Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

லாட்வியா

லாட்வியா

லாட்வியா

லாட்வியாவின் தலைநகரான ரிகா நகரின் மையத்திலுள்ள ப்ரீவிபாஸ் தெருவில் (அல்லது, விடுதலை தெருவில்) 42 மீட்டர் உயரமுள்ள விடுதலை நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. 1935-⁠ல் திறந்துவைக்கப்பட்ட இந்தச் சின்னம், இந்நாடு விடுதலை பெற்றதற்கு அடையாளமாய்த் திகழ்கிறது. எனினும், 1920-கள் முதற்கொண்டு லாட்வியாவிலுள்ள மக்களுக்கு இதைவிடவும் சிறந்த விடுதலை கிடைத்து வருகிறது; அந்த விடுதலை பைபிள் சத்தியத்தை அறிந்துகொள்வதால் கிடைக்கிறது. அத்தகைய விடுதலையைப் பற்றி ஓர் அறிக்கை பின்வருமாறு குறிப்பிட்டது: “பொது மக்களில் . . . ஆண்களும் பெண்களும் ஆனந்தக் கண்ணீருடன் செய்தியை ஏற்றுக்கொள்கிறார்கள்.” பல பத்தாண்டுகளாக, அந்த அருமையான செய்தி பரவவிடாமல் தடுக்க எதிரிகள் முயற்சி செய்தார்கள், அதில் அவர்கள் ஓரளவு வெற்றியும் பெற்றார்கள். ஆனால், எல்லைகளுக்கு அப்பாற்பட்டு எங்கும் அதிகாரம் செலுத்தும் சர்வ வல்லவரை அல்லது அவருடைய குமாரனைத் தடுத்து நிறுத்த பூமியிலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது என்பதையே இந்தப் பதிவு காட்டப்போகிறது.​—வெளிப்படுத்துதல் 11:⁠15.

டியூட்டானிக் போர்வீரர்கள் 1201-⁠ல் ரிகா நகரை ஸ்தாபித்தார்கள்; அதுமுதல் சோவியத் கம்யூனிஸ சகாப்தம்வரை ஜெர்மனி, போலந்து, ரஷ்யா, சுவீடன் உட்பட எண்ணற்ற நாடுகள் லாட்வியாமீது படையெடுத்து அதன்மீது ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. 1918-⁠ல் முதன்முறையாக லாட்வியா சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டது. எனினும், 1940-⁠ல் அந்நாடு சோவியத் குடியரசாக மாறியது. 1991-⁠ல் மீண்டும் சுதந்திரம் பெற்று, லாட்விய குடியரசானது.

ஆம், இந்நாடு அரசியல் ரீதியில் சுதந்திரம் பெற்றிருந்தது, ஆனாலும் உண்மையான விடுதலையை அது அர்த்தப்படுத்துவதில்லை. மனிதருக்கு முற்றும் முழுமையான விடுதலையை யெகோவா மட்டுமே அளிக்க முடியும்; அவர் வாக்குறுதி அளித்திருக்கும் விடுதலை கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியில் அடங்கியுள்ள அற்புதமான அம்சமாகும். (லூக். 4:18; எபி. 2:15) லாட்வியாவை அந்த நற்செய்தி எப்படிச் சென்றெட்டியது? ஆன்ஸ் இன்ஸ்பர்க் என்ற மாலுமியின் ஜெபத்தோடு நற்செய்தி சென்றெட்டிய கதை ஆரம்பமாகிறது.

ஆன்ஸ் இவ்வாறு எழுதினார்: “நட்சத்திரங்கள் நிறைந்திருந்த ஓர் இரவு வேளையில் கடல் பயணத்தில் இருந்தபோது கர்த்தரிடம் என் இருதயத்தில் இருந்ததையெல்லாம் கொட்டினேன், அவரை ஆவியோடும் உண்மையோடும் வணங்கும் ஜனங்களிடம் என்னை வழிநடத்தும்படி வேண்டினேன். (யோவா. 4:24) என் சொந்த நாடான லாட்வியாவில் சர்ச்சுக்குப் போகிறவர்கள் போடும் வெளிவேஷத்தைப் பார்த்திருந்தேன், அவர்களோடு கூட்டுறவுகொள்ள நான் துளியும் இஷ்டப்படவில்லை. 1914-⁠ல் அமெரிக்காவிலுள்ள ஒஹாயோ, கிளீவ்லாண்ட் என்ற இடத்தில் ‘ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்’ என்ற இயங்கு படத்தைப் பார்த்தேன்; இது சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் என முன்பு அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் தயாரித்திருந்த பைபிள் சார்ந்த படமாகும். ஆம், என் ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது; நான் சத்தியத்தைக் கண்டுபிடித்தேன்! 1916, ஜனவரி 9-⁠ஆம் தேதி முழுக்காட்டுதல் பெற்றேன், பிரசங்க ஊழியம் செய்ய ஆரம்பித்தேன், கையில் காசு தேவைப்படும் சமயத்தில் கொஞ்ச நாட்களுக்கு மாலுமியாக வேலை செய்தேன்.”

முதல் உலகப் போருக்குப் பிறகு சீக்கிரத்திலேயே, லாட்வியா முழுவதும் ராஜ்ய செய்தியை ஆன்ஸ் இன்ஸ்பர்க் பிரசங்கித்திருந்தார். தன்னுடைய சொந்த செலவில், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்திகளை லாட்வியாவின் செய்தித்தாள்களில் அறிவித்தார். அந்த அறிவிப்புகளிலிருந்து கிராஸ்டினிஷ் என்ற ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் சத்தியத்தை அறிந்துகொண்டார்; இவரே லாட்வியாவில் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த முதல் பைபிள் மாணாக்கராக இருந்திருக்கலாம். 1922-⁠ல் சகோதரர் ஆன்ஸ் இன்ஸ்பர்க் நியு யார்க் நகரில், புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தின் அங்கத்தினராக ஆனார். அங்கிருக்கையில் அவர் தவறாமல் கப்பலில் சரக்கு ஏற்றி இறக்கும் இடத்திற்குச் சென்றார்; மற்ற கப்பல் மாலுமிகளுடன் பைபிள் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு “எனக்குப் பிடித்தமான பிரசங்க மேடை” என அதை அவர் விவரித்தார். 1962, நவம்பர் 30-ஆம் தேதி அவருடைய பூமிக்குரிய வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

வட ஐரோப்பிய கிளை அலுவலகம், டென்மார்க்கிலுள்ள கோபன்ஹாகனில் 1925-⁠ல் திறக்கப்பட்டது. எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய மூன்று பால்டிக் நாடுகளிலும் டென்மார்க், பின்லாந்து, நார்வே, சுவீடன் ஆகிய நாடுகளிலும் நடைபெறும் ஊழியத்தை அது மேற்பார்வை செய்தது. 1926, ஜூலை மாதம், பிரிட்டனைச் சேர்ந்த ரீஸ் டெய்லர் என்பவர் லாட்வியாவில் நடைபெறும் ஊழியத்தை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டார். அவர் ரிகாவில் ஓர் அலுவலகத்தை அமைத்தார், சிறிய மாநாடு ஒன்றையும் ஒழுங்கமைத்தார். அதற்கு வந்திருந்த 20 பேரில் 14 பேர் அந்நாட்டில் முதன்முறையாக வெளி ஊழியத்தில் கலந்துகொண்டார்கள். பிறகு, பொதுக் கூட்டங்களைச் சகோதரர்கள் நடத்த போலீஸாரின் அனுமதியைப் பெற்றார்கள், ரிகா, லிபாயா, யல்காவா ஆகிய நகரங்களில் 975 பேர் பைபிள் பேச்சுகளைக் கேட்டார்கள். ஜெர்மன் மொழியில் பேச்சு கொடுக்கப்பட்டது; இது, லாட்வியாவில் பேசப்படும் இரண்டாவது முக்கிய மொழியாகும். இது போன்ற கூட்டங்களை மீண்டும் நடத்தும்படி பலர் கேட்டுக்கொண்டார்கள்.

“ஜனங்களுக்கு விடுதலை”

1927, செப்டம்பர் மாதம், உலக தலைமை காரியாலயத்திலிருந்து வந்திருந்த ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு, “ஜனங்களுக்கு விடுதலை” என்ற தலைப்பில் கோபன்ஹாகனில் கொடுத்த பொதுப் பேச்சைக் கேட்க எஸ்டோனியா, லாட்வியா, ஸ்கான்டிநேவியா ஆகிய இடங்களிலிருந்து சுமார் 650 பேர் வந்திருந்தார்கள். அதற்கு அடுத்த வருடம் அதே தலைப்பில் லாட்வியன் மொழியில் ஒரு சிறுபுத்தகம் மொழிபெயர்க்கப்பட்டது; அதை வினியோகிப்பதில் கால்போர்ட்டர்கள், அதாவது பயனியர்கள், முன்னணியில் இருந்தார்கள்.

ஊழியத்தில் உதவுவதற்காக ஜெர்மனியிலிருந்து வந்த சகோதரர்களில் பத்துப் பேராவது அந்த ஆரம்ப கால பயனியர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். அவர்களில் ஒருவர் 22 வயதான யோஹான்னஸ் பர்கா என்பவர். அவர் இவ்வாறு எழுதினார்: “ஊழியம் செய்ய தங்களுக்கு நியமிக்கப்பட்ட நகரத்திற்கு பயனியர்கள் போனவுடன் செய்த முதலாவது காரியம் பொதுப் பேச்சுகளைக் கொடுப்பதுதான். இதனால் கிட்டத்தட்ட லாட்வியாவிலுள்ள எல்லா நகரங்களிலும் நாங்கள் பேச்சுகளைக் கொடுத்தோம். ஸ்லுயாகா நகரத்தில் ஒரு திரை அரங்கை வாடகைக்கு எடுத்தோம்; குளிர்காலத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் அங்கு நான் பேச்சுகளைக் கொடுத்தேன். தொலைதூரத்தில் இருந்தெல்லாம் தங்களுடைய குட்டிக் குதிரைகளில் சவாரிசெய்து ஜனங்கள் வந்தார்கள்.” அந்த நாட்களை எண்ணிப் பார்த்து அவர் இவ்வாறு சொன்னார்: “எனக்கு அந்தளவுக்குப் படிப்பறிவு இல்லாதபோதிலும், கடவுளுடைய சேவையில் அருமையான காரியங்களைச் செய்யும் பாக்கியம் பெற்றிருந்தேன்.”

1928-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றிருந்த 15 பேர் உட்பட, சுமார் 40 ராஜ்ய பிரஸ்தாபிகள் பிரசங்க ஊழியத்தில் கலந்துகொண்டார்கள். 1929-⁠ல், ரிகாவிலுள்ள ஷார்லாடிஸ் தெருவுக்கு அலுவலகம் மாற்றப்பட்ட அந்த வருடத்தில், இன்னும் ஒன்பது பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள், 90,000-⁠க்கும் அதிகமான புத்தகங்களும் சிறுபுத்தகங்களும் வெளி ஊழியத்தில் வினியோகிக்கப்பட்டன.

1927-⁠லேயே, ஃபெர்டினான்ட் ஃப்ருக் என்ற வாலிபரும் அவருடைய அம்மா ஈமைலியும் முழுக்காட்டுதல் பெற்றார்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தன் சொந்த ஊரான லிபாயாவிலுள்ள ஒரு பேக்கரியில் ஃபெர்டினான்ட் சாட்சிகொடுக்கும்போது தன் வருங்கால பயனியர் பார்ட்னரைக் கண்டுபிடித்தார். அந்த பேக்கரிக்காரர் அடுத்திருந்த சலூனுக்கு விரைந்தோடினார்; அது அவருடைய அண்ணனுடையது. “ஹைன்ரிக்! என் கடைக்கு சீக்கிரம் வா! யாரோ ஒருவர் வந்து நம்பவே முடியாத ஏதேதோ சொல்கிறார்” என அழைத்தார். சலூன் வைத்திருந்த ஹைன்ரிக் ட்சிக்குக்கோ பைபிள் சத்தியங்கள் நம்ப முடியாதவையாய் இருக்கவில்லை, அவர் சீக்கிரத்தில் முழுக்காட்டுதல் பெற்றார். ஃபெர்டினான்ட்டுடன் இவரும் சேர்ந்துகொண்டு, இருவருமாய் ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்க சைக்கிளிலேயே அநேக நகரங்களுக்குச் சென்றார்கள்.

திடீரென கிளம்பிய எதிர்ப்பு

சகோதரர்கள் கொஞ்சம் பேரே இருந்தபோதிலும் அவர்கள் காட்டிய பக்தி வைராக்கியம் மதகுருமாரின் கோபத்தைக் கிளறிவிட்டது. சொல்லப்போனால், ரிகாவிலிருந்த பிரபல மதகுரு ஒருவர், பைபிள் மாணாக்கர்களின் கூட்டங்களில் யார் கலந்துகொண்டாலும் அவர்களைச் சர்ச்சிலிருந்து விலக்கி வைக்கப்போவதாகப் பயமுறுத்தினார். லிபாயாவில் மதகுருமார் துண்டுப்பிரதிகளை வினியோகித்தார்கள்; அதில், சகோதரர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்கள் என்று குற்றஞ்சாட்டி, அவர்களது பிரசுரங்களைப் பொதுமக்கள் வாங்கிக்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்கள். பைபிள் மாணாக்கர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்ல சர்ச்சின் பிரபல செய்தித்தாளையும் பயன்படுத்தினார்கள்.

1929-⁠ல் சர்ச்சின் வற்புறுத்தலுக்கு அரசு அடிபணிந்தது, ஜெர்மனியிலிருந்து வந்திருந்த கால்போர்ட்டர்களை லாட்வியாவிலிருந்து வெளியேற்றியது. 1931-⁠ற்குள் பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான புத்தகங்கள் தடைசெய்யப்பட்டன. இத்தகைய தாக்குதல்களைக் கண்டு சகோதரர்கள் பயந்துபோய் ஊழியம் செய்வதை நிறுத்திவிட்டார்களா? லாட்வியாவிலுள்ள அலுவலகம் இவ்வாறு எழுதியது: “பிசாசின் எதிர்ப்பு, இன்னும் அதிக விசுவாசத்தைக் காட்டவே எங்களைத் தூண்டிவிட்டது. இங்கே ஊழியம் செய்வது எங்களுக்கு உண்மையிலேயே சந்தோஷத்தைத் தருகிறது . . . , ஊழியத்தை தொடர்ந்து செய்வதற்கு நாங்கள் தீர்மானமாய் இருக்கிறோம்.”

1931-⁠ல் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரர்களில் பலர், பால்டிக் நாடுகளுக்குப் போய் பயனியர் ஊழியம் செய்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். இவர்களில் சிலர், லாட்வியாவின் அண்டை நாடுகளான எஸ்டோனியாவிலிருந்தும் லிதுவேனியாவிலிருந்தும் ஆன்மீக உணவை எடுத்து வருவதில் உதவினார்கள். லிதுவேனியாவில் ஊழியம் செய்வதற்கு அப்போது 18 வயதாக இருந்த எட்வின் ரிஜ்வெல் நியமிக்கப்பட்டார். இப்போது அவருக்கு 90 வயதுக்கு மேல் ஆகிவிட்டது; அவர் அந்த நாட்களை நினைத்துப் பார்த்து இவ்வாறு சொல்கிறார்: “ஊழியத்தில் என் பார்ட்னர்களாக இருந்த ஆன்ட்ரூ ஜேக், ஜான் சிம்பி ஆகிய இருவருக்கும் எனக்கும் விசேஷ பொறுப்பு கொடுக்கப்பட்டது; அது, லாட்வியாவுக்குப் பிரசுரங்களை எடுத்து வரும் பொறுப்பு. நாங்கள் இரவுநேர ரயிலில் ரிகாவுக்குப் பயணித்தோம்; பகல் நேரத்தில் இருக்கைகளுக்கு அடியே படுக்கைகள் வைக்கப்படும் இடத்தில் பிரசுர பார்சல்களை மறைத்து வைக்க வசதியாக அதே அளவுள்ள பார்சல்களை எடுத்து வந்தோம். ரயிலிலிருந்து இறங்குவதற்கு முன்பாக, விரிந்துகொடுக்கும் தன்மையுடன் விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட சூட்கேஸுகளில் சில துணிமணிகளோடு சேர்த்து அந்த பார்சல்களை அடுக்கினோம். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பத்திரமாய் பார்சலைக் கொண்டுபோய் சேர்த்த ஒவ்வொரு முறையும் அதை மகிழ்ந்து கொண்டாடினோம். ஊழியத்தை மேற்பார்வை செய்து வந்த பர்ஸீ டன்னம் என்பவர் இரவு விருந்துக்காக ரிகாவிலுள்ள ரெஸ்டராண்டுக்கு எங்களை அழைத்துப் போவது வழக்கம்.”

ஃபெர்டினான்ட் ஃப்ருக், லிதுவேனியாவின் எல்லையில் சகோதரர்களைப் போய் அடிக்கடி சந்தித்தார். அவர்கள் பிரசுரங்களை அவரிடம் கொடுத்து அனுப்பினார்கள்; அவற்றை அவர் தன்னுடைய களஞ்சியத்திலிருந்த பரண்மீது வைக்கோலுக்கு அடியில் மறைத்து வைத்தார். எனினும், அவருடைய நடவடிக்கைகள் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது; அதன் பிறகு தடைசெய்யப்பட்ட பிரசுரங்கள் இருக்கின்றனவா என்பதை அறிய போலீஸார் அடிக்கடி வந்து அவருடைய வீட்டை சோதனை போட்டார்கள். இப்படி ஒருமுறை சோதனை போட வந்தபோது, பரண்மீது ஏற அந்த அதிகாரி விரும்பாததால் தனக்குப் பதிலாக ஃபெர்டினான்டையே ஏறிப் பார்க்கச் சொன்னார்! அந்த அதிகாரியைத் திருப்திப்படுத்துவதற்காக, ஃபெர்டினான்ட் பழைய காவற்கோபுர பத்திரிகைகள் சிலவற்றோடு கீழே இறங்கி, அவற்றை அவரிடம் கொடுத்தார். திருப்தி அடைந்த அந்த அதிகாரி அங்கிருந்து போய்விட்டார்.

எதிர்ப்பின் மத்தியிலும் முன்னேற்றம்

மேற்குறிப்பிடப்பட்ட, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பர்ஸீ டன்னம், லாட்வியாவில் ஊழியத்தை மேற்பார்வை செய்யும்படி 1931-⁠ல் நியமிக்கப்பட்டார். 1914-⁠க்கு முன்பிருந்தே பைபிள் மாணாக்கராய் இருந்து வந்த பர்ஸீயினுடைய ஊழிய அனுபவம் கைகொடுத்தது. 1931-⁠ன் பிற்பகுதியில் லாட்வியா அலுவலகம் இவ்வாறு எழுதியது: “பொருளாதார ரீதியில் ஏழையாக இருந்தாலும், கடவுளுக்குக் காட்டும் விசுவாசத்தில் செல்வந்தராய் இருக்கும் ஆட்களால், கஷ்டங்களின் மத்தியிலும் ஊழியம் செய்யப்பட்டு வருகிறது. . . . நம்முடைய செய்திக்கு பெருமளவு ஆர்வம் காட்டப்படுகிறது. . . . வாராவாரம் அலுவலகத்திற்கு ஆட்கள் வந்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள், வேறு புத்தகங்கள் எப்போது வருமென விசாரிக்கிறார்கள்.” பிறகு, தேவராஜ்ய முன்னேற்றத்தில் மிக முக்கிய மைல்கல்லைக் குறித்து அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது: “ரிகாவில் நடந்த சமீபத்திய கூட்டத்தில், கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுத்திருக்கும் [யெகோவாவின் சாட்சிகள் என்ற] புதிய பெயரைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தை ஏகமனதோடு நிறைவேற்றினோம்.”

1932-⁠ல், ரிகாவிலுள்ள ட்ஸிசு தெருவுக்கு அலுவலகம் மாற்றப்பட்டது. அதே வருடத்தில், மார்க்கரெட் (மாஜ்) ப்ரௌன் என்பவர் லாட்வியாவுக்கு வந்து பர்ஸீ டன்னம்மை மணந்துகொண்டார்; ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மார்க்கரெட் அயர்லாந்தில் பயனியராக ஊழியம் செய்து வந்தவர்; இவர் 1923-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றவர். இதற்கிடையில் ஊழியத்திற்குத் தீவிர எதிர்ப்பு கிளம்பியது. மாஜ் இவ்வாறு எழுதுகிறார்: “1933, பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியான ரிகா செய்தித்தாள் எங்களை கம்யூனிஸ்ட்டுகள் எனக் குற்றம்சாட்டியது. மறுநாள் காலை அழைப்புமணி சத்தம் கேட்டு போய் கதவைத் திறந்தபோது, கையில் துப்பாக்கிகளோடு போலீஸார் திடுதிப்பென உள்ளே நுழைந்து, ‘ஹேண்ட்ஸ் அப்!’ என கோபத்தில் கத்தினார்கள். தடைசெய்யப்பட்டுள்ள புத்தகங்கள் இருக்கின்றனவா என்பதை அறிய ஏழு மணிநேரம் வீட்டைச் சோதனையிட்டார்கள். மதிய உணவு வேளையில் அவர்கள் குடிப்பதற்கு டீ கொடுத்தேன், வாங்கிக்கொண்டார்கள்.

“சபைக்குரிய முக்கியமான பிரசுரங்கள் வீட்டின் மாடியிலிருந்த சிறிய அறையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக தலைமை போலீஸ் அதிகாரி என் கணவருடைய பாக்கெட்டுகளைச் சோதனையிட்டபோது சாவிகள் சிலவற்றைக் கண்டுபிடித்தார். ‘இவை எதற்குரியவை?’ என அவர் கேட்டார். ‘மேலிருக்கும் சிறிய அறைக்குரியவை’ என பர்ஸீ பதில் அளித்தார். ஆனாலும், போலீஸார் மேலே போய் பார்க்கவே இல்லை. சொல்லப்போனால், புறப்பட்டுச் செல்வதற்கு முன்பாக அவர் அந்தச் சாவிகளை பர்ஸீயிடமே கொடுத்துவிட்டார்! அவர்கள் சில பிரசுரங்களை ஆராய்ந்து பார்த்தபோதிலும், அவை பறிமுதல் செய்வதற்குரியவை அல்லவென சொல்லிவிட்டார்கள்.

“ஆனாலும், அவற்றையும் சில கடிதங்களையும், கொஞ்சம் பணத்தையும், நகலெடுக்கும் ஓர் இயந்திரத்தையும், ஒரு டைப்ரைட்டரையும் அவர்கள் பறிமுதல் செய்தார்கள். லாட்வியாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் ஆறு பேருடைய வீடுகளுக்கும் சென்று போலீஸார் சோதனையிட்டார்கள்; ஆனால், குற்றவாளி எனத் தீர்க்கும் அளவிற்கு எந்தத் தடயத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, எந்தக் குற்றச்சாட்டையும் அவர்களால் சுமத்த முடியவில்லை.”

அந்தச் சமயத்தில் நாடு முழுவதிலும் 50 ராஜ்ய பிரஸ்தாபிகள்கூட இருக்கவில்லை. ஆனாலும், அங்கீகாரம் பெறுவதற்கு சகோதரர்கள் சட்டப்படி பதிவுசெய்ய அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார்கள். 1933, மார்ச் 14-ஆம் தேதி சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் அமைப்பு என்ற பெயரில் சட்டப்படி பதிவுசெய்யப்பட்டபோது அவர்கள் எந்தளவு குதூகலம் அடைந்திருப்பார்கள் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்! பைபிள் பிரசுரங்களை வேறு நாடுகளிலிருந்து தருவிக்க அவர்களுக்கு அனுமதி கிடைக்காதபோதிலும், சட்டப்படி அங்கீகாரம் பெற்றிருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, சிறுபுத்தகங்கள் சிலவற்றை உள்ளூரில் அச்சிட்டார்கள். பலரும் பாராட்டும் எழுத்தாளரும், ரீட்ஸ் செய்தித்தாளின் பதிப்பாளருமான அலிக்சான்டர் கிரின்ஸ் என்பவர் லாட்வியன் மொழியில் பிரசுரங்களை மொழிபெயர்த்தார்.

அங்கீகாரம்​—⁠நீடிக்கவில்லை

மே 1934-⁠ல், அரசாங்கம் கவிழ்க்கப்பட்டபோது ராணுவ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. சத்தியத்தை எதிர்த்தவர்கள், ஆட்டம்கண்ட இந்த அரசியல் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு கடவுளுடைய ஜனங்களை கம்யூனிஸ்ட்டுகள் என குற்றம்சாட்டினார்கள். ஜூன் 30-⁠ஆம் தேதி, சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் சங்கத்தை உள்துறை அமைச்சர் இழுத்து மூடிவிட்டார்; கொஞ்சம் பணத்தையும், 40,000-⁠க்கும் அதிகமான புத்தகங்களையும் சிறுபுத்தகங்களையும் பறிமுதல் செய்தார். பின்னர் இந்தச் சங்கத்தின் கணக்குவழக்குகளைத் தீர்ப்பதற்கு மதகுருமார் நியமிக்கப்பட்டார்கள்! மீண்டும் சட்டப்படி பதிவுசெய்வதற்குக் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன.

1939-⁠ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது; 1940, ஜூன் மாதம் ரஷ்ய ராணுவம் லாட்வியாவுக்குள் நுழைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் USSR-⁠ன் 15-வது குடியரசாக லாட்வியா மாறியது; லாட்வியன் சோவியத் சோஷியலிஸ்ட் ரிப்பப்ளிக் என அதற்குப் பெயர்சூட்டப்பட்டது. அக்டோபர் 27-ஆம் தேதி லாட்வியாவையும் அங்குள்ள அன்பான சகோதர சகோதரிகளையும் விட்டுப் பிரிய வேண்டிய நிலை டன்னம் தம்பதியருக்கு ஏற்பட்டது. ஆஸ்திரேலியா கிளை அலுவலகத்தில் சேவை செய்ய அவர்கள் ஊழிய நியமிப்பைப் பெற்றார்கள். அங்கு அவர்களுடைய பூமிக்குரிய வாழ்க்கை முடிவுக்கு வந்தது; அதாவது, 1951-⁠ல் பர்ஸீயும் 1998-⁠ல் மாஜும் இறந்துபோனார்கள்.

அலுவலகம் இழுத்து மூடப்பட்டது, சகோதரர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டது, போரினால் விளைந்த கஷ்டங்கள், அதன் பிறகு பல பத்தாண்டு கால கம்யூனிஸ ஆட்சியால் ஏற்பட்ட அல்லல்கள் என எல்லாம் சேர்ந்து ஊழியத்தைப் பெருமளவு பாதித்தன. உண்மைதான், 1990-⁠களின் ஆரம்பத்தில்தான் ஒருவழியாக சகிப்பின்மை எனும் கொடூரமான கால் விலங்குகள் அகற்றப்பட்டன.

உண்மையுள்ள ஊழியர்களுக்கு யெகோவா ஆறுதல் அளிக்கிறார்

இரண்டாம் உலகப் போரின்போது, லாட்வியாவில் சின்னஞ்சிறிய தொகுதியாய் இருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு தலைமை காரியாலயத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாதிருந்தது. எனினும், ‘தேவவசனத்தினால் உண்டாகும் . . . ஆறுதலினால்’ அவர்களுடைய நம்பிக்கைச் சுடர் அணையாதிருந்தது. (ரோ. 15:4) போருக்குப் பிறகு 1940-களின் பிற்பகுதியில், யல்காவா, குல்டீகா, ரிகா, வென்ட்ஸ்பில்ஸ் ஆகிய நகரங்களிலுள்ள சில சகோதரர்களுக்கு ஜெர்மனி கிளை அலுவலகம் ஒருவழியாக கடிதங்களை அனுப்பி வைக்க முடிந்தது.

ரிகாவுக்கு மேற்கே 160 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குல்டீகா நகரில் 20 வருடங்களாக சத்தியத்தில் இருக்கும் எர்னஸ்ட்ஸ் க்ருன்ட்மானிஸ் என்பவர் உண்மையிலேயே காலத்துக்கேற்ற ஆன்மீக உணவளித்த அநேக கடிதங்களை ஜெர்மனியிலிருந்து பெற்றுக்கொண்டார். அவற்றில் ஒரு கடிதம் இவ்வாறு குறிப்பிட்டது: “எல்லாவற்றிலும் நம் அருமையான தகப்பனாகிய யெகோவா தேவன்மீது நம்பிக்கையாய் இருங்கள். ஏற்ற சமயத்தில் அவர் உங்களை ஆதரிப்பார், பலப்படுத்துவார்.” பிறகு அந்தக் கடிதத்தில் 2 நாளாகமம் 16:9 மேற்கோள் காட்டப்பட்டிருந்தது; அது சொல்வதாவது: “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.” இத்தகைய கடிதங்கள் எவ்வளவாய் காலத்துக்கேற்றதாயும் உற்சாகம் அளிப்பதாயும் இருந்தன!

சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் சகோதரர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். உதாரணத்திற்கு, மார்ட்டா பால்டுயானி என்பவர் வென்ட்ஸ்பில்ஸ் நகரிலுள்ள உடல்நல மையம் ஒன்றில் மசாஜ் வேலை செய்து வந்தார்; தன்னுடைய வாடிக்கையாளரான அலெக்சான்ட்ரா ப்ரிக்லான்ஸ்காயா (தற்போது ரெஸவ்ஸ்கிஸ்) என்பவரிடம் சாட்சிகொடுத்தார். அலெக்சான்ட்ரா நினைவுபடுத்தி இவ்வாறு சொல்கிறார்: “கடவுளுடைய பெயர் யெகோவா என மார்ட்டா சொல்லிக் கொடுத்தார், எனக்கு அந்தப் பெயர் ரொம்பவே பிடித்துவிட்டது.”

1880-⁠ல் பிறந்த அலெக்சான்ட்ராவின் அப்பாவான பீட்டரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். தன் அப்பாவைப் பற்றி அலெக்சான்ட்ரா இவ்வாறு எழுதுகிறார்: “1917-⁠ஆம் ஆண்டின் புரட்சிக்கு முன்பாக அப்பா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்; அவர் [1914 முதல் 1924 வரை பெட்ரோகிராட் என்றும் 1924 முதல் 1991 வரை லெனின்கிராட் என்றும் அழைக்கப்பட்ட] செயி. பீட்டர்ஸ்பர்க்கில் வசித்து வந்தார். எனினும், அந்தப் புரட்சியில் அப்பா எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், அவர் கட்சி அங்கத்தினருக்குரிய அட்டையைத் திருப்பிக் கொடுத்துவிட்டார், அதனால் அந்த நகரத்திலிருந்தே அவர் வெளியேற்றப்பட்டார். அவர் லாட்வியாவுக்கு வந்தார், அப்போது மார்ட்டாவுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தேன். நேர்மை தவறாதவரும், கனிவு மாறாதவருமான அப்பா உடனடியாக சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். 1951-⁠ல் அவர் ரஷ்யாவுக்குத் திரும்பிச் சென்றார்; இந்தச் சமயத்திலோ விசுவாசத்தின் கைதியாகச் சென்றார். 1953-⁠ல் அவர் சைபீரியாவில் இறந்துபோனார்.”

சைபீரியாவுக்கு நாடுகடத்தப்படுதல்

சோவியத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பிற நாடுகளைப் போலவே, லாட்வியாவில் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கமும் சோவியத் நாட்டின் தராதரங்களுக்கு இசைய கலாச்சார, அரசியல் நிறுவனங்கள் அனைத்தையும் வடிவமைக்கத் தொடங்கியது. கம்யூனிஸ்ட்டுகள் தனியார் வசமிருந்த பண்ணைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, அவற்றையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ஆட்களை திடீர் திடீரென நாடுகடத்தினார்கள்; இவ்வாறு நாடுகடத்துவது 1949-⁠ல் உச்சக்கட்டத்தை எட்டியது. இதனால் சுமார் 1,00,000 லாட்வியர்கள் சைபீரியா உட்பட ரஷ்யாவின் வட பகுதிக்கு நாடுகடத்தப்பட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கம்யூனிஸ்ட்டுகளின் கவனம் யெகோவாவின் சாட்சிகள் பக்கம் திரும்பியது; ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானோரில், லாட்வியாவில் மீதமாயிருந்த சுமார் 30 யெகோவாவின் சாட்சிகளில் 20 பேராவது இருந்திருப்பார்கள்.

1950, செப்டம்பரில் நடந்த அதிரடி சோதனையின்போது, வென்ட்ஸ்பில்ஸ் நகரைச் சேர்ந்த வலியா லாங்கி என்பவரை KGB (சோவியத் அரசு பாதுகாப்புக் குழு) கைதுசெய்தது; அப்போது அவர் முழுக்காட்டுதல் பெறாதவராய் இருந்தார். ரிகாவில் நடந்த நள்ளிரவு குறுக்கு விசாரணையின்போது அவரிடம் இவ்வாறு கேட்கப்பட்டது: “சோவியத் யூனியனின் பிரஜையாக இருந்துகொண்டு ஏன் அரசுக்கு எதிராக செயல்படுகிறாய்?” வலியா அமைதியாக, மரியாதையோடு இவ்வாறு பதில் அளித்தார்: “யெகோவா தேவனுக்குச் சேவை செய்வதும், அவருடைய போதனைகளைப் புரிந்துகொள்வதும், மற்றவர்களிடம் அதைப் பகிர்ந்துகொள்வதும் மட்டுமே என் இலட்சியம்.”

1950, அக்டோபர் 31 தேதியிட்ட ஆவணத்தில் மற்ற 19 யெகோவாவின் சாட்சிகளின் பெயரோடு வலியாவின் பெயரும் காணப்பட்டது. ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அனைவருக்கும் சைபீரியாவில் பத்தாண்டு கால கடின உழைப்பு முகாமில் தண்டனை வழங்கப்பட்டிருந்தது, அவர்களுடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட சிலர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்கள். உதாரணத்திற்கு, பவுலினி சிராவா என்பவர் தபால் மூலம் பைபிள் பிரசுரங்களைப் பெற்றுவந்தது அதிகாரிகளுக்குத் தெரிய வந்தபோது மீண்டும் நான்கு ஆண்டுகள் சைபீரியாவுக்கு அவர் அனுப்பப்பட்டார்.

கடின உழைப்பு முகாம்களில் சகோதரர்கள் தொடர்ந்து பிரசங்கித்துக்கொண்டும், சீஷராக்கிக்கொண்டும் வந்தார்கள்; அப்படிச் சீஷரானவர்களில் ஒருவர் யானிஸ் கர்ஷ்கைய்ஸ் ஆவார். 1956-⁠ல் முழுக்காட்டுதல் பெற்ற இவர் தற்போது வென்ட்ஸ்பில்ஸில் வசித்து வருகிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “கடின உழைப்பு முகாமுக்குச் செல்லும்படி கடவுள் என்னை அனுமதித்ததற்காக நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்; அப்படி மட்டும் அவர் அனுமதித்திராவிட்டால் சத்தியத்தை நான் கற்றுக்கொண்டிருந்திருக்கவே மாட்டேன்.” பாராட்ட வேண்டிய மனப்பான்மை!

லாட்விய பிரஜையான டெக்லா ஆன்ட்ஸ்குலி, அரசுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டார். ஒதுக்குப்புறத்திலிருந்த ஓம்ஸ்க் நகரில், நாடுகடத்தப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து அவர் சத்தியத்தைத் தெரிந்துகொண்டார். “நான் முழுக்காட்டுதல் எடுத்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அது, ஐஸ்போல் குளிர்ந்த தண்ணீரில் நட்டநடு ராத்திரியில் கொடுக்கப்பட்டது. அந்தக் குளிர் தாங்க முடியாமல் உடலே நடுங்க ஆரம்பித்தது, ஆனாலும் சந்தோஷமாகவே இருந்தது” என்று டெக்லா சொல்கிறார். 1954-⁠ல் அலிக்ஸியே ட்காச் என்ற சகோதரரை டெக்லா மணந்தார்; 1948-⁠ல் தற்போது மால்டோவா என்றழைக்கப்படும் மால்டேவியாவில் முழுக்காட்டுதல் பெற்ற இவர், பின்னர் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். 1969-⁠ல் இந்தத் தம்பதியரும் யெகோவாவின் சாட்சிகளில் இன்னும் சிலரும் லாட்வியாவுக்குத் திரும்பினார்கள். லாட்வியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டிருந்தவர்களில் சாட்சிகள் அல்லாத பெரும்பாலோர் முகாம்களிலேயே இறந்துவிட்டார்கள் என்பது வருத்தமான விஷயம்.

வீடு திரும்புவதும் KGB-யிடம் தப்புவதும்

யெகோவாவின் சாட்சிகளில் சிலர் கைதுசெய்யப்படாமல் தப்பினார்கள். அலெக்சான்ட்ரா ரெஸவ்ஸ்கிஸ் இவ்வாறு எழுதுகிறார்: “ஒரே இடத்தில் இருக்காமல் மாறி மாறி வெவ்வேறு பண்ணைகளில் வேலை செய்துகொண்டு, KGB-யின் கைகளில் சிக்காதிருந்ததால் நாடுகடத்தப்படாமல் தப்பினேன். இதற்கிடையில், நான் சந்திக்கும் எல்லாரிடமும் பிரசங்கித்து வந்தேன். சொல்வதை ஜனங்கள் காதுகொடுத்துக் கேட்டார்கள், சிலர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்.” லாட்வியாவில் அங்கும் இங்கும் சிதறியிருந்த சாட்சிகள் சிலரைக் கண்டுபிடிப்பதில் KGB ஏஜென்டுகள் தீவிரம் காட்டினார்கள்; சோவியத்தின் எதிரிகள் என அவர்களைக் குற்றம்சாட்டினார்கள். யெகோவாவின் சாட்சிகளை அமெரிக்க ஒற்றர்கள் என பொய்க் குற்றம்சாட்டும் ஒரு புரோஷரையும்கூட மக்கள் மத்தியில் அரசு வினியோகித்தது. காட்டிக்கொடுக்கும் கம்யூனிஸ்ட்டுகளால் சதா கண்காணிக்கப்பட்டதால் சகோதரர்கள் எச்சரிக்கையுடன் பிரசங்கிக்கவும், வெவ்வேறு இடங்களில் இரகசியமாகக் கூட்டங்களை நடத்தவும் வேண்டியிருந்தது.

கார்லிஸ் ரெஸவ்ஸ்கிஸ் என்பவரை அலெக்சான்ட்ரா மணந்துகொண்ட பிறகு, இவர்கள் இருவரும் கார்லிஸின் பெற்றோருக்குச் சொந்தமான ஒரு வீட்டில் குடியேறினார்கள். ரிகாவிலிருந்து 68 கிலோமீட்டர் தொலைவில், டுகும்ஸ் என்ற நகரத்திற்கு அருகே இருந்த காட்டில் தனித்திருந்த அந்த வீடு குளிர் காலத்தில் கூட்டங்களை நடத்துவதற்கு வசதியான இடமாய் அமைந்தது. டீடா கிராஸ்பர்கா (முன்னர் டீடா அன்ட்ரிஷ்கா) நினைவுபடுத்தி இவ்வாறு சொல்கிறார்: “நான் குழந்தையாக இருந்தபோது ரெஸவ்ஸ்கிஸ் குடும்பத்தினரின் வீட்டில் நடந்த கூட்டங்களுக்கு என் குடும்பத்தார் சென்றுகொண்டிருந்தார்கள். டுகும்ஸுக்குச் செல்வதற்கு முதலாவது பஸ்ஸிலும், அடுத்து பனிபடர்ந்த காட்டின் வழியாக நடந்தும் செல்ல வேண்டியிருந்தது; அந்தப் பயணம் பரபரப்பூட்டும் அனுபவமாய் இருந்தது. கடைசியில், அந்த வீட்டிற்குள் நுழைந்ததும், அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் சுவையான சூப்பின் வாசனை பொதுவாக எங்களை வரவேற்கும்.”

பிரசுரங்களை கார்லிஸ் காட்டில் ஒளித்து வைப்பார். ஒரு சமயம், அவர் இரண்டு பைகள் நிறைய புத்தகங்களைப் புதைத்துவிட்டு, அந்த இடத்தில் கவனமாய் அடையாளக் குறியிட்டு வைத்தார். ஆனால், அந்த இரவு கடும் புயல் வீசியதால் அது அந்த அடையாளக் குறியை சுவடுதெரியாமல் அழித்துவிட்டது. அந்தப் பைகளைக் கண்டுபிடிக்க கார்லிஸ் பெரும்பாடுபட்டார், ஆனால் கிடைக்கவே இல்லை. இன்றுவரை அந்தக் காட்டுக்குள் அவை எங்கோ புதையுண்டு கிடக்கின்றன.

வெயில் காலத்தில் சகோதரர்கள் காட்டில் ஏரிகளுக்குப் பக்கத்திலோ கடற்கரையிலோ கூட்டங்களை நடத்தினார்கள். பிற சோவியத் நாடுகளில் செய்யப்பட்டதைப் போலவே, திருமண வைபவங்கள், சவ அடக்கங்கள் போன்ற சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பைபிள் அடிப்படையிலான பேச்சுகளைக் கொடுத்தார்கள். 1960-களிலும் 1970-களிலும் சில்வர் சில்லிக்சார், லெம்பிட் டோம், வில்யார்ட் கார்னா உட்பட எஸ்டோனியாவிலிருந்தும் சகோதரர்கள் லாட்வியாவுக்குத் தவறாமல் வந்து பேச்சுகளைக் கொடுத்தார்கள், பிரசுரங்களை எடுத்து வந்தார்கள், ஊழிய அறிக்கைகளைச் சேகரித்துச் சென்றார்கள்; அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் 25 பேர் அறிக்கை செய்தார்கள். முக்கியமாய், ரஷ்ய மொழியில் காவற்கோபுர பத்திரிகையைப் பெற்றுக்கொள்வதில் உள்ளூர் சகோதரர்கள் சந்தோஷப்பட்டார்கள்; இப்பத்திரிகையை பவுல்ஸ், வலியா பெர்க்மானிஸ் தம்பதியர் லாட்வியன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார்கள்.

“எங்களிடம் ஒரேவொரு காவற்கோபுரம்தான் இருந்தது”

1970-களிலும் 1980-களிலும் ரஷ்யாவில் நுண்படத் தகட்டில் (microfilm) தயாரிக்கப்பட்டு, லாட்வியாவுக்கு ரகசியமாய் எடுத்துவரப்பட்ட, காவற்கோபுர பத்திரிகையையே எஸ்டோனியாவிலுள்ள சகோதரர்கள் பெற்றுக்கொண்டார்கள். அந்தக் காலத்தில் புகைப்படம் எடுப்பது விருப்பமான பொழுதுபோக்காக இருந்ததால், சகோதரர்கள் வீட்டிலேயே நெகட்டிவ்களைக் கழுவி, பிரதிகளை எடுத்து, வினியோகிக்க முடிந்தது. அவ்வப்போது, இதே விதத்தில் பிற பிரசுரங்களும் முக்கியமாய் லிதுவேனியா, உக்ரைன் ஆகிய நாடுகளிலிருந்து லாட்வியாவுக்கு எடுத்துவரப்பட்டன.

அப்போது பத்து வயதாய் இருந்த வீடா சகலயுஸ்கீனி இவ்வாறு சொல்கிறார்: “எங்களிடம் ஒரேவொரு காவற்கோபுரம்தான் இருந்தது. கொஞ்ச நாட்களுக்கு, நெகட்டிவ்களை டெவலப் செய்து, ஃபோட்டோகிராஃபிக் தாளில் தயாரிக்கப்பட்ட பத்திரிகை ஒவ்வொரு தொகுதிக்கும் கிடைத்தது; எல்லாரும் வாசித்து குறிப்புகளை எடுத்துக்கொள்வதற்கு வசதியாக அந்தப் பத்திரிகை அடுத்தடுத்த குடும்பங்களுக்குக் கைமாறியது. 24 மணிநேரத்திற்கு மேல் யாரும் பத்திரிகையைத் தங்களிடம் வைத்துக்கொள்ளக் கூடாது. கூட்டத்தில், படிப்பு நடத்துபவரிடம் பத்திரிகை இருந்தது, எங்கள் ஞாபகத்திலிருந்தோ நோட்டுகளில் எழுதி வைத்திருந்ததை வைத்தோ படிப்புக் கட்டுரைகளுக்கான கேள்விகளுக்குப் பதில் சொன்னோம்.” இந்த ஆன்மீக ஏற்பாடு, பள்ளிக் காலத்தில் சத்தியத்தின் பக்கம் உறுதியாய் நிலைநிற்கை எடுப்பதற்கு வீடாவுக்கு உதவியது. இது, கிறிஸ்தவ நடுநிலைமைக்காகச் சிறைப்பட்டபோது உத்தமத்தோடிருக்க வீடாவின் சகோதரரான ராமுயால்டாஸ் என்பவருக்கும் உதவியது.

சகலரும் சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்

வீரா பெட்ரோவா என்பவர் 27 ஆண்டுகள் கம்யூனிஸ கட்சியின் தீவிர ஆதரவாளராய் இருந்தார். “கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களில் எவ்வளவு பேர் சர்ச்சுக்கு வந்திருக்கிறார்களென கவனித்துக்கொண்டு, கட்சியின் உள்ளூர் செயலரிடம் போய் அறிவிக்க வேண்டியது என்னுடைய வேலைகளில் ஒன்று. இதற்கிடையில், என் இரண்டு அக்காக்களில் ஒருவர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார், அவர் எனக்குச் சாட்சிகொடுக்க ஆரம்பித்தார். எனக்கும் ஆர்வம் பிறந்தது, ஒரு பைபிளைத் தரும்படி ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் பாதிரியிடம் கேட்டேன்.

“‘எதற்கு பைபிள்?’ என அவர் கேட்டார்.

“‘நீங்கள் கற்பிக்கும் விஷயம் பைபிளுக்கு இசைவாக இருக்கிறதாவெனத் தெரிந்துகொள்வதற்கு’ என பதில் அளித்தேன். அவர் எனக்கு பைபிளைத் தரவில்லை, எனவே வேறு எப்படியோ பைபிளைப் பெற்று வாசிக்க ஆரம்பித்தேன். சர்ச்சில் கற்பிக்கப்படுபவை பைபிளின் அடிப்படையில் இல்லாததை சீக்கிரத்திலேயே கண்டுபிடித்தேன். தொடர்ந்து ஆன்மீக ரீதியில் முன்னேறினேன், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகினேன். 1985-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றேன்.”

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு, டியஃபீலியா கால்வீடி என்ற நர்ஸ் தௌக்காவ்பில்ஸ் நகரின் மேயரைத் திருமணம் செய்திருந்தார். வருத்தகரமாக, போரின் ஆரம்ப கட்டத்தில் மேயருக்கு என்னவானதென்றே தெரியாததால் காணாமல் போனதாய் அறிவிக்கப்பட்டார். டியஃபீலியா, தன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தவர், பலர் படும் துயரங்களையும் மரணத்தையும் நேரில் கண்டவர். போர் முடிந்த பிறகு அவர் லாட்வியாவிலுள்ள செஞ்சிலுவை சங்கத்தின் தலைவியாக ஆனார், 61 வருட மருத்துவப் பணியில் குறைந்தபட்சம் 20 அரசு விருதுகளைப் பெற்றிருந்தார். 65 வயதில், யெகோவாவின் சாட்சியாக இருந்த பவுலினி சிராவாவைச் சந்தித்தார்; அவர், துன்மார்க்கத்தைக் கடவுள் அனுமதிப்பதற்கான காரணத்தை பைபிளிலிருந்து எடுத்து விளக்கினார். டியஃபீலியா சத்தியத்தை ஏற்றுக்கொண்டார், அதன் பிறகு ஆன்மீக நலம் பெற மக்களுக்கு உதவும் மாபெரும் பாக்கியத்திற்காகச் சந்தோஷப்பட்டார். 1982-⁠ல் அவர் இறக்கும்வரை உண்மையுள்ளவராய் இருந்தார்.

“ஓ, டிக்ஷ்னரியா!”

1981-⁠ல், 18 வயதான யூரி காப்டாலா கிறிஸ்தவ நடுநிலைமை காரணமாக மூன்று வருட சிறைத்தண்டனை பெற்றார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “என் தண்டனைக் காலத்தில் இரண்டு வருடங்களை சைபீரியாவில் கழித்தேன்; அங்கு சீதோஷ்ணநிலை மைனஸ் 30 டிகிரி செல்ஷியஸாக குறைந்த சமயத்திலும்கூட நாங்கள் கூடாரங்களில் தங்கியிருந்தோம், காடுகளில் வேலை செய்தோம்!” a “யெகோவா எப்போதும் என்னை ஆன்மீக ரீதியில் பராமரித்து வந்தார். உதாரணத்திற்கு, ஒரு சமயம் உணவு பொட்டலத்தில் அம்மா எனக்கு கிரேக்க வேதாகமத்தின் பிரதி ஒன்றை அனுப்பினார். ஒரு காவலாளி அந்தப் பொட்டலத்தைத் திறந்து பரிசோதித்தபோது அதைப் பார்த்துவிட்டார்.

“‘இது என்ன?’ என்று கேட்டார்.

“நான் பதில் சொல்வதற்கு முன்பாகவே பக்கத்திலிருந்த ஓர் இன்ஸ்பெக்டர் ‘ஓ, டிக்ஷ்னரியா!’ என்று சொல்லி என்னிடமே கொடுத்துவிட்டார்.

“1984-⁠ல் நான் விடுதலை செய்யப்பட்டேன். என் சொந்த நாடான உக்ரைனில் நிரந்தரமாய்த் தங்குவதற்குப் பதிலாக ரிகாவில் குடியேறினேன். அங்கு சிறிய தொகுதியாக இருந்த யெகோவாவின் சாட்சிகளுடன் சுமார் இரண்டு ஆண்டுகள் கூட்டுறவு வைத்திருந்தேன். எனினும், லாட்வியா இன்னும் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததால் ராணுவத்தில் வேலை செய்ய மீண்டும் அழைப்பைப் பெற்றேன். விளைவு? 1986, ஆகஸ்ட் 26 முதல் மீண்டும் கடின உழைப்பு முகாமில் தண்டனை பெற்றேன், இந்த முறை லாட்வியாவில் நான்கு ஆண்டு கால தண்டனையை அனுபவித்தேன். ரிகாவில் தண்டனையை அனுபவித்த பிறகு வால்மையிரா என்ற நகரிலிருந்த முகாமுக்கு அனுப்பப்பட்டேன். 1990-⁠ன் ஆரம்பத்தில் என் விடுதலை சம்பந்தமாக நடந்த நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதி இவ்வாறு சொன்னார்: ‘யூரி, நான்கு வருடங்களுக்கு முன் உங்களுக்கு அளிக்கப்பட்ட சிறைத்தண்டனைத் தீர்ப்பு சட்டவிரோதமானது. குற்றவாளியாக அவர்கள் உங்களுக்குத் தீர்ப்பளித்திருக்கக் கூடாது.’ எனவே, திடீரென நான் விடுதலை செய்யப்பட்டேன்!”

1991-⁠ல் லாட்வியாவில் ஒரேவொரு சபைதான் இருந்தது; அதன் அங்கத்தினரான யூரி, அங்கிருந்த இரண்டு மூப்பர்களில் ஒருவராகச் சேவை செய்தார். “வயல் அறுப்புக்கு உண்மையிலேயே விளைந்திருந்தது” என அவர் எழுதினார்.

முதன்முதல் லாட்வியாவுக்கு யூரி வந்தபோது கல்லறையைச் சுற்றியிருந்த இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பேசினார். அப்போது நடந்ததை அவர் சொல்கிறார்: “வாழ்க்கை ஏன் இவ்வளவு குறுகியதாய்த் தெரிகிறது என நான் அவரிடம் கேட்டபோது, ஒருசில அடிகள் எடுத்து வைத்து முன்னே வந்தார், நாங்கள் பேசினோம். சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு பெரிய மரக் கிளை முறிந்து அவர் சுத்தம் செய்துகொண்டிருந்த அந்த இடத்தில் டமார் என்று விழுந்தது. அவர் அங்கே நின்றிருந்தால் அவரும் நசுங்கிப் போயிருப்பார். அவர் தன் விலாசத்தை எனக்குக் கொடுத்தார், அவரைப் போய்ப் பார்க்க ஒரு சகோதரியை நான் ஏற்பாடு செய்தேன். 1987-⁠ல் அந்தப் பெண்மணியும் அவருடைய மகனும் மருமகளும் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.”

அவர்கள் ஜனங்களை நேசிக்கிறார்கள், சொகுசான வாழ்க்கையை அல்ல

சோவியத் யூனியனின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அநேக இளைஞர்களும், லாட்வியாவில் ஊழியம் செய்வதற்கு உதவிக்கரம் நீட்டினார்கள். அவர்களுக்கு வாழ்க்கை எளிதாய் இருக்கவில்லை, ஆனால் அவர்கள் தியாகங்களைச் செய்யத் தயாராய் இருந்தார்கள். உதாரணத்திற்கு, தற்போது விசேஷ பயனியராக இருக்கும் அன்னா பாட்னியா என்பவர் தையல் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார், ஹாஸ்டலில் தங்கினார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “அங்கிருந்த சூழ்நிலை படுமோசமாய் இருந்தது. ரயிலில், ரயில் நிலையங்களில், பார்க்குகளில், கல்லறைத் தோட்டங்களில், சர்ச்சுகளுக்கு அருகில் என எல்லா இடங்களிலும் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தோம்.

“எப்போதும் நிரம்பி வழிந்த ரயில்களில் ஒவ்வொரு பெட்டிக்கும் நாங்கள் இரண்டிரண்டு பேராகப் போய் பிரசங்கித்தோம். எங்களில் ஒருவர் சாட்சிகொடுக்கும்போது மற்றவர் கண்காணித்துக்கொண்டே இருப்போம். பெரும்பாலும் பக்கத்தில் உள்ளவர்களும் எங்கள் உரையாடலில் கலந்துகொள்வார்கள். இதனால், சில சமயங்களில் நாலாபுறமும் இருந்து கேள்விக் கணைகள் சரமாரியாக வரும். ரயில் நிற்கும்போது தேவைப்பட்டால் அடுத்த பெட்டிக்கு நாங்கள் மாறிச் சென்றுவிடுவோம். எங்கள் ஊழியத்தை யெகோவா ஆசீர்வதிப்பதைப் பார்க்க அதிக சந்தோஷமாய் இருந்தது.”

ஆன்ஜிலீனா ட்ஸ்வீட்காவா சர்ச்சில் ஜெபித்துவிட்டு வந்த பிறகு சத்தியத்தை முதன்முதல் கேட்டார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “1984-⁠ல், யெகோவாவின் சாட்சியாய் இருக்கும் அல்ட்வோனா ட்ரானியுகா என்பவர் என்னை அணுகி, பைபிளை நான் வாசித்திருக்கிறேனா என்று கேட்டார். ‘கொஞ்சம் வாசித்திருக்கிறேன். ஆனால் அது எனக்குப் புரியவில்லை, என் மனதில் நிறைய கேள்விகள் இருக்கின்றன’ என பதில் சொன்னேன். என்னுடைய விலாசத்தை அவருக்குக் கொடுத்தேன், அவருடைய விலாசத்தை நான் வாங்கிக்கொண்டேன்; பைபிள் விஷயங்களைத் தவறாமல் கலந்துபேசினோம். சில மாதங்களுக்குப் பிறகு லிதுவேனியாவில் நடக்கவிருந்த ஒரு திருமணத்திற்கு வரும்படி அல்ட்வோனா என்னை அழைத்தார், நானும் அதற்குச் சம்மதித்தேன். அங்கு சுமார் 300 பேர் வந்திருந்தார்கள். வரவேற்பின்போது, ஒன்றன் பின் ஒன்றாக பைபிள் பேச்சுகளை நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம், எனக்கு கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது.

“நான் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்துக்கொண்டிருப்பதை இந்த இடத்தில்தான் அறிந்துகொண்டேன்; அது திருமண வைபவம் மட்டுமல்ல, அதுவொரு மாநாடு என்பதையும் அறிந்துகொண்டேன்! இதையெல்லாம் நான் தெரிந்துகொண்டபோதிலும், அங்கிருந்த தாழ்மை மனம் படைத்தவர்கள் காட்டிய அன்பும் அவர்கள் மத்தியில் நிலவிய ஒற்றுமையும் என்னை நெகிழ வைத்தன. 1985-⁠ல் நான் முழுக்காட்டுதல் பெற்றேன், 1994-⁠ல் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். என் ஆறு பிள்ளைகளில் ஐந்து பேர் முழுக்காட்டுதல் பெற்றிருக்கிறார்கள், கடைக்குட்டி முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாய் இருக்கிறான்.”

பெரிய கூட்டங்களில் கலந்துகொள்ளக் கிடைத்த சுதந்திரம்

1980-களின் மத்திபத்தில் கம்யூனிஸ நாடுகள் பலவற்றில் அந்தளவுக்குக் கெடுபிடி இல்லாதிருந்தது, யெகோவாவின் சாட்சிகள் முன்பைவிட இப்போது வெளிப்படையாகக் கூட்டங்களை நடத்த முடிந்தது. 1989-⁠ல், போலந்தில் நடந்த “தேவ பக்தி” மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள லாட்வியாவிலிருந்து சுமார் 50 பேர் சென்றிருந்தார்கள். “அந்தச் சகோதர சகோதரிகள் எல்லாருடனும் சேர்ந்து ஒன்றாக இருந்தது, என் ஆன்மீக முன்னேற்றத்தில் திருப்புக் கட்டமாய் அமைந்தது” என சொல்கிறார் மரியா ஆன்ட்ரிஷாகா; இவர் இப்போது விசேஷ பயனியராக சேவை செய்கிறார்.

1990-⁠ல் போலந்தில் மீண்டும் ஒரு மாவட்ட மாநாடு நடந்தது; “சுத்தமான பாஷை” என்ற அந்த மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள லாட்வியாவிலிருந்து 50-⁠க்கும் அதிகமானோர் வந்தார்கள். அவர்களில் ஒருவரான அன்னா மான்சின்ஸ்கா இதில் கலந்துகொள்ள தன்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “ரயில் நிலையத்திற்குப் போகும் வழியில், நாட்டின் எல்லையைக் கடப்பதற்குத் தேவைப்படும் ஆவணங்களில் சிலவற்றை எடுத்துவர மறந்துபோனது தெரிய வந்தது. உடனே டாக்ஸி பிடித்து வீட்டுக்கு வந்தேன், ஆவணங்களை எடுத்துக்கொண்டேன், ரயில் நிலையத்திற்கு விரைந்தேன்; அதற்குள் ரயில் சென்றுவிட்டது. உடனடியாக அடுத்த ரயில் நிலையத்திற்குச் சென்றேன், தாமதமாகச் சென்றதால் அங்கும் ரயிலைப் பிடிக்க முடியவில்லை. கடைசியில், லிதுவேனியாவுக்கே டாக்ஸியில் பறந்தேன், ரிகாவிலிருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் ஒருவழியாக ரயிலைப் பிடித்துவிட்டேன். டாக்ஸியில் சென்றது அதிக பணச் செலவை ஏற்படுத்தியது, ஆனாலும், அந்தளவு செலவு செய்து அந்த மாநாட்டுக்குச் சென்றது வீண்போகவில்லை!” அன்னா தற்போது லாட்வியா பெத்தேலில் சேவை செய்கிறார்.

கடைசியாக 1991-⁠ல், முன்னர் சோவியத் குடியரசாக இருந்த இடங்களில் சகோதரர்களால் பகிரங்கமாக மாவட்ட மாநாடுகளை நடத்த முடிந்தது. எஸ்டோனியாவிலுள்ள டல்லின் நகரில் நடைபெற்ற “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள லாட்வியாவிலிருந்து சகோதரர்கள் நிறைய பஸ்ஸுகளில் சென்றார்கள். மாநாட்டின் அந்தப் பொருள் எவ்வளவு பொருத்தமாய் இருந்தது!

வைனிவாடி நகரைச் சேர்ந்த ருடா பாராகௌஸ்கா என்பவர் சத்தியத்தில் இல்லாத கணவர் அடால்ஃப்ஸை தன்னோடு டல்லின் நகருக்கு வருவதற்குச் சம்மதிக்க வைத்தார். அடால்ஃப்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “மாநாட்டுக்குப் போகும் எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. என் காருக்குத் தேவையான உதிரி பாகங்களை வாங்குவதற்கு நான் அங்கே போனேன். ஆனால், முதல் நாள் காலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, நான் கேட்ட பேச்சுகளும் யெகோவாவின் சாட்சிகள் நட்புடன் பழகுவதும், பேசும்போது நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதும் என் நெஞ்சத்தைத் தொட்டதால் முழு மாநாட்டிலும் கலந்துகொண்டேன். வீடு திரும்பியதும் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டேன், என் கோபத்தைக் கட்டுப்படுத்த கடினமாய் பாடுபட்டேன். 1992-⁠ல் முழுக்காட்டுதல் பெற்று யெகோவாவின் சாட்சியாக என் மனைவியோடு சேர்ந்து சேவை செய்கிறேன்.”

1990-களின் ஆரம்பத்தில், லாட்வியாவில் மாவட்ட மாநாடுகளை நடத்துவதற்குப் பொருத்தமான இடத்தை வாடகைக்கு எடுக்க முடியாதிருந்தது; எனவே, பொதுவாய் சகோதரர்கள் எஸ்டோனியாவுக்கும் லிதுவேனியாவுக்கும் சென்றார்கள். 1998-⁠ல் நடைபெற்ற “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாநாடுதான் லாட்வியாவில் நடந்த முதல் மாவட்ட மாநாடு ஆகும்; இது ரிகாவில் ஒரு பெரிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. லாட்வியன், ரஷ்யன் மொழிகளிலும் லாட்வியன் சைகை மொழியிலும் பேச்சுகள் கொடுக்கப்படுவதற்கு வசதியாக அந்த அரங்கம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முடிவான ஜெபத்திற்குப் பிறகு எல்லாரும் கரவொலி எழுப்பினார்கள், அநேகர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள், சரித்திரம் படைத்த இந்த மாநாட்டிற்காக யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருந்தார்கள்.

அபார வளர்ச்சிக்குரிய காலம்

கம்யூனிஸ சகாப்தம் முடிவடைந்த பிறகு லாட்வியாவில் ஊழியம் வெகு மும்முரமாய் நடைபெற்றது. எனினும், 1995-⁠க்கு முன்பாக நம் ராஜ்ய ஊழியம் லாட்வியன் மொழியில் வெளிவரவில்லை; எனவே சில சமயங்களில் வெளி ஊழியத்தில் சகோதரர்களால் திறம்பட்ட விதத்தில் பேச முடியவில்லை. ஆனால், அந்தக் குறையை தங்கள் பக்தி வைராக்கியத்தால் அவர்கள் ஈடுகட்டினார்கள். சத்தியத்தை முதன்முதல் கேள்விப்பட்ட விதத்தை டாட்ஸி ஷ்கியிப்ஸ்னா இவ்வாறு விவரிக்கிறார்: “1991-⁠ல் தெருவோரத்தில் இருந்த ஒரு சிறிய புத்தகக் கடையில் நரகத்தையும் அதற்குப் பின்னான வாழ்க்கையையும் விளக்கும் ஒரு புத்தகத்தை வாங்கினேன். அங்கிருந்து கொஞ்ச தூரம்கூடப் போயிருக்க மாட்டேன், அதற்குள் ‘நீங்கள் விஷத்தை வாங்கியிருக்கிறீர்கள்!’ என்று பின்னாலிருந்து யாரோ சொல்வதைக் கேட்டேன்.

“அந்த வார்த்தைகள், அடுத்த அடியை எடுத்து வைக்காதபடி என் கால்களைத் தடுத்து நிறுத்தின. யெகோவாவின் சாட்சிகளாய் இருக்கும் தம்பதியர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள், நாங்கள் பைபிளைப் பற்றி பேசினோம். சொல்லப்போனால், ஹேடீஸ், கெஹன்னா, கிறிஸ்மஸ், சிலுவை, கடைசி நாட்கள் என எல்லா விஷயத்தையும் பற்றி பேசினோம்! சில விஷயங்கள் எனக்குத் தெளிவாகப் புரியாவிட்டாலும், நான் கேட்ட விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். என் ஃபோன் நம்பரைத் தந்தேன், அவர்களுடைய ஃபோன் நம்பரை வாங்கிக்கொண்டேன்; அடுத்து வந்த வாரங்களில், நான் கேட்ட பைபிள் கேள்விகள் பலவற்றிற்கு அந்தத் தம்பதியர் பதில் அளித்தார்கள்.”

“நான் பின்வாங்காததைக் குறித்து எனக்குச் சந்தோஷம்”

யானிஸ் ஃபாக்மானிஸ் என்பவர் சோவியத் ரஷ்யாவில் வெயிட் லிஃப்டிங் சாம்பியனாய்த் திகழ்ந்தார்; மார்ச் 1993-⁠ல் இறுதிப் போட்டிகளில் இவர் லாட்வியாவின் சாம்பியனாய் ஆனார். யானிஸ் இவ்வாறு சொல்கிறார்: “1992-⁠ல் என்னுடன் வேலை செய்யும் யானிஸ் ட்ஸீலாவ்ஸ் என்பவர் தன்னோடுகூட பைபிள் படிப்பில் கலந்துகொள்ளும்படி என்னை அழைத்தார். அந்தப் படிப்பு என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. லாட்வியாவின் வெயிட் லிஃப்டிங் சாம்பியனாய் ஆகி மூன்று மாதங்கள் கழித்து நான் ராஜ்ய பிரஸ்தாபியாக ஆனேன். ஆகஸ்ட் 1993-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றேன். ‘ஜிம்’முக்குப் போய் அங்கிருப்பவர்களுக்குச் சாட்சி கொடுத்தது என் பயிற்சியாளருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், நான் பின்வாங்காததைக் குறித்து எனக்குச் சந்தோஷம். அதற்கான காரணத்தை, என் நண்பர்களான ஈடுவார்ட்ஸ் ஏஹென்பவும்ஸும் எட்கர்ஸ் பிரான்ட்ஸிஸும் விளக்குவார்கள்.”

ஈடுவார்ட்ஸ்: “இலவச பைபிள் படிப்பில் கலந்துகொள்ளும்படி யானிஸ் ஃபாக்மானிஸ் என்னிடம் சொன்னார். ‘இலவசம் என்றால் உடனடியாக படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்’ என நான் சொன்னேன். நாங்கள் உண்மையிலேயே படிக்க ஆரம்பித்தோம்! நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எனக்கு நியாயமாய்ப் பட்டன; முக்கியமாக, அழியாத ஆத்துமா பற்றிய கோட்பாட்டைவிட உயிர்த்தெழுதல் பற்றிய போதனை அர்த்தமுள்ளதாய் இருந்தது. என் மனைவியும்கூட பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டாள், நாங்கள் 1995-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றோம்.”

எட்கர்ஸ்: “‘ஜிம்மில்’ யானிஸ் பக்தி வைராக்கியத்தோடு சாட்சிகொடுத்தார். எனக்கு பைபிள் படிப்பு நடத்துவதைப் பற்றி நான்கு முறை கேட்டார், ஒவ்வொரு முறையும் நான் தட்டிக்கழித்தேன். ஆனால், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையும் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தையும் பெற்றுக்கொண்டேன். இதற்கிடையில், ‘இவ்வளவு பிரபலமான விளையாட்டு வீரன் ஏன் பைபிளில் ஆர்வம் காட்டுகிறார்?’ என சதா என்னையே கேட்டுக்கொண்டேன். கடைசியில் என் ஆர்வமே மேலோங்கியது, நான் பைபிள் படிக்க ஆரம்பித்தேன். விளைவு? 1995-⁠ல் நான் முழுக்காட்டுதல் பெற்றேன். இப்போது விசேஷ பயனியராக சேவை செய்கிறேன்.”

கடவுளைப் பிரியப்படுத்த சிலர் தங்கள் கெட்ட பழக்கங்களை விட்டுவிட வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, ஐவார்ஸ் யாட்ஸ்கெவிக்ஸ் என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாய் இருந்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “வார இறுதி நாளில் ‘பின்ஞ்’ குடியில் இறங்கினேன். காலை உணவின்போது பியருடன் ஆரம்பிப்பேன், அதன் பிறகு ஒரு பாட்டில் வோட்கா குடிப்பேன். 1992, ஜனவரி மாதத்தில் ஒருநாள் நான் குடிபோதையில் இருந்தபோது என்னிடமிருந்த பொருள்கள் பறிபோயிருந்தன. அடுத்த நாள் மாலை வேளையில், கை முறிந்து கட்டுப்போட்ட நிலையில் மன அழுத்தத்தோடு வீட்டிலிருந்தபோது தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. பல சந்தர்ப்பங்களில் என்னிடம் பைபிளைக் கலந்தாலோசிக்க வந்த அந்தப் பக்கத்து வீட்டுக்காரர் நின்றுகொண்டிருந்தார். நாங்கள் உரையாடினோம், அவர் பைபிள் படிப்புக்குச் சிபாரிசு செய்தார், நானும் ஒப்புக்கொண்டேன்.

“பைபிள் படிப்பு நடக்கும் நாட்களில் நான் மதுவைக் கையில் தொட மாட்டேன், அது பைபிள் படிப்பில் முன்னேற எனக்கு உதவியது. இறந்து போனவர்களின் உண்மை நிலையையும் நான் எரிநரகத்தில் வதைக்கப்பட மாட்டேன் என்பதையும் அறிந்துகொண்ட பிறகு வாரத்தில் மூன்று நாட்கள் பைபிள் படிப்பு நடத்தச் சொன்னேன்; காரணம், அதற்கு முன் எரிநரகத்தை நினைத்து சதா பயந்துகொண்டிருந்தேன். நான்கு மாதங்கள்கூட ஆகியிருக்காது, அதற்குள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக ஆனேன். எனினும், ‘தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்’ என பைபிள் எச்சரிக்கிறது. முட்டாள்தனமாக, ஒருநாள் மாலை வேளையில் மோசமான நண்பர்களுடன் சேர்ந்து எக்கச்சக்கமாய் குடித்துவிட்டேன்; தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் மீண்டும் தலைதூக்கியது. ஆனால், யெகோவா இரக்கமுள்ளவராக, பொறுமையுள்ளவராக இருக்கிறார்; அன்பான சகோதரர்கள் சிலர் எனக்கு உதவ வந்தார்கள். அது எனக்கு எப்பேர்ப்பட்ட பாடத்தைப் புகட்டியது! 1992-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றேன், இன்று லாட்வியா பெத்தேல் குடும்பத்தில் சேவை செய்கிறேன்.”​—1 கொ. 10:12; சங். 130:3, 4.

மாரிஸ் க்ரூமினிஷும் பெத்தேலில் சேவை செய்கிறார். இவர் யெகோவாவைச் சேவிப்பதற்காக பெரும் மாற்றங்களைச் செய்திருந்தார். மாரிஸ் விளக்குகிறார்: “ராணுவத்தில் சேவை செய்த பிறகு எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. பின்னர், கல்லூரியில் வகுப்புகளை ‘கட்’ அடித்ததால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லாதிருந்ததால், குற்றச்செயல்களில் ஈடுபட்டேன்; ஒருநாள் இரவு எக்கச்சக்கமாய் குடித்துவிட்டு, சண்டை போட்டபோது கைதுசெய்யப்பட்டேன். சிறையில் என் அறையில் உட்கார்ந்துகொண்டு நான் மீறியிருக்கும் சட்டங்களையெல்லாம் எண்ணிப் பார்த்தேன்; அவற்றில் பல உண்மையில் கடவுளுடைய சட்டங்களின் அடிப்படையிலேயே உருவானவை என்ற முடிவுக்கு வந்தேன். வாழ்க்கையில் முதன்முதலாக, மன்னிப்புக் கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்தேன், அவர் யாரென தேடிக் கண்டுபிடிப்பேன் என்று வாக்குக்கொடுத்தேன்.

“சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு வெவ்வேறு சர்ச்சுகளுக்குப் போனேன், ஆனால், ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடனேயே திரும்பி வந்தேன். எனவே பைபிளையும் வேறு மத புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். 1990-⁠ல் ரயில் பயணத்தின்போது, என்னோடு பள்ளியில் படித்த ஒருவனை சந்தித்தேன், அவன் யெகோவாவின் சாட்சி என்பதை அறிந்துகொண்டேன். அந்தச் சிறிது தூரப் பயணத்தின்போது, மனிதரைக் கடவுள் படைத்ததன் நோக்கத்தையும் இன்று உலகில் காணப்படும் துன்பத்திற்கான காரணத்தையும் என் பால்ய சிநேகிதன் விளக்கிச் சொல்லுகையில் காதுகொடுத்துக் கேட்பதற்கு யெகோவா என் மனக்கதவைத் திறந்தார். நான் பைபிள் படிக்க ஆரம்பித்தேன், 1991-⁠ல் பிரஸ்தாபியாக ஆனேன். 1992-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றேன். ஒரு வருடம் கழித்து லாட்வியா பெத்தேல் குடும்பத்தில் அங்கத்தினன் ஆனேன், 1995-⁠ல் பின்லாந்து நாட்டுப் பயனியரான சீமோனாவை மணந்துகொண்டேன்.”

எட்கர்ஸ் என்ட்ஸெலிஸ் சட்டக் கல்வி படித்து வந்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “1990-களின் ஆரம்பத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுமென்ற உணர்வு எல்லாருக்கும் இருந்தது. ரிகாவிலுள்ள சட்டக் கல்லூரியில் நான் படித்து வந்தேன், வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி மாணவர்களில் பலர் விவாதித்தார்கள். தத்துவ புத்தகங்களையும் கிழக்கத்திய மத புத்தகங்களையும் வாசித்தேன். ஐகீடோ என்றழைக்கப்படும் தற்காப்புக் கலையில் ஈடுபட்டு வந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில், நானும் என் மனைவி எலீடாவும் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தோம்.

“முதன்முதலாகக் கூட்டத்திற்குச் சென்றபோது லாட்வியன், ரஷ்யன் மொழிகளைப் பேசும் சகோதரர்கள் ஒன்றுபோல எங்களை இருகரம் நீட்டி வரவேற்றார்கள். இந்த மாசற்ற அன்பு எங்களை வெகுவாய்க் கவர்ந்தது. ஏறக்குறைய அதே சமயத்தில், சென் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஐகீடோ கலைஞர்களாய் ஆக முடியுமென தற்காப்பு கலையைக் கற்பிக்கும் ஆசிரியர் சொன்னபோது அதிர்ந்துபோனேன். அன்றோடு ஐகீடோவுக்கு முழுக்குப் போட்டேன்! அதற்குப் பிறகு சீக்கிரத்திலேயே என் நீளமான முடியைக் கத்தரித்துவிட்டேன், 1993 மார்ச் மாதத்தில் நானும் எலீடாவும் முழுக்காட்டுதல் பெற்றோம். அதுமுதற்கொண்டு லாட்வியாவில், ‘நற்செய்திக்காக வழக்காடி அதை நிலைநாட்ட’ உதவுவதில் என் சட்ட அறிவைப் பயன்படுத்தும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்.”​—பிலி. 1:7, பொது மொழிபெயர்ப்பு.

சோதனையைச் சந்திக்கும் கிறிஸ்தவ விசுவாசம்

யல்காவாவிலுள்ள இசைக் கல்லூரியில் பயிலும் நான்கு மாணவிகளின் விசுவாசத்திற்கு 1993-⁠ல் சோதனை வந்தது; அந்தச் சமயத்தில், சுதந்திர தின கொண்டாட்டத்தில் பாடுவதற்கு இந்தப் பெண்களுடைய இசைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர்கள் புதிதாக சத்தியத்திற்கு வந்திருந்தபோதிலும் கடவுளுக்குப் பிரியமானதைச் செய்ய வேண்டுமென்பதில் உறுதி காட்டினார்கள். இவர்களுடைய கிறிஸ்தவ மனசாட்சி அனுமதிக்காததால் அதில் கலந்துகொள்வதிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கேட்டு இசைக் குழுவின் இயக்குனருக்கு பணிவோடு கடிதம் எழுதினார்கள். அப்போது அந்த இயக்குனர் என்ன செய்தார்? பாட வேண்டும், இல்லாவிட்டால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அப்பெண்களுடைய பெற்றோருக்கு அவர் முதலும் கடைசியுமாக எச்சரிக்கை விடுத்துக் கடிதம் எழுதினார். மூன்று எபிரெயர்களைப் போலவே இந்தப் பெண்களும் யெகோவாவுக்கே கீழ்ப்படிந்தார்கள்.​—தானி. 3:14, 15, 17; அப். 5:29.

அந்தப் பெண்களில் ஒருவரான டாட்ஸி புன்ட்சுலி இவ்வாறு சொல்கிறார்: “கடவுளிடம் செய்த ஜெபமும் சகோதரர்கள் காட்டிய ஆதரவும் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள எங்களுக்கு உதவின. நாங்கள் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டோம், ஆனால், நான் சத்தியத்தை ஆதரித்து உறுதியான நிலைநிற்கை எடுத்ததற்காக வருத்தப்பட்டதே இல்லை. சொல்லப்போனால், யெகோவா என்னை நன்றாகவே வைத்திருக்கிறார். கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு சில மாதங்கள்கூட ஆகியிருக்காது, எனக்குச் சட்ட அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அங்கு நான் பெற்ற அனுபவம் பின்னர் பெத்தேலில் சேவை செய்ய எனக்கு உதவியது; 2001 முதல் அங்கு சேவை செய்து வருகிறேன்.”

இரத்தம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும்கூட சிலருடைய உண்மைத்தன்மை சோதிக்கப்பட்டிருக்கிறது. 1996, செப்டம்பர் 6-⁠ஆம் தேதி அன்று 17 வயது யெல்யீனா காட்லிவ்ஸ்காயாமீது கார் மோதிவிட்டது, இடுப்பெலும்பு பல இடங்களில் முறிந்துவிட்டது. ஆன்மீக முதிர்ச்சிமிக்க யெல்யீனா இரத்தத்திலிருந்து விலகியிருக்க திடதீர்மானமாய் இருந்தாள். (அப். 15:29) அந்தச் சமயத்தில், லாட்வியாவிலிருந்த பெரும்பாலான டாக்டர்கள் இரத்தமில்லா சிகிச்சை முறைகளைப் பற்றி அந்தளவு அறியாதிருந்தார்கள்; எனவே இவளுக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்கள் இரத்தமில்லாமல் இடுப்பெலும்பை சரிசெய்யும் அறுவை சிகிச்சையை நடத்த மறுத்துவிட்டார்கள். சுமார் ஒரு வாரம் கழித்து நடுராத்திரியில் இரண்டு டாக்டர்கள் இரக்கமே இல்லாமல் யெல்யீனாவுக்குப் பலவந்தமாக இரத்தத்தை ஏற்றினார்கள், அவள் இறந்துவிட்டாள்.

யெல்யீனாவின் அம்மா மாரீனா அப்போது யெகோவாவின் சாட்சியாய் இருக்கவில்லை. அவர் சொல்கிறார்: “யெகோவாவின் மீதும் அவருடைய வாக்குறுதிகள் மீதும் என் மகளுக்கு திடவிசுவாசம் இருந்ததைக் கண்டு வியந்துபோனேன். அவள் விட்டுக்கொடுத்து இணங்கிப் போகவே இல்லை.” இப்போது முழுக்காட்டுதல் பெற்றுவிட்ட மாரீனாவும் அவருடைய குடும்பத்தாரும் உயிர்த்தெழுதலில் யெல்யீனா வருகையில் அவளைக் கட்டித்தழுவ ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.​—அப். 24:15.

முக்கியத் தேவையைப் பூர்த்திசெய்கிற ஆன்மீக முதிர்ச்சியுள்ள ஆண்கள்

பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரிக்க ஆரம்பித்தபோது அவர்களை முன்நின்று வழிநடத்த ஆன்மீக முதிர்ச்சியுள்ள ஆண்கள் தேவைப்பட்டார்கள். 1992-⁠ல் லாட்வியாவில் மிஷனரிகளாக சேவை செய்யும் வாய்ப்பு லாட்வியன் மொழி பேசும் மூன்று சகோதரர்களுக்குக் கிடைத்தது; இவர்கள் அமெரிக்காவில் வளர்ந்தவர்கள். இவர்கள், வால்டிஸ் புரினிஷ், ஆல்ஃபிரட்ஸ் எல்க்ஸ்னிஸ், ஐவார்ஸ் ஆகியோர்; இவர்களில் வால்டிஸின் மனைவி பெயர் லிண்டா, ஆல்ஃபிரட்ஸின் மனைவி பெயர் டாரஸ்; ஐவார்ஸ் எல்க்ஸ்னிஸ், ஆல்ஃபிரட்ஸின் தம்பி ஆவார். இவர்கள் ஐந்து பேரும் 1992, ஜூலை மாதம் ரிகா வந்து சேர்ந்தார்கள். நான்கு அறைகள் உள்ள அவர்களுடைய வீடு, மிஷனரி இல்லமாகவும், பிரசுர கிடங்காகவும், மொழிபெயர்ப்பு மையமாகவும் ஆனது.

மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்ளும்போது நகைச்சுவை உணர்வு கைகொடுக்கிறது. டாரஸ் எல்க்ஸ்னிஸ் இவ்வாறு சொல்கிறார்: “இரண்டு இளம் பெண்களுக்கு பைபிள் படிப்பு நடத்தும்போது, ஏவாளோடு பேசுவதற்கு சாத்தான் எப்படி ஒரு பாம்பை பயன்படுத்தினான் என்பதை விளக்க முயற்சி செய்தேன். ‘பாம்பு’ என்ற சொல்லைப் போலவே தொனிக்கும் ஒரு லாட்வியன் வார்த்தையைப் பயன்படுத்தினேன். என்ன ஆனது தெரியுமா? பன்றியைப் பயன்படுத்தி சாத்தான் பேசியதாய்ச் சொல்லிவிட்டேன்!”

1994-⁠ல் பீடர் லுடர்ஸ், ஜீன் லுடர்ஸ் தம்பதியர் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தார்கள். பீடர் 1954-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றவர், லாட்வியாவில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். அன்பையும் கனிவையும் காட்டி எல்லாருடைய மனதையும் கொள்ளைகொண்டிருந்த ஜீன் வருத்தகரமாக 1999-⁠ல் இறந்துவிட்டார். பீடர் லாட்வியாவிலேயே தங்கிவிடத் தீர்மானித்தார், தற்போது கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்து வருகிறார். பீடர் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் வந்துசேர்ந்தபோது லாட்வியாவிலுள்ள சகோதரர்கள் பக்தி வைராக்கியத்தோடு பிரசங்கிப்பதைப் பார்த்தோம். எனினும், சபைகளுக்கென தனித்தனி பிராந்தியங்கள் ஒதுக்கப்படாதிருந்தன, சொல்லப்போனால் ரிகா நகரில்கூட சில இடங்களில் ஊழியமே செய்யப்படாதிருந்தது. மேலும், சில சபைகளில் மட்டுமே வாரா வாரம் பொதுப் பேச்சு கொடுக்கப்பட்டது. இந்தக் காரியங்களுக்கு உடனடி கவனம் செலுத்தப்பட்டது.”

உற்சாக ‘டானிக்’ தருகிற கிலியட் பட்டதாரிகள்

1993-⁠ன் ஆரம்பத்தில் கிலியட்டில் பயிற்சி பெற்ற மிஷனரிகள் முதன்முதலாக லாட்வியாவுக்கு வந்தார்கள். சுவீடனைச் சேர்ந்த ஆன்டர்ஸ் பெரிலுண்ட், ஆக்னீடா பெரிலுண்ட் தம்பதியரும் டாரினி ஃபிரீட்லுண்ட், லையினா ஃபிரீட்லுண்ட் தம்பதியரும் யல்காவா நகரில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார்கள்; அந்நகரில் 60,000 பேருக்கு மேல் வசித்தார்கள், அங்கு 28 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். தற்போது கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்யும் ஆன்டர்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் இங்கு வந்ததும், மற்ற சகோதரர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தோம், அவர்கள் எங்களை சுறுசுறுப்பாய் இருக்கச் செய்துவிட்டார்கள்! சில நாட்களில் சாப்பிடாமல்கூட ஏழெட்டு மணிநேரங்கள் அடுத்தடுத்து பைபிள் படிப்புகளுக்கு அவர்களோடு நிஜமாகவே ஓடினோம்! அவர்கள் காட்டிய பக்தி வைராக்கியம் ஊக்கத்தை அளித்தது. அப்படி பைபிள் படித்தவர்களில் பலர் இப்போது முழுநேர ஊழியர்களாய் இருக்கிறார்கள்.”

டாரினி ஃபிரீட்லுண்ட் இவ்வாறு சொல்கிறார்: “மூன்று மாத மொழிப் பயிற்சிக்குப் பிறகு உரையாடுவதற்குத் தயாராய் இருப்பதாய் நாங்கள் நினைத்தோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஊழியமே செய்யப்படாதிருந்த பிராந்தியத்தை ஊழியத்திற்கு நாங்கள் தேர்ந்தெடுத்தோம், ஆனால் பெரும்பாலோர் செவிகொடுத்துக் கேட்கவில்லை. ‘எங்கள் அணுகுமுறைதான் சரியாக இல்லையோ?’ இந்த விஷயத்தைக் குறித்துக் கலந்துபேசிய பிறகு, வேறொரு அணுகுமுறையைப் பயன்படுத்திப் பார்த்தோம்; அதாவது ஒவ்வொரு வீட்டிலும் பைபிளிலிருந்து ஒரு வசனத்தை வாசித்துக்காட்ட ஆரம்பித்தோம். அதன் பிறகு அநேக பைபிள் படிப்புகளை நடத்த முடிந்தது.”

1995 ஏப்ரல் மாதத்தில் இன்னும் அநேக கிலியட் பட்டதாரிகள் வர ஆரம்பித்தார்கள். பின்லாந்தைச் சேர்ந்த பாசா பெரிமான், ஹைடி பெரிமான் தம்பதியர் வந்தார்கள்; அவர்கள் தற்போது ரஷ்ய மொழி பேசும் வட்டாரத்தில் பயண வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். பாசா இவ்வாறு சொல்கிறார்: “ஊழியத்தில் எதையாவது தவறுதலாகச் சொல்லிவிட்டால் என்னைத் திருத்தும்படி உள்ளூர் சகோதரர்களிடம் சொல்லியிருந்தேன். அவர்கள் அதை உற்சாகத்தோடு செய்தார்கள், வெளி ஊழியத்தில் மட்டுமல்ல, கூட்டங்களிலும்கூட உடனுக்குடன் என்னைத் திருத்தினார்கள்! இப்போதெல்லாம், ‘பாசா நம்மை மாதிரியே நன்றாகப் பேசுகிறார்’ என சகோதரர்கள் சொல்வதைக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.”

டென்மார்க்கைச் சேர்ந்த கார்ஸ்டன் ஐஸ்ட்ருப், யான்னீ ஐஸ்ட்ருப் தம்பதியர் லாட்வியாவில் ஊழியம் செய்ய வந்தார்கள்; 30-களிலேயே இருந்த யான்னீ புற்றுநோயோடு போராடி இறந்து போகும்வரை இருவரும் சேர்ந்து சேவை செய்தார்கள். கார்ஸ்டன் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவை மகிமைப்படுத்த எனக்கு இருக்கும் மிகச் சிறந்த வழி, மிஷனரி ஊழியத்தில் உண்மையோடு நிலைத்திருப்பதே.” இத்தகைய சகோதரர்கள் எப்பேர்ப்பட்ட முன்மாதிரியாய் இருக்கிறார்கள்!

ஊழியப் பயிற்சிப் பள்ளி பட்டதாரிகளின் வருகை

1994 முதற்கொண்டு, பிரிட்டன், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 20-⁠க்கும் அதிகமான ஊழியப் பயிற்சிப் பள்ளி பட்டதாரிகள் லாட்வியாவில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார்கள். டென்மார்க்கைச் சேர்ந்த மைக்கல் உத்சனும், யெஸ் கையர் நீல்சனும் முதலாவது வந்தவர்கள் ஆவர். அவர்கள் தொழில் முன்னேற்றமடைந்த நகரமான தௌக்காவ்பில்ஸில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார்கள்; இது, லாட்வியாவிலுள்ள இரண்டாவது பெரிய நகரமாகும்.

யெஸ் இவ்வாறு சொல்கிறார்: “ரிகா நகருக்குத் தென்கிழக்கில் சுமார் 240 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தௌக்காவ்பில்ஸுக்கு ஜனவரி மாதக் குளிரில் ஒரு நாள் மதியம் புறப்பட்டோம். சொல்லப்போனால், நாங்கள் ரிகாவில் கார் ஏறும்போது பனிப்பொழிவு இருந்தது; அந்தப் பழங்காலக் காரில் ஏராளமான பிரசுரங்கள் நிரப்பப்பட்டிருந்தன. காரை ஓட்டிய சகோதரருக்கு ஆங்கிலம் தெரியாது, எங்களுக்கோ லாட்வியனும் தெரியாது, ரஷ்யனும் தெரியாது. 50 கிலோமீட்டர் தூரம் போனதும் ஒவ்வொரு முறையும் காரை நிறுத்தி அவர் என்ஜினை பழுதுபார்த்தார். அவர் ஹீட்டரைச் சரிசெய்யவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது; வெளியில் எப்படிச் சில்லென்று இருந்ததோ அப்படியே உள்ளேயும் இருந்தது! சாலையில் மேடுபள்ளங்கள் நிறைந்திருந்ததால் கார் எங்களைத் தூக்கித்தூக்கிப் போட, கிட்டத்தட்ட நடுராத்திரியில் ஒருவழியாக தௌக்காவ்பில்ஸ் போய்ச் சேர்ந்தோம். அந்தச் சமயத்தில் நகரில் 16 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். மறுவருடக் கடைசியில் அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக ஆனது.”

லாட்வியனில் மொழிபெயர்த்தல்

1992-⁠க்கு முன்பாக பிரசுரங்கள் முக்கியமாய் ரஷ்யன் மொழியில் கிடைத்தன; லாட்வியாவிலுள்ள பெரும்பாலோருக்கு ரஷ்யன் மொழி தெரிந்திருந்தது. எனினும் பலர் தங்கள் தாய்மொழியில் பிரசுரங்களைப் படிக்க விரும்பினார்கள். ஓர் அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “வெறும் நூற்றுக்கணக்கில் இருந்த பிரஸ்தாபிகளில் புதியவர்கள் சிலருக்கு மொழிபெயர்க்கும் திறமை இருந்தது; இவ்வேலையைச் செய்ய மனமுவந்து செயல்படும் இந்த இளம் ஆண்களையும் பெண்களையும் கடவுளுடைய பரிசுத்த ஆவி வழிநடத்துவதை எங்களால் காண முடிந்தது.”

இந்த மொழிபெயர்ப்பாளர்களின் கடின உழைப்பால் 1995 ஜனவரி மாதத்திலிருந்து லாட்வியன் மொழியில் காவற்கோபுரம் பத்திரிகை மாதாந்தரப் பத்திரிகையாய் வெளிவர ஆரம்பித்தது; பிறகு ஜனவரி 1996-⁠லிருந்து அது மாதம் இருமுறை வெளிவர ஆரம்பித்தது. லாட்வியன் மொழியில் தற்போது விழித்தெழு! பத்திரிகை உட்பட பல புத்தகங்களும் சிற்றேடுகளும் கிடைக்கின்றன.

1993-⁠ன் ஆரம்பத்தில், இட நெருக்கடி காரணமாக மொழிபெயர்ப்புக் குழுவினர், ரிகாவிலுள்ள மிஷனரி இல்லத்திலிருந்து ப்ரீவிபாஸ் தெருவிலுள்ள ஓர் அப்பார்ட்மென்டுக்குக் குடிமாறினார்கள். பிறகு, 1994 ஆகஸ்ட் மாதம், 40 மைரா தெரு என்ற விலாசத்தில் உள்ள புதுப்பிக்கப்பட்ட அலுவலகங்களுக்கு மாறிச் சென்றார்கள். அந்தப் புதிய கட்டடத்தை சகோதரர்கள் எப்படிப் பெற்றார்கள்?

அள்ளிக்கொடுத்த அன்பளிப்பு

கார்ஜ் ஹாக்மானிஸும் அவருடைய மனைவி ஸைகிரிட்டும் இரண்டாம் உலகப் போரின்போது அகதிகளாக லாட்வியாவிலிருந்து வெளியேறினார்கள். அவர்கள் இங்கிலாந்திலுள்ள லண்டனில் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு 1951-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றார்கள். அதற்கு மறுவருடம் அவர்கள் அமெரிக்காவில் குடியேறினார்கள்; 1992-⁠ல் ஐந்து வருடங்கள் தங்குவதற்காக லாட்வியா வந்தார்கள்.

1991-⁠ல் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டிலிருந்து லாட்வியா விலகிய பிறகு, அரசு பறிமுதல் செய்த சொத்துகளைத் திருப்பித் தரும்படி ஜனங்கள் உரிமைக் குரல் எழுப்பினார்கள். ஸைகிரிட்டும் யெகோவாவின் சாட்சியாய் இருக்கும் அவருடைய அக்காவும் தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான சொத்து சம்பந்தமான ஆவணங்களை 50 வருடங்களுக்கும் மேலாகப் பத்திரமாய் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்; எனவே, 40 மைரா தெரு என்ற விலாசத்திலிருந்த அவர்களுடைய கட்டடம் அவர்களுக்குத் திரும்பக் கிடைத்தது. அப்படிக் கிடைத்த கட்டடத்தை அவர்கள் அன்போடு யெகோவாவின் அமைப்புக்கு அன்பளிப்பாய்க் கொடுத்தார்கள். 20 பேர் தங்குவதற்குரிய வசதியோடு, மொழிபெயர்ப்பு மையமாய்ச் செயல்படும் ஐந்து மாடிக் கட்டடமாக சகோதரர்கள் அதைப் புதுப்பித்தார்கள்.

1994, ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடந்த பிரதிஷ்டையில் ஆளும் குழுவைச் சேர்ந்த மில்டன் ஜி. ஹென்ஷல் கலந்துகொண்டார். அங்கிருக்கும்போது அவர், அதை ஒட்டினாற்போல் 42 மைரா தெரு என்ற விலாசத்தில் அமைந்திருந்த ஆறு மாடிக் கட்டடத்தையும் வாங்கும்படி சகோதரர்களுக்கு ஆலோசனை சொன்னார். அமெரிக்காவில் வசித்து வந்த அதன் சொந்தக்காரர் அதை விற்பதற்குச் சம்மதித்தார். அந்தக் கட்டடமும் முழுமையாய் புதுப்பிக்கப்பட்டது; பின்னர் பெத்தேல் குடும்பத்தாரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்தது. அது முதற்கொண்டு, மேலுமாக விஸ்தரிக்கப்பட்டு 55 பெத்தேல் அங்கத்தினர்கள் வேலை செய்வதற்கும் தங்குவதற்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

சட்டப்பூர்வ அங்கீகாரம்

லாட்வியாவில் ஊழியம் செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறுவது பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. 1996-⁠ல், யெல்யீனா காட்லிவ்ஸ்காயாவுக்கு இரத்தமேற்றியது சம்பந்தமாக வெளியான தவறான அறிக்கைகளை ஆதாரம் காட்டி அரசு அதிகாரிகள் பதிவுசெய்வதற்கு மறுத்தார்கள். நம் ஊழியம் தடைசெய்யப்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாடைமாடையாகக்கூட தெரிவித்தார்! எனினும் அரசு அதிகாரிகளைச் சகோதரர்கள் சளைக்காமல் போய் சந்தித்து நம் ஊழியத்தைப் பற்றி அவர்களிடம் விளக்கி வந்தார்கள். இறுதியில், 1998, அக்டோபர் 12-⁠ஆம் தேதி, ரிகா மையம், ரிகா டுயார்நியாகால்ன்ஸ் ஆகிய இரு சபைகளும் தற்காலிகமாக ஒரு வருடத்திற்குப் பதிவுசெய்யப்படுமென தேசிய மனித உரிமை அலுவலகத்தின் இயக்குனர் அறிவித்தார். ஒரு மாதம் கழித்து அதே முறையில் யல்காவாவிலுள்ள சபையும் பதிவுசெய்யப்பட்டது.

லாட்விய சட்டப்படி புதிய சபைகள் ஒவ்வொரு ஆண்டும் பதிவுசெய்யப்பட வேண்டும். நிரந்தரமாகப் பதிவுசெய்யப்படுவதற்கு, பத்து வருடங்களில் குறைந்தபட்சம் பத்து சபைகளாவது பதிவுசெய்யப்பட வேண்டும். இதற்கிடையில், பதிவுசெய்யப்படுவதற்குக் காத்திருக்கும் சபைகள், அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் கூட்டங்களை நடத்த முடிகிறது.

சபை கூடுவதற்கான இடங்களைக் கண்டுபிடித்தல்

1990-களில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை வெகு வேகமாக அதிகரித்தபோது கூட்டங்களை நடத்த பெரிய இடங்கள் தேவைப்பட்டன. 1997-⁠ல், தௌக்காவ்பில்ஸில் பொருத்தமான கட்டடம் ஒன்று ஏலத்துக்கு வந்தது, சகோதரர்கள் மட்டுமே அதை ஏலத்தில் எடுக்க முன்வந்தார்கள். 1998, டிசம்பர் மாதம் அந்தக் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணி ஆரம்பமானது; எட்டு மாதங்களுக்குப் பிறகு, அந்த நகரத்திலுள்ள 140-⁠க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் தங்களுடைய சொந்த ராஜ்ய மன்றத்தில் கூட்டத்திற்காகக் கூடிவந்தபோது பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.

1997-⁠ல் யூர்மாலா நகரில் புத்தம் புதிய ராஜ்ய மன்றம் முதன்முதல் கட்டப்பட்டது. அங்குள்ள பைபிள் மாணாக்கர் ஒருவர் தரமான கட்டடம் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்து வியந்துபோய் சாட்சிகள் தனக்கும் ஒரு வீட்டைக் கட்டித்தரும்படி கேட்டார்! சகோதரர்கள் கட்டித்தராததோடு, நம் பணி ஆன்மீகப் பணி என்பதை அவருக்கு விளக்கவும் செய்தார்கள். இதற்கிடையில், ரிகாவில் தீக்கிரையான திரை அரங்கு ஒன்றை மலிவான விலைக்கு டுயார்நியாகால்ன்ஸ் பகுதியிலுள்ள சகோதரர்கள் வாங்கினார்கள். தீக்கிரையான அந்தக் கட்டடம் 1998, ஆகஸ்ட் மாதத்திற்குள் இரண்டு ராஜ்ய மன்றங்களைக் கொண்ட அழகிய கட்டடமாக உருவெடுத்தது!

பின்லாந்திலிருந்து உதவி

லாட்வியாவில் ஊழியம் முன்னேறுவதற்கு பின்லாந்தைச் சேர்ந்த சகோதரர்கள் பெருமளவு உதவியிருக்கிறார்கள்; 1992 முதல் 2004 வரை செய்யப்பட்ட ஊழியத்தையும் மேற்பார்வை செய்திருக்கிறார்கள். லாட்வியாவுக்குத் தேவையான அனைத்து பத்திரிகைகளையும் பின்லாந்தில் அச்சடித்திருக்கிறார்கள்; காலப்போக்கில் முன்நின்று வழிநடத்துவதற்கு திறம்பட்ட சகோதரர்களையும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இவ்வாறு, யுஹா ஹுட்டுனினும் அவருடைய மனைவி டைனாவும் 1995-⁠ல் லாட்வியா வந்தார்கள். யுஹா தற்போது கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்கிறார். முழுநேர சேவையில் ரூபன் லின்ட், உல்லா லின்ட் தம்பதியர் இருவரும் சேர்ந்து 80 வருடங்களுக்கும் மேல் செலவிட்டிருக்கிறார்கள்; ஊழியத்தைப் பொறுத்தவரை அவர்கள் அரும்பெரும் சொத்தாகக் கருதப்படுகிறார்கள். பின்லாந்துக்குத் திரும்பிச் செல்லும் முன்பு சகோதரர் லின்ட் லாட்வியா கன்ட்ரீ கமிட்டியில் நான்கு வருடங்கள் சேவை செய்தார்.

அதோடு, பின்லாந்தைச் சேர்ந்த 150-⁠க்கும் அதிகமான சகோதரர்கள் பல்வேறு கட்டுமானப் பணிகளில் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்கள். இப்படி அன்போடு உதவிக்கரம் நீட்டியதாலும், லாட்வியாவிலுள்ள பிரஸ்தாபிகள், பயனியர்கள், மிஷனரிகள் ஆகியோரின் ஊழியத்தை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதித்ததாலும் 2004, செப்டம்பர் 1-⁠ம் தேதி முதற்கொண்டு இந்நாட்டிலேயே கிளை அலுவலகம் செயல்படத் தொடங்கியது.

விசேஷ பிரசங்க ஊழியங்கள்

லாட்வியாவிலுள்ள பிரஸ்தாபிகளில் பெரும்பாலோர் நகரங்களிலும் பெரிய ஊர்களிலும் அவற்றின் சுற்றுவட்டாரங்களிலும் வசிக்கிறார்கள். 2001-⁠ன் ஆரம்பத்தில், தங்கள் விடுமுறைகளில் சிலவற்றைப் பிரஸ்தாபிகள் பயன்படுத்திக்கொண்டு ஒதுக்குப்புறமான பகுதிகளில் விசேஷ பிரசங்க ஊழியம் செய்யும்படி சபைகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. அப்படி ஊழியம் செய்வதற்கு முன்வந்த 93 பிரஸ்தாபிகள் ஒன்பது தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒதுக்குப்புறமான ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் அனுப்பப்பட்டார்கள்.

பெத்தேலில் சேவை செய்யும் வையாசெஸ்லாவ்ஸ் ஸைட்ஸிவ்ஸ், இந்த ஊழியத்தில் கலந்துகொள்வதற்கு தன் விடுமுறையைப் பயன்படுத்தினார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “மற்ற சகோதர சகோதரிகளுடன் நன்கு பழகுவதற்கு இது அருமையான வாய்ப்பை அளித்தது. ஊழியத்திற்குப் பிறகு எல்லாரும் சேர்ந்து உணவு சாப்பிட்டோம், அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம், மறுநாள் ஊழியத்திற்குத் திட்டமிட்டோம். அதன் பிறகு உதைபந்து விளையாடினோம், ஏரியில் நீந்தினோம். அது பரதீஸில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தந்தது.”

ஊழியத்தில் சகோதரர்கள் 4,200-⁠க்கும் அதிக மணிநேரத்தைச் செலவழித்தார்கள், அதாவது ஒரு பிரஸ்தாபி சராசரியாக 41 மணிநேரத்திற்கும் அதிகமாக செலவழித்திருந்தார்; அதோடு, அனைவரும் சேர்ந்து 9,800-⁠க்கும் அதிக பிரசுரங்களை வினியோகித்திருந்தார்கள், 1,625 மறுசந்திப்புகளைச் செய்திருந்தார்கள், 227 பைபிள் படிப்புகளை நடத்தியிருந்தார்கள். அதுமுதற்கொண்டு ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற விசேஷ ஊழியங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

உண்மையான விடுதலைக்கு வழிநடத்தும் பாதையை அநேகர் கண்டுபிடிக்கிறார்கள்

ஆன்ஸ் இன்ஸ்பர்க் என்ற ஒரு லாட்வியன், கடல் பயணத்தின்போது, நட்சத்திரங்கள் நிறைந்த ஓர் இரவு வேளையில் தன் இருதயத்தில் இருந்ததையெல்லாம் கொட்டி கடவுளிடம் ஜெபித்ததுடன் நம் கதை ஆரம்பமானது. கடவுளை ‘ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளும்’ ஜனங்களைக் கண்டுபிடிக்க ஆன்ஸ் விரும்பினார். (யோவா. 4:24) அவருடைய இருதயப்பூர்வமான வேண்டுதலுக்கு யெகோவா செவிசாய்த்தார். அது முதற்கொண்டு, லாட்வியாவில் 2,400-⁠க்கும் அதிகமான நல்மனமுள்ளவர்கள் ஆன்மீக அறிவைப் பெற்று சத்தியத்திற்கு வந்திருக்கிறார்கள்; கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையானோர் தற்போது பைபிளைப் படித்து வருகிறார்கள். ஆம், இன்னும் ஊழியம் செய்யப்பட வேண்டியிருக்கிறது!​—மத். 9:37, 38.

உண்மையான விடுதலைக்காக ஏங்கும் அனைவருக்கும் உதவ லாட்வியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்; அவர்கள், ப்ரீவிபாஸ் தெருவிலுள்ள விடுதலை நினைவுச் சின்னம் அடையாளப்படுத்துகிற விடுதலைக்கு வழிகாட்டாமல், கடவுளுடைய ராஜ்யத்திற்கு வழிகாட்டுவதன் மூலம் உதவ காத்திருக்கிறார்கள். சீக்கிரத்தில், அந்த ராஜ்யத்திற்காக ஏங்குகிறவர்களும் யெகோவாவை ‘ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்கிறவர்களும்’ எல்லா விதமான வலியிலிருந்தும் வேதனையிலிருந்தும் விடுதலை பெறுவார்கள். ஆம், பரிபூரண விடுதலையை, அதாவது ‘தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை’ ருசிக்கப் போகிறார்கள்.​—ரோ. 8:20.

[அடிக்குறிப்பு]

a யூரி காப்டாலாவின் வாழ்க்கை சரிதை 2005, செப்டம்பர் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தில் வெளிவந்தது.

[பக்கம் 190-ன் சிறு குறிப்பு]

“நான் முழுக்காட்டுதல் எடுத்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அது, ஐஸ்போல் குளிர்ந்த தண்ணீரில் நட்டநடு ராத்திரியில் கொடுக்கப்பட்டது. அந்தக் குளிர் தாங்க முடியாமல் உடலே நடுங்க ஆரம்பித்தது, ஆனாலும் சந்தோஷமாகவே இருந்தது.”

[பக்கம் 203-ன் சிறு குறிப்பு]

“‘நீங்கள் விஷத்தை வாங்கியிருக்கிறீர்கள்!’ என்று பின்னாலிருந்து யாரோ சொல்வதைக் கேட்டேன்”

[பக்கம 184, 185-ன் பெட்டி/​தேசப்படங்கள்]

லாட்வியா ஒரு கண்ணோட்டம்

நிலம்

லாட்வியா, கிழக்கு மேற்காக சுமார் 450 கிலோமீட்டர் தூரமும், வடக்குத் தெற்காக 210 கிலோமீட்டர் தூரமும் பரந்துவிரிந்து கிடக்கிறது. சுமார் 45 சதவீத நிலப்பகுதியை காடுகள் ஆக்கிரமித்திருக்கின்றன. பீவர், மான், கடம்பை மான், சிவிங்கி, நீர்நாய், கடல்நாய் (சீல்) காட்டுப் பன்றி, ஓநாய் போன்ற விலங்குகள் காணப்படுகின்றன. கருநாரை, நாரை, நைட்டிங்கேல், மரங்கொத்தி போன்ற பறவை இனங்கள் வலம்வருகின்றன.

மக்கள்

23 லட்சம் ஜனங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் தலைநகரான ரிகாவில் குடியிருக்கிறார்கள். லூத்தரன், ரோமன் கத்தோலிக்கர், ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் ஆகியவை முக்கிய மதங்களாகும். எனினும் லாட்வியர்களில் பெரும்பாலோர் தங்களுக்கு மதப்பற்று இல்லை என்கிறார்கள்.

மொழி

இங்கு பேசப்படும் முக்கிய மொழிகள் லாட்வியன், ரஷ்யன் ஆகும்; சுமார் 60 சதவீதத்தினர் லாட்வியன் மொழியையும் 30 சதவீதத்திற்கு அதிகமானோர் ரஷ்யன் மொழியையும் பேசுகிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் பலரும் பேசுகிறார்கள்.

பிழைப்பு

கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர் சொந்தத் தொழில் செய்கிறார்கள், மீதமானோர் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள் அல்லது விவசாயம் செய்கிறார்கள்.

உணவு

பார்லி, உருளைக்கிழங்கு, சர்க்கரை தயாரிக்கும் பீட்ரூட் ஆகியவையும் பிற காய்கறி வகைகளும் தானியங்களும் இங்கு விளைகின்றன. ஆடுமாடுகளும் பன்றிகளும் வளர்க்கப்படுகின்றன. பறவைகளையும் மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

சீதோஷ்ணம்

ஈரப்பதம் இங்கு அதிகமாய் இருக்கிறது, வானம் பொதுவாக மேகமூட்டத்துடனே காணப்படுகிறது. கோடைக்காலங்கள் ஓரளவு குளிர்ச்சியாக உள்ளன, குளிர் காலங்களில் மிதமிஞ்சிய குளிர் இருப்பதில்லை.

[தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

எஸ்டோனியா

ரஷ்யா

லாட்வியா

வால்மையிரா

ரிகா

யூர்மாலா

ஸ்லுயாகா

டுகும்ஸ்

வென்ட்ஸ்பில்ஸ்

குல்டீகா

லிபாயா

வைனிவாடி

யல்காவா

தௌக்காவ்பில்ஸ்

லிதுவேனியா

பால்டிக் கடல்

ரிகா வளைகுடா

[படம்]

ரிகா

[பக்கம் 186-ன் பெட்டி/​தேசப்படம்]

லாட்வியாவின் நான்கு பிரதேசங்கள்

புவியியல், கலாச்சாரத்தின் அடிப்படையில் லாட்வியா பொதுவாக நான்கு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது; இவை ஒவ்வொன்றும் அவற்றிற்கே உரிய சிறப்பம்சங்களோடும் வனப்போடும் திகழ்கின்றன. ரிகா வளைகுடாவின் கரை​யோரமிருக்கும் விட்ஸிமி மிகப் பெரிய பிரதேசமாகும்; இதில், ஸீகுல்டா வம்சத்தவர், ட்ஸீசிஸ் இனத்தவர் ஆகியோரது சரித்திரப் புகழ்பெற்ற அரண்சூழ்ந்த நகரங்கள் காணப்படுகின்றன. இங்குதான் லாட்வியாவின் தலைநகரான ரிகாவும் உள்ளது. கிழக்கே தாழ்நிலப் பகுதிகளும், நீலநிற ஏரிகளும் உள்ள லாட்காலி பிரதேசம் இருக்கிறது; இங்குதான் நாட்டின் இரண்டாவது பெருநகரமான தௌக்காவ்பில்ஸ் உள்ளது. லாட்வியாவின் உணவுக் களஞ்சியம் என்றழைக்கப்படும் ஸெம்காலி பிரதேசம் மேற்கு டவுகாவா ஆற்றின் தெற்கே அமைந்துள்ளது. இந்த ஆறு பெலாரூஸிலிருந்து லாட்வியா வழியாக ரிகா வளைகுடா வரை பாய்கிறது. இப்பிரதேசத்திற்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், ராஸ்ட்ரெல்லி என்ற இத்தாலிய கட்டடக் கலைஞர் புதுமையைப் புகுத்தி வடிவமைத்த பிரமாண்டமான இரண்டு அரண்மனைகள் உள்ளன; இந்தக் கலைஞர் ரஷ்யாவில் செ. பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள வின்டர் பாலஸையும் வடிவமைத்தார். நான்காவது பிரதேசமான குர்ஸிமியில் பண்ணைகள், காடுகள், கடற்கரைகள் நிறைந்துள்ளன; பால்டிக் கடற்கரையும் வென்ட்ஸ்பில்ஸ், லிபாயா ஆகிய நகரங்களும் அநேக மீன்பிடி கிராமங்களும் இப்பிரதேசத்தில் உள்ளன.

[தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

1 விட்ஸிமி

2 லாட்காலி

3 ஸெம்காலி

4 குர்ஸிமி

[பக்கம் 192, 193-ன் பெட்டி/​படங்கள்]

மதகுருவுக்குப் பிரசங்கம்—⁠இருவர் வாழ்விலும் மாற்றம்

அன்னா பாட்னியா

பிறந்தது 1958

முழுக்காட்டப்பட்டது 1977

பின்னணிக் குறிப்பு உக்ரைனில் கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்த இவர், 30-⁠க்கும் அதிகமானோர் சத்தியத்திற்கு வர உதவியிருக்கிறார், தற்போது விசேஷ பயனியராகச் சேவை செய்கிறார்.

லாட்வியாவில் ஊழியம் செய்ய பிரஸ்தாபிகள் தேவை என்பதை அறிந்தபோது 1986-⁠ல் நான் அங்குச் சென்றேன். பகிரங்கமாக எல்லாருக்கும் பிரசங்கிக்க முடியாததால் மளிகை சாமான் வைத்திருந்த பையில் என் பைபிளை மறைத்துவைத்துக்கொண்டு பூங்காக்களிலும் பொது இடங்களிலும் உள்ள மக்களிடம் பேசினேன். நாங்கள் ராஜ்ய நம்பிக்கையைப் பற்றியே பேசுவோம்; யாராவது சாதகமாய் பதில் அளித்தால் மட்டுமே பைபிளைப் பயன்படுத்துவோம். சாதாரணமாக, சொந்தக்காரர்களுக்கும் அக்கம்பக்கத்தாருக்கும் பயந்துகொண்டு ஜனங்கள் எங்களை வீட்டுக்குள் அழைக்க மாட்டார்கள்; எனவே, ஆர்வம் காட்டியவர்களுக்குப் பொதுவாக வேறெங்காவது வைத்து பைபிள் படிப்பு நடத்தினோம்.

பிரசுரங்கள் அத்திப்பூத்தாற்போல் எப்போதாவது கிடைத்தன. சொல்லப்போனால், சில வருடங்களுக்கு எங்கள் சபையில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் புத்தகம் ரஷ்ய மொழியில் ஒரேவொரு பிரதிதான் இருந்தது. இந்தப் புத்தகத்திலிருந்து கற்றவற்றையெல்லாம் நாங்கள் ஊழியத்தில் பயன்படுத்தினோம், ஆனால் இந்தப் புத்தகம் சபையிலேயே இருந்தது!

ஒரு சர்ச்சுக்குப் பக்கத்தில் நானும் இன்னொரு சகோதரியும் சாட்சிகொடுக்கும்போது, ஒரு மதகுருவைச் சந்தித்தோம், அவருடைய பெயர் பியாடர் பாட்னியா. அவரிடம் உரையாடலை ஆரம்பிக்க, எங்கு பைபிள் கிடைக்குமென விசாரித்தோம். “எனக்கும் பைபிளில் ஆர்வம் இருக்கிறது” என அவர் பதில் அளித்தார். பிறகு சுவாரஸ்யமான உரையாடல் தொடர்ந்தது. மறுநாள் அருகிலுள்ள பூங்காவில் நாங்கள் பியாடரை சந்தித்தோம், சத்தியம் புத்தகத்தின் பொருளடக்கத்தை அவரிடம் காட்டினோம், எதைக் குறித்து கலந்துபேச அவர் விரும்புகிறார் எனக் கேட்டோம். ‘கடவுளுக்கு வெறுப்புண்டாக்குகிற பழக்கவழக்கங்கள்’ என்ற தலைப்பை அவர் தேர்ந்தெடுத்தார். அந்தக் கலந்தாலோசிப்பு பயனுள்ளதாய் இருந்தது, தொடர்ந்து பைபிள் படிப்பு நடத்த வழிவகுத்தது; இந்தப் படிப்பை ஒரு சகோதரர் நடத்தினார்.

பைபிளிலிருந்து திருத்தமான அறிவைப் பெற்றுத் தேறிய பியாடர் சக மதகுருமார்களிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்; பைபிளின் அடிப்படைப் போதனைகளுக்குக்கூட அவர்களால் பதில் அளிக்க முடியாததைக் கண்டுபிடித்தார்! அதன் பிறகு சீக்கிரத்தில், அவர் சர்ச்சிலிருந்து விலகிக்கொண்டார், யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார்.

1991-⁠ல் நானும் பியாடரும் திருமணம் செய்துகொண்டோம், இருவருமாக பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தோம். சில வருடங்களுக்குள்ளேயே அவர் விபத்தில் உயிரிழந்தது வேதனை அளித்தது. இந்தச் சூழ்நிலையை நான் எப்படிச் சமாளித்தேன்? முழு மூச்சோடு ஊழியத்தில் இறங்கிவிட்டேன், ‘சகலவிதமான ஆறுதலின் தேவனை’ பற்றி மற்றவர்கள் அறிந்துகொள்வதற்கு உதவினேன். (2 கொ. 1:3, 4) 1997-⁠ல் விசேஷ பயனியராகச் சேவை செய்யும் பாக்கியத்தையும் பெற்றேன்.

[படம்]

பியாடர்

[பக்கம் 200, 201-ன் பெட்டி/​படங்கள்]

நீதியான அரசாங்கத்திற்கு ஏங்கினேன்

இன்ட்ரா ரேடுபி

பிறந்தது 1966

முழுக்காட்டப்பட்டது 1989

பின்னணிக் குறிப்பு முன்னாள் கம்யூனிஸவாதியான இவர், 1990-⁠ல் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார், 30-⁠க்கும் அதிகமானோர் சத்தியத்திற்கு வர உதவியிருக்கிறார்.

வளர்ந்து வருகையில் எனக்குக் கடவுள் மீதோ பைபிள் மீதோ நம்பிக்கை இருக்கவில்லை. எனினும், எது சரியோ அதை ஆதரிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது; நீதிநேர்மையான ஓர் அரசாங்கத்தை மனிதர்களால் ஏன் அமைக்க முடியவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

முதன்முறையாக யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தபோது அவர்கள் பைபிளிலிருந்து காட்டிய விஷயங்களைப் பார்த்து மலைத்துவிட்டேன். அவர்கள் சொன்னவை அனைத்தும் நியாயமாகப்பட்டன! கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும், இயேசு போதித்த நீதியைப் பற்றியும் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் என் மனதைத் தொட்டன. 1989-⁠ல் ஓர் ஏரியில் நான் முழுக்காட்டுதல் பெற்றேன், ஆறு மாதங்கள் கழித்து ஒழுங்கான பயனியராகச் சேவை செய்ய ஆரம்பித்தேன். அப்போது எங்களுக்கு ஒரு குழந்தை இருந்தது. பிறகு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. என் கணவர் இவானும் யெகோவாவின் சாட்சியாக இருந்ததாலும், அவர் அன்போடு உதவியதாலும் முழுநேர ஊழியத்தை என்னால் தொடர்ந்து செய்ய முடிகிறது.

பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தபோது பெரும்பாலும் தெருக்களிலும் பூங்காக்களிலும் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தேன். சொல்லப்போனால் இந்த இரட்டைக் குழந்தைகள் எனக்குப் பெரிதும் உதவியாகவே இருந்தன, எப்படியெனில், ஜனங்கள் இவர்களை ஆர்வத்தோடு பார்த்தார்கள், அவர்கள் சாவகாசமாய் உணர்ந்ததால் என்னோடு பேச மனமுள்ளவர்களாய் இருந்தார்கள்.

ரிகாவில் ஒரு பூங்காவில் சாட்சிகொடுக்கும்போது அன்னா என்ற பெண்ணைப் பார்த்தேன். அவர் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்; ஓர் இசைநிகழ்ச்சி ஆரம்பிப்பதற்காகக் காத்திருந்தார், ஏற்கெனவே அதற்கான டிக்கெட்டையும் வாங்கியிருந்தார். எனினும், மனிதகுலத்திற்கான பைபிளின் நம்பிக்கையைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டதால் அந்த இசைநிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளக்கூட இல்லை. நாங்கள் இருவருமாகச் சேர்ந்து பைபிள் வசனங்களை வாசித்தோம், மீண்டும் பூங்காவில் சந்திக்க ஏற்பாடு செய்துகொண்டோம். ஆறு மாதங்களில் அன்னா (வலது) நம் ஆன்மீக சகோதரி ஆனார், தற்போது கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்புக் குழுவில் சேவை செய்கிறார். ஆம், என் ஊழியத்தை யெகோவா எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தால் என் உள்ளம் சந்தோஷத்தில் துள்ளுகிறது.

[படம்]

என் குடும்பத்தாருடன்

[பக்கம் 204, 205-ன் பெட்டி/​படம்]

என் மனதிலிருப்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்

ஆன்ட்ரே கெவ்லியா

பிறந்தது 1963

முழுக்காட்டப்பட்டது 1990

பின்னணிக் குறிப்பு படத்தில் தன் மனைவி எல்யீனாவுடன் இருக்கும் இவர் பயனியராக​வும் உதவி வட்டாரக் கண்காணியாகவும் நகரக் கண்காணியாகவும் சேவை செய்கிறார்.

பைபிளை நான் எப்போதாவது வாசித்திருக்கிறேனா என்று ரிகா செல்லும் ரயிலில் இருந்த இரண்டு பெண்கள் என்னிடம் கேட்டார்கள்; இது ஜனவரி 1990-⁠ல் நடந்தது. என் மனதிலிருப்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்; ஏனெனில், நீண்ட நாட்களாகவே பைபிள் வாசிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கு இருந்தது, ஆனால் பைபிள் கிடைக்கவில்லை. அந்தப் பெண்களில் ஒருவரான இன்ட்ரா ரேடுபியிடம் என் விலாசத்தையும் ஃபோன் நம்பரையும் கொடுத்தேன். (பக்கங்கள் 200-201-லுள்ள பெட்டியைக் காண்க.) சில நாட்கள் கழித்து அவர்கள் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வந்தார்கள், அவர்கள் வருகையை எதிர்பார்த்து நான் காத்திருந்தேன். என் கேள்விகளுக்கு எல்லாம் பைபிளிலிருந்து திறம்பட பதில் அளித்ததைப் பார்த்து வியந்துபோனேன். அதன் பிறகு சீக்கிரத்திலேயே, ஒரு காலத்தில் மதகுருவாக இருந்து, தற்போது முழுநேர ஊழியம் செய்து வந்த பியாடர் பாட்னியா எனக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார்.​—⁠பக்கங்கள் 192-3-லுள்ள பெட்டியைக் காண்க.

நான்கு மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக சபை கூட்டத்தில் கலந்துகொண்டேன். கோடை காலத்தில், மாதத்திற்கு ஒருமுறை காலை 10:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை காட்டில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தேவராஜ்ய ஊழியப் பள்ளி, ஊழியக் கூட்ட அட்டவணைகள் ஆகியவற்றிலிருந்து சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து சகோதரர்கள் கலந்தாலோசித்தார்கள், பொதுவாக யாராவது முழுக்காட்டுதலும் பெற்றார்கள்; இதனால் மதிய இடைவேளைக்கு முன்பு முழுக்காட்டுதல் பேச்சும் கொடுக்கப்பட்டது.

நான் புதிதாக கற்றுக்கொண்ட சத்தியமும், கூட்டங்களில் ருசித்த சகோதர அன்பும் எனக்கு அளவிலா ஆனந்தத்தை அளித்தன. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முழுக்காட்டுதல் பெற விரும்பினேன். அதே வருடத்தில் ஆகஸ்ட் மாத முடிவில் அந்த நாளும் வந்தது, ஓர் ஏரியில் முழுக்காட்டுதல் பெற்றேன்.

1990-களின் ஆரம்பத்தில் என் கலைக்கூடத்தில் அநேகருக்கு பைபிள் படிப்பு நடத்தினேன். அவர்களில் சிலர் என் ஆன்மீக சகோதரர்கள் ஆனார்கள். 1992-⁠ல் யெகோவா என் ஆனந்தத்தை இன்னும் அதிகரித்தார்; ஆம், என் அருமை மனைவி எல்யீனா என் ஆன்மீக சகோதரியாகவும் ஆனாள்.

[பக்கம் 208, 209-ன் பெட்டி/​படங்கள்]

50 வருடங்களுக்குப் பிறகு தாயகம் திரும்புதல்

ஆரியா பி.லேவர்ஸ்

பிறந்தது 1926

முழுக்காட்டப்பட்டது 1958

பின்னணிக் குறிப்பு லாட்வியாவைச் சேர்ந்த இவர், ஊழியம் செய்வதற்குத் தேவை அதிகமுள்ள இடமான லாட்வியாவுக்குத் திரும்பும் முன்பு பல நாடுகளில் வசித்தார்.

எங்கள் உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு லாட்வியாவை விட்டே வெளியேறிவிட இரண்டாம் உலகப் போரின்போது அப்பா தீர்மானித்தார். சீக்கிரத்தில் எனக்குத் திருமணம் ஆனது, நானும் என் கணவரும் வெனிசுவேலாவில் குடியேறினோம். அங்குதான் முதன்முறையாக யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தேன், ஒரு மிஷனரி சகோதரி எனக்கு பைபிள் படிப்பு நடத்த முன்வந்தபோது சம்மதித்தேன். நாங்கள் ஜெர்மன் மொழியில் படித்தோம். கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தபோது, வெனிசுவேலாவின் அரசு மொழியான ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக்கொண்டேன்.

1958-⁠ல் குடும்பமாக நாங்கள் அமெரிக்காவில் குடியேறினோம், அங்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் முழுக்காட்டுதல் பெற்றேன். என் கணவர் இறந்த பிறகு நானும் என் மகளும் ஸ்பெயினுக்குக் குடிமாறினோம், அங்கு நான் பயனியர் ஊழியம் செய்தேன். அந்தச் சமயத்தில் அங்கே ஜெனரல் ஃபிரான்கோ சர்வாதிகாரியாய் இருந்தார்; எளியவர்களும் கடவுள் பயமுள்ளவர்களும் சத்தியத்தின் தண்ணீருக்காகத் தவியாய்த் தவித்தார்கள். ஸ்பெயினில் இருந்த 16 ஆண்டுகளில் சுமார் 30 பேர் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள உதவும் பாக்கியத்தைப் பெற்றேன்.

1991-⁠ல் சோவியத் கம்யூனிஸ ஆட்சி கவிழ்ந்த பிறகு நான் லாட்வியாவுக்குத் திரும்பினேன். இங்கு ராஜ்ய அறிவிப்பாளர்கள் அதிகம் தேவைப்பட்டதைப் புரிந்துகொண்டேன். என் தாயகம் திரும்பி பயனியர் செய்ய வேண்டுமென்ற என் ஆசைக்கனவு 1994-⁠ல் நனவானது; லாட்வியாவை விட்டு வெளியேறி சரியாக 50 வருடங்களுக்குப் பிறகு நனவானது.

ஆன்மீக அர்த்தத்தில், லாட்வியாவின் வயல்கள் அறுவடைக்குத் தயாராய் இருந்தது உண்மையே. உதாரணத்திற்கு, நம் புத்தகங்களில் ஒன்றைக் கேட்ட ஒரு நபரிடம் நான் சாட்சிகொடுத்தேன். அவருடைய மகளுக்கு ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகமெனவும், எனவே அவளுக்குக் கொடுப்பதற்காக தனக்கு அந்தப் புத்தகம் வேண்டுமெனவும் அவர் சொன்னார். அந்தப் பெண்ணுடைய விலாசத்தை வாங்கிக்கொண்டேன், அவளுக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தேன், ஒரு வருடத்திற்குள் அவள் முழுக்காட்டுதல் பெற்றுவிட்டாள். இத்தனை வருடங்கள் கழித்து என் தாயகத்தில் பயனியர் செய்வதற்கான பாக்கியத்தையும் பலத்தையும் யெகோவா எனக்குக் கொடுத்திருப்பதற்காக அவருக்கு நன்றிசொல்கிறேன்.

[படம்]

20 வயதில் நான்

[பக்கம் 216, 217-ன் அட்டவணை/​வரைபடம்]

கால வரலாறு​—⁠லாட்வியா

1916 மாலுமியான ஆன்ஸ் இன்ஸ்பர்க் முழுக்காட்டுதல் பெறுகிறார். முதல் உலகப் போருக்குப் பிறகு, கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிக்கும் தகவலை லாட்வியாவில் வெளியாகும் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்துகிறார்.

1920

1926 ரிகாவில் ஓர் அலுவலகம் திறக்கப்படுகிறது.

1928 ஜனங்களுக்கு விடுதலை என்ற சிறுபுத்தகம் லாட்வியன் மொழியில் முதன்முதலாக வெளியிடப்படுகிறது. ஜெர்மனியிலிருந்து கால்போர்ட்டர்கள் வருகிறார்கள்.

1931 பர்ஸீ டன்னம் அலுவலக மேலாளராக நியமிக்கப்படுகிறார்.

1933 சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் அமைப்பு (IBSA) சட்டப்படி பதிவுசெய்யப்படுகிறது.

1934 IBSA அலுவலகத்தை அரசு இழுத்து மூடுகிறது .

1939 முதல் 1992 வரை எந்த அறிக்கைகளும் கிடைக்கவில்லை.

1940

1940 சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டின் கீழ் லாட்வியா வருகிறது; டன்னம் தம்பதியர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியதாகிறது.

1951 சாட்சிகள் சைபீரியாவுக்கு நாடு​கடத்தப்​படுகிறார்கள்.

1960

1980

1991 லாட்வியா பழையபடி சுதந்திரம் பெறுகிறது.

1993 கிலியட் பயிற்சிபெற்ற மிஷனரிகள் முதன்முறையாக வருகிறார்கள்.

1995 லாட்வியன் மொழியில் காவற்கோபுரம் மாதாந்தர வெளியீடாக பிரசுரிக்கப்படுகிறது.

1996 ரிகாவில் கன்ட்ரீ கமிட்டி ஏற்படுத்தப்படுகிறது.

1997 யூர்மாலாவில் புத்தம் புதிய ராஜ்ய மன்றம் கட்டப்படுகிறது.

1998 ரிகாவில் இரண்டு சபைகள் சட்டப்படி பதிவுசெய்யப்படுகின்றன.

2000

2001 விசேஷ பிரசங்க ஊழியம் முதன்முதலாக ஏற்பாடு செய்யப்படுகிறது.

2004 செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் லாட்வியாவிலேயே கிளை அலுவலகம் செயல்படத் தொடங்குகிறது.

2006 கிளை அலுவலக விரிவாக்கம் நிறைவு; லாட்வியாவில் 2,400-⁠க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் மும்முரமாய்ப் பிரசங்கிக்கிறார்கள்.

[வரைபடம்]

(பிரசுரத்தைக் காண்க)

மொத்த பிரஸ்தாபிகள்

மொத்த பயனியர்கள்

2,000

1,000

1920 1940 1960 1980 2000

[பக்கம் 176-ன் முழுபக்க படம்]

[பக்கம் 178-ன் படம்]

1926-⁠ல் ரிகாவில் பைபிள் மாணாக்கர்​களின் முதல் அலுவலகம் இந்தக் கட்டடத்தில் செயல்பட ஆரம்பித்தது

[பக்கம் 178-ன் படம்]

1928-⁠ல், லாட்வியன் மொழியில் “ஜனங்களுக்கு விடுதலை” சிறுபுத்தம் சந்தோஷமான செய்தியை அறிவித்தது

[பக்கம் 178-ன் படம்]

ரீஸ் டெய்லர்

[பக்கம் 180-ன் படம்]

1927-⁠ல் ஃபெர்டினான்ட் ஃப்ருக் முழுக்காட்டுதல் பெற்றார்

[பக்கம் 180-ன் படம்]

லிபாயாவில் தங்கள் கடைக்கு முன்பாக ஹைன்ரிக் ட்சிக்கும் அவருடைய மனைவி எல்ஸாவும்

[பக்கம் 183-ன் படங்கள்]

யாருக்கும் தெரியாமல் பிரசுரங்களை எட்வின் ரிஜ்வெல்லும் (இடது) ஆன்ட்ரூ ஜேக்கும் லாட்வியாவுக்கு எடுத்து வந்தார்கள்

[பக்கம் 183-ன் படம்]

பர்ஸீ, மாஜ் டன்னம் தம்பதியர்

[பக்கம் 183-ன் படம்]

1930-களில் அலுவலகத்தில் பணிபுரிந்தோரும் மற்ற சாட்சிகளும்

[பக்கம் 191-ன் படம்]

1950-⁠ல் KGB பட்டியலின்படி கைதுசெய்யப்பட்ட சாட்சிகள். அநேகர் சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்

[பக்கம் 191-ன் படம்]

1950-களின் ஆரம்பத்தில் சைபீரியா

[பக்கம் 194-ன் படம்]

இந்த சவ அடக்கக் கூட்டத்தைப் போன்ற பெரிய கூட்டங்களில் சகோதரர்கள் ஆன்மீக பேச்சுகளைக் கேட்டார்கள்

[பக்கம் 194-ன் படம்]

பவுல்ஸ், வலியா பெர்க்மானிஸ் தம்பதியர் “காவற்கோபுர”த்தை லாட்வியன் மொழியில் மொழிபெயர்த்து, பள்ளி நோட்டுப் புத்தகத்தில் கைப்பட எழுதினார்கள்

[பக்கம் 194-ன் படம்]

(நிஜ அளவில் காட்டப்பட்டுள்ள) நுண்படத் தகட்டைப் பயன்படுத்தி சகோதரர்கள் டெவலப் செய்து, பிரதி எடுத்து, வினியோகித்த “காவற்கோபுரம்”

[பக்கம் 197-ன் படங்கள்]

டெக்லா ஆன்ட்ஸ்குலி என்பவருக்கு பவுலினி சிராவா சத்தியத்தை அறிமுகப்படுத்தினார்

[பக்கம் 199-ன் படம்]

1981, யூரி காப்டாலா

[பக்கம் 199-ன் படம்]

இன்று, அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை முன்பு

[பக்கம் 202-ன் படங்கள்]

லாட்வியாவில் 1998-⁠ல் முதன்முறை நடைபெற்ற “கடவுள் காட்டும் ஜீவ வழி” மாநாட்டில், சைகை மொழிப் பகுதி

[பக்கம் 207-ன் படங்கள்]

லாட்வியாவில் வெயிட் லிஃப்டிங் சாம்பியன் ஆகி மூன்று மாதங்களுக்குப் பிறகு யானிஸ் ஃபாக்மானிஸ், ராஜ்ய பிரஸ்தாபியாக ஆனார்

[பக்கம் 207-ன் படங்கள்]

சிறையில் இருந்தபோது மாரிஸ் க்ரூமினிஷ் முதன்முறையாக கடவுளிடம் ஜெபித்தார்

[பக்கம் 210-ன் படம்]

தேசபக்திப் பாடல்களைப் பாடாததற்காக டாட்ஸி புன்ட்சுலி கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்

[பக்கம் 210-ன் படம்]

பலவந்தமாக இரத்தம் ஏற்றப்பட்டதற்குப் பிறகு யெல்யீனா காட்லிவ்ஸ்காயா இறந்துவிட்டாள்

[பக்கம் 210-ன் படம்]

பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் சபைகளை ஊக்குவித்தார்கள்

[பக்கம் 215-ன் படம்]

லாட்விய பெத்தேல் குடும்பம்

[பக்கம் 215-ன் படங்கள்]

கிளை அலுவலகக் குழு, 2006

பீடர் லுடர்ஸ்

ஆன்டர்ஸ் பெரிலுண்ட்

ஹானு கன்கான்பா

யுஹா ஹுட்டுனின்

[பக்கம் 215-ன் படம்]

ரிகாவில் மைரா தெருவிலுள்ள மூன்று கிளை அலுவலகக் கட்டடங்கள்

[பக்கம் 218-ன் படங்கள்]

லாட்வியாவிலுள்ள யெகோவாவின் மக்கள் தற்போது பகிரங்கமாய்ப் பிரசங்கிக்க முடியும்

[பக்கம் 218-ன் படங்கள்]

தீக்கிரையான இந்தத் திரை அரங்கம் (இடது) இரண்டு ராஜ்ய மன்றங்களாக உருவெடுத்தது (கீழே)