Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ரீயூனியன்

ரீயூனியன்

ரீயூனியன்

வெப்பமண்டலப் பரதீஸான ரீயூனியன் தீவை பெரும்பாலும் அரேபிய வியாபாரிகள்தான் முதன்முதல் கண்டுபிடித்திருக்க வேண்டும்; அதுவும், எதேச்சையாகக் கண்டுபிடித்திருக்க வேண்டும். அடர் நீல நிறத்திலுள்ள இந்தியப் பெருங்கடலில் பச்சை மணிக்கல் போல் அமைந்திருக்கும் இந்த ரீயூனியன் தீவு, முழுக் கண்டங்களில் காணப்படுவதைப் போன்ற இயற்கை அழகையும் பல்வகைமையையும் பரிசாகப் பெற்றிருக்கிறது. எரிமலைக் குழம்பிலிருந்து தோன்றிய மணலால் உருவான கடற்கரைகளும், எண்ணிலடங்கா நீர்வீழ்ச்சிகளும், மழைக் காடுகளும், எக்கச்சக்கமான காட்டுப் புஷ்பங்களும், ஆழமான பள்ளத்தாக்குகளும், கரடுமுரடான எரிமலை சிகரங்களும், தாவரங்களைத் தாங்கி நிற்கிற பல கிலோமீட்டர் குறுக்களவுள்ள எரிமலைப் பெருவாய்களும், அவ்வப்போது அனலைக் கக்கும் ஓர் எரிமலையும் உள்ளன; இவையெல்லாம் இத்தீவுக்கே உரிய செல்வங்களில் சில.

ஜனங்கள் வனப்புமிக்க இந்த ரீயூனியன் தீவில் வாழ்கிறபோதிலும், அவர்களில் பலர் கண்ணால் பருக முடிந்த அழகைவிட அதிக அழகான ஒன்றைப் பொக்கிஷமாய்ப் போற்றுகிறார்கள். கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் அருமையான சத்தியங்களை அவர்கள் நெஞ்சார நேசிக்கிறார்கள். அருகே உள்ள மொரிஷியஸ் தீவில் ஊழியம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட ராபர்ட் நிஸ்பட் என்ற மிஷனரிதான் ராஜ்ய அறிவிப்பாளராக முதன்முதல் ரீயூனியனில் காலடி எடுத்து வைத்தார். 1955, செப்டம்பர் மாதம் சில நாட்கள் இங்கே ராபர்ட் தங்கியிருந்தபோது, பைபிளிடம் பெருமளவு ஆர்வத்தை ஜனங்களில் தூண்டிவிட்டார்; ஏராளமான பிரசுரங்களை வினியோகித்தார், விழித்தெழு! பத்திரிகைக்கு அநேக சந்தாக்களைப் பெற்றுக்கொண்டார். சத்தியத்தில் ஆர்வம் காட்டியவர்களிடம் கடிதத்தொடர்பு வைத்திருந்தார்.

1955-⁠க்கும் 1960-⁠க்கும் இடைப்பட்ட வருடங்களில் ராபர்ட்டும் மண்டலக் கண்காணியாய் இருந்த ஹார்ரி ஆர்னட்டும் இந்தத் தீவுக்கு சில தடவை வந்து ஊழியம் செய்துவிட்டுப் போனார்கள். 1959-⁠ல் பிரெஞ்சு மொழி தெரிந்தவரான ஆடம் லீசீயாக்கை ரீயூனியனுக்குப் போய் வருமாறு பிரான்சு கிளை அலுவலகம் கேட்டுக்கொண்டது; நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து ஓய்வுபெற்ற போலந்து நாட்டவரான இவர், மடகாஸ்கர் தீவில் பயனியராகச் சேவை செய்துவந்தார். 1959, டிசம்பர் மாதம் முழுவதும் ஆடம் இந்தத் தீவில் ஊழியம் செய்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “ஜனத்தொகையில் 90 சதவீதத்தினர் பக்திமிக்க கத்தோலிக்கர்கள்; எனினும், பெரும்பாலோர் கடவுளுடைய வார்த்தையையும் புதிய உலகத்தையும் பற்றி அதிகம் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். சத்தியம் பரவுவதைத் தடுக்க பாதிரிகள் முயற்சி செய்கிறார்கள். ‘தேவனே சத்தியபரர்’ என்ற நமது ஆங்கில புத்தகத்தை உள்ளூர் பாதிரி ஒருவர் இரவல் கேட்டதாக விழித்தெழு! பத்திரிகை சந்தாதாரரிடம் ஒருவர் வந்து சொன்னார். ‘அவரே நேரில் வந்து கேட்டால் இரவல் கொடுக்கிறேன்’ என சந்தாதாரர் சொல்லி அனுப்பிவிட்டார். அந்தப் பாதிரியோ வரவே இல்லை.”

பிரான்சிலிருந்து உதவி

அந்தச் சமயத்தில் ரீயூனியனில் ஊழியத்தை மேற்பார்வை செய்துவந்த பிரான்சு கிளை அலுவலகம், தகுதியுள்ள பிரஸ்தாபிகள் ரீயூனியனுக்குக் குடிமாறிச் செல்லும்படி அழைப்புவிடுத்தது. பேகூ குடும்பத்தார் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள்; அதாவது, தங்களுடைய ஆறு வயது மகன் க்ரீஸ்டியானுடன் ஆன்ட்ரே பேகூ ஷானீன் பேகூ, இவர்களுடைய உறவுக்காரப் பெண்ணான நயேமீ டுயிரே ஆகியோர் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். 1961, ஜனவரி மாதம் கப்பலில் வந்திறங்கினார்கள். மீமீ என்றும் அழைக்கப்பட்ட நயேமீ மீண்டும் பிரான்சுக்குத் திரும்பி வரும் முன்பு இரண்டு வருடங்கள் விசேஷ பயனியராக ரீயூனியனில் ஊழியம் செய்தார்.

சீக்கிரத்திலேயே, ஆர்வம் காட்டும் அநேகரை அவர்கள் கண்டுபிடித்தார்கள்; தலைநகரான செயின்ட்-டெனிஸில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே கூட்டங்களையும் நடத்தினார்கள். பின்னர் ஒரு வீட்டிற்குக் குடிமாறிச் சென்றதும், அங்கே கூட்டங்களை நடத்தினார்கள். சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, செயின்ட்-டெனிஸ் நகரில் புதிதாய் உருவான அந்தத் தொகுதியினர், கூட்டங்களை நடத்துவதற்காக சுமார் 30 பேர் உட்காரும் வசதியுள்ள சிறிய மன்றம் ஒன்றை வாடகைக்கு எடுத்தார்கள். அது நெளிவுள்ள இரும்புத் தகடாலான கூரை போடப்பட்ட மரக் கட்டடமாகும்; அந்த அறையில், கவிகையடுக்குள்ள (louver) இரண்டு சன்னல்களும், ஒரு கதவும் இருந்தன. அதன் உரிமையாளரின் அனுமதியோடு சகோதரர்கள் உட்புற சுவர்களை அகற்றி, சிறிய மேடை ஒன்றைக் கட்டினார்கள், சாய்மானம் இல்லாத மர பெஞ்சுகளைப் போட்டார்கள்.

மேகமூட்டம் இல்லாத, வெப்பமண்டலப் பகுதியில் நிலவும் உஷ்ணத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில், அந்த இரும்புத் தகட்டுக் கூரை அதிகளவு வெப்பத்தை உள்ளே கடத்தியது; ஆகவே, கொஞ்ச நேரத்தில் சபையார் அனைவரும், முக்கியமாக மேடையில் நிற்பவர்களின் தலைக்கு மேலே கூரை வெகு தாழ்வாக இருந்ததால் அவர்களும், முத்துமுத்தாக வியர்வை சிந்த ஆரம்பித்தார்கள். அதோடு, பெரும்பாலும் ஆட்களால் அந்த அறை நிரம்பி வழிந்ததால் அநேகர் வெளியே நின்றுகொண்டு வாசல் பக்கமிருந்தும் சன்னல் பக்கமிருந்தும் நிகழ்ச்சிகளைக் கேட்டார்கள்; அதனால், ஏற்கெனவே போதிய காற்றோட்டமில்லாத அறையில் இன்னும் புழுக்கம் அதிகரித்தது.

‘கொஞ்சம் திணறுகிறோம்!’

எத்தனை அசௌகரியங்கள் இருந்தபோதிலும், கூட்டங்களுக்கு வருபவர்கள் இன்முகத்தோடு வரவேற்கப்பட்டார்கள்; முதல் வருட முடிவில் சுமார் 50 பேர் தவறாமல் கூட்டங்களுக்கு வந்துகொண்டிருந்தார்கள். ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது, 47 பைபிள் படிப்புகளை நடத்தி வந்தார்கள்! புதிய பிரஸ்தாபிகளில் சிலர் வாரத்தில் இரண்டு முறை பைபிள் படிப்புகளை நடத்தச் சொன்னார்கள். “எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்தான், ஆனால், கொஞ்சம் திணறுகிறோம், அவ்வளவுதான்” என சகோதரர்கள் எழுதினார்கள்.

1961-⁠ல் மடகாஸ்கரில் பைபிள் படிக்க ஆரம்பித்த மிரியம் ஆன்ட்ரியென் என்பவர் புதிய பைபிள் மாணாக்கர்களில் ஒருவர். மேற்குறிப்பிடப்பட்ட ராஜ்ய மன்றம், தற்காலிக மாநாட்டு மன்றமாகப் பயன்படுத்தப்பட்டதும் அவருக்கு நினைவிருக்கிறது. அந்த மன்றத்திற்கு வெளியே நிழலுக்காக ஓலைக்கூரை அமைத்து அந்த இடத்தைச் சகோதரர்கள் விசாலமாக்கினார்களாம். அந்த ஆரம்ப காலத்தில் மாநாடுகளில் கலந்துகொள்ள 110 பேர்வரை வந்தார்களாம்.

1961, அக்டோபர் மாதம் மொரிஷியஸில் நடந்த ஒரு மாநாட்டில், டாவீட் சூரி, மார்யான் லான்-⁠க்கூ, லுஸியன் வேஷோ ஆகியோரும் முழுக்காட்டுதல் பெற்றார்கள்; இவர்கள் அனைவரும் பிரசங்க ஊழியத்தில் பெரிதளவு உதவினார்கள். இரண்டாவது வருடத்தில் 32 பிரஸ்தாபிகள்வரை முன்னேற்றம் ஏற்பட்டது, பயனியர்கள் ஒவ்வொருவரும் சுமார் 30 பைபிள் படிப்புகளை நடத்தி வந்தார்கள்! ஞாயிற்றுக்கிழமைகளில் சபை கூட்டங்களுக்கு 100 பேர் வந்தார்கள்; அவர்கள் அனைவரும் பலதரப்பட்ட இனத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

ரீயூனியனில் வசிக்கும் இந்தியர்களில் அநேகர் கத்தோலிக்க மதம், இந்து மதம் என இரு மதங்களின் பழக்கவழக்கங்களையும் கடைப்பிடிப்பவர்கள். இவர்களில் சிலர் சத்தியத்திற்கு இசைய நடப்பதற்காக, தாங்கள் கடைப்பிடித்து வந்த பழக்கவழக்கங்களை விட்டுவிடுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆனால், சகோதரர்கள் காட்டிய பொறுமையும், கனிவும், அதேசமயத்தில் சரியானதைச் செய்வதில் காட்டிய உறுதியும் பெரும்பாலும் நல்ல பலன்களைப் பெற்றுத் தந்தது. உதாரணத்திற்கு, ஒரு பயனியர் சகோதரி இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்தி வந்தார்; இந்தப் பெண், பொய் மத பழக்கவழக்கங்களையும், குறிசொல்லுவதையும் விட்டுவிடாதிருந்தார்; அதோடு, ஒருவரது வைப்பாட்டியாகவும் வாழ்ந்து வந்தார். இவருக்கு உதவுவதற்காக, அந்தப் பயனியர் சகோதரி பைபிள் படிப்பை இன்னொரு சகோதரி நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். இரண்டாவதாக படிப்பு நடத்திய சகோதரி இவ்வாறு எழுதுகிறார்: “சில மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் விஷயங்களை நன்கு புரிந்துகொள்ள ஆரம்பித்தார்; ஆவியுலகத்தொடர்பு பழக்கங்களை அவர் விட்டுவிட்டது எனக்கு அதிக சந்தோஷத்தைத் தந்தது. ஆனால், தன் திருமணத்தைச் சட்டப்படி அவர் பதிவுசெய்யவில்லை. அவர் யாருடன் வாழ்ந்து வந்தாரோ அந்த நபர் அப்படித் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லையென அவர் சொன்னார். கடைசியில், அந்த நபருடன் வாழ அவர் தீர்மானித்ததால், வேறு வழியில்லாமல் அவருக்கு பைபிள் படிப்பு நடத்துவதை நிறுத்திவிட்டேன்.

“ஒருநாள் வழியில் அந்தப் பெண்ணைச் சந்தித்தேன், மீண்டும் வந்து பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டார். ஏற்கெனவே படித்துத் தெரிந்துகொண்டிருந்த விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் மட்டுமே படிப்பு நடத்த வருவதாகத் தெரிவித்தேன். இந்த விஷயத்தைக் குறித்து யெகோவாவிடம் ஜெபிக்கும்படி அவருக்குப் புத்திசொன்னேன்; அவரும் ஜெபித்தார். பின்னர், தான் சேர்ந்து வாழும் நபரிடம் மனந்திறந்து பேசுவதற்கு தைரியத்தை வரவழைத்துக்கொண்டார். அவரைத் திருமணம் செய்துகொள்ள அந்த நபர் சம்மதித்தபோது மிகவும் சந்தோஷப்பட்டார். அதோடு, தன் புதிய மனைவியோடு அந்த நபர் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்தார்.”

1963 ஊழிய ஆண்டில், ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 11 உச்சநிலைகள் எட்டப்பட்டன; அதில் கடைசி உச்சநிலை எண்ணிக்கை 93 ஆகும். அந்தச் சமயத்தில் ரீயூனியனில் இரண்டு சபைகளும் ஒரு தொகுதியும் இருந்தன. 1962, டிசம்பரில் செ.-ஷீல்-லே பென் கடற்கரையில், இங்கு முதன்முறையாக 20 பேருக்கு முழுக்காட்டுதல் கொடுக்கப்பட்டது. 1963, ஜூன் மாதத்தில் இரண்டாவது முறையாக 38 பேருக்கு முழுக்காட்டுதல் கொடுக்கப்பட்டது. 1961-⁠ல் ஜனத்தொகை/பிரஸ்தாபி விகிதம், 41,667 பேருக்கு 1 பிரஸ்தாபி என்ற கணக்கில் இருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு அந்த விகிதம் 2,286 பேருக்கு 1 பிரஸ்தாபி எனக் குறைந்துவிட்டது. ஆம், ஆன்மீக ரீதியில் வளம்கொழிக்கும் இந்தத் தீவில் யெகோவா சத்திய விதையை “விளையச் செய்தார்.”​—⁠1 கொ. 3:6.

தொலைதூரப் பகுதிகளில் ராஜ்ய செய்தியை அறிவித்தல்

1965-⁠க்குள், அதாவது யெகோவாவின் சாட்சிகளின் குடும்பம் ஒன்று முதன்முறையாக இத்தீவில் காலடியெடுத்து வைத்து நான்கே வருடங்களுக்குள், செயின்ட்-டெனிஸ் நகரிலிருந்த சபையில் 110-⁠க்கும் அதிக பிரஸ்தாபிகள் இருந்தார்கள்; மூன்று வாரத்திற்கு ஒருமுறை, அவர்கள் உள்ளூர் பிராந்தியம் முழுவதையும் ஊழியம் செய்து முடித்தார்கள்! ஆனால், மற்ற பகுதிகளில் ஊழியமே செய்யப்படாதிருந்தது. என்ன செய்வது? சகோதரர்கள் வாடகைக்கு பஸ்ஸுகளை அமர்த்திக்கொண்டு, செயின்ட்-லூயி, செயின்ட்-ஃபீலீப், செயின்ட்-பையர் போன்ற கடலோர நகரங்களுக்குச் சென்று பிரசங்கித்தார்கள்.

சில பிராந்தியங்களுக்குச் செல்ல அநேக மணிநேரம் எடுத்ததால், சகோதரர்கள் விடியற்காலையில் புறப்பட்டார்கள்; சாலைகள் பெரும்பாலும் குறுகலானவையாக, செங்குத்தானவையாக, வளைந்துநெளிந்து சென்றன. செயின்ட்-டெனிஸிலிருந்து லா பார் நகரம்வரை வண்டியில் செல்ல இன்று 15 நிமிடம் எடுக்கிறது, அன்றோ பெரும் கஷ்டங்களின் மத்தியில் இரண்டு மணிநேரம் எடுத்தது. “அந்தச் சாலைகளில் பயணிக்க, யெகோவாமீது நமக்கு நம்பிக்கை வேண்டும்” என ஒரு சகோதரர் அந்த நாளை எண்ணிப் பார்த்துச் சொல்கிறார். பாறைச் சரிவுகள் ஏற்படுவதால், புதிய சாலையைக்கூட ஆபத்தற்றது எனச் சொல்லிவிட முடியாது. சில இடங்களில், சாலையிலிருந்து கிட்டத்தட்ட செங்குத்தாக மலைகளில் ஏற வேண்டியிருக்கும்; சில சமயங்களில் பெய்கிற கன மழையால், உயரத்தில் இருக்கும் டன்கணக்கான எடையுள்ள பாறைகள் சில ஆட்டங்கண்டுவிடுகின்றன. இதுவரையாக எண்ணற்றோர் இவற்றிற்குப் பலியாகியிருக்கிறார்கள்.

க்ரீஸ்டியான் பேகூ இவ்வாறு சொல்கிறார்: “எனக்கு எட்டு வயதிருக்கும்போது, ஒதுக்குப்புறமான பிராந்தியங்களில் எங்கள் தொகுதியினர் 400 முதல் 600 விழித்தெழு! பத்திரிகைகள் வரை விநியோகித்தார்கள். காவற்கோபுரம் தடைசெய்யப்பட்டிருந்தது. சத்தியத்தில் இல்லாத, அன்பான கணவன்மார்கள் சிலர் ஜாலியாகப் பொழுதைக் கழிக்க விரும்பியதால் தங்கள் மனைவிகளுடன் கூடவே வந்தார்கள், ஆனால் ஊழியத்திற்கு வரவில்லை. வெளி ஊழியத்திற்குப் பிறகு பிக்னிக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, பிள்ளைகளான எங்களுக்கு ரொம்ப ‘ஜாலியாக’ இருந்தது. அந்த விசேஷ ஊழிய ஏற்பாடுகள் என் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.”

அமைப்பு சார்ந்த மாற்றங்கள் ஊழியத்தை முடுக்கிவிட்டன

1963 மே மாதத்தில், உலக தலைமை அலுவலகத்திலிருந்து ரீயூனியனுக்கு வந்த முதல் பிரதிநிதி மில்டன் ஜி. ஹென்ஷல் ஆவார். இவர் கொடுத்த விசேஷ பேச்சைக் கேட்க 155 பேர் வந்திருந்தார்கள். அவர் ரீயூனியனுக்கு வந்துபோன பிறகு, சபைகளைக் கவனித்துக்கொள்வதற்கும் இதுவரை ஊழியம் செய்யப்படாத பிராந்தியங்களில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் நான்கு பேர் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டார்கள். லா பார் நகருக்கு டாவீட் சூரியும், செயின்ட்-ஆன்ட்ரி நகருக்கு லுஸியன் வேஷோவும், செயின்ட்-பையர் நகருக்கு மார்யான் லான்-⁠க்கூவும் நயேமீ டுயிரேவும் (இப்போது நயேமீ டிஸிரன்டு) ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார்கள்.

1964, மே 1-⁠ஆம் தேதி முதல் இத்தீவில் ஊழியத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பு பிரான்சு நாட்டிலிருந்து மொரிஷியஸ் தீவுக்கு மாற்றப்பட்டது. அதோடு, ரீயூனியனில் பிரசுர கிடங்கு ஒன்றும் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், நியமிக்கப்படாத பிராந்தியங்களில் பெருமளவு ஊழியம் செய்ய பிரஸ்தாபிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது; அதோடு, புதிதாக சத்தியத்திற்கு வருபவர்களைச் சரிவர கவனித்துக்கொள்வதற்கு உதவியாக, சபை பொறுப்புகளைக் கையாள சகோதரர்கள் தகுதிபெறும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது. சொல்லப்போனால், 1964 ஊழிய வருடத்தில் 57 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள், அதுவும் ஒரே மாநாட்டில் 21 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள்!

இதற்கு முந்தைய வருடம், செயின்ட்-ஆன்ட்ரியிலுள்ள தொகுதியினர் தங்களை ஒரு சபையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்படி விண்ணப்பித்தார்கள். அவர்கள் இவ்வாறு விண்ணப்பக் கடிதம் எழுதினார்கள்: “1963, ஜூன் மாதக் கடைசியில் முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் 12 பேர் இருப்பார்கள், அடுத்த இரண்டு மாதங்களில் 5 அல்லது 6 பேர் புதிய பிரஸ்தாபிகள் ஆவதற்கு வாய்ப்பிருக்கிறது. சகோதரர்கள் 30 பைபிள் படிப்புகளை நடத்தி வருகிறார்கள்.” அவர்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது; சபையை இரு சகோதரர்கள் மேற்பார்வை செய்தார்கள்; சபை ஊழியராக அதாவது நடத்தும் கண்காணியாக ஷான் நாஸ்ஸோவும், அவருக்கு உதவியாளராக லுஸியன் வேஷோவும் சேவை செய்தார்கள். இவர்கள் இருவரும் சத்தியத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்கூட ஆகாதிருந்தது.

பரந்த மனம் படைத்த, வாட்டசாட்டமான 38 வயது ஷான், ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்; அதோடு, கைதேர்ந்த கட்டுமானப் பணியாளராகவும் இருந்தார். 1962-⁠ல் முழுக்காட்டுதல் பெற்ற இவர், ராஜ்ய வேலையை முன்னேற்றுவிப்பதில் செயல்திறன்மிக்கவராகவும் திறமைசாலியாகவும் விளங்கினார். சொல்லப்போனால், அவர் செயின்ட்-ஆன்ட்ரி நகரில் தன் சொந்த நிலத்தில், தன் சொந்தச் செலவில் ரீயூனியனில் இரண்டாவது ராஜ்ய மன்றத்தைக் கட்டினார். உறுதியான, வசீகர வனப்புடன் மரக் கட்டடத்தைக் கட்டி முடித்தார்; இதில் 50-⁠க்கும் அதிகமானோர் தாராளமாய் உட்கார முடிந்தது. ஆரம்பத்தில் செயின்ட்-ஆன்ட்ரி தொகுதியினர் ஊழியம் செய்து வந்த பிராந்தியத்தில் இதுவரை எட்டு சபைகள் உருவாகியிருக்கின்றன. யெகோவாவுக்கு உண்மையுள்ளவராய் இருந்த ஷான் 1997-⁠ல் இறந்தார்.

1960-⁠களின் ஆரம்பத்தில் மூன்றாவது தொகுதி, துறைமுகப் பட்டணமான லா பார் நகரில் உருவானது; இதற்குத் தெற்கே சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்த செயின்ட்-பால் நகரைச் சேர்ந்த ஆர்வம் காட்டியவர்களும் அந்தத் தொகுதியில் இருந்தார்கள். லா பார் நகரில் மரத்தாலான, எளிமையான வீடுகள் காணப்பட்டன; கள்ளி வகையைச் சேர்ந்த, முட்களில்லாத மில்க்புஷ் என்ற செடிகள் இவ்வீடுகளைச் சுற்றிக் காணப்பட்டன. டாவீட் சூரி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார், அங்கு கூட்டங்கள் நடத்தப்பட்டன. 1963, டிசம்பர் மாதம் தங்களை ஒரு சபையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்படி இத்தொகுதியினர் விண்ணப்பித்திருந்தார்கள். இத்தொகுதியில் 16 ராஜ்ய பிரஸ்தாபிகள் இருந்தார்கள், அவர்களில் 8 பேர் முழுக்காட்டுதல் பெற்றிருந்தார்கள், அவர்கள் சராசரியாக 22.5 மணிநேரம் வெளி ஊழியத்தில் செலவிட்டிருந்தார்கள். டாவீட்டும் அவருடைய உதவியாளரும் மட்டுமே 38 பைபிள் படிப்புகளை நடத்தி வந்தார்கள்! அந்த மாதத்தில் சபையைச் சந்திக்க வட்டாரக் கண்காணி வந்தபோது, அவருடைய பொதுப் பேச்சைக் கேட்க 53 பேர் வந்திருந்தார்கள்.

மேலும், லா பார் நகரில் விசேஷ பயனியர்களாக சேவை செய்வதற்கு க்ரீஸ்டியான் பான்காஸ், ஷோஸெட் பான்காஸ் தம்பதியர் நியமிக்கப்பட்டார்கள். பிரெஞ்சு கயானா நாட்டில் முழுக்காட்டுதல் பெற்ற க்ரீஸ்டியான், 1960-⁠களின் ஆரம்பத்தில் ரீயூனியன் தீவுக்கு வந்தார். அந்தச் சமயத்தில் அவர் திருமணமாகாதவராய் இருந்தார். அதோடு, அவருடைய குடும்பத்தில் அவரைத் தவிர வேறு யாரும் சத்தியத்தில் இல்லை. கூட்டங்கள் நடத்தப் பயன்படுத்தப்பட்ட தன் வீட்டை க்ரீஸ்டியான் பான்காஸ், ஷோஸெட் பான்காஸ் தம்பதியருக்குக் கொடுத்துவிட்டு சகோதரர் டாவீட் சூரி வேறொரு வீட்டுக்குக் குடிமாறினார். எனினும், காலப்போக்கில் சபை கூட்டத்திற்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தபோது, இந்தத் தம்பதியரும்கூட அங்கே குடியிருக்க முடியாமல் குடிமாறிச் சென்றார்கள்!

இதற்கிடையில், கத்தோலிக்க செல்வாக்குமிக்க இந்தப் பகுதியிலிருந்த மதகுருமார், யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக ஜனங்களைத் தூண்டிவிட்டார்கள். பகல் நேரத்தில் பெரும்பாலும் பிள்ளைகளும் இளைஞர்களும் பிரஸ்தாபிகளின் மீது கற்களை வீசினார்கள், இரவு நேரத்தில் சகோதரர்களுடைய வீட்டுக் கூரைகள்மீது கற்களை வீசினார்கள்.

புதிதாக பைபிள் படித்து வந்த ராஃபாய்ல்லா ஹாராவ் என்ற பெண்மணிக்கு அந்த இளைஞர்களில் சிலரைத் தெரிந்திருந்தது. ஒருமுறை இப்படிக் கற்கள் வீசப்பட்ட பிறகு, அந்தப் போக்கிரி இளைஞர்களின் வீட்டுக்கு அப்பெண்மணி சென்றார். “என் சகோதரர்மீது இப்படிக் கற்களை வீசிக்கொண்டே இருந்தால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்” என எச்சரித்தார்.

“எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள் மிஸஸ் ஹாராவ், அவர் உங்கள் சகோதரர் என்று எங்களுக்குத் தெரியாது” என்று அந்த இளைஞர்கள் பதில் அளித்தார்கள்.

ராஃபாய்ல்லாவும் அவருடைய மூன்று மகள்களும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். யாலென் என்ற இவருடைய மகள், லுஸியன் வேஷோவை மணந்துகொண்டார்.

மதகுருமாரின் தூண்டுதலால் ஜனங்கள் தப்பெண்ணத்துடன் நடந்துகொண்டபோதிலும், சகோதரர்களுடைய பக்தி வைராக்கியத்தாலும் கடவுளுடைய ஆசீர்வாதத்தாலும் லா பாரில் அருமையான சபை ஒன்று உருவானது; சீக்கிரத்தில், ராஜ்ய மன்றம் ஆட்களால் நிரம்பி வழிந்தது. சொல்லப்போனால், அநேகர் மன்றத்துக்கு வெளியே நின்றுகொண்டுதான் பெரும்பாலும் நிகழ்ச்சிகளைக் கவனித்தார்கள். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம், மேடையிலும்கூட இருக்கைகளைப் போட்டார்கள், கொஞ்சம் பிள்ளைகள் சபையாரைப் பார்த்தபடி மேடையின் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். கடைசியில், சகோதரர்கள் அருமையான ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டினார்கள்; இன்று அந்தப் பகுதியில் ஆறு சபைகள் உள்ளன.

முன்னணியில் நிற்கும் பயனியர்கள்

ரீயூனியனில் ஆரம்ப காலத்திலிருந்த பயனியர்களுள் ஒருவர்தான் ஆனிக் லாப்யெர் என்ற சகோதரி. மிரியம் டாமா என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “ஆனிக் எனக்கும் என் அம்மாவுக்கும் பைபிள் படிப்பு நடத்தினார். ஊழியத்தில் ஊக்கமாய் ஈடுபடும்படி என்னை அவர் உற்சாகப்படுத்தினார். நான் பயனியர் ஆக ஆசைப்படுவதாய் அவரிடம் சொன்னேன். படிப்பு நடத்த ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குப் பிறகு முழுக்காட்டுதல் பெற்றேன். அந்தக் காலத்தில் அந்தத் தீவு முழுவதுமே நாங்கள் ஊழியம் செய்வதற்குரிய பிராந்தியமாய் இருந்தது. அப்போதெல்லாம் பஸ் வசதி கிடையாது, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கார்கள் ஓடிக்கொண்டிருந்தன; எனவே, பொதுவாக நாங்கள் ஊழியத்திற்கு நடந்தே போவோம். சகோதரர் நாஸ்ஸோவிடம் கார் இருந்ததால் முடிந்தபோதெல்லாம் எங்களை ஊழியத்திற்கு அதில் அழைத்துச் சென்றார். ஊழியம் செய்வது சந்தோஷத்தை அளித்தது, நாங்கள் எல்லாம் பெருமளவு ஊக்கத்தைப் பெற்றோம்.”

குடும்பஸ்தரான ஆன்ரீ-லுயிஸ்யன் க்ரான்டின் இவ்வாறு சொல்கிறார்: “பிள்ளைகளை பயனியர் ஊழியம் செய்யும்படி எப்போதும் ஊக்குவித்தோம். யெகோவாவுக்கு நம்மிடமுள்ள மிகச் சிறந்ததைக் கொடுப்பதன் முக்கியத்துவத்தை வட்டாரக் கண்காணிகள் எங்களுக்கு வலியுறுத்தினார்கள். எங்கள் மூத்த மகனான ஆன்ரீ-ஃபிரெட்டுக்கு இப்போது 40 வயதாகிறது, அவன் முழுநேர ஊழியம் செய்வதையே தன் வாழ்க்கைப் பணியாய் தேர்ந்தெடுத்திருக்கிறான்.”

ஆன்ரீ-ஃபிரெட் இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் சபையில் பக்தி வைராக்கியமுள்ள இளைஞரின் பெரிய பட்டாளமே இருந்தது. சிலர் முழுக்காட்டுதல் பெற்றிருந்தார்கள், இன்னும் சிலர் என்னைப் போல முழுக்காட்டுதல் பெறாதிருந்தார்கள். ஆனாலும், பள்ளி விடுமுறைக் காலங்களில், நாங்கள் எல்லாருமே 60 மணிநேரத்தை ஊழியத்தில் செலவிட்டோம். எங்கள் ஆன்மீக இலட்சியங்களை நாங்கள் மறக்கவே இல்லை. இன்று என் மனைவி ஈவ்லீன் உடன் வர, வட்டாரக் கண்காணியாக சேவை செய்து வருகிறேன்.”

பேய்களின் தொல்லை

ரீயூனியனில் ஆவியுலகத்தொடர்பு பழக்கம் சர்வசாதாரணமாய் காணப்படுகிறது. ஷானீன் காரீனா (முன்னர் ஷானீன் பேகூ) இவ்வாறு சொல்கிறார்: “லா மான்டானி என்ற கிராமத்தில் ஒரு நபரைச் சந்தித்தேன். பொம்மையில் குண்டூசிகளைக் குத்தி வைப்பதன் மூலம் எனக்குத் தீங்கு விளைவிக்கப் போவதாக அவர் சொன்னார். அவர் என்ன சொல்கிறார் என்றே எனக்குப் புரியவில்லை; எனவே, நான் பைபிள் படிப்பு நடத்திக்கொண்டிருந்த பெண்ணிடம் அதற்கான அர்த்தத்தைக் கேட்டேன். அதற்கு அவர், ‘அவன் ஒரு பில்லிசூனிய வைத்தியன். அவன் ஆவிகளை ஏவிவிட்டு உங்களுக்குத் தீங்கு செய்யப் போகிறானாம்’ என்று சொன்னார். யெகோவாமீது முழு நம்பிக்கை வைப்பவர்களுக்கு அவர் பாதுகாப்பு அளிப்பார் என அந்த பைபிள் மாணாக்கருக்கு நான் உறுதி அளித்தேன். எனக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை என்பதை நான் சொல்லவா வேண்டும்?”

தான் சிறுவனாய் இருந்த சமயத்தில் ஆவியுலகத்தொடர்பு கோட்பாளர்களின் கூட்டத்தைத் தன் குடும்பத்தார் ஏற்பாடு செய்ததைப் பற்றி ஒரு சகோதரர் சொல்கிறார். 1969-⁠ல் அவர் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்து, அவர்களுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தாராம். ஆனால், அவர் கூட்டங்களுக்கு வந்து அமர்ந்திருக்கும்போது, காதுகேட்காதபடி செய்வதன் மூலம் அந்தப் பேய்கள் அவருக்கு வெறுப்பேற்ற முயற்சி செய்தனவாம். இருந்தபோதிலும், அவர் கூட்டங்களுக்குத் தவறாமல் சென்றதோடு, அங்கு தரப்பட்ட பேச்சுகளை எல்லாம் கேஸட்டில் பதிவுசெய்து வீட்டிற்கு வந்த பிறகும் போட்டுக் கேட்டாராம். சீக்கிரத்திலேயே, பேய்கள் அவரைவிட்டு ஒதுங்கிவிட்டனவாம்; அதன் பிறகு விரைவில் அவர் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்தாராம்.​—⁠யாக். 4:7.

1996-⁠ல் பெந்தெகொஸ்தே மதத்தைச் சேர்ந்த ரோஸேடா காரோ என்ற பெண்மணி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தார். முன்பு, சர்ச்சிலிருந்த அவருடைய நண்பர்களின் பேச்சைக் கேட்டு, சர்க்கரை வியாதிக்கு மருந்து சாப்பிடுவதை நிறுத்தியதால் அவர் தன் பார்வையை இழந்துவிட்டிருந்தார். இவருடைய கணவர் க்ளேடோ காரோ என்பவர் உள்ளூரிலிருந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்; கோபம் வந்தால் கண்ணுமண்ணு தெரியாமல் இவர் மூர்க்கத்தனமாய் நடந்துகொள்வதை அறிந்திருந்த உள்ளூர்வாசிகள் இவரைக் கண்டு பயந்தார்கள். அதோடுகூட இவர் பில்லிசூனிய வைத்தியராக இருந்தார், இந்துக்களுடைய மத சடங்குகளில் கலந்துகொண்டார்; பின்னர் பெந்தெகொஸ்தே சபையில் சேர்ந்துகொண்டார்.

ரோஸேடா பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்தபோது க்ளேடோ அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார், சபை மூப்பர்களைக்கூட பயமுறுத்தினார். ஆனால் ரோஸேடா பயப்படவே இல்லை. சில மாதங்களுக்குப் பிறகு, க்ளேடோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அங்கே அவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒருவழியாக நினைவு திரும்பியபோது, அவர் குடிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளில் இருவர் கொஞ்சம் சூப்பு கொண்டுவந்திருந்தார்கள்; அதை அவர்கள் தன் மனைவிக்கு கொண்டுவந்திருப்பதாக நினைத்தார்.

“இல்லை, மிஸ்டர் காரோ இந்த சூப்பு உங்களுக்குத்தான்!” என்று அந்தச் சகோதரிகள் சொன்னார்கள்.

“அந்த பதில் என் நெஞ்சை நெகிழ வைத்தது. என்னைப் பார்க்க பெந்தெகொஸ்தே சபையிலிருந்து யாருமே வரவில்லை, ஆனால், இந்த இரண்டு யெகோவாவின் சாட்சிகள், அதாவது நான் யாரை ரொம்பவே எதிர்த்தேனோ அவர்கள் எனக்குச் சாப்பாடு கொண்டு வந்திருந்தார்கள். ‘என் மனைவி வணங்கும் கடவுளாகிய யெகோவா உண்மையிலேயே உயிருள்ள கடவுள்’ என எனக்குள் சொல்லிக்கொண்டேன். பிறகு, நானும் ரோஸேடாவும் கடவுளை வணங்குவதில் ஒன்றுபட வேண்டுமென மனதுக்குள்ளேயே ஜெபம் செய்தேன்” என்று க்ளேடோ சொல்கிறார்.

ஏதோ உணர்ச்சிவசப்பட்டு க்ளேடோ இப்படி மனத்தாழ்மையோடு அப்போது ஜெபம் செய்யவில்லை. அவர் நோய்வாய்ப்படுவதற்கு முன்பு யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய அவருடைய மனப்பான்மையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டிருந்தது; பக்கத்து வீட்டிலிருந்து பைபிள் படிக்க தன் மனைவிக்கு அவர் அனுமதி அளித்திருந்தார். பிறகு, ஒருநாள் ரோஸேடாவிடமும் அவருக்கு பைபிள் படிப்பு நடத்தி வந்த சகோதரியிடமும் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் அங்கே உட்கார்ந்து படிப்பது சரியில்லை. எங்கள் வீட்டில் உட்கார்ந்து படியுங்கள்.” சொன்னபடியே இருவரும் செய்தார்கள். ஆனால், இவர்கள் இருவருக்கும் தெரியாமல் க்ளேடோ அடுத்த அறையில் உட்கார்ந்து இவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்; கேட்ட விஷயங்கள் எல்லாம் அவருக்குப் பிடித்துப்போயின. க்ளேடோவுக்கு எழுதப் படிக்கத் தெரியாதிருந்தபோதிலும், வியாதியிலிருந்து சுகமடைந்த பிறகு தனக்கு வாரத்தில் இரண்டு முறை பைபிள் படிப்பு நடத்தச் சொன்னார், 1998-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றார். வயோதிகத்தால் வரும் உடல்நல பிரச்சினைகளின் மத்தியிலும், க்ளேடோவும் ரோஸேடாவும் கடவுளுக்கு உண்மையாய் சேவை செய்து வருகிறார்கள்.

உள்நாட்டில் பிரசங்கித்தல்

ரீயூனியனில் வெகு சிலரே, கடலிலிருந்து ஒதுங்கியிருக்கும் உட்புறத்தில், 1,200 மீட்டர் அல்லது அதைவிட அதிக உயரமுள்ள செங்குத்தான மலைகளால் சூழப்பட்டிருக்கிற ஆழமான பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கிறார்கள். இன்னும் சிலர் உயரத்தில், அதாவது செயலிழந்த மிகப் பெரிய எரிமலையின், பரந்து விரிந்த, பசுமையான எரிமலைப் பெருவாய்களில் குடியிருக்கிறார்கள். இவர்களில் சிலர், கடல் பக்கம் போவது ரொம்பவே அபூர்வம். உதாரணத்திற்கு, சீர்க் டா மாஃபாட் என்ற எரிமலைப் பெருவாய்க்கு நடந்துதான் செல்ல வேண்டும் அல்லது ஹெலிக்காப்டர் தேவை.

ஆப்பிரிக்க அடிமை வம்சத்தில் வந்த ல்வி நலோப் என்பவர் சீர்க் டா மாஃபாட் பகுதியில் வளர்ந்தவர். வாலிப வயதில் கத்தோலிக்கப் பாதிரியை மூடுபல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்வதற்கு இவர் உதவினாராம். காலப்போக்கில் செயின்ட்-டெனிஸ் நகருக்கு ல்வி குடிமாறினார்; இங்குதான், அவர் சத்தியத்தைக் கற்றுக்கொண்டார். தான் புதிதாகக் கண்டுபிடித்த மதநம்பிக்கைகளைப் பற்றி தன் சொந்தபந்தங்களுக்குச் சொல்ல அவர் ஆசைப்பட்டது இயல்பானதுதான், அல்லவா? எனவே, 1968-⁠ல் ஒருநாள் ல்வி நலோப்பும் அவருடைய மனைவி ஆனும், 15 வயதிலும், 67 வயதிலும் இருந்த இன்னும் இரண்டு கிறிஸ்தவ சகோதரிகளும் நடந்தே உள்நாட்டுக்குள் செல்ல ஆரம்பித்தார்கள். முதுகில் சுமக்கத்தக்க ஒரு பை, ஒரு சூட்கேஸ், பிரசுரங்கள் வைக்கப்பட்ட ஒரு பிரீஃப்கேஸ் ஆகியவற்றுடன் சென்றார்கள்.

ஆரம்பத்தில், அவர்கள் ஆற்றுப்படுகை ஓரமாய் நடந்துசென்றார்கள், பின்னர் குறுகலான, வளைந்துநெளிந்து செல்லும் மலைப்பாதையில் போனார்கள். சில இடங்களில், இருபுறமும் செங்குத்தான பாறைகள் இருந்தன. செல்லும் வழியிலிருந்த வீடுகளில் எல்லாம் அவர்கள் பிரசங்கித்தார்கள். ல்வி இவ்வாறு சொல்கிறார்: “அந்த ராத்திரியில் எங்களுக்குத் தேவையான உதவியை அளிக்க அந்தப் பிராந்தியத்தில் இருந்த ஒரே கடைக்காரரை யெகோவா எங்களுக்கு ஏற்பாடு செய்தார். சமையலறையும் படுக்கை வசதியுமுள்ள இரண்டு அறைகளை அவர் எங்களுக்குக் கொடுத்தார். காலையில் மீண்டும் பயணத்தைத் தொடங்கினோம். அப்போது 1,400 மீட்டர் உயரமுள்ள மலையின் ஓரமாக நடந்து எரிமலைப் பெருவாய்க்குச் சென்றோம்; அது, இயற்கையில் அமைந்த விஸ்தாரமான, திறந்தவெளி அரங்கமாகும்.

“கடைசியில், பார்த்துப் பல நாட்களான ஒரு நண்பரின் வீட்டை அடைந்தோம்; அவர் எங்களை உபசரித்தார். மூட்டை முடிச்சுகள் சிலவற்றை அவர் வசம் வைத்துவிட்டு, மறுநாள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் காட்டில் விளைந்த சிறு சிறு கொய்யாப் பழங்களைப் பறித்துச் சாப்பிட்டு எங்கள் பசியைப் போக்கிக்கொண்டோம், ராஜ்ய செய்தியை இதுவரை கேட்டிராத சாதாரண ஜனங்களிடம் பிரசங்கித்தோம். மாலை 6:00 மணிக்கு எங்கள் உறவினர் ஒருவருடைய வீட்டை அடைந்தோம். எங்களைப் பார்த்ததும் அவருக்கு ஒரே சந்தோஷம், கோழி அடித்து, மணக்க மணக்க ருசியான இரவு சாப்பாட்டைத் தயாரித்து எங்களுக்குப் பரிமாறினார்; இது, கடவுளுடைய தூதர்களுக்கு ஆபிரகாமும் சாராளும் உணவளித்த விதத்தை எங்களுக்கு நினைவுபடுத்தியது. (ஆதி. 18:1-8) அவர் சமைத்துக்கொண்டிருந்தபோது மறக்காமல் அவருக்கும் சாட்சிகொடுத்தோம். இறுதியில், இரவு 11:00 மணிக்குச் சாப்பிட்டோம்.

“மறுநாள் வியாழக்கிழமை அன்று, எரிமலைப் பெருவாயைச் சுற்றி நடந்தோம், வயிறார கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டோம், எங்கெல்லாம் வீடுகள் இருந்தனவோ அங்கெல்லாம் போய் பிரசங்கித்தோம். அன்பான ஒருவர் எங்களுக்குக் குடிக்க காபி கொடுத்தார்; எங்களால் சற்று ஓய்வெடுக்கவும் முடிந்தது. ஆம், கால்களுக்கு மட்டும்தான் ஓய்வுகொடுத்தோம், வாய்க்கு அல்ல! எங்கள் பைபிள் கலந்துரையாடலை இந்த நபர் வெகுவாய் ரசித்ததால், ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திலுள்ள வீடுகளுக்கு நாங்கள் செல்லும்போது இவரும் ஹார்மோனிகாவை வாசித்துக்கொண்டு கூடவே நடந்து வந்தார்.

“கடைசியில், எங்கள் மூட்டை முடிச்சுகளை வைத்துவிட்டு வந்த இடத்திற்கே திரும்பினோம், அங்கு இரவு தங்கினோம். எங்கள் வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை இரவு தாமதமாகப் போய்ச் சேர்ந்தபோது, 67 வயதான எங்கள் அருமை சகோதரி உட்பட நாங்கள் நான்கு பேரும் சுமார் 150 கிலோமீட்டர் நடந்திருந்தோம், 60 வீடுகளுக்குச் சென்றிருந்தோம், 100-⁠க்கும் அதிகமான பிரசுரங்களை அளித்திருந்தோம். நாங்கள் உடல் ரீதியில் சோர்வடைந்துவிட்டது என்னவோ உண்மைதான், ஆனால், ஆன்மீக ரீதியில் புத்துணர்ச்சி பெற்றிருந்தோம். சொல்லப்போனால் எனக்கு சீர்க் டா மாஃபாட் பயணம் என் சொந்த ஊருக்கு நெடுநாளைக்குப் பிறகு போய் வர வாய்ப்பையும் அளித்தது.”

இரண்டே பிரஸ்தாபிகளிலிருந்து ஐந்து சபையாக

1974-⁠ல் க்ரீஸ்டியான் பேகூவும் அவருடைய அம்மாவும் தீவின் தென்புறமிருந்த லா ரிவ்யர் நகரத்திற்குக் குடிமாறிச் சென்றார்கள். அந்தச் சமயத்தில் அங்கு சபை எதுவும் இருக்கவில்லை. அப்போது க்ரீஸ்டியானுக்கு 20 வயது; அவர் இவ்வாறு சொல்கிறார்: “கூட்டங்கள் நடத்த எங்கள் கராஜைப் பயன்படுத்திக்கொண்டோம், சீக்கிரத்திலேயே 30 பேர் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்கள். ஒரு பெண்ணுக்கும் அவருடைய மகளுக்கும் நான் பைபிள் படிப்பு நடத்தினேன். அவருடைய மகளின் பெயர் சேலின்; இவருக்கு உயெலிஸ் க்ரான்டின் என்பவரோடு திருமணம் நிச்சயமாகியிருந்தது. கம்யூனிஸ போராளியான உயெலிஸுக்கு தன் வருங்கால மனைவி எங்களோடு பைபிள் படிப்பதில் விருப்பமில்லை. எனினும், நாங்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கும்படி உயெலிஸை சேலின் சம்மதிக்க வைத்தார். உயெலிஸையும் அவருடைய பெற்றோரையும் சந்திக்க என் அம்மா சென்றார். அம்மா சொல்வதை அவர்கள் கேட்டார்கள், பைபிள் செய்தி அவர்களுக்குப் பிடித்துவிட்டது; இது எங்களுக்குச் சந்தோஷத்தை அளித்தது. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் பைபிள் படிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள்; 1975-⁠ல் உயெலிஸும் சேலினும் முழுக்காட்டுதல் பெற்றார்கள், திருமணமும் செய்துகொண்டார்கள். பின்னர் உயெலிஸ் மூப்பராக நியமிக்கப்பட்டார்.”

க்ரீஸ்டியான் இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார்: “லா ரிவ்யர் தவிர, மலைப் பிரதேசத்திலிருந்த சில்லாவோஸ், லேஸாவிரோன், லேஸ்மாக், லேடான்-சாலே ஆகிய பிராந்தியங்களிலும் ஊழியம் செய்தோம். லேஸ்மாக்கில் அநேகர் சத்தியத்திடம் ஆர்வம் காட்டினார்கள். மலைப்பகுதியில் இந்தக் கிராமத்திற்கு மேலே லா காப் உள்ளது; இது, செயல்படாதிருக்கும் ஓர் எரிமலை விளிம்பின் ஒரு பகுதியாகும். அங்கிருந்து, மேகங்கள் இல்லாத காலை வேளையில் 300 மீட்டர் கீழே ஒருவர் விஸ்தாரமான, பச்சைப்பசேலென்று காட்சி அளிக்கும் திறந்தவெளி அரங்கைக் காணலாம்.”

மலைப் பகுதியில் அமைந்துள்ள லா காப் கிராமத்தின் அடிவாரத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறிய நிலத்தில் பௌட்ரௌக்ஸ் குடும்பத்தார் வசித்து வந்தார்கள். அவர்களுடைய மூத்த மகன் ஷான்-⁠க்ளோட் அந்த நாளைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “நானும் என் நான்கு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் காய்கறிகளைப் பயிர்செய்து, சந்தையில் விற்பதற்கு என் அப்பாவுக்கு ஒத்தாசையாய் இருந்தோம். வாசனை திரவியத்தில் பயன்படுத்தப்படுகிற ‘எசன்ஸை’ தயாரிப்பதற்காக அவர் பல நிறப் பூக்களைத் தரும் ஜெரேனியம் என்ற பூச்செடியைப் பயிரிட்டு, காய்ச்சி வடித்தார். உள்ளூர் கிராமத்திலிருந்த பள்ளிக்கு நாங்கள் ஐந்து கிலோமீட்டர் நடந்து சென்றோம், பெரும்பாலும் தோட்டத்தில் விளைந்தவற்றையும் எடுத்துச் சென்றோம். பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது, சிலசமயங்களில் வீட்டுக்குத் தேவையான சுமார் 10 கிலோ மளிகை சாமான்களைத் தலையில் சுமந்து வந்தோம்.

“அப்பா நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தார், அதற்காக நாங்கள் அவர்மீது அதிக மரியாதை வைத்திருந்தோம். அவரோ பலரைப்போல் எக்கச்சக்கமாய் குடித்தார்; அப்படிக் குடிபோதையில் இருக்கும்போது மூர்க்கத்தனமாய் நடந்துகொண்டார். நிதானம் இல்லாததால் அவர் வீட்டில் செய்யும் ரகளைகளை நானும்சரி, என் தம்பி, தங்கைகளும்சரி கண்கூடாகப் பார்த்தோம், இப்படியே போய்க்கொண்டிருந்தால் குடும்ப நிலைமை என்னவாகுமென பயந்தோம்.”

ஷான்-⁠க்ளோட் தொடர்ந்து சொல்கிறார்: “1974-⁠ல் பயனியர் சகோதரர் ஒருவர் என்னைச் சந்தித்தார். அப்போது நான் லா ரிவ்யரில் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்தேன். சர்ச்சுகளில் நடக்கும் அநியாயங்களையும் பாசாங்குத்தனத்தையும் பார்த்து வெறுத்துப் போனதால் கிட்டத்தட்ட கடவுள் நம்பிக்கை இல்லாதவனைப் போல இருந்தேன். எனினும், என் கேள்விகளுக்கு எல்லாம் அந்தச் சகோதரர் பைபிளிலிருந்து பதில் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. நானும் என் மனைவி நீகாலும் பைபிள் படிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்தோம். பைபிள் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக என் குடும்பத்தாரையும் போய்ச் சந்தித்தோம், பெரும்பாலும் நள்ளிரவுவரை என் தம்பி, தங்கைகளுடன் இதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். சிலசமயங்களில் என் அப்பா, அம்மாவும் உட்கார்ந்து கேட்டார்கள்.

“சீக்கிரத்திலேயே என் சகோதரர்களில் ஷான்-மாரீ, ஷான்-மீஷெல் ஆகியோரும், என் சகோதரிகளில் ரோஸ்லீனும் பைபிள் படிப்பில் கலந்துகொள்வதற்காக எங்கள் வீட்டுக்குத் தவறாமல் வர ஆரம்பித்தார்கள். நாங்கள் எல்லாரும் ஆன்மீக ரீதியில் முன்னேறினோம், பிரஸ்தாபிகள் ஆனோம்; 1976-⁠ல் எல்லாரும் முழுக்காட்டுதல் பெற்றோம். என் தம்பி, தங்கைகளை நான் கெடுப்பதாகச் சொல்லி, அப்பா என்னிடம் பேசுவதை அடியோடு நிறுத்திவிட்டது வருத்தமாய் இருந்தது. பொது இடங்களில் நானே அவரைத் தவிர்க்குமளவுக்கு அவர் கோபாவேசத்துடன் என்னை எதிர்த்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

“அம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும்கூட பைபிள் படிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். கடைசியில் அப்பாவின் கோபம் பெருமளவு தணிந்தது சந்தோஷகரமான விஷயம். சரியாகச் சொன்னால், 2002-⁠ல் அவர் பைபிள் படிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். இன்று, நானும், என் தம்பி, தங்கைகள் ஒன்பது பேரும், எங்கள் மணத்துணைகளும், அம்மாவும் சேர்ந்து மொத்தம் 26 பேர் எங்கள் குடும்பத்தில் முழுக்காட்டுதல் பெற்றிருக்கிறோம்; அம்மாவுக்கு வயதாகிவிட்டாலும் இன்னமும் பக்தி வைராக்கியத்துடன் சேவை செய்து வருகிறார். ஷான்-மீஷெல், ஷான்-ஈவ் ஆகிய இருவரும் கொஞ்ச காலத்திற்கு வட்டாரக் கண்காணிகளாகச் சேவை செய்தார்கள்; உடல்நலக் காரணங்களால் அந்த ஊழியத்தைத் தொடர முடியாமல் நிறுத்திவிட்டார்கள். இருவரும் சபை மூப்பர்களாக இருக்கிறார்கள்; ஷான்-ஈவ்வும் அவருடைய மனைவி ரோஸேடாவும் பயனியர்களாகவும் இருக்கிறார்கள். நானும் என் மூத்த மகனும் மூப்பர்களாகச் சேவை செய்கிறோம்.”

1974-⁠ல் க்ரீஸ்டியான் பேகூவும் அவருடைய அம்மாவும் லா ரிவ்யர் வந்தபோது அங்கும், அதன் சுற்றுவட்டாரத்திலும் சபைகள் எதுவும் இல்லாதிருந்தன; ஆனால், இப்போது ஐந்து சபைகள் இருக்கின்றன. சீர்க் டா சில்லாவோஸ் மலைப் பகுதியில், சில்லாவோஸ் நகரில் ஒரு சபை உள்ளது; இந்நகரம், மலை நீரூற்றுகளுக்கும், வெந்நீர் குளியல் ஊற்றுகளுக்கும் பெயர்போனது. இந்த சில்லாவோஸ் சபை எப்படி ஆரம்பமானது? 1975 முதல் 1976 வரை ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் லா ரிவ்யரிலிருந்து பிரஸ்தாபிகள், பயங்கரமான பாறைச் சரிவுகள் ஏற்படும் குறுகலான, வளைந்துநெளிந்து செல்லும் பாதையில் 37 கிலோமீட்டர் பயணப்பட்டு, சில்லாவோஸ் வந்து மாலை சுமார் 5:00 மணிவரை பிரசங்கித்தார்கள். அவர்களுடைய முயற்சி பலன் அளித்தது; இப்போது அந்நகரில் சுமார் 30 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள், தங்களுக்கென சொந்தமாக ராஜ்ய மன்றத்தையும் கட்டியிருக்கிறார்கள்.

தென் பகுதியில் ஆன்மீக முன்னேற்றம்

நியாயமான காரணத்துடன்தான், ரீயூனியனின் தென் பகுதிக்கு உள்ளூர் மக்கள் “மூர்க்கமான தெற்கு” என பெயர்சூட்டியிருக்கிறார்கள். இப்பகுதியில், ராட்சதப் பேரலைகள் ஜனசஞ்சாரமில்லாத கடற்கரையில் வந்து ஆவேசத்துடன் மோதி வெள்ளை வெளேரென்ற நுரையைக் கக்குகின்றன. இந்த இடத்தை, அவ்வப்போது சீற்றத்துடன் சீறியெழும் பீட்டான் டா லா ஃபார்னேஸ் (உலைக்களத்தின் சிகரம்) என்ற எரிமலையும் ஆக்கிரமித்திருக்கிறது. இப்பகுதியிலுள்ள மிகப் பெரிய நகரத்தின் பெயர் செயின்ட்-பையர். அங்கே விசேஷ பயனியர்களான டானீஸ் மிலோ, லில்யான் பைப்ஷிக் ஆகிய சகோதரிகள் 1960-⁠களின் பிற்பகுதியில் நியமிக்கப்பட்டார்கள். பின்னர், ஆர்வம் காட்டுபவர்கள் அதிகரிக்க அதிகரிக்க, அந்த இரண்டு சகோதரிகளுடன் சேர்ந்து ஊழியம் செய்வதற்கு விசேஷ பயனியர்களான மிஷெல் ரிவ்யர், ரனே தம்பதியர் அனுப்பப்பட்டார்கள்.

இப்பகுதியைச் சேர்ந்த ஆரம்ப கால பைபிள் மாணாக்கருடைய பெயர் க்லேயா லாப்யர்; இவர் 1968-⁠ல் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட, கட்டடப் பணியாளர் ஆவார். “நான் முதன்முதல் கலந்துகொண்ட சபை கூட்டம் ஒரு பெரிய மரத்தடியில் நடைபெற்றது. ராஜ்ய மன்றம் என்று நாங்கள் அழைத்த, மூன்று மீட்டர் நீளத்திலும் மூன்று மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கொட்டகை தகர்க்கப்பட்டு அதைவிடப் பெரிய கட்டடமாகக் கட்டப்பட்டது; அந்தக் கட்டடப் பணியில் நானும் பங்கேற்றேன்” என்று க்லேயா சொல்கிறார்.

அதே வருடத்தில், ராணுவ ரிசர்வ் படையில் க்லேயா இருந்ததால், அதில் சேவை செய்ய அழைப்பைப் பெற்றார். “அந்தளவுக்கு பைபிள் அறிவு இல்லாவிட்டாலும், அப்போது நான் நடுநிலை வகிப்பதை விளக்கி அதிகாரிகளுக்கு ஒரு கடிதத்தை எழுதினேன். அதற்கு அவர்கள் பதில் அனுப்பவே இல்லை; எனவே, விஷயத்தை அறிந்துகொள்ள, தீவின் மறுகரையான செயின்ட்-டெனிஸிலிருந்த ராணுவ தலைமையிடத்திற்குச் சென்றேன். வீட்டுக்குச் செல்லும்படியும், ஆனால், சிறைக்குச் செல்லத் தயாராய் இருக்கும்படியும் ஓர் அதிகாரி சொன்னார். எனவே, அடிக்கடி ஜெபம் செய்தேன், ஊக்கமாய் பைபிள் படிப்பு படித்தேன். சீக்கிரத்திலேயே, மீண்டும் ராணுவ தலைமையிடத்திற்கு வரும்படி அழைப்பைப் பெற்றேன். அங்கு போய்ச் சேர்ந்ததும், என் கூடவே காரில் நான் அழைத்துச் சென்றிருந்த சகோதரரிடம் ஒரு மணிநேரம் காத்திருக்கும்படி சொன்னேன். ‘அதற்குப் பிறகும் நான் வராவிட்டால், நான் வரவே மாட்டேன் என வைத்துக்கொள்ளுங்கள். அப்படி ஏதாவது நேர்ந்தால், தயவுசெய்து என் காரை விற்று அந்தப் பணத்தை என் மனைவியிடம் கொடுத்துவிடுங்கள்’ என்று சொன்னேன்.

“நான் உள்ளே போனதும், என்னை என்ன செய்வது என்பதைக் குறித்து அதிகாரிகள் காரசாரமாய் விவாதித்துக்கொண்டிருந்ததைக் கவனித்தேன். சுமார் 45 நிமிடத்திற்குப் பிறகு, படைத் தலைவர் ஒருவர் என்னிடம் வந்தார்.

“‘என் கண் முன்னால் நிற்கவே நிற்காதே, வீட்டுக்குப் போ!’ என்று சொன்னார்.

“45 மீட்டர் தூரம்கூட போயிருக்க மாட்டேன் அதற்குள் அவர் என்னைத் திரும்பவும் கூப்பிட்டார். இப்போது அந்த அதிகாரியின் குரலில் கனிவு தொனித்தது, அவர் இவ்வாறு சொன்னார்: ‘உங்கள் ஆட்கள்மீது ரொம்பவே மதிப்பு மரியாதை வைத்திருக்கிறேன். பிரான்சில் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அவர்களில் உன்னைத்தான் முதன்முதலில் பார்க்கிறேன்.’

“அந்தச் சமயத்தில் செயின்ட்-பையர் சபையிலிருந்த ஒரே சகோதரர் நான்தான்; எனவே, எல்லா சபை கூட்டங்களையும் நானே நடத்தினேன். எனினும், அவ்வப்போது எனக்கு உதவி கிடைத்தது; 1979-⁠ல், மிஷனரிகளான ஆன்ட்வான், ஷீல்பர் பிரான்கா தம்பதியர் வந்தார்கள்.”

ராஜ்ய மன்ற கட்டுமானம்

ஆரம்பத்தில் சபைகளும் தொகுதிகளும், தனியார் வீடுகளிலும் குடியிருந்த வீடுகளை சற்று மாற்றியமைத்தும் பொதுவாகக் கூட்டங்களை நடத்தின. எனினும், அடிக்கடி புயல் காற்று வீசியதால் உறுதியான கட்டடங்கள் தேவைப்பட்டன. இப்படிப்பட்ட கட்டடங்களைக் கட்டுவதோ செலவுபிடித்ததாய் இருந்தது, அதோடு கட்டி முடிக்க அதிக காலமும் எடுத்தது. ஆனாலும், யெகோவாவின் கை குறுகியதாய் இல்லை; காலப்போக்கில், அத்தகைய ராஜ்ய மன்றங்கள் ரீயூனியனில் கட்டப்படத் தொடங்கின.​—ஏசா. 59:1.

உதாரணமாக, செயின்ட்-⁠ல்வி நகரில் புதிய ராஜ்ய மன்ற கட்டுமான திட்டங்களை சபை பெற்றபோது, ஓர் இளம் சகோதரர் கட்டுமானப் பயிற்சியை முறையாகப் பயின்று வந்தார். அந்தச் சகோதரர் தன் ஆசிரியரிடம் சாட்சி கொடுத்தார், ராஜ்ய மன்றத்தைப் பற்றி சொன்னார், அதை வாலண்டியர்கள் கட்டப்போவதைப் பற்றியும் விளக்கினார். அப்போது அந்த ஆசிரியர் என்ன செய்தார்? சில நடைமுறைப் பயிற்சிகளை அளிக்க அந்த ஆசிரியர், மாணவர்களைக் கட்டுமான இடத்திற்கு அழைத்து வந்தார்! அஸ்திவாரத் தூண்களுக்கு மாணவர்களையே குழிதோண்டச் சொன்னார், அதற்கான இரும்பையும் பின்னர் அன்பளிப்பாய் கொடுத்து உதவினார்.

அரசு விடுமுறை நாளின்போது 190 சதுர மீட்டர் கான்கிரீட் தளம் போடுகிற வேலைக்கு சகோதரர்கள் ஏற்பாடு செய்தார்கள்; அந்த வேலையில் ஈடுபட விடியற்காலையிலேயே நூற்றுக்கும் அதிகமான வாலண்டியர்கள் ஆர்வத்தோடு வந்துவிட்டார்கள். எனினும், ஏதோ காரணங்களால் நகரத்தில் அன்று தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டிருந்தது! ஒரு சகோதரருக்குத் தீயணைப்புத் துறையின் தலைமை அதிகாரியைத் தெரிந்திருந்ததால், அவராகவே போய் சிநேகப்பான்மையான அந்த அதிகாரியைச் சந்தித்து, இக்கட்டான நிலையை விளக்கினார். அந்த வேலை நடைபெறுவதற்குத் தேவையான அளவு தண்ணீரை தீயணைப்பு வண்டியில் அந்த அதிகாரி உடனடியாக அனுப்பி வைத்தார்.

ராஜ்ய மன்றம் கட்டி முடிக்கப்பட்டபோது, சத்தியத்திடம் ஆர்வம் காட்டி வந்த புதியவர் ஒருவர் சகோதரர்களையும் அவர்கள் செய்யும் வேலையையும் பார்த்து அசந்துபோய்விட்டார்; தன் செக் புக்கை எடுத்தார், புதிய ஒலிபெருக்கி அமைப்பு வாங்குவதற்குக் கிட்டத்தட்ட தேவைப்பட்ட தொகையை நன்கொடையாய் எழுதிக்கொடுத்தார். டிசம்பர் 1988-⁠ல் மொரிஷியஸ் செல்லும் வழியில் ஆளும் குழுவின் அங்கத்தினரான கேரி பார்பர் ரீயூனியனுக்கு வந்து பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுத்தார். துரித முறையில் கட்டப்பட்ட முதல் ராஜ்ய மன்றம், செ.-ஷீல் லே பென் என்ற இடத்தில் 1996-⁠ல் கட்டிமுடிக்கப்பட்டது. இன்று இந்தத் தீவில் 17 ராஜ்ய மன்றங்கள் உள்ளன; இவற்றை 34 சபைகள் பயன்படுத்துகின்றன.

வட்டார மாநாடுகளை எங்கே நடத்துவது?

ஆரம்பத்திலிருந்தே ரீயூனியனில் பிரசங்க வேலையில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்ததால், மாநாடுகளை நடத்துவதற்குப் போதுமான பெரிய இடங்களைக் கண்டுபிடிப்பது பெரும் பாடாய் இருந்தது. 1964-⁠ல், முதன்முறையாக ஒரு வட்டார மாநாட்டை நடத்த சகோதரர்கள் திட்டமிட்டார்கள். எனினும், மாதக்கணக்கில் தேடித் தேடி கடைசியில் ஓர் இடத்தைக் கண்டுபிடித்தார்கள்; அதுவும் செயின்ட்-டெனிஸில் ஒரு ரெஸ்டராண்டின் மாடியில் கண்டுபிடித்தார்கள். அது பழங்காலத்து மரக் கட்டடம், வாடகையும் எக்கச்சக்கம். 200 பேருக்கு மேல் உட்கார முடியுமென உரிமையாளர்கள் சொன்னார்கள்; மாநாட்டுக்கு எதிர்பார்த்தவர்களின் எண்ணிக்கையும் அதுதான்.

வேறு வழியே இல்லாததால் சகோதரர்கள் அந்த ரெஸ்டராண்ட் கட்டடத்தை புக் செய்தார்கள். சத்தியத்தில் ஆர்வம் காட்டிய ஒருவர் ஒலிபெருக்கி அமைப்பைப் பயன்படுத்திக்கொள்ளக் கொடுத்தார். மாநாட்டுக்குரிய நாளும் வந்து, சகோதரர்களும் வந்து குவிய ஆரம்பித்தபோது, தளம் கிரீச்சொலி எழுப்ப ஆரம்பித்தது; நல்ல வேளை இடிந்து விழவில்லை. அந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்கு 230 பேர் வந்திருந்தார்கள், 21 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.

அதற்குப் பிறகு சீக்கிரத்திலேயே, சீர்க் டா மாஃபாட்டில் வளர்ந்த சகோதரரான ல்வி நலோப், செயின்ட்-டெனிஸிலிருந்த தன் நிலத்தில் தற்காலிக மாநாட்டு மன்றம் கட்டிக்கொள்வதற்கு இடங்கொடுத்து உதவினார். அதில், மரச் சட்டங்களின் மீது இரும்புத் தகடாலான கூரை போடப்பட்டு, நாலாபுறமும் ஓலைகளால் மறைக்கப்பட்ட ஓர் எளிமையான கட்டடம் அமைக்கப்பட்டது.

அங்கு நடைபெற்ற முதல் மாநாடு மூன்று நாள் மாவட்ட மாநாடு ஆகும். இம்மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த மிரியம் ஆன்ட்ரியென் இவ்வாறு சொல்கிறார்: “முதல் நாள் காலையில் நாங்கள் ஊழியத்திற்குப் போனோம், சுடச்சுட உணவு சாப்பிடத் திரும்பி வந்தோம்; சாதம், பீன்ஸ், காரசாரமாகத் தயாரிக்கப்பட்டிருந்த கோழிக்கறி என அசல் கிரியோல் உணவைச் சாப்பிட்டோம். இந்தளவு காரமான உணவைச் சாப்பிட்டு எங்களுக்குப் பழக்கமில்லாததால் உணவு சமைத்தவர்கள் பிள்ளைகள் சாப்பிடும் ரூகில் மார்மாய் என்ற காரம் குறைவான சட்னியைத் தயாரித்துக் கொடுத்தார்கள்.”

புதியவர்கள் அதிகமதிகமாக வரவர மாநாட்டு மன்றமும் விரிவுபடுத்தப்பட்டது, இது ராஜ்ய மன்றமாகவும் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில், அந்த இடத்தில் வாடகைக்குக் குடியிருந்த குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறின; சகோதரர் ல்வி நலோப் அந்த நிலம் முழுவதையும் சபைக்காக நன்கொடையாய் கொடுத்துவிட்டார். செங்கல் வைத்துக் கட்டப்பட்ட ராஜ்ய மன்றம் அந்த இடத்தில் இப்போதும் கம்பீரமாய்க் காட்சியளிக்கிறது; இதை செயின்ட்-டெனிஸிலுள்ள இரண்டு சபைகள் பயன்படுத்துகின்றன.

1997-⁠ல் லா பாஸ்செஸ்யான் என்ற நகரத்தில் ஒரு மாநாட்டு மன்றம் கட்டப்பட்டது; இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டது. அது நான்கு புறமும் சுவரில்லாத திறந்தவெளிக் கட்டடம், மேடையில் முழுக்காட்டுதல் கொடுப்பதற்கான தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. இது 1,600 பேர் உட்காரும் வசதி படைத்தது, அசெம்பிளிகளுக்கும் மாவட்ட மாநாடுகளுக்கும் என வருடத்தில் குறைந்தபட்சம் 12 முறையாவது இது பயன்படுத்தப்படுகிறது. இதைத் தொட்டாற்போல், ஒன்பது பேர் தங்குவதற்கு வசதியான மிஷனரி இல்லம் ஒன்று இருக்கிறது. இதில், பிரசுர கிடங்கு ஒன்றும், ரீயூனியன் பகுதியில் ஊழியத்தை மேற்பார்வை செய்வதற்குரிய அலுவலகம் ஒன்றும் இருக்கிறது.

மாவட்ட மாநாடுகளை எங்கே நடத்துவது?

சகோதரர்கள் சொந்தமாக ஒரு மாநாட்டு மன்றத்தைக் கட்டுவதற்கு முன்பு செயின்ட்-பால் நகரிலுள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தை மாவட்ட மாநாடுகள் நடத்துவதற்காக வாடகைக்கு எடுத்தார்கள். எனினும், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அல்லது கலைநிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், கடைசி நிமிடத்தில் மாநாட்டை வேறு இடத்தில் நடத்த வேண்டிய சூழ்நிலையை அவர்கள் அடிக்கடி எதிர்ப்பட்டார்கள். பின்னர், ஸ்டேடியத்திற்கு அடுத்திருந்த மைதானத்தைப் பயன்படுத்திக்கொள்ளும்படி மாநகராட்சி சகோதரர்களிடம் தெரிவித்தது. பொருட்காட்சி, விழா போன்றவற்றிற்காகவே இந்த இடம் பயன்படுத்தப்படுவதால், உட்காருவதற்கு இருக்கைகளோ, மேலே கூரையோ கிடையாது; எனவே, மாநாட்டுக்கு வருகிறவர்கள் தாங்கள் உட்காருவதற்கு இருக்கைகளையும் நிழலுக்குக் குடைகளையும் எடுத்துவர வேண்டியிருந்தது. இதனால் பேச்சு கொடுப்பவர்கள், கவனமாய் செவிகொடுத்துக் கேட்கும் கூட்டத்தாரின் முகங்களை அல்ல, ஆனால் கலர்கலரான குடைகளைத்தான் பார்த்தார்கள்.

ரீயூனியன் கிளை அலுவலகம் இவ்வாறு எழுதுகிறது: “ஒரு சமயம், இந்த மைதானத்தில் இரண்டு நிகழ்ச்சிகளை நடத்த மாநகராட்சி ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. ஒரு நிகழ்ச்சி, மார்டினிக் நாட்டிலிருந்து வந்த ஸூக் இசைக் குழுவினரின் நிகழ்ச்சியாகும். இந்த இசை, ஆப்பிரிக்க நாட்டவரின் சந்தங்கள், ஜமைக்கா நாட்டவரின் ரெகே, மேற்கிந்தியத் தீவினரின் கலிப்சோ ஆகியவை இணைந்த கதம்பக் கலவையாகும். ஸூக் இசைக் குழுவிற்கு அந்த மைதானத்தைக் கொடுப்பதற்காக அதிகாரிகள், பொழுதுபோக்கு அரங்கம் ஒன்றைச் சகோதரர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார்கள்; அந்த இடத்தின் பெயர் கேவ் ஆஃப் த ஃபஸ்ட் ஃபிரெஞ்ச்மேன் என்பதாகும். இது, பிரெஞ்சுக் குடியேறிகள் முதன்முதலாக கால்பதித்த இடமாகும். உயரமான செங்குத்துப் பாறைகள், ஏராளமான நிழல்தரும் மரங்கள் என அந்தச் சூழமைவு அற்புதமாய் இருந்தது; ஆனால், இருக்கைகள் எதுவும் இல்லை, அதிக கழிவறைகள் இல்லை, மேடையும் இல்லை.

“எனினும், இந்தச் சமயத்தில் இங்கு மாநாட்டை நடத்துவதில் சந்தோஷப்பட்டோம்; ஏனெனில், மாநாட்டின்போது சனிக்கிழமை மாலையில் புயல் காற்று வீசியது, மின்னல் அடித்தபோது அது அந்த ஸ்டேடியத்தின் மின் இணைப்பு முழுவதையும் துண்டித்துவிட்டது, ஸூக் இசை நிகழ்ச்சியையும் ஸ்தம்பிக்கச் செய்தது. ஐந்து கிலோமீட்டர் தள்ளி நாங்கள் இருந்த இடத்தில் எங்களுக்குப் பாதிப்பு ஏதுமில்லை. அந்தச் சம்பவம் ‘கடவுளுடைய நியாயத்தீர்ப்பு’ என்றுகூட உள்ளூர்வாசிகள் பேசிக்கொண்டார்கள்.”

அமைப்பு சார்ந்த முன்னேற்றங்கள்

1967, ஜூன் 22-⁠ல் லா டேம்வின் டி ஷேயோவா (யெகோவாவின் சாட்சிகளின் சங்கம்) என்ற பெயரில் சங்கம் சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டது. 1969 பிப்ரவரி மாதத்தில், அல்ஜீரியாவில் பிறந்து, பிரான்சில் வளர்ந்த ஆன்ரீ ஸாமீ என்பவர் அந்த நாட்டைச் சேர்ந்த முதல் வட்டாரக் கண்காணியாக இத்தீவிலுள்ள சபைகளைச் சந்திக்க வந்தார். அவருடைய வட்டாரத்தில் ரீயூனியனில் ஆறு சபைகளும் மொரிஷியஸில் நான்கு சபைகளும் ஒதுக்குப் புறத்திலிருந்த சில தொகுதிகளும் இருந்தன. இன்று ரீயூனியனில் மட்டுமே இரண்டு வட்டாரங்கள் உள்ளன.

1975-⁠ல் காவற்கோபுர பத்திரிகைக்கு பிரான்சில் விதிக்கப்பட்டிருந்த 22 வருட தடையுத்தரவு நீக்கப்பட்டது. உடனடியாக சகோதரர்கள் இந்தப் பத்திரிகையை ரீயூனியனின் பிராந்தியத்தில் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதற்கு முன்பு அவர்கள் புயல்டீன் என்டேர்யூர் என்ற பிரசுரத்தைப் பயன்படுத்தி வந்தார்கள். இது பிரான்சில் அச்சிடப்பட்டது, காவற்கோபுரத்திலுள்ள அதே தகவல் இதில் இருந்தது, ஆனால் இது பொது மக்களுக்கு வினியோகிக்கப்படவில்லை. 1980, ஜனவரி மாதத்தில் ரீயூனியனிலும் அதைச் சுற்றியிருந்த தீவுகளிலும் வசித்த ஜனங்களின் தேவைக்கு ஏற்ப, நம் ராஜ்ய ஊழிய பிரதியை பிரெஞ்சு பதிப்பாக பிரான்சு கிளை அலுவலகம் அச்சிட ஆரம்பித்தது. மேலும், ரீயூனியன் கிரியோல் மொழி பேசும் மக்கள் பயன் அடைவதற்காக, துண்டுப்பிரதிகள், சிற்றேடுகள் போன்றவையும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு, ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் போன்ற புத்தகங்களும் இந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆன்மீக உணவைச் சுமந்து சென்ற இந்த அருமையான பிரசுரங்கள் உலகின் இந்தத் தொலைதூரத்தில் நற்செய்தி எங்கும் பரவ உதவியிருக்கின்றன.

உண்மைதான், பரந்து விரிந்துகிடக்கும் இந்தியப் பெருங்கடலில் ரீயூனியன் தீவு சின்னஞ்சிறியதுதான். ஆனால், இங்கிருந்து யெகோவாவுக்கு எப்பேர்ப்பட்ட துதி சத்தமாக ஏறெடுக்கப்படுகிறது! இது ஏசாயா தீர்க்கதரிசியின் பின்வரும் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகிறது: ‘அவருடைய [யெகோவாவுடைய] துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக’! (ஏசா. 42:10, 12) அந்தத் துதியை அறிவிப்பதில் ரீயூனியனிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் எப்போதும் உறுதியாய் நிலைத்திருப்பார்களாக; இந்தத் தீவின் எரிமலை மணல் கடற்கரைகளில் முடிவே இல்லாமல் புரண்டு வந்து மோதும் நீலப் பேரலைகளைப் போல் அவர்கள் எப்போதும் உண்மையுள்ளவர்களாய் இருப்பார்களாக.

[பக்கம் 228, 229-ன் பெட்டி/​தேசப்படங்கள்]

ரீயூனியன்ஒரு கண்ணோட்டம்

நிலம்

மஸ்கரின் தீவுக்கூட்டத்தில், அதாவது மொரிஷியஸ், ரீயூனியன், ரோட்ரிகஸ் ஆகிய தீவுகளில், சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 50 கிலோமீட்டர் அகலமுமுள்ள ரீயூனியன் தீவுதான் மிகப் பெரியது. கிட்டத்தட்ட இத்தீவின் மத்தியில் சர்க்ஸ் என அழைக்கப்படும் நல்ல விளைநிலமான மூன்று எரிமலைப் பெருவாய்கள் உள்ளன; இவை செங்குத்தான சுற்றுச்சுவர்களை உடைய உட்குழிவான பள்ளங்கள் ஆகும்; பூர்வத்தில் பிரமாண்டமான எரிமலை வெடித்தபோது உருவானவை ஆகும்.

மக்கள்

பெரும்பாலும், ஆப்பிரிக்கா, சீனா, பிரான்சு, இந்தியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வம்சாவளியினரின் கதம்பக் கலவையாக இங்கு 7,87,600 பேர் குடியிருக்கிறார்கள். சுமார் 90 சதவீதத்தினர் கத்தோலிக்கர்கள்.

மொழி

ஆட்சி மொழி பிரெஞ்சு; எனினும், மக்களிடையே பேசப்படும் மொழி ரீயூனியன் கிரியோல் ஆகும்.

பிழைப்பு

இத்தீவின் பொருளாதாரம் கரும்பையும் அதிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரைப் பாகு, ரம் ஆகியவற்றையும், சுற்றுலாத்துறையையும் பெருமளவு சார்ந்திருக்கிறது.

உணவு

அரிசி, இறைச்சி, மீன், பீன்ஸ், பருப்பு வகைகள் ஆகியவை முக்கிய உணவுப்பொருள்களாகும். கரும்பு தவிர, தேங்காய், லீச்சீ, பப்பாளி, அன்னாசி, முட்டைக்கோசு, லெட்யூஸ் கீரைகள், தக்காளி, வனிலா பருப்பு ஆகியவை முக்கியமாக விளைவிக்கப்படுகின்றன.

சீதோஷ்ணம்

மகரரேகைக்குச் சற்று வடக்கே ரீயூனியன் தீவு அமைந்திருப்பதால், இது வெப்பமண்டலப் பிரதேசமாகவும், ஈரப்பதம் மிக்கதாகவும் உள்ளது; மழை பொழிவிலும் தட்பவெப்பநிலையிலும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. புயல் காற்று வீசுவது இங்கு சகஜம்.

[தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

மடகாஸ்கர்

ரோட்ரிகஸ்

மொரிஷியஸ்

ரீயூனியன்

செயின்ட்-டெனிஸ்

லா மான்டானி

லா பாஸ்செஸ்யான்

லா பார்

செயின்ட்-பால்

செ.-ஷீல்-லே பென்

சீர்க் டா மாஃபாட்

சீர்க் டா சில்லாவோஸ்

சில்லாவோஸ்

சீர்க் டா சில்லாவோஸ்

செயின்ட்-லூயி

லா காப்

லேஸ் மாக்

லேஸாவீரோன்

ல்லிடாங்-சலி

லா ரிவ்யர்

செயின்ட்-⁠ல்வி

செயின்ட்-பையர்

செயின்ட்-ஃபீலீப்

பீட்டான் டா லா ஃபார்னேஸ்

சென்-பன்வா

செயின்ட்-ஆன்ட்ரி

[படங்கள்]

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்

லாவா பாய்தல்

செயின்ட்-டெனிஸ்

[பக்கம் 232, 233-ன் பெட்டி]

ரீயூனியன்​—⁠பெயர் பிறந்த கதை

ஆரம்பத்தில் வந்த அரபு நாட்டு கப்பலோட்டிகள் இத்தீவுக்கு டீனா மார்கபின் (மேற்கத்திய தீவு) என்று பெயர் சூட்டினார்கள். 1500-களின் ஆரம்பத்தில், போர்ச்சுகீஸிய கப்பலோட்டிகள் ஜனசஞ்சாரமற்ற இத்தீவைக் கண்டுபிடித்தபோது, சான்டா ஆபோலோன்யா என்று பெயரிட்டார்கள். 1642-⁠ல் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஷேக் பிரானி என்பவர் 12 கலகக்காரர்களை மடகாஸ்கரிலிருந்து இத்தீவிற்கு நாடு கடத்தியபோது இது பிரான்சுக்குரியது என சொந்தங்கொண்டாடினார். 1649-⁠ல் பிரெஞ்சு அரச வம்சத்தின் நினைவாக இல் புர்பான் என இதற்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1793-⁠ல் பிரெஞ்சுப் புரட்சியின்போது புர்பான் வம்சம் வீழ்ச்சியடைந்த பிறகு இத்தீவுக்கு ரீயூனியன் என பெயரிடப்பட்டது; பாரிஸ் நேஷனல் கார்ட்டும் மார்செயல்ஸ் புரட்சிக்காரர்களும் ஒன்றுசேர்ந்ததன் நினைவாக இப்பெயரிடப்பட்டது. பல மாறுதல்களுக்குப் பிறகு 1848-⁠ல் இந்தத் தீவு ரீயூனியன் என்ற பெயரையே மீண்டும் ஏற்றுக்கொண்டது. 1946-⁠ல் இத்தீவு பிரான்சு நாட்டின் அதிகாரத்திற்குட்பட்ட மாகாணமாய் ஆனது.

1660-⁠ன் ஆரம்பத்தில், இத்தீவில் குடியேற்றப் பகுதி ஒன்றை பிரான்சு உருவாக்கியது; காபி, கரும்பு ஆகியவற்றைப் பயிர்செய்ய ஆரம்பித்தது. இங்கு வேலை செய்ய கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வேலையாட்கள் அடிமைகளாய் அழைத்து வரப்பட்டார்கள். 1848-⁠ல் அடிமை வியாபாரம் நீக்கப்பட்ட பிறகு, ஒப்பந்தப் பணியாட்களைப் பெரும்பாலும் இந்தியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளிலிருந்து பிரான்சு வரவழைத்தது. இவர்களிலிருந்து வந்த கலப்பு இனத்தவரே தற்போது இங்கு இருக்கிறார்கள். 1800-களின் ஆரம்பத்தில், காபி விளைச்சல் குறைந்தது; கரும்பு முக்கிய ஏற்றுமதிப் பயிரானது.

[பக்கம் 236, 237-ன் பெட்டி/​படங்கள்]

முன்பு பயில்வான் பின்பு விசேஷ பயனியர்

லுஸியன் வேஷோ

பிறந்தது 1937

முழுக்காட்டப்பட்டது 1961

பின்னணிக் குறிப்பு ஒருகாலத்தில் பிரபல பயில்வானாய் இருந்தார். 1963 முதல் 1968 வரை விசேஷ பயனியராக ஊழியம் செய்தார். 1975 முதல் மூப்பராகச் சேவை செய்து வருகிறார்.

என்னால் 1961-⁠ல் அந்த நாளை மறக்கவே முடியாது. ஷான் என்ற என் நண்பனை, யெகோவாவின் சாட்சிகளுடைய கைகளிலிருந்து “காப்பாற்ற” அவனுடைய வீட்டுக்குப் போயிருந்தேன். என் நண்பனின் மனைவி, தான் பொய்த் தீர்க்கதரிசிகள் என அழைத்த யெகோவாவின் சாட்சிகள் எங்கே விவாதத்தில் இறங்கி தன் கணவரை அடித்துவிடுவார்களோ எனப் பயந்ததால் என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்திருந்தாள்!

‘அவன்மீது அவர்கள் கையை வைத்தால், அவர்களை அடித்து நொறுக்க வேண்டியதுதான்’ என நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அவர்கள் சிநேகபாவத்துடன் பழகினார்கள், அவர்களுடைய பேச்சில் நியாயம் இருந்தது, வலுச்சண்டைக்கான அறிகுறியே அவர்களிடம் இருக்கவில்லை. சீக்கிரத்திலேயே, சிலுவை பற்றிய உரையாடலில் நான் மூழ்கிவிட்டேன்; ஒரு மரத்தில்தான் இயேசு கிறிஸ்து இறந்தார் என்பதை அவர்கள் பைபிளிலிருந்து தெளிவாக எடுத்துக் காட்டினார்கள்.

பின்னர், கடவுளுடைய ஜனத்தின் சார்பாக பிரதான தூதனாகிய மிகாவேல் ‘நிற்பதாக’ தானியேல் தீர்க்கதரிசி சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார் என்று கேட்டேன். (தானி. 12:1) உண்மையில் மிகாவேல் என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது என்றும் 1914 முதல் கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆட்சி செய்வதே அவர் ‘நின்றுகொண்டிருப்பதைக்’ குறிக்கிறது என்றும் அவர்கள் பைபிளிலிருந்து விளக்கினார்கள். (மத். 24:3-7; வெளி. 12:7-10) அவர்கள் அளித்த பதில்களைக் கேட்டு, பைபிளில் அவர்களுக்கு இருந்த அறிவைப் பார்த்து மலைத்துவிட்டேன். அதுமுதற்கொண்டு, அந்தப் பகுதிக்கு எப்போதெல்லாம் யெகோவாவின் சாட்சிகள் வந்தார்களோ அப்போதெல்லாம் அவர்களுடன் பைபிளைக் கலந்தாலோசிக்க வாய்ப்புகளைத் தேடினேன். வீடு வீடாக அவர்கள் பின்னாலேயே போகவும் ஆரம்பித்தேன், அவர்கள் மற்றவர்களிடம் உரையாடும்போது நானும் உட்கார்ந்து கேட்டேன். சீக்கிரத்திலேயே, செயின்ட்-ஆன்ட்ரியில் கூடிவந்த ஒதுக்குப்புற தொகுதியோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தேன்.

எனக்கு சரிவர வாசிக்கத் தெரியாவிட்டாலும் முதன்முதல் கூட்டத்திற்குப் போனபோது புயல்டீன் என்டேர்யூர் என்ற பிரசுரத்திலிருந்து சில பாராக்களை வாசித்தேன்; அந்தச் சமயத்தில் இந்தப் பிரசுரம் காவற்கோபுரத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர், அந்தத் தொகுதியில் சகோதரர்கள் யாருமே இல்லாததால், நான் முழுக்காட்டுதல் பெற்ற உடனேயே புத்தகப் படிப்பு நடத்தும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். ‘ஆனால் எப்படிப் புத்தகப் படிப்பு நடத்துவது?’ என யோசித்தேன். என் கவலையையும் தயக்கத்தையும் புரிந்துகொண்ட ஷானீன் பேகூ, பாராக்களை அவர் வாசிப்பதாகவும், புத்தகத்திலுள்ள கேள்விகளை நான் கேட்கும்படியும் சொன்னார். இப்படித்தான் நடத்தினோம், படிப்பும் சுமுகமாக நடந்தது.

1963-⁠ல் ரீயூனியனுக்கு மில்டன் ஹென்ஷல் வந்தபோது தகுதியுள்ளவர்கள் விசேஷ பயனியர் ஊழியம் செய்யும்படி ஊக்கப்படுத்தினார். யெகோவாவின் சேவையில் என்னை முழுமையாக அர்ப்பணிக்க நான் விரும்பியதால், விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திசெய்து கொடுத்தேன், அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. செயின்ட்-ஆன்ட்ரி நகரில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டேன், போகப் போக ஒன்பது பைபிள் படிப்புகளை நடத்த ஆரம்பித்தேன்.

புதிதாக உருவான அந்தச் சபையின் கூட்டங்கள் ஷான் நாஸ்ஸோ என்பவரின் வீட்டில் நடத்தப்பட்டன. கார் விபத்தில் ஷானுடைய இடுப்பெலும்பு முறிந்துபோனபோது அந்தச் சபையை ஆறு மாதம் நான் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதாவது, பேச்சுகளைக் கொடுப்பது, தேவராஜ்ய ஊழியப் பள்ளியையும், ஊழியக் கூட்டத்தையும் நடத்துவது, கிளை அலுவலகத்திற்கு அறிக்கைகளைத் தயாரித்து அனுப்புவது என எல்லாவற்றையும் கவனிக்க வேண்டியிருந்தது. இவை எல்லாம் எனக்கு இன்னும் பயனுள்ள பயிற்சியை அளித்தன.

இங்கு கத்தோலிக்க மதமும் இந்து மதமும் ஒன்றரக் கலந்திருப்பதால் அவற்றிலிருந்து தோன்றிய மூடநம்பிக்கைகளை ஊழியத்தில் சமாளிக்க வேண்டியிருந்தது. எனினும், ஜனங்கள் நற்செய்திக்குச் செவிசாய்க்க ஆரம்பித்தார்கள். சொல்லப்போனால், ஒரு குடும்பத்தில் சுமார் 20 பேர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். இன்று செயின்ட்-ஆன்ட்ரி பகுதியில் ஐந்து சபைகள் உள்ளன.

[பக்கம் 238-ன் பெட்டி/​படங்கள்]

கேலி கிண்டலுக்கு மசியாத என் விசுவாசம்

மிரியம் டாமா

பிறந்தது 1937

முழுக்காட்டப்பட்டது 1965

பின்னணிக் குறிப்பு 1966 முதல் பயனியர் ஊழியம் செய்து வந்திருக்கிறார்.

நானும் என் உறவினரான ல்வி நலோப்பும் 1962-⁠ல் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தோம். அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட எல்லாருமே எங்களை வீட்டிற்குள் அழைத்தார்கள். காபி, லெமனேட், ஏன் ரம்கூட கொடுத்து உபசரித்தார்கள்! ஆனால் சீக்கிரத்திலேயே, ஜனங்கள் பலருடைய மனதை மதகுருமார் மாற்றிவிட்டார்கள். சிலர் எங்களைப் பார்த்து கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள், சில சமயங்களில் கடவுளுடைய பெயரை வேண்டுமென்றே கேவலப்படுத்தினார்கள். ஒரு நகரத்தில் ஜனங்கள் எங்கள்மீது கற்களை வீசினார்கள்.

இதனால், எங்களில் சிலர் ஊழியத்தில் கடவுளுடைய பெயரை உபயோகிப்பதையே நிறுத்திவிட்டோம். இதைக் கவனித்த வட்டாரக் கண்காணி அதற்கான காரணத்தைக் கேட்டார். காரணத்தை விளக்கும்போது எங்களுக்கே வெட்கமாக இருந்தது. அவரோ கனிவான முறையில் எங்களுக்குப் புத்திமதி சொன்னதோடு அதிக தைரியத்துடன் ஊழியம் செய்யும்படி ஊக்கமும் அளித்தார். இதற்கு நாங்கள் மனதார நன்றி தெரிவித்தோம், அவருடைய வார்த்தைகளை யெகோவா கொடுத்த சிட்சையாக எடுத்துக்கொண்டோம். (எபி. 12:6) உண்மைதான், கடவுளுடைய பொறுமையும் இரக்கமும் பரிசுத்த ஆவியும் இல்லாதிருந்தால் பயனியர் ஊழியம் செய்வதை எப்போதோ நிறுத்தியிருந்திருப்பேன். ஆனால் அப்படி நிறுத்திவிடாமல், 40 வருடங்களுக்கும் மேலாக பயனியர் சேவை செய்ய என்னால் முடிந்திருக்கிறது.

[பக்கம் 246, 247-ன் பெட்டி/​படம்]

யெகோவாவே துன்பத்தில் துணை

சல்லி எஸ்பாரன்

பிறந்தது 1947

முழுக்காட்டப்பட்டது 1964

பின்னணிக் குறிப்பு ரீயூனியனில் ஆரம்ப காலத்தில் முழுக்காட்டப்பட்டவர்களுள் ஒருவர். ராணுவத்தில் சேர மறுத்ததால் மூன்று வருடங்களைச் சிறையில் கழித்தவர்.

சத்தியத்தை நான் 15 வயதில் ஏற்றுக்கொண்டபோது என்னை அப்பா, அம்மா வீட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். ஆனால், யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற தீர்மானத்திலிருந்து நான் துளியும் தடுமாறவில்லை. 1964-⁠ல் ஒழுங்கான பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன். 1965 முதல் விசேஷ பயனியர் ஊழியத்தில் கால் வைத்தேன். அதோடு, செயின்ட்-ஆன்ட்ரி நகரிலும் சென்-பன்வா நகரிலும் இருந்த சபைகளை மேற்பார்வை செய்யும் பாக்கியத்தையும் பெற்றிருந்தேன். இந்த இரு சபைகளுக்கும் நானும் ஷான்-⁠க்ளோட் ஃப்யுயர்ஸி என்பவரும் தவறாமல் சைக்கிளில் சென்று வந்தோம். இவற்றில் முறையே 12 பிரஸ்தாபிகளும் 6 பிரஸ்தாபிகளும் இருந்தார்கள்.

1967-⁠ல், ராணுவ சேவை செய்ய அழைக்கப்பட்டேன். ஒரு கிறிஸ்தவனாக இருப்பதால் கையில் ஆயுதங்களை எடுக்க முடியாததை அதிகாரிகளிடம் விளக்கினேன். எனினும், ரீயூனியனில் இப்படி யாருமே இதுவரை மறுப்புத் தெரிவிக்காதிருந்ததால் அதிகாரிகள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை, என் நிலைநிற்கையையும் மதிக்கவில்லை. சொல்லப்போனால், புதிதாக படையில் சேர்ந்த சுமார் 400 ராணுவ வீரர்கள் முன்னால் ஓர் அதிகாரி என்னை அடித்தார்; அதனால் நொண்டி நொண்டி நடந்த என்னை அப்படியே தன் அலுவலக அறைக்கு இழுத்துச் சென்றார். தன் மேஜைமீது ராணுவ சீருடையை வைத்துவிட்டு அதை எடுத்து அணிந்துகொள்ளும்படி சொன்னார்; இல்லாவிட்டால் என்னை மீண்டும் அடிக்கப் போவதாக மிரட்டினார். கிட்டத்தட்ட ஆறடி உயரத்தில், வாட்டசாட்டமான அந்த அதிகாரி முன் நான் சின்னஞ்சிறியவனாய் இருந்தேன். ஆனாலும், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவரிடம், “பிரான்சு நாடு மத சுதந்திரத்திற்கு இடமளிப்பதால், நீங்கள் திரும்பவும் என்னை அடித்தால் நான் உங்கள்மீது சட்டப்படி வழக்குத் தொடுப்பேன்” என்று சொன்னேன். கோபாவேசத்தோடு என்னை நெருங்கியவர், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். பிறகு, உயர் அதிகாரியிடம் என்னை அழைத்துச் சென்றார்; பிரான்சிலுள்ள கடின உழைப்பு முகாமில் நான் மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவிக்கப் போவதாகச் சொன்னார்.

மூன்று ஆண்டுகள் கடின உழைப்பு முகாமில் இருந்தேன், ஆனால் பிரான்சில் அல்ல, ரீயூனியனில். கடின உழைப்பு முகாமில் வேலை ஒன்றும் அந்தளவுக்குக் கடினமானதாய் இருக்கவில்லை. எனக்குத் தண்டனை விதித்த பிறகு அந்த நீதிபதி என்னை அவருடைய அலுவலக அறைக்கு வரச் சொன்னார். புன்முறுவலுடன் அவர் கைகுலுக்கினார், எனக்காக அனுதாபப்பட்டார்; அவர் நீதிபதியாக இருப்பதால் சட்டப்படி செய்ய வேண்டியதையே செய்ததாகச் சொன்னார். உதவி சிறை அதிகாரியும்கூட சிநேகப்பான்மையுடன் பழகினார், நீதிமன்ற அறையில் வேலை செய்வதற்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். என் அப்பாவும் அம்மாவும் சபையிலிருந்து ஒருவரும் என்னைப் பார்க்க வந்ததால், நான் அவர்களைச் சந்திக்க பார்வையாளர்களுக்குரிய பகுதிக்குச் சென்றபோது அவரும் என்னுடன் வந்தார்.

ஆரம்பத்தில், 20 முதல் 30 பேர்வரை இருந்த அறையில் அடைக்கப்பட்டிருந்தேன்; பிறகு 2 பேர் இருக்கிற அறைக்கு மாற்றப்பட்டபோது எனக்கு அதிக சுதந்திரம் கிடைத்தது. எனக்கு ஓர் எலெக்ட்ரிக் லைட் வேண்டுமென கேட்டபோது, அது கிடைத்தது ஆச்சரியம்தான். கைதிகள் தற்கொலை செய்துகொள்ள எலெக்ட்ரிக் சாதனங்களைப் பயன்படுத்த வாய்ப்பிருப்பதால் பொதுவாக அவற்றைக் கொடுக்க மாட்டார்கள். அந்த லைட் கிடைத்ததால் பைபிளை வாசிக்க முடிந்தது, அதோடு, அக்கௌண்டிங்கை அஞ்சல் வழி கல்வி முறையில் படித்து முடிக்கவும் முடிந்தது. 1970-⁠ல் விடுதலையானபோது ஒரு நீதிபதி கனிவோடு எனக்கு வேலை வாங்கித் தந்தார்.

[பக்கம் 249-ன் பெட்டி]

புயல் காற்றுகளின் சீற்றம்

பிப்ரவரி 1962-⁠ல் ஜீனி என்ற புயல் காற்று ரீயூனியனையும் மொரிஷியஸையும் தாக்கியது; இவற்றைச் சூழ்ந்திருந்த இந்தியப் பெருங்கடலை வெண்நுரை கக்கும் ராட்சதனாக்கியது; இதனால் இத்தீவுகளின் கரையோரப் பகுதிகள், முக்கியமாக ரீயூனியனின் கரையோரப் பகுதிகள் வெள்ளக் காடாயின. இச்சீற்றத்தால் செயின்ட்-டெனிஸ் நகரில் கட்டடங்கள் சேதமடைந்தன, மரங்கள் இலைகளின்றி மொட்டையாய் நின்றன, தெருக்களிலோ முறிந்த கிளைகளின் குப்பைக்கூளங்களே நிறைந்திருந்தன. மின்கம்பங்கள் அபாயகரமாக வளைந்து நின்றன, மின்கம்பிகள் நிலத்தில் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருந்தன. அப்படியிருந்தும், அங்கிருந்த சிறிய ராஜ்ய மன்றத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படாதது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே. அந்தப் புயல் காற்றின் சீற்றத்தால் 37 பேர் உயிரிழந்தார்கள், 250 பேர் காயமுற்றார்கள், ஆயிரக்கணக்கானோர் வீடுவாசலை இழந்து நிர்க்கதியாய் நின்றார்கள். அந்தச் சமயத்தில், புயல் காற்றால் கடுமையாகத் தாக்கப்படாத மொரிஷியஸ் தீவில் நடந்த ஒரு மாநாட்டிற்குச் சகோதரர்கள் சென்றிருந்தார்கள். சில நாட்களுக்கு அவர்களால் வீடு திரும்ப முடியாவிட்டாலும் வேறு எந்தப் பாதிப்பும் இல்லாமல் அவர்கள் தப்பித்தது பெரிய விஷயம்!

2002-⁠ல் டைனா என்ற புயல் காற்றால் ஏற்பட்ட நிலச்சரிவால் சில்லாவோஸ் நகருக்குச் செல்லும் பாதை மூன்று வாரங்களுக்கு மறிக்கப்பட்டது. அங்கிருந்த 30 சகோதரர்களுக்குத் தேவையான பொருள்களை நான்கு சக்கர வாகனத்தில் ரீயூனியன் கிளை அலுவலகம் உடனடியாக அனுப்பி வைத்தது. அந்த வாகனம், போலீஸாரின் தலைமையில் வரிசையாகச் சென்ற 15 வாகனங்களோடு சேர்ந்து சென்றது. தளவரிசை போடப்பட்ட சாலைகளின் சில பகுதிகளைத் தண்ணீர் அடித்துக்கொண்டு போனதால் அந்த வாகனங்கள் ஆற்றுப்படுகையின் வழியே சென்று பின்னர் சாலையை அடைய வேண்டியிருந்தன; அவை கவிழ்ந்துவிடாதபடி கவனமாய்ச் செல்ல வேண்டியிருந்ததால் அது ஆபத்தான பயணமாய் இருந்தது. நிவாரணப் பொருள்களுடன் சென்ற வாகனம், சில்லாவோஸை அடைந்ததும் அங்கிருந்த சகோதரர்கள் பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

[பக்கம் 252, 253-ன் அட்டவணை/​வரைபடம்]

ரீயூனியன்​—⁠கால வரலாறு

1955 செப்டம்பரில் ராபர்ட் நிஸ்பட் வருகிறார்.

1960

1961 யெகோவாவின் சாட்சிகளில் ஒரு குடும்பத்தார் பிரான்சிலிருந்து வருகிறார்கள், சத்தியத்திடம் அநேகர் ஆர்வம் காட்டுவதைக் காண்கிறார்கள்.

1963 உலக தலைமை அலுவலகத்திலிருந்து வந்த எம். ஜி. ஹென்ஷல் 155 பேர் முன் பேச்சு கொடுக்கிறார்.

1964 ஊழியத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பு பிரான்சிலிருந்து மொரிஷியஸுக்கு மாற்றப்படுகிறது; உள்ளூரில் நடைபெற்ற முதல் வட்டார மாநாட்டில் 230 பேர் கலந்துகொள்கிறார்கள்.

1967 லா டேம்வின் டி ஷேயோவா என்ற பெயரில் சங்கம் சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப்படுகிறது.

1970

1975 காவற்கோபுர பத்திரிகைக்கு பிரான்சில் விதிக்கப் பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.

1980

1985 பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டுகிறது.

1992 பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டுகிறது. அலுவலகம், ஓர் அசெம்பிளி ஹால், ஒரு மிஷனரி இல்லம் ஆகியவற்றுக்காக ரீயூனியன் கிளை அலுவலகம் லா பாஸ்செஸ்யான் நகரில் இடத்தை வாங்குகிறது.

1996 துரிதக் கட்டுமான முறையில் முதல் ராஜ்ய மன்றம் கட்டி முடிக்கப்படுகிறது.

1998 புதிதாகக் கட்டப்பட்ட லா பாஸ்செஸ்யான் அசெம்பிளி ஹாலில் முதல் மாநாடு நடைபெறுகிறது.

2000

2006 ரீயூனியனில் சுமார் 2,590 பிரஸ்தாபிகள் ஊக்கமாய் செயல்படுகிறார்கள்.

[வரைபடம்]

(பிரசுரத்தைக் காண்க)

மொத்த பிரஸ்தாபிகள்

மொத்த பயனியர்கள்

3,000

2,000

1,000

1960 1970 1980 1990 2000

[பக்கம் 223-ன் முழுபக்க படம்]

[பக்கம் 224-ன் படம்]

1959, ரீயூனியனில் ஆடம் லீசீயாக் ஒரு மாதம் பிரசங்கித்தார்

[பக்கம் 224-ன் படம்]

1961, ரீயூனியனுக்குச் செல்லும் வழியில் நயேமீ டுயிரேவும், ஷானீன் பேகூவும் இவருடைய மகன் க்ரீஸ்டியானும்

[பக்கம் 227-ன் படம்]

1965, லா பார் ராஜ்ய மன்றம்

[பக்கம் 230-ன் படம்]

1965, ஊழியத்திற்குச் செல்ல வாடகைக்கு அமர்த்தப்பட்ட திறந்த அமைப்புள்ள பஸ்ஸுகள்

[பக்கம் 230-ன் படம்]

ஷோஸெட் பான்காஸ்

[பக்கம் 235-ன் படம்]

ஷானீன் காரீனா

[பக்கம் 235-ன் படம்]

1965, செயின்ட்-பாலில் பிரசங்கித்தல்

[பக்கம் 243-ன் படம்]

க்லேயா லாப்யர்

[பக்கம் 244, 245-ன் படங்கள்]

ல்வி நலோப், ஆன் நலோப் தம்பதியர் ஒதுக்குப்புற கிராமங்களில் பிரசங்கிப்பதும், வழியிலே கொய்யாப் பழங்களைச் சாப்பிடுவதும்

சீர்க் டா மாஃபாட்

[பக்கம் 248-ன் படம்]

1988, செயின்ட்-⁠ல்வியில் கட்டி முடிக்கப்பட்ட ராஜ்ய மன்றம்

[பக்கம் 251-ன் படங்கள்]

அசெம்பிளிகளும் மாவட்ட மாநாடுகளும்

1964, உள்ளூரில் ரெஸ்டராண்டின் மாடியில் நடத்தப்பட்ட முதல் வட்டார மாநாடு

கேவ் ஆஃப் த ஃபஸ்ட் ஃபிரெஞ்ச்மேன், மாவட்ட மாநாடு நடந்த ஓர் இடம்

1965, செயின்ட்-டெனிஸ், கூட்டங்களுக்குத் தற்காலிகமாக கூடிய இடம்