பெலிஸ்
பெலிஸ்
யுகாடன் தீபகற்பத்தில் மெக்சிகோ, குவாதமாலா, கரீபியன் கடல் ஆகியவற்றை எல்லையாகக் கொண்டு அமைந்திருக்கும் பெலிஸ் நாடு வெப்பமண்டலப் பிரதேசத்தில் ஒரு மணிக்கல்லாய்த் திகழ்கிறது. முன்னர் பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் என்றழைக்கப்பட்ட இந்தச் சின்னஞ்சிறிய நாடு, கலாச்சாரங்கள், மொழிகள், பழக்கவழக்கங்கள், உணவுகள், மதங்கள் ஆகியவற்றின் கதம்பமாய்த் திகழ்கிறது.
பெலிஸின் மக்கள்தொகை சுமார் 3,00,000-மாக இருந்தாலும் மற்ற மத்திய அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிட அங்கே ஜனநெரிசல் குறைவுதான். அங்குள்ள செழிப்பான வெப்பமண்டலக் காடுகள், பிடிபடாமல் தப்பிக்கும் ஜாகுவார் சிறுத்தைப் புலி உட்பட, கொள்ளை அழகுள்ள பறவைகளுக்கும் கண்கவர் விலங்குகளுக்கும் “வீடாக” விளங்குகிறது. அங்கே, பண்டைய மாயா இனத்தவருடைய ஏராளமான சிதிலங்களையும் கம்பீரமான மலைகளையும் அவற்றில் உயர்ந்தோங்கி நிற்கும் பனைமரங்களையும் ஆங்காங்கே கொட்டும் அருவிகளையும்கூடக் காணலாம். இந்த நாட்டிற்கு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வேறொரு சிறப்பம்சமும் உண்டு; அங்கு ஏராளமான தொடர் குகைகள் உள்ளன; அவற்றில் சில, தெளிந்த நீருடன் வளைந்து நெளிந்து ஓடும் ஆறுகளால் இணைக்கப்பட்டுள்ளன. கரையோரம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் விதத்தில் மிக நீண்ட தூரத்திற்கு உள்ள பெலிஸ் பவளப் பாறையில், கண்ணைப் பறிக்கும் பவளங்கள் உள்ளன. அதோடு, புள்ளி வைத்தாற்போல் சிறு தீவுகள் காணப்படுகின்றன; அவை, வெண் மணல் கடற்கரைகளும் தென்னை மரங்களும் நிறைந்த தாழ்வான தீவுகள்.
ஆரம்ப கால சரித்திரம்
தென் அமெரிக்காவைச் சேர்ந்த அரவாக், கரிப் ஆகிய இனத்தவரே பெலிஸில் ஆரம்பத்தில் குடியேறியவர்கள். வட, தென் அமெரிக்க கண்டங்களுக்கு ஐரோப்பியர் செல்வதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பாக, மாயா நாகரிகத்தின் மையமாக பெலிஸ் கருதப்பட்டது; அங்கே, தழைத்தோங்கிய வழிபாட்டு ஸ்தலங்களும், கண்கவர் கோவில்களும் காணப்பட்டன.
பெலிஸில் குடியேறி அதைத் தங்களுடைய ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர ஆரம்பத்தில் ஐரோப்பியர் எடுத்த முயற்சிகளைப் பற்றி விவரமான பதிவுகள் எதுவும் இல்லை. ஆனால், மாயா இனத்தவரை
அடக்கி ஆள ஸ்பெயின் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததைப் பற்றிய பதிவுகள் இருக்கின்றன. 1638-ல் ஆங்கிலேய கடற்கொள்ளையர்கள் பெலிஸின் கடற்கரைப் பகுதியில் குடியேறினார்கள். 17-ஆம் நூற்றாண்டின் மத்திபத்திற்குள், லாக்வுட் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்க நிறையப் பேர் அங்கே வந்து குடியேறினார்கள்; இந்த மரக்கட்டைகளிலிருந்துதான் விலையுயர்ந்த ஒரு சாயம் தயாரிக்கப்பட்டது.ஜமைகா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் சந்தைகளிலிருந்தும் நேரடியாக ஆப்பிரிக்காவிலிருந்தும் ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட அடிமைகள் லாக்வுட், கருங்காலி ஆகிய மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். சவுக்கை கையிலெடுத்து அடிமைகளை விரட்டி வேலை வாங்கும் நிலை அமெரிக்க கண்டங்களின் மற்ற இடங்களில் காணப்பட்ட அளவுக்கு இந்த மரத் தொழிற்சாலைகளில் காணப்படவில்லைதான்; என்றாலும், இங்கு வாழ்க்கைச் சூழல் மோசமாக இருந்தது, கொடுமையும் சர்வசாதாரணமாகக் காணப்பட்டது. அநேக அடிமைகள் கலகம் செய்தார்கள், தற்கொலை செய்துகொண்டார்கள், அல்லது தப்பித்துச் சென்று பெலிஸுக்குள்ளேயே தனித்தனி சமுதாயங்களை உருவாக்கிக் கொண்டார்கள். 1862-ல் பெலிஸ், ஆங்கிலேயரது குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது; 1981-ல் அது சுதந்திரம் பெற்றது. a
சத்திய விதை வேரூன்றுகிறது
1918-ல் ஜமைகாவில் ஞானஸ்நானம் பெற்ற ஜேம்ஸ் கார்டன் என்பவர், சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் என்று அப்போது அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளில் முதலாவது பெலிஸுக்கு வந்தவர்களுள் ஒருவர். மெலிந்த தேகமும், மென்மையான குரலும் கொண்ட அவர் 1923-ல் ஜமைகாவைவிட்டு பெலிஸுக்கு வந்து குடியேறினார். அவர் ஒதுக்குப் புறத்திலிருந்த பாம்பா என்றழைக்கப்பட்ட மாயா கிராமத்தில் குடியேறி, திருமணம் செய்துகொண்டு, குடும்பம் நடத்தினார். அவர் தன் கிறிஸ்தவ சகோதரர்களைவிட்டு தொலை தூரத்தில் இருந்தபோதிலும் தன் நண்பர்களுக்கும் அக்கம்பக்கத்தாருக்கும் நற்செய்தியை அறிவித்தார்.
இந்த ஆங்கிலேயக் குடியேற்றத்தின் பிற பகுதிகளுக்கு நற்செய்தி எப்படிப் பரவியது? 1931-ல், அமெரிக்காவைச் சேர்ந்த ஃப்ரிடா ஜான்சன் என்ற சுமார் 58-60 வயதுடைய குள்ளமான பெண்மணி, தென்
அமெரிக்காவின் சில பகுதிகளில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அவர் தன்னந்தனியாக சென்று, சில சமயங்களில் குதிரை மீது சென்று, நகரங்களிலும், கிராமங்களிலும், கரீபியன் கரையோரம் ஆங்காங்கே சிதறிக் கிடந்த வாழைத் தோட்டங்களிலும் நற்செய்தியை அறிவித்தார்.1933-ல் பெலிஸ் நகரத்துக்கு வந்த ஃப்ரிடா, திருமதி பிக்ஸ் என்பவரிடமிருந்து ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் வீட்டைவிட்டு வெளியே போவதற்கு முன்பு ஃப்ரிடா பைபிள் வாசித்ததையும் துதிப் பாடல் பாடியதையும் அந்தப் பெண்மணி கேட்டார். ஃப்ரிடாவின் தளராத பக்திவைராக்கியத்தை அநேகர் கவனித்தார்கள். உதாரணத்திற்கு, பெரும்பாலான வெப்பமண்டல வாசிகள் பொதுவாக மதிய வேளையில் சற்று ஓய்வெடுப்பதைப் போல ஃப்ரிடா ஓய்வெடுக்காததைக் கவனித்தார்கள். அந்த நாட்டில் ஆறு மாதங்கள் அவர் தங்கியிருந்த காலத்தில், தாடியஸ் ஹாஜ்சன் என்பவரின் ஆர்வத்தைத் தூண்டினார்; ஜமைகாவைச் சேர்ந்த அவர் ரொட்டி தயாரிப்பாளராக இருந்தார். முக்கியமாய் பெலிஸ் நகரத்தில் ஃப்ரிடா ஊழியம் செய்து வந்தபோதிலும், நாட்டுப்புறப் பகுதிகள் சிலவற்றுக்கும் அவர் சென்றார்; பாம்பாவுக்குச் சென்றபோது ஜேம்ஸ் கார்டன் என்பவரை அவர் சந்தித்தார். ஃப்ரிடா ஊழியத்தில் ஊக்கமாகக் கலந்துகொண்டதால், சக விசுவாசிகள் எல்லாரும் ஒருவரோடு ஒருவர் அறிமுகமாகவும், கூட்டங்களுக்காக ஒன்றுகூடி வர ஆரம்பிக்கவும் முடிந்தது.
சத்தியத்தை ஏற்றுக்கொள்ள அநேகர் உதவி பெற்றார்கள்
அந்தக் காலத்தில் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது மிகக் கடினமாக இருந்தபோதிலும், ஜேம்ஸும் தாடியஸும் தங்கள் தங்கள் பகுதியில் ஊழியம் செய்து கொண்டே தவறாமல் ஒருவரோடொருவர் தொடர்பு வைத்துக்கொண்டார்கள். 1934-லேயே, தாடியஸ் தனக்கு டிரான்ஸ்க்ரிப்ஷன் மெஷினையும் பதிவு செய்யப்பட்ட பைபிள் பேச்சுகளையும் அனுப்பி வைக்கும்படி கேட்டு புருக்லினிலுள்ள உலக தலைமை அலுவலகத்திற்குக் கடிதம் எழுதினார்.
சனிக்கிழமை மாலை வேளைகளில் தாடியஸ் உச்ச நீதிமன்ற கட்டிடத்தின் முன்பாக இருந்த சிறிய பூங்காவில், தன்னிடமிருந்த பதிவு செய்யப்பட்ட பேச்சுகளைப் போட்டுக் காட்டினார்; அந்தப் பூங்கா, காவல் படையினரின் உடற்பயிற்சி மைதானமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. “போர்க்களம்” என்ற அழைக்கப்பட்ட அந்தப் பூங்கா அதன் பெயருக்கேற்ப மாறியது. அந்தப் பூங்காவின் ஒரு பக்கத்தில், சகோதரர் ரதர்ஃபர்டின் பேச்சுகளை தாடியஸ் போட்டுக் காட்டுகையில், அதன் மறு பக்கத்தில் சால்வேஷன் ஆர்மி என்ற பிரிவின் இசைக் குழுவினர்
வாத்தியங்களை வாசித்தார்கள்; அதில் போமான்ட் போமன் பேரோசை எழுப்பிய பெரிய முரசை வாசித்தார். ஆனால் சீக்கிரத்தில், போமான்ட் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, “போர்க்களத்தில்” தாடியஸ் இருந்த பக்கத்திற்கு வந்து அவருடன் சேர்ந்துகொண்டார். “அந்த முரசு வாசிப்பதை நிறுத்தச் செய்ததற்காக, என் கடவுளான யெகோவாவுக்கு நான் நன்றி சொல்கிறேன்!” என்று அவர் சொன்னார்.‘கோவேறு கழுதைப் பூங்கா’ என்ற திறந்தவெளி சந்தை, நகரத்திற்கு உள்ளேயும் அதன் சுற்றுப்புறத்திலும் பொருள்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட கோவேறு கழுதை வண்டிகள் நிறுத்துமிடமாக இருந்தது. அந்தப் பூங்காவுக்கு முன்பிருந்த சிறிய இடம், பொது மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க பொருத்தமாக இருந்தது. நெட்டையாகவும், மாநிறமாகவும், லட்சணமாகவும் இருந்த பேராற்றல்மிக்க பேச்சாளரான தாடியஸ், அடிக்கடி அங்கு பேச்சுக் கொடுத்தார். பெலிஸில் பைபிளை நேசித்த ஆட்கள்மீது கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் கட்டுப்பாடு பலத்திருந்தபோதிலும், நல்மனமுள்ள அநேகர் நற்செய்திக்குச் செவிசாய்த்தார்கள்; அவர்களில், ஜமைகாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹையட், ஆர்தர் ரான்டல் ஆகியோரும் அடங்குவர்.
பெலிஸ் நகரத்தின் வடக்கே, தன்னுடைய பேக்கரியில் தாடியஸ் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார். அந்தக் கூட்டங்களுக்காக அவர், உணவு விநியோகிக்கும் மேடையைத் தள்ளி வைத்துவிட்டு, நாற்காலிகளின் மீது பலகைகளைப் பொருத்தி ‘பெஞ்சுகளாக’ உருவாக்க வேண்டியிருந்தது. நகரத்தின் தெற்கே, கோரா ப்ரௌன் என்ற சகோதரியின் வீட்டில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதோடு, நோரா ஃபாயாட் என்ற சகோதரி தான் சிறுமியாக இருக்கையில் அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகள் சிலர் அவருடைய வீட்டுக்கு அடுத்திருந்த ஆர்தர் ரான்டலின் வீட்டுக் காம்பௌண்டில் கூட்டங்களுக்காகக் கூடிவந்ததைப் பற்றிச் சொன்னார்.
மும்முரமான ஊழியம் பலன்களை அளிக்கிறது
ஓய்வொழிச்சலின்றி ஊழியத்தில் ஈடுபடுவது, ஆரம்ப கால சாட்சிகள் பலரது அடையாளச் சின்னமாய் இருந்தது. உதாரணத்திற்கு, ஜேம்ஸ் (ஜிம்ஸி) ஜெங்கன்ஸ் கண்பார்வையற்றவராக இருந்தபோதிலும் தன் கைத்தடியின் உதவியோடு பெலிஸ் நகரமெங்கும் நடந்துபோனார். அவர் சந்தைவெளியில் பிரசங்கித்ததை, அங்கிருந்து இரண்டு தெருக்கள் தள்ளியும் கேட்க முடிந்ததாக மாலி டிலட் என்பவர் சொன்னார்! கூட்டங்களில் அவர் கூர்ந்து கவனித்ததும்கூட எல்லாருக்கும் நினைவிருக்கிறது; அவர் தன் கைத்தடியின்மீது சற்று முன்னோக்கி
சாய்ந்து உட்கார்ந்துகொண்டு சொல்லப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாய்க் கேட்டார். அநேக பைபிள் வசனங்களை அவர் மனப்பாடம் செய்து, ஊழியத்தில் அவற்றைப் பயன்படுத்தினார்.இதற்கிடையில் ஜேம்ஸ் கார்டன், மகோகனி மரத்தால் செய்யப்பட்ட கையடக்கமான பெட்டியை ஒரு கையிலும் டிரான்ஸ்க்ரிப்ஷன் மெஷினை இன்னொரு கையிலும் எடுத்துக்கொண்டு பாம்பாவைச் சுற்றியிருந்த கிராமங்களுக்குச் சென்றார்; அங்கே தான் சந்தித்த எல்லாரிடமும் நற்செய்தியை அறிவிப்பதற்கு அவர் பெயர்போனவராய் இருந்தார். ஞாயிற்றுக்கிழமை தோறும் விடியலுக்கு முன்பு இருட்டோடு ஊழியத்துக்குப் புறப்பட்டுவிடுவார்; நீண்ட மரத் தோணியில் ஆற்றைக் கடந்து, அந்தப் பிராந்தியத்தில் நாள் முழுவதும் பல மைல் தூரம் நடப்பார். பொழுது சாய்ந்ததும், அந்த மங்கிய வெளிச்சத்தில் அவர் ஆற்றைவிட்டுக் களைப்போடு நடந்து வருவதைக் காண முடியும். இரவு உணவுக்குப் பிறகு, ஜேம்ஸ் தன் ஆறு பிள்ளைகளுக்கும் பைபிள் படிப்பு நடத்துவார்; கைகளால் புத்தகத்தைப் பிடிக்க முடியாதளவுக்குக் களைப்பில் கண்கள் செருகும்வரை அப்படிப் படிப்பு நடத்துவார்.
அந்தச் சமயத்தில், சகோதரர் கார்டனின் மனைவி யெகோவாவின் சாட்சியாக இருக்கவில்லை. சொல்லப்போனால், ஒருநாள் சகோதரர் கார்டன் வெளியே போயிருந்த சமயத்தில் அவரிடமிருந்த பெரும்பாலான பைபிள் பிரசுரங்களை எல்லாம் எடுத்து அவருடைய மனைவி எரித்துவிட்டார். வீடு திரும்பிய ஜேம்ஸ் தன் மனைவி செய்திருந்ததைப் பார்த்தபோது கோபப்பட்டு கத்தவில்லை. ஆனால் உறுதியான குரலில், “இனிமேல் இதுபோல் செய்யாதே!” என்று மட்டும் சொன்னார். அவர் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டது அவருடைய பிள்ளைகளின் மனதைத் தொட்டது; ஏனென்றால், தங்களுடைய அம்மாவால் அவருக்கு எப்பேர்ப்பட்ட இழப்பு ஏற்பட்டிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
யெகோவாவின் சக்தியால் ஈர்க்கப்படுதல்
ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில், ஆங்கிலிக்கன் சர்ச்சைச் சேர்ந்த டரின் லைட்பர்ன் என்ற பக்திமிக்க பெண்மணிக்கு ஜேம்ஸ் நற்செய்தியை அறிவித்தார்; அவரும் த ஹார்ப் ஆஃப் காட் என்ற புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். மென்மையாகப் பேசுகிற இயல்புடைய ஜேம்ஸ் சொன்ன எல்லாவற்றையும் அவரால் முழுமையாகக் கேட்க முடியாவிட்டாலும், அவர் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாரென யோசித்தார். அவருடைய பெரியம்மா ஆல்ஃபான்சினா ரோபாடோவுடன் பெலிஸ் நகரில் அவர் கொஞ்ச நாட்கள் தங்கியிருந்த சமயத்தில், ஒருவர் காம்பவுண்டின் வாசலில் நின்று உள்ளே வர அனுமதி கேட்டார்.
“எனக்கு ஓர் அருமையான புத்தகத்தை ஒருவர் கொடுத்தார் என்று சொன்னேன், அல்லவா? அவரைப் போலவே இவர் இருக்கிறார்” என்று டரின் தன் பெரியம்மாவிடம் சொன்னார்.
வந்தவர் ஜேம்ஸ் கார்டன் அல்ல, ஆனால் ஜேம்ஸ் ஹையட். அந்தப் பெண்கள் இருவருக்கும் அவர் டிரான்ஸ்க்ரிப்ஷன் மெஷினில் பேச்சைப் போட்டுக் காட்டினார்; பின்பு, த ஹார்ப் ஆஃப் காட் புத்தகத்தை ஆல்ஃபான்சினாவிடம் கொடுத்தார். ஆல்ஃபான்சினாவும் அவருடைய தங்கை ஆக்டாபெல் ஃப்ளவர்ஸ் என்பவரும் அரசியலில் அதிக ஈடுபாடுள்ளவர்களாய் இருந்தபோதிலும் சத்தியத்தைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அன்று ஆல்ஃபான்சினா அந்தப் பேச்சைக் கேட்ட பிறகு தன் தங்கையிடம் இவ்வாறு சொன்னார்: “ஒரு விஷயம் தெரியுமா, இங்கு ஒருவர் வந்து கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பேசினார். என்னைப் பொறுத்தவரை, நாம் தேடிக்கொண்டிருக்கிற சத்தியத்தைத்தான் அவர் சொன்னார்!” அடுத்த முறை அந்தச் சகோதரர் அங்கு வரும்போது தான் அங்கிருக்க வேண்டுமென ஆக்டாபெல் தீர்மானித்தார். ஆல்ஃபான்சினா, ஆக்டாபெல், டரின் ஆகிய மூவரும் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, 1941-ல் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
அதற்குப் பிறகு சீக்கிரத்தில் ஆல்ஃபான்சினா, ஆக்டாபெல் ஆகியோரது அம்மா இறந்துவிட்டார்கள்; அப்போது அவர்களுடைய தங்கை ஏமிபெல் தானும் இறக்க வேண்டுமென்றும், தன் அம்மாவுடன் இருப்பதற்காகப் பரலோகத்திற்குப் போக வேண்டுமென்றும் கடவுளிடம் ஜெபம் செய்தார். “இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” என்ற தலைப்பில் கொடுக்கப்படவிருந்த பேச்சைக் கேட்பதற்கு ஏமிபெல்லை ஆக்டாபெல் அழைத்தார். அழைப்பை ஏற்று கூட்டத்திற்குச் சென்ற ஏமிபெல் அதன் பிறகு சபைக் கூட்டங்களுக்குப் போவதை நிறுத்தவே இல்லை.
டரினின் மகள் ஆல்கா நைட் இவ்வாறு சொல்கிறார்: “பிரசுரங்களை வாசிப்பதன் மூலமும் கூட்டங்களுக்குச் செல்வதன் மூலமும் யெகோவாவின் சக்தியால் அவர்கள் அவரிடம் ஈர்க்கப்பட்டார்கள். சத்தியத்தை அறிந்ததில் அவர்கள் அளவிலா ஆனந்தம் அடைந்தார்கள்; ஆகவே, சீக்கிரத்திலேயே தாங்கள் கற்றுக்கொண்டவற்றை மற்றவர்களிடம் சொல்லவும் ஆரம்பித்தார்கள்.”
உதாரணத்திற்கு, ஆல்காவின் அப்பா ஹெர்மன் லைட்பர்ன் சுகவீனத்தால் ஆஸ்பத்திரியில் இருந்த சமயத்தில் பிள்ளைகள் என்ற ஆங்கில புத்தகத்தைப் படித்த பிறகு சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். அவர் கற்றுக்கொண்ட விஷயங்கள் அவருக்கு அந்தளவு பிடித்துப்போனதால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு டிரக்கை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு, அக்கம் பக்கத்திலிருந்த கிராமங்களுக்குச் சென்று ஊழியம் செய்வதற்குப் பிரஸ்தாபிகளின் சிறு தொகுதியை அழைத்துச் சென்றார். அவருடைய பண்ணை இருந்த ப்ளாக் க்ரிக் என்ற நாட்டுப்புற பகுதியிலும் அவர் பெருமளவு ஊழியம் செய்தார்.
ஆல்கா இவ்வாறு சொல்கிறார்: “பெலிஸ் ஆற்றோரம் குடியிருந்த மக்களுக்கு என் அம்மா அப்பா நற்செய்தியை அறிவித்து வந்தார்கள்; மாலை வேளையில் நற்செய்தியைக் கேட்க அங்கிருந்த மக்கள் அரிக்கன் விளக்கைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். விடுமுறை நாட்களில் பண்ணையிலிருந்த ஒவ்வொரு நாள் காலையிலும் நானும், அம்மாவும், அப்பாவும், ஏமிபெல் ஆன்ட்டியும், அவருடைய மகள் மாலி டிலட்டும் என் அப்பாவுடைய குதிரைகளில் ஒருவருக்குப் பின்னால் ஒருவர் ஏறிக்கொண்டு தடம் உருவாகியிருந்த வழியாகவே க்ரூக்கெட் ட்ரீ வரை சென்றோம். அங்கே, புல் மேய்வதற்குக் குதிரைகளை விட்டுவிட்டு, ஆர்வம் காட்டிய ஆட்களுக்கு பைபிள் படிப்பு
நடத்தினோம். இதனால், அங்கிருந்த சில குடும்பங்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டன.”1941-ல் பெலிஸ் நகரில் புதிய பிரஸ்தாபிகளின் முதல் தொகுதியினருக்கு கரீபியன் கடலில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில், ஜார்ஜ் லாங்ஸ்வர்த் என்பவரும் ஞானஸ்நானம் பெற்றார்; அந்த வருடமே பயனியர் ஊழியத்தைச் செய்ய ஆரம்பித்த அவர் 1967-ல் தனது 87-வது வயதில் இறக்கும்வரை அதைத் தொடர்ந்து செய்தார். அவர் பெரும்பாலும் உள்நாட்டில் ஊழியம் செய்தார்; குதிரையில் ஏறி நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் பல மைல் தூரம் பயணம் செய்து புதிய பிராந்தியங்களில் நற்செய்தியை அறிவித்தார். ஊழியத்தில் அவர் தொடர்ந்து பக்திவைராக்கியத்துடன் ஈடுபட்டதும் தவறாமல் கூட்டங்களில் கலந்துகொண்டதும் முக்கியமாகப் புதியவர்களுக்கு ஊக்கத்தை அளித்தது. அத்தகைய பக்திவைராக்கியமும் விசுவாசமுமுள்ள ஊழியர்களை வல்லமைமிக்க விதத்தில் யெகோவா பயன்படுத்தி நல்மனமுள்ளவர்களை தம்முடைய அமைப்பின் பக்கம் வரவழைத்தார்.
முதல் மிஷனரிகள் வருகிறார்கள்
அக்டோபர் 5, 1945-ல் முதல் கிலியட் வகுப்பின் பட்டதாரிகளான எல்மர் ஐரிக், சார்லஸ் ஹேயன் ஆகியோர் வந்தார்கள். ஆனால், அவர்கள் வருவதற்கு முந்தின நாள்தான், பெலிஸ் நகரின் தெற்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் சூறாவளி தாக்கியிருந்தது. விமான நிலையத்திலிருந்து நகரத்திற்கு வரும் பாதை 16 கிலோமீட்டர் தூரத்திற்குத்
தண்ணீரில் மூழ்கியிருந்தது; எனவே, அந்த இரண்டு மிஷனரிகளும் பெரிய ராணுவ டிரக்குகளில் அழைத்து வரப்பட்டார்கள். தாடியஸ் ஹாஜ்சன் தன் வீட்டிற்கு முன்பிருந்த தண்ணீரில் சிமெண்டு பாளங்களையும் மரப் பெட்டிகளையும் போட்டு பாதை அமைத்திருந்தார்; அந்தச் சகோதரர்கள் இருவரும் தன் வீட்டுக்கு வரும்போது அவர்களுடைய கால்கள் நனையாமல் இருப்பதற்காக அப்படி அமைத்திருந்தார்.அந்த முதல் மிஷனரிகளின் வருகைக்காக பெலிஸிலிருந்த சகோதரர்கள் அதிக ஆவலோடு காத்திருந்தார்கள். அந்தப் புதிய மிஷனரிகளைச் சந்திக்க நாட்டின் வட பகுதியிலிருந்து பெலிஸ் நகரத்திற்குச் செல்ல, ஜேம்ஸ் கார்டன், லேயோன் ரேகேனா, ராஃபாயெல் மெடீனா ஆகியோர் மனமுள்ளவர்களாக இருந்தார்கள்; அப்படிச் செல்வது அந்தக் காலத்தில் ஒரு பெரிய சவால்! அதைப் பற்றி ராஃபாயெலின் பேரனான இஸ்மாயெல் மெடீனா இவ்வாறு சொல்கிறார்: “நாட்டின் வட பகுதியை பெலிஸ் நகரத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலை எதுவும் அப்போது இல்லை. பிகாடோஸ் மட்டுமே, அதாவது கோவேறு கழுதை வண்டிகள் போய் வந்த கரடுமுரடான தடங்கள் மட்டுமே, இருந்தன. வழியில் எந்த வீடுகளும் இருக்கவில்லை; அதனால், இரவு வேளையில் பாம்புகளின் நடமாட்டம் இருந்தபோதிலும் அந்தத் தடங்களின் ஓரமாகவே அவர்கள் படுத்துத் தூங்கினார்கள். மிஷனரிகளைச் சந்தித்து, அவர்களிடமிருந்து அறிவுரைகளையும் பிரசுரங்களையும் பெற்றுக்கொண்ட பிறகு, அந்த மூன்று சகோதரர்களும் மீண்டும் நடந்தே வீடு திரும்பினார்கள். அதற்குப் பல நாட்கள் எடுத்ததாம்!”
கோவேறு கழுதைப் பூங்காவில் பேச்சைக் கேட்கக் கூடியிருந்தவர்கள் முன்பாக அந்த மிஷனரிகள் மிக அசாதாரண விதத்தில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார்கள். அந்தப் பேச்சின் ஆரம்பத்தில், மத குருமார்களின் பொய்யான போதனைகளை ஜேம்ஸ் ஹையட் கடுமையாய்க் கண்டித்தார்; அதைக் கேட்டுக்கொண்டிருந்த சிலர் கோபத்தில் கொதித்தெழுந்து கண்டபடி திட்டினார்கள். அவரோ தன்னுடைய பேச்சின் முடிவில், திடீரென அந்தப் புதிய மிஷனரிகள் இருவரையும் சுட்டிக்காட்டி, “இவர்கள் இருவரையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்!” என்று சொன்னார். அந்தச் சமயத்தில் கூட்டத்தார் அந்தப் புதிய சகோதரர்கள் இருவரையும் பற்றி அவ்வளவுதான் அறிந்துகொள்ள முடிந்தது!
அந்த ஆரம்ப கால சகோதரர்கள் யெகோவாவிடமும் பைபிள் சத்தியத்திடமும் அளவற்ற அன்பையும், அதே சமயத்தில், பொய் மதப் போதனைகளிடம் கடும் வெறுப்பையும் காட்டினார்கள் என்பதில்
சந்தேகமில்லை. ஆர்வமிக்க அந்தப் பிரஸ்தாபிகளுடன் பகிர்ந்துகொள்ள அந்த மிஷனரிகளிடம் மதிப்புமிக்க அனுபவம் இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது; அந்த அனுபவம் இன்னும் திறம்பட்ட ஊழியர்களாய் ஆவதற்கு அந்தப் பிரஸ்தாபிகளுக்கு உதவவிருந்தது.அந்த இரண்டு மிஷனரிகளும் பெலிஸ் நகரில் ஊழியத்தை ஆரம்பித்தார்கள்; அச்சமயத்தில் அதன் மக்கள்தொகை சுமார் 26,700-ஆக இருந்தது. கல்லும் மண்ணும் போட்டு உயர்த்தப்பட்ட நிலப்பரப்பின்மீது அந்த நகரம் அமைக்கப்பட்டது; அதனால் அது கடல் மட்டத்திற்கு மேல் ஓர் அடி உயரத்திலேயே இருந்தது; அங்கு கழிவுநீர் வசதி மோசமாக இருந்தது. அதோடுகூட, சீதோஷ்ணநிலை சூடாகவும் புழுக்கமாகவும் இருந்தது. வீடுகளுக்கு நகராட்சி தண்ணீர் வசதி இல்லாதிருந்தது; ஆனால், மழை காலத்தில் மழை நீரைச் சேமிப்பதற்கு, கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டின் காம்பௌண்டுக்குள்ளும் ஒரு பெரிய மரத் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. எனினும், சில சந்தர்ப்பங்களில் மழை தன் கோப முகத்தைக் காட்டியதைப் போலிருந்தது; உதாரணத்திற்கு, 1931-ல் ஒரு சூறாவளி அந்த நகரத்தைச் சின்னாபின்னமாக்கி, 2,000-க்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்தது.
தடைகளையும் மீறிய வளர்ச்சி
யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு பெலிஸில் ஒருபோதும் தடையுத்தரவு போடப்படாத போதிலும், இரண்டாம் உலகப் போரின்போது சில காலத்திற்கு நம்முடைய பிரசுரங்களுக்கு அரசு தடை விதித்தது. மிஷனரிகள் வருவதற்குச் சற்று முன்புதான் அந்தத் தடைகளெல்லாம் அகற்றப்பட்டன.
இருப்பினும், ஜூலை 15, 1946 காவற்கோபுரம் பெலிஸிலிருந்த அந்த இரண்டு மிஷனரிகளின் ஊழியத்தைப் பற்றி அறிக்கை செய்தபோது இவ்வாறு குறிப்பிட்டது: “தபாலில் பெறப்படுகிற பிரசுரங்களுக்குத் தடை விதிக்க, ரோமன் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் திரைமறைவில் இன்னமும் முயற்சி செய்து வருகிறார். யெகோவாவின் சாட்சிகளுடைய அந்த இரண்டு மிஷனரிகள் இருப்பது ரோமன் கத்தோலிக்க பாதிரிகளுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது; ஐரிஷ்-அமெரிக்கன் பாதிரி ஒருவர் . . . ஆங்கிலேய குடியேற்ற அரசு அவர்களை நாட்டுக்குள் அனுமதித்ததற்காக அதிக கோபப்பட்டார். . . . அமெரிக்கரென அவர் தன்னை மார் தட்டிக்கொண்டதை அந்த இரண்டு பேரும் [மிஷனரிகள்] அந்தப் பாதிரிக்கு நினைப்பூட்டினார்கள்; அதோடு, அமெரிக்கர்களின் ஒழுக்கநெறிகளுக்கு உண்மையான ‘பாதுகாவலராக’ ரோமன் கத்தோலிக்க அமைப்பு இல்லாதிருந்ததற்கு அத்தாட்சியாக
அமெரிக்க சிறையில் இருப்பவர்களின் புள்ளிவிவரத்தை அவர்கள் காட்டினார்கள்; அப்போது, அந்தப் பாதிரி அவமானத்தில் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறினார்.”1944-ல் பெலிஸிலிருந்த பிரஸ்தாபிகளின் சரியான எண்ணிக்கை முதன்முதலாகக் கிடைத்தது; அச்சமயத்தில், ஏழு பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தார்கள். இன்னும் திறம்பட்ட விதத்தில் ஊழியம் செய்வதற்கு, பிரஸ்தாபிகள் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சாட்சி அட்டைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். மிஷனரிகள் வந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது.
1946-ல், உலகத் தலைமை அலுவலகத்திலிருந்து நேதன் எச். நாரும் ஃபிரெட்ரிக் டபிள்யூ. ஃபிரான்ஸும் பெலிஸுக்கு வந்து, அங்கே ஒரு கிளை அலுவலகத்தை ஏற்படுத்தினார்கள். அமைப்பு பற்றிய ஒரு பேச்சைச் சகோதரர் நார் கொடுத்தார்; அதில், வெளி ஊழிய அறிக்கையை அதற்குரிய அச்சிடப்பட்ட படிவத்தில் சமர்ப்பிப்பதன் அவசியத்தை விளக்கினார். சகோதரர் ஃபிரான்ஸ், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைத் தொடர்ந்து அறிவிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு இரக்கம் காட்டும்படி சபையாரைத் தூண்டுவித்தார். அந்த வாரத்தின் மற்றொரு சமயத்தில் சகோதரர் நார் பேச்சு கொடுத்தபோது 102 பேர் கூடிவந்திருந்தார்கள்; அவர்களில் பலர் ஆர்வம் காட்டுபவர்களாக இருந்தார்கள்; யெகோவாவின் மக்களோடு இருப்பதற்கு அவர்கள் ஏன் சந்தோஷப்பட வேண்டும் என்பதை அந்தப் பேச்சில் சகோதரர் நார் விளக்கினார். யெகோவாவின் சாட்சிகளோடு தவறாமல் பைபிள் படிக்கும்படி அவர்களுக்கு அவர் அழைப்புவிடுத்தார்.
அதே வருடத்தில், சார்லஸ் பாரிஷ், ஆனி ரூத் பாரிஷ் தம்பதியரும் கார்டிஸ் சாரெல், மில்டிரட் சாரெல் தம்பதியரும் வந்தார்கள். 1948-ல் சார்லஸ் ஹோமால்கா, ஃப்ளாரன்ஸ் ஹோமால்கா தம்பதியரும் ட்ரூமன் ப்ரூபாகரும் வந்தார்கள். பெருமளவு ஊழியம் செய்யப்பட வேண்டியிருந்ததால், இருகரம் நீட்டி அவர்கள் வரவேற்கப்பட்டார்கள்.
செய்வதற்குப் பெருமளவு ஊழியம்
எல்மர் ஐரிக் இவ்வாறு எழுதினார்: “அப்போது ஒரேவொரு சிறிய சபைதான் இருந்தது. வெளி மாகாணங்களில் எந்தச் சபையும் இருக்கவில்லை. சில சமயங்களில் அத்தகைய இடங்களுக்குச் சென்று, சேர்ந்தார் போல் ஓரிரு வாரங்கள் தங்கி புத்தகங்களை விநியோகித்து, சந்தாக்களைப் பெற்று, பேச்சுக்களைக் கொடுப்பதன் மூலமாக சத்திய விதைகளை விதைத்தேன்.” அந்த முதல் வருடத்தில் சார்லஸ் ஹேயன், ஆரஞ்ச் வாக் என்ற இடத்திற்கு டிரக்கில் சென்று ஊழியம் செய்தார்; அதோடு, தவறாமல் கூட்டங்களை நடத்தும்படி சகோதரர்களை உற்சாகப்படுத்தினார்.
நகரத்தின் தென் பகுதிகளுக்குப் படகின் மூலமாக மட்டுமே செல்ல முடிந்தது. எனவே, பிரசங்க ஊழியத்தை ஆரம்பித்து வைக்கும் எண்ணத்தில், எல்மரும் சார்லஸும் ஹிரான் எச் என்ற படகில் ஏறி, ஸ்டான் க்ரிக் (தற்போது டான்க்ரீகா), பன்டா கார்டா என்ற கரையோர நகரங்களுக்குச் சென்றார்கள்; அவை, காரிஃபூனா இனத்தவர் குடியேறியிருந்த பகுதிகளாக இருந்தன. அந்தக் காலத்தில், பெலிஸ் நகரத்திலிருந்து படகில் 30 மணிநேரம் பயணம் செய்தால் மட்டுமே பன்டா கார்டாவுக்குச் செல்ல முடிந்தது. ஆனாலும் எல்மர் அங்கே சென்று, தான் தங்கியிருந்த ஹோட்டலின் வரவேற்பறையில் கூடிவந்த சுமார் 20 பேருக்குப் பொதுப் பேச்சுக் கொடுத்தார்.
க்ரூக்கெட் ட்ரீ என்ற ஒதுக்குப்புறமான கிராமத்தில், வரிசையாக மரங்கள் நடப்பட்டிருந்த ஆற்றோரம் ஆல்கா நைட்டின் அப்பா கூட்டங்களை நடத்தினார்; அந்தக் கூட்டங்களுக்கு அவருடைய குடும்பத்தாரோடு எல்மர் சென்றது ஆல்கா நைட்டுக்கு நினைவிருக்கிறது. மிஷனரிகளின் கடின உழைப்பையும் பணிவான குணத்தையும் அங்கிருந்த சகோதரர்கள் பெரிதும் பாராட்டினார்கள்.
1948-ல் சராசரியாக 38 பிரஸ்தாபிகள் இருந்தார்கள்; பெலிஸ் நகருக்கு வெளியே நான்கு புதிய சபைகள் உருவாயின. இந்தச் சிறிய சபைகளில் நாட்டுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த வெகு சில பிரஸ்தாபிகளே இருந்தார்கள்; அதாவது, லைட்பர்ன் குடும்பத்தார் ப்ளாக் க்ரிக்கிலும், கார்டன் குடும்பத்தார் பாம்பாவிலும், ஹூம்ஸ் குடும்பத்தாரும் ஆல்டானா குடும்பத்தாரும் சான்ட்டானாவிலும், சகோதரர் ரேகேனாவும் சகோதரர் மெடீனாவும் ஆரஞ்ச் வாக்கிலும் இருந்தார்கள். மிஷனரிகளும் விசேஷ பயனியர்களும், தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி முழுக்க முழுக்க பெலிஸ் நகரத்திலேயே மும்முரமாய் ஊழியம் செய்தார்கள். அவர்களுடைய ஊக்கமான முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்தார்; அதனால், உண்மை மனமுள்ள ஏராளமானோர் யெகோவாவின் ஊழியர்களாக ஆகி வந்தார்கள்.
டிசம்பர் 1949-ல் சகோதரர் நார் மீண்டும் பெலிஸுக்கு வந்தது காலத்துக்கு ஏற்றதாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் இருந்தது. ஒருநாள் மாலைப் பொழுதில், மிஷனரி ஊழியத்திலுள்ள சவால்களைப் பற்றி அவர் மிஷனரி இல்லத்தில் பேசினார். புதிய பிரஸ்தாபிகள் அநேகர் யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்பினார்கள்; ஆனால், தங்களை யெகோவாவுக்கு அர்ப்பணிக்கவும் அதை ஞானஸ்நானத்தின் மூலம் அடையாளப்படுத்தவும் அவர்கள் விரும்பவில்லை. மிஷனரிகளுக்குப் பொறுமையும் சகிப்புத்தன்மையும் மக்களிடம் அன்பும் தேவையென சகோதரர் நார் அவர்களுக்கு நினைப்பூட்டினார். அதோடு, அவர்கள் நல்ல பலன்களைப் பெற்றிருந்ததையும் அவர்களுக்கு நினைப்பூட்டினார்.
இனி மிஷனரிகளுக்கு அனுமதியில்லை
1957-ல் பெலிஸிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் என்னென்ன செய்கிறார்கள் என்று அரசு கூர்ந்து கவனித்து வந்ததைச் சகோதரர்கள் புரிந்துகொண்டார்கள். உதாரணத்திற்கு, ஆரஞ்ச் வாக்கில் சங்கத்தின் படம் ஒன்றைக் கிளை அலுவலகத்திலிருந்து வந்த சகோதரர்கள் போட்டுக் காட்டினார்கள்; அப்போது, ஒரு போலீஸ் அதிகாரி, எத்தனை மணிக்கு அந்தச் சகோதரர்கள் கிராமத்திற்குள் வந்தார்கள், எத்தனை மணிக்குத் திரும்பிப் போவார்கள் என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டார். அதையெல்லாம் போலீஸ் கண்காணிப்பாளருக்குத் தெரிவிப்பதற்காக அவர் கேட்டுத் தெரிந்துகொண்டார் என்றும், அதுபோன்ற தகவலைக் கொடுப்பதற்காகச் சமீபத்தில் நடந்த மாநாட்டிற்குச் சீருடை அணியாத போலீஸ் அதிகாரி ஒருவர் வந்திருந்தார் என்றும் அவர் சொன்னார்.
1951-க்கும் 1957-க்கும் இடையே, நாட்டிற்குள் வர இன்னும் பத்து மிஷனரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. திடீரென ஜூன் 1957-ல் போலீஸ் மற்றும் குடியேற்ற தலைமை அலுவலகத்திலிருந்து சகோதரர்களுக்கு ஒரு கடிதம் வந்தது; அது இவ்வாறு குறிப்பிட்டது: “இனிமேல் உங்களுடைய சங்கத்தின் ஊழியர்கள் யாரும் வெளிநாடுகளிலிருந்து பிரிட்டிஷ் ஹோண்டுராஸுக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் [தற்போது பெலிஸ்] அரசு தீர்மானம் எடுத்திருக்கிறது; இது உடனடியாக அமலுக்கு வருகிறது.” ஆளுநரைச் சந்தித்து இத்தகைய தீர்மானத்திற்கான காரணத்தைக் கேட்டறிய அனுமதி கோரியபோது அது மறுக்கப்பட்டது.
புதிய மிஷனரிகளை நாட்டுக்குள் அழைப்பதற்கான அனுமதி வேறு சில மதத் தொகுதிகளுக்கும் மறுக்கப்பட்டபோதிலும், அங்கிருந்து வெளியேறிய மிஷனரிகளுக்குப் பதிலாக வேறு மிஷனரிகளை அழைக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தச் சலுகை யெகோவாவின் சாட்சிகளுக்கு மறுக்கப்பட்டது; அவர்கள் இரண்டு மிஷனரிகளை மாற்றீடு செய்ய வேண்டியிருந்தது. 1960-ல், சகோதரர்கள் புதிய மிஷனரிகளுக்காக அல்ல, ஆனால் மிஷனரிகளை மாற்றீடு செய்வதற்காக அனுமதி கேட்டு, பெலிஸிலும் லண்டனிலும் உள்ள அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார்கள்.
அவர்கள் நறுக்கென்று பதில் எழுதினார்கள்: “உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியின் எந்த மிஷனரியையும் இனி பிரிட்டிஷ் ஹோண்டுராஸுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற திட்டவட்டமான முடிவை நகர மன்ற ஆளுநர் எடுத்திருக்கிறார்.”
ஒருமுறை சந்தித்துப் பேச சகோதரர்கள் அனுமதி கேட்டபோது, அவர்களுக்குப் பின்வரும் பதில் கிடைத்தது: “உங்கள் சொஸையிட்டியைச் சேர்ந்த எந்த மிஷனரியையும் இனி பிரிட்டிஷ் ஹோண்டுராஸுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று நகர மன்ற ஆளுநர் 1957-ல் திட்டவட்டமான முடிவெடுத்திருக்கிறார்; இத்தகைய சூழ்நிலையில், இது சம்பந்தமாக உங்களைச் சந்தித்துப் பேசுவது எந்த விதத்திலும் பயனுள்ளதாய் இருக்காதென நகர மன்ற ஆளுநர் நினைக்கிறார்.” சகோதரர்களால் சூழ்நிலையை மாற்றவே முடியாது என்பதுபோல் தோன்றியது.
இறுதியில், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் விடாது விண்ணப்பித்துக் கொண்டே இருந்த பிறகு, அக்டோபர் 1961-ல் பெலிஸிலுள்ள செயலகத்திலிருந்து பின்வரும் கடிதத்தைக் கிளை அலுவலகம் பெற்றது: “பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் அரசு நீங்கள் சமீபத்தில் அனுப்பியிருந்த வேண்டுகோள்களைப் பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அதன்படி, ஏற்கெனவே இங்கிருக்கிற மிஷனரிகளுக்குப்
பதிலாக வேறு மிஷனரிகள் இந்த நாட்டுக்குள் வர தற்காலிக அனுமதி அளிக்கப்படுகிறது.” அதன் விளைவாக, 1962-ல் ஜமைகாவிலிருந்து மார்டின் தாம்ஸன், ஆலஸ் தாம்ஸன் தம்பதியர் மிஷனரிகளாக நாட்டுக்குள் வர அனுமதிக்கப்பட்டார்கள்.ஊழியம் தடையின்றி தொடர்ந்தது
மத எதிரிகள் நம்முடைய ஊழியத்தை முடக்கிப்போட முயற்சி செய்திருந்தது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், அவர்கள் வெற்றி பெற்றிருந்தார்களா? ஏழு சபைகளில் உச்சநிலை எண்ணிக்கையாக 176 பிரஸ்தாபிகள் இருந்ததை 1957-ஆம் ஊழிய ஆண்டுக்கான அறிக்கை காட்டியது. அந்தச் சமயத்தில் பெலிஸின் மக்கள்தொகை 75,000-ஆக இருந்தது; ஆகவே, ஒவ்வொரு 400 பேருக்கும் சுமார் 1 பிரஸ்தாபி என்ற வீதத்தில் சாட்சிகள் இருந்தார்கள். 1961-ஆம் ஊழிய ஆண்டு அறிக்கைப்படி, ஒவ்வொரு 383 பேருக்கும் 1 பிரஸ்தாபி என்ற வீதத்தில் அங்கு 236 பிரஸ்தாபிகள் இருந்தார்கள்; இது 34 சதவீத அதிகரிப்பாக இருந்தது! யெகோவா தம்முடைய மக்களுக்கு அளித்திருந்த பின்வரும் வாக்குறுதி உண்மையென நிரூபிக்கப்பட்டது: “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்.” (ஏசா. 54:17) எந்தத் தடையுமின்றி ஊழியம் தொடர்ந்து நடைபெற்றது.
பைபிளைப் படித்துக்கொண்டிருந்த அநேக தம்பதியர் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள்; அவர்களில் சிலர் தங்கள் துணையை மாற்றிக்கொண்டே இருந்தார்கள். ஆனால், யெகோவாவின் உயர் நெறிமுறைகளைப் பற்றி அவர்கள் கற்றுக்கொண்டபோது, அநேகர் பெரும் முயற்சியையும் அதிக செலவையும் செய்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களில் சிலர் 80 வயதையும் தாண்டியிருந்தார்கள்!
ஒரு புதிய ராஜ்ய மன்றம் தேவைப்படுகிறது
ஜனவரி 1950-ல் தொடர்ச்சியாக நான்கு விசேஷப் பேச்சுகள் கொடுக்கப்படவிருந்தன; அதற்கு, பெலிஸ் நகரிலுள்ள லிபர்டி ஹாலைப் பயன்படுத்திக்கொள்ள டிசம்பர் 1949-ல் முன்னதாகவே சகோதரர்கள் பணம் கட்டியிருந்தார்கள். அந்தக் கடைசிப் பேச்சுக்கு முந்தின தினம், பிரமுகர் ஒருவருடைய சவ அடக்க ஆராதனை அந்த ஹாலில் மறுநாள் நடக்கவிருந்ததாக ரேடியோவில் ஓர் அறிவிப்பு செய்யப்பட்டது. அந்த ஹாலின் சொந்தக்காரர்களிடம் திரும்பத் திரும்ப பலமுறை சகோதரர்கள் கேட்டுக்கொண்ட போதிலும், விசேஷப் பேச்சு
கொடுக்கப்பட்டபோது அந்த ஹாலுக்குள் சில ஆட்கள் கும்பலாக நுழைந்து, சவ அடக்க ஆராதனைக்கான ஏற்பாடுகளை அதிக சத்தத்துடன் செய்ய ஆரம்பித்தார்கள். கடைசியில், சகோதரர்கள் போலீஸாரை வரவழைக்க வேண்டியிருந்தது. சகோதரர்களுக்குச் சொந்தமாக ஒரு ராஜ்ய மன்றம் தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. அங்கிருந்த மன்றங்கள் எல்லாம் கிளப்புகளாகவும் டான்ஸ் ஹால்களாகவும் பயன்படுத்தப்பட்டன; அவற்றிற்கான வாடகையும் எக்கச்சக்கமாக இருந்தது.அப்போது கிளை அலுவலகக் கண்காணியாகச் சேவை செய்து வந்த டானல்ட் ஸ்னைடர் இவ்வாறு சொன்னார்: “கடந்த ஞாயிறு இரவு காவற்கோபுர படிப்புக்காக 174 பேர் வந்திருந்தார்கள். அவ்வளவு பேரையும் அந்த ஹாலில் உட்கார வைக்க முடியவில்லை; அதனால், நிறையப் பேர் நிற்க வேண்டியதாய் இருந்தது. எக்கச்சக்கமான ஆட்கள் கூடியிருந்ததன் காரணமாக, எப்போதையும்விட அதிக புழுக்கம் ஏற்பட்டது.” கிளை அலுவலகமும் மிஷனரி இல்லமும் பல்வேறு இடங்களுக்குப் பல முறை மாற்றப்பட்டன; எல்லாமே வாடகைக்கு எடுக்கப்பட்டன.
செப்டம்பர் 1958-ல், இரண்டு மாடி கட்டிடத்திற்கான கட்டுமானப் பணி ஆரம்பமானது. முதல் மாடியில், சிறிய கிளை அலுவலகமும் மிஷனரி இல்லமும் செயல்பட்டது; இரண்டாவது மாடி முழுவதும் அரங்கமாகப் பயன்படுத்தப்பட்டது. 1959-ல் கட்டுமானப் பணி முடிவடைந்தபோது, பெலிஸ் நகர சபைக்கு இறுதியில் சொந்த ராஜ்ய மன்றம் கிடைத்தது!
ஸ்பானிய பிராந்தியத்தில் வளர்ச்சி
பெலிஸில் யெகோவாவின் மக்களுடைய அபாரமான ஆன்மீக வளர்ச்சியை, ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள் மத்தியில் காண முடிந்திருக்கிறது. 1949-ல் ஸ்பானிஷ் மொழி பேசப்பட்ட பிராந்தியங்கள் இருந்தன; ஆனால், அப்போது மிஷனரிகள் யாருக்கும் ஸ்பானிஷ் மொழி தெரியாதிருந்தது. எனினும், பின்னர் ஸ்பானிஷ் மொழி தெரிந்த சிலர் அனுப்பப்பட்டார்கள். 1955-ல் வந்த லெஸ்லி பிச்சர் என்பவர் அவர்களில் ஒருவர். அவர், ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள் அதிகமிருந்த பென்கெ விஹோ என்ற ஊரில் ஊழியம் செய்ய நியமிப்பைப் பெற்றார்; அந்த நகரம் பெலிஸின் மேற்குப் பகுதியில் குவாதமாலா எல்லைக்கு அருகிலிருந்தது. அந்தச் சகோதரர் அங்கு சென்றபோது, சிலர் ஏற்கெனவே அவருக்காக அங்கே காத்துக்கொண்டிருந்தார்கள். ஏன்?
கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பாக, குவாதமாலாவின் மேற்குக் கோடியிலுள்ள சான் பெனிடோ ஊரில் நாடால்யா
கான்ட்ரேராஸ் என்பவர் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றிருந்தார். அவர் எல்லையைக் கடந்து பெலிஸுக்கு வந்து பென்கெ விஹோவில் வசிக்கிற தன் உறவினர்களுக்குச் சத்தியத்தைப் பற்றிச் சொன்னார். அவர்களில் ஒருவரான செர்வில்யானோ கான்ட்ரேராஸ், சிலை வழிபாடு பற்றி நாடால்யா சொன்ன பைபிள் குறிப்புகளுக்கு விசேஷக் கவனம் செலுத்தினார், சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். அவர், 1998-ல் 101-வது வயதில் இறக்கும்வரை உண்மையுள்ள சாட்சியாக நிலைத்திருந்தார். அவருடைய பிள்ளைகளிலும் பேரப் பிள்ளைகளிலும் அநேகர் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள். அந்த ஆரம்ப காலத்தில் பென்கெ விஹோவில் சிறிய தொகுதியாகச் செயல்பட்டுவந்த பிரஸ்தாபிகளின் பிராந்தியம், குவாதமாலா எல்லையைக் கடந்து மெல்சார் டெ மென்கோஸ் என்ற ஊர்வரை இருந்தது; அந்த ஊரில்தான் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர், மெல்சார் டெ மென்கோஸில் ஒரு சபை ஸ்தாபிக்கப்பட்டது; பென்கெ விஹோ சபை இப்போதும் பக்திவைராக்கியத்திற்குப் பெயர்பெற்றிருக்கிறது.1956-ன் ஆரம்பத்தில், மாவட்ட மாநாட்டிலும், வட்டார மாநாட்டிலும் சில பேச்சுகள் ஸ்பானிஷ் மொழியில் கொடுக்கப்பட்டன. ஆனால், பிப்ரவரி 1968-ல் ஆரஞ்ச் வாக்கிலுள்ள ராஜ்ய மன்றத்தில் நடந்த வட்டார மாநாட்டில் பேச்சுகள் அனைத்தும் ஸ்பானிஷ் மொழியில் கொடுக்கப்பட்டன. அதற்கு 85 பேர் வந்திருந்தார்கள், 4 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ஸ்பானிஷ் மொழி பேசும் மார்செலோ டோமிங்கஸ், ராஃபாயெல் மெடீனா என்ற இரண்டு சகோதரர்களோடு டியோனிஸ்யோ டெக்,
காடாலினா டெக் தம்பதியர் போன்ற ஸ்பானிஷ் மொழி பேசும் மற்ற சாட்சிகளும் சேர்ந்து ஆங்கிலத்தில் நடைபெற்ற கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்துகொண்டார்கள்; அவர்கள் ஆங்கிலத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாவிட்டாலும் தவறாமல் அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டார்கள். அக்டோபர் 1964-ல்தான் ஸ்பானிஷ் சபை ஆரஞ்ச் வாக்கில் உருவானது; ஆங்கில சபையில் கூட்டுறவு வைத்திருந்த 20 பிரஸ்தாபிகள் அந்தப் புதிய சபையில் சேர்ந்தார்கள்.1980-களின்போது, பெலிஸுக்கு அருகே உள்ள எல் சால்வடார், குவாதமாலா ஆகிய நாடுகளில் உள்நாட்டு சண்டைகள் மூண்டதால், அநேகர் பெலிஸுக்கு அகதிகளாக ஓடி வந்தார்கள். அப்படி வந்தவர்களில், யெகோவாவின் சாட்சிகளுடைய மூப்பர்கள், உதவி ஊழியர்கள், பயனியர்கள் உட்பட ஸ்பானிஷ் மொழி பேசும் குடும்பத்தார் பலர் இருந்தார்கள். அவர்கள் ஸ்பானிய பிராந்தியத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார்கள்; ஸ்பானிஷ் மொழி பேசப்படுகிற பிற நாடுகளிலிருந்து வந்த இரு மொழி பேசும் மிஷனரிகளைப் போலவே அவர்களும் உதவினார்கள்.
“உண்மைக் கிறிஸ்தவர்கள் வீட்டுக்கு வீடு சென்று ஊழியம் செய்வார்கள்”
ஒருநாள், முன்பின் தெரியாத இருவர் ஆரஞ்ச் வாக்கிலிருந்த மார்காரிடா சாலாசார் என்பவரின் வீட்டுக் கதவைத் தட்டி, “மார்காரிடா சாலாசார் என்ற யெகோவாவின் சாட்சியை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அந்த இருவரில் ஒருவர் 23 வயதான டேயஃபிலா மை, மற்றவர் அவருடைய அம்மா; அவர்கள் ஆரஞ்ச் வாக்குக்குத் தென்மேற்கே 34 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆகஸ்ட் பைன் ரிட்ஜ் என்ற கிராமத்திலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் ஏன் மார்காரிடாவைத் தேடிக்கொண்டு வந்தார்கள்?
டேயஃபிலா இவ்வாறு சொல்கிறார்: “கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன், என்னுடைய ஒன்பது மாத குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. எனவே, கன்னிப் புனிதராகக் கருதப்பட்ட சான்டா க்ளாராவுக்கு அர்ப்பணம் செய்ய குழந்தையை போடெஸ் என்ற கிராமத்துக்கு எடுத்துச் சென்றேன். ஒரு டிரக்கின் முன் இருக்கையில் அமர்ந்து நான் பயணம் செய்தபோது, எங்கள் பகுதியில் வசித்த அந்த டிரைவர் என்னிடம் சத்தியத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். நான் குழந்தையை போடெஸுக்கு எடுத்துச் செல்வதற்கான காரணத்தை என்னிடம் அவர் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகு, சிலை வழிபாட்டை பைபிள் ஏற்றுக்கொள்வதில்லை என்று சொன்னார். அது என்
ஆர்வத்தை அதிகம் தூண்டிவிட்டது. காலப்போக்கில், அவர் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருந்த அநேக பைபிள் சத்தியங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.“ஒரு பயணத்தின்போது, உண்மைக் கிறிஸ்தவர்கள் வீட்டுக்கு வீடு சென்று ஊழியம் செய்வார்கள் என்று அந்த டிரக் டிரைவர் என்னிடம் சொன்னார். யெகோவாவின் சாட்சிகள் அப்படி ஊழியம் செய்வதாகவும், அவர்கள் செப்பனியா 1:14; 2:2, 3 போன்ற வசனங்களை மக்களுக்கு வாசித்துக் காட்டுவதாகவும் அவர் சொன்னார். எனவே, ஒரு கையில் என் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, இன்னொரு கையில் என் சிறு மகனைப் பிடித்துக்கொண்டு, ஆகஸ்ட் பைன் ரிட்ஜில் வீடு வீடாகச் சென்று அந்த பைபிள் வசனங்களை மக்களுக்கு வாசித்துக் காட்டினேன். பின்னர், நான் உண்மையிலேயே சத்தியத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினால், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க வேண்டுமென அந்த டிரைவர் சொன்னார். அவர்தான் சாலாசார் தம்பதியரைப் பற்றியும், ஆரஞ்ச் வாக்கில் எங்கே அவர்களைக் கண்டுபிடிக்கலாம் என்றும் சொன்னார். நான் ஆரஞ்ச் வாக்குக்குப் போனதே இல்லை, அதனால்தான் என் அம்மாவோடு சாலாசார் தம்பதியரைத் தேடிக்கொண்டு சென்றேன்.”
டேயஃபிலாவும் அவருடைய அம்மாவும் முதன்முதல் தன் வீட்டுக்குக் காலை வேளையில் வந்தது மார்காரிடாவுக்கு நினைவிருக்கிறது. அவர் இவ்வாறு சொல்கிறார்: “அவர்கள் பைபிளிலிருந்து அநேகக் கேள்விகளைக் கேட்டார்கள்; நீண்ட நேரம் நாங்கள் உரையாடினோம். பைபிளைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதற்காக, யெகோவாவின் சாட்சிகள் எவ்வளவு தூரமானாலும் பயணம் செய்வார்கள் என்பது உண்மையா என்று அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பினார்கள். அது உண்மைதான் என்றும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவர்களுடைய கிராமத்திற்கு நிச்சயம் வந்து பைபிள் படிப்பு நடத்துவோம் என்றும் நான் உறுதியளித்தேன்.”
மார்காரிடாவும் அவரது கணவர் ராமனும் ஆகஸ்ட் பைன் ரிட்ஜுக்குச் சென்றபோது, டேயஃபிலா தன் குடும்பத்தாரில் பெரியவர்கள் ஆறு பேரை பைபிள் படிப்புக்காக வரவழைத்திருந்தார். அதை அடுத்து, ஆரஞ்ச் வாக்கைச் சேர்ந்த மற்ற பயனியர்கள் சாலாசார் தம்பதியருடன் குறுகலான, சாலை அமைக்கப்படாத, மேடுபள்ளமான பாதையில் 34 கிலோமீட்டர் தவறாமல் நடந்துசென்று அந்தக் கிராமத்தில் ஊழியம் செய்தார்கள்; அதே வேளையில், டேயஃபிலாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் பைபிள் படிப்பு நடத்தப்பட்டது. பைபிள் படிப்புகள் நடத்துவதற்காகப் பெரும்பாலும் ஏமிபெல் ஆலன் இரவில் அந்தக் கிராமத்திலேயே தங்கிவிடுவார். பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகு, 1972-ல் டேயஃபிலா ஞானஸ்நானம் பெற்றார். ஆகஸ்ட் பைன் ரிட்ஜில் ஒரு சபை 1980-ல் ஆரம்பிக்கப்பட்டது, இத்தனை வருடங்களில் டேயஃபிலா குடும்பத்தைச் சேர்ந்த 37 பேர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
புதர் பயணங்கள் பயனளிக்கின்றன
பெலிஸிலுள்ள பெலிஸ் நகரத்திலும் மற்ற பெரிய ஊர்களிலும் முழுமையாக ஊழியம் செய்யப்பட்டபோதிலும், கிராமப்புறங்களில் அவ்வப்போது மட்டுமே ஊழியம் செய்யப்பட்டது. ஆரம்ப கால மிஷனரிகள் தெற்கிலிருந்த ஊர்களுக்குப் படகில் போய் ஊழியம் செய்திருந்தார்கள்; ஆனால், தென்புற மாகாணங்களான ஸ்டான் க்ரிக்கையும் டொலீடோவையும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ஒரு சாலை பிற்பாடு அமைக்கப்பட்டது. பிறகு, 1971-ன் ஆரம்பத்தில், புதர் பயணங்கள் என்றழைக்கப்பட்ட வருடாந்தர ஊழியப் பயணங்களைக் கிளை அலுவலகம் ஒழுங்கமைத்தது; பெலிஸ் மழைக் காட்டில், மோபான், கெக்சி மாயா ஆகிய ஒதுக்குப்புற பகுதிகளில் உள்ளவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க அத்தகைய பயணங்களை ஒழுங்கமைத்தது.
வண்டிகளையும் மரத் தோணிகளையும் வாடகைக்கு அமர்த்திக்கொண்டு, டான்க்ரீகா முதல் பன்டா கார்டா வரையிலும், தெற்கே குவாதமாலா எல்லைக்கு அருகே உள்ள பார்ராங்கோ வரையிலும் உள்ள கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் சகோதர சகோதரிகளால் போக முடிந்தது. இத்தகைய சில பயணங்களின்போது ஒரு தொகுதியினர் வேனில் செல்ல அவர்களுடன் இரண்டு முதல் நான்கு மோட்டர் சைக்கிள்களில் சகோதரர்கள் சென்றார்கள். ஒவ்வொரு நாள் இரவும் அவர்கள் வெவ்வேறு கிராமத்தில் தங்கினார்கள்; பகல் வேளையில் பெரிய தொகுதியினர் கிராமத்தில் ஊழியம் செய்தபோது மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள், இரண்டிரண்டு பேராக ஒதுக்குப்புற பண்ணைகளுக்குச் சென்றார்கள்.
பன்டா கார்டா பகுதியில், சகோதரர்கள் முதுகில் பைகளைச் சுமந்துகொண்டு கிராமம் கிராமமாகச் சென்றார்கள். பொதுவாக, கிராமத்தில் உள்ளவர்களைச் சந்தித்து நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்பு, கிராமத்துப் பெரியவர்கள் கூடும் காபில்டோ மன்றத்திலிருந்த ஆல்கால்டெவிடம் (தலைவரிடம்) அவர்கள் அனுமதி பெற வேண்டியிருந்தது.
ரேன்னர் தாம்ஸன் என்ற மிஷனரி இவ்வாறு சொல்கிறார்: “சகோதரர்கள் ஒரு கிராமத்திற்குச் சென்றபோது அங்கிருந்த ஆண்கள் காபில்டோவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மக்காச்சோள அறுவடை சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்திற்குப் பிறகு, ராஜ்ய பாடல் ஒன்றைப் பாடும்படி அந்த ஆண்கள் சகோதரர்களைக் கேட்டுக்கொண்டார்கள். சகோதரர்களோ களைப்பாகவும் பசியாகவும் இருந்தார்கள்; அதோடு, அவர்களிடம் பாட்டுப் புத்தகமும் இல்லாதிருந்தது. ஆனால், அந்த ஆண்கள் சந்தோஷப்படும் விதத்தில் அவர்கள் இருதயப்பூர்வமாகப் பாடினார்கள்.” காலப்போக்கில்,
மாங்கோ க்ரிக் கிராமத்திலும், பின்னர் மிகப் பெரிய மாயா கிராமங்களில் ஒன்றான சான் ஆன்டோன்யோவிலும் சபைகள் உருவாயின.சான்டியாகோ சோசா இவ்வாறு சொல்கிறார்: “திட்டமிட்டபடி ஊழியம் செய்து முடிப்பதற்காக, சில சமயங்களில் நாங்கள் ஒரு கிராமத்திலிருந்து மறு கிராமத்திற்கு இரவு நேரத்தில் நடந்து சென்றோம். சாலையின் வலப் பக்கமோ இடப் பக்கமோ நடக்காமல், நடுவில் வரிசையாக ஒருவர் பின் ஒருவர் நடக்கக் கற்றுக்கொண்டோம்; காரணம், சாலையை ஒட்டியிருந்த புதர்களில் பாம்புகள் நிச்சயம் குடியிருக்கும் என்பதை அறிந்திருந்தோம். அதோடு, எங்களிடம் தண்ணீர் இல்லாதபோது, கொடியில் காய்க்கும் ஒருவிதப் பழத்திலிருந்து தண்ணீரைக் குடிக்கவும் கற்றுக்கொண்டோம்.”
சில சமயங்களில் அந்தத் தொகுதியினர் இரண்டிரண்டு பேராக அல்லது நான்கு நான்கு பேராகப் பிரிந்து கிராமத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரசங்கித்தார்கள். பிறகு, எல்லாரும் மாலையில் ஒன்றாகக் கூடினார்கள். சமைப்பதற்காக இரண்டு பேர் மட்டும் அங்கேயே இருந்தார்கள். வாய்க்குள் சிரித்தபடி சான்டியாகோ இவ்வாறு சொல்கிறார்: “சிலருக்கு உண்மையில் எப்படிச் சமைப்பது என்றே தெரியாததால், எங்கள் பாடு திண்டாட்டமாக இருந்தது. ஒருமுறை சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவைப் பார்த்துவிட்டு ‘இது என்ன?’ என்று கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. அதற்கு, அதைச் சமைத்தவர், ‘என்னவென்று தெரியாது, ஆனால் சாப்பாடுதான்’ என்று பதிலளித்தார். சமைத்தவருக்கே அது என்னவென்று தெரியாததால், எலும்பும் தோலுமாய்த் திரிகிற ஒரு நாயை முதலில் சாப்பிட வைத்துப் பார்ப்பது நல்லதென நாங்கள் நினைத்தோம். ஆனால், பசியோடிருந்த நாய்கூட அதைச் சீந்தவில்லை!”
கெக்சி இனத்தவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறார்
ரோடால்ஃபோ கோகமும் அவருடைய மனைவி ஓஃபேல்யா கோகமும் கோரோசால் நகரிலிருந்து தென் பகுதியில் க்ரிக்கெ சார்கோ என்றழைக்கப்பட்ட ஒதுக்குப்புற கெக்சி கிராமத்திற்குக் குடிமாறி வந்தார்கள். வருடாந்தரப் புதர் பயணங்களின்போது மட்டுமே யெகோவாவின் சாட்சிகள் ஊழியம் செய்கிற இந்தக் கிராமத்தில்தான் ஓஃபேல்யா வளர்ந்திருந்தார். அவருக்குச் சுமார் 14 வயதிருக்கும்போது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தை ஓர் ஆரஞ்சு மரத்தடியில் கண்டுபிடித்தபோது அதை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்; ஆனால், திருமணம் செய்துகொண்டு கோரோசாலில் குடியிருக்கும்போதுதான், அவருக்கும் அவருடைய கணவர் ரோடால்ஃபோவுக்கும் விசேஷ பயனியர்களாக இருந்த
மார்த்தயால் கே, மான்வால்லா கே தம்பதியர் பைபிள் படிப்பு நடத்தினார்கள்.1981-ல் கோகம் தம்பதியர் க்ரிக்கெ சார்கோவுக்குக் குடிமாறிப் போனபோது, யெகோவாவின் சாட்சிகளுடன் மீண்டும் பைபிளைப் படிக்க விரும்பினார்கள்; எனவே, ரோடால்ஃபோ சாட்சிகளைத் தேடிக்கொண்டு பன்டா கார்டாவுக்குச் சென்றார். அங்கு செல்ல குறைந்தபட்சம் ஆறு மணிநேரம் எடுத்தது; நடந்து செல்லவும், பிறகு படகிலே ஆற்றிலும் கடலிலும் பயணிக்கவும் வேண்டியிருந்தது. பன்டா கார்டாவில் அவர் டானல்ட் நிப்ரூஜி என்ற பயனியரைச் சந்தித்தார்; கடிதம் மூலம் அந்தத் தம்பதியருடன் பைபிள் படிப்பதற்கு அவர் ஏற்பாடு செய்தார். ஆனால், ஒரு பிரச்சினை இருந்தது. க்ரிக்கெ சார்கோவில் தபால் நிலையம் எதுவும் இல்லாதிருந்தது.
டானல்ட் இவ்வாறு சொல்கிறார்: “நான் எப்படித் தபாலை க்ரிக்கெ சார்கோவுக்கு அனுப்ப வேண்டுமென பன்டா கார்டாவிலிருந்த தபால் நிலையத்தில் கேட்டேன்; வாரம் ஒரு முறை அங்கு ஒரு பாதிரி செல்வதாகச் சொன்னார்கள்.” எனவே, சுமார் ஆறு மாதங்களுக்கு அந்தப் பாதிரி பைபிள் படிப்புக்குரிய கடிதங்களை எடுத்துப் போய்க்கொண்டும் எடுத்து வந்துகொண்டும் இருந்தார்; யெகோவாவின் சாட்சிகளுக்காகத் தபாலைக் கொண்டுபோவது தெரியாமலேயே அப்படிச் செய்துவந்தார்.
டானல்ட் இவ்வாறு சொல்கிறார்: “அந்தப் பாதிரி எதை எடுத்துச் சென்றுகொண்டிருந்தார் என்பதை அறிந்தபோது நிலைகுலைந்து போனார், அதற்குப்பின் எங்கள் கடிதங்களை எடுத்துச் செல்ல அடியோடு மறுத்துவிட்டார்.”
அந்த மாதங்களில் டானல்ட் அநேக தடவை க்ரிக்கெ சார்கோவுக்குச் சென்று கோகம் தம்பதியருக்கு பைபிள் படிப்பு நடத்தினார். அடுத்த
முறை புதர் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது, ரோடால்ஃபோவும் வெளி ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். டானல்ட் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் அவரை நான்கு நாட்களுக்கு எங்களுடன் அழைத்துக்கொண்டுபோய், பல்வேறு கிராமங்களில் ஊழியம் செய்தோம்; அந்தப் பயணத்தில் சகோதரர்களுடன் அவர் கூட்டுறவு கொண்டது முன்னேற்றம் செய்ய அவருக்கு உண்மையிலேயே உதவியது.”ரோடால்ஃபோ இவ்வாறு சொல்கிறார்: “நானும் ஓஃபேல்யாவும் எங்கள் கிராமத்தில் ஊழியம் செய்யப் போனோம்; நாங்கள் கற்றுக்கொண்டவற்றைப் பற்றிச் சொல்ல நாங்கள் இருவர் மட்டுமே போனோம். நான் யாருக்கெல்லாம் பைபிள் படிப்பு நடத்தினேனோ அவர்கள் எங்களைவிடவும் அதிக எதிர்ப்பைச் சந்தித்தார்கள். கிராமத்திற்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட மருந்து, உணவுப் பொருள்கள், உடைகள் போன்றவை சிலருக்கு மறுக்கப்பட்டன. எங்கள் ஊழியத்தை என்னுடைய மாமியாரும்கூட அதிகம் எதிர்த்தார். க்ரிக்கெ சார்கோவில் இருக்கும்வரை நாங்கள் ஆன்மீக முன்னேற்றம் செய்ய முடியாதென நானும் ஓஃபேல்யாவும் புரிந்துகொண்டோம். நாங்கள் கூட்டங்களில் கலந்துகொள்வது அவசியமாய் இருந்தது. எனவே, படிப்பைத் தொடருவதற்காக பன்டா கார்டாவுக்குக் குடிமாறிப் போனோம். அங்கிருக்கையில் ஆன்மீக முன்னேற்றம் செய்து, 1985-ல் ஞானஸ்நானம் பெற்றோம்.” இன்று, கோகம் தம்பதியர் லேடிவில் சபையுடன் கூட்டுறவு வைத்திருக்கிறார்கள்; அங்கே ரோடால்ஃபோ உதவி ஊழியராகச் சேவை செய்கிறார்.
ஆன்மீக மீன்களை அள்ளித்தந்த கடல் பயணங்கள்
தீவுகளிலும் கரையோர கிராமங்களிலும் உள்ள மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க ஒவ்வொரு வருடமும் கடல் பயணங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டன. அந்தச் சமயத்தில், ஹாப்கின்ஸ், ஸேன் பைட், ப்ளாசென்ஸ்யா, பூன்டா நெக்ரா போன்ற கிராமங்களுக்கும் மங்கி ரிவர் டவுனுக்கும் செல்ல தரை மார்க்கமே இல்லாதிருந்தது. போலிட்டோ பெவனஸ், மீன் பிடிக்காத காலத்தில், லாப்ஸ்டர் நண்டு பிடிக்கும் தன் படகில் இன்னும் நான்கு பயனியர்களையும் மிஷனரிகளையும் ஏற்றிக்கொண்டு வடக்கிலிருந்து தெற்குவரை இரண்டு வாரங்களுக்குப் பயணிப்பார்; வழியில் ஊழியம் செய்வதற்கு எல்லா இடங்களிலும் நிறுத்துவார்.வருடாந்தரப் புதர் பயணங்களிலும் கடல் பயணங்களிலும் அடிக்கடி கலந்துகொண்ட டானல்ட் நிப்ரூஜிக்கு, ஒரு கடல் பயணத்தின்போது ஆம்ரோன்ஸ்யோ ஹெர்நான்டெஸ் என்பவருடைய பாய்மரப் படகைக் கடன் வாங்கிச் சென்ற சுவையான அனுபவம் நினைவிருக்கிறது. பலன்? போசோ என்று அன்பாக அழைக்கப்படும் ஆம்ரோன்ஸ்யோ பைபிள் படிக்க ஆரம்பித்தார்.
டானல்ட் இவ்வாறு சொல்கிறார்: “அதற்கு மறுவருடம் நாங்கள் நால்வரும் கரையோரப் பகுதிகள் முழுவதிலும் ஊழியம் செய்வதற்கு இரண்டு வார கடல் பயணத்திற்குத் திட்டமிட்டோம். ஆனால், அந்தச் சமயத்திற்குள்ளாக போசோ தன் படகை விற்றுவிட்டிருந்தார். அதனால் அவர் இன்னொரு மீனவருடைய படகில் செல்வதற்குச் சிபாரிசு செய்தார்; அந்த மீனவரும் தன்னுடைய கூட்டாளியையும் போசோவையும் அதில் கூட்டிச் செல்ல சம்மதித்தார். மூன்று மீனவர்கள், இரண்டு விசேஷ பயனியர் தம்பதியர் என நாங்கள் புறப்பட்டோம். அந்தப் பயணத்தின்போது போசோ வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். நாங்கள் ப்ளாசென்ஸ்யா துறைமுகத்தை அடைந்தபோது, எக்கச்சக்கமான உல்லாசப் படகுகள் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம்; எனவே, படகு படகாகப் போய் ஊழியம் செய்தோம். சத்தியத்தில் இல்லாத அந்த இரண்டு மீனவர்கள் அந்த இரண்டு வாரங்களும் அதிக ஒத்தாசையாய் இருந்தார்கள். ஒரு சமயம், நாள் முழுவதும் ஒரு கிராமத்தில் ஊழியம் செய்துவிட்டு நாங்கள் திரும்பி வந்தபோது, அந்த இரண்டு மீனவர்களும் கோழி வாங்கி வந்து அவர்களிடமிருந்த சிறிய மண்ணெண்ணெய் அடுப்பில் எங்களுக்காக உணவு தயாரித்திருந்தார்கள்.” அடுத்த வருட கடல் பயணத்தின்போது போசோ ஞானஸ்நானம் பெற்றிருந்தார். அவர் பெலிஸ் நகரத்தில் கடந்த 18 வருடங்களாக மூப்பராய்ச் சேவை செய்து வருகிறார்.
நியமிக்கப்படாத பிராந்தியம் நல்ல பலன்களை அளிக்கிறது
பெலிஸின் தென் பகுதியிலுள்ள டொலீடோ மாகாணம், தொடர்ச்சியான குன்றுகளும், அடர்த்தியான மழைக் காடுகளும் உள்ள பகுதியாகும்; அங்கே, மண் தரைகள் உள்ள குடிசை வீடுகள் நிறைந்த
மோபான், கெக்சி மாயா கிராமங்கள் ஏராளம் இருக்கின்றன. பெரும்பாலான பகுதிகளில், அந்தக் கிராமவாசிகள் கடினமாய் உழைக்கிறார்கள்; பெரிய பெரிய வயல் வேலைகளை எல்லாம் சாதாரண மண்வெட்டியால் செய்கிறார்கள். வறட்சி மிகுந்த காலங்களில், சோளம், அவரை, கோகோ ஆகியவற்றை விளைவிக்க தண்ணீரை வயல்களுக்குச் சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது. நாடெங்கும், பெண்களில் பலர் துணிகளில் பாரம்பரிய கெக்சி பூவேலைப்பாட்டைச் செய்கிறார்கள், கூடைகளை முடைகிறார்கள்; இவற்றை நினைவுப் பொருள்களை விற்கும் கடைகளில் விநியோகிக்கிறார்கள். இளைஞர்களில் அநேகர் படிப்புக்காகவும் வேலைக்காகவும் கிராமங்களை விட்டுவிட்டு, நாட்டின் ஜனநெருக்கமுள்ள பகுதிகளில் போய்க் குடியேறுகிறார்கள்.1995-ல், “வாழ்க்கையில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?” என்ற தலைப்பிலிருந்த ராஜ்ய செய்தி எண் 34-ஐ ஏப்ரல், மே மாதங்களில் டொலீடோ மாகாணத்தில் விநியோகிப்பதற்குத் தற்காலிக விசேஷ பயனியர்களாகச் சேவை செய்யும்படி ஃபிராங்க் கார்டோஸா, ஆலிஸ் கார்டோஸா தம்பதியர் அழைப்பைப் பெற்றார்கள். ஃபிராங்க் இவ்வாறு சொல்கிறார்: “ஒருமுறை வருடாந்தரப் புதர் பயணத்தின்போது நான் அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தேன்; அங்கே குடியிருக்க சாட்சிகள் யாராவது சென்றால், நற்செய்தியைச் சிறந்த விதத்தில் கற்றுக்கொள்ள மாயா மக்களுக்கு உதவ முடியுமென நினைத்தேன். அங்கே நான் தங்குவதற்கு ஓர் இடத்தை வாடகைக்கு எடுக்கும்படியும், பைபிள் படிப்புத் தொகுதி ஒன்றை ஆரம்பிக்கும்படியும், சான் ஆன்டோன்யோவில் விசேஷப் பேச்சைக் கொடுக்கும்படியும் கிளை அலுவலகம் என்னிடம் தெரிவித்தது. அந்த இடத்திலும் இன்னும் எட்டு கிராமங்களிலும் நாங்கள் ராஜ்ய செய்தியை விநியோகிக்க வேண்டியிருந்தது.”
ஒரே அறையை உடைய வாடகை வீட்டில் கார்டோஸா தம்பதியர் வாராந்தரப் படிப்பை நடத்தினார்கள்; அடித்தளத்தில் அமைந்திருந்த அந்த அறையில் நடத்தப்பட்ட அந்தப் படிப்பில் சில வாரங்களுக்குள்ளாகவே மூன்று, நான்கு குடும்பங்கள் கலந்துகொள்ள ஆரம்பித்தன. ஆர்வம் காட்டிய இவர்கள் கார்டோஸா தம்பதியருடன் சேர்ந்து பன்டா கார்டாவுக்குப் போய் தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலும் ஊழியக் கூட்டத்திலும்கூட கலந்துகொண்டார்கள்; அதற்காக, தேய்ந்துபோன ஒரு பிக்கப் டிரக்கில், மேடுபள்ளம் நிறைந்த மண்சாலையில் ஒருமணிநேரம் பயணித்தார்கள். அந்த முதல் மாதத்தில் ஃபிராங்க் விசேஷப் பேச்சை சான் ஆன்டோன்யோவில் கொடுத்தார். முதன்முறையாகக் கூட்டத்திற்கு வந்திருந்த ஹாஸஸ் இச் என்பவர் கூர்ந்து கவனித்தார். நாசரீன் சர்ச்சைச் சேர்ந்த அவர் எரிநரகப் போதனை புற மதங்களிலிருந்து தோன்றியது என்பதையும், பைபிளில் குறிப்பிடப்படுகிற நரகமானது கல்லறையைக் குறிக்கிறது என்பதையும் முக்கியமாக அறிந்தபோது நெகிழ்ந்து
போனார். கூட்டத்திற்குப் பிறகு அவர் ஃபிராங்க்கைத் தனியாக அழைத்துச் சென்று, அது சம்பந்தமாகக் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரைத் துளைத்தெடுத்தார். விளைவு? அவர் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டு, ஒரு வருடத்திற்குப் பிறகு ஞானஸ்நானம் பெற்றார்.கார்டோஸா தம்பதியர், தற்காலிக விசேஷ பயனியர்களாக இரண்டு மாத ஊழியத்தை முடிக்கவிருந்த சமயத்தில், அவர்கள் முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியிருந்தது. ஃபிராங்க் இவ்வாறு சொல்கிறார்: “எங்களால் நடத்த முடியாதளவுக்கு எக்கச்சக்கமான பைபிள் படிப்புகளை ஆரம்பித்திருந்தோம். லேடிவில்லில் இருந்த எங்கள் சொகுசான வீட்டுக்குத் திரும்பிப் போக எங்கள் மனமும் மனசாட்சியும் துளியும் இடங்கொடுக்கவில்லை. நாங்கள் சான் ஆன்டோன்யோவில் தங்குவதற்குத் தீர்மானித்தால், அந்த அடித்தள அறையை விட்டுவிட்டு அதன் மாடியிலிருந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொஞ்சம் சௌகரியமாக இருக்கலாமென நினைத்தோம். அதில், சிறிய தொட்டிக்கும், மழை நீருக்கான வடிகாலுக்கும், பிற்பாடு ‘ப்ளஷ்’ டாய்லெட்டுக்கும், மின்சாரத்திற்கும் வழி செய்ய முடியுமென நினைத்தோம். எங்கள் தீர்மானத்தைக் குறித்து நாங்கள் யெகோவாவிடம் ஜெபம் செய்தோம்; அவருடைய ஆசீர்வாதத்தோடு இந்தப் பகுதியில் ஒரு சபையை உருவாக்க முடியுமென நம்பினோம். பிறகு, நாங்கள் சான் ஆன்டோன்யோவில் தங்கி ஒழுங்கான பயனியர்களாகச் சேவை செய்ய விரும்புவதைக் கிளை அலுவலகத்திற்குக் கடிதம் மூலம் தெரிவித்தோம்.”
கார்டோஸா தம்பதியர் எடுத்த தீர்மானத்தை யெகோவா ஆசீர்வதித்தது சீக்கிரத்திலேயே பளிச்செனத் தெரிந்தது. ஆறே மாதங்களில், அதாவது நவம்பர் மாதத்தில், அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டிலேயே முதல் பொதுக் கூட்டத்தை நடத்தினார்கள். அதற்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தேவராஜ்ய ஊழியப் பள்ளியையும் ஊழியக் கூட்டத்தையும் சான் ஆன்டோன்யோவில் நடத்த ஆரம்பித்தார்கள். இனி கூட்டங்களுக்காக பன்டா கார்டாவுக்கு வாரா வாரம் சுமார் 65 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியதில்லை என்பதை அறிந்தபோது அந்தச் சிறிய தொகுதியினர் அதிக நிம்மதி அடைந்தார்கள்.
‘அவருடைய பயமுறுத்தல்கள் எதுவும் என்னிடம் பலிக்கவில்லை’
சான் ஆன்டோன்யோவில் ஒரு தொகுதியாக இருந்த நல்மனமுள்ள பைபிள் மாணாக்கர்கள் சீக்கிரத்தில் முன்னேற ஆரம்பித்தார்கள்; சத்தியத்தின் மீதிருந்த அன்பு அவர்களை உண்மையிலேயே தூண்டுவித்தது. ஃபிராங்க் இவ்வாறு சொல்கிறார்: “இந்தக் கிராமங்களில் முக்கியமாகப் பெண்கள் அதிக கூச்ச சுபாவமுள்ளவர்கள்; தங்கள் அப்பாவுக்கும்
கணவருக்கும் கீழ்ப்படிவது அவர்களுடைய பாரம்பரியப் பழக்கம். முன்பின் தெரியாதவர்களிடம் அவர்கள் பேச மாட்டார்கள். எனவே, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபடுவது அவர்களுக்கு அதிக சிரமமாக இருந்தது.”அந்தச் சமயத்தில் 20 வயதாக இருந்த ப்ரிசில்யான் ஷோ ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபியாக இருந்தார்; அந்தப் பகுதியில் இருந்தவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் மிகவும் விரும்பினார். ஒரு சமயம், ஆமால்யா ஷோ என்ற அண்ணியுடன் ப்ரிசில்யான் சில மறுசந்திப்புகளுக்குச் சென்றிருந்தபோது அவர்கள் திடீரென ஒரு பிரச்சினையை எதிர்ப்பட்டார்கள்.
ப்ரிசில்யான் இவ்வாறு சொல்கிறார்: “வெளியில் போய் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது பற்றி என் அப்பாவிடம் நாம் சொல்லாதிருந்தேன்; ஏனென்றால், அப்படிப் போகக் கூடாதென அவர் சொல்லியிருந்தார், எனக்கு அவரிடம் பயமும் இருந்தது. அந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நாங்கள் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, என் அப்பா போய்க்கொண்டிருந்த பாப்டிஸ்ட் சர்ச் வாசலில் திடீரென அவரைப் பார்த்தோம். முதலில், அவர் எங்களைப் பார்த்துவிடக் கூடாதென, புற்களுக்கு இடையே பதுங்கிக்கொண்டோம். பிறகு நான், ‘ஆமால்யா, யெகோவா நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். என் அப்பாவைப் பார்த்துப் பயப்படுவது தவறு. யெகோவாவுக்குத்தான் நாம் பயப்பட வேண்டும்’ என்று சொன்னேன்.”
ப்ரிசில்யானின் அப்பாவுக்குக் கோபம் தலைக்கேறியது. அதைவிடவும் பெரிய பிரச்சினை ஒன்று காத்திருந்தது; ஏனென்றால், ப்ரிசில்யான் யெகோவாவின் சாட்சியாவதை அவர் மூர்க்கத்தனமாய் எதிர்த்தார். ப்ரிசில்யானோ வரவிருந்த மாநாட்டில் ஞானஸ்நானம் பெற முடிவுசெய்திருந்தார்; மாநாட்டுக்கு முந்தின நாள்வரை தன் ஞானஸ்நானத்தைக் குறித்து ஜெபம் செய்துவிட்டு, அதைத் தன் அப்பாவிடம் சொல்வதற்கு ஒருவழியாக தைரியத்தைத் திரட்டிக்கொண்டார்.
“நாளைக்கு நான் பெலிஸ் நகரத்திற்குப் போகப் போகிறேன்” என்று தன் அப்பாவிடம் அவர் சொன்னார்.
“அங்கே போய் என்ன செய்யப் போகிறாய்?” என்று அவர் கேட்டார்.
“நான் ஞானஸ்நானம் எடுக்கப் போகிறேன். நான் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா விரும்புகிறாரோ அதைச் செய்யப்
போகிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். ஆனால், யெகோவாவையும் நான் நேசிக்க வேண்டும்” என்று ப்ரிசில்யான் சொன்னார்.“நீ உண்மையிலேயே ஞானஸ்நானம் எடுக்கப் போகிறாயா?” என்று கோபாவேசத்தோடு அப்பா கேட்டார்.
“ஆமாம், மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, கடவுளுக்கு நான் கீழ்ப்படிய வேண்டும் என்று அப்போஸ்தலர் 5:29 சொல்கிறது” என்று ப்ரிசில்யான் சொன்னார்.
ப்ரிசில்யானின் அப்பா கோபத்தில் விருட்டென எழுந்து சென்றுவிட்டார். ப்ரசில்யான் இவ்வாறு சொல்கிறார்: “மாநாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லவிருந்த டிரக்கில் ஏறி உட்காரும்வரை நான் பாதுகாப்பாகவே உணரவில்லை. மாநாடு முடிந்து வீடு திரும்பியதும் அவர் என்ன செய்வாரென்றே தெரியாதிருந்தது. ஆனால், அதற்குள்ளாக நான் ஞானஸ்நானம் பெற்றுவிடுவேன் என்பதால், அதன் பிறகு அவர் என்னைக் கொன்றாலும் நான் சரியானதையே செய்திருப்பேன் என்பது எனக்குத் தெரிந்திருந்தது.”
அவர் வீடு திரும்பியதும் ப்ரிசில்யானின் அப்பா அவருக்கு எந்தத் தீங்கையும் செய்யாவிட்டாலும், பின்னர் அவரைக் கொன்றுவிடப் போவதாகப் பயமுறுத்தினார். “ஆனால், அவருடைய பயமுறுத்தல்கள் எதுவும் என்னிடம் பலிக்காது என்பதை அவர் அறிந்துகொண்டார்; அதுமுதல், அவர் என்னிடம் சாந்தமாகவே நடந்துகொள்கிறார்” என்று ப்ரிசில்யான் சொல்கிறார்.
எதிர்த்தவர் யெகோவாவின் பக்கம் சேர்ந்துகொள்கிறார்
சான் ஆன்டோன்யாவில் புதிதாக உருவான பக்திவைராக்கியமுள்ள பிரஸ்தாபிகளின் தொகுதி ஆன்மீக ரீதியில் செழித்தோங்கிய சமயத்தில், கார்டோஸா தம்பதியர் திடீரென ஒரு கடிதத்தைப் பெற்றார்கள். அதில், சான் ஆன்டோன்யாவை விட்டு அவர்கள் வெளியேற வேண்டுமென கிராமப் பஞ்சாயத்து குறிப்பிட்டிருந்தது. முன்னர் ஃபிராங்க் விண்ணப்பத் தொகையைக் கட்டியபோது, அந்தக் கிராமத்தில் குடியிருக்க அந்தப் பஞ்சாயத்தின் அனுமதியை அவர் பெற்றிருந்தார். இப்போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், கார்டோஸா தம்பதியரை அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அந்தப் பஞ்சாயத்தின் ஒரு கூட்டத்தில் ஃபிராங்குடன் பைபிள் படித்துக்கொண்டிருந்த மூவர் அவர் சார்பாகப் பேசினார்கள். பிறகு, ஃபிராங்க் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரும் அந்தப் பஞ்சாயத்தில் பேசினார்; கார்டோஸா தம்பதியரை வெளியேற்றினால், அவர்கள் கொடுத்து வந்த வாடகையை அந்தப் பஞ்சாயத்து கொடுக்க வேண்டியிருக்குமென எச்சரித்தார். தனியாருக்குச் சொந்தமான இடத்தில் குடியிருக்கும் ஒருவரை
வெளியேற்ற முடியாதென குறிப்பிடும் கடிதம் ஒன்றையும் நில இலாகாவிடமிருந்து பெற்று ஃபிராங்க் அவர்கள் முன் சமர்ப்பித்தார். கடைசியில், கார்டோஸா தம்பதியர் அங்கே தங்குவதற்கு அந்தப் பஞ்சாயத்து அனுமதி அளித்தது.கார்டோஸா தம்பதியரை வெளியேற்ற விரும்பியவரின் பெயர் பாசில்யோ ஆ; அவர் முன்னாளைய ஆல்கால்டெயாகவும் (தலைவராகவும்), அப்போதைய அரசியல் பிரமுகராகவும் இருந்தார். அவர் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, தன்னால் முடிந்த வழிகளிலெல்லாம் சான் ஆன்டான்யோவிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுக்குத் தொல்லை கொடுத்து வந்தார். ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்கு ஓர் இடத்தை வாங்க அந்தச் சிறிய தொகுதியினர் ஆசைப்பட்டபோது, “இந்தக் கிராமத்தில் நீங்கள் ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டவே மாட்டீர்கள்!” என்று அவர் எச்சரித்தார். இருப்பினும், சகோதரர்கள் ஓர் இடத்தை வாங்கி, எளிய, அழகான ராஜ்ய மன்றத்தைக் கட்டினார்கள். டிசம்பர் 1998-ல் நடந்த அந்த ராஜ்ய மன்ற அர்ப்பண விழாவுக்கு பாசில்யோவும் வந்திருந்தது ஆச்சரியத்தை அளித்தது. என்ன நடந்திருந்தது?
பாசில்யோவின் மகன்கள் இருவருடைய மணவாழ்வில் பிரச்சினைகள். தன்னுடைய மகன்களுக்கு உதவும்படி பாசில்யோ தன் சர்ச்சிடம் இரண்டு முறை கேட்டிருந்தார்; ஆனால், அந்த இரண்டு முறையும் சர்ச் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. பின்னர், அவருடைய மகன்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். பாசில்யோவின் மனைவி மாரியா, தன் மகன்கள் நல்ல விதத்தில் மாற்றங்களைச் செய்ததையும், அவர்களுடைய மணவாழ்வு முன்னேற்றம் அடைந்திருந்ததையும் கவனிக்க ஆரம்பித்தார். எனவே, அவரே போய்த் தனக்கும் பைபிள் படிப்பு நடத்தும்படி யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டுக்கொண்டார்.
மாரியா இவ்வாறு சொல்கிறார்: “யெகோவா தேவனைப் பற்றித் தெரிந்துகொள்ள உண்மையிலேயே ஆசைப்பட்டேன். கடவுளைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்ள ராஜ்ய மன்றத்திற்கு நாம் போக வேண்டுமென என் கணவரிடம் சொன்னேன்.” யெகோவாவின் சாட்சிகள் மீதும், “அந்த வெளிநாட்டுக்காரர்” என்று அவர் அழைத்த ஃபிராங்க் கார்டோஸா
மீதும் பாசில்யோவுக்கு இருந்த வெறுப்பு அவ்வளவு சீக்கிரம் தணியவில்லைதான்; என்றாலும், தன்னுடைய மகன்கள் பைபிள் சத்தியங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்ததால் ஏற்பட்ட நல்ல மாற்றங்களைப் பார்த்துச் சந்தோஷப்பட்டார். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றித் தானே ஆராய்ந்து பார்க்கத் தீர்மானித்தார்; சில கலந்தாலோசிப்புகளுக்குப் பிறகு அவர் யாரிடம் பைபிள் படிக்க ஒத்துக்கொண்டார் தெரியுமா? “அந்த வெளிநாட்டுக்காரர்” என்று அவர் அழைத்த ஃபிராங்க் கார்டோஸாவிடம்தான்!பாசில்யோ இவ்வாறு சொல்கிறார்: “பைபிளில் நான் படித்த விஷயங்கள் என் மனதை மாற்றின. நான் 60 வருடங்களாகக் கத்தோலிக்கனாக இருந்தேன், சர்ச்சில் உருவச் சிலைகளுக்கு முன்பாக நறுமண தூபம் போட்டேன். இப்போதோ, யெகோவாவுடைய புத்தகமான பைபிளிலிருந்தே அவரைப் பற்றி நான் கற்றுக்கொண்டிருந்தேன். இன்று என் சகோதரராக இருக்கிற ஃபிராங்க் கார்டோஸாவிடம் நான் நடந்துகொண்ட விதத்தை நினைத்து வெட்கப்படுகிறேன். நான் தப்பு செய்ததை ஒப்புக்கொள்ளத் தயங்கவில்லை. எனக்குச் சரியென பட்டதை என் கிராமத்திற்காகவும் என் மதத்திற்காகவும் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன். ஆனால், எங்கள் கிராமங்களில் பொதுவாகக் காணப்படும் ஆவியுலகச் சுகப்படுத்துதலுடன் சம்பந்தப்பட்ட மாயா பாரம்பரியங்களில் ஈடுபடுவதை விட்டுவிட்டேன்; அதோடு, மாயா அரசியல் கட்சிகளுடன் இருந்த தொடர்பைத் துண்டித்துக் கொண்டுவிட்டேன்.” இன்று பாசில்யோ ஆவும் மாரியா ஆவும் ஞானஸ்நானம் பெற்ற பிரஸ்தாபிகளாக யெகோவாவைச் சந்தோஷமாய்ச் சேவிக்கிறார்கள்.
யெகோவாவின் ஊழியர்கள் அன்புக்கும், சந்தோஷத்திற்கும், பக்திவைராக்கியத்திற்கும் பெயர்பெற்றவர்கள். பெலிஸின் ஒதுக்குப்புற பிராந்தியங்களில் உள்ள அநேக பிரஸ்தாபிகள் ஊழியத்தில் ஆட்களைச் சந்திக்க, மூன்று மணிநேரமோ அதற்கும் அதிகமாகவோ செங்குத்தான குன்றுகளில் மேலும் கீழும் ஏறி இறங்குகிறார்கள்; அதோடு, அவர்கள் கூட்டங்களைத் தவறவிட விரும்புவதில்லை. உதாரணத்திற்கு, ஒருநாள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வீட்டுக்காரராக இருக்கும் நியமிப்பை ஆன்ட்ரேயா இச் பெற்றார். அன்று ஆவகாடோ பழங்களைப் பறித்துவர அவர் தன் மகன்களுடன் காட்டுக்குள் 3 முதல் 5 கிலோமீட்டர் தூரம் நடந்திருந்தார். அந்தச் சமயத்தில் அவரை 23 குளவிகள் கொட்டிவிட்டன. ஆனாலும், அவர் வீட்டுக்குப் போனார், தன் குடும்பத்தாருக்கு உணவைத் தயாரித்தார், கூட்டத்திற்குச் சென்றார், நிகழ்ச்சியில் தன் பகுதியைக் கையாண்டார். பூச்சிக் கடியால் அவருடைய முகம் புஸ் என்று வீங்கியிருந்தபோதிலும் அவர் முகத்தில் சந்தோஷம் தென்பட்டது. அன்பான மாயா சகோதர சகோதரிகள் மாநாடுகளில் கலந்துகொள்ள நாள் முழுவதும் டிரக்கிலோ பஸ்ஸிலோ பயணம் செய்ய
வேண்டியிருந்தபோதிலும் உண்மைக் கடவுளான யெகோவாவின் வணக்கத்தில் ஒன்றுபட்டிருப்பதில் அவர்கள் சந்தோஷமாய் இருப்பதைப் பார்க்க எப்போதும் உற்சாகம் அளிக்கிறது.பெலிஸைச் சின்னாபின்னமாக்கிய படுமோசமான வானிலை
கடந்த 115 ஆண்டுகளில், மொத்தம் 51 சூறாவளிகளும் வெப்பமண்டல புயல் காற்றுகளும் பெலிஸைத் தாக்கியிருக்கின்றன. 1930 முதல் 12 சூறாவளிகள் பெலிஸை நேரடியாகத் தாக்கியிருக்கின்றன அல்லது அதன் அருகே கரையைக் கடந்து பெருமளவு பொருள் சேதத்தையும் உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஹட்டி என்ற சூறாவளி பெலிஸைத் தாக்கிய படுமோசமான சூறாவளிகளில் ஒன்று. அக்டோபர் 31, 1961 அன்று விடியக் காலையில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசியது, கட்டுக்கடங்காத அலைகள் நூற்றுக்கணக்கானோரைப் பலிவாங்கின. கடல் மட்டத்திற்கு மேல் ஓர் அடி உயரத்திலேயே உள்ள பெலிஸ் நகரமெங்கும், ஓர் அடிக்குச் சேறு நிறைந்திருந்தது. கிளை அலுவலகத்திலிருந்து வந்த அறிக்கை இவ்வாறு தெரிவித்தது: “[பெலிஸ் நகரிலுள்ள] பெரும்பாலான சகோதரர்களுடைய வீடுகள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன அல்லது முழுவதுமாகத் தரைமட்டமாகியிருக்கின்றன; ஆனால், யாருக்கும் மோசமான காயங்கள் ஏற்படவில்லை. அவர்களுடைய துணிமணிகள் எல்லாம் பறிபோயின அல்லது தண்ணீரில் நனைந்து நாசமாயின.
“புல்டோஸர்கள் தெருக்களைச் சுத்தப்படுத்துகின்றன, தரைமட்டமான வீடுகளில் சிதைந்து கிடந்த பொருள்கள் நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டன. இங்கே [மிஷனரி] இல்லத்தில், சுமார் 2 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்தது; அது பெருமளவு பொருள்களை நாசமாக்கியது. வெளியே சுமார் 9 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்தது, . . . ஆனால், தெருவின் மட்டத்திலிருந்து சற்று உயரத்தில் மிஷனரி இல்லம் கட்டப்பட்டிருந்தது நல்லதாய்ப் போயிற்று. . . . அற்பசொற்ப உணவையே வாங்க முடிகிறது . . . அவர்கள் இன்னும் பிரேதங்களைத் தோண்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.”
பத்து நாட்களுக்குப் பிறகு கிளை அலுவலகம் பின்வரும் அறிக்கையை அனுப்பியது: “[டான்க்ரீகாவில்] நிலைமைகள் இங்கு [பெலிஸ் நகரத்தில்] இருப்பதைவிட மோசமாக இருக்கின்றன. எதை வாங்குவதற்கும் மக்கள் தினமும் எட்டு மணிநேரம் வேலை செய்து கூப்பன்களைப் பெறும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். எல்லாம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, பணத்தால் எதையும் வாங்க முடியாது.” ஒரு வீடு இடிந்துவிழுந்தபோது இரண்டு பையன்கள் இறந்து போனார்கள், அவர்களுடைய அப்பாவின் கால்கள் முறிந்துபோயின. அந்த இரண்டு பையன்களும் ஊக்கமாக ஊழியத்தில் ஈடுபட்டு வந்தவர்கள்; அவர்களில்
12 வயது பையன் தன் பள்ளி ஆசிரியர்களுக்குச் சாட்சி கொடுத்து நற்பெயர் பெற்றவன்.பெலிஸ் நகரத்திற்கும் டான்க்ரீகாவுக்கும் இடையே சூறாவளி கரையைக் கடந்தது; அப்போது, அந்த இடத்திலிருந்த பெரும்பாலான சகோதரர்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் ஓரளவோ மொத்தமாகவோ இழந்தார்கள். சூறாவளி தாக்கிய பிறகு, ஆளுநர் அவசரச் சட்டங்களையும் ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்தார்; இவற்றை அமல்படுத்தவும் சூறையாடுபவர்களைச் சுட்டுத்தள்ளவும் ஆங்கிலேய ராணுவத்தை வரவழைத்தார். ஊரடங்கு உத்தரவை மீறிய ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் இரவு முழுக்க கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
குழப்பமான சூழ்நிலைகள் நிலவிய போதிலும், முடிந்தவரை சீக்கிரத்திலேயே வாராந்தர சபை கூட்டங்களும் வெளி ஊழியமும் மீண்டும் நடைபெற ஆரம்பித்தன. எக்கச்சக்கமான ஆட்கள் புகலிடங்களில் தங்கியிருந்ததாலும், வாசற்புறத்தில் தண்ணீரும் சகதியும் நிறைந்திருந்ததாலும் அவற்றில் கலந்துகொள்வது கடினமாக இருந்தது. ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய ஆறுதலளிக்கும் நற்செய்தி மக்களுக்குத் தேவைப்பட்டது; அதை அவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்குத் தியாகங்களைச் செய்ய யெகோவாவின் சாட்சிகள் தயாராய் இருந்தார்கள்.
வாழ்க்கைச் சூழல் படுமோசமாக இருந்தது; ஆனால், அயல் நாடுகளில் வசித்து வந்த யெகோவாவின் சாட்சிகள் காட்டிய அன்பும் தாராள குணமும் பெலிஸில் சோர்ந்து போயிருந்த சகோதரர்களுக்கு ஊக்கத்தை அளித்தன. பிற நாடுகளிலுள்ள கிளை அலுவலகங்களிலிருந்து 25 அட்டைப் பெட்டிகள் நிறைய துணிமணிகளும் பிற பொருள்களும் வந்திறங்கின; அவை யெகோவாவின் சாட்சிகளுக்கும் வேறு பலருக்கும்கூட விநியோகிக்கப்பட்டன. சூறாவளியைத் தாக்குப்பிடித்த சில கட்டிடங்களில் கிளை அலுவலகமும் ராஜ்ய மன்றமும் இருந்தன. அதனால், சூறாவளி சமயத்தில் பொதுப் புகலிடமாக ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதி கேட்டபோது சகோதரர்கள் அதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தார்கள். b
“திருமதி ப்ராட், எங்களுக்காக நீங்கள் ஜெபம் செய்வீர்களா?”
அக்டோபர் 2000-ல் மூன்று நாட்களுக்கு, மணிக்கு 205 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய கித் சூறாவளிக் காற்றையும் அடை மழையையும்
சமாளிக்க முடியாமல் அம்பர்கிரிஸ் தீவிலுள்ள சான் பெட்ரோவாசிகள் தவித்தார்கள். பெலிஸ் நகரத்திற்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லேடிவில் நகரில், மூன்று நாட்கள் கொட்டிய மழையால் சுமார் 80 சென்டிமீட்டர் உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. லேடிவில்லில் உள்ள மாநாட்டு மன்றத்தில் 42 சகோதரர்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். காக்கர் தீவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளும் தரைமட்டமாகியிருந்தன. அம்பர்கிரிஸ் தீவிலும் காக்கர் தீவிலும் இருந்த 57 பிரஸ்தாபிகளும் பெரும்பாலான உடமைகளை அல்லது எல்லா உடமைகளையும் இழந்திருந்தார்கள்; அந்த இரண்டு தீவுகளிலும் மின்சாரமும், தண்ணீரும், தொலைத்தொடர்பு வசதியும் பல வாரங்களுக்கு இல்லாதிருந்தன. பெலிஸ், ஆரஞ்ச் வாக், கோரோசால் ஆகிய மாகாணங்களையும், அம்பர்கிரிஸ், காக்கர் ஆகிய தீவுகளையும் பேரழிவால் பாதிக்கப்பட்ட இடங்களாக முதல் மந்திரி அறிவித்தார். பொருள்கள் சூறையாடப்படுவதைத் தடுப்பதற்காக, பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதிலும் தற்காலிக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.காக்கர் தீவில் விசேஷ பயனியராக ஊழியம் செய்து வந்த சிசில்யா ப்ராட், சூறாவளி பற்றிய எச்சரிக்கைகளைக் கேட்டார்; சூறாவளி தாக்கும்போது புகலிடத்திற்குப் போக நேர்ந்தால் சமாளிப்பதற்காக ஒரு பையைத் தயார்படுத்தினார். அன்றுதான், 12 சகோதரிகளிடமிருந்து ஊழிய அறிக்கைகளைச் சேகரித்திருந்தார்; மதிய வேளையில் பெலிஸுக்குப் படகில் போய்க் கிளை அலுவலகத்தில் அந்த அறிக்கைகளைக் கொடுப்பதற்குத் திட்டமிட்டிருந்தார். அந்தத் தொகுதியினரின் வெளி ஊழிய அறிக்கைகளை அவர் கவனமாக ஒரு பிளாஸ்டிக்கில் சுற்றி, அவசர காலத்திற்குத் தயார்படுத்தியிருந்த பையில் வைத்துக்கொண்டார். எதிர்பார்த்தபடி, இரவில் சிசில்யாவும் சகோதரிகளில் சிலரும் காங்க்ரீட்டில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம் ஒன்றில் புகலிடம் தேட நேர்ந்தது. மீதமிருந்த சகோதரிகள் உடல்நல மையத்தில் அடைக்கலம் புகுந்தார்கள்.
சிசில்யா இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் இருந்த முதல் வகுப்பறையின்
துத்தநாகத் தகட்டாலான கூரையைக் காற்று பிய்த்துச் சென்றது. எங்களுடைய பொருள்களை வாரிக்கொண்டு நாங்கள் எல்லாரும் மற்றொரு அறைக்கு ஓடினோம். அது காங்க்ரீட் கட்டிடமாக இருந்தாலும், காற்றில் அந்த முழுக் கட்டிடமுமே அசைவதுபோல் தோன்றியது. நாங்கள் வெளியே எட்டிப் பார்த்தபோது, எங்களைச் சுற்றிக் கடல் சூழ்ந்திருந்ததைப் போல் தெரிந்தது; கண்ணுக்கெட்டிய தூரம்வரை நிலத்தையே பார்க்க முடியவில்லை. சிறிய தொகுதியாக இருந்த நாங்கள் சேர்ந்தே இருந்தோம்; ஊக்கமாய் ஜெபம் செய்தோம். அந்த வகுப்பறையிலிருந்த, பல்வேறு மதங்களைச் சேர்ந்த 40 பேரும் பயந்து நடுங்கினோம். சிலர், ‘இது கடவுளின் செயல்’ என்று சொன்னார்கள். கத்தோலிக்கப் பிரசங்கி ஒருவர் என்னிடம் வந்து, ‘திருமதி ப்ராட், எங்களுக்காக நீங்கள் ஜெபம் செய்வீர்களா?’ என்று கேட்டார். ‘என்னால் செய்ய முடியாது. நான் ஒரு பெண், என்னிடம் தொப்பி இல்லை’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர், ‘என்னுடைய தொப்பி இருக்கிறது’ என்று பதிலளித்தார். எல்லாருக்காகவும் நான் ஜெபம் செய்வது சரியாவென எனக்குத் தெரியவில்லை; ஆனால், அந்தச் சூறாவளி யெகோவாவின் செயல் அல்ல என்பதை அந்த மக்களுக்குப் புரிய வைக்க விரும்பினேன். எனவே, நான் மற்ற சகோதரிகளுடன் சேர்ந்து எல்லாருக்கும் கேட்கும் விதத்தில் ஜெபம் செய்தேன். நான் ஜெபம் செய்து முடித்து, எல்லாரும் ‘ஆமென்’ என்று சொன்னபோது காற்று வீசுவது அடங்கியது! அந்தச் சமயத்தில்தான் சூறாவளி நாங்கள் இருந்த பகுதியைவிட்டு நகர்ந்து போனது. அப்போது அந்தக் கத்தோலிக்கப் பிரசங்கி, ‘நீங்கள் நன்றாக ஜெபம் செய்தீர்கள். உங்கள் கடவுள்தான் உண்மையான கடவுள்’ என்று சொன்னார். அதற்குப் பிறகு, அங்கிருந்த சாட்சிகளான நாங்கள் ஐந்து பேரும் அவர்களுடன் அங்கேயே இருக்க வேண்டுமென விரும்பினார்கள்; அடுத்த மூன்று நாட்களுக்கு அவர்கள் எங்களுக்கு உணவும் காபியும் கொடுத்தார்கள்.“என்றாலும், நான் மற்ற பிரஸ்தாபிகளை நினைத்துக் கவலைப்பட்டேன். மறுநாள் காலை, காற்றடிப்பது ஓய்ந்ததும், அவர்களைத் தேடிக்கொண்டு அந்தப் புகலிடத்தை விட்டுப் புறப்பட்டேன். திரும்பிய பக்கமெல்லாம் மரங்கள் விழுந்து கிடந்தன, பொருள்கள் எல்லாம் நாசமாகியிருந்தன. சில வீடுகள் 40 அல்லது 50 அடி தூரத்திற்குக் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. முதலாவது நான் கம்யூனிட்டி சென்ட்டருக்குச் சென்று அங்கே இரண்டு சகோதரிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் கண்டுபிடித்தேன். மற்றொரு சகோதரியுடைய வீடு தரைமட்டமாகியிருந்தது, ஆனால் அவர் உயிர்தப்பினார்.”
சூறாவளியின் சீற்றத்திற்குப் பிறகு, புயலால் சூறையாடப்பட்ட சபைகளிலிருந்து வெளி ஊழிய அறிக்கைகளைச் சேகரிப்பது கிளை அலுவலகத்திற்குக் கடினமாய் இருந்தது. ஆனால், காக்கர் தீவிலிருந்துதான்
அறிக்கைகள் முதலாவது வந்து சேர்ந்தன. சிசில்யா அவற்றை அவசர காலத்திற்கென தயார்படுத்தியிருந்த பையில் பத்திரமாக வைத்திருந்தார்; சபையாரின் நிலையை அறிந்துகொள்ள கிளை அலுவலகத்திலிருந்து வந்திருந்த சகோதரர்களின் கையில் அவரே அந்த அறிக்கைகளை ஒப்படைத்தார்.அதற்குப் பின்னான வாரங்களில், பாதிக்கப்பட்ட தீவுகளிலிருந்த சகோதரர்கள் நிவாரணப் பொருள்களைப் பெற்றார்கள்; அதோடு, வாலண்டியர்களின் நடைமுறை உதவியையும் பெற்றார்கள்; அந்த வாலண்டியர்கள் அம்பர்கிரிஸ் தீவிலிருந்த அவர்களுடைய வீடுகளையும் ராஜ்ய மன்றத்தையும் சுத்தம் செய்து, பழுது பார்த்துக் கொடுத்தார்கள்.
காக்கர் தீவில் வாலண்டியர் வேலையில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான மர்ல் ரிச்சர்ட் இவ்வாறு சொல்கிறார்: “முதலாவது நாங்கள் தங்குமிடங்களை அமைத்துக் கொடுத்து, பொருள்களை விநியோகிக்க ஏற்பாடுகளைச் செய்தோம். மறுநாள், பிரஸ்தாபிகளின் வீடுகளைப் பழுதுபார்க்கும் பணியைத் தொடங்கினோம். ஞாயிற்றுக்கிழமை காலை நாங்கள் எல்லாரும் வெளி ஊழியத்திற்குச் சென்றோம். பிறகு, ஒரு சகோதரியுடைய வீட்டின் முன்பகுதியில் கூட்டங்களை நடத்துவதற்கு ஓர் இடத்தைத் தயார்படுத்தினோம்; சபையார் உட்காருவதற்கு பெஞ்சுகளையும் பழைய தென்னை மரக் கட்டையிலிருந்து பேச்சாளருக்கான பீடத்தையும் தயாரித்தோம். இரவு 8 மணிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால், எங்கள் கூட்ட நேரத்தை அதற்கேற்ப சற்று மாற்றியமைத்தோம்; பொதுப் பேச்சுக்கும் காவற்கோபுர படிப்புக்கும் 43 பேர் வந்திருந்தார்கள்.”
யெகோவாவால் கற்பிக்கப்படக் கூடிவருதல்
1960-களின் பிற்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் கூடாரம் போட்டு மாநாடுகளை நடத்த முடிந்தது. ஆனாலும், பெரிய கூடாரத்தைப் போடுவதற்குப் பல நாட்கள் கடினமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. சான்டியாகோ சோசா இவ்வாறு சொல்கிறார்: “கூடாரத்தைப் போடுவது, ராஜ்ய மன்றத்திலிருந்து பெஞ்சுகளைக் கொண்டு வருவது, நாற்காலிகளைக் கடன் வாங்குவது போன்ற வேலைகளை வாரத்தின் ஆரம்பத்திலேயே தொடங்கினோம். அந்தச் சமயத்தில் மாநாடுகளில் சிற்றுண்டிச்சாலைக்கான ஏற்பாடும் இருந்தது; எனவே, பாத்திரங்களையும் தட்டுகளையும் கடன் வாங்கினோம்; பெரும்பாலும், விடிய விடிய விழித்திருந்து சமையல் அனைத்தையும் முடித்தோம். சில சமயங்களில், எல்லாவற்றையும் செய்து முடித்த பிறகு, திடீரென இரவில் பயங்கரக்
காற்று அடித்து பந்தல் படுத்துவிடும். மறுநாள் பழையபடி எல்லாவற்றையும் மீண்டும் எடுத்து நிறுத்த வேண்டியிருந்தது. ஆனால், இதைக் குறித்து யாரும் முணுமுணுக்கவில்லை.”பெலிஸ் நகரத்திற்கும் ஆரஞ்ச் வாக்குக்கும் இடையே இருந்த கிராமப் புறத்தில் நடந்த ஒரு மாவட்ட மாநாடு ஜினி தாம்ஸன் என்ற சகோதரியின் மனதில் இன்னும் பசுமையாய் இருக்கிறது. பந்தலைப் போட்டு, பெஞ்சுகளை வைப்பதற்கு முன்பு, ராஜ்ய மன்றத்திற்குப் பக்கத்திலிருந்த புதர்களைச் சகோதரர்கள் வெட்டி அகற்ற வேண்டியிருந்தது. ஜினி இவ்வாறு சொல்கிறார்: “மாவட்ட மாநாடு முழுவதிலும் மழை ஓயவே இல்லை, பந்தலுக்குக் கீழே தண்ணீர் ஆறாய் ஓடிக்கொண்டிருந்தது. அதனால், எங்களுக்கு முன்பிருந்த பெஞ்சில் கால்களைத் தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம். அந்தப் பகுதி முழுவதும் பவழப் பாம்புகள் ஏராளமாக இருந்தது எங்களுக்குத் தெரியவில்லை. மழை காரணமாக, வெளியே போக வழியின்று நாங்கள் ராஜ்ய மன்றத்திற்குப் பக்கத்தில், பந்தலுக்குள்ளேயே இருந்தோம். அந்தப் புதர் பகுதிகளுக்குள் நடந்திருந்தால் ஆபத்தானதாய் இருந்திருக்கும்.”
1970-களில், பெலிஸ் நகரத்தின் தென்கிழக்கு முனையிலிருந்து சுமார் 120 மீட்டர் தூரத்திலிருந்த பேர்ட்ஸ் தீவு என்ற சிறிய
வெப்பமண்டலத் தீவு, மாநாடுகளை நடத்துவதற்கு ஏற்ற இடமாய் அமைந்தது. ஓலைக்கூரை வேயப்பட்ட, மின்வசதி, தண்ணீர் வசதி, கழிவறை வசதி ஆகியவற்றைக் கொண்ட ஓர் அரங்கத்தைப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக அதன் சொந்தக்காரர் கட்டியிருந்தார். அமைதியும் சாந்தமும் தவழும் அந்த இடத்திற்கு எளிதில் சென்று பல மாநாடுகளில் கலந்துகொள்வதற்கு வசதியாக, பெலிஸுக்கும் அந்த இடத்திற்கும் இடையே மரப் பாலம் ஒன்றைச் சகோதரர்கள் அமைத்தார்கள்.1983 மார்ச் மாதத்தில், லேடிவில் நகரில் ஒரு மாநாட்டு மன்றத்தைக் கட்ட அரசிடமிருந்து நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டது. வட்டார மாநாடுகள், விசேஷ நிகழ்ச்சிகள், மாவட்ட மாநாடுகள் ஆகியவற்றை நடத்துவதற்காக ஆரம்பத்தில் சகோதரர்கள் ஒரு தற்காலிக அமைப்பை ஏற்படுத்தினார்கள். பிறகு, 1988-ல் குவாதமாலாவில் ஒரு ஸ்டீல் கட்டிடம் வாங்கப்பட்டு, லேடிவில் நிலத்தில் நிரந்தர மாநாட்டு மன்றத்தை எழுப்பப் பயன்படுத்தப்பட்டது.
சீனப் பிராந்தியத்தில் வளர்ச்சி
1920 முதல் சீனர்கள் பலர் பெலிஸுக்கு வந்து குடியேறியிருக்கிறார்கள். அவர்களில் அநேகர் நம்முடைய பிரசுரங்களைத் தங்கள் தாய் மொழியில் படித்து மகிழ்கிறார்கள். உதாரணத்திற்கு, ரோபர்டா கொன்ஸாலெஸ் இவ்வாறு சொல்கிறார்: “தைவானைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பேக்கரி வைத்திருந்தார்; அன்பாகப் பழகும் அவரிடம் சத்தியத்தைப் பற்றிப் பேச ஆசைப்பட்டேன்; ஆனால், அவருக்கு மதத்தில் அந்தளவு ஈடுபாடு இல்லை என்பதும் எப்போதுமே வேலையாக இருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். அவருக்குப் பருவ வயது பிள்ளைகள் இருவர் இருப்பதும்கூட எனக்குத் தெரியும். எனவே, ஒருநாள் அவருடைய பேக்கரிக்குப் போயிருந்தபோது சைனீஸ் மொழியில் உள்ள இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் ஒன்றை அவரிடம் கொடுத்தேன், அதைப் பற்றிய அவருடைய கருத்தைத் தெரிந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னேன். சில நாட்களுக்குப் பிறகு, அவருடைய பேக்கரி வழியாக நான்
வண்டியில் சென்றபோது, என்னைப் பார்த்து அவர் வேக வேகமாகக் கைகளை ஆட்டுவதைக் கவனித்தேன். நான் அவரிடம் சென்றபோது, அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து எனக்காக ஆவலோடு காத்திருப்பதாக அவர் சொன்னார். பெலிஸில் வந்து குடியேறிய தைவானியக் குடும்பத்திலுள்ள பருவ வயதுப் பிள்ளைகள் பெரும்பாலோருக்கு அங்கு வந்து குடியேறிய பிறகு பிரச்சினைகள் இருப்பதாக அவர் சொன்னார். அவர்கள் எல்லாருமே இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை வாசிக்க வேண்டுமென அவர் விரும்புவதாகச் சொன்னார். அந்த ஊரில் பருவ வயதுப் பிள்ளைகளை உடைய தைவானியக் குடும்பங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுச் சொல்லும்படி தன் மகனைக் கேட்டார்; பிறகு, அந்தக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியைப் பரிசாகத் தான் கொடுக்க விரும்புவதாகச் சொல்லி 16 புத்தகங்களைத் தரும்படி கேட்டார்.”அக்டோபர் 2000-ல், தங்கள் பிராந்தியத்திலுள்ள சீன சமுதாயத்திற்கு நற்செய்தியை அறிவிக்க மனமுள்ள பயனியர்களும் பிரஸ்தாபிகளும் மான்டரின் மொழியைக் கற்றுக்கொள்வதற்காக மூன்று மாத மொழி பயிற்சிக்குக் கிளை அலுவலகம் ஏற்பாடு செய்தது. பலன்? அநேக பயனியர்கள் உள்ள சீனத் தொகுதி ஒன்று உருவானது; பிறகு அது ஒரு சபையாக வளர்ந்தது. கடும் எதிர்ப்பின்
மத்தியிலும் சிலர் நற்செய்திக்குச் செவிசாய்த்திருக்கிறார்கள், சபையார் காட்டிய அன்பில் திளைத்திருக்கிறார்கள்.உதாரணத்திற்கு, மான்ஜி சன் என்பவரை எடுத்துக்கொள்வோம். அவர் 2006-ல் பைபிள் படிக்க ஒத்துக்கொண்டார்கள். ஆரம்பத்தில், அவருடைய குடும்பத்தார் அவருடன் ஒத்துழைத்தார்கள்; ஆனால், சீக்கிரத்திலேயே அவர்கள் கேலிசெய்யவும், எதிர்க்கவும் ஆரம்பித்தார்கள். திடீரென ஒருநாள், அவருடைய குடும்பத்தார் வேறொரு நாட்டிற்குக் குடிமாறிச் செல்வதற்காக, மான்ஜி நடத்திக்கொண்டிருந்த கடை உட்பட எல்லா சொத்துபத்துகளையும் விற்றுவிட்டார்கள்; அவர் தன் புதிய மதத்திற்கு முழுக்குப் போட்டுவிட்டு அவர்களுடன் புறப்பட ஒருமணிநேர அவகாசம் கொடுத்தார்கள். அவர் தன் மத நம்பிக்கைகளைத் தலைமுழுக மறுத்துவிட்டார்; எனவே, அவருடைய குடும்பத்தார் சல்லிக்காசுகூட கொடுக்காமல் அவரை அம்போவென விட்டுவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். மான்ஜி ஒரு சகோதரர் வீட்டில் தங்கினார், பைபிள் படிப்பைத் தொடர்ந்தார், தவறாமல் கூட்டங்களில் கலந்துகொண்டார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவுடன் ஒரு நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டேன், அவர் என்னைப் பராமரித்தார். சகோதரர்களின் உற்சாகம் எனக்கு உதவிய விதமாகவே பைபிளைப் படிப்பதும் அதை ஆழ்ந்து சிந்திப்பதும் எனக்கு உதவியிருக்கின்றன.”
நவம்பர் 2008-ல் மான்ஜி ஞானஸ்நானம் பெற்றார். அவருடைய நடத்தையிலும் பேச்சிலும் ஏற்பட்டிருந்த மாற்றத்தைப் பார்த்த அவருடைய குடும்பத்தாரின் மனநிலையும் மாறியிருக்கிறது. மான்ஜி இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தது என்னை ஏழையாக்கவில்லை,
அது உண்மையில் எனக்குச் சந்தோஷத்தையே தந்தது. யெகோவா என்னைக் கைவிடவில்லை; மாறாக, ஒன்றுபட்ட, அன்பான சகோதரர்கள் மத்தியில் வாழ வழிசெய்திருக்கிறார்.”மெக்சிகோ கிளை அலுவலகம் பெலிஸில் ஊழியத்தை மேற்பார்வை செய்கிறது
ஊழிய வேலைகள் எந்தளவு செய்யப்பட வேண்டியிருக்கிறது என்பதை பெலிஸிலும் மெக்சிகோவிலும் உள்ள கிளை அலுவலகக் குழுவினருடன் ஆளும் குழு கவனமாகச் சிந்தித்த பிறகு, பெலிஸில் நடைபெறும் ஊழியத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்பை மெக்சிகோ கிளை அலுவலகத்திடம் ஒப்படைக்க தீர்மானித்தது. அது ஜனவரி 1, 2001 முதல் அமலுக்கு வந்தது; அது, உலகின் இப்பகுதியிலுள்ள நம் சகோதரர்களுக்கு நன்மையையும் சந்தோஷத்தையும் அளித்திருக்கிறது.
அதுமுதற்கொண்டு, பெலிஸில் எண்ணற்ற ராஜ்ய மன்றங்களின் கட்டுமானப் பணியை மேற்பார்வை செய்வதில் மெக்சிகோ கிளை அலுவலகம் உதவியிருக்கிறது. மார்ச் 16, 2002-ல் பெலிஸ் நகரத்தில் எளிய, இரட்டை ராஜ்ய மன்றம் ஒன்று அர்ப்பணம் செய்யப்பட்டது. அதற்கு மறுநாள், அழகான புதிய மிஷனரி இல்லத்திற்காகவும், லேடிவில்லில் புதுப்பிக்கப்பட்ட மாநாட்டு மன்றத்திற்காகவும் அர்ப்பண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்தச் சமயத்தில், ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளாக யெகோவாவுக்கு உண்மையாய்ச் சேவை செய்து வந்திருந்த அநேகரும் மற்றவர்களும், ஆளும் குழுவின் அங்கத்தினரான கெரட் லாஷ் கொடுத்த பேச்சைக் கேட்டு மகிழ்ந்தார்கள். ராஜ்ய மன்ற கட்டுமான குழு உருவாக்கப்பட்டதிலிருந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது;
நாடெங்கும் 20 ராஜ்ய மன்றங்கள் கட்டப்படுவதற்கு அந்தக் குழு உதவியிருக்கிறது.2007-ல், அவ்வப்போது மட்டுமே ஊழியம் செய்யப்படுகிற பகுதிகளில் ஊழியம் செய்வதற்காக, மெக்சிகோவிலிருந்து 325 பயனியர்கள் பெலிஸுக்கு வந்தார்கள். அதனால், பெலிஸிலுள்ளவர்கள் மும்முரமாய் நற்செய்தியை அறிவிப்பதற்கு அதிக ஊக்கம் பெற்றார்கள். பலன்? பயனியர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.
சூறாவளிகளிலிருந்து பெலிஸ் பாதுகாக்கப்பட வேண்டுமென ஆண்டாண்டு காலமாய் சர்ச் தலைவர்கள் ஜெபம் செய்கிறார்கள்; ஆனால், யெகோவாவின் சாட்சிகள் 2007-ல் சூறாவளி காலம் வருவதற்கு முன்னதாகவே அத்தகைய சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு உதவும் பயனுள்ள அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டார்கள். பிரிவு 5 என வகைப்படுத்தப்பட்ட டீன் சூறாவளி ஆகஸ்ட் மாதத்தில் தாக்கியபோது அந்த அறிவுரைகளுக்காக அவர்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருந்தார்கள். ஆபத்தான சூழ்நிலையிலிருந்த சகோதரர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளிலுள்ள சகோதரர்களுடைய வீடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். சூறாவளி அடித்து ஓய்ந்த பிறகு, நாடெங்கும் இருந்த சாட்சிகள் பாதிக்கப்பட்டவர்களுடைய வீடுகளையும் ராஜ்ய மன்றங்களையும் பழுதுபார்ப்பதில் உதவினார்கள்; அதையெல்லாம் பார்த்ததும், யெகோவாவின் சாட்சிகள் சிறந்த முன்மாதிரியானவர்கள் என உள்ளூர் வானொலி நிலையம் பாராட்டியது.
சகல தேசத்தாரையும் ஒன்றுபடுத்துதல்
யெகோவாவின் ஆசீர்வாதத்தால் இப்போது பெலிஸில் 1,800-க்கும் அதிக பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்; அது, ஒவ்வொரு 149 பேருக்கும் 1 பிரஸ்தாபி என்ற வீதத்தில் இருக்கிறது. ஒவ்வொரு 39 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் பெலில் மக்கள் 2009-ல் நடைபெற்ற கிறிஸ்துவின் நினைவுநாள் அனுசரிப்பில் கலந்துகொண்டார்கள்; இது பிரமாண்டமான அதிகரிப்புக்கு வாய்ப்பிருப்பதைக் காட்டுகிறது!
கடந்த 80 ஆண்டுகளாக பெலிஸில் செய்யப்பட்டு வருகிற ஊழியம், பலதரப்பட்ட, அழகான, ஆன்மீக மக்களை உருவாக்கியிருக்கிறது; அவர்கள் எல்லாரும் கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய ‘சுத்தமான பாஷையால்’ ஒன்றுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். பெலிஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் அந்தச் சுத்தமான பாஷையை நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்; அதனால், உலகெங்குமுள்ள தங்கள் ஆன்மீகச் சகோதர சகோதரிகளுடன் “ஒருமனப்பட்டு,” நம்முடைய அன்பான கடவுளாகிய யெகோவாவுக்கு மகிமை சேர்க்கும் விதத்தில் சாட்சி கொடுக்கிறார்கள்.—செப். 3:9.
[அடிக்குறிப்பு]
a பெலிஸ் 1973 வரை பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் என்றழைக்கப்பட்டபோதிலும், இந்தப் புத்தகத்தில் சூழமைவு தேவைப்படுத்தினால் தவிர மற்றபடி அதை பெலிஸ் என்றே குறிப்பிடுவோம்.
b இந்தச் சூறாவளியின் தாக்குதலால் தலைநகர் பெலிஸ் நகரத்திலிருந்து உள்நாட்டிலுள்ள பெல்மோபான் நகரத்திற்கு மாற்றப்பட்டது.
[பக்கம் 224-ன் சிறுகுறிப்பு]
“உண்மைக் கிறிஸ்தவர்கள் வீட்டுக்கு வீடு சென்று ஊழியம் செய்வார்கள் என்று அந்த டிரக் டிரைவர் என்னிடம் சொன்னார்”
[பக்கம் 224-ன் சிறுகுறிப்பு]
“என் அப்பாவைப் பார்த்துப் பயப்படுவது தவறு. யெகோவாவுக்குத்தான் நாம் பயப்பட வேண்டும்”
[பக்கம் 208-ன் பெட்டி]
பெலிஸ்—ஒரு கண்ணோட்டம்
நிலம்
தெற்கே தாழ்வான கரையோரச் சமவெளியிலிருந்து மாயா மலைத்தொடர்வரை உயர்ந்திருக்கிறது பெலிஸ். அங்குள்ள காடுகள், ஜாகுவார் சிறுத்தைப் புலிகளுக்கும், ப்யூமா காட்டுப் பூனைகளுக்கும், கருப்பு நிற பபூன் குரங்குகளுக்கும், பெக்காரி பன்றிகளுக்கும், இக்வானா பச்சை பல்லிகளுக்கும், முதலைகளுக்கும், அதோடு 60 வகை பாம்புகளுக்கும் குடியிருப்பாக விளங்குகின்றன; கொடிய விஷம் நிறைந்த “மஞ்சள் தாடை டாமிகோஃப்” என்று உள்ளூர்வாசிகள் அழைக்கிற ஈட்டித்தலை குழி விரியன் பாம்பும் அவற்றில் அடங்கும். மேலும், அழிந்து வரும் இனங்களான சென்னிற மக்கா கிளி, கப்பலின் அடிக்கட்டை வடிவிலுள்ள அலகுடன் கண்ணுக்கு விருந்தளிக்கும் அழகிய டூகன் பறவை உட்பட கிட்டத்தட்ட 600 பறவை இனங்கள் அங்கு உள்ளன. பவளங்கள், கடற்பாசிகள், கிளி மீன், கடற்பசு, பாரகூடா மீன், திமிங்கிலச் சுறா போன்ற எண்ணற்ற கடல்வாழ் ஜீவிகள் உள்ளன.
மக்கள்
உள்ளூர்வாசிகளில், மாயா (கெக்சி, மோபான், யுகாடெக்), கிரியோல்ஸ் (ஆப்பிரிக்க, ஐரோப்பிய கலப்பினத்தவர்), மெஸ்டிசோஸ் (ஸ்பானிய, மாயா கலப்பினத்தவர்), காரினாகு (ஆப்பிரிக்க, கரிப் கலப்பினத்தவர்), கிழக்கு இந்தியர்கள், லெபனானியர்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள் ஆகியோருடன் ஜெர்மானியர்களும் டச்சு மெனனைட்டுகளும் குடியிருக்கிறார்கள்.
மொழி
ஆங்கிலம் அரசு மொழியாக இருந்தாலும், பெலிஸ் கிரியோல், ஸ்பானிஷ், கரிஃபுன்னா, கெக்சி, மாயா, ஜெர்மன், மான்டரின் ஆகிய மொழிகளும் அங்கு பேசப்படுகின்றன.
பிழைப்பு
கரும்பு, வெப்பமண்டல பழங்கள் ஆகியவற்றை விளைவிப்பதிலும் ஏற்றுமதி செய்வதிலும் பெரும்பாலான மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். மீன்பிடித்தலும் சுற்றுலாவும்கூட அநேகருடைய வருமானத்திற்கு வழிசெய்கின்றன.
உணவு
இந்த நாட்டிலுள்ள பலதரப்பட்ட கலாச்சாரங்கள் பல்வகை அறுசுவை உணவுகளுக்கு வழிசெய்திருக்கின்றன. அரிசியையும் பீன்ஸையும் தேங்காய்ப் பாலில் சமைத்து பரிமாறப்படும் உணவு பாரம்பரிய விசேஷ உணவாகும்; அது பெரும்பாலும் கோழியை, மாட்டிறைச்சியை, அல்லது மீனை வறுத்தோ குழம்பு வைத்தோ வாழைப்பழ வறுவலுடன் சேர்த்துப் பரிமாறப்படுகிறது. மிகச் சுவையான கடல்வாழ் உணவுகள் எக்கச்சக்கமாகக் கிடைக்கின்றன, அவற்றிற்கு மவுசும் அதிகம்.
சீதோஷ்ணம்
மத்திய அமெரிக்காவில் கரீபியன் கரையோரம் அமைந்துள்ள பெலிஸ் நாடு வெப்பமாகவும், புழுக்கமாகவும், மிதவெப்பமண்டல சீதோஷ்ணத்துடனும் காணப்படுகிறது; அடிக்கடி சூறாவளிகள் தாக்கும் அபாயமும் இருக்கிறது.
[பக்கம் 215-ன் பெட்டி/ படம்]
காரினாகு மக்கள் சிலர் சத்தியத்திற்குச் செவிசாய்க்கிறார்கள்
பெவர்லி ஆன் ஃப்ளோர்ஸ்
பிறப்பு 1961
ஞானஸ்நானம் 1993
பின்னணிக் குறிப்பு காரிஃபூனாவாக இருந்தவர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார், இப்போது தன்னுடைய ஜனங்கள் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ள உதவுகிறார்.
◼ காரினாகு (காரிஃபூனாவின் பன்மை வடிவம்) மக்களின் சரித்திரம்17-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் துவங்கியதாகச் சொல்லப்படுகிறது; அவர்கள் உள்நாட்டு வாசிகளான கரிப்புகளைக் கலப்புத் திருமணம் செய்துகொண்ட அடிமைகளுக்குப் பிறந்தவர்கள் என்பது தெரிகிறது. காரிஃபூனா என்பது பிரெஞ்சையும் ஸ்வாஹிலியையும் அடிப்படையாகக் கொண்டு உருவான ஓர் அரவாகன் மொழியாகும்.
காரினாகு மதம், ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க இந்திய பாரம்பரியங்களின் கலவையாகும்; அதில், கத்தோலிக்க மதத்தின் பலத்த செல்வாக்குக் காணப்படுகிறது. உதாரணத்திற்கு, டூகூ என்பது இறந்து போன மூதாதையரைச் சாந்தப்படுத்த உணவும் பானமும் படைத்துக் கொண்டாடப்படும் பெரிய பண்டிகையாகும். பெவர்லி இவ்வாறு சொல்கிறார்: “என் அம்மாவுக்கு டூகூ பண்டிகையில் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. அவ்வளவு உணவையும் கொண்டுபோய் புதைப்பதைக் கடவுள் எப்படி ஏற்றுக்கொள்வார் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘மக்கள் சாப்பிடுவதற்குத்தானே உணவு!’ என்று அவர் சொல்வார்; அதோடு, ‘இறந்தவர்கள் அன்பானவர்களாக இருந்தால், அவர்கள் ஏன் திரும்பவும் வந்து நமக்குத் தீங்கு செய்ய வேண்டும்?’ என்று கேட்பார்.”
பெவர்லி சத்தியத்தைக் கற்றுக்கொண்டபோது என்ன நடந்ததென்பதை அவர் தொடர்ந்து சொல்கிறார்: “காரிஃபூனாவாக இருந்ததால், டாங்க்ரீகாவுக்குப் போய் மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கத் தூண்டப்பட்டேன். அவர்களைச் சேர்ந்தவர்களிலேயே ஒருவர் போனால் காரினாகு மக்கள் நன்கு செவிசாய்ப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். நான் காரிஃபூனா மொழியில் பேசும்போது அநேகர் நின்று நான் சொல்வதைக் கேட்கிறார்கள்; பலர் சபையுடன் கூட்டுறவுகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். பைபிளுக்கு எதிரான பாரம்பரியங்களை விட்டு விலக முடியும் என்றும், அப்படி விலகினால் கெட்ட ஆவிகள் தங்களைக் கொன்றுபோடாது என்றும் அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.”
[பக்கம் 218-ன் பெட்டி/ படம்]
“யெகோவா எப்போதும் எங்களைக் கவனித்துக்கொண்டார்”
லில்லி மில்லர்
பிறப்பு 1928
ஞானஸ்நானம் 1960
பின்னணிக் குறிப்பு தன்னந்தனியாக ஆறு பிள்ளைகளை வளர்த்தார், 47 வருடங்களாக முழுநேர ஊழியம் செய்து வருகிறார்.
◼ மென்மையான குரல் கொண்ட லில்லி இவ்வாறு சொல்கிறார்: “1959-ல் ஏமிபெல் ஆலன் என்னிடம் பைபிளைப் பற்றிப் பேசினார். வீட்டுக்கு வீடு செல்கிற இந்தப் ‘பொய்த் தீர்க்கதரிசிகளைப்’ பற்றி சர்ச்சில் ஏற்கெனவே எங்களை எச்சரித்திருந்தார்கள். பைபிளை மட்டுமே பயன்படுத்துகிற படிப்புக்கு நான் ஒப்புக்கொண்டேன், சத்தியத்தை ஏற்றுக்கொண்டேன், மறுவருடம் ஞானஸ்நானம் பெற்றேன்.
“ஆரம்பத்தில், ஊழியம் செய்வது எனக்குக் கடினமாக இருந்தது. பைபிளைக்கூட கைகளில் பிடிக்க முடியாதளவுக்கு என் கைகள் பயங்கரமாய் நடுங்கின. ஆனால், நான் கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்ற ஆசை, எரேமியா சொன்னதுபோல், ‘என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல்’ இருந்தது; மக்கள் கேட்டாலும்சரி கேட்காவிட்டாலும்சரி, என்னால் பேசாமலிருக்க முடியவில்லை.”—எரே. 20:9.
லில்லி தன்னந்தனியாக ஆறு பிள்ளைகளையும் வளர்த்ததோடு, எப்படி பயனியர் ஊழியத்தையும் செய்தார்? அவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் யெகோவாவிடம் ஜெபம் செய்தேன், அவர் எனக்கு உதவினார். பிஸ்கெட்டுகள் செய்வதற்காக வாரத்தில் மூன்று நாட்கள் காலை 3:30 மணிக்கு எழுந்தேன். நானும் என் மகள்களும் மர அடுப்பில் அவற்றைச் சுட்டோம்; அவற்றை அடுப்பிலிருந்து எடுத்ததும் சுடச்சுட வாங்கிச் செல்ல மக்கள் வரிசையில் நின்றார்கள். எல்லா பிஸ்கெட்டுகளும் விற்கப்பட்ட பிறகு, என் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றார்கள்; நான் வெளி ஊழியத்திற்குச் சென்றேன். யெகோவா எப்போதும் எங்களைக் கவனித்துக்கொண்டார்.”
1969 முதல், கோரோசாலில் லில்லி பயனியர் ஊழியம் செய்து வருகிறார். அவருடைய மூத்த மகனும் இரண்டு மகள்களும் முழுநேர ஊழியர்களாக இருக்கிறார்கள்; 69 பேர் ஞானஸ்நானம் பெறுவதற்கு அவர் உதவியிருக்கிறார்.
[பக்கம் 227, 228-ன் பெட்டி/ படம்]
புதர் பயணங்கள்—மழைக் காட்டில் ஊழியம் செய்தல்
மார்த்தா சைமன்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “மார்ச் 1991-ல் நாடு முழுவதிலுமிருந்து 23 சகோதர சகோதரிகள் வந்திருந்தார்கள்; நாங்கள் மழைக் காட்டின் உட்புறத்தில் 10 நாட்கள் ஊழியம் செய்வதற்காக பன்டா கார்டாவில் கூடினோம். உடைகள், கம்பளிகள், படுப்பதற்கு வலை ஊஞ்சல்கள் ஆகியவற்றுடன் ஆங்கிலம், ஸ்பானிஷ், கெக்சி ஆகிய மொழிகளில் பிரசுரங்களையும் எடுத்துக்கொண்டோம். எங்கள் உணவுப் பொருள்களோடு, பயணத்திற்கு 200 பிஸ்கெட்டுகளையும் எடுத்துக்கொண்டோம்.
“மறுநாள் காலை, பெரிய சேபா (இலவம்பஞ்சு) மரத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட தோணியில், சிற்றலைகள் நிறைந்த கடலில் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். க்ரிக்கெ சார்கோ கிராமத்தில் எங்கள் மூட்டை முடிச்சுகளை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு, கூடாரம் அமைத்தோம். சகோதரர்கள் இரண்டு மரங்களுக்கு இடையே வலை ஊஞ்சல்களைக் கட்டுகையில், எங்களுக்குப் பிடித்தமான உணவுகளில் ஒன்றாகிய பன்றிவால் குழம்பை சகோதரிகள் தயாரித்தார்கள்; அது, மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய், தேங்காய், வேக வைத்த முட்டை ஆகியவற்றோடு பன்றியின் வாலையும் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட குழம்பு. நாங்கள் வந்திருக்கும் செய்தி கெக்சி கிராமவாசிகளின் காதை எட்டிய உடனேயே எங்களை வரவேற்க அவர்கள் வரிசையாக வந்துகொண்டே இருந்தார்கள். இதனால், இரண்டே மணிநேரத்தில் அந்தக் கிராமத்தார் எல்லாருக்கும் நாங்கள் நற்செய்தியை அறிவிக்க முடிந்தது. மரக்கம்பங்களுக்கு மேலே காவல் நிலையம் அமைக்கப்பட்டிருந்ததால், அன்று இரவு சகோதரர்கள் அந்தக் கம்பங்களில் வலை ஊஞ்சல்களைக் கட்டி அவற்றில் தூங்கினார்கள்; சகோதரிகள் கூரை வேயப்பட்ட காபில்டோவின் உள்ளே தூங்கினார்கள்; அந்தக் காபில்டோ, கிராமத் தலைவர்களின் கூட்டம் நடக்கும் இடமாகும்.
“மறுநாள், மீண்டும் பொருள்களைப் படகில் ஏற்றிக்கொண்டு ஆற்றில் முன்னோக்கிச் சென்றோம்; சில இடங்களில் சதுப்புநில மரங்களின் வெளிவேர்கள் காடுபோல் வளர்ந்திருந்ததால் இருட்டாகவும் பயத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தன. சுமார் அரை மணிநேரப் பயணத்திற்குப் பிறகு, படகை விட்டிறங்கி, புதர்கள் வழியாக இன்னும் ஒன்றரை மணிநேரம் நடந்து, சன்டேவுட் என்ற கிராமத்தை அடைந்தோம். அங்கிருந்தவர்கள் மாநிறமாகவும் நேரான, கருத்த முடியுடன் குள்ளமாகவும் இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் செருப்பு அணியாமல் வெறுங்காலோடு இருந்தார்கள்;
பெண்கள் அவர்களுடைய வழக்கப்படி பாவாடைகளையும் முத்து மணிமாலைகளையும் அணிந்திருந்தார்கள். கூரை வேயப்பட்ட, மண் தரை வீடுகளில், தடுப்புச் சுவர்களோ, தட்டுமுட்டு சாமான்களோ இல்லை; வலை ஊஞ்சல்கள் மட்டுமே இருந்தன. வீட்டின் ஒருபுறம் அந்த மக்களுக்கே உரிய அடுப்பு இருந்தது.“மக்கள் அன்பாகப் பழகினார்கள், அநேகர் சத்தியத்திடம் ஆர்வம் காட்டினார்கள். முக்கியமாக, எங்களிடம் கெக்சி மொழியில் பிரசுரங்கள் இருந்ததாலும் கெக்சி பைபிளிலிருந்து நாங்கள் வசனங்களை எடுத்துக் காட்டியதாலும் அவர்கள் அதிகம் சந்தோஷப்பட்டார்கள்.
“மறுநாள் காலை சேவல்களும் காட்டுப் பட்சிகளும் பபூன் குரங்குகளும் போட்ட சத்தத்தில் நாங்கள் விழித்துக்கொண்டோம். அருமையான காலை உணவுக்குப் பிறகு, முந்தைய நாள் ஆர்வம் காட்டிய ஆட்கள் எல்லாரையும் மீண்டும் போய்ச் சந்தித்தோம். அநேக பைபிள் படிப்புகளை ஆரம்பித்தோம், அடுத்த வருடம் நாங்கள் திரும்பி வரும்வரை தாங்களாகவே தொடர்ந்து படிக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்தினோம். அதற்குப் பின் வந்த நாட்களில், மழைக் காட்டின் உட்புறத்திலிருந்த ஒதுக்குப்புற கிராமங்களுக்கு நாங்கள் சென்றபோது இந்த முறையையே பின்பற்றினோம்.
“காட்டில் பத்து நாட்களைச் சந்தோஷமாகக் கழித்த பிறகு, நாங்கள் பயணம் செய்து வந்த நீண்ட தூரத்தையும், சென்ற அநேக கிராமங்களையும், சந்தித்த எல்லா மக்களையும் நினைத்துப் பார்த்தோம். அடுத்த வருடம் மீண்டும் அங்கு போகும்வரை, நாங்கள் விதைத்த சத்திய விதைகளைப் பாதுகாக்கும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்தோம். எங்கள் பாதங்கள் புண்ணாகி, உடல்களும் தளர்ந்து போயிருந்தன; ஆனால், இந்த வருட புதர் பயணத்தில் சந்தோஷமாய்க் கலந்துகொள்ள யெகோவா வாய்ப்பளித்ததால் எங்கள் இருதயங்களில் நன்றியுணர்வு நிரம்பி வழிந்தது.”
[பக்கம் 235, 236-ன் பெட்டி/ படங்கள்]
யெகோவாவை நேசிக்கிற மாயா இனத்தவர்
ஹார்ஹே ஷோவும் நிகோலாஸ் ஷோவும் (தங்கை ப்ரிசில்யானுடன்)
பிறப்பு 1969, 1971
ஞானஸ்நானம் 1997
பின்னணிக் குறிப்பு திருமணமான பெரியவர்கள் உட்பட எல்லாரும் பெற்றோருக்கு மரியாதையையும் முழுமையான கீழ்ப்படிதலையும் காட்ட வேண்டுமென மாயா பாரம்பரியம் வலியுறுத்துகிறது.
◼ நிகோலாஸும் ஹார்ஹேவும் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை நேசிக்க ஆரம்பித்தபோது அவர்களுடைய கிறிஸ்தவ நடவடிக்கைகளை அவர்களுடைய அப்பா பிடிவாதமாக எதிர்த்தார்.
நிகோலாஸ் இவ்வாறு சொல்கிறார்: “பயனுள்ள விஷயங்களை நான் கற்றுக்கொள்வதாக என் அப்பாவிடம் சொன்னேன்; ஆனால், அவர் பாப்டிஸ்ட் சர்ச்சின் உறுப்பினராய் இருந்ததால் என்னைப் போல் ஆர்வம் காட்டவில்லை. அவருடைய உணர்வுகளைப் புண்படுத்த விரும்பாததால் ஓரிரு முறை பைபிள் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். ஆனால், என் அப்பாவுடன் சேர்ந்து குடித்ததால் என் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி வைக்காதிருந்ததையும் அறிந்திருந்தேன். என் மனைவியும் பிள்ளைகளும் மிகச் சோகமாக இருந்ததால் அவர்கள் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியவில்லை.
“மீண்டும் பைபிளைப் படிக்கவும், கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்லவும் ஆரம்பித்தபோது, கெட்ட பழக்கத்தை விட்டு விலக சத்தியம் எனக்கு உதவியது. என் குடும்பத்துக்காகக் கடினமாய் உழைத்தேன்; என் மொத்த வருமானத்தையும் குடும்பத்துக்காகச் செலவு செய்தேன். இப்போது, குடும்பமாக நாங்கள் யெகோவாவுக்கு ஊக்கமாய் சேவை செய்து வருகிறோம்; எங்கள் வீட்டில் சந்தோஷமும் சிரிப்பும் நிரம்பி வழிகிறது.”
ஹார்ஹோவின் சூழ்நிலையும் கிட்டத்தட்ட அதுபோல்தான் இருந்தது. அவர் குடித்து வெறித்ததும் கெட்ட வார்த்தைகளைப் பேசியதும் குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தின; சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவரை வீட்டில் பார்க்கவே முடியாது. ஆனால், பைபிள் படிப்புக்குப் பிறகு அவருடைய நடத்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஹார்ஹே இவ்வாறு சொல்கிறார்: “நான் முன்னேற்றம் செய்து வருகையில், அப்பா என்னை அதிகமாக எதிர்க்க ஆரம்பித்தார். எங்களை அவர் பொய்த் தீர்க்கதரிசிகள் என்று அழைத்தார். பல தடவை அவர் தன்னுடைய அரிவாளைக் காட்டி எங்களை மிரட்டினார். எனக்கு பைபிள் படிப்பு நடத்திய சகோதரர் கார்டோஸா, வெகு முன்னதாகவே அதற்கு எங்களைத் தயார்படுத்த முயற்சி செய்திருந்தார். அவர் எங்களிடம், ‘ஒருவேளை, உங்கள் அப்பா சொத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேற்றினால், என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘என் அப்பா என்னை நேசிக்கிறார், அவர் அப்படிச் செய்யவே மாட்டார்’ என்று பதிலளித்தேன். ஆனால், வருத்தகரமாக, அதையேதான் என் அப்பா செய்தார்.
“இருந்தாலும், நான் கற்றுக்கொண்டவற்றை நேசித்தேன், என் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது. என்னுடைய புதிய கிறிஸ்தவ சுபாவம் என் குடும்பத்தாருக்குப் பயனுள்ளதாய் இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டினோம், சந்தோஷமாக வாழ்ந்தோம். இன்று, ஊழியம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது, யெகோவாவின் உதவியால் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்கிறேன்.”
[படம்]
ஹார்ஹேக்கு ஃபிராங்க் கார்டோஸா சாட்சி கொடுத்தார்
[பக்கம் 238, 239-ன் பெட்டி/ படங்கள்]
தேவை அதிகமுள்ள இடங்களில் சந்தோஷமாகச் சேவை செய்தல்
கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்போர் அதிகம் தேவைப்படுகிற ஒரு நாட்டுக்குக் குடிமாறிச் செல்வது மிகப் பெரிய படி. பொதுவாக, அங்கேயே வருடக்கணக்காக ஊழியம் செய்து வருவதற்கு அதிக முயற்சியும் சுயதியாகமும் தேவைப்படுகிறது. நம்முடைய சகோதர சகோதரிகளில் அநேகர் அந்தச் சவால்களை மிகுந்த மனோதிடத்தோடும் சந்தோஷத்தோடும் சமாளித்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, ஆர்த்தர் ரோபர்டா கொன்ஸாலெஸை எடுத்துக்கொள்வோம். அவர் 1989-ல் தன் மூன்று வயது மகன் டால்டனுடன் பெலிஸில் சேவை செய்ய அமெரிக்காவிலிருந்து வந்தார். ரோபர்டா இவ்வாறு சொல்கிறார்: “நல்ல வேலையை, அதுவும் கைநிறைய சம்பளம் தருகிற வேலையை விட்டுவிட்டு, வேலையே கிடைக்காமல் அநேகர் திண்டாடுகிற வேறொரு நாட்டுக்குச் செல்வது மிகப் பெரிய சவால்.”
ஆர்த்தர் இவ்வாறு சொல்கிறார்: “உண்மைதான், யெகோவாமீது நம்பிக்கை வைப்பது அவசியம். ஆபிரகாமைப் பற்றி பைபிளில் வாசிக்கையில் நான் மலைத்துப் போகிறேன்; அவர் தன் வீட்டையும், குடும்பத்தாரையும், பரிச்சயமான எல்லாவற்றையும் விட்டுச் சென்றார். ஆனாலும், யெகோவா அவரை நன்கு கவனித்துக்கொண்டார். பெலிஸ் கிரியோல் மொழியைப் புரிந்துகொள்வது சவாலாக இருந்தது. ஆனால், நாங்கள் யெகோவாமீது சார்ந்திருந்தோம், அவர் எங்களுக்கு உதவினார்.”
ஃபிராங்க் கார்டோஸாவும் ஆலிஸ் கார்டோஸாவும் 1991-ல் பெலிஸில் பயனியர் ஊழியம் செய்ய கலிபோர்னியாவிலிருந்து வந்தார்கள். ஃபிராங்க் இவ்வாறு சொல்கிறார்: “அப்போஸ்தலர் புத்தகத்தை பைபிளிலிருந்து வாசித்தபோது நானும் மிஷனரியாக வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஆனால், எங்களுக்கு நான்கு பிள்ளைகள் இருந்ததால், கிலியட் பள்ளிக்குச் செல்ல தகுதி பெறவே மாட்டோம் என்பதை அறிந்திருந்தேன். எனவே, எங்களுடைய கடைசி மகளுடைய பள்ளிப் படிப்பு முடிந்ததும், வேறொரு நாட்டுக்குக் குடிமாறிச் செல்ல வாய்ப்பிருந்ததைக் கண்டோம். பெலிஸைப் பற்றி காவற்கோபுரம் பத்திரிகையில் நாங்கள் வாசித்தபோது, அங்கு செல்லத் தீர்மானித்தோம்.”
ஆலிஸ் இவ்வாறு சொல்கிறார்: “மூன்று வருடங்களுக்கு அங்கே தங்குவதற்கு நான் ஒப்புக்கொண்டேன். இப்போது நாங்கள் இங்கே 18 வருடங்களாக
இருக்கிறோம், இந்த இடம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது!”ஃபிராங்க் இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் மக்களை நேசிக்கிறோம், ஊழியத்தையும் நேசிக்கிறோம். எனவே, யெகோவாவை நேசிக்கிறவர்களிடம் நெருங்கிச் செல்வது எங்களுக்கு எளிதாக இருக்கிறது. நாங்கள் இங்கு செலவிட்ட காலம்தான் எங்கள் வாழ்க்கையிலேயே சிறந்த காலமென சொல்வோம். ஏனென்றால், எங்களால் நடத்த முடியாதளவுக்கு பைபிள் படிப்புகளை ஆரம்பித்திருக்கிறோம், சத்தியத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதைப் பார்த்திருக்கிறோம். உலகத்திலுள்ள எல்லாப் பணத்தையும் கொடுத்தாலும் இந்தப் பாக்கியத்தை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.”
கார்ல் சைமன்ஸும் மார்த்தா சைமன்ஸும் 1988-ல் டெக்ஸஸ் நகரிலிருந்து பெலிஸுக்கு வந்து குடியேறினார்கள். மார்த்தா இவ்வாறு சொல்கிறார்: “நாங்கள் இங்கு குடிமாறி வந்தபோது எங்களுக்குப் பத்து வயதிலும் எட்டு வயதிலும் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். பெலிஸில் நாங்கள் சபையாருடன் சேர்ந்து புதர் பகுதியிலுள்ள கிராமங்களில் நாள் முழுவதும் ஊழியம் செய்தோம். மாநாட்டு மன்றத்தைக் கட்டுவதிலும்கூட நாங்கள் உதவினோம்; மாநாட்டு சமயங்களில் எப்போதும் நிறைய சகோதர சகோதரிகள் எங்கள் வீட்டில் தங்கினார்கள். எங்கள் பிள்ளைகளை இங்கே வளர்க்க முடிந்ததற்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்; ஏனெனில், அவர்களால் விசேஷ பயனியர்களுடனும் மிஷனரிகளுடனும் கூட்டுறவுகொள்ள முடிந்தது. சில சமயங்களில் மின்சாரம், குழாய்த் தண்ணீர், பாட்டரிகள், தொலைபேசி வசதி போன்றவை இல்லாமல் தவித்தபோது, விமானத்தில் ஏறி திரும்பிச் சென்றுவிடலாம் போல் தோன்றியது உண்டு. ஆனால், கடந்துபோன காலம் மீண்டும் வந்தால், இதே கஷ்ட நஷ்டத்தை எதிர்ப்பட வேண்டியிருந்தாலும், திரும்பவும் இங்கு வந்து ஊழியம் செய்யவே தீர்மானிப்போம். தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வதால் எங்கள் வாழ்க்கை வளமடைந்திருக்கிறது.”
[படங்கள்]
இடமிருந்து வலம்: டால்டன், ரோபர்டா, ஆர்த்தர், அவருடைய அம்மா மார்த்தா கொன்ஸாலெஸ்
ஆலிஸ் கார்டோஸாவும் ஃபிராங்க் கார்டோஸாவும்
கார்ல் சைமன்ஸும் மார்த்தா சைமன்ஸும்
[பக்கம் 250-ன் பெட்டி]
“அக்கறை காட்ட ஆட்கள் இருக்கிறார்கள்!”
ஆலேஹான்ட்ரோ லாகையோவும் ரெபேக்கா (பெக்கி) லாகையோவும்
பிறப்பு 1950, 1949
ஞானஸ்நானம் 1966, 1959
பின்னணிக் குறிப்பு கிலியட்டில் 1972-ல் பட்டம் பெற்ற பிறகு அவர்கள் எல் சால்வடார், பெலிஸ், நிகாராகுவா, மெக்சிகோ, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் சேவை செய்தார்கள். தற்போது அமெரிக்காவில் வட்டார ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்; ஆனால், பெலிஸில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட காலம் அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
◼ திங்கட்கிழமை, அக்டோபர் 2, 2000-ல் பெக்கி இவ்வாறு எழுதினார்: “கித் சூறாவளி வீசிக்கொண்டிருக்கிறது! சுமார் இரண்டரை நாட்களுக்கு நிற்காமல் மழை சோவென கொட்டிக் கொண்டிருக்கிறது.”
மறுநாள் காற்றும் மழையும் ஓய்ந்த பிறகு, ஆலேஹான்ட்ரோவும் விசேஷ பயனியராக இருந்த டானல்ட் நிப்ரூஜியும் சில பொருள்களை எடுத்துக் கொண்டு அம்பர்கிரிஸ் தீவுக்குச் சென்றார்கள். இவர்களுடன் உள்ளூர் மூப்பர்கள் இருவரும் சேர்ந்து போய், அங்கே இரண்டு சபைகளில் இருந்த பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரின் நலனையும் விசாரித்து அறிந்துகொண்டார்கள்.
பெக்கி இவ்வாறு சொல்கிறார்: “புதன்கிழமை அன்று, தீவுகளிலுள்ள சகோதரர்களுக்காக உணவு, தண்ணீர், உடை ஆகியவற்றை நாட்டின் பல பகுதிகளிலிருந்து சகோதரர்கள் கிளை அலுவலகத்திற்குக் கொண்டு வந்தார்கள். அந்தப் பொருள்களால் சீக்கிரத்திலேயே வரவேற்பறையும் நூலகமும் நிரம்பி வழிந்தன.”
இதற்கிடையில், ஆலேஹான்ட்ரோவும் இன்னும் மூன்று பேரும் காக்கர் தீவுக்குப் பொருள்களை எடுத்துச் சென்றார்கள்; அங்கிருந்த தொகுதியினருக்கு அப்போது தேவைப்பட்ட ஊக்கமூட்டுதலை அளித்தார்கள், அவர்களோடு சேர்ந்து ஜெபம் செய்தார்கள். சகோதரர்கள் காட்டிய அன்பையும் அக்கறையையும் பார்த்து சக வணக்கத்தாரும் வெளியாட்களும் நெகிழ்ந்து போனார்கள். “எத்தனையோ வருடங்களாக நான் என் சர்ச்சுக்கு நன்கொடை கொடுத்து வருகிறேன்; ஆனால், என் சர்ச்சிலிருந்து ஒருவர்கூட வந்து நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்கவில்லை” என ஒரு பெண்மணி புலம்பித் தள்ளினார்.
ஒரு சகோதரி கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட, “மற்றவர்களையும் பாருங்கள், நம்மையும் பாருங்கள்! நம்மீது அக்கறை காட்ட ஆட்கள் இருக்கிறார்கள்!” என்று சொன்னார்.
[பக்கம் 244, 245-ன் அட்டவணை/ வரைபடம்]
கால வரலாறு பெலிஸ்
1923 ஜேம்ஸ் கார்டன் பாம்பாவில் ஊழியம் செய்கிறார்.
1930
1933 ஃப்ரிடா ஜான்சன் பெலிஸ் நகரத்தில் ஊழியம் செய்கிறார்.
1934 தாடியஸ் ஹாஜ்சன் தன் பேக்கரியில் கூட்டங்களை நடத்துகிறார்.
1940
1941 பெலிஸ் நகரத்தில் முதன்முதலாக பிரஸ்தாபிகளாய் ஆனவர்கள் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்.
1945 முதல் மிஷனரிகள் வருகிறார்கள்.
1946 கிளை அலுவலகம் ஏற்படுத்தப்படுகிறது.
1950
1957 மிஷனரிகள் வருவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
1959 கிளை அலுவலகம், மிஷனரி இல்லம், ராஜ்ய மன்றம் ஆகியவை கட்டப்படுகின்றன.
1960
1961 மிஷனரிகள் வர மீண்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
1961 ஹட்டி சூறாவளி பெலிஸை சின்னாபின்னமாக்குகிறது.
1971 முதன்முறையாக மாநாட்டுக்கென பேர்ட்ஸ் தீவு பயன்படுத்தப்படுகிறது.
1980
1988 லேடிவில்லில் ஒரு மாநாட்டு மன்றம் கட்டப்படுகிறது.
1990
2000
2000 கித் சூறாவளி பெலிஸை நாசமாக்குகிறது.
2001 பெலிஸில் நடைபெறும் ஊழியத்தை மேற்பார்வை செய்ய மெக்சிகோ கிளை அலுவலகம் நியமிக்கப்படுகிறது.
2002 இரட்டை ராஜ்ய மன்றத்திற்கும் (இடது), மிஷனரி இல்லத்திற்கும், புதுப்பிக்கப்பட்ட மாநாட்டு மன்றத்திற்கும் அர்ப்பண விழா நடைபெறுகிறது.
2010
[வரைபடம்]
(பிரசுரத்தைக் காண்க)
மொத்த பிரஸ்தாபிகள்
மொத்த பயனியர்கள்
1,800
1,200
400
1930 1940 1950 1960 1980 1990 2000 2010
[படம்]
மாநாட்டுக்குப் படகு நிறைய செல்லும் சகோதரர்கள்
[பக்கம் 209-ன் தேசப்படங்கள்]
(For fully formatted text, see publication)
மெக்சிகோ
குவாதமாலா
மெல்சார் டெ மென்கோஸ்
கரீபியன் கடல்
பெலிஸ்
அம்பர்கிரிஸ் தீவு
சான் பெட்ரோ
காக்கர் தீவு
கோரோசால் மாகாணம்
கோரோசால்
ஆரஞ்ச் வாக் மாகாணம்
ஆரஞ்ச் வாக்
ஆகஸ்ட் பைன் ரிட்ஜ்
பெலிஸ் மாகாணம்
பாம்பா
சான்ட்டானா
க்ரூக்கெட் ட்ரீ
ப்ளாக் க்ரிக்
லேடிவில்
பெலிஸ் நகரம்
கயோ மாகாணம்
பெல்மோபான்
பென்கெ விஹோ
ஸ்டான் க்ரிக் மாகாணம்
ஸ்டான் க்ரிக் பள்ளத்தாக்கு
டான்க்ரீகா
ஹாப்கின்ஸ்
ஸேன் பைட்
டொலீடோ மாகாணம்
மாங்கோ க்ரிக்
ப்ளாசென்ஸ்யா
மங்கி ரிவர் டவுன்
பூன்டா நெக்ரா
சான் ஆன்டோன்யோ
பன்டா கார்டா
சன்டேவுட்
பார்ராங்கோ
க்ரிக்கெ சார்கோ
பெலிஸ் ஆறு
மாயா மலைத்தொடர்
[பக்கம் 200-ன் முழுபக்க படம்]
[பக்கம் 206-ன் படம்]
மூன்று விசேஷ பயனியர்களுடன் ஆல்ஃபான்சினா ரோபாடோவும் ஏமிபெல் ஆலனும்
[பக்கம் 207-ன் படம்]
மகன் ஸ்டீபனோடு ஹெர்மன் லைட்பர்ன், டரின் லைட்பர்ன் தம்பதியர்
[பக்கம் 210-ன் படம்]
பெலிஸ் நகரில், 1940-களில், ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வண்டியுடன் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு தொகுதி; (1) தாடியஸ் ஹாஜ்சன், (2) ஜார்ஜ் லாங்ஸ்வர்த்
[பக்கம் 213-ன் படம்]
வெளி மாகாணங்களிலும் எல்மர் ஐரிக் ஊழியம் செய்தார்
[பக்கம் 214-ன் படம்]
தவறாமல் கூட்டங்களை நடத்தும்படி சார்லஸ் ஹேயன் சகோதரர்களை உற்சாகப்படுத்தினார்
[பக்கம் 221-ன் படம்]
பெலிஸ் நகரிலுள்ள கிளை அலுவலகம், மிஷனரி இல்லம், ராஜ்ய மன்றம்
[பக்கம் 223-ன் படம்]
1968-ல் ஆரஞ்ச் வாக்கிலுள்ள ராஜ்ய மன்றத்தில், முழுவதும் ஸ்பானிஷ் மொழியில் முதன்முதல் நடத்தப்பட்ட வட்டார மாநாடு
[பக்கம் 229-ன் படம்]
விசேஷ பயனியர்களான மார்த்தயால் கேயும் மான்வால்லா கேயும்
[பக்கம் 230-ன் படம்]
மாயா கிராமம், டொலீடோ மாகாணம்
[பக்கம் 240-ன் படம்]
மாரியா ஆவும் பாசில்யோ ஆவும்
[பக்கம் 246-ன் படம்]
சிசில்யா ப்ராட்
[பக்கம் 249-ன் படம்]
1960-களில் பன்டா கார்டாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பந்தலுக்குக் கீழே உட்கார்ந்திருப்பது
[பக்கம் 251-ன் படம்]
பெக்கி லாகையோவும் ஆலேஹான்ட்ரோ லாகையோவும்
[பக்கம் 252-ன் படம்]
கீழே உள்ள ஸ்டீல் கட்டிடம் இப்போது மாநாட்டு மன்றமாக (வலது) பயன்படுத்தப்படுகிறது
[பக்கம் 253-ன் படம்]
புதுப்பிக்கப்பட்ட மாநாட்டு மன்றம்
[பக்கம் 254-ன் படம்]
பெலிஸ் நகரிலுள்ள இரட்டை ராஜ்ய மன்றத்திற்குரிய இடத்தில் சகோதர சகோதரிகள்