Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவர்களது நவீனகால முன்னேற்றமும் வளர்ச்சியும்

அவர்களது நவீனகால முன்னேற்றமும் வளர்ச்சியும்

அவர்களது நவீனகால முன்னேற்றமும் வளர்ச்சியும்

யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன கால வரலாறு நூறாண்டுகளுக்கு முன்பே ஆரம்பமானது. 1870-களின் ஆரம்பத்தில், அ.ஐ.மா., பென்ஸில்வேனியாவில், இப்பொழுது பிட்ஸ்பர்க்கின் பாகமாக இருக்கும் அலிகெனி என்ற நகரில் மிகச் சிறிய பைபிள் படிப்பு தொகுதி உதயமானது. சார்ல்ஸ் டேஸ் ரஸல் என்பவரே இத்தொகுதியின் முக்கிய காரணகர்த்தா. ஜூலை 1879-ல், ஸயன்ஸ் உவாட்ச் டவர் அண்டு ஹெரால்டு ஆஃப் கிரைஸ்ட்ஸ் பிரசன்ஸ் பத்திரிகையின் முதல் இதழ் வெளியானது. அந்தச் சிறிய பைபிள் படிப்பு தொகுதியிலிருந்து 1880-க்குள் அநேக சபைகள் அருகிலுள்ள மாநிலங்களிலும் உருவாகின. 1881-ல் ஸயன்ஸ் உவாட்ச் டவர் டிராக்ட் சொஸைட்டி உருவானது; பின்னர் 1884-ல், அது ரஸலை பிரஸிடென்ட்டாக கொண்ட ஓர் சட்டப்பூர்வ அமைப்பாக ஆனது. பிற்பாடு உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி என பெயர் மாற்றப்பட்டது. அநேகர் வீட்டுக்கு வீடு சாட்சி கொடுத்தும் பைபிள் பிரசுரங்களை விநியோகித்தும் வந்தனர். 1888-ல் ஐம்பது பேர் முழுநேர ஊழியராக சேவை செய்து வந்தனர்; தற்பொழுது உலகம் முழுவதும் முழுநேர சேவை செய்வோரின் சராசரி எண்ணிக்கை சுமார் 7,00,000.

1909-க்குள் இவர்களது ஊழியம் சர்வதேச அளவில் செய்யப்பட்டது; சொஸைட்டியின் தலைமை அலுவலகம் நியூ யார்க், புரூக்ளினில் தற்போதிருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. பிரசங்கங்கள் செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்டன, 1913-க்குள் இவை ஐக்கிய மாகாணங்கள், கனடா, மற்றும் ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான செய்தித்தாள்களில் நான்கு மொழிகளில் பிரசுரமாயின. புத்தகங்கள், சிற்றேடுகள், துண்டுப்பிரதிகள் ஆகியவை கோடிக்கணக்கில் விநியோகிக்கப்பட்டன.

1912-ல், “சிருஷ்டிப்பின் நிழற்பட நாடகம்” சம்பந்தமான வேலை ஆரம்பமானது. பூமியின் சிருஷ்டிப்பு முதல் கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின் முடிவு வரை அனைத்தும், ஸ்லைடுகள் மற்றும் ஒலியோடுகூடிய இயங்கு திரைப்படங்கள் வாயிலாக அதில் சித்தரிக்கப்பட்டது. அது 1914-ல் திரைக்கு வந்தது, ஒவ்வொரு நாளும் 35,000 பேர் இதைப் பார்த்தனர். ஒலியோடுகூடிய இயங்கு திரைப்படங்களுக்கு இது முன்னோடியாக விளங்கியது.

1914-⁠ம் ஆண்டு

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டம் நெருங்கிக் கொண்டிருந்தது. 1876-ல் நியூ யார்க், புரூக்ளினில் பிரசுரிக்கப்பட்ட பைபிள் எக்ஸாமினர் என்ற பத்திரிகைக்காக, “புறஜாதியாரின் காலங்கள்: அவை எப்பொழுது முடிவடையும்?” என்ற கட்டுரையை பைபிள் மாணாக்கர் சார்ல்ஸ் டேஸ் ரஸல் எழுதினார். அக்டோபர் இதழில் பக்கம் 27-ல், “ஏழு காலங்கள் கி.பி. 1914-ல் முடிவடையும்” என இப்பத்திரிகை குறிப்பிட்டது. புறஜாதியாரின் காலங்களை “தேசங்களுக்கு குறிக்கப்பட்ட காலங்கள்” என்று மற்றொரு பைபிள் மொழிபெயர்ப்பு குறிப்பிடுகிறது. (லூக்கா 21:24, NW) 1914-ல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் நடக்கவில்லை, ஆனால் அது நிச்சயமாகவே புறஜாதியாருடைய காலங்களின் முடிவாக இருந்ததோடு, விசேஷித்த முக்கியத்துவமுள்ள ஆண்டாகவும் இருந்தது. மனித வரலாற்றில் 1914 ஒரு திருப்புமுனையாக விளங்கியது என்பதை அநேக சரித்திராசிரியர்களும் உரையாசிரியர்களும் ஒப்புக்கொள்கின்றனர். பின்வரும் மேற்கோள்கள் இதைக் காண்பிக்கின்றன:

“சரித்திரத்தில் முற்றிலும் ‘இயல்பான நிலையில்’ இருந்த கடைசி ஆண்டு 1913, அதாவது முதல் உலகப் போர் ஆரம்பமாவதற்கு முந்திய ஆண்டு.”​—⁠மார்ச் 13, 1949-⁠ல் வாஷிங்டன், டி.சி., டைம்ஸ்-ஹெரால்டு பத்திரிகையில் வெளிவந்த தலையங்கம்.

“1914 முதல் 1989 வரையான 75 வருட காலப்பகுதியில் இந்த உலகம் இரண்டு உலகப் போர்களையும் பனிப்போரையும் சந்தித்தது; இதை தனித்தன்மை வாய்ந்த ஒரு சகாப்தமாகவும், உலகத்தின் பெரும்பகுதி போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அல்லது போரின் விளைவுகளிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த அல்லது போருக்குத் தயார் செய்துகொண்டிருந்த ஒரு காலப்பகுதியாகவும் சரித்திராசிரியர்கள் காண்கின்றனர்.”​—⁠த நியூ யார்க் டைம்ஸ், மே 7, 1995.

“முதல் உலகப் போரினால் முழு உலகமும் சின்னாபின்னமாகி இருந்தது, அது ஏன் என்று இன்னும் நமக்குத் தெரியாது. அந்தப் போருக்கு முன், லட்சிய உலகம் கண்ணில் தெரிவதாக அநேகர் நினைத்தார்கள். அமைதியும் செழிப்பும் நிலவியது. பின்னர் எல்லாம் சின்னாபின்னமானது. அதுமுதல் நாம் செயலிழந்த நிலையில் இருந்து வருகிறோம் . . . சரித்திரத்திலேயே இந்த நூற்றாண்டில்தான் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.”​—⁠டாக்டர் வாக்கர் பெர்சி, அமெரிக்கன் மெடிக்கல் நியூஸ், நவம்பர் 21, 1977.

1914-க்குப் பின் 50-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் கடந்த பிறகு ஜெர்மன் நாட்டு அரசியல் மேதை கோன்ராட் அடினோயர் இவ்வாறு எழுதினார்: “1914 முதல் பாதுகாப்பும் அமைதியும் மக்களின் வாழ்க்கையிலிருந்து மறைந்துவிட்டது.”​—⁠த வெஸ்ட் பார்க்கர், கிளீவ்லாண்ட், ஒஹாயோ, ஜனவரி 20, 1966.

1916-ல், சொஸைட்டியின் முதல் பிரஸிடென்ட் சி. டி. ரஸல் காலமானார், அவருக்குப் பிறகு அடுத்த ஆண்டில் ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு தலைமையேற்றார். அநேக மாற்றங்கள் நிகழ்ந்தன. காவற்கோபுரம் பத்திரிகையின் கூட்டுப் பத்திரிகை கோல்டன் ஏஜ் அறிமுகப்படுத்தப்பட்டது. (இப்பொழுது விழித்தெழு! என அழைக்கப்படுகிறது, 86-க்கும் மேற்பட்ட மொழிகளில் 2,10,00,000-க்கும் அதிகமான பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன.) வீட்டுக்கு வீடு சாட்சி கொடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்தவமண்டல மதப் பிரிவுகளிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கு 1931-ல் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை இந்தக் கிறிஸ்தவர்கள் சூட்டிக்கொண்டனர். இந்தப் பெயர் ஏசாயா 43:10-12-⁠ன் அடிப்படையில் அமைந்துள்ளது.

1920-களிலும் 1930-களிலும் இவர்கள் வேலைக்காக வானொலி மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது. 1933-க்குள் பைபிள் சொற்பொழிவுகளை ஒலிபரப்ப 403 வானொலி நிலையங்களை சொஸைட்டி பயன்படுத்தி வந்தது. பின்னர் வானொலிக்குப் பதிலாக சிறிய போனோகிராஃப் கருவிகளையும் பதிவு செய்யப்பட்ட பைபிள் பேச்சுக்களையும் எடுத்துக்கொண்டு சாட்சிகள் பெரும்பாலும் வீட்டுக்கு வீடு சென்று ஆட்களை சந்தித்தனர். பைபிள் சத்தியத்தை அறிந்துகொள்ள ஆர்வம் காண்பித்தவர்களுக்கு வீடுகளில் பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

நீதிமன்ற வழக்குகளில் வெற்றிகள்

இந்த வேலையை செய்ததற்காக 1930-களிலும் 1940-களிலும் சாட்சிகள் பலர் கைதுசெய்யப்பட்டனர், பேச்சுரிமை, எழுத்துரிமை, மாநாடு நடத்தும் உரிமை, வணக்க உரிமை ஆகியவற்றை காப்பதற்கு நீதிமன்றங்களில் அநேக வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஐக்கிய மாகாணங்களில், மேல் முறையீடு செய்ததால் உச்ச நீதிமன்றத்தில் 43 வழக்குகளில் சாட்சிகள் வெற்றி பெற்றனர். அதேபோல மற்ற தேசங்களிலும் உச்ச நீதிமன்றங்கள் சாதகமான தீர்ப்புகளை அளித்திருக்கின்றன. நீதிமன்ற வழக்குகளில் பெற்ற இந்த வெற்றிகள் சம்பந்தமாக இவர்களும் நம்புகிறார்கள் (ஆங்கிலம்) என்ற நூலில் சாட்சிகளைப் பற்றி பேராசிரியர் சி. எஸ். ப்ரேடன் இவ்வாறு கூறினார்: “தங்களுடைய குடி உரிமைகளைக் காப்பதற்குப் போராடியதில் இவர்கள் ஜனநாயகத்திற்கு தனிச்சிறப்புமிக்க விதத்தில் தொண்டாற்றியிருக்கிறார்கள். ஏனென்றால் தங்களுடைய போராட்டத்தால் அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு சிறுபான்மை தொகுதியினரும் அந்த உரிமைகளைப் பெற பேருதவி செய்திருக்கிறார்கள்.”

விசேஷ பயிற்சித் திட்டங்கள்

1942-ல் ஜே. எஃப். ரதர்ஃபர்டு இறந்தபோது என். எச். நார் தலைமை பொறுப்பேற்றார். ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டம் ஆரம்பமானது. 1943-ல் உவாட்ச் டவர் பைபிள் கிலியட் பள்ளி என்ற விசேஷ பயிற்சிப் பள்ளி மிஷனரிகளுக்காக தொடங்கப்பட்டது. அது முதல் இப்பள்ளியில் பட்டம் பெற்றவர்கள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளனர். சபைகளே இல்லாத தேசங்களில் புதிய சபைகள் தோன்றியிருக்கின்றன, சர்வதேச அளவில் இப்பொழுது 110-⁠க்கும் அதிகமான கிளை அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சபை மூப்பர்கள், கிளை அலுவலக வாலண்டியர்கள், சாட்சி கொடுக்கும் வேலையில் (பயனியர்களாக) முழுநேரம் சேவை செய்பவர்கள் ஆகியோரை பயிற்றுவிக்க அவ்வப்பொழுது விசேஷ பாடத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நியூ யார்க்கிலுள்ள பாட்டர்ஸனில் செயல்படும் கல்வி மையத்தில் ஊழியர்களுக்காக பல விசேஷ பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1977-ல் என். எச். நார் காலமானார். அவருடைய மரணத்திற்கு முன்பு அவர் செய்த அமைப்பு சம்பந்தப்பட்ட கடைசி மாற்றங்களில் ஒன்று, புரூக்ளினில் தலைமை அலுவலகத்திலிருந்த ஆளும் குழுவை விரிவுபடுத்தியதாகும். 1976-ல் நிர்வாகப் பொறுப்புகள் பிரிக்கப்பட்டு, ஆளும் குழுவின் அங்கத்தினர்கள் அடங்கிய பல்வேறு குழுக்களுக்கு நியமிக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் பல பத்தாண்டுகள் ஊழியர்களாக சேவை செய்த அனுபவமுள்ளவர்கள்.

அச்சக வசதிகள் விரிவடைகின்றன

யெகோவாவின் சாட்சிகளுடைய நவீனகால வரலாறு சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள் நிறைந்தது. 1870-ல் பென்ஸில்வேனியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய பைபிள் படிப்பு தொகுதி, 2001-ம் ஆண்டுக்குள் உலகெங்கிலும் 93,000-⁠க்கும் மேற்பட்ட சபைகளாக வளர்ந்தது. முதலில் அனைத்து பிரசுரங்களும் தனியார் நிறுவனங்களில் அச்சடிக்கப்பட்டன. பின்னர் 1920-ல், வாடகைக்கு எடுக்கப்பட்ட தொழிற்சாலைகளில் சில பிரசுரங்களை யெகோவாவின் சாட்சிகள் தயாரித்தனர். ஆனால் 1927 முதல், உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் நியூ யார்க்கிற்கு சொந்தமான எட்டு மாடி தொழிற்சாலை கட்டடத்தில் அதிகமான பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டன. இது இப்பொழுது இன்னும் சில தொழிற்சாலை கட்டடங்களாகவும் பெரிய அலுவலக வளாகமாகவும் விரிவடைந்திருக்கிறது. அருகில் புரூக்ளினில் மற்ற கட்டடங்களும் உள்ளன; அங்கே, பிரசுர சம்பந்தப்பட்ட வேலைகளில் வாலண்டியர் சேவை செய்யும் ஊழியர்கள் தங்கியிருக்கின்றனர். இதைத் தவிர, வட நியூ யார்க்கில் வால்கிலுக்கு அருகில் ஒரு கூட்டுப் பண்ணையும் அச்சகமும் உள்ளது. இங்கே காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அச்சடிக்கும் வேலை நடைபெறுகிறது, பல்வேறு இடங்களில் சேவை செய்யும் இவர்களுக்குத் தேவையான உணவும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வாலண்டியர்களுடைய கைச்செலவுக்கு ஒவ்வொரு மாதமும் சிறுதொகை வழங்கப்படுகிறது.

சர்வதேச மாநாடுகள்

1893-ல் அ.ஐ.மா., இல்லினாய்ஸில் உள்ள சிகாகோவில் முதன்முதல் பெரிய மாநாடு நடத்தப்பட்டது. அதற்கு 360 பேர் ஆஜராகியிருந்தனர், 70 பேர் முழுக்காட்டப்பட்டனர். மிகப் பெரியதோர் தனி சர்வதேச மாநாடு 1958-ல் நியூ யார்க் நகரில் நடத்தப்பட்டது. அதற்காக யாங்கி ஸ்டேடியமும் அப்போதிருந்த போலோ விளையாட்டு மைதானமும் பயன்படுத்தப்பட்டன. ஆஜரானவர்களின் உச்ச எண்ணிக்கை 2,53,922; முழுக்காட்டப்பட்ட புதியவர்களின் எண்ணிக்கை 7,136. அது முதல் சர்வதேச மாநாடுகள் அநேக நாடுகளில் தொடர் மாநாடுகளாக நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட மாநாடுகள் உலகெங்கிலும் சுமார் ஆயிரம் நடத்தப்படுகின்றன.

[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]

குடி உரிமைகளுக்கு ஆற்றிய தனிச்சிறப்புமிக்க சேவை

[பக்கம் 6-ன் படம்]

“காவற்கோபுரம்” முதலில் ஒரேவொரு மொழியில் 6,000 பிரதிகள் அச்சிடப்பட்டது, இப்போதோ 143-க்கும் மேற்பட்ட மொழிகளில் 2,40,00,000-க்கும் அதிகமான பிரதிகள் அச்சிடப்படுகின்றன

[பக்கம் 7-ன் படம்]

மனித வரலாற்றில் திருப்புமுனை

[பக்கம் 10-ன் முழுபக்க படம்]