Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யா

“சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்.” (மல். 1:11) நெஞ்சை நெகிழ வைக்கும் இந்தத் தீர்க்கதரிசனத்தை சுமார் 2,450 வருடங்களுக்கு முன்பாக யெகோவா சொன்னார்; இது எந்தளவு உண்மை என்பது இன்று ரஷ்யாவைப் பார்த்தாலே தெரியும். இதன் மேற்குப் பகுதியில், யெகோவாவை உண்மையாய் வழிபடுபவர்கள் வசிக்கிற கலினின்கிராட் நகரத்தில் சூரியன் அஸ்தமிக்கும் அதே வேளையில், கிழக்கே பிரஸ்தாபிகள் உள்ள சுக்சீ தீபகற்பத்தில் சூரியன் உதயமாகிறது; இந்த சுக்சீ தீபகற்பம் அலாஸ்காவின் பேரிங் ஜலசந்திக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. ஆம், ராஜ்ய செய்தியைப் பிரசங்கித்து சீஷராக்கும் வேலையைப் பொறுத்தவரை ரஷ்யாவில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை. சோவியத் சகாப்தத்தில், தைரியமிக்க சகோதர சகோதரிகள் அயராது உழைத்ததற்கு யெகோவா அளவிலா ஆசீர்வாதங்களை அள்ளித் தந்திருக்கிறார். அவர்கள் மூர்க்கத்தனமான துன்புறுத்தலை சகித்தார்கள்; அதன்மூலம் இன்று ரஷ்யாவில் 1,50,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் சேவை செய்வதற்கு வழியைத் தயார்படுத்தி இருக்கிறார்கள்; இதையெல்லாம் நாம் இப்போது வாசித்துத் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

“ரஷ்ய கூட்டமைப்பு” என அதிகாரப்பூர்வமாய் பெயரிடப்பட்ட ரஷ்யா, ஒரேவொரு இனத்தவர் வசிக்கிற தனிநாடு அல்ல. அதன் பெயரே சுட்டிக்காட்டுவதுபோல, அது பல நாடுகளின் கூட்டமைப்பாகும்; இங்கு, தங்களுக்கே உரிய தனிச்சிறப்புமிக்க கலாச்சாரத்தைப் பின்பற்றுகிற பல்வேறு இனத்தவரையும் மொழியினரையும் நாட்டவரையும் காணலாம். ஏராளமான இனப்பிரிவுகளோடும், எண்ணற்ற மொழிகளோடும், பல்வேறு மதங்களோடும் சேர்ந்து கதம்ப கலாச்சாரமாய் காட்சியளிக்கிற, பரந்து விரிந்த இந்த நாட்டைப்பற்றி தெரிந்துகொள்ளப் போகிறோம்; இன்றுள்ள ரஷ்யக் குடியரசைப்பற்றி அல்ல, நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு சார் மன்னர்கள் ஆண்ட ரஷ்ய பேரரசைப்பற்றித் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

மாஸ்கோவிலுள்ள மதகுருமார்களுக்குத் தைரியமாய் சாட்சிகொடுத்தல்

ஜனங்கள் மதத்திடம் ஆர்வம் காட்டத் தொடங்கிய காலத்தில், ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் செமினரியில் பட்டம் பெற்றவரும், கடவுள் பக்திமிக்கவருமான ஸ்யிம்யான் கஸ்லிட்ஸ்கீ என்பவர் சார்ல்ஸ் டேஸ் ரஸலைச் சந்தித்தார். முன்பு பைபிள் மாணாக்கர்கள் என அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் செய்துவந்த ஊழியத்தை அப்போது ரஸல் முன்நின்று வழிநடத்தி வந்தார். இதுபற்றி, ஸ்யிம்யான்னின் பேத்தியான நீனா லுப்பா என்பவர் இவ்வாறு விளக்கினார்: “1891-ல் என் தாத்தா அமெரிக்காவுக்குச் சென்று, சகோதரர் ரஸலைச் சந்தித்தார். இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் வைத்திருந்தார், சகோதரர் ரஸல் தன்னுடைய சகோதரன் என்று சதா சொல்லிக்கொண்டிருப்பார்.” 1800-களின் பிற்பகுதியில், மக்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றும் சக்திபடைத்த பைபிள் சத்தியங்களைக் கற்பிப்பதன்மூலம் மெய் வணக்கத்தை மீண்டும் ஸ்தாபிக்கும் வேலையில் சகோதரர் ரஸலும் அவருடைய தோழர்களும் ஈடுபட்டிருந்தார்கள். கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளும் அவற்றின் குருமார்களும் போதிப்பவை பொய்யான கோட்பாடுகள் என்பதை வெட்டவெளிச்சமாக்குவது அவர்களுடைய வேலையின் பாகமாய் இருந்தது. ஸ்யிம்யான் பைபிள் சத்தியத்தைத் தெரிந்துகொண்டார், சகோதரர் ரஸலும் அவரது தோழர்களும் மெய் வணக்கத்திடம் காட்டிய பக்திவைராக்கியத்தையும் பார்த்தார்; இது, மாஸ்கோவிலுள்ள மதகுருமார்களுக்குத் தைரியமாகப் பிரசங்கிக்க அவருக்குத் தூண்டுதல் அளித்தது. அவர் இப்படித் தைரியமாய் பிரசங்கித்ததன் விளைவு?

“மாஸ்கோவிலுள்ள ஆர்ச்பிஷப்பை அவமதித்தாகக் குற்றம்சாட்டப்பட்டு, விசாரணையின்றி, சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு உடனடியாக சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்; இவ்வாறுதான், 1891-ல் பைபிளின் செய்தி சைபீரியாவை அடைந்தது” என்று நீனா எழுதினார். கடைசியில், இன்றைய கஸக்ஸ்தானோடு இணைக்கப்பட்ட சைபீரியப் பகுதிக்கு ஸ்யிம்யான் கஸ்லிட்ஸ்கீ மாற்றப்பட்டார். அங்கு 1935-ல் இறக்கும்வரை கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாய்ப் பிரசங்கித்து வந்தார்.

‘சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்குச் சாதகமான சூழல் ரஷ்யாவில் இருப்பதாகத் தெரியவில்லை’

ஸ்யிம்யான் கஸ்லிட்ஸ்கீ நாடுகடத்தப்பட்ட அதே வருடத்தில் ரஷ்யாவுக்கு முதன்முறையாக சகோதரர் ரஸல் வந்தார். “சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கான சாதகமான சூழலோ ஆர்வமோ ரஷ்யாவில் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை” என தன்னுடைய விஜயத்தைப்பற்றி அவர் எழுதினார்; இந்த வார்த்தைகள் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. அப்படியென்றால், அங்கிருந்த ஜனங்கள் சத்தியத்தைக் கேட்க விரும்பவில்லை என்றா அவர் சொன்னார்? இல்லை. அங்கு நடந்த சர்வாதிகார ஆட்சி சத்தியத்தைக் கேட்கவிடாமல் ஜனங்களைத் தடுத்தது.

இந்தச் சூழ்நிலையைப்பற்றி சகோதரர் ரஸல் 1892, மார்ச் 1 தேதியிட்ட ஜயன்ஸ் உவாட்ச் டவர் பத்திரிகையில் விவரமாய் இவ்வாறு எழுதினார்: “தன் ஆட்சி எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு பிரஜைமீதும் ரஷ்ய அரசாங்கத்தின்பிடி இரும்புப்பிடியாய் இறுகுகிறது. அது, அந்த நாட்டுக்குச் செல்லும் அன்னியரை எப்போதும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறது. அந்த நபர் மாநகரத்திற்குள் அல்லது நகரத்திற்குள் நுழைந்தாலும்சரி வெளியேறினாலும்சரி, தன்னுடைய பாஸ்போர்ட்டை ஹோட்டல்களிலும், ரயில் நிலையத்திலும் காட்ட வேண்டும். ஹோட்டல் உரிமையாளர் அவருடைய பாஸ்போர்ட்டை வாங்கி, தலைமை போலீஸ் அதிகாரியிடம் கொடுப்பார்; அந்த நபர் அங்கிருந்து புறப்படும்வரை அதை அவர் தன்வசம் வைத்திருப்பார். ஒருவர் எப்போது நாட்டுக்குள் வந்தார், வெளியேறினார் என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்ள இது உதவும். அவர் அங்கு தங்குவதற்கு மரியாதையுடன் அவர்கள் அனுமதித்தாலும் வேண்டாத விருந்தாளியாகவே அவரை அதிகாரிகளும் அரசு அலுவலர்களும் நடத்துவார்கள்; அவர்களுடைய கருத்துகளோடு முரண்படுகிற எதுவும் அவரிடம் இல்லாததை உறுதிப்படுத்திக்கொள்ள அவரிடமுள்ள புத்தகங்கள், தாள்கள் எல்லாவற்றையும் கவனமாய் சோதனையிடுவார்கள்.”

இத்தகைய சூழ்நிலைகளில் நற்செய்தியைப் பெருமளவு பிரசங்கிக்க முடியாது என்பதைப்போல் தெரியலாம். எனினும், ரஷ்யாவில் சத்தியத்தின் விதைகள் முளைவிட்டுத் துளிர்ப்பதை எதுவும் தடுக்க முடியவில்லை.

‘அற்பமான ஆரம்பத்தின் நாள்’ துவங்குகிறது

ஜயன்ஸ் உவாட்ச் டவர் பத்திரிகை பல்வேறு நாடுகளுக்கு, “ரஷ்யாவுக்கும்கூட” தபாலில் அனுப்பப்பட்டதாக 1887-ஆம் ஆண்டிலேயே அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது. 1904-ல் சிறு தொகுதியாக ரஷ்யாவிலிருந்த பைபிள் மாணாக்கர்கள், பெரும் கஷ்டத்தின் நடுவே தாங்கள் பைபிள் பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டதாகக் கடிதம் எழுதினார்கள். நம்முடைய “பிரசுரங்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்ததால், கிட்டத்தட்ட அவற்றை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்றே சொல்லலாம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். அந்தச் சிறிய தொகுதியினர் அந்தப் பிரசுரங்களைப் பெற்றதற்கு அதிக நன்றி தெரிவித்தார்கள்; “இது பொன் போன்றது; கிடைப்பது அதிக கஷ்டம்” என்று அவர்கள் சொன்னார்கள். பிரசுரங்களின் நோக்கத்தைப் புரிந்திருப்பதை வெளிக்காட்டுபவர்களாக, “தம்முடைய ஆசீர்வாதத்தையும் இந்தப் பிரசுரங்களை வினியோகிப்பதற்கான வாய்ப்பையும் ஆண்டவர் எங்களுக்கு இப்போது அருளுவாராக” என்று எழுதினார்கள்.

ரஷ்யாவில் நற்செய்தியைப் பிரசங்கிப்பது உண்மையிலேயே ஆரம்பமாகி, மெய் வணக்கம் சிறிய அளவில், ஆனால் பலமாகக் காலூன்றியது என்பதில் சந்தேகமில்லை. இது ஒரு சிறிய ஆரம்பம்தான். எனினும், சகரியா தீர்க்கதரிசி எழுதிய விதமாக, “அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?”—சக. 4:10.

அதற்குப் பின் வந்த வருடங்களில், ஜெர்மனியில் ஊக்கமாய் ஊழியம் செய்துவந்த சகோதரர்கள் ரஷ்யாவுக்குப் பிரசுரங்களை அனுப்பினார்கள். பெருமளவு பிரசுரங்கள் ஜெர்மன் மொழியில் இருந்தன. ஜெர்மன் மொழி பேசியவர்களில் அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். 1907-ல் ரஷ்யாவிலுள்ள ஜெர்மன் பாப்டிஸ்ட் சர்ச் ஒன்றைச் சேர்ந்தவர்கள் ஆயிரமாண்டு உதயம் என்ற ஆங்கில புத்தகத் தொகுப்பின் பிரதிகளைப் பெற்றுக்கொண்டார்கள்; இவை தபாலில் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவர்களில் 15 பேர் மெய் வணக்கத்தாராய் மாறியதால் சர்ச்சிலிருந்து நீக்கப்பட்டார்கள். பின்னர், அவர்களை எதிர்த்த மதகுருவே ஆயிரமாண்டு உதயம் புத்தகத்திலுள்ள சத்தியங்களை ஏற்றுக்கொண்டார்.

1911-ல், பிரசங்க வேலைக்கு வித்தியாசமான விதத்தில் உதவி கிடைத்தது. ஆம், தேன்நிலவுக்குச் சென்ற இளம் தம்பதியர் உதவிக்கரம் நீட்டினார்கள். திருமணத்திற்குப் பிறகு, ஜெர்மனியைச் சேர்ந்த ஹெர்கன்டல் தம்பதியர், ஜெர்மானியருக்கு பிரசங்கிப்பதற்காக ரஷ்யாவுக்குப் பயணித்தார்கள். அங்கு, ஒதுக்குப்புறத்தில் ராஜ்ய பிரஸ்தாபிகளைக் கொண்ட சிறிய தொகுதிகளைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள். அவர்களுக்கு ஆன்மீக உதவி அளித்தார்கள்.

முன்பு, ரஷ்யாவிலிருந்து வாசகர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “இஸ்ரவேல பிள்ளைகளுக்கு வானத்திலிருந்து வந்த மன்னா எந்தளவுக்கு முக்கியமானதாய் இருந்ததோ அந்தளவுக்கு ஜெர்மனியிலிருந்து வரும் பிரசுரங்கள் எனக்கு முக்கியமானவையாய் இருக்கின்றன. . . . ரஷ்ய மொழியில் பிரசுரங்கள் இல்லையே என்று மிகவும் கவலைப்படுகிறோம். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், ரஷ்ய மொழியில் பல்வேறு பிரசுரங்களை மொழிபெயர்த்து வருகிறேன்.” இப்படித்தான் மொழிபெயர்க்கும் வேலை ஆரம்பமானது; இன்னும் பெருமளவில் மொழிபெயர்ப்பு வேலை நடைபெறவிருந்தது.

“கடவுளைத் தேடுகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்”

போலந்து நாட்டைச் சேர்ந்த ஆர். ஹெச். ஆலிஷின்ஸ்கீ என்பவர் போலந்தில் உள்ள வார்ஸாவில் வசித்து வந்தார்; போலந்தின் ஒரு பகுதி அப்போது ரஷ்யப் பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இவர் இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்? (ஆங்கிலம்) என்ற துண்டுப்பிரதியை 1911-ஆம் ஆண்டு ரஷ்ய மொழியில் அச்சிட ஏற்பாடு செய்தார். இவர் சகோதரர் ரஸலுக்கு எழுதிய கடிதத்தில், “இதனுடன் ஒரு பிரதியை அனுப்பி வைக்கிறேன் . . . பத்தாயிரம் பிரதிகளுக்கு அவர்கள் எழுபத்து மூன்று ரூபிள்களைக் கட்டணமாகப் பெற்றிருக்கிறார்கள் . . . எத்தனை எத்தனையோ கஷ்டங்கள் இருக்கின்றன, ஆனாலும் கடவுளைத் தேடுகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். மற்ற பிரசுரங்களோடு சேர்த்து இந்தத் துண்டுப்பிரதிகளும் ரஷ்ய மொழி பேசுபவர்களுக்கு வினியோகிக்கப்பட்டன. அவற்றை அவர்கள் ரஷ்யாவுக்கு எடுத்துச் சென்றார்கள். இவ்வாறு, புதிதாக பிரசங்க வேலை ஆரம்பமாகியிருந்த இந்த ரஷ்ய மொழி பிராந்தியத்தில் அந்த மொழி பேசுபவர்களின் மத்தியில் சத்தியத்தைப் பிரசங்கிப்பதற்கான முக்கிய மைல்கல் எட்டப்பட்டது. சீக்கிரத்திலேயே, துண்டுப்பிரதிகள், சிற்றேடுகள், சிறுபுத்தகங்கள் என பிற பிரசுரங்களும் அச்சிடப்பட்டன. காலப்போக்கில், புத்தகங்கள் போன்றவற்றைப் பெருமளவு மொழிபெயர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

1912-ல், அப்போது ரஷ்யாவின் ஆட்சிக்குட்பட்ட பின்லாந்து நாட்டுக்கு சகோதரர் ரஸல் சென்றார். அப்போது, பின்லாந்தில் உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியின் சார்பாக செயல்படும் பகராள் செயலுரிமை, கார்லா ஹார்டவா என்பவருக்கு வழங்கப்பட்டது. 1913, செப்டம்பர் 25-ஆம் தேதி, சார் மன்னரின் பிரதிநிதியாக நியு யார்க்கில் இருந்த தூதுவர், அந்தப் பகராள் செயலுரிமை ஆவணத்தில் அரசாங்க முத்திரை பதித்து, அதில் கையெழுத்திட்டார்.

இரண்டு மாத பிரசங்கப் பயணம் நீடித்தது

முதல் உலகப் போர் ஆரம்பமாவதற்கு சில காலத்திற்கு முன்பு, அமைப்பின் பிரதிநிதியாக புருக்லினிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது, போலந்திலுள்ள லோட்ஜ் நகரத்தில் டாய்ச்மான் என்ற பைபிள் மாணாக்கரை அவர் சந்தித்தார். இதன் பிறகு சீக்கிரத்திலேயே, ரஷ்யா முழுவதும் இரண்டு மாதங்கள் பிரசங்கிக்க சகோதரர் டாய்ச்மான் தன் குடும்பத்தாரோடு பயணப்பட்டார். ஆனால், போர் மூண்டதால் அவர்கள் நீண்ட காலம் ரஷ்யாவில் தங்க நேர்ந்தது.

பல்வேறு கஷ்டங்களுக்குப் பிறகு, வோல்கா நதிக்கரையோரம் அமைந்துள்ள சிறிய நகரத்தில் டாய்ச்மானின் குடும்பத்தார் தங்கினார்கள். 1918-ல் போலந்துக்குத் திரும்பிச் செல்ல அவர்கள் தீர்மானித்தார்கள்; ஆனால், பெரியம்மை கொள்ளைநோய் எங்கும் பரவியதால் அவர்களால் திரும்பிச் செல்ல முடியவில்லை. அதன் பிறகு, உள்நாட்டு சண்டை காரணமாக எல்லைப் பகுதிகள் மூடப்பட்டன. அந்த வருடங்களில் அவருடைய மூன்று பெண் பிள்ளைகள் இறந்து போனார்கள்; அவர்களுள் ஒருத்தி பெரியம்மையாலும் மற்றொருத்தி நிமோனியா ஜுரத்தாலும் இறந்து போனாள்.

எல்லாரையும் பசி வாட்டியெடுத்தது, பயமும் கவ்விக்கொண்டது. பட்டினியில் வாடியவர்கள் தெருக்களில் இறந்துகிடந்தார்கள். இந்தக் குழப்பத்தில் அநேகர், முக்கியமாய் வெளிநாட்டவர்கள், எதிரிகளின் கைக்கூலிகளென குற்றம்சாட்டப்பட்டு, விசாரணையே இல்லாமல் உடனடியாகக் கொல்லப்பட்டார்கள். ஒருநாள், ஆயுதமேந்திய போர்வீரர் ஒருவருடன் திடீரென ஒருவன் டாய்ச்மானின் வீட்டுக்குள் புகுந்தான்.

“இவன்தான் அந்த எதிரி, பிடியுங்கள்!” என கத்தினான்.

“ஏன்? இவர் என்ன செய்தார்?” என்று அந்தப் போர்வீரர் கேட்டார்.

சகோதரர் டாய்ச்மான் அந்த நபருக்காக ஏதோ தச்சு வேலை செய்திருந்தார்; இவருக்குப் பணம் தராமல் ஏய்க்கும் எண்ணத்தில் சகோதரரைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் அவன் சொன்னான். இருதரப்பு வாதங்களையும் கேட்ட போர்வீரர், அவனுடைய தவறான உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, வீட்டைவிட்டு அவனைத் துரத்திவிட்டார். பிறகு, பைபிள் சம்பந்தப்பட்ட விஷயங்களை சகோதரர் டாய்ச்மான் தன்னோடு ஒருசமயம் உரையாடியது தனக்கு நினைவிருப்பதாக அந்தப் போர்வீரர் அவரிடம் சொன்னார். அந்த உரையாடலே சகோதரர் டாய்ச்மானையும் அவரது குடும்பத்தாரையும் காப்பாற்றியது எனலாம். 1921-ல் கம்யூனிஸ அரசாங்கம் ஆயுதமேந்திய புரட்சியாளர்களை முற்றிலும் ஒடுக்கியபோது உள்நாட்டு சண்டை முடிவுக்கு வந்தது. சீக்கிரத்திலேயே டாய்ச்மான் குடும்பத்தார் தங்கள் தாயகமான போலந்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.

பைபிள் மாணாக்கர்களும் பொதுவுடைமை கொள்கையினரும்

முதல் உலகப் போர் மும்முரமாய் நடந்துவந்த சமயத்தில், ரஷ்யாவிலுள்ள சகோதரர்களுக்கு பிற இடங்களிலுள்ள சகோதரர்களோடு இருந்த கொஞ்சநஞ்ச தொடர்பும் இல்லாமல் போனது. உலகெங்கிலுமிருந்த கிறிஸ்துவின் சகோதரர்களைப் போலவே, ரஷ்யாவில் இருந்தவர்களும் கிறிஸ்து அரசாக முடிசூட்டப்பட்டதன் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாதிருந்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் சிலவற்றை தங்கள் நாடு சீக்கிரத்தில் சந்திக்கவிருந்ததை அவர்கள் துளியும் அறியாதிருந்தார்கள்; அவற்றில் பல, பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாய் இருந்தன.

1917-ஆம் வருடம் முடிவதற்கு சில மாதங்களே இருந்த சமயத்தில் 370 ஆண்டு கால சார் மன்னரின் ஆட்சிக்கு ரஷ்யப் புரட்சி முற்றுப்புள்ளி வைத்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தை அறியாதிருந்த, புதிதாக ரஷ்யாவில் ஆட்சியைக் கைப்பற்றியிருந்த பொதுவுடைமை கொள்கையினர் (Bolsheviks), இதுவரை இல்லாத வகையில் தனிச்சிறப்பான ஓர் அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமென்ற லட்சியத்தோடு திட்டங்களைத் தீட்டினார்கள். எனவே, சில வருடங்களுக்குள் யூஎஸ்எஸ்ஆர் எனப்படும் ஐக்கிய சோவியத் சோஷலிசக் குடியரசுகள் உருவாயின; இது கடைசியில், பூமியின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பகுதியை தன் ஆட்சிக்குட்படுத்தியது.

ரஷ்யப் புரட்சி நடப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பு, சோவியத் யூனியனின் முதல் அதிபரான விலாடிமிர் லெனின் பின்வருமாறு சொன்னது குறிப்பிடத்தக்கது: “ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லிக்கொள்வதற்கு மட்டுமல்ல, அதைப் பரப்புவதற்கோ அதிலிருந்து மாறுவதற்கோ ஒவ்வொருவருக்கும் முழு சுதந்திரம் வேண்டும். ஒருவரின் மதத்தைப்பற்றிக் கேட்கக்கூட எந்தவொரு அதிகாரிக்கும் உரிமை இல்லை; அது ஒருவருடைய மனசாட்சியோடு சம்பந்தப்பட்ட விஷயம், அதில் தலையிட யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.”

சமுதாய மக்களாட்சித் தொழிலாளர் கட்சியின் இந்த அதிகாரப்பூர்வ கொள்கைகள், நாட்டின் சில பகுதிகளில் பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்கு அறிவிக்க நல்மனமுள்ளவர்களுக்கு வாய்ப்பளித்தன. எனினும், ஆரம்பம் முதலே பொதுவாக இந்தப் புதிய அரசாங்கம் நாத்திகத்தைப் பின்பற்றியது, மதத்திடம் வெறுப்பைக் காட்டி, அதை “மக்களின் போதைப்பொருள்” என முத்திரை குத்தியது. இந்த அரசாங்கம் பொறுப்பேற்றதும் செய்த முதல் வேலைகளில் ஒன்று, சர்ச்சுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லாதபடி பிரிப்பதற்கு ஆணை பிறப்பித்ததாகும். மத அமைப்புகள் கல்வி புகட்டுவதை இது சட்டவிரோதமான செயலாக்கியது; சர்ச்சின் சொத்துகள் அரசுடமை ஆயின.

பைபிள் மாணாக்கர்கள் கடவுளுடைய ராஜ்யத்தை ஆதரித்தார்கள். இவர்கள் சிறுசிறு தொகுதிகளாய் ஆங்காங்கே சிதறியிருந்தார்கள். இவர்களை இந்தப் புதிய அரசாங்கம் எப்படிக் கருதியது? 1917-ல் நடந்த புரட்சிக்குப் பின் சிறிது காலம் கழித்து பைபிள் மாணாக்கர் ஒருவர் அங்கு நிலவிய சோகமான நிலைமையை விவரித்து சைபீரியாவிலிருந்து இவ்வாறு எழுதினார்: “ரஷ்யாவிலுள்ள நிலைமையை ஒருவேளை நீங்கள் அறிந்திருக்கலாம். பொதுவுடைமை கொள்கைகளைக் கடைப்பிடிக்கிற சோவியத் அரசாங்கத்தின் கீழ் நாங்கள் இருக்கிறோம். சமத்துவத்தை ஸ்தாபிக்க பெருமுயற்சி எடுக்கப்படுவது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தாலும், கடவுள் சம்பந்தப்பட்ட எதுவும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது.”

1923-க்குள் பைபிள் மாணாக்கர்களை எதிர்ப்பது மும்முரமடைந்தது. சகோதரர்கள் இவ்வாறு எழுதினார்கள்: “ரஷ்யாவில் என்ன நடக்கிறதென நீங்கள் தெரிந்துகொள்வதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறோம். . . . உணவு, உடை என அடிப்படை வசதிகள் கிடைக்கின்றன . . . ஆனால், எங்களுக்கு ஆன்மீக உணவு அதிகம் தேவைப்படுகிறது. எங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட புத்தகங்களை அரசாங்கம் பறிமுதல் செய்துவிட்டது. எனவே, ரஷ்ய மொழி பிரசுரங்கள் அனைத்திலும் இருந்து சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, கடிதங்களில் எழுதி எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம் . . . சத்திய வார்த்தைக்காக அநேகர் பசிதாகத்தோடு இருக்கிறார்கள். கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதை சமீபத்தில் ஐந்து பேர் முழுக்காட்டுதல்மூலம் வெளிக்காட்டினார்கள், பாப்டிஸ்ட் பிரிவைச் சேர்ந்த பதினைந்து பேரும்கூட நம்முடன் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.”

1923, டிசம்பர் 15 தேதியிட்ட காவற்கோபுரம் இவ்வாறு குறிப்பிட்டது: “பிரசுரங்களை ரஷ்யாவுக்கு அனுப்ப சங்கம் முயற்சி செய்து வருகிறது, ஆண்டவருடைய கிருபையால் அந்த முயற்சி இனியும் தொடரும்.” 1925-க்குள் காவற்கோபுர பத்திரிகை ரஷ்ய மொழியில் கிடைத்தது. ஊழியத்தில் அது ஏற்படுத்திய தாக்கத்தை உடனடியாகக் காண முடிந்தது. உதாரணத்திற்கு, எரிநரக கோட்பாடு, அன்புள்ள கடவுளோடு துளியும் பொருந்தாததைக் கண்டு எவான்ஜிலிக்கல் மதப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் குழம்பிப்போயிருந்தார். சகவிசுவாசிகளிடம் இதுபற்றி அவர் கேட்டபோது, இத்தகைய எண்ணங்கள் அவருடைய மனதில் எழாதிருக்க வேண்டுமென கடவுளிடம் அவர்கள் ஜெபம் செய்தார்கள். பின்னர், அவரும் அவருடைய மனைவியும் சில காவற்கோபுர பத்திரிகைகளைப் பெற்றுக்கொண்டபோது சத்தியத்தை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார்கள். இன்னும் அநேக பிரசுரங்களை அனுப்பும்படி அவர் கேட்டெழுதியபோது, “சமுத்திரத்தின் மறுபக்கத்தில் நாங்கள் மன்னாவுக்காகக் காத்திருக்கிறோம்” என அதில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய “மன்னா” தங்களுக்குக் கிடைப்பதை மற்ற சகோதரர்களும் தவறாமல் தெரிவித்தார்கள்; விசுவாசத்தைப் பலப்படுத்தும் இத்தகைய பிரசுரங்களைத் தயாரித்து அளிப்பதில் அமெரிக்காவிலுள்ள சகோதரர்கள் காட்டிய கிறிஸ்தவ அன்புக்கு நன்றி தெரிவித்தார்கள்.

“எல்லா பிரசுரங்களிலும் சிலவற்றை எனக்கு அனுப்பி வையுங்கள்”

1925 செப்டம்பர் மாத காவற்கோபுர இதழில், சைபீரியாவிலிருந்து வந்த நெஞ்சை நெகிழ வைக்கிற ஒரு கடிதம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில், 1909-ல் ரஷ்யாவின் தென் பகுதியைவிட்டு சைபீரியாவில் குடியேறியதாக விவசாயக் குடும்பத்தில் பிறந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மனதில் உற்சாகத்துள்ளலோடு பிரசுரங்களைப் படித்ததாக அவர் எழுதினார். “அதிக திறமையோடும் பலத்தோடும் இருளை எதிர்த்துப் போராடுவதற்காக, கடவுள் தரும் பரிசுத்த சத்தியத்தை இன்னும் அதிகமதிகமாய்த் தெரிந்துகொள்ள மனதார விரும்புகிறேன்” என்று எழுதியிருந்தார். “எல்லா பிரசுரங்களிலும் சிலவற்றை எனக்கு அனுப்பி வையுங்கள்” என்று இன்னுமதிக பிரசுரங்களுக்கான வேண்டுகோளோடு தன் கடிதத்தை முடித்திருந்தார்.

இந்தக் கடிதத்துக்கான பிரசுரிப்போரின் பதிலும் அதே பத்திரிகையில் வெளியாகியிருந்தது. “பிரசுரங்களை ரஷ்யாவிற்கு அனுப்ப நாங்கள் முயற்சி செய்தோம்; ஆனால், ரஷ்ய அரசாங்கத்தின் எதிர்ப்பால் எங்கள் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்திருக்கின்றன. இந்தக் கடிதமும், இது போன்று பிறர் எழுதிய கடிதங்களும், ‘நீர் . . . வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று’ மக்கெதோனியா தேசத்தான் கேட்டுக்கொண்டதைப் போல் இருக்கிறது. (அப். 16:9) ஆண்டவருக்குச் சித்தமானால், வாய்ப்பு கிடைத்த உடனேயே, உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட நாங்கள் வருவோம்.”

நற்செய்தியை “சாட்சியாகப்” பிரசங்கிக்க ரஷ்ய மொழியிலிருந்த இந்த காவற்கோபுர பத்திரிகையும் பிற பிரசுரங்களும் உண்மையிலேயே சக்திவாய்ந்த கருவிகளாய் இருந்திருக்கின்றன. (மத். 24:14) 2006-க்குள் ரஷ்ய மொழியில் யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட பிரசுரங்களின் எண்ணிக்கை 69,12,43,952-ஆக உயர்ந்திருந்தது; ஆங்கிலம், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ் தவிர வேறு எந்த மொழிகளிலும் இந்தளவு அதிக பிரசுரங்கள் வெளியாகவில்லை. ராஜ்யத்தை அறிவிப்பதில் தம்முடைய சாட்சிகள் எடுத்த முயற்சிகளை யெகோவா அபரிமிதமாய் ஆசீர்வதித்திருக்கிறார்.

உலகின் பிற பகுதிகளில் வசிக்கும் ரஷ்யர்களுக்குச் சாட்சிகொடுத்தல்

பொதுவுடைமை கொள்கையினர் ஆட்சியைக் கைப்பற்றி, கம்யூனிஸ அரசாங்கத்தை உருவாக்கியபோது ரஷ்யர்களில் அநேகர் பிற நாடுகளுக்குச் சென்று குடியேறினார்கள். சோவியத் யூனியனுக்கு வெளியேதான் காவற்கோபுர பத்திரிகையும் பிற பிரசுரங்களும் ரஷ்ய மொழியில் அச்சிடப்பட்டன. இதனால், பிற நாடுகளிலுள்ள ரஷ்யர்களுக்கு ஆன்மீக உணவு கிடைப்பதில் சோவியத் அரசாங்கம் குறுக்கிட முடியவில்லை. 1920-களின் இறுதியில், ரஷ்ய பிரசுரங்கள் உலகெங்குமுள்ள ரஷ்யர்களின் கைகளில் கிடைத்தன; அமெரிக்கா, ஆஸ்திரேலியா, உருகுவே, பராகுவே, பிரான்ஸ், பின்லாந்து, போலந்து, லாட்வியா போன்ற நாடுகளில் வசிக்கிற ரஷ்யர்களிடமிருந்து பாராட்டுக் கடிதங்கள் வந்தன.

கடைசியில், இந்த நாடுகள் சிலவற்றில், ரஷ்ய மொழியில் கிறிஸ்தவக் கூட்டங்களை நடத்தவும் பிரசங்க ஊழியம் செய்யவும் சகோதரர்கள் ஏற்பாடு செய்தார்கள். அமெரிக்காவில் ரஷ்ய மொழியில் பைபிள் சொற்பொழிவுகள் வானொலி நிலையங்களிலிருந்து தவறாமல் ஒலிபரப்பப்பட்டன. பென்சில்வேனியாவில் பிரௌன்ஸ்வில் நகரில் உள்ளதைப் போன்று ரஷ்ய மொழி சபைகள் உருவாக்கப்பட்டன; இந்த மொழியில் மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்டன. உதாரணத்திற்கு, 1925 மே மாதத்தில், பென்சில்வேனியாவிலுள்ள கார்னகீ நகரில் ரஷ்ய மொழியில் மூன்றுநாள் மாவட்ட மாநாட்டை சகோதரர்கள் ஏற்பாடு செய்து நடத்தினார்கள். இதில் 250 பேர் கலந்துகொண்டார்கள், 29 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.

சூழ்நிலை மாறுகிறது

லெனின் இறந்த பிறகு, எல்லா மதங்களையும் அரசாங்கம் மிகத் தீவிரமாய் தாக்க ஆரம்பித்தது. 1926-ல் கடவுள் நம்பிக்கையற்ற போராளிகளின் சங்கம் (League of the Militant Godless) என்ற அமைப்பு உருவானது; இதன் பெயரே இதன் இலட்சியத்தைத் தெளிவாய் விளக்கியது. ஜனங்களின் மனதிலும் இதயத்திலுமிருந்து கடவுள் நம்பிக்கையை வேறோடு பிடுங்கி எறியும் நோக்கத்தோடு நாத்திகக் கொள்கை சதா பரப்பப்பட்டு வந்தது. சீக்கிரத்திலேயே, பரந்து விரிந்த சோவியத் யூனியனின் மூலைமுடுக்கெல்லாம் நாத்திகக் கொள்கை பரவியது. பைபிள் மாணாக்கர் ஒருவர் ரஷ்யாவிலிருந்து உலக தலைமை அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்தார்: “இந்தக் கொள்கையை இளைஞர்கள் பின்பற்றுகிறார்கள்; உண்மையில் இது சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாய் இருக்கிறது.”

அன்டீரிலீஜியாஸ்னிக் என்ற பத்திரிகை உட்பட நாத்திக பிரசுரங்கள் பலவற்றை கடவுள் நம்பிக்கையற்ற போராளிகளின் சங்கம் வெளியிட்டது. 1928-ல், “வோரோனெஜ் ஆப்லாஸ்ட்டில் மதப்பிரிவுகள் நிறைந்திருக்கின்றன” என்று அந்தப் பத்திரிகை அறிவித்தது. a மற்ற மதப்பிரிவுகளைப்பற்றி எழுதியதோடு, “பரிசுத்த வேதாகமத்தின் மாணாக்கர்களாக” 48 பேர் இருப்பதைப் பற்றியும் அவர்களுடைய தலைவர்களாக “ஜின்சென்காவும் மிட்ராஃபான் பவினும் இருப்பதைப்” பற்றியும் குறிப்பிட்டிருந்தது. 1926, செப்டம்பர் மாத காவற்கோபுர பத்திரிகையில் ரஷ்யாவைச் சேர்ந்த மீக்கையில் ஜின்சென்கா எழுதிய கடிதம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதில் அவர், “ஆன்மீக உணவு கிடைக்காமல் ஜனங்கள் பசியால் வாடுகிறார்கள். . . . எங்கள் கைவசம் வெகு சில பிரசுரங்களே இருக்கின்றன. சகோதரர் ட்ரும்பீயும் மற்றவர்களும் ரஷ்ய மொழி பிரசுரங்களை மொழிபெயர்த்து, நகல் எடுக்கிறார்கள். இப்படித்தான் நாங்கள் ஆன்மீக உணவைச் சாப்பிடுகிறோம், ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுகிறோம். ரஷ்ய சகோதரர்கள் அனைவருடைய வாழ்த்துதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ரஷ்ய மொழி பிரசுரங்களை சகோதரர்கள் பெற்றுக்கொள்ள அதிகாரிகளின் அனுமதி கிடைக்குமென தான் எதிர்பார்ப்பதாக 1926, செப்டம்பர் மாதத்தில் சகோதரர் ட்ரும்பீ எழுதினார். ஜெர்மனியில் மாக்டபர்க்கிலுள்ள கிளை அலுவலகத்தின் வாயிலாக துண்டுப்பிரதிகளையும் சிறுபுத்தகங்களையும் புத்தகங்களையும் காவற்கோபுர பவுண்டு வால்யூம்களையும் அனுப்பி வைக்கும்படி புருக்லின் பெத்தேலிலுள்ள சகோதரர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். இந்த வேண்டுகோளுக்கு இணங்க ஜார்ஜ் யங் என்பவரை மாஸ்கோவுக்கு சகோதரர் ரதர்ஃபர்டு அனுப்பி வைத்தார். இவர் 1928, ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாஸ்கோ வந்தடைந்தார். “சுவாரஸ்யமான சில அனுபவங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால், எவ்வளவு நாட்கள் இங்கே தங்குவதற்கு என்னை அனுமதிப்பார்களெனத் தெரியவில்லை” என அவர் எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார். மாஸ்கோவிலுள்ள உயர் அதிகாரியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றபோதிலும் 1928, அக்டோபர் 4-ஆம் தேதிவரை மட்டுமே தங்குவதற்கு அனுமதி அளிக்கும் விசாதான் அவருக்குக் கிடைத்தது.

இதற்கிடையில், புதிதாக உருவான சோவியத் அரசு மதத்திடம் எத்தகைய மனப்பான்மையைக் காட்டுகிறதென்பது தெளிவாகத் தெரியாதிருந்தது. மதத் தொகுதிகளைச் சேர்ந்தோர் சோவியத் உழைப்பாளிகளுடன் சேர்ந்துகொள்வார்களென அரசு ஆவணங்கள் பல நம்பிக்கை தெரிவித்தன. இதற்குப் பின் வந்த ஆண்டுகளில் இந்த நம்பிக்கை கொள்கையாக மாறிவிட்டது. யெகோவாவின் ஜனங்களைக் கொல்லுவதற்கு சோவியத் அரசு விரும்பவில்லை என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்; அது, அவர்களுடைய மனதை மாற்றி தன் பக்கம் இழுப்பதற்குப் போராடியது. நாட்டுக்கு மட்டுமே தங்கள் பக்தியைக் காட்டும்படி கடவுளுடைய ஜனங்களை இணங்க வைக்க முயற்சி செய்தது. யெகோவாவுக்குத் தங்கள் உண்மைத்தன்மையைக் காட்டவே கூடாதென்பதில் அது குறியாய் இருந்தது.

சகோதரர் யங் திரும்பிச் சென்ற பிறகு, ரஷ்ய சகோதரர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து ஊக்கமாய்ப் பிரசங்கித்து வந்தார்கள். ரஷ்யாவில் பிரசங்க வேலையை ஒழுங்கமைக்க டான்யீல் ஸ்டாரூகீன் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த வேலை இன்னும் பெருமளவு செய்யப்படுவதற்கும், சகோதரர்களை ஊக்கப்படுத்துவதற்கும் மாஸ்கோ, குர்ஸ்க், வோரோனெஜ் ஆகிய நகரங்களுக்கும் ரஷ்யாவிலும் உக்ரைனிலும் உள்ள இன்னும் சில நகரங்களுக்கும் சகோதரர் ஸ்டாரூகீன் சென்றார். மற்ற சகோதரர்களுடன் சேர்ந்து, பாப்டிஸ்டுகளின் ஜெப வீடுகளில் பிரசங்கித்தார், இயேசு கிறிஸ்துவையும் கடவுளுடைய ராஜ்யத்தையும் பற்றிய சத்தியத்தைத் தெளிவாக விளக்கினார். 1929 ஜனவரி மாதம், சர்ச் கட்டடம் ஒன்றை வருடத்திற்கு 200 டாலர் வாடகைக்கு எடுத்து பகிரங்கமாய் பொதுக் கூட்டங்களை நடத்த ரஷ்ய சகோதரர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

அந்த வருடத்தின் பிற்பகுதியில், கொஞ்சம் பைபிள் பிரசுரங்களை சோவியத் யூனியனுக்கு அனுப்பி வைக்க, யூஎஸ்எஸ்ஆர்-ரின் வணிகம் சம்பந்தப்பட்ட அரசு இலாகாவிடம் புருக்லின் பெத்தேலிலுள்ள சகோதரர்கள் அனுமதி கேட்டார்கள். அந்தப் பிரசுரங்களில் கடவுளின் சுரமண்டலம், விடுதலை ஆகிய ஆங்கில புத்தகங்கள் ஒவ்வொன்றும் 800 பிரதிகளும் 2,400 சிறுபுத்தகங்களும் இருந்தன. “பிரசுரிக்கப்படுபவற்றை மேற்பார்வையிடும் அரசு இலாகா தடை விதித்திருப்பதால் இவை திருப்பி அனுப்பப்படுகின்றன” என்ற முத்திரையுடன் இரண்டு மாதங்களுக்குள் அந்தப் பிரசுரங்கள் திரும்பி வந்தன. எனினும், சகோதரர்கள் நம்பிக்கை இழந்துவிடவில்லை. பழங்கால ரஷ்ய எழுத்துக்களில் பிரசுரங்கள் அச்சிடப்பட்டிருந்ததால் அவை திருப்பி அனுப்பப்பட்டதாக சிலர் கருதினார்கள். அதுமுதற்கொண்டு, ரஷ்ய மொழி பிரசுரங்கள் எல்லாம் திருத்தமாக மொழிபெயர்க்கப்பட்டு, நவீன மொழி மாற்றங்களுக்கு இசைய அச்சிடப்படுவதை சகோதரர்கள் உறுதிசெய்துகொண்டார்கள்.

தரமான மொழிபெயர்ப்புக்கான அவசியம்

1929 முதற்கொண்டு, காவற்கோபுர பத்திரிகையின் பல இதழ்களில், ஆங்கிலத்திலும் ரஷ்ய மொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என்ற அறிவிப்புகள் இடம்பெற்றன. உதாரணத்திற்கு, 1930 மார்ச் மாத ரஷ்ய மொழி காவற்கோபுர பத்திரிகையில் பின்வரும் அறிவிப்பு காணப்பட்டது: “ஆங்கிலத்திலிருந்து ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்க்க ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெற்ற தகுதியான ஒரு சகோதரர் தேவை; இவர் ஆங்கில மொழி தெரிந்தவராகவும், ரஷ்ய மொழியைச் சரளமாய் அறிந்தவராகவும் இருக்க வேண்டும்.”

இத்தகைய தேவை இருப்பதை யெகோவா அறிந்தார்; பல்வேறு நாடுகளில் அத்தகைய மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பது தெரிய வந்தது. அவர்களில் ஒருவர்தான் அலெக்சாண்டர் ஃபோர்ஸ்ட்மன். இவர் 1931-ல் கோபன்ஹாகனிலுள்ள டென்மார்க் கிளை அலுவலகத்தின் வாயிலாக உலக தலைமை அலுவலகத்திற்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரைகளை ஏற்கெனவே அனுப்பி வந்தார். ஆர்வமிக்க இந்த மொழிபெயர்ப்பாளர் லாட்வியாவில் வசித்து வந்தார். உயர் கல்வி கற்ற இவர், ஆங்கிலத்தையும் ரஷ்ய மொழியையும் நன்கு அறிந்திருந்தார். அதனால், பைபிள் பிரசுரங்களை அவரால் வெகு வேகமாய் மொழிபெயர்க்க முடிந்தது. சத்தியத்தில் இல்லாத தன் மனைவியையும் பிள்ளையையும் பராமரிப்பதற்காக இவர் முழுநேர வேலை பார்த்து வந்ததால், ஆரம்பத்தில், மொழிபெயர்ப்பதற்காக ஒவ்வொரு வாரமும் சில மணிநேரங்களை மட்டுமே செலவிட்டார். 1932 டிசம்பர் மாதத்தில், முழுநேரமும் மொழிபெயர்ப்பாளராக சேவை செய்ய ஆரம்பித்தார். இந்தப் பணியில் துண்டுப்பிரதிகளையும் சிறுபுத்தகங்களையும் புத்தகங்களையும் மொழிபெயர்த்தார். 1942-ல் இறந்துபோனார்.

ரஷ்யாவில் பிரசங்க வேலை செய்வதற்குச் சீக்கிரத்திலேயே சட்டப்படி அனுமதி கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்படும் பிரசுரங்கள் எல்லாம் உயர்தரம் வாய்ந்தவையாய் இருக்கும்படி சகோதரர்கள் கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டார்கள். வட ஐரோப்பிய அலுவலகத்தின் கண்காணியான வில்லியம் டே, சகோதரர் ரதர்ஃபர்டுக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்: “ரஷ்யாவில் பிரசங்க ஊழியத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை நிச்சயமாக சீக்கிரத்தில் நீக்கப்படும் என்று நினைக்கிறேன். ஆகவே, 18 கோடி மக்களுக்குக் கொடுக்கும் விதத்தில் நம்முடைய பிரசுரங்களை சிறந்த விதத்தில் மொழிபெயர்ப்பது உதவியாய் இருக்கும்.”

வானொலி ஒலிபரப்புகள்

பிரமாண்டமான ரஷ்யப் பிராந்தியத்தில் நற்செய்தியைப் பரப்புவதற்கான மற்றொரு வழியாக வானொலி பயன்படுத்தப்பட்டது. “ரஷ்ய மொழி சொற்பொழிவுகள் வானொலியில் ஒலிபரப்பப்படும்” என்ற அறிவிப்பு 1929 பிப்ரவரி மாத காவற்கோபுர பத்திரிகையில் காணப்பட்டது. மாதந்தோறும் இரண்டாவது, நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் எஸ்டோனியாவிலிருந்து சோவியத் யூனியன் எங்கும் சொற்பொழிவுகள் ஒலிபரப்பப்பட்டன.

எஸ்டோனிய கிளை அலுவலகக் கண்காணியான சகோதரர் வேலஸ் பாக்ஸ்டர் பின்னர் இதைச் சொன்னார்: “நீண்ட விவாதத்திற்குப் பிறகு ஒரு வருடம் ஒலிபரப்புவதற்கான ஒப்பந்தம் 1929-ல் கையெழுத்தானது. ரஷ்ய மொழியில் ஒலிபரப்பு ஆரம்பமான உடனேயே லெனின்கிராட்டில் உள்ளவர்கள் நிகழ்ச்சிகளைக் கேட்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தது. இந்த விஷயத்தில், எஸ்டோனியாவிலுள்ள மதகுருக்களைப் போலவே சோவியத் அரசும் நடந்துகொண்டது. ராஜ்ய செய்திக்குச் செவிசாய்க்க வேண்டாமென இந்த இரு சாராருமே மக்களை எச்சரித்தார்கள்.” 1931-ல், ரஷ்ய மொழி சொற்பொழிவுகள் நேயர்களுக்கு வசதியான நேரத்தில், மத்திய அலைவரிசையில் மாலை 5:30 முதல் 6:30 வரை ஒலிபரப்பப்பட்டன. இப்படி மூன்றரை ஆண்டுகள் ஒலிபரப்பப்பட்ட பிறகு, 1934 ஜூன் மாதம் இது தடைசெய்யப்பட்டது. எஸ்டோனிய கிளை அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில் இது தடைசெய்யப்பட்டதற்கான காரணத்தை சகோதரர்கள் பின்வருமாறு விளக்கியிருந்தார்கள்: “நம்முடைய வானொலி சொற்பொழிவுகள் [எஸ்டோனிய] அரசாங்கத்தை ஆதரிக்காமல் கம்யூனிஸத்தையும் ஆட்சி வேண்டாக் கொள்கையையும் பரப்புகின்றன என்று மதகுருமார் தெரிவித்தார்கள்.”

மாற்றம் நிகழ்கிறது

1935-ல் சோவியத் யூனியனில் கிளை அலுவலகத்தைத் திறக்கும் எண்ணத்தில் புருக்லின் பெத்தேலிலுள்ள சகோதரர்கள் ஆன்டோன் கார்பர் என்பவரை அனுப்பி வைத்தார்கள். ஜெர்மனியிலிருந்து யூஎஸ்எஸ்ஆருக்கு அச்சு இயந்திரம் ஒன்றை அனுப்ப அவர்கள் விரும்பினார்கள்; இது, ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த சமயம். அச்சு இயந்திரத்தை அனுப்புகிற திட்டம் வெற்றி பெறாவிட்டாலும் ரஷ்யாவிலுள்ள அநேக சகோதரர்களை சகோதரர் கார்பர் சந்தித்தார்.

சில வருடங்களுக்கு ரஷ்யாவில் ராஜ்ய பிரசங்க வேலை சீராக முன்னேறி வந்தது. லாட்விய கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில் ரஷ்ய மொழியில் பைபிள் பிரசுரங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. எனினும், வெளிநாடுகளில் அச்சிடப்பட்ட பிரசுரங்களை நாட்டிற்குள் எடுத்துவருவது கடினமாக இருந்தது. எனவே, பிரசுரங்கள் சரக்கு கிடங்குகளில் பெருமளவு தேங்கிக் கிடந்தன.

1939-ல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாவதற்கு முன்புவரை, யெகோவாவின் சாட்சிகள் இங்கு வெகு சிலரே இருந்தார்கள். எனவே, சோவியத் அரசு அவர்களைப் பொருட்படுத்தவோ கண்டுகொள்ளவோ இல்லை. இந்த நிலைமை சீக்கிரத்தில் மாறவிருந்தது. 1939-ல் போலந்தின் மீது நாசி ஜெர்மனி படையெடுத்ததற்குப் பிறகு ஒரு வருடத்திற்குள்ளாகவே தன் ஆட்சிக்குட்பட்ட குடியரசுகளில் கடைசியான நான்கு குடியரசுகளை சோவியத் யூனியன் தன்னுடன் இணைத்துக்கொண்டது. அவை, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, மால்டோவா ஆகியவையே. இதனால், ஆயிரக்கணக்கான சாட்சிகள் திடீரென சோவியத் யூனியனின் அதிகாரத்தின்கீழ் வந்தார்கள்; தன் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள இந்த சோவியத் யூனியன் சீக்கிரத்திலேயே மூர்க்கத்தனமான போரில் இறங்கவிருந்தது. அது, லட்சக்கணக்கானோருக்கு துன்பமும் துயரமும் நிறைந்த காலமாய் இருந்தது. யெகோவாவின் சாட்சிகளுக்கோ கடும் ஒடுக்குதலின் கீழ் கடவுளுக்குத் தங்கள் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்கான காலமாய் இருந்தது.

உறுதியாய் நிற்கத் தயார்

1941 ஜூன் மாதத்தில், சோவியத் யூனியன்மீது ஜெர்மனி பயங்கரத் தாக்குதலை நடத்தியது; இதை சோவியத் அதிபரான ஜோசஃப் ஸ்டாலின் துளியும் எதிர்பார்க்கவில்லை. அந்த வருட முடிவில், ஜெர்மானிய படைகள் மாஸ்கோவின் புறநகர் எல்லைப் பகுதிகளுக்குள் நுழைந்தன; சோவியத் யூனியனின் வீழ்ச்சி உறுதி என்பது தெளிவாய்த் தெரிந்தது.

என்ன செய்வது, ஏது செய்வதென தெரியாத நிலையில், நாட்டு மக்களை ஸ்டாலின் கூட்டி, மாபெரும் தேசாபிமான போரில் இறங்குவதற்குக் குரல்கொடுத்தார். லட்சக்கணக்கானோர் மதப்பற்றுள்ளவர்களாய் இருந்தார்கள். எனவே, போரில் அவர்களுடைய ஆதரவைப் பெற, சர்ச்சுக்கு சில சலுகைகளை அளிக்க வேண்டும் என்பதை ஸ்டாலின் புரிந்துகொண்டார். ஆகையால், 1943 செப்டம்பர் மாதம், ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் உயர் பதவி வகித்த மூன்று முக்கிய பிரமுகர்களை க்ரிம்லின் கோட்டைக்கு வரும்படி இவர் பகிரங்க அழைப்புவிடுத்தார். இது, சர்ச்சுக்கும் அரசுக்கும் இடையே இருந்த நட்புறவை ஓரளவு மேம்படுத்தியது; இதனால், பொதுமக்களுக்கென நூற்றுக்கணக்கான சர்ச்சுகள் திறக்கப்பட்டன.

ஜெர்மனியிலிருந்த யெகோவாவின் சாட்சிகளைப் போலவே ரஷ்யாவிலிருந்த சகோதரர்களும் இந்தப் போர் காலத்தில் முழுக்க முழுக்க நடுநிலை வகித்தார்கள். இதன் விளைவைச் சந்திக்க அவர்கள் தயாராகவும் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் உறுதியாகவும் இருந்தார்கள். (மத். 22:37-39) நடுநிலை வகித்ததால், 1940 முதல் 1945 வரை, உக்ரைன், மால்டோவா, பால்டிக் குடியரசுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான சாட்சிகள் ரஷ்யாவின் மையப் பகுதியிலுள்ள கடின உழைப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.

வாசீலி சவ்சூக் இவ்வாறு சொல்கிறார்: “1941-ல், 14 வயதில் உக்ரைனில் முழுக்காட்டுதல் பெற்றேன். போர் நடந்து வந்த சமயத்தில், ஊக்கமாய் ஊழியத்தைச் செய்து வந்த சகோதரர்களில் கிட்டத்தட்ட எல்லாருமே ரஷ்யாவின் மையத்திலிருந்த சிறைகளுக்கும் முகாம்களுக்கும் அனுப்பப்பட்டார்கள். ஆனால், யெகோவாவின் வேலை தடைபடவில்லை. உண்மையுள்ள சகோதரிகளும்சரி என்னைப் போன்ற இளைஞரும்சரி, சபை காரியங்களிலும் ஊழியத்திலும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டோம். எங்கள் கிராமத்தில் உடல் நலம் குறைவுபட்டிருந்த சகோதரர் ஒருவர் கைதுசெய்யப்படாதிருந்தார். அவர் என்னிடம், ‘வாசீலி, எங்களுக்கு உன்னுடைய உதவி தேவை. முக்கியமான வேலை ஒன்றை செய்ய வேண்டியிருக்கிறது; ஆனால், போதுமான சகோதரர்கள் இல்லை’ என்று சொன்னார். முடியாத நிலையிலிருந்த இந்தச் சகோதரர் யெகோவாவுடைய வேலையிடம் காட்டிய அக்கறையைப் பார்த்தபோது என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எது வேண்டுமானாலும் செய்யத் தயாரென சந்தோஷமாய் சொன்னேன். வீட்டின் அடித்தளங்களில், ஓரளவு வேலைசெய்கிற அச்சு இயந்திரங்களை வைத்திருந்தோம்; இங்கிருந்துதான் மதிப்புமிக்க ஆன்மீக உணவை நகலெடுத்து, சகோதரர்களுக்கு வினியோகித்தோம்; முக்கியமாய் சிறைப்பட்டவர்களுக்கு வினியோகித்தோம்.”

இப்படி சகோதரிகளும் இளம் வயதினரும் தன்னலமின்றி, அன்போடு சேவை செய்தபோதிலும் போதுமானளவு ஆன்மீக உணவை தயாரித்து அளிக்க முடியவில்லை. ரஷ்யாவிலிருந்து குடிமாறும் போலந்து நாட்டு சகோதரர்கள் இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்; இவர்கள், போலந்திலுள்ள கிளை அலுவலகத்திற்கு வெளி ஊழிய அறிக்கைகளை எடுத்து சென்று கொடுக்கும் வேலை செய்தார்கள். உக்ரைனையும் ரஷ்யாவையும் சேர்ந்த சகோதரர்கள், ரஷ்யாவுக்குச் சென்றபோது ஆன்மீக உணவு, மெழுகால் செய்யப்பட்ட ஸ்டென்சில் தாள்கள், அச்சிடுவதற்கு மை ஆகியவற்றையும் தேவைப்பட்ட பிற உபகரணங்களையும் எடுத்துச் சென்றார்கள்.

“ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள்”

1946-ல், சோவியத் ஆட்சிக்குட்பட்ட உக்ரைனுக்குக் குடிமாறிச் செல்லும்படி போலந்தில் வசிக்கும் சகோதரர்கள் சிலர் வற்புறுத்தப்பட்டார்கள். அதைப்பற்றி ஈவான் பாஷ்காவ்ஸ்கீ இவ்வாறு சொல்கிறார்: “இந்தச் சூழ்நிலையில் தாங்கள் என்ன செய்ய வேண்டுமென கேட்டு லோட்ஜ் கிளை அலுவலகத்திற்குச் சகோதரர்கள் கடிதம் எழுதினார்கள். அதற்குக் கிடைத்த பதிலில் நியாயாதிபதிகள் 7:7 குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வசனம், ‘ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள்’ என்று சொல்கிறது. பிரசங்கிப்பதற்குக் கடினமான அந்தப் பிராந்தியங்களில் பிரசங்க வேலை நடைபெறுவதற்கு தம்முடைய ஞானத்தால் யெகோவா எவ்வளவு அருமையாய் வழிநடத்தினார் என்பதை அநேக ஆண்டுகளுக்குப் பிறகு நான் புரிந்துகொண்டேன். எங்களைப் பொறுத்தவரை யெகோவா எங்கே அனுப்புகிறாரோ அதுவே எங்கள் ‘இடமாய்’ ஆனது. அதிகாரிகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது முக்கியம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். எனவே, கடவுள் நம்பிக்கை இல்லாத நாட்டில் குடியேறுவதற்கு எங்களைத் தயார்படுத்திக்கொள்ள ஆரம்பித்தோம்.

“முதலாவதாக, நாங்கள் எல்லாரும் ஒரு சகோதரர் வீட்டில் ஒன்றுகூடினோம், அங்கே அழைத்து வரப்பட்டிருந்த 18 பேரிடம் பைபிள் சத்தியங்களையும் நியமங்களையும் கலந்தாலோசித்து முழுக்காட்டுதல் பெற தயாராவதற்கு உதவினோம். ரஷ்ய, உக்ரைனிய மொழிகளில் பிரசுரங்களைச் சேகரித்துக்கொண்டோம்; ஒருவேளை சோதனையிடப்பட்டாலும் கையில் கிடைக்காதவாறு அவற்றைக் கட்டியெடுத்துச் செல்ல முயற்சி செய்தோம். விடியக்காலையில் போலந்து நாட்டு படை வீரர்கள் எங்கள் கிராமத்தைச் சட்டென சூழ்ந்துகொண்டார்கள்; சாலைக்குச் செல்லத் தயாராகும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஒரு மாதத்திற்குத் தேவையான உணவையும், தேவையான வீட்டுச் சாமான்களையும் எடுத்துச் செல்ல அனுமதித்தார்கள். ரயில் நிலையம்வரை அவர்கள் எங்களுடன் வந்தார்கள். இவ்வாறு, சோவியத் உக்ரைன் எங்கள் ‘இடமானது.’

“இறங்க வேண்டிய இடத்தை அடைந்த உடனேயே ஜனங்களும் அங்கிருந்த அதிகாரிகளும் எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள். உடனடியாக சாட்சிகொடுக்க ஆசைப்பட்டதால் நாங்கள் யெகோவாவின் சாட்சிகளென அவர்களிடம் தைரியமாய் சொன்னோம். மறுநாள், எதிர்பாராத விதமாக, உள்ளூர் விவசாய குழுமத்தின் செயலர் எங்களைச் சந்திக்க வந்தார். அவருடைய அப்பா அமெரிக்காவில் குடியேறியிருப்பதையும் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களைத் தனக்கு அனுப்பி வைப்பதையும் பற்றி அவர் சொன்னார். அதைக் கேட்டு நாங்கள் எவ்வளவாய் மகிழ்ந்தோம்! முக்கியமாய், அவர் எங்களுக்குப் பிரசுரங்களைக் கொடுத்தபோது அளவிலா ஆனந்தம் அடைந்தோம். அவரே தன்னுடைய குடும்பத்தாரோடு வந்து நமது கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார், யெகோவாவுக்கு ‘விருப்பமானவர்கள்’ அநேகர் இந்த நாட்டில் இருப்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். (ஆகா. 2:7) சீக்கிரத்திலேயே அந்தக் குடும்பத்தார் எல்லாரும் யெகோவாவின் சாட்சிகள் ஆனார்கள், அநேக ஆண்டுகளாக உண்மையாய் சேவை செய்தார்கள்.”

செய்வதற்கு இன்னும் அதிக வேலை இருக்கிறது

இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்குப் பிறகும் ரஷ்யாவில் ஊழியம் மிகக் கடினமான சூழ்நிலைகளின் கீழ் செய்யப்பட்டு வந்தது. போலந்து கிளை அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலகத்திற்கு 1947, ஏப்ரல் 10 என தேதியிடப்பட்ட ஒரு கடிதம் இவ்வாறு தெரிவித்தது: “யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து காவற்கோபுர பத்திரிகையையோ ஒரு துண்டுப்பிரதியையோ பெற்றுக்கொள்பவர்கள் நாடு கடத்தப்படுவதுடன், கடின உழைப்பு முகாமில் பத்து வருட தண்டனையையும் அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று மதத் தலைவர்கள் தங்கள் அங்கத்தினர்களைப் பயமுறுத்தினார்கள். எனவே, குடிமக்கள் அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள், இவர்கள் ஆன்மீக வெளிச்சத்துக்காக ஏங்குகிறார்கள்.”

இயர்புக் 1947 இவ்வாறு சொன்னது: “அச்சிடப்பட்ட பிரசுரங்களோ அழகான வடிவில் அச்சிடப்பட்ட காவற்கோபுர பத்திரிகையோ சாட்சிகளின் கைவசம் இல்லை. . . . பல சமயங்களில், கஷ்டப்பட்டு கைப்பட எழுதி நகல் எடுக்கப்பட்டே இன்னமும் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது . . . இதை எடுத்துச் செல்பவர்கள் சில சமயங்களில் கைதுசெய்யப்படுகிறார்கள், அவர்களிடம் காவற்கோபுர பத்திரிகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சிறையில் தள்ளப்படுகிறார்கள்.”

ரெஜினா கிர்வாகூல்ஸ்காயா இவ்வாறு சொல்கிறார்: “நாட்டை முள் கம்பி போட்டு மொத்தமாய் வேலியடைத்திருப்பதைப் போலவும் சிறைப்படாவிட்டாலும் கைதிகளாய் இருப்பதைப் போலவும் எங்களுக்குத் தோன்றியது. ஊக்கமாய் கடவுளுக்குச் சேவை செய்து வந்த எங்களுடைய கணவர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறைச்சாலைகளிலும் கடின உழைப்பு முகாம்களிலும் கழித்தார்கள். பெண்களாகிய நாங்கள் சகித்த கொடுமைகள் எத்தனை எத்தனையோ. நாங்கள் எல்லாரும் இரவு நேர தூக்கத்தைத் தொலைத்திருந்தோம்; கேஜிபி எனப்படும் சோவியத் அரசின் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் எங்களை சதா கண்காணித்து வந்தார்கள், மன ரீதியான அழுத்தத்தையும் கொடுத்து வந்தார்கள்; வேலையை இழந்திருந்தோம்; இன்னும் அநேக சோதனைகளைச் சகித்தோம். சத்தியப் பாதையிலிருந்து எங்களை விலக்க பல வழிகளில் அதிகாரிகள் முயற்சி செய்தார்கள். (ஏசா. 30:21) இந்தச் சூழ்நிலையை சாத்தான் சாதமாக்கிக்கொண்டு பிரசங்க வேலையை நிறுத்த முயற்சி செய்கிறான் என்பதில் எங்களுக்குச் சந்தேகமே இருக்கவில்லை. எனினும், யெகோவா தம்முடைய மக்களைக் கைவிடவில்லை; அவர் உதவிக்கரம் நீட்டுவது பளிச்செனத் தெரிந்தது.

“பெரும் கஷ்டத்தின் மத்தியில் யாருக்கும் தெரியாமல் பைபிள் பிரசுரங்கள் நாட்டுக்குள் எடுத்துவரப்பட்டன; இந்தப் பிரசுரங்கள், ‘இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியையும்,’ சூழ்நிலையைச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தையும் எங்களுக்குத் தந்தன. (2 கொ. 4:7, NW) தம்முடைய ஜனங்களை யெகோவா வழிநடத்தினார்; அரசு பயங்கரமாக எதிர்த்துவந்தபோதிலும் புதியவர்கள் அவருடைய அமைப்பிற்குள் வந்த வண்ணம் இருந்தார்கள். ஆரம்பத்திலிருந்தே யெகோவாவின் ஜனங்களோடு சேர்ந்து கஷ்டங்களைச் சகிக்க அவர்கள் தயாராய் இருந்தது வியப்பை அளித்தது. யெகோவாவின் ஆவியால் மட்டுமே இதையெல்லாம் சாதிக்க முடிந்தது.”

வேலிக்கு அப்பால் கடிதங்களை வீசுவது

இந்த ரெஜினாவைப் பின்னர் மணந்துகொண்டவர்தான் பையோட்டர்; இவர், கிறிஸ்தவ நடுநிலையை விட்டுக்கொடுக்காததால், 1944-ல் கோர்கீ ஆப்லாஸ்ட்டில் இருந்த ஒரு முகாமில் சிறைப்படுத்தப்பட்டார். இது பிரசங்கிப்பதற்கான அவருடைய ஆர்வத்தை எந்த விதத்திலும் தணித்துவிடவில்லை. பைபிள் போதனைகளைச் சுருக்கமாய் விளக்குகிற கடிதங்களை பையோட்டர் எழுதினார். ஒவ்வொரு கடிதத்தையும் ஒரு கவரில் போட்டார், அதை ஒரு கல்லோடு சேர்த்து கயிற்றில் கட்டினார், உயரமான முள் கம்பி வேலிக்கு அப்பால் அதைத் தூக்கி வீசினார். அந்தக் கடிதத்தை யாராவது வாசிப்பார்கள் என பையோட்டர் நம்பினார். ஒருநாள் லீடியா பூலாடாவா என்ற சிறுமியின் கையில் அந்தக் கடிதங்களில் ஒன்று கிடைத்தது, அதை அவள் வாசித்தாள். அதைப் பார்த்த பையோட்டர் அருகில் வரும்படி மெதுவாக அழைத்தார். பைபிளைப்பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள அவளுக்கு விருப்பமாவென கேட்டார். லீடியாவுக்கு அப்படிப் படிக்க விருப்பமிருந்தது, மீண்டும் சந்திக்க அவர்கள் ஏற்பாடு செய்துகொண்டார்கள். அதன் பிறகு, இந்த அருமையான கடிதங்களை எடுத்துச் செல்ல அவள் தவறாமல் வந்தாள்.

லீடியா, ஊக்கமாய் நற்செய்தியைப் பிரசங்கிக்கிற சகோதரியாக ஆனாள்; சீக்கிரத்திலேயே அவள் மாரீயா ஸ்மிர்னோவா, ஓல்கா சவ்ரியூஜினா என்ற பெண்களுக்கு பைபிள் படிப்புகளை நடத்த ஆரம்பித்தாள். அவர்களும் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்கள். ஆன்மீக ரீதியில் இந்தச் சகோதரிகளுக்கு உதவ, அந்த முகாமிலிருந்தே சகோதரர்கள் ஆன்மீக உணவை அளிக்க ஆரம்பித்தார்கள். இதற்காக, பிரசுரங்களை உள்ளே திணிப்பதற்கு வசதியாக இரட்டை அடிப்புறத்தை உடைய சிறிய பெட்டி ஒன்றை பையோட்டர் வடிவமைத்தார். யெகோவாவின் சாட்சிகளாகவும், கைதிகளாகவும் இல்லாதிருந்த ஆட்களை இந்தப் பெட்டியை சிறைக்குள் கொண்டு வருவதற்கும் சிறையிலிருந்து எடுத்துச் செல்வதற்கு அவர் ஏற்பாடு செய்தார். அவர்கள் அந்தப் பெட்டியை இந்தச் சகோதரிகள் ஒருவருடைய விலாசத்திற்கு எடுத்துச் சென்று கொடுத்தார்கள்.

சீக்கிரத்திலேயே தங்கள் பகுதியில் பிரசங்க வேலையை இந்தச் சகோதரிகள் ஒழுங்கமைத்தார்கள். இதை போலீஸார் கவனிக்க ஆரம்பித்தார்கள்; இவர்களை வேவுபார்க்க ஒரு பெண்ணை அவர்கள் அனுப்பினார்கள்; இப்படி வேவுபார்ப்பது அந்தக் காலத்தில் சகஜம். அந்தப் பெண் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தாள்; இவள் சத்தியத்திடம் ஆர்வம் காட்டுவதுபோல் நடித்தாள்; சகோதரிகளின் நம்பிக்கையை சம்பாதித்தாள். தாங்கள் வேவு பார்க்கப்படுவதைப்பற்றி இந்தச் சகோதரிகளுக்கு எதுவும் தெரியாதிருந்ததால், ஆன்மீக சகோதரியென தாங்கள் கருதியவளிடம் சந்தோஷமாய் பைபிள் சத்தியத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்; பின்னர், தங்களுக்குப் பிரசுரங்கள் கிடைக்கிற விதத்தையும் அவளுக்குத் தெரிவித்தார்கள். அடுத்த முறை அந்தப் பெட்டி முகாமைவிட்டு வெளியே எடுத்து வரப்பட்டபோது, பையோட்டர் பிடிபட்டார்; கூடுதலாக இன்னும் 25 ஆண்டுகள் சிறைதண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. அந்த மூன்று சகோதரிகளுக்கும்கூட தலா 25 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

“தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்”

போர் காலத்தின்போதும் அதற்குப் பிறகும், யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையை சோவியத் அரசு தீவிரமாக எதிர்த்து வந்தது. அந்த வருடம் வசந்த காலம் முடிவதற்குள் யெகோவாவின் சாட்சிகளை முற்றிலுமாய் துடைத்தழிக்கப் போவதாய், சோவியத் யூனியனின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் அறிவித்ததாக போலந்தைச் சேர்ந்த சகோதரர்கள் 1947 மார்ச் மாதம் தகவல் தெரிவித்தார்கள். “இந்தக் கடிதத்தை நாங்கள் எழுதும் சமயத்தில், ஒரே நாளில் 100 சகோதர சகோதரிகள் கைதுசெய்யப்பட்ட செய்தி எங்களுக்குக் கிடைத்தது” என்று தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். முகாம்களிலுள்ள சகோதரர்களைப்பற்றி எழுதப்பட்ட மற்றொரு கடிதத்தில், “யெகோவாவுக்கு அவர்கள் காட்டும் உத்தமத்தன்மையைப் பார்த்து வியந்துபோகிறோம். அநேகர் ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்டார்கள், சித்திரவதை முகாம்களில் உள்ளவர்களைப் போலவே இந்தச் சகோதரர்களும் யெகோவா தங்களை விடுவிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரசங்கித்ததற்காகவும் ஓட்டுப்போட மறுத்ததற்காகவும்கூட சாட்சிகள் கைதுசெய்யப்பட்டார்கள். “நம்முடைய சகோதரர்கள் படும்பாட்டை ரஷ்யாவில் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் அறியாதிருக்கிறார்கள் என்றும், சகோதரர்களைக் கொல்ல வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என்றும் எங்களுக்குத் தோன்றுகிறது. இது சம்பந்தமான தெளிவான தகவல் [அதிகாரிகளுக்கு] தெரியாது. எனவே, அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்” என 1947-ல் பொறுப்பான சகோதரர்கள் எழுதினார்கள்.

சட்டப்படி பதிவுசெய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள்

சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளை சட்டப்படி பதிவு செய்வதற்கு, அனுபவமிக்க வழக்கறிஞர் ஒருவரோடு சேர்ந்து ரஷ்ய சகோதரர்கள் இருவர் தேவையான ஆவணங்களைச் சீக்கிரத்தில் தயாரிக்க வேண்டுமென போலந்து கிளை அலுவலகம் ஆலோசனை தெரிவித்தது. “ரஷ்யா உட்பட ராஜ்யத்தின் நற்செய்தி எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கப்பட வேண்டும். (மாற். 13:10)” என்று ரஷ்யாவிலுள்ள சகோதரர்களுக்கு போலந்திலிருந்து வந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. “பொறுமையாய் இருங்கள். உங்கள் துயரக் கண்ணீரை யெகோவா ஆனந்தக் கண்ணீராய் மாற்றுவார். (சங். 126:2-6)” என்ற வார்த்தைகளோடு அந்தக் கடிதம் நிறைவடைந்தது.

1949 ஆகஸ்ட் மாதத்தில், மைகாலா பையாடாகா, மைகாய்லா சுமாக், ஈலீயா பாபீசுக் ஆகியோர் சட்டப்பூர்வமாய் பதிவுசெய்வதற்கு விண்ணப்பித்தார்கள். சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால் மட்டுமே யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கப்படும் என்று அரசு கூறியது. சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கிற யெகோவாவின் சாட்சிகள் அனைவருடைய பெயரையும் சகோதரர்கள் எழுதிக்கொடுக்க வேண்டுமென்பது அதன் நிபந்தனைகளில் ஒன்று. இதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து ஊழியம் செய்யப்பட்டது, பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது; அதே சமயத்தில், சகோதரர்களில் அநேகர் சிறையில் தள்ளப்படுவதும் தொடர்ந்தது.

“உங்கள் யெகோவா இங்கிருந்து உன்னை விடுவிக்க மாட்டார்”

1945-ன் கோடைகாலத்தில் நடந்த சம்பவத்தை பையோட்டர் கிர்வாகூல்ஸ்காயா நினைவில் வைத்திருக்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “விசாரணைக்குப் பிறகு, சகோதரர்கள் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். நான் இருந்த முகாமிலிருந்த கைதிகளில் பலர் சத்தியத்தைத் தெரிந்துகொள்ள உண்மையிலேயே விரும்பினார்கள். அவர்களில் ஒருவர் மதகுரு; நான் பிரசங்கித்த விஷயங்களைக் கேட்ட பிறகு, இதுதான் சத்தியம் என்று உடனடியாக அடையாளம் கண்டுகொண்டு, யெகோவாவின் பக்கம் அவர் உறுதியான நிலைநிற்கை எடுத்தார்.

“எனினும், சூழ்நிலைகள் மிகக் கொடூரமாய் இருந்தன. ஒருசமயம், நிற்கக்கூட போதுமான இடமில்லாத சின்னஞ்சிறு சிறை அறையில் நான் அடைக்கப்பட்டேன். மூட்டைப்பூச்சி வீடு என அது அழைக்கப்பட்டது. ஏனெனில், அந்த அறை முழுவதும் எக்கச்சக்கமான மூட்டைப்பூச்சிகள் இருந்தன; சொல்லப்போனால், மனித உடலிலுள்ள மொத்த இரத்தத்தையும் உறிஞ்சும் அளவுக்கு அத்தனை மூட்டைப்பூச்சிகள் இருந்தன. அந்த அறையின் முன் நின்றுகொண்டு ஒரு போலீஸ் அதிகாரி என்னிடம், ‘உங்கள் யெகோவா இங்கிருந்து உன்னை விடுவிக்க மாட்டார்’ என்று சொன்னார். தினசரி எனக்கு 300 கிராம் ரொட்டியும் ஒரு கிளாஸ் தண்ணீரும் கொடுக்கப்பட்டன. காற்றோட்டத்திற்கு வழியே இல்லை; எனவே, அந்தச் சின்னஞ்சிறு கதவின்மீது சாய்ந்துகொண்டு, மயிரிழை அளவிலிருந்த அந்தக் கதவிடுக்கிலிருந்து வரும் காற்றை வேகவேகமாய் சுவாசித்தேன். மூட்டைப்பூச்சிகள் என் உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சுவதை உணர்ந்தேன். அந்த மூட்டைப்பூச்சிகள் நிறைந்த அந்த வீட்டில் பத்து நாட்கள் அடைபட்டிருந்தபோது, சகித்திருக்கத் தேவையான பலத்தைத் தரும்படி யெகோவாவிடம் வேண்டிக்கொண்டே இருந்தேன். (எரே. 15:15) பத்து நாட்களுக்குப் பிறகு கதவுகள் திறக்கப்பட்டபோது, நான் மயங்கி விழுந்தேன், மீண்டும் கண் விழித்தபோது வேறொரு அறையில் இருந்தேன்.

“இதன் பிறகு, கடின உழைப்பு முகாமிலுள்ள நீதிமன்றம் எனக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது; ‘சோவியத் அரசுக்கு எதிரான போராட்டத்திலும் பிரச்சாரத்திலும் இறங்கியதாக’ சொல்லி அத்தகைய தண்டனையை விதித்தது. இந்த முகாமிலிருந்து கடிதத்தை அனுப்புவதோ, பெற்றுக்கொள்வதோ முடியாத காரியம். கொலை போன்று பயங்கரமான குற்றச்செயல்களைச் செய்த குற்றவாளிகளே பொதுவாக இங்கிருந்தார்கள். என்னுடைய மதநம்பிக்கையை உதறித்தள்ளாவிட்டால், குற்றவாளிகளிடம் சொல்லி என்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் என் எடை 36 கிலோதான் இருந்தது, நடக்கக்கூட எனக்குத் தெம்பில்லை. ஆனாலும் அங்கு நல்மனமுள்ளவர்களை, சத்தியத்திடம் ஆர்வம் காட்டுபவர்களை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

“ஒரு சமயம் நான் புதர்ச்செடிகளின் மத்தியில் முகங்குப்புற விழுந்து ஜெபம் செய்கையில், வயதான ஒருவர் என்னிடம் வந்தார். ‘இந்த நரகத்தில் தள்ளப்படும் அளவுக்கு நீ என்ன தப்பு செய்தாய்?’ என்று கேட்டார். நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று சொன்னபோது அவர் பக்கத்தில் அமர்ந்து, என்னை ஆரத்தழுவி முத்தமிட்டார். ‘தம்பி, எத்தனையோ காலமாக சத்தியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமெனத் துடியாய் துடிக்கிறேன். தயவுசெய்து அதை எனக்குச் சொல்லிக் கொடுப்பாயா?’ என்று என்னிடம் கேட்டார். எனக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. கிழிந்துபோன என் உடையின் பல இடங்களில், சுவிசேஷ புத்தகங்களின் பக்கங்களை வைத்துத் தைத்திருந்தேன்; உடனடியாக அவற்றை வெளியே எடுத்தேன். அவருடைய கண்கள் குளமாயின. அன்று மாலை நீண்ட நேரம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். முகாமிலுள்ள சாப்பாட்டு அறையில் அவர் வேலை செய்வதாகவும், எனக்கு உணவு தருவதாகவும் அவர் சொன்னார். இப்படித்தான் நாங்கள் நண்பர்களானோம். அவர் ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் செய்தார், நானும் உடல் பலத்தைப் பெற்றேன். யெகோவாவே இத்தகைய ஏற்பாட்டை செய்தாரென உறுதியாய் நம்பினேன். சில மாதங்களுக்குப் பிறகு அவர் விடுதலையாகிச் சென்றார், கோர்கீ ஆப்லாஸ்ட்டிலுள்ள வேறொரு முகாமுக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்.

“அங்கு நிலைமை எவ்வளவோ மேலாக இருந்தது. ஆனால், எல்லாவற்றையும்விட முக்கியமாக நான்கு கைதிகளுக்கு பைபிள் படிப்பு நடத்த முடிந்தது எனக்கு ஆனந்தத்தை அளித்தது. 1952-ல், நாங்கள் பிரசுரங்களை வைத்திருப்பதை முகாமின் மேற்பார்வையாளர் கண்டுபிடித்துவிட்டார். நீதிமன்ற விசாரணைக்கு முன்பு நடைபெற்ற குறுக்குவிசாரணையின்போது, துளிகூட காற்று உட்புகாத பெட்டியில் என்னைப் போட்டு பூட்டினார்கள், மூச்சுத் திணறும்போது சுவாசிப்பதற்கு பெட்டியை சற்றே திறந்துவிட்டு உடனடியாக மூடினார்கள். என் மதநம்பிக்கையைப் புறக்கணிக்க வைக்க அவர்கள் முயற்சி செய்தார்கள். நாங்கள் எல்லாரும் குற்றவாளிகளென தீர்ப்பளிக்கப்பட்டோம். எங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னவென வாசிக்கப்பட்டபோது, என்னோடு சேர்ந்து பைபிளைப் படித்தவர்கள் யாருமே பயப்படவில்லை. அதைப் பார்த்தபோது எனக்கு ஒரே ஆனந்தம்! அவர்கள் நான்கு பேருக்கும் கடின உழைப்பு முகாமில் 25 ஆண்டு கால தண்டனை விதிக்கப்பட்டது. எனக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது; எனினும், கடுங்காவல் முகாமில் இன்னும் 25 ஆண்டுகள் என்றும், 10 ஆண்டுகள் நாடு கடத்தப்பட வேண்டுமென்றும் அந்தத் தண்டனை பின்னர் மாற்றப்பட்டது. அந்த நீதிமன்ற அறையைவிட்டு வெளியே வந்ததும், நின்று எங்களுக்குப் பக்கபலமாய் இருந்ததற்காக யெகோவாவுக்கு நன்றிசொன்னோம். நாங்கள் ஏன் சந்தோஷமாய் இருக்கிறோமென தெரியாமல் காவலாளிகள் விழித்தார்கள். எல்லாரும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு முகாம்களுக்கு அனுப்பப்பட்டோம். பிறகு, வோர்குடா நகரிலுள்ள கடுங்காவல் முகாமுக்கு நான் அனுப்பப்பட்டேன்.”

கிறிஸ்தவ நடுநிலைமை காப்பாற்றியது

கடின உழைப்பு முகாமில் வாழ்க்கை கடினமாகவே இருந்தது. யெகோவாவின் சாட்சிகள் அல்லாத கைதிகள் பலர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஈவான் க்ரிலோவ் சொல்வதாவது: “கடுங்காவல் முகாமிலிருந்து நான் வெளியே வந்தபிறகு, வெவ்வேறு நிலக்கரிச் சுரங்கங்களுக்குச் சென்றேன். அங்கே நம் சகோதர சகோதரிகள் கட்டாய வேலை செய்துவந்தார்கள். அப்படிச் சந்தித்ததால் நாங்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள முடிந்தது. நம் பத்திரிகைகளில் சிலவற்றைக் கைப்பட எழுத முடிந்தவர்கள் அதை நகல் எடுத்து மற்றவர்களுக்கும் கொடுத்தார்கள். ஒவ்வொரு முகாமிலும் இருந்த சாட்சிகள் அங்கிருந்தவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்கள்; அநேகர் ஆர்வம் காட்டினார்கள். அவர்களில் சிலர், விடுதலை செய்யப்பட்டபின் வோர்குடா நதியில் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.

“யெகோவாவின் மீதும் அவருடைய ராஜ்யத்தின் மீதும் நாங்கள் வைத்திருந்த விசுவாசத்திற்கு அடிக்கடி சோதனை வந்தது. 1948-ல் ஒரு சமயம், வோர்குடாவில் ஒரு முகாமிலிருந்த கைதிகள் சிலர் கலவரத்தில் ஈடுபடுவதற்குத் திட்டம் போட்டார்கள். ஒரே தேசத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து கலவரத்தில் ஈடுபட்டால் மாபெரும் வெற்றி கிடைக்கும் என்பதாக மற்ற கைதிகளிடம் அந்தக் கலகக்காரர்கள் தெரிவித்திருந்தார்கள். அப்போது அந்த முகாமில் நாங்கள் மொத்தம் 15 பேர் இருந்தோம். யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் கிறிஸ்தவர்கள் என்றும், இதுபோன்ற காரியங்களில் ஈடுபட மாட்டோம் என்றும் அந்தக் கலகக்காரர்களிடம் சொன்னோம். ஆரம்பகாலக் கிறிஸ்தவர்கள் ரோமர்களுக்கு எதிராகக் கலவரங்களில் ஈடுபடவில்லை என்பதை விளக்கினோம். நாங்கள் இப்படிச் சொன்னது பலருக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது, என்றாலும் நாங்கள் உறுதியாகவே இருந்தோம்.”

அந்தக் கலவரம் விபரீதத்தில் முடிவடைந்தது. ஆயுதமேந்திய ராணுவவீரர்கள் அந்தக் கலவரத்தை அடக்கி, அதில் ஈடுபட்டவர்களை வேறொரு சிறைக் குடியிருப்புக்கு (barracks) மாற்றினார்கள். பின்னர் பெட்ரோல் ஊற்றி அந்தக் குடியிருப்பைத் தீக்கொளுத்தினார்கள். கிட்டத்தட்ட, உள்ளே இருந்த எல்லாருமே கருகிச் சாம்பலானார்கள். நம் சகோதரர்களுக்கோ ராணுவவீரர்கள் எந்தத் தீங்கும் செய்யவில்லை.

“டிசம்பர் 1948-ல், 25 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த எட்டுச் சகோதரர்களை ஒரு முகாமில் சந்தித்தேன்” என ஈவான் சொல்கிறார். “அது, குளிர் வாட்டியெடுக்கும் காலமாக இருந்தது, சுரங்கங்களில் வேலை பார்ப்பதோ மிகவும் கடினமாக இருந்தது. என்றாலும், அந்தச் சகோதரர்களின் மன உறுதியும் திட நம்பிக்கையும் அவர்களுடைய கண்களில் மின்னியதை என்னால் பார்க்க முடிந்தது. அவர்களுடைய நம்பிக்கையான மனோபாவம், யெகோவாவின் சாட்சிகள் அல்லாத மற்ற கைதிகளையும் பலப்படுத்தியது” என்றும் அவர் சொல்கிறார்.

சைபீரியாவுக்கு நாடுகடத்தப்படுதல்

அதிகாரிகளின் கொடூரமான எதிர்ப்பு ஒருபுறமிருக்க, சாட்சிகளோ யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பக்திவைராக்கியத்துடன் தொடர்ந்து பிரசங்கித்தார்கள். இது, மாஸ்கோவிலிருந்த மத்திய அரசின் கோபத்தைக் கிளறிவிட்டது. முக்கியமாக கேஜிபி-யின் அதாவது, சோவியத் நாட்டுப் பாதுகாப்புக் குழுவின் கோபத்தைக் கிளறிவிட்டது. இதனால் ஒரு குறிப்பாணையை (memo) இந்தக் குழு ஸ்டாலினுக்கு அனுப்பியது; பிப்ரவரி 19, 1951 தேதியிட்ட அந்தக் குறிப்பாணையில் இவ்வாறு தெரிவித்தது: “சோவியத் அரசுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் ஜெஹோவிஸ்ட் மதப்பிரிவினரின் இரகசிய நடவடிக்கைகள் மேலும் தொடராதபடி தடுக்க, ஜெஹோவிஸ்ட் என நாங்கள் அடையாளம் காண்பவர்களையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் இர்குட்ஸ்க் மற்றும் டோம்ஸ்க் ஆப்லாஸ்ட்டுகளுக்கு அனுப்புவது அவசியமென எம்ஜிபி [சோவியத் பாதுகாப்பு அமைச்சகம், பின்னர் கேஜிபி என அழைக்கப்பட்டது] கருதுகிறது.” யார்யாரெல்லாம் யெகோவாவின் சாட்சிகளென்று கேஜிபி அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது; எனவே, சோவியத் யூனியனைச் சேர்ந்த ஆறு குடியரசு நாடுகளிலிருந்து 8,576 பேரை சைபீரியாவுக்கு நாடுகடத்த அனுமதி வழங்கும்படி ஸ்டாலினிடம் விண்ணப்பித்து அதற்கான ஒப்புதலைப் பெற்றுக்கொண்டது.

மக்டலீனா பியெலஷிட்ஸ்கயா என்ற சகோதரி பின்வருமாறு சொல்கிறார்: “அது, ஏப்ரல் 8, 1951; அன்று ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை இரண்டு மணிக்கு யாரோ கதவைத் தடதடவென்று தட்டுகிற சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தோம். அம்மா விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய்க் கதவைத் திறந்தார்கள். வாசலில் ஓர் அதிகாரி நின்றுகொண்டிருந்தார். ‘நீங்கள் கடவுளை நம்புவதால் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்படுகிறீர்கள்’ என அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். ‘இரண்டு மணிநேரம் தருகிறோம்; அதற்குள் பெட்டி படுக்கையெல்லாம் தயார் செய்துகொள்ளுங்கள். வீட்டிலிருந்து எதை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தானியம், மாவு, பயறு ஆகியவற்றை எடுத்துச்செல்லக் கூடாது. மேஜை, நாற்காலி, மர சாமான்கள், தையல் மெஷின் ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. வீட்டு முற்றத்திலுள்ள எதையுமே எடுத்துக்கொண்டு போகக் கூடாது. உங்களுக்குத் தேவையான படுக்கை விரிப்புகள், துணிமணிகள், பைகள் ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்புங்கள்’ என்று சொல்லி அவசரப்படுத்தினார்.

“இது நடப்பதற்கு முன்பு, நாட்டின் கிழக்குப் பகுதிகளில் பிரசங்க வேலை அதிகளவில் செய்யப்பட வேண்டியிருந்ததைப்பற்றி நம் பிரசுரங்களில் நாங்கள் வாசித்திருந்தோம். அதற்கான நேரம் வந்துவிட்டதெனப் புரிந்துகொண்டோம்.

“நாடுகடத்தப்படுவதை நினைத்து நாங்கள் யாருமே அழுது புலம்பவில்லை. இதைப் பார்த்த அதிகாரிக்கு ஆச்சரியமாகிவிட்டது. ‘உங்கள் கண்களிலிருந்து துளி கண்ணீர்கூட வரக்காணோமே’ என்றார் அவர். இதை 1948-லிருந்தே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாக அவரிடம் சொன்னோம். ஒரே ஒரு கோழியையாவது எடுத்துக்கொண்டு போகிறோமெனக் கேட்டோம். அதற்கு அவர் மறுத்துவிட்டார். நாங்கள் வளர்த்துவந்த கால்நடைகளை அதிகாரிகள் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்டார்கள். எங்கள் வீட்டுக் கோழிகளை ஒருவர் ஐந்து, இன்னொருவர் ஆறு, மற்றொருவர் மூன்று, நான்கு என எங்கள் கண் முன்னாலேயே பங்கு போட்டுக்கொண்டார்கள். கோழிக்கூட்டில் இரண்டே இரண்டு கோழிகள்தான் மீந்திருந்தன. அவற்றையும் எங்களிடம் உயிரோடு கொடுக்காமல், அடித்துக் கொடுக்கும்படி அந்த அதிகாரி உத்தரவிட்டார்.

“எங்களுடைய எட்டு மாதப் பெண் குழந்தையை மரத் தொட்டிலில் படுக்க வைத்திருந்தோம். அந்தத் தொட்டிலை எடுத்துச்செல்ல அனுமதி கேட்டோம்; அந்த அதிகாரியோ அதை அக்கக்காகக் கழற்றும்படி உத்தரவிட்டார். அதைக் கழற்றியபின் குழந்தையைக் கிடத்தியிருந்த பாகத்தை மட்டும் எங்களிடம் கொடுத்தார்.

“நாங்கள் நாடுகடத்தப்படுகிறோம் என்பது அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் தெரிந்துவிட்டது. ஒருவர் இனிப்பு ரஸ்க் பாக்கெட்டுகளை ஒரு சிறிய பையில் வைத்து எங்களுக்காக எடுத்துவந்தார்; நாங்கள் ஏறியிருந்த கட்டை வண்டி கிளம்பியபோது அதை அவர் வண்டிக்குள் வீசினார். எங்களுடன் வந்த காவலர் இதைப் பார்த்துவிட்டார்; அந்தப் பையைத் திருப்பி அதே வேகத்தில் வண்டிக்கு வெளியே தூக்கியெறிந்துவிட்டார். நான், என் அம்மா, என் இரண்டு தம்பிகள், என் கணவர், எங்களுடைய எட்டு மாதக் குழந்தை என மொத்தம் ஆறு பேர் அந்த வண்டியில் சென்றோம். அந்த வண்டி கிராமத்து எல்லையைவிட்டு வெளியே வந்தபின், அதிலிருந்து இறக்கிவிடப்பட்டு ஒரு காருக்குள் அவசர அவசரமாகத் தள்ளி அடைக்கப்பட்டோம். அந்த கார் மண்டல அலுவலகத்தை அடைந்தது. அங்கு எங்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் நிரப்பப்பட்டன. அங்கிருந்து ரயில் நிலையத்திற்கு டிரக்கில் ஏற்றிச் செல்லப்பட்டோம்.

“அந்த ஞாயிற்றுக்கிழமை இதமான வெயில் அடித்துக்கொண்டிருந்தது. ஸ்டேஷனில் எங்கு பார்த்தாலும் மக்கள்மயம். நாடு கடத்தப்படுபவர்களும், அவர்களை வேடிக்கை பார்க்க வந்திருந்தவர்களுமாக ஒரே கூட்டம். நாங்கள் ஏறிச்சென்ற டிரக், ரயில் பெட்டிக்குப் பக்கத்தில் எங்களைக் கொண்டுபோய் விட்டது; அதில் ஏற்கெனவே நம் சகோதரர்கள் இருந்தார்கள். அந்த ரயில் வண்டி நிறைந்ததும் எல்லாரும் இருக்கிறார்களா என அவரவர்களுடைய குடும்பப் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டுச் சரிபார்த்தார்கள். நாங்கள் ஏறியிருந்த பெட்டியில் 52 பேர் இருந்தார்கள். எங்களை வழியனுப்ப வந்திருந்தவர்கள் வண்டி புறப்படுவதற்கு முன்பாகவே எங்களைப் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டார்கள், பின்பு விம்மி அழுதார்கள். அந்தக் காட்சி நெஞ்சை உருக்கியது; ஏனென்றால் அங்கிருந்தவர்களில் சிலர் யாரென்றுகூட எங்களுக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதும் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்படுகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அந்த வண்டி புறப்படுவதற்குத் தயாரானதும், அதுபோட்ட அலறல் காதைத் துளைத்தது. அப்போது நம் சகோதரர்கள் உக்ரேனியன் பாஷையில் ஒரு பாடலைப் பின்வருமாறு பாட ஆரம்பித்தார்கள்: ‘கிறிஸ்துவின் அன்பு உங்களோடு இருக்கட்டும். இயேசு கிறிஸ்துவுக்கு மகிமையாக, அவருடைய ராஜ்யத்தில் நாம் மீண்டும் சந்திப்போம்.’ யெகோவா எங்களைக் கைவிடமாட்டார் என்ற திட நம்பிக்கையும் விசுவாசமும் எங்களில் பெரும்பாலோருக்கு இருந்தது. நிறைய பாடல்களைப் பாடினோம். அப்போது காவலர்கள் சிலருடைய கண்களும் கலங்கினதைப் பார்த்து நெகிழ்ந்துபோனோம். பிறகு அந்த ரயில் வண்டி புறப்பட்டது.”

“அவர்கள் நினைத்ததற்கு எதிர்மாறாகவே நடந்தது”

யெகோவாவின் சாட்சிகளை நாடுகடத்தியவர்கள் எதைச் சாதித்தார்கள் என்பதை செ. பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஹெர்ஸின் பல்கலைக்கழகப் பேராசிரியரான டாக்டர் என். எஸ். கர்டியென்க்கா, தான் எழுதிய புத்தகத்தில் இவ்வாறு விளக்கியுள்ளார்: “அவர்கள் நினைத்ததற்கு எதிர்மாறாகவே நடந்தது; சோவியத் ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது அமைப்பை வலுவிழக்கச் செய்வதே அவர்களுடைய நோக்கமாய் இருந்தது, ஆனால் அதற்கு எதிர்மாறாக அவர்கள் அந்த அமைப்பினரைப் பலப்படுத்திவிட்டார்கள். அவர்களது மதத்தைப்பற்றி முன்பின் தெரியாதவர்கள் மத்தியில் அவர்கள் குடியேற்றப்பட்டபோது, அவர்களுக்கிருந்த பற்றும் விசுவாசமும் அங்கு வசித்தவர்களையும் தொற்றிக்கொண்டன.”

சாட்சிகள் பலரும் சீக்கிரத்திலேயே தங்களுடைய புதிய சூழ்நிலைகளுக்கு ஒத்துப்போகப் பழகிக்கொண்டார்கள். சிறிய சபைகள் ஒழுங்கமைக்கப்பட்டன, ஊழியத்திற்கான பிராந்தியங்களும் நியமிக்கப்பட்டன. நிக்கலை கலிபாபா கூறுவதாவது: “சைபீரியாவில் ஒரு காலத்தில் நாங்கள் வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கித்தோம்; இன்னும் சரியாகச் சொன்னால், ஒரு வீட்டுக்குச் சென்றபின் இரண்டு, மூன்று வீடுகளை விட்டுவிட்டு இன்னொரு வீட்டுக்குச் சென்றோம். இது ஆபத்தான வேலையாக இருந்தது. ஆனால், அதை நாங்கள் எப்படிச் செய்தோம்? முதல் முறை சந்தித்தபின் ஒரு மாதத்திற்குள் மறுசந்திப்பு செய்ய முயன்றோம். ‘கோழி, வெள்ளாடு, மாடு என எதையாவது விற்கிறீர்களா?’ என்று ஜனங்களிடம் கேட்டு உரையாடலை ஆரம்பித்தோம். பின்னர் மெதுமெதுவாக ராஜ்யத்தினிடம் அவர்கள் கவனத்தைத் திருப்பினோம். காலப்போக்கில், கேஜிபி அதிகாரிகள் எப்படியோ இதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். யெகோவாவின் சாட்சிகள் சொல்வதைக் கேட்கக்கூடாதென உள்ளூர் மக்களை எச்சரித்து சீக்கிரத்திலேயே செய்தித்தாளில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்கள். சாட்சிகள் வீட்டுக்கு வீடு சென்று வெள்ளாடு, மாடு கோழி போன்றவை இருக்கிறதா என ஜனங்களிடம் கேட்பதாக அந்தக் கட்டுரை எச்சரித்தது; ஆனால், உண்மையிலேயே எங்களுக்குத் தேவைப்பட்டது ‘செம்மறியாடு’தான்!”

கவ்ரில் லீவி சொல்வதாவது: “கேஜிபியினர் உன்னிப்பாகத் தங்களைக் கவனித்து வருவதை அறிந்தும் சகோதரர்கள் ஊழியத்தில் கலந்துகொள்ள முயற்சி எடுத்தார்கள். சோவியத் மக்களின் மனோபாவம் எப்படி இருந்ததென்றால், மதத்தைப்பற்றி தங்களிடம் யாராவது பேச முயலுவதாகத் தோன்றினால், உடனே போலீசாருக்குத் தகவல் சொல்லி விடுவார்கள். இந்த நிலையிலும், நாங்கள் தொடர்ந்து பிரசங்கித்தோம்; ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைக்காததுபோல் தோன்றினாலும் தொடர்ந்து பிரசங்கித்தோம். சிறிது காலம் கழித்து, உள்ளூர் மக்களில் சிலரை சத்தியம் மாற்ற ஆரம்பித்தது. குடிகாரராய் இருந்த ஒரு ரஷ்யரும் அவர்களில் ஒருவர். சத்தியத்தைக் கற்றபின் பைபிள் நியமங்களுக்கு ஏற்ப தன் வாழ்க்கையை அவர் மாற்றியமைத்தார்; பிறகு, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகி மும்முரமாய் சாட்சி கொடுக்க ஆரம்பித்தார். பிற்பாடு ஒரு கேஜிபி அதிகாரி அவரை அழைத்து, ‘நீ யாரோடு சகவாசம் வைத்திருக்கிறாய்? அந்த யெகோவாவின் சாட்சிகள் எல்லாரும் உக்ரேனியர்கள்’ என்று சொன்னார்.

“அதற்கு அந்தச் சகோதரர், ‘ஒரு காலத்தில் நான் குடிகாரனாய் இருந்தேன், சாக்கடையில் எல்லாம் புரண்டேன். அப்போது நீங்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்போதோ, நான் திருந்தி, ஒழுங்கான குடிமகனாய் இருக்கிறேன், அது உங்களுக்குப் பிடிக்கவில்லை. உக்ரேனியர் பலர் சைபீரியாவிலிருந்து செல்கிறார்கள், ஆனால், கடவுள் விரும்புகிறபடி வாழ இங்குள்ள சைபீரியர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிட்டுத்தான் செல்கிறார்கள்’ என்று பதிலளித்தார்.”

சில வருடங்களுக்குப் பிறகு, இர்குட்ஸ்க்கிலுள்ள அதிகாரி ஒருவர் மாஸ்கோவிலுள்ள அதிகாரிகளுக்குப் பின்வருமாறு எழுதினார்: “[யெகோவாவின் சாட்சிகளாகிய] அவர்கள் எல்லாரையும் வடக்கே எங்கேயாவது ஓர் இடத்திற்கு அனுப்பி வைத்தால் இங்குள்ளவர்களோடு அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்விடும் என்றும் அதே சமயத்தில் அவர்களைச் சீர்திருத்தவும் முடியும் என்றும் இந்நகரப் பணியாளர்கள் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.” சைபீரிய அதிகாரிகளுக்கும் சரி மாஸ்கோ அதிகாரிகளுக்கும் சரி, யெகோவாவின் சாட்சிகளுடைய வாயை அடைக்க என்ன செய்ய வேண்டுமென்றே தெரியவில்லை.

“உங்கள் எல்லாரையும் சுட்டுத்தள்ளியிருப்போம்”

1957-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக அதிகாரிகள் புதுவிதமான செயலில் இறங்கினார்கள். சகோதரர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டார்கள், அவர்களுடைய வீடுகள் சோதனையிடப்பட்டன. இதுகுறித்து விக்டர் கட்ஷ்மிட் சொல்வதாவது: “ஒரு சமயம் நான் ஊழியத்திற்குப் போய்விட்டு வீடு திரும்பியபோது, வீட்டிலிருந்த எல்லாப் பொருள்களும் தாறுமாறாகக் கிடந்தன. புத்தகங்கள் ஏதாவது அகப்படுமா என கேஜிபி அதிகாரிகள் தேடிக்கொண்டிருந்தார்கள். என்னைக் கைதுசெய்து இரண்டு மாதங்களாக விசாரணை செய்தார்கள். அப்போது மூத்த மகளுக்கு 2 வயதுதான் ஆகியிருந்தது; எங்கள் இளைய மகள் யூலியாவோ 11 மாதக் குழந்தை.

“விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் என்னைப் பார்த்து, ‘நீ ஜெர்மானியன்தானே?’ என்று கேட்டார். அப்போதெல்லாம் ‘ஜெர்மானியன்’ என்றாலே ‘பாசிஸவாதி’ என்றுதான் அநேகர் கருதினார்கள். ஜெர்மானியர் வெறுக்கப்பட்டார்கள்.

“‘நான் ஒரு தேசியவாதி அல்ல என்பதைச் சொல்லிக்கொள்கிறேன், ஆனால் நாசிக்களால் சித்திரவதை முகாம்களில் போடப்பட்டிருந்த ஜெர்மானியர்களைப்பற்றி நீர் பேசுகிறீரென்றால், அந்த ஜெர்மானியரை நினைத்துப் பெருமைப்படுகிறேன்! அவர்கள் பீபல்ஃபார்ஷர் என்று முன்பு அழைக்கப்பட்டார்கள், இப்போது யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்தச் சாட்சிகளில் ஒருவர்கூட இயந்திரத் துப்பாக்கியில் ஒரு தோட்டாவை வைத்தோ, பீரங்கியில் ஒரு வெடிகுண்டை வைத்தோ சுட்டதில்லை. அந்த ஜெர்மானியரை நான் மெச்சுகிறேன்!’

“அந்த இன்ஸ்பெக்டர் அமைதியாக இருந்தார். ஆகவே நான் தொடர்ந்து இவ்வாறு சொன்னேன்: ‘யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர்கூட எந்தவொரு கலகத்திற்கோ புரட்சிக்கோ துணைபோகவில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளுக்குத் தடை விதிக்கப்பட்டபோதும்கூட, கடவுளை வழிபடுவதை அவர்கள் நிறுத்தவே இல்லை. அதே சமயத்தில், தேசிய சட்டங்கள் நம்முடைய படைப்பாளரின் உன்னதச் சட்டங்களுக்கு முரண்படாத பட்சத்தில், சாட்சிகள் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிகிறார்கள்.’

“எதிர்பாராத வகையில் அந்த இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டு இவ்வாறு சொன்னார்: ‘யெகோவாவின் சாட்சிகளையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்திருக்கிற அளவுக்கு உன்னிப்பாய் வேறெந்தப் பிரிவினரையும் நாங்கள் கண்காணித்ததில்லை. உங்களுக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தால், யாருக்காவது நீங்கள் துளியளவு தீங்கு செய்ததாகத் தெரியவந்திருந்தாலும், உங்கள் எல்லாரையும் சுட்டுத்தள்ளியிருப்போம்.’

“அப்போது நான் இப்படி நினைத்துக்கொண்டேன்: ‘உலகெங்கும் நம் சகோதரர்கள் தைரியத்துடன் யெகோவாவுக்குச் சேவை செய்து வருகிறார்கள். இந்த முன்னுதாரணமே சோவியத் யூனியனிலிருந்த எங்களைக் காப்பாற்றியுள்ளது. ஆகவே, இங்கு நாங்கள் கடவுளுக்குச் சேவை செய்வது வேறு பகுதியிலுள்ள நம் சகோதரர்களுக்கு எவ்விதத்திலாவது உதவலாம்.’ இந்த எண்ணமே, யெகோவாவின் வழிகளுக்கு மாறாக நடந்துவிடக்கூடாது என்ற மனஉறுதியை என்னுள் வேரூன்றச் செய்தது.”

50-க்கும் அதிகமான முகாம்களில் சாட்சிகள்

சோவியத் யூனியனில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து நடுநிலைமை காத்துவந்தார்கள், ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்டுவந்தார்கள்; இதைப் பார்த்த அரசாங்க அதிகாரிகள் மிகவும் எரிச்சல் அடைந்தார்கள். (மாற். 13:10; யோவா. 17:16) இவ்விஷயங்களில் தங்களுடைய நிலைநிற்கை காரணமாக நம் சகோதரர்கள் அடிக்கடி நியாயமின்றி நீண்டகால சிறைத் தண்டனைகளைப் பெற்றார்கள்.

உலகமுழுவதிலும் ஜூன் 1956 முதல் பிப்ரவரி 1957 வரை நடைபெற்ற 199 மாநாடுகளில் 4,62,936 பேர் கலந்துகொண்டார்கள். சோவியத் அரசுக்குச் சமர்ப்பிக்கவிருந்த மனுவை அவர்கள் அனைவரும் ஏகமனதாக ஒப்புக்கொண்டார்கள்; அவற்றின் நகல்கள் மாஸ்கோவிலிருந்த சோவியத் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டன. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு விஷயமாவது: “ஐரோப்பிய ரஷ்யாவிலிருந்து சைபீரியா, அதற்கு வடக்கே ஆர்க்டிக் கடல் சார்ந்த பகுதிகள், ஆர்க்டிக் கடலில் அமைந்துள்ள நோவாயா ஜெம்லியா தீவு ஆகிய பகுதிகளிலுள்ள 50-க்கும் அதிகமான முகாம்களில் யெகோவாவின் சாட்சிகள் போடப்பட்டிருக்கிறார்கள். . . . அமெரிக்காவிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் கம்யூனிஸ்ட்டுகள் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். கம்யூனிஸ ஆட்சியின் கீழுள்ள நாடுகளில் அவர்கள் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள். . . . கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் அவர்களை ‘ஏகாதிபத்திய உளவாளிகள்’ எனக் குற்றஞ்சாட்டி விசாரணை செய்திருக்கின்றன, 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதித்திருக்கின்றன. ஆனால் அவர்கள் அரசாங்கத்துக்கு எதிரான எந்தவொரு சதித்திட்டத்திலும் ஈடுபட்டதே இல்லை.” இவ்வாறு அவர்கள் சமர்ப்பித்த மனுவினால் சோவியத்திலிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

ரஷ்யாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது பெரும்பாடாக இருந்தது. அப்படிப்பட்ட கடினமான சமயத்தில் மூன்று ஆண் பிள்ளைகளை வளர்த்துவந்த மாஸ்கோவைச் சேர்ந்த விளடீமிர் சஸ்நின் கூறுவதாவது: “சோவியத் பள்ளியில் பிள்ளைகள் எல்லா நாளும் வகுப்புக்கு ஆஜராக வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது. கம்யூனிஸக் கொள்கைகளுக்கு ஆதரவளித்த மாணவர் சங்கங்களில் சேரும்படி நம் பிள்ளைகளை ஆசிரியர்களும் மற்ற மாணவர்களும் வற்புறுத்தினார்கள். எங்கள் பிள்ளைகள் அடிப்படைக் கல்வியை எப்படியாவது பெற வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம்; அவர்கள் நன்கு படிக்கவும் உதவினோம். அதோடு, யெகோவாவை அதிகமதிகமாக நேசிப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பிள்ளைகளின் இருதயத்தில் பதியவைப்பது பெற்றோர்களாகிய எங்களுக்குச் சாமானியமான விஷயமாக இருக்கவில்லை. ஏனென்றால் பள்ளிகளில் சோஷியலிஸ, கம்யூனிஸக் கொள்கைகளே கொடிகட்டிப் பறந்தன. ஆகவே, பெற்றோராகிய எங்களுக்கு அளவுகடந்த பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்பட்டது.”

மகளின் காதைக் கிழித்ததாகக் குற்றச்சாட்டு

இந்தச் சூழ்நிலையில் சைபீரியாவில் காலம்தள்ளிய சிம்யொன், டார்யா கோஸ்ட்டில்யெவ் தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள். சிம்யொன் சொல்கிறார்: “அப்போது யெகோவாவின் சாட்சிகள் மத வெறியர்களாகக் கருதப்பட்டார்கள். 1961-ல், எங்களுடைய இரண்டாவது மகளான ஆலாவை முதல் வகுப்பில் சேர்த்திருந்தோம். மற்ற பிள்ளைகளோடு ஒரு நாள் அவள் விளையாடிக்கொண்டிருந்தபோது, தெரியாமல் ஒரு சிறுமி அவளுடைய காதைக் காயப்படுத்திவிட்டாள். என்ன நடந்ததென்று வகுப்பு ஆசிரியர் அடுத்த நாள் கேட்டபோது, அவளைக் காட்டிக்கொடுக்க ஆலாவுக்கு மனமில்லை; ஆகவே அவள் அமைதியாக இருந்துவிட்டாள். அந்த ஆசிரியருக்கு, ஆலாவின் பெற்றோராகிய நாங்கள் யெகோவாவின் சாட்சிகளென்று தெரிந்திருந்தது; நாங்கள்தான் பைபிள் நியமங்களைப் பின்பற்றச் சொல்லி அவளை வற்புறுத்தி அடித்துக் காயப்படுத்தியிருப்போம் என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். இந்த விஷயத்தை அரசுத் தரப்பு வக்கீலிடம் அந்தப் பள்ளி நிர்வாகம் புகார் செய்தது. நான் வேலைபார்த்து வந்த கம்பெனியும் இதில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சுமார் ஒரு வருடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. கடைசியில், அக்டோபர் 1962-ல் நீதிமன்ற விசாரணைக்கு வரும்படி எங்களுக்கு சமன் அனுப்பப்பட்டது.

“நீதிமன்ற விசாரணைக்கு முன்பு இரண்டு வாரங்களாக, பேலஸ் ஆஃப் கல்ச்சர் கட்டடத்தில் விளம்பர பேனர் கட்டப்பட்டது. அதில், ‘ஆபத்தான ஜெஹோவிஸ்ட் மதப்பிரிவினரின் விசாரணை தொடங்கவிருக்கிறது’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. எங்கள் பிள்ளைகளை பைபிளின்படி வளர்க்கிறோமென நானும் என் மனைவியும் குற்றஞ்சாட்டப்பட்டோம்; கொடுமைப்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டோம். ஜெபிக்கும்படி எங்கள் மகளை நாங்கள் கட்டாயப்படுத்தியதாகவும், வாளியின் விளிம்பால் அவளுடைய காதைக் கிழித்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது! இதெல்லாம் பொய் என்பதாகச் சாட்சி சொல்வதற்கு இருந்த ஒரே நபர் ஆலாதான். அவளோ கிரென்ஸ்க் நகரிலிருந்த அனாதை இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தாள்; அது நாங்கள் வசித்து வந்த இர்குட்ஸ்க் நகருக்கு வடக்கே சுமார் 700 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

“நீதிமன்ற அறை முழுக்க கம்யூனிஸ்ட் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களே நிறைந்திருந்தார்கள். இவ்விஷயத்தைக் கவனமாகப் பரிசீலனை செய்வதற்காக நீதிபதிகள் வழக்கு விசாரணையைச் சற்றுநேரத்திற்கு ஒத்திவைத்துவிட்டு உள்ளே சென்றபோது, அங்கிருந்த கூட்டத்தார் கூச்சல்போட ஆரம்பித்தார்கள். தரக்குறைவாகத் திட்டினார்கள், சாபமிட்டார்கள், நாங்கள் அணிந்திருந்த ‘சோவியத்’ நாட்டு உடைகளைக்கூட கழற்றும்படி யாரோ ஒருவர் அதட்டினார். எங்களைக் கொல்ல வேண்டுமென்று எல்லாரும் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அங்கேயே எங்களைத் தீர்த்துக்கட்டுவதற்கும் யாரோ ஒருவர் முயன்றார். அந்தக் கூட்டத்தாரின் கோபம் உச்சத்தை எட்டியது, அப்படியும் நீதிபதிகள் வெளியே வந்தபாடில்லை. அவர்களுடைய பரிசீலனை ஒருமணிநேரத்திற்கு நீடித்தது. அந்தக் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு எங்களை நோக்கி வந்தபோது, யெகோவாவின் சாட்சியாய் இருந்த ஒரு சகோதரியும், சத்தியத்தில் இல்லாத அவரது கணவரும் தடுப்புச் சுவர்போல் எங்களுக்கும் அந்த ஜனங்களுக்கும் நடுவே நின்றுகொண்டு, எங்களுக்கு எந்தத் தீங்கும் செய்துவிட வேண்டாமென்று கெஞ்சினார்கள். எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை விளக்க முயன்றதோடு, அந்தக் கூட்டத்தின் பிடியிலிருந்து நிஜமாகவே எங்களை மீட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

“கடைசியில், ஒரு நீதிபதி வெளியே வந்தார், பொது மக்கள் நீதிமன்றத்தின் உதவியாளர்களும் கூடவே வந்தார்கள். நீதிபதி தண்டனைத் தீர்ப்பை அளித்தார். எங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கு இனிமேலும் எங்களுக்கு உரிமை இல்லை என்று அறிவித்தார். நான் கைதுசெய்யப்பட்டு சீர்திருத்த முகாமில் இரண்டு வருடங்கள் வேலை செய்யும்படி அனுப்பி வைக்கப்பட்டேன். எங்கள் மூத்த மகளும் ஓர் அனாதை இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அவளுடைய பெற்றோரான நாங்கள் ஓர் ஆபத்தான மதப்பிரிவின் அங்கத்தினர் என்றும், எங்களிடம் வளர்ந்தால் அவள் கெட்டுக் குட்டிச்சுவராகிவிடுவாள் என்றும் சொல்லி அவள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.

“எங்கள் மகனுக்கு மூன்று வயதே ஆகியிருந்ததால் அவன் டார்யாவுடன் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டான். எனக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் காலம் முடிந்த பின்னர் நான் வீடுதிரும்பினேன். முன்புபோலவே நாங்கள் சந்தர்ப்ப சாட்சிதான் கொடுத்துவந்தோம்.”

“எங்கள் பிள்ளைகளை எண்ணிப் பெருமிதமடைந்தோம்”

“ஆலாவுக்கு 13 வயதானபோது அனாதை இல்லத்தைவிட்டு வெளியேறி எங்களோடு வசிப்பதற்காக வீடுதிரும்பினாள். அவள் யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து 1969-ல் முழுக்காட்டுதல் பெற்றபோது எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தது! அந்தச் சமயத்தில் எங்கள் நகரிலிருந்த பேலஸ் ஆஃப் கல்ச்சர் மன்றத்தில் தொடர்ச்சியாக மதத்தின்பேரில் சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டன. இம்முறை என்ன சொல்வார்களெனக் கேட்பதற்கு நாங்களும் சென்றோம். வழக்கம்போல, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியே எக்கச்சக்கமாகப் பேசினார்கள். அவர்களில் ஒரு சொற்பொழிவாளர் காவற்கோபுரம் பத்திரிகையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, ‘இது ஓர் ஆபத்தான, கேடு விளைவிக்கிற பத்திரிகை; இது நம் நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் பத்திரிகை’ என்றார். பிறகு, அதற்கு ஓர் உதாரணத்தையும் சொன்னார். ‘இந்தப் பிரிவின் அங்கத்தினர்கள் இதுபோன்ற பத்திரிகைகளை வாசிக்கவும் கடவுளிடம் ஜெபிக்கவும் தங்கள் பிள்ளைகளை வற்புறுத்துகிறார்கள். ஒரு குடும்பத்தில், இந்தப் பத்திரிகையை வாசிக்க ஒரு சிறுமி விரும்பவில்லை, அதற்காக அவளுடைய அப்பா அவள் காதையே கிழித்துவிட்டார்’ என்றார். ஆலாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஏனென்றால் அவளும் அந்தக் கூட்டத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தாள், அவளுடைய இரண்டு காதுகளும் பத்திரமாகவே இருந்தன. என்றாலும் அவள் வாய்திறந்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அப்படிப் பேசினால் இந்த முறையும் பெற்றோரை விட்டுப் பிரிந்துசெல்ல நேரிடுமோ என்று பயந்து அவள் வாயே திறக்கவில்லை.

“எங்கள் மகன் பரிஸுக்கு 13 வயதானபோது, அவனும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றான். ஒருமுறை தன் வயதிலிருந்த சில சாட்சிகளோடு சேர்ந்து அவன் தெரு ஊழியம் செய்துகொண்டிருந்தான். ஊழியத்திற்கு அப்போதும் தடை விதிக்கப்பட்டிருந்ததுதான்; என்றாலும் அவர்கள் அங்கே பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் பைபிளோ, பைபிள் பிரசுரங்களோ இருக்கவில்லை. திடீரென்று அங்கு ஒரு கார் வந்தது, பையன்களெல்லாரும் அதில் ஏற்றப்பட்டு ராணுவ காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களை விசாரணை செய்து சோதனையிட்டபோது, சில பைபிள் வசனங்கள் எழுதப்பட்டிருந்த ஒரு காகிதத்தைத் தவிர வேறெதையும் அந்த ராணுவ அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. பையன்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டார்கள். பரிஸ் வீட்டிற்கு வந்தபோது, தானும் தன்னோடிருந்த சகோதரர்களும் யெகோவாவின் பெயரினிமித்தம் துன்புறுத்தப்பட்டதைப் பெருமையுடன் சொல்லிக்கொண்டான். சோதனைக் காலத்தில் பிள்ளைகளுக்கு யெகோவா பக்கபலமாக இருந்ததால் எங்கள் பிள்ளைகளை எண்ணிப் பெருமிதமடைந்தோம். இதற்குப் பின்பு, நானும் டார்யாவும் கேஜிபி அதிகாரிகளால் பலமுறை அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டோம். ‘இந்தப் பிள்ளைகளையெல்லாம், இளங்குற்றவாளிகள் முகாமுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் 14 வயது ஆகாததால் எப்படியோ தப்பித்துக்கொண்டார்கள்’ என்று ஓர் அதிகாரி குறைப்பட்டுக்கொண்டார். எங்கள் மகன் பிரசங்க வேலையில் ஈடுபட்டதற்காக எங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

“இன்று, என் மகன் மற்றும் பேரக்குழந்தைகளோடு நான் வசித்து வருகிறேன். பேரக்குழந்தைகளும் சத்தியத்தில் இருக்கிறார்கள். என் மூத்த மகள் உஸ்பெகிஸ்தானில் இருக்கிறாள். அவள் இன்னும் யெகோவாவின் சாட்சியாய் ஆகவில்லை; என்றாலும், எங்களையும் பைபிளையும் மதிக்கிறாள், அடிக்கடி வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போகிறாள். 2001-ல், டார்யா இறந்துவிட்டாள், சாகும்வரை அவள் யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்தாள். நான் இப்போதும் தெம்போடு இருப்பதால், ‘நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்களைக்’ கண்டுபிடிப்பதற்காக சபையோடு சேர்ந்து தொலைதூர பிராந்தியங்களில் ஊழியத்திற்குச் சென்று வருகிறேன். (அப். 13:48) ஏசாயா 65:23-ல் எழுதப்பட்டுள்ளபடி, நம் ஒவ்வொருவருடைய வாஞ்சையையும் யெகோவா விரைவில் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.”

பெற்றோர் வைத்த சிறந்த முன்மாதிரி

விளடிஸ்லாவ் அபன்யுக், ரஷ்யா பெத்தேலில் சேவை செய்கிறார். சிறுவயதிலேயே கடவுள்மீது அன்பை வளர்த்துக்கொள்ள தனக்கும் தன் உடன் பிறந்தோருக்கும் பெற்றோர் எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை நினைத்து அவர் கூறுவதாவது: “எங்கள் பெற்றோர் 1951-ல் உக்ரைனிலிருந்து சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். யெகோவாவுக்குப் பிரியமாய் நடக்க அவர்கள் அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தபோதிலும்கூட, சுயமாகத் தீர்மானங்கள் எடுக்க எங்களுக்குக் கற்பித்தார்கள். எங்கள் பெற்றோரிடம் எனக்குப் பிடித்த ஒரு விஷயம் என்னவென்றால், அவர்கள் எப்போதுமே தங்களுடைய குறைகளைப்பற்றி பிள்ளைகளாகிய எங்கள் முன் பேசிக்கொள்ளத் தயங்கவில்லை, அவர்கள் செய்த தவறுகளை எங்களிடம் மறைக்கவில்லை. அவர்கள் யெகோவாவை எந்தளவுக்கு நேசித்தார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. எங்களுடன் ஆன்மீக விஷயங்களைப் பேசியபோது அப்பாவும் அம்மாவும் பெரும்பாலும் கலகலப்பாகவே இருந்தார்கள்; யெகோவாவைப்பற்றித் தியானிப்பதற்கும் அவரைப்பற்றிப் பேசுவதற்கும் அவர்கள் காட்டிய ஆர்வத்தை நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம். அதனால், யெகோவாவைப் பற்றிய சத்தியங்களைத் தியானித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் எங்களுக்கும் ஏற்பட்டது. வியாதியும் போரும் தலைகாட்டாத, எந்தப் பக்கம் திரும்பினாலும் ரம்மியமான சூழலே இருக்கப்போகிற புதிய உலகில் மக்கள் வாழப்போவதை அடிக்கடி கற்பனை செய்து பார்த்தோம்.

“நான் மூன்றாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, பயனியர்ஸ் என்று அழைக்கப்பட்ட சோவியத் இளைஞர் சங்கத்தில் சேரும்படி என் வகுப்பிலிருந்த எல்லா மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. சோவியத் யூனியனைச் சேர்ந்த பெரும்பாலான பிள்ளைகள் இந்தச் சங்கத்தில் சேருவதைப் பெரும் கௌரவமாகக் கருதினார்கள். அதில் சேரும் நாளுக்காக என் சக மாணவர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். கம்யூனிஸத்தைச் செதுக்கிச் சீராக்கும் எதிர்காலச் சிற்பிகள் அடங்கிய சோவியத் பயனியர்ஸ் அணியில் சேருவதற்குத் தாங்கள் தயாராய் இருப்பதாக முறைப்படியான ஓர் உறுதிமொழியை ஒவ்வொருவரும் எழுதிச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. நான் எழுத மறுத்துவிட்டேன். ‘இந்த உறுதிமொழியை எழுதித் தராமல் நீ வெளியே போக முடியாது’ என்று சொல்லி ஆசிரியை என்னை வகுப்பறையில் அடைத்துவிட்டார். சில மணிநேரங்கள் கழித்து, விளையாடுவதற்கு வெளியே வரும்படி சக மாணவர்கள் சிலர் ஜன்னலில் தட்டிக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். நானோ, என்னவானாலும்சரி எழுதிக்கொடுக்கக் கூடாது என்ற தீர்மானத்துடன் வகுப்பறையிலேயே இருந்துவிட்டேன். பொழுது சாயும் நேரத்தில் வேறொரு ஆசிரியை அந்தப் பக்கமாக வந்தார். நான் வகுப்பறையில் இருந்ததை அவர் பார்த்துவிட்டார்; அதனால் வீட்டுக்குப் போவதற்குக் கடைசியில் அனுமதி அளித்தார். இதுவே எனக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். யெகோவாவின் இருதயத்தை மகிழ்விக்கும் ஒரு செயலைச் செய்ய முடிந்ததை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். (நீதி. 27:11) வீடுதிரும்பியதும், நடந்ததையெல்லாம் என் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும் சந்தோஷப்பட்டார்கள்; ‘சமர்த்துப் பையன்!’ என்று சொல்லி மெச்சினார் என் அப்பா.

பைபிள்—தேசவிரோதமானது

சில சமயங்களில், பைபிளை வைத்திருந்ததற்காகவே சகோதரர்கள் விசாரணை செய்யப்பட்டார்கள். நட்யெஸ்டா விஷன்யாக் இவ்வாறு சொல்கிறார்: “அந்தச் சமயத்தில் நானும் என் கணவரும் யெகோவாவின் சாட்சிகளாய் ஆகியிருக்கவில்லை, ஆனாலும் பைபிள் சத்தியம் எங்கள் இருதயத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. ஒருமுறை, நான் வேலை பார்க்குமிடத்தில் போலீசார் வந்து, வேலைக்குப் போட்டிருந்த உடையோடு என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள். என் கணவர் பியோட்டரையும் வேலை செய்யுமிடத்திலேயே கைதுசெய்தார்கள். எங்களைக் கைதுசெய்வதற்கு முன் போலீசார் எங்கள் வீட்டைச் சோதனை செய்திருந்தார்கள். அப்போது ஒரு பைபிளும், அர்மகெதோனுக்குப் பின்—கடவுளுடைய புதிய உலகம் என்ற சிறுபுத்தகமும் அவர்கள் கைகளில் சிக்கின. என்னைக் கைதுசெய்வார்கள் என்று பியோட்டர் நினைக்கவே இல்லை. ஏனென்றால் நான் அப்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தேன்.

“சோவியத் அதிகாரிகளுக்கு விரோதமாகச் செயல்படுவதாக எங்கள்மீது குற்றம் சுமத்தினார்கள். சோவியத் நாட்டின் அதிகாரத்தைவிட மிக உயர்ந்த அதிகாரத்தை உடைய பைபிளையே நாங்கள் நம்புவதாக அவர்களிடம் தெரிவித்தோம்.

“‘பைபிள் கடவுளுடைய வார்த்தை, அதனால்தான் அதிலுள்ள நியமங்களின்படி வாழ நாங்கள் விரும்புகிறோம்’ என்றேன்.

“எங்களை விசாரணை செய்வதற்கான சமயம் வந்தபோது, என் பிரசவத்துக்கு இன்னும் இரண்டு வாரங்கள்தான் இருந்தன. விசாரணையின்போது இடையிடையே வெளியில் சென்று காலார நடப்பதற்கு, அதுவும் ஆயுதம்தாங்கிய ஒரு ராணுவவீரருடன் நடப்பதற்கு அந்த நீதிபதி என்னை அனுமதித்தார். அப்படி ஒருமுறை நடந்துசென்றபோது, நான் செய்திருந்த குற்றம் என்னவென்று அந்த வீரர் கேட்டார். அவருக்குச் சாட்சிகொடுக்க அது அருமையான சந்தர்ப்பமாக அமைந்தது.

“எங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைபிளும் சிறுபுத்தகமும் ‘தேசவிரோதமானவை’ என அந்த நீதிபதி அறிவித்தார். நானும் என் கணவரும் தேசவிரோதிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டது போதாதென்று நாங்கள் படித்த அந்தச் சிறுபுத்தகமும், ஏன் பைபிளும்கூட தேசவிரோதமானது என்பதாக நீதிபதி அறிவித்ததைக் கேட்டபோது என் உள்ளமெல்லாம் குளிர்ந்தது. யெகோவாவின் சாட்சிகளோடு எங்கே அறிமுகமானோம் என எங்களைக் கேட்டபோது, ‘வோர்குடா முகாமில்’ எனப் பதில் சொன்னோம்; அவ்வளவுதான், கோபாவேசத்துடன் அந்த நீதிபதி, ‘நம் முகாம்களில் என்ன நடந்துகொண்டிருக்கிறது, பாருங்கள்!’ என்று கத்த ஆரம்பித்துவிட்டார். நாங்கள் குற்றவாளிகளெனத் தீர்க்கப்பட்டோம், இருவருமே சீர்திருத்த முகாம்களில் பத்து வருட தண்டனை பெற்றோம்.

“பியோட்டர் மத்திய ரஷ்யாவைச் சேர்ந்த மார்டிவினியாவிலுள்ள ஒரு முகாமின் தனிச்சிறையில் போடப்பட்டார். நான் மார்ச் 1958-ல் ஆண்குழந்தையைப் பிரசவித்தேன். இந்தக் கஷ்டமான காலங்களில் யெகோவாவே உற்ற நண்பராய் இருந்து எனக்கு உதவினார். குழந்தையை என் அம்மா எடுத்துச்சென்று வளர்த்தார்கள். நான் சைபீரியாவில் கெமிரோவோவுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன், அங்கு கடின உழைப்பு முகாமில் போடப்பட்டேன்.

“எனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலம் பூர்த்தியாவதற்கு முன்பே, அதாவது எட்டு வருடங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டேன். சிறைக் குடியிருப்பில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெண்மணி, நான் ‘தேசவிரோதமாக’ ஒரு வார்த்தைகூட சொன்னதில்லை எனவும், நம்முடைய புத்தகம் மத சம்பந்தமானதுதான் எனவும் மற்றவர்கள் கேட்கும்படி சத்தமாகத் தெரிவித்தார். விடுதலையானபின் 1966-ல் நான் முழுக்காட்டுதல் பெற்றேன்.”

பைபிள் மற்றும் பைபிள் பிரசுரங்கள், சிறைகளிலும் முகாம்களிலும் இருந்த சகோதரர்களுக்குப் பெரும் மதிப்புமிக்கவையாய் இருந்தன. 1958-ல் மார்டிவினியாவில் உள்ள ஒரு முகாமில், சகோதரர்கள் தவறாமல் கூட்டங்களை நடத்தினார்கள். ஒரு தொகுதியினர் காவற்கோபுர பத்திரிகையைப் படித்துக்கொண்டிருக்கையில், முகாமின் கண்காணிப்பாளர் அங்கே திடுதிப்பென வந்துவிடாதபடி, அநேக சகோதரர்கள் கூப்பிடுகிற தூரத்தில் ஆங்காங்கே காவலுக்கு நிறுத்திவைக்கப்பட்டார்கள். கண்காணிப்பாளர் வருவது தெரிந்தால், அருகிலுள்ள சகோதரர் தனக்கு அடுத்ததாக நிற்பவரிடம் “வருகிறார்” என்று சொல்வார். இவ்வாறு, அடுத்தடுத்து நிற்பவர்களிடம் இதைத் தெரிவிக்கையில், கூட்டம் நடத்திக்கொண்டிருக்கும் தொகுதிக்குச் செய்தி எட்டிவிடும். அப்போது அங்கு கூடிவந்திருந்த எல்லாரும் கலைந்துவிடுவார்கள், பத்திரிகையையும் மறைத்து வைத்துவிடுவார்கள். பொதுவாக, கண்காணிப்பாளர்கள் திடுதிப்பென்று எதிர்பாரா சமயத்தில்தான் வருவார்கள்.

ஒருமுறை இவ்வாறு ஒரு கண்காணிப்பாளர் திடீரென்று வந்தபோது, அவரை எப்படியாவது திசைதிருப்பி பத்திரிகையைப் பத்திரப்படுத்திவிட பரிஸ் கிரில்ட்ஸோவ் தீர்மானித்தார். எனவே, சட்டென்று ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு சிறைக் குடியிருப்பைவிட்டு ஓட்டம்பிடித்தார். வெகுநேரம் அவரைத் துரத்திச்சென்ற கண்காணிப்பாளர்கள் கடைசியில் அவரைப் பிடித்துவிட்டார்கள். ஆனால் அவர் கையில் இருந்ததோ லெனின் எழுதிய புத்தகம்தான். அவர் ஏழு நாட்களுக்கு தனிச்சிறையில் போடப்பட்டார்; என்றாலும், பத்திரிகை அவர்கள் கண்களில் படாமற்போனதை நினைத்து நிம்மதியடைந்தார்.

மாஸ்கோவில் சத்திய விதைகள் தூவப்படுதல்

ரஷ்யாவின் தலைநகராகிய மாஸ்கோவில் ஒரு சிறிய தொகுதியினர் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். பரிஸ் கிரில்ட்ஸோவ்வும் இந்நகரில் முதன்முதலாக பக்திவைராக்கியத்துடன் பிரசங்கித்துவந்த சிலரில் ஒருவராய் இருந்தார். அவர் கூறுகிறார்: “நான் கட்டடப் பணியை மேற்பார்வை செய்யும் வேலை பார்த்து வந்தேன். சகோதர சகோதரிகள் அடங்கிய ஒரு குழுவோடு சேர்ந்து நானும் சந்தர்ப்ப சாட்சி கொடுத்து வந்தேன். நான் பிரசங்கித்ததைக் கண்டுபிடித்த கேஜிபி அதிகாரிகள் ஏப்ரல் 1957-ல் என் வீட்டில் சோதனை நடத்தி பைபிள் பிரசுரங்களைக் கண்டுபிடித்தார்கள். உடனே என்னைக் கைதுசெய்தார்கள். விசாரணையின்போது, நாட்டில் மிக மிக ஆபத்தானவர்கள் யெகோவாவின் சாட்சிகளே என்பதாக அந்த இன்ஸ்பெக்டர் என்னிடம் சொன்னார். ‘உன்னைக் கைதுசெய்யாமல் விட்டுவிட்டால், சோவியத் குடிமக்கள் பலர் உன்னுடன் சேர்ந்துவிடுவார்கள். ஆகவேதான் உங்கள் எல்லாரையும் அரசாங்கத்துக்கே கேடுவிளைவிப்பவர்களாகக் கருதுகிறோம்’ என்றார் அவர்.

“‘சட்டத்திற்குக் கீழ்ப்படியும் குடிமக்களாக இருக்கவே பைபிள் எங்களுக்குக் கற்பிக்கிறது’ என்றேன். ‘முதலாவது கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தொடர்ந்து தேட வேண்டுமென்றும் அது சொல்கிறது. எந்தவொரு நாட்டிலேயும் உண்மைக் கிறிஸ்தவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றதாகச் சரித்திரமே இல்லை’ என்றும் சொன்னேன்.

“‘நாங்கள் தேடுதல் வேட்டை நடத்தியபோது சிக்கிய பிரசுரம் எங்கேயிருந்து உங்களுக்குக் கிடைத்தது?’ என்று அந்த அதிகாரி கேட்டார்.

“‘அந்தப் பிரசுரத்தில் அப்படி என்ன தவறு இருக்கிறது?’ என நான் கேட்டேன். ‘அது பைபிள் தீர்க்கதரிசனங்களைத்தான் விவரிக்கிறது, அரசியல் விவகாரங்கள் எதையும் குறிப்பிடவில்லையே’ என்று சொன்னேன்.

“‘அது சரிதான், ஆனால் அது வெளிநாட்டில் அல்லவா பிரசுரிக்கப்படுகிறது’ என்று அவர் சொன்னார்.

“கடைசியில் விலாடிமிர் நகரிலிருந்த கடுங்காவல் முகாமில் போடப்பட்டேன். என்னை உச்சிமுதல் உள்ளங்கால்வரை சோதனை செய்தார்கள். ஆனாலும் மிக மெல்லிய காகிதத்தில் எழுதி வைத்திருந்த காவற்கோபுர பத்திரிகையின் நான்கு இதழ்களை அந்த முகாமுக்குள் நான் கொண்டுசெல்ல முடிந்ததை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக உள்ளது. யெகோவாவே எனக்குத் துணைநின்றிருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. என்னைப் போட்டிருந்த அறையில் அந்த நான்கு இதழ்களை மறுபடியும் நகல் எடுத்தேன். ஏனெனில் என்னைத் தவிர இன்னும் சில சாட்சிகள் அந்தச் சிறையில் இருந்தார்கள், அவர்களுக்கு ஏழு வருடங்களாக எந்தவிதத்திலும் ஆன்மீக உணவு கிடைக்கவே இல்லை என்பதை அறிந்திருந்தேன். எனவே, இந்தப் பத்திரிகைகளை அவர்களுக்கும் கடத்தினேன். எப்படி? அங்கிருந்த மாடிப்படிப் பகுதியைத் துடைத்துச் சுத்தம்செய்கிற வேலைக்குப் பொறுப்பாளராக இருந்த ஒரு சகோதரியின் உதவியோடு!

“நம் சகோதரர்களுடன் பழகிவந்த ஒருவன் சிறைக் காப்பாளர்களுக்கு ஆள்காட்டியாகச் செயல்பட்டான்; பைபிள் பிரசுரங்கள் எங்களுக்கிடையே வலம் வருவதை சிறைக் காப்பாளர்களிடம் அவன் காட்டிக்கொடுத்துவிட்டான். உடனே எல்லாரிடமும் அவர்கள் சோதனை நடத்தி, பிரசுரங்கள் அனைத்தையும் கைப்பற்ற ஆரம்பித்தார்கள். என்னிடமும் வந்தார்கள், என் படுக்கைக்குள் பிரசுரங்கள் இருந்ததைக் கண்டுபிடித்துவிட்டார்கள். அதற்குத் தண்டனையாகத் தனிச்சிறையில் 85 நாட்கள் போடப்பட்டேன். இருந்தபோதிலும், முன்புபோலவே யெகோவா எங்களைத் தொடர்ந்து காத்துவந்தார்.”

சொற்பொழிவுகளைக் கேட்ட சிலர் சத்தியத்தைக் கற்றார்கள்

சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராகவும், கம்யூனிஸக் கொள்கையைப் பிரச்சாரம் செய்யும் நோக்கத்தோடும் சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டன. விக்டர் கட்ஷ்மிட் சொல்வதாவது: “எங்கள் முகாமில் நாத்திகக் கொள்கையைப் பரப்பிய பேச்சாளர்கள் அடிக்கடி வந்து சொற்பொழிவுகள் ஆற்றினார்கள். அப்போது சகோதரர்கள் கேள்விகளைக் கேட்பது வழக்கமாய் இருந்தது. சிலசமயங்களில், பேச்சாளர்கள் மிக எளிய கேள்விகளுக்கும்கூட பதில்சொல்ல முடியாமல் திணறினார்கள். பொதுவாக ஆட்கள் அந்த அரங்கம் முழுக்க நிறைந்திருப்பார்கள், எல்லாருமே காதைத் தீட்டிக்கொண்டு கேட்பார்கள். இதுபோன்ற பேச்சுகளைக் கேட்க மக்கள் ஆர்வத்துடன் வருவார்கள்; பேச்சின் முடிவில் யெகோவாவின் சாட்சிகள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைக் கேட்க அவர்களுக்கு அப்படி ஓர் ஆவல்!

“ஒருமுறை எங்கள் முகாமுக்கு ஒருவர் சொற்பொழிவாற்ற வந்தார். அவர் ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் பாதிரியாக இருந்தவர். ஒரு முகாமில் போடப்பட்டிருந்தபோது தன் விசுவாசத்தைக் கைவிட்டு, நாத்திகராக மாறியவரென்று அவரைப்பற்றி எல்லாருக்குமே தெரிந்திருந்தது.

“அவர் உரையாற்றி முடித்த பின்னர், ‘நீங்கள் சிறைக்குப் போகும் முன்பு நாத்திகராக இருந்தீர்களா, அல்லது சிறைக்குச் சென்றுவந்த பின்பு அப்படி ஆகிவிட்டீர்களா?’ என்று நம் சகோதரர்களில் ஒருவர் கேட்டார்.

“அதற்கு அந்தப் பாதிரி, ‘இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு மனிதன் விண்வெளிக்கே சென்றிருக்கிறான், ஆனால் அங்கும் அவன் கடவுளைப் பார்க்கவில்லை’ என்று பதிலளித்தார்.

“அந்தச் சகோதரரோ, ‘நீங்கள் பாதிரியாக இருந்தபோது, பூமிக்கு மேல் வெறுமனே 200 கிலோமீட்டருக்குச் சற்று அதிகமான தூரத்திலிருந்தே கடவுள் மக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் நினைத்தீர்களா?’ என்று கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்லவே இல்லை. இந்தக் கலந்துரையாடல் சிறைக் கைதிகளில் அநேகரைச் சிந்திக்க வைத்தது; அதன்பின்னர் அவர்களில் சிலர் எங்களுடன் சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள்.

“இதுபோன்ற ஒரு சொற்பொழிவின்போது ஒரு சகோதரி அவரிடம் ஏதோ கேட்பதற்கு முயன்றார். ‘என்ன சொல்லப்போகிறீர்கள், நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகத்தான் இருப்பீர்கள்’ என்றார் சொற்பொழிவாளர்.

“‘ஆள்நடமாட்டம் இல்லாத வெட்டவெளியில் நின்றுகொண்டு, “நான் உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று ஒருவர் உரக்கக் கத்தினால் அவரைப்பற்றி எல்லாரும் என்ன நினைப்பார்கள்?’ என்று அந்தச் சகோதரி கேட்டார்.

“‘அவரைப் புத்திசாலியென்று யாரும் நினைக்கமாட்டார்கள்’ என்று அவர் பதில்சொன்னார்.

“‘கடவுள் இல்லையென்றால், நாம் ஏன் அவரைத் தாக்கிப் பேச வேண்டும்? அப்படி ஒருவர் இல்லையென்றால், தாக்குவதற்கு யாரும் இல்லை என்றுதானே அர்த்தம்?’ என்று அந்தச் சகோதரி கூறினார். கூடியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை பரவியது.”

பிரசங்கிப்பவர் மறுபடியும் வருவார்

சோவியத் அரசின் கொள்கையைப் பற்றிய சொற்பொழிவுகள் முகாம்களில் மட்டுமே ஆற்றப்படவில்லை. குறிப்பாகப் பெருநகரங்களில் வாழ்ந்த பொதுமக்களுக்காகவும் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. நகரங்களிலும் மாநகரங்களிலும், அனுபவம் வாய்ந்த சொற்பொழிவாளர்கள் உரையாற்றினார்கள்; முக்கியமாக யெகோவாவின் சாட்சிகள் பெருவாரியாகக் குவிந்திருக்கும் இடங்களான வோர்குடா, இன்டா, உக்டா, சிக்டிவ்கார் போன்ற பகுதிகளுக்குச் சென்று உரையாற்றினார்கள். சகோதரர் கட்ஷ்மிட் சொல்கிறார்: “ஒரு சமயம் 1957-ல், இன்டாவிலுள்ள சுரங்கத் தொழிலாளர்களுக்கு உரையாற்றுவதற்காக பேலஸ் ஆஃப் கல்ச்சருக்கு ஒரு சொற்பொழிவாளர் வந்திருந்தார். அவருடைய சொற்பொழிவைக் கேட்க 300 பேர் அங்கு கூடியிருந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளையும் அவர்கள் பிரசங்கிக்கிற விதத்தையும் அவர் விலாவாரியாக விவரித்தார். அந்தச் சமயத்தில் நாங்கள் 15 முறைக்கும் அதிகமாக மறுசந்திப்பு செய்துவந்தோம். பிரசங்கிப்பதற்கு நாங்கள் பயன்படுத்திய இந்த முறையை ஒன்றுவிடாமல் விவரித்த பின்னர் அவர் சொன்னதாவது: ‘நீங்கள் வேண்டாமென்று சொல்லாவிட்டால், பிரசங்கிப்பவர் மறுபடியும் வருவார். இரண்டாவது சந்திப்புக்குப் பிறகும் நீங்கள் வேண்டாமென்று சொல்லாவிட்டால், மூன்றாவது முறையும் வருவார்.’

“இதுபோன்ற ஆறு மறுசந்திப்புகளை அப்படியே இரண்டு மணிநேரத்தில் அவர் நடித்துக்காட்டினார். பின்பு நாங்கள் பயன்படுத்திய எல்லா வசனங்களையும் அவர் எழுதிவைத்திருந்த நோட்டிலிருந்து வாசித்துக் காட்டினார். இதையெல்லாம் நான் முகாமில் தண்டனைக் காலத்தைக் கழித்துவந்தபோது என் மனைவி பலீனா எனக்கு எழுதியிருந்தாள்; சொற்பொழிவைக் கேட்கச் சென்ற சகோதரர்களால் தங்கள் காதுகளையே நம்ப முடியவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தாள். இந்த உரைக்குப் பிறகு ஒரு செய்தித்தாள், சாட்சிகளைப்பற்றி மோசமாகச் சித்தரித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது; ஆனால் ராஜ்யத்தைப் பற்றிய முழு விவரிப்பும் அதில் அடங்கியிருந்தது. அத்துடன், அவர் ஆற்றிய உரை அப்படியே ரேடியோவிலும் ஒலிபரப்பப்பட்டது. அதைக் கேட்டதன்மூலம் யெகோவாவின் சாட்சிகள் எப்படிப் பிரசங்கிக்கிறார்கள் என்பதையும் எதைப்பற்றிப் பிரசங்கிக்கிறார்கள் என்பதையும் அம்மாநகரில் வசித்த ஆயிரக்கணக்கானோர் அறிந்துகொண்டார்கள்.

“1962-ல், யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி சொற்பொழிவாற்றுவதற்காக மாஸ்கோவிலிருந்து ஒரு பேச்சாளர் வந்தார். நம்முடைய தற்காலச் சரித்திரத்தை விவரித்தபின் அவர் சொன்னதாவது: ‘வெவ்வேறு நாடுகளில் யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக மனமுவந்த நன்கொடை என்ற பெயரில் கோடிக்கணக்கான பணம் புருக்லின் அலுவலகத்திற்கு மாதந்தோறும் வந்து குவிகிறது. ஆனால் அவர்களுடைய தலைவர்களில் எவருக்கும் துணிமணிகளை வைத்துக்கொள்ளச் சொந்தமான அலமாரிகூட இல்லை. அறைகளைச் சுத்தம் செய்பவரும்சரி தலைவரும்சரி, எல்லாரும் சாப்பாட்டு அறையில் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுகிறார்கள்; அவர்களுக்கிடையில் எந்த வேறுபாடும் இல்லை. நம் மத்தியில் தோழர் என ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வதைப் போல அவர்கள் ஒருவரையொருவர் சகோதரன் சகோதரி என்பதாக அழைத்துக்கொள்கிறார்கள்.’

“சிறிது நேரம் அந்த அரங்கத்தில் மயான அமைதி நிலவியது. பிறகு அவர் இதையும் சொன்னார்: ‘ஆனால், அவர்களுடைய கொள்கை எவ்வளவுதான் மிகச் சிறந்ததாகத் தோன்றினாலும், நாம் அதைப் பின்பற்றப்போவதில்லை; ஏனென்றால், இவற்றையெல்லாம் கடவுள் இல்லாமலேயே நம்முடைய மூளையை உபயோகித்து நம் சொந்தக் கைகளால் உருவாக்க விரும்புகிறோம்.’

“இதைக் கேட்ட எங்களுக்குப் புதுத் தெம்பு கிடைத்ததைப் போலிருந்தது. ஏனென்றால், நாங்கள் முதன்முறையாக யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய உண்மையை அதிகாரிகளே சொல்லக் கேட்டோம். அநேக மக்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய உண்மையை அதிகாரிகளின் வாயிலிருந்தே நேரடியாகக் கேட்பதற்கு இப்படிப்பட்ட சொற்பொழிவுகள் வழிவகுத்தன. என்றாலும், தங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் செய்வதற்கு பைபிள் போதனைகள் எப்படி உதவக்கூடும் என்பதை அவர்கள் சுய அனுபவத்தில் காணவேண்டியிருந்தது.”

கண்காணிப்பு எப்போதுமே கைகொடுக்கவில்லை

டெலிபோன் உரையாடல்களை ஒட்டுக்கேட்பது, கடிதங்களைக் கைப்பற்றுவது போன்ற வழிகளிலும், பிற வழிகளிலும் கண்காணிப்பது பல ஆண்டுகளாக கேஜிபி அதிகாரிகளின் பொதுவான வழக்கமாக இருந்துவந்தது. சில சமயங்களில் சபையைத் தலைமைதாங்கி நடத்திவந்த சகோதரர்களின் வீடுகளில் ஒட்டுக்கேட்கும் கருவிகளை அவர்கள் மறைத்து வைத்தார்கள். 1958-ல் அப்படிப்பட்ட ஒரு கருவியைத் தன் வீட்டு மேல்கூரைக்குக் கீழேயிருந்த சிறிய அறையில் கண்டுபிடித்ததைப்பற்றி கிரிகோரி சிவூல்ஸ்கி நினைவுகூருகிறார்; அவர், தடை போடப்பட்டிருந்த காலத்தில் 25 வருடங்களாய் மாவட்டக் கண்காணியாகச் சேவை செய்துவந்தவர். அவர் சொல்வதாவது: “நாங்கள் சைபீரியாவைச் சேர்ந்த டுலூன் நகரின் புறநகர்ப்பகுதியில் இரண்டு மாடிக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் வசித்துவந்தோம். ஒருநாள் நான் வீடுதிரும்பியபோது, அந்த அறையில் துளைபோடும் சத்தம் ஏதோ கேட்டது. நாங்கள் என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்பதை ஒட்டுக்கேட்பதற்காக கேஜிபி அதிகாரிகள் ஒட்டுக்கேட்கும் கருவி எதையோ அங்கே பொருத்துகிறார்கள் என எனக்குத் தெரிந்துவிட்டது; இதுவே அவர்கள் கடைப்பிடித்துவந்த முறையென்று எல்லாருக்கும் தெரிந்திருந்தது. முக்கால்வாசிப் பிரசுரங்களை நாங்கள் அந்த அறையில்தான் ஒளித்து வைத்திருந்தோம்.

“அன்று சாயங்காலம் நாங்கள் எல்லாரும் குடும்பமாக ஒன்றுசேர்ந்திருந்த வேளையில், அதைப்பற்றி என் மனதில் இருந்த சந்தேகத்தைச் சொன்னேன். ஆகவே சிறிது காலத்திற்குச் சபை சம்பந்தமான விஷயங்கள் எதையும் வீட்டுக்குள் வைத்துப் பேசவேண்டாமென நாங்கள் தீர்மானித்தோம். ரேடியோவை ‘ஆன்’ செய்து அதன் சத்தத்தை அதிகரித்தோம், அந்த வாரம் முழுவதும் அப்படியே செய்தோம். அந்த வாரக் கடைசியில், நானும் இன்னொரு சகோதரரும் அந்த அறைக்குள் தவழ்ந்துசென்று தேடிப் பார்த்தபோது, ஒட்டுக்கேட்கும் கருவியோடு ஒரு கேபிள் பொருத்தப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தோம். அந்த கேபிள், வீட்டுக் கூரையின் இரண்டு மரச் சட்டங்களுக்கு நடுவே சென்று, நகருக்குள் இருந்த கேஜிபி அலுவலகத்தில் முடிவடைந்தது. வீட்டிற்குள் நடக்கிற எல்லாவற்றையும் அவர்கள் பதிவு செய்துகொண்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமே இல்லை, ஆனால் அந்தச் சமயத்தில் ரேடியோ நிகழ்ச்சிகள்தான் அதில் பதிவாகி இருந்திருக்கும்.”

அமைப்புக்குள் கேஜிபி அதிகாரிகளின் ஊடுருவல்

யெகோவாவின் சாட்சிகளை என்னதான் துன்புறுத்தினாலும் அவர்களுடைய ஆர்வக்கனலைத் தணித்துவிட முடியாது என்பதை கேஜிபி அதிகாரிகள் அறிந்துகொண்டார்கள். ஆகவே, வஞ்சகமாகச் செயல்பட்டு, சந்தேக விதைகளைத் தூவினார்கள். முன்னின்று நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட சகோதரர்களைக் குறித்தும், ஒட்டுமொத்தமாகக் கடவுளுடைய அமைப்பைக் குறித்தும் சந்தேக விதைகளைத் தூவிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். அனுபவமிக்க உளவாளிகளைச் சபைகளில் உறுப்பினராகும்படி செய்வது கேஜிபியின் ஒரு சூழ்ச்சியாகும்.

கேஜிபி ஏஜென்டுகளாகப் பணிபுரிந்த அநேகர் அமைப்பில் முன்னின்று நடத்தும் பொறுப்புள்ள ஸ்தானங்களை எட்டிப் பிடித்தார்கள். கள்ளச் சகோதரர்களாகிய இவர்கள், பிரசங்க வேலையின் மும்முரத்தைத் தணிப்பதற்குத் தங்களால் ஆன எல்லாவற்றையும் செய்தார்கள்; சகோதரர்கள் மத்தியில் அச்சமும் அநிச்சயமுமான சூழலை உருவாக்கி, முன்னின்று நடத்துவோர்மீது சந்தேகம் ஏற்படும்படி செய்துவிட்டார்கள். அத்துடன், பைபிள் பிரசுரங்களைச் சகோதரர்களின் கைகளில் கிடைக்காதவாறு கைப்பற்றி கேஜிபி அதிகாரிகளின் வசம் அவற்றை ஒப்படைத்தார்கள். இதுபோன்று 1957 முதல் 1959 வரையாக உளவு வேலையில் ஈடுபட்டிருந்த இரண்டே இரண்டு ஏஜென்டுகள், 500-க்கும் அதிகமான காவற்கோபுர பத்திரிகைகளையும் அதுபோகப் பிற பிரசுரங்களையும் கேஜிபி அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது.

1950-களின் மத்திபத்தில், சகோதரர்கள் சிலர் நாட்டின் ஆலோசனைக் குழுமீது நம்பிக்கை இழக்க ஆரம்பித்தார்கள். ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களில் சிலர் கேஜிபி அதிகாரிகளுக்குத் துணைபோவதாகவும், பிரசுரங்களை நகல் எடுக்கும் வேலையில் ஈடுபட்டவர்கள் உட்பட உண்மைச் சகோதரர்களைக் காட்டிக்கொடுப்பதாகவும் எழுந்த வதந்தி காட்டுத்தீப் போலப் பரவியது. ஈவான் பாஷ்காவ்ஸ்கீ சொல்வதாவது: “ஏப்ரல் 1959-ல் நாட்டு ஆலோசனைக் குழு ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது; அதில் நானும் ஓர் அங்கத்தினனாய் இருந்தேன். சகோதர ஒற்றுமையைக் குலைப்பதற்காகப் பிசாசு இடைஞ்சல் செய்தபோதிலும் சத்தியத்தின் பக்கம் நிலைத்திருக்கவே நாங்கள் மனவுறுதியுடன் இருந்தோம். சோவியத் யூனியனில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு என்றுமில்லாத அளவில் கஷ்டகாலம் அப்போது ஆரம்பித்திருந்தது.”

சந்தேக விதைகள் வேர்விட்டு வளர வளர, சகோதரர்களில் சிலர் சபை அறிக்கைகளை நாட்டு ஆலோசனைக் குழுவிற்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள். சபையிலிருந்த பிரஸ்தாபிகள் தொடர்ந்து ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்டுவந்தார்கள், தங்கள் ஊழிய அறிக்கைகளைத் தவறாமல் சமர்ப்பித்தார்கள்; ஆனால், அந்த அறிக்கைகள் நாட்டு ஆலோசனைக் குழுவிற்கு அனுப்பப்படவில்லை என்பது அவர்களில் பெரும்பாலோருக்குத் தெரியவே இல்லை. 1958-ற்குள், பொறுப்பிலிருந்த சில சகோதரர்களின் செயலால் ஆயிரக்கணக்கான பிரஸ்தாபிகளுக்கு நாட்டு ஆலோசனைக் குழுவுடன் இருந்த தொடர்பு அறுந்துபோனது. இவ்வாறு அமைப்பிலிருந்து தங்களைப் பிரித்துக்கொண்ட இந்தச் சகோதரர்களின் தொகுதி, இர்குட்ஸ்க் மற்றும் டோம்ஸ்க் மாநகரங்களிலும், பின்னர் ரஷ்யாவின் பிற மாநகரங்களிலும் பெருகிய வண்ணமாய் இருந்தது. மார்ச் 1958-ல், இவ்வாறு பிரிந்தவர்கள் தங்களுக்கென்று ஓர் “ஆலோசனைக் குழு”வை அமைத்துக்கொண்டார்கள்; நாடு முழுவதிலுமிருந்த சபைகள் அந்தக் குழுவை அங்கீகரிக்குமென்ற நம்பிக்கையில் அவ்வாறு அமைத்துக்கொண்டார்கள்.

ஆளும் குழுவினர், சோவியத் யூனியனைச் சேர்ந்த சகோதரர்கள் மீண்டும் ஒன்றுபட்டு யெகோவாவை வணங்குவதற்காகத் தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும் உதவி செய்தார்கள். சுவிட்சர்லாந்தில் வசித்த ஆல்ஃபிரேட் ரூயிட்டீமான் அப்போது ஐரோப்பாவின் வடபகுதியிலிருந்த நாடுகளுக்கு கிளை அலுவலகக் கண்காணியாக இருந்தார்; இந்த அலுவலகமே சோவியத் யூனியனில் பிரசங்க வேலையை மேற்பார்வை செய்துவந்தது. 1959-ல், ரஷ்யாவிலுள்ள சகோதரர்களுக்கு ஒரு கடிதத்தை அவர் அனுப்பினார். அதில், சகோதரர்களின் மத்தியில் ஒற்றுமையைக் காக்கப் பாடுபடுபவர்களையும் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்களையும் மட்டுமே யெகோவா ஆசீர்வதிப்பார் என்று விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். பிரிந்து சென்ற சகோதரர்களில் சிலர் இந்தப் புத்திமதியை ஏற்றுக்கொண்டார்கள், நாட்டு ஆலோசனைக் குழுவின் மீது தங்கள் நம்பிக்கையை மீண்டும் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்தார்கள். என்றாலும், முழு நம்பிக்கை வருவதற்குப் பல ஆண்டுகள் எடுத்தன. இந்தக் கஷ்டகாலங்கள் முழுவதிலும், நாட்டு ஆலோசனைக் குழு கூரியர்களாகச் செயல்பட்ட சகோதரர்களின் மூலமாக பைபிள் பிரசுரங்களைச் சபைகளுக்குத் தொடர்ந்து அனுப்பிவைத்தது. பிரிந்துசென்றவர்கள் பிரசுரங்களைப் படித்தபோதிலும், வெளி ஊழிய அறிக்கைகளை நாட்டு ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பிவைக்கவே இல்லை.

கேஜிபியினர், சகோதரர்கள் மத்தியில் சந்தேக விதைகளை இன்னும் தூவிக்கொண்டேதான் இருந்தார்கள். சகோதரர்கள் சிலரை மட்டும் வேண்டுமென்றே கைதுசெய்யாமல் விட்டுவைத்தார்கள், மற்றவர்களையோ சிறைக்கு அனுப்பிவைத்தார்கள். இதனால், கைதுசெய்யப்படாத சாட்சிகள் கேஜிபி அதிகாரிகளுக்குத் துணைபோனவர்களாகவே இருக்கவேண்டுமென்ற அபிப்பிராயம் சகோதரர்கள் மத்தியில் இருந்துவந்தது. பொறுப்பிலிருந்த சகோதரர்களை அளவுக்கு மீறி சந்தேகிப்பதும் அவர்களைக் குறைசொல்வதுமே அநேகரின் வேலையாகிப்போனது.

விளம்பரப்படுத்தப்பட்ட விசாரணை

இர்குட்ஸ்க் என்ற இடத்தைச் சேர்ந்த அரசாங்க அதிகாரி ஒருவர் மாஸ்கோவுக்கு அனுப்பிய ஓர் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “[இர்குட்ஸ்க் ஆப்லாஸ்ட்டில் உள்ள யெகோவாவின் சாட்சிகள்] திரைமறைவு வேலைகளில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். 1959-ன் பிற்பகுதியில், நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த ஐந்து அச்சகங்களை கேஜிபி நிறுவனங்கள் கண்டுபிடித்திருக்கின்றன.” சைபீரியாவில் உள்ள ஜிமா, டுலூன் ஆகிய நகரங்களிலும், கிடாய், அக்ட்யாபர்ஸ்கி, ஜலரீ ஆகிய கிராமங்களிலும் இந்த அச்சகங்கள் அமைந்திருந்தன. அவற்றைக் கண்டுபிடித்ததும், அதில் வேலை செய்தவர்களைக் கைதுசெய்யும் படலம் தொடங்கியது.

ஆரம்பத்தில் கைதான நான்கு சகோதரர்கள், அச்சு வேலையைப் பற்றிய தகவல்களை எழுதி வாக்குமூலமாகக் கொடுத்தார்கள். இப்படிச் செய்ய விசாரணையாளர்கள் நயவஞ்சகமாக அவர்களை வற்புறுத்தியிருந்தார்கள். கேஜிபியினர் இந்த வாக்குமூலங்களைத் திரித்து எழுதி, உள்ளூர் செய்தித்தாள்களில் பிரசுரித்தார்கள். இந்த நான்கு சகோதரர்களும் விடுதலை செய்யப்பட்டு, வேறு எட்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஏப்ரல் 1960-ல் அவர்களுடைய விசாரணை டுலூனில் நடைபெற இருந்தது. நீதிமன்ற விசாரணையை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் கேஜிபி மும்முரமாய் இறங்கியது. விடுதலை செய்யப்பட்டிருந்த நான்கு சகோதரர்களை, தங்கள் தரப்பு சாட்சிகளாகப் பயன்படுத்திக்கொள்ள கேஜிபியினர் திட்டமிட்டார்கள். இந்தச் சகோதரர்கள் கேஜிபியினரின் கைக்கூலிகளாகிவிட்டதாக சபைகளில் இருந்த அநேகர் நினைக்க ஆரம்பித்தார்கள்.

விளம்பரப்படுத்தப்பட்ட இந்த விசாரணையைப் பயன்படுத்தி, அங்கு கூடிவரும் யெகோவாவின் சாட்சிகளுடைய விசுவாசத்தைக் குலைத்து, உள்ளூர் ஜனங்களை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடலாமென கேஜிபியினர் மனக்கணக்குப் போட்டிருந்தார்கள். இதற்காக, சகோதரர்கள் பல ஆண்டுகளாக பிரசுரங்களை அச்சிடப் பயன்படுத்தி வந்த ஒரு கட்டடத்தின் அடித்தளத்தை அந்த விசாரணைக்கு முன்பாக பொதுமக்களுக்கு கேஜிபியினர் சுற்றிக் காட்டினார்கள். தலைமறைவாகச் செயல்படும் “இரகசியத் தொகுதியின்” நடவடிக்கைகள்பற்றி நகரமெங்கும் எக்கச்சக்கமான வதந்திகள் உலா வந்தன. வழக்கு விசாரணைக்கு வந்த நாளில், அந்த நீதிமன்றத்தில் 300-க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தார்கள். பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சி நிருபர்களும் அங்கு திரண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் மாஸ்கோவிலிருந்தும் வந்திருந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளில் அநேகரும் கூடிவந்திருந்தார்கள்.

நீதிமன்றத்தில் கூச்சல் குழப்பம்

கேஜிபியினரின் மனக்கணக்குத் திடீரென்று தப்புக்கணக்காகி விட்டது. ஏனெனில், முன்பு எழுத்தில் வாக்குமூலம் கொடுத்திருந்த சகோதரர்கள் அதன் பிறகு தங்கள் தவறை உணர்ந்தார்கள். யெகோவாவுக்கு மகிமை சேர்க்க தங்களால் முடிந்ததை எல்லாம் செய்ய, விசாரணைக்கு முந்தைய தினம் உறுதிபூண்டார்கள். எனவே விசாரணையின்போது, தாங்கள் கேஜிபியினரால் ஏமாற்றப்பட்டதையும் தங்களுடைய வாக்குமூலம் திரித்து எழுதப்பட்டதையும் அவர்கள் விசாரணையின்போது விளக்கமாய்ச் சொன்னார்கள். அதன் பிறகு, “கைதிகளாய் இருக்கிற எங்கள் சகோதரர்களுடன் சேர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்கள். பின்னர், நீதிமன்றத்தில் ஒரே கூச்சல் குழப்பம்தான்.

அதோடு, அவர்களைக் குறுக்குவிசாரணை செய்தபோது, மற்ற சகோதரர்களைக் காட்டிக்கொடுக்காத விதத்தில் அவர்கள் பதில் அளித்தார்கள். உதாரணமாக, க்ரிகரி டிம்சூக் என்ற சகோதரரிடம், அவருடைய வீட்டில் அச்சகத்தைக் கட்டியது யார் என்று நீதிபதி கேட்டார்; “நான்தான் கட்டினேன்” என்று அவர் பதில் அளித்தார். பிரசுரங்களை அச்சடித்தது யார் என்று கேட்டதற்கு, “நான்தான் அச்சடித்தேன்” என்றார். அவற்றை விநியோகித்தது யார் என்ற கேள்விக்கு, “நான்தான் விநியோகித்தேன்” என்றார். காகிதத்தை கொண்டு வந்து கொடுத்தது யார் என்று கேட்டபோது, “அதையும் நான்தான் செய்தேன்” என்று பதில் அளித்தார். அதன் பிறகு, அரசு தரப்பு வழக்கறிஞர், “அப்படியென்றால் நீ யார்? மேலாளர், விநியோகஸ்தர், தொழிலாளி என சகலமும் நீதானா?” என்று கேட்டார்.

“அந்தக் கடிதம் எங்களுக்குத் தெம்பூட்டியது!”

தன் வாதத்தை ஆதரிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கு சாட்சி சொல்ல ஆட்கள் இல்லாமல் போனபோது, சகோதரர்கள் வெளிநாட்டினரோடு சேர்ந்துகொண்டு சூழ்ச்சி செய்வதாகக் குற்றம்சாட்டினார். இதற்கு ஆதாரமாக, புருக்லின் பெத்தேலைச் சேர்ந்த நேதன் எச். நார் அனுப்பியிருந்த கடிதத்தை அவர் சமர்ப்பித்தார். அந்த விசாரணையை நேரில் கண்ட மிக்கேல் சவிட்ஸ்கீ என்ற சகோதரர் அதைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார்: “சகோதரர் நார், சோவியத் யூனியனில் இருந்த சகோதரர்களுக்கு அனுப்பிய கடிதத்தை கேஜிபியினர் கைப்பற்றியிருந்தார்கள். அதை அரசு தரப்பு வழக்கறிஞர் சத்தமாய் வாசிக்க ஆரம்பித்தார். அங்கு குழுமியிருந்த சாட்சிகள் அனைவரும் அதை, யெகோவாவிடமிருந்து வந்த அருமையான பரிசாகக் கருதினார்கள். அந்தக் கடிதம் எங்களுக்குத் தெம்பூட்டியது! அதில், பைபிள் அடிப்படையில் ஞானமான அறிவுரைகளை சகோதரர் நார் எழுதியிருந்தார், சக விசுவாசிகளுக்கு அன்போடு சேவை செய்து, சோதனைகளின் மத்தியில் உறுதியாய் நிலைத்திருக்கும்படி உற்சாகப்படுத்தியிருந்தார். கடவுளை முழுமையாகச் சார்ந்திருக்கும்படியும், ஞானத்திற்காகவும் வழிநடத்துதலுக்காகவும் அவரிடம் வேண்டிக்கொள்ளும்படியும், நியமிக்கப்பட்ட சகோதரர்களுடன் ஒத்துழைக்கும்படியும் சாட்சிகளை அவர் ஊக்கப்படுத்தியிருந்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் அந்தக் கடிதத்தை முழுமையாக வாசித்தார். நாங்கள் அதை மிக உன்னிப்பாகக் கவனித்தோம். எங்களுக்கு மாநாட்டில் உட்கார்ந்து இருப்பதைப் போலிருந்தது!” விசாரணைக்குட்பட்ட சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் நீதிமன்றம் பல்வேறு கால அளவுகளில் சிறை தண்டனை அனுபவிக்கும்படி தீர்ப்பளித்தபோதிலும், அங்கே கூடிவந்திருந்த சாட்சிகள் யெகோவாவை எப்போதும் சேவிக்க வேண்டும் என்ற உறுதியைப் பெற்றார்கள்.

வணக்கத்தில் சந்தோஷமாக ஒன்றுபட்டோம்

சோவியத் யூனியனில் இருந்த யெகோவாவின் சாட்சிகளின் நடவடிக்கைகளை முடக்கிவிட்டதாக கேஜிபியினர் நினைத்துக்கொண்டார்கள். ஆகவே, சாட்சிகள்மீது இறுதிக்கட்ட நடவடிக்கை எடுக்கத் தயாரானார்கள். எதிர்பாராத விதமாக, 1960-ஆம் ஆண்டு 450-க்கும் அதிகமான சகோதரர்கள் மார்டிவினியாவில் இருந்த முகாமில் ஒன்றாக சிறை வைக்கப்பட்டார்கள். அமைப்போடு சேர்ந்து செயல்பட்டவர்கள், அமைப்பை விட்டு விலகியிருந்தவர்கள் என இரு சாராரும் அங்கே அடைக்கப்பட்டிருந்தார்கள். இந்த இரு சாராரையும் வழிநடத்திய சகோதரர்களும் அங்கே இருந்தார்கள். இப்படி இரண்டு சாராரையும் ஒன்றாக அடைத்து வைத்தால், அமைப்பை ஒரேயடியாகப் பிரித்து விடலாம் என கேஜிபியினர் திட்டமிட்டார்கள். கட்டாய உழைப்பு முகாமின் செய்தித்தாளில், யார் யாரோடு சண்டையிடுவார்கள் என்று தாங்கள் எதிர்பார்ப்பதை விளக்குகிற இழிவுபடுத்தும் கட்டுரை ஒன்றை அவர்கள் வெளியிட்டார்கள். ஆனால், சகோதரர்கள் ஒரே இடத்திலிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தாங்கள் அனைவரும் ஒன்றுசேருவதற்கான வழியைக் கண்டுபிடித்தார்கள்.

ஐயோவ் அன்ரோநிக் பின்வருமாறு சொல்கிறார்: “முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள், ஒற்றுமையாய் இருக்கும்படி ஒவ்வொரு சாட்சியையும் ஊக்கப்படுத்தினார்கள். அமைப்பை விட்டு விலகியிருந்தவர்களையும்கூட அவ்வாறு ஊக்கப்படுத்தினார்கள். செப்டம்பர் 1, 1961 தேதியிட்ட காவற்கோபுரத்தின் ரஷ்ய பதிப்பில் வெளிவந்த ‘தேவனைப் பிரியப்படுத்தும் மக்களின் ஒற்றுமை வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது’ என்ற கட்டுரைக்கு அவர்கள் விசேஷ கவனம் செலுத்தினார்கள். முற்காலங்களில் தம் மக்களை யெகோவா எப்படி வழிநடத்தினார் என்பதைக் காட்டுகிற நியமங்களும் உதாரணங்களும் அதில் கொடுக்கப்பட்டிருந்தன. கிறிஸ்தவ சபையில் அனைவரும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க முயற்சி செய்ய வேண்டியதற்கான காரணத்தை அது விளக்கியது. அந்தக் கட்டுரையைக் கவனமாகப் படித்த பிறகு, கடவுளுடைய அமைப்போடும் சகோதரர்களோடும் ஒற்றுமையாய் செயல்படுவதன் அவசியத்தை அநேகர் புரிந்துகொண்டார்கள். தேவையான மாற்றங்களையும் செய்தார்கள்.”

ஆன்மீக உணவு சகோதரர்களை ஒன்றுசேர்த்தது

காவற்கோபுர பத்திரிகையில் வெளிவந்த அந்தக் கட்டுரை, சிறைக்கு வெளியிலிருந்த சாட்சிகள் ஒன்றுசேருவதற்கும் உதவியது. முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள் ஜெபம் செய்துவிட்டு, அந்தக் கட்டுரையை ஒன்றுசேர்ந்து வாசித்தார்கள். தன்னுடைய கடைசி பேச்சை சகோதரர் ரதர்ஃபர்ட் ஆகஸ்ட் 1941-ல் நடந்த மாநாட்டில் கொடுத்தார் என்ற செய்தி அதில் வெளியாகியிருந்தது. அவரது உடல்நிலை சரியில்லாதிருந்ததே அதற்குக் காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. யெகோவாவின் அமைப்பில் ஒன்றுபட்டிருக்கும்படியும், மனிதத் தலைவர்களைப் பின்பற்றாதிருக்கும்படியும் அதில் அவர் சகோதரர்களை ஊக்கப்படுத்தியிருந்தார். ‘புதிதாக ஒரு அமைப்பு உருவாகி, வளர ஆரம்பித்தவுடன், யாரோ ஒருவர் அந்தப் பெரிய கூட்டத்திற்குத் தலைவராய் இருப்பதாக சில மக்கள் சொல்கிறார்கள். நான் கர்த்தரின் ஊழியக்காரர்களில் ஒருவன்தான் என்பதையும், நாம் தோளோடு தோள் சேர்ந்து ஒற்றுமையாக உழைக்கிறோம், கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சேவை செய்கிறோம் என்பதையும் நீங்கள் ஒத்துக்கொண்டால் ஆம் என்று பதில் சொல்லுங்கள்’ என்று அந்தப் பேச்சின்போது கேட்டுக்கொண்டிருந்தார். மாநாட்டில் கூடிவந்திருந்த அனைவரும் சத்தமாக ஏககுரலில் “ஆம்!” என்று பதில் அளித்திருந்தார்கள்.

மிக்கேல் சவிட்ஸ்கீ பின்வருமாறு கூறுகிறார்: “அந்தச் சமயத்தில் சோவியத் யூனியனில் இருந்த சாட்சிகளின் மத்தியில் இப்படிப்பட்ட ஒற்றுமை மிகவும் தேவைப்பட்டது. விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்க எங்களுக்கு அன்பாகவும் பொறுமையாகவும் யெகோவா உதவியதற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருந்தோம். அமைப்பை விட்டு விலகிச் செயல்பட்டு வந்த சகோதரர் ஒருவர், அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த தகவலைக் கேட்டதுமே தனக்கு அந்தப் பத்திரிகை வேண்டும் என்றார். ‘இதை என்னிடம் கொடுங்கள். ப்ராட்ஸ்க் நகரிலும் மற்ற இடங்களிலும் உள்ள சகோதரர்களிடம் இதை வாசித்துக் காட்ட வேண்டும்’ என்று சொன்னார். இந்தப் பத்திரிகையின் ஒரு பிரதி மட்டுமே என்னிடம் இருக்கிறதெனச் சொன்னேன். ஒரே வாரத்தில் அதைத் திருப்பித் தந்துவிடுவதாக உறுதி அளித்தார். சொன்னபடியே செய்தார். அதோடு, பல சபைகள் நீண்ட காலமாக அனுப்பி வைக்காதிருந்த ஊழிய அறிக்கைகளையும் அவர் சேகரித்து வந்தார். யெகோவாவின் வணக்கத்தாருடைய ஒன்றுபட்ட குடும்பத்திற்கு, அமைப்பை விட்டு விலகிச் சென்ற சகோதர சகோதரிகளில் நூற்றுக்கணக்கானோர் திரும்பி வந்தார்கள்.”

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நாட்டு ஆலோசனை குழுவில் சேவை செய்து வந்த ஈவான் பாஷ்கோவ்ஸ்கி பின்வருமாறு சொல்கிறார்: “ஒற்றுமையாகச் செயல்பட்டு, கடவுளுடைய ஏற்பாட்டிற்குக் கீழ்ப்படியும்படி நாட்டிலுள்ள அனைத்து சகோதரர்களிடமும் சகோதரர் நாரைச் சொல்லச் சொன்னோம். இந்தத் தகவலை வெளிநாட்டிலிருந்து இங்கு வந்திருந்த சகோதரர் மூலமாக அவருக்குத் தெரியப்படுத்தினோம். விஷயத்தைக் கேட்டதும் சகோதரர் நார் சம்மதித்தார். 1962-ல் அவர் எழுதிய கடிதத்தின் 25 பிரதிகள் எங்களுக்குக் கிடைத்தன. அந்தக் கடிதம் ஆங்கிலத்திலும் ரஷ்ய மொழியிலும் இருந்தது. உண்மையில், அமைப்போடு சேர்ந்து செயல்பட வேண்டுமென்ற உணர்வை இந்தக் கடிதம் அநேகருக்கு ஏற்படுத்தியது.”

மேய்ப்பனுடைய சத்தத்தை ஆடுகள் கேட்கின்றன

சகோதரர்களை ஒன்றுபடுத்த நாட்டு ஆலோசனைக் குழு கடுமையாகப் பாடுபட்டது. அப்போதிருந்த சூழ்நிலையில் இது சாதாரண வேலை அல்ல. 1962-ஆம் ஆண்டின் கோடைகாலத்திற்குள்ளாக, ஒரு மாவட்டம் முழுவதும் அமைப்புடன் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தது. அமைப்பை விட்டு விலகிப்போனவர்களை மறுபடியும் அமைப்பிற்குள் ஒன்றுசேர்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு விசேஷ குழுவில் அனுபவமுள்ள சகோதரர்கள் நியமிக்கப்பட்டார்கள். ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ தந்து, இவர்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்தார். (யாக். 3:17) 1986 முதல் 1995 வரை வட்டாரக் கண்காணியாக சேவை செய்து வந்த அலிக்ஸே கபுர்யாக் என்பவர் பின்வருமாறு கூறினார்: “உசோல்யி-சிபிர்ஸ்கயா பகுதியில் நாட்டு ஆலோசனைக் குழுவினரை 1965-ல் சந்தித்தோம். நாடு கடத்தப்படுதல், சிறையிருப்பு, அமைப்பிலிருந்து பிரிந்து போனது போன்ற காரணங்களால் ஆங்காங்கே சிதறியிருந்த சகோதர சகோதரிகளைக் கண்டுபிடித்து அவர்களைச் சபைகளோடு திரும்பவும் ஒன்றுசேர்க்கும் பணியை நாட்டு ஆலோசனைக் குழுவினர் எங்களிடம் ஒப்படைத்தார்கள். முதலில், சிலருடைய விலாசங்கள் எங்களிடம் கொடுக்கப்பட்டன. டோம்ஸ்க் மற்றும் கெமிரோவோ ஆப்லாஸ்ட்டையும் நோவோகுஜ்னெட்ஸ்க், நோவோசிபிரிஸ்க் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கிய பகுதிதான் எங்கள் பிராந்தியம். பிற சகோதரர்களுக்கு வேறு பிராந்தியங்கள் ஒதுக்கப்பட்டன. சபைகளையும் தனிப்பட்ட தொகுதிகளையும் ஒழுங்கமைத்து, தகுதியுள்ள சகோதரர்களுக்குப் பயற்சி அளித்து அவர்களுக்குச் சபைகளில் பொறுப்புகளைக் கொடுப்பதே எங்களுடைய பணி. அதோடு, பிரசுரங்களைக் கொண்டு செல்வதற்கான வழியைத் தீர்மானித்து, சபை கூட்டங்களை ஒழுங்கமைக்கவும் வேண்டியிருந்தது; இதையெல்லாம், தடை உத்தரவு அமலில் இருந்த அந்தக் கடினமான சூழ்நிலைகள் மத்தியில் செய்ய வேண்டியிருந்தது. வெகு விரைவிலேயே, அமைப்போடு தொடர்பே இல்லாதிருந்த 84 சகோதர சகோதரிகளைக் கண்டுபிடித்தோம். ‘ஆடுகள்’ மறுபடியுமாக நல்ல மேய்ப்பனின் சத்தத்தைக் கேட்டு, யெகோவாவுடைய மக்களோடு சேர்ந்து சேவை செய்ததைக் கண்டு நாங்கள் மிகவும் சந்தோஷப்பட்டோம்.”—யோவா. 10:16.

சீக்கிரத்திலேயே, அமைப்பிலிருந்து பிரிந்து செயல்பட்டு வந்த ஆட்கள் நாட்டு ஆலோசனைக் குழுவின் வழிநடத்துதலை ஏற்றுக்கொண்டு, தங்கள் ஊழிய அறிக்கைகளை அனுப்பி வைக்க ஆரம்பித்தார்கள். 1971-க்குள்ளாக 4,500-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்துகொண்டார்கள். 1985 வாக்கில், தடையின் மத்தியிலும் பிரசங்க வேலை தொடர்ந்து நடைபெற்று வந்தது, புதியவர்கள் சபைகளுக்கு வர ஆரம்பித்தார்கள்.

மதிப்புள்ள சின்னச் சின்ன சுருள்கள்

பிரசுரங்களை நகல் எடுக்கும் பெரும் முயற்சியில் சகோதரர்கள் இறங்கினார்கள், சோவியத் யூனியனில் இருந்த தைரியமுள்ள சகோதரர்கள் ஜாக்கிரதையாக இந்த வேலையில் ஈடுபட்டார்கள். முதலில், அவர்களுக்கு எப்படிப் பிரசுரங்கள் கிடைக்க ஆரம்பித்தன?

பொதுவாக, சின்னச் சின்ன புகைப்பட சுருள்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. அண்டை நாடுகளில் உள்ள சகோதரர்கள் நம்முடைய பத்திரிகைகள், புத்தகங்கள், சிற்றேடுகள் ஆகியவற்றை புகைப்படம் எடுத்தார்கள். முக்கியமாக ரஷ்யன், உக்ரேனியன் மொழியில் வெளியிடப்படும் பிரசுரங்களை மட்டுமின்றி, மற்ற அநேக மொழி பிரசுரங்களையும் புகைப்படம் எடுத்தார்கள். 30 மீட்டர் நீளமுள்ள புகைப்படச் சுருளை அதற்குரிய கேமராவில் பயன்படுத்தி ஒவ்வொரு பக்கத்தையும் மிகக் கவனமாகப் புகைப்படம் எடுத்தார்கள். ஒவ்வொரு பிரசுரத்தையும் பலமுறை புகைப்படம் எடுத்தார்கள். பல நகல்கள் இருந்தால் விநியோகிக்க வசதியாயிருக்குமே! இப்படிப் பல ஆண்டுகளாகப் பதிவுசெய்ய பயன்படுத்தப்பட்ட சுருளின் நீளத்தைக் கணக்கிட்டால் அவை பல கிலோமீட்டர் நீளம் இருக்கும். எளிதாய் பயன்படுத்துவதற்காக, படச்சுருள்கள் சுமார் 20 சென்டிமீட்டர் நீளத்திற்கு வெட்டப்பட்டன. பின்னர் கூரியர் மூலமாக அவை சோவியத் யூனியனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

சைபீரியாவில் இரகசிய அச்சகங்கள்

பைபிள் பிரசுரங்களை நகலெடுப்பது கடினமான வேலையாக இருந்தது. எனினும், யெகோவா அந்த வேலையை ஆசீர்வதித்தார். 1949-க்கும் 1950-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மட்டுமே, சகோதரர்கள் பல்வேறு பிரசுரங்களைப் பிரதியெடுத்து 47,165 நகல்களைச் சபைகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அதோடு, கடும் எதிர்ப்பின் மத்தியிலும், அதே காலப்பகுதியில் 31,448 கூட்டங்கள் அந்நாட்டில் நடத்தப்பட்டதாக நாட்டு ஆலோசனைக் குழு தெரிவித்தது.

பிரசுரங்களுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே இருந்ததால், புதிய அச்சகங்களும் அவசியமாயின. ஸ்டாக் சவிட்ஸ்கீ இவ்வாறு சொல்கிறார்: “1955-ல் இரகசிய அச்சகம் ஒன்றை எங்கள் வீட்டில் நிறுவினோம். என்னுடைய அப்பா யெகோவாவின் சாட்சியாக இல்லாததால், இதற்கு முதலாவது அவருடைய அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. எங்களுடைய வீட்டின் வராண்டாவிற்குக் கீழே தோண்டி, சுமார் 2-க்கு 4 மீட்டர் என்ற கணக்கில் ஓர் அறையைக் கட்டினோம். இந்த வேலையைச் செய்து முடிக்க கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆயின. கிட்டத்தட்ட 30 கனசதுர மீட்டர் அளவிற்கு மண்ணைத் தோண்டி எடுத்தோம். இந்த மண்ணை வெளியே எடுத்துச் சென்று யாருக்கும் சந்தேகம் வராத வகையில் மறைத்துவைக்க வேண்டியிருந்தது. நிலத்தின் அடியில் 1.5 மீட்டர் ஆழத்தில், நிரந்தரமாக உறைந்துபோயிருந்த பகுதி தட்டுப்பட்டது. நாங்கள் வேலைக்குப் போன பிறகு, அம்மா அதை உருக்குவதற்காக அதன்மீது விறகுகளை வைத்து லேசாக நெருப்பு எரிந்துகொண்டிருக்கும்படி செய்வார். இதையும் அக்கம்பக்கத்தாரின் கவனத்தை ஈர்க்காதபடி ஜாக்கிரதையாகச் செய்வார். பிறகு, நாங்கள் அந்தக் குழியில் பலகைகளைக் கொண்டு, தரையையும் மேற்கூரையையும் அமைத்தோம். எல்லாம் தயாரானதும், ஒரு தம்பதியர் அங்கு வந்து தங்கி, வேலை செய்தார்கள். அம்மா அவர்களுக்குச் சமைத்துப்போடுவது, துணிகளைத் துவைப்பது என எல்லாவற்றையும் செய்துகொடுத்து கவனித்துக்கொண்டார். 1959 வரை அந்த அச்சகம் செயல்பட்டு வந்தது.

“1957-ல், பிரசுரங்களை நகல் எடுக்கும் பணியை மேற்பார்வை செய்துவந்த சகோதரர் என்னிடம், ‘உன்னால் அச்சகத்தில் வேலை செய்ய முடியுமா? ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 200 பத்திரிகைகளையாவது நாம் தயாரிக்க வேண்டும்’ என்றார். முதலில் நான் 200 பத்திரிகைகளைத் தயாரித்தேன், பின்னர் அந்த எண்ணிக்கை 500-ஆக உயர்ந்தது. என்றாலும், பத்திரிகைகளுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த வேலையை நாங்கள் இரவு நேரத்தில்தான் செய்ய வேண்டியிருந்தது. ஏனெனில், நாடுகடத்தப்பட்டிருந்த எங்களைப் போன்றவர்கள் பகலில் ஒரு மேற்பார்வையாளரின் கீழ் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதோடு, வாரத்தில் ஒரேவொரு நாள்தான் எங்களுக்கு விடுமுறையும் கிடைத்தது.

“வீடு திரும்பியதும் இரகசிய அச்சகத்திற்குப் போய்விடுவேன். அப்போதெல்லாம் நான் தூங்கவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அச்சடிக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டால், அது முடியும்வரை தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. அச்சு மை விரைவாக உலர்ந்துவிடும் தன்மையுள்ளதால் வேலையை நிறுத்திவிட்டு பிறகு செய்யலாம் என்ற பேச்சுக்கே இடமில்லாதிருந்தது. சில சமயங்களில் நான் 500 பக்கங்களை அச்சடித்துவிட்டு, மறுபடியும் அதை வாசித்து, ஊசியின் உதவியால் அதில் சின்னச் சின்ன திருத்தங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அப்போதுதான், அதிலிருக்கும் எழுத்துகளைத் தெளிவாக வாசிக்க முடியும். அங்கே போதுமான காற்றோட்ட வசதி இல்லாதிருந்ததால், அச்சடிக்கப்பட்ட பக்கங்களை உலர வைப்பது பெரும்பாடாய் இருந்தது.

“எங்கள் வீட்டிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் டுலூன் நகரத்திற்கு, இரவு நேரத்தில் பத்திரிகைகளை எடுத்துச் சென்று கொடுப்பேன். அங்கிருந்து அவை எங்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இந்தப் பிரசுரங்களை க்ரஸ்னோயார்ஸ்க், ப்ராட்ஸ்க், உசோல்யி-சிபிர்ஸ்கயா உட்பட பல நகரங்களிலும் மாநகரங்களிலும் இருக்கிற சாட்சிகள் பயன்படுத்துவது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது.

“1959-ல், ரயில் நிலையத்திற்கு அடுத்துள்ள டுலூனில் புதிய அச்சகம் அமைப்பதில் உதவும்படி இந்தப் பணியை மேற்பார்வை செய்துவந்த சகோதரர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். முதல் அச்சகத்தில் செய்திருந்ததைப்போலவே, குழி தோண்டுவது, மின் விளக்கை அமைப்பது போன்ற எனக்கு நன்கு தெரிந்த வேலைகளை மறுபடியும் செய்தேன். யெகோவா எங்களுக்கு ஞானத்தை அளித்தார். ஒரு குடும்பத்தார் அந்த அச்சகத்திற்குக் குடிமாறிச் சென்று, சுமார் ஓராண்டு காலம் அங்கு வேலை செய்தார்கள். கொஞ்ச காலத்திற்குப் பிறகு, கேஜிபியினர் இந்த அச்சகத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். ‘திறமையான எலக்ட்ரீஷியன்களே புரிந்துகொள்ளத் திணறுமளவிற்கு மின் அமைப்புகள் இருந்ததாக’ உள்ளூர் செய்தித்தாளில் தகவல் வெளியானது.

“என் குடும்பத்தாரைத் தவிர, ஒருசில சகோதரர்களுக்கு மட்டுமே நான் அச்சகத்தில் வேலை செய்தது தெரிந்திருந்தது. மாலை நேரங்களில் யார் கண்ணிலும் நான் படாததால், ஒருவேளை அமைப்பை விட்டு விலகிச் செல்கிறேனோ என்று சபையிலிருந்த சகோதர சகோதரிகள் கவலைப்பட்டார்கள். என்னைச் சந்தித்து உற்சாகப்படுத்துவதற்காக அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். ஆனால், நான் வீட்டிலேயே இருக்க மாட்டேன். கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு கேஜிபியினர் கண்காணித்து வந்த அந்தக் காலப்பகுதியில், இந்த இரகசியத்தை வெளியிடாமல் வாய்க்குப் பூட்டு போட்டிருந்ததால்தான் அச்சகத்தை தொடர்ந்து நடத்த முடிந்தது.”

மாஸ்கோவில் பத்திரிகைகளை நகல் எடுத்தல்

யெகோவாவின் சாட்சிகளுக்கு பைபிள்களும் பைபிள் பிரசுரங்களும் அவசரமாகத் தேவைப்படுவதை அதிகாரிகள் நன்கு அறிந்திருந்தார்கள். பைபிள் பிரசுரங்களை அச்சிட அல்லது இறக்குமதி செய்ய ஆளும் குழு திரும்பத் திரும்ப அனுமதி கோரியும்கூட, அது நிராகரிக்கப்பட்டது, உதாசீனப்படுத்தப்பட்டது. பிரசுரங்களுக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவியதால் மாஸ்கோ உட்பட பல்வேறு பகுதிகளில் அவற்றை நகல் எடுப்பதற்குச் சகோதரர்கள் தொடர்ந்து வழிகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்படிச் செய்தால்தானே, சபைகளுக்கும் தொகுதிகளுக்கும் ஆன்மீக உணவை அளிக்க முடியும்.

ஒரு காவற்கோபுர பிரதி வீட்டில் இருந்ததற்காக, 1957-ல் ஸ்டீபான் லவிட்ஸ்கீ என்பவருக்குப் பத்தாண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்தப் பத்திரிகை அவருடைய சாப்பாட்டு மேஜை விரிப்பிற்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்டீபான் பின்வருமாறு கூறுகிறார்: “மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. நான் விடுதலையாவதற்கு முன்பு, மாஸ்கோவிற்குப் பக்கத்திலிருக்கும் ஏதாவதொரு இடத்திற்குச் சென்று, ஊழியத்திலும் சபை காரியங்களிலும் ஈடுபடும்படி சகோதரர்கள் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். மாஸ்கோவிலிருந்து இரண்டு மணிநேர பிரயாண தூரத்தில் உள்ள பகுதியில் தங்க எனக்கு வீடு கிடைத்தது. மாஸ்கோவின் பல்வேறு பகுதிகளில் பிரசங்கிக்க ஆரம்பித்தேன். என் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, சகோதர சகோதரிகளின் ஒரு தொகுதி மாஸ்கோவில் ஒழுங்கமைக்கப்பட்டது. 1970-ல், மாஸ்கோ, லெனின்கிராட் (இப்போது செ. பீட்டர்ஸ்பர்க்), கார்கி (இப்போது நிஜினி நாவ்கோராட்), ஓரெல், துலா ஆகிய இடங்களை உள்ளடக்கிய வட்டாரத்தின் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். சபைகளுக்குப் பிரசுரங்களைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது.

“மாஸ்கோவிலும் ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் உள்ளவர்களுக்குப் போதுமானளவு பைபிள் பிரசுரங்கள் கிடைக்க வேண்டுமென்றே யெகோவா விரும்புகிறார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. இதன் சம்பந்தமாய் கூடுதலாய் சேவை செய்ய விரும்புவதாக யெகோவாவிடம் ஜெபம் செய்தேன். சீக்கிரத்திலேயே, அச்சக வேலையில் நிபுணரான ஒருவருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மாஸ்கோவில் உள்ள பல அச்சகங்களோடு அவருக்குத் தொடர்பு இருந்தது. மாஸ்கோவிலுள்ள ஏதாவதொரு அச்சகத்தில், கொஞ்சம் புத்தகங்களை அச்சிட்டுத் தர முடியுமாவென்று பேச்சுவாக்கில் அவரிடம் கேட்டேன்.

“‘எந்த புத்தகத்தை?’ என்று கேட்டார்.

“‘பரதீஸ் இழக்கப்பட்டதிலிருந்து பரதீஸ் திரும்பப் பெறும் வரையில்’ என்றேன் நடுக்கத்துடன்.

“அவருடைய நெருங்கிய ஒரு நண்பர் அச்சகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அவர் ஒரு கம்யூனிஸவாதி. கட்சி ஒன்றின் தலைவர். பணத்தைப் பெற்றுக்கொண்டு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் அந்தப் புத்தகங்களை அச்சிட்டுத் தர ஒத்துக்கொண்டார். பைபிள் படிப்பு நடத்த உதவியாய் இருந்த அந்தப் புத்தகம் கிடைத்ததும் சகோதரர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

“நம்முடைய பிரசுரங்களை இப்படி அச்சடிப்பது, எனக்கு மட்டுமின்றி அச்சடிப்பவருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்தது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. பொதுவாக, இரவு நேரத்தில்தான் அச்சகத்திலிருந்து புத்தகங்கள் யார் கண்ணிலும் படாமல் உடனடியாக வெளியே எடுத்துச் செல்லப்பட்டன. யெகோவா இந்த ஏற்பாட்டை ஆசீர்வதித்தார். ஏகப்பட்ட பைபிள் பிரசுரங்கள் இங்கு அச்சிடப்பட்டன. “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்,” நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் ஆகிய புத்தகங்களும் பாட்டு புத்தகமும்கூட இப்படி அச்சிடப்பட்டன. இது ஏற்ற காலத்தில் கிடைத்த உணவு என்பதில் சந்தேகமே இல்லை! (மத். 24:45) இந்த அச்சகத்தை நாங்கள் ஒன்பது வருடங்களுக்குப் பயன்படுத்தினோம்.

“ஆனால், ஒருநாள் நம்முடைய பிரசுரங்களில் ஒன்று அச்சாகிக்கொண்டிருந்த சமயத்தில் அச்சகத்தின் மேற்பார்வையாளர் திடுதிப்பென்று அங்கு வந்துவிட்டார். அச்சு இயந்திரத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்து, ஆரோக்கியத்தைப்பற்றிய பத்திரிகை ஒன்றை அச்சகர் அச்சிட ஆரம்பித்தார். ஆனால் அவசரத்தில், நம்முடைய பிரசுரங்களின் ஆறு பக்கங்களை அதோடு சேர்த்துவிட்டார். மேற்பார்வையாளர் புதிதாக அச்சான பத்திரிகையை தன் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். பத்திரிகையை வாசிக்கும்போது இடையே கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத தகவல்கள் அச்சிடப்பட்டுள்ளதைப் பார்த்து அவர் அதிர்ந்துபோனார். அச்சகரை தன் அலுவலகத்திற்கு அழைத்து, அந்தத் தகவல் எப்படி இந்தப் பத்திரிகையில் வந்தது என்று விசாரித்தார். அதன் பிறகு, கேஜிபியினர் இதை விசாரிக்கத் தொடங்கினார்கள். உண்மையைச் சொல்லாவிட்டால் நீண்ட கால சிறை தண்டனை கிடைக்குமென கேஜிபியினர் அச்சகரை பயமுறுத்தினார்கள். அவரும் பயந்துபோய், தனக்குத் தெரிந்த உண்மைகள் அனைத்தையும் சொல்லிவிட்டார். இதனால், கேஜிபியினர் சீக்கிரத்திலேயே என்னைப் பிடித்துவிட்டார்கள். ஏனெனில், மாஸ்கோவில் அவர்களுக்கு தெரிந்திருந்த ஒரே யெகோவாவின் சாட்சி நான்தான். எனக்கு ஐந்தரை ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது.” அச்சகருக்கு மூன்று ஆண்டு கால சிறை தண்டனை கிடைத்தது.

“அர்மகெதோன் வருவதாக!”

அநேக சகோதர சகோதரிகள் சிறைச்சாலையில் நீண்ட காலம் தண்டனை அனுபவித்தார்கள். உதாரணமாக, க்ரிகரி கடிலஃப் என்பவர் 15 ஆண்டுகளைச் சிறையில் செலவிட்டார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் கடைசியாக தண்டனை அனுபவித்த சிறைக்கு மிகவும் அழகான பெயர் இருந்தது. அதன் பெயர் வெள்ளை அன்னம். காகஸஸ் பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அது அமைந்திருந்தது; அங்கிருந்த ஐந்து மலைகளில் ஒன்றின்மீது அது வீற்றிருந்தது. சுற்றிலும் அந்த மலைகளால் சூழப்பட்ட பிடிகார்ஸ்க் என்ற சுற்றுலா தலம் அங்குதான் இருந்தது. இந்தச் சிறையில் இருந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு ஆட்களுக்குச் சத்தியத்தை அறிவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என் சிறை அறையே பிரசங்கிப்பதற்கான என் ‘பிராந்தியமாக’ அமைந்துவிட்டதால், வேறெங்கும் போக அவசியம் இருக்கவில்லை. ஏனெனில், சிறைக் காப்பாளர்கள் அந்த அறையில் புதிய புதிய ஆட்களை அடைத்தார்கள், ஒருசில நாட்களுக்குப் பிறகு அவர்களை அழைத்துப் போய்விடுவார்கள். என்னை மட்டும் இடம் மாற்றவே இல்லை. எப்போதாவதுதான் என்னை வேறொரு அறைக்கு மாற்றுவார்கள். யெகோவாவின் ராஜ்யத்தைப்பற்றி எல்லாருக்கும் முழுமையாகச் சாட்சி கொடுக்க நான் முயற்சி செய்தேன். அநேகர் அர்மகெதோனைப்பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். மத நம்பிக்கைக்காக இத்தனை ஆண்டுகளைச் சிறையில் கழிக்க நான் தயாராயிருப்பதைப் பார்த்து கைதிகள் சிலர் ஆச்சரியப்பட்டார்கள். ‘இந்த மதத்தை உதறித்தள்ளிவிட்டு, வீட்டுக்குப் போக வேண்டியதுதானே?’ என்று சக கைதிகளும் சில சமயங்களில் சிறைக் காப்பாளர்களும் என்னிடம் சொல்வதுண்டு. அவர்களில் யாராவது சத்தியத்தைத் தெரிந்துகொள்ள உள்ளப்பூர்வமான ஆர்வம் காட்டும்போது எனக்குச் சந்தோஷமாக இருக்கும். ஒருசமயம், சிறை அறை ஒன்றின் சுவற்றில் யாரோ ‘அர்மகெதோன் வருவதாக!’ என்று கிறுக்கியிருந்தார்கள். பொதுவாக சிறை வாழ்க்கை சந்தோஷத்தைத் தராவிட்டாலும்கூட, சத்தியத்தைப் பிரசங்கிக்க அங்கு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட்டேன்.”

“யோனதாபுகள் யாராவது இங்கு இருக்கிறீர்களா?”

யெகோவாவை ஊக்கமாக சேவித்து வந்த கிறிஸ்தவ சகோதரிகளில் அநேகரும்கூட சிறையில் காலம் தள்ளினார்கள். (சங். 68:11, NW) சகோதரிகள் தங்களிடையே மட்டுமின்றி, பிற கைதிகளிடமும் எவ்வாறு அன்பு காட்டினார்கள் என்பதை ஜினயிடா கோஸிரிவா இவ்வாறு சொல்கிறார்: “1959-ல், நானும் வீரா மிக்ஹாய்லவாவும் ல்யூட்மிலா யிஃப்ஸ்டாஃப்யிவாவும் சைபீரியாவில் உள்ள கெமிரோவோ முகாமிற்கு அனுப்பப்பட்டோம். அப்போது நான் முழுக்காட்டுதல் எடுத்து ஓராண்டுகூட ஆகியிருக்கவில்லை. அந்த முகாமில் 550 கைதிகள் இருந்தார்கள். நாங்கள் அங்கு சென்றபோது, பெண்கள் அநேகர் வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள்.

“‘யோனதாபுகள் யாராவது இங்கு இருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள்.

“அவர்கள் நம் அன்பு சகோதரிகள் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். உடனடியாக உணவளித்து, எங்களைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் உண்மையான அன்பையும், கரிசனையையும் காட்டினார்கள். அதை நான் என் குடும்பத்தில்கூட ருசித்ததில்லை. நாங்கள் அந்த முகாமிற்கு புதிதாய் வந்திருந்ததால், அந்தச் சகோதரிகள் எங்களுக்கு ஆதரவாக தோள் கொடுத்தார்கள். (மத். 28:20) நாங்கள் யெகோவாவிடம் நெருங்கி வர உதவும் ஏற்பாடுகள் இங்கு மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது சீக்கிரத்திலேயே எங்களுக்குத் தெரிய வந்தது.

“நாங்கள் உண்மையில் ஒரே குடும்பமாக ஆகிவிட்டோம். கோடைகாலத்தில் புல் அறுக்கும் சமயம் அருமையாக இருக்கும். நாங்கள் தப்பி ஓடிவிடுவோம், முகாம் சட்டத்தை மீறிவிடுவோம் என்ற பயமெல்லாம் அந்த முகாம் நிர்வாகத்திற்கு இருக்கவில்லை. 20, 25-க்கும் அதிகமான சகோதரிகள் அங்கு இருந்தும், எங்களைக் கண்காணிப்பதற்கு ஒரேவொரு காவலாளிதான் இருந்தார். உண்மையைச் சொன்னால், நாங்கள்தான் அவருக்கு காவலாக இருந்தோம். யாராவது வந்தால், தூங்கிக்கொண்டிருக்கும் அவரை உடனடியாக எழுப்பி விடுவோம். இல்லாவிட்டால், வேலை நேரத்தில் தூங்கியதற்காக அவருக்குத் தண்டனை கிடைக்குமே. அவர் தூங்கிக்கொண்டிருக்க, நாங்களோ ஓய்வு நேரங்களில் பைபிள் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசுவோம். இந்த ஏற்பாடு எங்களுக்கும், அவருக்கும் ரொம்ப உதவியாயிருந்தது.

“1959- இறுதியில், சகோதரிகளில் சிலரும் நானும் கடுங்காவல் சிறைக்கு மாற்றப்பட்டோம். எங்களை அடைத்திருந்த அறை பயங்கர குளிராக இருந்தது. அங்குள்ள ஜன்னலில் கண்ணாடியே இல்லை. இரவு நேரத்தில், பலகைகள்மீது தூங்கினோம், பகலில் வேலை செய்தோம். காய்கறிகளை தனித்தனியாக பிரித்து வைக்கும் வேலையை எங்களுக்குக் கொடுத்துவிட்டு, எங்களைக் கண்காணித்தார்கள். மற்ற கைதிகளைப் போல நாங்கள் திருடுவதில்லை என்பது உறுதியானதும், தூங்கும்போது பரப்பிக்கொள்ள கொஞ்சம் வைக்கோல் கொடுத்தார்கள். ஜன்னலில் கண்ணாடியைப் பொருத்தினார்கள். ஓராண்டு காலத்தை அங்கே செலவிட்டோம். அதன் பிறகு, இர்குட்ஸ்க் என்ற இடத்தில் இருக்கும் சாதாரண சிறைக்கு சகோதரிகள் அனைவரும் அனுப்பப்பட்டோம்.

“இந்த முகாமில் சுமார் 120 சகோதரிகள் இருந்தார்கள். அங்கு ஓராண்டையும் மூன்று மாதங்களையும் செலவிட்டோம். அங்கு சென்றபோது எதிர்ப்பட்ட முதல் குளிர்காலத்தில் பயங்கர குளிரில் திண்டாடினோம், பனி பொழிவும் அதிகமாக இருந்தது. மரம் அறுக்கும் ஓர் ஆலையில் நாங்கள் கடினமாக வேலை செய்தோம். பிரசுரங்கள் ஏதேனும் எங்களிடம் இருக்கிறதாவென்று மேற்பார்வையாளர்கள் அடிக்கடி சோதனையிடுவார்கள். நேரத்தைப் போக்க இதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை இல்லையோ என்று எங்களுக்குத் தோன்றும். நாங்களும் பிரசுரங்களை ஒளித்து வைப்பதில் கில்லாடிகளாய் ஆகிவிட்டோம். சிலசமயங்களில் கையில் கிடைக்காதபடி எங்கேயாவது நன்றாக ஒளித்துவைத்து விடுவோம். ஒருசமயம், நானும் வீராவும் அந்த நாளுக்கான தினவசனத்தை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி, எங்களாலேயே அதைக் கண்டுபிடிக்க முடியாதபடி எங்கேயோ ஒளித்து வைத்துவிட்டோம். வேலை செய்யும்போது நாங்கள் அணியும் மேற்சட்டையில்தான் அது இருந்தது. ஆனால், மேற்பார்வையாளர் ஒருவர் அதைக் கண்டுபிடித்துவிட்டார். அதனால், நானும் வீராவும் ஐந்து நாட்களுக்குத் தனிச்சிறையில் அடைக்கப்பட்டோம். அங்கு -40 டிகிரி செல்ஷியஸைவிட அதிக குளிர் நிலவியது. சூடேற்றப்படாத அந்த அறையின் சுவர்களில் பனி உறைந்து கிடந்தது.

அந்த அறைகளில் சிமெண்டாலான சிறிய அலமாரிகள் இருந்தன. உட்காருவதற்கு மட்டுமே அந்த இடம் போதுமானதாய் இருக்கும். குளிரைத் தாங்க முடியாதபோது, கால்களை இறுக்கமாக மடக்கிக்கொண்டு, முதுகும் முதுகும் உரசும்படி இருவரும் உட்கார்ந்துகொள்வோம். அப்படியே தூங்கி விடுவோம். திடீரென கண்விழித்து, தூக்கத்திலேயே உறைந்துபோய் செத்துவிடக் கூடாதென்ற பயத்தில் எழுந்துவிடுவோம். நாங்கள் ஒரு குவளையில் வெந்நீரையும், 300 கிராம் கருப்பு ரொட்டியையும் தினசரி பெற்றோம். இந்தக் கடினமான சூழ்நிலையிலும், யெகோவா எங்களுக்கு ‘இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியைக்’ கொடுத்ததால் சந்தோஷமாக இருந்தோம். (2 கொ. 4:7, NW) சிறைக் குடியிருப்பிற்குத் திரும்பிச் செல்ல எங்களுக்கு அனுமதி கிடைத்தபோது, சகோதரிகள் அதிகக் கரிசனையோடு எங்களைக் கவனித்துக்கொண்டார்கள். நாங்கள் அங்கே சென்றபோது, எங்களுக்காக சூடான உணவையும், குளிப்பதற்கு வெந்நீரையும் தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.”

“மற்றவர்களோடு நன்கு ஒத்துப்போகிறாள்”

ஜினயிடா இவ்வாறு கூறுகிறார்: “இந்த முகாமில் பிரசங்கிப்பது ரொம்பக் கடினம். ஏனெனில், கைதிகளின் எண்ணிக்கை இங்கு மிகக் குறைவு; அதோடு, சாட்சிகளைப்பற்றி எல்லாருக்குமே தெரிந்திருந்தது. 1 பேதுரு 3:1-ல் காணப்படும் நியமம் இந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருந்தது. வார்த்தைகள் மூலமாக அல்ல, எங்களுடைய நடத்தையின் மூலமாகப் பிரசங்கிப்பதாக உணர்ந்தோம். நாங்கள் தங்கியிருந்த இடத்தைச் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொண்டோம். ஒருவருக்கொருவர் அன்பாகவும் ஆதரவாகவும் நடந்துகொண்டோம். (யோவா. 13:34, 35) சாட்சிகளாக இல்லாதவர்களிடமும் நாங்கள் நன்கு பழகினோம். கடவுளுடைய வார்த்தையில் சொல்லப்பட்டுள்ள விதமாக நடந்துகொள்ள முயற்சி செய்தோம். மற்றவர்களுடைய தேவைகளுக்குக் கரிசனையோடு கவனம் செலுத்தினோம். சில சமயங்களில், சாட்சிகளாக இல்லாதவருக்குப் பல்வேறு விதங்களில் உதவி செய்தோம். உதாரணமாக, கணக்குப் போடுவதில் உதவி தேவைப்பட்ட மற்ற கைதிகளுக்கு ஒரு சகோதரி மனமுவந்து உதவினார். யெகோவாவின் சாட்சிகள் மற்ற மதத்தாரைப் போன்றவர்கள் அல்ல என்பதை அநேகர் புரிந்துகொண்டார்கள்.

“1962-ல் இர்குட்ஸ்க் முகாமிலிருந்து மார்டிவினியாவில் உள்ள முகாம் ஒன்றிற்கு மாற்றப்பட்டோம். இங்கும் நேர்த்தியான தோற்றத்தோடு, சுத்தமாக, சுகாதாரமாக இருக்க முயற்சி செய்தோம். எங்கள் படுக்கைகளை எப்போதுமே சுத்தமாகவும், விரிப்புகளை நேர்த்தியாக விரித்தும் வைத்திருந்தோம். அந்தக் குடியிருப்பில் சுமார் 50 கைதிகள் இருந்தார்கள், அவர்களில் பெரும்பாலோர் நம்முடைய சகோதரிகள். அவர்கள் மட்டும்தான் குடியிருப்புகளைச் சுத்தம் செய்தார்கள்; ஏனெனில், இதுபோன்ற வேலைகளைச் செய்ய மற்ற கைதிகளுக்குப் பிடிக்கவில்லை. எப்போதும் குடியிருப்பின் தரைகளைக் கழுவி, மண்ணைப் போட்டு தேய்த்து சமதளமாக்குவோம். அதற்குத் தேவையான பொருள்களை முகாம் நிர்வாகம் எங்களுக்கு அளித்தது. எங்களோடு அதே குடியிருப்பில் இருந்த கன்னியாஸ்திரீகள் இப்படிச் சுத்தம் செய்ய மறுத்தார்கள், மெத்த படித்தவர்களுக்கும் இந்த வேலைகளையெல்லாம் செய்யப் பிடிக்கவில்லை. ஆகவே, குடியிருப்பைப் பெரும்பாலும் நாங்கள்தான் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. சகோதரிகளில் ஒருவர் விடுதலையாகும்போது, அவரைப் பற்றிய அறிக்கையில், இவள் ‘சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்கிறாள், மற்றவர்களோடு நன்கு ஒத்துப்போகிறாள்’ என்று நிர்வாகத்தார் குறிப்பிட்டார்கள்.”

எங்களை நன்கு மறைக்க உயரமான பூச்செடிகள்

ஜினயிடா இவ்வாறு சொல்கிறார்: “பெரிய பெரிய பூக்கள் பூக்கிற செடிகளின் விதைகளை அனுப்பி வைக்கும்படி பல சகோதரிகள் தங்கள் வீட்டிற்கு ஒருமுறை கடிதம் எழுதினார்கள். நாங்கள் அழகழகான பூச்செடிகளை நடுவதற்கு விரும்புவதால், வளமான கரிசல் மண் கொஞ்சம் கிடைக்குமாவென்று நிர்வாகத்தினரிடம் கேட்டோம். அவர்களும் அதற்கு உற்சாகமாய் தலையசைத்தது எங்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது. குடியிருப்புகள் அருகே விதைகளைத் தூவி, மலர் பாத்திகளை அமைத்தோம். நீண்ட பாதைகளை அமைத்து வழிநெடுக பூச்செடிகளை நட்டு வைத்தோம். சீக்கிரத்திலேயே முகாமில் நீளமான தண்டுகளையுடைய ரோஜாக்கள், ஸ்வீட் வில்லியம்ஸ் மலர்கள், கண்ணைப் பறிக்கிற அதேசமயம், உயரமான இன்னுமநேக பூச்செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. மத்தியில் இருந்த மலர் பாத்தியில் மனதைக் கொள்ளை கொள்ளும் டாலியா மலர்களும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் உயரமான, வண்ண வண்ண டெய்ஸி மலர்களும் இருந்தன. நாங்கள் அங்கே சென்று, பூச்செடிகளுக்குப் பின்னால் மறைந்து உட்கார்ந்துகொண்டு பைபிளைப் படித்தோம். அடர்ந்து வளர்ந்திருந்த ரோஜா புதர்களுக்குப் பின்னால் பிரசுரங்களை ஒளித்து வைத்தோம்.

“நடந்துகொண்டே கூட்டங்களை நடத்தினோம். ஐந்து சகோதரிகள் கொண்ட தொகுதிகளாக நாங்கள் பிரித்துக்கொண்டோம். சகோதரிகள் ஒவ்வொருவரும் பைபிள் பிரசுரம் ஒன்றிலிருந்து ஆளுக்கொரு பாராவை முன்னதாகவே மனப்பாடம் செய்துகொள்வோம். ஆரம்ப ஜெபத்திற்குப் பிறகு, ஒவ்வொருவராக பாராவைச் சொல்லிவிட்டு, அதைப்பற்றிக் கலந்துபேசுவோம். முடிவாக ஜெபம் செய்துவிட்டு, திரும்பவும் நடக்க ஆரம்பிப்போம். நம்முடைய காவற்கோபுர பத்திரிகைகள் [161-ஆம் பக்கத்திலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போன்ற] மிகச் சிறிய புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டன. தினமும் எதையாவது படிப்போம். முக்கியமாக, தினவசனத்தைப் படிப்போம். வாரத்தில் மூன்று நாட்கள் நாங்கள் நடத்திய கூட்டங்களுக்கான பாராக்களை மனப்பாடமாய்ச் சொல்லிப் பார்ப்போம். அதோடு, பைபிளில் உள்ள அதிகாரங்களை முழுவதுமாக மனப்பாடம் செய்ய முயற்சி செய்தோம். வேதவசனங்களில் இருந்து பலத்தைப் பெறுவதற்காக, பின்னர் அதை ஒருவருக்கொருவர் மனப்பாடமாய் ஒப்பித்தோம். இதனால், சோதனையிடும்போது பிரசுரங்கள் சிக்கினால் என்ன செய்வதென்று அளவுக்கதிகமாக நாங்கள் கவலைப்படவில்லை.

“முகாமில் எங்களுடைய நடவடிக்கைகளை நாங்கள் எப்படி ஒழுங்கமைத்தோம் என்பதை மற்ற கைதிகளின் வாயிலாகத் தெரிந்துகொள்ள முகாம் நிர்வாகத்தார் முயற்சி செய்தார்கள். இருப்பினும், கைதிகள் பலர் எங்களுக்கு ஒத்தாசையாய் இருந்தார்கள். நாங்கள் இருந்த அதே குடியிருப்பில் ஓல்கா இவின்ஸ்கயா என்பவரும் இருந்தார். அவர் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற பிரபல கவிஞரும் எழுத்தாளருமான போரிஸ் பாஸ்டர்நாக் என்பவரின் தோழி. அவரும் ஓர் எழுத்தாளர்தான். அவர் எங்களிடம் அன்பாகப் பழகினார். யெகோவாவின் சாட்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த விதத்தைப் பார்த்து அவர் சந்தோஷப்பட்டார். யெகோவா எங்களுக்கு ஞானத்தைக் கொடுத்தார். அதுவும், எங்களிடையே பைபிள் பிரசுரங்களை வைத்திருப்பதற்கான ஞானத்தைக் கொடுத்தார்.”—யாக். 3:17.

“போதும், என் பொறுமையைச் சோதிக்காதே”

ஜினயிடா இவ்வாறு சொல்கிறார்: “பிரசுரங்கள் எங்களுக்குப் பல்வேறு வழிகளில் கிடைத்தன. ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை’ என்று யெகோவா வாக்குறுதி அளித்திருந்தபடியே எல்லாவற்றையும் அவர் மேற்பார்வை செய்கிறார் என்பது பெரும்பாலும் தெளிவாகத் தெரிந்தது. (எபி. 13:5) சில சமயங்களில், அவர் காவலர்களின் கண்களை மறைத்ததைப்போல் இருந்தது. குளிர்காலத்தில் ஒரு சமயம், எங்களுடைய தொகுதியில் உள்ளவர்கள் வேலை முடிந்து, முகாமிற்குள் நுழைந்தபோது, வாசலில் எப்போதும் போல் காவலர்கள் எங்களைச் சோதனையிட்டார்கள். உடைகள் எல்லாவற்றையும் கழற்றச் சொன்னார்கள். நான் தான் கடைசி நபர். புதிய பிரசுரங்கள் இரண்டை என்னுடைய கால்சட்டைகள் இரண்டுக்கு உள்ளே மறைத்து வைத்திருந்தேன்.

“குளிராக இருந்ததால், அடுக்கடுக்காக வெங்காயத் தோல் இருப்பதுபோல் நானும் ஏகப்பட்ட உடைகளை ஒன்றன்மீது ஒன்றாக அணிந்திருந்தேன். முதலில், கட்டாய உழைப்பு முகாமின் பெண் மேற்பார்வையாளர் என்னுடைய குளிர்கால மேற்சட்டையில் தேடினார், அதற்கு அடுத்திருந்த கையில்லாத சட்டையில் தேடினார். எப்படியாவது இழுத்தடித்து, அவரை களைப்படையச் செய்வதெனத் தீர்மானித்தேன். நிதானமாக, ஒரு கம்பளிச் சட்டையைக் கழற்றினேன். பிறகு அடுத்தது. அதை அவர் கவனமாகத் தேடிக்கொண்டிருந்தபோது, தோளில் போட்டிருந்த சால்வைகளை ஒவ்வொன்றாக மெதுவாய்க் கழற்றினேன். பிறகு, மெத்தென்று அதே சமயம் சற்று தடிமனாய் இருந்த மேற்சட்டை ஒன்றைக் கழற்றினேன், அடுத்ததாக மற்றொரு சட்டை, பிறகு அடுத்த சட்டை என வரிசையாகக் கழற்றினேன். கடைசியாக, மீதமிருந்தது இரண்டு ஜோடி கால்சட்டைகளும் கம்பளி பூட்ஸும்தான். மெதுவாக ஒரு பூட்ஸைக் கழற்றினேன், பிறகு மற்றதைக் கழற்றினேன். அடுத்ததாக, அதேபோல் நிதானமாக, ஒரு கால்சட்டையைக் கழற்ற ஆரம்பித்தேன். ‘இப்போது என்ன செய்வது? கடைசியாக அணிந்திருக்கும் கால்சட்டையையும் கழற்றச் சொல்லிவிட்டால், நான் சட்டென்று ஓடிச்சென்று, பிரசுரங்களை சகோதரிகளிடம் தூக்கியெறிய வேண்டியதுதான்’ என்று நினைத்துக்கொண்டேன். முதல் கால்சட்டையைக் கழற்றியதும், அந்தப் பெண் மேற்பார்வையாளர் பொறுமையிழந்து, ‘போதும், என் பொறுமையைச் சோதிக்காதே, முதலில் இங்கிருந்து ஓடிப்போய்விடு!’ என்று கத்தினார். விறுவிறுவென்று உடைகளை அணிந்துகொண்டு முகாமிற்குள் ஓடினேன்.

“பிரசுரங்கள் எங்கிருந்து எங்களுக்குக் கிடைத்தன? எந்த இடத்தில் பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன என்பதைச் சகோதரர்கள் எங்களிடம் முன்னதாகவே தெரிவித்துவிடுவார்கள். சகோதரிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய முறை வரும்போது பொறுப்பாக அதை முகாமிற்குள் கொண்டுவந்துவிடுவோம். பிரசுரத்தை முகாமிற்குள் கொண்டுவந்த பிறகு, அதை ஓரிடத்தில் பத்திரமாக ஒளித்து வைப்போம். இடத்தை அடிக்கடி மாற்றிக்கொள்வோம். பிரசுரங்களைக் கைப்பட எழுதி நகல் எடுக்கும் வேலையையும் தவறாமல் செய்து வந்தோம். அந்த நகல்களையும் ஒளித்து வைத்தோம். போர்வையைப் போர்த்திக்கொண்டு, ஜன்னல் வழியாக வரும் தெரு விளக்கின் வெளிச்சத்தில், நகல் எடுக்கும் வேலையைச் செய்தோம். போர்வையில் ஒரு சிறு துளையிட்டு, தெரு விளக்கின் வெளிச்சம் அதன் உள்ளே வரும்படிச் செய்தோம். ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காமல் எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்தோம். சாப்பாட்டு அறைக்குச் செல்லும்போதுகூட, ஒவ்வொருவரும் பைபிள் வசனத்தைத் துண்டுக் காகிதத்தில் எழுதி கையில் எடுத்துச் செல்வோம்.”

“நீங்கள் இங்கிருந்து செல்வதற்கான நேரம் வந்துவிட்டது”

1949 முதல் 1951 வரை சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்டிருந்த சாட்சிகள் அனைவரையும் விடுதலை செய்யும்படி 1965-ல் சோவியத் அரசாங்கம் திடீரென ஒரு விசேஷ ஆணை பிறப்பித்தது. என்றாலும், தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல பெரும்பாலான சகோதர சகோதரிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. சைபீரியாவிலேயே தங்கியிருக்க விரும்பாதவர்கள் பிரசங்கிப்பதற்கு ஆட்கள் அதிகம் தேவைப்பட்ட இடங்களுக்குச் சென்று தங்குவதற்குத் தீர்மானித்தார்கள்.

மக்டலீனா பியெலஷிட்ஸ்கயா இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் நாடுகடத்தப்பட்டு சைபீரியாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வாழ்ந்தோம். குளிர்காலத்தில் சீதோஷ்ணம் -60 டிகிரி செல்ஷியஸ் வரை குறையும். கோடைக்காலத்தில், ஈக்களும் கொசுக்களும் படையெடுத்து வந்து, எங்கள் கண்ணிலுள்ள கருமணிகளைக்கூட பதம் பார்த்துவிடும். என்றாலும், யெகோவாவின் உதவியோடு எல்லாவற்றையும் சகித்தோம். குளிர் மிகுந்த சைபீரிய பிராந்தியங்களில் சத்தியத்தின் விதைகளை விதைக்க முடிந்ததை எண்ணி சந்தோஷப்படுகிறோம். நாடு கடத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து ஓடிப்போக மாட்டோம் என்று 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் மேற்பார்வையாளரின் அலுவலகத்திற்குப் போய் நாங்கள் கையெழுத்துப் போட்டோம். சில சமயங்களில், மேற்பார்வையாளர் எங்கள் வீட்டுக்கு வந்து இரவில் தங்குவார். அந்தச் சமயங்களில், அவர் எங்களிடம் அதிகக் கனிவோடு நடந்துகொள்வார். பைபிளைப் பற்றியும், அது சொல்லியிருக்கிறபடி வாழ என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றியும் பல கேள்விகளைக் கேட்பார். துன்புறுத்துதல் வருமென்று தெரிந்தும் இப்படிப்பட்ட வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தைக் கேட்பார். அங்கிருந்து விடுதலை பெற ஏதாவது வழியிருக்கிறதா என்று அவரிடம் ஒருசமயம் கேட்டோம். தன் உள்ளங்கையைக் காட்டி, ‘இங்கு முடி வளருவதற்கு வாய்ப்பிருக்கிறதா?’ என்று கேட்டார்.

“‘இல்லை’ என்றேன்.

“‘நீங்கள் விடுதலையாவதற்கும் அந்தளவு வாய்ப்புதான் இருக்கிறது’ என்றார் அவர். பிறகு, ஏதோ யோசித்துவிட்டு, ‘ஒருவேளை உங்கள் கடவுள் ஏதாவது நடவடிக்கை எடுத்து, அற்புதம் நிகழ்த்தினால் விடுதலை ஆக முடியும்’ என்றார்.

“1965-ன் கோடைகாலத்தில், ஒரு கடிதத்தைத் தபாலில் சேர்க்க ரயில் நிலையத்திற்குச் சென்றேன். தூரத்தில் என்னைப் பார்த்துவிட்டு, ‘மக்டலீனா, அனுமதியில்லாமல் எங்கே போகிறாய்?’ என்று சத்தமாகக் கேட்டார்.

“‘இதுவரை எங்கும் போகவில்லை, கடிதத்தைத் தபாலில் சேர்க்கப் போகிறேன்’ என்று பதில் அளித்தேன். பிறகு, அவர் என் அருகே வந்து, ‘இன்று முதல் உங்களுக்கு விடுதலை. நீங்கள் இங்கிருந்து செல்வதற்கான நேரம் வந்துவிட்டது’ என்றார். அவர் என்னைப் பார்த்த பார்வை, ‘கடவுள் உங்களை விடுவித்துவிட்டார்!’ என்று சொல்வதைப் போலிருந்தது. நாங்கள் விடுதலை பெற்றதை என்னால் நம்பவே முடியவில்லை.

“நாடுகடத்தப்படுவதற்கு முன்னால் நாங்கள் வசித்து வந்த பகுதியைத் தவிர, சோவியத் யூனியனில் வேறெங்கு வேண்டுமானாலும் போக எங்களுக்கு அனுமதி கிடைத்தது. இது, ‘பிரிந்து சென்று எல்லா இடங்களிலும் பிரசங்கியுங்கள். இதுதான் சரியான சமயம், தாமதிக்காதீர்கள்; பிரிந்து செல்லுங்கள்’ என்று யெகோவாவே எங்களிடம் சொல்வதைப் போன்றிருந்தது. ஒருவேளை சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல எங்களுக்கு அனுமதி கிடைத்திருந்தால் எங்களில் அநேகர் அங்குதான் திரும்பிச் சென்றிருப்போம். அதற்கு அனுமதி கிடைக்காததால், அனைவரும் வெவ்வேறு புதிய இடங்களுக்கு மாறிச் சென்றோம். நாங்கள் குடும்பமாக காகஸஸ் பகுதியில் குடியேறத் தீர்மானித்தோம்.”

ஆயிரக்கணக்கான சாட்சிகள் ஆளுக்கொரு பக்கமாக சோவியத் யூனியன் எங்கும் சிதறிப்போய்க் குடியேறினார்கள். அதே ஆண்டில் நடந்த ஒரு மாநில மாநாட்டில் ஓர் அதிகாரி, “நம்முடைய புதிய நகரம் இளம் தன்னார்வ தொண்டர்களால் இப்போதுதான் உருவாக்கப்பட்டது, இங்கே ஜெஹோவிஸ்ட் மதப் பிரிவினர் எப்படி வந்தார்கள் என உங்களில் யாருக்காவது தெரியுமா? இந்த நகரம் புதியது, ஒழுங்காக இருக்கிறது; ஆனால், திடீரென, இந்த ஜெஹோவிஸ்ட் மதப் பிரிவு இங்கும் முளைத்துவிட்டதே!” என்று நொந்துகொண்டார். சாட்சிகளைச் சமாளிக்க வழிதெரியாமல் அதிகாரிகள் கையைப் பிசைந்தார்கள். “கர்த்தரை அறிகிற அறிவினால்” பூமியை நிரப்பப் போவதாக கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிக்குக் குறுக்கே யாராலும் நிற்க முடியாதே!—ஏசா. 11:9.

“உங்களிடம் ‘புனித நீர்’ இருக்கிறதாமே”

பிரசங்கித்ததற்காக சாட்சிகள் சிறையிருப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். நிக்கலை கலிபாபா என்பவர் இப்படிப்பட்ட முகாம்களில் பல ஆண்டுகளைக் கழித்திருக்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “இர்குட்ஸ்க் ஆப்லாஸ்ட்டில் இருக்கும் விகரெவ்கா கிராமத்தில் உள்ள சிறையிருப்பு முகாமிற்கு எங்களில் நான்கு பேர் அனுப்பப்பட்டோம். அங்கு சுமார் 70 சகோதரர்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அங்கு குடிநீர் வசதி எதுவும் இல்லாதிருந்தது. அங்கிருந்த ஒரேவொரு குடிநீர் குழாயும் கழிவுநீர் அமைப்போடு இணைக்கப்பட்டிருந்தது. அதனால், அந்தத் தண்ணீரைக் குடிப்பது ஆபத்தானதாய் இருந்தது. அதோடு, சுத்தமான சாப்பாடும் கிடையாது. ஆனால், எப்படியோ யெகோவா எங்களுக்கு உதவி செய்தார். இந்த முகாமில், சாட்சிகளைத் தவிர வேறு யாருமே வேலை செய்ய விரும்பவில்லை. நாங்கள் கடுமையாக உழைத்தோம். சீக்கிரத்தில் நிர்வாகமும் இதைப் புரிந்துகொண்டது. பிற மண்டல முகாம்களில் வேலை செய்ய நாங்கள் அனுப்பப்பட்டோம். அங்கிருந்து குடிநீரை வாளியில் எடுத்துவர முடிந்தது. பல கைதிகள் எங்களிடம் வந்து, ‘உங்களிடம் “புனித நீர்” இருக்கிறதாமே. அரை டம்ளர் தண்ணீராவது கொடுங்களேன்’ என்று கேட்டார்கள். நாங்களும் அவர்களுக்குத் தண்ணீரைக் கொடுத்தோம்.

“அந்தக் கைதிகளில் நல்ல உள்ளம் படைத்தவர்களும் இருந்தார்கள். இவர்களில் சிலர் முன்பு திருடர்களாகவும் பிற குற்றங்களைச் செய்தவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு யெகோவாவின் சாட்சிகளாய் ஆனார்கள். மற்றவர்களுக்கு சத்தியத்தைக் கேட்க விருப்பமில்லாததுபோல் தெரிந்தது, இவர்கள் நேரடியாகவே எங்களை எதிர்த்தார்கள். ஆனால், யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக சொற்பொழிவாற்ற ஒரு போதகர் எங்கள் முகாமிற்கு வந்தபோது, எதிர்த்தவர்கள் எங்களை ஆதரித்துப் பேசினார்கள். அந்தப் போதகர் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசியதாக அவர்கள் சொன்னார்கள்.”

“நாங்கள் குழுவாக வருவோம்”

ராஜ்யத்தைப்பற்றி அதிகமாகப் பிரசங்கிக்க சகோதரர்கள் விரும்பினார்கள். இதற்குக் கிடைக்கும் வாய்ப்புகளை ஞானமாகப் பயன்படுத்திக்கொள்ள தங்களுக்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தார்கள். நிக்கலை தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்: “மாஸ்கோவிற்கு அருகே, மார்டிவினியாவில் உள்ள வேறொரு முகாமிற்கு நாங்கள் மாற்றப்படவிருப்பதைப் பற்றிய தகவல் எங்களுக்குக் கிடைத்தது. நாங்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னால், சுவாரஸ்யமான ஒரு சம்பவம் நடந்தது. பல ஆண்டுகளாக யெகோவாவின் சாட்சிகளைக் காவல் காத்துவந்த சில காவலர்களும் மேற்பார்வையாளர்களும் எங்களிடம் வந்து, ‘உங்கள் பாடல்களைக் கேட்கவும், உங்களுடைய நம்பிக்கைகளைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவும் ஆசைப்படுகிறோம். 10-லிருந்து 20 பேர் வரை அல்லது அதற்கும் சற்று அதிகமானோர் கொண்ட குழுக்களாக உங்களிடம் வந்து கேட்டுக்கொள்கிறோம்’ என்று சொன்னார்கள்.

“இப்படிச் சொல்லிவிட்டாலும், இதனால் அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன ஆபத்து வருமோ என்று அவர்களுக்கு ஒரே பயம். அதனால், நாங்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருந்த இடத்தில் காவலர்களை நிறுத்துவதாக எங்களிடம் சொன்னார்கள். இதுபோன்ற விஷயங்களில் எங்களுக்கு அதிக அனுபவம் இருப்பதால், எங்கள் சார்பாக காவலுக்கு ஆட்களை நிறுத்துவதாக நாங்கள் கூறினோம். அவர்களுடைய காவலர்களும் எங்களைப் போன்றே செய்தார்கள். அதாவது, காவலருக்கான அறைக்கும் நாங்கள் சந்தித்த இடத்திற்கும் இடையே அவர்கள் நின்றுகொண்டார்கள். இதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சாட்சிகள் ஒரு குழுவாகச் சேர்ந்து, வந்திருந்த அதிகாரிகளுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் பாடல்களைப் பாடிக் காட்டினார்கள். அதற்குப் பின் ஒரு சகோதரர், பைபிள் சம்பந்தப்பட்ட விஷயத்தைப்பற்றிப் பேச்சு கொடுத்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் இருப்பதைப் போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது! இப்படி ஆர்வமுள்ளவர்களைக் கொண்ட பல குழுக்களுடன் நாங்கள் கூட்டங்களை நடத்தினோம். யெகோவா எங்களை மட்டுமல்ல, நல்மனமுள்ள மற்றவர்கள் மீதும் கரிசனை காட்டுவதை எங்களால் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

“இந்த முகாமிலிருந்து மார்டிவினியாவிற்குப் போகும்போது நிறைய பத்திரிகைகளை எடுத்துச் சென்றோம். அங்கும் சாட்சிகள் பலர் அடைக்கப்பட்டிருந்தார்கள். பிரசுரங்களை மறைத்து வைப்பதற்குரிய வசதியோடு தயாரிக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேஸை சகோதரர்கள் என்னிடம் தந்தார்கள். சோதனையிடும் சமயத்தில், அந்த சூட்கேஸ் மேற்பார்வையாளர்களின் சந்தேகத்தைக் கிளப்பாதபடி பார்த்துக்கொண்டோம். மார்டிவினியாவிலுள்ள முகாமில் எங்களைக் கடுமையாகச் சோதனையிட்டார்கள். மேற்பார்வையாளர் ஒருவர் என் சூட்கேஸை எடுத்துப் பார்த்து: ‘இப்படிக் கனக்கிறதே! உள்ளே பொக்கிஷம் இருக்கிறதோ! என்றார். எதிர்பாராத விதமாக, என்னுடைய சூட்கேஸையும் மற்ற சாமான்களையும் ஒருபக்கமாக போட்டுவிட்டு, மற்றவர்களுடைய உடமைகளை அவர் சோதனையிட ஆரம்பித்தார். சோதனை முடிந்த பிறகு, ‘சாமான்களை எடுத்துக்கொண்டு போ’ என்று மற்றொரு மேற்பார்வையாளர் என்னிடம் சொன்னார். என்னுடைய சூட்கேஸை யாருமே சோதனையிடவில்லை. இப்படியாக, மிக மிக அவசியமாயிருந்த அந்தப் புத்தம்புது பிரசுரங்களைச் சிறையிருப்பு முகாமுக்குள் கொண்டு சென்றேன்.

“அதுமட்டுமல்ல, பல சமயங்களில் கைப்பட எழுதப்பட்ட துண்டுப்பிரதிகளை என்னுடைய பூட்ஸில் மறைத்து வைத்து எடுத்துச் சென்றிருந்தேன். என்னுடைய பாதங்கள் ரொம்பவே பெரிதாக இருக்கும். ஆகையால், பல காகிதங்களை வைப்பதற்கு என்னுடைய பூட்ஸில் எப்போதுமே இடமிருந்தது. காகிதங்களை நன்றாக மடித்து, என்னுடைய பூட்ஸின் சோலுக்குக் கீழே வைத்தேன். பிறகு கிரீஸை நன்றாக பூட்ஸின் மேல் தடவினேன். அது வழவழப்பாகவும் அதோடு, பயங்கர நாற்றமாகவும் இருந்ததால், மேற்பார்வையாளர்கள் என்னுடைய பூட்ஸ் பக்கமே வர மாட்டார்கள்” என்று நிக்கலை கூறுகிறார்.

“மேற்பார்வையாளர்கள் எங்களைக் கண்காணிக்க, நான் அவர்களைக் கண்காணித்தேன்”

நிக்கலை இவ்வாறு கூறுகிறார்: “மார்டிவினியன் முகாமில், பைபிள் பிரசுரங்களை நகல் எடுக்கும் பணியை மேற்பார்வை செய்யும் பொறுப்பு எனக்கு ஒப்படைக்கப்பட்டது. எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் மேற்பார்வையாளர்களைக் கண்காணிப்பதும் ஒன்றாகும். நான் தகவல் கொடுத்தால்தான், பிரசுரங்களைக் கைப்பட நகல் எடுப்பவர்கள் எல்லாவற்றையும் மறைத்து வைக்கப் போதிய அவகாசம் இருக்கும். மேற்பார்வையாளர்கள் எங்களைக் கண்காணித்தார்கள், நான் அவர்களைக் கண்காணித்தேன். நகலெடுக்கும்போது எங்களைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டுமென்பதற்காக, நிர்வாகிகள் அடிக்கடி திடீர் திடீரென்று குடியிருப்புக்குள் வருவார்கள். அவர்களைக் கண்காணிப்பதுதான் இருப்பதிலேயே மிகக் கஷ்டமான வேலையாக இருந்தது. மற்றவர்கள் தினமும் ஒருமுறை குடியிருப்புக்கு வந்து செல்வார்கள். அவர்கள் ஓரளவு பரந்த மனம் படைத்தவர்களாய் இருந்ததால், எங்களுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை.

“இந்தச் சமயத்தில், அசல் பிரசுரங்களில் இருந்து நாங்கள் நகலெடுத்தோம். அசலைப் பாதுகாப்பான இடங்களில் மறைத்து வைத்திருந்தோம். அசல் பிரதிகள் பலவற்றை அடுப்புகளில் மறைத்து வைத்திருந்தோம். முகாம் நிர்வாகியின் அலுவலகத்திலிருந்த அடுப்புகூட இப்படிப்பட்ட மறைவிடமாய் இருந்தது. அவருடைய அடுப்பைச் சுத்தம் செய்த சகோதரர்கள் அதில் ஒரு விசேஷ பகுதியை இணைத்திருந்தார்கள். அதில்தான் மதிப்புமிக்க காவற்கோபுர பத்திரிகைகள் பலவற்றின் அசலை மறைத்து வைத்திருந்தோம். மேற்பார்வையாளர்கள் சல்லடை போட்டுத் தேடியபோதும், அசல் பிரதிகள் அவர்கள் கண்ணில் சிக்கவே இல்லை. அவைதான் நிர்வாகியின் அலுவலகத்தில் பத்திரமாய் இருந்தனவே!”

பிரசுரங்களை ஒளித்து வைப்பதில் சகோதரர்கள் கில்லாடிகளாய் ஆகிவிட்டார்கள். இதற்கு ஜன்னல் நிலை சிறந்த இடமாக அமைந்தது. பற்பசைக் குழாயில்கூட பிரசுரங்களை ஒளித்து வைக்க சகோதரர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். அசல் பிரதிகள் இருக்குமிடம் இரண்டு, மூன்று சகோதரர்களுக்குத்தான் தெரியும். தேவைப்படும்போது, அவர்களில் ஒருவர் அசலை எடுத்து, கைப்பட நகலெடுத்துவிட்டு, அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவார். இப்படியாக, அசல் பிரதிகள் எப்போதுமே பாதுகாப்பாக இருந்தன. நகலெடுப்பது ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால், தனிச்சிறையில் 15 நாட்கள் அடைத்து வைக்கப்படுவோம் என்பது தெரிந்திருந்தும், அந்தப் பணியைச் செய்வதைப் பெரும்பாலான சகோதரர்கள் தங்களுக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதினார்கள். “முகாமிலிருந்த பத்து வருடங்களில், சுமார் மூன்று வருடங்களைத் தனிமைச் சிறையில் கழித்தேன்” என்று விக்டர் கட்ஷ்மிட் சொல்கிறார்.

சிலந்திவலை காவற்கோபுரங்கள்

சாட்சிகளிடமிருந்து பைபிள் பிரசுரங்களைக் கண்டுபிடித்து, பறிமுதல் செய்வதற்காக முகாம் நிர்வாகம் ஒரு விசேஷ உத்தியைக் கையாளுவதை சகோதரர்கள் அறிந்தார்கள். இவ்வேலையில் சில அதிகாரிகள் அதிக தீவிரமாக இறங்கியிருந்தார்கள். ஐவன் கிலிம்கோ நடந்ததை இவ்வாறு சொல்கிறார்: “ஒருசமயம் மார்டிவினியா முகாம் எண் 19-க்கு, ராணுவ வீரர்கள் நாய்களோடு வந்தார்கள்; முகாமிலிருந்து சகோதரர்களை வெளியே அழைத்து வந்து, கவனமாகத் தேடினார்கள். ஒவ்வொரு சாட்சியின் உடையையும் ஒன்றுவிடாமல் கழற்ற வைத்துத் தேடினார்கள். காலோடு சேர்த்து கட்டியிருந்த கந்தைகளைக்கூட உருவிவிட்டார்கள். ஆனால், சகோதரர்கள் தங்களுடைய பாதங்களில் கைப்பட எழுதப்பட்ட சில நகல்களை ஒட்டி வைத்திருந்தார்கள். சோதனையில் அவை தப்பின. அதோடு, தங்களுடைய விரல்களுக்கு இடையில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு சின்ன புத்தகங்களை அவர்கள் உருவாக்கியிருந்தார்கள். காவலர்கள் எங்களிடம் கைகளை உயர்த்தும்படி சொன்னபோது, விரல்களுக்கு இடையில் இருந்த சிறு புத்தகங்கள் சிலவும் தப்பித்தன.”

பிரசுரங்களைப் பாதுகாக்க வேறு வழிகளும் இருந்தன. அலிக்ஸே நிபசாடஃப் பின்வருமாறு சொல்கிறார்: “சகோதரர்கள் சிலர் சிலந்திவலையின் நூலிழை அளவுக்கு மெல்லிய கையெழுத்தில் எழுதப் பழகிக்கொண்டார்கள். பென்சில் முனையைக் கூராகச் சீவி, கோடுபோட்ட நோட்டுப் புத்தகத்தின் இரு கோடுகளுக்கு இடையில் மூன்று, நான்கு வரிகள்வரை சின்னச்சின்னதாக எழுதினார்கள். இப்படி எழுதப்பட்ட ஐந்து, ஆறு காவற்கோபுர பத்திரிகைகளை ஒரு தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்துவிடலாம். இவ்வளவு சிறிய எழுத்துகளை எழுதுவதற்குக் கூர்மையான கண்பார்வை வேண்டும். கடினமாக உழைக்கும் திறனும் வேண்டும். விளக்கை அணைத்துவிட்டு, எல்லாரும் தூங்கச் சென்ற பிறகு, இந்தச் சகோதரர்கள் போர்வையின் மறைவில் இந்த வேலையைச் செய்வார்கள். சிறையிருப்பு முகாமின் வாசலில் ஒரு மின்விளக்கு இருந்தது. எப்போதாவது மட்டுமே எரியும் அந்த விளக்கு வெளிச்சத்தில்தான் எழுத வேண்டியிருந்தது. இந்த வேலையை ஒரு சில மாதங்கள் தொடர்ந்து செய்தால், பார்வையே போய்விடும். சில சமயத்தில் இது காவலரின் கண்களிலும் பட்டுவிடும். அவர் எங்களுக்குச் சற்று சாதகமானவராய் இருந்தால், ‘இன்னும் எழுதிக்கொண்டே இருக்கிறீர்களே, எப்போதுதான் தூங்கப் போவீர்கள்?’ என்று கேட்பார்.”

சகோதரர் கிலிம்கோ பின்வருமாறு சொல்கிறார்: “ஒரு சமயம், ஏகப்பட்ட பிரசுரங்களையும் பைபிளையும்கூட நாங்கள் இழந்துவிட்டோம். அவை எல்லாவற்றையும் ஒரு சகோதரரின் செயற்கைக் காலில் ஒளித்து வைத்திருந்தோம். அந்தச் செயற்கைக் காலை கழட்டும்படி காவலர்கள் அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். பிறகு, அதை உடைத்து நொறுக்கினார்கள். சிதறிக் கிடந்த பக்கங்களைப் புகைப்படம் எடுத்து முகாம் செய்தித்தாளில் வெளியிட்டார்கள். என்றாலும், யெகோவாவின் சாட்சிகள் மத நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை அநேகருக்கு மறுபடியும் நிரூபிக்க இது வாய்ப்பளித்தது. பிரசுரங்களைக் கண்டுபிடித்த பிறகு, முகாம் நிர்வாகி வெற்றிப் பெருமிதத்தோடு, ‘இதுதான் உங்களுக்கு அர்மகெதோன்’ என்று சகோதரர்களிடம் கூறினார். என்றாலும் அடுத்த நாளே, சாட்சிகள் ஒன்றுகூடி, பாட்டுகளைப் பாடி, எப்போதும்போல் படித்துக்கொண்டிருப்பதாக யாரோ அவரிடம் போய் சொன்னார்கள்.”

அரசாங்க தலைமை வழக்கறிஞருடன் சந்திப்பு

1961-ன் இறுதியில், ரஷ்ய சோவியத் பெடரேடிவ் சோஷியலிஸ்ட் குடியரசின் அரசாங்க தலைமை வழக்கறிஞர் மார்டிவினியாவில் இருந்த முகாமைச் சோதனையிட வந்தார். முகாமைச் சுற்றிப் பார்க்கையில், சாட்சிகளின் குடியிருப்பிற்குள் நுழைந்தார். சகோதரர்கள் சில கேள்விகள் கேட்பதற்கு அவர் அனுமதித்தார். விக்டர் குட்ஸ்மிட் இவ்வாறு சொல்கிறார்: “‘யெகோவாவின் சாட்சிகளுடைய மதம் சோவியத் மக்களுக்கு ஆபத்தானதென நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்று கேட்டேன்.

“‘இல்லையே, நான் அப்படி நினைக்கவில்லை’ என்றார் அந்த வழக்கறிஞர். பேச்சுவாக்கில், ‘1959-ல் மட்டுமே, இர்குட்ஸ்க் ஆப்லாஸ்ட்டில் உள்ள அதிகாரிகள் 50 லட்சம் ரூபிள் தொகையை யெகோவாவின் சாட்சிகளைச் சமாளிப்பதற்கு ஒதுக்கியதாக’ அவர் குறிப்பிட்டார்.

“இதன் மூலம், யெகோவாவின் சாட்சிகளைப் புரிந்துகொள்வதற்கு ஐம்பது லட்சம் ரூபிள் தொகையைச் சட்டத்துறை செலவிட்டிருப்பதால், அதிகாரிகளுக்கு இப்போது அவர்களைப்பற்றி நன்றாகவே தெரியும் என்று சொன்னார். இது எக்கச்சக்கமான பணம். அந்தச் சமயத்தில், ஐந்தாயிரம் ரூபிள் இருந்தாலே சொகுசான காரையோ, வசதியான வீட்டையோ வாங்கிவிட முடியும். இந்தளவு பெரிய தொகை செலவிட்டிருந்ததால், மாஸ்கோவில் உள்ள அதிகாரிகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் ஆபத்தற்றவர்கள் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.

“‘சோவியத் மக்களிடம் மட்டும் யெகோவாவின் சாட்சிகளை உங்கள் இஷ்டப்படி நடத்துங்கள் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், உங்களை இருந்த இடம் தெரியாமல் அழித்து விடுவார்கள்’ என்று அந்த வழக்கறிஞர் சொன்னார். சோவியத் மக்கள் யெகோவாவின் சாட்சிகளை அடியோடு வெறுத்தார்கள் என்பதே இதன் அர்த்தம். நாத்திக, கம்யூனிஸ கோட்பாடுகள் லட்சக்கணக்கானோரின் மனதை மாற்றியிருந்தன என்பதை இந்த வார்த்தைகள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டின.

“‘மாஸ்கோமுதல் விலாடிவோஸ்டோக்வரை யெகோவாவின் சாட்சிகள் தங்கள் மாநாடுகளை நடத்தும்போது உண்மை நிலவரத்தை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்’ என்று நாங்கள் பதில் அளித்தோம்.

“‘ஒருவேளை ஐந்து லட்சம் பேர் உங்கள் பக்கம் சேர்ந்துகொள்ளலாம், ஆனால், மற்றவர்கள் எல்லாரும் எங்கள் பக்கம்தான்’ என்றார் அவர்.

“இதோடு அந்த வழக்கறிஞரோடு எங்கள் சந்திப்பு முடிந்தது. அவர் சொன்னது கிட்டத்தட்ட சரிதான். முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்த நாடுகளில் நடைபெறுகிற யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இப்போது கலந்துகொள்கிறார்கள். அங்கு பைபிளின் சத்திய வார்த்தைகளை மக்கள் கேட்கிறார்கள், பிரச்சாரங்களை அல்ல.”

‘யெகோவாவின் சாட்சிகளுக்குப் பூங்கா அமைத்துக் கொடுத்திருக்கிறீர்கள்’

விக்டர் தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்: “முகாம் நிர்வாகத்தார் யெகோவாவின் சாட்சிகள் நட்டு வைத்திருந்த மரங்களையும் பூச்செடிகளையும் அரசாங்க தலைமை வழக்கறிஞரிடம் காண்பித்தார்கள். குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்களுக்கு அனுப்பியிருந்த பொருள்களையும், அவர்களின் குடியிருப்பில் யாரும் திருடாமல் அவை பத்திரமாக இருப்பதையும் அவரிடம் சொன்னார்கள். ஆச்சரியத்தில் கண்கள் விரிய அனைத்தையும் அவர் பார்த்துக்கொண்டிருந்தார். என்றாலும், பிற்பாடு எல்லா பூச்செடிகளையும் மரங்களையும் வெட்டிப் போடும்படி முகாம் நிர்வாகத்தாரிடம் அவர் உத்தரவிட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம். ‘யெகோவாவின் சாட்சிகளுக்கு இந்தக் கட்டாய உழைப்பு முகாமைப் பூங்காவாக மாற்றிக் கொடுத்திருக்கிறீர்கள்’ என்று முகாம் நிர்வாகியிடம் அவர் சொல்லிவிட்டாராம். வெளியிலிருந்து வரும் பொருள்களைச் சாட்சிகள் பெற்றுக்கொள்வதைத் தடைசெய்தார். சாட்சிகள் கூடுதல் உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்ட உணவகத்தை மூடும்படி செய்தார்.

“நிர்வாகம் அந்த உத்தரவுகள் சிலவற்றிற்குக் கீழ்ப்படியவில்லை. இது சகோதரர்களுக்கு சந்தோஷத்தைத் தந்தது. உதாரணமாக, பூச்செடிகளை வைத்து பராமரிக்க சகோதரிகளுக்கு முன்பு போல் அனுமதி கிடைத்தது. இலையுதிர் காலத்தில், அவர்கள் பூக்களைப் பறித்து, பெரிய பூச்செண்டுகளைத் தயாரித்தார்கள். அவற்றை முகாம் ஊழியர்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் பரிசளித்தார்கள். காவலர் அறைக்கு வந்த அவர்களது பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பார்த்துவிட்டு, பூச்செண்டுகளை எடுத்துக்கொண்டு, மலர்ந்த முகத்தோடு பள்ளிக்கு ஓடியதைப் பார்த்தபோது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர்களுக்கு சாட்சிகளை மிகவும் பிடிக்கும்.”

விக்டர் இவ்வாறு சொல்கிறார்: “1964-ன் ஆரம்பத்தில் ஒருநாள், யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக மாநில அளவில் பெரிய இயக்கம் உருவாவதாக மேற்பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார். அவருடைய சகோதரர் கேஜிபியில் வேலை செய்து வந்தார். ஆனால், அந்த வருட பிற்பகுதியில், மாநில தலைவரான நிகியா க்ரூச்சோஃப் திடீரென பதவி இழந்தார். எங்களைத் துன்புறுத்துவதும் குறைந்தது.”

கடுங்காவல் சிறையில் ராஜ்ய பாடல்கள்

1960-களில் மார்டிவினியாவில் இருந்த ஒரு கடுங்காவல் சிறையில், வருடத்திற்கு ஒருமுறைதான் கைதிகள் தங்களுடைய உறவினர்களிடமிருந்து பொருள்களைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அதுவும் ‘விசேஷப் பரிசாக’ அதைப் பெற்றுக்கொண்டார்கள். அடிக்கடி கைதிகள் சோதனையிடப்பட்டார்கள். பைபிள் வசனம் எழுதப்பட்ட துண்டுக் காகிதம் அவர்களிடம் கண்டுபிடிக்கப்பட்டால், பத்து நாட்கள் அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதோடு, மற்ற முகாம்களோடு ஒப்பிட, இங்கு இருந்தவர்களுக்குக் குறைவான உணவே கிடைத்தது. கடுங்காவல் சிறைகளில் வேலையும் மிகக் கடுமையாக இருந்தது. சாட்சிகள் பிரமாண்டமான மரங்களின் அடிக்கட்டைகளை வெட்டியெடுக்க வேண்டியிருந்தது. அலிக்ஸே நிபசாடஃப் இவ்வாறு சொல்கிறார்: “உடலில் உள்ள சக்தியெல்லாம் உறிஞ்சப்பட்டதுபோல் அடிக்கடி உணர்ந்தோம். எனினும், நாங்கள் எப்போதுமே கவனமாக இருந்தோம், கவலையில் சுருண்டுவிடவில்லை. உற்சாகம் இழக்காதிருக்க சகோதரர்கள் ராஜ்ய பாடல்களைப் பாடுவார்கள். பலதரப்பட்ட குரல் வளமுடைய சகோதரர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கினோம். அதனால், சகோதரிகள் யாரும் இல்லாதபோதிலும், பாடல்களைக் கேட்க மிக இனிமையாக இருந்தது. இந்தப் பாடல்கள் யெகோவாவின் சாட்சிகளை மட்டுமல்ல, அதிகாரிகளையும் குஷிப்படுத்தின. வேலை நேரங்களில் பாடல்களைப் பாடும்படி சகோதரர்களிடம் அவர்கள் கேட்பார்கள். நாங்கள் மரங்களை வெட்டும்போது, மெய்க்காப்பு படையின் மேற்பார்வையாளர் எங்களிடம் வந்து, ‘சில பாடல்களை பாடுங்கள். மண்டல அதிகாரியே வேண்டுகோள் விடுத்திருக்கிறார்’ என்று கூறினார்.

“சகோதரர்கள் ராஜ்ய பாடல்களைப் பாடுவதை அந்த அதிகாரி பலமுறை கேட்டிருக்கிறார். இந்த வேண்டுகோள் சரியான சமயத்தில் விடுக்கப்பட்டதென்றே சொல்ல வேண்டும். ஏனெனில், நாங்கள் சோர்வின் உச்சியில் இருந்தோம். நாங்கள் சந்தோஷமாக யெகோவாவைப் பாடி மகிமைப்படுத்த ஆரம்பித்தோம். பொதுவாக, நாங்கள் முகாமில் பாடும்போது, அதிகாரிகளின் மனைவிகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து, வீட்டின் வாசலில் நின்றுகொண்டு, பாட்டை வெகுநேரம் ரசித்துக் கேட்பார்கள். பழைய பாட்டுப் புத்தகத்தில் இருக்கும் ‘பூமி யெகோவாவை மகிமைப்படுத்தட்டும்’ என்ற பாடல் எண் 6-ன் வார்த்தைகள் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பாடலில் அர்த்தம் பொதிந்த வாக்கியங்கள் பல இருந்தன, ராகமும் அருமை.”

அவர் “வேறொரு நாட்டிற்கு” வந்திருந்தார்

யெகோவாவின் சாட்சிகள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பதை சற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளிலும்கூட மற்றவர்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. விக்டர் கட்ஷ்மித் இவ்வாறு சொல்கிறார்: “வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு, வாரத்தின் இறுதியில் கொஞ்சம் நேரம் ஓய்வெடுப்பதற்காக ஒரு சமயம் நாங்கள் எல்லாரும் முகாமின் தோட்டத்தில் உட்கார்ந்திருந்தோம். அப்போது, நாங்கள் சிறைவைக்கப்பட்டிருந்த முகாமிற்குள் விலையுயர்ந்த மின் சாதனங்கள் கொண்டுவரப்பட்டன. வண்டியில் இவற்றை எடுத்துவந்த ஓட்டுநர் ஒரு சாட்சி அல்ல, ஆனால் எங்கள் முகாமைச் சேர்ந்தவர். அவரோடு வந்த பர்ச்சேஸிங் மானேஜர் வேறொரு முகாமைச் சேர்ந்தவர். சேமிப்பறை பூட்டப்பட்டிருந்ததோடு சேமிப்பறையின் அதிகாரியும் விடுமுறைக்குச் சென்றிருந்ததால் வந்திருக்கும் சரக்குகளை இறக்கிவைக்கும்படி சாட்சிகளிடம் சொல்லப்பட்டது.

“எனவே, நாங்கள் அந்த மின் சாதனங்களை இறக்கி சேமிப்பறைக்குப் பக்கத்தில் அடுக்கி வைத்தோம். சகோதரரர்கள் தங்கியிருந்த குடியிருப்புகளுக்கு அருகில்தான் இந்த சேமிப்பறை இருந்தது. சேமிப்பறை அதிகாரியிடமிருந்து ரசீதைப் பெறாமல் சரக்குகளைக் வைத்துவிட்டு செல்ல பர்ச்சேஸிங் மானேஜர் ரொம்பவே பயந்தார். ஆனால், ஓட்டுநரோ அவரிடம், ‘பயப்படாதீர்கள், இங்குள்ள யாருமே அதை தொடக்கூட மாட்டார்கள். நீங்கள் “வேறொரு நாட்டிற்கு” வந்திருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். வெளியே இருக்கும் உலகத்திலிருந்து இந்த முகாம் வித்தியாசப்பட்டது. இந்த முகாமில், உங்கள் கைக்கடிகாரத்தை எங்காவது கழற்றி வைத்துவிட்டு, அடுத்த நாள் வந்து பார்த்தால் நீங்கள் வைத்தே இடத்திலேயே அது இருக்கும்’ என்று சொல்லி ஆறுதல் அளித்தார். ஆனால், அந்த பர்ச்சேஸிங் மானேஜரோ, அந்தச் சரக்குகள் 5 லட்சம் ரூபள்கள் மதிப்புள்ளதாக இருப்பதால் ரசீது எதுவும் வாங்காமல் அதை விட்டுவர முடியாது என்றார்.

“கொஞ்ச நேரத்திற்குள் அந்த முகாமின் நிர்வாக குழுவைச் சேர்ந்த சில ஆட்கள் வந்து, முகாமிலிருந்து வண்டியை உடனே வெளியே எடுக்குமாறு வற்புறுத்தினார்கள். அவர்களில் ஒருவர், சரக்குகளின் விலைவிவரப் பட்டியலைக் கொடுத்துவிட்டு அடுத்த நாள் வந்து எடுத்துக்கொள்ளும்படி பர்ச்சேஸிங் மானேஜரிடம் கூறினார். எனவே, அவர் மனதில்லாமல் அங்கிருந்து கிளம்பினார். அடுத்த நாள் காலை, அந்த அதிகாரி, விலைவிவரப் பட்டியலில் கையெழுத்து வாங்க முகாமிற்குள் போக அனுமதிக்கும்படி காவலாளியிடம் கேட்டார். ஆனால், அந்தக் காவலாளியோ கையெழுத்திடப்பட்ட அந்த விலைவிவரப் பட்டியலை அவரிடம் நீட்டினார்.

“அந்த பர்ச்சேஸிங் மானேஜருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அங்கிருந்து போக மனதில்லாமல், கிட்டத்தட்ட அரை மணிநேரம் அங்கேயே நின்று வாயிற்கதவையும் ஆவணங்களையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு அங்கிருந்து கிளம்பலாம் என்று இரண்டடி எடுத்துவைத்தார் ஆனால், திரும்பவும் முகாமின் வாயிற்கதவை கொஞ்சம் நேரம் பார்த்துக்கொண்டு நின்றார் என்பதாக காவலாளி பிறகு எங்களிடம் சொன்னார். ஒருவேளை வாழ்க்கையில் முதல் முறையாக அவருக்கு இப்படிப்பட்ட ஓர் அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். விலைமதிப்புள்ள சரக்குகள் இறக்கிவைக்கப்பட்டு, அவர் இல்லாமலேயே விலைவிவரப் பட்டியலில் கையெழுத்தும் இடப்பட்டிருந்தது. இத்தனைக்கும் எந்தத் தில்லுமுல்லும் செய்யப்படாமல் எல்லாமே நேர்மையாகச் செய்து முடிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இவையெல்லாம் நடந்தது, கடுங்காவல் கட்டாய உழைப்பு முகாம்களில். இங்கு ‘மிகவும் ஆபத்தான குற்றவாளிகள்’ என்று முத்திரைக் குத்தப்பட்ட கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்தார்கள். சாட்சிகள்மீது என்னதான் அநியாயமாகப் பழிசுமத்தப்பட்டாலும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே எப்படிப்பட்ட மக்கள் என்பதை அங்கிருக்கும் நபர்களால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.”

“அவர்கள் மறுபடியும் பிரசங்கிக்க ஆரம்பித்துவிட்டார்கள்”

1960-ல், மார்டிவினியாவிலுள்ள முகாம் எண் 1-ல் பல சகோதரர்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். சில நாட்களுக்குப் பிறகு அவர்களில் 100-க்கும் அதிகமானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 10-வது எண் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். விசேஷ சிறையாக இருக்கும் இந்த முகாம், அருகே உள்ள உடார்னி என்ற கிராமத்தில் இருந்தது. இது சாட்சிகளுக்கு மூளைச் சலவைச் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு “சோதனை” சிறையாக இருந்தது. அங்கிருந்த சிறைகைதிகள், நாசி சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களைப்போல் கோடுபோட்ட சீருடைகளை அணிந்திருந்தார்கள். சாட்சிகளுக்கு வழக்கமாக இருந்த மற்ற வேலைகள் போக, காடுகளில் பெரிய பெரிய மரங்களின் அடிபாகத்தை வேரோடு தோண்டியெடுக்க வேண்டிய வேலையும் கொடுக்கப்பட்டது. இப்படி ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 11-12 மரங்களின் அடிபாகத்தை தோண்டியெடுக்க வேண்டியிருந்தது. ஆனால், சில சமயங்களில் சகோதரர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நாள் முழுக்க வேலை செய்தாலும், ஒரேயொரு பெரிய ஓக் மரத்தின் அடிபாகத்தைக்கூட தோண்டியெடுக்க முடியாமல் போய்விடும். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்காக அவர்கள் அடிக்கடி ராஜ்ய பாடல்களைப் பாடினார்கள். அவர்கள் பாடுவதைக் கேட்டு சில சமயங்களில் முகாமின் நிர்வாகி கோபப்பட்டு இவ்வாறு கத்தி கூச்சல்போட்டிருக்கிறார்: “இன்று இரவு உங்களுக்கு சாப்பாடு கிடையாது. அப்போதுதான் பாடுவதை நிறுத்திவிட்டு வேலையை மட்டும் செய்வீர்கள்!” இந்த முகாமில் இருந்த ஒரு சகோதரர், கடினமான அந்தக் காலங்களை நினைத்து இவ்வாறு சொல்கிறார்: “யெகோவா எங்களைக் கைவிடவில்லை. கடினமான சூழ்நிலைகள் மத்தியிலும் ஆன்மீக ரீதியில் நாங்கள் உறுதியாக இருந்தோம். சர்வலோக பேரரசுரிமை குறித்த விவாதத்தில் நாங்கள் யெகோவாவின் பக்கம் நிற்பதை எண்ணி எப்போதும் சந்தோஷப்பட்டோம்.”—நீதி. 27:11.

முழு சிறைச்சாலைக்கும் பல “போதகர்கள்” இருந்ததோடு ஒவ்வொரு தனிச்சிறைக்கும் ஒரு தனி போதகர் இருந்தார். இராணுவ அதிகாரிகளாக இருந்த இவர்கள் கேப்டன் பதவியை அல்லது அதைவிட உயர்ந்த பதவியை வகித்தார்கள். சாட்சிகள் தங்களுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்கும்படி செய்வதே இந்த அதிகாரிகளின் குறிக்கோளாக இருந்தது. தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுப்பவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது. ஒவ்வொரு மாதமும், சிறை போதகர்கள் ஒவ்வொரு சாட்சியினுடைய நடத்தையைப்பற்றி ஓர் அறிக்கை எழுதுவார்கள், சிறை பணியாட்கள் பலர் அதில் கையொப்பமிடுவார்கள். ஆனால், ஒவ்வொரு சாட்சியினுடைய அறிக்கையிலும் எப்போதும் ஒன்றையேதான் இந்த அதிகாரிகள் எழுதவேண்டியிருந்தது: “இவர், சீர்த்திருத்தத்திற்கு மசியவில்லை; தன் நம்பிக்கைகளில் உறுதியாக இருக்கிறார்.” ஈவான் கிலிம்கோ என்ற சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “எனக்கு விதிக்கப்பட்ட 10 வருட சிறைதண்டனையில் 6 வருடங்களை இந்த முகாமில் கழித்தேன். மற்ற சகோதரர்களைப் போலவே என்னையும் ‘மிகவும் ஆபத்தான குற்றவாளி, பயங்கரமான குற்றங்களை மீண்டும் மீண்டும் செய்பவன்’ என்று முத்திரை குத்தினார்கள். மேலதிகாரிகள் சொன்னது போலவே, சாட்சிகளின் நடத்தையை கவனிப்பதற்காக அதிகாரிகள் வேண்டுமென்றே கடுமையான சவால்களை முன்வைத்தார்கள்.”

இந்தச் சிறையில் ஐந்து வருடங்களைக் கழித்த யாவ் ஆன்ட்ரோநிக் என்ற சகோதரர் முகாமின் அதிகாரியிடம் ஒருமுறை இவ்வாறு கேட்டார்: “இந்தச் சிறையில் நாங்கள் இன்னும் எவ்வளவு காலம் இருப்போம்?” அந்த அதிகாரி, அங்கிருந்த ஒரு காட்டுப்பகுதியைக் காட்டி, “நீங்கள் எல்லாரும் அங்கு புதைக்கப்படும்வரை” என்று பதிலளித்தார். யாவ் சொல்கிறார்: “மற்றவர்களிடம் பிரசங்கிக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் தனியாக அடைக்கப்பட்டோம். அதிகாரிகள் எப்போதுமே எங்கள்மீது ஒரு கண் வைத்திருந்தார்கள். அந்த முகாமிற்கு உள்ளேகூட நாங்கள் யாருமே தனியாக உலாவ அனுமதிக்கப்படவில்லை. எங்களில் ஒருவர் வேறு இடத்திற்குச் சென்றாலும்கூட எப்போதும் ஒரு மேற்பார்வையாளர் எங்களோடு அனுப்பிவைக்கப்பட்டார். பல வருடங்கள் கழிந்த பிறகு, பாதுகாப்பு கெடுபிடிகள் குறைவாக இருக்கும் சிறைக்கு நாங்கள் மாற்றப்பட்டபோது சாட்சியல்லாத சில சிறைகைதிகள் முகாம் அதிகாரிகளிடம் இவ்வாறு சொன்னார்கள்: ‘யெகோவாவின் சாட்சிகள் ஜெயித்துவிட்டார்கள். மற்றவர்களுடன் சேராதபடி நீங்கள் அவர்களைத் தனியாக வைத்தீர்கள், ஆனால் அவர்கள் மறுபடியும் பிரசங்கிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.’”

தன் பைபிளை அடையாளம் கண்ட அதிகாரி

10-வது முகாமிற்குள் பிரசுரங்களைக் கொண்டுவருவது ரொம்ப ரொம்ப கடினம், அதுவும் ஒரு பைபிளைக் கொண்டுவருவதென்றால் சொல்லவே தேவையில்லை. சிறைக்குள் கடவுளுடைய வார்த்தையைக் கொண்டுவருவது அசாத்தியம் என்றே சகோதரர்கள் நினைத்தார்கள். சில வருடங்களாக இந்தச் சிறையில் இருந்த ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவால் கூடாத காரியம் என்று எதுவுமே இல்லை. இந்தச் சிறையில் நூறு சாட்சிகள் இருந்தோம், எங்களுக்கு ஒரு பைபிளாவது கிடைக்க வேண்டுமென்று யெகோவாவிடம் ஜெபித்தோம். அவர் எங்கள் ஜெபங்களைக் கேட்டார். நாங்கள் கேட்டதோ ஒன்று ஆனால், எங்களுக்கு கிடைத்ததோ இரண்டு!” (மத். 19:26) அது எப்படி நடந்தது?

துணைத் தளபதி ஒருவர் சிறை போதகராக வேலை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பைபிள் அறிவு இல்லாத ஒரு நபர் எவ்வாறு சாட்சிகளுக்கு “போதிக்க” முடியும்? அவர் எப்படியோ கஷ்டப்பட்டு, ஒரு பைபிளைப் பெற்றார்; ஆனால், அது ஏடு ஏடாகப் பிரிந்திருந்தது. எனவே, பிரிந்திருந்த பக்கங்களையெல்லாம் ஒன்றுசேர்த்து புதிதாக அட்டைப்போட்டு கொடுக்கும்படி பாப்டிஸ்ட் சர்ச்சை சேர்ந்த ஒரு வயதான சிறைக்கைதியிடம் கேட்டார். துணைத் தளபதி விடுமுறைக்கு செல்லும் முன்பு கைதிகளை மேற்பார்வை செய்யும் நபரிடம் இந்த வயதானவரிடமிருந்து அந்த பைபிளைப் பறிமுதல் செய்ய வேண்டாம் என்றும் கூறினார். இந்த வயதானவர் தனக்கு ஒரு பைபிள் கிடைத்திருக்கிறது என்று சொல்லி ரொம்ப பெருமைப்பட்டார். அதேசமயம், மற்றவர்கள் அதை எடுத்து படித்துவிட்டு அவரிடம் திருப்பித் தரவும் ஒத்துக்கொண்டார். மதிப்புள்ள இந்தப் பொக்கிஷம் சகோதரர்களுடைய கையில் கிடைத்தவுடன் அவர்கள் அதைப் பகுதி பகுதியாகப் பிரித்து நகல் எடுப்பதற்காக எல்லா சாட்சிகளிடமும் கொடுத்தார்கள். அடுத்த சில நாட்களுக்கு, அனைத்து சாட்சிகளுடைய சிறை அறைகளும் நகலெடுக்கும் கடைகளாக மாறின. ஒவ்வொரு பக்கமும் இரண்டு முறை நகலெடுக்கப்பட்டன. அதைப்பற்றி ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “எல்லா பக்கங்களும் ஒன்றாகச் சேர்க்கப்பட்ட பிறகு, எங்களிடம் மொத்தம் மூன்று பைபிள்கள் இருந்தன! துணைத் தளபதிக்கு, அட்டைப் போடப்பட்ட புதிய பைபிள் கிடைத்தது. எங்களுக்கு, கையால் நகலெடுக்கப்பட்ட இரண்டு பைபிள்கள் கிடைத்தன. ஒரு பைபிளை நாங்கள் படிப்பதற்காகப் பயன்படுத்தினோம். இன்னொரு பைபிளை, பாதுகாப்பான ஓர் இடத்தில், அதாவது ‘ஹை வோல்டேஜ் கேபிள்களை’ உடைய சில பைப்புகளில் ஒளித்து வைத்தோம். எங்களை கண்காணித்தவர்கள் இந்தக் கேபிள்களுக்கு அருகில் போகவே பயந்ததால் யாருமே அங்கெல்லாம் போய் சோதனை நடத்தவில்லை. இந்த ‘ஹை வோல்டேஜ் கேபிள்கள்’ எங்களுடைய நூலகத்திற்கு நம்பகமான காவல்காரர்களாக இருந்தன.”

ஆனால், துணைத் தளபதி ஒருமுறை சோதனை நடத்தியபோது நகலெடுக்கப்பட்ட பைபிளின் ஒரு பக்கம் அவர் கையில் கிடைத்தது. நடந்ததை அவர் கேள்விப்பட்டபோது அவர் மிகவும் நொந்துபோய், “முகாமிற்குள் நான் கொண்டுவந்த பைபிளின் பாகம்தான் இது!” என்று கூறினார்.

கிறிஸ்துவின் நினைவுநாளை ஆசரித்தோம்

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துவின் நினைவுநாளை ஆசரிப்பதற்கு முகாம்களில் இருந்த சகோதரர்கள் முயற்சி எடுத்தார்கள். அவர்கள் மார்ட்வினியாவின் ஒரு முகாமில் இருந்தவரை இந்த நிகழ்ச்சியை தவறாமல் ஆசரித்துவந்தார்கள். முகாமின் நிர்வாகிகளோ இந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்கள். நினைவுநாள் ஆசரிப்பு எந்தத் தேதியில் விழும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்ததால் விசேஷமாக அந்த நாளில் முகாமின் காவலர்களிடம் அதிக எச்சரிக்கையாய் இருக்கும்படி சொல்வார்கள். எனினும், காவலர்களில் யாருக்குமே, நினைவுநாள் ஆசரிப்பு ஆரம்பமாகும் நேரமும், நடக்கவிருந்த இடமும் தெரியாது என்பதால் அந்தி சாய்வதற்குள் அவர்களுக்கு காவல் காத்து காத்து போதுமென்றாகிவிடும்.

திராட்ச ரசத்தையும் புளிப்பில்லாத அப்பத்தையும் பெறுவதற்கு சகோதரர்கள் எப்போதும் சிரமப்பட்டார்கள். சிறைக்கைதிகளை மிகக் கவனமாக காவல்காக்கும் காவலர் தொகுதி ஒருமுறை நினைவுநாள் ஆசரிப்பு அன்று மேசையின் டிராயரில் இருந்த திராட்ச ரசத்தையும் புளிப்பில்லாத அப்பத்தையும் கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தார்கள். பிறகு, அந்தக் காவலர் தொகுதியினரின் வேலை முடிந்து, அடுத்த காவலர் தொகுதியினர் வந்தார்கள். காவலர் தொகுதியின் மேலதிகாரியினுடைய அலுவலகத்தை சுத்தம் செய்ய சென்ற ஒரு சகோதரர், பறிமுதல் செய்யப்பட்ட நினைவு ஆசரிப்பு சின்னங்களை யாருக்கும் தெரியாமல் சகோதரர்களிடம் ஒப்படைத்தார். அன்று மாலை மூன்றாவது காவலர் தொகுதி காவல் காத்துக்கொண்டிருந்த சமயத்தில், சகோதரர்கள் நினைவுநாளை சின்னங்களுடன் ஆசரித்தார்கள். இந்தச் சின்னங்கள் அன்று மிகவும் அவசியமாய் இருந்தன, ஏனெனில், சகோதரர்களில் ஒருவர் சின்னங்களில் பங்கேற்கிறவராக இருந்தார்.

மகளிர் முகாமில் நினைவுநாள் ஆசரிப்பு

மற்ற முகாம்களிலும் இதேபோன்ற பிரச்சினைகள் இருந்தன. கெமிரோவோ நகரத்தில் இருந்த ஒரு மகளிர் முகாமில் கிறிஸ்துவின் நினைவுநாளை ஆசரிப்பது, பெரிய சவாலாக இருந்ததை வாலெண்டீனா கார்னோஃப்ஸ்காயா நினைவுகூர்ந்து இவ்வாறு விளக்குகிறார்: “இந்த முகாமில் கிட்டத்தட்ட 180 சகோதரிகள் இருந்தார்கள். நாங்கள் ஒன்றாகச் சேரக்கூடாதென்று கட்டளையிடப்பட்டிருந்தோம். பத்து வருடங்களில் இரண்டே இரண்டு முறைதான் எங்களால் நினைவுநாளை ஆசரிக்க முடிந்தது. ஒருமுறை நான் சுத்தம் செய்ய நியமிக்கப்பட்டிருந்த அலுவலகத்தில், நினைவுநாள் ஆசரிப்பு நிகழ்ச்சியை நடத்த நாங்கள் தீர்மானித்திருந்தோம். நிகழ்ச்சி ஆரம்பமாக பல மணிநேரங்கள் இருந்தபோதே சகோதரிகள் கொஞ்சம் கொஞ்சமாக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வந்து சேர்ந்தார்கள். இப்படிச் சுமார் 80 சகோதரிகள் வந்துசேர்ந்தார்கள். மேசைமீது திராட்ச ரசத்தையும் புளிப்பில்லாத அப்பத்தையும் வைத்தோம்.

“பாடல் பாடாமலேயே நிகழ்ச்சியை ஆரம்பிக்க தீர்மானித்தோம். ஒரு சகோதரி ஆரம்ப ஜெபத்தை செய்தார். எல்லாமே ரொம்ப மரியாதைக்குரிய விதத்தில் சந்தோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று நாங்கள் எதிர்பார்க்காத சப்தங்களும், கூச்சல்களும் காதில் விழுந்தன. எங்களை மேற்பார்வைசெய்ய நியமிக்கப்பட்டவர்கள் எங்களைத் தேடுவதைப் புரிந்துகொண்டோம். நாங்கள் கூடியிருந்த அந்த அறையின் ஜன்னல் உயரத்தில் இருந்தபோதிலும் எங்கள் தொகுதியின் அதிகாரியே ஜன்னல் வழியாக எங்களைப் பார்ப்பதை அப்போதுதான் கண்டோம். அப்போது, கதவை யாரோ பயங்கரமாகத் தட்டுவதைக் கேட்டோம். கதவைத் திறக்கச் சொல்லி ஒரு குரல் உத்தரவிட்டது. அந்த அதிகாரி வேகமாக உள்ளே நுழைந்து, பேச்சு கொடுத்துக்கொண்டிருந்த சகோதரியை தரதரவென்று இழுத்துச் சென்று ஒரு தனிச்சிறையில் அடைத்தார். இன்னொரு சகோதரி தைரியமாகப் பேச்சைத் தொடர்ந்தார். ஆனால், அவரையும் காவலர்கள் இழுத்துச் சென்றார்கள். உடனே, மற்றொரு சகோதரி பேச்சை தொடர முயற்சி செய்தார். அதனால், எங்கள் அனைவரையும் அந்தக் காவலர்கள் இன்னொரு அறைக்கு இழுத்துச் சென்றார்கள். எங்களை தனிச்சிறையில் அடைத்துவிடுவதாகக் கூறி மிரட்டினார்கள். அந்த அறையிலேயே பாட்டு பாடி ஜெபத்துடன் நினைவுநாள் ஆசரிப்பை முடித்தோம்.

“நாங்கள் எங்களுடைய சிறைகளுக்கு வந்துசேர்ந்தபோது, மற்ற கைதிகள் எங்களை இப்படியாகச் சொல்லி வரவேற்றார்கள்: ‘நீங்கள் அனைவரும் திடீரென்று காணாமற்போனபோது, அர்மெகதோன் வந்துவிட்டதென்று நினைத்தோம், கடவுள் உங்களையெல்லாம் பரலோகத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டு, எங்களை அழிப்பதற்காக இங்கேயே விட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டோம்!’ இந்தக் கைதிகள் ஏற்கெனவே எங்களுடன் சில வருடங்கள் இருந்திருக்கிறார்கள். என்றாலும், சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர்களில் சிலர் சத்தியத்திற்கு செவிசாய்க்க ஆரம்பித்தார்கள்.”

‘நாங்கள் நெருக்கமாக நின்றோம்’

வோர்குடாவிலிருந்த ஒரு முகாமில், உக்ரைன், மால்டோவா ஆகிய இடங்களிலிருந்தும் பால்டிக் நாடுகளிலிருந்தும் சோவியத் யூனியனின் மற்ற குடியரசுகளிலிருந்தும் வந்த சகோதரர்கள் இருந்தார்கள். அங்கு நடந்ததைக் குறித்து ஈவான் கிலிம்கோ என்ற சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “1948-ஆம் வருடத்தின் குளிர்காலம் அது. எங்களிடம் பைபிள் பிரசுரங்கள் எதுவும் இருக்கவில்லை. என்றாலும், பழைய பத்திரிகைகளில் நாங்கள் படித்த விஷயங்களை முடிந்தளவுக்கு நினைவுகூர்ந்து, அவற்றைச் சிறிய காகிதங்களில் எழுதிவைத்தோம். சிறை மேற்பார்வையாளர்களின் கண்ணில் படாமல் அவற்றை மறைத்துவைத்தோம். ஆனால், எங்களிடம் அப்படிப்பட்ட காகிதங்கள் இருந்தன என்பது அவர்களுக்குத் தெரியும். சீக்கிரத்திலேயே நீண்ட, கடுமையான தேடல்கள் ஆரம்பிக்கவிருந்தன. கடும் குளிர்காலங்களில், ஐந்து ஐந்து பேரென வரிசையாக வெளியே நிற்கவைக்கப்பட்டோம். அடிக்கடி அதிகாரிகள் எங்களைத் திரும்பத் திரும்ப எண்ணுவார்கள். உறையவைக்கும் பணியில் நிற்பதற்குப் பதிலாக நாங்கள் எழுதிவைத்திருந்த அந்தக் காகிதங்களை அவர்களிடம் கொடுக்க வேண்டுமென அவர்கள் எதிர்பார்த்ததாகத் தெரிந்தது. ஒவ்வொரு முறையும் எங்களை எண்ணும்போது, நாங்கள் நெருக்கமாக நின்று ஒரு பைபிள் தலைப்பின்பேரில் கலந்துபேசுவோம். நாங்கள் எப்போதுமே பைபிள் சம்பந்தப்பட்ட விஷயங்களைத்தான் யோசித்தோம். யெகோவாவிடம் உத்தமத்தைக் காத்துக்கொள்ள அவர் எங்களுக்கு உதவினார். சிலகாலத்திற்குப் பிறகு முகாமிற்குள் ஒரு பைபிளையும் சகோதரர்களால் கொண்டுவர முடிந்தது. சோதனையிடப்படுகையில் முழு பைபிளும் பறிமுதல் செய்யப்படாமல் இருப்பதற்காக அதை அநேக பாகங்களாகப் பிரித்து வைத்தோம்.

“அங்கிருந்த காவலர்களில் சிலர், யெகோவாவின் சாட்சிகள் சிறையில் இருக்க வேண்டியவர்கள் அல்ல என்பதை நன்றாகவே அறிந்திருந்தார்கள். தயவுள்ள இந்த மனிதர்கள், தங்களால் முடிந்த விதங்களில் எங்களுக்கு உதவி செய்தார்கள். எங்களில் ஒருவருக்கு ஏதாவது ‘பார்ஸல்’ வருகையில் இவர்கள் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்துவிட்டார்கள். பொதுவாக, எங்களுக்கு வந்த ஒவ்வொரு பார்ஸலிலும் காவற்கோபுரத்தின் ஓரிரு பக்கங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்தக் காகிதங்கள் மிஞ்சி மிஞ்சி போனால் சில கிராம்கள்தான் தேறும். இருந்தாலும், கிலோ கணக்கில் கிடைக்கிற உணவுடன் ஒப்பிட இவை விலைமதிப்புள்ளவை. எல்லா முகாம்களிலும், சாட்சிகள் சரீர ரீதியில் வாடியிருந்தாலும் ஆன்மீக ரீதியில் புஷ்டியாய் இருந்தார்கள்.”—ஏசா. 65:13, 14.

“அதை அவர் 50 பேருக்கு பங்கு போடுவார்!”

சத்தியத்திடம் ஆர்வம் காட்டினவர்களுடன் சகோதரர்கள் வாராவாரம் பைபிள் படிப்பு நடத்தினார்கள். மாலை 7 மணிக்குப் பிறகு முகாம்களில் பைபிள் படிப்பு நடத்தப்படுவது அநேக கைதிகளுக்குத் தெரிந்திருந்தது. பைபிளில் ஆர்வம் காட்டாதவர்களுக்குக்கூட இந்த விஷயம் தெரிந்திருந்தது. எனவே, ரொம்பவே அமைதியாக இருப்பதற்கு அவர்கள் அனைவரும் முயற்சி செய்தார்கள். அந்தக் காலத்தை நினைவுகூர்ந்து யாவ் ஆன்ட்ரோனிக் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவா எங்களைக் கவனித்துக்கொள்வதையும் அவருடைய வேலையைச் செய்ய எங்களுக்கு உதவுவதையும் எங்களால் நன்றாக உணர முடிந்தது. அதோடு, பைபிளின் நியமங்களைக் கடைப்பிடித்து ஒருவரிடம் ஒருவர் கிறிஸ்தவ அன்பை வெளிக்காட்ட முயற்சி செய்தோம். உதாரணத்திற்கு, எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட உணவை எங்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டோம். முகாம்களிலோ இது அபூர்வமான பழக்கமாக இருந்தது.

“ஒரு முகாமில், சகோதரர்களுக்கு உணவு பங்கிடும் வேலை மிகேலா பியாடோகா என்ற சகோதரருக்குக் கொடுக்கப்பட்டது. ‘மிகேலாவுக்கு ஒரு சிறிய துண்டு மிட்டாய் கொடுத்தாலும், அதை அவர் 50 பேருக்கு பங்கு போடுவார்!’ என்று ஒரு கேஜிபி அதிகாரி ஒருமுறை கூறினார். சகோதரர்கள் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். முகாமில் எங்களுக்குக் கிடைத்த அனைத்தையும் நாங்கள் பகிர்ந்துகொண்டோம். அது எங்கள் வயிற்றுப் பசியை ஆற்றும் உணவாக இருந்தாலும் சரி ஆன்மீகப் பசியை ஆற்றும் உணவாக இருந்தாலும் சரி, நாங்கள் அப்படியே செய்தோம். அது, எங்களுக்கும் நன்மையை அளித்தது; நல்மனம் படைத்தவர்களுக்கும் ஒரு சிறந்த சாட்சியாக அமைந்தது.”—மத். 28:19, 20; யோவா. 13:34, 35.

நன்னடத்தைக்காக கூடுதல் சம்பளம்

ஒரு முகாமில் யெகோவாவின் சாட்சிகளை மேற்பார்வை செய்த பணியாளர்கள், தங்களுக்கு வழக்கமாக கிடைக்கும் சம்பளத்தைவிட கிட்டத்தட்ட 30 சதவிகிதம் அதிகமாகப் பெற்றார்கள். ஏன்? அதைக் குறித்து விக்டர் கட்ஷ்மித் இவ்வாறு விளக்குகிறார்: “அந்த முகாமில், முன்பு காஷியராக வேலைசெய்த ஒரு பெண்மணி இதைப்பற்றி எனக்கு கூறினார். அவர் என்ன சொன்னார் என்றால், நம்முடைய சகோதரர்களில் அநேகர் அடைக்கப்பட்டிருந்த முகாம்களில், முகாம் பணியாட்கள் கோபப்பட்டு, கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், சாதுர்யமாகவும் பணிவாகவும் நடந்துகொள்ளும்படி சொல்லப்பட்டார்கள். அப்படி நல்ல விதமாக நடந்துகொண்டால் அவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டது. யெகோவாவின் சாட்சிகள் மட்டும் இல்லை, மற்றவர்களும் நன்நடத்தையுள்ளவர்கள் என்பதையும் மற்றவர்களிடமிருந்து சாட்சிகள் எவ்விதத்திலும் வித்தியாசமானவர்கள் அல்ல என்பதையும் நிரூபிக்கவே இந்தத் திட்டம். எனவே, பணியாட்களின் நன்நடத்தைக்குப் பணம் கொடுக்கப்பட்டது. அந்த முகாமில், மருத்துவ பணியாட்கள், தொழிலாளர்கள், கணக்கர்கள், கண்காணிப்பவர்கள் என்று மொத்தமாக கிட்டத்தட்ட நூறு பேர் வேலை செய்தார்கள். அதிக பணம் கிடைக்கிற சந்தர்ப்பத்தை நழுவவிட அவர்கள் யாருக்குமே மனமிருக்கவில்லை.

“ஒருநாள் முகாமிற்கு வெளியே ஒரு சகோதரர் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது கைதிகளின் ஒரு குழு தலைவர் சப்தமாகத் திட்டிக்கொண்டிருந்தது அவர் காதில் விழுந்தது. அடுத்த நாள் முகாமிற்கு உள்ளே சகோதரர் அந்தக் குழு தலைவரைச் சந்தித்து, ‘காவலர் அறையில் உங்களை யாராவது ரொம்பவே கோபமூட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் ரொம்ப சப்தமாகத் திட்டிக்கொண்டிருந்தீர்களே!’ என்றார். அதற்கு அந்தத் தலைவர், ‘அப்படி எதுவுமில்லை, காலையிலிருந்து நான் கோபத்தைக் கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி எனக்கு நெஞ்சே வெடித்துவிடும்போல இருந்தது. என் கோபத்தை போக்கத்தான் அப்படி முகாமிற்கு வெளியே சென்று கத்தினேன்’ என்று கூறினார். யெகோவாவின் சாட்சிகளைப் போல் நடந்துகொள்வது உண்மையிலேயே மற்றவர்களுக்குப் பெரிய சுமையாக இருந்தது.”

கண்ணாடிக்குப் பின் பிரசங்கித்தல்

மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்க தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை சகோதரர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். சில சமயங்களில் அவர்களுடைய முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்தன. அதைக் குறித்து நிகோலாய் குட்ஸல்யாக் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் பெரும்பாலும் முகாமிலிருந்த சிறிய உணவு கடையிலிருந்தே உணவு பொருட்களை வாங்கினோம். எப்போதெல்லாம் நான் உணவு வாங்க சென்றேனோ அப்போதெல்லாம் பைபிளிலிருந்து ஏதாவது ஒரு விஷயத்தைப் பேச முயற்சி செய்தேன். உணவு அளித்த அந்தப் பெண்மணி நான் சொல்வதை எப்போதுமே கவனமாய்க் கேட்டார். ஒரு சமயம், பைபிள் சம்பந்தமாக எதையாவது வாசித்துக்காட்டும்படி கேட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு, ஓர் அதிகாரி நுழைவாயிலுக்கு வரும்படி என்னிடம் சொன்னார். முகாம் அதிகாரியுடைய வீட்டில் ஒரு ஜன்னலுக்கு கண்ணாடிப் பொருத்தும்படி என்னிடமும் இன்னொரு சாட்சியிடமும் சொன்னார்.

“ராணுவ வீரர்கள் மூன்று பேரின் பாதுகாப்பில் நானும் அந்தச் சகோதரரும் பட்டணத்திலிருந்த அந்த அதிகாரியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். முகாமில் உணவு அளித்த அந்தப் பெண்மணிதான் கதவைத் திறந்தார். அவர் அந்த முகாம் அதிகாரியின் மனைவி! ராணுவ வீரர்களில் ஒருவர் வீட்டிற்கு உள்ளே நின்றார். மற்ற இருவர் வெளியே அதாவது தெருவில், ஜன்னல் பக்கத்தில் நின்றார்கள். அந்தப் பெண்மணி எங்களுக்கு குடிக்க டீ கொடுத்துவிட்டு, பைபிளைப்பற்றி அதிகம் சொல்லும்படி கேட்டார். ஜன்னலில் கண்ணாடியைப் பொருத்திய அன்றைய தினம் அவருக்கு நாங்கள் முழுமையாகச் சாட்சி கொடுத்தோம். நாங்கள் பேசி முடித்த பிறகு, ‘என்னைக் குறித்து பயப்படாதீர்கள். என் பெற்றோர்கூட உங்களைப் போலவே கடவுள் பக்தியுள்ளவர்கள்’ என்று கூறினார். அவருடைய கணவர் சாட்சிகளை வெறுத்ததால் நாங்கள் கொடுத்த பிரசுரங்களை அவருக்குத் தெரியாமல் ரகசியமாகப் படித்தார்.”

“நாளைக்கு நீங்கள் வேலைக்குப் போகலாம்”

அதிகார வர்க்கத்தில் இருந்த சிலருக்கு சாட்சிகள்மீது நல்ல அபிப்பிராயம் இருந்ததால் அவர்களுக்கு ஆதரவாகப் பேசினார்கள். 1970-களில் இர்குட்ஸ்க் ஆப்லாஸ்ட்டைச் சேர்ந்த ப்ராட்ஸ்க் நகரத்தில், ஒரு மரத் தொழிற்சாலையை நடத்தி வந்த கம்யூனிஸ்ட் அலுவலகம், யெகோவாவின் சாட்சிகளாய் இருந்த எல்லா தொழிலாளர்களையும் வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டது. “சோவியத் அரசாங்கம் உங்களுக்குப் பிடிக்காததால் அது உங்களை கவனித்துக்கொள்ளாது. ஆனால், உங்களுக்கு யெகோவாவைப் பிடித்திருப்பதால் அவரே உங்களை கவனித்துக்கொள்ளட்டும்” என்று சகோதரர்களிடம் சொல்லப்பட்டது. வேலையிலிருந்து நீக்கப்பட்ட சகோதரர்கள், வெளியே சென்று பகிரங்கமாக பிரசங்கிப்பதே சிறந்தது என்று தீர்மானித்தார்கள். எனவே, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் இறங்கினார்கள். ஒரு வீட்டில் ஒரு பெண்மணி கதவைத் திறந்தார். சகோதரர்கள் தங்களை அறிமுகப்படுத்திய பிறகு தாங்கள் வந்ததற்கான காரணத்தைச் சுருக்கமாகச் சொன்னார்கள். இப்படி அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, சமையல் அறையிலிருந்து ஓர் ஆணின் குரல் கேட்டது: “நீ யாரிடம் பேசுகிறாய்? அவர்களை உள்ளே வரச்சொல்” என்று அவர் கூறினார். சகோதரர்கள் வீட்டிற்குள் சென்றவுடன், “இன்று விடுமுறை இல்லையே, நீங்கள் ஏன் வேலைக்குப் போகவில்லை?” என்று கேட்டார். தங்களுடைய வேலை எப்படிப் பறிபோனதென்று சகோதரர்கள் விளக்கினார்கள்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த அந்த மனிதர், அரசு தரப்பு வழக்கறிஞர். மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்திருந்தார். சகோதரர்கள் சொன்னதைக் கேட்டு அவருக்கு கோபம் வந்துவிட்டது. உடனே அந்தத் தொழிற்சாலைக்கு ஃபோன் செய்தார். யெகோவாவின் சாட்சிகளை அந்த அலுவலகம் வேலையிலிருந்து நீக்கியது உண்மைதானா என்று கேட்டார். உண்மைதான் என்று அவருக்குப் பதில் கிடைத்ததும், “எதன் அடிப்படையில் அவ்வாறு செய்தீர்கள்? நீங்கள் சட்டத்தை மீறியிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியாதா? இப்படிச் செய்ய உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது! நீங்கள் வேலையிலிருந்து தூக்கிய எல்லா சாட்சிகளுக்கும் மறுபடியும் வேலை கொடுக்க வேண்டும். நீங்கள் எடுத்த தீர்மானத்தால் அவர்களுக்கு மூன்று மாதங்கள் வேலை இல்லாமல் போய்விட்டது. அதற்காக நீங்கள் அவர்களுக்கு இழப்பீடு தரவேண்டும்” என்று சொல்லி ஃபோனை கீழே வைத்துவிட்டு, “நாளைக்கு நீங்கள் வேலைக்குப் போகலாம், அங்கேயே வேலை செய்யுங்கள்” என்று சகோதரர்களிடம் கூறினார்.

“பிரசுரங்களை 1947-லிருந்து ஒளித்துவைக்கிறேன்”

1970-களுக்குள், பிரசுரங்களைத் தயாரிப்பதிலும், வினியோகிப்பதிலும், மறைத்துவைப்பதிலும் சகோதரர்கள் திறமைசாலிகளாக ஆகியிருந்தார்கள். இருந்தாலும், சில சமயங்களில் சட்டென்று யோசித்து முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களையும் எதிர்ப்பட்டனர். கிரிகோரி சிவூல்ஸ்கி நினைவுகூர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “1976-ல் ஒருமுறை எங்கள் வீடு சோதனையிடப்பட்டது. அன்று மாலைதான், சில சகோதரர்களின் ஊழிய அறிக்கைகளையும் விலாசங்களையும் மேசைக்கு அடியில் அஜாக்கிரதையாக வைத்திருந்தேன். சோதனையிட வந்த கேஜிபி அதிகாரிகள், ‘எதைத் தேட வேண்டும், எங்கே தேட வேண்டும் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்பதைப்போல காட்சியளித்தார்கள். அவர்களில் ஒருவர் என்னிடம் ‘இந்தக் கட்டிலைப் பிரிக்க வேண்டும். ப்ளையர்களையும் ஸ்குரு டிரைவரையும் கொடுங்கள்’ என்றார். நான் ஜெபம் செய்துவிட்டு எந்தப் பதட்டமுமின்றி நிதானமாக இவ்வாறு கூறினேன்:

“‘நீங்கள் மற்ற சாட்சிகளுடைய வீட்டை சோதனையிட வந்ததுபோல் எங்கள் வீட்டிற்கும் திடீரென வந்திருந்தால் எதையாவது கண்டுபிடித்திருப்பீர்கள். ஆனால், இன்று நீங்கள் தாமதமாக வந்துவிட்டீர்கள். உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது.’

“‘சரி அப்படி வந்திருந்தால், எங்களுக்கு என்ன கிடைத்திருக்கும்?’ என்று கேட்டார் அந்த அதிகாரி.

“‘காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் கிடைத்திருக்கும். ஆனால், இன்று உங்களுக்கு எதுவும் கிடைக்காது.’

“அவர்கள் கேட்ட கருவிகளைக் கொடுத்துவிட்டு, ‘நீங்கள் சோதனை நடத்தி முடித்த பிறகு இப்போது இருப்பது போலவே அந்தக் கட்டிலைத் திரும்ப ஒன்றுசேர்க்க வேண்டும்’ என்று அவர்களிடம் கூறினேன்.

“என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு நிமிடம் அப்படியே நின்றிருந்தார்கள். அவர்கள் குழம்பிப்போயிருப்பதை உணர்ந்து அவர்களில் இளையவராய் இருந்த ஒருவரிடம், ‘யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களை நீங்கள் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகத்தான் தேடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நானோ, பிரசுரங்களை 1947-லிருந்து ஒளித்துவைக்கிறேன். இங்கே சோதனை செய்து உங்களுடைய நேரத்தை வீணாக்காதீர்கள்; பிரசுரங்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்கின்றன.’

“அவர்கள் எங்கள் வீட்டைவிட்டு கிளம்பியபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சகோதரர்களின் ஊழிய அறிக்கைகளும் விலாசங்களும் கைக்கு எட்டும் தூரத்தில்தான் இருந்தன.”

பெரஸ்ட்ராய்கா—மாற்றத்திற்கான காலம்

முன்னாள் சோவியத் யூனியனின் அரசியலிலும் சமுதாயத்திலும் ஏற்பட்ட மாற்றம்தான் பெரஸ்ட்ராய்கா. 1985-ல் அறிவிக்கப்பட்ட இந்த பெரஸ்ட்ராய்கா எதிர்பார்த்த மாற்றங்களை உடனடியாகக் கொண்டுவரவில்லை. சில இடங்களில், சாட்சிகள் இன்னும் கைதிசெய்யப்பட்டு சிறைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். இருப்பினும், 1988-ல் ஜெர்மனி கிளை அலுவலகம், உலக தலைமை அலுவலகத்திற்கு இவ்வாறு கடிதம் எழுதியது: “[யூஎஸ்எஸ்ஆரில் உள்ள சகோதரர்கள்] தங்கள் சபைகளை உள்ளூர்களில் பதிவு செய்தால் கூட்டங்கள் மற்றும் பிரசுரங்கள் பொறுத்தவரையில் அவர்களுக்கு ஓரளவு சுதந்திரம் அளிக்க யூஎஸ்எஸ்ஆர் அதிகாரிகள் விரும்புகிறார்கள் என்பதற்கு ஊழிய ஆண்டின் ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரிந்தன. பெரும்பாலான இடங்களில் எந்தத் தொந்தரவுமின்றி கிறிஸ்துவின் நினைவுநாளை சகோதரர்கள் ஆசரித்தார்கள். தங்களைக் குறித்து, அதிகாரிகளுக்கு இருந்த அபிப்பிராயம் மாறியிருப்பதாகச் சகோதரர்கள் உணருகிறார்கள்.”

காலப்போக்கில், ஆன்மீக உணவு பார்ஸல்களைப் பெற விரும்பின சகோதரர்களின் விலாசங்களை, ஜெர்மனி கிளை அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்ட சகோதரர்கள் அனுப்பிவைத்தார்கள். கிளை அலுவலகத்திலிருந்து தங்களுக்குக் கிடைத்த பார்ஸல்களை இந்தச் சகோதரர்கள் மூப்பர்களிடம் ஒப்படைத்தார்கள். இந்த ஆன்மீக உணவு எல்லா சகோதரர்களுக்கும் கிடைக்கும்படி இந்த மூப்பர்கள் பார்த்துக்கொண்டார்கள். பிப்ரவரி 1990-க்குள் கிட்டத்தட்ட 1,600 சகோதரர்கள் தங்கள் விலாசங்களைக் கொடுத்தார்கள். மாதத்திற்கு ஒருமுறை ஆன்மீக உணவு இந்த விலாசங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

1989-ல் சோவியத் யூனியனைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான சாட்சிகள் போலந்தில் நடைபெற்ற விசேஷ மாநாட்டில் கலந்துகொண்டார்கள். நாபெரிஷ்னிசெல்னி என்ற நகரத்திலிருந்து யெஃப்டாகியா என்ற சாட்சி நினைவுகூர்ந்து சொல்வதாவது: “எங்களுடைய உண்மையான, முதல் மாநாட்டிற்கு நாங்கள் செல்ல எங்களுக்கு உதவிசெய்யும்படி யெகோவாவிடம் ஜெபத்தில் மன்றாடினோம். நான் வேலை செய்த கம்பெனியின் முதலாளி நான் நாட்டைவிட்டு வெளியே செல்வதைக் கேள்விப்பட்டு, ‘என்ன! நீங்கள் டிவியில் பார்க்கவில்லையா? எல்லை மூடப்பட்டிருக்கிறது, அதைக் கடந்து செல்ல யாருக்கும் அனுமதி கொடுக்கப்படுவதில்லை!’ என்று சொன்னார்.

“எல்லை திறக்கப்படும்’ என்று உறுதியாகச் சொன்னேன். சொன்னது போலவே நடந்தது. ப்ரெஸ்ட் என்ற நகரத்தின் சோதனைச் சாவடியில் யெகோவாவின் சாட்சிகள் மட்டுமே எல்லையைக் கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். எங்களை அவர்கள் சோதனைக்கூட செய்யவில்லை. நாங்கள் அனைவருமே மரியாதையுடன் நடத்தப்பட்டோம். சாட்சியல்லாத ஒருவன் மாநாட்டுக்கு செல்கிறவரைப் போல் பாசாங்கு செய்து எல்லையைக் கடக்க முயற்சி செய்தான். ஆனால், சோதனையிட்ட அதிகாரிகள் அவனை உடனே கண்டுபிடித்து, எல்லையைக் கடக்க அவனை அனுமதிக்கவில்லை. அவர்கள் எப்படி அவனை அடையாளம் கண்டார்கள்? மாநாட்டுக்குச் செல்லவிருந்த மக்களின் முகத்தில் பளீர் புன்முறுவல் இருந்தது. அவர்களுடைய கைகளில் சிறிய பைகள் மட்டுமே இருந்தன.”

மாஸ்கோவில் அமோக வரவேற்பு

யெகோவாவின் சாட்சிகள், 1949-ல் மாஸ்கோவில் தங்கள் வேலையைப் பதிவு செய்ய விண்ணப்பித்து 40 வருடங்கள் கடந்துவிட்டிருந்தன. அந்தச் சமயத்தில், ஸ்டாலினின் அரசாங்கம் சொன்னபடியெல்லாம் நடப்பதற்கு சகோதரர்களின் மனசாட்சி அனுமதிக்கவில்லை. ஆனால், 1990 பிப்ரவரி 26 அன்று மாஸ்கோவில் மத நடவடிக்கைகளைக் கவனிக்கும் குழுவின் சேர்மன், யெகோவாவின் சாட்சிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர்களை அழைத்தார். அந்தக் கூட்டத்தில், இரண்டு துணை சேர்மன்களும் அந்தக் குழுவின் மற்ற மூன்று அங்கத்தினர்களும் கலந்துகொண்டனர். யெகோவாவின் சாட்சிகளில் மொத்தம் 15 பேர் பிரதிநிதிகளாகச் சென்றிருந்தார்கள். ரஷ்யாவிலிருந்தும் மற்ற குடியரசுகளிலிருந்தும் 11 பேர், புருக்லினிலிருந்து மில்டன் ஹென்ஷல், தியோடர் ஜாரஸ், ஜெர்மனி கிளை அலுவலகத்திலிருந்து வில்லி போல், நிகீடா கார்ல்ஸ்ட்ரோம் ஆகியோர் சென்றிருந்தார்கள்.

சேர்மன் பின்வருமாறு கூறி கூட்டத்தை ஆரம்பித்துவைத்தார்: “யெகோவாவின் சாட்சிகளைச் சந்திப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இப்போதுதான் முதல் முறையாக உங்களை நேரில் சந்திக்கிறேன். உங்களுடன் வெளிப்படையாக கலந்தாலோசிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” சோவியத் யூனியனில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் நடவடிக்கைகளைப் பதிவு செய்ய விரும்புவதாகச் சகோதரர்கள் கூறினார்கள். அதற்கு சேர்மன், “அதைக் கேட்க சந்தோஷமாக இருக்கிறது. அதற்கான சமயமும் கைகூடி வந்திருக்கிறது. சீக்கிரத்தில் வசந்தகாலம் பிறக்கப்போகிறது. பயிரிடும் சமயம் அது, நல்ல பலன்களும் நல்ல பழங்களும் கிடைக்குமென நாம் எதிர்பார்க்கலாம்.”

சகோதரர்கள் தங்களை அறிமுகப்படுத்துமாறு சேர்மன் கேட்டபோது யெகோவாவின் சாட்சிகள் அந்நாட்டின் நான்கு திக்குகளிலும் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. அதாவது, கலினின்கிராட் தொடங்கி ரஷ்யாவின் கிழக்குக் கோடிவரை சாட்சிகள் இருந்தது தெரியவந்தது. ஒரு வட்டாரக் கண்காணி பின்வருமாறு கூறினார்: “இர்குட்ஸ்க் ஆப்லாஸ்ட்டில் உள்ள நான்கு சபைகளையும் கிழக்குக் கோடியிலுள்ள சபைகளையும் நான் பிரதிநிதித்துவம் செய்கிறேன். காபாரோவ்ஸ்க் மற்றும் க்ரஸ்னோயார்ஸ்க் க்ரைகளும் b நோவோசிபிரிஸ்க் மற்றும் ஓம்ஸ்க் ஆப்லாஸ்ட்டுகளும் என்னுடைய பிராந்தியத்தில் உள்ளடங்குகின்றன.” அதைக் கேட்ட சேர்மனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை; “உங்களுக்கு இவ்வளவு பெரிய பிராந்தியம் இருக்கிறதா, அதில் பல நாடுகளை உள்ளடக்கிவிடலாம் போலிருக்கிறதே!” என்றார்.

ஒரு துணை சேர்மன் இவ்வாறு கூறினார்: “உங்களுடைய நம்பிக்கைகளில் சிலவற்றை நாங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம். ஏனெனில், அவற்றில் சில எங்களுக்கு அவ்வளவு தெளிவாகப் புரியவில்லை. உதாரணத்திற்கு, கடவுள் இந்தப் பூமியைச் சுத்தப்படுத்தி, இன்று இருக்கிற எல்லா அரசாங்கங்களையும் நீக்கப்போகிறார் என்று உங்களுடைய புத்தகங்கள் ஒன்றில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை எங்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை.” அதற்கு சகோதரர் போல் கூறிய பதில்: “யெகோவாவின் சாட்சிகள் எந்த விதமான வன்முறையிலும் ஈடுபடுவதில்லை. ஒரு புத்தகம் இப்படிச் சொல்கிறதென்றால், குறிப்பிட்ட பைபிள் தீர்க்கதரிசனங்களை அந்தப் புத்தகம் கலந்தாலோசிக்கிறது என்று அர்த்தம். யெகோவாவின் சாட்சிகள், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் பரதீஸ் பூமியில் அனுபவிக்கப்போகும் நித்திய ஜீவனைப் பற்றியும் பிரசங்கிக்கிறார்கள்.”

“அதில் ஒரு தவறுமில்லையே” என்றார் அந்தத் துணை சேர்மன்.

பேச்சுவார்த்தையின் முடிவில் சேர்மன் இவ்வாறு கூறினார்: “உங்களைச் சந்தித்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். உங்களுடைய மதம் சீக்கிரத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.”

மார்ச் 1991-ல் ரஷ்யாவில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது. அந்தச் சமயத்தில், ரஷ்யாவில் 15 கோடிக்கும் அதிகமாயிருந்த ஜனத்தொகையில், ராஜ்ய பிரசங்கிப்பாளர்களின் எண்ணிக்கையோ 15,987-ஆக இருந்தது. இதன் காரணமாக ரஷ்யாவிலுள்ள சகோதர சகோதரிகளுக்குக் யெகோவாவிடமிருந்து கூடுதல் வழிநடத்துதல் தேவைப்பட்டது.—மத். 24:45; 28:19, 20.

“சந்தோஷத்தில் சுதந்திரப் பறவைகளாகச் சிறகடித்தோம்!”

ரஷ்யாவுக்கு அருகே பின்லாந்து இருந்தது. எனவே, ரஷ்யாவிலுள்ள செ. பீட்டர்ஸ்பர்க்கில் 1992 ஜூன் 26-28 வரை நடக்கவிருந்த சர்வதேச மாநாட்டை, ஒழுங்கமைக்க உதவுமாறு பின்லாந்து கிளை அலுவலகத்திடம் ஆளும் குழு கேட்டுக்கொண்டது. 50 வருடங்களுக்கும் மேலாக தடையுத்தரவின்கீழ் வாழ்ந்த சகோதரர்கள், சுதந்திரமாக ஒரு மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததைக் குறித்து எப்படி உணர்ந்தார்கள்? ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “அந்த அரங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் இருந்தார்கள். எங்கள் கண்களில் அருவியாய் நீர் வழிந்தது. சந்தோஷத்தில் சுதந்திரப் பறவைகளாகச் சிறகடித்தோம்! புதிய உலகம் வந்த பிறகுதான் இப்படியொரு சுதந்திரம் கிடைக்குமென நினைத்தோம். ஆனால், இப்போதே கிடைத்திருப்பதை பார்க்கும்போது எங்களால் நம்பவே முடியவில்லை. இதற்கெல்லாம் யெகோவாதான் காரணம். கொஞ்ச காலத்திற்கு முன்பு நாங்கள் இருந்த நிலையைச் சற்று யோசித்துப் பார்த்தோம். உயரமான வேலி சூழ்ந்த தனி முகாமில் நாங்கள் ஐந்து பேர் படுத்திருப்போம். ஒரே சமயத்தில் நான்கு பேர் ஒன்றாகச் சேர்ந்து ஐந்தாவது நபருக்கு அனலூட்டுவோம். இப்படி, ஒருவர் மாற்றி ஒருவர் படுத்துக்கொள்வோம். மாநாட்டிற்கு நாங்கள் கூடிவந்திருந்த அரங்கத்தைச் சுற்றிலும்கூட உயரமான சுவர் எழுப்பப்பட்டிருந்தது. ஆனால், இங்கிருந்து போக எங்களுக்கு மனதே வரவில்லை, எவ்வளவு நேரம் கூடுமோ அவ்வளவு நேரம் அங்கேயே இருந்துவிட விரும்பினோம். எங்களுடைய உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

“மாநாடு நடைபெற்ற அந்த மூன்று நாட்களும் நாங்கள் கண்ணீர் வடித்தோம். அந்த அற்புதத்தைக் கண்டு நாங்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தோம். நாங்கள் 70 வயதைத் தாண்டியவர்களாக இருந்தபோதிலும் சிறகடித்துப் பறக்கும் பறவைகளைப் போல் அந்த அரங்கத்தையே சுற்றி சுற்றி வந்தோம். 50 வருடங்களாக இந்தச் சுதந்திரத்திற்காகத்தானே காத்திருந்தோம். நாங்கள் முதலில் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட யெகோவா அனுமதித்தார், பிறகு சிறைச்சாலைகளிலும் முகாம்களிலும் அடைக்கப்பட அவர் அனுமதித்தார். ஆனால், இப்போதோ இந்த அரங்கத்தில் இருக்க வழிசெய்திருக்கிறார்! உண்மையிலேயே, யெகோவா எல்லாரையும்விட சக்திபடைத்தவர். அரங்கத்தில் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்தபோது எங்கள் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நாங்கள் பார்ப்பதெல்லாம் கனவுபோல் இருந்தது. சில இளம் சகோதரர்கள் எங்களைச் சுற்றிக்கொண்டு, ‘ஏன் அழுகிறீர்கள், என்ன ஆனது? யாராவது உங்களைப் புண்படுத்தும் விதத்தில் எதாவது சொல்லிவிட்டார்களா?’ என்று கேட்டார்கள். நாங்கள் அழுதுகொண்டிருந்ததால் எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், எங்களில் ஒருவர், ‘இது ஆனந்தக் கண்ணீர்!’ என்று அழுதுகொண்டே கூறினார். நாங்கள் எப்படிப் பல வருடங்களாகத் தடையுத்தரவின்கீழ் யெகோவாவைச் சேவித்தோம் என்பதை அவர்களுக்கு விளக்கினோம். ஆனால், இவ்வளவு சீக்கிரமாக யெகோவா எல்லாவற்றையும் மாற்றியிருப்பதைப் பார்க்கும்போது எங்களுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.”

மறக்கமுடியாத அந்த மாநாட்டிற்குப் பிறகு 15 விசேஷ பயனியர்களை ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்குமாறு பின்லாந்து கிளை அலுவலகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. 1992 ஜூலை 1-ஆம் தேதியன்று பின்லாந்திலிருந்து ஹான்னூ டானினென் மற்றும் ஏயா டானினென் என்ற சுறுசுறுப்பான விசேஷ பயனியர் தம்பதி செ. பீட்டர்ஸ்பர்க்குக்கு வந்து சேர்ந்தார்கள். ஆரம்பத்தில், புதிய மொழியைக் கற்பது அவர்களுக்கு மிகப் பெரிய சவாலாய் இருந்தது. தங்களுடைய முதல் மொழிப் பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு, அவர்கள் வெளி ஊழியத்திற்குச் சென்றார்கள்; மக்களிடம் வீட்டு பைபிள் படிப்பு பற்றி கூறினார்கள். ஹான்னூ சொல்கிறார்: “1990-களின் ஆரம்பத்தில், அந்த நகரத்தில் கிட்டத்தட்ட எல்லாருமே பைபிளைப் படிக்க விரும்பினார்கள். தெரு ஊழியத்தின்போது மக்கள் மனமுவந்து தங்கள் விலாசங்களைக் கொடுத்தார்கள். எல்லாருமே தங்களுக்குப் பிரசுரங்கள் வேண்டுமென கேட்டார்கள். தெருக்களில் யாராவது ஒருவருக்கு நீங்கள் துண்டுப்பிரதியையோ பத்திரிகையையோ கொடுத்தால் போதும், அதைப் பார்த்து பத்து பேர் உங்களிடம் வந்து தங்களுக்கும் பத்திரிகைகள் கொடுக்குமாறு கேட்பார்கள். மக்கள் பத்திரிகைகளை வாங்கியதோடு உடனடியாக அவற்றை வீதியிலேயே அல்லது சுரங்கப்பாதையிலேயே வாசிக்கத் தொடங்கினார்கள்.”

1992 அக்டோபரிலிருந்து நிறைய விசேஷ பயனியர்கள் போலந்திலிருந்தும் வர ஆரம்பித்தார்கள். முதலில் வந்த தொகுதியில் திருமணமாகாத சகோதரிகள் அநேகர் இருந்தார்கள். சீக்கிரத்தில் போலந்திலிருந்து வந்த இரண்டாவது தொகுதியும் செ. பீட்டர்ஸ்பர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். ஒரு வருடத்திற்குப் பிறகு போலந்திலிருந்து வந்த பயனியர்கள் மாஸ்கோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். அதற்கு பின்வந்த வருடங்களில் ரஷ்யாவில் சேவை செய்ய 170-க்கும் அதிகமான வாலண்டியர்கள் போலந்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் ஊழியப் பயிற்சி பள்ளியில் தேர்ச்சி பெற்ற சகோதரர்களாக இருந்தார்கள்.

பெரிதும் அநுகூலமுமான கதவு திறக்கப்பட்டிருக்கிறது

செ. பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த அந்தச் சர்வதேச மாநாட்டிற்குப் பிறகு, நகர்ப்புறத்திற்கு அருகேயுள்ள சோல்னிசிநோயி என்ற கிராமத்தில் பொருத்தமான ஓர் இடத்தை (17 ஏக்கர்) வாங்குவதற்கு சகோதரர்களுக்கு ஆளும் குழு அனுமதி கொடுத்தது; அந்த இடத்தில் சில பழைய கட்டிடங்களும் இருந்தன. ரஷ்யாவில் பெத்தேலைக் கட்ட சமயம் வந்துவிட்டது. கட்டுமானப் பணியில் உதவுமாறு பின்லாந்து கிளை அலுவலகத்திடம் கேட்கப்பட்டது. 1992 செப்டம்பர் மாதத்தில் பின்லாந்திலிருந்து வாலண்டியர்களின் முதல் குழு சோல்னிசிநோயி கிராமத்திற்கு வந்து சேர்ந்தது. ஒளலிஸ் பெர்க்டால் என்பவர் அந்தக் குழுவைச் சேர்ந்த சகோதரர்களில் ஒருவர். பிறகு இவர், கிளை அலுவலகக் குழு அங்கத்தினராக ஆனார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “எனக்கும் என் மனைவி ஈவா லீஸாவுக்கும் ரஷ்யாவின் பெத்தேல் கட்டுமானப் பணியில் உதவ அழைப்பு கிடைத்தபோது அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டோம். யெகோவாதான் இந்த வேலையை வழிநடத்துகிறார் என்று எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. உலக முழுவதிலுமுள்ள சகோதரர்கள் இந்த வேலைக்கு ஆதரவு கொடுத்தார்கள்.”

பின்லாந்திலிருந்து கட்டுமானப் பணியைக் கண்காணிக்க வந்த ஆல்ஃப் ஸேடெர்லோஃப்பும் அவரது மனைவி மார்யேலேனாவும் கட்டிட வேலையில் ஈடுபட்ட எல்லா சகோதர சகோதரிகளுக்கும் உற்சாக ஊற்றாகத் திகழ்ந்தார்கள். பின்லாந்து கிளை அலுவலக குழுவினரும் சகோதரர்களை நன்கு உற்சாகப்படுத்தினார்கள். சோல்னிசிநோயி கிராமத்தில் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்தபோது புருக்லின் தலைமை அலுவலகத்திலிருந்தும் சகோதரர்கள் வந்தார்கள். ஔலிஸ் இவ்வாறு சொல்கிறார்: “1993-ல் சர்வதேச மாநாடு முடிந்த பிறகு மில்டன் ஹென்ஷல் எங்களை வந்து சந்தித்தார். வாலண்டியர்களுக்கு அவர் பேச்சு கொடுத்தபோதும் சரி அவர்களிடம் தனிப்பட்ட விதமாக பேசினபோதும் சரி, அவர்களுக்கு உற்சாகம் தரும் விதத்தில் பேசினார்.”

பெத்தேல் கட்டுமானப் பணிக்காக ஏறக்குறைய 700 வாலண்டியர்கள் வந்திருந்தார்கள். இவர்கள் ஸ்காண்டினேவியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா அதோடு முன்னாள் சோவியத்தின் மற்ற குடியரசுகளிலிருந்தும் வந்திருந்தார்கள். இவர்கள் வெவ்வேறு கலாச்சாரத்தையும் பின்னணியையும் சேர்ந்தவர்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய பாணியில் வேலையைச் செய்தார்கள். என்றாலும், சகரியா 4:6 சொல்கிறபடியே வேலை நடந்து முடிந்தது: “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” இந்த “வீட்டை” உண்மையிலேயே யெகோவாதான் கட்டினார். (சங். 127:1) ரஷ்ய சகோதரர்கள் ராஜ்ய வேலையில் மனமுவந்து ஈடுபட்டார்கள். அவர்களில் அநேகர் இளைஞர்கள், சத்தியத்தைப் புதிதாய்க் கற்றவர்கள். இருந்தாலும் அவர்களில் அநேகர் பயனியர் ஊழியர்களாக இருந்தார்கள். தரமான ஒரு கட்டிடத்தை சீக்கிரத்தில் எப்படிக் கட்டிமுடிப்பது என்பதையும், சபையை ஒழுங்கமைப்பது போலவே கட்டுமான வேலையையும் எப்படி ஒழுங்கமைப்பது என்பதையும் கற்றுக்கொள்ள ஆவலாய் இருந்தார்கள்.

வேலையை ஒழுங்கமைத்தல்

1993-ன் இறுதியில் ரஷ்ய நாட்டு ஆலோசனை குழு சோல்னிசிநோயிக்கு வந்தது. ஈவான் பாஷ்காவ்ஸ்கி, டிமீட்ரீ லிவி, வாஸிலி காலின், ஆலெக்ஸீ வெர்ஷ்பிட்ஸ்கி, அனாடோலீ பரீபிட்கோவ், டிமீட்ரீ ஃபெடனீஷின் ஆகியோர் அதில் அடங்குவர். ஒரு வருடம் கழித்து, மைச்சாயில் ஸாவீட்ஸ்கி என்பவரும் அவர்களோடு சேர்ந்துகொண்டார். வேலையை ஒழுங்கமைப்பதில் சகோதரர்களுக்கு உதவும்படி ஜெர்மனி கிளை அலுவலகத்திலிருந்து ஹார்ஸ்ட் ஹென்ஷல் என்பவரையும் ஆளு குழு அனுப்பிவைத்தது.

முதலாவதாக, பயண வேலையை ஒழுங்கமைக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில், அந்நாடு ஐந்து வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டது. அவற்றில் இரண்டு, செ. பீட்டர்ஸ்பர்க்கிலும், மற்ற மூன்று, மாஸ்கோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்தன. ஆர்டுர் பாயுயர், பாவ்யில் பாகைஸ்கி, ராய் ஆஸ்டர் ஆகியோர் மாஸ்கோவிலும் கஷிஷ்டாவ் பாப்லாவ்ஸ்கி, ஹான்னூ டானினென் ஆகியோர் செ. பீட்டர்ஸ்பர்க்கிலும் முதன் முதலில் நியமிக்கப்பட்ட ஐந்து முழுநேர வட்டாரக் கண்காணிகள் ஆவர். பிறகு, ராமான் ஸ்கீபா என்பவரும் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். அதோடு, 1992-ல் ஊழியப் பயிற்சி பள்ளியில் தேர்ச்சிபெற்ற, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த மாத்யூ கெல்லி என்பவர் பகுதிநேர மாவட்ட கண்காணியாக நியமிக்கப்பட்டார்.

1990-களின் ஆரம்பத்தில் வட்டாரக் கண்காணியின் சந்திப்புகள் எவ்வாறு இருந்தன என்பதைக் குறித்து ஹான்னூ டானினென் இவ்வாறு சொல்கிறார்: “வட்டாரக் கண்காணியின் சந்திப்பைக் குறித்து காரீலீயா குடியரசைச் சேர்ந்த பீட்ரோஜாவோட்ஸ்க் என்ற நகரத்திலிருந்த சபைக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்த வாரத்தின்போது சபை கூட்டங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைக் குறித்து அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். நானும் என் மனைவியும் அந்தச் சபையைச் சந்திப்பதற்காக அந்த ஊருக்கு வந்துசேர்ந்தபோது ஒரு மூப்பர் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அவர் தன்னுடைய வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்றார். நான் எழுதின கடிதத்தை என்னிடம் காட்டி அவர் இவ்வாறு கூறினார்: “உங்களுடைய கடிதம் எங்கள் கைக்கு கிடைத்தது, ஆனால் அதில் சொல்லியிருப்பதெல்லாம் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை; அதனால் நீங்கள் வந்து இதைப்பற்றி விளக்கின பிறகு எல்லா ஏற்பாடுகளையும் செய்யலாம் என்று நினைத்தோம்.’

“மர்மான்ஸ்க் நகரத்தில் வட்டாரக் கண்காணியின் முதல் சந்திப்பின்போது அங்கிருந்த 385 பிரஸ்தாபிகள் 1000-க்கும் அதிகமான பைபிள் படிப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்கள். ஆனால், பைபிளைப் படித்தவர்களின் உண்மையான எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருந்தது. ஏனென்றால், ஒரு பைபிள் படிப்பில் நிறைய பேர் கலந்துகொண்டார்கள். உதாரணத்திற்கு, ஒரு சகோதரிக்கு 13 பைபிள் படிப்புகள் இருந்தன, ஆனால் அவருடன் படித்ததோ 50-க்கும் அதிகமானோர்!

“எங்களுடைய இரண்டாவது நியமிப்பு, வோல்காகிராட் ஆப்லாஸ்ட்டையும் ரோஸ்டோவ் ஆப்லாஸ்ட்டையும் உள்ளடக்கியது. 10,00,000-க்கும் அதிகமான ஜனத்தொகையை உடைய வோல்காகிராட்டில் நான்கு சபைகள்தான் இருந்தன. கூட்டங்களையும் பைபிள் படிப்புகளையும் எவ்வாறு நடத்துவது, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் எவ்வாறு பிரசங்கிப்பது ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள சகோதரர்கள் ஆவலாய் இருந்தார்கள். ஒவ்வொரு சந்திப்பின்போதும் புதுப்புது சபைகளை உருவாக்க வேண்டியிருந்தது. வட்டாரக் கண்காணியின் அறிக்கையைத் தயாரிக்கையில் முந்தைய சந்திப்பிற்கும் தற்போதைய சந்திப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு பேர் முழுக்காட்டப்பட்டிருக்கிறார்கள் என்று கணக்கிட்டோம். ஒவ்வொரு சபையிலும் 50, 60, அல்லது 80 பேர் முழுக்காட்டப்பட்டிருந்தார்கள். ஒரு சபையில் அந்த எண்ணிக்கை 100-யும் தாண்டியிருந்தது. அதன் விளைவாக அந்த நகரத்தில் மூன்றே வருடங்களில் 16 புதிய சபைகள் உருவாக்கப்பட்டன.”

ஜனவரி 1996-ல் ரஷ்யாவில் ஒரு கிளை அலுவலகக் குழு நியமிக்கப்பட்டது. அதேசமயம், முதன் முதலாக முழுநேர மாவட்ட கண்காணிகளும் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுடைய பட்டியல் பின்வருமாறு: ராமான் ஸ்கீபா (சைபீரியாவும் கிழக்குக் கோடியும்), ராய் ஆஸ்டர் (பெலாரூஸ், மாஸ்கோ மற்றும் செ. பீட்டர்ஸ்பர்க் முதல் யூரல் மலைகள்வரை), ஹான்னூ டானினென் (காகேஷியா முதல் வோல்கா நதிவரை), ஆர்டுர் பாயுயர் (கஸக்ஸ்தானும் மத்திய ஆசியாவும்). அந்தக் காலங்களில் மாவட்ட கண்காணிகளாக இருந்த அனைவரும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட மாவட்டங்களைக் கண்காணித்ததோடு சிறிய வட்டாரங்களையும் கண்காணித்தார்கள்.

தூர இடங்களுக்குப் பயணித்தல்

1993-ன் ஆரம்பத்தில் போலந்திலிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட முதல் விசேஷ பயனியர்களில் ராமான் ஸ்கீபாவும் ஒருவர். அவர் இவ்வாறு சொல்கிறார்: “அக்டோபர் 1993-ல் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு நியமிக்கப்பட்ட வட்டாரத்தில், செ. பீட்டர்ஸ்பர்க்கின் தெற்கு பகுதியிலும், பஸ்காஃப் ஆப்லாஸ்ட்டிலும், பெலாரூஸ் முழுவதிலும் உள்ள சபைகள் அடங்கியிருந்தன. இது ரஷ்யாவின் மிகப் பெரிய வட்டாரமாக இல்லையென்றாலும், நான் தூர இடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டியிருந்தது. நவம்பர் 1995-ல் யூரல் மலைகளில் இருந்த வட்டாரத்திற்குத் துணை மாவட்ட கண்காணியாக நியமிக்கப்பட்டேன். என்னுடைய பிராந்தியத்தில் யூரல் மலைகளும், சைபீரியா முழுவதும், ரஷ்யாவின் கிழக்குக் கோடியும் அடங்கியிருந்தன. இந்த மாவட்டம், போலந்து அளவிலுள்ள 38 நாடுகளை உள்ளடக்கும் என ஒரு சகோதரர் கணக்கிட்டார்! இந்தப் பகுதிகள், மொத்தம் எட்டு வித்தியாசமான காலநிலைகளை (time zone) உள்ளடக்கின! கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு மங்கோலியாவின் தலைநகரான உலான் படோரிலுள்ள ஒரு தொகுதியைச் சந்திக்குமாறு கிளை அலுவலகம் என்னிடம் கூறியது.”

சகோதரர் ஸ்கீபா தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “ஒருமுறை ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கிலுள்ள நாரீல்ஸ்க் என்ற நகரத்திலிருந்து யெகாடிரின்பர்க் என்ற நகரத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அதற்கு முதலில் நான் நாரீல்ஸ்க்கிலிருந்து நோவோசிபிரிஸ்க் நகரம்வரை ஒரு விமானத்தில் பயணித்து பிறகு அங்கிருந்து யெகாடிரின்பர்க் நகரத்திற்கு இன்னொரு விமானத்தில் பயணிக்க வேண்டியிருந்தது. இது மறக்க முடியாத ஒரு நீ. . .ண்ட பயணமாக இருந்தது. நாரீல்ஸ்க்கிலிருந்து எங்களுடைய விமானம் 12 மணிநேரம் தாமதமாக புறப்பட்டதால் நானும் என் மனைவி, லியூட்மீலாவும் ஒரு நாள் முழுவதும் விமான நிலையத்திலேயே கழித்தோம். இது கஷ்டமாக இருந்தாலும் இதில் விளைந்த ஒரு நன்மை என்னவென்றால், பயணங்களின்போதே எங்கள் தனிப்பட்ட படிப்பை செய்ய நாங்கள் கற்றுக்கொண்டோம்.

“சில சமயங்களில் நாங்கள் எவ்வளவு முயற்சி எடுத்தும் சபைகளைச் சந்திப்பதற்கு தாமதமாகவே சென்றோம். ஒருமுறை அல்டாயில் இருந்த ஊஸ்ட்கான் என்ற மலை கிராமத்திலிருந்த சபைக்குச் செல்ல, தளம் போடப்படாத மலை பாதை வழியாக காரில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், வழியிலேயே எங்கள் கார் பழுதாகி நின்றுவிட்டது. எனவே, சபையின் அறிக்கைகளைப் பார்ப்பதற்கு மட்டுமல்ல கூட்டத்திற்கே இரண்டு மணிநேரம் தாமதமாகத்தான் போய்ச் சேர்ந்தோம். இந்நேரத்திற்கு எல்லாரும் வீட்டுக்கு கிளம்பியிருப்பார்கள் என்று நினைத்து ரொம்பவே நொந்துபோனோம். ஆனால், நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்தபோது வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த மன்றத்தில் 175 பேர் எங்களுக்காக காத்திருந்ததைப் பார்த்து எங்களுக்கு ஒரே ஆச்சரியம்! இத்தனைக்கும் அவர்களில் 40 பேர்தான் பிரஸ்தாபிகள்! நாங்கள் வருவதற்குத் தாமதமானதால் வேறு மலை கிராமங்களிலிருந்தும் ஆர்வமுள்ளவர்கள் கூட்டத்திற்கு வர முடிந்தது என்று நாங்கள் கேள்விப்பட்டோம்.” c

மறக்கமுடியாத மாநாடுகள்

சில பெரிய நகரங்களில் மாவட்ட மாநாடுகள் முதல் முறையாக நடைபெற்றன. அங்குள்ள சகோதரர்களுக்கு மாநாட்டை ஒழுங்கமைப்பதில் எந்த முன் அனுபவமும் இருக்கவில்லை. 1996-ல் யெகாடிரின்பர்க்கில் ஒரு மாவட்ட மாநாட்டை நடத்த பொருத்தமான ஓர் அரங்கத்தை சகோதரர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதைக் குறித்து ராமான் ஸ்கீபா இவ்வாறு சொல்கிறார்: “இருக்கைகள்மீது புற்கள் முளைத்திருந்தன, அரங்கத்திற்கு உள்ளே இரண்டு மீட்டர் உயரத்தில் காட்டு மரங்கள் வளர்ந்திருந்தன. மாநாட்டிற்கு இன்னும் மூன்று வாரங்கள்தான் இருந்தன. அந்த நகரத்திலும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் மூன்று சபைகள் மட்டுமே இருந்தன. அந்த அரங்கத்தில் எப்படி எங்களால் மாநாட்டை நடத்த முடியும் என்று அந்த அரங்கத்தின் நிர்வாகிக்குப் புரியவில்லை. இருந்தாலும் அவர் எங்களுடன் ஒத்துழைக்க முன்வந்தது சந்தோஷமாக இருந்தது. சகோதரர்கள் வேலையை ஆரம்பித்தார்கள். குறிக்கப்பட்ட தேதிக்குள் அரங்கம் பளிச்சென்று ஆகிவிட்டது. அந்த நிர்வாகி அரங்கத்தை பார்த்தபோது அவர் கண்ணையே அவரால் நம்ப முடியவில்லை!” இந்த நன்றியின் நிமித்தம் அந்த நிர்வாகி, அரங்கத்தின் ஒரு கட்டிடத்தில் பயனியர் ஊழியப் பள்ளியை நடத்த சகோதரர்களுக்கு அனுமதி அளித்தார். ஒரு சகோதரர் சொல்வதாவது, “மாநாடு முடிந்த பிறகு அந்த அரங்கத்தில் மறுபடியும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவை அந்த நகரத்திற்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தந்தன.”

மாநாடுகளையும் அசெம்பிளிகளையும் நடத்த சில சமயங்களில் வளைந்துகொடுக்கும் தன்மையையும் சகிப்புத்தன்மையையும் காட்ட வேண்டியிருந்தது. 1999-ல் விலாடகாஃப்காஸ் என்ற நகரத்தில் வட்டார மாநாட்டை நடத்த 5,000 பேர் உட்காருமளவுக்கு வசதியுள்ள ஓர் அரங்கத்தை சகோதரர்களால் வாடகைக்கு எடுக்க முடியாமற்போனது. எனவே, வட்டார மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்களைச் செய்ய சகோதரர்கள் உடனடியாகத் தீர்மானித்தார்கள். வட்டார மாநாடு ஒரு நாள் மாநாடாகச் சுருக்கப்பட்டு விலாடகாஃப்காஸ் நகரத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு சினிமா தியேட்டரில் ஐந்து முறை நடத்தப்பட்டது. அதன் பிறகு வார இறுதியில் வட்டார மாநாட்டின் இரண்டு நாள் நிகழ்ச்சியும் நால்சிக் என்ற நகரத்தில் இரண்டு கிலோமீட்டர் தூர இடைவெளியில் அமைந்திருந்த இரண்டு வித்தியாசமான இடங்களில் நடத்தப்பட்டது. முதல் மன்றத்தில் மாநாடு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணிநேரம் கழித்து இரண்டாவது மன்றத்தில் மாநாடு ஆரம்பித்தது. பேச்சாளர்கள் முதல் மன்றத்திலிருந்து இரண்டாம் மன்றத்திற்கு வந்துசேர நேரமளிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. அசெம்பளி முடிவதற்குள் சில பயணக் கண்காணிகளுக்குத் தொண்டை கட்டிவிடும்போல் இருந்தது. ஒரு சகோதரர், அந்த வாரத்தில் தான் 35 பேச்சுகளைக் கொடுத்ததாக கணக்கிட்டார்! ஒரு மன்றத்தில் சனிக்கிழமை காலைவரை நன்றாக நடந்துகொண்டிருந்த நிகழ்ச்சியில் திடீரென்று தடங்கல் ஏற்பட்டது. சீருடையில் வந்த ஆட்கள் ஒரு நாயுடன் மன்றத்திற்குள் நுழைந்து தொழில்நுட்ப காரணங்களுக்காக மன்றத்திலிருந்த அனைவரையும் வெளியே போகும்படி சொன்னார்கள். எப்போதும் போலவே சகோதர சகோதரிகள் பதட்டப்படாமல் மன்றத்தை விட்டு வெளியேறினார்கள். தங்கள் மதிய உணவைச் சாப்பிட்டவாறு மன்றத்திற்கு வெளியே ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். தடங்களுக்கு காரணம் பின்பு தெரியவந்தது. மத வெறிப்பிடித்த ஒருவர், அந்த மன்றத்தின் நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து அந்தக் கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். மன்றம் முழுவதும் சோதனையிடப்பட்டது. அங்கு வெடிகுண்டு எதுவும் அகப்படவில்லை. எனவே, சகோதரர்கள் மாநாட்டைத் தொடர அனுமதிக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியில் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு மாநாடு நல்லபடியாக நடந்துமுடிந்தது. எல்லாருமே நிகழ்ச்சியிலிருந்து பயனடைய முடிந்தது.

கற்கள், கேடயங்கள், வாள்கள்

சத்திய விதைகள் சீக்கிரத்தில் நாடு முழுவதும் விதைக்கப்பட்டன. ஏயா டானினென் இவ்வாறு சொல்கிறார்: “1998-ல் ஒரு மாநாட்டை முடித்துவிட்டு இன்னொரு மாநாட்டிற்குச் செல்ல 15 மணிநேரம் ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. அதற்காக நாங்கள் தயார் செய்துகொண்டிருந்தபோது, மாநாட்டின் நாடகத்திற்குத் தேவையான பொருள்களை எல்லாம் எடுத்துச் செல்ல முடியுமா என்று சகோதரர்கள் எங்களிடம் கேட்டார்கள். ஆனால், எடுத்து செல்வதில் ஒரு பிரச்சினை இருந்தது. பயணிகள் நிறைய பொருள்களை எடுத்துவந்தால் ரயில் ஊழியர்களுக்குப் பொதுவாகப் பிடிக்காது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஆனாலும், சகோதரர்களின் உதவியுடன் நாங்கள் தைரியமாக கற்களையும், கேடயங்களையும், வாள்களையும் நாடக உடைகள் நிறைந்த பைகளையும் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறினோம். நாங்கள் ஏறின அந்த ரயில் பெட்டியில் நான்கு பேர்தான் உட்கார முடியும். மற்ற இரண்டு பயணிகளுடன் எங்கள் பொருள்களையும் வைத்துக்கொண்டு நாங்கள் உட்கார்ந்தோம்.

“ரயில் ஊழியராக வந்த பெண்மணி எங்கள் டிக்கெட்டுகளைப் பார்வையிட வந்தபோது நாங்கள் ஏன் இத்தனை பொருள்களை எடுத்துவந்திருக்கிறோம் என்று கேட்டார். இவை யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாட்டில் நடைபெறவிருக்கும் நாடகத்திற்குத் தேவையான பொருள்கள் என்று கூறினோம். அதைக் கேட்டு அந்தப் பெண்மணி எங்களிடம் கணிவுடன் நடந்துகொண்டார். சில சமயத்திற்கு முன்பு அவர் வசித்த இடத்திலிருந்த சபையை சந்திப்பதற்காக நானும் என் கணவரும் அங்குச் சென்றிருந்தபோது அங்கு என் கணவர் கொடுத்த பொதுப்பேச்சை அவரும் கேட்டதாகக் கூறினார். யெகோவா எங்களுக்கு உதவியதை எங்களால் உணர முடிந்தது.”

பைபிள் படிப்பைப் பார்க்க வந்தவர்கள்

சகோதரிகள் ஒருவரையொருவர் பார்த்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டார்கள். இதைப்பற்றி ஏயா இவ்வாறு சொல்கிறார்: “ரஷ்யாவில் நாங்கள் ஊழியத்தை ஆரம்பித்தபோது எங்களால் அந்நாட்டு பாஷையை சரியாகப் பேச முடியவில்லை. அந்தச் சமயத்தில் சகோதரிகள் எங்களிடம் ரொம்பவே பொறுமையாகவும் மனத்தாழ்மையாகவும் நடந்துகொண்டார்கள். பைபிள் படிப்புகளை எவ்வாறு நடத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள சகோதரிகள் ஆவலாய் இருந்ததைப் பார்த்தபோது உண்மையிலேயே நெகிழ்ந்துபோனேன். அவர்களில் அநேகர் சத்தியத்தை புதிதாய்க் கற்றவர்கள், சிலர் தடையுத்தரவின்கீழ் இருந்தவர்கள். எனவே, யெகோவாவுடைய அமைப்பிலிருந்து கிடைக்கும் வழிநடத்துதல்களை அவர்களால் எல்லா சமயங்களிலும் பெற முடியாமற்போனது.

“1995 முதல் 1996 வரை வால்ஷ்ஸ்கீ என்ற பட்டணத்தில் சேவை செய்தோம். யாராவது ஒரு சகோதரி தன்னுடைய பைபிள் படிப்புக்கு வரும்படி என்னை அழைத்தால் பெரும்பாலும் மற்ற சகோதரிகளும் வந்து, ‘நாங்களும் உங்களோடு வரலாமா’ என்று கேட்பார்கள். இவர்கள் ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்று முதலில் எனக்குப் புரியவில்லை. பைபிள் படிப்புகளை நடத்துவது எப்படி என்பதை பார்த்து கற்றுக்கொள்ள விரும்பியதால்தான் அவர்கள் அப்படிக் கேட்டார்கள் என்று பிறகுதான் எனக்கு சொன்னார்கள். நிறைய பேர் சென்றால் பைபிள் மாணாக்கருக்கு தொந்தரவாகவும் கூச்சமாகவும் இருக்காது என்றால் அவர்கள் வரலாம் என்றேன். பைபிள் மாணாக்கருக்கு அது தொந்தரவாக இருக்காது என்று நினைத்து பொதுவாக ஆறு முதல் பத்து சகோதரிகள் வந்தார்கள். உண்மையிலேயே அது அவர்களுக்கு கஷ்டமாக இருக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, அநேக பைபிள் மாணாக்கர்கள் ஆர்வம் காட்டினவர்களிடம் தாங்களே சொந்தமாக பைபிள் படிப்புகள் நடத்தியதைப் பார்த்தேன். அந்தச் சமயத்தில் வால்ஷ்ஸ்கீயில் இரண்டு சபைகள் மட்டுமே இருந்தன. ஆனால், பத்து வருடங்களுக்குப் பிறகு, அவை 11 சபைகளாகப் பெருகின.”

அவருடைய ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது

தேவராஜ்ய வழிநடத்துதல், புதிதாய் சத்தியத்திற்கு வந்த சகோதர சகோதரிகளுக்கு மட்டுமல்ல பல வருடங்களாகத் தடையுத்தரவின்கீழ் யெகோவாவைச் சேவித்தவர்களுக்கும் பேருதவியாய் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. ஹான்னூ டானினென் இவ்வாறு சொல்கிறார்: “வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தேவதூதர்களின் வழிநடத்துதல் எங்களுக்கு இருந்ததை நாங்கள் உணர்ந்தோம். எங்கள் மனதை ஆழமாகத் தொட்ட சில சந்தர்ப்பங்களை எதிர்ப்பட்டோம். 1994-ல் நோவ்கோராட் நகரத்தில் (இப்போது விலீகீ நோவ்கோராட் என்றும் அழைக்கப்படுகிறது) இருந்த ஒரு புதிய சபைக்கு வந்து சேர்ந்தோம். அந்த வாரம் நாங்கள் தங்கவிருந்த அப்பார்ட்மென்ட்டுக்கு சகோதரர்கள் எங்களை அழைத்துச் சென்றார்கள். மரியா என்ற வயதான ஒரு சகோதரியும் அந்த அப்பார்ட்மென்ட்டில் தங்க வந்திருந்தார். வட்டார ஊழியரின் சந்திப்புக்காக கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரத்திலிருந்து இவர் வந்திருந்தார். இவர் 50 வருடங்களாகச் சத்தியத்தில் இருந்திருக்கிறார். தடையுத்தரவிற்குப் பிறகு சேவை செய்ய வந்திருக்கும் முதல் வட்டாரக் கண்காணியைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார். அவர் எப்படிச் சத்தியத்தைக் கற்றார் என்று சொல்லும்படி அவரிடம் கேட்டோம். அவர் 17 வயதாய் இருந்தபோது ஜெர்மனியிலிருந்த ஒரு சித்திரவதை முகாமில் அடைக்கப்பட்டதாக கூறினார். அங்கு யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்து சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு சகோதரி முகாமிலேயே அவருக்கு முழுக்காட்டுதல் கொடுத்திருக்கிறார். காலப்போக்கில், மரியா விடுதலை செய்யப்பட்டு ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக ரஷ்யாவுக்குத் திரும்பியிருக்கிறார். பிரசங்கித்ததன் நிமித்தம் சில காலத்திற்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சோவியத் கட்டாய உழைப்பு முகாம்களில் அவர் பல வருடங்களைச் செலவழித்திருக்கிறார்.

“தன் கதையின் இறுதியில் அவர் சொன்னதைக் கேட்டு நாங்கள் மனதுருகினோம். பணிவுள்ள இந்தச் சகோதரி தன்னுடைய வணக்கத்தில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று கடந்த சில வாரங்களாக யெகோவாவிடம் ஜெபத்தில் கேட்டதாகக் கூறினார். பல வருடங்களுக்கு முன்பு காவற்கோபுரத்தில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட விஷயம் கலந்தாலோசிக்கப்பட்டிருந்ததை அன்று மாலை அந்தச் சகோதரியிடம் சொன்னேன். முழுக்காட்டுதல் ஏற்கத்தகுந்ததாக இருக்க வேண்டுமென்றால், அதை ஒரு கிறிஸ்தவ சகோதரர் கொடுப்பது அவசியம் என்று அதில் சொல்லியிருந்தது. அதைக் கேட்டு மரியா மிகவும் சந்தோஷப்பட்டார். தன்னுடைய ஜெபத்திற்குப் பதில் கிடைத்துவிட்டதாக உணர்ந்தார். அதனால் ஒரு குளியல் தொட்டியில் முழுக்காட்டுதல் பெறுவதுகூட அவருக்கு திருப்தியளித்தது. 1944-ல் யெகோவாவுக்கு அவர் ஒப்புக்கொடுத்து 50 வருடங்கள் ஆகியிருந்தன.”

11 காலநிலைகளை உள்ளடக்கிய பிராந்தியங்களுக்கு ஆன்மீக உணவு எடுத்துச் செல்லப்பட்டது

1991-ன் ஆரம்பத்திலிருந்து பிரசுரங்கள் சிறிய சிறிய பார்ஸல்களில் ஜெர்மனியிலிருந்து அல்லது பின்லாந்திலிருந்து அஞ்சல்மூலம் ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஜூலை 1993-ல் ஜெர்மனியிலிருந்து சோல்னிசிநோயிக்கு முதல் முறையாக 20 டன் பிரசுரங்கள் ஒரு டிரக்கில் வந்துசேர்ந்தன. ரஷ்யாவிலிருந்து டிரக்குகள் மாஸ்கோ, பெலாரூஸ், கஸக்ஸ்தான் ஆகிய இடங்களுக்குச் சென்று பிரசுரங்களை அளிக்க ஆரம்பித்தன. ஆனால், அதில் சில சவால்களை மேற்கொள்ள வேண்டியிருந்தன. உதாரணத்திற்கு, பிரசுரங்களை கஸக்ஸ்தானுக்கு எடுத்துச் செல்ல, சகோதரர்கள் 5,000 கிலோமீட்டர் பயணிக்க வேண்டியிருந்தது. எல்லைப் பகுதியை கடப்பதற்கு பொதுவாக அதிக நேரமெடுத்தது. அதோடு குளிர் காலங்களில் டிரக்குகள் பனிக்குவியலில் சிக்கிக்கொண்டன.

தற்போது ஒவ்வொரு மாதமும் 200 டன் பிரசுரங்கள் சோல்னிசிநோயிக்கு வந்து சேருகின்றன. பெத்தேலிலிருந்து வண்டி ஓட்டிச்செல்பவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி எல்லைப்பகுதி காவலர்களிடமும் சுங்கத்துறை அதிகாரிகளிடமும் சாட்சி கொடுக்கிறார்கள். அவர்களில் சிலர் பைபிள் பிரசுரங்களை விரும்பி படிக்கிறவர்கள். ஒருமுறை ஒரு காவல் அதிகாரி வண்டிகளைச் சோதனை செய்தார்; பெத்தேல் டிரக், ஏதோ மத அமைப்பைச் சேர்ந்தது என்று தெரிந்தவுடனே சத்தம் போட்டு எல்லா மதங்களையும் தாழ்வாகப் பேச ஆரம்பித்தார். முன்பு அவருக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்ல ஆரம்பித்தார். ஒருமுறை ஒரு பாதிரி, சாலை விதிகளை கடுமையாக மீறியபோது அந்தக் காவல் அதிகாரி அவருடைய வண்டியை நிறுத்தியிருக்கிறார். அதற்கு அந்தப் பாதிரி இந்த அதிகாரியை கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறார். ஆனால், நம்முடைய சகோதரர்கள் அந்தக் காவல் அதிகாரியிடம் சாட்சி கொடுத்தனர்; கடவுள் மக்களை எவ்வாறு நடத்துகிறார், பூமிக்காகவும் மனிதருக்காகவும் அவரது நோக்கம் என்ன ஆகியவற்றை விளக்கி கூறினார்கள். கத்துவதை நிறுத்திவிட்டு அந்தக் காவல் அதிகாரி சாந்தமாகப் பேசினார். சாட்சிகளுடன் நன்றாக நடந்துகொண்டார். அவர்களிடம் கேள்விகளையும் கேட்க ஆரம்பித்தார். எனவே, சகோதரர்கள் பைபிளிலிருந்து அவருக்கு விளக்கி கூறினார்கள். இது அந்தக் காவல் அதிகாரியின் மனதை ஆழமாக தொட்டதால், “இந்த உரையாடலைத் தொடருவதற்காக நான் சாட்சிகளைத் தேடுவேன்” என்று அவர் சொன்னார்.

ரஷ்யாவின் கிழக்குக் கோடியில் இருந்த விலாடிவோஸ்டோக் நகரத்தில் உள்ள சபைகளுக்குத் தேவையான பிரசுரங்களை 1995 முதல் 2001 வரை ஜப்பான் கிளை அலுவலகம் அளித்துவந்தது. விலாடிவோஸ்டோக்கிலிருந்து கடல் வழியாக கம்சட்காவிலிருந்த சபைகளுக்குப் சகோதரர்கள் பிரசுரங்களை அனுப்பிவைத்தார்கள். கம்சட்காவிற்கு சென்ற சில கப்பல்களின் கேப்டன்களை விலாடிவோஸ்டோக்கிலிருந்த சகோதரர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். ஒரு கப்பல் கேப்டன் நம் பிரசுரங்களை இலவசமாக தன் கப்பலில் எடுத்துச்செல்ல ஒத்துக்கொண்டார். ஏன், பிரசுரங்களை தன் அறையில் ஏற்றி வைப்பதிலும் உதவினார். “நான் ஒரு விசுவாசியாக இல்லாவிட்டாலும் நல்லது செய்ய விரும்புகிறேன். உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது. நீங்கள் எல்லாவற்றையும் ஒழுங்காக செய்வதும் எனக்குப் பிடித்திருக்கிறது. சரக்கை இறக்க வேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்த பிறகு, பிரசுரங்களை இறக்கிவைக்க ரொம்ப நேரம் நான் காத்திருக்க வேண்டியதில்லை. உங்களுடைய ஜனங்கள் பறவைகளைப் போல் வேகமாக வந்து பிரசுரங்களைக் கவிக்கொண்டு போய்விடுவார்கள்” என்று அவர் சகோதரர்களிடம் கூறினார்.

வளர்ச்சியால் ஏற்பட்ட தேவை

பல வருடங்களாக ரஷ்ய மொழியில் காவற்கோபுரம், 16 பக்க பத்திரிகையாக வெளியானது. இப்போது இருப்பதைவிட கொஞ்சம் பெரியளவு பேப்பரில் அது அச்சிடப்பட்டது. படிப்பு கட்டுரைகள் அனைத்தும் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு சோவியத் யூனியனில் இருந்த சகோதரர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ஆனால், ஆங்கில பத்திரிகைகள் வெளியாகி வெகு நாட்கள் ஆன பிறகே ரஷ்ய பத்திரிகைகள் கிடைத்தன. படிப்பு கட்டுரைகள் கையில் கிடைப்பதற்கு குறைந்தது ஆறு மாதங்களிலிருந்து அதிகபட்சம் இரண்டு வருடங்கள்வரை எடுத்தன. இதர கட்டுரைகள் வந்து சேருவதற்கு அதைவிட அதிக சமயம் எடுத்தது. 1981 முதல், ரஷ்ய மொழியில் வெளிவந்த காவற்கோபுரம் 24 பக்க மாதாந்தர பத்திரிகையாக வெளிவந்தது. 1985 முதல், அது மாதத்திற்கு இரண்டு முறை வெளிவர ஆரம்பித்தது. ஆங்கிலப் பத்திரிகையுடன் ஒரேசமயத்தில் நான்கு வண்ணங்களில் முதல் முறையாக அச்சடிக்கப்பட்ட 32 பக்க ரஷ்ய பத்திரிகை ஜூன் 1, 1990-வது இதழ் ஆகும்.

டான்யா என்ற ஒரு மொழிபெயர்ப்பாளர் இவ்வாறு சொல்கிறார்: “முன்பெல்லாம் நாங்கள் மொழிபெயர்த்து அச்சடித்த விஷயங்கள் இயல்பாகவும், எளிமையாகப் புரிந்துகொள்ளும் விதத்திலும் இருக்கவில்லை என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அன்று இருந்த சூழ்நிலையில் எங்களால் முடிந்த மிகச் சிறந்ததை நாங்கள் செய்தோம். கடவுளுடைய வார்த்தையைப்பற்றி ஒன்றும் அறியாத மக்களுக்குத் தேவையான ஆன்மீக உணவாக அது இருந்தது.”

முன்னாள் சோவியத் யூனியனின் பகுதிகளில் பிரசங்க வேலைமீது போடப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதால், நம் பிரசுரங்கள் எல்லா இடங்களிலும் பரவின. ஜெர்மனியில் வேலை செய்துகொண்டிருந்த ரஷ்ய மொழிபெயர்ப்பாளர்கள் மொழிபெயர்ப்பில் உதவியைப் பெற ஆவலாய் இருந்தார்கள். மொழிபெயர்ப்பு சம்பந்தமாகச் செய்யப்பட்ட இரண்டு முன்னேற்றங்கள் மொழிபெயர்ப்பின் தரத்தை உயர்த்தின. முதல் முன்னேற்றமானது, ரஷ்யாவிலிருந்தும் உக்ரைனிலிருந்தும் அநேக சகோதர சகோதரிகள் மொழிபெயர்ப்பாளர்களாகப் பயிற்சி பெறுவதற்கு ஜெர்மனி கிளை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்கள். இதன் காரணமாக 1991 செப்டம்பர் 27 அன்று ஐந்து பேர் ஜெர்மனிக்கு வந்துசேர்ந்தார்கள். மற்றவர்கள் பிறகு வந்து சேர்ந்துகொண்டார்கள். எனவே, ரஷ்ய மொழிபெயர்ப்புக் குழு புதுவடிவம் பெற்றது. இதில் சவால்கள் இல்லாமல் இல்லை. அவர்களுடைய ‘மரங்களும் கற்களும்’ உடனடியாக ‘பொன்னாக’ மாறிவிடவில்லை. ஆனால், ஏசாயா 60:17-ல் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா நிலைகளையும் கடந்துவந்தன.

இரண்டாவது முன்னேற்றமானது, அப்போது புதிதாய் அமைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்லேஷன் சர்வீஸஸ் டிபார்ட்மென்ட் அளித்த உதவியிலிருந்து ரஷ்ய மொழிபெயர்ப்பாளர்கள் மிகவும் பயனடைந்தார்கள். ரஷ்யாவிலிருந்து சகோதர சகோதரிகள் ஜெர்மனியிலுள்ள செல்ட்டர்ஸ்ஸுக்கு வந்த சமயத்தில் ஜெர்மனி கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மொழிபெயர்ப்பு, அந்த மொழி பேசப்படும் இடத்திலேயே செய்யப்படுகையில் நல்ல பலன்கள் கிடைக்கும். எனவே, ஜனவரி 1994-ல் ரஷ்ய மொழிபெயர்ப்பாளர்கள் ஜெர்மனி கிளை அலுவலகத்தைவிட்டு, சோல்னிசிநோயியில் இன்னும் கட்டட வேலை நடந்துகொண்டிருந்த பெத்தேலில் குடியேறினார்கள்.

ஆனால், இரும்புத் திரைக்குப் பின்னால் இருந்த தங்கள் சகோதரர்களுக்காக பல பத்தாண்டுகளாக அமைதியாய் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கு ரஷ்யாவில் குடியேற அவர்களுடைய சூழ்நிலை அனுமதிக்கவில்லை. அவர்களை விட்டுப் பிரிவது ரஷ்ய மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கடினமாக இருந்தது. 17 சகோதர சகோதரிகளும் விசேஷ பயனியர்களாகச் சேவை செய்யவிருந்த இரண்டு சகோதரர்களும் 1994 ஜனவரி 23-ஆம் தேதி, அழுகையுடனும் துக்கத்துடனும் செல்ட்டர்ஸைவிட்டு ரஷ்யாவிற்கு கிளம்பினார்கள்.

“நோயாளிக்கு நான்தான் கடவுள்”

சோவியத் மருத்துவ துறையில் இரத்தம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதோடு நாத்திக கொள்கையும் பரவலாகக் காணப்பட்டது. இவற்றை அடிப்படையாக வைத்தே பல பத்தாண்டுகளாக ரஷ்ய மருத்துவர்களும் மருத்துவ பணியாட்களும் நோயாளிகளின் மத நம்பிக்கைகளை எடைப்போட்டார்கள். எனவே, மருத்துவ உதவிக்காக வந்த சாட்சிகள் இரத்தமின்றி சிகிச்சை அளிக்கும்படி கேட்டபோதெல்லாம் அவர்களுடைய மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள், ஏன், கடுகடுப்பாகவும் நடந்துகொண்டார்கள்.

“நோயாளிக்கு நான்தான் கடவுள்!” என்றுகூட மருத்துவர்கள் அநேக முறை சொன்னார்கள். மருத்துவர் சொல்வதை நோயாளி ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர் உடனடியாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படலாம். சத்தியத்தை எதிர்ப்பவர்கள், இரத்தமேற்றுதல் சம்பந்தமாக சாட்சிகளின் பைபிள் சார்ந்த நிலைநிற்கையைப் பயன்படுத்தி ரஷ்யாவில் நம் வேலையை தடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

1995-ல் ரஷ்ய கிளை அலுவலகத்தில், மருத்துவ தகவல் இலாக்கா அமைக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சையைப் பொறுத்தவரையில் யெகோவாவின் சாட்சிகளுடைய நிலைநிற்கையைக் குறித்து தெளிவான தகவல்களை மருத்துவ துறையின் நிபுணர்களுக்கு இந்தத் துறை அளித்தது. இந்தத் துறை பல கருத்தரங்குகளை நடத்தியது. 60-க்கும் மேற்பட்ட மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களின் பாகமாய் இருந்த மூப்பர்கள் அவற்றில் கலந்துகொண்டார்கள். மருத்துவர்களுக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் தேவையான தகவல்களை எவ்வாறு கொடுப்பது, சாட்சிகளாய் இருக்கும் நோயாளிகளுக்கு இரத்தமில்லாமல் சிகிச்சையளிக்கக்கூடிய மருத்துவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது போன்றவற்றை இந்த மூப்பர்கள் அந்தக் கருத்தரங்கிலிருந்து கற்றுக்கொண்டார்கள்.

1998-ல் மாஸ்கோவில், ரஷ்ய மருத்துவர்களும் அவர்களுடைய வெளிநாட்டு சகாக்களும் சர்வதேச மருத்துவ மாநாட்டிற்காக ஏற்பாடு செய்தார்கள். ரஷ்யாவில் முதல் முறையாக நடைப்பெற்ற இந்த மாநாட்டின் தலைப்பு, “அறுவை சிகிச்சையில் இரத்தத்திற்கான மாற்று வகைகள்.” ரஷ்யாவின் பல பகுதிகளிலிருந்து வந்த 500-க்கும் அதிகமான மருத்துவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்கள். 1998-லிருந்து 2002-ற்குள் ரஷ்ய மருத்துவர்கள் நிறைய அனுபவம் பெற்றதால் ரஷ்யாவின் பெரிய பெரிய நகரங்களில் இதுபோன்ற பல மாநாடுகளை நடத்தினார்கள். இதுபோன்ற மாநாடுகள் நல்ல பலன்களை அளித்தன.

ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் சுகாதார மற்றும் முக்கிய இரத்தவியல் வல்லுநரான டாக்டர் ஏ. ஐ. வாராபியோஃப், சாட்சிகளுடைய உரிமைகள் சார்பாக வழக்காடிய வக்கீல்களுக்கு ஓர் அதிகாரப்பூர்வ கடிதம் எழுதினார். இரத்தமேற்றுதல் சம்பந்தமாக மருத்துவர்கள் தங்கள் அபிப்பிராயத்தை மாற்றிக்கொண்டிருப்பதால், “பிரசவத்தில் இறக்கும் தாய்மார்களின் மரணம் நம்முடைய நாட்டில் 34 சதவிகிதம் குறைந்திருப்பதாக” அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார். டாக்டர் வாராபியோஃப் மேலும் கூறியதாவது, “இதற்கு முன்பு, நம்முடைய நாட்டில் பிரசவத்தில் இறக்கும் தாய்மார்களின் மரணம் ஐரோப்பாவைவிட 8 சதவிகிதம் அதிகமாய் இருந்ததாக நம்முடைய மருத்துவ துறை அறிக்கையிட்டது. ஏனெனில், நம் நாட்டில் பிரசவம் பார்த்தவர்கள், தேவையில்லாமல் தாய்மார்களுக்கு இரத்தம் ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.”

2001-ல் ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார துறை, நாடு முழுவதிலுமுள்ள மருத்துவ நிறுவனங்களுக்கு ஒரு தகவல் பட்டியலை அனுப்பிவைத்தது. ஒரு நோயாளி மத காரணத்தினால் தனக்கு இரத்தமேற்ற வேண்டாமென்று கேட்டுக்கொண்டால் நோயாளின் வேண்டுதலுக்கு மருத்துவர் இணங்கிச்செல்ல வேண்டும் என்று அதில் சொல்லப்பட்டிருந்தது. 2002-ல் ரஷ்யாவின் சுகாதார துறை, இரத்தக் கூறுகளின் பயன்பாடு குறித்த தகவல்களை வெளியிட்டது. தனக்கு இரத்தமேற்ற நோயாளி எழுத்தில் ஒப்புதல் தெரிவித்த பிறகே அவருக்கு இரத்தம் ஏற்றப்படலாம் என்று அந்தத் தகவல்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. மத காரணங்களுக்காக ஒரு நோயாளி இரத்தமேற்றுதலை மறுத்தால் அவருக்கு மாற்று சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மருத்துவமனை தகவல் இலாக்கா பிரதிநிதிகளுடன் உரையாடிய பிறகு இரத்தத்தைப் பயன்படுத்துவதைக் குறித்து அநேக மருத்துவர்களுக்கு இருந்த எண்ணம் மாறிவிட்டது. ஓர் அறுவை சிகிச்சை நிபுணர் அந்தப் பிரதிநிதிகளிடம் இவ்வாறு கூறினார்: “[சாட்சிகளான] நோயாளிகளிடமும் உங்களிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டதில், ஏதோ குருட்டாம்போக்கில் அல்ல பைபிளின் கட்டளைக்கு கீழ்ப்படிவதாலேயே இரத்தமேற்றுதலை நீங்கள் மறுக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இதைக் குறித்து ஆராய்ச்சி செய்ய தீர்மானித்தேன். நீங்கள் கொடுத்த பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டிருந்த எல்லா பைபிள் வசனங்களையும் வாசித்துப் பார்த்தேன். அவற்றைக் குறித்து நன்றாக யோசித்துப் பார்த்த பிறகு, உங்களுடைய தீர்மானம் உண்மையிலேயே பைபிள் சார்ந்தது என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால், இதைப்பற்றி எங்களுடைய சர்ச் பாதிரிகள் ஏன் எதுவும் சொல்வதில்லை? இப்போதெல்லாம் இரத்தத்தைக் குறித்து ஏதாவது பேச்சு வந்தால், சாட்சிகள் மட்டுமே பைபிளைப் பின்பற்றுகிறவர்கள் என்று மற்ற மருத்துவர்களிடம் நான் சொல்கிறேன்.” இன்று ரஷ்யாவில் 2,000-க்கும் அதிகமான மருத்துவர்கள் சாட்சிகளான நோயாளிகளுக்கு இரத்தமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கிறார்கள்.

தங்கள் ஊழிய நியமிப்பில் மகிழ்ச்சியோடு சேவை செய்கிறார்கள்

ஜெர்மனியிலுள்ள கிலியட் விரிவாக்கப் பள்ளியின் பட்டதாரிகளான ஆர்னோ டூங்லாவும் ஸான்யா டூங்லாவும் அக்டோபர் 1993 முதல் பல்வேறு ரஷ்ய நகரங்களில் சேவை செய்து வந்திருக்கிறார்கள். அந்தப் பிராந்தியங்களில் யெகோவாவின் ஊழியம் எப்படி முன்னேறி வந்திருக்கிறது? அந்த அனுபவங்களை அவர்கள் சொல்ல நாம் கேட்போமா?

ஆர்னோ: “மாஸ்கோவில் ஊழியம் செய்வதற்கு நாங்கள் அனுப்பப்பட்டோம். சில வாரங்களுக்குப் பிறகு, அங்கு தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் முதல் தடவையாக பேச்சுகளைக் கொடுத்தோம். ரஷ்யாவுக்கு நாங்கள் போய்ச் சேர்ந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு நடந்த ஒரு மாநாட்டில் முதல் தடவை பேச்சைக் கொடுத்தேன். முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் சுமார் 140 பேர் உள்ள சபைக்கு நியமிக்கப்பட்டோம். அந்தச் சபைக்குரிய பிராந்தியம் ஜெர்மனியிலுள்ள ஒரு வட்டாரத்தின் அளவுக்குப் பெரியதாய் இருந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! நாங்கள் முதன்முதல் ஊழியம் செய்த பிராந்தியம் எங்களுடைய பயனியர் இல்லத்திற்கு அருகே இருந்தது. அந்தப் பகுதியில் முதன்முறையாக வீட்டுக்கு வீடு ஊழியம் செய்த யெகோவாவின் சாட்சிகள் நாங்கள்தான் என்பதை நினைக்கும்போதே ஆனந்தமாக இருந்தது!”

ஸான்யா: “ரஷ்ய மொழி எங்கள் இருவருக்கும் தெரியாவிட்டாலும், சில சமயங்களில் வேறு சகோதர சகோதரிகள் இல்லாமல் நாங்கள் இருவருமாக சேர்ந்து தெரு ஊழியம் செய்தோம்; ஜனங்களிடம் பேசி துண்டுப்பிரதிகளையும் பிரசுரங்களையும் அளித்தோம். அங்கிருந்த சகோதர சகோதரிகள் எங்களை ஊக்கப்படுத்தினார்கள், அடிக்கடி எங்களோடு சேர்ந்து ஊழியம் செய்தார்கள்; இதனால், வெளி ஊழியத்திற்குச் செல்ல அவர்களுடன் ஏற்பாடுகளைச் செய்துகொள்வது எளிதாய் இருந்தது. அவர்கள் அதிக கனிவோடும் பொறுமையோடும் நடந்துகொண்டார்கள்; எங்களுக்குத் தெரிந்த அரைகுறை ரஷ்ய மொழியில் பேச அனுமதித்தார்கள். வீட்டுக்காரர்களும்கூட நாங்கள் சொல்வதை மிகுந்த பொறுமையோடு கேட்டார்கள். அந்தச் சமயத்தில், சோவியத் யூனியன் சிதறியிருந்தது, மக்களும் மதத்திடம் பெருமளவு ஆர்வம் காட்டினார்கள்.”

ஆர்னோ: “வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொண்டதும், பைபிள் படிப்புகளை நடத்தியதும் ரஷ்ய மொழியைக் கற்றுக்கொள்ள எங்களுக்குப் பேருதவியாய் இருந்தன. ஜனவரி 1994-ல், அதாவது ரஷ்யாவுக்குச் சென்ற நான்கு மாதங்களில், நாங்கள் 22 பைபிள் படிப்புகளை நடத்தி வந்தோம். இதனால், அன்றாட உரையாடலில் மக்கள் பயன்படுத்திய ரஷ்ய மொழியை கேட்கவும் பேசவும் எங்களுக்கு அநேக வாய்ப்புகள் கிடைத்தன.

“அந்தக் காலப்பகுதியில் வியப்பளிக்கும் விதத்தில் ஏராளமானோர் மாநாடுகளில் முழுக்காட்டுதல் பெற்றார்கள்; கூடிவந்திருந்தோரின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தினரோ அதற்கும் அதிகமானோரோ முழுக்காட்டுதல் பெற்றார்கள். மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் சேவை செய்வதற்குப் போதுமான சகோதரர்கள் பல சபைகளில் இல்லாதிருந்தார்கள். ஒரு மூப்பர் ஐந்து சபைகளில் நடத்தும் கண்காணியாக சேவை செய்து வந்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! அந்தச் சகோதரர் இந்தச் சபைகள் ஒன்றில் நினைவுநாள் ஆசரிப்பின்போது பேச்சுக் கொடுக்கும்படி என்னிடம் கேட்டார். அதற்கு 804 பேர் வந்திருந்தார்கள்; அடுத்த சபை அதே மன்றத்தில் ஆசரிப்பை நடத்தவிருந்ததால், பேச்சுக்குப் பிறகு சகோதரர்கள் உடனடியாக மன்றத்தைக் காலி செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அந்தச் சபையில் ஆசரிப்புப் பேச்சைக் கொடுக்க வேண்டிய சகோதரர், வரும் வழியில் கார் விபத்தில் சிக்கிக்கொண்டதால் உரிய நேரத்திற்கு அவரால் வர முடியவில்லை. ஆகையால், நானே மீண்டும் பேச்சைக் கொடுத்தேன். இந்தச் சபையில் அதற்கு 796 பேர் வந்திருந்தார்கள்! எனவே, அந்த இரண்டு சபைகளில் மட்டுமே நினைவுநாள் ஆசரிப்புக்கு மொத்தம் 1,600 பேர் வந்திருந்தார்கள்; இது அந்தக் காலப்பகுதியில் சத்தியத்திடம் மக்களுக்கிருந்த பேரளவான ஆர்வப்பசியைச் சுட்டிக்காட்டுகிறது.”

அறுவடையை யெகோவா ‘தீவிரப்படுத்துகிறார்’

‘விரும்பப்பட்டவர்களை’ கூட்டிச் சேர்க்கும் பணியைத் “தீவிரமாய்” நடப்பிக்கப் போவதாகத் தம்முடைய வார்த்தையில் யெகோவா வாக்குறுதி அளித்தார். (ஏசா. 60:22; ஆகா. 2:7) 1980-ல், செ. பீட்டர்ஸ்பர்க் நகரில் 65 பிரஸ்தாபிகள் இருந்தார்கள்; கேஜிபியினர் கண்கொத்தி பாம்புபோல் இவர்களைக் கண்காணித்து வந்தபோதிலும், அந்த நகரத்தாருடன் பைபிள் விஷயங்களைக் கலந்துபேச முயற்சி செய்தார்கள். 1990-ல், 170-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் தெரு ஊழியத்தில் கலந்துகொண்டு சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார்கள். 1991, மார்ச் மாதம் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை ரஷ்யாவில் சட்டப்படி பதிவுசெய்யப்பட்டது; சீக்கிரத்திலேயே ஐந்து சபைகள் அந்த நகரத்தில் ஊழியம் செய்து வந்தன. 1992-ல், செ. பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த சர்வதேச மாநாடும் பிற தேவராஜ்ய நிகழ்ச்சிகளும் ஏராளமானோர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள வழிசெய்தன. 2006-ல், செ. பீட்டர்ஸ்பர்க்கில் 70-க்கும் அதிகமான சபைகள் ஊழியம் செய்து வந்தன.

கஸக்ஸ்தான் நாட்டின் எல்லைக்கு அருகே அமைந்துள்ள அஸ்ட்ராகான் நகரில், 1995-ல் ஒரேவொரு சபைதான் இருந்தது. அந்தச் சபையில் மூப்பர்களோ, உதவி ஊழியர்களோ இல்லை. ஆனாலும் சகோதரர்கள் வட்டார மாநாட்டையும் விசேஷ மாநாட்டு தினத்தையும் நடத்தினார்கள். மாநாட்டில் பேச்சுகளைக் கொடுக்க 700 கிலோமீட்டருக்கும் அப்பாலுள்ள கபர்டீனோ-பால்கரிய குடியரசிலிருந்து மூப்பர்கள் வந்தார்கள். இந்த மாநாடுகளில் முழுக்காட்டுதல் பெறுவதற்குத் தயாராய் இருந்தவர்களின் எண்ணிக்கை இந்தச் சகோதரர்களுக்கு முன்னதாகவே தெரியாதிருந்தது. அதைப்பற்றி ராமான் ஸ்கீபா இவ்வாறு சொல்கிறார்: “சபையாருடன் சேர்ந்து வெளி ஊழியம் செய்வதற்காகவும் முழுக்காட்டுதல் பெறவிருப்போருடன் கேள்விகளைக் கலந்தாலோசிப்பதற்காகவும் நானும் இன்னொரு மூப்பரும் மாநாட்டு தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே அங்கு போய்ச் சேர்ந்தோம். ஆனால், ஊழியத்திற்கே செல்ல முடியவில்லை. முழுக்காட்டப்படவிருந்த 20 பேருடன் கேள்விகளைக் கலந்தாலோசிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது!”

1999-ல், யெகாடிரின்பர்க் நகரத்தில் ஒரு சந்தையில் இருக்கும் வியாபாரிகள் பலரை நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொள்ள சகோதரர்கள் அழைத்தார்கள். தங்கள் நண்பர்களையும் அழைத்து வரலாமாவென அவர்கள் கேட்டார்கள். அன்று சுமார் 100 பேர் மன்றத்திற்கு வந்ததைப் பார்த்தபோது சபையாருக்கு ஒரே ஆச்சரியமாம்! வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த அந்த மன்றம் பெரியதாக இருந்தபோதிலும் சிலருக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை.

ஐம்பது பேர் வீதம் பைபிள் படிப்புகள்

1991-ன் இறுதியில், மாஸ்கோவிற்கு அருகே உள்ள இவாநோவா ஆப்லாஸ்ட்டுக்கு பாவ்யில் டீமோவ், அனஸ்டாஸீய டீமோவ் தம்பதியர் குடிமாறியபோது அந்தப் பகுதியில் பிரசங்க ஊழியம் ஆரம்பமானது. அது மாபெரும் சவாலை அவர்களுக்கு முன்வைத்தது; ஏனெனில், அங்கு பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வந்தார்கள். அவர்கள் எப்படி ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள்? அவர்கள் எளிய, பயன்தரும் முறையைப் பயன்படுத்தத் தீர்மானித்தார்கள்; அதுதான் திறந்தவெளி புத்தகக் கடை. நகரத்தின் முக்கிய சதுக்கத்தில் கடை போட்டு சிற்றேடுகளையும் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் வைத்தார்கள். அந்த வழியே செல்பவர்கள் நின்று பார்த்தார்கள், அநேகர் உண்மையான ஆர்வம் காட்டினார்கள். சத்தியத்திடம் ஆர்வம் காட்டிய அனைவருக்கும், பைபிள் படிப்புக்கான கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்புக் கொடுத்தார்கள். வாடகைக்கு எடுக்கப்பட்ட மன்றங்களில், 50 பேர்வரை கலந்துகொண்ட இந்தக் கூட்டங்களை பைபிள் படிப்புகள் என்று அழைக்க முடியாது. ஏனெனில், அவை வாடகைக்கு எடுத்திருந்த மன்றங்களில் நடத்தப்பட்டன, அவற்றில் கிட்டத்தட்ட 50 பேர்வரை கலந்துகொண்டார்கள். இந்தப் படிப்புகள் சபை கூட்டங்களைப் போலிருந்தன, இரண்டு பகுதிகளாக நடத்தப்பட்டன. முதலாவதாக, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகம் சிந்திக்கப்பட்டது, அடுத்ததாக, காவற்கோபுர பத்திரிகையிலுள்ள கட்டுரை கலந்தாலோசிக்கப்பட்டது. இந்தப் படிப்புகள் ஒவ்வொன்றும் வாரத்தில் மூன்று முறை, மூன்று மணிநேரத்துக்கு நடத்தப்பட்டன. இதுபோன்ற படிப்புக்கான கூட்டங்கள் நகரத்தில் மூன்று இடங்களில் நடத்தப்பட்டன. சகோதரர் பாவ்யில் எப்போதுமே மூன்று பைபிள் படிப்புகளை நடத்துவதாக அறிக்கை செய்தார். பிரஸ்தாபிகளில் பெரும்பாலோர் 10 முதல் 20 படிப்புகளை நடத்தி வந்த சமயத்தில், இவர் மட்டும் ஏன் மூன்று படிப்புகளை நடத்துகிறாரென கேட்டபோதுதான், அந்தப் படிப்புகள் ஒவ்வொன்றிலும் சுமார் 50 பேர் கலந்துகொள்வது தெரியவந்தது. விரைவிலேயே, அந்தப் படிப்பில் கலந்துகொண்டவர்களில் பலர், நற்செய்தியைப் பிரசங்கிக்க விருப்பம் தெரிவித்தார்கள். இது, அந்த ஏற்பாட்டின்மீது யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்ததைத் தெளிவாகக் காட்டியது. ஒரு முறை இப்படிப்பட்ட படிப்புக்குப் பிறகு, பிரஸ்தாபிகள் ஆவதற்கு விருப்பமுள்ளவர்கள் கூட்டம் முடிந்ததும் மன்றத்திலேயே இருக்கும்படி சகோதரர் பாவ்யில் அறிவிப்பு செய்தார். கூட்டம் முடிந்து யாருமே போகவில்லை, எல்லாருமே பிரஸ்தாபிகள் ஆனார்கள். நகரத்தில் திறந்தவெளி புத்தகக் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தன, நகர சதுக்கங்களிலும் பூங்காக்களிலும் உள்ள திறந்தவெளி புத்தகக் கடைகள் பலவற்றில் பிரசுரங்கள் குவிந்தன.

இப்போது வேறொரு விதமான ஊழியத்தில், அதாவது, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபடுவதற்கான வேளை வந்தது. ஆனால், இதுவரை பிரஸ்தாபிகளில் யாருமே இத்தகைய ஊழியத்தில் ஈடுபட்டிராததால் இதை எப்படிச் செய்ய ஆரம்பிப்பது? வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பிரசங்கிக்க விரும்புகிறவர்கள், சகோதரர் பாவ்யில் டீமோவோடும் சகோதரி அனஸ்டாஸீய டீமோவோடும் ஊழியத்திற்குச் சென்றார்கள். பொதுவாக, இந்த வகை ஊழியம் செய்யும் முறையைக் கற்றுக்கொள்வதில் பிரஸ்தாபிகளில் அநேகர் ஆர்வம் காட்டினார்கள். ஒரு சமயம், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சகோதரர் பாவ்யிலோடு பத்து பிரஸ்தாபிகள் சென்றார்களாம்! இதைப் பார்த்து வீட்டுக்காரர்கள் பயந்துபோகாமல், எல்லாருடனும் சந்தோஷமாய் உரையாடியது ஆச்சரியம்தான். சிலர் மொத்தமாக எல்லாரையும் வீட்டுக்குள் அழைத்தார்களாம்!

சீக்கிரத்திலேயே, இவாநோவா நகரத்திற்கு வெளியே பிரசங்கிப்பதிலும் புதிய பிரஸ்தாபிகள் ஆர்வம் காட்டினார்கள். எனவே, இவாநோவா ஆப்லாஸ்ட்டைச் சேர்ந்த மற்ற நகரங்களிலும் போய்ப் பிரசங்கிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 50 பேர் அடங்கிய தொகுதியினர் இரயிலில் அடுத்த நகரத்திற்குப் போய்ச் சேரும்வரை பயணிகளிடம் பிரசங்கித்தார்கள்; போய்ச் சேர்ந்ததும் இரண்டிரண்டு பேராகப் பிரிந்து ஊழியம் செய்தார்கள். அடுக்கு மாடி கட்டடங்களில் ஊழியம் செய்தபோது அன்று மாலை நடக்கவிருந்த கூட்டத்திற்கு வரும்படி ஜனங்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். அந்தக் கூட்டங்களில், யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட வீடியோக்களை சகோதரர்கள் போட்டுக் காட்டினார்கள். ஒரு பேச்சையும் கொடுத்தார்கள். கூட்டத்திற்குப் பிறகு, பைபிள் படிப்பு முறையைப்பற்றிக் கூட்டத்தாரிடம் தெரிவித்தார்கள், ஆர்வம் காட்டியவர்கள் தங்கள் விலாசத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். அத்தகைய முயற்சிகளின் காரணமாக, இவாநோவா ஆப்லாஸ்ட்டிலுள்ள பல நகரங்களில் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட ஐந்து சபைகள் உருவாயின.

1994-ல், இவாநோவா நகரத்தில் மட்டுமே 125 பிரஸ்தாபிகள் இருந்தார்கள்; ஆனால், 1,008 பேர் நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்டார்கள். அதே வருடத்தில் அந்த நகரத்திலுள்ள 62 பேர் மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றார்கள். ஒரே நாளில் ஒரு புதிய சபை பிறந்தது எனலாம். இப்போது இவாநோவா ஆப்லாஸ்ட்டில் 1,800 ராஜ்ய அறிவிப்பாளர்கள் பிரசங்க வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருக்கிறார்கள்.

எதிர்ப்பின் மத்தியிலும் ஒன்றுகூடிவருதல்

அநேக நகரங்களில் மாவட்ட மாநாடுகளுக்காக விளையாட்டு அரங்கங்களைப் பயன்படுத்த அனுமதி பெறுவது குதிரைக் கொம்பாய் இருந்தது. நோவோசிபிரிஸ்க் நகரத்தில் மாவட்ட மாநாடு நடக்கும் அரங்கத்திற்குள் யாரையும் நுழைய விடாதபடி வாசலில், மதகுருமாரின் ஆதரவுபெற்ற எதிரிகள் மனித சங்கிலி அமைத்து நின்றிருந்தார்கள். அவர்கள் கையில் பிடித்திருந்த அட்டை ஒன்றில், “யெகோவாவின் சாட்சிகள், ஜாக்கிரதை” என்ற வாசகத்தை ரஷ்ய மொழியில் எழுதி வைத்திருந்தார்கள். ஆனால், அந்த வாசகத்தின் முதல் வார்த்தையிலுள்ள கடைசி இரண்டு எழுத்துக்கள் வாசிக்க முடியாதபடி அழிந்திருந்ததை அந்த ஆட்கள் கவனிக்கவில்லை. எனவே கடைசி இரண்டு எழுத்துக்கள் இல்லாமல் அதை வாசிக்கும்போது, “யெகோவாவின் சாட்சிகளை பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று அர்த்தந்தரும் வாசகமாய் அது மாறியிருந்தது.

1998-ல் ஓம்ஸ்க் நகரில் வட்டார மாநாடு நடத்த சகோதரர்கள் முயற்சி செய்தபோது, அதற்கு எதிர்ப்பு தலைதூக்கியது. எதிர்ப்பவர்களின் வற்புறுத்தலால், யெகோவாவின் சாட்சிகளுக்கு அரங்கத்தை வாடகைக்குத் தர சம்மதிக்கும் ஒப்பந்தத்தை ரத்துசெய்யும்படி அந்த அரங்கத்தின் இயக்குநரை கடைசி நிமிடத்தில் உள்ளூர் அதிகாரிகள் நெருக்கினார்கள். மாநாட்டுக்கு வந்து குவிந்த நூற்றுக்கணக்கானோர் அரங்கத்திற்குப் பக்கத்தில் நின்றிருந்தார்கள். தனக்கும் அரங்கத்திற்கும் பாதிப்பு ஏற்படுமோவென பயந்த அதன் இயக்குநர், எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாமென ஜனங்களிடம் சொல்லும்படி நம் சகோதரர்களிடம் கெஞ்சத் தொடங்கினார். அங்கிருக்கும் யாரும் எந்த வன்முறையிலும் இறங்க மாட்டார்களென சொல்லி சகோதரர்கள் அவரை சாந்தப்படுத்தினார்கள். அந்தச் சம்பவத்தின் நினைவாக வந்திருந்த சகோதரர்கள் ஒருவரையொருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அமைதியாய் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். யெகோவாவின் சாட்சிகள் சமாதானமான ஜனங்கள் என்பதை அந்த இயக்குநர் இப்போது முழுமையாய் நம்பினார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு வேறொரு அரங்கத்தில் மாநாடு நடைபெற்றது. எதிர்ப்பவர்களுக்கு இவ்விஷயம் வெகு தாமதமாகத் தெரியவந்ததால் அவர்களால் தடுத்த நிறுத்த முடியவில்லை. நிகழ்ச்சி முடிவடையவிருந்த சமயத்தில்தான் அவர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

“நட்சத்திரக் கூரையின் கீழே” ஒரு மாநாடு

சைகை மொழி மாவட்ட மாநாடுகளில் ஒன்று காகஸஸ் பகுதியில் உள்ள ஸ்டாவ்ரோபோல் நகரத்தில் 2003, ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெறவிருந்தது. இதில் கலந்துகொள்ள ரஷ்யாவிலுள்ள 70 நகரங்களிலிருந்து சகோதர சகோதரிகள் வந்தார்கள். ஆனால், நகர அதிகாரிகளின் கடும் எதிர்ப்பால் இந்த மாநாடு கிட்டத்தட்ட ரத்து செய்யப்படும் நிலையில் இருந்தது. மாநாடு ஆரம்பிப்பதற்கு முந்தின நாள் மன்றத்தை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை அதன் இயக்குநர் ரத்து செய்தார். ஆனால், சர்க்கஸ் அரங்கம் ஒன்றைப் பயன்படுத்திக்கொள்ள ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை அன்று சகோதரர்கள் அதன் நிர்வாகத்தினருடன் ஒப்பந்தம் செய்தார்கள்.

மதியம் 3 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. இடைவேளைக்குப் பிறகு சிறிது நேரத்திலேயே, அரங்கத்தில் எதிர்பாராத விதமாக மின்தடை ஏற்பட்டது. கூடிவந்திருந்தோர் தங்கள் இருக்கைகளில் பொறுமையாய் அமர்ந்திருந்தார்கள். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு மின்சாரம் வந்ததும் நிகழ்ச்சி மீண்டும் ஆரம்பமானது, இரவு மணி 9:30-க்கு முடிவடைந்தது.

இரண்டாம் நாள், காலை மணி 9:30-க்கு நிகழ்ச்சி ஆரம்பமானபோது மின்தடை ஏற்பட்டிருந்தது. விரைவில் அரங்கத்துக்கு வரும் தண்ணீரும் நின்றுவிட்டது. மின்சாரமும் தண்ணீரும் இல்லாமல் சகோதரர்கள் மாவட்ட மாநாட்டை எப்படி நடத்தி முடிக்கப் போகிறார்கள்? வெளியே சூரியன் பளிச்சென பிரகாசித்துக் கொண்டிருந்ததால் காலை மணி 10:50-க்கு அரங்கத்தின் எல்லா கதவுகளையும் திறந்து வைக்க மாநாட்டு குழுவினர் தீர்மானித்தார்கள். சகோதரர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டார்கள்; பெரிய கண்ணாடிகளை வெளியே எடுத்துச் சென்று சூரிய ஒளி கண்ணாடியில் பட்டு, அரங்கத்திற்குள்ளும் பேச்சாளர்மீதும் விழும்படி செய்தார்கள். அந்தப் பிரகாசமான ஒளியால் கூடிவந்தவர்களுக்குப் பேச்சாளரைப் பார்க்க முடிந்தாலும், பேச்சாளருக்குத் தன்னுடைய குறிப்புத்தாளைப் பார்க்க முடியவில்லை. இது தெரிந்ததும், மாற்று ஏற்பாட்டை அவர்கள் செய்தார்கள். சிறு சிறு கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய பந்து ஒன்று சர்க்கஸ் அரங்கத்தின் மத்தியில் தொங்கவிடப்பட்டிருந்தது; சகோதரர்கள் வேறு கண்ணாடிகளைப் பயன்படுத்தி, சூரிய ஒளி அதன் கண்ணாடிகளில் விழும்படி செய்தார்கள். இதனால் அந்த சர்க்கஸ் அரங்கம் முழுவதும் ஆங்காங்கே ஒளி கண்சிமிட்டிக் கொண்டிருந்தது! இதனால் இப்போது பேச்சாளரும் கூடிவந்திருந்த எல்லாரும் நிகழ்ச்சியில் கவனத்தை ஒருமுகப்படுத்த முடிந்தது. இருண்ட சர்க்கஸ் அரங்கம் முழுவதும் ஆங்காங்கே ஒளி கண்சிமிட்டிக் கொண்டிருந்ததால், தனிச்சிறப்புமிக்க இந்த மாநாட்டை “நட்சத்திரக் கூரையின் கீழே” நடைபெற்ற மாநாடு என கூடிவந்தோர் அழைத்தார்கள்.

சீக்கிரத்தில், நகர மேயரும் அதிகாரிகள் பலரும் அரங்கத்திற்கு வந்தார்கள். யெகோவாவின் சாட்சிகள் தங்கள் மாநாட்டைத் தொடர்ந்து நடத்துவதைப் பார்த்து வியந்து போனார்கள். முக்கியமாக, மாநாட்டுக்கு வந்திருந்தோரின் நன்நடத்தையைப் பார்த்து நெகிழ்ந்து போனார்கள். யாரும் கண்டனக்குரல் எழுப்பவில்லை, புகார் செய்யவில்லை; மேடையிலிருந்து கொடுக்கப்பட்ட பேச்சை எல்லாரும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். முன்பு யெகோவாவின் சாட்சிகளிடம் கோபாவேசத்துடன் நடந்துகொண்ட போலீஸ் உயரதிகாரி, இதையெல்லாம் பார்த்து உருகிப்போனார்; “மனதளவில் என்னுடைய ஆதரவு உங்களுக்கு நிச்சயம் உண்டு, ஆனால், உங்களை வெறுக்கிற உலகத்தில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்று சொன்னார்.

அந்த அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள், சீக்கிரத்தில் அந்த அரங்கத்திற்கு மின்சாரம் கிடைத்தது. மாநாட்டின் முதல் இரண்டு நாட்களும் நிகழ்ச்சிகள் தாமதமாக முடிந்தாலும் கூடிவந்திருந்தோர் இறுதி ஜெபம்வரை தங்கள் இருக்கைகளைவிட்டு எழுந்துபோகவில்லை. எதிர்ப்பு இருந்தபோதிலும், தினமும் மாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருந்தது; வெள்ளிக்கிழமை 494 பேரும் சனிக்கிழமை 535 பேரும் ஞாயிற்றுக்கிழமை 611 பேரும் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! மாநாட்டின் கடைசி நாளில் முடிவான ஜெபத்தின்போது இந்த அற்புதமான மாநாட்டை நடத்தித் தந்ததற்காக யெகோவாவுக்கு விசேஷ நன்றியைத் தெரிவித்தார்கள். தங்கள் பரலோகத் தகப்பனான யெகோவாவுக்கு சேவை செய்வதற்கும், அவருடைய பெயரைத் துதிப்பதற்கும் இன்னுமதிக உறுதியோடு அங்கிருந்து சந்தோஷமாகச் சென்றார்கள்.

காதுகேளாதோர் யெகோவாவைத் துதிக்கிறார்கள்

1990-ல் போலந்தில் நடைபெற்ற விசேஷ மாநாட்டில் கலந்துகொள்ள சோவியத் யூனியனிலிருந்து சென்ற ஆயிரக்கணக்கானோரில் காதுகேளாதவர்கள் பலர் இருந்தார்கள். மாநாட்டில் ஆன்மீக ரீதியில் உற்சாகத்தைப் பெற்ற கையோடு, அதில் கலந்துகொண்ட காதுகேளாதோரே ராஜ்ய விதைகளை ரஷ்யாவில் முதன்முதலில் ‘விதைத்தவர்கள்.’ இதைச் செய்ய அவர்கள் ஊக்கமாய் முயற்சி எடுத்தார்கள். சொல்லப்போனால், 1992-ன் ஆரம்பத்திலேயே, காதுகேளாதோரின் மத்தியில் அநேகர் நற்செய்திக்குச் செவிசாய்த்திருந்தார்கள்; இதனால் அங்கு, ‘அறுப்பு மிகுதியாயிருக்கும்’ என சொல்ல முடிந்தது. (மத். 9:37) 1997-ல் சைகை மொழி சபை முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது; அதோடு, நாடு முழுவதும் ஏராளமான சைகை மொழி தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன. 2002-ல் சைகை மொழி வட்டாரம் உருவானது; பரப்பளவைப் பொருத்ததில், உலகிலேயே மிகப் பெரிய வட்டாரமாய் இது இருந்தது. 2006-ல் நாட்டிலுள்ள காதுகேளாதோர் மத்தியில் பிரஸ்தாபிகளின் விகிதம் 300-க்கு ஒன்று என்றிருக்கையில் காதுகேட்போரின் மத்தியில் பிரஸ்தாபிகளின் விகிதம் 1,000-க்கு ஒன்று என்றிருந்தது.

நம் பிரசுரங்களை எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் சைகை மொழியில் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. 1997-ல் ரஷ்ய கிளை அலுவலகத்தில் சைகை மொழி மொழிபெயர்ப்பு ஆரம்பமானது. அந்த மொழிபெயர்ப்பு குழுவிலுள்ள காதுகேளாத சகோதரியான யெவ்டோக்யா என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “பெத்தேலில் சேவை செய்வதையும், நம்முடைய பிரசுரங்களை சைகை மொழியில் மொழிபெயர்ப்பதையும் விசேஷ பாக்கியமாய் கருதுகிறேன். காதுகேளாதோரை இந்த உலகத்தார் நம்ப மாட்டார்கள், மட்டமாய்க் கருதுவார்கள். ஆனால், கடவுளுடைய அமைப்பில் எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது. முதலாவதாக, எங்கள் மௌன மொழியில் சத்தியத்தை அறிவிப்பதற்கு யெகோவாவே எங்கள்மீது நம்பிக்கை வைத்திருப்பதைப் பார்க்கிறேன். இரண்டாவதாக, யெகோவாவின் மக்கள் மத்தியில் இருக்கையில் நாங்களும் அதிக தன்னம்பிக்கை பெறுகிறோம்; இத்தகைய மாபெரும் குடும்பத்தில் ஒருவராய் இருப்பதற்கு உண்மையிலேயே சந்தோஷப்படுகிறோம்.”

சகல மொழிகளிலும் நற்செய்தி

சோவியத் யூனியனில் வணிகத்திற்கும் கல்விக்கும் ரஷ்ய மொழி முக்கியமாய் பயன்படுத்தப்பட்டபோதிலும், சுமார் 150 பிற மொழிகளும் அங்கு பேசப்பட்டன. 1991-ல் இது 15 நாடுகளாக பிரிந்த பிறகு, சத்தியத்தைக் கற்றுக்கொள்வதில் பிற மொழிகளைப் பேசுவோர் மத்தியிலும் ஆர்வம் தென்பட்டது. அதுவும், புதிதாய் சுதந்திரம் பெற்ற நாடுகளில் உள்ளவர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். வெளிப்படுத்துதல் 14:6-க்கு இசைவாக, பரந்து விரிந்த இந்த நாட்டில், “சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்” நற்செய்தியைப் பிரசங்கிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டது. இதன் விளைவாக, புதிதாக அமைப்புக்கு வருகிற ஆயிரக்கணக்கானோருக்கு ஆன்மீக உணவளிக்க வேண்டியிருந்தது. எனவே, ரஷ்ய கிளை அலுவலகம் அந்த நாட்டில் பேசப்படுகிற இன்னும் 14 மொழிகளில் காவற்கோபுர பத்திரிகையைப் புதிதாக வெளியிடுவது அவசியமானது. நற்செய்தியைப் பரப்புவதற்கு வசதியாக, 40-க்கும் அதிக மொழிகளில் பிரசுரங்கள் மொழிபெயர்க்கப்படுவதை ரஷ்ய கிளை அலுவலகம் மேற்பார்வையிடுகிறது. இதன்மூலம், எப்போதையும்விட இப்போது பைபிள் சத்தியத்தை இன்னும் சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது; மக்களின் மனதையும் அது ஆழமாகத் தொடுகிறது.

இந்த மொழிகளில் பெரும்பாலானவை ரஷ்ய கூட்டமைப்பில் பேசப்படுபவை. உதாரணத்திற்கு, பிஸ்லான், விலாடகாஃப்காஸ் ஆகிய நகரங்களின் வீதிகளில் ஒருவர் ஆஸெஷியன் மொழி பேசுவதைக் கேட்கலாம்; மங்கோலியன் மொழியோடு தொடர்புடைய புர்யாட் மொழி, பைகால் ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் பேசப்படுகிறது. பனிமான் மேய்ப்பவர்களும் ரஷ்யாவின் தொலைதூர கிழக்கில் வசிப்பவர்களும் அல்டேய்க்-துருக்கிய மொழியான யாகுட் மொழி பேசுகிறார்கள்; இன்னும் சுமார் 30 மொழிகள் காகஸஸ் பகுதியில் பேசப்படுகின்றன. ரஷ்ய மொழிக்கு அடுத்ததாக ரஷ்யாவிலுள்ளவர்களில் பெரும்பாலோர், அதாவது 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பேசுகிற மொழி டாட்டர் மொழியாகும். முக்கியமாய், டாட்டர்ஸ்தான் என்றழைக்கப்படுகிற பகுதியில் இந்த மொழி அதிகமாய்ப் பேசப்படுகிறது.

டாட்டர் மொழி பேசுவோரில் சிலர் ரஷ்ய மொழி பிரசுரங்களை ஏற்றுக்கொண்டாலும் பொதுவாக, டாட்டர் மொழி பிரசுரங்களையே அவர்கள் வாசிக்க விரும்புகிறார்கள். ராஜ்ய செய்தி எண் 35-ஐ வினியோகித்த சமயத்தில், நாட்டுப்புற பகுதியில் வசிக்கிற ஒரு பெண் ராஜ்ய செய்தியைப் பெற்றுக்கொண்டார்; பிறகு, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை டாட்டர் மொழியில் அனுப்பும்படி கடிதம் எழுதினார். ஒரு சகோதரி அவருக்கு அந்தச் சிற்றேட்டுடன் ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார். அவற்றைப் பெற்றபோது அந்தப் பெண் அதிக சந்தோஷத்துடன் எட்டு பக்கங்களுக்கு பதில் எழுதினார். விரைவில், டாட்டர் மொழியிலுள்ள பிரசுரங்களைப் பயன்படுத்தி, பைபிள் படிக்க ஆரம்பித்தார். கடவுள் அக்கறையுள்ளவராக இருக்கிறாரா? என்ற சிற்றேட்டை டாட்டர் மொழியில் ஒரு நபர் பெற்றுக்கொண்டார். அது உலக நிலைமையை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்குத் தனக்கு உதவியதாகச் சொன்னார். டாட்டர் மொழியில் பிரசுரங்கள் இல்லாதிருந்தால் இத்தகைய பலன்கள் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை.

மாரி மொழி பேசும் ஒரு பெண் அந்த மொழியில் ராஜ்ய செய்தி எண் 35-ஐப் பெற்றுக்கொண்டார். அதை வாசித்த பிறகு, அதைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினார். அவர் வசிக்கிற நாட்டுப்புற பகுதியில் யெகோவாவின் சாட்சிகள் யாருமே இல்லை. ஒரு சமயம் நகரத்துக்கு அவர் சென்றிருந்தபோது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரைச் சந்தித்தார்; ரஷ்ய மொழியில் அறிவு புத்தகத்தையும் இன்னும் சில பிரசுரங்களையும் பெற்றுக்கொண்டார். தனியாகவே இவற்றைப் படித்துத் தெரிந்துகொண்ட பிறகு, தன் பகுதியில் வசிப்பவர்களிடம் பிரசங்கிக்க ஆரம்பித்தார். விரைவிலேயே ஆர்வம் காட்டிய சிலருக்கு பைபிள் படிப்பையும் நடத்தினார். பிறகு, இஜெவ்ஸ்க் நகரில் விசேஷ மாநாட்டு தினம் நடைபெறவிருப்பது தெரிந்தபோது, முழுக்காட்டுதல் பெறும் நம்பிக்கையில் அந்த மாநாட்டுக்குச் சென்றார். ஆனால், அங்கு போனபோது, முழுக்காட்டுதல் பெற விரும்புகிறவர்கள் பைபிளை நன்கு படித்திருக்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டார்; அவருக்கு பைபிள் படிப்பு நடத்த சகோதரர்கள் ஏற்பாடுகளைச் செய்தார்கள். இதெல்லாம் தாய்மொழியில் ராஜ்ய செய்தி துண்டுப்பிரதியை அவர் வாசித்ததன் பலனே.

விலாடகாஃப்காஸ் நகரில் ஆஸெஷியன் மொழி சபை ஒன்றே ஒன்றுதான் இருந்தது. வட்டார மாநாடுகளிலும் மாவட்ட மாநாடுகளில் கொடுக்கப்பட்ட எந்தப் பேச்சுமே ஆஸெஷியன் மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. ஆனால், 2002-ல் முதன்முறையாக பேச்சுகள் ஆஸெஷியன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆஸெஷியன் மொழி பேசும் சகோதரர்களுக்கு ஒரே சந்தோஷம்! இவர்களில் ரஷ்ய மொழியை நன்கு அறிந்திருந்தவர்கள்கூட, தாய்மொழியில் பைபிள் செய்தியைக் கேட்டது தங்கள் மனதில் ஆழமாய் பதிந்ததாகச் சொன்னார்கள். இது ஆன்மீக ரீதியில் சபை முன்னேறுவதற்கு உதவியது, ஆஸெஷியன் மொழி பேசுகிற அநேகர் சத்தியத்திற்கு வர வழிசெய்தது. 2006-ல் ஆஸெஷியன் மொழி பேசுகிற சபைகளின் வட்டாரம் ஒன்று ஆஸெஷியாவில் உருவானது; முதன்முறையாக இந்த மொழியில் வட்டார மாநாடுகள் நடத்தப்பட்டன.

ஒருமுறை, அல்டாய் குடியரசிலுள்ள அக்டாஷ் கிராமத்தில் ஓர் ஒதுக்குப்புற தொகுதியிலிருந்தவர்களைச் சந்திக்கப் பயணக் கண்காணிகள் சென்றார்கள். அந்தத் தொகுதியில் சொற்ப பிரஸ்தாபிகளே இருந்தபோதிலும் சுமார் 30 பேர் ஒரு வீட்டில் கூடிவந்திருந்தார்கள். பொதுப் பேச்சை எல்லாரும் வெகு கவனமாகக் கேட்டார்கள்; மாவட்டக் கண்காணியின் ஊழியப் பேச்சின்போது கிட்டத்தட்ட பாதிப்பேர் இடையே எழுந்து போய்விட்டார்கள். கூட்டம் முடிந்த பிறகு, ஏன் அத்தனை பேர் எழுந்து போய்விட்டார்களென மாவட்டக் கண்காணி அங்கிருந்த சகோதரர்களைக் கேட்டார். அல்டேய்க் மொழி பேசும் வயதான பெண்மணி ஒருவர் தனக்குத் தெரிந்த அரைகுறை ரஷ்ய மொழியில், “நீங்கள் முக்கியமான வேலையைச் செய்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால், நீங்கள் பேசிய எதுவும் எனக்குப் புரியவில்லையே!” என்று பதில் சொன்னார். அடுத்த முறை வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது பேச்சை மொழிபெயர்க்க ஒருவர் நியமிக்கப்பட்டார்; யாருமே எழுந்து போகாமல் எல்லாரும் அங்கிருந்து முழு நிகழ்ச்சியையும் கேட்டு மகிழ்ந்தார்கள்.

வோரோனெஜ் நகரத்தில் ஏராளமான மாணவர்கள் அயல் நாடுகளிலிருந்து வந்து கல்வி பயிலுகிறார்கள். சபையில் உதவி ஊழியராக இருக்கிற சீன மொழி பேசும் சகோதரர் ஒருவர், சீன மொழி பயிற்சி வகுப்புகளை நடத்த 2000-ல் அவரே ஏற்பாடு செய்தார். இந்த மொழியைக் கற்றுக்கொள்வதற்கான அவசியம் இருப்பதை உணர்ந்து அநேக சாட்சிகள் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்தார்கள்; பிறகு சீன மொழி பேசும் மாணவர்களுக்குப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். சீன மொழியைக் கற்றுக்கொள்வது மிகக் கடினம்; இருப்பினும், சகோதரர்கள் முயற்சியைக் கைவிடவில்லை. 2004, பிப்ரவரி மாதம் அந்த நகரத்தில் முதன்முறையாக சீன மொழியில் புத்தகப் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. முதல் தடவையாக, அந்த வருடம் ஏப்ரல் மாதம், சீன மொழியில் பைபிள் படித்து வந்த ஒருவர் முழுக்காட்டுதல் பெற்றார்; இரண்டு மாதங்களுக்குப் பிறகு மற்றொருவர் முழுக்காட்டுதல் பெற்றார். ஆர்வமுள்ள பலர் தவறாமல் இந்தப் புத்தகப் படிப்பில் கலந்துகொள்கிறார்கள்; சீன மொழியில் சுமார் 15 பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன. பரந்து விரிந்த இந்தப் பிராந்தியத்தின் மூலைமுடுக்கெல்லாம் நற்செய்தி சென்றெட்டுகிறது; அதிகமதிகமான மொழிகளில் அதிகமதிகமான பிரசுரங்களை அனுப்பும்படி வேண்டுகோள் விடுப்பவர்களுக்கு அவற்றை அனுப்பி வைக்க ரஷ்ய கிளை அலுவலகம் தொடர்ந்து முயற்சி செய்கிறது.

பயனியர்களுக்குப் பயிற்சி

பல ஆண்டுகளாக ரஷ்யாவில் பயனியர் ஊழியப் பள்ளி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வகுப்பிலும், 20 முதல் 30 பயனியர்கள் கலந்துகொள்கிறார்கள்; பெரும்பாலும் உள்ளூர்வாசிகளான இவர்கள் இந்த வகுப்பில் கலந்துகொள்ள அதிக தூரம் பயணிக்க வேண்டியதில்லை. ஆனால், ரஷ்யாவில் முதன்முறையாக பள்ளி நடத்தப்பட்டபோது நிலைமை அவ்வாறு இருக்கவில்லை. “1996-ல் யெகாடிரின்பர்க் நகரில் நடைபெற்ற பயனியர் ஊழியப் பள்ளியை என்னால் மறக்கவே முடியாது. இதில் 40-க்கும் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டார்கள். அந்தப் பள்ளிக்காக அநேகர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணித்தார்கள், சிலர் கிட்டத்தட்ட 1,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருந்தது” என்று ராமான் ஸ்கீபா சொல்கிறார்.

1997 முதற்கொண்டு சைகை மொழி பிராந்தியத்தில் ஸ்விட்லானா என்பவர் ஒழுங்கான பயனியராக ஊழியம் செய்து வருகிறார். இவர் சைகை மொழி பயனியர் பள்ளியில் ஜனவரி 2000-ல் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு இன்னும் சிறப்பாய் ஊழியம் செய்வதற்கும், குடும்பத்திலும் சபையிலும் ஒரு கிறிஸ்தவராக நடந்துகொள்ள வேண்டிய விதத்தைப் புரிந்துகொள்வதற்கும் அந்தப் பள்ளி தனக்கு உதவிய விதத்தை விவரித்தார். “மற்றவர்களை அதிகமாய் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து ஒத்துழைப்பதன் மதிப்பையும் புரிந்துகொண்டிருக்கிறேன்; இப்போது எனக்குக் கொடுக்கப்படுகிற அறிவுரைகளை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன். போதிக்கும்போது உதாரணங்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதால், திறம்பட்ட விதத்தில் பைபிள் படிப்புகளையும் நடத்த முடிந்திருக்கிறது” என்றும் சொன்னார்.

அல்யோனா என்பவர் கிழக்கு ஆசியாவிலுள்ள காபாரோவ்ஸ்க் நகரில் பயனியராக சேவை செய்கிறார்; சத்தியத்தைக் கற்றுக்கொள்ள காதுகேளாதோருக்கு உதவுகிறார். அதிக பயன்தரும் விதத்தில் இதைச் செய்வதற்கு, சைகை மொழி பயனியர் ஊழியப் பள்ளியில் கலந்துகொள்ள விரும்பினார். இதற்கு என்ன விதமான கஷ்டங்களை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது? “மாஸ்கோவில் நடைபெற்ற சைகை மொழி பயனியர் ஊழியப் பள்ளிதான் வெகு அருகே இருந்த பள்ளி; இதில் கலந்துகொள்ள, காபாரோவ்ஸ்க் நகரிலிருந்து 9,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. இந்தப் பள்ளியில் கலந்துகொள்வதற்கு போகவும் வரவும் 16 நாட்கள் ரயிலில் பயணித்தேன்” என்று அவர் சொல்கிறார். ஆனால், அதற்காக அவர் துளிகூடக் கவலைப்படவில்லை.

சைகை மொழி பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு உதவுவதற்கான பள்ளிகள் தவிர, ரஷ்யாவில் 1996 முதல் 2006 வரை நூற்றுக்கணக்கான பயனியர் ஊழியப் பள்ளிகள் நடத்தப்பட்டன. இப்படிப் பயனியர்களுக்குப் பயிற்சி அளித்தது, ஒட்டுமொத்தமாக பிரசங்க வேலையிலும் சபைகளிலும் முன்னேற்றம் ஏற்பட உதவியிருக்கிறது. தற்போது வட்டாரக் கண்காணியாக சேவை செய்து வருகிற மார்சின் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “1995-ல் மாஸ்கோவிலுள்ள கூன்ட்சவா சபையில் ஒழுங்கான பயனியராக நியமிக்கப்பட்டேன். பொதுப் பேச்சுக்கும் காவற்கோபுர படிப்புக்கும் சென்றபோது பார்க்க ஏதோ மாநாடு நடப்பதுபோல் இருந்தது! சுமார் 400 பேர் அந்த மன்றத்தில் இருந்தார்கள். அந்தச் சமயத்தில், 300 பிரஸ்தாபிகள் சபையில் இருந்தார்கள். பத்து ஆண்டுகளுக்குள்ளாக இதிலிருந்து பத்து புதிய சபைகள் பிரிந்தனவென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

“1996-லிலும் 1997-லிலும் வட்டாரக் கண்காணியாக சேவை செய்தபோது அந்த வட்டாரத்தில் ஏற்பட்டிருந்த அபார வளர்ச்சியைக் கண்ணாரக் கண்டேன். வோல்காகிராட் ஆப்லாஸ்ட்டிலுள்ள வால்ஷ்ஷிகீ நகரில் ஒரு சபையைச் சந்தித்துவிட்டு, ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அங்கு சென்றேன். அந்தச் சமயத்தில், புதிதாக 75 பேர் பிரஸ்தாபிகள் சபையில் இருந்தார்கள். பார்ப்பதற்கு அது ஒரு புத்தம் புதிய சபைபோல் இருந்தது! இந்தப் புதிய பிரஸ்தாபிகள் ஊழியத்தில் காட்டிய ஆர்வத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை! அடுக்குமாடிக் கட்டடத்திலுள்ள ஒரு வீட்டில் வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் நடைபெற்றன; இவற்றில், தவறாமல் 80 பேர்வரை வந்து கலந்துகொண்டார்கள். அந்த வீட்டில் எல்லாரும் உட்காருவதற்குப் போதுமான இடமில்லாததால் அநேகர் படிக்கட்டுகளிலும் அதன் நடைபாதையிலும் நின்றுகொண்டார்கள்.”

இளைஞர்கள் யெகோவாவை மகிமைப்படுத்துகிறார்கள்

பெற்றோருடைய எதிர்ப்பின் மத்தியிலும் அநேக இளைஞர்கள் ராஜ்ய செய்தியிடம் ஆர்வம் காட்டுகிறார்கள். 20 வயதுள்ள சகோதரி ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “1995-ல், எனக்கு ஒன்பது வயதிருக்கையில் யெகோவாவின் சாட்சிகள் என் பெற்றோருக்கு நற்செய்தியை அறிவித்தார்கள்; ஆனால், அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கடவுளைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள நான் ஆசைப்பட்டேன். என் பள்ளித் தோழி ஒருத்தி பைபிள் படிக்க ஆரம்பித்தது சந்தோஷமாய் இருந்தது; நானும் அவளுடன் சேர்ந்து பைபிள் படிப்பில் கலந்துகொண்டேன். இதை என் பெற்றோர் அறிந்தபோது, யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவு வைக்கக்கூடாதெனத் தடுத்தார்கள். பைபிள் படிப்பில் நான் கலந்துகொள்ளாதிருக்க, சில சமயங்களில் என்னைத் தனியாக வீட்டில் வைத்துப் பூட்டிவிடுவார்கள். சட்டப்படி சுதந்திரமாய் செயல்படுவதற்குரிய வயது வரும்வரை இப்படிக் கஷ்டப்பட்டேன். அதன் பிறகு, வேறொரு நகரத்தில் கல்வி பயில வீட்டை விட்டு சென்றேன்; அங்கு யெகோவாவின் சாட்சிகளைக் கண்டுபிடித்தேன். மீண்டும் பைபிள் படிப்பைத் தொடங்கியபோது எவ்வளவாய் பூரித்துப்போனேன்! யெகோவாவை நெஞ்சார நேசிக்க ஆரம்பித்தேன், 2005-ல் நடைபெற்ற ஒரு மாவட்ட மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றேன். முழுக்காட்டுதல் பெற்ற கையோடு துணைப் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். சிறுவயதிலிருந்து நான் உள்ளூர நேசித்த காரியத்திற்கு இப்போது என் பெற்றோர் உற்ற துணையாய் இருக்கிறார்கள்.”

மற்றொரு சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “1997-ல் எனக்கு 15 வயதிருக்கையில், யெகோவாவின் சாட்சிகள் எனக்கு ஒரு விழித்தெழு! பத்திரிகையைக் கொடுத்தார்கள். அதன் பெயரும் அதிலிருந்த கட்டுரைகளும் எனக்குப் பிடித்திருந்தன; அதைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். அதை நான் வாசிப்பது என அப்பாவுக்குத் தெரிந்தபோது யெகோவாவின் சாட்சிகள் எங்கள் வீட்டுக்கு வரக்கூடாதெனச் சொல்லிவிட்டார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, என் உறவுக்கார பெண் ஒருத்தி யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஆரம்பித்தாள். 2002-ன் ஆரம்பத்தில் அவளுடன் சேர்ந்து ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டேன். அங்கு போனபோது, யெகோவாவின் சாட்சிகள் மிஷனரிகளாக சேவை செய்வதைப்பற்றித் தெரிந்துகொண்டேன். கடவுளைப்பற்றிக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்ற ஆசை எனக்குள் ஆழமாய் வேரூன்றியது. ஆனால் அதற்கு, முதலாவதாக நான் புகைப்பதை நிறுத்திவிட்டு, என் வாழ்க்கையை கடவுளுடைய நோக்கத்திற்கு இசைவாக மாற்றிக்கொண்டு, அவருடைய ஊழியர்களில் ஒருவராய் ஆக வேண்டுமென என் உறவுக்காரப் பெண் விளக்கினாள். அவளுடைய அறிவுரைப்படி உடனடியாக மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு முழுக்காட்டுதல் பெற்றேன்; அப்போதே துணைப் பயனியர் ஊழியம் செய்யவும் ஆரம்பித்தேன். வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைத் தெரிந்துகொண்டதில் சந்தோஷமாய் இருக்கிறேன்.”

சாகா குடியரசில் ‘விரும்பப்பட்டவர்களுக்கான’ தேடல்

ஆமுர் ஆப்லாஸ்ட்டும் சாகாவின் முழு பிராந்தியமும் ஒரு வட்டாரத்தில் உள்ளன. 2005-ன் ஊழிய ஆண்டில், சாகாவின் தலைநகரான யாகுத்ஸ்க் நகரில் முதன்முறையாக வட்டார மாநாட்டையும், விசேஷ மாநாட்டு தினத்தையும் சகோதரர்கள் ஏற்பாடு செய்தார்கள். முக்கியமாய், இந்த மாநாடுகளில் கலந்துகொள்ள வந்த பழங்குடியினரைப் பார்ப்பதற்கு சந்தோஷமாய் இருந்தது.

மாநாட்டில் கலந்துகொள்வோரின் வசதிக்காக, அந்த வட்டாரம் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மாநாடுகள் தனித்தனியாக நடத்தப்பட்டன. ஒரு மாநாட்டிலிருந்து இன்னொரு மாநாட்டுக்குப் பயணிக்க, 24 மணிநேரம் ரயிலிலும், 15 மணிநேரம் காரிலும் மூன்று மணிநேரம் விமானத்திலும் செல்ல வேண்டியிருந்தது.

இந்தப் பகுதியில் குளிர்காலத்தில் கடும் குளிர் நிலவுகிறது; வெப்பம் -50 டிகிரி செல்ஷியஸாகவோ அதற்கும் குறைவாகவோ இருக்கிறது. ஆனாலும் அங்குள்ள பிரஸ்தாபிகள் அடுக்குமாடிக் கட்டடங்களில் மட்டுமல்ல வீட்டுக்கு வீடு சென்றும் பிரசங்கிக்கிறார்கள்.

2005-ன் ஆரம்பத்தில் பிரஸ்தாபிகளின் இரண்டு தொகுதிகள் உருவாயின. ஒரு தொகுதி கையிர் என்ற கிராமத்தில் இருக்கிறது; இந்தக் கிராமம், ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே, லாப்டெவ் கடற்கரையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்நாட்டில் இருக்கிறது. இங்கு 500 பேர் குடியிருக்கிறார்கள்; அவர்களுள் 4 பேர் யெகோவாவின் சாட்சிகள். 2004-ல் இந்தக் கிராமத்தில் நடைபெற்ற நினைவுநாள் ஆசரிப்பில் மொத்தம் 76 பேர் கலந்துகொண்டார்கள். இந்தத் தொகுதியைப் போய்ச் சந்திக்க வட்டாரக் கண்காணி முதலாவது சுமார் 900 கிலோமீட்டர் தூரம் விமானத்திலும், அந்தக் கிராமத்தின் பனி போர்த்திய சாலைகளில் 450-க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரம் காரிலும் பயணிக்க வேண்டும்.

மற்றொரு தொகுதி ஊஸ்ட்நிரா என்ற ஒதுக்குப்புற கிராமத்தில் உருவானது; இது, ஐமைகோன் என்ற கிராமத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தப் பகுதியில் குளிர்கால வெப்பநிலை சில சமயங்களில் -60 டிகிரி செல்ஷியஸை எட்டுகிறது. கடந்த வருட வட்டார மாநாட்டில் கலந்துகொள்ள இந்தத் தொகுதியிலுள்ள பிரஸ்தாபிகள் இரண்டு கார்களில் புறப்பட்டார்கள். ஒருவழிப் பயணமாக இவர்கள் சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் பயணித்திருந்தார்கள்; பெரும்பாலும் ஒதுக்குப்புறமான, ஜனசஞ்சாரமற்ற பகுதி வழியாக, -50 டிகிரி செல்ஷியஸ் குளிரில் பயணித்திருந்தார்கள்.

4,000 மீட்டர் உயரத்தில் தனக்குக் கிடைத்த சுவையான அனுபவத்தைப்பற்றி ஒரு வட்டாரக் கண்காணி சொல்கிறார். “விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டின் விசேஷ வினியோகிப்பின்போது எங்களுடைய வட்டாரத்தில் அடுத்தடுத்து பல மாநாடுகள் நடைபெற்றன. ஒரு மாநாட்டிலிருந்து மற்றொரு மாநாட்டில் கலந்துகொள்ள நானும் மாவட்டக் கண்காணியும் விமானத்தில் சென்றுகொண்டிருந்தோம். எதிர்பாராத விதமாக, விசேஷ வினியோகிப்புக்குரிய சிற்றேடு தீர்ந்துவிட்டது; எனவே, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? சிற்றேட்டை விமானப் பணிப் பெண்ணுக்குக் கொடுத்தோம். ஏற்கெனவே தான் சில பைபிள் பிரசுரங்களைப் பெற்றிருப்பதாகச் சொல்லிவிட்டு, தன்னிடமிருந்த விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அவர் காட்டியபோது எங்களுக்கு ஒரே ஆச்சரியமாய் போய்விட்டது. நம்முடைய சகோதரர்கள் மும்முரமாய் ஊழியத்தில் ஈடுபட்டிருந்தது எங்களுக்கு அளவிலா ஆனந்தத்தைத் தந்தது! நாங்கள் உரையாடுகிற சமயத்தில் துணை பைலட் அங்கு வந்தார். ஆர்வத்துடன் அவரும் எங்கள் உரையாடலில் கலந்துகொண்டார், கிட்டத்தட்ட பயணம் முழுவதும் நாங்கள் பேசிக்கொண்டு வந்தோம். உரையாடிய விஷயங்களில் மகிழ்ந்துபோன அவர், விமானியின் அறையிலுள்ள மற்ற பணியாட்களுக்குக் கொடுப்பதற்காக பல பத்திரிகைகளைக் கேட்டு வாங்கிச் சென்றார்.”

சகாலின் தீவில் நற்செய்தியைப் பிரசங்கித்தல்

ஜப்பானின் வடகோடியில் அமைந்துள்ள ஹோகைடோ தீவுக்கு மேலே அமைந்துள்ள சகாலின் தீவுக்கு 1970-களின் பிற்பகுதியில் முதன்முதலாக சாட்சிகள் சென்றார்கள். அந்தப் பகுதியில் நடைபெறும் பிரசங்க ஊழியத்தை விலாடிவோஸ்டோக் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் மேற்பார்வை செய்து வந்தார்கள். அவர்கள் சர்கே சாகின் என்பவரை சகாலின் தீவுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி உற்சாகப்படுத்தினார்கள். சர்கேவுக்கு துறைமுகத்தில் வேலை கிடைத்தது; அவர், சக பணியாளர்களிடம் பைபிள் விஷயங்களைப் பேச முயற்சி செய்தார். விரைவிலேயே அவர் பல பைபிள் படிப்புகளை நடத்த ஆரம்பித்தார். பின்னர் அவர் அந்தத் தீவைவிட்டுச் செல்ல வேண்டியிருந்தபோதிலும் அவர் விதைத்த சத்திய விதைகள் காலப்போக்கில் கனிகொடுக்க ஆரம்பித்தன.

1989-லும் 1990-லும் போலந்தில் நடைபெற்ற மாநாடுகள், தேவை அதிகமுள்ள இடங்களுக்குக் குடிமாறிச் சென்று ஊழியம் செய்வதற்கு ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளில் அநேகருக்குத் தூண்டுதல் அளித்தன. 1990-ல் சர்கே அவிரினும் கலீனா அவிரினும் கிழக்கு ஆசியாவிலுள்ள காபாரோவ்ஸ்க் பகுதியிலிருந்து சகாலின் தீவிலுள்ள கர்சகஃப் என்ற நகரத்திற்குக் குடிமாறிச் சென்றார்கள். சில மாதங்களுக்குப் பிறகு, ஒரேவொரு யெகோவாவின் சாட்சி மட்டுமே வசித்து வந்த யூஸ்ன-சகலின்ஸ்க் நகருக்கு நான்கு பயனியர்களும் அநேக பிரஸ்தாபிகளும் குடிமாறிச் சென்றார்கள்.

முன்னர் குறிப்பிடப்பட்ட பாவ்யில் சிவூல்ஸ்கீயின் மகனான பாவ்யில் சிவூல்ஸ்கீ என்பவர் அந்த நான்கு பயனியர்களில் ஒருவர். இப்போது பெத்தேலில் சேவை செய்கிற இவர் அதைப்பற்றி இவ்வாறு சொல்கிறார்: “யூஸ்ன-சகலின்ஸ்க் நகரைப் போய்ச் சேர்ந்ததும், குடியிருக்க உடனடியாக வீடு கிடைக்காததால் நானும் இன்னொரு சகோதரரும் ஹோட்டலில் தங்கினோம். அதற்குப் பக்கத்திலேயே வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தோம். உரையாடலின்போது தங்குமிடம் ஏதாவது வாடகைக்குக் கிடைக்குமாவென ஜனங்களிடம் விசாரித்தோம். எங்கு வந்தால் பைபிளைப்பற்றி தொடர்ந்து கலந்தாலோசிக்க முடியுமென சிலர் எங்களிடம் கேட்டார்கள். தற்சமயம் நாங்கள் ஹோட்டலில் தங்கியிருப்பதால், குடியிருக்க வீடு கிடைத்ததும் அவர்களுக்குத் தெரிவிப்பதாக சொன்னோம். குடியிருக்க வீடும் வேலையும் எங்களுக்குக் கிடைக்க வழிசெய்யும்படி யெகோவாவிடம் ஓயாமல் ஜெபித்தோம். எங்கள் ஜெபங்களுக்கு அவர் பதில் அளித்தார். விரைவிலேயே எங்களுக்கு ஒரு வீடும், வேலையும் கிடைத்தது. தன்னுடைய வீட்டில் தங்கிக்கொள்ளும்படி ஒரு வீட்டுக்காரர் எங்களை அழைத்தார். அவர் எங்களிடமிருந்து எந்த வாடகையும் வாங்கிக்கொள்ளவில்லை; அதுமட்டுமல்ல, எங்களுக்கு உணவையும் சமைத்துக் கொடுத்தார். இது அதிக நேரத்தை ஊழியத்தில் செலவிட எங்களுக்கு உதவியது. யெகோவா எங்களுடன் இருப்பது தெளிவாய் தெரிந்தது. விரைவிலேயே நாங்கள் அநேக பைபிள் படிப்புகளை நடத்தினோம், புத்தகப் படிப்பு தொகுதிகளை ஏற்படுத்தினோம். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து, அங்கு கூட்டங்களை நடத்தினோம்.”

சபை வளர்ந்து வருகையில் புதிய பிரஸ்தாபிகள் அநேகர் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். ஊழியத்தில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டார்கள், தீவின் பிற பகுதிகளுக்குக் குடிமாறிச் சென்று அங்குள்ளவர்களுக்கு சத்தியத்தைப் பிரசங்கித்தார்கள். மளமளவென வளர்ந்து வந்த இந்தச் சபையார் ஊக்கமாய் செய்த ஊழியத்தை யெகோவா பெருமளவு ஆசீர்வதித்தார்; மூன்று வருடங்களுக்குப் பிறகு, 1993-ல் அந்த முதல் சபையிலிருந்து, எட்டு புதிய சபைகள் உருவானதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

காலப்போக்கில், பொருளாதார நெருக்கடியாலும் தேவை அதிகமுள்ள இடங்களில் ஊழியம் செய்ய விரும்பியதாலும் பிரஸ்தாபிகள் பலர் அந்தத் தீவை விட்டுச் சென்றார்கள். முன்பு போலவே, இவர்களுடைய முயற்சிகள் பெருமளவு வளர்ச்சிக்கு வழிவகுத்தன. இப்போது யூஸ்ன-சகலின்ஸ்க் நகரத்தின் மத்தியில் அழகிய ராஜ்ய மன்றம் ஒன்று கம்பீரமாய் நிற்கிறது. இந்தத் தீவில் ஒன்பது சபைகளும் நான்கு தொகுதிகளும் உள்ளன; இவை ஒரு வட்டாரத்தை உருவாக்கியிருக்கின்றன.

பலரது எதிர்ப்பின் மத்தியிலும் வாய்ப்பெனும் கதவு திறக்கிறது

“இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்” என்று முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 கொ. 16:9) 2,000 ஆண்டுகளுக்குப் பிறகும் எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. மாஸ்கோ வழக்கறிஞர் அலுவலகம், யெகோவாவின் சாட்சிகள் குற்றம் செய்ததாக பழிசுமத்தி, 1995 முதல் 1998 வரை நான்கு முறை நடவடிக்கை எடுத்தது. அது, யெகோவாவின் சாட்சிகள், மத சகிப்புத்தன்மையின்றி நடந்துகொள்ள மக்களைத் தூண்டுவதாகவும், குடும்பங்களை சீரழிப்பதாகவும், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், மற்ற குடிமக்களது உரிமைகளில் குறுக்கிடுவதாகவும் குற்றம் சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாதபோது, உரிமையியல் சட்டத்தை மீறி நடப்பதாக முன்பு போலவே ஆதாரமில்லாமல் 1998-ல் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்தது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகளோ அவர்களுடைய பிரசுரங்களோ மக்களிடம் மதப் பகைமையை ஊட்டிவளர்க்கவில்லை, குடும்பங்களைச் சிதைக்கவில்லை, மனித உரிமைகளை மீறவில்லை என்பதையெல்லாம் நீதித்துறை அமைச்சகம் கண்டறிந்தபோது ரஷ்யாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய மைய ஆணைக் குழுவை மீண்டும் ஒருமுறை பதிவுசெய்தது. இருப்பினும், வழக்கறிஞர் அலுவலகம் அதே குற்றச்சாட்டுகளை மீண்டும் முன்வைத்தது.

யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகள் முழுக்க முழுக்க பைபிளைச் சார்ந்திருக்கின்றன என்பதை மதங்களை ஆய்வு செய்கிற பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் புரிந்துகொண்டார்கள். “யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகளுக்காக விமர்சகர்கள் அவர்கள்மீது குற்றம்சாட்டுகிறபோது, உண்மையில் பைபிளுக்கு எதிராக தாங்கள் குற்றம்சாட்டுவதை அவர்கள் உணராதிருக்கிறார்கள்” என்று பேராசிரியர் டாக்டர் என். எஸ். கர்டியென்க்கா சொல்கிறார்; இவர், செ. பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஹர்ஸன் ரஷ்யன் ஸ்டேட் பெடகாஜிகல் யுனிவர்சிட்டியில் மதத்தின்பேரில் ஆய்வு நடத்துபவர் ஆவார்.

ஆனால், மாஸ்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை அளிக்க, மாஸ்கோ சிட்டி கோர்ட் மறுத்தது. எனினும், மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி பைபிள் கொடுத்திருக்கிற கட்டளைக்கு நம் சகோதரர்கள் கீழ்ப்படிவதை இது தடுத்து நிறுத்த முடியவில்லை. மத நம்பிக்கைகள் சம்பந்தமான விஷயங்களை மாஸ்கோவாசிகளே சொந்தமாய்த் தீர்மானிக்க வேண்டும் என்பதில் யெகோவாவின் சாட்சிகள் உறுதியாய் இருந்தார்கள். இந்த உரிமைக்குக் கட்டுப்பாடு விதிப்பது மாஸ்கோவாசிகள் ஒவ்வொருவருடைய சுதந்திரத்தையும் பறிப்பதாக இருக்கும். ஆனால், மாஸ்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கித்து, சீஷராக்கும்படி இயேசு கிறிஸ்து கொடுத்த கட்டளைக்கு எப்போதும் கீழ்ப்படிவார்கள். (மத். 28:19, 20) மாஸ்கோ சிட்டி கோர்ட் எடுத்த தீர்மானத்தை இப்போது மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் பரிசீலனை செய்து வருகிறது.

1998, செப்டம்பர் மாதத்தில், மாஸ்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் எல்லாரையும் ஒழித்துக்கட்ட முயற்சி எடுக்கப்பட்டது சம்பந்தமான வழக்கு முதன்முறையாக விசாரணைக்கு வந்தபோது, யெகோவாவின் சாட்சிகளுடைய 43 சபைகள் மாஸ்கோவில் செயல்பட்டு வந்தன. எட்டு வருடங்களுக்குப் பிறகோ, அங்கு 93 சபைகள் இருந்தன! “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்” என்று தம் மக்களுக்கு யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிறார். (ஏசா. 54:17) மாஸ்கோவில் முன்பு ஒலிம்பிக் விளையாட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட லூஷ்னிகீ விளையாட்டு அரங்கத்தில், 2007-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 29,040 பேர் கலந்துகொண்டார்கள், 655 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.

ரஷ்யாவில் கடவுளுடைய பெயர் பிரபலமடைந்திருக்கிறது

மல்கியா 1:1-ல் காணப்படுகிற விதமாக, “சூரியன் உதிக்கிற திசை தொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்” என்று யெகோவா தேவன் சொன்னார். பரந்து விரிந்த இந்த நாட்டில் சூரியன் கண்விழிக்கும் ஒவ்வொரு நாளும் செம்மறியாடு போன்ற ஒருவரைக் கண்டுபிடிக்கிற வாய்ப்பை அளிக்கிறது. கடந்த ஊழிய ஆண்டில் மட்டும், ரஷ்யாவில் 7,000-க்கும் அதிகமானோர் முழுக்காட்டுதல் பெற்றிருக்கிறார்கள். ‘சார் மன்னர்களுக்கெல்லாம் மன்னர்’ என ரஷ்ய பைபிளில் குறிப்பிடப்படுகிற இயேசு கிறிஸ்து, தம்முடைய குடிமக்கள் பிரசங்க வேலையில் ஈடுபடும்போது, அவர்களுக்குப் பக்கபலமாய் இருக்கிறார்.—மத். 24:14; வெளி. 19:16.

‘யெகோவாவின் நாள் இரவிலே திருடன் வருகிற விதமாய் வரும்’ என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (2 பே. 3:10) எனவே, ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் சகல நாடுகளிலும் இனங்களிலும் மொழிகளிலும் ஜனங்களிலும் நித்திய ஜீவனைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மை உள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் எஞ்சியிருக்கிற காலத்தை செலவிட தீர்மானமாய் இருக்கிறார்கள்.

[அடிக்குறிப்பு]

a ஆப்லாஸ்ட் என்பது பிராந்திய உட்பிரிவைக் குறிக்கிறது.

b க்ரை என்பது ஒரு பிராந்தியம், மாகாணம் அல்லது மண்டலம்.

c ஜூன் 22, 1999 விழித்தெழு!-வில் “அல்டாய்க்குகள்—எங்கள் அன்புக்குரிய மக்கள்” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

[பக்கம் 110-ன் சிறுகுறிப்பு]

“உங்களுக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தால், யாருக்காவது நீங்கள் துளியளவு தீங்கு செய்ததாகத் தெரிய வந்திருந்தாலும், உங்கள் எல்லாரையும் சுட்டுத்தள்ளியிருப்போம்”

[பக்கம் 128-ன் சிறுகுறிப்பு]

“உன்னைக் கைதுசெய்யாமல் விட்டுவிட்டால், சோவியத் குடிமக்கள் பலர் உன்னுடன் சேர்ந்துவிடுவார்கள். ஆகவேதான் உங்கள் எல்லாரையும் அரசாங்கத்துக்கே கேடுவிளைவிப்பவர்களாகக் கருதுகிறோம்”

[பக்கம் 128-ன் சிறுகுறிப்பு]

“உங்களுடைய ஜனங்கள் பறவைகளைப் போல் வேகமாக வந்து பிரசுரங்களைக் கவ்விக்கொண்டு போய்விடுவார்கள்”

[பக்கம் 69-ன் பெட்டி/ படம்]

சைபீரியா

சைபீரியா என்றதுமே உங்கள் மனத்திரையில் என்ன காட்சி ஓடுகிறது? கரடுமுரடான, ஜனசஞ்சாரமற்ற பூமி, உறைய வைக்கும் கடுங்குளிரான இடம் உங்கள் மனக்கண் முன் தெரிகிறதா? அதை ஒரு பாழ்நிலமாக, சோவியத் அரசோடு மோதிக்கொண்ட நபர்கள் நாடு கடத்தப்படும் இடமாக கற்பனை செய்கிறீர்களா? இதெல்லாம் உண்மைதான்; ஆனால், இன்னுமநேக விஷயங்கள் உள்ளன.

சைபீரியா பிரமாண்டமான பிராந்தியம்; உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான கனடாவைவிட பெரியது. இன்று சைபீரியா 1,30,00,000-க்கும் அதிக சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்திருக்கிறது; யூரல் மலைத்தொடர்முதல் கிழக்கே பசிபிக் பெருங்கடல்வரையும், மங்கோலியா, சீனாமுதல் வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல்வரையும் அது விரிந்து கிடக்கிறது. இயற்கை வளம்கொழிக்கும் நாடு இது; இங்கே மரக்கட்டை, எண்ணெய், இயற்கை வாயு போன்றவை எக்கச்சக்கமாய் கிடைக்கின்றன. மலைத்தொடர்களையும் சமவெளிகளையும் சதுப்புநிலங்களையும் ஏரிகளையும் மிகப் பெரிய ஆறுகளையும் நீங்கள் இங்கு காண்பீர்கள்.

சைபீரியா சுமார் 150 ஆண்டுகளுக்கு, சிறைப்படுத்துவதற்கும் கடின உழைப்பு முகாம்களுக்கும் நாடுகடத்தப்படுவதற்குமுரிய இடமாக விளங்கியது. 1930 முதல் 1950 வரையான ஆண்டுகளில் இங்கிருந்த முகாம்களில் வேலை செய்ய லட்சக்கணக்கானோரை ஜோசஃப் ஸ்டாலின் அனுப்பினார். 1949-லும் 1951-லும் மால்டோவா, பால்டிக் குடியரசுகள், உக்ரைன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 9,000 யெகோவாவின் சாட்சிகள் இங்கு நாடுகடத்தப்பட்டிருந்தார்கள்.

[பக்கம் 72-ன் பெட்டி/ படங்கள்]

கண்ணோட்டம்

நிலம்

உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா, கிழக்கு மேற்காக 7,700 கிலோமீட்டர், வடக்கு தெற்காக 3,000 கிலோமீட்டர் என மொத்தம் 1,70,75,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விசாலமாய் இருக்கிறது. ஆச்சரியப்படும் விதத்தில், ரஷ்யாவின் பிராந்தியத்தில் 11 காலநிலை மண்டலங்கள் இருப்பதால், கிட்டத்தட்ட வடகோளத்தில் பாதியளவை இது ஆக்கிரமித்திருக்கிறது. ஐரோப்பாவிலேயே மிக நீளமான நதியும், உலகிலேயே மிக ஆழமான ஏரியும் இந்த ரஷ்யாவில்தான் உள்ளன.

மக்கள்

மொத்த ஜனத்தொகையில் 80 சதவீதத்தினர் ரஷ்யர்கள். எனினும், 70-க்கும் அதிகமான இனத் தொகுதியினர் ரஷ்யாவில் வசிக்கிறார்கள். இந்தத் தொகுதிகள் சிலவற்றில் சுமார் ஆயிரம் பேரும் இன்னும் சிலவற்றில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோரும் இருக்கிறார்கள்.

மொழி

ரஷ்ய மொழி ஆட்சிமொழியாக இருக்கிறது, கிட்டத்தட்ட எல்லா பிரஜைகளுமே இந்த மொழியைப் பேசுகிறார்கள். அதோடு, 100-க்கும் அதிகமான பிற மொழிகளும் பேசப்படுகின்றன; அவற்றுள் சில கிட்டத்தட்ட பத்து லட்சம் பேருடைய தாய்மொழியாய் இருக்கின்றன.

பொருளாதாரம்

எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றின் உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் நாடாக ரஷ்யா திகழ்கிறது. வனத்துறை, சுரங்கத்துறை ஆகியவற்றோடு பல்வகை பொருள்களை உற்பத்தி செய்கிற முக்கிய தொழிற்சாலைகளும் இங்கு உள்ளன.

உணவு

இறைச்சி, மீன், முட்டைக்கோசு, அல்லது பாலடைக் கட்டி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சத்தான உணவை, கறுத்த கம்பு ரொட்டி, உருளைக்கிழங்கு, ஒருவகை கோதுமை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள். கொழுப்புச்சத்து, மாவுச்சத்துமிக்க உணவுப்பொருள்கள் சமையலில் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன; இவை நீண்ட காலம் நீடிக்கும் குளிர்காலத்தைச் சமாளிப்பதற்குத் தேவையான சக்தியைத் தருகின்றன. பொதுவாக உணவில், பீல்மினீயை (இறைச்சிக் கொழுக்கட்டைகளை) சூப்பில் போட்டோ அவற்றின்மீது புளிப்பான பாலேடை ஊற்றியோ சாப்பிடுகிறார்கள்; அல்லது, பைரோஷ்கீயை (சிறு அப்பங்களை) முட்டைக்கோசு, இறைச்சி, பாலாடை ஆகியவற்றோடு சேர்த்து, அல்லது அந்த அப்பங்களுக்குள் உருளைக்கிழங்கை அடைத்து சாப்பிடுகிறார்கள். பீட்ரூட் சூப்பும் ஷி எனப்படும் முட்டைக்கோசு சூப்பும் மக்கள் விரும்பிச் சுவைக்கும் சூப்புகளாகும்.

சீதோஷ்ணம்

கோடைகாலம் அதிக உஷ்ணமாகவும் குளிர்காலம் இருண்டு அதிக குளிராகவும் இருக்கிறது. வசந்தகாலமும் இலையுதிர்காலமும் அதிக நாட்கள் நீடிப்பதில்லை; மற்ற இரண்டு பருவகாலங்கள்தான் நீண்ட காலம் நீடிக்கின்றன.

 (பக்கங்கள் 116, 167-ல் ரஷ்யாவின் வரைபடங்கள்)

[படங்கள்]

க்ரிம்லின்

எல்புரூஸ் மலை, கபர்டீனோ-பால்கரியா

பளுப்பு நிறக் கரடி, கம்சட்கா தீபகற்பம்

[பக்கம் 92, 93-ன் பெட்டி]

மனதை மாற்றும் முயற்சி

யெகோவாவின் சாட்சிகளைப் பூண்டோடு அழிப்பதற்கு சோவியத் அரசாங்கம் முயற்சி செய்யவில்லை. துன்புறுத்தியோ வற்புறுத்தியோ சோவியத் அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களுடைய மனதை மாற்றுவதே அதன் இலட்சியமாய் இருந்தது. இதற்காக அரசு, உளவு மற்றும் பாதுகாப்பு குழுவான கேஜிபியைப் பயன்படுத்தியது; இந்த அமைப்பினர் கையாண்ட சில முறைகள் இதோ:

தேடுதல்கள்: இவை யெகோவாவின் சாட்சிகளுடைய வீடுகளில் நடத்தப்பட்டன, இரவிலும்கூட. இப்படி அடிக்கடி தேடுதல் வேட்டை நடந்ததால், சில குடும்பங்கள் பிற இடங்களுக்குக் குடிமாறிச் செல்லும் கட்டாயத்திற்குள்ளாயின.

கண்காணித்தல்: தொலைபேசியில் பேசுவதை ஒட்டுக்கேட்பது, கடிதங்களை இடைமறித்து எடுத்துக்கொள்வது, சகோதரர்களுடைய வீடுகளில் ஒட்டுக்கேட்கும் கருவிகளைப் பொருத்துவது போன்றவை அவற்றில் சில.

அபராதங்களும் கூட்டங்களில் இடையூறுகளும்: நாடெங்கும் சகோதரர்கள் எங்கெங்கு கூட்டங்களை நடத்துகிறார்களென உள்ளூர் அதிகாரிகள் உன்னிப்பாய் கண்காணித்து வந்தார்கள். கூட்டங்களில் கலந்துகொண்ட எல்லாருக்கும் அபராதங்கள் விதிக்கப்பட்டன. பெரும்பாலும், சராசரி மாத வருமானத்தில் பாதியோ அதற்கும் அதிகமாகவோ அபராதத் தொகை இருந்தது.

லஞ்சமும் அச்சுறுத்துவதும்: தங்களுடன் ஒத்துழைத்தால் மாஸ்கோவின் முக்கிய பகுதியில் வீடுகளையும் அதோடுகூட கார்களையும் தருவதாக யெகோவாவின் சாட்சிகள் சிலரிடம் கேஜிபியினர் ஆசைகாட்டினார்கள். தங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் பல வருடங்கள் கடின உழைப்பு முகாம்களில் காலம் தள்ள வேண்டியிருக்கும் என்று பெரும்பாலும் சகோதரர்கள் மிரட்டப்பட்டார்கள்.

பிரச்சாரம்: திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் செய்தித்தாள்களும் யெகோவாவின் சாட்சிகளை சமுதாயத்திற்கு ஆபத்தான ஜனங்களென சித்தரித்தன. அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு பைபிளை ஒரு போர்வையாக அவர்கள் பயன்படுத்துவதாக சிறைச்சாலைகளிலும் உழைப்பு முகாம்களிலும் கொடுக்கப்பட்ட சொற்பொழிவுகளில் சகோதரர்கள்மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிரான இத்தகைய பிரச்சாரம், மற்றவர்களுடைய மனதில் தப்பெண்ணத்தை விதைத்தது, யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் குறைந்த மதிப்பெண்களைக் கொடுத்தார்கள், வேலை செய்யுமிடத்தில் உரிய சலுகைகளையோ விடுப்புகளையோ சகோதரர்கள் பெற முடியாதபடி முதலாளிகள் செய்தார்கள்.

வேவுபார்த்தல்: கேஜிபியினர் ராஜ்ய செய்தியிடம் ஆர்வம் காட்டுவதுபோல் நடித்து, பைபிள் படிப்பில் கலந்துகொண்டு, முழுக்காட்டுதல் பெற்றார்கள். அமைப்பில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் அளவுக்குக்கூட சிலர் முன்னேற்றம் செய்தார்கள். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் சந்தேகத்தையும் பிரிவினையையும் உண்டுபண்ணுவதன்மூலம் பிரசங்க வேலையை நிறுத்த வேண்டுமென்பதே அவர்களுடைய இலட்சியமாய் இருந்தது.

நாடுகடத்தப்படுதல்: நாட்டின் ஒதுக்குப்புற பகுதிகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் அனுப்பப்பட்டார்கள். தினமும் 12 மணிநேரம் கடினமாய் உழைத்தாலும் அடிப்படைத் தேவைகளைப் பெற முடியாதளவுக்கு சகோதரர்கள் கஷ்டப்பட்டார்கள். குளிர்காலத்தில் தாங்க முடியாத கடும் குளிரைச் சகித்தார்கள்; கோடைகாலத்தில் கொசுக்கள் மற்றும் ஒருவகை ஈக்களுடைய தொல்லையைச் சமாளித்தார்கள்.

பறிமுதல் செய்யப்படுவதும் பிரிக்கப்படுவதும்: சொத்துகளும் வீடுகளும் உடைமைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து சில சமயங்களில் பிரிக்கப்பட்டார்கள்.

ஏளனமும் அடி, உதையும்: பெண்கள் உட்பட யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் அவமானப்படுத்தப்பட்டார்கள், கேலிகிண்டல் செய்து ஏளனப்படுத்தப்பட்டார்கள். சிலர் மூர்க்கத்தனமாய் அடித்து நொறுக்கப்பட்டார்கள்.

சிறைதண்டனை: தங்களுடைய மதநம்பிக்கையை விட்டுக்கொடுக்கும்படி சாட்சிகளை வற்புறுத்துவது அல்லது சகோதரர்கள் எல்லாரிடமுமிருந்து அவர்களைப் பிரித்துவிடுவதுதான் இதன் நோக்கமாய் இருந்தது.

கடின உழைப்பு முகாம்கள்: இத்தகைய முகாம்களில் சாட்சிகள் வேலையில் சக்கையாய் பிழிந்தெடுக்கப்பட்டார்கள். பெரும்பாலும் அவர்கள், பிரமாண்டமான மரங்களின் அடிக்கட்டைகளைத் தோண்டியெடுக்க வேண்டியிருந்தது. நிலக்கரி சுரங்கங்களிலும் சாலை பணிகளிலும் இருப்புப் பாதைகளை அமைப்பதிலும்கூட சகோதரர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இந்த முகாம்வாசிகள், குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்டு, தன்னந்தனியாக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டார்கள்.

[பக்கம் 96, 97-ன் பெட்டி/ படம்]

இருமுறை மரண வாசல்வரை

பையோட்டர் கிர்வாகூல்ஸ்காயா

பிறந்தது 1922

முழுக்காட்டப்பட்டது 1956

பின்னணிக் குறிப்பு சத்தியத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு இவர் இறையியல் கல்லூரியில் படித்தார். இவர் 22 ஆண்டுகளை சிறைச்சாலைகளிலும் கடின உழைப்பு முகாம்களிலும் கழித்தார், 1998-ல் இறந்தார்.

உக்ரைனில் நான் குடியிருந்த இடத்தில், போலந்தைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகள் 1940-ல் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். கார்ன்யா என்பவர் என்னை வந்து சந்தித்தார், அவர் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர். இரவு முழுவதும் நாங்கள் உரையாடினோம், கடவுளைப்பற்றி அவர் சொன்னதெல்லாம் உண்மையென நான் முழுமையாய் நம்ப ஆரம்பித்தேன்.

1942-ல், ஜெர்மானிய படைகள் முன்னேறின, சோவியத் படைகள் நான் வசித்து வந்த பகுதியிலிருந்து வெளியேறின. அந்தச் சமயத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருந்தது. ஜெர்மானியருக்கும் சோவியத் நாட்டவருக்கும் எதிரான போராட்டத்தில் தங்களை ஆதரிக்க வேண்டுமென உக்ரைனைச் சேர்ந்த தேசியவாதிகள் என்னை வற்புறுத்தினார்கள். அதற்கு நான் மறுத்தபோது, மயங்கிவிழும்வரை அவர்கள் என்னை அடித்து நொறுக்கினார்கள், பின்னர் என்னைத் தெருவிலே தூக்கியெறிந்துவிட்டுச் சென்றார்கள். அன்றிரவே, தொகுதியாய் ஜனங்கள் கொல்லப்படும் இடத்திற்கு அவர்கள் என்னைத் தூக்கிச் சென்றார்கள். உக்ரைனியர்களுக்காகச் சேவை செய்வேனா என்று மீண்டும் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். “யெகோவா தேவனுக்கு மட்டுமே சேவை செய்வேன்!” என்று உறுதியாகவும் சத்தமாகவும் சொன்னேன். அப்போது அவர்கள் எனக்கு மரணதண்டனை விதித்தார்கள். என்னைச் சுடும்படி போர்வீரர்களில் ஒருவன் கட்டளையிட்டதும் மற்றொருவன் துப்பாக்கியைப் பிடித்திழுத்துத் தடுத்து, “சுடாதே! இந்த நிலையிலும் அவனை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்” என கத்தினான். கோபத்தில் கொதித்தெழுந்த இன்னொருவன் என்னை அடிக்கத் தொடங்கினான். தான் ஒரே வாரத்தில் என்னைச் சுட்டுக்கொல்லப்போவதாக சபதம் செய்தான், ஆனால் சில நாட்களுக்குள் அவனே கொல்லப்பட்டான்.

1944 மார்ச் மாதம், சோவியத் படை எங்கள் பகுதிக்கு மீண்டும் திரும்பி வந்தது. படைவீரர்கள் எல்லா ஆண்களையும் அழைத்துச் சென்றார்கள், என்னையும்தான். இந்தச் சமயத்தில் சோவியத் படைக்குப் போராளிகள் தேவைப்பட்டார்கள். எங்கள் எல்லாரையும் அவர்கள் கூட்டிச் சேர்த்த இடத்தில், சத்தியத்தை எனக்கு முதன்முதல் சொல்லிக்கொடுத்த சகோதரர் கார்ன்யாவைச் சந்தித்தேன். யெகோவாவின் சாட்சிகளில் இன்னும் 70 பேர் அங்கிருந்தார்கள். மற்றவர்களிலிருந்து விலகி நாங்கள் தனியாக நின்றிருந்தோம், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக்கொண்டோம். ஓர் அதிகாரி எங்களிடம் வந்து மற்றவர்களைவிட்டு நாங்கள் தனியாக நின்றிருப்பதற்கான காரணத்தைக் கேட்டார். நாங்கள் கிறிஸ்தவர்கள் என்றும் போரில் ஈடுபட முடியாது என்றும் கார்ன்யா விளக்கினார். உடனடியாக, அவரைப் போர்வீரர்கள் தனியாக அழைத்துச் சென்றார்கள், அவரை சுட்டுக்கொல்லப்போவதாக எங்களிடம் சொன்னார்கள். அவரை நாங்கள் திரும்பவும் பார்க்கவே இல்லை. அவருடைய கதிதான் எங்களுக்கும் என்று சொல்லி எங்களைப் பயமுறுத்த ஆரம்பித்தார்கள்; பிறகு, தங்கள் படையில் சேர்ந்துகொள்கிறோமாவென ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கேட்டார்கள். நான் மறுத்தபோது, மூன்று போர்வீரர்களும் ஓர் அதிகாரியும் என்னைக் காட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். “ராணுவ சீருடையை அணியவும் போர்க் கருவிகளை எடுக்கவும் மறுத்ததால் ராணுவ வீரர்களால் சுட்டு கொல்லப்பட வேண்டும்” என்று ராணுவ நீதிமன்றம் விதித்த தீர்ப்பை படைத்தலைவர் வாசித்தார். நான் யெகோவாவிடம் ஊக்கமாய் ஜெபம் செய்தேன், முழுக்காட்டுதல் பெறுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைக்காததால் என் சேவையை அவர் ஏற்றுக்கொள்வாரா எனக் கவலைப்பட்டேன். திடீரென “எதிரியைச் சுடுங்கள்!” என்ற கட்டளை என் காதில் விழுந்தது. போர்வீரர்களோ வானில் சுட்டார்கள். பிறகு அந்த அதிகாரி என்னிடம் வந்து, என்னை அடிக்க ஆரம்பித்தார். எனக்குப் பத்து ஆண்டுகால சிறைதண்டனை விதிக்கப்பட்டது; ரஷ்யாவின் மையத்திலுள்ள கோர்கீ ஆப்லாஸ்ட்டிலுள்ள கடின உழைப்பு முகாம்கள் ஒன்றிற்கு அனுப்பப்பட்டேன்.

1956-ல் விடுதலை செய்யப்பட்டேன்; பின்னர், உண்மையாய் யெகோவாவுக்குச் சேவை செய்துவந்த ரெஜினாவை மணந்தேன். ஆறு மாதங்கள் நாங்கள் சேர்ந்திருந்தோம், அதற்குள் எதிர்பாராத விதமாக திடீரென கைதுசெய்யப்பட்டு பத்தாண்டு கால சிறைதண்டனை பெற்றேன்.

ஒருவழியாக விடுதலையானதும், “சோவியத் யூனியனில் உனக்கு இடமில்லை” என ஓர் அதிகாரி என்னிடம் சொன்னார். அவர் சொன்னது தவறு. இந்த உலகம் யெகோவாவுக்குரியது, இதில் யார் நிரந்தரமாய் வசிக்கப்போகிறார்களென அவரே தீர்மானிக்கிறார் என்பதை அறிவது எத்தனை ஆனந்தம் அளிக்கிறது!—சங். 37:18.

[பக்கம் 104, 105-ன் பெட்டி/ படம்]

“உங்களில் யாராவது யெகோவாவின் சாட்சிகளா?”

இஃப்ஜெனியா ரிபாக்

பிறந்தது 1928

முழுக்காட்டப்பட்டது 1946

பின்னணிக் குறிப்பு இந்தச் சகோதரி உக்ரைனில் பிறந்தார்; போர்க் கைதியாக ஜெர்மனிக்குக் கொண்டுசெல்லப்பட்டார்; அங்கு சத்தியத்தைக் கற்றார். ரஷ்யாவில் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்து வருகிறார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஜன்னல் வழியே வந்த இனிய கீதம் என் காதில் தேனாய்ப் பாய்ந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்திலிருந்துதான் அந்தக் கீதம் ஒலித்தது. அதன்பிறகு சீக்கிரத்திலேயே அவர்களுடைய கூட்டங்களுக்கு நான் செல்ல ஆரம்பித்தேன். மதத்தைக் காரணங்காட்டி ஜெர்மானியர்களை ஜெர்மானியர்களே ஏன் துன்புறுத்தினார்கள் என்று குழம்பினேன். நான் ஜெர்மானியரோடு பழகியது என்னுடன் போர்க்கைதிகளாக வந்திருந்த உக்ரைனிய நண்பர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர்கள் என்னை வெறுக்க ஆரம்பித்தார்கள். ஒரு சமயம் அவர்களில் ஒருத்தி என்னைப் பார்த்துக் கன்னா பின்னாவென்று கத்திக் கூச்சல் போட்டு, என் முகத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டாள். அதைப் பார்த்த என் முன்னாள் தோழிகள் கொல்லென்று சிரித்தார்கள்.

1945-ல் விடுதலையான பிறகு, உக்ரைனுக்குத் திரும்பினேன். என் தாத்தா என்னிடம், “உன் அம்மாவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. எல்லாச் சிலைகளையும் அவள் வீசியெறிந்துவிட்டாள், இப்போது வேறு ஏதோ கடவுளை வணங்க ஆரம்பித்திருக்கிறாள்” என்று சொன்னார். நானும் அம்மாவும் தனியே இருந்தபோது, விக்கிரக வழிபாட்டைக் கடவுள் வெறுக்கிறார் என்று குறிப்பிடுகிற வசனத்தை பைபிளிலிருந்து அம்மா வாசித்துக்காட்டினார். யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்குத் தான் செல்வதாக என்னிடம் அப்போது தெரிவித்தார். நான் அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு கண்களில் நீர் வழியச் செல்லமாக, “அம்மா . . . நானும் இப்போது ஒரு யெகோவாவின் சாட்சிதான்!” என்றேன். இரண்டு பேருமே ஆனந்தக் கண்ணீர் வடித்தோம்.

ஊழியத்தில் அம்மா அளவில்லா ஆர்வம் காட்டினார்கள். கிட்டத்தட்ட சகோதரர்கள் அனைவருமே முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருந்ததால், புத்தகப் படிப்பை நடத்தும் ஊழியராக அம்மா நியமிக்கப்பட்டார். அவருடைய ஆர்வம் என்னையும் தொற்றிக்கொண்டது.

மத சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 1950-ல் நான் கைதுசெய்யப்பட்டேன். அதற்குத் தண்டனையாக முகாமில் பத்து வருடத்தைக் கழிக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஐந்து சகோதரிகளாகிய நாங்கள் சைபீரியாவிலுள்ள உசோல்யி-சிபிர்ஸ்கயா நகருக்குக் கொண்டுசெல்லப்பட்டோம். ஏப்ரல் 1951-லிருந்து, ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டோம். தண்டவாளத்தின் குறுக்கே இணைக்கப்படும் கனமான மரக்கட்டைகள் ஒவ்வொன்றையும் இரண்டிரண்டு பேராகத் தோள்களில் சுமந்தோம். அதுபோக, ஒவ்வொன்றும் 320 கிலோ எடையிலும் 10 மீட்டர் நீளத்திலும் இருந்த எஃகுத் துண்டுகளை எங்கள் கைகளாலேயே நகர்த்தி, ஒன்றுக்கொன்று இணையாக வைத்து ரயில் பாதை அமைத்தோம். இதனால், சீக்கிரத்தில் களைத்துப்போனோம். ஒருமுறை இப்படி வேலைபார்த்துவிட்டு, அசதியோடு வீடுதிரும்பிக்கொண்டிருந்தோம்; அப்போது, ஒரு ரயில் வண்டி மெதுவாக வந்து கடைசியில் எங்கள் பக்கத்திலேயே நின்றுவிட்டது. அந்த வண்டி முழுவதும் சிறைக் கைதிகள் நிறைந்திருந்தார்கள். ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்த ஒருவர், “உங்களில் யாராவது யெகோவாவின் சாட்சிகளா?” என்று எங்களிடம் கேட்டார். எங்கள் அசதியெல்லாம் பறந்துவிட்டது. “நாங்கள் ஐந்து பேருமே தான்!” என்று ஏககுரலில் கத்தினோம். ரயிலில் இருந்தவர்கள் யாரென்று பார்த்தால், நம் அன்பான சகோதர சகோதரிகள்; உக்ரைனிலிருந்து நாடுகடத்தப்பட்டிருந்தவர்கள். ரயில் வண்டி மீண்டும் புறப்படுவதற்குள், நடந்த சம்பவத்தையும் நாடுகடத்தப்பட்ட விதத்தையும் அவர்கள் உணர்ச்சிபொங்க எங்களிடம் தெரிவித்தார்கள். பிறகு, அந்தச் சகோதரர்களே எழுதியிருந்த சில கவிதைகளைச் சிறுவர்கள் ஒப்பித்தார்கள். காவலர்களும்கூட எங்களை ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் அளவளாவி, உற்சாகத்தைப் பரிமாறிக்கொண்டோம்.

உசோல்யி-சிபிர்ஸ்கயா நகரிலிருந்து அன்கார்ஸ்க் மாநகருக்கு அருகிலிருந்த பெரிய முகாமுக்கு நாங்கள் மாற்றப்பட்டோம். அங்கே 22 சகோதரிகள் இருந்தார்கள். பிரசங்கிப்பதற்கான பிராந்தியங்கள் முதற்கொண்டு எல்லாக் காரியங்களையும் அவர்கள் ஒழுங்கமைத்திருந்தார்கள். இது யெகோவாவோடு உள்ள பந்தத்தைப் பலப்படுத்த எங்களுக்கு உதவியது.

[பக்கம் 108-ன் பெட்டி/ படம்]

தனிச்சிறையில் பலமுறை போடப்பட்டேன்

நிக்கலை கலிபாபா

பிறந்தது 1935

முழுக்காட்டப்பட்டது 1957

பின்னணிக் குறிப்பு 1949-ல் சைபீரியாவில் உள்ள குர்கான் ஆப்லாஸ்ட்டுக்கு நாடுகடத்தப்பட்டார்.

சோவியத் யூனியனில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொருவரும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டதுபோல் தோன்றியது. வாழ்க்கை சுமுகமாக இருக்கவில்லை, ஆனால் யெகோவா எங்களுக்கு ஞானத்தைத் தந்து உதவினார். மத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஏப்ரல் 1959-ல் நான் கைதுசெய்யப்பட்டேன். எந்தச் சகோதரரையும் காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக, என்னிடம் என்ன கேட்டாலும்சரி, ‘எனக்குத் தெரியாது’ என்றே பதில் சொல்லத் தீர்மானித்தேன். என்னிடம் விசாரணை செய்த புலனாய்வு அதிகாரி, சகோதரர்களின் புகைப்படங்களைக் காட்டி யாரென்று சொல்லும்படி கேட்டார். ‘எனக்கு யாரையுமே அடையாளம் தெரியவில்லை’ என்று சொன்னேன். என் தம்பியின் புகைப்படத்தைக் காட்டி, “இது உன் தம்பியா?” என்று கேட்டார். “இது அவனா, வேறு யாருமா என்று எனக்குத் தெரியவில்லை, என்னால் சொல்ல முடியவில்லை” என்றேன். அதன் பிறகு, என் புகைப்படத்தையே காட்டி, “இது நீதானா?” என்று கேட்டார். “பார்த்தால் என்னைப் போலவே தெரிகிறது, ஆனால் நான்தானா, வேறு யாருமா என்று என்னால் சொல்ல முடியவில்லை” என்றேன்.

சிறையிலிருந்த ஓர் அறையில் இரண்டு மாதங்களுக்கு நான் அடைக்கப்பட்டேன். தினமும் காலையில் எழுந்து யெகோவாவின் கனிவு கலந்த கருணைக்காக அவருக்கு நன்றிதெரிவித்தேன். பிறகு பைபிள் வசனம் ஒன்றை நினைவுபடுத்திப் பார்த்தேன், அதன்பின் அந்த வசனம் சம்பந்தமாக எனக்குத் தெரிந்த விஷயங்களையெல்லாம் எனக்கு நானே சொல்லிப் பார்த்துக்கொண்டேன். பின்னர் ராஜ்ய பாடல் ஒன்றை ஓசையின்றி அமைதியாகப் பாடினேன்; ஏனெனில் பாடுவதற்கு அங்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதற்குப் பிறகு, பைபிள் விஷயம் ஒன்றை மனத்திரையில் ஓடவிட்டேன்.

அங்கிருந்து என்னை ஒரு முகாமிற்கு அனுப்பினார்கள்; அந்த முகாமில் ஏற்கெனவே சாட்சிகள் அநேகர் இருந்தார்கள். அங்கு சூழ்நிலை ரொம்பவே கெடுபிடியாக இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளக்கூட அனுமதி இருக்கவில்லை. சகோதரர்கள் அடிக்கடி தனிச்சிறையில் போடப்பட்டார்கள். நானும் பலமுறை அங்கு போடப்பட்டேன். அங்கே கைதிகளுக்கு அன்றாடம் தரப்பட்ட சாப்பாடு, 200 கிராம் “பிரெட்” மட்டுமே. இரும்புப் பாளத்தால் மூடப்பட்டிருந்த பெரிய மரக்கட்டை ஒன்றுதான் என் படுக்கையாக இருந்தது. ஜன்னல் கண்ணாடி உடைந்து போயிருந்ததால் கொசுக்களின் பட்டாளம் வேறு! என்னுடைய “பூட்ஸ்”தான் என் தலையணை.

பொதுவாக, பிரசுரங்களை மறைத்து வைப்பதற்கான இடங்களை சகோதரர்கள் பார்த்து வைத்துக்கொண்டார்கள். தரையைக் கூட்டுவதற்கு நான் பயன்படுத்திய துடைப்பத்துக்குள் பிரசுரத்தை ஒளித்து வைக்க முடிவுசெய்தேன். தேடுதல் வேட்டைகளின்போது கண்காணிப்பாளர் ஓர் இடத்தையும் பாக்கி வைக்காமல் தேடினபோதிலும், துடைப்பத்துக்குள் பார்க்கவே இல்லை. சுவர்களிலும் நாங்கள் பிரசுரங்களை ஒளித்துவைத்தோம். நான் யெகோவாவின் அமைப்பை நம்பக் கற்றுக்கொண்டேன். யெகோவா எல்லாவற்றையும் பார்க்கிறார், அறிந்திருக்கிறார்; தம்முடைய உண்மையான ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் துணைபுரிகிறார். யெகோவா எப்போதும் எனக்கு உதவினார்.

என் குடும்பத்தார் 1949-ல் நாடுகடத்தப்பட்டிருந்தார்கள். அதற்கு முன்பாகவே சைபீரியாவின் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும்கூட சத்தியம் எட்டும்படி யெகோவா செய்வார் என்பதாக அப்பா சொன்னார். ‘அது எப்படி நடக்கும்?’ என்று நாங்கள் நினைத்தோம்; ஆனால் அது நடந்துவிட்டது. சைபீரியாவில் இருந்த நல்மனமுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள வசதியாக அதிகாரிகளே வழியமைத்துக் கொடுத்துவிட்டனர்.

சோவியத் யூனியனில் நிலவிய சூழ்நிலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டபோது, 1989-ல் போலந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டிற்குச் செல்வதற்கான வாய்ப்பு அங்கிருந்த சகோதரர்களுக்குக் கிடைத்தது. அந்த நாட்களை மறக்கவே முடியாது. கடைசி ஜெபத்திற்குப் பிறகு, நாங்கள் கலைந்து செல்லாமல் நீண்ட நேரம் கைதட்டியவாறே நின்றுகொண்டு இருந்தோம். எங்களுக்குள் பொங்கி எழுந்த உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை! பல வருடங்களாகப் பல்வேறு கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்ததால் அவற்றைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டிருந்தேன், ஆனால் துளி கண்ணீர்கூட நாங்கள் விடவில்லை. போலந்திலிருந்த எங்கள் அன்பான சகோதரர்களை விட்டுப் பிரிந்த சமயத்திலோ, எல்லாருடைய விழிக்கரைகளையும் உடைத்துக்கொண்டு கண்ணீர் அருவியாய்க் கொட்டியது; ஒருவராலும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருவரும் அதற்கு அணைபோடவும் விரும்பவில்லை.

[பக்கம் 112, 113-ன் பெட்டி/ படம்]

எல்லாவற்றையும் நற்செய்திக்காகவே செய்கிறோம்

பியோட்டர் பார்ட்ஸே

பிறந்தது 1926

முழுக்காட்டப்பட்டது 1946

பின்னணிக் குறிப்பு இவர் யெகோவாவின் சாட்சிகளை 1943-ல் சந்தித்தார். இரண்டு நாசி சித்திரவதை முகாம்களிலும், ரஷ்யாவில் கடின உழைப்பு முகாமிலும் தண்டனையை அனுபவித்தார். பின்னர் தடையுத்தரவின்போது வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்தார்.

நாசிக்களின் பிடியிலிருந்த ஜெர்மனியில் பைபிளின் அடிப்படைப் போதனைகளைக் கற்றுக்கொண்டேன். உடனே அவற்றை எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்ல ஆரம்பித்தேன். அவர்களில் அநேகர் சத்தியத்திற்கு வந்தார்கள். 1943-ல் ஒரு மதகுரு ஜெர்மானிய ரகசிய போலீசாரிடம் என்னைக் காட்டிக்கொடுத்துவிட்டார். அந்த போலீஸ் அதிகாரிகள் என்னைக் கைதுசெய்து அதிகாரத்தை எதிர்த்துக் கலகம் செய்யும்படி இளைஞர்களைத் தூண்டிவிட்டதாக என்மீது குற்றம்சாட்டினார்கள். அதைத் தொடர்ந்து, போலந்திலிருந்த மைடானெக் படுகொலை முகாமில் போடப்பட்டேன். அப்போது, சகோதர சகோதரிகளோடு உள்ள சகவாசம்தான் எங்களைத் தாங்கி ஆதரித்தது. முகாமில், பிரசங்கிக்க வேண்டுமென்ற எங்கள் தீர்மானம் மேன்மேலும் வலுப்பெற்றது. அங்கிருந்த அநேகர் சத்தியத்தில் ஆர்வம் காட்டினார்கள்; எனவே, யெகோவாவின் ராஜ்யத்தைப்பற்றி சாட்சிகொடுக்க புதுப்புது உத்திகளைக் கண்டுபிடித்தோம். இதனால் ஒருதடவை எனக்கு இரட்டைச் சவுக்கால் 25 அடி கிடைத்தது. நான் எழுந்து நின்று, ஜெர்மானிய மொழியில் “டாங்க்க ஷோன்!” (“நன்றி!”) என்று உரக்கச் சொன்னேன். ஜெர்மானியரில் ஒருவர், “இப்படிப் போட்டு விளாசியும் அவன் மசிகிறானா, பாருங்கள்! நன்றி என்கிறானே, ரொம்ப நெஞ்சழுத்தம்தான்!” என்று கத்தினார். அத்தனை அடி வாங்கியதில் என் முதுகு சிவந்து கன்றிப்போய்விட்டது.

வேலை மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் சக்கையாய்ப் பிழிந்தெடுக்கப்பட்டோம். இறந்துபோனவர்களின் உடல், சவங்களை எரிக்கும் சூளையில் தகனிக்கப்பட்டது; அங்கு இராப்பகலாய்ச் சவங்கள் தகனிக்கப்பட்டன. அதில் என் உடலும் சீக்கிரத்தில் தகனிக்கப்படுமென்று நினைத்தேன். முகாமைவிட்டு உயிரோடு வெளிவர வாய்ப்பே இல்லாததுபோல் எனக்குத் தோன்றியது. எனக்குக் காயம் ஏற்பட்டதன் காரணமாக, நான் தப்பித்துக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், ஓரளவு உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவர்கள் வேலைசெய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்; மற்றவர்கள் வேறு முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ராவன்ஸ்புரூக் சித்திரவதை முகாமுக்கு அனுப்பப்பட்டேன்.

போர் முடியும் தறுவாயில், ஜெர்மானியர் எங்கள் எல்லாரையும் சுட்டுத்தள்ளிவிடுவார்கள் என்ற வதந்தி என் காதில் விழுந்தது. பின்னர், காவலர்கள் அனைவரும் ஓட்டம்பிடித்துவிட்டார்கள் என்பதாக எங்களுக்குத் தெரியவந்தது. இனிமேலும் தாங்கள் சிறையில் இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதைக் கைதிகள் அறியவந்தபோது, ஆளாளுக்கு வெவ்வேறு பக்கமாகச் செல்லத் துவங்கினார்கள். நான் ஆஸ்திரியா நாடு போய்ச்சேர்ந்தேன். அங்கு சென்றதும், என்னை ராணுவத்தில் சேரச்சொன்னார்கள். நான் உடனடியாக மறுத்துவிட்டேன்; என் மத நம்பிக்கைகளுக்காகச் சித்திரவதை முகாம்களில் தண்டனை அனுபவித்திருந்ததைத் தெரிவித்தேன். பின்பு என் தாயகமான உக்ரைனுக்குத் திரும்பிச்செல்ல அனுமதி கிடைத்தது. அந்நாடு அப்போது சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1949-ல், இகட்டெரீனாவைத் திருமணம் செய்துகொண்டேன். அவள் எனக்கு இனிய வாழ்க்கைத் துணையானாள். 1958-ல், நான் கைதுசெய்யப்பட்டு மார்டிவினியாவிலுள்ள கடின உழைப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டேன்.

விடுதலையானபின், பைபிள் பிரசுரங்களை அச்சிடுவதில் ஈடுபட்டேன். 1986-ல், ஒருசமயம் 1,200 பக்கங்களை அச்சிடுவதற்காக இரவெல்லாம் கொட்டக் கொட்ட விழித்திருந்து வேலைபார்த்தோம். அச்சிட்டவற்றைத் தரைமீது, படுக்கைகள்மீது என எங்கெல்லாம் இடம் இருந்ததோ அங்கெல்லாம் அடுக்கி வைத்தோம். திடீரென்று, ஒரு கேஜிபி அதிகாரி வந்துவிட்டார். “சும்மா பேசிவிட்டுப் போக” வந்ததாகக் கூறினார். எங்கேயிருந்து பேச விரும்புகிறாரென இகட்டெரீனா கேட்டாள்; அவர் வீட்டிற்குள் வந்துவிடக்கூடும் என்பதைச் சற்றும் சிந்திக்காமல் அப்படிக் கேட்டாள். நல்ல வேளையாக, வீட்டுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த அடுப்பறையில் வைத்துப் பேசலாமென அவர் தெரிவித்தார். அவர் மட்டும் வீட்டிற்குள் வந்திருந்தாரென்றால், நாங்கள் கைதுசெய்யப்பட்டிருப்போம்.

இந்நாள்வரை, எங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழ நாங்கள் முயலுகிறோம்; எல்லாவற்றையும் நற்செய்திக்காகவே செய்கிறோம். எங்கள் 6 பிள்ளைகளும், 23 பேரப்பிள்ளைகளும், 2 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உண்மையுடன் யெகோவாவைச் சேவித்து வருகிறார்கள். எங்கள் பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்பதால் நாங்கள் யெகோவாவுக்கு நன்றியுடன் இருக்கிறோம்.

[பக்கம் 122-ன் பெட்டி]

தனிச்சிறை

சோவியத் நாட்டில் வழங்கப்பட்ட தண்டனைகளில், தனிச்சிறையில் அடைப்பதே பொதுவாக வழங்கப்பட்ட தண்டனையாக இருந்தது; மத சம்பந்தமான பிரசுரங்களைத் தானாக முன்வந்து ஒப்படைக்க மறுப்பது போன்ற குற்றங்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டது. நைந்து கந்தலாகிப்போன பருத்தித் துணிமணிகளே இந்தக் கைதிகளுக்கு வழங்கப்பட்டன.

தனிச்சிறை எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். அந்தச் சிறிய அறையின் பரப்பளவு சுமார் மூன்று சதுர மீட்டர்தான். அது இருளடைந்து, ஈரக்கசிவுடன், அழுக்குப் படிந்து இருக்கும். அங்கே குளிர் வாட்டியெடுக்கும். அதிலும் குளிர்காலத்தில் சொல்லவே வேண்டியதில்லை. அந்த அறையின் கான்க்ரீட் சுவர்கள் சொரசொரப்பாக இருக்கும். ஒரு மீட்டர் தடிமனுள்ள அந்தச் சுவருக்குள் ஒரு சிறிய ஜன்னல் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றில் சில கண்ணாடிகள் உடைந்துபோயிருக்கும். மின்விளக்கிலிருந்து சிறிதளவு வெளிச்சமே கிடைக்கும். ஏனெனில் அது அந்தச் சுவரின் மாடத்தில் பொருத்தப்பட்டு, சிறு சிறு துளைகள் உள்ள இரும்புத் தகட்டால் மூடப்பட்டிருக்கும். கான்கிரீட் தரையை விட்டால், சுவரோடு சேர்ந்தாற்போல் இருந்த குறுகிய திண்ணையில்தான் உட்கார முடியும். அதில் நீண்டநேரம் உட்கார முடியாது. காலிலும் முதுகிலும் வலியெடுக்கும். சொரசொரப்பான சுவர் முதுகில் குத்தும்.

இரவில் கால்கள் இல்லாத செவ்வக வடிவ மரக் கட்டிலை காவல் அதிகாரிகள் அறைக்குள் தள்ளுவார்கள். அதன்மீது நான்கு அல்லது ஐந்து உலோகப் பட்டைகள் விட்டுவிட்டுப் பொருத்தப்பட்டிருக்கும்; அதில் படுத்துதான் இரவைக் கழிக்க வேண்டும். ஆனால் குளிர் தூங்க விடாது. போர்வையெல்லாம் கொடுக்கப்படாது. பொதுவாக, தனிச்சிறையில் போடப்பட்ட கைதிகளுக்கு ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டும் சுமார் 300 கிராம் எடையுள்ள “பிரெட்” கொடுக்கப்படும், மூன்று நாளைக்கு ஒருமுறை தண்ணீர்போன்ற சூப் கொடுக்கப்படும்.

தரையோடு பொருத்தப்பட்ட வெறும் ஒரு குழாய்தான் கழிவறை; குடலைப் புரட்டும் சகிக்க முடியாத துர்நாற்றம் அதிலிருந்து வீசும். சில அறைகளில் காற்றாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்; அவை கழிவறை நாற்றத்தை அறையெங்கும் பரவச் செய்யும். அந்த அறையில் இருக்கும் கைதி மனம் நொந்துபோவதற்காகவும் அவரை இன்னும் தண்டிப்பதற்காகவும் கண்காணிப்பாளர்கள் சில சமயங்களில் இந்தக் காற்றாடிகளை ஓடவிடுவார்கள்.

[பக்கம் 124, 125-ன் பெட்டி/ படம்]

மார்டிவினியாவிலுள்ள முகாம் எண் 1

1959-க்கும் 1966-க்கும் இடைப்பட்ட வருடங்களில் இந்த முகாமில் மொத்தம் 600 பேர் போடப்பட்டிருந்தனர். இதில் 450-க்கும் அதிகமான சகோதரர்களும் சில காலத்திற்குப் போடப்பட்டிருந்தனர். மார்டிவினிய குடியரசில் இருந்த 19 கட்டாய உழைப்பு முகாம்களில் இதுவும் ஒன்றாகும். இந்த முகாமைச் சுற்றிலும் கிட்டத்தட்ட மூன்று மீட்டர் உயரத்தில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட முள்கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வேலியைச் சுற்றி இன்னும் 13 முள்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. முகாமைச் சுற்றியிருந்த நிலம் எப்பொழுதும் உழுது போடப்பட்டிருந்தது; யாராவது தப்பிச்செல்ல முயன்றால் அவரது கால்தடம் காட்டிக்கொடுத்துவிடும்.

யெகோவாவின் சாட்சிகளை வெளி உலகிலிருந்து முற்றிலும் பிரித்து வைப்பதன்மூலம், உடல் ரீதியிலும் மனோ ரீதியிலும் அவர்களை அடக்கியாள அதிகாரிகள் முயன்றனர். இந்த நிலையிலும், முகாமிற்குள்ளேயே சபை சம்பந்தப்பட்ட காரியங்களைச் சகோதரர்கள் வெற்றிகரமாகச் செய்துவந்தனர்.

இந்த முகாமே ஒரு வட்டாரமாகச் செயல்பட்டது; இதற்கென்று வட்டாரக் கண்காணியும் இருந்தார். இந்த வட்டாரத்தில் நான்கு சபைகள் அடங்கியிருந்தன; அவற்றில் 28 புத்தகப் படிப்புத் தொகுதிகள் இருந்தன. ஆன்மீக ரீதியில் எல்லாரும் பலமாக இருப்பதற்காக, வாரத்தில் ஏழு கூட்டங்களை நடத்த சகோதரர்கள் தீர்மானித்தனர். முதன்முதலில் அவர்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரேவொரு பைபிள்தான் இருந்தது. ஆகவே ஒவ்வொரு சபையாக முறை எடுத்துக்கொண்டு பைபிளை வாசிக்க அட்டவணை இட்டனர். பைபிள் தங்களது கைக்கு வந்தவுடன், சகோதரர்கள் முதல் வேலையாக அதை நகல் எடுக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு புத்தகத்தையும் தனித்தனி நோட்புக்கில் எழுதி வைத்துக்கொண்டனர். ஆனால் பைபிளை யார் கண்ணிலும் படாதவாறு பத்திரமாக ஒளித்து வைத்துக்கொண்டனர். இவ்வாறு, சகோதரர்கள் தங்களது சபைக்கென்று அட்டவணையிடப்பட்ட பைபிள் பகுதியை வாசித்துவந்தனர். காவற்கோபுர படிப்பையும் நடத்திவந்தனர். நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்டிருந்த குட்டிப் பத்திரிகைகளை, கணவன்மார்களைப் பார்க்க முகாமுக்கு வந்த சகோதரிகள் கொண்டுவந்தனர். அவற்றைத் தங்கள் வாயிலோ, ஷூக்களின் குதிங்கால் பகுதியிலோ மறைவாக வைத்துக்கொண்டனர்; அல்லது அவற்றின் மெல்லிய தாள்களைத் தங்கள் தலைமுடிக்குள் செருகிக்கொண்டனர். இவ்வாறு பெற்ற பிரசுரங்களை நகலெடுத்த குற்றத்திற்காகப் பல சகோதரர்கள் ஒன்று முதல் 15 நாட்கள் வரை தனிச்சிறையில் போடப்பட்டனர்.

தனிச்சிறைப் பகுதி, மற்ற கைதிகள் போடப்பட்டிருந்த இடத்திலிருந்து வெகு தூரத்தில் அமைந்திருந்தது. இங்கு பொறுப்பு வகித்த காவலர்கள் சாட்சிகளைப் படு உஷாராகக் கண்காணித்து வந்தனர்; சிறைக்குள்ளே அவர்கள் எதையும் வாசிக்காதபடி பார்த்துக்கொண்டனர். இந்தக் கெடுபிடியிலும், முகாமிலிருந்த மற்ற சகோதரர்கள் இவர்களுக்கு எப்படியாவது ஆன்மீக உணவு கிடைக்கும்படி செய்துவந்தனர். எப்படி? தனிச்சிறையில் போடப்பட்டிருந்த சகோதரர்கள் காலார உலாவுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த திடலுக்குப் பக்கத்தில் அமைந்திருந்த கட்டடத்தின் உச்சிக்கு ஒரு சகோதரர் ஏறிச்செல்வார். ஏற்கெனவே பைபிள் வசனங்களை எழுதித் தயாராக வைத்திருந்த சிறு சிறு துண்டுக் காகிதங்களைக் கசக்கிப் பந்துகளாகச் சுருட்டிக்கொள்வார்; இப்படிச் சுருட்டப்பட்ட பந்துகளின் விட்டம் ஒரு சென்டிமீட்டர் மட்டுமே இருக்கும். பின்னர் இந்தப் பந்துகளில் ஒன்றை ஒரு நீளமான குழாயின் முனையில் வைப்பார்; கீழே அந்தச் சாட்சி நடமாடும் திசையில் விழும்படியாக அதை ஊதிவிடுவார். அந்தச் சாட்சி குனிந்து, ஷூ லேஸைக் கட்டுவதுபோல் பாசாங்கு செய்து யாரும் பார்க்காத வகையில் டக்கென்று அப்பந்தை எடுத்துக்கொள்வார்.

கைதிகளுக்கு உணவாகக் காலையிலும் மாலையிலும் சிறிதளவு பருத்திக்கொட்டை எண்ணெய் கலந்த கூழ் தரப்பட்டது. மதிய உணவாக பீட்ரூட் போன்ற ஏதாவது கிழங்குகள் போடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட தண்ணீரான சூப்புடன் எளிய உணவு தரப்பட்டது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட “பிரெட்” எப்படியிருந்தது? அவை, கனமான ஷூக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒட்டுக் கம்பளத்துண்டுபோலக் காணப்பட்டது! “இந்த முகாமில் நான் ஏழு வருடங்களைச் செலவிட்டேன், சொல்லப்போனால் எப்போது பார்த்தாலும் கடும் வயிற்றுவலியால் நாங்கள் அவதிப்படுவோம்” என ஈவான் மிக்கிட்காவ் கூறுகிறார்.

இந்தச் சகோதரர்கள் விசுவாசத்தில் திடமாக இருந்தனர். தனிமைப்படுத்தப்பட்டபோதிலும் கடவுளுக்கு உண்மையாக இருந்தனர். ஆன்மீக ரீதியில் உறுதி குலையாமல், தொடர்ந்து தங்கள் விசுவாசத்தை வெளிக்காட்டிவந்தனர்; அதோடு, கடவுள்மீதும் சக மனிதர்மீதும் அன்புகாட்டிவந்தனர்.—மத். 22:37-39.

[பக்கம் 131, 132-ன் பெட்டி/ படம்]

“ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டாள்

பலீனா கட்ஷ்மிட்

பிறந்தது 1922

முழுக்காட்டப்பட்டது 1962

பின்னணிக் குறிப்பு இந்தச் சகோதரி பிற்பாடு விக்டர் கட்ஷ்மிட்டின் மனைவி ஆனார். சிறையில் இருந்தபோது, யெகோவாவின் சாட்சிகள் எவ்வளவு கருணை உள்ளம் படைத்தவர்கள் என்பதைக் கண்ணாரக் கண்டார்.

கம்யூனிஸக் கொள்கையில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது, அவற்றுக்கு நான் ஆதரவு அளித்து வந்தேன். அப்படியிருந்தும், கம்யூனிஸ்ட்டுகளால் மே 1944-ல் கைது செய்யப்பட்டு வோர்குடாவிலுள்ள கடின உழைப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டேன். என்னைக் கைது செய்ததற்கான காரணத்தை அவர்கள் மூன்று வருடங்களாகத் தெரிவிக்கவே இல்லை. முதலில், தவறுதலாக என்னைக் கைது செய்துவிட்டார்களென நினைத்தேன்; அதனால் விடுதலை செய்யும் நாளுக்காகக் காத்திருந்தேன். அதற்கு மாறாக, பத்து வருட முகாம் தண்டனை அளிக்கப்பட்டேன்; சோவியத் அரசுக்கு எதிராக நான் ஏதோ சொல்லிவிட்டதாக அவர்கள் நினைத்ததே அதற்குக் காரணம்.

மருத்துவத் துறையில் எனக்கு அனுபவம் இருந்ததால், ஆரம்பத்தில் சில வருடங்கள் முகாமிலிருந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தேன். 1949-ல், இன்டா நகரிலிருந்த அரசியல் கைதிகளுக்கான முகாமுக்கு மாற்றப்பட்டேன். அந்த முகாமின் விதிமுறைகள் ரொம்பக் கெடுபிடியானவை. அதுபோக, மனக்கசப்பு, கடுகடுப்பு, ஒழுக்கக்கேடு, அசட்டை மனப்பான்மை, மனமுறிவு ஆகியவை நிறைந்த ஒரு சூழலே கைதிகளுக்கு மத்தியில் நிலவியது. முகாமிலிருந்த கைதிகள் அனைவரும் விரைவில் சுட்டுக் கொல்லப்படுவார்கள் அல்லது ஆயுள் தண்டனை அனுபவிப்பார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவின; இதனால், ஏற்கெனவே இருந்த இறுக்கமான சூழ்நிலை இன்னும் மோசமாக ஆனது. பதற்றமான இந்தச் சூழ்நிலை காரணமாக கைதிகளில் சிலருக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது. முகாமிலிருந்த அநேகர் காவலாளிகளுக்குத் தகவல் தெரிவிக்கும் ஆள்காட்டிகளாய் இருந்தார்கள்; அதனால், கைதிகள் ஒருவரையொருவர் சந்தேகித்தார்கள், பகைத்தார்கள். கைதிகள் தங்களால் முடிந்தளவு சமாளித்துக்கொண்டு யாருடனும் ஒட்டாமலே காலம் தள்ளினார்கள். முகாம் முழுக்க எல்லாருமே சுயநலவாதிகளாயும் பேராசைபிடித்தவர்களாயும் இருந்தார்கள்.

பெண் கைதிகளில் சுமார் 40 பேர் மட்டும் வித்தியாசமாகத் தெரிந்தார்கள். அவர்கள் எப்போதும் சேர்ந்தே இருந்தார்கள், அழகுடன் மிளிர்ந்தார்கள்; சுத்தமாகக் காட்சியளித்தார்கள், கருணை உள்ளம் படைத்தவர்களாய் சிநேகபாவத்துடன் பழகினார்கள். அவர்கள் பெரும்பாலும் இளவயதில் இருந்தார்கள், அவர்களில் சிலர் சின்னப் பிள்ளைகளாகவும் இருந்தார்கள். அவர்கள் மத நம்பிக்கையுள்ளவர்கள், அதுவும் யெகோவாவின் சாட்சிகள் என்று எனக்குத் தெரியவந்தது. கைதிகள் அவர்களை வெவ்வேறு விதமாக நடத்தினார்கள். சிலர் சிடுசிடுப்புடன் அவர்கள்மீது எரிந்து விழுந்தார்கள். வேறு சிலர் அவர்களது நடத்தையை மெச்சினார்கள். முக்கியமாக அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டிய அன்பைப் பாராட்டினார்கள். உதாரணமாக, அவர்களில் யாருக்காவது உடல்நலம் சரியில்லாதபோது, மற்றவர்கள் மாறி மாறிப் பக்கத்திலிருந்து கவனித்துக்கொண்டார்கள். முகாமைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட அன்பான கவனிப்பை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாதே.

இந்த மக்கள் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாய் இருந்தபோதிலும் ஒருவருக்கொருவர் அன்புடன் நடந்துகொண்டதைக் கண்டு நான் மெய்சிலிர்த்துப்போனேன். அந்தச் சமயத்திற்குள்ளாக எனக்கு வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தது. ஒரு சமயம் அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்து அழத் தொடங்கிவிட்டேன். அவர்களில் ஒருத்தி என்னிடம் வந்து, “பலீனா, ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டாள்.

“எனக்கு வாழவே பிடிக்கவில்லை” என்றேன்.

அவள் பெயர் லீடியா நிக்கூலினா; அவள் எனக்கு ஆறுதல் வார்த்தை சொன்னாள். வாழ்க்கையின் நோக்கத்தையும், மனிதருடைய பிரச்சினைகளைக் கடவுள் சரிசெய்யப் போவதையும், அதோடு இன்னும் பல விஷயங்களையும் விவரமாக என்னிடம் பேசினாள். ஜூலை 1954-ல் நான் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டேன். அதற்குள், யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன், அவர்களில் ஒருத்தியாக ஆவதற்குத் துடித்தேன்.

[பக்கம் 140, 141-ன் பெட்டி/ படம்]

அன்று ராணுவ பொறியாளர், இன்று நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்

வ்ளாடிமிர் நிகலாஃப்ஸ்கி

பிறந்தது 1907

முழுக்காட்டப்பட்டது 1955

பின்னணிக் குறிப்பு 256 முறை பல்வேறு முகாம்களுக்கும் சிறைகளுக்கும் மாற்றப்பட்டார். 1999-ல் இறந்தார்.

மாஸ்கோ தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரியில் 1932-ல் பட்டம் பெற்றேன். 1941 வரை மாஸ்கோ கல்லூரியில் பொறியாளராகவும் தலைமை வடிவமைப்பாளராகவும் பணியாற்றினேன். போர்க் கப்பல்களில் பயன்படுத்தப்படும் விசேஷ கருவிகளை நானே வடிவமைத்தேன். போர்க் காலத்தில் கைது செய்யப்பட்டேன். அதன் பிறகு, மத்திய கஸக்ஸ்தானில் உள்ள கெங்ஜிர் கிராமத்திற்கு அருகிலிருந்த முகாமிற்கு அனுப்பப்பட்டேன்.

அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகள் என் கவனத்தைக் கவர்ந்தார்கள். மற்ற கைதிகளிலிருந்து அவர்கள் வித்தியாசமாய் இருந்தார்கள். சிறையிலிருந்த மூன்று பிரிவுகளையும் சேர்த்து சுமார் 14,000 கைதிகள் இருந்தார்கள். அவர்களில் சுமார் 80 பேர் யெகோவாவின் சாட்சிகள். அவர்கள் பிற கைதிகளிலிருந்து வித்தியாசமானவர்கள் என்பது, முக்கியமாக 1954-ல் நடந்த கெங்ஜிர் சிறைக் கலவரத்தின்போது தெளிவாகத் தெரிந்தது. யெகோவாவின் சாட்சிகள் அதில் பங்குகொள்ளவில்லை. அதற்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளக்கூட மறுத்துவிட்டார்கள். அவர்களுடைய மன அமைதி ஆச்சரியப்பட வைத்தது. தங்களுடைய தீர்மானத்தை மற்ற கைதிகளுக்கு எடுத்துச்சொல்ல முயற்சி செய்தார்கள். அவர்களுடைய நடத்தை என் நெஞ்சைத் தொட்டது. அதனால் அவர்களுடைய மத நம்பிக்கைகளைக் குறித்து அவர்களிடம் கேட்டேன். சில காலத்திற்குப் பிறகு, யெகோவாவிற்கு என்னை ஒப்புக்கொடுத்தேன். அந்த முகாமில், முக்கியமாக, ராணுவத்தினர் டாங்கிகளுடன் வந்து அந்தக் கலவரத்தை ஒடுக்கியபோது யெகோவாவின் சாட்சிகளுடைய விசுவாசம் சோதிக்கப்பட்டது.

என்னைச் சந்திப்பதற்கென்றே மாஸ்கோவிலிருந்து படைத் தளபதிகள் இருவர் வந்திருப்பதாக ஒருமுறை என்னிடம் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தளபதிகளில் ஒருவர் என்னிடம், “வ்ளாடிமிர், யெகோவாவின் சாட்சிகளுடன் சகவாசம் வைத்துக்கொள்வதை முதலில் நிறுத்து. நீ ஒரு ராணுவ பொறியாளன், வடிவமைப்பாளன். உன் சேவை நாட்டிற்குத் தேவை. முன்பு நீ செய்து வந்த பணியைத் தொடர வேண்டுமென்பதே எங்களுடைய விருப்பம். படிக்காத பாமரர்கள் மத்தியில் நீ எப்படிச் சந்தோஷமாக இருக்க முடியும்?” என்று கேட்டார்.

அதற்கு நான், “பெருமைப்பட்டுக்கொள்ள எனக்கு எதுவுமே இல்லை. மனுஷனுக்கு இருக்கும் திறமைகள் எல்லாமே கடவுள் கொடுத்தவைதான். அவருக்குக் கீழ்ப்படிபவர்கள் கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் சந்தோஷமாக இருப்பார்கள். அப்போது மனிதர் பரிபூரணத்தை அடைவார்கள், உண்மையான கல்வியைப் பெறுவார்கள்” என்று பதில் அளித்தேன்.

அந்தத் தளபதிகளிடம் சத்தியத்தைப்பற்றி பேச வாய்ப்பு கிடைத்ததற்காக ரொம்பவும் சந்தோஷப்பட்டேன். பழைய வேலைக்கு மீண்டும் வரும்படி பலமுறை அவர்கள் என்னிடம் கெஞ்சினார்கள். இனிமேல் என்னை தொந்தரவு செய்ய வேண்டாமென்றும், என் உயிருக்கு உயிரான சகோதர சகோதரிகளுடன் இருக்க என்னை விட்டுவிடுங்கள் என்று அவர்களிடம் சொல்லிவிட்டேன்.

1955-ல் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டது. ராணுவத்துடன் சம்பந்தப்படாத ஒரு வடிவமைப்பு நிறுவனத்தில் வேலை செய்ய ஆரம்பித்தேன். மும்முரமாகப் பிரசங்கிக்க ஆரம்பித்தேன். இதன் விளைவாக, ஒரு பொறியாளரின் குடும்பத்திற்கு பைபிள் படிப்பு நடத்த வாய்ப்புக் கிடைத்தது. சீக்கிரத்தில் அவரும் அவருடைய குடும்பத்தாரும் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள்; ஊக்கமாய்ப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், கேஜிபி ஆட்கள் என்மேல் ஒரு கண் வைத்திருந்தார்கள். என் வீட்டைச் சோதனையிட்டபோது பைபிள் பிரசுரங்களைக் கண்டுபிடித்தார்கள். நீதிமன்றம் எனக்கு 25 வருட சிறைதண்டனை விதித்தது. க்ரஸ்னோயார்ஸ்க் நகரில் இருந்த சைபீரிய கடின உழைப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டேன். வெவ்வேறு முகாம்களுக்கும் சிறைகளுக்கும் பலமுறை மாற்றப்பட்டேன். என் வாழ்நாள் காலத்தில், 256 முறை ஒவ்வொரு சிறையாகப் பந்தாடப்பட்டிருக்கிறேன் என்பது எண்ணிப்பார்த்தபோது தெரிந்தது.

[பக்கம் 147, 148-ன் பெட்டி/ படம்]

எங்களுக்குப் பெரிய சூட்கேஸ்கள் தேவைப்பட்டன

நடிஸ்டா யாரஷ்

பிறந்தது 1926

முழுக்காட்டப்பட்டது 1957

பின்னணிக் குறிப்பு இவர் ராவன்ஸ்ப்ரூக் சித்திரவதை முகாமில் இருந்தபோது சத்தியத்தைக் கற்றுக்கொண்டார். சோவியத் யூனியனுக்குத் திரும்பிய பிறகு, சகோதரர்களுக்குப் பத்திரிகைகளையும் கடிதங்களையும் எடுத்துச் செல்லும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டார். இப்போது கோகாஸாவில் வசிக்கிறார்.

சித்திரவதை முகாமில் காலடி எடுத்து வைத்த 1943-ஆம் ஆண்டிலிருந்து எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. யெகோவாவின் சாட்சிகளைச் சந்திக்கும்வரை என் மனநிலையில் மாற்றமேதும் இல்லாதிருந்தது. பிறகு, பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழப்போகும் உறுதியான நம்பிக்கையோடு எனது தாய்நாடான உக்ரைனுக்குத் திரும்பியது அளவிலா ஆனந்தத்தை அளித்தது. என்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்காக, பிற சகோதரிகளுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டேன். என்றாலும், கேஜிபியினரின் கைகளில் என் கடிதங்கள் சிக்கின. சீக்கிரத்திலேயே 15 ஆண்டு கால சிறை தண்டனை பெற்றேன்.

1947-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கலமா என்ற இடத்திலிருந்த முகாமிற்கு அனுப்பப்பட்டேன். தண்டனை காலத்தில் சாட்சிகள் யாரையும் சந்திக்க முடியவில்லை. பிரசங்கிப்பதற்கு யெகோவா எனக்கு உதவினார். கைதியாய் இருந்த யெஃப்டகியா என்பவர் பைபிளைப்பற்றிக் கற்றுக்கொள்ள விரும்பினார். நாங்கள் தோழிகளானோம். ஒருவருக்கொருவர் ஆன்மீக ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் தோள்கொடுத்தோம். எனக்கு பைபிளைப்பற்றி அதிகம் தெரியாதிருந்தபோதிலும் கற்றிருந்த விஷயங்கள் யெகோவாவுக்கு உத்தமமாய் நிலைத்திருக்க உதவியாய் இருந்தன.

விடுதலையாகி ஒரு வருடத்திற்குப் பிறகு, அதாவது 1957-ன் ஆரம்பத்தில், இர்குட்ஸ்க் ஆப்லாஸ்ட்டைச் சேர்ந்த சூயிடிகா என்ற இடத்திற்குச் சென்றேன். சகோதரர்கள் என்னை அன்பாக வரவேற்று, உபசரித்தார்கள். அவர்கள் எனக்கு வீடு தேடிக் கொடுத்தார்கள், வேலை கிடைக்க உதவினார்கள். தேவராஜ்ய காரியங்களில் அவர்கள் என்னைப் பங்கெடுக்க சொன்னதுதான் எனக்கு அதிக சந்தோஷத்தைத் தந்தது. அதுவரை நான் முழுக்காட்டுதல் பெறாதிருந்தேன். ஆகவே, ஒரு பெரிய தண்ணீர் தொட்டியில் முழுக்காட்டுதல் பெற்றேன். அதன் பிறகு, யெகோவாவின் அமைப்பில் பொறுப்புகளைக் கையாளத் தயாரானேன். பைபிள் பிரசுரங்களையும் கடிதங்களையும் சகோதரர்களுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்தப் பிரசுரங்களை சைபீரியா முழுவதும் மத்திய ரஷ்யா, மேற்கு உக்ரைன் ஆகிய இடங்களுக்கும் எடுத்துச் சென்று கொடுக்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் முன்கூட்டியே கவனமாய்த் திட்டமிட வேண்டியிருந்தது. மேற்கு உக்ரைனுக்குப் பிரசுரங்களை எடுத்துச் செல்ல, பெரிய சூட்கேஸ்கள் தேவைப்பட்டன. ஒருசமயம் மாஸ்கோவில் உள்ள யாரஸ்லாவல் ரயில் நிலையத்தில் இருக்கும்போது, சூட்கேஸ் ஒன்றின் பூட்டு உடைந்து, பிரசுரங்கள் எல்லாம் வெளியே விழுந்து சிதறிவிட்டன. பதட்டப்படாமல் மனதுக்குள் ஜெபம் செய்தவாறே, பிரசுரங்களை நிதானமாகப் பொறுக்கி எடுத்தேன். எல்லாவற்றையும் சேர்த்துக் கட்டி எடுத்துக்கொண்டு, அங்கிருந்து உடனடியாக வெளியேறினேன். நல்ல வேளையாக யாரும் அதைக் கவனிக்கவில்லை.

மற்றொரு சமயம், இரண்டு சூட்கேஸ் நிறைய பிரசுரங்களை எடுத்துக்கொண்டு உக்ரைனில் இருந்து மாஸ்கோ வழியாக சைபீரியாவிற்குச் சென்றுகொண்டிருந்தேன். ரயிலில் கீழ் இருக்கைக்கு அடியில் ஒரு சூட்கேஸை வைத்தேன். அங்கு கேஜிபி ஏஜென்டுகளான இரண்டு ஆண்கள் வந்து உட்கார்ந்தார்கள். பேச்சுவாக்கில், சாட்சிகளைப்பற்றிப் பேசினார்கள். சாட்சிகள் “பிரசுரங்களை விநியோகிக்கிறார்கள், சோவியத் அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள்” என்று பேசிக்கொண்டார்கள். அவர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அமைதியாய் இருக்க முயற்சி செய்தேன். அவர்கள் உட்கார்ந்துகொண்டிருந்ததே அந்தப் பிரசுரங்கள் மீதுதான்!

பிரசுரங்களை விநியோகிக்கும்போதோ, மற்ற பொறுப்புகளைக் கையாளும்போதோ, எந்நேரமும் கைது செய்யப்படலாமென எதிர்பார்த்திருந்தேன். யெகோவாவை எல்லாக் காரியத்திலும் நம்ப வேண்டும் என்ற பாடத்தைப் பல சம்பவங்களிலிருந்து கற்றுக்கொண்டேன்.

[பக்கம் 158, 159-ன் பெட்டி/ படம்]

‘உங்களுடைய ஜனங்கள் மிகவும் வித்தியாசமானவர்கள்’

ஜினயிடா கோஸிரிவா

பிறந்தது 1919

முழுக்காட்டப்பட்டது 1958

பின்னணிக் குறிப்பு பல்வேறு முகாம்களில் பல ஆண்டுகளைச் செலவழித்தார். 2002-ல் இறந்தார்.

சின்ன வயதிலிருந்தே கடவுளுக்குச் சேவை செய்ய எனக்குக் கொள்ளை ஆசை. 1942-ல் என் தோழி, தான் போய்க்கொண்டிருந்த ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சிற்கு என்னையும் அழைத்துச் சென்றாள். அவளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். “நான் நரகத்திற்கு போய்விடக்கூடாது என்பதற்காக” என்னை சர்ச்சிற்கு அழைத்துச் சென்றதாய்க் கூறினாள். நான் ஆஸெஷியா நகரைச் சேர்ந்தவள் என்பது அந்தப் பாதிரிக்குத் தெரிந்ததும் எனக்கு முழுக்காட்டுதல் கொடுக்க மறுத்துவிட்டார். என் தோழி அவருக்குப் பணம் கொடுத்த பிறகு, தன் மனதை மாற்றிக்கொண்டு எனக்கு முழுக்காட்டுதல் சடங்கை நடத்தி வைத்தார். நான் சத்தியத்தைத் தேடினேன். அட்வென்டிஸ்டு, பெந்தெகொஸ்தே சபை, பாப்டிஸ்ட் என பல சபைகளுக்குச் சென்றேன். இதற்குத் தண்டனையாக, அதிகாரிகள் என்னை கட்டாய உழைப்பு முகாமிற்கு அனுப்பினார்கள். அந்த முகாமில், யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தேன். அவர்கள் சத்தியத்தைக் கற்பிப்பதைச் சட்டெனப் புரிந்துகொண்டேன். 1952-ல் சிறையிலிருந்து விடுதலை பெற்று, வீடு திரும்பியதும் நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆரம்பித்தேன்.

1958-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருநாள் அதிகாலையில், யாரோ எங்கள் வீட்டுக் கதவைப் பலமாகத் தட்டினார்கள். திறந்ததும், புயலென உள்ளே நுழைந்த போர்வீரர்கள் எங்கள் வீட்டைச் சோதனையிட ஆரம்பித்தார்கள். என்னை ஒரு மூலையில் நிற்க வைத்து, எனக்குக் காவலாக இருவர் அங்கே நின்றுகொண்டார்கள். தூங்கிக்கொண்டிருந்த என் அப்பா எழுந்துவிட்டார். நடப்பதைப் பார்த்ததும், தன் குடும்பத்தை, முக்கியமாக தன் மகன்களை நினைத்து ரொம்பவே கவலைப்பட்டார். என் அப்பா அம்மாவுக்கு ஐந்து மகன்கள், நான் ஒரே பெண். எல்லா அறைகளையும் மாடியிலிருந்த சிறு அறையையும் விட்டு வைக்காமல் போர்வீரர்கள் சோதனையிட்ட விதத்தைப் பார்த்தபோது, அதற்குக் காரணம் என்னுடைய மதம்தான் என்பதை அப்பா புரிந்துகொண்டார். துப்பாக்கியை எடுத்தார்; “அமெரிக்க உளவாளி” என்று என்னைப் பார்த்துக் கத்தினார். என்னைச் சுட முயற்சி செய்தார். ஆனால், அந்தப் போர்வீரர்கள் துப்பாக்கியை அவரிடமிருந்து பறித்தார்கள். என் அப்பாவே என்னைச் சுட முயற்சி செய்ததைப் பார்த்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. சோதனை முடிந்ததும், முழுக்க மூடப்பட்ட டிரக்கில் என்னை ஏற்றிச் சென்றார்கள். உயிர் தப்பியதற்காக சந்தோஷப்பட்டேன். மதக் காரியங்களில் ஈடுபட்டதால், எனக்கு 10 ஆண்டு கால சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

என்னுடைய தண்டனை காலம் முடிவதற்கு முன்பே, டிசம்பர் மாதம் 1965-ல் விடுதலை பெற்றேன். வீடு திரும்பியபோது, அப்பா அம்மாவிற்கு என்னைப் பார்த்து சந்தோஷம்தான். ஆனால், நான் அங்கு தங்குவதை அப்பா விரும்பவில்லை. கேஜிபியினர் என் அப்பாவைக் கட்டாயப்படுத்தி, அவருடைய வீட்டில் நான் தங்கியிருப்பதாகப் பதிவுசெய்ய வைத்தார்கள். எனக்கு வேலை கிடைக்கவும் ஏற்பாடு செய்தார்கள். இதெல்லாம் எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. முன்பைப் போலவே, அப்பா என்மீது பயங்கர கோபமாய் இருந்தார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, அவருடைய கோபம் தணியத் தொடங்கியது. என்னைச் சந்திக்க வந்த சகோதர சகோதரிகளிடம் பேச ஆரம்பித்தார். என் அண்ணன், தம்பிகள் வேலைக்கு போகாமல், குடித்துவிட்டு, கலாட்டா செய்துகொண்டிருந்தார்கள். ஒருசமயம் அப்பா என்னிடம், “உங்களுடைய ஜனங்கள் நான் நினைத்த மாதிரி இல்லை. மிகவும் வித்தியாசமானவர்கள். உனக்கென்று இங்கு ஓர் அறையை ஒதுக்கி தந்துவிடுகிறேன். கூட்டங்களை இங்கேயே நடத்திக்கொள்ளலாம்!” என்றார். என் காதுகளை என்னாலேயே நம்ப முடியவில்லை! ஒரு பெரிய அறையை எனக்காக ஒதுக்கித் தந்தார். “பயப்படாதே. கூட்டம் நடக்கும்போது, நான் காவலுக்கு நிற்கிறேன், என்னை மீறி யாரும் உள்ளே வர மாட்டார்கள்” என்று கூறினார். நடந்ததும் அதுதான். என் அப்பா விடாப்பிடியானவர் என்பதுதான் எல்லாருக்கும் நன்றாகத் தெரியுமே!

இப்படி யெகோவாவும் என் அப்பாவும் பாதுகாக்க, என் வீட்டிலேயே சபை கூட்டங்களை நிம்மதியாக நடத்தினோம். கிட்டத்தட்ட 30 பேர் கூட்டங்களுக்கு வந்தார்கள். அந்தக் காலத்தில் ஆஸெஷியாவில் அத்தனை பேர்தான் இருந்தார்கள். என் அப்பாவும் அம்மாவும் எங்களுக்குக் காவலாக தெருவில் உட்கார்ந்திருந்ததை ஜன்னல் வழியாக பார்த்தது எனக்கு ஆனந்தத்தை அளித்தது. இன்று ஆஸெஷியாவில் 2,600-க்கும் அதிகமானோர் யெகோவாவின் ராஜ்யத்தை ஊக்கமாக அறிவித்து வருகிறார்கள்.—ஏசா. 60:22.

[பக்கம் 162, 163-ன் பெட்டி/ படம்]

முகாமில் மீந்திருந்த ஒரே சாட்சி நான்தான்

கோன்ஸ்டான்டின் ஸ்கிரிப்சூக்

பிறந்தது 1922

முழுக்காட்டப்பட்டது 1956

பின்னணிக் குறிப்பு 1953-ல் கட்டாய உழைப்பு முகாமில் சத்தியத்தைக் கற்றுக்கொண்டார். அங்கேயே 1956-ல் முழுக்காட்டுதல் பெற்றார். யெகோவாவின் சாட்சியாக 25 ஆண்டுகள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்தார். 2003-ல் இறந்துவிட்டார்.

சிறையில் இருந்தபோது, 1953-ன் ஆரம்பத்தில் வாஸிலி என்ற யெகோவாவின் சாட்சியைச் சந்தித்தேன். கடவுள்மீது நம்பிக்கை வைத்திருந்ததற்காக சிறையில் தள்ளப்பட்டிருந்ததாக அவர் சொன்னார். மத நம்பிக்கைகளுக்காக ஒருவரை எப்படிச் சிறையில் தள்ள முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. மனதைக் குடைந்த அந்த விஷயத்தால் அன்று என் தூக்கத்தைத் தொலைத்தேன். மறுநாள், விஷயத்தை அவர் முழுமையாக விளக்கினார். பைபிள் கடவுள் தந்த புத்தகம்தான் என்பதை மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்தேன்.

1956-ல் முழுக்காட்டுதல் பெற்றேன். அந்த வருடக் கடைசியில், அங்கிருந்த மேற்பார்வையாளர்கள் தேடுதல் வேட்டை நடத்தி, எங்களிடம் எக்கச்சக்கமான பைபிள் பிரசுரங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். இதற்கான விசாரணை கிட்டத்தட்ட ஓராண்டு காலம் நடந்தது. மத சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபட்டதற்காக, 1958-ல் நீதிமன்றம் எனக்கு 23 ஆண்டு கால சிறை தண்டனை விதித்தது. இதற்குள்ளாக, நான் ஏற்கெனவே ஐந்தரை ஆண்டுகளை முகாம்களில் கழித்திருந்தேன். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பின்றி, இருபத்தெட்டரை ஆண்டுகளைத் தொடர்ச்சியாக சிறையிலேயே கழித்தேன்.

ஏப்ரல் 1962-ல், “படுபயங்கரமான குற்றவாளி” என்று நீதிமன்றம் என்மீது முத்திரை குத்தியது. எனவே, கடுங்காவல் சிறைக்கு மாற்றப்பட்டேன். அங்கு 11 ஆண்டுகளைக் கழித்தேன். இந்த முகாம் பலவிதங்களில் “விசேஷமானதாய்” இருந்தது. உதாரணமாக, உணவு வாங்கிக்கொள்ள தினமும் தலா 11 கோபெக் பணம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்தப் பணத்தில் ஒரு துண்டு ரொட்டிகூட வாங்க முடியாது. என்னுடைய உயரம் ஆறடி மூன்று அங்குலம், எடையோ 59 கிலோதான் இருந்தது. என் தோல் சுருங்கி, செதில் விழ ஆரம்பித்தது.

கட்டுமான வேலையில் கைதேர்ந்தவனாய் இருந்ததால், அதிகாரிகளின் வீடுகளைப் பழுதுபார்க்க அடிக்கடி அனுப்பப்பட்டேன். யாரும் என்னைப் பார்த்துப் பயப்படவில்லை. வீடுகளில் பொருள்களை ஒளித்து வைக்க வேண்டுமென்றும்கூட குடியிருப்பவர்கள் யாரும் நினைக்கவில்லை. ஓர் அதிகாரியின் வீட்டில் நான் வேலை செய்யப்போவதை அவருடைய மனைவி அறிந்ததும், அவர்களுடைய ஆறு வயது மகனை அன்று பள்ளிக்கு அனுப்பவில்லை. இது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்: “படுபயங்கரமான குற்றவாளி” ஒருவன் ஆறு வயது சிறுவனோடு தன்னந்தனியாக வீட்டில் ஒரு நாள் முழுவதையும் செலவிடுகிறான்! என்னை ‘படுபயங்கரமானவன்’ என்று யாருமே நினைக்கவில்லை. சொல்லப்போனால், என்னை யாரும் குற்றவாளியாகக்கூட கருதவில்லை என்பது தெளிவாய் தெரிந்தது.

காலப்போக்கில், எங்களுடைய முகாமில் இருந்த சகோதரர்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட்டார்கள். 1974-ல் அந்த முகாமில் மீந்திருந்த ஒரே சாட்சி நான்தான். இன்னும் ஏழு ஆண்டுகளை அந்தச் சிறையில் கழித்தேன். பிறகு 1981-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலை பெற்றேன். தனிமையில் கழித்த அந்தச் சமயத்திலும், தம்முடன் ஒரு நல்லுறவை வைத்திருக்க யெகோவா எனக்கு எப்போதும் உதவினார். எப்படி? அந்த ஏழு ஆண்டுகளாக, எனக்குக் கடிதங்கள் வாயிலாக காவற்கோபுரம் கிடைத்தது. ஆம், ஒரு சகோதரர் புதிய காவற்கோபுர இதழில் வெளியான கட்டுரைகளைத் தெளிவாக, தன் கைப்பட எழுதி, தவறாமல் எனக்கு அனுப்பி வந்தார். முகாமின் மேற்பார்வையாளர் ஒவ்வொரு முறையும் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டுத்தான் எனக்குத் தருவார். அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்ததென எங்கள் இருவருக்குமே நன்றாகத் தெரியும். எனினும், அவர் ஏன் இந்தளவு துணிந்து எனக்கு உதவினார் என்பதற்கான காரணம் இன்றுவரை எனக்குத் தெரியாது. எப்படியானாலும், அந்த ஏழு வருடங்களும் அவர் அங்கு வேலை செய்தது எனக்குச் சந்தோஷத்தையே அளித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவுக்கு மனமார்ந்த நன்றியைச் செலுத்துகிறேன். அந்த ஆண்டுகளின்போது, யெகோவாமீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டு, அவரிடமிருந்து பலத்தைப் பெற்றேன்.—1 பே. 5:7.

[பக்கம் 168, 169-ன் பெட்டி/ படம்]

போருக்குப் பிறகு ரஷ்யா திரும்பினேன்

அலிக்ஸே நிபசாடஃப்

பிறந்தது 1921

முழுக்காட்டப்பட்டது 1956

பின்னணிக் குறிப்பு பூக்கன்வால்ட் சித்திரவதை முகாமில் இருந்தபோது 1943-ல் சத்தியத்தைக் கற்றுக்கொண்டார். ரஷ்யாவில் 19 வருடங்களைச் சிறையில் கழித்தார். 30 வருடங்களுக்கும் மேலாக, அவர் ஒழுங்கான பயனியராக சேவை செய்தார். அதுவும் பெரும்பாலான வருடங்கள் தடை உத்தரவின்போது ஊழியம் செய்தார்.

அலிக்ஸே தன்னுடைய 20-தாவது வயதில் நாசி ஜெர்மனியில் உள்ள ஆஷ்விட்ஸ் சித்திரவதை முகாமிற்கு அனுப்பப்பட்டார். பிற்பாடு, பூக்கன்வால்ட் முகாமிற்கு மாற்றப்பட்டார். அங்குதான் சத்தியத்தைக் கற்றுக்கொண்டார். அவர் விடுதலையாவதற்குக் கொஞ்சம் முன்பு, அபிஷேகம் செய்யப்பட்ட சாட்சிகள் இருவர் அவரிடம் இவ்வாறு சொன்னார்கள்: “போருக்குப் பிறகு நீ ரஷ்யாவுக்குச் சென்றால் நன்றாயிருக்கும் அலிக்ஸே. பரந்து விரிந்த அந்த நாட்டில் அறுவடைக்கு ஆட்கள் கண்டிப்பாகத் தேவைப்படுகிறார்கள். அங்கு கடினமான சூழ்நிலை நிலவுவதால், எப்பேர்ப்பட்ட சோதனையையும் சந்திக்கத் தயாராக இரு. உனக்காகவும், நற்செய்திக்கு செவிகொடுப்போருக்காகவும் நாங்கள் எப்போதும் ஜெபம் செய்வோம்.”

1945-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் அலிக்ஸேயை விடுதலை செய்தது. ரஷ்யாவுக்குத் திரும்பியதுமே, ஓட்டுப்போட மறுத்ததற்காக அவருக்குப் பத்தாண்டு கால சிறை தண்டனை கிடைத்தது. அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஆரம்பத்தில், அந்தச் சிறையில் என்னைத் தவிர சாட்சிகள் வேறு யாருமே இல்லை. கடவுளைப்பற்றிக் கற்றுக்கொள்ள விரும்புவோரைக் கண்டுபிடிக்க உதவும்படி யெகோவாவிடம் மன்றாடினேன். சீக்கிரத்திலேயே சாட்சிகளின் எண்ணிக்கை அங்கு 13-ஆக உயர்ந்தது. அந்தச் சமயத்தில், எங்களிடம் பைபிள் பிரசுரங்கள் எதுவுமே இருக்கவில்லை. அதனால், நாங்கள் சிறை நூலகத்திலிருந்து எடுத்த நாவல்களில் காணப்பட்ட பைபிள் வசனங்களைத்தான் எழுதி வைத்துக்கொண்டோம்.”

அந்தப் பத்தாண்டுகளும் அலிக்ஸே சிறையில் கழித்தார். விடுதலையான பிறகு, இயேசுமீது நம்பிக்கை வைத்திருந்த பலர் வசிக்கும் ஒரு பகுதிக்கு அவர் சென்றார். “கடவுளைப்பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற தணியாத தாகத்தோடு அங்குள்ளவர்கள் இருந்தார்கள். அவர்கள் இரவும் பகலும் என்னிடம் வந்தார்கள். பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள். கேட்ட விஷயங்கள் பைபிளில் இருக்கிறதாவென்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்” என்று அவர் சொல்கிறார்.

அடுத்த ஒருசில ஆண்டுகளிலேயே, 70-க்கும் மேற்பட்டோர் முழுக்காட்டுதல் பெற அலிக்ஸே உதவினார். அவர்களில் மரீயாவும் ஒருவர். அலிக்ஸே பிற்பாடு மரீயாவைத் திருமணம் செய்துகொண்டார். அலிக்ஸே சொல்கிறார்: “கேஜிபியினர் என்னைத் தேடிக்கொண்டு வந்தார்கள். நான் கைது செய்யப்பட்டேன். 25 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றேன். பிற்பாடு அவர்கள் மரீயாவைக் கைது செய்தார்கள். விசாரணைக்கு முன்பு, மரீயா ஏழு மாதங்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டாள். யெகோவாவை வணங்குவதை விட்டுவிட்டால், அவளை உடனடியாக விடுதலை செய்வதாக விசாரணை செய்த அதிகாரி கூறினார். அவள் மறுத்துவிட்டாள். கடின உழைப்பு முகாமில் ஏழாண்டுகள் உழைக்கும்படி அவளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. எங்கள் சின்னஞ்சிறு மகளை ஒரு சகோதரி தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று பராமரித்தார்.”

அலிக்ஸேயும் மரீயாவும் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டார்கள். டிவர் ஆப்லாஸ்ட்டுக்கு அவர்கள் குடிமாறிச் சென்றார்கள். அங்கிருந்த அதிகாரிகளும் உள்ளூர் மக்களும் அவர்களைக் கடுமையாக எதிர்த்தார்கள். அண்டை வீட்டுக்காரர் ஒருவர் அவர்களுடைய வீட்டிற்குத் தீ வைத்தார். அடுத்து வந்த ஆண்டுகளில், அவர்கள் பலமுறை குடிமாறிச் செல்ல நேர்ந்தது. எனினும், அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் சீஷர்களை உருவாக்கினார்கள்.

அலிக்ஸே இவ்வாறு சொல்கிறார்: “சிறையில் இருந்த காலத்தில், கடவுளுடைய வார்த்தையைப் படிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதிருந்து, தினமும் பைபிள் வாசிப்பதைக் குறிக்கோளாக வைத்தோம். நானும் மரீயாவும் பைபிளை முழுவதுமாக 40-க்கும் மேற்பட்ட முறைகள் வாசித்திருக்கிறோம். கடவுளுடைய வார்த்தைதான் ஊழியத்தில் எங்களுக்குப் பலத்தையும் ஊக்கத்தையும் அளித்திருக்கிறது.”

மொத்தமாக, 4 ஆண்டுகளை நாசி சித்திரவதை முகாமிலும், 19 ஆண்டுகளை ரஷ்ய சிறைச்சாலைகளிலும் முகாம்களிலும் அலிக்ஸே செலவிட்டார். 30 ஆண்டுகால பயனியர் ஊழியத்தில், யெகோவாவைப்பற்றிக் கற்றுக்கொண்டு, அவரை நேசிக்க அநேகருக்கு அவரும் அவருடைய மனைவியும் உதவியிருக்கிறார்கள்.

[பக்கம் 177, 178-ன் பெட்டி/ படம்]

அந்த ராணுவ வீரர் சொன்னது சரிதான்

ரெஜினா குகூஷ்கினா

பிறந்தது 1914

முழுக்காட்டப்பட்டது 1947

பின்னணிக் குறிப்பு பல ஆண்டுகள், சபையில் உள்ளவர்களோடு தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருந்தபோதிலும், உண்மையோடு நற்செய்தியைத் தொடர்ந்து பிரசங்கித்து வந்தார்.

என்னை 1947-ல், யெகோவாவின் சாட்சி ஒருவர் சந்தையில் சந்தித்துப் பேசினார். அன்று மாலை, அவருடைய வீட்டுக்குச் சென்றேன். நாங்கள் மணிக்கணக்காகப் பேசினோம். அவரைப் போலவே, நானும் யெகோவாவுக்கு முழுமூச்சோடு சேவை செய்வதென உடனடியாகத் தீர்மானித்தேன். “உங்களைப் போல நானும் பிரசங்கிப்பேன்” என்றேன்.

பிரசங்கித்ததற்காக, 1949-ல், உக்ரைனில் உள்ள லவீஃப் நகரில் கைதுசெய்யப்பட்டேன். கணவரிடமிருந்தும், என் இரண்டு சின்னஞ்சிறு மகள்களிடமிருந்தும் பிரிக்கப்பட்டேன். மூன்று நீதிபதிகளைக் கொண்ட ட்ரோயிகா என்றழைக்கப்படுகிற நிர்வாகக் குழு என் வழக்கை விசாரித்தது. இந்த நீதிமன்றத்தில் வெளியாட்கள் யாருக்கும் அனுமதியில்லை. என்னைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும்படி தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த நீதிபதிகளில் ஒருவரான பெண் நீதிபதி, தீர்ப்பை வாசிக்கும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்: “உனக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதால், உன்னுடைய தண்டனையைக் குறைக்க தீர்மானித்திருக்கிறோம். மரண தண்டனைக்குப் பதிலாக 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.”

நான் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையில் ஆண்கள் மட்டுமே இருந்தார்கள். நான் யெகோவாவின் சாட்சி என்பது ஏற்கெனவே அவர்களுக்குத் தெரிந்திருந்தது. எனக்கு 25 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததைக் கேட்டதும், ‘இவரால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறதோ’ என்று ஆச்சரியப்பட்டார்கள். அந்தச் சிறையிலிருந்து நான் மாற்றப்பட்டபோது, இளம் ராணுவ வீரர் ஒருவர் என்னிடம் உணவு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு, “பயப்படாதீர்கள், எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று பரிவோடு கூறினார்.

1953 வரை, வட ரஷ்யாவிலிருந்த முகாமில் இருந்தேன். சோவியத் யூனியனின் பல்வேறு குடியரசுகளைச் சேர்ந்த சகோதரிகள் இங்கு இருந்தார்கள். ஒரு குடும்பத்தைப்போல நாங்கள் ஒருவர்மீது ஒருவர் பாசமாக இருந்தோம்.

எங்களுடைய நடத்தையின் மூலமாக, மற்றவர்களுக்குச் சாட்சி கொடுக்க முயற்சி செய்தோம். அதைப் பார்த்தாவது, அவர்கள் யெகோவாவை வழிபட ஆரம்பிக்கலாம் என்று நம்பினோம். நாங்கள் நீண்ட மணிநேரத்திற்கு கடினமாய் உழைக்க வேண்டியிருந்தது. என்னுடைய தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை பெற்றேன். ஆனால், மற்றொரு விதமான தனிமை என்னை வாட்டிவதைக்க ஆரம்பித்தது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சபையோடு எனக்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் போனது. இது சிறைத் தண்டனையைவிட கொடுமையாக இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், யெகோவா என்னை எப்போதும் தாங்கினார்; அவர் காட்டிய அன்பு குறையவே இல்லை. நான் பைபிளை அதிகமதிகமாக வாசிக்க ஆரம்பித்தேன். படித்ததைத் தியானித்தேன். இது, யெகோவாவிடம் நெருங்கி வர எனக்கு உதவியது.

சாட்சிகளைச் சந்திக்க யெகோவா எனக்கு எதிர்பாராத விதத்தில் உதவினார். சோவியத் ரஷ்யா என்ற ரஷ்ய மொழி செய்தித்தாளில், தென்மேற்கு ரஷ்யாவில், ஆஸெஷியா நகரிலுள்ள நம் சகோதரர்களைப்பற்றித் தரக்குறைவாக எழுதப்பட்ட கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. சோவியத் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் யெகோவாவின் சாட்சிகள் ஈடுபட்டிருப்பதாக அந்தக் கட்டுரை தெரிவித்தது. அதில் குறிப்பிட்ட சகோதர சகோதரிகளின் குடும்பப் பெயர்களும் அவர்களுடைய விலாசமும் காணப்பட்டது. அதைப் பார்த்ததும் எனக்கு ஒரே சந்தோஷம்! கடிதம் எழுதி, அவர்களைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். நாங்கள் சந்தித்தோம். சகோதரர்கள் எனக்குப் பெரிதும் உதவினார்கள். தம்முடைய ஜனங்களை நான் சந்திப்பதற்காகவே, யெகோவா இந்தக் கட்டுரை வெளியாக அனுமதித்ததாக அவர்கள் சொன்னார்கள்.

இப்போது எனக்கு 92 வயது. ஆரம்பத்தில், அந்த ராணுவ வீரர் பரிவாகச் சொன்னது சரிதான். பிரச்சினைகள் மத்தியிலும், என்னுடைய வாழ்க்கை முழுவதும் எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்திருக்கிறது.

[பக்கம் 188, 189-ன் பெட்டி/ படம்]

எங்கள் ‘கூடார முளைகளை’ முடிந்தளவு ‘உறுதிப்படுத்தினோம்’

டிமீட்ரீ லிவி

பிறந்தது 1921

முழுக்காட்டப்பட்டது 1943

பின்னணிக் குறிப்பு ரஷ்யாவில் அமைக்கப்பட்டிருந்த ஆலோசனைக் குழுவில் 20-க்கும் அதிகமான வருடங்கள் சேவை செய்தார். இப்போது சைபீரியாவின் ஒரு சபையில் மூப்பராக சேவை செய்கிறார்.

அது 1944-ஆம் வருடம். இரண்டாம் உலக யுத்தம் முற்றுப்பெற இன்னும் ஆறு மாதங்கள் இருந்தன. ஒரு கிறிஸ்தவனாக நடுநிலைமையைக் காத்ததால் இராணுவ நீதிபதி முன்பாக விசாரணைக் கூண்டில் நின்றேன். என்னைத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளும்படி தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தீர்ப்பு நிறைவேற்றப்படவில்லை. அதற்குப் பதிலாக சீர்திருத்த முகாம்கள் என்றும் அழைக்கப்பட்ட கட்டாய உழைப்பு முகாம்களில் எனக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனவரி 1945-ல், வடக்கு ரஷ்யாவில் கோமி குடியரசின் பெசோரா பட்டணத்திலிருந்த முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்த நூற்றுக்கணக்கான கைதிகள் மத்தியில் நம்முடைய சகோதரர்கள் 10 பேர் இருந்தார்கள். வருத்தகரமாக, என்னிடம் இருந்த ஒரே ஒரு காவற்கோபுர இதழ் பறிமுதல் செய்யப்பட்டது. அதனால், எங்களுக்கு ஆன்மீக உணவு எதுவுமே இல்லாமல் போய்விட்டது. என் உடல்நிலைகூட மிக மோசமாக இருந்தது. வேலையே செய்ய முடியாதளவுக்கு நான் ஒடுங்கி ஓடாகியிருந்தேன். குளியல் அறையில் நாங்கள் குளித்துக்கொண்டிருந்தபோது ஒரு சகோதரர் என்னிடம், ‘பார்ப்பதற்கு நீ எலும்புகூடுபோல் இருக்கிறாய்’ என்றார். உண்மையிலேயே, பார்ப்பதற்கு நான் ரொம்ப பரிதாபமாக இருந்ததால் வோர்குடாவில் உள்ள ஒரு மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

சில நாட்களில் என் உடல்நிலை கொஞ்சம் தேறியது. மணல் சுரங்கத்தில் வேலை செய்ய அனுப்பப்பட்டேன். வேலையை ஆரம்பித்து ஒரு மாதம்தான் ஆனது, திரும்பவும் பழைய நிலைக்கே வந்துவிட்டேன், அதாவது எலும்புக்கூடாகிவிட்டேன். என்னைப் பரிசோதித்த டாக்டரோ, எனக்குக் கிடைத்த உணவை விற்று நான் புகையிலை வாங்கியதால்தான் அப்படி மெலிந்துவிட்டேன் என்று நினைத்தார். ஆனால், நான் ஒரு யெகோவாவின் சாட்சி, நான் புகைபிடிக்க மாட்டேன் என்று அவரிடம் கூறினேன். இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக அந்த முகாமில் இருந்தேன். அங்கு என்னைத் தவிர யெகோவாவின் சாட்சி வேறு யாரும் இல்லை. இருந்தாலும், சத்தியத்திற்குச் செவிக்கொடுக்க எப்போதுமே யாராவது இருந்தார்கள். அவர்களில் சிலர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவும் செய்தார்கள்.

ஒருமுறை என் உறவினர்கள் காவற்கோபுர பத்திரிகையைக் கையாலேயே நகல் எடுத்து எனக்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால், சிறை தொழிலாளர்களுக்கு வரும் ஒவ்வொரு பொருளையும் மேற்பார்வையாளர் கவனமாக ஆராய்ந்த பிறகே எங்கள் கையில் கொடுப்பார். இப்படிக் கண்ணில் விளக்கெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு ஆராயும் மேற்பார்வையாளரின் கண்ணில் படாமல் எப்படி இது என் கையில் கிடைத்தது தெரியுமா? என் உறவினர்கள் காகிதங்களை நான்காக மடித்து இரண்டு அடித்தளமுடைய டப்பாவில் வைத்திருந்தார்கள். காகிதங்களை மறைக்கும் வண்ணம் அதன்மீது கெட்டியான கொழுப்பையும் வைத்திருந்தார்கள். சிறை மேற்பார்வையாளர் அந்தத் தகர டப்பாவில் துளைபோட்டு பார்த்தபோது சந்தேகப்படும்படி அவருக்கு எதுவும் தென்படவில்லை, அதனால், டப்பாவை என்னிடம் கொடுத்துவிட்டார். இவ்விதமாக வந்து சேர்ந்த ‘ஜீவத்தண்ணீர்’தான் சில காலத்திற்கு ஆன்மீக நீரூற்றாக எனக்கு இருந்தது.—யோவா. 4:10.

என்னுடைய தண்டனைக் காலம் முடியும் முன்பே அக்டோபர் 1949-ல் நான் விடுதலைச் செய்யப்பட்டேன். உக்ரைனிலிருந்த என் வீட்டுக்கு நவம்பர் மாதம் திரும்பினேன். எங்கள் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரத்தைப் பெறவேண்டி அநேக சகோதரர்கள் மாஸ்கோவிற்குச் சென்றிருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம். ஆனால், சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகளுக்கு அங்கீகாரமளிக்க, அதிகாரிகள் விரும்பாததுபோல் தெரிந்தது.

1951 ஏப்ரல் 8 இரவன்று நாங்களும் யெகோவாவின் சாட்சிகளாக இருந்த மற்ற குடும்பங்களும் கூட்டம்கூட்டமாக ரயில் பெட்டிகளில் அடைக்கப்பட்டு சைபீரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டோம். இரண்டு வாரங்களுக்குப் பின் சைபீரியாவின் மையப் பகுதியில் இருந்தோம், அதாவது, இர்குட்ஸ்க் ஆப்லாஸ்ட் என்ற பகுதியைச் சேர்ந்த காஸான் என்ற கிராமத்திற்கு வந்துசேர்ந்தோம்.

“உன் [கூடாரத்தின்] கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து” என்று ஏசாயா 54:2-ல் உள்ள வார்த்தைகள் எங்கள் மனதில் ஆழமாகப் பதிந்தன. எங்கள்மூலம் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுவதுபோல் எங்களுக்குத் தோன்றியது. ஏனென்றால், இந்த மாதிரி நடக்கவில்லை என்றால் சைபீரியாவுக்கு நாங்கள் யாராவது வந்திருப்போமா? எங்கள் கூடார முளைகளை முடிந்தளவு உறுதிப்படுத்த வேண்டுமென நான் நினைத்தேன். எனவே, நான் சைபீரியாவிலேயே தங்கிவிட்டேன். நான் இங்கு வந்து இப்போது 55-க்கும் அதிகமான வருடங்கள் கடந்துவிட்டன.

[பக்கம் 191, 192-ன் பெட்டி/ படம்]

எனக்கென்று சொந்தமாக ஓர் இடம் இருந்ததில்லை

வாலென்டீனா கார்னோஃப்ஸ்காயா

பிறந்தது 1924

முழுக்காட்டப்பட்டது 1967

பின்னணிக் குறிப்பு 21 வருடங்களாக சிறைகளிலும் கடின உழைப்பு முகாம்களிலும் காலத்தைக் கழித்திருக்கிறார். அவற்றில் 18 வருடங்கள் முழுக்காட்டப்படுவதற்கு முன்பு. 44 பேர் சத்தியத்தைக் கற்க உதவியிருக்கிறார். 2001-ல் மரணமடைந்தார்.

நானும் என் அம்மாவும் மேற்கு பெலாரூஸில் வசித்து வந்தோம். 1945 பிப்ரவரி மாதம் யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தேன். ஒரு சகோதரர் எங்கள் வீட்டுக்கு வந்து சில விஷயங்களை பைபிளிலிருந்து எடுத்துக் காட்டினார். அவர் மூன்று முறை மட்டுமே வந்தார். அதற்குப் பிறகு அவரை நான் பார்க்கவில்லை. இருந்தாலும், நான் கற்ற விஷயங்களை அக்கம்பக்கத்தாரிடமும், தெரிந்தவர்களிடம் பிரசங்கிக்க ஆரம்பித்துவிட்டேன். அதனால், அதிகாரிகள் என்னைக் கைது செய்தனர். எட்டு வருடங்களுக்கு முகாம்களில் இருக்கும்படி எனக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. உல்யானோவ்ஸ்க் ஆப்லாஸ்ட் என்ற இடத்திற்கு அவர்கள் என்னை அனுப்பிவைத்தார்கள்.

முகாம்களில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரையாவது சந்திக்கமாட்டேனா என்ற ஆவலில் மற்ற பெண் கைதிகள் நடந்துகொள்ளும் விதத்தையும் அவர்களுடைய பேச்சையும் கவனிக்க ஆரம்பித்தேன். 1948-ல் ஒரு பெண் கைதி, கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டேன். அந்தப் பெண்ணின் பெயர், ஆஸியா. அவரிடம் பைபிள் விஷயங்களைக் குறித்து பேசியபோது சந்தோஷத்தில் பூரித்துப்போனேன். சீக்கிரத்தில், இன்னும் மூன்று சகோதரிகள் முகாமிற்குள் அடைக்கப்பட்டார்கள். எங்களிடம் அவ்வளவாக பிரசுரங்கள் ஏதும் இல்லாததால் கூடியமட்டும் ஒருவரையொருவர் சந்தித்து பேசிக்கொள்ள முயன்றோம்.

1953-ல் எனக்கு விடுதலை கிடைத்தது. இருந்தாலும், நான் பிரசங்கித்ததன் காரணமாக மூன்றரை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கைதுசெய்யப்பட்டேன். இந்த முறை எனக்கு 10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 1957-ல் கெமிரோவோ நகரத்திலிருந்த முகாமிற்கு இடமாற்றப்பட்டேன், அங்குச் சுமார் 180 சகோதரிகள் இருந்தார்கள். எப்போதும் எங்களிடம் சில பைபிள் பிரசுரங்கள் கைவசம் இருந்தன. குளிர் காலத்தில் அவற்றை பனிக்குவியலில் ஒளித்துவைத்தோம், வெயில் காலத்திலோ புல்லுக்கு இடையேயும் குழித்தோண்டியும் ஒளித்துவைத்தோம். சிறை காவலர்கள் எங்கள் பிரசுரங்களைத் தேடியபோது, கைகளால் நகல் எடுத்து வைக்கப்பட்ட பிரதிகளை என் கைகளுக்குள் ஒளித்துவைத்துக்கொண்டு, என் தோளைச் சுற்றி ஒரு பெரிய சால்வையை போர்த்திக்கொள்வேன். சால்வையின் இருமுனைகளையும் கையில் பிடித்துக்கொண்டு அந்தப் பிரதிகள் வெளியே தெரியாதபடி பார்த்துக்கொள்வேன். ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்குச் செல்லும்போது நானே தைத்த ஒரு பெரிய தொப்பியை போட்டுக்கொண்டு செல்வேன். அந்தத் தொப்பியில் நிறைய காவற்கோபுர இதழ்களை மறைத்துவைத்து எடுத்துச் செல்வேன்.

கடைசியாக, மார்டிவினியாவில் உள்ள முகாமிற்கு நான் அனுப்பப்பட்டேன். அந்த முகாமில் ஒரு பைபிள் இருந்தது. ஆனால், அது பாதுகாப்பான ஓர் இடத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. அப்படிப் பத்திரமாக ஒளித்துவைக்க வேண்டிய பொறுப்பு ஒரு சகோதரிக்கு கொடுக்கப்பட்டது. அவர் பக்கத்தில் இருக்கும்போதுதான் அந்த பைபிளை நாங்கள் படிக்க வேண்டும். 1945-ல் எனக்கு சத்தியத்தை தெரியப்படுத்திய அந்தச் சகோதரர் கையில்தான் முதன்முதலில் பைபிளைப் பார்த்தேன். அதற்கு பிறகு இந்த முகாமில்தான் பார்த்தேன்.

1967-ல் நான் விடுதலை செய்யப்பட்டபோது உஸ்பெகிஸ்தானிலுள்ள ஆங்கிரியென் என்ற நகரத்திற்குச் சென்றேன். யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்ததை முழுக்காட்டுதல்மூலம் அங்கு வெளியரங்கமாகத் தெரிவித்தேன். ஆரம்பத்தில் எனக்குச் சத்தியத்தை அறிமுகப்படுத்திய அந்தச் சகோதரரை பார்த்ததோடு சரி, அதன் பிறகு நான் இங்குதான் சகோதரர்களைப் பார்த்தேன். ஏனெனில், நான் எப்போதும் மகளிர் கடின உழைப்பு முகாம்களிலேயே காலத்தைக் கழித்திருந்தேன். சபையிலிருந்த எல்லா சகோதர சகோதரிகளும் ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார்கள். சீக்கிரத்தில் அவர்கள் எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. ஜனவரி 1969-ல் எங்கள் சபையிலிருந்து எட்டு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் பிரசங்கித்ததன் காரணமாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் நானும் ஒருத்தி. எனக்கு, “சட்ட விரோதி” என்று பட்டம் குத்தப்பட்டு மூன்று வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பிரசங்கித்ததற்காக பலமுறை தனிச் சிறையில் அடைக்கப்பட்டேன்.

பைபிள் சத்தியங்களில் ஆர்வம் காட்டினவர்களுக்கு கம்பளிக்கு அடியில் ஒளிந்துகொண்டு பைபிள் படிப்பு நடத்தினேன். நடந்து செல்கையில் ஒருவருடன் ஒருவர் பேசக்கூடாது என்று கட்டளையிடப்பட்டோம். ஒருவேளை, பேசி மாட்டிக்கொண்டால் தனிச் சிறையில் போடப்பட்டோம். கையால் எழுதி நகல் எடுக்கப்பட்ட பிரசுரங்களையே நாங்கள் பயன்படுத்தினோம், அவற்றை பலமுறை மீண்டும் மீண்டும் நகல் எடுத்துக்கொண்டே இருந்தோம்.

எனக்கென்று சொந்தமாக ஓர் இடம் இருந்ததில்லை. என்னுடைய எல்லா உடைமைகளையும் ஒரே ஒரு பெட்டிக்குள் அடக்கிவிடலாம். இருந்தாலும், யெகோவாவைச் சேவிப்பதில் எனக்குச் சந்தோஷமும் திருப்தியும் கிடைத்திருக்கிறது.

[பக்கம் 200, 201-ன் பெட்டி/ படம்]

விசாரணையாளர் என் விசுவாசத்தை பலப்படுத்தினார்

பாவ்யில் சிவூல்ஸ்கி

பிறந்தது 1933

முழுக்காட்டப்பட்டது 1948

பின்னணிக் குறிப்பு சோவியத் யூனியன் சித்தாந்தத்தின்படி வாழ தொடர்ந்து வற்புறுத்தப்பட்டார். ஆனால், இப்போது ரஷ்யாவிலுள்ள ஒரு சபையில் மூப்பராக சேவை செய்கிறார்.

மதம் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபட்டதால் 1958-ல் நான் கைது செய்யப்பட்டேன். ரயில்நிலையம் வரை என்னோடு வந்த அதிகாரி, “உன் மனைவியை கடைசியாக பார்த்துக்கொள், இனிமேல் நீ அவளைப் பார்க்கவே மாட்டாய்” என்றார்.

இர்குட்ஸ்க் நகரில் விசேஷ சிறை ஒன்றில் நான் அடைக்கப்பட்டேன். அந்தச் சிறையில் நிற்பதற்கு மட்டுமே இடம் இருந்தது. விசாரணைக்கு என்னை அழைத்துச் செல்லும்வரை ஆறு மாதங்கள் அந்தத் தனிச்சிறையில் காலத்தை ஓட்டினேன். இரவு நேரங்களில் விசாரணை செய்யப்பட்டேன். பைபிள்மீது எனக்கிருந்த விசுவாசத்தையும் கடவுளுடைய அமைப்புமீது எனக்கிருந்த நம்பிக்கையையும் ஆட்டம்காணவைப்பதற்காக தங்களால் முடிந்த அனைத்தையும் அந்த அதிகாரிகள் செய்தார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய சட்டவிரோதமான நடவடிக்கைகளில் நான் ஈடுபட்டதாக என்மீது பழிசுமத்தினார்கள். என்னை மசிய வைக்க சில சமயம் அடித்து உதைத்தார்கள். ஆனால், பெரும்பாலும் மூளைச்சலவைச் செய்தே என் மனதை மாற்ற பார்த்தார்கள். உறுதியாக நிலைத்திருப்பதற்கு சக்தியைத் தரும்படி யெகோவாவிடம் கெஞ்சினேன். அவர் எப்போதுமே எனக்குப் பக்கபலமாக இருந்தார்.

இப்படி ஒருமுறை என்னை விசாரணை செய்தபோது, ஓர் அதிகாரி தன் அலுவலகத்திற்குள் என்னை அழைத்து இவ்வாறு சொன்னார்: “உன் அமைப்பு என்ன செய்கிறது என்பதை இப்போது உனக்கு காட்டுகிறோம். அது கடவுளுடைய வேலையா, இல்லையா என்பதை நீயே புரிந்துகொள்வாய்!”

என்னை உற்றுப் பார்த்தவாறு அவர் மேலும் கூறினார்: “இந்த வருடம் நியு யார்க்கில் நடந்த உங்கள் மாநாட்டிற்கு 2,53,000 பேர் வந்திருந்தார்கள். மாநாடு, இரண்டு அரங்கங்களில் நடைபெற்றது. இத்தனை பெரிய மாநாட்டை CIA உளவாளிகளின் உதவியின்றி எப்படி நடத்தியிருக்க முடியும்? அதுவும் 8 நாள் மாநாடு என்றால் சொல்லவே தேவையில்லை. பல நாடுகளிலிருந்து மக்கள், விமானத்திலும் ரயிலிலும் கப்பல்களிலும் மற்ற வாகனங்களிலும் பயணித்து மாநாட்டிற்கு வந்திருந்தார்கள். அதிகாரிகளின் உதவியின்றி இவையெல்லாம் எப்படி நடந்திருக்கும்? மாபெரும் இந்த அரங்கங்களில் 8 நாட்களுக்கு மாநாடு நடந்திருக்கிறதென்றால் சும்மாவா, இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வந்திருக்கும்?

விசாரணை நடத்திய அந்த அதிகாரி மேஜை முழுவதுமாக புகைப்படங்களைப் பரப்பினார். ஒரு படத்தில், பாரம்பரிய உடையணிந்து மாநாட்டிற்கு வந்திருந்தவர்கள் சந்தோஷம் பொங்க ஒருவரையொருவர் கட்டித் தழுவினதைப் பார்த்தேன். இன்னொரு படத்தில், சகோதரர் நார், பேச்சு கொடுத்ததைப் பார்த்தேன். இன்னும் மற்ற படங்களில் சிலர் முழுக்காட்டுதல் எடுத்ததைப் பார்த்தேன். அதோடு, சகோதரர் நார், முழுக்காட்டுதல் எடுத்தவர்களுக்கு ‘உம்முடைய சித்தம் பூமியிலே செய்யப்படுவதாக’ என்ற ஆங்கில புத்தகத்தைக் கொடுப்பதையும் பார்த்தேன். இந்தப் புத்தகம் எங்களுக்குக் கிடைக்கவில்லை, ஆனால் அது வெளியாகி கொஞ்சகாலம் கழிந்த பிறகு அதைப்பற்றி காவற்கோபுர பத்திரிகையில் வாசித்து தெரிந்துகொண்டோம். என்னை நேருக்கு நேர் பார்த்து அந்த விசாரணையாளர் இப்படிக் கேட்டார்? “இந்தப் புத்தகம் எதைப்பற்றி பேசுகிறது தெரியுமா? வடதிசை ராஜாவைப் பற்றியும் அவனுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றியும் பேசுகிறது. இதையெல்லாம் யெகோவாவின் சாட்சிகள் நிச்சயம் தனியாக ஒழுங்கமைத்திருக்க முடியாது. அமெரிக்க ராணுவத்தினர், தங்களுடைய போர் நடவடிக்கைகளை எப்படி ஒழுங்கமைப்பது என்பதை உங்களைப் பார்த்து தெரிந்துகொள்வதற்காக இதுபோன்ற மாநாடுகளில் கலந்துகொள்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல, இந்தப் பெரிய மாநாட்டை நடத்துவதற்கு ஒரு கோடீஸ்வரர் பணம் கொடுத்திருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும். காரணமில்லாமல், எந்த ஒரு கோடீஸ்வரரும் பணத்தை இப்படி வாரி இறைக்க மாட்டார்!”

அந்த விசாரணையாளர் இதையெல்லாம் என்னிடம் சொன்னபோது நான் எப்படி உணர்ந்தேன் என்பதை அவர் கற்பனைகூட செய்துபார்த்திருக்க மாட்டார். சிறையில் இருந்துகொண்டே ஒரு மாநாட்டில் கலந்துகொண்டதைப்போல் உணர்ந்தேன். எனக்குள் உற்சாகம் பெருக்கெடுத்தது. இதுபோன்ற ஓர் உற்சாக மருந்துதான் எனக்குத் தேவைப்பட்டது! விசேஷமான வகையில் யெகோவா என்மீது ஆசீர்வாதத்தைப் பொழிந்தார். இன்னும் எத்தனை கஷ்டம் வந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ள தயாராய் இருந்தேன்.

[பக்கம் 214, 215-ன் பெட்டி/ படம்]

அந்த அரங்கம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகள்தான்

வினிரா கிரிகோர்யிவா

பிறந்தது 1936

முழுக்காட்டப்பட்டது 1994

பின்னணிக் குறிப்பு அவர் 1960-களில் ஒரு நடிகையாக இருந்தார். சோவியத் யூனியனின் கொள்கையைப் பிரச்சாரம் செய்யும் ஒரு படத்தில் நடித்தார். 1995 முதல் செ. பீட்டர்ஸ்பர்க்கில் ஒழுங்கான பயனியராகச் சேவைசெய்து வருகிறார்.

வருடம் 1960. திரையுலகில் நான் காலெடுத்து வைத்த சமயம் அது. சோவியத் யூனியனிலுள்ள சினிமா அரங்கங்களில் கடவுளின் சாட்சிகள் என்ற பெயரில் ஒரு டாக்குமென்டரி படம் வெளியானது. அந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். அந்தப் படத்தில் வரும் டான்யா என்ற கதாநாயகி இறந்துவிடுகிறாள். அதற்கு யெகோவாவின் சாட்சிகள் என்ற ஆபத்தான மதப்பிரிவினர்களே காரணம் என்று சித்தரிக்கப்பட்டது. நான்தான் அந்த டான்யாவாக நடித்தேன். கதையின்படி, இரவு நேரத்தில் டான்யா ஆபத்தான அந்த மதப் “பிரிவி”னரைவிட்டு தப்பித்து ஓடுகிறாள், வெளியே உறைபனிப் புயல் அடித்துக்கொண்டிருக்க, இவளோ எதுவும் போர்த்திக்கொள்ளாமல் ஓடிவிடுகிறாள். இறுதியில் உறைபனியில் அப்படியே மறைந்துவிடுகிறாள். “டான்யா வெசெலோவாவின் வாழ்க்கை இத்துடன் முற்றுப்பெறுகிறது” என்று கதை சொல்கிறவர் வருத்தத்துடன் அறிவிக்கிறார். எனக்கு அந்தக் கதை பிடித்திருந்தது. பார்க்கப்போனால், யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி எனக்குத் தெரிந்ததெல்லாம் அந்தக் கதையில் அவர்களைப்பற்றி சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் மட்டுமே. இருந்தாலும், அவர்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவதை மதிப்பாகக் கருதினேன்.

இந்தப் படம் சோவியத் யூனியனின் பல நகரங்களில் இருந்த சினிமா அரங்கங்களிலும் மனமகிழ் மன்றங்களிலும் காட்டப்பட்டது. எந்தத் திரையரங்கில் இந்தப் படம் புதிதாகத் திரையிடப்பட்டாலும் நான் அங்கு இருப்பேன். படம் முடிந்ததும் மேடைக்குச் சென்று ரசிகர்கள் முன் காட்சியளிப்பேன். அந்தக் காலத்தில் திரையில் பார்த்த அனைத்தையும் சோவியத் மக்கள் அப்படியே நம்பினார்கள். எனவே, நான் மேடையில் காட்சியளித்ததும் “அப்பாடி, அவள் உயிரோடுதான் இருக்கிறாள்!” என்று அவர்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். உறைபனிப் புயல் என்னை பள்ளத்தாக்கிற்கு அடித்து சென்ற காட்சியையும் பனியில் நான் அப்படியே மறைந்துவிட்ட காட்சியையும் இயக்குநர் மற்றும் சிறப்பு காட்சி நிபுணர்கள் எப்படி படமெடுத்தார்கள் என்பதை அவர்களுக்கு நான் விளக்கினேன்.

ஒரு நாள் மாலை கலினின் (இப்போது டிவெர்) ஆப்லாஸ்ட் என்ற பகுதியைச் சேர்ந்த விஷ்னி வாலாசோக் என்ற இடத்திலிருந்த ஓர் அரங்கத்திற்குச் சென்றேன். அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது. ஆனால், அன்றைய தினம் சற்று வித்தியாசமாக கழிந்தது. படம் முடிந்த பிறகு ஒரு வயதானவர் என்னிடம் மதம் சம்பந்தப்பட்ட கேள்விகளை மட்டுமே கேட்டார். நானோ, பூமியில் உயிர் தோன்றியது கடவுள் மூலமாக அல்ல என்ற என்னுடைய கருத்தில் விடாப்பிடியாக இருந்தேன். அங்கு வந்திருந்த எவருமே படத்தைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை. மெதுவாக மேடையின் பின்புறம் சென்று அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரிடம், “இப்போது நான் யாரிடம் பேசினேன்?” என்று கேட்டேன்.

“அவர் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைவர். அந்த அரங்கம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகளைத் தவிர வேறு யாருமே இருக்கவில்லை” என்றார் அந்தத் தொகுப்பாளர். இப்படித்தான், என்னையே அறியாமல் அன்று நான் யெகோவாவின் சாட்சிகளை சந்திக்க நேர்ந்தது. அதன் பிறகு பைபிளைப் படிக்க நான் விரும்பினேன். ஆனால், ஒரு பைபிள்கூட எனக்குக் கிடைக்கவில்லை. போலந்து நாட்டைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அவருடன் போலந்துக்கு குடிமாறினேன். 1977-ல் இரண்டு சகோதரிகள் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். சீக்கிரத்தில் அவர்களுடன் பைபிளைப் படிக்கத் தொடங்கினேன். பைபிளை நான் நேசிக்க ஆரம்பித்தேன். நானும் என் கணவரும் யெகோவாவின் சாட்சிகளுடன் நெருங்கி பழக ஆரம்பித்தோம். 1985-ல் என் அப்பா நோய்வாய்ப்பட்டதால் நானும் என் கணவரும் அவருடன் லெனின்கிராட்டுக்கு (இப்போது செ. பீட்டர்ஸ்பர்க்) சென்று அங்கு தங்கிவிட்டோம். அந்த இடத்தில் எப்படியாவது யெகோவாவின் சாட்சிகளை சந்திப்பதற்கு எனக்கு உதவிசெய்யும்படி யெகோவாவிடம் ஜெபித்தேன்.

இதோ, இப்போது நானும் ஒரு யெகோவாவின் சாட்சி. 12 வருடங்களாக ஒழுங்கான பயனியராக சேவை செய்து வருகிறேன். இப்போது என் கணவர் ஸ்ஜிஸ்வாஃப் செ. பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒரு சபையில் உதவி ஊழியராக சேவை செய்கிறார்.

சினிமா துறை, ‘வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமான’ விதங்களில் செயல்பட்டு மக்களை ஏமாற்ற வல்லது என்பதை என் சொந்த அனுபவத்தில் தெரிந்துகொண்டேன். (எபே. 4:14) அன்று சோவியத் யூனியனின் கொள்கையைப் பிரச்சாரம் செய்த படத்தில் நடித்தபோது, 30 வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆவேன் என்று கற்பனைகூட செய்ததில்லை.

[பக்கம் 237-ன் பெட்டி]

ரஷ்ய மொழியில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ரஷ்ய மொழியிலுள்ள பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகளை யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் ஸினாடின் மொழிபெயர்ப்பாகும். அந்த மொழிபெயர்ப்பில் புழக்கத்தில் இல்லாத வார்த்தைகள் இருந்ததோடு, கடவுளுடைய பெயர் வெகு சில இடங்களிலேயே காணப்பட்டது. எனினும், ஆயிரக்கணக்கான ரஷ்ய வாசகர்கள் கடவுளுடைய நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு அது உதவியாய் இருந்தது. கடவுளுடைய பெயர் சுமார் 3,000 தடவை காணப்படும் மாக்காரியாஸ் மொழிபெயர்ப்பு பைபிளும்கூட உதவியாய் இருந்தது. ஆனால், ரஷ்யாவில் யெகோவாவின் சாட்சிகள் பெருமளவு அதிகரித்தபோது, திருத்தமான, தெளிவான, தற்கால நடையில் பைபிள் மொழிபெயர்ப்பு ஒன்றிற்கான தேவையும் அதிகரித்தது.

புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்க ஆளும் குழு ஏற்பாடுகளைச் செய்தது. ரஷ்ய கிளை அலுவலகம் இந்த மாபெரும் பணியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.

2001-ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டது. 2007-ல் உலகெங்குமுள்ள ரஷ்ய வாசகர்கள் ஆனந்தப்படும் விதத்தில், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் முழுமையாய் ரஷ்ய மொழியில் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய வெளியீட்டை ஆளும் குழுவைச் சேர்ந்தவர்களான தியோடர் ஜாரக்ஸ் செ. பீட்டர்ஸ்பர்க்கிலும் ஸ்டீவன் லெட் மாஸ்கோவிலும் வெளியிட்டார்கள். அப்போது விண்ணைமுட்டும் பலத்த கரவொலி எழுந்தது. இந்த பைபிளைப் பெற்றுக்கொண்டவர்கள் அப்போதே சந்தோஷத்தில் குதூகலிக்க ஆரம்பித்தார்கள். “எவ்வளவு தெளிவாக, புரிந்துகொள்ளும் விதத்தில், எளிய நடையில் இருக்கிறது! பரிசுத்த பைபிளை வாசிப்பது இப்போது இன்னும் அதிக இன்பம் அளிக்கிறது” என்று ஒரு சகோதரி எழுதினார். “யெகோவா தந்த அருமையான பரிசு!,” “எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” போன்ற வாசகங்களுடன் நன்றி கடிதங்களை அமைப்புக்கு பலர் அனுப்பியிருந்தார்கள். இது, பல நாடுகளில் வசிக்கும் ரஷ்யர்களுக்கு, அதுவும் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறவர்களுக்கு மிக முக்கியமான நிகழ்ச்சி என்பதைத் தெளிவாய் காட்டுகிறது.

[பக்கம் 244, 245-ன் பெட்டி/ படம்]

ஒரே நாளில் எங்கள் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்தன

ஈவான் ஸ்லாவா, நட்டாலியா ஸ்லாவா

பிறந்தது முறையே 1966, 1969

முழுக்காட்டப்பட்டது 1989

பின்னணிக் குறிப்பு தேவை அதிகமுள்ள இடத்தில் ஊழியம் செய்ய பயனியர்களாகக் குடிமாறிச் சென்றார்கள். ஈவான் இப்போது ரஷ்ய கிளை அலுவலகக் குழுவில் சேவை செய்கிறார்.

நானும் என் மனைவியும் 1990-ன் முடிவில் உக்ரைனைவிட்டு ரஷ்யாவில் குடியேற தீர்மானித்தோம். கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் குடியிருந்த பெல்கோராட் ஆப்லாஸ்ட்டில் பத்துப் பிரஸ்தாபிகள்கூட இருக்கவில்லை. இந்த இடத்தில் “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்” என்பதில் துளியும் சந்தேகம் இருக்கவில்லை.—மத். 9:37.

எங்கள் தேவைகளைக் கவனித்துக்கொள்ள நாங்கள் வேலை தேட வேண்டியிருந்தது. ஆனால், நாட்டில் பொருளாதார நிலை படுமோசமடைந்தது, அநேகரது வேலை பறிபோனது. மக்கள் அடிப்படை உணவைப் பெறுவதற்கு உதவியாக சலுகை சீட்டுகளை அரசு வினியோகித்தது; இவை வேலை செய்யுமிடத்தில் வினியோகிக்கப்பட்டன. எங்களுக்கு வேலை இல்லாததால், இந்தச் சீட்டுகள் கிடைக்கவில்லை. எனவே, சந்தையில் அதிக விலை கொடுத்து உணவுப்பொருள்களை நாங்கள் வாங்க வேண்டியிருந்தது. குடியிருக்க வீடு கிடைப்பதும் பெரும்பாடாய் இருந்தது; நாங்கள் விடுதியில் தங்கியிருந்தோம். அந்த அறைக்கு 20 நாட்கள் வாடகை கொடுத்ததும், எங்கள் பணப்பை காலியாகிவிட்டது. வேலையும், குறைந்த வாடகைக்கு வீடும் கிடைப்பதற்கு உதவும்படி யெகோவாவிடம் நாள்தோறும் ஜெபம் செய்தோம். இந்தச் சமயத்தில் ஊக்கத்துடன் ஊழியத்தில் கலந்துகொண்டு, உண்மையான ஆர்வம் காட்டுபவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். அந்த விடுதியிலிருந்து வெளியேற வேண்டிய நாள் வந்தது. எங்களிடமிருந்த கொஞ்சநஞ்ச காசுக்கு ரொட்டியையும் பாலையும் வாங்கினோம். மறுநாள் விடிந்ததும் அந்த அறையைக் காலிசெய்ய வேண்டுமென்பதால், அன்றிரவு படுக்கச் சென்றபோது, வேலையும் குடியிருக்க வீடும் கிடைப்பதற்கு உதவுமாறு யெகோவாவிடம் மீண்டும் ஜெபம் செய்தோம்.

காலையில் தொலைபேசியின் ஒலிகேட்டு கண்விழித்தோம். என் உறவுக்கார பையன் ஒருவன் எங்களுக்காக வரவேற்பு அறையில் காத்திருப்பதாக அந்த விடுதியின் நிர்வாகி சொன்னபோது எங்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது. தனக்கு சமீபத்தில் ஊக்கத்தொகை கிடைத்ததாகவும் கூடுதலாகக் கிடைத்த அந்தப் பணத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் சொல்லி, கொஞ்சத்தை எங்களிடம் கொடுத்தான். இதோடு எல்லாம் முடிந்துவிடவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சகோதரர் எங்களைத் தொலைபேசியில் அழைத்து, குறைந்த வாடகைக்கு வீடு ஒன்றைப் பார்த்திருப்பதாகச் சொன்னார். மேலும், அதே நாள் பாலர் பள்ளி ஒன்றின் மைதானத்தைக் கவனித்துக்கொள்கிற வேலை எங்களுக்குக் கிடைத்தது. இப்படியாக, ஒரே நாளில் எங்கள் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்தன. எங்களிடம் கொஞ்சம் பணமும், குடியிருக்க வீடும், வேலையும் இருந்தன. எங்கள் ஜெபங்களை யெகோவா கேட்டு, அருமையான விதத்தில் அவற்றுக்கு பதில் அளித்தார் என்பதில் துளிகூட சந்தேகமில்லை.

1991-ல், பெல்கோராட்டில் நினைவுநாள் ஆசரிப்புக்கு 55 பேர் வந்திருந்தார்கள்; மறுவருடம் 150 பேர் இதில் கலந்துகொண்டார்கள். அதற்கு மறுவருடம் 354 பேர் வந்தார்கள். 2006-ல் இந்த நகரத்தில் ஆறு சபைகள் இருந்தன; பெல்கோராட் ஆப்லாஸ்ட்டில் 2,200-க்கும் அதிக பிரஸ்தாபிகள் இருந்தார்கள்.

[பக்கம் 250-ன் பெட்டி]

சமீபத்திய வழக்குகளின் விவரம்

ஜனவரி 2007-ல், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் (ECHR) ஏகமனதாய் வழங்கிய தீர்ப்பில், அரசாங்கத்தின் குறுக்கீடு இல்லாமல் வழிபடுவதற்கான உரிமை நமக்கிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த வழக்கின் ஏகோபித்த தீர்ப்பில், “யெகோவாவின் சாட்சிகள் என்ற மதத் தொகுதியினர், ஒன்றாகக் கூடி மத புத்தகங்களைப் படிப்பதும், கலந்தாலோசிப்பதும், அவர்களது வழிபாட்டுமுறையாக, போதிக்கும்முறையாக இருந்தது” என்று தெரிவிக்கப்பட்டது.

2004-ல் அவர்களது ஊழியம் மாஸ்கோ நகரில் அதிகாரப்பூர்வமாய் தடைசெய்யப்பட்டிருந்தாலும், வழிபடுவதற்காக நம் சகோதரர்கள் தொடர்ந்து பகிரங்கமாகக் கூடிவருகிறார்கள், முடிந்தவரை ஊழியத்தில் முழுமையாய் ஈடுபடுகிறார்கள். 2007-ல், எந்தக் குறுக்கீடும் இல்லாமல் நினைவுநாள் ஆசரிப்பையும் மாவட்ட மாநாடுகளையும் மாஸ்கோவில் நடத்த முடிந்ததற்காக சகோதரர்கள் அதிக ஆனந்தப்பட்டார்கள். பொதுவாக ரஷ்யா எங்கும் இதே நிலைதான்.

இன்னும் சட்ட ரீதியான பிரச்சினைகள் இருந்து வருகிறபோதிலும், எதிர்ப்பு தலைதூக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்கும்போது, தங்களைத் தற்காத்துக்கொள்ள நம் சகோதரர்கள் தைரியமாய் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். உதாரணத்திற்கு, 2006, ஏப்ரல் 12-ஆம் தேதி மாஸ்கோவில் நடைபெற்ற நினைவுநாள் ஆசரிப்பின்போது, லியுப்லினா காவல் துறையைச் சேர்ந்தோர் இடையே புகுந்து அதை நிறுத்தியதை எதிர்த்து 2007, ஜூன் 20-ஆம் தேதி ECHR-ல் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. காவல் துறையினர் 14 சகோதரர்களைக் காவலில் வைத்து, அவர்களது வழக்கறிஞரை கத்திமுனையில் மிரட்டினார்கள். உள்ளூர் நீதிமன்றம் ஓரளவு நம் சகோதரர்களுக்குச் சாதகமாக தீர்ப்பை வழங்கியது; இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் சகோதரர்கள் மேல்முறையீடு செய்தபோது பாதகமான தீர்ப்பே கிடைத்தது. அதோடு, நம்முடைய மத நடவடிக்கைகளை சட்டப்படி எந்த உரிமையுமின்றி, நீண்ட காலமாய் புலன் விசாரணை செய்து வருகிற பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு எதிராக 2007, ஜூலை மாதம் செ. பீட்டர்ஸ்பர்க்கில் குற்ற முறையீடு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

[பக்கம் 228-ன் அட்டவணை/ வரைபடம்]

கால வரலாறு ரஷ்யா

1890

1891 தைரியமாய் பிரசங்கித்ததற்காக, ஸ்யிம்யான் கஸ்லிட்ஸ்கீ ரஷ்யப் பேரரசின் கிழக்குப் பகுதிக்கு நாடுகடத்தப்படுகிறார்.

1904 பைபிள் பிரசுரங்களுக்கு நன்றி தெரிவித்து ரஷ்யாவிலிருந்து வந்த கடிதங்களை ஜெர்மன் கிளை அலுவலகம் பெறுகிறது.

1910

1913 அப்போது ரஷ்யப் பேரரசின் பாகமாய் இருந்த பின்லாந்தில், சார்பாளர் அலுவலகத்தை பைபிள் மாணாக்கர்கள் ஏற்படுத்துகிறார்கள்.

1923 ரஷ்யாவுக்கு பைபிள் பிரசுரங்களை அனுப்பும்படி கேட்டு உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு அநேக கடிதங்கள் வர ஆரம்பிக்கின்றன.

1928 பைபிள் மாணாக்கர்களுடைய வேலைகளுக்கு மாஸ்கோவில் அனுமதி வழங்கும்படி ஜார்ஜ் யங் வேண்டுகோள் விடுகிறார். அவருடைய விசாவை நீட்டிக்க அதிகாரிகள் மறுக்கிறார்கள்.

1929 எஸ்டோனியாவில் டல்லின் நகரிலுள்ள வானொலி நிலையத்துடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அங்கிருந்து ஒலிபரப்பப்படுகிற பைபிள் பிரசங்கங்களை லெனின்கிராட்டிலும் பிற நகரங்களிலும் கேட்க முடிகிறது.

1930

1939-1940 மேற்கு உக்ரைன், மால்டோவா, பால்டிக் குடியரசுகள் ஆகியவற்றை யூஎஸ்எஸ்ஆர் தன்னுடன் இணைத்துக்கொள்கிறது. இவ்வாறு ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் அந்த நாட்டின் அதிகார எல்லைக்குட்படுகிறார்கள்.

1944 நூற்றுக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் ரஷ்யா எங்குமுள்ள சிறைச்சாலைகளுக்கும் கடின உழைப்பு முகாம்களுக்கும் அனுப்பப்படுகிறார்கள்.

1949 யெகோவாவின் சாட்சிகள் மால்டோவாவிலிருந்து சைபீரியாவுக்கும் தூர கிழக்கு நாடுகளுக்கும் நாடுகடத்தப்படுகிறார்கள்.

1950

1951 மேற்கு உக்ரைன், பெலாரூஸ், லாட்வியா, லிதுவேனியா, எஸ்டோனியா ஆகியவற்றைச் சேர்ந்த 8,500-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்படுகிறார்கள்.

1956/1957 மத சுதந்திரம் அளிக்கும்படி உலகெங்கும் 199 மாவட்ட மாநாடுகளில் கலந்துகொண்டவர்களின் சார்பாக சோவியத் அரசிடம் மனு கொடுக்கப்படுகிறது.

1950-களின் பிற்பகுதி மார்டிவினியாவிலுள்ள விசேஷ கடின உழைப்பு முகாமில் நூற்றுக்கணக்கான சாட்சிகள் தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

1965 சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் அங்கிருந்து பிற இடங்களுக்குச் சென்று குடியேற அனுமதி அளித்து சோவியத் அரசு விசேஷ ஆணை பிறப்பிக்கிறது. சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்ட சாட்சிகள் சிதறிப்போய் நாடெங்கும் குடியேறுகிறார்கள்.

1970

1989-1990 முதன்முறையாக ஆளும் குழுவைச் சேர்ந்தோர் ரஷ்யாவிலுள்ள சகோதரர்களைச் சந்திக்கிறார்கள். யூஎஸ்எஸ்ஆர்-ஐ சேர்ந்த சாட்சிகள் விசேஷ மாநாடுகளில் கலந்துகொள்ள போலந்துக்குச் செல்கிறார்கள்.

1990

1991 மார்ச் 27-ஆம் தேதி யெகோவாவின் சாட்சிகள் ரஷ்யாவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறுகிறார்கள்.

1992/1993 செ. பீட்டர்ஸ்பர்க்கிலும் மாஸ்கோவிலும் சர்வதேச மாநாடுகள் நடைபெறுகின்றன.

1997 செ. பீட்டர்ஸ்பர்க் நகருக்கு அருகே உள்ள சோல்னிசிநோயி என்ற கிராமத்தில் ரஷ்ய கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

1999 ரஷ்யாவின், முதல் மாநாட்டு மன்றம் செ. பீட்டர்ஸ்பர்க் நகரில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

2000

2003 கிளை அலுவலக விஸ்தரிப்பு நிறைவடைகிறது.

2006 ரஷ்யாவில் உள்ள 2,100-க்கும் அதிகமான சபைகளிலும் ஒதுக்குப்புற தொகுதிகளிலும் உள்ள பிரஸ்தாபிகள் சுறுசுறுப்பாய் ஊழியம் செய்து வருகிறார்கள்.

[வரைபடம்]

(பிரசுரத்தைக் காண்க)

மொத்த பிரஸ்தாபிகள்

மொத்த பயனியர்கள்

மொத்த பிரஸ்தாபிகள்

மொத்த பயனியர்கள்

முன்னாள் யூஎஸ்எஸ்ஆர்-ரின் பாகமான 15 நாடுகளிலிருந்த மொத்த பிரஸ்தாபிகள்

3,60,000

3,00,000

2,40,000

1,80,000

1,20,000

60,000

40,000

20,000

1890 1910 1930 1950 1970 1990 1990 2000

[பக்கம் 218-ன் படம்/ தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பிரசுரங்களை நாடெங்கும் கொண்டுசேர்க்க மற்ற கிளை அலுவலகங்களும் உதவின

ஜெர்மனி பின்லாந்து

↓ ↓

சோல்னிசிநோயி

↓ ↓ ↓ ↓

பெலாரூஸ் கஸக்ஸ்தான் மாஸ்கோ ரஷ்யா

ஜப்பான்

விலாடிவோஸ்டோக்

கம்சட்கா

[பக்கம் 116, 117-ன் தேசப்படங்கள்]

ஆர்க்டிக் வட்டம்

ஆர்க்டிக் பெருங்கடல்

வட துருவம்

பேரன்ட்ஸ் கடல்

காரா கடல்

லாப்டெவ் கடல்

கிழக்கு சைபீரியக் கடல்

சுக்சீ கடல்

பேரிங் ஜலசந்தி

சுவீடன்

நார்வே

டென்மார்க்

கோபன் ஹாகன்

ஜெர்மனி

போலந்து

லோட்ஜ்

வார்ஸா

பால்டிக் கடல்

பின்லாந்து

எஸ்டோனியா

லாட்வியா

லிதுவேனியா

பெலாரூஸ்

ப்ரெஸ்ட்

உக்ரைன்

விவ்

மால்டோவா

காஸ்பியன் கடல்

கஸக்ஸ்தான்

அஸ்தானா

கெங்ஜிர்

உஸ்பெகிஸ்தான்

தாஷ்கெண்ட்

ஆங்கிரியென்

மங்கோலியா

உலன் படோர்

சீனா

ஜப்பான் கடல்

ஜப்பான்

டோக்கியோ

ஹோகைடோ

ஒக்கோட்ஸ்க் கடல்

பேரிங் கடல்

ரஷ்யா

பீட்ரோஜாவோட்ஸ்க்

செ. பீட்டர்ஸ்பர்க்

சோல்னிசிநோயி

கலினின்கிராட்

நோவ்கோராட்

விஷ்னி வாலாசோக்

மாஸ்கோ

துலா

ஓரெல்

குர்ஸ்க்

வோரோனெஜ்

உடார்னி

விலாடிமிர்

இவாநோவா

நிஜினி நாவ்கோராட்

சிக்டிவ்கார்

உக்டா

பெசோரா

இன்டா

நோவாயா ஜெம்லியா

வோர்குடா

யூரல் மலைகள்

சைபீரியா

யெகாடிரின்பர்க்

நாபெரிஷ்னி செல்னி

இஜெவ்ஸ்க்

சாராடோவ்

வால்ஷ்ஸ்கீ

ஸ்டாவ்ரோபோல்

பிடிகார்ஸ்க்

எல்புரூஸ் மலை

நால்சிக்

நார்ட்கலா

பிஸ்லான்

விலாடகாஃப்காஸ்

காகஸஸ் மலைகள்

அஸ்ட்ராகான்

வோல்கா நதி

டோம்ஸ்க்

நோவோசிபிரிஸ்க்

கெமிரோவோ

க்ரஸ்னோயார்ஸ்க்

நோவோகுஜ்னெட்ஸ்க்

ஊஸ்ட் கான்

அக்டாஷ்

பிருஸின்ஸ்க்

அக்ட்யாபர்ஸ்கி

ப்ராட்ஸ்க்

விகோரேவ்கா

டுலூன்

கஸான்

ஜிமா

ஜலரீ

உசோல்யி-சிபிர்ஸ்கயா

கிடாய்

அன்கார்ஸ்க்

இர்குட்ஸ்க்

பைகால் ஏரி

கிரென்ஸ்க்

காபாரோவஸ்க்

விளாடிவோஸ்டோக்

கர்சகஃப்

யூஸ்ன-சகலின்ஸ்க்

சகாலின்

யாகுத்ஸ்க்

ஐமைகோன்

ஊஸ்ட் நிரா

கம்சட்கா

சுக்சீ தீபகற்பம்

கொலிமா நதி

கையிர்

நாரீல்ஸ்க்

[பக்கம் 167-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

காஸ்பியன் கடல்

பால்டிக் கடல்

பேரன்ட்ஸ் கடல்

காரா கடல்

ஆர்க்டிக் பெருங்கடல்

வட துருவம்

லாப்டெவ் கடல்

கிழக்கு சைபீரியன் கடல்

சுக்சீ கடல்

பேரிங் ஜலசந்தி

ஓகாட்ஸ்க் கடல்

ஜப்பான் கடல்

கஸக்ஸ்தான்

சீனா

மங்கோலியா

மர்மான்ஸ்க்

பெஸ்கோவ்

டிவர்

மாஸ்கோ

பெல்கோராட்

வோரோனெஜ்

ரோஸ்டோவ்

கபர்டீனோ -பால்கரியா

அலான்யா

இவாநோவா

நிஸிகோராட்

மார்டிவினியா

உல்யானோவ்ஸ்க்

வோல்காகிராட்

டாட்டர்ஸ்தான்

பெர்ம்

கோமி குடியரசு

யூரல் மலைகள்

சைபீரியா

ஸ்வொட்லோவ்ஸ்க்

செலியாபின்ஸ்க்

குர்கான்

டையுமென்

ஓம்ஸ்க்

டோம்ஸ்க்

நோவோசிபிரிஸ்க்

அல்டாய்

அல்டாய் குடியரசு

கெமிரோவோ

காகஸியா குடியரசு

க்ரஸ்னோயார்ஸ்க்

துவா குடியரசு

இர்குட்ஸ்க்

புர்யாடியா

சிடா

சாகா குடியரசு

ஆமுர்

காபாரோவ்ஸ்க்

பிரைமோர்ஸ்கி கிரே

சகாலின்

கம்சட்கா

[பக்கம் 66-ன் படம்]

சுக்சீ தீபகற்பத்தில் சூரியோதயம்

[பக்கம் 68-ன் படங்கள்]

ரஷ்ய, கஸக் மொழிகளில் காணப்படும் இந்த எழுத்துப் பலகை, சைபீரிய கிராமமான ஊஸ்ட்-புகாடார்மாவைச் சுட்டிக்காட்டுகிறது; இந்த இடத்திற்குத்தான் ஸ்யிம்யான் கஸ்லிட்ஸ்கீ நாடுகடத்தப்பட்டிருந்தார்

[பக்கம் 71-ன் படங்கள்]

தங்கள் தேன்நிலவு பயணத்தின்போது ஹெர்கன்டல் தம்பதியர், ரஷ்யாவிலுள்ள ஜெர்மன் மொழி பேசுபவர்களுக்கு உதவினார்கள்

[பக்கம் 74-ன் படங்கள்]

கார்லா ஹார்டவாவுக்கு (வலது) பகராள் செயலுரிமை வழங்கப்பட்டது; அதில், நியு யார்க்கிலிருந்த ரஷ்ய தூதுவர் அரசாங்க முத்திரையைப் பதித்தார்

[பக்கம் 80-ன் படம்]

1925 மே மாதம், பென்சில்வேனியாவிலுள்ள கார்னகீ நகரில் ரஷ்ய மொழியில் நடைபெற்ற இந்த மூன்றுநாள் மாவட்ட மாநாட்டில் 250 பேர் கலந்துகொண்டார்கள், 29 பேர் முழுக்காட்டுதல் பெற்றார்கள்

[பக்கம் 81-ன் படம்]

“வோரோனெஜ் ஆப்லாஸ்ட்டில் மதப்பிரிவுகள் நிறைந்திருக்கின்றன” என்று இந்தப் பத்திரிகை அறிவித்தது

[பக்கம் 82-ன் படம்]

ஜார்ஜ் யங்

[பக்கம் 84-ன் படங்கள்]

சுமார் பத்து வருடங்களாக அலெக்சாண்டர் ஃபோர்ஸ்ட்மன் துண்டுப்பிரதிகளையும் சிறுபுத்தகங்களையும் புத்தகங்களையும் ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தார்

[பக்கம் 90-ன் படம்]

ரெஜினா, பையோட்டர் கிர்வாகூல்ஸ்காயா தம்பதியர், 1997

[பக்கம் 95-ன் படங்கள்]

கல்லோடு சேர்த்துக் கட்டப்பட்ட கடிதங்களை பையோட்டர் வீசியதால் ஓல்கா சவ்ரியூஜினா யெகோவாவைச் சேவிக்க ஆரம்பித்தார்

[பக்கம் 100-ன் படம்]

ஈவான் க்ரிலோவ்

[பக்கம் 101-ன் படங்கள்]

சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்ட சாட்சிகள் அங்கே தங்களுக்கென்று வீடுகளைக் கட்டினார்கள்

[பக்கம் 102-ன் படம்]

மக்டலீனா பியெலஷிட்ஸ்கயாவும் அவருடைய குடும்பத்தாரும் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்

[பக்கம் 110-ன் படம்]

விக்டர் கட்ஷ்மிட்

[பக்கம் 115-ன் படம்]

1964-ல் ஆலா

[பக்கம் 118-ன் படம்]

இன்று சிம்யொன் கோஸ்ட்டில்யெவ்

[பக்கம் 120-ன் படம்]

பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் விசுவாசப் பரீட்சையை எதிர்கொள்ள விளடிஸ்லாவ் அபன்யுக்கிற்கு உதவின

[பக்கம் 121-ன் படங்கள்]

நட்யெஸ்டா விஷன்யாக்கின் வீட்டில் போலீசார் கைப்பற்றிய “அர்மகெதோனுக்குப் பின்—கடவுளுடைய புதிய உலகம்” என்ற சிறுபுத்தகம்

[பக்கம் 126-ன் படம்]

பரிஸ் கிரில்ட்ஸோவ்

[பக்கம் 129-ன் படம்]

1957-ல், விக்டர் கட்ஷ்மிட் கைதுசெய்யப்படுவதற்கு சுமார் ஒரு மாதம் முன்பு தன் சகோதரி (மேலே), மகள்கள், மற்றும் தன் மனைவி பலீனாவுடன்

[பக்கம் 134-ன் படம்]

ஈவான் பாஷ்காவ்ஸ்கீ

[பக்கம் 136-ன் படம்]

வைக்கோல் போரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பிரசுரத்தின் படத்தை “க்ராகடைல்” பத்திரிகை 1959-ல் வெளியிட்டது

[பக்கம் 139-ன் படம்]

1959-ல் கேஜிபியினரால் கண்டுபிடிக்கப்பட்ட அச்சகங்களில் ஒன்று இந்த வீட்டின்கீழ் அமைந்திருந்தது

[பக்கம் 142-ன் படம்]

சிதறியிருந்தவர்களை ஒன்றுசேர்ப்பதில் அலிக்ஸே கபுர்யாக் உதவினார்

[பக்கம் 150-ன் படங்கள்]

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட அச்சிடும் சாதனம்

ரோட்டரி அச்சகம்

காகித அச்சகம்

பக்கங்களின் ஓரத்தை வெட்டும் கருவி

ஸ்டேப்ளர்

[பக்கம் 151-ன் படம்]

ட்ராம் வண்டி ஓட்டுனரான ஸ்டீபான் லவிட்ஸ்கீ, அச்சகர் ஒருவரை தைரியமாக அணுகினார்

[பக்கம் 153-ன் படம்]

க்ரிகரி கடிலஃப் தன் அறையிலிருந்த சக கைதிகளிடம் பிரசங்கித்தார்

[பக்கம் 157-ன் படங்கள்]

பைபிளைப் படித்து, கலந்தாலோசிப்பதற்கு வசதியான, மறைவான, உயரமான பூச்செடிகள்

[பக்கம் 161-ன் படம்]

சிறிய வடிவில் தயாரிக்கப்பட்ட “காவற்கோபுர” பத்திரிகையின் நிஜ அளவு

[பக்கம் 164-ன் படம்]

“சோவியத் யூனியனின் கூட்டாட்சி சட்டமன்ற தலைமையகத்தின் ஆணை”

[பக்கம் 170-ன் படம்]

சகோதரர்கள் ‘பொக்கிஷங்களை’ விசேஷ சூட்கேஸுகளிலோ, தங்கள் பூட்ஸின் அடிப்பகுதியிலோ மறைத்து வைப்பார்கள்

[பக்கம் 173-ன் படம்]

ஐவன் கிலிம்கோ

[பக்கம் 175-ன் படம்]

சிலந்திவலையின் நூலிழை அளவுக்கு மெல்லிய எழுத்தில் எழுதப்பட்ட ஐந்து, ஆறு “காவற்கோபுர” பத்திரிகைகளை ஒரு தீப்பெட்டிக்குள் அடைத்துவிடலாம்

[பக்கம் 184, 185-ன் படம்]

மார்டிவினியாவின் ஒரு முகாமில் சகோதரர்கள் இருந்தவரை நினைவுநாளை தவறாமல் ஆசரித்துவந்தார்கள்

[பக்கம் 194-ன் படம்]

முகாம் அதிகாரியின் மனைவியிடம் நிகோலாய் குட்ஸல்யாக் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தார்

[பக்கம் 199-ன் படங்கள்]

சர்வதேச மாநாடுகள்

1989-ல் போலந்தில் நடந்த மூன்று சர்வதேச மாநாடுகளில் ரஷ்ய மக்கள் கலந்துகொண்டார்கள்

வார்ஸா

காஷுஃப்

போஜ்னன்

[பக்கம் 202-ன் படம்]

தேசிய அங்கீகாரத்தைப் பெற்ற பிறகு, இடமிருந்து வலமாக: தியோடர் ஜாரஸ், மிகைல் டாஸ்விச், டிமீட்ரீ லிவி, மில்டன் ஹென்ஷல், நீதித்துறையின் ஓர் ஊழியர், அனானி க்ரோகுல், ஆலெக்ஸீ வெர்ஷ்பிட்ஸ்கி, வில்லி போல்

[பக்கம் 205-ன் படங்கள்]

1992-ல் “ஒளி கொண்டுசெல்வோர்” என்ற தலைப்பில் செ. பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள கீராஃப் அரங்கத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் மில்டன் ஹென்ஷல் பேச்சு கொடுக்கிறார்

[பக்கம் 206-ன் படம்]

ரஷ்யாவிலுள்ள சோல்னிசிநோயியில் நிலம் வாங்கப்பட்டது

[பக்கம் 207-ன் படம்]

சோல்னிசிநோயியிக்கு முதலில் வந்த வாலண்டியர் குழுவில் ஒளலிஸ் பெர்க்டாலும் ஈவா லீஸா பெர்க்டாலும் இருந்தனர்

[பக்கம் 208-ன் படம்]

ஹான்னூ டானினென்னும் ஏயா டானினென்னும் செ. பீட்டர்ஸ்பர்க்குக்கு நியமிக்கப்பட்டார்கள்

[பக்கம் 210-ன் படம்]

ராமான் ஸ்கீபா தன் மனைவி லியூட்மீலாவுடன் மாவட்ட கண்காணியாகச் சேவை செய்தபோது நீண்ட தூரம் பயணம் செய்தார்

[பக்கம் 220-ன் படம்]

விலாடிவோஸ்டோக்கில் செயற்கை துறைமுகத்தில் சகோதரர்கள் பிரசுரங்களை அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள்

[பக்கம் 224-ன் படம்]

ரஷ்யாவில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டபோது, ஆர்னோ டூங்லாவும் ஸான்யா டூங்லாவும் மனநிறைவளிக்கும் அநேக வாய்ப்புகளைப் பெற்றார்கள்

[பக்கம் 226, 227-ன் படம்]

1989, செ. பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள காட்டில் சபை கூட்டம்

[பக்கம் 238-ன் படம்]

ரஷ்ய கிளை அலுவலகம் 40-க்கும் அதிக மொழிகளில் பிரசுரங்கள் மொழிபெயர்க்கப்படுவதை மேற்பார்வை செய்கிறது

[பக்கம் 243-ன் படம்]

1996, ஜூன் மாதம் செ. பீட்டர்ஸ்பர்க்கில் முதன்முதலாக நடைபெற்ற பயனியர் ஊழியப் பள்ளி

[பக்கம் 246-ன் படங்கள்]

ரஷ்யாவில் பிரசங்க ஊழியம்

பர்ம் ஆப்லாஸ்ட்டின் வயல்வெளியிலும் நார்ட்கலா நகரிலும் ஊழியம் செய்யும்போது

செ. பீட்டர்ஸ்பர்க் நகர வீதிகளில்

யாகுத்ஸ்க் பகுதியில் வீட்டுக்கு வீடு ஊழியத்தில்

சராட்டஃப் நகரிலுள்ள சந்தைகளில்

[பக்கம் 252, 253-ன் படம்]

ரஷ்ய கிளை அலுவலகம்

வானிலிருந்து பார்க்கையில், குடியிருப்பு கட்டடங்களும் சுற்றிலுமுள்ள இயற்கை காட்சிகளும்

[பக்கம் 254-ன் படம்]

மாஸ்கோவில் 2006-ல் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் 23,537 பேர் கலந்துகொண்டார்கள்

[பக்கம் 254-ன் படம்]

லூஷ்னிகீ விளையாட்டு அரங்கம்