கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்
கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்
‘நான் உயிரோடிருக்குமட்டும் யெகோவாவைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.’ (சங். 146:2) சங்கீதக்காரன் இப்போது உயிரோடிருந்தால், சரித்திரம் கண்டிராதளவுக்கு யெகோவாவின் புகழ் ஓங்கியிருப்பதைக் கண்டு எப்படிப் பூரித்துப்போயிருப்பார்! பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகம், கடவுளைப் பற்றிய சத்தியத்திற்காகத் தேடிக் கொண்டிருந்த அநேகரின் இருதயங்களைத் தொட்டு, அவரைத் துதிக்கத் தூண்டியிருக்கிறது.—அப். 17:27.
யெகோவாவுக்குச் சேரும் துதியின் சத்தத்தை அதிகரிப்பதற்காக, அநேக கிளை அலுவலகங்கள் மொழி வகுப்புகளை ஏற்பாடு செய்திருக்கின்றன. பிரஸ்தாபிகளும் பயனியர்களும் இன்னும் அதிகமானோருக்கு நற்செய்தியைச் சொல்வதற்காக இவ்வாறு ஏற்பாடு செய்திருக்கின்றன. ஒருவேளை, மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம் ஊழியத்தை விரிவுபடுத்துவதைப்பற்றி யோசிக்க நீங்களும் தூண்டப்பட்டிருக்கலாம்.
சுமார் 155 நாடுகளில் நடத்தப்பட்ட “மீட்பு விரைவில்!” மாவட்ட மாநாடுகளை விளம்பரப்படுத்துவதற்காக மூன்று வாரங்களுக்கு விசேஷ கைப்பிரதிகளை விநியோகித்தது யெகோவாவுக்குத் துதி சேர்த்த மற்றொரு அம்சமாகும். மாவட்ட மாநாடுகளை இப்படி விளம்பரப்படுத்தியது இதுவே முதல்முறையாகும். 99,000-க்கும் மேற்பட்ட சபைகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான ராஜ்ய பிரஸ்தாபிகள் இதில் கலந்துகொண்டார்கள். “பிரஸ்தாபிகளாவதற்கு புதியவர்களும் தூண்டப்பட்டார்கள்; செயலற்றவர்களாயிருந்த சிலரும்கூட மறுபடியும் ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதற்கு உற்சாகப்படுத்தப்பட்டார்கள்” என்று ஒரு மாநாட்டுக் குழு குறிப்பிட்டது. 35 ஆண்டுகளாய் செயலற்றவராக இருந்த ஒரு சகோதரருக்கு இந்தக் கைப்பிரதி கிடைத்தது; அதுமுதல் அவர் ஒரு கூட்டத்தையும் தவறவிடுவதில்லை! பல்வேறு கிளை அலுவலகங்களில் இருந்து வந்த அனுபவங்களில் சில:
பிரான்சு
ஒரு கத்தோலிக்கப் பெண்ணும் அவருடைய கணவரும் தங்கள் உறவினருடைய வீட்டிற்குச் சென்றிருந்தபோது, இந்தக் கைப்பிரதியைக் கண்டார்கள். அதிலிருந்த கேள்விகள் அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டியதால் தங்களுடைய மூன்று பிள்ளைகளோடு அந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள். அங்குச் சென்றபோது, அட்டென்டண்டு ஒருவர் அவர்களை அன்போடு வரவேற்று, பைபிள்களைக் கொடுத்து, ஒரு சாட்சி குடும்பத்தின் பக்கத்தில் உட்கார வைத்தார். அவர்களுடைய வீட்டிலிருந்து வெறுமனே 3 கிலோமீட்டர் தூரத்தில்தான் இந்தச் சாட்சிக் குடும்பத்தின் வீடு இருந்தது. இரு குடும்பத்தாரும் அன்றைய பொழுதை ஒன்றாகக் கழித்தார்கள். அதோடு, பைபிள் படிப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்வம் காட்டிய இந்தக் குடும்பத்தார், மாநாட்டிற்கு அடுத்த வாரத்தில் நடைபெற்ற வட்டாரக் கண்காணியின் விஜயத்தின்போது சபை கூட்டத்திலும் கலந்துகொண்டார்கள்.
இந்தியா
சுனிதா என்ற பிரபல பாடகி இசைநிகழ்ச்சிகளை நடத்துவதற்காக கனடாவிற்குச் சென்றிருந்தார். அங்கே அவரைச் சந்தித்த சாட்சிகள், பஞ்சாபி மொழியில் நடைபெற்ற கூட்டத்திற்கு வரும்படி அழைத்தனர். அவரும் ஒத்துக்கொண்டு, கூட்டத்திற்குச் சென்று அதை ரசித்தார். காரணம், பைபிளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அவரைக் கவர்ந்தது. மாநாட்டுக் கைப்பிரதி அவருக்குக் கொடுக்கப்பட்டது. மூன்று நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்த வார இறுதியில் நடைபெறவிருந்த அவருடைய கலைநிகழ்ச்சிகளை உடனடியாக ரத்து செய்தார். அதற்காக அவர் வருத்தப்படவில்லை. மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியின் முடிவில் “இதுதான் சத்தியம்” என்றார். இந்தியா திரும்பியதும் தன் மகன், அம்மா, சகோதரனின் மகன், தோழி ஆகியோருடன் உள்ளூர் ராஜ்ய மன்றத்திற்குச் சென்றார். முன்பு சென்றுகொண்டிருந்த சர்ச் பாஸ்டர்கள் அவரைச் சந்தித்தபோது,
தான் ஒரு யெகோவாவின் சாட்சியாய் ஆவதற்குத் தீர்மானித்திருப்பதாகச் சொன்னார். சொல்லப்போனால், அவர்களும்கூட ராஜ்யமன்றத்திற்கு வர வேண்டும் என்று அவர்களிடம் சொன்னார்.செர்பியா
பெல்கிரேட் நகரில் வசிக்கிறார் ஒரு சீனப் பெண்மணி. அவருடைய பெயர் மே லி என்று வைத்துக்கொள்வோம். அவர் 2006-ஆம் ஆண்டு, காவற்கோபுரம் பத்திரிகையை தன்னுடைய தாய்மொழியில் வாசிக்க ஆரம்பித்தார். ஜெர்மனியிலுள்ள லீப்ஜிக்கில் நடைபெற்ற சீன மாநாட்டிற்கான கைப்பிரதி அவருக்குக் கிடைத்தது. பெல்கிரேடில் இருந்து லீப்ஜிக் நகரம் சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதிலும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளத் தீர்மானித்தார். மூன்று நாட்களுக்கான விசா ஒன்றைப் பெற்றுக்கொண்டு, மியூனிச் நகருக்கு விமானத்திலும், அங்கிருந்து லீப்ஜிக்கிற்கு ரயிலிலும் பயணித்தார். இப்பயணத்திற்காக அவர் இரண்டு மாத சம்பளத்திற்கு இணையான தொகையை செலவிட வேண்டியிருந்தது. மாநாட்டு நிகழ்ச்சிகள் வாயிலாகவும், அதில் கலந்துகொண்ட மற்றவர்களுடன் பேசியதன் வாயிலாகவும் அவர் கற்றுக்கொண்ட காரியங்கள் அவருடைய மனதைத் தொட்டன. மே லி பெல்கிரேடிற்குத் திரும்பியதும், அவரும் அவருடைய அம்மாவும் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார்கள். சீன மொழியில் நடக்கும் புத்தகப் படிப்பிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
ஐக்கிய மாகாணங்கள்
“மாநாட்டின் மூன்று நாட்களிலுமே சாட்சிகளாயிராத ஆட்கள் கலந்துகொண்டதைப் பார்க்க முடிந்தது” என்று ஒரு மாநாட்டுக் குழு அறிக்கையிடுகிறது. உதாரணமாக, “ஒரு பெண்மணி தன் வாழ்க்கைக்கு வழி காட்டும்படி கடவுளிடம் ஜெபித்த மறுநாளே இந்தக் கைப்பிரதி அவருக்குக் கிடைத்திருக்கிறது. இரண்டு மணிநேரம் காரை ஓட்டிக்கொண்டு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மாநாட்டில் கலந்துகொண்டார். பைபிள் படிப்பையும் ஏற்றுக்கொண்டார்.” மற்றொரு சம்பவத்தில், “ஒருவர், தன் மகனிடம் மாநாட்டு அழைப்பிதழைக் கொடுத்த சகோதரர் பின்னாலேயே ஓடி வந்தார். எதற்காக வருகிறார் என்று அந்தச் சகோதரர் குழம்பிக்கொண்டிருக்கையில், பைபிளைப் பற்றி கூடுதலாகப் பேசுவதற்கு தன் வீட்டிற்கு வரும்படி அந்த மனிதர் அன்போடு கூப்பிட்டதும் சகோதரருக்குச் சந்தோஷமாகிவிட்டது. கையில் பைபிளை வைத்துக்கொண்டு, அவர் பல கேள்விகளைக் கேட்டார், படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது” என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.
கட்டுமான வேலை நடைபெற்றுவந்த ஓர் இடத்திலிருந்த நபரிடம் ஒரு சகோதரர் இந்தக் கைப்பிரதியைக் கொடுத்தார். “நான் இதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லலாமா?” என்று அந்த நபர் கேட்டார்.
“நிச்சயமாக!” என்றார் சகோதரர். சனிக்கிழமைதோறும் காலையில் அவர் ரேடியோவில் நிகழ்ச்சிகள் நடத்துவது நம் சகோதரருக்குத் தெரியாது. சொன்னபடியே, அந்த நபர் மற்றவர்களிடம் சொன்னார். ஆம், ரேடியோ நிகழ்ச்சியின்போது
அந்த அழைப்பிதழில் இருந்தே வாசித்தார். இதன் விளைவாக, அநேகர் அந்தக் கைப்பிரதியைப் பற்றி விசாரித்தார்கள்.பன்னிரண்டு வயது மார்கன் ஒரு துணைப் பயனியர். இந்த விசேஷ அளிப்பு துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன், ஊழியத்தில் ஒருவரைச் சந்தித்தாள். பைபிளைப் பற்றி அவர் அநேக கேள்விகளைக் கேட்டார். அவரை உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் நடக்கும் பொதுப் பேச்சிற்கு வருமாறு மார்கன் அழைத்தாள். அவரும் கூட்டத்தில் கலந்துகொண்டார். உறவினரின் சவ அடக்கத்தில் அவர் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால், கூட்டம் முடிந்த உடனேயே போய்விட்டார். விசேஷ அளிப்பு துவங்கியபோது, மார்கன் அவரிடம் கைப்பிரதியைக் கொடுத்தாள். “சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கண்டிப்பாக வருவேன், ஆனால், வெள்ளிக்கிழமை வேலைக்கு போக வேண்டுமே” என்றார். பிறகு, அந்தமாதிரி சூழ்நிலையில் சாட்சிகள் என்ன செய்வார்கள் என்று கேட்டார். “பெரும்பாலும், லீவு போட்டு விடுவார்கள், ஆனால் சிலசமயத்தில் அவர்கள் வேலையை விடவேண்டியிருந்திருக்கிறது” என்று மார்கன் பதிலளித்தாள்.
அடுத்தமுறை மார்கன் அவரைச் சந்தித்தபோது, அவர் தன் முதலாளியிடம் வெள்ளிக்கிழமை லீவு தரும்படி கேட்டதாகவும், கொடுக்காவிட்டால் வேலையை விட்டுவிடத் தான் தீர்மானித்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். அந்த முதலாளி அவரைப் போன்ற சிறந்த
பணியாளரைத் தான் இழக்க விரும்பவில்லையென்றும், அதனால் வெள்ளிக்கிழமை மட்டுமல்ல மாநாட்டுக்கு தயாராவதற்கு வியாழக்கிழமையும் லீவு எடுத்துக்கொள்ளும்படி சொல்லியிருக்கிறார்.அவர் மாநாட்டின் மூன்று நாட்களும் கலந்துகொண்டார். தனியாக அல்ல! அவருடைய குடும்ப அங்கத்தினர்கள் எட்டுப் பேர், அவருடைய நண்பர்கள் 12 பேரும் அவர்களுடைய குடும்பத்தாரும் என மொத்தமாக 35 பேர் மாநாட்டுக்கு வந்திருந்தனர். முன்னதாக, அவர் மார்கனிடம் தன்னுடன் சுமார் 30 பேர் வருவார்கள் என்பதாகச் சொல்லியிருந்தார். “அத்தனை பேருக்கு நான் சீட் போட முடியாதே” என்று அவள் பதிலளித்தாள்.
“பரவாயில்லை, எந்த இடம் கிடைத்தாலும் நாங்கள் உட்கார்ந்து கொள்கிறோம்” என்று அவர் கூறினார். ஆனால், எல்லாருக்கும் உட்கார வசதியான இடம் கிடைத்தது.
“இப்புத்தகம் . . . இயேசுவைப்போல போதிக்கிறது”
பைபிள் படிப்பு நடத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகம் பிரசங்க வேலைக்கு ரொம்பவே கைகொடுக்கிறது என்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. “அது கண்களைத் திறக்கிறது, இதயத்திற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது” என்று ஒரு பைபிள் மாணாக்கர் கூறினார். “இப்புத்தகம் கவனத்தைக் கவர்வதற்குக் காரணம், இது இயேசுவைப்போல போதிக்கிறது. வளவளவென்று இல்லாமல், நேரடியாகவும் தெளிவாகவும் விஷயத்தைச் சொல்கிறது. அதேசமயத்தில் இதயத்தைத் தொடுகிறது” என்று ஒரு மாவட்டக் கண்காணி கூறினார். பின்வரும் அனுபவங்களைக் கவனியுங்கள்:
ஆஸ்திரேலியா
உடல்நலம் சரியில்லாதிருந்த ஒரு பெண்மணியின் வீட்டில் ஒரு சகோதரர் ரிப்பேர் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, ராஜ்ய நம்பிக்கையைப் பற்றி அவரிடம் சொன்னார். சில நாட்களுக்குப் பிறகு, ஒரு பயனியர் சகோதரியை அழைத்துக்கொண்டு அங்கே சென்றார். கடைசி நாட்களைப்பற்றி அந்தப் பெண்மணி கேள்வி கேட்டார். சாட்சிகள் இருவரும் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் “நாம் ‘கடைசி நாட்களில்’ வாழ்கிறோமா?” என்ற தலைப்பிலுள்ள 9-வது அதிகாரத்தைக் காட்டி, அதிலுள்ள தகவலை விளக்கினார்கள். பைபிளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களைக் கண்டு அந்தப் பெண்மணி அசந்துபோனார். “என்னுடைய சர்ச் என்னை இருட்டில் வைத்திருந்திருக்கிறது” என்றார்.
அந்தச் சகோதரர் பின்வருமாறு எழுதினார்: “மறுபடியும் சென்றபோது, ‘கடவுளைப் பற்றிய உண்மைகள் யாவை?’ என்ற முதல் அதிகாரத்தைப் படித்தோம். அதோடு, கடவுளுடைய பெயர் ஏன் சில பைபிள்களிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்கும் பிற்சேர்க்கையையும் படித்தோம். அந்தப் பெண்மணி தன்னுடைய பைபிளின் முகவுரையில் ‘யெகோவா’ என்பதற்குப்
பதிலாக ‘கர்த்தர்’ என்று மாற்றீடு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டதை வாசித்தவுடன் கோபமடைந்தார். ஏனெனில், அது திருத்தமான பைபிள் மொழிபெயர்ப்பு என்பதாக அவருக்குச் சொல்லப்பட்டிருந்தது. அதன்பிறகு, கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார்.பெல்ஜியம்
இங்ரிட் என்ற சகோதரி ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணைச் சந்தித்தார். அப்பெண்ணுக்கு யெகோவாவின் சாட்சிகள் என்றாலே பிடிக்காது. இங்ரிட் அவரிடம் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அன்போடு காண்பித்தார். அதன்பின் அந்தப் பெண்ணின் மனப்பான்மை ஓரளவு மாறியது. ஏனெனில், அவர் பைபிளைப் புரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார். பைபிள் படிப்பிற்கும்கூட ஒத்துக்கொண்டார். ஆனால், படிப்பின்போது எல்லா வசனங்களையும் வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் தற்போது கூட்டங்களில் கலந்துகொள்கிறார், அடிக்கடி பதில் சொல்கிறார், ராஜ்ய பிரஸ்தாபியாய் ஆகவும் விரும்புகிறார்.
பிரேசில்
பௌலூ என்பவர் டீனேஜ் பருவத்தின் ஆரம்பத்தில் இருந்தபோது சாட்சிகள் அவருக்கு பைபிள் படிப்பு நடத்தியிருந்தார்கள். வருத்தகரமாக, அவருடைய 16-வது வயதில், அவருடைய குடும்பம் பிளவுற்றுப் பிரிந்துவிட்டது. தன்னுடைய அம்மாவை ஆதரிப்பதற்காக, அவர் சம்பா இசைக் குழுவில் சேர்ந்தார். சீக்கிரத்தில் ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு, குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். என்றாலும், சத்தியம் ஓரளவுக்கு அவருடைய மனதில் இருந்தது. உதாரணமாக, ஊடூ [பில்லிசூனிய] மையத்தில் இசைக்கருவியை வாசிக்க வேண்டியிருக்கையில் அவருடைய மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஏனெனில், அது ஆவியுலகத்தோடு தொடர்புடையது என்பதை அவர் அறிந்திருந்தார். தன்னுடைய வாழ்க்கையில் எந்தவொரு நோக்கமும் இல்லாதிருந்ததை அவர் உணர்ந்தார். 2005-ல் ஓர் இளம் சகோதரர் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை பௌலூவுக்குக் காண்பித்தபோது, அவருடைய ஆர்வத்தீ மறுபடியும் பற்றிக்கொண்டது. அவர் மீண்டும் படிக்க ஆரம்பித்தார். சீக்கிரத்தில் அந்த இசைக் குழுவிலிருந்து விலகினார். இப்போது கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.
பிரிட்டன்
மெர்லின் என்ற சகோதரி, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் மெலனி என்ற இளம் தாயைச் சந்தித்தார். அவருக்கு பைபிளைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. அவரிடம் ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்துவிட்டு, மறுபடியும் வந்து சந்திப்பதாகச் சொன்னார். மெலனியைச் சந்திப்பதற்கு பலமுறை முயன்றார். கடைசியில் ஒருநாள் அவரை வீட்டில் சந்திக்க முடிந்தது. “உடனடியாக பைபிள் கற்பிக்கிறது
புத்தகத்திலிருந்து படிப்பை ஆரம்பித்தேன். இதனால் முன்னேறுகிற ஒரு பைபிள் படிப்பை நடத்த முடிந்தது. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு சற்று முன்பு, கிறிஸ்மஸ் மரத்தை தான் வைப்பது அதுவே கடைசி முறையாக இருக்கும் என்று சொல்லி, மெலனி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நான் நடத்தும் முன்பாகவே அந்தப் புத்தகத்தை வாசித்து, கிறிஸ்மஸைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டார்” என்று மெர்லின் சொல்கிறார்.கொலம்பியா
மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கான்ஸ்வெலோ தன்னுடைய மேற்பார்வையாளரிடம் லீவு கேட்டு, அனுமதியும் பெற்றாள். அவள் வேலைக்குத் திரும்பியதும் மாநாட்டைப்பற்றி அந்த மேற்பார்வையாளர் விசாரித்தார். உற்சாகமான கலந்துரையாடலுக்கு அது வழிவகுத்தது. கான்ஸ்வெலோ அவரிடம் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் காட்டியபோது, தனக்கு அது இரவலாகக் கிடைக்குமா என்று அந்தப் பெண் கேட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அதைத் திருப்பிக் கொடுக்கையில், அதை வாசிப்பது சுவாரஸ்யமாக இருந்ததாக அவர் சொன்னார். “அந்தப் புத்தகம் வெறுமனே வாசிப்பதற்கு அல்ல, ஆழமாகப் படிப்பதற்கு” என்று கான்ஸ்வெலோ சொன்னாள். பிறகு, பைபிள் படிப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதையும் விளக்கினாள். “நான் இந்தப் புத்தகத்திலிருந்து படிக்கலாமா” என்றார் அந்த மேற்பார்வையாளர். அதன்பிறகு படிப்பு ஆரம்பிக்கப்பட்டது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? விரைவிலேயே அவர் தன் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் சாட்சிகொடுக்க ஆரம்பித்தார். கிறிஸ்தவ கூட்டங்களிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தார். சில சமயங்களில், தன்னுடைய மகனையும் பாட்டியையும் கூட்டங்களுக்கு அழைத்துக்கொண்டு செல்கிறார்.
கயானா
ஜோசப் என்ற ஒழுங்கான பயனியர், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக்
கொண்டு ஒரு நபருக்குப் படிப்பு எடுக்க ஆரம்பித்தார். அந்நபர், பல ஆண்டுகளுக்கு முன்பு தலைநகரான ஜார்ஜ்டவுனில் சாட்சிகளைச் சந்தித்திருந்தார். படிப்பு நடத்துவதற்கு ஜோசப் முதன்முறை சென்றிருந்தபோது, அந்த நபருடன், அவருடைய வளர்ந்த மகன்கள் இருவரும், அவர்களுடைய மனைவிகளும் கூட அவரை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அவர்களும் அப்புத்தகத்தின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள். அடுத்த வாரம், தன்னுடைய பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை உள்ளூர் பள்ளி ஆசிரியர் இரவல் வாங்கிப் படித்ததாக அந்த நபர் சொன்னார். “இதில் சத்தியம் இருக்கிறது” என்று அந்த ஆசிரியர் சொல்லியிருக்கிறார். அந்த ஆசிரியரும் படிப்பில் கலந்துகொண்டார். இதற்கிடையே, படிப்பு நடப்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர் தானும் அதில் கலந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னார். அச்சமயத்தில், அவர்கள் அனைவரையும் நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொள்ளும்படி ஜோசப் அழைத்தார். ஜோசப் முதலில் படிப்பு எடுத்த அந்நபருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போனது. ஆனால், அவருடைய குடும்பத்தார் அதில் கலந்துகொண்டார்கள். அந்த ஆசிரியரும் அவருடைய குடும்பத்தாரும்கூட அதில் கலந்துகொண்டார்கள். அவர்கள் அனைவரும் சத்தியத்தில் நன்றாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.போலந்து
லூட்ஸியான் என்பவர் தெரு ஊழியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் யான் என்ற 50 வயதுக்காரரைச் சந்தித்தார். இருவரும் பள்ளி நண்பர்கள், ஆனால் ஒருவரையொருவர் சந்தித்துப் பல வருடங்களாகியிருந்தது. யானிடம் பேசியபோது, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருக்கிற சில விஷயங்களையும் லூட்ஸியான் குறிப்பிட்டார். யான்,
தன்னுடைய மனைவி இறந்துவிட்டதாகவும் அதன்பிறகு தான் புகைபிடிக்கவும் குடிக்கவும் தொடங்கியதாகவும் பேச்சுவாக்கில் குறிப்பிட்டார். பிறகு நடந்ததை லூட்ஸியான் இவ்வாறு கூறினார்: “நானும் என்னுடைய நண்பரும் சில நாட்களுக்குப் பிறகு யானைச் சந்திக்கச் சென்றோம். அவர் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அவர் கேட்டுக்கொண்டபடியே, நாங்கள் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து உடனடியாகப் படிக்க ஆரம்பித்தோம்.” சத்தியம் அவருடைய இருதயத்தை எட்டுகிறது. தன்னுடைய கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட முயற்சி செய்து வருகிறார், அநாகரிகமாகப் பேசுவதை நிறுத்தவும் முயன்று வருகிறார்.ஸ்பெயின்
இரத்தவியல் வல்லுநராய் இருந்த ஒரு மருத்துவர், மனச்சோர்வால் கஷ்டப்படும் ஒரு பெண்ணிடம் பைபிள் படிக்கும்படி ஏன் கூறினார்? மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழு ஒன்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர் இந்த மருத்துவரைச் சந்தித்து பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்திருந்தார்கள். தீராத வியாதியின் காரணமாக அவரும் அவரிடம் சிகிச்சை பெறவந்த ஒரு பெண்ணும் மனச்சோர்வால் கஷ்டப்பட்டார்கள். பைபிள் கற்பிக்கிறது புத்தகம் அவரைக் கவர்ந்தது. ஆகவே, அந்தப் பெண்ணிடம் அதைக் காண்பித்தார். சாட்சிகளோடு படித்தால் தாங்கள் இருவரும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையான மனநிலையை வளர்த்துக்கொள்ள முடியுமென உறுதியளித்தார். ஓரிரு நாட்களுக்குள், தெரு ஊழியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பயனியர் சகோதரி அந்தப் பெண்ணைச் சந்தித்தார்; அந்தப் பெண் பைபிள் படிப்பிற்கு ஒப்புக்கொண்டார். அந்த இரத்தவியல் வல்லுநரும் படிக்க ஆரம்பித்தார். இப்போது கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.
ஜாம்பியா
கோலியாத் என்ற கிராமத் தலைவருக்கு இரண்டு மனைவிகள், பத்துப் பிள்ளைகள். கோலியாத் என்ற பெயருக்கேற்ப அவர் உருவத்தில் பெரிய ஆளாக இல்லாவிட்டாலும், அவரும் அவருடைய குடும்பத்தாரும் பெரிய மாற்றங்களைச் செய்து ஆன்மீக ரீதியில் முன்னேறி வருகிறார்கள். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் படித்த உடனேயே அவர் மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தார். ஜனவரி 2006-ல் அவரும் அவருடைய குடும்பத்தாரும் கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பிப்ரவரி மாதத்தில் தன்னுடைய இரண்டாவது மனைவியை விட்டுப் பிரிந்தார். முதல் மனைவியுடனான உறவை சட்டப்பூர்வமாக பதிவுசெய்தார். (மத். 19:4-6; 1 தீ. 3:2) மார்ச் மாதத்தில் கிராமத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஏப்ரலில் அவரும் அவருடைய மனைவி எஸ்தரும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆனார்கள். யெகோவாவைச் சேவிக்க அவர்கள் தீர்மானித்தது, பேய்களுக்கு வெறுப்பூட்டியது. இதனால் அவை எஸ்தருக்குத் தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தன. என்றபோதிலும், யாக்கோபு 4:7-ல் சொல்லப்பட்டவிதமாக எஸ்தர் அவற்றை எதிர்த்து நின்றார். விளைவு? “இப்போது, என் கணவருடன் நானும் பேய்களிடமிருந்து விடுபட்ட ஒரு சுதந்திர மனுஷி” என்கிறார் எஸ்தர்.
மற்றொரு மொழியில் பிரசங்கிக்க முயலுதல்
பல நாடுகளில் வேற்று மொழி பேசும் குடியேறிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இவர்களில் பலர் பிரசங்க வேலைக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் இடங்களைச் சேர்ந்தவர்கள். இதனால், “பெரிதும் அநுகூலமுமான கதவு . . . திறக்கப்பட்டிருக்கிறது.” (1 கொரி. 16:9) வேறொரு மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம் பல சகோதர சகோதரிகள் இந்த வாசலின் வழியே நுழைந்திருக்கிறார்கள். இதுதவிர, சில நாடுகளில் உள்ள குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோரின் தாய்மொழி அந்நாடுகளில் பரவலாக பேசப்படாத மொழியாக இருக்கிறது. ராஜ்யத்தை அறிவிப்போர் இம்மொழிகளையும்கூட கற்றுவருகிறார்கள், அபரிமிதமான பலன்களையும் பெறுகிறார்கள்.
இப்படிப்பட்ட பிராந்தியங்களில் வேலையை முன்னேற்றுவிப்பதற்காக, பல கிளை அலுவலகங்கள் மொழிப் பயிற்சி வகுப்புகளை ஏற்பாடு செய்திருக்கின்றன. மொழியை சீக்கிரம் கற்றுக்கொள்ள உதவும் வகையில் இவை தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதிலுள்ள பாடங்கள் ஊழியத்தில் ஒருவர் சந்திக்கும் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு அவர்களைத் தயார்படுத்துகின்றன. “நாம் எந்த மொழியைப் படிக்கிறோமோ அதில் மூழ்கிவிட இந்த வகுப்புகள் உதவுகின்றன” என்று அல்பேனியன் மொழியைக் கற்றுவரும் எலிசா கூறுகிறார்.
பெல்ஜியம்
பத்து மொழிகளில் நடத்தப்பட்ட 17 வகுப்புகளில் மொத்தமாக 300-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் கலந்துகொண்டார்கள். 9 வயது முதல் 71 வயது வரையாக பலதரப்பட்ட பிரஸ்தாபிகள் கலந்துகொண்டதாக கிளை அலுவலகம் கூறுகிறது. “துருக்கிஷ் மொழியைக் கற்றுக்கொண்டு, மக்களை நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன்” என்று இனோரா என்பவர் கூறினார். ஆனலஸ் என்ற பெண் சைனீஸ் மொழியைக் கற்று வருகிறாள். தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர் அவளைப் பேட்டி கண்டார். ஏனெனில், வாழ்க்கையில் எதையாவது புதிதாகச் செய்கிற ஒருவரைப் பற்றிய கதையை ஒளிபரப்ப அவர் விரும்பினார். சந்தேகமின்றி, ஆனலஸ் தான் சைனீஸ் மொழியைக் கற்றுக்கொள்வதற்கான காரணத்தைத் தெரிவித்தாள். ஒரு வருடத்திற்குப் பிறகு, அந்த நிருபர் அவளைச் சந்தித்தபோது, ஊழியத்தில் தனக்குக் கிடைத்த நல்ல பலன்களை அவரிடம் கூறினாள். அதைக் கேட்டதும் அந்த நிருபர் கவரப்பட்டார் என்பதில் சந்தேகமேயில்லை. ஆகவே, அந்நிகழ்ச்சி பெரும்பாலான மக்கள் டிவி பார்க்கும் நேரத்தில் தேசிய சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அதில் ஆனலஸின் பேட்டியும் இடம்பெற்றது. அதோடு, அவள் பஸ் ஸ்டாப்பில் சைனீஸ் மொழியில் சாட்சி கொடுக்கும் காட்சியும் இடம்பெற்றது.
நெதர்லாந்து
“வேற்று மொழியினருக்கு பிரசங்கிக்க அதிகமானோரைத் தயார்படுத்த இந்த வகுப்புகள் உதவியிருப்பதோடு, சபைகளில் முன்னின்று
செயல்படவும் சகோதரர்களுக்கு உதவியிருக்கின்றன” என்று கிளை அலுவலகம் குறிப்பிடுகிறது. புதிதாய் மலர்ந்துவரும் ருமேனியன் பிராந்தியத்தில் முன்நின்று செயல்படும் சகோதரர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது. அவ்வப்போது கிளை அலுவலகம் கூட்டங்களை ஏற்பாடு செய்தது. முன்னின்று நடத்த ஒரு சகோதரரால் மட்டுமே முடிந்தது, அவருடைய உடல்நிலையும் மோசமாக இருந்தது. இப்போது இந்த வகுப்புகளின் உதவியால் தகுதியுள்ள கூடுதலான சகோதரர்களால் முன்னின்று செயல்பட முடிந்திருக்கிறது. ஒரு சகோதரர் வாராந்தர புத்தகப் படிப்பை நடத்துகிறார், மற்றொருவர் காவற்கோபுர படிப்பை நடத்துகிறார், இன்னொருவர் டச்சு மொழியில் பேச்சுகள் கொடுக்கப்படுகையில் மொழிபெயர்க்க ஆரம்பித்துவிட்டார்.ஸ்பெயின்
2003 முதற்கொண்டு, பத்து மொழிகளில் 48 வகுப்புகளை கிளை அலுவலகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதன் விளைவாக பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து, கிட்டத்தட்ட 50,000-த்தைத் தொட்டிருக்கிறது. விசேஷ பயனியர்களான ஹ்வான், மாரீ பாஸ் தம்பதியரை ஒரு ருமேனிய குடும்பத்தார் தங்கள் வீட்டிற்குள் வரும்படி கேட்டுக்கொண்டார்கள். சீக்கிரத்திலேயே, அவர்கள் சொல்வதைக் கேட்க 19 வயது மார்யோ உட்பட 16 பேர் கூடிவிட்டார்கள். மார்யோ அதிக உன்னிப்பாகக் கேட்டான். அவனுக்கு ஸ்பானிஷ் மொழி தெரியாது, அந்த பயனியர்களுக்கு ருமேனிய மொழி தெரியாது. இருந்தபோதிலும் தன்னுடைய மொழியில் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அவன் பெற்றுக்கொண்டான். அதற்கடுத்த வாரத்தில், தனக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டான். விசேஷ மாநாட்டு தினத்திலும் கலந்துகொண்டான், அவ்வளவாக புரியாதபோதிலும். ஒருசில வாரங்களுக்குள், சபை கூட்டங்கள் எல்லாவற்றிலும் கலந்துகொண்டு, ஸ்பானிஷ் மொழியில் சின்னச் சின்ன பதில்கள் சொல்ல ஆரம்பித்தான். தன்னுடைய தோற்றத்திலும் நல்ல மாற்றங்களைச் செய்தான். புதிதாகக் கற்றுக்கொண்ட நம்பிக்கைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஆரம்பித்தான். தற்போது ஒரு ருமேனிய தம்பதியருக்கு பைபிள் படிப்பு நடத்துகிறான். அவர்களும் நல்லவிதமாக முன்னேறி வருகிறார்கள்.
இதற்கிடையே, ஹ்வானும், மாரீயும் ருமேனிய மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். சீக்கிரத்தில் அம்மொழியில் 30 படிப்புகளை அவர்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! ருமேனிய மொழியில் ஒரு புத்தகப் படிப்பையும்கூட ஹ்வான் நடத்துகிறார். இந்தப் படிப்பு முடிந்தபிறகு, பிரஸ்தாபிகள் பத்து பேர் ருமேனிய மொழிப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்கிறார்கள். நடத்துவது வேறு யாருமல்ல, பைபிள் படிப்பிற்கு முதலில் ஒத்துக்கொண்ட மார்யோவே தான்!
ஐக்கிய மாகாணங்கள்
5 கோடிக்கும் அதிகமானோர் தங்கள் வீட்டில் ஆங்கிலம் அல்லாத வேறொரு மொழியைப் பேசுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளில்,
சுமார் 2,54,000 பிரஸ்தாபிகள் 3,052 ஸ்பானிஷ் மொழி சபைகளிலும், 53 தொகுதிகளிலும் சேவை செய்கிறார்கள். இது தவிர, 26,000 பிரஸ்தாபிகள் ஸ்பானிஷ் மொழியல்லாத வேறொரு மொழி பேசும் 690 சபைகளிலும் தொகுதிகளிலும் சேவை செய்கிறார்கள். பலதரப்பட்ட மொழி பேசும் இந்த மாபெரும் பிராந்தியத்தில் பிரசங்க வேலையைத் தீவிரப்படுத்துவதற்காக, 29 மொழிகளில் 450 வகுப்புகளை கிளை அலுவலகம் ஏற்பாடு செய்திருக்கிறது. “எங்கள் வட்டாரத்தில் கடந்த இரு ஆண்டுகளில் புதிதாக நான்கு சபைகள் உருவாகியிருக்கின்றன. இவற்றில் மூன்று உருவாவதற்கு பிரெஞ்சு மொழிப் பயிற்சி வகுப்புகளே காரணம்” என்று ஒரு வட்டாரக் கண்காணி கூறுகிறார்.“எங்களுடைய கனவு நனவாகியிருக்கிறது” என்கிறார் ஸ்பானிஷ் மொழி கற்றுக்கொண்ட ஒரு சகோதரர். “மிஷனரிகளாக சேவை செய்ய வேண்டும் என்று பல வருடங்களாக நானும் என் மனைவியும் ஆசைப்பட்டோம். ஆனால், எங்களுடைய இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருந்தது. இப்போது பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள், நானும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். ஆகவே, மூன்று மாதங்களுக்கு முன்னால், நானும் என் மனைவியும் ஒரு ஸ்பானிஷ் சபைக்கு மாறிச் சென்றோம். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் எங்களுக்கு பேச்சு நியமிப்புகள்கூட கிடைத்திருக்கின்றன. நாங்கள் அநேக மறுசந்திப்புகளையும் கிட்டத்தட்ட ஐந்து பைபிள் படிப்புகளையும் நடத்துகிறோம். எங்களுடைய வயது 67, 64 என இருந்தாலும், வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ள வயது ஒரு தடையே அல்ல என்பதைத் தெரிந்துகொண்டோம்.”
உங்களுடைய பிராந்தியத்தில் புதிய சீஷர்கள் அநேகரை உருவாக்குவது கடினமாக இருந்தால், அதோடு, உங்கள் சூழ்நிலையும் அனுமதித்தால் வேறொரு மொழியைக் கற்றுக்கொண்டு அது பேசப்படும் பிராந்தியத்திற்குச் செல்வதைப் பற்றி ஜெபத்தோடு யோசிக்கலாமே? அப்படிச் செய்வது அதிக பலனளிக்கலாம். அதோடு, உங்கள் ஊழியத்தை ஆர்வத்திற்குரிய ஒன்றாகவும் ஆக்கலாம்.
ஜெர்மனி
மொழி வகுப்புகள் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்நாட்டில் தொடங்கப்பட்டுவிட்டன. அல்பேனியன், வியட்னாமீஸ் உட்பட ஒன்பது மொழிகளில், மொத்தமாக 1000-த்திற்கும் அதிகமானோர் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். “பல்கலைக்கழகத்தில் படித்த கோர்ஸை விட இந்த வகுப்பு மிகச்சிறந்ததாக இருக்கிறது” என்று ஒரு சகோதரி கூறினார். மற்ற நாடுகளைச் சேர்ந்த
மக்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதையும் இந்த வகுப்பின்மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். இதனால், சாட்சி கொடுக்கும்போது மக்களுடைய மனதைச் சென்றெட்டுவது அதிக எளிதாய் இருக்கிறது.பௌலா என்ற 82 வயது சகோதரி, வியட்னாமீஸ் மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார், கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக 150 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறார். “மொழியைக் கற்றுக்கொள்ளும் திறமை எனக்கு இல்லை. ஆனாலும் இவ்வளவு பெரிய சந்தோஷத்தை கொடுத்ததற்காக யெகோவாவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.” பௌலா ஒரு வியட்னாமீஸ் குடும்பத்திற்கு பைபிள் படிப்பு நடத்தினார். அந்தக் குடும்பத்திலிருந்த கணவர் முதலில் சத்தியத்திடம் ஆர்வம் காட்டினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவியும் படிக்க ஆரம்பித்தார். இருவரும் இப்போது முழுக்காட்டுதல் பெற்றுவிட்டார்கள்.
அந்த தம்பதியரும் அவர்களது மகளும் தங்கள் தாய்நாட்டில் யெகோவாவைச் சேவிக்க வேண்டுமென்று விரும்பினர். அந்தத் தம்பதியர் முழுக்காட்டுதல் பெற்றபிறகு, அந்த ஆசை நிறைவேறியது. கூட்டங்கள் நடத்துமளவுக்கு இடவசதியுள்ள ஒரு வீட்டை அவர்கள் கட்டினார்கள். அந்தக் கணவர் சபை மூப்பராகவும் துணைப் பயனியராகவும் சேவை செய்கிறார். மனைவி ஒழுங்கான பயனியராக இருக்கிறார். மகளுக்கு அப்பாவே முழுக்காட்டுதல் கொடுத்ததாக அந்தக் குடும்பத்தார் பௌலாவுக்கு கடிதம் எழுதினார்கள். படித்ததும் பௌலா பூரித்துப்போனார். பௌலாவுக்கு அவர்களுடைய மகள் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தாள்: “அன்புள்ள ‘பாட்டி,’ உங்களைப் பார்க்காமல் இருக்கவே முடியவில்லை. அடிக்கடி உங்கள் ஞாபகமாகவே இருக்கிறது. நீங்கள் எப்போதுமே என்னுடைய பௌலா பாட்டிதான். நான் உங்களை ரொம்ப நேசிக்கிறேன்.” வயதான காலத்தில், கஷ்டமான மொழியைக் கற்றுக்கொண்ட நம்முடைய அருமைச் சகோதரிக்கு உள்ளத்தைத் தொடும் எப்பேர்ப்பட்ட அனுபவமாக இது இருந்தது!
கனடா
2002-ஆம் ஆண்டு முதற்கொண்டு, பத்து நகரங்களில் நடத்தப்பட்ட 31 மொழிப் பயிற்சி வகுப்புகளில் மொத்தமாக 554 மாணவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். மூப்பராகச் சேவை செய்யும் பால் என்பவரின் இடுப்புக்கு கீழுள்ள பகுதிகள் செயலிழந்துவிட்டன. அவர் மான்டரின் மொழியைக் கற்றுவந்தார். அவருக்குப் பகுதி நேர நர்ஸாக பணிபுரிந்த லிண்டா சீனாவைச் சேர்ந்தவர். அவருடைய சர்ச், சாட்சிகளைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்லியிருந்ததால், ராஜ்ய நற்செய்தியைக் கேட்க லிண்டா விரும்பவில்லை. ஒருநாள், மான்டரின் மொழியில் கொடுக்கப்பட்ட பொதுப் பேச்சைக் கேட்பதற்காக தன்னை ராஜ்ய மன்றத்திற்கு கூட்டிச் செல்லுமாறு பால் அவரிடம் கேட்டார். அவரைக் கூட்டிக்கொண்டு போனாலும், அந்த நர்ஸ் அங்கிருந்த யாரோடும் பேசிப் பழகவில்லை. ஆர்வமும்
காட்டவில்லை. சீக்கிரத்தில், பாலைக் கூட்டிக்கொண்டு புத்தகப் படிப்பிற்குச் சென்றார். ஒற்றைத் தாயான லிண்டா இந்தச் சமயம் உன்னிப்பாக கேட்டார். காரணம், அந்தப் படிப்பு குடும்ப வாழ்க்கையைப் பற்றியது. அதன்பிறகு, ஒரு பயனியர் சகோதரி அவரிடம் பைபிள் படிப்பைப் பற்றி சொன்னபோது, லிண்டா படிக்க ஒப்புக்கொண்டார். அவர் ஆன்மீக ரீதியில் விறுவிறுவென முன்னேறினார். தற்போது அவரும் நம்முடைய சகோதரிகளில் ஒருவர்.கனடாவிலுள்ள அநேக பழங்குடியினர் தங்களுடைய மொழியிலேயே பேசுகிறார்கள். கார்மா என்ற பயனியர் சகோதரி, பிளாக்ஃபுட் இந்தியர் என்ற அமெரிக்க இந்திய பழங்குடி இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட பிராந்தியத்தில் தன் பெற்றோருடன் வசிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னால், பிளாக்ஃபுட் இனத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கார்மா சாட்சி கொடுத்தார். “ஆங்கிலத்தில் சாட்சி கொடுக்க நான் முயன்றபோது, அதைக் கேட்க அவர் மறுத்துவிட்டார்” என்று கார்மா கூறுகிறார். அதோடு, “நான் வெள்ளைக்காரரின் மதத்தைச் சேர்ந்தவள் என்றும், பைபிள் வெள்ளைக்காரரின் புத்தகம் என்றும் அவர் கூறினார். ‘எனக்கு மட்டும் பிளாக்ஃபுட் இனத்தவரின் மொழியையும் கலாச்சாரத்தையும் பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தால், ஒருவேளை நான் சொல்வதை அவர் கேட்டிருப்பார்’” என்று கார்மா யோசித்தார். அம்மொழியைக் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். அம்மொழியைக் கற்றுக்கொண்ட பிற்பாடு, நடந்த வாராந்தர பிளாக்ஃபுட் மொழிப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட 23 பிரஸ்தாபிகளுக்கு அவர் உதவினார்.
இந்த வகுப்பில் கலந்துகொண்ட ஒரு சகோதரி ஒரு பிளாக்ஃபுட் தம்பதியருக்கு சாட்சி கொடுத்தார். நோய்வாய்ப்பட்டிருந்த தங்கள் மகனைப் பார்ப்பதற்காக அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். அந்தச் சகோதரி தங்களுடைய மொழியில் காட்டிய ஆர்வத்தைப் பார்த்து அவர்கள் கவரப்பட்டார்கள். தங்கள் விலாசத்தையும் கொடுத்தார்கள். ஓராண்டுக்கு
முன்னால் கார்மா சாட்சி கொடுத்த அதே நபர்தான் அந்தக் கணவர் என்பது கார்மாவுக்குத் தெரியவந்தது. ஆகவே, மறுசந்திப்பு செய்வதற்கு அந்தச் சகோதரியோடு கார்மாவும் சென்றார். “அவர்கள் நாங்கள் சொன்னதைக் கேட்டார்கள், பைபிளிலுள்ள விஷயங்களையும் ஒப்புக்கொண்டார்கள்” என்கிறார் கார்மா. “அந்தச் சகோதரி அவர்களிடம் பைபிளையும் பைபிள் படிப்பிற்கு உதவும் பிரசுரத்தையும் கொடுத்தார். அந்தப் பெண் கண்ணீர் மல்க, பிரசுரங்களை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். அவருடைய கணவரும் தலையசைத்து ஒப்புதல் தெரிவித்தார். அந்தப் பெண் இப்போது படிக்கிறார், அவருடைய கணவர் செவிகொடுக்கிறார்.”இவ்வகுப்பு வெற்றியடைந்திருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாக, பிளாக்ஃபுட் இனத்தைச் சேர்ந்த 34 பேர் தங்கள் மொழியில் நடத்தப்பட்ட 2006-ஆம் ஆண்டு நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்டனர் என்று கிளை அலுவலகம் அறிக்கை செய்கிறது.
இத்தாலி
18 மொழிப் பயிற்சி வகுப்புகளில் மொத்தமாகச் சுமார் 7,200 பிரஸ்தாபிகள் கலந்துகொண்டார்கள். இவர்களில் ஒருவர், சாம்சன் என்பவரைச் சந்தித்தார். சாம்சன் நம்முடைய பிரசங்க வேலை தடை செய்யப்பட்டிருக்கும் நாட்டிலிருந்து வந்தவர். அவர் தன்னுடைய 24-வது வயதில் நம்பிக்கைப் பயணம் என்ற பெயரில் பயணத்தைத் தொடங்கினார். பாலைவனத்தைக் கடந்து, இத்தாலிக்கு கப்பலில் பயணித்தார். தன்னுடைய மொழியைக் கற்றுக்கொண்ட ஒரு சகோதரரை அங்குச் சந்தித்தார். அவர் சொன்னதை சாம்சன் ஆர்வத்தோடு கேட்டார், கிறிஸ்தவ கூட்டத்திலும்கூட கலந்துகொண்டார். அதன்பிறகு, பத்து மாதங்களுக்கு இருவருக்கும் இடையே எவ்வித தொடர்புமில்லாமல் போனது. மறுபடியும் சந்தித்தபோது,
அந்தச் சகோதரர் சாம்சனுக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார். ஃபாஸ்ட்-புட் கடைகள், சுரங்க ரயில் நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களில் படிப்பு நடத்தப்பட்டது. நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்ட பிறகு, சாம்சன் தன் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவருடன் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருந்த பெண்ணுடன் இருந்த தொடர்பை துண்டித்துக்கொண்டார். தற்போது நம்முடைய சகோதரர்களில் ஒருவராக இருக்கிறார்.நிகாராகுவா
2006-ல் முதல்முறையாக மையாங்னான் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தோருக்கு சகோதரர்கள் சிறப்பாகச் சாட்சி கொடுத்தார்கள். மையாங்னான் மக்களில் அநேகர் மோராவியன் மதத்தைச் சேர்ந்தவர்கள். அது புராட்டஸ்டன்ட் மதப்பிரிவைச் சேர்ந்தது. ஒவ்வொரு நகரிலும் பெரும்பாலும் பாஸ்டர்தான் அதிகாரப்பூர்வமற்ற மேயராகவும் செயல்படுவார். அந்தப் பாஸ்டர்களில் ஒருவர் வழக்கத்தை மீறி, விசேஷ பயனியர்களான ஹாமில்டனையும் அப்னேரையும் அந்நகரில் தங்க அனுமதித்தார். அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததோடு, ஒரு முழு மையாங்னா மொழி பைபிளையும் கொடுத்தார். சகோதரர்கள் அந்த மொழியைக் கற்றுக்கொண்டார்கள்; விரைவிலேயே, அநேக பைபிள் படிப்புகளை நடத்த ஆரம்பித்தார்கள். வட்டாரக் கண்காணி முதன்முதல் இங்கே விஜயம் செய்தபோது 13 பேர் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். நினைவுநாள் ஆசரிப்பில் 90 பேர் கலந்துகொண்டார்கள். இவ்விரு சமயங்களிலும், அந்தப் பயனியர்கள்தான் பேச்சுகளை மொழிபெயர்த்தார்கள். நினைவு ஆசரிப்பில் பாடப்பட்ட இரு பாடல்களையும் அந்தச் சகோதரர்கள் மையாங்னாவில் மொழிபெயர்த்திருந்தார்கள். நிகழ்ச்சியின்போது அப்பாடலை அனைவரும் உற்சாகத்துடன் பாடினார்கள்.
மக்களிடையே அதிகப்படியான ஆர்வம் காணப்பட்டதால், அந்தப் பயனியர்கள் தங்களது நியமிப்பில் காலவரையின்றி தொடருவதற்கு கிளை அலுவலகம் அனுமதியளித்தது. ஆனால், உள்ளூர் அதிகாரிகள் அனுமதியளிப்பார்களா? நகரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், யெகோவாவின் சாட்சிகள் தான் அந்திக்கிறிஸ்து என்று சிலர் பழித்துப்
பேசினார்கள். என்றாலும், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்திருந்த ஒருவர் நகர சபையில் அங்கத்தினராக இருந்தார். அவர் இவ்வாறு கூறினார்: “இந்த இரண்டு இளைஞரும் நம்முடைய ஊருக்கு வந்ததிலிருந்து, தங்களுக்காக சமைக்கவோ, துவைக்கவோ யாரையும் வேலைக்கு வைத்துக்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வேலையை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். சொல்லப்போனால், நம்முடைய மொழியைக்கூட அவர்கள் கற்றிருக்கிறார்கள்! அதோடு, பைபிளிலிருந்து நமக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொல்லித் தந்திருக்கிறார்கள். அவர்கள் கடவுளிடமிருந்து வரவில்லையென்றால், இந்நேரம் அவர்கள் திரும்பிப் போயிருப்பார்கள்.” இதன் விளைவாக, அங்கு தொடர்ந்து தங்குவதற்கு அந்தப் பயனியர்கள் அனுமதி பெற்றார்கள்.காது கேளாதோருக்கு மொழிபெயர்ப்பது
ஐக்கிய மாகாணங்கள்
2006-ல் மத்தேயுவின் சுவிசேஷம் அமெரிக்க சைகை மொழியில் டிவிடி-களாக வெளியிடப்பட்டது. முதல் முறையாக, காதுகேளாதோரால் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளிலிருந்து முழு அதிகாரங்களை தங்களுடைய மொழியில் வாசிக்க முடிகிறது. “யெகோவாவிடமிருந்து எனக்குக் கிடைத்த கடிதங்களிலேயே இதுதான் மிகச் சிறப்பானது” என்று காதுகேளாத மூப்பர் ஒருவர் கூறினார். “ஒவ்வொரு வசனமும் சூழமைவோடு எப்படிப் பொருந்துகிறது என்பதை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று மற்றொருவர் கூறினார்.
தினமும் ஒவ்வொரு அதிகாரமாக படிக்கத் தீர்மானித்திருக்கிற ஒரு சகோதரி பின்வருமாறு எழுதினார்: “நேரம் போவதே தெரியாமல் நான்கு, ஐந்து அதிகாரங்களை வாசித்துவிடுகிறேன். அதனால் சில சமயங்களில் என்னுடைய வேலையை ஆரம்பிக்க தாமதமாகிவிடுகிறது.”பிரேசில்
சைகை மொழி பிராந்தியத்தில் ஊழியம் படுவேகமாக முன்னேறி வருகிறது. தற்போது அங்கே 232 சைகை மொழி சபைகள் உள்ளன. இவற்றை உள்ளடக்கும் பத்து வட்டாரங்களும், ஒரு மாவட்டமும் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூப்பர்களும் உதவி ஊழியர்களும் இந்தச் சபைகளில் சேவை செய்கின்றனர்; இந்தப் பிராந்தியங்களில் 146 விசேஷ பயனியர்கள் சேவை செய்கின்றனர். அவர்களில் 8 பேர் காது கேளாதவர்கள். ஆன்மீக ரீதியில் முன்னேற, யெகோவாவின் அமைப்பு காது கேளாதோருக்காக அளித்து வருகிற சிறந்த பிரசுரங்களே காரணம் என்று 100-க்கும் மேற்பட்ட மூப்பர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் சொல்கிறார்கள். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?, விழிப்புடன் இருங்கள், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார், காவற்கோபுரம் ஆகிய பிரசுரங்கள் அதிலடங்கும். 2006-ல் இருந்து, சைகை மொழிக்கு ஏற்றவாறு, அம்மொழியில் இருக்கும் பிரசுரங்களை வைத்து நடத்தும் வகையில் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
“பல்வேறு சர்ச் ஆராதனைகளில் கலந்திருக்கிறேன். காது கேளாதவர்களுக்கு பைபிளை மிக நன்றாக கற்பிப்பவர்கள் யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான் என்பதை இப்போது புரிந்துகொண்டேன்” என்று 30 வயதிலிருக்கும் பள்ளி ஆசிரியை ஒருவர் குறிப்பிட்டார். தன்னுடைய சர்ச் சொல்லிக்கொடுத்ததெல்லாம் அறிவுபூர்வமற்றதாகவும், பலனற்றதாகவும் இருந்ததாக அவர் சொன்னார். தன்னுடைய நண்பர்களிடமிருந்து வரும் எதிர்ப்பின் மத்தியிலும் அவர் கிறிஸ்தவ கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொள்ள தீர்மானித்திருக்கிறார். யெகோவா அப்படிப்பட்ட நேர்மை மனமுள்ளோரை தொடர்ந்து தம்முடைய மகனிடம் ஈர்ப்பாராக!—யோவா. 6:44; வெளி. 14:6.
சட்டரீதியான முன்னேற்றங்கள்
எரிட்ரியா
தேசிய தேர்தலில் நம்முடைய சகோதரர்கள் வாக்களிக்க மறுத்ததால், 1994-ல் ஜனாதிபதியின் ஆணைப்படி யெகோவாவின் சாட்சிகளுடைய குடியுரிமை எரிட்ரியாவில் ரத்து செய்யப்பட்டது. இது அவர்களுக்குப் பயங்கரமான பொருளாதார கஷ்டத்தை ஏற்படுத்தியது. அவர்களில் நூற்றுக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி மற்ற இடங்களில் அடைக்கலம் தேடினார்கள். பள்ளிப் பருவத்திலுள்ள குழந்தைகளை உடையவர்கள்
உட்பட, மற்றவர்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவருமே ராணுவ பயிற்சிக்காக பதிவு செய்யப்படுகிறார்கள். ஆகவே, இளம் பிள்ளைகள் பலர் எட்டாம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்குப் போடுகிறார்கள்.சபை கூட்டங்களில் கலந்துகொள்வதும், பிரசங்க வேலையில் ஈடுபடுவதும் அதிக ஆபத்தாகி இருக்கின்றன. சில சபைகள் ஒட்டுமொத்தமாகக்கூட கைது செய்யப்பட்டிருக்கின்றன! இருப்பினும், தைரியமுள்ள நம்முடைய சகோதர சகோதரிகள் “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும்” தொடர்ந்து ‘தேவனுக்குக் கீழ்ப்படிகிறார்கள்.’ (அப். 5:29) தற்போது 31 சகோதர சகோதரிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களில் நெதர்லாந்து குடிமகனான, 73-வயது சகோதரரும் ஒருவர். ராணுவத்தில் சேருவதற்கு மறுத்த மற்றவர்களும் சிறையில் இருக்கிறார்கள். பௌலோஸ் ஈயாசு, ஈசாக் மோகோஸ், நகட டெக்லிமாரியாம் ஆகியோர் 1994 முதல் சிறையில் காலம் கழிக்கிறார்கள்.
பிரான்சு
யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள அநியாய வரி குறித்து பிப்ரவரி 25, 2005-ல் மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் (ECHR) மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த அநியாயத்திற்கு எதிரான தேசிய அளவிலான மனுவில் 8,74,000-க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டார்கள். அது அந்த நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இருந்தாலும், மே 2006-ல் வரிவிதிப்பு அதிகாரிகள் வரி ரசீதில் உள்ள மீதிப் பணத்தைக் கட்டும்படி சகோதரர்களுக்கு ஆணையிட்டார்கள்.
யெகோவாவின் சாட்சிகள் ECHR-ஐ அவசரமாகத் தொடர்புகொண்டு, இதைத் தெரிவித்தார்கள். அந்த நீதிமன்றம் உடனடியாக சாட்சிகளுடைய மனுவின் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியது. மே 4, 2006-ல் பிரெஞ்சு அரசாங்கத்திடம் அதன் வாதத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டது. யெகோவாவின் சாட்சிகளுடைய மத சுதந்திரம் பறிக்கப்பட்டதா, பாரபட்சம் காட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்கவே இவ்வாறு கேட்டுக்கொண்டது.
ஜெர்மனி
பிப்ரவரி 10, 2006-ல் லீப்ஜிக்கில் உள்ள கூட்டரசு நிர்வாக நீதிமன்றம், ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மத அமைப்பை சட்டப்பூர்வ ஸ்தாபனமாக அங்கீகரிக்கும்படி பெர்லின் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது. இதன் மூலம் 15 ஆண்டுகளாய் நடந்துவந்த சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்தது. முக்கிய மதங்களுக்கு கிடைக்கிற வரிவிலக்கையும், பிற சலுகைகளையும் பெற இந்த அமைப்புக்கு இப்போது உரிமையிருக்கிறது. ஜூன் 13, 2006-ல், பெர்லின் அரசாங்கம் தனது அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியது. கிளை அலுவலகக் குழுவைச் சேர்ந்த அங்கத்தினர்கள் இருவரிடம் அது சம்பந்தப்பட்ட சான்றிதழை ஜூலை 5-ஆம் தேதி வழங்கியது.
கிரீஸ்
ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கும், பயன்படுத்துவதற்கும் பல ஆண்டுகளாக அனுமதி கிடைப்பதில் தாமதம் நிலவியது, அல்லது அனுமதி மறுக்கப்பட்டது. காரணம், இதற்கான விண்ணப்பங்கள் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பிஷப் ஒருவரால் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று சட்டம் கூறியது. மே 30, 2006-ல் பாராளுமன்றம் பின்வரும் சட்டத்தை இயற்றியது; அதன்படி, ஆர்த்தடாக்ஸ் அல்லாத பிற மதங்கள் கொடுக்கும் விண்ணப்பங்களை தேசிய கல்வி மற்றும் மத அமைச்சகமே கையாளும்.
கொரிந்துவில் உள்ள லூட்ராகியில் இருக்கும் பொது அரங்கத்தின் நிர்வாகத்தினர், மாவட்ட மாநாட்டிற்காக அதைப் பயன்படுத்திக்கொள்ள சகோதரர்களை அனுமதிக்கலாம் என்று முன்பு தீர்மானித்திருந்தனர். ஆனால் ஜூலை 15, 2005-ல் அதை ரத்து செய்தனர். யெகோவாவின் சாட்சிகள் “அங்கீகரிக்கப்பட்ட மதத்தாரா” என்று அந்த நிர்வாகம் கேள்வி எழுப்பியது. புலன்விசாரணை அதிகாரி இப்பிரச்சினையில் தலையிட்டார். யெகோவாவின் சாட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட மதத்தவர் என்று புரிந்துகொண்டதன் அடிப்படையில் புதிய மனுக்களை பரிசீலிப்போம் என்று அரங்கத்தின் அதிகாரிகள் பிப்ரவரி 2006-ல் உறுதி கூறினார்கள்.
நேபாளம்
யெகோவாவின் சாட்சிகள் ஒரு மத அமைப்பு என்று அக்டோபர் 2005-ல் வெற்றிகரமாக பதிவுசெய்யப்பட்டனர். அமைப்பின் சாசனத்தில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களில் ஒன்று: “கடவுளைப் பற்றி கற்றுக்கொள்ள உதவுவது.” இவ்வாறு பதிவு செய்தது, இந்துக்கள் அதிகளவில் வசிக்கும் இந்நாட்டில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு உதவியாக இருக்கும்.
ருமேனியா
யெகோவாவின் சாட்சிகள் 1990-ல் ஒரு மதமாகப் பதிவு செய்யப்பட்டனர். இருப்பினும், 1997-ல் அரசாங்கம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மதங்களின் பட்டியலில் அவர்களுடைய பெயர் நீக்கப்பட்டிருந்தது. இதன் விளைவாக, ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ராணுவத்தில் சேர்வதற்கு அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. ஆனால் இத்தகைய உரிமைகள் அங்கீகரிக்கப்பட்ட மதங்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன. யெகோவாவின் சாட்சிகளை ஒரு மதமாக அங்கீகரிக்கும்படி ருமேனிய உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு ஆணை பிறப்பித்தது. அதை அரசாங்கம் திரும்பத் திரும்ப எதிர்த்து வந்தது. மார்ச் 2006-ல் ECHR-ன் ஆதரவோடு, யெகோவாவின் சாட்சிகளுடன் அரசாங்கம் சமரசத்திற்கு வந்தது. இவ்வாறாக, ஒன்பது ஆண்டுகளாய் நடந்துவந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது. அங்கீகரிக்கப்பட்ட மதங்களுக்குக் கிடைக்கிற “சட்டப்படியான அனைத்து உரிமைகளும், பொறுப்புகளும்” நம்முடைய அமைப்பிற்கும் கிடைக்க வேண்டும் என அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
துருக்கி
யெகோவாவின் சாட்சிகளை ஒரு மதமாக பதிவு செய்யும்படி கிளை அலுவலகம் விண்ணப்பித்தது. ஐரோப்பிய யூனியனின் நெறிமுறைகளுக்கு
ஏற்றவிதமாக சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தபோதிலும், பதிவு செய்வதற்கு வாய்ப்பில்லை என்று அரசாங்கம் கைவிரித்துவிட்டது. ஆகவே, தற்போது இந்த வழக்கு உள்ளூர் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவ்வழக்கை காலப்போக்கில் ECHR-க்கு கொண்டு செல்ல நேரிடலாம்.மற்றொரு பிரச்சினை, ராணுவ சேவை சம்பந்தப்பட்டது. ராணுவப் பணிக்காக, வருடத்தில் மூன்று நான்கு முறை சகோதரர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய அதிகபட்ச வயது வரம்பைத் தாண்டும் வரை இது தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு தண்டனை அளிக்கப்படுகிறது. சிலர் திரும்பத் திரும்ப அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார்கள், மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். 2004-ல் யூனுஸ் எர்செப் ECHR-ரிடம் விண்ணப்பித்தார். பலமுறை அபராதம் கட்டியிருந்தபோதிலும், அக்டோபர் 2005-ல் எர்கெப் சிறையிலடைக்கப்பட்டார். 12 மாத சிறைத்தண்டனையில் 5 மாதங்களைச் சிறையில் கழித்தபிறகு அவர் விடுவிக்கப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட அன்று, அவர் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு, இதற்கு முந்தின சந்தர்ப்பங்களில் ராணுவ சேவையை மறுத்த காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டார்.
உஸ்பெகிஸ்தான்
கடந்த நான்கு ஆண்டுகளில், அடிப்பது, கைதுசெய்வது, சிறையிலடைப்பது, அபராதம் விதிப்பது என 1,100-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நம்முடைய சகோதரர்களுக்கு நேர்ந்திருக்கின்றன. இவற்றில் 800-க்கும் மேற்பட்டவை, 2005, 2006-ன் நினைவு ஆசரிப்பு சமயத்தின்போது நடந்தவை. பல இடங்களில், லத்திக்கம்புகளுடன் பஸ்களில் வந்த போலீஸார் கூடியிருந்த அனைவரையும் கைது செய்தார்கள். அநேகருக்கு அபராதம் விதிக்கப்பட்டது, சிலர் கடுமையாக அடிக்கப்பட்டார்கள்.
என்றபோதிலும், சகோதரர்கள் நல்லவிதமாக சாட்சி கொடுத்திருக்கிறார்கள். சபை கூட்டங்களில் கலந்துகொண்டதற்காகவும், பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டதற்காகவும் கிரிமினல் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு சகோதரர் மற்றும் சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர்கள் கைதுசெய்யப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட பிரசுரங்களை நீதிமன்றத்தில் ஆராய்வதற்கு அவர்களுடைய வழக்கறிஞர் அனுமதி கேட்டார். அறிவு புத்தகமும் தேவைப்படுத்துகிறார் சிற்றேடும் சத்தமாக வாசிக்கப்பட்டன. நீதிபதியும் சில பகுதிகளை வாசித்தார். அறிவு புத்தகத்தில், “யாருடைய வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்கிறார்?” என்ற தலைப்பிலுள்ள ஐந்தாம் அதிகாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள அவர் அதிக ஆர்வமாக இருந்தார். மதிய இடைவேளையின்போதும் அதைத் தொடர்ந்து வாசிக்கும்படி அவர் உத்தரவிட்டார்.
மத்தேயு 28:19, 20 வாசிக்கப்பட்டதும், “ஆக, இதனால்தான் நீங்கள் பிரசங்கிக்கிறீர்கள்” என்றார். ஹிட்லரின் நாசி ஆட்சியில் யெகோவாவின் சாட்சிகள் ஏன் துன்புறுத்தப்பட்டார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். ஊதாநிற முக்கோணங்கள், நாசி தாக்குதலுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் உறுதியாய் நிற்கிறார்கள், பைபிள்—திருத்தமான சரித்திரம், நம்பத்தக்க தீர்க்கதரிசனம் ஆகிய ஆங்கில வீடியோக்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டன. நம் சகோதரருக்கும் சகோதரிக்கும் அபராதம் விதிக்கப்பட்டபோதிலும், அவர்கள் நினைத்துப் பார்த்திராத விதத்தில் நீதிமன்ற அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் அவர்களால் சாட்சி கொடுக்க முடிந்தது.—லூக்கா 21:12, 13.
சூடான்
ஜூன் 2006 முதற்கொண்டு எட்டு மாகாணங்களில் யெகோவாவின் சாட்சிகள் ஒரு மதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்விடங்களில் சகோதரர்கள் ராஜ்ய மன்றங்களைக் கட்டியிருக்கிறார்கள்; பெரிய மாநாடுகளை வெளிப்படையாகவே நடத்தியிருக்கிறார்கள். நம்முடைய பிரசுரங்கள் எவ்விதத் தடையுமின்றி இறக்குமதி செய்யப்படுகிறது. கார்டூமில் நம்முடைய அலுவலகம் ஒன்று செயல்படுகிறது.
ரஷ்யா
ஏப்ரல் 12, 2006-ல், மாஸ்கோவில் 200 பேர் அடங்கிய ஒரு சபையார் நினைவு ஆசரிப்பை வாடகை மன்றத்தில் அனுசரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆயுதம்தாங்கிய 50-க்கும் மேற்பட்ட போலீஸார் திடீரென்று அங்கு வந்தார்கள். லியுப்லினா காவல் துறைத் தலைவர் கூட்டத்தை நிறுத்தினார். மாஸ்கோவில் யெகோவாவின் சாட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இப்படிப்பட்ட கூட்டங்களை நடத்த அனுமதியில்லை என்று அவர் கூறினார். அட்டென்டண்டுகளின் அடையாளத் தாள்களை அவர்கள் சோதனையிட்டார்கள், பிரசுரங்களைப் பறிமுதல் செய்தார்கள், 14 சகோதரர்களை லியுப்லினா காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, நான்கு மணிநேரத்திற்கும் அதிகமாக காவலில் வைத்தார்கள். சட்ட ரீதியான
உதவி அளிக்கும் நோக்கத்துடன் காவல் நிலையத்துக்குச் சென்ற சகோதரர் தரையில் தள்ளப்பட்டு, கத்திமுனையில் மிரட்டப்பட்டார். புகார் செய்யக்கூடாதென்று பயமுறுத்தப்பட்டார். என்றாலும், ஏப்ரல் 17 அன்று, அந்த 14 சகோதரர்களில் 4 பேர் லியுப்லினா காவல் துறைக்கு எதிராகப் புகார் செய்தனர்.மாஸ்கோவிலுள்ள லியுப்லினா மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி இஸட். வி. சூப்காவா தலைமையில் மே 16-ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது. ரெய்டில் கலந்துகொண்ட அதிகாரிகள் யாருமே அங்கு வரவில்லை. அவர்களுடைய வழக்கறிஞர் மட்டுமே அங்கு ஆஜராகியிருந்தார். எந்த விளக்கமும் கொடுக்காமல், சகோதரர்களுடைய வழக்கறிஞர் எழுப்பிய 50 ஆட்சேபணைகளை நீதிபதி தள்ளுபடி செய்தார். அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை மறுத்துவிட்டார். மறுபட்சத்தில், கலவின்ஸ்கி இன்டர் முனிசிபல் மாவட்ட நீதிமன்றம் மாஸ்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைத் தடை செய்த தீர்ப்பின் நகலையும் முந்தைய விசாரணையில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக சாட்சியம் அளித்த மனோதத்துவ நிபுணரான எல். வி. கூலிகாவ்வின் கருத்தையும் ஏற்றுக்கொள்ளும்படி காவல் துறை தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதும் அதற்கு நீதிபதி இசைந்தார்.
வழக்கு தொடுத்தவர்களை, அதாவது யெகோவாவின் சாட்சிகளை, விசாரணையின்றி காவலில் வைத்தது சட்டவிரோதமானது என்று ஜூன் 15, 2006-ல் நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால், நினைவு ஆசரிப்பைக் குலைத்ததற்கு எதிராக அவர் தீர்ப்பளிக்கவில்லை. வாடகைக்கு எடுக்கப்பட்ட அரங்கம் மத ஆராதனைக்கு ஏற்றவாறு இல்லை என்பதாகவும் அவருடைய தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. ஜூன் 30, 2006-ல் மாஸ்கோ நகர நீதிமன்றத்தில் யெகோவாவின் சாட்சிகள் மேல் முறையீடு செய்தார்கள். மற்ற விஷயங்களோடுகூட, லியுப்லினா மாவட்ட நீதிமன்றம் விதிமுறைகளை மீறி அநேக விஷயங்களில் செயல்பட்டதையும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள். மாஸ்கோவிலுள்ள மற்ற 22 இடங்களில் நினைவு ஆசரிப்பு எந்த இடையூறுமின்றி நடந்தது.
இந்த சிறப்பம்சங்கள் பகுதியின் ஆரம்ப பாராவில் சங்கீதக்காரனுடைய ஆசை குறிப்பிடப்பட்டிருந்தது: “நான் உள்ளளவும் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.” (சங்கீதம் 146:2) அப்படிப்பட்ட உள்ளப்பூர்வமான ஆசை தங்களுக்கும் இருப்பதை லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் இன்று நிரூபித்திருக்கிறார்கள். ஆம், சாத்தானின் பொல்லாத உலகம் தொடரும் வரையாக, சிறைக் கம்பிகளோ, அரசாங்கச் சட்டங்களோ, மொழி தடைகளோ நம்முடைய பரலோகத் தகப்பனைக் கீர்த்தனம் பண்ணுவதைத் தடுக்க அனுமதிக்காதிருப்போமாக!
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
சாதாரண அழைப்பிதழ் அல்ல
கைப்பிரதியில் இருந்த கூப்பன், பைபிள் படிப்பையோ, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் பிரதியையோ அல்லது இரண்டையுமோ கேட்பதற்கு உதவியது. விரைவிலேயே, உலகெங்கும் உள்ள கிளை அலுவலகங்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட கூப்பன்கள் வரத்தொடங்கின. கைப்பிரதியை அளித்த சமயத்தில், 2,000-க்கும் சற்றே குறைவான கூப்பன்கள் வந்ததாக ஐக்கிய மாகாண கிளை அலுவலகம் அறிக்கை செய்கிறது. அவற்றில் 300 கூப்பன்களில் பைபிள் படிப்பு நடத்தப்படும்படி கேட்கப்பட்டிருந்தது. அந்தக் கைப்பிரதியை விநியோகிப்பதில் நம்முடைய சகோதர சகோதரிகளின் கடின உழைப்பு தொடர்ந்து நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பது தெளிவாக இருக்கிறது.
[பக்கம் 12, 13-ன் பெட்டி/ படங்கள்]
பைபிள் கற்பிக்கிறது புத்தகங்களுக்கு கிராக்கி!
ஜூலை 2006-க்குள், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் 4 கோடியே 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிகள் 155 மொழிகளில் அச்சிடப்பட்டன. இதுதவிர, 10 பிரெய்ல் பதிப்புகளும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஒரு மாதத்தில் மட்டும், ஐக்கிய மாகாணங்களில் உள்ள வெவ்வேறு சபைகளிடமிருந்து தினமும் சராசரியாக 42,000 புத்தகங்களுக்கான ஆர்டர்கள் வந்தன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஆர்டர்கள், புத்தகங்களை அவசரமாக அனுப்பிவைக்கும்படி கேட்கப்பட்டிருந்தவை ஆகும். இதுபோன்ற பிரசுரங்களை நம்முடைய சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கச் செய்வதற்காக உலகளாவிய பெத்தேல் குடும்பத்தினர் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது; இதை அவர்கள் பாக்கியமாகவே கருதுகிறார்கள்.
[பக்கம் 28, 29-ன் பெட்டி/படம்]
கிளை அலுவலக பிரதிஷ்டைகள்
அல்பேனியா
50 வருடங்களாக நம்முடைய வேலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 1992-ல் முடிவுக்கு வந்தது. டிரானேயின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள புதிய கிளை அலுவலகத்தின் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் 325 சகோதர சகோதரிகள் கலந்துகொண்டார்கள். தடை உத்தரவு அமலில் இருந்த ஆண்டுகளில் கடவுளுக்குச் சேவை செய்த வயதான சாட்சிகள் நான்கு பேர் அவர்களில் அடங்குவர். 32 வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் அதில் கலந்துகொண்டார்கள். 1992-ல் மிஷனரிகள் அங்கு வந்தபோது, ஒன்பது முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் மட்டுமே அங்கிருந்தார்கள். இப்போதோ 3,617 பேர் அங்கிருக்கிறார்கள். ஜூன் 3, 2006-ல் நடந்த அந்நிகழ்ச்சியில், ஆளும் குழு அங்கத்தினர்களான தியோடர் ஜாரஸ், கெரட் லாஷ் ஆகியோர் பங்கேற்றார்கள். அதற்கடுத்த நாள், திறந்தவெளி அரங்கத்தில் கூடியிருந்த 5,153 பேர், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவர்களுடைய பேச்சை உன்னிப்பாகக் கேட்டார்கள்.
குரோஷியா
கடந்த வருடத்தில் குரோஷியாவின் மகிழ்ச்சி இரட்டிப்பாக இருந்தது. காரணம், மாவட்ட மாநாட்டில் முழுமையான பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் குரோஷிய மொழியில் வெளியிடப்பட்டது. அதோடு, ஜாக்ரெப்பில் உள்ள கிளை அலுவலகத்தின் விரிவாக்கப்பட்ட கட்டடங்களின் பிரதிஷ்டையும் நடைபெற்றது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அங்கு கூடியிருந்த 142 பேர், சகோதரர் ஜாரஸ் கொடுத்த பிரதிஷ்டைப் பேச்சைக் கேட்டார்கள். முதல் பிரதிஷ்டை ஏழு ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1999-ல் நடைபெற்றது.
ஸ்லோவேனியா
ஆகஸ்ட் 12, சனிக்கிழமையன்று சகோதரர் ஜாரஸ் பிரதிஷ்டைப் பேச்சை புதிய கிளை அலுவலகத்தில் கொடுத்தார். தலைநகரான லுஜுபுல்ஜானாவுக்கு வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவிலும் குரோஷியாவிலுள்ள ஜாக்ரெப்பிற்கு மேற்கே 130 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள காம்னிக் நகரில் இப்புதிய கிளை அலுவலகம் உள்ளது. இதற்கு முன், தலைநகரில் உள்ள பல்வேறு குடியிருப்புக் கட்டடங்களில் பெத்தேல் அங்கத்தினர்கள் வசித்து வந்தார்கள். கடைசியில், ஒரே குடும்பமாக ஒன்றுசேர்ந்து வசிக்க முடிந்ததை எண்ணி அவர்கள் பரவசமடைந்தார்கள். 20 நாடுகளைச் சேர்ந்த 144 பேர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
[படங்கள்]
அல்பேனிய கிளை அலுவலகக் கட்டடம்
5,153 பேர் கலந்துகொண்ட விசேஷ கூட்டம்
குரோஷியாவில் விரிவாக்கப்பட்ட கிளை அலுவலகக் கட்டடங்கள்
ஸ்லோவேனியா கிளை அலுவலகம்
[பக்கம் 6-ன் படம்]
காது கேளாத பெண்மணிக்கு சாட்சி கொடுத்தல், பிரேசில்
[[பக்கம் 17-ன் படம்
முதல் இந்தி வகுப்பு, ஜெர்மனி
[[பக்கம் 19-ன் படம்
லிண்டா மற்றும் பால்
[[பக்கம் 19-ன் படம்
பிளாக்ஃபுட் மொழியில் கார்மா சாட்சி கொடுக்கிறார்
[[பக்கம் 20-ன் படம்
ஸ்பானிஷ் மொழி வகுப்பு, ரோம், இத்தாலி
[[பக்கம் 20-ன் படம்
சாம்சனுக்கு சாட்சி கொடுத்தல்
[[பக்கம் 21-ன் படம்
ஹாமில்டனும் அப்னேரும் மையாங்னாவில் பைபிளை கற்பிக்கிறார்கள்
[[பக்கம் 27-ன் படம்
சூடானின் தென்பகுதியிலுள்ள ராஜ்ய மன்றம்