Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மதிக்கப்பட தகுதியான தார்மீக மதிப்பீடுகள்

மதிக்கப்பட தகுதியான தார்மீக மதிப்பீடுகள்

மதிக்கப்பட தகுதியான தார்மீக மதிப்பீடுகள்

வரலாறு முழுவதிலும் தைரியமுள்ள ஆண்களும் பெண்களும் அவர்களுடைய காலங்களில் இருந்த பிரபலமான சிந்தனைக்கு மாறான ஒரு நிலைநிற்கையை எடுத்திருக்கிறார்கள். அரசியல், மத மற்றும் இன கொடுமைகளைச் சகித்து, அவர்களுடைய நிலைநிற்கைக்காக அநேகமாக தங்கள் உயிரையும் கொடுத்திருக்கிறார்கள்.

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் குறிப்பாக தைரியமுள்ளவர்களாக இருந்தார்கள். முதல் மூன்று நூற்றாண்டுகளில் இருந்த கடுமையான துன்புறுத்தலின்போது, அவர்களில் அநேகர் பேரரசரை வணங்க மறுத்த காரணத்தால் புறமத ரோமர்களால் கொல்லப்பட்டார்கள். சில சமயங்களில், அரங்கில் ஒரு பலிபீடம் எழுப்பப்பட்டு இருந்தது. தாங்கள் விடுதலையடைய, அந்தக் கிறிஸ்தவர்கள் வெறுமென பேரரசரின் தெய்வீக தன்மையை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு சிறு துளி தூபவர்க்கத்தை எரிக்க வேண்டியதாக இருந்தது. எனினும் வெகு சிலர் அதற்கு இணங்கிவிட்டார்கள். பெரும்பான்மையர் தங்கள் விசுவாசத்தை மறுதலிப்பதைவிட மரிப்பதையே தெரிவுசெய்தனர்.

நவீன காலங்களில், யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகள் அரசியல் நடுநிலைமையைக் குறித்ததில் இதேவிதமான ஒரு நிலைநிற்கையை எடுக்கின்றனர். உதாரணமாக, நாசிஸத்தின் எதிர்ப்பின் மத்தியிலும் அவர்கள் எடுத்த உறுதியான நிலைநிற்கை சரித்திரப் பதிவாக ஆகியுள்ளது. நடுநிலைமையைக் காத்துக்கொண்டு “ஹிட்லர் வாழ்க” என்று சொல்ல மறுத்ததன் காரணமாக இரண்டாம் உலகப் போருக்கு முன்பும், அதன்போதும், ஜெர்மன் சாட்சிகளில் ஏறக்குறைய கால் பகுதியினர் முக்கியமாக சித்திரவதை முகாம்களில் தங்கள் உயிர்களை இழந்தனர். இளம் பிள்ளைகள் தங்கள் சாட்சி பெற்றோரிடமிருந்து பலவந்தமாக பிரிக்கப்பட்டார்கள். அழுத்தத்தின் மத்தியிலும், இளம் பிள்ளைகள் உறுதியாக நிலைத்திருந்து அவர்கள்மீது மற்றவர்கள் திணிக்க விரும்பிய வேதப்பூர்வமற்ற போதனைகளால் கறைப்படுத்தப்பட மறுத்தார்கள்.

கொடி வணக்கம்

யெகோவாவின் சாட்சிகள் இன்று இத்தகைய கடுமையான துன்புறுத்தலுக்கு பொதுவாக இலக்காவதில்லை. இருந்தபோதிலும், கொடி வணக்கம் போன்ற தேசாபிமான சடங்குகளில் பங்குகொள்ளாதிருக்க இளம் சாட்சிகள் எடுக்கும் மனச்சாட்சிக்குட்பட்ட தீர்மானத்தின் காரணமாக சில சமயங்களில் தப்பெண்ணங்கள் எழும்புகின்றன.

மற்றவர்கள் கொடியை வணங்குவதை தடைசெய்யக்கூடாது என்பதாக யெகோவாவின் சாட்சிகளின் பிள்ளைகள் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; தீர்மானம் செய்வது ஒவ்வொரு தனிநபருக்கும் விடப்பட்டிருக்கிறது. என்றபோதிலும் சாட்சிகளின் நிலைநிற்கை உறுதியாக இருக்கிறது; அவர்கள் எந்த தேசத்தின் கொடியையும் வணங்க மாட்டார்கள். நிச்சயமாகவே அவமரியாதையைக் காண்பிப்பது இதன் நோக்கமல்ல. எந்த நாட்டில் அவர்கள் வாழ்ந்தாலும், அந்த நாட்டின் கொடியை அவர்கள் மதிக்கிறார்கள். அந்த நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் இந்த மரியாதையை அவர்கள் காண்பிக்கிறார்கள். அரசாங்கத்திற்கெதிராக எந்த வகையான நடவடிக்கையிலும் அவர்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள். இந்தத் தற்போதைய மனித அரசாங்கங்களை “கடவுளின் ஏற்பாடாக” இருக்க அவர் அனுமதித்திருக்கிறார் என சாட்சிகள் உண்மையில் நம்புகின்றனர். எனவே அவர்கள் ‘மேலான அதிகாரங்களை’ மதிக்கவும் வரிகளைக் கட்டவும் தெய்வீக கட்டளையின்கீழ் இருப்பதாக தங்களைக் கருதுகிறார்கள். (ரோமர் 13:1-7, NW) கிறிஸ்துவின் பிரபலமான கூற்றுக்கு இசைவாக இது இருக்கிறது: “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்.”—மத்தேயு 22:21.

‘அப்படியென்றால், யெகோவாவின் சாட்சிகள் கொடியை வணங்குவதன் மூலம் ஏன் அதை மதிப்பதில்லை?’ என ஒருவேளை சிலர் கேட்கலாம். இது ஏனென்றால் அவர்கள் கொடிவணக்கத்தை வணக்கத்தின் ஒரு செயலாக கருதுகிறார்கள். மேலும் வணக்கம் கடவுளுக்கு உரியதாக இருக்கிறது. கடவுளைத் தவிர வேறு யாருக்கும் அல்லது எதற்கும் வணக்கத்தைக் கொடுக்க அவர்கள் மனச்சாட்சி இடங்கொடுப்பதில்லை. (மத்தேயு 4:10; அப்போஸ்தலர் 5:29) எனவே, இந்த நம்பிக்கையைக் கல்வியாளர்கள் மதித்து, சாட்சி பிள்ளைகளை அவர்களுடைய நம்பிக்கைகளின்படி வாழ அனுமதிக்கும்போது அவர்கள் அதை போற்றுகிறார்கள்.

பின்வரும் குறிப்புகள் காண்பிக்கும் விதமாக, கொடி வணக்கம், வணக்கத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதை நம்புவதில் யெகோவாவின் சாட்சிகள் தனியாக இல்லை என்பது ஆச்சரியமாய் இல்லை.

“ஆரம்பத்தில் கொடிகள் கிட்டத்தட்ட முழுமையாக மத இயல்புடையவையாக இருந்தன. . . . தேசீய கொடிகளுக்கு புனித தன்மை கொடுப்பதில் எப்பொழுதுமே மதம் உதவியிருக்கிறது.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.)என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா.

“சிலுவையைப் போல கொடியும் பரிசுத்தமாக இருக்கிறது. . . . தேசீய தராதரங்களிடமாக மனித மனநிலையோடு சம்பந்தப்பட்ட சட்டங்களும் விதிமுறைகளும் ‘கொடிக்கு சேவை,’ . . . ‘கொடிக்கு பயபக்தி,’ ‘கொடிக்கு பக்தி’ போன்ற பலமான பொருள்பொதிந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.)தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா.

“கிறிஸ்தவர்கள் . . . [ரோம] பேரரசரின் தெய்வத்தன்மைக்குப் பலிசெலுத்த மறுத்துவிட்டனர்—இன்று கொடிக்கு வணக்கம் செலுத்த அல்லது பதவியேற்பு உறுதிமொழி சொல்ல மறுப்பதற்கு அநேகமாக சமமாயிருந்தது.”—சாகப்போகும் நிலையில் இருப்போர் (1958), டேனியேல் பி. மன்னிக்ஸ், பக்கம் 135.

ஏற்கெனவே குறிப்பிட்ட விதமாக யெகோவாவின் சாட்சிகள் கொடியை வணங்க மறுப்பதன் மூலம் எந்த ஒரு அரசாங்கத்திற்கோ அல்லது அதன் ஆட்சியாளர்களுக்கோ அவமரியாதைக் காண்பிப்பது அவர்கள் நோக்கம் அல்ல. ஒரு வணக்கச் செயலாக நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு சொரூபத்திற்கு தலைகுனியவோ வணக்கம் செலுத்தவோ மாட்டார்கள் என்பதையே இது அர்த்தப்படுத்துகிறது. ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரால் தூரா சமவெளியில் நிறுத்தப்பட்டிருந்த சிலைக்கு முன்பாக வணங்க மறுத்த மூன்று எபிரெய இளைஞர்கள் பைபிள் காலங்களில் எடுத்த நிலைநிற்கைக்கு ஒத்ததாக இதை அவர்கள் கருதுகிறார்கள். (தானியேல் அதிகாரம் 3) எனவே மற்றவர்கள் வணங்கி தேசபக்தி உறுதிமொழியை எடுத்துக்கொள்ளும்போது, பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தங்கள் மனச்சாட்சியை பின்பற்றும்படி யெகோவாவின் சாட்சிகளின் பிள்ளைகள் கற்றுக்கொடுக்கப்படுகிறார்கள். இவ்வாறு, அமைதியாகவும் மரியாதையாகவும் அவர்கள் பங்குகொள்வதிலிருந்து விலகிக்கொள்கிறார்கள். இதேவிதமான காரணங்களுக்காகவே, தேசீய கீதம் பாடப்படும்போதோ இசை கருவிகளில் வாசிக்கப்படும்போதோ சாட்சி பிள்ளைகள் பங்குகொள்வதை தெரிவுசெய்வதில்லை.

பெற்றோரின் உரிமை

இப்பொழுதெல்லாம், அவர்களுடைய நம்பிக்கைக்கு இசைவாக மதப் போதனையை அவர்களுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்க பெற்றோருக்கு இருக்கும் உரிமையை பெரும்பான்மையான நாடுகள் மதிக்கின்றன. கத்தோலிக்க சர்ச்சில் இன்னும் அமலில் இருக்கும் திருச்சபைக் கட்டளையில் விளக்கப்பட்டிருப்பது போல எல்லா மதங்களும் இந்த உரிமையை ஆதரிக்கின்றன: “தங்கள் பிள்ளைகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் காரணத்தால், அவர்களுக்குக் கல்விபுகட்டுவது பெற்றோரின் கண்டிப்பான கடமையாகும், அவ்வாறு செய்ய அவர்கள் உரிமைப்பெற்றிருக்கிறார்கள்; அதனால்தான் சர்ச் கோட்பாட்டிற்கு இசைவாக தங்கள் பிள்ளைகளுக்கு கிறிஸ்தவ கல்வியை முக்கியமாக அளிக்கும்படியாக அது பெற்றோரை துரிதப்படுத்துகிறது.”—சட்டம் 226.

இதைத் தவிர வேறு எதையும் யெகோவாவின் சாட்சிகள் கேட்கவில்லை. அக்கறையுள்ள பெற்றோராக, அவர்கள் தங்கள் பிள்ளைகளில் உண்மையான கிறிஸ்தவ மதிப்பீடுகளை படிப்படியாக அறிவுறுத்தி அயலாருக்கான அன்பையும் மற்ற ஆட்களின் உடைமைகளுக்கான மரியாதையையும் மனதில் ஆழமாக பதியவைக்க முயற்சிசெய்கிறார்கள். எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையை பின்பற்ற அவர்கள் விரும்புகின்றனர்: “பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் கோபப்படும் விதமாக அவர்களை நடத்தாதிருங்கள். மாறாக, கிறிஸ்தவ சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.”—எபேசியர் 6:4, டுடேய்ஸ் இங்கிலீஷ் வெர்ஷன்.

மத சம்பந்தமாக பிளவுபட்டிருக்கும் குடும்பங்கள்

சில குடும்பங்களில், ஒரு பெற்றோர் மட்டுமே யெகோவாவின் சாட்சியாக இருக்கிறார். அத்தகைய சூழ்நிலையில், அவனுடைய அல்லது அவளுடைய மத நம்பிக்கையின்படி பிள்ளைகளைப் போதிக்க சாட்சியல்லாத பெற்றோருக்கு இருக்கும் உரிமையையும் ஒப்புக்கொள்ள சாட்சி பெற்றோர் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். வித்தியாசப்பட்ட மத கருத்துக்களுக்கு வெளிப்படுத்தப்படும் பிள்ளைகள், மோசமான விளைவுகள் ஏதேனும் இருந்தால், சிலவற்றை எதிர்ப்படுகிறார்கள். a உண்மையில், தாங்கள் எந்த மதத்தைப் பின்பற்றுவது என்று எல்லா பிள்ளைகளும் தீர்மானம் செய்யவேண்டியதாக இருக்கிறது. இயல்பாகவே, யெகோவாவின் சாட்சிகளாக இருந்தாலும்சரி சாட்சிகளல்லாதவர்களாக இருந்தாலும்சரி, அவர்களது பெற்றோரின் மத நியமங்களைப் பின்பற்ற எல்லா இளைஞரும் தெரிவுசெய்வதில்லை.

மனச்சாட்சியின் சுயாதீனத்துக்கு பிள்ளைகளின் உரிமை

யெகோவாவின் சாட்சிகள் தனிப்பட்ட கிறிஸ்தவ மனச்சாட்சிக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறார்கள் என்பதையும்கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். (ரோமர், அதிகாரம் 14) 1989-ல் ஐக்கிய நாடுகளின் பொது பேரவை பிள்ளையின் உரிமைகள் தொடர்பாக ஏற்பாடு செய்திருந்த மாநாடு, “சிந்தனை, மனச்சாட்சி மற்றும் மத சுயாதீனத்திற்கு” பிள்ளைக்கு உரிமை இருப்பதையும் “அவனுடைய அல்லது அவளுடைய கருத்தை வெளிப்படையாக தெரிவிக்கவும், பிள்ளையைப் பாதிக்கும் எந்தவொரு விஷயத்திலும் அல்லது நடவடிக்கையிலும் அந்தக் கருத்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு” உரிமை இருப்பதையும் ஒப்புக்கொண்டது.

இரண்டு பிள்ளைகள் ஒரே விதமாக இருக்கவே முடியாது. பள்ளியில் சில நடவடிக்கைகள் மற்றும் நியமிப்புகள் குறித்ததில் இளம் சாட்சிகள் அல்லது மற்ற மாணவர்கள் செய்யும் தெரிவுகளில் வித்தியாசங்கள் இருக்கும் என்று நியாயமாகவே நீங்கள் எதிர்பார்க்கலாம். சுயாதீனமான மனச்சாட்சி என்ற இந்த நியமத்திற்கு நீங்களும் உங்கள் சம்மதத்தை தருவீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.

[அடிக்குறிப்புகள்]

a கலப்பு விசுவாச திருமணங்களில் பிறக்கும் பிள்ளைகளின் விஷயத்தில், ஸ்டீவன் கார் ரூபன், Ph.D. ரேய்சிங் சில்ட்ரன் இன் எ கான்டெம்ப்பரரி உவோர்ல்ட் என்ற தன்னுடைய புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “தாங்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பதை பெற்றோர் ஏற்க மறுத்து, குழப்பத்திலும், இரகசியமாகவும், மத விஷயங்களை தவிர்த்தும் வாழ்க்கையை நடத்துகையில் பிள்ளைகள் குழம்பிப்போய் விடுகின்றனர். பெற்றோர் தங்கள் சொந்த நம்பிக்கைகள், மதிப்பீடுகள், கொண்டாட்டத்தின் பாங்குகள் பற்றி ஒளிவுமறைவற்றவர்களாக, நேர்மையானவர்களாக, தெளிவாக இருக்கையில், பிள்ளைகள் மத சம்பந்தமான சூழலில் ஒருவிதமான பாதுகாப்போடும் சுய தகுதியோடும் வளர்ந்துவருகின்றனர், இவை அனைத்தையும் உள்ளிட்ட அவர்களுடைய சுய மதிப்பின் வளர்ச்சிக்கும் உலகில் அவர்களுக்குரிய நிலையைப்பற்றிய அறிவுக்கும் மிகவும் முக்கியமானதாய் இருக்கின்றன.”

[பக்கம் 20-ன் பெட்டி]

மரியாதை, ஆனால் வணக்கமல்ல

கனடாவிலுள்ள ஒரு பள்ளியில், ஒருநாள் காலை, டெரா என்ற பெயருடைய 11 வயது சாட்சி பெண், ஆசிரியர் சில நிமிடங்களுக்கு ஒரு உடன் மாணவியை வகுப்பறைக்கு வெளியே அழைத்துச் செல்வதைக் கவனித்தாள். அதற்குப்பின் உடனடியாக, முதல்வரின் அலுவலகத்திற்கு டெரா தன்னுடன் வரும்படி ஆசிரியர் அமைதியாக கேட்டார்.

அலுவலகத்திற்குள் அவள் நுழைந்தவுடன், முதல்வரின் மேசையின்மீது கனடா நாட்டு கொடி விரித்து வைக்கப்பட்டிருப்பதை டெரா உடனடியாக பார்த்தாள். கொடியின்மீது துப்பும்படி ஆசிரியர் டெராவுக்கு உத்தரவிட்டார். டெரா தேசீய கீதத்தைப் பாடவோ கொடியை வணங்கவோ செய்யாததன் காரணமாக, உத்தரவு இட்டபோது, கொடியின்மீது துப்பாமல் இருக்க எந்தக் காரணமும் இருக்கமுடியாது என்பதாக அவர் சொன்னார். யெகோவாவின் சாட்சிகள் கொடியை வணங்காதபோதிலும், அதை மதிக்கிறார்கள் என்பதாக விளக்கி அதைச் செய்ய டெரா மறுத்துவிட்டாள்.

வகுப்பறைக்கு திரும்பியபிறகு, கொடியின்மீது துப்பும்படி உத்தரவிட்டு, இரண்டு மாணவிகளைச் சோதித்ததாக ஆசிரியர் அறிவித்தார். தேசப் பற்றுமிக்க சடங்குகளில் அந்த முதல் மாணவி பங்கெடுத்தபோதிலும் கொடியின்மீது துப்ப உத்தரவிட்ட போது அவ்வாறு செய்தாள். என்றபோதிலும், டெரா தேசீய கீதத்தைப் பாடவோ கொடியை வணங்கவோ இல்லையென்றாலும் இந்த விதத்தில் அவள் அதை அவமதிக்க மறுத்துவிட்டாள். அந்த இருவரில் டெரா மட்டுமே சரியான மரியாதையைக் காண்பித்தாள் என்பதாக ஆசிரியர் சுட்டிக் காட்டினார்.

[பக்கம் 24-ன் பெட்டி]

யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றும் சில தார்மீக நியமங்கள்

ஒழுக்க மதிப்பீடுகளைக் குறித்ததில், தங்களுக்கோ மற்றவர்களுக்கோ தீங்கை கொண்டுவரக்கூடிய நடத்தை, பழக்கவழக்கங்கள் அல்லது மனநிலைகள், இன்று உலகத்தில் சர்வசாதாரணமாக இருந்தாலும், அவற்றிலிருந்தும் பிரிந்திருக்கும்படியாக தங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் கற்றுக்கொடுக்கிறார்கள். (யாக்கோபு 1:27) எனவே, போதைப்பொருட்களைக் குறித்தும், புகைப்பிடித்தல் மற்றும் மதுபான துர்ப்பிரயோகம் போன்ற பழக்கவழக்கங்களின் ஆபத்தைக் குறித்தும் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவிக்கிறார்கள். (நீதிமொழிகள் 20:1; 2 கொரிந்தியர் 7:1) நேர்மை மற்றும் கடின உழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் நம்புகிறார்கள். (எபேசியர் 4:28) ஆபாசமான வார்த்தைகளைத் தவிர்க்கும்படி அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறார்கள். (எபேசியர் 5:3, 4) பாலியல் ஒழுக்கம் குறித்த பைபிள் நியமங்களின்படி வாழவும், அதிகாரத்துக்கும், பிறருடைய உடலுக்கும் உடைமைகளுக்கும் மரியாதை கொடுக்கவும் அவர்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கிறார்கள். (1 கொரிந்தியர் 6:9, 10; தீத்து 3:1, 2; எபிரெயர் 13:4) அந்த நியமங்களின்படி வாழ்வது தங்கள் பிள்ளைகளுக்கு அதிக நன்மையளிக்கும் என்று அவர்கள் உண்மையில் நம்புகிறார்கள்.

[பக்கம் 19-ன் படம்]

யெகோவாவின் சாட்சிகள் உண்மையான கிறிஸ்தவ மதிப்பீடுகளை தங்கள் பிள்ளைகளின் மனதில் பதியவைக்க முயற்சிசெய்கிறார்கள்

[பக்கம் 21-ன் படம்]

“இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்”—மத்தேயு 22:21

[பக்கம் 22-ன் படம்]

மூன்று எபிரெய இளைஞர்கள் பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்திய சிலைக்கு முன்பாக வணங்க மறுத்துவிட்டனர்

[பக்கம் 25-ன் படம்]

பிள்ளைகள் மற்றவர்களில் அக்கறை எடுத்துக்கொள்ளும்படியாக உற்சாகப்படுத்தப்படுகின்றனர்