Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ருமேனியா

ருமேனியா

ருமேனியா

உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தல் கடைசி நாட்களில் அதன் உச்சக்கட்டத்தை அடையும் என பைபிள் தீர்க்கதரிசனம் உரைத்தது. (ஆதி. 3:15; வெளி. 12:13, 17) அந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிடத்தக்க விதத்தில் ருமேனியா நாட்டில் நிறைவேற்றம் அடைந்துள்ளது. என்றபோதிலும், ருமேனியாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் சத்தியத்தின் பேரில் தங்கள் இருதயங்களில் கொழுந்துவிட்டு எரிகிற ஜுவாலைகளை எக்காரணத்தைக்கொண்டும் எவரும் அணைத்துப்போட அனுமதிக்கவில்லை. (எரே. 20:9) மாறாக, “மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும்” தங்களை ‘தேவ ஊழியக்காரராக விளங்கப் பண்ணியிருக்கிறார்கள்.’ (2 கொ. 6:4, 5) இதையே இந்தப் பதிவு காண்பிக்கப்போகிறது. அவர்களுடைய உத்தமப்போக்கு கடினமான இக்காலங்களில் கடவுளோடு நடக்க விரும்புகிற அனைவருக்கும் ஊக்கமூட்டுவதாக.

வருடம் 1914. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாதளவு மனித சரித்திரத்திலேயே படு ஆபத்தான ஒரு சகாப்தம் உதயமாகவிருந்தது. அந்தச் சகாப்தத்தின்போது, ஏராளமான ஐரோப்பிய நாடுகளில் கொடூரமான சர்வாதிகாரிகளின் ஆட்சி மேலோங்கின, அரசியல் கோட்பாடுகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டன, பயங்கரமான படுகொலைகள் நடந்தன. இத்தகைய போக்கில் சிக்கிக்கொண்ட நாடுகளில் ஒன்றுதான் ருமேனியா. இதனால் அங்கிருந்த ஜனங்கள் ஏகப்பட்ட துன்பத்தை அனுபவித்தார்கள். அப்படித் துன்பம் அனுபவித்தவர்களில், இயேசு கிறிஸ்துவின் சொல்படி, “தேவனுடையதை தேவனுக்கு” செலுத்துவதற்கும், அரசாங்கத்திற்கு வணக்கம் செலுத்தாதிருப்பதற்கும் தீர்மானமாயிருந்த ஜனங்களும் இருந்தார்கள்.​—மத். 22:21.

1945-⁠க்கு முன் யெகோவாவின் மக்களைத் தாக்குவதில், ருமேனிய ஆர்த்தடாக்ஸ் குருமாரும் ரோமன் கத்தோலிக்க குருமாரும் முன்னிலை வகித்தார்கள். சர்ச் பிரசங்கங்களின் மூலமும், அரசியல்வாதிகளையும் போலீஸ்காரர்களையும் தூண்டிவிடுவதன் மூலமும் அவர்களைத் தாக்கினார்கள். பின்னர் கம்யூனிஸவாதிகளும் அவர்களைத் துன்புறுத்தினார்கள். அந்த கம்யூனிஸவாதிகள் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு தங்களுடைய கொடூரமான திட்டங்களை இடைவிடாமல் அரங்கேற்றினார்கள்.

அத்தகைய கொடிய காலங்களில்கூட பிரசங்க வேலை தடைபடாமல் முன்னேறியதென்றால், அதற்குக் காரணம் என்ன? “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்ற தமது வாக்குறுதியை இயேசு நிறைவேற்றியதே அதற்குக் காரணம். (மத். 28:20) இப்பொழுது, காலச்சக்கரத்தில் சுமார் நூறு ஆண்டுகள் பின்னோக்கி ‘சுழலலாம்’ வாருங்கள்! கிழக்கு ஐரோப்பா என இன்று அழைக்கப்படும் மண்ணில் ராஜ்ய விதை அப்போதுதான் முதன்முதல் விதைக்கப்பட்டது.

தாயகம் திரும்பிய ருமேனியர்

1891-⁠ல், பைபிள் மாணாக்கரான சார்ல்ஸ் டேஸ் ரஸல் தன்னுடைய பிரசங்க சுற்றுப்பயணத்தின்போது, கிழக்கு ஐரோப்பாவின் சில பாகங்களுக்கு விஜயம்செய்தார். ஆனால், பலன் ஏதும் கிடைக்காததைப் பார்த்து கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தார். “சத்தியம் வளருவதற்கான எந்த வாய்ப்பையும் நாங்கள் அங்கு பார்க்கவில்லை, சத்தியத்தை ஏற்றுக்கொள்ள ஜனங்கள் தயாராயும் இல்லை” என அவர் தெரிவித்தார். ருமேனியாவில் நிலவிய அந்த நிலைமை சீக்கிரத்தில் மாறவிருந்தது. சொல்லப்போனால், பிரசங்க வேலை அங்கு தொடங்குவதற்கு சகோதரர் ரஸல்தானே முக்கிய பங்கு வகிக்கவிருந்தார், ஆனால் நேரடியாக அல்ல, மறைமுகமாக. எப்படி?

19-⁠ம் நூற்றாண்டின் இறுதியில், சமூக, பொருளாதார நிலைமை காரணமாக ஏராளமானோர் ருமேனியாவை விட்டு வெளியேறி அமெரிக்கா உட்பட வேறுபல இடங்களுக்கு வேலை தேடிச் சென்றார்கள். அப்படி வெவ்வேறு இடங்களுக்குச் சென்றதால் சிலர் பொருளாதார லாபத்தைக் காட்டிலும் மேம்பட்ட ஒன்றைப் பெற்றுக்கொண்டார்கள், ஆம் பைபிள் சத்தியத்தின் திருத்தமான அறிவைப் பெற்றுக்கொண்டார்கள். இதுதான் கரோலி சாபா என்பவருக்கும் யோஷெஃப் கிஸ் என்பவருக்கும் நடந்தது; கடவுளைப் பற்றி அதிகமதிகமாகக் கற்றுக்கொள்ள இவர்கள் இருவரும் ஆர்வமாயிருந்தார்கள்; ரஸலுடைய பைபிள் சொற்பொழிவுகளைக் கேட்க அநேக முறை சென்றிருந்தார்கள்.

இந்த இருவருக்கும் பைபிளில் உண்மையான ஆர்வம் இருந்ததைக் கண்டுகொண்ட சகோதரர் ரஸல், தானாகவே அவர்களிடம் போய்ப் பேசினார். அவர்கள் இருவரும் ருமேனியாவுக்குத் திரும்பிச்சென்று, தங்கள் சொந்தக்காரர்களிடமும் நண்பர்களிடமும் ராஜ்ய செய்தியைப் பரப்புவது குறித்துச் சிந்தித்துப் பார்க்கும்படி பேச்சுவாக்கில் அவர் ஆலோசனை கூறினார். இந்த ஆலோசனைப்படியே இருவரும் 1911-⁠ல் ருமேனியாவுக்குத் திரும்பினார்கள்; டிரான்ஸ்சில்வேனியாவில் உள்ள டிர்க்யூ-மூரெஷ் என்ற நகரில் குடியேறினார்கள்.

அங்கிருந்து தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்பிய சகோதரர் சாபா, தன் குடும்பத்தாரில் யாராவது சத்தியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென வழியில் ஜெபம்செய்துகொண்டே போனார். வீட்டை அடைந்ததும் தான் ஜெபித்ததற்கு இசைவாகத் தன்னுடைய சொந்தக்காரர்களிடம் சாட்சிகொடுக்க ஆரம்பித்தார்; அப்படி அவர் சாட்சிகொடுத்தவர்களில் ஷுஷன்னா இன்யெடீ என்பவரும் ஒருவர்; இவர் ஒரு கத்தோலிக்கர்; சகோதரர் சாபா தங்குவதற்கு இடவசதி செய்துகொடுத்தவர். ஷுஷன்னா மார்க்கெட்டில் பூ விற்பவர், அவருடைய கணவர் ஒரு தோட்டக்காரர்.

ஒவ்வொரு நாளும் காலையில் தன் வேலையைத் துவங்குவதற்கு முன் ஷுஷன்னா சர்ச்சுக்குப் போய் பூசையில் கலந்துகொண்டார், இரவில் குடும்பத்தார் தூங்கச் சென்ற பின் வெளியே தோட்டத்திற்குப் போய் ஜெபம் செய்துவந்தார். இதையெல்லாம் கவனித்த சகோதரர் சாபா ஒருமுறை அவர் தோட்டத்தில் இருந்தபோது அவரை அணுகி, அவருடைய தோளில் மென்மையாகக் கை வைத்து, “ஷுஷன்னா, நீ முழு இருதயத்தோட ஊக்கமா ஜெபிக்கிற. கண்டிப்பா உனக்குச் சத்தியம் கிடைச்சிடும்” என்றார். அவர் சொன்னபடியே நடந்தது; அருமையான இந்தப் பெண்மணி ராஜ்ய செய்தியை மனதார ஏற்றுக்கொண்டார்; டிர்க்யூ-மூரெஷில், யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த முதல் நபர் இவர்தான். தன்னுடைய 87-வது வயதில் மரிக்கும்வரை கடவுளுக்கு உண்மையுடன் இருந்தார்.

இன்யெடீ குடும்பத்திற்காக வேலைசெய்து வந்த ஷன்டார் யோஷா என்ற 18 வயது இளைஞரிடமும் சகோதரர் சாபா சாட்சிகொடுத்தார். சகோதரர் சாபாவும் சகோதரர் கிஸ்ஸும் நடத்திய எல்லாக் கூட்டங்களிலும் ஷன்டார் வந்து கலந்துகொண்டார், சத்தியத்தை வேகமாகக் கற்றுக்கொண்டார். சீக்கிரத்திலேயே, மூரெஷ் மாவட்டத்தில் உள்ள தன் சொந்த கிராமமான ஸரட்ஸெனியில் சாட்சிகொடுக்கவும் அருமையான பைபிள் பேச்சுகளைக் கொடுக்கவும் ஆரம்பித்தார். காலப்போக்கில் ஆறு தம்பதியரும், 13 பெண் பிள்ளைகள், 11 பையன்கள் என 24 பிள்ளைகளும் இவரிடம் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு அவருடைய ‘நிருபங்களாக’ ஆனார்கள்.​—2 கொ. 3:1, 2.

சகோதரர் கிஸ்ஸும் சகோதரர் சாபாவும் டிர்க்யூ-மூரெஷ் தொடங்கி டிரான்ஸ்சில்வேனியா பகுதி முழுவதும் பிரசங்கித்தார்கள். க்ளுஜ்-நாப்போக்காவிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலுள்ள டூம்ப்ரேவா நகராட்சிப் பகுதியில் இருந்தபோது, வாஸிலெ காஸ்ட்யா என்பவரை அவர்கள் சந்தித்தார்கள்; இவர் பாப்டிஸ்ட் சர்ச்சைச் சேர்ந்தவர். குட்டையானவர், உறுதியானவர், பைபிள் படிப்பதில் தீரா ஆர்வமுள்ளவர். கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியைப் பற்றி அவருக்குச் சரியாகப் புரிந்திராததால், சகோதரர்கள் கிஸ்ஸும் சாபாவும் வேதாகமத்திலிருந்து அதற்கு விளக்கம் அளித்ததைக் கூர்ந்து கவனித்தார். பிற்பாடு முழுக்காட்டுதல் பெற்றார்; வாஸிலெவுக்கு ஹங்கேரியன் மொழியும் தெரிந்திருந்ததால் முழுக்காட்டுதலுக்குப் பிறகு, தன்னுடைய மாவட்டத்திலிருந்த ருமேனியருக்கும் ஹங்கேரியருக்கும் முழுமையாகச் சாட்சிகொடுத்தார். பிறகு, கால்பார்ட்டராக (முழுநேர ஊழியராக) சேவை செய்ய ஆரம்பித்தார்; சாகும்வரை அச்சேவையில் தொடர்ந்திருந்தார்.

ருமேனியாவின் வடமேற்குக் கோடியில் உள்ள ஸாட்டூ-மாரே என்ற நகரிலும் சகோதரர் சாபா நற்செய்தியைப் பிரசங்கித்தார். அங்கு பரஸ்கீவா கால்மர் என்ற பக்திமிக்க பெண்மணியைச் சந்தித்தார்; சத்தியத்தை இவர் வெகு சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். யெகோவாவை நேசிக்க தன்னுடைய ஒன்பது பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுத்தார். இன்று ஐந்து தலைமுறையாக அவருடைய குடும்பத்தார் யெகோவாவின் சாட்சிகளாய் இருக்கிறார்கள்!

முதல் உலகப் போருக்கு முன்னரே அமெரிக்காவில் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு ருமேனியாவுக்குத் திரும்பிய மற்றொரு ருமேனியர் அலெக்ஸா ராமாச்சியா என்பவர் ஆவார். டிரான்ஸ்சில்வேனியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள பனஸட் என்ற தன் சொந்த கிராமத்திற்கு அவர் சென்றார். அங்கு சீக்கிரத்திலேயே பைபிள் மாணாக்கர்களின் (யெகோவாவின் சாட்சிகள் அப்போது அப்படித்தான் அறியப்பட்டிருந்தார்கள்) சிறு தொகுதி ஒன்றை உருவாக்கி, கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார். அந்தத் தொகுதியில் அலெக்ஸாவுடைய சகோதரரின் மகன்களான எலெக் ராமாச்சியாவும் காவ்ரிலா ராமாச்சியாவும் கலந்துகொண்டார்கள். இன்று, அலெக்ஸாவின் பெரிய குடும்பத்தாரும் ஐந்து தலைமுறையாக யெகோவாவின் சாட்சிகளாய் இருக்கிறார்கள்.

ராணுவத்தில் சேர மறுத்ததற்காக எலெக் கடுமையாய்த் துன்புறுத்தப்பட்டார், எனவே, அமெரிக்காவுக்குச் சென்று குடியேறினார்; அங்கு 1922-⁠ல், ஒஹாயோவில் உள்ள சீடர் பாயின்ட் என்ற இடத்தில் நடைபெற்ற பைபிள் மாணாக்கரின் விசேஷ மாநாடு ஒன்றில் கலந்துகொண்டார். சொல்லப்போனால், அந்த அரங்கிலிருந்த ருமேனியர்கள் தங்கள் தாய்மொழியில் மாநாட்டு பேச்சுகளைக் கேட்பதற்காக அவற்றை மொழிபெயர்க்கும் பாக்கியத்தையும் பெற்றார். காவ்ரிலாவோ ருமேனியாவிலேயே தங்கி, சகோதரர் சாபாவுடனும் சகோதரர் கிஸ்ஸுடனும் சேர்ந்து ஊழியம் செய்தார். அவர்கள் டிரான்ஸ்சில்வேனியாவில் பிரசங்க வேலைசெய்து, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சபைகளையும் தொகுதிகளையும் சந்தித்துவந்தார்கள். பிற்பாடு, ருமேனியாவில் முதன்முதலாக கிளை அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் சேவைசெய்யும் பாக்கியத்தையும் காவ்ரிலா பெற்றார்.

முதல் உலகப் போரின்போது, இமானாயில் கின்ட்ஸா என்ற ஒரு ருமேனியர் கைதுசெய்யப்பட்டார்; இத்தாலியிலிருந்த ஒரு ராணுவச் சிறைக்கு அனுப்பப்பட்டார், அது அவருடைய தாய்நாட்டிலிருந்து தொலை தூரத்திலிருந்தது. ஆயுதம் ஏந்த மறுத்ததன் காரணமாக அந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பைபிள் மாணாக்கர் சிலரை அவர் சந்தித்தார். பைபிளிலிருந்து அவர்கள் சொன்ன செய்தியை மனதார ஏற்றுக்கொண்டார். 1919-⁠ல் விடுதலையாக்கப்பட்டபோது, மாராமூரெஷ் நகராட்சிப் பகுதியில் உள்ள பாயா-மேரே என்ற தன் சொந்த ஊருக்குத் திரும்பினார்; அங்கு முழு ஆர்வத்துடன் நற்செய்தியைப் பிரசங்கித்தார், இதன் விளைவாக பைபிள் மாணாக்கர் அடங்கிய மற்றொரு தொகுதி உருவானது.

நற்செய்தியைப் பிரசங்கித்த ஆரம்பகால பயனியர்களும், அதற்குச் செவிசாய்த்த நபர்களும் காண்பித்த வைராக்கியம் மற்றும் சுயதியாக மனப்பான்மை காரணமாக, சீஷர்களின் எண்ணிக்கை பெருகியது, பைபிள் மாணாக்கர்களின் சிறுசிறு தொகுதிகள் நாடெங்கும் படுவேகமாகத் தோன்ற ஆரம்பித்தன. சொல்லப்போனால், 1919-⁠க்குள்​—⁠கரோலி சாபாவும் யோஷெஃப் கிஸ்ஸும் ருமேனியாவுக்குத் திரும்பிவந்த எட்டே வருடங்களுக்குள்​—⁠1,700-⁠க்கும் மேற்பட்ட ராஜ்ய பிரஸ்தாபிகளும் ஆர்வமுள்ளவர்களும் அடங்கிய 150 பைபிள் படிப்பு வகுப்புகள் (இப்போது தொகுதிகள் அல்லது சபைகள் என அழைக்கப்படுபவை) ஒழுங்கமைக்கப்பட்டன. சகோதரர் கிஸ் 86 வயதில் சாகும்வரை தன் சொந்த நாட்டில் பயனியராகச் சேவை செய்தார். அமெரிக்காவில், ஹங்கேரி நாட்டவர் வசிக்கும் பிராந்தியத்தில் நடைபெற்ற ஊழியத்தை ஒழுங்கமைப்பதற்காக சகோதரர் சாபா 1924-⁠ல் அங்கு திரும்பிச் சென்றார்.

ஆன்மீக உணவைத் தயாரித்தல்

ராஜ்ய செய்தியைப் பரப்புவதிலும் ஆன்மீகப் பசியுள்ளவர்களுக்கு உணவளிப்பதிலும் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள் மிகப் பெரிய அளவில் உதவின. ஆன்மீக உணவுக்கான தேவையைப் பூர்த்திசெய்வதற்கு உதவியாக, பிரசுரங்களை உள்ளூர் அச்சகங்களில் அச்சடிக்க சகோதரர்கள் ஏற்பாடு செய்தார்கள். 1914 தொடங்கி, டிர்க்யூ-மூரெஷில் இருந்த ஆக்லின்டா (“கண்ணாடி” என்று அர்த்தம்) என்ற தனியார் அச்சகம், த உவாட்ச் டவர் அண்டு ஹெரால்டு ஆஃப் கிறைஸ்ட்ஸ் பிரசன்ஸ் என்ற 16 பக்க மாதாந்தர பத்திரிகையையும், புத்தகங்களையும், துண்டுப்பிரதிகளையும் அச்சிட்டது​—⁠அனைத்தும் ஹங்கேரியன் மொழியில்.

1916-⁠ல், பிரசுரங்கள் ருமேனியன் மொழியிலும் அச்சிடப்பட்டன. அவற்றில் சில: “மேம்பட்ட பலிகளுக்கு” முன்நிழலாக இருந்த ஆசரிப்புக்கூடார பலிகள் என்ற சிறுபுத்தகம், ‘காவற்கோபுரத்திலிருந்து’ தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் என்ற எட்டுப் பக்க பத்திரிகை, விசுவாசக் குடும்பத்தாருக்கு அன்றாட பரலோக மன்னா (தற்போதைய தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்) என்ற சிறுபுத்தகம், ஆயிரம் வருட ஆட்சி தொடக்கத்தின் கீர்த்தனை என்ற பாட்டுப் புத்தகம். 1918 தொடங்கி, அ.ஐ.மா., மிச்சிகன் மாகாணத்தில் டெட்ராய்ட் நகரிலிருந்த ஓர் அச்சகம், த உவாட்ச் டவர் அண்டு ஹெரால்டு ஆஃப் கிறைஸ்ட்ஸ் பிரசன்ஸ் பத்திரிகையையும், பொய் மதத்தைத் துணிந்து வெட்ட வெளிச்சமாக்கிய பீப்பில்ஸ் புல்பிட் என்ற மாதாந்தர துண்டுப்பிரதியையும் ருமேனியன் மொழியில் அச்சிட்டு, ருமேனியாவுக்கு அனுப்பியது.

நற்செய்தியை அறிவிக்கும் வேலை நன்கு முன்னேறி வந்ததால், அந்த வேலையை ஒருங்கிணைப்பதற்கும் சட்டப்பூர்வமாக்குவதற்கும் உதவ ருமேனியரான யெக்காப் பீ. ஷீமா என்ற பைபிள் மாணாக்கர் நியமிக்கப்பட்டார். 1920-⁠ல் அவர் க்ளுஜ்-நாப்போக்காவுக்கு வந்த சிறிது காலத்திற்குள்ளாகவே, கரோலி சாபாவையும் பிறகு யோஷெஃப் கிஸ்ஸையும் சந்தித்தார். க்ளுஜ்-நாப்போக்காவில் ஒரு கிளை அலுவலகம் செயல்படுவதற்கு ஏற்ற ஒரு வீட்டைக் கண்டுபிடிப்பதற்கே அப்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், போதிய வீடுகள் இல்லாததால், ஒரு சகோதரருடைய அப்பார்ட்மென்ட்டில் தற்காலிக அலுவலகம் ஒன்று நிறுவப்பட்டது. உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி சட்டப்பூர்வ நிறுவனமாக ஏப்ரல் 1920-⁠ல் ஸ்தாபிக்கப்பட்ட அதே சமயம், முதல் கிளை அலுவலகமும் ஸ்தாபிக்கப்பட்டது. அல்பேனியா, பல்கேரியா, முன்னாள் யுகோஸ்லாவியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஊழியத்தையும் ருமேனிய கிளை அலுவலகம் கொஞ்ச காலத்திற்கு மேற்பார்வை செய்தது.

அந்தச் சமயத்தில், பால்கன் நாடுகளைக் கலக்கிக்கொண்டிருந்த புரட்சிக் காற்று ருமேனியாவுக்குள்ளும் வீசத் தொடங்கியது. அரசியல் குழப்பங்கள் போதாதென்று யூதர்களுக்கு எதிரான பகையும் காட்டுத் தீயைப் போல் பரவ ஆரம்பித்தது, குறிப்பாக, பல்கலைக்கழகங்களில்; இதனால் ஏராளமான நகரங்களிலிருந்த மாணவர்கள் போராட்டங்களில் கலந்துகொண்டார்கள். விளைவு? பொதுக் கூட்டங்களையே அரசாங்கம் தடைசெய்தது. அப்போது நடந்த எந்தக் கலவரத்திலும் கால்பார்ட்டர்கள் தலையிடாதபோதிலும், 20-⁠க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, கொடூரமாக நடத்தப்பட்டார்கள், அவர்கள் வைத்திருந்த பிரசுரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

என்றாலும், சகோதரர்கள் வெளி ஊழியத்தில் தொடர்ந்து கடினமாகவே உழைத்தார்கள், இதனால் அதிகமதிகமான பிரசுரங்கள் தேவைப்பட்டன. ஆனால், தனியார் அச்சகங்களில் பிரசுரங்களை அச்சடிக்க அதிக செலவானதால், வேறு முறைகளைக் கையாளுவது பற்றி கிளை அலுவலகம் தீவிரமாக யோசித்தது. அந்தச் சமயம்பார்த்து, க்ளுஜ்-நாப்போக்காவில், 36 ரெஜைனா மரீயா வீதி என்ற முகவரியிலிருந்த ஓர் அச்சகம் விலைக்கு வந்தது; சகோதரர்கள் அந்த அச்சகத்தை ஏற்கெனவே பயன்படுத்தி வந்திருந்தார்கள். உலகத் தலைமையகத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, பொருத்தமான இந்த இடத்தை கிளை அலுவலகம் வாங்கியது; இந்த இடத்தில் இரண்டு கட்டடங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று நான்கு மாடிக் கட்டடம்; மற்றொன்று இரண்டு மாடிக் கட்டடம்.

அவற்றைப் புதுப்பிக்கிற வேலை மார்ச் 1924-⁠ல் ஆரம்பமானது; பாயா-மேரே, பிஸ்ட்ரிட்ஸா ஆகிய நகரங்களிலிருந்தும், ராட்னா கிராமத்திலிருந்தும்கூட வாலண்டியர்கள் வந்தார்கள். இந்த வேலைக்காக ஏராளமான சகோதரர்கள் தங்கள் சொந்த உடமைகளை விற்று நன்கொடை அளித்தார்கள்; மற்றவர்கள் உணவையும் கட்டுமானப் பொருள்களையும் நன்கொடையாக அளித்தார்கள். இந்தப் பொருள்களில் ஏராளமானவற்றை டெஸெஜி என்ற ஒருவித விசேஷப் பைகளில் போட்டு அனுப்பிவைத்தார்கள்; இந்தப் பைகளைத் தோளில் சுமந்து செல்லவும் முடிந்தது, குதிரைமீது ஏற்றிச் செல்லவும் முடிந்தது.

அச்சகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக கிளை அலுவலகம் நிறைய பொருள்களை விலைக்கு வாங்கியது; லைனடைப் இயந்திரங்கள் மூன்று, ஃபிளாட்பெட் பிரஸ்கள் இரண்டு, ரோட்டரி பிரஸ் ஒன்று, ஆட்டோமேட்டிக் ஃபோல்டிங் மெஷின் ஒன்று, கோல்ட் எம்பாஸிங் மெஷின் ஒன்று ஆகியவை அவற்றில் சில. இவ்வாறு தேவையான இயந்திரங்களை வாங்கிய பின், சீக்கிரத்தில் அந்நாட்டிலேயே மிகமிகத் தரமான பிரசுரங்கள் அச்சடிக்கப்பட ஆரம்பித்தன.

பெத்தேல் அங்கத்தினர்கள் மொத்தம் எட்டுப் பேர் இருந்தார்கள்; அவர்களில் ஒருவர், சாட்சிகள் அல்லாத 40 பணியாட்களை மேற்பார்வை செய்தார்; அந்த ஆட்கள் அச்சகத்தில் மூன்று ஷிஃப்டுகளில் வேலை செய்தார்கள். அவர்கள் மிகக் கடினமாய் உழைத்தார்கள் என்பதை அந்த அச்சகம் செயல்படத் தொடங்கிய முதல் வருடத்தின் அறிக்கை, அதாவது 1924-⁠ம் வருடத்தின் அறிக்கை காண்பித்தது. ருமேனியன் மற்றும் ஹங்கேரியன் மொழியில் சகோதரர்கள் 2,26,075 புத்தகங்களையும், 1,00,000 சிறுபுத்தகங்களையும், 1,75,000 பத்திரிகைகளையும் அச்சிட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இவ்வாறாக, கடவுளின் சுரமண்டலம், வேதாகமத்தில் படிப்புகள் என்ற ஏழு தொகுப்புகளில் காலங்களின் தெய்வீகத் திட்டம் என்று தலைப்பிடப்பட்ட முதல் தொகுப்பு ஆகிய பைபிள் படிப்புப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டன.

இரண்டாண்டு கால முன்னேற்பாட்டுப் பணிகளுக்குப் பின், கிளை அலுவலகம் ருமேனியன் மொழியில் ஸினாரியோ ஆஃப் த ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன் என்ற புத்தகத்தையும் அச்சிட்டது. பெயருக்கு ஏற்றாற்போல் அந்தப் புத்தகம் “ஃபோட்டோ-டிராமா” என்ற பேச்சின் அடிப்படையில் அமைந்திருந்தது; இந்தப் பேச்சில் ஒலியுடன்கூட வண்ண ஸ்லைடுகளும் இயங்கு படங்களும் பயன்படுத்தப்பட்டன. பூமியின் சிருஷ்டிப்பு தொடங்கி, கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின் முடிவு வரையான சம்பவங்கள் அதில் காண்பிக்கப்பட்டன. “ஃபோட்டோ-டிராமா” போல் ஸினாரியோ அத்தனை தத்ரூபமாக இல்லாவிட்டாலும், அதில் 400 படங்கள் அச்சிடப்பட்டிருந்தன, அதுமட்டுமின்றி கோட்பாடு, சரித்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றின் பேரில் சுருக்கமான பாடங்களும் இருந்தன; இவை அனைத்தும் பைபிளை ஆராய்ந்துபார்க்க ஏராளமான வாசகர்களின் மனதைத் தூண்டின.

பைபிள் படிப்பு வகுப்புகள் பெருகுகின்றன

1922-⁠ம் வருடம், ஒஹாயோவிலுள்ள சீடர் பாயின்ட்டில் நடைபெற்ற மாநாட்டின்போது, “ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்!” எனக் கூடிவந்திருந்தோரை ஜோஸஃப் ரதர்ஃபர்ட் தூண்டுவித்தார். மனதைத் தட்டியெழுப்பிய அந்தப் பேச்சின் காரணமாக உலகெங்குமிருந்த கடவுளுடைய மக்கள் இன்னுமதிக ஆர்வத்துடன் பிரசங்க வேலையில் ஈடுபட உற்சாகம் பெற்றார்கள். ருமேனியாவில், சகோதரர்கள் புதிய பிராந்தியங்களுக்குச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து, ஏராளமான புதிய சீஷர்களை உண்டாக்கினார்கள்.

அந்தக் காலத்தில் புதியவர்கள் பைபிளை எப்படிப் படித்தார்கள்? பெரீயன் பைபிள் படிப்புகள் என்றழைக்கப்பட்ட வகுப்புகளில் அவர்கள் சேர்ந்தார்கள். கேள்விகள் கொடுக்கப்பட்டன, பாடங்களுக்குத் தேவையான தகவல்கள் பல்வேறு பிரசுரங்களிலிருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டன; இவற்றைத் தபால் மூலம் ஆர்டர் செய்ய முடிந்தது. படிப்புக்கான அட்டவணை காவற்கோபுரத்தில் பட்டியலிடப்பட்டது. இந்தப் படிப்பில் நன்கு முன்னேறிய மாணவர்கள் சர்வதேச ஞாயிறு பள்ளிப் பாடங்கள் என்ற படிப்புத் திட்டத்திலிருந்தும் பயன் அடைந்தார்கள்; கடவுளுடைய வார்த்தையைப் போதிப்பவர்களாகத் தகுதிபெற அது அவர்களுக்கு உதவியது.

இந்தப் படிப்புத் தொகுதிகளை கிளை அலுவலகப் பிரதிநிதிகள் சென்று சந்தித்தார்கள், பேச்சுகள் கொடுத்தார்கள், மற்ற விதங்களிலும் ஆன்மீக உதவி அளித்தார்கள். ஆனால், பில்க்ரிம்கள், அதாவது இன்று பயணக் கண்காணிகள் என்று அழைக்கப்படுகிறவர்கள் தவறாமல் மேய்ப்புச் சந்திப்புகளைச் செய்தார்கள், போதனையும் அளித்தார்கள். 1921-⁠ல் பயணக் கண்காணிகள் ஆறு பேர் இருந்தார்கள், இரண்டே வருடங்களில் எட்டு பேராக ஆனார்கள். வைராக்கியமிக்க இந்த ஊழியர்கள் நூற்றுக்கணக்கான நகரங்களிலும், ஊர்களிலும், கிராமங்களிலும் கூட்டங்களை நடத்தினார்கள், ஆன்மீகப் பசியில் தவித்துக்கிடந்த பல்லாயிரக்கணக்கானோருக்குச் சாட்சிகொடுத்தார்கள்.

முன்பு குறிப்பிடப்பட்ட இமானாயில் கின்ட்ஸா என்பவரும் ஒரு பில்க்ரிமாக இருந்தார்; ஆனைஸிம் ஃபிலிப்பாயூ என்பவர் இன்னொருவர். நாட்டின் வடபகுதியில் உள்ள பூக்கோவீனா என்ற இடத்தில் ஒருசமயம் சகோதரர் கின்ட்ஸா பேச்சுக் கொடுத்தபோது, ஏராளமான அட்வென்ட்டிஸ்ட் சர்ச்சினரும், பாப்டிஸ்ட் சர்ச்சினரும் வந்திருந்தார்கள்; இவர்களில் சிலர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். பிற்பாடு, இந்தச் சகோதரர்கள் இருவரும் புகாரெஸ்ட் நகரில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார்கள்; கடவுளுடைய வார்த்தையிலிருந்து திருத்தமான அறிவைப் பெற அங்கிருந்த இன்னும் ஏராளமானோருக்கு அவர்கள் உதவினார்கள். அவர்கள் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஒரு நபர் இவ்வாறு எழுதினார்: “சகோதரர் இமானாயிலையும் சகோதரர் ஆனைஸிமையும் இங்கு அனுப்பியதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்; எனக்குப் புரியவைத்து அறிவொளியூட்டுவதற்கு அவர்கள் ரொம்பவே பாடுபட்டார்கள். இந்த நகரில் கர்த்தர் நிச்சயம் பெரிய வேலையைச் செய்யப் போகிறார், ஆனால் அதற்குப் பொறுமை அவசியம்.”

1920-⁠ல், ருமேனியாவிலிருந்த சகோதரர்கள் முதன்முதலாகத் தங்களுடைய அசெம்பிளிகளை நடத்தினார்கள்​—⁠ஒன்று, ஸலாஷ் நகராட்சிப் பகுதியில் உள்ள பிரெபி என்ற இடத்தில்; மற்றொன்று குலூஷ் நகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்னா டெ ஷுலூ என்ற இடத்தில். இவ்விரண்டு இடங்களுக்கும் ரயிலில் செல்ல முடிந்தது; அங்கிருந்த பிரஸ்தாபிகளும் ஆர்வமுள்ளவர்களும் சகோதரர்கள் தங்குவதற்கு வசதிசெய்து கொடுத்தார்கள். ருமேனியாவின் எல்லாப் பாகங்களிலிருந்தும் சுமார் 500 பேர் வந்திருந்தார்கள். தங்களுடைய நல்நடத்தையால் அருமையாகச் சாட்சிகொடுத்தார்கள்.

ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்தபோதிலும் எதிர்ப்பு இல்லாமல் இல்லை. சொல்லப்போனால், முதல் உலகப் போர் தொடங்கிய சமயத்திலிருந்தே மதம் மற்றும் அரசியல் சக்திகளிடமிருந்து சகோதரர்களுக்குத் துன்புறுத்தல் வர ஆரம்பித்தது.

போர் வெறியை எதிரிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்

ஒருபுறம் தேசப்பற்று தூண்டிவிட, மறுபுறம் குருமார் உசுப்பிவிட, தேசப்பற்றைக் காண்பிக்காதவர்களையும் நாட்டுக்காகக் கொலை செய்ய மறுத்தவர்களையும் அரசியல் அதிகாரிகள் ஈவிரக்கமில்லாமல் நடத்தினார்கள். எனவே, முதல் உலகப் போர் ஆரம்பித்தபோது ஏராளமான சகோதரர்கள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டார்கள். சிலர் கொலைகூட செய்யப்பட்டார்கள், இவர்களில் யவன் ரூஸ் என்பவரும் ஒருவர்; க்ளுஜ்-நாப்போக்காவுக்குத் தெற்கே உள்ள பெட்ரெஷ்டி டெ மிஷ்லாக் என்ற ஊரைச் சேர்ந்த புது மாப்பிள்ளை இவர்.

யவனுடைய சொந்தக்காரரான டனீயல் இவ்வாறு சொல்கிறார்: “1914-⁠ல், யவன் ரூஸ் ராணுவச் சேவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் போரில் கலந்துகொள்ள மறுத்ததால், புகாரெஸ்ட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டார், அங்கு அவருக்கு மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. கொல்லப்படவிருந்த இடத்தில் தனது சவக்குழியைத் தானே தோண்டும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்; பிறகு பட்பட்டென சுட்டுத்தள்ளும் ராணுவப் படையினர் முன்னிலையில், அந்தச் சவக்குழி அருகில் நிற்க வைக்கப்பட்டார். பிறகு, ஒருசில கடைசி வார்த்தைகளைச் சொல்ல பொறுப்பிலிருந்த அதிகாரியால் அனுமதிக்கப்பட்டார். அப்போது யவன் சத்தமாக ஜெபிக்கத் தொடங்கினார். யவனுடைய ஜெபத்தைக் கேட்டு நெகிழ்ந்துபோன ராணுவ வீரர்கள் இப்போது அவரைச் சுடுவதற்குச் சற்றுத் தயங்கினார்கள், அவரைக் கொல்வதற்கு மறுத்தார்கள். அப்போது அந்த அதிகாரி அவர்களில் ஒருவரை தனியே அழைத்துப்போய், ‘நீ இந்தக் கைதியைக் கொன்றால் சம்பளத்துடன் உனக்கு மூன்று மாத லீவு தருவேன்’ என்று வாக்குறுதி அளித்தார். அதற்கு ஆசைப்பட்டு அந்த ஆள் யவனைக் கொன்றுபோட்டான்.”

1916-⁠ல், சகோதரர்கள் கிஸ்ஸும் சாபாவும்கூட கைதுசெய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகால சிறைதண்டனையை அனுபவித்தார்கள். “ஆபத்தானவர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டதால், ஆயூட் என்ற இடத்திலிருந்த கட்டுக்காவல் அதிகமாயிருந்த சிறையில் 18 மாதங்களுக்குத் தனி அறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் எந்த விதத்தில் “ஆபத்தானவர்கள்”? “ஏற்றுக்கொள்ளப்பட்ட போதனைகளுக்கு எதிரான போதனைகளை அவர்கள் பிரசங்கித்தார்கள்” என்று நீதிபதி கூறினார். எளிய வார்த்தையில் சொன்னால், கொலை செய்ய மறுத்ததற்காக மட்டுமல்ல, ஆனால் ஐதீகக் கோட்பாடுகளுடன் முரண்பட்ட பைபிள் சத்தியங்களைப் போதித்ததற்காகவும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்த இருவரும் சிறையிலிருந்தவாறே, சபைகளுக்கும் தொகுதிகளுக்கும் கடிதம் எழுதி சகோதரர்களை ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுடைய கடிதத்தின் ஒரு பகுதியில் இவ்வாறு இருந்தது: “நம்முடைய தயவுமிக்க பரலோகத் தகப்பனுக்கு நன்றியையும், துதியையும், கனத்தையும் செலுத்த நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்; காவற்கோபுரத்திலிருந்து அவர் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்திருப்பதால் எங்களுடைய மகிழ்ச்சியை அவருக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம். காவற்கோபுரத்தை நம்முடைய சகோதரர்கள் நெஞ்சார நேசிக்கிறார்கள்; புயல் காற்றிலே படபடக்கும் மெழுகுவர்த்தியின் சுடரைப் பொத்திப் பாதுகாப்பதுபோல் அதைப் பாதுகாக்கிறார்கள்.” இவ்விருவரும் 1919-⁠ல் விடுதலையானார்கள்; அதற்கடுத்த வருடம் கிளை அலுவலகத்தை நிறுவ உதவினார்கள்.

குருமாரின் எதிர்ப்பு தீவிரமாகிறது

1918-⁠ல், முதல் உலகப் போர் முடிவடைந்தபோது, கடவுளுடைய மக்களைக் குருமார் தொடர்ந்து எதிர்த்துவந்தார்கள். ஆத்துமா அழியாது என்பது பற்றியும் மரியாள் வகித்த பங்கு பற்றியும் பைபிள் மாணாக்கர்களுடைய கருத்தை ஒரு பாதிரியார் பகிரங்கமாகத் தாக்கிப் பேசினார். “இந்தப் பூமியில் மேம்பட்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்ற ஏக்கம் [பைபிள் மாணாக்கர்களை] பைத்தியமாக்கி வருகிறது” என்று அவர் எழுதினார். “நாம் எல்லாருமே சகோதர சகோதரிகள், எல்லாத் தேசத்து மக்களும் சமமானவர்கள் என்றெல்லாம் அவர்கள் சொல்லி வருகிறார்கள்” என்றும் அவர் எழுதினார். இவ்வாறு எழுதிய அவர், பைபிள் மாணாக்கர்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது கடினமாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் “சத்தியத்தை நேசிப்பவர்களாக, மதப்பற்றுள்ளவர்களாக, சமாதானமானவர்களாக, மனத்தாழ்மையானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள்” என்றும் குற்றம் சாட்டினார்.

1921-⁠ல், பூக்கோவீனாவில் இருந்த பாதிரிமார், பைபிள் மாணாக்கர்களுடைய வேலைக்குத் தடைவிதிக்கும்படி கோரி உள்துறை மற்றும் நீதித்துறை அமைச்சகத்துக்கு மனு அனுப்பினார்கள். சொல்லப்போனால், சத்தியம் பரவியிருந்த கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் இருந்த குருமார் கடவுளுடைய ஜனங்களுக்கு எதிராகக் கோபாவேசத்தில் கொதித்துக்கொண்டிருந்தார்கள். ஆர்த்தடாக்ஸ் சர்ச்சும், கத்தோலிக்க சர்ச்சும், வேறுபல சர்ச்சுகளும் பகைமைப் பிரச்சாரங்களைச் செய்து, சகோதரர்களைத் தாக்குவதற்காக ஆட்களையும் கோஷ்டிகளையும் தூண்டிவிட்டன. உலகத் தலைமைக் காரியாலயத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில் கிளை அலுவலகம் இவ்வாறு குறிப்பிட்டது: “இந்த நாட்டில் குருமார் ஏகப்பட்ட அரசு பதவிகளைப் பிடித்திருக்கிறார்கள்; நம்முடைய வேலை ஓரளவு அவர்களது கருணையின்பேரில் சார்ந்திருக்கிறது. அவர்கள்மட்டும் சட்டத்தைக் கடைப்பிடித்தால் எந்தப் பிரச்சினையும் இருக்காது, ஆனால் அவர்கள் தங்களுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துவருகிறார்கள்.”

குருமார் தொடர்ச்சியாக எழுப்பிய ஏராளமான குற்றச்சாட்டுகளுக்கு மத அமைச்சகம் பணிந்தது; யெகோவாவின் ஜனங்களுடைய பிரசங்க வேலையையும் சபை கூட்டங்களையும் தடுப்பதற்கு “உள்ளூர் போலீஸாரை” பயன்படுத்த அவர்களுக்கு அனுமதி அளித்தது. இதனால், போலீஸார் சர்ச்சுகளின் கைப்பாவை ஆனார்கள்; அமைதியைக் குலைப்பதாகச் சகோதரர்கள்மீது பொய்க் குற்றம்சாட்டி அவர்களைக் கைதுசெய்தார்கள். ஆனால், எந்தத் தெளிவான சட்டமும் அமலில் இல்லாததால், தண்டனைத் தீர்ப்புகள் வேறுபட்டன. சகோதரர்களுடைய நல்நடத்தையும்கூட அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்தது. ஒரு நீதிபதி இவ்வாறு சொன்னார்: “பைபிள் மாணாக்கர்களைக் குற்றப்படுத்தவே முடியாது, ஏனென்றால் அவர்கள்தான் அநேகமாக எல்லாரையும்விட மிகமிக சமாதானமான ஜனங்கள்.”

என்றபோதிலும், துன்புறுத்தல் தீவிரமானது; 1926-⁠ன் இறுதியில் காவற்கோபுரம் தடைசெய்யப்பட்டது. ஆனாலும், சகோதரர்களுக்கு ஆன்மீக உணவு தொடர்ந்து கிடைத்துவந்தது; ஆம், சகோதரர்கள் அந்தப் பத்திரிகையின் பெயரை மட்டும் மாற்றிவிட்டு தொடர்ந்து அதை வெளியிட்டு வந்தார்கள். ஜனவரி 1, 1927 இதழ் தொடங்கி, காவற்கோபுரத்தின் ருமேனியன் மொழி பதிப்பு அறுவடை என்ற பெயரிலும், பிற்பாடு பைபிளின் ஒளி என்ற பெயரிலும், கடைசியில் வைகறை என்ற பெயரிலும் வெளியானது. அதன் ஹங்கேரியன் மொழி பதிப்பு கிறிஸ்தவ யாத்திரிகன் என்ற பெயரிலும், பிறகு சுவிசேஷம் என்ற பெயரிலும், கடைசியில் கிறிஸ்துவின் இரத்தத்தில் நம்பிக்கையுள்ளோரின் பத்திரிகை என்ற பெயரிலும் வெளியானது.

வருத்தகரமாக, இச்சமயத்தின்போதுதான் யெக்காப் பீ. ஷீமா நம்பிக்கைத் துரோகியானார். சொல்லப்போனால், 1928-⁠ல் அவருடைய நடவடிக்கையால் கிளை அலுவலகத்தின் உடைமைகள், இயந்திரங்கள் எனச் சகலமும் பறிபோயின! சகோதரர்கள் “நாலாபுறமும் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடைய நம்பிக்கை பெருமளவு ஆட்டங்கண்டிருக்கிறது” என இயர்புக் 1930 (ஆங்கிலம்) அறிக்கை செய்தது. வேதனை அளித்த இத்தகைய சம்பவங்களின் காரணமாக, பிரசங்க வேலையை மேற்பார்வை செய்யும் பொறுப்பு 1929-⁠ல் ஜெர்மனி கிளை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது, பிற்பாடு சுவிட்சர்லாந்தின் தலைநகரான பெர்னிலிருந்த மத்திய ஐரோப்பிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இவ்விரு கிளை அலுவலகங்களும், பிற்பாடு சகோதரர்கள் புகாரெஸ்ட்டில் நிறுவிய ஓர் அலுவலகத்தின் மூலமாக ஊழியத்தை மேற்பார்வை செய்தன.

‘தயவுசெய்து என் புத்தகத்தைக் கொளுத்திவிடாதீர்கள்’

கூடுதலான இத்தகைய சோதனைகள் வந்தபோதிலும், உண்மையுள்ள சகோதரர்கள் மீண்டும் தங்களை ஒழுங்கமைத்துக்கொண்டு தொடர்ந்து சாட்சிகொடுக்க ஆரம்பித்தார்கள்; புதிய பிராந்தியங்களுக்கும் சென்று சாட்சிகொடுத்தார்கள். ஆகஸ்ட் 24, 1933-⁠ல், ருமேனிய கிளை அலுவலகம் இவ்வாறு எழுதியது: “ஜனங்கள் சத்தியத்திற்காக ஏங்கித் தவிக்கிறார்கள். வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது, சத்தியத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிற கிராமவாசிகள் கூட்டங்கூட்டமாய் தங்களோடு வருவதாக சகோதர சகோதரிகள் எங்களுக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.”

ஒருசமயம், சகோதரர்கள் விநியோகித்த ஒரு புத்தகத்தை ஓர் ஏழைப் பெண் கேட்டு வாங்கிக்கொண்டாள், ராஜ்ய வேலைக்காகச் சிறு நன்கொடையும் அளித்தாள். இதைக் கேள்விப்பட்ட அக்கிராமத்துப் பாதிரி, சரசரவென நேராக அந்தப் பெண்ணின் வீட்டுக்குப் போனார். “அந்தப் புத்தகத்தை என்னிடம் கொடுத்துவிடு, அதைக் கொளுத்தப்போகிறேன்” என்று மிரட்டினார்.

அதற்கு அந்தப் பெண், “தயவுசெய்து அதைக் கொளுத்திவிடாதீர்கள், ஃபாதர், அது எங்களுக்கு ரொம்பவே ஆறுதலைத் தந்திருக்கிறது, எங்கள் துயரங்களில் சகித்திருக்க கட்டாயம் அது எங்களுக்கு உதவும்!” என்றாள். கடைசிவரை அவள் அந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுக்கவே இல்லை.

பைபிள் பிரசுரங்களுக்கு மிகுந்த போற்றுதலைக் காட்டிய மற்றொரு பெண்மணி, ஓர் உயர்குல சீமாட்டி; அவருடைய வேலைக்காரர்கள் யெகோவாவின் சாட்சிகள். ஒருநாள் அவர் தன்னுடைய வேலைக்காரர்களைப் பார்த்து, “இனிமேல் நீங்கள் என் வேலைக்காரர்கள் அல்ல; என் சகோதரர்கள்!” என்றார். இன்னொரு கிராமத்தில் சகோதரர் ஒருவர், தான் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி ஜனங்களிடம் அறிவித்து வருவதாக, படு ஆர்வமாயிருந்த சிறுசுகள் பட்டாளத்திடம் சொன்னார். அதன்பின், அந்தச் சிறுசுகள் பிரசுரங்களை வாங்கிக்கொள்ளும்படி போவோர் வருவோரையெல்லாம் ஊக்கப்படுத்த ஆரம்பித்தன. “இந்தப் புத்தகங்கள் கடவுளைப் பற்றிச் சொல்கின்றன” எனவும் அறிவிக்கத் தொடங்கின. கேட்காமலேயே இப்படி அந்தச் சிறுசுகள் வெகு உற்சாகத்துடன் தன் வேலைக்கு ஆதரவளித்ததைக் கண்டு அந்தச் சகோதரர் வாயடைத்துப்போனார்; சீக்கிரத்திலேயே அவரிடமிருந்த எல்லாப் பிரசுரங்களும் தீர்ந்துபோயின!

மிக மென்மையாகப் பேசும் நைக்கூ பெலூயெஸ் என்ற ஒரு பயனியர், பிரசங்க வேலையில் உதவுவதற்காக கிரீஸிலிருந்து ருமேனியாவுக்கு வந்தார். புகாரெஸ்ட்டில் சேவைசெய்த பிறகு, டேன்யூப் நதிக்கரையில் அமைந்திருந்த கேலாட்ஸி என்ற முக்கிய துறைமுகப் பட்டணத்தில் குடியேறினார். 1933-⁠ம் வருடத்தின் இறுதியில் அவர் இவ்வாறு எழுதினார்: “ஏறத்தாழ இரண்டரை மாதங்களுக்கு ருமேனியரிடம் பிரசங்கித்தேன்; அந்த மொழியை என்னால் பேச முடியாதபோதிலும் யெகோவா தேவன் எனக்கு ஏராளமான ஆசீர்வாதங்களை அருளினார். அதன்பின், கிரேக்கரிடமும் ஆர்மீனியரிடமும் பிரசங்கித்தேன், யெகோவாவுடைய உதவியால் 20 ஊர்களில் பிரசங்கித்தேன். ராஜ்ய செய்தி குறிப்பாக கிரேக்கர்களின் மனதைப் பெரிதும் கவர்ந்தது.”

ஆம், குருமார் பகைமைப் பிரச்சாரத்தில் இறங்கியபோதிலும், நல்மனமுள்ள அநேகர் நற்செய்தியைக் கேட்கவே விரும்பினார்கள். அவர்களில் நகர மேயரும் ஒருவர்; ஏராளமான சிற்றேடுகளை ஆசை ஆசையாய் வாசித்த பிறகு, புதிய உலகிற்காகத் தானும் ஆவலுடன் காத்திருப்பதாய்ச் சொன்னார். மற்றொரு ஊரைச் சேர்ந்த ஒரு நபர், தனக்கு நிறைய பைபிள் பிரசுரங்கள் வேண்டுமென்று கேட்டார், வாசிக்க விரும்பிய அனைவருக்கும் அவற்றை விநியோகிக்கப்போவதாக வாக்குறுதி அளித்தார்.

பிரசங்க வேலை மீண்டும் ஒழுங்கமைக்கப்படுகிறது

1930-⁠ல், அதாவது ஷீமா நம்பிக்கைத் துரோகியாக மாறி இரண்டு வருடங்கள் கழித்து, மார்ட்டின் மஜராஷி என்பவர் பிரசங்க வேலையை மேற்பார்வை செய்வதற்கு நியமிக்கப்பட்டார்; ருமேனியரான இவர் டிரான்ஸ்சில்வேனியாவில் உள்ள பிஸ்ட்ரிட்ஸா நகரைச் சேர்ந்த ஹங்கேரியரின் வழிவந்தவர். சகோதரர் மஜராஷி, ஜெர்மனி கிளை அலுவலகத்தில் ஆறு வாரப் பயிற்சி பெற்ற பிறகு, புகாரெஸ்ட்டில் கிளை அலுவலகம் ஒன்றை நிறுவினார். சீக்கிரத்திலேயே, ருமேனியன் மொழியில் காவற்கோபுரம் மீண்டும் ருமேனியாவில் அச்சிடப்படத் தொடங்கியது, இம்முறை புகாரெஸ்ட்டிலிருந்த த கோல்டன் புக் என்ற பதிப்பகத்தில் அச்சிடப்பட்டது. அதற்கு முன்னர் தற்காலிகமாக ஆஸ்திரியாவிலும் ஜெர்மனியிலும் அது அச்சிடப்பட்டது.

கடும் முயற்சிக்குப் பின், 1933-⁠ல், த பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் ஜெஹோவாஸ் விட்னஸஸ் என்ற சட்டப்பூர்வ புதிய நிறுவனம் ஒன்றை சகோதரர்கள் ஸ்தாபித்தார்கள். இந்த நிறுவனம், 33 கிரிஷேனா தெரு, புகாரெஸ்ட் என்ற விலாசத்திலிருந்து செயல்பட்டது. என்றாலும், மத மற்றும் அரசியல் எதிர்ப்பு காரணமாக, வணிக ரீதிக்காக மட்டுமே சகோதரர்களால் அதைப் பதிவுசெய்ய முடிந்தது.

இருந்தாலும், இந்த முயற்சிகள் பட்டுப்போன நம்பிக்கையை மீண்டும் துளிர்க்கச் செய்தன, பிரசங்க வேலை முன்னேற உதவின. அநேக பிரஸ்தாபிகள் பயனியர் சேவை செய்யவும் ஆரம்பித்தார்கள்; மற்றவர்களோ தங்களுடைய ஊழியத்தை அதிகரித்தார்கள், குறிப்பாக குளிர்காலத்தின்போது அதிகரித்தார்கள்; ஏனெனில் கிராமவாசிகளுக்கு அப்போதுதான் ஓய்வுநேரம் அதிகமாக இருந்தது. வெளிநாடுகளிலிருந்து ரேடியோ மூலம் ஒலிபரப்பப்பட்ட பைபிள் சொற்பொழிவுகளையும் சகோதரர்கள் கேட்டார்கள். முக்கியமாக, அக்கம்பக்கத்தாருக்கு அல்லது பாதிரிமாருக்குப் பயந்து சபை கூட்டங்களுக்கு வராத நபர்கள் அந்தச் சொற்பொழிவுகளைக் கேட்டு மிகவும் பயன் அடைந்தார்கள். காவற்கோபுரத்தில் அந்நிகழ்ச்சிகள் நடைபெறவிருந்த நேரமும், பொதுப் பேச்சின் தலைப்புகளும், ரேடியோ அலைவரிசைகளும் அறிவிக்கப்பட்டன.

நற்செய்தி பரவுவதற்கு உதவிய மற்றொரு ஏற்பாடு போர்ட்டபிள் ஃபோனோகிராஃப் ஆகும்; யெகோவாவின் அமைப்பே அதைத் தயாரித்தது. 1930-களில், சபைகளாலும் தனிநபர்களாலும் இவற்றை ஆர்டர் செய்ய முடிந்தது, அதோடு ரெக்கார்ட் செய்யப்பட்ட பைபிள் பேச்சுகளையும் ஆர்டர் செய்ய முடிந்தது. இந்தப் பேச்சுகள் “சகோதரர்களை மட்டுமல்ல, ஃபோனோகிராஃப் வைத்திருந்த குடும்பங்களையும் சத்தியத்தை நேசித்த ஆட்களையும்கூட” ஊக்கமூட்டியது என புல்லட்டின் (தற்போதைய நம் ராஜ்ய ஊழியம்) அறிக்கை செய்தது.

அமைப்புக்குள் மேலுமான சோதனைகள்

1920-களிலும் 1930-களிலும் கடவுளுடைய வார்த்தை இன்னும் நன்கு புரிந்துகொள்ளப்பட்டது, ஒவ்வொரு கிறிஸ்தவரும் சத்தியத்தைக் குறித்து கட்டாயம் சாட்சிகொடுக்க வேண்டுமென்றும் புரிந்துகொள்ளப்பட்டது. பைபிள் மாணாக்கர்கள், 1931-⁠ல் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றுக்கொண்டபோது சத்தியத்தின் ஒளிக்கீற்று பிரகாசித்தது. பைபிளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பெயர் வெறுமனே ஒரு லேபிளைப் போல் இருப்பதற்குப் பதிலாக, அதைத் தரித்திருப்பவர் யெகோவாவின் தேவத்துவத்தை ஆதரிக்கிறார், அதை அறிவிக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. (ஏசா. 43:10-12) பிரசங்க வேலையை எதிர்த்த பைபிள் மாணாக்கர் சிலர் இந்த முன்னேற்றத்தால் இடறலடைந்து, அமைப்பைவிட்டே வெளியேறினார்கள். சிலர் விசுவாசதுரோகிகளாகவும் ஆகி, தங்கள் பெயரை மிலனியலிஸ்ட்ஸ் என மாற்றிக்கொண்டார்கள். இச்சோதனைக்கிடையே உண்மையுள்ளவர்கள் விசுவாசத்தில் நிலைத்திருந்தார்களா? குருமாரிடமிருந்தும் விசுவாசதுரோகிகளிடமிருந்தும் வந்த எதிர்ப்பின் மத்தியிலும் அவர்கள் தங்களுடைய பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார்களா?

இந்த அழுத்தத்திற்குச் சிலர் அடிபணிந்துபோனார்கள், ஆனால் பலர் யெகோவாவின் சேவையில் தொடர்ந்து விசுவாசமாகவும் வைராக்கியமாகவும் இருந்தார்கள். 1931-⁠ம் வருடத்திற்கான ஓர் அறிக்கை இப்படிச் சொன்னது, அதன் ஒரு பகுதி பின்வருமாறு: “ருமேனியாவில் சுமார் 2,000 சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள், இவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு இந்த வருடம் 5,549 புத்தகங்களையும் 39,811 சிறுபுத்தகங்களையும் விநியோகித்திருக்கிறார்கள்.” அதற்கடுத்த வருடம், சகோதரர்கள் இன்னும் நன்றாகச் செய்தார்கள், ஆம், அவர்கள் விநியோகித்த புத்தகங்கள், சிறுபுத்தகங்களின் மொத்த எண்ணிக்கை 55,632.

சிலசமயம் துன்புறுத்தல்கூட சாதகமான விளைவுகளையே உண்டுபண்ணியது. உதாரணத்திற்கு, ஒரு பிராந்தியத்திலிருந்த யெகோவாவின் சாட்சிகள் அனைவரும் ஒரு தொகுதியாக, தாங்கள் ‘மகா பாபிலோனிலிருந்து’ வெளியேறிவிட்டதைப் பகிரங்கமாய் அறிவிக்க முடிவுசெய்தார்கள். (வெளி. 18:2, 4) முன்னாள் சர்ச்சிலிருந்து தாங்கள் விலகிக்கொண்டதைத் தெரிவிக்கும் ஆவணங்களைத் தயாரிக்க, தைரியமிக்க இந்தச் சகோதர சகோதரிகள் தொடர்ந்தாற்போல் ஐந்து நாட்களுக்கு உள்ளூர் டவுன் ஹாலுக்குத் திரண்டுசென்றார்கள்.

ஊர்த் தலைவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள், உள்ளூர் பாதிரி ஆடிப்போனார். முதலில், உதவிக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார், ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. எனவே, டவுன் ஹாலுக்கு விரைந்துசென்று, ஜனங்களுக்கு ஆவணங்களை எழுத உதவிசெய்ததற்காக அங்கிருந்த சான்றுறுதி அலுவலரை கம்யூனிஸவாதி எனச் சாடினார். கோபமடைந்த அந்த ஊழியர், ‘சர்ச்சிலிருந்து விலகுவதை அறிவிக்கிற சான்றிதழ்களைத் தயாரித்துக்கொடுக்கும்படி இந்த ஊரிலுள்ள எல்லாருமே வந்து என்னிடம் கேட்டால்கூட அத்தனை பேருக்கும் நான் உதவப்போகிறேன்’ என்று பதிலடி கொடுத்தார். அதன்பின் அந்தப் பாதிரியால் ஒன்றும் செய்ய முடியவில்லை; சகோதரர்கள் அந்த ஆவணம் சம்பந்தப்பட்ட வேலையை வெற்றிகரமாக முடித்துக்கொண்டார்கள்.

“என்னைச் சுட்டுவிட நினைக்கிறீர்களா?”

குருமார் தங்கள் சர்ச் பிரசங்கங்களின்போது யெகோவாவின் சாட்சிகளை கோபாவேசத்துடன் தாக்கிப் பேசினார்கள். அவர்களுடைய வேலைக்குத் தடை விதிக்கும்படி அரசாங்கத்திற்கு மேன்மேலும் அழுத்தம் கொடுத்துவந்தார்கள். குருமாரின் அரசியல் கைப்பாவையான மத அமைச்சகம், சகோதரர்களைத் துன்புறுத்த தொடர்ந்து போலீஸாரை உபயோகித்தது. ஒருமுறை, போலீஸ் உயர் அதிகாரி ஒருவரும் அவருடைய சக அதிகாரி ஒருவரும் கிறிஸ்தவக் கூட்டங்கள் நடைபெற்றுவந்த ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார்கள்.

அந்த வீட்டுக்காரரின் பெயர் ஜார்ஜ் என வைத்துக்கொள்வோம்; போலீஸ் அதிகாரி ஜார்ஜைப் பார்த்து, “மதக் கூட்டங்களை நடத்துவதற்கு உங்களிடமுள்ள அனுமதிச்சீட்டை இப்போது நான் பார்த்தாக வேண்டும்” என்றார்.

அப்படிக் கேட்பதற்குரிய வாரண்ட் அந்த அதிகாரியிடம் இருக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்திருந்த ஜார்ஜ், “எந்த அதிகாரத்தில் என்னுடைய வீட்டுக்குள் நீங்கள் நுழைந்திருக்கிறீர்கள்?” என்று பதிலுக்குக் கேட்டார்.

எதுவும் சொல்லாமல் நின்ற அந்த உயர் அதிகாரியிடம் அங்கிருந்து உடனடியாகப் போய்விடும்படி சொன்னார் ஜார்ஜ். வேண்டாவெறுப்புடன், வாசற்கதவை நோக்கி நடக்க ஆரம்பித்த அந்த உயர் அதிகாரி, தன் சக அதிகாரியைப் பார்த்து, வெளி கேட்டுக்குப் பக்கத்திலேயே காவலுக்கு நிற்கும்படி கூறினார், அந்த இடத்தைவிட்டு ஜார்ஜ் வெளியே செல்ல முயன்றால் அவரைக் கைதுசெய்யும்படியும் உத்தரவிட்டார். பிற்பாடு, ஜார்ஜ் வெளியே செல்ல முயன்றபோது, அந்த அதிகாரி “சட்டப்படி” அவரைக் கைது செய்வதாகச் சொன்னார்.

“எந்தச் சட்டம்?” எனக் கேட்டார் ஜார்ஜ்.

“உன்னைக் கைதுசெய்வதற்கான வாரண்ட் என்னிடம் உள்ளது” என உறுதியுடன் கூறினார் அந்த அதிகாரி.

முன்னாள் போலீஸ் அதிகாரியான ஜார்ஜ் சட்டத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்; அதனால் அந்த வாரண்ட்டை தன்னிடம் காட்டச் சொன்னார். ஜார்ஜ் சந்தேகப்பட்டது சரியாகவே இருந்தது, அந்த அதிகாரியிடம் எந்த வாரண்ட் பேப்பரும் இருக்கவில்லை. அந்த அதிகாரி சட்டப்பூர்வமாக ஜார்ஜை கைதுசெய்ய முடியாததால், தன் துப்பாக்கியில் குண்டுகளைப் போடுவதன் மூலம் அவரைப் பயமுறுத்த நினைத்தார்.

“என்னைச் சுட்டுவிட நினைக்கிறீர்களா?” எனக் கேட்டார் ஜார்ஜ்.

“இல்லை” என மறுத்தார் அதிகாரி, “நான் ஒன்றும் முட்டாள் இல்லை.”

“அப்படியானால், துப்பாக்கியில் எதற்காகக் குண்டுகளைப் போட்டீர்கள்?”

தன் செயல்களின் மடமையை உணர்ந்த அந்த மனிதர் அங்கிருந்து புறப்பட்டார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக அந்த உயர் அதிகாரியின் மீது ஜார்ஜ் வழக்கு தொடர்ந்தார், தன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு. ஆச்சரியகரமாக, அந்த அதிகாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது, 15 நாள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது.

மற்றொரு சம்பவத்தின்போது, வயதான ஒரு சகோதரர் நீதிமன்றத்தில் அருமையாகச் சாட்சிகொடுத்தார். யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இரண்டு புத்தகங்களை அங்கிருந்த நீதிபதி தன் கையில் பிடித்திருந்தார். அந்தச் சகோதரருடைய முகத்திற்கு எதிரே அவற்றை ஆட்டியபடி, புத்தகங்களை விநியோகித்து மதப் பிரச்சாரம் செய்ததாக அவர்மீது குற்றம்சாட்டினார்.

அதற்கு அந்தச் சகோதரர் இவ்வாறு பதில் அளித்தார்: “கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தை அறிவித்ததற்காக நீங்கள் என்னைத் தண்டித்தீர்களென்றால், அதை ஒரு தண்டனையாகவே நான் கருத மாட்டேன், அதை ஒரு கௌரவப் பதக்கம்போல் கருதுவேன். நீதியினிமித்தம் துன்புறுத்தப்படும்போது சந்தோஷப்பட்டு களிகூர வேண்டுமென கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார், ஏனெனில் பூர்வ காலத்து தீர்க்கதரிசிகள்கூட அப்படித்தான் துன்புறுத்தப்பட்டார்கள். சொல்லப்போனால், இயேசு தாமே துன்புறுத்தப்பட்டு, கழுவிலேற்றப்பட்டார், தவறு செய்ததற்காக அல்ல, ஆனால் கடவுளிடமிருந்து பெற்ற சத்தியத்தைக் குறித்துப் பேசியதற்காக.”

“எனவே, இயேசு சொன்ன ராஜ்ய செய்தியை அந்த இரண்டு புத்தகங்கள் மூலம் அறிவித்ததற்காக இந்த நீதிமன்றம் என்னைத் தண்டித்ததென்றால், எந்தக் குற்றமும் செய்திராத ஒரு மனிதனை அது தண்டித்ததாக ஆகிவிடும்” எனக் கூறி முடித்தார். உடனே நீதிபதி அவர் மீதிருந்த வழக்குகளையெல்லாம் தள்ளுபடி செய்தார்.

‘வேறெங்கும் சகோதரர்கள் இந்தளவு துன்புறுத்தப்படுவதில்லை’

1929-⁠ல், விவசாயப் பொருள்களின் விலைச்சரிவால் வேலையில்லாத் திண்டாட்டம் எங்கும் தலைதூக்கியது, அரசியல் குழப்படி நிலவியது; இதெல்லாம் ஃபாசிஸ்ட்டுகள் போன்ற தீவிரவாத அரசியல் கட்சிகள் வேகமாக வளர வழிசெய்தன. அதோடு, 1930-களில், ருமேனியா படிப்படியாக நாசி ஜெர்மனியின் ஆதிக்கத்திற்குள் வந்தது. இந்தச் சூழ்நிலைகள் யெகோவாவின் சாட்சிகளுக்குத் தீமையை முன்னறிவிப்பவையாகவே இருந்தன. சொல்லப்போனால், இயர்புக் 1936 (ஆங்கிலம்) இவ்வாறு சொன்னது: “ருமேனியாவில் அனுபவிப்பதைப் போன்ற மோசமான துன்புறுத்தலை இந்தப் பூமியில் வேறெந்த இடத்திலும் சகோதர சகோதரிகள் அனுபவிப்பதில்லை.” 1933 முதல் 1939 வரை, யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக 530 வழக்குகள் தொடரப்பட்டன. அதோடு, அவர்களுடைய வேலைக்குத் தடைவிதிக்கச் சொல்லியும், புகாரெஸ்ட்டில் உள்ள அவர்களுடைய கிளை அலுவலகத்தை இழுத்துமூடச் சொல்லியும் வழக்கு தொடுத்தவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள்.

கடைசியில், 1935, ஜூன் 19, இரவு 8:00 மணிக்கு போலீஸார் வாரண்ட்டோடு கிளை அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள்; அது ஒரு பொய் வாரண்ட் என்பது பின்னர் தெரியவந்தது. அங்கிருந்த ஃபைல்களையும் 12,000-⁠க்கும் அதிகமான சிறுபுத்தகங்களையும் பறிமுதல் செய்துகொண்டு, ஒரு காவலாளியையும் வெளியே நிறுத்திவிட்டுச் சென்றார்கள். ஆனால், எப்படியோ ஒரு சகோதரர் பின்கதவு வழியே தப்பிச்சென்று அனுதாபமிக்க ஒரு வழக்கறிஞரைச் சந்தித்தார்; அந்த வழக்கறிஞர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் ஃபோன் செய்து, சட்டவிரோதமாக சீல் வைக்கப்பட்டது செல்லுபடியாகாதவாறு செய்தார், அதோடு எல்லா ஃபைல்களும் திரும்ப கைக்கு வந்துசேரும்படியும் பார்த்துக்கொண்டார். ஆனால் கிடைத்த நிம்மதி நெடுநாளைக்கு நீடிக்கவில்லை.

1937, ஏப்ரல் 21 அன்று, மத அமைச்சகம் அதிகாரப்பூர்வ அரசிதழ்களிலும் செய்தித்தாள்களிலும் ஓர் ஆணையை வெளியிட்டது. ருமேனியாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை முற்றுமுழுக்க தடைசெய்யப்பட்டிருக்கிறது என்றும், அவர்களுடைய பிரசுரங்களை விநியோகிப்பவர்களோ அதை வாசிப்பவர்களோகூட கைதுசெய்யப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுடைய பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து சகோதரர்கள் மேல் முறையீடு செய்தார்கள். ஆனால், அந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த அமைச்சர் ஒருவர் தனக்கு வெற்றி கிடைக்காது என்பதை அறிந்து, வழக்கு விசாரணைக்கு மூன்று முறை வாய்தா வாங்கினார். பிறகு, கடைசி வாய்தா தேதி வருவதற்கு முன், இரண்டாம் கெரல் ராஜா ருமேனியாவை சர்வாதிகார நாடாக அறிவித்தார். ஜூன் 1938-⁠ல், யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக ஒரு புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. மறுபடியும் சகோதரர்கள் வழக்கைத் தாக்கல் செய்தார்கள். அதுமட்டுமல்ல, ராஜாவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பினார்கள்; அதில் சாட்சிகளுடைய பிரசுரங்கள் ஆட்சியைக் கவிழ்ப்பதாயும் அல்ல, பொதுமக்களிடையே கலவரத்தைத் தூண்டுவதாயும் அல்ல, ஆனால் அவை கல்விபுகட்டுவதாகவே இருக்கின்றன என்று குறிப்பிட்டிருந்தார்கள். இது சம்பந்தமாகக் கடந்த முறை பெற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைப் பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். ராஜா இந்தச் சுற்றறிக்கையை மத அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார். என்ன ஆனது? ஆகஸ்ட் 2, 1938-⁠ல், புகாரெஸ்ட்டில் இருந்த கிளை அலுவலகத்தை அமைச்சகம் இழுத்து மூடி சீல் வைத்தது.

கடினமான அந்தச் சமயத்தில், ஏகப்பட்ட சகோதரர்கள்​—⁠முழு குடும்பங்களாகக்கூட​—⁠கைதுசெய்யப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டார்கள், சிலசமயம் தங்கள் வீட்டிலிருந்தபோது ராஜ்ய பாடல்களைப் பாடியதற்காகவும்கூட அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். மூன்று மாதத்திலிருந்து இரண்டு வருடம்வரை அவர்கள் சிறைதண்டனை பெற்றார்கள். ஆனால், முதலாவது இந்தச் சகோதரர்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டார்கள்? இவர்களில் அநேகர் குருமாரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த ஆட்களால் வேவுபார்க்கப்பட்டார்கள். வேலையாட்கள், சேல்ஸ்மேன்கள் போன்றெல்லாம் அந்த உளவாளிகள் மாறுவேடம் போட்டுக்கொண்டு அவர்களைப் பிடித்துக்கொடுத்தார்கள்.

நம்முடைய பிரசுரங்களை வைத்திருந்த நபர்கள்கூட கைதுசெய்யப்பட்டார்கள். காட்டில் மரம் வெட்டும் தொழில் செய்த ஒரு சகோதரர் தன்னுடைய பைபிளையும் இயர்புக்கையும் எப்போதுமே கையோடு எடுத்துச்செல்வார். ஒருநாள் போலீஸார் அனைவருடைய உடமைகளைச் சோதனையிட்டபோது, அந்தச் சகோதரரின் பிரசுரங்கள் அவர்களுடைய கண்ணில் பட்டன. உடனே அவரைக் கைதுசெய்து, 200 கிலோமீட்டர் தூரத்திலிருந்த நீதிமன்றத்திற்கு அவரை நடத்தியே கூட்டிச்சென்றார்கள்; அங்கு ஆறுமாத சிறைதண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. சிறைச்சாலைகள் நெரிசலாக இருந்தன, படுமோசமாக இருந்தன, எங்கு பார்த்தாலும் பேன்கள் ஊர்ந்துகொண்டிருந்தன. சாப்பிடுவதற்கு, தண்ணீர் போன்ற கஞ்சி மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது அதிக சோதனைகள்

1939, செப்டம்பர் 1 புலர்ந்தபோது, ஜெர்மன் ராணுவப் படைகள் போலந்துமீது திடீர் தாக்குதல் நடத்தின; இது மற்றொரு உலகப் போரை உசுப்பிவிட்டது​—⁠அந்தப் போர் ருமேனியாமீது நெடுநாளைக்கு மாபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆக்கிரமிப்புத் தடை ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டிருந்த சோவியத் யூனியனும் ஜெர்மனியும், தங்களுடைய ஆதிக்கப் போராட்டத்தில் கிழக்கு ஐரோப்பாவை செல்வாக்குமிக்க பிராந்தியங்களாகப் பிரித்து, கேக்கை வெட்டிக் கூறுபோடுவதுபோல் ருமேனியாவைக் கூறுபோட்டன. வட டிரான்ஸ்சில்வேனியாவை ஹங்கேரியும், பெஸரேபியா மற்றும் வட பூக்கோவீனாவை சோவியத் யூனியனும், தென் டாப்ருஜாவை பல்கேரியாவும் எடுத்துக்கொண்டன. இதன் விளைவாக, ஜனத்தொகையிலும் பிராந்தியத்திலும் சுமார் மூன்றில் ஒரு பங்கை ருமேனியா இழந்தது. 1940-⁠ல், ஃபாசிஸ சர்வாதிகார ஆட்சி ஆரம்பமானது.

இந்தப் புதிய அரசாங்கம், அரசியல் சாசனத்தைத் தற்காலிகமாக நீக்கிப்போட்டு புதியதோர் ஆணையைப் பிறப்பித்தது; அந்த ஆணையின்படி ஒன்பது மதங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டன; அவற்றில் முக்கியமானவை ஆர்த்தடாக்ஸ் சர்ச்சும், கத்தோலிக்க சர்ச்சும், லூத்தரன் சர்ச்சும் ஆகும். யெகோவாவின் சாட்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடித்தது. பயங்கரவாத செயல்கள் சர்வசகஜமாக நடைபெற்றன; அக்டோபர் 1940-⁠ல், ஜெர்மன் துருப்புகள் ருமேனியாவைக் கைப்பற்றின. படு பயங்கரமான இந்தச் சூழ்நிலைகளின்போது, ருமேனிய அலுவலகத்திற்கும் சுவிட்சர்லாந்தில் இருந்த மத்திய ஐரோப்பிய கிளை அலுவலகத்திற்கும் இடையே கடிதத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

பெரும்பாலான யெகோவாவின் சாட்சிகள் டிரான்ஸ்சில்வேனியாவில் வசித்துவந்ததால், மார்ட்டின் மஜராஷி புகாரெஸ்ட்டிலிருந்து இங்கு வந்து, டிர்க்யூ-மூரெஷில் குடியேறினார். உடல்நலம் காரணமாக அவருடைய மனைவி மரியா ஏற்கெனவே அங்கு குடியேறி இருந்தார். புகாரெஸ்ட் அலுவலகத்தில் சேவை செய்திருந்த பாம்ஃபில் மற்றும் இலனா ஆல்பூ தம்பதியர், வட கோடியிலுள்ள பாயா-மேரேவில் குடியேறினார்கள். இவ்விரு நகரங்களில் இருந்தவாறு வேலை செய்த சகோதரர் மஜராஷியும் சகோதரர் ஆல்பூவும் பிரசங்க வேலையை மீண்டும் ஒழுங்கமைத்தார்கள்; அதோடு, காவற்கோபுர பத்திரிகையின் ரகசிய தயாரிப்பு வேலையையும் ஒழுங்கமைத்தார்கள். அவர்களுடைய சக ஊழியரான டீயாடார் மாரஸஷ் என்பவர் புகாரெஸ்ட்டில் தங்கியிருந்து, ருமேனியாவில் மீந்திருந்த பகுதிகளில் நடைபெற்ற ஊழியத்தை ஒருங்கிணைத்து வந்தார்; பிறகு, 1941-⁠ல் அவர் கைதுசெய்யப்பட்டார்.

இதற்கிடையே, சகோதரர்கள் மும்முரமாக ஊழியம் செய்து வந்தார்கள், கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஆனால் படு ஜாக்கிரதையாக பைபிள் பிரசுரங்களை விநியோகித்தார்கள். உதாரணத்திற்கு, ரெஸ்ட்டாரன்ட்டுகள், ரயில் பெட்டிகள் எனப் பொது இடங்கள் பலவற்றில், சிறுபுத்தகங்களை வைத்துவிட்டுச் செல்வார்கள், யாருடைய கண்ணிலாவது அது படும் என்ற நம்பிக்கையில். ஆன்மீகரீதியில் ஊக்கம் பெறுவதற்காக ஒன்றுகூடி வர வேண்டுமென்ற வேதப்பூர்வ கட்டளைக்கும் அவர்கள் தொடர்ந்து கீழ்ப்படிந்து வந்தார்கள், யாருடைய சந்தேகத்தையும் கிளப்பாத விதத்தில் வெகு ஜாக்கிரதையாக அவ்வாறு ஒன்றுகூடிவந்தார்கள். (எபி. 10:24, 25) உதாரணத்திற்கு, அறுவடை காலத்தில் வழிவழியாகக் கொண்டாடப்பட்டு வந்த விருந்துகளை கிராமப்புறங்களில் வசித்த சாட்சிகள் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தினார்கள்; பொதுவாக, அப்படிப்பட்ட விருந்துகளின்போது விவசாயிகள் தங்கள் பயிர் வகைகளைக் கொண்டுவர ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்வார்கள், பிறகு ஜோக் அடித்து, கதைகள் சொல்லி கொண்டாடுவார்கள். சகோதரர்கள் இந்த விருந்துகளுக்குப் பதிலாக கிறிஸ்தவக் கூட்டங்களை நடத்தினார்கள்.

‘எப்பக்கத்திலும் நெருக்கப்படுகிறார்கள்’

சகோதரர் மஜராஷி செப்டம்பர் 1942-⁠ல் கைது செய்யப்பட்டார், ஆனால் சிறையிலிருந்தவாறே பிரசங்க வேலையை ஒருங்கிணைத்து வந்தார். ஆல்பூ தம்பதியரும் கைதுசெய்யப்பட்டார்கள்; அவர்களோடு சுமார் 1,000 சகோதர சகோதரிகளும் கைதுசெய்யப்பட்டார்கள்; அவர்களில் அநேகர் அடிக்கப்பட்டு, ஏறத்தாழ ஆறு வாரங்களுக்கு சிறை தண்டனை அனுபவித்த பிறகு விடுதலை செய்யப்பட்டார்கள். கிறிஸ்தவ நடுநிலை காரணமாக, ஏராளமான சகோதரிகள் உட்பட, நூறு சாட்சிகள் 2 முதல் 15 வருடங்கள்வரை சிறைதண்டனை பெற்றார்கள். ஐந்து சகோதரர்களுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது, ஆனால் பிற்பாடு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இரவு நேரங்களில், ஆயுதம் ஏந்திய போலீஸார் தாய்மார்களையும் குழந்தைகளையும் தரதரவென இழுத்துக்கொண்டு போனார்கள்; வீட்டுப் பிராணிகளைக் கவனிப்பாரற்று விட்டுச்சென்றார்கள், திருடர்கள் வந்து கொள்ளையடிக்கும்படி அவர்களுடைய வீடுகளைத் திறந்தே வைத்துவிட்டுச் சென்றார்கள்.

சிறை முகாம்களில், “வரவேற்பு” குழுவிலிருந்த காவலாளிகள் சகோதரர்களைச் சந்தித்து, கால்களைக் கட்டிப்போட்டு, அவர்களைத் தரையில் படுக்க வைத்தார்கள்; பிறகு அவர்களுடைய வெற்றுப் பாதத்தில் ஒரு காவலாளி ஒயர் சுற்றப்பட்ட ரப்பர் குண்டாந்தடியால் ஓங்கி ஓங்கி அடித்தார். எலும்புகள் உடைந்தன, கால்விரல் நகங்கள் பெயர்ந்து விழுந்தன, தோல் கருப்பானது, மரத்திலிருந்து உரியும் மரப்பட்டைகள்போல் சிலசமயம் தோல்கள் உரிந்துவிழுந்தன. அந்தச் சிறை முகாம்களை ரோந்து சுற்றிவந்த பாதிரிமார் அங்கு நடந்த அந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்து, “எங்களிடமிருந்து உங்களை விடுவிக்காமல் உங்கள் யெகோவா எங்கே போய்விட்டார்?” என ஏளனம்பண்ணி தூஷித்தார்கள்.

சகோதரர்கள் ‘எப்பக்கத்திலும் நெருக்கப்பட்ட’ போதிலும், அவர்கள் ‘கைவிடப்படவில்லை.’ (2 கொ. 4:8, 9) சொல்லப்போனால், அவர்கள் மற்ற சிறைவாசிகளிடம் ராஜ்ய நம்பிக்கையைப் பற்றிப் பேசி அவர்களைத் தேற்றி வந்தார்கள்; அவர்களில் சிலர் சத்தியத்தை மனதார ஏற்றுக்கொண்டார்கள். வடகிழக்கு டிரான்ஸ்சில்வேனியாவில் உள்ள டாப்லிட்ஸா என்ற கிராமத்தைச் சேர்ந்த டீயாடார் மீரான் என்பவரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மனித உயிரைக் கொல்லக் கூடாதென்பது கடவுளுடைய கட்டளை என்பதை டீயாடார் இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் புரிந்துகொண்டார்; அதனால், ராணுவத்தில் சேர அவர் மறுத்தார். எனவே, 1943 மே மாதம் ஐந்து வருட சிறைதண்டனை பெற்றார். அதன்பின் சீக்கிரத்திலேயே, மார்ட்டின் மஜராஷியையும், பாம்ஃபில் ஆல்பூவையும், சிறையிலிருந்த மற்ற சாட்சிகளையும் சந்தித்தார், பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார். ஆன்மீகரீதியில் படுவேகமாக முன்னேறினார், பிறகு சில வாரங்களிலேயே யெகோவாவுக்குத் தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தார். ஆனால், அவர் எப்படி முழுக்காட்டப்பட்டார்?

சர்பியாவில் உள்ள பார் என்ற ஊரிலிருந்த நாசி சிறை முகாமுக்குச் சுற்றுவழியில் டீயாடாரும் சுமார் 50 ருமேனிய சாட்சிகளும் அழைத்துச் செல்லப்பட்டபோது அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. போகிற வழியே, ஹங்கேரியில் உள்ள யாஸ்பெரேன் என்ற நகரில் அவர்கள் சற்றுத் தங்கினார்கள்; அங்கு ஹங்கேரிய மொழி பேசிய நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். அப்போது, அருகே இருந்த ஒரு நதிக்குச் சென்று தண்ணீர் எடுத்துவருமாறு காவலாளிகள் நிறைய சகோதரர்களை அனுப்பினார்கள். அவர்கள்மீது நம்பிக்கை இருந்ததால், அந்தக் காவலாளிகள் அவர்களைக் கண்காணிக்கவில்லை. டீயாடார் அவர்களோடு சேர்ந்து சென்றார், அந்த நதியில் முழுக்காட்டுதல் பெற்றார். பிறகு அந்தக் கைதிகள், யாஸ்பெரேனிலிருந்து ரயிலிலும் படகுகளிலும் பார் ஊருக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள்.

அந்த ஊரிலிருந்த முகாமில் அப்போது 6,000 யூதர்களும், 14 அட்வென்ட்டிஸ்ட்களும், 152 யெகோவாவின் சாட்சிகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். சகோதரர் மீரான் இவ்வாறு கூறுகிறார்: “அங்கு நிலைமை கொடுமையிலும் கொடுமையாக இருந்தது, ஆனால் யெகோவா எங்களைக் கவனித்துக்கொண்டார். எங்கள்மீது அனுதாபம் காட்டிய காவலாளி ஒருவர் அடிக்கடி ஹங்கேரிக்கு அனுப்பப்பட்டார், அவர் மூலம் பிரசுரங்கள் முகாமிற்குள் கொண்டுவரப்பட்டன. அவர் தன்னுடைய வீட்டில் இல்லாத சமயத்திலெல்லாம், அவருக்குத் தெரிந்த நம்பகமான சாட்சிகள் சிலர் அவருடைய குடும்பத்தைக் கவனித்துக்கொண்டார்கள், எனவே, சிறையிலிருந்தவர்களுக்கு அவர் ஒரு சகோதரர் போலானார். ஏதாவது அசம்பாவிதம் நடக்கவிருந்தபோது, லெஃப்ட்டெனன்ட்டான அவர் எங்களிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவார். இன்று மூப்பர்கள் என அழைக்கப்படுகிற சகோதரர்களில் 15 பேர் முகாமில் இருந்தார்கள்; வாரத்தில் மூன்று கூட்டங்களுக்கு அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். சராசரியாக, கிட்டத்தட்ட 80 பேர் அவற்றில் கலந்துகொண்டார்கள், அவரவருடைய ஷிப்ட்டைப் பொறுத்து அவற்றில் கலந்துகொண்டார்கள். கிறிஸ்துவின் மரண நினைவுநாளையும் நாங்கள் ஆசரித்தோம்.”

சில முகாம்களில், வெளியே இருந்த சாட்சிகள் சிறையிலுள்ள சகோதரர்களுக்கு உணவையும் மற்ற பொருள்களையும் கொடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 1941-லிருந்து 1945-⁠க்குள்ளாக, பெஸரேபியாவிலிருந்தும், மால்டோவாவிலிருந்தும், டிரான்ஸ்சில்வேனியாவிலிருந்தும் சுமார் 40 சாட்சிகள் டிரான்ஸ்சில்வேனியாவில் உள்ள ஷீபாட் என்ற ஊரிலிருந்த சித்திரவதை முகாமிற்கு அனுப்பப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் அந்த ஊரிலேயே இருந்த மரத் தொழிற்சாலையில் வேலைசெய்ய அவர்கள் சென்றார்கள். முகாமில் உணவுப் பற்றாக்குறை இருந்ததால், அருகில் வசித்துவந்த சாட்சிகள் அந்தத் தொழிற்சாலைக்கு ஒவ்வொரு வாரமும் உணவையும் துணிமணிகளையும் கொண்டுவந்தார்கள். அந்தப் பொருள்களை அவரவருடைய தேவைக்கு ஏற்ப சகோதரர்கள் பிரித்துக் கொடுத்தார்கள்.

இத்தகைய நற்செயல்கள், சக கைதிகளுக்கும் காவலாளிகளுக்கும் அருமையான விதத்தில் சாட்சிகொடுத்தன. யெகோவாவின் சாட்சிகள் பொறுப்புள்ளவர்கள், நம்பகமானவர்கள் என்பதையும் அங்கிருந்த காவலாளிகள் கவனித்தார்கள். எனவே, பொதுவாகக் கைதிகளுக்கு வழங்கப்படாத சில சலுகைகளை சாட்சிகளுக்கு வழங்கினார்கள். ஏன், ஷீபாட் ஊரில் காவலாளியாய் பணியாற்றிய ஒருவர்கூட பிற்பாடு சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்.

போருக்குப் பின் கிடைத்த ஆசீர்வாதங்கள்

ஐரோப்பாவில் 1945-⁠ம் வருடம் மே மாதம் போர் முடிவடைந்தபோது, யெகோவாவின் சாட்சிகள் அனைவருமே சிறைச்சாலைகளிலிருந்தும் கட்டாய உழைப்பு முகாம்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்கள். 62 வயது மார்ட்டின் மஜராஷி புகாரெஸ்ட்டுக்குத் திரும்பியபோது, அங்கிருந்த பழைய கிளை அலுவலகத்திற்குச் சென்றார்; அது வெறிச்சோடிக் கிடந்தது, ஒரு சாமானும் இருக்கவில்லை. ஏன், ஒரு டைப்ரைட்டர்கூட இருக்கவில்லை! “சூனிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த கர்த்தருடைய வேலை மீண்டும் துவங்கப்பட்டது” என்றது ஓர் அறிக்கை. ஊழியத்தை ஒழுங்கமைக்கும் வேலை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, சட்டப்பூர்வமாக அதைப் பதிவுசெய்ய சகோதரர்கள் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள்; சீக்கிரத்திலேயே அவர்களுடைய முயற்சிக்குப் பலன் கிடைத்தது. ஜூலை 11, 1945-⁠ல், ருமேனியாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளது நிறுவனம் சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த முன்னேற்றப் படியானது பொதுக் கூட்டங்களையும், மாநாடுகளையும், பிரசுரங்களின் அச்சடிப்பையும் ஒழுங்கமைக்க பெரிதும் உதவியது; இவை அனைத்துமே பிரசங்க வேலைக்குப் புதிய உத்வேகத்தை அளித்தன; அப்போதிருந்த ஏகப்பட்ட குழப்பங்கள், பிரிவினைகள் ஆகியவற்றைச் சரிசெய்யவும் உதவின. ஆம், போர் முடிந்த முதல் வருடத்திலே, அந்நாட்டில் பேப்பர் பற்றாக்குறை இருந்தபோதிலும் சகோதரர்கள் கிட்டத்தட்ட 8,70,000 சிறுபுத்தகங்களையும் 85,500-⁠க்கும் அதிகமான காவற்கோபுர பிரதிகளையும் அச்சிட்டார்கள்! அந்த வருடம் 1,630 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.

பிரசங்க வேலைக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைப்பதற்கு முன்பே சகோதரர்கள் பகிரங்கமாகச் சாட்சிகொடுக்க ஆரம்பித்தார்கள். அதுமட்டுமல்ல, கூட்டங்களுக்கும் விசேஷப் பொதுப் பேச்சுகளுக்கும் ஏற்பாடு செய்தார்கள். மாராமூரெஷ் நகராட்சிப் பகுதியிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய செயல்களை நேரில் கண்ட ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “ராணுவத்தினர் இன்னும் முழுமையாக நாட்டைவிட்டு வெளியேறாத போதிலும்கூட, அப்பகுதியிலுள்ள எல்லாக் கிராமங்களிலிருந்தும் சகோதரர்கள் ஒன்றுகூடிவந்தார்கள். துளிகூட பயப்படாமல் வந்தார்கள். அது ஒரு பரபரப்பான சமயமாக இருந்தது. சிலர் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக, சுமார் 80 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்தார்கள், வழியெல்லாம் பாட்டுப் பாடிக்கொண்டும், சாட்சி கொடுத்துக்கொண்டும் வந்தார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தின்போதும் அதற்கடுத்த வாரம் எந்த இடத்தில் கூட்டம் நடைபெறும் என்பதை சேர்மன் அறிவித்தார்.”

வெகு சில சாட்சிகள் இருந்த அல்லது சாட்சிகளே இல்லாத ஊர்களிலும் கிராமங்களிலும் சகோதரர்கள் விளம்பரம் செய்து பொதுப் பேச்சுகளைக் கொடுத்தார்கள். இந்த இடங்களுக்குச் செல்வதற்காக, சகோதரர்கள் ஏறத்தாழ நடுராத்திரியில் புறப்பட்டு, 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கால்கடுக்க நடந்துசென்றார்கள், பெரும்பாலும் வெறுங்காலிலேயே நடந்துசென்றார்கள், ஷூக்களின் விலை மிக அதிகமாக இருந்ததே அதற்குக் காரணம். அவர்களுக்கு ஷூக்கள் இருந்தாலும் அவற்றை தங்களுடைய தோள்களில் சுமந்துசென்றார்கள். சீதோஷ்ணம் படுமோசமாக இருந்தபோது மட்டும், உதாரணத்திற்கு கடுங்குளிரின்போது மட்டும், ஷூக்களை அணிந்துகொண்டார்கள். கூட்டத்திற்கு முந்தின நாள், பொதுமக்களிடம் சகோதரர்கள் பிரசுரங்களை வினியோகித்தார்கள், பொதுப் பேச்சின் தலைப்பைச் சொன்னார்கள், கூட்டங்களுக்கு வரச்சொல்லியும் அழைத்தார்கள். பேச்சு கொடுத்த பிறகு, சகோதரர்கள் வீடு திரும்பினார்கள்.

பாயா-மேரே, க்ளுஜ்-நாப்போக்கா, டிர்க்யூ-மூரெஷ், ஆக்னா மூரெஷ் ஆகிய நகரங்களில், சகோதரர்கள் ஏராளமான மாநாடுகளை நடத்தினார்கள்; அவற்றில் நூற்றுக்கணக்கான சாட்சிகளும் ஆர்வமுள்ள ஆட்களும் கலந்துகொண்டார்கள். 1945-⁠ம் வருடம், ஜூன் மாதம் பாயா-மேரே நகரில் நடந்த மாநாட்டில் முழுக்காட்டுதல் நிகழ்ச்சி சிறப்பம்சமாக இருந்தது; ஊரைவிட்டு பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்த இடத்தில் அது நடந்தது. ஒரு சகோதரரின் தோட்டத்தில் முழுக்காட்டுதல் பேச்சு கொடுக்கப்பட்ட பிறகு, 118 பேர் லப்பூஷூல் என்ற ஆற்றில் முழுக்காட்டப்பட்டார்கள்; அந்த ஆறு அச்சகோதரருடைய தோட்டத்திற்குப் பக்கத்தில் ஓடியது. அழகிய சூழலில் கொடுக்கப்பட்ட மறக்க முடியாத முழுக்காட்டுதல் அது.

டிர்க்யூ-மூரெஷில், 3,000 பேர் உட்காரும் வசதியுள்ள ஒரு திரை அரங்கத்தைச் சகோதரர்கள் வாடகைக்கு எடுத்தார்கள். மாநாட்டிற்கு முந்தைய தினம் சகோதரர்கள் ரயிலிலும், குதிரை வண்டியிலும், சைக்கிளிலும், வந்திறங்க ஆரம்பித்தார்கள்; நடந்தும்கூட வந்தார்கள். சிலர் வந்ததும் வராததுமாகப் பிரசங்கிக்கத் தொடங்கினார்கள்; நோவாவின் பேழை பற்றிய பொதுப் பேச்சைக் கேட்க ஜனங்களுக்கு அழைப்புக் கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். மணிமணியான வார்த்தைகளுடன் பொதுப் பேச்சை விளம்பரப்படுத்திய சுவரொட்டிகளை ஊர் முழுக்க பார்த்த சகோதரர்களில் அநேகர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். நற்செய்தியைப் பிரசங்கிக்க தங்களுக்கு இந்தளவு சுதந்திரம் கிடைக்குமென்று அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை!

சகோதரர்களுடைய கடின உழைப்புக்கு அபரிமிதமான பலன் கிடைத்தது​—⁠மாநாட்டிற்கு ஏராளமானோர் வந்ததால், அரங்கிற்கு வெளியேயும் ஜனங்கள் அமர வேண்டியிருந்தது, பேச்சுகளைக் கேட்பதற்கு வசதியாக வெளியே இரண்டு ஒலிபெருக்கிகளையும் பொருத்த வேண்டியிருந்தது. இதனால், அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்த பலர் தங்கள் ஜன்னல் திண்டுகளில் உட்கார்ந்தவாறே பேச்சுகளைக் கேட்டார்கள். யெகோவாவின் சாட்சிகளை நேரில் பார்ப்பதற்கும், அவர்களுடைய பேச்சுகளை நேரில் கேட்பதற்கும் நகர அதிகாரிகள் பலரும் பிரமுகர்கள் பலரும் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அனைவருமே அதில் வந்து கலந்துகொண்டது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது. எல்லாருடனும் சேர்ந்து அவர்கள் பாட்டுக்கூடப் பாடினார்கள்.

முதல் தேசிய மாநாடு

1946-⁠ம் வருடம், செப்டம்பர் 28, 29 சனி-ஞாயிறு அன்று, யெகோவாவின் சாட்சிகள் முதன்முதலாக ருமேனியாவில் தேசிய மாநாடு ஒன்றை நடத்தினார்கள். மாநாடு நடைபெற்ற இடம்: புகாரெஸ்ட்டில் உள்ள ரோம வட்டரங்கம் (ஆரினெலெ ரோமானெ). ருமேனிய ரயில்வே துறை ஒரு விசேஷ ரயில் விடுவதற்கு மட்டுமல்ல, அதன் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதற்கும் ஒப்புக்கொண்டது! ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ருமேனியாவின் மூலைமுடுக்குகள் சிலவற்றிலிருந்து அதன் தலைநகருக்கு ரயிலில் வந்திறங்கினார்கள். அவர்களில் அநேகர், வரும் வழியெல்லாம் விளம்பர அட்டைகளைப் பிடித்தவாறு வந்தார்கள், இது ஜனங்களுடைய ஆர்வத்தைப் பெருமளவு தூண்டியது. என்றாலும், ரயில் பயணத்தின்போது பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்ப்பட வேண்டியிருந்தது.

மாநாட்டைப் பற்றிக் கேள்விப்பட்ட குருமார், ரயிலைத் தடுத்து நிறுத்த முயன்றார்கள். மாநாட்டுக்கு முந்தின நாள் வெள்ளிக்கிழமை அன்று, ரயிலில் வந்திறங்கப்போகும் தங்கள் சகோதரர்களை வரவேற்க உள்ளூர் சாட்சிகள் ரயில் நிலையத்தில் ஒரு மணிநேரத்திற்கு முன்னதாகவே, அதாவது காலை 9:00 மணிக்கெல்லாம், கூடிவர ஆரம்பித்தார்கள். பிறகு, பொறுமையாய்க் காத்திருந்தார்கள், கடைசியில் மாலை 6:00 மணிக்குத்தான் ரயில் வந்துசேர்ந்தது. அதில் வந்த சகோதரர்களும் அவர்களை உபசரிக்கவிருந்த சகோதரர்களும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டார்கள், அப்போது அவர்களிடையே காணப்பட்ட பரஸ்பர சந்தோஷம் . . . அப்பப்பா, விவரிக்க வார்த்தைகளே கிடையாது. அமைதி காக்க நியமிக்கப்பட்டிருந்த ஆயுதமேந்திய போலீஸார் வேலை இல்லாமல் சும்மா நிற்க வேண்டியிருந்தது.

சுமார் 12,000 வீடுகள் உட்பட, புகாரெஸ்ட்டின் பெரும்பகுதி போரில் நாசமாக்கப்பட்டிருந்தது, எனவே, தங்குவசதிகள் அங்கு மிகக் குறைவாக இருந்தன. ஆனால் சகோதரர்கள் சமயோசிதமாகச் செயல்பட்டார்கள். பெர்ச்செனி என்ற புறநகர்ப் பகுதியில் வசித்த ஒரு சகோதரருடைய வீட்டுப் புல்தரையில் மலைபோல் வைக்கோலைக் கொண்டுவந்து பரப்பி, கூடுதல் “படுக்கை” வசதி செய்துகொடுத்தார்கள். செப்டம்பர் மாத இறுதியில், சீதோஷ்ண நிலை வழக்கத்திற்கு மாறாக வெதுவெதுப்பாய் இருந்ததால், மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் தங்கள் குழந்தை குட்டிகளோடு நட்சத்திர வானத்தின் கீழ், வைக்கோல் படுக்கையின் மேல் சௌகரியமாகப் படுத்துறங்கினார்கள். இன்று, அதே இடத்தில் மிக அழகான புத்தம்புதிய ராஜ்ய மன்றம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது.

ருமேனியன் மொழியிலும் ஹங்கேரியன் மொழியிலும் காவற்கோபுர பத்திரிகை மீண்டும் மாதம் இருமுறை வெளியிடப்படும் என மாநாட்டில் சனிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது, அதைக் கேட்டு அங்கிருந்த 3,400 பேரும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனார்கள். சொல்லப்போனால், அப்படி முதலில் அச்சிடப்பட்ட ஆயிரம் பிரதிகள் சகோதரர்களுக்கு அன்று காலை விநியோகிக்கப்பட்டன. கொஞ்சக் காலத்திற்கு அந்தப் பத்திரிகையில் நான்கு படிப்புக் கட்டுரைகள் வெளியாயின; ஏன்? போர்க் காலத்தில் அவர்கள் பெற்றுக்கொள்ள முடியாமல்போன விஷயங்களையெல்லாம் பெற்றுக்கொள்வதற்காகத்தான்.

ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் ஊழியத்திற்காக ஒதுக்கப்பட்டது. பிரஸ்தாபிகள் கூட்டங்கூட்டமாகச் சென்று பொதுப் பேச்சை விளம்பரப்படுத்துவதை எல்லா இடங்களிலும் காண முடிந்தது. அவர்களுடைய விளம்பர அட்டைகளில் ஒரு சம்மட்டி, ஒரு வாள், ஒரு பட்டறைக்கல் ஆகியவை சித்தரிக்கப்பட்டிருந்ததோடு, ஒரு வாசகமும் காணப்பட்டது; “‘பட்டயங்கள் மண்வெட்டிகளாயின’​—⁠இந்த வார்த்தைகள் கடவுளால் ஏவப்பட்டவை; இவற்றை தீர்க்கதரிசிகள் இருவர் எழுதினார்கள்; ஆனால் யார் இதன்படி நடப்பார்கள்?” என்பதே அந்த வாசகம். அழைப்பிதழ்களையும் பத்திரிகைகளையும் பிரஸ்தாபிகள் ஜனங்களுக்கு வினியோகித்தார்கள்; அவற்றை வெள்ளைத் துணிப்பைகளில் அவர்கள் எடுத்துச் சென்றார்கள், தோளில் போட்டுக்கொள்வதற்கு வசதியாக அந்தப் பைகளில் ஸ்டிராப் இணைக்கப்பட்டிருந்தது; அதோடு, அந்தப் பைகளின் மீது “யெகோவாவின் சாட்சிகள்” அல்லது “கடவுளுடைய ராஜ்ய அறிவிப்பாளர்கள்” அல்லது “தேவ ஆட்சியின் அறிவிப்பாளர்கள்” என்ற வார்த்தைகள் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தன.

மதிய நிகழ்ச்சியின்போது, மார்ட்டின் மஜராஷி பொதுப் பேச்சை இவ்வாறு ஆரம்பித்தார்: “மாபெரும் வல்லரசுகள் இன்று பாரீஸில் சமாதான மாநாட்டை நடத்திக்கொண்டிருக்கின்றன. அதே சமயம் இங்கு நம்முடைய மாநாட்டில், 15,000 பேர் கூடியிருக்கிறோம். இங்கிருக்கும் ஒவ்வொரு யெகோவாவின் சாட்சியையும் நீங்கள் சோதனை போட்டால், உங்களுக்கு ஒரு வாளோ, ஒரு துப்பாக்கியோகூட கிடைக்காது. ஏன்? ஏனெனில், நம்முடைய பட்டயங்களை நாம் ஏற்கெனவே மண்வெட்டிகளாக மாற்றியிருக்கிறோம்!” போரின் நாசகர விளைவுகளால் எல்லா இடங்களும் பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சமயத்தில் கொடுக்கப்பட்ட இப்பேச்சு ஊக்கம் அளிப்பதாகவும், காலத்துக்கு ஏற்றதாகவும் இருந்தது.

தலைமை சட்ட வழக்கறிஞர், உள்துறை அமைச்சரின் செயலர், ஏராளமான போலீஸ் அதிகாரிகள், ஏராளமான ஆர்த்தடாக்ஸ் சர்ச் பாதிரிமார் ஆகியோரெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மாநாட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். பாதிரிமார் ஏற்கெனவே பயமுறுத்தியபடி ஏதோ குழப்பத்தை உண்டுபண்ணப் போகிறார்கள் எனச் சகோதரர்கள் எதிர்பார்த்தார்கள், அதிகாரிகளும்கூட எதிர்பார்த்தார்கள். ஆனால் ஒரேவொரு பாதிரி மட்டும் நிகழ்ச்சியின்போது குறுக்கிட முயன்றார். மேடையில் பொதுப் பேச்சைக் கொடுத்துக்கொண்டிருந்த பேச்சாளரை நோக்கி அவர் செல்வதைப் பார்த்த சகோதரர்கள், ஓடிப்போய் அவரைத் தடுத்து, வலுக்கட்டாயமாக அவருடைய கைகளைப் பிடித்து, இழுத்துவந்து சீட்டில் உட்கார வைத்தார்கள். இழுத்து வந்தவர்கள், “ஒரு ஆர்த்தடாக்ஸ் பாதிரி இந்தக் கூட்டத்தில் பேச வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் தாராளமாக சீட்டில் உட்கார்ந்து பேச்சுகளைக் கேட்கலாம்” என அவருடைய காதில் கிசுகிசுத்துவிட்டு சென்றார்கள். அந்தப் பாதிரி மீண்டும் மேடைப் பக்கம் போக முயற்சி செய்யவில்லை. அரசு தலைமை வழக்கறிஞர், மாநாட்டுப் பேச்சுகளை தான் ரசித்ததாகவும் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒழுங்கைக் கண்டு வியந்ததாகவும் பிற்பாடு தெரிவித்தார்.

அந்த மாநாட்டைக் குறித்து ஒரு சகோதரர் இவ்வாறு எழுதினார்: “எதிரிகளுடைய சதித்திட்டம் படுதோல்வி அடைந்தது, சகோதரர்கள் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.” சகோதரர்கள் புதிய உத்வேகத்துடன் சமாதானத்தோடும் ஐக்கியத்தோடும் செயல்படத் தொடங்கியது ஊக்கமூட்டுவதாய் இருந்தது; ஏனெனில் போர்க் காலத்தின்போது சகோதரர்களிடையே ஏற்பட்ட பிரிவினைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களில் அநேகர் ஒருவித குழப்பத்துடன் அந்த மாநாட்டுக்கு வந்திருந்தார்கள்.

ஆனால் குருமாருக்கு சூழ்நிலை அத்தனை சாதகமாக அமையவில்லை, ஏனென்றால், அநேக இடங்களில் அரசாங்க அதிகாரிகளைத் தூண்டிவிட்டு யெகோவாவின் சாட்சிகளை ஆட்டிப்படைக்க அவர்களால் முடியவில்லை. என்றாலும், சர்ச்சுகளில் பிரசங்கிக்கும்போது சகோதரர்களைப் பற்றித் தொடர்ந்து தரக்குறைவாகவே பேசிவந்தார்கள். இன்னும் சில பாதிரிகளோ, ஒருபடி மேலாகச் சென்று, ஊழியத்தில் ஈடுபடுகிற ஆண்கள், பெண்கள் என ராஜ்ய பிரஸ்தாபிகள் அனைவரையும் அடித்துப்போட குண்டர்களைக் கூலிக்கு அமர்த்தினார்கள். ஒருமுறை, ஆர்த்தடாக்ஸ் பாதிரி ஒருவரின் மனைவி, நம்முடைய பயனியர் சகோதரியை ஒரு பிரம்பால் அடித்து நொறுக்கினார், அதுவும் அந்தப் பிரம்பு உடைந்துபோகும்வரை! “அத்தகைய குருமாருக்கு எதிராக பல முறை சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது” என அச்சமயத்தில் வெளியான ஓர் அறிக்கை கூறியது.

ஐக்கியத்தைத் திரும்ப நிலைநாட்ட மேலுமான முயற்சிகள்

1947-⁠ல், சுவிட்சர்லாந்து கிளை அலுவலகத்தைச் சேர்ந்த ஆல்ஃபிரேட் ரூயிட்டீமான் ருமேனியாவில் இரண்டு மாதம் தங்கினார். ஒரு மாநாட்டை நடத்த வேண்டுமென்பதும், உலகத் தலைமையகத்தைச் சேர்ந்த ஹேடன் சி. கவிங்டன் என்ற சகோதரரோடு ரூயிட்டீமானை அனுப்பிவைக்க வேண்டுமென்பதுமே அப்போதைய திட்டமாக இருந்தது. ஆனால், மாநாட்டை நடத்த அனுமதி அளிப்பதற்கும், சகோதரர் கவிங்டனுக்கு விசா வழங்குவதற்கும் அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். என்றாலும், ஆல்ஃபிரேட் ரூயிட்டீமானுக்கு இரண்டு மாத விசா வழங்கினார்கள்; இதன் காரணமாக, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களின்போது அவரால் ருமேனியாவில் தங்க முடிந்தது.

முதலில் அவர் புகாரெஸ்ட்டுக்கு விஜயம் செய்தார்; விமான நிலையத்தில் நிறைய சகோதர சகோதரிகள், முகத்தில் புன்னகையோடும் கையில் பூச்செண்டோடும் அவரை வரவேற்றார்கள்; பூச்செண்டு கொடுத்து வரவேற்பதுதான் அவர்களுடைய பாரம்பரிய வழக்கம். 38 ஆல்யான் தெரு என்ற விலாசத்திலிருந்த புகாரெஸ்ட் கிளை அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்றார்கள்; ஆர்வம்காட்டிய ஒருவருடைய வீடு அது. ஜனவரி 1947-⁠ல் கிளை அலுவலகம் அங்கு மாற்றப்பட்டிருந்தது. என்றாலும், கம்யூனிஸ அச்சுறுத்தலின் காரணமாக, 38 பெஸரேபியா தெரு என்ற விலாசத்திலிருந்த கிளை அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ விலாசத்தையே சகோதரர்கள் பயன்படுத்தினார்கள். அந்த விலாசத்திலிருந்த கட்டடம் ஜூலை 1945-⁠ல் விலைக்கு வாங்கப்பட்டிருந்தது; அதில் ஒரு பழைய டேபிளும் சோஃபாவும் போடப்பட்டிருந்தது, உடைந்துபோன ஒரு டைப்ரைட்டரும், ஓர் அலமாரி முழுக்க பழுப்பேறிய சிறுபுத்தகங்களும் பத்திரிகைகளும் வைக்கப்பட்டிருந்தன; ஒருவேளை இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டால்கூட பிரசங்க வேலைக்குத் தடங்கல் வராது. ஒரு சகோதரி அவ்வப்போது அங்கு சென்று வேலை பார்த்தார்.

சகோதரர் ரூயிட்டீமான், சட்டப்பூர்வ ஸ்தாபனத்தின் பொறுப்பாளரான பாம்ஃபில் ஆல்பூவையும், ருமேனியாவில் நடைபெற்ற பிரசங்க வேலையை மேற்பார்வை செய்து வந்த மார்ட்டின் மஜராஷியையும் சந்தித்தார். இவ்விரு சகோதரர்களும் மாவட்டக் கண்காணிகளாகவும் சேவை செய்து வந்தார்கள். ருமேனிய சகோதரர்களுக்கு நிறைய வருடங்கள் அமைப்போடு அந்தளவு தொடர்பு இல்லாதிருந்தது, அதனால் யெகோவாவுடைய அமைப்பின் சமீப கால முன்னேற்றங்களைப் பற்றிக் கேள்விப்பட்டபோது அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்; உதாரணத்திற்கு, சபைகளில் தேவராஜ்ய ஊழியப் பள்ளி ஏற்படுத்தப்பட்டதையும், மிஷனரிகளைப் பயிற்றுவிக்கும் கிலியட் பள்ளி நிறுவப்பட்டதையும் கேட்டபோது அகமகிழ்ந்தார்கள். ருமேனியாவில் தேவராஜ்ய ஊழியப் பள்ளியை ஆரம்பிப்பது குறித்து அவர்கள் அனைவருமே வெகு ஆர்வமாக இருந்தார்கள். சொல்லப்போனால், ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு தேவராஜ்ய உதவி என்ற அந்தப் பள்ளிப் பாடப் புத்தகத்திலுள்ள 90 பாடங்களையும் ருமேனியன், ஹங்கேரியன் மொழிகளில் பகுதி பகுதியாய் அச்சிட சகோதரர்கள் உடனடி ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

என்றபோதிலும், முடிந்தளவு எல்லாச் சபைகளுக்கும் தொகுதிகளுக்கும் சென்று, மாநாட்டில் கேட்ட முக்கிய பேச்சுகளின் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே சகோதரர் ரூயிட்டீமானின் குறிக்கோளாக இருந்தது. எனவே, சத்தியம் நன்கு வேரூன்றிய இடங்களுக்கு அவரும், மொழிபெயர்ப்பாளராகச் சேவை செய்த சகோதரர் மஜராஷியும் இரண்டு கட்டச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்கள்; முதற்கட்ட சுற்றுப்பயணத்தில் டிரான்ஸ்சில்வேனியாவுக்குச் சென்றார்கள்.

டிரான்ஸ்சில்வேனியாவுக்கும் அதற்கு அப்பாலும்

மற்ற இடங்களிலிருந்த பிரஸ்தாபிகளைப் போலவே, டிரான்ஸ்சில்வேனியாவிலிருந்த பிரஸ்தாபிகளும் அந்த விசேஷக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக பெருமளவு முயற்சியெடுத்தார்கள். தங்களைச் சந்திக்க வந்திருந்த அவ்விரு சகோதரர்களின் படுபிஸியான அட்டவணையைப் புரிந்துகொண்ட அவர்கள், இரவு வெகுநேரம் கண்விழித்திருக்கவும் தயாராக இருந்தார்கள். உதாரணத்திற்கு, வாமா பூஸயூலூயி என்ற கிராமத்தில் அவர்களுடைய நிகழ்ச்சி இரவு 10:00 மணிக்குத் தொடங்கி விடியற்காலை 2:00 மணிக்கு முடிவடைந்தது​—⁠ஆனால், அங்கு கூடியிருந்த 75 பேரிடமிருந்து எந்தவொரு முணுமுணுப்பும் வரவில்லை.

ஆல்ஃபிரேட் ரூயிட்டீமான் பிற்பாடு இவ்வாறு எழுதினார்: “நேரத்தைக் குறித்த இந்த சகோதர சகோதரிகளுடைய கருத்து சுவிட்சர்லாந்துக்காரர்களான எங்களுடைய கருத்திலிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. தங்களைச் சந்திக்க வருபவர்களுக்காக விடியற்காலை 2:00 அல்லது 3:00 மணிக்கு எழுந்திருக்கக்கூட அவர்கள் தயாராக இருக்கிறார்கள்; எங்களைப் போல் நேரத்தைப் பற்றி அவர்கள் அவ்வளவாகக் கவலைப்படுவதே இல்லை! எங்கு சென்றாலும் அவர்கள் நடந்தே செல்கிறார்கள்​—⁠சிலசமயம் நெடுந்தூரத்திற்கு வெறுங்காலிலேயே நடந்துசெல்கிறார்கள்​—⁠என்றாலும், எங்களைவிட அவர்களுக்கு நேரம் அதிகமாக இருப்பது போலவும், எங்களைப் போல அதிகக் கவலைப்படாதது போலவுமே தெரிகிறது. இரவு அத்தனை நேரங்கழித்து கூட்டத்தை ஏற்பாடு செய்தது மடத்தனம் என நான் ஆரம்பத்தில் நினைத்தேன், ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று சகோதரர் மஜராஷி என்னிடம் உறுதிகூறினார்.”

அடுத்ததாக, டிர்க்யூ-மூரெஷுக்கு அவர்கள் விஜயம்செய்தார்கள்; அப்போது அந்நகரின் ஜனத்தொகை 31,000-ஆக இருந்தது. போரின்போது பாதிக்கப்பட்ட நகரங்களில் அதுவும் ஒன்று, அங்கு ஒரு மேம்பாலம்கூட மீந்திருக்கவில்லை. என்றாலும், அந்நகருக்கு அருகே இருந்த காட்டுப்பகுதியிலே, திறந்தவெளியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள, 25 சபைகளிலிருந்து 700 சகோதரர்கள் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்திருந்தார்கள்.

அடுத்து, இவ்விரு சகோதரர்களும் க்ளுஜ்-நாப்போக்காவுக்குச் சென்றார்கள்; அங்கு கொடுக்கப்பட்ட பேச்சைக் கேட்க 48 சபைகளிலிருந்து 300 பேர் வந்தார்கள். இந்நகரிலிருந்தபோது, சகோதரர் ரூயிட்டீமானுக்கு சகோதரர் மஜராஷி ஓர் அச்சகத்தைக் காண்பித்தார்; யெக்காப் ஷீமாவின் விசுவாசதுரோக செயலால் 1928-⁠ல் அமைப்பின் அச்சகம் பறிபோனது. ஷீமாவுக்கு என்ன ஆயிற்று? “போன வருடம் அவர் இறந்துவிட்டார்; ஒரு குடிகாரராக ஆகியிருந்தார்” என்று தன் அறிக்கையில் எழுதினார் சகோதரர் ரூயிட்டீமான்.

அடுத்து, இவ்விரு சகோதரர்களும் உக்ரைனுக்கு அருகிலிருந்த ஸாட்டூ-மாரே என்ற நகருக்கும் சீகெட் மார்மாட்யே என்ற நகருக்கும் விஜயம்செய்தார்கள். இந்தப் பகுதியில் உக்ரேனியன், ருமேனியன், ஹங்கேரியன் மொழி சபைகள் 40-⁠க்கும் மேலாக இருந்தன. அங்கிருந்த விவசாயிகளுக்கும் கிராமவாசிகளுக்கும் வெளி உதவி அதிகமாகத் தேவைப்படவே இல்லை. ஏனெனில், தங்களுக்குத் தேவையான பயிர் வகைகளையும், சணல் செடிகளையும் சொந்தமாக விளைவித்தார்கள்; மிருகங்களை, குறிப்பாக ஆடுகளைச் சொந்தமாக வளர்த்தார்கள். துணிமணிகளையும், கம்பளிப் போர்வைகளையும், தோல் பொருள்களையும் தாங்களே தயாரித்துக்கொண்டார்கள். அந்தக் கிராமத்திலிருந்த செருப்பு தைக்கும் தொழிலாளி அவர்களுடைய ஷூக்களைச் செய்துகொடுத்தார். அநேக சகோதர சகோதரிகள் அந்த விசேஷக் கூட்டங்களுக்கு வீட்டில் தயாரித்த உடைகளையே அணிந்து வந்திருந்தார்கள்; எம்பிராய்டரி செய்யப்பட்ட பருத்தி, சணல் துணிகளால் ஆன பாரம்பரிய உடைகள் அவை.

இரண்டாம் கட்ட பயணத்தில், சகோதரர் ரூயிட்டீமானும் மஜராஷியும் ருமேனியாவின் வடகிழக்கில் உள்ள மால்டேவியாவுக்குச் சென்றார்கள். முதலில், ஃபிரட்டயூட்ஸி நகராட்சிப் பகுதிக்கு விஜயம்செய்தார்கள்; அங்கிருந்த சகோதரர்கள் ஏழைகளாக இருந்தபோதிலும் ரொம்பப் பிரமாதமாக உபசரித்தார்கள். தங்களைச் சந்திக்க வந்திருந்த சகோதரர்களுக்கு எண்ணெய் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் உணவு பரிமாறினார்கள்; பால், பிரெட், போலென்ட்டா ஆகியவற்றோடு, நெய்யில் முங்கியும் முங்காமலும் இருந்த வேக வைத்த முட்டைகள் என விதவிதமாக சமைத்துக்கொடுத்து அவர்களை அசத்தினார்கள். சிறுசிறு கிண்ணங்களில் எல்லாரும் உணவு அருந்தினார்கள். “சாப்பாடு ரொம்ப ருசியாக இருந்தது” எனப் பிற்பாடு எழுதினார் சகோதரர் ரூயிட்டீமான். சமையல் அறை அடுப்புக்குப் பக்கத்தில் கதகதப்பாய் இருக்கும் என்பதால் அன்றிரவு அந்தச் சகோதரர்களுக்கு அங்கு படுக்கைகள் விரிக்கப்பட்டன. அந்த வீட்டிலிருந்தவர்களும் அவர்கள் அருகிலேயே வைக்கோல் பைகள்மீது படுத்து உறங்கினார்கள்.

இந்தப் பிராந்தியத்திலிருந்த சாட்சிகள் வைராக்கியமாக ஊழியம் செய்தார்கள்; இதனால் யெகோவாவிடமிருந்து அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்கள், பதிவுகள் இதைக் காண்பிக்கின்றன. 1945-⁠ம் வருடத்தின் இளவேனிற்காலத்தில், அங்கு 33 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். 1947-⁠ல் இச்சகோதரர்களுடைய விஜயத்தின்போது 350 பேர் இருந்தார்கள்​—⁠இரண்டே வருடங்களில் பத்து மடங்கு அதிகரிப்பு!

தங்களுடைய பயணம் நிஜமாகவே ஒரு பட்டிக்காட்டுப் பயணம்போல் இருக்க வேண்டுமென்பதற்காக, இவ்விரு சகோதரர்களும் அடுத்து 120 கிலோமீட்டர் தூரம் இரட்டைக் குதிரை வண்டியில் பல்கயூட்ஸி, ஈவன்கயூட்ஸி ஆகிய கிராமங்களுக்குச் சென்றார்கள். “அந்தச் சிறிய, ஆனால் அருமையான ருமேனிய குதிரைகள் எந்த ரோட்டில் வேண்டுமானாலும் போகும், எவ்வளவு மோசமாக இருந்தாலும் போகும், பகலோ இரவோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போகும்” என எழுதினார் ஒரு சகோதரர். பல்கயூட்ஸி சபை 1945-⁠ல் உருவானது; அதன் பிரஸ்தாபிகள் முன்னர் இவான்ஜலிக்கல் சர்ச்சுக்கு சென்றுகொண்டிருந்தவர்கள். அந்த சர்ச்சில் ஒரு பிரசங்கியாக இருந்தவர் இப்போது இந்தச் சபையின் ஊழியராக இருந்தார். ஈவன்கயூட்ஸி கிராமத்தில் விசேஷக் கூட்டம் ஒரு சகோதரரின் வீட்டில் நடந்தது, காரணம் மழை! ஆனால், கூடிவந்திருந்த 170 பேருக்கு அதுவொன்றும் பெரிய அசௌகரியமாக இருக்கவில்லை, ஏனெனில் அவர்களில் சிலர் அங்கு வருவதற்காக 30 கிலோமீட்டர் தூரத்திற்கு வெறுங்காலிலேயே நடந்துவந்திருந்தார்கள்.

ஆக மொத்தத்தில், இவ்விரு சகோதரர்களும் 19 இடங்களில் பேச்சுகள் கொடுத்தார்கள்; 259 சபைகளைச் சேர்ந்த 4,504 பிரஸ்தாபிகள் அவர்களுடைய பேச்சைக் கேட்க வந்திருந்தார்கள். சுவிட்சர்லாந்திற்குத் திரும்பிப்போகும் வழியில், ஆல்ஃபிரேட் ரூயிட்டீமான், ஆரஷ்டீயா என்ற நகரிலும் ஆராட் என்ற நகரிலும் பேச்சுகள் கொடுத்தார்; அங்கேயும் அநேக சகோதரர்கள் 60-80 கிலோமீட்டர் தூரம் நடந்துவந்து அவருடைய பேச்சுகளைக் கேட்டார்கள். சொல்லப்போனால், 60 வயது நிரம்பிய ஒரு விவசாயி, 100 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்திருந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! எப்பேர்ப்பட்ட போற்றுதல் அவருக்கு!

அந்த விசேஷக் கூட்டங்கள் ருமேனியாவின் ஊழிய சரித்திரத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தன; சகோதரர்களுக்கு ஊக்குவிப்பு தேவைப்பட்டதால் மட்டுமல்ல, ஆனால் ஆன்மீக அறுப்புக்கான சமயம் வந்துவிட்டதாலுமே அந்தக் கூட்டங்கள் காலத்துக்கு ஏற்றவையாக இருந்தன. தங்களை ஆட்டிப்படைத்த ஆட்சியாளர்களைக் கண்டும், போரின் அவலங்களைக் கண்டும் ருமேனியர்கள் வெறுத்துப்போயிருந்தார்கள், அநேகர் மதத்தின் மீது நம்பிக்கை இழந்திருந்தார்கள். போதாக்குறைக்கு, ஆகஸ்ட் 1947-⁠ல் பணவீக்கம் காரணமாக அவர்களுடைய நாட்டின் கரன்சியான லேயுவின் மதிப்பு கிடுகிடுவென குறைந்துபோனது, ஏராளமானோர் ஒரே நாளில் ஓட்டாண்டி ஆனார்கள். எனவே, முன்பு ராஜ்ய செய்தியை எதிர்த்தவர்கள் இப்போது ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தார்கள்.

மற்றொரு காரணத்திற்காகவும் அந்த விசேஷக் கூட்டங்கள் காலத்துக்கு ஏற்றவையாய் இருந்தன​—⁠ஆம், மிகக் கடுமையான புதிய துன்புறுத்தல் தலைகாட்டிக்கொண்டிருந்தது. அந்தத் தீக்கு நாத்திகக் கொள்கை எண்ணெய் வார்த்துக்கொண்டிருந்தது; ஈவிரக்கம் இல்லாத, சகிப்புத்தன்மை இல்லாத தலைவர்கள் அதைத் தூண்டிவிட்டுக்கொண்டிருந்தார்கள்; ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு துன்புறுத்தல் எனும் அந்தத் தீ கொழுந்துவிட்டு எரிய இருந்தது!

சோவியத் ஆதிக்கத்தில் ருமேனியா

ஆல்ஃபிரேட் ரூயிட்டீமானின் விஜயத்திற்கு முந்தின வருடம், அதாவது 1946-⁠ம் வருடம், நவம்பர் மாதத்தின்போது ருமேனியாவில் கம்யூனிஸ ஆட்சி தொடங்கியது. அடுத்த சில வருடங்களில் அந்த ஆட்சி அப்போதிருந்த கொஞ்சநஞ்ச எதிர்ப்பையும் தகர்த்துப்போட்டது, பிறகு ருமேனியாவை சோவியத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது; இதன் மூலம் ருமேனியாவின் கலாச்சார, அரசியல் நிறுவனங்கள் சோவியத் யூனியனின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டன.

துன்புறுத்தல் எனும் தீ பரவ ஆரம்பிப்பதற்கு முன் இருந்த அமைதியான காலத்தைச் சகோதரர்கள் நல்ல விதத்தில் பயன்படுத்திக்கொண்டார்கள்; லட்சக்கணக்கான பத்திரிகைகளையும், சிறுபுத்தகங்களையும், மற்ற பிரசுரங்களையும் அப்போது அச்சடித்து, நாடெங்குமிருந்த 20 டிப்போக்களுக்கு அவற்றை அனுப்பி வைத்தார்கள். அதேசமயம், அநேகர் ஊழியத்தில் அதிகமாக ஈடுபட்டார்கள், சிலர் பயனியர் சேவை செய்ய ஆரம்பித்தார்கள்; அவர்களில் மீஹை நிஸ்டார் என்பவரும் வாஸீலீ சாபாடஷ் என்பவரும் இருந்தார்கள்.

மீஹை, வடமேற்கு மற்றும் மத்திய டிரான்ஸ்சில்வேனியாவுக்கு நியமிக்கப்பட்டார்; கம்யூனிஸ தடைக்குப் பிறகும் அவர் தொடர்ந்து அங்கு பயனியர் ஊழியம் செய்து வந்தார்; அப்போது எதிரிகளின் கையில் சிக்காமல் நெடுநாளைக்கு அவர் தப்பி வந்தார். அவரால் எப்படித் தப்பிக்க முடிந்தது? அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஜன்னல் கண்ணாடிகளை விற்கும் ஆட்கள் உபயோகித்ததைப் போன்ற ஒருவித பையை நான் தயாரித்துக்கொண்டேன். பிறகு, வேலை செய்கையில் போட்டுக்கொள்கிற உடைகளுடனும், ஜன்னல் கண்ணாடிகளுடனும், கைக்கருவிகளுடனும் எனக்கு நியமிக்கப்பட்ட கிராமங்களிலும், நகரங்களிலும் சுற்றித்திரிந்தேன். போலீஸாரை அல்லது சந்தேகத்திற்குரிய யாரோ ஒருவரைப் பார்த்தபோதெல்லாம் உரத்த குரலில் கூவிக்கூவி ஜன்னல் கண்ணாடிகளை விற்க ஆரம்பித்தேன். மற்ற சகோதரர்களோ எதிரிகளிடமிருந்து நழுவுவதற்காக வெவ்வேறு முறைகளைக் கையாண்டார்கள். இப்படி ஊழியம் செய்தது பரபரப்பாக இருந்தாலும், அது ஆபத்தானதாயிருந்தது​—⁠பயனியர்களான எங்களுக்கு மாத்திரமல்ல, நாங்கள் தங்குவதற்கு இடங்கொடுத்த குடும்பங்களுக்கும்தான். என்றாலும், எங்களோடு பைபிள் படித்தவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்தபோதும், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைப் பார்த்தபோதும் எங்களுக்கு ரொம்பவுமே சந்தோஷமாக இருந்தது.”

வாஸீலீ சாபாடஷும் தொடர்ந்து பயனியர் ஊழியம் செய்தார், அடிக்கடி வெவ்வேறு இடங்களுக்கு மாறிச்செல்ல வேண்டியிருந்தபோதிலும் தொடர்ந்து பயனியர் ஊழியம் செய்தார். புதிய கம்யூனிஸ ஆட்சியிலிருந்த மிகப் பரந்த பாதுகாப்பு அமைப்பின் மையமான செக்யூரிட்டெட்டினால் சிதறியடிக்கப்பட்ட சகோதரர்களைக் கண்டுபிடிப்பதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் அவர் பெருமளவு ஒத்தாசைபுரிந்தார். “போலீஸாரின் கைகளில் சிக்காதிருக்க நான் வெகு உஷாராக இருக்க வேண்டியிருந்தது, புதுப்புது உத்திகளையும் கையாள வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, நாட்டின் பல்வேறு பகுதிக்குப் பயணித்தபோதெல்லாம், சிகிச்சைக் குளியல் ரிஸார்ட்டுக்குப் போகும்படி டாக்டர் சிபாரிசு செய்தாரென்று ஒரு காரணத்தைச் சொன்னேன், அல்லது அதுபோன்ற தகுந்த வேறு ஏதாவதொரு காரணத்தைச் சொன்னேன்.

“சந்தேகம் வராதபடி நடந்துகொண்டதால், சகோதரர்களுடன் என்னால் தொடர்புகொள்ள முடிந்தது, இவ்வாறு ஆன்மீக உணவு அவர்களுக்குத் தவறாமல் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள முடிந்தது. ஏசாயா 6:8-⁠ல் சொல்லப்பட்டுள்ள, ‘இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்’ என்ற வசனமும், மத்தேயு 6:33-⁠ல் சொல்லப்பட்டுள்ள, ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள்’ என்ற வசனமுமே என்னுடைய தாரகமந்திரங்களாக இருந்தன. இந்த வசனங்கள் எனக்குச் சந்தோஷத்தையும் தந்தன, சகித்திருப்பதற்கு வேண்டிய பலத்தையும் தந்தன” என்று சொல்லி முடித்தார் வாஸீலீ. மிக உஷாராக இருந்தும்கூட, கடைசியில் மற்ற அநேகரைப் போல கைதாகவிருந்த அவருக்கு அந்த இரண்டு குணங்களுமே மிகவும் தேவைப்பட்டன.

கடவுளுடைய அமைப்புக்கு எதிராகப் பயங்கர தாக்குதல்கள்

1948-⁠க்குள்ளாக, உலகத் தலைமை காரியாலயத்தோடு கடிதத் தொடர்புகொள்வது மிகமிகக் கடினமானது, அதனால் சகோதரர்கள் பெரும்பாலும் போஸ்ட்கார்டுகளில் ரகசிய குறியீட்டு முறையில் செய்திகளை அனுப்பினார்கள். புகாரெஸ்ட் கிளை அலுவலகத்தில் வேலை செய்த சக ஊழியரான பீட்ரெ ரான்க்கா என்பவரிடமிருந்து வந்திருந்த ஒரு செய்தியை மார்ட்டின் மஜராஷி 1949, மே மாதம் தலைமை காரியாலயத்திற்கு அனுப்பி வைத்தார். அதில் அவர் சொன்னதாவது: “குடும்பத்திலுள்ள எல்லாரும் நலம். படுபயங்கரமான காற்றும் கடுங்குளிரும் இங்கு நிலவியது, அதனால் எங்களால் வயலில் வேலை செய்ய முடியவில்லை.” பிற்பாடு, மற்றொரு சகோதரர் இவ்வாறு எழுதினார்: “குடும்பத்திலுள்ளவர்கள் எந்த இனிப்புப் பலகாரங்களையும் பெற்றுக்கொள்ளும் நிலைமையில் இல்லை,” “நிறைய பேர் உடம்பு சுகமில்லாமல் இருக்கிறார்கள்;” அதாவது ருமேனியாவுக்குள் ஆன்மீக உணவை அனுப்ப முடியாது என்றும், நிறைய சகோதரர்கள் சிறையில் இருந்தார்கள் என்றும் அவர் அர்த்தப்படுத்தினார்.

1949, ஆகஸ்ட் 8-⁠ம் தேதியன்று நீதித்துறை வெளியிட்ட தீர்மானத்திற்குப் பின், புகாரெஸ்ட் அலுவலகமும் குடியிருப்புக் கட்டடங்களும் மூடப்பட்டன; சகோதரர்களின் சொந்த சாமான்கள் உட்பட, அங்கிருந்த அனைத்து கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்துவந்த வருடங்களின்போது, நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்கள். பாஸிச ஆட்சியில், யெகோவாவின் சாட்சிகள் கம்யூனிஸவாதிகள் எனக் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்கள்; ஆனால் கம்யூனிஸ ஆட்சியின்போதோ, சகோதரர்கள் “ஏகாதிபத்தியவாதிகள்” என்றும் “அமெரிக்க பிரச்சாரகர்கள்” என்றும் முத்திரை குத்தப்பட்டார்கள்.

ஒற்றர்களும், காட்டிக்கொடுப்பவர்களும் ஒரு இடம் விடாமல் எல்லா இடத்தையும் வேவுபார்த்தார்கள். கம்யூனிஸவாதிகளின் நடவடிக்கைகள் “இப்போது மிகத் தீவிரமடைந்திருக்கிறது; எனவே, ருமேனியாவில் உள்ள யாராவது மேற்கத்திய நாடுகளிலிருந்து கடிதத்தைப் பெற்றுக்கொண்டால் அந்த நபருடைய பெயர் கரும்பட்டியலில் சேர்க்கப்படுகிறது, அவருடைய நடமாட்டங்கள் மிக உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன” என இயர்புக் 1953 (ஆங்கிலம்) கூறியது. “அங்கு நிலவுகிற திகிலூட்டும் சூழ்நிலையைக் கற்பனை செய்யவே முடியாது. சொந்தக் குடும்பத்தார்மீதுகூட நம்பிக்கை வைக்க முடியாமல் இருக்கிறது. சுதந்திரமே பறிபோய்விட்டிருக்கிறது” என அது மேலுமாகக் கூறியது.

1950-களின் ஆரம்பத்தில் பாம்ஃபில் ஆல்பூ, இலனா ஆல்பூ, பீட்ரெ ரான்க்கா, மார்ட்டின் மஜராஷி ஆகியோர் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டு, மேற்கத்தியருக்கு ஒற்றர்களாய் இருந்ததாகப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டார்கள். ரகசிய தகவல்களை அவர்களிடமிருந்து வரவழைப்பதற்காகவும், அவர்கள் “ஒற்றர்களே” என்பதை ஒத்துக்கொள்ள வைப்பதற்காகவும், சிலர் சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஆனால், தாங்கள் யெகோவாவை வணங்குபவர்கள், அவருடைய ராஜ்ய வேலைகளைச் செய்பவர்கள் என்பதைத் தவிர அவர்கள் வேறெந்த உண்மையையும் வெளியிடவில்லை. இந்தச் சித்திரவதைகளுக்கெல்லாம் பிறகு, சில சகோதரர்கள் சிறைகளுக்கு அனுப்பப்பட்டார்கள், மற்றவர்கள் கட்டாய உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். ஒன்றன் பின் ஒன்றாக வந்த இந்தத் துன்புறுத்தல், பிரசங்க வேலையின்மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது? அதே வருடத்தில்​—⁠1950-⁠ல்​—⁠பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 8 சதவீத அதிகரிப்பு இருந்தது. கடவுளுடைய ஆவியின் வல்லமைக்கு எப்பேர்ப்பட்ட சான்று!

70 வயதை எட்டவிருந்த சகோதரர் மஜராஷி, டிரான்ஸ்சில்வேனியாவில் உள்ள கெர்லா சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்; அங்கு 1951-⁠ம் வருடக் கடைசியில் காலமானார். “குறிப்பாக அவர் ஜனவரி 1950-⁠ல் கைதுசெய்யப்பட்டது முதற்கொண்டு, சத்தியத்திற்காக ஏகப்பட்ட கடுஞ்சோதனைகளை அனுபவித்தார். இப்போது அவருடைய சோதனைகளெல்லாம் முடிவடைந்தன” என்று ஓர் அறிக்கை கூறியது. ஆம், சுமார் 20 ஆண்டுகளுக்குக் குருமாராலும், ஃபாசிஸவாதிகளாலும், கம்யூனிஸவாதிகளாலும் சகோதரர் மார்ட்டின் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டார். உத்தமத்தைக் காத்துக்கொண்டதில் அவருடைய உதாரணம் அப்போஸ்தலன் பவுலுடைய பின்வரும் வார்த்தைகளை நினைப்பூட்டுகிறது: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.” (2 தீ. 4:7) அவருடைய மனைவி மரியா சிறையில் அடைக்கப்படாவிட்டாலும், துன்பகாலத்தில் சகித்திருந்ததில் அவரும்கூட அருமையான முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவர் “புத்திசாலியான சகோதரி, கர்த்தருடைய வேலைக்காகத் தன்னையே முழுமையாய் அர்ப்பணித்தவர்” என்று அவரைப் பற்றி சகோதரர் ஒருவர் விவரித்தார். மார்ட்டின் கைதான பிறகு, மரியாவை அவருடைய சொந்தக்காரர்கள் கவனித்துக்கொண்டார்கள்; அவருடைய வளர்ப்பு மகளான மரிவேராவும் அவரைக் கவனித்துக்கொண்டார்; மரிவேராவும்கூட சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு 1955 இலையுதிர் காலத்தின்போது விடுதலையானார்.

“யெகோவாவின் சாட்சிகள் பாராட்டுக்குரியவர்கள்”

1955-⁠ல் அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கி, பெரும்பாலான சகோதரர்களை விடுவித்தது. ஆனால் அந்தச் சுதந்திரம் கொஞ்ச காலத்திற்கே நீடித்தது. 1957-லிருந்து 1964 வரை, யெகோவாவின் சாட்சிகள் மீண்டும் ‘வேட்டையாடப்பட்டு,’ கைதுசெய்யப்பட்டார்கள்; சிலர் ஆயுள் தண்டனை பெற்றார்கள். என்றாலும், சிறையிலிருந்த சகோதரர்கள் நம்பிக்கை தளராமல் இருந்தார்கள், உறுதியாய் நிலைத்திருப்பதற்கு ஒருவருக்கொருவர் ஊக்கம் அளித்துக்கொண்டார்கள். சொல்லப்போனால், நீதிநெறிகளுக்காகவும் உத்தமத்தன்மைக்காகவும் அவர்கள் ரொம்பவே பிரபலமானார்கள். “யெகோவாவின் சாட்சிகள் பாராட்டுக்குரியவர்கள், எக்காரணத்தைக்கொண்டும் இணங்கிப்போய் தங்களுடைய மதத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்” என்று கூறினார் ஓர் அரசியல் கைதி. தான் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் யெகோவாவின் சாட்சிகள்தான் “எல்லாருடைய பிரியத்தையும் சம்பாதித்த கைதிகளாக” இருந்தார்கள் எனவும் அவர் கூறினார்.

1964-⁠ல் மற்றொரு முறை அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதுவும்கூட கொஞ்சக் காலத்திற்கே நீடித்தது, ஏனெனில் 1968-லிருந்து 1974 வரைக்கும் சகோதரர்கள் பல முறை கும்பல்கும்பலாகக் கைதுசெய்யப்பட்டார்கள். “நாங்கள் நற்செய்தியைப் பரப்பியதால், சித்திரவதைக்கு ஆளானோம், ஏளனம் செய்யப்பட்டோம். சிறையிலுள்ள சகோதரர்களை உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளும்படி உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். இதெல்லாம் சகிக்க வேண்டிய ஒரு சோதனை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். மத்தேயு 24:14-⁠ல் முன்னறிவிக்கப்பட்டுள்ளபடி நற்செய்தியை நாங்கள் தொடர்ந்து தைரியமாகப் பிரசங்கிப்போம். ஆனால் மீண்டும் மனதார உங்களிடம் ஒன்று கேட்கிறோம், எங்களை மறந்துவிடாதீர்கள்!” என ஒரு சகோதரர் எழுதினார். யெகோவா தம்முடைய உண்மையுள்ளவர்களின் ஊக்கமான, கண்ணீர் ஜெபங்களுக்குச் செவிகொடுத்து, பல்வேறு வழிகளில் அவர்களுக்கு ஆறுதலை அளித்தார், அதைத்தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.

சாத்தான் அவநம்பிக்கையை விதைக்கிறான்

பிசாசாகிய சாத்தான் கடவுளுடைய ஊழியர்களை வெளியிலிருந்து மட்டுமல்ல, சபைக்கு உள்ளே இருந்தும் தாக்குகிறான். உதாரணத்திற்கு, கைதாவதற்கு முன் சபையில் கண்காணிகளாக இருந்த சகோதரர்களில் சிலர், 1955-⁠ல் விடுதலையான பிறகு அந்தப் பொறுப்பில் மீண்டும் நியமிக்கப்படவில்லை. இதனால் கோபங்கொண்ட அவர்கள், உட்பூசல்களைக் கிளப்பினார்கள். சிறையில் உறுதிகாத்த அவர்கள், விடுதலையான பிறகு பெருமைக்கு இடங்கொடுத்தது எப்பேர்ப்பட்ட வேதனையான விஷயம்! முக்கிய பொறுப்பிலிருந்த ஒரு சகோதரர், தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, செக்யூரிட்டெட் அதிகாரிகளோடு ஒத்துழைக்கும் அளவுக்குக்கூட சென்றுவிட்டார், இதனால் விசுவாசமுள்ள சகோதரர்களுக்கும், பிரசங்க வேலைக்கும் அவர் மிகுந்த பங்கம் விளைவித்தார்.​—மத். 24:10.

மனசாட்சிப்படி தீர்மானிக்க வேண்டிய சில காரியங்களில் நிலவிய கருத்து வேறுபாடுகளையும் கடவுளுடைய மக்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. உதாரணமாக, சகோதரர்கள் கைதான பிறகு, சிறைக்குப் போக விரும்புகிறார்களா அல்லது உப்புச் சுரங்கங்களில் வேலை செய்ய விரும்புகிறார்களா எனப் பெரும்பாலும் கேட்கப்பட்டது. உப்புச் சுரங்கங்களில் வேலை செய்யத் தீர்மானித்தவர்கள் பைபிள் நியமங்களை விட்டுக்கொடுத்துவிட்டதாக சிலர் கருதினார்கள். சகோதரிகள் மேக்-அப் செய்துகொள்ளக்கூடாது, யாரும் சினிமாவுக்கோ திரை அரங்குகளுக்கோ போகக்கூடாது, ஏன் சொந்தமாக ஒரு ரேடியோகூட வைத்திருக்கக் கூடாது என்றெல்லாம் இன்னும் சிலர் ஆணித்தரமாய் நம்பினார்கள்.

ஆனாலும் முக்கியமான விஷயத்தை, அதாவது கடவுளுக்கு உண்மையாய் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை, சகோதரர்கள் பொதுவாக மறந்துவிடவில்லை. 1958 ஊழிய ஆண்டின் அறிக்கை அதைத் தெளிவுபடுத்தியது; ஆம், அந்த வருடத்தில் 5,288 பேர் வெளி ஊழியத்தில் ஈடுபட்டார்கள்​—⁠அதற்கு முந்தின வருடத்தைவிட 1,000 பேருக்கும் அதிகமானோர்! அதுமட்டுமல்ல, அந்த வருட நினைவுநாள் ஆசரிப்புக்கு 8,549 பேர் வந்திருந்தார்கள், 395 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்.

ரோமர் 13:1-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘மேலான அதிகாரங்கள்’ முன்பு கருதப்பட்டதுபோல், யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் அல்ல, ஆனால் அரசாங்க அதிகாரிகளைக் குறிக்கின்றன என்பதை காவற்கோபுர பத்திரிகை விளக்கிய பின்பு, 1962-⁠ல் இன்னொரு சோதனை ஆரம்பமானது. ருமேனியாவிலிருந்த சகோதரர்கள் மிருகத்தனமான ஆட்சியாளர்களின் கையில் ஏகப்பட்ட இம்சைகளை அனுபவித்திருந்ததால், அவர்களில் அநேகருக்கு இந்தப் புதிய விளக்கத்தை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது. சொல்லப்போனால், மத்தேயு 22:21-⁠லுள்ள நியமத்திற்கு நேர்மாறாக, தங்களை முழுக்க முழுக்க அரசாங்கத்தின் அடிமைகளாய் ஆக்குவதற்காக கம்யூனிஸவாதிகள் தந்திரமாய் நுழைத்திருக்கும் பொய் இது என்றே சிலர் உண்மையில் நம்பினார்கள்.

பெர்லின், ரோம் என இன்னும் பல நகரங்களுக்குச் சென்றிருந்த ஒரு சக விசுவாசியிடம் சகோதரர் ஒருவர் இது குறித்துப் பேசினார். “இந்தப் புதிய விளக்கம் கம்யூனிஸவாதிகளின் தந்திரம் அல்ல, ஆனால் அடிமை வகுப்பாரிடமிருந்து வந்துள்ள ஆன்மீக உணவே என்பதை அந்தச் சக விசுவாசி ஊர்ஜிதம் செய்தார். ஆனாலும், அதை நம்பத் தயங்கினேன். எனவே, மாவட்டக் கண்காணி ஒருவரிடம் நாங்கள் என்ன செய்வதென்று கேட்டேன்” என்கிறார் இந்தச் சகோதரர்.

அதற்கு அவர், “தொடர்ந்து ஊழியம் செய்து வாருங்கள்​—⁠அதுதான் நாம் எல்லாரும் செய்ய வேண்டிய வேலை!” என்றார்.

“அது ஓர் அருமையான புத்திமதியாக இருந்தது, நான் இன்னமும் ‘தொடர்ந்து’ ஊழியம் செய்து வருகிறேன் எனச் சொல்வதில் சந்தோஷப்படுகிறேன்.”

சகோதரர்களோடு தொடர்புகொள்வதில் பெரியபெரிய தடைகள் இருந்தன; என்றபோதிலும், வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தைச் சகோதரர்களிடம் உடனுக்குடன் தெரியப்படுத்துவதற்கும், ஐக்கியப்பட்ட ஓர் ஆன்மீகக் குடும்பமாக ஒன்றிணைந்து ஊழியம் செய்ய அவர்களுக்கு உதவுவதற்கும் உலகத் தலைமை காரியாலயமும், ருமேனியாவில் நடைபெற்ற ஊழியத்தை மேற்பார்வை செய்த கிளை அலுவலகமும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டன. அதற்காக, அங்கிருந்த சகோதரர்கள் கடிதங்களை எழுதினார்கள், ராஜ்ய ஊழியத்தில் பிரசுரிக்க பொருத்தமான சில கட்டுரைகளையும் தயாரித்தார்கள்.

இந்த ஆன்மீக உணவு யெகோவாவின் மக்களுக்கு எப்படிப் போய்ச் சேர்ந்தது? ஆலோசனைக் குழு அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் பயணக் கண்காணிகளோடும் சபை மூப்பர்களோடும் ரகசிய தொடர்பு வைத்திருந்தார்கள். இப்படித் தொடர்புகொள்வதற்கு நம்பகமான கூரியர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்; இவர்கள் கடிதங்களையும் அறிக்கைகளையும் சுவிட்சர்லாந்திலிருந்த அலுவலகத்திற்குக் கொண்டுவந்து கொடுத்தார்கள், அங்கிருந்து அவற்றை மற்றவர்களிடம் கொண்டுபோயும் கொடுத்தார்கள். இதன் காரணமாக, ஆன்மீக உணவையும் தேவராஜ்ய வழிநடத்துதலையும் சகோதரர்கள் கொஞ்சமாவது பெற்றுக்கொண்டார்கள்.

தங்கள் சொந்த சபைகளிலும் தொகுதிகளிலும் ஐக்கியத்தை வளர்க்க உள்ளூர் சகோதர சகோதரிகளும் கடினமாக உழைத்தார்கள். அவர்களில் ஒருவர் யோஸிஃப் ஷோகான்; இவர் அடிக்கடி இவ்வாறு சொல்வார்: “ஆன்மீக உணவை நாம் தவறாமல் உட்கொண்டுவந்து, நம் ‘தாயோடு’ நெருங்கியிருந்தால் மட்டுமே, அர்மகெதோனில் தப்பிக்க முடியும்.” யெகோவாவுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தோடு எப்போதும் தொடர்பு வைத்துக்கொள்வதைப் பற்றியே அவர் இங்கு குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். அத்தகைய சகோதரர்கள் கடவுளுடைய மக்களுக்கு விலைமதிக்க முடியாத சொத்து போலவும், சகோதர ஐக்கியத்தைக் குலைத்துப்போட முயன்றவர்களுக்கு எதிரான பாதுகாப்புச் சுவர் போலவும் இருந்தார்கள்.

எதிரிகளின் சூழ்ச்சிகள்

யெகோவாவுடைய ஊழியர்களின் விசுவாசத்தை ஆட்டங்காண வைக்கும் முயற்சியில் அல்லது அவர்களைப் பயமுறுத்தி அடிபணிய வைக்கும் முயற்சியில், கம்யூனிஸவாதிகள் ஒற்றர்களையும், ஆள்காட்டிகளையும் பயன்படுத்தினார்கள்; அதுமட்டுமல்ல சித்திரவதை செய்தார்கள், பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள், கொலை செய்யப்போவதாக மிரட்டவும் செய்தார்கள். அக்கம்பக்கத்தார், சக வேலையாட்கள், விசுவாசதுரோகிகள், குடும்ப அங்கத்தினர்கள், செக்யூரிட்டெட் அதிகாரிகள் ஆகியோர் ஒற்றர்களாகவும் ஆள்காட்டிகளாகவும் செயல்பட்டார்கள். செக்யூரிட்டெட் அதிகாரிகள் சத்தியத்தின் மீது ஆர்வம் காட்டுகிறவர்கள்போல் நடித்து, சபைகளுக்குள்ளும் ஊடுருவினார்கள், தேவராஜ்ய வார்த்தைகளையும் கற்றுக்கொண்டார்கள். இந்த ‘கள்ளச் சகோதரர்கள்’ மிகுந்த தீங்குகளை உண்டாக்கினார்கள், அநேகர் கைதாவதற்கும் காரணமானார்கள். அப்படிப்பட்ட நபர்களில், ஷாவூ காபார் என்பவனும் ஒருவன்; இவன் சபையில் பொறுப்புள்ள பதவியிலும் இருந்தான். என்றாலும், 1969-⁠ல் அவனுடைய முகமூடி கிழிக்கப்பட்டது.​—கலா. 2:4.

ரகசிய மைக்ரோஃபோன்களை ஒளித்து வைத்தும்கூட, தனிநபர்களையும் குடும்பங்களையும் அரசாங்க அதிகாரிகள் வேவுபார்த்தார்கள். டிமட்டே லாஸர் என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “கிறிஸ்தவ நடுநிலைமை காரணமாக நான் சிறையிலிருந்தபோது, செக்யூரிட்டெட் அதிகாரிகள் என் பெற்றோரையும் தம்பியையும் தவறாமல் அவர்களுடைய தலைமையகத்திற்கு வரவழைத்து, தொடர்ந்தாற்போல் ஆறு மணிநேரம்வரை விசாரணை செய்தார்கள். அப்படி ஒரு சமயம் விசாரித்தபோது, அவர்கள் எங்களுடைய வீட்டில் ஒரு மைக்ரோஃபோனையும் ஒளித்துவைத்தார்கள். எங்கள் வீட்டு எலக்ட்ரிக் மீட்டர் வழக்கத்திற்கு மாறாக படுவேகமாய் ஓடுவதை எலக்ட்ரீஷனாக இருக்கும் என் தம்பி அன்று சாயங்காலம் கவனித்துவிட்டான். உடனே வீட்டைச் சுற்றி நோட்டமிட்டு, ஒட்டுக்கேட்க பயன்படும் இரண்டு கருவிகளைக் கண்டெடுத்தான்; ஃபோட்டோ பிடித்த பிறகு அவற்றை அப்புறப்படுத்தினான். மறுநாள் செக்யூரிட்டெட் அதிகாரிகள் வந்து அவர்களுடைய விளையாட்டுச் சாமான்களைத் திருப்பித் தரும்படி கேட்டார்கள், ஆம், அவற்றை அவர்கள் அப்படித்தான் அழைத்தார்கள்.”

பெரும்பாலும், மற்ற கம்யூனிஸ நாடுகளில் வெளியான கட்டுரைகளை மீண்டும் இங்கு வெளியிடுவதன் மூலம் பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டது. உதாரணத்திற்கு, ஒரு ரஷ்ய செய்தித்தாளில் வெளிவந்த “ஜெஹோவிஸ்ட் மதப்பிரிவும் அதன் பிற்போக்கான இயல்பும்” என்ற கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளுக்கு “ஓர் அரசியல் அமைப்புக்கே உரிய இயல்புகள்” இருக்கிறது எனவும், “சோஷியலிஸ நாடுகளின் ஆட்சியைக் கவிழ்க்கும் காரியங்களில் ஈடுபடுவதுதான்” அவர்களுடைய குறிக்கோள் எனவும் அந்தக் கட்டுரை குற்றம்சாட்டியது. அதுமட்டுமல்ல, சாட்சிகளுடைய போதனைகளைப் பரப்பும் ஆட்களைப் பற்றித் தகவல் தெரிவிக்குமாறும் வாசகர்களை அது ஊக்குவித்தது. என்றாலும், இந்த அரசியல் பிரச்சாரம் எதிரிகள் தோல்வி அடைந்ததையே மறைமுகமாக ஒத்துக்கொண்டது, ஏனெனில் யெகோவாவின் சாட்சிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள், இன்னமும் பிரசங்கம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அது யாவருக்கும் அறிவித்தது; சிந்திக்கும் மக்கள் அதைப் புரிந்துகொண்டார்கள்.

செக்யூரிட்டெட் அதிகாரிகள் ஒரு சகோதரரையோ சகோதரியையோ கைதுசெய்தபோது, கொடூரமான முறையில் தங்களுடைய கைவரிசையைக் காட்டினார்கள்; அவர்களுடைய கொடூரத்திற்கு ஒரு அளவே இல்லாமல்போனது. அவர்களுடைய கையில் சிக்கியவர்களிடமிருந்து விஷயங்களை வரவழைப்பதற்காக, மனதையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிற சில இரசாயனப் பொருள்களைக்கூட பயன்படுத்தினார்கள். ஸாமாய்லா பரயான் என்பவர் அத்தகைய ஈவிரக்கமற்ற கொடுமைக்கு ஆளானார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “அவர்கள் என்னை விசாரிக்கத் தொடங்கிய சமயத்தில், கட்டாயப்படுத்தி சில மருந்துகளைச் சாப்பிடக் கொடுத்தார்கள்; அடிக்கும்போது ஏற்பட்ட பாதிப்புகளைவிட அது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை சீக்கிரத்திலேயே உணர ஆரம்பித்தேன். என்னால் நேராக நடக்க முடியவில்லை, மாடிப்படிகளிலும் ஏற முடியவில்லை. அதன்பின், தூக்கமில்லா நோயினால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டேன். எதிலுமே கவனம் செலுத்த முடியாமல் திண்டாடினேன், திக்கித்திக்கியும் பேச ஆரம்பித்தேன்.

“என் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போனது. ஏறத்தாழ ஒரு மாதத்திற்குப் பிறகு, நாக்கில் ருசி தெரியாமல்போனது. உணவு செரிக்கும் சக்தியை இழந்தேன்; உடம்பிலுள்ள ஒவ்வொரு மூட்டும் அப்படியே கழன்று விழுந்துவிடுவதைப் போல் உணர்ந்தேன். வலி தாங்க முடியவில்லை. என் பாதங்கள் அந்தளவு வியர்த்துக் கொட்டியதால், இரண்டே மாதங்களில் என்னுடைய ஷூ ஒன்றுக்கும் உதவாதபடி பிய்ந்துபோனது. விசாரணை நடத்திய அதிகாரி என்னைப் பார்த்து, ‘ஏன் இப்படிப் பொய் சொல்லிக்கிட்டே இருக்கிற? இதுவரை உனக்கு என்னவெல்லாம் ஆகியிருக்குன்னு தெரியல?’ எனக் கேட்டு காட்டுக்கத்தல் கத்தினார். கோபத்தில் திருப்பிக் கத்த வேண்டும்போல் இருந்தது, ஆனால் அப்படிச் செய்யாதிருக்க என்னையே ரொம்பவும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.” இந்தக் கடுஞ்சோதனையின் பாதிப்புகளிலிருந்து சகோதரர் பரயான் காலப்போக்கில் பூரண குணம் அடைந்தார்.

செக்யூரிட்டெட் அதிகாரிகள் மனோரீதியாகவும் சித்திரவதை செய்தார்கள்; அதை அலெக்ஸா பாய்சூக் நினைவுகூருகிறார்: “ஒருநாள் இரவு நான் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர்கள் வந்து என்னை எழுப்பி ஒரு ஹாலுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள்; நான் மிகுந்த வேதனையை அனுபவித்த இரவு அதுதான். அங்கு ஒரு சகோதரரை அடிக்கும் சத்தம் என் காதில் விழுந்தது. பிறகு ஒரு சகோதரியின் அழு குரல் கேட்டது, அதன்பின் என் அம்மாவின் கூக்குரலும் கேட்டது. அதையெல்லாம் கேட்பதற்குப் பதில், அந்த அடிகளை நானே வாங்கிக்கொள்ளலாம்போல் இருந்தது.”

மற்ற சாட்சிகளுடைய பெயர்களையும், சபை கூட்டம் எப்போது, எங்கு நடைபெறுகிறது என்ற விவரத்தையும் சகோதரர்கள் தெரிவித்துவிட்டால், அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் எனச் சொல்லப்பட்டது. தங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டுமென்றால், சிறைப்பட்ட தங்கள் கணவன்மார்களை விட்டுப்பிரியும்படி மனைவிமார்கள் தூண்டுவிக்கப்பட்டார்கள்.

அரசு தங்களுடைய உடமைகளைப் பறிமுதல் செய்ததால், அநேக சகோதரர்கள் அரசாங்கப் பண்ணைகளில் வேலை செய்யும் கட்டாயத்திற்கு ஆளானார்கள். வேலை அந்தளவு மோசமாக இல்லாவிட்டாலும், அடிக்கடி அங்கு நடைபெற்ற அரசியல் கூட்டங்களில் அவர்கள் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. அவற்றில் கலந்துகொள்ளாதவர்கள் ஏளனம் செய்யப்பட்டார்கள், அவர்களுக்குக் கூலியும் ரொம்பவே குறைவாகக் கொடுக்கப்பட்டது. ஆக, எந்த அரசியல் கூட்டங்களிலும் நடவடிக்கைகளிலும் கலந்துகொள்ளாத யெகோவாவின் சாட்சிகளுக்கு இந்தச் சூழ்நிலை ஏகப்பட்ட கஷ்டங்களைக் கொடுத்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

சாட்சிகளுடைய வீடுகளில் அரசாங்க அதிகாரிகள் திடீர்ச் சோதனை நடத்தி அவர்களுடைய சொந்த உடமைகளைக்கூட பறிமுதல் செய்தார்கள்; குறிப்பாக, விற்க முடிந்த சாமான்களைப் பறிமுதல் செய்தார்கள். குளிர்காலத்தின் மத்திபத்தில் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று அவர்களுடைய அடுப்புகளை​—⁠கதகதப்பைப் பெற ஒரே வழியாக இருந்த அடுப்புகளை⁠—⁠பெரும்பாலும் பாழாக்கிப்போட்டார்கள். ஏன் இந்த மூர்க்கத்தனம்? பிரசுரங்களை மறைத்து வைப்பதற்கு அடுப்புகள் வசதியான இடங்களாக இருந்தன என்று சொல்லி அப்படிச் செய்தார்கள். என்றபோதிலும், சகோதரர்களின் வாயை அவர்களால் அடைக்க முடியவில்லை. கட்டாய உழைப்பு முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் தன்மானம் இழந்து, கடும் துன்புறுத்தலை அனுபவித்த சகோதரர்கள்கூட, யெகோவாவைப் பற்றித் தொடர்ந்து சாட்சிகொடுத்தார்கள், ஒருவருக்கொருவர் ஆறுதல் அளித்துக்கொண்டார்கள்; இதைப் பற்றித்தான் இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.

முகாம்களிலும் சிறைகளிலும் யெகோவாவைப் புகழ்தல்

சிறைச்சாலைகள் போக, பெரியதாயிருந்த மூன்று கட்டாய உழைப்பு முகாம்கள் ருமேனியாவில் இருந்தன. ஒன்று டேன்யூப் கழிமுகப் பகுதியில், மற்றொன்று பிரயீலாவைச் சேர்ந்த பெரிய தீவில், மூன்றாவது டேன்யூப்பையும் கருங்கடலையும் இணைக்கிற கால்வாய்ப் பகுதியில் இருந்தன. கம்யூனிஸ சகாப்தத்தின் ஆரம்பத்திலிருந்து, அடிக்கடி தங்களைத் துன்புறுத்திய ஆட்களுடன் சேர்த்து யெகோவாவின் சாட்சிகள் சிறையில் தள்ளப்பட்டார்கள்; அந்த ஆட்கள், முன்னாள் அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டவர்கள். வட்டாரக் கண்காணியாய் இருந்த ஒரு சகோதரர் 20 பாதிரிமாரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்! அப்படிப்பட்ட சக கைதிகளுடன் ஆர்வமூட்டும் விதத்தில் உரையாட சகோதரர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

உதாரணமாக, பாதிரியார் ஆவதற்கு விண்ணப்பித்தவர்களின் தகுதிகளை முன்னர் ஆராய்ந்துவந்த இறையியல் பேராசிரியர் ஒருவருடன் சேர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு சகோதரர் நீண்ட நேரம் அவருடன் உரையாடினார். அந்தப் பேராசிரியருக்கு பைபிள் விஷயங்கள் பற்றி கிட்டத்தட்ட ஒன்றுமே தெரியாதிருந்தது; சகோதரர் சீக்கிரத்திலேயே அதைப் புரிந்துகொண்டார். முந்தைய அரசாங்கத்தின் ராணுவத் தளபதியாக இருந்த ஒரு கைதியும் அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

பேராசிரியரைப் பார்த்து அந்தத் தளபதி, “சாதாரண ஆட்கள் உங்களைவிட நன்றாக பைபிளைத் தெரிந்து வைத்திருக்கிறார்களே, அதெப்படி?” என்று கேட்டார்.

அதற்கு அவர், “இறையியல் செமினரிகளில் சர்ச் பாரம்பரியத்தைப் பற்றியும் அது சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும்தான் எங்களுக்குக் கற்பிக்கப்படுகிறது, பைபிளைப் பற்றி அல்ல” என்று பதில் அளித்தார்.

அதைக் கேட்ட தளபதி முகம் சுளித்தார். “உங்கள் போதனைகளை நாங்கள் நம்பியிருந்தோம், ஆனால் நாங்கள் எந்தளவு மோசம்போயிருக்கிறோம் என்பது இப்போதுதான் தெரிகிறது” என்றார்.

காலப்போக்கில், ஏராளமான கைதிகள் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்றுக்கொண்டு தங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தார்கள்; அவர்களில் ஒருவர் திருட்டுக் குற்றத்திற்காக 75 வருட சிறைதண்டனை பெற்றிருந்தார். சொல்லப்போனால், அவருடைய குணாம்சத்தில் அந்தளவு மாற்றம் ஏற்பட்டதை சிறை அதிகாரிகளே கவனித்தார்கள். அதனால், அவருக்கு ஒரு புதிய வேலையைக் கொடுத்தார்கள்; அதாவது, அவரே தனியாக நகருக்குச் சென்று, சிறைச்சாலைக்குத் தேவையான பொருள்களை வாங்கிவரும் வேலையைக் கொடுத்தார்கள்! பொதுவாக, அப்படிப்பட்ட வேலையைத் திருட்டுக் குற்றம் செய்த கைதிக்குக் கொடுக்க மாட்டார்கள்.

என்றபோதிலும், சிறைவாசம் கடினமாக இருந்தது, உணவு போதும்போதாததாய் இருந்தது. சாப்பிட உருளைக்கிழங்குகள்தான் கொடுக்கப்பட்டன; கொஞ்சம் அதிகமாக வயிற்றை நிறைக்குமே என்ற நப்பாசையில் அவற்றின் தோல்களை உரிக்காமல் தருமாறு கைதிகள் கேட்டுக்கொண்டார்கள்! தங்கள் வயிற்றை நிரப்புவதற்காக பீட்ரூட்கள், புற்கள், இலைகள், செடி வகைகள் எனக் கிடைத்ததையெல்லாம் அவர்கள் சாப்பிட்டார்கள். காலப்போக்கில், ஊட்டக்குறைவினால் ஏராளமானோர் உயிரிழந்தார்கள், சீதபேதியினால் எல்லாரும் அவதியுற்றார்கள்.

கோடைகாலத்தின்போது, ஓர் அணையின் கட்டுமானப் பணிக்காக டேன்யூப் கழிமுகப் பகுதியிலிருந்த சகோதரர்கள் மண்ணை வாரியெடுத்து அனுப்பும் வேலையில் ஈடுபட்டார்கள். குளிர்காலத்தின்போது, பனிக்கட்டிமீது நின்றுகொண்டு நீர் நாணல்களை வெட்டியெடுத்தார்கள். பழைய, இரும்புப் பயணப்படகு ஒன்றில் படுத்துறங்கினார்கள்; அதில் குளிரையும், அசிங்கத்தையும், பேன்களையும் அவர்கள் சகிக்க வேண்டியிருந்தது; ஒரு கைதி செத்தபோதுகூட அங்கிருந்த கல்நெஞ்சக்கார காவலாளிகள் உணர்ச்சியற்ற ஜடமாக நின்றார்கள். என்றாலும், எந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையிலும் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டி, உதவிசெய்துகொண்டார்கள்; ஆன்மீகரீதியில் பலமுள்ளவர்களாக இருந்தார்கள். டீயானீஸீயா வர்ச்சூ என்பவரின் அனுபவத்தைக் கவனியுங்கள்.

அவர் விடுதலையாவதற்குச் சற்று முன் ஓர் அதிகாரி அவரைப் பார்த்து, “சிறைவாசம் உன் விசுவாசத்தை மாற்றியிருக்கிறதா, வர்ச்சூ?” என்று கேட்டார்.

அதற்கு அவர், “தப்பாக நினைத்துக்கொள்ளாதீர்கள், உங்களை ஒன்று கேட்கட்டுமா? உயர் ரக உடை ஒன்றைக் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக மட்டரக உடையை நீங்கள் மாற்றிக்கொள்வீர்களா?”

“மாட்டேன்” என்றார் அந்த அதிகாரி.

“அப்படியானால், சிறைவாசத்தின்போது என்னுடைய விசுவாசத்தைவிட உயர் ரக ஒன்றை யாருமே எனக்குக் கொடுக்கவில்லை. அப்படியிருக்கும்போது எதற்காக நான் அதை மாற்றிக்கொள்ள வேண்டும்?” என்றாரே பார்க்கலாம்!

உடனே அந்த அதிகாரி அவருடைய கைகளைக் குலுக்கி, “நீ விடுதலையாகிவிட்டாய், வர்ச்சூ. உன் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாய் இரு” என்றார்.

டீயானீஸீயா வர்ச்சூ போன்ற சகோதர சகோதரிகள் அமானுஷ்ய சக்திபடைத்தவர்களாக இருக்கவில்லை. யெகோவாமீது அவர்களுக்கிருந்த விசுவாசமே அவர்களுக்கு அந்தத் தைரியத்தையும் ஆன்மீகப் பலத்தையும் தந்தது; அந்த விசுவாசச் சுடர் அணைந்துவிடாதபடி அதி அற்புதமான வழிகளில் அதை அவர்கள் காத்து வந்தார்கள்.​—நீதி. 3:5, 6; பிலி. 4:13.

ஞாபகத்திலிருந்த விஷயங்களை ஒன்றுசேர்ந்து படித்தல்

“சிறையில் நான் கழித்த காலம், எனக்கு தேவராஜ்ய பயிற்சிக் காலமாக இருந்தது” என்கிறார் ஆன்ட்ரஷ் மால்னாஷ். அவர் ஏன் அப்படிச் சொல்கிறார்? ஒவ்வொரு வாரமும் தன் சகோதரர்களுடன் ஒன்றுசேர்ந்து கடவுளுடைய வார்த்தையிலிருந்து படித்த விஷயங்களால் அவர் பெற்ற அருமையான பலன்களை வைத்து அவ்வாறு சொல்கிறார். “நாங்கள் கலந்தாலோசித்த விஷயங்கள் பேப்பரில் இருக்கவில்லை, பெரும்பாலும் எங்கள் மனதில்தான் இருந்தன. சிறைக்கு வரும் முன் தாங்கள் படித்திருந்த காவற்கோபுர கட்டுரைகளைச் சகோதரர்கள் நினைவுக்குக் கொண்டுவந்தார்கள். ஒருசில சகோதரர்கள் பத்திரிகையிலிருந்த அத்தனை விஷயங்களையும் அத்துப்படியாக நினைவில் வைத்திருந்தார்கள்​—⁠படிப்புக் கட்டுரைகளிலிருந்த கேள்விகள் உட்பட!” கைதாவதற்கு முன்னர் சில சகோதரர்கள் ஆன்மீக உணவைக் கைப்பட நகலெடுக்கும் வேலை செய்திருந்தார்கள், வழக்கத்திற்கு மாறாக விஷயங்களை ஞாபகம் வைத்ததற்குக் காரணம் சிலசமயம் அதுவாக இருக்கலாம்.​—⁠பக்கங்கள் 132-3-⁠ல் உள்ள “நகலெடுக்கப் பயன்படுத்தப்பட்ட வழிகள்” என்ற பெட்டியைக் காண்க.

சிறையில் கிறிஸ்தவக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டபோது, சிந்திக்கப்படவிருந்த தலைப்பை பொறுப்புள்ள சகோதரர்கள் அறிவித்தார்கள்; அப்போது ஒவ்வொரு கைதியும் அந்தத் தலைப்பின் பேரில் முடிந்தவரை எல்லா விஷயங்களையும் ஞாபகத்திற்குக் கொண்டுவந்தார்​—⁠வேதவசனம் முதற்கொண்டு கிறிஸ்தவ பைபிள் பிரசுரங்களில் தான் கற்றுக்கொண்ட விஷயங்கள்வரை​—⁠ஞாபகத்திற்குக் கொண்டுவந்தார். கடைசியில், அந்த விஷயத்தைப் பற்றிக் கலந்தாலோசிக்க எல்லாரும் ஒன்றுகூடினார்கள். கூட்டத்தை நடத்த அவர்கள் ஒரு சகோதரரைத் தேர்ந்தெடுத்தார்கள்; அவர் ஜெபத்தோடு கூட்டத்தை ஆரம்பித்த பிறகு பொருத்தமான கேள்விகளைக் கேட்டு கலந்தாலோசிப்பை ஆரம்பித்து வைத்தார். எல்லாருமே அவரவருடைய குறிப்புகளைச் சொன்ன பிறகு, தன்னுடைய கருத்துகளை அவர் தெரியப்படுத்தினார், அதன் பிறகு அடுத்த குறிப்புக்குச் சென்றார்.

சில சிறைச்சாலைகளில், ஒன்றுசேர்ந்து கலந்தாலோசிப்பது தடைசெய்யப்பட்டது. ஆனால், சகோதரர்களின் புத்திசாலித்தனத்திற்கு ஓர் எல்லையே இருக்கவில்லை. ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “பாத்ரூமிலிருந்த ஜன்னல் கண்ணாடியை அதன் ஃபிரேமிலிருந்து அப்படியே கழற்றியெடுத்து, சுவற்றிலிருந்து சுரண்டியெடுத்த சுண்ணாம்பையும் ஈரப்பசையுள்ள சோப்பையும் கலந்து அதன்மீது பூசினோம். காய்ந்த பிறகு, இந்தக் கண்ணாடி எங்களுடைய எழுது பலகையாக ஆனது; அந்தந்த நாளுக்குரிய பாடத்தை எழுதி வைக்க அது எங்களுக்கு வசதியாக இருந்தது. எழுத வேண்டிய விஷயத்தை ஒரு சகோதரர் மெதுவாகச் சொல்லச்சொல்ல மற்றொருவர் அதில் எழுதி வைத்தார்.

“வெவ்வேறு சிறை அறைகளில் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம், அவை படிப்புத் தொகுதிகளாக ஆயின. ஒவ்வொரு பாடமும் கைமாறி கைமாறி அந்த அறையிலுள்ள எல்லாச் சகோதரர்களுக்கும் அனுப்பப்பட்டன. ஒரு அறையில் மட்டுமே அந்தப் பலகை இருந்ததால், மற்ற அறைகளிலிருந்த சகோதரர்களுக்குத் தந்திக்குறியீட்டு முறையால் அந்த விஷயத்தைத் தெரியப்படுத்தினோம். எப்படி? கட்டுரையை முடிந்தளவுக்குச் சத்தமில்லாமல், சுவரில் அல்லது ஹீட்டிங் பைப்புகளில் தட்டித்தட்டி தந்தியடித்தோம். அப்போது மற்ற அறைகளிலிருந்த சகோதரர்கள் தங்கள் கப்புகளைச் சுவர்மீது அல்லது ஹீட்டிங் பைப்மீது வைத்து, அதில் தங்கள் காதை வைத்து விஷயத்தைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள்; அந்த கப்புகள் செய்தியைக் கடத்தும் கருவிகளாக செயல்பட்டன. தந்திக்குறியீட்டு முறை தெரியாதவர்கள், அதைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.”

சில சிறைகளிலிருந்த சகோதரர்கள் புதிதாக வெளியிடப்பட்டிருந்த ஆன்மீக உணவை, மேற்சொல்லப்பட்ட சகோதரர்களைப் போலவே புத்திசாலித்தனமும் சமயோசிதமும் நிறைந்த சகோதரிகள் மூலம் பெற்றுக்கொண்டார்கள். உதாரணத்திற்கு, சகோதரிகள் பிரெட் தயாரிக்கும்போது, சில பிரசுரங்களை அந்த மாவுக்குள் வைத்துத் தயாரித்தார்கள். இந்த பிரெட்டிற்கு, வானத்திலிருந்து வந்த அப்பம் எனச் சகோதரர்கள் பெயரிட்டார்கள். பைபிளின் சில பாகங்களைக்கூட சகோதரிகள் சிறைகளுக்குள் அனுப்பி வைத்தார்கள்; எப்படி? அதன் சில பக்கங்களைக் குட்டிக் குட்டியாக மடித்து, அவற்றைச் சிறு பிளாஸ்டிக் பந்துகளில் வைத்து, அந்தப் பந்துகள்மீது பிசுபிசுப்பான சாக்லேட், கொக்கோ கலவையைத் தடவி அனுப்பி வைத்தார்கள்.

ஆனால், சகோதரர்கள் அவற்றையெல்லாம் கழிப்பறையில்தான் படிக்க வேண்டியிருந்தது; இது ஒன்றுதான் முகம் சுளிக்க வைத்த விஷயமாக இருந்தது; ஆம், காவலாளிகளுடைய கண்காணிப்பு இல்லாமல் ஒருசில நிமிடங்களுக்குத் தனியாக இருக்க முடிந்த ஒரே இடம் அதுவாகத்தான் இருந்தது. ஒரு சகோதரர் அதைப் படித்து முடித்தவுடன், டாய்லெட் ஃபிளஷ் டேங்கின் பின்புறம் அதை மறைத்துவைத்துவிடுவார். இந்த மறைவிடம், சாட்சிகளல்லாத கைதிகளுக்கும் தெரிந்திருந்தது; அவர்களில் அநேகர் அமைதலான அந்த நேரத்தில் அதை வாசித்தும் மகிழ்ந்தார்கள்.

உத்தமம் காத்த பெண்களும் பிள்ளைகளும்

யெகோவாவின் சாட்சிகளில் அநேகர், தங்கள் குடும்பத்தாரால் துன்புறுத்தப்பட்டார்கள். அயூரைக்கா ஃபிலிப், வியாரைக்கா ஃபிலிப் என்ற அக்கா தங்கையும்கூட அப்படித்தான் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் இருவருக்கும் ஏழு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தார்கள். வியாரைக்கா இவ்வாறு சொல்கிறாள்: “க்ளுஜ்-நாப்போக்கா என்ற நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில்தான் என் அக்கா அயூரைக்கா படித்து வந்தாள். ஆனால் யெகோவாவுக்கு ஊழியம் செய்ய விரும்பினாள். ஆகவே 1973-⁠ல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டாள். அதன் பிறகு சீக்கிரத்திலேயே முழுக்காட்டுதல் பெற்றாள். அவளுடைய நேர்மையும் ஈடுபாடும் என்னுடைய ஆர்வத்தைக் கிளறியது. ஆகவே நான் பைபிளை ஆராய ஆரம்பித்தேன். பரதீஸான பூமியில் நித்திய ஜீவனை அளிக்கப்போவதாக கடவுள் தந்திருக்கும் வாக்குறுதியைப் பற்றி கற்றுக்கொண்டபோது, ‘வாழ்க்கையில் இதைவிட வேறென்ன வேண்டும்?’ என்று நினைத்தேன். பைபிளைப் படிக்கப் படிக்க, கிறிஸ்தவர்கள் அரசியலிலிருந்து விலகியிருக்க வேண்டுமென தெரிந்துகொண்டு, அந்த பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன்; ஆகவே கம்யூனிஸ கட்சியில் சேர மறுத்துவிட்டேன்.

“1975-⁠ல் யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன். என் வீட்டில் தங்காமல், சொந்தக்காரர் ஒருவரின் வீட்டில் தங்கினேன். அவருடைய வீடு சீகெட் மார்மாட்ஸியே என்ற நகரில் இருந்தது. அந்த நகரிலேயே ஸ்கூல் டீச்சராக வேலை செய்தேன். நான் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்ததால், அந்த வருட முடிவில் என்னை வேலையைவிட்டு நீக்கப்போவதாக ஸ்கூல் அதிகாரிகள் சொன்னார்கள். அப்படி நடக்கவிடாமல் செய்வதற்காக என் குடும்பத்தார் என்னையும் என் அக்காவையும் துன்புறுத்த ஆரம்பித்தார்கள்!”

சாட்சிகளாயிருந்த பள்ளி மாணவர்கள்கூட மிரட்டப்பட்டார்கள்; சிலசமயம் செக்யூரிட்டெட் அதிகாரிகளால் மிரட்டப்பட்டார்கள். அடி, உதை, திட்டு என எல்லா விதத்திலும் துன்புறுத்தப்பட்டார்கள். போதாததற்கு, நிறைய பிள்ளைகள் ஸ்கூலிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்கள். அவர்கள் வேறு ஸ்கூலைத் தேடிச் செல்ல வேண்டியிருந்தது. சிலருக்கு எந்த ஸ்கூலிலேயும் இடம் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல, தங்களுக்கு உளவு வேலை செய்ய சில பிள்ளைகளைக்கூட செக்யூரிட்டெட் ஆட்கள் பயன்படுத்திக்கொள்ள முயன்றார்கள்!

இப்போது பயனியராக இருக்கும் டானியலா மலூட்சான் இவ்வாறு சொல்கிறார்: “இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்துவதில் குறியாக இருந்த கம்யூனிஸ இளைஞர் சங்கத்தில் சேர நான் மறுத்ததால் அடிக்கடி என் வகுப்பில் அவமானப்படுத்தப்பட்டேன். நான் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தபோது செக்யூரிட்டெட் ஆட்கள் நிறைய கஷ்டம் கொடுத்தார்கள்; அவர்களுக்கு ஆள்காட்டியாக இருந்த ஆசிரியர்களும் மற்றவர்களும்கூட அதேபோல் கஷ்டம் கொடுத்தார்கள். 1980 முதல் 1982 வரை, ஒரு புதன்கிழமை விட்டு மறு புதன்கிழமை என்று தவறாமல் ஸ்கூல் ப்ரின்ஸிப்பலின் ஆபீசில் விசாரணை செய்யப்பட்டேன். ஆனால் அவர் அங்கிருக்க அனுமதிக்கப்படவில்லை. என்னை விசாரித்த செக்யூரிட்டெட் அதிகாரியை, பிஸ்ட்ரிட்சா-நஸ்யூத் என்ற மாவட்டத்திலிருந்த நம் சகோதரர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது; ஏனென்றால், சாட்சிகளென்றாலே கொதித்தெழுந்தவர் அவர்; சாட்சிகளை ஒழித்துக்கட்டுவதில் படுதீவிரம் காட்டியவர். சொல்லப்போனால், என்னிடம் விசாரணை நடத்த வந்தபோதுகூட, பொறுப்பான சகோதரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக் கடிதங்களை கையோடு எடுத்து வந்திருந்தார். அவருக்கென்று சில லட்சியங்களை வைத்திருந்தார்: சகோதரர்கள் மீதுள்ள என் நம்பிக்கையைக் குலைக்க வேண்டும்; விசுவாசத்தை விட்டுவிலக என்னைத் தூண்ட வேண்டும்; பள்ளிச் சிறுமியான என்னை செக்யூரிட்டெட்டின் ரகசிய ஆள்காட்டியாக மாற்ற வேண்டும். ஆனால் அவருடைய இந்த லட்சியங்கள் ஏதும் ஈடேறவில்லை, அனைத்துமே படுதோல்வி அடைந்தன.

“எனக்கு சில நல்ல அனுபவங்களும் கிடைத்தன. உதாரணத்திற்கு, கம்யூனிஸ கட்சியின் உறுப்பினராக இருந்த என்னுடைய வரலாற்று ஆசிரியர், ஏன் அடிக்கடி என்னிடம் விசாரணை நடத்தப்பட்டதென தெரிந்துகொள்ள விரும்பினார். ஒருநாள் அவர் வரலாற்று வகுப்பின்போது பாடம் நடத்தாமல் இரண்டு மணிநேரத்திற்கு எல்லா மாணவர்கள் முன்பாகவும் என் மதத்தைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டார். என்னுடைய பதில்கள் அவருடைய மனதைத் தொட்டன; ஆகவே நான் இந்தளவு மோசமாக நடத்தப்படுவது சரியல்ல என நினைத்தார். அதன் பிறகு நம் நம்பிக்கைகளை மதிக்க ஆரம்பித்தார், நம் பிரசுரங்களையும் ஏற்றுக்கொண்டார்.

“ஆனால் ஸ்கூல் அதிகாரிகளோ தொடர்ந்து என்னை எதிர்த்து வந்தார்கள். பத்தாம் வகுப்புக்குப் பிறகு என்னை ஸ்கூலிலிருந்தும் வெளியேற்றினார்கள். இருந்தாலும் எனக்கு உடனடியாக வேலை கிடைத்தது; யெகோவாவுக்கு உத்தமமாய் இருந்ததற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை. சொல்லப்போனால் அவருக்கு நன்றிதான் சொல்கிறேன்; ஏனென்றால் கம்யூனிஸ ஆட்சியில் துன்புறுத்தப்பட்டபோது உத்தமத்தை விட்டுக்கொடுக்காதிருந்த கிறிஸ்தவ பெற்றோரால் வளர்க்கப்பட்டேன். அவர்களுடைய சிறந்த முன்மாதிரி எப்போதுமே என் மனதில் இருந்துவந்திருக்கிறது.”

இளைஞர்களுக்கு வந்த சோதனைகள்

செக்யூரிட்டெட் அதிகாரிகள், யெகோவாவின் சாட்சிகளை துன்புறுத்தியபோது, கிறிஸ்தவ நடுநிலையைக் காத்துக்கொண்டதற்காக இளம் சகோதரர்களை முக்கியமாக குறிவைத்தார்கள். அவர்களைக் கைதுசெய்தார்கள், சிறையில் அடைத்தார்கள், விடுதலை செய்தார்கள், பிறகு மறுபடியும் கைதுசெய்தார்கள், சிறையில் அடைத்தார்கள், இது இப்படியே தொடர்ந்தது. சகோதரர்களுடைய மனவுறுதியைக் குலைப்பதே அவர்களுடைய லட்சியமாக இருந்தது. யோஷெஃப் சாபா என்ற இளம் சகோதரர் முழுக்காட்டுதல் எடுத்தவுடனேயே நான்கு வருட சிறைதண்டனை பெற்றார்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு 1976-⁠ல் யோஷெஃப் விடுதலை செய்யப்பட்டார்; கொஞ்ச நாட்களில் ஒரு பெண்ணை சந்தித்தார். “நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்து, அதற்கு தேதியையும் நிச்சயித்தோம்” என்கிறார் யோஷெஃப். “பிறகு க்ளுஜ் ராணுவ தீர்ப்பாயத்திடமிருந்து இன்னொரு உத்தரவைப் பெற்றேன். தீர்ப்பாயத்திற்குமுன் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டேன், அதுவும் என் கல்யாணம் நடக்கவிருந்த அதே தேதியில்! இருந்தாலும் முதலில் கல்யாணம் செய்துகொண்டு, பிறகு அங்கு ஆஜரானேன். கல்யாணம் ஆகி சில நிமிடங்களே ஆகியிருந்தபோதிலும் இன்னொரு மூன்று ஆண்டுகால சிறைத்தண்டனை பெற்றேன். அந்த மூன்று ஆண்டுகளும் சிறையில் கழித்தேன். பிரிவுத் துயரத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.”

மற்றொரு இளம் சகோதரரான டிமட்டே லாஸர் இவ்வாறு சொல்கிறார்: “1977-⁠ல் என் தம்பியும் நானும் சிறையிலிருந்து விடுதலை பெற்றோம். அந்த சந்தோஷத்தைக் கொண்டாட எங்கள் அண்ணன் வீட்டிற்கு வந்தார்; அவர் ஒரு வருடத்திற்கு முன்பே விடுதலை ஆனவர். ஆனால் எங்களைப் பார்க்க வந்தபோது செக்யூரிட்டெட் ஆட்கள் விரித்திருந்த வலையில் அவர் வசமாக மாட்டிக்கொண்டார்; ஏனென்றால் அவர்கள் அவருக்காகவே காத்துக்கொண்டிருந்தார்கள். நாங்கள் ஏற்கெனவே இரண்டு வருடங்கள், ஏழு மாதங்கள், 15 நாட்கள் பிரிக்கப்பட்டிருந்தோம்; இப்போது மறுபடியும் அண்ணன் எங்களிடமிருந்து பிரிக்கப்பட்டார்; நடுநிலைமை காத்ததால் மீண்டும் சிறையில் தள்ளப்பட்டார். என் தம்பியும் நானும் மனமுடைந்துபோய் செய்வதறியாமல் திகைத்து நின்றோம்.”

நினைவுநாள் ஆசரிப்பில் பங்குகொள்ளுதல்

நினைவுநாள் ஆசரிப்பு நடக்கும்போது, யெகோவாவின் சாட்சிகளைப் பிடிக்க இன்னும் தீவிர முயற்சி எடுக்கப்பட்டது. அவர்களுடைய வீடுகளில் அதிகாரிகள் திடீர்ச் சோதனை நடத்தினார்கள், அவர்களுக்கு அபராதம் விதித்தார்கள், அவர்களைக் கைது செய்தார்கள். ஆகவே சகோதரர்கள் முன்ஜாக்கிரதையோடு சிறு தொகுதிகளாக ஒன்றுகூடி இயேசுவின் மரண நினைவுநாளை ஆசரித்தார்கள்; சிலசமயம் குடும்பத்தார் மட்டும் ஒன்றுகூடி ஆசரித்தார்கள்.

“ஒருமுறை நினைவுநாள் ஆசரிப்பின்போது, போலீஸ் தலைமை அதிகாரி ஒருவர் வெகு நேரம் நண்பர்களோடு சேர்ந்து குடித்துக் கொண்டிருந்தார். பிறகு சகோதரர்களின் வீடுகளில் திடீர்ச் சோதனை நடத்த புறப்பட்டார்; முன்பின் தெரியாத ஒருவர் கார் வைத்திருந்ததைப் பார்த்து தன்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டார். ஆனால் அந்தக் கார் ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்தது. ஒருவழியாக அது ஸ்டார்ட் ஆன பிறகு அவர்கள் எங்கள் வீட்டுப் பக்கமாக வந்தார்கள். அங்கே நாங்கள் சிறு தொகுதியாக நினைவுநாளை ஆசரித்துக்கொண்டு இருந்தோம். ஆனாலும், எங்கள் வீட்டு ஜன்னல் எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டதால் கும்மிருட்டாக இருந்தது; அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. ஆகவே நாங்கள் யாரும் வீட்டில் இல்லையென நினைத்துக் கொண்டு வேறொரு வீட்டிற்குப் போனார்கள். அங்கே நினைவுநாள் ஆசரிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டிருந்தது; எல்லாரும் வீடு திரும்பியிருந்தார்கள்.

“இதற்கிடையே, எங்கள் வீட்டில் நினைவுநாள் ஆசரிப்பு முடிந்த உடனே சகோதரர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். நானும் என் அண்ணனும் மட்டுமே இருந்தோம். அப்போதுதான் இரண்டு போலீஸ்காரர்கள் திடுதிப்பென்று உள்ளே நுழைந்து, ஹாலின் நடுவே நின்றுகொண்டு, ‘இங்கே என்ன நடக்கிறது?’ என்று கத்தினார்கள்.

“‘ஒன்றுமில்லையே, நானும் அண்ணனும் பேசிக்கொண்டிருக்கிறோம்’ என்று சொன்னேன்.

“‘இங்கு ஏதோ கூட்டம் நடந்ததென்று எங்களுக்குத் தெரியும். மற்றவர்கள் எங்கே?’ என்றார் ஒருவர். பிறகு அண்ணனைப் பார்த்து, ‘நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார்.

“அண்ணனோ என்னைக் காட்டி, ‘நான் என் தம்பியைப் பார்க்க வந்தேன்’ என்றார். அந்த போலீஸ்காரர்கள் வெறுத்துப்போய் ஆவேசத்துடன் அங்கிருந்து கிளம்பினார்கள். அடுத்த நாள்தான் எங்களுக்குத் தெரிந்தது, போலீஸ்காரர்கள் அப்படி வலைபோட்டு தேடியும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரைக்கூட அவர்களால் கைது செய்ய முடியவில்லை என்று!”

உலக தலைமையகம் ருமேனிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கிறது

யெகோவாவின் சாட்சிகள் கொடூரமாக நடத்தப்பட்டதால், 1970, மார்ச் மாதத்தில் ஐக்கிய மாகாணங்களுக்கான ருமேனிய தூதுவருக்கு நான்கு பக்க கடிதம் ஒன்றை தலைமையகம் எழுதியது; மேலும், 1971, ஜூன் மாதத்தில் ருமேனிய ஜனாதிபதி நையிகலை சாசெஸ்கு என்பவருக்கு ஆறு பக்க கடிதத்தை எழுதியது. தூதுவருக்கு எழுதிய கடிதத்தில் சகோதரர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள்: “ருமேனியாவிலுள்ள எங்கள் சகோதரர்கள் மீதுள்ள அன்பாலும் அக்கறையாலும்தான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம்.” விசுவாசத்தின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட ஏழு பேருடைய பெயர்களைத் தெரிவித்த பிறகு அந்தக் கடிதம் இவ்வாறு தொடர்ந்தது: “மேற்குறிப்பிடப்பட்ட நபர்களில் சிலர் சிறையில் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டதாகத் தகவல் வந்திருக்கிறது. . . . யெகோவாவின் சாட்சிகள் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் உலகின் எந்தப் பகுதியிலும், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவர்கள் அல்ல; ஆனால் அவர்களுடைய மத வழிபாடு சம்பந்தப்பட்ட காரியங்களில் மட்டுமே ஈடுபடுகிறவர்கள்.” கடிதத்தின் முடிவில், “யெகோவாவின் சாட்சிகளுடைய துயரத்தைத் தீர்க்க வேண்டும்” என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சகோதரர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்கள்: “ருமேனிய அரசமைப்பு வழங்கும் மத சுதந்திரத்தை யெகோவாவின் சாட்சிகள் இன்னும் பெறவில்லை.” மாறாக, தங்கள் நம்பிக்கைகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கையிலும் பைபிள் படிப்புக்காக ஒன்றுகூடுகையிலும் அவர்கள் கைது செய்யப்பட்டு கொடூரமாக நடத்தப்படுகிறார்கள். சமீபத்தில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டபோது அநேக சகோதரர்கள் விடுதலை பெற்றதைப் பற்றியும் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட அந்தக் கடிதம் குறிப்பிட்டது. பிறகு இவ்வாறு தொடர்ந்தது: “யெகோவாவின் சாட்சிகளுக்கும் . . . ஒரு புதிய சகாப்தம் உதயமாகுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருத்தகரமாக அந்த எதிர்பார்ப்பு ஈடேறவில்லை. ருமேனியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் அதே சோக செய்தியைத்தான் கேட்கிறோம்: யெகோவாவின் சாட்சிகள் இன்னமும் அரசாங்கத்தால் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது, புத்தகங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன, ஆண்களும் சரி பெண்களும் சரி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகிறார்கள், அவர்களில் சிலர் அநேக வருடங்களுக்கு சிறைத்தண்டனை பெறுகிறார்கள், இன்னும் சிலர் கொடூரமாக நடத்தப்படுகிறார்கள். இவற்றிற்கெல்லாம் காரணம், அவர்கள் யெகோவா தேவனின் வார்த்தையை வாசித்து அதைப் பற்றி பிரசங்கிப்பதுதான். அவர்களை இப்படி நடத்துவது ஒரு நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்; அதுமட்டுமல்ல, ருமேனியாவில் யெகோவாவின் சாட்சிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதைக் குறித்து நாங்கள் மிகுந்த வேதனைப்படுகிறோம்.”

அந்தக் கடிதத்துடன் பின்வரும் இரண்டு புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டன: ருமேனியன் மொழியில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; ஜெர்மன் மொழியில் கடவுளுடைய குமாரர்களின் சுயாதீனத்தில் நித்திய ஜீவன்.

1975-⁠ல் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பின் பேரில் ஐரோப்பாவில் நடைபெற்ற ஹெல்சிங்கி மாநாட்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ருமேனியா கையெழுத்திட்டது; அதுமுதல், யெகோவாவின் சாட்சிகள் நடத்தப்பட்ட விதத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதென சொல்லலாம். அந்த மாநாடு, மத சுதந்திரத்திற்கும் மற்ற முக்கியமான சுதந்திரங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளித்தது. அதன் பிறகு ராணுவத்தில் சேர மறுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

1986-⁠ல் ஒரு புதிய சட்டம் அமலுக்கு வந்தது; அதன்படி, ஒருவரது வீட்டிற்குள் யாரும், அதிகாரிகளும்கூட, அனுமதியின்றி நுழையக் கூடாது; சில சூழ்நிலைகளில் சட்டம் அனுமதித்தால் மட்டுமே அப்படி நுழையலாம். ஆக, ஒருவழியாக சகோதரர்களால் தங்கள் வீடுகளில் நிம்மதியாக கிறிஸ்தவக் கூட்டங்களையும் நினைவுநாள் ஆசரிப்பையும் நடத்த முடிந்தது.

ரகசிய அச்சடிப்பு

தடையுத்தரவு போடப்பட்டிருந்த காலத்தில் பிரசுரங்கள், ஸ்டென்ஸில்கள் போன்ற வெவ்வேறு வடிவங்களில் ஆன்மீக உணவு ருமேனியாவுக்குள் மறைவாக எடுத்துச் செல்லப்பட்டது; பிறகு அந்தப் பிரசுரங்கள் நகலெடுக்கப்பட்டன. சிலசமயங்களில் அவை ருமேனியன் மொழியிலும் ஹங்கேரியன் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன; ஆனால் பெரும்பாலும், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் போன்ற மொழிகளிலிருந்து அவற்றை மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. ஆன்மீக உணவு பல வழிகளிலும் வந்துசேர்ந்தது. வெளிநாட்டுப் பயணிகள் போல் வந்த சகோதரர்கள், கல்வி பயிலுகிறவர்கள் போல் வந்த சகோதரர்கள், அதோடு, வெளிநாடு சென்று திரும்பிய ருமேனிய சகோதரர்கள் ஆகிய அனைவரும் பிரசுரங்களைக் கொண்டுவந்தார்கள்.

அப்படிப் பிரசுரங்கள் மறைவாக எடுத்து வரப்படுவதைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் எவ்வளவோ முயற்சி செய்தார்கள்; ருமேனியாவில் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடிக்கவும் தீவிரமாக முயன்றார்கள். ஆனால் சகோதரர்கள் அதிக விவேகத்துடன் செயல்பட்டார்கள்; அநேக பட்டணங்களிலும் நகரங்களிலும் வெவ்வேறு சகோதரர்களின் வீடுகளில், அதுவும் சப்தம் வெளிவராத கட்டடங்களில் அச்சடித்தார்கள். இந்த வீடுகளுக்குள் ரகசிய அறைகளைக் கட்டி, நகலெடுக்கும் மெஷினை வைத்தார்கள். சில அறைகள், கணப்படுப்புகளுக்குப் பின்புறம் மறைவாக இருந்தன. கணப்படுப்புகள் பொதுவாக நகர்த்த முடியாதபடி சுவரோடு ஒட்டியிருக்கும். ஆனால் சகோதரர்கள் அவற்றை சற்று மாற்றியமைத்தார்கள்; ரகசிய அறைக்குள் போவதற்கு வசதியாக அதை சற்று நகர்த்தும் விதத்தில் அமைத்தார்கள்.

ஷான்டார் பாரொய்டி என்ற சகோதரர் டிர்க்யூ-மூரெஷ் நகரில் ரகசியமாக அச்சகத்தை இயக்கி வந்தார்; அங்கே அவர், தினவசனம், ராஜ்ய ஊழியம், காவற்கோபுரம், விழித்தெழு! போன்ற பிரசுரங்களை அச்சடித்தார். அவர் சொல்கிறார்: “நாங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிட்டத்தட்ட 40 மணிநேரம் வேலை செய்தோம்; மாறி மாறி ஒருமணிநேரம் தூங்கிவிட்டு தொடர்ந்து வேலை செய்தோம். எங்கள் உடைகளிலும் உடல்களிலும் இரசாயன நெடி அடித்தது. ஒருமுறை நான் வீடு திரும்பியபோது ‘டாடி, உங்களிடம் தினவசன புத்தகத்தின் வாசனை வருகிறது’ என்று என் மூன்று வயது மகன் சொன்னான்.”

சகோதரர் ட்ராயான் கிரா திருமணமானவர், ஒரு தகப்பனும்கூட; அவர் க்ளுஜ் மாவட்டத்தில் பிரசுரங்களை அச்சடித்து விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டார். நகலெடுக்கும் பழைய மெஷின் ஒன்று அவரிடம் கொடுக்கப்பட்டது; அதற்கு “த மில்” என்ற பெயர் சூட்டப்பட்டது; அது பழம்பாணி மெஷின், ஏதோ ஒப்புக்கு வேலை செய்தது. ஆகவே அதை சர்வீஸ் செய்யும்படி மெக்கானிக்காக இருந்த ஒரு சகோதரரிடம் ட்ராயான் கேட்டார். அந்தச் சகோதரர் மெஷினை நோட்டமிட்டார்; ஆனால் அவரது முகம் போன போக்கைப் பார்த்தபோதுதான் புரிந்தது, அந்த மெஷினை ரிப்பேர் செய்யவே முடியாதென்று. பிறகு திடீரென்று அவரது முகம் மலர்ந்தது; “நான் உங்களுக்கு ஒரு புதிய மெஷினை செய்துகொடுக்கிறேன்!” என்றார் மகிழ்ச்சியுடன். அந்தப் பழைய மெஷினை ரிப்பேர் செய்வதைவிட மிகப் பெரிய உபகாரத்தை அவர் செய்தார். ஒரு சகோதரியின் வீட்டு பேஸ்மென்ட்டில் பட்டறையை அமைத்தார்; சொந்தமாக ஒரு லேத் மெஷினையும் உருவாக்கினார். நகலெடுப்பதற்கு ஒரேவொரு மெஷினை அல்ல, ஆனால் பத்துக்கும் அதிகமான மெஷின்களை உருவாக்கினார்! இவை நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன; மிக நன்றாக வேலை செய்தன.

1980-களில் உயர் தர ஆஃப்செட் மெஷின்களைப் பயன்படுத்த அநேக சகோதரர்கள் பயிற்றுவிக்கப்பட்டார்கள். முதன்முதலில் பயிற்சி பெற்றவர் நிக்காலையெ பென்டாரு; பிறகு அவர் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்தார். அவருடைய வீட்டில் பொதுவாக குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து அச்சக வேலையில் ஈடுபட்டார்கள்; ஆளுக்கொரு வேலையைச் செய்தார்கள். ஆனால் அந்த வேலையை ரகசியமாக செய்வது மிகப் பெரிய சவாலாக இருந்தது; ஏனென்றால் செக்யூரிட்டெட் ஆட்கள் வேவு பார்த்துக்கொண்டும் திடீர்ச் சோதனைகள் நடத்திக்கொண்டும் இருந்தார்கள். ஆகவே, வேலையை மளமளவென முடிக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக சகோதரர்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல மணிநேரங்கள் பிரசுரங்களை அச்சடித்து வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பினார்கள். ஆனால் ஏன் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவ்வாறு செய்தார்கள்? ஏனென்றால் வார நாட்களில் அவர்கள் வேலைக்குப் போக வேண்டியிருந்தது.

பேப்பர்கள் வாங்கும்போதும் சகோதரர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்தது. வெறும் 500 தாள்களை யாராவது வாங்கினாலே அதற்கான விளக்கம் கேட்கப்பட்டது. அப்படியிருக்க, நம் அச்சகங்கள் மாதாமாதம் கிட்டத்தட்ட 40,000 தாள்களை பயன்படுத்தினவே! ஆகவே கடைக்காரர்களிடம் சகோதரர்கள் மிக உஷாராக நடந்துகொள்ள வேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, சாலைகளிலும் சோதனை நடத்தப்பட்டது; ஆகவே பொருள்களை வேறு இடங்களுக்கு சர்வ ஜாக்கிரதையாக எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது.

மொழிபெயர்ப்பு என்ற சவால்

ருமேனியாவின் வெவ்வேறு பகுதிகளில் சொற்ப எண்ணிக்கையில் வசித்துவந்த சகோதர சகோதரிகள் உள்ளூர் மொழியில் பிரசுரங்களை மொழிபெயர்த்தார்கள்; நாட்டின் வட பகுதியில் வசித்த சிறுபான்மை தொகுதியினரால் பேசப்பட்ட உக்ரேனியன் மொழியிலும் மொழிபெயர்த்தார்கள். அவ்வாறு மொழிபெயர்த்தவர்களில் சிலர், அம்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள்; பிறகு பைபிளைப் படித்து சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்கள். மற்றவர்கள், வகுப்புகளுக்குச் சென்றோ மற்றபடியோ வேறொரு மொழியைக் கற்றுக்கொண்டு அதன்பின் மொழிபெயர்ப்பு செய்தவர்கள்.

ஆரம்ப நாட்களில், மொழிபெயர்ப்பாளர்கள் நோட்டுப் புத்தகங்களில் கைப்பட எழுதினார்கள். பிறகு, பிழைத் திருத்தம் செய்வதற்காக வடக்கே பிஸ்ட்ரிட்ஸா நகருக்கு எடுத்துச் சென்றார்கள். வருடத்திற்கு ஓரிரு முறை, மொழிபெயர்ப்பாளர்களும் பிழைத் திருத்துபவர்களும் ஒன்றுகூடி, அந்த வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களை கலந்துபேசினார்கள். இந்த சகோதர சகோதரிகள் சிலசமயம் பிடிபட்டார்கள்; அப்போது அதிகாரிகள் அவர்களை சோதனை செய்து, விசாரணை நடத்தி, அடித்து, கைதுசெய்வது வழக்கமாக இருந்தது. அப்படிக் கைதுசெய்யப்பட்டவர்கள் சில மணிநேரங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்டு, அதன்பின் மறுபடியும் கைது செய்யப்பட்டார்கள்​—⁠பயமுறுத்தும் நோக்கோடு அதிகாரிகள் இப்படி மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருந்தார்கள். மற்றவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள்; அல்லது தினமும் போலீஸில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டார்கள். காவலில் வைக்கப்பட்ட அநேகரில், சகோதரர் டூமிட்ரூ சப்பனாரூ, அவரது மனைவி டோய்னா சப்பனாரூ, சகோதரர் பீட்டர் ரான்க்கா ஆகியோரும் இருந்தார்கள்.

சகோதரர் டூமிட்ரூ சப்பனாரூ, ருமேனியன் மொழி ஆசிரியராகவும் வரலாற்று ஆசிரியராகவும் இருந்தார்; அவரது மனைவி டோய்னா, டாக்டராக இருந்தார். செக்யூரிட்டெட் அதிகாரிகள் எப்படியோ அவர்களைக் கண்டுபிடித்து, கைது செய்து, ஏழரை வருடங்களுக்கு தனித்தனி சிறைகளில் அடைத்தார்கள். அதில் ஐந்து வருடங்களை டோய்னா தனி அறையில் கழித்தார். சொல்லப்போனால், முன்னர் குறிப்பிடப்பட்டபடி, ஐக்கிய மாகாணங்களுக்கான ருமேனிய தூதுவருக்கு தலைமையகம் எழுதிய கடிதத்தில் இவர்களுடைய பெயர்களும் குறிப்பிடப்பட்டன. சிறையில் இருந்தபோது டோய்னா தனது கணவரையும் சிறையிலிருந்த மற்ற சகோதரிகளையும் உற்சாகப்படுத்தும் விதத்தில் 500 கடிதங்களை எழுதினார்.

டூமிட்ரூவும் டோய்னாவும் கைதான ஒரு வருடத்திற்குப் பிறகு டூமிட்ரூவின் தாய் சாபினா சப்பனாரூவும் கைது செய்யப்பட்டார்; அவர் ஐந்து வருடம், பத்து மாதம் சிறையில் கழித்தார். அவர்களுடைய குடும்பத்தாரில் சிறைக்குச் செல்லாத ஒரேவொருவர் சாபினாவின் கணவர்தான்; அவரும் யெகோவாவின் சாட்சியாக இருந்தார். மிகுந்த ஆபத்தின் மத்தியிலும், தன் குடும்பத்தார் மூவரையும் அவர் தவறாமல் போய் சந்தித்து வந்தார்.

1938-⁠ல், சகோதரர் பீட்டர் ரான்க்கா, ருமேனியாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகத்தில் செயலராக பொறுப்பளிக்கப்பட்டார். இந்தப் பொறுப்பினாலும், அவர் ஏற்கெனவே செய்துவந்த மொழிபெயர்ப்பு வேலையினாலும் செக்யூரிட்டெட் அதிகாரிகள் அவரை வலைவீசித் தேடி வந்தார்கள். 1948-⁠ல் அவரைக் கண்டுபிடித்துவிட்டார்கள்; அதன் பிறகு பல முறை அவரைக் கைது செய்து, 1950-⁠ல் மார்ட்டின் மஜராஷியோடும் பாம்ஃபில் ஆல்பூவோடும் சேர்த்து விசாரணை நடத்தினார்கள். ஆங்கிலோ-அமெரிக்க உளவாளி என அவர்மீது குற்றஞ்சாட்டி, ஆயூட், கெர்லா, ஷைலாவா போன்ற மிகக் கொடிய சிறைச்சாலைகளில் 17 ஆண்டுகள் அடைத்து வைத்தார்கள்; அதுபோக, கேலாட்ஸி மாவட்டத்தில் மூன்று ஆண்டுகள் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இருந்தாலும் முடிவுவரை அவரால் யெகோவாவின் சேவையில் முழுமூச்சோடு ஈடுபட முடிந்தது; ஆகஸ்ட் 11, 1991-⁠ல், உண்மையுள்ள இந்தச் சகோதரரின் பூமிக்குரிய வாழ்க்கை முடிவடைந்தது.

உத்தமத்தை விட்டுக்கொடுக்காத இப்படிப்பட்டவர்களின் அன்பான பிரயாசங்கள் பின்வரும் பைபிள் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகின்றன: “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.”​—எபி. 6:⁠10.

திறந்தவெளி மாநாடுகள்

1980-களில் சகோதரர்கள் பெரிய தொகுதிகளாக ஒன்றுகூடிவர ஆரம்பித்தார்கள்; திருமண நிகழ்ச்சி, சவ அடக்க நிகழ்ச்சி போன்ற சந்தர்ப்பங்களில்கூட ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடினார்கள். திருமண நிகழ்ச்சியாக இருந்தால், நாட்டுப்புறத்தில் பொருத்தமான ஓர் இடத்தில் பெரிய கூடாரத்தை அமைப்பார்கள்; கூடாரத்திற்குள் அழகிய கம்பளங்களை விரித்து அலங்கரிப்பார்கள்; அவற்றில் பைபிள் சம்பவங்களும் வசனங்களும் நெய்யப்பட்டிருக்கும். “விருந்தினருக்கு” டேபிள்களும் சேர்களும் போடப்பட்டிருக்கும். பெரிய உருவில் காவற்கோபுர அட்டைப் படத்தையும் வருடாந்தர வசனத்தையும் உடைய ஒரு போஸ்டர் போடியத்திற்குப் பின்புறம் மாட்டப்பட்டிருக்கும். உள்ளூர் பிரஸ்தாபிகள் தங்கள் வசதிக்கு ஏற்ப உணவை எடுத்துவந்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இவ்வாறு அனைவரும் இரட்டை விருந்தை​—⁠சொல்லர்த்தமான விருந்தையும் ஆன்மீக விருந்தையும்​—⁠அனுபவித்து மகிழ்ந்தார்கள்.

முதலில் திருமணப் பேச்சு அல்லது சவ அடக்கப் பேச்சு கொடுக்கப்படும், பிறகு பல்வேறு பைபிள் தலைப்புகளில் பேச்சுகள் தொடரும். சிலசமயங்களில் குறித்த நேரத்திற்குள் பேச்சாளர்களால் வந்துசேர முடியாதபோது தகுதியுள்ள மற்ற சகோதரர்கள் பேச்சு கொடுக்க எப்போதும் தயாராக இருந்தார்கள்; பொதுவாக பைபிளை மட்டுமே வைத்துப் பேசினார்கள், ஏனென்றால் பேச்சுத்தாள்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

கோடைகாலத்தில் நகரவாசிகள் உல்லாசமாகப் பொழுதுபோக்க நாட்டுப்புறத்திற்கு திரண்டு வந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளும் அப்படிச் செய்தார்கள். ஆனால், அந்த வாய்ப்பை நழுவவிடாமல் குன்றுகள்மீதும் காடுகளிலும் சிறு மாநாடுகளை நடத்தினார்கள். ஒப்பனையுடன் பைபிள் நாடகங்களையும் நடத்தினார்கள்.

மற்றொரு விசேஷ விடுமுறைத் தலம் கருங்கடலாகும்; அது முழுக்காட்டுதலுக்கு ஏற்ற இடமாகவும் இருந்தது. சகோதரர்கள் எப்படி மற்றவர்களின் கவனத்தைக் கவராதபடி முழுக்காட்டுதல் கொடுத்தார்கள்? ஒரு வழி, “விளையாடுவதன்” மூலமாகும். முழுக்காட்டுதல் பெறவிருந்தோரும் முழுக்காட்டப்பட்ட மற்ற சகோதரர்களும் தண்ணீருக்குள் வட்டமாக நின்றுகொண்டு பந்தை தூக்கிப்போட்டு “விளையாடினார்கள்.” நடுவில் பேச்சாளர் நின்றுகொண்டு பேசினார்; அதன் பிறகு விவேகத்துடன் முழுக்காட்டுதல் கொடுக்கப்பட்டது.

தேனீ வளர்ப்போருக்கு ஒரு மன்றம்

1980-⁠ல், ருமேனியாவின் வடமேற்கில், நெக்ரிஷ்டியோவாஷ் என்ற பட்டணத்திலிருந்த சகோதரர்கள், ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்ட சட்டப்பூர்வ அனுமதி பெறுவதற்கு புதுமையான வழியைக் கண்டுபிடித்தார்கள். அந்தச் சமயத்தில் தேனீ வளர்ப்பை அரசாங்கம் ஊக்குவித்தது. ஆகவே தேனீப் பண்ணை வைத்திருந்த சில சகோதரர்கள் ஒன்றுசேர்ந்து, தேனீ வளர்ப்பு கூட்டுறவு சங்கம் ஒன்றை உள்ளூரில் ஆரம்பிக்க திட்டமிட்டார்கள்; அனைவரும் கூடிவருவதற்குத் தேவையான ஒரு மன்றத்தைக் கட்டுவதற்கு நல்ல காரணமும் கிடைத்துவிடும் என நினைத்தார்கள்.

தங்கள் வட்டாரத்திலிருந்த மூப்பர்களிடம் ஆலோசனை கேட்ட பிறகு அந்தச் சகோதரர்கள் ருமேனிய தேனீ வளர்ப்பு சங்கத்தில் பதிவு செய்துகொண்டு, ஒரு மன்றத்தைக் கட்டுவதற்கான திட்டத்தை நகர மன்றத்தில் சமர்ப்பித்தார்கள். அதிகாரிகள் உடனடியாக ஒப்புதல் அளித்தார்கள்; 34 மீட்டர் நீளத்திலும் 14 மீட்டர் அகலத்திலும் மரத்தாலான கட்டடத்தைக் கட்டுவதற்கு வழி பிறந்தது. அந்தத் தேனீ வளர்ப்போரும் அவர்களுக்கு உதவிய மற்ற அநேகரும் சந்தோஷத்தில் பூரித்துப்போய், அந்தக் கட்டடப் பணியை மூன்றே மாதத்தில் முடித்தார்கள். அதுமட்டுமா, அதற்காக நகர அதிகாரிகள் அவர்களுக்கு விசேஷமாக நன்றியும் தெரிவித்தார்கள்!

முதல் கூட்டத்திற்கு அநேகர் வரவிருந்ததாலும் அது பல மணிநேரம் நீடிக்கவிருந்ததாலும் சகோதரர்கள் அந்த மன்றத்தை நெல் அறுவடை கொண்டாட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக அனுமதி பெற்றார்கள். அந்நிகழ்ச்சிக்கு நாட்டின் எல்லா பகுதிகளிலிருந்தும் 3,000-⁠க்கும் அதிகமான சாட்சிகள் வந்தார்கள். இத்தனை பேர், அறுவடை செய்யவும் பிற்பாடு அதைக் “கொண்டாடவும்” வந்திருந்ததைப் பார்த்து நகர அதிகாரிகளுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்.

அக்கொண்டாட்டம் உண்மையில் ஆன்மீக விருந்து அளித்த அசெம்பிளியாக இருந்தது. அந்தக் கட்டடம் தேனீ வளர்ப்புக்கு என்று கட்டப்பட்டதால், பேச்சுகளில் அடிக்கடி தேனீக்கள் சிறப்பித்துக் காட்டப்பட்டன; ஆனால் ஆன்மீக கோணத்தில் விவரிக்கப்பட்டன. உதாரணத்திற்கு தேனீயின் சுறுசுறுப்பும், பறக்கும் திறமையும், ஒழுங்கமைக்கும் திறமையும், கூட்டைப் பாதுகாக்கையில் காட்டும் சுயதியாகமும் தைரியமும், இன்னும் பல குணங்களும் பேச்சுகளில் சுட்டிக்காட்டப்பட்டன.

இந்த முதல் கூட்டத்திற்குப் பிறகு, தேனீ மன்றம் என அழைக்கப்பட்ட அக்கட்டடம் சகோதரர்களுக்கு பல வருடங்களுக்குக் கைகொடுத்தது; தடையுத்தரவின் கீழிருந்த மீதி வருடங்களுக்கும் தடை நீக்கப்பட்ட பிறகு இன்னும் மூன்று வருடங்களுக்கும் அது அவர்களுக்குக் கைகொடுத்தது.

மண்டலக் கண்காணிகள் ஒற்றுமையை முன்னேற்றுவிக்கிறார்கள்

பல பத்தாண்டுகளுக்கு, கம்யூனிஸவாதிகள் கடவுளுடைய மக்கள் மத்தியில் சந்தேகங்களுக்கு வித்திட்டு அவர்களுடைய ஒற்றுமையைக் குலைத்து, பேச்சுத்தொடர்பை அறுத்துவிட தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து வந்தார்கள். முன்னர் பார்த்தபடி, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். சொல்லப்போனால், 1980-களில்கூட சில பிரிவினைகள் இருக்கத்தான் செய்தன. மண்டலக் கண்காணிகளின் விஜயம் இப்பிரச்சினையைச் சரிசெய்ய உதவியது; அதேசமயத்தில் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களும் உதவின.

சுமார் 1975 முதற்கொண்டு, சகோதரர் கெரட் லாஷ் ருமேனியாவுக்கு பல முறை விஜயம் செய்தார்; அப்போது அவர் ஆஸ்திரிய கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினராக இருந்தார்; இப்போது ஆளும் குழுவின் அங்கத்தினராக இருக்கிறார். 1988-⁠ல், ஆளும் குழுவின் பிரதிநிதிகளான தியோடோர் ஜாராக்ஸும் மில்டன் ஹென்ஷலும் ருமேனியாவுக்கு இரு முறை சென்றார்கள்; அவர்கள் சகோதரர் லாஷையும், மொழிபெயர்ப்பு செய்வதற்காக சகோதரர் ஜான் ப்ரென்காவையும் அழைத்துச் சென்றார்கள். சகோதரர் ஜான் அப்போது ஐக்கிய மாகாணத்திலுள்ள பெத்தேலில் பணிபுரிந்துவந்தார். அவர்களுடைய விஜயம் சகோதரர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது; யெகோவாவின் அமைப்பிலிருந்து விலகியிருந்த ஆயிரக்கணக்கான சகோதரர்கள் மறுபடியும் நம்பிக்கையோடு அமைப்பிடம் வந்தார்கள்.

இதற்கிடையே, அரசியலில் ஏற்பட்ட பல மாற்றங்கள் கம்யூனிஸ ஐரோப்பாவையே கலக்கின; அதன் அஸ்திவாரத்தையே ஆட்டங்காண வைத்தன. கடைசியாக, 1980-களின் முடிவில் பெரும்பாலான கம்யூனிஸ ஆட்சிகள் கவிழ்ந்தன. ருமேனியாவில் 1989-⁠ல் மக்கள் கம்யூனிஸ ஆட்சியை எதிர்த்து கலகம் செய்தபோது நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. அக்கட்சியின் தலைவர் நையிகலை சாசெஸ்கும் அவரது மனைவியும் டிசம்பர் 25 அன்று கொலை செய்யப்பட்டார்கள். அதற்கடுத்த வருடம் ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டது.

ஒருவழியாக சுதந்திரம்!

ருமேனியாவின் அரசியலில் மாற்றம் ஏற்பட்டபோதிலும், யெகோவாவின் சாட்சிகள் எப்போதும்போல் உறுதியுடன் நடுநிலைமை காத்தார்கள். ஆனாலும், அச்சமயத்தில் ருமேனியாவில் இருந்த 17,000 சாட்சிகளுக்கு, கனவில் மட்டுமே கிடைக்குமென நினைத்திருந்த சுதந்திரம் நிஜமாகவே கிடைத்துவிட்டது. நாட்டு ஆலோசனைக் குழு இவ்வாறு எழுதியது: “42 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக, ருமேனியாவில் நடக்கும் ஊழியத்தைப் பற்றிய அறிக்கையை சந்தோஷமாக அனுப்பி வைக்கிறோம். அன்பான தகப்பனாகிய யெகோவா தேவனுக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; ஏனென்றால் லட்சக்கணக்கான சகோதரர்கள் செய்த ஊக்கமான ஜெபங்களை அவர் கேட்டு, இரக்கமற்ற துன்புறுத்தலுக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்திருக்கிறார்.”

ஏப்ரல் 9, 1990-⁠ல், யெகோவாவின் சாட்சிகளுடைய மத அமைப்பு என்ற பெயரில் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது; உடனடியாக நாடு முழுவதும் வட்டார மாநாடுகளை சகோதரர்கள் ஏற்பாடு செய்தார்கள். இந்த மாநாடுகளில் 44,000-⁠க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டார்கள்; இந்த எண்ணிக்கை பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட இரு மடங்குக்கும் அதிகமாக இருந்தது; அப்போது பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 19,000-ஆக அதிகரித்திருந்தது. வெளி ஊழிய அறிக்கையின்படி, செப்டம்பர் 1989 முதல் செப்டம்பர் 1990 வரையான காலப்பகுதியில் 15 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டது!

அச்சமயத்தில், ஆஸ்திரிய கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில் நாட்டு ஆலோசனைக் குழு ஒன்று ஊழியத்தை மேற்பார்வை செய்து வந்தது. இருந்தாலும் 1995-⁠ல், 66 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் ருமேனியாவில் கிளை அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.

பொருளாதார நெருக்கடியின்போது உதவி

1980-களில் ருமேனியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது; நுகர்வோர் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்பின் கம்யூனிஸ அரசு கவிழ்ந்தபோது அதனுடன் சேர்ந்து பொருளாதாரமும் ஒரேயடியாகக் கவிழ்ந்தது; மக்களின் நிலைமை பரிதாபத்திற்குரியதானது. ஆகவே ஆஸ்திரியா, முன்னாள் செக்கோஸ்லோவாகியா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி ஆகிய நாடுகளிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் 70 டன்னுக்கும் அதிகமான உணவையும் உடையையும் அனுப்பி வைத்தார்கள்; சொல்லப்போனால், ருமேனியாவிலிருந்த சகோதரர்கள் அவற்றில் கொஞ்சத்தை சாட்சிகளல்லாத அக்கம்பக்கத்தாருக்குக்கூட கொடுத்து உதவினார்கள். “ஒவ்வொரு முறை உதவியபோதும், சகோதரர்கள் அந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி நன்கு சாட்சி கொடுத்தார்கள்” என ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது.

சகோதரர்களுக்குப் பொருள் உதவி மட்டுமல்ல ஆன்மீக உதவியும் வழங்கப்பட்டது; ஆன்மீக உணவு ட்ரக்குகளில் அனுப்பி வைக்கப்பட்டது. பொதுவாக ஒரு முழு தொகுதிக்கே ஒரேவொரு காவற்கோபுர பத்திரிகைதான் கிடைத்து வந்ததால், ஏராளமாக வந்திறங்கிய பிரசுரங்களைப் பார்த்ததும் அநேகர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். அதுமட்டுமல்லாமல், ஜனவரி 1, 1991 இதழ் முதற்கொண்டு காவற்கோபுரம் ருமேனிய மொழியில் மாதம் இருமுறை வெளிவர ஆரம்பித்தது, அதுவும் ஆங்கில பதிப்பு வெளிவந்த அதே சமயத்தில் வண்ணப் பத்திரிகையாக வெளிவர ஆரம்பித்தது! இந்தப் புதிய முன்னேற்றங்களால் ஊழியத்தில் விநியோகித்துவந்த பத்திரிகைகளின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது.

கலந்தாலோசிப்புகளிலிருந்து சபைக் கூட்டங்கள் வரை

துன்புறுத்தலைச் சந்தித்த காலத்தின்போது சகோதரர்களால் சில கூட்டங்களை​—⁠தேவராஜ்ய ஊழியப் பள்ளி போன்றவற்றை​—⁠நடத்த வேண்டிய விதத்தில் நடத்த முடியவில்லை. அவர்கள் வெறுமனே சிறு தொகுதிகளாக ஒன்றுகூடி, பிரசுரத்திலுள்ள தகவலை வாசித்து, பிறகு கலந்தாலோசித்தார்கள். பொதுவாக அத்தகைய பிரசுரங்களில் வெகு சில பிரதிகளே, அல்லது ஒரேவொரு பிரதியே அவர்களிடம் இருந்தது.

இப்போது ருமேனிய கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினராக இருக்கும் சகோதரர் ஜான் ப்ரென்கா இவ்வாறு சொல்கிறார்: “தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல் ருமேனிய மொழியில் 1992-⁠ல் அச்சிடப்பட்டது. அதற்கு முன்பு, உள்ளூரில் அச்சிடப்பட்ட புத்தகம் வெகு சில சகோதரர்களிடம் மட்டுமே இருந்தது. 1991-⁠ல், தேவராஜ்ய ஊழியப் பள்ளியை நடத்துவதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் மூப்பர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தோம். ஆனால் அவர்கள் பள்ளியில் ஆலோசனை தர பெரும்பாலும் தயங்கினார்கள். அந்நாட்களில் மேடையிலிருந்தே ஆலோசனை தர வேண்டியிருந்தது. ஆகவே, ‘எல்லாருக்கும் முன் அறிவுரை சொன்னால் சகோதரர்களுக்குத் தர்மசங்கடமாக இருக்கும்’ என சிலர் சொன்னார்கள்.”

மேலும், சில விஷயங்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தன. உதாரணத்திற்கு, ஊழியப் பயிற்சிப் பள்ளியில் பட்டம்பெற்ற சகோதரர் ஒருவர் 1993-⁠ல் ஒரு சபைக்கு விஜயம் செய்தபோது, அங்கிருந்த மூப்பர் அவரை அணுகி, பள்ளி அட்டவணையைக் காட்டினார்; அதில், பெரிய சபைகள் இரண்டாம் பள்ளியை நடத்தலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. திறம்பட்ட மாணவர்களுக்குத்தான் அந்தப் பள்ளி என நினைத்துக்கொண்டு, “அந்தப் பள்ளியில் எப்போது நாங்கள் பேச்சு கொடுக்க ஆரம்பிக்கலாம்?” என அந்த மூப்பர் கேட்டார்; பிறகு, “இன்னும் அதிக முன்னேற்றம் செய்ய முடிந்த திறமையுள்ள சகோதரர்கள் இங்கிருக்கிறார்கள்” என்றார். அதன்பின், அங்குச் சென்றிருந்த அந்தச் சகோதரர் அவருக்கு அன்போடு காரியங்களைப் புரியவைத்தார்.

“வட்டார மாநாடுகள் சகோதரர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்பித்தன; ஏனென்றால் அவற்றில் மாவட்டக் கண்காணி, தேவராஜ்ய ஊழியப் பள்ளியை நடத்திக் காட்டினார். இருந்தாலும் அந்த ஏற்பாட்டை எல்லாருமே முழுமையாகப் புரிந்து ஏற்றுக்கொள்வதற்கு சில வருடங்கள் எடுத்தன.”

ருமேனியாவில் 1993-⁠ல் பயனியர் ஊழியப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. ஆன்மீக முன்னேற்றம் செய்வதற்கும் இன்னுமதிக திறமையோடு ஊழியம் செய்வதற்கும் ஆயிரக்கணக்கான பயனியர்களுக்கு அது உதவியிருக்கிறது. பயனியர் ஊழியம் செய்வது ருமேனியாவில் மிகப் பெரிய சவால்தான்; ஏனென்றால் அங்கு பகுதிநேர வேலை கிடைப்பது ரொம்பவே கஷ்டம். இருந்தாலும் 2004-⁠ல், 3,500-⁠க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் பயனியர் ஊழியத்தின் ஏதோவொரு அம்சத்தில் பங்குகொண்டார்கள்.

பயணக் கண்காணிகளுக்கு உதவி

1990-⁠ல், இத்தாலிய கிளை அலுவலகத்தைச் சேர்ந்த சகோதரர் ரோபர்டோ ஃப்ரான்கெஸ்கெட்டெ என்பவரும் சகோதரர் ஆன்ட்ரியா ஃபாபி என்பவரும் ருமேனியாவில் சேவை செய்ய நியமிக்கப்பட்டார்கள். வேலையை மறுசீரமைப்பதே அவர்களுடைய குறிக்கோளாக இருந்தது. சகோதரர் ஃப்ரான்கெஸ்கெட்டெ இவ்வாறு சொல்கிறார்: “அப்போது எனக்கு 57 வயது. அச்சமயத்தில் ருமேனியாவிலிருந்த பொருளாதார நிலைமையின் காரணமாக, அந்தப் புதிய நியமிப்பு எனக்கும் என் மனைவி இமெல்டாவுக்கும் ரொம்பவே கஷ்டமாக இருந்தது.

“நாங்கள் 1990, டிசம்பர் 7-⁠ம் தேதி இரவு 7:00 மணிக்கு புகாரெஸ்ட் வந்து சேர்ந்தபோது, சீதோஷ்ணம் -12 டிகிரி செல்ஷியஸாக இருந்தது; நகரமே பனியில் மூழ்கியிருந்தது. நாங்கள் சகோதரர்களைச் சந்தித்து, இரவு தங்குவதற்கு ரூம் இருக்கிறதாவென கேட்டோம். ‘இதுவரை எதுவும் கிடைக்கவில்லை’ என அவர்கள் சொன்னார்கள். ஆனால் நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட ஓர் இளம் பெண் தன்னுடைய வீட்டுக்கு உடனடியாக எங்களை அழைத்துச் சென்றாள்; அவளுடைய தாயும் பாட்டியும் சாட்சிகளாக இருந்தார்கள். அவர்களுடைய வீட்டில் நாங்கள் சில வாரங்கள் தங்கினோம்; பிறகு பொருத்தமான ஒரு அப்பார்ட்மென்ட் கிடைத்ததும் அங்கு சென்றோம். அந்த ஊரிலிருந்த சகோதரர்கள் உணர்ச்சிப்பூர்வமாகக்கூட எங்களுக்கு ஆதரவையும் உற்சாகத்தையும் தந்தார்கள்; இதனால் அந்தப் புதிய பிராந்தியத்தில் ஊழியம் செய்வது சீக்கிரத்தில் பழகிப்போனது.”

1967-⁠ல் கிலியட் பள்ளியின் 43-வது வகுப்பில் பட்டம் பெற்ற சகோதரர் ரோபர்டோவும் அவரது மனைவியும் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக ருமேனியாவில் ஊழியம் செய்தார்கள்; யெகோவாவின் சேவையில் பெற்றிருந்த பல பத்தாண்டுகால அனுபவத்தைப் பயன்படுத்தி சகோதரர்களுக்கு தாராளமாக உதவி செய்து வந்தார்கள். “ஜனவரி 1991-⁠ல், நாட்டு ஆலோசனைக் குழுவானது எல்லா பயணக் கண்காணிகளுக்கும்​—⁠மொத்தம் 42 சகோதரர்களுக்கு​—⁠ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தக் கண்காணிகளில் பெரும்பாலோர் ஆறு அல்லது ஏழு சபைகள் உள்ள சிறு வட்டாரங்களில் சேவை செய்து வந்தார்கள். ஒவ்வொரு சபையையும் அடுத்தடுத்த இரு வாரயிறுதி நாட்களில் அவர்கள் வழக்கமாக சந்தித்தார்கள்; பொதுவாக, மனைவியை அழைத்துச் செல்லாமல் தனியாகச் சென்றார்கள். அந்தச் சமயத்தில், வட்டாரக் கண்காணிகள் தங்கள் குடும்பத்தாரைப் பராமரிப்பதற்கும் அதிகாரிகள் சந்தேகப்படாதபடி நடந்துகொள்வதற்கும் ஏதேனும் வேலை பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அந்தச் சகோதரர்கள் புதிய விதத்தில்​—⁠அதாவது மற்ற நாடுகளிலிருந்த பயணக் கண்காணிகளைப் போல்⁠—⁠செவ்வாய்க்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை சபைகளைச் சந்திக்க வேண்டும் என சொல்லப்பட்டது.

“இந்த ஏற்பாட்டைப் பற்றி விளக்கிய பிறகு, ‘பயணக் கண்காணிகளாகத் தொடர்ந்து சேவை செய்ய விரும்புகிறவர்கள் கையைத் தூக்குங்கள்’ என அந்த 42 சகோதரர்களிடம் சொன்னேன். ஒருவர்கூட கையைத் தூக்கவில்லை! ஆகவே சில நிமிடங்களில் அந்த நாட்டிலிருந்த எல்லா பயணக் கண்காணிகளையும் இழந்துவிட்டோம்! ஆனால் அவர்களில் சிலர் ஜெபசிந்தையோடு மறுபடியும் தீர யோசித்துப் பார்த்து, தங்கள் முடிவை மாற்றிக்கொண்டார்கள். அத்துடன், ஊழியப் பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்ற சகோதரர்களின் உதவியும் கிடைத்தது; அவர்கள் ஆஸ்திரியா, இத்தாலி, ஐக்கிய மாகாணங்கள், பிரான்சு, ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வந்தார்கள்.”

ருமேனிய நாட்டவரான ஜான் ப்ரென்கா, புரூக்ளின் பெத்தேலில் பத்து ஆண்டுகளாக சேவை செய்துவந்தார்; அவர் மீண்டும் ருமேனியாவுக்கே மாறிச் சென்றார். முதலில் அவர் வட்டாரக் கண்காணியாகவும் மாவட்டக் கண்காணியாகவும் சேவை செய்தார். அவர் சொல்வதாவது: “ஜூன் 1991-⁠ல் மாவட்டக் கண்காணியாக நான் வட்டாரக் கண்காணிகளுடன் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தேன்; அவர்கள், புதிய ஏற்பாட்டிற்கு இசைவாக முழுநேரமாக ஊழியத்தில் ஈடுபட முன்வந்தவர்கள். ஆனால், அவர்கள் மட்டுமல்ல சபையினரும்கூட தங்கள் சிந்தையை பெருமளவு மாற்றிக்கொள்ள வேண்டியிருந்ததை நான் சீக்கிரத்தில் புரிந்துகொண்டேன்; புதிய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வது அவர்களுக்கும் கஷ்டமாக இருந்தது. ‘பிரஸ்தாபிகளால் தினமும் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ளவே முடியாது’ என சில மூப்பர்கள் சொன்னார்கள். என்றாலும், அனைவருமே நன்கு ஒத்துழைத்து, தேவையான மாற்றங்களைச் செய்தார்கள்.”

ராஜ்ய ஊழியப் பள்ளியும் ஊழியப் பயிற்சிப் பள்ளியும்கூட சகோதரர்களுக்கு அநேக விஷயங்களைக் கற்றுக்கொடுத்தன. பாயா-மேரே நகரில் ராஜ்ய ஊழியப் பள்ளி நடந்தபோது, அதன் போதனையாளர்களில் ஒருவரை மூப்பர் ஒருவர் கண்ணீரோடு அணுகினார். “நான் அநேக வருடங்களாக மூப்பராய் இருக்கிறேன், ஆனால் மேய்ப்பு சந்திப்புகளை எப்படிச் செய்வதென்று இப்போதுதான் உண்மையிலேயே புரிந்துகொண்டேன்; இந்த அருமையான தகவலுக்காக ஆளும் குழுவிற்கு மனமார நன்றி சொல்கிறேன்” என்றார்.

சகோதரர்கள் ஊழியப் பயிற்சிப் பள்ளியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள், ஆனால் தங்கள் நாட்டிலேயே அது நடக்குமென கனவுகூட கண்டதில்லை. ஆகவே 1999-⁠ல் முதல் வகுப்பு அவர்களுடைய நாட்டில் நிஜமாகவே நடத்தப்பட்டபோது அவர்கள் அடைந்த பூரிப்பை சொல்லவா வேண்டும்! அதுமுதல், அங்கு இன்னும் எட்டு வகுப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன; மால்டோவா, உக்ரைன் ஆகிய அண்டை நாடுகளிலுள்ள ருமேனியன் மொழி பேசும் சகோதரர்களும் இவ்வகுப்புகளில் வந்து கலந்துகொண்டார்கள்.

“நான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்!”

இன்று அநேகருக்கு தவறாமல் சாட்சி கொடுக்கப்படுகிறது என்றாலும் சுமார் 70 லட்சம் பேர்​—⁠அதாவது, மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர்​—⁠நியமிக்கப்படாத பிராந்தியத்தில் வசித்து வருகிறார்கள். அநேகர் நற்செய்தியைக் கேட்டதே கிடையாது; ஆகவே அறுப்பு இன்னும் மிகுதியாயிருக்கிறது! (மத். 9:37) அத்தகைய பிராந்தியங்களுக்கு, ஒழுங்கான பயனியர்கள், விசேஷப் பயனியர்கள், சபை மூப்பர்கள் ஆகியோர் குடிமாறிச் செல்வதன் மூலம் உதவி அளித்திருக்கிறார்கள். இதன் காரணமாக இன்னுமதிக தொகுதிகளும் சபைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அத்தகைய பிராந்தியங்களில் விசேஷ ஊழியம் செய்யும்படி சபைகளுக்கு கிளை அலுவலகம் அழைப்பு விடுத்திருக்கிறது. மற்ற நாடுகளைப் போலவே இங்கும் அப்படிப்பட்ட ஊழியம் மிகுந்த பலன் தந்திருக்கிறது.

ஓர் ஒதுக்குப்புற கிராமத்திலுள்ள 83 வயது பெண்மணிக்கு காவற்கோபுரம் பத்திரிகையை அவருடைய மகள் தந்திருந்தாள்; அவள் புகாரெஸ்ட் நகரில் ஒரு குப்பைத்தொட்டியிலிருந்து அதைக் கண்டெடுத்திருந்தாளாம். அந்தப் பெண்மணி பத்திரிகையை வாசித்தது மட்டுமல்லாமல் அதிலிருந்த வசனத்தையெல்லாம் தன்னுடைய பைபிளில் எடுத்துப் பார்த்திருக்கிறார்; கடவுளுடைய பெயரும்கூட அந்த பைபிளில் இருந்திருக்கிறது. அடுத்த முறை தன் மகளைப் பார்த்ததும், “நான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்!” என பூரிப்புடன் சொன்னார்.

அதுமட்டுமல்ல, அவர் தன்னுடைய கிராமத்துப் பாதிரியிடம்கூட பேசினார்; கடவுளுடைய பெயரை ஏன் யாருக்கும் கற்றுக்கொடுக்கவில்லை என அவரிடம் கேட்டார். அந்தப் பாதிரி பதிலே சொல்லாமல், அவருடைய பைபிளையும் காவற்கோபுர பத்திரிகையையும் ஆராய விரும்புவதாகச் சொல்லி இரவல் கேட்டார். அந்தப் பெண்மணியும் உடனடியாகக் கொடுத்துவிட்டார்; ஆனால் அந்தப் பாதிரி அவற்றைத் திருப்பிக் கொடுக்கவே இல்லை. பிற்பாடு, யெகோவாவின் சாட்சிகள் அந்தக் கிராமத்தில் ஊழியம் செய்த போது, அந்தப் பெண்மணி அவர்களோடு சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பித்தார்; அறிவு புத்தகத்தின் உதவியுடன் படித்து நன்கு முன்னேறினார். இன்று அவரும் அவருடைய மகள்கள் அனைவரும் சத்தியத்தில் இருக்கிறார்கள்.

சுதந்திரமாக ஒன்றுகூடிவர வழிபிறந்தது!

ருமேனியாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் 1990-⁠ல் நடைபெற்ற “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாடுகளில் கலந்துகொள்ள வந்தபோது மிகுந்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனார்கள். அவர்களில் அநேகர் அப்போதுதான் முதன்முறையாக ஒரு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டார்கள். க்ளுஜ்-நாப்போக்கா, பிராஷாவ் ஆகிய நகரங்களில் அம்மாநாடு நடந்தது. இரு வாரங்களுக்கு முன்பு, 2000-⁠க்கும் அதிகமானவர்கள் ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்ட் நகரில் நடந்த ருமேனியன் மொழி மாநாட்டில் கலந்துகொண்டார்கள். ருமேனியாவில் ஒரு நாளுக்கு மட்டுமே மாநாடு நடந்தபோதும் சகோதரர்கள் பூரிப்படைந்தார்கள்; ஏனென்றால் ஆளும் குழுவிலிருந்து மில்டன் ஹென்ஷலும் தியோடர் ஜாரக்ஸும் பிரதிநிதிகளாக வந்து பேச்சு கொடுத்தார்கள். 36,000-⁠க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டார்கள், 1,445 பேர்​—⁠அதாவது, பிரஸ்தாபிகளில் சுமார் 8 சதவீதத்தினர்​—⁠முழுக்காட்டுதல் பெற்றார்கள்!

1996-⁠ல், “தேவ சமாதான தூதுவர்கள்” என்ற பொருளில் ஒரு சர்வதேச மாநாடு புகாரெஸ்ட் நகரில் நடக்கவிருந்தது. இருந்தாலும், அம்மாநாட்டை நிறுத்த ஆர்த்தடாக்ஸ் குருமார் தீவிரமாக முயற்சி செய்தார்கள். அவர்களும் அவர்களுடைய கூட்டாளிகளும் போஸ்டர்கள் அடித்து நகரெங்கும் ஒட்டினார்கள்; வெறுப்பைக் கொப்பளிக்கும் வாசகங்களை உடைய அந்தப் போஸ்டர்களை சர்ச் வளாகம், பொது கட்டடங்கள், நடைபாதைகள், சுவர்கள் என எங்கும் ஒட்டினார்கள். “வாழ்ந்தால் ஆர்த்தடாக்ஸ் நம்பிக்கையோடு, இல்லையேல் சாவு” என எழுதப்பட்ட ஒரு போஸ்டர் காணப்பட்டது. மற்றொன்று இவ்வாறு அறிவித்தது: “இந்த மாநாட்டைத் தடுத்து நிறுத்த அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்போம். வாருங்கள், நம் மூதாதையரின் மதத்தைக் கட்டிக்காப்போம். தேவன் நமக்குத் துணை!”

இந்தச் சூழ்நிலைகளின் காரணமாக நகர அதிகாரிகள் தீர்மானத்தை மாற்றிக்கொண்டு, புகாரெஸ்ட்டில் மாநாடு நடத்துவதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்கள். இருந்தாலும், ஜூலை 19 முதல் 21 வரை பிராஷாவ், க்ளுஜ்-நாப்போக்கா நகரங்களில் மாநாடு நடத்துவதற்கு சகோதரர்கள் மன்றங்களைக் கண்டுபிடித்தார்கள்; அதோடு, மற்ற மாநாடுகளுக்குச் செல்ல முடியாதவர்களுக்காக புகாரெஸ்ட்டிலும் பாயா-மேரேயிலும் மிகச் சிறு மாநாடுகளை நடத்த ஏற்பாடு செய்தார்கள்.

சகோதரர்கள் பதட்டப்படாமல் அவ்வளவு சீக்கிரத்தில் வேறு ஏற்பாடுகளைச் செய்ததைப் பார்த்து நிருபர்கள் அசந்துவிட்டார்கள். ஆகவே, குருமாரின் மோசமான விமர்சனங்கள் மத்தியிலும் மாநாட்டிற்கு முந்தைய தினம் மீடியாவில் நல்ல விதமான அறிவிப்புகள் வெளியாயின. அதேசமயத்தில், முன்பு வெளியான கெட்ட செய்திகள்கூட ஒருவிதத்தில் நன்மை செய்தன; எப்படியெனில் அவை யெகோவாவின் பெயரை விளம்பரப்படுத்தின. புகாரெஸ்ட்டைச் சேர்ந்த ஒரு சகோதரர் இவ்வாறு சொன்னார்: “நாடெங்கும் மூன்றே வாரங்களில் ஏகப்பட்ட விளம்பரம் கிடைத்தது; ஆகவே பல வருடங்கள் சாட்சி கொடுத்துவிட்டதுபோல் இருந்தது. எங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்குமென ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் நினைத்த காரியமே, நற்செய்தியைப் பரப்புவதில் கைகொடுத்துவிட்டது.” மொத்தம் 40,206 பேர் மாநாடுகளில் கலந்துகொண்டார்கள்; 1,679 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.

வருடம் 2000-⁠ல் நடைபெற்ற, “கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்” மாவட்ட மாநாடுகளில், ருமேனியன் மொழியில் வெளியிடப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைப் பெற்ற சகோதரர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். ஓர் இளம் சகோதரர் நன்றி பொங்க இவ்வாறு சொன்னார்: “இந்த மொழிபெயர்ப்பு பைபிளில், அதுவும் என்னுடைய சொந்தப் பிரதியில் யெகோவாவின் பெயரை வாசித்தபோது அவரிடம் இன்னுமதிகமாக நெருங்கி வந்தேன். என் இருதயத்தின் ஆழத்திலிருந்து யெகோவாவுக்கும் அவரது அமைப்புக்கும் நன்றி சொல்கிறேன்.”

தேனீ மன்றம் முதல், மாநாட்டு மன்றம் வரை

கம்யூனிஸ சகாப்தத்தின்போது, முன்பு குறிப்பிடப்பட்ட தேனீ மன்றம் தவிர, வேறு எந்த ராஜ்ய மன்றங்களும் கட்டப்படவில்லை. ஆகவே தடையுத்தரவு நீக்கப்பட்ட பிறகு, மிக அதிகமான ராஜ்ய மன்றங்கள் தேவைப்பட்டன. ஆனாலும் ராஜ்ய மன்ற நிதி ஏற்பாட்டின் உதவியால், சமீப வருடங்களில் சகோதரர்கள் சராசரியாக பத்து நாட்களுக்கு ஒரு ராஜ்ய மன்றம் வீதம் கட்டி முடித்திருக்கிறார்கள்! எளிய, நடைமுறைக்கு ஏற்ற வடிவமைப்புகளில், எளிதில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி அவற்றைக் கட்டியிருக்கிறார்கள். மற்ற நாடுகளைப் போலவே இங்கேயும், மன்றங்கள் கட்டப்பட்டபோது​—⁠முக்கியமாக அதிவிரைவில் கட்டப்பட்டபோது​—⁠வெளிக்காட்டப்பட்ட அருமையான ஒழுங்கமைப்பும் மனப்பூர்வமான ஈடுபாடும் அக்கம்பக்கத்தாருக்கும், வியாபாரிகளுக்கும், நகர அதிகாரிகளுக்கும் சிறந்த விதத்தில் சாட்சி பகர்ந்தன.

மூரெஷ் மாவட்டத்தில் கட்டப்பட்டுவந்த ஒரு ராஜ்ய மன்றத்திற்கு மின்வசதி இணைப்புக்கு அனுமதி பெற சகோதரர்கள் அதிகாரிகளை அணுகினார்கள். “ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்? அனுமதி பெறுவதற்கு குறைந்தது ஒரு மாதமாவது ஆகும். எப்படியும், அந்த ஒரு மாதத்தில் நீங்கள் எதையும் கட்டி முடித்துவிடப் போவதில்லையே” என்றார் ஓர் அதிகாரி. ஆகவே சகோதரர்கள் இயக்குநரை சந்தித்துப் பேசினார்கள்.

அவரும் இப்படிக் கேட்டார்: “ஏன் அவசரப்படுகிறீர்கள்? இப்போதுதானே அஸ்திவாரம் போட்டிருக்கிறீர்கள்?”

“அஸ்திவாரம் போட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. இப்போது மேற்கூரை போட்டுக்கொண்டு இருக்கிறோம்!” என்றார்கள் சகோதரர்கள். இயக்குநருக்கு விஷயம் புரிந்துவிட்டது, ஆகவே மறுநாளே அனுமதி வழங்கினார்.

ருமேனியாவில் நெக்ரிஷ்டியோவாஷ் பட்டணத்தில் முதன்முதலாகக் கட்டப்பட்ட மாநாட்டு மன்றத்தின் மெயின் ஹாலில் 2,000 பேர்வரை உட்கார முடியும்; அதோடு, திறந்தவெளி வட்ட அரங்கில் 6,000 பேர்வரை அமர முடியும். பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுக்க வந்திருந்த சகோதரர் லாஷ் பூரித்துப்போனார்; ருமேனியன் மொழியில் பேச்சு கொடுத்தார். ஐந்து வட்டாரங்களைச் சேர்ந்த 90-⁠க்கும் அதிகமான சபைகள் கட்டுமானப் பணியில் உதவியிருந்தன. அம்மன்றம் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்பாகவே ஜூலை 2003-⁠ல் அங்கு நடத்தப்பட்ட மாவட்ட மாநாட்டில் 8,572 பேர் கலந்துகொண்டார்கள். அந்த மன்றத்தைப் பற்றி உள்ளூர் ஆர்த்தடாக்ஸ் மதத்தினர் மத்தியில் பேச்சு அடிபட்டுக்கொண்டே இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அவர்கள் அனைவருமே குறைகூறிப் பேசவில்லை. மாறாக, சில பாதிரிகள்கூட, சகோதரர்களின் மனப்பூர்வமான சேவையைப் பாராட்டினார்கள்.

கடவுளுடைய ஊழியர்களுக்கு எதிரான எந்த ஆயுதமும் வாய்க்காமல் போகும்

கரோலி சாபாவும் யோஷெஃப் கிஸ்ஸும் 1911-⁠ல் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பியபோது, தாங்கள் ஆரம்பிக்கவிருந்த வேலையை யெகோவா எந்தளவு ஆசீர்வதிப்பார் என்பதைப் பற்றி அறியாதிருந்தார்கள். இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்: கடந்த பத்து ஆண்டுகளில், கிட்டத்தட்ட 18,500 புதியவர்கள் ருமேனியாவில் முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள்; ஆக, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 38,423-ஆக உயர்ந்திருக்கிறது. 2005-⁠ல் நடந்த நினைவுநாள் ஆசரிப்புக்கு 79,370 பேர் வந்திருந்தார்கள்! இந்த வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் விதத்தில் ஒரு புதிய பெத்தேல் வீடு 1998-⁠ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது; பிறகு வருடம் 2000-⁠ல் அது விஸ்தரிக்கப்பட்டது. மூன்று ராஜ்ய மன்றங்களைக் கொண்ட ஒரு கட்டடம் அந்த வளாகத்தில் கட்டப்பட்டது.

ஆனால் குறிப்பிடத்தக்க இந்த வளர்ச்சிக்கான அஸ்திவாரம், கடும் துன்புறுத்தல் நிலவிய காலத்தில் போடப்பட்டது; அந்த துன்புறுத்தலின் சில விவரங்களை அறிக்கை செய்யவே முடியாது, அந்தளவு பயங்கரமானது. ஆகவே வளர்ச்சிக்கான எல்லா புகழும் யெகோவாவையே சேரும்; அவரது பாதுகாப்பான நிழலில் உத்தம சாட்சிகள் அடைக்கலம் கண்டார்கள். (சங். 91:1, 2) உண்மையுள்ள ஊழியர்களைக் குறித்து யெகோவா இவ்வாறு வாக்குறுதி அளித்தார்: ‘உங்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உங்களுக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீங்கள் குற்றப்படுத்துவீர்கள்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரம் [அதாவது, சொத்து].’​—ஏசா. 54:⁠17.

அந்த மதிப்புமிக்க ‘சொத்தை’ காத்துக்கொள்வதற்காக, ருமேனியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், நீதியின் நிமித்தம் கடும் துன்புறுத்தலைச் சகித்தவர்களின் பொன்னான விசுவாசத்தைப் பின்பற்ற உறுதிபூண்டிருக்கிறார்கள்; இவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் பட்ட பாடுகளுக்கெல்லாம் நன்றியுணர்வு காட்டத் தீர்மானித்திருக்கிறார்கள்.​—ஏசா. 43:10; எபி. 13:⁠7.

[பக்கம் 72-ன் பெட்டி]

ருமேனியா​—⁠ஒரு கண்ணோட்டம்

நிலம்: ருமேனியாவின் பரப்பளவு 2,38,000 சதுர கிலோமீட்டர் ஆகும்; அது ஓரளவு நீளுருண்டை வடிவத்தில் இருக்கிறது; கிழக்கிலிருந்து மேற்குவரை சுமார் 720 கிலோமீட்டருக்கு அது நீண்டிருக்கிறது. வடக்கிலிருந்து கடிகாரச்சுற்றில், உக்ரைன், மால்டோவா, பல்கேரியா, சர்பியா & மான்டனிக்ரோ, ஹங்கேரி ஆகியவை அதன் அருகே இருக்கின்றன.

மக்கள்: ருமேனியாவின் ஜனத்தொகை 2 கோடியே 20 லட்சம் ஆகும். இதில் ருமேனியர், ஹங்கேரியர், ஜெர்மானியர், யூதர், உக்ரைனியர், ராமனீஸியர் ஆகியோர் உட்பட பல்வேறு அயல்நாட்டு இனத்தவரும் பூர்வீக இனத்தவரும் இருக்கிறார்கள். ஜனத்தொகையில் குறைந்தபட்சம் 70 சதவீதத்தினர் ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைச் சேர்ந்தவர்கள்.

மொழி: ருமேனிய மொழி இந்நாட்டின் ஆட்சி மொழியாகும். இது பூர்வ ரோமர்களின் மொழியான லத்தீனிலிருந்து தோன்றியுள்ளது.

பிழைப்பு: வேலை செய்பவர்களில் சுமார் 40 சதவீதத்தினர் விவசாயத்தில், வன வளர்ப்புத் தொழிலில், அல்லது மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்; 25 சதவீதத்தினர் தொழிற்சாலைகளில், சுரங்கங்களில் வேலை செய்கிறார்கள், அல்லது கட்டுமானப் பணியில் ஈடுபடுகிறார்கள்; 30 சதவீதத்தினர் அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள்.

உணவு: சோளம், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி, கோதுமை, திராட்சை போன்றவை பயிரிடப்படுகின்றன. கால்நடைகளில் முக்கியமாக ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. மாடு, பன்றி, கோழி ஆகியவையும் வளர்க்கப்படுகின்றன.

சீதோஷ்ணம்: தட்பவெப்ப நிலையும் மழையும் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. மொத்தத்தில், நான்கு மாறுபட்ட பருவ காலங்களுடன் மிதமான சீதோஷ்ணம் நிலவுகிறது.

[பக்கம் 74-ன் பெட்டி]

ருமேனியாவின் பல்வேறு இடங்கள்

ருமேனியாவின் பெரும்பகுதி கிராமப்புறமாக இருக்கிறது; மாராமூரெஷ், மால்டேவியா, டிரான்ஸ்சில்வேனியா, டாப்ருஜா ஆகிய பிரதேசங்கள் உட்பட, வரலாற்றுச் சிறப்புமிக்க ஏராளமான இடங்களும் பலதரப்பட்ட நிலப்பகுதிகளும் காணப்படுகின்றன. ரோமர்கள் படையெடுக்காத ஒரே இடம் வட பகுதியான மாராமூரெஷ் மட்டும்தான். தொலைதூர மலைக் கிராமங்களில் மக்கள் வசிக்கிறார்கள்; அவர்கள் தங்களது டேஷிய முன்னோர்களுடைய கலாச்சாரத்தை இதுவரை பாதுகாத்து வந்திருக்கிறார்கள். கிழக்கே உள்ள மால்டேவியா அதன் ஒயின் தொழிற்சாலைகளுக்கும், தாது நிறைந்த நீரூற்றுகளுக்கும், 15-⁠ம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவி மடங்களுக்கும் பெயர்பெற்றிருக்கிறது. தென் பகுதியான வல்லாசியாவில் ருமேனியாவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமுமான புகாரெஸ்ட் அமைந்திருக்கிறது.

ருமேனியாவின் மத்திபப் பகுதியில் டிரான்ஸ்சில்வேனியா அமைந்துள்ளது; அந்தப் பீடபூமியின் முக்கியப் பகுதி முழுவதையும் கார்பேத்தியன் மலைகள் மாபெரும் வில்போல் சுற்றிவளைத்திருக்கின்றன. இடைக்காலத்தைச் சேர்ந்த அரண்மனைகளும், நகரங்களும், இடிபாடுகளும் இங்கு ஏராளம் காணப்படுகின்றன; கதைகளில் இரத்தக் காட்டேரியாகச் சித்தரிக்கப்படுகிற பிரபல கதாபாத்திரமான ‘டிராகுலா’ பற்றிய பழங்கதைகள் இந்த டிரான்ஸ்சில்வேனியப் பகுதியிலிருந்தே தோன்றியுள்ளன. டிராகுலாவின் முன்னோடிகளாகக் கருதப்பட்டவர்கள் 15-⁠ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு இளவரசர்கள்; ஒருவன் விலாட் டிராக்கூல், அதாவது பிசாசாகிய விலாட் என்றழைக்கப்பட்டான், மற்றொருவன் விலாட் ட்ஸிபெஷ்; இவன் தன்னுடைய எதிரிகளைக் கொன்றுபோட்ட விதத்தின் காரணமாக கழுவேற்றுக்காரனான விலாட் என அழைக்கப்பட்டான். இவ்விரு இளவரசர்களும் சுற்றித்திரிந்ததாகக் கருதப்படுகிற பகுதிகள் உல்லாசப் பயணிகளுக்குக் காண்பிக்கப்படுகின்றன.

சுமார் 250 கிலோமீட்டர் தூரத்திற்கு கருங்கடலை எல்லையாகக் கொண்ட டாப்ருஜா பகுதியில் சிறப்புமிக்க டேன்யூப் நதியின் கழிமுகப்பகுதி அமைந்திருக்கிறது. ஐரோப்பாவிலேயே இரண்டாவது நீளமான நதியாகிய டேன்யூப், ருமேனியாவின் தெற்கு எல்லையாக அமைந்து, அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வழியே வளைந்தோடுகிறது. 4,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலுள்ள அதன் கழிமுகப்பகுதி ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய நன்செய் நில ஒதுக்கீட்டுப் பகுதியாக இருக்கிறது, அதோடு சுற்றுச்சூழலில் பல்வகைமை உடையதாகவும் இருக்கிறது; இங்கு 300-⁠க்கும் அதிகமான பறவை இனங்களும், 150 வகையான மீன்களும், வில்லோ மரங்கள்முதல் வாட்டர் லில்லிகள்வரை 1,200 விதமான தாவரங்களும் காணப்படுகின்றன.

[பக்கம் 87-ன் பெட்டி]

ஸமால்ஸீஸ் வழிபாடு மறைந்து ருமேனிய ஆர்த்தடாக்ஸ் வழிபாடு தோன்றுகிறது

பொது சகாப்தத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், ருமேனியா என்று தற்போது அறியப்பட்டிருக்கிற பகுதியில் வாழ்ந்தவர்கள் ஜிட்டே இனத்தவரும் டேஷிய இனத்தவரும் ஆவர்; இவ்விரு இனத்தாரும் ஒரே மரபுவழி வந்தவர்கள். விண் மற்றும் இறந்தோரின் தெய்வமாகக் கருதப்பட்ட ஸமால்ஸீஸை இவர்கள் வணங்கினார்கள். இன்று, கிட்டத்தட்ட அனைத்து ருமேனியர்களும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள். இந்த மாற்றம் எவ்வாறு ஏற்பட்டது?

பால்கன் தீபகற்பத்தில் ரோமின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தில், ரோம ஆட்சிக்கு ஜிட்டோ-டேஷிய கூட்டரசு மாபெரும் அச்சுறுத்தலாக இருந்தது. சொல்லப்போனால், அந்தக் கூட்டரசின் ராஜாவான டிஸெபலஸ் இரண்டு முறை ரோமப் படைகளைத் தோற்கடித்தார். என்றாலும், பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோம் வெற்றிபெற்று, அப்பகுதியை அதன் ஆட்சிக்குட்பட்ட மாகாணமாக ஆக்கியது. டேஷியா என்றழைக்கப்பட்ட அந்தப் பகுதியில் சகல சௌபாக்கியங்களும் நிறைந்திருந்தது; எனவே, ஏராளமான ரோமக் குடியேறிகள் அங்கு செல்லக் கவரப்பட்டார்கள். அவர்கள் டேஷியர்களோடு கலப்புத் திருமணம் செய்துகொண்டு, அவர்களுக்கு லத்தீன் மொழியைக் கற்றுக்கொடுத்தார்கள்; அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் தற்கால ருமேனியர்களின் மூதாதையர் ஆனார்கள்.

அங்கு குடியேறிய ஜனங்களும், வணிகர்களும், வியாபாரிகளும் “கிறிஸ்தவ மதத்தை” அவ்விடத்தில் அறிமுகப்படுத்தினார்கள். பொ.ச. 332-⁠ம் ஆண்டு, டேன்யூபுக்கு வடக்கே வசித்துவந்த காத்தியர்களுடன், அதாவது ஜெர்மானிய இனத்தவரின் குழுவுடன், பேரரசர் கான்ஸ்டன்டைன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்ட சமயத்தில் கிறிஸ்தவமண்டலத்தின் செல்வாக்கு அதிகரித்தது.

1054-⁠ல், ரோமன் சர்ச்சிலிருந்து கிழக்கு ஆர்த்தடாக்ஸ் சர்ச் பிரிந்தபோது ஏற்பட்ட மாபெரும் பிளவுக்குப் பிறகு, இப்பகுதி கிழக்கு ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுடைய செல்வாக்கின் கீழ் வந்தது; இந்த சர்ச்சிலிருந்துதான் ருமேனிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் பிற்பாடு தோன்றியது. 20-⁠ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குள், இந்த ருமேனிய சர்ச் அங்கத்தினரின் எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சமாக உயர்ந்தது; இதனால், பால்கன் நாடுகளிலேயே சுயமாகச் செயல்படும் மிகப் பெரிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சாக அது ஆனது.

[பக்கம் 98-100-ன் பெட்டி/​படம்]

குண்டு மழை பொழிந்தபோது, பாட்டுப் பாடிக்கொண்டிருந்தோம்

டீயாடார் மீரான்

பிறந்தது: 1909

முழுக்காட்டப்பட்டது: 1943

பின்னணிக் குறிப்பு: சிறையிலிருந்தபோது சத்தியத்தைக் கற்றுக்கொண்டார். நாசி சித்திரவதை முகாம்களிலும், கம்யூனிஸ கட்டாய உழைப்பு முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் 14 வருடங்களைக் கழித்தார்.

செப்டம்பர் 1, 1944-⁠ல், ஜெர்மானியப் படைகள் பின்வாங்கிச் சென்றன; அப்போது, சர்பியாவிலுள்ள பார் என்ற ஊரிலிருந்த சித்திரவதை முகாமிலிருந்து மற்ற கைதிகளுடன் 152 சகோதரர்கள் ஜெர்மனிக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள்; அவர்களில் நானும் ஒருவன். சில தினங்களுக்கு எங்களிடம் சாப்பிட ஒன்றுமே இருக்கவில்லை. வயல்களைத் தொட்டாற்போல், சாலையோரமாகக் கிடந்த பீட்ரூட் போன்ற சில உணவுப்பொருள்களை எடுத்துச் சமமாகப் பங்கிட்டுக்கொண்டோம். யாருக்காவது நடப்பதற்குக்கூட சக்தி இல்லாமல் போனபோது, எங்களில் பலமுள்ளவர்கள் கைவண்டி ஒன்றில் அவர்களை வைத்துத் தள்ளிக்கொண்டு சென்றோம்.

கடைசியில், ஒரு ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தோம்; சுமார் நான்கு மணிநேரத்திற்கு ஓய்வெடுத்தோம், பிறகு கூரையில்லாத இரண்டு சரக்குப் பெட்டிகளைக் காலிசெய்தோம், எங்களுக்கு இடம் வேண்டும் என்பதற்காக! நிற்பதற்குத்தான் அதில் இடமிருந்தது, கதகதப்பூட்டும் ஆடைகள்கூட எங்களிடம் இல்லை​—⁠ஆளுக்கு ஒரு போர்வை மட்டுமே இருந்தது; மழைபெய்ய ஆரம்பித்தபோது அந்தப் போர்வையால் எங்கள் தலைகளை மூடிக்கொண்டோம். விடியவிடிய அப்படியே பயணம் செய்தோம். மறுநாள் காலை 10 மணிக்கு, ஒரு கிராமத்தை நெருங்கியபோது இரண்டு விமானங்கள் எங்கள் ரயில் என்ஜின்மீது குண்டுகளை வீசியதால் ரயில் நின்றுபோனது. என்ஜினுக்கு அடுத்தாற்போல் எங்களுடைய பெட்டிகள் இருந்தபோதிலும், நாங்கள் யாருமே கொல்லப்படவில்லை. என்றாலும், எங்களுடைய பெட்டிகள் வேறொரு ரயில் என்ஜினோடு இணைக்கப்பட்ட பிறகு, மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அங்கிருந்து ஏறக்குறைய 100 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஒரு ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் வண்டி நிறுத்தப்பட்டது; அப்போது சில ஆண்களும் பெண்களும் கூடைகளில் உருளைக்கிழங்குகளைச் சுமந்துகொண்டு வருவதைப் பார்த்தோம். ‘உருளைக்கிழங்கு வியாபாரிகள்’ என நினைத்துக்கொண்டோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறு. அவர்கள் எங்களுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகள்; எங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதால், நாங்கள் பசியாய் இருப்போம் என்று அவற்றை எடுத்து வந்திருந்தார்கள். வேகவைத்த மூன்று பெரிய உருளைக்கிழங்குகளையும், ஒரு ரொட்டித் துண்டையும், கொஞ்சம் உப்பையும் எங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். ஹங்கேரியில் உள்ள சோம்பாட்ஹே எனும் நகரை டிசம்பர் மாதத் துவக்கத்தில் நாங்கள் சென்றடையும்வரை ‘வானத்திலிருந்து வந்த இந்த மன்னா’ அடுத்த 48 மணிநேரத்திற்கு வேண்டிய போஷாக்கை எங்களுக்கு அளித்தது.

குளிர்காலம் முடியும்வரை சோம்பாட்ஹே நகரில் நாங்கள் தங்கினோம்; உறைபனியில் புதைந்து கிடந்த மக்காச்சோளத்தையே பெரும்பாலும் சாப்பிட்டோம். 1945-⁠ம் வருடத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களின்போது, இந்த அழகிய நகரின் மீது குண்டுகள் வீசப்பட்டன, உருக்குலைந்த உடல்கள் தெருக்களில் ஆங்காங்கே கிடந்தன. இடிபாடுகளுக்கடியில் நிறைய பேர் சிக்கியிருந்தார்கள்; உதவிக்காக எழுப்பப்பட்ட அவர்களுடைய கூக்குரல்கள் சிலசமயம் எங்கள் காதுகளில் விழுந்தன. மண்வெட்டிகளாலும் வேறுசில கருவிகளாலும் இடிபாடுகளுக்கடியே தோண்டி ஒருசிலரை மீட்டோம்.

நாங்கள் தங்கியிருந்த கட்டடத்திற்குப் பக்கத்தில் இருந்த கட்டடங்கள் குண்டுகளால் தகர்க்கப்பட்டன, ஆனால் எங்களுடைய கட்டடம் மட்டும் அப்படியே இருந்தது. விமானத் தாக்குதலுக்கான அபாயச்சங்கு ஒலிக்கும்போதெல்லாம், பயத்தில் எல்லாரும் தலைதெறிக்க ஓடி ஒளிந்தார்கள். ஆரம்பத்தில் நாங்களும்கூட அப்படித்தான் ஓடினோம், ஆனால் அப்படி ஓடுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதைச் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டோம்; காரணம், பாதுகாப்பான இடங்கள் எதுவுமே அங்கு இருக்கவில்லை. அதனால் இருந்த இடத்தைவிட்டு ஓடாமல், அங்கேயே அமைதியாக இருக்க முயன்றோம். கொஞ்ச நேரத்திற்கெல்லாம், காவலர்களும் எங்களோடு தங்கினார்கள். ‘உங்களுடைய கடவுள் ஒருவேளை எங்களையும் காப்பாற்றலாம்’ என்று அவர்கள் சொன்னார்கள்! ஏப்ரல் 1-⁠ம் தேதியன்று, சோம்பாட்ஹேவில் நாங்கள் தங்கியிருந்த கடைசி இரவன்று, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சரமாரியாகக் குண்டு மழை பொழிந்தது. என்றபோதிலும், நாங்கள் இருந்த இடத்தைவிட்டு அசையாமல், யெகோவாவைப் புகழ்ந்து பாடல்கள் பாடினோம், மன அமைதியைத் தந்ததற்காக அவருக்கு நன்றியும் செலுத்தினோம்.​—⁠பிலி. 4:6, 7.

மறுநாள் ஜெர்மனிக்குச் செல்லும்படி எங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரண்டு குதிரை வண்டிகள் எங்களிடம் இருந்ததால், அதில் பயணித்தோம், சுமார் 100 கிலோமீட்டர் தூரம் நடந்தும் சென்றோம்; ரஷ்ய எல்லைப் பகுதியிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு காட்டை அடைந்தோம். அன்றிரவு ஒரு பணக்காரப் பண்ணையாரின் வீட்டில் தங்கினோம்; அடுத்த நாள் எங்களுடைய காவலாளிகள் எங்களை விடுதலை செய்தார்கள். சரீர ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும் எங்களைப் போஷித்துக் காப்பாற்றிய யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாய், ஒருவருக்கொருவர் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தோம், பிறகு, எங்கள் வீடுகளை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம்; சிலர் நடந்தும், மற்றவர்கள் ரயிலிலும் பயணித்தோம்.

[பக்கம் 107-ன் பெட்டி]

கிறிஸ்தவ அன்பு​—⁠செயலில்

1946-⁠ல், ருமேனியாவின் கிழக்குப் பகுதி பஞ்சத்தால் பீடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் அந்தளவு பாதிக்கப்படாத யெகோவாவின் சாட்சிகள் ருமேனியாவின் சில பாகங்களில் வாழ்ந்து வந்தார்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தபோதிலும், தேவையிலிருந்த தங்கள் சகோதரர்களுக்கு உணவையும், உடையையும், பணத்தையும் நன்கொடையாக அளித்து உதவினார்கள். உதாரணத்திற்கு, உக்ரைன் எல்லைக்கு அருகிலிருந்த சீகெட் மார்மாட்யே என்ற ஊரில் உப்புச் சுரங்கத்தில் வேலை பார்த்துவந்த சில யெகோவாவின் சாட்சிகள், அங்கிருந்து உப்பை விலைக்கு வாங்கி, பக்கத்து ஊர்களிலும் நகரங்களிலும் விற்றார்கள்; கிடைத்த லாபத்தில் மக்காச்சோளங்களை வாங்கி அவர்களுக்கு அனுப்பினார்கள். அதேசமயத்தில், அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளிலும் இன்னும் பல நாடுகளிலுமிருந்த யெகோவாவின் சாட்சிகள் ஐந்து டன் உணவுப்பொருள்களை அவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்கள்.

[பக்கம் 124, 125-ன் பெட்டி/​படம்]

1,600 பைபிள் வசனங்களை நினைவுபடுத்திக் கொண்டோம்

டீயானீஸீயா வர்ச்சூ

பிறந்தது: 1926

முழுக்காட்டப்பட்டது: 1948

பின்னணிக் குறிப்பு: 1959-⁠ம் வருடத்திலிருந்து, ஏராளமான சிறைச்சாலைகளிலும் கட்டாய உழைப்பு முகாம்களிலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக செலவிட்டார். 2002-⁠ல் காலமானார்.

சிறைவாசத்தின்போது எங்கள் குடும்பங்களோடு தொடர்புகொள்ள அனுமதி கிடைத்தது; அவர்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் 5 கிலோ பரிசுப்பொருள்களைப் பெற்றுக்கொள்ளவும் அனுமதி கிடைத்தது. ஆனால், கொடுத்த வேலைகளை யார் ஒழுங்காகச் செய்து முடிக்கிறார்களோ அவர்களிடம்தான் அந்தப் பரிசுப்பொருள்கள் ஒப்படைக்கப்பட்டன. கிடைத்த உணவை நாங்கள் எப்போதும் சமமாய்ப் பகிர்ந்துகொண்டோம்; பொதுவாக, சுமார் 30 பங்குகளாகப் பிரிக்க வேண்டியிருந்தது. அப்படித்தான் ஒருமுறை, இரண்டே இரண்டு ஆப்பிள்களைப் பங்கிட்டுக்கொண்டோம். ஆம், ஒவ்வொருவருக்கும் சிறிய துண்டு மட்டுமே கிடைத்தபோதிலும், அது எங்கள் பசியை ஆற்றியது.

எங்களிடம் பைபிள்களோ பைபிள் படிப்புப் பிரசுரங்களோ இல்லாதபோதிலும், சிறைவாசத்திற்கு முன் நாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை நினைவுபடுத்திக் கொண்டோம், ஒருவருக்கொருவர் அவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டோம், இப்படிச் செய்வதன் மூலம் ஆன்மீகரீதியில் எங்களைப் பலமுள்ளவர்களாகவே வைத்துக்கொண்டோம். இதற்காக ஓர் ஏற்பாட்டை நாங்கள் செய்திருந்தோம்; ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு சகோதரர் பைபிள் வசனம் ஒன்றை நினைவுபடுத்திச் சொல்ல வேண்டும். அந்தச் சகோதரர் சொல்லி முடித்தவுடன், அதை நாங்கள் அடிக்குரலில் ஒப்பித்தோம்; பிறகு, காலையில் 15-20 நிமிட கட்டாய நடைப்பயிற்சியின்போது அந்த வசனத்தின் பேரில் தியானித்தோம். சிறை அறைக்கு வந்ததும்​—⁠20 பேர் ஒன்றாக அடைந்து கிடந்த 2 மீட்டர் அகலமும் 4 மீட்டர் நீளமுமுள்ள அறைக்கு வந்ததும்​—⁠அதே வசனத்தின் பேரில் சுமார் 30 நிமிடங்களுக்குக் குறிப்புகள் சொன்னோம். இப்படியாக, எங்கள் அனைவராலும் மொத்தம் 1,600 வசனங்களை நினைவுபடுத்திக்கொள்ள முடிந்தது. மதிய வேளையில் பல்வேறு தலைப்புகளில் கலந்துபேசினோம், அதனுடன் சம்பந்தப்பட்ட ஏறக்குறைய 20-30 வசனங்களைப் பற்றியும் கலந்துபேசினோம். பேசிய விஷயங்களை எல்லாரும் மனப்பாடம் செய்துகொண்டோம்.

ஆரம்பத்தில் ஒரு சகோதரர், தனக்கு வயதாகிவிட்டதால் நிறைய பைபிள் வசனங்களைத் தன்னால் மனப்பாடம் செய்ய முடியாது என்று நினைத்தார். ஆனால், அவர் தன் திறமையையே குறைவாக மதிப்பிட்டிருந்தார். வசனங்களை சுமார் 20 முறை நாங்கள் சப்தமாக ஒப்பித்ததைக் கேட்ட பிறகு, ஏராளமான வசனங்களை அவராலும் நினைவுபடுத்திச் சொல்ல முடிந்தது; அதனால் அவருக்கும் ஒரே குஷியாகிவிட்டது!

உண்மைதான், நாங்கள் சரீரப்பிரகாரமாகப் பசியாய் இருந்தோம், பலவீனமாய் இருந்தோம், ஆனால் யெகோவா எங்களை ஆன்மீகரீதியில் போஷித்துப் பலப்படுத்தினார். நாங்கள் விடுதலையான பிறகும்கூட, ஆன்மீகரீதியில் எங்களைத் தொடர்ந்து பலமாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது, ஏனென்றால் செக்யூரிட்டெட் அதிகாரிகள் எங்களுடைய விசுவாசத்தைக் குலைத்துப்போடும் நோக்கத்தில் தொடர்ந்து எங்களைத் துன்புறுத்தி வந்தார்கள்.

[பக்கம் 132, 133-ன் பெட்டி]

நகலெடுக்கப் பயன்படுத்தப்பட்ட வழிகள்

1950-களில், பெரும்பாலும் கார்பன் பேப்பரைப் பயன்படுத்தியே பைபிள் பிரசுரங்கள் கைப்பட எழுதி நகலெடுக்கப்பட்டன; இப்படிச் செய்தது வெகு எளிய, மிகமிக வசதியான வழியாக இருந்தது. ஆனால் மெதுவான, சிரமமான வழியாக இருந்தது; என்றாலும் இதில் முக்கியமான ஒரு நன்மையும் கிடைத்தது; நகலெடுப்பவர்களால் இதிலுள்ள பெரும்பாலான விஷயங்களை மனப்பாடம் செய்துகொள்ள முடிந்தது. இதன் காரணமாக, சிறையில் அடைக்கப்பட்டபோது அவர்களால் ஆன்மீகரீதியில் மற்றவர்களுக்கு அதிகமாக ஊக்கமூட்ட முடிந்தது. நகலெடுப்பதற்குச் சகோதரர்கள் டைப்-ரைட்டர்களையும் பயன்படுத்தினார்கள், ஆனால் அந்தக் கருவிகளை போலீஸாரிடம் பதிவுசெய்ய வேண்டியிருந்தது, அதோடு அவற்றை வாங்குவதும் கடினமாக இருந்தது.

1950-களின் இறுதிப்பகுதியில், ஸ்டென்ஸில் டூப்ளிகேட்டர்கள் கிடைக்கத் தொடங்கின. ஸ்டென்ஸில் செய்வதற்கு சகோதரர்கள், பசை, ஜெலடின், மெழுகு ஆகியவற்றைக் கலந்து, வழுவழுப்பான செவ்வக வடிவ மேற்பரப்பில், குறிப்பாக கண்ணாடியில் அதை மெல்லியதாக, சம அளவில் பரப்பிவிடுவார்கள். அவர்களே தயாரித்த ஒருவித விசேஷ இங்க்கைப் பயன்படுத்தி, புடைத்துக் காணப்படும் விதத்தில் விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதுவார்கள். இங்க் காய்ந்ததும், அந்த பேப்பரை மெழுகு கலவை பூசப்பட்ட மேற்பரப்பில் சீராக அழுத்தியெடுப்பார்கள்; ஸ்டென்ஸில் ரெடி. ஆனால், இந்த ஸ்டென்ஸில்கள் நீண்ட காலம் உழைக்கவில்லை, அதனால் எப்போதும் புதுப்புது ஸ்டென்ஸில்களையே உருவாக்க வேண்டியிருந்தது. கைப்பட எழுதி எடுக்கப்பட்ட நகல்களுக்குப் பாதுகாப்பு இல்லாதிருந்ததைப் போலவே இந்த ஸ்டென்ஸில்களுக்கும் பாதுகாப்பு இருக்கவில்லை; ஆம் அதை யார் எழுதியதென்று கையெழுத்தை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம்.

1970-கள் தொடங்கி தடையுத்தரவு போடப்பட்டிருந்த காலத்தின் இறுதி ஆண்டுகள்வரை, சகோதரர்கள் பத்துக்கு மேற்பட்ட ஸ்டென்ஸில் டூப்ளிகேட்டர்களை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்தினார்கள்; அந்த டூப்ளிகேட்டர்கள் தூக்கிச்செல்ல முடிந்தவையாகவும், கையால் இயக்கப்படுபவையாகவும் இருந்தன. ஆஸ்திரியாவிலிருந்து வந்த ஒரு மாடலின் அடிப்படையில் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன; பிளாஸ்டிக் கோட்டிங் இருந்த பேப்பர் ப்ரின்ட்டிங் ப்ளேட்டுகள் அவற்றில் உபயோகிக்கப்பட்டன. இந்த மெஷினை சகோதரர்கள் ‘த மில்’ என்று செல்லமாக அழைத்தார்கள். 1970-களின் பிற்பகுதி தொடங்கி, சில ஆஃப்-செட் டூப்ளிக்கேட்டர்கள் வாங்கப்பட்டன; ஆனால் சகோதரர்களால் ப்ளேட்டுகளைத் தயாரிக்க முடியவில்லை, எனவே, அந்த மெஷின்கள் பயனற்றுக் கிடந்தன. என்றாலும் 1985-⁠ல், செக்கோஸ்லோவாகியா என அப்போது அழைக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்த வேதியியல் என்ஜினியரான ஒரு சகோதரர், ப்ளேட்டுகளைச் செய்வது எப்படி என்பதைச் சகோதரர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதுமுதல், அச்சடிக்கப்பட்டவற்றின் அளவும் சரி, தரமும் சரி, குறிப்பிடத்தக்க விதத்தில் முன்னேற்றம் கண்டது.

[பக்கம் 136, 137-ன் பெட்டி/​படம்]

யெகோவா என்னைப் பயிற்றுவித்தார்

நிக்காலையெ பென்டாரு

பிறந்தது: 1957

முழுக்காட்டப்பட்டது: 1976

பின்னணிக் குறிப்பு: கம்யூனிஸ சகாப்தத்தின்போது, அச்சடிக்கும் வேலை செய்தார்; இப்போது தன் மனைவி, வெரானிக்காவுடன் விசேஷப் பயனியராகச் சேவை செய்கிறார்.

ஸசீலீ என்ற ஊரில் 1972-⁠ம் ஆண்டு பைபிளைப் படிக்கத் தொடங்கினேன்; நான்கு வருடம் கழித்து, என்னுடைய 18-வது வயதில் முழுக்காட்டப்பட்டேன். அப்போது பிரசங்க வேலை தடைசெய்யப்பட்டிருந்தது, கூட்டங்கள், புத்தகப் படிப்புபோல் சிறுசிறு தொகுதிகளாக நடத்தப்பட்டு வந்தன. இருந்தபோதிலும், ஆன்மீக உணவை நாங்கள் தவறாமல் பெற்று வந்தோம், அதுமட்டுமல்ல, ஒலிப்பதிவு செய்யப்பட்ட பைபிள் நாடகங்களைக் கேட்டவாறே, அதற்குரிய கலர் ஸ்லைடுகளையும் பார்த்தோம்.

முழுக்காட்டுதலுக்குப் பிறகு, ஸ்லைடு புரொஜக்டரை இயக்கும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது; அது எனக்குக் கொடுக்கப்பட்ட முதல் பொறுப்பாகும். இரண்டு வருடங்கள் கழித்து, கூடுதலான ஒரு பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது, அது எங்கள் ஊரில் இரகசியமாய் நடைபெற்று வந்த அச்சக வேலைக்குத் தேவைப்பட்ட பேப்பரை வாங்கிவரும் பொறுப்பு. அச்சடிக்கும் கலையை 1980-⁠ல் கற்றுக்கொண்டேன், அதன் பிறகு காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையும் மற்ற பிரசுரங்களையும் அச்சடிப்பதில் உதவிபுரிந்தேன். ஸ்டென்ஸில் டூப்ளிக்கேட்டர் ஒன்றையும், கையால் இயக்கப்படும் சிறிய அச்சு இயந்திரத்தையும் நாங்கள் பயன்படுத்தினோம்.

இதற்கிடையே, அருமை சகோதரியான வெரானிக்காவைச் சந்தித்தேன்; யெகோவாவுக்கு அவள் தன்னுடைய உண்மைத்தன்மையை நிரூபித்திருந்தாள்; நாங்கள் இருவரும் மணவாழ்வில் இணைந்தோம். என்னுடைய வேலையில் வெரானிக்கா பெரிதும் துணைபுரிந்தாள். 1981-⁠ல், ஆஸ்திரிய கிளை அலுவலகத்திலிருந்து வந்திருந்த ஓட்டோ கூக்லிச் என்பவர், ஆஃப்-செட் டூப்ளிக்கேட்டரை எப்படி இயக்குவதென்று எனக்குக் கற்றுக்கொடுத்தார். 1987-⁠ல், எங்களுடைய இரண்டாவது அச்சு இயந்திரத்தை க்ளுஜ்-நாப்போக்காவில் நிறுவினோம்; அதை இயக்குபவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது.

1990-⁠ல் தடையுத்தரவு நீக்கப்பட்ட பிறகு, வெரானிக்காவும், நானும், எங்கள் மகன் ஃப்ளாரீனும் பிரசுரங்களை அச்சடித்து விநியோகிக்கிற வேலையில் எட்டு மாதங்களுக்குத் தொடர்ந்து ஈடுபட்டோம். அச்சடிக்கப்பட்ட பக்கங்களைச் சேகரிக்கும் வேலையில் ஃப்ளாரீன் உதவினான்; அப்படிச் சேகரிக்கப்பட்டவை ப்ரெஸ்ஸிங், ட்ரிம்மிங், ஸ்டேப்பிளிங் செய்யப்பட்ட பின்னர் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2002-⁠ல், நாங்கள் மூவரும் புகாரெஸ்ட்டுக்கு வடக்கே சுமார் 80 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மிஸில் என்ற ஊரில் பயனியர்களாக நியமிக்கப்பட்டோம்; அந்த ஊரின் ஜனத்தொகை 15,000. வெரானிக்காவும் நானும் விசேஷப் பயனியர்களாகச் சேவை செய்கிறோம், ஃப்ளாரீன் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்கிறான்.

[பக்கம் 139, 140-ன் பெட்டி/​படம்]

எதிரியின் கண்ணை யெகோவா மறைத்தார்

ஆன்னா வியூசென்க்கூ

பிறந்தது: 1951

முழுக்காட்டப்பட்டது: 1965

பின்னணிக் குறிப்பு: பருவ வயதின் ஆரம்பத்திலிருந்தே, பிரசுரங்களை நகலெடுக்க தன் பெற்றோருக்கு உதவிவந்தார். பிற்பாடு, உக்ரேனியன் மொழியில் பிரசுரங்களை மொழிபெயர்ப்பதில் உதவினார்.

1968-⁠ம் வருடம்; ஒரு நாள் காவற்கோபுர பத்திரிகை ஒன்றை நகலெடுப்பதற்காக ஸ்டென்ஸில் பேப்பர்களில் எழுதிக்கொண்டிருந்தேன். பிறகு, அந்த பேப்பர்களை பத்திரமாய் எடுத்து வைப்பதற்குப் பதில், கவனக்குறைவாக அவற்றை அப்படியே வைத்துவிட்டு கிறிஸ்தவக் கூட்டங்களுக்குப் போய்விட்டேன். வீடுவந்து சேர நடுராத்திரி ஆனது. வந்ததும் வராததுமாக ஒரு கார் சத்தத்தைக் கேட்டேன். யார் என்று பார்ப்பதற்குள், ஆயுதமேந்திய ஐந்து செக்யூரிட்டெட் ஆட்கள், சோதனையிடுவதற்குரிய வாரண்டுடன் வீட்டுக்குள் நுழைந்தார்கள். நடுங்கிப்போனேன், ஆனால் எப்படியோ அமைதியாக இருக்க முயன்றேன். அதேசமயம், அந்த ஸ்டென்ஸில் பேப்பர்களைக் கவனக்குறைவாக வெளியே வைத்துவிட்டு போனதற்காக யெகோவாவிடம் மன்னிப்புக்கேட்டு மன்றாடினேன்; இனிமேல் அவற்றை அப்படி வைக்க மாட்டேன் எனப் பொருத்தனை செய்துகொண்டேன்.

கார் சத்தத்தைக் கேட்டபோது அவசரத்தில் ஒரு துணியைத் தூக்கி அந்த பேப்பர்கள்மீது போட்டிருந்தேன்; பொறுப்பிலிருந்த அதிகாரி அந்த பேப்பர்கள் வைக்கப்பட்டிருந்த டேபிளுக்கு அருகிலேயே வந்து அமர்ந்தார்; சோதனை நடந்து முடியும்வரை சில மணிநேரத்திற்கு அங்கேயே அவர் அமர்ந்திருந்தார். சில அங்குல இடைவெளியில் இருந்த ஸ்டென்ஸில்களுக்குப் பக்கத்தில் தன்னுடைய ரிப்போர்ட்டை எழுதிக்கொண்டிருந்தார்; எழுதும்போது, அடிக்கொருதரம் அங்கிருந்த துணியைச் சரிப்படுத்தினார். தான் எழுதிய ரிப்போர்ட்டில், இந்த வீட்டிலும் இங்குள்ள எந்தவொரு நபரிடமும் தடைசெய்யப்பட்ட பிரசுரங்களை அவரது ஆட்கள் கண்டுபிடிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அப்படியிருந்தும், அந்த ஆட்கள் என் அப்பாவை பாய-மாரா என்ற இடத்திற்குக் கூட்டிச்சென்றார்கள். அவருக்காக நானும் அம்மாவும் ஊக்கமாய் ஜெபித்தோம், அதுமட்டுமல்ல, அந்த இரவு யெகோவா எங்களைக் காப்பாற்றியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தோம். சில தினங்கள் கழித்து அப்பா வீட்டிற்கு வந்தபோதுதான் போன ‘உயிர்’ திரும்பியது.

அதன்பின், கொஞ்ச நாட்களுக்குள், சில பிரசுரங்களை நானே கைப்பட நகலெடுத்துக்கொண்டிருந்தபோது, மறுபடியும் வீட்டுக்கு வெளியே கார் சத்தம் கேட்டது. லைட்டை அணைத்துவிட்டு, திரையிடப்பட்டிருந்த ஜன்னல் வழியே மெதுவாக எட்டிப்பார்த்தேன்; விருதுகள் தோள்பட்டையில் பளபளக்க ராணுவச் சீருடையில் ஏராளமான ஆட்கள் காரைவிட்டு இறங்கி, எங்கள் தெருவில் எதிரே இருந்த ஒரு வீட்டுக்குள் செல்வதைப் பார்த்தேன். மறுநாள் இரவு அந்த ஆட்களுக்குப் பதிலாக, சீருடையிலிருந்த மற்றொரு தொகுதியினர் அந்த வீட்டிற்குள் சென்றார்கள்; அவர்கள் செக்யூரிட்டெட் ஒற்றர்களாகத்தான் இருக்கும் என்ற எங்களுடைய சந்தேகம் ஊர்ஜிதமானது. இருந்தாலும், நகலெடுக்கும் வேலையை நாங்கள் விட்டுவிடவே இல்லை, ஆனால் யாரும் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக அது சம்பந்தமான பொருள்களையெல்லாம் வீட்டின் பின்புறத் தோட்டம் வழியாக எடுத்துச் சென்றோம்.

அப்பா எப்போதும் இப்படிச் சொல்வார்: “நமக்கும் எதிரிக்கும் நடுவே உள்ள ரோடு, இஸ்ரவேலருக்கும் எகிப்தியருக்கும் நடுவே நின்ற மேகஸ்தம்பம்போல் இருக்கிறது.” (யாத். 14:19, 20) அப்பா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அனுபவப்பூர்வமாய்த் தெரிந்துகொண்டேன்!

[பக்கம் 143, 144-ன் பெட்டி/​படம்]

உடைந்த எக்ஸாஸ்ட் பைப் எங்களைக் காப்பாற்றியது

ட்ராயன் கைரா

பிறந்தது: 1946

முழுக்காட்டப்பட்டது: 1965

பின்னணிக் குறிப்பு: தடையுத்தரவு போடப்பட்ட வருடங்களின்​போது பிரசுரங்களைத் தயாரிப்பதற்கும், வெவ்வேறு இடங்களுக்கு அவற்றைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கும் உதவிய சகோதரர்களில் ஒருவர்.

கோடைகாலம்; ஞாயிற்றுக்கிழமை; காலைநேரம்; பிரசுரங்கள் வைக்கப்பட்டிருந்த எட்டுப் பைகளை என் காரில் ஏற்றிக்கொண்டிருந்தேன். எல்லாப் பைகளையும் கார் ‘டிக்கியில்’ வைக்க முடியவில்லை, அதனால் காரின் பின்சீட்டை எடுத்துவிட்டு, மற்ற பைகளை அங்கு வைத்தேன்; பிறகு அவற்றைக் கம்பளங்களால் மூடி, ஒரு தலையணையை அதன்மீது போட்டேன். கார் உள்ளே யாராவது எட்டிப்பார்த்தால், நாங்கள் குடும்பமாக பீச்சுக்குப் போவதாகத்தான் நினைப்பார்கள். கூடுதல் பாதுகாப்பிற்காக, கார் ‘டிக்கியில்’ இருந்த பைகள்மீதும் ஒரு கம்பளத்தைப் போட்டு மூடினேன்.

யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காக ஜெபம் செய்துவிட்டு, நான், என் மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் ஆகிய ஐந்து பேரும் சகோதரர்களிடம் பிரசுரங்களை ஒப்படைப்பதற்காக டிர்க்யூ-மூரெஷ், பிராஷாவ் ஆகிய இரு நகரங்களை நோக்கி ‘பறந்தோம்.’ வண்டியில் ராஜ்யப் பாடல்களைப் பாடிக்கொண்டே ஜாலியாகப் பயணித்தோம். அப்படியே கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரம் பயணித்திருப்போம், அப்போது குண்டும்குழியுமான ஒரு நெடுஞ்சாலைப் பகுதியைக் கடக்க வேண்டி வந்தது. காருக்குள் அத்தனை ‘வெயிட்’ இருந்ததால் காரின் ‘சஸ்பென்ஷன்’ அமைப்பு கீழே இறங்கியிருந்தது; அப்போது காருடைய எக்ஸாஸ்ட் பைப் ரோட்டிலிருந்த ஏதோவொன்றின் மீது மோதி உடைந்துபோனது. அதனால் காரை ஒரு ஓரமாக நிறுத்தி, உடைந்த பைப்பை கார் ‘டிக்கியில்’ இருந்த ஸ்பேர் டயருக்குப் பக்கத்தில், ஆனால் கம்பளத்திற்கு மேலாகப் போட்டுவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்​—⁠இரைச்சலோடு!

லூடோஷ் என்ற ஊரை அடைந்ததும், ஒரு போலீஸ்காரர் எங்களை வழிமறித்தார்; காரின் ‘கண்டிஷன்’ நன்றாக இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்காக. என்ஜின் நம்பரைப் பார்த்தார்; பிறகு, ஹாரன், வைப்பர்கள், லைட்டுகள் என ஒவ்வொன்றாகப் பார்த்தார்; பிறகு ஸ்பேர் டயரை காண்பிக்கச் சொன்னார். அதைக் காட்ட காரின் பின்புறம் போகும்போது, ஜன்னல் பக்கமாகக் குனிந்து என் மனைவியிடமும் பிள்ளைகளிடமும், “ஜெபித்துக்கொள்ளுங்கள். யெகோவாதான் இப்போது நம்மைக் காப்பாற்ற வேண்டும்” என்று கிசுகிசுத்தேன்.

கார் டிக்கியைத் திறந்ததுமே, உடைந்த எக்ஸாஸ்ட் பைப்தான் அந்தப் போலீஸ்காரரின் கண்ணில்பட்டது. “இது என்ன?” என்று கேட்டுவிட்டு, “இதற்காக நீங்கள் ஃபைன் கட்ட வேண்டும்!” என்றார். ஒரு குறையைக் கண்டுபிடித்துவிட்ட திருப்தியில், தன் பரிசோதனையை முடித்துக்கொண்டார். அப்பாடா! என்று பெருமூச்சுவிட்டு, டிக்கியை மூடினேன்; சந்தோஷம் தாங்க முடியவில்லை, இனி ஃபைன் மட்டும்தானே கட்ட வேண்டும்! மறுபடியும் அப்படிப் பயந்து நடுங்க வேண்டிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படவில்லை; சகோதரர்களிடம் பத்திரமாக அந்தப் பிரசுரங்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தோம்.

[பக்கம் 147-149-ன் பெட்டி/​படம்]

செக்யூரிட்டெட் ஆட்களை எதிர்ப்படுதல்

வியாரைக்கா ஃபிலிப்

பிறந்தது: 1953

முழுக்காட்டப்பட்டது: 1975

பின்னணிக் குறிப்பு: 1986-⁠ல் முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தார், பெத்தேலில் சேவை செய்கிறார்.

நானும் என் அக்கா அயூரைக்காவும் யெகோவாவின் சாட்சிகளாக ஆனபோது, எங்கள் குடும்பத்தினர் எங்களைப் பாடாய்ப் படுத்தினார்கள். மனதிற்கு அது வேதனை அளித்தாலும், செக்யூரிட்டெட் ஆட்களை எதிர்ப்படவிருந்த சமயங்களைச் சமாளிக்க அது எங்களுக்கு வலுவூட்டியது. 1988 டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் மாலை வேளையில் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை நான் எதிர்ப்பட்டேன். ஹங்கேரியின் எல்லைக்கு அருகிலுள்ள ஆராடீயா என்ற நகரில் அயூரைக்காவின் குடும்பத்தோடு அப்போது நான் வசித்து வந்தேன்.

மொழிபெயர்க்கும் வேலையை மேற்பார்வை செய்துவந்த ஒரு சகோதரரின் வீட்டிற்கு ஒருநாள் போயிருந்தேன், புரூஃப்-ரீடிங் செய்ய வேண்டிய ஒரு பத்திரிகை என் ஹான்ட்-பேக்கில் இருந்தது. செக்யூரிட்டெட் ஆட்கள் அவருடைய வீட்டில் சோதனை நடத்திக்கொண்டு, அங்கிருந்தவர்களையும் அங்கு வந்துபோகிறவர்களையும் விசாரித்துக்கொண்டிருந்தார்கள், அது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் நடந்துகொண்டிருந்ததைப் பார்த்ததும், நல்ல வேளையாக யார் கண்ணிலும் படாதபடி என் பேக்கில் இருந்த பத்திரிகையை எரித்துப்போட்டேன். அதன் பிறகு, அந்த ஆட்கள் என்னையும் மற்ற சாட்சிகளையும் கூடுதல் விசாரணைக்காக செக்யூரிட்டெட் அலுவலகத்துக்கு அழைத்துப் போனார்கள்.

இராமுழுக்க கேள்விக்கு மேல் கேள்வி கேட்டார்கள்; மறுநாள், ஊயிலீயெக்கூ டெ மூன்ட்டா என்ற பக்கத்து ஊரில் இருந்த ஒரு சிறிய வீட்டில்​—⁠நான் தங்கியிருந்ததாக அவர்கள் நினைத்திருந்த வீட்டில்​—⁠சோதனை நடத்தினார்கள். அங்கு நான் வசிக்கவில்லை, ஆனால் ரகசியமாகச் செய்யப்பட்டு வந்த வேலைக்குத் தேவையான பொருள்களை வைக்க சகோதரர்கள் அந்த வீட்டைப் பயன்படுத்தி வந்திருந்தார்கள். அந்தப் பொருள்களையெல்லாம் கண்டுபிடித்த பிறகு, அந்த ஆட்கள் என்னைத் திரும்பவும் செக்யூரிட்டெட் அலுவலகத்துக்கு இழுத்துப்போய் ரப்பர் குண்டாந்தடியால் பின்னியெடுத்தார்கள்; அந்தப் பொருள்கள் யாருக்குச் சொந்தமானவை அல்லது அவற்றோடு நேரடியாகத் தொடர்புடையவர்கள் யார் என்ற உண்மையை என்னிடமிருந்து வரவழைப்பதற்காக அப்படி விளாசினார்கள். அந்த அடிகளைத் தாங்கிக்கொள்ள எனக்கு உதவும்படி யெகோவாவிடம் கெஞ்சினேன். அப்போது எனக்குள் அசாத்திய நிம்மதி பிறந்தது, அதன்பின், ஒவ்வொரு அடியை வாங்கும்போதும் சில நொடிகளுக்கு மட்டுமே வலி தெரிந்தது. ஆனாலும், சீக்கிரத்தில் என் கைகள் ரொம்பவும் ஊதிப்போய்விட்டன, அதனால் இனி என்னால் எழுதவே முடியாதென்று நினைத்தேன். மாலையில், என்னை விடுவித்தார்கள்​—⁠கையில் பைசா இல்லை, பசி தாங்க முடியவில்லை, உடம்பில் தெம்பும் இல்லை.

மெயின் பஸ் ஸ்டான்டை நோக்கி நடந்தேன், செக்யூரிட்டெட் ஆள் ஒருவர் என்னைப் பின்தொடர்ந்தார். விசாரணை நடத்தியவர்களிடம் நான் வசிக்குமிடத்தைச் சொல்லவில்லை, அதனால் நேராக அயூரைக்காவின் வீட்டுக்கு என்னால் போக முடியாது, ஏனெனில் அவளுக்கும் அவளுடைய குடும்பத்துக்கும் அது ஆபத்தாகிவிடும். இனி எங்கே போவது, என்ன செய்வது என்று தெரியாமல் யெகோவாவிடம் ஜெபத்தில் மன்றாடினேன்; ‘இப்போது எனக்கு ஏதாவது சாப்பிட வேண்டும்போல் இருக்கிறது, என்னுடைய சொந்த படுக்கையிலேயே தூங்க வேண்டும்போல் இருக்கிறது, அதற்காக ஏங்குகிறேன் யெகோவாவே’ என்று ஜெபித்தேன். ஆனால் அதன் பிறகு, ‘அளவுக்குமீறி கேட்கிறேனோ?’ என்று எனக்கு நானே நினைத்துக்கொண்டேன்.

நான் பஸ் ஸ்டான்டை அடைவதற்கும் ஒரு பஸ் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது. டிக்கெட்டுக்குக் காசில்லாதபோதிலும், ஓடிப்போய் அதில் ஏறிக்கொண்டேன். தற்செயலாக, அந்த பஸ் என் சொந்த ஊருக்குத்தான் போய்க்கொண்டிருந்தது; என் வீடு அங்குதான் இருந்தது. அந்த செக்யூரிட்டெட் ஆளும் பஸ்ஸில் ஏறிக்கொண்டு, பஸ் எந்த இடத்திற்குப் போகிறது என என்னிடம் கேட்டார், பிறகு பஸ்ஸிலிருந்து குதித்திறங்கினார். அப்படியானால், ஊயிலீயெக்கூ டெ மூன்ட்டாவில் எனக்காக அவர்களுடைய இன்னொரு ஆள் காத்துக்கொண்டிருப்பார் என்பதைச் சட்டென ஊகித்துவிட்டேன். பஸ் டிரைவர் என்னை பஸ்ஸில் பயணிக்க அனுமதித்தார், பெரிய நிம்மதியாய்ப் போயிற்று. ‘ஆனால், நான் எதற்காக ஊயிலீயெக்கூ டெ மூன்ட்டாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்?’ என யோசித்தேன். வீட்டுக்குப் போக எனக்கு விருப்பம் இல்லை, ஏனெனில் அங்கு சாப்பாடு இருக்கப் போவதில்லை, ஒரு படுக்கைக்கூட இருக்கப் போவதில்லை.

இப்படி, யெகோவாவிடம் என் கவலைகளையெல்லாம் கொட்டிக்கொண்டிருந்தபோது, பஸ் டிரைவர் தன் நண்பர் ஒருவரை இறக்கிவிடுவதற்காக ஆராடீயா நகரின் எல்லைப் புறத்தில் பஸ்ஸை நிறுத்தினார். இதுதான் சமயமென்று, நானும் இறங்கிக்கொண்டேன். பஸ் புறப்பட்டுப்போனது, மனம் சந்தோஷத்தால் நிரம்பியது; எனக்குத் தெரிந்த ஒரு சகோதரர் அந்த இடத்தில் வசித்து வந்தார்; சற்று உஷாராக அவருடைய அப்பார்ட்மென்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நான் அங்கு போய்ச் சேருவதற்கும், அவருடைய மனைவி எனக்கு ரொம்பவும் பிடித்த கௌலாஷ் என்ற உணவு வகையைச் சுடச்சுடத் தயாரித்து அடுப்பிலிருந்து இறக்குவதற்கும் சரியாக இருந்தது. இரவு உணவை எனக்கும் பரிமாறினார்கள்.

அதன்பின், ராத்திரி பாதுகாப்பான வேளையில் அங்கிருந்து கிளம்பி அயூரைக்காவின் வீட்டுக்குப் போனேன், என் சொந்த படுக்கையிலேயே படுத்துறங்கினேன். ஆம், நான் மன்றாடிக் கேட்ட இரண்டு காரியங்களை யெகோவா எனக்குக் கொடுத்தார்​—⁠நல்ல சாப்பாடு, சொந்த படுக்கை. எப்பேர்ப்பட்ட அருமையான தகப்பன் நமக்கு!

[பக்கம் 155-ன் படம்]

ஆன்மீகக் காரியங்களில் கண்ணும் கருத்துமாயிருக்கிற இளைஞர்கள்

துன்புறுத்தல் தீவிரமடைந்த காலத்தின்போது, இளம் கிறிஸ்தவர்கள் தங்களுடைய உத்தமத்தைக் காத்துக்கொள்வதில் உறுதிகாட்டினார்கள், நற்செய்தியின் நிமித்தம் அவர்களில் அநேகர் தங்கள் சுதந்திரத்தைப் பணயம் வைத்தார்கள். இன்றைய இளம் கிறிஸ்தவர்கள், வேறுவிதமான சோதனைகளை எதிர்ப்படுகிறார்கள்; வருத்தகரமாக, இவர்களில் சிலர் எச்சரிக்கையாய் இருக்கத் தவறியிருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ தொடர்ந்து தங்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்தியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, கம்ப்யா டூர்ஸீ என்ற ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் சிலர், காலை இடைவேளையின்போது ஒன்றாகச் சேர்ந்து தினவசனத்தைக் கலந்தாலோசிக்கிறார்கள். பள்ளி முற்றத்தில் அல்லது விளையாட்டு மைதானத்தில் அதை அவர்கள் செய்கிறார்கள்; சில சமயத்தில் மற்ற மாணவர்களும் அதில் கலந்துகொள்கிறார்கள்.

ஓர் இளம் சகோதரி இவ்வாறு கூறினாள்: “என்னுடைய நண்பர்களோடு சேர்ந்து தினவசனத்தைப் படிப்பது எனக்குப் பாதுகாப்பு அரண்போல் இருக்கிறது; யெகோவாவை வணங்காத மாணவர்களுடைய சகவாசத்திலிருந்து சிறிதுநேரம் விலகியிருக்க உதவுகிறது. நான் மாத்திரம் தனியாக இல்லாமல், பள்ளியில் என்னைப் போல் நிறைய யெகோவாவின் சாட்சிகள் இருப்பதைப் பார்ப்பதும்கூட எனக்கு ஊக்கமூட்டுகிறது.” அருமையான இந்த இளைஞர்களை அவர்களுடைய பள்ளித் தலைமை ஆசிரியையும் வேறு சில ஆசிரியர்களும் பாராட்டியிருக்கிறார்கள்.

[பக்கம் 160-ன் பெட்டி]

நற்செய்தியைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டுதல்

பண்பாடு மற்றும் மத சம்பந்தப்பட்ட ருமேனிய அமைச்சகம் 2003-⁠ம் ஆண்டு, மே 22, வியாழக்கிழமை அன்று அதிகாரப்பூர்வ சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது; இது, 1990-⁠ம் வருடம் ஏப்ரல் 9-⁠ம் தேதி நிறுவப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய மத அமைப்பிற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதை மீண்டும் உறுதிசெய்தது. எனவே, அங்கீகரிக்கப்பட்ட மதங்களுக்கு என்னென்ன சட்டப்பூர்வ சலுகைகள் வழங்கப்படுமோ அவை அனைத்தும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் வழங்கப்படும்; உதாரணத்திற்கு, பிரசங்க வேலைக்கும் ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கும் உரிமை அளிக்கப்படும். இந்தச் சட்டப்பூர்வ அங்கீகாரம், இத்தனை வருட காலமாக நடைபெற்ற ஏராளமான சட்டப்பூர்வ போராட்டங்கள் முடிவுற்றதைக் குறிக்கிறது.

[பக்கம் 80, 81-ன் அட்டவணை/​வரைபடம்]

ருமேனியா கால வரலாறு

1910

1911: கரோலி சாபா, யோஷெஃப் கிஸ் ஆகியோர் அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்புகிறார்கள்.

1920: க்ளுஜ்-நாப்போக்காவில் கிளை அலுவலகம் ஸ்தாபிக்கப்​படுகிறது. அல்பேனியா, பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா, முன்னாள் யுகோஸ்லாவியா ஆகிய நாடுகளில் நடைபெறும் ஊழியத்தை அது மேற்பார்வை செய்கிறது.

1924: அச்சகம் உட்பட, கிளை அலுவலகக் கட்டடங்கள் க்ளுஜ்-நாப்போக்காவில் விலைக்கு வாங்கப்படுகின்றன.

1929: மேற்பார்வைப் பணி ஜெர்மனி கிளை அலுவலகத்திற்கு மாற்றப்படுகிறது, பிற்பாடு சுவிட்சர்லாந்தில் உள்ள மத்திய ஐரோப்பிய கிளை அலுவலகத்திற்கு மாற்றப்படுகிறது.

1938: புகாரெஸ்ட்டில் உள்ள ருமேனிய கிளை அலுவலகத்தை அரசாங்கம் இழுத்துமூடி, சீல் வைக்கிறது.

1940

1945: ருமேனியாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய சங்கம் சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்படுகிறது.

1946: புகாரெஸ்ட்டில் நடைபெற்ற முதல் தேசிய மாநாட்டில் சுமார் 15,000 பேர் கலந்துகொள்கிறார்கள்.

1947: ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், ஆல்ஃபிரேட் ரூயிட்டீமான் மற்றும் மார்ட்டின் மஜராஷி ருமேனியாவில் பிரசங்கச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.

1949: கம்யூனிஸ அரசாங்கம் யெகோவாவின் சாட்சிகளுக்குத் தடைவிதித்து, கிளை அலுவலகத்​தின் எல்லா உடமைகளையும் பறிமுதல் செய்கிறது.

1970

1973: மேற்பார்வைப் பணி, சுவிட்சர்லாந்து கிளை அலுவலகத்திலிருந்து ஆஸ்திரிய கிளை அலுவலகத்திற்கு மாற்றப்படுகிறது.

1988: ஆளும் குழு பிரதிநிதிகள் ருமேனியாவுக்கு விஜயம் செய்கிறார்கள்.

1989: கம்யூனிஸ ஆட்சி வீழ்கிறது.

1990: யெகோவாவின் சாட்சிகள் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறுகிறார்கள். அசெம்பிளிகள் நடத்தப்படுகின்றன.

1991: காவற்கோபுர பத்திரிகையின் ஆங்கிலப் பதிப்பு பிரசுரிக்கப்படுகிற சமயத்திலேயே ருமேனிய மொழியிலும் பிரசுரிக்கப்படுகிறது, அதுவும் முழு வர்ணத்தில்.

1995: புகாரெஸ்ட்டில் ருமேனிய கிளை அலுவலகம் மீண்டும் ஸ்தாபிக்கப்படுகிறது.

1999: ருமேனியாவில் முதன்முதலாக ஊழியப் பயிற்சிப் பள்ளி தொடங்குகிறது.

2000

2000: கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு ருமேனிய மொழியில் வெளியிடப்படுகிறது.

2004: நெக்ரிஷ்டியோவாஷ் நகரில் முதல் அசெம்பிளி ஹால் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

2005: ருமேனியாவில் 38,423 பிரஸ்தாபிகள் ஊழியத்தில் மும்முரமாய் ஈடுபடுகிறார்கள்.

[வரைபடம்]

(பிரசுரத்தைக் காண்க)

மொத்த பிரஸ்தாபிகள்

மொத்த பயனியர்கள்

40,000

20,000

1910 1940 1970 2000

[பக்கம் 73-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

போலந்து

ஸ்லோவாக்யா

ஹங்கேரி

உக்ரைன்

மால்டோவா

ருமேனியா

ஸாட்டூ-மாரே

ஆராடீயா

ஆராட்

நெக்ரிஷ்டியோவாஷ்

பாயா-மேரே

மாராமூரெஷ்

பிரெபி

பிஸ்ட்ரிட்ஸா

டாப்லிட்ஸா

க்ளுஜ்-நாப்போக்கா

டிர்க்யூ-மூரெஷ்

ஆக்னா மூரெஷ்

டிரான்ஸ்சில்வேனியா

கார்பேத்தியன் மலைகள்

ஃபிரட்டயூட்ஸி

பல்கயூட்ஸி

ஈவன்கயூட்ஸி

புரூட்

மால்டேவியா

பிராஷாவ்

ஸசீலீ

மிஸில்

புகாரெஸ்ட்

வல்லாசியா

கேலாட்ஸி

பிரயீலா

டேன்யூப்

டாப்ருஜா

சர்பியா & மான்டனிக்ரோ

பல்கேரியா

மாசிடோனியா

[பக்கம் 66-ன் முழுபக்க படம்]

[பக்கம் 69-ன் படங்கள்]

1911-⁠ல், கரோலி சாபாவும் யோஷெஃப் கிஸ்ஸும் ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதற்காக, தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பினார்கள்

[பக்கம் 70-ன் படம்]

கணவரோடும் எட்டுப் பிள்ளைகளோடும், பரஸ்கீவா கால்மர் (உட்கார்ந்திருப்பவர்)

[பக்கம் 71-ன் படம்]

காவ்ரிலா ராமாச்சியா

[பக்கம் 71-ன் படம்]

எலெக் மற்றும் எலிசபெத் ராமாச்சியா

[பக்கம் 77-ன் படம்]

க்ளுஜ்-நாப்போக்காவில் புதிய கிளை அலுவலகத்தின் கட்டுமானப் பணி, 1924

[பக்கம் 84-ன் படம்]

துன்புறுத்தல் தீவிரமானபோது, பிரசுரங்கள் பல்வேறு பெயர்களில் பிரசுரிக்கப்பட்டன

[பக்கம் 86-ன் படம்]

பிரசங்க வேலையில் உதவ நைக்கூ பெலூயெஸ் கிரீஸிலிருந்து வந்தார்

[பக்கம் 89-ன் படம்]

ஃபோனோகிராப் ரெக்கார்டில் பைபிள் பேச்சைக் கேட்கையில், 1937

[பக்கம் 95-ன் படம்]

மார்ட்டின், மரியா மஜராஷி தம்பதியரும் (முன்புறம்) இலனா, பாம்ஃபில் ஆல்பூ தம்பதியரும்

[பக்கம் 102-ன் படம்]

1945-⁠ல், பாயா-மேரேவில் நடைபெற்ற ஒரு வட்டார மாநாடு

[பக்கம் 105-ன் படம்]

1946-⁠ல் நடைபெற்ற தேசிய மாநாட்டிற்கான போஸ்டர்

[பக்கம் 111-ன் படம்]

மீஹை நிஸ்டார்

[பக்கம் 112-ன் படம்]

வாஸீலீ சாபாடஷ்

[பக்கம் 117-ன் படம்]

ஒட்டுக்கேட்க செக்யூரிட்டெட் அதிகாரிகள் பயன்படுத்திய கருவி

[பக்கம் 120-ன் படம்]

பெரிப்ரேவா, டேன்யூப் கழிமுகப் பகுதியிலிருந்த கட்டாய உழைப்பு முகாம்

[பக்கம் 133-ன் படம்]

“த மில்”

[பக்கம் 134-ன் படம்]

வெரானிக்கா மற்றும் நிக்காலையெ பென்டாரு; அவர்கள் வீட்டின் ரகசிய நிலவறையில்

[பக்கம் 138-ன் படம்]

டோய்னா மற்றும் டூமிட்ரூ சப்பனாரூ

[பக்கம் 138-ன் படம்]

பீட்டர் ரான்க்கா

[பக்கம் 141-ன் படம்]

1980-களில் நடத்தப்பட்ட மாநாடுகள்

[பக்கம் 150-ன் படம்]

1993-⁠ல், ருமேனியாவில் நடத்தப்பட்ட முதலாவது பயனியர் ஊழியப் பள்ளி

[பக்கம் 152-ன் படம்]

ரோபர்டோ மற்றும் இமெல்டா ஃப்ரான்கெஸ்கெட்டெ

[பக்கம் 156, 157-ன் படங்கள்]

1996-⁠ல், குருமாருடைய எதிர்ப்பின் மத்தியிலும், “தேவ சமாதான தூதுவர்கள்” என்ற சர்வதேச மாநாடுகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள்

[பக்கம் 158-ன் படங்கள்]

(1) ஏழு ராஜ்ய மன்றங்கள் உள்ள கட்டடம், டிர்க்யூ-மூரெஷ்

(2) ருமேனிய கிளை அலுவலகம், புகாரெஸ்ட்

(3) மாநாட்டு மன்றம், நெக்ரிஷ்டியோவாஷ்

[பக்கம் 95-ன் படம் 161]

கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினர்கள், இடப்பக்கம் நிற்பவரிலிருந்து கடிகாரச் சுற்றில்: டானியேல் டி நிக்கோலா, ஜான் ப்ரென்கா, கேபிரியெல் நெக்ரூவு, டூமிட்ரூ ஔல், இயான் ரோமன்