Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

யெகோவாவின் சாட்சிகளான அன்புள்ள சக ஊழியர்களுக்கு:

அருமைச் சகோதரர்களாகிய உங்களுக்குக் கடிதம் எழுதுவது எங்களுக்கு எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி! சக வணக்கத்தார்மீது ‘உண்மையிலேயே அன்பு வைத்திருப்பதாகவும்’ அவர்கள் “சத்தியத்தில் நடப்பதை” கண்டு மிகவும் சந்தோஷப்படுவதாகவும் சொன்ன அப்போஸ்தலன் யோவானைப் போலவே நாங்கள் உணருகிறோம். (2 யோ. 1, 4, NW) சத்தியம் நம்மெல்லாருக்கும் கிடைத்திருப்பது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! மகா பாபிலோனிலிருந்தும் அதன் போதனைகளிலிருந்தும் கடவுளை அவமதிக்கிற பாரம்பரியங்களிலிருந்தும் சத்தியம் நம்மை விடுவித்திருக்கிறது. சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பதன் மூலம் அன்பும் கருணையும் இரக்கமும் உள்ள மக்களாக நாம் ஆகியிருக்கிறோம். அந்தச் சத்தியத்தினால் கடவுளுக்குமுன் சுத்தமான நிலைநிற்கையைப் பெற்றிருக்கிறோம், அதோடு முடிவில்லா வாழ்வுக்கான நம்பிக்கையைப் பெற்றிருக்கிறோம்.

யெகோவாவின் சக்தி நம்மைத் தினம்தினம் வழிநடத்தி, பலப்படுத்துகிறது, அதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! யெகோவா அன்போடு தமது சக்தியின் மூலம் நம்மை எப்படியெல்லாம் வழிநடத்திப் பலப்படுத்துகிறார் என்பதைச் சமீபத்தில் நடைபெற்ற “கடவுளுடைய சக்தியால் வழிநடத்தப்படுதல்” மாவட்ட மாநாடுகளிலிருந்து நிச்சயம் நீங்கள் விவரமாகக் கற்றிருப்பீர்கள். உலக நிலைமை படுமோசமாகி வருவதால், வரவிருக்கிற கடினமான காலங்களைச் சமாளிப்பதற்கு யெகோவாவுடைய மகத்தான சக்தியின் மீது சார்ந்திருப்பது மிகமிக அவசியம்.

தங்களுடைய விசுவாசத்தின் காரணமாக எவ்வளவோ துன்பங்களைச் சகித்த நம் சகோதர சகோதரிகளுடைய மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவங்களைப் பல வருடங்களாக இயர்புக்கில் வாசித்து மனம் நெகிழ்ந்துபோயிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. கஷ்டங்களின்போது விசுவாசமாக இருந்தவர்களில் பலர் புதிதாய் ஞானஸ்நானம் பெற்றவர்களாக அல்லது அச்சமயத்தில் ஞானஸ்நானம் பெறாதவர்களாக இருந்தார்கள்; இதை நினைத்தால் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது! அவர்கள் காட்டிய பற்றுறுதியையும், கடவுளுடைய நீதிநெறிகளுக்காக அவர்கள் எடுத்த நிலைநிற்கையையும் எண்ணி அவர்களை எவ்வளவாய்ப் போற்றுகிறோம்! எதிர்காலத்தில் நாம் எப்பேர்ப்பட்ட இன்னல்களை எதிர்ப்பட்டாலும் கடவுளுடைய அரசாங்கத்திற்குத் தொடர்ந்து பற்றுறுதி காண்பிக்க வேண்டுமென்ற நம் தீர்மானத்தை அவர்களுடைய அருமையான முன்மாதிரி பலப்படுத்துகிறது.—1 தெ. 1:6–8.

பிரியமுள்ள சகோதர சகோதரிகளே, உங்கள் குடும்பத்தை அன்பான, சந்தோஷமான குடும்பமாகக் கட்டிக்காப்பதற்காக, பணப் பிரச்சினைகளையும் வேறுபல பிரச்சினைகளையும் நீங்கள் எதிர்ப்பட்டு வருகிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். பிரசங்க வேலை, சபைக் கூட்டங்கள் போன்ற முக்கிய அம்சங்களில் தவறாமல் கலந்துகொள்வதும்கூட உங்களில் சிலருக்குச் சவாலாகவே இருக்கிறது. அதனால்தான், ஜெபத்தோடு பலமுறை கலந்தாலோசித்த பிறகு சபைக் கூட்டங்கள் பற்றிய விஷயத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறோம்; இது ஜனவரி 1, 2009-லிருந்து அமலுக்கு வந்திருக்கிறது. இந்த மாற்றத்தின் காரணமாக உங்களுக்குக் கிடைக்கும் கூடுதலான நேரத்தை வீணாக்கிவிடாமல் அதைத் தனிப்பட்ட படிப்புக்கும் குடும்பப் படிப்புக்கும் நன்கு பயன்படுத்துவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த வருடம் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளின் சமயத்தில் ஏராளமானோர் ஞானஸ்நானம் பெற்றார்கள், இது குறித்து நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். சிறுவயதினர்கூட ஞானஸ்நானம் பெற்றார்கள். பெற்றோர்களே, சத்தியத்தின் பேரில் போற்றுதலைக் காண்பிக்கும் விதத்தில் உங்கள் பிள்ளைகளை வளர்த்திருப்பதற்காக உங்களைப் பாராட்டுகிறோம், அதோடு இளவயதிலேயே யெகோவாவுக்குச் சேவை செய்ய ஒப்புக்கொடுக்கும்படி அவர்களை ஊக்கமூட்டியதற்காகவும் உங்களைப் பாராட்டுகிறோம். இந்த அன்புச் செல்வங்கள் பள்ளிகளில் ஏராளமான பிரச்சினைகளை எதிர்ப்பட்டபோதிலும், ஞானஸ்நானம் பெறுவதற்குத் தகுதிபெற்றிருக்கிறார்கள்; வீட்டில் அவர்களுக்கு எவ்வளவு நல்ல பயிற்சி கிடைத்திருக்கிறது என்பதையே இது படம்பிடித்துக் காட்டுகிறது.சங். 128:1–6.

பைபிள் படிப்புகளின் எண்ணிக்கையும்கூட அதிகரித்திருக்கிறது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம்; கடினமாக உழைக்கிற மிஷனரிகளும் விசேஷ பயனியர்களும் இதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார்கள். தாகமாய் இருப்பவர்களை “ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ள” வரும்படி அழைப்பதில் சகோதர சகோதரிகள் வகிக்கிற முக்கியப் பங்கை ஆளும் குழுவிலுள்ள நாங்கள் எல்லாருமே பெரிதும் மதிக்கிறோம். (வெளி. 22:17) கடந்த வருடம், கடவுளுக்குத் தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெற்ற 2,89,678 பேரை நமது உலகளாவிய சகோதரத்துவத்திற்குள் அன்புடன் வரவேற்கிறோம்.

“உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதிய வார்த்தைகளை அடிக்கடி நம் நினைவுக்குக் கொண்டுவருவது நல்லது. (1 யோ. 2:17) இந்த உலகம் வெகு சீக்கிரத்தில் ‘ஒழிந்துபோகப்போகிறது’! ஆகவே, தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கு நம் வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பதும், நாம் ‘விழித்திருப்பதும்’ எவ்வளவு ஞானமானது! (மத். 24:42) அப்படிச் செய்தால், பிற்பாடு நாம் வருத்தப்படவே மாட்டோம், மாறாக யெகோவாவின் அன்புமாறா கருணையினால் கிடைக்கிற ஆசீர்வாதங்களை அபரிமிதமாகப் பெற்றுக்கொள்வோம்.ஏசா. 63:7, NW.

பல நாடுகளிலிருந்து வந்துள்ள நெகிழ வைக்கும் அனுபவங்கள் இந்த இயர்புக்கில் உள்ளன; கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க அவை கண்டிப்பாக உங்களை உந்துவிக்கும். உங்களை எப்போதும் எங்கள் நினைவில் வைத்திருக்கிறோம், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம், உங்களை நெஞ்சார நேசிக்கிறோம் என்பதில் உறுதியாய் இருங்கள். யெகோவா தாமே உங்கள்மீது அளவில்லா ஆசீர்வாதங்களைப் பொழிந்தருளுவாராக!

உங்கள் சகோதரர்கள்,

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு