தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் பரபரப்பான தெருவின் வழியே நடந்துபோனால் மனிதரில் இத்தனை நிறங்களா என ஆச்சரியப்படுவீர்கள். ஆம், கன்னங்கரேலென்ற ஆட்கள் முதல் செக்கச்செவேரென்ற ஆட்கள் வரை வித்தியாசமான நிறத்தில் ஆட்களை நீங்கள் காணமுடியும். வாகனங்களின் இரைச்சலையும் மீறி, பல்வேறு மொழி பேசும் மக்களின் குரலையும் உங்களால் கேட்க முடியும். பழங்கள், அலங்காரப் பொருள்கள், துணிமணிகள் போன்றவற்றை விற்கும் கடைகளைப் பார்த்துக்கொண்டே நீங்கள் செல்லலாம். அப்படிச் செல்கையில் வெயிலின் கொடுமை தெரியாதபடி நெடுநெடு கட்டடங்களின் நிழல் உங்களைப் பாதுகாக்கும். விரும்பினால், நடைபாதை ஓரத்தில் இருக்கும் சலூன்காரரிடம் முடி வெட்டிக்கொள்ளலாம்.
தென் ஆப்பிரிக்காவின் மக்கள் தொகை 4 கோடியே 60 லட்சம். இதில் பல்வேறு வகையான மக்கள் கலந்திருக்கிறார்கள். ஆகவே, தென் ஆப்பிரிக்கர் ஒருவர் இப்படித்தான் இருப்பார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. கறுப்பர்கள்தான் அந்த மண்ணின் மைந்தர்கள். மக்கள் தொகையில் 75 சதவீதத்தினர் அவர்களே. ஜூலு, ஸோஸா, ஸோதோ, பீடீ, ட்ஸ்வானா, அதோடு மற்ற சிறு தொகுதிகள் அதிலடங்கும். வெள்ளையரில் பெரும்பாலோர் ஆங்கிலமோ ஆப்பிரிக்கான்ஸோ பேசுகிறார்கள். 17-ஆம் நூற்றாண்டின் மத்திபத்தில் இங்கு குடியேறிய டச் மக்கள், அவர்களுக்குப்பின் வந்த பிரெஞ்சு ஹியூகனாட்டுகள் ஆகியோரின் சந்ததியினரே இந்த வெள்ளையர். ஆங்கில குடியேறிகள் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கே வந்திறங்கினார்கள்.
இந்தியர்களும் பெருமளவில் இங்கே வசிக்கிறார்கள். நடாலில் (இப்போது க்வாஸூலூ-நடால்) உள்ள கரும்புத் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளரின் சந்ததியினரே இவர்கள். இப்படி, பல்வேறு இனங்களும் கலாச்சாரங்களும் ஒன்றாகக் கலந்திருப்பதால் தென் ஆப்பிரிக்காவை வானவில் தேசமென அழைப்பது மிகப் பொருத்தமே.
கடந்த காலத்தில், இங்கே இனப் பாகுபாடுகள் நிலவின. இன ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனக்குரல் எழுந்தது. இதை ஒழித்துவிட்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை நிறுவுவதற்கு சமீப ஆண்டுகளில் ஆதரவு வலுத்துள்ளது.
இப்போது எல்லா இன மக்களும் சரிசமமாகப் பழக முடிகிறது. அவர்கள் சினிமாவுக்கோ, ஹோட்டலுக்கோ வேறெந்த பொது இடங்களுக்கோ
போக முடிகிறது. எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனக்குப் பிடித்த இடத்தில் அவர் வாழலாம், பணம் இருந்தால் போதும்.என்றாலும், புதிய அரசாங்கம் அமைந்தவுடன் எழுந்த ஆரம்பகட்ட பரபரப்பு அடங்கியவுடன், தவிர்க்க முடியாத பிற கேள்விகள் எழுந்தன. இன ஒதுக்கீட்டால் ஏற்பட்ட காயங்களை புதிய அரசாங்கம் எந்தளவுக்கு ஆற்றும்? அதற்கு எவ்வளவு காலம் ஆகும்? இன ஒதுக்கீடு முடிவுக்கு வந்து பத்தாண்டுகளுக்கு மேலான பிறகும், முக்கியமான சில பிரச்சினைகள் தொடர்கின்றன. குற்றச்செயல் அதிகரித்து வருவது; வேலையில்லாத் திண்டாட்டம் 41 சதவீதமாக இருப்பது; கணக்கெடுப்பின்படி 50 லட்சம் மக்கள் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டிருப்பது; இவையெல்லாம் அரசாங்கம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் சில. இந்தப் பிரச்சினைகளை எந்த
மனித அரசாங்கத்தாலும் தீர்க்க முடியாது என்ற முடிவுக்கு அநேகர் வந்துள்ளனர். தீர்வுக்காக வேறொருவரை நோக்கித் திரும்பியுள்ளனர்.இயற்கை அழகு
பிரச்சினைகள் ஒருபக்கம் இருந்தாலும், இந்நாட்டின் இயற்கை அழகு சுற்றுலாப் பயணிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுள்ளது. கதிரவனின் ஒளியில் நனையும் அழகிய கடற்கரைகளும் கம்பீரமான மலைத்தொடர்களும் பலவிதமான காட்டுவழிப் பாதைகளும் அவர்களை ஈர்க்கின்றன. நகரங்களில் உலகத் தரம் வாய்ந்த கடைகளையும் உணவகங்களையும் காணலாம். தென் ஆப்பிரிக்காவின் மிதமான தட்பவெப்பம் இந்நாட்டின் அழகிற்கு மெருகூட்டுகிறது.
முக்கியமாக, இங்கு காணப்படும் பல்வகை விலங்கினங்களும் மக்களை ஈர்க்கின்றன. 200 வகையான பாலூட்டி இனங்கள், 800 பறவையினங்கள், 20,000 பூச்செடி வகைகள் ஆகியவை இந்நாட்டின் சொத்துகளாகும். பிரபலமான க்ரூகர் தேசிய பூங்கா போன்ற வனவிலங்கு சரணாலயங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கே இயற்கைச் சூழலில் ஆப்பிரிக்காவின் ‘ஐந்து முக்கிய விலங்குகளான’ யானை, காண்டாமிருகம், சிங்கம், சிறுத்தை, கேப் எருமை ஆகியவற்றைக் காணலாம்.
தென் ஆப்பிரிக்காவுக்கே உரித்தான காடுகளில் ஒன்றைச் சுற்றிப்பார்ப்போருக்கு அது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அபூர்வமான பெரணிகளையும் மரப்பாசிகளையும் பூக்களையும் பார்த்து ரசிப்பதோடு, வண்ண வண்ணப் பறவைகளையும் பூச்சிகளையும் அமைதியான சூழலில் கண்டுகளிக்கலாம். வானளாவும் எல்லோவுட் மரத்தைப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய மரம் ஒரு சின்ன விதையிலிருந்து வந்ததை நம்மால் நம்பவே முடியாது. இம்மரங்களில் சில, 50 மீட்டர் உயரத்திற்கு வளரும், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு உயிர்வாழும்.
ஆயினும், கடந்த ஒரு நூற்றாண்டாக, இந்நாட்டில் வித்தியாசமான ஒருவகை விதை விதைக்கப்பட்டு வருகிறது. அதுதான் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி என்ற விதை. அது மக்களுடைய மனதில் விதைக்கப்பட்டு வருகிறது. நற்செய்தியை இருகரம் நீட்டி வரவேற்பவர்களை சங்கீதக்காரன் பெரிய மரங்களுக்கு ஒப்பிட்டார். அவர் இவ்வாறு எழுதினார்: “நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.” (சங். 92:12) ஆம், மிகப் பழமையான எல்லோவுட் மரங்களைவிட நீதிமான்கள் அதிக காலம் வாழ்வார்கள். ஏனெனில், அவர்களுக்கு நித்திய ஜீவனைத் தருவதாக யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிறார்.—யோவா. 3:16.
சில விதைகள், பெரிய வளர்ச்சி
19-ஆம் நூற்றாண்டில், போரும் அரசியல் போராட்டங்களும் இந்நாட்டை அலைக்கழித்தன. அந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலோ, வைரமும் தங்கமும் அங்கே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது; இதனால் பெரும் மாற்றம் ஏற்பட்டது. த மைன்ட் ஆஃப் சௌத் ஆப்பிரிக்கா என்ற புத்தகத்தில் அலிஸ்டர் ஸ்பார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இந்தக் கண்டுபிடிப்பு, மேய்ச்சலை நம்பிக்கொண்டிருந்த நாட்டை தொழிற்சாலைகள் நிறைந்த நாடாக மாற்றிவிட்டது. மாநகரங்கள் கிராம மக்களைக் காந்தமாய்க் கவர்ந்திழுத்தன. இதனால் அவர்களுடைய வாழ்க்கையே மாறிவிட்டது.”
ஹாலந்து நாட்டிலிருந்து வந்த ஒரு பாதிரியார் மூலமாக 1902-ல் பைபிள் சத்தியம் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவிற்கு வந்து சேர்ந்தது. அவருடைய பெட்டிகள் ஒன்றில் பைபிள் மாணாக்கர் என்று அப்போது
அறியப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் சில இருந்தன. க்ளெர்க்ஸ்டார்ப் நகரில் வசிக்கும் ப்ரான்ஸ் ஏபர்சோனுக்கும் ஸ்டாஃபல் ஃப்யுரிக்கும் இவை கிடைத்தன. அவற்றை வாசித்தபிறகு, அதுதான் சத்தியம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டு, மற்றவர்களுக்குச் சாட்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். ஃப்யுரியின் சொந்தக்காரர்களில், ஐந்து தலைமுறைகளாக, 80-க்கும் மேற்பட்டோர் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள். ஏபர்சோன் குடும்பத்தின் சந்ததியாரில் அநேகர் யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களாகி இருக்கிறார்கள். ஃப்யுரி குடும்பத்தின் வழிவந்தவர்களில் ஒருவர் தற்போது தென் ஆப்பிரிக்கா பெத்தேலில் சேவை செய்து வருகிறார்.ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் இருந்து வில்லியம் டபிள்யூ. ஜான்ஸ்டன் என்பவர் 1910-ல் தென் ஆப்பிரிக்காவிற்கு வந்தார். பைபிள் மாணாக்கரின் கிளை அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான ஆலோசனைகள் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. அப்போது அவருடைய வயது 35-க்குள்தான் இருக்கும். சகோதரர் ஜான்ஸ்டன் தீர்க்கமாக யோசித்து தீர்மானம் எடுப்பவர்; நம்பகமானவர். டர்பன் நகரில், ஒரு கட்டடத்தில் இருந்த சின்ன அறைதான் கிளை அலுவலகமாகச் செயல்பட்டது. இந்த அலுவலகம் சிறியதாக இருந்தாலும் வேலை பெரியதாக இருந்தது. பூமத்தியரேகைக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க பகுதிகள் முழுவதையும் அது கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.
ஆரம்ப காலங்களில், நற்செய்தியை வெள்ளையர்தான் பெருமளவில் ஏற்றுக்கொண்டனர். அந்தச் சமயத்தில், பைபிள் மாணாக்கரின் பிரசுரங்கள் டச் மொழியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கிடைத்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகே, பிரசுரங்களில் சில, உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. காலப்போக்கில், வெள்ளையர், கறுப்பர், கலப்பினத்தவர், இந்தியர் ஆகிய நான்கு இனத்தவர் மத்தியிலும் பிரசங்க வேலை மும்முரமடைந்தது.
1911 முதற்கொண்டு, அந்நாட்டிலுள்ள கறுப்பினத்தவர் மத்தியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக பதிவுகள் காண்பிக்கின்றன. யோஹான்னஸ் சாங்கே என்பவர் டர்பன் நகருக்கு அருகிலுள்ள தன்னுடைய சொந்த ஊரான ன்ட்வேட்வெக்குத் திரும்பினார். பைபிள் சத்தியத்தைப் பற்றி அவர் அறிந்திருந்தார். அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார். வேதாகமத்தில் படிப்புகள் என்ற ஆங்கில புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு சிறு தொகுதிக்கு தொடர்ச்சியாக பைபிள் படிப்புகள் நடத்தி வந்தார். இத்தொகுதிதான் நாளடைவில் தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பர் சபையாக உருவானது.
இந்தத் தொகுதி உள்ளூர் பாதிரியார்களின் கண்ணில்பட்டது. இந்தத் தொகுதியினர் சர்ச் போதனைகளைப் பின்பற்றுகிறார்களா என்று அவர்களிடமே வெஸ்லீயன் மெத்தடிஸ்ட் சர்ச் அங்கத்தினர்கள் விசாரித்தார்கள். அவர்களோ தாங்கள் பைபிளில் சொல்லப்பட்டுள்ளதையே போதிப்பதாக பதிலளித்தார்கள். பலமுறை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சர்ச்சில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். கூட்டங்களை நடத்தவும் அவர்களுக்கு உதவியளிக்கவும் சகோதரர் ஜான்ஸ்டன் அவர்களைத் தொடர்ந்து சந்தித்தார். ஒருசில பைபிள் மாணாக்கர் மட்டுமே இருந்தபோதிலும்கூட, பிரசங்க வேலை பெரியளவில் நடைபெற்றது. மொத்தம் 61,808 துண்டுப்பிரதிகள் விநியோகிக்கப்பட்டதாக 1912-ல் வெளியான ஓர் அறிக்கை கூறுகிறது. அதோடு, 1913-ன் இறுதிக்குள்ளாக, தென் ஆப்பிரிக்காவில் உள்ள 11 செய்தித்தாள்களில் பிரபல பைபிள் மாணாக்கரான சி. டி. ரஸலின் பிரசங்கங்கள் நான்கு மொழிகளில் பிரசுரிக்கப்பட்டு வந்தன.
போர்க்காலங்களில் தேவராஜ்ய வளர்ச்சி
உலகெங்கும் உள்ள கடவுளுடைய மக்களுக்கு 1914-ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்த சிறு தொகுதியான யெகோவாவின் சாட்சிகளுக்கும் அது அவ்வாறே அமைந்தது. அந்தச் சமயத்தில் தங்கள் பரலோக வெகுமதியைப்
பெற்றுக்கொள்கிற சமயம் வந்துவிட்டதாக அவர்களில் அநேகர் எதிர்பார்த்திருந்தார்கள். நியு யார்க், புரூக்ளினில் உள்ள உலக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிய வருடாந்தர அறிக்கையில் சகோதரர் ஜான்ஸ்டன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “கடந்த ஆண்டின் வருடாந்தர அறிக்கையில், அடுத்த வருடாந்தர அறிக்கையை பரலோக தலைமையகத்தில் சமர்ப்பிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தேன். அது நிறைவேறவில்லை.” என்றாலும், அவர் தொடர்ந்து இவ்வாறு குறிப்பிட்டார்: “1914-ஆம் ஆண்டில் சரித்திரம் காணாத அளவுக்கு அறுவடை வேலை ஆப்பிரிக்காவில் நடைபெற்றது.” செய்யப்பட வேண்டிய வேலை நிறைய இருக்கிறது என்பதை அநேகர் உணர்ந்து கொண்டார்கள்; அதில் பங்குகொள்வதில் சந்தோஷப்பட்டார்கள். வேலை எந்தளவுக்கு மும்முரமாக நடைபெற்றது என்பது 1915-ஆம் ஆண்டு அறிக்கையில் தெளிவாகத் தெரிந்தது. அதன்படி, வேதாகமத்தில் படிப்புகள் (ஆங்கிலம்) புத்தகத்தின் 3,141 பிரதிகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. அது, அதற்கு முந்தைய வருடத்தில் அளிக்கப்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகம்.அந்தச் சமயத்தில்தான் யாபீ டரான் என்ற திறமையான வக்கீல் ஒருவருக்கு சத்தியம் கிடைத்தது. அவர் வாசித்த டர்பன் செய்தித்தாளில் வெளிவந்திருந்த கட்டுரையில், பத்தாண்டுகளுக்கு முன்னர் பைபிள் மாணாக்கரால் வெளியிடப்பட்ட பிரசுரம் ஒன்றைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. பைபிள் தீர்க்கதரிசனத்தை விளக்கும் வேதாகமத்தில் படிப்புகள் என்ற தொடர் புத்தகங்களில், 1914 முதற்கொண்டு நடைபெற்றுவரும் சம்பவங்கள் முன்னறிவிக்கப்பட்டிருந்தன என்பதாக அந்தக் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. யாபீ இவ்வாறு எழுதினார்: “இந்தப் புத்தகங்களை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பினேன். இதற்கென்று கடை கடையாக ஏறி இறங்கியும் ஒரு பிரயோஜனமும் இல்லை. கடைசியாக, டர்பனில் உள்ள கிளை அலுவலகத்திற்கு எழுதிக் கேட்டு ஒரு செட் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டேன். படித்த விஷயங்கள் என் கண்களைத் திறந்தன! பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள ‘மறைவான விஷயங்களை’ புரிந்துகொண்டபோது நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை!” சீக்கிரத்தில் யாபீ முழுக்காட்டுதல் பெற்றார். வியாதிப்பட்டு 1921-ல் அகால மரணமடையும்வரை பைபிள் சத்தியத்தை ஊக்கமாகப் பிரசங்கித்தார்.
தென் ஆப்பிரிக்காவில் சர்வதேச பைபிள் மாணாக்கரின் மாநாடு ஜோஹெனஸ்பர்க்கில் 1914, ஏப்ரலில் முதன்முதலாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட 34 ஆட்களில் 16 பேர் முழுக்காட்டப்பட்டனர்.
1916-ல் “ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” காட்டப்பட்டது; நாடு முழுவதும் அதற்கு பெரும் வரவேற்பு இருந்தது. கேப் ஆர்கஸ் செய்தித்தாள் பின்வருமாறு அறிக்கையிட்டது: “இந்தத் தொடர் பைபிள் படங்களின் அற்புத தயாரிப்பு அமோக வெற்றியடைந்திருப்பது, இதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகள் வீண்போகவில்லை என்பதையே காட்டுகிறது.
அதோடு, இப்படத்தை இங்கே வெளியிட்ட சர்வதேச பைபிள் மாணாக்கரின் தொலைநோக்குப் பார்வையையும் காட்டுகிறது.” “ஃபோட்டோ-டிராமா” மக்கள்மீது எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் அதைப் பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது. ஆகவே, கொஞ்ச காலத்திலேயே மிகப்பெரிய அளவில் சாட்சி கொடுக்கப்பட்டது. அப்படத்தைக் காட்டுவதற்காக சகோதரர் ஜான்ஸ்டன் நாடு முழுவதும் சுமார் 8,000 கிலோமீட்டர் தூரம் பயணித்தார்.அதே வருடத்தில் சகோதரர் ரஸல் இறந்துவிட்டார். அவருடைய மரணத்தால் உலகின் மற்ற பகுதிகளில் ஏற்பட்டதைப் போல தென் ஆப்பிரிக்காவிலும் பிரசங்க வேலையில் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டது. அவருடைய மரணத்திற்குப் பிறகு செய்யப்பட்ட மாற்றங்களை சிலர் எதிர்த்தனர். அவர்கள் கூட்டுறவு கொண்டிருந்த சபைகளில் பிரிவினைகளை ஏற்படுத்தினர். உதாரணமாக, டர்பனில் இருந்த சபையிலிருந்து பெரும்பாலான ஆட்கள் பிரிந்துபோய் தனியாக கூட்டங்களை நடத்தினர். தங்களை “இணை பைபிள் மாணாக்கர்” என்று அழைத்துக்கொண்டார்கள். ஆரம்பத்திலிருந்த சபையில் 12 பேர் மட்டுமே நிலைத்திருந்தார்கள்; அவர்களில் பெரும்பாலோர் சகோதரிகள். இதனால், புதிதாக முழுக்காட்டப்பட்ட டீனேஜரான ஹென்றி முயர்டால் கஷ்டமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டார். அவருடைய தந்தை பிரிந்துபோன ஆட்களுடன் சேர்ந்துகொண்டார். ஆனால், அம்மாவோ குறைந்த ஆட்களைக் கொண்டிருந்த உண்மை சபையில் நிலைத்திருந்தார். ஹென்றி விஷயங்களை கவனமாக ஆராய்ந்தார், அதைப் பற்றி ஜெபித்தார்; சபையோடு நிலைத்திருக்க முடிவு செய்தார். எப்போதும்போல, பிரிந்துபோன தொகுதி வெகுகாலம் நிலைக்கவில்லை.
1917-ல் கிளை அலுவலகம் டர்பனில் இருந்து கேப் டவுனுக்கு மாற்றப்பட்டது. பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த பைபிள் மாணாக்கரின் எண்ணிக்கை 200 முதல் 300 வரையாக இருந்தது. அதோடு கறுப்பர்களைக் கொண்ட பல சபைகள் தொடர்ந்து முன்னேறின.
1917-ல் தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகம் பின்வருமாறு அறிக்கை செய்தது: “இந்நாட்டின் மொழிகளில் நம்முடைய பிரசுரங்கள் எதுவுமே இல்லை. இருந்தாலும், சகோதரர்கள் சத்தியத்தை இந்தளவுக்குப் புரிந்திருப்பது நிச்சயமாகவே அசாதாரணமான ஒன்றுதான். ‘அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது’ என்றுதான் எங்களால் சொல்ல முடியும்.” நியாசாலாந்தில் (தற்போது மலாவி) இருந்து தென் ஆப்பிரிக்காவில் ஊழியம் செய்ய சகோதரர்கள்
வந்தார்கள். கறுப்பர் இனத்தைச் சேர்ந்த அநேகர் சத்தியத்திற்கு வர அவர்கள் உதவினார்கள். ஜேம்ஸ் நேப்பியர், மக்காஃபீ ங்குலு ஆகியோர் அவர்களில் சிலர்.தைரியமாக சத்தியத்திற்காகப் போராடியவர்கள்
ஆரம்ப காலங்களில், சுவிசேஷத்தை அறிவித்த அந்தச் சிறு தொகுதியினர் சத்தியத்தை தைரியமாக ஆதரித்துப் பேசினார்கள். தென் ஆப்பிரிக்காவின் வடக்கு ட்ரான்ஸ்வாலிலுள்ள (தற்போது லிம்போபோ மாகாணம்) நேல்ஸ்ட்ரூயம் என்ற இடத்தில் பள்ளி மாணவர்கள் இருவர், நரகத்தைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது? (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகத்தைப் படித்தனர். இறந்தவர்களைப் பற்றிய உண்மையைப் படித்ததும் அவர்களுக்கு ஒரே சந்தோஷம்! அவர்களில் ஒருவரான பால் ஸ்மிட் a இவ்வாறு கூறினார்: “சர்ச் போதனைகள் தவறானவை என்று பள்ளி மாணவர்களாகிய நாங்கள் இருவரும் தெளிவாகச் சொன்னோம். ஏதோ சூறாவளியே தாக்கியதுபோல நேல்ஸ்ட்ரூயமில் அமளி ஏற்பட்டது. சீக்கிரத்திலேயே, இந்தப் புதிய மதத்தைப்பற்றி எல்லாரும் பேச ஆரம்பித்தார்கள். பாதிரிமார்கள் கடவுளுடைய மக்களைப் பற்றி தவறாகப் பேசுவதும், துன்புறுத்துவதும் தெரிந்ததுதானே. அதைத்தான் இங்கிருந்த பாதிரிமார்களும் செய்தார்கள். பல மாதங்களுக்கு, சொல்லப்போனால், பல வருடங்களுக்கு இந்த ‘பொய் மதத்தைப்’ பற்றித்தான் பிரசங்கத்தில் குறிப்பிட்டார்கள்.” என்றாலும், 1924-க்குள் அங்கே 13 பிரஸ்தாபிகளைக் கொண்ட ஒரு சிறு தொகுதி பிரசங்க வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வந்தது.
1917-ல் பிட் ட யாஹர் என்பவர் ஸ்டெலன்பாஸ் என்ற இடத்திலிருந்த பல்கலைக்கழகத்தில் இறையியல் படித்துக் கொண்டிருந்தார். அவரது சக மாணவர் ஒருவர் பைபிள் மாணாக்கரால் வெளியிடப்பட்ட பிரசுரங்களை வாசித்துக்கொண்டும், அதைப்பற்றி பேசிக்கொண்டும் இருந்தார். சர்ச் அதிகாரிகள் அதைக் கண்டு கவலையடைந்தார்கள். பிட்டைக் கூப்பிட்டு, அந்த மாணவரிடம் பேசச் சொன்னார்கள். அதோடு, கிறிஸ்தவ மாணவர் அமைப்பால் நடத்தப்படும் வாராந்தர பைபிள் படிப்பில் கலந்துகொள்ள அவரை அழைக்கும்படியும் சொன்னார்கள். ஆனால், நடந்ததோ வேறு. பிட் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்! ஆத்துமா, நரகம், இன்னும் பிற விஷயங்களைப் பற்றி தன் பேராசிரியர்களோடு விவாதித்தார். ஒரு பயனுமில்லை. அதன்பிறகு, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினார்.
பிட்டுக்கும் டச் சீர்திருத்த இறையியல் அறிஞரான ட்வைட் ஸ்நேமான்
என்பவருக்கும் இடையே பொது விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் 1500 மாணவர்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டார்கள். நடந்தவற்றை சகோதரர் ஆட்டி ஸ்மிட் விளக்குகிறார்: “மெத்தப் படித்த அந்த அறிஞரின் விவாதங்கள் ஒவ்வொன்றையும் பிட் தவிடுபொடியாக்கினார். சர்ச் போதனைகள் வேதப்பூர்வமற்றவை என்பதை பைபிளில் இருந்தே நிரூபித்தார். மாணவர்களில் ஒருவர் தன் கருத்தை இவ்வாறு தெரிவித்தார்: ‘பிட் ட யாஹர் சொல்வதை நம்பக்கூடாதென்று நான் மட்டும் ஏற்கெனவே தீர்மானித்திருக்காவிட்டால், அவர் சொன்னது சரியே என்று சொல்லியிருப்பேன்; ஏனெனில் அவர் எல்லாவற்றையும் பைபிளிலிருந்து ஆதாரத்தோடு நிரூபித்துவிட்டார்!’’”மற்ற சமுதாயங்களிலும் விதைத்தல்
ஸ்டெலன்பாஸுக்கு அருகில் உள்ள சிறிய நகரமாகிய ப்ரான்ஸ்ஹூக்கிற்கு சகோதரர் ஜான்ஸ்டன் சென்றிருந்தார். அங்கிருந்த கலப்பின மக்களிடம் அவர் பேசினார். சில வருடங்களுக்கு முன்பு, ஆடாம் ஃபான் டிமன் என்ற உள்ளூர் பள்ளி ஆசிரியர் டச் சீர்திருத்த சர்ச்சை விட்டு விலகி, சிறு மதத் தொகுதி ஒன்றை உருவாக்கியிருந்தார். சகோதரர் ஜான்ஸ்டன் அவரைச் சந்தித்தார். திரு. ஃபான் டிமன் தனக்காகவும் தன் நண்பர்களுக்காகவும் பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டார்.
ஃபான் டிமனும் அவருடைய நண்பர்களில் சிலரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, தாங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்குச் சொல்வதில் சுறுசுறுப்பாக ஈடுபட்டனர். கலப்பின மக்கள் மத்தியில் ராஜ்ய நற்செய்தி பரவுவதற்கு இது நல்ல அடித்தளமாக அமைந்தது. ஜி. ஏ. டானியெல்ஸ் என்ற 17 வயது இளைஞர் அந்தச் சமயத்தில் சத்தியத்தைக் கற்றுக்கொண்டார்; தன் வாழ்நாளின் மீதி பாகத்தை யெகோவாவின் சேவைக்காக அர்ப்பணித்தார்.
பிற்பாடு, டேவிட் டேலர் என்ற கலப்பின சகோதரரும் அதே இனத்தவருக்கு பைபிள் சத்தியத்தை அறிவிப்பதில் ஊக்கமாக ஈடுபட்டார். அவர் தன்னுடைய 17-வது வயதில் பைபிள் மாணாக்கரோடு பைபிள் படிக்க ஆரம்பித்தார். 1950-ல் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். எல்லா கலப்பின சபைகளையும் ஒதுக்குப்புற தொகுதிகளையும்
சந்திக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். அச்சமயத்தில் மொத்தமாக 24 தொகுதிகள் இருந்தன. இதற்காக அவர் ரயிலிலும் பேருந்திலும் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.கடினமான சமயத்திலும் தேவராஜ்ய வளர்ச்சி
1918-ல் சகோதரர் ஜான்ஸ்டன் ஆஸ்திரேலியாவில் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையை மேற்பார்வை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். ஹென்றி ஆங்கடல் தென் ஆப்பிரிக்காவின் கிளை அலுவலகக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். முன்னதாக அவர் நடாலின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ஓய்வு பெற்றவராகவும் வயதானவராகவும் இருந்தபோதும், அடுத்த ஆறு வருடங்களுக்கு தன்னுடைய பொறுப்பை அவர் சரிவரச் செய்தார்.
அது கொந்தளிப்பான போர்க்காலமாக இருந்தது, அமைப்பிலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இதன் மத்தியிலும் அநேகர் ஆர்வமாக பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். 1921-ல், தண்டவாள பராமரிப்புக் குழு ஒன்றின் மேற்பார்வையாளரான கிறிஸ்டியான் ஃபென்டர், தண்டவாளத்தின் அடியில் துண்டுக்காகிதம் ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டார். அது பைபிள் மாணாக்கரால் பிரசுரிக்கப்பட்ட துண்டுப்பிரதி. அதைப் படித்துவிட்டு, தன் மருமகனான ஆப்ரஹாம் சல்யியைப் பார்க்க ஓடினார். “ஆப்ரஹாம், இன்று நான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்!” என்று உணர்ச்சிபொங்க கூறினார். அவர்கள் இருவரும் பைபிள் சார்ந்த பிரசுரங்களைக் கூடுதலாகப் பெற்றுக்கொண்டு, அவற்றை ஊக்கமாகப் படிக்க ஆரம்பித்தார்கள். இருவருமே ஒப்புக்கொடுத்த சாட்சிகளாக ஆனார்கள். சத்தியத்தைக் கற்றுக்கொள்ள அநேகருக்கு உதவினார்கள். அவர்களுடைய சந்ததியாரில் நூறுக்கும் மேலானோர் தற்போது யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள்.
கூடுதல் வளர்ச்சி
1924-க்குள் அச்சு இயந்திரம் ஒன்று கேப் டவுனுக்கு அனுப்பப்பட்டது. அது சம்பந்தமாக உதவுவதற்கு பிரிட்டனில் இருந்து இரு சகோதரர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவரான தாமஸ் வால்டர் கிளை அலுவலகக் கண்காணியாக ஆனார். மற்றொருவரான ஜார்ஜ் ஃபிலிப்ஸ் b சில வருடங்களுக்குப் பின் அடுத்த கிளை அலுவலகக் கண்காணியாக ஆனார். சகோதரர் ஃபிலிப்ஸ் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பில் இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் ராஜ்ய வேலையை முன்னேற்றுவிப்பதிலும் ஸ்தாபிப்பதிலும் முக்கியப் பங்காற்றினார்.
1931-ல் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றுக்கொள்வது சம்பந்தமான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு பிரசங்க வேலை இன்னும் மும்முரமடைந்தது. அந்தச் சமயத்தில், ராஜ்யம்—உலகத்தின் நம்பிக்கை (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகம் வெளியிடப்பட்டது. “யெகோவாவிடமிருந்து வரும் எச்சரிப்பு” என்று தலைப்பிடப்பட்டிருந்த அத்தீர்மானத்தின் முழு விவரமும் அப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் அப்புத்தகம் விநியோகிக்கப்பட்டது. அந்தப் பகுதியிலுள்ள ஒவ்வொரு பாதிரியாருக்கும் அரசியல்வாதிக்கும் முக்கிய வியாபாரிக்கும் அதைக் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
புதிய கிளை அலுவலகம்
1933-ல் கேப் டவுனில் வாடகைக்கு எடுக்கப்பட்ட பெரிய வளாகத்திற்கு கிளை அலுவலகம் மாற்றப்பட்டது. 1952 வரை அங்கேயே செயல்பட்டு வந்தது. அந்தச் சமயத்திற்குள் பெத்தேல் அங்கத்தினர்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்திருந்தது. ஆரம்பகால பெத்தேல் அங்கத்தினர்கள் சகோதரர்களுடைய வீடுகளில் தங்கிக்கொண்டு, அலுவலகத்திற்கும் அச்சகத்திற்குமாக தினமும் பயணித்தார்கள். தினமும் வேலையைத் தொடங்குவதற்கு முன், அச்சகத்தில் இருக்கும் உடை மாற்றும் அறையில் எல்லாரும் சந்தித்து, தினவசனத்தைக் கலந்தாலோசித்தார்கள். அதன்பிறகு, பரமண்டல ஜெபத்தை ஒன்றாகச் சேர்ந்து சொன்னார்கள்.
சிலர் தங்கியிருந்த இடம் வெகு தொலைவில் இருந்ததால் மதிய உணவிற்காக வீட்டுக்குச் செல்ல முடியாதிருந்தது. எனவே உணவு வாங்குவதற்காக அவர்களுக்கு ஒரு ஷில்லிங்கும், சிக்ஸ்பென்ஸும் (15 தென் ஆப்பிரிக்க சென்ட்கள்) கொடுக்கப்பட்டன. அதைக் கொண்டு அவர்களால் ரயில் நிலைய உணவகத்தில் ஒரு பிளேட் உருளைக்கிழங்கு மசியலையும் சிறு கொத்துக்கறி சாசேஜையும் வாங்க முடிந்தது; அல்லது ஒரு ரொட்டியையும், கொஞ்சம் பழங்களையும் வாங்க முடிந்தது.
அச்சுப்பணியில் உதவுவதற்காக அதில் திறம்பட்டவரான ஆன்ட்ரூ
ஜேக் 1935-ல் கேப் டவுனில் இருந்த கிளை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டார். அவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்; ஒல்லியாக இருப்பார்; பளீர் புன்னகைக்குச் சொந்தக்காரர். முன்னதாக, லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா ஆகிய பால்டிக் தேசங்களில் முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டிருந்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு அவர் வந்த பிறகு, அச்சிடுவது சம்பந்தமாக கூடுதலான சாதனங்களைப் பெற்றார். சீக்கிரத்தில், தனியாளாக நின்று அச்சுவேலைகளை முழு வீச்சில் தொடங்கினார். தென் ஆப்பிரிக்காவில் 1937-ஆம் ஆண்டு ஃப்ரான்டெக்ஸ் என்ற முதல் தானியங்கி அச்சு இயந்திரம் நிறுவப்பட்டது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் லட்சக்கணக்கான கைப்பிரதிகளையும், படிவங்களையும், பத்திரிகைகளையும் அதன் உதவியுடன் அச்சிட முடிந்துள்ளது.ஆன்ட்ரூ தன் வாழ்நாளின் மீதி காலம் முழுவதும் தென் ஆப்பிரிக்க பெத்தேலில் சேவை செய்தார். வயதான காலத்திலும் ஊழியத்தில் முழுமையாக ஈடுபடுவதன் மூலம் பெத்தேல் குடும்பத்திற்கு சிறந்த முன்மாதிரியாக இருந்தார். அபிஷேகம் செய்யப்பட்டவரான இந்த உண்மையுள்ள சகோதரர் தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையை 1984-ல் முடித்தார். அப்போது அவருக்கு வயது 89. அவர் யெகோவாவின் சேவையில் 58 வருடங்களை செலவிட்டிருந்தார்.
போர்க்காலங்களில் அமோக வளர்ச்சி
இரண்டாம் உலகப் போரின்போது ஆப்பிரிக்காவிலும் இத்தாலியிலும் தென் ஆப்பிரிக்கர்கள் அநேகர் போரில் கலந்துகொண்டபோதிலும், ஐரோப்பா பாதிக்கப்பட்ட அளவுக்கு தென் ஆப்பிரிக்கா பாதிக்கப்படவில்லை. மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காகவும் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பதற்காகவும் இந்தப் போர் குறித்து அதிகளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. அச்சமயத்தில் மக்கள் மத்தியில் தேசபக்தி அலை அடித்துக்கொண்டிருந்தபோதும் 1940 ஊழிய ஆண்டின் முடிவில் 881 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலை எட்டப்பட்டது. முந்தைய வருடத்தைக் காட்டிலும் இது 58.7 சதவீத அதிகரிப்பாகும். அவ்வருடத்தின் பிரஸ்தாபிகளின் உச்சநிலை 555 ஆக இருந்தது.
ஜனவரி 1939-ல் ஆறுதல் (இப்போது விழித்தெழு!) பத்திரிகை ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் முதன்முறையாக பிரசுரிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் யெகோவாவின் சாட்சிகளால் அச்சிடப்பட்ட முதல் பத்திரிகையும் இதுவே. இப்பத்திரிகைக்கு கையால் அச்சுக்கோர்க்கப்பட்டது; இதற்கு அதிக நேரம் எடுத்தது. விரைவிலேயே காவற்கோபுரம் பத்திரிகையையும் ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் பிரசுரிப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. ஐரோப்பாவில் எதிர்காலத்தில் நிகழவிருந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது, இத்தீர்மானம் மிகச் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டது என்றே சொல்லலாம். ஆனால், சகோதரர்கள் அப்போது அதை உணரவில்லை. லைனடைப் மெஷினும் ஃபோல்டிங் மெஷினும் நிறுவப்பட்டன. ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் காவற்கோபுர பத்திரிகையின் முதல் பிரதி ஜூன் 1, 1940-ல் வெளியானது.
அதுவரை, ஆப்பிரிக்கான்ஸ் வாசகருக்காக நெதர்லாந்திலிருந்து டச் மொழி காவற்கோபுரத்தை வரவழைத்துக் கொண்டிருந்தார்கள்; ஏனெனில், இவ்விரு மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. ஆனால், ஹிட்லர் நெதர்லாந்தை முற்றுகையிட்டதால் 1940-ஆம் ஆண்டு மே மாதத்தில் நெதர்லாந்து கிளை அலுவலகம் திடீரென மூடப்பட்டது. என்றபோதிலும், காவற்கோபுரம் பத்திரிகையை ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் அச்சிடும் வேலை ஏற்கெனவே தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியிருந்ததால், சகோதரர்கள் ஓர் இதழைக்கூட தவறவிடவில்லை. ஒவ்வொரு
மாதமும் கிட்டத்தட்ட 17,000 பத்திரிகைகள் வரை விநியோகிக்கப்பட்டன.தணிக்கையின் மத்தியிலும் வளர்ச்சி
கிறிஸ்தவமண்டல மதத் தலைவர்களிடம் இருந்து வந்த நெருக்கடி, நம்முடைய நடுநிலைமையைக் கண்டு அரசாங்கத்திற்கு ஏற்பட்ட கலக்கம் ஆகியவற்றின் காரணமாக, காவற்கோபுரம், ஆறுதல் ஆகிய பத்திரிகைகளின் சந்தா பிரதிகள் தணிக்கை அதிகாரிகளால் 1940-ல் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தப் பத்திரிகைகள் தடை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் செய்யப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வந்த பத்திரிகைகளும் மற்ற பிரசுரங்களும் அங்கு வந்து சேர்ந்ததுமே கைப்பற்றப்பட்டன.
என்றாலும், சகோதரர்களுக்கு சரியான நேரத்தில் ஆன்மீக உணவு தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருந்தது. காவற்கோபுரத்தின் ஆங்கில இதழ் ஒன்று எப்படியாவது கிளை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துவிடும். அங்கே அது அச்சுக்கோர்க்கப்பட்டு அச்சிடப்படும். ஜார்ஜ் ஃபிலிப்ஸ் பின்வருமாறு எழுதினார்: “தடை அமலில் இருந்தபோது, . . . தம் மக்கள்மீது மிக அருமையான விதத்தில் யெகோவா காட்டுகிற கனிவான அக்கறையையும், பாதுகாப்பையும் நேரடியாக உணர்ந்தோம். காவற்கோபுரத்தின் ஓர் இதழைக்கூட நாங்கள் தவறவிடவில்லை. பெரும்பாலும் ஓர் இதழின் ஒரேயொரு பிரதி மட்டுமாவது எப்படியோ ‘தப்பித்து’ எங்கள் கைக்கு வந்துசேர்ந்தது. சில சமயங்களில் வட அல்லது தென் ரோடீஷியாவிலோ [இப்போது ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே] போர்ச்சுகீஸியக் கிழக்கு ஆப்பிரிக்காவிலோ [தற்போது மொசம்பிக்] தென் ஆப்பிரிக்க ஒதுக்குப்புற பண்ணையிலோ இருக்கும் சந்தாதாரர் மூலமாக அது கிடைத்தது. அல்லது, கேப் டவுன் வழியாகச் செல்கிற கப்பலில் வரும் பயணியின் மூலமாக அது கிடைத்தது.”
ஆகஸ்ட் 1941-ல் கிளை அலுவலகத்திலிருந்து வெளியே செல்லும் எல்லா கடிதங்களும் எவ்வித விளக்கமும் இன்றி தணிக்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. அந்த வருடத்தின் பிற்பகுதியில், அமைப்பின் பிரசுரங்கள் அனைத்தையும் நாட்டிலிருந்து கைப்பற்றும்படி உள்துறை அமைச்சர் ஆணையிட்டார். ஒருநாள் காலை பத்து மணிக்கு, குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் பிரசுரங்கள் அனைத்தையும் அள்ளிச் செல்வதற்காக ட்ரக்குகளை எடுத்துக்கொண்டு கிளை அலுவலகத்திற்கு வந்து விட்டார்கள். சகோதரர் ஃபிலிப்ஸ் அவர்கள் கொண்டுவந்த வாரண்டைப் படித்துப் பார்த்தார். அது விதிமுறைகளுக்கு இசைவாக இல்லாதிருந்ததைக் கண்டுபிடித்தார். அதாவது, அவர்கள் கைப்பற்றவிருந்த புத்தகங்கள் பெயர்வாரியாக பட்டியலிடப்படவில்லை. ஆனால், அவ்வாறு பட்டியலிடப்பட்டிருக்க வேண்டுமென அரசினர் செய்தியிதழ் தேவைப்படுத்தியது.
சகோதரர் ஃபிலிப்ஸ் புலனாய்வு அதிகாரிகளை கொஞ்ச நேரம் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, வழக்கறிஞர் ஒருவரைத் தொடர்பு கொண்டார். பிரசுரங்களை பறிமுதல் செய்யாதபடி உள்துறை அமைச்சருக்குத் தடை விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்திற்கு அவசரமாக மனு தாக்கல் செய்தார். அதற்குப் பலன் இருந்தது. மதியத்திற்குள் தடையுத்தரவு பெறப்பட்டது. அதனால், போலீஸார் வெறுங்கையோடு திரும்பினார்கள். ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்த அமைச்சர் ஆணையை ரத்து செய்தார். நம்முடைய சட்ட செலவுகளுக்கான பணத்தையும் கட்டினார்.
நம்முடைய பத்திரிகைகளைத் தடை செய்தது தொடர்பாக சட்டப்படியான போராட்டம் சில ஆண்டுகளுக்கு நீடித்தது. சகோதரர்கள் பிரசுரங்களை தங்கள் வீடுகளில் ஒளித்து வைத்தார்கள். ஊழியத்தில் பயன்படுத்துவதற்கு மிகக் குறைவான பிரசுரங்களே இருந்தபோதிலும், அதை அவர்கள் ஞானமாக பயன்படுத்தினார்கள். பைபிளைப் படிக்க விரும்பியவர்களுக்கு அவர்கள் புத்தகங்களை கடனாகவே கொடுத்துவந்தார்கள். இச்சமயத்தில் அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
1943-ன் இறுதியில், புதிய உள்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டார். தடையை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்முறை அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1944-ன் ஆரம்பத்தில் தடை நீக்கப்பட்டது. அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டிருந்த அதிகளவான பிரசுரங்கள் கிளை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன.
ராஜ்ய பிரசங்க வேலையை நிறுத்துவதற்கு மெய் வணக்கத்தை எதிர்த்தவர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியடைந்தனவா? யெகோவா
தம்முடைய உண்மையுள்ள ஜனங்கள் ஈடுபாட்டுடன் செய்த ஊழியத்தை ஆசீர்வதித்தார் என்பதை 1945 ஊழிய ஆண்டு அறிக்கை காட்டியது. ஏனெனில், முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு பிரசங்க வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. சராசரியாக 2,991 பிரஸ்தாபிகள் 3,70,264 பிரசுரங்களை அளித்திருந்தனர்; 4,777 பைபிள் படிப்புகளை நடத்தினர். 1940-ல் உச்சநிலையாக 881 பிரஸ்தாபிகளே இருந்தனர் என்பதைக் கவனிக்கும்போது, இது மிகப்பெரிய அதிகரிப்பு என்பது தெரிய வருகிறது.தேவராஜ்ய பயிற்சியின் பலன்கள்
தேவராஜ்ய ஊழியத்திற்கான பயிற்சி (இப்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது) 1943-ல் ஆரம்பிக்கப்பட்டது. பொதுப் பேச்சாளர்களாகத் தகுதிபெற அநேக சகோதரர்களுக்கு இப்பள்ளி பயிற்சியளித்தது. வெளி ஊழியத்தில் திறம்பட்டவர்களாக இருக்கவும் அதிகமானோருக்கு இப்பள்ளி உதவியது. 1945-க்குள் போதுமான அளவு பயற்சிபெற்ற பேச்சாளர்கள் இருந்தார்கள். பொதுக் கூட்டங்களைப்
பிரபலப்படுத்தும் பணி துவங்கியது. சகோதரர்கள் பொதுப் பேச்சுகளை கைப்பிரதிகள் மூலமாகவும், விளம்பர அட்டைகள் மூலமாகவும் விளம்பரப்படுத்தினார்கள்.பிட் வென்ட்சல் c அச்சமயத்தில் ஓர் இளம் பயனியராக இருந்தார். அந்த ஆரம்ப காலங்களை நினைவுகூர்ந்து அவர் பின்வருமாறு எழுதினார்: “நான் ஃப்ரேனஜிங் என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டேன். என்னுடைய பயனியர் பார்ட்னராக ஃப்ரான்ஸ் மல்லர் அனுப்பப்பட்டார். ஜூலை 1945-ல் பொதுக் கூட்டத்தை நாங்கள் விளம்பரப்படுத்துவதற்கு முன்னர், கொடுக்கப்பட வேண்டிய நான்கு பேச்சுகளில் இரண்டைத் தயாரித்தேன். தினமும் மதிய இடைவேளையின்போது, ஆற்றுப்பக்கம் சென்று, ஓடும் நதியிடமும், நிற்கும் மரங்களிடமும் ஒரு மணிநேரம் பேசுவேன். மக்கள் கூட்டத்திற்கு முன்பாக பொதுப் பேச்சைக் கொடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கை வரும்வரையில் ஒரு மாதத்திற்கு இப்படிப் பேசிப் பழகினேன்.” ஃப்ரேனஜிங்கில் முதன்முதல் கொடுக்கப்பட்ட பேச்சிற்கு, ஆர்வம் காட்டிய 37 பேர் வந்திருந்தார்கள். இது பிற்பாடு உருவான சபைக்கு அடித்தளமாக அமைந்தது.
பல வருடங்களுக்கு பிட்டும் அவரது மனைவி லீனாவும் பயண ஊழியத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன் பின்னர், அவர்கள் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டனர். அவர் தற்போது கிளை அலுவலகக் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். ஊழியத்தில் அவர் இன்னமும் வைராக்கியமாக ஈடுபட்டு வருகிறார். பைபிளை ஊக்கமாகப் படிப்பதிலும் ஈடுபடுகிறார். லீனா 59 ஆண்டுகளை முழு நேர ஊழியத்தில் செலவிட்ட பிறகு, பிப்ரவரி 12, 2004-ல் இறந்தார்.
அன்பான உதவி அளிக்கப்படுகிறது
புரூக்ளின் தலைமையகத்தின் வழிநடத்துதலின் கீழ் செய்யப்பட்ட மற்றொரு ஏற்பாடு என்னவென்றால், ‘சகோதரர்களுக்கு ஊழியர்கள்’ என்று அழைக்கப்படும் ஆட்களை நியமித்ததே. இன்றுள்ள வட்டாரக் கண்காணிகளுக்கு இவர்கள் முன்னோடிகளாக இருந்தனர். அப்படி நியமிக்கப்பட்ட ஆட்கள் மணமாகாதவர்களாக இருந்தனர். நல்ல ஆரோக்கியமுள்ளவர்களாக இருந்தனர். சுறுசுறுப்பாகச் செயல்படுவதற்குத் தேவையான பலமுள்ளவர்களாக இருந்தனர்.
முதலில், இவர்கள் பெரிய சபைகளை இரண்டு அல்லது மூன்று நாட்கள் விஜயம் செய்தனர். சிறு சபைகளில் ஒரு நாள் மட்டுமே செலவிட்டனர். இவ்வாறாக, நியமிக்கப்பட்ட சகோதரர்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும் அவர்கள் பொது போக்குவரத்து வாகனங்களையே பயன்படுத்தினர். இதனால் பஸ், ரயில் ஆகியவற்றை இரவு நேரத்தில் தாமதமாகப் பிடிக்கவும் நேர்ந்தது. அப்படி
விஜயம் செய்தபோது, சபை பதிவுகளை அவர்கள் கவனமாக ஆராய்ந்தனர். இருந்தாலும், சகோதரர்களுடன் ஊழியத்தில் நேரம் செலவிட்டு, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதே அவர்களுடைய முக்கியக் குறிக்கோளாக இருந்தது.‘சகோதரர்களுக்கு ஊழியராக’ இருந்தவர்களில் ஒருவர் கெர்ட் நெல் என்பவர். அவர் 1943-ல் தன் நியமிப்பைப் பெற்றார். 1934-ல் வட ட்ரான்ஸ்வாலில் பள்ளி ஆசிரியராக இருந்த சமயத்தில் அவருக்கு சத்தியம் கிடைத்தது. அவர் அநேக பிரஸ்தாபிகளுக்கு உதவி செய்தார். அவருடைய உண்மையுள்ள சேவையை இன்றைக்கும் அநேகர் நினைவுகூருகிறார்கள். அவர் உயரமாக, ஒல்லியாக இருப்பார். பார்ப்பதற்கு கண்டிப்பானவராகத் தெரிவார். சத்தியத்திற்காக பக்திவைராக்கியத்துடன் போராடியவர். அவருடைய அசாதாரணமான நினைவாற்றலைப்பற்றி அநேகர் அறிந்திருந்தனர். அவர் மக்களை வெகுவாக நேசித்தார். காலை ஏழு மணிக்கு ஆரம்பித்து இரவு ஏழு அல்லது எட்டு மணி வரை நிறுத்தாமல் ஊழியம் செய்வார். அவர் பயணக் கண்காணியாக இருந்தபோது, இரவுபகல் பாராமல் ரயிலில் பயணிப்பார், சபையின் அளவுக்கேற்ப சில நாட்கள் அங்கே செலவிடுவார். அதன்பின், அடுத்த சபைக்குச் செல்வார். இதையே வாராவாரம் தொடருவார். ஆப்பிரிக்கான்ஸ்
மொழிபெயர்ப்பாளராக சேவை செய்ய அவர் 1946-ல் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டார். 1991-ல் மரிக்கும்வரை அவர் அங்கே உண்மையுடன் சேவை செய்தார். தென் ஆப்பிரிக்க பெத்தேலில் சேவை செய்த அபிஷேகம் செய்யப்பட்டோரில் அவர்தான் கடைசி நபர். 1982-க்கும் 1985-க்கும் இடையே மற்ற உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்டோரான ஜார்ஜ் ஃபிலிப்ஸ், ஆன்ட்ரூ ஜேக், ஜெரால்ட் காரார்ட் ஆகியோர் தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்திருந்தனர்.அவர்கள் தங்களையே தாராளமாக அளித்தனர்
பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் சபையை ஆன்மீக ரீதியில் பலப்படுத்துவதற்கு தங்களையே மனமுவந்து அளிக்கிறார்கள்; இவர்களுடைய சேவையை யெகோவாவின் ஊழியர்கள் மதிக்கிறார்கள். அதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். உதாரணமாக, லூக் த்லாத்லா 1965-ல் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். தற்போது ஒழுங்கான பயனியராக சேவை செய்கிறார். அவர் பின்வருமாறு கூறினார்: “இப்போது 2005-ல் எனக்கு வயது 79. என் மனைவியின் வயது 68. இருந்தாலும், நாங்கள் மலைகளில் ஏறி இறங்கி, ஆறுகளைக் கடந்து எங்கள் பிராந்தியத்தில் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறோம். நாங்கள் கிட்டத்தட்ட 50 வருடங்களை ஊழியத்தில் செலவிட்டிருக்கிறோம்.”
ஆன்ட்ரூ மாசான்டொ 1954-ல் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். அவர் கூறுகிறார்: “1965-ல் நான் போட்ஸ்வானாவுக்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். அது கிட்டத்தட்ட ஒரு மிஷனரி நியமிப்பைப் போன்றே இருந்தது. அந்நாட்டில் பஞ்சம் நிலவியது. அங்கு மூன்று ஆண்டுகளுக்கு மழையே பெய்திருக்கவில்லை. சாப்பிடாமல் படுக்கைக்குப் போவதும், காலையில் எழுந்து சாப்பிடாமல் ஊழியத்திற்குப் போவதும் எப்படியிருக்கும் என்பதை நானும் என் மனைவி ஜார்ஜீனாவும் அனுபவ ரீதியில் புரிந்துகொண்டோம். பெரும்பாலும், மதிய உணவை மட்டுமே சாப்பிட்டோம்.
“தென் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பியதும்,
மாவட்டக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். அர்னஸ்ட் பான்டசக் எனக்குப் பயிற்சியளித்தார். பயிற்சி முடிந்ததும், கடைசியாக அவர் என்னிடம் சொன்னது இதுதான்: ‘சகோதரர்களுக்கு மேலாக உங்களை உயர்த்திக்கொள்ளாதீர்கள். மாறாக, நன்கு விளைந்திருக்கும் முதிர்ந்த கதிர் தன் தலையைத் தாழ்த்தியிருப்பது போலவே நீங்களும் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்.’”முதல் வட்டார மாநாடு
ஏப்ரல் 1947-ல் தென் ஆப்பிரிக்காவின் முதல் வட்டார மாநாடு டர்பனில் நடத்தப்பட்டது. கிலியட் பள்ளியின் ஐந்தாவது வகுப்பைச் சேர்ந்தவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு வந்த முதல் மிஷனரியுமான மில்டன் பார்ட்லட், இம்மாநாட்டில் கலந்து கொண்ட சகோதரர்களைப் பற்றி இவ்வாறு கூறினார்: “கறுப்பர் இனத்தைச் சேர்ந்த சகோதரர்களின் மனப்பான்மையைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன். அவர்கள் ரொம்பவே சுத்தமாக, அமைதியாக இருந்தார்கள். சத்தியத்தை இன்னுமதிகமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் அவர்களுக்கு இருந்தன. ஊழியத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வம் மேலோங்கி இருந்தது.”
கறுப்பரிடையே அதிக ஆர்வம் தென்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு அதிக உதவி அளிக்கப்பட்டது. ஜனவரி 1, 1949-ல் ஜூலு மொழியில் காவற்கோபுரம் முதன்முதலில் வெளியானது. கையால் இயக்கப்படும் டூப்ளிகேட்டிங் மெஷினைக் கொண்டு கேப் டவுனில் உள்ள கிளை அலுவலகத்தில் அது அச்சிடப்பட்டது. இன்று கிடைக்கும் பத்திரிகைகளைப் போல அது பளிச்சென்று பல வண்ணத்தில் கிடைக்கவில்லை. இருந்தாலும், மதிப்புமிக்க ஆன்மீக உணவை அது அளித்தது. 1950-ல் ஆறு மொழிகளில் எழுத்தறிவு வகுப்புகள் நடத்தப்பட்டன. கடவுளுடைய வார்த்தையை தாங்களாகவே படிக்க இந்த வகுப்புகள் ஆர்வமுள்ள நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகளுக்கு உதவின.
பிரசங்க வேலை முன்னேற்றம் அடைந்தது. ஆகையால், கூட்டங்களை நடத்துவதற்குத் தகுந்த இடங்கள் தேவைப்பட்டன. கேப் டவுனுக்குப் பக்கத்திலிருந்த ஸ்ட்ரான்ட் என்ற இடத்திற்கு 1948-ல் பயனியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் முதல் ராஜ்ய மன்றத்தைக் கட்டும் வேலையை ஒழுங்கமைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. உள்ளூர் சகோதரி ஒருவர் அதற்கு நிதியுதவி அளித்தார். ஜார்ஜ் ஃபிலிப்ஸ் பின்வருமாறு கூறினார்: “இன்னும் அதிக ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு சகோதரர்களை உற்சாகப்படுத்துவதற்காக, இந்தப் புதிய மன்றத்திற்கு சக்கரங்களைக் கட்டி, நாடு முழுக்க கொண்டு செல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.” நாடு முழுக்க ஒழுங்கமைப்பட்ட ராஜ்ய மன்ற கட்டுமானத்தை ஆரம்பிக்க அநேக வருடங்கள் எடுக்கவிருந்தது.
இந்தியர்களின் பிரதிபலிப்பு ஊக்கமூட்டியது
நடாலில் இருந்த கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, 1860-க்கும் 1911-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டனர். தங்கள் வேலை ஒப்பந்தம் முடிந்த பின்னரும் அநேகர் அங்கேயே தங்கிவிட்டனர். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலிருந்த இந்தியர்—தற்போது 10 லட்சம் இந்தியர்கள்—அந்நாட்டில் தங்கிவிட்டனர். 1950-களின் ஆரம்பத்தில், இந்தியர் மத்தியில் பைபிள் சத்தியத்திற்கான ஆர்வம் அதிகரித்தது.
வேலு நாயக்கர் 1915-ல் பிறந்தவர். ஒன்பது பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் அவர் நான்காவது பிள்ளை. அவரது பெற்றோர் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்தனர். அவர்கள் இந்து மதத்தில் பக்தியுடன் இருந்தவர்கள். பள்ளியில் நடத்தப்பட்ட பைபிள் வகுப்புகள் வேலுவுடைய ஆர்வத்தைத் தூண்டின. வேலு ஓர் இளைஞராக இருந்த சமயத்தில், யாரோ அவருக்கு பைபிளைக் கொடுத்தார்கள். அதை அவர் தினமும் படித்தார். நான்கு ஆண்டுகளில் படித்து முடித்துவிட்டார். அவர் பின்வருமாறு எழுதினார்: “மத்தேயு 5:6 எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒருவர் சத்தியத்திற்காகவும், சரியானதைச் செய்வதற்காகவும் ஆர்வத்தோடு இருந்தால், அதைக் கண்டு கடவுள் சந்தோஷப்படுகிறார் என்பதை அதிலிருந்து தெரிந்துகொண்டேன்.”
கடைசியாக, யெகோவாவின் சாட்சி ஒருவர் வேலுவைச் சந்தித்து, பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார். 1954-ல் வேலு முழுக்காட்டப்பட்டார். தென் ஆப்பிரிக்க இந்தியர்களில் முதலாவதாக முழுக்காட்டுதல் எடுத்தவர் அவரே. கௌட்டெங் மாகாணத்தில் இருந்த அக்டன்வெல் நகரில்தான் வேலு வசித்து வந்தார். அங்கிருந்த இந்துக்கள் யெகோவாவின் சாட்சிகளைக் கடுமையாக எதிர்த்து வந்தனர். அங்கிருந்த முக்கியஸ்தர் ஒருவர் வேலுவைக் கொல்லப்போவதாகவும் மிரட்டினார். பைபிள்
சத்தியத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்ததால், உலர் சலவை நிலையத்தின் மேனேஜராக அவர் செய்துவந்த வேலை பறிபோனது. என்றாலும், 1981-ல் மரிக்கும்வரை அவர் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்தார். அவருடைய நல்ல முன்மாதிரிக்கு பலன் இருந்தது. அவருடைய குடும்ப அங்கத்தினர்களில், (திருமணத்தின் மூலமாகப் பெற்ற சொந்தபந்தங்கள் உட்பட) நான்கு தலைமுறையைச் சேர்ந்த 190-க்கும் அதிகமானவர்கள் யெகோவாவைச் சேவித்து வருகிறார்கள்.கோபால் குப்புசாமி 14 வயதில் இருந்தபோது தன்னுடைய மாமா வேலுவிடமிருந்து சத்தியத்தைப் பற்றி முதன்முதலில் கேட்டார். “சின்ன பிள்ளைகளாயிருந்த எங்களிடம் பைபிளைப்பற்றி வேலு மாமா பேசினார். ஆனால், பைபிள் படிப்பு எதையும் எனக்கு நடத்தவில்லை” என்று அவர் சொல்கிறார். “இந்துவாக இருந்த எனக்கு பைபிளைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால், அதில் நான் வாசித்த சில விஷயங்கள் அர்த்தமுள்ளவையாகத் தெரிந்தன. ஒருநாள், வேலு மாமா சபை புத்தகப் படிப்புக்குச் செல்வதைப் பார்த்தேன். நானும் வரலாமா என்று அவரிடம் கேட்டேன். அவரும் சரியென்றார். அதிலிருந்து தொடர்ந்து கூட்டங்களில் கலந்துகொண்டு வருகிறேன். பைபிளைப்பற்றி நான் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆகவே, பொது நூலகத்திற்குச் சென்று, யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் சிலவற்றை எடுத்துப் படித்தேன். என்னுடைய குடும்பத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும், சங்கீதம் 27:10 சொல்வதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டேன். அது இவ்வாறு சொல்கிறது: ‘என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.’ 1955-ல் என்னுடைய 15-வது வயதில் முழுக்காட்டப்பட்டேன்.”
கோபால் தற்போது அவர் இருக்கும் சபையில் நடத்தும் கண்காணியாகச் சேவை செய்கிறார். அவருடைய மனைவி சுசீலாவும் சத்தியத்தில் இருக்கிறார். சுமார் 150 பேர் யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களாக ஆவதற்கு அவர்கள் உதவியிருக்கிறார்கள். அவர்களால் எப்படி இது முடிந்தது என்று கேட்டபோது, அவர் பின்வருமாறு சொன்னார்: “எங்கள் பகுதியில் குடும்ப நபர்கள் அநேகர் இருந்தார்கள். அவர்களிடம் சாட்சி கொடுத்தேன். அவர்களில் அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். அதோடு, நான் சொந்தமாக வியாபாரத்தை நடத்தியதால் ஊழியத்தில் செலவிட கொஞ்சம் ஓய்வுநேரமும் எனக்குக் கிடைத்தது. நான்கு வருடங்களுக்கு பயனியர் ஊழியம் செய்தேன். ஊழியத்தில் அதிக சிரத்தையுடன் ஈடுபட்டேன். ஆர்வம் காட்டியவர்களை மறுபடியும் சென்று சந்திப்பதற்கு முழு முயற்சி எடுத்தேன்.”
அன்பும் பொறுமையும் பலனளித்தன
டாரின் கில்கோர், இஸபெல்லா எலரே ஆகியோர் முறையே 1956-லும் 1957-லும் கிலியட் பள்ளியில் பட்டம் பெற்றனர். டர்பனின் புறநகர்ப் பகுதியான சாட்ஸ்வர்த்தில் இருந்த இந்தியர்கள் மத்தியில் அவர்கள் 24 ஆண்டுகள் சேவை செய்தனர்.
அந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்வது எப்படி இருந்தது என்பதை டாரின் சொல்கிறார்: “எங்களுக்குப் பொறுமை தேவைப்பட்டது. சில மக்கள் ஆதாம், ஏவாளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கவே இல்லை. அவர்கள் உபசரிக்கும் குணமுள்ளவர்களாக இருந்தனர். வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துப் பேசுவது சரியல்ல என இந்துக்கள் நினைக்கிறார்கள். ‘டீ குடித்துவிட்டுப் போங்கள்’ என்று அவர்கள் சொல்வார்கள். அதாவது, நாங்கள் அடுத்த வீட்டுக்குப் போவதற்கு முன்னால் டீ குடிக்க வேண்டுமென்று அர்த்தம். இப்படி டீ குடித்து, குடித்து, நாங்கள் டீயில் மிதப்பது போல உணர்ந்தோம். ஒவ்வொரு முறையும் ஓர் இந்தியர் தன்னுடைய ஆழமான மத நம்பிக்கைகளை விட்டுவிட்டு, யெகோவாவின் வணக்கத்தாராக ஆகும்போது எங்களுக்கு அது ஓர் அற்புதத்தைப்போல இருந்தது.”
இஸபெல்லா இந்த அனுபவத்தைக் கூறினார்: “ஊழியத்தில் ஒரு நபரிடம் பேசினேன். அவர் பத்திரிகைகளைப் பெற்றுக்கொண்டார். அவருடைய மனைவி தர்ஷினி அப்போதுதான் சர்ச்சிலிருந்து திரும்பியிருந்தாள். அவளும் தன் கணவரோடு சேர்ந்து நாங்கள் பேசுவதைக் கவனிக்க ஆரம்பித்தாள். கையில் தன் குழந்தையை வைத்திருந்தாள். நாங்கள் மிக அருமையாகக் கலந்துரையாடினோம். அவர்களை மறுபடியும் வந்து சந்திப்பதாகக் கூறினேன். ஆனால், நாங்கள் சென்றபோதெல்லாம் தர்ஷினி
வீட்டில் இல்லை. நாங்கள் வரும்போது வீட்டில் இருக்க வேண்டாமென்று அவளுடைய பாஸ்டர் சொல்லிவிட்டதாக பிற்பாடு அவள் சொன்னாள். அப்படிச் செய்தால், அவளுக்கு ஆர்வம் இல்லையென்று நான் நினைத்துக்கொள்வேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். என் குடும்பத்தாரைச் சந்திப்பதற்காக நான் இங்கிலாந்துக்குச் சென்றேன். அங்கிருந்தபோது, நான் தர்ஷினியைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். தென் ஆப்பிரிக்கா திரும்பியதும், அவளைச் சந்திப்பதற்காகச் சென்றேன். நான் எங்கே சென்றிருந்தேன் எனக் கேட்டாள். ‘எனக்கு ஆர்வமில்லையென்று நீங்கள் முடிவுசெய்திருப்பீர்கள் என்றே நம்பினேன். உங்களை மறுபடியும் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்’ என்றாள். அவளுடைய கணவர் பைபிள் படிப்பில் கலந்துகொள்ளவில்லை என்றாலும், தர்ஷினிக்குப் படிப்பு நடத்த ஆரம்பித்தோம். அவள் கவனமாகப் படித்து, சீக்கிரத்திலேயே முழுக்காட்டுதலும் பெற்றாள்.“திருமணமான பெண்கள் தாலி அணிவது அப்பகுதியில் இருந்த இந்துக்களுடைய வழிபாட்டின் ஒரு பாகமாக இருந்தது. கணவன் இறந்தால் மட்டுமே அதை அவள் கழற்ற வேண்டும். தர்ஷினி பிரசங்க வேலையில் ஈடுபட விரும்பியபோது, தாலியைக் கழற்ற வேண்டுமென்பதைப் புரிந்துகொண்டாள். தான் என்ன செய்ய வேண்டுமென என்னிடம் கேட்டாள். அவளுடைய கணவரிடம் அதைப் பற்றி கேட்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும்படி சொன்னேன். அவளும் தன் கணவரிடம் கேட்டாள். அவரோ சம்மதிக்கவில்லை. கொஞ்ச காலம் பொறுமையாக இருக்கும்படியும், அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது மறுபடியும் கேட்கும்படியும் தர்ஷினியிடம் சொன்னேன். தாலியைக் கழற்றுவதற்கு அவர் காலப்போக்கில் சம்மதித்தார். சாதுரியமாக நடந்துகொள்ளும்படி எங்கள் பைபிள் மாணாக்கரை ஊக்குவித்தோம். இந்து போதனைகளுக்கு மரியாதை காட்டும் அதேசமயத்தில், பைபிள் சத்தியத்தின் சம்பந்தமாக உறுதியான நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்கு உதவினோம். இதனால் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் உணர்ச்சிகளை அநாவசியமாகப் புண்படுத்துவதை அவர்கள் தவிர்த்தார்கள். பைபிள் மாணாக்கர் மதம் மாறியபோதும் அதை ஏற்றுக்கொள்வது அவர்களுக்குக் கடினமாக இருக்கவில்லை.”
பல வருடங்களுக்கு மிஷனரியாக தொடர்ந்து இருக்க எது அவர்களுக்கு உதவியது என்று கேட்டபோது, டாரின் பின்வருமாறு பதிலளித்தார்: “நாங்கள் மக்களை நேசிக்க ஆரம்பித்தோம். எங்கள் நியமிப்பில் மூழ்கிவிட்டோம். அதை முழுமையாக அனுபவித்தோம்.” இஸபெல்லா கூடுதலாகச் சொல்கிறார்: “நெருங்கிய நண்பர்கள் அநேகரைச் சம்பாதித்தோம். எங்களுடைய நியமிப்பை விட்டு வரும்போது மனதுக்கு
ரொம்பவே கஷ்டமாக இருந்தது. என்ன செய்வது, எங்கள் உடல்நிலை இப்போது ஒத்துழைப்பதில்லையே! பெத்தேலில் சேவை செய்ய வரும்படி கொடுக்கப்பட்ட கனிவான அழைப்பை நாங்கள் நன்றியோடு ஏற்றுக்கொண்டோம்.” இஸபெல்லா டிசம்பர் 22, 2003-ல் இறந்துவிட்டார்.மற்ற மிஷனரிகளுக்கும், அவர்களது முதுமையின் காரணமாக சாட்ஸ்வர்த்தில் தொடர்ந்து சேவை செய்து கொண்டே மிஷனரி ஹோமையும் கவனித்துக்கொள்வது கடினமாக இருந்தது. ஆகையால் அவர்களும் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்கள் யாரெனில்: எரிக் குக், மர்டில் குக், மாரீன் ஸ்டேன்பர்க் மற்றும் ரான் ஸ்டீஃபன்ஸ். ரான் தற்போது உயிரோடு இல்லை.
மாபெரும் பணி
புரூக்ளின் தலைமை அலுவலகத்தில் சேவை செய்துவந்த சகோதரர்கள் நேதன் நார், மில்டன் ஹென்ஷல் ஆகியோர் 1948-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு விஜயம் செய்தனர். அப்போது, ஜோஹெனஸ்பர்க் அருகிலிருக்கும் ஈலான்ஸ்ஃபான்டேன் என்ற நகரில் பெத்தேல் வீட்டையும் அச்சகத்தையும் அமைப்பதற்காக இடம் வாங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டம் 1952-ல் கைகூடியது. முதன்முறையாக, பெத்தேல் குடும்பத்திலுள்ள அனைவரும் ஒரே இடத்தில் தங்க முடிந்தது. அச்சுவேலை தொடர்பாக கூடுதல் இயந்திரங்கள் நிறுவப்பட்டன. அதில் ஃப்ளாட்பெட் அச்சு இயந்திரம் ஒன்றும் அடங்கும். காவற்கோபுரம் எட்டு மொழிகளிலும் விழித்தெழு! மூன்று மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்டன.
1959-ல் பெத்தேல் வீடும் அச்சகமும் விரிவாக்கப்பட்டன. விரிவுபடுத்தப்பட்ட இடம் ஏற்கெனவே இருந்த கட்டடத்தைவிடப் பெரிதாயிருந்தது. புதிதாக டிம்சன் அச்சு இயந்திரம் ஒன்று நிறுவப்பட்டது. கிளை அலுவலகத்தின் முதல் ரோட்டரி பிரஸ் இதுவே.
அச்சக வேலைகளில் உதவி செய்வதற்காக கனடாவைச் சேர்ந்த நான்கு இளம் சகோதரர்களை தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லும்படி சகோதரர் நார் கேட்டுக்கொண்டார். பில் மெக்லெலன், டென்னிஸ் லீச், கென் நார்டன், ஜான் கிகாட் ஆகியோரே அவர்கள். 1959 நவம்பரில் அவர்கள் அங்குச் சென்றார்கள். பில் மெக்லெலனும் அவர் மனைவி மெரலினும் இன்றும் தென் ஆப்பிரிக்கா பெத்தேலில் சேவை செய்கிறார்கள். ஜான் கிகாட்டும் அவர் மனைவி லாராவும் நியு யார்க்கில் உள்ள புரூக்ளின் பெத்தேலில் சேவை செய்கிறார்கள். கென் நார்டனும், டென்னிஸ் லீச்சும் தென் ஆப்பிரிக்காவிலேயே இருந்துவிட்டார்கள். அவர்களுக்குத் திருமணமாகி, பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் ராஜ்யம் சம்பந்தமான காரியங்களை முன்னேற்றுவிப்பதில் தொடர்ந்து பங்காற்றுகிறார்கள். கென்னுடைய
பிள்ளைகள் இருவரும் தென் ஆப்பிரிக்கா பெத்தேலில் தற்போது சேவை செய்கிறார்கள்.ராஜ்ய செய்திக்கு தற்போது அந்நாட்டில் அதிகமான ஆர்வம் தென்படுகிறது. அதை கவனித்துக்கொள்வதற்கு, விரிவாக்கப்பட்ட பெத்தேலும், புதிய சாதனங்களும் முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன. 1952-ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 10,000-க்கும் மேலாக இருந்தது. 1959 வாக்கில் அது 16,776-ஆக அதிகரித்தது.
இன ஒதுக்கீட்டின் மத்தியிலும் கிறிஸ்தவ ஒற்றுமை
இன ஒதுக்கீட்டு முறை காரணமாக சகோதரர்கள் அனுபவித்த பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு, அது எப்படி அமல்படுத்தப்பட்டது என்பதை முதலில் தெரிந்துகொள்வோம். கறுப்பர், வெள்ளையர் (ஐரோப்பிய வம்சாவளியினர்), கலப்பினத்தவர், இந்தியர் ஆகியோர் நகரங்களில் உள்ள கட்டடங்களில், அதாவது தொழிற்சாலைகள், அலுவலகங்கள், உணவகங்கள் ஆகியவற்றில் ஒன்றாக வேலை செய்ய சட்டம் அனுமதித்தது. ஆனால் இரவில், ஒவ்வொரு இனத்தவரும் தங்கள் தங்கள் புறநகர்ப் பகுதிக்குச் சென்றுவிட வேண்டும். குடியிருப்புப் பகுதியைப் பொறுத்தவரை ஒவ்வொரு இனத்தாரும் பிரித்து வைக்கப்பட்டனர். வெள்ளையருக்கும் மற்ற இனத்தவருக்கும் தனித்தனி சாப்பாட்டு அறைகளும், பாத்ரூம்களும் ஒவ்வொரு கட்டடத்திலும் இருக்க வேண்டியிருந்தது.
ஈலான்ஸ்ஃபான்டேனில் முதல் கிளை அலுவலகம் கட்டப்பட்டபோது, வெள்ளை இனத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருக்கும் அதே கட்டடத்தில் கறுப்பின, கலப்பின, இந்திய சகோதரர்கள் தங்க அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை. அந்தச் சமயத்தில், பெத்தேலில் பெரும்பாலும் வெள்ளையரே இருந்தார்கள். ஏனெனில் மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்நகரில் வேலை செய்வதற்கான அனுமதி கிடைப்பது கஷ்டமாக இருந்தது. என்றாலும், கறுப்பின, கலப்பின சகோதர சகோதரிகள் 12 பேர் அங்கே இருந்தார்கள். அவர்கள் அந்நாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கிக்கொள்வதற்காக முக்கிய கட்டடத்திற்கு பின்னால் தனியாக ஐந்து அறைகளைக் கட்டிக்கொள்ள அரசாங்கம் அனுமதியளித்தது. இன ஒதுக்கீட்டுச் சட்டங்கள் அதிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டபோது, ஏற்கெனவே அளித்திருந்த அனுமதியையும் அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்டது. ஆகவே, 20 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஆப்பிரிக்க டவுனுக்குப் பயணித்து, ஆண்களுக்கான விடுதியில் அவர்கள் தங்கினார்கள். இதுதான் அவர்களிருந்த இடத்திற்கு மிக அருகிலிருந்த டவுனாகும். கறுப்பின சகோதரிகள் இருவரும் அந்த டவுனில் இருந்த சாட்சிகளுடைய வீடுகளில் தங்கினார்கள்.
பெத்தேலிலிருந்த இந்தச் சகோதர சகோதரிகள் தங்களுடைய வெள்ளைக்கார சகோதரர்களுடன் மெயின் டைனிங் ஹாலில் உட்கார்ந்து சாப்பிடக்கூட சட்டம் அனுமதிக்கவில்லை. இந்தச் சட்டம் கொஞ்சம்கூட மீறப்படக்கூடாது என்பதற்காக உள்ளூர் நகராட்சியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தார்கள். என்றாலும், தனியாகப் பிரிந்து சாப்பிடுவதை வெள்ளைக்கார சகோதரர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆகவே, டைனிங் ஹாலில் பளிச்சென்று இருந்த ஜன்னல் கண்ணாடிகளை அகற்றிவிட்டு, ஒளி ஊடுருவாத ஜன்னல் கண்ணாடிகளைப் பொருத்தினார்கள். இதனால் பெத்தேல் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுசேர்ந்து எந்தத் தொந்தரவுமின்றி சாப்பிட முடிந்தது.
d கிளைக் கண்காணியாகவும் பிற்பாடு கிளைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் சேவை செய்தார்.
1966-ல், தன் மனைவி ஸ்டெல்லாவுடைய உடல்நிலை மோசமடைந்ததால் ஜார்ஜ் ஃபிலிப்ஸ் பெத்தேலைவிட்டுப் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக ஹேரி ஆர்னட் என்ற தகுதிவாய்ந்த சகோதரர் கிளைக் கண்காணியாக நியமிக்கப்பட்டார்; அவர் இரண்டு வருடம் அப்பொறுப்பில் இருந்தார். 1968 முதற்கொண்டு, ஃபிரான்ஸ் மல்லர்ஒரு நீல வெடிகுண்டால் ஏற்பட்ட வளர்ச்சி
நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகம் 1968-ல் நடந்த மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்டது. இது, நீல வெடிகுண்டு என்பதாகப் பிரியமாய் அழைக்கப்பட்டது; இது ஊழியத்தில் சிறந்த ஊக்குவிப்பை அளித்தது. இப்புத்தகத்தை வெளியிடுவதற்கு முன்பெல்லாம் ஷிப்பிங் டிபார்ட்மென்ட் வருடந்தோறும் 90,000 புத்தகங்களை சபைகளுக்கு அனுப்பிக்கொண்டிருந்தது; ஆனால் 1970-ஆம் ஊழிய ஆண்டில் 4,47,000 புத்தகங்களை அனுப்பியது.
1971-ல் சகோதரர் நார் இன்னொரு முறை தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார். இந்தச் சமயத்திற்குள்ளாக, பெத்தேலில் இடவசதி மீண்டும் குறைந்துவிட்டது. பெத்தேல் குடும்பத்தில் 68 பேர் இருந்தார்கள். கூடுதலான கட்டடங்கள் கட்டத் திட்டமிடப்பட்டது; கட்டடப் பணிக்கு உதவ சகோதரர்கள் முன்வந்தார்கள், நன்கொடைகளும் அளித்தார்கள். ஜனவரி 30, 1972-க்குள்ளாக கட்டட வேலை முடிவடைந்தது. மற்றொரு கட்டடம் 1978-ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கட்டட வேலைகளெல்லாம்
யெகோவாவின் ஆதரவு இருப்பதற்கு உற்சாகமூட்டும் உறுதியை அளித்தன; ஏனென்றால், அந்தச் சமயத்தில் கடவுளுடைய ஜனங்கள் அரசாங்க அதிகாரிகளிடமிருந்து அதிகமதிகமான அழுத்தங்களை எதிர்ப்பட்டனர்.நடுநிலைமைக்கு ஒரு சோதனை
மே 1961-ல் பிரிட்டிஷ் பொதுவுடைமை அரசிலிருந்து தென் ஆப்பிரிக்கா விலகி ஒரு குடியரசு நாடானது. அந்தச் சமயத்தில் நாடு முழுக்க அரசியல் கலவரங்கள் நடந்தன, வன்முறைகளும் பெருகின. நிலைமையைக் கட்டுப்படுத்த, அப்போது நடப்பிலிருந்த அரசாங்கம் நாட்டுப்பற்றைத் தூண்டிவிட்டது; இதனால், அதைத் தொடர்ந்த வருடங்களில் யெகோவாவின் சாட்சிகளுக்கு அநேக கஷ்டங்கள் வந்தன.
பல வருடங்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் ராணுவத்தில் சேரவேண்டிய கட்டாயம் அமலில் இருக்கவில்லை. ஆனால், 1960-களின் பிற்பகுதியில் நமிபியாவிலும் அங்கோலாவிலும் ராணுவ நடவடிக்கைகளில் தென் ஆப்பிரிக்கா மும்முரமாக ஈடுபட்டபோது இந்நிலை மாறியது. வெள்ளையர்களான வாட்டசாட்டமான வாலிபர்கள் எல்லாரும் ராணுவத்தில் சேர வேண்டுமென்ற புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு மறுப்புத் தெரிவித்த சகோதரர்கள் 90 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவ்வாறு அடைக்கப்பட்ட சகோதரர்களில் ஒருவர்தான் மைக் மார்க்ஸ்; ராணுவ உடையையும் ஹெல்மட்டையும் அணியும்படி அந்தச் சகோதரர்களுக்கு உத்தரவிடப்பட்டது. சகோதரர் மைக் மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “ராணுவத்தினராக எங்களைக் காட்டிக்கொள்ள விரும்பாததால் அவற்றை அணிய மறுத்தோம். அதனால், கமாண்டர் எங்களுடைய சில உரிமைகளைப் பறித்தார், தனிச் சிறையில் அடைத்தார், அரைகுறையாக சாப்பாடு போட்டார்.” சகோதரர்கள் கடிதம் எழுதுவதற்கோ பெற்றுக்கொள்வதற்கோ மற்றவர்கள் தங்களை வந்து பார்ப்பதற்கோ பைபிளைத் தவிர வேறு எந்தப் புத்தகத்தையும் வைத்திருப்பதற்கோ அனுமதிக்கப்படவில்லை. திருந்தாத சிறைக் கைதிகளுக்குக் கொடுக்கப்படுகிற அரைகுறையான உணவே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதாவது, ஒரு நாளைக்கு பாதி ரொட்டியும் தண்ணீரும் கொடுக்கப்பட்டது. இவ்வாறு இரண்டு நாட்களுக்குக் கொடுக்கப்பட்டது; அதைத் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ராணுவத்தினருக்கு
வழக்கமாகக் கொடுக்கப்படும் உணவு கொடுக்கப்பட்டது. பிறகு, மீண்டும் இரண்டு நாட்களுக்கு ரொட்டியும் தண்ணீரும் கொடுக்கப்பட்டது. வழக்கமாகக் கொடுக்கப்பட்ட அந்த உணவும்கூட போதுமானதாகவும் ருசியானதாகவும் இருக்கவில்லை.சகோதரர்களுடைய உத்தமத்தைக் குலைத்துப்போட எல்லா விதத்திலும் முயற்சி செய்துபார்த்தார்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக சிறிய அறைகளில் அடைக்கப்பட்டார்கள். ஒருசமயம் குளியலறையைப் பயன்படுத்துவதற்குக்கூட அவர்களை அனுமதிக்கவில்லை. மாறாக, ஒவ்வொருவருக்கும் டாய்லட் போவதற்கு ஒரு பக்கெட்டையும் கால் கழுவுவதற்கு ஒரு பக்கெட்டையும் மட்டுமே கொடுத்தார்கள். பிற்பாடு, குளிப்பதற்கு எங்களை அனுமதித்தார்கள்.
கீத் விகல் தன் நினைவிலிருந்து சொல்வதாவது: “ஒருநாள் குளிர் காலத்தின்போது நாங்கள் குளித்து முடித்து வந்ததும், காவலர்கள் எங்களுடைய மெத்தைகளையும் கம்பளி விரிப்புகளையும் எடுத்துவிட்டார்கள். வழக்கமாக நாங்கள் அணியும் உடையைப் போட்டுக்கொள்வதற்கு அவர்கள் விடவில்லை; அதனால் அரைக் கால்சட்டையையும் பனியனையும் மட்டுமே போட்டுக்கொண்டோம். ஐஸ்போல் சில்லென்ற கான்க்ரீட் தரையில் ஈரமான டவல்மீது படுத்தோம். மறுநாள் காலையில் நாங்கள் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதைப் பார்த்து சார்ஜன்ட் மேஜர் ஆச்சரியப்பட்டுப் போனார். உடலை உறைய வைக்கும் அந்தக் கடுங்குளிரிலும் கடவுள் எங்களைப் பார்த்துக்கொண்டார் என்பதை அவர் உணர்ந்தார்.
90 நாள் தண்டனை முடிவடைவதற்குச் சற்று முன்பு, சகோதரர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்; அதற்குக் காரணம், அவர்கள் ராணுவ சீருடையை அணிவதோ மற்ற ராணுவ கைதிகளுடன் சேர்ந்துகொள்வதோ இல்லை. அதனால் அவர்கள் மீண்டும் காவலில் அடைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு 65 வயது ஆகும் வரையில் இவ்வாறு தண்டனை அளிக்கப்படுவார்களென அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள்; 65 வயதுக்குப்பின் அவர்கள் ராணுவத்தில் சேர வேண்டியதில்லை.
1972-ல், அரசியல் மற்றும் பொதுமக்களின் வற்புறுத்தலுக்குப் பின் அந்தச் சட்டம் மாற்றப்பட்டது. சகோதரர்களுக்கு ஒரேயொரு முறை மட்டுமே சிறைத்தண்டனை வழங்கப்பட்டது; அது ராணுவ பயிற்சி கொடுக்கப்படும் அதேயளவு காலப்பகுதியாக இருந்தது. ஆரம்பத்தில் தண்டனைக் காலம் ஓர் ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டாக இருந்தது. பிற்பாடு, மூன்று ஆண்டுகளாகக் கூட்டப்பட்டது; கடைசியில் ஆறு ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. காலப்போக்கில், அதிகாரிகள் சில சலுகைகளை அளித்தார்கள்; வாரத்தில் ஒருநாள் கூட்டங்களை நடத்த சகோதரர்களுக்கு அனுமதி அளித்தார்கள்.
மத். 28:19, 20) மற்ற சிறைக் கைதிகளிடமும் அதிகாரிகளிடமும் அவர்கள் தொடர்புகொண்ட மற்றவர்களிடமும் சத்தியத்தைப் பற்றிப் பேசினார்கள். சனிக்கிழமை மத்தியானங்களில் கடிதம் மூலம் நற்செய்தியை அறிவிக்க கொஞ்ச காலத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
காவலில் இருந்தபோதிலும், சீஷராக்கும்படி கிறிஸ்து கொடுத்த கட்டளையை சகோதரர்கள் மறந்துவிடவில்லை. (ஒருசமயம், 350 யெகோவாவின் சாட்சிகளையும் 170 ராணுவ கைதிகளுடன் சேர்ந்து உணவருந்தும்படி உத்தரவிட்டார்கள். அந்தச் சிறையில், யெகோவாவின் சாட்சிகளுடைய எண்ணிக்கை இருவருக்கு ஒருவர் என்ற கணக்கில் இருந்தது. அதனால், சகோதரர்கள் எல்லாரும் சேர்ந்து தனியாக உணவருந்துவதற்கு அதிகாரிகள் தீர்மானித்தார்கள்.
கிறிஸ்தவமண்டலமும் நடுநிலைமையும்
கட்டாய ராணுவ சேவை சம்பந்தமாக கிறிஸ்தவமண்டலம் எப்படி நடந்துகொண்டது? அதற்கு மத காரணங்களின் நிமித்தம் மறுப்பு தெரிவிக்கும் நோக்குடன் ஜூலை 1974-ல் தென் ஆப்பிரிக்க சர்ச்சுகளின் கவுன்சில் (SACC) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. என்றாலும், மத காரணங்களின் நிமித்தம் மறுப்பு தெரிவிப்பதற்குப் பதிலாக, அத்தீர்மானம் அரசியலோடு தொடர்புடையதாய் இருந்தது. “அநியாயமாயும் பாரபட்சமாயும் நடந்துகொள்கிற சமுதாயத்தை” பாதுகாப்பதற்காக அநியாயமாய் போர்தொடுப்பதால் ராணுவத்தில் சேர மறுப்பதாகத் தெரிவித்தது. ஆப்பிரிக்கான்ஸ் சர்ச்சுகளும் பிற சர்ச் தொகுதிகளும் SACC-யின் தீர்மானத்திற்கு ஆதரவு காட்டவில்லை.
டச் சீர்திருத்த சர்ச், அரசாங்கத்தின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவு காட்டியது; SACC இயற்றிய தீர்மானம் ரோமர் 13-ஆம் அதிகாரத்திற்கு முரணாய் இருப்பதாகக் கூறி அதை அந்த சர்ச் ஏற்றுக்கொள்ளவில்லை. தென் ஆப்பிரிக்க பாதுகாப்புப் படையில் மத குருக்களாகப் பணிபுரிந்தவர்களும் SACC-யின் தீர்மானத்தை ஏற்கவில்லை; SACC-யில் அங்கம் வகித்த சர்ச்சுகளின் பாதிரிமார்களும் இதில் அடங்குவர். ஆங்கில மொழி சர்ச்சுகளைச் சேர்ந்த குருக்கள் அத்தீர்மானத்தைக் கண்டனம் செய்து, தங்களுடைய கூட்டு அறிக்கையை இவ்வாறு தெரிவித்தார்கள்: “நம் சர்ச் அங்கத்தினர்கள் அனைவரும், முக்கியமாக வாலிபர்கள் நாட்டைக் காப்பதில் உதவ முன்வர வேண்டுமென . . . நாங்கள் ஊக்குவிக்கிறோம்.”
அதுமட்டுமல்ல, SACC-யில் அங்கம் வகித்த சில சர்ச்சுகளும்கூட சரியான விதத்தில் நடுநிலை வகிக்கவில்லை. தென் ஆப்பிரிக்காவில் போரும் மனசாட்சியும் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பெரும்பாலான [சர்ச்சுகள்] . . . தங்களுடைய நிலைநிற்கையைக் குறித்து சர்ச் அங்கத்தினர்களுக்கு தெளிவாகச் சொல்லவில்லை,
மனசாட்சி அடிப்படையில் மறுப்பு தெரிவிக்கும்படி அங்கத்தினர்களை ஊக்குவிக்கவுமில்லை.” SACC நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, சட்டத்தின் துணையுடன் அரசாங்கம் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சுகள் தங்களுடைய முடிவை வலியுறுத்தத் தயங்கின என்பதை அப்புத்தகம் காட்டுகிறது: “உருப்படியான நடவடிக்கை எடுக்க சர்ச்சை வற்புறுத்துவதற்காகச் செய்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.”இதற்கு நேர்மாறாக, அதே புத்தகம் இவ்வாறு ஒத்துக்கொள்கிறது: “மத காரணங்களின் நிமித்தம் மறுப்பு தெரிவித்ததால் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் யெகோவாவின் சாட்சிகளே.” அது மேலும் இவ்வாறு கூறுகிறது: “எல்லா போர்களையுமே மனசாட்சியின் அடிப்படையில் எதிர்க்க தனிநபர்களுக்கு உரிமை இருப்பதை மனதில் வைத்து யெகோவாவின் சாட்சிகள் செயல்பட்டார்கள்.”
யெகோவாவின் சாட்சிகளுடைய நிலைநிற்கை முற்றிலும் மதத்தின் அடிப்படையில் இருந்தது. “உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனால் சம்பந்தப்பட்ட ஸ்தானங்களில் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன” என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறபோதிலும் அரசியல் விவகாரங்களில் நடுநிலை வகிக்கிறார்கள். (ரோ. 13:1, NW) அவர்கள் தங்களுடைய பற்றை யெகோவாவுக்கே முக்கியமாகக் காட்டுகிறார்கள்; அவரை உண்மையாக வணங்குகிறவர்கள் போர்களில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதை அவர் தமது வார்த்தையாகிய பைபிள் மூலம் வெளிப்படுத்துகிறார்.—ஏசா. 2:2-4; அப். 5:29.
இவ்வாறு காவலில் வைக்கும் வழக்கம் அநேக ஆண்டுகளாக இருந்தது. அதன் பிறகு, கொடுமைகளுக்குப் பயந்து யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய நடுநிலை வகிப்பை விட்டுவிட மாட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிய வந்தது. அதுமட்டுமல்ல, சிறைக் கட்டடங்கள் நிரம்பிவழிய ஆரம்பித்தன, அத்துடன், அதைப் பற்றிய விபரீதமான செய்தி எங்கும் பரவியது. சகோதரர்களை பொதுச் சிறைக்கு மாற்றும்படி சில அரசாங்க அதிகாரிகள் கட்டாயப்படுத்தினார்கள்.
நல்மனம் கொண்ட ராணுவ அதிகாரிகள் சிலர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஏனெனில், உயர்ந்த ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடித்த இளம் சகோதரர்களை அவர்கள் மதித்தார்கள். சகோதரர்கள் பொதுச் சிறைக்கு அனுப்பப்பட்டால், குற்றவாளி என்ற பெயர் அவர்களுக்கு வந்துவிடும். மோசமான குற்றவாளிகளுடன் சகவாசம் வைக்க நேரிடும், கற்பழிக்கப்படும் ஆபத்தும் இருந்தது. இதனால், ராணுவம் சாராத அரசுத் துறைகளில் அவர்கள் சமூக சேவை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 1990-களில் நாட்டின் அரசியல் நிலவரம் மாறியபோது, கட்டாய ராணுவ சேவையும் ஒழித்துக்கட்டப்பட்டது.
இளம் சகோதரர்கள் தங்களுடைய வாலிப வயதில் நீண்ட காலத்தை சிறையில் போக்கியது அவர்களை எப்படிப் பாதித்தது? அநேகர் தாங்கள்
யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்பவர்கள் என்ற நல்ல பெயரெடுத்தார்கள்; சிறைவாசத்தை கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் ஆன்மீக ரீதியில் வளருவதற்கும் ஞானமாகப் பயன்படுத்தினார்கள். “நான் சிறையில் இருந்த காலம், என்னுடைய வாழ்க்கையில் திருப்புக்கட்டமாக இருந்தது” எனக் கூறுகிறார் க்ளிஃப் வில்லியம்ஸ். “சிறையில் யெகோவாவின் பாதுகாப்பும் ஆசீர்வாதமும் எனக்கு இருந்ததை உணர்ந்ததால், அவருக்கு இன்னும் அதிக நேரம் சேவை செய்ய வேண்டுமென்ற தூண்டுதல் ஏற்பட்டது. 1973-ல் விடுதலை பெற்று சிறிது காலத்திலேயே ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்தேன்; அடுத்த வருடம் பெத்தேலில் சேர்ந்தேன், இன்றுவரை அங்கு சேவை செய்து வருகிறேன்” என்றும் அவர் கூறுகிறார்.ஸ்டீஃபன் வென்டர் என்பவர் சிறைக்குச் சென்றபோது அவருக்கு 17 வயதுதான். அவர் இவ்வாறு சொன்னார்: “நான் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக இருந்தேன்; எனக்குச் சத்தியத்தைப் பற்றி நிறைய தெரிந்திருக்கவில்லை. காலையில் தரையைத் துடைக்கையில் தினவசனத்தை கலந்தாலோசித்ததும், தவறாமல் நடத்தப்பட்ட கூட்டங்களும், அனுபவமிக்க ஒரு சகோதரர் எனக்கு பைபிள் படிப்பு நடத்தியதுமே சகித்திருக்க உதவியது. கஷ்டமான சில சமயங்களும் இருந்தன; ஆச்சரியம் என்னவென்றால், அதைப் பற்றியெல்லாம் எனக்கு அவ்வளவு ஞாபகமில்லை! சொல்லப்போனால், சிறையிலிருந்த மூன்று வருடங்கள்தான் என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த வருடங்களாக இருந்திருக்கும். என்னுடைய இளம் வயதைத் தாண்டி பெரியவனாக ஆவதற்கு அந்த அனுபவமே கைகொடுத்தது. நான் யெகோவாவை அறிந்துகொண்டேன், அதுவே அவருக்கு முழுநேர சேவைசெய்ய என்னைத் தூண்டியது.”
சகோதரர்களை அநியாயமாகச் சிறையில் அடைத்ததால் நன்மையும் விளைந்தது. சிறையிலிருந்த சகோதரர்களைச் சந்தித்த கிடியன் பெனாடி இவ்வாறு எழுதினார்: “கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கையில், எவ்வளவு பெரிய சாட்சி கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஒருவர் உணர முடியும்.” சகோதரர்களுடைய சகிப்புத்தன்மையையும், அவர்கள் பட்ட கஷ்டங்களையும், பெற்ற தண்டனைகளையும் பற்றிய அநேக செய்திகளும் யெகோவாவின் சாட்சிகளுடைய நடுநிலை வகிப்புக்கு நீங்கா பதிவை ஏற்படுத்திவிட்டன; அவை ராணுவத்தின் மீதும் நாட்டின் மீதும் அழியா முத்திரையை ஏற்படுத்திவிட்டன.
கறுப்பு சகோதரர்களின் உத்தமத்தன்மை
இன ஒதுக்கீட்டு ஆட்சி முறையின் ஆரம்ப வருடங்களில், நடுநிலை வகிப்பு சம்பந்தமாக வெள்ளைக்கார சகோதரர்களுக்கு ஏற்பட்ட அதே சோதனை கறுப்பு சகோதரர்களுக்கு ஏற்படவில்லை. உதாரணமாக, ராணுவத்தில் சேரும்படி கறுப்பர்கள் உத்தரவிடப்படவில்லை. யோவா. 15:19, NW.
என்றாலும், கறுப்பு இனத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் இன ஒதுக்கீட்டு ஆட்சி முறைக்கு எதிராக தகராறு செய்ய ஆரம்பித்ததால், கறுப்பு சகோதரர்களுக்கு கடும் சோதனைகள் வந்தன. சிலர் கொல்லப்பட்டார்கள், இன்னும் சிலர் அடிக்கப்பட்டார்கள், வேறு சிலருடைய வீடுகளும் உடமைகளும் தீக்கொளுத்தப்பட்டதால் அவர்கள் தப்பியோடினார்கள். அவர்கள் நடுநிலை வகித்ததே இதற்கெல்லாம் காரணம். ஆம், ‘உலகத்தின் பாகமாயிருக்கக் கூடாது’ என்று இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிய அவர்கள் உறுதிபூண்டிருந்தார்கள்.—சில அரசியல் கட்சியினரோ, தங்களுடைய பகுதியில் வசிக்கிற எல்லாரும் அரசாங்கத்தின் கட்சி அட்டைகளை வாங்க வேண்டுமென வற்புறுத்தினார்கள். ஆயுதங்களை வாங்குவதற்காகவும், வெள்ளையரின் பாதுகாப்புப் படையினரோடு மோதியதில் உயிரிழந்த தங்கள் நண்பர்களை அடக்கம் செய்வதற்காகவும் பணம் கேட்டு இவர்களுடைய பிரதிநிதிகள் வீடு வீடாக வந்தார்கள். கறுப்பு சகோதரர்கள் அதற்கு மரியாதையோடு மறுப்பு தெரிவித்தபோது, இன ஒதுக்கீட்டு அரசாங்கத்திற்கு உளவாளிகள் என அவர்களைக் குற்றம்சாட்டினார்கள். வெளி ஊழியம் செய்கையில், சகோதர சகோதரிகள் சிலர் தாக்கப்பட்டார்கள்; ஆப்பிரிக்க வெள்ளையர்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதாகக் குற்றம்சாட்டப்பட்டார்கள்.
உதாரணமாக, எலைஜா ட்லாட்லா என்பவர், யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியராவதற்காக ஒரு சிறந்த விளையாட்டு வீரனாக ஆகும் இலட்சியத்தை விட்டுவிட்டவர். தென் ஆப்பிரிக்க குடியாட்சியின் முதல் தேர்தல் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் தேர்தலில் போட்டியிடும் கறுப்பு சமுதாயத்தினரிடையே பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. எலைஜாவின் சபையினர், சில கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்த, அடிக்கடி ஊழியம் செய்யப்படாத பிராந்தியத்தில் ஊழியம் செய்யத் தீர்மானித்தனர். முழுக்காட்டுதல் பெற்று இரண்டு மாதங்களே ஆகியிருந்த எலைஜா முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளான இரண்டு சிறுவர்களுடன் ஊழியத்திற்கு விடப்பட்டார். வாசலில் நின்று ஒரு பெண்ணிடம் பேசுகையில், அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களின் கும்பலை அவர்கள் எதிர்ப்பட்டார்கள். அதன் தலைவர் ஷாம்பாக் என்ற தடித்த தோல் சாட்டையை வைத்திருந்தார். “இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று அவர் அதட்டினார்.
“நாங்கள் பைபிளைப் பற்றி பேசுறோம்” என அந்தப் பெண் சொன்னாள்.
அந்தக் கோபக்கார ஆள் அவளிடம் ஒன்றும் சொல்லாமல், எலைஜாவையும் அவரோடு சென்ற இருவரையும் பார்த்து, “ஏய், நீங்க மூன்று பேரும் எங்களோடு சேர்ந்துகொள்ளுங்கள். இது பைபிளைப் பற்றி
பேசுவதற்கான நேரமில்லை, நம்முடைய உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நேரம்” என்று சொன்னார்.“நாங்கள் அதில் கலந்துகொள்ள முடியாது, ஏனென்றால் நாங்கள் யெகோவாவுக்கு வேலை செய்கிறோம்” என எலைஜா தைரியமாகப் பதிலளித்தார்.
உடனே அந்த ஆள் எலைஜாவைக் தள்ளிவிட்டு, ஷாம்பாக் சாட்டையால் அடிக்க ஆரம்பித்தார். “எங்களோடு சேருகிறாயா இல்லையா?” என கத்திக்கொண்டே அடித்தார். முதல் அடியை வாங்கிய பிறகு, எலைஜாவுக்கு வலியே தெரியவில்லை. உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாருமே “துன்பப்படுவார்கள்” என அப்போஸ்தலன் பவுல் சொன்ன வார்த்தைகள் அவருக்குப் பலத்தை அளித்தன.—2 தீ. 3:12.
கடைசியில் அந்த ஆள் களைத்துப்போய் அடிப்பதை நிறுத்திவிட்டார். அவருடைய ஆட்களில் ஒருவர், சாட்டையை வைத்திருந்தவரைக் கண்டித்து, எலைஜா தங்களுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவரல்ல என்று சொன்னார். பின்பு அந்தக் கும்பலே பிளவுற்று ஒருவருக்கொருவர் சண்டைபோட ஆரம்பித்தார்கள்; அந்தத் தலைவர் தனது ஷாம்பாக்காலேயே செமத்தியாக அடி வாங்கினார். இதற்கிடையே எலைஜாவும் அவரோடிருந்த இருவரும் அங்கிருந்து தப்பினார்கள். இச்சோதனை எலைஜாவின் விசுவாசத்தைப் பலப்படுத்தியது; அவர் நற்செய்தியைத் தைரியமாக பிரசங்கிப்பவராகத் தொடர்ந்து முன்னேறினார். இப்போது அவருக்குத் திருமணமாகி பிள்ளைகளும் இருக்கிறார்கள்; அவருடைய சபையில் மூப்பராகச் சேவை செய்கிறார்.
பிரசங்கிப்பதற்குத் தடை ஏற்பட்டபோதிலும் கறுப்பு சகோதரிகளும்கூட மிகுந்த தைரியத்தைக் காட்டினார்கள். ஃப்ளோரா மலின்டா என்ற சகோதரியின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவருடைய முழுக்காட்டப்பட்ட மகள் மாக்கியை ஓர் இளைஞர் கும்பல் தீக்கிரையாக்கியது. அவளுடைய அண்ணன் அந்தக் கும்பலின் அரசியல் கட்சியில் சேர மறுத்தபோது, அவள் ஆதரவு தெரிவித்ததே அதற்குக் காரணம். இப்படியொரு பேரிடி தாக்கியபோதிலும், ஃப்ளோரா மனக்கசப்படையவில்லை; மாறாக, தன்னுடைய சமுதாயத்தினருக்கு கடவுளுடைய வார்த்தையைத் தொடர்ந்து அறிவித்து வந்தார். ஒருநாள், அவருடைய மகளைக் கொன்ற அதே கும்பலைச் சேர்ந்த ஆட்கள், அவரைத் தங்களுடைய கட்சியில் சேரும்படியும் இல்லையென்றால் தொலைத்துக்கட்டுவதாகவும் மிரட்டினார்கள். அக்கம்பக்கத்தார் ஓடிவந்து, அவர் எந்தக்
கட்சியையும் சேர்ந்தவரல்ல என்றும் பைபிளைப் படிக்க மற்றவர்களுக்கு மும்முரமாக உதவி செய்பவர் என்றும் சொன்னார்கள். இதனால், அந்தக் கட்சிக்காரருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது; கடைசியில், ஃப்ளோராவை விட்டுவிட்டார்கள். கஷ்டமான இந்த எல்லா சமயத்திலும் இன்றுவரையிலும்கூட, ஃப்ளோரா தொடர்ந்து ஒழுங்கான பயனியராக உண்மையோடு சேவைசெய்து வருகிறார்.தன்னுடைய பிராந்தியத்திற்கு பஸ்ஸில் பயணிக்கையில் என்ன நடந்தது என்பதை ஒழுங்கான பயனியரான ஒரு சகோதரர் சொல்கிறார். அரசியல் தீவிரவாதியாய் இருந்த ஓர் இளைஞன் அவரைப் பிடித்துத் தள்ளி, ‘ஆப்பிரிக்கானர் [தென் ஆப்பிரிக்க வெள்ளையர்கள்] தயாரிக்கிற பிரசுரங்களை ஏன் வைத்திருக்கிறாய், ஏன் அவற்றைக் கறுப்பர்களுக்குக் கொடுக்கிறாய்’ எனக் கேட்டான். அடுத்து என்ன நடந்தது என்பதை அவர் இவ்வாறு விளக்குகிறார்: “பஸ்ஸின் ஜன்னல் வழியாக பிரசுரங்களையெல்லாம் வெளியே போடும்படி சொன்னான். அதற்கு நான் மறுத்தபோது என்னுடைய முகத்தில் அறைந்து, அவன் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டால் கன்னத்தில் சூடுவைத்தான். அதற்கும் நான் மசியவில்லை. உடனே, பிரசுரங்கள் வைத்திருந்த பையைப் பிடுங்கி ஜன்னல் வழியாக எறிந்தான். அவன் என்னுடைய ‘டை’யையும் பிடித்து இழுத்து, வெள்ளையன்தான் இப்படி டிரஸ் பண்ணுவான் என்று சொன்னான். அவன் கேவலமாகப் பேசிக்கொண்டே இருந்தான், என்னைப் போன்றவர்களை எல்லாம் உயிரோடே தீக்கொளுத்த வேண்டுமென சொல்லி கலாட்டா செய்தான். யெகோவா என்னைக் காப்பாற்றினார்; ஏனென்றால், வேறெந்த பாதிப்பும் இல்லாமல் பஸ்ஸைவிட்டு என்னால் இறங்க முடிந்தது. இந்த அனுபவத்தைப் பெற்றபின், துளியும் பயமின்றித் தொடர்ந்து பிரசங்கித்தேன்.”
கறுப்பு சகோதரர்களின் உத்தமத்தன்மையை விளக்கும் அநேக கடிதங்களை தனிநபர்களிடமிருந்தும் சபைகளிடமிருந்தும் தென் ஆப்பிரிக்கக் கிளை அலுவலகம் பெற்றது. க்வாஸூலூ-நடாலில் இருந்த ஒரு சபையின் மூப்பரிடமிருந்து வந்த கடிதத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருந்தது: “எங்கள் அன்புச் சகோதரர் மோசஸ் நியாமுசுவாவின் பிரிவை உங்களுக்குத் தெரியப்படுத்த இதை எழுதுகிறோம். கார்களை வெல்டு செய்வதும் பழுதுபார்ப்பதும்தான் அவருடைய
வேலை. ஒருநாள் ஓர் அரசியல் கட்சியினர் தாங்களாகவே செய்த துப்பாக்கிகளை வெல்டு செய்துதரும்படி அவரிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். அடுத்து, பிப்ரவரி 16, 1992 அன்று அந்த அரசியல் கட்சியினர் ஊர்வலம் சென்றபோது எதிர்க் கட்சியினரோடு சண்டையிட்டனர். அன்றே சாயங்காலத்தில் சண்டை முடிந்து திரும்புகையில் இந்தச் சகோதரர் ஷாப்பிங் சென்டருக்குச் செல்வதை அவர்கள் கண்டனர். அவரை அங்கேயே ஈட்டியால் கொன்றனர். அதற்குக் காரணம் என்ன? ‘எங்களுடைய துப்பாக்கிகளை நீ வெல்டு செய்து தராததால் எங்களுடைய ஆட்கள் இப்போது சண்டையில் செத்துவிட்டார்கள்’ என அவர்கள் சொன்னார்கள். இதனால், சகோதரர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். இருந்தாலும், நாங்கள் தொடர்ந்து ஊழியம் செய்துவருகிறோம்.”பள்ளியில் எதிர்ப்பு
கறுப்பர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் படித்த சாட்சிகளின் பிள்ளைகள் பள்ளியில் காலை வணக்கத்தின்போது செய்யப்பட்ட ஜெபங்களிலும் கடவுள் வாழ்த்துப் பாடல்களிலும் கலந்துகொள்ளவில்லை. இதனால் பிரச்சினைகள் எழுந்தன. வெள்ளையருக்கான பள்ளிகளில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அவர்களுடைய பெற்றோர் தங்களுடைய நிலைநிற்கையைப் பற்றி எழுதிக்கொடுத்தால் போதும், பிள்ளைகள் அவற்றில் கலந்துகொள்ள வேண்டியதில்லை. கறுப்பருக்கான பள்ளிகளிலோ, இவ்வாறு கலந்துகொள்ளாதிருப்பது பள்ளி நிர்வாகத்தையே எதிர்ப்பதாய்க் கருதப்பட்டது. பாட்டு, ஜெபங்களில் பிள்ளைகள் கலந்துகொள்ள மறுப்பது ஆசிரியர்களுக்குப் புதுமையாய் இருந்தது. சாட்சிகளின் நிலைநிற்கையைப் பற்றி ஆசிரியர்களிடம் வந்து பெற்றோர் விளக்கியபோது, பிள்ளைகளுக்கு விலக்களிக்க முடியாதென அவர்கள் சொல்லிவிட்டார்கள்.
காலை வணக்க சமயத்தில் பள்ளி விஷயங்கள் அறிவிப்பு செய்யப்பட்டதால், யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளும் கட்டாயம் ஆஜராக வேண்டுமென பள்ளி அதிகாரிகள் கூறினார்கள். அதனால் பிள்ளைகள் அதற்கு ஆஜரானார்கள், ஆனால் பாட்டிலோ ஜெபத்திலோ கலந்துகொள்ளாமல் அமைதியாக நின்றார்கள். பிள்ளைகள் ஜெபத்தின்போது கண்களை மூடுகிறார்களா, பக்திப் பாடல்களைப் பாடுகிறார்களா என்பதைக் கவனிக்க சில ஆசிரியர்கள் ஒவ்வொரு வரிசையிலும்
வந்து பார்த்தார்கள். இந்தப் பிள்ளைகள், அவர்களில் சிறியவர்களும்கூட தைரியமாகத் தங்கள் உத்தமத்தைக் காட்டியது நெஞ்சை நெகிழவைத்தது.பள்ளிகளிலிருந்து அநேக பிள்ளைகள் வெளியேற்றப்பட்ட பிறகு, இந்த விஷயத்தைக் குறித்து நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்ய சகோதரர்கள் தீர்மானித்தார்கள். ஆகஸ்ட் 10, 1976-ல் ஜோஹெனஸ்பர்க் உச்ச நீதிமன்றம், ஒரே பள்ளியைச் சேர்ந்த 15 மாணவ மாணவிகளை உட்படுத்திய ஒரு முக்கிய வழக்கின் பேரில் தீர்ப்பளித்தது. அந்த ஆவணம் இவ்வாறு குறிப்பிட்டது: “. . . ஜெபங்களிலும் பக்திப் பாடல்களிலும் கலந்துகொள்ளாதிருக்க இந்த விண்ணப்பதாரர்களின் பிள்ளைகளுக்கு உரிமையிருப்பதை பிரதிவாதிகள் ஒப்புக்கொண்டார்கள்; அதோடு, . . . [பள்ளியிலிருந்து] தற்காலிகமாக நீக்கியதும் வெளியேற்றியதும் சட்டவிரோதமானவை என்பதையும் ஒப்புக்கொண்டார்கள்.” இது சட்டப்பூர்வமாகக் கிடைத்த முக்கிய வெற்றியாக இருந்தது; கடைசியில், சம்பந்தப்பட்ட எல்லாப் பள்ளிகளிலும் இப்பிரச்சினை சரிசெய்யப்பட்டது.
பள்ளிகளில் பிற பிரச்சினைகள்
வெள்ளையர்களுக்கான பள்ளிகளில் படித்த யெகோவாவின் சாட்சிகளுடைய அநேக பிள்ளைகள் தங்களுடைய உத்தமத்தைச் சோதிக்கும் பிற பிரச்சினையைச் சந்தித்தார்கள்; அதன் விளைவாக, அவர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இன ஒதுக்கீட்டு அரசாங்கம், அதன் கொள்கைகளை ஆதரிப்பதில் வெள்ளையரான இளைஞர்களை ஒன்றுபடுத்த விரும்பியது. 1973-ல் இளைஞர்களின் தயார்நிலை என்றழைக்கப்படும் ஓர் இயக்கத்தை அரசாங்கம் ஆரம்பித்து வைத்தது. அணிவகுத்துச் செல்லுதல், தற்காப்பு, பிற தேசப்பற்று நடவடிக்கைகள் எல்லாம் அதில் உட்பட்டிருந்தன.
சாட்சிகளான சில பெற்றோர்கள் சட்டப்பூர்வ ஆலோசனையை நாடினார்கள்; கல்வி அமைச்சருக்கும் விஷயத்தைத் தெரியப்படுத்தினார்கள். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இளைஞர்களின் தயார்நிலை என்ற இந்த இயக்கம் முற்றிலும் கல்வி சார்ந்தது என அமைச்சர் சொல்லிவிட்டார். அரசாங்கம் இப்பிரச்சினையின் பேரில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக ரொம்பவே தவறான பிரச்சாரம் செய்தது. சில பள்ளிகளின் முதல்வர்கள் பரந்த மனதுடையவர்களாய் இருந்ததால், அந்த இயக்கத்தின் வேதப்பூர்வமற்ற அம்சங்களிலிருந்து பிள்ளைகளுக்கு விலக்களித்தார்கள்; ஆனால், மற்ற பள்ளிகளிலோ பிள்ளைகள் வெளியேற்றப்பட்டார்கள்.
எல்லா பெற்றோர்களாலும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்கவைக்க முடியவில்லை. சில பெற்றோர்கள் தங்களுடைய ஏசா. 54:13) அநேகர் முழுநேர சேவையில் சேர்ந்துகொண்டார்கள். தைரியமிக்க இந்த இளைஞர்கள், யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்து சோதனையைச் சகித்ததைக் குறித்து சந்தோஷப்பட்டார்கள். (2 பே. 2:9) காலப்போக்கில், நாட்டின் அரசியல் நிலவரம் மாறியது; அதன் பிறகு, தேசப்பற்று நடவடிக்கைகளில் ஈடுபட மறுத்ததற்காக பிள்ளைகள் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்படவில்லை.
பிள்ளைகள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஆசிரியர்களாய் பணிபுரிந்த யெகோவாவின் சாட்சிகள் வீட்டிலேயே தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். இருந்தாலும், வெளியேற்றப்பட்ட அநேக பிள்ளைகள் அடிப்படைக் கல்வியான உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. என்றாலும், வீட்டிலிருந்தும் தங்கள் சபைகளிலிருந்தும் பெற்ற வேதப்பூர்வ கல்வியிலிருந்து பயனடைந்தார்கள். (இன ஒதுக்கீட்டு அரசாங்கமும் மாநாடுகளும்
தென் ஆப்பிரிக்க நாட்டுச் சட்டப்படி, ஒவ்வொரு இனத்தவருக்காகவும் தனித்தனியாக மாநாடுகளை சகோதரர்கள் நடத்த வேண்டியிருந்தது. முதன்முறையாக எல்லா இனத்தவரும் ஒரே இடத்தில் கூடிவந்தது, 1952-ல் ஜோஹெனஸ்பர்க்கிலுள்ள வெம்பிலி ஸ்டேடியத்தில் நடந்த தேசிய மாநாட்டில்தான். அப்போது, சகோதரர் நாரும் சகோதரர் ஹென்ஷலும் தென் ஆப்பிரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தார்கள், அந்த மாநாட்டில் பேச்சுகளும் கொடுத்தார்கள். இன ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி வித்தியாசப்பட்ட ஒவ்வொரு இனத்தவரும் தனித்தனியாக உட்கார வேண்டியிருந்தது. ஸ்டேடியத்திற்கு மேற்கே வெள்ளையர்களும் கிழக்கே கறுப்பர்களும் வடக்கே இந்தியர்களும் கலப்பினத்தவரும் உட்கார்ந்தார்கள். ஒவ்வொரு இனத்தவருக்காகவும் தனித்தனியாக கேஃபிட்டீரியாவையும் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் சகோதரர் நார் அந்த மாநாட்டைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “நாங்கள் எல்லாரும் ஒரே ஸ்டேடியத்தில் ஒன்றுசேர்ந்து
பரிசுத்த அலங்காரத்தோடே யெகோவாவை வணங்கியதுதான் மகிழ்ச்சிக்குரிய அம்சம்.”ஜனவரி 1974-ல் ஜோஹெனஸ்பர்க் பகுதியில் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் தனித்தனியாகவும், இந்தியர்கள் உட்பட கலப்பினத்தவருக்குத் தனியாகவும் என மூன்று மாநாடுகள் நடந்தன; என்றாலும், மாநாட்டின் இறுதிநாளில் விசேஷித்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது, எல்லா இனத்தவரும் பிற்பகல் நிகழ்ச்சிக்காக ரான்ட் ஸ்டேடியத்தில் ஒன்றுகூடி வரவேண்டும். அந்த ஸ்டேடியத்தில் மொத்தம் 33,408 பேர் கூடியிருந்தார்கள். அது எவ்வளவு பேரானந்தமாய் இருந்தது! இங்கே எல்லா இனத்தவருமே கூடிக் குலவினார்கள், ஒன்றுசேர்ந்து உட்கார்ந்தார்கள். ஐரோப்பாவிலிருந்து அநேகரும் விஜயம் செய்திருந்தார்கள்; அதனால் அம்மாநாடு நெஞ்சைவிட்டு நீங்காத ஒரு மாநாடானது. இது எப்படிச் சாத்தியமாயிற்று? அது சர்வதேச அளவிலும் இனங்களுக்கு இடையிலும் நடக்கும் நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஸ்டேடியமாகும்; மாநாட்டை ஒழுங்குபடுத்திய சகோதரர்கள் அதை அறியாமலேயே அந்த ஸ்டேடியத்தைப் பதிவு செய்துவிட்டார்கள், அதனால், அந்தப் பிற்பகல் நிகழ்ச்சிக்காக அனுமதி வாங்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.
தப்பெண்ணத்தின் மத்தியிலும் கூடிவருதல்
சில வருடங்களுக்கு முன் ஜோஹெனஸ்பர்க்கில் ஒரு தேசிய மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், பிரிடோரியாவைச் சேர்ந்த ஓர் அமைச்சர், ஜோஹெனஸ்பர்க்கில் பண்டூ மக்களின் (கறுப்பு இனத்தவரின்) விவகாரங்களைக் கையாளும் அரசு அலுவலகங்களைச் சந்தித்தார்; கறுப்பு சகோதரர்களுக்கான மாநாட்டை நடத்துவதற்காக மஃபோலோ பார்க்கை யெகோவாவின் சாட்சிகள் பதிவு செய்திருப்பதை அவர்களுடைய கூட்ட நிகழ்ச்சிப் பதிவேட்டில் பார்த்தார்.
இந்த அமைச்சர் அதை பிரிடோரியாவிலுள்ள தன்னுடைய தலைமையகத்துக்குத் தெரிவித்தார். பண்டூ மக்களின் விவகாரங்களைக் கவனிக்கும் துறை, சாட்சிகள் “அங்கீகரிக்கப்பட்ட மதத்தினர்” அல்ல என்பதைக் குறிப்பிட்டு ஏற்கெனவே பதிவு செய்திருந்ததை உடனே ரத்துசெய்துவிட்டது. அதே சமயத்திலேயே வெள்ளை சகோதரர்களும் தங்களுடைய மாநாட்டுக்காக ஜோஹெனஸ்பர்க்கின் மத்திபத்திலுள்ள மில்னர் பார்க் மைதானத்தைப் பதிவு செய்திருந்தார்கள்; கலப்பின சகோதரர்களோ, மேற்கில் புறநகர்ப்பகுதியிலிருந்த யூனியன் ஸ்டேடியத்தில் மாநாடு நடத்த பதிவு செய்திருந்தார்கள்.
இதோடு சம்பந்தப்பட்ட அமைச்சரைப் பார்ப்பதற்காக பெத்தேலிலிருந்து இரண்டு சகோதரர்கள் சென்றார்கள்; அந்த அமைச்சர், டச்
சீர்திருத்த சர்ச்சின் முன்னாள் பாதிரியார். மஃபோலோ பார்க்கில் பல வருடங்களாகவே மாநாடுகளை சாட்சிகள் நடத்தி வந்திருக்கிறார்கள், வெள்ளை சகோதரர்களும் கலப்பின சகோதரர்களும் அவர்களுடைய மாநாடுகளை நடத்துகிறார்கள், அப்படியிருக்க, கறுப்பு சகோதரர்கள் மட்டும் ஒன்றுகூடி வருவதற்கான உரிமையை நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்? என அவரிடம் சகோதரர்கள் கேட்டார்கள். அவரோ கொஞ்சமும் வளைந்துகொடுக்கவில்லை.மஃபோலோ பார்க் ஜோஹெனஸ்பர்க்கின் மேற்கே இருந்ததால், அதன் கிழக்குப் பகுதியில் மாநாட்டை நடத்த சகோதரர்கள் தீர்மானித்தார்கள்; அங்கே கறுப்பர்களுக்கு ஒதுக்கப்பட்ட பெரும் பகுதிகள் இருந்தன. அவர்கள், பொறுப்பிலிருந்த நிர்வாகத் தலைவரை அணுகிப் பேசினார்கள்; அதே சமயத்தில் பிரிடோரியாவின் அமைச்சரைச் சந்தித்தது பற்றி அவர்கள் மூச்சுவிடவில்லை. மாநாடு நடத்துவதற்கான இடத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, அவர் ஆதரவாகப் பேசினார். வாட்வில் ஸ்டேடியத்தை அவர்களுக்கு ஒழுங்குபடுத்தித் தந்தார். இந்த இடத்தில் இருக்கைகளின் வரிசைகள் படிப்படியாக அமைக்கப்பட்டிருந்தன; இந்த வசதி மஃபோலா பார்க்கில் இருக்கவில்லை.
இட மாற்றத்தைக் குறித்து உடனடியாக எல்லா சகோதரர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. சுமார் 15,000 பேர் ஆஜராயிருந்தார்கள்; பிரிடோரியாவிலிருந்து எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் மாநாடு நல்லபடியாக முடிந்தது. அப்போது முதற்கொண்டு, சில வருடங்களுக்கு எந்தப் பிரச்சினையுமின்றி வாட்வில் ஸ்டேடியத்தில் சகோதரர்கள் மாநாடுகளை நடத்தினார்கள்.
சட்டப்பூர்வமாக ஒரு சங்கம் ஏற்படுத்தப்படுகிறது
ஜனவரி 24, 1981-ல் ஆளும் குழு அளித்த ஆலோசனையின் பேரில் 50 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சங்கம் சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரில் அச்சங்கம் செயல்பட்டது. அது, ஆன்மீக காரியங்களைப் பல வழிகளில் மேம்படுத்த உதவியது.
யெகோவாவின் சாட்சிகளாயிருக்கும் சகோதரர்களை திருமணப் பதிவாளர்களாக அங்கீகரிப்பதற்கு கிளை அலுவலக சகோதரர்கள் பல வருடங்களாகவே முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை. அதைக் குறித்து ஃபிரான்ஸ் மல்லர் இவ்வாறு கூறுகிறார்: “அதற்காக அரசு அதிகாரிகளிடம் சென்றபோதெல்லாம், திருமணப் பதிவாளர்களை நாம் கொண்டிருக்குமளவுக்கு நம்முடைய மதத்திற்கு அந்தஸ்தும் இல்லை, அது உறுதியானதாயும் இல்லை என்று சொல்லி மறுத்துவிட்டார்கள்.”
அதுமட்டுமல்ல, சட்டப்பூர்வமாக ஒரு சங்கம் இல்லாதிருந்ததால், கறுப்பர்களுக்கான பகுதிகளில் ராஜ்ய மன்றங்கள் கட்டுவதும் முடியாத
காரியமாய் இருந்தது. எப்போது சென்றாலும் சரி, “நீங்கள் அங்கீகாரம் பெற்ற மதத்தினரல்ல” என்று கூறி அதிகாரிகள் சகோதரர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.என்றாலும், இந்தச் சங்கம் உருவானபின், சகோதரர்கள் திருமணப் பதிவாளர்களாகச் சேவை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. கறுப்பர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ராஜ்ய மன்றங்கள் கட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் இப்போது 100-க்கும் அதிகமான மூப்பர்கள் திருமணப் பதிவாளர்களாகச் சேவை செய்கிறார்கள். அவர்கள் ராஜ்ய மன்றத்திலேயே திருமணத்தை நடத்திவைக்கலாம்; மணமக்கள் சட்டப்பூர்வமாகப் பதிவு செய்வதற்காக முதலில் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியதில்லை.
அச்சிடுவதில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்
அச்சிடும் முறைகளில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டன. லெட்டர்பிரஸ்ஸைப் பயன்படுத்தி வந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. அதுமட்டுமல்ல, அதற்கான உதிரி பாகங்கள் கிடைப்பது அரிதாகவும் அவற்றின் விலை அதிகமாகவும் இருந்தது. ஆகவே, கம்ப்யூட்டர் அச்சுக்கோப்பு முறையையும், ஆஃப்செட் அச்சு முறையையும் அமல்படுத்த வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. தகவல்களைப் பதிவு செய்வதற்கும் அச்சுக்கோப்புக்குமுரிய கம்ப்யூட்டர்கள் வாங்கப்பட்டன; 1979-ல் டிகேஎஸ் ரோட்டரி ஆஃப்செட் பிரஸ் நிறுவப்பட்டது. அது ஜப்பான் கிளை அலுவலகம் தாராளமாகக் கொடுத்த நன்கொடையாகும்.
யெகோவாவின் சாட்சிகள் அநேக மொழிகளில் பிரசுரங்களை அச்சிடுவதால், தங்களுடைய சொந்த அச்சுக்கோப்பு முறையை முன்னேற்றுவிப்பது பயனுள்ளதெனக் கண்டார்கள். 1979-ல் நியு யார்க், புரூக்ளினில் உள்ள சகோதரர்கள் மெப்ஸ் (multilanguage electronic phototypesetting system) என்ற கம்ப்யூட்டர் புரோகிராமை வடிவமைக்கத் தொடங்கினார்கள். தென் ஆப்பிரிக்காவில் மெப்ஸ் முறை 1984-ல் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. மொழிபெயர்ப்புக்கும் அச்சுக்கோப்புக்கும் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்பட்டதால் ஒரே நேரத்தில் பல மொழிகளில் பிரசுரங்களை வெளியிட முடிந்தது.
மேலுமான வளர்ச்சிக்கு முன்கூட்டியே திட்டமிடுதல்
1980-களின் ஆரம்பத்தில், ஈலான்ஸ்ஃபான்டேனில் இருந்த சிறிய பெத்தேல் வளாகத்தால் பிரசங்க வேலையில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆகவே, க்ரூகர்ஸ்டார்ப் நகரில் ஒரு நிலம் வாங்கப்பட்டது; அது ஜோஹெனஸ்பர்க்கிலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் இருக்கிறது. 87 ஹெக்டேர் பரப்பளவுடைய மலைப்பாங்கான இந்த இடம் ரம்மியமானது, அதற்கு பார்டர் வைத்தாற்போல் ஒரு
நீரோடை நளினமாகச் செல்கிறது. அந்த இடத்தில் கட்டடப் பணிக்காக அநேக சகோதரர்கள் தங்களுடைய வேலைகளை விட்டுவிட்டு வந்தார்கள், இன்னும் சிலரோ விடுமுறை நாட்களில் அந்தக் கட்டட வேலையில் கலந்துகொண்டார்கள். வாலண்டியர்கள் சிலர் நியூசிலாந்திலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் வந்தார்கள். ஆறு வருடங்களில் கட்டடப் பணி முடிவடைந்தது.இருந்தாலும், கறுப்பு சகோதர சகோதரிகளுக்கு, முக்கியமாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு அந்தக் கட்டடத்தில் குடியிருக்க சுலபமாய் அனுமதி கிடைக்கவில்லை. 20 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது; அவர்களுக்கென தனி குடியிருப்புக் கட்டடங்களைக் கட்ட வேண்டியிருந்தது. இருந்தாலும், காலப்போக்கில் அரசாங்கம் அதன் இன ஒதுக்கீட்டுக் கொள்கையை சற்றுத் தளர்த்தியது; அதனால் எல்லா இனத்தைச் சேர்ந்த சகோதரர்களும் பெத்தேலில் எந்த அறையில் வேண்டுமானாலும் தங்கிக்கொள்ள முடிந்தது.
நல்ல இடவசதியுடன் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட அறைகளில் தங்குவது பெத்தேல் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சிவப்பு நிற டைல்கள் பதிக்கப்பட்ட முகப்புடைய அந்த மூன்று மாடிக் கட்டடத்தைச் சுற்றிலும் அழகான தோட்டங்கள் இருந்தன. க்ரூகர்ஸ்டார்ப்பில் கட்டட வேலை ஆரம்பிக்கப்பட்டபோது, தென் ஆப்பிரிக்காவில் 28,000 யெகோவாவின் சாட்சிகள் பிரஸ்தாபிகளாகச் செயல்பட்டு வந்தார்கள். மார்ச் 21, 1987-ல் அது பிரதிஷ்டை செய்யப்பட்டபோது அவர்களுடைய எண்ணிக்கை 40,000 என உயர்ந்தது. இருந்தாலும், இத்தனை பெரிய கட்டடம் உண்மையிலேயே தேவையா எனச் சிலர் யோசித்தார்கள். அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு மாடி பயன்படுத்தப்படவேயில்லை; குடியிருப்புக் கட்டடத்தின் ஒரு பகுதியும் காலியாகவே இருந்தது. காரணம், சகோதரர்கள் முன்யோசனையுடன் திட்டமிட்டிருந்தார்கள், பிற்பாடு வளர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் அப்படிச் செய்தார்கள்.
முக்கியத் தேவை
சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, கூடுதல் ராஜ்ய மன்றங்களுக்கான அவசரத் தேவை ஏற்பட்டது. முக்கியமாக கறுப்பர்களின் பகுதிகளில் இருந்த சகோதரர்கள், சிரமத்துடன் கூட்டங்களை நடத்தினார்கள். கராஜ்களில், கட்டடங்களுக்கு வெளியேயுள்ள ஷெட்டுகளில், பள்ளிக்கூடத்தின் வகுப்பறைகளில் கூட்டங்களை நடத்தினார்கள்; வகுப்பறைகளில் சிறுவர் சிறுமியருக்காகப் போடப்பட்டிருந்த சிறிய டெஸ்க்குகளுக்கு முன் உட்கார்ந்தார்கள். பிற மதத் தொகுதியினரும்கூட அதே பள்ளிக்கூடத்தில் உள்ள வகுப்பறைகளைப் பயன்படுத்தினார்கள்; அவர்கள் சத்தமாகப் பாட்டுப் பாடி, கொட்டடித்துக் காட்டுச்சத்தம் போட்டதையும் சகோதரர்கள் சமாளிக்க வேண்டியிருந்தது.
1980-களின் இறுதியில், மண்டலக் கட்டடக் குழுக்கள் ராஜ்ய மன்றங்களைத் துரிதமாகக் கட்டுவதற்கான புதிய முறைகளை முயன்று பார்த்தன. 1992-ல் துரிதமாகக் கட்டுவதில் அனுபவமிக்க கனடா நாட்டு சாட்சிகள் 11 பேர், இரண்டு ராஜ்ய மன்றங்களை, அதாவது இரண்டு மாடிக் கட்டடத்தைக் கட்டுவதற்கு முன்வந்தார்கள்; ஜோஹெனஸ்பர்க்கிலுள்ள புறநகர்ப் பகுதியான ஹில்ப்ராவில் இந்த ராஜ்ய மன்றம் கட்டப்பட்டது. கட்டட வேலையில் புதிய முறைகளை உள்ளூர் சகோதரர்கள் தெரிந்துகொள்வதற்காக, இந்தச் சாட்சிகள் தங்களுடைய திறமைகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
1992-ல், முதன்முதலாக துரித கட்டுமான முறைப்படி கட்டப்பட்டது, ஸோவேட்டோவிலுள்ள டிப்க்லூயஃப் ராஜ்ய மன்றமாகும். இந்தப் பகுதியில் ராஜ்ய மன்றம் கட்டுவதற்காக சகோதரர்கள் 1962-லிருந்தே இடம் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தை வாங்குவதற்கு முயற்சி செய்தவர்களில் ஒருவரே சகரையா செடீபி; ஜூலை 11, 1992-ல் அந்த ராஜ்ய மன்றம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது அவர் அங்கே இருந்தார். முகத்தில் புன்னகை பூக்க அவர் இவ்வாறு சொன்னார்: “நமக்கென ராஜ்ய மன்றம் கிடைக்கப் போவதில்லை என்றே நாங்கள் நினைத்தோம். அப்போது நாங்கள் இளைஞர்களாக இருந்தோம். இப்போது நான் ஓய்வுபெற்றுவிட்டேன், ஆனால், நமக்கென ஒரு ராஜ்ய மன்றம் இருக்கிறது. ஸோவேட்டோவில் சில நாட்களிலேயே கட்டப்பட்ட முதல் ராஜ்ய மன்றம் இருக்கிறது.”
தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்தின் மேற்பார்வையிலுள்ள நாடுகளில் தற்போது 600 ராஜ்ய மன்றங்கள் உள்ளன. இவை யெகோவாவின் தூய வணக்கத்திற்கு மையங்களாகத் திகழ்கின்றன. என்றாலும், ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுகிற 30 அல்லது அதற்கும் மேற்பட்ட பிரஸ்தாபிகளைக் கொண்ட சுமார் 300 சபைகள் இன்னும் உள்ளன.
ராஜ்ய மன்றத்தைக் கட்ட விரும்புகிற சபைகளுக்கு, கிளை அலுவலக மேற்பார்வையின்கீழ் செயல்படுகிற 25 மண்டலக் கட்டடக் குழுக்கள் நடைமுறையான உதவியை அளித்து வருகின்றன. கட்டட வேலைக்கான பணத்தை வட்டியில்லாக் கடனாக சபைகள் பெற்றுக்கொள்ளலாம். பீட்டர் பட் என்பவர் காட்டெங் மண்டலக் கட்டடக் குழுவின் சேர்மன் ஆவார்; இவர் ராஜ்ய மன்றக் கட்டுமானப் பணியில் 18 வருடங்கள் உதவிபுரிந்திருக்கிறார். இந்தக் குழுக்களில் உள்ள சகோதரர்கள் வேலை பார்ப்பவர்களாக, குடும்பஸ்தர்களாக இருந்தாலும், தங்களுடைய சகோதரர்களுக்காக சந்தோஷத்துடன் அதிக மணிநேரத்தை தியாகம் செய்கிறார்கள் என பீட்டர் பட் குறிப்பிட்டார்.
மண்டலக் குழுவின் மற்றொரு அங்கத்தினர்தான் யாக்காப் ராட்டன்பாக்; இக்குழுவின் அங்கத்தினர்கள் பொதுவாக, கட்டடப் பணி
முடிவடையும் வரையில் அந்த இடத்திலேயே இருக்கிறார்கள் என அவர் சொன்னார். அதுபோக, பணி ஆரம்பிப்பதற்கு முன்னரே அதன் சம்பந்தமான எல்லா திட்டங்களிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள். வாலண்டியர்களாகப் பணிபுரிபவர்களின் மத்தியில் காணப்படும் மகிழ்ச்சியையும் ஒத்துழைப்பையும் பற்றி அவர் உற்சாகம் பொங்க விவரித்தார். அவர்கள் பணி நடக்கும் இடத்திற்கு தங்கள் சொந்த செலவிலேயே பயணித்து வருகிறார்கள், சில சமயங்களில் தூரமான இடங்களிலிருந்தும்கூட பயணித்து வருகிறார்கள்.இன்னும் அநேக சகோதரர்கள் ராஜ்ய மன்றக் கட்டுமானப் பணிக்காக தங்களுடைய நேரத்தையும் வளங்களையும் அளிக்கிறார்கள் என யாக்காப் கூறினார். அதற்குப் பின்வரும் ஓர் உதாரணத்தையும் கொடுத்தார்: “டிரான்ஸ்போர்ட் கம்பெனி வைத்து நடத்துகிற அக்கா தங்கை இருவர், கட்டுமானக் கருவிகள் அடங்கிய 13 மீட்டர் [40 அடி] நீளமுள்ள கண்டெய்னரை அந்நாட்டில் கட்டட வேலை நடக்கும் இடங்களுக்கும் பக்கத்து நாடுகளுக்கும்கூட அனுப்ப ஏற்பாடு செய்கிறார்கள்; 1993-லிருந்தே அவர்கள் இவ்விதமாகச் செய்துவருகிறார்கள். அது ஒரு பெரிய நன்கொடைதான்! நாங்கள் தொடர்பு கொள்கிற பல கம்பெனிகள்கூட எங்களுடைய வேலையைப் பார்த்து, நன்கொடை அளிக்க அல்லது கட்டணச் சலுகை அளிக்கத் தூண்டப்பட்டிருக்கின்றன.”
நன்கு திட்டமிட்டு, வேலையாட்களை ஒழுங்குபடுத்தியபின் சகோதரர்கள் பெரும்பாலும் மூன்றே நாட்களில் ஒரு மன்றத்தைக் கட்டி முடித்திருக்கிறார்கள். இது போவோர் வருவோரின் பாராட்டையும் பெற்றுத் தந்திருக்கிறது. ஓர் இடத்தில் முதல்நாள் கட்டட வேலை முடியப்போகும் நேரத்தில், அருகேயிருந்த ‘பார்’ரில் மூக்குமுட்ட பியர் குடித்திருந்த இரண்டு பேர் சகோதரர்களிடம் வந்தார்கள். தாங்கள் எப்போதும் ஒரு காலியிடம் வழியாகத்தான் வீட்டிற்குப் போவதாகவும் இப்போது அங்கே ஒரு கட்டடம் இருப்பதாகவும் சொன்னார்கள். அவர்களுக்குத் திக்குத் தெரியாமல் போனதால், சகோதரர்களிடம் வழி கேட்டார்கள்.
சுயதியாக மனப்பான்மை
1990-களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் நாட்டில் சமாதானமும் பிறக்கவில்லை, ஒழுங்கை நிலைநாட்டவும் முடியவில்லை. மாறாக, ஒருபோதும் இருந்திராதளவு வன்முறை தாண்டவமாடியது. நிலைமை மோசமடைந்தது, வன்முறை அதிகரித்ததற்கு மக்கள் பல காரணங்களைச் சொன்னார்கள்; அரசியல் போட்டியும் பொருளாதார வீழ்ச்சியுமே அதற்குக் காரணமென அநேகர் சொன்னார்கள்.
இருந்தாலும், ராஜ்ய மன்றக் கட்டுமானப் பணி தொடர்ந்தது. கறுப்பர்களுக்கென
ஒதுக்கப்பட்டிருந்த இடங்களுக்கு உள்ளூர் சகோதரர்களுடைய துணையுடன் மற்ற பல இனத்தைச் சேர்ந்த வாலண்டியர்கள் சென்றார்கள். வாலண்டியர்கள் சிலர் கோபக்கார கும்பல்களால் தாக்கப்பட்டார்கள். 1993-ல் ஸோவேட்டோவில் ஒரு ராஜ்ய மன்றக் கட்டுமான வேலை நடக்கையில், மூன்று வெள்ளைக்கார சகோதரர்கள் கட்டட சாமான்களுடன் வேலை நடக்கும் இடத்திற்கு வண்டியில் வந்துகொண்டிருந்தபோது ஒரு வன்முறைக் கும்பல் அவர்கள்மேல் கல்லெறிந்தது. வண்டியின் ஜன்னல்கள் நொறுங்கின, சகோதரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் எப்படியோ வண்டியை ஓட்டிக்கொண்டு வேலை நடக்குமிடத்திற்கு வந்துசேர்ந்தார்கள். அங்கு வந்தவுடன் உள்ளூர் சகோதரர்கள் பாதுகாப்பான வழியாக அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள்.கட்டுமானப் பணியில் தாமதம் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன; அந்த வார இறுதியில் எல்லா இனத்தையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கட்டுமானப் பணியில் கலந்துகொண்டார்கள். உள்ளூர் பயனியர்கள், ராஜ்ய மன்றத்தைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் தெரு ஊழியம் செய்தார்கள். ஏதாவது பிரச்சினை இருப்பது தெரியவந்தால் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த சகோதரர்களுக்கு அவர்கள் அறிவித்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு, காயமடைந்த சகோதரர்கள் நன்கு குணமடைந்து மீண்டும் ராஜ்ய மன்றக் கட்டுமான வேலைக்கு வந்தார்கள்.
வாலண்டியர்களாக சகோதரர்கள் ராஜ்ய மன்றக் கட்டுமான வேலைக்கென தங்களையே அர்ப்பணித்ததையும், அவர்கள் செய்த தியாகங்களையும் சபைகள் பெரிதும் போற்றுகின்றன. 15 வருட காலப்பகுதியில், ஃபானி மற்றும் இலேன் ஸ்மித் தம்பதியர் தங்களுடைய சொந்தச் செலவிலேயே பெரும்பாலும் தூர இடங்களுக்குப் பயணித்து 46 ராஜ்ய மன்றங்களைக் கட்டிக் கொடுப்பதில் உதவியிருக்கிறார்கள்.
மண்டலக் கட்டடக் குழுவுக்கு க்வாஸூலூ-நடாலிலுள்ள ஒரு சபை இவ்வாறு எழுதியது: “நீங்கள் இங்கு வந்து எங்களுக்கு ராஜ்ய மன்றத்தைக் கட்டித் தருவதற்காக, உங்களுடைய தூக்கத்தையும் குடும்பத்தினரோடு இருக்கும் சந்தோஷத்தையும் பொழுதுபோக்கையும் இன்னும் பலவற்றையும் தியாகம் செய்தீர்கள். இந்த வேலையைச் செய்து முடிப்பதற்காக உங்களுடைய சொந்தப் பணத்தையும் நிறைய செலவிட்டிருக்கிறீர்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு ‘நன்மையுண்டாக’ யெகோவா உங்களை நினைப்பாராக.—நெகேமியா 13:31.”
ஒரு சபை அதன் சொந்த ராஜ்ய மன்றத்தைக் கொண்டிருக்கும்போது சுற்றுவட்டாரத்தில் நல்ல பிரதிபலிப்பைப் பார்க்க முடிகிறது. ஒரு சபை பின்வருமாறு குறிப்பிட்டது இதற்கு ஓர் உதாரணம்: “ராஜ்ய மன்றம்
கட்டி முடிக்கப்பட்ட பிறகு கூடிவருவோரின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது; அதனால் பொதுப் பேச்சு மற்றும் காவற்கோபுர படிப்புக்கு சபையை இரண்டு தொகுதிகளாகப் பிரிக்க வேண்டியுள்ளது. சீக்கிரத்திலேயே இன்னொரு சபையை ஏற்படுத்த வேண்டியுள்ளது.”நாட்டுப்புறங்களில் உள்ள சிறிய சபைகளால் சில சமயங்களில் ராஜ்ய மன்றத்திற்காக பண உதவி அளிக்க முடிவதில்லை. இருந்தாலும், பணம் திரட்டுவதற்கான வழிகளை அநேகர் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு சபையில், சகோதரர்கள் பன்றிகளை விற்றார்கள். அதிகப் பணம் தேவைப்பட்டபோது ஒரு காளை மாட்டையும் ஒரு குதிரையையும் விற்றார்கள். அதன் பிறகு, 15 ஆடுகளையும், இன்னொரு காளை மாட்டையும் குதிரையையும் விற்றார்கள். ஒரு சகோதரி, பெயின்டுக்கான பணத்தைக் கொடுத்தார், மற்றொருவர் கார்ப்பெட் வாங்கிக் கொடுத்தார், இன்னுமொருவர் கர்ட்டன்கள் வாங்குவதற்குப் பணம் கொடுத்தார். கடைசியில், நாற்காலிகள் வாங்குவதற்கு மற்றொரு காளை மாடும் இன்னும் ஐந்து ஆடுகளும் விற்கப்பட்டன.
காட்டெங் சபை அதன் ராஜ்ய மன்றக் கட்டுமான வேலை முடிந்ததும் இவ்வாறு எழுதியது: “ராஜ்ய மன்றம் கட்டப்பட்டு, குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாக, வெளி ஊழியத்திற்குப் பிறகு அதன் அழகைப் பார்த்து ரசிக்க அங்குச் சென்றோம். ஊழியத்திற்குப் பின் முதலில் ராஜ்ய மன்றத்தைப் போய்ப் பார்க்காமல் வீட்டிற்குப் போக எங்களுக்கு மனம் வரவில்லை.”
மற்றவர்களும் கவனித்தார்கள்
வழிபாட்டிற்காகக் கூடிவரும் இடங்களைக் கட்டுவதற்கு யெகோவாவின் சாட்சிகள் எடுக்கும் முயற்சிகளைப் பொதுவாக ஜனங்கள் கவனிக்கிறார்கள். க்வாஸூலூ-நடாலிலுள்ள உம்லாஸி சபை ஒரு கடிதத்தைப் பெற்றது. அதன் ஒரு பகுதி இவ்வாறு குறிப்பிட்டது: “உங்களுடைய சுற்று வட்டாரத்தைச் சுத்தமாக வைப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளை த கீப் டர்பன் பியூட்டிஃபுல் அசோஸியேஷன் பாராட்டுகிறது; தொடர்ந்து அவ்வாறு வைத்திருக்கும்படி உங்களை ஊக்குவிக்கிறோம். உங்களுடைய ஊக்கத்தால் இந்த இடம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. எங்களுடைய அமைப்பு, குப்பைக் கூளங்களைத் தவிர்த்து நம் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்குப் போராடும் ஓர் அமைப்பாகும். சுத்தம் சுகம் தருமென நாங்கள் நம்புகிறோம். அதனால்தான், நம்முடைய பகுதியைச் சுத்தமாக வைத்திருப்பதற்காகக் குடிமக்களை நாங்கள் பாராட்டுகிறோம். உங்களுடைய நல்ல முன்மாதிரிக்கு நன்றி. இந்த உம்லாஸி பகுதியைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.”
ஒரு சபை இவ்வாறு எழுதியது: “பேர்போன ஒரு திருடன் எங்களுடைய புதிய ராஜ்ய மன்றத்திற்குள் புகுந்தபோது, சுற்றிலுமிருந்த ஆட்கள் ஓடிவந்து அவனைத் தாக்கினார்கள். அந்தச் சுற்றுவட்டாரத்தில் இந்த ஒரேயொரு வழிபாட்டுக் கட்டடம் மட்டும் இருப்பதால், ‘எங்களுடைய சர்ச்சை’ வேண்டுமென்றே இவன் நாசப்படுத்துகிறான் என அவர்கள் சொன்னார்கள். போலீசிடம் ஒப்படைப்பதற்கு முன் அவனை அவர்கள் துவைத்தெடுத்து விட்டார்கள்.”
ஆப்பிரிக்காவில் ராஜ்ய மன்றங்களுக்கான தேவையைத் திருப்தி செய்தல்
வசதி குறைந்த நாடுகளில் ராஜ்ய மன்றங்களைக் கட்டிக்கொடுப்பதற்கு 1999-ல் யெகோவாவின் அமைப்பு ஓர் ஏற்பாடு செய்தது. ஆப்பிரிக்காவிலுள்ள பல நாடுகளில் இந்த வேலையை ஒழுங்குபடுத்துவதற்குரிய ராஜ்ய மன்ற மண்டல அலுவலகம் ஒன்று தென் ஆப்பிரிக்கக் கிளை அலுவலகத்தில் நிறுவப்பட்டது. ராஜ்ய மன்றக் கட்டுமானத் துறையை ஏற்படுத்துவதில் சகோதரர்களுக்கு உதவ, இந்த மண்டல அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவர் ஒவ்வொரு கிளை அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டார். நிலம் வாங்குகிற பொறுப்பும், ராஜ்ய மன்றக் கட்டுமானக் குழுக்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் இத்துறைக்கு உரியது. உள்ளூர் சகோதரர்களுக்கு உதவவும், பயிற்சியளிக்கவும் சர்வதேச ஊழியர்களும் அனுப்பப்பட்டார்கள்.
தென் ஆப்பிரிக்க மண்டல அலுவலகம், ஆப்பிரிக்காவில் 25 ராஜ்ய மன்றக் கட்டுமானத் துறைகளை ஏற்படுத்தியுள்ளது; இத்துறைகள் 37 நாடுகளில் நடக்கும் ராஜ்ய மன்றக் கட்டுமானப் பணிகளைக் கவனிக்கின்றன. இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாடுகளில் நவம்பர் 1999 முதற்கொண்டு, 7,207 ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டுள்ளன. 2006-ன் மத்திபத்திற்குள், இந்நாடுகளில் இன்னும் 3,305 ராஜ்ய மன்றங்களுக்கான தேவையிருப்பது உறுதிசெய்யப்பட்டது.
அரசியல் புரட்சியின் விளைவுகள்
முந்தின அரசாங்கத்தின் இன ஒதுக்கீட்டுக் கொள்கைகளினால் கலவரங்களும் வன்முறைகளும் அதிகரித்தன; அதனால் யெகோவாவின் சாட்சிகள் சிலர் நேரடியாகவே பாதிக்கப்பட்டார்கள். கறுப்பர்களுக்குரிய பகுதிகளில் பயங்கரமான சண்டைகள் நடந்தன, அதில் அநேகர் உயிரிழந்தார்கள். என்றாலும், பெரும்பாலான சகோதரர்கள் இந்தக் கடினமான காலக்கட்டத்தில் ஜாக்கிரதையாக இருந்து யெகோவாவுக்கு உண்மையோடு சேவைசெய்து வந்தார்கள். ஒரு நாள் இரவு, ஒரு சகோதரரும் அவருடைய குடும்பத்தாரும் தூங்கிக்கொண்டிருக்கையில் அவருடைய வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
அவர்கள் எல்லாரும் எப்படியோ தப்பித்துவிட்டார்கள்; பிற்பாடு அந்தச் சகோதரர் இவ்வாறு எழுதினார்: “நானும் என்னுடைய குடும்பத்தாரும் முன்பைவிட இப்போது விசுவாசத்தில் ரொம்பவே பலமுள்ளவர்களாய் இருக்கிறோம். எங்களுடைய உடமைகள் எல்லாவற்றையுமே இழந்துவிட்டோம்; என்றாலும், யெகோவாவிடமும் அவருடைய ஜனங்களிடமும் நாங்கள் மிகவும் நெருக்கமானோம். சகோதரர்கள் எங்களுக்குப் பொருளுதவி அளித்தார்கள். இந்த உலகத்தின் முடிவை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்; அதுவரை ஆன்மீக பரதீஸில் இருப்பதற்காக நாங்கள் யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.”மே 10, 1994-ல் கறுப்பர்களின் முதல் ஜனாதிபதியாக நெல்சன் மண்டேலா பதவியேற்றார். ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியும் இவரே; அப்போதுதான் ஓட்டுப் போடுவதற்கான வாய்ப்பு முதன்முறையாக கறுப்பர்களுக்கு அளிக்கப்பட்டது. அப்போது, ஜனங்கள் மத்தியில் தேசப்பற்று உருவானது, ஜனங்கள் மகிழ்ச்சிக்கடலில் திளைத்தார்கள். சில சகோதரர்களுக்கு இது வேறுவிதமான பிரச்சினைகளைக் கொண்டுவந்தது.
வருத்தகரமான விஷயம் என்னவென்றால், சிலர் தங்களுடைய கிறிஸ்தவ நடுநிலையைக் காத்துக்கொள்ளவில்லை. வாக்காளருக்கான பயிற்சியை அளித்து வாக்களிப்பதை ஊக்குவிக்கிற வேலை அநேகருக்குக் கிடைத்தது. இன்னும் சிலர் வாக்குச் சாவடிகளில் அலுவலர்களாக ஆனார்கள் அல்லது வாக்களிக்கச் சென்றார்கள். என்றாலும் யெகோவாவின் ஜனங்கள் பெரும்பாலோர் நடுநிலையைக் காத்துக்கொண்டார்கள். அவ்வாறு காத்துக்கொள்ளாமற்போன அநேகர் தங்களுடைய தவறை பின்னர் உணர்ந்தார்கள்; அவர்கள் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பி, பைபிளின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார்கள்.
இருதயத்தில் வளர்ச்சி
அதிகமான ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கான ஏற்பாடு, யெகோவாவின் ஆசீர்வாதத்திற்கு அத்தாட்சியாகும்; ஆனால், உண்மையில் ஜனங்களின் இருதயத்திலேயே அற்புத வளர்ச்சி ஏற்படுகிறது. (2 கொ. 3:3) பல வித்தியாசப்பட்ட பின்னணிகளைச் சேர்ந்தவர்கள் சத்தியத்திடம் கவரப்பட்டிருக்கிறார்கள். சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
ரால்சன் மூலாட்ஸி என்பவர் 1986-ல் சிறையிலிடப்பட்டார்; கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். நம்முடைய சிற்றேட்டில் இருந்த கிளை அலுவலக விலாசத்தைப் பார்த்த அவர், பைபிளைப் பற்றி கற்றுக்கொள்ள உதவும்படி கேட்டெழுதினார். லெஸ் லீ என்ற விசேஷ பயனியர் அவரைச் சந்தித்து பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். தான் கற்றதை மற்ற கைதிகளிடமும் காவலர்களிடமும் ரால்சன் சொல்ல ஆரம்பித்தார். ஏப்ரல்
1990-ல் சிறையிலேயே அவர் முழுக்காட்டப்பட்டார். உள்ளூர் சபையார் அவரைத் தவறாமல் சந்தித்து வருகிறார்கள்; ஒருநாளில் ஒரு மணிநேரம் சிறையை விட்டு வெளியே வர அவருக்கு அனுமதி கிடைக்கிறது. மற்ற கைதிகளுக்குப் பிரசங்கிப்பதற்காக இந்தச் சமயத்தை அவர் செலவிடுகிறார். மூன்று பேர் முழுக்காட்டுதல் பெறுமளவுக்கு அவர் உதவியிருக்கிறார், தற்போது இரண்டு பைபிள் படிப்புகளை நடத்திவருகிறார். அவருடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது; நன்னம்பிக்கை உறுதிமொழியின் அடிப்படையில் விடுதலை பெறும் வாய்ப்பும் உள்ளது.யெகோவாவிடம் கவர்ந்திழுக்கப்பட்டுள்ள இன்னும் சிலர் முற்றிலும் வித்தியாசப்பட்ட பின்னணியை உடையவர்கள். சத்தியத்தில் ஆர்வம் காட்டிய க்யீனி ரூஸோ, சபை புத்தகப் படிப்பில் கலந்துகொண்டார்; கேட்டகிஸம் எனப்படுகிற வேதப்பாட வகுப்புக்காக தயாரித்துக்கொண்டிருந்த தன் 18 வயது மகனைச் சந்திக்கும்படி புத்தகப் படிப்புக் கண்காணியிடம் அவர் சொன்னார். சகோதரர் அந்தப் பையனுடன் பைபிள் விஷயங்களை நன்கு கலந்துரையாடினார். அவன் தன் அம்மாவுடன் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தான். அடுத்து, அந்த அம்மா தன் கணவர் ஜான்னியைச் சந்தித்துப் பேசும்படி சகோதரரிடம் சொன்னார். அவருடைய கணவர் டச் சீர்திருத்த சர்ச்சில் மூப்பராகவும், அந்த சர்ச் குழுவின் சேர்மனாகவும் இருந்தார். அவருக்குச் சில கேள்விகள் இருந்தன. இந்தச் சகோதரர் அவருடன் பேசினார், அவர் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்.
அந்த வாரத்தில் மாவட்ட மாநாடு நடக்கவிருந்தது; அதற்கு வரும்படி க்யீனியை சகோதரர் அழைத்தார். அந்தச் சகோதரருக்கு ஒரே ஆச்சரியம்! ஜான்னியும் அவருடன் வந்து நான்கு நாட்களும் அதில் கலந்துகொண்டார். மாநாட்டு நிகழ்ச்சியும் சாட்சிகளின் மத்தியில் நிலவிய அன்பும் அவருடைய மனதைத் தொட்டுவிட்டன. அவர்களுடைய 18 வயது மகனும் சர்ச்சில் உதவி மதகுருவாகப் பணிபுரிந்த அவர்களுடைய மூத்த மகனும் பைபிள் படிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
அவர்கள் எல்லாருமே உடனடியாக சர்ச்சிலிருந்து ராஜினாமா செய்து கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள். வெளி ஊழியத்திற்கான ஒரு கூட்டத்திலும் அவர்கள் கலந்துகொண்டார்கள். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஆவதற்கு ஜான்னி இன்னும் தகுதி பெறாததால் சாட்சிகளுடன் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள முடியாதென சகோதரர் சொன்னார். இதைக் கேட்டதும் அவருடைய கண்ணிலிருந்து கண்ணீர் தாரைதாரையாய் வழிய ஆரம்பித்தது; இந்தச் சத்தியத்திற்காகத்தான் இவ்வளவு காலமாகத் தேடினேன், இதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லாமலிருக்க என்னால் முடியாது என அவர் சொன்னார்.
ரூஸோ தம்பதியருக்கு 22 வயதில் இன்னொரு மகனும் இருந்தான்; அவன் மூன்றாம் வருட இறையியல் மாணவனாக இருந்தான். அவனுடைய படிப்பை விட்டுவிட்டு வீட்டிற்கு வரும்படியும், படிப்புக்காக இனி பணம் கட்டப்போவதில்லை என்றும் தன் மகனுக்கு ஜான்னி கடிதம் எழுதினார். அந்த மகன் திரும்பி வந்த மூன்றாம் நாளில் ஜான்னியும் அவருடைய மூன்று பையன்களும் சபையாரோடு சேர்ந்து க்ரூகர்ஸ்டார்ப்பில் உள்ள பெத்தேல் வளாகத்தில் வேலை செய்தார்கள். பெத்தேலில் பார்த்த காரியங்கள் இறையியல் மாணவனாயிருந்த மகனைக் கவர்ந்ததால், தன் அண்ணன் தம்பியோடு சேர்ந்து பைபிள் படிப்பில் கலந்துகொள்ள அவன் ஒத்துக்கொண்டான். சில காலம் படித்த பிறகு, இறையியல் கல்லூரியில் தனது இரண்டரை வருடப் படிப்பின்போது கற்றுக்கொண்டதைவிட நிறைய விஷயங்களை ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டதாகச் சொன்னான்.
அந்த முழுக் குடும்பத்தாரும் முழுக்காட்டுதல் பெற்றார்கள். அந்த அப்பா இப்போது ஒரு மூப்பராக இருக்கிறார், அவருடைய ஆண் பிள்ளைகளில் சிலர் மூப்பர்களாக, உதவி ஊழியர்களாக இருக்கிறார்கள். ஒரு மகள் ஒழுங்கான பயனியராக இருக்கிறாள்.
‘உன் கூடாரத்தின் . . . கயிறுகளை நீளமாக்கு’
எதிர்காலத்தில் பெத்தேலை விரிவுபடுத்துவதற்கு ஏற்ப போதுமான இடத்தைப் பெற ஆரம்பத்திலேயே முயற்சி எடுக்கப்பட்டது; எனினும், க்ரூகர்ஸ்டார்ப் என்ற இடத்தில் கிளை அலுவலகக் கட்டடங்களைக் கட்டி பிரதிஷ்டை செய்து, பன்னிரண்டே வருடங்களுக்குப் பிறகு அதைப் பெருமளவு விரிவுபடுத்துவதற்கான தேவை ஏற்பட்டது. (ஏசா. 54:2) அந்தச் சமயத்தில் தென் ஆப்பிரிக்காவிலும் அந்தக் கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில் இருந்த நாடுகளிலும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 62 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. சேமிப்புக் கிடங்கு ஒன்றும் புதிய குடியிருப்புக் கட்டடங்கள் மூன்றும் கட்டப்பட்டன. துணிச் சலவையகமும், அலுவலகக் கட்டடங்களும் விரிவுபடுத்தப்பட்டன; மற்றுமொரு சாப்பாட்டறையும் கட்டப்பட்டது. 1999, அக்டோபர் 23-ம் தேதி இந்த விரிவாக்கத்திற்கு உட்பட்ட கட்டடங்கள் அனைத்தும் யெகோவாவுக்குப் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அப்போது, ஆளும் குழுவைச் சேர்ந்த சகோதரர் டேனியல் சிட்லிக் பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுத்தார்.
வெகு சமீபத்தில், கூடுதலாக 8,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு அச்சகம் விரிவுபடுத்தப்பட்டது. இதனால், புதிய மேன் ரோலட் லித்தோமேன் ரோட்டரி அச்சு இயந்திரம் வைப்பதற்கு இடம் கிடைத்திருக்கிறது. தானாகவே பத்திரிகைகளின் ஓரங்களை வெட்டி சீர்படுத்தி, எண்ணி, அடுக்கி வைக்கும் இயந்திரத்தையும்கூட இந்தக் கிளை அலுவலகம் பெற்றது. தென் ஆப்பிரிக்காவில் மெல்லிய அட்டைகளுள்ள புத்தகங்களையும் பைபிளையும் தயாரிப்பதற்கு வசதியாக சங்கிலித் தொடர் போன்று இயங்கும் பைண்டிங் மெஷினை ஜெர்மனி அன்பளிப்பாய் கொடுத்தது. இது, சஹாரா பாலைவனத்தின் தெற்கில் அமைந்துள்ள ஆப்பிரிக்க நகரங்கள் முழுவதற்கும் தேவையான பிரசுரங்களைத் தயாரிக்க உதவியாய் இருக்கும்.
மாநாடுகளுக்குப் பொருத்தமான இடங்கள்
மாநாட்டு மன்றங்களுக்கான தேவையைப் பூர்த்திசெய்ய பெரும் கட்டுமானத் திட்டம் போடப்பட்டது. ஜோஹெனஸ்பர்க் நகரத்திற்குத் தெற்கே உள்ள ஏகன்ஹாஃப் என்ற இடத்தில் முதல் கட்டடம் கட்டப்பட்டு, 1982-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கேப் டவுன் நகரில் பெல்வில் என்ற இடத்தில் மற்றொரு மாநாட்டு மன்றம் கட்டப்பட்டது; 1996-ல் இதன் பிரதிஷ்டைப் பேச்சை சகோதரர் மில்டன் ஹென்ஷல் கொடுத்தார். 2001-ல் பிரிடோரியா நகருக்கும் ஜோஹெனஸ்பர்க் நகருக்கும் இடையே உள்ள மிட்ரான்ட் என்ற இடத்தில் மற்றுமொரு மாநாட்டு மன்றம் கட்டி முடிக்கப்பட்டது.
மிட்ரான்ட்டில் கட்டுமானப் பணிக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்த அக்கம்பக்கத்தார், சகோதரர்களுடன் நன்கு அறிமுகமாகி, அவர்கள் செய்கிற வேலைகளைக் கவனித்தபோது தங்கள் மனப்பான்மையை மாற்றிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவர் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பழங்களையும் காய்கறிகளையும் ஒரு வருடத்திற்கும் மேல் தவறாமல் அன்பளிப்பாய் கொடுத்து வந்தார். சில கம்பெனிகள் நன்கொடை கொடுக்க தாங்களாகவே முன்வந்தன. தோட்டங்களுக்குத் தேவையான உரத்தை ஒரு கம்பெனி இலவசமாகக் கொடுத்தது. மற்றொரு கம்பெனி 10,000 ரான்ட் (சுமார் 1,575 அமெரிக்க டாலர்) தொகையைக் கட்டுமானப் பணிக்காக நன்கொடையாய் சகோதரர்களிடம் கொடுத்தது. அதுமட்டுமல்ல, சகோதரர்களும்கூட மாநாட்டு மன்றக் கட்டுமானப் பணிக்கென தாராளமாக நன்கொடை அளித்தார்கள்.
அந்த மன்றம் அழகாக, நன்கு வடிவமைக்கப்பட்ட கட்டடமாகும். பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுத்த ஆளும் குழுவின் அங்கத்தினரான சகோதரர் கை பியர்ஸ், மகத்தான கடவுளாகிய யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் அதைப் பயன்படுத்துவதே அந்த மன்றத்துக்கு உண்மையில் அழகு சேர்க்குமென குறிப்பிட்டார்.—1 இரா. 8:27.
மனித சட்டங்கள் சாட்சிகளைப் பிரிப்பதில்லை
கறுப்பர் வாழும் பகுதிகளில் மாநாடுகளை நடத்துவதற்குப் பொருத்தமான இடங்களைக் கண்டுபிடிப்பது பல ஆண்டுகளாக பெரும் பிரச்சினையாய் இருந்தது. லிம்போபோ மாகாணத்தில் ஒதுக்கீட்டுப் பகுதியில் சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள்; அச்சமயங்களில் வெள்ளையர்கள் அங்கே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பகுதிக்குள் செல்ல காரி சீயக்கர்ஸ் என்ற மாவட்டக் கண்காணிக்கு அனுமதி கிடைக்கவில்லை; எனவே அவரால் மாநாட்டை நடத்துவதற்கு ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனினும், அந்தப் பகுதிக்கு அடுத்தாற்போல் இருந்த நிலத்தின் சொந்தக்காரரை சகோதரர் சீயக்கர்ஸ் அணுகிப் பார்த்தார்; ஆனால், இவர் தன்னுடைய நிலத்தில் மாநாடு நடைபெறுவதை விரும்பவில்லை. இருப்பினும்,
சகோதரர் சீயக்கர்ஸுடைய வண்டியை (ட்ரெய்லரை) அங்கு நிறுத்திக்கொள்ள அனுமதி கொடுத்தார். இறுதியில், அந்த ஒதுக்கீட்டுப் பகுதியிலேயே புதர்கள் அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் சகோதரர்கள் மாநாட்டை நடத்தினார்கள். இந்தப் பகுதி, அந்த விவசாயியின் நிலத்திற்கு அடுத்தாற்போல் அமைந்திருந்தது; இவ்விரண்டையும் முள் கம்பி வேலி பிரித்தது. புதர்கள் அப்புறப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டுப் பகுதிக்கு அடுத்திருந்த அந்த விவசாயியின் நிலத்தில் சகோதரர் சீயக்கர்ஸ் தன் வண்டியை நிறுத்தினார், அதிலிருந்து தன் பேச்சுகளைக் கொடுத்தார். இந்த “மேடையை” பிரிக்கும் வேலிக்கு அப்புறத்தில் சகோதரர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் மாநாட்டு நிகழ்ச்சியை அனுபவித்தார்கள், சட்டத்தை மீறாமலேயே சகோதரர் சீயக்கர்ஸ் சகோதரர்களுக்கு முன்பாகப் பேச்சு கொடுத்தார்.வெளி ஊழியத்திற்குப் பயன் அளிக்கிற மாற்றம்
2000-ஆம் ஆண்டு முதற்கொண்டு, உண்மையான ஆர்வம் காட்டுகிற அனைவருக்கும் பிரசுரங்களை விலையின்றி விநியோகிக்கும் ஏற்பாட்டை தென் ஆப்பிரிக்காவிலிருக்கும் எல்லா சபைகளும் பின்பற்றும்படி ஆளும் குழு தெரிவித்தது. உலகளாவிய சுவிசேஷ வேலைக்காக சிறிய நன்கொடை அளிக்கும்படி தனிப்பட்டவர்களிடம் பிரஸ்தாபிகள் கேட்பார்கள்.
மனமுவந்து நன்கொடை அளிக்கும் இந்த ஏற்பாடு பொதுமக்களுக்கு மட்டுமல்ல, நம் சகோதரர்களுக்கும்கூட பயனுள்ளதாய் அமைந்தது. முன்பு, காவற்கோபுர படிப்பிலும் சபை புத்தகப் படிப்பிலும் பயன்படுத்தப்பட்ட பிரசுரங்களைக் காசு கொடுத்து வாங்க முடியாத நிலையில் அநேகர் இருந்தார்கள். 100 பிரஸ்தாபிகள் இருந்த சில சபைகளில், சுமார் 10 பேரின் கைகளில் மட்டுமே காவற்கோபுர பத்திரிகைகள் இருந்தன. இப்போது ஒவ்வொருவரிடமும் சொந்தப் பிரதி இருக்கிறது.
சமீப வருடங்களில் பெத்தேலிலுள்ள எக்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட் செய்யும் வேலை பெருமளவு அதிகரித்துள்ளது. மே 2002-ல் மொத்தம் 432 டன் சரக்குகள் பிற ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்டன; அவற்றில் பெரும்பாலானவை பைபிள் பிரசுரங்கள் ஆகும்.
மலாவி, மொசம்பிக், ஜாம்பியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளின் கிளை அலுவலகங்களுக்குத் தேவையான பிரசுரங்களை அனுப்புவதற்கு தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகம் தற்போது சேமித்து வைக்கிறது. இந்த நாடுகளிலுள்ளவர்கள் பயன்படுத்தும் பல்வேறு மொழி பிரசுரங்கள் அனைத்தும் இங்கு சேமித்து வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு சபைக்கும் தேவைப்படும் பிரசுரங்கள் தனித்தனியாக பார்சல் செய்யப்பட்டு டிரக்குகளில் ஏற்றப்படுகின்றன; நேரடியாகச் சேமிப்புக் கிடங்குகளில் இறக்குவதற்கு வசதியாக அவை பார்சல் செய்யப்பட்டு அந்தந்த கிளை அலுவலக வண்டிகளில் ஏற்றப்படுகின்றன.
நன்கொடை ஏற்பாடு செயல்பட ஆரம்பித்ததிலிருந்து, பிரசுரத்திற்கான
தேவை பெருமளவு அதிகரித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் பத்திரிகைகளின் அச்சடிப்பு மாதத்திற்கு 10 லட்சம் பிரதிகளிலிருந்து 44 லட்சம் பிரதிகளாக அதிகரித்துள்ளது. 1999-ல் 200 டன்னாக இருந்த பிரசுர ஆர்டர்கள், வருடத்திற்கு 3,800 டன்னாக அதிகரித்திருக்கிறது.கட்டுமானப் பொருள்களும்கூட பிற ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதோடு, தேவையிலிருக்கும் சகோதரர்களுக்கு நிவாரணப் பொருள்களைச் சேகரித்து அளிக்கும் பணியையும் தென் ஆப்பிரிக்கா ஒழுங்கமைத்திருக்கிறது. கடும் துன்புறுத்தல் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு ஓடிவந்து முகாம்களில் தங்கிவிட்ட மலாவியைச் சேர்ந்த சகோதரர்களுக்கு மீண்டும் மீண்டும் உதவி அளிக்கப்பட்டது. 1990-ல் கடும் வறட்சியால் நலிந்து போயிருந்த அங்கோலாவைச் சேர்ந்த சகோதரர்களுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டன. அங்கு நடந்த உள்நாட்டுப் போரும்கூட சகோதரர்களை ஏழ்மையின் பிடியில் சிக்க வைத்தது; அந்தச் சகோதரர்களுக்குத் தேவையான உணவும் துணிமணிகளும் டிரக்குகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. மொசம்பிக் நாட்டில், 2000-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு அங்குள்ள சகோதரர்களுக்கு உதவி அளிக்கப்பட்டது. 2002-ஆம் ஆண்டிலும் 2003-ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் ஏற்பட்ட கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஜிம்பாப்வே நாட்டிலுள்ள சகோதரர்களுக்கு 800-க்கும் அதிக டன் மக்காச்சோளம் அனுப்பி வைக்கப்பட்டது.
மொழிபெயர்ப்பில் முன்னேற்றம்
தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்தில் மிகப் பெரிய மொழிபெயர்ப்பு இலாகா இருக்கிறது. பெருமளவில் செய்யப்பட வேண்டியிருந்த பைபிள் மொழிபெயர்ப்பு வேலை காரணமாக சில வருடங்களுக்கு முன்பு இந்த இலாகா விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 102 மொழிபெயர்ப்பாளர்கள் 13 மொழிகளில் பிரசுரங்களை மொழிபெயர்ப்பதில் உதவுகிறார்கள்.
பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிள் தற்போது ஏழு உள்ளூர் மொழிகளில் கிடைக்கிறது. ட்ஸ்வானா பைபிளைப்பற்றி சகோதரர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “இதை வாசித்தவுடன் புரிந்துகொள்ள முடிகிறது; இது வாசிப்பதற்கு எளிதாகவும் கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கிறது. ஆன்மீக ரீதியில் நாங்கள் இந்தளவுக்கு ஊட்டத்தைப் பெற செய்திருப்பதற்கு, யெகோவாவுக்கும் பரிசுத்த ஆவியின் மூலம் அவர் வழிநடத்தும் அமைப்புக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன்.”
மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவியாக நவீன தொழில்நுட்பம் திறம்பட்ட
விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவும் சாஃப்ட்வேரை உருவாக்கும்படி புரூக்ளின் தலைமை அலுவலகத்திலுள்ள சகோதரர்கள் ஆளும் குழுவால் நியமிக்கப்பட்டார்கள். காலப்போக்கில், இந்தப் பணியில் உதவுமாறு தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்திடமும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டு முயற்சியால், உவாட்ச்டவர் டிரான்ஸ்லேஷன் சிஸ்டம் என அழைக்கப்படும் புரோகிராம் உருவானது. இதனை உலகெங்குமுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் நன்கு பயன்படுத்துகிறார்கள்.தானாகவே கம்ப்யூட்டர் மொழிபெயர்ப்பதற்கு எந்த புரோகிராம்களையும் சகோதரர்கள் உருவாக்க முயற்சி செய்யவில்லை; ஆனால், நம் அமைப்போடு சம்பந்தப்படாத சில கம்பெனிகள் அத்தகைய முயற்சியில் இறங்கி, ஓரளவே வெற்றி பெற்றன. மாறாக, சகோதரர்கள் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவும் விதத்தில் கம்ப்யூட்டரில் வசதிகளைச் செய்துகொடுப்பதில் கவனம் செலுத்தினார்கள். உதாரணமாக, எலெக்ட்ரானிக் வடிவில் பைபிள்கள் கிடைத்தன. அதோடு, எலெக்ட்ரானிக் வடிவிலுள்ள டிக்ஷ்னரிகளை மொழிபெயர்ப்பாளர்கள் தாங்களாகவே தொகுத்துக்கொள்ள முடிந்தது. சில உள்ளூர் மொழிகளில் போதுமான டிக்ஷ்னரிகள் இல்லாததால் இவை மதிப்புமிக்கவையாய் உள்ளன.
“மௌன உலகில்” சத்திய விதைகளை விதைத்தல்
ராஜ்ய செய்தியை எல்லாருக்கும் அறிவிக்க பிரஸ்தாபிகள் முயற்சி செய்கிறார்கள். காதுகேளாதவர்களுடன் உரையாடுவது பெரும் கஷ்டமாய் இருந்திருக்கிறது, பலன்களோ சந்தோஷத்தைத் தருகின்றன. 1960-களில் ஜூன் காரிகஸ் என்ற சகோதரி காதுகேளாத ஒரு பெண்மணிக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார். அந்தப் பெண்மணியோடுகூட காதுகேளாதிருந்த அவருடைய கணவரும் நல்ல முன்னேற்றம் செய்து முழுக்காட்டுதல் பெற்றார்கள்.
அதுமுதற்கொண்டு காதுகேளாத எண்ணற்றோர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்; நாடெங்குமுள்ள நகரங்களில் காதுகேளாதோருக்கான தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இப்போதெல்லாம் மாவட்ட மாநாடுகளில் சைகை மொழிப் பகுதி சகஜமான ஒன்றாகிவிட்டது. அங்கு கூடிவந்திருக்கும் ஆட்கள் சைகை மொழியைப் பயன்படுத்தி பாடல்களைப் பாடுவதையும் தங்கள் கைகளை உயர்த்தி ஆட்டுவதன் மூலம் மற்றவர்களுடன் சேர்ந்து “கைதட்டுவதையும்” பார்ப்பது நெஞ்சை நெகிழ வைக்கிறது.
ஜோஹெனஸ்பர்க் நகரில் உள்ள பிரிக்ஸ்டன் சபையில் காதுகேளாதவர்களுக்காக முதன்முதலில் ஒரு தொகுதி ஏற்படுத்தப்பட்டது; இதை, ஜூனுடைய கணவரும் மூப்பருமான ஜார்ஜ் மேற்பார்வை செய்தார். சபையில், சைகை மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பிய சகோதரர்களுக்கும் பெத்தேல் அங்கத்தினர் சிலருக்கும் சைகை மொழியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழுள்ள பிராந்தியத்தில் ஒரு சைகை மொழி சபையும் ஐந்து தொகுதிகளும் உள்ளன.பிற நாடுகளில் ராஜ்ய கனிகள்
தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகம் இன்னும் ஐந்து நாடுகளில் சுவிசேஷ வேலையை மேற்பார்வையிடுகிறது. அந்தப் பகுதிகளில் ராஜ்ய வேலை எந்தளவு முன்னேறியுள்ளது என்பதை அறிந்துகொள்வதற்கு பின்வரும் தகவல் சுருக்கமான கண்ணோட்டத்தை அளிக்கிறது.
நமிபியா
இந்த நாடு அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து போட்ஸ்வானாவின் மேற்கு எல்லைவரை பரவியிருக்கிறது. முதல் உலகப் போருக்குப் பிறகு, சர்வதேச சங்கத்தின் ஆணைப்படி இது தென் ஆப்பிரிக்காவின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. இறுதியில், பெரும் அரசியல் கிளர்ச்சிக்கும் இரத்தக் களரிக்கும் பிறகு 1990-ல் நமிபியா சுதந்திரம் பெற்றது. இந்த நாட்டின் பெரும்பகுதி வறண்டு கிடக்கிறது, ஜனநெருக்கமும் குறைவாகவே இருக்கிறது. எனினும், இயற்கை வனப்பில் ஜொலிக்கும் சில இடங்கள், எண்ணற்ற வனவிலங்குகளோடும், அரிய தாவரங்களோடும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. நாமிப் பாலைவனம் எக்கச்சக்கமான சுற்றுலாப் பயணிகளைச் சுண்டியிழுக்கிறது; விவரிக்கவே முடியாதளவு விதவிதமான வனவாழ் விலங்குகள் கடுமையான இச்சூழ்நிலைகளிலும் உயிர்வாழ்வதைப் பார்த்து இப்பயணிகள் மலைத்து நிற்கலாம். நமிபியாவில் வண்ணக்கோலம் படைக்கிற இயற்கைக் காட்சிகள் மட்டுமல்லாமல், ஒன்பது தேசிய மொழிகளைப் பேசும் மனங்கவரும் பல ரக மக்களும்கூட இருக்கிறார்கள்.
1928-ல் ராஜ்ய செய்தியைப் பரப்புவதற்கு ஆரம்ப முயற்சிகள் எடுக்கப்பட்டன. தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகம் அந்த வருடத்தில், நேரில் போய் சந்திக்க முடியாத ஆட்களுக்குப் பெருமளவு பைபிள் பிரசுரங்களை அனுப்பி வைத்தது. அந்தச் சமயத்தில், நமிபியாவில் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவராய் ஆகவிருந்த முதல் நபர் சத்தியத்தை விநோதமான விதத்தில் கற்றுக்கொண்டார். பெர்ன்ஹார்ட் பாடா என்பவர் முட்டைகளை வாங்கி வந்தார்; அவை நம்முடைய பிரசுரத்திலிருந்து கிழிக்கப்பட்ட பக்கங்களால் சுற்றப்பட்டிருந்தன. அவை எந்தப் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்டன என்பதை அறியாமல் அவர் ஒவ்வொரு பக்கத்தையும் கவனமாய் வாசித்தார். இறுதியில், ஜெர்மனி கிளை அலுவலக விலாசமிருந்த அந்தப் பிரசுரத்தின் கடைசி பக்கத்தில் ஒரு முட்டை சுற்றப்பட்டிருந்தது. இன்னும் அதிக பிரசுரங்களை அனுப்பி வைக்கும்படி அவர் அந்த விலாசத்திற்குக் கேட்டெழுதினார். இறக்கும்வரை பெர்ன்ஹார்ட் மாதம் தவறாமல் வெளி ஊழியத்தில் கலந்துகொண்டதாக அவருடைய சபையைப் பின்னர் சந்தித்த ஒரு வட்டாரக் கண்காணி தெரிவித்தார்.
1929-ல் லியனி டெரோன் என்ற பயனியர் சகோதரி நமிபியாவின் தலைநகரான விண்ட்ஹோக் நகருக்கு அனுப்பப்பட்டார். இந்தச் சகோதரி நமிபியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் தபால்களை எடுத்துச் செல்லும் வாகனத்திலும் ரயிலிலும் சென்று பிரசங்கித்தார். நான்கு மாதங்களில் ஆங்கிலம், ஆப்பிரிக்கான்ஸ், ஜெர்மன் ஆகிய மொழிகளில் 6,388 புத்தகங்களையும் சிறுபுத்தகங்களையும் வினியோகித்திருந்தார். அவ்வப்போது நமிபியாவில் பயனியர்கள் பிரசங்கித்திருந்தாலும் அங்கேயே தங்கி ஆர்வம் காட்டியவர்களை மீண்டும்போய் சந்திக்க யாருமே இல்லாதிருந்தார்கள். 1950-ல் மிஷனரிகள் சிலர் வந்தபோது இந்த நிலை மாறியது. கஸ் எரிக்சன், ஃப்ரெட் ஹேஹர்ஸ்ட், ஜார்ஜ் கூட் ஆகியோர் மிஷனரிகளாக வந்தார்கள்; இவர்கள் அனைவரும் இறக்கும்வரை உண்மையாய் சேவை செய்தவர்களென நற்பெயர் எடுத்திருக்கிறார்கள்.
1953-ல் இந்நாட்டில் டிக் வால்ட்ரன், அவருடைய மனைவி கார்லீ உட்பட எட்டு மிஷனரிகள் இருந்தார்கள். e கடுமையாய் எதிர்த்த கிறிஸ்தவமண்டல குருமாரையும், உள்ளூர் அதிகாரிகளையும் அவர்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. உள்ளூர் மக்களுக்கு பைபிள் செய்தியை அறிவிக்க வால்ட்ரன் தம்பதியர் விரும்பியபோதிலும், கறுப்பர் வசிக்கும் பகுதிகளுக்குச் செல்ல அவர்களுக்கு அரசு அனுமதி தேவைப்பட்டது. டிக் அதற்காக விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்கவில்லை.
1955-ல் வால்ட்ரன் தம்பதியருக்கு மகள் பிறந்த பிறகு அவர்களால் மிஷனரி ஊழியத்தைத் தொடர முடியவில்லை; எனினும், டிக் வால்ட்ரன் கொஞ்ச காலத்திற்கு பயனியர் ஊழியம் செய்து வந்தார். 1960-ல் கறுப்பர் வசிக்கும் நகர்ப்புறமான காட்டூடூரா என்ற இடத்திற்குச் செல்ல டிக் வால்ட்ரன் ஒருவழியாக அனுமதி பெற்றார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஜனங்கள் ரொம்பவே ஆர்வம் காட்டினார்கள்.” வெகு சீக்கிரத்திலேயே இந்த நகர்ப்புறத்தைச் சேர்ந்த அநேகர் சபை கூட்டங்களுக்கு வந்தார்கள். இப்போது, 50 வருடங்களுக்கும் மேலாக வால்ட்ரன் தம்பதியர் நமிபியாவில் உண்மையோடு சேவை செய்து வருகிறார்கள். இப்பகுதியில் ராஜ்ய காரியங்களை முன்னேற்றுவிப்பதில் அவர்கள் பெருமளவு உதவியிருக்கிறார்கள்.
நமிபியாவிலுள்ள பல்வேறு இனத் தொகுதியினருக்கு பைபிள் சத்தியங்களை அறிவிப்பது சவாலை முன்வைத்தது. ஹெரெரோ, க்வாங்காலி,
ன்டோங்கா ஆகிய உள்ளூர் மொழிகளில் பைபிள் பிரசுரங்கள் எதுவும் இல்லாதிருந்தது. ஆரம்பத்தில், கல்வி கற்ற உள்ளூர்வாசிகள் சிலர் பைபிள் படிப்பு படித்து வந்தார்கள்; இவர்கள், உள்ளூரிலிருந்த சாட்சிகளின் மேற்பார்வையில் துண்டுப்பிரதிகள், சிற்றேடுகள் சிலவற்றை மொழிபெயர்த்துக் கொடுத்தார்கள். அப்போது விசேஷ பயனியராய் இருந்த எஸ்தர் பார்மான் என்பவர் குவானியாமா மொழியைக் கற்றுக்கொண்டார்; காலப்போக்கில், அவர் ஏற்கெனவே கற்றிருந்த ஓர் உள்ளூர் மொழியோடுகூட இந்த மொழியிலும் பேச ஆரம்பித்தார். இவரும் ன்டோங்கா மொழி பேசிய ஏனா நெக்வாயோ என்ற சகோதரியும் சேர்ந்து காவற்கோபுரத்தை மொழிபெயர்த்தார்கள்; சில கட்டுரைகள் குவானியாமா மொழியிலும், மீதமுள்ள கட்டுரைகள் ன்டோங்கா மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு இந்தப் பத்திரிகையில் வெளிவந்தன. ஒவாம்போலாந்தில் இந்த இரு மொழிகளும் பயன்படுத்தப்படுகின்றன, இவற்றைப் பெரும்பாலோர் புரிந்துகொள்கிறார்கள்.1990-ல் விண்ட்ஹோக் நகரில் எல்லா வசதிகளும் நிறைந்த மொழிபெயர்ப்பு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. அநேக மொழிபெயர்ப்பாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்; மேற்குறிப்பிடப்பட்ட மொழிகள் தவிர ஹெரெரோ, க்வாங்காலி, கூகூசாவாப்,
அம்பூகூஷு ஆகிய மொழிகளிலும் இப்போது பிரசுரங்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. ஆன்ட்ரே பார்மான், ஸ்டீஃபன் ஜேன்சன் ஆகியோர் இந்த அலுவலகத்தில் மேற்பார்வை செய்கிறார்கள்.நமிபியா வைர உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. ஜூலை 15, 1999 தேதியிட்ட காவற்கோபுரத்தில் வெளியான “நமிபியாவில் உயிருள்ள மணிக் கற்கள்!” என்ற கட்டுரையில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கட்டுரை, நல்மனமுள்ளவர்களை ‘உயிருள்ள மணிக் கற்களுக்கு’ ஒப்பிட்டது; பெருமளவு சுவிசேஷ வேலை இங்கு நடைபெற்றிருக்கிறபோதிலும் இன்னும் சில பகுதிகளில் நற்செய்தி பிரசங்கிக்கப்படவே இல்லை. எனவே, அந்தக் கட்டுரையில் பின்வரும் அழைப்பு கொடுக்கப்பட்டது: “ஆர்வமுள்ள ராஜ்ய அறிவிப்பாளர்கள் அதிகம் தேவைப்படும் பகுதிகளில் சேவை செய்ய உங்களால் முடியுமா? முடியுமென்றால், தயவுசெய்து நமிபியாவுக்கு வாருங்கள், இன்னும் அதிகமான ஆன்மீக மணிக் கற்களைக் கண்டுபிடித்து, மெருகூட்டுவதில் எங்களுக்கு உதவுங்கள்.”
இந்த அழைப்பை ஏற்க அநேகர் முன்வந்தார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து 130 சகோதரர்கள் இது பற்றிக் கேட்டெழுதியிருந்தார்கள்; ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்தும் சிலர் தென்
அமெரிக்காவிலிருந்தும் கேட்டெழுதியிருந்தார்கள். இதன் பலனாக, யெகோவாவின் சாட்சிகளில் 83 பேர் நமிபியாவுக்கு வந்துபோனார்கள்; இவர்களில் 18 பேர் தங்கிவிட்டார்கள். இவர்களில் 16 பேர் ஒழுங்கான பயனியர்கள், இதில், விசேஷ பயனியர்கள் ஆவதற்குச் சிலர் தகுதி பெற்றிருக்கிறார்கள். இந்த வாலண்டியர்கள் காட்டிய ஆர்வம் மற்றவர்களையும் தொற்றிக்கொண்டது. இப்போதும்கூட, அந்தக் காவற்கோபுரத்தில் கொடுக்கப்பட்ட அழைப்பு சம்பந்தமாக விவரம் கேட்டு கிளை அலுவலகத்திற்குக் கடிதம் வந்தவண்ணம் இருக்கிறது. 1989 முதற்கொண்டு வில்லியம், எல்லன் ஹைன்டல் தம்பதியர் வடக்கு நமிபியாவில் மிஷனரிகளாகச் சேவை செய்து வருகிறார்கள். அப்பகுதியில் வசிக்கும் ஒவாம்போ மக்களின் ன்டோங்கா மொழியை இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அசாதாரணமான இந்தப் பிராந்தியத்தில் சகிப்புத்தன்மையோடு, இவர்கள் கடினமாய் உழைத்தது அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. வில்லியம் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் பைபிள் படிப்பு நடத்திய சிறுவர்களில் சிலர் ஆன்மீக மனிதராய் வளர்ந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் சிலர் சபையில் சேவை செய்கிறார்கள். இவர்கள் மாநாடுகளில் பேச்சு கொடுப்பதைப் பார்க்கையில் எங்கள் உள்ளம் பூரித்துப்போகிறது.”சமீப வருடங்களில், ஊழியப் பயிற்சிப் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற சகோதரர்களில் அநேகர் நமிபியாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்; ஆர்வத்தை வளர்ப்பதிலும் சபைகளில் சேவை செய்வதிலும் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். நமிபியாவில் மே 2004-ல் 1,233 பிரஸ்தாபிகள் இருந்தார்கள்; அதற்கு முந்தைய வருடத்தைவிட இது 8 சதவீத அதிகரிப்பாகும்.
லெசோதோ
22 லட்சம் பேர் வசிக்கும் சிறிய நாடான லெசோதோவை நாலாபுறமும் தென் ஆப்பிரிக்கா சூழ்ந்திருக்கிறது. இது, ட்ராகென்ஸ்பெர்க் மலைகளில் அமைந்துள்ளது; உடல் உரம் வாய்ந்த மலையேறி ஒருவர் இங்கிருந்து தொலைதூரம் பார்க்க முடிவதால் அவர் இயற்கை அழகை கண்களால் பருக முடிகிறது.
பொதுவாக இந்நாட்டில் அமைதி நிலவுகிறபோதிலும் அரசியல் கிளர்ச்சியும் சம்பவித்திருக்கிறது. 1998-ல் தலைநகரான மஸேருவில் நடந்த தேர்தல் சம்பந்தமாகத் தலைதூக்கிய தகராறு, ராணுவ வீரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதலில் முடிந்தது. அந்தச் சமயத்தில், வீயோ கொயஸ்மனும் அவருடைய மனைவி சிர்பாவும் மிஷனரிகளாக இங்கிருந்தார்கள். அவர் இவ்வாறு சொல்கிறார்: “நல்லவேளை, அந்த மோதலின்போது சில சகோதரர்களே காயப்பட்டார்கள்; உணவுப் பொருளும் எரிபொருளும் இல்லாதவர்களுக்கு நாங்கள் நிவாரண உதவி அளிக்க ஏற்பாடு செய்தோம். இது சபையில் ஐக்கியத்தின் பிணைப்பைப் பலப்படுத்தியது, நாடெங்கும் சபை கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.”
பொருளாதாரத்திற்கு லெசோதோ விவசாயத்தையே பெருமளவு நம்பியிருக்கிறது. பொருளாதார ரீதியில் ஏழ்மை நிலையில் உள்ளதால் ஆண்களில் அநேகர் தென் ஆப்பிரிக்காவில் குடியிருந்துகொண்டு சுரங்கங்களில் வேலை செய்கிறார்கள். பொருள் சம்பந்தமாக ஏழ்மை நிலவினாலும், இந்த மலைநாட்டில் மதிப்புமிக்க ஆன்மீக சொத்துகள் இருக்கின்றன; அநேகர் பைபிள் சத்தியத்திற்குச் செவிசாய்த்திருக்கிறார்கள். மே 2004-ல் 2,938 ராஜ்ய அறிவிப்பாளர்கள் இருந்தார்கள்; இது முந்தைய வருடத்தைவிட 1 சதவீத அதிகரிப்பாகும். மிஷனரிகளான ஹுட்டிங்கர் தம்பதியரும், நியுக்ரேன் தம்பதியரும், பாரிசிஸ் தம்பதியரும் தற்போது மஸேருவில் சேவை செய்து வருகிறார்கள்.
ஏபெல் மாடீபா என்பவர் 1974 முதல் 1978 வரை லெசோதோவில் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்தார். இப்போது தன் மனைவி ரெபேக்காவுடன் தென் ஆப்பிரிக்க பெத்தேலில் சேவை செய்து வருகிறார். அவருக்கே உரிய பாணியில் பதட்டப்படாமல், நிதானமாக லெசோதோ பற்றிய சில தகவலைச் சொல்கிறார்: “பெரும்பாலான நாட்டுப்புறப் பகுதிகளில் சாலைகளே இருக்கவில்லை. ஓர் ஒதுக்குப்புறத் தொகுதியிலிருந்த பிரஸ்தாபிகளைச் சந்திக்க சில சமயங்களில் நான் ஏழு மணிநேரம்கூட நடந்திருக்கிறேன். பெரும்பாலும் சகோதரர்கள் குதிரைகளைக் கொண்டு வருவார்கள்; ஒன்று, நான் ஏறிக்கொள்வதற்கு மற்றொன்று, என் சாமான்களைச் சுமப்பதற்கு. சில சமயங்களில் நாங்கள் ஸ்லைடு படக்காட்சிக்குரிய புரொஜெக்டரையும் 12 வோல்ட் பாட்டரியையும்கூட எடுத்துச் சென்றோம். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தால், அது வடியும்வரை சில நாட்கள் காத்திருந்தோம். சில கிராமங்களில் அந்தக் கிராமத்தார் எல்லாரையும் பொதுப் பேச்சைக் கேட்பதற்கு கிராமத் தலைவர் அழைத்தார்.
“சிலர் கூட்டங்களுக்கு வர மணிக்கணக்காக நடக்க வேண்டியிருந்தது; எனவே, வெகு தூரத்திலிருந்து வருபவர்கள் வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது ராஜ்ய மன்றத்திற்கு அருகே உள்ள சகோதரர்களின் வீடுகளில் தங்கிவிடுவது வழக்கம். அது விசேஷித்த சமயமாய் இருந்தது. மாலை நேரங்களில் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள், ராஜ்யப் பாடல்களைப் பாடுவார்கள். மறுநாள் வெளி ஊழியத்திற்குச் செல்வார்கள்.”
1993 முதற்கொண்டு, பிர்-ஒலா, பிர்கிட்டா நியுக்ரேன் தம்பதியர் மஸேருவில் மிஷனரிகளாகச் சேவை செய்து வந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் பத்திரிகைகள் எந்தளவு மதிப்புமிக்கவையாய் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகிற பின்வரும் அனுபவத்தை பிர்கிட்டா சொல்கிறார்: “1997-ல் மாபலிசா என்ற பெண்மணிக்கு நான் பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தேன். அவர் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார். ஆனால், படிப்பு நடத்தச் செல்லும்போது பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார், அடிக்கடி எங்காவது போய் ஒளிந்துகொள்வார். எனவே படிப்பு நடத்துவதை
நிறுத்திவிட்டேன், ஆனால், தவறாமல் போய் பத்திரிகைகளைக் கொடுத்து வந்தேன். பல வருடங்கள் கழித்து ஒருநாள் அவர் கூட்டத்திற்கு வந்தார். கோபத்தைக் கட்டுப்படுத்துவது பற்றிய கட்டுரையை ஒருநாள் அவர் காவற்கோபுரத்தில் படித்தாராம். அவரும் அவருடைய உறவினர்களும் சதா சண்டை போட்டுக்கொண்டிருந்ததால், அது தன் பிரச்சினைக்கு யெகோவா கொடுத்த பதில் என அவர் உணர்ந்தாராம். மீண்டும் பைபிள் படிப்பை ஆரம்பித்தோம், அதுமுதற்கொண்டு அவர் ஒரு கூட்டத்தைக்கூட தவறவிடவில்லை. அதோடு ஊக்கத்துடன் வெளி ஊழியத்திலும் பங்குகொள்ள ஆரம்பித்தார்.”லெசோதோவிலுள்ள சகோதரர்கள் பல வருடங்களுக்குத் தற்காலிக இடங்களை ராஜ்ய மன்றங்களாகப் பயன்படுத்தி வந்தார்கள். எனினும், சமீப ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகம் ராஜ்ய மன்ற கட்டுமானத்திற்குப் பணம் அளிப்பதன் மூலம் லெசோதோவிலுள்ள சபைகளுக்கு உதவியிருக்கிறது.
மக்காட்லாங் நகரத்தில் சுமார் 3,000 மீட்டர் உயரத்திலுள்ள ராஜ்ய மன்றம், ஆப்பிரிக்காவிலேயே மிக உயரமான இடத்திலுள்ள ராஜ்ய மன்றமாகும். இந்த மன்றத்தைக் கட்டுவதற்கு, ஆஸ்திரேலியா, அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா போன்ற தூர இடங்களில் இருந்தெல்லாம் வாலண்டியர்கள் வந்தார்கள். தென் ஆப்பிரிக்காவிலுள்ள க்வாஸூலூ-நடால் மாகாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பண உதவி அளித்ததோடு, சாதனங்களையும் பொருள்களையும் கட்டுமான இடத்திற்கு எடுத்துச் செல்ல வாகனங்களையும் கொடுத்து உதவினார்கள். வாலண்டியர் சேவை செய்ய வந்த சகோதரர்கள் எளிய சூழலில் தங்கினார்கள். படுப்பதற்கும், சமைத்துச் சாப்பிடுவதற்கும் தேவையானவற்றை அவர்களே எடுத்து வர வேண்டியிருந்தது. பத்து நாட்களில் அந்த மன்றம் கட்டி முடிக்கப்பட்டது. 1910-ல் பிறந்த, இங்குள்ள வயதான சகோதரர் ஒருவர் வேலை நடைபெறுவதைக் காண தினந்தோறும் கட்டுமான இடத்திற்கு வந்தார். 1920-களில் அவர் யெகோவாவின் சாட்சியாக ஆன காலத்திலிருந்தே ஒரு ராஜ்ய மன்றத்தைப் பார்க்க அவர் ஆவலுடன் காத்திருந்தார்; “அவருடைய” ராஜ்ய மன்றம் மளமளவென கட்டி முடிக்கப்படுவதைப் பார்த்து பூரித்துப் போனார்.
2002-ல் லெசோதோவில் பஞ்சம் தலைதூக்கியது. சாப்பிடுவதற்கு மக்காச்சோளமும் வேறு பொருள்களும் டிரக்குகளில் ஏற்றி அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டன. நன்றி தெரிவித்து வந்த ஒரு கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “சாப்பிடுவதற்கு மக்காச்சோளத்தைக் கொடுக்க என் வீடுதேடி சகோதரர்கள் வந்தபோது நான் மலைத்து நின்றேன். அது எனக்குத் தேவையென அவர்களுக்கு எப்படித் தெரிந்தது? நான் கனவிலும் நினைத்துப் பார்த்திராத உதவி எனக்குக் கிடைத்ததால் யெகோவாவுக்கு நன்றி சொன்னேன். யெகோவா தேவன் மீதும் அவருடைய அமைப்பின்
மீதும் இருந்த என் நம்பிக்கையை இது பலப்படுத்தியது, என் முழு ஆத்துமாவோடு அவரைச் சேவிக்கத் தீர்மானமாய் இருக்கிறேன்.”போட்ஸ்வானா கலஹாரி பாலைவனத்தின் பெரும்பகுதி இந்நாட்டில் அமைந்துள்ளது. இங்கு 16 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள். பொதுவாக வெப்பமான, வறண்ட சீதோஷ்ணநிலை காணப்படுகிறது. எண்ணற்ற பூங்காக்களும் வனவிலங்கு சரணாலயங்களும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன. இயற்கை வனப்புமிக்க ஓகொவாங்கோ சதுப்புநிலப் பகுதி, ஏராளமான வனவிலங்குகளுக்கும், அமைதி குலையாத நிலைக்கும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்தக் கழிமுகப் பகுதியில் உள்ள கால்வாயில் மாக்காரோ என்ற பாரம்பரியப் படகு போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது; இது, உள்ளூர் மரங்களின் அடிமரத்தைக் குடைந்து உருவாக்கப்பட்ட படகாகும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை போட்ஸ்வானா வளம்கொழிக்கும் நாடு; வைரச் சுரங்கம் இங்கு இருப்பதே இதற்கு முக்கியக் காரணம். 1967-ல் கலஹாரி பாலைவனத்தில் வைரங்களைக் கண்டுபிடித்தது முதற்கொண்டு, உலகிலேயே வைரங்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியிலிருக்கும் நாடுகளில் ஒன்றாக போட்ஸ்வானா விளங்குகிறது.
1929-ல் ஒரு சகோதரர் சில மாதங்கள் போட்ஸ்வானாவில் தங்கி பிரசங்க ஊழியம் செய்தபோது, முதன்முறையாக கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய செய்தி இந்த இடத்தை எட்டியதாகத் தெரிகிறது. 1956-ல் ஜாஷ்வா டாங்வானா என்ற சகோதரர் வட்டாரக் கண்காணியாக போட்ஸ்வானாவில் நியமிக்கப்பட்டார். f அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் தடைசெய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த வளமான பூமியில் ஆர்வமிக்க மிஷனரிகள் ஏராளமான பலனை அறுவடை செய்திருக்கிறார்கள். பிளேக், க்வென் ஃப்ரிஸ்பி தம்பதியரும், டிம், வெர்ஜீனியா கிரௌச் தம்பதியரும் ட்ஸ்வானா மொழியைக் கற்றுக்கொள்ள வெகு பாடுபட்டிருக்கிறார்கள். வடக்கே வீயோ, சிர்பா கொயஸ்மன் தம்பதியர் ஆர்வத்துடன் மக்களுக்கு ஆன்மீக உதவி அளிக்கிறார்கள்.
நாட்டின் தென்பகுதியில் ஊழியம் செய்த ஹியூ, காரல் கார்மக்கன் தம்பதியர் மிஷனரிகளைப் போல் ஊழியத்தில் முழுமூச்சாய் ஈடுபடுகிறார்கள். ஹியூ இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் சபையில் ஈடீ என்ற 12 வயது சிறுவன் இருக்கிறான். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சு கொடுப்பதற்காகவும் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதற்காகவும் வாசிக்கக் கற்றுக்கொள்ளுவதற்கு சிறுபிள்ளையாக இருக்கும்போதிருந்தே ஆசைப்பட்டான். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக தகுதி பெற்ற உடனேயே
வெளி ஊழியத்தில் அதிகளவு நேரத்தைச் செலவிட்டான், தன் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தான். முழுக்காட்டுதல் பெற்றது முதற்கொண்டு அவன் அடிக்கடி துணை பயனியர் ஊழியம் செய்துவருகிறான்.”போட்ஸ்வானாவிலுள்ள பல சபைகள் அதன் தலைநகரான கபோரோனிலோ அதன் அருகிலோ உள்ளன; இது, இந்நாட்டின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள, செல்வச்செழிப்புமிக்க நகரமாகும். நாட்டின் கிழக்குப் பகுதியில்தான் ஏராளமானோர் குடியிருக்கிறார்கள். மற்றவர்கள் மேற்கே உள்ள கிராமங்களிலும் கலஹாரி பாலைவனத்திலும் வசிக்கிறார்கள். இந்த கலஹாரி பாலைவனத்தில் குள்ளர்களின் குடும்பங்கள் சில இன்னமும்
சுற்றித் திரிகின்றன; இந்தக் குள்ளர்கள் வயிற்றுப்பிழைப்புக்கு உணவுதேடி அலைகிறார்கள், வில்லையும் அம்பையும் பயன்படுத்தி வேட்டையாடுகிறார்கள். ஒதுக்குப்புற பிராந்தியத்தில் விசேஷ பிரசங்க ஊழியம் ஏற்பாடு செய்யப்படுகிறபோதெல்லாம் பிரஸ்தாபிகள் பெரும் முயற்சி எடுத்துக் கலந்துகொள்கிறார்கள்; இவர்கள், நாட்டுப்புறத்தில் கால்நடைகளை மேய்க்கும் நாடோடிகளைச் சந்தித்து பைபிள் சத்தியங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்திருக்கிறார்கள். இந்த நாடோடிகள் தானியங்களைப் பயிர்செய்வதிலும் உள்ளூரில் கிடைக்கும் பொருள்களை வைத்து குடியிருப்புகளைக் கட்டுவதிலும் விறகுக்காகத் தேடி அலைவதிலும் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே, மற்ற காரியங்களைக் கவனிக்க அவர்களுக்கு அற்பசொற்ப நேரமே மிஞ்சுகிறது. எனினும், புத்துணர்ச்சி அளிக்கும் பைபிள் செய்தியை அறிவிக்க முன்பின் தெரியாதவர்கள் வரும்போது, உடனடியாக வெட்டவெளியில் மெத்தென்று இருக்கும் பாலைவன மணலில் உட்கார்ந்துகொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.ஆறுபேர் கொண்ட தற்காலிக விசேஷ பயனியர் குழுவைச் சேர்ந்த ஸ்டீஃபன் ராபன்ஸ் இவ்வாறு சொன்னார்: “இங்குள்ள ஜனங்கள் சதா இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். சொல்லப்போனால், நாம் சாலையைக் கடப்பதைப் போல் அவர்கள் நாட்டின் எல்லைகளைக் கடக்கிறார்கள். நாங்கள் பைபிள் படிப்பு நடத்திய மார்க்ஸ் என்பவரை தோணியில் ஓகொவாங்கோ ஆற்றைக் கடக்கும்போது சந்தித்தோம். தன் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பைபிள் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக தன் வேலையிலிருந்து நேரத்தை ஒதுக்கி அவர்களைப் போய் இவர் சந்தித்ததைப்பற்றி கேட்டபோது நாங்கள் ரொம்பவே சந்தோஷப்பட்டோம். மார்க்ஸ் தன் ஓய்வுநேரத்தை எல்லாம் சுவிசேஷத்தை அறிவிப்பதில் செலவிடுகிறார்.”
போட்ஸ்வானாவில் நற்செய்தியை அறிவிக்கும்போது மக்கள் ஆர்வத்துடன் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். மே 2004-ல் புதிய உச்சநிலை எண்ணிக்கையாக 1,434 பேர் பிரசங்க ஊழியத்தில் கலந்துகொண்டார்கள்; இது அதற்கும் முந்தைய வருடத்தைவிட 14 சதவீத அதிகரிப்பாகும்.
ஸ்வாஸிலாந்து
மன்னர் ஆட்சி நடக்கும் இந்தச் சிறிய நாட்டில் சுமார் 11 லட்சம் பேர் இருக்கிறார்கள். அநேக ஆண்கள் தென் ஆப்பிரிக்காவில் வேலை தேடிச் செல்கிற போதிலும் இந்நாடு முக்கியமாய் விவசாயத்தையே நம்பியிருக்கிறது. ஸ்வாஸிலாந்து இயற்கை அழகு கொஞ்சும் நாடாகும்; இங்கு அநேக வனவிலங்குச் சரணாலயங்கள் உள்ளன. ஸ்வாஸி மக்கள் அன்பாகப் பழகுபவர்கள், தங்கள் பாரம்பரியத்தில் பலவற்றை இன்னமும் பின்பற்றுகிறவர்கள்.
முன்னாள் அரசரான இரண்டாம் சோபூஸா யெகோவாவின் சாட்சிகளைப் பெரிதும் மதித்தார், பெரும்பாலான நம் பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு வருடமும் பைபிளைப் பற்றிப் பேசுவதற்கு
மதகுருமார்களை மட்டுமல்ல யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரையும் தன் அரண்மனைக்கு அழைப்பார். அப்படி, 1956-ல் அழைப்பை ஏற்றுச் சென்ற யெகோவாவின் சாட்சி, ஆத்துமா அழியாமை கோட்பாடு பற்றியும் மதத் தலைவர்கள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் பயன்படுத்தும் பட்டப்பெயர்களைப் பற்றியும் பேசினார். அதன் பிறகு, அவர் சொன்ன விஷயங்கள் சரிதானாவென மதத் தலைவர்களிடம் அரசர் கேட்டார். அந்தச் சகோதரர் சொன்னது தவறென அவர்களால் மறுத்துப் பேச முடியவில்லை.மூதாதையர் வழிபாட்டுடன் தொடர்புடைய துக்கங்கொண்டாடும் பழக்கவழக்கங்களுக்கு எதிராக நம் சகோதரர்கள் உறுதியான நிலைநிற்கை எடுக்க வேண்டியிருந்தது. ஸ்வாஸிலாந்தின் சில பகுதிகளில், துக்கங்கொண்டாடுவதுடன் சம்பந்தப்பட்ட பாரம்பரியப் பழக்கத்தை யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றாததால், அவர்களைப் பழங்குடித் தலைவர்கள் அவர்களுடைய வீடுகளிலிருந்து விரட்டினார்கள். வேறு பகுதிகளில் வசிக்கும் ஆன்மீக சகோதரர்கள் அவர்களை எப்போதும் பாதுகாத்துப் பராமரித்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக ஸ்வாஸிலாந்து உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது; அதற்கு நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது; சாட்சிகளுடைய சொந்த வீட்டையும் நிலத்தையும் அவர்களிடம் திரும்பக் கொடுக்கும்படியான ஆணையையும் அது பிறப்பித்தது.
ஜேம்ஸ், டான் ஹாகெட் தம்பதியர், ஸ்வாஸிலாந்தின் தலைநகரான பாபேனில் மிஷனரிகளாக ஊழியம் செய்கிறார்கள். அவர்கள் முறையே 1971-லும், 1970-லும் கிலியட்டிலிருந்து பட்டம் பெற்றவர்கள். வித்தியாசமான பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப மிஷனரிகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதை பின்வரும் அனுபவத்தின் மூலம் ஜேம்ஸ் விளக்கினார்: “நியமிக்கப்படாத பிராந்தியத்தில் நாங்கள் ஊழியம் செய்து வந்தோம், அங்கிருந்த தலைவர் என்னிடம் ஒரு பொதுப் பேச்சைக் கொடுக்கச் சொன்னார். ஜனங்கள் எல்லாரையும் அவர் வரவழைத்தார். கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த இடத்தில் நாங்கள் அமர்ந்திருந்தோம், அங்கு சிமென்ட் பாளங்கள் எங்கும் கிடந்தன. தரையும் ஈரமாக இருந்தது. எனவே, ஒரு சிமென்ட் பாளத்தைக் கண்டுபிடித்து அதன்மீது வசதியாக உட்கார்ந்துகொண்டேன், அந்தப் பாளத்தில் டான் என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள். ஸ்வாஸி சகோதரிகளில் ஒருவர் டானிடம் வந்து தன்னோடு சேர்ந்து உட்காரும்படி அழைத்தார். ‘பரவாயில்லை, இங்கேயே உட்கார்ந்துகொள்கிறேன்’ என டான் சொல்லியும் அந்தச் சகோதரி ரொம்பவே வற்புறுத்தினார். சில ஆண்கள் தரையில் உட்கார்ந்திருந்ததால், அவர்களைவிட உயரமான இடத்தில் பெண்கள் உட்கார மாட்டார்கள் என்பது பின்னர் எங்களிடம் விளக்கப்பட்டது. அதுதான் நாட்டுப்புறப் பகுதியில் பின்பற்றப்படுகிற பழக்கமாகும்.”
ஆசிரியை ஒருவர் சத்தியத்திடம் ஆர்வம் காட்டினார்; அவரைச் சந்தித்துப் பேசுவதற்காக அவர் பணியாற்றும் பள்ளிக்கு ஜேம்ஸும் டானும் சென்றார்கள். அந்த நேரம் தனக்குச் சௌகரியப்படாது என்பதை அவர் ஒரு பையனிடம் சொல்லி அனுப்பினார். இந்தத் தம்பதியர் அந்தப் பையனிடம் பேசினார்கள். அந்தப் பையனின் பெயர் பேட்ரிக். தாங்கள் வந்திருப்பதற்கான காரணம் அவனுக்குத் தெரியுமாவென கேட்டார்கள். சிறிது நேரம் உரையாடிய பிறகு, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தை அவனுக்குக் கொடுத்தார்கள், அவனுக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார்கள். பேட்ரிக்கிற்கு அப்பா அம்மா கிடையாது, தன் சித்தப்பா வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஓர் அறையில் அவன் வசித்து வந்தான்.
தன்னையும் பராமரித்துக்கொண்டு, தனக்கான உணவையும் தானே சமைத்துக்கொண்டு, தன் பள்ளிக் கட்டணத்திற்காகப் பகுதி நேர வேலையும் பார்த்து வந்தான். அவன் ஆன்மீக ரீதியில் நல்ல முன்னேற்றம் செய்தான், முழுக்காட்டுதல் பெற்றான். இப்போது? சபையில் பேட்ரிக் ஒரு மூப்பர்.1930-களில் சுவிசேஷ ஊழியம் ஆரம்பமானது முதற்கொண்டு ஸ்வாஸிலாந்தில் ஏற்பட்டிருக்கிற முன்னேற்றம் நெஞ்சத்தைக் குளிர்விக்கிறது. இங்கு, மே 2004-ல் 2,199 பேர் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை ஊக்கத்துடன் பிரசங்கித்தார்கள், 3,148 பைபிள் படிப்புகளை நடத்தினார்கள்.
செ. ஹெலினா
இந்தச் சின்னஞ்சிறிய தீவு 17 கிலோமீட்டர் நீளமும் 10 கிலோமீட்டர் அகலமும் கொண்டது; இது ஆப்பிரிக்காவின் தென்மேற்குக் கரையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக மிதமான, ரம்மியமான சீதோஷ்ணநிலை இங்கு நிலவுகிறது. செ. ஹெலினாவின் ஜனத்தொகை சுமார் 3,850 ஆகும். ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள் கதம்பம்போல் இங்கு வசிக்கிறார்கள். இவர்கள் ஆங்கிலத்தை வித்தியாசமான பாணியில் பேசுகிறார்கள். இங்கு விமான நிலையம் இல்லை. தென் ஆப்பிரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் சென்று வர வணிகக் கப்பல் கம்பெனி ஒன்று ஜனங்களுக்கு உதவுகிறது. 1990-ன் மத்திபத்திலிருந்து செயற்கைக்கோள் உதவியுடன் இங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
1930-களின் ஆரம்பத்தில் செ. ஹெலினாவில் இருந்தவர்களுக்குச் சத்தியம் கிடைத்தது; குறுகிய காலத்திற்கு அங்குச் சென்றிருந்த இரண்டு பயனியர்களின் மூலம் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தி முதன்முதல் பிரசங்கிக்கப்பட்டது. போலீஸ்காரராகவும் பாப்டிஸ்ட் சர்ச்சின் மதகுருவாகவும் இருந்த டாம் ஸ்கிப்பியோ என்பவர் அந்தச் சகோதரர்களிடமிருந்து சில பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டார். பின்னர் தான் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பித்தார்; திரித்துவம் இல்லை, எரிநரகம் இல்லை, அழியாத ஆத்துமா இல்லை என்பதைப் பிரசங்க பீடத்திலிருந்து மக்களுக்குத் தெளிவுபடுத்தினார். அவரும் பைபிள் சத்தியத்தை ஆதரித்த இன்னும் சிலரும் சர்ச்சிலிருந்து வெளியேறும்படி சொல்லப்பட்டார்கள். சீக்கிரத்திலேயே டாமும் ஒரு சிறிய தொகுதியினரும், மூன்று ஃபோனோகிராஃப்புகளின் உதவியுடன் வெளி ஊழியத்தில் கலந்துகொண்டார்கள். நடந்து சென்றும், கழுதைமீது சென்றும் தீவு முழுவதும் பிரசங்கித்தார்கள். பெரிய குடும்பத்தைக் கொண்டிருந்த டாம், தன் ஆறு பிள்ளைகளின் மனதிலும் சத்தியத்தை ஆழமாகப் பதியவைத்தார்.
1951-ல், இந்தத் தீவிலிருந்த உண்மையுள்ள சாட்சிகளின் தொகுதியை உற்சாகப்படுத்தவும் அவர்களுக்கு உதவவும் யாக்குபஸ் ஃபான் ஸ்டாடன் என்பவர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து அனுப்பப்பட்டார். திறம்பட்ட விதத்தில் ஊழியம் செய்ய அவர்களுக்கு உதவினார், தவறாமல் சபை கூட்டங்களை g எல்லாரையும் கூட்டங்களுக்கு வரச் செய்வதில் எதிர்ப்பட்ட பிரச்சினையைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “ஆர்வம் காட்டியவர்களில் இரண்டு பேரிடம் மட்டுமே கார்கள் இருந்தன. நிலப்பகுதியோ கரடுமுரடாகவும் குன்றுப் பிரதேசமாகவும் இருந்தது. அந்தச் சமயத்தில் ஒருசில சாலைகளே நல்ல நிலைமையில் இருந்தன. . . . சிலர் விடியற்காலையில் நடக்க ஆரம்பித்தார்கள். என்னுடைய சிறிய காரில் மூன்று பேரை ஏற்றி வந்து, பாதி தூரத்தில் இறக்கிவிடுவேன். அவர்கள் நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். நான் காரைத் திருப்பிக்கொண்டுபோய் இன்னும் மூன்று பேரை ஏற்றி வந்து பாதி தூரத்தில் இறக்கிவிடுவேன், மீண்டும் திரும்பிப் போவேன். இப்படியாக, எல்லாரும் ஒருவழியாகக் கூட்டங்களுக்குப் போய்ச் சேருவோம்.” பின்னர், ஜார்ஜுக்குத் திருமணமாகி நான்கு பிள்ளைகள் இருந்தபோதிலும் 14 வருடங்கள் அவர் பயனியராகச் சேவை செய்தார். இவருடைய மகன்களில் மூவர் மூப்பர்களாகச் சேவை செய்கிறார்கள்.
நடத்தினார். டாமின் மகன்களில் ஒருவரான ஜார்ஜ் ஸ்கிப்பியோ1990-களில், யானி மல்லர் தன் மனைவி ஆனலீஸுடன் சில முறை வட்டாரக் கண்காணியாக செ. ஹெலினாவுக்கு வந்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் ஒரு பிரஸ்தாபியோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது அவர் ஒவ்வொரு வீட்டிலும் யார் வசிக்கிறார்கள், அவர்கள் சத்தியத்தைக் கேட்பார்களா, மாட்டார்களா என்பதை எப்போதும் சொல்லிக்கொண்டே வருவார். இந்தத் தீவுக்கு வந்திருந்தபோது “ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?” என்ற தலைப்பிலிருந்த ராஜ்ய செய்தி துண்டுப்பிரதியை ஒரே நாளில் காலை 8:30 மணியிலிருந்து மாலை 3:00 மணிக்குள்ளாக இந்தத் தீவு முழுவதும் வினியோகித்து முடித்தோம்.”
செ. ஹெலினாவுக்குப் போய் இறங்கிய சமயங்களிலும் அங்கிருந்து புறப்பட்ட சமயங்களிலும் நடந்தது யானியின் மனதில் இன்றும் பசுமையாய் இருக்கிறது. அவர் இவ்வாறு சொல்கிறார்: “படகு தீவை வந்தடைந்ததும், எங்களை வரவேற்க படகுத்துறையின் ஓரத்தில் பெரும்பாலான சகோதரர்கள் குவிந்துவிடுவார்கள். கடந்த முறை நாங்கள் திரும்பிப்போன தினத்தன்று அவர்கள் எந்தளவு கண்ணீர் வடித்தார்கள் என்பதைப் பற்றிச் சொன்னார்கள், எல்லாரும் படகுத்துறையில் நின்றுகொண்டு எங்களுக்குக் கையசைத்து விடைகொடுத்தபோது நாங்கள் அதைக் கண்ணாரக் கண்டோம்.”
மே 2004-ல், அத்தீவில் பைபிள் சத்தியத்தைப் பரப்புவதில் புதிய
உச்சநிலையாக 132 பேர் பங்குகொண்டார்கள்; இது அதற்கு முந்தைய வருடத்தைவிட 6 சதவீத அதிகரிப்பாகும். அந்த மாதத்தில் மூன்று துணை பயனியர்களும் ஓர் ஒழுங்கான பயனியரும் இருந்தார்கள். உலகிலேயே இத்தீவில்தான் ஜனத்தொகைக்கும் பிரஸ்தாபிக்கும் இடையே உள்ள விகிதம் 30 பிரஸ்தாபிக்கு ஒருவர் என குறைந்தளவில் உள்ளது.எதிர்கால எதிர்பார்ப்புகள்
இனப் பகைமை நிலவும் தென் ஆப்பிரிக்காவில் எல்லா இனத்திலிருந்தும் வந்த யெகோவாவின் சாட்சிகள் தனித்துவமிக்க ‘ஐக்கியத்தின் பிணைப்பை’ அனுபவித்து மகிழ்கிறார்கள். (கொலோ. 3:14, NW) இதைப் பார்த்து மற்றவர்களும்கூட பாராட்டியிருக்கிறார்கள். 1993-ல் நடந்த சர்வதேச மாநாடுகளுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து அநேக யெகோவாவின் சாட்சிகள் வந்தார்கள். அமெரிக்காவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் வந்தவர்களை வரவேற்க டர்பன் நகரிலுள்ள விமான நிலையத்திற்கு சுமார் 2,000 சாட்சிகள் சென்றார்கள். வந்திறங்கிய சாட்சிகளைப் பார்த்ததும் இவர்கள் ராஜ்ய பாடல்களைப் பாடினார்கள். சகோதரர்கள் ஒருவரையொருவர் அன்புடன் வரவேற்று, ஆரத் தழுவிக்கொண்டார்கள். இதையெல்லாம் பிரபல அரசியல்வாதி ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார். நம் சகோதரர்கள் சிலருடன் அவர் உரையாடும்போது இவ்வாறு சொன்னார்: “உங்களிடமிருக்கும் ஐக்கியம் எங்களிடமிருந்தால் பிரச்சினைகளை என்றோ தீர்த்திருப்போம்.”
2003-ல் நடைபெற்ற “தேவனை மகிமைப்படுத்துங்கள்” சர்வதேச மாநாடுகள், அவற்றில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆன்மீக உத்வேகத்தை அளித்தன. தென் ஆப்பிரிக்காவின் முக்கிய மையங்களில் சர்வதேச மாநாடுகளும் அதோடு, சிறியளவில் மாவட்ட மாநாடுகளும் நடைபெற்றன. சர்வதேச மாவட்ட மாநாடுகளில் பேச்சு கொடுக்க ஆளும் குழுவிலிருந்து சாம்யெல் ஹெர்ட், டேவிட் ஸ்ப்லேன் ஆகிய இருவரும் வந்திருந்தார்கள். 18 நாடுகளிலிருந்து வந்த சாட்சிகள் இவற்றில் கலந்துகொண்டார்கள். சிலர் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்ததால் அங்கு சர்வதேச மணம் கமழ்ந்தது. இந்த மாநாடுகள் அனைத்திலும் மொத்தம் 1,66,873 பேர் கலந்துகொண்டார்கள், மொத்தம் 2,472 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.
கேப் டவுனில் நடந்த சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட ஜனின் அங்கு வெளியிடப்பட்ட, பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்திற்கு அதிக நன்றியுள்ளவராய் இருக்கிறார்; அதைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்: “அந்தப் பரிசை எந்தளவு பெரிதாய் மதிக்கிறேன் என்பதை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. நம் பிள்ளைகளின் இருதயத்தைத் தொடும் விதத்தில் இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தம்முடைய
ஜனங்களுக்கு என்ன தேவை என்பதை யெகோவா அறிந்திருக்கிறார், தேவபயமற்ற இந்த உலகில் நாம் படும் பாட்டை சபையின் தலைவராகிய இயேசு பார்க்கிறார். யெகோவாவுக்கும் பூமியிலுள்ள அவருடைய ஊழியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”கடந்த நூற்றாண்டில், தென் ஆப்பிரிக்காவில் யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தைப் புரட்டிப் பார்க்கும்போது, உண்மையுள்ளவர்கள் காட்டிய சகிப்புத்தன்மையையும் விடாமுயற்சியையும் கண்டு சந்தோஷப்படுகிறோம். 2006-ல் 78,877 பிரஸ்தாபிகள் 84,903 பைபிள் படிப்புகளை நடத்தினார்கள். 2006-ல் 1,89,108 பேர் நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்டார்கள். இவை, இயேசுவின் பின்வரும் வார்த்தைகள் உலகின் இப்பகுதியிலுள்ளவர்களுக்கு இன்னும் பொருந்தும் என்பதைக் காட்டுகின்றன: “இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (யோவான் 4:35) இன்னும் பெருமளவு ஊழியம் செய்ய வேண்டியிருக்கிறது. யெகோவா ஆசீர்வதிக்கிறார் என்பதற்கான ஏராளமான அத்தாட்சிகள், உலகின் மூலைமுடுக்கெங்கும் உள்ள நம் சகோதரர்களுடன் சேர்ந்து உணர்ச்சி பொங்க பின்வருமாறு சொல்ல நம்மைத் தூண்டுகின்றன: ‘பூமியின் குடிகளே, எல்லாரும் யெகோவாவைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். மகிழ்ச்சியோடே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்’!—சங்கீதம் 100:1, 2.
[அடிக்குறிப்புகள்]
a பால் ஸ்மிட்டின் வாழ்க்கை சரிதையை காவற்கோபுரம் நவம்பர் 1, 1985 (ஆங்கிலம்) பக்கங்கள் 10-13-ல் காணலாம்.
b ஜார்ஜ் ஃபிலிப்ஸின் வாழ்க்கை சரிதையை காவற்கோபுரம் (ஆங்கிலம்) டிசம்பர் 1, 1956 பக்கங்கள் 712-19-ல் காணலாம்.
c பிட் வென்ட்சல்லின் வாழ்க்கை சரிதையை ஜூலை 1, 1986 ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 9-13-ல் காணலாம்.
d ஃபிரான்ஸ் மல்லரின் வாழ்க்கை சரிதையை காவற்கோபுரம், ஏப்ரல் 1, 1993, பக்கங்கள் 19-23-ல் காணலாம்.
e வால்ட்ரன் தம்பதியரின் வாழ்க்கை சரிதை, டிசம்பர் 1, 2002 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 24-8-ல் வெளிவந்தது.
f ஜாஷ்வா டாங்வானாவின் வாழ்க்கை சரிதை, பிப்ரவரி 1, 1993 தேதியிட்ட காவற்கோபுர பிரதியில் பக்கங்கள் 25-9-ல் வெளிவந்தது.
g ஜார்ஜ் ஸ்கிப்பியோவின் வாழ்க்கை சரிதை பிப்ரவரி 1, 1999 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 25-9-ல் வெளிவந்தது.
[பக்கம் 174-ன் சிறு குறிப்பு]
உலகிலேயே செ. ஹெலினாவில்தான் ஜனத்தொகைக்கும் பிரஸ்தாபிக்கும் இடையே உள்ள விகிதம் 30 பிரஸ்தாபிக்கு ஒருவர் என குறைந்தளவில் உள்ளது
[பக்கம் 68, 69-ன் பெட்டி]
இன ஒதுக்கீடு என்றால் என்ன?
“இன ஒதுக்கீடு” என்ற வார்த்தை 1948-ஆம் ஆண்டு அரசியல் தேர்தலின்போது தேசிய கட்சியால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அவ்வருடத் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் பல்வேறு இனத்தொகுதிகளை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாக ஆனது. இதற்கு டச் சீர்திருத்த சர்ச்சும் முழு ஆதரவளித்தது. வெள்ளையர்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதை நிலைநாட்டியே தீரவேண்டும் என்பதற்காக இந்தக் கொள்கை வகுக்கப்பட்டது. அதன்படி, வாழ்க்கையின் முக்கிய அம்சங்களான குடியிருப்பு, வேலை, கல்வி, பொதுமக்களுக்கான வசதிகள், அரசியல் ஆகியவற்றின் சம்பந்தமாக சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.
முக்கிய இனங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டன: வெள்ளையர், பண்டூ (கருப்பின ஆப்பிரிக்கர்), கலப்பினத்தவர், ஆசியர் (இந்தியர்). ஒவ்வொரு இனத்தவரும் தனித்தனியான பிராந்தியங்களில் வசிக்க வேண்டும்; அந்த இடம் சொந்த ஊர் என்பதாக அழைக்கப்பட்டது; அங்கே அவர்களுடைய கலாச்சாரம் பண்பாட்டின்படி வாழ்ந்து வளர்ந்துகொள்ளலாம் என்பதாக இன ஒதுக்கீட்டை ஆதரித்தவர்கள் அறிவித்தார்கள். கொள்கையளவில் பார்க்கும்போது சிலர் அதை செயல்முறைப்படுத்த முடியுமென நினைத்தார்கள், ஆனால் அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. துப்பாக்கிகள், கண்ணீர்ப்புகை குண்டுகள், உறுமும் நாய்கள் ஆகியவற்றைக் கொண்டு அநேக கருப்பினத்தவர் பயமுறுத்தப்பட்டார்கள், வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு, கொஞ்சநஞ்ச சாமான்களுடன் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டார்கள். வங்கிகள், தபால் அலுவலகங்கள் போன்ற பெரும்பாலான இடங்களில் வெள்ளையருக்கும் மற்றவர்களுக்கும் தனித்தனிப் பிரிவுகள் இருந்தன. உணவகங்களிலும் சினிமா தியேட்டர்களிலும் வெள்ளையர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.
இருந்தாலும், வெள்ளையருக்கு தங்கள் தொழிற்சாலைகளிலும், வீடுகளிலும் வேலை செய்ய கருப்பின வேலையாட்கள் தேவைப்பட்டார்கள், அவர்களுக்கு கூலியும் குறைவாகவே கொடுக்கப்பட்டது. இதனால் குடும்பங்கள் பிரிய நேரிட்டது. உதாரணத்திற்கு, கருப்பின ஆண்கள் சுரங்கங்களிலோ தொழிற்சாலைகளிலோ வேலை செய்வதற்காக நகரங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்; அங்கே அவர்கள் ஆண்களுக்கான விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களுடைய மனைவிகளோ சொந்த ஊரிலேயே தங்க வேண்டியிருந்தது. குடும்ப வாழ்க்கை சிதைந்துபோக இது காரணமானது, பெருமளவு ஒழுக்கக்கேட்டிற்கும் வழிவகுத்தது. வெள்ளையரின் வீடுகளில் வேலை செய்யும் கருப்பின வேலையாட்கள் அவர்களுடைய எஜமானருக்குச் சொந்தமான இடத்திலிருக்கும் ஓர் அறையிலேயே பெரும்பாலும் தங்கினர். அவர்களுடைய குடும்பத்தார், வெள்ளையர் இருக்கும் பிராந்தியங்களில் தங்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் பெற்றோர் தங்கள் குடும்பத்தை பல காலத்திற்கு பார்க்க முடியாமல் போனது. கருப்பர் தங்கள் அடையாளத் தாள்களை எந்நேரமும் வைத்திருக்க வேண்டியிருந்தது.
இன ஒதுக்கீட்டின் காரணமாக, கல்வி, திருமணம், வேலை, சொத்துரிமை போன்ற பல விஷயங்களில் மோசமான பாதிப்பு ஏற்பட்டது. இனப் பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்கள் என்று யெகோவாவின் சாட்சிகள் நன்கு அறியப்பட்டிருக்கிறார்கள். என்றாலும், அரசாங்க சட்டங்கள் கடவுளுக்கு பரிசுத்த சேவை செய்வதிலிருந்து அவர்களை தடுக்காதவரையில் அதற்கும் அவர்கள் கீழ்ப்படிந்தார்கள். (ரோமர் 13:1, 2) முடிந்தபோதெல்லாம், பல்வேறு இனங்களைச் சேர்ந்த சக வணக்கத்தாரோடு கூடிமகிழ அவர்கள் வாய்ப்பைத் தேடினார்கள்.
1970-களின் மத்திபத்திலிருந்து, அரசாங்கம் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்தது. இன ஒதுக்கீட்டுக் கொள்கைகளின் தீவிரம் சற்று தணிக்கப்பட்டது. பிப்ரவரி 2, 1990-ல், அப்போதைய ஜனாதிபதியான எஃப். டபிள்யூ. ட கிளார்க், இன ஒதுக்கீட்டுக் கொள்கையை நீக்குவதற்கான வழிமுறைகளை அறிவித்தார். கருப்பர் அரசியல் கட்சிகளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பது, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவரான நெல்சன் மண்டேலாவை சிறையிலிருந்து விடுவிப்பது போன்றவை அவற்றில் அடங்கும். 1994-ல், ஜனநாயகத் தேர்தலில் கருப்பரை பெரும்பான்மையாகக் கொண்ட அரசு வெற்றி பெற்றதோடு இன ஒதுக்கீட்டுக் கொள்கை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.
[பக்கம் 72, 73-ன் பெட்டி/தேசப்படங்கள்]
தென் ஆப்பிரிக்கா ஒரு கண்ணோட்டம்
நிலம்
தென் ஆப்பிரிக்காவின் கடலோரப் பகுதி குறுகலான தாழ்நிலமாகும். அதை ஒட்டியுள்ள மலைகள், உள்நாட்டுப் பகுதியில் பீடபூமியாக உருவெடுத்துள்ளன. இப்பீடபூமி அந்நாட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. கிழக்கே இந்தியப் பெருங்கடல் பகுதியில் இப்பீடபூமி மிக உயரமாக இருக்கிறது. அங்கே ட்ராகென்ஸ்பெர்க் மலைத்தொடர் 3,400 மீட்டருக்கு மேல் கம்பீரமாக நிற்கிறது. தென் ஆப்பிரிக்காவின் நிலப்பகுதி பிரிட்டிஷ் தீவுகளின் பரப்பளவைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாகும்.
மக்கள்
இந்நாட்டில் உள்ள 4 கோடியே 60 லட்சம் மக்கள் வித்தியாசமான பின்னணியைச் சேர்ந்தவர்கள். 2003-ஆம் ஆண்டின் அரசாங்கக் கணக்கெடுப்பின்படி, குடிமக்கள் பின்வரும் நான்கு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டனர்: கருப்பர் 79 சதவிகிதம்; வெள்ளையர் 9.6 சதவிகிதம்; கலப்பினத்தவர் 8.9 சதவிகிதம்; இந்தியர் அல்லது ஆசியர் 2.5 சதவிகிதம்.
மொழி
அநேகர் ஆங்கிலத்தில் பேசினாலும் இந்நாட்டில் 11 அதிகாரப்பூர்வ மொழிகள் புழக்கத்தில் உள்ளன. அதிகளவில் பேசப்படும் மொழிகள் இறங்குவரிசையில் பின்வருமாறு வரிசைப்படுத்தப்படுகின்றன: ஜூலு, ஸோஸா, ஆப்பிரிக்கான்ஸ், செப்பெடி, ஆங்கிலம், ட்ஸ்வானா, ஸிஸோதோ, ஸோங்கா, ஸ்வாஸி, வெண்டா, ந்டபேலே.
பிழைப்பு
இந்நாட்டில் இயற்கை வளம் கொட்டிக் கிடக்கிறது. உலகிலேயே தங்கம், பிளாட்டினம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளில் இது முதன்மையானதாய் விளங்குகிறது. லட்சக்கணக்கான தென் ஆப்பிரிக்கர்கள் சுரங்கங்களிலோ பண்ணைகளிலோ வேலை செய்கிறார்கள். உணவுப்பொருள்கள், கார்கள், இயந்திரங்கள், துணிமணிகள், பிற பொருள்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பணியாற்றுகிறார்கள்.
சீதோஷ்ணம்
கேப் டவுன் உட்பட இந்நாட்டின் தென் முனையில் மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அதாவது குளிர் காலத்தில் மழை பெய்கிறது, கோடை காலத்தில் வறட்சி வாட்டுகிறது. உள்நாட்டுப் பீடபூமியிலோ வித்தியாசமான சீதோஷ்ணம் நிலவுகிறது; கோடையில் இடி மின்னலுடன் கூடிய புயல் குளிர்ச்சியூட்டுகிறது, ஆனால், குளிர் காலத்தில் ஓரளவு கதகதப்பாகவே இருக்கிறது, மேகமில்லா வானத்தையும் காண முடிகிறது.
[தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
நமீபியா
நமீபியா பாலைவனம்
காட்டூடூரா
விண்ட்ஹோக்
போட்ஸ்வானா
கலஹாரி பாலைவனம்
கபோரோன்
ஸ்வாஸிலாந்து
பாபேன்
லெசோதோ
மஸேரு
டியாடியாநெங்
தென் ஆப்பிரிக்கா
க்ரூகர் தேசிய பூங்கா
நேல்ஸ்ட்ரூயம்
புஷ்பக்ரிஜ்
பிரிடோரியா
ஜோஹெனஸ்பர்க்
க்ளெர்க்ஸ்டார்ப்
டன்டீ
ன்ட்வேட்வெ
பிட்டர்மாரெட்ஸ்பர்க்
டர்பன்
ட்ராகென்ஸ்பெர்க் மலைத்தொடர்
ஸ்ட்ரான்ட்
கேப் டவுன்
பிரிடோரியா
மிட்ரான்ட்
க்ரூகர்ஸ்டார்ப்
காகிஸோ
ஜோஹெனஸ்பர்க்
ஈலான்ஸ்ஃபான்டேன்
சோவேட்டோ
ஏகன்ஹாஃப்
ஹைடல்பர்க்
[படங்கள்]
கேப் டவுன்
நன்னம்பிக்கை முனை
[பக்கம் 80, 81-ன் பெட்டி/படங்கள்]
முதன்முதல் சாட்சி கொடுத்த அனுபவம்
ஆபெத்நேகோ ராடிபி
பிறந்தது 1911
முழுக்காட்டப்பட்டது 1939
பின்னணிக் குறிப்பு க்வாஸூலூ-நடாலில் உள்ள பிட்டர்மாரெட்ஸ்பர்க்கில் இருந்த முதல் கருப்பர் சபையில் சேவை செய்தார். 1995-ல் மரிக்கும்வரை உண்மையோடு நிலைத்திருந்தார்.
பிட்டர்மாரெட்ஸ்பர்க்கிற்கு அருகே பிறந்து வளர்ந்தேன். என் அப்பா ஒரு மெத்தடிஸ்ட் சர்ச் போதகர். 1930-களின் மத்திபத்தில், யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட சில பிரசுரங்களை வாங்கினேன். அவற்றில் படித்த விஷயங்கள் உண்மையென நான் ஒத்துக்கொண்டபோதிலும், சாட்சிகளைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
நான் வசித்த விடுதியில் தங்கியிருந்த ஒருவர், பரலோகமும் உத்தரிக்கும் ஸ்தலமும் (ஆங்கிலம்) என்ற சிறுபுத்தகத்தைக் கொடுத்தார். அதிலிருந்த தகவல் எனக்குப் புதிதாய் பட்டது. அதைப் படித்துப் பார்த்தபிறகு, உயிர்த்தெழுதலைப் பற்றியும் பூமியில் வாழும் நம்பிக்கையைப் பற்றியும் பைபிள் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிந்தது. சில புத்தகங்கள் வேண்டுமென்று கேப் டவுனில் இருந்த கிளை அலுவலகத்திற்கு எழுதிக் கேட்டேன்.
நகரத்தில் நான் பார்த்த சாட்சிகளிடம் பேசத் தயங்கினேன். காரணம்: “வெள்ளையரிடம் நீயாகப் போய் பேசாதே, அவராக வந்து பேசும்வரை காத்திரு” என்று சொல்வது ஜூலு மக்களின் வழக்கம்.
ஒருநாள் மாலையில் வேலை முடிந்து விடுதிக்குத் திரும்பினபோது, சாட்சிகளுக்குச் சொந்தமான, ஒலிபெருக்கியுடன் கூடிய கார் எங்கள் விடுதிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்ததைக் கவனித்தேன். வாசலுக்கு அருகே நான் சென்றபோது, வாட்டசாட்டமான முதியவர் ஒருவர் என்னை அணுகினார்; அவர் கோடை கால உடை அணிந்திருந்தார். தன் பெயர்
டானியெல் யான்ஸென் என்றார். சாட்சிகளைப் பற்றி தெரிந்துகொள்ள இதை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்று முடிவுசெய்தேன். ஆகவே, சகோதரர் ரதர்ஃபர்டின் பேச்சுகளில் ஒன்றை ஒலிபரப்பும்படிச் சொன்னேன். பெரிய கூட்டம் கூடிவிட்டது. பேச்சு முடிந்ததும், யான்ஸென் என் கையில் ‘மைக்’கைக் கொடுத்து, “இந்தப் பேச்சில் கேட்டதை இப்போது ஜூலு பாஷையில் சொல்லுங்கள். இந்த மக்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும்” என்றார்.“பேச்சாளர் சொன்னது எல்லாமே எனக்கு ஞாபகத்தில் இல்லையே” என்றேன்.
“ஞாபகத்தில் இருப்பதை மட்டும் சொல்லுங்கள்” என்றார் யான்ஸென்.
கைகள் வெடவெடக்க, திக்கித்திணறி ஒருசில வார்த்தைகளை மைக்கில் சொன்னேன். யெகோவாவுக்காக சாட்சி கொடுத்த முதல் அனுபவம் அதுதான். தன்னோடு பிரசங்கிக்க வரும்படி சகோதரர் யான்ஸென் கூப்பிட்டார். பைபிளில் உள்ள அடிப்படை விஷயங்களைப் புரிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறேனா என்பதை முதலில் சோதித்தார். அதில் அவருக்குத் திருப்தி. நான்கு வருடங்களுக்கு வெள்ளையரின் சபைக்குச் சென்றேன். அங்கே கருப்பர் இனத்தைச் சேர்ந்தவன் நான் மட்டுமே. சிறு தொகுதியான நாங்கள், ஒரு சகோதரரின் வீட்டில் கூடிவந்தோம்.
அந்தக் காலத்தில், பிரசங்க வேலையை வித்தியாசமாகச் செய்தோம். எல்லா பிரஸ்தாபிகளுக்கும் பைபிள் செய்தியைக் கொண்ட சாட்சி அட்டை ஒன்று கொடுக்கப்பட்டது. அதை வீட்டுக்காரரிடம் காட்டினோம். அதோடு, ஃபோனோகிராஃப் கருவி ஒன்றையும், பதிவு செய்யப்பட்ட நான்கு நிமிட பேச்சுகளையும், பை நிறைய பிரசுரங்களையும் கொண்டு சென்றோம்.
நேரத்தை வீணாக்காமல் இருப்பதற்காக, பிரஸ்தாபி அந்த ஃபோனோகிராஃப் கருவியை ரீவைன்ட் செய்து, புதிய ஊசியையும் பொருத்தி தயாராக வைத்திருப்பார். வீட்டுக்காரர் கதவைத் திறந்தவுடன், பிரஸ்தாபி அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, பதிவு செய்யப்பட்ட பேச்சைப் பற்றி கூறும் சாட்சி அட்டையை அவரிடம் கொடுப்பார். பேச்சு பாதிக்குமேல் ஒலித்துக்கொண்டிருக்கும்போதே, பிரஸ்தாபி தன் பையைத் திறந்து விடுவார். பேச்சு முடிந்தவுடனே, அது சம்பந்தமான ஒரு பிரசுரத்தை வீட்டுக்காரருக்கு அளிப்பார்.
[பெட்டி/பக்கம் 88, 89-ன் ]
உண்மையுள்ள முன்மாதிரி
ஜார்ஜ் ஃபிலிப்ஸ்
பிறந்தது 1898
முழுக்காட்டப்பட்டது 1912
பின்னணிக் குறிப்பு 1914-ல் ஒழுங்கான பயனியராக ஆனார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்காவில் கிளை அலுவலகக் கண்காணியாக சேவை செய்தார். 1982-ல் மரிக்கும்வரை உண்மையுள்ளவராக நிலைத்திருந்தார்.
ஜார்ஜ் ஃபிலிப்ஸ், ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் பிறந்து வளர்ந்தார். 1914-ல், தன்னுடைய 16-வது வயதில் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார். கிறிஸ்தவ நடுநிலை வகித்ததால் 1917-ல் சிறையிலடைக்கப்பட்டார். 1924-ல், தென் ஆப்பிரிக்காவில் சேவை செய்யும்படி சகோதரர் ரதர்ஃபர்ட் அவரைக் கேட்டுக்கொண்டார். “ஜார்ஜ், ஒருவேளை ஒரு வருடமோ, அதைவிட கொஞ்சம் அதிகமாகவோ அங்கே இருக்க வேண்டியிருக்கலாம்” என்று கூறினார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு வந்தபோது ஜார்ஜ் சொன்ன கருத்து: “பிரிட்டனோடு ஒப்பிடும்போது, இங்கே நிலைமைகள் முற்றிலும் வித்தியாசமாக இருந்தன. பிரசங்க வேலை சிறியளவில்தான் நடந்துகொண்டிருந்தது. அந்தச் சமயத்தில், 6 பேர் மட்டுமே முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டிருந்தனர். பிரசங்க வேலையில் ஓரளவு ஈடுபட்டிருந்தவர்களின் எண்ணிக்கையும் 40-ஐத் தாண்டவில்லை. ஆப்பிரிக்காவின் தென்முனை துவங்கி கென்யா வரை எங்கள் பிராந்தியம் நீண்டிருந்தது. ஒரு வருடத்திற்குள் இங்குள்ள அனைவருக்கும் திறம்பட்ட விதத்தில் எப்படி சாட்சி கொடுக்கப் போகிறோம் என்று யோசித்தேன். ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். இருக்கிற எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்தி பிரசங்க வேலையை ஆரம்பிக்க வேண்டும், மற்றதை யெகோவாவின் கையில் விட்டுவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.
“தென் ஆப்பிரிக்கா பல்வேறு இனங்களையும் மொழிகளையும் கொண்ட சிக்கலான தேசம். இங்குள்ள பலதரப்பட்ட மக்களைப் பற்றித் தெரிந்துகொண்டது உண்மையில் சந்தோஷமாயிருந்தது. இந்த மிகப்பரந்த பிராந்தியத்தில் பிரசங்க வேலையை ஒழுங்கமைப்பதும், கூடுதல் வளர்ச்சிக்குத் தேவையான அடித்தளத்தை அமைப்பதும் சிரமமாகவே இருந்தது.
“இத்தனை காலமாக, யெகோவா எனக்குத் தேவையான எல்லாவற்றையும் அன்புடன் அளித்து, பாதுகாத்து, வழிநடத்தி, ஆசீர்வதித்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்” என்பதை நான் தெரிந்துகொண்டேன். ‘உன்னதமானவரின் மறைவிலிருக்க’ விரும்புகிறவர் கடவுளுடைய அமைப்போடு நெருக்கமாக இருந்து, அவருடைய வழிநடத்துதலுக்கு ஏற்றபடி அவருடைய வேலையில் கடினமாக உழைக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.”—1 தீமோத்தேயு 6:6; சங்கீதம் 91:1.
[பக்கம் 92-94-ன் பெட்டி/படங்கள்]
ஆன்மீக பலத்துடனிருக்க என் குடும்பத்திற்கு உதவினேன்
யோஸபட் பூஸானே
பிறந்தது 1908
முழுக்காட்டப்பட்டது 1942
பின்னணிக் குறிப்பு குடும்பஸ்தரான இவர், ஜோஹெனஸ்பர்க்கில் வேலை செய்தபோது சத்தியத்தைக் கற்றுக்கொண்டார். இவருடைய வீடு, ஜோஹெனஸ்பர்க்கிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் க்வாஸூலு-நடாலில் உள்ள ஸூலுலேண்டில் இருந்தது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஸூலுலேண்டில் 1908-ஆம் ஆண்டு நான் பிறந்தேன். எளிமையான பண்ணை வாழ்க்கையில் என்னுடைய குடும்பத்தார் திருப்தி கண்டபோதிலும், என்னுடைய 19-ஆம் வயதில் டன்டீ நகரில் இருந்த ஒரு கடையில் விற்பனையாளனாக வேலை செய்யத் தொடங்கினேன். தென் ஆப்பிரிக்க தங்கச் சுரங்கத் தொழிலின் மையமான ஜோஹெனஸ்பர்க்கில் அநேக இளைஞர்கள் கைநிறைய சம்பாதிக்கும் விஷயம் காலப்போக்கில் என் காதுக்கு எட்டியது. ஆகவே, அங்கு மாறிச் சென்றேன். பொதுவிடங்களில் விளம்பர போஸ்டர்களை ஒட்டும் வேலையை பல வருடங்களுக்குச் செய்தேன். ஆர்வமூட்டும் இடங்களையும் வாய்ப்புகளையும் கண்டு மலைத்துப்போனேன். ஆனால், நகர வாழ்க்கை எங்களுடைய ஒழுக்கப் பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக சீரழிப்பதை சீக்கிரத்திலேயே உணர்ந்தேன். அநேக இளைஞர்கள் கிராமத்தில் வாழும் தங்கள் குடும்பத்தாரை மறந்துவிட்டார்கள். ஆனால், நான் என் குடும்பத்தை மறந்துவிடவில்லை, தொடர்ந்து வீட்டிற்குப் பணம் அனுப்பி வைத்தேன். 1939-ல் ஸூலுலேண்டைச் சேர்ந்த க்ளாடினா என்ற பெண்ணை மணந்தேன். திருமணத்திற்குப் பிறகும், 400 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஜோஹெனஸ்பர்க்கில் தொடர்ந்து வேலை செய்தேன். என்னுடைய சகாக்கள் அனைவரின் நிலையும் அதுவே. குடும்பத்தை விட்டு வெகு காலத்திற்குப் பிரிந்திருந்தது வேதனையாக இருந்தாலும், அவர்களை வசதியாக வாழ வைப்பது என்னுடைய கடமை என்று நான் உணர்ந்தேன்.
ஜோஹெனஸ்பர்க்கில் இருந்தபோது, நானும் என்னுடைய நண்பரான ஏலியாஸ் என்பவரும் உண்மையான மதத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று தீர்மானித்தோம். சுற்றுவட்டாரத்திலிருந்த சர்ச்சுகளுக்குச் சென்றோம். எதுவுமே எங்களுக்குத் திருப்தி தரவில்லை. அதன்பிறகு, ஏலியாஸ் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தார். ஜோஹெனஸ்பர்க்கில் இருந்த யெகோவாவின் சாட்சிகளது முதல் கருப்பர் சபைக்கு ஏலியாஸோடு நானும்
தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். யெகோவாவுக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்த பிறகு, 1942-ஆம் ஆண்டு ஸோவேட்டோவில் முழுக்காட்டுதல் பெற்றேன். ஸூலுலேண்டிற்குச் செல்லும் போதெல்லாம் க்ளாடினாவுக்கு பைபிள் சத்தியங்களைச் சொல்லிவந்தேன். அவளோ, சர்ச் காரியங்களிலேயே மூழ்கிப் போயிருந்தாள்.என்றாலும், நம்முடைய பிரசுரங்களில் உள்ளவற்றை அவளுடைய பைபிளோடு ஒத்துப்பார்க்க ஆரம்பித்தாள். கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியம் மெல்ல மெல்ல அவளுடைய இருதயத்தைத் தொட்டது. 1945-ல் அவள் முழுக்காட்டப்பட்டாள். பக்தி வைராக்கியத்தோடு பைபிள் சத்தியத்தை அயலகத்தாருக்குப் பிரசங்கிக்க ஆரம்பித்தாள். அதோடு, அதை எங்கள் பிள்ளைகளின் மனதிலும் பதிய வைத்தாள். இதற்கிடையில், ஜோஹெனஸ்பர்க்கில் இருந்த சிலருக்கு பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கும் சந்தோஷத்தை நான் அனுபவித்தேன். 1945-க்குள் ஜோஹெனஸ்பர்க்கிற்கு அருகே நான்கு கருப்பர் சபைகள் உருவாயின. ஸ்மால் மார்க்கெட் சபையின் கம்பெனி ஸெர்வன்ட்டாக நான் சேவை செய்தேன். காலப்போக்கில், தங்கள் குடும்பத்தை விட்டு வெகு தொலைவில் வேலை செய்யும் மணமான ஆட்கள் தங்கள் குடும்பம் இருக்கும் இடத்திற்கே செல்ல வேண்டும், குடும்பத் தலைவர் என்ற பொறுப்பை அதிக கவனமாகச் செய்ய வேண்டும் என்று பைபிளிலிருந்து ஆலோசனை கொடுக்கப்பட்டது.—எபே. 5:28-31; 6:4.
யெகோவா விரும்புகிற விதத்தில் குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதற்காக, 1949-ல் ஜோஹெனஸ்பர்க்கில் செய்து வந்த வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டேன். வீடு திரும்பியதும், பண்ணை விலங்கு ஆய்வாளர் ஒருவரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். ஒட்டுண்ணிகளைக் கொல்வதற்கான மருந்தைக் கொண்ட தொட்டியில் விலங்குகளை இறக்கும் வேலையில் நான் உதவியாளனாக இருந்தேன். எனக்குக் கிடைத்த சொற்ப வருமானத்தில் ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தைப் பராமரிப்பது கஷ்டமாக இருந்தது. செலவுகளைச் சமாளிப்பதற்காக, வீட்டில் காய்கறிகளையும் சோளத்தையும் பயிரிட்டு விற்றேன். எங்கள் வீட்டில் வசதிவாய்ப்புகள் இல்லையென்றாலும்கூட, ஆன்மீக பொக்கிஷங்கள் நிறையவே இருந்தன. காரணம், மத்தேயு 6:19, 20-ல் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு நாங்கள் கீழ்ப்படிந்தோம்.
ஜோஹெனஸ்பர்க்கைச் சுற்றியுள்ள சுரங்கங்களில் தங்கத்தைத் தோண்டியெடுக்க எப்படிக் கடின உழைப்பு தேவைப்பட்டதோ, அப்படியே இந்த ஆன்மீகப் பொக்கிஷங்களைப் பெறுவதற்கும் கடின உழைப்பு அவசியமாயிருந்தது. தினசரி மாலையில் பிள்ளைகளோடு சேர்ந்து ஒரு பைபிள் வசனத்தை வாசிப்பேன். அதிலிருந்து என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதைச் சொல்லும்படி ஒவ்வொருவரிடமும் கேட்பேன். வாரக் கடைசியில் ஒருவர் மாற்றி ஒருவராக என்னோடு ஊழியத்திற்கு கூட்டிக்கொண்டு போவேன். ஒரு பண்ணையிலிருந்து அடுத்த பண்ணைக்கு நடந்து செல்கையில் பைபிள் விஷயங்களை அவர்களோடு கலந்துபேசுவேன். இவ்வாறாக, பைபிளின் உயர்ந்த ஒழுக்கநெறிகளை அவர்கள் மனதில் பதிய வைக்க முயன்றேன்.—உபா. 6:6, 7.
பல ஆண்டுகளுக்கு, எங்கள் குடும்பம் மட்டுமே பயணக் கண்காணிகளை உபசரிக்கும் நிலையில் இருந்தது. இந்தச் சகோதரர்களும் அவர்களுடைய மனைவிகளும் எங்கள் பிள்ளைகள்மீது சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். முழுநேர பிரசங்க வேலையில் ஈடுபட வேண்டுமென்ற ஆசையை அவர்கள் மனதில் விதைத்தார்கள். இப்போது எங்களுடைய ஐந்து மகன்களும் மகளும் நன்கு வளர்ந்துவிட்டார்கள், ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாக இருக்கிறார்கள். குடும்பத்தின் ஆன்மீக நலனுக்கு அதிக கவனம் செலுத்தும்படி என்னைப் போன்றோரை உற்சாகப்படுத்திய யெகோவாவின் அமைப்புக்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்! கோடி பணம் கொடுத்தாலும் கிடைக்காத ஆசீர்வாதங்களை இதனால் பெற முடிந்தது.—நீதி. 10:22.
சகோதரர் யோஸபட் பூஸானே 1998-ல் மரிக்கும் வரை யெகோவாவை உண்மையோடு சேவித்தார். இப்போது பெரியவர்களாக இருக்கும் அவருடைய பிள்ளைகளும் தங்கள் ஆன்மீக சொத்தை தொடர்ந்து பாதுகாத்து வருகிறார்கள். அவருடைய மகனான தியோபில்லஸ் பயணக் கண்காணியாக சேவை செய்கிறார். சகோதரர் பூஸானேயைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள, அக்டோபர் 8, 1993 ஆங்கில “விழித்தெழு!” பத்திரிகையில் பக்கங்கள் 19-22-ஐக் காண்க.
[பக்கம் 96, 97-ன் பெட்டி/படம்]
“பிரசங்க ஊழியம் யெகோவாவிடம் நெருங்கி வர எனக்கு உதவியிருக்கிறது”
தாமஸ் ஸ்கோஸானா
பிறந்தது 1894
முழுக்காட்டப்பட்டது 1941
பின்னணிக் குறிப்பு தன்னுடைய பயனியர் ஊழியத்தில் சந்திக்கும் மக்களுக்கு ஆன்மீக உதவி அளிப்பதற்காக ஐந்து மொழிகளைக் கற்றார்.
யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட சில சிறுபுத்தகங்களை 1938-ல் பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னிடம் கொடுத்தார். அந்தச் சமயத்தில், ஜோஹெனஸ்பர்க்கிற்கு கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டெல்மாஸ் நகரில் இருந்த வெஸ்லியன் சர்ச்சில் போதகராக இருந்தேன். வெகு காலமாகவே எனக்கு பைபிளில் அதிக ஆர்வம் இருந்தது. ஆத்துமா அழியாது, கெட்டவர்கள் நரகத்தில் வதைக்கப்படுவார்கள் என்று சர்ச் போதித்தது. ஆனால், அது தவறென்பதை இந்தப் புத்தகங்கள் பைபிளிலிருந்து நிரூபித்துக் காட்டின. (சங். 37:38; எசே. 18:4) அதோடு, கடவுளுடைய மக்கள் பெரும்பாலோர் பரலோகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக, பூமியில் முடிவில்லா வாழ்க்கையைப் பெறுவார்கள் என்பதையும் தெரிந்துகொண்டேன்.—சங். 37:29; மத். 6:9, 10.
இந்த உண்மைகளைக் கற்றுக்கொண்டபோது நான் அதிக சந்தோஷப்பட்டேன். எங்கள் சர்ச்சில் கூடிவருவோருக்கு அவற்றைப் போதிக்க விரும்பினேன். ஆனால், சக போதகர்கள் அதை ஆட்சேபித்தார்கள், என்னை சர்ச்சிலிருந்து நீக்கவும் திட்டமிட்டார்கள். ஆகவே, நான் அங்கிருந்து வெளியேறி டெல்மாஸில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சிறு தொகுதியோடு கூடிவர ஆரம்பித்தேன். 1941-ல் முழுக்காட்டுதல் பெற்றேன், 1943-ல் பயனியர் ஊழியத்தைத் தொடங்கினேன்.
ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் அதிகம் தேவைப்பட்ட ருஸ்டன்புர்க் நகருக்குச் சென்றேன். அவ்விடத்திற்கு நான் புதியவனாக இருந்ததால் தங்குமிடம், தங்குவதற்கான அனுமதி ஆகியவற்றைப் பெற உள்ளூர் தலைவரிடம் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. அனுமதி வேண்டுமெனில் 12 பவுண்ட் கட்டவேண்டும் என்று அவர் சொன்னார். என்னிடமோ காசில்லை.
ஆனால், அங்கிருந்த ஒரு தயவான வெள்ளையின சகோதரர் எனக்காக அந்தப் பணத்தைக் கட்டினார். அவர் பண உதவி செய்ததால் என்னால் பயனியர் ஊழியத்தைத் தொடர முடிந்தது. நான் பைபிள் படிப்பு நடத்தியவர்களில் ஒருவர் நல்ல விதமாக முன்னேறினார். நான் அங்கிருந்து வந்தபிறகு, அந்தச் சபையின் ஊழியராக அவர் நியமிக்கப்பட்டார்.அங்கிருந்து மேற்கில் தொலைதூரத்தில் இருந்த லக்டன்பர்க் நகருக்குச் சென்றேன். இப்போதோ, கருப்பர் வசிக்கும் பிராந்தியத்தில் தங்குவதற்கு ஒரு வெள்ளையின கண்காணிப்பாளரிடம் விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. அவர் அனுமதி மறுத்துவிட்டார். ஆகவே, அருகிலிருந்த மாஃபகிங் நகரில் வசித்த ஒரு வெள்ளையின பயனியர் சகோதரரின் உதவியை நாடினேன். நாங்கள் இருவருமாகச் சென்று அந்தக் கண்காணிப்பாளரைச் சந்தித்தோம். அவரோ, “நீங்கள் இங்கே தங்க நான் விரும்பவில்லை. நரகமே இல்லையென்று நீங்கள் போதிக்கிறீர்களே, நரக அக்கினிக்கு பயப்படவில்லையென்றால் மக்கள் எப்படி ஒழுங்காக இருப்பார்கள்?” என்றார்.
அனுமதி மறுக்கப்பட்டதால் நான் மாஃபகிங் நகருக்குச் சென்றேன். அங்குதான் இன்னும் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்து வருகிறேன். என்னுடைய தாய்மொழி ஜூலு. ஆனால், சத்தியத்தைக் கற்றுக்கொண்ட உடனேயே, ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தேன். அப்போதுதானே யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் எல்லாவற்றையும் வாசிக்க முடியும்! இது என்னுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்குக் கைகொடுத்தது.
ஊழியத்தில் நல்ல பலன்களைப் பெறுவதற்காக, ஸிஸோதோ, ஸோஸா, ட்ஸ்வானா, கொஞ்சம் ஆப்பிரிக்கான்ஸ் ஆகிய மொழிகளில் பேசக் கற்றுக்கொண்டேன். இத்தனை ஆண்டுகளில் அநேகர் யெகோவாவுக்கு தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்க உதவும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறேன். அவர்களில் நால்வர் இப்போது மூப்பர்களாய் இருக்கிறார்கள். முழுநேர ஊழியம் என் உடல் ஆரோக்கியத்திற்கும் உதவியிருக்கிறது.
இந்த முதிர்வயது வரை ஊழியத்தில் ஈடுபட அனுமதித்ததற்காக யெகோவாவுக்கு நான் நன்றி சொல்கிறேன். அறிவை வளர்த்துக்கொண்டதும், ஊழியத்தில் வெற்றி கண்டதும் என்னுடைய சொந்த பலத்தினால் அல்ல. யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக எனக்கு உதவியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒழுங்கான முழுநேர பிரசங்க ஊழியம் யெகோவாவிடம் நெருங்கி வர எனக்கு உதவியிருக்கிறது. அவரைச் சார்ந்திருக்க நான் கற்றுக்கொண்டேன்.
இது 1982-ல் எடுக்கப்பட்ட பேட்டி. அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான சகோதரர் ஸ்கோஸானா 1992-ல் மரிக்கும்வரை உண்மையுள்ளவராக நிலைத்திருந்தார்.
[பக்கம் 100, 101-ன் பெட்டி/படங்கள்]
தென் ஆப்பிரிக்காவின் முதல் மாவட்டக் கண்காணி
மில்டன் பார்ட்லட்
பிறந்தது 1923
முழுக்காட்டப்பட்டது 1939
பின்னணிக் குறிப்பு கிலியட் பட்டதாரியான இவர், தென் ஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும்படி நியமிக்கப்பட்ட முதல் மிஷனரி ஆவார். பிரசங்க வேலையை முன்னேற்றுவிப்பதில், அதிலும் முக்கியமாக கருப்பர்களுக்கு நற்செய்தியைக் கொண்டு செல்வதற்குக் கடினமாக உழைத்தார்.
கிலியட் பயிற்சி பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு வந்த முதல் மிஷனரியான மில்டன் பார்ட்லட் டிசம்பர் 1946-ல் கேப் டவுனுக்கு வந்தார். வட்டார, மாவட்டப் பணிகளை ஆரம்பிக்க வேண்டுமென்பதே அவருக்குக் கிடைத்த நியமிப்பு. அந்தச் சமயத்தில், சகோதரர் பார்ட்லட் மட்டுமே மாவட்டக் கண்காணியாகச் சேவை செய்து வந்தார். அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், தென் ஆப்பிரிக்காவில் பிரசங்க வேலையை முன்னேற்றுவிக்க பயணக் கண்காணிகள் கடினமாக முயன்றார்கள், அதிலும் முக்கியமாக, கருப்பர்களுக்குப் போதிக்க பெருமுயற்சி எடுத்தார்கள்.
தென் ஆப்பிரிக்க சகோதரர்களுக்கு மில்டனை ரொம்பப் பிடிக்கும். பொறுமைசாலியான அவர், சகோதரர்கள் தங்கள் பிரச்சினைகளைச் சொல்லும்போது கவனமாகக் கேட்பார். இதனால், முழு சகோதரத்துவத்தையும் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளைப் பற்றிய விளக்கமான, துல்லியமான அறிக்கைகளை தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்திற்கு அவரால் அனுப்ப முடிந்தது. இது சகோதரர்களுடைய வணக்கமுறையும் வாழ்க்கைமுறையும் பைபிள் நெறிமுறையுடன் அதிக ஒத்திசைவு கொண்டதாய் இருக்க உதவியது.
சகோதரர்களுக்கு இப்படிப்பட்ட உதவியை மில்டனால் ஏன் செய்ய முடிந்தது தெரியுமா? பைபிள் விஷயங்கள் அவருக்கு அத்துப்படி; அதோடு, போதிப்பதிலும் அவர் கெட்டிக்காரராக இருந்தார். வெள்ளையரான அவர், கருப்பரின் பிராந்தியத்திற்குள் நுழைய வேண்டுமெனில் இன ஒதுக்கீட்டு அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டியிருந்தது. இவற்றைப்
பெறுவதற்குத் தேவையான உறுதியும், விடாமுயற்சியும் அவருக்கு நிறையவே இருந்தன. தப்பெண்ணம் கொண்ட அதிகாரிகள் பெரும்பாலும் அனுமதியளிக்க மறுப்பர். ஆகவே, உதவி கேட்டு நகர கவுன்சில் போன்ற உயர் அதிகாரிகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும். அடுத்த கவுன்சில் கூட்டம் நடந்து, மறுபடியும் அனுமதி கிடைக்கும்வரை அவர் காத்திருக்க வேண்டியிருக்கும். எப்படியாவது முயன்று, பெரும்பாலான கருப்பர் பிராந்தியத்திற்குள் அவர் நுழைந்துவிடுவார்.சில சமயங்களில், மில்டன் பேச்சு கொடுக்கும்போது, அதை வேவு பார்க்க ரகசிய போலீஸார் அனுப்பப்பட்டனர். யெகோவாவின் சாட்சிகள் எல்லாம் கம்யூனிஸ கிளர்ச்சியாளர்கள் என்று கிறிஸ்தவ மண்டல போதகர்கள் கிளப்பிவிட்ட புரளியே இதற்கு ஒரு காரணம். ஒருமுறை, மாநாட்டில் குறிப்பு எடுப்பதற்காக கருப்பின போலீஸ் ஒருவர் அனுப்பப்பட்டார். “அது நல்லதாகப் போயிற்று. ஏனென்றால், அந்த மாநாட்டில் கேட்ட விஷயங்கள் அந்த போலீஸ்காரர் மெய் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளக் காரணமாயின. அவர் இன்னமும் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கிறார்” என்று 20 வருடங்களுக்குப் பிறகு மில்டன் எழுதினார்.
மில்டன், தன்னுடைய 23-வது வயதில் மணமாகாத இளைஞராக தென் ஆப்பிரிக்காவில் காலடி எடுத்து வைத்தபோது, அங்கு 3,867 பிரஸ்தாபிகள் இருந்தனர். தென் ஆப்பிரிக்காவில் அவருடைய 26 ஆண்டு சேவையின் முடிவில், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 24,005-ஐத் தொட்டிருந்தது. வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்வதற்காக, 1973-ல் மில்டன் தன் மனைவி ஷீலாவையும், ஒரு வயது மகன் ஜேஸனையும் அழைத்துக்கொண்டு அமெரிக்கா திரும்பினார். இந்தப் பக்கத்தில் உள்ள படம், 1999-ல் விரிவாக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்தின் பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மில்டனும் ஷீலாவும் அங்குச் சென்றிருந்தபோது எடுக்கப்பட்டதாகும். தங்களுடைய அன்பான சேவையை மறவாதிருந்த அநேக பழைய நண்பர்களை 26 வருடங்களுக்குப் பிறகு சந்தித்தபோது அவர்கள் மகிழ்ச்சியில் பூரித்துப்போனார்கள்.
[படம்]
மில்டன் மற்றும் ஷீலா பார்ட்லட், 1999
[பக்கம் 107-ன் பெட்டி/படம்]
ஒப்பற்ற சூழல்
டேபிள் மவுண்டன்—கேப் டவுனின் முக்கிய சிறப்பம்சம். இது அந்நகரின் அழகிற்கு அழகு சேர்க்கிறது. கேப் டவுன்தான் ஆப்பிரிக்காவின் மிக அழகிய மாநகரம் என்று சிலர் புகழாரம் சூட்டுகிறார்கள்.
கோடையில், சில சமயங்களில் மலையின் உச்சிப்பகுதியை அடர்ந்த மேகங்கள் மூடியிருக்கும். அதை “டேபிள் கிளாத்” என்று அழைப்பது மிகப் பொருத்தமாக உள்ளது. மலைச் சரிவுகளில் மேல்நோக்கி வேகமாகக் காற்றடிக்கும்போது, ஈரப்பதம், அடர்ந்த மேகமாக உருவாகிறது. இது டேபிள் மவுண்டனை மூடுகிறது.
[பக்கம் 114-117-ன் பெட்டி/படங்கள்]
தடுப்புக்காவலிலும் உத்தமமாய் இருத்தல்
ரோயன் புருக்ஸ் என்பவருடன் நடத்தப்பட்ட பேட்டி
பிறந்தது 1952
முழுக்காட்டப்பட்டது 1969
பின்னணிக் குறிப்பு கிறிஸ்தவ நடுநிலை காரணமாக டிசம்பர் 1970-லிருந்து மார்ச் 1973 வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். 1973-ல் ஒழுங்கான பயனியர் சேவையைத் தொடங்கினார்; 1974-ல் பெத்தேலுக்குச் சென்றார். இப்பொழுது கிளை அலுவலகக் குழு உறுப்பினராக இருக்கிறார்.
பாசறைகளில் நிலைமை எப்படி இருந்தது?
இந்தப் பாசறைகள் நீளமான இரண்டு வரிசைகளைக் கொண்டவை. அவற்றிற்கு நடுவே நடைபாதையும் மழைநீர்க் கால்வாயும் இருந்தன. இப்பாசறைகளில் 34 அறைகள் இருந்தன. தனிச்சிறையில் எங்கள் ஒவ்வொருவருக்கும் 2 மீட்டர் நீளமும் 1.8 மீட்டர் அகலமும் கொண்ட அறைகள் இருந்தன. ஒரு நாளில் இருமுறை மட்டுமே அறைகளை விட்டு வெளியே வர எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதாவது, காலையில் கை, கால்களை கழுவுவதற்கும், ஷேவ் செய்வதற்கும் டாய்லட் பக்கெட்டுகளைக் கழுவுவதற்கும், மத்தியானத்தில் குளிப்பதற்கும் மட்டுமே வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டது. கடிதங்களை எழுதவோ பெற்றுக்கொள்ளவோ முடியவில்லை. நாங்கள் பைபிளை மட்டும் வைத்துக்கொள்ளலாம், பிற புத்தகங்களையோ பென்சில் பேனாக்களையோ வைத்திருக்கக் கூடாது. யாரும் எங்களை வந்து பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
பெரும்பாலான சகோதரர்கள் பாசறைகளுக்கு வருவதற்கு முன்பே எய்ட் டு பைபிள் அண்டர்ஸ்டான்டிங் போன்ற புத்தகங்களை பைபிளுடன் சேர்த்து பைண்ட் செய்து வைத்திருப்பார்கள். காவலாளிகள் யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில், புத்தகங்களோடு சேர்ந்த அந்த பைபிள் பார்ப்பதற்கு அவர்களுடைய பழைய ஆப்பிரிக்கான்ஸ் அல்லது டச்சு மொழி பைபிள் அளவுக்குப் பெரிதாக இருந்தது.
அங்கு பைபிள் பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்ததா?
ஆம், எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பிரசுரங்களை இரகசியமாகக் கடத்தினோம். எங்களிடமிருந்த எல்லா சாமான்களையும் சூட்கேஸுகளில் அடைத்து ஒரு காலி அறையில் வைத்தோம். சோப்பு, க்ரீம், டூத்பேஸ்ட் போன்ற ஐட்டங்களையும் அவற்றில் வைத்திருந்தோம். இந்த ஐட்டங்களை சூட்கேஸிலிருந்து எடுப்பதற்காக காவலர் மாதத்திற்கு
ஒருமுறை எங்களை அங்கு அனுப்புவார். இந்த சூட்கேஸுகளில் ஏற்கெனவே பிரசுரங்களும் வைக்கப்பட்டிருந்தன.எங்களில் ஒருவர் காவலரிடம் பேசி அவரது கவனத்தைத் திருப்புவார், அப்போது மற்றொரு சகோதரர் தன்னுடைய அரைக் கால்சட்டைக்குள்ளோ பனியனுக்குள்ளோ ஒரு புத்தகத்தை மறைத்து வைத்துவிடுவார். அறைக்குத் திரும்பிய பிறகு, அந்தப் புத்தகத்தைச் சிறு பகுதிகளாகப் பிரித்து ஆளுக்கொரு பகுதியை எடுத்துக்கொள்வோம். அப்படிச் செய்வது மறைத்து வைப்பதற்கு சுலபமாக இருந்தது. படித்து முடித்த பகுதிகளை எங்களுக்குள் கைமாற்றிக்கொண்டோம். இதனால் எல்லாருமே புத்தகத்தைப் படிக்க முடிந்தது. மறைத்து வைப்பதற்குத் தோதாக நிறைய இடங்களைக் கண்டுபிடித்து வைத்திருந்தோம். சில அறைகள் பராமரிக்கப்படாத நிலையில் இருந்ததால், அங்கே ஏகப்பட்ட ஓட்டைகள் இருந்தன.
காவலர்கள் அடிக்கடி வந்து எங்களுடைய அறைகளைச் சோதனையிட்டார்கள், அதுவும் சில சமயங்களில் நடுராத்திரியில் சோதனையிட்டார்கள். இப்படி வரும்போதெல்லாம் ஏதாவது சில பிரசுரங்கள் அவர்களுடைய கண்ணில் பட்டுவிடும், ஆனால், எல்லாவற்றையுமே அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கள்மேல் ரொம்பவே அனுதாபம் காட்டிய ராணுவ வீரர்களில் ஒருவர் சோதனையிட வரும் சமயத்தை எங்களுக்கு முன்னதாகவே எச்சரித்துவிடுவார். அப்போது பிரசுரங்களை எல்லாம் பிளாஸ்டிக்கில் சுற்றி மழைநீர் குழாய்களுக்குள் செருகிவைப்போம். ஒருநாள் கனமழை பெய்ததில் இப்படி குழாயில் செருகிவைத்த ஒரு கட்டு, மழைநீர்க் கால்வாயில் மிதந்துகொண்டிருந்தது. எங்களுக்கு குலைநடுங்க ஆரம்பித்தது. ராணுவ கைதிகள் சிலர் அதை வைத்து பந்து விளையாட ஆரம்பித்தார்கள். திடீரென ஒரு காவலர் வந்து, அவர்களை அறைகளுக்குப் போகும்படி கட்டளையிட்டார். அதற்குப்பின் யாருமே அந்தக் கட்டை கண்டுகொள்ளவே இல்லை. நாங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். சற்று நேரத்திற்குப்பின், எங்களை அறைகளிலிருந்து வெளியே விட்ட சமயத்தில் அதைத் திரும்ப எடுத்துக்கொண்டோம்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உத்தமத்தன்மை சோதிக்கப்பட்டதா?
ஆம், அடிக்கடி சோதிக்கப்பட்டது. பாசறை அதிகாரிகள் எப்போதுமே ஏதாவதொரு விதத்தில் சோதித்துக்கொண்டே இருந்தார்கள். உதாரணமாக, எங்களிடம் ரொம்ப அன்பாக பழகினார்கள்; கூடுதலாக சாப்பாடு கொடுத்தார்கள், உடற்பயிற்சி செய்ய வெளியே அழைத்துச் சென்றார்கள், சூரியக் குளியல் எடுப்பதற்கு அனுமதித்தார்கள். அடுத்து, சில நாட்களுக்குப் பிறகு, திடீரென ராணுவத்தினருக்குரிய காக்கி உடையை அணியும்படி கட்டளையிட்டார்கள். அதற்கு மறுப்பு தெரிவிக்கும்போது, முன்புபோல் கடுமையாக நடத்தினார்கள்.
அதன் பிறகு, ராணுவத்தினருக்குரிய பிளாஸ்டிக் ஹெல்மட்டுகளை அணியும்படி சொன்னார்கள். அதையும் மறுத்துவிட்டோம். கேப்டனுக்கு மூக்குக்குமேல் கோபம் வந்துவிட்டதால், அன்றுமுதல் குளிப்பதற்குக்கூட எங்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அறைக்குள்ளேயே குளிப்பதற்காக, ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கெட் கொடுக்கப்பட்டது.
எங்களுக்கு காலில்போட ஷூ இருக்கவில்லை. சில சகோதரர்களுக்கு ஷூ போடாததால் பாதத்திலிருந்து இரத்தம் வடிந்தது. அதனால் நாங்கள் ஷூ தயாரித்தோம். தரையைத் துடைப்பதற்காகப் பயன்படுத்திய பழைய கம்பளி விரிப்புகளின் துண்டுத்துணிகளை நாங்கள் சேகரித்தோம். செம்புக் கம்பியும் எங்களுக்குக் கிடைத்தது; அதன் ஒரு நுனியை தட்டையாகவும் மறு நுனியைக் கூர்மையாகவும் ஆக்கினோம். அதன் தட்டையான நுனியில் துளை போட்டு, அதைத் தைப்பதற்கான ஊசியாகப் பயன்படுத்தினோம். எங்களுடைய கம்பளி விரிப்புகளிலிருந்து நூல் எடுத்து அந்தத் துண்டுத்துணிகளைத் தைத்து ஷூக்கள் தயாரித்தோம்.
எந்த முன்னறிவிப்புமின்றி, திடீரென ஒருநாள் ஒவ்வொரு அறையிலும் மூன்று பேர் வீதம் இருக்கும்படி எங்களிடம் சொல்லப்பட்டது. அறையில் எங்களுக்கு நடமாடுவதற்கே இடமில்லாமல் போனாலும், அது எங்களுக்கு நன்மையாகவே இருந்தது. ஆன்மீக ரீதியில் பலவீனமான சகோதரர்கள் அதிக அனுபவமுள்ள சகோதரர்களுடன் இருக்கும்படி நாங்கள் ஏற்பாடு செய்தோம். எங்களுக்கு பைபிள் படிப்புகளையும் வெளி ஊழியப் பயிற்சிக் கூட்டங்களையும் நடத்தினோம். இதனால் நாங்கள் இன்னும் நல்ல முறையில் நடந்துகொண்டதைப் பார்த்தபோது கேப்டனுக்கு பெருத்த ஏமாற்றமாகி விட்டது.
இந்தத் திட்டம் தோல்வியடைந்ததை கேப்டன் உணர்ந்தபோது, ஓர் அறையில் யெகோவாவின் சாட்சி ஒருவருடன் சாட்சியல்லாத இருவர் தங்குவதற்கு உத்தரவிட்டார். எங்களுடன் பேசக்கூடாதென அவர்களுக்கு கண்டிப்புடன் சொல்லப்பட்டிருந்தபோதிலும், அவர்கள் எங்களிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். சாட்சிகொடுக்க எங்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. இதன் விளைவாக, இந்தக் கைதிகளில் ஒன்றிரண்டு பேர் சில ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட மறுத்தார்கள். அதனால், பழையபடி ஓர் அறைக்கு ஒருவர் என்ற நிலையில் வைக்கப்பட்டோம்.
கூட்டங்களை நடத்த முடிந்ததா?
நாங்கள் தவறாமல் கூட்டங்களை நடத்தினோம். ஒவ்வொரு அறைக் கதவின் மேலேயும் கம்பிவலையும் செங்குத்தான ஏழு கம்பிகளும் உள்ள ஒரு ஜன்னல் இருந்தது. அந்தக் கம்பிகள் இரண்டில் கம்பளி விரிப்பின் இரு நுனிகளையும் கட்டி, உட்காருவதற்கு ஒரு சிறிய தொட்டிலை அமைத்தோம். அதில் இருந்துகொண்டு, நேரெதிரேயுள்ள அறையில் இருக்கும் சகோதரரைப் பார்க்க முடியும். நாங்கள் சத்தம்போட்டுச் சொல்வதை அந்தக் கட்டடத்திலுள்ள மற்றவர்களும் கேட்க முடிந்தது. ஒவ்வொரு நாளும் இவ்வாறு தினவசனத்தைப் படித்தோம்; பத்திரிகை கிடைத்தால் காவற்கோபுர படிப்பையும் அவ்வாறு நடத்தினோம். ஒவ்வொரு நாளின் முடிவிலும் வரிசை முறைப்படி ஒருவர் ஜெபம் செய்தோம். வட்டார மாநாட்டு நிகழ்ச்சிகளை நாங்களாகவே தயாரித்து நடத்தினோம்.
மூப்பர் யாராவது அனுமதி பெற்று, நினைவு ஆசரிப்பை உள்ளே வந்து எங்களுடன் நடத்துவாரா இல்லையா என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதனால், நாங்களே அதை நடத்த தயார் செய்தோம். உலர்ந்த திராட்சையை ஊற வைத்து திராட்சை ரசம் தயாரித்தோம்; எங்களுக்குக் கிடைத்த சில பிரெட்டுகளைத் தட்டையாக்கிக் காயவைத்து அப்பமாகப் பயன்படுத்தினோம். ஒருசமயம்
வெளியேயுள்ள சகோதரர்களிடமிருந்து ஒரு சிறிய பாட்டில் ஒயினும் புளிப்பில்லா அப்பங்கள் சிலவும் பெறுவதற்கு அனுமதி கிடைத்தது.பிற்பாடு நிலைமைகள் மாறினவா?
ஆம், பிற்பாடு நிலைமைகள் மாறின. சட்டம் மாறியது, எங்களுடைய தொகுதிக்கு விடுதலையும் கிடைத்தது. அப்போது முதற்கொண்டு எங்களைப் போன்றோருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தண்டனை வழங்கப்படுவதோடு சரி, மீண்டும் தண்டனை வழங்கப்படவில்லை. பிற்பாடு, 22 சகோதரர்களைக் கொண்ட எங்களுடைய தொகுதி விடுதலை செய்யப்பட்ட பிறகு, இன்னும் காவலிலிருந்த 88 சகோதரர்களுக்கு வழக்கம்போல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் வழங்கப்பட்டன. மாதத்தில் ஒருமுறை தங்களுடைய உற்றார் உறவினர்கள் வந்து பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது, கடிதம் எழுதுவதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் முடிந்தது.
விடுதலையான பிறகு வாழ்க்கை கடினமாய் இருந்ததா?
ஆம், வெளியேயுள்ள வாழ்க்கையோடு ஒத்துப்போக கொஞ்ச காலம் எடுத்தது. உதாரணமாக, நிறைய பேருடன் பழகத் தயக்கமாக இருந்தது. சபையில் படிப்படியாக நிறைய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள, எங்களுடைய பெற்றோர்களும் சகோதரர்களும் அன்புடன் உதவினார்கள்.
அவை கடினமான காலங்களாக இருந்தபோதிலும், நாங்கள் பட்ட கஷ்டங்களிலிருந்து நன்மை அடைந்தோம். விசுவாச பரீட்சைகள் எங்களை ஆன்மீக ரீதியில் பலப்படுத்தின, பொறுமையைக் கற்றுக்கொடுத்தன. பைபிளின் அருமையை நாங்கள் புரிந்துகொண்டோம்; தினமும் அதை வாசித்து தியானிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் தெரிந்துகொண்டோம். யெகோவாமீது நம்பிக்கை வைக்கவும் கற்றுக்கொண்டோம். யெகோவாவுக்கு உண்மையாய் இருக்க நாங்கள் அந்தத் தியாகங்களை எல்லாம் செய்தபிறகு, தொடர்ந்து சகித்திருக்கவும், அவருக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்கவும், கூடுமானால் முழுநேர சேவையில் ஈடுபடுவதன் மூலம் அதைச் செய்யவும் முடிவு செய்தோம்.
[பக்கம் 126-128-ன் பெட்டி/படம்]
ஆபத்தான சமயங்களில் யெகோவாமேல் நம்பிக்கை வைத்தோம்
ஸெப்லான் ங்குமாலா
பிறந்தது 1960
முழுக்காட்டப்பட்டது 1985
பின்னணிக் குறிப்பு சத்தியத்தை அறிந்துகொள்வதற்கு முன் ராஸ்டஃபாரிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தார். முழுக்காட்டுதலுக்குப் பின் சீக்கிரத்திலேயே முழுநேர சேவையில் ஈடுபட்டார். இப்போது தன் மனைவி நாமுஸாவுடன் சேர்ந்து வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்கிறார்.
க்ரூகர்ஸ்டார்ப் நகரில் பெத்தேல் வளாகத்தைக் கட்டி முடித்த பிறகு, என்னுடைய பயனியர் பார்ட்னராக இருந்த சகோதரரும் நானும் தேவை அதிகமுள்ள இடத்திற்கு நியமிக்கப்பட்டோம். அது துறைமுக நகரமான டர்பனுக்கு அருகே கறுப்பர்களுக்கு ஒதுக்கப்பட்ட க்வாங்கன்டிஸி நகரியமாகும். நாங்கள் அங்கு போய்ச்சேர்ந்த சில நாட்களில், நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை விசாரிப்பதற்காக ஓர் அரசியல் கட்சியினர் ஐந்து வாலிபர்களை எங்களுடைய வீட்டிற்கு அனுப்பினார்கள். எதிர்க் கட்சியினரிடமிருந்து அந்த நகரியத்தைப் பாதுகாப்பதில் தங்களுக்கு உதவும்படி அவர்கள் கேட்டார்கள். ஜூலு மொழிபேசும் இந்த இரு கட்சியினரிடையேயுள்ள விரோதத்தால் தென் ஆப்பிரிக்காவிலுள்ள அப்பகுதியில் ஏற்கெனவே அநேகர் கொன்று குவிக்கப்பட்டிருந்தார்கள். இந்த வன்முறைக்கு அவர்கள் எப்படித் தீர்வு கொண்டுவர நினைக்கிறார்கள் என நாங்கள் கேட்டோம். வெள்ளையரின் ஆட்சிதான் வன்முறைக்கு முக்கிய காரணமென அவர்கள் சொன்னார்கள். போர் சின்னாபின்னமாக்கியதால் வறுமையில் தாண்டவமாடும் பிற ஆப்பிரிக்க நாடுகளை அவர்களுடைய கண்முன் நிறுத்தினோம். ஆக, காலம் மாறினாலும் கோலம் மாறுவதில்லை என்ற ஒரு பழமொழியை அவர்களுக்கு நினைப்பூட்டினோம். நாட்டை வெள்ளையர் ஆண்டாலும் சரி, கருப்பர் ஆண்டாலும் சரி, குற்றச்செயல், வன்முறை, வியாதி இவையெல்லாம் ஓயாது என்பதை அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். அதன் பிறகு, மனிதரின் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் அளிக்கிற ஒரே அரசாங்கம் கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே என்பதை பைபிளிலிருந்து அவர்களுக்கு எடுத்துக்காட்டினோம்.
சில நாட்களுக்குப்பின் ஓர் இரவு, வாலிபர்களின் கூட்டம் சுதந்திரப் பாடல்களைப் பாடும் சத்தத்தைக் கேட்டோம்; அதோடு, துப்பாக்கி ஏந்திய ஆட்களையும் பார்த்தோம். வீடுகள் தீக்கொளுத்தப்பட்டன, ஆட்கள் கொல்லப்பட்டார்கள். நாங்கள் அரண்டுபோனோம்; மிரட்டலுக்கோ அச்சுறுத்தலுக்கோ மத். 10:32, 33) திடீரென, வாலிபர்களும் பெரியவர்களும் சேர்ந்த ஒரு கும்பல் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டியது. எங்களிடம் ‘ஹலோ’ எதுவும் சொல்லாமல், ஜூலு மொழியில் இன்டலஸி எனப்படும் ஒரு மருந்தை வாங்குவதற்கு பணம் தரும்படி வற்புறுத்தினார்கள்; சூனிய மருத்துவர் தருகிற அந்த மருந்துக்கு பாதுகாக்கிற குணம் இருப்பதாக அவர்கள் நம்பினார்கள். அவர்களிடம் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி சொல்லி, இவ்வாறு கேட்டோம்: “சூனிய மருத்துவர்கள் சூனியம்செய்து ஆட்களைக் கொன்றுகுவிக்கத் தூண்டுவது சரியென நினைக்கிறீர்களா?” பிறகு, “இப்படிச் சூனியம் செய்ததால் உங்களுடைய அன்பான உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் என வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எப்படியிருக்கும்?” என்றும் அவர்களிடம் கேட்டோம். அது ரொம்ப வேதனையாய் இருக்கும் என்பதை அவர்கள் எல்லாரும் ஒத்துக்கொண்டார்கள். அதன் பிறகு, நாங்கள் பைபிளைத் திறந்து, பில்லிசூனியத்தைப் பற்றி கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதை உபாகமம் 18:10-12-லிருந்து வாசிக்கும்படி அவர்களுடைய தலைவரிடம் சொன்னோம். அந்த வசனங்களை அவர் வாசித்த பிறகு, அதைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டோம். அவர்கள் வாயே திறக்கவில்லை. அதை நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, நாங்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டுமா அல்லது உங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமா என அவர்களிடம் கேட்டோம். அவர்கள் ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டார்கள்.
பயந்து சோர்ந்துவிடாதிருக்க அல்லது எங்களுடைய உத்தமத்தை விட்டுவிடாதிருக்க பலம்தரும்படி யெகோவாவிடம் ஜெபித்தோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இயேசுவை மறுதலிக்காதிருந்த தியாகிகளைப் பற்றி நினைத்துப் பார்த்தோம். (அநேக சந்தர்ப்பங்களில் நாங்கள் இவ்வாறு தப்பித்தோம்; அதனால், யெகோவாவின் துணை எங்களுக்கு இருப்பதை உணர்ந்தோம். உதாரணமாக, ஒருநாள் சாயங்காலம், வேறொரு கும்பல் எங்களுடைய வீட்டிற்கு வந்து, குடிமக்களைப் “பாதுகாப்பதற்காக” ஆயுதங்களை வாங்குவதற்குப் பணம் தரும்படி வற்புறுத்தினார்கள். எதிர்க் கட்சிக்காரர்கள் தாக்கும்போது தங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாதிருப்பதாக அவர்கள் குறைகூறினார்கள்; அவர்களை எதிர்த்துத் தாக்குவதற்கு ஒரே வழி, சிறந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதுதான் என்றும் அவர்கள் சொன்னார்கள். பணத்தைக் கொடுக்கும்படியும், அப்படிக் கொடுக்காவிட்டால் அதன் விளைவைச் சந்திக்க நேரிடும் என்பதாகவும் பயமுறுத்தினார்கள். மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் மற்றவர்களின் மனசாட்சிக்கு மதிப்புக்கொடுப்பதாகவும் சொல்லப்பட்டுள்ள ஓர் ஆவணத்தில் அவர்களுடைய அமைப்பு கையெழுத்திட்டிருந்ததை அவர்களிடம் நினைவூட்டினோம். ஒருவன் அரசியல் சட்டத்தை மீறுவதைவிட செத்துப்போவதுதானே மேல் என நாங்கள் கேட்டோம். அவர்கள் அதை ஆமோதித்தார்கள். அடுத்து, நாங்கள் யெகோவாவின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், எங்களுடைய “சட்டப் புத்தகம்” பைபிள் என்றும், கொலை செய்வதை பைபிள் கண்டனம் செய்கிறதென்றும் நாங்கள் விளக்கினோம். கடைசியில், அந்தக் கும்பலின் தலைவன் தன் ஆட்களிடம் இவ்வாறு சொன்னார்: “இந்த ஆட்களுடைய தீர்மானத்தை நான் புரிந்துகொண்டேன். நம்முடைய நகரியத்தின் வளர்ச்சிக்காக, அதாவது முதியோர் இல்லம் போன்ற கட்டடங்களைக் கட்டுவதற்காக அல்லது தங்களுடைய பக்கத்து வீட்டுக்காரருக்கு ஆஸ்பத்திரிக்குப் போவதற்காக பணம் தேவைப்பட்டால் அதற்குப் பணம் கொடுக்க அவர்கள் தயாராய் இருக்கிறார்கள் என்பது அவர்கள் சொன்னதிலிருந்து தெளிவாகிவிட்டது. ஆனால், ஆட்களைக் கொல்வதற்குப் பணம் கொடுக்க அவர்கள் தயாராய் இல்லை.” அப்படிச் சொன்னதும் அந்த ஆட்கள் தங்களுடைய இருக்கைகளைவிட்டு எழுந்துவிட்டார்கள்; நாங்கள் அவர்களுடைய கைகளைக் குலுக்கி, அவர்கள் பொறுமையாக இருந்ததற்கு நன்றி சொன்னோம்.
[பக்கம் 131-134-ன் பெட்டி/படங்கள்]
நூறாண்டு மொழிபெயர்ப்பு வேலையில் மணமாகா சகோதரிகள்
தென் ஆப்பிரிக்காவில், அநேக சகோதர சகோதரிகள் தங்களுக்குக் கிடைத்த மணமாகா வரத்தை மதிப்புமிக்க ராஜ்ய வேலையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். (மத். 19:11, 12) கீழே சொல்லப்பட்டுள்ள மூன்று சகோதரிகள், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” தரும் ஆன்மீக உணவை மொழிபெயர்ப்பதில் மொத்தம் 100 ஆண்டுகள் செலவழித்திருக்கிறார்கள்.—மத். 24:45, NW.
மரீயா மோலிப்போ
தென் ஆப்பிரிக்காவிலுள்ள லிம்பொபோ மாகாணத்தில் மோலிப்போவின் தலைவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் நான் பிறந்தேன். நான் ஸ்கூலில் படித்த காலத்தில் என் அக்கா அலட் சத்தியத்தை எனக்குச் சொல்லித் தந்தாள். ஸ்கூல் படிப்பு முடிந்ததும், ஒரு நல்ல டீச்சராக ஆவதற்கு காலேஜில் சேர்ந்து மூன்று வருடம் படிக்கும்படி இன்னொரு அக்கா சொன்னாள். யெகோவாவின் சாட்சியாக இல்லாத இந்த அக்கா, அதற்குப் பண உதவியும் அளிப்பதாகச் சொன்னாள். அதை நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால், நான் யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்பினேன்; பயனியர்களாக இருந்த அலட் அக்காவோடும் எலிசபெத் அக்காவோடும் சேர்ந்து ஊழியம்செய்ய விரும்பினேன். 1953-ல் முழுக்காட்டுதல் பெற்றேன். 1959-ல் ஓர் ஒழுங்கான பயனியராக ஆனேன். அதற்காக விண்ணப்பித்து, அந்த நியமிப்பு கிடைக்கும் வரையில் ஆறு வருடங்களுக்கு அவ்வப்போது ஒழுங்கான பயனியர்களுக்குரிய மணிநேரத்தை எட்டுமளவுக்கு ஊழியத்தில் ஈடுபட்டேன்.
1964-ல், ஆன்மீக உணவை செப்பெடி பாஷையில் மொழிபெயர்ப்பதில் பகுதிநேர வேலை செய்வதற்கு தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. பயனியர் சேவையோடு இந்த மொழிபெயர்ப்பு வேலையையும் செய்தேன். பிறகு 1966-ல், தென் ஆப்பிரிக்க பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினராக ஆவதற்கு அழைப்பு கிடைத்தது. பெத்தேல் சேவை நான் நினைத்ததுபோல் இருக்கவில்லை. தினமும் ஊழியத்திற்குச் செல்ல முடியாதது எனக்கு ஓர் இழப்பாக இருந்தது. என்றாலும், சீக்கிரத்திலேயே என்னுடைய எண்ணத்தை மாற்றினேன்; எப்படியெனில், பயனியர் மணிநேரத்தை எட்ட முடியாவிட்டாலும், வாரயிறுதி நாட்களில் சனிக்கிழமை மத்தியானத்திலிருந்து
ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் வரையான சமயத்தை பயனியர் செய்வதற்குரிய சமயமாகக் கருதினேன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளின்போது ஊழியத்தில் அந்தளவு ஆர்வமாக இறங்கியதால், இரவு சாப்பாட்டிற்கு ரொம்ப லேட்டாகத்தான் வந்துசேர்ந்தேன். பெத்தேலில் வயதில் மூத்த சகோதரிகள் சனிக்கிழமை காலையில் வேலை செய்யவேண்டியதில்லை என்ற புதிய மாற்றம் வந்தபோது நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். அதனால், அந்தச் சமயத்தையும் ஊழியத்தில் செலவிட்டேன்.நான் பெத்தேலுக்கு வந்த முதல் எட்டு வருடங்களின்போது, பெத்தேல் இல்லத்திலிருந்து தனியாக இருந்த ஒரு கட்டடத்தில் இருந்தேன். மொழிபெயர்ப்பாளராக இருந்த இன்னொரு சகோதரியும் என்னுடைய ரூமில் இருந்தார். இன ஒதுக்கீட்டு அதிகாரிகள், முதலில் எங்களுடைய வெள்ளைக்கார சகோதரர்களுக்குப் பக்கத்திலேயே குடியிருப்பதற்கு எங்களை அனுமதித்தார்கள்; ஆனால் 1974-ல் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டார்கள். அதனால், கறுப்பரான என்னைப்போன்ற மொழிபெயர்ப்பாளர்கள் கறுப்பர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குப் போக வேண்டியதாயிற்று. டெம்பிசா என்ற இடத்திலிருந்த ஒரு யெகோவாவின் சாட்சி குடும்பத்துடன் நான் தங்கினேன்; அங்கிருந்து பெத்தேலுக்கு ஒவ்வொரு நாளும் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. க்ரூகர்ஸ்டார்ப் நகரில் புதிய பெத்தேல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட சமயத்தில், இன ஒதுக்கீட்டை ஆதரித்துவந்த அரசாங்கம் அதன் கொள்கைகளைத் தளர்த்த ஆரம்பித்திருந்தது; அதனால், மீண்டும் பெத்தேல் குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களோடு சேர்ந்து வாழ முடிந்தது.
இன்றுவரையாக பெத்தேலில் மொழிபெயர்ப்பாளராக தொடர்ந்து வேலைசெய்வதற்கு வாய்ப்பளித்த யெகோவாவுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். சொல்லப்போனால், மணமாகாதிருக்கும் வரத்தை அவருடைய சேவையில் பயன்படுத்துவதால் அவர் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். என்னுடைய தங்கை ஆனாவும்கூட மணமாகாதிருப்பதைத் தெரிவு செய்திருப்பது அவருடைய ஆசீர்வாதம்தான்; அவள் கடந்த 35 வருடங்களாக முழுநேர சேவையைச் செய்து வருகிறாள்.
ட்ஸீலங் மாச்சகிலெ:
லெசோதோ நாட்டிலுள்ள டியட்டியனெங் என்ற நகரில் நான் பிறந்தேன். என்னுடைய அம்மா மதபக்தியுள்ளவர், அதனால் பிள்ளைகள் எல்லாரையும் சர்ச்சுக்கு வரும்படி கட்டாயப்படுத்துவார். சர்ச்சுக்குப் போவதென்றாலே எனக்குப் பிடிக்காது. இப்படியிருக்க, என்னுடைய சித்தி யெகோவாவின் சாட்சியாக ஆனார்; அவருடைய நம்பிக்கைகளைப் பற்றி அம்மாவிடம்
சொன்னார். சர்ச்சுக்குப் போவதை அம்மா நிறுத்தியவுடன் நான் சந்தோஷப்பட்டேன், ஆனால் சத்தியத்தைக் காதில் வாங்கவில்லை. ஏனென்றால், நான் உலகத்தையும் அதன் பொழுதுபோக்குகளையும் விரும்பினேன்.1960-ல் என்னுடைய பள்ளிப் படிப்பை முடிப்பதற்காக ஜோஹெனஸ்பர்க்கிற்குச் சென்றேன். நான் வீட்டிலிருந்து கிளம்பியபோது, “ஜோஹெனஸ்பர்க்கில் சாட்சிகளைத் தேடிக் கண்டுபிடித்து, ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு முயற்சிசெய் ட்ஸீலங்” என்று அம்மா என்னிடம் கெஞ்சினார். அங்கு முதலில் போய்ச் சேர்ந்தவுடன், பொழுதுபோக்கிற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்ததைப் பார்த்து அசந்துவிட்டேன். ஆனால், ஆட்களோடு நெருங்கிப் பழகினபோது ஒரே அதிர்ச்சியாக இருந்தது; ஒழுக்கக்கேடான காரியங்கள் அவர்கள் மத்தியில் சர்வ சகஜமாயிருந்தது. அப்போதுதான் அம்மா சொன்னதை நினைத்துப் பார்த்தேன்; ஸோவேட்டோவில் நடக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தேன். அங்கு கூட்டத்திற்கு முதன்முதலாகச் சென்றிருந்தபோது, “நான் உங்களுடைய சாட்சிகளில் ஓர் ஆளாக ஆவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள், யெகோவா தேவனே” என்று சொல்லி ஜெபம் செய்தது ஞாபகமிருக்கிறது. சீக்கிரத்திலேயே ஊழியத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன்; அதே வருடம் ஜூலை மாதத்தில் முழுக்காட்டுதலும் பெற்றேன். ஸ்கூல் படிப்பு முடிந்ததும் லெசோதோவுக்கு அம்மாவிடம் திரும்பிச் சென்றேன். அதற்குள்ளாக அம்மாவும் முழுக்காட்டுதல் பெற்றிருந்தார்கள்.
1968-ல், ஸிஸோதோ மொழியில் முழுநேர மொழிபெயர்ப்பாளராக சேவை செய்வதற்கு தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகம் என்னை அழைத்தது. நான் அம்மாவுடைய வீட்டில் இருந்தவாறே பல வருடங்கள் இந்த வேலையைச் செய்தேன். வீட்டில் பணக் கஷ்டம் வந்தபோது, நான் முழுநேர சேவையை விட்டுவிட்டு வேறு வேலையில் சேர்ந்து வீட்டிற்கு உதவுவதாகச் சொன்னேன். ஆனால், அம்மாவும் முழுக்காட்டுதல் பெற்றிருந்த என் கடைசித் தங்கை டோபிலோவும் அதற்குச் சம்மதிக்கவே இல்லை. ஒரு முழுநேர மொழிபெயர்ப்பாளராக என்னுடைய சேவைக்கு ஆதரவு அளிப்பதையே அவர்கள் பெரும் பாக்கியமாக நினைத்தார்கள்.
1990-ல் க்ரூகர்ஸ்டார்ப் நகரிலுள்ள புதிய கிளை அலுவலகக் கட்டடத்திலுள்ள தென் ஆப்பிரிக்க பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினரானேன்; அங்கு, மொழிபெயர்ப்பு வேலையைத் தொடர்ந்து சந்தோஷமாகச் செய்து வருகிறேன். மணமாகாதிருக்க தெரிவு செய்ததைக் குறித்து நான் கவலைப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, அப்படிப்பட்ட சந்தோஷமும் அர்த்தமுமுள்ள ஒரு வாழ்க்கையைத் தந்து ஆசீர்வதித்திருப்பதற்காக யெகோவாவுக்கு மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
நர்ஸ் அன்கூனா:
நான் தென் ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள
பூஷ்பக்ரிஜ் நகரில் பிறந்தேன். என் அம்மா ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்ததால், என்னைச் சத்தியத்தில் வளர்த்தார். அதே சமயத்தில் அப்பாவுடைய வருமானம் போதாததால் அம்மாவும் வேலைக்குப் போக வேண்டியிருந்தது. நான் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிப்பதற்கு முன்பே வாசிப்பதற்கு அம்மா கற்றுக்கொடுத்தார். ஒழுங்கான பயனியராகச் சேவை செய்துவந்த வயதான ஒரு சகோதரியுடன் சேர்ந்து வார நாட்களில் ஊழியத்தில் ஈடுபடுவதற்கு இது உதவியது. அவருக்குக் கண் சரியாகத் தெரியாது; அதனால் ஊழியத்தில் வாசிப்பதற்கு நான் அவருக்கு உதவினேன். ஸ்கூலுக்குப் போக ஆரம்பித்த பிறகும்கூட, மத்தியான நேரங்களில் நான் அவரோடு தொடர்ந்து ஊழியத்திற்குச் சென்றேன். முழுநேர ஊழியர்களோடு இப்படிப் பழகியதால் ஊழியத்தின்மீது ஆசை வளர்ந்தது. ஆட்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டபோது சந்தோஷப்பட்டேன். எனக்கு சுமார் 10 வயது இருந்தபோது, நான் முழுநேர பிரசங்க வேலை செய்யவே ஆசைப்படுகிறேன் என்று சொல்லி யெகோவாவிடம் ஜெபித்தேன். 1983-ல் நான் முழுக்காட்டுதல் பெற்றேன். வீட்டின் தேவைகளைக் கவனிப்பதற்காக சில வருடங்கள் வேலைக்குச் சென்றேன். முழுநேர சேவையில் ஈடுபடும் இலக்கை அடைய முடியாதபடி பண ஆசை தடுத்துவிடக்கூடாது என்பதால், என்னுடைய சம்பளத்திற்கு பட்ஜெட் போடும்படி அம்மாவிடம் சொன்னேன். பிறகு 1987-ல், தென் ஆப்பிரிக்க பெத்தேல் குடும்பத்தாருடன் சேர்ந்துகொண்டு ஜூலு மொழிபெயர்ப்பாளராக ஆவதற்கான அப்ளிகேஷன் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், என்னுடைய வேலையை ராஜினாமா செய்தேன்.பெத்தேலில் மணமாகாத ஒரு சகோதரியாக சேவை செய்வது அளவிலா சந்தோஷத்தை அள்ளித்தந்திருக்கிறது. அங்கு காலை வணக்கத்தின்போது கொடுக்கப்படும் குறிப்புகள் ஊழியத்தில் நன்கு முன்னேற எனக்கு உதவியிருக்கிறது. வித்தியாசமான பின்னணிகளைச் சேர்ந்த சக வணக்கத்தாரோடுகூட சேவைசெய்வது என்னுடைய சுபாவத்தில் முன்னேற உதவியிருக்கிறது. ஆம், எனக்கென்று பிள்ளைகள் இல்லைதான், ஆனால், நிறைய ஆன்மீகப் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எனக்கு இருக்கிறார்கள்; கல்யாணம் செய்து, எனக்கென்று ஒரு குடும்பம் இருக்க வேண்டுமென தீர்மானித்திருந்தால், இத்தனை பிள்ளைகள் கிடைத்திருக்க மாட்டார்கள்.
பெத்தேலில் ஊக்கம் தளராமல் தங்களுடைய மொழிபெயர்ப்பு வேலையைச் செய்கிற அதே சமயத்தில், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட வணக்கத்தாராக ஆவதற்கு மொத்தத்தில் 36 பேருக்கு இந்த மூன்று மணமாகாத சகோதரிகள் உதவியிருக்கிறார்கள்.
[பக்கம் 146, 147-ன் பெட்டி/படங்கள்]
கம்பீரமான மலை
ட்ராகென்ஸ்பெர்க் மலைத்தொடர் தென் ஆப்பிரிக்காவில் சுமார் 1,050 கிலோமீட்டர்களுக்கு பரந்துகிடக்கிறது. என்றாலும், க்வாஸூலூ-நடாலுக்கும் லெசோதோவுக்கும் இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள இதன் ஒரு பாகம் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இது தென் ஆப்பிரிக்காவின் சுவிட்சர்லாந்து என பொதுவாக அழைக்கப்படுகிறது.
ஏறுவதற்குக் கடினமான இதன் சிகரங்கள் மலையேறி சாதனை படைக்கும் வீரர்களைச் சுண்டியிழுக்கின்றன; பிரமாண்டமான சென்டினல், வழுவழுப்பானதும் ஆபத்தானதுமான மாங்க் கௌல், செங்குத்தான சரிவுகளைக் கொண்டதும் ஆபத்தானதுமான டெவில்ஸ் டூத் ஆகியவை இவற்றில் சில. இத்தகைய மலைகளில் ஏறுவது அபாயகரமானது. இதன் சரிவுகளில் அநேக கணவாய்கள் உள்ளன. இவை செங்குத்தாக இருந்தபோதிலும், பாதுகாப்பானவை, அவற்றில் ஏறுவதற்கு விசேஷித்த கருவிகள் எதுவும் தேவைப்படுவதில்லை. ஆனால், மலையேறுவது சம்பந்தமான விதிகளுக்குக் கீழ்ப்படிவது முக்கியம். கதகதப்பூட்டும் உடை, தங்குவதற்கு ஒரு கூடாரம், போதுமான உணவு இவையாவும் அத்தியாவசியம். மலைச்சரிவுகளில் கடுங்குளிராக இருக்கும், இரவிலோ காற்று பலமாக இருக்கும்.
ஒவ்வொரு வருடமும் மலையில் நடக்க விரும்புகிறவர்கள், கூடாரமிட்டு தங்குபவர்கள், மலையேறுபவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இங்கு வருகிறார்கள். கவலைகளைச் சற்று மறந்து மாசுபடிந்த நகரத்தைவிட்டுச் சற்று விலகி, மலையின் சுத்தமான காற்றை முகருவதற்கும், அதன் தித்திப்பான தண்ணீரைப் பருகுவதற்கும் கம்பீரமான மலைகளின் எழிலைக் கண்டுகளிப்பதற்கும் இங்கு வருகிறார்கள்.
[படம்]
புஷ்மென் எனப்படும் காட்டுவாசிகள் வரைந்த பாறை ஓவியங்கள்
[பக்கம் 158, 159-ன் பெட்டி/படங்கள்]
ஆவியுலகத் தொடர்பிலிருந்தும் பலதார மணத்திலிருந்தும் விடுதலை
ஐசக் ட்ஸிஹ்லா
பிறந்தது 1916
முழுக்காட்டப்பட்டது 1985
பின்னணிக் குறிப்பு கிறிஸ்தவமண்டலத்தின் செயல்களால் அதிருப்தியடைந்திருந்தார்; சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு முன்பு பணக்கார பில்லிசூனிய வைத்தியராயிருந்தார்.
ஐசக் என்பவரும் அவருடைய மூன்று நண்பர்களான மாட்லாபானி, லூக்காஸ், ஃபிலப் ஆகியோரும் தென் ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செக்கூகூனி மலைப் பகுதிகளில் வளர்ந்து வந்தார்கள். இந்த நான்கு வாலிபர்களும் அப்போஸ்டலிக் சர்ச் அங்கத்தினர்களின் வெளி வேஷத்தைப் பார்த்து அதைவிட்டு விலகத் தீர்மானித்தார்கள். நால்வருமாகச் சேர்ந்து மெய் மதத்தைத் தேட ஆரம்பித்தார்கள். பிறகு ஒருவருக்கொருவர் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.
காலப்போக்கில், இந்த நான்கு நண்பர்களில் மூவர் தங்கள் மனைவிகளோடு யெகோவாவின் சாட்சிகள் ஆனார்கள். ஆனால் ஐசக்குக்கு என்ன நடந்தது? அவருடைய அப்பாவைப் போலவே அவரும் பிரபலமான பில்லிசூனிய வைத்தியரானார். எக்கச்சக்கமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது ஐசக்குடைய இலட்சியமாய் இருந்தது, அவ்வாறே அவர் பணக்காரர் ஆனார். அவரிடம் நூறு மாடுகள் இருந்தன, நிறைய பணம் வங்கியில் இருந்தது. பொதுவாக பணக்காரர்கள் செய்வதைப் போலவே அவரும் இரண்டு மனைவிகளை வைத்துக்கொண்டார். இதற்கிடையில், அந்த மூன்று நண்பர்களில் ஒருவரான மாட்லாபானி, தாங்கள் மூவரும் மெய் மதத்தைக் கண்டுபிடித்த விதத்தைச் சொல்வதற்காக ஐசக்கைத் தேடிக்கொண்டு போனார்.
மாட்லாபானியைப் பார்த்ததில் ஐசக்கிற்குச் சந்தோஷம்; தன்னுடைய பால்ய நண்பர்கள் ஏன் யெகோவாவின் சாட்சிகள் ஆனார்கள் என்பதை அறிந்துகொள்வதில் அவர் ஆர்வம் காட்டினார். பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற சிற்றேட்டிலிருந்து ஐசக்குக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆப்பிரிக்க பில்லிசூனிய வைத்தியர் ஒருவர், தன்னை நாடிவந்த நபரிடம் குறிசொல்வதற்கு எலும்புகளை நிலத்தில் வீசுவது போன்ற காட்சி உள்ளூர் மொழியிலிருந்த பதிப்பில் 17-வது படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது. அங்கு கொடுக்கப்பட்டுள்ள உபாகமம் 18:10, 11-லுள்ள வசனங்களைப் படித்துவிட்டு, அத்தகைய ஆவியுலகத்தொடர்பு பழக்கங்கள் கடவுளுக்கு வெறுப்பூட்டுபவை என்பதை அறிந்து அவர் வாயடைத்துப்போனார். பலதாரமணம் செய்த ஒருவர் தன் மனைவிகளுடன் இருப்பதைப் போன்று சித்தரிக்கப்பட்ட 25-வது படம் அவருடைய மனத்தை உறுத்தியது. மெய்க் கிறிஸ்தவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்கு ஆதாரமாக 1 கொரிந்தியர் 7:1-4 அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வசனங்களுக்கு உடனே கீழ்ப்படிய ஐசக் முடிவுசெய்தார். 68 வயதில் தன் இரண்டாவது மனைவியை விலக்கி வைத்தார், தன் முதல் மனைவியான ஃப்ளாரீனேவைச் சட்டப்படி திருமணம் செய்துகொண்டார். பில்லிசூனிய வைத்தியத் தொழிலுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார்; குறிசொல்வதற்குப் பயன்படுத்திய எலும்புகளையும் வீசியெறிந்துவிட்டார். ஒருமுறை ஐசக்கின் பைபிள் படிப்பு நடந்துகொண்டிருந்தபோது, அவரைச் சந்திக்க இரண்டு பேர் வெகு தூரத்திலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் ஏற்கெனவே அவரிடம் குறிகேட்டிருந்ததால், 550 ரான்ட்களை (அந்தச் சமயத்தில் 140 ஐ.மா. டாலர்களை) அவருக்குக் கொடுப்பதற்காக வந்திருந்தார்கள். அவரோ அதை வாங்க மறுத்துவிட்டார்; தான் முன்பு செய்துவந்த தொழிலை விட்டுவிட்டதாகவும் யெகோவாவின் சாட்சியாய் ஆவதற்குத் தற்போது பைபிளைப் படித்து வருவதாகவும் சொல்லி அவர்களுக்குச் சாட்சி கொடுத்தார். சீக்கிரத்தில் ஐசக் தான் வைத்திருந்த இலக்கை எட்டினார். 1985-ல் அவரும் ஃப்ளாரீனேயும் முழுக்காட்டுதல் பெற்றார்கள்; கடந்த சில வருடங்களில், ஐசக் கிறிஸ்தவ சபையில் மூப்பராகச் சேவை செய்திருக்கிறார்; இப்போது அவருக்கு வயது 90.
[பக்கம் 124, 125-ன் அட்டவணை/வரைபடம்]
கால வரலாறு தென் ஆப்பிரிக்கா மொத்த பிரஸ்தாபிகள் மொத்த பயனியர்கள்
1900
1902 தென் ஆப்பிரிக்காவுக்கு பைபிள் பிரசுரங்கள் வந்து சேருகின்றன.
1910 டர்பனில் கிளை அலுவலகத்தை வில்லியம் டபிள்யூ. ஜான்ஸ்டன் திறந்துவைக்கிறார்.
1916 “ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” கிடைக்கிறது.
1917 கிளை அலுவலகம் கேப் டவுனுக்கு மாற்றப்படுகிறது.
1920
1924 அச்சு இயந்திரம் கேப் டவுனுக்கு அனுப்பப்படுகிறது.
1939 ஆப்ரிக்கான்ஸ் மொழியில் ஆறுதல் பத்திரிகை முதன்முதலாக அச்சிடப்படுகிறது.
1940
1948 கேப் டவுனுக்கு அருகே ராஜ்ய மன்றம் கட்டப்படுகிறது.
1949 ஜூலு மொழி காவற்கோபுரம் அச்சிடப்படுகிறது.
1952 ஈலான்ஸ்ஃபான்டேன் என்ற இடத்தில் பெத்தேல் கட்டி முடிக்கப்படுகிறது.
1979 டிகேஎஸ் ரோட்டரி அச்சு இயந்திரம் நிறுவப்படுகிறது.
1980
1987 க்ரூகர்ஸ்டார்ப் நகரில் புதிய பெத்தேல் கட்டப்படுகிறது, 1999-ல் விரிவுபடுத்தப்படுகிறது.
1992 ஸோவேட்டோவில் துரித கட்டுமான முறையில் முதல் ராஜ்ய மன்றம் கட்டப்படுகிறது.
2000
2004 அச்சகம் விரிவாக்கப்படுகிறது. மேன் ரோலன்ட் லித்தோமேன் ரோட்டரி பிரஸ்ஸில் பிரசுரங்கள் அச்சடிக்கப்படுகின்றன.
2006 பிரஸ்தாபிகளின் உச்ச எண்ணிக்கை 78,877
[வரைபடம்]
(பிரசுரத்தைக் காண்க)
Total Publishers
Total Pioneers
80,000
40,000
1900 1920 1940 1980 2000
[பக்கம் 148, 149-ன் அட்டவணை/படங்கள்]
எண்ணற்ற மொழிகள்
தென் ஆப்பிரிக்க அச்சகம் “காவற்கோபுரம்” பத்திரிகையை 33 மொழிகளில் பிரசுரிக்கிறது
பலவித பாஷன்கள்
ஆப்பிரிக்காவில் விதவிதமான பலவர்ண பாரம்பரிய ஆடை ஆபரணங்களையும் துணி டிசைன்களையும் காணமுடிகிறது
ஜூலு
வணக்கம் சொல்லுதல் “ஸானிபோனா”
தாய்மொழி பேசுவோர் 1,06,77,000 h
பிரஸ்தாபிகள் 29,000 i
ஸிஸோதோ
வணக்கம் சொல்லுதல் “லூம்லாங்”
தாய்மொழி பேசுவோர் 35,55,000
பிரஸ்தாபிகள் 10,530
செப்பெடி
வணக்கம் சொல்லுதல் “தோபிலா”
தாய்மொழி பேசுவோர் 42,09,000
பிரஸ்தாபிகள் 4,410
ஸோங்கா
வணக்கம் சொல்லுதல் “ஸீவானி”
தாய்மொழி பேசுவோர் 19,92,000
பிரஸ்தாபிகள் 2,540
ஸோஸா
வணக்கம் சொல்லுதல் “மால்வினி”
தாய்மொழி பேசுவோர் 79,07,000
பிரஸ்தாபிகள் 10,590
ஆப்பிரிக்கான்ஸ்
வணக்கம் சொல்லுதல் “ஹலோ”
தாய்மொழி பேசுவோர் 59,83,000
பிரஸ்தாபிகள் 7,510
ட்ஸ்வானா
வணக்கம் சொல்லுதல் “டூம்லாங்”
தாய்மொழி பேசுவோர் 36,77,000
பிரஸ்தாபிகள் 4,070
வெண்டா
வணக்கம் சொல்லுதல் “ரி யா வூஸா”
தாய்மொழி பேசுவோர் 10,21,800
பிரஸ்தாபிகள் 480
[அடிக்குறிப்பு]
h எண்ணிக்கைகள் தோராயமானவை.
i எண்ணிக்கைகள் தோராயமானவை.
[பக்கம் 66-ன் முழுபக்க படம்]
[பக்கம் 71-ன் படம்]
எல்லோவுட் மரம்
[பக்கம் 74-ன் படம்]
ஸ்டாஃபல் ஃப்யுரி
[பக்கம் 74-ன் படம்]
“வேதாகமங்களில் படிப்புகள்”
[பக்கம் 74-ன் படம்]
வில்லியம் டபிள்யூ. ஜான்ஸ்டனுடன் டர்பன் சபையினர், 1915
[பக்கம் 74, 75-ன் படம்]
குடும்பத்தாருடன் யோஹான்னஸ் சாங்கே
[பக்கம் 75-ன் படம்]
முதல் கிளை அலுவலகம் இக்கட்டடத்திலுள்ள சிறிய அறையில் செயல்பட்டு வந்தது
[பக்கம் 77-ன் படம்]
யாபீ டரான்
[பக்கம் 79-ன் படம்]
ஹென்றி முயர்டால்
[பக்கம் 79-ன் படம்]
பிட் ட யாஹர்
[பக்கம் 82-ன் படம்]
ஹென்றி ஆங்கடல், 1915
[பக்கம் 82-ன் படம்]
கிரேஸ் மற்றும் டேவிட் டேலர்
[பக்கம் 82-ன் படம்]
1931-ல் வெளியிடப்பட்ட இந்தச் சிறு புத்தகத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றுக்கொள்வதற்கான உறுதிமொழி இருந்தது
[பக்கம் 84-ன் படங்கள்]
1931-ல் கேப் டவுன் பெத்தேல் குடும்பம், ஜார்ஜ் மற்றும் ஸ்டெல்லா ஃபிலிப்ஸ் உட்பட
[பக்கம் 87-ன் படம்]
ஸோஸா மொழியில் ஒலிப்பதிவு
[பக்கம் 87-ன் படம்]
ஃப்ரான்டெக்ஸ் அச்சு இயந்திரத்துடன் ஆன்ட்ரூ ஜேக், 1937
[பக்கம் 87-ன் படம்]
ஆப்பிரிக்கான்ஸ் மொழியில் முதல் “ஆறுதல்” மற்றும் “காவற்கோபுரம்” பத்திரிகைகள்
[பக்கம் 90-ன் படம்]
மாநாட்டுப் பிரதிநிதிகள், ஜோஹெனஸ்பர்க்கில், 1944
[பக்கம் 90-ன் படம்]
அட்டைகளைப் பயன்படுத்தி ஒரு பொதுப் பேச்சை விளம்பரப்படுத்துதல், 1945
[பக்கம் 90-ன் படம்]
ஃப்ரான்ஸ் மல்லரும் பிட் வென்ட்சலும் ஃபோனோகிராஃப் களுடன், 1945
[பக்கம் 95-ன் படம்]
கெர்ட் நெல், ‘சகோதரர்களுக்கு ஊழியர்,’ 1943
[பக்கம் 95-ன் படம்]
கிராமப்புறங்களில் பிரசங்கித்தல், 1948
[பக்கம் 99-ன் படம்]
ஆன்ட்ரூ மாசான்டொவுடன் அவரது இரண்டாவது மனைவி ஐவி
[பக்கம் 99-ன் படம்]
லூக் மற்றும் ஜாய்ஸ் த்லாத்லா
[பக்கம் 99-ன் படம்]
ஜூலு மொழியில் முதல் “காவற்கோபுரம்”
[பக்கம் 102-ன் படம்]
வேலு நாயக்கரின் முன்னுதாரணத்தால் அவருடைய குடும்பத்தில் 190 பேர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்
[பக்கம் 102-ன் படங்கள்]
கோபால் குப்புசாமி தன் 21-வது வயதில்; இப்போது தன் மனைவி சுசீலாவுடன்; கடவுளுக்கு ஒப்புக்கொடுக்க 150 பேருக்கு அவர்கள் உதவியிருக்கிறார்கள்
[பக்கம் 104, 105-ன் படம்]
இஸபெல்லா எலரே
டாரின் கில்கோர்
[பக்கம் 108, 109-ன் படம்]
முதல் கட்டடம், 1952
1972-ல் ஈலான்ஸ்ஃபான்டேனில் இருந்த பெத்தேல்
[பக்கம் 110-ன் படம்]
மாநாட்டுச் சிறப்புக் குறிப்புகள்
(மேலே) 1942-ல் “சில்ரன்” என்ற புத்தகத்தின் வெளியீடு; (மத்தியில்) 1959-ல் முழுக்காட்டுதல் பெறவிருப்போர்; (கீழே) 1998-ல் பிரதிநிதிகளை ஸோஸா மொழியினர் ஒன்றுசேர்ந்து வரவேற்கிறார்கள்
கடந்த வருடம் 3,428 பேர் முழுக்காட்டப்பட்டார்கள்!
[பக்கம் 120-ன் படம்]
சவுக்கடியைச் சகித்த எலைஜா ட்லாட்லா
[பக்கம் 121-ன் படம்]
ஒழுங்கான பயனியரான ஃப்ளோரா மலின்டா. இவருடைய மகள் கொடூரமாகக் கொல்லப்பட்டாள்
[பக்கம் 122-ன் படம்]
மோசஸ் நியாமுசுவா ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார்
[பக்கம் 140, 141-ன் படங்கள்]
விறுவிறுப்பாக நடைபெறும் ராஜ்ய மன்றக் கட்டுமானப் பணி
காகிஸோவிலுள்ள சபையார் வழிபாட்டிற்காக ஒரு புதிய நிலத்தை வாங்குவதில் உதவி பெற்றனர்
அதற்கு முன்
அதற்கு முயலுகையில்
அதன் பிறகு
ஹெடல்பர்க்கிலுள்ள ராதன்டா சபையார் தங்களுடைய ராஜ்ய மன்றத்தை அருமையானதாய் கருதுகிறார்கள்
37 ஆப்பிரிக்க நாடுகளில் 7,207 ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டன, இன்னும் 3,305 மன்றங்கள் தேவைப்படுகின்றன!
[பக்கம் 147-ன் படம்]
இன்று ரூஸோ குடும்பம்
[பக்கம் 150-ன் படங்கள்]
மிட்ரான்ட் மாநாட்டு மன்றம்
[பக்கம் 155-ன் படம்]
2002, ஜிம்பாப்வேக்கு வந்திறங்கிய நிவாரணப் பொருள்கள்
[பக்கம் 155-ன் படம்]
மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவியாக உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்
[பக்கம் 156, 157-ன் படங்கள்]
2006, தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகம்
குடியிருப்பு மற்றும் அலுவலகக் கட்டடங்கள், புதிய அச்சகம், ஷிப்பிங் டிபார்ட்மென்ட்
[பக்கம் 156, 157-ன் படங்கள்]
கிளை அலுவலகக் குழுவினர்
பிட் வென்ட்சல்
லாயீசா பீலீசா
ரோவன் ப்ரூக்ஸ்
ரேமன்ட் ம்தலானே
ஃப்ரான்ஸ் மல்லர்
பைட்டர் டா ஹிர்
யானி டைப்பரன்க்
[பக்கம் 161, 162-ன் படங்கள்]
நமிபியா
வில்லியம், எல்லன் ஹைன்டல் தம்பதியர்
1951, கார்லீ, டிக் வால்ட்ரன் தம்பதியர்
நமிபியா மொழிபெயர்ப்பு அலுவலகம்
[பக்கம் 167-ன் படங்கள்]
லெசோதோ
(மேலே) வட்டார ஊழியத்தின்போது ஏபெல் மாடீபா; (மேலே, வலது) குகைவாசிகள் ஒரு மிஷனரியைச் சுற்றி நிற்கிறார்கள்; (இடது) பிர்-ஒலா, பிர்கிட்டா நியுக்ரேன் தம்பதியர்
[பக்கம் 168-ன் படங்கள்]
போட்ஸ்வானா
தெரு வியாபாரிக்கு டாங்வானா தம்பதியர் சாட்சிகொடுக்கிறார்கள்
குடிசைகளில் பிரசங்கித்தல்
[பக்கம் 170-ன் படங்கள்]
ஸ்வாஸிலாந்து
ஜேம்ஸ், டான் ஹாகெட் தம்பதியர்
பாபேன் நகரிலுள்ள கைவினைப்பொருள் சந்தையில் சத்தியத்தைப் பிரசங்கித்தல்
[பக்கம் 170-ன் படங்கள்]
செ. ஹெலினா
ஒரே நாளில் “ராஜ்ய செய்தி” வினியோகிப்பு முடிவுற்றது; (கீழே) துறைமுகப் பட்டணமாகிய ஜேம்ஸ்டவுன்
[பக்கம் 175-ன் படம்]
1993 சர்வதேச மாநாடு