு புத்தகத்துடன் நாங்கள் மீண்டும் சென்று, ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தோம். சந்திப்பின் முடிவில், தன்னுடைய ஸ்டவ் அதிக தொல்லை தருவதாக அவர் கூறினார். இதை ரிப்பேர் செய்வதில் வல்லவரான சகோதரர் ஒருவர் எனக்குத் தெரியும், சாபாவின் டெலிபோன் நம்பரை அவரிடம் தருகிறேன் என்று சொன்னேன். ஆர்வத்தை வளர்ப்பதற்கு சகோதரர்கள் அவரை சந்திக்கச் சென்றபோது, சாபா அந்தப் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார், பைபிள் படிப்பையும் நிறுத்திவிட்டார். இதற்கிடையில், ஸ்டவ் ரிப்பேர் செய்வது சம்பந்தமாக நான் சிபாரிசு செய்த அந்தச் சகோதரர் அவரை சந்தித்தார். சாபாவின் ஸ்டவ்வை சரிப்படுத்த அந்தச் சகோதரர் மூன்று நாட்கள் செலவழித்தார், அந்தச் சமயத்தில் மணிக்கணக்காக சத்தியத்தைப் பற்றி அவரிடம் பேசினார். அவர் மீண்டும் பைபிள் படிக்க ஒத்துக்கொண்டார், அவருடன் அவருடைய மனைவியும் சேர்ந்துகொண்டார். 2005 மே மாதத்திற்குள், முழுக்காட்டப்படாத ஒரு பிரஸ்தாபியாக அவர் மாறினார். அந்தச் சபைக்கு நான் விஜயம் செய்த சமயத்தில், முதல் தடவையாக அவர் ஊழியத்தில் கலந்துகொண்டபோது நான் அவருடன் சென்றேன். சகோதரர்களுடைய சிநேகப்பான்மை, உதவும் குணம், சாட்சிகளுடைய நடத்தைக்கும் அவருடைய சர்ச் ஆட்களுடைய நடத்தைக்கும் இடையே உள்ள வித்தியாசமுமே அவருடைய ஆன்மீக வளர்ச்சிக்கு பேருதவி புரிந்தது.”

பெல்ஜியம்: தெருமுனையில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கும் பெண்மணிக்கு மறுசந்திப்புகள் செய்துவந்தார் ஒரு சகோதரர், அவருடைய உரையாடல் எப்பொழுதும் வீட்டு வாசலில் நடந்தது. ஒருநாள் அந்தச் சகோதரர் அந்த வீட்டைவிட்டுச் சென்றபோது, ஒருவர் அவரை அணுகி இவ்வாறு கூறினார்: “யெகோவாவின் சாட்சிகள் பழகுவதற்கு லாயக்கற்றவர்கள் என என்னுடைய நண்பர்கள் கூறினார்கள். ஆனால் அது உண்மை அல்ல என்று நான் சொன்னேன். சொல்லப்போனால், என்னுடைய நாயுடன் ‘வாக்கிங்’ போய்க்கொண்டிருந்த நிறைய சந்தர்ப்பங்களில், அந்தப் பெண்மணியின் வீட்டில் நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை அந்தத் தெருவின் முனையில் நின்றுகொண்டு கேட்டேன். உயிர்த்தெழுதலைப் பற்றியும் பரதீஸைப் பற்றியும் நீங்கள் அடிக்கடி பேசினீர்கள். இதைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்புகிறேன். என் மனைவி ஆஸ்பத்திரியில் இருக்கிறாள், அவளுக்கு ஏற்பட்ட ஒரு தாக்குதலிலிருந்து அவள் குணமாகி வருகிறாள், 17 தடவை அவள் குத்தப்பட்டாள். நான் நம்பிக்கை இழந்து தவிக்கிறேன், இதற்குமேல் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை.” அவருக்கு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இத்தாலி: ஒருநாள் பிற்பகல் நேரத்தில் சகோதரர் ஒருவர் வேலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தன்னுடைய வீட்டுப் பக்கத்தில் வந்தபோது, மோட்டர்பைக்கில் வந்த இருவர் அவரை மடக்கினார்கள். பின்புறத்தில் அமர்ந்திருந்தவன் ஒரு துப்பாக்கியைக் காட்டி, காரை நிறுத்தும்படி அந்தச் சகோதரரிடம் சைகை காட்டினான், அந்தச் சகோதரர் காரை நிறுத்தினார். அடுத்து, துப்பாக்கி வைத்திருந்தவன் காரைத் திறந்து, சகோதரரை வெளியே வரும்படியும் பாக்கெட்டிலிருக்கும் எல்லா பணத்தையும் கொடுக்கும்படியும் சொன்னான். அந்தச் சகோதரரும் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டார். பிறகு அவன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து காரை ஓட்டிக்கொண்டு போகத் தயாரானான். ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் உள்ளே இருந்ததைப் பார்த்து, “நீங்க யெகோவாவின் சாட்சியா?” என கேட்டான்.

“ஆம்,” என்று சொல்லிவிட்டு, “ஏன்?” என்று அந்தச் சகோதரர் கேட்டார். அவன் எந்தப் பதிலும் பேசாமல், காரைவிட்டு வெளியே வந்து, நடந்த காரியத்திற்கு மன்னிப்புக் கேட்டு, சீட்டில் வந்து உட்காரும்படி சகோதரரரிடம் சொன்னான். இதற்கிடையில், அவனோடு வந்த இன்னொரு திருடனோ, எடுத்த பணத்தையெல்லாம் அவரிடம் கொடுத்துவிடும்படி தன்னுடைய கூட்டாளியிடம் கூறினான்.

துப்பாக்கி வைத்திருந்தவன், “மீண்டும் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறோம்” என சொல்லிவிட்டு, சகோதரருக்காக கார் கதவை அடைத்தான். ஏன் அவர்களுடைய மனம் மாறியது என்பதற்கு அவர்கள் ஒரு காரணமும் சொல்லவில்லை, ஆனால் அவர்கள் யெகோவாவின் சாட்சிகளை மதித்ததாக தெரிகிறது.

ஸ்வீடன்: அறிவு புத்தகத்தை ஏற்றுக்கொண்ட ஒருவரை ஏப்ரல் 2003-⁠ல் பிரஸ்தாபி ஒருவர் சந்தித்தார். அந்த மனிதருக்கு சுமார் 90 வயது. இளம் வயதில், நாடு முழுவதும் பயணம் செய்து பல்வேறு சர்ச்களை போட்டோ எடுத்து வைத்திருந்தார். இதனால், ஸ்வீடன் நாட்டு சர்ச்சில் இருந்த ஒரு தொகுதியில் கௌரவ அங்கத்தினராக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த சர்ச்களில் எதிலாவது கடவுளுடைய பெயரை பார்த்திருக்கிறீர்களா என்று அந்தப் பிரஸ்தாபி கேட்டார், சுவீடனில் உள்ள பிரபல சர்ச் ஒன்றில் கடவுளுடைய பெயரைக் கொண்ட ஒரு போட்டோவை அந்தப் பெரியவரிடம் அவர் காட்டினார். இது அவருடைய ஆர்வத்தைத் தூண்டியது. அவர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார், அதை அவர் மிகவும் அனுபவித்து மகிழ்ந்தார். அவர் கூறினார்: “நான் சிறுபையனாக இருந்தது முதற்கொண்டே பைபிள் படித்திருக்கிறேன், நிறைய விஷயங்களைப் புரிந்துகொண்டதாக நம்பினேன். ஆனால் இப்பொழுது எனக்குத் தெரிந்த விஷயங்களோடு ஒப்பிடும்போது நான் முன்பு ஒன்றுமே புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.” ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கும் விரைவில் ஆஜரானார். ஜூன் 2005-⁠ல், 91-⁠ம் வயதில், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் முதல் தடவையாக பைபிள் வாசிப்பு நியமிப்பை பெற்றார். இப்பொழுது முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக இருக்கிறார், முழுக்காட்டுதலை நோக்கி முன்னேறி வருகிறார். யெகோவாவின் சாட்சிகளுக்கு விரோதமாகப் பேசப்பட்ட ஒரு டிவி நிகழ்ச்சியை அவர் கேட்டிருந்தார், எனவே அவர்களைப் பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள 2003-⁠ல் அவர்களுக்குச் செவிகொடுக்க தீர்மானித்தார். இப்பொழுது அவருக்கு உண்மை தெரியும்.

[பக்கம் 43-ன் படம்]

ஸ்வெட்லானா, கிர்கிஸ்தான்

[பக்கம் 47-ன் படம்]

லூஸி, உகாண்டா

[பக்கம் 52-ன் படம்]

கிராஸியெல்லா, வெனிசுவேலா

[பக்கம் 55-ன் படம்]

குடும்பத்தாருடன் ரெனில்டோ, பிரேசில்

[பக்கம் 57-ன் படம்]

டேல் மற்றும் பெட்டெலி, துவாலூ

[பக்கம் 57-ன் படம்]

சிசிலியா, நியு ஜீலாந்து

[பக்கம் 58-ன் படம்]

எலினா, சமோவா

[பக்கம் 61-ன் படம்]

பாவெல், மய்யா, பெலாரூஸ்

[பக்கம் 61-ன் படம்]

ரிச்சர்டு, அவரது நாய் இர்வின், பிரிட்டன்