Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகெங்கும் பிரசங்கித்தலும் கற்பித்தலும்

உலகெங்கும் பிரசங்கித்தலும் கற்பித்தலும்

உலகெங்கும் பிரசங்கித்தலும் கற்பித்தலும்

ஆப்பிரிக்கா

நாடுகள் 57

மக்கள்தொகை 82,73,87,930

பிரஸ்தாபிகள் 10,86,653

பைபிள் படிப்புகள் 20,27,124

கோட் டீ வ்வார்

இந்நாட்டின் கிழக்கே பீயனூவன் கிராமம் உள்ளது; இங்குள்ளவர்கள் சத்தியத்திற்கான தணியா தாகத்தோடு இருக்கிறார்கள். சிலர் தங்களுடைய வயல்களுக்குப் போவதற்குமுன், பைபிளைப்பற்றித் தெரிந்துகொள்ள காலை 6 மணிக்கு பிரஸ்தாபிகளுடைய வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். மற்றவர்கள் சபைக் கூட்டங்கள் முடிந்த பிறகு, மாலையில் தங்களுக்கு பைபிள் படிப்பு நடத்த வேண்டுமென்று கேட்கிறார்கள். ஒருநாள், படிப்பறிவில்லாத ஒரு பெண், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகம் வேண்டுமென ஒரு சகோதரரிடம் கேட்டாள். தன் கணவர் தனக்கு வாசித்துக் காட்டுவாரென அவள் கூறினாள். சகோதரரும் புத்தகத்தைக் கொடுத்தார்; மறுநாள் அவளுடைய வீட்டிற்கு அவர் சென்றார். அந்தப் பெண்ணும் அவளுடைய கணவரும் இந்தச் சகோதரருக்காகப் பொறுமையோடு காத்திருந்தார்கள். அவளுடைய கணவர் அன்று வேலைக்குப் போகவில்லை. ஏன்? ஏனென்றால், அவர்கள் இருவரும் விடியவிடிய கண்விழித்து அந்தப் புத்தகத்தை வாசித்திருந்தார்கள். தான் வாசித்த விஷயங்களை சகோதரரோடு இப்பொழுது கலந்துபேச அவர் விரும்பினார். அவர்களுக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

பெனின்

ஒதுக்குப்புற பகுதியில் வசித்து வரும் ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தோர் பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள். அந்தக் குடும்பத்தின் தலைவர் பாரம்பரிய சர்ச் ஒன்றில் பாதிரியாக சேவை செய்து வந்தார். படிப்பு ஆரம்பித்து இரண்டே வாரத்தில் அந்த குடும்பத்தார் எல்லாரும் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்வதாகத் தெரிவித்தார்கள். சனிக்கிழமை மாலை, மூத்த மகள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்துபோனாள். இந்த அதிர்ச்சியையும் தாங்கிக்கொண்டு அவளுடைய அப்பா ஞாயிற்றுக்கிழமை அன்று மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். திங்கட்கிழமை அவர் அந்த மரணத்தைப்பற்றி இவ்வாறு சொன்னார்: “நாங்கள் மனமுடைந்து போவதற்காக சாத்தான் இதைச் செய்திருக்கிறான். ஆனால், நானும் என்னுடைய குடும்பத்தினரும் பின்வாங்கிவிட மாட்டோம்.” அங்கி, தொப்பி, கச்சை, அபிஷேக தைலம், கோல் என்று சர்ச்சுக்குரிய பொருள்கள் எல்லாவற்றையும் அவர் வெளியே எடுத்து வந்தார். அதேபோல, அந்த சர்ச்சின் அலுவலகத்தில் வேலை செய்த அவருடைய மனைவியும் பொருள்களை எடுத்து வந்தார். “இனிமேல் சர்ச்சுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று அவர் அறிவித்தார். அப்போஸ்தலர் 19:19-ல் வாசிக்கிற விதமாக, பொதுவிடத்திலே அவை எல்லாவற்றையும் அவர் எரித்துப்போட்டார். அந்தக் குடும்பத்தார் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் செய்கிறார்கள்.

மடகாஸ்கர்

கடந்த வருடம், சுமார் 500 பேர் வசிக்கிற ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிரசங்கி ஒருவர், அடுத்த கிராமத்திலுள்ள சகோதரி ஒருவரிடமிருந்து பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். அதைக் கவனமாக வாசித்த பிறகு, சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக அவர் உணர்ந்தார்; தன்னுடைய சர்ச் அங்கத்தினர்களுடன் தான் கற்ற விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். விரைவில் அவரும் அவருடைய குடும்பத்தாரும் இன்னும் 20 பேரும் சர்ச்சிலிருந்து விலகிக்கொண்டார்கள்; பிற இடங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைப் போலவே இவர்களும் கூட்டங்களை நடத்தினார்கள். விசேஷ பயனியர்கள் அவர்களுக்கு உதவ முன்வந்தார்கள். ஆர்வமுள்ள அநேகருக்கு அவர்கள் பைபிள் படிப்பு நடத்தினார்கள், தவறாமல் சபை புத்தகப் படிப்பு நடப்பதற்கும் காவற்கோபுர படிப்பு நடப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்தார்கள். அக்டோபர் மாதத்தில் ஐந்து பேர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள் ஆனார்கள், இப்பொழுது அந்த பயனியர்கள், பொதுப் பேச்சும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியும் நடப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். கூட்டங்களுக்கு சராசரியாக நாற்பது பேர் வருகிறார்கள். இங்கு 20-க்கும் அதிகமான பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தென் ஆப்பிரிக்கா

ஹெனீயும் அவருடைய மனைவியும் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்தார்கள். ஒரு வீட்டைச் சுற்றியுள்ள வேலியோரமாய் அவர்கள் நடந்து செல்லுகையில், அந்த வேலி வழியாகத் தலையை நீட்டிக்கொண்டிருந்த ஒரு வெறிநாய் ஹெனீயின் கையைக் கடித்துவிட்டது. இரத்தம் கொட்டியதால் அவர்கள் சீக்கிரமாக வீடு திரும்பினார்கள்; அவருடைய மனைவி காயத்தைச் சுத்தம் செய்து கட்டுப்போட்டார். பிறகு, ஹெனீ மருத்துவரைப் பார்க்க சென்றார். ஊழியத்தில் பங்குகொள்ளாதபடி ஒரு நாய் தடைசெய்வதை தான் விரும்பவில்லையென அவர் தன் மனைவியிடம் கூறினார். அதனால் சுமார் ஒரு மணிநேரம் கழித்து, ஊழியம் செய்ய அவர்கள் மீண்டும் அந்தப் பிராந்தியத்திற்குச் சென்றார்கள். அந்த வெறிநாய் இருந்த வீட்டை விட்டுவிட்டு அடுத்த வீட்டிலிருந்து அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். சில வீடுகளில் பேசிய பிறகு அவர்களை ஒருவர் உள்ளே அழைத்தார். சொல்வதை அவர் கூர்ந்து கேட்டார்; மீண்டும் சந்திக்க மிகுந்த ஆர்வம் காட்டினார். பைபிள் படிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்தார், விரைவிலேயே கூட்டங்களுக்குத் தவறாமல் வரத் தொடங்கினார். அவர் டச்சு சீர்திருத்த சர்ச்சிலிருந்து விலகியபோது, அதன் மூத்த உறுப்பினர் ஒருவர் இவரைச் சந்தித்து, உதவி குரு பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு சொன்னார். என்றாலும், சர்ச்சிலிருந்து விலகும் தன்னுடைய தீர்மானத்தில் அவர் உறுதியாக இருந்தார். அவர் தொடர்ந்து நல்ல மாற்றங்களைச் செய்தார், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பங்கெடுக்க தன் பெயரைக் கொடுத்தார்.

டான்ஜானியா

அக்டோபர் 2005-ல் ஒதுக்குப்புற பிராந்தியம் ஒன்றில் ஊழியத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஈரீங்கா சபையிலிருந்து 9 சகோதரர்கள் சுமார் 75 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பாவாகாவிற்கு ஊழியம் செய்யப் புறப்பட்டார்கள். அந்தப் பகுதியில் ஒரு பிரஸ்தாபி குடியிருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தார்கள்; அவரைத் தேடிச் சென்றார்கள். பலரிடம் விசாரித்த பிறகு, அந்தச் சகோதரரை அவர்கள் கண்டுபிடித்தார்கள். ஊழியம் செய்வதற்கு இன்னும் டான்ஜானியாவில் தடை இருப்பதாக நினைத்துக்கொண்டு 20 வருடங்களுக்கும் மேலாக அந்த ஒதுக்குப்புற பிராந்தியத்திலேயே தங்கிவிட்டதாக அவர் கூறினார். அத்தனை வருடங்களும் அங்கு சாட்சி கொடுத்து வந்ததாகவும் பைபிள் செய்தியில் உண்மையான ஆர்வம் காட்டும் சிலர் அங்கு இருப்பதாகவும் அவர் கூறினார். ஈரீங்கா சபையிலிருந்து சென்ற சகோதரர்கள் பாவாகாவில் இரண்டு வாரங்கள் தங்கி, பைபிளில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு உதவ முன்வந்தார்கள். 2006-ல் இரண்டு ஒழுங்கான பயனியர்கள் பலன்தரும் இந்தப் பிராந்தியத்திற்குக் குடிமாறிச் சென்றார்கள். தனியாக இருந்த அந்தச் சகோதரர் ஆன்மீக ரீதியில் உதவி பெற்றார்; இப்பொழுது 9 பேருள்ள சிறிய தொகுதி ஒன்று அங்கிருக்கிறது. தற்போதைக்கு ஒரு மரத்தடியில் கூட்டங்களை நடத்துகிறார்கள்; ஆனால், உள்ளூரில் கிடைக்கிற பொருள்களை வைத்து ஒரு மன்றத்தைக் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறார்கள்.

ருவாண்டா

ஜேன்டீலே என்ற இளம்பெண் சாகெர் என்றழைக்கப்படும் கால்பந்தாட்டத்தில் கோல் அடிப்பதில் கெட்டிக்காரியாக இருந்தாள். அதனால் மிகவும் பிரபலமடைந்தாள். கின்யார்வன்டா மொழியில் “கோல்களில் தேவதை” என்று அர்த்தம் தரும் மேனாயிபிடெகோ என்ற பட்டப்பெயரை மக்கள் அவளுக்குச் சூட்டினார்கள். அவளுடைய திறமையைக் கண்ட இத்தாலியர் சிலர் அவளுக்குக் கூடுதல் பயிற்சி கொடுத்தார்கள். பின்னர், இத்தாலியில் நடைபெறவிருந்த சாகெர் போட்டியில் விளையாட அவளை அழைத்தார்கள். ஐரோப்பாவிற்குச் சென்று விளையாடி, கால்பந்தாட்ட வீராங்கனையாக சர்வதேச அளவில் புகழ்பெறுவது என்ற ஒளிமயமான எதிர்காலம் அவள் கண்முன் இருந்தது. என்றாலும், அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டால் தன்னுடைய குடும்பத்தைப் பிரிந்திருக்க நேரிடுமென்பதை ஜேன்டீலே அறிந்திருந்தாள். அவளுடைய அம்மா யெகோவாவின் சாட்சியாக இருந்தார். ஜேன்டீலே பைபிளைப் படித்திருந்தாலும்கூட அதற்கு அவள் அந்தளவு முக்கியத்துவத்தைத் தரவில்லை. அவள் சாகெர் விளையாட்டுதான் உலகம் என்றிருந்தாள். இந்த விஷயத்தைக் குறித்து தன் அம்மாவிடம் பேசியபோது ஐரோப்பாவுக்குச் செல்லும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டால், கடவுளுடைய கட்டளைகளை மீறும்படியான சோதனைகள் வரலாம் என்பதைப் புரிந்துகொண்டாள். அந்த வாய்ப்பை மறுப்பதற்கு முடிவுசெய்தாள்; வாழ்க்கையில் கடவுளுடைய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க ஆரம்பித்தாள். சமீபத்தில் நடந்த மாநாட்டில் அவள் முழுக்காட்டுதல் பெற்றாள்.

அமெரிக்க நாடுகள்

நாடுகள் 55

மக்கள்தொகை 89,33,57,181

பிரஸ்தாபிகள் 33,67,544

பைபிள் படிப்புகள் 32,36,692

குரகோ

ஒருநாள் சகோதரர் ஒருவர் பைபிள் படிப்பு நடத்தச் சென்றார். இவருடன் பைபிளைப் படிப்பவர் ஒரு தோட்டாவை சகோதரரிடம் கொடுத்து அது என்னவென்று தெரியுமா எனக் கேட்டார். சகோதரர் அவரை முதன்முதலாகச் சந்திப்பதற்கு முன் பல மாதங்களாக தற்கொலை செய்துகொள்வதுபற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருந்ததாகக் கூறினார். ஏனெனில், அவருடைய வேலையையும் குடும்பத்தையும் அவர் பறிகொடுத்திருந்தார். பழிவாங்க வேண்டுமென்ற வெறி அவருடைய மனதை ஆட்டிப்படைத்ததால் தன் பிரச்சினைக்குக் காரணமென அவர் கருதிய நான்கு பேரை சுட்டுக்கொல்ல முடிவு செய்திருந்தார். தன்னுடைய கைத்துப்பாக்கியில் நான்கு தோட்டாக்களை நிரப்பியிருந்தார்; கடைசியில் தன்னையும் சுட்டுக்கொள்ள இன்னொன்றைப் பத்திரமாக வைத்திருந்தார். என்றாலும், அன்று வீட்டைவிட்டு வெளியே போவதற்குமுன் கடவுளிடம் உதவி கேட்க முடிவு செய்திருந்தார். தொலைக்காட்சியில், மத போதனைகளை ஒளிபரப்பும் சேனலைத் தேடினார். அந்த விநாடிதான் இரண்டு சாட்சிகள் அவருடைய கதவைத் தட்டினார்கள், பிறகு அவருடன் சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள். அவர் நான்கு தோட்டாக்களையும் தூக்கியெறிந்து விட்டார், ஆனால், ஐந்தாவது தோட்டாவைத் தூக்கியெறிய மறந்துவிட்டார். அதைத் தன் சட்டைப் பையில் கண்டபோது, சகோதரரிடம் காட்டி தன்னுடைய கதையைச் சொன்னார். பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு தன்னுடைய வாழ்க்கை வெகுவாய் மாறிவிட்டதை விளக்கினார். ஐந்து பேரின் உயிர்களை யெகோவாவின் சாட்சிகள் காப்பாற்றியிருக்கிறார்கள் என அவர் சொல்கிறார். இப்போது அவர் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

உருகுவே

ஒரு பெண் தன்னுடைய வீட்டுக்கு வந்த இரண்டு சாட்சிகளை உள்ளே அழைத்தாள். விடியவிடிய அவள் கடவுளிடம் ஜெபம் செய்ததாகவும் அவருடைய சித்தத்தைத் தனக்குத் தெரியப்படுத்துமாறு கெஞ்சி மன்றாடியதாகவும் கண்களில் கண்ணீர் ததும்ப விளக்கினாள். சமீபத்தில் அவள் சென்றுகொண்டிருந்த சர்ச்சின் பாதிரியார்கள் அவளைப் பார்க்க வந்திருந்தார்கள். எதற்காக? அவளுக்குக் கிடைத்திருந்த பணத்தில் கணிசமான தொகையை தசமபாகமாக வாங்கிச் செல்லத்தான். வேறெதற்கும் அவர்கள் அவள் வீட்டுப் படியை மிதித்ததில்லை; பிரச்சினைகளுடன் போராடிய சமயத்தில் அவள் உதவி கேட்டபோதும்கூட அவர்கள் அவள் வீட்டுக்கு வரவில்லை. அவள் ஏமாற்றத்தின் எல்லைக்குச் சென்றிருந்தாள். ஒரு மாதத்திற்கும் மேலாக அவள் சர்ச் பக்கமே போகவில்லை. இறுதியாக, ‘முன்னுக்குப் பின் முரணாக போதிப்பதால் நீங்கள் என்னை ஏமாற்றுவதாக நினைக்கிறேன்’ என்று ஒரு பாதிரியாரிடம் அவள் சொன்னாள். என்றாலும், முரண்பாடுகளை நீக்குவதற்குப் பதிலாக அவர் ‘நீ சர்ச்சுக்கு வருவதை நிறுத்தினால் உன்மீது ஏழு சாபங்கள் வரும்’ என்று சொன்னார். சத்தியத்தைத் தேடுகிறவர்களைக் கண்டுபிடிக்க தேவதூதர்களை கடவுள் பயன்படுத்துவதாக சகோதரர்கள் விளக்கினார்கள். அவள் பைபிளிலிருந்து கேள்வி மேல் கேள்வி கேட்டாள். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்திலிருந்து உடனடியாக பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. பிற்பாடு அவளுடைய கணவரும் படிப்பில் கலந்துகொண்டார்; அவர்கள் இருவரும் நினைவுநாள் ஆசரிப்புக்கும் சிறப்புப் பேச்சுக்கும் வந்திருந்தார்கள். ராஜ்ய மன்றத்தில் கொடுக்கப்படுகிற போதனை அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது; நன்கொடை வசூலிக்காதது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. அவர்கள் தொடர்ந்து முன்னேற்றம் செய்தார்கள், சபையில் நிறைய நண்பர்களைப் பெற்றார்கள்.

சிலி

தொலைதூர ஒதுக்குப்புறப் பகுதியான கேப் ஹார்னில் வசிக்கிற ஒரு பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்தப்பட்டது; இதுவே உலகின் தென்கோடியில் நடத்தப்பட்ட படிப்பாக இருப்பதுபோல் தெரிகிறது. அவள் இந்த ஒதுக்குப்புற பகுதியில் இருக்கும் கலங்கரைவிளக்க காவலாளியின் மனைவி. அந்தப் பெண் புண்டா ஏரினாஸில் தங்கியிருந்தபோது துணைப் பயனியர் செய்த ஒரு சகோதரி அவளுக்கு நான்கு வாரங்கள், அதாவது, அவள் கேப் ஹார்னுக்குத் திரும்பிச் செல்லும்வரை பைபிள் படிப்பு நடத்தினார். அதன் பிறகு, தொலைபேசி வாயிலாக பைபிள் படிப்பு நடத்தப்பட்டது. அவள் நல்ல முன்னேற்றம் செய்கிறாள்.

கோஸ்டா ரிகா

இந்த நாட்டில், குறிப்பாக பனாமா எல்லையின் அருகிலுள்ள சிக்ஸாவோலா என்ற சிறிய நகரத்தில் சுமார் 10,000 குவைமீ இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் அநேகர் பைபிளைப்பற்றிக் கற்றுக்கொள்வதில் உண்மையான ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். இவர்களுடைய ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய விசேஷ பயனியரான இளம் தம்பதியினர் இப்பகுதியில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் அங்கு பேசப்படும் மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். 26 குவைமீ சகோதர சகோதரிகளின் உதவியோடு இவர்களால் பெருமளவு ஊழியம் செய்ய முடிந்தது. முதன்முறையாக, குவைமீயில் நடைபெற்ற இயேசுவின் மரண நினைவுநாள் ஆசரிப்புக்கு 264 பேர் வந்திருந்தது ஆச்சரியத்தை அளித்தது. அதன் பிறகு, தொடர்ந்து ஊழியத்தில் முன்னேற்றம் இருந்தது. உதாரணமாக, 13 பிரஸ்தாபிகளுள்ள சபை புத்தகப் படிப்புக்கு, ஆரம்பத்தில் சராசரியாக 20 பேர் கலந்துகொண்டார்கள். இப்பொழுது 40 பேர் கலந்துகொள்கிறார்கள். அதனால், இன்னும் இரண்டு சபை புத்தகப் படிப்பு தொகுதிகள் உருவாயின.

பனாமா

உடற்கல்வி ஆசிரியரான ராமீரோ 2004-ல் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட அதே சமயத்தில், ஆறு தொகுதிகளுக்கு உடற்கல்வி பயிற்சி அளிக்க அவர் நியமிக்கப்பட்டார்; அதற்காக ஒவ்வொரு வாரமும் 12 மணி நேரங்கள் மட்டுமே அவர் செலவிட வேண்டியிருந்தது. மீதமுள்ள 12 மணி நேரத்திற்கு எந்தவொரு வேலையும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. எனவே, மீதமிருக்கும் நேரத்தில் அந்த ஆறு தொகுதிகளுக்கும் மதத்தைப்பற்றி சொல்லிக்கொடுக்கும்படி அந்தப் பள்ளியின் இயக்குநர் அவரிடம் சொன்னார். “கடவுளையும் இயேசுவையும் பைபிளையும்பற்றி அவர்களிடம் பேசுங்கள்” என்று அவர் கூறினார். தான் கற்று வந்த விஷயங்களை ராமீரோ போதித்தார். அந்த வருடத்தில், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தைப் பயன்படுத்தி 6-லிருந்து 8-ஆம் வகுப்புவரை படிக்கும் 150 மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அடுத்த வருடத்தில் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகம் வெளியிடப்பட்டது; அந்தச் சமயத்தில் ராமீரோ முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாகும் அளவிற்கு முன்னேறியிருந்தார். இப்பொழுது அவர் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்தி அந்த மாணவர்களுக்குத் தொடர்ந்து போதித்து வந்தார். மாணவர்களின் எண்ணிக்கை 160-ஆக அதிகரித்தது, அவர்களை, ஆறு வித்தியாசமான தொகுதிகளாக பிரித்தார். பலன்? ராமீரோவும் சபையிலுள்ள மற்ற பிரஸ்தாபிகளும் இப்பொழுது ஏராளமான மாணவர்களுக்கு அவர்களுடைய வீட்டிலேயே பைபிள் படிப்பு நடத்துகிறார்கள். அந்த மாணவர்களில் சிலருடைய பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பார்த்து ராமீரோவுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள். சில பெற்றோர் சபைக் கூட்டங்களுக்கு வந்திருக்கிறார்கள்; சில மாநாடுகளுக்கும் வந்திருக்கிறார்கள். நவம்பர் 2006-ல் ராமீரோ முழுக்காட்டுதல் பெற்றார்; பைபிள் சத்தியத்தைப் போதிக்கக் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள அவர் எப்போதும் ஆர்வமாக இருக்கிறார்.

குவாதமாலா

குவாதமாலா நகரில் ஜெரமீ என்ற பிரஸ்தாபி பைபிள் படிப்பு நடத்தி வந்த ஓர் இளைஞனுடைய வீட்டிற்குச் சென்றார். அந்த வீடு ஒரு சந்தில் இருந்தது. ஜெரமீ கதவைத் தட்டினார்; அந்த இளைஞனுடைய அக்கா கதவருகே வந்து, ‘தம்பி வீட்டில் இல்லை’ என்று சொன்னாள். ஜெரமீ அங்கு நிற்கையிலேயே இரண்டு வாலிபர்கள் அங்கே வந்தார்கள். ஒருவன் கைத்துப்பாக்கியை எடுத்து ஜெரமீயின் தலையில் வைத்து, “இங்கே வந்து உன்னைக் கொல்வதற்கு கூலி வாங்கியிருக்கிறேன்” என்று சொன்னான். (அந்தத் திருடர்கள் ஆட்களை மிரட்டுவதற்காக அப்படிச் சொல்வார்கள் என்பதை ஜெரமீ பிற்பாடு புரிந்துகொண்டார்.) “அந்தப் பெண் கதவைச் சாத்திக்கொண்டாள்; அந்த ஆளிடம், ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்களில் ஒருவன், ‘நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டான். யெகோவாவின் செய்தியைப் பிரசங்கிப்பதாகச் சொன்னேன். அதற்கு அவன், ‘அந்தச் செய்தியை எனக்கும் சொல்லு!’ என்றான் முரட்டுக் குரலில். நான் நடுங்கிப் போனேன்; என்ன செய்வதென்றே தெரியவில்லை. பையைத் திறந்து பைபிளை எடுத்தேன். அப்பொழுது துப்பாக்கி வைத்திருந்தவன் அழ ஆரம்பித்துவிட்டான்; ஏனென்றால், தவறென்று தெரிந்தும் மோசமான காரியங்களைச் செய்துகொண்டிருந்தான். தனக்கு உதவும்படி என்னிடம் கெஞ்சினான். என்னுடைய பையில் தேடினான், பணத்தைப்பற்றிச் சொல்லும் விழித்தெழு! பத்திரிகையை எடுத்துக்கொண்டான். பிறகு, இன்னொருவன் என்னுடைய பையில் பணம் இருக்கிறதாவென தேடினான்; துப்பாக்கி வைத்திருந்தவனோ, ‘அவனிடம் எதையும் தேடாதே, அவனை விட்டுவிடு’ என்று சொன்னான். அவன் என்னைக் கட்டிப்பிடித்து, நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டான். அதன் பிறகு நான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். அந்தச் சூழ்நிலையிலிருந்து என்னைக் காப்பாற்றியதற்காக யெகோவாவுக்கு நன்றி சொன்னேன்” என்று ஜெரமீ சொல்கிறார்.

டொமினிகன் குடியரசு

பல் சீரமைக்கும் மருத்துவராக இருக்கும் சகோதரி ஒருவர், பல் கட்டுவது சம்பந்தப்பட்ட ஒருநாள் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றார். ஐரோப்பாவில் நடத்தப்படவிருக்கும் செலவு மிகுந்த மேற்படிப்புக்கு விண்ணப்பிக்குமாறு கலந்துகொண்ட 250-க்கும் அதிகமான பல் மருத்துவர்களிடம் அப்போது சொல்லப்பட்டது. அவர்களில் எட்டு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்தக் கருத்தரங்கின் இறுதியில், மேற்படிப்புக்காக அந்தச் சகோதரி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக அவர் எந்தக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்றும் அவரிடம் சொல்லப்பட்டது. அதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட சகோதரி, “எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி; ஆனால், நான் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவே இல்லை. அதோடு, இந்தத் தாராள உதவியை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாததற்கு வருந்துகிறேன். நான் ஒரு யெகோவாவின் சாட்சி; என்னுடைய குடும்பத்தின் ஆன்மீக நலனைவிட வேறெதையும் நான் பெரிதாகக் கருதுவதில்லை. இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டால், படிப்பில் நான் அதிக கவனம் செலுத்த வேண்டும்; ஏனென்றால், அந்தப் படிப்பு மிகவும் கடினமானது. எனக்கோ வாரந்தோறும் நடக்கிற ஐந்து பைபிள் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். அவற்றுக்கு நான் அதிக கவனம் செலுத்த வேண்டும். நான் இல்லாத காரணத்தால் என் பருவ வயது பிள்ளைகள் இருவரும் போதைப் பொருளுக்கு அடிமைகளாகவோ மோசமான பழக்கமுள்ளவர்களாகவோ ஆகிவிட்டால், இந்தக் கூடுதலான பயிற்சியும் பட்டமும் என்ன மகிழ்ச்சியை எனக்குக் கொடுக்க முடியும்?” என்று சொன்னார்.

ஆசியாவும் மத்திய கிழக்கும்

நாடுகள் 47

மக்கள்தொகை 399,36,86,009

பிரஸ்தாபிகள் 6,07,112

பைபிள் படிப்புகள் 4,96,577

இஸ்ரேல்

எலா என்ற ஓர் இளம் சகோதரி துணைப் பயனியர் ஊழியம் செய்கிறார். குப்பைப் பையைத் தூக்க முடியாமல் ஒரு மூதாட்டி கஷ்டப்படுவதை அவர் கவனித்தார். எலா அவருக்கு உதவி செய்த கையோடு சுருக்கமாக சாட்சியும் கொடுத்தார். அந்த மூதாட்டி தன் முகவரியைக் கொடுத்தார். இருந்தாலும், அவருடைய வீட்டிற்குப் பலமுறை சென்றும் எலாவால் அவரைச் சந்திக்க முடியவில்லை. கடைசியில், ஒருநாள் அந்த மூதாட்டி கதவைத் திறந்தார். அவருக்குச் சரியாக காதுகேட்காததால் எலா முன்பு வந்து கதவைத் தட்டியபோதெல்லாம் அவருக்குக் கேட்காதிருந்திருக்கிறது. அவரோடு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் நாத்திகரைப்போல இருந்த அந்த மூதாட்டி பிற்பாடு கடவுள்மீது அன்பையும் நன்றியுணர்வையும் வளர்த்துக்கொண்டார், அவருடைய வார்த்தையை மதிக்க தொடங்கினார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தன்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தார்; சமீபத்தில் தன்னுடைய 92-வது வயதில் முழுக்காட்டுதல் பெற்றார்.

மங்கோலியா

டெர்பிஸ் என்ற வயதான பெண்மணி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு புத்தகக் கடையில் வேலை செய்தார். 18 வயதான மூங்க்ஸயா என்ற பயனியர் சகோதரி அவரைச் சந்தித்தபோது, தான் அநேக புத்தகங்களைப் படித்திருப்பதாகவும், அதனால் எந்தப் புத்தகத்தையும் ஆரம்பத்திலிருந்தோ நடுவிலிருந்தோ முடிவிலிருந்தோ படித்தாலும் தனக்குச் சீக்கிரத்தில் புரிந்துவிடுமென்று சொன்னார். ஆனால், பைபிள் அப்படியல்ல. எத்தனை முறை படித்தாலும், சர்ச்சுக்குப் போனாலும் அவரால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும், அவர் தானாகவே படித்து ஒவ்வொரு வசனத்தின்பேரிலும் குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். முக்கியமாக, எபிரெயர் 11:6-ஐப் புரிந்துகொள்வதில் டெர்பிஸ் அதிக ஆர்வம் காட்டினார். மூங்க்ஸயா அந்த வசனத்தை விளக்கினார், பைபிள் படிப்பு நடத்த விரும்புவதாகக் கூறினார், அவரை ராஜ்ய மன்றத்துக்கும் வரும்படி அழைத்தார். ராஜ்ய மன்றம் இருக்கும் இடத்தை அவர் கேட்டபோது, “வெளியே அழகான பூக்களெல்லாம் இருக்குமே அந்தக் கட்டடமா? ஒவ்வொரு முறை அந்தப் பக்கமாகப் போகும்போதும் அந்த இடத்தில் நின்று அவற்றை ரசிப்பேன். அவற்றைப் பராமரிக்கும் நபரிடம் என்னை அறிமுகப்படுத்துவாயா?” என்று டெர்பிஸ் கேட்டார். மூங்க்ஸயாவும் சந்தோஷமாய் அறிமுகப்படுத்தி வைத்தார். டெர்பிஸ் இப்போது ஆர்வமாக படைப்பாளரைப்பற்றிக் கற்று வருகிறார்; கூட்டத்திலும் கலந்துகொள்கிறார். “நற்செய்தியை நான் சொல்லுவதற்கு வெகு முன்னதாகவே இந்தப் பூக்கள் அதைச் சொல்லிவிட்டன” என்று மூங்க்ஸயா சொல்கிறார்.

ஜப்பான்

கால் வலி காரணமாக 78 வயதான ஹீரோகோவுக்கு முன்புபோல் சாட்சிகொடுக்க முடியவில்லை. உதவி கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்துவிட்டு, சற்று கூட்டமாக இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றார்; அங்கே அவரால் தொடர்ந்து 30 நிமிடங்கள் உட்கார முடிந்தது. புன்னகை பூத்தபடி மக்களிடம் அக்கறையோடு பேசுகிறார். அருகில் மருத்துவமனை ஒன்று இருக்கிறது; அதனால் மருந்து மாத்திரைகளோடு வருவோரிடம் அவர்களுடைய உடல் நலம்பற்றி விசாரிக்கிறார். பேருந்துகளின் நேர அட்டவணையை மக்கள் வாசிக்க முயற்சி செய்கையில் இவர் உதவுகிறார். அந்தப் பகுதிக்கு புதிதாக வருகிறவர்களுக்கு, அங்கே காண வேண்டிய இடங்களைப்பற்றி விளக்குகிறார். அவர்கள் பேசும்போது கவனித்துக் கேட்டு, பிறகு பத்திரிகைகளை அளிக்கிறார். வழக்கமாக அந்த நிறுத்தத்திற்கு வரும் சிலருடன் மறுசந்திப்புகளைச் செய்கிறார்.

மயன்மார்

லாசரூ, போதைப்பொருளைக் கடத்தி வந்தவர். போதைப்பொருள், கொலை என எல்லா விதமான சட்டவிரோதமான, ஒழுக்கங்கெட்ட காரியங்களே அவருடைய வாழ்க்கை முறையாக இருந்தது. என்றாலும், ஒரு பயனியர் சகோதரி, கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை பைபிளிலிருந்து அவருக்கு எடுத்துக் காட்டினார்; அது சத்தியம் என்பதை லாசரூ உடனடியாக புரிந்துகொண்டு, பைபிள் படிப்புக்குச் சம்மதித்தார். நீண்ட காலம் படிப்பு நடந்தாலும், அவர் ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் செய்தார். அவருடைய வாழ்க்கைமுறையை முழுமையாக மாற்றிக்கொள்வது அவருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. தன்னுடைய கூட்டாளிகளிடம் அந்தக் கூட்டத்தைவிட்டு விலகுவதாக சொன்னபோது அவர்கள் கதிகலங்கிப் போனார்கள். ஏனென்றால், அவர்களுடைய போதைப்பொருள் கடத்தல் விவகாரங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படி. அவரைக் கொல்ல அநேகரை அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். ஆனாலும் லாசரூ அவர்கள் கைகளில் சிக்காமல் தப்பிவிட்டார். கடைசியாக, வேறொரு பகுதிக்கு அவர் குடிமாறிச் சென்றார்; அவரும் அவருடைய மனைவியும் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.

தைவான்

வித்தியாசமான பெயரைக் கொண்ட ஒரு காபி கடைக்கு வெளியே சில சகோதரர்கள் கொஞ்ச நேரம் நின்றார்கள். ஆம், அந்தக் கடையின் பெயர்—எஸ்றா புத்தகம் காபி கடை. ஆர்வம் தாளாமல், அந்தக் கடையின் முதலாளியிடம் கடைக்கு எஸ்றா என்ற பெயர் வைத்திருப்பதைப்பற்றி ஒரு சகோதரர் கேட்டார். உண்மை வணக்கத்திற்கு எஸ்றா பக்திவைராக்கியத்தைக் காட்டியதால் அவரைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் பதிலளித்தார். வருடக்கணக்கில் அவர் சர்ச்சுக்குச் சென்றுகொண்டிருந்தார். ஆனால், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த அவருடைய மனைவிக்கு அங்கு கொடுக்கப்படும் பிரசங்கம் புரியாததால், சர்ச்சுக்குப் போவதை அவர்கள் சமீபத்தில் நிறுத்திவிட்டிருந்தார்கள். வியட்நாம் மொழி பைபிளைக் கொண்டு வந்து தருவதாக சகோதரர் சொல்லிவிட்டு, அன்று பிற்பகலிலேயே அதை அவர்களுக்கு எடுத்துச் சென்றார். அவர்களும் சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டார்கள். அந்த முழுக் குடும்பத்துக்குமே பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியா

ஒரு நகரில் பிரசங்க வேலைக்குக் கடும் எதிர்ப்பு நிலவுகிறது; பிரசங்கித்ததற்காக ஐந்து சகோதரிகள் நான்கு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஆரம்பத்தில், சிறைக் காப்பாளராக இருந்த பெண்மணி அந்தச் சகோதரிகளிடம் கடுமையாக நடந்துகொண்டார்; சிறைக்குள் கிறிஸ்தவ மதத்தைப்பற்றிப் பிரசங்கிக்கக்கூடாது என்று அவர்களை எச்சரித்தார். என்றாலும், போகப் போக அவர்கள் சாந்தமாகவும் அன்பாகவும் நடந்துகொண்டதைப் பார்த்து அவருடைய மனப்பான்மை மாறியது. அந்தச் சகோதரிகளுக்காக பழங்கள், உணவுப் பொருள்கள் போன்றவற்றை சகோதரர்கள் கொண்டுவந்து கொடுத்தார்கள். அவற்றைத் தங்களோடு இருக்கும் மற்றவர்களுடனும் அந்தச் சிறைக் காப்பாளருடனும் அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். ஒருநாள் இரவு, அந்தச் சகோதரிகள், யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்திலிருக்கும் குறிப்புகளை தங்களுக்குள் கலந்து பேசுவதை அந்தச் சிறைக் காப்பாளர் ஒட்டுக்கேட்டார். விரைவிலேயே, அந்த அறையின் வாசலில் ஒரு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்துகொண்டு அவர்களுடைய கலந்துரையாடலில் அவரும் பங்குகொண்டார். சகோதரிகள் விடுதலையான அந்த நாளில் அந்தக் காப்பாளரின் உறவினர் இறந்துவிட்டார், சகோதரிகள் அவரிடம் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப்பற்றிப் பேசி அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

சகோதரிகள் செய்த குற்றத்தைப்பற்றி இன்னொரு சிறைக் காப்பாளர் விசாரித்தார். தாங்கள் செய்த பிரசங்க வேலையை, சட்ட விரோதமான மதமாற்றம் என்று தவறாகப் புரிந்துகொண்டு, தங்களைக் கைது செய்திருப்பதாக ஒரு சகோதரி விளக்கினார். அதைக் கேட்ட அவர் நெகிழ்ந்துபோய், “இந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் சாந்தமாய் பேசுகிறீர்கள். நான் முன்கோபக்காரி. உங்களைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன். நான் கோபமாகப் பேசும்போது தயவுசெய்து என்னிடம் சொல்லுங்கள்; உங்களைப்போல பேசுவதற்கு எனக்குச் சொல்லித் தாருங்கள். உங்களைப் போன்ற நல்லவர்களை ஏன்தான் சிறையில் போடுகிறார்களோ தெரியவில்லை” என்று கூறினார். அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் சகோதரிகளிடம் வந்து, “பைபிளைப்பற்றி ஏதாவது சொல்லுங்கள். அதைக் கேட்கையில் மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது” என்று கூறினார். கொலைக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த இன்னும் இரண்டு பெண் கைதிகளுக்கும் பைபிள் செய்தி பிடித்துப்போய்விட்டது. சகோதரிகள் அவர்களுக்கும் மற்ற கைதிகளுக்கும் எச்சரிக்கையோடு சாட்சி கொடுத்தார்கள். இப்பொழுது சகோதரிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள், சிறையில் இருக்கும்போது பார்த்த ஆர்வமுள்ள நபர்களைத் திரும்பவும் சந்திக்கத் தகுந்த வழிகளை நாடுகிறார்கள்.

இந்தோனேஷியா

விசேஷ பயனியராக இருக்கும் ரேஸ்மாவதி வெளி ஊழியத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வேளையில் ஒரு பெண், பைபிளைப்பற்றிப் பேச அவரைத் தன் வீட்டிற்கு அழைத்தாள். மூன்று நாள் கழித்து ரேஸ்மாவதி திரும்பவும் அவளைப் பார்க்கச் சென்றார். இந்த முறை அந்தப் பெண் தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்தாள்; தன் கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகச் சொன்னாள். ரேஸ்மாவதி அவளிடம் எபிரெயர் 4:12-ஐ வாசித்துக் காட்டி, பைபிளைப் படிப்பதால் அநேக காரியங்களை சரிசெய்ய முடியுமென விளக்கினார். யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் 2003-ல் வெளிவந்த டோனியின் அனுபவத்தை அவர் கூறினார். அந்தப் பெண் ஆர்வமாகி அந்த காலண்டரின் ஒரு பிரதியைக் கேட்டாள். அடுத்து முறை போனபோது அவளுக்காக காலண்டரை அவர் எடுத்துச் சென்றார். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு மறுவாரத்தில், அந்தப் பெண்ணின் கணவர், தானும் படிப்பில் கலந்துகொள்ளலாமா என்று கேட்டார். காலண்டரில் வெளிவந்த டோனியின் அனுபவத்தை அவர் வாசித்திருந்தார், அது அவருடைய மனதை ஆழமாய் தொட்டிருந்தது. சந்தர்ப்பவசமாக அவருடைய பெயரும் டோனி; காலண்டரில் குறிப்பிடப்பட்டிருந்த டோனிக்கு சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு முன்னால் எத்தகைய மனப்பான்மையும் பழக்கவழக்கங்களும் இருந்ததோ அதுவே இவருக்கும் இருந்தன. அந்த அனுபவத்தைப் படித்தபோது “இது என்னுடைய பெயர், அல்லவா? என்னைப்பற்றி எழுதுவதற்கு இவர்களுக்கு என் பெயர் எப்படித் தெரிந்தது?” என்று தன் மனைவியிடமும் குழந்தைகளிடமும் கேட்டார். அதற்கு அவருடைய மனைவி, “சாட்சிகளுக்கு உங்களுடைய பெயர் தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும் அதற்குள்ளேயும் நிச்சயமாக 2003 காலண்டரிலோ 2007 காலண்டரிலோ போடமாட்டார்கள்” என்று அவரிடம் சொன்னாள். கணவருக்குள் திடீரென ஏற்பட்ட ஆர்வத்தைக் கவனித்தவளாய், “காலண்டரிலுள்ள டோனியைப் போலிருக்க நீங்களும் ஆசைப்படுகிறீர்களா?” என்று சாமர்த்தியமாகக் கேட்டாள். “அப்படியிருக்க நான் முயற்சி செய்கிறேன்” என்று அவர் சொன்னதைக் கேட்டதும் அவளுக்கு ஒரே ஆச்சரியம். காலண்டரில் குறிப்பிடப்பட்டிருந்த டோனியைப் போலவே இந்தோனேஷியாவிலிருக்கும் இந்த டோனியும் தன் கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டார், நீண்ட முடியை வெட்டினார். தன்னுடைய தோற்றத்தை நேர்த்தியாக்கினார். அந்த முழுக் குடும்பமும் பைபிள் படிப்பைத் தொடர்ந்து படிக்கிறது.

மலேஷியா

பார்னீயோவின் சில பகுதிகளில் சகோதரர்கள் வீடுகளைக் கண்டுபிடிக்க இன்டர்நெட்டிலிருந்து கிடைக்கும் செயற்கைக்கோள் படங்களை உபயோகிக்கிறார்கள். “மழைக்காடுகளில் உள்ள வீடுகளைக் கண்டுபிடிக்க இந்தப் படம் எங்களுக்கு உதவுகிறது. அதில் தெரிந்த சில ‘மேற்கூரைகள்’ இருக்குமிடத்திற்குப் போய்ப் பார்த்தால், அவை வெள்ளாட்டுத் தொழுவங்களின் கூரைகள்; ‘வெள்ளாடுகளுக்கு’ பிரசங்கிக்கப் போனதை நினைத்து விழுந்து விழுந்து சிரித்தோம்; ஆனால், சில மேற்கூரைகள் மனிதர்கள் வாழும் வீட்டுக் கூரைகள்தான். இதற்குமுன் இந்த மலைப்பகுதியில் ஊழியம் செய்ததே இல்லை. இந்த மழைக்காடுகள் அடர்த்தியாக இருப்பதால் பாதைகளைக் கண்டுபிடிப்பது பெரும் பாடாய் இருக்கிறது. ஆனால், இதற்கு செயற்கைக்கோள் படங்கள் உதவுகின்றன” என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஐரோப்பா

நாடுகள் 47

மக்கள்தொகை 73,26,10,687

பிரஸ்தாபிகள் 15,33,790

பைபிள் படிப்புகள் 7,49,911

ஹங்கேரி

12 வயது சகோதரி இவ்வாறு கூறுகிறாள்: “ஒன்பது மாதங்களுக்கு முன்னால் நான் முழுக்காட்டுதல் பெற்றேன். இப்பொழுது மூன்று மாதங்களாக துணைப் பயனியர் ஊழியம் செய்து வருகிறேன். இதற்கு என் அம்மா மிகவும் உதவியாய் இருக்கிறார். பள்ளிக்கூடத்திற்கும் போய்க்கொண்டு துணைப் பயனியர் ஊழியத்தையும் எப்படிச் செய்ய முடிகிறதென அநேகர் கேட்கிறார்கள். என்னைப் பொருத்தவரை, பள்ளிக்கூடத்திற்குப் போகாவிட்டால் என்னால் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியாதென்றே சொல்வேன். இடைவேளை நேரத்தில் சாட்சி கொடுக்கிறேன். எனது பள்ளியில் படிப்பவர்களில் ஐந்து பேரிடம் பைபிளைப்பற்றித் தவறாமல் பேசுகிறேன். இருவருக்கு பைபிள் படிப்பு நடத்துகிறேன். அதனால் யெகோவாவின் ஆசீர்வாதத்தை என்னால் உணர முடிகிறது. பயனியர் செய்வது ஒன்றும் சுமையல்ல, சுகமே. என் அம்மா ஒழுங்கான பயனியராக சேவை செய்கிறார், நானும் அப்படித்தான் ஆக வேண்டுமென ஆசைப்படுகிறேன். யெகோவாவுக்கு முழுநேரம் சேவை செய்யவே நான் விரும்புகிறேன்.”

பிரிட்டன்

சூசன் என்பவர் 2001-ல் பைபிள் படிக்க ஆரம்பித்தார்; சுமார் இரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து படித்தார். இந்தச் சமயத்தில் புகைப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பெரும்பாடுபட்டார். அநேகந்தரம் முயற்சி செய்தும் முடியவில்லை. அதனால் பைபிள் படிப்பதை நிறுத்திவிட்டார்; ஆனால், சபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் வந்துகொண்டிருந்தார். நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆன்மீக ரீதியில் முன்னேறியே தீருவதென அவர் உறுதிபூண்டார்; அதனால் சபையின் உதவியை நாடினார். மீண்டும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்திலுள்ள தகவல் அவருக்கு உதவியாக இருந்தது. யெகோவா நம்மேல் வைத்திருக்கிற அன்பையும் அவரிடம் நாம் எப்படி அன்பு காட்டலாம் என்பதையும் விவரமாகப் படித்தது அவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எட்டு வாரங்களுக்குள் புகைபிடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார். இந்தப் புத்தகத்தைப் படித்தது, யெகோவாவின்மேல் நம்பிக்கை வைப்பதற்குக் கற்றுக்கொள்ள தனக்கு உதவியதாக அவர் சொல்கிறார். நல்ல முன்னேற்றம் செய்தார், தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தார்; அதற்கு அடையாளமாக “கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!” மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றார்.

எஸ்டோனியா

ஹெல்ஜீ 17 வயது மாணவி. விவாகரத்தில் பிரிந்துபோன அவளுடைய பெற்றோரைவிட்டுத் தனியாக வாழ்கிறாள். சத்தியத்தை அறியும் ஆர்வத்தில் பைபிள் படிக்க ஆரம்பித்தாள். உள்ளூர் இசைக் குழுவில் பாடுவதிலேயே அதிக நேரத்தைச் செலவிட்டதால், துவக்கத்தில் பல கூட்டங்களுக்கு அவளால் போக முடியவில்லை. சத்தியத்தைப் புரிந்துகொண்டு அதை அதிகமாக மதிக்க ஆரம்பித்த பிறகு, தன்னுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய ஆரம்பித்தாள். கூட்டங்கள் நடக்கும் மாலை நேரங்களில் தன்னால் பாட வர முடியாததற்கான காரணத்தை இசைக் குழுவினரிடம் விளக்கினாள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்து, முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாகும் அளவிற்கு முன்னேறினாள். தேசிய அளவிலான பாட்டுப் போட்டியில் அவள் கலந்துகொண்டாள். அதில் வெற்றி பெறுபவர் பிரபல ஒலிப்பதிவு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும். அந்தப் போட்டியின் ஆரம்ப சுற்றிலேயே அநேகர் வெளியேற்றப்பட்டார்கள்; ஆனால், ஹெல்ஜீ நடுவர்களின் ஆதரவோடு, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றாள். ஆனால், போட்டியின் அந்தச் சுற்றும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் முதன்முதலாக அவள் கொடுக்கவிருந்த பேச்சும் ஒரே நாளில் இருந்தன. இப்போது அவள் என்ன செய்வாள்? யெகோவாவின் சாட்சியாக இல்லாத அவளுடைய அம்மா, ‘பேச்சுக் கொடுக்காதே அல்லது அதை தள்ளிப்போடு’ என்று ஆலோசனை கூறினார். இது ஏதோ பேச்சுக் கொடுக்கிற விஷயம் மட்டுமல்ல, தன் வாழ்க்கையில் ஆன்மீகக் காரியங்களுக்கா அல்லது உலகப்பிரகாரமான காரியங்களுக்கா எதற்கு முதலிடம் என்பதைத் தீர்மானிக்கிற விஷயம் என்று ஹெல்ஜீ கூறினாள். இதைப்பற்றித் தீவிரமாக யோசித்தாள்; பாட்டுப் போட்டிக்குச் செல்வதற்குப் பதிலாக பேச்சுக் கொடுக்க முடிவு செய்தாள். ஹெல்ஜீ பேச்சுக் கொடுத்தாள்; அவளுடைய அம்மா அவளுடைய தீர்மானத்தை மதித்தார்.

பிற்பாடு, ஒரு தொலைக்காட்சி நிருபர் “கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!” மாவட்ட மாநாட்டையும் முழுக்காட்டுதலையும் படம்பிடித்து செய்தி வெளியிடுவதற்காக அங்கு வந்திருந்தார். ஹெல்ஜீ, முழுக்காட்டுதல் பெறுவதற்காக குளத்தில் இறங்குவதைப் பார்த்ததும், அவள் முழுக்காட்டுதல் பெறுவதைப் படம்பிடித்தார், பின்னர் பேட்டியும் எடுத்தார். அன்று மாலை செய்தியில் இது ஒளிபரப்பப்பட்டது. பாட்டுப் போட்டியின் ஆரம்பச் சுற்றில் அவள் பங்கேற்றதைக் காட்டினார்கள்; இறுதியாக, அவள் முழுக்காட்டுதல் எடுத்ததையும், “என் வாழ்வில் நான் எடுத்த மிகச் சிறந்த தீர்மானம் இதுவே” என்று மலர்ந்த முகத்துடன் அவள் சொன்னதையும் ஒளிபரப்பினார்கள்.

பல்கேரியா

பெலன் தீவில் உள்ள சிறையில் இவெலின் என்ற கைதி உள்ளார். அவர் அந்நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு இவ்வாறு எழுதினார்: “நான் இங்கே சிறையில் எதேச்சையாக காவற்கோபுர பத்திரிகையைப் பார்த்தேன். உங்களிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும். நான் என்னுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பியிருக்கிறேன், என் எண்ணங்களை மாற்றிக்கொண்டு, பின்பு அதைச் செயலில் காட்டவும் ஆசைப்படுகிறேன். நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்; ஆனால், அதைச் செய்வது உங்களுக்குக் கடினமாக இருக்கும். அதைச் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. யெகோவா தேவனைப்பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன், அவரைப்பற்றி எனக்கு எழுத முடியுமா? நீங்கள் எனக்குப் பதில் எழுதுவீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் யெகோவாவைப்பற்றி தெரிந்துகொள்வது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது. இந்த விஷயங்களைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். எனக்காக மட்டுமல்ல, என்னோடு இருப்பவர்களுக்காகவும்தான். ஒருவேளை நீங்கள் எனக்குப் பதில் எழுத முடியாவிட்டால், என்றாவது ஒருநாள் நான் விடுதலையாகி வந்து உங்களைச் சந்திப்பேன் என்பதை தயவுசெய்து நினைவில் வையுங்கள்!” ஆர்வம் காட்டிய இவரை சகோதரர்கள் விரைவில் சென்று சந்தித்தார்கள். தற்போது இவெலின் உட்பட சிறையிலிருக்கும் பத்துக் கைதிகள் பைபிள் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

போர்ச்சுகல்

விசேஷ பயனியராக இருக்கும் ஜானா இவ்வாறு சொல்கிறார்: “சுரங்கப் பாதையை விட்டு வெளியே வந்தபோது ஒரு சீனரைப் பார்த்தேன். அவரிடம் நற்செய்தியைச் சொல்ல முடிவுசெய்தேன். நான் சீன மொழியில் பேசியபோது அவருக்கு ஒரே ஆச்சரியம்! கர்ப்பிணியாயிருக்கும் தன் மனைவிக்கு சிஸேரியன் அறுவை சிகிச்சை செய்யப்படவிருப்பதால் மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருப்பதாக அவர் என்னிடம் கூறினார். அவருக்கும் அவருடைய மனைவிக்கும் போர்ச்சுகீஸ் மொழி தெரியாது. மருத்துவமனையில் உள்ளவர்கள் மொழிபெயர்த்துச் சொல்ல யாரையாவது அழைத்து வரும்படி அவர்களிடம் சொல்லியிருந்தார்கள். யாரும் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தவர், என்னிடம் உதவி கேட்டார். மறுநாள், அறுவை சிகிச்சையின்போது அவருடைய மனைவியுடன் இருப்பதற்காக என்னையும் அறுவை சிகிச்சை பிரிவுக்குரிய ஆடையை அணிந்துகொள்ளும்படி மருத்துவர்கள் சொன்னார்கள். சிகிச்சையின்போது நான் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டே இருந்தேன். பைபிளைப் பற்றியும் நம்முடைய வேலையைப் பற்றியும் அவள் நிறைய கேள்விகள் கேட்டாள். அழகான பெண் குழந்தை பிறந்தது; என்னுடைய உதவிக்கு அந்தப் பெண் மிகவும் நன்றி சொன்னாள். அவள் மகளுக்கு என்னையே பெயர் வைக்கச் சொன்னாள். நான் ஒரு விநாடி யோசித்துவிட்டு சாரா என்று பெயர் வைத்தேன். அந்தப் பெயர் அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற சாராளையும் அவர் வணங்கிய கடவுளையும் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டாள். மருத்துவமனையிலிருந்து நாங்கள் வீடு திரும்பிய பிறகு, பைபிள் படிப்பைப்பற்றி அவர்களிடம் சொன்னேன். முன்பு அவளும் அவளுடைய கணவரும் சாட்சிகளிடம் பேச மறுத்திருந்தார்கள். ஆனால், அவளுடைய அறுவைச் சிகிச்சையின்போது நான் உதவியதற்குப் பிறகு சாட்சிகளைப் பற்றிய தங்கள் கருத்தை அவர்கள் அப்போதே மாற்றிக்கொண்டார்கள். உடனடியாக பைபிளைப் படிக்க ஒப்புக்கொண்டார்கள், இப்பொழுது கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள்.”

ஸ்லோவாக்யா

ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த இரண்டு இளைஞர்களை விசேஷ பயனியராக ஊழியம் செய்யும் தம்பதியர் சந்தித்தார்கள். ஸ்லோவாக்யாவில் தங்கியிருந்த அந்தக் குறுகிய காலத்தில் பைபிளைப்பற்றித் தெரிந்துகொள்ள அந்த இளைஞர்கள் ஆர்வம் காட்டினார்கள். அந்தத் தம்பதியர் அநேகந்தரம் அவர்களைச் சந்தித்தார்கள், பைபிளையும் பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தையும் கொடுத்தார்கள். அவர்கள் இருவருமே சேர்ந்து பைபிளைப் படிப்பதற்கும் மற்றவர்களோடு படிப்பதற்கும் உதவியாக, பைபிள் படிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை அந்தப் பயனியர்கள் நடத்திக் காட்டினார்கள்.

ஓசியானியா

நாடுகள் 30

மக்கள்தொகை 3,68,29,259

பிரஸ்தாபிகள் 96,691

பைபிள் படிப்புகள் 51,122

நியுஜிலாந்து

பால் என்ற சகோதரர் ஒருநாள் பிற்பகல் வேளையில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தபோது ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவருக்கு ஒரு சிற்றேட்டைக் கொடுத்தார். அப்போது, சத்தியத்தைக் கற்றுக்கொள்வது அவசியமென்று உறவினர் ஒருவர் சமீபத்தில் தன்னிடம் சொன்னதாகக் கூறினார். அன்று காலையில்தான் கடவுளின் பெயரான யெகோவா என்பதைப் பயன்படுத்தி அவர் ஜெபம் செய்திருந்தார்; தன்னை யாராவது வந்து சந்திக்க வழிசெய்யுமாறு கேட்டிருக்கிறார். அதற்கு “மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, நான் அவருடைய வீட்டிற்குச் சென்றேன். அதுவும் பொதுவாக அவர் வீட்டிலிருக்காத வேளையில் சென்றேன்” என்று பால் கூறுகிறார். அந்தப் பெண் சந்தோஷமாக பைபிள் படிப்புக்கு சம்மதித்தார்; நல்ல முன்னேற்றமும் செய்து வருகிறார்.

ஆஸ்திரேலியா

ஆர்மான்டோவும் எல்வீராவும் இளம் தம்பதியர். ஆஸ்திரேலிய கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில் செயல்படும் கிழக்குத் தைமூரில் வசிக்கிறார்கள். 2006-ல் அவர்கள் இருக்கிற பகுதியை இன்னொரு இனத்தவர் சதா தாக்கி வந்தார்கள். எனவே, உயிருக்குப் பயந்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினார்கள். அகதிகள் முகாம் ஒன்றில் தஞ்சம் புகுந்தார்கள். ஆர்மான்டோவுடைய பைபிளையும் கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? சிற்றேட்டையும் மட்டுமே அவர்கள் எடுத்துச் சென்றார்கள். அவர்கள் மீண்டும் சகோதரர்களுடன் தொடர்புகொண்டு, வாரத்திற்கு இருமுறை படிக்கவும் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்தார்கள். டிலீ நகரிலிருந்து நாலரை மணிநேரப் பயண தூரத்திலுள்ள சிறிய கிராமத்தில் வசிக்கும் தன்னுடைய உறவினர்களுக்கும் ஆர்மான்டோ சாட்சிகொடுத்தார். அவருடைய குடும்பத்தார் ராஜ்ய செய்தியில் அக்கறை காண்பித்தபோது, அவர்களுக்குக் கற்பிக்க பாவ்காவ் நகரத்தைச் சேர்ந்த பயனியர்களை ஏற்பாடு செய்தார். அந்நகரம் ஆர்மான்டோ வசித்து வந்த கிராமத்திலிருந்து ஒன்றரை மணிநேரப் பயண தூரத்தில் இருக்கிறது. அந்தப் பயனியர்கள் சொல்வதைக் கேட்க 20-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். அந்த மக்களின் சார்பில் ஆர்மான்டோவின் அப்பா பேசினார். சிலைகளை எறிந்துவிட தாங்கள் தயாராக இருப்பதாகவும், அதன் பிறகு பொல்லாத ஆவிகளிடமிருந்து தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமாவென தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் கூறினார். யெகோவா அவர்களுக்கு நிச்சயமாக உதவுவாரென பயனியர்கள் உறுதியளித்தார்கள். அந்த மக்கள் சிலைகளை அகற்றினார்கள். அந்தக் கிராமத்தில் இப்போது 25-க்கும் அதிகமானோர் பைபிளைப் படித்து வருகிறார்கள். ஆர்மான்டோ விரைவில் முழுக்காட்டுதல் பெற ஆவலாய் இருக்கிறார்; எல்வீராவும் நல்ல முன்னேற்றம் செய்துவருகிறார்.

குவாம்

குவாம் கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில் சைபான் தீவு உள்ளது. அங்கு வசிக்கும் சகோதரி ஒருவரின் கணவர் முன்பு சத்தியத்தைத் தீவிரமாக எதிர்த்து வந்தார். ஆனால், வீட்டில் கண்ணில்படும்படி அவர் விட்டுச் செல்லும் பிரசுரங்களில் பலவற்றை அவருடைய கணவர் இரகசியமாகப் படிப்பதை அறிந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி. காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் மட்டுமின்றி இயர்புக்குகளையும் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தையும் அவர் படித்திருந்திருக்கிறார். ஒருநாள் அவர், “முக்கியமான குடும்ப நிகழ்ச்சி” ஒன்று இருக்கிறது என்று கூறி தன்னுடைய மனைவியையும் ஐந்து பிள்ளைகளையும் அழைத்தார். இது ரொம்பவே விசித்திரமாக இருந்தது. தன்னுடைய மூன்று மகள்களுக்கும் திருமணம் சம்பந்தமாக ஆலோசனை கூறுவதே அவருடைய நோக்கமாக இருந்தது. கணவராக வரப்போகிறவரிடத்தில் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்க வேண்டும் என்பதை ஒரு பெரிய தாளில் அவர் பட்டியல் போட்டிருந்தார். நவம்பர் 1, 2006, காவற்கோபுரத்தில் வெளிவந்த ஷீலா வின்ஃபீல்ட் டா கோன்ஸேஸாஙின் வாழ்க்கை சரிதை, சத்தியத்தில் இல்லாத இந்தத் தகப்பனின் மனதை தொட்டிருந்தது; அதனால், ஷீலாவைப் போல அவரும் பொருத்தமான மணத்துணைக்குரிய தகுதிகளை பட்டியலிட்டிருந்தார். யெகோவாவின் சாட்சியாய் இருக்கிற ஒருவரையே திருமணம் செய்துகொள்ளுமாறும் அவர்களைவிட பைபிளை நன்கு அறிந்திருக்கிற, யெகோவாவை நேசிக்கிறவர்களைக் கணவராகத் தேர்ந்தெடுக்கும்படியும் தன்னுடைய மகள்களுக்கு அவர் அறிவுரை கூறினார். அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த விதமான சந்தோஷத்தை அவர்களும் பெற வேண்டுமென்பதே தன் ஆசை என்று தன் மூன்று மகள்களிடமும் அவர் சொன்னார். இதைக் கேட்டு அவர்கள் நெகிழ்ந்து போனார்கள்; இது, என்றாவது ஒருநாள் தங்களுடைய அப்பாவும் தங்களோடு சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்வார் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளித்தது.

சமோவா

முன்பு வேறொரு கிளை அலுவலகத்தில் சேவை செய்து வந்த ஒரு சகோதரரும் அவருடைய மனைவியும் சமோவாவில் சேவை செய்ய நியமிக்கப்பட்டார்கள். ஊழியத்தில் அந்தச் சகோதரர் பேசிய முதல் வீட்டிலேயே, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அவர் அளித்தார். வீட்டிற்குள் அவர் அழைக்கப்பட்டபோது ஆச்சரியப்பட்டார். என்றாலும், ஓய்வு பெற்ற வணிகரான அந்த வீட்டுக்காரப் பெண்மணி, சற்று நிறுத்திவிட்டு பிறகு, “இந்தக் காலை வேளையில் உங்களுடன் 45 நிமிடங்கள்தான் பேச முடியும்” என்று சொன்னார். இப்படி ஒரு பதிலைக் கேட்டது அவருக்குப் புதிதாக இருந்தது. உடனடியாக படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த வாரம் அவரும் அவருடைய மனைவியும் சென்றபோது, பைபிளையும் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தையும் கையில் வைத்துக்கொண்டு அப்பெண்மணி அவர்களை வரவேற்றார். படிப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன.

சாலமன் தீவுகள்

சான் கிரிஸ்டோபல் தீவில் எமலீ என்பவர் மட்டும்தான் சாட்சி; அவர் ஒழுங்கான பயனியராக சேவை செய்கிறார். அவர் 20 பைபிள் படிப்புகளை நடத்துகிறார். அவர்களில், அவருடைய பெற்றோர் உட்பட மூன்று பேர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள் ஆகியிருக்கிறார்கள். சர்வதேச ஊழியர்களாக சேவை செய்யும் லான்ஸ், டையன் தம்பதியர் விடுமுறை எடுத்துக்கொண்டு, நெரிசல்மிக்க சிறிய சரக்குக் கப்பலில் 14 மணிநேரம் பயணித்தார்கள்; இயேசுவின் மரண நினைவுநாள் ஆசரிப்பை நடத்துவதில் எமலீக்கு உதவச் சென்றார்கள். லான்ஸ் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் அங்கு சென்றதுமே தூங்க வேண்டுமென்றுதான் நினைத்தோம்; ஆனால், அந்தக் கிராமத் தலைவரைப் பார்ப்பது நல்லதென்று முடிவு செய்தோம். அங்கு நாங்கள் வந்திருப்பதற்கான நோக்கத்தை விளக்கிச் சொன்ன பிறகு, ‘நிறைய பேருக்கு நினைவுநாள் ஆசரிப்புக்கான அழைப்பிதழ் கிடைக்கவில்லை. அவர்களெல்லாம் வரலாமா?’ என்று அவர் கேட்டார். தாராளமாக அவர்களும் கலந்துகொள்ளலாம் என்று புன்னகையோடு சொன்னோம்.

“நினைவுநாள் ஆசரிப்புக்கான நேரம் நெருங்கிவிட்டது. இரண்டு பெண்களும் சில பிள்ளைகளும் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். என்றாலும், மற்ற அநேகர் தயங்கித் தயங்கி சற்று தொலைவிலிருந்த மரத்தடியில் நின்றிருந்தார்கள். விரைந்து சென்று அவர்களை உள்ளே அழைத்தோம். இருட்ட ஆரம்பித்ததும், சிறிய ஜெனரேட்டரை இயக்கினோம், விளக்குகள் எரிந்தன. வந்திருந்த அனைவரும் நினைவுநாள் ஆசரிப்பு பேச்சைக் கவனமாகக் கேட்டார்கள்.” சுமார் 130 பேர் பேச்சைக் கேட்டார்கள். அதில் செவன்த் டே அட்வென்ட்டிஸ்ட் பிரசங்கி ஒருவரும் இருந்தார். அவர் பயன்படுத்துகிற பைபிளைவிட புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிள் தெளிவாக இருப்பதால் அதன் ஒரு பிரதியை அவர் கேட்டார். இந்த விசேஷ நிகழ்ச்சி சமயத்தில் ஐந்து புதிய பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

பாப்புவா-நியூ கினி

ஒரு சிறிய நகரத்துக்கு வெளியே இரண்டு கிராமங்கள் இருக்கின்றன. கத்தோலிக்க சர்ச்சின் அதிகாரம் அங்கே கொடிகட்டிப் பறந்தது. அங்கே பிரசங்கிப்பது மிகக் கடினமாக இருந்தது. சமீபத்தில், நம்முடைய ஊழியத்தையும் மக்களிடம் நாம் பேச விரும்புகிற காரணத்தையும் பற்றிச் சொல்ல சகோதரர்கள் இந்தக் கிராமத் தலைவர்களைச் சந்தித்தார்கள். சந்தர்ப்பவசமாக, ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள இளைஞர்களுக்கு எப்படி உதவலாம் என்பதுபற்றி அந்தக் கிராமங்களில் ஒன்றில் சமீபத்தில்தான் ஒரு கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பைபிளைப்பற்றிக் கற்றுக்கொள்வது அவர்களுக்கு உதவுமென சகோதரர்கள் அந்தத் தலைவர்களிடம் கூறினார்கள்.

எல்லாரிடமும் பிரசங்கிக்க நம் சகோதரர்களுக்கு அனுமதி கிடைத்தது. ஏராளமான இளைஞர்கள் படிக்க ஆரம்பித்தார்கள். யெகோவாவின் சாட்சிகளுடன் பழக ஆரம்பித்த பிறகு அந்த இளைஞர்கள் மிகவும் மாறிவிட்டார்கள், ஒழுக்கத்துடன் நடந்துகொண்டார்கள் என்பதை அந்த கிராமவாசிகள் கவனித்தார்கள். அதனால் நம்முடைய ஊழியத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை நிறுத்திவிட்டார்கள். நாளடைவில், அவர்களுடைய நண்பர்களும் பெற்றோர்களும் படிக்க ஆரம்பித்தார்கள். அவர்களில், முன்பு சகோதரர்களைப் பயமுறுத்திய உபதேசியாரின் மகளும் ஒருவர். அவர் தன்னுடைய மகளிடம், “நான் மிகப் பெரிய பாவம் செய்துவிட்டேன். கடவுளும் யெகோவாவின் சாட்சிகளும் அதை மன்னிப்பார்களென்று நம்புகிறேன்” என்று சொன்னார். இந்த இரண்டு கிராமங்களிலிருந்து இப்பொழுது 27 பேர் தவறாமல் கூட்டங்களுக்கு வருகிறார்கள். குறைந்தது நான்கு பேர் முழுக்காட்டப்பட்டு, துணைப் பயனியர் ஊழியம் செய்கிறார்கள். அவர்கள் ஒழுங்கான பயனியர்களாவதற்குத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

[பக்கம் 48-ன் தேசப்படம்/ படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

[படம்]

கேப் ஹார்னில் உள்ள கலங்கரைவிளக்கம்

[பக்கம் 63-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சான் கிரிஸ்டோபல்

[பக்கம் 44-ன் படம்]

மடகாஸ்கரின் ஆன்டானாயன்டாவா கிராமத்தில் “காவற்கோபுர” படிப்பு நடக்கிறது

[பக்கம் 46-ன் படம்]

டான்ஜானியாவின் பாவாகாவில் இருக்கும் தொகுதியோடு “பைபிள் கற்பிக்கிறது” புத்தகத்தில் படிப்பு நடத்தப்படுகிறது

[பக்கம் 49-ன் படம்]

கோஸ்டா ரிகாவில் உள்ள சிக்ஸாவோலாவில் நடைபெறுகிற சபை புத்தகப் படிப்பு

[பக்கம் 50-ன் படம்]

“பைபிள் கற்பிக்கிறது” புத்தகத்தின் ஒரு பிரதியுடன் ராமீரோ

[பக்கம் 53-ன் படம்]

பேருந்து நிலையத்தில் ஹீரோகோ சாட்சி கொடுக்கிறார்

[பக்கம் 58-ன் படம்]

ஹெல்ஜீ (வலது) தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சுக் கொடுக்கிறாள்

[பக்கம் 64-ன் படம்]

லான்ஸ், டையன், எமலீ