உலகளாவிய அறிக்கை
உலகளாவிய அறிக்கை
ஆசியாவும் மத்திய கிழக்கு நாடுகளும்
நாடுகளின் எண்ணிக்கை 47
மக்கள் தொகை 3,93,03,43,401
பிரஸ்தாபிகள் 5,91,750
பைபிள் படிப்புகள் 4,77,609
ஜப்பான்
மீஹோ என்பவருக்குப் பேறுகாலம் நெருங்கியபோது, அவரால் எப்போதும்போல ஊழியத்திற்குச் செல்ல முடியவில்லை. தன்னுடைய பயனியர் சேவையை விட்டுவிடாமல் தொடர்ந்து செய்ய விரும்பியதால், பலத்த பாதுகாப்புமிக்க அபார்ட்மென்டுகள் போன்ற பிரசங்க வேலை செய்ய முடியாதிருந்த வீடுகளின் விலாசங்களைத் தரும்படி ஊழியக் கண்காணியிடம் அவர் கேட்டார். அவரும் சுமார் 100 விலாசங்களைக் கொடுத்தார். தன்னால் முடிந்தளவு நிறைய வீடுகளுக்கு அவர் ஃபோன் செய்து பேசினார். அவர் முதலில் பேசிய வீட்டுக்காரர்கள் யாருமே கேட்பதற்கு விருப்பம் காட்டவில்லை. அதனால் எல்லா ஃபோன் கால்களையும் 30 நிமிடங்களுக்குள் அவர் முடித்துவிட்டார். அடுத்த முறை, ஃபோனில் பேசியதோடுகூட கடிதங்களையும் அவர் எழுதி அனுப்பினார். ஃபோனில் பேசும்போது, குழந்தை அழுவது போன்ற ஏதாவது பின்னணி தகவல்கள் கிடைத்தால், அதன் அடிப்படையில் சுருக்கமான கடிதங்களை எழுதினார். தன்னுடைய கடிதம் வீட்டுக்காரருக்குக் கிடைத்திருக்கும் என நினைத்தால், அக்கடிதத்திலுள்ள பைபிள் விஷயங்களைப் பின்பற்றுவதன் பயனைக் குறித்து ஃபோனில் உரையாடுவார். ஒரு சமயம் இவ்வாறு ஃபோனில் பேசியபோது ஓர் இல்லத்தரசி கேட்க மறுத்துவிட்டார்; இருந்தாலும் மீஹோ அந்தப் பெண்ணுக்குக் கடிதம் அனுப்பினார். மீண்டும் அவருக்கு ஃபோன் செய்தபோது, அவருடைய மகள் மட்டுமே அங்கு இருந்தாள். மீஹோ அனுப்பியிருந்த கடிதத்தை, ஸ்கூலுக்குச் செல்லும் அந்தச் சிறுமி படித்திருந்தாள். அந்தச் சிறுமியிடம் மீஹோ பைபிள் விஷயங்களைப் பேசி, ஸ்கூல் சம்பந்தமான சில பைபிள் ஆலோசனைகளைப் பற்றி அடுத்தக் கடிதத்தில் எழுதி அனுப்புவதாகச் சொன்னார். மீண்டும் ஃபோன் செய்வதாகவும் சொன்னார். அடுத்த முறை ஃபோன் செய்தபோது அவளுடைய அம்மா பேசினார். அப்போது, தன் மகளுக்கு ஸ்கூலில் சில பிரச்சினைகள் இருந்ததாகவும் மீஹோ எழுதிய கடிதம்
அவளுக்கு உதவியாக இருந்ததாகவும் அவர் சொன்னார். இப்படி ஒருசில முறை ஃபோனில் பேசி, கடிதங்கள் எழுதிய பிறகு அந்த அம்மாவும் மகளும் பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள்.நேப்பாளம்
ப்ரேம் என்ற பள்ளி ஆசிரியர் சத்தியத்துக்காக பல காலமாகத் தேடிக்கொண்டிருந்தார். அவர் பைபிளை வாசித்து வந்தார்; தான் வேலை பார்த்துவந்த பள்ளிக்கு அருகிலிருந்த சர்ச்சுக்கும் போய்வந்தார். என்றாலும், அவருடைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை; அதுமட்டுமல்ல, அந்த சர்ச்சின் பாஸ்டர் எப்போதும் நன்கொடை கேட்டுக்கொண்டிருந்தைப் பார்த்து அவருக்குக் கோபமே மிஞ்சியது. சத்தியத்தைத் தெரிந்துகொள்ள உதவும் ஒரு சர்ச்சைக் காட்டும்படி கடவுளிடம் ப்ரேம் ஜெபித்தார். அவர் வேறு இடத்திற்குக் குடிமாறி அங்குள்ள பள்ளியில் வேலைசெய்ய ஆரம்பித்தபோது, அங்கு ஏதாவது சர்ச் இருக்கிறதா என அக்கம்பக்கத்தாரிடம் விசாரித்தார். அவர் வசித்த அப்பார்ட்மென்டில் ஒரு பள்ளி மாணவன் இருந்தான்; அவனுடைய அம்மா ராஜ்ய மன்றத்தில் நடக்கிற கூட்டங்கள் சிலவற்றில் கலந்துகொண்டிருக்கிறார்; ஆகையால், அந்தப் பையன் அவரை ராஜ்ய மன்றத்திற்கு அழைத்துச் சென்றான். அன்றைய பொதுப் பேச்சில் கடவுளுடைய ராஜ்யம் பற்றி விளக்கப்பட்டது; முக்கியமாக அந்த விஷயத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளவே ப்ரேம் விரும்பினார். பைபிள் படிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒருவழியாக அவருடைய கேள்விகளுக்கு பதில் கிடைத்ததை எண்ணி அவர் சந்தோஷப்படுகிறார்; இப்போது தன் குடும்பத்தோடு கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்கிறார். அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக மாற விரும்புவதால் தங்களுடைய சர்ச்சுக்கு ராஜினாமா கடிதத்தையும் அனுப்பிவிட்டார்கள்.
தைவான்
வருடந்தோறும் நடத்தப்படுகிற எழுத்துப் போட்டியில் ஒரு கட்டுரை எழுதும்படி ஆரம்பப்பள்ளி மாணவ மாணவிகளிடம் சொல்லப்பட்டது. “எனக்குப் பிடித்த புத்தகம்” என்பதே அக்கட்டுரையின் தலைப்பு. வேஜன் என்ற பத்து வயது மாணவி பைபிளே தனக்குப் பிடித்த புத்தகம் என எழுதினாள். பைபிள் தீர்க்கதரிசனங்களின் திருத்தமான தன்மையையும் கடவுளுடைய வார்த்தை தரும் சிறந்த வழிநடத்துதலையும் அதில் புகழ்ந்து எழுதியிருந்தாள். அதோடு, ஆசிரியர்களோ சக மாணவர்களோ தனக்கு விடையளிக்க முடியாதிருந்த கேள்விகளுக்கு திருப்திகரமான விடைகளை பைபிள் அளித்திருக்கிறது எனவும் அவள் எழுதியிருந்தாள். “மனிதனின் முன்னோர் குரங்கிலிருந்து வந்தவர்கள் என நம்முடைய ஆசிரியர் நமக்குச் சொன்னார். ‘மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்றால், அவற்றிடம் நாம் பயபக்தியோடு நடந்துகொண்டு மனப்பூர்வமாக நன்றிகாட்ட வேண்டும், அல்லவா? அதற்குப் பதிலாக, மிருகக்காட்சி சாலையிலுள்ள கூண்டில் அவற்றை ஏன் அடைத்து வைக்கிறோம்? அப்படிச் செய்வது மகா பெரிய தவறாக அல்லவா இருக்கும்?’ என்றெல்லாம் யோசித்தேன். எபிரெயர் 4:12-ஐ அவள் மேற்கோள் காட்டி “எல்லாப் பெருமையும் யெகோவா தேவனுக்கே சேரும்” என கூறுகிறாள்.
ஆனால், பைபிள் தெளிவான பதில்களைத் தருகிறது. நாம் உண்மையில் குரங்கிலிருந்து வந்தவர்கள் அல்ல. மாறாக, நம்முடைய முன்னோர்கள் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டார்கள், அவர்கள் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டார்கள் என அது சொல்கிறது” என வேஜன் எழுதினாள். “‘ஒரு புத்தகத்தை வாசிப்பது ஒரு பொக்கிஷ பெட்டகத்தைத் திறப்பதைப் போல் இருக்கிறது’ என பண்டைய காலத்தில் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை, பைபிள் பொன்னைவிட விலையேறப்பெற்றது. அதனால், இந்தப் புத்தகமே எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்” என அவள் முடிவாக எழுதியிருந்தாள். அவளை விட பெரியவர்களான நடுநிலைப் பள்ளி மாணவ மாணவிகளும்கூட கட்டுரை எழுதியிருந்தார்கள். வேஜன் நான்காம் வகுப்பு மாணவியாக இருந்தாலும்கூட அவளே முதல் பரிசைப் பெற்றாள். தன்னுடைய இந்த அனுபவத்தைப் பற்றி விவரிக்கையில்மங்கோலியா
பலர்ட்ஸிட்ஸிக் என்ற மங்கோலிய நாட்டு சகோதரி சமீபத்தில் முழுக்காட்டுதல் பெற்றவர். அவருடைய உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாகவும் அவருடைய மனைவி மிகுந்த துக்கத்தில் இருப்பதாகவும் அறிந்தபோது, மங்கோலிய மொழியில் உள்ள நம் பிரசுரங்கள் அனைத்தையும் அவருக்கு அனுப்பி வைத்தார். இறந்தவரின் மனைவியான யூஸானா ஒரே இரவில் எல்லா பிரசுரத்தையும் வாசித்து விட்டார். அடுத்த நாளே பலர்ட்ஸிட்ஸிக் சகோதரிக்கு அவர் ஃபோன் செய்தார். நேரில் பேசுவதற்காக உடனே புறப்பட்டு வரும்படி கேட்டுக்கொண்டார். மற்றொரு சகோதரியையும் அழைத்துக்கொண்டு யூஸானாவைச் சந்திப்பதற்கு அவர் சென்றார். யூஸானா ஒரு நீண்ட கேள்விப் பட்டியலே வைத்திருந்தார். பைபிளிலிருந்து கொடுக்கப்பட்ட பதில்களை அவர் ஆர்வமாகக் கவனித்தார். நீண்ட உரையாடலுக்குப் பிறகு, ஒரு சமயத்தில் ஒரு விஷயத்தைப் பற்றி முழுமையாகக் கலந்து பேசினால் யூஸானாவுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும் என்று சகோதரிகள் சொன்னார்கள். பைபிள் படிப்பைக் குறித்து அவரிடம் சொன்னார்கள். உடனடியாக, வாரத்தில் மூன்று முறை பைபிள் படிப்பதற்கு அவர் ஒத்துக்கொண்டார். ஒரு மாதத்திற்குள்ளாகவே எல்லா விக்கிரகங்களையும் தூக்கியெறிந்து விட்டார், கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தார். ஒரு பிரஸ்தாபியாக ஆகி இரண்டு மாதங்களுக்குப் பின், துணை பயனியர் செய்வதற்கு தயாராகி விட்டார். அதற்கு முன் முழுக்காட்டுதல் பெற வேண்டுமென அவரிடம் சொல்லப்பட்டது. இருப்பினும் மனந்தளராமல், ஒவ்வொரு மாதமும் வெளி ஊழியத்தில் குறைந்தபட்சம் 50 மணிநேரம் செலவிட தீர்மானித்தார். அடுத்த மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற அவர் காத்துக்கொண்டிருக்கிறார்.
கஸக்ஸ்தான்
ரூட்னி நகரில், நிக்கலை என்ற இளைஞரை ஒரு பயனியர் சகோதரர் சந்தித்தார்; அவர் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்.
என்றாலும், பைபிள் படிப்பு நடத்துவதில் ஒரு பிரச்சினை. நிக்கலையும் அவரது குடும்பத்தாரும் தொலைவிலுள்ள கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள்; அவர் எப்போதாவதுதான் ரூட்னிக்குத் தன் உறவினர்களைப் பார்ப்பதற்காக வருவார். அவரை அவருடைய கிராமத்திற்கு வந்து சந்திக்கலாமா என்று சகோதரர் கேட்டார்; அந்தக் கிராமம் 200 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகவும் அங்குப் போய்ச் சேருவது ரொம்பவே கஷ்டம் என்றும் நிக்கலை சொன்னார்.இருந்தாலும், சகோதரர் அவரிடமிருந்து விலாசத்தைப் பெற்றுக்கொண்டு அவரைக் கண்டிப்பாக வந்து சந்திப்பதாகச் சொன்னார். அந்தக் கிராமத்திற்குச் செல்ல அவர் ஏற்பாடு செய்தார். தன்னுடன் வரும்படி சபையிலுள்ள மற்றொரு சகோதரரையும் இரண்டு சகோதரிகளையும் அழைத்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர்கள் ரயில் ஏறினார்கள். அந்தக் கிராமத்திற்கு மிக அருகிலுள்ள ரயில் நிலையத்தை வந்தடைந்தபோதுதான், அந்த கிராமம் இன்னும் 18 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதும், அங்கு செல்வதற்குப் பொது போக்குவரத்து வசதி இல்லையென்பதும் தெரியவந்தது. நடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அதுவும் எளிதாக இருக்கவில்லை; காரணம், குளிர்காலமாக இருந்ததால் பனிக்காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்திற்குப் பின், ஒரு பால் டாங்கர் அந்த வழியாக வந்தது; அவர்களைக் கண்டதும் அதன் டிரைவர் வண்டியை நிறுத்தி அதன் டாங்குக்குள் ஏறிக்கொள்ளும்படி சொன்னார். அவர் ஏதோ ஜோக் அடிக்கிறார் என இந்தச் சகோதர சகோதரிகள் நினைத்தார்கள், ஆனால் அந்த டாங்க் காலியாகவும் காய்ந்தும் இருந்தது; அதனால் அவர்கள் அதில் ஏறி உட்கார்ந்தார்கள். டாங்குக்குள்ளே குளிராக இருந்தபோதிலும், பயங்கர பனிக்காற்றின் தாக்குதலில் இருந்தாவது அவர்கள் தப்பிக்க முடிந்தது. அவர்கள் இறங்க வேண்டிய இடத்திற்கு ஏழு கிலோமீட்டர் முன்னதாகவே இறக்கிவிடுவதாக டிரைவர் அவர்களிடம் சொன்னார். அங்கிருந்து அவர்கள் திரும்பவும் நடந்தே செல்ல வேண்டியிருந்தது. இன்னும் ஏழு கிலோமீட்டர் தூரத்திலிருந்த நிக்கலையின் கிராமத்திற்கு நடந்துபோய்ச் சேர இரண்டு மணிநேரம் எடுத்தது.
சகோதர சகோதரிகள் அவருடைய வீட்டு வாசற்படியில் நிற்பதைப் பார்த்ததும் நிக்கலைக்கும் அவருடைய மனைவி வால்யாவுக்கும் ஓரே ஆச்சரியமும் சந்தோஷமும். சகோதர சகோதரிகளை அவர்கள் குளிர்காய வைத்து சாப்பாடும் கொடுத்தார்கள். அதன் பிறகு, சகோதரர்கள் பைபிளிலிருந்து பேச ஆரம்பித்தார்கள். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ரூட்னியிலிருந்து சகோதரர்கள் மறுபடியும் இந்தக் கிராமத்திற்குச் சென்றார்கள். அந்த பயனியர் சகோதரர் நினைவுபடுத்தி இவ்வாறு கூறுகிறார்: “நிக்கலை ரயில் நிலையத்தில் எங்களை வந்து சந்தித்தார். கிராம மக்கள் நிறைய பேர் ‘பால் டாங்கரில் வந்தவர்களிடம்’ பேச விரும்பினார்கள்; அதனால், ஆர்வமுள்ளவர்கள் எங்களை வந்து
சந்திப்பதற்காக நிக்கலை ஓர் அட்டவணை போட்டார். அந்த அட்டவணைபடி வந்தவர்கள் எல்லாருமே பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்கள்.” காலப்போக்கில், அந்தக் கிராமத்தில் பைபிளைப் படிக்க ஆரம்பித்த ஏறக்குறைய எல்லாருமே ஆன்மீக ரீதியில் நன்கு முன்னேறினார்கள். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, நிக்கலையும் அவருடைய மனைவி வால்யாவும் முழுக்காட்டுதல் பெற்றார்கள். இப்பொழுது அவர்களுடைய இரண்டு மகன்களும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக இருக்கிறார்கள். இந்த ஒதுக்குப்புற தொகுதியின் மூப்பராக நிக்கலை சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜார்ஜியா
இந்நாட்டின் ஒதுக்குப்புற மலைப் பிராந்தியங்களில் பயனியர்கள் ஊழியம் செய்துகொண்டிருந்தார்கள். இரண்டு சகோதரிகள், அங்குள்ள ஒரு மலைப்பாதையின் கடைக்கோடியில் இருக்கும் ஒதுக்குப்புற கிராமத்திற்குச் செல்வதற்காக எட்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார்கள்; அங்கே வீடுவீடாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். கேட்டிவான் என்ற சகோதரி பேசுகையில் அங்குள்ள ஒரு முதியவர் குறுக்கிட்டார்; ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை சேராத அவர் எப்படி இங்கு வந்து பிரசங்கிக்கலாம் என கேட்டார். அந்தச் சகோதரி பதிலளித்தபோது அவர் காதுகொடுக்கவே இல்லை. சகோதரியைக் கீழே தள்ளி பிரம்பால் அடித்தார். அவர் அடிப்பதை அங்கிருந்த பலரும் பார்த்தார்கள், அந்த விஷயம் ஊர் முழுக்க பரவியது. பிற்பாடு, கேட்டிவான் மீண்டும் அதே கிராமத்துக்கு ஊழியம் செய்ய வந்தார். முன்பு எதிர்ப்பு தெரிவித்த ஒரு பெண், சகோதரியைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “அடிவாங்கிய பிறகும் நீங்கள் இங்கு திரும்ப வந்திருக்கிறீர்களே! உங்களுடைய தைரியத்தைப் பார்த்து நான் அசந்துபோய்விட்டேன்! எங்களுடைய வீட்டுக்கு வந்து இன்னும் நிறைய விஷயங்களைச் சொல்லுங்கள்” என்றாள். அவர் சொன்னதைக் கேட்டபிறகு, தன்னிடம் பிரசங்கிப்பதற்காக கேட்டிவான் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு வரலாம் என்று சொன்னாள்.
ஆப்பிரிக்கா
நாடுகளின் எண்ணிக்கை 57
மக்கள் தொகை 80,22,32,357
பிரஸ்தாபிகள் 10,43,396
பைபிள் படிப்புகள் 19,03,665
ருவாண்டா
சில காலத்திற்கு முன், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகம் சாலையில் கிடப்பதை அவ்வழியே சென்றவர்கள் கண்டார்கள். அவர்கள் அதை எடுத்து தங்களுடைய புராட்டஸ்டன்ட் சபையின் மூப்பரிடம் கொடுத்தார்கள். அவர் அதை மிகுந்த ஆர்வத்தோடு வாசித்தார்; யெகோவாவின் சாட்சிகளைப் பார்த்துப் பேச அவர் விரும்பினார். அவர்கள் அவருக்கு பைபிள் படிப்பு நடத்தினார்கள். அவர் பைபிள் விஷயங்களை அதிகமாகத் தெரிந்துகொண்டபோது, சர்ச்சிலிருந்து விலகினார், முழுக்காட்டுதலும் பெற்றார். இதற்கிடையே, தன்னுடைய முன்னாள் சர்ச் ஆட்களிடம் சத்தியத்தைப் பற்றி பக்திவைராக்கியத்தோடு பேசினார். அதனால் 25 பேர் சர்ச்சை விட்டுவிலகி யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். அவருக்குப் பதிலாக சர்ச்சில் மூப்பராக நியமிக்கப்பட்டவரும் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஆரம்பித்தார்; அவரும் சர்ச்சைவிட்டு விலகினார். அவர் இப்பொழுது கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராகிறார், ஒரு பிரஸ்தாபியாக ஆக விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்த விசேஷ மாநாட்டு தினத்தில் அவருடைய மனைவி முழுக்காட்டப்பட்டார். இத்தனைக்கும் காரணம், சாலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புத்தகமே என்பதை யோசித்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது!கோட் டீவோர்
பெரன்ஷே என்ற இளம் சாட்சி, தலைநகரான அபித்ஜனில் ஊழியம் செய்வதற்காகச் செல்கையில், ரொட்டி விற்கிற ஒரு பெண் அவரைக் கடந்து சென்றாள். ஒரு 5,000 ஃபிரான்க் நோட்டு (10 அமெரிக்க டாலர்) அவளிடமிருந்து கீழே விழுந்தது. ஆனால், அதை அவள் கவனிக்கவில்லை. அந்தப் பணத்தை அவளிடம் கொடுப்பதற்காக பெரன்ஷே எடுத்ததும் எதிர்புறத்திலிருந்து வந்த மற்றொரு பெண், “அந்தப் பணத்தை தா, அது என்னுடையது” என்று கத்தினாள். அந்தப் பணத்தின் மதிப்பு எவ்வளவு என்று பெரன்ஷே கேட்டதும் அவள் கோபத்துடன் போய்விட்டாள். பெரன்ஷே, பணத்தைத் தொலைத்த அந்தப் பெண்ணிடத்திற்கு ஓடிச் சென்றார். அவளோ அது தன்னுடைய பணம் அல்ல என்றும், தன்னிடமிருந்து திருடுவதற்காக அவர் நாடகமாடுவதாகவும் சொன்னபோது பெரன்ஷே திகைத்துப்போனார். என்றாலும், அவர் உண்மையாகவும் விடாப்பிடியாகவும் சொன்னதை அவள் புரிந்துகொண்டபோது, தன்னிடமிருந்த பணத்தைக் கணக்குப் பார்த்தாள். 5,000 ஃபிரான்க் குறைவாக இருந்ததைக் கவனித்தாள்; அது 50 ரொட்டிகளின் விலையாக இருந்தது.
பெரன்ஷே இவ்வாறு சொன்னான்: “நான் அந்தப் பணத்தை அவரிடம் கொடுத்தேன்; பிறகு, என்னுடைய கடவுளான யெகோவா நேர்மையாய் இருக்கும்படி தம்முடைய ஊழியர்களுக்குக் கற்பித்திருப்பதால்தான் நான் பணத்தைத் திருப்பிக்கொடுத்தேன் என்று சொன்னேன். அவர் எனக்கு நன்றிகூறி இவ்வாறு சொன்னார்: ‘யெகோவாவின் சாட்சிகளைப் போலவே எல்லாரும் நடந்துகொண்டால் எல்லா மனிதருமே நண்பர்களாக இருப்பார்கள். ஒரு இளைஞன் இப்படி நடந்துகொள்வதை என்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாகப் பார்க்கிறேன்.’ நான் அவருக்கு ஒரு துண்டுபிரதியைக் கொடுத்தேன்; இனி யெகோவாவின் சாட்சிகள் வந்தால் அவர்கள் சொல்வதைக் கண்டிப்பாகக் கேட்பேன் என்று அவர் சொன்னார். அன்றைய நாள் செலவுக்கு என்னிடம் 50 ஃபிரான்க் மட்டுமே இருந்தது. ஆனாலும், நல்லதைச் செய்தோமே என்று சந்தோஷப்பட்டேன்.”
காங்கோ மக்கள் குடியரசு
யூஜின் என்ற மூப்பர் ஒரு வைர கடையை பராமரிப்பவராகவும் அதன் வாட்ச்மேனாகவும் வேலை செய்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “ஒரு நாள் சாயங்காலத்தில், 22,000 (அமெரிக்க) டாலர் மதிப்புள்ள வைர கற்களை விற்பதற்காக ஒருவர் கடைக்கு வந்தார். வைரத்தை வைத்திருந்த பொட்டலம் அவருடைய பாக்கெட்டிலிருந்து
கீழே விழுந்திருந்தது. அவர் பதட்டத்துடன் எல்லா இடமும் தேடிப்பார்த்தும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள், அவருடைய முதலாளியும் சக பணியாளரும் சேர்ந்து தெருவெங்கும் தேடியும் அது கிடைக்கவில்லை. பிறகு, நான் கடைக்கு வெளியே கூட்ட ஆரம்பித்தேன், இதோ, எங்களுடைய கடையின் வாசலுக்கு முன்னாலேயே அந்தப் பொட்டலம் கிடந்தது! நான் அதை எடுத்துக்கொண்டு, முதலாளியிடம் ஓடினேன்; அவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். நான் அதைக் கொடுத்தபோது அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை. நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்றும் கடவுளுக்குப் பயந்து வாழ்பவன் என்றும் அவரிடம் சொன்னேன். அந்த வைரத்தின் உரிமையாளர் என்னுடைய நேர்மையைப் பார்த்து அசந்துபோய், ‘என்னால் நம்பவே முடியவில்லை!’ என்று சொன்னார்.“என்னுடன் வேலைபார்க்கிற ஒருவர், ‘யூஜின், எங்களுடைய மதிப்பு மரியாதையை நீ காப்பாற்றிவிட்டாய்!’ என்று சொன்னார்.
“நானும் பதிலுக்கு ‘அவரிடம் நன்றி தெரிவித்து, எல்லாப் புகழும் யெகோவாவுக்குத்தான்; ஏனெனில் எனக்கு நேர்மையைக் கற்றுக்கொடுத்தவர் அவரே’ என்று சொன்னேன்.”
அங்கோலா
மிஷனரியான ஷ்வாங், வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்து வருகிறார். அவர் ஒரு கிராமப் பகுதிக்கு விஜயம் செய்தபோது, அங்குள்ள சகோதரர்களுக்கும் ஆர்வமுள்ள ஆட்களுக்கும் நோவா கடவுளோடு நடந்தார்—தாவீது கடவுள்மீது நம்பிக்கை வைத்தார் என்ற டிவிடியைக் காட்ட விரும்பினார். அந்தச் சகோதரர் தன்னுடைய லாப்டாப் கம்ப்யூட்டரோடுகூட ஒரு சிறிய ஜெனரேட்டரையும் இரண்டு ஒலிப்பெருக்கிகளையும் கொஞ்சம் பெட்ரோலையும் எடுத்துச் சென்றார். முதலில் சென்ற கிராமத்தில் ஒரு சிறிய மண் குடிசையில் தங்கினார். மாலை மயங்கும் வேளையில் டிவிடி போடுவதற்கு ஏற்பாடு செய்தார். “உட்காருவதற்காக நாற்காலிகள், பெஞ்சுகள், கற்கள், பால் கேன்கள், மற்றும் வேறுபல பொருட்களை எடுத்துக்கொண்டு சுமார் 38 பேர் வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதில் பாதிபேர் உட்காருவதற்குப் போதுமான இடவசதிகூட அந்த வீட்டில் இருக்கவில்லை; ஆகவே படத்தை வெளியே உட்கார்ந்து பார்க்க வேண்டியதாயிற்று. நட்சத்திரங்கள் மின்னும் வெட்டவெளியில் சில செங்கல்களின்மீது கம்ப்யூட்டரை வைத்தேன். கூடிவந்திருந்த பலரும் பலவர்ண ஆப்பிரிக்க துணியைக் கீழே விரித்து அதில் உட்கார்ந்தார்கள்.” இந்த விஷயம் அந்தப் பகுதியெங்கும் வேகமாகப் பரவியது; அதனால் ஷ்வாங் விஜயம் செய்த கிராமங்களுக்கு அநேகர் வந்தார்கள். “படக்காட்சி முடிந்த பிறகும்கூட அங்கிருந்து கிளம்ப யாருமே விரும்பவில்லை. தங்கள் வாழ்க்கையில் அனுபவித்து மகிழ்ந்த ஒரு நல்ல இரவு இதுதான் என்று அநேகர் சொன்னார்கள்; அதோடு இந்த ஆன்மீக ஏற்பாட்டுக்காக
யெகோவாவுக்கு உள்ளப்பூர்வமான நன்றியையும் தெரிவித்தார்கள்” என அவர் சொல்கிறார். கிராமப் பகுதியில் ஷ்வாங் விஜயம் செய்த மூன்று வாரங்களில் 1,568 பேர் அந்த டிவிடியைப் பார்த்து மகிழ்ந்தார்கள்!கானா
அக்ரா நகரில், காண்ட்ராக்ட் எடுத்து உணவு பொருட்களைச் சப்ளை செய்துவந்த வீடா என்பவர் கானாவிலுள்ள கிளை அலுவலகத்துக்கு பச்சைக் காய்கறிகளை சப்ளை செய்ய மனமில்லாதவராக இருந்தார். ஏன்? ஏனென்றால், யெகோவாவின் சாட்சிகள் மற்ற மதத்தவரை வெறுப்பதாக அவருடைய பாஸ்டர் அவரிடம் சொல்லியிருந்தார். வீடா முதல் முறையாக உணவு பொருட்களை சப்ளை செய்தபோது, சமையலறையில் வேலை செய்தவர்கள் புன்னகை பூத்தபடி பவ்வியமாக நன்றி சொன்னதும் அவருக்கு ஒரே ஆச்சரியம். தொடர்ந்து வந்த வாரங்களில் கிளை அலுவலகத்திலுள்ள வாலண்டியர்களுடன் நன்கு பழக்கமானார். ஒவ்வொருவரும் அவரிடம் அன்பாக நடந்துகொண்டதைக் கவனித்தார், தன்னுடைய பாஸ்டர் சொன்னது தவறு என்பதைப் புரிந்துகொண்டார்.
வாசிக்கத் தெரியாவிட்டாலும், பைபிளைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள தான் விரும்புவதாகவும் தனக்கு பைபிள் படிப்பு நடத்தும்படியாகவும் அவர் கேட்டுக்கொண்டார். ஆறு மாதங்களுக்குள்ளாக, தன்னுடைய பைபிளிலிருந்து வாசிக்கக் கற்றுக்கொண்டார்; சமீபத்தில் நடந்த மாவட்ட மாநாட்டில் அவர் முழுக்காட்டுதல் பெற்றார். குடும்பத்தாரும் முன்னாள் நண்பர்களும் அவரைக் கேலி செய்தபோதிலும் தன்னுடைய மாமாவின் மகள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாகத் தகுதிபெறுவதற்கு வீடா உதவியிருக்கிறார்.
சூடான்
ஒரு சகோதரி வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில், இரண்டு சிறுமிகள் அவரை வீட்டுக்குள் அழைத்தார்கள். ஆனால், தங்களுடைய பைபிளில் வசனங்களைக் கண்டுபிடிப்பதற்கு உதவ அந்தச் சகோதரியை அவர்கள் அனுமதிக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகள் யாராவது அவர்களுடைய பைபிளைத் தொட்டால், அதிலுள்ள வசனங்கள் எல்லாம் தானாகவே சாட்சிகளுடைய போதனைகளின்படி மாறிவிடும் என உள்ளூர் பாதிரியார் எச்சரித்திருந்தார். அதனால், அந்தச் சகோதரியிடம் கைகுலுக்கக்கூட அந்தச் சிறுமிகள் மறுத்துவிட்டார்கள். இருந்தாலும், சகோதரி சொன்ன வசனங்களை அந்தச் சிறுமிகள் தாங்களாகவே கண்டுபிடித்து வாசித்தார்கள்; அவர்கள் வாசித்தது அந்தச் சகோதரி சொன்னபடியே இருந்தது. பாதிரியார் தங்களிடம் பொய் சொல்லியிருக்கிறார் என்று தெரிந்ததும் அவர்கள் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாதிரியார், சாப்பாட்டுக்கு அவர்களுக்குப் பணம் தருவதாக வாக்குக் கொடுத்தார்; ஆனால், அவர்கள் பைபிள் படிப்பை நிறுத்திவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதற்கு
அவர்கள் என்ன சொன்னார்கள்? “சாப்பிட்டு வயிற்றை நிரப்ப நாங்கள் விரும்பவில்லை. மாறாக, கடவுளுடைய வார்த்தையால் எங்களை நிரப்பவே விரும்புகிறோம்.” அந்தச் சிறுமிகள் இப்போது சபை கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள்.எத்தியோப்பியா
அவோக் என்பவர், தன்னுடைய மனைவி பத்து வருடங்களாக யெகோவாவின் சாட்சியாக இருக்கிற போதிலும் சத்தியத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும், இரண்டு மாத பயிற்சிக்காக அவர் வேறொரு இடத்திற்கு போகையில், அங்கே யெகோவாவின் சாட்சிகளைக் கண்டுபிடிக்க அவர் தீர்மானித்தார். அங்கு போய்ச் சேர்ந்ததும், ஓர் அலுவலகத்திற்கு அவர் அனுப்பப்பட்டார்; அந்த அலுவலகத்தில் யெகோவாவின் சாட்சியான ஒரு சகோதரி வேலை பார்த்துவந்தார். அந்தச் சகோதரியோ, அங்குள்ள சபைக்கு ஒரு சகோதரர் வந்து உதவ வேண்டுமென ஜெபித்து வந்திருந்தார். யெகோவாவின் சாட்சிகள் யாராவது இருக்கிறார்களா என ஒருவர் கேட்கிறார் என்ற விஷயம் அந்தச் சகோதரிக்குத் தெரியவந்ததும், தான் செய்த ஜெபத்தை அவர் நினைத்துப் பார்த்தார். நன்கு உடையணிந்து நேர்த்தியாக தலைவாரியிருந்த அவோக்கைப் பார்த்ததும் தன்னுடைய ஜெபத்திற்குப் பதிலளிக்கும் விதமாக அனுப்பப்பட்ட புதிய சகோதரர் இவர்தான் என முடிவு செய்தார். சந்தோஷம் பொங்க அவோக்கிடம் அவர் வேகமாகச் சென்று அன்புடன் வாழ்த்தினார். அவருடைய சந்தோஷத்தைப் பார்த்ததும் அவர் நினைத்த சகோதரர் தான் அல்ல என்பதைச் சொல்ல அவோக்குக்குத் தைரியம் வரவில்லை. சகோதரர்களுக்கு அவரை அந்தச் சகோதரி அறிமுகப்படுத்துகையில் அவருக்கு ஏமாற்றத்தை அளிக்க அவோக் விரும்பவில்லை. அவர் அங்குத் தங்கியிருந்த மாதங்களில் எல்லாக் கூட்டங்களுக்கும் சென்றார். அவருடைய பயிற்சி முடிந்து திரும்பிச் செல்ல வேண்டிய சமயம் வந்தபோது சகோதரிகள் சிலபேர் அவரை மதிய உணவுக்கு அழைத்தார்கள். உணவுக்காக ஜெபம் செய்யும்படி அவரிடம் கேட்டார்கள். வீட்டில் சாப்பிடும்போது தன்னுடைய மனைவி முக்காடிட்டுக்கொண்டு ஜெபம் செய்வதும் இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பதும் அவருடைய நினைவுக்கு வந்தது. அப்படியே அவர் ஜெபம் செய்தார், எல்லாரும் சாப்பிட்டு முடித்தார்கள். அவர் அங்கு தங்கியிருந்த மாதங்களில், அவர்கள் காட்டிய அன்பு அவருடைய மனதைத் தொட்டதால், தானொரு நிஜ சகோதரராக ஆக வேண்டுமென முடிவுகட்டினார். வீடு திரும்பியதும், அவர் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார், சமீபத்தில் நடந்த மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றார். அவருடைய மனைவி இப்போது அதிக சந்தோஷமாக இருக்கிறார். தான் விஜயம் செய்திருந்த சபையில் தன்னுடைய நிஜக் கதையை சொல்வதற்கான சந்தர்ப்பத்துக்காக அவோக் எதிர்பார்த்திருக்கிறார்.
ஐரோப்பா
நாடுகளின் எண்ணிக்கை 46
மக்கள் தொகை 73,07,76,667
பிரஸ்தாபிகள் 15,06,019
பைபிள் படிப்புகள் 7,44,319
உக்ரைன்
எலக்ட்ரீஷியன் ஒருவர் ராஜ்ய மன்றத்தில் மீட்டர் பொருத்துவதற்காகச் சென்றார். அவர் அந்தக் கிராமத்தில் பேர்பெற்ற குடிகாரனாக இருந்தார். அவர் மீட்டரைப் பொருத்தும்போது மன்றத்தில் எழுதப்பட்டிருந்த வருடாந்தர வசனத்தைப் பார்த்தார்; “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்பதே அந்த வசனம். (யாக். 4:8, NW) அவர் வேலையைச் சற்று நிறுத்தி, “கடவுளிடம் நெருங்கிவருவது உண்மையிலேயே சாத்தியமா? பாவிகள் கடவுளிடம் நெருங்கிவர முடியுமா?” என்று சகோதரர் ஒருவரிடம் கேட்டார். அந்தச் சகோதரர் பைபிளிலிருந்து அவருக்குப் பதில் அளித்தார், கூட்டத்துக்கு வரும்படியும் அழைத்தார். ஞாயிற்றுக்கிழமை கூட்டத்துக்குப் போக அவர் தீர்மானித்தார். அவர் போவதை அக்கம்பக்கத்தார் பார்க்காதிருக்க மற்றொரு கிராமத்திலுள்ள ராஜ்ய மன்றத்துக்குப் போனார். அங்கு சென்று பார்த்தால், அன்று பொதுப் பேச்சு கொடுத்த மூப்பர் அவருடைய கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்தார். மூப்பரைப் பார்த்ததும் அவர் ஒளிந்துகொள்ள முயன்றார். ஆனால், அந்த மூப்பரோ அவரை அடையாளம் கண்டுகொண்டு அன்புடன் வரவேற்றார். அதுமுதல், தன்னுடைய கிராமத்திலேயே நடத்தப்படும் கூட்டங்களுக்குச் செல்லத் தீர்மானித்தார். அவருக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது, ஒரு வருடத்துக்குப் பிறகு முழுக்காட்டுதல் பெற்றார்.
அந்தச் சமயத்தில் அவருடைய மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தாள்; தன்னுடைய கணவர் குடியை நிறுத்தியதையும் யெகோவாவின் சாட்சியாக மாறியதையும் அவளால் நம்பவே முடியவில்லை. அதை நேரில் பார்ப்பதற்காக, அவள் திரும்பி வந்தாள். தன்னுடைய கணவர் குடிப்பதை நிறுத்திவிட்டதையும் பிள்ளைகளை நன்கு கவனித்துக்கொள்வதையும் பார்த்தபோது சந்தோஷப்பட்டாள்; ஆனால், அவர் ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறியது அவளுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும், ஒருநாள் அவளிடம் அவர் இவ்வாறு கேட்டார்: “நாம் எல்லாரும் குடும்பமாக ராஜ்ய மன்றத்துக்குப் போகலாமா?” அதற்கு அவள்
ஒத்துக்கொண்டாள். அவளுக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது; கொஞ்ச காலத்திற்குள்ளாகவே, அவளும் அவர்களுடைய மகள்கள் மூவரும் முழுக்காட்டுதல் பெற்றார்கள். இவ்வாறு, ஒரேயொரு பைபிள் வசனம் ஐந்துபேர் கடவுளிடம் நெருங்கிவர உதவியது.கிரீஸ்
தினமும் ஒரே வழியில் வேலைக்குச் செல்லும் ஒரு சகோதரர், ஒரு சின்னஞ்சிறிய சர்ச்சுக்கு ஒரு பெண் தவறாமல் போவதைப் பார்த்தார். கிரீஸ் நாட்டின் சாலையோரங்களில் காணப்படும் இத்தகைய குட்டி சர்ச்சுகள் பொதுவாக உயிரைக் குடித்த கோர விபத்து நடந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கும். இந்தப் பெண்ணுக்கு உதவ விரும்பிய அந்தச் சகோதரர், இறந்தவர்களின் நிலையையும், உயிர்த்தெழுதல் நம்பிக்கையையும் பற்றிய ஆறுதலளிக்கும் பைபிள் விஷயங்களைக் குறிப்பிட்டு சுருக்கமாக கடிதம் எழுதினார். தன்னுடைய பெயரையும் ஃபோன் நம்பரையும்கூட அதில் எழுதி அந்த சர்ச்சுக்குள் போட்டுவிட்டார். அடுத்த நாளே, அந்தப் பெண் அவருக்கு ஃபோன் செய்தார், நற்செய்தியில் மிகுந்த ஆர்வத்தையும் காட்டினாள். இப்போது அந்தப் பெண்ணுக்கு தவறாமல் மறு சந்திப்பு நடத்தப்பட்டு வருகிறது.
நார்வே
வெளி ஊழியத்துக்குப் பிறகு ஆறு சகோதரிகள் ஒரு ஹோட்டலுக்குச் சென்றார்கள். இரண்டு நாட்களுக்கு முன் கேட்ட அருமையான பொதுப் பேச்சைப் பற்றி அவர்கள் சம்பாஷித்துக்கொண்டிருந்தார்கள். அது உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றியது. சிறிது நேரத்திற்குப் பின், அவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட ஒரு பெண் அவர்களுடைய டேபிளுக்கு வந்தார். தானும் அவர்களுடன் உட்கார்ந்து அவர்கள் பேசுவதைக் கவனிக்கலாமா என்று கேட்டார். சமீபத்தில், அவருடைய அம்மா, அப்பா இருவருமே இறந்துவிட்டதாகச் சொன்னார். உற்சாகமான உரையாடல் தொடர்ந்தது. அவருடைய ஃபோன் நம்பரை சகோதரிகள் வாங்கினார்கள். பின்பு அவர்களில் ஒருவர் அந்தப் பெண்ணைச் சந்தித்து பைபிள் படிப்பை ஆரம்பித்தார்.
லிதுவேனியா
முழுநேர ஊழியம் செய்யும் ஓல்கா என்ற இளைஞி, வீட்டு வாசலில் நின்றபடி ஒரு ரஷ்ய பெண்ணுக்கு பைபிள் படிப்பை ஆரம்பித்தார். பைபிள் படிப்பை ஆரம்பித்த சமயத்தில் ஒருநாள், பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ‘கடைசி நாட்கள்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் சொல்லும்படி ஓல்காவிடம் அந்தப் பெண் கேட்டார். (2 தீ. 3:1) அடுத்த முறை வரும்போது அதற்கு விளக்கம் அளிப்பதாக ஓல்கா சொன்னார். ஓல்கா பலமுறை அவருடைய வீட்டிற்குச் சென்றும் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவரைப் பார்க்க முடியவில்லை. வீட்டுக் கதவை யாருமே திறக்காவிட்டாலும் அதன் துளை வழியாக யாரோ பார்ப்பது ஓல்காவுக்குத் தெரிந்தது. ஓல்கா இவ்வாறு சொல்கிறார்: “தொடர்ந்து பைபிள் படிக்க அந்தப் பெண்ணுக்கு ஆர்வம் இல்லையென்று தீர்மானித்துவிடக் கூடாதென்று நினைத்தேன். ஒருவேளை, துளை வழியாகப் பார்ப்பது வேறொருவராக இருக்கலாம். ஆகவே, அவர் ஆர்வமாகக் கேட்ட அந்த விஷயத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதினேன். மூன்று நாட்களுக்குப் பிறகு, திரும்பவும் அவருடைய வீட்டிற்குச் சென்றபோது அவர் அங்கே இருந்தார். அவர் கதவைத் திறந்தபோது எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருந்தது! அந்தக் கடிதமும் அவரிடம் காட்டப்பட்ட தனிப்பட்ட அக்கறையும் அவருடைய மனதை ஆழமாகத் தொட்டிருந்தது.”
அந்தப் பெண் ஓல்காவுக்கு நன்றி தெரிவித்து இவ்வாறு சொன்னார்: “உங்களுடைய கடிதத்தை ஒரு வரி விடாமல் பலமுறை படித்தேன்; எல்லாவற்றையும் புரிந்துகொண்டேன்.” அதன் விளைவாக, ஆரம்பத்தில் வீட்டு வாசலில் நடத்தப்பட்ட பைபிள் படிப்பு, வீட்டுக்குள் நடத்தப்படும் பைபிள் படிப்பாக மாறியது; பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து தவறாமல் பைபிள் படிப்பு நடத்தப்படுகிறது. இப்போது, ஒவ்வொரு முறையும் பைபிள் படிப்புக்காக ஓல்கா போகும்போது, அவரை இந்தப் பெண் அன்புடன் வரவேற்கிறார்.
சுவிட்சர்லாந்து
பன்னாட்டு மக்களின் சங்கமமாய்த் திகழும் ஜெனிவா நகரில், மரீ என்ற சகோதரி மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசினார். சகோதரி மரீ அரபிக் மொழியைக் கற்றுக்கொண்டிருந்ததால், அந்த மொழியில் அவரிடம் பேசினார். ஒரேயொரு உண்மைக் கடவுளையே தான் நம்புவதாக மரீ கூறினார். அப்படிச் சொன்னதும், அந்தப் பெண் மரீயைக் கட்டித்தழுவி முத்தமிட்டாள்; தான் கவலையாக இருந்ததாகவும் மரீ தன்னிடம் பேசிய சமயத்தில் தான் ஜெபம் செய்து கொண்டிருந்ததாகவும் சொன்னார். மறுநாள் தன்னுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லவிருப்பதாக அந்தப் பெண் கூறினாள். மரீ பைபிளைத் திறந்து 1 பேதுரு 3:7-ஐ வாசித்து, பெண்களைக் கடவுள் உயர்வாகக் கருதுகிறார் என விளக்கினார். அதன் பிறகு, கணவர்கள் தங்களுடைய மனைவிகளுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டுமென யெகோவா விரும்புகிறார் என்று சொன்னார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன அந்தப் பெண் இவ்வாறு கேட்டாள்: “நீங்கள் ஒரு பெண்ணா அல்லது தேவதையா? இந்த வசனத்தில் கடவுள் சொல்லியிருக்கிறபடி என் கணவர் நடந்துகொள்ளாததுதான் எனக்குப் பிரச்சினையே. எனக்கு உதவும்படி கடவுளிடம் ஜெபித்துக்கொண்டேயிருந்தேன். அதற்கேற்றமாதிரி நீங்கள் இந்தப் புத்தகத்தைத் திறந்து இந்த வசனத்தையே எனக்கு வாசித்துக் காட்டினீர்கள்.” அதன் பிறகு அந்த வசனத்தை ஒரு பேப்பரில் எழுதித் தரும்படி மரீயிடம் அவர் கேட்டார். அந்த பேப்பரை வீட்டிற்கு எடுத்துச் சென்று எல்லாருக்கும் காட்டி, இந்த அருமையான சந்திப்பைப் பற்றி அவர்களிடம் சொல்லப்போவதாக அவர் கூறினார். அந்தப் பெண் தன்னுடைய நாட்டுக்குச் செல்லவிருப்பதைக் குறித்து மரீ வருத்தப்பட்டார், என்றாலும் ஒருவருக்கொருவர் தவறாமல் தொடர்புகொள்ள ஒத்துக்கொண்டார்கள்.
நெதர்லாந்து
ரோட்டர்டாம் நகரில் உலகிலுள்ள மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்று அமைந்துள்ளது. கப்பலில் வரும் சரக்குகள், டிரக்குகளில் ஏற்றப்பட்டு ஐரோப்பிய யூனியனிலுள்ள நாடுகளுக்கோ அதற்கு அப்பாலுள்ள நாடுகளுக்கோ அனுப்பப்படுகின்றன. அதனால், ஏகப்பட்ட டிரக்குகள் அந்த நாட்டின் வழியாகச் செல்கின்றன. பக்கத்து நாடான ஜெர்மனிக்குச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலையில் ஒரு பெரிய டிரக் நிறுத்தம் உள்ளது. ஒரு மணிநேரத்திற்கு 1,500 பெரிய டிரக்குகள்வரை அதைக் கடந்து செல்கின்றன. அந்த இடத்தில் டிரக்குகளை சற்று நேரத்திற்கு நிறுத்தி ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க வேண்டுமென்ற சட்டம் இருக்கிறது; நம் சகோதரர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் முன்னாள் சோவியத் குடியரசின் ஏறக்குறைய எல்லா நாடுகளையும் சேர்ந்த டிரக் ஓட்டுனர்களைச் சந்தித்து சாட்சி கொடுக்கிறார்கள். இவர்களுக்கு நம் பத்திரிகைகளைப் படிப்பதில் கொள்ளை ஆசை. கடந்த வருடம், சகோதரர்கள் 82 முறை அந்த டிரக் நிறுத்தத்தில் பிரசங்கித்திருக்கிறார்கள், 35 மொழிகளில் 10,000-க்கும் அதிகமான பத்திரிகைகளையும் கொடுத்திருக்கிறார்கள்.
அமெரிக்க நாடுகள்
நாடுகளின் எண்ணிக்கை 56
மக்கள் தொகை 88,37,82,291
பிரஸ்தாபிகள் 32,56,287
பைபிள் படிப்புகள் 31,11,358
பெரு
ஹார்ஹே ஒழுங்கான பயனியராக சேவை செய்கிறார்; தன் செலவுகளைக் கவனித்துக்கொள்வதற்காக அவர் ஓவியராகப் பணிபுரிகிறார். இவர் ஹூபர்ட் என்ற மற்றொரு ஓவியரிடம் சத்தியத்தைப்பற்றிப் பேசினார்; அப்போது அவர் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார். குடும்பத்தாரும் நண்பர்களும் அக்கம்பக்கத்தாரும் ஹூபர்ட்டைக் கடுமையாய் எதிர்த்தபோதிலும், பைபிள் படிப்பில் ஆறே மாதத்தில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை முழுமையாகப் படித்து முடித்தார். தன் குடும்பத்தாரும் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள உதவும்படி அவர் யெகோவாவிடம் ஜெபித்து வந்தார். அவருடைய அண்ணன் ஜானும் அவருடன் சேர்ந்து பைபிள் படிக்கவும் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்தபோது அவருக்கு இன்ப அதிர்ச்சி. அதற்கு மறுவாரத்தில் ஜானுடைய மச்சான் சிசார் பைபிள் படிப்பில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் சிசாரின் மனைவி எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அவரும் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர், ஹூபர்ட்டின் பள்ளித் தோழன் ரேனால்டோ தனக்கும் பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார். கடும் எதிர்ப்பு இருந்ததால் ஹூபர்ட்டின் வீட்டிலேயே அவருக்கு பைபிள் படிப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு சீக்கிரத்திலேயே ஹூபர்ட்டின் தம்பி மில்டனும் பைபிள் படிப்பில் கலந்துகொண்டார். அவர் முதல் பாடத்தைப் படித்து முடிந்த பிறகு, தன்னுடைய பள்ளித் தோழர்களான டார்வன், கிறிஸ்டியான் ஆகியோரிடம் சத்தியத்தைப்பற்றிப் பேசினார்; இவர்கள் பைபிள் படிப்பிலும் சபை கூட்டங்களிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். ஹூபர்ட்டிற்கு ரான்னல்ட், மார்டின் என இன்னும் இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். ஹூபர்ட்டிற்கு பைபிள் படிப்பு நடக்கும்போது ரான்னல்ட்
எக்கச்சக்கமான பைபிள் கேள்விகளை எழுதிக்கொண்டு அங்கு வந்தார்; அப்போது, பைபிள் படிப்பில் அவருடைய கேள்விகள் அனைத்துக்கும் பதில் கிடைக்குமென ஹார்ஹே விளக்கினார். அவரும் பைபிள் படிப்புக்குச் சம்மதித்தார். அடுத்து, மார்டின் பைபிள் படிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்தார், அவருடைய இரண்டு மகள்களும்தான். ஹூபர்ட்டும் ஜானும் “மீட்பு விரைவில்!” மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றார்கள். முதலில் ஹூபர்ட்டுக்குச் சாட்சி கொடுத்ததன் விளைவாக, சமீப கணக்கெடுப்பின்படி, 18 பேர் யெகோவாவைப்பற்றிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.பிரேசில்
நாட்டின் வட பகுதியிலுள்ள ஒரு பண்ணையில் பௌலூ வசிக்கிறார். திருமணம் செய்துகொள்ளாமல் இவர் ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார், பின்னர் அந்தப் பெண்ணையே மணந்துகொண்டார். அந்தப் பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்தப்பட்டது, அவளைச் சந்தோஷப்படுத்துவதற்காக அவரும் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார். இதற்கிடையில், எக்கச்சக்கமான கால்நடைகளைக் கொன்றுவந்த ஜாகுவார் இன சிறுத்தையை, பண்ணையில் வேலை செய்யும் ஆட்கள் துரத்திப்போய், கடைசியில் கொன்றார்கள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் காசு சம்பாதிக்க நினைத்த அந்த ஆட்கள் பண்ணை சொந்தக்காரருக்கு ஃபோன் செய்தார்கள்; ஜாகுவார் இன சிறுத்தையைப் பிடிக்க வேட்டைக்காரர் ஒருவரை வேலைக்கு அமர்த்துவதற்குப் பணம் கேட்டார்கள். பௌலூவும் அந்தத் திட்டத்தில் அவர்களோடு ஒத்துழைத்தார், அவர்களைப் போலவே தன் முதலாளியிடம் இவரும் பொய் சொன்னார். எனினும், அவர் பைபிள் படிப்பில் கற்ற விஷயங்கள் அவருடைய மனதை உறுத்த ஆரம்பித்தன. தன் வேலை பறிபோகும், சக வேலையாட்கள் தன்மீது ஆத்திரப்படுவார்கள் என்பது தெரிந்தும் அவர் தன் முதலாளிக்கு ஃபோன் செய்து உண்மையைச் சொல்லிவிட்டார். பின்னர், இப்படி அவர் நேர்மையாய் நடந்துகொண்டதால் பண்ணையை நிர்வகிப்பவராக பதவி உயர்வு பெற்றார். இப்போது பௌலூவும் அவருடைய மனைவியும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளாக இருக்கிறார்கள். இந்த நேர்மை மனம் படைத்தவர், டிராக்டரில் தன் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் ராஜ்ய மன்றத்திற்கு அழைத்து வருவதைப் பார்க்கும்போது எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறது!
மெக்சிகோ
பக்தி வைராக்கியத்துடன் ஒழுங்கான பயனியராக சேவை செய்துவருகிறார் மாரியா. இவருடைய இரண்டு மகள்கள் படிக்கும் பள்ளியில் பெற்றோர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மாரியா கலந்துகொண்டபோது, சில பிள்ளைகள் கலகத்தனமாகவும் ஒழுக்கக்கேடாகவும் நடந்துகொள்வதைக் குறித்து ஆசிரியர்கள் பெரிதும் கவலைப்படுவதைக் கவனித்தார். ஓர் ஆசிரியை இவ்வாறு சொன்னார்: “பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளில் ஒருவர் குற்றவாளியாகத் தெருக்களில் அலையாதிருக்க வேண்டுமென்றால் தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள். அவர்களுக்குப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். ஏதாவதொரு விதத்தில் அவர்களுக்கு உதவுங்கள், ஏனெனில் அவர்கள் மனதில் ஏன், ஏன் என ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. அவற்றிற்கான பதிலை அவர்கள் தங்கள் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள விட்டுவிடாதீர்கள்.” பின்னர், மாரியா தன் மகள்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை விசாரிக்க தலைமை ஆசிரியையைச் சந்தித்தபோது, அந்தச் சிறுமிகளால் எந்தப் பிரச்சினையும் இல்லையென தெரிந்துகொண்டார். அப்போது, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகம், இளம் தலைமுறையினருக்கு நடைமுறை உதவி அளிக்கும் புத்தகமென சிபாரிசு செய்தார். அவர் சொன்ன எல்லாவற்றையும் கவனமாய் கேட்ட தலைமை ஆசிரியை ஒரு பிரதியைக் கொண்டுவந்து தரும்படி மாரியாவிடம் சொன்னார். மறுநாள் அவர் அதை எடுத்துச் சென்றபோது, தலைமை ஆசிரியை பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு நன்றி தெரிவித்தார்; மனநல மருத்துவராகப் பள்ளியில் பணியாற்றுபவருக்குத் தருவதற்காக அவர் இன்னொரு புத்தகத்தைக் கேட்டார். அந்த மருத்துவர் அதை வாசித்த பிறகு, பள்ளிப் பாடத்தில் அந்தப் புத்தகத்தையும் கற்பிக்கும்படி ஆலோசனை சொன்னார். அங்குப் பணிபுரியும் 12 ஆசிரியைகளுக்கும் ஒவ்வொரு புத்தகத்தையும் பள்ளி நூலகத்திற்காக 50 புத்தகங்களையும் அந்தத் தலைமை ஆசிரியை தருவித்தார்.
உருகுவே
விடியலுக்கு முன்பு ஒரு நபர் அண்டை நாடான அர்ஜென்டினாவிலிருந்து உருகுவேயிலுள்ள தன் வீட்டுக்குப் பயணித்துக்கொண்டிருந்தார். ரியோ தே லா ப்ளாட்டா ஆற்றைக் கடப்பதற்குத் தோணியில் ஏறப்போகும்போது, ஓர் இளம் பெண் அவருக்கு ஜனவரி 2006 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையைக் கொடுத்தார்; “எதிர்காலம் எப்படி இருக்கும்?” என்ற தலைப்பில் அதன் அட்டைப்பட கட்டுரைகள் இருந்தன. அந்தப் பெண் அன்பாகப் பேசினாள், அவரும் சந்தோஷமாய் பத்திரிகையைப் பெற்றுக்கொண்டார். மான்டிவிடியோ நகரை அடைந்ததும் பயணிகள் அனைவரும் முக்கிய பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். மீண்டும் ஒரு யெகோவாவின் சாட்சி அவரை அங்கு அணுகியபோது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது; இந்த முறை அவரைச் சந்தித்தவரோ, கைத்தடியைப் பயன்படுத்துகிற வயதான பெண்மணி. இந்தப் பெண்மணியும் அதே பத்திரிகையை அவருக்கு அளித்தார், அவரும் பெற்றுக்கொண்டார். வீடுபோய் சேர்ந்து சிறிது நேரத்திற்குப் பிறகு அன்று மாலை வேளையில் யாரோ கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்டார். போய் திறந்தபோது யெகோவாவின் சாட்சியாய் இருக்கும் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தார். அந்தப் பெண்
சுருக்கமாகச் சொன்ன செய்தியைக் கேட்ட பிறகு அவர் கொடுத்த அதே பத்திரிகையை அவர் வாங்கிக்கொண்டார், அதுவும் ஒரே நாளில் மூன்றாவது முறையாக! உலகளாவிய வேலைக்காக நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதாக அந்தச் சாட்சி விளக்கியபோது, அது தனக்கு முன்னமே தெரியுமென சொல்லிவிட்டு, பணத்தை எடுத்து வர உள்ளே போனார். அந்த நாளில் தான் ஏற்கெனவே வாங்கியிருந்த இரண்டு பத்திரிகைகளையும் கையோடு எடுத்து வந்தார். “எதிர்காலம் எப்படி இருக்கும்?” என்ற கேள்வியைச் சுட்டிக்காட்டி சிரித்தபடியே அவர் இவ்வாறு சொன்னார்: “எதிர்காலத்தில் இன்னொரு யெகோவாவின் சாட்சி வருவார் என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்!”பியூர்டோ ரிகோ
ஒரு சகோதரி தன் மகளைப் பார்ப்பதற்குப் போயிருந்தார்; அங்கே இரண்டு திருடர்கள் திடீரென வீட்டுக்குள் நுழைந்தார்கள், ஒருவனிடம் கைத்துப்பாக்கி இருந்தது. அவர்கள் பணம் கேட்டார்கள், தங்களிடம் பணமில்லையென அவர்கள் சொன்னபோது ஒருவன் அவர்களுக்கு நேராகத் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு நின்றான், மற்றவன் வீட்டிலிருக்கிறதாவென தேட ஆரம்பித்தான். உடனடியாக பெண்கள் இருவரும் யெகோவாவிடம் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். அந்தத் திருடன், “என்ன செய்கிறீர்கள்?” என கேட்டான். தாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்றும் தங்கள் கடவுளான யெகோவாவிடம் ஜெபிப்பதாகவும் அவர்கள் பதில் சொன்னார்கள். கைத்துப்பாக்கி வைத்திருந்தவனிடம் அந்தச் சகோதரிகள் சத்தியத்தைப்பற்றி பேசிக்கொண்டிருந்த சமயத்தில் ATM கார்டு கிடைத்ததாகச் சொல்லிக்கொண்டு மற்றவன் திரும்பி வந்தான். சீக்கிரத்திலேயே அம்மா வந்திருந்த காரில் அவர்கள் எல்லாரும் ஏறிக்கொண்டு வங்கியை நோக்கி விரைந்தார்கள். போகும் வழியில் அந்தச் சகோதரிகள் அவர்களுக்குச் சாட்சிகொடுத்தார்கள்; அதோடு, அவர்களிடம் மரியாதை குறையாமல் பேசினார்கள். கைத்துப்பாக்கி வைத்திருந்த திருடனிடம் அதை இப்போது கீழே வைக்கும்படி அந்த அம்மா சொன்னார்; அவர் சொன்னபடி அவன் செய்ததைப் பார்த்ததும் அவருக்கு ஆச்சரியம். அதுமட்டுமின்றி, அவர் பதட்டப்படாமல் இருந்தது தன் மனதைக் கவர்ந்ததாகவும் அவன் சொன்னான். அவர்கள் வயதில் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்றும், ஆனால் அவனுடைய எதிர்காலம் ஒளிமயமாக இருக்குமென்றும் அவர் சொன்னார். அவர்கள் இருவரும் தங்களை மாற்றிக்கொண்டு யெகோவாவின் வழியில் நடக்க ஆரம்பிக்கும்படி ஊக்குவித்தார். அப்படிச் செய்தால் அவர்களுடைய எதிர்காலமும் பிரகாசமாக இருக்குமென்று கூறினார். இருப்பினும், அவர்கள் எல்லாரும் வங்கியை நோக்கி சென்றுகொண்டிருந்தார்கள், அவருடைய மகள் கொஞ்சம் பணத்தை வங்கியிலிருந்து எடுத்தார். பிறகு அந்தத் திருடர்கள் நம் சகோதரிகளைக் குறுகலான நடைபாதை வரைக்கும் அழைத்துச் சென்று அங்கே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். ஒருவன் அவர்களைக் கட்டிப்போட நினைத்தான், கைத்துப்பாக்கி வைத்திருந்தவனோ அதற்குச் சம்மதிக்கவில்லை. அதிக பலம் படைத்த ஒருவர் அவர்களைப் பாதுகாப்பதாக அந்தச் சகோதரிகளிடம் அவன் சொன்னான். இதற்கு முன்பு அந்தத் திருடர்கள் அக்கம்பக்கத்திலுள்ளவர்களிடம் திருடியிருந்தார்கள், அவர்களைக் கட்டிப்போட்டிருந்தார்கள், அடித்திருந்தார்கள்.
ஓசியானியா
நாடுகளின் எண்ணிக்கை 30
மக்கள் தொகை 3,59,14,649
பிரஸ்தாபிகள் 94,323
பைபிள் படிப்புகள் 49,667
பாப்புவா-நியூ கினி
முன்னாள் போர்வீரரான டாம், போரின் கொடூரங்களையும் அவலங்களையும் நன்கு அறிந்திருந்தார். அவர் குடியிருக்கிற கிராமத்தில் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தார். போரில்லா உலகம் வரும் என்ற பைபிள் வாக்குறுதியை அறிந்ததும் அவர் நெகிழ்ந்துபோனார். சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்து, ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் செய்தார்; நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொள்வதற்கு அவர் தீர்மானித்திருந்தபோது அவருடைய விசுவாசத்திற்கு ஒரு சோதனை வந்தது. டாமின் அப்பா முன்னர் யுனைட்டட் சர்ச்சில் பாஸ்டராக இருந்திருந்தார்; இப்போது டாம் இதன் சேர்மனாக இருந்தார். இந்த சர்ச் ராஜ்ய மன்றத்திற்கு அடுத்திருந்தது. ராஜ்ய மன்றத்திற்குள் டாம் நுழைந்தபோது, அந்த சர்ச் அங்கத்தினர்கள், அதாவது அவருடைய நெருங்கிய நண்பர்கள், முன்பு அவருடன் பணியாற்றியவர்கள், பாஸ்டர் என எல்லாரும் அவரையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதை டாமும் கவனித்தார். அவர்களுடைய கண்களில்படாமல் ஒளிந்துகொள்ள விரும்பினார், பின்னர், ‘நான் ஏன் ஒளிந்து ஒளிந்து போக வேண்டும்? நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகப் போகிறேன் என்பதை ஜனங்களுக்குத் தெரிவிக்க இதுதான் சரியான சமயம்’ என நினைத்தார். ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு, சர்ச் பாஸ்டரை அணுகி, “நீங்கள் என்னை ராஜ்ய மன்றத்தில் பார்த்தீர்களா?” என்று கேட்டார்.
“ஆமாம், பார்த்தேன்” என அவர் சொன்னதும், இருவருமே சிரித்துவிட்டார்கள்.
பிறகு டாம் இவ்வாறு சொன்னார்: “நண்பரே, ஒரு பழைய ஹோட்டலில்தான் மிகச் சிறந்த உணவு கிடைப்பதாக நம்பிக்கொண்டிருந்தேன், ஆனால் அந்த உணவில் விஷம் கலந்திருப்பதை அறிந்துகொண்டேன். அதன் பிறகு, ஆரோக்கியமான, சத்தான உணவை வழங்குகிற ஒரு புதிய ஹோட்டலைக் கண்டுபிடித்தேன். அங்கு அருமையான உணவை ருசித்த பிறகு என்னால் எப்படி அந்தப் பழைய ஹோட்டலுக்கு மறுபடியும் போக முடியும்?”
டாம் சொல்ல வந்த விஷயம் அந்தப் பாஸ்டருக்குப் புரிந்துவிட்டது; அவர், “டாம், நான் விழித்தெழு! பத்திரிகையைத் தவறாமல் படிப்பவன், இதை யாரிடமும் சொல்லிவிடாதே” என்றார். சர்ச்சிலிருந்து விலகிக்கொள்வதாக டாம் எழுதிக்கொடுத்துவிட்டார், பல்வேறு பிரச்சினைகளின் மத்தியிலும் அவர் ஒப்புக்கொடுத்து யெகோவாவின் ஊழியராக ஆகியிருக்கிறார்.
சாலமன் தீவுகள்
அடிப்படை ஆஸ்லன் சைகை மொழி வகுப்பை யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. 2006, பிப்ரவரி 18-ஆம் தேதி, அந்த வகுப்பிலிருந்து 58 பிரஸ்தாபிகள் பட்டம் பெற்றார்கள். அது முதற்கொண்டு, காதுகேளாத பத்து பேர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், சபை கூட்டங்களுக்கும் வருகிறார்கள். அவர்களில் ஒருவருடைய பெயர் மோசஸ். “இவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும், அப்போது, பயங்கரமாக திட்டி விடுவார். அவரிடம் பேசி புரிய வைப்பது ரொம்ப கஷ்டம்” என அவரைப்பற்றி பக்கத்து வீட்டுக்காரர் சொல்லியிருந்தார். எனினும், இந்த வகுப்பில் பட்டம் பெற்ற யெகோவாவின் சாட்சியான அவருடைய உறவினர் ஒருவர் மோசஸுக்கு பைபிள் படிப்பு நடத்த முன்வந்தார்; அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு, ராஜ்ய மன்றத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முதல் தடவையாக மோசஸ் சென்றிருந்தார். ஏனோதானோவென்று உடுத்திக்கொண்டு, நீளமான முடியோடும், ஒழுங்காக வெட்டப்படாத பெரிய தாடியோடும் போயிருந்தார். அங்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பும், அவர் கற்றுக்கொண்ட சத்தியமும் அவருடைய மனதைத் தொட்டன. ஒரு நபர் தன்னுடைய உடைக்கும் தோற்றத்திற்கும் சரிவர கவனம் செலுத்துவதன்மூலம் கடவுளை மகிமைப்படுத்துகிறார் என்பதை பைபிளிலிருந்து அறிந்துகொண்டபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். மறுவாரம் அவர் ராஜ்ய மன்றத்திற்குப் போனபோது சகோதரர்களுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. அவர் நேர்த்தியாக முடியை வெட்டியிருந்தார், தாடியைச் சிரைத்திருந்தார், பளிச்சென உடுத்தியிருந்தார். தன் குணாம்சத்திலும் மாற்றங்களைச் செய்திருந்தார். அவருடைய அக்கம்பக்கத்தார் இவ்வாறு சொன்னார்கள்: “இப்போது அவர் பார்க்க பளிச்சென இருக்கிறார், எப்போதும் சிரித்த முகத்தோடிருக்கிறார்.” மோசஸ் ஆன்மீக ரீதியில் முன்னேறி வருகிறார், நற்செய்தியை அறிந்துகொள்ள காதுகேளாத மற்றவர்களுக்கு உதவுகிறார்.
டஹிடி
டஹிடியிலிருந்து 600 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் தன்னந்தனியாக, மாகேமோ என்ற சிறிய பவளத் தீவு இருக்கிறது; இதில் 720 பேர்தான் குடியிருக்கிறார்கள். ராவாஹிரி என்ற பெண் டஹிடியில் தன் சொந்தக்காரர்களுடன் தங்கியிருந்தபோது சத்தியத்தைப்பற்றி அறிந்துகொண்டார். அவர் மாகேமோக்குத் திரும்பி வந்த பிறகு, முதலில் தபால் மூலமும், அடுத்து ஃபேக்ஸ் மூலமும், கடைசியில் தொலைபேசி மூலமும்
சாட்சிகளுடன் பைபிள் படித்தார். மார்மன் மதத்தைவிட்டு விலகக்கூடாதென குடும்பத்தார் சிலர் அவருக்குத் தொந்தரவு கொடுத்தபோதிலும், ராவாஹிரி தன் திருமணத்தைச் சட்டப்படி பதிவுசெய்தார்; யெகோவாவின் தராதரங்களுக்கு இசைய வாழ்வதற்காக இன்னும் பல மாற்றங்களையும் செய்தார். இறுதியில், டஹிடியில் ஒரு சபையைச் சந்திக்கச் சென்றிருந்தபோது முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாகத் தகுதிபெற்றார். அந்தச் சபையிலுள்ள பிரஸ்தாபிகளிடமிருந்து இருவாரங்களுக்கு ஒருமுறை உற்சாகமூட்டும் கடிதங்களைத் தவறாமல் பெற்றுக்கொள்கிறார்.2006, ஜூன் மாதம் வட்டாரக் கண்காணியும் அவருடைய மனைவியும் ராவாஹிரியைச் சந்தித்தார்கள். வார இறுதிநாட்களில் தவறாமல் அவர் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வதாக வட்டார கண்காணி அறிக்கை செய்தார். ஊழியம் செய்வதற்கான பிராந்தியத்தின் வரைபடத்தை ராவாஹிரி வரைந்து வைத்திருக்கிறார், அநேக பைபிள் படிப்புகளையும் நடத்த ஆரம்பித்திருக்கிறார். தின்பண்டங்கள் விற்கும் தன் சிறிய பெட்டிக் கடைக்குப் பக்கத்தில் பத்திரிகைகளைக் காட்சிக்கு வைத்திருக்கிறார். புத்தகப் படிப்பும் நடத்துகிறார். அதில் அவருடைய கணவர் கலந்துகொள்கிறார்.
பிஜிகிலியட்டில் பயிற்சி பெற்ற மிஷனரியும் மூப்பருமான மேத்யூ, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படிக்கும் நான்கு பேருக்கு வாராவாரம் பைபிள் படிப்பு நடத்துகிறார். பல்வேறு சர்ச்சுகளைச் சேர்ந்த போதகர்கள், அந்தக் கல்லூரியில் படிக்கிற தங்கள் மதத்தவருக்காக மாலை வேளையில் தவறாமல் பிரசங்கம் செய்கிறார்கள். அந்த வளாகத்தில் காணப்படும் மோசமான நடத்தைப் போக்கை
சரிசெய்வதில் கல்லூரி அதிகாரிகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்தது.ஒருநாள் மாலை வேளையில், சுமார் 250 மாணவர்கள் கைகளில் பைபிளையும் நோட்டுப் புத்தகங்களையும் பேனாக்களையும் வைத்துக்கொண்டு அமைதியாக சிற்றுண்டி அறையில் உட்கார்ந்திருப்பதை மேத்யூ கவனித்தார். முக்கிய மதப் பிரிவு ஒன்றைச் சேர்ந்த பாதிரியார் மத ஆராதனை நடத்த வருவதை எதிர்பார்த்து அவர்கள் காத்திருந்தார்கள். அந்தச் சமயத்தில் அவர் வராததால் மாணவர்களிடம் பேசுவதற்கு மேத்யூ அழைக்கப்பட்டார். பொதுவாகப் பாட்டுப் பாடிய பிறகு, எரிநரகத்தில் பாவிகள் வதைக்கப்படுவதைப்பற்றியே சிலர் போதிப்பார்கள்; அதுபோல் இல்லாமல், மேத்யூ பைபிள் வசனங்களின் அடிப்படையில் ரொம்பவே வித்தியாசமான பேச்சைக் கொடுத்தார். முன்னேற்பாடின்றி கொடுக்கப்பட்ட இந்தப் பேச்சில், வாலிபப் பிராயத்தில் தங்கள் படைப்பாளரை நினைக்கும்படி மாணவர்களை மேத்யூ உற்சாகப்படுத்தினார். அதன் பிறகு, அவருடன் கைகுலுக்குவதற்கும் நன்றி தெரிவிப்பதற்கும் எல்லா மாணவர்களும் வரிசையாக நின்றார்கள். திடீரென்று கொடுக்கப்பட்ட இந்தப் பேச்சு அநேகருடைய ஆர்வத்தைத் தூண்டியது. அப்படிப்பட்டவர்களை மீண்டும் சந்திப்பதற்கான வாய்ப்பை மேத்யூ எதிர்நோக்கியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா
வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறபோது, வியாதிப்பட்டிருந்த ஒரு பெண்ணை இரண்டு சகோதரிகள் சந்தித்தார்கள். உயிரைக் குடிக்கும் புற்றுநோய் தனக்கு வந்திருப்பதாக அந்தப் பெண் சொன்னார்; தான் இறந்த பிறகு தன்னுடைய பொருள்களைப்பற்றி மற்றவர்கள் கவலைப்படாதிருப்பதற்காக அவற்றைக் கட்டி பெட்டியில் வைப்பதில் மும்முரமாய் ஈடுபட்டிருப்பதாக அவர் சொன்னார். அவருக்கென குடும்பத்தாரோ நண்பர்களோ யாரும் இல்லையென்றும், வாழ்க்கையைத் தன்னந்தனியாகவே ஓட்டியிருப்பதாகவும் அவர் சொன்னார். மதத்தைப் பொறுத்தவரை அவருடைய அனுபவங்கள் கசப்பானதாய் இருந்ததாகவும், கடவுள் தன்னைக் கைவிட்டுவிட்டதாக நினைப்பதாவும்கூட அவர் சொன்னார். பிற்பாடு, அந்தச் சகோதரிகளில் ஒருவர் அவருக்குக் கொடுப்பதற்காக பூங்கொத்து ஒன்றை வாங்கிக்கொண்டு சென்றார்; அந்தப் பெண் அப்போது வீட்டில் இல்லாததால் சிறிய கடிதத்துடன் அதை அவருடைய வீட்டு வாசலில் வைத்துவிட்டு வந்தார். அத்தகைய கனிவு காட்டியதற்காக அன்று பிற்பகல் அந்தப் பெண் ஃபோன் செய்து சகோதரிக்கு உள்ளார்ந்த நன்றி தெரிவித்தார். இதுவரை யாரும் தனக்கு அதுபோன்ற கனிவைக் காட்டியதோ பூங்கொத்தைக் கொடுத்ததோ இல்லையென அவர் சொன்னார்; சகோதரி சென்றிருந்த சமயத்தில் வீட்டில் இல்லாததற்காக அவர் வருத்தம் தெரிவித்தார். மீண்டும் சகோதரிகள் சந்திக்கச் சென்றபோது, இவர்களுடைய வருகைக்காக அவர் காத்திருந்தார். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அவருக்குக் கொடுத்து பைபிள் படிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
[பக்கம் 43-ன் படம்
மீஹோ
[பக்கம் 47-ன் படம்
நாங்கள் பால் டேங்கரில் அங்கு போய்ச் சேர்ந்தோம்
[பக்கம் 47-ன் படம்
கேட்டிவான்
[பக்கம் 48-ன் படம்
முன்னாள் சர்ச் அங்கத்தினர்கள் சிலர்
[பக்கம் 55-ன் படம்
ஓல்கா
[பக்கம் 55-ன் படம்
மரீ
[பக்கம் 57-ன் படம்
ஹூபர்ட், ஹார்ஹே, ஜான்
[பக்கம் 58-ன் படம்
பௌலூவும் அவருடைய குடும்பத்தாரும்
[[பக்கம் 63-ன் படங்கள்]
மாகேமோவிலுள்ள தின்பண்டங்கள் விற்கும் சிறிய பெட்டிக் கடையில் ராவாஹிரி
[பக்கம் 63-ன் படம்
மேத்யூ