Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று கடவுளிடம் நாம் உள்ளப்பூர்வமாய் ஜெபிக்கிறோம். அதற்கு இசைய வாழவே பெரிதும் விரும்புகிறோம் என்பதை யெகோவாவின் சாட்சிகளாக நாம் வாழ்கிற விதம் வெளிக்காட்டுகிறது. உண்மையில், கடவுளுடைய பெயரை அறிந்திருந்தால் மட்டும் போதாது. அந்தப் பெயரை மகிமைப்படுத்துவதற்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், யெகோவாவின் சாட்சிகள் என அழைக்கப்படுவதைவிடவும் பெருமைப்படத்தக்க விஷயம் வேறு எதுவுமே இல்லை.​—மத். 6:9; ஏசா. 43:10.

செய்து முடிக்க வேண்டுமென யெகோவா கட்டளையிட்டிருக்கும் வேலையை அவருடைய ஜனங்கள் சங்கீதம் 110:3-⁠க்கு இசைய மனமுவந்து செய்கிறார்கள். வயது வித்தியாசம் இல்லாமல், எல்லா விதமான வாழ்க்கைப் பின்னணியிலிருந்து வந்தவர்களும் பிரசங்க வேலையில் ஏன் பங்குகொள்கிறார்கள்? கடவுளை நேசிப்பதும் அவரிடம் தனிப்பட்ட பக்திகாட்டுவதுமே முக்கியக் காரணம். யெகோவாவிடம் நாம் ‘முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும்’ அன்புகூரும்படி உபாகமம் 6:5, 6 நமக்குக் கட்டளையிடுகிறது. இதயத்திலிருந்து பிறக்கும் இந்த அன்பு, நம் நேரத்தையும் சக்தியையும் வளங்களையும் கடவுளுடைய ராஜ்யத்துடன் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காகச் செலவிடத் தூண்டுகிறது; அது, நம் சூழ்நிலை அனுமதிக்குமளவுக்கு முற்று முழுமையாக ஊழியத்தில் பங்குகொள்வதையும் குறிக்கிறது.

மனிதகுலத்தின் மீது தாம் வைத்திருக்கும் அன்பினாலேயே யெகோவா உலகெங்கும் தம்முடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படும்படி வழிநடத்துகிறார். யாரும் அழிக்கப்படுவதை அவர் விரும்புவதில்லை; மாறாக, எல்லாரும் தான்தோன்றித்தனமான போக்கைவிட்டு மனந்திரும்பி ஜீவனைப் பெறுவதற்காகப் படைப்பாளராகிய தம்மிடம் வர வேண்டுமென அவர் விரும்புகிறார். (2 பே. 3:9) “நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன்” என்று யெகோவா சொல்கிறார். (எசே. 33:11) நாம் ஊழியத்தில் ஈடுபடும்போது, சக மனிதரிடம் யெகோவா அன்புகாட்டுகிறார் என்பதற்குக் காணக்கூடிய அத்தாட்சியை அளிக்கிறோம். இக்காரணத்திற்காகவும் இந்த முக்கியமான வேலையில் நாம் கலந்துகொள்ளும்போது சந்தோஷத்தையும் திருப்தியையும் அனுபவிக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை.

யெகோவாவின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட அவருடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமத்தை நாம் கருதும் விதமும்கூட அவரிடம் நமக்கு மட்டற்ற அன்பு இருப்பதை வெளிக்காட்டுகிறது. பைபிள் மட்டும் இல்லாதிருந்தால், கடவுளைப் பற்றி அறிந்திருக்கவும் மாட்டோம், யாக்கோபு 4:8 நமக்குச் சொல்கிற விதமாக அவரிடம் நெருங்கி வந்திருக்கவும் மாட்டோம். நம் வாழ்க்கைக்கு அர்த்தமென்ன, நம் எதிர்காலம் என்ன என்பதைத் தெரிந்திருக்கவும் மாட்டோம். நம் பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் நம் முற்பிதாவாகிய ஆதாம்தான் காரணம் என்பதைப் புரிந்திருக்கவும் மாட்டோம். (ரோ. 5:12) நமக்காக தம்முடைய ஒரேபேறான குமாரனை மீட்கும் பலியாகக் கொடுப்பதன் மூலம் ஈடற்ற விதத்தில் கடவுள் அன்பு காட்டியதை அறிந்திருக்கவும் மாட்டோம். இன்னும் பல வழிகளில், யெகோவா தம்முடைய அறிவையும் ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் நம்முடன் ஓரளவு பகிர்ந்துகொள்கிறார். ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட அவருடைய வார்த்தையை நமக்குப் பரிசாய் கொடுத்திருப்பதை எவ்வளவாய் நாம் போற்றுகிறோம்! இந்த அரும்பெரும் பரிசை நாம் உயர்வாய் மதிப்பது, அவருடைய வார்த்தையை வாசிப்பதற்கும், ஆராய்ந்து படிப்பதற்கும், தியானிப்பதற்கும் ‘காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளும்படி’ நம்மை ஊக்குவிக்கிறது. (எபே. 5:15, 16; சங். 1:1-3) நாள்தோறும் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்குச் செலவாகும் நேரத்தைக் குறித்து நாம் மனக்கசப்பு அடையவே கூடாது. மாறாக, கடவுளிடம் நமக்குள்ள அன்பு அவருடைய வார்த்தையிடம் நம்மை கவர்ந்திழுக்க வேண்டும், அவரை இன்னும் நன்கு அறிந்துகொள்வதற்கும், மட்டற்ற விதத்தில் இன்னும் அவரிடம் அன்புகாட்டுவதற்கும் நமக்கு உதவ வேண்டும்.

யெகோவாவுக்கு எதிராக ஆதாம் பாவம் செய்தபோது, நம்மையும் அவனுடைய எதிர்கால சந்ததியினர் அனைவரையும் படுமோசமான, எதிர்கால நம்பிக்கையற்ற சூழலில் அவன் தள்ளினான். ஆனாலும், அத்தகைய சூழலிலிருந்து மனிதகுலத்தை விடுவிக்க கடவுளுக்குச் சக்தி இருந்தது, அதற்கு அவர் வழியும் செய்தார்; பூமி சம்பந்தப்பட்ட தம்முடைய நோக்கம் நிறைவேறுவதற்கு உரிய நடவடிக்கைகளை அவர் எடுத்தார்.​—ஆதி. 3:15.

நம் கடவுளுடைய அற்புதமான பெயரைப் பரிசுத்தப்படுத்த வேண்டுமென்ற தீரா ஆசை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. யெகோவா எப்பேர்ப்பட்ட அருமையான கடவுள் என்பதைப் பற்றி இன்னும் அதிகமதிகமாக அறிந்துகொள்ளும்போது, அவருடைய மகத்தான பெயரையும் நோக்கத்தையும் அறிவிப்பதில் அவருடனும் அவருடைய அமைப்புடனும் சேர்ந்து ஒத்துழைப்பதற்குத் தூண்டப்படுகிறோம். இன்று அவருடைய தயவையும் ஆசீர்வாதத்தையும், வரவிருக்கும் புதிய உலகில் முடிவில்லா வாழ்க்கையையும் நாம் பெறுவோமென உறுதி அளிக்கப்படுகிறோம்.

அருமையான சகோதர சகோதரிகளாகிய உங்களுக்கு எங்கள் அன்பு எப்போதும் உண்டு என்பதை ஆளும் குழுவினராகிய நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். மிகுந்த உபத்திரவம் வருவதற்கு முன் மீந்திருக்கும் இந்த நேரத்தில் முடிந்தவரை எல்லாருக்கும் நற்செய்தியை அறிவிப்பதற்கு நீங்கள் ஊக்கமாய் முயற்சி எடுக்கிறீர்கள், அதற்கு எங்கள் மனமார்ந்த பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம். (வெளி. 7:14) இவ்வாறு செய்வதன் மூலம், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவை, அதாவது கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றிய அறிவை உங்களைப் போலவே மற்றவர்களும் பெற்றுக்கொள்ள வாய்ப்பை அளிக்கிறீர்கள்.​—யோவா. 17:3.

உங்கள் சகோதரர்கள்,

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு

[பக்கம் 4-ன் படம்]

காரி டபிள்யூ. பார்பர்

[பக்கம் 4-ன் படம்]

ஜான் ஈ. பார்

[பக்கம் 4-ன் படம்]

சாம்யெல் ஹெர்ட்

[பக்கம் 4-ன் படக்குறிப்பு]

ஜெஃப்ரீ ஜேக்ஸன்

[பக்கம் 4-ன் படக்குறிப்பு]

ஸ்டீவன் லெட்

[பக்கம் 5-ன் படம்]

தியோடர் ஜாரஸ்

[பக்கம் 5-ன் படம்]

கெரட் லாஷ்

[பக்கம் 5-ன் படம்]

அன்தனி மாரிஸ் III

[பக்கம் 5-ன் படம்]

கை பியர்ஸ்

[பக்கம் 5-ன் படம்]

டேவிட் ஸ்ப்லேன்