Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்

கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்

கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்

கடந்த ஆண்டில் நடந்த சம்பவங்கள், நாம் ‘கடைசி நாட்களின்’ கடைசிக் கட்டத்தில் வாழ்கிறோம் என்பதற்கு கூடுதலான அத்தாட்சியை அளிக்கின்றன; இதை “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள்” என்று கடவுளுடைய வார்த்தை விவரிக்கிறது. (2 தீ. 3:1, NW) இந்தக் கடைசி நாட்கள் மிகவும் மோசமாகிக்கொண்டே போனாலும், பூமியெங்குமுள்ள தம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள்மீது யெகோவா பொழியும் ஆசீர்வாதத்தைக் கண்ணாரக் காண முடிகிறது. இயற்கைப் பேரழிவுகள், குற்றச்செயல், வன்முறை, வியாதி, மனச்சோர்வு, முதுமை, எதிர்ப்பு, அலட்சிய மனப்பான்மை ஆகியவற்றை யெகோவாவின் சாட்சிகள் சமாளிக்க வேண்டியிருந்தாலும், யெகோவா தரும் பலத்தினால் தங்களுக்கு ‘நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.’—எபி. 12:1.

“மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்—முடிவுக்கு வருமா?”

2006 அக்டோபர், நவம்பர் மாதங்களில் “மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்—முடிவுக்கு வருமா?” என்ற ராஜ்ய செய்தி எண் 37-ஐ யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதும் மும்முரமாக வினியோகித்தார்கள். இதிலுள்ள வலிமைமிக்க செய்திக்கு மக்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்?

“இது பொய் மதத்தை அம்பலப்படுத்துவதில் வெற்றிவாகை சூடிவிட்டது!” என்றார் சுவீடனைச் சேர்ந்த ஒருவர்; இவர் பொய் மதத்தின் பாசாங்குத்தனத்தைக் கண்டு நொந்துபோயிருந்தவர். இந்த நபரைப் போலவே, பலரும் இந்த ராஜ்ய செய்தியை வாசித்த பிறகு பைபிளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நேபாளம்

காட்மாண்டுவைச் சேர்ந்த டில் என்ற சகோதரி, சர்ச்சுக்கு வழக்கமாகச் செல்லும் ஒரு நபருக்கு இந்த ராஜ்ய செய்தியைக் கொடுத்தார். அவருடைய குடிப்பழக்கத்தின் காரணமாக அவரது மனைவி இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரைவிட்டுப் பிரிந்துபோயிருந்தார். ராஜ்ய செய்தியிலிருந்து கலந்து பேசுவதற்காக டில்லும் அவருடைய கணவர் புத்தாவும் அவரைச் சந்திக்கச் சென்றார்கள். அப்போது அவர், சர்ச் அங்கத்தினர்கள் சிலருடைய நடத்தை தனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று சொன்னதோடு தான் சர்ச்சில் கேட்ட விஷயங்களுக்கும் யெகோவாவின் சாட்சிகள் கற்பிப்பவற்றுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது என்றும் சொன்னார். நம் சகோதரரோ, வெளிப்படுத்துதல் 18:2-4-ஐ எடுத்துக்காட்டி ‘மகா பாபிலோனை’விட்டு வெளியேறுவது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தினார். அவர்கள் மூன்றாவது முறை அவரைச் சந்தித்தபோது, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலுள்ள 13-ஆம் பாடத்திலிருந்து அவருக்குப் படிப்பை ஆரம்பித்தார்கள். ஐந்தாவது முறை சென்றபோது அவருடைய மனைவியை சந்தித்தார்கள்; அவர் வீட்டிற்குத் திரும்பி வந்திருந்தார். யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது; சாட்சிகள் சொன்ன செய்தி அவருக்குப் பிடித்துவிட்டது. ஏழாவது முறை சந்தித்தபோது, கணவனும் மனைவியும் அந்தச் சிற்றேட்டிலிருந்து படித்தார்கள்; “என் கணவர் இப்போது குடிப்பதை விட்டுவிட்டார்” என்று அந்த மனைவி சொன்னார்.

பிரேசில்

மோட்டார் சைக்கிள் டாக்ஸி டிரைவர் ஒருவர் ராஜ்ய செய்தியைப் பெற்றுக்கொண்டபோது, அதை இன்னும் விளம்பரப்படுத்துவதற்காக சில நாட்களுக்குத் தன் ஜாக்கெட்டின் பின்னால் ஒட்டி வைத்திருந்தார். இதனால், இந்த வாகனத்தில் பயணிப்பவர்கள் தாங்கள் போய்ச்சேர வேண்டிய இடம் வருவதற்குள் அதன் முன்பக்கத்தை எப்படியும் பார்த்துவிடுவார்கள்.

பிரேசிலைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் ஊழியத்தில் ஒரு வீட்டிற்குச் சென்றபோது, வாசலில் இருந்த ஒரு வாசகத்தைப் பார்த்து ஆடிப்போனார்கள். “நீங்கள் உள்ளே வரலாம், ஆனால் உயிரோடே திரும்பிப்போக மாட்டீர்கள்” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. பயந்துபோன சகோதரிகள் என்ன செய்வதென்று இரண்டு சகோதரர்களிடம் கேட்டார்கள். அந்த வீட்டுக்குச் செல்ல சகோதரர்கள் முடிவுசெய்தார்கள். வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபித்துவிட்டு, கைதட்டுவதன்மூலம் தாங்கள் வந்திருப்பதைத் தெரிவித்தார்கள். வீட்டிலிருந்து ஒருவர் வந்தார், அவர் ஒரு போலீஸ்காரர்; அவர் சிநேகபாவத்தோடு ராஜ்ய செய்தியைப் பெற்றுக்கொண்டார். தன்னுடைய வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவதாகவும் கட்டிட சாமான்களை வீட்டின் பின்புறத்தில் போட்டுவைத்திருப்பதாகவும் அவர் சொன்னார். திருடர்களைப் பயமுறுத்துவதற்காகவே அந்த வாசகத்தை எழுதிவைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். சகோதரர்கள் மறுபடியும் அவரைச் சந்தித்தபோது பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்.

மங்கோலியா

ஸெட்செக்மா என்ற சகோதரி தன்னுடைய அக்காவுக்கு சாட்சிகொடுக்க பலமுறை முயன்றிருக்கிறார். அவருடைய அக்கா கூட்டங்களுக்குச் சிலமுறை வந்திருக்கிறார், இரண்டு ஆண்டுகளாக நினைவுநாள் நிகழ்ச்சிக்கும் வந்திருக்கிறார். என்றாலும், அவர் சத்தியத்தில் ஆர்வம் காட்டவில்லை, பைபிள் படிப்புக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. ஸெட்செக்மாவின் வீட்டில் ராஜ்ய செய்தி எண் 37-ஐப் பார்த்தது, அவருடைய ஆர்வத்தைத் தூண்டியது. அக்காவும் தங்கையும் இரண்டு மணிநேரத்திற்கு பைபிள் விஷயங்களை உரையாடினார்கள். அப்போது, அவருடைய அக்கா நிறைய கேள்விகளைக் கேட்டார்; அந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஸெட்செக்மா பைபிளிலிருந்து பதிலளித்தார். ‘பைபிள் இப்படிச் சொல்கிறதா’ என்று ஆச்சரியத்துடன் கேட்ட அவருடைய அக்கா இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாகக் கூறினார். இப்போது தன் தங்கையுடன் தவறாமல் பைபிளைப் படித்து வருகிறார்.

ஜார்ஜியா

நம் சகோதரிகள் ஒரு பெண்மணியிடம் ராஜ்ய செய்தியைக் கொடுத்தபோது, அது மதம் சம்பந்தப்பட்டதா என அவர் கேட்டார். அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தபோது அதைப் பெற்றுக்கொண்டு, கண்டிப்பாய் வாசிப்பதாகச் சொன்னார். அவரைச் சந்திப்பதற்குச் சகோதரிகள் திரும்பச் சென்றபோது, ஆர்த்தடாக்ஸ் சர்ச் இதுவரை பொய்யைத்தான் தனக்கு போதித்து வந்திருக்கிறதா என அவர் கேட்டார். உலக நிலவரத்தையும் இளைஞருக்கிடையே ஒழுக்கம் கெட்டுவருவதையும் பார்த்து அவர் கவலைப்பட்டார். தன்னுடைய பிள்ளைகள் ஒத்துக்கொள்ளுகிற ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுத்துப் பேசுவது தனக்கு அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை என்று அவர் சொன்னார். சகோதரிகள் அவருக்கு 2 தீமோத்தேயு 3:1-5 வசனங்களை எடுத்துக் காட்டினார்கள், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அவர் பெற்றுக்கொண்டார். சகோதரிகள் அங்கிருந்து புறப்படுகையில், “உங்கள் மதம்தான் உண்மையான மதம் என்று உறுதியாய் நம்புகிறேன். உங்களுடைய மதத்திலுள்ள இளைஞர்கள் உடை உடுத்தும் விதத்தையும் அவர்கள் நேர்மையாக, ஒழுக்கமாக நடப்பதையும் நான் மெச்சுகிறேன்” என்று அவர் சொன்னார். அந்தப் பெண்மணி இப்போது நம் பத்திரிகைகளை ஒன்றுவிடாமல் ஆர்வமாகப் படித்து வருகிறார்.

பங்களாதேஷ்

ரீச்சல் என்ற 19 வயது இளைஞி, இதுவரை ஊழியம் செய்யப்படாத ஒரு பிராந்தியத்தில் ராஜ்ய செய்தி எண் 37-ஐ வினியோகித்தார். அந்தப் பிராந்தியம் அவருடைய வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. என்றாலும், இது ஒரு விசேஷ வினியோகிப்பாக இருந்ததால், அங்கு செல்ல வேண்டுமென அவர் நினைத்தார். இரண்டாவது வீட்டிலேயே கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இரண்டு பெண்பிள்ளைகளைச் சந்தித்தார். அவர்களுடைய அப்பா இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இறந்துபோயிருந்தார். “இப்படியெல்லாம் நடக்க கடவுள் ஏன் அனுமதித்தார்?” என அவர்கள் கேட்டார்கள். அதற்கு பைபிளிலிருந்து ரீச்சல் பதிலளித்தார். “கடவுள்தான் எங்களுடைய வீட்டிற்கு உங்களை அனுப்பியிருக்கிறார்” என்று சொன்னதோடு ராஜ்ய செய்தியை அவர்கள் சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டார்கள். கடவுளைப்பற்றியும் பைபிளைப் பற்றியும் அவர்கள் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்த ரீச்சல், பைபிள் படிப்பு ஏற்பாட்டைப்பற்றி விளக்கினார்; அதற்கு அவர்கள் உடனடியாக சம்மதம் தெரிவித்தார்கள். அவர்கள் இப்போது ஆர்வமாகப் படிக்கிறார்கள், நிறைய கேள்விகளைக் கேட்கிறார்கள். அதனால், ரீச்சல் ரொம்பவே ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஆனாலும், கடவுளைப்பற்றி தெரிந்துகொள்ள வாஞ்சிப்பவர்களுக்குச் சத்தியத்தைச் சொல்லிக்கொடுப்பதால் கிடைக்கும் திருப்தியை அவர் உண்மையிலேயே ருசிக்கிறார்.

ஆர்மீனியா

ஒழுங்கான பயனியராக சேவை செய்கிற எலீஸாவுக்கு ஒருநாள் லிலிட் என்பவரிடமிருந்து ஃபோன் வந்தது; இந்த லிலிட் கொஞ்ச காலத்திற்கு முன்பு அவருடன் பைபிளைப் படித்து வந்தவர். “நாளைக்கு நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை வேறொரு நாளுக்கு மாற்றிவைத்துவிட்டு கண்டிப்பாக என் வீட்டிற்கு வர வேண்டும்; அப்போதுதான் நாம் பைபிள் படிப்பைத் தொடர முடியும்” என்று அவர் ஃபோனில் சொன்னார். ஏன் அப்படிச் சொன்னார்? முதலில் அவர் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, அவருடைய கணவர் “உனக்கு நான் வேண்டுமா, யெகோவா வேண்டுமா?” என்று கேட்டிருந்தார். அதனால், அவர் படிப்பதை நிறுத்திவிட்டிருந்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சமீபத்தில், தன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு சற்று நேரம் காலார நடப்பதற்காக பூங்காவிற்குச் சென்றிருந்தார். அப்போது ராஜ்ய செய்தி எண் 37-ஐ பெற்றிருந்தார். இது அவருடைய ஆர்வத்தை ரொம்பவே தூண்டிவிட்டது. ஆகவே, தன் கணவரிடம், “ஐம்பதோ, அறுபதோ வருடங்கள் நோய்நொடியின்றி வாழ்ந்துவிட்டு பின்பு இறந்துபோவதுதான் வாழ்க்கை என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை” என்று தைரியமாகச் சொன்னார். அதன் பிறகு, தன்னிடம் இருக்கிற குறைகளையெல்லாம் சரிசெய்துகொள்ள பைபிள் படிப்புதான் தனக்கு உதவும் என அவர் தன் கணவரிடம் தெரிவித்தபோது, அவரும் எதிர்ப்பு தெரிவிப்பதை நிறுத்திவிட்டார். இப்போது தன் கணவரின் சம்மதத்தோடு அவர் பைபிள் படிக்கிறார்; அவ்வாறு படிக்கையில், பிள்ளைகளைக் கணவர் கவனித்துக்கொள்கிறார்.

கம்போடியா

இந்த விசேஷ வினியோகிப்பின்போது யூக் என்ற மிஷனரி ஒரு முஸ்லீம் ஆளிடம் பிரசங்கித்தார். ராஜ்ய செய்தியை அவர் வாசித்ததும் மதங்கள் போர்களில் ஈடுபடக் கூடாது என்பதை ஒத்துக்கொண்டார். தன்னுடைய மதத்தின்மீதே அவருக்கு வெறுப்பு ஏற்பட்டிருந்தது. மதத் தீவிரவாதிகளால் தன்னுடைய மதத்தின் பெயர் கெட்டுவிட்டது என்றும் அவர் சொன்னார். போரில்லா உலகத்தைப்பற்றி கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதியை சங்கீதம் 46:9-லிருந்து யூக் வாசித்துக் காட்டினார். அடுத்த வாரத்தில் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை யூக் அவருக்குக் கொடுத்தார். இப்போது அவர் பைபிளை உயர்வாக மதிக்கிறார், யூக்குடன் சேர்ந்து பைபிளைத் தவறாமல் படித்துவருகிறார்.

ரஷ்யா

இரண்டு சகோதரிகளிடமிருந்து ராஜ்ய செய்தியைப் பெற்ற ஆர்த்தடாக்ஸ் பாதிரி ஒருவர், “நீங்கள் சொல்வதுதான் சத்தியம் என்றும் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய மதத்தைத் தவிர மற்ற எல்லாப் பொய் மதங்களையும் அழித்துவிடுவார் என்றும் எனக்குத் தெரியும்” என்பதாகச் சொன்னார். பரலோகத்திற்குச் செல்பவர்களைப் பற்றியும் பரதீஸ் பூமியில் வாழப்போகிறவர்களைப் பற்றியும் தான் அறிந்திருப்பவற்றை அவர்களிடம் சொன்னார். அவருடைய மதம் அழிந்துவிடும் எனத் தெரிந்திருந்தும் அவர் ஏன் அந்த மதத்திலேயே இருக்கிறாரென சகோதரிகள் அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், “எனக்கு வருமானம் கிடைப்பது இந்த வேலையில்தான். அதுபோக, எனக்கு மூன்று வீடுகளும் நான்கு கார்களும் இருக்கின்றன. இதையெல்லாம் நான் விட்டுவிட்டு வர முடியாதே” என்றார்.

நினைவுநாள் நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதற்கு விசேஷ ஏற்பாடு

ஏப்ரல் 2, 2007, திங்கட்கிழமை அன்று உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் கர்த்தரின் இராப்போஜன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்; அதன்மூலம், கடவுள் காட்டிய அளவற்ற இரக்கத்தையும் அன்பையும் போற்றித் துதித்தார்கள். இந்த முக்கிய நிகழ்ச்சிக்கு அநேகரை அழைப்பதற்காக, மார்ச் 17 முதல் ஏப்ரல் 2 வரையாக உலகெங்கும் விசேஷித்த அழைப்பிதழ் வினியோகிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஊழியத்தில் அதிகமாக ஈடுபட்ட இந்தக் காலப்பகுதியில் அநேக பைபிள் மாணாக்கரும் பிள்ளைகளும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆனார்கள்.

அமெரிக்கா

நியு யார்க், புருக்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது தலைமை அலுவலகத்தில் மாலைநேர டியூட்டியில் இருந்த சகோதரருக்கு, நினைவுநாள் அன்று கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கு தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. தங்களுடைய பகுதியில் நினைவுநாள் நிகழ்ச்சி எங்கு நடைபெறுகிறது என்பதை அறிவதற்காகவே அநேகர் ஃபோன் செய்தார்கள். இத்தகைய தொலைபேசி அழைப்புகளில் பலவும் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி கொடுக்கப்பட்ட அழைப்பிதழைப் பெற்றவர்களிடமிருந்தே வந்தன. ஒரு பெண் இவ்வாறு சொன்னாள்: “நான் இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன். இன்று சாயங்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு வரும்படியான அழைப்பிதழைப் பார்த்தேன். அதற்கு நான் போக வேண்டும், ஆனால் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரம் எனக்குச் சரியாகத் தெரியவில்லை.”

பதினாறு வயது ஜாக்கலன் நினைவுநாள் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை தன்னுடைய ஆசிரியைக்கு கொடுத்து அதன் முக்கியத்துவத்தை விளக்கினாள். அவளுடைய அழைப்பை ஏற்று டீச்சர் வந்திருந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த நிகழ்ச்சி, யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மாநாட்டு வளாகத்தில் நடைபெற்றது; ஆகவே, நிகழ்ச்சி முடிந்ததும் ஜாக்கலன் அந்த வளாகத்தை ஆசிரியைக்குச் சுற்றிக் காட்டினாள். அந்த வளாகம் முழுவதும் சுத்தமாகவும் எல்லாமே ஒழுங்காகவும் இருப்பதைப் பார்த்து அவர் பிரமித்துப் போனார். முக்கியமாக, அந்தக் கட்டிடத்தைக் கட்டி அதைப் பராமரித்து வருபவர்கள் மனமுவந்து பணியாற்றும் தொண்டர்களே என்பதை அறிந்ததும் அவர் வியந்துபோனார். அங்கு கேட்ட பேச்சு தனக்கு ரொம்பவே பிடித்திருந்தது என்று அவர் கூறினார்; அதன் பிறகு, “பைபிள் படிப்பைப்பற்றி பேச்சாளர் சொன்னாரே, அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “நான்கூட அதை நடத்துவேனே!” என்று ஜாக்கலன் சந்தோஷம்பொங்க கூறினாள். திங்கட்கிழமைகளில் ஸ்கூல் முடிந்ததும் டீச்சருக்கு ஜாக்கலன் பைபிள் படிப்பு நடத்துகிறாள்.

தென் ஆப்பிரிக்கா

ஓர் ஒதுக்குப்புற பகுதியில் ஒன்பது பிரஸ்தாபிகளைக் கொண்ட ஒரு சபை இருந்தது. அந்தச் சபையினர் கிளை அலுவலகத்திடம் தாங்கள் ஆர்டர் செய்திருந்த 500 நினைவுநாள் அழைப்பிதழ்களுக்குப் பதிலாக ஒரேவொரு அழைப்பிதழ் மட்டுமே கிடைத்தபோது குழம்பிப் போயினர். ஆனால், என்ன நடந்தது என்பது பிற்பாடுதான் சகோதரர்களுக்குத் தெரிய வந்தது. கிளை அலுவலகம் அனுப்பிய பார்சலில் ஒட்டப்பட்டிருந்த முகவரி கழன்று போயிருந்ததால் அது யாருக்குரியது என்பதை உள்ளூர் அஞ்சல் அலுவலகத்தினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், பெறுநருடைய முகவரியையோ அனுப்புநருடைய முகவரியையோ கண்டுபிடிப்பதற்காக அஞ்சலக ஊழியர்கள் பார்சலைத் திறந்தார்கள். ஆனால், அதில் நினைவுநாள் அழைப்பிதழ்கள் இருந்ததைப் பார்த்தபோது, அவை மக்களுக்கு வினியோகிக்கப்பட வேண்டியவை என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆகவே, அவர்கள் ஒவ்வொரு தபால் பெட்டியிலும் ஒவ்வொரு அழைப்பிதழ்களைப் போட்டார்கள். இப்படியாக, அவை எல்லாவற்றையும் அவர்களே மற்றவர்களுக்கு வினியோகித்து விட்டார்கள். முழுப் பார்சலுக்குப் பதிலாக ஒரேவொரு அழைப்பிதழ் மட்டும் சபையின் தபால் பெட்டியில் கிடந்ததைப் பார்த்தபோதுதான் சகோதரர்களுக்கு விஷயம் தெரிய வந்தது. என்றாலும், நினைவுநாள் நிகழ்ச்சிக்கு 42 பேர் வந்தபோது அந்த ஒன்பது பிரஸ்தாபிகளுக்கும் எவ்வளவு உற்சாகமாய் இருந்திருக்கும்! அதுவும் அவர்களில் பலர் தங்களுடைய தபால் பெட்டியில் போடப்பட்டிருந்த அழைப்பிதழுடன் வந்திருந்தார்கள்!

இத்தாலி

பாட்ரீட்ஸியா என்ற சகோதரி தான் பைபிள் படிப்பு நடத்துகிற கேப்ரியல்லா என்பவரிடம் அழைப்பிதழைக் கொடுத்து அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்னார். அவர்கள் இருவரும் பேசுவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த கேப்ரியல்லாவின் ஐந்து வயது மகன் மத்தியா, தன்னுடைய ஸ்கூல் டீச்சருக்குக் கொடுப்பதற்காக ஓர் அழைப்பிதழைத் தரும்படி கேட்டான். அடுத்த நாள் மத்தியா அந்த அழைப்பிதழைத் தன் டீச்சரிடம் கொடுத்து, அதில் கலந்துகொள்வது ரொம்பவே முக்கியம் என்றும் அவர் கண்டிப்பாக வர வேண்டுமென தான் ஆசைப்படுவதாகவும் கூறினான். சில நாட்களுக்குப் பிறகு, பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தின்போது மத்தியாவின் டீச்சர் கேப்ரியல்லாவைப் பார்த்து, மத்தியாவின் உறுதியான நம்பிக்கை தன்னை அந்தளவுக்கு கவர்ந்துவிட்டதால் நினைவுநாள் நிகழ்ச்சிக்குத் தான் வரத் தீர்மானித்திருப்பதாகச் சொன்னார். கேப்ரியல்லா, அவருடைய மகன் மத்தியா ஆகியோருடன் சேர்ந்து நினைவுநாள் நிகழ்ச்சிக்கு அந்த டீச்சர் வந்தார். அங்கு கொடுக்கப்பட்ட பேச்சை கவனித்துக் கேட்டார். அதோடு, அங்கு வந்திருந்த பிள்ளைகள் எல்லாரும் அருமையாக நடந்துகொண்டதைப் பார்த்தும் அசந்துபோனார். மத்தியா சொன்னபடி நினைவுநாள் நிகழ்ச்சி ரொம்பவே முக்கியமானது என்பதை தான் புரிந்துகொண்டதாக பிற்பாடு அவர் சொன்னார். அதன் பிறகு, அந்த டீச்சருடைய மகனுக்காக என்னுடைய பைபிள் கதைப் புத்தகத்தை மத்தியா கொடுத்திருக்கிறான். கேப்ரியல்லாவும் பாட்ரீட்ஸியாவும் அவருடன் பைபிள் விஷயங்களை இன்னும் அதிகமாகப் பேசுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

மெக்சிகோ

ஒரு மூப்பர் பிரஸ்பிட்டேரியன் சர்ச் ஊழியர் ஒருவருக்குச் சாட்சி கொடுத்து, அவரை நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வரும்படி அழைத்தார். அவர் அந்த அழைப்பிதழைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். ஆச்சரியம் என்னவென்றால், தன்னுடைய சபையாருக்குக் கொடுப்பதற்காக சில அழைப்பிதழ்களை அவர் கேட்டு வாங்கினார்! நினைவுநாள் நிகழ்ச்சிக்கு அவருடைய சர்ச் அங்கத்தினர்கள் 40 பேருடன் அந்த ஊழியர் வந்திருந்ததைப் பார்த்து சகோதரர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒவ்வொருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்களுடன் வந்திருந்தார்கள். ‘இன்னும் நிறைய பேர் வருவதற்கு ஆசைப்பட்டார்கள், ஆனால் அழைப்பிதழ் இல்லாமல் வந்தால், ஒருவேளை தங்களுக்கு அனுமதி கிடைக்காதோ என நினைத்து, அவர்கள் வரவில்லை’ என்று அந்த ஊழியர் சொன்னார். நினைவுநாள் நிகழ்ச்சிக்கு 191 பேர் வந்திருந்ததைப் பார்த்து அந்தச் சபையிலுள்ள 11 பிரஸ்தாபிகளும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்!

ஆஸ்திரேலியா

யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்துவந்த ஓர் இளைஞர் உடற்பயிற்சிக் கூடத்தில் வேலைபார்த்து வருகிறார்; அங்கே உள்ளவர்களிடம் தான் பைபிளிலிருந்து கற்றுக்கொண்டதைச் சொல்ல ஆரம்பித்தார். நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வரும்படி அவர்களுக்கு அழைப்பிதழைக் கொடுத்தார். அவர்களில் ஒரு பெண், அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். அவள் டீனேஜில் இருந்தபோது, அருகிலுள்ள ராஜ்ய மன்றத்திலிருந்து வரும் பாட்டு சத்தத்தைக் கேட்டிருக்கிறாள், அங்கு போவதற்கு பெற்றோரிடம் அனுமதியும் கேட்டிருக்கிறாள். ஆனால், யெகோவாவின் சாட்சிகளோடு எந்தத் தொடர்பும் வைக்கக்கூடாதென அவளுடைய பெற்றோர் தடுத்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் சில கூட்டங்களுக்கு அவள் சென்றிருக்கிறாள்; ஆனால், அவளுடைய குடும்பம் அங்கிருந்து குடிமாறியபோது அவளால் யெகோவாவின் சாட்சிகளோடு எந்தவிதத்திலும் தொடர்புகொள்ள முடியாமல் போய்விட்டது. இப்போது, நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வந்தபோது, ஒரு சகோதரியிடம் அவள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டாள். அவர் அவளுக்கு பைபிள் படிப்பை நடத்த ஆரம்பித்தார். அவள் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தாள், அவளுடைய கணவரும் சத்தியத்தில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். இதற்கிடையே உடற்பயிற்சி கூடத்தில் வேலைபார்க்கிற அந்த இளைஞர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஆனார், இப்போது முழுக்காட்டுதல் பெற தயாராகி வருகிறார்.

கஸக்ஸ்தான்

நற்செய்திக்கு ஆர்வம் காட்டிய ஒரு பெண், தனக்கு சிறு பிள்ளைகள் இருப்பதால் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வர இயலாது எனக் கூறினார். ஆனால், நினைவுநாளன்று அந்தப் பெண்ணின் ஐந்து வயது மகள் தானாகவே உடை போட்டுக்கொண்டு தனியாக ராஜ்ய மன்றத்திற்கு வந்துவிட்டாள். தன்னுடைய மகள் வீட்டில் இல்லாததை அறிந்த அந்தப் பெண், உடனடியாக அவளைத் தேடுவதற்குக் கிளம்பினார். நினைவுநாள் நிகழ்ச்சிக்குத்தான் அவள் சென்றிருக்க வேண்டுமென அவர் ஊகித்தார். அவர் ஊகித்தபடியே, அவள் ராஜ்ய மன்றத்தில் இருந்தாள். இப்போது அவரும் அங்கு வந்துவிட்டதால் தன்னுடைய மகளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பேச்சாளர் பேசுவதைக் கூர்ந்து கவனிக்கத் தீர்மானித்தார்.

நற்செய்தியைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டுதல்

பிரான்சு

1996 முதற்கொண்டு பிரான்சிலுள்ள அதிகாரிகள் சிலர், லூவியேவில் இருக்கிற பெத்தேல் குடும்பத்தினருக்குக் கொடுக்கப்படுகிற சிறு தொகையின்மீது வரி வசூலிக்க வேண்டுமென வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். என்றாலும், பெத்தேல் குடும்பத்தினர் ஊதியம் பெறும் பணியாளர்கள் அல்ல என்பதால் அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என மார்ச் 28, 2007-ல் பாரிஸிலுள்ள நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. “லூவியேவிலுள்ள பெத்தேலில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் அங்கு நிரந்தர அங்கத்தினர்களாக வேலை செய்வதற்குக் காரணம் அவர்களுடைய மத நம்பிக்கையே” என்று அந்த நீதிமன்றம் குறிப்பிட்டது. இத்தீர்மானம், பெத்தேல் குடும்பத்தில் நடைபெறும் வேலைகள் மத சம்பந்தமானவை என்பதை உறுதிப்படுத்துகிறது; அதோடு, இத்தீர்ப்பு பிரேசிலிலுள்ள உயர் நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஒத்திருக்கிறது.

லையோன் நகராட்சி நினைவுநாள் நிகழ்ச்சியை நடத்துவதற்கு நகரசபை மன்றத்தை வாடகைக்குக் கொடுக்க மறுத்ததால் யெகோவாவின் சாட்சிகள் மற்றொரு வழக்கு தொடுத்திருந்தார்கள். மார்ச் 15, 2007-ல் நிர்வாக நீதிமன்றத்தின் நீதிபதி, அந்த மன்றத்தை யெகோவாவின் சாட்சிகளுக்கு வாடகைக்குக் கொடுக்கும்படி நகராட்சிக்கு ஆணையிட்டார். நகராட்சியோ மாநில பேரவைக்கு அப்பீல் செய்தது; ஆனால், மாநில பேரவை நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்தது; நகராட்சியின் நடவடிக்கை, “கடுமையானது என்றும் அது ஒன்றுகூடிவருவதற்கான அடிப்படை சுதந்திரத்தையே பறிக்கும் சட்ட விரோதமான செயல் என்றும்” மாநில பேரவை குறிப்பிட்டது. அதோடு, அங்குள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கான நீதிமன்றக் கட்டணத்தை செலுத்தும்படியும் நகராட்சிக்கு மாநில பேரவை ஆணையிட்டது.

லையோனில் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்தபோதிலும், பிரான்சில் அவர்களுக்கு இன்னும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது; மீடியாவின் தவறான விளம்பரங்களுக்கும் அரசு அதிகாரிகளின் பகைமைக்கும்கூட அவர்கள் ஆளாகிறார்கள். உதாரணமாக, “யெகோவாவின் சாட்சிகள் மாஃபியா கும்பலைப்போல பிரமிட் முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் இயக்கம்” என்பதாக 2005-ல் நடத்தப்பட்ட ஒரு பொதுவான பேட்டியில், பிரெஞ்சு தேசிய பேரவையின் முன்னாள் பிரதிநிதி குற்றம்சாட்டினார். யெகோவாவின் சாட்சிகளோ அந்த இழிவான குற்றச்சாட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஜூலை 2007-ல் ரூவானிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. குற்றம் சாட்டியவருடைய “அநாவசியமான பேச்சு முற்றிலும் நல்லெண்ணம் அற்றது, அதுவும் அத்துமீறிய பேச்சாக அது இருந்திருக்கிறது” என்று அந்தத் தீர்ப்பில் அது குறிப்பிட்டது. பிரெஞ்சு அரசு, யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து அநியாயமாகவும் சட்டவிரோதமாகவும் வரி வசூலிக்க முயன்று வருகிறது. இந்தப் பிரச்சினை, தற்போது மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றத்தின் (ECHR) பரிசீலனையில் உள்ளது. யெகோவாவின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்பதில் சகோதரர்கள் மனவுறுதியுடன் இருக்கிறார்கள்.

உஸ்பெகிஸ்தான்

சகோதர சகோதரிகள் கைது செய்யப்பட்டதையோ காவலில் போடப்பட்டதையோ தாக்கப்பட்டதையோ பற்றிய ஆயிரத்திற்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சகோதர சகோதரிகள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டது, 2005 மற்றும் 2006-ல் நடந்த நினைவுநாள் நிகழ்ச்சியின்போதுதான். இருந்தாலும், 2007-ல் நடந்த நினைவுநாள் நிகழ்ச்சியின்போது எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்பதை தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனாலும், கொஞ்ச காலத்திற்கே பிரச்சினைகள் இல்லாதிருந்தது. சீக்கிரத்திலேயே, ஒரு சகோதரரும் சகோதரியும் மதத்தைப்பற்றி போதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். திருமணமாகி இரண்டு பிள்ளைகளை உடைய அந்தச் சகோதரர் இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு, உடனேயே சிறையில் தள்ளப்பட்டார். அந்தச் சகோதரிக்கோ, இரண்டு வருடங்களுக்கு தண்டிக்கப்பட்ட பணியாளராக வேலை செய்யும்படி தீர்ப்பளிக்கப்பட்டது; இந்தக் காலப்பகுதி முழுவதும் அவருடைய சம்பளத்தில் 20 சதவீதத்தை அபராதமாக அரசு எடுத்துக்கொள்ளும்.

ஜார்ஜியா

யெகோவாவின் சாட்சிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ஜார்ஜியா அரசு உடன்பட்டதால், அதற்கு எதிராக ECHR மே 3, 2007-ல் ஒருமனதான தீர்ப்பை வழங்கியது. பாதிக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென்றும் அது ஆணையிட்டது. யெகோவாவின் சாட்சிகள் அக்டோபர் 1999-ல் இருந்து நவம்பர் 2002 வரை, 138 தடவை கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். சில சமயங்களில், அங்கு போலீஸ் இருந்தும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜார்ஜியாவின் முந்தைய அரசு, மதத் தீவிரவாதிகளிடமிருந்து நம் சகோதரர்களைப் பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததன்மூலம் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒப்பந்தத்தின்படி தன் கடமைகளை மீறியிருப்பதோடு நம் சகோதரர்களின் மத சுதந்தரத்தையும் பறித்திருக்கிறது என்பதை நீதிமன்றம் உறுதிசெய்தது. மதச் சுதந்தரத்தை அலட்சியம் செய்யக்கூடாது என்றும் யெகோவாவின் சாட்சிகள் சிறுபான்மையோராக இருந்தாலும் அவர்களைத் தாக்கினாலோ மோசமாக நடத்தினாலோ தக்க பாதுகாப்பு தருவது அவசியம் என்றும் ECHR கருதுகிறது என்பதற்குத் தெளிவான அடையாளமாக இது இருக்கிறது.

எரிட்ரியா

அரசு அங்கீகாரம் பெற்ற நான்கு மதங்களின் அதிகாரத்திற்கு உட்படாமல் சுயேட்சையாக செயல்படும் எல்லா மதங்களையும் ஒடுக்க இங்குள்ள அரசு ஐந்து ஆண்டுகளாக கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது; இந்நிலையில், யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பைச் சந்திக்கிறார்கள். வணக்கத்திற்காக அவர்கள் சகோதரர்களின் வீடுகளில் கூடிவந்தபோதிலும் கைது செய்யப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள், தங்களுடைய விசுவாசத்தைக் கைவிடும்படி கடுமையாக வற்புறுத்தப்படுகிறார்கள். ஏப்ரல் 2007-ல் கிடைத்த தகவலின்படி, கூட்டங்களில் கலந்துகொண்டதற்காகவும், ஊழியம் செய்ததற்காகவும் மத நம்பிக்கைகளின் நிமித்தம் ராணுவத்தில் ஈடுபட மறுத்ததற்காகவும் யெகோவாவின் சாட்சிகள் 24 பேர் இன்னும் சிறையில் இருந்தார்கள். சிறையிலிடப்பட்ட சாட்சிகளில் மூன்று பேர் அறுபதோ, அறுபது வயதைத் தாண்டியவர்களாகவோ இருக்கிறார்கள், பத்துப் பேர் மிகவும் அழுக்கடைந்த சூழ்நிலையில் போடப்பட்டிருக்கிறார்கள், இன்னும் முன்று பேரோ 1994 தொட்டே சிறையில் இருக்கிறார்கள். இங்குள்ள நம் சகோதரர்களுக்கு உதவுவதற்காக எடுக்கப்பட்டுவரும் கூடுதலான முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவில்லை; என்றாலும், சீக்கிரத்தில் அவர்களுக்கு விடுதலை கிடைக்குமென்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்; அதோடு, தம் ஊழியர்களை ‘வஞ்சகத்திலிருந்தும் கொடுமையிலிருந்தும்’ விடுவிக்கிற யெகோவாவையே நாம் நம்பியிருக்கிறோம்.—சங். 72:14.

அன்டோரா

சட்டப்பூர்வ அங்கீகாரத்திற்காக 1973 முதற்கொண்டு பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. கடைசியாக, டிசம்பர் 14, 2006-ல் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. அங்கு 150-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்.

கொரியா

ராணுவ சேவையில் ஈடுபட மறுத்ததன் காரணமாக தென் கொரியாவில் உள்ள சகோதரர்கள் சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது 50 வருடங்களுக்கும் மேலாகவே நடந்துவருகிறது. அதன் விளைவாக, அவர்களில் ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு சட்டரீதியாகத் தீர்வுகாண தென் கொரியாவிலேயே எல்லாவித முயற்சிகள் எடுத்தும் பயனில்லாமல் போகவே, சகோதரர் யூன் மற்றும் சாய் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை குழுவிடம் அப்பீல் செய்தார்கள். அக்குழு, நவம்பர் 3, 2006-ல் இந்தச் சகோதரர்களின் மனித உரிமையை தென் கொரிய அரசு மீறியதாகக் குற்றம்சாட்டி, அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு ஆணையிட்டது. அதோடு, மதக் காரணங்களின் நிமித்தம் ராணுவத்தில் சேர மறுக்கும் மற்றவர்களை அவர்களுடைய நியதிகளை மீறும்படியோ இல்லையெனில் சிறை தண்டனை அனுபவிக்கும்படியோ வற்புறுத்துவதற்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தென் கொரியா அரசுக்கு அறிவுறுத்தியது. சராசரியாக ஒவ்வொரு மாதமும் 70 சகோதரர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள்.

முன்பெல்லாம், இப்பிரச்சினையை எதிர்ப்பட்ட சகோதரர்கள் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஒன்றரை வருடங்கள் சிறைவாசத்தை அனுபவிக்கவே தீர்மானித்திருந்தார்கள். ஆனால், இப்போதெல்லாம், இளம் சகோதரர்கள் தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து மனு தாக்கல் செய்யத் தீர்மானித்துவிட்டனர்; அதனால், நூற்றுக்கணக்கான மனுக்களின் பேரில் இப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை அறிந்த கொரிய அரசோ, அவர்களுக்குப் படைத்துறை சாராத பிற பணிகளைக் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தது. அரசு அதை அமல்படுத்துமா இல்லையா என்பதையும் அப்படி அமல்படுத்தினாலும் பிறபணிகளைச் செய்வது சரி என மனசாட்சிப்படி தீர்மானிக்கிற சகோதரர்களுக்கு அது ஏற்கத்தக்க வேலையாக இருக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அர்ஜென்டினா

பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் காரணமாக ராணுவத்தில் சேர மறுத்த டான்யல் பிக்டர் குவாக்லியார்டோவை சிறையில் தள்ளியது அநியாயமான செயல் என்று ஜூலை 2007-ல் நீதித்துறை மற்றும் மனித உரிமைகளின் அமைச்சர் ஒரு தீர்மானத்தில் எழுதி கையெழுத்திட்டார். மத நம்பிக்கைகளின் காரணமாக ராணுவத்தில் சேர மறுத்ததால் அநியாயமாக சிறையிலிடப்பட்ட மற்றவர்களும் இந்தத் தீர்மானத்தினால் பயனடையலாம்.

ஆர்மீனியா

படைத்துறை சாராத பிற சேவையில் ஈடுபட மறுத்ததால் 19 சகோதரர்கள்மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது; சொல்லப்போனால், அந்தச் சேவையில் ஈடுபடுவது கிறிஸ்தவ நடுநிலையை விட்டுக்கொடுப்பதாய் இருக்கும். என்றாலும், செப்டம்பர் 2006-ல் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதம், சகோதரர்கள் மீதான கிரிமினல் வழக்குகள் நிறுத்திவைக்கப்பட்டதாகத் தெரிவித்தது. என்றாலும், ஒரு கிறிஸ்தவரால் ஏற்றுக்கொள்ள முடிந்த படைத்துறை சாராத பிற சேவையை அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. இதன் காரணமாக, 2007-ஆம் வருடத்தின் மத்திபத்திற்குள் 71 இளம் சகோதரர்கள் சிறையில் இருந்தார்கள், அவர்கள் அதிகபட்சமாக மூன்று வருட சிறைத் தண்டனை பெற்றிருந்தார்கள்.

ஆர்மீனியாவில் இவ்வாறு விசாரணை செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ள அநேக இளம் சாட்சிகளில் வாஹான் பயாட்யான் என்பவரும் ஒருவர். அவருக்கு ஒன்றரை வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், வழக்கறிஞரோ, மத நம்பிக்கைகளின் காரணமாக சகோதரர் பயாட்யான் மறுப்பு தெரிவித்தது “ஆதாரமற்றது, ஆபத்தானது” என்பதாகச் சொல்லி அவருக்குக் கடுமையான தண்டனை வழங்குமாறு கேட்டார். மேல்முறையீட்டு நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு, அவருக்கு இன்னும் ஒரு வருட தண்டனையைக் கூட்டி வழங்கியது; உச்ச நீதிமன்றமும் அத்தீர்ப்பை உறுதிப்படுத்தியது. அதனால், சகோதரர் பயாட்யான் ECHR-யில் மனு கொடுத்தார். அந்த மனு ஏற்றுக்கொள்ளத் தக்கது என ECHR அறிவித்தது; வழக்கை நன்கு ஆராய்ந்து பரிசீலனை செய்ய அது தயார் என்பதை அதன்மூலம் தெரிவித்தது. இந்த வழக்குக்கு நல்ல தீர்ப்பு கிடைத்தால் அது சகோதரர் பயாட்யானுக்கும் இதே போன்ற பிரச்சினையைச் சந்திக்கிற மற்றவர்களுக்கும் பயனுள்ளதாயிருக்கும் என நம்புகிறோம்.

அஜர்பைஜான்

இங்கு யெகோவாவின் சாட்சிகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருந்தும் சகோதர சகோதரிகள் தொடர்ந்து பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள். உதாரணமாக, டிசம்பர் 24, 2006-ல் சில பைபிள் விஷயங்களை அமைதலாகக் கலந்தாலோசிப்பதற்காக 200-க்கும் அதிகமான சகோதர சகோதரிகளும் ஆர்வமுள்ளவர்களும் பாகு என்ற இடத்தில் கூடிவந்திருந்தார்கள். அப்போது, அந்தக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ஆயுதமேந்திய போலீசார் தொலைக்காட்சி குழுவினரையும் உள்ளூர் அதிகாரிகளையும் அழைத்து வந்தார்கள். சோதனையிடுவதற்கான வாரண்டைப் பெற்றிராத அந்தப் போலீசார், வாடகைக்கு எடுத்திருந்த அந்த மன்றத்தின் கதவை உடைத்து கூடிவந்திருந்தோரை கைது செய்தார்கள். குறைந்த பட்சம் இரண்டு பேரையாவது அவர்கள் அடித்தார்கள். எக்கச்சக்கமான பைபிள் பிரசுரங்களையும், நன்கொடை பெட்டியையும் அதிலுள்ளவற்றையும், சட்டப்பூர்வ ஆவணங்களையும் போலீசார் பறிமுதல்செய்தார்கள்; பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் மொழிபெயர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட அநேக கம்ப்யூட்டர்களையும் கைவசப்படுத்தினார்கள். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோரை அன்றைய தினமே விடுதலை செய்தார்கள். என்றாலும், மனமுவந்து சேவைசெய்ய வந்திருந்த வெளிநாட்டு சகோதரர்கள் ஆறு பேரை, “மதப் பிரச்சாரம் செய்ததாக” சொல்லி நாடுகடத்தினார்கள். இங்குள்ள சகோதரர்கள் ராணுவ சேவையில் ஈடுபட மறுப்பதால் சிறையில் தள்ளப்படுகிறார்கள். வெளிநாட்டிலிருந்து பிரசுரங்களைப் பெற்றுக்கொள்வதிலும் அவர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன.

இஸ்ரேல்

யெகோவாவின் சாட்சிகளின் மாநாட்டிற்காக ஹைஃபா காங்கிரஸ் அமைப்பு (ICC) அதன் மன்றத்தைத் தர மறுத்தது. இவ்வாறு பாரபட்சமாக நடந்துகொண்டது தவறு என ஹைஃபா மாவட்ட நீதிமன்றம் பிப்ரவரி 5, 2007-ல் தீர்ப்பளித்தது. வழக்குக்கான கட்டணத்தில் ஒரு பகுதியை நஷ்ட ஈடாக வழங்கும்படி ICC-க்கு நீதிமன்றம் ஆணையிட்டது. “வாடிக்கையாளர்கள் எல்லாரையும் பாரபட்சமின்றி நடத்துவது . . . ICC நிர்வாகத்தின் முக்கிய கடமையாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் இக்கடமையை அது மீறியுள்ளது” என தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்தார். இஸ்ரேலில் உள்ள நம் சகோதரர்கள் வணக்கத்திற்காக பெரியளவில் கூடிவருவதற்கு இந்தச் சாதகமான தீர்ப்பு உதவும்.

தஜிகிஸ்தான்

இங்கு அனுப்பிவைக்கப்பட்ட நம் பிரசுரங்களை இரண்டு முறை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள்; கலாச்சார அமைச்சகமோ, நம் பிரசுரங்களுக்கும் அமைப்புக்கும் தடையுத்தரவு வழங்கும்படி வற்புறுத்தியது. இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையின் காரணமாக, கிலியட் பயிற்சிபெற்ற இரண்டு மிஷனரிகள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியதாயிற்று. அடுத்து, அக்டோபர் 11, 2007-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. இழைக்கப்பட்ட இந்த எல்லா அநியாயங்களைக் குறித்தும் அநேக முறை அப்பீல் செய்யப்பட்டிருக்கிறது. ஆர்வமுள்ளோர் அதிகம் உள்ள இந்த நாட்டில் பிரசங்க வேலை தொடருவதற்கு வழி திறக்கும்படி யெகோவாவிடம் ஜெபிக்கிறோம். 2007 ஊழிய ஆண்டில் இங்கு 14 சதவீத அதிகரிப்பு இருந்தது.

உக்ரைன்

விவ் ஸ்டேடியத்தில் மே 12, 2007-ல் விசேஷ பேச்சு கொடுக்கப்படவிருந்தது. அதற்கு முந்தின நாள், ஸ்டேடியத்தின் நிர்வாகம் விரோதிகளின் வற்புறுத்தலுக்கு இணங்கி அந்த ஸ்டேடியத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை ரத்துசெய்தது. சகோதரர்கள் உடனடியாக உக்ரைன் மற்றும் ஐக்கிய மாகாணங்களின் அரசு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, யெகோவாவின் சாட்சிகள் நகரத்தின் அமைதியைக் குலைப்பவர்கள் அல்ல என்பதை அந்த நிர்வாகத்தினருக்குப் புரியவைக்க முயன்றனர். அடுத்த நாளிலும் அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தைத் தொடர்ந்தது. அதே சமயத்தில் விசேஷ பேச்சைக் கேட்பதற்காக உக்ரைன் நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் காரிலும் பஸ்ஸிலும் ரயிலிலுமாக விவ் ஸ்டேடியத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். நம் சகோதரர்கள், அந்த ஸ்டேடியத்தின் பூட்டப்பட்ட கதவுகளுக்கு வெளியே அமைதியாக கூடிவந்து பொறுமையோடு காத்திருந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தோஷத்தோடு அளவளாவினர், ராஜ்ய பாடல்களையும் பாடினர். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு இன்னும் 20 நிமிடங்களே இருந்தன. அந்தச் சமயத்தில், ஸ்டேடியத்தின் கதவுகளைத் திறந்து சகோதரர்களை உள்ளே விடுவதற்கு அதன் நிர்வாகம் எப்படியோ சம்மதித்துவிட்டது. மண்டலக் கண்காணி கொடுக்கப்போகும் உற்சாகமான பேச்சைக் கேட்டு மகிழ்வதற்காக அங்கு கூடிவந்திருந்த 27,000-க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் ஸ்டேடியத்திற்குள் சென்றனர்.

துர்க்மேனிஸ்தான்

இங்கு யெகோவாவின் சாட்சிகளுக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. சகோதரர்கள் சில காலத்திற்கு ஓரளவு பிரச்சினையின்றி இருந்தனர். பிறகு, அதிகாரிகள் திரும்பவும் சகோதரர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தனர். என்றாலும், சகோதர சகோதரிகள் தைரியமாகவும் அதே சமயத்தில் விவேகமாகவும் கூடிவருகிறார்கள், மற்றவர்களுக்கு நற்செய்தியையும் அறிவிக்கிறார்கள். (மத். 10:16) ராணுவ சேவையில் ஈடுபட மறுத்ததற்காக மூன்று இளம் சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர்; இரண்டு சகோதரர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை சில நிபந்தனைகளின் பேரில் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், மற்ற சகோதரருக்கோ ஒன்றரை வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் கடுமையாக நடத்தப்பட்டதால், அவர் பட்ட கஷ்டத்தை உலகளவில் யாவரும் அறியும்படி சகோதரர்கள் செய்தனர். இங்குள்ள நீதிமன்றத்தில் நம் சகோதரர்கள் சார்பாக வழக்காடுவதற்காகவும் அவர்களுக்கு உதவுவதற்காகவும் வெளிநாட்டில் வழக்கறிஞர்களாக இருக்கும் சகோதரர்கள் வருவதை அதிகாரிகள் தடுத்தனர். அவர்களுக்கு விசா அளிக்க மறுத்தனர். என்றாலும், உன்னதமானவரின் உதவிக்காக நாம் செய்யும் ஜெபங்களை எந்த மனித அதிகாரிகளாலும் தடுக்க முடியாது.—1 தீ. 2:1, 2.

கஸக்ஸ்தான்

ஒரு சகோதரியின் வீட்டில் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. யெகோவாவின் சாட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாத பகுதியில் அவருடைய வீடு இருந்தது. அரசுதரப்பு வழக்கறிஞரின் அலுவலகத்திலிருந்து ஆறு அதிகாரிகள் அந்த சகோதரியின் வீட்டிற்கு வந்து கூட்டத்தைத் தடுத்து நிறுத்தினர். ஐந்து சகோதரிகளுக்கும் கூட்டத்திற்கு வந்திராத ஒரு சகோதரருக்கும் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. இவர்கள் எல்லாருக்காகவும் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.

துருக்கி

ஜூலை 31, 2007-ல் அசோஸியேஷன் ஃபார் த ஸப்போர்ட் ஆஃப் ஜெஹோவாஸ் விட்னஸஸ் சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றபோது துருக்கி கிளை அலுவலகம் பெருமகிழ்ச்சி அடைந்தது. இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்காக இரண்டு வருடங்களுக்கும் மேலாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக, கிளை அலுவலக சாசனம் அரசியல் விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கிறதா என்பதைக் குறித்து நீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடுத்தது. சாசனம் சட்டப்பூர்வமாக இருப்பதை இஸ்தான்புல்லில் இருந்த கீழ் விசாரணை நீதிமன்றம் உறுதிசெய்ததும், அரசு அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்திற்கு அப்பீல் செய்தனர். ஆனால், உச்ச நீதிமன்றமும் கீழ் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்தது. இத்தீர்ப்பு அங்கீகாரம் பெறுவதற்கு வழியைத் திறந்தது. இந்தப் புதிய அசோஸியேஷன், கிளை அலுவலகத்தை சட்டப்பூர்வ மத நிறுவனமாக ஆக்கியது. அதனால், ஓர் இடத்தை சொந்தமாக வாங்கிக்கொள்வதற்கும், மாநாடுகளுக்காக மன்றங்களை வாடகைக்கு எடுப்பதற்கும், நன்கொடைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், நீதிமன்றத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய சட்டப்படியான காரியங்களுக்காக வாதாடுவதற்கும் முடியும்.

ராஜ்ய செய்தி எண் 37-ஐ வினியோகித்துக் கொண்டிருந்த யெகோவாவின் சாட்சிகள் இருவர் “மக்களுக்குத் தொல்லை கொடுத்ததாக” குற்றம்சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டனர். என்றாலும், இஸ்தான்புல் ஸிஸ்லி பீஸ் கோர்ட் அந்த அபராதத்தை ரத்து செய்தது. அதோடு, “யெகோவாவின் சாட்சிகள் பிரசுரங்களை அளிப்பது . . . கருத்து மற்றும் நம்பிக்கைச் சுதந்திரத்திற்கு உட்பட்டே இருக்கிறது” என்றும் துருக்கிவாசிகள் “தங்களுடைய நம்பிக்கைகளை பரப்புவதற்கு சுதந்திரம் இருக்கிறது” என்றும் அது குறிப்பிட்டது. இருந்தாலும், துருக்கியிலுள்ள நம் சகோதரர்களுக்கு வேறு பிரச்சினைகளும் இருக்கின்றன. உதாரணமாக, நடுநிலை வகிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காரணமாக, ராணுவத்தில் சேரவேண்டிய வயதில் உள்ள நம் சகோதரர்கள் சிறையில் தள்ளப்படவும் அபராதம் செலுத்தவும் வேண்டியிருக்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சில அறிக்கைகள் காட்டுகிறபடி, கடவுளை வழிபடுவதற்கான உரிமையை ஐரோப்பிய நாடுகள் எதிர்த்தபோதெல்லாம் யெகோவாவின் சாட்சிகள் மனித உரிமைகளின் ஐரோப்பிய நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். 2007-ன் மத்திபத்திற்குள்ளாக அந்த நீதிமன்றத்தில் 22 மனுக்கள் நிலுவையில் இருந்தன; அவை நடுநிலை வகிப்பு, சட்டப்பூர்வ அங்கீகாரம், துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட மனுக்கள் ஆகும். இப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்கிற நம் சகோதர சகோதரிகள் ஐரோப்பாவில் இருந்தாலும் சரி வேறு இடத்தில் இருந்தாலும் சரி, அவர்களுக்காக ஜெபிப்பது நம் கடமை.—2 கொ. 1:10, 11.

உண்மைத்தன்மையும் உத்தமத்தன்மையும்

இந்த இயர்புக்கில் ரஷ்யாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய வரலாறு உள்ளது. சோவியத் சகாப்தத்தில் அங்குள்ள யெகோவாவின் சாட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டபோது நம் சகோதரர்கள் எவ்வாறு உத்தமத்தன்மையைக் காட்டினார்கள் என்பதைப்பற்றி அதில் நீங்கள் வாசிப்பீர்கள். சகிக்க முடியாதளவுக்குக் கொடூரமான எதிர்ப்பை அவர்கள் சந்தித்தார்கள். ஆனால், நம் வேலைக்கு எந்தத் தடையுமில்லாத நாடுகளிலும்கூட சாத்தானும் அவனுடைய ஆட்களும் வெகு தந்திரமான விதத்தில் நம் உத்தமத்தை முறிக்க அயராது பாடுபடுகிறார்கள். என்றாலும், யெகோவாவின் ஊழியர்கள் அவருக்கு உண்மையாய் நிலைத்திருக்கையில், அவருடைய இருதயம் எவ்வளவாய் சந்தோஷப்படுகிறது! (நீதி. 27:11) உலகெங்குமுள்ள கடவுளுடைய மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு விசுவாசத்தையும் உண்மைப்பற்றுறுதியையும் காட்டுகிறார்கள் என்பதற்கு சில அனுபவங்களைக் கீழே காணலாம்.

சுவீடன்

தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துவரும் ஒரு பயனியர் சகோதரிக்கு சக பணியாளர்களிடமிருந்து வரும் பாலியல் தொல்லைகளைச் சமாளிப்பது சதா பிரச்சினையாக இருந்தது. என்றாலும், இப்படிப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு, அவர் சிறந்த உத்திகளைக் கண்டுபிடித்திருக்கிறார். புதிதாக வேலைக்கு வருவோரிடம் தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறார்; அதோடு, தான் திருமணமானவள் என்பதையும் அடிக்கடி தெரிவிக்கிறார். தனக்கும் தன் கணவருக்கும் இடையே இருக்கும் ஒரேவிதமான விருப்பு வெறுப்புகளைப்பற்றி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன் சக பணியாளர்களிடம் சொல்கிறார்; இதன்மூலம் அவர்களுக்கு இடையே பலமான திருமணப் பிணைப்பு இருப்பதை ஆணித்தரமாக தெரிவித்து விடுகிறார். ஒரு நோயாளியைப்பற்றி டாக்டரிடம் பேச வேண்டியிருந்தால், பல பேர் இருக்கிற சாப்பாட்டு அறையில் டாக்டரைச் சந்திக்க ஏற்பாடு செய்துகொள்கிறார். எதிர்பாரா சூழ்நிலையில், தான் வேலை பார்க்கிற அறைக்குள் யாராவது நுழைந்து கதவை அடைத்தால், உடனடியாக யெகோவாவிடம் ஜெபிக்கிறார்; அதோடு, பணியிடத்தில் காட்ட வேண்டிய மரியாதையையும் ஒழுக்கத்தையும் விட்டுக்கொடுக்காத விதத்தில் அவரிடம் நடந்துகொள்கிறார்.

ஜெர்மனி

மாரியான் என்ற சகோதரர் வடக்கு ஜெர்மனியிலுள்ள ஒரு கம்பெனியில் தொடர்ந்து 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். அவருடைய வேலைநேரம் சாயங்காலமாக இருப்பதால், வாரநாட்களில் நடக்கும் கூட்டங்களில் கலந்துகொள்வது எப்போதும் பிரச்சினையாகவே இருந்தது. “அது எனக்குக் கவலையாக இருந்தது; ஏனெனில், கூட்டங்களை அவ்வளவு பொக்கிஷமாகக் கருதுகிறேன். எல்லாக் கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்கு வழிகாட்டும்படி யெகோவாவிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன்” என அவர் சொல்கிறார். எனவே, தைரியத்திற்காக ஜெபித்துவிட்டு தன் மேலதிகாரியிடம் போய் விஷயத்தைச் சொன்னார். கூட்டம் நடக்கும் நாட்களில் அவருடைய வேலை முடிந்துவிட்டால் அவர் சீக்கிரமாகவே சென்றுவிடுவதற்கு அந்த மேலதிகாரி ஒத்துக்கொண்டார். அந்த அதிகாரி இருந்த வரையில் மாரியான் கூட்டங்களுக்குச் செல்ல முடிந்தது. ஆனால், அவருடைய இடத்திற்கு வந்த வேறொரு அதிகாரி சீக்கிரமாகச் செல்ல மாரியானுக்கு அனுமதி அளிக்கவில்லை. மாரியான் என்ன செய்தார்? “நான் கம்பெனி மானேஜரிடம் பேசட்டுமா என அந்தப் புதிய மேலதிகாரியிடம் மரியாதையோடு கேட்டேன்” என அவர் சொல்கிறார். மானேஜரிடம் பேசுகையில், மாரியான் அவருக்குச் சிறந்த சாட்சி கொடுத்தார்; அதோடு, தான் கூட்டங்களில் கலந்துகொள்ள விரும்புவதற்கான காரணத்தையும் விளக்கினார். மாரியானோடு அந்த நேரத்தில் வேலைப் பார்க்கிற அனைவரும் ஒத்துக்கொண்டால், கூட்டம் நடக்கும் நாட்களில் அவர் சீக்கிரமாகவே சென்றுவிடலாம் என மானேஜர் சொன்னார். ஆகவே, மாரியான் தன்னோடு வேலை பார்க்கிற எல்லாரையும் அழைத்து விஷயத்தை விளக்கினார், அவர்களுக்கு சிறந்த சாட்சியையும் கொடுத்தார். மாரியானால் இப்போது வார நாட்களில் நடக்கும் எல்லாக் கூட்டங்களிலும் கலந்துகொள்ள முடிகிறது. “கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கு ரொம்பவே போராட வேண்டியிருந்தது. என்றாலும், யெகோவாவிடம் உருக்கமாக ஜெபித்தபோது அவர் இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியைத் தந்தார்” என்று சொல்கிறார் மாரியான்.

பிரிட்டன்

ஸோஃபி என்ற 16 வயது பெண் பள்ளியில் விசுவாசப் பரீட்சையை எதிர்பட்டாள். அவளுடன் படிக்கும் பிள்ளைகள் பார்ட்டிகளுக்கு வரும்படி அவளை எப்போதும் வற்புறுத்தினார்கள். “சில பார்ட்டிகள் ரொம்ப சுவாரஸ்யமானதாகத் தெரிந்தாலும், அங்குச் சென்றால் நான் பின்னால் வருத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்; பிற்பாடு அதனால் பிரச்சினைகள்தான் வரும் என்று எனக்குத் தெரியும். சமீபத்தில், ஒரு மாணவி என்னை பார்ட்டிக்கு அழைத்தாள்; ‘சும்மா எல்லாரும் வருவார்கள் அவ்வளவுதான்’ என்று சொன்னாள். பிறகுதான் எனக்குப் புரிய வந்தது, அந்த வாரயிறுதியில் அவளுடைய பிறந்தநாள் வந்ததையொட்டி அந்த பார்ட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று. நான் அதற்குப் போகாததை நினைத்து சந்தோஷப்பட்டேன். ஏனென்றால், அன்று இரவில் அவளுடைய பெற்றோர் வெளியே சென்றிருந்த சமயத்தில் ஸ்கூல் நண்பர்கள் நிறைய பேர் போதையேறும் அளவுக்கு குடித்ததாகக் கேள்விப்பட்டேன். அதனால்தான், சத்தியத்தில் உள்ள பலதரப்பட்ட வயதினரோடு சேர்ந்து பொழுதுபோக்கில் ஈடுபடுகிறேன். அவர்களோடு இருந்தால் எனக்கு ஆன்மீக ரீதியில் உதவி கிடைக்கும். என்னுடைய தம்பியும் நானும் இரவில் இன்னிசை இசைத்து மகிழ்வதற்கு, திறந்தவெளியில் விருந்து சமைத்து சாப்பிடுவதற்கு, அல்லது நாட்டுப்புற பகுதியில் ஜாலியாக நடந்து வருவதற்கு இளைஞர்களையும் வயதானவர்களையும்கூட அழைக்கிறோம். இப்போதெல்லாம், பார்ட்டிகளுக்கு வரும்படி பிள்ளைகள் அழைத்தால் அது யெகோவாவுடன் உள்ள என் பந்தத்தை எப்படிப் பாதிக்கும் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். நல்லதைச் செய்யும்போது, நாம் எதையும் இழந்துவிடுவதில்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்” என்று அவள் கூறுகிறாள்.

இத்தாலி

17 வயது ஜோவான்னியை அவனோடு படிக்கும் பெண்கள் காதல் வலையில் சிக்க வைக்க பலமுறை முயன்றார்கள். அதிலும் ஒருத்தி மட்டும் அவனை ரொம்பவே தொல்லை பண்ணினாள். தன்னை ஜோவான்னி சற்றும் கண்டுகொள்ளாததைப் பார்த்தபோது அவள் அவனுக்கு ஒரு கடிதம் எழுதினாள்: “நம் இரண்டு பேருக்கும் நல்ல ஜோடி பொருத்தம் இருக்கிறது. உன்னுடைய குணமும் ‘பர்சனாலிட்டி’யும் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அது மட்டுமல்ல, இன்னும் நிறைய விஷயங்கள் பிடித்திருக்கிறது. நீ சரியான தீர்மானம் எடுப்பாய் என நம்புகிறேன். அன்புடன், உன்.” அக்கடிதத்தின் முடிவில் தன்னுடைய பெயரை எழுதி, ‘லிப்ஸ்டிக்’ போட்ட உதடுகளால் முத்தமிட்டிருந்தாள். ஜோவான்னி இவ்வாறு கூறுகிறான்: “அடுத்த சில நாட்களுக்கு மனதுக்குள் ஒரே குழப்பமாக இருந்தது. அவளைப்போல் அழகானவள் எனக்குக் கிடைப்பாளா என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். ஸ்கூல் பிள்ளைகளுக்கு விஷயம் தெரிந்தபோது, அவளிடம் ‘சரி’ என்று சொல்லிவிடும்படி என்னை ஊக்கப்படுத்தினார்கள். ‘இந்த வாய்ப்பை விட்டுவிடாதே, அவளிடம் “வேண்டாம்” என்று சொல்வது முட்டாள்தனம்’ என்று அவர்கள் சொன்னார்கள். என்றாலும், என்னுடைய கிறிஸ்தவ அடையாளத்தை இழந்துவிடுவேனோ என்று யோசித்தேன். நான் யெகோவாவிடம் ஜெபம் செய்தேன், பெற்றோரிடமும் விஷயத்தைச் சொன்னேன். முதலில் அவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டதுபோல் இருந்தது. ஏனென்றால், இதுபோன்ற பிரச்சினைகள் எனக்கு வருமென்று அவர்கள் சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து பைபிளை ஆழ்ந்து படித்தோம்; அதற்கு முக்கியமாக இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தைப் பயன்படுத்தினோம். சபையிலுள்ள முதிர்ச்சி வாய்ந்த சகோதரர்களிடமும் இதைப்பற்றி பேசினேன். கடைசியில், நான் சரியான தீர்மானத்தை எடுத்தேன். அவளுடைய வேண்டுகோளை நிராகரித்தேன். என்னுடைய தீர்மானத்தில் நான் உறுதியாய் இருந்ததைப் பார்த்து இப்போது ஸ்கூல் பிள்ளைகள் எல்லாரும் என்னை ரொம்பவே மதிக்கிறார்கள்.”

மெக்சிகோ

“எனக்கு அப்போது 19 வயதுதான். அந்தச் சமயத்தில் எனக்கு மூட்டு அழற்சி நோய் வந்தது. அது என்னை முற்றிலும் முடமாக்கிவிட்டது. 35 வருடங்களாக சக்கர நாற்காலியே கதி எனக் கிடக்கிறேன். இதனால் மனதுக்குள் அதிக விரக்தி ஏற்படுகிறது. சில சமயங்களில் மனம் தளர்ந்துவிடுகிறது. ஆனாலும், என்னால் முடிந்தளவு கிறிஸ்தவ நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவது எனக்குத் தெம்பளிக்கிறது” என 59 வயது ஆன்டோன்யோ கூறுகிறார். அவர் முழுக்காட்டுதல் பெற்று இப்போது 37 வருடங்கள் ஆகின்றன. ஏழு வருடங்களுக்கு முன்பு அவருடைய அம்மா இறந்தபோது அவருடைய சூழ்நிலை இன்னும் மோசமானது. ஏனெனில், அம்மாதான் அவரை கவனித்து வந்தார். ஆன்டோன்யோ அதை எப்படிச் சமாளித்து வருகிறார்? “தமது ஊழியர்களை யெகோவா கைவிடுவதில்லை, மாறாக அவர்களுக்குத் தேவையான உதவியை அளிக்கிறார் என்பதை அப்போது முதற்கொண்டு நான் கண்ணாரக் காண்கிறேன். என்னைக் கவனிப்பதற்கு ஒரு சகோதரரை சபை ஏற்பாடு செய்தது; என்னுடைய அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகளுக்கு சகோதரர்கள் சிலர் பணம் கொடுத்து உதவுகிறார்கள்” என்று அவர் சொல்கிறார். ராஜ்யம் சம்பந்தப்பட்ட எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறும் காலத்திற்காக ஆன்டோன்யோ ஏங்குகிறார்.

“உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு”

“உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்.” (ஏசா. 54:2) அதிகமதிகமான ராஜ்ய மன்றங்களும் பெரிய கிளை அலுவலகங்களும் தேவைப்படுவதைப் பார்க்கும்போது இந்தத் தீர்க்கதரிசனம் கண்கூடாக நிறைவேறி வருவது தெரிகிறது. கடந்த வருடத்தில் உலகெங்கும் வணக்க ஸ்தலங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இவை தவிர, குறிப்பாக, பின்வரும் ஆறு கிளை அலுவலகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது யெகோவாவின் சாட்சிகளுக்கு பெருமகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

பியூர்டோ ரிகோ

முந்தின கிளை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு 13 வருடங்களிலேயே அதை விரிவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பல துறைகள் விரிவுபடுத்தப்பட்டதே அதற்குக் காரணம். செப்டம்பர் 16, 2006, சனிக்கிழமை, ஆளும் குழுவின் அங்கத்தினரான டேவிட் ஸ்ப்லேன் பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுத்தார்.

கொலம்பியா

போகோட்டாவுக்கு வடமேற்கில் 42 கிலோமீட்டர் தூரத்தில் ஃபாகாடாடிவா என்ற இடத்தில் இருந்த கிளை அலுவலகம் விரிவாக்கப்பட்டது. நவம்பர் 11, 2006 அன்று அது பிரதிஷ்டை செய்யப்பட்டபோது 30 நாடுகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகள் அதற்கு வருகை தந்தார்கள். 3,605 பேர் கூடிவந்தார்கள். சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் பாசத்துடன் அரவணைத்துக் கொண்டார்கள்; இவர்களில் அநேகர் 30 அல்லது 40 வருடங்களுக்குப் பிறகே சந்திக்கிறார்கள். ஆளும் குழுவின் அங்கத்தினரான கெரட் லாஷ் கொடுத்த பிரதிஷ்டை பேச்சை அனைவரும் கேட்டு மகிழ்ந்தார்கள்.

பிஜி

பிஜியின் தலைநகரான சுவாவின் மையப்பகுதியிலிருந்து ஐந்து நிமிடங்கள் நடந்தால் போதும். அங்கே, துறைமுகத்தைப் பார்த்தாற்போல் அமைந்திருப்பது, ஓர் அழகிய கிளை அலுவலகம். நவம்பர் 11, 2006, சனிக்கிழமை அந்தக் கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு 410 பேர் வந்திருந்தார்கள்; ஆளும் குழுவின் அங்கத்தினரான ஜெஃப்ரி ஜாக்ஸன் பிரதிஷ்டை பேச்சைக் கொடுத்தார்.

புருண்டி

அழகு மிளிரும் இந்த மத்திய ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு நவம்பர் 25, 2006 நெஞ்சைவிட்டு நீங்காத நாள். அங்கு கட்டப்பட்ட கண்ணைக் கவரும் புதிய கிளை அலுவலகத்தின் பிரதிஷ்டை நிகழ்ச்சியை அனுபவித்து மகிழ ஆளும் குழுவின் அங்கத்தினரான கை பியர்ஸ் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த 1,141 பேர் கூடி வந்திருந்தனர். யெகோவாவின் ஆசீர்வாதத்திற்கான அத்தாட்சியை அங்கு காண முடிகிறது. அங்கு யெகோவாவை வழிபடுவதில் இன்னும் அநேகர் சேர்ந்துகொள்வதற்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன.

ருவாண்டா

தடையுத்தரவுகள், உள்நாட்டுப் போர் என 30 வருடங்களாக பல கொந்தளிக்கும் பிரச்சினைகளுக்குப் பிறகு, கண்ணைக் கவரும் தோட்டங்களின் நடுவில் கம்பீரமாக வீற்றிருக்கும் அழகிய கிளை அலுவலகத்தின் பிரதிஷ்டைக்கு சகோதரர் கை பியர்ஸை அழைப்பதில் ருவாண்டாவிலுள்ள சகோதர சகோதரிகள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.

அங்கு நடந்த இனப்படுகொலையில் அநேக சகோதரர்கள் இறந்திருக்கிறார்கள். என்றாலும், ஆயிரம் மலைகளின் தேசம் என்று அறியப்படும் இந்நாட்டில் யெகோவாவின் வேலை தொடர்ந்து வளர்ச்சி அடைந்திருக்கிறது. டிசம்பர் 2, 2006, சனிக்கிழமை நடந்த பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு 553 பேர் வந்திருந்தார்கள். அதில் 15 நாடுகளிலிருந்து வந்திருந்த 112 பேரும் உட்படுவர்.

உகாண்டா

தலைநகரான கம்பாலாவுக்கு தெற்கே புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் இந்தப் புதிய கிளை அலுவலகம் ஜனவரி 20, 2007, சனிக்கிழமை அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. மொத்தம் 665 பேர் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். பிரதிஷ்டை பேச்சைக் கொடுத்த ஆளும் குழு உறுப்பினரான ஆந்தணி மாரிஸ் உட்பட சுமார் 20 கிளை அலுவலகங்களிலிருந்து வருகை புரிந்த 170 பேரும் அதில் உட்படுவர்.

‘கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார்’

கடந்த வருடத்தில் யெகோவா செய்துள்ள அற்புதமான செயல்களைச் சிந்தித்துப் பார்க்கையில் நாம் நிச்சயம் ஆனந்தம் அடைகிறோம். நாம் ஒருமித்து, ஏக குரலில் சங்கீதக்காரன் சொன்னதையே சொல்கிறோம்: “கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ச்சியாயிருக்கிறோம்.”—சங். 126:3.

[பக்கம் 9-ன் பெட்டி/ படம்]

உலகளாவிய வினியோகிப்பு

பல்வேறு இடங்களிலுள்ள சிலர், இந்த ராஜ்ய செய்தி உண்மையிலேயே உலகெங்கும் வினியோகிக்கப்படுகிறதா என்று சந்தேகித்தனர். உதாரணமாக, பிரேசிலிலுள்ள ஒருவருக்கு இந்தச் சந்தேகம் வந்தது. அதனால், அவர் அந்தப் பிரஸ்தாபியிடம் அமெரிக்காவிலுள்ள தன் நண்பருக்கு இதன் பிரதி கிடைத்திருக்கிறதா என்று போன் செய்து கேட்கும் வரை சற்று நிற்கும்படி சொன்னார். ஃபோனின் மறுமுனையிலிருந்து, “ஆம், பத்து நிமிஷத்துக்கு முன்னால்தான் எனக்கு கிடைத்தது” என்று அவருடைய நண்பர் சொன்னார். வியந்துபோன அந்த ஆள் ராஜ்ய செய்தியைப் பெற்றுக்கொண்டு அதைக் கவனமாகப் படிப்பதாகத் தெரிவித்தார்.

[பக்கம் 12-ன் படம்]

சபையின் தபால் பெட்டியில் ஒரேவொரு அழைப்பிதழே இருந்தது

[பக்கம் 25-ன் படம்]

ஆன்டோன்யோ ஊழியத்திற்குச் செல்லத் தயாராய் இருக்கிறார்

[பக்கம் 28, 29-ன் படங்கள்]

கிளை அலுவலகப் பிரதிஷ்டைகள்

பியூர்டோ ரிகோ

ருவாண்டா

கொலம்பியா

புருண்டி

பிஜி

உகாண்டா