Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

யெகோவாவைச் சேவிக்கும் அன்புள்ள சக ஊழியர்களுக்கு:

அப்போஸ்தலன் பவுல், சக விசுவாசிகளிடம் அன்பையும் நன்றியையும் காட்டுவதற்குக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தினார். “முதற்கண் உங்கள் அனைவருக்காகவும் நான் இயேசு கிறிஸ்து வழியாய் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். ஏனெனில் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை உலக முழுவதிலும் தெரிந்திருக்கிறது” என்று ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவர் எழுதினார். (ரோ. 1:8, பொது மொழிபெயர்ப்பு) ஆம், அந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுடைய உறுதியான விசுவாசமும் பிரசங்க வேலையில் அவர்கள் காட்டிய பக்திவைராக்கியமும் ரோம சாம்ராஜ்யம் எங்கும் பிரபலபமாயிருந்தது. (1 தெ. 1:8) ஆகவே, தன் சகோதரர்கள்மீது பவுலுக்கு ஆழ்ந்த அன்பு இருந்ததில் ஆச்சரியமேதுமில்லை.

பவுலைப் போலவே, நாங்களும் உங்களைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் யெகோவாவுக்கு நன்றி கூறுகிறோம். உங்கள் எல்லாரையும் நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்! யெகோவாவும்கூட உங்கள் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார் என்பதில் நீங்கள் நம்பிக்கையோடு இருக்கலாம். உங்களில் சிலர் கடும் எதிர்ப்புகளைச் சந்திக்கிற போதிலும் பிரசங்க வேலையை விடாமல் செய்கிறீர்கள். உங்களுடைய தைரியத்தையும் அஞ்சாநெஞ்சத்தையும் பார்க்கும்போது யெகோவாவின் இதயம் எவ்வளவாய் ஆனந்தமடையும்!—நீதி. 27:11.

விறுவிறுப்பூட்டுகிற, விசுவாசத்தைப் பலப்படுத்துகிற பதிவுகள் நிறைந்த இந்த இயர்புக்கில் “யெகோவாவின் சாட்சிகளது நவீன நாளைய செயல்கள்” என்ற தலைப்பில் ஒரு பகுதி உள்ளது. இதை நீங்கள் சிரத்தையோடு வாசித்து தியானித்துப் பார்க்கையில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ‘ஜெயிக்கிறவராகவும் ஜெயிப்பவராகவும்’ புறப்பட்டுச் செல்கிறார் என்பதற்கும் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வெற்றி அடையாது என்பதற்கும் ஏராளமான அத்தாட்சிகளைக் காண்பீர்கள்.—வெளி. 6:2; ஏசா. 54:17.

பிலிப்பி பட்டணத்திலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில், ‘என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்; . . . ஏனெனில் நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்’ என்று பவுல் குறிப்பிட்டார். (பிலி. 1:3-5, பொ.மொ.) ஆளும் குழுவின் அங்கத்தினர்களாகிய நாங்களும் அதே விதமாக தேவனுக்கு நன்றி கூறுகிறோம். 2007 ஊழிய ஆண்டில், உலகம் முழுவதிலுமுள்ள 236 நாடுகளில் 66,91,790 பிரஸ்தாபிகள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் மொத்தம் 143,17,61,554 மணிநேரங்களைச் செலவிட்டிருக்கிறார்கள். நற்செய்தியை எங்கும் அறிவிப்பதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி அபாரம்! நம்முடைய ஒட்டுமொத்த முயற்சியினால் ஆயிரக்கணக்கான ஆட்கள் நன்மை அடைந்திருப்பதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். இவை யாவும் யெகோவாவுக்கே புகழ் சேர்க்கிறது!

தன் சகோதரர்கள் பட்ட கஷ்டங்களைத் தான் நன்கு புரிந்துகொண்டதாக பவுல் மற்றொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார். தெசலோனிக்கேயிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூருகிறோம்’ என்று அவர் குறிப்பிட்டார். (1 தெ. 1:2, 3) ஆம், கஷ்டங்கள் நிறைந்ததே வாழ்க்கை. பிரச்சினைகள் தலைதூக்கும், ஆனால் அவற்றை நாம் சகிப்பது முக்கியம். நீங்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவிக்கிறீர்கள்? தீராத வியாதியின் காரணமாக, யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய முடியவில்லையே என நினைத்து மனமொடிந்து போகிறீர்களா? பல ஆண்டுகளாக உங்களின் நேசத்துணையாக இருந்தவரை தணியா தாகம்கொண்ட ஷியோல் இரையாக்கி விட்டதா? (நீதி. 30:15, 16) உங்களைப் போலவே யெகோவாவை நேசிக்கிற ஒரு மணத்துணையைக் கண்டுபிடிப்பது உங்களுக்குக் கடினமாகத் தெரிகிறதா? அப்படியிருந்தும், கர்த்தருக்குட்பட்டவரை மட்டுமே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற பைபிளின் அறிவுரைக்கு நீங்கள் உண்மையோடு கீழ்ப்படிந்து வருகிறீர்களா? (1 கொ. 7:39) கடும் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் பிள்ளைகளைப் பராமரிப்பதற்குக் கடுமையாகப் போராடுகிறீர்களா? உங்களுடைய சூழ்நிலை எப்படிப்பட்டதாய் இருந்தாலும் சரி, ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு நீங்கள் முதலிடம் கொடுத்தால் ‘தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை [யெகோவா] மறந்துவிட மாட்டார்’ என்பதில் நிச்சயமாக இருக்கலாம். ஆகவே, சகோதர சகோதரிகளே ‘நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருக்கும்படி’ உங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்!—எபி. 6:10; கலா. 6:9.

சகித்திருக்க எது உங்களுக்கு உதவும்? தெசலோனிக்கேயர்களுக்கு இருந்ததைப் போல ‘நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையே’ உங்களுக்கும் உதவும். நல்ல காரணத்திற்காகவே, பவுல் ‘இரட்சிப்பின் நம்பிக்கையை’ உறுதியான தலைச்சீராவுக்கு ஒப்பிட்டார்; ஒரு கிறிஸ்தவரை மனச்சோர்வளிக்கும் சிந்தனைகளிலிருந்தும் ஓயாத சந்தேகங்களிலிருந்தும் இந்தத் தலைச்சீரா பாதுகாக்கும்.—1 தெ. 5:8.

உண்மையிலேயே, சந்தோஷத்தோடு சகித்திருப்பதன்மூலம் யெகோவாவுடைய உன்னத அரசதிகாரத்தைக் குறித்த மாபெரும் விவாதத்தில் சாத்தானின் நிந்தைகளுக்கு நீங்கள் பதிலடி கொடுக்கிறீர்கள். தன்னலம் கடவுளுடைய ஊழியர்களின் பிறவிக்குணமாக இருக்கிறது என்று கடவுளிடம் சாத்தான் குற்றம்சாட்டுகிறான். அவர்கள் சிறிது காலத்திற்கு கடவுளுக்குச் சேவை செய்ய மனமுள்ளவர்களாய் இருந்தாலும், சோதனைக்கு மேல் சோதனை வரும்போது அல்லது தாங்கள் எதிர்பார்த்த காலத்திற்குள்ளாக இந்த உலகிற்கு முடிவு வராமல் போகும்போது கடவுளைச் சேவிப்பதில் மந்தமாகிவிடுவார்கள் என்று அவன் கூறுகிறான். பிசாசு படுபயங்கரமான பொய்யன் என்பதை அம்பலப்படுத்துவதற்கான அரிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது! ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச்செல்ல உங்களுடைய நம்பிக்கை நிறைவேறும் நாளும் நெருங்கி வருகிறது.

தன்னுடைய சகோதரர்கள் பலமான விசுவாசத்தோடு செயல்பட்டதையும், பிரசங்க வேலையில் அவர்கள் அதிகமதிகமாய் ஈடுபட்டதையும், அவர்களுடைய சகிப்புத்தன்மையையும் பாராட்டுவதற்குக் கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் பவுல் பயன்படுத்தினார்; அதுபோலவே இச்சமயத்தில் நாங்கள் உங்களை பாராட்டுகிறோம் என்பதையும் மிகவும் நேசிக்கிறோம் என்பதையும் மறுபடியும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். இந்தச் சிறந்த வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள்!

வரவிருக்கும் ஆண்டும் கடவுளுடைய அபரிமிதமான ஆசீர்வாதங்கள் நிறைந்த ஆண்டாகத் திகழட்டும். இனிய வாழ்த்துக்களுடன் இந்தக் கடிதத்தை நிறைவு செய்யும்

உங்கள் சகோதரர்கள்,

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு