Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மத வேற்றுமையின் சவால்

மத வேற்றுமையின் சவால்

மத வேற்றுமையின் சவால்

ஒரு கல்வியாளராக, முந்தைய நூற்றாண்டுகளில் கல்வியாளர்கள் அபூர்வமாக சந்தித்த ஒரு சவாலை நீங்கள் எதிர்ப்படுகிறீர்கள்—மத வேற்றுமை.

வரலாற்றின் இடைநிலைக்காலம் முழுவதிலுமாக, ஒரே தேசத்தின் குடிமக்கள் பொதுவாக ஒரே மதத்தைப் பின்பற்றிவந்தனர். சமீப 19-ம் நூற்றாண்டின் முடிவுவரையாகவும், ஐரோப்பா ஒருசில முக்கிய மதங்களையே அறிந்திருந்தது: மேற்கே கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்டு மதங்கள், கிழக்கே ஆர்த்தடாக்ஸ், இஸ்லாம் மற்றும் யூத மதம். எவ்வித சந்தேகமுமின்றி இன்று மத வேற்றுமையானது ஐரோப்பாவிலும் உலகம் முழுவதிலும் அதிகளவில் இருக்கிறது. நன்றாக அறியப்படாத மதங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. இவை உள்ளூர் மக்கள் சிலராலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன அல்லது பிற நாட்டிலிருந்து வந்து குடியேறுகிறவர்களாலும் அகதிகளாலும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதன் காரணமாகவே இன்று ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐக்கிய மாகாணங்கள் போன்ற நாடுகளில், நாம் அநேக முகமதியர்களையும், புத்த மதத்தினரையும், இந்துக்களையும் காண்கிறோம். அதே சமயத்தில், கிறிஸ்தவர்களாக, யெகோவாவின் சாட்சிகள் 230-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுறுசுறுப்பாக ஊழியம் செய்து வருகின்றனர்; இத்தாலியிலும் ஸ்பெய்னிலும் அவர்களது மதம் இரண்டாவது மிகப் பெரிய மதமாக ஆகியிருக்கிறது. 13 தேசங்களில், ஒவ்வொன்றிலும் அவர்கள் 1,00,000-க்கும் மேலான சுறுசுறுப்பான உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர்.—பக்கம் 15, பெட்டியைக் காண்க.

உள்ளூர் மதப் பழக்கவழக்கங்களிலுள்ள வேற்றுமை, கல்வியாளருக்கு சவால்களை அளிக்கலாம். உதாரணமாக, பிரபலமான கொண்டாட்டங்களைக் குறித்து முக்கியமான சில கேள்விகள் எழுப்பப்படலாம்: ஒவ்வொரு மாணவரையும்—அவனுடைய அல்லது அவளுடைய மதம் என்னவாக இருப்பினும்—எல்லா சடங்குகளையும் கடைபிடிக்கும்படி வற்புறுத்த வேண்டுமா? இப்படிப்பட்ட கொண்டாட்டங்களில் எதுவும் தவறு இல்லை என்பதாக பெரும்பாலானவர்கள் நினைக்கலாம். இருப்பினும், சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களுடைய குடும்பங்களின் நோக்குநிலையும்கூட மதிக்கப்பட வேண்டாமா? மேலும் சிந்திப்பதற்கு மற்றொரு காரியமும் உண்டு: சட்டம் அரசிலிருந்து மதத்தைப் பிரித்துவைப்பதாய் இருப்பதும், பாடத்திட்டத்தில் மத போதனை சேர்க்கப்படக்கூடாததாய் இருப்பதுமான தேசங்களில், இத்தகைய கொண்டாட்டங்களைப் பள்ளியில் கட்டாயமாக ஆக்குவதை சிலர் முன்னுக்குப் பின் முரணாக காணமாட்டார்களா?

பிறந்த நாட்கள்

மத சம்பந்தமான தொடர்புகள் ஏதாயினும் இருந்தால் அதில் சிலவற்றைக் கொண்டிருப்பதாகத் தோன்றும் கொண்டாட்டங்களிலும்கூட தப்பெண்ணம் எழும்பக்கூடும். அநேக பள்ளிகளில் கொண்டாடப்படும் பிறந்த நாட்களின் விஷயத்தில் இது உண்மையாக இருக்கிறது. பிறந்த நாட்களைக் கொண்டாடுவதற்கு மற்றவர்களுக்கிருக்கும் உரிமையை யெகோவாவின் சாட்சிகள் மதிக்கின்ற போதிலும், இப்படிப்பட்ட கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாதிருப்பதை தெரிந்துகொள்கின்றனரென்று நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாதிருக்க ஏன் தெரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணங்களை ஒருவேளை நீங்கள் அறியாமலிருக்கலாம்.

பிரான்ஸில் மிகவும் விரிவாக விநியோகிக்கப்பட்டுள்ள கலைக்களஞ்சியமாகிய ல லிவ்ர டே ரலிஸான் (மதங்களின் புத்தகம்), இந்தப் பழக்கத்தை ஒரு சடங்கு என்பதாக அழைத்து அதை “மதச்சார்பற்ற சடங்குகள்” மத்தியில் வரிசைப்படுத்தியுள்ளது. இன்று தீங்கில்லாத மதச் சார்பற்ற பழக்கமாக கருதப்பட்டாலும், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் உண்மையில் புறமத தொடக்கத்தை உடையனவாக உள்ளன.

தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா (1991 பதிப்பு) இவ்வாறு சொல்கிறது: “எகிப்து, கிரீஸ், ரோம் மற்றும் பெர்சியா அடங்கிய பண்டைய உலகம் கடவுட்கள், ராஜாக்கள் மற்றும் பிரபுக்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடியது.” நூலாசிரியர்கள் ரால்ப் மற்றும் அடெலின் லின்டன் இதற்கான அடிப்படை காரணத்தை தெரியப்படுத்துகின்றனர். தி லோர் ஆஃப் பர்த்டேய்ஸ் (ஆங்கிலம்) என்ற தங்கள் புத்தகத்தில் அவர்கள் இவ்விதமாக எழுதுகின்றனர்: “நாகரிகத்தின் பிறப்பிடமாக கருதப்பட்ட மெசபொத்தோமியா மற்றும் எகிப்தும்கூட மனிதர்கள் தங்கள் பிறந்த நாட்களை நினைவுகூர்ந்து கெளரவித்த முதல் நாடுகளாக இருந்தன. பண்டைய காலங்களில் பிறந்த நாள் பதிவுகளை வைத்திருப்பது முக்கியமானதாக இருந்தது, முக்கியமாக இது ஏனென்றால் ஒரு ஜாதகத்தை உருவாக்குவதில் பிறந்த தேதி இன்றியமையாததாக இருந்தது.” ஜோதிடத்தோடுள்ள நேரடியான இந்தத் தொடர்பு, அதைக் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது என்பதன் காரணமாக ஜோதிடத்தைத் தவிர்க்கும் எவருக்கும் அதிக அக்கறைக்குரிய ஒரு காரணமாக உள்ளது.—ஏசாயா 47:13-15.

தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியாவில் நாம் பின்வருமாறு வாசிப்பது நமக்கு ஆச்சரியமூட்டுவதாய் இல்லை: “பூர்வ கிறிஸ்தவர்கள் அவருடைய [கிறிஸ்துவின்] பிறப்பைக் கொண்டாடவில்லை, ஏனென்றால் எவருடைய பிறப்பையும் கொண்டாடுவதை ஒரு புறமத பழக்கமாக அவர்கள் கருதினர்.”—தொகுதி 3, பக்கம் 416.

மேற்கூறப்பட்ட தகவலை மனதில் கொண்டவர்களாய், யெகோவாவின் சாட்சிகள் பிறந்தநாள் விழாக்களில் கலந்துகொள்ளாதிருப்பதை தெரிந்துகொள்கிறார்கள். நிச்சயமாகவே ஒரு குழந்தையின் பிறப்பு மகிழ்ச்சிதரும் அருமையான ஒரு தருணமாகும். இயல்பாகவே ஒவ்வொரு ஆண்டும் கடந்துபோகையில் தங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது எல்லா பெற்றோரும் சந்தோஷப்படுகின்றனர். யெகோவாவின் சாட்சிகளும்கூட தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பரிசுகளைக் கொடுப்பதன் மூலமும் ஒன்றாகச் சேர்ந்து சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பதன்மூலமும் தங்கள் அன்பை வெளிப்படுத்திக்காட்டுவதில் அதிகமான சந்தோஷத்தைக் கண்டடைகின்றனர். என்றபோதிலும், பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஆரம்பத்தை முன்னிட்டுப் பார்க்கையில், வருடம் முழுவதிலும் மற்ற சமயங்களில் அவ்விதமாகச் செய்ய அவர்கள் விரும்புகிறார்கள்.—லூக்கா 15:22-25; அப்போஸ்தலர் 20:35.

கிறிஸ்மஸ்

கிறிஸ்மஸ் உலகம் முழுவதிலும், கிறிஸ்தவமல்லாத அநேக தேசங்களிலும்கூட கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவமண்டலத்தின் பெரும்பாலான மதங்களால் இந்த விடுமுறை நாள் ஏற்றுக்கொள்ளப்படும் காரணத்தால், யெகோவாவின் சாட்சிகள் இதைக் கொண்டாட தெரிவு செய்யாதிருப்பது ஒருவேளை ஆச்சரியமாகத் தோன்றலாம். அது ஏன் அப்படி?

அநேக என்ஸைக்ளோப்பீடியாக்கள் தெளிவாகச் சொல்வது போல, இயேசுவின் பிறந்த நாள் புறமத ரோம பண்டிகையோடு ஒத்திருப்பதற்கு செளகரியமாக டிசம்பர் 25-ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டது. பல்வேறு நோக்கீட்டுப் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ள பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்:

“கிறிஸ்து பிறந்த தேதி அறியப்படாமல் இருக்கிறது. சுவிசேஷங்கள் அந்த நாளையோ மாதத்தையோ குறிப்பிடுவது கிடையாது.”—நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா, தொகுதி II, பக்கம் 656.

“ஐரோப்பாவில் இன்று நிலவிவரும் அல்லது முற்காலங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பெரும்பாலான கிறிஸ்மஸ் பழக்கங்கள், உண்மையான கிறிஸ்தவ பழக்கங்கள் அல்ல, ஆனால் அவை சர்ச்சுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் அல்லது சகித்துக்கொள்ளப்பட்டிருக்கும் புறமத பழக்கங்களே. . . . ரோமில் கொண்டாடப்பட்ட சாட்டர்நேலியா கிறிஸ்மஸ் சமயத்தின் பெரும்பாலான விழாக்கால பழக்கங்களுக்கு மாதிரியை அளித்தது.”—என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் அண்டு எதிக்ஸ் (எடின்பர்க், 1910) ஜேம்ஸ் ஹேஸ்டிங்ஸ் பதிப்பித்தது, தொகுதி III, பக்கங்கள் 608-9.

“நான்காவது நூற்றாண்டு முதற்கொண்டு டிசம்பர் 25 அன்று எல்லா கிறிஸ்தவ சர்ச்சுகளிலும் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தச் சமயத்தில், இது ‘சூரியனின் பிறப்பு’ (லத்தீன், நாட்டாலே) என்றழைக்கப்பட்ட புறமத குளிர்கால-கதிர்திருப்ப பண்டிகையாக இருந்தது, ஏனென்றால் பகல்பொழுது மறுபடியுமாக நீண்டதாக ஆகையில் சூரியன் மறுபடியுமாக பிறப்பது போல தோன்றியது. ரோமில் சர்ச், மிகவும் பிரபலமாக இருந்த இந்தப் பழக்கத்துக்கு புதிய ஒரு பெயரைக் கொடுப்பதன்மூலம் அதை . . . தனதாக்கிக்கொண்டது.”—என்ஸைக்ளோப்பீடியா யூனிவர்சாலிஸ், 1968, (பிரெஞ்சு) தொகுதி 19, பக்கம் 1375.

“கிறிஸ்மஸ் விழாவின் வளர்ச்சியில் சோல் இன்விக்டுஸின் (மித்ரா) வேறுபட்ட புறமத கொண்டாட்டங்கள் செல்வாக்கு செலுத்தின. மறுபட்சத்தில், டிசம்பர் 25, குளிர்கால கதிர்திருப்ப நாளாக இருந்தபடியால் அது கிறிஸ்துவின் மூலமாக உலகுக்குப் புறப்பட்டுத் தோன்றிய ஒளியோடு அடையாளப்படுத்தப்பட்டது. இவ்விதமாக சோல் இன்விக்டுஸ்-ன் அடையாளம் கிறிஸ்துவுக்கு மாற்றப்பட்டது.”—ப்ராக்காவ்ஸ் என்ட்ஸ்யூக்ளோப்பேடி, (ஜெர்மன்) தொகுதி 20, பக்கம் 125.

கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகளை கற்றறிகையில் சிலர் எவ்விதமாக பிரதிபலித்திருக்கின்றனர்? என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு குறிப்பிடுகிறது: “1644-ல் [கிறிஸ்மஸ்] ஒரு புறமத பண்டிகை என்பதன் அடிப்படையில் அது எந்த ஒரு சந்தோஷ ஆரவாரத்தையோ மத சம்பந்தமான ஆராதனையையோ கொண்டிருக்கக் கூடாது என தடைசெய்து, அது உபவாசமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதாக இங்கிலாந்து நாட்டு கடுஞ்சீர்திருத்த சமயவாதிகள் சட்டமன்றத்தின் சாசனத்தின் மூலமாக உத்தரவிட்டனர். இரண்டாம் சார்லஸ் விழாக்கால நடவடிக்கைகளை மீண்டும் புதுப்பித்தார், ஆனால் ஸ்காத்லாந்து நாட்டவர் கடுஞ்சீர்திருத்த சமயவாதிகளின் கருத்தையே ஆதரித்துவந்தனர்.” பூர்வ கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடவில்லை, யெகோவாவின் சாட்சிகளும் இன்று அதை கொண்டாடுவதோ அல்லது கிறிஸ்மஸோடு தொடர்புடைய நடவடிக்கைகளில் பங்குகொள்வதோ கிடையாது.

இருப்பினும் மற்ற சமயங்களில் பரிசுகளைக் கொடுப்பதை அல்லது சந்தோஷமாக ஒரு உணவை அருந்துவதற்காக குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைப்பதை பைபிள் ஆதரித்து பேசுகிறது. சம்பிரதாயப்படி, பரிசுகள் எதிர்பார்க்கப்படும்போது மாத்திரமே பரிசுகளைக் கொடுப்பதற்குப் பதிலாக உண்மையிலேயே உதாரகுணமுள்ளவர்களாய் இருக்கும்படி தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிக்க அது பெற்றோரை உற்சாகப்படுத்துகிறது. (மத்தேயு 6:2, 3) யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் சகிப்புத்தன்மையுடனும் மரியாதையுடனும் இருக்க கற்றுக்கொடுக்கப்படுகின்றனர், இது கிறிஸ்மஸ் கொண்டாட மற்றவர்களுக்கிருக்கும் உரிமையை ஒப்புக்கொள்வதையும் உட்படுத்துகிறது. முறையே, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளாதிருக்க அவர்கள் செய்திருக்கும் தீர்மானம் மதிக்கப்படுகையில் அவர்கள் அதைப் போற்றுகின்றனர்.

மற்ற கொண்டாட்டங்கள்

பிரேஸிலில் ஜூன் விழாக்கள், பிரான்ஸில் எபிஃபெனி, ஜெர்மனியில் கார்னிவல், ஜப்பானில் செட்சுபன், ஐக்கிய மாகாணங்களில் ஹாலோவீன் போன்று பல்வேறு தேசங்களில் பள்ளி ஆண்டில் வரும் மற்ற மதசம்பந்தமான அல்லது பாதி மத சம்பந்தமான விடுமுறை நாட்களின் விஷயத்திலும் யெகோவாவின் சாட்சிகள் அதே நிலைநிற்கையை எடுக்கின்றனர். இவற்றின் சம்பந்தமாகவும் இங்கே குறிப்பிடப்படாத மற்ற எந்த ஒரு குறிப்பிட்ட கொண்டாட்டத்தின் சம்பந்தமாகவும் உங்களுக்கிருக்கக்கூடிய எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்க சாட்சி பெற்றோர் அல்லது அவர்களுடைய பிள்ளைகள் நிச்சயமாகவே சந்தோஷமுள்ளவர்களாக இருப்பர்.

[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]

“ரோமில் கொண்டாடப்பட்ட சாட்டர்நேலியா கிறிஸ்மஸ் சமயத்தின் பெரும்பாலான விழாக்கால பழக்கங்களுக்கு மாதிரியை அளித்தது.”—என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் அண்டு எதிக்ஸ்

[பக்கம் 15-ன் பெட்டி]

யெகோவாவின் சாட்சிகள்உலகளாவிய ஒரு மதம்

சுறுசுறுப்பான

நாடு உறுப்பினர்கள்

அர்ஜன்டினா 1,05,650

பிரேஸில் 3,85,099

பிரிட்டன் 1,29,852

கனடா 1,10,659

பிரான்ஸ் 1,23,718

ஜெர்மனி 1,67,878

இத்தாலி 2,08,016

ஜப்பான் 1,94,608

மெக்ஸிகோ 4,04,593

நைஜீரியா 1,80,813

பிலிப்பீன்ஸ் 1,18,446

போலாந்து 1,17,958

அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் 9,36,264

[பக்கம் 18-ன் பெட்டி]

பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள்

“என்னுடைய பிறந்தநாளன்று எனக்கு அன்பளிப்புகள் கிடைக்காவிட்டாலும், மற்ற சமயங்களில் என் பெற்றோர் எனக்குப் பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுக்கிறார்கள். இது எதிர்பாராத சமயத்தில் கிடைப்பதால் எனக்குப் பிடித்திருக்கிறது.”—கிரகரி, வயது 11.

“கிறிஸ்மஸை, அதிகமான பரிசுப்பொருட்களுக்கான காலமாகவே அநேக சிறுவர்கள் கருதுகிறார்கள். ஆனால் வருடம் முழுவதும் எனக்குப் பரிசுப்பொருட்கள் கிடைக்கின்றன, பல இடங்களுக்கும் நான் செல்கிறேன். ஃபிஜி, நியூஜீலாந்து, பிரேஸில் போன்ற மற்ற நாடுகளுக்கு என் குடும்பத்தார் என்னை அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.”—கேலப், வயது 10.

“என்னுடைய நண்பர்களோடு நான் ஜாலியாக இருக்கிறேன். அவ்வப்போது நாங்கள் அன்பளிப்புகளைக் கொண்டு ஒருவரையொருவர் ஆச்சரியப்படுத்திக்கொள்வோம்.”—நிக்கோல், வயது 14.

“கிறிஸ்மஸ் அல்லது மற்ற விடுமுறை நாட்கள் இல்லாமல் எவ்வாறு என்னால் இருக்க முடிகிறது என்பதாக பள்ளியில் உள்ள அநேகர் என்னை கேட்கிறார்கள். ஜாலியாக இருப்பதை நான் இழந்துவிடுவதில்லை. நானும் என் குடும்பத்தாரும் அடிக்கடி ஒன்றாக காரியங்களைச் செய்கிறோம். விடுமுறைக்காக செல்லும்போது என்னோடு சேர்ந்து அனுபவிப்பதற்காக அருமையான நண்பர்கள் இருக்கிறார்கள். கூடாரங்கள் அமைத்து தங்குவோம், பனிகட்டியில் சறுக்குவோம். எங்கள் வீட்டில் நாங்கள் அடிக்கடி ஒன்றாக கூடிவருவோம். நாங்கள் எவ்வளவு ஜாலியாக இருக்கிறோம் என்பதை மற்றவர்கள் அறிந்தால், ஆச்சரியப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.”—அன்ரியானா, வயது 13.

“கிறிஸ்மஸ் அல்லது மற்ற விடுமுறைகளை நான் கொண்டாடாமல் இருப்பதனால், தனித்து விடப்பட்டதாக நான் எப்பொழுதும் உணர்ந்ததில்லை. நாங்கள் பள்ளிக்குச் செல்லாத சமயமும் அப்பா வேலைக்கு செல்லாத சமயமுமான விடுமுறை நாட்களில் நாங்கள் விளையாடுகிறோம், திரைப்படங்களுக்குச் செல்கிறோம், தொலைக்காட்சி பார்க்கிறோம். ஒரு குடும்பமாக காரியங்களை ஒன்றாகச் செய்வதில் நாங்கள் அதிக நேரத்தை செலவழிக்கிறோம்.”—ப்ரையன், வயது 10.

[பக்கம் 16-ன் படம்]

சாட்சிகள் சந்தோஷமான நேரத்தை ஒன்றுசேர்ந்து அனுபவிக்கின்றனர்

[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]

Culver Pictures