உகாண்டா
உகாண்டா
ஆப்பிரிக்காவின் பல நாடுகள் வழியாக வளைந்து நெளிந்து செல்லும் மாபெரும் நைல் நதி கடைசியில் மத்தியத்தரைக் கடலில் போய் சங்கமமாகிறது; இந்த நதியின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க ஆய்வுப் பயணிகள் நூற்றுக்கணக்கான வருடங்கள் தேடி அலைந்தார்கள். கடைசியில், விக்டோரியா ஏரியும், அதனைச் சுற்றியுள்ள மலைகளுமே நைல் நதி ஆண்டு முழுவதும் பெருக்கெடுத்து ஓடுவதற்கு வழிசெய்கின்றன என்ற முடிவுக்கு அந்த ஆய்வுப் பயணிகளில் சிலர் வந்தார்கள். சமீப பத்தாண்டு காலங்களில், அதைவிடவும் அதிக மதிப்புமிக்க தண்ணீரின் பிறப்பிடத்தை அங்கு குடியிருக்கும் அநேகர் கண்டுபிடித்தபோது குதூகலப்பட்டார்கள்; அந்தத் தண்ணீர், ‘வாழ்வளிக்கும் தண்ணீர்,’ அதாவது, “முடிவில்லா வாழ்வை” அளிக்கும் தண்ணீராகும். (யோவா. 4:10-14) “நீதியின்மீது பசிதாகமுள்ள” உகாண்டா மக்களின் சரித்திரத்தை இப்போது நாம் வாசிக்கப் போகிறோம்.—மத். 5:6.
“ஆப்பிரிக்காவின் நல்முத்து”
ஆப்பிரிக்காவின் மத்தியில் அமைந்துள்ளது உகாண்டா நாடு; இதை இரண்டாகக் கூறுபோடும் விதத்தில் இடையே பூமத்திய ரேகை ஓடுகிறது; இந்த அழகிய நாட்டில் மிதமான சீதோஷ்ணம் நிலவுகிறது. கம்பீரமாய்க் காட்சியளிக்கும் ருவென்ஜோரி மலைத்தொடர், நிலவின் மலைத்தொடர் என அழைக்கப்படுகிறது; அதன் உச்சியிலுள்ள பனிப்பாளங்கள் உருகுகையில், பளிங்குபோன்ற நீர் அருவிகளாகக் கொட்டி, எண்ணற்ற ஆறுகளையும் ஏரிகளையும் உருவாக்குகிறது. வளம் கொழிக்கும் மண்ணும் மிகுதியாகப் பெய்யும் மழையும் உகாண்டாவில் காப்பி, தேயிலை, பஞ்சு ஆகியவை வளருவதற்குத் தோதான சூழலை ஏற்படுத்துகின்றன. வாழைக்காய் இங்கு எக்கச்சக்கமாக விளைகிறது; இது, உகாண்டாவாசிகளின் முக்கிய உணவான மாடூகி என்பதைத் தயாரிக்கப் பயன்படுகிறது. அங்குள்ளவர்கள் மரவள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம், கம்பு, சோளம் போன்றவற்றையும் சாப்பிடுகிறார்கள்.
இந்த வெப்பமண்டல நாடு, சிங்கம், யானை, நீர்யானை, முதலை, சிறுத்தை, ஒட்டகச்சிவிங்கி, மறிமான், சிம்பான்சி, வியப்பூட்டும் எண்ணற்ற வகை குரங்குகள், அழிந்து வரும் மலை கொரில்லா ஆகியவற்றின் குடியிருப்பாகும். கண்ணுக்கு விருந்தளிக்கும் பறவைகளின் இனிய கீதங்கள் காற்றில் கலக்கின்றன. உண்மைதான், உகாண்டாவில் அழகு
கொட்டிக்கிடப்பதால் “ஆப்பிரிக்காவின் நல்முத்து” என்று அது பெயரிடப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.உகாண்டாவின் அழகிய மக்கள்
சுமார் 30 இனத்தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 3 கோடி மக்கள் உகாண்டாவில் குடியிருக்கிறார்கள். அநேகர் கடவுள் பக்தி மிக்கவர்கள், சர்ச்சுகளுக்குச் செல்பவர்கள்; ஆனால், மற்ற இடங்களைப் போலவே இங்கும் மத வழிபாட்டுடன் பாரம்பரிய மத சம்பிரதாயங்கள் இரண்டறக் கலந்திருக்கின்றன. உகாண்டாவாசிகள் அன்பாகப் பழகுபவர்கள், உபசரிக்கும் குணம்படைத்தவர்கள்; சிலர் வணக்கம் சொல்லும் போதோ, தங்களைவிட பெரியவர்களுக்கு உணவு பரிமாறும்போதோ மண்டியிடுவதைச் சாதாரணமாகக் காணலாம்.
வருத்தகரமாக, 1970-க்கும் 1990-க்கும் இடைப்பட்ட வருடங்களில் ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சிகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள்; அதனால், அந்த அழகிய ‘நல்முத்துக்கும்,’ அதன் மதிப்புமிக்க மக்களுக்கும் பெருத்த பாதிப்பு ஏற்பட்டது. அது போதாதென்று, எய்ட்ஸ் கொள்ளைநோயும் மக்களை ஆட்டிப்படைத்தது. அது போன்ற சூழ்நிலைகளில், எதையும் சமாளிக்கும் மனப்பான்மையுள்ள உகாண்டாவாசிகளுடன் யெகோவாவின் சாட்சிகள் ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் செய்தியைப் பகிர்ந்துகொண்டார்கள்.
ஊழியம் செய்யப்படாத பிராந்தியத்தில் பிரசங்கித்தல்
உகாண்டாவில் 1931-ல் முதன்முதலாக நற்செய்தி அறிவிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில், பூமத்திய ரேகைக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகள் அனைத்திலும் நடந்த பிரசங்க வேலையை தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகம் மேற்பார்வை செய்தது. இந்த மிகப் பெரிய பிராந்தியத்தில் நற்செய்தியை அறிவிப்பதற்கு, பயனியராக இருந்த ராபர்ட் நிஸ்பட், டேவிட் நார்மன் என்ற இரண்டு சகோதரர்களை கிளை அலுவலகம் முதன்முதலாக அனுப்பியது. இன்றைய கென்யா, உகாண்டா, டான்ஜானியா பகுதிகளில் ஊழியம் செய்ய இவர்களை அனுப்பியது.
சகோதரர்கள் நிஸ்பட்டும் நார்மனும், ஆப்பிரிக்காவின் உட்பகுதிக்குச் சென்று கடவுளுடைய அரசாங்கத்தின் நற்செய்தியை அறிவிப்பதற்குத் தீர்மானமாய் இருந்தார்கள். அவர்கள், ஆகஸ்ட் 31, 1931-ல் 200 அட்டைப்பெட்டிகள் நிறையப் பிரசுரங்களுடன் தார்-எஸ்-சலாம் நகரில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்கள். அங்கிருந்து அவர்கள் ஜான்ஜிபார் தீவுக்கும், கென்யாவிலுள்ள மேட்டு நிலங்களுக்குப் போகும் வழியில் மோம்பாசா எனும் துறைமுக நகரத்திற்கும்
சென்றார்கள். அவர்கள் ரயிலில் பயணித்தபோது, ரயில் பாதைக்கு அருகே இருந்த ஊர்களில் ஊழியம் செய்தார்கள்; விக்டோரியா ஏரியின் கிழக்குக் கரையோரங்கள்வரை சென்று அப்படி ஊழியம் செய்தார்கள். பின்பு, தைரியமிக்க அந்த இரண்டு பயனியர்களும் நீராவிக் கப்பலில் அந்த ஏரியைக் கடந்து உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவை அடைந்தார்கள். ஏராளமான பிரசுரங்களை விநியோகித்து, த கோல்டன் ஏஜ் பத்திரிகைக்குப் பல சந்தாக்களைப் பெற்ற பிறகு அவர்கள் காரில் நாட்டின் உட்பகுதியை நோக்கிப் பயணித்தார்கள்.நான்கு வருடங்களுக்குப் பிறகு, 1935-ல், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நான்கு பயனியர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவை நோக்கி பயணப்பட்டார்கள். அவர்கள், க்ரே ஸ்மித், அவருடைய மனைவி ஆல்கா, ராபர்ட் நிஸ்பட், அவருடைய தம்பி ஜார்ஜ் ஆகியோர். இரண்டு வேன்களில், குடியிருப்புக்கு ஏற்ற சகல வசதிகளையும் செய்து அவற்றைத் தங்களுடைய வீடாக்கிக் கொண்டார்கள்; அந்தத் துணிச்சல்மிக்க பயனியர்கள் மோசமான சாலைகளையும், சுமார் மூன்று மீட்டர் உயரமுள்ள யானைப்புல்லையும் சமாளித்துப் பயணித்தார்கள். ஓர் அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “அவர்கள் பெரும்பாலும் காட்டுப் பகுதிகளில் தூங்கினார்கள்; அப்போது, ஏராளமான வனவிலங்குகள் குடியிருக்கும் ஆப்பிரிக்கக் காடு உண்மையிலேயே எப்படியிருக்கும் என்பதைக் கண்டார்கள், கேட்டார்கள், உணர்ந்தார்கள்; ஆம், இரவில் சிங்கங்களின் கர்ஜனையைக் கேட்டார்கள், வரிக்குதிரைகளும் ஒட்டகச்சிவிங்கிகளும் அமைதியாய் மேய்வதைக் கண்டார்கள், திகிலூட்டும் காண்டா மிருகங்களும் யானைகளும் நடமாடுவதை உணர்ந்தார்கள்.” அதுவரை நற்செய்தி அறிவிக்கப்படாத நகரங்களுக்குத் துளியும் பயமின்றிச் சென்று பிரசங்கித்தார்கள்.
தங்கனிகாவில் (இன்றைய டான்ஜானியாவில்) க்ரே ஸ்மித்தும், ஆல்கா ஸ்மித்தும் கொஞ்சக் காலம் தங்கியிருந்தபோது ராபர்ட் நிஸ்பட்டும், ஜார்ஜ் நிஸ்பட்டும் கென்யாவிலுள்ள நைரோபிக்குச்
சென்றார்கள். பின்னர், தங்கனிகாவைவிட்டு வெளியேறும்படி ஸ்மித் தம்பதியருக்குக் குடியேற்ற அதிகாரிகள் ஆணை பிறப்பித்தபோது அவர்கள் உகாண்டாவிலுள்ள கம்பாலாவுக்குச் சென்றார்கள். இந்தச் சமயத்தில், நிலைமை அந்தளவு தோதாக இல்லாததால், கம்பாலா போலீஸார் அவர்களைச் சதா கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். தைரியமிழக்காத ஸ்மித் தம்பதியர் இரண்டே மாதங்களில் 2,122 புத்தகங்களையும் சிறுபுத்தகங்களையும் விநியோகித்தார்கள்; ஆறு பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார்கள். கடைசியில், நாட்டைவிட்டு வெளியேறும்படி உகாண்டாவின் ஆளுநர் அவர்களுக்கு ஆணை பிறப்பித்தார். அவர்கள் தென் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பும் முன், நைரோபிக்குச் சென்றார்கள்; அங்கே நிஸ்பட் சகோதரர்களைச் சந்தித்தார்கள்.யெகோவாவின் ஆசீர்வாதத்தால், நற்செய்தியை அறிவிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பெருமளவு பலன் அளித்தன, சிறந்த சாட்சிகொடுக்க வாய்ப்பளித்தன. அந்த பயனியர்கள் பிற மதத்தாரின் எதிர்ப்பையும், குடியேற்ற அதிகாரிகளின் விடாத தொல்லையையும் சந்தித்தபோதிலும், 3,000-க்கும் அதிகமான புத்தகங்களையும் 7,000-க்கும் அதிகமான சிறுபுத்தகங்களையும் விநியோகித்தார்கள்; அதோடு, அநேக சந்தாக்களைப் பெற்றார்கள். இப்படி ஊழியம் செய்யப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகே உகாண்டாவில் பிரசங்கிப்பு வேலை மீண்டும் ஆரம்பமானது.
மீண்டும் தொடங்கியது ஊழியம்
ஏப்ரல் 1950-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் தம்பதியரான கில்மின்ஸ்டர் தம்பதியர் கம்பாலாவில் வந்து குடியேறினார்கள். அவர்கள் நற்செய்தியை ஊக்கமாகப் பிரசங்கித்தார்கள்; ஒரு கிரேக்க குடும்பமும் ஓர் இத்தாலிய குடும்பமும் நற்செய்தியை ஏற்றுக்கொண்டபோது அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
பிறகு, டிசம்பர் 1952-ல் நியு யார்க்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்திலிருந்து சகோதரர் நாரும் சகோதரர் ஹென்ஷலும் கென்யாவிலுள்ள நைரோபிக்கு வந்தார்கள். சகோதரர் கில்மின்ஸ்டர் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை; எனவே, அவர் கம்பாலாவிலிருந்து நைரோபிக்குப் பயணித்தார். சகோதரர் நாரும் சகோதரர் ஹென்ஷலும் அங்கே சிறிய தொகுதியாக இருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்கள்; கம்பாலாவில் ஒரு சபையைத் தொடங்க ஏற்பாடு செய்தார்கள். அப்படிப் புதிதாக உருவான அந்தச் சபை, சீக்கிரத்திலேயே நல்ல பலன்களைக் கொடுக்க ஆரம்பித்தது; 1954-ஆம் ஊழிய ஆண்டில் உச்சநிலை எண்ணிக்கையாகப் பத்துப் பிரஸ்தாபிகள் ஊழியத்தில் கலந்துகொண்டார்கள்.
அதே வருடத்தில், தெற்கு ரோடீஷியாவில் (இன்றைய ஜிம்பாப்வேயில்) இருந்த கிளை அலுவலகத்தைச் சேர்ந்த எரிக் கூக் கிழக்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்றார்; கம்பாலாவிலிருந்த புதிய சபையில் கொஞ்சக் காலம் சேவை செய்தார். சகோதரர்கள் சபையில் நடைபெற்ற வாராந்தர காவற்கோபுர படிப்பில் விருப்பத்துடன் கலந்துகொண்டபோதிலும் கிறிஸ்தவ ஊழியத்தில் அந்தளவு ஊக்கமாகக் கலந்துகொள்ளாதிருந்தார்கள். எனவே, வாராந்தர ஊழியக் கூட்டம் உட்பட சபை கூட்டங்கள் எல்லாவற்றையும் நடத்தும்படி சகோதரர் கில்மின்ஸ்டரிடம் சகோதரர் கூக் சொன்னார். ஊழியத்தை இன்னும் விரிவுபடுத்துவதற்கு, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்படி அவர் வலியுறுத்தினார்; அதோடு, அநேக பிரஸ்தாபிகளுக்குத் தனிப்பட்ட விதத்தில் அன்புடன் பயிற்சியும் அளித்தார்.
அதுவரையாக, உகாண்டாவில் வசித்த ஐரோப்பியர்களிடமே பெரும்பாலும் நற்செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கம்பாலாவில் வசித்த உகாண்டாவாசிகளில் பெரும்பாலோர் லுகாண்டா மொழி பேசுவதைச் சகோதரர் கூக் கவனித்தார். உள்ளூர்வாசிகளின் இதயத்தைத் தொடுவதற்குச் சகோதரர்கள், லுகாண்டா மொழியில் ஒரு பிரசுரத்தை மொழிபெயர்க்க வேண்டுமென்று அவர் ஆலோசனை கூறினார். 1958-ல், புதிதாக மொழிபெயர்க்கப்பட்டிருந்த, “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி” என்ற சிறுபுத்தகத்தைப் பிரஸ்தாபிகள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அது எப்பேர்ப்பட்ட தூண்டுதலாய் அமைந்தது! ஊழியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது; 1961-ல் புதிய உச்சநிலை எண்ணிக்கையாக 19 பிரஸ்தாபிகள் ஊழியத்தில் கலந்துகொண்டார்கள்.
சகோதரர் கில்மின்ஸ்டர் வேலை செய்கையில் ஜார்ஜ் கடூ என்பவரைச் சந்தித்தார்; ஆர்வமிக்க அவர் 40-43 வயதுள்ளவராக இருந்தார். ஆங்கிலத்தையும் அவருடைய தாய்மொழியான லுகாண்டாவையும் சரளமாகப் பேசினார். கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை அறிந்துகொண்டபோது, பைபிள் சத்தியத்திடம் அவர் அதிக ஆர்வம் காட்டினார், பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார். அவர் விரைவிலேயே வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சகோதரர் கிஸ்மின்ஸ்டரோடு அவருடைய மொழிபெயர்ப்பாளராகச் செல்ல ஆரம்பித்தார். பிறகு 1956-ல், யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணம் செய்ததற்கு அடையாளமாக, என்டெபியின் அருகிலிருந்த விக்டோரியா ஏரியில் ஜார்ஜ் ஞானஸ்நானம் பெற்றார்; இதுவே உகாண்டாவில் கொடுக்கப்பட்ட முதல் ஞானஸ்நானம் ஆகும்.
வருத்தகரமாக, நற்செய்தியை அறிவிப்பதில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. அயல்நாட்டு சகோதரர்கள் சிலர் தங்கள் பணி ஒப்பந்தம் முடிந்ததால் தங்களுடைய நாடுகளுக்குத் திரும்பிச் சென்றார்கள். சில சகோதரர்கள் சபைநீக்கம் செய்யப்பட்டார்கள்; சபையிலுள்ள சிலர் பைபிளின் ஒழுக்கநெறிகளை மீறி நடப்பதைப் பார்த்து பலர் இடறலடைந்தார்கள். ஆனால், சகோதரர் கடூ யெகோவாவை நேசித்தார், சத்தியத்தைக் கண்டுபிடித்திருந்ததைப் புரிந்துகொண்டிருந்தார். அவர் “சாதகமான காலத்திலும் சரி பாதகமான காலத்திலும் சரி” சத்தியத்தில் நிலைத்திருந்தார், 1998-ல் இறக்கும்வரை மூப்பராக உண்மையோடு சேவை செய்தார்.—2 தீ. 4:2.
தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்தல்
கிழக்கு ஆப்பிரிக்க பிராந்தியம் மிகப் பெரியதாக இருந்ததால் நற்செய்தியை அறிவிப்பதற்கு அதிகமானோர் தேவைப்பட்டார்கள். அதோடு, வேறொரு பிரச்சினையும் இருந்தது. குடியேற்ற அரசாங்கம் மிஷனரிகளுக்கு அனுமதி மறுத்தது. பிரச்சினைக்கு ஏதாவது பரிகாரம் இருந்ததா?
1957-ல் தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வதற்கான அழைப்பு, உலகெங்குமுள்ள பிரஸ்தாபிகளுக்கு விடுக்கப்பட்டது. பிரஸ்தாபிகள் அதிகம் தேவைப்படுகிற இடங்களுக்குச் செல்ல, ஆன்மீக முதிர்ச்சியுள்ள சகோதரர்கள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள். அந்த அழைப்பு, அப்போஸ்தலன் பவுல் கண்ட தரிசனத்தில், “மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று ஒருவர் அவரிடம் கேட்டதற்கு ஒத்ததாய் இருந்தது. (அப். 16:9, 10) அந்த நவீன நாளைய அழைப்பு, உகாண்டாவில் நற்செய்தி பெருமளவு பிரசங்கிக்கப்படுவதற்கு எப்படி வழிசெய்தது?
a (ஏசா. 6:8) ஜூலை 1959-ல், நியு யார்க்கிலிருந்து கேப்டவுன் வழியாக மோம்பாசாவுக்குக் கப்பலில் சென்றார்கள். பிறகு, அவர்கள் ரயிலில் கம்பாலாவுக்குச் சென்றார்கள்; அங்கே நில அமைப்பியல் ஆராய்ச்சித் துறையில் அரசு வேதியியல் வல்லுனராக ஃபிராங்க் வேலையில் சேர்ந்தார். ஸ்மித் தம்பதியர் கம்பாலாவுக்குத் தெற்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்திலுள்ள என்டெபியில் குடியேறினார்கள். விக்டோரியா ஏரியின் கரைகளில் அமைந்திருந்த அந்த அழகிய நகரத்தில் அதுவரை நற்செய்தி அறிவிக்கப்படவே இல்லை. எனவே, அந்தத் தம்பதியர் கம்பாலாவில் வளர்ந்து வந்த சிறிய சபைக்குத் தவறாமல் சென்று கூட்டங்களில் கலந்துகொண்டார்கள்.
அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதில், ஃபிராங்க் ஸ்மித்தும் மேரி ஸ்மித்தும் ஏசாயாவின் மனநிலையை வெளிக்காட்டினார்கள்; உடனடியாகக் கிழக்கு ஆப்பிரிக்காவுக்குக் குடிமாறத் தயாரானார்கள்.விரைவிலேயே, பீட்டர் ஜாபி என்பவருக்கும் அவருடைய மனைவி எஸ்தருக்கும் ஸ்மித் தம்பதியர் சத்தியத்தை அறிவித்தார்கள்; பீட்டர், உகாண்டா அரசு ஊழியராகப் பொறுப்பான பதவியில் இருந்தார். முன்னர், மனிதகுலத்திற்கு மதம் என்ன செய்துள்ளது? b என்ற ஆங்கில புத்தகத்தை அவர் பெற்றிருந்தார். அவர் அலுவலக வேலையில் மூழ்கிப்போயிருந்ததாலும், மாற்றலாகி அடிக்கடி வேறு ஊர்களுக்குச் சென்றுகொண்டிருந்ததாலும் அந்தப் புத்தகத்தை அவர் படிக்கவில்லை. பின்னர், இரண்டு இனத்தொகுதிகளுக்கு இடையிலான நிலத்தகராறு சம்பந்தமான சிக்கலான பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக, பதட்டம் நிலவுகிற ஒரு பகுதிக்கு அவர் அனுப்பப்பட்டார். “கடவுளே நீங்கள் எனக்கு உதவினால் உங்களைத் தேடுவேன்” என்று அவர் ஜெபம் செய்தார். சுமுகமாய் அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டபோது அவர் தன் ஜெபத்தை நினைத்துப் பார்த்தார்; அந்தப் புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அவர் வாசிக்க வாசிக்க அதுவே உண்மை என்பதைப் புரிந்துகொண்டார்; யெகோவாவின் சாட்சிகளைத் தேட ஆரம்பித்தார். ஃபிராங்க் ஸ்மித்தைச் சந்தித்தபோது அவர் எவ்வளவாய் ஆனந்தப்பட்டார்! இவருக்கும் இவருடைய மனைவிக்கும் ஃபிராங்க் தவறாமல் பைபிள் படிப்பு நடத்த ஒப்புக்கொண்டார். இதன் விளைவாக, சந்தோஷமிக்க அந்தத் தம்பதியர் ஞானஸ்நானம் பெற்றார்கள்; அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக உண்மையுள்ளவர்களாய் நற்செய்தியை அறிவித்து வருகிறார்கள்.
தேவை அதிகமுள்ள இடங்களுக்குச் சென்று சேவை செய்ய விடுக்கப்பட்ட அழைப்பை மற்ற அயல்நாட்டு சகோதரர்களும் ஏற்றுக்கொண்டார்கள். சிலர், கம்பாலாவிலிருந்த சிறிய சபையைவிட்டு, தொலைதூர இடங்களில் வேலை வாங்கிக்கொண்டு போனார்கள். ஒரு தம்பதியர் அம்பாராரா என்ற சிறிய ஊரில் தங்கினார்கள்; அந்த ஊர், உகாண்டாவின் தென்மேற்கில், தொடர்ச்சியான குன்றுகள் நிறைந்த பகுதியில் உள்ளது; அது, கம்பாலாவிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அம்பாராராவிலிருந்த அந்தத் தம்பதியர் தங்கள் வீட்டில் காவற்கோபுர படிப்புக்கும் புத்தகப் படிப்புக்கும் ஏற்பாடு செய்தார்கள். அவ்வப்போது அவர்கள் அன்பான கிறிஸ்தவக் கூட்டுறவை அனுபவிப்பதற்காகக் கம்பாலாவுக்கு அல்லது என்டெபிக்குத் தொலைதூரம் பயணித்தார்கள். வட ரோடீஷியாவில் (இப்போது ஜாம்பியாவில்), லூவான்ஷா நகரிலுள்ள கிளை அலுவலகத்துடன் அவர்கள் தொடர்பும் வைத்திருந்தார்கள்; அந்தக் கிளை அலுவலகம் அச்சமயத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவந்த பிரசங்க வேலையை மேற்பார்வை செய்தது. அப்போதைய கிளை அலுவலகக் கண்காணியான ஹாரி அர்னோட், மண்டலக் கண்காணியாகவும் சேவை செய்தார்; அவர் உகாண்டாவில் சொற்ப எண்ணிக்கையிலிருந்த பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்த கம்பாலாவுக்குச் சென்றார்; அங்கிருந்த பிரஸ்தாபிகள் அவர் காட்டிய அன்பையும் அக்கறையையும் பெரிதும் மதித்தார்கள்.
தேவை அதிகமுள்ள இடங்களுக்குச் சென்று சேவை செய்ய வேண்டுமென்ற தீராத ஆசை இங்கிலாந்தைச் சேர்ந்த டாம் கூக், ஆன் கூக் தம்பதியருக்கும் இருந்தது. டாம் பல்வேறு நாடுகளில்
வேலைக்காக விண்ணப்பித்தார்; உகாண்டாவிலுள்ள கல்வி அமைச்சகத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றும் வேலையைப் பெற்றார். வேலை காரணமாக ஆரம்பத்தில் அவரும் அவருடைய மனைவி ஆனும், நான்கு வயது மகள் சாராவும் கம்பாலாவுக்குக் கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இகாங்கா என்ற சிறிய ஊருக்குச் சென்றார்கள். இரண்டாவது மகளான ரேச்சல் பிறந்த பிறகு, டாம் குடும்பத்தார் ஜின்ஜா என்ற ஊருக்குக் குடிமாறினார்கள்; இந்த ஊர் நைல் நதியின் பிறப்பிடமென பொதுவாக அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. பின்னர் இந்தக் குடும்பத்தார் கம்பாலாவுக்குக் குடிமாறினார்கள்.தியாகங்களும் ஆசீர்வாதங்களும்
உகாண்டாவில் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் இந்தக் குடும்பங்களெல்லாம் எப்பேர்ப்பட்ட சிறந்த பங்கை அளித்திருக்கின்றன! தங்களுக்குப் பழக்கப்பட்ட வாழ்க்கைச் சூழலையும் வசதி வாய்ப்புகளையும் அவர்கள் விட்டுவந்தது உண்மைதான். ஆனால், அதற்குக் கைமாறாக, நல்மனமுள்ள ஆட்கள் நற்செய்திக்குச் செவிசாய்த்து தங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைச் செய்ததைப் பார்க்கும் ஆனந்தத்தைப் பெற்றார்கள். வணக்கத்துக்காகவும் சந்தோஷமான கூட்டுறவுக்காகவும் ஒன்றுசேர்ந்த சமயங்களில் தங்கள் குடும்பத்தாருக்கும் அங்கிருந்த சகோதரர்களின் குடும்பத்தாருக்கும் இடையே கிறிஸ்தவ அன்பு பலப்படுவதையும் கண்ணாரக் கண்டார்கள்.
இதைக் குறித்து டாம் கூக் இவ்வாறு சொல்கிறார்: “ஊழியத்தில் ஆட்கள் எங்களிடம் கனிவாகவும் பண்பாகவும் நடந்துகொண்ட விதத்தையும், அவர்களுடைய அடக்கத்தையும் கண்ணியத்தையும் பார்த்து நாங்கள் நெகிழ்ந்துவிட்டோம். சபையின் வளர்ச்சியில் எங்களுக்கும் ஒரு சிறிய பங்கு கிடைத்ததைப் பெரிய பாக்கியமாய் கருதுகிறோம்.”
குடிமாறி வந்ததைக் குறித்து எப்படி உணர்ந்தாரென கேட்டபோது அவர் இவ்வாறு சொன்னார்: “சிறு பிள்ளைகளோடு குடும்பமாக நாங்கள் யெகோவாவைச் சேவிக்க, இதைவிடச் சிறந்த சூழல் வேறு எங்குமே எங்களுக்கு அமைந்திருக்காது. பல நாடுகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் அருமையான முன்மாதிரியும், அங்கு உண்மையுடன் சேவை செய்துவந்த சகோதரர்களின் அன்பான தோழமையும், மதிப்புமிக்க ஊழியப் பொறுப்புகளும், டிவியின் தாக்கமில்லாத சூழலும், ஆப்பிரிக்கக் கிராமப்புறத்தின் அதிசயங்களைக் காணும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்தன. நாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களில் இவை சில மட்டுமே.”
தேவை அதிகமுள்ள இடங்களுக்குச் சென்று சேவை செய்தவர்கள், வட்டார மாநாடுகளில் கலந்துகொள்ள கென்யாவரை தொலைதூரம் பயணம் செய்தார்கள்; அது, கிறிஸ்தவக் கூட்டுறவை அவர்கள் எவ்வளவு உயர்வாய் மதித்தார்கள் என்பதை வெளிக்காட்டியது. மாநாட்டிற்காக அவர்கள் போய் வர மொத்தம் 1,500 கிலோமீட்டர் பஸ்ஸிலோ ரயிலிலோ பயணம் செய்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
மாவட்ட மாநாடு என்றால் சொல்லவே வேண்டாம், பெருமளவு முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, 1961-ல் வட ரோடீஷியாவில் (இப்போது ஜாம்பியாவில்) உள்ள கிட்வே நகரில் மாவட்ட மாநாடு நடைபெற்றது; அதில் கலந்துகொள்ள உகாண்டாவிலிருந்தும் கென்யாவிலிருந்தும் சகோதரர்கள் சென்றிருந்தார்கள். அதில் கலந்துகொண்ட ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “அந்த மாநாட்டுக்காக, தங்கனிகாவில் (டான்ஜானியாவில்) தளம் பாவப்படாத, கரடுமுரடான சில சாலைகள் வழியாக 1,600-க்கும் அதிக கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு நாட்கள் பயணிக்க வேண்டியிருந்தது. பின்னர் உகாண்டா திரும்புவதற்கு, சுட்டுப் பொசுக்கும் வெயிலில், புழுதி நிறைந்த ஆப்பிரிக்க சவானா வழியாக மீண்டும் நான்கு நாட்கள் பயணிக்க வேண்டியிருந்தது. அது மிகக் கஷ்டமாக இருந்தாலும் அநேக சகோதர சகோதரிகளுடன் சந்தோஷமாய்க் கூட்டுறவுகொள்ள முடிந்தது பெரிய ஆசீர்வாதம்.” கடும் முயற்சி எடுத்து, அரும்பாடுபட்டு அவர்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது; ஆனால், அது எப்பேர்ப்பட்ட ஆன்மீகப் புத்துணர்ச்சியை அளித்தது!
மிஷனரிகளின் முக்கியப் பணி
1962-ல் பிரிட்டனிடமிருந்து உகாண்டா சுதந்திரம் பெற்றது. அதற்கு அடுத்த ஆண்டு, நைரோபிக்கும் கென்யாவுக்கும் சகோதரர் ஹென்ஷல் பயணம் செய்து உகாண்டாவுக்கு மிஷனரிகளை அனுப்ப வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார். யார் அங்கே நியமிக்கப்படுவார்கள்?
கிலியட்டின் 37-வது வகுப்பில் பட்டம்பெற்ற டாம் மக்லேன், பெத்தல் மக்லேன் தம்பதியர் நைரோபியில் சேவை செய்ய சமீபத்தில் வந்திருந்தார்கள். கம்பாலாவில் ஊழியம் செய்யும்படி நியமனத்தைப் பெற்றபோது அவர்கள் எவ்வளவாய் ஆச்சரியப்பட்டார்கள்! அந்த மாற்றத்தை அவர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார்கள்; இவ்வாறு, கிலியட் பயிற்சி பெற்று உகாண்டாவுக்குச் சென்ற முதல் மிஷனரிகளாய் ஆனார்கள். டாம் இவ்வாறு சொல்கிறார்: “ஆரம்பத்தில் கென்யாவின் நினைவாகவே இருந்தோம்; ஆனால், உகாண்டாவில் உள்ளவர்கள் அன்போடு பழகியதையும் நற்செய்தியிடம் ஆர்வம் காட்டியதையும் பார்த்தபோது விரைவிலேயே ஊழியத்தை முழுமையாய் ருசிக்க ஆரம்பித்தோம்.”
கென்யாவிலிருந்தபோது டாமும் பெத்தலும் ஸ்வாஹிலி மொழியைக் கற்றுக்கொண்டிருந்தார்கள்; இப்போதோ அவர்கள் லுகாண்டா என்ற புதிய மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுக்கு அந்த மொழியைக் கற்றுக்கொடுக்க யாரும் இல்லாதபோதிலும் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற திடதீர்மானமும், யெகோவாமீது நம்பிக்கையும்,
அதோடு, “நீங்களே கற்றுக்கொள்ளலாம்” என்ற புத்தகமும் இருந்தன. உகாண்டாவிற்கு அவர்கள் வந்துசேர்ந்த முதல் மாதத்தில் புதிய மொழியைக் கற்றுக்கொள்ள அவர்கள் 250 மணிநேரத்தைச் செலவிட்டார்கள்; இரண்டாவது மாதத்தில், மொழியைக் கற்றுக்கொள்வதற்கு 150 மணிநேரத்தையும் வெளி ஊழியத்திற்கு 100 மணிநேரத்தையும் செலவிட்டார்கள். மெல்ல மெல்ல அவர்கள் அந்தப் புதிய மொழியைச் சரளமாகப் பேச ஆரம்பித்தார்கள்; அதனால் ஊழியத்தில் நல்ல பலன்களைக் கண்டடைந்தார்கள்.ஜனவரி 1964-ல் டாமுடனும் பெத்தலுடனும் சேர்ந்து ஊழியம் செய்ய 38-வது கிலியட் வகுப்பில் பட்டம் பெற்ற கில்பர்ட் வால்டர்ஸ், ஜோன் வால்டர்ஸ் தம்பதியர் வந்தார்கள். அதே வகுப்பில் பட்டம் பெற்ற இன்னும் இரண்டு தம்பதியரான ஸ்டீவன் ஹார்டி, பார்பரா ஹார்டி, ரான் பிக்னல், ஜென்னி பிக்னல் ஆகியோர் அருகிலிருந்த புரூண்டியில் ஊழியம் செய்ய நியமிப்பைப் பெற்றார்கள்; ஆனால், விசா கிடைக்காததால், அவர்களும் உகாண்டாவில் ஊழியம் செய்யும்படி நியமிப்பைப் பெற்றார்கள். குறுகிய காலத்திலேயே கம்பாலாவில் இன்னொரு மிஷனரி இல்லம் தேவைப்பட்டது!
கம்பாலா சபை மறக்க முடியாத சபை. அதில் சகோதரர் கடூவும் அவருடைய குடும்பத்தாரும் இருந்தார்கள்; வட ரோடீஷியாவைச் சேர்ந்த விசேஷ பயனியர்களான ஜான் ப்வாலி, யூனஸ் ப்வாலி
தம்பதியர் தங்கள் பிள்ளைகளுடன் இருந்தார்கள்; மார்கரெட் நையன்டியும் அவருடைய பிள்ளைகளும் இருந்தார்கள். கிட்டத்தட்ட வெட்டவெளி போல் இருந்த இடத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதைக் குறித்து கில்பர்ட் வால்டர்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் கொஞ்சப் பேரே இருந்ததால் அந்தப் பக்கம் போவோரும் வருவோரும் எங்களைப் பார்க்கவும் நாங்கள் பேசுவதைக் கேட்கவும் முடிந்தது. பொதுமக்கள் பார்க்க, இன்னிசையின் உதவியின்றி ப்வாலி குடும்பத்தார் ராஜ்ய பாடல்களை உரத்த குரலில் ஆர்வத்துடன் பாடினார்கள். அது, மிஷனரி ஊழியத்தைத் தொடர்ந்து செய்ய எங்களுக்குத் தைரியத்தை அளித்தது.”சீக்கிரத்திலேயே, ஜின்ஜா என்ற இடத்தில் மிஷனரி இல்லத்தை ஏற்படுத்துவதற்கு, கில்பர்ட் வால்டர்ஸும் ஜோன் வால்டர்ஸும் அனுப்பப்பட்டார்கள்; அந்த இடத்தில் அதுவரை முறையாக நற்செய்தி பிரசங்கிக்கப்படாதிருந்தது. பின்னர், இன்னும் இரண்டு மிஷனரி இல்லங்கள் ஏற்படுத்தப்பட்டன; ஒன்று, அம்பாலே என்ற இடத்தில் கென்யாவின் எல்லைக்கு அருகேயும், மற்றொன்று அம்பாராராவிலும் ஏற்படுத்தப்பட்டன. இந்த இல்லங்களில் வசித்த மிஷனரிகள், அயல்நாட்டு விசேஷ பயனியர்கள் பலருடன் சேர்ந்து ஊழியம் செய்தார்கள். வயல் ‘விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது’ தெளிவாகத் தெரிந்தது. (யோவா. 4:35) ஆனால், கூட்டிச்சேர்க்கும் வேலையை இன்னும் துரிதப்படுத்த என்ன செய்யப்பட்டது?
மேம்பட்ட ஒழுங்கமைப்பு
உகாண்டாவிலுள்ள முழுநேர ஊழியர்கள் பரந்து விரிந்த தங்கள் பிராந்தியத்தில் ஒழுங்காகவும் முறைப்படியும் நற்செய்தியை அறிவிப்பதற்காக முடிந்தவரை பாடுபட்டார்கள். வார நாட்களில், குடியிருப்பு வளாகங்களில் ஊழியம் செய்தார்கள்; அங்கிருந்த தெருக்களுக்குப் பெயர்கள் இருந்தன, வீடுகளுக்கு எண்கள் இருந்தன. ஆனால், பெயர்
இல்லாத தெருக்களையும் எண் இல்லாத வீடுகளையும் உடைய பகுதியெங்கும் அவர்களால் எப்படி முறைப்படி நற்செய்தியை அறிவிக்க முடிந்தது?டாம் மக்லேன் இவ்வாறு சொல்கிறார்: “குன்றுகளின் அடிப்படையில் நாங்கள் பிராந்தியங்களைப் பிரித்துக்கொண்டோம். நாங்கள் இரண்டு பேர் குன்றின் ஒருபக்கம் சென்றோம், இன்னும் இரண்டு பேர் குன்றின் மறுபக்கம் சென்றார்கள். நாங்கள் நான்கு பேரும் சந்திக்கும்வரை, அங்கிருந்த பாதைகளில் மேலும் கீழும் சென்று பிரசங்கித்தோம்.”
உகாண்டாவில் சாட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது; அந்த உள்ளூர் சாட்சிகள் பிராந்தியத்தையும் அங்குள்ள கலாச்சாரத்தையும் அறிந்திருந்ததால் அயல்நாட்டு சகோதரர்கள் அவர்களிடமிருந்து விரைவிலேயே பயன் அடைய ஆரம்பித்தார்கள். உள்ளூர் சாட்சிகளும் அந்த அயல்நாட்டு சகோதர சகோதரிகளின் மதிப்புமிக்க அனுபவத்திலிருந்து பயன் அடைந்தார்கள். உதாரணத்திற்கு, ஜின்ஜாவில் உகாண்டா சகோதரர்கள் மிஷனரிகளுடன் சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணிமுதல் 10 மணிவரை வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தார்கள். அடுத்து, ஒருமணிநேரம் மறுசந்திப்புகள் செய்தார்கள், மதியம்வரை பைபிள் படிப்பு நடத்தினார்கள். இவ்வாறு, அனுபவத்தையும் உற்சாகத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு சபையிலுள்ள எல்லாரும் பயன் அடைந்தார்கள்.
அப்போது, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக ஜின்ஜா இருந்தது; அங்கே நீர்மின்சக்தி நிலையம் இருந்ததால், அது தொழிற்துறை வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் நகரமாக விளங்கியது. இரைச்சல்மிக்க டாக்ஸி ஸ்டாண்டுகளிலும் பஸ் நிலையங்களிலும் மிஷனரிகள் சாட்சிகொடுத்து நல்ல பலன்களைப் பெற்றார்கள். தொலைதூரப் பயணிகள் பயணத்தின்போது படிப்பதற்காக பைபிள் பிரசுரங்களை ஆர்வத்துடன் வாங்கிக்கொண்டார்கள். இவ்வாறு சத்தியம், சுற்றியிருந்த நாட்டுப்புற பகுதியெங்கும் எட்டுத் திக்கிலும் பரவியது.
எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் நற்செய்தியை அறிவிக்க, வானொலி ஒலிபரப்பையும் சகோதரர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்.
தேசிய வானொலியில் வாராவாரம் நிகழ்ச்சியை ஒலிபரப்ப அனுமதி பெற்றார்கள்; “ஜனங்கள் சிந்திக்கிற விஷயங்கள்” என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. “குடும்பத்தில் நெருக்கடிநிலையைச் சமாளித்தல்,” “குற்றச்செயலிலிருந்தும் வன்முறையிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வழி” போன்ற சிந்தனையைத் தூண்டும் தலைப்புகளில் சகோதரர்கள் பேசினார்கள்; அது, “திரு. ராபின்ஸ்,” “திரு. லீ” ஆகிய இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலாகத் தொகுத்தளிக்கப்பட்டது. அதைப் பற்றி ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “ஓர் அமெரிக்கரும் ஒரு ஸ்காட்லாந்தவரும் சேர்ந்து உரையாடுவதை ஆப்பிரிக்க வானொலி ஒலிபரப்பில் கேட்பதற்கு ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. வெளி ஊழியத்தில் அந்த ஒலிபரப்பைப் பற்றி ஜனங்கள் அடிக்கடி பேசினார்கள்; ஆகவே, அது பயனளிப்பது தெரிந்தது.”புதிய பிரசங்கிகளுக்கு உதவி
ஜின்ஜா தொகுதியினர் அந்தச் சமயத்தில், வாலூகூபா என்ற முக்கியக் குடியிருப்பு வளாகத்தின் கம்யூனிட்டி சென்ட்டர் ஒன்றில்
கூட்டங்களை நடத்தி வந்தார்கள். “சகோதரர்களில் அநேகர் புதியவர்களாக இருந்தார்கள்; அதோடு, கூட்டப் பகுதிகளைத் தயாரிக்க வெகுசில பிரசுரங்களே இருந்தன” என்று டாம் கூக் சொல்கிறார். அவர்கள் என்ன செய்ய முடியும்?டாம் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “அந்தக் குடியிருப்பு வளாகத்தின் மையத்தில் குடியிருந்த ஒரு சகோதரரின் வீட்டில் மிஷனரிகள் சேர்ந்து ஒரு நூலகத்தை ஏற்படுத்தினார்கள். கூட்டத்தில் பேச்சுக் கொடுக்கும் நியமிப்புகளைப் பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு அந்த நூலகத்திற்கு சென்று, தங்கள் பேச்சைத் தயாரிப்பதற்கு உதவியைப் பெற்றார்கள்.” இப்போது ஜின்ஜாவைச் சுற்றிலும் அநேக சபைகள் உள்ளன; நைல் நதியின் முக்கியப் பிறப்பிடமான இந்தப் பகுதியில் ஆன்மீக மீன்பிடிக்கும் பணி இன்னமும் பலன் அளிப்பது தெரிகிறது.
ஆன்மீக வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் பயணக் கண்காணிகள்
செப்டம்பர் 1963-ல், புதிதாக ஏற்படுத்தப்பட்ட கென்யா கிளை அலுவலகம் உகாண்டாவில் நடைபெற்ற பிரசங்க வேலையை மேற்பார்வை செய்தது; நைரோபியைச் சேர்ந்த வட்டாரமான உகாண்டாவிலும் வட்டார ஊழியம் செய்யும்படி வில்லியம் நிஸ்பட், ம்யூரியல் நிஸ்பட் தம்பதியர் நியமிக்கப்பட்டார்கள். வில்லியமின் அண்ணன்களான ராபர்டும், ஜார்ஜும் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு உகாண்டாவில் நற்செய்தியை அறிவிக்க வந்தார்கள்; அவர்களுடைய முன்மாதிரியைத் தம்பி வில்லியமும் பின்பற்றினார். அப்போதிருந்த பிரஸ்தாபிகள் இந்த முறை வந்த முழுநேர ஊழியர்களான நிஸ்பட் தம்பதியரின் கடின உழைப்பிலிருந்து பயன் அடைந்தார்கள்.
அநேகர் ஆர்வம் காட்டினார்கள், அநேக தொகுதிகள் உருவாயின, பிரஸ்தாபிகள் தொலைதூரம்வரை ஆங்காங்கே பரவியிருந்தார்கள். எனவே, பயணக் கண்காணிகள் ஒதுக்குப் புறத்திலிருந்த சகோதர சகோதரிகளைத் தவறாமல் போய்ச் சந்தித்தது, பயிற்சியையும் புத்துணர்ச்சியையும் அளிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது; அதோடு, “யெகோவாவுடைய கண்கள் நீதிமான்களைப் பார்க்கின்றன” என்ற உறுதியை ஒதுக்குப் புறத்தில் குடியிருந்தவர்களுக்குக் கொடுத்தது.—1 பே. 3:12.
1965-ல் ஸ்டீவன் ஹார்டியும், பார்பரா ஹார்டியும் உகாண்டாவிலிருந்து ஸேசேல்ஸ்வரை பரந்துகிடந்த ஒரு வட்டாரத்திலிருந்த சபைகளைப் போய்ச் சந்தித்தார்கள்; ஸேசேல்ஸ் என்ற இந்தத் தீவுக்கூட்டம்
உகாண்டாவிலிருந்து 2,600 கிலோமீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் உள்ளது. ஒருசமயம், பயனியர்களுக்குச் சிறந்த பலனளிக்கும் பகுதியைக் கண்டுபிடிக்க உகாண்டா எங்கும் அவர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். பயணிப்பதற்கும் தங்குவதற்கும் கென்யா கிளை அலுவலகம் கொடுத்திருந்த வால்ஸ்வாகன் காம்பி வாகனத்தின் உதவியோடு உகாண்டாவில் பெரும்பாலான பகுதிகளுக்கு அவர்கள் பயணம் செய்தார்கள்; ஆறே வாரங்களில் அவர்கள், மாசாகா, அம்பாராரா, காபாலே, மாசின்டி, ஹோய்மா, ஃபோர்ட் பார்ட்டல், ஆரூவா, கூலூ, லிரா, சோரோடி ஆகிய ஊர்களுக்குச் சென்றார்கள்.சகோதரர் ஹார்டி இவ்வாறு சொல்கிறார்: “அந்தப் பயணம் சிலிர்ப்பூட்டியது, பிரசங்க ஊழியம் மகிழ்ச்சியூட்டியது. உள்ளூர் அதிகாரிகள் உட்பட எல்லாருமே உதவி செய்தார்கள், அன்போடு நடந்துகொண்டார்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது பல சந்தர்ப்பங்களில் கிட்டத்தட்ட ‘பொதுப் பேச்சு’ கொடுக்க வேண்டியதாகிவிட்டது; ஆம், அக்கம்பக்கத்தாரும், வழியில் போவோரும் வருவோரும் நாங்கள் அறிவித்த செய்தியைக் கேட்கக் கும்பலாகக் கூடிவிட்டார்கள். ஒதுக்குப்புற பகுதி என்று நினைத்து நாங்கள் வண்டியை நிறுத்திய இடத்தில்கூட, எங்களை ஜனங்கள் அவர்களுடைய விருந்தாளிகளாகக் கருதி,
சிரித்த முகத்தோடு எங்களிடம் வந்து பேசினார்கள். கையிலிருந்த பிரசுரங்கள் மளமளவெனத் தீர்ந்துபோயின. நாங்கள் சுமார் 500 புத்தகங்களை விநியோகித்தோம், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு அநேக சந்தாக்களைப் பெற்றோம்.உகாண்டாவாசிகளின் சிநேகபாவமும், ஆர்வத்துடிப்பும், மத ஈடுபாடும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெருமளவு வாய்ப்பிருந்ததைச் சுட்டிக்காட்டுவதாகத் தெரிந்தன. அதைவிட முக்கியமாக, இந்த வளமான பூமியில், தங்களுடைய ஊழியத்தை யெகோவா ஆசீர்வதித்ததைப் பார்த்து ஹார்டி தம்பதியர் பூரித்துப் போனார்கள்.
யெகோவா விளையச் செய்கிறார்
ஆகஸ்ட் 12, 1965-ல் உகாண்டாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளின் சரித்திரத்தில் புதிய மைல்கல் எட்டப்பட்டது; அந்த வருடம், இன்டர்நேஷனல் பைபிள் ஸ்டூடன்ஸ் அசோஸியேஷன் என்ற பெயரில் சங்கம் பதிவுசெய்யப்பட்டு, நம்முடைய பிரசங்க வேலைக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது. 1960-களில் உகாண்டாவைச் சேர்ந்த ஜார்ஜ் மாயன்டா, பீட்டர் ஜாபி, எஸ்தர் ஜாபி, ஐடா சாலி போன்ற நல்மனமுள்ள சகோதர சகோதரிகள் சிறிய தொகுதியாகச் செயல்பட்டபோதிலும், நெஞ்சுரமிக்க சாட்சிகளாக விளங்கினார்கள். உகாண்டா எங்கும் வசித்த சுமார் 80 லட்சம் பேரில் 75 பிரஸ்தாபிகள் இருந்ததாக 1969-ல் உகாண்டா அறிக்கை செய்தது; இதன்படி, ஒவ்வொரு சாட்சியும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டியிருந்தது. 1970-ல் நற்செய்தியை அறிவிப்பவர்களின் எண்ணிக்கை 97-ஆக அதிகரித்தது, 1971-ல் அது 128-ஆக அதிகரித்தது. 1972-ல் உகாண்டாவில் 162 யெகோவாவின் சாட்சிகள் இருந்தார்கள்.
இந்த வளர்ச்சி உற்சாகத்தை அளித்தபோதிலும், எண்ணிக்கையின் அதிகரிப்பு அல்ல, ஆனால் ‘வளரச் செய்கிற கடவுளே’ தங்கள் பலம் என்பதைச் சகோதரர்கள் அறிந்திருந்தார்கள். (1 கொ. 3:7) 1970-களில் மாபெரும் மாற்றங்களைத் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கவிருந்ததையும் கடினமான விசுவாசப் பரீட்சைகளை எதிர்ப்படவிருந்ததையும் அவர்கள் அறியாதிருந்தார்கள். 1971-ல் படைத் தளபதியான இடி ஆமினின் தலைமையில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின் உருவான சர்வாதிகார ஆட்சி லட்சக்கணக்கானோருக்குத் துன்பத்தை விளைவித்தது; அதனால், பல்லாயிரக்கணக்கானோரின் உயிர் பறிபோனது. புதிய அரசுக்கும் அதன் எதிர்க் கட்சிகளுக்கும் இடையே பூசல்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன. அவ்வப்போது, அண்டை அயல் நாடுகளுக்குப் போக முடியாதபடி எல்லைகள் மூடப்பட்டன. ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆட்கள் காணாமல்போக ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர் சதா கண்காணிக்கப்பட்டார்கள். சமாதானமும் அன்புமிக்க உகாண்டா நாட்டு சகோதர சகோதரிகள் கொந்தளிப்பும் அச்சுறுத்தலும் வன்முறையும் நிலவிய இந்தக் காலத்தை எப்படிச் சமாளித்தார்கள்?
‘கடவுளுடைய ஆட்சியா’ அல்லது மனிதனுடையதா?
அந்தச் சமயத்தில், “கடவுளுடைய ஆட்சி” என்ற 1972-ம் ஆண்டிற்கான மாவட்ட மாநாட்டை கம்பாலாவில் நடத்த திட்டங்கள் போடப்பட்டிருந்தன; இது உகாண்டாவில் நடைபெறவிருந்த முதல் மாவட்ட மாநாடாக இருந்தது. தொலைதூர நாடான எத்தியோப்பியா உட்பட, கென்யா, டான்ஜானியா போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் சகோதர சகோதரிகள் வரவிருந்தார்கள். தொடர்ந்து நிலவிய பதட்ட நிலையையும், அரசுக்கும் இனப் பிரிவுகளுக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட மோதல்களையும், எல்லைகளில் போடப்பட்டிருந்த கடுங்காவலையும் அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள்? மாநாட்டை ரத்து செய்ய வேண்டுமா? மாநாட்டிற்காகச் சகோதரர்கள் ஊக்கமாக ஜெபம் செய்தார்கள்; மாநாட்டு ஏற்பாடுகளுக்காகவும் பயணம் செய்துவரும் சகோதர சகோதரிகளின் பாதுகாப்புக்காகவும் யெகோவாவிடம் மன்றாடினார்கள்.
பின்னர், மாநாட்டுக்காக வந்த சகோதரர்கள் எல்லையை அடைந்தபோது, கூட்டம் கூட்டமாக மக்கள் நாட்டைவிட்டு ஓடுவதைப் பார்த்தார்கள்! சூழ்நிலை படுமோசமாய் இருந்ததாகத் தோன்றியது. குடியுரிமை பெறாத ஆசிய மக்கள் எல்லாரையும், முக்கியமாக இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும் நாட்டைவிட்டு வெளியேறும்படி அரசு உத்தரவிட்டிருந்ததால் அநேகர் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அயல்நாட்டு பள்ளி ஆசிரியர்கள் போன்ற இன்னும் அநேகர், அதுபோன்ற உத்தரவு மற்ற இனத் தொகுதியினருக்கும் போடப்படுமென பயந்து வெளியேறினார்கள். அத்தகைய சூழ்நிலையிலும், மாநாட்டுக்குச் சகோதரர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள். அரசியல் பதட்டம் நிறைந்த ஒரு நகரத்தில் அவர்கள் எதைக் கண்டடைய முடிந்தது?
கம்பாலாவில் மிகுந்த அமைதி நிலவியதையும், சகோதரர்களும் ஆர்வமுள்ளவர்களும் அயல்நாட்டு சகோதரர்களின் வருகைக்காக மாநாட்டு வளாகத்தில் சந்தோஷமாகக் காத்திருந்ததையும் அவர்கள் கண்டபோது அதிசயித்துப் போனார்கள். கம்பாலாவில் அதிக சந்தடிமிக்க தெருவில், மாநாட்டின் தேதியும் இடமும் குறிப்பிடப்பட்ட மிகப் பெரிய பேனரை வைப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்திருந்ததைக் கண்டும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அங்கே, குழப்பமும் கொந்தளிப்பும் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த சமயத்தில், “கடவுளுடைய ஆட்சி—மனிதகுலத்தின் ஒரே நம்பிக்கை” என்ற பொதுப் பேச்சின் தலைப்பு கொட்டை எழுத்துக்களில் காணப்பட்டது!
எந்த இடையூறுமில்லாமல் நிகழ்ச்சி வெற்றிகரமாய் நடந்து முடிந்தது; இதில் உச்சநிலை எண்ணிக்கையாக 937 பேர் கலந்துகொண்டார்கள்; சங். 138:3.
உகாண்டாவில் உண்மை வணக்கத்தின் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க மைல்கல்லாய் அமைந்தது. அதன் பிறகு, அயல்நாட்டு சகோதரர்கள் வீடு திரும்புகையில் எல்லைப் பகுதிகளைக் கடப்பது கடினமாக இருந்தபோதிலும், அவர்களுடைய பக்திவைராக்கியம் தணியாதிருந்தது; அவர்கள் எல்லாரும் பத்திரமாய் வீடுபோய்ச் சேர்ந்தார்கள். அரசியலில் திடீர் மாற்றங்கள் நிகழவிருந்த சூழலில் யெகோவாவின் ஜனங்கள் தங்கள் சர்வலோகப் பேரரசரை உண்மையாய் ஆதரிப்பதைத் தைரியமாக எல்லாருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்கள். இந்த முக்கியக் காலக்கட்டத்தில் கடவுள் தம்முடைய மக்களுக்கு ‘பெலன்தந்து . . . தைரியப்படுத்தி’ இருந்தார்.—அந்த மாநாட்டில் உகாண்டாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஓகோலோவும் கர்ட்ரூட் ஓகோலோவும் கலந்துகொண்டார்கள். “அதுதான் நான் கலந்துகொண்ட முதல் மாநாடு, அதில்தான் நான் ஞானஸ்நானமும் பெற்றேன்!” என்று கர்ட்ரூட் சொல்கிறார். அந்தச் சமயத்தில் ஜார்ஜ் யெகோவாவின் சாட்சியாக இருக்கவில்லை. அவருக்குக் கால்பந்தாட்டம் என்றால் உயிர்; அந்த மாநாட்டு வளாகம் விளையாட்டு அரங்கமாக இருந்ததால் அவர் அதில் கலந்துகொள்ள அதிக ஆர்வம் காட்டினார். எனினும், அவருடைய மனைவியின் நல்நடத்தையாலும், பைபிள் படிப்பாலும் கடைசியில் அவர் 1975-ல் ஞானஸ்நானம் பெற தூண்டப்பட்டார்.
கர்ட்ரூட், வட உகாண்டாவில் சத்தியத்தைக் கற்றுக்கொண்ட முதல் யெகோவாவின் சாட்சியாம். “1972-ல் நான் ஞானஸ்நானம் பெற்றேன். எங்கள் வீடு மிகவும் ஒதுக்குப்புறத்தில் இருந்ததாக நினைத்தேன். ஆனால், இப்போது ஒரு ராஜ்ய மன்றமும், மிஷனரி இல்லமும், மொழிபெயர்ப்பு அலுவலகமும் இங்கு இருக்கிறது. இதனால், ஞானஸ்நானம் எடுத்தபோது பட்ட ஆனந்தத்தைவிட இப்போது இன்னும் அதிகமாக ஆனந்தப்படுகிறேன்!” என்று அவர் சொல்கிறார்.
‘பாதகமான காலம்’
எந்த முன்னெச்சரிப்புமின்றி, ஜூன் 8, 1973-ல், யெகோவாவின் சாட்சிகள் உட்பட 12 மதத் தொகுதிகள் தடைசெய்யப்பட்டிருப்பதாக வானொலியிலும் டிவியிலும் அறிவிப்புகள் செய்யப்பட்டன. அயல் நாட்டவர்மீது உளவாளிகள் என்ற பொய் முத்திரையைக் குத்தி, புதிய அரசு பொதுமக்கள் மத்தியில் பீதியையும் சந்தேகத்தையும் கிளப்பிவிட்டிருந்தது. இதனால் வெளி ஊழியத்தில் ஈடுபடுவது மிஷனரிகளுக்கு அதிக கடினமானது. உகாண்டாவிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் மிகப் ‘பாதகமான காலத்தில்’ கால்பதித்திருந்தார்கள். (2 தீ. 4:2) அவர்களுக்கு என்ன சம்பவித்தது?
கூடுதல் காலம் தங்குவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதால் அந்த வருடம் ஏற்கெனவே இரண்டு மிஷனரி தம்பதியர் நாட்டைவிட்டு வெளியேறி இருந்தார்கள். ஜூலை மத்திபத்தில் மீதமிருந்த 12 மிஷனரிகளும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள். தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வதற்கு வந்த அயல்நாட்டு சகோதரர்கள் தங்கள் வேலை காரணமாக இன்னும் கொஞ்ச நாட்கள் மட்டும் அங்கே தங்க முடிந்தது. அதற்கு அடுத்த வருடமே அவர்கள் எல்லாரும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
“உறுதியானவர்களாகவும் அசைக்க முடியாதவர்களாகவும்”
தங்களுடைய அன்புக்குரிய அயல்நாட்டு சகோதர சகோதரிகள் சென்றுவிட்டதால் உகாண்டாவிலிருந்த பிரஸ்தாபிகள் வருத்தமடைந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், யெகோவா தந்த பலத்தால் அவர்கள், “உறுதியானவர்களாகவும் அசைக்க முடியாதவர்களாகவும்” இருந்தார்கள். (1 கொ. 15:58) யெகோவாவின் சாட்சிகள் தடைசெய்யப்பட்டிருப்பதைப் பற்றி வயதான சகோதரரான அர்னஸ்ட் வாமாலா என்பவரிடம் சொன்னபோது, “என் இருதயத்தில் இருப்பதை அவர்கள் எப்படித் தடைசெய்ய முடியும்?” என்று கேட்டார். சட்டென அவர் கேட்ட அந்தக் கேள்வி, அங்குள்ள சகோதர சகோதரிகளுக்குக் கடவுள் மீதிருந்த பற்றைப் படம்பிடித்துக் காட்டியது.
அயல்நாட்டிலிருந்து வந்திருந்த மூப்பர்கள் எல்லாரும் போய்விட்டதால் உகாண்டாவிலிருந்த ஜார்ஜ் கடூ, பீட்டர் ஜாபி போன்ற மூப்பர்கள் எப்படிச் சமாளித்தார்கள்? அவர்கள் ஆன்மீகப் பற்றுள்ளவர்களாக இருந்ததும், மக்களின் கலாச்சாரத்தைப் புரிந்தவர்களாக இருந்ததும் அவர்களுக்குப் பெரிதும் கைகொடுத்தன. சகோதரர் ஜாபி இவ்வாறு சொல்கிறார்: “உகாண்டாவில் ஒருவர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு யெகோவாவைச் சேவிப்பதற்கு, யெகோவாவின் நெறிமுறைகளுக்கு முரணான பழக்கவழக்கங்களைத் தூக்கியெறிய வேண்டியிருந்தது; அதைச் செய்ய அவருக்கு அதிக சுயக்கட்டுப்பாடு தேவைப்பட்டது. யெகோவாவின் அமைப்பு எழுத்தில் கொடுத்த அறிவுரைகளை முழுமையாய்ச் சார்ந்திருக்க வேண்டியிருந்த, பொறுப்பான ஸ்தானத்திலிருந்த சகோதரர்களுக்கு
இந்தச் சுயக்கட்டுப்பாடு மிகவும் அவசியமாய் இருந்தது.” அங்கிருந்த மூப்பர்கள் தனிப்பட்ட படிப்பில் கண்ணும் கருத்துமாய் ஈடுபட்டார்கள்; அது, பொய்யான மனித ஞானத்தால் திசைதிருப்பப்படாதிருக்க அவர்களுக்கு உதவியது. இதனால், சோதனைமிக்க இந்தக் காலப்பகுதி, யெகோவாவின் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதற்கு மாறாக ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிசெய்தது.மறுபட்சத்தில், பாதுகாப்பற்ற உணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. பலர் இம்சைப்படுத்தப்பட்டார்கள், சிலர் ராணுவத்தினரைப் பற்றிய பயத்தில் வாழ்க்கையை ஓட்டினார்கள். ஊழல் தலைவிரித்தாடியது; இதனால் பொருளாதார சரிவு ஏற்பட்டது. அந்த அழகிய நாடு ரண வேதனைப்பட்டது. அந்தச் சோதனைக் காலத்திலும் உகாண்டாவிலிருந்த யெகோவாவின் உண்மை ஊழியர்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாய் இருப்பதற்குக் காரணங்கள் இருந்தனவா?
மகிழ்ச்சிதரும் கூட்டங்கள்
அரசுக்கு அச்சுறுத்தலாய் இருக்குமென கருதப்பட்ட அனைத்து அரசியல் கூட்டங்களையும் தடைசெய்ய அரசு பல முயற்சிகளை எடுத்தது. யெகோவாவின் சாட்சிகள் நடுநிலைமை வகித்தார்கள்; அதேசமயத்தில், ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதற்குக் கூட்டங்களைத் தவறவிடாதிருக்கும்படி பைபிள் கொடுத்த அறிவுரையை அவர்கள் மதித்து நடந்தார்கள். (எபி. 10:24, 25) சந்தேகக் கண்களோடு சதா கண்காணித்துக் கொண்டிருந்த அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து கூட்டங்களை நடத்துவதற்கு அதிக தைரியமும் சாமர்த்தியமும் தேவைப்பட்டது. தீங்குவிளைவிக்காத தங்கள் கூட்டங்களிடம் மற்றவர்களின் கவனம் திரும்பாதிருக்கக் கடவுளுடைய ஊழியர்கள் என்ன செய்தார்கள்?
முதலாவதாக, சகோதர சகோதரிகளின் வீடுகளில் சிறு சிறு தொகுதிகளாகக் கூடி பெரும்பாலான கூட்டங்களை நடத்தினார்கள். பெரிய தொகுதிகளாகக் கூடிவருகையில் “பிக்னிக்” என்ற போர்வையில் கூட்டங்களை நடத்தினார்கள். உதாரணத்திற்கு, மாதத்திற்கு ஒருமுறை சபையார் எல்லாரும் பொதுப் பேச்சுக்கும் காவற்கோபுர படிப்புக்கும் கூடிவந்தார்கள். பொதுப் பூங்காக்களில் அல்லது ஒருவருடைய தோட்டத்தில் சகோதரர்கள் “பிக்னிக்”குக்கு ஏற்பாடு செய்தார்கள். பொதுவாகவே கூடிப்பழகும் இயல்புடைய உகாண்டாவாசிகள் மத்தியில் இந்தத் தந்திரம் பலித்தது; நண்பர்களோ உறவினர்களோ ஒன்றாகச் சேர்ந்து பொழுதைக் கழிப்பதை அவர்கள் வழக்கத்துக்கு மாறானதாகக் கருதவில்லை. பைபிள்களையும் படிப்புப் உபா. 16:15.
புத்தகங்களையும் கவனமாக எடுத்து வந்ததோடு, அசல் பிக்னிக்குக்கும் வெட்டவெளியில் சமைப்பதற்கும் தேவைப்பட்ட எல்லாவற்றையும் சகோதரர்கள் சாமர்த்தியமாக எடுத்து வந்தார்கள்! இத்தகைய கூட்டங்கள், பூர்வ இஸ்ரவேலர் தங்கள் பண்டிகைகளை எந்தளவு அனுபவித்து மகிழ்ந்திருப்பார்கள் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டின.—இதே விதமாகத்தான் தடையுத்தரவு காலம் முழுவதும், சுருக்கப்பட்ட வட்டார மாநாடுகள் நடத்தப்பட்டன. சாட்சிகளைத் தடைசெய்ய அரசாங்கம் முயற்சிகளை எடுத்தபோதிலும், கூட்டங்களுக்குக் கூடிவருவதை அல்லது நற்செய்தியை அறிவிப்பதை சகோதரர்கள் நிறுத்தவே இல்லை. நைரோபியில் நடைபெற்ற மாநாடுகளிலும்கூட சில சகோதரர்களால் கலந்துகொள்ள முடிந்தது; திரும்பி வந்து, தங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் முடிந்தது.
‘பாம்புகளைப் போல் ஜாக்கிரதையானவர்கள், புறாக்களைப் போல் கபடமில்லாதவர்கள்’
“பாம்புகளைப் போல் ஜாக்கிரதையானவர்களாகவும், புறாக்களைப் போல் கபடமில்லாதவர்களாகவும்” நடந்துகொண்டால் தடையுத்தரவு மிகக் கடுமையாக இருக்காது என்றும், ஆன்மீகக் காரியங்களைத் தொடரலாம் என்றும் நம்புவதற்குப் பொறுப்பிலிருந்த சகோதரர்களுக்குக் காரணம் இருந்தது. (மத். 10:16) ஆகவே, விசேஷ பயனியர்கள் சர்வ ஜாக்கிரதையாகத் தங்கள் ஊழியத்தைச் செய்தார்கள்; பிரஸ்தாபிகளும் அதேபோல் வீட்டுக்கு வீடு ஊழியத்தைச் செய்தார்கள்.
ஊழியத்தில் எல்லாருமே யெகோவாவின் சாட்சிகளைச் சந்தோஷத்தோடு வரவேற்காதது உண்மைதான். 70-களின் மத்திபத்தில் ஒருநாள் பீட்டர் ஜாபி இளைஞரான ஃப்ரெட் நயென்டாவுடன் ஊழியம் செய்துகொண்டிருந்தார். 1962-ல் ஃப்ரெட் கைக்குழந்தையாக இருந்தபோது அவருடைய அம்மா சத்தியத்தைக் கற்றுக்கொண்டார். ஃப்ரெட் வளர்ந்து ஆளானதும், அவருடைய ஆன்மீக முதிர்ச்சிக்குப் பரீட்சை வந்தது.
ஊழியத்தில் கோபக்காரர் ஒருவர், அந்தச் சகோதரர்களை யெகோவாவின் சாட்சிகளென அடையாளம் கண்டுகொண்டார்; அவர் வேறு யாரும் இல்லை, சாதாரண உடையிலிருந்த ஒரு காவல் அதிகாரி. அந்தச் சகோதரர்களை அவர் கைது செய்து தன் வாகனத்திற்குள் தள்ளினார். அவர்கள் பயந்தார்கள்; ஏனென்றால், இவ்விதத்தில் கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களுக்கு அதன்பின் என்னாயிற்றென்றே தெரியாமல் போனது. அதுமட்டுமல்ல, ஏதாவது காரணம் சொல்லி அல்லது காரணமே இல்லாமல் சித்திரவதை செய்வது சகஜமாக இருந்தது. காவல் நிலையத்திற்குப் போகும் வழியில், யெகோவாவிடம் ஜெபம் செய்ய அந்தச் சகோதரர்களுக்கு நேரம் கிடைத்தது; நீதிமொழிகள் 25:15-ல் உள்ள வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை பீட்டரும் ஃப்ரெட்டும் கண்ணாரக் கண்டார்கள்; “நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்” என்று அந்த வசனம் சொல்கிறது. நல்ல வேளையாக, அன்று நிஜமான எலும்புகள் எதுவும் நொறுக்கப்படவில்லை. யெகோவாவின் சாட்சிகள் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதைப் பற்றியும் பைபிள் போதனைகளைப் பின்பற்றுவதைப் பற்றியும் பீட்டர் சாந்தமாக அந்த உயர் அதிகாரியிடம் விளக்கினார்; சகோதரர்கள் இருவருமே மிகுந்த மரியாதையோடு நடந்துகொண்டார்கள், பணிவோடு பதிலளித்தார்கள். ஆகவே, அந்த உயர் அதிகாரியின் தப்பெண்ணம் நொறுங்கியது. அதனால் என்ன செய்தார்?
சாந்தமாய் இருக்கவும் உத்தமத்தில் நிலைத்திருக்கவும் பலம் கேட்டு அவர்கள் ஜெபம் செய்தார்கள். அந்த அதிகாரி தன்னுடைய உயர் அதிகாரியிடம் அவர்களைக் கொண்டுசென்று, அவர்கள்மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்; அவர்களிடம் கேள்விக்குமேல் கேள்வியும் கேட்டார். இருந்தாலும்அவர் பீட்டரையும் ஃப்ரெட்டையும் விடுதலை செய்ததோடு, அவர்களைத் திரும்பக் கொண்டுபோய் விடும்படி அவர்களைக் கைதுசெய்திருந்த அதிகாரிக்கு ஆணையிட்டார்! அவமானமடைந்த அந்த அதிகாரி வேண்டாவெறுப்போடு ஒத்துக்கொண்டார். அந்தச் சகோதரர்கள், தங்களைக் காப்பாற்றியதற்காக யெகோவாவுக்கு நன்றி சொன்னார்கள்.
போலீஸிடம் மாட்டிக்கொண்ட மற்ற சந்தர்ப்பங்கள் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை. உதாரணத்திற்கு, இம்மானவல் காமிஸாவும் அவருடைய மனைவியும், என்டெபியிலுள்ள தங்கள் வீட்டில் ரகசியமாகக் கூட்டங்களை நடத்தினார்கள்; அவர்களுடைய குடும்பத்தினரும் ஆர்வமுள்ள ஒரு சிறிய தொகுதியினரும் அந்தக் கூட்டங்களில்
கலந்துகொண்டார்கள். பைபிள் படிப்புகளை ஒரே இடத்தில் நடத்தினால் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும் என்பதால் இம்மானவல் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்தார். அவருடைய திட்டம் நன்கு வேலை செய்ததாகத் தோன்றியதால், இப்படியே போலீஸிடமிருந்து தப்பித்துக்கொள்ளலாமென நினைத்துக்கொண்டார். ஒருநாள், என்டெபி உயிரியல் பூங்காவில் இம்மானவல் பைபிள் படிப்பை நடத்தி முடித்தபோது, ஒரு போலீஸ்காரர் அவரிடம் வந்தார்; இம்மானவல் சட்டென படிப்புப் புத்தகத்தை மறைக்கப் பார்த்தார். அப்போது அந்தப் போலீஸ்காரர், “ஏன் உங்கள் புத்தகங்களை மறைக்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் யெகோவாவின் சாட்சிகளென்று தெரியும். நீங்கள் எங்கே கூடிவருகிறீர்கள் என்றுகூட தெரியும். நாங்கள் நினைத்திருந்தால் எப்போதோ உங்களைக் கைது செய்திருப்போம். ஆனால், நீங்கள் உங்கள் வேலையைப் பார்க்கலாம்” என்றார். இம்மானவலும் தொடர்ந்து தன் வேலையைப் பார்த்தார், மிகுந்த கடமையுணர்ச்சியோடு!பிற்பாடு, இம்மானவல் தன் அலுவலகப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, தன் சொந்த கிராமத்தில் குடியேறினார்; ஆனால், அந்தக் கிராமத்தார் காட்டிய எதிர்ப்பும் செய்த பரிகாசமும் கொஞ்ச நஞ்சமல்ல. இயேசுவைப் போலவே அவரும், ‘சொந்த ஊராரால் மதிக்கப்படவில்லை.’ (மாற். 6:4) இருந்தாலும், கிட்டத்தட்ட 80 வயதை எட்டவிருந்த அவர், தொடர்ந்து “முதிர்வயதிலும் கனிதந்து” வந்தார்; தவறாமல் கூட்டங்களுக்கு 30 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே போய்வந்தார். (சங். 92:15) இன்று, அவருக்குக் கிட்டத்தட்ட 90 வயது; அவர் விரும்பும் அளவுக்கு இப்போது அவரால் சைக்கிள் ஓட்ட முடியாவிட்டாலும், உதவி ஊழியராக உண்மையோடு சேவை செய்து வருகிறார்.
ஊக்கந்தளராத பயனியர்கள்
தொடர்ந்து பதற்றம் நிலவியபோதிலும், பயனியர் ஊழியத்தில் ஈடுபட வழிகண்ட சிலர் எப்போதும் இருக்கத்தான் செய்தார்கள். அச்சமயத்தில் இருந்த பக்திவைராக்கியமான பயனியர்களில் ஒருவர்தான் ஜேம்ஸ் லூவெரெகெரா; அரசு சர்வேயராக இருந்த அவர் 1974-ல் ஞானஸ்நானம் பெற்றார். அதன்பின் சீக்கிரத்திலேயே, விவசாயம் செய்ய ஆரம்பித்தார்; ஏனென்றால், தன் சொந்த ஊரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நற்செய்தியைப் பிரசங்கிக்க நினைத்தார். ஆரம்பத்தில் அவருடைய மனைவியும் படித்தார், ஆனால் காலப்போக்கில் அவர் ஜேம்ஸைப் பயங்கரமாக எதிர்க்க ஆரம்பித்தார்.
உதாரணத்திற்கு, ஒரு நாள் விடிவதற்கு முன்பே ஜேம்ஸும் சில சகோதரர்களும் நைரோபியில் நடக்கவிருந்த மாவட்ட மாநாட்டிற்குப்
புறப்பட்டுச் சென்றார்கள். போலீஸ் சோதனைச் சாவடி ஒன்றில் வண்டி நின்றபோதுதான் ஜேம்ஸின் உடை வித்தியாசமாக இருந்ததைச் சகோதரர்கள் கவனித்தார்கள்; அவர் சம்பந்தமே இல்லாத ஏதேதோ துணிகளை எடுத்து மாட்டிக்கொண்டு வந்திருந்ததுபோல் தெரிந்தது. இருட்டில் அவசரமாகப் புறப்பட்டதால் வந்த வினைதான் இதுவென முதலில் ஜேம்ஸ் தமாஷாகச் சொன்னார். ஆனால், மற்ற சகோதரர்கள் விடாப்பிடியாகக் கேட்டதால் கடைசியில் உண்மையைச் சொல்லிவிட்டார். மாநாட்டிற்குப் போகவிடாமல் செய்வதற்காக அவருடைய மனைவி அவருடைய நல்ல உடைகளையெல்லாம் ஒளித்து வைத்துவிட்டாராம். ஆகவே, கையில் கிடைத்ததைப் போட்டுக்கொண்டு வருவதைத் தவிர வேறு வழி அவருக்குத் தெரியவில்லையாம். இதைக் கேட்ட அந்தச் சகோதரர்கள் இரக்கப்பட்டு தங்களுடைய உடைகளில் சிலவற்றை அவருக்குக் கொடுத்தார்கள்; அவரும் கண்ணியமான உடையுடன் மாநாட்டில் கலந்துகொண்டார்.சிலசமயங்களில், ஜேம்ஸின் வீட்டிலிருந்தும் அக்கம்பக்கத்திலிருந்தும் வந்த எதிர்ப்பு அவ்வளவு மோசமாக இருக்கவில்லை. ஆனால், மற்ற சமயங்களில் அது கடுமையாக இருந்தது. இப்படியே பல வருடங்கள் ஓடின. ஜேம்ஸ் அத்தனை காலமும் பொறுமையாக அதைச் சகித்துக்கொண்டு, விசுவாசமுள்ளவர் என்ற பெயரெடுத்தார். 2005-ல் அவர் இறந்தபோதிலும், இன்றுவரை சகோதரர்கள் அவருடைய விசுவாசத்தை மெச்சிப் பேசுகிறார்கள்; அதை யெகோவா தேவனும் நினைவில் வைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.
‘இடுக்கணில் உதவவே பிறந்த சகோதரன்’
“சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” (நீதி. 17:17) 1970-களில் உகாண்டாவிலிருந்த சாட்சிகள் இன்னல்களையும் ஆபத்துகளையும் சந்தித்தபோது கென்யாவைச் சேர்ந்த சகோதரர்கள் அவர்களுக்கு உதவிசெய்வதன் மூலம் சிநேகிதர்களென நிரூபித்தார்கள். எல்லையைத் தாண்டி உகாண்டாவுக்கு வந்து அன்பான சகோதர சகோதரிகளுக்கு உதவியும் உற்சாகமும் அளிக்க பயணக் கண்காணிகளுக்கும் கிளை அலுவலகப் பிரதிநிதிகளுக்கும் தைரியம் தேவைப்பட்டது.
1978-ல் உகாண்டாவின் படைப்பிரிவு ஒன்று டான்ஜானியாமீது படையெடுத்தபோது அரசியல் கலவரம் வெடித்தது. பதிலுக்கு டான்ஜானியாவின் ராணுவம் ஏப்ரல் 1979-ல், உகாண்டாவின் அரசாங்கத்தைக் கவிழ்த்தது. எல்லாரையும் கதிகலங்க வைத்துக்கொண்டிருந்த உகாண்டாவின் சர்வாதிகாரியான இடி ஆமின் அங்கிருந்து தப்பியோட வேண்டியதாயிற்று. அவர் இப்படி விழுந்தடித்துக்கொண்டு
வெளியேறியதன் விளைவாக உகாண்டாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. “ஆமின் போன கையோடு தடையுத்தரவும் போய்விட்டது” என்கிறார் ஒரு சகோதரர். “இனி மிஷனரிகள் தாராளமாய் திரும்பலாம்” என்று உகாண்டா டைம்ஸ் அறிவித்தது. ஆக, யெகோவாவின் மக்கள் மறுபடியும் மத சுதந்திரத்தை அனுபவித்தார்கள்!“அவர்கள் என்னைக் கொன்றுபோடுவதாக இருந்தாலும் பரவாயில்லை, நான் போயே தீருவேன்”
உகாண்டாவில் ஆட்சி கைமாறியபோது குழப்பம் தலைதூக்கியது; அது ஒரு பக்கம் சுதந்திரமடைந்தபோதிலும் மறு பக்கம் சூறையாடப்பட்டது. அராஜகம் தலைதூக்கியதால் திரும்பிய பக்கமெல்லாம் திருட்டும் வன்முறையும் தலைவிரித்தாடின. இருந்தாலும், உகாண்டாவுக்குச் செல்லவும் அங்கு வட்டார மாநாடுகளை நடத்த ஆரம்பிக்கவும் குன்ட்டர் ரெஷ்கா, ஸ்டான்லி மாகூம்பா ஆகிய இரண்டு சகோதரர்களை உடனடியாக அனுப்பி வைக்க கென்யா கிளை அலுவலகச் சகோதரர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
குன்ட்டர் இவ்வாறு சொல்கிறார்: “அங்கு போவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு நாங்கள் கென்யா மலையருகே மெரு என்ற இடத்தில் ஒரு பயனியர் பள்ளியை நடத்தினோம். கம்பாலாவில் முக்கியமாக இரவு வேளைகளில் நடந்த பல கொலைகளைப் பற்றி நான் செய்தித்தாளில் வாசித்தது எனக்கு நினைவிருக்கிறது. அதில் ஒரு பகுதியைச் சத்தமாக வாசித்தபின், ‘இந்த இடத்திற்கா அடுத்த வாரம் போக வேண்டும்!’ என்று கதிகலங்கிச் சொன்னேன். ஆனால், ‘நான் யோனாவைப் போல் என் பொறுப்பைச் செய்யாமல் ஓடிவிட நினைக்கிறேனா?’ என்று யோசித்தேன். உடனே என் பயம் பஞ்சாய் பறந்தது; ‘அவர்கள் என்னைக் கொன்றுபோடுவதாக இருந்தாலும் பரவாயில்லை, நான் போயே தீருவேன். யோனாவைப் போல் ஓட மாட்டேன்’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.”
திட்டமிட்டபடியே அந்த இரண்டு சகோதரர்களும் உகாண்டாவுக்கு வந்து சேர்ந்தார்கள்; நாட்டின் உட்பகுதிகளிலிருந்த சபைகளுக்கு ஸ்டான்லி விஜயம் செய்தார், பெரிய ஊர்களிலிருந்த சபைகளுக்கு குன்ட்டர் விஜயம் செய்தார். “போருக்குப்பின் நிறைய காரியங்களைச் சீர்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட 113 பிரஸ்தாபிகள்தான் ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மறுபடியும் சுதந்திரமாக ஒன்றுகூடிவந்து, வெட்டவெளியில் மாநாடு நடத்த முடிந்ததால் எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்; மாநாட்டிற்கு 241 பேர் வந்ததைக் கண்டும் ஆனந்தப்பட்டார்கள்” என்று அவர்கள் சொன்னார்கள். சத்தியத்தின் விதைகள் மிதித்து
நசுக்கப்பட்டபோதிலும், அவை துளிர்விட்டுத் தழைக்கவிருந்தது தெளிவாகத் தெரிந்தது.ஆபத்தான காலங்கள்
உகாண்டாவின் கிழக்கு எல்லைப்பகுதிக்கு அருகே அம்பாலே என்ற ஊரில் ஒரு சம்பவம் நடந்தது; குன்ட்டரும் ஸ்டான்லியும் ஓர் இரவு வேளையில், தாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு முன்பாகத் தங்கள் காரை நிறுத்தியிருந்தார்கள். நடுராத்திரியில், திருடர்கள் வந்து அந்தக் காரிலிருந்து எதையோ கழற்றும் சத்தம் அவர்களுக்குக் கேட்டது. குன்ட்டர் அவர்களைப் பார்த்துக் கத்திக் கூச்சலிட நினைத்தார்; ஆனால், சில நாட்களுக்கு முன்புதான் இதேபோல் திருடர்களைத் தடுக்க முயன்ற ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது அவர் நினைவுக்கு வந்தது. ஆகவே, காரைவிட உயிருக்குத்தான் மதிப்பு அதிகம் என்பதை அவர் உணர்ந்து, பேசாமல் இருந்துவிட்டார். விடிந்ததும், காரின் இரண்டு டையர்களும் முன்பக்க கண்ணாடியும் திருட்டுப்போயிருந்ததை அவர்கள் கவனித்தார்கள். உடனே போலீஸிடம் புகார் செய்தார்கள்; போலீஸோ, “திருடர்கள் மறுபடியும் வந்து மற்றவற்றைக் கழற்றிக்கொண்டு போவதற்குமுன் உங்கள் காரை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள்!” என்றது.
ஆகவே, இருவரும் கம்பாலாவுக்கு அவசரமாய் புறப்பட்டுச் சென்றார்கள். காரில் முன்பக்கக் கண்ணாடி இல்லாமல் குளிரிலும் காற்றிலும் 250 கிலோமீட்டர் தூரம் செல்வது அவர்களுக்கு மிகக் கஷ்டமாக இருந்தது; அதுவும் குன்ட்டரிடம் ஒரு போர்வையும், ஸ்டான்லியிடம் ஒரு தொப்பியும்தான் இருந்தன. திருட்டுப்போன டையர்களுக்குப் பதிலாக கைவசமிருந்த ஒரு டையரையும் இரவலுக்கு வாங்கிய இன்னொரு டையரையும் காரில் மாட்டியிருந்தார்கள்; ஆனால், அந்த இரவல் டையரில் காற்று குறைந்துகொண்டே வந்தது. போதாததற்கு, அந்த இரவல் டையரை இரண்டு நாட்களில் அவர்கள் திருப்பித்தர வேண்டியிருந்தது! போய்ச் சேரும்வரை அந்த டையர்களிலிருந்து
காற்று இறங்கிவிடக் கூடாதே என்ற தவிப்பில் அவர்கள் இருந்தார்கள்.அதுமட்டுமல்ல, கொள்ளைக்காரர்களுக்குப் பேர்போன ஒரு காட்டுப் பாதை வழியாக குன்ட்டரும் ஸ்டான்லியும் பயணம் செய்ய வேண்டியிருந்தது. “வேகமாக ஓட்டுங்கள், முந்திச் செல்ல யாரையும் விடாதீர்கள்” என்று அவர்கள் தங்கிய வீட்டின் சொந்தக்காரர் சொல்லியிருந்தார். தைரியமிக்க அந்தச் சகோதரர்கள் எப்படியோ கம்பாலாவுக்குப் பத்திரமாக வந்து சேர்ந்தார்கள், அதுவும் அதிவிரைவில்! மறுபடியும் அந்த இரவல் டையரை யாரிடமாவது கொடுத்து அனுப்புவதற்குத்தான் அவர்களுக்கு நேரம் இருந்தது.
புதிய சவால்களும் வாய்ப்புகளும்
சகோதரர் ரெஷ்கா 1980-ல் நியு யார்க், புருக்லினிலுள்ள உலகத் தலைமையகத்திற்குச் சென்றிருந்தார்; அப்போது, உகாண்டாவில் ஊழியம் எப்படி நடந்துவருகிறதென பெத்தேல் குடும்பத்தாருக்குச் சொல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். பிற்பாடு, உகாண்டாவுக்கு மறுபடியும் மிஷனரிகள் அனுப்பப்படலாம் என ஆளும் குழு அங்கத்தினர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள். இன்னுமதிக மிஷனரிகள் அனுப்பப்படுவதற்கு அது ஏற்ற நேரமாக இருந்ததை எல்லாரும் ஒப்புக்கொண்டார்கள். மீண்டும் மாநாடுகளை நடத்த முடிந்தது; 1981-க்குள் உகாண்டாவில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 175-ஐ எட்டிவிட்டது. சொல்லப்போனால், அவ்வருடம் ஜூலை மாதத்திற்குள், அந்த எண்ணிக்கை 206-ஆக உயர்ந்து புதிய உச்சநிலையை எட்டியபோது சகோதரர்களுக்கு ஒரே சந்தோஷம்!
இருந்தாலும், 10 வருடங்களுக்கும் மேலாக அங்கு நடந்த சண்டைகளில் பயன்படுத்தாமல் விடப்பட்ட ஆயுதங்களும் வெடிமருந்துகளும் பழிபாவத்திற்கு அஞ்சாத ஆட்கள் பலரின் கைகளில் சிக்கின. கண்மண் தெரியாமல் சுடுவதும் கொள்ளையடிப்பதும் சர்வசகஜமாகி, பீதியை ஏற்படுத்தின. பிரஸ்தாபிகள், ஆறுதலளிக்கும் பைபிள் பிரசுரங்களை அந்தப் பகுதியெங்கும் மிக ஜாக்கிரதையாக விநியோகிக்க பெருமுயற்சி செய்தார்கள்; ஜூலை மாதத்தில் ஒவ்வொரு பிரஸ்தாபியும் சராசரியாக 12.5 பத்திரிகைகளை விநியோகித்தார்கள். என்றாலும், மற்ற காரியங்களைப் போலவே வெளி ஊழியத்தையும் பகல் நேரத்தில் செய்வதுதான் விவேகமானதாகத் தெரிந்தது; ஏனென்றால், இருட்டில் ரௌடிகளின் அட்டகாசம் அதிகமாயிருந்தது. இப்படி ஆபத்துகள் ஒருபக்கம் இருந்தாலும், வளர்ச்சி ஏற்படுமென்பதற்கான அத்தாட்சி இன்னொரு பக்கம் தெளிவாகத் தெரிந்தது.
மீண்டும் மிஷனரிகளின் வருகை
கென்யாவிலிருந்து ஜெஃப்ரி வெல்ச், ஆரி பால்விஐனென் ஆகிய கிலியட் பட்டதாரிகள் செப்டம்பர் 1982-ல் கம்பாலாவுக்கு வந்து சேர்ந்தார்கள். ஜெஃப், ஆரி என்றழைக்கப்பட்ட அவர்கள் இருவரும் ஆரம்பத்திலிருந்தே நல்ல பலன் கண்டார்கள். ஜெஃப் சொல்கிறார்: “அச்சமயத்தில் மக்கள் ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருந்தார்கள்; ஆகவே, கருத்தைக் கவரும் தலைப்புகளில் வந்த பத்திரிகைகளை உடனடியாகப் பெற்றுக்கொண்டார்கள்.”
டிசம்பர் மாதத்தில், ஜெஃப்போடும் ஆரியோடும் சேர்ந்து ஊழியம் செய்ய, ஜெர்மனியிலுள்ள வீஸ்பாடனில் நடந்த கிலியட் விரிவாக்கப் பள்ளியில் கலந்துகொண்ட ஹைன்ட்ஸ் மற்றும் மாரியானா வெர்ட்ஹால்ட்ஸ் தம்பதியர் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஆரம்பத்திலிருந்தே, உகாண்டாவின் சீர்குலைந்த, ஆபத்தான சமுதாயங்களில் தங்கள் சகோதர சகோதரிகள் முன்னேறி வந்த விதத்தைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்துபோனார்கள்.
ஹைன்ட்ஸ் சொல்கிறார்: “தண்ணீர் சப்ளை, தகவல்தொடர்பு போன்ற வசதிகள் துண்டிக்கப்பட்டிருந்தன. அரசியல் விவகாரங்களில் பதற்ற நிலை நீடித்தது. திடீரென ஆட்சி கைப்பற்றப்பட்டதாகப் பலமுறை வதந்திகள் பரவின; பல இடங்களில் ராணுவ சாலை மறிப்புகள் காணப்பட்டன. முக்கியமாக இரவு வேளைகளில், துப்பாக்கிச் சூடும் திருட்டும் சர்வசாதாரணமாக நடந்தன. ஆகவே, இருட்டியதும் ஆள் நடமாட்டம் இல்லாமல் தெருக்கள் விறிச்சோடிக் கிடந்தன. எல்லாரும் வீட்டிற்குள்ளேயே இருந்தார்கள்; அதுவும், ‘கொள்ளைக்காரர்கள் யாரும் வந்துவிடக்கூடாதே’ என்று நினைத்தபடி, அதற்காக அடிக்கடி பிரார்த்தனையும் செய்துகொண்டு இருந்தார்கள்.”
ஹைன்ட்ஸும் மாரியானாவும் மிஷனரி இல்லமாகப் பயன்படுத்த ஒரு வீட்டைத் தேடிக்கொண்டிருந்தபோது, சாம் வாயிஸ்வா தன்னுடைய வீட்டிலேயே தன் குடும்பத்தாரோடு தங்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார். சாம் ஓர் ஆசிரியராகப் பணியாற்றிவந்தபோதிலும், நாட்டின் பொருளாதார சரிவால் ஏழ்மையில் வாடினார்; ஆகவே, அவருடைய குடும்பத்தார் காட்டிய உபசரிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
ஹைன்ட்ஸ் சொல்கிறார்: “பாதுகாப்பான இடத்தில் வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. ஆகவே, ஐந்து மாதங்களுக்கு சாமின் வீட்டில் தங்க வேண்டியதாயிற்று. அந்தச் சமயத்தில் நாங்கள் நெருங்கிப் பழக முடிந்தது. அவருடைய குடும்பம் பெரியது; அதனால்,
சிலசமயங்களில் அவர்கள் ஒரு வேளைதான் சாப்பிட முடிந்தது, என்றாலும் எப்போதுமே சந்தோஷமாக இருந்தார்கள்; பிள்ளைகள் மரியாதையோடும் கீழ்ப்படிதலோடும் நடந்துகொண்டார்கள். தண்ணீர் சரிவர கிடைக்காததால், பிள்ளைகள் 20 லிட்டர் பிடிக்கும் ப்ளாஸ்டிக் பாத்திரங்களில் வழியவழிய தண்ணீர் நிரப்பி தலையில் சுமந்து வர வேண்டியிருந்தது. நாங்கள் எப்போது ஊழியம் முடித்து வீடு திரும்பினாலும் நல்ல தண்ணீர் எங்களுக்கென்று தயாராக இருந்தது. ஆனால், அதை நாங்கள் சிக்கனமாக உபயோகிக்கக் கற்றுக்கொண்டோம். உதாரணத்திற்கு, கொஞ்சம் தண்ணீரில் மட்டும் குளித்தோம், அந்தத் தண்ணீரையும் ஒரு பேஸினில் பிடித்துவைத்து அதை டாய்லெட்டில் ஊற்றுவதற்கு வைத்துக்கொண்டோம்.”ஏப்ரல் 1983-ல், அதாவது ஆரம்பகால மிஷனரிகள் உகாண்டாவிலிருந்து வெளியேற்றப்பட்டுக் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு, புதிதாக வந்த அந்த நான்கு மிஷனரிகளுக்கும் ஓரளவு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீடு கிடைத்தது. சுற்றிலும் ஆபத்தான சூழல் நிலவியதாலும், உணவுப்பொருள்கள் கிடைப்பது தட்டுப்பாடாக இருந்ததாலும் அவர்கள் பல கஷ்டங்களைச் சகிக்க வேண்டியிருந்தது; ஆனால், அங்கிருந்த சகோதரர்கள் காட்டிய அன்பினால் எப்படிப்பட்ட அசௌகரியங்களையும் அவர்களால் சமாளிக்க முடிந்தது.
மாரியானா இவ்வாறு விளக்குகிறார்: “மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் நாங்கள் எப்போதுமே மகிழ்ச்சி கண்டோம். அவர்களுக்கு மதப்பற்று இருந்தது, பெரும்பாலோர் பைபிளை வைத்திருந்தார்கள், நற்செய்தியைக் கேட்கவும் விரும்பினார்கள். அவர்களை அணுகிப் பேசுவது மிகச் சுலபமாக இருந்தது, அவர்கள் இங்கிதம் தெரிந்து நடந்துகொண்டார்கள். பணக் கஷ்டமும் மற்ற கஷ்டங்களும் இருந்தபோதிலும் எப்போதுமே சிரித்த முகத்தோடு இருந்தார்கள்.”
இன்னுமதிகம் செய்ய விரும்பிய முதியவர்கள்
உகாண்டாவின் கலாச்சாரத்தில் உயர்வாய் மதிக்கப்பட்ட முதியவர்கள் பலர் நற்செய்திக்குச் செவிசாய்த்து, முதிர்வயதிலும் யெகோவாவுக்குச் சேவை செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, பௌலூ மூகாசா என்ற முன்னாளைய ஆசிரியர் ஒருவர் 89 வயதில் சத்தியத்தைக் கற்றுக்கொண்டார். தன் வாழ்நாள் காலத்தில் இரண்டு உலகப் போர்கள், குடியேற்ற ஆட்சி, கொடூரமான சர்வாதிகார ஆட்சி, அரசியல் புரட்சிகள் போன்றவற்றையெல்லாம் பார்த்திருந்த பௌலூ கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தார். மேசியானிய ராஜாவாகிய இயேசு கிறிஸ்து ‘ஏழைகளையும் எளியோரையும் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்’ என்பதைத் தெரிந்துகொண்டபோது அவர் பூரித்துப்போனார்.—சங். 72:12, 14, பொது மொழிபெயர்ப்பு.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு பௌலூ ஞானஸ்நானம் பெறத் தகுதிபெற்றார்; அப்போது, ‘இவ்வளவு வயதான ஒருவரைத் தண்ணீருக்குள் முக்கி எடுக்க முடியுமா?’ என சகோதரர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் அப்படிக் கவலைப்பட்டிருக்கவே வேண்டாம். தண்ணீருக்குள் முக்கப்படுவதை நினைத்து இளவயது பிரஸ்தாபி ஒருவரே பயந்து நின்றபோதிலும், 91 வயது பௌலூ தயங்காமல் ஞானஸ்நானம் பெற்று புன்முறுவலோடு தண்ணீரிலிருந்து வெளியே வந்தார். பௌலூவால் அதிகளவு ஊழியம் செய்ய முடியாவிட்டாலும், தன்னைப் பார்க்க வந்தவர்களிடம் மரணம்வரை பக்திவைராக்கியத்தோடு நற்செய்தியை அறிவித்துவந்தார்.
லோவின்ஸா நாகாயிமா என்பவர் முதிர்வயதோடு மட்டுமல்லாமல் உடல்நலப் பிரச்சினைகளோடும் போராடினார். அவருடைய கால்கள் பயங்கரமாக வீங்கியிருந்ததால் தனியாக அவரால் எங்கும் போய்வர முடியவில்லை. இருந்தாலும், நினைவுநாள் அனுசரிப்பு காலத்தில் ஒரு மாதம் துணைப் பயனியர் ஊழியம் செய்யும்படி சபையார் உற்சாகப்படுத்தப்பட்டபோது அவரும் முயற்சி செய்து பார்க்க விரும்பினார்.
அவர் துணைப் பயனியர் செய்ய சபையார் உதவினார்கள்; ஆர்வமுள்ளவர்களை அவருடைய வீட்டிற்கே அழைத்துச் சென்று பைபிள் படிப்பு நடத்தினார்கள். கிராமப்புற மக்களுக்குக் கடிதங்கள் மூலம் நற்செய்தியை அறிவிக்க மிஷனரிகளும் அவருக்குக் கற்றுக்கொடுத்தார்கள்; அவருக்குச் சௌகரியமான நேரத்தில் அவர் அதைச் செய்ய முடிந்தது. பின்பு, சனிக்கிழமைகளில் கம்பாலாவின் ஜனநெரிசல்மிக்க பகுதி ஒன்றிற்கு ஒரு மூப்பர் அவரை அழைத்துச் சென்றார்; அங்கே அவர் ஒரு சிறிய சுவர்மீது வசதியாக உட்கார்ந்துகொண்டு, அந்தப் பக்கம் வருகிறவர்களிடமும் போகிறவர்களிடமும் நாள் முழுக்க சாட்சி கொடுத்தார். மாதக் கடைசியில் அவர் மகிழ்ச்சியோடும் திருப்தியோடும், “என்னால் இதைச் செய்ய முடியும், அதுவும் சந்தோஷமாகச் செய்ய முடியும் என்பது இப்போது புரிகிறது!” என்றார். அவர் அந்த ஒரு மாதத்திற்கு மட்டுமல்ல, சபையாரின் அன்பான உதவியோடு, அடுத்த 11 மாதங்களுக்குத் துணைப் பயனியர் ஊழியம் செய்தார்!“. . . என்று எப்படிச் சொல்வீர்கள்?”
1980-களில், உகாண்டாவில் கடினமாக உழைத்துவந்த பிரஸ்தாபிகள், தங்கள் நாட்டுக்கு வந்துகொண்டே இருந்த ஆர்வமிக்க மிஷனரிகளை அன்போடு வரவேற்றார்கள். அந்த மிஷனரிகளில் சிலர் கிலியட் பள்ளியில் புதிதாகப் பட்டம் பெற்றிருந்தார்கள்; மற்றவர்கள், ஜயரில் (தற்போது, காங்கோ மக்கள் குடியரசு) மிஷனரி ஊழியம் செய்வதை விட்டுவிட்டு இங்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானவர்கள். கம்பாலாவிலும் ஜின்ஜாவிலும் மிஷனரிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், மக்கள்தொகை அதிகமாயிருந்த அந்தப் பகுதிகளில் இன்னும் முழுமையாக ஊழியம் செய்து முடிக்க முடிந்தது; உகாண்டா அறுப்புக்குத் தயாராக இருந்ததைக் கண்டு மிஷனரிகள் பூரித்துப்போனார்கள். ஆனால், ஆர்வமுள்ளவர்களைக் கண்டுபிடிப்பது அல்ல, அவர்களுடைய ஆர்வத்தை வளர்ப்பதுதான் சவாலாக இருந்தது.
பல மாத கிலியட் பயிற்சியை முடித்த கையோடு முழு உத்வேகத்துடன் வந்த சகோதரர் மாட்ஸ் ஹால்ம்க்விஸ்ட், சத்தியத்திடம் மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக உள்ளூர் மொழியைக் கரைத்துக் குடிக்க விரும்பினார். அச்சமயத்தில் ஃப்ரெட் நயென்டா விசேஷ பயனியராக என்டெபியில் சேவை செய்துவந்தார்; அவருக்கு
மொழிபெயர்க்கும் திறன் இருந்ததால், லுகாண்டா மொழியைத் தெளிவாகப் பேச புதிய மிஷனரிகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு அவர் பயன்படுத்தப்பட்டார்; அந்த மொழியின் வார்த்தைகள் எல்லாமே உச்சரிப்பதற்குக் கடினமானவை. ஆகவே, அந்த மொழியைக் கற்றுக்கொள்வது மாட்ஸுக்குப் பெரும் பாடாக இருந்தது.ஆரம்பத்தில், மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வகுப்புகள் ஒன்றில், “லுகாண்டா பாஷையில் ‘கடவுளுடைய அரசாங்கம்’ என்று எப்படிச் சொல்வீர்கள்?” என மாட்ஸ் கேட்டார்.
“ஓப்வாகாபாகா புவா காடோன்டா” என்றார் ஃப்ரெட், ராகத்தோடு.
‘வாயில்கூட நுழையாதுபோல் தெரிகிறதே’ என்று மாட்ஸ் நினைத்தார்; ஏன்தான் அந்தக் கேள்வியைக் கேட்டோமோ என்று தன்னையே நொந்துகொண்டார். இருந்தாலும், மாட்ஸ் நல்ல முன்னேற்றம் செய்து, லுகாண்டா மொழியைச் சரளமாகப் பேச ஆரம்பித்தார்.
கூட்டிச்சேர்க்கும் வேலை முன்னேறுகிறது
உகாண்டாவில் 1980-1990 வரையான காலப்பகுதி பெரும்பாலும் பிரச்சினைகள் நிறைந்ததாகவே இருந்தபோதிலும், நிறையப் பேர் பைபிள் சத்தியத்திடம் ஆர்வம் காட்டினார்கள். பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 130 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது; 1986-ல் 328-ஆக இருந்த அந்த எண்ணிக்கை 1990-ல் 766-ஆக உயர்ந்தது. நாடெங்கும் பல புதிய தொகுதிகள் உருவாகிக்கொண்டே இருந்தன. கம்பாலாவில் சபைகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது. ஜின்ஜாவிலிருந்த சபையில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை மும்மடங்குக்கும் அதிகமானது; இகாங்காவிலிருந்த தொகுதி விரைவில் ஒரு சபையானது.
ஜின்ஜாவிலிருந்த ஒரு மூப்பர் சொல்கிறார்: “சபை கிடுகிடுவென வளர்ந்ததால், அத்தனை புதிய பிரஸ்தாபிகளும் எங்கிருந்துதான் வந்தார்களோ என்று நினைத்தோம். கொஞ்சக் காலத்திற்கு, ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபியாக ஆக விரும்பியவர்களைச் சந்தித்துப் பேச ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது.”
இன்னும் பெரிய வயலில் அறுப்பு
குறிப்பிடத்தக்க அந்த வளர்ச்சிக்கு ஒரு காரணம், சகோதரர்கள் மிகுந்த பக்திவைராக்கியத்தோடு பயனியர் ஊழியம் செய்ததுதான். முதல் நூற்றாண்டில் நற்செய்தியை அறிவித்த பவுல், சீலா, தீமோத்தேயு ஆகியவர்களைப் போலவே, உகாண்டாவிலிருந்த 2 தெ. 3:9) இப்படிப்பட்ட அருமையான முன்மாதிரிகள் இருந்ததாலும், ஊழியம் செய்ய அதிகமானோர் தேவைப்பட்டதாலும், பக்திவைராக்கியமுள்ள பல பிரஸ்தாபிகள் ஊழியத்தில் பெருமளவு ஈடுபட தூண்டப்பட்டார்கள். இளையவர்கள், முதியவர்கள், மணமாகாதவர்கள், மணமானவர்கள், ஆண்கள், பெண்கள் என பலரும், சொல்லப்போனால் குடும்பப் பொறுப்புகளுள்ள சிலரும்கூட, கடினமாய் உழைக்கும் பயனியர்களின் பட்டியலில் சேர்ந்துகொண்டார்கள். 1980-களின் பிற்பகுதியில், மொத்த பிரஸ்தாபிகளில் சராசரியாக 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏதோவொரு வித பயனியர் ஊழியத்தில் ஈடுபட்டார்கள். அவர்களில் சிலர் இன்றுவரை முழுநேர ஊழியம் செய்து வருகிறார்கள்.
முழுநேர ஊழியர்கள் ‘பின்பற்றுவதற்கு முன்மாதிரியாய் இருந்தார்கள்.’ (வருடாந்தர விசேஷ ஊழியங்களில் பயனியர்கள் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள்; அவற்றை மக்கெதோனிய ஊழியங்கள் என்று ஆசையாக அழைத்தார்கள். (அப். 16:9, 10) அப்படிப்பட்ட ஊழியங்கள் பல வருடங்களாகத் தொடர்ந்து செய்யப்பட்டிருக்கின்றன. நியமிக்கப்படாத பிராந்தியத்தில் அல்லது அரிதாகவே ஊழியம் செய்யப்படுகிற பிராந்தியத்தில் மூன்று மாதங்கள்வரை சபைகள் ஊழியம் செய்கின்றன. அதோடு, அதிக தேவையிருக்கும் பிராந்தியங்களில் ஒழுங்கான பயனியர்கள் சிலர் தற்காலிக விசேஷ பயனியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அதனால் கிடைத்திருக்கும் பலன் மிகுந்த உற்சாகம் அளித்திருக்கிறது. ஆர்வமுள்ள பலர், சத்தியத்தைத் தெரிந்துகொள்ள தங்களுக்கு உதவிய இப்படிப்பட்ட ஊழியங்களைப் பாராட்டியிருக்கிறார்கள். பல புதிய தொகுதிகளும் சபைகளும் உருவாகியிருக்கின்றன.
இத்தகைய ஓர் ஊழியத்தின்போது, பீட்டர் ஆப்ராமாவ், மைக்கேல் ரைஸ் ஆகிய மிஷனரிகள் காபாலே என்ற ஊரில் ஊழியம் செய்தார்கள்; அப்போது, மார்கரெட் டோஃபாயோ என்ற பெண்ணைச் சந்தித்தார்கள். அவர் ஏற்கெனவே பைபிளைப் படித்திருந்தார். தான் கற்றுக்கொண்டது சத்தியம்தான் என்பதை அவர் உறுதியாக நம்பினார்; ஆகவே, அதைப் பற்றி ஏற்கெனவே சந்தர்ப்ப சாட்சி கொடுக்க ஆரம்பித்திருந்தார். அவருக்குத் தங்களாலான எல்லா உதவியும் செய்ய மிஷனரிகள் நினைத்தார்கள்; ஆகவே, தங்களிடம் இருந்த வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் ஒரே பிரதியையும் அவருக்குக் கொடுத்துவிட்டார்கள். திரும்பிப்போவதற்கு முன்பு கடைசி முறையாக அவரைச் சகோதரர்கள் சந்திக்கச் சென்றிருந்தபோது, மார்கரெட் அவர்களுக்காக விசேஷ விருந்து தயாரித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவரிடமிருந்த ஒரேவொரு கோழியை அடித்துச்
சமைத்திருந்தார். அவருடைய அன்பையும் தாராள குணத்தையும் கண்டு அவர்கள் நெகிழ்ந்துபோனார்கள், ஆனால் சற்று தர்மசங்கடமாகவும் உணர்ந்தார்கள். ஏனென்றால், மார்கரெட்டின் குடும்பத்தார் போதும் போதாமலும் சாப்பிட்ட உணவுக்கு ஓரளவு ஊட்டச்சத்தைச் சேர்த்தது அந்தக் கோழி போட்ட முட்டைகள்தான். இருந்தாலும், “நான் உங்களுக்குக் கொடுக்கிற இந்தச் சாப்பாட்டைவிட பல மடங்கு அதிகமாக நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள், அதனால் கவலைப்படாதீர்கள்” என்று அவர் சொன்னார். பிற்பாடு அவர் ஞானஸ்நானம் பெற்று, மரணம்வரை பக்திவைராக்கியத்தோடு ஊழியம் செய்துவந்தார்.வேகமான வளர்ச்சிக்கு இன்னொரு காரணம், நம்முடைய அருமையான பிரசுரங்களைச் சகோதரர்கள் பயன்படுத்திய விதமாகும். முன்பு குறிப்பிடப்பட்ட மாட்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “கற்பிக்கிற திறமையை வளர்த்துக்கொள்ள நாங்கள் முயற்சி செய்தாலும், உண்மையில் பைபிளும் பைபிள் பிரசுரங்களும்தான் மக்களின் மனதைக் கவர்ந்து, மாற்றங்களைச் செய்ய அவர்களை உந்துவிக்கின்றன. நடைமுறை பயனளிக்கும் நம் சிற்றேடுகள், நன்கு வாசிக்கத் தெரியாத, ஆனால் சத்தியத்திற்காக ஏங்குகிற ஆட்களின் இருதயத்தைத் தொடுகின்றன.”
இடையூறுகளைச் சமாளித்தல்
1980-களின் பிற்பகுதியில் அபார வளர்ச்சி ஏற்பட்டபோதிலும், சவால்கள் வராமல் இல்லை. 1985, ஜூலை மாதத்தில் ராணுவம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. முன்புபோலவே பாதுகாப்பு குலைந்தது, கொரில்லா போர் தீவிரமடைந்தது. தப்பியோடிய படைவீரர்கள் இன்னும் மூர்க்கத்தனமாகி, பொருள்களைச் சூறையாடினார்கள், கண்மூடித்தனமாக மக்களைச் சுட்டுத்தள்ளினார்கள். கொஞ்சக் காலத்திற்கு, ஜின்ஜாவில் மிஷனரிகள் வசித்த பகுதியைச் சுற்றி வெறித்தனமாகப் போர் நடந்தது. ஒருநாள் திடுதிப்பென அவர்களுடைய வீட்டிற்குள் போர்வீரர்கள் நுழைந்தார்கள்; ஆனால், அவர்கள் மிஷனரிகள் என்று தெரிந்ததும் ஒருசில பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு எதையும் நாசமாக்காமல் போய்விட்டார்கள். அதன்பின், 1986, ஜனவரி மாதத்தில், வேறொரு அரசு ஆட்சியைப் பிடித்தது; நாட்டில் மீண்டும் ஓரளவு அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்தது.
ஆனால் விரைவில், அந்தப் புதிய அரசு ஒரு புதிய எதிரியைச் சந்திக்க வேண்டியிருந்தது; அதுதான், உயிரைக் கொல்லும் எதிரியான எய்ட்ஸ். 1980-களில் அந்தக் கொள்ளைநோயினால் படுமோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உகாண்டா இருந்தது. சுமார்
10 லட்சம் பேர் இறந்திருப்பார்களென கருதப்படுகிறது; இது, 15-க்கும் அதிக வருடகால அரசியல் கலவரத்திலும் உள்நாட்டுப் போரிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கலாம். இந்த நோயினால் நம் சகோதரர்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள்?ஒழுங்கான பயனியரான வாஷிங்டன் சென்டோங்கோ இவ்வாறு சொல்கிறார்: “சமீபத்தில் சத்தியத்திற்கு வந்த சில சகோதர சகோதரிகள் மிகுந்த பக்திவைராக்கியத்தோடும் ஆர்வத்தோடும் இருந்தார்கள், ஆனால் எய்ட்ஸின் கோரப் பிடியில் சிக்கிப் பலியானார்கள்; சத்தியத்திற்கு வருவதற்கு முன்பாக அவர்கள் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.” மற்றவர்களுக்கு, சத்தியத்திலில்லாத மணத்துணையிடமிருந்து அந்நோய் தொற்றிக்கொண்டது.
வாஷிங்டன் சொல்கிறார்: “சிலசமயங்களில், எங்களுக்கு நெருக்கமானவர்களுடைய சவ அடக்கத்தைப் பற்றிக் கேள்விப்படாத மாதமே இல்லாததுபோல் தோன்றியது. குடும்பத்தினரைப் பறிகொடுக்காதவர்கள் யாருமே இருக்கவில்லை. அதுமட்டுமல்ல, எய்ட்ஸைப் பற்றி ஏராளமான மூடநம்பிக்கைகள் பரவின. அநேகர் அதைப் பில்லிசூனியத்தோடும் சாபக்கேட்டோடும் சம்பந்தப்படுத்தினார்கள். இந்தத் தவறான கருத்தினால் மக்கள் பயந்தார்கள், காரணமில்லாமல் தப்பெண்ணங்களை வளர்த்துக்கொண்டார்கள், பகுத்தறியும் திறனை இழந்தார்கள்.” என்றாலும், நம் சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் துணைநின்றார்கள்; உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி சொல்லி ஒருவரையொருவர் ஆறுதல்படுத்தினார்கள்; தங்களுடைய உள்ளப்பூர்வமான கிறிஸ்தவ அன்பைக் குறித்தும் உறுதியளித்தார்கள்.
1980-களின் முடிவில், உகாண்டாவெங்கும் நம்பிக்கை ஒளி பிரகாசித்தது. பாதுகாப்பான சூழல் திரும்பியது, பொருளாதார நிலைமை சீரடைந்தது, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன, பொது நிகழ்ச்சிகள் மீண்டும் துவக்கப்பட்டன அல்லது புதிதாக நடத்த ஆரம்பிக்கப்பட்டன.
அநேகர் அரசியல் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்; ஆகவே, சில சமயங்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய நடுநிலைமையைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள். ஒரு சந்தர்ப்பத்தில், அதிகாரிகள் அநியாயமாக ராஜ்ய மன்ற கட்டுமான வேலையை நிறுத்திவிட்டார்கள். சில மாநாடுகளை நடத்துவதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டார்கள். சில மிஷனரிகளின் விஸா காலம் முடிவடைந்ததும் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. 1991-ன் முடிவில், இரண்டே மிஷனரி சகோதரர்கள்தான்
மீந்திருந்தார்கள். அந்தச் சூழலை மாற்றுவதற்கு ஏதாவது செய்ய முடிந்ததா?கடைசியில், சில சகோதரர்கள் ஒன்றாகப்போய் அதிகாரிகளைச் சந்தித்து நம் நடுநிலைமையைப் பற்றி விளக்கினார்கள். அதிகாரிகள் அதைப் புரிந்துகொண்டபோது, உகாண்டாவுக்குத் திரும்பிவர மிஷனரிகளுக்கு அனுமதி அளித்தார்கள். ஊழியம் தடைபடாமல் தொடர்ந்து முன்னேறியது; 1993-ல், உகாண்டாவில் 1,000 பிரஸ்தாபிகள் இருந்ததாக அறிக்கை செய்யப்பட்டது. அதன்பின், ஐந்தே வருடங்களில் அந்த எண்ணிக்கை 2,000-ஐ எட்டியது. தற்போது சுமார் 40 மிஷனரிகள் நாடெங்கும் சிறப்பாக ஊழியம் செய்து வருகிறார்கள்.
மொழிபெயர்ப்பு ஏற்படுத்தும் அதிகரிப்பு
நாடு முழுவதும் ஆங்கிலம் பேசப்படுகிறது. என்றாலும், மிக அதிகமாகப் பேசப்படும் மொழி லுகாண்டா ஆகும். இதுதவிர, பல்வேறு இனத்தவர் 30-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகிறார்கள். ஆகவே, சமீப காலங்களில் அதிவேக வளர்ச்சி ஏற்பட்டிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், மொழிபெயர்ப்பு வேலையில் செய்யப்பட்ட முன்னேற்றமாகும்.
ஃப்ரெட் நயென்டா இவ்வாறு சொல்கிறார்: “என் அம்மா விசுவாசமிக்க ஒரு சாட்சியாக இருந்தார்; ஆனாலும், படிப்புக் கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து லுகாண்டாவுக்கு நான் மொழிபெயர்த்துச் சொன்னபோதுதான் கூட்டங்களின் மதிப்பை அவர் இன்னுமதிகமாகப் புரிந்துகொண்டார். பெரியளவிலான மொழிபெயர்ப்பு வேலைக்காக நான் தயாராகிக்கொண்டிருந்தது அப்போது எனக்குப் புரியவில்லை.” ஃப்ரெட் என்ன சொல்ல வந்தார்?
ஃப்ரெட் 1984-ல் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார்; அதன்பின் சீக்கிரத்திலேயே, மிஷனரிகளுக்கு லுகாண்டா மொழியைக் கற்றுக்கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். அதற்கடுத்த வருடம், லுகாண்டா மொழிபெயர்ப்புக் குழுவில் சேர்ந்துகொள்ள அழைப்பைப் பெற்றார். ஆரம்பத்தில், அவரும் மற்ற மொழிபெயர்ப்பாளர்களும் தங்களுக்குக் கிடைத்த நேரத்தில் வீட்டிலேயே மொழிபெயர்ப்பு வேலையைச் செய்தார்கள். பிற்பாடு, மிஷனரி இல்லத்தை ஒட்டியிருந்த ஒரு சிறிய அறையில் அவர்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து முழுநேரமாக மொழிபெயர்ப்பு வேலையைச் செய்தார்கள். 1975 வாக்கில் நிலவிய தடையுத்தரவின்போது காவற்கோபுரம் பத்திரிகை சில மாதங்களுக்கு லுகாண்டாவில் மொழிபெயர்க்கப்பட்டு நகலெடுக்கப்பட்டது ஆர்வத்திற்குரிய விஷயம். என்றாலும், சற்று காலத்திற்குப்
பிறகு அந்தப் பணி நின்றுவிட்டது. மறுபடியும் 1987-ல்தான் காவற்கோபுரம் லுகாண்டா மொழியில் பிரசுரிக்கப்பட்டது. அதுமுதல், மொழிபெயர்ப்புக் குழு விரிவாக்கப்பட்டிருக்கிறது; அதிகரித்துவரும் லுகாண்டா-மொழி சபைகளுக்காக இன்னுமதிக பிரசுரங்களை மொழிபெயர்க்க மொழிபெயர்ப்புக் குழுவினர் கடினமாக உழைத்து வந்திருக்கிறார்கள். தற்போது, நாட்டிலுள்ள சபைகளில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி, லுகாண்டா-மொழி சபைகளாக இருக்கின்றன.காலப்போக்கில், நம் பிரசுரங்கள் மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. தற்போது, முழுநேரமாக வேலை செய்யும் மொழிபெயர்ப்புக் குழுக்கள் ஆகோலி, லூகோன்ஸோ, ரூன்யான்கோரெ ஆகிய மொழிகளில் இருக்கின்றன. அதோடு, ஆடெஸோ, லூக்பாரா, மாடி, ரூடோரோ ஆகிய மொழிகளில் சில பிரசுரங்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
ஆகோலி குழுவினர் கூலூவிலும் ரூன்யான்கோரெ குழுவினர் அம்பாராராவிலும் இருந்து மொழிபெயர்க்கிறார்கள்; அந்த ஊர்களில்தான் அம்மொழிகள் அதிகம் பேசப்படுகின்றன. ஆகவே, மொழிபெயர்ப்பாளர்கள் அங்கிருப்பது, தாய்மொழியைத் தொடர்ந்து பேசவும், எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் மொழிபெயர்க்கவும் அவர்களுக்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், அங்குள்ள சபைகளும் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியால் பயனடைகின்றன.
மொழிபெயர்ப்பு வேலைக்கு முயற்சியும் மூலாதாரங்களும் பெருமளவு தேவை என்பதில் சந்தேகமே இல்லை. கடினமாய் உழைக்கும் உகாண்டா மொழிபெயர்ப்பாளர்களும், உலகெங்கும் உள்ள மற்ற மொழிபெயர்ப்புக் குழுவினரும், மொழியைப் புரிந்துகொள்வதற்கும் திறம்பட மொழிபெயர்ப்பதற்கும் கொடுக்கப்பட்ட விசேஷ பயிற்சிகளிலிருந்து பயனடைந்திருக்கிறார்கள். அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிக்கும் செய்யப்பட்ட செலவுக்கும் கைமேல் பலன் கிடைத்திருக்கிறது; உகாண்டாவில், பலதரப்பட்ட “கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும்” சேர்ந்த அதிகமதிகமான மக்கள் தங்களுடைய தாய்மொழியிலேயே பைபிள் சத்தியத்தைப் படித்து என்றுமில்லாதளவுக்குப் பயனடைகிறார்கள். (வெளி. 7:9, 10) இதன் விளைவாக, 2003-ஆம் ஆண்டிற்குள், அங்கு 3,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருந்தார்கள்; மூன்றே ஆண்டுகளில், அதாவது 2006-ல், அவர்களுடைய எண்ணிக்கை 4,005-ஆக உயர்ந்தது.
தேவை—இன்னுமதிக ராஜ்ய மன்றங்கள்
ஆரம்ப காலத்தில், சகோதரர்களுடைய வீடுகளிலும், கம்யூனிட்டி சென்டர்களிலும், பள்ளி வகுப்பறைகளிலும் கூட்டங்கள்
நடத்தப்பட்டன. கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு மட்டுமே முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட மன்றங்கள், வெயிலில் உலர்ந்த செங்கலால் கட்டப்பட்டு ஓலை வேயப்பட்ட குடிசைகளாகும்; அவை நாமாயின்கோ, ரூசெசெ ஆகிய கிராமங்களில் இருந்தன. அந்த இரண்டு கிராமங்களிலும் இருந்த சகோதரர்கள் தாங்களாகவே முன்வந்து எடுத்த முயற்சிகளுக்குத் தக்க பலன் கிடைத்தது; அங்கு சபைகள் ஸ்திரமாக்கப்பட்டன.நகரங்களிலோ ஒரு சாதாரண கட்டிடத்திற்கே பெருமளவு செலவு பிடித்தது; உகாண்டாவின் பொருளாதார நிலைமை மோசமாக இருந்ததால் ராஜ்ய மன்றங்கள் கட்டுவதைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதிருந்தது. 1988, மார்ச் மாதத்தில்தான் நிரந்தரமான முதல் ராஜ்ய மன்றம் ஜின்ஜாவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் கட்டுமானத்திற்காக சகோதரர்கள் செய்த வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல; அருகிலிருந்த ஒரு காட்டிற்குப் போய் மரங்களை வெட்டி, மரக்கட்டைகளை மணல் சாலைகள் வழியாகக் கொண்டுவந்து, பின்பு மன்றத்தைக் கட்டினார்கள்! பிற்பாடு, அம்பாலே, கம்பாலா, டோரோரோ ஆகிய ஊர்களிலிருந்த சகோதரர்களும் மனமுவந்து தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி ராஜ்ய மன்றங்களைக் கட்டினார்கள்.
1999-ல் ராஜ்ய மன்ற கட்டுமான வேலை வேகமாக முன்னேறியது; அந்த ஆண்டில், தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்திலுள்ள மண்டலப் பொறியியல் அலுவலகத்தின் உதவியோடு ஒரு கட்டுமானக் குழு ஏற்படுத்தப்பட்டது. தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகம் ஒன்பது பேரை நியமித்தது; அதில் இரண்டு சர்வதேச ஊழியர்களும் அவர்களுடைய மனைவிகளும் இருந்தார்கள். அந்த ஒன்பது பேரும் ஆர்வத்தோடு வேலையைச் சீக்கிரமாகக் கற்றுக்கொண்டார்கள்; அவர்கள் அங்குள்ள சகோதரர்களுக்கும் பயிற்சி அளித்தார்கள். கட்டுமானத் திட்டம் வேகமாக முன்னேறியது, 67 மன்றங்கள் கட்டி முடிக்கப்பட்டன; அவை ஒவ்வொன்றிற்கும் சராசரியாக ஒன்றரை மாதமே எடுத்தது. இத்தனைக்கும், சாதனங்கள் அதிகம் இல்லை, அடிக்கடி தண்ணீர் கிடைக்கவில்லை, கட்டுமானப் பொருள்கள் எப்போது கிடைக்கும் எப்போது கிடைக்காது என்று சொல்ல முடியவில்லை.
இப்போது, உகாண்டாவிலுள்ள பெரும்பாலான சபைகள் சொந்த ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களை நடத்தி மகிழ்கின்றன; அதனதன் பிராந்தியத்தில் ஒரு மன்றம் இருப்பதால் பல நன்மைகளை அனுபவிக்கின்றன. பள்ளி வகுப்பறைக்கு வர விரும்பாத ஆர்வமுள்ளோர், வணக்கத்திற்குத் தகுந்த இந்த இடத்திற்கு வரத் தயாராய் இருக்கிறார்கள்.
ஆகவே, கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்திருக்கிறது, சபைகள் வேகமாக வளர்ந்திருக்கின்றன.அதிவேக வளர்ச்சியைச் சமாளித்தல்
சபைகளில் அதிவேக வளர்ச்சி ஏற்பட்டபோது, மாநாடுகள் நடத்துவதற்குப் பொருத்தமான இடங்கள் கிடைக்காமல் திண்டாட வேண்டியிருந்தது. முக்கியமாகக் கிராமப்புறங்களைச் சேர்ந்த சகோதரர்கள் மாநாடுகளில் கலந்துகொள்வதற்கு வெகு தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டுமென சகோதரர்கள் நினைத்தார்கள்; ஆனால், மாநாடுகளை நடத்துவதற்குத் தகுந்த இடங்களை எப்படிக் கண்டுபிடிப்பதென யோசித்தார்கள். அதற்கு நல்லதொரு தீர்வு கிடைத்தது. தேவைக்கேற்ப விரிவாக்கப்படும் ராஜ்ய மன்றங்களைக் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த மன்றங்கள் மற்ற மன்றங்களின் அளவுள்ளவைதான்; ஆனால், அதன் பின்பக்க கதவைத் திறந்தால், தரையும் கூரையும் கொண்ட, நாலா பக்கமும் திறப்புள்ள பெரிய மன்றம் தயார்! மாநாடுகளுக்குத் திரண்டு வருவோர் அங்கு அமர்ந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட மன்றங்கள் ஏற்கெனவே காஜான்சி, ரூசெசெ, லிரா ஆகிய இடங்களில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன; சீட்டா என்ற இடத்தில் புதிதாக ஒன்று இப்போது கட்டப்பட்டு வருகிறது.
யெகோவாவின் ஆசீர்வாதத்தால் உகாண்டாவில் ஏற்பட்ட ஆன்மீக வளர்ச்சியினால், அமைப்பில் சில மாற்றங்களையும் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. 1994-க்கு முன்பாக, அந்த முழு நாட்டிற்கும் ஒரேவொரு வட்டாரம்தான் இருந்தது. பிற்பாடு, பெருகி வந்த சபைகளுக்கும் தொகுதிகளுக்கும் உதவுவதற்காகவும், நாட்டிலிருந்த பலதரப்பட்ட மொழியினருக்கு உதவுவதற்காகவும் இன்னுமதிக வட்டாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. இன்று, 111 சபைகளும் சுமார் 50 தொகுதிகளும் எட்டு வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன; அவற்றில் மூன்று லுகாண்டா-மொழி வட்டாரங்கள்.
உகாண்டாவிலுள்ள வட்டாரக் கண்காணிகளில் ஒருவரான அப்பாலோ மூகாசா 1972-ல் ஞானஸ்நானம் பெற்றார்; உயர் கல்வியைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக 1980-ல் அவர் முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அந்தத் தீர்மானத்தை நினைத்து அவர் இப்போது வருந்துகிறாரா?
“இல்லவே இல்லை. விசேஷ பயனியராகவும், ஆரம்பகாலத்தில் தொகுதிகளுக்கும் பின்பு சபைகளுக்கும் விஜயம் செய்த பயணக் கண்காணியாகவும் சேவித்ததில் எத்தனையோ நல்ல அனுபவங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. முக்கியமாக, ஊழியப் பயிற்சிப் பள்ளியில்
ஆன்மீக விஷயங்களின்பேரிலும் அமைப்புசார்ந்த விஷயங்களின்பேரிலும் கிடைத்த மேம்பட்ட பயிற்சி என் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டது” என்று அவர் சொல்கிறார்.உகாண்டாவில், அப்பாலோ தவிர 50-க்கும் மேற்பட்ட சகோதரர்கள் 1994 முதற்கொண்டு ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொண்டு அதிமுக்கிய விஷயங்களைக் கற்றிருக்கிறார்கள். அந்த வருடத்தில்தான் கென்யா கிளை அலுவலகத்தில் அந்த வகுப்புகள் முதன்முதலாக நடத்தப்பட்டன. மனப்பூர்வமாய் சேவை செய்யும் இந்தச் சகோதரர்களில் அநேகர் விசேஷ பயனியர்களாகச் சிறிய சபைகளுக்கும் தொகுதிகளுக்கும் பெருமளவு உதவியாய் இருக்கிறார்கள்; மற்றவர்கள், பயணக் கண்காணிகளாகத் தங்கள் சகோதர சகோதரிகளுக்குச் சேவை செய்கிறார்கள்.
1995-ல், உகாண்டாவில் நாட்டு ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது; அது, கென்யா கிளை அலுவலகத்தின் மேற்பார்வையில் செயல்பட்டது. கம்பாலா மிஷனரி இல்லங்களில் ஒன்று, லுகாண்டா மொழிபெயர்ப்புக் குழு உட்பட எட்டு முழுநேர ஊழியர்கள் அடங்கிய ஒரு புதிய குடும்பத்தாரின் வீடாக ஆனது. 2003, செப்டம்பர் மாதத்தில் உகாண்டாவிலேயே ஒரு கிளை அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.
“நாங்கள் இப்போது பூஞ்சோலையில் இருக்கிறோம்”
வளர்ந்து வந்த மொழிபெயர்ப்புக் குழுக்களையும் அதிகரித்து வந்த மற்ற வேலைகளையும் கவனித்துக்கொள்ள அந்நாட்டு ஆலோசனைக் குழு கொஞ்சக் காலத்திற்கு முயன்று கொண்டிருந்தது. ஆகவே, இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கம்பாலாவிலிருந்த அலுவலகத்திற்குத் தொட்டாற்போல் அமைந்திருந்த இரண்டு கட்டிடங்களை அது வாங்கியது. என்றாலும், கூடுதலான விரிவாக்கத்திற்கு இன்னும் பெரிய கட்டிடங்கள் பிற்பாடு தேவைப்பட்டன. ஆகவே, 2001-ல் புதிய கிளை அலுவலகத்திற்காகப் பத்து ஏக்கர் நிலப்பரப்புள்ள ஓர் இடத்தை வாங்க ஆளும் குழு அனுமதி அளித்தது; அந்த இடம் கம்பாலாவின் புறநகர் பகுதியில், விக்டோரியா ஏரிக்கரைக்கு அருகே அமைந்திருந்தது.
கிளை அலுவலகத்தைக் கட்டுவதற்கு ஏற்ற சாதனங்களை வைத்திருந்த ஒரு கம்பெனி ஆரம்பத்தில் கட்டுமான வேலையை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை; ஏனென்றால், அதற்கு ஏற்கெனவே பல வேலைகள் குவிந்திருந்தன. ஆனால், திடீரென அந்தக் கம்பெனியின் ஆட்கள் மனதை மாற்றிக்கொண்டு, புதிய கிளை அலுவலகத்தை
மிகக் குறைந்த செலவில் கட்டிக் கொடுக்க முன்வந்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது. எதிர்பாராத விதமாக ஒரு பெரிய கான்ட்ராக்ட்டை அவர்கள் இழந்துவிட்டதால், கிளை அலுவலகத்தை முடிந்தவரை சீக்கிரமாகக் கட்டிக்கொடுக்க அவர்கள் ஒப்புக்கொண்டார்களாம்.2006, ஜனவரி மாதத்தில், 32 அறைகள் கொண்ட அந்த அழகான, புத்தம் புதிய இரண்டு மாடி குடியிருப்புக் கட்டிடத்திற்குக் குடிபுகுந்த பெத்தேல் குடும்பத்தார் அளவில்லா ஆனந்தம் அடைந்தார்கள். அந்த வளாகத்தில் ஓர் அலுவலகக் கட்டிடமும், பெரிய சாப்பாட்டு அறையும், சமையல் அறையும், சலவை அறையும் இருந்தன. சுற்றுப்புறத்திற்குக் கேடு விளைவிக்காத விதத்தில் அமைக்கப்பட்ட சாக்கடை
வசதிகளும், லிட்ரேச்சர் மற்றும் ஷிப்பிங் இலாகாவுக்குரிய கிடங்கும் இருந்தன; அதோடு, பழுதுபார்க்கும் பட்டறை, தண்ணீர் சேமிப்பு, எலெக்ட்ரிக் ஜெனரேட்டர் ஆகியவற்றிற்குரிய கட்டிடங்களும் இருந்தன. “நாங்கள் இப்போது பூஞ்சோலையில் இருக்கிறோம், முடிவில்லா வாழ்வு ஒன்றுதான் இல்லை!” என ஒரு சகோதரர் பூரிப்புடன் சொன்னார். 2007, ஜனவரி 20, சனிக்கிழமை அன்று ஆளும் குழுவின் அங்கத்தினரான சகோதரர் ஆந்தணி மாரிஸ் பிரதிஷ்டை பேச்சைக் கொடுத்தார்.மெய் அறிவு பெருகுகிறது
உகாண்டாவிலுள்ள யெகோவாவின் மக்கள் சமீப காலம் முழுவதும், கலவரமான காலத்திலும்சரி அமைதியான காலத்திலும்சரி, பிரசங்கித்து வந்திருக்கிறார்கள்; ஆம், ‘சாதகமான காலத்திலும் சரி பாதகமான காலத்திலும் சரி, பிரசங்கம்’ செய்வது எப்படியிருக்குமென அனுபவத்தில் கற்றிருக்கிறார்கள். (2 தீ. 4:2) 2008-ல் 4,766 பிரஸ்தாபிகள் 11,564 பைபிள் படிப்புகளை நடத்தி மகிழ்ந்தார்கள்; கிறிஸ்துவின் மரண நினைவுநாள் அனுசரிப்பில் 16,644 பேர் கலந்துகொண்டார்கள். இந்த எண்ணிக்கைகளையும், 6,276 பேருக்கு 1 பிரஸ்தாபி என்ற விகிதத்தையும் பார்க்கும்போது, அங்குள்ள வயல்கள் இன்னமும் ‘அறுவடைக்குத் தயாராக’ இருப்பது தெரிகிறது.—யோவா. 4:35.
அதேசமயத்தில், சட்டென சூழ்நிலைகள் மாறலாம் என்பதையும் திடீரென நம் விசுவாசம் பரீட்சிக்கப்படலாம் என்பதையும் உகாண்டாவிலுள்ள சகோதர சகோதரிகள் கசப்பான அனுபவங்களிலிருந்து கற்றிருக்கிறார்கள். இருந்தாலும் அந்த அனுபவங்களிலிருந்து, யெகோவாவின்மீதும் அவரது வார்த்தையிலுள்ள அறிவுரையின்மீதும் உலகளாவிய சகோதரத்துவத்தின்மீதும் நம்பிக்கை வைக்க அவர்கள் கற்றிருக்கிறார்கள்.
முதிர்வயதிலிருந்த விசுவாசமிக்க தீர்க்கதரிசியான தானியேலிடம் ஒரு தேவதூதர், ‘முடிவுகாலத்தில் [மெய்] அறிவு பெருகும்’ என்று சொன்னார். (தானி. 12:4) யெகோவாவின் ஆசீர்வாதத்தால், மெய் அறிவு உகாண்டாவில் உண்மையிலேயே பெருகியிருக்கிறது. மாபெரும் நைல் நதி உற்பத்தியாகிற இந்தப் பகுதியில், சத்திய நீரூற்று மேன்மேலும் பெருக்கெடுத்து எல்லாருடைய ஆன்மீகத் தாகத்தையும் தீர்க்கும் என்பது உறுதி. உலகெங்கும் நடக்கும் ஊழியத்தை யெகோவா தொடர்ந்து ஆசீர்வதிக்கையில், அனைவரும் ஒன்றுசேர்ந்து சதா காலங்களுக்கும் யெகோவாவுக்குத் துதியை முழங்கப்போகும் காலத்திற்காக நாம் ஆவலோடு காத்திருக்கிறோம்.
[அடிக்குறிப்புகள்]
a ஃபிராங்க் ஸ்மித்தின் வாழ்க்கை சரிதை, ஆகஸ்ட் 1, 1995 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 20-24-ல் காணப்படுகிறது. முதன்முதலாகக் கிழக்கு ஆப்பிரிக்காவுக்குச் சென்று பிரசங்கித்தவர்களில், ஃபிராங்கின் அப்பாவான ஃபிராங்க் டபிள்யூ. ஸ்மித்தும் அவருடைய சித்தப்பா கிரே ஸ்மித்தும் சித்தி ஆல்கா ஸ்மித்தும் அடங்குவர். ஃபிராங்க் பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவருடைய அப்பா கேப்டவுனிலுள்ள தன் வீட்டிற்குத் திரும்புகையில் மலேரியா ஜுரத்தில் இறந்துபோனார்.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது; தற்போது அச்சில் இல்லை.
[பக்கம் 84-ன் சிறுகுறிப்பு]
‘ஓர் அமெரிக்கரும் ஒரு ஸ்காட்லாந்தவரும் சேர்ந்து உரையாடுவதை ஆப்பிரிக்க வானொலியில் கேட்க ரொம்பவே வித்தியாசமாக இருந்தது’
[பக்கம் 92-ன் சிறுகுறிப்பு]
“என் இருதயத்தில் இருப்பதை அவர்கள் எப்படித் தடைசெய்ய முடியும்?”
[பக்கம் 111-ன் சிறுகுறிப்பு]
“லுகாண்டா பாஷையில் ‘கடவுளுடைய அரசாங்கம்’ என்று எப்படிச் சொல்வீர்கள்?” “ஓப்வாகாபாகா புவா காடோன்டா”
[பக்கம் 72-ன் பெட்டி/ படம்]
உகாண்டா—ஒரு கண்ணோட்டம்
நிலம்
அடர்த்தியான வெப்பமண்டல மழைக் காடுகள், பரந்து விரிந்துகிடக்கும் சமதளப் புல்வெளிகள், எண்ணற்ற ஆறுகள், ஏராளமான ஏரிகள், பனிமூடிய முகடுகளுடன் கம்பீரமாய் காட்சியளிக்கும் ருவென்ஜோரி மலைத்தொடர் என்று வியக்க வைக்கும் வேறுபாடுகள் நிறைந்த நாடுதான் உகாண்டா. அதன் பரப்பளவு 2,41,551 சதுர கிலோமீட்டர்; ஆப்பிரிக்காவிலேயே மிகப் பெரிய விக்டோரியா ஏரியில் கிட்டத்தட்ட பாதி ஏரி அந்தப் பரப்பளவில் அடங்கும்.
மக்கள்
சுமார் 30 இனத் தொகுதிகளாகப் பிரிந்திருக்கிறார்கள்; மக்கள் தொகையில் 85 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிராமப் புறங்களில் வசிக்கிறார்கள்.
மொழி
உகாண்டாவில் 32-க்கும் அதிகமான மொழிகள் பேசப்பட்டாலும், லுகாண்டா மொழி பெரும்பாலோர் பேசும் பொது மொழியாக இருக்கிறது. ஆங்கிலமும் ஸ்வாஹிலியும் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கின்றன.
பிழைப்பு
காபி, தேயிலை, பஞ்சு ஆகியவற்றையும், பிற பணப்பயிர்களையும் விளைவிப்பதால் உகாண்டா ஒரு விவசாய நாடாகத் திகழ்கிறது. பெரும்பாலான உகாண்டாவாசிகள் விவசாயிகள்; தாங்கள் பயிர் செய்கிறவற்றைச் சாப்பிட்டே அவர்கள் வாழ்கிறார்கள்; சிலர் மீன்பிடிக்கும் தொழில் அல்லது சுற்றுலா தொழில் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்.
உணவு
வாழைக்காயை வேக வைத்துத் தயாரிக்கப்படும் மாடூகி (படத்தில் காண்க) என்ற பதார்த்தத்தை நாட்டின் தென் பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் அதிகம் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். சோள உணவு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கம்பு மாவால் அல்லது மரவள்ளிக்கிழங்கு மாவால் தயாரிக்கப்படும் ரொட்டி ஆகியவற்றைப் பல்வேறு காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.
சீதோஷ்ணம்
தெற்கே சுமார் 5,000 அடியிலிருந்து வடக்கே சுமார் 3,000 அடியாகச் சரிந்திருக்கும் பீடபூமியில் அமைந்துள்ள உகாண்டா நாடு, மிதமான சீதோஷ்ணம் உள்ள வெப்பமண்டல நாடாகும். நாட்டின் பெரும் பகுதியில், கோடைக் காலமோ மழைக் காலமோ நிலவுவதைத் தெளிவாய்க் காண முடியும்.
[பக்கம் 77-ன் பெட்டி/ படம்]
உள்ளத்தைத் தொட்ட உண்மையான கிறிஸ்தவ அன்பு
பீட்டப் ஜாபி
பிறப்பு 1932
ஞானஸ்நானம் 1965
பின்னணிக் குறிப்பு தடையுத்தரவு சமயத்தில் பிரசுரங்களை மொழிபெயர்க்க உதவிய மூப்பர். இவருடைய மனைவி பெயர் எஸ்தர்; இந்தத் தம்பதியருக்கு நான்கு பிள்ளைகள்.
◼ உகாண்டாவில் ஊழியம் செய்ய முதன்முதலாக மிஷனரிகள் வந்தபோது, மக்கள் மத்தியில் இனப் பாகுபாடு மிகுதியாக இருந்தது; பெரும்பாலான வெள்ளையர்கள் கருப்பு ஆப்பிரிக்கர்களிடமிருந்து விலகியே இருந்தார்கள். மிஷனரிகள் காட்டிய உண்மையான கிறிஸ்தவ அன்பு எங்கள் உள்ளத்தைத் தொட்டது; அவர்களை நாங்கள் நெஞ்சார நேசிக்க ஆரம்பித்தோம்.
1970-களின்போது, சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் அம்பாராராவில் குடியிருந்த மிஷனரிகளின் கூட்டுறவை நாங்கள் குடும்பமாக அனுபவித்தோம், அவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்வதில் மகிழ்ந்தோம். ஒருநாள் அங்கு செல்லும்போது எங்கள் காரைப் படைவீரர்கள் நிறுத்தினார்கள். “நீங்கள் சாக விரும்பினால் போகலாம்” என்று ஒரு படைவீரன் சொன்னான். மீண்டும் வீட்டுக்கே திரும்பிப் போவது நல்லதாகப் பட்டது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அந்த மிஷனரிகளைப் பற்றிய கவலை மனதை அரிக்க ஆரம்பித்தது. முடிந்தவரை சீக்கிரத்தில் மிஷனரி இல்லத்திற்குச் சென்று அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள நாங்கள் விரும்பினோம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன; எனினும், நான் மருத்துவமனையில் பணியாற்றியதாலும், அதற்கு அடையாளமான மருத்துவமனை ஸ்டிக்கரைக் காரில் ஒட்டியிருந்ததாலும், அந்தச் சாலையிலிருந்த தடைகளை எல்லாம் என்னால் தாண்டிச் செல்ல முடிந்தது. மிஷனரிகள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்தபோது எங்களுக்கு எவ்வளவு நிம்மதியாக இருந்தது! அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை வாங்கிக் கொடுத்தோம், அவர்களுடன் சில நாட்கள் தங்கினோம். அதன் பிறகு, அவர்கள் பத்திரமாகக் கம்பாலா செல்லும்வரை ஒவ்வொரு வாரமும் போய் அவர்களைச் சந்தித்துவிட்டு வந்தோம். சூழ்நிலை மோசமாக மோசமாக, அருமையான சகோதர சகோதரிகளுடைய அன்பை அதிகமதிகமாக ருசித்தோம்.
[பக்கம் 82-ன் பெட்டி/ படம்]
“என்னால் வாயைத் திறக்கவே முடியாதென நினைத்தேன்”
மார்கரெட் நயென்டா
பிறப்பு 1926
ஞானஸ்நானம் 1962
பின்னணிக் குறிப்பு உகாண்டாவில் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட முதல் பெண்மணி. 20-க்கும் அதிக ஆண்டுகளாக ஒழுங்கான பயனியராகச் சேவை செய்தார். இன்னும் ஊழியத்தில் ஈடுபடுகிறார்.
◼ என் கணவர் சகோதரர் கில்மின்ஸ்டரிடம் பைபிளைப் படித்தார்; அதை அவர் மகிழ்ந்து அனுபவித்ததால், பைபிளில் அதிக ஈடுபாடுள்ள நானும் அதைக் கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பினார். ஜான் ப்வாலியுடைய மனைவி யூனஸ் எனக்கு பைபிள் படிப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நான் கற்றுவந்ததை நேசித்தேன், ஆனால் மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க பயப்பட்டேன். பொதுவாகவே எனக்குக் கூச்ச சுபாவம்; எனவே, என்னால் வாயைத் திறக்கவே முடியாதென நினைத்தேன். ஆனால், யூனஸ் எனக்குப் பொறுமையாக உதவினார்; முதலில், ஒரேவொரு வசனத்தை மட்டும் வாசித்துக் காட்ட உதவினார். பின்னர், ஒரு வீட்டிலிருந்து அடுத்த வீட்டுக்கு நடந்து செல்லும்போது அந்த வசனத்திலிருந்து குறிப்புகளைத் தயாரிக்க அவர் எனக்குக் கற்றுக்கொடுத்தார். யெகோவாவின் உதவியோடு என் பயத்தைச் சமாளித்தேன்.
ஞானஸ்நானம் பெறுவதற்குச் கொஞ்ச நாட்கள் முன்பு என் கணவர் சத்தியத்தைப் புறக்கணித்தார், என்னையும் எங்கள் ஏழு பிள்ளைகளையும் அம்போவென விட்டுவிட்டுச் சென்றார்; அப்போது அதிர்ச்சியில் உறைந்தேன். எனினும், சகோதர சகோதரிகள் என்னைக் கண்ணுக்குள் வைத்துக் கவனித்துக்கொண்டார்கள்; அவர்கள் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் நடைமுறையான, ஆன்மீக உதவிகளை அளித்தார்கள். அயல் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கம்பாலாவில் நடைபெறும் கூட்டங்களுக்குச் செல்லும் வழியில் நிறுத்தி என்னையும் என் பிள்ளைகளையும் காரில் அழைத்துச் சென்றார்கள். என் பிள்ளைகளில் நான்கு பேர் தங்கள் குடும்பத்தோடு யெகோவாவைச் சேவிக்கத் தீர்மானித்ததற்காக நான் அதிக நன்றியுள்ளவளாய் இருக்கிறேன்.
கடைசியில் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்ய என்னால் முடிந்தது. முடக்குவாதம் என் நடமாட்டத்தைப் பெருமளவு முடக்கிப் போட்டிருக்கிறபோதிலும், என் வீட்டுக்கு வெளியே மேஜையில் பிரசுரங்களை வைத்துக்கொண்டு, போவோர், வருவோரிடம் பேசினேன். இவ்வாறு முழுநேர ஊழியத்தை என்னால் தொடர்ந்து செய்ய முடிந்தது.
[பக்கம் 98, 99-ன் பெட்டி/ படங்கள்]
எங்கள் ஆன்மீக அறுவடையைக் கடவுள் ஆசீர்வதித்தார்
சாம்வெல் மூக்வாயா
பிறப்பு 1932
ஞானஸ்நானம் 1974
பின்னணிக் குறிப்பு பல வருடங்கள் அமைப்பின் சார்பாக வழக்கறிஞராகச் சேவை செய்தார்; அதோடு, மூப்பராகவும் பயனியராகவும் சேவை செய்தார்.
◼ நைரோபியிலுள்ள கென்யா கிளை அலுவலகத்தைப் பார்வையிடச் சென்றபோது நடந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.
உகாண்டாவின் வரைபடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, “இதிலுள்ள கலர் கலர் குண்டூசிகள் எதைக் குறிக்கின்றன?” என்று கேட்டேன்.
“அந்த இடங்களில் அநேகர் சத்தியத்திடம் ஆர்வம் காட்டுவதைக் குறிக்கின்றன” என்று கென்யா கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினரான ராபர்ட் ஹார்ட் பதிலளித்தார்.
என் சொந்த ஊரான இகாங்கா மீது பளிச்சென்ற நிறத்தில் குத்தப்பட்டிருந்த ஒரு குண்டூசியைச் சுட்டிக்காட்டி, “நீங்கள் எப்போது பயனியர்களை இந்த இடத்திற்கு அனுப்புவீர்கள்?” என்று கேட்டேன்.
“அங்கு யாரையும் நாங்கள் அனுப்புவதில்லை” என்று அவர் சொன்னார். பின்னர், கண்சிமிட்டியபடி அவர் என்னை நேராகப் பார்த்து, “நீங்கள் அங்கே போகிறீர்கள்” என்று சொன்னார்.
சகோதரர் ஹார்ட் சொன்ன பதிலைக் கேட்டு ஆச்சரியத்தில் ஸ்தம்பித்துவிட்டேன்; ஏனெனில், நான் பயனியர் ஊழியம் செய்யவுமில்லை, என் சொந்த ஊரில் வசிக்கவுமில்லை. எனினும், இந்தச் சம்பவம் என் மனதைவிட்டு மறையவே இல்லை. அரசு பணியிலிருந்து நான் ஓய்வுபெற்ற பிறகு என் சொந்த ஊருக்குக் குடிமாறிச் செல்லத் தீர்மானித்தேன், ஓர் ஒழுங்கான பயனியர் ஆனேன். சொற்ப எண்ணிக்கையே இருந்த பிரஸ்தாபிகள் மளமளவென அதிகரித்து, பெரிய சபையாக வளர்ந்து, சொந்த ராஜ்ய மன்றத்தையும் கட்டிக்கொண்டபோது, எவ்வளவு பூரித்துப் போனேன்!
பாட்ரிக் பாலிகயா என்ற சகோதரர் இகாங்காவுக்கு விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டபோது, அவர் என்னுடன் தங்கினார், நாங்கள் ஒன்றாகச்
சேர்ந்து பயனியர் ஊழியம் செய்தோம். அதோடு, எங்கள் பிழைப்புக்காகச் சோளத்தைப் பயிர் செய்தோம். தினமும் விடியக்காலையில் தினவசனத்தைக் கலந்தாலோசித்துவிட்டு, சில மணிநேரம் சோள வயலில் வேலை செய்தோம். சுமார் பத்து மணிக்கு, ஊழியத்துக்குச் சென்றோம், பிறகு நாள் முழுவதும் ஊழியத்தில் சந்தோஷமாய்க் கழித்தோம்.எங்கள் வயலில் சோளக் கதிர் தலைதூக்கத் தொடங்கியதும், ஊழியத்துக்குச் சென்றால் அதை நாங்கள் கவனிக்க முடியாமல் போய்விடுமென சில அக்கம்பக்கத்தார் சொன்னார்கள். சோளக் கதிர் முற்றுகிற காலம் முழுவதும் குரங்குகளிடமிருந்து அதைப் பாதுகாக்க வேண்டுமென்பதை நாங்கள் நன்கு அறிந்திருந்தோம். எனினும், எங்கள் ஆன்மீக அறுவடையை விட்டுவிட்டு, குரங்குகளை விரட்ட நாங்கள் விரும்பவில்லை.
அதன் பிறகு சீக்கிரத்திலேயே, எங்கள் வயலை இரண்டு பெரிய நாய்கள் சுற்றிச் சுற்றி வருவதைக் கவனித்தோம். அவை எங்கிருந்து வந்தன அல்லது அவை யாருடையவை என்பது எங்களுக்குத் தெரியவில்லை; ஆனால், அவற்றை விரட்டி அடிப்பதற்குப் பதிலாக தினமும் அவற்றிற்குக் கொஞ்சம் உணவையும் தண்ணீரையும் கொடுத்தோம். எங்கள் வயலை நாய்கள் சுற்றிச் சுற்றி வந்ததால், குரங்குகள் அந்தப் பக்கமே வரவில்லை! நான்கு வாரங்களுக்குப் பின், அந்த நாய்கள் எப்படித் திடீரென வந்தனவோ அப்படியே திடீரெனக் காணாமல் போயின; எங்கள் சோளத்தைப் பாதுகாக்க வேண்டிய காலம் முழுவதும், ஒரு நாள்கூட தவறாமல், அவை அங்கிருந்தன! அமோக விளைச்சலைத் தந்ததற்காக யெகோவாவுக்கு நன்றி சொன்னோம்! அவரால்தான் சோளம் குரங்குகளின் கைக்குத் தப்பின, எங்கள் பசியையும் போக்கின. அதைவிட முக்கியமாக, எங்கள் ஆன்மீக அறுவடையையும் கடவுள் ஆசீர்வதித்ததற்காக மிகவும் நன்றியுள்ளவர்களாக இருந்தோம்!
[பக்கம் 101, 102-ன் பெட்டி/ படம்]
காவலில் இருந்தேன், ஆனால் காப்பாற்றப்பட்டேன்
பாட்ரிக் பாலிகயா
பிறப்பு 1955
ஞானஸ்நானம் 1983
பின்னணிக் குறிப்பு ஞானஸ்நானம் பெற்ற கொஞ்ச நாட்களிலேயே முழுநேர ஊழியம் செய்ய ஆரம்பித்தார். தன் மனைவி சிம்ஃபிரோனியாவுடன் பயணக் கண்காணியாகச் சேவை செய்திருக்கிறார்.
◼ புதிய அரசாங்கம் 1979-ல் ஆட்சிக்கு வந்தபோது, முந்தைய அரசுடன் சம்பந்தப்பட்டிருந்த எல்லாருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்காக அவர்களைச் சிறைக்குச் செல்லும்படி உத்தரவிட்டது. அந்த ஏற்பாட்டுடன் ஒத்துழைக்க மறுத்த எவரும் புதிய அரசின் எதிரியாகவே கருதப்படுவார், எதிரியைப் போலவே நடத்தப்படுவார் என்ற அறிவிப்புகளும் செய்யப்பட்டன. படைத்துறையில் இசைக் கலைஞனாக நான் சேவை செய்திருந்ததால் சிறையில் இருக்க நேர்ந்தது.
அந்தச் சமயத்தில், என் மூளைக்கு வேலைகொடுக்க தினம் தினம் பைபிளை வாசிக்க முடிந்ததற்காக நன்றியுள்ளவனாய் இருந்தேன். அதோடு, சத்தியத்தைத் தேடிக் கொண்டிருந்தேன், பைபிள் சம்பந்தமான விஷயங்களை சக கைதிகளுடன் பேசவும் விரும்பினேன். அதே வளாகத்தில் ஜான் மூண்டூவா என்ற யெகோவாவின் சாட்சி ஒருவரும் இருந்தார். அவர் அரசு ஊழியராக இருந்ததாலும் முந்தைய அரசை ஆதரிப்பதாகக் கருதப்பட்ட இனப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்ததாலும் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஜான் ஆர்வத்தோடு என்னிடம் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டார், நான் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டேன். எங்களிடம் 16 காவற்கோபுர பத்திரிகைகளும் நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு c (ஆங்கிலம்) என்ற புத்தகமும் மட்டுமே இருந்தன; ஆனால், நான் கற்றுக்கொண்டிருப்பது சத்தியம் என்பதை உடனடியாகப் புரிந்துகொண்டுவிட்டேன். மூன்று மாதங்கள் பைபிளைப் படித்த பிறகு, பிரஸ்தாபி ஆவதற்கு நான் தகுதிபெற்றிருப்பதாக ஜான் நினைத்தார். அதன் பிறகு சீக்கிரத்தில், அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாததால், விடுதலை செய்யப்பட்டார். யெகோவாவின் அமைப்போடு எனக்கிருந்த ஒரே தொடர்பும் துண்டிக்கப்பட்டது. எனினும், அங்கிருந்தவர்களில் சத்தியத்திடம் ஆர்வம் காட்டியவர்களுக்கு என்னால் முடிந்தவரை சிறப்பாக பைபிள் படிப்புகளை நடத்தினேன்.
அக்டோபர் 1981-ல் நான் விடுதலை செய்யப்பட்டேன், என் கிராமத்திற்குத் திரும்பி வந்தேன். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் யாருமே அங்கு இல்லை. என் உறவினர்கள் தங்கள் மத வழிபாட்டில் கலந்துகொள்ளும்படி என்னை வற்புறுத்தினார்கள். ஆனால், யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டுமென நான் ஆசைப்பட்டேன்; அதை யெகோவா அறிந்திருந்தார், என்னைக் காப்பாற்றினார். இயேசுவின் முன்மாதிரியை நான் பின்பற்ற வேண்டுமென அறிந்திருந்தேன்; எனவே, சொந்தமாக நானே பிரசங்கிக்க ஆரம்பித்தேன், சீக்கிரத்திலேயே அநேக பைபிள் படிப்புகளை நடத்த ஆரம்பித்தேன். ஒருநாள் ஒரு வீட்டுக்காரர் என்னிடம், “நீங்கள் சொன்ன தகவல் கிட்டத்தட்ட நான் இந்தப் புத்தகத்தில் வாசித்ததைப் போலவே இருக்கிறது” என்று சொல்லி, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தைக் காட்டினார். d அவருக்கு அதில் அந்தளவு ஆர்வம் இல்லாதிருந்தது. எனக்கோ, அந்தப் புத்தகத்தையும் அவரிடமிருந்த அநேக காவற்கோபுர பத்திரிகைகளையும் வாசிக்க அதிக ஆசையாக இருந்தது. இந்தச் சமயத்தில், அந்த வீட்டுக்காரர் அப்பிரசுரங்களை எனக்கு அளிக்க முன்வந்தார்!
ஆனால், யெகோவாவின் சாட்சிகளை நான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. ஜின்ஜாவில் யெகோவாவின் சாட்சிகள் இருப்பதாகச் சகோதரர் மூண்டூவா சொல்லியிருந்தார். எனவே, அங்குள்ள சகோதரர்களைக் கண்டுபிடித்துவிட வேண்டுமென தீர்மானமாய் இருந்தேன். கிட்டத்தட்ட இரவு முழுவதும் ஜெபம் செய்த பிறகு, விடியக்காலையில் எதையும் சாப்பிடாமல் சகோதரர்களைத் தேடிப் புறப்பட்டேன். நடக்க ஆரம்பிக்கையில் நான் சந்தித்த முதல் மனிதர், ஒரு பிளாஸ்டிக் பையுடன் நடந்து போய்க்கொண்டிருந்தார். அந்தப் பையிலிருந்த விழித்தெழு! பத்திரிகை பளிச்சென தெரிந்ததும் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. என் சகோதரர்களில் ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டேன்!
1984-ல், உகாண்டாவில் நடைபெற்ற பயனியர் ஊழியப் பள்ளியின் முதல் வகுப்பில் கலந்துகொண்டபோது அதிக ஆனந்தப்பட்டேன். அந்த வகுப்பில் யார் என்னுடன் கலந்துகொண்டார்கள் தெரியுமா? வேறு யாருமில்லை, என் அன்புச் சகோதரர் ஜான் மூண்டூவாதான். இப்போதும், 74 வயதில், ஒழுங்கான பயனியராக உண்மையுடன் அவர் சேவை செய்து வருகிறார்.
[அடிக்குறிப்புகள்]
c யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. தற்போது அச்சில் இல்லை.
d யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. இப்போது அச்சில் இல்லை.
[பக்கம் 113-ன் பெட்டி/ படம்]
கடைசியில் அவர் உண்மை மதத்தைக் கண்டுபிடித்தார்
ஒரு சகோதரி ஸெவந்த்-டே அட்வென்டிஸ்ட் சர்ச்சின் பாஸ்டராக இருந்த மூடெசாசிரா யாஃபெசி என்பவரைப் போய்ச் சந்திக்கும்படி மாட்ஸ் ஹாம்க்விஸ்ட் என்ற மிஷனரியிடம் கேட்டுக்கொண்டார். யெகோவாவின் சாட்சிகள் கற்பித்த விஷயங்களில் அந்த பாஸ்டர் ஆர்வம் காட்டினார், ஆகவே அவர்களிடம் கேட்பதற்காக 20 கேள்விகளை அவர் தெளிவாக எழுதி வைத்தார். மாட்ஸைச் சந்தித்தபோது, அந்தக் கேள்வித் தாளை அவரிடம் கொடுத்தார்.
இரண்டு மணிநேர பைபிள் கலந்தாலோசிப்புக்குப் பிறகு மூடெசாசிரா இவ்வாறு சொன்னார்: “உண்மை மதத்தைக் கடைசியில் நான் கண்டுபிடித்துவிட்டேன்! தயவுசெய்து என் கிராமத்துக்கு வாருங்கள். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அங்கிருக்கிறார்கள்.”
ஐந்து நாட்களுக்குப் பிறகு, மூடெசாசிராவைப் போய் சந்திக்க மாட்ஸும் வேறொரு மிஷனரியும் காலாங்காலோ கிராமத்திற்கு மோட்டர் சைக்கிளில் புறப்பட்டார்கள்; 110 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அந்தக் கிராமத்திற்கு, தேயிலைத் தோட்டங்களின் வழியாக, சேறும் சகதியும் நிறைந்த மோசமான பாதைகளில் சென்றார்கள். “ராஜ்ய மன்றம்” என்ற பெயர் பலகை உடைய கூரை வேயப்பட்ட குடிசைக்கு சகோதரர்களை அவர் அழைத்துப் போனபோது அவர்கள் அசந்துபோனார்கள். ஆம், பைபிள் படிப்புக்காகவும், கூட்டங்களுக்காகவும் அவர் ஏற்கெனவே ஓர் இடத்தைத் தயார்படுத்தி வைத்திருந்தார்!
மூடெசாசிரா தான் கற்ற விஷயங்களை மற்றவர்களிடம் பேச ஆரம்பித்ததன் விளைவாகப் பத்துப் பேர் சத்தியத்திடம் ஆர்வம் காட்டினார்கள். பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன; தொலை தூரத்தைக் கண்டு துவண்டு போகாத மாட்ஸும் மாதம் இருமுறை சென்று பைபிள் படிப்புகளை நடத்தினார். அவர்கள் நல்ல முன்னேற்றம் செய்தார்கள். 20-க்கும் அதிகமானோர் காலாங்காலோவில் பிரஸ்தாபிகள் ஆனார்கள். அருகே உள்ள மிடியானா ஊரில் சபை ஒன்று செழித்தோங்குகிறது. இதற்கிடையில் மூடெசாசிரா வேகமாக முன்னேற்றம் செய்து, ஞானஸ்நானம் பெற்றார். இப்போது அவருக்குக் கிட்டத்தட்ட 80 வயதாகிவிட்டது, சபையில் மூப்பராகச் சேவை செய்து வருகிறார்.
[பக்கம் 108, 109-ன் அட்டவணை/ வரைபடம்]
கால வரலாறு உகாண்டா
1930
1931 ராபர்ட் நிஸ்பட்டும் டேவிட் நார்மனும் கிழக்கு ஆப்பிரிக்காவில் நற்செய்தியை அறிவிக்கிறார்கள்.
1940
1950
1950 கில்மின்ஸ்டர் தம்பதியர் உகாண்டாவுக்குக் குடிமாறி வருகிறார்கள்.
1952 முதல் சபை உருவாகிறது.
1956 முதல் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது.
1959 அயல்நாட்டு சகோதரர்கள் ஆன்மீக உதவி அளிக்கிறார்கள்.
1960
1963 கிலியட் மிஷனரிகள் வருகிறார்கள்.
1972 முதல் மாவட்ட மாநாடு நடைபெறுகிறது.
1973 யெகோவாவின் சாட்சிகள் தடைசெய்யப்படுகிறார்கள், மிஷனரிகள் வெளியேற்றப்படுகிறார்கள்.
1979 தடையுத்தரவு நீக்கப்படுகிறது.
1980
1982 மிஷனரிகள் மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
1987 லுகாண்டா மொழியில் காவற்கோபுர பத்திரிகை தொடர்ந்து மொழிபெயர்க்கப்படுகிறது.
1988 நிரந்தமான முதல் ராஜ்ய மன்றம் கட்டப்பட்டு, அர்ப்பணம் செய்யப்படுகிறது.
1990
2000
2003 கிளை அலுவலகம் ஏற்படுத்தப்படுகிறது.
2007 புதிய கிளை அலுவலக வளாகம் அர்ப்பணம் செய்யப்படுகிறது.
2010
[வரைபடம்]
(பிரசுரத்தைக் காண்க)
மொத்த பிரஸ்தாபிகள்
மொத்த பயனியர்கள்
5,000
3,000
1,000
1930 1940 1950 1960 1980 1990 2000 2010
[பக்கம் 73-ன் தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
காங்கோ மக்கள் குடியரசு
சூடான்
கென்யா
உகாண்டா
கம்பாலா
ஆரூவா
கூலூ
லிரா
சோரோடி
கியோகா ஏரி
மாசின்டி
ஹோய்மா
அம்பாலே
டோரோரோ
நாமாயின்கோ
இகாங்கா
ஜின்ஜா
சீட்டா
காஜான்சி
என்டெபி
மிட்டான்யா
காலாங்காலோ
ஃபோர்ட் பார்ட்டல்
ரூசெசெ
ஆல்பர்ட் ஏரி
ருவென்ஜோரி மலைத்தொடர்
பூமத்திய ரேகை
எட்வர்ட் ஏரி
மாசாகா
அம்பாராரா
காபாலே
கென்யா
விக்டோரியா ஏரி
டான்ஜானியா
புரூண்டி
ருவாண்டா
உகாண்டா
கம்பாலா
கென்யா
நைரோபி
மெரு
கென்யா மலை
மோம்பாசா
டான்ஜானியா
தார்-எஸ்-சலாம்
ஜான்ஜிபார்
[பக்கம் 87-ன் தேசப்படம்/ படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உகாண்டா
கம்பாலா
ஆரூவா
கூலூ
லிரா
சோரோடி
மாசின்டி
ஹோய்மா
ஃபோர்ட் பார்ட்டல்
மாசாகா
அம்பாராரா
காபாலே
விக்டோரியா ஏரி
[படம்]
ஆறே வாரங்களில், சகோதரர் ஹார்டி தன் மனைவியுடன் உகாண்டாவின் பெரும்பாலான பகுதிகளுக்குப் பயணித்தார்
[பக்கம் 66-ன் முழுபக்க படம்]
[பக்கம் 69-ன் படம்]
கிழக்கு ஆப்பிரிக்காவில், டேவிட் நார்மனும் ராபர்ட் நிஸ்பட்டும் முதன்முதலாக நற்செய்தியை அறிவித்தார்கள்
[பக்கம் 71-ன் படம்]
ஆற்றைக் கடக்கத் தயாராய் இருந்த கட்டுமரத்தில் தங்கள் வேன்களுடன் ஜார்ஜ் நிஸ்பட்டு, ராபர்ட் நிஸ்பட்டு, க்ரே ஸ்மித்து, ஆல்கா ஸ்மித்து
[பக்கம் 75-ன் படம்]
1956-ல், திருமணத்திற்குச் சற்று முன்பு மேரியும், ஃபிராங்க் ஸ்மித்தும்
[பக்கம் 78-ன் படம்]
மகும்பா தம்பதியருடன் ஆன் கூக்கும் அவருடைய பிள்ளைகளும்
[பக்கம் 80-ன் படம்]
கிலியட்டில் பயிற்சி பெற்று, உகாண்டாவுக்குச் சென்ற முதல் மிஷனரிகளான டாம் மாக்லேன், பெத்தல் மாக்லேன்
[பக்கம் 81-ன் படம்]
ஜின்ஜாவில் முதல் மிஷனரி இல்லம்
[பக்கம் 83-ன் படம்]
கிலியட் மிஷனரிகளான பார்பரா ஹார்டியும் ஸ்டீவன் ஹார்டியும்
[பக்கம் 85-ன் படம்]
மேரி நிஸ்பட் (நடுவில்), அவருடைய மகன்கள் ராபர்ட் (இடது), ஜார்ஜ் (வலது), மற்றும் வில்லியமும் அவரது மனைவி ம்யூரியலும் (பின்பக்கம்)
[பக்கம் 89-ன் படம்]
கம்பாலாவில் நடைபெற்ற “கடவுளுடைய ஆட்சி” மாவட்ட மாநாட்டில் டாம் கூக் பேச்சுக் கொடுக்கிறார்
[பக்கம் 90-ன் படம்]
ஜார்ஜ் ஓகோலோவும் கர்ட்ரூட் ஓகோலோவும்
[பக்கம் 94-ன் படம்]
தடையுத்தரவின் மத்தியிலும் நம்முடைய சகோதரர்கள் தொடர்ந்து கூடிவந்தார்கள்
[பக்கம் 95-ன் படம்]
ஃப்ரெட் நயென்டா
[பக்கம் 96-ன் படம்]
இம்மானவல் காமிஸா
[பக்கம் 104-ன் படம்]
ஸ்டான்லி மாகூம்பா, அவரது மனைவி எசினாலாவுடன், 1998-ல்
[பக்கம் 107-ன் படம்]
ஜெர்மனியில் நடந்த கிலியட் விரிவாக்க பள்ளியின் முதல் வகுப்பில் கலந்துகொண்ட ஹைன்ட்ஸ் மற்றும் மாரியானா வெர்ட்ஹால்ட்ஸ்
[பக்கம் 118-ன் படங்கள்]
மொழிபெயர்ப்புக் குழுக்கள்
லுகாண்டா
ஆகோலி
லூகோன்ஸோ
ரூன்யான்கோரெ
[பக்கம் 123-ன் படங்கள்]
அன்றைய ராஜ்ய மன்றத்திலிருந்து (இடது) வேறுபட்டு நிற்கும் இன்றைய ராஜ்ய மன்றங்கள்
[பக்கம் 124-ன் படங்கள்]
உகாண்டா கிளை அலுவலகம்
கிளை அலுவலகக் குழுவினர்: மாட்ஸ் ஹாம்க்விஸ்ட், மார்டின் லவோம், மைக்கேல் ரைஸ், ஃப்ரெட் நயென்டா; அலுவலகக் கட்டிடம் (கீழே), குடியிருப்புக் கட்டிடம் (வலது)