கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்
கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்
சமீப ஆண்டுகளில் இயற்கைப் பேரழிவுகள் அதிகரித்திருக்கின்றன; 2005-ஆம் ஊழிய ஆண்டின்போதும் அநேக நாடுகளில் அப்படிப்பட்ட பேரழிவுகள் ஏற்பட்டன. அவற்றால் நம் சகோதரர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நாம் பார்க்கப்போகிற விதமாக, சோதனைகள் வரும்போது கிறிஸ்தவ அன்பு மேலோங்கி நிற்கிறது; அது சகோதரத்துவத்தைப் பலப்படுத்தி நேர்மை மனமுள்ளவர்களை சத்தியத்திடம் கவர்ந்திழுக்கிறது.—மல். 3:18; யோவா. 13:35.
பேரழிவுகள் அதிகரித்திருப்பது, வாழ்க்கையில் உண்மையிலேயே முக்கியமானது எதுவென்பதைக் குறித்தும் எதிர்காலத்தைக் குறித்தும் அநேகரை ஆழ்ந்து சிந்திக்க வைத்திருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு, விசேஷ வினியோகிப்பின்போது விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டைக் கொடுத்து, நம் காலங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவியது நமக்குக் கிடைத்த பாக்கியம்! அநேக நாடுகளில் அக்டோபர் 18, 2004 அன்று அந்த விசேஷ வினியோகிப்பு ஆரம்பமானது; அது நல்ல பலன்களையும் தந்தது.
விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டின் வினியோகிப்பு
அர்ஜென்டினா: “பேரழிவு ஏதேனும் ஏற்பட்டால், யார் தப்பிப்பிழைப்பார்கள்—கெட்டவர்களா, நல்லவர்களா, அல்லது எச்சரிப்புக்குச் செவிகொடுத்தவர்களா?” இப்படியொரு கேள்வியைக் கேட்டுத்தான், யாரும் ஆர்வம் காட்டாத பிராந்தியத்தில் ஒரு சகோதரி விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை திறமையாக அறிமுகப்படுத்தினார்.
ஹவான் என்ற சகோதரர் 16 வயது இளைஞனிடம் சிற்றேட்டைக் கொடுத்தார்; அவன் அதைப் படித்துவிட்டு, அதிலுள்ள விஷயங்களை மிகுந்த சந்தோஷத்தோடு தன் அப்பாவிடம் சொன்னான். அவனது அப்பாவுக்கும் அதிக ஆர்வம் ஏற்பட்டுவிட்டது; ஆகவே அவரும் அதை வாசித்து, அதிலுள்ள வசனங்களை எடுத்துப் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதால் தன் குடும்பத்தோடு சேர்ந்து அந்தச் சிற்றேட்டைப் படிக்க ஆரம்பித்தார். அவர்கள் வீட்டிற்கு ஹவான் மறுபடியும் சென்றபோது, இலவச பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி அந்த இளைஞனின் அப்பாவிடம் சொன்னார். “அதுதான் எங்களுக்கு வேண்டும், குடும்ப பைபிள் படிப்புதான் உண்மையிலேயே வேண்டும்” என்று அவர் பதில் அளித்தார். ஆக, படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
பிரான்சு: ஜோஸ்லின் என்ற சகோதரி, விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை ஆலிஸ்யா என்ற இளம் பெண்ணுக்குக் கொடுத்தார்; இவள், முன்பே யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்தவள். இப்போது சிற்றேட்டை சந்தோஷத்துடன் பெற்றுக்கொண்டதோடு, மறுபடியும் ஜோஸ்லினிடம் பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டாள். பைபிளைத் தவறாமல் வாசிக்கவும் தீர்மானித்தாள். “இரண்டே வாரங்களுக்குப் பிறகு” அவள் ஜோஸ்லினிடம் என்ன சொன்னாள் தெரியுமா? ‘இயேசுவைப் பற்றி பைபிளில் படித்தபோது அழுகையே வந்துவிட்டது’ என்று சொன்னாள்.
ஆலிஸ்யா தன் பாய்ஃபிரெண்டிடம், கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு தாங்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டுமென சொன்னாள்; தான் ஒரு யெகோவாவின் சாட்சியாக மாற விரும்புவதாகவும் சொன்னாள். உடனே அவர் “சரி” என சொல்லிவிட்டார்; “கடவுளுக்குப் பிடித்த மாதிரி நீ நடப்பதற்கு நான் தடையாக இருக்க விரும்பவில்லை” என்றும் சொன்னார். இதைக் கேட்டு ஆலிஸ்யாவுக்கு ஒரே ஆச்சரியம். அதன் பிறகு அவள் முதன்முதலாக ஒரு வட்டார மாநாட்டில் கலந்துகொண்டாள்.
மடகாஸ்கர்: நாநா என்ற பெண் இப்போது இரண்டு இளம் மகள்களுக்குத் தாய்; அவர் சிறுமியாக இருந்த காலத்தில் தன் பெற்றோருடன் சேர்ந்து கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறார். ஆனால் அவருடைய பெற்றோர் யெகோவாவை வணங்குவதை நிறுத்திவிட்டபோது அவரும் நிறுத்திக்கொண்டார். விசேஷ வினியோகிப்பின்போது ஒரு மிஷனரி சகோதரி அவருக்கு விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டைக் கொடுத்தார்; பைபிளைப் படிக்க அவர் ஒப்புக்கொண்டார். இப்போது தன் இரண்டு
மகள்களுடன் அவர் எல்லா கூட்டங்களுக்கும் வருகிறார்; முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆவதற்கு முயற்சி செய்து வருகிறார். அதுமட்டுமல்ல, அவரது பெற்றோரும் அந்தச் சிற்றேட்டிலிருந்து பைபிள் படிக்க ஒத்துக்கொண்டார்கள். நாநாவின் 14 வயது தம்பி ஜோசியாகூட, தன் நண்பனுக்கு பைபிள் படிப்பை நடத்துகிறான்; அந்த நண்பனும் இப்போது கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தவறாமல் வருகிறான்.நைஜீரியா: ஒரு பயனியர் சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “விசேஷ வினியோகிப்பின்போது என் அம்மா இறந்துவிட்டார்கள்; அப்போது, எங்கள் கிராமத்து மக்களுக்குச் சாட்சிகொடுக்க வாய்ப்பு கிடைத்தது. சவ அடக்க நிகழ்ச்சிக்கு முன்பு உறவினர்கள் எல்லாரும் தரையில் குப்புற விழுந்து கதறி அழுதார்கள். ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? அம்மா இறந்தது எல்லாருக்குமே வேதனையாகத்தான் இருக்கிறது, ஆனால் அவர்கள் மரணத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் உயிரோடு வருவார்கள்’ என்று சொன்னேன். நானும் அழுதுகொண்டுதான் இருந்தேன்; என்றாலும், சிற்றேட்டை பக்கம் 8-க்குத் திருப்பி, உயிர்த்தெழுதல் காட்சியைச் சித்தரிக்கிற படத்தைக் காட்டி விளக்கினேன். பிறகு சிற்றேட்டில் 45 பிரதிகளை அவர்களுக்குக் கொடுத்தேன்; மற்ற சிற்றேடுகளையும் சேர்த்து, மொத்தம் 195 பிரதிகளை எல்லாருக்கும் கொடுத்தேன். அதோடு, சவ அடக்க நிகழ்ச்சியின்போது மற்ற சகோதரர்களும் நானும் 100 காவற்கோபுர பிரதிகளைக் கொடுத்தோம்; “இறந்தோர் மீண்டும் உயிர் பெறுவார்களா?” என்று தலைப்பிடப்பட்ட மே 1, 2005 பிரதியே அது.
ரஷ்யா: சல்யானக்ராட்ஸ்க் என்ற இடத்தில் சேவை செய்யும் இரினா என்ற விசேஷ பயனியர் இவ்வாறு எழுதுகிறார்: “ஒரு சகோதரியும் நானும், விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை ஆல்லா என்ற பெண்ணுக்குக் கொடுத்தோம். அவள் எங்களை வீட்டிற்குள் அழைத்தாள். ஜனங்கள் மிகவும் கல்நெஞ்சக்காரர்களாக ஆகிவிட்டதால் வாழ்க்கையே வெறுத்துவிட்டதாகச் சொன்னாள். நாங்கள் மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் சில நாட்களுக்குள்ளேயே, அதே சகோதரியும் நானும் நடந்துபோய்க் கொண்டிருந்தபோது யாரோ எங்களைக் கூப்பிடுவது கேட்டது. திரும்பிப் பார்த்தால், ஆல்லா. சிற்றேட்டைக் கொடுத்ததற்கு அவள் எங்களுக்கு நன்றி சொன்னாள்; அதுமட்டுமல்ல, அதை தன் பையிலிருந்து எடுத்து, தான் கோடிட்டு வைத்திருந்த குறிப்புகளைக் காட்டினாள். இப்போது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலிருந்து அவளுக்குத் தவறாமல் பைபிள் படிப்பு நடத்தப்படுகிறது.”
ரஷ்யாவில் வேறொரு இடத்தில், வியெராவும் அவரது கணவர் விட்டாலியும் தெருவோரத்திலிருந்த ஒரு சிறுகடைக்குச் சென்றார்கள்; அங்கேதான் வியெராவுக்குத் தெரிந்த ஒரு பெண் வேலை செய்கிறாள். அவளது பெயர் லியூடா. யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் பற்றி பேச விருப்பமில்லையென அவள் முன்பு சொல்லியிருந்தாள். ஆகவே அவளிடம் சிற்றேட்டைக்
கொடுக்க வியெரா தயங்கினார். ஆனாலும் அவரது கணவர் கொடுத்த உற்சாகத்தினால் அதை அவளிடம் காட்டினார். என்ன ஆச்சரியம்! அவள் அதை வாங்கிக்கொண்டாள். அதுமட்டுமா, இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் போன் செய்தாள். “ஒரேவொரு புத்தகத்திலிருந்து என்னால் இவ்வளவு விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்ததென்றால், உங்களுடன் தவறாமல் பைபிளைப் படிக்கும்போது இன்னும் எவ்வளவு விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்!” என்றாள். உறவினர்கள் எதிர்த்தபோதிலும் அவள் உடனடியாக பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டு கூட்டங்களுக்கும் வரத் தொடங்கினாள். பைபிள் படிப்பில் இப்போது அவளது மகனும் மகளும்கூட கலந்துகொள்கிறார்கள். வியெரா சொல்கிறார்: “சில வருடங்களுக்கு முன்பு லியூடாவுக்கு அறிவு புத்தகத்தைக் காண்பித்தும் அவள் ஆர்வமே காட்டவில்லை. ஆனால் விழிப்புடன் இருங்கள்! சிற்றேடு அவளது ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.”வெனிசுவேலா: ஒரு வட்டாரக் கண்காணியின் மனைவி, ஒரு வீட்டின் வாசலிலேயே நின்று அக்குடும்பத்தாரோடு பேசினார். கணவன், மனைவி, நான்கு பிள்ளைகள் ஆகிய எல்லாரும் அவர் சொல்வதைக் கேட்டார்கள். விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டின் பக்கங்கள் 16, 17-லுள்ள பரதீஸ் படத்தைக் காட்டி, குடும்பத்திலுள்ள எல்லாரும் கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வது அவசியமென அந்தச் சகோதரி விளக்கினார். அதன்பின், வியாழக்கிழமை கூட்டத்திற்கு வரும்படி அவர்கள் ஆறு பேரையும் அவர் அழைத்தார்; அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பில் காத்திருக்குமாறும் சொன்னார். சரியான நேரத்தில் அவரும் அவரது கணவரும் பஸ் ஸ்டாப்புக்குச் சென்றார்கள், ஆனால் யாரையும் காணவில்லை. இவர்களுக்கு முன்பாகவே அந்தக் குடும்பத்தார் பஸ்ஸில் ஏறி ராஜ்ய மன்றத்திற்குச் சென்றுவிட்டார்கள்! அவர்களில் ஐந்து பேர் இப்போது தவறாமல் பைபிள் படிப்பில் கலந்துகொள்கிறார்கள்; அதிக செலவு செய்து நீண்ட தூரம் பஸ்ஸில் பிரயாணம் செய்ய வேண்டியபோதிலும் அவர்கள் கூட்டங்களுக்குத் தவறாமல் வருகிறார்கள்.
ஒரு பயனியர் சகோதரி ஒரு வீட்டின் கதவைத் தட்டினார், ஆனால் யாரும் வரவில்லை. திரும்பிப் போய்விட்டு கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் வந்தபோது வயதான ஒருவரை சந்தித்தார்; அவர் அப்போதுதான் உள்ளேயிருந்து வெளியே வந்துகொண்டிருந்தார். அவருக்குக் காதே கேட்காதாம்; யாராவது கதவைத் தட்டினால் ஒன்றும் காதில் விழாதாம், அப்படியே விழுந்தாலும் எழுந்து வருவதற்கு ரொம்ப நேரம் ஆகுமாம், அதற்குள் வந்தவர்கள் போய்விடுவார்களாம். இதையெல்லாம் அவர் விளக்கிய பிறகு சகோதரி விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அவருக்குக் கொடுத்து சபை கூட்டத்திற்கும் அழைத்தார்.
கூட்டத்தின்போது சகோதரி அந்த அனுபவத்தைச் சொன்னார்; அந்த வயதானவரும் அங்கு வந்து உட்கார்ந்திருந்ததை அவர் கவனிக்கவே இல்லை! இப்போது அவர் ஒரு சகோதரரோடு தவறாமல் பைபிளைப் படித்து வருகிறார், எல்லா கூட்டங்களுக்கும் வருகிறார்; அதோடு, நற்செய்தியைப்
பிரசங்கிக்க விரும்புவதாகவும் சொல்லியிருக்கிறார். அந்த முதல் கூட்டத்திற்கு ஏன் வந்தார் என கேட்டபோது, விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டைத் தூக்கிக் காட்டி, “இந்த சிற்றேட்டினால்தான்!” என்றார்.பைபிள் மொழிபெயர்ப்பு
1800-களின் பிற்பகுதி முதல், யெகோவாவின் அமைப்பு வேறு நிறுவனங்களிடமிருந்து பைபிள்களை பெருமளவு வாங்கி ஆர்வமுள்ளோருக்கு வினியோகித்தது; சில சமயங்களில் அவற்றை 65 சதவீத தள்ளுபடியில் வினியோகித்தது. 1926 முதற்கொண்டு, சகோதரர்கள் தங்களுடைய சொந்த அச்சகத்திலேயே சில பைபிள்களை அச்சடித்து பைண்ட் செய்ய ஆரம்பித்தார்கள்; தி எம்ஃபடிக் டையக்லாட், கிங் ஜேம்ஸ் வர்ஷன், அமெரிக்கன் ஸ்டான்டர்ட் வர்ஷன் ஆகியவை அவற்றில் சில. அதன் பிறகு, 1961-ல் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளையும் முழுமையாக ஒரே தொகுதியாக ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள்.
பிற மொழி பைபிள்களைப் பற்றியென்ன? 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிளை அலுவலகங்கள், பிற மொழி பைபிள்களை பல்வேறு பதிப்பகங்களிலிருந்து வாங்கி, அதே விலைக்கு வினியோகித்தன. அவற்றில் சிலவற்றை, நேர்மை மனமுள்ளவர்கள் மொழிபெயர்த்தார்கள்; அவர்கள் கடவுளுடைய பெயரையும்கூட, அதாவது யெகோவா என்ற பெயரையும்கூட பயன்படுத்தினார்கள். ஆனால், பிற்பாடு பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்கள் அந்தப் பெயரை தங்கள் மொழிபெயர்ப்புகளில் பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள். இன்றோ சிலர் உண்மையான கடவுளுடைய பெயருக்குப் பதிலாக தங்களுடைய தெய்வத்தின் பெயரைப் புகுத்தியிருக்கிறார்கள்! உதாரணமாக, மலாவி, மொசாம்பிக், ஜாம்பியா ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் புக்கு லோயெரா என்ற சிச்சேவா பைபிள், கடவுளுடைய பெயருக்குப் பதிலாக சௌட்டா என்ற குல தெய்வத்தின் பெயரைப் பயன்படுத்துகிறது. அதன் அர்த்தம் “மகா வில்வீரன்” என்பதாகும்.
பைபிளில் இன்னுமநேக மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, ஓர் ஆப்பிரிக்க மொழிபெயர்ப்பு லூக்காவை சூனியக்கார வைத்தியர் என குறிப்பிடுகிறது. துவாலுவன் மொழி பைபிள், யூதா 23-ஐ இவ்வாறு மிகவும் மோசமாக மொழிபெயர்த்திருக்கிறது: “சோதோமியர்கள்மீது ஊக்கமான அன்பு காட்டுங்கள்; ஆனால் அவர்களைப் போல் கேடுகெட்ட புணர்ச்சியில் ஈடுபடாமல் ஜாக்கிரதையாயிருங்கள்.” ஆனால் பைபிளின் மூலப் பிரதி இவ்வசனத்தில் சோதோமியர்களைப் பற்றியும் குறிப்பிடுவதில்லை, கேடுகெட்ட புணர்ச்சியைப் பற்றியும் குறிப்பிடுவதில்லை!
முன்பெல்லாம் பைபிள் சங்கங்கள் பைபிள்களை அச்சடித்து வினியோகித்து வந்தன. ஆனால் சமீப காலங்களில் அவற்றில் சில, பைபிள்களை அச்சடித்து வினியோகிக்கும் உரிமையை கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளுக்கு அளித்திருக்கின்றன. சில நாடுகளிலுள்ள சர்ச்சுகள் பைபிள்களின் விலையை
உயர்த்தியிருப்பதோடு, யெகோவாவின் சாட்சிகளுக்கு அவற்றை வினியோகிக்கவும் மறுக்கின்றன. உதாரணத்திற்கு, கிர்கிஸ்தானில், கிர்கீஸ் மொழி கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் நவீன மொழிபெயர்ப்பை அச்சடிக்கும் உரிமையை ஒரு புராட்டஸ்டன்ட் மதம் பெற்றிருக்கிறது. சகோதரர்கள் அந்த பைபிளை வாங்கப்போகும் போதெல்லாம், “நீங்கள் யெகோவாவின் சாட்சியா?” அல்லது, “உங்களுக்கு கடவுளுடைய பெயர் தெரியுமா?” என கேட்கப்படுகிறது. ஆம் என்று சொல்கிறவர்களுக்கு பைபிள்கள் கொடுக்கப்படுவதில்லை.இந்தக் காரணங்களாலும் மற்ற காரணங்களாலும், பைபிள் மொழிபெயர்ப்புக்கு முதலிடம் தரும்படி ஆளும் குழு ஆலோசனை வழங்கியிருக்கிறது. தற்போது, புதிய உலக மொழிபெயர்ப்பு முழு பைபிள் 35 மொழிகளில் கிடைக்கிறது; மேலும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு கூடுதலான 20 மொழிகளில் கிடைக்கிறது. தற்போது உலகெங்குமுள்ள 33 பைபிள் மொழிபெயர்ப்புக் குழுக்களில் 19 குழுக்கள் எபிரெய வேதாகமத்தையும், 11 குழுக்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தையும், இன்னும் 3 குழுக்கள் ஒத்துவாக்கிய பைபிளையும் மொழிபெயர்த்து வருகின்றன. பொதுவாக ஒரு பைபிள் மொழிபெயர்ப்புக் குழுவில் மூன்றிலிருந்து ஆறு பேர் வரை இருப்பார்கள். மொழிபெயர்ப்பு சம்பந்தப்பட்ட விசேஷ கம்ப்யூட்டர் புரோகிராம்களின் உதவியாலும் முன்னேற்றுவிக்கப்பட்ட முறைகளாலும் சில குழுக்கள் இரண்டே வருடங்களுக்குள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை மொழிபெயர்த்து முடித்துவிட்டன.
சகோதரர்கள் தங்கள் மொழியிலேயே புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைப் பெற்றுக்கொள்ளும்போது எப்படி உணருகிறார்கள்? அல்பேனியாவிலுள்ள ஒரு பயனியர் சகோதரர் இவ்வாறு சொன்னார்: “நான் அழுதேவிட்டேன். இதற்குமுன் பைபிளைப் படிக்கும்போது இந்தளவு மனம் நெகிழ்ந்துபோனதே இல்லை. ஒவ்வொரு வசனத்தையும் கரைத்துக்குடிக்க வேண்டும்போல் தோன்றுகிறது!” மற்ற அநேகரும் இப்படித்தான் உணருகிறார்கள்.
சட்டப்பூர்வ முன்னேற்றங்கள்
ஆர்மீனியா: யெகோவாவின் சாட்சிகள் 15 முறை விண்ணப்பித்த பிறகு இறுதியாக அக்டோபர் 8, 2004-ல் சட்டப்பூர்வ நிறுவனமாக பதிவு செய்யப்பட்டார்கள். என்றாலும், மனசாட்சியின் காரணமாக ராணுவ சேவையில் ஈடுபட மறுக்கும் இளம் சகோதரர்கள் இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்கள். (ஏசா. 2:4) இப்போது, சாட்சிகளின் அமைப்பு அங்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் மத சுதந்திரம் கிடைக்குமென நம்புகிறோம்; பிரசுரங்களை இறக்குமதி செய்யவும் மாநாடுகளை நடத்தவும் முடியுமென நம்பிக்கையாக இருக்கிறோம். சொல்லப்போனால், ஜூன் 2005-ல், முதன்முதலாக சட்டப்படி இறக்குமதி செய்யப்பட்ட பிரசுரங்கள் சுங்க இலாகாவின் அனுமதியோடு சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
ஆஸ்திரியா: 30 வருடங்களுக்கும் மேலாக, இங்குள்ள யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வ மத அமைப்பாக அங்கீகாரத்தைப் பெற போராடியிருக்கிறார்கள். மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. யெகோவாவின் சாட்சிகள் மத அங்கீகாரத்தைப் பெறாததால் மத ஊழியர்கள் என்ற அடிப்படையில் ராணுவ சேவையிலிருந்து சகோதரர்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை; பிப்ரவரி 1, 2005-ல் இது சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானித்தது. ஜூலை 5 அன்று, ஒரு மனுவை ஏற்க நீதிமன்றம் முடிவுசெய்தது, ஆனாலும் அதில் எவ்வாறு தீர்ப்பு வழங்கும் என்பதை தெரிவிக்கவில்லை.
எரிட்ரியா: ஜனவரி 24, 2004-ல் அஸ்மராவிலுள்ள சாபா என்ற சபையைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என 38 பேரை அதிகாரிகள் கைது செய்தார்கள். அவர்களில் 6 வயது சிறுவன் முதல் 94 வயது முதியவர் வரை இருந்தார்கள். சிலர் முழுக்காட்டப்படாதவர்கள். மூன்று இரவுகள் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகு, சிறுவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். மீதமிருந்த 28 பேர் அஸ்மராவுக்கு வெளியே இருந்த சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு உலோக சரக்குப் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள்; அப்பெட்டிகள், பகல்நேர வெப்பத்திலும் இரவுநேர குளிரிலும் வெளியிலேயே கிடந்தன. 2004, செப்டம்பர் 2 அன்று, அதிக வயதான இரண்டு சகோதரர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள், 94, 87 வயதுடைய இவர்கள் ஏழு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்தார்கள். இவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு மற்றவர்களும்கூட விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் அவர்களில் ஆறு பேர் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்கள்; அதோடு வேறு 16 சகோதரர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், இந்த 16 பேரில் மூவர் 11 வருட சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார்கள். இந்த அருமையான சகோதரர்களுக்காகத் தயவுசெய்து ஜெபம் செய்யுங்கள்.—அப். 12:5.
பிரான்சு: 2001 இயர்புக்கில் (ஆங்கிலம்) குறிப்பிடப்பட்டிருக்கிறபடி, அதிகாரிகள் நம்முடைய சகோதரர்கள் பெறுகிற நன்கொடைகள்மீது ஒரு புதிய வரியை விதித்திருக்கிறார்கள், முந்தைய நான்கு வருடங்களுக்கும் (அதாவது, 1993-96) சேர்த்து வரியைக் கட்டும்படி சொல்லியிருக்கிறார்கள். இந்த வரிகளுக்கு மிக அதிகமான வட்டி, அதாவது 60 சதவீத வட்டி கட்டும்படி சொல்லியிருக்கிறார்கள். அது தவிர அபராதங்களையும் விதித்திருக்கிறார்கள்! இதைக் குறித்து நம்முடைய சகோதரர்கள் கீழ்மன்றத்திலும் மேல் முறையீட்டு மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் முறையிட்டார்கள். ஆனால் இந்த மூன்று நீதிமன்றங்களும் அவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கவில்லை. ஆகவே, பிப்ரவரி 25, 2005 அன்று சகோதரர்கள் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் தங்கள் வழக்கை தாக்கல் செய்தார்கள். வெளிப்படையாகவே மத பாகுபாடு காட்டப்படுவதைச் சுட்டிக்காட்டி அவர்கள் முறையிட்டார்கள்.
ஜார்ஜியா குடியரசு: கடும் துன்புறுத்தல்கள் ஓரளவு ஓய்ந்துவிட்டன. இப்போதெல்லாம் நம்முடைய பிரசுரங்களை இறக்குமதி செய்ய முடிகிறது. எந்தத் தொந்தரவுமின்றி கிறிஸ்தவக் கூட்டங்களை நடத்த முடிகிறது. ஆனால், முன்பு சகோதரர்களை மிக மோசமாக துன்புறுத்தியதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாமலேயே இருக்கின்றன. சகோதரர்கள் ஜார்ஜியாவுக்கு எதிராகத் தொடுத்த நான்கு வழக்குகளில் ஒன்றைக்கூட மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் இன்னும் விசாரிக்கவில்லை. இந்த வழக்குகள் தொடுக்கப்பட்ட காரணங்களில் சில: சகோதரர்களைக் கடுமையாக துன்புறுத்தியது, சட்டப்பூர்வ ஸ்தாபனங்களை இழுத்துமூடச் செய்தது, இத்தகைய வழக்கு விசாரணைகளை நீதிமன்றங்கள் இழுத்தடித்தது. ஜூலை 6, 2004 அன்று யெகோவாவின் சாட்சிகளுடைய கிலடானீ சபை Vs ஜார்ஜியா வழக்கை விசாரிக்க நீதிமன்றம் முன்வந்தது.
ஜெர்மனி: முன்பு பிரிந்திருந்த நாடு மறுபடியும் ஒன்றுசேர்ந்தபோது, யெகோவாவின் சாட்சிகளுடைய மத அமைப்பை சட்டப்பூர்வ ஸ்தாபனமாக்க சகோதரர்கள் முயற்சி செய்தார்கள். இவ்வாறு, 12 வருட சட்டப்போர் ஆரம்பமானது. 2000-ம் ஆண்டின்போது ஃபெடரல் கான்ஸ்ட்டிட்யூஷனல் கோர்ட் நமக்குச் சாதகமாக தீர்ப்பளித்தது. தங்கள் கிறிஸ்தவ மனசாட்சி இடங்கொடுக்காத காரியங்களில் யெகோவாவின் சாட்சிகளை அரசாங்கத்திற்குக் கீழ்ப்படியும்படி வற்புறுத்துவது தவறு என்று தீர்ப்பளித்தது. அதன் பிறகு நடந்த சம்பவங்கள் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு உதவின. மார்ச் 24, 2005 அன்று பெர்லினின் உயர் நிர்வாக நீதிமன்றம், தங்கள் அமைப்பை சட்டப்பூர்வ ஸ்தாபனமாக மாற்றுவதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு அனுமதி வழங்கும்படி பெர்லின் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் பெர்லின் அரசாங்கம் அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முயன்றுவருகிறது.
ரஷ்யா: இயர்புக் 2005-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறபடி 2004, மார்ச் 26 அன்று மாஸ்கோவில், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளின் மீது தடை விதிப்பதாக கலவின்ஸ்கீ இன்டர்-முனிசிபல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமுதல், சபை கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்துவதற்கு மன்றங்களை வாடகைக்கு எடுப்பது கடினமாகியிருக்கிறது. ஆனாலும், சகோதரர்களுக்குச் சொந்தமாக ஒரு ராஜ்ய மன்ற வளாகம் இங்கு இருக்கிறது. இதில் ஐந்து அரங்கங்கள் இருக்கின்றன, அவற்றை 44 சபைகளும் இரண்டு தொகுதிகளும் பயன்படுத்துகின்றன. மாஸ்கோவிலுள்ள 17 சபைகளைச் சேர்ந்தவர்கள் நிறைய செலவு செய்து, சிரமப்பட்டு நகரத்திற்கு வெளியே சென்று சபை கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். மேலும், 31 சபைகளைச் சேர்ந்தவர்கள் அப்பார்ட்மென்டுகளில் சிறிய தொகுதிகளாகக் கூடி, சில கூட்டங்களை அல்லது எல்லா கூட்டங்களையும் நடத்துகிறார்கள். சில சமயங்களில் போலீஸ்காரர்கள் தொந்தரவு தருகிறார்கள், ஆனால்
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மார்ச் 26 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.2004, செப்டம்பர் 9 அன்று கூஸ்னட்ஸாஃப்பும் மற்றவர்களும் Vs ரஷ்யன் ஃபெடரேஷன் வழக்கு மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் வாய்மொழியாக தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 4-ம் தேதியன்று இந்த வழக்கை விசாரிப்பதற்கு நீதிமன்றம் ஏக மனதுடன் ஒத்துக்கொண்டது. இந்த வழக்கு தொடுக்கப்பட்டதற்கான காரணம், வருடம் 2000, ஏப்ரல் மாதம் செலியாபின்ஸ்க் நகரில் நடந்துகொண்டிருந்த சைகை மொழி கூட்டத்தைக் கலைக்கும்படி ஓர் அதிகாரி போலீஸாருக்கு உத்தரவிட்டதே ஆகும். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது சட்ட விரோதமான பயங்கர குளறுபடிகள் நடந்திருக்கின்றன. நாங்கள் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.
துர்க்மேனிஸ்தான்: மனசாட்சியின் நிமித்தம் ராணுவத்தில் சேர மறுத்ததால் மன்சூர் மஷாரிபாஃப், ஆடாமூராட் ஸூஃப்கானாப், வேப்பா டூவாகாஃப் ஆகிய மூன்று சகோதரர்களும் 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டார்கள். நான்காவதாக பேகென்ச் ஷாக்மூராடாஃப் என்ற இன்னொரு சகோதரரும் ஒரு வருட தண்டனை பெற்றார். இந்த நான்கு சகோதரர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி, வாஷிங்டன், டி.சி.-யிலுள்ள துர்க்மேனிஸ்தான் தூதரகத்திற்கு பிப்ரவரி 16, 2005 அன்று யெகோவாவின் சாட்சிகளுடைய சட்ட அலுவலகங்கள் கடிதம் எழுதின. ஏப்ரல் 16-ம் தேதியன்று அந்த நான்கு சகோதரர்களும் துர்க்மேனிஸ்தான் முதல்வர் அளித்த விசேஷ பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள். அந்த வருடத்தில் போலீஸ்காரர்கள் அநேக சகோதரர்களையும் சகோதரிகளையும் காவலில் வைத்து விசாரணை நடத்தினார்கள். இவ்வாறு, அவர்களுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்கும்படி செய்துவிட முயன்றார்கள். ஆனால் அவர்களுக்கு தோல்விதான் மிஞ்சியது.
அதிகமான இயற்கைப் பேரழிவுகளைக் கண்ட வருடம்
இத்தனை வருடங்களில், 2004-ல்தான் இயற்கைப் பேரழிவுகள் சில இடங்களில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தப் பேரழிவுகள் நம்முடைய சகோதரர்களை எவ்வாறு பாதித்திருக்கின்றன?
காரீயகூ, கிரெனெடா, பாடீட் மார்டினிக் தீவுகள்: 2004 செப்டம்பர் 7 அன்று ஐவான் என்ற சூறாவளி இந்தத் தீவுகளிலுள்ள 90 சதவீதத்திற்கும் மேலான வீடுகளை சின்னாபின்னமாக்கியது. அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், அச்சமயத்தில் பெருமளவு பொருட்கள் சூறையாடப்பட்டன; இவை சூறாவளி வாரிக்கொண்டதற்குச் சமமாக இருந்திருக்கலாம்! சகோதரர்கள் கிட்டத்தட்ட தங்களுடைய எல்லா உடமைகளையும் இழந்துவிட்டார்கள். கிரெனெடாவிலுள்ள ஆறு ராஜ்ய மன்றங்களில் இரண்டு படுமோசமாக நாசமடைந்தன. சகோதரர்கள் அனைவரும் பலத்த காயங்கள் எதுவும் இல்லாமல் உயிர் தப்பினார்கள்.
இதற்குமுன் 1955-ல்தான் இந்தத் தீவுகளை சூறாவளி தாக்கியிருந்தது. என்றாலும் சூறாவளியைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி இத்தீவுகளை மேற்பார்வை செய்கிற பார்படோஸ் கிளை அலுவலகம் ஆலோசனை கொடுத்தது. இது சம்பந்தமாக ஊழியக் கூட்டத்தில் ஒரு பேச்சை ஏற்பாடு செய்யும்படி அது சபைகளுக்கு ஆலோசனை வழங்கியது. ஆனால் கிரெனெடாவிலுள்ள ஒரு சகோதரி இப்படிக் கேட்டார்: “செய்வதற்கு எத்தனையோ முக்கியமான காரியங்கள் இருக்கும்போது நாம் ஏன் இப்போது சூறாவளி பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டும்?” இருந்தாலும், ஐவான் சூறாவளி வந்த பிறகு அந்தச் சகோதரி எப்படிப் பிரதிபலித்தார்? அமைப்பு கொடுக்கிற அறிவுரைகளை எதிர்த்து இனி வாயே திறக்கப்போவதில்லை என்று முடிவு செய்தார்! கிளை அலுவலகம் உடனே ஒரு நிவாரணக் குழுவை அமைத்தது. கயானா, டிரினிடாட் நாடுகளைச் சேர்ந்த கிளை அலுவலகங்களும் இந்த நிவாரணப் பணியில் உதவின. கரீபியன் பகுதியிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் வந்து, இடிந்து விழுந்த கட்டடங்களை மறுபடியும் சீரமைக்கும் பணியில் உதவினார்கள்.
ஜமைகா, கேமன் தீவுகள்: ஐவான் சூறாவளியின் தாக்குதலிலிருந்து சகோதரர்கள் உயிரோடு தப்பினார்கள், ஆனால், அவர்களுடைய உடமைகள் தப்பவில்லை. சூறாவளி ஓய்ந்த பிறகு அத்தீவுகளிலிருந்த 199 சபைகளைச் சேர்ந்த மூப்பர்கள் பிரஸ்தாபிகளுடன் தொடர்பு கொண்டார்கள். “நீங்கள் உண்மையிலேயே ஒருவருக்கொருவர் அக்கறையாக இருக்கிறீர்கள்” என்று சகோதரர்களைக் கவனித்த மற்றவர்கள் சொன்னார்கள்.
ஹெய்டி: 2004-ம் வருடம் செப்டம்பர் மாத மத்திபத்தில் ஜீன் என்ற சூறாவளி ஹெய்டியின் வட பகுதியைத் தாக்கியது. அதனால் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் கோனாயிவ் என்ற கரையோர பட்டணமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் நீரில் மூழ்கின. சிலர் உயிர் தப்புவதற்கு வீட்டின் கூரைமேல் ஏறி நின்றும் தண்ணீர் அவர்களது முழங்கால் வரை வந்தது! “இரவு முழுவதும் வீடுகள் இடிந்து விழுகிற சத்தத்தையும் மக்களின் கூக்குரலையும் கேட்டுக்கொண்டிருந்தோம்” என்று ஒரு சகோதரர் சொல்கிறார். இந்தச் சூறாவளி 2,900 பேரின் உயிரைச் சூறையாடிவிட்டது, பலியானவர்களில் 83 வயதான சகோதரியும் ஒருவர்.
ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “நானும் என் குடும்பத்தாரும் உடமைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு உயிர் தப்பினோம்; அதற்காக யெகோவாவிற்கு நன்றி சொல்லுகிறேன்.” சில நாட்களுக்குப் பிறகு அருகிலுள்ள பட்டணங்களிலிருக்கும் சகோதரர்கள் உணவையும் குடிநீரையும் கொண்டுவந்து கொடுத்தார்கள், கிளை அலுவலகம் தேவையான பொருட்களை ஒரு டிரக் நிறைய அனுப்பி வைத்தது. சேதமடைந்திருந்த இடங்களைச் சுத்தப்படுத்தும் வேலை நிறைய இருந்தபோதிலும், வாரயிறுதிக்குள் அதையெல்லாம் முடித்து எல்லாரும் கூட்டங்களுக்கும் வெளி
ஊழியத்திற்கும் போக ஆரம்பித்தார்கள். “என் வீட்டை 40 சகோதரர்கள் சேர்ந்து நான்கு நாட்கள் பழுது பார்த்தார்கள், அதற்கு பெயின்ட் அடித்தும் கொடுத்தார்கள்! சாட்சிகளாக இல்லாதிருந்த என் குடும்பத்தினர் இதையெல்லாம் பார்த்து வாயடைத்துப்போனார்கள். அவர்களில் ஒருவர் இப்போது சாட்சிகளுடன் சேர்ந்து பைபிளைப் படித்து வருகிறார்” என்கிறார் ஒரு சகோதரி.அமெரிக்கா: 2004 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களின்போது நான்கு சூறாவளிகள் அடுத்தடுத்து வந்து ப்ளோரிடாவைத் தாக்கின. இந்தச் சூறாவளிகளின் பெயர்கள்: சார்லீ, ஃபிரான்சஸ், ஐவான், ஜீன். a நம்முடைய சகோதரர்களுடைய வீடுகளில் 4,300-க்கும் அதிகமானவை சேதமடைந்தன, அதுபோக பத்து ராஜ்ய மன்றங்களும் சேதமடைந்தன. வெள்ளம் வடிந்த பிறகு, ப்ளோரிடாவின் அவசர இயக்கக் குழுவின் நிவாரண உதவிகள் சரியாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை அந்தக் குழுவின் சேர்மன் கவனித்தார். வேறு எந்தக் குழுவும் யெகோவாவின் சாட்சிகளைப் போல் அவ்வளவு நன்கு ஒழுங்கமைக்கப்படவில்லை என்று அவர் சொன்னார். தேவைப்படும் எல்லாவற்றையுமே தாராளமாக பெற்றுக்கொள்ளலாம் என்று நிவாரணக் குழுவிடம் சொன்னார்.
ஒரு சபையினர் கொஞ்ச காலத்திற்கு ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்து கூட்டங்களை நடத்தினார்கள். ஒவ்வொரு கூட்டத்திற்கும் 50 டாலர் வாடகை கொடுத்தார்கள். ஆனால் முதன்முறை சூறாவளி வந்தபோது இந்தக் கட்டடமும் சேதமடைந்துவிட்டது. எனவே அதைப் பழுதுபார்க்கும் வேலையை சிலரிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் அவர்கள் அந்த வேலையைச் செய்து முடிக்கவில்லை. சகோதரர்கள் தாங்களே அந்த வேலையைச் செய்ய முன்வந்தார்கள். கட்டடத்தின் சொந்தக்காரர்களும் அதற்கு சம்மதித்தார்கள், சொன்னபடியே சகோதரர்கள் வேலையை முடித்துக் கொடுத்தார்கள். அதற்குக் கைமாறாக அதன் சொந்தக்காரர்கள் மூன்று மாதங்களுக்கு வாடகை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.
ஜப்பான்: “ஜப்பானில் 1551-லிருந்து, சூறாவளிகள் பற்றிய விவரம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அப்பதிவுகளின்படி, 2004-ல்தான் மிக அதிகளவில் சூறாவளிகள் ஏற்பட்டிருக்கின்றன” என்று ஒரு செய்தி அறிக்கை கூறுகிறது. நீகாடா, ஃபுகூயி ஆகிய இடங்களில் ஜூலை மாதத்தின்போது தாக்கிய சூறாவளிகள் 34,000-க்கும் அதிகமான வீடுகளையும் மற்ற கட்டடங்களையும் சீரழித்தன. அதில் ஒரு ராஜ்ய மன்றமும் நம்முடைய சகோதரர்கள் 60 பேருடைய வீடுகளும் சின்னாபின்னமாயின. அக்கம்பக்கத்திலிருந்த சபைகளிலிருந்து நூற்றுக்கணக்கான சாட்சிகள் உதவி செய்வதற்கு ஓடோடி வந்தார்கள். இரண்டே வாரங்களில் ராஜ்ய மன்றம் புத்தம் புது பொலிவுடன் விளங்கியது.
ராஜ்ய மன்றத்திற்கு அருகே குடியிருந்தவர்களின் வீடுகளையும் சகோதரர்கள் கிருமி நாசினிகளை உபயோகித்து சுத்தம் செய்து கொடுத்தார்கள். முன்பு சாட்சிகளை எதிர்த்த ஒருவர் இதையெல்லாம் பார்த்து நன்றி சொல்ல வார்த்தை வராமல் அழுதே விட்டார். சகோதரர்களுடைய பணிகளைப் பாராட்டி அந்த ஊரின் அரசாங்கம்கூட நிவாரணக் குழுவிற்கு ஒரு நன்றிக் கடிதம் அனுப்பியது.
செப்டம்பரிலும் அக்டோபரிலும் இரண்டு சூறாவளிகள் ஜப்பானைத் தாக்கியபோது வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. அதில் ஒரு சகோதரரும் ஒரு சகோதரியும் இறந்துவிட்டார்கள். அது தவிர சுமார் 100 சாட்சிகள் பாதிக்கப்பட்டார்கள். ஹியோகோவிலுள்ள டோயோயோகா நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. வட்டாரக் கண்காணி, தான் தங்கியிருந்த இடம் பாதிக்கப்பட்டபோதிலும் நிவாரணப் பணியை ஒழுங்கமைக்கும் வேலையில் இறங்கினார்.
ஒரு பயனியர் சகோதரியின் வீட்டிற்குள் பல அடி உயரத்திற்கு சேறும் சகதியும் கலந்த அழுக்கு நீர் புகுந்துவிட்டது. அது வடிந்த பிறகு சாட்சிகள் அவருடைய வீட்டை சுத்தம்செய்து கொடுத்தார்கள். சாட்சியாக இல்லாத அந்த வீட்டின் சொந்தக்காரர் இதைப் பார்த்து நெகிழ்ந்துபோனார். அந்தப் பயனியர் சகோதரி சொன்னதாவது: “யெகோவாவின் அமைப்பு மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் அதை நேரில் பார்க்கிறேன். நம் தேவனாகிய யெகோவாவைக் குறித்தும் அவருடைய அமைப்பைக் குறித்தும் ரொம்பவே பெருமைப்படுகிறேன்.”
அக்டோபர் மாதம் ஜப்பானின் வடபகுதியை ஒரு பயங்கரமான பூமியதிர்ச்சி தாக்கியது. அதில் 40 பேர் இறந்துவிட்டார்கள், அதோடு 1,00,000-க்கும் அதிகமானோர் உயிர் தப்புவதற்கு வீட்டையெல்லாம் விட்டுவிட்டு ஓடினார்கள். 200-க்கும் அதிகமான நம்முடைய சகோதரர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன, ஒரு ராஜ்ய மன்றமும் படுமோசமாக சேதமடைந்தது. நல்ல வேளையாக சகோதரர்களில் ஒருவரும் காயப்படவுமில்லை உயிரிழக்கவுமில்லை. அந்த வட்டாரத்தின் மூப்பர்கள் எல்லோரும் வரவிருக்கும் வட்டார மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஒன்றுகூடியிருந்த சமயத்தில் பூமியதிர்ச்சி உலுக்கியது. அவர்கள் என்ன செய்தார்கள்? கிளை அலுவலகமும் மண்டலக் கட்டுமான குழுவும் மூப்பர்களுக்குக் கொடுத்த ஆலோசனைப்படி அவர்கள் உடனடியாக நிவாரணப் பணியை ஒழுங்கமைக்கத் தொடங்கினார்கள். “பூமியதிர்ச்சி போன்ற சம்பவங்களை ஆன்மீக கண்ணோட்டத்தில் பார்க்கும்படி எங்களுக்கு நினைப்பூட்டுதல் கிடைத்தது” என்கிறார் ஒரு மூப்பர். அந்த வட்டார மாநாடு திட்டமிட்டபடியே நடைபெற்றது, பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களும் அதில் கலந்துகொண்டார்கள்.
“பூமியதிர்ச்சி என் கணவரின் இருதயத்தையும் சேர்த்து உலுக்கிவிட்டது” என்று ஒரு சகோதரி சொல்கிறார். இந்த சகோதரியின் வீடு பூமியதிர்ச்சியில் சேதமடைந்துவிட்டது, இவருடைய கணவர் யெகோவாவின் சாட்சி கிடையாது. எனினும் நிவாரணப் பணியின்போது சகோதரர்கள் காட்டிய அன்பைப் பார்த்து மனம் கவரப்பட்டார்; எனவே வாழ்க்கையில் முதன்முறையாகச் சபைக் கூட்டத்திற்குச் சென்றார். “உங்களுடைய அமைப்பை முழுமையாக நம்பலாம், அது நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிடாது” என்று அவர் சொன்னார்.
பிலிப்பைன்ஸ்: 2004 இறுதியில் கியூஜான், அரோரா மாகாணங்களை சூறாவளி தாக்கியது. அதில் ஒரு யெகோவாவின் சாட்சியுடைய வீடு தண்ணீரிலும் சேரிலும் மூழ்கியது. அந்த வீட்டிலிருந்த தம்பதியரும் அவர்களுடைய நான்கு பிள்ளைகளும் இறந்துவிட்டார்கள். திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் வட்டாரக் கண்காணியான ஃபிலிமன் மாரிஸ்டெலா, கியூஜான் மாகாணத்தில் இருந்தார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “கண்ணை மூடித் திறப்பதற்குள் ராஜ்ய மன்றம் வெள்ளக்காடாக மாறியது. வெள்ளம் என் ஜீப்பையும் அடித்துக்கொண்டு போய்விட்டது. நான், என் மனைவி, இன்னும் இரண்டு சகோதரர்கள் எல்லாரும் ராஜ்ய மன்றத்தின் கூரை மேல்தான் ராத்திரி முழுவதும் இருந்தோம். கூரையின் விளிம்புவரை தண்ணீர் வந்துவிட்டது. அடுத்த நாள் மத்தியானம் மூன்று மணிக்குத்தான் நான் கீழே இறங்கினேன். அப்போதுகூட நெஞ்சளவு தண்ணீர் இருந்தது.”
இவ்வளவு ஆபத்து இருந்தும் சகோதரர் மாரிஸ்டெலா, பிரஸ்தாபிகள் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா என்று போய் பார்த்தார். அரோரா
மாகாணத்தில் டீங்காலான் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்குப் போக ஒரு மூப்பருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவர் போகவில்லை. மற்ற சகோதர, சகோதரிகளுக்கு உதவி செய்வதற்காக அவர் அங்கேயே இருந்துவிட்டார்.சரித்திரம் காணாத பயங்கரமான சுனாமி பேரலைகள்
டிசம்பர் 26, 2004-ல், இந்தோனேஷியாவிலுள்ள சுமத்ராவின் வட பகுதியில், அதன் மேற்குக் கரையருகே பூமியதிர்ச்சி ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.0-ஆக பதிவாகிய இந்தப் பூமியதிர்ச்சியினால் சரித்திரத்திலேயே மிக பயங்கரமான சுனாமி பேரலைகள் உருவாகி லட்சக்கணக்கான உயிர்களை வாரிக்கொண்டு போயின. இறந்துபோனவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 2,80,000-த்திற்கும் மேல் இருக்குமென அறிக்கைகள் காட்டுகின்றன! இந்தியப் பெருங்கடலின் மேற்கே அமைந்துள்ள சோமாலியாவைக்கூட இந்தப் பயங்கர பேரலைகள் தாக்கி 290 உயிர்களைப் பறித்தன.
இந்தோனேஷியா: இந்த நாட்டில்தான் சுனாமியால் மிகப் பெரியளவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டதென்றாலும் அதில் சகோதரர்களோ ஆர்வம் காட்டினவர்களோ ஒருவர்கூட இறக்கவில்லை. ஆக்கி என்ற ஊர்தான் சுனாமியால் படுமோசமாக உருக்குலைந்து போயிருந்தது. அங்கு வசித்துவந்த சாட்சிகளில் அநேகர் வன்முறை காரணமாக ஏற்கெனவே உள்நாட்டிற்கு குடிமாறிப் போய்விட்டதால் உயிர் தப்பினார்கள். நியாஸ் என்ற தீவையும் சுனாமி மிக மோசமாக பாதித்திருந்தது. ஆனால் சகோதரர்கள் எப்படியோ உயிர்தப்பினார்கள்.
இந்தியா: சுனாமியினால் அநேக சகோதரர்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தாலும் ஒருவரும் உயிரை இழக்கவில்லை. பாண்டிச்சேரியில் லக்ஷ்மி என்ற சகோதரி வெளி ஊழியம் செய்துகொண்டிருந்த சமயத்தில்தான் சுனாமி பற்றி கேள்விப்பட்டார். கடற்கரையிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருந்த தனது வீட்டுக்குச் சென்றார். அங்கு அவருடைய மண் வீடு சரிசெய்ய முடியாதளவு சேதமடைந்திருந்தது. உடனடியாக அதை சுத்தம் செய்து சரிப்படுத்த சகோதரர்கள் அவருக்கு உதவினார்கள்.
சென்னை நகரில் நவீன் என்ற 13 வயது சிறுவன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் மாபெரும் அலைகள் வருவதைப் பார்த்தான். அவன் உடனே தன் அம்மாவிடமும் அக்காவிடமும் போய் நடந்ததைச் சொன்னான். அவர்கள் மூவரும் பத்திரமான இடத்திற்குத் தப்பியோடினார்கள். வேகமாக அடித்துக்கொண்டுவந்த தண்ணீரில் அவர்கள் ஓட வேண்டியிருந்தது. எல்லா விதமான சாமான்களும் செத்த பிணங்களும் அதில் மிதந்து வந்தன.
ஏழு வயது லினி, தன் சித்தப்பாவுடனும் சித்தப்பா பையனுடனும் கன்னியாகுமரிக்கு அருகே உள்ளே ஒரு கடற்கரையில் இருந்தாள். அப்போது சுனாமி அலைகள் வந்து அவளை அடித்துச் சென்றன; அவள் ஒரு மர வேலிக்குள் சிக்கிக்கொண்டாள். அலை மேல் அலை வந்து அவள்மீது முட்டி மோதியது. அவளுடைய சித்தப்பாவும் சித்தப்பா பையனும் தப்பித்துக்கொண்டார்கள். சித்தப்பாவின் கண்ணாடி அலையில் அடித்துக்கொண்டு போய்விட்டதால் கண் சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் அவர் கஷ்டப்பட்டு லினியைத் தேடிக்கொண்டு இருந்த சமயத்தில் அலைகளின் மத்தியில் அவள் அழுதுகொண்டே யெகோவாவிடம் சப்தமாக ஜெபிக்கிறதைக் கேட்டார், உடனே அவளைப் போய்க் காப்பாற்றினார். யெகோவா தன்னுடைய ஜெபத்தைக் கேட்டதாக லினி இப்போது எல்லாரிடமும் சொல்கிறாள்.
அந்தமான், நிக்கோபார் தீவுகள்: மேரியும் அவருடைய எட்டு வயது மகன் ஆல்வினும் சொந்தக்காரர்கள் வீட்டில் இருந்தபோது பூமியதிர்ச்சி ஏற்பட்டது. உடனே எல்லோரும் ஒரே ஓட்டமாக வெளியே ஓடினார்கள். ஒரு பெரிய ராட்சத அலை மலை அளவு உயர்ந்து உருண்டு வருவதை மேரி பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு பஸ் வந்து நின்றது. உடனே அவரும் அவருடைய மகனும் அதில் ஏறினார்கள். ஆனால் மற்றவர்கள் தங்கள் வீடுகளிலுள்ள பொருட்களை எடுக்கச் சென்றார்கள். போனவர்கள் திரும்பவே இல்லை, தண்ணீர் அவர்களை வாரிச் சென்றது. பஸ் கொஞ்ச தூரம் போன பிறகு இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது, அது பஸ்ஸை ஒரு குலுக்கு குலுக்கியது. அவர்கள் பஸ்ஸை விட்டு இறங்கி உயரமான ஓர் இடத்திற்கு விரைந்தார்கள். அங்கு சுமார் 500 பேர் இருந்தார்கள். அவர்கள் கண் எதிரேயே பஸ்ஸை அலைகள் இழுத்துச் சென்றதைக் கண்டார்கள். அவர்கள் இருந்த இடத்திற்கு இரண்டு அடி தூரம்வரை தண்ணீர் வந்துவிட்டது.
தண்ணீர் கொஞ்சம் வடிந்த பிறகு மேரி, தன் வீட்டிற்குப் போய் பைபிளையும் தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் சிறுபுத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கொஞ்ச நேரத்திற்குள் திரும்பினார். அடுத்த சில நாட்களுக்கு இவைதான் அவர்களுக்குப் பலம் தந்தன. எல்லாரையும் வேறு இடத்திற்குக் கொண்டு செல்ல கப்பல்கள் வரும் என்ற செய்தி கிடைத்தவுடன் மக்கள் கரைக்கும், கடலுக்குள் கொஞ்சதூரமும் ஓடிச்சென்று கப்பல்களை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இப்படியாக ஒவ்வொரு நாளும் மேரியும் அவருடைய மகனும் இடுப்பளவு தண்ணீரில் மணிக்கணக்காக நின்றார்கள். அவர்களைச் சுற்றி பிணங்கள் மிதந்துகொண்டிருந்தன. சுனாமி தாக்கி ஆறு நாட்களுக்குப் பிறகு கடைசியாக ஒரு கப்பல் வந்து அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றது. சுனாமி வந்ததற்கு அநேகர் கடவுளைச் சாடினார்கள். அவர்களிடம் மேரி சிறந்த விதத்தில் சாட்சிகொடுத்தார். மேரியுடைய அண்ணி இப்போது பைபிளைப் படிக்கிறார், கிறிஸ்தவக் கூட்டங்களுக்கும் வருகிறார்.
சகோதரி பிரசாந்தி தன்னுடைய ஐந்து வயது மகன் ஜேஹோயாஷைக் கூட்டிக்கொண்டு, வயதான தன் அப்பாவான சகோதரர் பிரசாத் ராவைப் பார்ப்பதற்கு ஹட் பேயிற்குச் சென்றிருந்தார். அங்கிருக்கையில், அவர்கள் பூமி அதிர்வதை உணர்ந்தார்கள், அலைகள் சீறிக்கொண்டு வந்ததையும் பார்த்தார்கள். உடனே மேடான ஓர் இடத்திற்கு ஓட்டம் பிடித்தார்கள். தெருக்களில் தண்ணீர் 5 மீட்டர் உயரத்திற்கு வந்தது. அதில் சகோதரர் பிரசாத்தின் வீடு மூழ்கியேவிட்டது. அவர் வீட்டிலிருந்த படுக்கைகள், ஃபிரிட்ஜ், டிவி, சபைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய மிகப் பெரிய மனிதர் புத்தகங்கள் எல்லாம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்தப் புத்தகம் பிறகு உயிர்தப்பினவர்களின் கைகளில் கிடைத்தபோது அவர்கள் அதை எடுத்துப் படித்தார்கள். ஐந்து நாட்களுக்கு பிரசாத்தும், பிரசாந்தியும், ஜெஹோயாஷும் கையில் கிடைத்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டார்கள்; கொசுக்களும் ஈக்களும் அவர்களைப் பாடாய்ப் படுத்தின. படகுகள் வந்தபோது அவற்றில் ஏற பிரசாந்தியும் ஜெஹோயாஷும் மற்றவர்களுடன் சேர்ந்து நெஞ்சளவு தண்ணீரில் நடந்துசென்றார்கள், அந்தத் தண்ணீரில் முதலைகளும் நீந்திச்சென்றன! இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க பிரசாந்தி ஆறு மாத கர்ப்பிணியாகவும் இருந்தார். அவருடைய அப்பா அடுத்து வந்த படகில் ஏறி வந்தார்.
தெரீசா தீவிலிருந்த எல்லா வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கிருந்த 13 சகோதர சகோதரிகள் ஆறு நாட்களுக்குக் காட்டுக்குள்தான் தங்கியிருந்தார்கள். அப்போது பசியில் தவித்தார்கள், பூச்சிக்கடியில் அவதிப்பட்டார்கள். பிறகு கமோர்டா தீவிற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். அங்கு மார்க் பால் என்ற சகோதரர் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். அவருடைய வீடு உயரமான இடத்தில் இருந்தது, அதுதான் ராஜ்ய மன்றமாகவும் உபயோகிக்கப்படுகிறது. கூட்டத்திற்கு வழக்கமாக 10, 12 பேர்தான் வருவார்கள். ஆனால் சுனாமி தாக்கிய அன்றோ 300 பேர் வந்திருந்தார்கள்! அன்று முதல் புதிதாக பைபிள் படிப்பு படிப்பவர்களில் 18 பேர் தவறாமல் கூட்டங்களுக்கு வருகிறார்கள். யெகோவாவின் ஜனங்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் உதவுவதை நேரில் பார்த்த அவர்கள் நெகிழ்ந்துபோனார்கள்.
இலங்கை: இந்தத் தீவின் கரையோரப் பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு, வெள்ளத்தால் பயங்கரமாகச் சேதமடைந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று சுனாமி இத்தீவைத் தாக்கியபோது சகோதரர்களில் பெரும்பாலோர் கடற்கரையிலிருந்து உள்ளே தள்ளியிருந்த ராஜ்ய மன்றங்களுக்குக் கூட்டத்திற்காக சென்றிருந்தார்கள். பத்து சபைகள் பாதிக்கப்பட்டன. ஒரு சகோதரியின் வீட்டை அலைகள் அடித்துக்கொண்டு போனபோது அதிலிருந்த சகோதரி இறந்துவிட்டார். இந்த அருமையான சகோதரியை இழந்துவிட்டதை எண்ணி சகோதரர்கள் மிகவும் வருந்துகிறார்கள். பைபிள் சத்தியங்களிடம் ஆர்வம் காட்டின அநேகர் இறந்துவிட்டார்கள், அதோடு அநேக சகோதரர்கள் தங்கள் உறவினர்களை வெள்ளத்திற்குப்
பறிகொடுத்திருக்கிறார்கள். ஒரு மூப்பர் தன் குடும்பத்தாரில் 27 பேரை இழந்துவிட்டார்! என்றாலும், “எவ்வித ஆவிக்குரிய ‘சேதமுமில்லாமல்’ சகோதரர்கள் இந்தப் பேராபத்தான சுனாமியிலிருந்து தப்பினார்கள்” என்று கிளை அலுவலகம் அறிக்கை செய்துள்ளது.பெத்தேலில் நிவாரணப் பொருள்கள் நிரம்பி வழிந்தன. பெத்தேல் குடும்பத்தினரில் அநேகர் நிவாரணப் பணியில் உதவினார்கள். வாகனங்கள் வைத்திருந்த உள்ளூர் சகோதரர்களோ பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதில் உதவினார்கள். நான்கே நாட்களுக்குள் எல்லா சகோதரர்களும் தொடர்புகொள்ளப்பட்டார்கள். அவர்கள் உணவையும் உடையையும் பெற்றார்கள். வேறு ஏதாவது வேண்டுமா என்று அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “பைபிளும் புத்தகங்களும் வேண்டும், எங்களுடையவை தண்ணீரில் அழிந்துவிட்டன” என்றார்கள். அவர்களுடைய தேவைகள் உடனே பூர்த்தி செய்யப்பட்டன.
சுனாமி வந்த சமயத்தில் வட்டாரக் கண்காணியான ஜெராட் கூக் கொழும்பு நகரில் இருந்தார். ஆனால் செய்தி கிடைத்தவுடன் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடத்திற்கு வண்டியில் கிளம்பினார். அவர் ஏழு மணி நேரம் பயணித்த சாலையைப் பற்றி கேட்கவே தேவையில்லை, இருட்டிய பிறகு அந்தச் சாலையில் பயணிப்பது ஆபத்தானது, ஏனென்றால், காட்டு யானைகள் நடமாடுகிற சாலை அது. அவர் போய்ச் சேர்ந்தபோது இரவு மணி 10:30. அவரும் இன்னொரு சகோதரரும்—இவருடைய வீடுகூட தண்ணீரில் மூழ்கியது—உடனே மற்ற சகோதரர்களின் குடும்பங்களைச் சந்தித்து நிவாரணப் பொருள்களைக் கொடுத்தார்கள், விடியற்காலை வரை இந்த வேலையைச் செய்தார்கள்.
தாய்லாந்து: உள்ளூர் சகோதரர்களில் ஒருவருக்குக்கூட உயிர்ச் சேதமோ உடற்சேதமோ ஏற்படவில்லை. அவர்கள் யாருக்குமே பொருள் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் விடுமுறையைக் கழிக்க வந்த வெளிநாட்டுச் சகோதரர்கள் சிலரைக் காணவில்லை,
இறந்துவிட்டிருப்பதுபோல் தெரிந்தது. அவர்களில், பின்லாந்தைச் சேர்ந்த ஒரு சகோதரரும், சுவீடனைச் சேர்ந்த தம்பதியர் இருவரும், ஆஸ்திரியாவைச் சேர்ந்த சகோதரர் ஒருவரும், ஒரு சகோதரியின் சாட்சியல்லாத கணவரும் அடங்குவர். சுவீடனைச் சேர்ந்த தம்பதியர் இருவரும் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அன்று மற்ற சகோதரர்களுடன் சேர்ந்து கரையிலிருந்து தள்ளியிருந்த இடத்தில் வெளி ஊழியத்தில் கலந்துகொண்டார்கள். பின்னர் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பி வந்தபோது சடலங்களையும் சுக்குநூறாகியிருந்த கட்டடங்களையும்தான் பார்த்தார்கள்.திங்கட்கிழமை காலை பூமி அதிர்ந்து ஓய்ந்த பிறகு, பூகெட் சபையின் நடத்தும் கண்காணிக்கு தாய்லாந்து கிளை அலுவலகத்திலிருந்து ஒரு ஃபோன்கால் வந்தது. பின்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்டினா என்ற சகோதரி ஒன்றரை மணிநேர பயண தூரத்திலுள்ள ஆஸ்பத்திரியில் இருப்பதாக கிளை அலுவலகம் அவருக்குத் தகவல் தெரிவித்தது. அவரும் இன்னொரு சகோதரரும் உடனே ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள். அந்த நடத்தும் கண்காணி இவ்வாறு சொல்கிறார்: “கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன், பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள் இவர்களெல்லாரும் தவித்த தவிப்பை சொன்னால் புரியுமா! இந்தளவு சோகமான காட்சிகளை நான் பார்த்ததே இல்லை. சிலர் உதவிகேட்டு அழுதுகொண்டிருந்தார்கள், இன்னும் சிலர் வாழ்க்கை இருண்டுபோய்விட்டதை எண்ணி கூரையை அல்லது தரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்தபோது துக்கம் தாளாததால் தைரியத்தையும் பலத்தையும் மீண்டும் பெறுவதற்கு யெகோவாவிடம் ஜெபம் செய்ய நாங்கள் அவ்வப்போது ரூமைவிட்டு வெளியே போக வேண்டியிருந்தது.”
சகோதரர்கள் கிறிஸ்டினாவைக் கண்டுபிடித்தார்கள், அவருடைய கால் எலும்பு முறிந்திருந்தது. அதனால் ஆபரேஷன் செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அவருடைய எல்லா ஆவணங்களும் தொலைந்துவிட்டன. ஆபரேஷன் முடிந்த பிறகு அந்த இரண்டு சகோதரர்களும் அவருடன் சேர்ந்து ஜெபம் செய்து, நடுராத்திரிவரை அவர் பக்கத்திலேயே இருந்தார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவர் பின்லாந்திற்குத் திரும்பினார். “கஷ்டங்களின் மத்தியிலும் கிறிஸ்டினா தைரியமாகவும் உறுதியாகவும் இருந்தார்” என்று சகோதரர்கள் சொல்கிறார்கள். ஆனால் வருத்தகரமாக, அவரது கணவரின் உயிரை சுனாமி பறித்துவிட்டது.
கிளை அலுவலக பிரதிஷ்டை
அங்கோலா, ஜனவரி 8, 2005: அங்கோலாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக உள்நாட்டுக் கலவரம் நடந்துகொண்டிருந்தது. அதனால் அமைதிக்கே இடமில்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதானது பிரசங்க வேலைக்கு ஒரு
மைல்கல்லாக அமைந்தது. அங்கு சென்ற சகோதரர் ஸ்டீவன் லெட்டிற்கு இரட்டை பாக்கியம் கிடைத்தது. அதாவது, அங்கோலா பெத்தேல் வளாகத்தின் பிரதிஷ்டைப் பேச்சு கொடுக்கும் பாக்கியமும் அந்த நாட்டை முதன்முதல் சந்திக்க வந்த ஆளும் குழுவின் அங்கத்தினர் என்ற பாக்கியமும் கிடைத்தது. 11 நாடுகளிலிருந்து சுமார் 730 பேர் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார்கள். எதற்காக ஒரு புதிய கிளை அலுவலகம் கட்டப்பட்டது என்று நீங்கள் கேட்கலாம். 1975-ல் அந்நாட்டில் 3,055 பிரஸ்தாபிகள் இருந்ததாக கிளை அலுவலகம் அறிக்கை செய்தது. ஆனால் 2004-ன் இறுதியில் அந்த எண்ணிக்கை 18 மடங்கு அதிகரித்தது, அதாவது, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 54,000-த்தையும் தாண்டிவிட்டது!பல்கேரியா, அக்டோபர் 9, 2004: மூன்று வருடங்களாக 150 சர்வதேச வாலண்டியர்களும் 300 உள்ளூர் சகோதரர்களும், சோஃபியாவில் புதிய கிளை அலுவலகத்தைக் கட்டும் பணியில் உதவினார்கள். ஆளும் குழு அங்கத்தினரான கெர்ரட் லாஷ் பிரதிஷ்டைப் பேச்சை கொடுத்தார். 24 நாடுகளிலிருந்து வந்த 364 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
எத்தியோப்பியா, நவம்பர் 20, 2004: பெத்தேல் குடும்பத்தைச் சேர்ந்த 60 பேர் 2004-ன் ஆரம்பத்தில் ஒன்பது வித்தியாசமான இடங்களில் தங்கியிருந்ததால் மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஆனால் இப்போது, நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவின் கிழக்குக் கோடியில் அழகிய, புதிய பெத்தேல் வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. சரிவான அந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது! அங்கு நிலவும் அமைதியைக் குலைப்பது கழுதைப்புலிகள் மட்டும்தான். அவற்றின் சத்தம் சிரிப்பொலிபோல் இருப்பதால் சில இரவுவேளைகளில் அவை அமைதியைக் குலைத்துவிடுகின்றன. சகோதரர் கெர்ரட் லாஷ் கொடுத்த பிரதிஷ்டைப் பேச்சைக் கேட்பதற்காக சகோதர சகோதரிகளில் 2,230 பேர் எத்தியோப்பியாவிலிருந்தும் 200 பேர் 29 நாடுகளிலிருந்தும் வந்திருந்தார்கள். பேட்டி அளித்தவர்களில் பலர் விசுவாசத்தின் காரணமாக சிறைத் தண்டனையையும் சித்திரவதையையும் அனுபவித்தவர்கள். கொலை செய்யப்பட்ட ஒரு சகோதரரைக் குறித்து அவருடைய மகள் இவ்வாறு சொன்னாள்: “அப்பா உயிர்த்தெழுந்து வரும்போது, தன் மகளும் கடவுளுக்குப் பயந்து நடப்பவளாக, பெத்தேலில் சேவை செய்திருக்கிறாள் என்பதை அறியும்போது ரொம்பவே சந்தோஷப்படுவார்.”
கானா, மார்ச் 5, 2005: நைஜீரியா கிளை அலுவலகத்தைச் சேர்ந்த சகோதரர் மால்கம் ஜே. விகோ, 3,243 பேருக்கு முன்பாக பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுத்தார். கிளை அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டவை இவையே: மூன்று குடியிருப்பு கட்டடங்கள், 50 அலுவலகங்கள், ஒரு மெயின்டனென்ஸ் கட்டடம், ஒரு ராஜ்ய மன்றம், ஒரு டைனிங் ரூம், சமையலறை, லாண்டரி.
குவாம், ஜூன் 25, 2005: 1980-லிருந்து இங்கு இரண்டு முறை பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. இது மூன்றாவது பிரதிஷ்டையாகும். 1980-ல் குவாமில் ஒரேவொரு சபைதான் இருந்தது. ஆனால் இப்போதோ பத்து சபைகள் இருக்கின்றன. கிளை அலுவலகப் புதுப்பித்தல் வேலைகள் தவிர, சமீபத்தில் இங்கு ராஜ்ய மன்றம் ஒன்றும் இரண்டு மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டன. இதற்காக ஆஸ்திரேலியாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் 100 சர்வதேச வாலண்டியர்கள் தங்கள் சொந்த செலவில் வந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட ஒரு கட்டட மேற்பார்வையாளர் அவர்களுடைய சிறந்த வேலையைப் பார்த்து ‘ஆச்சரியத்தில் வாயடைத்துப்போனார்’ என்பதாக கிளை அலுவலகம் எழுதியிருக்கிறது. பெரு கிளை அலுவலகத்தைச் சேர்ந்த லாரன்ஸ் ஷெப், பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுத்தார்.
மொரிஷியஸ், நவம்பர் 6, 2004: விஸ்தரிக்கப்பட்ட கிளை அலுவலகத்தின் பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுக்கும் பாக்கியம் கெர்ரட் லாஷ்ஷுக்கு கிடைத்தது. மொழிபெயர்ப்பு இலாகாவுக்கென கூடுதலாக 12 அறைகளும், ஒரு மெயின்டனென்ஸ் கட்டடமும் புதிதாகக் கட்டப்பட்டன. ஐரோப்பா, மடகாஸ்கர், மாயாட், ரீ யூனியன், ஸேசேல்ஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலிருந்து சகோதரர்கள் வந்திருந்தார்கள்.
நிகாராகுவா, டிசம்பர் 4, 2004: 330-க்கும் மேற்பட்ட சர்வதேச வாலண்டியர்களும் நூற்றுக்கணக்கான உள்ளூர் சகோதரர்களும், அலுவலகத்திற்கும் குடியிருப்புக்கும் புதிய கட்டடங்களைக் கிளை அலுவலகத்தில் கட்டினார்கள். 2,400 பேர் உட்காரும் வசதியுள்ள, திறந்த வெளி மாநாட்டு மன்றத்தையும் கட்டினார்கள். ஆளும் குழு அங்கத்தினரான சாமுவேல் ஹெர்ட் பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுத்தார். நிகாராகுவாவில் முன்பு சேவை செய்த மிஷனரிகளும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். அவர்கள் தங்களுடைய பழைய பைபிள் மாணாக்கர்களை மட்டுமல்ல, அவர்களுடைய பிள்ளைகளையும், சிலர் விஷயத்தில் பேரப் பிள்ளைகளையும்கூட பார்த்தார்கள். அவர்கள் எந்தளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!
பனாமா, மார்ச் 19, 2005: கூடிவந்திருந்த 2,967 பேருக்கு சாமுவேல் ஹெர்ட் பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுத்தார். இவர்களில் பெரும்பாலோர் 20 வருடங்களுக்கு மேலாக யெகோவாவுக்குச் சேவை செய்து வருகிறவர்கள். கட்டட வேலை தொடங்கப்பட்ட பிறகு சகோதரர்கள் சில ஸ்டோரேஜ் ட்ரெய்லர்களை நகர்த்துவதற்காக ஒரு கிரேனையும் அதை இயக்குவதற்கு ஒரு நபரையும் வேலைக்கு அமர்த்தினார்கள். ஆனால் அந்த நபரோ கட்டட வேலை நடக்கும் இடத்திற்கு வந்த பிறகு இடம் தயாராகாததால் தன்னால் வேலை செய்ய முடியாது என்று சொன்னார். சகோதரர்கள் அவரிடம் பேசிப் பார்த்தார்கள், ஆனால் அவர் கேட்கவில்லை. அவர் கிளம்புவதற்கு சற்று முன் “சரி, நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?” என்று கேட்டார்.
“நாங்கள் யெகோவாவின் சாட்சிகள்” என்று சகோதரர்கள் சொன்னார்கள்.
அவர் கொஞ்ச நேரம் யோசித்த பிறகு “சரி, அப்படியென்றால், நான் உங்களுக்காக இந்த வேலையைச் செய்து தருகிறேன்” என்றார். அவர் உடனே அப்படி மனதை மாற்றிக்கொண்டதற்கு என்ன காரணம் தெரியுமா? இரண்டு சகோதரிகள் அவருடைய பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு நடத்தி வருகிறார்கள், அதற்காக அவர் நன்றியுள்ளவராக இருந்தார். அதுதான் அவர் மனதை மாற்றியது.
ஸ்லோவாக்யா, ஏப்ரல் 16, 2005: ஆளும் குழு அங்கத்தினரான தியோடர் ஜாரக்ஸ் 21 நாடுகளிலிருந்து வந்திருந்த 448 பேரிடம் பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுத்தார். அதற்கு அடுத்த நாள் ஒரு விளையாட்டு அரங்கத்தில் விசேஷித்த கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதற்கு அநேக சகோதர சகோதரிகள் பஸ்ஸில் வந்தார்கள். அந்த பஸ் டிரைவர்களில் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் ரொம்ப நல்ல ஜனங்கள், சந்தோஷமான ஜனங்கள், நீங்கள் எல்லாருமே எனக்கு வணக்கம் சொன்னீர்கள்! உங்கள் மத விசுவாசத்தினால்தான் இப்படி நீங்கள் நடந்துகொள்கிறீர்கள். நான் வழக்கமாக ஸ்கூல் பிள்ளைகளையும் டீச்சர்களையும் என் பஸ்ஸில் ஏற்றிச் செல்கிறேன், ஆனால் அந்தப் பிள்ளைகளுக்கு நான்தான் முதலில் வணக்கம் சொல்ல வேண்டும், அந்த டீச்சர்களோ என்னைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்!”
வால்கில், நியு யார்க், அ.ஐ.மா., மே 16, 2005: “இந்த அழகான புதிய அச்சகத்தையும் ஏ, சி, டி ஆகிய குடியிருப்புக் கட்டடங்களையும் ஒன்றான மெய்த்தேவனாகிய யெகோவாவிற்கு அர்ப்பணிக்க அனைவரும் தீர்மானித்திருக்கிறோம்” என்பதாக ஆளும் குழு அங்கத்தினரான ஜான் பார் பிரதிஷ்டைப் பேச்சின்போது சொன்னார். மே 1, 2003 அன்று புதிய அச்சகத்திற்கான அடித்தளம் போடும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. எட்டு மாதங்களுக்குள் பழைய அச்சகத்திலிருந்த அச்சு இயந்திரங்களில் ஒன்று புதிய அச்சகத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
ஐக்கிய மாகாணங்கள் எங்குமுள்ள மண்டல கட்டுமான குழுக்கள், முக்கியமாகப் பக்கத்து மாகாணங்களில் இருந்த குழுக்கள், திறம்பட்ட கைவினைஞர்களை வால்கில்லுக்கு அனுப்பி வைத்தன. சில வேலைகளை வெளியாட்கள் செய்தார்கள். “என் ஆட்களுக்குப் பணம் கொடுத்தாலும் உங்களுடைய ஆட்களைப் போல் வேலை செய்ய மாட்டார்கள். ஏனென்றால் உங்களுடையவர்கள் முழு மனதோடு வேலை செய்கிறார்கள்” என்று ஒருவர் சொன்னார். “என் தொழிலைப் பற்றி ஐந்து வருடங்களாக பயிற்சிப் பள்ளியில் கற்றுக்கொண்டதைவிட உவாட்ச்டவர் வளாகத்தில் செலவிட்ட சில மாதங்களில் நிறையவே கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்போது என் தொழிலைப் பற்றி ரொம்பவே தெரிந்து வைத்திருக்கிறேன்” என்றார் இன்னொரு புராஜக்ட் மேனேஜர். கன்வேயர் ஸிஸ்டத்தைப் பொருத்திய ஒரு கம்பெனியின்
பிரதிநிதி இவ்வாறு சொன்னார்: “நாங்கள் எத்தனையோ இயந்திரங்களைப் பொருத்தியிருக்கிறோம். ஆனால் இந்த அச்சகத்தில் பொருத்தியதைப்போல் வேறு எங்கும் நாங்கள் இவ்வளவு சீக்கிரமாக வேலையை முடித்ததில்லை; அதற்கு உங்களுடைய உதவிதான் காரணம். இங்குள்ள எல்லோருமே சந்தோஷமாக இருப்பது எனக்கும் சந்தோஷம் அளிக்கிறது! இது மிக அருமையான இடம்.”சில வருடங்களுக்கு முன்பு ஐக்கிய மாகாணங்களில் மொத்தம் 15 வெப்-ஆஃப்செட் அச்சகங்கள்—11 புரூக்ளினிலும் 4 வால்கில்லிலும்—இருந்தன. ஆனால் இப்போது ஐந்தே ஐந்து அச்சகங்கள்தான் இருக்கின்றன. அதற்கு ஒரு காரணம் தொழில் நுட்ப முன்னேற்றம். இன்னொரு காரணம், மண்டல அச்சக ஏற்பாட்டின்படி மற்ற கிளை அலுவலகங்களுக்கும் வேலைகள் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டிருப்பது. இந்தப் புதிய அச்சகத்தில், ஓரங்கள் வெட்டப்படுகையில் விழும் பேப்பர் துண்டுகள், அச்சடிக்கப்படும் இடத்திலிருந்தும் பைன்டிங் செய்யப்படும் இடத்திலிருந்தும் சேகரிக்கப்பட்டு, மேல் நோக்கி செல்லும் காற்றுக் குழாய்கள் வழியாக ஆட்டோமாட்டிக் பேலர் மெஷின்களுக்குப் போய் சேருகின்றன; இங்கு இவை இயந்திரத்தால் தாமாகவே பெரிய கட்டுகளாக கட்டப்படுகின்றன. இந்தப் பேப்பர் கட்டுகள், வேறொரு கம்பெனிக்கு விற்கப்படுகின்றன; அந்தக் கம்பெனி அவற்றை மறுசுழற்சி செய்வதால் ஒவ்வொரு வருடமும் கிளை அலுவலகத்திற்கு 2,00,000 டாலர்கள் மிச்சமாகின்றன!
ஜாம்பியா, டிசம்பர் 25, 2004: விஸ்தரிக்கப்பட்ட கிளை அலுவலக பிரதிஷ்டைக்காக 700 பேர் வந்திருந்தார்கள். அவர்களில் 374 பேர் 40 வருடங்களுக்கும் மேலாக யெகோவாவுக்குச் சேவை செய்து வருகிறவர்கள்! ஸ்டீவன் லெட் பிரதிஷ்டைப் பேச்சை கொடுத்தபோது, இயேசுவின் ஓர் உவமையில் “மிக நன்று!” என மனப்பூர்வமாகப் பாராட்டப்பட்ட ஊழியக்காரர்களைப் போலவே கட்டட வேலையில் பங்குகொண்டவர்களும் பாராட்டப்படத் தகுதியுள்ளவர்கள் என்றார்.—மத்தேயு 25:23, NW.
கட்டட வேலையின்போதும்கூட சகோதரர்கள் சிறந்த விதத்தில் சாட்சி கொடுத்தார்கள். ஒரு கான்ட்ராக்டர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் பரதீஸில் இருக்கிறீர்கள்.”
“ஆன்மீகப் பரதீஸா அல்லது சொல்லர்த்தமான பரதீஸா?” என்று சகோதரர்கள் கேட்டார்கள்.
“இரண்டும்தான்” என்றார் அவர்.
[அடிக்குறிப்பு]
a கட்ரீனா சூறாவளியைப் பற்றிய தகவல் பின்னர் வெளிவரும்.
[பக்கம் 29-ன் பெட்டி/படங்கள்]
“கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” மாவட்ட மாநாடுகள்
“கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” மாவட்ட மாநாடுகளில் விளக்கப்பட்டபடி, ‘தேவனை அறிந்து,’ ‘சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியும்’ நபர்களே யெகோவாவின் நியாயத்தீர்ப்பு நாளில் தப்பிப்பிழைப்பார்கள். (2 தெ. 1:6-10) ஆகவே, கடவுளைப் பற்றி சரியாகத் தெரியாமல் குழம்பிப் போயிருப்பவர்களுக்கு அல்லது உலகிலுள்ள துன்பத்தையெல்லாம் பார்த்து கடவுள்மீது வெறுப்படைந்து இருப்பவர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய விரும்புகிறோம். இதற்குக் கைகொடுக்கும் அருமையான புதிய பிரசுரங்கள்தான், துன்பத்திற்கெல்லாம் முடிவு விரைவில்! என்ற துண்டுப்பிரதியும், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகமும்.
இந்தப் புதிய துண்டுப்பிரதி, போர், வறுமை, பேரழிவுகள், அநீதி, வியாதி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிற அநேகருக்கு ஆறுதல் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை; இவற்றிற்கெல்லாம் கடவுள் காரணமல்ல என்பதையும் அவர்களுக்குப் புரிய வைக்கும். அதேபோல், புதிய புத்தகம், ஆன்மீக சத்தியத்திற்காக ஏங்குபவர்களுக்கு உதவும். அதன் எழுத்துநடையில் கனிவு, எளிமை, தெளிவு ஆகியவை பளிச்சிடுகின்றன; முக்கிய குறிப்புகள் வார்த்தைகளிலும் படங்களிலும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. இப்புத்தகத்தைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு படிப்பு நடத்துவதற்கு முன்பு, அதன் பிற்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதலான 14 கட்டுரைகளைப் படித்துப் பார்க்கத் தவறாதீர்கள்.
[பக்கம் 12, 13-ன் அட்டவணை/படங்கள்]
2005 ஊழிய ஆண்டின் முக்கிய சம்பவங்கள்
செப்டம்பர் 1, 2004
அக்டோபர் 8: ஆர்மீனியாவில் யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படுகிறார்கள்.
அக்டோபர் 9: பல்கேரியா கிளை அலுவலகப் பிரதிஷ்டை.
அக்டோபர் 18: விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டின் விசேஷ வினியோகிப்பு ஆரம்பம்.
நவம்பர் 6: மொரிஷியஸ் கிளை அலுவலகப் பிரதிஷ்டை.
நவம்பர் 20: எத்தியோப்பியா கிளை அலுவலகப் பிரதிஷ்டை.
டிசம்பர் 4: நிகாராகுவா கிளை அலுவலகப் பிரதிஷ்டை.
டிசம்பர் 25: ஜாம்பியா கிளை அலுவலகப் பிரதிஷ்டை.
டிசம்பர் 26: இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ராவுக்கு அருகே மிகப் பெரிய பூகம்பம் (ரிக்டர் அளவுகோலில் 9.0); இதன் விளைவாக, சரித்திரம் காணாத பயங்கரமான சுனாமி பேரலையின் தாக்குதல்.
ஜனவரி 1, 2005
ஜனவரி 8: அங்கோலா கிளை அலுவலகப் பிரதிஷ்டை.
மார்ச் 5: கானா கிளை அலுவலகப் பிரதிஷ்டை.
மார்ச் 19: பனாமா கிளை அலுவலகப் பிரதிஷ்டை.
மார்ச் 24: பெர்லின் உச்சநீதி மன்றம், சட்டப்பூர்வ நிறுவனமாக இயங்கும் உரிமையை பெர்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு வழங்கும்படி கூறுகிறது.
ஏப்ரல் 16: ஸ்லோவாக்யா கிளை அலுவலகப் பிரதிஷ்டை.
மே 1, 2005
மே 16: நியு யார்க்கிலுள்ள வால்கிலில், அச்சகம் மற்றும் குடியிருப்புக் கட்டடங்களின் பிரதிஷ்டை.
ஜூன் 25: குவாம் கிளை அலுவலகப் பிரதிஷ்டை.
ஆகஸ்ட் 1, 2005
[பக்கம் 20-ன் படம்]
ஜப்பானிலுள்ள நிகாட்டா நகரில், வெள்ளத்தால் சேதமடைந்த ராஜ்ய மன்றத்தைச் சுத்தப்படுத்துதல்
[பக்கம் 24-ன் படம்]
இலங்கையில், நிவாரணப் பொருட்களை வழங்குதல்