Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்

கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்

கடந்த ஆண்டின் சிறப்பம்சங்கள்

யெகோவாவின் சாட்சிகள் ‘உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாக’ நற்செய்தியை இன்னும் அதிக மும்முரமாக பிரசங்கித்து வருகிறார்கள் என்பதை பன்முனைகளிலிருந்து வரும் அறிக்கைகள் காட்டுகின்றன. (மத். 24:14) சாட்சிகளின் சகிப்புத்தன்மையும் ஒற்றுமையும் சுயநலமற்ற சேவையும்தான் பாரெங்கும் ‘யெகோவாவின் செய்தி ஒலித்திருப்பதற்கும், கடவுள்மீது அவர்கள் வைத்திருக்கும் விசுவாசத்தைப் பற்றிய செய்தி எல்லா இடங்களிலும் பரவியிருப்பதற்கும்’ காரணம்.—1 தெ. 1:8.

குடும்ப வழிபாட்டை ரசித்தவர்கள்... ருசித்தவர்கள்...

ஜனவரி 1, 2009 முதல் வாராந்திர கூட்டங்களில் யெகோவாவின் சாட்சிகள் மாபெரும் மாற்றம் செய்தார்கள். சபை புத்தகப் படிப்பு “சபை பைபிள் படிப்பு” என மாற்றப்பட்டது; அதோடு இந்தக் கூட்டம் தேவராஜ்ய ஊழியப் பள்ளி மற்றும் ஊழியக் கூட்டத்தோடு சேர்ந்து நடத்தப்படுகிறது. சபை புத்தகப் படிப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை இனி குடும்ப வழிபாட்டிற்கென்று பயன்படுத்தும்படி எல்லோருக்கும் உற்சாகப்படுத்தப்பட்டது.

அன்புடன் செய்யப்பட்டிருக்கும் இந்த ஏற்பாட்டிற்கு யெகோவாவின் சாட்சிகள் எப்படி பிரதிபலித்திருக்கிறார்கள்? இந்தச் சகோதரருடைய உணர்சிகள் பலருடைய உணர்ச்சிகளை படம்பிடித்துக் காட்டுகின்றன. “நன்றி! நன்றி!! மிக்க நன்றி!!! இந்த ஏற்பாட்டினால் நானும் என் மனைவியும் பெற்ற நன்மைகளை சொல்ல வார்த்தைகளே இல்லை. யெகோவாமீது நாங்கள் வைத்திருக்கும் அன்பு இன்னும் ஆழமாகியிருக்கிறது, எனக்கும் என் மனைவிக்கும் இடையே நெருக்கம் அதிகமாகியிருக்கிறது. ஆஹா! என்ன அருமையான ஏற்பாடு!! ஞானமான இந்த ஏற்பாட்டைச் செய்த நம் பரலோக தகப்பனுக்கு கோடி நன்றி!!!” என்று எழுதியிருந்தார் உணர்ச்சி பொங்க.

இந்தப் பொன்னான நேரத்தை குடும்பங்கள் எப்படிப் பிரயோஜனமாகப் பயன்படுத்துகின்றன? இது ஒரு தாயின் அனுபவம்: “இராத்திரி நேரத்தில், சில சமயங்களில் நாங்கள் விழித்தெழு! பத்திரிகையில் 31-ஆம் பக்கத்திலுள்ள கட்டுரையைக் கலந்தாலோசிக்கிறோம். சில சமயம், நம் அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோக்களைப் பார்க்கிறோம். பிள்ளைகள் அவர்களாகவே ஆராய்ச்சி செய்வதோடு ஆர்வமாகவும் கற்றுக்கொள்கிறார்கள், குடும்ப வழிபாட்டையும் அனுபவிக்கிறார்கள். எங்கள் பிள்ளைகளிடம், ஒரு பைபிள் கதாப்பாத்திரத்தைக் குறித்து ஒரு மாதம் முழுவதும் ஆராய்ச்சி செய்து, அடுத்த மாதம் அதைக் குறித்து ஒரு பேச்சு கொடுக்க வேண்டும் என்று சொல்வோம். பிள்ளைகள் மட்டுமல்ல நாங்களும் அப்படிச் செய்வோம். எங்கள் பத்து வயது மகன் முதன்முதலில் நோவாவைப் பற்றி ஒரு பேச்சு கொடுத்தான். அசத்திட்டான்! நோவாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றுகூட சொன்னான். அதன்பின் அவனே செய்த ஒரு குட்டி பேழையைக் காட்டினான். அதற்கு அடுத்த வாரம் அப்போஸ்தலன் பவுலின் மிஷனரி பயணங்களைப் பற்றி எங்கள் மகள் ஒரு பேச்சு கொடுத்தாள். அவள் முடித்ததும் நாங்கள் ஜோராக கை தட்டினோம்; பின்பு, அது சம்பந்தமாக கேள்வி கேட்டு ‘குவிஸ்’ புரோகிராம் நடத்தினாள், ‘உங்களுக்கு நினைவிருக்கிறதா?’ என்று அந்த புரோகிராமுக்கு பெயரிட்டாள். அது பிரமாதமாக இருந்தது!” குடும்ப வழிபாடு ஏற்பாட்டை யெகோவா அளித்த ஓர் ஆசீர்வாதமாகத்தான் இந்தக் குடும்பம் கருதுகிறது. “சென்ற வருடம் என் வீட்டுக்காரரும் நானும் பட்ட கஷ்டங்களைச் சொல்லி மாளாது. ஆனால் அவற்றையெல்லாம் சமாளிக்க இந்தப் படிப்பு எங்களுக்கு உண்மையிலேயே கைகொடுத்தது” என்று அவர் மேலும் சொன்னார் நன்றி பொங்க.

“ஆன்மீக ரீதியில் என்னை தட்டியெழுப்பிய இந்த ஏற்பாட்டிற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது! எங்கள் பிள்ளைகளெல்லாம் வளர்ந்து ஆளாகி தனியாக சென்ற பிறகு என் கணவரும் நானும் ஒழுங்காக குடும்ப படிப்பைப் படிக்கவில்லை. ஆனால் இப்போது ஒழுங்காகப் படிக்கிறோம். பெரும்பாலும் இரண்டு மணிநேரம் படிப்போம். நேரம் போவதே தெரியாது!” என்று மற்றொரு சகோதரி எழுதினார் நன்றி உள்ளத்தோடு.

மிகுந்த உபத்திரவம் நெருங்க நெருங்க குடும்ப வழிபாட்டிற்காக நீங்கள் ஒதுக்கியிருக்கும் இந்த நேரம் கடவுளுடைய வார்த்தையை நன்கு கருத்தூன்றி படிக்க உங்களுக்கு உதவி செய்வதாக. அதோடு, பிசாசை எதிர்ப்பதற்கு உங்களை ஆன்மீக ரீதியில் பலப்படுத்துவதாக. நீங்கள் ‘கடவுளிடம் நெருங்கி வர’ இந்த அருமையான நேரத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளுங்கள், “அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக். 4:7, 8.

பைபிள் படிப்பு ஆரம்பிக்க கடின முயற்சி

ஜனவரி 2009 முதல், ஒவ்வொரு மாதமும் எதாவதொரு சனிக்கிழமையையோ ஞாயிற்றுக்கிழமையையோ பைபிள் படிப்பு ஆரம்பிப்பதற்காக ஒதுக்கும்படி சபைகளுக்குச் சொல்லப்பட்டது. அதன் விளைவு? அநேக பிரஸ்தாபிகளுக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆனந்தமாக இருக்கிறது. அவர்களுடைய ஆச்சரியத்திற்கு காரணம், பைபிள் படிப்பு ஆரம்பிப்பது அவர்கள் நினைத்ததைவிட ரொம்ப சுலபமாக இருப்பதுதான். ஆனந்தத்திற்கு காரணம், பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்திலிருந்து படிக்க பலதரப்பட்ட ஜனங்கள் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் புதிய ஏற்பாட்டை சபையார் அனைவரும் சந்தோஷமாய் வரவேற்பதாக பயணக் கண்காணிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஏற்பாட்டை தொடங்கி சில மாதங்களிலேயே நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. உதாரணத்திற்கு, முதல் ஐந்து மாதத்திலேயே இத்தாலியில் 8,000-க்கும் அதிகமான பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்குமுன் பைபிள் படிப்பு நடத்தாத பிரஸ்தாபிகள் இப்போது மறுசந்திப்புகள் செய்து பைபிள் படிப்பு ஆரம்பிக்கிறார்கள். பெரு நாட்டைச் சேர்ந்த கெரோலீனா சொல்வதைக் கேளுங்கள். “இந்த ஏற்பாடு வருவதற்கு முன்னாடி எனக்கு பைபிள் படிப்பே கிடையாது. ஆனால், பைபிள் படிப்பு ஆரம்பிப்பதற்காக மாதத்தில் ஒரு நாள் ஒதுக்கப்பட்டபோது, எப்படியாவது ஒரு பைபிள் படிப்பு தொடங்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் பிறந்தது. பைபிள் படிப்பு ரொம்ப எளிமையானது, அதற்கு அதிக நேரம் எடுக்காது என்று வீட்டுக்காரர்களுக்கு என்னால் சுலபமாக எடுத்துச்சொல்ல முடிந்திருக்கிறது. யெகோவாவுடைய உதவியினாலும் அமைப்பு கொடுத்த ஆலோசனைகளைப் பின்பற்றியதாலும் நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது எனக்கு இரண்டு பைபிள் படிப்பு இருக்கிறது” என்றார் உற்சாகம் பொங்க.

பிரிட்டனில் வசிக்கும் சத்யா என்ற பயனியர் சகோதரிக்கு முதல் சந்திப்பில் பைபிள் படிப்பு ஆரம்பிப்பதென்றால் ரொம்ப பயம். ஆனால், பைபிள் படிப்பு ஆரம்பிப்பதற்கான விசேஷ நாளன்று ஒரு படிப்பையாவது ஆரம்பிக்காமல் வீட்டுக்குத் திரும்புவதில்லை என்று தீர்மானித்தார். பைபிள் படிப்புக்கு ஒரு பெண் உடனே ஒத்துக்கொண்டபோது அவருக்கு அளவில்லா ஆனந்தம். சத்யா நினைத்ததைவிட அது மிக சுலபமாக இருந்தது.

சிசிலியில் பலெர்மோ என்ற இடத்தில் வசிக்கும் லூக்கா என்ற இளம் சகோதரர், நம்முடைய பத்திரிகைகளை ஒரு விதவைக்குத் தவறாமல் அளித்துவந்தார். அந்தப் பெண்ணுக்கு யாரையும் வீட்டுக்குள் விட பயம். பைபிள் படிப்பு ஆரம்பிப்பதற்காக ஒதுக்கப்பட்ட ஒரு சனிக்கிழமை மதியம், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து லூக்கா அந்தப் பெண்ணுக்கு ஒரு பகுதியை வாசித்துக்காட்டினார். அதைக் கேட்டு அந்தப் பெண்ணுக்கு மிகவும் பிடித்துவிட்டது. லூக்காவிடம் கொஞ்ச நேரம் பேசினார். அவருடைய கேள்விகளுக்கெல்லாம் அந்தப் புத்தகத்தில் பதில் இருப்பதாக லூக்கா சொன்னார். அவருடைய கணவனை மீண்டும் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கும் இந்தப் புத்தகத்தில் பதில் இருப்பதாக சொன்னார். அந்தப் புத்தகத்தில் 72-ஆம் பக்கத்தைத் திறந்து யாரெல்லாம் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதை விளக்கினார். பைபிள் தரும் இந்த நம்பிக்கையைக் கேட்டு, மனம் நெகிழ்ந்துபோய் பைபிள் படிப்புக்கு அந்தப் பெண் ஒத்துக்கொண்டார். இப்போது சாட்சிகளை பயமின்றி வீட்டுக்குள் அழைத்து தவறாமல் பைபிள் படிக்கிறார்.

பெரு நாட்டு வட்டாரக் கண்காணி இவ்வாறு அறிக்கை செய்தார்: “இந்த ஏற்பாடு ஆரம்பித்தது முதற்கொண்டு பெரும்பாலான சபைகளில் பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. சிக்லேயோ நகரத்திலுள்ள ஒரு சபை, ஒரே மாதத்தில் புதிதாக 25 பைபிள் படிப்புகள் ஆரம்பித்திருப்பதாக அறிக்கை செய்தது. ஷேப்பனிலுள்ள சபையிலும் புதிதாக 24 பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.”

இளம் பிரஸ்தாபிகளும் பைபிள் படிப்பு ஆரம்பிப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். பிரேசிலில் சாவோ போலோவில் வசிக்கும் ஜோவன்னா என்ற 11 வயது பெண் இவ்வாறு சொல்கிறாள்: “ஒரு நாள் சனிக்கிழமை மதியம் என் அம்மாவோடு சேர்ந்து வீட்டுக்கு வீடு ஊழியம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அறிமுகப்படுத்தி அதிலிருந்து பைபிள் படிப்பு நடத்துவதாக சொல்ல வேண்டுமென தீர்மானித்திருந்தேன். முதல் வீட்டில் ஒரு பிரபல தொழிலதிபரைச் சந்தித்தேன். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பைபிள் எழுதப்பட்டிருப்பதை அவர் நம்புகிறாரா என்று கேட்டேன். அவரும் நம்புவதாகச் சொன்னார். பின்பு, 2 தீமோத்தேயு 3:16-ஐ அவருக்கு வாசித்துக் காட்டினேன். இத்தனை சின்ன வயதில் இவ்வளவு அருமையான விஷயங்களை நான் சொல்வதைக் கேட்டு அவருக்கு மிகவும் பிடித்துப் போனதாகச் சொன்னார். என்னிடமிருந்து புத்தகத்தையும் வாங்கிக் கொண்டார்.

“மறுபடியும் அந்த நபரைப் போய் சந்தித்தபோது என் தாத்தாவை அழைத்துச் சென்றேன். ஏனென்றால், என் தாத்தாவுக்கு அந்த நபர் நல்ல பழக்கம். அந்த நபர் எங்களை வீட்டுக்குள் வரச் சொன்னார். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் பொருளடக்கத்தை காட்டி அவருக்கு மிகவும் பிடித்த பாடத்தை தேர்ந்தெடுக்கும்படி சொன்னேன். அவர் 11-ஆம் அதிகாரத்தை தேர்ந்தெடுத்தார். அதன் தலைப்பு, ‘கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?’ முதல் இரண்டு பாராக்களை வாசித்ததும் அவரும் அவர் மனைவியும் நிறைய கேள்விகளைக் கேட்டார்கள். அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பைபிளில் பதில் இருப்பதைத் தெரிந்துகொண்டபோது அவர்களுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. பைபிள் படிப்புக்கும் ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் சென்ற முதல் வீட்டிலேயே பைபிள் படிப்பை ஆரம்பித்தபோது எனக்கு எவ்வளவு குஷியாகிவிட்டது தெரியுமா?”

உண்மைதான், எல்லாருமே பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதேபோல் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ளும் அனைவரும் தொடர்ந்து படிப்பார்கள் என்றும் சொல்ல முடியாது. ஆனால், கடவுளுடைய சக வேலையாட்களாகிய நாம் எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கு பைபிள் படிப்பைப் பற்றி சொல்கிறோம். ஏனென்றால், சாத்தானின் இந்த உலகம் அழிந்துபோகும் முன் செம்மறியாடு போன்றவர்களை யெகோவா தம்மிடம் ஈர்க்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.—யோவா. 6:44; 1 கொ. 3:9.

தொழில்நுட்பம் உதவுகிறது “தீவிரமாய்” செயல்பட

“சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்: கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்”—மயிர்கூச்செரிய வைக்கும் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறி வருவதைப் பார்த்து யெகோவாவின் மக்கள் சந்தோஷத்தில் திளைக்கிறார்கள். (ஏசா. 60:22) விறுவிறுப்பான இந்தக் காலக்கட்டத்தில் ஆன்மீக வளர்ச்சியைத் துரிதப்படுத்த யெகோவா தொடர்ந்து புதுப் புது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார். எனவேதான், உலகெங்கிலும் உள்ள எல்லா கிளை அலுவலகங்களும் பயன்படுத்துவதற்கு, ‘அட்மினிஸ்டிரேஷன் சாஃப்ட்வேர் சிஸ்டம்’ (administration software system) உருவாக்க ஆளும் குழு அனுமதி அளித்திருக்கிறது.

இந்த சாஃப்ட்வேரை உருவாக்கிய குழு ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்கா கிளை அலுவலகத்தில் இருந்தது. பின்னர் புருக்லின், நியு யார்க்கிலுள்ள உலக தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. இப்போது இந்தக் குழு அங்கிருந்துதான் புதிய சாஃப்ட்வேரை உருவாக்கி செயல்படுத்துகிறது. கிட்டத்தட்ட 20 கிளை அலுவலகங்கள் மண்டல துணை மையங்களாக (regional support center) செயல்படுகின்றன. அருகிலுள்ள கிளை அலுவலகங்கள் இந்த சாஃப்ட்வேர் சிஸ்டமிலிருந்து பயனடைய இவை உதவுகின்றன.

இந்த சாஃப்ட்வேரினால் என்ன பயன்கள்? இந்தக் கிளை அலுவலகங்கள் எல்லாம் ஒரே சாஃப்ட்வேரை பயன்படுத்துவதால் தகவல் பரிமாற்றம் சுலபமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, உலகெங்குமுள்ள அச்சிடும் கிளை அலுவலகங்கள், மற்ற கிளை அலுவலகங்களின் கையிருப்பிலுள்ள பிரசுரங்களின் எண்ணிக்கையை அறிந்துகொள்ள முடிகிறது. ஒரு கிளை அலுவலகத்தில் குறிப்பிட்ட ஒரு பிரசுரம் தேங்கியிருந்தால் மற்றொரு கிளை அலுவலகம் அப்பிரசுரத்தை அச்சிடுவதற்கு பதிலாக அந்தக் கிளை அலுவலகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது. இந்த சாஃப்ட்வேர் புரோகிராமும், மற்றொரு சாஃப்ட்வேர் புரோகிராமும், அதாவது சபையிலிருந்து இதற்கு முன்பு வந்த ஆர்டர்களின் அடிப்படையில் எவ்வளவு பிரசுரங்கள் தேவை என்பதை கணிக்க உதவுகிற சாஃப்ட்வேர் புரோகிராமும், எல்லா கிளை அலுவலகங்களிலும் பிரசுரங்கள் தேங்குவதை குறைக்க உதவி செய்திருக்கின்றன.

பிரசுரங்கள் மற்றும் பத்திரிகை ஆர்டர்களை அனுப்புவது, வருடாந்திர ஊழிய அறிக்கைகளைத் தொகுப்பது, மாநாடுகளை ஏற்பாடு செய்வது, பயணக் கண்காணிகளையும் விசேஷ பயனியர்களையும் நியமிப்பது போன்ற வேலைகளைத் திறம்பட செய்ய இந்த புரோகிராம் பெத்தேல் ஊழியர்களுக்கு உதவி செய்கிறது. இதே புரோகிராம் பொருட்களை வாங்கவும், கணக்கு வைக்கவும், விவரப் பட்டியல்களைக் கையாளவும் உதவுகிறது. அதனால், நாம் விலையுயர்ந்த கமர்ஷியல் சாஃப்ட்வேர் புரோகிராம்களைச் சார்ந்திருப்பது வெகுவாய் குறைந்திருக்கிறது.

ஆன்லைனில் ஆன்மீக ஒளி

பொதுவாக, ஒளி எல்லா இடங்களிலும் பாய்வதுபோல் கடவுளுடைய மக்களும் உலகின் எல்லா பகுதிகளிலும் ‘தங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்கிறார்கள்.’ (மத். 5:16) தொலைதூர இடங்களிலெல்லாம் ஆன்மீக ஒளியைப் பிரகாசிக்கச் செய்யும் ஒரு முக்கியமான கருவிதான் நம்முடைய அமைப்பின் www.watchtower.org வெப்சைட். இந்த வெப்சைட்டில் சுமார் 383 மொழிகளில் நம்முடைய பத்திரிகை கட்டுரைகளும், துண்டுப்பிரதிகளும், சிற்றேடுகளும் உள்ளன. அதுமட்டுமல்ல, 11 மொழிகளில் பரிசுத்த வேதாகமம்—புதிய உலக மொழிபெயர்ப்பு உள்ளது. மொத்தமாக 700-க்கும் அதிகமான கட்டுரைகள் இந்த வெப் சைட்டில் உள்ளன. சமீபத்தில் வெளிவந்த ஆர்வத்துக்குரிய கட்டுரைகளை பிரதி ஒவ்வொரு வாரமும் அப்டேட் செய்யப்படும் ஹோம் பேஜ் காட்டுகிறது. ஆன்லைனில் அநேக மொழிகளிலுள்ள பிரசுரங்களை பிரின்ட் எடுக்க முடிவதால் என்னென்ன பயன்கள்?

வேற்று மொழிகளில் பிரசுரங்களைப் பெறுவதற்கான சிறந்த வழி ‘வெப் சைட்’தான் என்பதை அமெரிக்கா, ப்ளோரிடாவில் வசிக்கும் பாட் என்ற பெண் கண்டிருக்கிறார். “உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதி வினியோகிப்பு முடிந்த பிறகு ஏற்கனவே ஆங்கில மொழி துண்டுப்பிரதியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு அவர்கள் பேசும் வெறொரு மொழியில் அந்தத் துண்டுப்பிரதியை பிரின்ட் எடுத்து கொடுத்தேன்” என்று பாட் எழுதினார். அதனால் கிடைத்த பலன்கள்?

ஒரு சிறிய கடை வைத்திருந்த பெண்ணுக்கு இந்தத் துண்டுப்பிரதியை ‘தாய்’ மொழியில் பிரின்ட் எடுத்துக் கொடுத்தார் பாட். இவ்வளவு சீக்கிரமாக தன் தாய் மொழியிலேயே துண்டுப்பிரதியைக் கொண்டு வந்து கொடுத்தபோது அந்தப் பெண்ணுக்கு ஒரே சந்தோஷம், ஆச்சரியம். இந்தப் பெண்ணும் கடைக்கு வந்திருந்த மற்ற நபர்களும் அவர்களாகவே சென்று பார்ப்பதற்காக நம் வெப் சைட் விலாசத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டார்கள். இன்னும் நிறைய விஷயங்களைக் கேட்டு தெரிந்துகொள்வதற்காக சகோதரி பாட்டை தன் வீட்டுக்கு வரும்படி கடைக்கு வந்திருந்த ஒரு பெண் அழைத்தாள். பாட்டைப் போலவே அநேகர் வெப் சைட்டிலிருந்து வெவ்வேறு மொழி பிரசுரங்களிலுள்ள சில பக்கங்களை வேற்று தேசத்தவர்களிடம் பிரின்ட் எடுத்து கொடுத்திருக்கிறார்கள்.

போன வருடம் கிட்டத்தட்ட எல்லா கண்டங்களிலிருந்தும் 2.4 கோடிக்கும் அதிகமானோர் நம்முடைய வெப் சைட்டை சந்தித்திருக்கிறார்கள். 2007 முதல், அந்த எண்ணிக்கை 33 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. உலகின் எல்லா பாகங்களில் வசிப்பவர்களும், ஏன், ஒதுக்குப்புற தீவுகளில் வசிப்பவர்களும், தங்களை சந்திக்கும்படி அல்லது தங்களுக்கு பைபிள் படிப்பு நடத்த ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார்கள். 2007 முதல் மின்அஞ்சல் கூப்பன்களின் வரவு 55 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஆம், ஆன்மீக ஒளி உலகின் கடைக்கோடி வரை பிரகாசிக்கிறது. எல்லாப் புகழும் நம் பரலோகத் தகப்பனையே சேரும்.மத். 5:16.

www.watchtower.org என்ற வெப் சைட் தவிர, www.pr418.com என்ற வெப் சைட்டும் இருக்கிறது. இதில் சில முக்கியமான பிரசுரங்களை டிஜிட்டல் வடிவில் பார்க்கலாம். இந்த வெப் சைட் எந்த விதத்தில் பயனுள்ளது?

அமெரிக்காவிலுள்ள மிஸ்சௌரியைச் சேர்ந்த த்ரிஷா என்பவர் மற்றவர்களுடைய உணர்ச்சிகளைப் பிரதிபலித்து இவ்வாறு சொன்னார்: “எப்போதுதான் வியாழக்கிழமை வருமோ என்று ஆவலாய் காத்திருப்பேன்.” ஏன்? ஏனென்றால் புதிதாய் வெளிவரும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் ஆடியோ பதிப்புகளை அன்றுதான் அவர் www.pr418.com வெப் சைட்டிலிருந்து டவுன்லோடு செய்வார். ஆன்மீக தகவல்கள் நிரம்பிவழியும் இந்த வெப் சைட்டை தவறாமல் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான சகோதர சகோதரிகளில் த்ரிஷாவும் ஒருவர். 27 மொழிகளில் பத்திரிகைகள், பைபிள், டிராமாக்கள், புத்தகங்கள், சிற்றேடுகள், துண்டுப்பிரதிகள் ஆகியவற்றின் ஆடியோ பதிப்புகளை இவர்கள் டவுன்லோடு செய்கிறார்கள். அதோடு, அமெரிக்க சைகை மொழி பிரசுரங்களும் இரண்டு பிரபல வீடியோ ஃபார்மேட்டுகளில் கிடைக்கின்றன.

இந்த வெப் சைட்டிலிருந்து யாரெல்லாம் நம்முடைய பிரசுரங்களை டவுன்லோடு செய்கிறார்கள்? முக்கியமாக நம்முடைய சகோதர சகோதரிகள். அதோடு, 200-க்கும் அதிகமான நாடுகளில் வசிப்பவர்களும் பிரசங்க வேலை தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் இருப்பவர்களும் பயன்படுத்துகிறார்கள். பாப்புவா-நியூ கினி, செ. ஹெலனாவில் இருப்பவர்கள், ஏன், அண்டார்டிகாவில் இருப்பவர்களும்கூட, தவறாமல் இந்த வெப் சைட்டை பயன்படுத்துகிறார்கள். இந்த ஆடியோ பதிப்புகள் நம் சகோதர சகோதரிகளுக்கு எவ்விதத்தில் பயனுள்ளதாய் இருக்கின்றன? உதாரணத்திற்கு, பிரெஞ்சு பாலினேஷியாவிற்குப் பிரசுரங்கள் பொதுவாக தாமதமாகவே வந்து சேர்கின்றன. ஆனால் கடைக்கோடியிலுள்ள அதன் தீவுகளிலும் இன்டர்நெட் வசதி இருப்பதால் பிரஸ்தாபிகள் அந்தந்த மாதத்திற்கான பிரசுரங்களை வெப் சைட்டில் போடப்படும் அதே நாளிலேயே கேட்க முடிகிறது.

அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸைச் சேர்ந்த டெபோராவுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் சபை கூட்டங்களுக்கு அவரால் போகமுடிவதில்லை. அதோடு, வாசிக்கும் விஷயங்களை அவரால் நினைவில் வைக்கவும் முடிவதில்லை. அதனால் இப்போது அவர் பிரசுரங்களை டவுன்லோடு செய்து கேட்கிறார். அவர் சொல்கிறார்: “இப்போது என்னால் கேட்கிற விஷயங்களை ஓரளவிற்கு ஞாபகத்தில் வைக்க முடிகிறது. கேட்டவற்றை என்னால் மற்றவர்களிடம் தன்னம்பிக்கையோடு சொல்லவும் முடிகிறது.”

அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த தம்பதியர் சைபீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்துகிறார்கள். அவருக்காக ரஷ்ய மொழியில் பிரசுரங்களை டவுன்லோடு செய்து தருவதில் அவர்கள் அலாதி ஆனந்தம் அடைகிறார்கள். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு சகோதரர் விடியற்காலையில் ஜாகிங் செய்யும்போது இயர்ஃபோன் மூலமாக பத்திரிகைகளிலுள்ள விஷயங்களைக் கேட்டுக்கொண்டே போவார்.

வட நியுஜிலாந்திலுள்ள ஒரு தம்பதியர் கூட்டங்களில் பயன்படுத்தப்படும் எல்லா தகவல்களையும், அதாவது காவற்கோபுர படிப்பு கட்டுரை, ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்,’ பெரிய போதகரிடமிருந்து கற்றுக்கொள் புத்தகங்களிலுள்ள அதிகாரங்கள், அந்த வாரத்திற்குரிய பைபிள் வாசிப்பு பகுதி ஆகியவற்றை ஒவ்வொரு வாரமும் டவுன்லோடு செய்கிறார்கள். அந்த வாரம் முழுவதும் இதை அவர்கள் கேட்பார்கள். அந்தக் கணவர் சொல்கிறார்: “இப்போதெல்லாம் வேலையில் வரும் பிரச்சினைகளைவிட ஆன்மீக விஷயங்களைக் குறித்தே நாங்கள் அதிகம் பேசுகிறோம்.” உலகெங்கிலும் உள்ள அநேக குடும்பங்கள் இதே போல் செய்கின்றன.

ஒவ்வொரு வாரமும் விசேஷமாக செவ்வாய்க்கிழமைகளில் அந்தந்த வாரத்திற்கான பைபிள் வாசிப்பு பகுதி ஆயிரக்கணக்கான முறை டவுன்லோடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மிக அதிகமாக டவுன்லோடு செய்யப்படும் கட்டுரைகள் காவற்கோபுர படிப்புக் கட்டுரைகள். அதோடு, சபைக்கான ஃபார்ம்களையும் பேச்சு குறிப்புத் தாள்களையும் வெப் சைட்டிலிருந்தே மூப்பர்கள் நேரடியாக பிரின்ட் செய்துகொள்கிறார்கள். மொத்தத்தில் இந்த ஏற்பாட்டால் நம்முடைய அமைப்பு நேரத்தையும் பணத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த முடிகிறது.

‘சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பாக அது அமையும்’

‘தேவபக்தி நிறைந்தவர்களாய்த் தொல்லையில்லாமல் அமைதியாக வாழவே’ யெகோவாவின் சாட்சிகள் விரும்பினாலும், துன்புறுத்தல் வரும்போது அதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுவதில்லை. (1 தீ. 2:1, 2) “என் பெயரை முன்னிட்டு மக்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்தி, ஜெபக்கூடங்களிலும் சிறைச்சாலைகளிலும் ஒப்படைப்பார்கள், ராஜாக்களிடமும் ஆளுநர்களிடமும் இழுத்துச் செல்வார்கள்” என்று இயேசு தம் சீடர்களிடம் சொன்னபோது அவர்கள் எல்லா மக்களுடைய வெறுப்புக்கும் ஆளாவார்கள் என்று எச்சரித்தார். இருந்தாலும், உண்மை வணக்கத்தை எதிர்ப்பவர்கள் கொண்டுவரும் துன்புறுத்தல்களால் நல்ல பலன்கள்தான் உண்டாகும் என்று சொன்னார். ஆம், துன்புறுத்தல், ‘சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பாக அமையும்’ என்று இயேசு முன்னறிவித்தார்.லூக். 21:12, 13, 17.

இயேசு முன்னறிவித்தபடி, அநேக இடங்களில் தங்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தை யெகோவாவின் சாட்சிகள் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அநேக தேசங்களிலுள்ள நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருப்பதால் அவர்களுடைய உரிமைகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிக்கவும் சுதந்திரமாக ஒன்றுகூடி வழிபடவும் அவர்களுக்கு இருக்கும் உரிமை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. தடைகள் பல இருந்தாலும் இந்த வருடத்தில் பல முக்கியமான வழக்குகளில் நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. நம்முடைய வேலை முற்றும் முழுக்க மத சார்பானது என்பதை அவ்வழக்குகள் உறுதி செய்திருக்கின்றன.

ஆஸ்திரியா

மே 2009-ல் நம் சகோதரர்களின் 30 வருட விடாமுயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. ஆஸ்திரியாவின் கல்வி, கலை, கலாச்சார கூட்டரசு அமைச்சகம் யெகோவாவின் சாட்சிகளை ஒரு மத சமுதாயமாக அறிவித்து அவர்களுக்குப் பெரும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. இப்படி அங்கீகாரம் பெற்றிருக்கும் மத ஸ்தாபனங்களின் பட்டியலில் யெகோவாவின் சாட்சிகள் 14-ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம் (ECHR) ஜூலை 2008-ல் சாட்சிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய பின், இன்னும் மூன்று வழக்குகளில் நம் ஆஸ்திரிய சகோதரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதனால், விவாதத்திற்கு இடமின்றி, யெகோவாவின் சாட்சிகள் மத சார்பான சமுதாயம் என்று முழு அங்கீகாரம் பெற்றிருக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்க உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி மற்றும் தென் ஆப்பிரிக்க பெத்தேலில் சேவை செய்யும் யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ முழுநேர ஊழியர்கள் அடங்கிய உலகளாவிய ஸ்தாபனம் தரப்பில் தென் ஆப்பிரிக்க தொழில் துறைக்கு எதிராக தென் ஆப்பிரிக்க தொழிலாளர் நீதிமன்றத்தில் 2005-ல் வழக்கு தொடுக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க தொழிலாளர் சட்டத்தின்கீழ் வரும் பணியாளர்கள் பிரிவில் பெத்தேல் ஊழியர்களைச் சேர்க்கக்கூடாது என்று கோரி அந்த வழக்கு தொடுக்கப்பட்டது. பெத்தேல் ஊழியர்கள் ‘பணியாளர்கள்’ அல்ல என்பதையும் பெத்தேலில் நடக்கும் வேலை மத சார்பான வேலை என்பதையும் ஒத்துக்கொண்டு மார்ச் 2009-ல் தொழிலாளர் நீதிமன்றம் சாட்சிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

உகாண்டா

உகாண்டா வருமான வரி சட்டத்தின்படி, உகாண்டா பெத்தேலில் சேவை செய்யும் யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ முழுநேர ஊழியர்கள் ‘பணியாளர்கள்’ என்று உகாண்டா வருவாய் ஆணையம் (URA) 2007-ல் அறிவித்தது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண சர்வதேச பைபிள் மாணாக்கர் சங்கம் (IBSA) தரப்பில் கம்பாலாவில் உள்ள உகாண்டா உயர்நீதி மன்றத்தில் URA-க்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. உகாண்டா பெத்தேல் ஊழியர்கள் ‘பணியாளர்கள்’ அல்ல என்று ஜூன் 2009-ல் உயர்நீதி மன்றம் IBSA-க்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. பெத்தேல் ஊழியர்கள் “எந்த சேவை புரிந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரேயளவு ஊக்கத்தொகையையே பெறுகிறார்கள்” என்பதை நீதிமன்றம் குறிப்பாக கவனித்தது. பெத்தேல் ஊழியர்கள் ஒரு மத ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அறப்பணிகளையும் மத சார்பான வேலைகளையும் செய்கிற அவர்களுக்கு உணவும், உறைவிடமும், சொந்த செலவுகளுக்காக சொற்ப தொகையும் அளிக்கப்படுகிறது என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

ஆர்மீனியா

ராணுவத்தில் சேரும் வயதிலுள்ள நம் சகோதரர்கள் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு அதில் சேர மறுப்பதால் அவர்களை அதிகாரிகள் கைது செய்து இன்றுவரை சிறையில் அடைத்து வருகிறார்கள். ஆகஸ்ட் 2009 கணக்கெடுப்பின்படி, 74 சகோதரர்கள் சிறையில் இருந்தார்கள். உள்ளூரிலுள்ள எல்லா நீதிமன்றங்களும் நம் சகோதரர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால் மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்திடம் தீர்வு கேட்டு புதிதாக நான்கு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நம் சகோதரர்கள் மற்ற நாடுகளிலிருந்து பெறும் பத்திரிகைகள் மீதும் அரசாங்கம் எக்கச்சக்கமாக ‘வாட்’ (VAT) வரி சுமத்தியிருக்கிறது. அநியாயமாகச் சுமத்தப்படும் இந்த வரி விலக்கப்படுகிறதோ இல்லையோ நம் சகோதரர்களுக்குத் தொடர்ந்து ஆன்மீக உணவு தாராளமாக வழங்கப்படும் என்பது மட்டும் நிச்சயம்.ஏசா. 65:13.

அஜர்பைஜான்

அங்குள்ள நம் சகோதரர்களுக்கு மத சுதந்திரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது. பிரசுரங்களைப் பெறுவதும் வழிபாட்டிற்கு கூடிவருவதும் இப்போதெல்லாம் ரொம்ப கடினமாகிவிட்டது. தலைநகரம் பாகுவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் மற்ற நகரங்களில் அவர்களுடைய மதம் பதிவு செய்யப்படாததால் கூட்டங்கள் நடத்தப்படும் வீடுகளில் போலீசார் அடிக்கடி அத்துமீறி நுழைவதும், பல மணிநேரம் காவல் நிலையங்களில் சகோதரர்கள் அடைக்கப்படுவதும் சகஜமாக இருக்கின்றன. வீடுகளில் வழிபாட்டுக்கு கூடிவருவதற்காக பதிவு செய்ய வேண்டுமென்ற சட்டம் எதுவும் இல்லாதபோதிலும் இப்படிப்பட்ட அராஜகங்கள் நடக்கின்றன. தேசிய அங்கீகாரம் அளிக்கும்படி ஏப்ரல் 9, 2009-ல் அஜர்பைஜான் அரசிடம் நம் சகோதரர்கள் மனு சமர்ப்பித்தார்கள். இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டால் நம் சகோதரர்கள் படும் கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

எகிப்து

கடந்த மூன்று ஆண்டுகளாக எகிப்திலுள்ள நம் சகோதரர்களும், பெல்ஜியம், இத்தாலி மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்த சகோதரர்களும் நம் வேலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறுவதற்காக எகிப்து நாட்டு அரசதிகாரிகளைச் சந்தித்திருக்கிறார்கள். அதன் விளைவாக, வீடுகளில் 30 பேர் வரை வழிபாட்டுக்காக கூடிவர அதிகாரிகள் நம் சகோதரர்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இருந்தாலும், அரசாங்க அதிகாரிகள் சிலர் தொடர்ந்து நம் சகோதரர்களுக்கு இம்சை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அரசு பாதுகாப்பு அலுவலகங்கள் நம் சகோதரர்களை தீவிரமாகக் கண்காணிக்கின்றன, சபையாரிடம் திடீர் திடீரென விசாரணை நடத்துகின்றன, அவர்களை மிரட்டுகின்றன. நம் சகோதரர்கள் அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசுவதோடு நீதிமன்றங்கள் மூலம் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறவும் நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்.

எரிட்ரியா

அடிப்படை மனித உரிமைகளை அதிகாரிகள் துளியும் மதிக்கவில்லை என்பதற்கு பின்வரும் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு. ஜூன் 28, 2009-ல் ஒரே சபையிலிருந்து 23 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் வயதான சகோதரிகளும், இரண்டு முதல் நான்கு வயதுக்குட்பட்ட மூன்று பிள்ளைகளும் இருந்தார்கள். வயதான சகோதரிகள் விடுதலை செய்யப்பட்டாலும் அந்தப் பிள்ளைகள் இன்னும் தாய்மார்களுடன் சிறையில் இருக்கிறார்கள்; அவர்களுடைய தந்தைமார் பல வருடங்களுக்கு முன்பிருந்தே சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்கள். சொல்லப்போனால், அநேகர் குடும்பமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்தம் 64 சகோதர சகோதரிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், அவர்களில் மூன்று பேர் ராணுவத்தில் சேராமல் நடுநிலை வகித்ததால் 1994-லிருந்தே சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் எந்தச் சட்டத்தை மீறியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களுக்கே இதுவரை சொல்லப்படவில்லை.

இந்தியா

கடந்த சில வருடங்களாக இங்குள்ள யெகோவாவின் சாட்சிகள் வெளி ஊழியத்தில் ஈடுபடுகையில் அடிக்கடி கலகக் கும்பல்களின் தாக்குதலுக்கு இரையாகிவருகிறார்கள். கேவலமான பேச்சுகளுக்கும், அடி உதைகளுக்கும் அவர்கள் ஆளாகியிருக்கிறார்கள். சிறையில் தள்ளப்படுவதாக மிரட்டப்பட்டிருக்கிறார்கள், அவர்களுடைய பிரசுரங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. அநேக சமயங்களில் அவர்கள் சரமாரியாக அடிக்கப்பட்ட பின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள்மீது கடுங்குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. நம் சகோதரர்கள் உள்ளூர் சட்டங்களை மீறுவதாக பொய் குற்றம்சாட்டி, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்படி வெறி கும்பல்கள் உள்ளூர் அதிகாரிகளைத் தூண்டிவிடுகிறார்கள்.

உதாரணத்திற்கு, பைபிளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டிய ஒருவரை மறுபடியும் சந்திப்பதற்கு, டிசம்பர் 2008-ல் கர்நாடக மாநிலத்தில் குந்தாப்புரா என்ற இடத்தில் வசிக்கும் மூன்று யெகோவாவின் சாட்சிகள் (தாய், மகள், பத்து வயது பேத்தி) கோனி கிராமத்திற்குச் சென்றிருந்தார்கள். பின்பு, ஐந்தாறு ஆட்கள் வந்து அந்த மூன்று சாட்சிகளைப் பலவந்தமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு பெரிய கும்பல் கூடிவிட்டது; நம்முடைய சகோதரிகள் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாகவும், ஜாதிக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாகவும் மற்றொரு மதத்தைத் தாழ்வாகப் பேசியதாகவும் போலீசார் அவர்கள்மீது குற்றம்சாட்டினார்கள். பின்பு, வீட்டுக்குச் செல்ல சாட்சிகள் அனுமதிக்கப்பட்டார்கள். இப்படிப்பட்ட எதிர்ப்புகளைச் சந்திக்கும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு சட்ட ரீதியில் உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

மால்டோவா

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத பிராந்தியமான டிரான்ஸ்னிஸ்டிரீயாவில் உள்ள நம் சகோதரர்கள் யெகோவாவின் சேவையில் மும்முரமாய் ஈடுபட்டு வருகிறார்கள்; இத்தனைக்கும், அவர்கள்மீது தடை உத்தரவுகள் போடப்போவதாகவும் அவர்களைப் பூண்டோடு அழிக்கப்போவதாகவும் சுமார் 12 வருடங்களாக மிரட்டல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. பல சவால்கள் இருந்தாலும், நம் சகோதரர்கள் யெகோவாவின் ஆசீர்வாதத்தை ருசித்திருக்கிறார்கள், அதோடு, பல நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த மூன்று உதாரணங்களைக் கவனியுங்கள்: அர்தாஷி என்ற கிராமத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்த நம் சகோதரிகள் இரண்டு பேரை ஆர்த்தடாக்ஸ் பாதிரி ஒருவர் திட்டியதற்காகவும் அடித்ததற்காகவும் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. நம்முடைய மத அமைப்பை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்ய சகோதரர்கள் எடுத்த முயற்சிக்கு தக்க பலன் கிடைத்திருக்கிறது, ஆம், டிரஸ்பல் நகர நீதிமன்றம் நம் சகோதரர்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ரைப்னிதா நகரில் ராஜ்ய மன்ற கட்டுமானப் பணியில் சேவை செய்த வாலண்டியர்களுக்கு வழங்கப்பட்ட உணவுமீது ரைப்னிதா நகர வரி ஆய்வாளர் அலுவலகம் சட்டவிரோதமாக வரி சுமத்தியதற்காக அதன்மீது குற்றம்சாட்டப்பட்டது.

கஸக்ஸ்தான்

கஸக்ஸ்தான் குடியரசின் பொது குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகம் நம் சகோதரர்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது, ஆனால் நீதிமன்றம் நம் சகோதரர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. முன்பு, கைஸைலோர்டா என்ற இடத்திலும், ஷைம்கென்ட், சார்யாகாஷ் ஆகிய நகரங்களிலும் உள்ள நீதிமன்றங்கள் நம்முடைய மத நடவடிக்கைகளை ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென கட்டளையிட்டிருந்தன. ஆனால், நவம்பர் 2008-ல் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்குப் பின் கைஸைலோர்டா பகுதியிலும், ஷைம்கென்ட் நகரத்திலும் கஸக்ஸ்தானின் தெற்கு பகுதி முழுவதிலும் மீண்டும் மத சுதந்திரம் வழங்கப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளின் மத அமைப்பை சட்டப்படி பதிவு செய்வதற்கு ஏழு வருடம் உள்ளூர் அரசு மறுத்தபோதிலும் டிசம்பர் 2008-ல் ஆடீராவ் நகர நீதிமன்றம் அதற்கு உரிமை அளித்தது.

ரஷ்யா

நம்முடைய மத சார்பான வேலைகளை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கடந்த ஊழிய ஆண்டில் நம்முடைய நிர்வாக அலுவலகத்திற்கு அரசு வழக்கறிஞரும் அரசு அதிகாரிகள் பலரும் அடிக்கடி வந்து சட்டவிரோதமாய் விசாரணை நடத்தினார்கள். நம்முடைய சகோதர சகோதரிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள். காரணமில்லாமல் நூற்றுக்கணக்கான முறை விசாரணை செய்யப்படுகிறார்கள். ஒருமுறை சபை கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அரசு ஆணையின்றி போலீசார் திடீர் சோதனை நடத்தியதால் கர்ப்பமாயிருந்த நம் சகோதரிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த 15 வயது பையன் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டான். உள்ளூர் சபை கூட்டங்களை முடக்கவும் மத பிரசுரங்களைத் தடை செய்யவும் அரசு அதிகாரிகள் தீவிரவாத தடுப்பு சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். சாட்சிகள் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று முத்திரை குத்தப்படுவதால் நம்முடைய மத சுதந்திரத்திற்கு வேறு பல அநியாயமான தடைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, நம் சகோதரர்கள் காரணமில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள்; அதோடு, இப்படி அபாண்டமாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதாடுவதற்கு வெளி நாட்டிலிருந்து வந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சட்டப்பூர்வ பிரதிநிதிகள் நான்கு பேருக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் மாஸ்கோவில் ஒரு சிறையில் 23 மணிநேரம் அடைக்கப்பட்டார்.

வாடகைக்கு எடுக்கப்பட்ட மன்றங்களில் கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்துவதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தங்களை கூட்டரசு பாதுகாப்பு துறை அங்கத்தினர்கள் ரத்து செய்திருக்கிறார்கள். புதிய ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கும் அதிகாரிகள் தடை விதித்திருக்கிறார்கள். செய்யாத தவறுகளுக்காக குற்றம் சாட்டப்பட்டு, போலீஸ் காவலில் இருக்கும்போது சித்திரவதை செய்யப்படுவதும் சாட்சிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளில் அடங்கும்.

தென் கொரியா

மனசாட்சியின் அடிப்படையில் ராணுவத்தில் சேர மறுப்பவர்கள் படைத்துறை சாராத மாற்று சேவையைச் செய்யலாம் என்று தென் கொரியா அரசு மே 7, 2008-ல் அறிவித்தது. ஆனால், ஜூன் 16, 2008-ல் அந்த அறிவிப்பை வாபஸ் வாங்கிக்கொண்டது. “மனசாட்சியின் அடிப்படையில் ராணுவ சேவையில் ஈடுபட மறுப்பதைக் குறித்து இன்னும் கூடுதல் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் தேசியளவில் அதற்கு ஒப்புதல் பெற வேண்டும் என்றும்” கொரியா அரசு குறிப்பிட்டது. ஆனால், இந்நாள்வரை கொரியா தேசிய பேரவை மாற்று சேவைக்கான மசோதாவை பரிசீலனை செய்யவே இல்லை. நம் சகோதரர்கள் ஐக்கிய நாட்டு சங்க மனித உரிமை குழுவின் தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழு ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் நமக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. 1970-க்கும் சுமார் 1985-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ராணுவத்தில் சேரும்படி வற்புறுத்தப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் ஐந்து பேரின் கொடிய மரணத்திற்கு கொரிய அரசுதான் காரணம் என்று மர்ம இறப்புகளின் கொரிய ராணுவ மாநில விசாரணை கமிஷன் (Korean Presidential Commission on Suspicious Deaths) ஜனவரி 2009-ல் ஒத்துக்கொண்டது. ராணுவத்தினரின் வன்முறையால் ஏற்பட்ட இறப்புகளுக்கு அரசுதான் காரணம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது இதுவே முதல்முறை.

தஜிகிஸ்தான்

இங்குள்ள யெகோவாவின் சாட்சிகளின் மத அமைப்புக்கு 2007-ல் தடை விதிக்கப்பட்டது. ஜெர்மனியிலிருந்து வந்த பிரசுரங்கள் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. ராணுவ நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. செப்டம்பர் 2008-ல் அது தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் ராணுவ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, ஆனால் அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரசுரங்கள் தடைசெய்யப்படுவதற்கும் பறிமுதல் செய்யப்படுவதற்கும் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவிப்பதையே அந்த மறுப்புகள் காட்டுகின்றன. நம் சகோதரர்களுக்கு உதவ கூடுதல் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

துருக்கி

நம் சகோதரர்கள் ராணுவத்தில் சேர மறுப்பதால் சவால்களை எதிர்ப்படுகிறார்கள். ஒரு சகோதரர் நடுநிலை வகிப்பதில் மிகவும் உறுதியாய் இருந்ததால் இரண்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ராணுவத்தில் சேருவதற்கான வயதை எட்டிய இன்னும் அநேக சகோதரர்கள் அபராதம் விதிக்கப்படுவார்கள், சிறையில் அடைக்கப்படுவார்கள், ஏன், வேலையிலிருந்தும் நீக்கப்படுவார்கள் என சதா மிரட்டப்படுகிறார்கள். சாட்சிகளின் தரப்பில் பதிவு செய்யப்பட்ட இரண்டு புகார்களை ஐக்கிய நாட்டு சங்க மனித உரிமை குழு விசாரணை செய்ய ஆரம்பித்திருப்பதாக மார்ச் 2009-ல் நம் சகோதரர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அதோடு, நிலுவையில் உள்ள மூன்று மனுக்களையும் விசாரணையில் சேர்த்துக்கொள்ள, அதாவது நம்முடைய சகோதரர்கள் ஆறு பேருடைய மனித உரிமை மீறப்பட்டிருக்கிறதா என்ற வழக்கு விசாரணையை ஆரம்பிக்க, மே 2009-ல் மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம் முடிவு செய்தது. அவர்களில் நான்கு பேர் ஏற்கெனவே சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள். நம்முடைய விஷயத்தில் இந்த இரண்டு நீதி விசாரணை அமைப்புகள் காட்டும் அக்கறையை யெகோவாவின் ஊழியர்கள் பெரிதும் மதிக்கிறார்கள்; சீக்கிரத்தில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

உஸ்பெகிஸ்தான்

அங்குள்ள யெகோவாவின் ஊழியர்களுக்கு மத சுதந்திரம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. அதனால், அரசு ஆதரவுடன் செய்யப்படும் துன்புறுத்தலுக்கு நம் சகோதரர்கள் அடிக்கடி ஆளாகிறார்கள். மதத்தைப் பற்றி கற்பித்ததற்காக இரண்டு மகன்களையுடைய ஒரு தந்தை இரண்டு வருடம் சிறையில் அடைக்கப்பட்டு மே 14, 2009-ல் விடுதலை செய்யப்பட்டார். தான் குடியுரிமை பெற்ற தஜிகிஸ்தானுக்கு அடுத்த நாளே அவர் நாடுகடத்தப்பட்டார். மூன்று சகோதரர்கள் “சட்டவிரோதமாக மத கூட்டம்” நடத்தியதற்காக இன்னும் சிறைவாசத்தை அனுபவிக்கிறார்கள். இந்த மூன்று சகோதரர்களுக்கான வழக்கறிஞர்கள் உஸ்பெகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மறுபடியும் மேல்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். உள்ளூர் சகோதரர்களும் வெளிநாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகளும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு மத விவகாரங்களைக் கண்காணிக்கும் உஸ்பெகிஸ்தான் அரசு குழுவினரையும் அதன் பிரதிநிதிகளையும் பலமுறை சந்தித்திருக்கிறார்கள்.

மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம்

பிரான்சு, ஸ்ட்ராஸ்பர்கிலுள்ள மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் (ECHR) ஆர்மீனியா, ஆஸ்திரியா, அஜர்பைஜான், சைப்ரஸ், பிரான்சு, ஜார்ஜியா, ரஷ்யா, செர்பியா, துருக்கி ஆகிய தேசங்களில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் தொடுத்த வழக்குகளில் இன்னும் 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனித உரிமைக்கான ஐரோப்பிய அவையின் எல்லைக்குட்பட்ட பிரஜைகளுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பது அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது மனுக்கள், ராணுவ சேவையை மறுப்பதற்கு இருக்கும் உரிமையை குறிக்கிறது. ஏழு மனுக்கள், மதத்தின் பேரில் செய்யப்பட்ட துன்புறுத்தலையும் பாகுபாட்டையும் பற்றியது. நான்கு மனுக்கள், யெகோவாவின் சாட்சிகள் தங்கள் வேலையை ஒழுங்கமைக்க பயன்படுத்திய சட்டப்பூர்வ நிறுவனத்தை தடைசெய்வதை அல்லது அதற்காக செய்யப்பட்ட பதிவை ரத்து செய்வதைப் பற்றியது. இரண்டு மனுக்கள், எந்த இடையூறுமின்றி வழிபாட்டுக்காக கூடிவரும் உரிமையில் அரசாங்கம் தலையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைப் பற்றியது.

அசாசியாஸ்யன் லே டேம்வின் டி ஷெயோவா (Association Les Témoins de Jéhovah, ATJ) என்ற அமைப்பு பிரான்சு நாட்டுக்கு எதிராக கொடுத்த மனுவிற்கு ஜூன் 17, 2008-ல் ECHR கவனம் செலுத்தியது. 1993-லிருந்து 1996 வரை ATJ-க்கு வந்த மத சார்பான எல்லா நன்கொடை மீதும் 60 சதவீதம் அநியாயமாக வரி விதிக்கப்பட்டதைப் பற்றி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. மத சுதந்திரம் சம்பந்தப்பட்ட ஐரோப்பிய அவையின் 9-ஆம் பிரிவின்கீழ் வரும் சட்டம் எந்தளவு மீறப்பட்டது என்பது தொடர்பாக கூடுதல் கேள்விகளை ECHR எழுப்பியது. பிரான்சிலும், ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு உட்பட்ட பிற நாடுகளிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள், ECHR இந்த வழக்கை ஏற்றுக்கொள்ளுமா என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறார்கள்.

‘சட்டம் என்ற பெயரில் தொல்லை கொடுத்து’ உண்மை வணக்கத்தை சாத்தான் குலைக்க பார்த்தாலும் யெகோவாவின் ஊழியர்கள் ‘விசுவாசத்தில் உறுதியாயிருக்கிறார்கள், உலகத்திலுள்ள [அவர்களுடைய] சகோதரர்கள் அனைவரும் [அவர்களைப்] போலவே துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள்.’ உண்மை வணக்கத்தார் அனைவரும் சாத்தானை எதிர்த்து உறுதியாய் நிற்பார்களாக! அளவற்ற கருணையைப் பொழியும் கடவுள் அவர்கள்மீது அக்கறையாக இருப்பதாலும் அவர்களைப் பலப்படுத்தி திடப்படுத்தி வருவதாலும் எல்லா கவலைகளையும் அவர்மீது வைத்துவிடுவார்களாக!—சங். 94:20, கத்தோலிக்க பைபிள்; 1 பே. 5:7-11.

‘மற்றவர்களுக்குக் கற்பிக்க போதிய தகுதி பெறுதல்’

கிறிஸ்தவ சபை ஆரம்பமானதிலிருந்தே பயிற்சி என்பது அதன் அங்கமாக இருந்துவந்திருக்கிறது. ‘இந்த விஷயங்களை உண்மையுள்ள ஆட்களிடம் சொல்; அப்போது, மற்றவர்களுக்குக் கற்பிக்க அவர்கள் போதிய தகுதி பெறுவார்கள்’ என்று அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவிடம் சொன்னார். (2 தீ. 2:2) இன்றும்கூட, யெகோவாவின் அமைப்பில் எத்தனையோ பயிற்சி திட்டங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, 2008-ல், நியு யார்க் பாட்டர்சனிலுள்ள உவாட்ச்டவர் கல்வி மையத்தில் சபை மூப்பர்களுக்கான பள்ளி நடத்தப்பட்டது. அதில் ஐக்கிய மாகாணங்களின் கிளை அலுவலக பிராந்தியத்திலிருந்தும் அலாஸ்கா, பெர்முடா, துருக்கி மற்றும் கெய்கோஸ் தீவுகளிலிருந்தும் வந்த 6,528 மூப்பர்கள் கலந்துகொண்டார்கள். மொத்தம் 70 வகுப்புகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

ஒரு வாரத்திற்கு தீவிர பயிற்சியளிக்கும் அந்த வகுப்புகளில் மூப்பர்களின் தினசரி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் சிந்திக்கப்பட்டன. பிரசங்க வேலையில் முன்னின்று சேவை செய்யவும் சபையில் திறமையாக போதிக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. (2 தீ. 4:5; 1 பே. 5:2, 3) அவர்களுடைய ஆன்மீக நலனையும் குடும்பத்தின் ஆன்மீக நலனையும் காத்துக்கொள்ளும்படி அந்த வகுப்பு அவர்களை ஊக்குவிக்கிறது. அதோடு, மற்றவர்களுக்கு உதவி செய்கையில் ‘சத்திய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்தவும்’ அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. (2 தீ. 2:15) அந்தப் பள்ளியில் கலந்துகொண்ட மூப்பர்கள் தெரிவித்த பாராட்டு வார்த்தைகளில் சில...

“சபையில் இருக்கிற சகோதரர்களிடம் எந்தளவு மனத்தாழ்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை போதனையாளர்களைப் பார்த்து கற்றுக்கொண்டோம். ஆளும் குழுவுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நான் சத்தியத்தில் இருக்கிற இத்தனை வருடங்களில் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.”

“நமக்கு என்ன வேண்டுமென்றும் அதை எப்போது கொடுக்க வேண்டுமென்றும் யெகோவா தேவனுக்குத் தெரியும். என்னுடைய விசுவாசம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது, என்னுடைய ஆன்மீக பேட்டரி இப்போது ரீசார்ஜ் செய்யப்பட்டிருக்கிறது. தம்முடைய அமைப்பின் மூலம் யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளை மதிக்கவும் தம் மக்களை யெகோவா எப்படிக் கவனித்துக்கொள்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளவும் இந்தப் பள்ளி எனக்கு உதவி செய்திருக்கிறது.”

“இது அற்புதமான ஓர் அனுபவம். இந்த வகுப்பில் கலந்துகொண்ட பிறகுதான் தெரிகிறது நான் எந்தளவு அறியாமையில் இருந்திருக்கிறேன் என்று. இந்த வகுப்பில் கலந்துகொண்ட பிறகுதான் தனிப்பட்ட படிப்பின் மதிப்பையும், கற்றுக்கொண்ட எல்லா விஷயங்களையும் கடைப்பிடிக்க வேண்டியதற்கான காரணத்தையும் இன்னும் அதிகமாகப் புரிந்துகொண்டேன்.”

“கிறிஸ்துவின் சிந்தையோடு என் குடும்பத்தையும் சபையையும் கவனித்துக்கொள்ள இந்த வகுப்பு எனக்கு சிறந்த பயிற்சி அளித்திருக்கிறது. (1 கொ. 2:16) நான் எப்படிப்பட்டவன் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதற்கும் இந்த வகுப்பு எனக்கு உதவியிருக்கிறது.”

“யெகோவாவின் போதனையாளர்களால் கொடுக்கப்பட்ட இந்த ஒரு வார பயிற்சியை வேறெதற்காகவும் விட்டுக்கொடுத்திருக்க மாட்டேன். ஒரு பெரிய பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருந்தாலும்சரி.”

“எவ்வளவு உற்சாகமூட்டும் அனுபவம், பயனுள்ள அனுபவம்! யெகோவாவின் சேவையைத் தொடர்ந்து செய்ய இந்த வகுப்பு எனக்கு புதுத் தெம்பளித்திருக்கிறது. சுயதியாகத்தைக் காட்டவும், நம் சகோதர சகோதரிகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் நீரூற்றாக விளங்கவும் உதவி செய்திருக்கிறது. (ஏசா. 32:2) யெகோவாவே உமக்கு மிகவும் நன்றி!”

“இந்த வகுப்பில் யெகோவாவின் அன்பை கண்டுகொண்டோம். அவரே வந்து மேய்ப்பு சந்திப்பு செய்தது போல் இருக்கிறது.”

“யெகோவாவுக்கு மகிமையும் துதியும் சேர்க்கும் விதத்தில் என் நியமிப்பை திறம்பட செய்வதற்கு கற்றுக்கொள்ள கிடைத்த இந்தப் பெரும் பாக்கியத்திற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன்.”

மற்ற இடங்களில் உள்ள மூப்பர்களும் காலத்திற்கு ஏற்ற இந்தப் போதனையிலிருந்து பயனடைவதற்கான ஏற்பாடுகளைக் குறித்து பின்னர் ஆளும் குழு தெரிவிக்கும்.

கிளை அலுவலக பிரதிஷ்டைகள்—மகிழ்ச்சியான தருணங்கள்

ஜனவரி 24, 2009-ல் கிழக்கு ஆப்பிரிக்கா, டான்ஜானியாவில் உள்ள புதிய கிளை அலுவலகம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது ஆளும் குழு அங்கத்தினர் சாம்யெல் ஹெர்ட் சிறப்பு பேச்சாளராக வந்திருந்தார். 25 வருடங்களுக்கு முன் டான்ஜானியா கிளை அலுவலகம் மூன்று அறைகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. வீட்டு எண் 46, மாகோமினி குடியிருப்பு என்றுதான் டான்ஜானியா சகோதரர்களுக்கு அது அறியப்பட்டது. 1987-ல் அங்கு தடை நீக்கப்பட்ட பின்பு நம் வேலையில் ஏற்பட்ட முன்னேற்றங்களை கேட்டு 22 நாடுகளிலிருந்து வந்திருந்த 779 பிரதிநிதிகள் பலரின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது. “இந்த நாட்டில் இவ்வளவு மாற்றங்கள் நடந்திருக்கிறது என்றால் அதற்கு யெகோவாதான் காரணம்” என்று பல வருடங்களாக சத்தியத்தில் இருக்கும் ஒரு சகோதரர் சொன்னார். இன்றைக்கு நம்முடைய பிரசங்க வேலை அபிவிருத்தி அடைந்திருக்கிறது. 14,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் யெகோவாவுக்கு நன்றி சொல்லி அவருடைய பெயருக்குப் புகழ் சேர்க்கிறார்கள்.—சங். 92:1, 4.

மே 2, 2009 சனிக்கிழமையன்று நெதர்லாந்து கிளை அலுவலகத்தில் ஆளும் குழு அங்கத்தினர் தியோடர் ஜாரஸ் பிரதிஷ்டை பேச்சை கொடுத்தார்; அதற்கு 31 நாடுகளிலிருந்து சுமார் 600 சகோதர சகோதரிகள் வந்திருந்தனர். 1983-ல் கட்டப்பட்ட கிளை அலுவலகத்தில் கூடுதலாக ஒரு குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது. முன்பு பத்திரிகைகளை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட இடங்கள் அலுவலகங்களாக மாற்றப்பட்டன. மண்டல ஆடியோ/விடியோ மையத்திற்காக (RAVC) ஒரு விடியோ ஸ்டுடியோவும் இங்கு அமைக்கப்பட்டது. இந்த RAVC 24 மொழிகளில் சிடி-க்களையும் டிவிடி-க்களையும் தயாரிக்கிறது. அவற்றில் பெரும்பாலும் ஐரோப்பாவில் பேசப்படும் மொழிகளே. அதுமட்டுமல்ல, சுமார் 20 வெவ்வேறு சைகை மொழிகளில் விடியோக்களை வெளியிடுவதிலும் இந்த RAVC உதவுகிறது. அதோடு, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஓசியானியா ஆகிய தேசங்களில் சிடி-க்கள் தயாரிக்கப்படும் வேலையையும் உலகமுழுவதிலும் டிவிடி-க்கள் தயாரிக்கப்படும் வேலையையும் RAVC ஒருங்கிணைக்கிறது. உலகின் மற்ற பகுதிகளில் உள்ள கிளை அலுவலகங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி அதை அந்தந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் வேலையையும் நெதர்லாந்து கிளை அலுவலகம் செய்கிறது. புதிதாய் வடிவமைக்கப்பட்ட அதன் வளாகம் இந்த வேலைகளை செய்ய பொருத்தமாக இருக்கிறது.

‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’

உண்மைதான், நாம் சந்தோஷப்படுவதற்கு அநேகமநேக காரணங்கள் உள்ளன. விறுவிறுப்பான இந்தக் காலக்கட்டத்தில் வாழும் நாம் பாக்கியம் பெற்றவர்கள்! இருந்தாலும் தீர்க்கதரிசனம் சொல்கிறபடி, ‘கடைசி நாட்கள் சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்கள்தான்.’ (2 தீ. 3:1) ஆனால், மீட்பு கதவருகில் இருப்பதால் யூதா அளிக்கும் இந்த வலிமையான அறிவுரையைப் பின்பற்ற நாம் ஒவ்வொருவரும் மனதில் உறுதிகொள்வோமாக: “என் அன்புக் கண்மணிகளே, உங்களுடைய மகா பரிசுத்த விசுவாசத்தை அஸ்திவாரமாகக் கொண்டு உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்; கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலோடு ஜெபம் செய்யுங்கள். எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள். அதேசமயத்தில், முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்துகிற நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்திற்காக ஆவலோடு காத்திருங்கள்.”—யூ. 20, 21.

[பக்கம் 13-ன் வரைபடம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

www.watchtower.org வெப் சைட்டை தினமும் பார்ப்பவர்கள்

70,000

50,000

30,000

10,000

1999 2001 2003 2005 2007 2009

[பக்கம் 21-ன் தேசப்படம்]

((முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சமீபத்தில் சட்டப்பூர்வமாய் பிரத்தியேக நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நாடுகள்

ஆஸ்திரியா

எகிப்து

எரிட்ரியா

உகாண்டா

தென் ஆப்பிரிக்கா

மால்டோவா

ஆர்மீனியா

துருக்கி

அஜர்பைஜான்

ரஷ்யா

கஸக்ஸ்தான்

உஸ்பெகிஸ்தான்

தஜிகிஸ்தான்

இந்தியா

தென் கொரியா

[பக்கம் 11-ன் படம்]

இளம் பிரஸ்தாபிகள்கூட பைபிள் படிப்பு ஆரம்பிப்பதில் ஆனந்தம் காண்கிறார்கள்

[பக்கம் 27-ன் படங்கள்]

தேவராஜ்ய பொறுப்புகளை மூப்பர்கள் திறம்பட நிறைவேற்ற சபை மூப்பர்களுக்கான பள்ளி உதவுகிறது

[பக்கம் 28-ன் படங்கள்]

நெதர்லாந்து கிளை அலுவலகத்தில் சகோதரர் ஜாரஸ் பிரதிஷ்டை பேச்சு கொடுத்தபோது

[பக்கம் 29-ன் படங்கள்]

டான்ஜானியா கிளை அலுவலகத்தில் சகோதரர் ஹெர்ட் பிரதிஷ்டை பேச்சு கொடுத்தபோது