Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜாம்பியா

ஜாம்பியா

ஜாம்பியா

எம்பராய்டரி போட்ட ஓர் அகலமான ஆடை போன்றது ஆப்பிரிக்கா கண்டம். வெண்மணல் பரப்பிய மத்தியதரைக் கடற்கரைமுதல், பொன்னிற சஹாராவைக் கடந்து, படிகப்பச்சையில் மின்னும் பசுங்காடுகள் வழியே, வெண்ணுரை ததும்பும் நன்னம்பிக்கை முனையின் கடற்கரைவரை, உலக ஜனத்தொகையில் பத்தில் ஒரு பகுதியினரை தன்னகத்தே கொண்டுள்ளது இக்கண்டம். இங்கு நைல், நைஜர், காங்கோ, ஜாம்பஜி போன்ற ஆறுகள் பல பாய்கின்றன. அந்நாட்டு மண்ணுக்குள் தங்கமும் தாமிரமும் மதிப்புமிக்க மணிக்கற்களும் ஏராளமாய் புதைந்து கிடக்கின்றன.

காங்கோ ஆற்றுப் பள்ளத்தாக்கின் வெப்பமண்டல மழைக் காட்டிற்கு மேற்பகுதியில் மேடுபள்ளங்களைக் கொண்ட புல்வெளியில்​—⁠மத்திய ஆப்பிரிக்க பீடபூமியில்​—⁠ஜாம்பியா குடிகொண்டிருக்கிறது. வரைபடத்தில், ஒழுங்கற்ற வடிவிலுள்ள ஒரு பெரிய வண்ணத்துப் பூச்சி உட்கார்ந்திருப்பது போல் இந்நாடு காட்சி அளிப்பதாக சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த ஒழுங்கற்ற எல்லை குடியேற்ற சகாப்தம் அளித்த ஆஸ்தி. இதன் பரப்பளவு ஏழரை லட்சம் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமாகும்.

இன்றைய ஜாம்பியாவின் வடகிழக்கு பகுதியில் மகா பிளவு பள்ளத்தாக்கு உள்ளது. மேற்கிலும் தெற்கிலும் ஜாம்பஜி என்ற மகாநதி பாய்கிறது. ஆப்பிரிக்காவிலிருந்து தங்கத்தையும் தந்தத்தையும் ஆட்களையும் சூறையாடிய பிற தேசத்தவர்கள் 19-⁠ம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை இங்கு கால்வைக்கவில்லை. 1855-⁠ல், ஸ்காட்லாந்து ஆலைத் தொழிலாளியின் மகனான டேவிட் லிவிங்ஸ்டன் என்ற ஆய்வுப் பயணி, “இடி முழக்கமிடும் புகை” எனும் நீர்வீழ்ச்சிக்கு அப்பாலுள்ள இத்தேசத்தை உலகத்திற்குக் காட்டினார். இங்கிலாந்து நாட்டு விக்டோரியா மகாராணியை கௌரவிக்கும் வகையில், கண்களைக் கவரும் இந்த அதிசய நீர்வீழ்ச்சிக்கு விக்டோரியா நீர்வீழ்ச்சி என லிவிங்ஸ்டன் பிற்பாடு பெயர் சூட்டினார்.

“கிறிஸ்தவத்தையும் வாணிகத்தையும் நாகரிகத்தையும்” வளர்க்கும் ஆவலில் கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் இக்கண்டத்தின் மையப்பகுதிக்கு விரைந்து வந்தார்கள். அவர்கள் மிஷனரி சேவை செய்த விதம் கடவுளுடைய ஊழியர்களாக அவர்களை விளங்கச் செய்யவில்லை. ஆனால் விரைவிலேயே மற்றொரு தொகுதியினர் வந்தார்கள், இவர்கள் கடவுளுடைய உதவியால் உண்மையிலேயே அவருடைய ஊழியர்கள் என தங்களை விளங்கச் செய்தார்கள்.​—2 கொ. 6:3-10.

ஆரம்ப காலங்கள்

1890-⁠க்குள், இப்பொழுது ஜாம்பியா என அழைக்கப்படும் இடத்தில் ஐந்து மிஷனரி சங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. புதிய நூற்றாண்டு உதயமானபோது, குடியேற்ற ஆதிக்கமும் வாணிப நடவடிக்கைகளும் தீவிரமடைந்ததால் ஆப்பிரிக்கர்கள் அநேகர் பதட்டம் அடைந்தனர். எனவே ஆன்மீக வழிநடத்துதலை நாடினார்கள். விசித்திரமும் வினோதமுமான மத இயக்கங்கள் பல ஆப்பிரிக்க நாடுகளில் தலைதூக்கின. அதேசமயத்தில் உண்மையான ஆன்மீக உதவியும் மக்களுக்குக் கிடைத்தது. 1911-⁠ம் ஆண்டிலேயே, வேதாகமத்தின் பேரில் படிப்புகள் என்ற ஆங்கில புத்தகம் ஜாம்பியாவில் வசித்துவந்த நல்மனம் படைத்த ஆட்களுக்குக் கிடைத்தது. இப்புத்தகத்தில் இருந்த பைபிள் சத்தியங்கள் காட்டு தீயாக வடக்கில் பரவின, சிலசமயங்களில் கடவுளுக்குச் சேவை செய்வதில் உண்மையான அக்கறை காட்டாத ஆட்களால்கூட பரவின.

1910-⁠ம் ஆண்டில், ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை மேற்பார்வை செய்துவந்த சார்ல்ஸ் டேஸ் ரஸல் என்பவர் நியாசாலாந்தில் (இப்பொழுது மலாவி) உள்ள சகோதரர்களுக்கு உதவ வில்லியம் டபிள்யு. ஜான்ஸ்டனை அனுப்பி வைத்தார்; ஸ்காட்லாந்தில் இருக்கும் கிளாஸ்கோவைச் சேர்ந்த இந்தச் சகோதரர் நம்பகமானவர், பொறுப்புணர்ச்சியுள்ளவர். ஆனால் வருத்தகரமாக, இவருக்கு முன் அங்கு சென்றிருந்த சிலர்​—⁠அந்நாட்டவரும் அந்நியரும்​—⁠தங்கள் சொந்த அக்கறைகளை முன்னேற்றுவிக்க முயன்றதால் பைபிள் சத்தியங்களைத் திரித்துக்கூறினார்கள். பின்வந்த ஆண்டுகளில், பிரசங்கிகள் என்றும் பாஸ்டர்கள் என்றும் தங்களை அழைத்துக்கொண்டவர்கள் வடக்கு ரோடீஷியாவுக்கு (இப்பொழுது ஜாம்பியா) வந்தார்கள்; அசுத்தமான பழக்கங்களைக் கொண்ட எழுச்சியூட்டும் ஒரு மதத்தை அவர்கள் முன்னேற்றுவித்தார்கள், விடுதலை அளிப்பதாகவும் வாக்குறுதிகள் கொடுத்தார்கள். நியாசாலாந்து மக்களுக்கு சகோதரர் ஜான்ஸ்டன் ஆன்மீக ரீதியில் உதவி அளித்தார். அவர்கள் “கடவுளுடைய வார்த்தையை இன்னும் நன்றாக அறிந்துகொள்ள ஏங்கினார்கள்” என்று குறிப்பிட்டார். ஆனால் மேற்கில் இருந்தவர்களுக்கு அந்தளவு உதவி அளிக்கப்படவில்லை. தபால் மூலமாகவோ குடிமாறி வந்தவர்கள் மூலமாகவோ பைபிள் பிரசுரங்கள் வட ரோடீஷியாவுக்கு எப்படியோ வந்துசேர்ந்தன; இருந்தாலும் அந்நாட்களில் ராஜ்ய பிரசங்க வேலை பெருமளவு மேற்பார்வை செய்யப்படாமல்தான் இருந்தது.

குழப்பமான காலம்

1920-களின் ஆரம்பம் குழப்பமான காலமாக இருந்தது. போலி “உவாட்ச் டவர் இயக்கங்கள்” கடவுளுக்கு சேவை செய்வோருடைய மெய்யான கிறிஸ்தவ ஊழியத்திற்கு மிகுந்த அவப்பெயரைக் கொண்டுவந்தன. பைபிள் சத்தியத்தைப் பற்றி துளிகூட தெரியாத ஆட்கள் பைபிள் மாணாக்கர்களோடு (யெகோவாவின் சாட்சிகள் அப்போது அவ்வாறு அழைக்கப்பட்டனர்) தொடர்பு இருப்பதாக சொல்லிக்கொண்டார்கள். இவர்களில் சிலர், ஒருவருக்கொருவர் மனைவியை மாற்றிக்கொண்டார்கள், இன்னும் சிலரோ வேறு தவறான செயல்களிலும் ஈடுபட்டார்கள். அதேசமயம், மற்ற அநேக தொகுதியினர் பைபிள் நியமங்களை உண்மையிலேயே மதித்து பிரசங்க வேலையில் தீவிரமாக ஈடுபட்டார்கள், ஆகவே அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடிப்பது தெளிவாகத் தெரிந்தது.

கடவுளை உண்மையாகச் சேவிப்பவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. 1924-⁠ல், பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் வால்டரும் ஜார்ஜ் ஃபிலிப்ஸும் தென் ஆப்பிரிக்காவில் கேப் டவுனிலிருந்த பைபிள் மாணாக்கர்களுடைய அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தார்கள். சுமார் 30 அல்லது 35-வயது மதிக்கத்தக்க சகோதரர் வால்டர், தென் ரோடீஷியாவுக்கும் வட ரோடீஷியாவுக்கும் பயணம் செய்து உவாட்ச் டவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொண்டார். அதற்கடுத்த ஆண்டில், வளர்ந்துவந்த தொகுதிகளைக் கவனித்துக்கொள்வதற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த வில்லியம் டாஸன் நியமிக்கப்பட்டார். பாஸ்டர்கள் என தங்களை அழைத்துக்கொண்ட சிலர், பைபிள் சத்தியத்தைப் பற்றி ஒன்றும் அறியாத, அறிந்தும் மதிக்காத எண்ணற்ற மக்களுக்கு ஆர்வத்துடன் முழுக்காட்டுதல் கொடுத்து வந்ததாக அவர் குறிப்பிட்டார். லவலன் ஃபிலிப்ஸ் (ஜார்ஜ் ஃபிலிப்ஸின் உறவினர் அல்ல) பிற்பாடு இவ்வாறு எழுதினார்: “‘வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத’ நினிவே மக்களைப் போலவே பெரும்பான்மையோர் இருந்தது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.” (யோனா 4:11) அவர்களில் பலர் நல்மனமுள்ளவர்கள், ஆனால் அவர்களுடைய மொழிகளில் ஏறக்குறைய எந்தப் பிரசுரமும் இல்லாததால் சத்தியத்தைப் புரிந்துகொள்வது அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. வேலையை நிரந்தரமாய் மேற்பார்வை செய்வதற்கான அரசாங்க அங்கீகாரத்தைப் பெற திரும்பத்திரும்ப முயற்சி செய்தும் பலனில்லாமல் போனதால், வெளிப்படையாக பிரசங்கிப்பதையும் முழுக்காட்டுதல் கொடுப்பதையும் குறைக்கும்படி கேப் டவுன் அலுவலகம் தீர்மானம் எடுத்தது. ஆனால், பைபிள் படிப்பு நடத்துவதையோ வழிபாட்டிற்காக ஒன்றுகூடி வருவதையோ வேண்டாமென சொல்லவில்லை. என்றாலும், பைபிள் மாணாக்கர்களுக்கு நிரந்தர பிரதிநிதியை நியமிக்கும்வரை இந்தத் தற்காலிக ஏற்பாட்டுடன் ஒத்துழைக்கும்படி ஆர்வமுள்ளவர்கள் அடங்கிய தொகுதிகளுக்கு சகோதரர் வால்டர் எழுதினார்.

ரயில் பாதை நெடுக

நூற்றாண்டுகளாக, கருவிகள் தயாரிப்பதற்கும் அலங்காரப் பொருள்கள் தயாரிப்பதற்கும், மேற்பரப்பில் படிந்திருந்த செம்பையே உள்ளூர் மக்கள் பயன்படுத்தியிருந்தார்கள். ஆனால் 1920-களின் மத்திபத்திற்குள், பிரிட்டிஷ் சௌத் ஆப்பிரிக்கா கம்பெனி நிலத்தடியில் மண்டிக்கிடந்த செம்பை ‘சுரண்ட’ ஆரம்பித்தது; அந்தப் பிராந்தியம் மட்டுமின்றி, சுரங்கம் வெட்டும் உரிமைகளும் அதன் கட்டுப்பாட்டில் இருந்தன. செம்பை தோண்டியெடுக்க வேலையாட்கள் தேவைப்பட்டார்கள், அதற்காக கிராமப்புறங்களிலிருந்து ஆயிரமாயிரம் பேர் வந்து குவிந்தார்கள். கேப் டவுனிலிருந்து கெய்ரோவரை போடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ரயில் பாதை நெடுக புதிதாக வளர்ந்துவந்த நகரங்களிலும் மாநகரங்களிலும் அவர்கள் குடியேறினார்கள்.

ஜேம்ஸ் லூக்கா மவங்கோ இவ்வாறு கூறினார்: “கம்பெனிகளை (அதாவது, சபைகளை) ஸ்தாபிப்பது அன்று மிகவும் வித்தியாசமாக இருந்தது. 1930-⁠க்கு முன்பு, பைபிள் படிப்பிற்கான கூட்டங்கள் சிறுசிறு தொகுதிகளாகவே நடத்தப்பட்டன. ஆர்வமுள்ள சிலர் கேப் டவுன் அலுவலகத்துடன் தொடர்புகொண்டார்கள். மற்றவர்களோ பிரசுர ஆர்டர்களை நேரடியாகவே புரூக்ளினுக்கு அனுப்பினார்கள். பிரசுரங்கள் ஆங்கிலத்தில் இருந்ததால், சத்தியத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்வது பெரும்பாலோருக்குக் கஷ்டமாக இருந்தது.” பொதுவாக அவர்கள் சிறு தொகுதிகளாக கூடினபோதிலும், முன்னேற்றம் செய்தார்கள்; ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பிரசங்க வேலை செய்வதில் அவர்களது ஆர்வமும் மனவுறுதியும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இது கிறிஸ்தவமண்டல பாதிரிமாருடைய கவனத்தில் படாமல் இல்லை.

ஒடுக்குவதற்கு நடவடிக்கை

மே 1935-⁠க்குள் செல்வாக்குள்ள மதத் தொகுதியினர், வடக்கு ரோடீஷியாவின் குற்றப் பிரிவு சட்டத்தை சற்று மாற்றும்படி வற்புறுத்தினார்கள்; அதாவது அரசாங்கத்திற்கு எதிரானவை என சொல்லப்படும் பிரசுரங்களை இறக்குமதி செய்வதையும் வினியோகிப்பதையும் பெரும் குற்றமாக ஆக்கும்படி கோரினார்கள். ஆனால், அரசாங்கத்துக்கு எதிரான பிரசுரங்கள் எவை என்பதை தீர்மானிப்பவர்கள் தங்களுடைய சொந்த அரசியல் அல்லது மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே அப்படிச் செய்கிறார்கள். உண்மையில், யெகோவாவின் சாட்சிகள்மீது தடை விதிப்பதற்குத்தான் எதிரிகள் ஒரு சாக்குப்போக்கைத் தேடிக் கொண்டிருந்தார்கள்; இதை, பிற்பாடு நடந்த சம்பவங்கள் தெளிவாகக் காட்டின.

புதிய வரிவிதிப்பு பற்றி அறிவிக்கப்பட்டபோது சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் கலகம் வெடித்தது; யெகோவாவின் சாட்சிகள் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் என முத்திரை குத்துவதற்கு எதிரிகள் இதை ஒரு வாய்ப்பாக நினைத்தார்கள். அந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே லுஸாகா நகரில் சாட்சிகள் ஒரு மாநாடு நடத்தினார்கள். 300 கிலோமீட்டருக்கும் அப்பால் வடக்கில் கலகம் வெடித்ததற்கும் இந்தச் சிறிய மாநாட்டிற்கும் ஏதோவொரு விதத்தில் தொடர்பு இருந்ததென எதிரிகள் கூறினார்கள். அந்தச் சமயத்தில் இளைஞனாக இருந்த டாம்ஸன் காங்காலா இவ்வாறு கூறுகிறார்: “ஒரு ‘புயல்’ உருவாகிக்கொண்டிருந்ததை எங்களால் உணர முடிந்தது. பிரசங்கிப்பதற்குப் பதிலாக, வீட்டிற்குள்ளேயே இருந்து ராஜ்ய பாடல்களைப் பாடிப் பழகத் தீர்மானித்தோம். போராட்டங்களிலோ வன்முறைகளிலோ ஈடுபடக் கூடாது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.” இருந்தாலும், சகோதரர்கள் கைது செய்யப்பட்டார்கள்; பல நகரங்களில், அவர்களுடைய வீடுகளிலிருந்து விரட்டப்பட்டார்கள், பைபிள் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன. ஆளுநர் நம்முடைய 20 பிரசுரங்களுக்கு தடை விதித்தார்.

இந்தப் பிரச்சினைகளை அலசி ஆராய விசாரணை கமிஷன் ஒன்று நியமிக்கப்பட்டது. முக்கியமாக பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த மாவட்ட ஆணையர் இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “யெகோவாவின் சாட்சிகளும் உவாட்ச் டவர் அமைப்பும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவே இல்லை.” யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தர்கூட எந்தவொரு கலகத்திலும் ஈடுபடவில்லை. என்றாலும், கிறிஸ்டியன்ஸ் ஆஃப் த காப்பர்பெல்ட் என்ற நூல் இவ்வாறு அறிக்கை செய்தது: “விசாரணை கமிஷன் . . . வலுவில்லாத அத்தாட்சியின் அடிப்படையில் பெரிய பெரிய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டது. அதற்கு கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் தடை செய்யப்பட்டன. சில மாவட்டங்களில், [இனத்] தலைவர்கள் சாட்சிகளை அடக்கி ஒடுக்குவதில் தீவிரமாக இறங்கினார்கள், உவாட்ச்டவர் கூட்டங்கள் நடத்தும் இடங்களுக்கு தீ வைத்தார்கள்.”

இதற்கிடையே, சாட்சிகள் “எந்தவித தடையுமின்றி, கடவுள் தந்த உரிமைகளுக்கு ஏற்ப தங்களுடைய சொந்த மனசாட்சியின்படி யெகோவா தேவனை வழிபடுவதற்கு அனுமதி அளிக்க” வேண்டுமென காலனிகளுக்கான பிரிட்டிஷ் அரசு செயலரிடம் கேப் டவுன் அலுவலகம் மீண்டும் மீண்டும் முறையிட்டது. ஒரு பிரதிநிதியுடன்கூடிய நிரந்தர அலுவலகத்திற்காகவும் மனு செய்தது. இந்த முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்தார். லுஸாகாவில் ஒரு டெப்போவை நிறுவுவதற்கும் லவலன் ஃபிலிப்ஸ் அதன் பிரதிநிதியாக இருப்பதற்கும் மார்ச் 1936-⁠ல் அரசு செயலர் அங்கீகாரம் வழங்கினார்.

நான்கு தேவைகள்

லுஸாகாவில் டெப்போ நிறுவியது குறிப்பிடத்தக்க ஒரு வெற்றியாகும். என்றாலும், சபைகள் ஒழுங்கான விதத்தில் மேற்பார்வை செய்யப்படுகின்றன என்பதற்கு தகுந்த அத்தாட்சி கிடைக்கும்வரை, யெகோவாவின் சாட்சிகளை சட்டப்பூர்வ மத அமைப்பாக அங்கீகரிக்க ஆளுநர் மறுத்தார். இதற்குப்பின் வந்த வருடங்களில், நல்மனமுள்ள ஆட்களுக்கு உதவி செய்யவும் அவர்களைப் பலப்படுத்தவும் சகோதரர் ஃபிலிப்ஸ் உண்மையுள்ள சகோதரர்களுடன் சேர்ந்து தீவிரமாய் பாடுபட்டார்; அதேசமயத்தில் வேதப்பூர்வமற்ற பழக்கவழக்கங்களை ஊக்குவித்த ஆட்களை நீக்கவும் பாடுபட்டார். கோட்பாடு, ஒழுக்கம், அமைப்பு சார்ந்த விஷயங்களில் பயனியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது, அதன் பிறகு அவர்கள் சிறு தொகுதிகளுக்கும் சபைகளுக்கும் சென்று உதவினார்கள்.

இந்தக் காலப்பகுதியைப் பற்றி ஒரு சகோதரர் இவ்வாறு கூறினார்: “ஜாம்பியாவிலிருந்த பிரஸ்தாபிகளுக்கு 1940-⁠ம் ஆண்டுதான் மிகச் சிறந்த ஆண்டு. ஏனென்றால் 1925-⁠ல் தடை செய்யப்பட்ட முழுக்காட்டுதல் அந்த ஆண்டில்தான் மீண்டும் அனுமதிக்கப்பட்டது.”

ஜேம்ஸ் மவங்கோ என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “பைபிள் மாணாக்கர் முழுக்காட்டப்படுவதற்கு முன்பு, ‘நான்கு தேவைகள்’ என்று நாங்கள் அழைத்ததை படிக்க வேண்டியிருந்தது. பிறகு, முழுக்காட்டுதல் கொடுப்பவரோ அல்லது கம்பெனி ஊழியரால் நியமிக்கப்பட்ட மற்றொரு சகோதரரோ அதன் அர்த்தத்தை அவரிடம் கேட்பார். முதலாவது, சத்தியத்தைக் கேட்டல்; இரண்டாவது, மனந்திரும்புதல்; மூன்றாவது, கடவுளுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ளுதல்; நான்காவது, ஒப்புக்கொடுத்தல். இந்த நான்கு தேவைகளையும் மாணாக்கர் நன்கு புரிந்துகொண்டால் முழுக்காட்டுதல் பெறலாம். முழுக்காட்டுதல் பெறுகிறவர்கள் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.”

பிரசுரங்களுக்குத் தடை

முக்கியமாக இரண்டாம் உலகப் போரின்போது, கட்டாய ராணுவ சேவையை எதிர்த்துத்தான் சாட்சிகள் நடுநிலை வகிப்பதாக அதிகாரிகள் தவறாகப் புரிந்துகொண்டார்கள். டிசம்பர் 1940-⁠ல், தடைவிதிக்கப்பட்ட பிரசுரங்களின் பட்டியலில் யெகோவாவின் சாட்சிகளுடைய எல்லா பிரசுரங்களும் சேர்க்கப்பட்டன. நம்முடைய பிரசுரங்களை இறக்குமதி செய்வதும் தடை செய்யப்பட்டது. உவாட்ச் டவர் பிரசுரங்களை வைத்திருப்போர் அவற்றை ஒப்படைக்க வேண்டும், இல்லையென்றால் வழக்கு தொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற அறிக்கையை 1941-⁠ன் இளவேனிற் காலத்தில் அரசு வெளியிட்டது.

பயணக் கண்காணியாக சேவை செய்தவரும் பிற்பாடு கிலியட் பள்ளியில் பயின்றவருமான சாலமன் லியம்பெலா இவ்வாறு கூறுகிறார்: “ஜாம்பஜி நதியோரத்திலிருந்த கட்டுமரங்களில் பிரசுரங்களைப் பதுக்கி வைத்தோம். அவற்றைப் படுக்கைகளுக்கு அடியில் கட்டி வைத்தோம், மக்காச்சோளமும் கம்பும் வைத்திருக்கும் இடத்திலும்கூட ஒளித்து வைத்தோம்.”

மற்றொரு சகோதரர் இவ்வாறு கூறினார்: “நாங்கள் புத்தகங்களைப் புதைத்து வைக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், நாங்கள் மிக உயர்வாய் மதித்த பெரேயன் பைபிள் தடை செய்யப்படாததால் அதை மறைத்து வைக்க வேண்டியிருக்கவில்லை. நிறைய புத்தகங்களை நாங்கள் இழந்துவிட்டோம்​—⁠சிலவற்றை கரையான்கள் அரித்துவிட்டன, மற்றவை திருட்டுப்போய் விட்டன. புத்தகங்களைப் புதைத்து வைத்திருந்த இடங்களைப் போய் நாங்கள் அடிக்கடி பார்த்ததால், ஏதோ விலையுயர்ந்த பொருட்களை புதைத்து வைத்திருந்ததாக திருடர்கள் நினைத்துவிட்டார்கள். படிப்பதற்காக ஒருநாள் காட்டுப்பகுதிக்குச் சென்றபோது, புத்தகங்களெல்லாம் அங்குமிங்கும் சிதறிக் கிடந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. அவற்றையெல்லாம் எடுத்து வேறொரு இடத்தில் மறுபடியும் ஒளித்து வைத்தோம்.”

தடை செய்யப்பட்ட பிரசுரங்களைக் குறித்து லவலன் ஃபிலிப்ஸ் தைரியமாக ஆளுநருக்குப் புகார் கடிதம் எழுதினார். இராணுவ சேவை செய்ய மறுத்ததற்காக அந்த ஆண்டில் ஏற்கெனவே அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்; இப்போது இன்னும் ஆறு மாதங்களுக்கு சிறை தண்டனை நீடிக்கப்பட்டது. லுஸாகாவிலிருந்த டெப்போவில் தற்காலிகமாக வேலை பார்த்துவந்த வாலண்டியர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “குற்றவியல் புலனாய்வுத் துறையினர் அடிக்கடி வந்து எங்களைச் சந்தித்தார்கள். சகோதரர் ஃபிலிப்ஸை அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தார்கள்.” என்றபோதிலும், சகோதரர் ஃபிலிப்ஸ் சபைகளில் நல்ல ஒழுங்கையும் பக்திவைராக்கியத்தையும் தொடர்ந்து வளர்த்தார். திறமை வாய்ந்த சகோதரர்கள் கிடைத்தபோது, அவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, பயணக் கண்காணிகளாக அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய உழைப்பினால் 1943-⁠ல், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 3,409 என்ற உச்சநிலையை அடைந்தது.

படிப்படியாக அதிக சுதந்திரம்

போருக்குப்பின், நம்முடைய பிரசுரங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கு பிரிட்டனிலும் தென் ஆப்பிரிக்காவிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகம் லண்டனில் உள்ள குடியேற்ற அலுவலகத்திடம் திரும்பத்திரும்ப முறையிட்டது. யெகோவாவின் சாட்சிகளுடைய கல்வி திட்டத்திற்கு ஆதரவுதரும் 40,000-⁠க்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டிருந்த விண்ணப்பம் அனுப்பப்பட்டது. அதைப் பெற்ற பிறகு, தடை செய்யப்பட்ட பிரசுரங்களின் பட்டியலிலிருந்து சில பிரசுரங்களை அரசாங்கம் நீக்கியது. என்றாலும், காவற்கோபுரம் பத்திரிகை தொடர்ந்து தடை செய்யப்பட்டுத்தான் இருந்தது.

ஜனவரி 1948-⁠ல், புரூக்ளினில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமையகத்திலிருந்து நேதன் நாரும் மில்டன் ஹென்ஷலும் இந்நாட்டிற்கு முதன்முறையாக விஜயம் செய்தார்கள். லுஸாகாவில் நடைபெற்ற நான்கு நாள் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, உள்நாட்டு விவகாரங்களை கவனிக்கும் செயலரையும் அரசாங்க வழக்குரைஞரையும் சந்தித்தார்கள்; அப்பொழுது, மீதமுள்ள தடைகளையும் விரைவில் நீக்கப்போவதாக அவர்கள் சொன்னார்கள். கடைசியில், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டபோது எப்பேர்ப்பட்ட சந்தோஷம்! செப்டம்பர் 1, 1948-⁠ல், உவாட்ச் டவர் சொஸைட்டி என்ற பெயரில் அல்ல, ஆனால் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரில் ஒரு புதிய கிளை அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளுக்கும் உள்ளூர் “உவாட்ச் டவர்” பிரிவுகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததை அதிகாரிகளும் பொது மக்களும், ஏன் நம் சகோதரர்களும்கூட தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள்.

முந்தைய 40 ஆண்டுகளின்போது, கிறிஸ்தவ சீஷர்களை உண்டாக்கும் வேலையை எதிர்த்த மத விரோதிகள், நற்செய்திக்குச் செவிகொடுத்தவர்களுடைய விசுவாசத்தைக் குலைத்துப்போட முயன்றார்கள். சில காலத்திற்கு, “வஞ்சகர்கள்” என தவறாக முத்திரை குத்தப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து தங்களை கடவுளுடைய நிஜ ஊழியர்களாக நிரூபித்தார்கள். (2 கொ. 6:8, NW) போருக்குப்பின் சுதந்திரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு, வரப்போகும் அதிகரிப்புக்காக ஊக்கத்தோடு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள்.

மிஷனரி சேவை

“யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்ற எப்படி எல்லா வகையான ஆண்களையும் பெண்களையும் பயன்படுத்துகிறார் என்பதைக் காண்பது மிஷனரி சேவையில் கிடைக்கும் சிறந்த பலன்களில் ஒன்றாகும். ஆன்மீக உதவியைப் பெறுவோர் காட்டும் போற்றுதலைப் பார்ப்பதும் சந்தோஷம் அளிக்கிறது” என ஜாம்பியாவில் பல வருடங்களாக சேவை செய்த ஈயன் (ஜான்) ஃபர்ஜஸ்ஸன் குறிப்பிட்டார். பிற மதங்களைச் சேர்ந்த மிஷனரிகள் பெரும்பாலும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் மூழ்கிவிடுகிறார்கள், ஆனால் யெகோவாவின் சாட்சிகளுடைய மிஷனரிகளோ கிறிஸ்தவ சீஷர்களை உண்டுபண்ணும் வேலையில் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார்கள். கடவுள் கொடுத்த இந்தப் பொறுப்பை நிறைவேற்றுகையில், தங்களிடம் ‘மாயமற்ற அன்பு’ இருப்பதற்கு அத்தாட்சி அளித்திருக்கிறார்கள்.​—2 கொ. 6:⁠6.

வில்லியம் ஜான்ஸ்டன் போன்றவர்கள் மிஷனரி ஊழியத்தில் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள்; முதல் உலகப் போர் மூண்டதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு வில்லியம் வந்தார், பிற்பாடு அந்தப் பிராந்தியமெங்கும் பயணம் செய்தார். பீட் டெ யாஹர், பேரி வில்லியம்ஸ் ஆகியவர்களும் மற்றவர்களும் 1921-⁠ன் ஆரம்பத்திற்குள் சால்ஸ்பெரி வரை (இப்பொழுது ஹராரே) ஊழியம் செய்திருந்தார்கள்; இது ஜாம்பியாவின் பக்கத்திலுள்ள தென் ரோடீஷியாவின் (இப்பொழுது ஜிம்பாப்வே) தலைநகரமாகும். ஜார்ஜ் ஃபிலிப்ஸ், தாமஸ் வால்டர், வில்லியம் டாஸன் ஆகியோர் 1920-களின் மத்திபத்தில் வட ரோடீஷியாவுக்கு கவனம் செலுத்தினார்கள். மற்ற சிலர், வட ரோடீஷியாவில் பிறந்திருந்தாலும் வேறொரு இடத்தில் வேலை செய்கையில் பைபிள் மாணாக்கர்களோடு தொடர்புகொண்டு, ‘நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிப்பதற்குத்’ திரும்பி வந்தார்கள். (ரோ. 10:15) ஆரம்ப காலங்களில், மானாஸா நகாமாவும் ஆலிவர் காபுங்கோவும் நற்செய்தியைப் பரப்புவதில் பெரும் பங்காற்றினார்கள். ஜாம்பியாவைச் சேர்ந்த ஜோஸஃப் மூலீம்வா, வட ஜிம்பாப்வேயிலுள்ள வங்க்கி (இப்பொழுது ஹவங்கே) சுரங்கத்தில் சாட்சிகளால் சந்திக்கப்பட்டார்; இவர் பிற்பாடு மேற்கு ஜாம்பியாவில் உண்மையுடன் சேவை செய்தார். ஃபிரெட் கபாம்போ என்பவர் அந்தப் பகுதியில் முதன்முதல் சேவை செய்த பயணக் கண்காணி ஆவார். இந்தச் சகோதரர்கள் உண்மையிலேயே முன்னோடிகளாக விளங்கினார்கள்; நற்செய்தி அதிகம் பிரசங்கிக்கப்படாத அல்லது பிரசங்கிக்கவே படாத இடங்களுக்குச் சென்று வருங்கால வளர்ச்சிக்கு உறுதியான அஸ்திவாரம் போட்டார்கள்.

இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாயில் இருந்தது. அப்போது, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சார்ல்ஸ் ஹாலிடே என்பவர் கேப் டவுன் அலுவலகத்திலிருந்த ஜார்ஜ் ஃபிலிப்ஸின் அழைப்பை ஏற்று, மேற்கு மாகாணத்திலிருந்த ஆர்வமுள்ளவர்களின் சிறுசிறு தொகுதிகளைச் சந்திக்க சென்றார். மொழிபெயர்ப்பாளராக இருந்த உள்ளூர் சகோதரர் ஒருவருடன் சேர்ந்து சகோதரர் ஹாலிடே மரக்கட்டைகளை ஏற்றிச் செல்லும் ரயிலிலும், கட்டுமரத்திலும், கையால் இயக்கப்படும் ஒரு சிறிய ரயில்வே காரிலும் பயணம் செய்தார். விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு வடக்கே சுமார் 250 கிலோமீட்டர் தூரத்திலுள்ள செனாங்காவை அடைந்தபோது, ஒரு பெருங்கூட்டத்தார் இவர்களை வரவேற்றார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர், பைபிள் சத்தியங்களை இந்தச் சிறப்பு விருந்தினர் விளக்குவதைக் கேட்பதற்கு பல நாட்களாக பயணம் செய்து வந்திருந்தார்கள்.

கிலியட் மிஷனரிகளின் வருகை

1948-⁠ல், ஹாரி அர்னோட், ஈயன் ஃபர்ஜஸ்ஸன் என்ற இரு மிஷனரிகள் ஜாம்பியாவுக்கு வந்துசேர்ந்தார்கள். அப்பொழுது, செம்பு சுரங்க வேலைகள் சம்பந்தமாக அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான ஐரோப்பியருக்கு கவனம் செலுத்தப்பட்டது. அவர்கள் காண்பித்த பிரதிபலிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. அந்த ஆண்டில், வெளி ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்ட சாட்சிகளுடைய எண்ணிக்கையில் 61 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டது.

அநேக இடங்களில், பைபிள் படிப்புகள் வேண்டுமென கேட்டவர்களை மிஷனரிகள் ‘வெயிட்டிங் லிஸ்ட்’டில் வைப்பது சகஜமாக இருந்தது. பத்து வருட பழையதான ‘டாட்ஜ்’ என்ற டிரக் ஒன்றை கிளை அலுவலகம் வாங்கியது; பயணக் கண்காணிகளான இரண்டு மிஷனரிகள், தொழில்துறை மையங்களுக்கு அப்பாலுள்ள இடங்களுக்குச் செல்ல இந்த டிரக்கைப் பயன்படுத்தினார்கள். “சிலசமயங்களில் அது மூன்று சக்கரங்களோடுதான் கிளை அலுவலகத்துக்குத் திரும்பும், அல்லது ஒருபக்கமாக சாய்ந்தபடி ரோடை உரசிக்கொண்டு கிளை அலுவலகத்துக்கு வந்து சேரும்! ஆனாலும் பிரயோஜனமாக இருந்தது” என கிளை அலுவலக அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.

1951-⁠க்குள், இந்நாட்டில் ஆறு மிஷனரிகள் இருந்தார்கள். டிசம்பர் 1953-⁠ல் இன்னும் ஆறு மிஷனரிகள் உதவிக்காக வந்தார்கள். இவர்களில் இருவர், வலாரா மைல்ஸ்ஸும் ஜான் மைல்ஸ்ஸும் ஆவர்; இவர்கள் ஜாம்பியாவில் ஆறு ஆண்டுகள் சேவை செய்தார்கள், அதன்பின் ஜிம்பாப்வேக்கும் பிறகு லெசோதோவுக்கும் மாற்றம் செய்யப்பட்டார்கள். அதற்குப் பின்வந்த ஆண்டுகளில், இன்னுமதிகமான மிஷனரிகள் வந்துசேர்ந்தார்கள்: ஜோஸப் ஹாரிலக், ஜான் ரென்டன், ஈயன் ரென்டன், யூஜின் கின்னஷ், பால் ஆன்டேகோ, பீட்டர் பல்லஸர், அவருடைய மனைவி விரா பல்லஸர், ஏவிஸ் மார்கன் ஆகியோரும் இன்னும் பிறரும் அன்போடு சேவித்தார்கள். அதேசமயத்தில், இந்த விசேஷ சேவையில் பலன்தரும் ஆட்களாய் இருப்பதற்கு அவர்கள் பெரும் தியாகங்களும் மாற்றங்களும் செய்தார்கள்.

“அவர் இன்னும் ஒரு சிறுபிள்ளைதான்!”

ஜாம்பியாவில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டபோது, “கண்டிப்பாக ஒரு தவறு நடந்துவிட்டது என நான் நினைத்தேன்” என்று வேன் ஜான்ஸன் கூறுகிறார். இவர் 36-⁠ம் கிலியட் வகுப்பில் பட்டம் பெற்றவர், 1962-⁠ன் ஆரம்பத்தில் அவரும் ஏர்ல் ஆர்கபால்ட் என்பவரும் ஜாம்பியாவுக்கு வந்தார்கள். இப்பொழுது கனடாவில் தனது மனைவி கிரேஸுடன் பயணக் கண்காணியாக இருக்கும் வேன் இவ்வாறு கூறுகிறார்: “அப்பொழுது எனக்கு 24 வயதுதான், பார்ப்பதற்கு இன்னும் சிறியவனாகவே இருந்தேன். சின்யன்ஜா [சிச்சேவா என்றும் அழைக்கப்படுகிறது] மொழியை நான் கற்றுக்கொண்டிருந்த சமயத்தில், சகோதரிகள் என்னை முதலில் பார்த்தபோது, ‘ஆலி உம்வானா’​—⁠‘அவர் இன்னும் ஒரு சிறுபிள்ளைதான்!’​—⁠என்று ஒருவருக்கொருவர் கிசுகிசுப்பதைக் கேட்டேன்.”

“யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் முழுமையாக சார்ந்திருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்” என வேன் கூறுகிறார். “அப்போஸ்தலர் 16:4-⁠ல் சொல்லியிருக்கிறபடி, யெகோவாவும் அவருடைய அமைப்பும் தருகிற வழிநடத்துதலையும் தகவலையும்தான் நான் அவர்களுக்குத் தெரிவிக்கிறேன் என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டுமென விரும்பினேன். மற்றவர்கள் விரும்பும் விதத்தில் செயல்படுவதற்கும் நான் முயற்சி செய்தேன். கடந்த காலத்தைச் சிந்திக்கையில், எனக்கு எப்பேர்ப்பட்ட சிலாக்கியம் கொடுக்கப்பட்டது என்பதை நினைத்து இன்னும் பிரமிப்படைகிறேன்.”

நாடுகடத்தப்படுதல்!

1960-களிலும் 1970-களிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. நாடெங்கிலும் சகோதரர்கள் அவ்வப்போது துன்புறுத்துதலை சந்தித்தார்கள். 1964-⁠ல் ஜாம்பியா சுதந்திரம் பெற்ற பிறகு, கொடி வணக்கம் மற்றும் தேசிய கீதம் சம்பந்தமாக சகோதரர்கள் அதிக கஷ்டங்களை எதிர்ப்பட்டார்கள். 1960-கள் முடிவடையும் தறுவாயில், மிஷனரிகளின் செல்வாக்கு அரசாங்க இலட்சியங்களுக்கு விரோதமாக இருப்பதாய் அரசியல் தலைவர்கள் சிலர் கருதினார்கள். என்ன நடந்தது என்பதை கிளை அலுவலக அறிக்கை ஒன்று விளக்குகிறது: “ஜனவரி 20, 1968 அதிகாலையில், நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்ற ஆர்டர் கண்காணிகளுக்கு வந்திருப்பதாக ஏறக்குறைய எல்லா ஆங்கில சபையிலிருந்தும் கிளை அலுவலகத்திற்கு போன் மேல் போன் வந்தது. அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால், அயல்நாடுகளிலிருந்து வந்திருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு மட்டுமல்ல, ஜாம்பியா பிரஜைகளுக்கும் இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது; அவர்களில் இருவர், ஜார்ஜ் மார்டன் மற்றும் ஐசக் சிப்புங்கு.”

எல்லாம் வேகமாக நடந்தன. குடியேற்ற அதிகாரிகள் அதேநாளில் 10 மணிக்கு கிளை அலுவலகத்திற்கு வந்து, நாட்டைவிட்டு வெளியேறும்படி ஐந்து மிஷனரி தம்பதியருக்கு நோட்டீஸ் கொடுத்தார்கள். “அவர்கள் அவ்வளவு சீக்கிரம் வருவார்களென நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மிஷனரி சகோதரர்கள் நாங்கள் எல்லாரும் பின்புற கதவு வழியாக வெளியேறி ஒரு சகோதரருடைய வீட்டிற்குச் செல்ல திட்டமிடப்பட்டது. அதோடு, தடைவிதிக்கப்படும் பட்சத்தில் செய்யும்படி தீர்மானிக்கப்பட்ட காரியங்களில் உடனே இறங்கும்படி திட்டமிடப்பட்டது. என்றாலும், கிளை அலுவலகத்தை விட்டுப்போக எங்களுக்கு மனமில்லை. ஏனென்றால் மாடியில் ஒரு மிஷனரி சகோதரி மலேரியா காய்ச்சலால் மோசமான நிலையில் இருந்தார். ஆனால், உள்ளூர் சகோதரர்கள் அங்கிருந்து செல்லும்படி எங்களை வற்புறுத்தினார்கள், தாங்கள் அந்தச் சகோதரியை கவனித்துக்கொள்வதாக வாக்குக் கொடுத்தார்கள். அவர்கள் நிச்சயம் கவனித்துக்கொள்வார்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையும் இருந்தது.

“உவாட்ச்டவர்​—⁠அப்படித்தான் எங்களை அழைத்தார்கள்​—⁠தடை செய்யப்பட்டுள்ளது என்றும், அதன் ‘தலைவர்கள்’ தலைமறைவாக இருக்கிறார்கள் என்றும் டைம்ஸ் ஆஃப் ஜாம்பியா செய்தித்தாளில் வாசித்தபோது எங்களுக்கு வினோதமாக இருந்தது. செய்தித்தாளின் முதல் பக்கத்தில் எங்களுடைய பெயர்கள் போடப்பட்டிருந்தன, நகரத்தில் வீடு வீடாக சென்று அதிகாரிகள் எங்களைத் தேடுவதாகவும் செய்தி வெளியாகியிருந்தது! அலுவலகத்தில் இருந்த உள்ளூர் சகோதரர்கள் மிகச் சிறந்த வேலை செய்தார்கள். ஃபைல்களையும் பிரசுரங்களையும் பல்வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டார்கள். அதை அவர்கள் செய்து முடித்த பிறகு, அதிகாரிகளிடம் எங்களை ஆஜர்படுத்துவதற்கு நாங்கள் அடுத்தநாள் கிளை அலுவலகத்திற்குத் திரும்பினோம்.”

கிளை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது, குறிப்பிட்ட சில மிஷனரிகளுக்கும் அயல்நாட்டைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் விரைவில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. “நாங்கள்தான் கடைசியில் வெளியேறினோம்” என சகோதரர் லூயிஸ் கூறினார். “சகோதரிகள் ஒரு தொகுதியாக வந்திருந்தார்கள். அவர்களைத் தனிப்பட்ட முறையில் எங்களுக்குத் தெரியாது, ஆனால் எங்களை நேரில் சந்தித்து கைகுலுக்கி ‘குட்-பை’ சொல்வதற்காக தங்களுடைய பிள்ளைகளுடன் கலுலூஷியிலிருந்து 20 கிலோமீட்டர் நடந்தே வந்திருந்தார்கள்! அதை நினைத்துப் பார்த்தால் இப்பொழுதும் எங்கள் தொண்டை துக்கத்தில் அடைத்துக்கொள்கிறது.”

இரண்டாம் முறை நாடுகடத்தப்படுதல்

காலம் சென்றது. இப்பொழுது ஜாம்பியாவில் கிளை அலுவலகக் குழு அங்கத்தினராக சேவை செய்யும் ஆல்பர்ட் முஸான்டா என்பவர் 22 வயதில், அதாவது 1975-⁠ல் பெத்தேல் வாலண்டியராக அக்கௌன்ட் டிபார்ட்மென்டில் சேவை செய்துவந்த சமயத்தில், திடீரென ஒருநாள் போலீசார் வந்தார்கள். “நாட்டைவிட்டு வெளியேற மிஷனரிகளுக்கு இரண்டே நாள் கெடு கொடுத்தார்கள்” என அவர் கூறினார்.

ஜான் ஜேசன் மேலும் கூறுகிறார்: “டிசம்பர் 1975-⁠ல், 36 மணிநேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி குடியேற்ற அலுவலகத்திலிருந்து எங்களுக்கு சுருக்கமான ஒரு கடிதம் வந்தது.” உள்ளூர் வழக்குரைஞர் மூலம் அப்பீல் செய்யப்பட்டது, அதனால் மிஷனரிகள் தங்களுடைய சாமான்களையெல்லாம் எடுத்துச் செல்ல கூடுதலாக காலம் அனுமதிக்கப்பட்டது. “அதற்குப்பின், நாங்கள் மிகவும் நேசித்தவர்களை விட்டுப்பிரிய வேண்டியிருந்தது” என சகோதரர் ஜேசன் கூறுகிறார்.

ஆல்பர்ட்டின் மனைவி டைலஸ் இவ்வாறு கூறுகிறார்: “எங்களுடைய சகோதரர்களுக்கு ‘குட்-பை’ சொல்ல நாங்கள் அவர்களுடன் செளத்டவுன் ஏர்போர்ட்டுக்குச் சென்றோம். ஜான் ஜேசன் கென்யாவுக்கும் சகோதரர் ஈயன் ஃபர்ஜஸ்ஸன் ஸ்பெயினுக்கும் சென்றார்கள்.” இப்படி இரண்டாம் முறையாக மிஷனரிகள் வெளியேற்றப்பட்டதற்குக் காரணம் என்ன?

1975-⁠ல் நடைபெற்ற மாநாடே அதற்குக் காரணமென பலர் நினைத்தார்கள். “கொந்தளிப்பான அந்தக் காலப்பகுதியில் நடைபெற்ற மாநாடுகளில் அது மிகப் பெரியதாக இருந்தது; 40,000-⁠க்கும் அதிகமானோர் வந்திருந்தார்கள்” என ஜான் ஜேசன் கூறுகிறார். எதிர்பாராத விதமாக, மாநாடு நடைபெற்ற இடத்திற்குப் பக்கத்தில் ஒரு அரசியல் கூட்டமும் நடைபெற்றது. அரசியல் விவகாரங்களில் யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகிப்பதால் அவர்களை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தக் கூட்டத்திலிருந்த சிலர் கூறினார்கள். அந்த அரசியல் கூட்டத்திற்குக் குறைவான ஆட்கள் வந்திருந்ததற்கு யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுதான் காரணமென குற்றம் சாட்டப்பட்டதாக சகோதரர் ஜேசன் கூறுகிறார்.

மிஷனரிகள் திரும்பி வருதல்

பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஜாம்பியாவுக்குள் மிஷனரிகள் மீண்டும் வர முடிந்தது. 1980-களில், அரசியல் நிலவரம் அதிக ஸ்திரமாக இருந்தது, தடையுத்தரவுகளும் குறைந்துவந்தன. 1986-⁠ல், எட்வர்ட் ஃபிங்க் என்பவரும் அவரது மனைவி லின்டாவும் காம்பியாவிலிருந்து வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து இன்னும் அநேக மிஷனரிகள் வந்தார்கள், அவர்களில் சிலர்: ஆல்ஃப்ரட் மற்றும் ஹெலன் க்யூ, டிட்மார் மற்றும் சேபைன் ஸ்கிமிட்.

செப்டம்பர் 1987-⁠ல், டேரல் ஷார்ப்பும் அவரது மனைவி சூஸன் ஷார்ப்பும், இப்பொழுது காங்கோ மக்கள் குடியரசு என அழைக்கப்படுகிற ஜயரிலிருந்து தென் ஆப்பிரிக்கா வழியாக ஜாம்பியாவுக்கு வந்துசேர்ந்தார்கள். இவர்கள் 1969-⁠ல் கிலியட்டில் பட்டம் பெற்றவர்கள், காங்கோ முழுவதும் பயண ஊழியம் செய்திருந்தார்கள். மத்திய ஆப்பிரிக்க வாழ்க்கையோடு அவர்கள் ஏற்கெனவே பழக்கப்பட்டிருந்தார்கள். சகோதரர் டேரல், பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருப்பார். அவர் இப்பொழுது 40 வருடங்களுக்கும் மேலாக விசேஷ முழுநேர சேவையில் இருந்துவருகிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “எங்களுடைய மிஷனரி இல்லம் லூபும்பாஷி எல்லைப் பகுதிக்கு சற்று தொலைவில்தான் இருந்தது. நாங்கள் தவறாமல் ஜாம்பியாவுக்குப் பயணம் செய்து வந்தோம்.”

அந்தக் காலப்பகுதியைப் பற்றி சூஸனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் சொல்கிறார்: “1970-களின் ஆரம்பத்தில் காங்கோவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது, அதனால் உணவுப் பொருட்கள் வாங்க சில மாதங்களுக்கு ஒருமுறை ஜாம்பியாவுக்குப் போக வேண்டியிருந்தது. பிற்பாடு 1987-⁠ன் ஆரம்பத்தில், காங்கோவை விட்டு வேறொரு இடத்திற்குப் போகும்படி ஆளும் குழு எங்களைக் கேட்டுக்கொண்டது, எங்கே தெரியுமா? ஜாம்பியாவுக்கு!” காங்கோவில் ஊழியத்திற்கு அதிகமான தடைகள் விதிக்கப்பட்டதால், மத சுதந்திரம் அதிகமுள்ள ஒரு நாட்டிற்குக் குடிபெயர்ந்து செல்வதைக் குறித்து சகோதரர் மற்றும் சகோதரி ஷார்ப் சந்தோஷப்பட்டார்கள்.

என்றாலும், ஊழியத்திலும் கிளை அலுவலகத்திலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தன. வெளி ஊழியத்தின் மீது ஓரளவு தடை விதிக்கப்பட்டிருந்ததால், பெரும்பாலான சகோதரர்கள் பைபிள் படிப்புகள் மாத்திரமே நடத்தினார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்தின் முக்கிய அம்சமான வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பெரும்பாலான பிரஸ்தாபிகளுக்கு பழக்கமே இருக்கவில்லை, சொல்லப்போனால் அதைச் செய்ய தயங்கினார்கள். அதனால், வீட்டுக்கு வீடு ஊழியத்தைத் தைரியமாக செய்ய அந்தச் சகோதரர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள். அப்பொழுது அந்நாட்டில் அவ்வளவு கெடுபிடிகள் இருக்கவில்லை, நம்முடைய வேலைகளை போலீஸ் அதிகம் கவனிக்கவுமில்லை. அதனாலேயே சகோதரர்கள் அவ்வாறு ஊக்குவிக்கப்பட்டார்கள்.

பின்னோக்கி அல்ல, முன்னோக்கிச் செல்லுதல்

1970-களில் வளர்ச்சி குன்றியதுபோல் தோன்றியது; ஆகவே கிளை அலுவலகக் குழு அதற்கு கவனம் செலுத்தியது. சகோதரர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்கு உள்ளூர் பாரம்பரியம் முட்டுக்கட்டையாக இருந்தது; வீட்டுக்கு வீடு ஊழியம் தடை செய்யப்பட்டிருந்ததால், மற்ற சகோதரர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு நடத்த தகப்பன்மார்கள் அனுமதித்தார்கள், அது சகஜமாக ஆனது. அவர்களோ மற்ற சகோதரர்களின் பிள்ளைகளுக்குப் பைபிள் படிப்பு நடத்தினார்கள். ஆனால், தைரியமாய் தீர்மானங்கள் எடுக்க சமயம் வந்தது. பின்வந்த வருடங்களில், வேதப்பூர்வமற்ற பாரம்பரியங்களையும் பழக்கவழக்கங்களையும் விட்டொழிக்க பிரஸ்தாபிகள் ஊக்குவிக்கப்பட்டார்கள். இதற்குச் செவிகொடுத்தபோது, அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். பைபிள் நியமங்களுக்கும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கும் இசைவாக வாழ சகோதரர்கள் கடினமாக பிரயாசப்பட்டார்கள்.

1975-⁠ல் மிஷனரிகள் நாடுகடத்தப்பட்டதற்குப் பின்வந்த ஐந்து வருட காலப்பகுதியில், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 11 சதவீத வீழ்ச்சி காணப்பட்டது. ஆனால், 1986-⁠ல் மிஷனரிகள் மீண்டும் வர ஆரம்பித்த ஐந்து வருட காலப்பகுதியில், பிரஸ்தாபிகளுடைய உச்சக்கட்ட எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அந்த வருடம் முதற்கொண்டு பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது.

கிளை அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில், சைலஸ் சிவேக்கா என்ற முன்னாள் பயணக் கண்காணி ஒருவர் இவ்வாறு கூறினார்: “1950-களுக்குப் பின்வந்த வருடங்களில், மற்றவர்கள் முதிர்ச்சியடைவதற்கு கிலியட் பயிற்சி பெற்ற மிஷனரிகள் உதவி செய்திருக்கிறார்கள். மிஷனரிகள் மிகப் பொறுமையோடும் புரிந்துகொள்ளுதலோடும் அன்போடும் நடந்துகொண்டார்கள். பிரஸ்தாபிகளிடம் நெருங்கி வருவதன் மூலம் என்ன மாற்றங்கள் தேவையென தெரிந்துகொண்டார்கள்.” மிஷனரிகளுடைய இத்தகைய மாய்மாலமற்ற அன்பான உதவி இன்றைக்கும் தொடர்ந்து வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

அச்சிடப்பட்ட வார்த்தை

யெகோவாவின் நவீன நாளைய சாட்சிகள், பவுலையும் அவருடைய தோழர்களையும் போல, “நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களை” பயன்படுத்தி தங்களைக் கடவுளுடைய ஊழியர்களென நிரூபிக்கிறார்கள். (2 கொ. 6:7) ஆன்மீக போரில் நீதி எனும் “ஆயுதங்களை,” அதாவது மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு பல்வேறு முறைகளை, அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் நம் பிரசுரங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்தன. தென் ஆப்பிரிக்காவிலிருந்த சிலர் 1909-லேயே காவற்கோபுர பத்திரிகைக்குச் சந்தா செய்திருந்தபோதிலும், முக்கியமாக ஆட்களிடம் நேரில் பேசித்தான் பைபிள் சத்தியம் பரப்பப்பட்டது. அந்தக் காலப்பகுதியிலிருந்த ஒரு சகோதரர் இவ்வாறு அறிக்கை செய்தார்: “பொது மக்களின் நலனை விசாரிப்பதற்கென்றே ஒவ்வொரு கிராமத்திலும் [மக்கள் கூடிவருவதற்கான] ஓர் இடம் இருக்கிறது. ஆங்கிலம் வாசிக்கத் தெரிந்த ஒரு சகோதரர் ஊர் ஊராகச் சென்று, [காவற்கோபுரத்தின்] பாராக்களை மக்களுக்குப் புரியும் விதத்தில் அவர்களுடைய தாய்மொழியிலே மொழிபெயர்க்கிறார். கேள்விகளையும் கலந்தாராய்கிறார்.” உண்மைதான், சத்தியம் எவ்வளவு திருத்தமாக அறிவிக்கப்பட்டது என்பது, மொழிபெயர்ப்பாளரின் திறமையையும் உள்நோக்கத்தையுமே பெருமளவு சார்ந்திருந்தது. ஆகவே, அக்கறை காட்டுவோரின் மத்தியில் ஐக்கியத்தை வளர்ப்பதற்கும் அவர்களுக்குச் சத்தியத்தின் திருத்தமான அறிவைப் புகட்டுவதற்கும் நம்பத்தக்க பைபிள் பிரசுரங்கள் அவர்களுடைய தாய்மொழியிலேயே தவறாமல் கிடைப்பது அவசியமாக இருந்தது.

தாய்மொழியில் பிரசுரங்கள்

1930-களின் ஆரம்பத்தில் கடவுளின் சுரமண்டலம் என்ற ஆங்கில புத்தகமும் இன்னும் சில சிறுபுத்தகங்களும் ஆங்கிலத்திலிருந்து சின்யன்ஜா என்ற மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டன. சுறுசுறுப்புடன் செயல்பட்ட பிரஸ்தாபிகளின் சிறிய தொகுதி 1934-⁠க்குள்ளாக 11,000-⁠க்கும் அதிகமான பிரசுரங்களை வினியோகித்தது. இப்படி செய்தது பிற்பாடு, ‘தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கவிருந்த’ விரோதிகளின் கோபத்தைக் கிளறியது. (சங். 94:20) இருந்தாலும், 1949-ஆம் வருட இறுதிக்குள் காவற்கோபுர பத்திரிகை மீதான தடை நீக்கப்பட்டிருந்தது; அந்தச் சமயத்தில், சிபெம்பா மொழியில் காவற்கோபுர பத்திரிகையின் மாதாந்தர பதிப்பு ஸ்டென்ஸில் பிரதிகள் எடுக்கப்பட்டு சந்தாதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

1950-களின் ஆரம்பத்தில் பத்திரிகைகளுக்காக தான் செய்தவற்றைப் பற்றி ஜோனஸ் மன்ஜானி இவ்வாறு கூறுகிறார்: “சிபெம்பா மொழியில் மொழிபெயர்ப்பதற்கு நான் மட்டும்தான் இருந்தேன். ஆங்கிலத்தில் கையெழுத்துப் பிரதி எனக்குக் கிடைத்ததும், அதை நானே மொழிபெயர்த்து, தவறுகளையும் திருத்தினேன். அடுத்து, அதை அப்படியே ஸ்டென்ஸிலில் டைப் செய்தேன், பிறகு அதை வைத்து நகல்கள் எடுத்தேன். இதற்கு அதிக நேரம் செலவானது; சில சமயங்களில் ஒவ்வொரு இதழிலும் 7,000 நகல்கள் தேவைப்பட்டன. இப்படி ஒவ்வொரு பத்திரிகையையும் கையாலேயே தயாரித்த பிறகு, பக்கங்களை ஒன்று சேர்த்து ‘பின்’ அடித்தேன். அப்புறம் சபைகளுக்கு அவற்றை அனுப்பி வைத்தேன். பத்திரிகை பண்டில்களில் ஸ்டாம்பு ஒட்டி, அவற்றை அட்டைப்பெட்டிகளில் அடுக்கி போஸ்ட் ஆபீசுக்குக் கொண்டுசெல்வது ஒரு பெரிய வேலை.”

தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடையாத அந்தக் காலத்திலும்கூட, மொழிபெயர்ப்பாளர்கள் முழு ஈடுபாட்டுடன் தங்கள் வேலையைச் செய்தார்கள்; தங்களுடைய வேலையால் விளையும் நல்ல பலன்களை அறிந்திருந்தார்கள். சகோதரர் ஜேம்ஸ் மவங்கோ பயண கண்காணியாக சுறுசுறுப்புடன் சேவை செய்து வந்ததோடுகூட மொழிபெயர்த்தவற்றை கைப்பட எழுதும் வேலையையும் செய்தார்; பெரும்பாலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவற்றை எழுதினார். “இந்த வேலையை செய்தபோது நான் ஒருநாளும் களைப்பாகவே உணரவில்லை. இப்படிச் சகோதரர்கள் ஆன்மீக உணவைப் பெற்று முதிர்ச்சியை நோக்கி முன்னேற என்னால் உதவ முடிந்திருப்பதை அறிந்தபோது எனக்குச் சந்தோஷமாக இருந்தது” என அவர் சொன்னார்.

‘கைகளை மாற்றிக்கொள்ளுதல்’

சத்தியத்தைச் சரியாக மொழிபெயர்ப்பதற்கு, ஒரு மொழிபெயர்ப்பாளர் தன் தாய்மொழியை மட்டுமல்ல ஆங்கிலத்தையும் நன்கு அறிந்திருப்பது அவசியம். ஆரன் மாப்பூலங்கா இவ்வாறு சொன்னார்: “மொழிபெயர்க்கையில், சில சொற்றொடர்களின் அர்த்தத்திற்கும் அவற்றிலுள்ள தனித்தனி வார்த்தைகளின் அர்த்தத்திற்கும் இடையே பெரும் வித்தியாசம் இருக்கும். ஒரு பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருந்த ‘to change hands’ என்ற ஆங்கில சொற்றொடரைப் பற்றி நாங்கள் பேசியது எனக்கு ஞாபகமிருக்கிறது. அது எலியா தன்னுடைய பொறுப்புகளை எலிசாவிடம் ஒப்படைத்ததைப் பற்றிய விஷயம். ஒரு சகோதரர் அச்சொற்றொடரை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்த்துவிட்டார். எனக்கு சந்தேகம், அதனால், இது உண்மையிலேயே கைகளை மாற்றிக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறதா என்று கேட்டேன். மற்ற சகோதரர்களோடு கலந்துபேசிய பிறகே அதன் சரியான அர்த்தத்தைப் புரிந்துகொண்டோம். வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்க்காதேயுங்கள், அப்போதுதான் ஆங்கில நடையை தவிர்க்க முடியும் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. அதனால் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதை விட்டுவிட்டு எங்களுடைய தாய்மொழியின் நடையில் மொழிபெயர்க்க முயற்சி எடுத்தோம்.”

தொழில்நுட்பம் கைகொடுக்கிறது

1986 முதற்கொண்டு மெப்ஸ் (பன்மொழி மின்னணு இயக்க நிழற்பட அச்சுக் கோப்பு முறை) என்ற புரோகிராம் கிளை அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டது. மொழிபெயர்த்தல், சரிபார்த்தல், கம்ப்போஸ் செய்தல் ஆகிய வேலைகளைத் துரிதமாகச் செய்வதற்கு இந்த புரோகிராம் பெரிதும் உதவியது. சமீப காலங்களில், உவாட்ச்டவர் டிரான்ஸ்லேஷன் சிஸ்டம் ஸாஃப்ட்வேர் மற்றும் டிரான்ஸ்லேஷன் டூல்ஸ் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இப்போதோ, ஜாம்பியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்கிற முக்கிய மொழிகளில் பைபிள் பிரசுரங்களை அளிப்பதற்கு பல மொழிபெயர்ப்பு குழுக்கள் உதவுகின்றன. நல்மனமுள்ள மக்கள் யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்வதற்கு புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும் ‘நீதியாகிய பிற ஆயுதங்களும்’ தொடர்ந்து அவர்களுக்குத் துணைபுரியும்.​—2 கொ. 6:7.

அகதிகளுக்கு உதவி

ஆப்பிரிக்காவிலுள்ள அநேகர் சந்தோஷமாக அமைதியாக வாழ்க்கை நடத்துகிறார்கள். ஆனால், வருத்தகரமாக எண்ணற்றோர் போரினால் பாதிக்கப்படுகிறார்கள். திடீரென அக்கம்பக்கத்தில் உள்ளவர்களே விரோதிகளாக ஆகிவிடுகிறார்கள், இதனால், அப்பாவி மக்கள் வீடுகளைவிட்டே ஓட வேண்டிய நிலை ஏற்படுகிறது, சமுதாயங்கள் சின்னாபின்னமாகி விடுகின்றன. சில சாமான்களை மட்டும் எடுத்துக்கொண்டு, பாதுகாப்பான இடத்தைத் தேடி இந்த அகதிகள் செல்கிறார்கள். இன்று லட்சோபலட்ச மக்களின் கதி இதுதான்.

மார்ச் 1999-⁠ல் காங்கோ மக்கள் குடியரசில் நடந்த போர் காரணமாக அங்கிருந்து தப்பியோடிய ஆயிரக்கணக்கானோர் ஜாம்பியா நாட்டுக்குள் குபுகுபுவென புகுந்தார்கள். போர்களில் பொதுவாக நடப்பதுபோலவே, ராணுவ வீரர்கள் வீடுகளைக் கொள்ளையடித்தார்கள், ஆண்களைப் பாரமான சுமைகளைச் சுமக்கும்படி வற்புறுத்தினார்கள், பெண்களையும், பிள்ளைகளையும் துஷ்பிரயோகம் செய்தார்கள். யெகோவாவின் சாட்சிகள் ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதால், அநேகர் இழிவுபடுத்தப்பட்டார்கள், ஈவிரக்கமின்றி அடிக்கப்பட்டார்கள். வைராக்கியத்துடன் துணை பயனியர் ஊழியம் செய்துவருகிற, சுமார் 55 வயதுடைய கடாடூ ஸாங்கா என்பவர் நினைவுபடுத்தி இவ்வாறு கூறுகிறார்: “பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் முன்னால் என்னை படுக்க வைத்து நினைவிழக்கும் வரையில் சாட்டையால் அடித்தார்கள்.”

இப்படிப்பட்ட சித்திரவதைகளில் சிக்கிக்கொள்ளாதிருக்கவே, அநேக குடும்பங்கள் தப்பியோடின. காட்டுப்பகுதி வழியாக ஓடுகையில் மபெங்கோ கிடாம்போவும் அவரது பிள்ளைகளும் ஆளுக்கொரு பக்கம் பிரிந்துவிட்டனர். அதைப் பற்றி அவர் இவ்வாறு சொல்கிறார்: “யாரையுமே தேட எங்களுக்கு நேரம் இருக்கவில்லை. குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு என்ன ஆனது என்று நினைத்து மனது பயங்கரமாக படபடத்தாலும் நாங்கள் திரும்பிப் பார்க்காமல் தலைதெறிக்க ஓட வேண்டியிருந்தது.” பாதுகாப்பான இடம் தேடி நிறைய பேர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்தோ சைக்கிளிலோ போனார்கள்.

இந்த அகதிகள் கபூடா என்ற சிறிய நகரத்திற்கு கூட்டம் கூட்டமாக போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் அவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்ததால் ரொம்பவே களைத்துப் போயிருந்தார்கள்; 5,000 சகோதரர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். திடீரென இத்தனை சகோதர சகோதரிகள் அகதிகளாக வருவார்கள் என அங்கிருந்த 200 பிரஸ்தாபிகள் எதிர்பார்க்காதபோதிலும் அவர்களை சந்தோஷத்தோடு உபசரித்தார்கள். மன்டா என்டாம்பா என்ற அகதி இவ்வாறு சொல்கிறார்: “எங்களை அவர்கள் ரொம்பவும் அன்பாகக் கவனித்துக்கொண்டார்கள், அதை மறக்கவே முடியாது. நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று தெரிந்ததும் அவர்களுடைய வீட்டிலேயே எங்களைத் தங்க வைத்தார்கள். சாறிபாத் ஊர் விதவையைப் போல அவர்களுடைய கொஞ்சநஞ்ச சாப்பாட்டைக்கூட சந்தோஷமாக எங்களுக்கும் கொடுத்து, சாப்பிட்டார்கள்.”

வடக்கேயுள்ள ம்வேரூ என்ற ஏரிக்கரை பகுதியில் யெகோவாவின் சாட்சிகள் கொஞ்ச பேர் இருந்தார்கள், அவர்கள் நூற்றுக்கணக்கான அகதிகளைக் கவனித்துக்கொண்டார்கள். சாப்பாடு, தங்கும் வசதி எல்லாவற்றையும் நல்ல முறையில் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். பக்கத்து சபையிலுள்ளவர்கள் மரவள்ளிக்கிழங்குகளையும் மீன்களையும் கொண்டு வந்து தந்தார்கள். கடைசியில், மூன்று மாதங்களுக்குப் பிறகு, காங்கோவைச் சேர்ந்த அந்த யெகோவாவின் சாட்சிகளின் பெயர்கள் அகதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டு அகதிகள் முகாமுக்கு அவர்கள் மாற்றப்பட்டார்கள்.

பொதுவாக, போர் நடக்கும் பகுதிகளிலிருந்து தப்பி ஓடுபவர்களின் கையில் புத்தகங்களோ பத்திரிகைகளோ இருப்பதில்லை. உயிர்தப்ப ஓடுகையில் ரொம்பவும் முக்கியமானவற்றைக்கூட விட்டுவர வேண்டியிருக்கிறது. ஆனால் கடவுளுடைய ஜனங்களிடம் ஒரு பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது. தலைதெறிக்க தப்பியோடிய போதிலும் அவர்களில் சிலர் பிரசுரங்களையும் எடுத்துச் சென்றார்கள். என்றாலும், பைபிள்களும், பைபிள் பிரசுரங்களும் போதுமானதாக இருக்கவில்லை. பொதுவாக, ஒரு சபை கூட்டத்திற்கு 150 பேர் வந்தார்கள்; ஆனால் அங்கு ஐந்து புத்தகங்கள் மட்டுமே இருக்கும். அப்படியானால் வந்திருந்தவர்கள் எல்லாரும் எப்படிக் கூட்டத்தில் பங்கெடுத்தார்கள்? ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “பைபிள் வைத்திருந்தவர்கள் வசனங்களை பார்த்தார்கள், இல்லாதவர்களோ அந்த வசனங்கள் வாசிக்கப்பட்டதைக் கவனித்துக் கேட்டார்கள். இப்படியாக எல்லாருமே யெகோவாவைத் துதிக்க முடிந்தது, பதில் சொல்லி ஒருவரையொருவர் ஊக்குவிக்கவும் முடிந்தது.”

பொருளாதாரத் தேவைகள் கவனிக்கப்படுகின்றன

அகதிகளில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளும்தான். பட்டினியாக இங்கு வந்து சேருவதற்குள் அவர்களுடைய உடல்நிலை மோசமாகிவிடுகிறது. அவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் எப்படி உதவியிருக்கிறார்கள்? டைம்ஸ் ஆஃப் ஸாம்பியா இவ்வாறு குறிப்பிட்டது: “கிரேட் லேக்ஸ் பகுதியிலுள்ள அகதிகளின் கஷ்டத்தைத் தணிப்பதற்காக ஜாம்பியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பு, முன்னாள் ஜயருக்கு வாலண்டியர்களையும் நிவாரண பணியாளர்களையும் அனுப்பி வைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.” பெல்ஜியம், பிரான்சு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள், “அகதிகளுக்காக 500 கிலோ [1,100 பவுண்ட்] மருந்துகளையும் 10 டன் சத்து மாத்திரை மருந்துகளையும் 20 டன் உணவுப்பொருட்களையும் 90 டன்னுக்கும் அதிகமான துணிமணிகளையும் 18,500 ஜோடி ஷூக்களையும் 1,000 போர்வைகளையும் அளித்தார்கள், இவை கிட்டத்தட்ட பத்து லட்சம் டாலர் மதிப்புடையவையாகும்” என அந்தக் கட்டுரை விவரித்தது.

சகோதரர் என்டாம்பா இவ்வாறு கூறுகிறார்: “சரக்குகள் வந்து சேர்ந்த அந்த நாள் எங்களுக்கு ஒரே குதூகலமாகவும் விசுவாசத்தைப் பலப்படுத்துவதாகவும் இருந்தது. ஆம், உண்மையிலேயே கரிசனையோடு கவனிக்கிற அமைப்பில் நாம் இருக்கிறோம்! மிகப் பெரியளவில் சாட்சிகள் காண்பித்த இந்த அன்பு, அநேக சகோதரர்களுடைய அவிசுவாசிகளான குடும்பத்தாரின் மனதையும் மாற்றியது. அப்போது முதற்கொண்டு, சிலர் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள், அதோடு கடவுளுடைய வணக்கத்தாராக நன்கு முன்னேறியும் வருகிறார்கள்.” பாரபட்சமின்றி எல்லா அகதிகளுக்கும் நிவாரணப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டன.

1999-⁠ன் இறுதிக்குள் அகதிகளாக வந்தவர்களின் எண்ணிக்கை 2,00,000-ஐயும் தாண்டிவிட்டிருந்தது. உள்ளூர் செய்தித்தாள் ஒன்று இவ்வாறு குறிப்பிட்டது: “சண்டை சச்சரவுகள் நிறைந்த பகுதிகளிலிருந்து தப்பியோடி வருகிற ஆப்பிரிக்க அகதிகளுக்குப் பெருமளவு புகலிடம் அளிக்கிற நாடுகளில் ஒன்றாக ஜாம்பியாவும் ஆகியிருக்கிறது.” அகதிகளின் தேவைகளைக் கவனிப்பதற்கு அதிகாரிகள் முயற்சிகள் பல எடுத்த போதிலும், அகதிகளின் மத்தியில் ஏற்பட்ட ஏமாற்றத்தாலும் அதிருப்தியாலும் அவர்கள் பெரும் போராட்டங்களில் இறங்கினார்கள். யெகோவாவின் சாட்சிகள் அவற்றில் கலந்துகொள்ளவில்லை; இருந்தாலும், இப்படி நடந்த ஒரு போராட்டத்திற்குப் பிறகு முகாம் அதிகாரிகள் வட்டாரக் கண்காணியை அணுகி, அகதிகள் மத்தியில் ஒழுங்கைக் காக்க அவர் ஒன்றுமே செய்யவில்லை எனக் குறை சொன்னார்கள். அதற்கு வட்டாரக் கண்காணி, “நான் உங்களுக்கு உதவி செய்திருக்கிறேன்! இந்தக் கலகக்காரர்களுடன் இன்னும் 5,000 பேர் சேர்ந்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? 5,000 பேராவது அந்தப் போராட்டத்தில் சேராமல் இருந்ததை நினைத்து சந்தோஷப்படுங்கள், ஏனென்றால் அவர்கள் யெகோவாவின் சாட்சிகள். அவர்கள் என்னுடைய சகோதரர்கள்!” என சாந்தமாக அதே சமயத்தில் உறுதியாக பதில் அளித்தார்.

அகதிகளின் மத்தியில் அமைதி காப்பவர்கள் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே என்பதை எல்லாருமே ஒப்புக்கொள்கிறார்கள். அரசாங்க அதிகாரி ஒருவர் இவ்வாறு கூறினார்: “யெகோவாவின் சாட்சிகள் அதிக மதப்பற்றுள்ளவர்கள் என்பதை அறிந்தோம், அதனால் அவர்களில் பலரை அகதிகளின் ஒவ்வொரு தொகுதிக்கும் தலைவர்களாக நியமித்தோம். அப்போதிலிருந்துதான் முகாமில் அமைதி நிலவுகிறது, ஏனென்றால் அவர்கள் உதவி செய்கிறார்கள், அதுமட்டுமல்ல ஒவ்வொருவரும் பைபிள் வாசிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். இப்படிப்பட்ட ஆட்கள் தொடர்ந்து எங்களுடன் இருப்பதாலும் அவர்களுடைய உதவியால் முகாம் அமைதியாக இருப்பதாலும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.”

இரத்தத்தைக் குறித்த கடவுளின் சட்டத்திற்குக் கீழ்ப்படிதல்

‘இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டும்’ என்ற வேதப்பூர்வ சட்டத்திலுள்ள நடைமுறையான ஞானம் வெகுகாலமாகவே அறியப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஆப்பிரிக்காவில் சஹாராவுக்கு தெற்கே வசிக்கும் மக்களிடையே இரத்தமில்லா சிகிச்சை குறித்ததில் தப்பெண்ணங்களும் கருத்து வேற்றுமைகளும் நிலவியிருக்கின்றன. (அப். 15:28, 29) இதனால் அங்குள்ள யெகோவாவின் சாட்சிகள் கொடூரமாகவும் கேவலமாகவும் நடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பிள்ளையை இரவில் பெற்றோருக்குத் தெரியாமல் எடுத்து சென்று இரத்தம் ஏற்றுவது அங்கு சர்வசாதாரணமாக நடந்தது.

ஜெனலா முக்கூசாவோ என்பவர் தனது ஆறு வயது பேரன் மைக்கேலை வளர்த்து வந்தார்; அவனுக்கு பயங்கர இரத்த சோகை ஏற்பட்டதால் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவனுக்கு இரத்தம் ஏற்றுவதற்கு டாக்டர்கள் உத்தரவிட்டார்கள். சகோதரி முக்கூசாவோ அதற்கு மறுப்பு தெரிவித்ததால் டாக்டர்கள் அவரை நான்கு நாட்களாக மிரட்டினார்கள், வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். அவர் சொல்கிறார்: “அவர்களிடம் நான் கெஞ்சினேன், மருத்துவ முன்கோரிக்கை அட்டையைக் காட்டினேன், ஆனாலும் அவர்கள் கேட்கவே இல்லை. பேரப்பிள்ளையை சாகடிக்கிற சூனியக்காரி என்று சொல்லி நர்ஸ்கள் என்னைத் திட்டினார்கள்.”

இப்படிப்பட்ட எதிர்ப்பின் காரணமாக, சிலர் ஆஸ்பத்திரி பக்கம் போவதற்கே யோசித்தார்கள். இரத்தம் சம்பந்தமாகத் தீர்மானிப்பதற்கு நோயாளிக்கு இருக்கும் உரிமையை டாக்டர்கள் பலரும் அசட்டை செய்தார்கள். உதவி செய்ய முன்வந்த டாக்டர்கள் சிலர் மற்ற டாக்டர்களுடைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள்; முறையற்ற சிகிச்சையென பலர் கருதிய சிகிச்சையை இந்த டாக்டர்கள் அளித்ததால் சக டாக்டர்களிடமிருந்து இவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். ஆஸ்பத்திரிகளில் நவீன சிகிச்சை வசதிகளும் இரத்தத்திற்குப் பதிலான மாற்று மருந்துகளும் குறைவாக இருந்ததும்கூட சவால்களை முன்வைத்தன. என்றாலும், “ஆட்களின் விருப்பத்திற்கு எதிராக இரத்தம் ஏற்றக்கூடாது” என 1989-⁠ல் செம்பு சுரங்க நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி கூறினார். இதனால் டாக்டர்கள் சிலரின் எதிர்ப்பு சற்று தணிந்தது தெளிவாகத் தெரிந்தது.

குழுக்களின் செல்வாக்கு

ஜாம்பியாவில் 1995-⁠ல் மருத்துவ தகவல் சேவைகளும் அதனோடு சேர்ந்த மருத்துவமனை தொடர்பு ஆலோசனை குழுக்களும் (HLC) ஏற்படுத்தப்பட்டன. இரத்தமில்லா சிகிச்சை, நோயாளிகளின் உரிமைகள் ஆகியவை சம்பந்தமாக இந்தக் குழுக்களின் கருத்துகள் மருத்துவ வட்டாரத்தினரின் மத்தியில் பெரும் செல்வாக்கு செலுத்தும் என்பதை பலரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. மருத்துவமனைகளைப் போய்ச் சந்திப்பதும், டாக்டர்களைப் பேட்டி காண்பதும், சுகாதார பணியாளர்களுக்குக் கருத்தரங்குகளை நடத்துவதும் HLC-⁠ன் வேலைகளில் சில; மருத்துவ துறையிலிருப்பவர்களுடன் தேவையில்லாத சச்சரவுகளில் இறங்காமல் அவர்களுடைய முழு ஒத்துழைப்பையும் பெறும் நோக்கத்தோடே இவையாவும் செய்யப்பட்டன. மருத்துவ நுணுக்கங்களை அழகாக விளக்கிய இந்தக் கருத்தரங்குகள் மருத்துவ ஊழியர்களை மலைக்க வைத்தன. நாட்டின் தென் பகுதியிலிருக்கும் ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு மருத்துவ அதிகாரி இவ்வாறு சொன்னார்: “நீங்கள் டாக்டர்கள்தான்​—⁠ஆனா, அதை ஒத்துக்கொள்ள நீங்க விரும்புறதில்ல அவ்வளவுதான்.”

மேற்கு ஜாம்பியாவிலுள்ள மாவட்ட மருத்துவமனையில் பணிபுரியும் டச்சு டாக்டர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “இரத்தம் ஏற்றுவது பல ஆபத்துகளை விளைவிப்பதால், அதைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி இரண்டு வாரங்களுக்கு முன்புதான் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இன்றோ அந்த விஷயத்தைப் பற்றி நிபுணர்களே எங்களிடம் பேசிவிட்டார்கள்.” சீக்கிரத்திலேயே, HLC நடத்திய கருத்தரங்குகளில் கலந்துகொண்ட மருத்துவ ஊழியர்கள் தங்களுடைய சக ஊழியர்களையும் அவற்றில் கலந்துகொள்ளும்படி சிபாரிசு செய்ய ஆரம்பித்தார்கள். இந்த ஏற்பாடு மருத்துவ வட்டாரத்தினரின் அங்கீகாரத்தைப் பெற்றது; எதிர்த்து வந்த டாக்டர்கள் ஒத்துழைப்பவர்களாக மாறினார்கள்.

பல வருடங்களாக தெய்வம்போல் கருதப்பட்டு வந்த டாக்டர்களைத் தைரியமாய் சந்திப்பதற்கு, இக்குழுக்களின் அங்கத்தினர்கள் சிலர் தங்களுடைய தயக்கத்தையெல்லாம் ஓரங்கட்ட வேண்டியிருந்தது. லுஸாகா நகரத்திலுள்ள குழுவின் சேர்மனாக இருந்த சகோதரர் ஸ்மார்ட் ஃபிரி இவ்வாறு கூறுகிறார்: “மருத்துவத் துறையைப் பற்றி ஒன்றுமே தெரியாததால் என்மீது எனக்கு துளியும் நம்பிக்கை இருக்கவில்லை.”

என்றாலும், போகப்போக அவர்களுடைய விடாமுயற்சியாலும் யெகோவா மீதுள்ள நம்பிக்கையாலும் பலன் கிடைத்தது. ஆரம்பத்தில் நடந்ததை நினைவுபடுத்தி மற்றொரு குழுவை சேர்ந்தவர் இவ்வாறு கூறுகிறார்: “நாங்கள் மூன்று பேரும் ஒரு டாக்டரைச் சந்திக்கச் சென்றோம்; அவரைத் தெரியாதவர்கள் யாருமில்லை, அவர் உடல்நல அமைச்சராகக்கூட இருந்திருக்கிறார். எங்களுக்கோ ஒரே நடுக்கம். டாக்டருடைய அலுவலகத்தின் வராண்டாவில் நின்றுகொண்டு, தைரியமாகப் பேசுவதற்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபித்தோம். அதன் பிறகு உள்ளே சென்றோம். அவர் எங்களோடு நன்றாக பேசினார், ரொம்ப ஒத்தாசையாகவும் இருந்தார். யெகோவாவுடைய துணை எங்களுக்கு இருந்ததை உணர முடிந்தது, ஆகவே பயப்பட அவசியமில்லை என்பதைப் புரிந்துகொண்டோம்.”

முன்பெல்லாம் டாக்டர்கள் பெரிய அறுவை சிகிச்சைகளை இரத்தமின்றி செய்யவே மாட்டார்கள்; இப்போதோ அதைச் செய்ய முன்வருகிறார்கள்; HLC-⁠க்கும் டாக்டர்களுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருவதற்கு இது ஓர் அத்தாட்சி. 2000, அக்டோபரில், அறுவை மருத்துவர்கள் இருவர் காங்கோ மக்கள் குடியரசைச் சேர்ந்த பியட்ரிஸ் என்ற ஆறு மாத குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய தைரியமாக முன்வந்தார்கள். அந்தக் குழந்தைக்கு பித்தநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இரத்தம் ஏற்றாமலேயே ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிந்தது, என்றாலும் ஊரே அதைப் பற்றி பழித்துப் பேசியது.

ஆனால், அந்த ஆபரேஷனை நடத்திய குழுவின் தலைவரான பேராசிரியர் லுபன்டா முங்கான்கே அளித்த பிரெஸ் அறிக்கை நிலைமையைத் தலைகீழாக மாற்றியது. பியட்ரிஸின் பெற்றோர்களுடைய நிலைநிற்கையை தான் மதித்ததாக அவர் கூறினார். இது மீடியாவின் விமர்சனத்தை அப்படியே தணித்துப் போட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின், இரத்தமில்லாமல் சிகிச்சையும் ஆபரேஷனும் செய்வது சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகளுடைய நிலைநிற்கை பற்றிய ஒரு நல்ல அறிக்கை டிவி டாக்குமெண்டரியில் காட்டப்பட்டது.

“சீக்கிரமா செய்து முடிச்சுடுங்க”

மனசாட்சியின் நிமித்தம் யெகோவாவின் சாட்சிகள் இரத்தத்திற்கு விலகியிருப்பதை டாக்டர்கள் பலரும் சந்தேகிப்பதே இல்லை. மாற்று சிகிச்சை முறைகள்தான் பாதுகாப்பானதாயும், சுலபமானதாயும், பலன்தருவதாயும் இருக்கின்றன என்பதை அநேகர்​—⁠ஆப்பிரிக்க கிராமவாசிகள்கூட​—⁠இப்போது அறிந்திருக்கிறார்கள். நோயாளிகள் பலரும் தங்களுடைய உரிமைகளைத் தைரியமாகத் தெரிவிக்க கற்றிருக்கிறார்கள். அதற்காக, முக்கிய விஷயங்களை நன்கு அறிந்து வைத்துக்கொள்கிறார்கள், மனசாட்சிப்படி தாங்கள் நடப்பதைப் பற்றி திறம்பட விளக்குவதற்கு கற்றிருக்கிறார்கள்.

பிள்ளைகளும்கூட ‘கல்விமானின் நாவைப்’ பெற்றிருக்கிறார்கள். (ஏசா. 50:4) நேதன் என்ற எட்டு வயது சிறுவனுக்கு இடது தொடை எலும்பில் அழற்சி ஏற்பட்டு சீழ் பிடித்திருந்தது; ஆபரேஷனுக்கு முன் டாக்டர்களிடம் அவன் இவ்வாறு சொன்னான்: “நீங்க ஆபரேஷனை சீக்கிரமா செய்து முடிச்சுடுங்க. அப்போதான் நிறைய ரத்தம் வீணாகாது. எனக்கு ரத்தம் ஏத்தாதீங்க; அப்படி ஏத்தினீங்கன்னா என் அம்மா அப்பாவும், யெகோவாவும் உங்கள மன்னிக்கவே மாட்டாங்க.” ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது; ஆபரேஷன் செய்த டாக்டர்களில் ஒருவர் நேதனுக்கு நல்ல பயிற்சி கொடுத்திருந்ததற்காக அவனுடைய பெற்றோரைப் பாராட்டினார். “கடவுளுக்கு மதிப்பு கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை முதன்முறையாக ஒரு குட்டி பேஷன்ட் சொல்லக் கேட்டேன்” என அந்த டாக்டர் தாழ்மையோடு ஒத்துக்கொண்டார்.

‘கண்விழிப்புகளிலும் எங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப் பண்ணுகிறோம்’ என அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். சக விசுவாசிகள் மீதுள்ள அக்கறையாலும் மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்க வேண்டுமென்ற அக்கறையாலும் கடவுளுடைய ஊழியர்கள் அடிக்கடி தூங்காமல் கண்விழித்திருக்கிறார்கள். (2 கொ. 6:3-5) முக்கியமாக HLC அங்கத்தினர்கள் இவ்வாறு கண்விழித்திருக்கிறார்கள். அவர்கள் தங்களையே அந்தளவு அர்ப்பணிப்பது கவனிக்கப்படாமல் போவதில்லை. ஒரு சகோதரி இவ்வாறு சொன்னார்: “அவங்கள எப்படிப் பாராட்டுறதுன்னு தெரியாம வாயடைச்சு நிக்கிறேன். எங்களுக்காக அவங்க செய்த தியாகத்தைப் பார்த்து அப்படியே உருகிப் போயிட்டேன்; அவங்க நேரங்கெட்ட நேரத்திலும்கூட கூப்பிட்டவுடனே ஓடோடி வந்து உதவி செய்தது என் மனசுக்கு ஆறுதலாய் இருந்தது. 24 மணிநேரத்துக்குள்ள இரண்டாவது தடவையா என்னை ஆபரேஷன் ரூமுக்கு கொண்டுபோனப்போ நான் பயப்படவே இல்ல. ஏன்னா, அவங்க தந்த உற்சாகம் எனக்கு அவ்வளவு பலத்தைத் தந்தது.” ஆம், ‘தவறான அறிக்கைகளின்’ மத்தியிலும்கூட டாக்டர்களுக்கு மனமுவந்த ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம் யெகோவாவின் சாட்சிகள் தங்களைத் தேவ ஊழியக்காரர்களாக தொடர்ந்து விளங்கப் பண்ணியிருக்கிறார்கள். (2 கொ. 6:8, NW) அதே சமயத்தில் ‘நல்ல அறிக்கைகளாலும்’ அவர்கள் பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்; அதனால் ‘இரத்தத்திற்கு விலகியிருங்கள்’ என்ற கடவுளின் கட்டளைக்கு எப்போதும் கீழ்ப்படிவதற்குத் தீர்மானமாய் இருக்கிறார்கள்.

ஊழியப் பயிற்சிப் பள்ளி

“பல நாடுகளில் கிட்டத்தட்ட 25 வாலிபர்கள் ஒன்றாக சேர்ந்தாலே அவர்களை சந்தேக கண்ணோடுதான் பார்ப்பார்கள்” என்கிறார் ஜாம்பியா கிளை அலுவலக குழு அங்கத்தினரான சைரஸ் நியாங்கு. “என்றாலும், இதுவரை நடைபெற்ற 31 ஊழியப் பயிற்சி பள்ளிகள், துடிப்புமிகுந்த, ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவ ஆண்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி அளித்திருக்கின்றன; இவர்கள் சேவை செய்கிற இடத்தில் அதிக பயனுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.” இந்தச் சர்வதேச பள்ளியில் தேர்ச்சி பெற்ற 600-⁠க்கும் மேலான பட்டதாரிகள் முழுநேர சேவையின் பல்வேறு அம்சங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்; இவர்கள் தெற்கு ஆப்பிரிக்காவிலுள்ள ஆறு நாடுகள் முழுவதிலும் சேவை செய்து வருகிறார்கள். ஜாம்பியாவிலுள்ள பாதிக்கும் அதிகமான பயணக் கண்காணிகள் இப்பள்ளியின் பட்டதாரிகளே. இந்தப் பள்ளி ஏன் நடத்தப்படுகிறது, இது எதைச் சாதிக்கிறது?

1993-⁠ல் இப்பள்ளியின் முதல் பட்டமளிப்பு விழா நடந்தது முதற்கொண்டு, ஜாம்பியாவில் சுறுசுறுப்பாக ஊழியம் செய்துவரும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை சுமார் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், சபைகளைக் கவனிப்பதற்குத் தகுதியுள்ள சகோதரர்களின் தேவை அங்கு உள்ளது; அதற்கு முக்கிய காரணம், பைபிள் நியமங்களுக்கு எதிரான பாரம்பரியங்களையும் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிக்கும்படியான சமுதாய அழுத்தம் அங்கு அதிகம் உள்ளது. வழிநடத்துவதற்கும் போதிப்பதற்கும் தகுதியுள்ள சகோதரர்கள் தேவை என்பதை வலியுறுத்தி ஒரு பட்டதாரி இவ்வாறு குறிப்பிட்டார்: “தவறுகளை மக்கள் பொறுத்துக்கொள்வதுதான் எங்கள் பிராந்தியத்தில் உள்ள ஒரு பிரச்சினை. சரியானதைச் செய்வதில் உறுதி காட்ட வேண்டும் என்பதையும் பைபிளில் எழுதப்பட்டுள்ளதற்கு மீறி எதையும் செய்யக்கூடாது என்பதையும் நான் கற்றுக்கொண்டேன்.”

ஆரம்பத்தில், படிப்பில் கலந்தாலோசிக்கப்பட்ட பல விஷயங்களும் அதன் ஆழமான அர்த்தமும் மாணாக்கர்களுக்கு புதியதாக இருந்தன. என்றாலும், போதனையாளர்கள் அவர்களுக்கு உதவ ஆவலாய் இருந்தார்கள். சாரெல் ஹார்ட் என்ற போதனையாளர் இவ்வாறு சொன்னார்: “ஒவ்வொரு வகுப்பிலும் போதிப்பது, மலைப் பாதையில் அவர்கள் கூடவே சென்று சுற்றிக்காட்டுவதைப் போலிருக்கிறது. புதியவர்களாக இருப்பதால் இவர்கள் எல்லாருமே ஆரம்பத்தில் தங்களைச் சுற்றியுள்ள பழக்கமில்லாத, மலைக்க வைக்கிற சுற்றுச்சூழலோடு ஒன்றிவிட முயலுகிறார்கள். சில சமயங்களில், பாதையின் குறுக்கே தடையாக பாறைகள் கிடக்கின்றன. மாணவர்கள் அவற்றைச் சமாளித்து தொடர்ந்து ஏறுகிறார்கள், கடப்பதற்குத் தடையாக நினைத்த பாறைகளை அவர்கள் பின்னால் திரும்பிப் பார்க்கையில் அவை அற்பமானவையாகத் தெரிகின்றன.”

இப்பள்ளியில் பயின்றதால் அடைந்த ஆன்மீக முன்னேற்றத்தை ஓர் ‘உருமாற்றம்’ என மாணாக்கர்கள் பலரும் வர்ணிக்கிறார்கள். இப்போது விசேஷப் பயனியராக சேவை செய்துவருகிற ஈலட் இவ்வாறு சொன்னார்: “போதிக்க நான் லாயக்கற்றவன் என்றும் சபையின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வயது போதாது என்றும்தான் நினைத்தேன். என்னாலும் உதவ முடியும் என்பதை இப்பள்ளி எனக்கு உணர்த்தியது. முதலில் எனக்கு நியமிக்கப்பட்ட சபையிலிருந்த 16 பிரஸ்தாபிகளுக்கும் முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துவது சிரமமாக இருந்தது. அதனால், ஊழியத்திற்குச் செல்வதற்கு முன்பாக எப்போதுமே சில குறிப்புகளை கலந்து பேசினோம், ஊழியத்தில் பேசப்போகும் விஷயங்களை ஒருவரோடு ஒருவர் நடித்தும் பார்த்தோம். இதன் பலனாக, 2001-⁠க்குள் சபையில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 60-ஆக வளர்ந்தது, 20 பேர் உடைய ஓர் ஒதுக்குப்புற தொகுதியும் உருவானது.”

வெற்றியை அளவிடுதல்

ஊழியப் பயிற்சிப் பள்ளியிலிருந்து முழுமையாய் பயனடைய உதவும் சில குணங்கள் யாவை? “ஒருவர் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல் எப்போதும் மனத்தாழ்மையோடு இருப்பதன் அவசியத்தை நாங்கள் நன்கு வலியுறுத்திக் காட்டுகிறோம். முதிர்ச்சி, பரிவு, பிரச்சினைகளை இன்முகத்தோடு கையாளும் திறன் அவர்களுக்கு இருக்கிறதா என்பதை நாங்கள் கவனிக்கிறோம். சகோதரர்கள் பிறரிடம் அன்பாக நடந்துகொண்டு, சேவையை எதிர்பார்க்காமல் பிறகுக்குச் சேவை செய்யும் மனப்பான்மையைக் காட்டுவார்களானால், இப்பள்ளி இதன் குறிக்கோளை எட்டியிருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்துகொள்கிறோம்” என்கிறார் போதனையாளர்களில் ஒருவரான ரிச்சர்ட் ஃப்ரட்.

போதனையாளர் சொன்ன அந்த வார்த்தைகள் உண்மையானவை என்று மாணாக்கர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். 14-⁠ம் வகுப்பு பட்டதாரியான இம்மானுவேல் இவ்வாறு சொன்னார்: “ஒரு சபையில் நியமிக்கப்பட்டுவிட்டால், சின்ன சின்ன விஷயங்கள் எல்லாவற்றையும் உடனடியாகச் சரிசெய்து விடவேண்டும் என்று அர்த்தமில்லை. மாறாக, நற்செய்தியைப் பிரசங்கிக்கும் மிக முக்கியமான வேலையில் சபையாரோடு கலந்துகொள்வதற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்.”

மோசஸ் என்ற ஒரு பயனியர் இவ்வாறு சொன்னார்: “தாழ்மையுள்ள எவரையும் யெகோவாவால் பயன்படுத்த முடியும் என்பதையும் சில சமயங்களில் அறிவும் அனுபவமும் முக்கியமே இல்லை என்பதையும் அறிந்துகொண்டேன். சபையில் உள்ளவர்களையும் வெளி ஊழியத்தில் சந்திக்கிற ஆட்களையும் நேசிப்பதோடு மற்றவர்களுடன் ஒத்துழைப்பதுமே அவருக்கு முக்கியமானவை.”

மாநாடுகள்

கிறிஸ்தவத்திற்கு முன்னான காலத்தில் பூர்வ இஸ்ரவேலருடைய பண்டிகைகளும் அவர்களுடைய ‘பரிசுத்த மாநாடுகளும்’ மகிழ்ச்சிதரும் சந்தர்ப்பங்களாக இருந்தன, அவை ஆன்மீக விஷயங்களில் கவனம் செலுத்த உதவின. (லேவி. 23:21, NW; உபா. 16:13-15) இன்று கடவுளுடைய மக்கள் ஒன்றுகூடி வருகையிலும் இதுவே உண்மையாய் இருக்கிறது. ஜாம்பியாவில், பளிச்சென தெரிகிற நவீன விளையாட்டு மைதானங்களில் மாநாடுகள் நடத்தப்படுவதில்லை. மாறாக, சகோதரர்கள் ஒரு கிராமத்தையே இதற்காக உருவாக்கிவிடுகிறார்கள், அதை மாநாட்டு கிராமம் என அழைக்கிறார்கள். அங்கு இரவு தங்குவதற்குச் சிறிய கூடாரங்களும் இருக்கும்.

பிற்பாடு, இந்த இடங்களில் நிரந்தர கட்டடங்களை சகோதரர்கள் கட்டினார்கள். ஆனால், முன்பெல்லாம் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தன, அவற்றைச் சரிசெய்ய புதுப்புது உத்திகளைக் கையாள வேண்டியிருந்தது. ஒரு மாவட்ட கண்காணி இவ்வாறு கூறுகிறார்: “வட்டார மாநாடு நடக்கும் இடத்தில் சகோதரர்கள் எனக்காக ஒரு குடிலைக் கட்டித் தருவார்கள், அது பொதுவாக வைக்கோலால் கட்டப்பட்டதாயிருக்கும். பிறகு, கூடிவருவோர் உட்காருவதற்கான இடத்தைச் சுற்றி வேலி அடைத்தார்கள். மண்மேடுகளே இருக்கைகள், மெத்தென்று இருப்பதற்காக அவற்றின்மீது புற்களைப் பரப்புவார்கள். சில சமயங்களில் சகோதரர்கள் கரையான் இல்லாத புற்றின் மேற்பரப்பை சமதளப்படுத்தி அதை மேடையாக்கினார்கள். நிகழ்ச்சியை நடத்துவதற்கு வசதியாக அதன்மீது ஒரு சிறிய கூடாரத்தையும் அமைத்தார்கள்.”

பீட்டர் பல்லஸர் என்ற ஒரு மிஷனரி இவ்வாறு கூறினார்: “ஒரு மாநாட்டின்போது சகோதரர்கள் மேடையை உயரமாக அமைக்க தீர்மானித்தார்கள். வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதில் திறமைசாலியாக இருந்த ஒரு சகோதரர், சுமார் 6 மீட்டர் உயரமிருந்த கரையான் இல்லாத புற்றின் மேற்பகுதியில் வெடிமருந்தை வைத்து வெடிக்கச் செய்தார். இப்படியாக உயர்ந்த அந்த மண்மேட்டின் மீது நாங்கள் மேடை அமைத்தோம்.”

மாநாட்டுக்கு வர முயற்சி

மாநாடு நடத்தப்பட்ட பெரும்பாலான இடங்கள் மெயின் ரோடுகளிலிருந்து தூரமாகவும் போய் சேருவதற்கு சிரமமான இடங்களிலும் அமைந்திருந்தன. ராபின்ஸன் ஷாமுலூமா என்பவர் 1959-⁠ல் தான் கலந்துகொண்ட ஒரு மாநாட்டைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “மத்திய மாகாணத்திலுள்ள காப்வே என்ற இடத்திற்கு நாங்கள் சுமார் 15 பேர் சைக்கிளில் சென்றோம். சாப்பிடுவதற்காக மக்காச்சோளத்தில் செய்த உணவையும் கருவாடையும் எடுத்துச் சென்றோம். இரவில் காட்டுப் பகுதியில் தூங்கினோம். காப்வேக்கு சென்று ரயில் ஏறினோம். கடைசியில் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் பயணித்த பிறகு மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்துசேர்ந்தோம்.”

ஒரு சகோதரர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தன் பிள்ளைகளோடு சுமார் 130 கிலோமீட்டர் தூரம் நடந்தும் சைக்கிளிலும் வந்ததாக லாம்ப் சிஸெங்கா என்பவர் சொல்கிறார். அவர் மேலும் சொன்னதாவது: “பயணத்தின்போது வழியில் சாப்பிடுவதற்குத் தேவையான உணவை அவர்கள் எடுத்து வந்தார்கள்; சுட்ட மரவள்ளிக்கிழங்குகளையும் வேர்க்கடலையையும் பீநட் பட்டரையும் வைத்திருந்தார்கள். பாதுகாப்பற்ற காட்டுப் பகுதியில்தான் அவர்கள் பெரும்பாலும் தங்க வேண்டியிருந்தது.”

சகோதரர் வேன் ஜான்ஸன் மாவட்ட கண்காணியாகச் சேவை செய்த சமயத்தில், மாநாடுகளுக்கு வர அநேகர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனித்திருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார்: “மாநாட்டுக்கு வருவதற்காக ஒரு விசேஷப் பயனியர் கிட்டத்தட்ட ஒரு வாரம் சைக்கிளில் பயணம் செய்தார். சிலரோ டிரக்கின் பின்னால் பயணம் செய்தார்கள். பலரும் மாநாடு நடக்கும் வாரத்தின் ஆரம்பத்திலேயே வந்துவிட்டார்கள். இரவில் தங்களுடைய கூடாரத்திற்குள் தீமூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்து பாட்டுப் பாடினார்கள். சில சமயங்களில் வெளி ஊழியத்திற்கு நிறைய பேர் வந்ததால் அந்த வாரத்தில் அப்பிராந்தியத்திலேயே மூன்று தடவை ஊழியம் செய்தோம்.”

எதிர்ப்பின் மத்தியிலும் கூடிவந்தார்கள்

இப்படிப்பட்ட மாநாடுகள் சகோதரர்களுக்குப் பலத்தையும் உற்சாகத்தையும் தொடர்ந்து அளித்து வருகின்றன. இன்று மாநாடுகளைக் குறித்ததில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் உள்ளது. ஆனால், அரசியல் புரட்சி நடந்த சமயங்களில், குறிப்பாக 1960-களிலும் 1970-களிலும் இப்படிப்பட்ட மாநாடுகளை சந்தேகக் கண்ணோடுதான் பார்த்தார்கள். அரசியல் புள்ளிகள், நம் வணக்கத்தைத் தடுக்க தங்களாலான அனைத்தையும் செய்தார்கள். சகோதரர்கள் தேசிய கீதம் பாட மறுத்ததன் காரணமாக, பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. பிற்பாடு, தடைகளின் காரணமாக மாநாட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. டார்லிங்டன் ஸெஃபுக்கா இவ்வாறு கூறுகிறார்: “யெகோவாவின் சாட்சிகள் கடைசியாக திறந்த வெளிகளில் கூடிவந்தது 1974-⁠ல்தான். தேசிய கீதம் பாடாமலும், கொடியை ஏற்றாமலும் எந்தப் பொதுக் கூட்டங்களையும் நடத்தக் கூடாதென உள்துறை அமைச்சர் அறிவித்தார்.” இருந்தாலும், புல்லினால் வேலி அடைக்கப்பட்ட ராஜ்ய மன்றங்களில் கூடிவருவதற்கு சகோதரர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இந்தச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல், வட்டார மாநாட்டை ராஜ்ய மன்றங்களில் நடத்துவதற்கு கிளை அலுவலகம் ஏற்பாடு செய்தது; பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு சபைகள் மட்டுமே அப்போது கூடிவந்தன.

மாவட்ட மாநாடுகளும் சிறிய அளவில் நடைபெற்றன. மாநாட்டை ஒழுங்கமைப்பதற்கு உதவிய ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “ஒரு பெரிய மாவட்ட மாநாடுக்குப் பதிலாக 20 சிறிய மாநாடுகளை நடத்தினோம். அநேக சகோதரர்கள் பயிற்சி பெற்றார்கள்; அவர்களே நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள், இலாகாக்களில் பணியாற்றினார்கள். அதனால், தடை நீக்கப்பட்ட சமயத்தில் மாநாடுகளை ஒழுங்கமைப்பதற்கு அனுபவமிக்க சகோதரர்கள் அநேகர் இருந்தார்கள்.”

முழுக்காட்டுதல்கள்

1940-களின் ஆரம்பம் முதற்கொண்டே, முழுக்காட்டுதல் பெறவிருப்பவர்கள் அதன் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்குப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ‘மகா பாபிலோனையும்’ பொய் மத பழக்கவழக்கங்களையும் முற்றிலுமாக விட்டுவிடுவது சிலருக்கு கடினமாய் இருந்தது. (வெளி. 18:2, 4) அநேகருக்குச் சரிவர வாசிக்கத் தெரியாதிருந்ததே அப்பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கியது; அதுமட்டுமல்ல, பைபிள் படிப்பில் பயன்படுத்தப்பட்ட பிரசுரங்கள் போதிய அளவு பல சபைகளுக்குக் கிடைக்கவில்லை. அதனால், முழுக்காட்டுதல் பெறவிருப்பவர்கள் அதற்குத் தகுதி பெற்றிருக்கிறார்களா என்பதை அறிய வட்டாரக் கண்காணியும் மாவட்ட கண்காணியும் அவர்களை ஒவ்வொருவராகப் பேட்டி கண்டார்கள். கிலியட் பள்ளியின் 33-⁠ம் வகுப்பு பட்டதாரியான ஜெஃப்ரி வீலர் இவ்வாறு சொல்கிறார்: “கைக்குழந்தையை வைத்திருக்கும் தாய்மார் முழுக்காட்டுதல் பெற விரும்பினால், குழந்தைக்கு மணிகளையும் தாயத்துகளையும் கட்டியிருக்கிறார்களா என்பதைக் கவனமாகப் பார்த்தோம். முழுக்காட்டுதல் பெறுவதற்கு நிறைய பேர் இருந்ததால் மாநாட்டு வாரத்தில் எல்லா நாளும் நடுராத்திரி வரையில் விழித்திருந்தோம்.” பயணக் கண்காணிகள், சபை மூப்பர்களுக்கு அன்புடன் உதவினதாலும் பிற்பாடு, “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபம்” (ஆங்கிலம்) போன்ற பிரசுரங்கள் வந்ததாலும் அமைப்பில் சில மாற்றங்கள் ஏற்பட்டதாலும் இப்படி பேட்டி காண்பதன் அவசியம் படிப்படியாகக் குறைந்தது.

மேடை பயம்

ஒப்பனையுடன் பைபிள் நாடகங்களை அரங்கேற்றுவது மாநாட்டின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அதில் நடிக்கும் ஒவ்வொருவரும் கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அப்படியே வெளிக்காட்டுவதற்கு மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். ஜாம்பியா நாட்டு சகோதர சகோதரிகள் நடிப்பதில் “வெளுத்துவாங்கி விடுவார்கள்.” முன்னாள் மிஷனரியும் இப்போது அமெரிக்க பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினருமான ஃபிராங் லூயிஸ் இவ்வாறு கூறுகிறார்: “முன்பெல்லாம் நாடக உரைகள் டேப்பில் பதிவு செய்யப்படவில்லை. நடிப்பவர்கள் தாங்கள் சொல்ல வேண்டியதை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தது. வடக்கு மாகாணத்தில் ஒரு மாநாட்டிற்கு நாங்கள் சென்றிருந்தபோது அங்கு நாங்கள் அரங்கேற்றிய முதல் நாடகம் எனக்கு ஞாபகமிருக்கிறது, அது யோசேப்புவைப் பற்றிய நாடகம். தபால் தாமதமாக வந்துசேர்ந்ததால் நாடகத்திற்கான ஸ்கிரிப்ட் சகோதரர்களுக்குத் தாமதமாகக் கிடைத்தது. ஆகவே, சகோதரர்கள் ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்வதற்கு இரவெல்லாம் கண்விழித்து அவர்களுக்கு உதவினோம். நாடகம் ஆரம்பித்தது, யோசேப்பு தன்னைக் கெடுக்க வந்ததாக போத்திபாரின் மனைவி தன் கணவரிடம் கூப்பாடு போடுகிற காட்சியை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம். போத்திபாராக நடித்துக்கொண்டிருந்த சகோதரர் மேடையில் பேச பயந்துபோய் இறங்கி வந்துவிட்டார். அப்போது மேடையின் பின்னால் நின்று சகோதரர்கள் பேச வேண்டியதை நினைப்பூட்டுவதற்கு உதவி செய்துகொண்டிருந்த நான் அவர் இறங்கி வருவதைப் பார்த்தேன். அவர் சொல்ல வேண்டிய முதல் சில வரிகளை சொல்லிக்கொடுத்து மறுபடியும் அவரை மேடைக்குத் தள்ளிவிட்டேன். அப்போது அவர், கெடுக்க வந்ததாக பழிசுமத்தப்பட்ட அந்த ஆளை வாயில் வந்தபடி ஜோராகத் திட்டித்தீர்த்தார்! மாநாட்டில் எதிர்பாராமல்தான் இப்படி நடந்தது; என்றாலும் பைபிளில் அந்தப் பதிவைப் படிக்கும்போதெல்லாம் இவ்வாறே நினைத்துக்கொள்வேன்: ‘நிஜமாகவே அப்படித்தான் நடந்திருக்கும். முதலில் போத்திபார் கோபத்தில் விருட்டென்று அறையைவிட்டு வெளியேறியிருப்பார், பின்பு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, யோசேப்புவைக் கடிந்துகொள்வதற்காக மீண்டும் திரும்பி வந்திருப்பார்!’”

மாநாடுகளுக்கு அதிகம் பேர் கூடிவரக்கூடாதென போடப்பட்ட நான்கு வருட தடையுத்தரவு 1978-⁠ல் நீக்கப்பட்டது. அப்போது “வெற்றியுள்ள விசுவாசம்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாடு ஒரு சவாலை முன்வைத்தது. முன்னாள் பயணக் கண்காணி இவ்வாறு கூறுகிறார்: “முந்தின வருடங்களின்போது ராஜ்ய மன்றத்தில் நடத்தப்பட்ட மாநாடுகளில் பார்க்க முடியாமற்போன நாடகங்களை எல்லாம் இந்த மாநாட்டில் அரங்கேற்றினோம். மாநாடு ஐந்து நாட்கள் நடைபெற்றது; ஒரு நாளுக்கு ஒரு நாடகம் வீதம் ஐந்து நாடகங்களை போட்டுக் காட்டினோம். அவ்வாறு, தவறவிட்ட எல்லா நாடகங்களையும் அரங்கேற்றினோம்! எல்லாருமே சந்தோஷமாகக் கண்டுகளித்தார்கள், ஆனால் பெத்தேல் பிரதிநிதிக்கு இது சவாலாக இருந்தது; அவர் அந்த எல்லா நாடகங்களையும் முன்னதாகவே சரிபார்க்க வேண்டியிருந்தது. அது ஒரு சிரமமான வேலையாக இருந்தது!”

கிளை அலுவலகக் குழு அங்கத்தினர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நிஜமாகவே சொல்கிறேன், எந்தவொரு மாநாட்டையும் இந்தளவுக்கு அனுபவித்து மகிழ்ந்ததே இல்லை. காலையில் ஒவ்வொரு குடும்பத்தாரும் அவரவருடைய சிறிய கூடாரங்களிலிருந்து வெளியே வருகிறார்கள். அவர்கள் ‘ஜம்மென்று’ உடையணிந்து யெகோவாவை வணங்க வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் நிழலில் அல்ல, வெயிலிலே உட்காருகிறார்கள். இருந்தாலும், காலைமுதல் மாலைவரை அங்கேயே உட்கார்ந்து கவனித்துக் கேட்கிறார்கள். அதைப் பார்ப்பது அருமையிலும் அருமை.” ஒன்றுகூடி வருவது யெகோவாவின் சாட்சிகளுடைய வணக்கத்தின் இன்றியமையாத ஒரு பாகமாகும். (எபி. 10:24, 25) யெகோவாவின் ஜனங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளால் அல்லது மத எதிர்ப்பினால் ‘துக்கித்தாலும்’ சரி துக்கிக்காவிட்டாலும் சரி, மாநாடுகளுக்குக் கூடிவருவது ‘எப்பொழுதும் சந்தோஷமாயிருப்பதற்கு’ முக்கியம் என்று அறிந்திருக்கிறார்கள்.​—2 கொ. 6:10.

ராஜ்ய மன்ற கட்டுமானம்

“மேற்குறிப்பிடப்பட்ட பெயரிலுள்ள சபை, சொந்தமாக ஒரு நிலத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குவதற்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். இது நிரந்தரமாய் அவர்களுக்குச் சொந்தம், இதை அவர்கள் 150 வருடங்கள் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறேன். பரதீஸ் வரும்வரை யாரும் அவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது.”​—⁠தலைமை காலிலெலி.

கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே, தென் ஆப்பிரிக்காவில் சத்தியத்தை நாடுவோர் வணக்கத்திற்காக ஒன்றுகூடிவருவதன் அவசியத்தை உணர்ந்தனர். படுவேகமாக வளர்ந்து வந்த தொகுதிகள், வழக்கமாகப் பயன்படுத்தும் பொருள்களை வைத்தே கூட்டம் நடத்துவதற்கான மன்றங்களைக் கட்டின, அவற்றில் சில 600 பேர் அமரக்கூடியவை என வில்லியம் ஜான்ஸ்டன் சுமார் 1910-⁠ல் அறிக்கை செய்தார். தங்களுக்கென வணக்க ஸ்தலங்கள் வேண்டும் என்பதில் பலர் ஆர்வம் காட்டினர்; ஆனால் எல்லாருக்குமே அந்த ஆர்வம் இருக்கவில்லை. 1930-களின் ஆரம்பத்தில் முதன்முதலாக சத்தியத்தைக் கற்றுக்கொண்ட ஹாலன்ட் மூஷீம்பா இவ்வாறு சொல்கிறார்: “வணக்கத்திற்கு ஒன்றுகூடிவரும்படி ஊக்குவிக்கப்பட்டாலும், வணக்கத்திற்கென நிரந்தரமாக ஒரு மன்றத்தைக் கட்டுவதைப் பற்றி உள்ளூர் சகோதரர்கள் பேச்செடுக்கவில்லை. ஒரு பெரிய மரத்தடியில் அல்லது ஒரு சகோதரருடைய வீட்டு முற்றத்தில் என முடிந்த இடத்தில் பெரும்பாலும் நாங்கள் கூடிவந்தோம். சில சகோதரர்களின் மனப்பான்மை லூக்கா 9:58-⁠ல் சொல்லப்பட்டதற்கு ஒத்திருந்தது: இயேசுவுக்கே கூடிவருவதற்கு நிலையான ஓர் இடம் இருக்கவில்லை, அப்படியிருக்க நாம் ஏன் ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டுவது பற்றி கவலைப்பட வேண்டும்?”

1950-⁠க்கு முன்பெல்லாம் கூட்டங்கள் நடத்தப்பட்ட பெரும்பாலான இடங்கள் சொரசொரப்பான மரத்தாலும் களிமண்ணாலும் ஆன எளிய, வலுவற்ற கட்டடங்களாக இருந்தன. காப்பர்பெல்ட் என்ற சந்தடிமிக்க பகுதியில் ராஜ்ய மன்றத்துக்கு ஓர் இடத்தைத் தருவதற்கு ஒரு சுரங்கத்தின் மானேஜரை ஈயன் ஃபர்ஜஸ்ஸன் சம்மதிக்க வைத்தார். 1950-⁠ல் வூஸாகீலி என்ற இடத்தில் முதல் ராஜ்ய மன்றம் கட்டப்பட்டது. பத்து வருடங்களுக்குப் பின்தான் ஒரேமாதிரியான, தரமான மன்றங்களைக் கட்டுவதற்குச் சகோதரர்கள் திட்டம் போட்டனர். அத்திட்டத்தின்படி முதலில் கட்டப்பட்ட ராஜ்ய மன்றம் தட்டையான கூரையுடைய ஓர் அழகான கட்டடமாகும்; ஜாம்பியா நாட்டு பண மதிப்பின்படி அதற்கு சுமார் 12,000 க்வாச்சா செலவானது. அன்று அது பெருந்தொகையாக இருந்தபோதிலும், பணவீக்கமடைந்த இன்றைய பொருளாதாரத்தோடு ஒப்பிட அதன் மதிப்பு மூன்று அமெரிக்க டாலருக்கும் குறைவானதே!

யெகோவாவின் சாட்சிகள், அரசாங்க பார்ட்டி கார்டுகளை வாங்க மறுத்ததால் தேசவெறி பிடித்தவர்கள் அவர்களை சதா கொடுமைப்படுத்தினர். வணக்கத்திற்காகக் கூடிவந்த இடங்களைத் தீக்கொளுத்தினர். இன்னும் பாதிப்புகள் வரலாமென பயந்ததால், இனி ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்குப் பதிலாக, திறந்தவெளியில் கூடிவருவதுதான் சிறந்தது என சில சகோதரர்கள் நினைத்தார்கள். 1970-களின் ஆரம்பத்தில் மேலும் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டதால் நிலத்தை வாங்குவது இன்னும் கடினமாக ஆனது. யெகோவாவின் சாட்சிகள் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தபோதிலும், சில பகுதிகளில் இருந்த அதிகாரிகள் எந்தவொரு மனுவையும் பார்ட்டி கார்டுகளுடன் இணைத்துத்தான் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தினர்.

விஸ்டன் ஸிங்காலா இவ்வாறு கூறுகிறார்: “எங்களால் எந்த நிலத்தையும் வாங்க முடியவில்லை, கட்டுவதற்கு அனுமதியையும் பெற முடியவில்லை. நாங்கள் கோர்ட்டில் வழக்குத் தொடரப்போவதாக நகரப் பேரவையில் அறிவித்தபோது நாங்கள் சும்மாதான் சொல்கிறோம் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் ஒரு நல்ல வழக்கறிஞர் எங்களுக்குக் கிடைத்ததால் இரண்டு வருஷத்திற்குப் பிறகு, கோர்ட்டில் எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது, நிலம் வாங்க எங்களுக்கு அனுமதி அளிக்கும்படியும் பேரவைக்கு ஆணையிடப்பட்டது. இதனால் பிற்பாடு இன்னும் பல காரியங்களில் சுதந்திரம் பெற முடிந்தது.”

கறுப்புக் குதிரை

சபைக்காக நிலத்தை வாங்குகையில் அதற்குரிய பத்திரத்தைப் பெறுவது அரிது. பெரும்பாலும் எதற்கும் பயன்படுத்தப்படாத நிலங்கள்தான் சகோதரர்களுக்குச் சிக்கின, ஆனால் அவற்றிற்குரிய பத்திரம் இல்லாததால் நிரந்தரமான கட்டடத்தைக் கட்ட முடியவில்லை. கட்டுமான பொருள்களின் விலையும் அதிகமாக இருந்தது. அதனால் அநேகர் இரும்பு ஷீட்டுகளை, அல்லது காலியான தகர டிரம்களை பிளந்து, அவற்றைத் தட்டையாக்கி, அவற்றில் ஆணியடித்து மரச் சட்டங்களோடு பொருத்தினர். இப்படிக் கட்டப்பட்ட ஒரு மன்றத்தைப் பற்றி ஒரு மூப்பர் இவ்வாறு சொன்னார்: “இந்த இரும்பு ஷீட்டுகளில் தார் பூசியிருந்ததால் தூரத்திலிருந்து பார்ப்பதற்கு மன்றம் ஒரு பெரிய கறுப்புக் குதிரைபோல் காட்சி அளித்தது. அதன் உள்ளேயோ ஒரே அனலாக இருந்தது.”

முன்னாள் வட்டாரக் கண்காணி ஒருவர் இவ்வாறு சொன்னார்: “கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால், அந்தக் கட்டடங்களைப் போய் ராஜ்ய மன்றங்கள் என சொல்வதற்கே சங்கடமாக இருக்கிறது. உள்ளதைச் சொன்னால், உன்னத கடவுளாகிய யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கேற்ற இடங்களாகவே அவை இருக்கவில்லை.”

சில சபைகள் மன்றங்களை வாடகைக்கு எடுக்கத் தீர்மானித்தன. அது அதிக செலவில்லாத காரியமாக தோன்றினாலும், அதில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. 1970-களில் லுஸாகா நகரில் இருந்த ஒரேயொரு ஆங்கில சபையைச் சேர்ந்த சகோதரி ஈட்ரிஸ் முன்டி இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த மன்றம் டிஸ்கோ கிளப் ஆகவும் பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு விடியவிடிய குடியும் குத்துமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் சீக்கிரமாகவே அங்கே போய் சுத்தம் பண்ணுவோம். அங்கு ஒரே பியர், சிகரெட் நாற்றமாகத்தான் இருக்கும்; அப்படிப்பட்ட ஓர் இடத்தில் யெகோவாவை வணங்குவது சரியாகவே இருக்கவில்லை.”

ஈட்ரிஸின் கணவர் ஜாக்ஸன் இவ்வாறு கூறுகிறார்: “ஒரு ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ஓர் இளைஞன் நேரே உள்ளே வந்தான், இரவில் அங்கே அவன் விட்டுச்சென்றிருந்த பியர் பாட்டில் பெட்டியை எடுத்துக்கொண்டு யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றுகூட பார்க்காமல் போய்விட்டான்.” சொந்த ராஜ்ய மன்றங்களுக்காக உண்மையில் சகோதரர்கள் எவ்வளவு ஏங்கியிருப்பார்கள்!

சரித்திரம் படைத்த ஒரு திட்டம்

ராஜ்ய செய்தியை அதிகமதிகமானோர் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது, கண்ணியமிக்க மன்றங்களுக்கான தேவையும் அதிகரித்தது. சகோதரர்கள் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் இருந்தார்கள்; என்றாலும் சில சகோதரர்கள் தங்கள் குடும்பத்தாருடைய வயிற்றுப்பாட்டை கவனிப்பதற்கே திண்டாடினார்கள். அப்படியிருக்க, ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டி பராமரிப்பதற்கு அவர்களால் முடியுமா? யெகோவா மிக ஆச்சரியமான ஒரு காரியத்தைச் செய்யவிருந்தார், அவரது கரம் குறுகினதல்லவே.

உலகெங்குமுள்ள 40 வளரும் நாடுகளில் 8,000-⁠க்கும் அதிகமான ராஜ்ய மன்றங்கள் தேவை என்பது ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்தபோது, கட்டுமான வேலையை முடுக்கிவிட ஆளும் குழு தீர்மானித்தது. சில இடங்களில் கட்டுமானப் பணிக்கு திறம்பட்ட தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக இருக்கலாம். அதற்கான கருவிகளுக்கும் தட்டுப்பாடு இருக்கலாம். அதுமட்டுமல்லாமல், பொருளாதார ரீதியில் வளரும் நாடுகளிலுள்ள அநேக சபைகளால் பெருந்தொகையான கடன்களை அடைக்க முடியவில்லை. அதுபோக, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்ததன் காரணமாக, சில நாடுகளிலுள்ள கிளை அலுவலகங்களால் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமானத் திட்டத்தைப் போடுவது கடினமாக இருந்தது. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, ஆளும் குழுவானது வடிவமைத்துக் கட்டும் குழு ஒன்றை ஐக்கிய மாகாணங்களில் ஏற்படுத்தியது; உலகெங்குமுள்ள ராஜ்ய மன்ற கட்டுமான திட்டங்களின் முன்னேற்றத்தை அது கண்காணித்தது. குறைந்த வசதிபடைத்த நாடுகளில் ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்குத் தேவையான ஆலோசனைகளை அது வழங்கியது; வெளிநாடுகளில் கட்டுமான பணிக்காக திறம்பட்ட வாலண்டியர்களை அனுப்பியது.

சில சமயங்களில் பாரம்பரிய கட்டுமான முறைகளையும் திட்டங்களையும் சற்று மாற்றியமைக்க வேண்டியிருந்தது. உதாரணமாக, கட்டுமான பணியைப் பொறுத்தவரை ஜாம்பியாவில் பொதுவாகப் பெண்கள், தண்ணீர் இறைப்பது, மணல் சுமப்பது, சமைப்பது போன்ற எடுபிடி வேலைகளில் உதவினார்கள். ஆனால் அவர்களை முக்கியமான கட்டுமான வேலையிலேயே ஈடுபடுத்த கட்டுமான குழுவினர் விரும்பினார்கள்; இவ்வாறு, ஆள் பலத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார்கள்.

ஒரு சகோதரி ராஜ்ய மன்ற சுவரைக் கட்டுவதை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் கவனித்தார். அவருக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஆச்சரியம் பொங்க அவர் இவ்வாறு கூறினார்: “என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக இப்போதுதான் ஒரு பெண், செங்கல் வைத்து சுவர் கட்டுவதை, அதுவும் இவ்வளவு அழகாகக் கட்டுவதை பார்க்கிறேன்! இதைப் பார்க்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.”

“எங்களுடைய ஆன்மீக மருத்துவமனை”

கட்டுமான வேலை, சமுதாயத்தினர்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. யெகோவாவின் சாட்சிகளை ஒருசமயம் வெறுக்கவும் எதிர்க்கவும் செய்த பலர், எந்தப் பேதமுமின்றி பழக ஆரம்பித்தார்கள். உதாரணமாக, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் தன்னுடைய ஏரியாவில் ராஜ்ய மன்றங்களைக் கட்ட முதலில் அனுமதி அளிக்கவில்லை. பிற்பாடு அவர் இவ்வாறு சொன்னார்: “உங்களுடைய கட்டுமான பணிக்கு முதலில் அனுமதி கொடுக்காதிருந்ததற்குக் காரணம் நான் அல்ல, மற்ற மத குருமார்கள் என்னை வற்புறுத்தினதால்தான் மறுத்தேன். உங்களுடைய மன்றம் இங்கு இருப்பது நல்லதுக்குத்தான் என்பதை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அழகான கட்டடமே இப்போது எங்களுடைய ஆன்மீக மருத்துவமனை.”

‘ராஜ்யத்தினுடைய நற்செய்தியை’ பிரசங்கிப்பதே கிறிஸ்தவர்கள் ‘பிரயாசப்பட்டு உழைக்கும்’ பிரதான வேலையாகும். (மத். 24:14; 2 கொ. 6:5) இருந்தாலும், பிரசங்கிப்பதற்கு கடவுளுடைய ஜனங்களை பரிசுத்த ஆவி உந்துவிப்பதுபோலவே, கூடிவருவதற்கு கண்ணியமான மன்றங்களை கட்டுவதன் மூலம் ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதில் ஊக்கமாய் உழைப்பதற்கும் அது அவர்களை உந்துவிக்கிறது. இதனால், சபையார் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நோக்கத்தைப் பெறுகிறார்கள். ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “இப்பொழுது ஊழியத்தில் சந்திக்கும் ஆட்களை தைரியமாகக் கூட்டத்திற்கு அழைக்க முடிகிறது, ஏனென்றால் அவர்கள் வரப்போகும் இடம் ஒரு குடிசை அல்ல, ஆனால் யெகோவாவை மகிமைப்படுத்துகிற ராஜ்ய மன்றம் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.”

மற்றொரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “இந்தக் காட்டுக்குள் இப்படியொரு அழகான ராஜ்ய மன்றத்தைப் பெற எங்களுக்கு தகுதியில்லை, ஆனால் அதைப் பெற யெகோவாவுக்கு தகுதியிருக்கிறது. வணக்கத்திற்காக கட்டப்படும் சிறந்த இடங்கள் யெகோவாவுக்கு மகிமை சேர்ப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.”

பயண ஊழியம்

கடவுளுடைய ஊழியர்களுக்குப் பொறுமை அவசியம். (கொலோ. 1:24-26) ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்காகத் தங்களையே அளிப்பதில் பயணக் கண்காணிகள் சிறந்த முன்மாதிரி வைக்கிறார்கள். மேய்ப்பர்களைப் போல் இருந்து சபைகளைப் பலப்படுத்துவதற்கு அன்போடு உழைப்பதன் மூலம் ‘மனிதரில் வரங்களாக’ இருப்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.​—எபே. 4:8, NW; 1 தெ. 1:2.

1930-களின் முடிவிற்குள்ளாக, தகுதிபெற்ற சகோதரர்கள் மண்டல ஊழியர்களாகவும், வட்டார ஊழியர்களாகவும்​—⁠இன்று வட்டார மற்றும் மாவட்ட கண்காணிகள் என அழைக்கப்படுகிறார்கள்​—⁠சேவை செய்வதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டார்கள். ஜேம்ஸ் மவங்கோ இவ்வாறு கூறுகிறார்: “ஒரு சபையிலிருந்து மறு சபைக்குப் பயணிப்பது எளிதாய் இருக்கவில்லை. எங்களுக்கு சைக்கிள் கொடுக்கப்பட்டது. ஆனால் எங்களுக்கு உதவியாக சகோதரர்கள் லக்கேஜுகளைத் தூக்கிக்கொண்டு கூடவே நடந்துவர வேண்டியிருந்தது. ஒவ்வொரு இடத்திற்கும் போய்ச் சேர பல நாட்கள் எடுத்தன. ஒவ்வொரு சபையிலும் இரண்டு வாரங்கள் செலவிட்டோம்.”

“அவர் அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்”

இன்று போலவே அன்றும் நாட்டுப்புறங்களில் பயணிப்பது கடினமாக இருந்தது. இப்போது 80 வயதைத் தாண்டிய ராபின்ஸன் ஷாமுலூமா தன் மனைவி ஜூலியானாவுடன் பயண ஊழியம் செய்தவர். ஒரு சமயம் மழைக்காலத்தின்போது பயங்கர புயலில் சிக்கிக்கொண்டது அவருக்கு இன்னமும் நினைவிருக்கிறது. புயல் ஓய்ந்தபோதிலும், அவருடைய சைக்கிள் சீட் உயரத்திற்கு இருந்த சேற்றில் நடந்து செல்ல வேண்டியிருந்தது! அடுத்த சபைக்குப் போய்ச் சேருவதற்குள்ளாக, ஜூலியானா மிகவும் களைத்துப்போய் விட்டார், ஒரு வாய் தண்ணீர் குடிக்கக்கூட அவருக்கு தெம்பு இல்லாமல் போய்விட்டது.

1960-களில் மற்றும் 70-களில் வட்டாரக் கண்காணியாகவும் மாவட்டக் கண்காணியாகவும் சேவை செய்த ஈனாக் சிர்வா இவ்வாறு கூறுகிறார்: “திங்கட்கிழமைதான் ரொம்பவே கஷ்டமான நாள்; அது பயணம் செய்யும் நாள். என்றாலும், அடுத்த சபையைப் போய்ச் சேர்ந்தவுடன் அந்தப் பயணத்தைப் பற்றி மறந்துவிடுவோம். சகோதரர்களுடன் இருந்தது எங்களுக்குச் சந்தோஷம் அளித்தது.”

தூரமான இடங்களுக்குப் பயணிப்பதும் நெருக்கடி நிலைகளும் மட்டுமே முட்டுக்கட்டைகளாக இருக்கவில்லை. நாட்டின் வடக்கேயிருந்த ஒரு சபைக்கு விஜயம் செய்வதற்காக, சகோதரர் லாம்ப் சிஸெங்கா இரண்டு சகோதரர்களுடன் சென்றார். மண் ரோடு வழியாகச் சென்றபோது அவர்கள் தூரத்தில் ஒரு மிருகத்தைப் பார்த்தார்கள். சகோதரர் சிஸெங்கா இவ்வாறு சொன்னார்: “சகோதரர்களால் அதைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு ரோட்டில் ஒரு நாய் உட்கார்ந்திருப்பதுபோல் தெரிந்தது. ‘அது என்னதென்று உங்க கண்ணுக்குத் தெரியுதா? அதப் பார்க்க முடியுதா?’ என்று கேட்டேன். பின்னர், அது சிங்கம்தான் என்பதை ஒரு சகோதரர் கண்டுபிடித்துவிட்டார். பயத்தில் அலறியபடி அவர் அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். அந்தச் சிங்கம் புதருக்குள் செல்லும்வரை நாங்கள் அங்கேயே கொஞ்ச நேரம் இருக்கத் தீர்மானித்தோம்.”

ஜான் ஜேசனும் அவரது மனைவி கேயும் ஜாம்பியாவில் 26 வருடம் ஊழியம் செய்தபோது கொஞ்ச காலம் மாவட்ட ஊழியத்தில் செலவிட்டார்கள். அவர்கள் தங்களுடைய காரில் ஏற்பட்ட கோளாறுகளைப் பொறுமையோடு சரிசெய்வதன் அவசியத்தைக் கற்றுக்கொண்டார்கள். ஜான் இவ்வாறு சொன்னார்: “உடைந்துபோன சஸ்பன்ஷன் ஸ்பிரிங்குகளை வைத்து சமாளித்தே 150 கிலோமீட்டருக்கும் மேலாக காரை ஓட்டிச் சென்றது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால், மாற்றுவதற்கு எங்களிடம் வேறு ஸ்பிரிங்கும் இருக்கவில்லை, ஃபோன் செய்து யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்றால் அதற்கான வசதியும் இருக்கவில்லை. இன்னொரு சமயத்தில், எங்களுடைய கார் பிரேக் டெளன் ஆகிவிட்டது. என்ஜின் அதிகமாக சூடானதே அதற்குக் காரணம், அப்போது எங்களால் செய்ய முடிந்ததெல்லாம் இதுதான்: ஒரு கப் டீ தயாரிக்க தேவையான தண்ணீரை மட்டும் வைத்துக்கொண்டு மீதமுள்ள எல்லாவற்றையும் என்ஜினில் ஊற்றி அதன் சூட்டைத் தணித்தோம். தனியாக வந்து மாட்டிக்கொண்டதும் இல்லாமல், உஷ்ணமும் களைப்பும் எங்களை வாட்டியெடுக்க காரில் உட்கார்ந்து உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தோம். மதியம் மூன்று மணிக்கு, ரோடு வேலை செய்யும் பணியாளர்களின் ஒரு வண்டி அந்த வழியாக வந்தது; அன்று அந்த வழியாக வந்த முதல் வண்டி அதுதான். எங்கள் கஷ்டத்தைப் பார்த்த அப்பணியாளர்கள், அந்த வண்டியில் எங்கள் காரை கட்டி இழுத்துச்சென்றார்கள். இருட்டுவதற்கு முன்பாகவே சகோதரர்களிடம் போய்ச் சேர்ந்தோம்.”

நம்பிக்கையோடிருக்கக் கற்றுக்கொள்ளுதல்

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பயணக் கண்காணிகள் சொந்தத் திறமைகளிலோ உடைமைகளிலோ அல்ல, ஆனால் நம்பிக்கைக்குப் பாத்திரரான யெகோவா தேவனிலும் கிறிஸ்தவ சகோதரர்களிலும் நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டார்கள். (எபி. 13:5, 6) ஜெஃப்ரி வீலர் இவ்வாறு கூறுகிறார்: “மாவட்ட ஊழியராகச் சேவை செய்ய ஆரம்பித்து மூன்று வாரங்களிலேயே ஒரு சோதனையைச் சந்தித்தோம். மாநாடு நடக்கப் போகும் இடத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கான நிகழ்ச்சிக்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருந்தோம். ஒரு மண்ணெண்ணெய் ஸ்டவ் என்னிடம் தரப்பட்டது, அதில் கொஞ்சம் கோளாறு இருந்தது. அன்று கொஞ்சம் உஷ்ணம் அதிகம், காற்றும் வீசிக்கொண்டிருந்தது. நான் ஸ்டவ் பற்ற வைத்தவுடன் தீ குப்பென்று மேலே எழும்பியது. சில நிமிடங்களுக்குள்ளாக தீ எல்லா இடத்திலும் பரவியது. எங்களுடைய லாண்ட் ரோவர் ஜீப்பின் முன்பக்க டயர் மீதும் தீப்பொறிகள் பாய்ந்தன. சீக்கிரத்தில் முழு வண்டியும் பற்றியெரிய ஆரம்பித்தது.”

வண்டியை மட்டுமல்ல இன்னும் பலவற்றையும் இழக்க வேண்டியதாயிற்று. ஜெஃப்ரி இவ்வாறு சொன்னார்: “எங்களுடைய துணிகளை ஜீப்பில் ஒரு கருப்பு ஸ்டீல் டிரங்கு பெட்டிக்குள் வைத்திருந்தோம். அவை எரியாவிட்டாலும் வெப்பத்தால் சுருங்கிவிட்டன. சகோதரர்கள் வேறு வழியாக வந்து ஜீப்பிலிருந்த எங்களுடைய படுக்கையையும், ஒரு ஷர்ட்டையும் டைப்ரைட்டரையும் பத்திரமாக வெளியே எடுத்தார்கள். அவர்கள் சட்டென யோசித்து செயல்பட்டதற்கு நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருந்தோம்!” ஜீப்பிலிருந்த உடைமைகள் எல்லாமே எரிந்து சாம்பலாயின, அவர்கள் இரண்டு மாதங்களுக்குப் பிறகே டவுன் பக்கம் போக முடியும், அப்படியானால் அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள்? ஜெஃப்ரி இவ்வாறு சொல்கிறார்: “ஒரு சகோதரர் கொடுத்த ‘டை’யை கட்டிக்கொண்டு, ரப்பர் ஷூவைப் போட்டுக்கொண்டு பொதுப் பேச்சை கொடுத்து முடித்தேன். எப்படியோ நாங்கள் உயிர்பிழைத்தோம். அந்தச் சகோதரர்களும் அனுபவமில்லாத தங்களுடைய மாவட்ட கண்காணியை ஆறுதல்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள்.”

பாம்பு அண்டாத படுக்கை

‘உபசரிக்கும் பண்புடைய’ சபைகள் காட்டுகிற அன்பாலும் அக்கறையாலும் பயண கண்காணிகள் தங்கள் மனைவிமார்களுடன் சேர்ந்து சுயதியாக சேவையைத் தொடர்ந்து செய்வதற்குப் பலப்படுத்தப்படுகிறார்கள். பொருளாதார வசதியில்லாத சபைகளாக இருந்தாலும் பயண கண்காணிகளையும் அவர்களுடைய மனைவிமார்களையும் அவை எப்படி அன்போடு உபசரித்தன என்பதற்கு எண்ணற்ற பதிவுகள் உள்ளன; அது பெரிதும் போற்றப்படுகிறது.​—ரோ. 12:13, NW; நீதி 15:17.

பொதுவாக, பயண கண்காணிகள் தங்குவதற்கு எளிய வசதிகளே செய்து கொடுக்கப்பட்டன, ஆனால் எப்போதுமே அவை அன்போடு அளிக்கப்பட்டன. 1980-களின் ஆரம்பத்தில் வட்டாரக் கண்காணியாக சேவை செய்துவந்த ஃபிரெட் காஷிமோட்டோ, ஜாம்பியாவின் வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு இரவில் வந்துசேர்ந்ததைப் பற்றி சொல்கிறார். சகோதரர்கள் அவரை அன்போடு வரவேற்றார்கள். அவரை ஒரு சிறிய வீட்டிற்குள் அழைத்துச் சென்று லக்கேஜை சுமார் ஐந்தடி உயரமுடைய தடிகளால் செய்யப்பட்ட ஒரு பெரிய டேபிள்மீது வைத்தார்கள். ரொம்ப நேரத்திற்குப் பிறகு, “நான் எங்கே படுத்துக்கொள்வது?” என சகோதரர் காஷிமோட்டோ கேட்டார்.

அந்த டேபிளைக் காட்டி, “அதுதான் உங்க பெட்” என சகோதரர்கள் சொன்னார்கள். அங்கு பாம்பு நடமாட்டம் அதிகமாக இருந்ததால்தான் சகோதரர்கள் அப்படிப்பட்ட பாதுகாப்பான படுக்கையை அவருக்குச் செய்து கொடுத்திருந்தார்கள். புற்கள் வைத்து செய்யப்பட்டிருந்த அந்த மெத்தையில் சகோதரர் காஷிமோட்டோ இரவு தூங்கினார்.

கிராமப்புறங்களில் பொதுவாக பண்ணை பொருள்களையே பரிசாகக் கொடுப்பார்கள். சகோதரர் வீலர் புன்முறுவலோடு இவ்வாறு சொல்கிறார்: “ஒரு சமயம், சகோதரர்கள் ஒரு கோழியை எங்களுக்குக் கொடுத்தார்கள். இருட்டுவதற்கு முன் அதை டாய்லட் குழிக்கு மேலிருந்த ஒரு கம்பத்தின்மீது வைத்தோம். ஆனால் அந்தக் கோழி, கம்பத்திலிருந்து கீழே குதித்து டாய்லட் குழிக்குள் விழுந்துவிட்டது. களையெடுக்கும் கம்பியால் ஒருவழியாக அதைப் பத்திரமாக வெளியே எடுத்தோம். பிறகு என் மனைவி சூடான சோப்பு தண்ணீரில் நிறைய கிருமிநாசினியைப் போட்டு அதைக் குளிப்பாட்டினாள். அந்த வாரத்தின் இறுதியில் அதைச் சமைத்தோம், ருசி பிரமாதமாக இருந்தது!”

சகோதரர்களின் இத்தகைய தாராள குணத்தால் ஜேசன் தம்பதியரும் பயனடைந்தார்கள். “நிறைய முறை சகோதரர்கள் எங்களுக்குக் கோழிகளை தந்திருக்கிறார்கள். மாவட்டக் கண்காணியாகச் சேவை செய்த சமயத்தில், எங்களிடமிருந்த சிறிய கூடையில் ஒரு பெட்டைக் கோழியையும் தூக்கிச் சென்றோம். தினமும் காலையில் அது ஒரு முட்டையிட்டதால், அதை நாங்கள் கொல்ல நினைக்கவில்லை. நாங்கள் அடுத்த இடத்திற்குக் கிளம்பும்போது, அதுவும் எங்களோடு வருவதற்குத் தயாராகிவிடும்” என ஜான் சொன்னார்.

இயங்கு படக்காட்சிகள்

1954 முதற்கொண்டு, ஆங்கிலத்தில் புதிய உலகச் சமுதாயம் செயலில் என்ற படக்காட்சியும் இன்னும் பல படக்காட்சிகளும் ஒரு கல்வி புகட்டும் திட்டத்தை முடுக்கிவிட்டன. “ஊழியத்திலும் சபையிலும் மும்முரமாகச் செயல்படுவதற்கு அநேகரை இது ஊக்குவித்தது” என அப்போதிருந்த கிளை அலுவலகத்தின் ஓர் அறிக்கை குறிப்பிட்டது. சிலர் படக்காட்சிக்குப் பிறகு, மாநாட்டுக்காக அமைத்தவற்றை பிரித்தபோது, “‘புதிய உலக சமுதாயம் செயலில்’ பாணியில் நாம் இதைச் செய்யலாம்” என்ற சுலோகனைச் சொல்லிக்கொண்டே பிரித்தார்கள். அந்த சுலோகனின் அர்த்தம் “விறுவிறுப்புடன் இதைச் செய்யலாம்!” என்பதாகும். இப்படக்காட்சி வெளிவந்த முதல் வருடத்திலேயே, அரசாங்க அதிகாரிகள், கல்வித் துறை அதிகாரிகள் உட்பட 42,000-⁠த்திற்கும் அதிகமானோர் இதைப் பார்த்து ரசித்தார்கள். இதன் விளைவாக, ஜாம்பியாவிலுள்ள பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியும் அவர்களுடைய கிறிஸ்தவ அமைப்பைப் பற்றியும் தெரிந்துகொண்டார்கள்.

அதன் தாக்கத்தை வேன் ஜான்ஸன் நினைவில் வைத்திருக்கிறார். அவர் இவ்வாறு சொன்னார்: “பல கிலோமீட்டர் தூரத்திலிருந்த மக்களையும் இப்படக்காட்சிகள் சுண்டி இழுத்தன, யெகோவாவின் அமைப்பைப் பற்றி நிறைய விஷயங்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தன. படம் ஓடிக்கொண்டிருந்தபோது அடிக்கடி உற்சாகமான, தொடர்ச்சியான கரகோஷங்கள் எழுந்தன.”

சிறிது காலத்திற்கு, வட்டார மாநாட்டில் சனிக்கிழமை மதிய நிகழ்ச்சியின்போது இப்படக்காட்சிகளில் ஒன்று காட்டப்பட்டது. காட்டுப் பகுதிகளில் இப்படி படக்காட்சிகள் காட்டப்பட்டது கிளர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது. பிற நாட்டு மக்களின் வாழ்க்கைப் பற்றி அவர்கள் அறியாதிருந்ததால், சில காட்சிகளைப் பார்த்தபோது தவறாகப் புரிந்துகொண்டனர்; இருந்தாலும், அவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. உதாரணமாக, நியு யார்க் நகரின் சுரங்கப் பாதையை விட்டு ஜனங்கள் கூட்டங்கூட்டமாக வெளியேறும் காட்சி ஒரு படக்காட்சியில் காண்பிக்கப்பட்டிருந்தது. இது உயிர்த்தெழுதலைத்தான் சித்தரிக்கிறது போலும் என அநேகர் நினைத்தார்கள்! இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஜனங்கள் நன்கு புரிந்துகொள்வதற்கு இப்படக்காட்சிகள் உதவின. என்றாலும், சூழ்நிலைகள் மாறிக்கொண்டேதான் இருந்தன; சுதந்திர தாகம் நாட்டில் தீவிரமடையும் சமயங்களில் ஜாம்பிய மக்கள் பலர் சகோதரர்களை எதிர்க்க ஆரம்பித்துவிடுவர். அப்போது சபையில் உள்ளவர்களும் சரி, பயணக் கண்காணிகளும் சரி, ரொம்பவே பொறுமையாய் இருக்க வேண்டியிருந்தது.

அரசாங்க தலையீடு

அக்டோபர் 24, 1964-⁠ல் பிரிட்டனிடமிருந்து வடக்கு ரோடீஷியா சுதந்திரம் பெற்று ஜாம்பியா குடியரசாக ஆனது. இக்காலப்பகுதியில், அரசியல் வட்டாரத்தில் கடும் பதற்றம் நிலவியது. குடியேற்ற ஆட்சிக்கு மறைமுக ஆதரவு அளிப்பதால்தான் யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகிக்கிறார்கள் என தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், பங்க்வியுலு ஏரிப் பகுதிக்கு பயணித்தது பற்றி சகோதரர் லாம்ப் சிஸெங்கா சொல்கிறார். தீவுப் பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்துவந்த யெகோவாவின் சாட்சிகளைச் சந்திப்பதற்கு ஒரு படகில் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். முதலில் ஏரிக்கரைக்குச் செல்ல ஒரு பஸ்ஸில் ஏறினார். பஸ்ஸிலிருந்து இறங்கியதும், அரசியல் கட்சிக்காரர்கள் அவரிடம் பார்ட்டி கார்ட்டைக் காட்ட சொன்னார்கள். ஆனால் அவரிடம் அது இல்லை. எனவே அவர்கள் அவருடைய ப்ரீஃப்கேஸை பிடுங்கி திறந்து பார்த்தார்கள். அதில் “உவாட்ச்டவர்” என எழுதப்பட்ட ஒரு பார்சலை ஒருவர் பார்த்தார். உடனடியாக அவர் “சத்தமாக விசிலடித்து, உவாட்ச்டவர்! உவாட்ச்டவர்!” என்று சொல்லி கத்த ஆரம்பித்தார்.

கலாட்டா ஏற்பட்டுவிடுமோ என பயந்ததால், ஓர் அதிகாரி சகோதரர் லாம்ப்பை அவருடைய பைகளோடுகூட பஸ்ஸுக்குள் தள்ளினார். அங்கு ஒரு பெரிய கூட்டமே கூடிவிட்டது; அவர்கள் பஸ்ஸின் கதவிலும், டயர்களிலும், ஜன்னல்களிலும் கல்லெறிய ஆரம்பித்தார்கள். உடனே, அந்த டிரைவர் பஸ்ஸை மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றார்; சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாம்ஃபியாவுக்குப் போய்ச் சேரும்வரை அவர் இடையில் எங்குமே நிறுத்தவில்லை. சீக்கிரத்திலேயே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மறுநாள் காலை சகோதரர் லாம்ப் அமைதியாக வந்து, ஏரியைச் சுற்றியுள்ள சபைகளைச் சந்திப்பதற்குப் படகில் ஏறினார்.

பயணக் கண்காணிகள் ‘மிகுந்த சகிப்புத்தன்மையுடன்’ தங்களைக் கடவுளுடைய ஊழியர்களாக எப்போதும் காட்டுகிறார்கள். (2 கொ. 6:4, NW) ஜாம்பஜி நதியருகே உள்ள பகுதியில் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்த ஃபான்வெல் சிஸெங்கா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒரு வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்வதற்கு முழு இருதயத்தோடு கூடிய பக்தியும், சுயதியாக மனப்பான்மையும் அவசியம்.” இப்பகுதியில், ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்குச் செல்ல ஓட்டைகள் நிறைந்த பழைய படகுகளில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது; அப்படிச் செல்லும்போது வெறிப்பிடித்த நீர்யானை, காய்ந்துபோன ஒரு குச்சியை உடைப்பதுபோல் படகை உடைத்துப் போடும் ஆபத்தும் இருந்தது. வட்டார ஊழியத்தில் சகித்திருக்க ஃபான்வெல்லுக்கு எது உதவியது? நதிப்பகுதிக்குத் தன்னுடன் வந்த சபையினரின் ஒரு ஃபோட்டோவை உற்றுப் பார்த்து புன்னகைத்தவாறு, எனக்குப் புத்துயிர் அளித்தவர்கள் என் சகோதர சகோதரிகளே எனக் கூறுகிறார். பின் ஆழ்ந்து யோசித்தவாறு, “கோபவெறிபிடித்த இவ்வுலகில் இப்படிப்பட்ட புன்னகை பூக்கும் முகங்களை வேறெங்குதான் பார்க்க முடியும்?” என அவர் கேட்கிறார்.

நடுநிலை வகிப்பு

“படைவீரர் எவரும் பிழைப்புக்காகப் பிற அலுவல்களில் ஈடுபட மாட்டார். தம்மைப் படையில் சேர்த்துக்கொண்டவருக்கு அவர் உகந்தவராயிருக்க வேண்டும் அன்றோ!” என எழுதினார் அப்போஸ்தலன் பவுல். (2 தீ. 2:4, பொது மொழிபெயர்ப்பு) கிறிஸ்தவர்கள் தங்களுடைய தலைவரான இயேசு கிறிஸ்துவுடன் மனமுவந்து ஒத்துழைக்க வேண்டியிருப்பதால், இவ்வுலகின் அரசியலிலும் மத அமைப்புகளிலும் இருந்து முற்றிலும் விலகியிருப்பது அவசியம். உலக விவகாரங்களில் நடுநிலை வகிக்க விரும்புகிற மெய்க் கிறிஸ்தவர்களுக்கு, இது சவால்களையும் “உபத்திரவங்களையும்” முன்வைத்தது.​—யோவா. 15:19.

இரண்டாம் உலகப் போரின்போது, “தேசபக்தியை” வெளிக்காட்டாததன் காரணமாக அநேகர் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டார்கள். “ராணுவ சேவையில் ஈடுபட மறுத்ததால் வயசானவர்களையெல்லாம் சோள மூட்டைகளைத் தூக்கி வீசுவதைப்போல் டிரக்கிற்குள் தள்ளியதை நாங்கள் பார்த்தோம். ‘டிட்சாஃபேரா ஸா மூலூங்கு’ (கடவுளுக்காக நாங்கள் உயிர்விடுவோம்) என்று இவர்கள் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்கிறார் பிற்பாடு பயணக் கண்காணியாக பக்தி வைராக்கியத்தோடு சேவை செய்த பென்சன் ஜட்ஜ்.

போர் காலத்தில் நடுநிலை பிரச்சினை அடிக்கடி எழுந்ததைப் பற்றி அந்தச் சமயத்தில் முழுக்காட்டப்படாதவராய் இருந்த முகாஸிகு ஸினாலி சொல்கிறார். “ஒவ்வொருவரும் மாம்போங்கோ என்ற கொடியின் வேரை மண்ணிலிருந்து வெட்டியெடுத்து சேகரிக்க வேண்டியிருந்தது; அதிலிருந்து விலையுயர்ந்த ரப்பர் பால் கிடைத்தது. அந்த வேர்களின் தோலை நீக்கி அதை அடித்து, அதிலிருந்து பட்டையான பொருட்கள் தயாரிக்கப்பட்டன; அவை ஒன்றாகச் சேர்த்துக் கட்டப்பட்டு, ரப்பருக்கு மாற்றுப்பொருளாகப் பதப்படுத்தப்பட்டன. ராணுவத்தினருக்கு பூட்ஸ் தயாரிக்க இந்த ரப்பர் பயன்படுத்தப்பட்டது. வேர்களை வெட்டியெடுக்கும் இந்த வேலைக்கும் போருக்கும் சம்பந்தம் இருப்பதை அறிந்ததால் சாட்சிகள் அதை செய்ய மறுத்தனர். இதனால் சகோதரர்கள் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் ‘வெறுக்கப்பட்ட ஆட்களாக’ ஆயினர்.”

அவ்வாறு ‘வெறுக்கப்பட்ட ஆட்களில்’ ஒருவர்தான் ஜோஸஃப் மூலீம்வா என்பவர். இவர் தெற்கு ரோடீஷியாவைச் சேர்ந்தவர், 1932-⁠ல் வடக்கு ரோடீஷியாவின் மேற்கு மாகாணத்திற்கு வந்திருந்தார். அப்போது இவர், ‘ராஜ்யம் சமீபித்திருப்பதால்’ வயல்களில் பயிரிட வேண்டாமென மக்களிடம் சொன்னதாக சிலர் அடித்துக் கூறினர். மாவூம்போ மிஷனைச் சேர்ந்த ஒரு நபர் ஜோஸஃபை வெறுத்ததால் இப்படியொரு பொய்யைப் பரப்பிவிட்டார். ஜோஸஃப் கைது செய்யப்பட்டு, மனக்கோளாறுள்ள ஓர் ஆளுடன் சேர்த்து கைவிலங்கிடப்பட்டார். அந்த ஆள் அவரை அடித்து ஒருவழி பண்ணிவிடுவான் என சிலர் நினைத்தனர். ஆனால், அவரை ஜோஸஃப் சாந்தமானவராக மாற்றிவிட்டார். விடுதலையான பிறகு, ஜோஸஃப் தொடர்ந்து பிரசங்கித்தார், சபைகளைச் சந்தித்தார். 1980-⁠ன் மத்திபத்தில் அவர் மரிக்கும்வரை உண்மையுள்ளவராய் இருந்தார்.

சோதனைகளைச் சந்திக்கப் பலம் பெறுதல்

தேசப்பற்றும் சமுதாய பதற்றங்களும் கடவுளுக்கு முன் நல் மனசாட்சி உடையோரை இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளின. ஏனென்றால் அரசியல் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபட அவர்களுடைய மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. நாட்டில் இறுக்கமான சூழல் நிலவியபோதிலும் 1963-⁠ல் கிட்வே நகரில் “தைரியமுள்ள ஊழியர்கள்” என்ற தலைப்பில் தேசிய மாநாடு நடத்தப்பட்டது. இது யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் காணப்படும் சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் சான்றளித்தது. அம்மாநாட்டிற்கு ஏறக்குறைய 25,000 பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். நான்கு வித்தியாசமான மொழிகளில் ஐந்து நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தாங்கள் விரும்பிய மொழியில் அனுபவிக்க அவர்களில் சிலர் கூடாரப் பொருட்களுடனும் டிரெய்லர் வண்டிகளுடனும் வந்தார்கள். சகோதரர் மில்டன் ஹென்ஷல் கொடுத்த பேச்சு குறிப்பிடத்தக்கதாய் இருந்தது; ஒரு கிறிஸ்தவருக்கும் அவருடைய தேசத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய பேச்சாக அது இருந்தது. “நடுநிலை வகிப்பதன் முக்கியத்துவத்தை சகோதரர்கள் புரிந்துகொள்ள உதவும்படி எங்களிடம் அவர் சொன்னது நினைவிருக்கிறது. காலத்திற்கேற்ற ஆலோசனையை அவர் கொடுத்ததால் நாங்கள் எவ்வளவு சந்தோஷம் அடைந்தோம்! ஏனென்றால், ஜாம்பியாவிலிருந்த சகோதரர்கள் பெரும்பாலோர் பிற்காலத்தில் வந்த பயங்கரமான சோதனைகளை வெற்றிகரமாகச் சமாளித்து யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தனர்” என ஃபிராங் லூயிஸ் சொல்கிறார்.

1960-களில் நாடெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டார்கள், அவர்களுடைய சொத்துபத்துக்களும் அழிக்கப்பட்டன. வீடுகளும் ராஜ்ய மன்றங்களும் தரைமட்டமாக்கப்பட்டன. பாராட்டத்தக்க விஷயம் என்னவென்றால், யெகோவாவின் சாட்சிகளை அச்சுறுத்தி, கொடுமைப்படுத்திய எண்ணற்றோரை அரசாங்கம் சிறையில் அடைத்தது. ஜாம்பியா குடியரசாக வடக்கு ரோடீஷியா மாறியபோது அதன் புதிய அரசியல் சட்டம் இடமளித்த அடிப்படை மனித உரிமைகளுக்கான ஏற்பாட்டிலிருந்து பயனடைவதற்கு யெகோவாவின் சாட்சிகள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் சீக்கிரத்திலேயே தேசபக்தி எனும் புயல் அப்பாவியான சிலரைத் தாக்கவிருந்தது.

தேசிய சின்னங்கள்

குடியேற்ற காலத்தின்போது, யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் மத காரணங்களின் நிமித்தம், அன்றிருந்த ஐக்கிய அரசின் தேசிய கொடியை வணங்க மறுத்ததால் தண்டனை பெற்றனர். தேசிய கீதத்தைப் பாட மறுத்ததற்காகவும் அவர்கள் தண்டனை பெற்றனர். அதற்கான காரணம் கல்வித் துறை அதிகாரிகளிடம் விளக்கப்பட்டபோது, அவர்கள் தங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டு, இவ்வாறு எழுதினர்: “கொடிக்கு சல்யூட் செய்வது குறித்ததில் உங்களுடைய [சொஸைட்டியின்] கருத்துகள் யாவரறிந்தவை, மதிக்கப்படத்தக்கவை; எனவே சல்யூட் செய்ய மறுப்பதற்காக எந்தவொரு பிள்ளையும் எந்த விதத்திலும் தண்டிக்கப்படக் கூடாது.” புதிய குடியரசின் அரசியல் சட்டமானது, மனசாட்சி, கருத்துகள், மதம் உள்ளிட்ட அடிப்படை சுதந்திரங்களைப் பெற முடியும் என்ற எதிர்பார்ப்புகளை தீவிரப்படுத்தியது. ஆனால், புதிய தேசியக் கொடியும், தேசிய கீதமும் தேசப்பக்தியை மீண்டும் முடுக்கிவிட்டன. பள்ளிகளில் தினமும் கொடியை சல்யூட் செய்வது, தேசிய கீதம் பாடுவது போன்றவை மீண்டும் படுவிறுவிறுப்புடன் அமல்படுத்தப்பட்டன. யெகோவாவின் சாட்சிகளான இளைஞர்களில் சிலருக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டாலும், பலர் அடிக்கப்பட்டார்கள், பள்ளியிலிருந்தும் நீக்கப்பட்டார்கள்.

1966-⁠ல் ஒரு புதிய கல்விச் சட்டம் அமலுக்கு வந்தது; அது நம்பிக்கை தீபத்தை மனதில் ஏற்றியது. மத ஆராதனைகளிலிருந்து அல்லது சடங்காச்சாரங்களிலிருந்து ஒரு பிள்ளைக்கு விலக்களிக்கும்படி அதன் பெற்றோரோ காப்பாளரோ கேட்பதற்கு அனுமதி தரும் ஏற்பாடும் அச்சட்டத்தில் இருந்தது. இதன் விளைவாக, பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருந்த பிள்ளைகளில் அநேகர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். என்றாலும், சீக்கிரத்திலேயே அச்சட்டத்துடன் விதிமுறைகள் சில மறைமுகமாகப் புகுத்தப்பட்டன; கொடிகளும், தேசிய கீதங்களும் தேசிய உணர்வைத் தூண்டிவிடுவதற்கான மதசார்பற்ற சின்னங்கள் என்பதாக அவை விளக்கின. கல்வி அமைச்சர்களிடம் சகோதரர்கள் பலமுறை போய் பேசியும் 1966-⁠க்குள்ளாக 3,000-⁠க்கும் அதிகமான பிள்ளைகள் நடுநிலை காரணமாக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்கள்.

பள்ளியில் படிக்க ஃபேலியா அனுமதிக்கப்படவில்லை

இத்தகைய செயல் சட்டப்படியானதா என்பதைச் சோதிப்பதற்கான சமயம் வந்தது. பிற்காலத்திற்கு ஒரு முன்மாதிரியாக அமையும் விதத்தில் ஒரு வழக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஃபேலியா காசாஸூ என்ற மாணவி சம்பந்தப்பட்ட வழக்கு அது. காப்பர்பெல்ட்டிலுள்ள புயான்டான்ஷி என்ற பள்ளிக்கு அவள் தவறாமல் சென்று வந்தாள். சிறந்த மாணவியென பெயரெடுத்திருந்த போதிலும், பள்ளியிலிருந்து அவள் நீக்கப்பட்டிருந்தாள். அவளுடைய வழக்கு எவ்வாறு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது என்பதை ஃபிராங் லூயிஸ் சொல்கிறார்: “திரு. ரிச்மாண்ட் ஸ்மித் எங்களுடைய வழக்கை தாக்கல் செய்தார், இது அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்காதலால், இதை நடத்துவது சுலபமாய் இருக்கவில்லை. கொடியை சல்யூட் செய்யாததற்கு ஃபேலியா கொடுத்த விளக்கத்தைக் கேட்டதால்தான் அவள் சார்பாக வாதாடுவதற்கு அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.”

அந்தச் சமயத்தில் லுஸாகாவைச் சேர்ந்த டைலஸ் முஸான்டா என்ற ஒரு பள்ளி மாணவி இவ்வாறு சொன்னாள்: “ஃபேலியாவின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்குமென நாங்கள் ரொம்பவே எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். வழக்கு விசாரணையை நேரில் கேட்பதற்காக மூஃபூலிரா என்ற இடத்திலிருந்து சகோதரர்கள் சென்றிருந்தார்கள். என்னையும் என்னுடைய சகோதரியையும் வரசொல்லியிருந்தார்கள். வெள்ளை நிற தொப்பியும் வெளிர் நிற டிரஸ்ஸையும் போட்டுக்கொண்டு நீதிமன்றத்தில் ஃபேலியா நின்றிருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. மூன்று நாட்களுக்கு விசாரணை நடந்தது. மிஷனரிகள் சிலர் இன்னும் நாட்டில் இருந்தார்கள்; அவர்களில் சகோதரர் ஃபிலிப்ஸும் சகோதரர் ஃபெர்கெசனும் விசாரணையைக் கேட்க வந்திருந்தார்கள். அவர்கள் அங்கிருப்பதே எங்களுக்கு உதவுமென நினைத்தோம்.”

முதன்மை நீதிபதி முடிவாக இவ்வாறு கூறினார்: “யெகோவாவின் சாட்சிகளுடைய இந்த வழக்கில் அவர்களுடைய செயல்களின் மூலம் தேசிய கீதத்தை அல்லது தேசிய கொடியை அவமதித்தார்கள் என சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.” இருந்தாலும், இவை மதசார்பற்ற நிகழ்ச்சிகள் என்றார். அதோடு ஃபேலியாவின் நம்பிக்கைகள் உண்மையானவையாய் இருந்தாலும்கூட, கல்வி சட்டத்தின் அடிப்படையில் விலக்களிக்குமாறு கோர அவளுக்கு உரிமையில்லை என்றும் அவர் தீர்ப்பளித்தார். தேசிய பாதுகாப்பிற்கு அத்தகைய நிகழ்ச்சிகள் தேவை என அவர் கருதினார். இந்த நிகழ்ச்சிகளில் ஈடுபட வேண்டுமென ஒரு மைனரை வற்புறுத்துவது எந்த விதத்தில் பொது மக்களுக்குப் பாதுகாப்பளிக்கும் என்பதற்கு எந்த விளக்கமும் தரப்படவில்லை. தன் கிறிஸ்தவ நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காததால் பள்ளியில் படிக்க ஃபேலியா அனுமதிக்கப்படவில்லை

“எங்களுக்கு ரொம்பவே ஏமாற்றமாகி விட்டது. இருந்தாலும், எல்லாவற்றையும் யெகோவாவுடைய கைகளில் விட்டுவிட்டோம்” என டைலஸ் கூறுகிறாள். பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள் வந்து கொண்டிருந்ததால், 1967-⁠ல் டைலஸும் அவளுடைய சகோதரியும் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார்கள். 1968-⁠ன் இறுதிக்குள், யெகோவாவின் சாட்சிகளாயிருந்த கிட்டத்தட்ட 6,000 பிள்ளைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்கள்.

பொதுக் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டன

எல்லா பொதுக் கூட்டங்களையும் தேசிய கீதத்துடன் ஆரம்பிக்க வேண்டுமென 1966-⁠ம் வருட பொது ஒழுங்குச் சட்டம் குறிப்பிட்டிருந்தது. எனவே பொது மக்கள் கலந்துகொள்கிற மாநாடுகளை நடத்த முடியாமல் போனது. சகோதரர்கள் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு இணங்கி, தனிப்பட்டவர்களின் இடங்களில், பெரும்பாலும் ராஜ்ய மன்றங்களைச் சுற்றியுள்ள புல் வேலியிட்ட இடங்களில் மாநாடுகளை நடத்தினர். என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆவலில் அக்கறை காட்டிய அநேகர் கூடிவந்தனர்; அதனால், ஆஜரானோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. இப்படியாக, 1967-⁠ல் கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்புக்குச் சுமார் 1,20,025 பேர் வந்திருந்தனர்.

“இந்தக் காலப்பகுதியில் அவ்வப்போது பயங்கரமான துன்புறுத்தல் தலைதூக்கியது. சாம்ஃபியா என்ற பகுதியில் கலகக்கார கும்பல் ஒன்று கான்டான்ஷா சபையைச் சேர்ந்த சகோதரர் மாபோவைத் தாக்கி கொன்றுபோட்டது. சிலசமயங்களில் சபைக் கூட்டம் நடக்கையில் சகோதரர்கள் தாக்கப்பட்டார்கள், அநேக ராஜ்ய மன்றங்கள் தீக்கொளுத்தப்பட்டன. என்றாலும், உயர் அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளுக்கு மதிப்புக்கொடுத்து வந்தார்கள், எதிரிகள் சிலரைக் கைதுசெய்து அவர்களுக்குத் தண்டனையும் வழங்கினார்கள்” என லாம்ப் சிஸெங்கா கூறுகிறார்.

அவர்களது சொந்த விமானப் படை!

அரசியல் ஆதரவாளர்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகளைக் குவித்துக்கொண்டே இருந்தார்கள்; சாட்சிகள் பெரும் பணக்காரர்கள் எனவும் அடுத்த அரசாங்கத்தை அவர்களே அமைப்பார்கள் எனவும் குற்றஞ்சாட்டினார்கள். ஒருநாள் ஆளும் கட்சியின் செயலர் எந்த முன்னறிவிப்புமின்றி கிட்வே கிளை அலுவலகத்திற்குச் சென்றார். அவருடைய வருகையை சகோதரர்கள் முதலில் அறிந்துகொண்டதே வாசலில் கூட்டமாக போலீஸ் அதிகாரிகள் வந்திருந்ததை வைத்துத்தான். கிளை பிரதிநிதிகளுடன் கூடிப் பேசியபோது அவர் கொதிப்படைந்தார். “இந்தக் கட்டடங்களையெல்லாம் கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது நாங்கள்தான். இங்கு நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? இதெல்லாம்தான் உங்களுடைய அரசு அலுவலகங்களா?” என சத்தமாகக் கேட்டார்.

உயர் அதிகாரிகளில் சிலர் பொய் வதந்திகளை நம்பினார்கள். ஜாம்பியாவின் வடமேற்கு மாகாணத்தில், கண்ணீர்ப்புகையை உபயோகித்து மாநாட்டைக் கலைக்க போலீசார் முயன்றார்கள். உடனடியாகச் சகோதரர்கள் எப்படியோ கிளை அலுவலகத்திற்கு தந்தியடித்தார்கள். வேறு நாட்டை சேர்ந்த ஒரு விவசாயியிடம் சிறிய விமானம் ஒன்றிருந்தது. சூழ்நிலையை அமைதிப்படுத்துவதற்கும் ஏதாவது தப்பெண்ணங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கும் அவர் கிளை அலுவலகத்திலிருந்து பிரதிநிதிகள் சிலருடன் கபோம்போவிற்குப் பறந்தார். ஆனால் சிலருடைய தப்பெண்ணங்களை மாற்ற முடியாதது வருத்தமான விஷயம், யெகோவாவின் சாட்சிகளுக்கென ஒரு விமானப் படை இருப்பதாக இப்போது அவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்!

மாநாட்டு வளாகத்தில், உபயோகிக்கப்பட்ட கண்ணீர்ப்புகை குண்டுகளை சகோதரர்கள் கவனமாகப் பொறுக்கி எடுத்தார்கள். பிற்பாடு, கிளை பிரதிநிதிகள் தங்கள் கவலையைத் தெரிவிக்க அரசாங்க அதிகாரிகளைப் போய்ச் சந்தித்தபோது, போலீசார் அநாவசியமாகப் பலப்பிரயோகம் செய்ததற்கு அத்தாட்சியாக அந்தக் கண்ணீர்ப்புகை குண்டுகளைக் காட்டினார்கள். இந்தச் சம்பவம் எல்லாருக்கும் தெரிய வந்ததோடு மட்டுமல்லாமல் யெகோவாவின் சாட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தது அவர்கள் பிரபலமடைவதற்கும் வழிவகுத்தது.

நம் நிலைநிற்கையை விளக்குதல்

யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையைச் சட்டத்தால் தடுக்கும் முயற்சி தீவிரமடைந்தது. நமது நடுநிலைமையைக் குறித்து அரசாங்கத்திடம் விளக்க கிளை அலுவலகம் விரும்பியது. அமைச்சர்கள் பலரிடம் போய்ப் பேசுவதற்கு ஸ்மார்ட் ஃபிரி என்பவரும் ஜோனஸ் மன்ஜானி என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள் போய் பேசியபோது, அமைச்சர் ஒருவர் சகோதரர்களை வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டார். “உங்களை வெளியே இழுத்துப்போட்டு உதைத்தால்தான் எனக்குத் திருப்தியாகும்! நீங்கள் என்ன செய்திருக்கீங்கன்னு தெரியுதா? எங்களுடைய நல்ல குடிமக்களை, மிகச் சிறந்த குடிமக்களை எங்களிடமிருந்து பிரிச்சுட்டீங்க, எங்களுக்குன்னு மீதியிருப்பதெல்லாம் கொலைகாரர்களும், ஒழுக்கங்கெட்டவர்களும் திருடர்களும்தான்!” என அவர் சாடினார்.

பதிலுக்கு சகோதரர்களும், “ஆமாம், அவர்களில் சிலர் அப்படித்தான் இருந்தார்கள்! அவர்கள், திருடர்களாக, ஒழுக்கங்கெட்டவர்களாக, கொலைகாரராக இருந்தார்கள், ஆனால் இப்போது அவர்கள் பைபிளுக்கு இருக்கும் சக்தியால் திருந்தி ஜாம்பியாவின் சிறந்த குடிமக்களாக திகழ்கிறார்கள். அதனால்தான் எந்தத் தடையும் இல்லாமல் பிரசங்கிப்பதற்கு அனுமதி கோருகிறோம்” என்றார்கள்.​—1 கொ. 6:9-11.

நாடுகடத்தப்படுதலும் ஓரளவு தடையுத்தரவும்

நாம் ஏற்கெனவே படித்தபடி, நாட்டைவிட்டு வெளியேறும்படி மிஷனரிகள் உத்தரவிடப்பட்டார்கள். “ஜனவரி 1968-ஐ எங்களால் மறக்கவே முடியாது” என சொன்னார் ஃபிராங்க் லூயிஸ். “குடியேற்ற அதிகாரி இப்போதுதான் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டுப் போனார் என ஒரு சகோதரர் ஃபோன் செய்தார். நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான ஆவணங்களை அவரிடம் சமர்ப்பிப்பதன் மூலம் வந்த வேலையை முடித்துக்கொண்டு ஜாம்பியாவிலிருந்து கிளம்புவதற்கு ஏழு நாள் அவகாசம் கொடுத்துவிட்டு அந்த அதிகாரி சென்றிருந்தார். சீக்கிரத்தில் வரிசையாக பலரிடமிருந்து போன் வந்தது. கடைசியில், ஒரு சகோதரர் போன் செய்து, அடுத்ததாக கிட்வேயில் உள்ள ஒரு பெரிய காம்ப்ளக்ஸுக்குத்தான் ஆபத்தென கேள்விப்பட்டதாகச் சொன்னார்.” இப்படிப்பட்ட கொடிய நடவடிக்கைகள் எல்லாமே யெகோவாவின் சாட்சிகளுடைய ஐக்கியத்தைக் கெடுப்பதற்கும் பிரசங்க வேலையில் அவர்களுடைய ஆர்வத்தைத் தணிப்பதற்குமே மேற்கொள்ளப்பட்டன.

மறுவருடத்தில், பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்திற்கு ஜனாதிபதி அங்கீகாரம் அளித்தார், இது வீடு வீடாகப் பிரசங்கிப்பதைச் சட்டப்படி தடைசெய்தது. எனவே, சகோதரர்கள் தாங்கள் பிரசங்கிக்கும் முறையை மாற்றியமைக்க வேண்டியிருந்தது; சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நம் ராஜ்ய ஊழியம் என்பது நம் மாதாந்தர கடிதம் என பெயர் மாற்றப்பட்டது; அதில் “நற்செய்தியை அளித்தல்” என்ற தலைப்பிலிருந்த பகுதி “நம் அக ஊழியம்” என மாற்றப்பட்டது. இப்படி மாற்றியது அரசாங்க தணிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்காதிருக்க உதவியது. ஏப்ரல் 1971-⁠ல் உச்சநிலை எண்ணிக்கையாக ஏறக்குறைய 48,000 பைபிள் படிப்புகள் அறிக்கை செய்யப்பட்டன; வேலையைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளைக் கண்டு சகோதரர்கள் கொஞ்சமும் சோர்ந்துவிடவில்லை என்பதற்கு இது தெளிவான அத்தாட்சி அளித்தது.

இப்போது இங்கிலாந்தில் வசித்துவரும் க்ளைவ் மவுன்ட்ஃபர்ட் என்பவர் அன்று அநேக மிஷனரிகளுடன் கூட்டுறவு வைத்திருந்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்க நாங்கள் பயன்படுத்திய ஒரு வழியானது, காரில் லிஃப்ட் கொடுத்து அப்படியே அவர்களிடம் சத்தியத்தைப் பேசுவதாகும். காரில் எப்போதுமே பத்திரிகைகளை வைத்திருப்போம். காரில் ஏறுபவர்களின் கண்களின் படும்படி அவற்றை வைத்திருப்போம்.”

பைபிளைப் பற்றிக் கலந்துபேசுவதற்குத் தடையில்லாத போதிலும், ஆர்வமுள்ள ஒருவரைப் போய்ச் சந்திப்பதற்கு முன் அவருடைய அனுமதியைப் பெற வேண்டும் என்ற சட்டம் இருந்தது. சில சமயங்களில், இச்சட்டத்தில் பிடிபடாதிருக்க உறவினர், முன்னாள் பள்ளித் தோழர்கள், சக பணியாளர்கள், பழக்கப்பட்டவர்கள் போன்றவர்களின் வீடுகளுக்கு வெறுமனே ‘விசிட்’ செய்வதுபோல் சகோதரர்கள் செல்வார்கள். அப்படிச் செல்கையில் உரையாடலை சாதுரியமாக பைபிள் விஷயத்திடம் திருப்புவார்கள். கூட்டுக் குடும்பங்களில் அநேகர் இருந்ததால், சத்தியத்தில் இல்லாத உறவினர்கள் பலரிடத்திலும் அந்தச் சமுதாயத்திலுள்ள அங்கத்தினர்களிடத்திலும் இவ்வாறே பேச முடிந்தது.

1975-⁠க்குள் கிளை அலுவலகம் இவ்வாறு அறிவித்தது: “எங்களுடைய பிராந்தியத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பிரஸ்தாபிகள் இதுவரை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொண்டதே இல்லை. என்றாலும் புதிய சீஷர்கள் உருவாக்கப்பட்டுள்ளார்கள், பெரியளவில் சாட்சி கொடுக்கும் வேலையும் நடைபெற்றிருக்கிறது.” வீட்டுக்கு வீடு ஊழியம் தடைசெய்யப்பட்டிருந்ததால், சாட்சி கொடுப்பதற்கு சகோதரர்கள் வேறு பல வழிகளைப் பயன்படுத்தினார்கள். அரசாங்க அலுவலகம் ஒன்றில் ரெக்கார்ட் கீப்பராக பணிபுரிந்த ஒரு சகோதரரின் உதாரணம் குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் பெயர்களையும் பிற விவரங்களையும் பதிவு செய்வது அவரது வேலையாக இருந்தது. பைபிள் பெயர்கள் உடையவர்களிடம் அவர் பிரத்தியேக அக்கறை காட்டி, அவர்களுடைய பெயரிலுள்ள பைபிள் கதாபாத்திரங்களைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியுமென கேட்டார். இது சாட்சி கொடுக்க அவருக்கு நிறைய வாய்ப்புகளை அளித்தது. ஒருசமயம் ஒரு தாயும் மகளும் அவருடைய அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள். மகளுடைய பெயர் ஏதேன் என்றிருந்தது. “ஏதேன்” என்பதன் அர்த்தம் தெரியுமா என அந்தத் தாயிடம் கேட்டபோது, தெரியாது என அவர் பதில் அளித்தார். வெகு சீக்கிரத்தில் பூர்வத்திலிருந்த அந்த ஏதேன் தோட்டம் போல இந்தப் பூமி முழுவதும் மாறப்போகிறதென்று சுருக்கமாக விளக்கினார். அதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தில் தன்னுடைய வீட்டு விலாசத்தை அந்தத் தாய் கொடுத்தார். அவருடைய கணவரும் ஆர்வம் காட்டினார், அவர்கள் குடும்பமாகக் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள்; பிற்பாடு அந்தக் குடும்பத்தில் சிலர் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.

இன்னும் சில பிரஸ்தாபிகளோ தாங்கள் வேலை செய்யுமிடத்தில் சாட்சி கொடுத்தார்கள். ராயிட் என்பவர் ஒரு சுரங்கக் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்; அவர் மதிய இடைவேளையில் கூட வேலை பார்த்தவர்களிடம் பல்வேறு வசனங்களைக் குறித்து அவர்களுடைய கருத்தைக் கேட்பார். “மத்தேயு 16:18-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘கல்’ யாரென்று நினைக்கிறீர்கள்?” அல்லது, “ரோமர் 9:32-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘இடறுதற்கான கல்’ யார்?” எனக் கேட்பார். பைபிள் வசனங்களின் விளக்கங்களைக் கேட்பதற்குப் பெரும்பாலும் சுரங்கப் பணியாளர்களின் ஒரு பெரிய கூட்டமே கூடிவிடும். இவ்வாறு சந்தர்ப்ப சாட்சி கொடுத்ததன் காரணமாக, ராயிட்டுடன் வேலை பார்த்தவர்கள் பலர் ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெறும் அளவுக்கு முன்னேறினார்கள்.

பள்ளியில் பிள்ளைகள் எடுத்த உறுதியான நிலைநிற்கையும்கூட சத்தியத்தைக் கேட்க மற்றவர்களுக்கு வாய்ப்பளித்தது. தேசபக்தி பாடல்கள் பாடப்படுகையில் சில பிள்ளைகள் அதில் கலந்துகொள்ளாதிருந்ததால், டீச்சர் கோபப்பட்டு கிளாஸிலுள்ள எல்லாரையும் வெளியே போய் நிற்கும்படி சொன்னார். அதைப் பற்றி ஒரு பிள்ளை இவ்வாறு சொல்கிறது: “எங்களுடைய மதப் பாடல்களைக்கூட எங்களுக்குப் பாடத் தெரியாதென டீச்சர் நினைத்திருக்க வேண்டும். அதனால் இதை சாக்காக வைத்து எல்லார் முன்பாகவும் எங்களைக் கேவலப்படுத்த வேண்டுமென அவர் நினைத்ததுபோல் தெரிந்தது. ஒவ்வொரு மதத்தவரும் தனித்தனி குரூப்பாக நிற்கும்படி அவர் பிள்ளைகளிடம் சொன்னார். ஒவ்வொரு குரூப்பிடமும் அவர்களுடைய மத பாடல்களில் ஒன்றிரண்டைப் பாடும்படி சொன்னார். இரண்டு குரூப்களிலுள்ள பிள்ளைகளுக்கு எந்தவொரு பாடலும் ஞாபகத்திற்கு வரவில்லை. அதனால், டீச்சர் எங்களைப் பார்த்து பாடச் சொன்னார். ‘இது யெகோவாவின் நாள்!’ என்ற பாடலை முதலில் பாடினோம். நாங்கள் நன்றாகப் பாடினோம் என நினைக்கிறேன், ஏனென்றால் அந்த ஸ்கூல் பக்கமாக போன வெளி ஆட்கள் அதை நின்று கேட்டனர். அடுத்து, ‘யெகோவா ராஜாவாகிவிட்டார்!’ என்ற பாடலைப் பாடினோம். அந்த டீச்சர் உட்பட, எல்லாருமே பலமாக கைதட்டினார்கள். நாங்கள் கிளாஸில் திரும்பப் போய் உட்கார்ந்தோம். கூடப் படிக்கிற பிள்ளைகள் பலர், அருமையான இந்த பாடல்களை நாங்கள் எங்கிருந்து கற்றுக்கொண்டோம் என கேட்டார்கள்; சிலர் எங்களுடன் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள், பிற்பாடு சுறுசுறுப்பான சாட்சிகளாகவும் ஆனார்கள்.”

“புத்தகம் அளிப்பவர்கள்”

இந்தக் காலப்பகுதி முழுவதிலும் சகோதரர்கள் “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய்” இருந்தார்கள். (மத். 10:16) யெகோவாவின் சாட்சிகள் தங்களது விசேஷித்த பிரசுரங்களை அளித்ததாலும் பைபிள் படிப்பு புத்தகங்களை மும்முரமாக பயன்படுத்தி வந்ததாலும் அவர்களுக்கு அபபோன்யா இஃபீடபோ என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது, அதன் அர்த்தம் “புத்தகம் அளிப்பவர்கள்” என்பதாகும். சகோதரர்களின் வாயை எப்படியும் அடைத்துவிட வேண்டுமென்பதற்காக விரோதிகள் பல முயற்சிகள் எடுத்தபோதிலும், ராஜ்ய பிரசங்க வேலை படுதீவிரமாக நடந்துகொண்டிருந்தது. பல வருடங்களாக ஆங்காங்கே கடும் எதிர்ப்புகள் தலைதூக்கியபோதிலும், 1980-களின் ஆரம்பத்திற்குள்ளாக அவை சற்று தணிந்தன.

தேசம் சுதந்திரம் பெற்ற 25 வருடங்களில் ஏறக்குறைய 90,000 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள். என்றாலும், சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை சுமார் 42,000-மாக மட்டுமே அதிகரித்தது. அதற்குக் காரணம்? சிலர் இறந்துவிட்டார்கள், இன்னும் சிலரோ வேறு இடங்களுக்குக் குடிமாறிச் சென்றுவிட்டார்கள். “மனித பயமும்கூட அதற்கு ஒரு காரணமாக இருந்தது” என அக்காலக்கட்டத்தில் கிளை அலுவலகத்தில் சேவை செய்த நெல்டி கூறுகிறார். ஊழியத்தில் அநேகர் ஒழுங்கற்றவர்களாகி விட்டார்கள் அல்லது செயலற்றவர்களாகி விட்டார்கள். அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்குப் பிறகு மாற்றங்களும் ஏற்பட்டன. நிர்வாகப் பொறுப்புகளை ஏற்பதில், முன்பு அகதிகளாக இருந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப ஆட்கள் தேவைப்பட்டார்கள். வீட்டு வசதி, வேலை வாய்ப்பு, கல்வி என புதிய வாய்ப்புகள் கிடைத்ததால், அநேக குடும்பங்கள் ஆன்மீக காரியங்களை ஒதுக்கிவிட்டு பொருளாதார காரியங்களை நாட ஆரம்பித்தன.

இருந்தாலும், பிரசங்க வேலை முன்னேறியது. ஞானியான சாலொமோன் ராஜா இவ்வாறு எழுதினார்: “காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.” (பிர. 11:6) சூழ்நிலைகள் சாதகமாக மாறுகையில், அவை செழுமையாக வளரும் என்ற நம்பிக்கையில் சத்தியத்தின் விதைகளை சகோதரர்கள் விதைத்துக்கொண்டே இருந்தார்கள். தொடர்ச்சியாக அதிகரிப்பு ஏற்பட்டதால் 1976-⁠ல் பிரசுரங்களை அதிகமதிகமாக அனுப்பி வைப்பதற்கு ஒரு புதிய டிரக் வாங்கப்பட்டது. 1982-⁠ல், பெத்தேலிலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் ஒரு புதிய அச்சகத்திற்கான கட்டுமான வேலை ஆரம்பமானது. இத்தகைய நடைமுறையான முன்னேற்றங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திட்டன.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்நாட்டுப் போர்கள் ஓய்ந்து ஓரளவு அமைதியை அனுபவித்த வெகுசில நாடுகளில் ஜாம்பியாவும் ஒன்று. ‘நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிப்பதற்கு’ மிகவும் சாதகமான சூழ்நிலை இப்போது நிலவுவது உண்மையே; என்றாலும், ‘உபத்திரவங்களை’ பற்றிய அழியா நினைவுகள், ‘நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்வதில்’ தொடர்ந்து சுறுசுறுப்புடன் இருக்க உண்மையுள்ளவர்களை உந்துவிக்கின்றன.​—ரோ. 10:15; 2 கொ. 6:4; யோவா. 4:36.

கிளை அலுவலக விரிவாக்கம்

1930-களில் சகோதரர் லவலன் ஃபிலிப்ஸும் அவருடன் இருந்த சகோதரர்கள் சிலரும் லுஸாகா நகரில் இரண்டு அறைகள் உடைய வாடகை வீட்டில் குடியிருந்துகொண்டு ஊழிய வேலைகளை கவனித்து வந்தார்கள். தற்போதுள்ள 270 ஏக்கர் பெத்தேல் வளாகத்தில் 250-⁠க்கும் மேலான வாலண்டியர்கள் சேவை செய்வதை அப்போது யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். இந்தச் சகோதர சகோதரிகள் அந்நாட்டிலுள்ள 1,25,000-⁠க்கும் அதிகமான பயனியர்கள் மற்றும் பிரஸ்தாபிகளின் ஆன்மீகத் தேவைகளைக் கவனித்து வருகிறார்கள். இந்த வளர்ச்சிக்கான காரணத்தை இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம்.

1936-⁠க்குள்ளாக, லுஸாகாவில் ஒரு புத்தக டிப்போ திறப்பதற்கு அனுமதி அளிக்குமளவுக்கு மேலதிகாரிகளின் மனநிலை மாறியது என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். அதிகரிப்பு ஏற்பட்டதால், சீக்கிரத்திலேயே அதை ஒரு பெரிய கட்டடத்திற்கு மாற்ற வேண்டியிருந்தது. மத்திய காவல் நிலையத்திற்கு அருகே ஒரு வீடும் வாங்கப்பட்டது. ஜோனஸ் மன்ஜானி இவ்வாறு கூறுகிறார்: “அதில் இரண்டு பெட்ரூம்கள் இருந்தன. டைனிங் ரூமை சர்வீஸ் டிபார்ட்மென்ட்டாகவும் வராண்டாவை ஷிப்பிங் டிபார்ட்மென்ட்டாகவும் பயன்படுத்தினோம்.” 1951-⁠ல் சகோதரர் ஜோனஸ் தன்னுடைய வேலையிலிருந்து இரண்டு வாரத்திற்கு லீவ் போட்டு பெத்தேலில் சேவை செய்வதற்காக வந்தார். பிற்பாடு, நிரந்தரமாக பெத்தேலுக்கே வந்துவிட்டார். “அது நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது, அங்கு சந்தோஷமான சூழலும் நிலவியது. ஷிப்பிங் டிபார்ட்மென்ட்டில் சகோதரர் ஃபிலிப்ஸுடன் சேர்ந்து சந்தாக்களை அனுப்புவது, பத்திரிகை பண்டில்களில் ஸ்டாம்பு ஒட்டுவது போன்ற வேலைகளைச் செய்தேன். சகோதரர்களுக்காக நாங்கள் வேலை செய்கிறோம் என்பதை அறிந்தது மனநிறைவளித்தது” என்கிறார் சகோதரர் ஜோனஸ். பிற்பாடு லவலன் ஃபிலிப்ஸுடன் சேர்ந்து வேலை செய்ய சகோதரர் ஹாரி அர்னோட் வந்தார். அவர்கள் உள்ளூர் சகோதரர்களான ஜோப் சிச்சேலா, ஆன்ட்ரூ ஜான் முலபக்கா, ஜான் முட்டலே, போட்டிஃபர் கசேபா, மார்டன் சிஸூலோ ஆகியோருடன் சேர்ந்து சேவை செய்தார்கள்.

ஜாம்பியாவில் சுரங்கத் தொழில் தழைத்தது, அதன் உள்கட்டமைப்பும் வேகமாக வளர்ந்தது; நாட்டின் எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து குடியேற ஆரம்பித்தார்கள். இதனால் லுஸாகாவைவிட காப்பர்பெல்ட் பகுதிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. சுரங்கமிருந்த ஒரு நகரத்தில் நிலம் வாங்குவதற்கு ஈயன் ஃபர்ஜஸ்ஸன் சிபாரிசு செய்தார்; அதனால் 1954-⁠ல் லுவான்ஷாவிலுள்ள கிங் ஜார்ஜ் அவன்யூக்கு கிளை அலுவலகம் மாற்றப்பட்டது. ஆனால், பிராந்திய விரிவாக்கத்தில் கிட்டத்தட்ட கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியும் சேர்க்கப்பட்டதால், சீக்கிரத்திலேயே இந்த இடமும் போதாமல் போனது. 1959-⁠ல் நடந்த “விழித்திருக்கும் ஊழியர்கள்” மாநாட்டிற்கு உலக தலைமையகத்திலிருந்து சகோதரர் நேதன் நார் வந்திருந்தபோது புதிய கிளை அலுவலகத்திற்கு ஏற்ற இடங்களை அவர் பார்வையிட்டார், கட்டுவதற்கு அனுமதியும் அளித்தார். ஜெஃப்ரி வீலர் இவ்வாறு கூறுகிறார்: “கிட்வேயில் புதிதாக வாங்கிய இடத்தில் புதிய பெத்தேல் இல்லத்திற்கு கற்களை நாட்டுவதற்காக ஃபிராங் லூயிஸும் யூஜின் கின்னஷுக்கும் நானும் ஒரு கட்டடக் கலைஞருடன் சென்றோம்.” பிப்ரவரி 3, 1962-⁠ல் ஒரு குடியிருப்பு கட்டடமும், ஓர் அச்சகமும், ஒரு ராஜ்ய மன்றமும் உடைய புதிய கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்நிகழ்ச்சியின் முடிவில், அப்போது கிளை அலுவலக ஊழியராக இருந்த ஹாரி அர்னோட், விசுவாசம், நம்பிக்கை, அன்பு எனும் கற்களைப் பயன்படுத்தி மிக முக்கியமான ஆன்மீக கட்டடத்தைக் கட்டுவதற்கு ஒவ்வொருவருமே கடினமாக உழைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அடுத்த பத்து வருடங்களில் ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 30,129-லிருந்து சுமார் 57,000-⁠க்கு உயர்ந்ததால் சீக்கிரத்திலேயே அந்த அலுவலகமும் போதாமல் போனது. ஈயன் ஃபர்ஜஸ்ஸன் இவ்வாறு கூறினார்: “அச்சடிக்கும் வேலையை விரிவுபடுத்தும்படி சகோதரர் நார் எங்களை ஊக்குவித்தார். அது சம்பந்தமாக விசாரிப்பதற்காக தென் ஆப்பிரிக்காவில் இலான்ஸ்ஃபான்டேன் என்ற இடத்திலுள்ள கிளை அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கிருந்த ஓர் அச்சு இயந்திரம் விமானம் மூலம் விரைவில் கிட்வேக்கு அனுப்பி வைக்கப்பட்டது.”

பிரசுரங்கள், பத்திரிகைகள் தவிர, கென்யாவுக்காகவும் கிழக்கு ஆப்பிரிக்க பிராந்தியங்களுக்காகவும் மாதாமாதம் நம் ராஜ்ய ஊழியமும் கிட்வேயில் அச்சிடப்பட்டது. சீக்கிரத்திலேயே அந்தச் சிறிய அச்சக அறை போதாமல் போனது, அதனால் மற்றொரு இடத்திற்கு அச்சகத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்களுக்குச் சொந்தமான ஓர் இடத்தை அதற்காகப் பயன்படுத்த நகர ஆலோசனைக் குழு மறுப்பு தெரிவித்தபோது ஒரு சகோதரர் முன்வந்து கொஞ்சம் நிலத்தைக் கொடுத்தார். 1984-⁠ல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. ஜாம்பியாவில் பிரசங்க வேலை நடைபெறுவதற்கு கிட்வே என்ற அந்த இடம் 30 வருடங்களுக்கு ஓர் ஆன்மீக மையமாகச் செயல்பட்டது.

மிஷனரிகள் நாட்டைவிட்டு வெளியேறிய பிறகு, அந்தக் கஷ்டமான காலப்பகுதியில் கிளை அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது; அதன் 14 அங்கத்தினர்கள் தங்கள் குடும்பத்தாரோடு பெத்தேலுக்கு வெளியே தங்குமளவுக்கு எண்ணிக்கை அதிகரித்தது. இனிமேல் செய்யப்பட வேண்டியிருந்த வேலையை சரியாகக் கவனிப்பதற்கு சில மாற்றங்கள் தேவைப்பட்டன. பிற்பாடு, இரண்டு வீடுகள் விலைக்கு வாங்கப்பட்டன, மற்றொரு வீடு வாடகைக்கும் எடுக்கப்பட்டது. இது பெத்தேல் குடும்பத்தின் வளர்ச்சிக்கு உதவியது. என்றாலும், ஒரு புதிய கிளை அலுவலகம் தேவைப்பட்டது. சீக்கிரத்திலேயே சூழ்நிலைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்படவிருந்தது. 1986-⁠ல், புதிய கிளை அலுவலகத்திற்காக நிலம் தேடும் பணியில் நாட்டின் முக்கிய பகுதிகளில் இருந்த சகோதரர்கள் நியமிக்கப்பட்டார்கள். தலைநகரத்திற்கு மேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் 270 ஏக்கர் பண்ணை நிலம் கிடைத்தது. இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தது ஞானமான செயலாக இருந்தது, ஏனென்றால் அது நிலத்தடி நீர்வளமிக்க இடமாக இருந்தது. “இந்த அருமையான இடத்திற்கு யெகோவாதான் எங்களை வழிநடத்தியிருக்கிறார் என நினைக்கிறேன்” என்று டேரல் ஷார்ப் சொன்னார்.

பிரதிஷ்டையும் வளர்ச்சியும்

சனிக்கிழமை, ஏப்ரல் 24, 1993 அன்று அந்தப் புதிய கிளை அலுவலகத்தின் பிரதிஷ்டைக்கு, நீண்ட காலமாக சேவை செய்துவந்த யெகோவாவின் ஊழியர்கள் வந்திருந்தார்கள். கூடிவந்திருந்த உள்ளூர் சகோதர சகோதரிகள் 4,000 பேர் மத்தியில் சர்வதேச விருந்தினராக 160-⁠க்கும் அதிகமானோர் இருந்தார்கள்; சுமார் 20 வருடங்களுக்கு முன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்த மிஷனரிகளும் இவர்களில் அடங்குவர். ஆளும் குழு அங்கத்தினர்களில் இருவரும் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவரான தியோடோர் ஜாராக்ஸ், “தேவ ஊழியக்காரராக நம்மை விளங்கப் பண்ணுதல்” என்ற தலைப்பில் பேசினார். உண்மையோடு பல வருடங்கள் சேவை செய்தவர்கள் மட்டும் அந்தளவு சகித்திருந்திராவிட்டால், இந்தக் கட்டடத்திற்கான அவசியமே ஏற்பட்டிருக்காது என அவர்களுக்கு நினைப்பூட்டினார். கொரிந்தியர்களுக்கு பவுல் எழுதிய வார்த்தைகளைக் குறிப்பிட்டு, கஷ்டங்களையும் சோதனைகளையும் உபத்திரவங்களையும் சகிப்பதற்கு உதவும் ஆவியின் கனியை உண்மை ஊழியர்கள் வளர்த்துக்கொள்கிறார்கள் என்பதை வலியுறுத்தினார். “நீங்கள் உங்களை தேவ ஊழியக்காரரென்று விளங்கப் பண்ணியிருக்கிறீர்கள். வேலை விரிவடைந்திருப்பதால் நாம் இந்தப் புதிய கிளை அலுவலகத்தை கட்ட வேண்டியிருந்தது” என அவர் குறிப்பிட்டார்.

2004-⁠ல் 32 ரூம்கள் உடைய ஒரு புதிய நான்கு மாடி குடியிருப்புக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. 47 மொழிபெயர்ப்பு அலுவலகங்களும், அதுபோக ஃபைல்கள் வைப்பதற்கான ரூம்கள், கான்ஃபரன்ஸ் ரூம்கள், லைப்ரரி ஆகியவையும் அடங்கும் விதத்தில், சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்த அச்சகம் புதுப்பித்துக் கட்டப்பட்டது.

பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பிற பிரச்சினைகள் மத்தியிலும், ஜாம்பியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய சேவையில் செல்வந்தர்களாகி இருக்கிறார்கள், தங்களுடைய ஆன்மீக செல்வத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதைப் பாக்கியமாகக் கருதுகிறார்கள்.​—2 கொ. 6:10.

சத்தியத்தை அனைவருக்கும் விளங்கப் பண்ணுதல்

ஜாம்பிய சமுதாயத்தினர், குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்; ஆகவே, சத்தியத்தில் வளர்க்கப்பட அநேகருக்குப் பல வருடங்களாகவே வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஜாம்பியாவின் மேற்கு மாகாணத்தில், ‘பசு தன் கொம்புகளை பாரமாகக் கருதாது’ என்ற ஒரு பழமொழி உண்டு. வேறு வார்த்தையில் சொன்னால், தன் குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பை ஒருவர் பாரமாகக் கருதக் கூடாது. கிறிஸ்தவப் பெற்றோர்கள் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியிருப்பதை அறிந்து, தங்கள் பிள்ளைகளைச் சரியான பாதையில் நடத்துகிறார்கள்; தங்கள் சொல்லிலும் செயலிலும் கிறிஸ்தவ ஊழியத்தை விளங்கப் பண்ணுகிறார்கள். அத்தகைய உண்மையுள்ளவர்களின் பிள்ளைகள் அநேகர் இன்று பக்திவைராக்கியமுள்ள சாட்சிகளாகத் திகழ்கிறார்கள்.​—சங். 128:1-4.

யெகோவாவின் பொறுமையாலும் ஆதரவாலும் தாங்கள் சாதித்திருப்பவற்றை நினைத்து ஜாம்பியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். (2 பே. 3:14, 15) ஆரம்ப காலத்தில் இருந்த குழப்பமான சூழ்நிலையைத் தாக்குப்பிடிக்க ‘சத்தியமான,’ பைபிள் அடிப்படையிலான நம்பிக்கைகள்தான் அவர்களுக்கு உதவின. பலதரப்பட்ட இனத்தாரிலிருந்து வந்தவர்களிடையே தொடர்ந்து காணப்படுகிற ஐக்கியத்திற்கும், அநாவசியமான எந்தப் பிரச்சினையுமின்றி தொடர்ந்து ஆன்மீக வளர்ச்சி ஏற்பட்டிருப்பதற்கும் காரணம் செயலில் காட்டும் ‘மாயமற்ற அன்பே.’ ‘நீதியின் ஆயுதங்களை’ பயன்படுத்தி தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் ‘தயவுடன்’ அறிவிக்கவும் உயர் அதிகாரிகள் உட்பட அநேகரின் மனங்களை அவர்கள் திறந்திருக்கிறார்கள், இதனால், பெரும்பாலும் ‘நல்ல அறிக்கை’ கிடைத்திருக்கிறது. இப்போது 2,100-⁠க்கும் மேலான சபைகள் ‘அறிவின்’ அடிப்படையில் உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன; இதற்குக் காரணம், ஊழியப் பயிற்சிப் பள்ளியின் திறம்பட்ட பட்டதாரிகள் இவற்றிற்குத் தேவையான கண்காணிப்பை அளித்து வருகிறார்கள். பயங்கரமான ‘உபத்திரவங்கள்’ இனி வந்தாலும், ஒன்றுகூடி வருகையில் யெகோவாவின் சாட்சிகள் ‘எப்போதும் சந்தோஷப்படுகிறவர்களாய்’ நிச்சயம் இருக்க முடியும்.​—2 கொ. 6:4-10; NW.

1940 ஊழிய ஆண்டில், இயேசுவின் மரண நினைவுநாளை ஆசரிக்க வேண்டுமென்ற கட்டளைக்குக் கீழ்ப்படிந்து சுமார் 5,000 பேர் கூடிவந்திருந்தார்கள். அங்குள்ள ஜனத்தொகையில் ஏறக்குறைய 200 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் அது இருந்தது. சமீப வருடங்களில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர், சொல்லப்போனால் 2005-⁠ல் அந்த விசேஷ மாலைப்பொழுதில் 5,69,891 பேர் வந்து யெகோவாவைக் கனப்படுத்தியிருக்கிறார்கள்; இது ஏறக்குறைய 20 பேருக்கு ஒருவர் என்ற விகிதமாகும். (லூக். 22:19) யெகோவாவின் ஜனங்களுடைய வெற்றிக்கு யார் காரணம்? யெகோவா தேவனே இந்த ஆன்மீக வளர்ச்சிக்குக் காரணம், எல்லாப் புகழும் அவரையே சேரும்.​—1 கொ. 3:7.

என்றாலும், ஜாம்பியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பங்கைச் செய்திருக்கிறார்கள். “நற்செய்தியைப் பற்றி பேச நாங்கள் வெட்கப்படுவதில்லை; எங்களைப் பொறுத்தவரை அது ஒரு சிலாக்கியம்” என கிளை அலுவலகக் குழு அங்கத்தினர் ஒருவர் கூறுகிறார். ஊழியத்தில் யெகோவாவின் சாட்சிகள் மரியாதையோடும் உறுதியோடும் பேசுகிறார்கள் என்பதை பார்வையாளர்கள் பார்த்ததுமே அறிந்துகொள்கிறார்கள். ஜனத்தொகையில் ஏறக்குறைய 90-⁠க்கு ஒருவர் என்ற விகிதத்தில் பிரஸ்தாபிகள் இருப்பதைக் குறித்து அவர்கள் மகிழ்ச்சி அடைவதில் ஆச்சரியமில்லை! இருந்தாலும், செய்வதற்கு இன்னும் அதிகம் உள்ளது.

“கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.” (நீதி. 18:10) சரியான மனச்சாய்வுடையவர்கள் இப்போதே யெகோவாவின் பக்கம் ஓடிவருவதற்கான அவசரத் தேவை உள்ளது. தற்போது ஜாம்பியாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 2,00,000 பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இன்னும் அநேகர் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து பக்திவைராக்கியமுள்ள ஊழியர்களாக ஆவதற்கு இவை உதவும். அதை விளங்கப் பண்ணுவதற்கு ஜாம்பியாவில் சுறுசுறுப்புடன் சேவை செய்கிற 1,25,000-⁠த்திற்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளுக்கு எல்லாக் காரணமும் இருக்கிறது.

[பக்கம் 168-ன் பெட்டி]

ஜாம்பியா​—⁠ஒரு கண்ணோட்டம்

நிலம்: பிறநாடுகள் சூழ ஜாம்பியா நடுவில் இருக்கிறது, தட்டையாக காட்சி அளிக்கிறது; இங்கு மரங்கள் ஏராளம். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரமுடைய ஒரு பீடபூமியில் அமைந்துள்ளது. ஜாம்பஜி ஆறுதான் ஜாம்பியாவின் தெற்கிலுள்ள பெரும்பகுதிக்கு எல்லையாக அமைந்திருக்கிறது.

மக்கள்: ஜாம்பியாவில் வசிக்கும் பெரும்பாலோர் கல்வி கற்றவர்கள், “கிறிஸ்தவர்கள்.” கிராமப்புற பகுதிகளில், புல்லால் கூரை வேயப்பட்ட வீடுகளில் வசிக்கிறார்கள், அருகிலேயே பயிர் செய்கிறார்கள்.

மொழி: ஆங்கிலமே தேசிய மொழி, அதேசமயத்தில் 70-⁠க்கும் அதிகமான உள்ளூர் மொழிகளும் பேசப்படுகின்றன.

பிழைப்பு: செம்பு சுரங்கங்களும் அவற்றின் தொழிற்சாலைகளும் அநேகம் உள்ளன. சோளம், மக்காச்சோளம், நெல், நிலக்கடலை ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.

உணவு: சோளமே முக்கிய உணவுப்பொருள். எங்ஷிமா என்ற சோளக் களி, அனைவரும் விரும்பி உண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகும்.

சீதோஷ்ணம்: இந்த நாடு உயரத்தில் அமைந்திருப்பதால், பொதுவாக தென்-மத்திப ஆப்பிரிக்க நாட்டில் ஒருவர் எதிர்பார்க்கும் அளவுக்கு வெப்பம் இங்கு இருப்பதில்லை. அவ்வப்பொழுது வறட்சி ஏற்படுகிறது.

[பக்கம் 173-175-ன் பெட்டி/​படம்]

17 மாத சிறைவாசம், 24 அடிகள்

காசமு மவான்ஸா

பிறந்தது: 1886

முழுக்காட்டப்பட்டது: 1918

பின்னணிக் குறிப்பு: துன்புறுத்தலையும் கள்ளச் சகோதரர்களால் வந்த கஷ்டங்களையும் சகித்தவர். 1989-⁠ல் தனது பூமிக்குரிய வாழ்வை முடிக்கும்வரை பயனியராகவும் மூப்பராகவும் உண்மையுடன் சேவை செய்தார்.

முதல் உலகப் போரின் ஆரம்ப கட்டத்தில், இராணுவத்தில் சேர்ந்து வடக்கு ரோடீஷியா படைப் பிரிவில் மருத்துவ உதவியாளனாக பணிபுரிந்தேன். டிசம்பர் 1917-⁠ல், விடுப்பில் இருந்த சமயத்தில், தென் ரோடீஷியாவிலிருந்து வந்த இரண்டு பேரை சந்தித்தேன், அவர்கள் பைபிள் மாணாக்கர்கள். வேதாகமத்தில் படிப்புகள் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் ஆறு தொகுப்புகளை எனக்குக் கொடுத்தார்கள். மூன்று நாட்களுக்கு அந்தப் புத்தகங்களைப் படிப்பதிலேயே மூழ்கிப் போனேன். அதன் பிறகு நான் போருக்குச் செல்லவில்லை.

யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தைக் கடிதத்தில் தொடர்பு கொள்வது கடினமாக இருந்தது, ஆகவே நானும் என்னுடன் இருந்த சகோதரர்களும் அமைப்பின் வழிநடத்துதல் இல்லாமல் ஊழியம் செய்தோம். கிராமம் கிராமமாகச் சென்று, மக்களை ஒன்றுகூட்டி, அவர்களுக்குப் பிரசங்கித்தோம், அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தோம். பிற்பாடு, கூட்டங்கள் நடத்துவதற்கு நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள கலிலி என்ற இடத்தை ஒரு மையமாக தேர்ந்தெடுத்தோம். பைபிள் பற்றிய விவரங்களைக் கேட்பதற்கு ஆர்வமுள்ளோரை அங்கு அழைத்தோம். எல்லாவற்றையும் கண்காணிப்பதற்கு நான் நியமிக்கப்பட்டேன். வருத்தகரமாக, கள்ளச் சகோதரர்கள் பலர் எழும்பி, குழப்பம் ஏற்படுத்தினார்கள்.

பிரசங்கிப்பதற்கு நாங்கள் ஆவலாக இருந்தோம், ஆனால் எங்களுடைய முயற்சிகள் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டண்டு மிஷனரிகளுக்கு இடையூறாக இருந்தன. நாங்கள் தொடர்ந்து பெரிய கூட்டங்களை ஏற்பாடு செய்தோம், ஜனவரி 1919-⁠ல் இஸோக்கா என்ற இடத்திற்கு அருகிலுள்ள மலைகளில் சுமார் 600 பேர் கூடிவந்தது எனக்கு நினைவிருக்கிறது. எங்களுடைய நோக்கத்தைப் பற்றி தெரியாததால், போலீசாரும் ராணுவத்தினரும் வந்து எங்களுடைய பைபிள்களையும் புத்தகங்களையும் கிழித்துப்போட்டு, எங்களில் பலரைக் கைது செய்தார்கள். சிலர் காஸாமா என்ற பகுதிக்கு அருகிலும், இன்னும் சிலர் எபாலாவிலும், மற்றவர்கள் தெற்கே லிவிங்ஸ்டன் வரையாகவும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். சிலருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது. எனக்கோ 17 மாத சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது; அதோடு, பிட்டத்தில் வாரினால் 24 அடியும் வாங்கினேன்.

விடுதலை பெற்றதும் என் சொந்த கிராமத்திற்குப் போய், பிரசங்க வேலையைத் தொடர்ந்தேன். பிற்பாடு என்னை மீண்டும் கைதுசெய்து, வாரினால் நிறைய அடி கொடுத்து, சிறையில் அடைத்தார்கள். எதிர்ப்பு தொடர்ந்தது. அந்தக் கிராமத்திலிருந்து சகோதரர்களை வெளியேற்ற உள்ளூர் தலைவர் தீர்மானித்தார். நாங்கள் எல்லாரும் வேறொரு கிராமத்திற்குச் சென்றோம், அங்கே இருந்த தலைவர் எங்களை ஏற்றுக்கொண்டார். நாங்கள் அங்கேயே தங்கிவிட்டோம்; அதோடு அவருடைய அனுமதியுடன், எங்களுக்கென்று ஒரு கிராமத்தை அமைத்து, அதற்கு நாசரேத் என்று பெயரிட்டோம். சமாதானத்தைக் குலைக்காத வரை அங்கு தங்குவதில் பிரச்சினையில்லை என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. எங்களுடைய நடத்தை அந்தத் தலைவருக்குப் பிடித்திருந்தது.

1924-⁠ம் ஆண்டின் இறுதியில், வடக்கே இஸோக்காவிற்குத் திரும்பி வந்தேன், அங்கே ஒரு மாவட்ட ஆணையர் என்மேல் இரக்கப்பட்டு, ஆங்கில மொழியை நன்கு கற்றுக்கொடுத்தார். அந்தச் சமயத்தில், மதத் தலைவர்கள் என சொல்லிக்கொண்ட சிலர் எழும்பி, மாறுபாடான விஷயங்களைப் போதித்து அநேகரை தவறாக வழிநடத்தினார்கள். என்றாலும், சிலருடைய வீடுகளில் நாங்கள் தொடர்ந்து விவேகமாய் கூடிவந்தோம். பல ஆண்டுகளுக்குப்பின், லுஸாகாவில் லவலன் ஃபிலிப்ஸ் என்ற சகோதரரை சந்திக்குமாறு என்னிடம் சொல்லப்பட்டது; ஜாம்பியா மற்றும் டான்ஜானியா எல்லை அருகே அமைந்திருந்த சபைகளை சந்திக்கும் பொறுப்பை அவர் எனக்குக் கொடுத்தார். டான்ஜானியாவில் உள்ள எம்பேயா வரைக்கும் சென்று, சகோதரர்களைப் பலப்படுத்தினேன். ஒவ்வொரு சுற்றுக்குப் பின்பும், என்னுடைய சபைக்குத் திரும்பினேன். 1940-களில் வட்டாரக் கண்காணிகள் நியமிக்கப்படும்வரை இந்த வேலையை நான் செய்தேன்.

[பக்கம் 184-186-ன் பெட்டி/​படங்கள்]

வடக்கிலுள்ள நாடுகளுக்கு உதவுதல்

1948-⁠ல், வடக்கு ரோடீஷியா கிளை அலுவலகம் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டது. அது பிரிட்டிஷ் கிழக்கு ஆப்பிரிக்கா என அப்போது அழைக்கப்பட்ட இடத்தின் பெரும்பாலான பகுதியில் ராஜ்ய பிரசங்க வேலையை மேற்பார்வை செய்தது. அந்தச் சமயத்தில், ஜாம்பியாவின் வடக்கேயுள்ள நாடுகளின் மேட்டுநிலப் பகுதியில் சில பிரஸ்தாபிகளே இருந்தார்கள். அயல்நாட்டு மிஷனரிகள் வருவதை அப்போதிருந்த அதிகாரிகள் அறவே தடை செய்துவிட்டார்கள், அப்படியிருக்க தாழ்மையுள்ள மக்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு யார் உதவி செய்வார்?

ஜாம்பியாவின் மத்திய மாகாணத்தில் ஒழுங்கான பயனியராக சேவை செய்வதற்கு ஹேப்பி சிஸெங்கா என்பவர் முன்வந்தார்; டான்ஜானியாவில் உள்ள அங்ஜாம்பே என்ற ஒதுக்குப்புறமான பிராந்தியத்தில் சேவை செய்ய அழைப்பு கிடைத்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். “‘ஒதுக்குப்புறமான’ என்ற வார்த்தையை நானும் என்னுடைய மனைவியும் பார்த்தபோது, பிரஸ்தாபிகளுடன் சேர்ந்து தொலைதூரமான ஓர் இடத்தில் ஊழியம் செய்வோம் என்று நினைத்தோம். ஆனால் அந்தப் பகுதியில் பிரசங்கிக்கச் செல்லும் முதல் நபர்களே நாங்கள்தான் என்பதை விரைவில் தெரிந்துகொண்டோம். அங்கிருந்த மக்களுக்கு யெகோவா என்ற பெயரையும், அர்மகெதோன் போன்ற வார்த்தைகளையும் அவர்களுடைய பைபிள்களிலேயே காட்டியபோது ஆச்சரியப்பட்டார்கள். சீக்கிரத்தில், என்னுடைய மனைவிக்கு அர்மகெதோன் என்றும் எனக்கு யெகோவா என்றும் பட்டப்பெயர் சூட்டிவிட்டார்கள். கடைசியில் அரூஷா என்ற இடத்திற்கு நாங்கள் மாறிச் செல்வதற்குள், இங்கு உறுதியான பிரஸ்தாபிகளின் ஒரு தொகுதி உருவாகியிருந்தது.”

மலை சூழ்ந்த எம்பேயா என்ற இடத்தில் விசேஷ பயனியராக சேவை செய்வதற்கு, 1957-⁠ல் வில்லியம் லாம்ப் சிஸெங்காவுக்கு நியமிப்பு கிடைத்தது. “என்னுடைய மனைவி மேரியுடனும் எங்களுடைய இரண்டு பிள்ளைகளுடனும் நவம்பரில் அங்கு போய்ச் சேர்ந்தோம், அங்கு எந்த ஹோட்டல்களிலும் அறைகள் கிடைக்காததால் முழு இராத்திரியும் நாங்கள் பஸ் நிலையத்திலேயே இருந்தோம். இரவில் மழையிலும் குளிரிலும் நடுங்கிக்கொண்டிருந்தாலும், யெகோவா எப்படி காரியங்களை வழிநடத்துவார் என்பதைப் பார்ப்பதற்கு நாங்கள் ஆவலோடு காத்திருந்தோம். அடுத்த நாள் காலையில், மனைவியையும் பிள்ளைகளையும் அங்கேயே விட்டுவிட்டு, தங்குவதற்கு இடம் தேடிப் போனேன். எங்கு போகிறேனென்று எனக்கே தெரியவில்லை, ஆனால் என்னுடன் காவற்கோபுரம் பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு சென்றேன். போஸ்ட் ஆபீஸை அடைவதற்குள், அநேக பத்திரிகைகளை அளித்திருந்தேன், அப்போது ஜான்சன் என்பவரை சந்தித்தேன். ‘நீங்க எங்கிருந்து வர்றீங்க, எங்கே போறீங்க?’ என்று கேட்டார். நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு வந்திருக்கிறேன் என்று சொன்னேன். நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை அறிந்தவுடன், தானும் முழுக்காட்டப்பட்ட சாட்சி என்றும் இப்போது செயலற்றவராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்; ஜாம்பியாவின் கிழக்கு மாகாணத்திலுள்ள லூன்டஸி தனது சொந்த ஊர் என்றும் கூறினார். என் உடைமைகளை எடுத்துக்கொண்டு மனைவி மக்களுடன் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். காலப்போக்கில், ஜான்சனும் அவருடைய மனைவியும் மறுபடியும் ஆன்மீக ரீதியில் பலம்பெற்று, ஸ்வாஹிலி மொழியைக் கற்றுக்கொள்ள எங்களுக்கு உதவினார்கள். சில காலத்திற்குப் பின், அவர் ஜாம்பியாவுக்குத் திரும்பிச் சென்று, நற்செய்தியைச் சுறுசுறுப்பாய் பிரசங்கிப்பவராக ஆனார். நமக்கு உதவ யெகோவாவுக்கு இருக்கும் திறமையையும் பிறருக்கு உதவ நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் ஒருபோதும் துச்சமாய் கருதக் கூடாது என்பதை இந்த அனுபவம் எனக்குக் கற்றுத் தந்தது.”

பர்னார்ட் முஸிங்கா முழுநேர ஊழியம் செய்தபோது, தன் மனைவி பாலினுடனும் தன் சிறுபிள்ளைகளுடனும் உகாண்டா, கென்யா, எத்தியோப்பியா போன்ற பலதரப்பட்ட இடங்களுக்குச் சென்றார். ஸேசேல்ஸுக்கு விஜயம் செய்ததைப் பற்றி பர்னார்ட் இவ்வாறு கூறுகிறார்: “1976-⁠ல், அழகிய ப்ராலன் தீவிலுள்ள ஒரு தொகுதியை சந்திப்பதற்கு நான் நியமிக்கப்பட்டேன். அங்குள்ள மக்கள் தீவிர கத்தோலிக்கர்கள், அதனால் தவறான அபிப்பிராயங்கள் எழுந்திருந்தன. உதாரணமாக, புதிய பிரஸ்தாபி ஒருவருடைய சிறு பையன் கணக்குப் பாடங்களில் வரும் கூட்டல் குறியீட்டை போட மறுத்தான்: ‘அது சிலுவை, நான் சிலுவையை நம்புவதில்லை’ என்று சொன்னான். அதனால், ‘யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பிள்ளைகளைக் கணக்குப் படிக்க அனுமதிப்பதில்லை’ என்ற அபத்தமான குற்றச்சாட்டை மதத் தலைவர்கள் சுமத்தினார்கள். நாங்கள் கல்வி அமைச்சரைச் சந்தித்து, நம்முடைய நம்பிக்கைகளை மரியாதைக்குரிய விதத்தில் விளக்கி, அந்தத் தப்பபிப்பிராயத்தை சரிசெய்தோம். அந்த அமைச்சருடன் நல்ல உறவை வளர்த்துக்கொண்டதால் நாட்டுக்குள் மிஷனரிகள் வர முடிந்தது.”

[படம்]

ஹேப்பி ம்வபா சிஸெங்கா

[படம்]

வில்லியம் லாம்ப் சிஸெங்கா

[படம்]

பர்னார்ட் மற்றும் பாலின் முஸிங்கா

[பக்கம் 191, 192-ன் பெட்டி/​படம்]

“உன் எதிர்காலத்தை நீ சீரழிக்கிறாய்!”

முகாஸிகு ஸினாலி

பிறந்தது: 1928

முழுக்காட்டப்பட்டது: 1951

பின்னணிக் குறிப்பு: கிலியட் பட்டதாரி, முன்னாள் மொழிபெயர்ப்பாளர், இப்பொழுது சபை மூப்பர்.

நான் முழுக்காட்டுதல் பெற்ற நாளன்று, மிஷனரியாக இருந்த ஹாரி அர்னோட் என்னிடம் வந்து பேசினார். அப்போது ஸிலோஸி மொழியில் மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்பட்டார்கள். “நீங்க மொழிபெயர்ப்பு வேலை செய்ய முடியுமா?” என அவர் கேட்டார். சீக்கிரத்தில் அதற்குரிய நியமன கடிதத்தையும் ஆங்கில காவற்கோபுரத்தின் ஒரு பிரதியையும் பெற்றேன். அன்று சாயங்காலமே ஆர்வமாக என்னுடைய வேலையைத் தொடங்கினேன். மொழிபெயர்ப்பது ரொம்பவே கடினமாக இருந்தது, ஒரு பழைய இங்க் பேனாவை வைத்துக்கொண்டு மணிக்கணக்காக எழுத வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் ஸிலோஸி மொழியில் அகராதி ஒன்றுகூட கிடையாது. பகலில் போஸ்ட் ஆபீஸ் வேலையையும் இரவில் மொழிபெயர்ப்பு வேலையையும் செய்தேன். சிலசமயங்களில், “தயவுசெய்து மொழிபெயர்த்தவற்றை உடனடியாக அனுப்புங்கள்” என்று கிளை அலுவலகத்திலிருந்து நினைப்பூட்டுதல் கடிதம் வரும். இதனால் ‘முழுநேர சேவை செய்ய ஆரம்பித்தால் என்ன?’ என்று யோசிக்கத் தொடங்கினேன். ஒருநாள், போஸ்ட் ஆபீஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். அதிகாரிகளுக்கெல்லாம் என்மீது நம்பிக்கை இருந்தாலும், திடீரென ராஜினாமா செய்தது அவர்களுக்குள் சந்தேகங்களைக் கிளப்பியது. ஒருவேளை பணத்தைக் கையாடியிருப்பேனோ என்று சந்தேகித்தார்கள். அதைக் கண்டுபிடிப்பதற்காக இரண்டு ஐரோப்பிய இன்ஸ்பெக்டர்களை அனுப்பி வைத்திருந்தார்கள். அவர்கள் முழுமையாகச் சோதனையிட்டதில் சந்தேகப்படும்படியான எதுவும் என்னிடம் இல்லை என்பது தெரியவந்தது. என்றாலும், ஏன் ராஜினாமா செய்தேன் என்பது அவர்களுக்குப் புரியாப் புதிராக இருந்தது. வேலையை விடாதிருப்பதற்காக எனக்கு பதவி உயர்வும் அளித்துப் பார்த்தார்கள். அதையும் நான் மறுத்தபோது, “உன் எதிர்காலத்தை நீ சீரழிக்கிறாய்!” என்று எச்சரித்தார்கள்.

ஆனால் அது பொய்யாகிவிட்டது. 1960-⁠ல் நான் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டேன். அதன் பிறகு சீக்கிரத்திலேயே கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்டேன். எனக்குப் பயமாக இருந்தது. இதுவரை நான் விமானத்தில் பயணம் செய்ததே இல்லை. ஆனால் இப்போது விமானத்தில் பாரிஸுக்கும், அங்கிருந்து ஆம்ஸ்டர்டாமுக்கும் பிறகு நியு யார்க்கிற்கும் செல்ல வேண்டியிருந்தது. நான் விமானத்தில் பயணித்தபோது, ‘அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பரலோகத்திற்குப் போகையில் இப்படித்தான் உணருவார்களோ?’ என்று எண்ணிப் பார்த்தது ஞாபகமிருக்கிறது. உலக தலைமையகத்தில் சகோதரர்கள் என்னை மிகவும் அன்புடன் வரவேற்றார்கள், அவர்கள் ரொம்பவே மனத்தாழ்மையுடன் நடந்துகொண்டார்கள், என்னிடம் துளிகூட பாரபட்சம் காட்டவில்லை. இதெல்லாம் பார்த்து மனம் நெகிழ்ந்துபோனேன். நான் மறுபடியும் ஜாம்பியாவிலேயே சேவை செய்ய நியமிப்பைப் பெற்றேன், தொடர்ந்து அங்கு மொழிபெயர்ப்பு வேலை செய்து வந்தேன்.

[பக்கம் 194-ன் பெட்டி/​படம்]

கழுகுகளைவிட அதிக வேகம்

கடூகூ எங்காபாங்கா ஊனமுற்றவர், அவரால் நடக்க முடியாது. ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை வட்டாரக் கண்காணியின் விஜயத்தின்போது, கடூகூ வசிக்கிற கிராமத்தை நோக்கி கலகக்கார கும்பல்கள் வந்துகொண்டிருப்பதாக செய்தி கிடைத்தது. எல்லாரும் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டார்கள். வட்டார கண்காணியான மியாங்கா மபோஷோதான் கடைசியாக அங்கிருந்து வெளியேறியவர். பாதுகாப்பான ஓரிடத்திற்கு போக அவர் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தபோது, பக்கத்து குடிசையிலிருந்து ஒரு குரல் கேட்டது. “சகோதரரே, நீங்க என்னை இங்கே விட்டுட்டு போகப்போறீங்களா?” அது கடூகூவின் குரல்தான். உடனே, வட்டாரக் கண்காணி அவரையும் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கிராமத்தைவிட்டு வெளியேறினார்.

அவர்கள் தெற்கு நோக்கி ஜாம்பியாவுக்குப் போக கரடுமுரடான நிலப்பகுதியைக் கடக்க வேண்டியிருந்தது. செங்குத்தான மலைகளில் சகோதரர் கடூகூ தவழ்ந்து செல்ல வேண்டியிருந்தது. அதைப் பற்றி வட்டாரக் கண்காணி இவ்வாறு கூறுகிறார்: “நான் இரண்டு காலில் மேலே ஏறுவதற்குள்ளாக, அவர் தவழ்ந்தே மலை உச்சியை அடைந்துவிட்டார்! ‘இவருக்கு கால் ஊனமாக இருந்தாலும் இறக்கை இருக்கும் போலிருக்கிறதே!’ என்று நான் சொன்னேன். கடைசியில், பாதுகாப்பான ஓரிடத்தில் போய்ச் சேர்ந்தோம், அங்கு எங்களுக்கு சாப்பாடு தரப்பட்டது; நான் சகோதரர் கடூகூவை ஜெபம் செய்யச் சொன்னேன். அவருடைய இருதயத்திலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு என் கண்கள் கலங்கின. ஏசாயா 40-⁠ம் அதிகாரத்திலுள்ள வார்த்தைகளைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு ஜெபம் செய்தார்: ‘யெகோவாவே, உம்முடைய வார்த்தைகள் உண்மையானவை. இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். யெகோவாவுக்கு காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.’ மேலுமாக, ‘வானத்தில் பறக்கும் கழுகுகளைவிட வேகமாக என்னை செல்ல வைத்ததற்கு உமக்கு நன்றி யெகோவாவே’ என்றும் ஜெபத்தில் சொன்னார்.

[பக்கம் 204, 205-ன் பெட்டி/​படம்]

காக்கி கால்சட்டை, பிரௌன் டென்னிஸ் ஷூ

ஃபைலமன் கஸிபா

பிறந்தது: 1948

முழுக்காட்டப்பட்டது: 1966

பின்னணிக் குறிப்பு: ஜாம்பியாவில் பயணக் கண்காணியாகவும் ஊழியப் பயிற்சிப் பள்ளியின் போதனையாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் சேவை செய்கிறார்.

ஊழியத்தில் எனக்குப் பயிற்சி அளித்தவர் என்னுடைய தாத்தா. பலமுறை என்னை பள்ளி நண்பர்களிடம் அழைத்துக்கொண்டுபோய் அவர்களிடம் சாட்சிகொடுக்கும்படி சொல்லியிருக்கிறார். தாத்தாதான் குடும்பப் படிப்பை நடத்துவார், யாரையும் தூங்கிவழிய விடமாட்டார்! குடும்பப் படிப்புக்காக நான் எப்போதுமே ஆவலோடு காத்திருப்பேன்.

என்னுடைய வீட்டிற்குப் பக்கத்திலுள்ள ஓர் ஆற்றில் முழுக்காட்டுதல் பெற்றேன். ஒரு மாதத்திற்குப் பிறகு சபையில் முதன்முதலாக மாணாக்கர் பேச்சைக் கொடுத்தேன். அன்றைக்கு, ஒரு புதிய காக்கி கால்சட்டையையும் பிரௌன் டென்னிஸ் ஷூவையும் போட்டிருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. ஷூ லேஸ்ஸுகளை இறுக்கமாக கட்டியிருந்ததால், அசௌகரியமாக உணர்ந்தேன். அதை சபை ஊழியர் கவனித்தார். அவர் என்மேல் இரக்கப்பட்டு மேடைக்கு வந்து, அதைக் கொஞ்சம் தளர்த்திக் கட்டிவிட்டபோது நான் அமைதியாக நின்றேன். பிறகு, பேச்சை வெற்றிகரமாக கொடுத்து முடித்தேன். அவர் இரக்கத்தோடு செய்துதந்த அந்தக் காரியத்திலிருந்து நான் பாடம் கற்றுக்கொண்டேன். யெகோவா எனக்கு நிறைய விஷயங்களில் பயிற்சி அளித்திருப்பதை என்னால் உணர முடிகிறது.

ஏசாயா 60:22-⁠ன் நிறைவேற்றத்தைக் கண்ணாரப் பார்த்திருக்கிறேன். சபைகள் அதிகரித்து வருவதால், பொறுப்புகளை நன்கு கவனிக்கிற மூப்பர்களும் உதவி ஊழியர்களும் நிறைய பேர் தேவைப்படுகிறார்கள். ஊழியப் பயிற்சிப் பள்ளி இத்தேவையை பூர்த்தி செய்கிறது. இப்பள்ளியில் பயிற்சி பெறும் இளம் சகோதரர்களுக்குப் போதிப்பது உண்மையிலேயே ஒரு பெரும் சந்தோஷமே. உங்களிடம் யெகோவா ஒரு வேலையை ஒப்படைக்கையில், அதைச் செய்ய அவர் தமது பரிசுத்த ஆவியை அளிப்பது நிச்சயம்.

[பக்கம் 207-209-ன் பெட்டி/​படங்கள்]

“ஓ, அதெல்லாம் ஒண்ணுமேயில்ல”

எட்வர்ட்டும் லின்டா ஃபிங்கும்

பிறந்தது: 1951

முழுக்காட்டப்பட்டது: முறையே 1969-லும் 1966-லும்

பின்னணிக் குறிப்பு: கிலியட் பள்ளியின் 69-⁠ம் வகுப்பு பட்டதாரிகள். எட்வர்ட், ஜாம்பியாவில் கிளை அலுவலகக் குழு ஒருங்கிணைப்​பாளராக சேவை செய்கிறார்.

ஒரு மாவட்ட மாநாடு சமயத்தில், நாங்கள் நாட்டின் வடக்குப் பகுதி வழியாக காரில் வந்தோம். சில ரோடுகள் மட்டுமே இருந்தன, அவைகூட கால்தடப் பாதைகளாகவே இருந்தன. ஒரு கிராமத்திற்கு வெளியே பல கிலோமீட்டர் தூரத்தில், எங்களுக்கு எதிரே ஆட்கள் நடந்துவருவதைப் பார்த்தோம். அதில் ஒருவர் மிகவும் வயதானவர், கூன் விழுந்திருந்த அவர் தடியை பிடித்துக்கொண்டு நடந்து வந்தார். அவருடைய பூட்ஸ் இரண்டும் ஒன்றாக சேர்த்து கட்டப்பட்டு முதுகில் தொங்கிக்கொண்டிருந்தன. அதோடு அவருடைய துணி மணிகள் வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய பையும் முதுகில் தொங்கிக்கொண்டிருந்தது. பக்கத்தில் வந்தபோதுதான், அவரும் மற்றவர்களும் மாநாட்டு பேட்ஜ் அணிந்திருந்ததைப் பார்த்தோம். நாங்கள் காரை நிறுத்தி அவர்கள் எங்கிருந்து வருகிறார்களென கேட்டோம். அந்த வயதான சகோதரர் தன் உடம்பை சற்று நிமிர்த்தி, “அதுக்குள்ள மறந்துட்டீங்களே. நாம எல்லாருமே கான்சா மாநாட்டில ஒன்னா இருந்தோமே, நினைவிருக்கா! இப்போ வீட்டுக்கு போயிட்டிருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்திலே வீடுபோய் சேர்ந்துடுவோம்” என்று சொன்னார்.

“அப்படீன்னா, நீங்க மாநாடு முடிஞ்சு எப்போ புறப்பட்டீங்க?” என்று கேட்டோம்.

“ஞாயிற்றுக்கிழமை மாநாடு முடிஞ்சதும் புறப்பட்டோம்.”

“ஆனா, இன்றைக்கு புதன்கிழமை மத்தியானம் ஆயிடுச்சே! அப்படீன்னா மூணு நாளா நடக்கிறீங்களா?”

“ஆமா, நேற்று ராத்திரி வருகிற வழியில சிங்கத்தோட சத்தத்தைகூட கேட்டோம்.”

“உங்களுடைய பெரிய மனசையும் மாநாட்டுக்கு வர நீங்க செய்ற தியாகத்தையும் ரொம்பவே பாராட்டுறோம்.”

“ஓ அதெல்லாம் ஒண்ணுமேயில்ல. இந்த புது இடத்தில மாநாட்டை வெச்சதுக்கு நாங்க ரொம்ப நன்றி தெரிவிச்சோம்னு கிளை அலுவலகத்தில சொல்லுங்க. போன வருஷம் நாங்க அஞ்சு நாள் நடக்க வேண்டியிருந்துச்சு, ஆனா, இந்த வருஷம் மூணே நாள்தான்” என்று சொல்லியவாறு சாமான்களை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார் அந்த வயதான சகோதரர்.

1992-⁠ல் ஜாம்பியாவில் கடும் வறட்சி நிலவியது எல்லாருக்குமே தெரியும். நாங்கள் மாநாடு நடைபெற்ற இடத்தில் அதாவது, ஜாம்பஜி ஆற்றின் கரையோரத்தில் இருந்தோம். இந்த இடம் விக்டோரியா நீர்வீழ்ச்சியிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. மாலையில், ஒவ்வொரு குடும்பங்களையும் சந்தித்தோம். பெரும்பாலோர் குளிர்காய்வதற்காக தங்களுடைய சிறிய குடிலுக்கு முன் தீமூட்டி அதைச் சுற்றிலும் கைகால்களை குறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். சுமார் 20 பேர் கூட்டமாகச் சேர்ந்து ராஜ்ய பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர்கள் எட்டு நாள் நடந்து வந்திருந்ததை நாங்கள் கேள்விப்பட்டோம். அதை அவர்கள் பெரிய விஷயமாகவே நினைக்கவில்லை. தங்கள் குழந்தைகள், உணவு, சமையல் பாத்திரங்கள், தேவையான பொருள்கள் என எல்லாவற்றையும் மிருகங்களின்மீது ஏற்றிவிட்டு அவர்கள் நடந்தே வந்தார்கள். இரவு நேரங்களில் வெளியே தூங்கினார்கள்.

வறட்சியால் அநேகர் பாதிக்கப்பட்டிருப்பதைப் பற்றியும், அவர்களுக்கு உதவி அளிக்கப்படுவதைப் பற்றியும் அடுத்த நாள் அறிவிப்பு செய்யப்பட்டது. அன்று சாயங்காலம் மூன்று சகோதரர்கள் எங்களுடைய குடிசைக்கு வந்தார்கள். அவர்கள் மூவரின் கால்களிலும் ஷூ இல்லை, அவர்கள் உடுத்தியிருந்த துணிகூட பழையதாக இருந்தது. பஞ்சம் அவர்களை எந்தளவு பாதித்திருந்தது என்பதைப் பற்றி அவர்கள் சொல்வார்களென நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அதற்குப் பதிலாக, மற்ற சகோதரர்கள் படுகிற கஷ்டத்தைக் கேள்விப்பட்டபோது தங்களுக்கு ரொம்ப பரிதாபமாக இருந்தது என்று சொன்னார்கள். ஒரு சகோதரர் தன்னுடைய சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு கவரை வெளியே எடுத்தார், அதில் நிறைய பணம் இருந்தது; அதைக் கொடுத்து, “தயவுசெய்து இந்த பணத்தில அவங்களுக்கு கொஞ்சம் சாப்பாடு வாங்கிக் கொடுங்க, அவங்க பட்டினி கிடக்கக் கூடாது” என்று சொன்னார். நாங்கள் அப்படியே வாயடைத்துப் போனோம், அவர்களுக்கு நன்றிகூட சொல்ல முடியவில்லை, அந்த அதிர்ச்சியிலிருந்து நாங்கள் மீள்வதற்குள் அவர்கள் சென்றுவிட்டார்கள். அந்த மூன்று சகோதரர்களும் மாநாட்டிற்கு வரும்போது அந்தளவு நன்கொடை கொடுப்பார்கள் என நினைத்திருக்க மாட்டார்கள். ஆகவே அவர்கள் கொடுத்த அந்த நன்கொடை அவர்கள் பங்கில் பெரும் தியாகமாக இருந்தது. இதுபோன்ற அனுபவங்கள் சகோதரர்களிடம் நம்மை இன்னும் நெருங்கிவரச் செய்கின்றன.

[படங்கள்]

கஷ்டத்தின் மத்தியிலும் மாநாடுகளில் கலந்துகொள்ள அநேகர் வெகுதூரம் பயணிக்கிறார்கள்

மேலே: மாநாடு நடக்கும் இடத்தில் இரவு உணவைச் சமைக்கிறார்கள்

இடது: வெளியே அடுப்பில் ரோல்களை சமைக்கிறார்கள்

[பக்கம் 211-213-ன் பெட்டி/​படம்]

கூடிவருவதில் உறுதியாயிருத்தல்

ஆரன் மாப்பூலங்கா

பிறந்தது: 1938

முழுக்காட்டப்பட்டது: 1955

பின்னணிக் குறிப்பு: முன்னாள் பெத்தேல் ஊழியர், மொழிபெயர்ப்பாளர், கிளை அலுவலகக் குழு அங்கத்தினர். இப்பொழுது, சபை மூப்பராக சேவை செய்யும் குடும்பஸ்தர்.

அது 1974-⁠ம் வருடம், எங்களுடைய மாநாடு கஸாமாவுக்குக் கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஓரிடத்தில் நடந்தது. மாநாடு நடத்துவதற்கு உள்ளூர் தலைவர் அனுமதி அளித்திருந்தபோதிலும், எல்லாரும் அங்கிருந்து போய்விட வேண்டுமென போலீஸார் வற்புறுத்தினார்கள். கொஞ்ச நேரத்திற்குள் பெரிய உருவம் படைத்த கமாண்டரும் துணை ராணுவப் படையின் சுமார் நூறு அதிகாரிகளும் வந்து மாநாட்டு ஸ்தலத்தை சுற்றிவளைத்தார்கள். எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது பற்றியும் தேசிய கீதம் பாடப்படுமா என்பது பற்றியும் புல்லால் அமைக்கப்பட்டிருந்த அலுவலகத்தில் அவர்கள் தீவிரமாக விசாரித்துக்கொண்டிருக்க, எங்களுடைய நிகழ்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

நிகழ்ச்சியில் முக்கியப் பேச்சைக் கொடுக்க நான் மேடைக்கு சென்றபோது அதைத் தடுக்க கமாண்டரும் என் பின்னாலேயே வந்தார். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என கூடிவந்திருந்தோர் நினைத்தார்கள். அவர் அங்கு நின்று கூடிவந்திருந்த சுமார் 12,000 பேரையும் சற்று நேரம் பார்த்துவிட்டு, விருட்டென்று போய்விட்டார். என்னுடைய பேச்சு முடிந்த பிறகு, மேடையின் பின்னால் பயங்கர கடுப்புடன் அவர் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். கூடிவந்திருந்தோரைக் கலைந்து போகும்படி செய்ய தன் ஆட்களுக்கு அவர் உத்தரவிட்டார்; ஆனால் மூத்த அதிகாரிகளுக்கிடையே பிரச்சினை எழுந்ததால், அவர்கள் தங்களுடைய வண்டிகளில் ஏறிச் சென்று விட்டார்கள். சீக்கிரத்திலேயே அவர்கள் திரும்பி வந்தார்கள், கையோடு ஒரு பெரிய புஸ்தகத்தையும் எடுத்து வந்தார்கள். கமாண்டர் அதை டேபிளில் எனக்கு முன்னால் விரித்து வைத்து, அதில் குறித்திருந்த ஒரு பாராவை வாசிக்கச் சொன்னார். அதை மனதுக்குள் வாசித்தேன்.

“இந்தப் புஸ்தகத்தில் சொல்லியிருப்பது சரியே. ‘அமைதிக்கு அச்சுறுத்தலாயிருக்கிற எந்தவொரு கூட்டத்தையும் கலைத்துவிட ஓர் அதிகாரிக்கு உரிமை இருக்கிறது’ என இது சொல்கிறது” என்றேன். பிறகு, அவருடைய பெல்ட்டையும் துப்பாக்கிகளையும் பார்த்தவாறு, “இங்கு அச்சுறுத்தலாய் இருப்பது நீங்களும், ஆயுதம் ஏந்திய உங்களுடைய ஆட்களும்தான். எங்களிடம் பைபிளைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை” என்று சொன்னேன்.

அவர் உடனடியாக புலன் ஆய்வு அதிகாரியிடம் திரும்பி, “நான்தான் சொன்னேனே, நம்ம போகலாம்!” என்றார். அவர்கள் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அவருடைய அலுவலகத்திற்குச் சென்றதும் மற்றொரு அதிகாரிக்கு போன் செய்தார். அதுவரையில் என்னிடம் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த இந்த அதிகாரி, போனில் ஸிலோஸி மொழியில் பேசத் தொடங்கினார். என்னுடைய மொழியும் அதுதான் என்பது அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் என்னைப் பற்றித்தான் போனில் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த மொழி தெரியும் என்பதுபோல் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அவர் போனை கீழே வைத்து, “இப்போ கேள்!” என்றார்.

நான் ஸிலோஸி மொழியில், “எனி ஷா நா ட்டேலிஸா!” என்று பதில் சொன்னேன். “சொல்லுங்க சார், கேட்கிறேன்!” என்பதே அதன் அர்த்தம். ஆச்சரியத்தில், என்னைப் பார்த்தவாறு அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்தார். அதற்குப்பின் எழுந்து, அலுவலகத்தின் ஒரு மூலையில் இருந்த ஃப்ரிட்ஜ்ஜிலிருந்து கூல்டிரிங்ஸ் எடுத்து எனக்குத் தந்தார். இறுக்கமான சூழ்நிலை சற்று தளர்ந்தது.

பிறகு, ஒரு சகோதரரும் அங்கு வந்தார்; அவர் அந்தப் பகுதியில் மதிப்பும் மரியாதையும் பெற்ற ஒரு பிஸினஸ்மேன். நாங்கள் நடைமுறையான சில ஆலோசனைகளை அந்த அதிகாரிக்கு அளித்தோம், அதனால் அவருடைய கவலை கொஞ்சம் குறைந்தது, இறுக்கமான சூழ்நிலையும் மறைந்தது. யெகோவாவின் துணையால் பிற்காலத்தில் மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்வது சுலபமானது.

[பக்கம் 221-ன் பெட்டி/​படம்]

ஒல்லிக்குச்சி

மைக்கேல் முக்கனு

பிறந்தது: 1928

முழுக்காட்டப்பட்டது: 1954

பின்னணி குறிப்பு: பயணக் கண்காணியாகச் சேவை செய்தவர்; தற்போது ஜாம்பியா பெத்தேலில் சேவை செய்கிறார்.

செங்குத்தான ஒரு மலைச்சரிவுக்குப் பின்னாலுள்ள ஒரு பள்ளத்தாக்கு வரையில் பரந்துகிடக்கும் பகுதியில்தான் வட்டார ஊழியனாக சேவை செய்தேன். அங்குள்ள ஒருவகை ஈக்களின் தொல்லையால் அடிக்கடி அவஸ்தைப்பட்டேன். அவற்றின் தொல்லைக்கும் பகலின் உஷ்ணத்திற்கும் பயந்து விடியற்காலை ஒரு மணிக்கெல்லாம் எழுந்து அடுத்த சபைக்கு நடை கட்டினேன். மலைகளிலும் குன்றுகளிலும் ஏறி இறங்கினேன். அதிகம் நடக்க வேண்டியிருந்ததால் குறைந்தளவு மூட்டை முடிச்சுகளையே எடுத்துச் சென்றேன். சாப்பிடுவதற்கு போதுமான உணவு கிடைக்காததால் பார்க்க ஒல்லிக்குச்சியாக இருந்தேன். நான் சீக்கிரத்திலேயே செத்துப் போய்விடுவேன் என அங்குள்ள சகோதரர்கள் பயந்து எனக்கு வேறு ஊழிய நியமிப்பு கொடுக்கும்படி கிளை அலுவலகத்திற்குக் கேட்டு எழுதுவதைப் பற்றி யோசித்தார்கள். அதை அவர்கள் என்னிடம் தெரிவித்தபோது, இப்படிச் சொன்னேன்: “இது அன்பான ஒரு யோசனைதான், ஆனால் நான் செய்கிற வேலை யெகோவா கொடுத்தது, அதை அவரால் மாற்ற முடியும் என்பதை நீங்கள் மறக்கக் கூடாது. அப்படியே நான் செத்தாலும், இந்த ஊரில் சாகப்போகிற முதல் ஆள் நான்தானா? இருக்கிற வரையில் என் வேலையை செய்கிறேன். நான் செத்துப்போனால், கிளை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துங்கள், அதுபோதும்.”

மூன்று வாரங்களுக்குப் பிறகு, எனக்கு வேறு ஊழிய நியமிப்பு கிடைத்தது. ஆம், யெகோவாவுக்குச் சேவை செய்வது கஷ்டமாக இருக்கலாம், ஆனால் அதைத் தொடர்ந்து செய்வது நம் கடமை. யெகோவா சந்தோஷமுள்ள கடவுள்; தம்முடைய ஊழியர்கள் சந்தோஷமாக இல்லை என்றால், தம் சேவையில் தொடர்ந்து சந்தோஷமாக இருப்பதற்கு வேண்டியதை அவர் செய்வார்.

[பக்கம் 223, 224-ன் பெட்டி/​படம்]

மூடநம்பிக்கைகளை நாங்கள் ஆதரிப்பதில்லை

ஹார்கின்ஸ் முக்கிங்கா

பிறந்தது: 1954

முழுக்காட்டப்பட்டது: 1970

பின்னணிக் குறிப்பு: தன் துணைவியுடன் பயணக் கண்காணியாகச் சேவை செய்தவர்; தற்போது ஜாம்பியா பெத்தேலில் சேவை செய்கிறார்.

பயணக் கண்காணியாக நாங்கள் சேவை செய்தபோது, நானும் என் மனைவி ஐடாவும் எங்களுடைய இரண்டு வயதுள்ள ஒரே மகனையும் அழைத்துச் சென்றோம். அப்படி ஒரு சபைக்குச் சென்றபோது அங்குள்ள சகோதரர்கள் எங்களை அன்புடன் வரவேற்றார்கள். வியாழக்கிழமை காலையில் எங்கள் மகன் திடீரென அழ ஆரம்பித்துவிட்டான், அழுகையை நிறுத்தவே இல்லை. காலை எட்டு மணிக்கு அவனை ஐடாவின் அன்பான கவனிப்பில் விட்டுவிட்டு, வெளி ஊழியக் கூட்டத்திற்குக் கிளம்பிவிட்டேன். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, நான் பைபிள் படிப்பு நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் என் மகன் இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. யாரோ செய்வினை வைத்துவிட்டதால்தான் அவன் இறந்தான் என சகோதரர்கள் பலர் சொன்னார்கள். அதைக் கேட்டபோது எங்களுடைய மனது இன்னும் பாரமானது. அவர்களுடைய இந்தப் பயத்தைப் போக்க நியாயத்தை எடுத்துக்காட்டிப் பேசினோம்; இருந்தாலும் செய்தி காட்டுத் தீபோல் அப்பிராந்தியம் முழுவதும் பரவியது. சாத்தான் சக்திபடைத்தவனாக இருந்தாலும் யெகோவாவையும் அவருடைய உண்மையுள்ள ஊழியர்களையும் அவனால் வீழ்த்த முடியாது என்றேன். “சமயமும் எதிர்பாராத சம்பவங்களும்” நம் அனைவருக்கும் வருகின்றன; ஆனால், நாம் பயந்துபோய் அவசரப்பட்டு எந்தத் தவறான முடிவுக்கும் வந்துவிடக் கூடாது என அவர்களிடம் விளக்கினேன்.​—⁠பிர. 9:11, NW.

அடுத்த நாள் என் மகனை அடக்கம் செய்தோம். அடக்கத்திற்குப் பிறகு நாங்கள் கூட்டம் நடத்தினோம். அந்தச் சகோதரர்கள் இதிலிருந்து சில பாடங்களைக் கற்றுக் கொண்டார்கள்: நாம் கெட்ட ஆவிகளுக்குப் பயப்படுவதும் இல்லை, மூடநம்பிக்கைகளை ஆதரிப்பதும் இல்லை. மகனை இழந்த வேதனை ஒருபுறமிருந்தாலும், அந்த விசேஷ வாரம் முழுவதும் நாங்கள் அவர்களுடன் ஊழிய வேலைகளில் ஈடுபட்டு, பிறகு அடுத்த சபைக்குச் சென்றோம். நாங்கள் சென்ற சபைகளில் உள்ளவர்கள் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஆறுதல் சொல்வதற்குப் பதிலாக, நாங்கள் அவர்களுக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் அளித்தோம். வெகு சீக்கிரத்தில் மரணம் இல்லாத வாழ்க்கையை நாம் அனுபவிப்போம் என்று சொன்னோம்.

[பக்கம் 228, 229-ன் பெட்டி/​படம்]

நாங்கள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டோம்

லெனர்ட் முஸான்டா

பிறந்தது: 1955

முழுக்காட்டப்பட்டது: 1974

பின்னணிக் குறிப்பு: 1976 முதற்கொண்டு முழுநேர சேவை செய்து வருகிறார். ஆறு ஆண்டுகள் பயணக் கண்காணியாகச் சேவை செய்தார், தற்போது ஜாம்பியா பெத்தேலில் சேவை செய்கிறார்.

1985 வாக்கில் நாட்டின் வடக்கோடியிலிருந்த சபைகளைப் போய் சந்தித்ததை நினைத்துப் பார்க்கிறேன். அதற்கு முந்தைய ஆண்டுகளில் அங்கு அரசாங்க எதிர்ப்பு தீவிரமாக இருந்தது. நான் புதிய வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டிருந்தேன். அப்போது விசுவாசத்தையும் தைரியத்தையும் வெளிக்காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பம் வந்தது. ஒருநாள் வெளி ஊழியக் கூட்டம் முடிந்த பிறகு, பிரசங்கிப்பதற்குப் பக்கத்துக் கிராமத்திற்குப்போகத் தயாரானோம். அங்கு போனால் அந்தக் கிராமவாசிகள் யெகோவாவின் சாட்சிகள் எல்லாரையும் அடித்துபோட காத்திருப்பதாக கேள்விப்பட்டதை ஒரு சகோதரர் சொன்னார். 1960-களின் இறுதியிலும் 1970-களின் ஆரம்பத்திலும் கலகக்கார கும்பல்களின் தாக்குதல் இருந்து வந்தது, ஆனால் இப்போது அந்தக் கிராமவாசிகள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து எங்களுக்கு எதிராக வருவார்களென நான் நினைக்கவில்லை.

இருந்தாலும், இதைக் கேள்விப்பட்டபோது, பிரஸ்தாபிகள் சிலர் பயந்துபோய் கிராமத்திற்கு வரவில்லை. ஆனால் எங்களோடிருந்த பலர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கிராமத்திற்குப் போகப் புறப்பட்டார்கள். அங்கு போனபோதோ எங்கள் கண்களை எங்களால் நம்பவே முடியவில்லை. அந்தக் கிராமவாசிகளுக்கு நிறைய பத்திரிகைகள் அளித்தோம்; அன்பாக அவர்களிடம் பேசினோம். என்றாலும், அந்தக் கிராமத்திற்குள் காலெடுத்து வைத்ததும் சிலர் எங்களைக் கண்டு பயந்து ஓடிவிட்டார்கள். இதனால், கவனிக்க யாருமின்றி அடுப்புகளில் சமையல் பானைகள் அப்படியே கொதித்துக்கொண்டிருந்தன, வீடுகளோ அம்போவென திறந்து கிடந்தன. இப்படியாக மக்கள் எங்களை எதிர்க்க வருவதற்குப் பதிலாக எங்களைக் கண்டு பயந்து ஓடவே செய்தார்கள்.

[பக்கம் 232, 233-ன் பெட்டி/​படம்]

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினேன்

டார்லிங்டன் ஸெஃபுக்கா

பிறந்தது: 1945

முழுக்காட்டப்பட்டது: 1963

பின்னணிக் குறிப்பு: விசேஷ பயனியராகவும், பயணக் கண்காணியாகவும், ஜாம்பியா பெத்தேலில் வாலண்டியராகவும் சேவை செய்தவர்.

அது 1963-⁠ம் வருடம்; அது கொந்தளிப்பு மிகுந்த காலம். அரசியல்வாதிகள் இளைஞர்களை எங்களுக்கு விரோதமாக தூண்டிவிட்டார்கள். அதனால் வெளி ஊழியத்திற்குப் போகும்போதெல்லாம் இந்த ‘இளைஞர் படை’ எங்களுக்கு முன்பாக சென்று, நாங்கள் சொல்வதைக் கேட்கக் கூடாதென மக்களிடம் சொல்வார்கள், மீறி யாரேனும் கேட்டால் அவர்களுடைய வீட்டு ஜன்னல்களையும் கதவுகளையும் உடைத்துப் போடுவதாகவும் மிரட்டுவார்கள்.

நான் முழுக்காட்டுதல் பெற்று இரண்டு நாட்களே ஆகியிருந்தன, அன்று சாயங்காலம் இளைஞர்கள் 15 பேர் சேர்ந்து என்னைக் பயங்கரமாக அடித்துப் போட்டார்கள். வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் குபுகுபுவென்று கொட்டியது. இன்னொரு நாள் சாயங்காலம், சுமார் 40 பேர் சேர்ந்த ஒரு கும்பல் என்னையும் என்னோடு இருந்த சகோதரரையும் நான் தங்கியிருந்த இடம்வரை பின்தொடர்ந்து வந்து அடித்துப்போட்டது. கர்த்தராகிய இயேசு பட்ட கஷ்டங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தது என்னைப் பலப்படுத்தியது. ஒரு கிறிஸ்தவருடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் என்பதை என்னுடைய முழுக்காட்டுதலின்போது சகோதரர் ஜான் ஜேசன் கொடுத்த பேச்சு எனக்குத் தெளிவாக்கியிருந்தது. எனவே, அடி, உதை கிடைத்தபோது நான் ஆச்சரியப்படவில்லை, மாறாக உற்சாகமடைந்தேன்.

சுதந்திரத்திற்காகப் போராடிய அரசியல்வாதிகளுக்கு ஆதரவு தேவைப்பட்ட சமயத்தில் நாங்கள் நடுநிலை வகித்தோம். அதைப் பார்த்த அரசியல்வாதிகளுக்கு நாங்கள் ஐரோப்பியர்களையும் அமெரிக்கர்களையும் ஆதரித்ததுபோல் தோன்றியது. போதாக்குறைக்கு அரசியல் கட்சியினரை ஆதரித்த மதத் தலைவர்களும் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் செயல்பட்டார்கள். சுதந்திரத்திற்கு முன்னான காலம் படுபயங்கரமாக இருந்தது, அதன் பிறகும் நிலைமை அப்படியேதான் இருந்தது. அநேக சகோதரர்கள் பார்ட்டி கார்டுகளை வாங்காததால் தங்களுடைய தொழிலை இழந்தார்கள். சிலர் நகர்ப் புறங்களிலிருந்து தங்களுடைய சொந்த கிராமங்களுக்கே திரும்பிச் சென்று குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார்கள். இவ்வாறு, அரசியல் காரியங்களுக்காக நன்கொடை கொடுக்கும் வாய்ப்பைத் தவிர்த்தார்கள்.

நான் டீனேஜராக இருந்தபோது என்னுடைய பெரியம்மா மகன்தான் என்னை கவனித்து வந்தார். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி அல்ல. என்னுடைய நடுநிலை வகிப்பு அவருடைய குடும்பத்திற்கு ஆபத்தாய் இருந்தது. அவர்கள் ரொம்ப பயந்தார்கள். ஒருநாள் என்னுடைய பெரியம்மா மகன் வேலைக்குக் கிளம்புவதற்கு முன், “நான் சாயங்காலம் வீட்டிற்கு வரும்போது, நீ இங்கு இருக்கக் கூடாது” என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னபோது ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறார் என்றே நினைத்தேன்; ஏனென்றால், அந்த டவுனில் சொந்தக்காரர்கள் என்று எனக்கு வேறு யாரும் கிடையாது. போவதற்கு வேறு இடமும் கிடையாது. அவர் நிஜமாகவே சொல்லியிருக்கிறார் என்பது அப்புறம் புரிந்துவிட்டது. அவர் வீட்டிற்குத் திரும்பி வந்த சமயத்தில் என்னைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவர் என்மீது கற்களை விட்டெறிந்து வீட்டைவிட்டு விரட்டினார். “உன்னோடு சேர்ந்த நாய்ங்க கிட்டேயே போ!” என்று கத்தினார். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினேன்.

நான் நடுநிலை வகிப்பது அப்பாவிற்கு தெரிந்தவுடன் அவர் இவ்வாறு தகவல் அனுப்பினார்: “நீ இப்படியேதான் இருக்கப்போவதாக அடம்பிடித்தால் என் வீட்டு வாசப்படியை மிதிக்காதே.” அந்தச் செய்தி என் மனதுக்கு ரொம்ப வேதனையாக இருந்தது. ஏனென்றால் அப்போது எனக்கு 18 வயதுதான் ஆகியிருந்தது. யார் என்னை சேர்த்துக்கொள்வார்கள் என்று கவலைப்பட்டேன். ஆனால், சபை என்னைச் சேர்த்துக்கொண்டது. தாவீது சொன்ன வார்த்தைகளை நான் அடிக்கடி தியானிப்பேன், “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்” என்று அவர் சொன்னார். (சங். 27:10) ஆம், யெகோவா வாக்குத் தவறாதவர் என்பதை நான் உங்களுக்கு அடித்துக் கூறுகிறேன்.

[பக்கம் 236, 237-ன் பெட்டி/​படம்]

என்னுடைய நடத்தையால் டீச்சர்களிடம் நல்ல பெயரெடுத்தேன்

ஜாக்ஸன் கபோபி

பிறந்தது: 1957

முழுக்காட்டப்பட்டது: 1971

பின்னணிக் குறிப்பு: சபை மூப்பராக சேவிக்கிறார்.

பிள்ளைகளை ஸ்கூல்களிலிருந்து நீக்குவது 1964-⁠ல்தான் ஆரம்பமானது. இந்தச் சவாலைச் சமாளிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உதவ வேண்டும் என்று கிளை அலுவலகம் சொன்னது. நான் ஸ்கூலிலிருந்து வந்த பிறகு அப்பா என்னுடன் உட்கார்ந்து யாத்திராகமம் 20:4, 5 வசனங்களை விளக்கிச் சொன்னது ஞாபகமிருக்கிறது.

ஸ்கூலில் அசெம்பிளி நடக்கும்போது பிரச்சினையேதும் வராதிருக்க பின்னால் நின்றுகொள்வேன். தேசிய கீதம் பாடாதவர்களை முன்னால் வரச்சொல்வார்கள். ஒருசமயம் ஹெட்மாஸ்டர் என்னைக் கூப்பிட்டு பாட்டு பாடாததற்கான காரணத்தைக் கேட்டபோது, நான் பைபிளிலிருந்து பதில் அளித்தேன். “நீ வாசிக்கிறீயே, ஏன் பாட்டு பாடக்கூடாது!” என்று கோபப்பட்டு கத்தினார். வாசிக்கக் கற்றுக்கொள்வதற்கு ஸ்கூலை ஏற்பாடு செய்துதந்திருக்கிற அரசாங்கத்திற்கு பக்திசெலுத்த நான் கடமைப்பட்டிருக்கிறேன் என அவர் காரணம் சொன்னார்.

கடைசியில், பிப்ரவரி 1967-⁠ல் நான் ஸ்கூலிலிருந்து நீக்கப்பட்டேன். நான் அப்படியே சோர்ந்துபோய்விட்டேன். ஏனென்றால் படிப்பு என் உயிர், நன்றாக படித்தும் வந்தேன். அப்பாவுடன் வேலை செய்தவர்கள், சத்தியத்தில் இல்லாத குடும்பத்தார் என எல்லாருமே அப்பாவை எதிர்த்தபோதிலும் நான் சரியானதையே செய்வதாக சொல்லி அவர் என்னை உற்சாகப்படுத்தினார். அம்மாவுக்கும்கூட பல பிரச்சினைகள் வந்தன. அம்மாவுடன் வேலை செய்ய வயலுக்கு போகும்போது, மற்ற பெண்கள், “ஏன் இந்தப் பையன் ஸ்கூலுக்குப் போறதில்ல?” என்று கேட்டு கேலி செய்வார்கள்.

என்றாலும், என் படிப்பு அதோடு நின்றுவிடவில்லை. 1972-⁠ல் சபையிலேயே எழுத்தறிவு வகுப்புகள் நடத்தப்படுவதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு ஸ்கூல்களிலும் நிலைமை மாறியது. என்னுடைய வீடு ஸ்கூலுக்கு நேர் எதிரே இருந்தது. குடிப்பதற்குக் குளிர்ந்த தண்ணீரையும், வகுப்பறைகளைக் கூட்டுவதற்குத் துடைப்பங்களையும் கேட்டு ஹெட்மாஸ்டர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். ஒருசமயம் கடனாகப் பணம் கேட்டுகூட வந்தார். வீட்டில் எல்லாருமே அவரிடம் அன்பாக நடந்துகொண்டது அவருடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்; அதனால்தான் ஒருநாள் அவர் இவ்வாறு கேட்டார்: “உங்க மகனை திரும்பவும் ஸ்கூலில் சேர்க்க விரும்புறீங்களா?” அதற்கு அப்பா, நான் இன்னும் ஒரு யெகோவாவின் சாட்சிதான் என்பதை அவருக்கு ஞாபகப்படுத்தினார். “அது பிரவாயில்ல” என்று சொல்லிவிட்டு, “எந்த வகுப்பில் நீ சேர விரும்புறே?” என என்னிடம் கேட்டார். ஆறாம் வகுப்பில் சேர விரும்புவதாகச் சொன்னேன். நான் திரும்பவும் அதே ஸ்கூலில், அதே ஹெட்மாஸ்டரின் கீழ், அதே மாணவர்களுடன் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். ஆனால், பெரும்பாலான மற்ற மாணவர்களைவிட வாசிப்பதில் நான் கெட்டிக்காரனாக இருந்தேன்; அதற்குக் காரணம் ராஜ்ய மன்றத்தில் நடத்தப்பட்ட எழுத்தறிவு வகுப்புகளே.

என்னுடைய கடின உழைப்பாலும், நல்நடத்தையாலும் அநேக டீச்சர்களிடம் நல்ல பெயரெடுத்தேன்; அதனால் பள்ளிக் காலம் சுலபமாக இருந்தது. நான் நன்கு கஷ்டப்பட்டு படித்து, சில பரீட்சைகளையும் எழுதி தேர்ச்சி பெற்றேன்; அதனால் சுரங்கங்களில் பொறுப்புள்ள ஒரு வேலை கிடைத்தது, பிற்பாடு என் குடும்பத்திற்கு உதவவும் முடிந்தது. நான் ஒருபோதும் என் விசுவாசத்தை விட்டுக்கொடுத்து தேசிய கீதம் பாடாததை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

[பக்கம் 241, 242-ன் பெட்டி/​படம்]

“பிரசங்கிப்பதை நாங்கள் எப்படி நிறுத்த முடியும்?”

ஜோனஸ் மன்ஜானி

பிறந்தது: 1922

முழுக்காட்டப்பட்டது: 1950

பின்னணிக் குறிப்பு: ஜாம்பியா பெத்தேலில் 20 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்தார். தற்போது மூப்பராகவும் ஒழுங்கான பயனியராகவும் சேவை செய்கிறார்.

இரண்டாம் உலகப் போரின் மத்திபத்தில், என்னுடைய சகோதரன் டான்ஜானியாவிலிருந்து திரும்பி வந்தார்; அவரிடம் பைபிளும் அரசாங்கம், ஒப்புரவாகுதல் என்ற ஆங்கில புத்தகங்களும் வேறுபல புத்தகங்களும் இருந்தன. யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் அப்போது தடைசெய்யப்பட்டிருந்ததால் அதற்கான காரணத்தை அறிய விரும்பினேன். ஒப்புரவாகுதல் என்ற புத்தகத்தைப் படித்தேன், ஆனால் ஒன்றுமே புரியவில்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு, என் சகோதரனைப் பார்க்கச் சென்றபோது அவருடன் சபை கூட்டத்திற்குப் போனேன். அங்கு ராஜ்ய மன்றம் கிடையாது, திறந்தவெளியில் கூட்டம் நடத்தப்பட்டது; அந்த இடத்தைச் சுற்றி மூங்கில் வேலி போடப்பட்டிருந்தது. பேச்சாளர் குறிப்புத்தாள் இல்லாமல் பைபிள் வசனங்களைப் பயன்படுத்தி நேரடியாகவே பேசினார். அப்பேச்சு மனதுக்கு எவ்வளவு திருப்தியாய் இருந்தது! பைபிளிலிருந்து கொடுக்கப்பட்ட விளக்கம், என்னுடைய சர்ச்சில் கொடுக்கப்பட்ட விளக்கத்திலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டதாய் இருந்தது. சர்ச்சில் எல்லாருமே கொடியை வணங்குவதிலும் கொட்டு அடிப்பதிலும்தான் ஆர்வம் காட்டினார்கள். அதுமட்டுமா, இன வேற்றுமை, எந்த மொழியில் பாடுவது போன்ற விஷயங்களில்கூட வாக்குவாதம் செய்தார்கள். ஆனால், இந்தக் கூட்டத்திலோ யெகோவாவுக்குத் துதி சேர்க்கும் இனிய பாடல்களைக் கேட்டேன், எல்லாரும் குடும்பம் குடும்பமாக உட்கார்ந்து ஆன்மீக உணவை அனுபவிப்பதையும் பார்த்தேன்.

நான் முழுக்காட்டுதல் பெற்றேன்; தொடர்ந்து மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தேன்; அது சுரங்கப் பகுதிகளில் ஊர் ஊராகப் பயணிக்க வேண்டிய ஒரு வேலை. 1951-⁠ல் இரண்டு வாரம் விடுப்பு எடுத்து லுஸாகாவில் உள்ள கிளை அலுவலகத்தில் வேலை செய்தேன். அதற்குப் பின் சீக்கிரத்திலேயே பெத்தேலில் சேவை செய்ய அழைப்பைப் பெற்றேன். முதலில் ஷிப்பிங் டிபார்ட்மெண்டில் வேலை செய்தேன்; லுவான்ஷா என்ற இடத்திற்கு அலுவலகத்தை மாற்றிய பிறகு, கரஸ்பாண்டன்ஸ், டிரான்ஸ்லேஷன் ஆகிய டிபார்ட்மெண்டுகளில் சேவை செய்தேன். 1960-களின் ஆரம்பத்தில் அரசியல் புரட்சிகளின் மத்தியிலும் சகோதரர்கள் பலன்தரும் விதத்தில் ஊழியம் செய்து வந்தார்கள்; அதோடு அரசியல் எழுச்சியின் மத்தியில் நடுநிலையையும் காத்து வந்தார்கள்.

அரசியல் கட்சிகளில் சேரவோ பார்ட்டி கார்டுகளை வாங்கவோ நாங்கள் மறுப்பதற்கான காரணத்தை விளக்க டாக்டர் கென்னத் காவூன்டா என்பவரை​—⁠இவர் சீக்கிரத்தில் ஜாம்பியாவில் ஜனாதிபதி பொறுப்பை ஏற்கவிருந்தவர்​—⁠நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவ்வாறு ஒருமுறை மார்ச் 1963-⁠ல் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது அரசியல் கட்சிக்காரர்களின் அச்சுறுத்தலை நிறுத்துவதற்கு உதவும்படி கேட்டோம். அதற்கான கூடுதல் விவரங்களைத் தரும்படி அவர் கேட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் காவூன்டா எங்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்தார்; அங்கே ஜனாதிபதியிடமும் அவருடைய முக்கிய மந்திரிகளிடமும் பேசுவதற்கு அரிய வாய்ப்பு கிடைத்தது. அக்கூட்டம் இரவுவரை நீடித்தது. ஒரு மதத் தொகுதியாக யெகோவாவின் சாட்சிகளை ஆட்சேபிக்காவிட்டாலும், பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டு மற்ற மதத்தாரைப்போல கூட்டங்களை மட்டும் நடத்தினால் போதாதாவென ஜனாதிபதி கேட்டார். “பிரசங்கிப்பதை நாங்கள் எப்படி நிறுத்த முடியும்? இயேசு பிரசங்கித்தாரே. பரிசேயர்களுக்குப் பக்கத்தில் அவர் ஓர் ஆலயத்தைக் கட்டிக்கொண்டு அங்கு சும்மா உட்காரவில்லையே” என்று பதில் அளித்தோம்.

நாங்கள் மேல் முறையீடுகள் செய்தும், ஊழியத்தின் சில அம்சங்களின் மீது தடை விதிக்கப்பட்டது. என்றாலும், தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தம் ஊழியர்களைப் பயன்படுத்தி வருகிற யெகோவாவுக்கு புகழையும் கனத்தையும் சேர்க்க நாங்கள் எப்போதும்போல வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருந்தோம்.

[பக்கம் 245, 246-ன் பெட்டி/​படம்]

கற்றுக்கொள்ள வேண்டுமென்ற தீவிர ஆசை இருந்தது

டேனியல் ஸகாலா

பிறந்தது: 1964

முழுக்காட்டப்பட்டது: 1996

பின்னணிக் குறிப்பு: சபை மூப்பராக சேவை செய்கிறார்.

ஸயன் ஸ்பிரிட் சர்ச்சின் அங்கத்தினராக இருந்த சமயத்தில் ஆங்கிலத்திலுள்ள, வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ளுங்கள் என்ற சிறுபுத்தகம் எனக்குக் கிடைத்தது. படிக்காதவனாக இருந்தாலும், கற்றுக்கொள்ள வேண்டுமென்ற தீவிர ஆசை இருந்தது. எனவே, அந்தப் பிரசுரத்தைப் பெற்ற பிறகு அதைப் படிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டேன். புதிய வார்த்தைகளின் அர்த்தத்தை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். இப்படி எந்தவொரு டீச்சருடைய உதவியுமின்றி, கொஞ்சம் கொஞ்சமாகப் படித்து சீக்கிரத்திலேயே வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் அடிப்படையானவற்றைக் கற்றுக்கொண்டேன்.

இப்போது என்னால் பைபிளை வாசிக்க முடியும்! ஆனால் என்னுடைய சர்ச்சில் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்கள் பைபிளில் சொல்லப்பட்டிருப்பதற்கு முற்றிலும் முரணாக இருப்பதைக் கண்டேன். யெகோவாவின் சாட்சியாக இருந்த என்னுடைய கொழுந்தன், மரித்தோரின் ஆவிகள்​—⁠அவை உங்களுக்கு உதவவோ தீங்கு செய்யவோ முடியுமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? என்ற ஆங்கில சிற்றேட்டை எனக்கு அனுப்பித் தந்தார். அதைப் படித்தபோது, என்னுடைய பாஸ்டரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஒருநாள் சர்ச்சில் இருக்கையில், உபாகமம் 18:10, 11 வசனங்களை வாசித்துக்காட்டி, “பைபிள் கண்டிக்கிற காரியங்களை நாம் ஏன் செய்கிறோம்?” என்று கேட்டேன்.

“நம்முடைய பங்கில் செய்ய வேண்டியதைச் செய்கிறோம்” என்று பாஸ்டர் பதில் அளித்தார். அவர் சொன்னது எனக்குப் புரியவில்லை.

அடுத்து, பிரசங்கி 9:5-ஐ வாசித்துக்காட்டி, “‘மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்’ என்று பைபிள் சொல்லும்போது மரித்தவர்களுக்கு மரியாதை செலுத்தும்படி நாம் ஏன் ஜனங்களிடம் சொல்கிறோம்?” என்று கேட்டேன். அதற்கு பாஸ்டரும் சரி, சர்ச்சுக்கு வந்திருந்தவர்களும் சரி வாயே திறக்கவில்லை.

பிற்பாடு, சர்ச்சிலிருந்த சிலர் என்னிடம் வந்து, “நாமதான் யெகோவாவின் சாட்சி இல்லையே, அப்புறம் ஏன் மரித்தவங்களுக்கு மரியாதை செலுத்தாம இருக்கணும், ஏன் நம்முடைய பழக்கவழக்கங்களைப் பின்பற்றாம இருக்கணும்?” என்று சொன்னார்கள். அவர்கள் அப்படிச் சொன்னபோது எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. நான் பைபிளிலிருந்துதான் பேசினேன், ஆனாலும் என்னை ஒரு யெகோவாவின் சாட்சியென சர்ச் முடிவுகட்டிவிட்டது. அப்போது முதற்கொண்டு, நானும், சர்ச்சிலிருந்த இன்னும் இரண்டு நண்பர்களும் ராஜ்ய மன்றத்திற்குப் போக ஆரம்பித்தோம். முதல் மூன்று மாதங்களுக்குள்ளாகவே, என்னுடைய நெருங்கிய உறவினர்களையும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வரும்படி அழைத்தேன், அவர்களும் வந்தார்கள். என்னுடைய மனைவி உட்பட அவர்களில் மூன்று பேர் இப்போது முழுக்காட்டுதல் பெற்று விட்டார்கள்.

[பக்கம் 176, 177-ன் அட்டவணை/​வரைபடம்]

ஜாம்பியா கால வரலாறு

1910

1911: வேதாகமத்தின் பேரில் படிப்புகள் ஜாம்பியா வரை செல்கிறது

1919: காசமு மவான்ஸாவும் சுமார் 150 பேரும் சாட்டையால் அடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள்.

1925: முழுக்காட்டுதல் கொடுப்பதையும் பிரசங்கம் செய்வதையும் பைபிள் மாணாக்கரின் கேப் டவுன் அலுவலகம் குறைத்துக் கொள்கிறது.

1935: பிரசுரங்கள் இறக்குமதி செய்யப்படுவதை அரசாங்கம் தடை செய்கிறது. இருபது பிரசுரங்கள் தடை செய்யப்படுகின்றன.

1936: லவலன் ஃபிலிப்ஸ் மேற்பார்வையில் லுஸாகாவில் ஒரு ‘டெப்போ’ திறக்கப்படுகிறது.

1940

1940: பிரசுரங்களை இறக்குமதி செய்து விநியோகிப்பதை அரசாங்கம் தடை செய்கிறது. முழுக்காட்டுதல் கொடுப்பது மீண்டும் ஆரம்பமாகிறது.

1948: முதல் கிலியட் பள்ளி பட்டதாரிகள் வந்து சேருகிறார்கள்.

1949: காவற்கோபுரம் பத்திரிகையின் மீது விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்குகிறது.

1954: கிளை அலுவலகம் லுவான்ஷாவிற்கு மாற்றப்படுகிறது.

1962: கிளை அலுவலகம் கிட்வேக்கு மாற்றப்படுகிறது.

1969: பொது மக்களுக்குப் பிரசங்கிப்பதை அரசாங்கம் தடை செய்கிறது.

1970

1975: மிஷனரிகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்​படுகிறார்கள்.

1986: மீண்டும் மிஷனரிகள் நாட்டிற்குள் அனுமதிக்கப்​படுகிறார்கள்.

1993: லுஸாகாவில் தற்போதைய கிளை அலுவலக கட்டடங்கள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

2000

2004: லுஸாகாவில் கிளை அலுவலக விரிவாக்கம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

2005: ஜாம்பியாவில் 1,27,151 பிரஸ்தாபிகள் மும்முரமாக பிரசங்கிக்கிறார்கள்.

[வரைபடம்]

(பிரசுரத்தைக் காண்க)

மொத்த பிரஸ்தாபிகள்

மொத்த பயனியர்கள்

1,30,000

65,000

1910 1940 1970 2000

[பக்கம் 169-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

காங்கோ மக்கள் குடியரசு

ஜாம்பியா

கபூடா

எபாலா

இஸோக்கா

காஸாமா

சாம்ஃபியா

லூன்டஸி

மூஃபூலிரா

கலுலூஷி

கிட்வே

லுவான்ஷா

காப்வே

லுஸாகா

செனாங்கா

ஜாம்பஜி ஆறு

லிவிங்ஸ்டன்

போட்ஸ்வானா

ஜிம்பாப்வே

மொசம்பிக்

மலாவி

[பக்கம் 162-ன் முழுபக்க படம்]

[பக்கம் 167-ன் படம்]

டாம்ஸன் காங்காலா

[பக்கம் 170-ன் படம்]

லவலன் ஃபிலிப்ஸ்

[பக்கம் 178-ன் படம்]

1952-⁠ல், ஹாரி அர்னோட், நேதன் நார், கே ஜேசன், ஜான் ஜேசன், ஈயன் ஃபர்ஜஸ்ஸன்

[பக்கம் 193-ன் படம்]

வலது: 2001-⁠ல் மன்டா என்டாம்பாவும் அவரது குடும்பத்தாரும் ம்வாங்கே அகதிகள் முகாமில்

[பக்கம் 193-ன் படம்]

கீழே: அகதிகளின் ஒரு முகாம்

[பக்கம் 201-ன் படம்]

1993-⁠ல் ஜாம்பியாவில் ஊழியப் பயிற்சிப் பள்ளியின் முதல் வகுப்பு

[பக்கம் 202-ன் படம்]

ஊழியப் பயிற்சிப் பள்ளியின் போதனையாளர்களான ரிச்சர்ட் ஃப்ரட்டும் ஃபைலமன் கஸிபாவும் ஒரு மாணாக்கரைச் சந்திக்கிறார்கள்

[பக்கம் 206-ன் படம்]

மண், புல், அல்லது கிடைத்த மற்ற பொருட்களை வைத்து மாநாட்டு இடங்கள் அமைக்கப்பட்டன

[பக்கம் 215-ன் படம்]

இடது: 1991-⁠ல் ஒப்பனையுடன் பைபிள் நாடகம்

[பக்கம் 215-ன் படம்]

கீழே: 1996-⁠ல் “தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டுதல் பெறவிருப்போர்

[பக்கம் 235-ன் படம்]

திரு. ரிச்மாண்ட் ஸ்மித்துடன் ஃபேலியா காசாஸூம் அவளுடைய அப்பா பாலும்

[பக்கம் 251-ன் படம்]

லுஸாகாவில் தற்போதுள்ள கிளை அலுவலக கட்டுமான வேலையில் சந்தோஷமாக ஈடுபடுவோர்

[[பக்கம் 252, 253-ன் படங்கள்]

(1, 2) சமீபத்தில் கட்டப்பட்ட ராஜ்ய மன்றங்கள்

(3, 4) லுஸாகாவிலுள்ள ஜாம்பியா கிளை அலுவலகம்

(5) டிசம்பர் 2004-⁠ல் கிளை அலுவலக விரிவாக்க பிரதிஷ்டையின்போது ஸ்டீவன் லெட்

[பக்கம் 254-ன் படம்]

கிளை அலுவலகக் குழு, இடமிருந்து வலம்: ஆல்பர்ட் முஸான்டா, ஆல்ஃபிரட் கேஹி, எட்வர்ட் ஃபிங்க், சைரஸ் நியாங்கு, டேரல் ஷார்ப்