Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகெங்கும் பிரசங்கித்துக் கற்பித்தல்

உலகெங்கும் பிரசங்கித்துக் கற்பித்தல்

உலகெங்கும் பிரசங்கித்துக் கற்பித்தல்

ஆப்பிரிக்கா

நாடுகள் 57

மக்கள்தொகை 84,85,82,269

பிரஸ்தாபிகள் 11,22,493

பைபிள் படிப்புகள் 22,02,217

ருவாண்டா

ஒன்பது வயது சிறுமி ஒருத்தி பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது சிறிய கைப்பை ஒன்று தெருவில் கிடப்பதைக் கண்டாள்; அதைத் திறந்து பார்த்தபோது அதில் நிறையப் பணம் இருந்தது. அவளுடைய குடும்பத்தார் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து வந்ததால், பைபிள் நியமங்களின்படி நடக்க முடிவு செய்தார்கள். அதனால் அந்தப் பணத்தின் சொந்தக்காரரைத் தேடிக் கண்டுபிடித்து பணத்தை ஒப்படைத்தார்கள். அப்போது அவர் அந்தச் சிறுமியைப் பார்த்து, “உன்னுடைய நேர்மைக்கு வெகுமதியாக நான் கொஞ்சம் பணம் தந்தால், அதை வைத்து என்ன செய்வாய்?” என்று கேட்டார்.

“ஒரு பைபிளை வாங்குவேன்” என்றாள் அவள்.

அந்தப் பதிலைச் சற்றும் எதிர்பார்க்காத அவர், “நீ போட்டிருக்கிற டிரெஸ்ஸும் ஷூவும் ரொம்பப் பழையதாக இருப்பதால், புது டிரெஸ் அல்லது புது ஷூ வாங்குவாய் என்று நினைத்தேன்” என்றார். அந்தச் சிறுமியோ, ‘நான் பைபிளைத்தான் வாங்குவேன்’ என்று ஆணித்தரமாகச் சொன்னாள். கண்டெடுக்கப்பட்ட பணத்தை அந்தக் குடும்பத்தார் தாங்களே வைத்துக்கொள்ளாததன் காரணத்தைத் தெரிந்துகொள்ள அவர் விரும்பினார். யெகோவாவின் சாட்சிகளோடு அவர்கள் பைபிள் படித்து வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, அவர் இரண்டு பைபிள்களை வாங்கினார்; ஒன்று அந்தச் சிறுமிக்கு, மற்றொன்று தன்னுடைய குடும்பத்திற்கு. அதுமட்டுமல்ல, யெகோவாவின் சாட்சிகள் தன்னுடைய வீட்டிற்கும் வந்து பைபிள் படிப்பு நடத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார். இப்போது இந்த இரண்டு குடும்பத்தாரும் பைபிள் படிப்பில் நல்ல முன்னேற்றம் செய்து வருகிறார்கள்.

மத்திய ஆப்பிரிக்க குடியரசு

மிகவும் பயந்த சுபாவமுள்ள தியடோரா யெகோவாவின் உதவியோடு அந்தச் சுபாவத்தை மேற்கொண்டாள். அவள் கிறிஸ்தவக் குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருந்தாலும், ராஜ்ய மன்றத்திற்குப் போகக்கூடக் கூச்சப்பட்டாள். ராஜ்ய மன்றத்திற்குப் போக ஆரம்பித்த பின்பும்கூட, தனியாகவே உட்காருவாள், யாரோடும் பேச மாட்டாள், கூட்டம் முடிந்தபின் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிடுவாள். கொஞ்ச நாட்களுக்குப்பின், எல்லாக் கூட்டங்களுக்கும் அவள் போக ஆரம்பித்தாலும், தன்னோடு பேச வருவோரிடம் அவளாகவே கைகுலுக்காமல் இருந்தாள். ஆனால் காலப்போக்கில், கூட்டங்களில் பதில் சொல்ல ஆரம்பித்தாள், அங்குள்ள மற்றவர்களிடம் வலியச் சென்று பேசத் தொடங்கினாள். வெளி ஊழியத்தில் கலந்துகொள்வது அவளுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. அக்கம்பக்கத்துப் பெண்கள் அவளைக் கேலிகிண்டல் செய்தபோது பிரசங்க வேலையில் இனி ஈடுபடப்போவதில்லை எனத் தீர்மானித்தாள், ஆனால் பலத்திற்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தாள். இப்போதோ, அவள் ஞானஸ்நானம் பெற்ற ஒரு சகோதரியாக இருக்கிறாள், கூட்டங்களில் நன்றாகப் பதில் சொல்கிறாள், துணைப் பயனியர் ஊழியமும் செய்கிறாள். நான்கு பேருக்குத் தனித்தனியே பைபிள் படிப்புகளை நடத்தி வருகிறாள்; அதில் ஒருவர் அவளை முன்பு கேலிகிண்டல் செய்தவர்.

மடகாஸ்கர்

வட்டாரக் கண்காணி ஒருவரும் அவரது மனைவியும் நாட்டுப்புறப் பகுதியிலிருந்த ஒரு சபைக்குப் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். வழியில், கோடரிகளையும் ஈட்டிகளையும் வைத்திருந்த கும்பல் ஒன்றை எதிர்ப்பட்டார்கள்; ஆடுமாடுகளைத் திருடிச்செல்கிற கும்பல் அது. வட்டாரக் கண்காணியின் மனைவி தைரியத்திற்காக மனதிற்குள் ஜெபம் செய்துவிட்டு, “இன்றைக்கு நாம் எல்லாரும் பயந்து பயந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. ஆனால், சீக்கிரத்தில் கடவுள் கெட்ட ஜனங்களை அழித்துவிட்டு சமாதானமான புதிய உலகத்தைக் கொண்டுவரப்போகிறார்” என்று அவர்களிடம் சொல்லி, சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியை நீட்டினார். அவர் சொல்வதை அந்தக் கும்பலிலிருந்த ஓர் ஆள் கவனமாகக் கேட்டான், பின்பு அந்தத் துண்டுப்பிரதியை வாங்கிக்கொண்டான்.

ஒரு வருடம் கழித்து, மாநாடு ஒன்றில், ஓர் ஆள் அவரை அணுகி, ‘என்னை ஞாபகம் இருக்கிறதா? சேறும்சகதியுமான ஒரு பாதையில் நீங்கள் போய்க்கொண்டிருந்தபோது திருட்டுக் கும்பல் ஒன்றைச் சந்தித்தீர்களே, நானும் அந்தக் கும்பலில் இருந்தேன். உங்களிடமிருந்து துண்டுப்பிரதியை வாங்கியவன் நான்தான்’ என்றான். பின்பு, நடந்த விஷயங்களை விளக்க ஆரம்பித்தான்: “நாங்கள் கொள்ளையடித்துவிட்டுத் திரும்புகிற சமயத்தில்தான் உங்களைச் சந்தித்தோம். நீங்கள் சொன்ன விஷயம் என்னைச் சிந்திக்க வைத்தது. ‘போலீஸ்காரர்களைக் கண்டோ ராணுவ வீரர்களைக் கண்டோ எனக்குப் பயமில்லை, அவர்களிடமிருந்து தப்பித்துவிடலாம். ஆனால் கடவுளிடமிருந்து என்னால் எப்படித் தப்பிக்க முடியும்? அவர் கெட்ட ஜனங்களை அழித்துவிடுவாராமே!’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள விருப்பப்பட்டேன். என் வீட்டிற்குப் பக்கத்தில் வசித்த ஒருவரைச் சந்தித்தேன்; அவருக்கு விசேஷ பயனியர் ஒருவர் பைபிள் படிப்பு நடத்தி வந்தார். எனக்கும் பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டேன். இப்போது, இந்த மாநாட்டில் ஞானஸ்நானம் பெறப்போகிறேன்” என்றான்.

மொசம்பிக்

ஏறக்குறைய 30 வயதான மாடாலேனா 1992-ல் சாலை விபத்துக்குள்ளானாள்; இதன் விளைவாக அவளது இரண்டு கால்களும் செயலிழந்துபோயின. இதன் காரணமாக, முன்புபோல் அவளால் வீட்டைவிட்டு வெளியே போக முடியவில்லை. மூன்று வருடங்களுக்குப் பின்பு, யெகோவாவின் சாட்சிகள் அவளுடைய அப்பாவிடம் வீட்டுக்கு வெளியே வைத்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். முக்கிய மதப்பிரிவு ஒன்றின் தலைவர் அவர். அவருடைய வீட்டுக்குப் பின்புறத்தில்தான் அவர்களுடைய சபைக் கூட்டம் நடைபெற்று வந்தது. அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை மாடாலேனா கேட்டாள்; அவளைப் பற்றி விசாரித்த அந்தச் சகோதரர்களை உள்ளே வரும்படி அழைத்தாள். சகோதரர்கள் அவள்மீது உண்மையான அக்கறை காட்டியது அவள் மனதை நெகிழச் செய்தது. அதனால், பைபிள் படிப்புக்கு அவள் ஒத்துக்கொண்டாள், கற்றுக்கொண்ட விஷங்களில் அதிக ஆர்வம் காட்டினாள். அவளுடைய ஆர்வத்துடிப்பைக் கண்ட யெகோவாவின் சாட்சிகள், கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வது போன்ற நடைமுறையான பல உதவிகளை அவளுக்கு அளித்தார்கள். அவர்கள் இப்படி உதவியதால், மாடாலேனா 2002-ல் யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெற்றாள்.

தங்களுடைய மகள்மீது யெகோவாவின் சாட்சிகள் இந்தளவு அக்கறை காட்டியதைப் பார்த்த மாடாலேனாவின் பெற்றோர் மனம் நெகிழ்ந்துபோனார்கள். அவளுடைய அம்மா, கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார், தன் கணவனின் மதத்தைக் கைவிட்டார். மாடாலேனாவின் அப்பாவோ எந்தக் காரணத்தைக் கொண்டும் தன்னுடைய மதத்தை விடப்போவதில்லை எனப் பிடிவாதமாக இருந்தார், ஆனால் காலப்போக்கில் அவரும் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார். அவருடைய சபையில் இருந்தவர்கள் அவரை எப்படியெல்லாமோ தடுத்துப் பார்த்தார்கள்; அவர்களுடைய தலைவர் இல்லாமல் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்! அவர்கள் எவ்வளவோ தடுத்தபோதிலும், அவர் மசியவே இல்லை, தன் மதத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாப் பொருள்களையும் எரித்துப்போட்டார். 2007-ல் அவரும் அவருடைய மனைவியும் ஞானஸ்நானம் பெற்றார்கள். குடும்பத்திலுள்ள எல்லாரும் ஆன்மீக விஷயங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.

ஜிம்பாப்வே

ஒன்பது வயது டிசபெல் தன் சக மாணவிகளிடமும் ஆசிரியைகளிடமும் பிரசங்கித்து வருகிறாள். ஒருநாள், தன் ஆசிரியை ரொம்பவே சோகமாக இருந்ததை அவள் கவனித்தாள்; அதனால் அவரை அணுகி, அவர் ஏன் சோகமாக இருக்கிறார் என்று கேட்டாள். அதற்கு அவர், தன் அக்காவின் குழந்தை இறந்துவிட்டதாக வருத்தத்தோடு தெரிவித்தார். அவருடைய மனதிற்கு ஆறுதல் தரும் ஒன்றைக் கொண்டுவந்து தருவதாக அவள் வாக்குக் கொடுத்தாள். நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைத் தன் பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொண்டு மறுநாள் தன் ஆசிரியைக்குக் கொடுத்தாள். சில பாராக்களை வாசித்த அந்த ஆசிரியை சந்தோஷத்தில் அழுதேவிட்டார். பிற்பாடு, டிசபெலின் பெற்றோருக்கு ஒரு குறிப்பு எழுதி அனுப்பினார்; அதில், ‘உங்கள் மகளுக்கு நீங்கள் நல்ல விதத்தில் பயிற்சி அளித்திருக்கிறீர்கள்; நான் மனவேதனையோடு இருந்தபோது அவள் என்னிடம் ஆறுதலாய்ப் பேசினாள்; அதற்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று எழுதியிருந்தார்.

கானா

அபிகேயில், பிரஸ்பிட்டேரியன் சர்ச்சைச் சேர்ந்த தன் தாத்தா பாட்டியோடு கானாவின் தென்பகுதியில் வசித்து வந்தாள்; யெகோவாவின் சாட்சிகள் போலித் தீர்க்கதரிசிகள் என்று அவளுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. கானாவின் வேறொரு பகுதியில் வசிக்கும் தன் பெற்றோர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்து வருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டபோது அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது; அந்தப் படிப்பை நிறுத்துவதற்காக என்னென்னவோ சொல்லி அவர்களுக்குக் கடிதம் எழுதினாள். அப்படிக் கடிதம் எழுதியும் படிப்பை அவர்கள் நிறுத்தாததால், சுமார் 1000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, அவர்களை நேரிலேயே சந்தித்துப் பேசினாள். பின்பு, நரகம் என்பது கெட்டவர்கள் சித்திரவதை செய்யப்படுகிற இடமல்ல என்பதைத் தன் சொந்த பைபிளிலிருந்து தெரிந்துகொண்டபோது அவள் அப்படியே அதிர்ந்துபோனாள். அதன்பின், பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள், தன் பெற்றோரோடு ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தாள், ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபியாகவும் ஆனாள். சமீபத்தில் நடந்த வட்டார மாநாட்டின்போது ஞானஸ்நானம் பெற்றாள்.

அமெரிக்க நாடுகள்

நாடுகள் 55

மக்கள்தொகை 89,81,30,531

பிரஸ்தாபிகள் 34,49,038

பைபிள் படிப்புகள் 35,48,101

டொமினிகா

இந்தத் தீவிலுள்ள ஆற்றங்கரைகளில் பெண்கள் பலர் தங்கள் துணிமணிகளைத் துவைத்து, பெரிய கற்கள் மீதும் பாறைகள் மீதும் காயப்போடுவது வழக்கம். ஒருநாள் ஏதோவொன்று தண்ணீரில் மிதந்து வருவதைத் துணி துவைத்துக்கொண்டிருந்த ஒரு பெண் பார்த்தாள். பக்கத்தில் வந்ததும்தான் தெரிந்தது அது ஒரு புத்தகம் என்று! யெகோவாவின் சாட்சிகளோடு ஒவ்வொரு வாரமும் தான் படித்துவந்த புத்தகம் அது எனக் கண்டுகொண்டாள். அதை எடுத்துப் பக்கத்திலிருந்த பாறையில் காயப்போட்ட பின்பு துணி துவைப்பதில் மும்முரமானாள்.

அன்று சாயங்காலம், காயப்போட்ட துணிகளையெல்லாம் எடுக்கச் சென்ற அவள் இந்தப் புத்தகத்தை எடுக்க மறந்துவிட்டாள். என்றாலும், கடலில் மீன்பிடித்துவிட்டுத் திரும்பிய மீனவர்கள் சிலர் அந்தப் பொன்னிறப் புத்தகத்தைப் பாறைமீது கிடப்பதைப் பார்த்தார்கள்; அவர்களில் ஒருவர் அதை எடுத்துக்கொண்டார். பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற தலைப்பைப் பார்த்தவுடன் ஆர்வம் பொங்க அதை வாசிக்க ஆரம்பித்தார். அவருடைய கிராமத்தில் உள்ளவர்களிடம் நற்செய்தியைச் சொல்லி வந்த பயனியர் சகோதரிகள் இருவர் பிற்பாடு அவரைச் சந்தித்தார்கள். அப்போது, 1,44,000 பேர் மட்டுமே பரலோகத்திற்குப் போவார்கள் என்றும், 1914-ல் கடவுளுடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் விவரமாய்ச் சொன்னார். அதோடு, பூமி சீக்கிரத்தில் ஒரு பூஞ்சோலையாக மாறுமென்றும் சொன்னார். இதெல்லாம் அவருக்கு எப்படித் தெரிந்தது என அந்த பயனியர்கள் கேட்டபோது, அந்தப் புத்தகத்தைக் கண்டெடுத்த கதையைச் சொன்னார்; அதை நாள் தவறாமல் படிப்பதையும் சொன்னார். பின்பு அந்தப் புத்தகத்தை அவர்களிடம் காட்டினார்; அந்தப் புத்தகம் காய்ந்துபோயிருந்தது, ஆனால், ஊதிப்போயிருந்தது!

அந்தப் புத்தகத்தைப் பார்த்ததும், தன்னோடு பைபிள் படித்துவந்த பெண் ஆற்றிலிருந்து கண்டெடுத்த புத்தகம்தான் அது என்று அவர்களில் ஒரு பயனியருக்குப் புரிந்துவிட்டது. அந்த மீனவருக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. பைபிள் படிப்புக்காக ஒவ்வொரு வாரமும் அவர் ஆவலோடு காத்திருக்கிறார், நன்றாக முன்னேற்றம் செய்து வருகிறார்.

பொலிவியா

இங்குள்ள அமேசான் பகுதியில் பிரசங்கிப்பது சவாலான வேலை, ஆனால் திருப்திகரமான வேலை. பயனியர் சகோதர சகோதரிகள் பத்துப் பேர் ஒன்றாகச் சேர்ந்து பெனி ஆற்றில் ஒரு சிறிய மோட்டார் படகில் நெருக்கி உட்கார்ந்தபடி ரூரனாபாக்கி என்ற இடத்திலிருந்து ரிபெரால்ட்டா என்ற இடத்திற்குச் சுமார் 800 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தார்கள்; கூடாரத் துணிகள், சமையல் பாத்திரங்கள், பெட்டி பெட்டியாக பைபிள் பிரசுரங்கள் ஆகியவற்றைக் கூடவே எடுத்துச் சென்றார்கள். ஒதுக்குப்புறமான 70-க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று, அங்குள்ளவர்களிடம் 800-க்கும் அதிகமான புத்தகங்களையும் சிற்றேடுகளையும் துண்டுப்பிரதிகளையும் விநியோகித்தார்கள். ஆர்வம் காட்டிய சுமார் 700 பேரிடம் பைபிள் படிப்பு எப்படி நடத்தப்படுமென்று காட்டினார்கள்; அவர்களில் 200-க்கும் அதிகமானோரிடம் பைபிள் படிப்பு நடத்துவதற்காகத் திரும்பவும் சென்றார்கள். யெகோவாவின் சாட்சிகள் அந்தக் கிராமங்களைவிட்டுப் புறப்பட்ட சமயத்தில், “இங்கேயே இருந்து இன்னும் கொஞ்ச நேரத்திற்கு பைபிள் படிப்பு நடத்துங்களேன்” என்று மக்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்டார்கள். ஒரு சிறிய ஊருக்குச் சென்றிருந்த அவர்கள் அங்கிருந்து கிளம்பியபோது ஒருவருக்கு ரொம்பவும் கவலையாகிவிட்டது; அவர்களைப் போகவிட அவருக்கு மனமே வரவில்லை. அவர்களோடு பைபிளைப் படித்துக்கொண்டே இருக்க அவர் விரும்பினார். “மரத்தை வெட்டிவிட்டீர்கள்; அதைச் செதுக்கிச் சீராக்காமல் போகிறீர்களே!” என்று அவர்களிடம் ஆதங்கத்தோடு சொன்னார்.

கனடா

மான்ட்ரீல் நகரிலுள்ள ஓர் உலோகச் சுத்திகரிப்புத் தொழிற்சாலையில் நார்மன் என்பவர் பல வருடங்களாக வேலை செய்து வருகிறார். சாப்பாட்டு இடைவேளையின்போது கேன்டீனில் தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்தை அவர் தவறாமல் வாசித்து வந்தார். இதை அவருடைய சக பணியாளர்கள் கவனித்தார்கள். அதனால், தன்னோடு சேர்ந்து தினவசனத்தைக் கலந்தாராய வரும்படி நார்மன் அழைத்தபோது அவர்களில் சிலர் சம்மதம் தெரிவித்தார்கள். கலந்தாலோசிக்கிற விஷயங்களை முக்கியமாகக் குடும்ப வாழ்க்கைக்கும் சக மனிதரோடு வைத்துக்கொள்ளும் உறவுக்கும் பொருத்திக் காட்டவே அவர் முயற்சியெடுத்தார். நிர்வாகப் பணியாளர் ஒருவரும் அப்படிப்பட்ட கலந்துரையாடலில் ஒருநாள் கலந்துகொண்டார்; பிற்பாடு அவர், நார்மனைத் தன் அலுவலக அறைக்கு வரும்படி அழைத்து, ‘நீங்கள் இப்படி பைபிள் வசனத்தைக் கலந்தாராய்வது நம் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு ரொம்பவே பிரயோஜனமானது; ஒருவரோடு ஒருவர் பழகும் விதத்தை அது மேம்படுத்தும்’ என்று சொல்லி அவரைப் பாராட்டினார்.

தினவசனக் கலந்துரையாடலுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 30-ஐத் தாண்டியபோது, இப்படிப்பட்ட கலந்துரையாடலைச் சிறுசிறு தொகுதிகளாகத் தொழிற்சாலை வளாகத்தின் வெவ்வேறு இடங்களில் வைத்து நடத்தும்படி நிர்வாகத்தார் நார்மனைக் கேட்டுக்கொண்டார்கள். நார்மன் சொல்வதாவது: “தற்போது ஒவ்வொரு நாளும் மூன்று தொகுதிகளோடு கலந்துரையாடி வருகிறேன்; அதை என்னுடைய சக பணியாளர்கள் அனுதின நினைப்பூட்டுதல்கள் என அழைக்கிறார்கள். இந்தக் கலந்துரையாடல்கள் அவர்களுக்கு அந்தளவு விருப்பமாக இருப்பதால், நான் இல்லாத சமயத்திலும்கூட அவர்களில் ஒருவர் எனக்குப் பதிலாக இதை நடத்துகிறார்; நான் திரும்பி வந்ததும் அவர்களுக்குப் புரியாத விஷயங்களை என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள்.” தன் சக பணியாளர்கள் தினந்தோறும் ஒரு பைபிள் வசனத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்குக் கடந்த ஐந்து ஆண்டுகளாக நார்மன் உதவி செய்திருக்கிறார். இதன் பலனாக, அவருடைய சக பணியாளர்களிலும் அவர்களுடைய குடும்பத்தாரிலும் 40-க்கும் அதிகமானோர் சத்தியத்திற்கு வந்திருக்கிறார்கள்.

பார்படோஸ்

சகோதரி பார்க்கருக்கு 89 வயது; மோசமான உடல்நிலை காரணமாக அவரால் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொள்ள முடிவதில்லை. ஆனால், ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க அவருக்குக் கொள்ளை ஆசை. அதனால், ஒரு முறை தொலைபேசி மூலம் சாட்சிகொடுக்க முயன்றார், ஆனால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை. ஒரு சபைக் கூட்டத்தின்போது ஜெபத்தைப் பற்றிக் கொடுக்கப்பட்ட ஒரு பேச்சு அவருக்கு ஊக்கமளித்தது. அதனால், ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கத் தனக்கு உதவி செய்யும்படி யெகோவாவிடம் மன்றாடினார். சில நாட்கள் கழித்து, அவர் தன்னுடைய பைபிளையும் பத்திரிகைகளையும் எடுத்துக்கொண்டு, தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டார்; அந்த வழியே யார் போனாலும் அவரிடம் சாட்சிகொடுக்கத் தீர்மானமாய் இருந்தார். இத்தனைக்கும், அந்தத் தெருவில் ஆள்நடமாட்டம் அதிகம் இருக்காது. வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒருவர் அந்தத் தெரு வழியே போனார், அவரிடம் சகோதரி பத்திரிகைகளை அளித்தார். ஒரு வாரம் கழித்து, மறுபடியும் தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தபோது அதே ஆளைச் சந்தித்தார். பத்திரிகைகளில் ஓரளவு ஆர்வம் காட்டியிருந்த அவருக்கு, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுத்துவிட்டு, தன்னோடு சேர்ந்து பைபிளைப் படிக்க விருப்பமா என்று கேட்டார். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தபோது சகோதரிக்குச் சந்தோஷம் தாளவில்லை. மார்ச் 2008 கடைசியில் அவருக்கு முதன்முதலாக பைபிள் படிப்பை ஆரம்பித்தார். தன்னுடைய வீட்டிற்குப் பக்கத்தில்தான் அவர் வசிக்கிறார் என்பது சகோதரிக்குப் பின்னர் தெரியவந்தது. சில வாரங்களுக்குள், அவர் சபைக் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார். சகோதரி பார்க்கர் சொல்கிறார்: “யெகோவா என் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார் என்று எனக்குத் தெரியும், ஆனால் இத்தனை சீக்கிரம் பதிலளிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை!”

சிலி

சாண்டியாகோ நகரிலுள்ள ஒரு பயனியர் சகோதரி தனது பிராந்தியத்தின் மத்திபப் பகுதிக்கு ஒரு டாக்ஸியில் வந்து இறங்கினார்; ஆனால், பத்திரிகைகள் இருந்த தன்னுடைய கைப்பையை மறந்தாற்போல் பின் சீட்டிலேயே வைத்துவிட்டார். அந்தக் கைப்பையில் பத்திரிகைகள் நிறையவே இருந்தன; அதோடு, நம் ராஜ்ய ஊழியத்தின் ஒரு பிரதியும் இருந்தது. அதில் அவருடைய பெயர் எழுதப்பட்டிருந்தது. அதனால், அந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்த மற்ற யெகோவாவின் சாட்சிகளின் உதவியோடு, டாக்ஸி டிரைவர் அந்தச் சகோதரியை இரண்டு நாள் கழித்துத் தேடிக் கண்டுபிடித்தார். சகோதரியிடம் அந்தக் கைப்பையை அவர் திருப்பிக் கொடுத்தபோது அதில் நம் ராஜ்ய ஊழியம் மட்டுமே இருந்தது, பத்திரிகைகளைக் காணோம்! அப்போது அந்த டிரைவர் தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார். தன் டாக்ஸியில் பயணம் செய்த பயணிகள் அந்தப் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்து, தன்னுடைய அனுமதியோடு ஆளாளுக்கு ஒவ்வொன்றை எடுத்துக்கொண்டதாகக் கூறினார். ஒரே நாளில், அந்த எல்லாப் பத்திரிகைகளும் தானாகவே மக்கள் கைகளில் போய்ச் சேர்ந்துவிட்டன!

நிகாராகுவா

எர்னஸ்ட்டோ என்பவர் ராணுவத்தில் விசேஷப் படைகளின் கேப்டனாகப் பணிபுரிந்தவர். கரிபியன் கரையோரப் பகுதிக்கு அருகிலிருந்த ஒரு சிறிய ஊரில் வசித்து வந்தார். இந்நாட்டின் வேறொரு ஊரிலிருந்து இந்த ஊருக்கு விசேஷ பயனியராக வந்திருந்த கைரோ என்பவர் எர்னஸ்ட்டோவை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்தித்தார்; பைபிள் படிப்பைப் பற்றி அவரிடம் சொன்னார். முன்னாள் படைவீரரான எர்னஸ்ட்டோ அதற்கு மறுப்புத் தெரிவித்தபோதிலும், கைரோ திரும்பத் திரும்ப அதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்ததால், கடைசியில் பைபிள் படிப்புக்கு அவர் சம்மதம் தெரிவித்தார். கைரோவின் அப்பா அரசாங்கத்திற்கு விரோதமான புரட்சிப் படையின் கமாண்டராகப் பணியாற்றி வந்திருந்ததாகவும், ஒரு சண்டையின்போது இறந்துவிட்டதாகவும் கைரோ சொல்ல எர்னஸ்ட்டோ தெரிந்துகொண்டார். அவர் தொடர்ந்து பைபிளைப் படித்துவந்தார்; முன்னேற்றம் செய்ய ஆரம்பித்தார். ஆனால், தனக்கு பைபிள் படிப்பு நடத்தியவரிடம் ஓர் உண்மையைச் சொல்லாமல் மறைத்தே வைத்திருந்தார். கடைசியில் அதைச் சொல்ல வேண்டிய கட்டம் வந்தது. தான் ஒரு குறிப்பிட்ட படைவீரர் தொகுதிக்கு கேப்டனாக இருந்தபோது, அந்தப் படைவீரர்கள் கைரோவின் அப்பாவை உயிரோடு பிடித்து வந்ததாகவும், தானே அவருடைய படுகொலைக்குக் காரணம் என்பதாகவும் கனத்த நெஞ்சத்துடன் சொன்னார். இதைக் கேட்ட கைரோ அதிர்ந்துபோனார். ஆனால், எர்னஸ்ட்டோ சொல்வதெல்லாம் உண்மையே என்பதை அவர் சொன்ன ‘பகீர்’ தகவல்களை வைத்துப் புரிந்துகொண்டார். அந்தத் தகவல்களை முன்பு அவருடைய அப்பாவின் சக வீரர்கள் அவரிடம் சொல்லியிருந்தார்கள். கைரோ தன்னுடன் வைத்திருந்த நட்பை அத்துடன் முறித்துக்கொள்வார் என்று எர்னஸ்ட்டோ நினைத்தார். அவர் போட்டது தப்புக்கணக்கு! கைரோ தொடர்ந்து அவருக்கு பைபிள் படிப்பு நடத்தினார். அவர்மீது மனக்கசப்பை வளர்த்துக்கொள்ளவே இல்லை. எர்னஸ்ட்டோ நன்றாக முன்னேற்றம் செய்தார்; அவரும் அவருடைய மனைவியும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அவரும் கைரோவும் இன்றுவரை நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

வெனிசுவேலா

வெனிசுவேலாவின் மேற்குப் பகுதியில், மாக்கீகெஸ் என்ற ஊரைச் சேர்ந்த சகோதரர்கள் ஊழியம் செய்துகொண்டிருந்தார்கள்; அது அடிக்கடி ஊழியம் செய்யப்பட்டிராத பிராந்தியம்; கொலம்பியா நாட்டு எல்லைக்கு அருகில் அமைந்திருந்தது. அங்கிருந்த எல்லாருமே காதுகொடுத்துக் கேட்டார்கள்! யூக்பா சமுதாயத்தின் தலைவர் அந்த இடத்தில் முதன்முதலாக நினைவுநாள் அனுசரிப்புக் கூட்டத்தை நடத்த அனுமதி அளித்தார். கூட்டத்திற்கு வருவோர் உட்காருவதற்குத் தேவையான நாற்காலிகளை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும், அந்த ஊரிலிருந்த பள்ளி நிர்வாகமும் அளித்தன. 200-க்கும் அதிகமானோர் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். கூட்டம் முடிந்த பின்பு, ஊர்த் தலைவர் அந்த ஊர் மக்கள் சார்பாக இப்படிச் சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகளான உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் மறுபடியும் இங்கு வருவீர்களென்று நம்புகிறோம். எங்களுக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கிறீர்கள், அதனால் தாராளமாக நீங்கள் வரலாம்!” தற்போது 50-க்கும் அதிகமானோர் வாராவாரம் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்து வருகிறார்கள்.

ஆசியாவும் மத்திய கிழக்கும்

நாடுகள் 47

மக்கள்தொகை 402,66,56,360

பிரஸ்தாபிகள் 6,18,088

பைபிள் படிப்புகள் 5,38,957

தைவான்

ஒரு சகோதரி இவ்வாறு எழுதினார்: “என் ஒன்றுவிட்ட அண்ணனைச் சந்தித்தபோது எனக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது! அதற்குமுன் நான் அவரைப் பார்த்ததே கிடையாது. காரணம், அவரும் அவருடைய குடும்பமும் தொலைதூரப் பகுதியில் வசித்து வருகிறார்கள், அதோடு அந்தப் பகுதிக்குப் பயணம் செய்வதென்பது ரொம்பவே கஷ்டமான காரியம். அதனால்தான், அவர்கள் எங்களைப் பார்க்க ரொம்ப சிரமமெடுத்து வருகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டபோது அப்பாவுக்கும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும் தலைகால் புரியவில்லை. அவர்கள் வசிக்கும் பகுதியில் யெகோவாவின் சாட்சிகளே இல்லை என்பதால், அவர்களுக்குச் சாட்சி கொடுக்க வேண்டுமென நினைத்தேன், நற்செய்தியை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தேன். என் நம்பிக்கை வீண்போகவில்லை; அந்த அண்ணனின் மனைவியும் மகளும் பைபிளில் ஆர்வம் காட்டினார்கள்; என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஆனால், ஒதுக்குப்புறப் பகுதியிலுள்ள வீட்டிற்கு அவர்கள் திரும்பிச் சென்ற பிறகு யெகோவாவின் நோக்கங்களைப் பற்றி நான் எப்படி அவர்களுக்கு இன்னும் அதிகமாகக் கற்றுக்கொடுக்க முடியும்? அவர்களிடம் ஒரு கம்ப்யூட்டரும் இன்டர்நெட் இணைப்பும் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். அதனால், நானும் என் கணவரும் இன்டர்நெட் வெப்கேமராவை வாங்கினோம்; அவர்களுடைய வீட்டிற்கு அவர்கள் திரும்பிச் சென்ற பிறகு, இந்த கேமராவைப் பயன்படுத்தி பைபிள் படிப்பைத் தொடர்ந்தோம். பைபிள் படிப்பை இப்படி நடத்துவது ரொம்பவே பிரமாதமாக இருக்கிறது. அவர்களுடைய சொந்த பைபிளிலிருந்தும் படிப்பு நடத்தப்படுகிற புத்தகத்திலிருந்தும் வாசிக்கும்போது அவர்கள் முகத்தில் ஏற்படுகிற உணர்ச்சிகளை எங்களால் பார்க்க முடிகிறது. அப்படிப் பார்க்கும்போதுதான், அவர்களுக்கு என்ன உதவி தேவை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நவீன தொழில்நுட்பத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; இது மட்டும் இல்லையென்றால், தொலைதூரப் பகுதியிலுள்ள எங்கள் சொந்தக்காரர்களிடம் எங்களால் சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்கவே முடிந்திருக்காது.”

நேபாளம்

16 வயது பூர்ணமாயா நேபாளத்திலுள்ள ஒரு சிறிய ஊரில் வசித்து வருகிறாள். அவளுடைய சித்தப்பா அவளுக்குச் சாட்சி கொடுத்தார்; பைபிள் படிப்பு அவளுக்கு ஆரம்பிக்கப்பட்டது. சபைக்குப் போவதற்காகத் தற்போது இரண்டரை மணிநேரம் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டியிருந்தாலும், வாரம் ஒரு தடவை தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்கிறாள். கூட்டங்களுக்குப் போவது அவளுக்கு அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் அவளுடைய அப்பா, அம்மா இருவருமே தொழுநோயாளிகள், பரம ஏழைகள். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக விடியற்காலையிலேயே கல் உடைக்கச் செல்கிறாள்; அதுபோக, வீட்டில் சமைப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகளையும் செய்கிறாள். அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கும் செல்கிறாள். பஸ் பயணம்செய்து கூட்டத்திற்குப் போகவேண்டுமானால் அவளுக்கு ஒருநாள் கூலி தேவைப்படுகிறது. ‘பக்கத்திலிருக்கும் சர்ச்சுக்குப் போய் வந்தாலென்ன’ என்று அவளுடைய பெற்றோர் சில சமயம் அவளிடம் சொல்கிறார்கள். ஆனால், ராஜ்ய மன்றத்தில்தான் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள முடியுமென்பது பூர்ணமாயாவுக்குத் தெரியும்; ஆகவே அங்கு செல்வதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறாள். தன் பாட்டி பரிசளித்திருந்த கைக்கடிகாரத்தைக்கூட அவள் சமீபத்தில் விற்க வேண்டியிருந்தது. கூட்டங்களில் நன்றாகப் பதில் சொல்கிறாள், அதோடு, பைபிள் விஷயங்களைத் தன் ஊர்க்காரர்களிடமும் சொல்கிறாள். அவளுக்கு அறிமுகமான அனைவருக்கும் அவள் உற்சாக ஊற்றாகத் திகழ்கிறாள்.

மலேசியா

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின்போது, ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். தோட்டங்களின் மத்தியிலுள்ள கிராமங்களில் அவர்கள் குடிவைக்கப்பட்டார்கள். அவற்றில் அநேக கிராமங்கள் இந்நாள்வரை இருக்கின்றன. இந்தக் கிராமங்கள் பலவற்றுக்குப் போவது படு கஷ்டம், நில வரைபடத்தில்கூட இவை காணப்படுவதில்லை. நியமிக்கப்படாத பிராந்தியத்தில் ஒரு சபை ஊழியம் செய்தபோது, ரப்பர் தோட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை எப்படியோ கண்டுபிடித்தார்கள். ஏற்கெனவே சில பத்திரிகைகளைப் பெற்றிருந்த 18, 19 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் இருவர், சகோதரர்கள் செய்துவந்த ஊழியத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். மற்ற கிராமங்களுக்கும் செல்ல சகோதரர்களுக்கு வழிகாட்டுவதாகச் சொன்னார்கள். ஏனென்றால், சகோதரர்களுக்குத் திக்குத் தெரியவில்லை; அவர்களுக்கோ அந்த வழிகளெல்லாம் அத்துப்படி. எனவே, அவர்கள் தங்களுடைய மோட்டார் பைக்குகளில் ஏறி, சேறும் சகதியுமான பாதையில் சகோதரர்களுடைய கார்களுக்கு முன்னால் ஓட்டிச்சென்றார்கள். இவ்வாறு ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்கு 45 நிமிடம்வரை ஓட்டிச்சென்றார்கள். யெகோவாவின் சாட்சிகள் ஒருபோதும் சென்றிராத ரப்பர் தோட்டங்களுக்கு அவர்கள் வழிகாட்டினார்கள். கிராமத்தாரிடம் சகோதரர்கள் பிரசங்கித்தபோது, பத்திரிகைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றைக் கட்டாயம் வாசிக்கும்படி அவர்களை இந்த இரண்டு இளைஞரும் ஊக்கப்படுத்தினார்கள். இதுபோல் மூன்று கிராமங்களுக்கு அவர்கள் வழிகாட்டினார்கள். அந்த இளைஞர்கள் சுயநலமில்லாமல் உதவியதால்தான் சகோதரர்களால் பிரமாண்டமான அளவில் சாட்சி கொடுக்க முடிந்தது; இல்லையென்றால் அந்தக் கிராமங்களிலிருந்த மக்கள் நற்செய்தியைக் கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள். அந்த வாரக்கடைசியில் மட்டுமே அச்சபையைச் சேர்ந்த 50 பிரஸ்தாபிகள் 5,000-க்கும் அதிகமான பத்திரிகைகளை விநியோகித்தார்கள்.

ஐரோப்பா

நாடுகள் 47

மக்கள்தொகை 73,37,75,190

பிரஸ்தாபிகள் 15,42,507

பைபிள் படிப்புகள் 7,89,219

ரஷ்யா

டாட்யானா என்ற சகோதரி, மூளைப் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறாள். சில வருடங்களுக்குமுன் அவளுக்கு மிகப் பெரிய அறுவை சிகிச்சை நடந்தது; அதன்பின், சாகக் கிடக்கும் நோயாளிகள் வைக்கப்பட்ட வார்டில் அவள் கிடத்தப்பட்டிருந்தாள். அந்த வார்டிலுள்ள நோயாளிகள் சாவதற்குமுன் தங்கள் பாவங்களை அறிக்கை செய்வதற்காக ஆர்த்தடாக்ஸ் பாதிரி ஒருவர் விஜயம் செய்தார். வார்டிலிருந்த ஒரு பெண் அந்தப் பாதிரிக்கு வெகு சிரமத்தோடு பணம் எடுத்துக் கொடுத்ததை டாட்யானா கவனித்தாள். பாதிரி போன பிறகு அவள் அந்தப் பெண்ணிடம், ‘இப்போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறதா?’ என்று கேட்டாள். அதற்கு அந்தப் பெண், “இல்லை. அவர் சொன்னது ஒன்றுமே புரியவில்லை” என்று விரக்தியுடன் சொன்னாள். அப்போது டாட்யானா உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி அவளிடம் பேசினாள். அதற்கு அந்தப் பெண், “இப்போதுதான் எனக்கு ஆறுதலாக இருக்கிறது!” என்று சொல்லி நன்றி தெரிவித்தாள். நடந்ததைக் கேள்விப்பட்ட அந்த ஆஸ்பத்திரியின் மேனேஜர் அந்தப் பாதிரியை இனி வர வேண்டாமெனச் சொல்லிவிட்டார். அதுமட்டுமல்ல, டாட்யானா மற்ற நோயாளிகளிடம் பேசுவதற்காக அவளை வேறொரு வார்டுக்கு மாற்றினார். அதோடு, யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டம் நடைபெறுகிற இடத்தின் விலாசத்தை வாங்கிக்கொண்டார். டாட்யானா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதற்குமுன், தான் தொடர்ந்து பிரசங்கிப்பதற்குப் பலம் தருமாறு கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்திருந்தாள். தன்னுடைய ஜெபத்திற்கு யெகோவா செவிசாய்த்தார் என்பதை அவள் ஆணித்தரமாக நம்புகிறாள். அந்த மாதம் 100 மணிநேரத்திற்கும் அதிகமாக அவள் அறிக்கை செய்தாள்! அதன்பின் அவளுடைய உடல்நிலை மோசமாகிவிட்டது, அதனால் வீட்டைவிட்டு எங்கும் போக முடியாத நிலையில் இருக்கிறாள். அவள் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய்வந்தபோது யாரிடமெல்லாம் சாட்சி கொடுத்திருந்தாளோ அவர்களெல்லாம் இப்போது வீட்டிற்கு வந்து அவளைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.

ஜார்ஜியா

யெகோவாவின் சாட்சிகளே வசிக்காத ஒரு பகுதியில் ஊழியம் செய்வதற்காக இரண்டு விசேஷ பயனியர்கள் தற்காலிகமாய் நியமிக்கப்பட்டார்கள். தங்களுடைய புதிய பிராந்தியம் எப்படி இருக்கிறதென்று பார்த்து வரச்சென்ற அவர்கள், திரும்பி வர வழிதெரியாமல் திண்டாட ஆரம்பித்தார்கள். வீட்டிற்குப் போகிற பாதையைத் தேடி முழங்கால் அளவு பெய்திருந்த பனியில் வெகு சிரமப்பட்டு நடந்தார்கள்; குளிரில் நடுநடுங்கிச் சோர்ந்துபோனார்கள். கடைசியில், யாரோ ஒருவருடைய கால்தடங்களைக் கண்டார்கள்; அதைப் பின்தொடர்ந்து சென்றபோது ஒரு வீட்டை அடைந்தார்கள்; நுழைவாயிலுக்கு வெளியே நின்று உரக்கக் கூப்பிட்டார்கள். அப்போது காட்டூனா என்ற ஓர் இளம்பெண் வெளியே வந்து, அந்தச் சகோதரிகளை உள்ளே வரும்படி சொன்னாள். அங்கே கதகதப்பாக இருந்தது; சகோதரிகளுடைய உள்ளம் நன்றிப்பெருக்கால் நிறைந்தது. தங்களை யெகோவாவின் சாட்சிகளென்று அறிமுகப்படுத்திக்கொண்டு, தாங்கள் தொலைந்துபோன கதையைச் சொன்னார்கள். அதைக் கேட்ட காட்டூனா, அந்தச் சகோதரிகள் திக்குத் தெரியாமல் பனியில் அலைந்துகொண்டிருந்த வேளையில், தானும் தன் குடும்பத்தாரும் சத்தியம் எதுவென்று காட்டும்படி கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டிருந்ததாகச் சொன்னாள். சற்று நேரத்திற்கெல்லாம் அந்தச் சகோதரிகள் அவள் வீட்டருகே வந்துவிட்டார்கள்! தாங்கள் செய்த ஜெபத்திற்குக் கிடைத்த பதில்தான் அது என காட்டூனா நம்பினாள். இன்று, இந்தக் குடும்பத்தில் நான்கு பேர் பைபிளைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேர், அதாவது காட்டூனாவும் அவளுடைய மாமியாரும், ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபிகளாகிவிட்டார்கள்.

பிரிட்டன்

பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க நேரடி அணுகுமுறையை அதுவரை பயன்படுத்தாமலிருந்த ரெஸ்டன், அதற்கு முயற்சியெடுக்கத் தீர்மானித்தார். இவ்விஷயத்தில் பலன் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு இருக்க உதவுமாறு யெகோவாவிடம் சுருக்கமாக ஜெபித்துவிட்டு, முதல் வீட்டின் கதவைத் தட்டினார். கதவைத் திறந்த அன்டி என்பவரிடம் பைபிள் படிப்பு பற்றி நேரடியாகச் சொன்னார், அவரும் உடனடியாகச் சம்மதித்தார். அதனால், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது புத்தகத்தை அன்றைக்கே கொண்டுபோய் அவருக்குக் கொடுத்துவிட வேண்டுமென ரெஸ்டன் தீர்மானமாய் இருந்தார். புத்தகத்தை அன்டியிடம் கொடுப்பதற்காக பஸ்ஸில் பயணித்தபோதுதான், அவர் அந்த பஸ் டிரைவரைக் கவனித்தார்; அவருக்கு காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை ரெஸ்டன் தவறாமல் கொடுத்து வந்திருந்தார். அன்று காலை அன்டி பைபிள் படிப்புக்குச் சம்மதம் தெரிவித்ததால் ஊக்கம் பெற்றிருந்த ரெஸ்டன், அந்த ஓட்டுநரிடம் பைபிள் படிப்பை இலவசமாக நடத்துவது பற்றிச் சொல்லத் தீர்மானித்தார்; கடைசி நிறுத்தம் வரட்டுமென்று காத்திருந்தார்.

இதற்கிடையில், அந்த பஸ்ஸில் இருந்த வயதான ஒரு பெண்மணி, ரெஸ்டன் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதைக் கண்டுகொண்டு, தனது சிநேகிதி நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், அவளைச் சந்தித்து அவளுக்காக ஜெபிக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அந்தச் சிநேகிதியைச் சந்தித்து பைபிளிலிருந்து ஆறுதலான விஷயத்தைச் சொல்ல ரெஸ்டன் சந்தோஷமாக ஒத்துக்கொண்டார். அப்போது, தன்னிடம் இருந்த பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் ஒரே ஒரு பிரதியை வைத்து, பைபிள் படிப்பு அந்தச் சிநேகிதிக்கு எப்படி உதவுமென்று விளக்கினார். தனக்கும் அதுபோல் பைபிள் படிப்பு நடத்துமாறு அந்தப் பெண்மணி கேட்டுக்கொண்டார். மறுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஓர் இளைஞன் இவர்களது உரையாடலைக் கேட்டுக்கொண்டே வந்தான். புத்தகத்திலுள்ள படங்களை அவன் பார்க்க விரும்பியதால் அவனிடம் உடனே அந்தப் புத்தகத்தை ரெஸ்டன் கொடுத்தார். கடைசியாக பஸ் நின்றதும் அந்த ஓட்டுநரிடம் பைபிள் படிப்பு பற்றி ரெஸ்டன் சொன்னார். என்ன ஆச்சரியம்! அந்த ஓட்டுநர் ஆர்வத்தோடு அதற்குச் சம்மதம் தெரிவித்தார்; பைபிளைப் பற்றித் தனக்கு ஏகப்பட்ட கேள்விகள் இருப்பதாகவும் சொன்னார். உடனடியாக, பக்கத்திலிருந்த ஒரு சகோதரரின் வீட்டிற்குச் சென்று பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கிக்கொண்டு கடைசியில் அன்று சாயங்காலம்தான் அன்டியின் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தார். அன்டி ஆவலோடு அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். அவருக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது; கற்றுக்கொண்ட விஷயங்களைச் சீக்கிரத்திலேயே அவர் கடைப்பிடிக்கத் தொடங்கினார். அன்டியும் அந்த பஸ் டிரைவரும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்கள். இப்போது ரெஸ்டன் 15 பைபிள் படிப்புகளை நடத்துகிறார்; இவை எல்லாமே நேரடி அணுகுமுறையைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்பட்டவை. எனவே, இப்போதெல்லாம் ஊழியத்திற்குப் போகும்போது தன்னிடம் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் பிரதிகள் போதியளவு இருக்கின்றனவா என்பதை ரெஸ்டன் உறுதிப்படுத்திக்கொள்கிறார்.

ஃபிராங்ஸ்வா, மோனிக்கா தம்பதியர் தங்கள் இரண்டு பிள்ளைகளோடு காலையில் வெளி ஊழியத்திற்குச் சென்றுவிட்டு காரை நிறுத்தியிருந்த இடத்திற்குத் திரும்பினார்கள். அவர்களுடைய இரண்டரை வயது மகளான ஷாயேவிடம் ஒரே ஒரு துண்டுப்பிரதி மீந்திருந்தது. அதை யாரிடமாவது கொடுத்த பிறகே தான் காரில் ஏறப்போவதாக அடம்பிடித்தாள். அப்பொழுது, அங்கே ஒரு கார் வேகத்தைக் குறைத்தபடி அவர்கள் அருகில் வந்துநின்றது, அதற்குள்ளிருந்து இரண்டு பெண்கள் வெளியே வந்தார்கள். ஷாயே துள்ளிக்குதித்தபடி தன்னிடம் மீந்திருந்த சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியை அவர்களில் ஒருவரிடம் கொடுத்தாள். அதிலுள்ள விஷயத்தை மோனிக்கா அவர்களிடம் விளக்கிச் சொன்னார். துண்டுப்பிரதியைப் பெற்ற பெண்ணின் பெயர் சீயரா. அவள் இந்த விஷயங்களைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள விரும்புவதாகச் சொல்லி, பருவ வயதிலுள்ள தனது இரண்டு சகோதரிகளுக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி அழைத்தார். பைபிள் படிப்பு நடத்தப்பட்ட முதல் நாளிலேயே, தனது இரண்டு மகன்களுக்கும் படிப்பை நடத்த முடியுமா என்று கேட்டார். பிறகு, சீயராவின் அக்கா மகனும் அந்தப் படிப்பில் கலந்துகொண்டான். இந்த எல்லாப் படிப்புகளிலுமே சீயரா கலந்துகொண்டு நிறையக் கேள்விகளைக் கேட்டார். கடைசியில், தனக்கென்று பைபிள் படிப்பு நடத்தப்படுவதற்கும் ஒத்துக்கொண்டார். பின்னர், அவருடைய கணவரும் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். அடுத்தபடியாக, சீயராவின் அம்மாவும், அவருக்குப்பின் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அவர்களது நண்பர்களும் தங்களுக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டார்கள். தன்னிடமிருந்த கடைசி துண்டுப்பிரதியைக் கொடுக்க ஷாயே தீர்மானமாக இருந்ததற்குக் கிடைத்த பலன்தான் இந்த 11 பைபிள் படிப்புகள்! இவர்களில் நான்கு பேர் சபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் வருகிறார்கள்.

இத்தாலி

ஜெனிஃபர், மிலான் நகரிலுள்ள ரஷ்ய மொழிச் சபையில் இருக்கிறார், வலின்ட்யீனா என்ற உக்ரைனியப் பெண்ணிடம் பலமுறை போனில் பேசியிருந்தார், ஆனால் அவரை நேரில் சந்தித்ததே இல்லை. ஒருநாள் சுரங்க ரயில் நிலையம் ஒன்றில் சந்திப்பதாக அவர்கள் இருவரும் பேசி வைத்துக்கொண்டார்கள். ஜெனிஃபரிடம் வலின்ட்யீனா, ‘நான் சிவப்புநிற கோட் அணிந்திருப்பேன்’ என்று அடையாளம் சொல்லியிருந்தாள். பேசி வைத்தபடியே ஜெனிஃபர் ரயில் நிலையத்திற்குச் சென்றார், சிவப்புநிற கோட் அணிந்திருந்த ஒரு பெண்ணைப் பார்த்தார்; அவள் யாருக்காகவோ காத்திருப்பதுபோல் தெரிந்தது. அதனால் ஜெனிஃபர் அவளை அணுகி, “ஹலோ! நீங்கள்தானே வலின்ட்யீனா?” என்று கேட்டார். அதற்கு அவள், “ஆமாம்” என்றாள். அப்போது ஜெனிஃபர், “நான்தான் ஜெனிஃபர்” என்றார். அதற்கு அந்தப் பெண் ஒன்றுமே சொல்லவில்லை. சற்றுக் குழப்பமடைந்த ஜெனிஃபர், “எனக்காகத்தானே நீங்கள் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அவள், “இல்லையே” என்றாள். அவளும் ஓர் உக்ரைனியப் பெண்தான், அவள் பெயரும் வலின்ட்யீனாதான், அவளும் சிவப்புநிற கோட்தான் அணிந்திருந்தாள், ஆனால் அவள் வேறு யாருக்காகவோ காத்துக்கொண்டிருந்தாள்! ஜெனிஃபர் குபுக்கென்று சிரித்துவிட்டு, விஷயத்தைச் சொன்னாள். தான் சந்திக்கவிருந்த வலின்ட்யீனாவிடம் பகிர்ந்துகொள்ள நினைத்த ஒரு பைபிள் விஷயத்தைச் சொல்லட்டுமா என்று அவளிடம் கேட்டார். வலின்ட்யீனா சரியென்று கூறிவிட்டு, ஜெனிஃபர் சொன்ன விஷயத்தை ஆர்வமாகக் கேட்டாள். பின்பு, சங்கீதம் 91-ஐத் தன் கைப்பட எழுதியிருந்த ஒரு தாளைக் காட்டினாள், பைபிள் என்றாலே தனக்குக் கொள்ளைப் பிரியம் எனச் சொன்னாள். ஜெனிஃபர் இந்த வலின்ட்யீனாவுடன் பைபிள் படிப்பை ஆரம்பித்தார். ஆனால், அந்த வலின்ட்யீனா என்ன ஆனாள்? அவளை ஜெனிஃபர் பிற்பாடு சந்தித்தார், அவளும் ஆவலோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள்.

ருமேனியா

ஒரு சகோதரர் தனக்குத் தெரிந்த ஒருவரைச் சந்தித்து, அவரோடும் அவருடைய மனைவியோடும் பைபிள் விஷயங்களைப் பேசினார். கணவன் மனைவிக்கு இடையிலான உறவைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அவர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள்; ஆனால் பைபிள் கலந்தாலோசிப்புக்கென்று அவர்களால் நேரம் ஒதுக்க முடியவில்லை. அந்தத் தம்பதியர் உடல் ஆரோக்கியத்தில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்பவர்கள்; அந்தக் கணவர் தினந்தோறும் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ‘ஜாகிங்’ செய்வார். அவரோடு பைபிள் கலந்தாலோசிப்பைத் தொடருவதற்குச் சகோதரர் பலமுறை முயற்சி செய்து பார்த்தார்; கடைசியில், “நானும் உங்களோடு ‘ஜாகிங்’ செய்ய வரட்டுமா” எனக் கேட்டார். “ஓ, தாராளமாக!” என்றார் அந்தக் கணவர். ஆனாலும், அந்தச் சகோதரருக்கு ‘ஜாகிங்’ செய்து முன்பின் பழக்கம் இருக்கவில்லை, அதோடு பைபிள் விஷயங்களைப் பேசிக்கொண்டே ‘ஜாகிங்’ செய்தபோது அவருக்கு மூச்சு வாங்கியது! “ஜாகிங் உடையைப் போட்டுக்கொண்டு, கையில் பைபிள் எதுவும் இல்லாமல், வசனங்களை ஞாபகத்திலிருந்தே சொல்லிச் சொல்லி ஒருவழியாக என்னால் சாட்சி கொடுக்க முடிந்தது” என்றார் அந்தச் சகோதரர். இப்படியே பல நாட்கள் சென்ற பிறகு, அந்தத் தம்பதியருக்கு பைபிள் விஷயங்களில் ஆர்வம் அதிகரித்தது; அதன்பின், முறைப்படி அவர்களுக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இப்போது அந்தக் கணவர் ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபியாகிவிட்டார். வெளி ஊழியத்தில் படு ஆர்வமாக ஈடுபடுகிறார், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார். அவருடைய மகனும் மகளும்கூட அந்தப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள்.

ஓசியானியா

நாடுகள் 30

மக்கள்தொகை 3,75,45,115

பிரஸ்தாபிகள் 97,329

பைபிள் படிப்புகள் 55,266

ஆஸ்திரேலியா

ஒரு பயனியர் சகோதரர் எழுதிய அனுபவம் இது: “புதிய பத்திரிகைகளைத் தவறாமல் கொண்டுவந்து தரும்படி பாம் என்ற மருத்துவர் என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் படுபிஸி என்பதால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான் அவரை வீட்டில் பார்க்க முடிந்தது. ஆகவே, பத்திரிகைகளையும் சிநேகபான்மையான ஒரு குறிப்பையும் கதவின் கீழ் வைத்துவிட்டு வருவது என் வழக்கமாய் இருந்தது. ஒருமுறை ஏழு மாதங்களுக்குப் பிறகும் அவரை நேரில் சந்திக்க முடியாததால், அந்த மாதம் பத்திரிகைகளோடுகூட மாவட்ட மாநாட்டிற்கான அழைப்பிதழையும் கதவின் கீழ் வைத்துவிட்டு வந்தேன். என்னைத் தொடர்புகொள்ளுமாறு தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டிருந்தேன், ஆனால் அவர் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. மாநாடு முடிந்த பிறகு நவம்பர் மாதம் மறுபடியும் சென்றபோது பாம் எழுதியிருந்த ஒரு குறிப்பு கதவில் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.

“அதில், ‘உங்கள் பத்திரிகைகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, அவற்றை வாசித்துவிட்டு என் சக பணியாளர்களுக்குக் கொடுக்கிறேன். அவர்கள் அவற்றை வாசித்துவிட்டு ஆஸ்பத்திரியில் அவர்களுடைய நோயாளிகளுக்குக் கொடுக்கிறார்கள். நான் கூட்டத்திற்கு வந்திருந்தேன், பிரமாதமாக இருந்தது. மாநாட்டு அழைப்பிதழைப் பார்த்ததால் மூன்று நாள் விடுப்பு எடுத்தேன். அந்த அழைப்பிதழை நகலெடுத்துச் சக பணியாளர்களுக்குரிய அலமாரியின் சிறு அறைகளில் வைத்திருந்தேன்; அதோடு, “இந்தக் கூட்டத்திற்கு வர உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளுங்கள்” என்ற ஒரு குறிப்பையும் எழுதி வைத்திருந்தேன். அந்த வாரக் கடைசிக்குள், சக பணியாளர்கள் 16 பேர் மாநாட்டிற்காக மூன்று நாள் விடுப்பு எடுத்தார்கள்’ என்று எழுதியிருந்தார். ஆகமொத்தம் 17 பேர்—அதுவும் எல்லாருமே மருத்துவர்கள்—அந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொண்டார்கள்; கதவின் கீழ் வைக்கப்பட்ட ஒரேவொரு அழைப்பிதழால் கிடைத்த பலன் இது! பாம் இப்போது, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து நடத்தப்படுகிற பைபிள் படிப்பில் தவறாமல் கலந்துகொள்கிறார். மாநாட்டிற்கு வந்திருந்த தன் சக பணியாளர்களை ஒன்றுகூட்டி பைபிள் விஷயங்களைக் கலந்துபேசி வருகிறார்.”

மற்றொரு சகோதரர் சொன்ன அனுபவம் இது: “யெகோவாவின் சாட்சிகள் தங்கள் வீட்டுக்கு வரக்கூடாது என ஒரு வீட்டுக்காரர்கள் சொல்லியிருந்தார்கள்; ஒருநாள் அந்த வீட்டைக் கடந்து போய்க்கொண்டிருந்தபோது அந்த வீட்டு வராந்தாவிலிருந்த ஒரு தம்பதியர் கவலையோடு அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்களுக்கு ஏதோ உதவி தேவை என்பது நன்றாகவே தெரிந்ததால், அவர்களை அதே நிலையில் விட்டுச்செல்ல எனக்கு மனம் வரவில்லை; அதனால், அவர்களிடம் போய் ஏதாவது உதவி தேவையா என்று விசாரித்தேன். அவர்கள் இருவரும் என்னை வீட்டுக்குள் அழைத்து தங்கள் மன பாரத்தையெல்லாம் என்னிடம் இறக்கி வைத்தார்கள். தங்களுடைய மகளைப் பார்த்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டதாகக் கூறினார்கள். அந்த மனைவிக்குப் புற்றுநோய் அறுவை சிகிச்சை நடைபெறவிருந்தது, அதனால் பிழைப்போமோ மாட்டோமோ என்ற கவலையில் இருந்தாள். மகளைப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற வேதனை ஒரு பக்கம் அவளை வாட்டியது. சில நாட்களுக்கு முன்புதான் கரிஸ்மாட்டிக் சர்ச் பாதிரியைத் தங்களுக்கு உதவும்படி கேட்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அவர் எந்த உதவியும் செய்யாமல் அலட்சியமாக இருந்துவிட்டார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்கு யெகோவா சமீபமாய் இருக்கிறார் என்று சொல்லும் வேதவசனங்களை நான் எடுத்துக்காட்டி அவர்களுக்கு ஆறுதல் சொன்னேன்.

“சுமார் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, யாரோ கதவைத் தட்டினார்கள். சர்ச் பாதிரிதான் வந்துவிட்டாரென முதலில் நான் நினைத்தேன். ஆனால், நன்கு உடை உடுத்திய ஓர் இளம் பெண் அங்கே நின்றுகொண்டிருந்தாள். நெடுநாள் காணாமல்போயிருந்த மகள் அவள்தான்! உணர்ச்சிகள் பொங்கிய சமயமாக அது இருந்ததால், பிறகு வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பப் பார்த்தேன். அவளோ தன் பெற்றோரிடம் எதையோ சொல்லப்போவதாகவும், நானும் அதைக் கேட்டால் நல்லதென்றும் சொன்னாள்; எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மதுபானத்திற்கும் போதை மருந்துகளுக்கும் அடிமையாகித் தன் வாழ்க்கையைச் சீரழித்து வந்த சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்ததாகவும், அதனால் தன் பெற்றோரைத் தேடி வீட்டிற்கு வரத் தூண்டப்பட்டதாகவும் அவள் விவரித்தாள். சமீபத்தில், ஞானஸ்நானமும் பெற்றிருந்தாள்.”

சில நாட்கள் கழித்து அவர்கள் வீட்டிற்கு அந்தப் பாதிரி வந்தார்; அப்போது, தங்களுடைய மகள் யெகோவாவின் சாட்சியாக ஆனபின் அவளாகவே வீடுதிரும்பிவிட்டதாக அவரிடம் சொன்னார்கள்; மறுபேச்சின்றி அவர் அங்கிருந்து நடையைக் கட்டினார்; அப்போது, அந்தக் கணவர் அவரைக் கூப்பிட்டு, மேஜை மீதிருந்த ஒரு கடிதத்தைக் கையோடு எடுத்துச்செல்லுமாறு சொன்னார்; சர்ச்சிலிருந்து விலகிக்கொள்வதாக அவர்கள் எழுதியிருந்த கடிதம் அது.

பாப்புவா-நியூ கினி

அடிக்கடி ஊழியம் செய்யப்பட்டிராத பிராந்தியத்தில் சாட்சி கொடுப்பதற்காகச் சகோதர சகோதரிகள் 23 பேர் சேர்ந்தாற்போல் சென்றார்கள். மலைகளில் ஏறி இறங்கி, ஆறுகளைக் கடந்து நடந்தே போக வேண்டியிருந்ததால் அவர்களுடைய பயணம் கஷ்டமாக இருந்தது. ஒரு கிராமத்தில், ஆங்கிலிக்கன் ஊழியர் ஒருவரை ஒரு சகோதரி சந்தித்தார்; அவருக்கு தானியேல் 2:44-க்கான விளக்கத்தை அளித்தார்; அதைக் கேட்டு அந்த ஊழியர் மிகவும் சந்தோஷப்பட்டார். அப்போது அவர், “காணாமற்போன ஆடுகளைப் போல் நாங்கள் இருக்கிறோம்” என்றார். பத்திரிகைகளையும் சிற்றேடுகளையும் பெற்றுக்கொண்டார், ஒரு பைபிள் வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

மூன்று நாட்களுக்குப் பின் இன்னொரு கிராமத்தில், இளம்பெண்கள் இருவரிடம் இரண்டு சகோதரிகள் நற்செய்தியை அறிவித்தார்கள்; அந்தப் பெண்கள் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டார்கள். அன்று மதியம் அவர்களுடைய அப்பா தோட்டத்திலிருந்து வீடுதிரும்பியபோது, அவரிடம் தாங்கள் பைபிளிலிருந்து தெரிந்துகொண்ட விஷயத்தைச் சொன்னார்கள். அந்த அருமையான செய்தியை அவர் நேரடியாகவே கேட்க விரும்புவதாகச் சொன்னார். சகோதர சகோதரிகள் எல்லாரையும் பார்ப்பதற்காக அவர்கள் தங்கியிருந்த குடிசைக்குச் செல்ல முடிவுசெய்தார். அவர் அந்தக் கிராமத்தின் தலைவர் என்பதால் அவர்களுக்காகச் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்து அதை அனுப்பியும் வைத்தார். அன்று சாயங்காலம் விளக்கைப் பிடித்துக்கொண்டு கிராமத்து ஆட்களோடு அங்கு சென்றார். அவரும் அவரோடு சென்றவர்களும் சகோதர சகோதரிகளைப் பார்த்து, “நீங்கள் இங்கு வந்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது, இதுவரை யெகோவாவின் சாட்சிகள் யாரும் எங்கள் கிராமத்திற்கு வந்ததில்லை” என்றார்கள். சகோதரர்கள் மத்தேயு 24:14-ஐ வாசித்துக் காட்டி தாங்கள் அங்கு வந்ததற்கான காரணத்தை விளக்கினார்கள். கடவுளுடைய அரசாங்கத்தில் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்குமென்று சொல்லிப் பிரசுரங்களையும் கொடுத்தார்கள்.

அவர்களுடைய பயணத்தின் ஐந்தாம் நாளன்று, பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்றிரவு அவர்கள் அங்கே தங்குவார்கள் என நினைத்த அந்தக் கிராமத்தார் அவர்களுக்கென்று ஒரு பந்தல் போட ஆரம்பித்தார்கள். ஆனால், எல்லாரிடமும் பேசிவிட்டு அன்றைக்கே திரும்பிவிடப்போவதாகச் சகோதரர்கள் சொன்னார்கள். பின்பு, அந்தக் கிராமவாசிகள் எல்லாருக்கும் அருமையாகச் சாட்சி கொடுத்தார்கள். கிராமத் தலைவரிடமும் சாட்சி கொடுத்தார்கள்; அவர், பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டு அதற்குக் கைமாறாகத் தேங்காய், பப்பாளி, வாழைப்பழம் ஆகியவற்றை அள்ளிக்கொடுத்தார்.

பிஜி

நாட்டுப்புறப் பகுதி ஒன்றில், பயனியர்கள் நடந்தே போய் ஊழியம் செய்கிறார்கள்; அதுவும், தூசி அல்லது சேறுசகதி நிறைந்த பாதைகளில் செல்கிறார்கள். நாகம்மாவும் அவருடைய மகள் ரேஷ்மாவும் ஒழுங்கான பயனியர்கள்; கண்தெரியாத ஒரு சகோதரியான உஷ்லாவைத் தங்களோடு ஒரு மாதம் பயனியர் செய்யும்படி அவர்கள் அழைத்தார்கள். அந்தச் சகோதரியைக் கூட்டிச் செல்ல வேண்டுமென்றால், அவருக்கு இந்தப் பக்கம் ஒருவரும் அந்தப் பக்கம் ஒருவருமாக, பல கிலோமீட்டர் தூரம்வரை ஒவ்வொரு நாளும் நடத்திச் செல்ல வேண்டும். ஓர் உஷ்ணமான நாளன்று இந்த மூன்று சகோதரிகளும் சகதியான பாதை வழியே சேற்றுநீரில் கால் படாதபடி பார்த்துப் பார்த்து நடந்து சென்றதை ஒரு குடும்பத்தார் தங்கள் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்தவாறே கவனித்தார்கள். அப்போது, கண்தெரியாத அந்தச் சகோதரி தேங்கிக்கிடந்த தண்ணீரில் சதக்கென்று கால் வைத்தார்; அவருடைய காலெல்லாம் சேறாகிவிட்டது. அதனால் அந்தச் சகோதரிகள் அவருடைய காலைத் துடைத்துச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குடும்பத் தலைவர் அந்தச் சகோதரிகளை உள்ளே அழைத்தார். “நீங்கள் மூன்று பேரும் தினந்தோறும் இப்படி நடந்து போகிறீர்களே, எங்குதான் போகிறீர்கள்?” என்று கேட்டார். தாங்கள் ஒரு பைபிள் படிப்பு நடத்துவதற்குப் போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அதற்கு அவர், ‘நீங்கள் இவ்வளவு தூரம் நடந்துபோய் மற்றவர்களுக்குச் சொல்லித் தருகிறீர்கள் என்றால், அது ரொம்ப முக்கியமான செய்தியாகத்தான் இருக்க வேண்டும்; அதை எனக்கும் சொல்லிக்கொடுங்களேன்!’ என்றார். இந்தக் குடும்பத்தாருக்கு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

குவாம்

லீஸா என்பவள் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஓர் இளம்பெண்; டினியன் தீவில் வீட்டோடு வேலைபார்க்கும் ஒரு பெண். அந்த வீட்டிற்கு யெகோவாவின் சாட்சிகள் வந்தபோதெல்லாம் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைக் கேட்டு வாங்கிக்கொண்டாள். அந்தப் பத்திரிகை நன்றாக இருந்ததென்று அவள் சொன்னபோதிலும் அவற்றை அடுப்பு எரிப்பதற்காகவே அவள் பயன்படுத்தி வந்தாள்.

2007-ஆம் வருட ஆரம்பத்தில் லீஸா வேலையிலிருந்து நீக்கப்பட்டாள். தங்குவதற்குக்கூட இடமில்லாததால் கடற்கரையில் படுத்துத் தூங்கினாள். ஒரு நாள், அத்தீவிலிருந்த ராஜ்ய மன்றத்தின் பக்கமாக அவள் நடந்து போய்க்கொண்டிருந்தாள்; அப்போது, இரண்டு சகோதரிகள் மன்றத்திற்கு வெளியே நிழலில் உட்கார்ந்திருந்தார்கள். மாம்பழம் சாப்பிட லீஸாவை அழைத்தார்கள், அவளும் அங்கே சென்று அவர்களோடு சேர்ந்து சகஜமாகப் பேச ஆரம்பித்தாள். மறுநாள் ராஜ்ய மன்றத்தை அவள் கடந்து சென்றபோது அந்தச் சகோதரிகள் மறுபடியும் அவளோடு பேசினார்கள்; அப்போது அவள், “உங்கள் சர்ச்சுக்கு நானும் ஒரு நாள் வருவேன் என நினைக்கிறேன்” என்றாள். முதலிலேயே அவளை அழைக்காமல் போய்விட்டோமே என்று அந்தச் சகோதரிகள் கொஞ்சம் சங்கடப்பட்டபோதிலும், அன்று மாலை நடக்கவிருந்த கூட்டத்திற்கு வரும்படி அவளை அழைத்தார்கள். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அவள், தனக்கு எப்படியாவது ஒரு வேலையை அவர்கள் வாங்கித் தருவார்கள் என்று நினைத்தாள்.

கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, சகோதர சகோதரிகளின் உண்மை மனதையும் மக்கள்மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறையையும் கண்டு லீஸா அசந்துபோனாள். அவளுடைய கண்கள் குளமாயின. சுயநலத்தோடு அந்தக் கூட்டத்திற்குச் சென்றதை நினைத்து வருத்தப்பட்டாள். அதுமட்டுமல்ல, தனக்குக் கொடுக்கப்பட்ட எல்லாப் பத்திரிகைகளையும் அடுப்பெரிக்கப் பயன்படுத்திவிட்டோமே என நினைத்தும் வருத்தப்பட்டாள். சகோதர சகோதரிகள் காட்டிய அன்பு அவள் இதயத்தைத் தொட்டதால், அதுமுதல் ஒரு கூட்டம் தவறாமல் எல்லாக் கூட்டங்களுக்கும் போக ஆரம்பித்தாள். யெகோவாவின் சாட்சிகளோடு தவறாமல் பைபிளையும் படிக்க ஆரம்பித்தாள். பிற்பாடு அவளுக்கு வேலை கிடைத்தது, ஒரு பிரஸ்தாபியாக ஆனாள், பிப்ரவரி 2008-ல் ஞானஸ்நானம் பெற்றாள்.

[பக்கம் 45-ன் படம்]

மாடாலேனா

[பக்கம் 48-ன் படம்]

மோட்டார் படகில் “காவற்கோபுர” படிப்பு

[பக்கம் 50-ன் படம்]

வழிப்போக்கர்களிடம் நற்செய்தியை அறிவிக்கப் பொறுமையோடு காத்திருக்கும் சகோதரி பார்க்கர்

[பக்கம் 53-ன் படம்]

குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பூர்ணமாயா கல் உடைக்கிறாள்

[பக்கம் 54-ன் படம்]

ரப்பர் தோட்டத்தில் ஓர் இந்தியப் பெண்ணிடம் சாட்சி கொடுத்தல்

[பக்கம் 57-ன் படம்]

அன்டியோடு ரெஸ்டன் பைபிள் படிக்கிறார்

[பக்கம் 58-ன் படம்]

ஷாயே

[பக்கம் 63-ன் படம்]

நாகம்மாவும் ரேஷ்மாவும் உஷ்லாவுக்கு உதவுகிறார்கள்