Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெற்றோரின் பங்கு

பெற்றோரின் பங்கு

பெற்றோரின் பங்கு

எந்தச் சந்தேகமுமில்லாமல், இன்றைய சமுதாயத்தில் சமநிலையுள்ள ஆட்களாக ஆகும்படி பிள்ளைகளை வளர்ப்பது என்பது எளிதான காரியமல்ல.

வெற்றிகரமாக இருந்ததாக கருதப்பட்ட பெற்றோர்களை வைத்து செய்யப்பட்ட ஒரு சுற்றாய்வின் முடிவுகளை ஐ.மா. மனநல தேசீய நிறுவனம் வெளியிட்டது. இவர்களின் பிள்ளைகள் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாக, “நம் சமுதாயத்தோடு தெளிவாகவே நன்றாக இணங்கிப்போகும் பலன்தரக்கூடிய ஆட்களாக இருந்தார்கள்.” இந்தப் பெற்றோர் இவ்வாறு கேட்கப்பட்டார்கள்: ‘உங்களுடைய தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், மற்ற பெற்றோருக்கு நீங்கள் என்ன சிறந்த ஆலோசனையைக் கொடுப்பீர்கள்?’ மிகவும் அடிக்கடி சொல்லப்பட்ட பதில்கள்: ‘அபரிமிதமாக அன்பு செலுத்துங்கள்,’ ‘ஆக்கப்பூர்வமாக சிட்சைசெய்யுங்கள்,’ ‘ஒன்றுசேர்ந்து நேரத்தை செலவிடுங்கள்,’ ‘எது சரி எது தவறு என்பதை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்,’ ‘பரஸ்பர மரியாதையை வளர்த்துக்கொள்ளுங்கள்,’ ‘உண்மையில் அவர்களுக்குச் செவிகொடுத்துக்கேளுங்கள்,’ ‘ஒரு சொற்பொழிவாற்றுவதற்குப் பதிலாக வழிநடத்துதலை அளியுங்கள்,’ ‘யதார்த்தமாய் இருங்கள்.’

இருந்தபோதிலும், நன்றாக இணங்கிப்போகும் இளம் ஆட்களை உருவாக்குவதில் பெற்றோர் மட்டுமே உட்பட்டில்லை. கல்வியாளர்களும்கூட இதில் இன்றியமையாத ஒரு பங்கை வகிக்கின்றனர். அனுபவமுள்ள ஒரு பள்ளி ஆலோசகர் இவ்வாறு குறிப்பிட்டார்: “அறிவுரீதியிலும், உடல்ரீதியிலும், உணர்ச்சிரீதியிலும் நன்றாக வளர்ச்சியடைந்துள்ள பொறுப்புள்ள இளம் ஆட்களை உருவாக்குவதில் பெற்றோரை ஆதரிப்பதே முறைப்படியான கல்வியின் முக்கிய குறிக்கோளாகும்.”

ஆகவே பெற்றோரும் கல்வியாளர்களும் ஒரே இலக்கை—வாழ்க்கையை அனுபவித்து தாங்கள் வாழும் அந்தச் சமுதாயத்தில் தங்களுடைய இடத்தைக் காணக்கூடியவர்களாக இருக்கும் முதிர்ச்சியும் சமநிலையுமுள்ள ஆட்களாக ஆகும் இளைஞர்களை உருவாக்கும் இலக்கை—உடையவர்களாக இருக்கின்றனர்.

உடன்வேலையாட்கள், போட்டியாளர்களல்ல

இருந்தபோதிலும், பெற்றோர் கல்வியாளர்களோடு ஒத்துழைக்க தவறும்போது, பிரச்சினைகள் எழும்புகின்றன. உதாரணமாக, சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வியைக் குறித்து முழுமையாக அலட்சியமாயிருக்கின்றனர். மற்றவர்கள் ஆசிரியர்களோடு போட்டிபோட முயற்சிக்கிறார்கள். இந்நிலையைக் கலந்தாலோசிப்பதாய், பிரெஞ்சு பத்திரிகை ஒன்று இவ்வாறு சொன்னது: “ஆசிரியர் இனிமேலும் கப்பலின் ஒரே தலைவராக இல்லை. தங்கள் பிள்ளைகளின் வெற்றியைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கும் பெற்றோர், பள்ளி புத்தகங்களைச் சோதனைசெய்தும், போதனா முறைகளை நியாயந்தீர்த்தும் குறை கண்டுபிடித்தும், தங்களுடைய பிள்ளைகள் பெறும் குறைந்த மதிப்பெண்களுக்கு கோபமாக பிரதிபலிக்கின்றனர்.” இப்படிப்பட்ட செயல்கள் ஆசிரியர்களின் தனிப்பட்ட உரிமைகள்மீது அத்துமீறல்களாக இருக்கின்றன.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் சுறுசுறுப்பான பயனுள்ள அக்கறையை எடுத்துக்கொண்டு, கல்வியாளரோடு ஒத்துழைக்கையில் தங்கள் பிள்ளைகள் நல்லவிதமாக உதவப்படுகிறார்கள் என்று யெகோவாவின் சாட்சிகள் கருதுகிறார்கள். ஒரு கல்வியாளராக உங்களுடைய வேலை அதிகமதிகமாக கடினமாகிவிட்டிருப்பதால், இப்படிப்பட்ட ஒத்துழைப்பு விசேஷமாக முக்கியமாக இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

இன்று பள்ளி பிரச்சினைகள்

சமுதாயத்தின் பாகமாக இருந்து அதனைப் பிரதிபலிக்கும் பள்ளிகள் பொதுவாக சமுதாயத்தின் பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவையாய் இல்லை. சமுதாய பிரச்சினைகள் ஆண்டுகளினூடே தீவிரமடைந்துள்ளன. ஐக்கிய மாகாணங்களில் ஒரு பள்ளியிலுள்ள நிலைமைகளை விவரிப்பதாய் தி நியூ யார்க் டைம்ஸ் இவ்விதமாக அறிக்கை செய்தது: “பிள்ளைகள் பள்ளியில் தூங்குகிறார்கள், சித்திரங்கள் தீட்டப்பட்ட நடைகூடத்தில் ஒருவரையொருவர் பயமுறுத்துகிறார்கள், நல்ல மாணவர்களை இகழ்கிறார்கள். . . . பெரும்பாலும் எல்லா மாணவமாணவியர்களுமே, குழந்தைகளை கவனித்துக்கொள்வது, சிறையிலடைத்து வைக்கப்பட்ட பெற்றோரைக் கையாளுவது மற்றும் சமூகவிரோத கும்பலின் வன்முறையிலிருந்து தப்பிவாழ்வது போன்ற பிரச்சினைகளை சமாளித்து வருகிறார்கள். எந்த ஒரு குறிப்பிட்ட நாளிலும், ஏறக்குறைய ஐந்தில் ஒரு பகுதி மாணவர்கள் பள்ளிக்கு வராமலிருக்கின்றனர்.”

பள்ளி வன்முறை சர்வதேச பிரச்சினையாக வளர்ந்துவருவதே விசேஷமாக அதிர்ச்சிதருவதாய் இருக்கிறது. ஒரு சமயம் எப்போதாவது நிகழ்ந்த இடித்துத் தள்ளுவதையும் கைகலப்பையும் உட்படுத்திய சண்டைகள் மாறி அதற்குப் பதிலாக வழக்கமாகச் சுடுவதும் வெட்டுக்குத்தும் நடைபெறுகின்றன. ஆயுதங்கள் மிகவும் சர்வசாதாரணமாகிவிட்டன, தாக்குதல்கள் கடுமையாகிவிட்டிருக்கின்றன, பிள்ளைகள் வெகு சீக்கிரமாகவும் இளவயதிலேயும் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

நிச்சயமாகவே ஒவ்வொரு நாடும் இப்படிப்பட்ட பயங்கரமான நிலைமைகளை எதிர்ப்படுவதில்லை. என்றபோதிலும் பிரெஞ்சு வார இதழ் லா ப்வேன்-ல் குறிப்பிடப்பட்டுள்ள நிலைமையை உலகெங்கும் உள்ள அநேக கல்வியாளர்கள் எதிர்ப்படுகின்றனர்: “ஆசிரியர் இனிமேலும் மதிக்கப்படுவதில்லை; அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.”

அதிகாரத்துக்குக் காண்பிக்கப்படும் இத்தகைய அவமரியாதை எல்லா பிள்ளைகளுக்கும் ஆபத்தாக அமைகிறது. ஆகவே பள்ளி வாழ்க்கையில் இன்று அடிக்கடி குறைவுபடுகின்ற குணங்களாகிய அதிகாரத்துக்குக் கீழ்ப்படிதலையும் மரியாதையையும் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் பிள்ளைகளுக்கு படிப்படியாக அறிவுறுத்துகின்றனர்.

[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் சுறுசுறுப்பான, பயனுள்ள அக்கறையை எடுத்துக்கொண்டு, கல்வியாளரோடு ஒத்துழைக்கையில் தங்கள் பிள்ளைகள் நல்ல விதமாக உதவப்படுகிறார்கள் என்று யெகோவாவின் சாட்சிகள் கருதுகிறார்கள்

[பக்கம் 26-ன் முழுபடம்]

[பக்கம் 28-ன் படம்]

நன்றாக இணங்கிப்போகும் இளம் ஆட்களை உருவாக்குவதில் கல்வியாளர்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றனர்

[பக்கம் 30-ன் படம்]

வெற்றிகரமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு நேரத்தை செலவிடுகின்றனர்