அவர்கள் யார்?
அவர்கள் யார்?
யெகோவாவின் சாட்சிகளோடு நீங்கள் நன்றாக அறிமுகமாக வேண்டும் என்பதே அவர்களுடைய ஆசை. அக்கம்பக்கத்திலோ அலுவலகங்களிலோ அல்லது அன்றாட அலுவல்களிலோ நீங்கள் அவர்களை சந்தித்திருக்கலாம். தெருவில் நின்றுகொண்டு, போகிற வருகிற ஆட்களுக்கு பத்திரிகைகளை கொடுப்பதை ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கலாம். அல்லது உங்கள் வீட்டிற்கு வந்திருந்தபோது அவர்களோடு சிறிது நேரம் பேசியிருக்கலாம்.
யெகோவாவின் சாட்சிகள் உங்கள் மீதும் உங்கள் நலனின் மீதும் அக்கறையுள்ளவர்கள். உங்களுடைய நண்பர்களாக இருக்க விரும்புகிறார்கள்; தங்களையும் தங்களுடைய நம்பிக்கைகளையும் தங்களுடைய அமைப்பையும் பற்றி நிறைய விஷயங்களை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறார்கள்; மக்களைப் பற்றியும் நாம் வாழ்கிற இந்த உலகத்தைப் பற்றியும் தாங்கள் எப்படி உணருகிறார்கள் என்பதைப் பற்றியும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறார்கள். இதற்காகவே இந்தச் சிற்றேட்டை உங்களுக்காக தயாரித்திருக்கிறார்கள்.
அநேக விதங்களில் யெகோவாவின் சாட்சிகள் மற்ற எல்லாரையும் போலவே பொருளாதார ரீதியில், உடல் ரீதியில், உணர்ச்சி ரீதியில் சகஜமாக வரக்கூடிய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சில சமயங்களில் அவர்களும் தவறுகள் செய்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் பூரணரோ தெய்வீக சக்தி படைத்தவர்களோ தவறிழைக்க முடியாதவர்களோ அல்ல. ஆனால் தங்கள் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறார்கள், தேவையான மாற்றங்களை செய்ய பைபிளை ஊக்கமாக படிக்கிறார்கள். கடவுளுடைய சித்தத்தை செய்வதற்கு தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள், இதை நிறைவேற்ற முழுமூச்சோடு உழைக்கிறார்கள். தங்களுடைய எல்லா நடவடிக்கைகளிலும் கடவுளுடைய வார்த்தையையும் அவருடைய பரிசுத்த ஆவியையும் வழிகாட்டியாக நோக்கியிருக்கிறார்கள்.
தங்களுடைய நம்பிக்கைகளுக்கு வெறும் மனித ஊகிப்புகளோ மத கோட்பாடுகளோ அல்ல, ஆனால் பைபிள் ஆதாரத்தையே மிக முக்கியமானதாக கருதுகிறார்கள். அப்போஸ்தலன் பவுல் ஆவியால் ஏவப்பட்டு சொன்னபோது உணர்ந்த விதமாகவே அவர்களும் உணருகிறார்கள்: “மனிதர் எல்லாரும் பொய்யர்; கடவுளோ உண்மை உள்ளவர்.” (உரோமையர் 3:4, பொது மொழிபெயர்ப்பு a) பைபிள் சத்தியத்தைக் கற்பிக்கும் விஷயத்தில், அப்போஸ்தலன் பவுல் பிரசங்கித்ததைக் கேட்டபோது பெரோயர்கள் பின்பற்றிய முறையை யெகோவாவின் சாட்சிகள் உறுதியாக ஆதரிக்கிறார்கள்: “அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்து” பார்த்தார்கள். (அப்போஸ்தலர் 17:11) தங்களுடைய போதனையாக இருந்தாலும்சரி மற்றவர்களுடைய போதனையாக இருந்தாலும்சரி, எல்லா மத போதனைகளும் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிளோடு ஒத்திருக்கின்றனவா என்பதை பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என யெகோவாவின் சாட்சிகள் நினைக்கிறார்கள். அவர்களோடு உரையாடும்போது இதை செய்யவே உங்களை அழைக்கிறார்கள்—உங்களை உந்துவிக்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகள் பைபிளை கடவுளுடைய வார்த்தை என நம்புவது இதிலிருந்து தெளிவாகிறது. அதன் 66 புத்தகங்களும் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டவை, வரலாற்றுப்பூர்வமாக திருத்தமானவை என கருதுகிறார்கள். பொதுவாக, புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுவதை கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் என்றும், பழைய ஏற்பாட்டை எபிரெய வேதாகமம் என்றும் அழைக்கிறார்கள். கிரேக்க, எபிரெய வேதாகமங்கள் ஆகிய இரண்டையுமே அவர்கள் நம்புகிறார்கள். பைபிளை அவர்கள் சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்கிறார்கள்; ஆனால் சில பைபிள் பகுதிகள் உருவகமானவை அல்லது அடையாள அர்த்தமுள்ளவை என்பதை அவற்றின் சொற்றொடர்கள் அல்லது சூழமைவுகள் தெளிவாக சுட்டிக்காட்டும் போது அவற்றை சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்வதில்லை. பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவிட்டன, மற்றவை நிறைவேறி வருகின்றன, இன்னும் பிற நிறைவேற காத்திருக்கின்றன என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய பெயர்
யெகோவாவின் சாட்சிகள்? ஆம், அப்படித்தான் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்துகின்றனர். இது வர்ணனைப் பெயர், யெகோவாவையும் அவருடைய தேவத்துவத்தையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி அவர்கள் சாட்சி கொடுப்பதை சுட்டிக்காட்டுகிறது. “ஜனாதிபதி,” “அரசன்,” “தளபதி” போன்றவற்றை போல “கடவுள்,” “கர்த்தர்,” “சிருஷ்டிகர்” என்பவை பட்டப்பெயர்களே, இவற்றை பல்வேறு பிரமுகர்களுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் “யெகோவா” என்பது தனிப்பட்ட பெயர், சர்வ வல்லமையுள்ள கடவுளும் இந்த சர்வலோகத்தின் சிருஷ்டிகருமானவரை குறிப்பிடுகிறது. இது சங்கீதம் 83:17-ல் காணப்படுகிறது: ‘யெ காவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணருவார்களாக.’
யெகோவா (அல்லது ரோமன் கத்தோலிக்க ஜெரூசலம் பைபிள் மற்றும் நவீன கல்விமான்கள் சிலர் கூறுகிறபடி, யாவே) என்ற பெயர் மூல எபிரெய வேதாகமத்தில் சுமார் 7,000 தடவை காணப்படுகிறது. பெரும்பாலான பைபிள்கள் இந்தப் பெயருக்குப் பதிலாக, “தேவன்” அல்லது “கர்த்தர்” என்று குறிப்பிடுகின்றன. ஆனால் மூல எபிரெய வேதாகமத்தில் யெகோவா என்ற பெயர் எங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த பைபிள்களை வைத்து ஒருவர் சொல்லிவிடலாம், ஏனென்றால் அந்த இடங்களில் கடவுளுடைய பெயருக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டுள்ள தேவன், கர்த்தர் என்ற வார்த்தைகள் தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் நவீன மொழிபெயர்ப்புகள் பல, யெகோவா அல்லது ஏசாயா 42:8-ல் ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு இவ்வாறு வாசிக்கிறது: “நான் யெகோவா, அது என்னுடைய பெயர்.”
யாவே என்ற பெயரை பயன்படுத்துகின்றன. ஆகவே,யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பெயருக்கு ஆதாரமாக பயன்படுத்தும் வேதப்பூர்வ பதிவு ஏசாயா 43-ம் அதிகாரத்தில் உள்ளது. அங்கே உலக காட்சி ஒரு நீதிமன்ற காட்சியைப் போல சித்தரிக்கப்படுகிறது: புறதேசத்தாரின் கடவுட்கள் தங்களுடைய வாதங்களே நியாயமானவை என உரிமை பாராட்டுகின்றன; ஆனால் அவற்றை நிரூபிக்க சாட்சியங்களைக் கொண்டுவரும்படி அல்லது யெகோவாவின் பக்கம் இருக்கும் சாட்சியங்களைக் கேட்டு உண்மையை ஏற்றுக்கொள்ளும்படி அவை அழைக்கப்படுகின்றன. அங்கே யெகோவா தமது ஜனங்களிடம் இவ்வாறு அறிவிக்கிறார்: “நீங்களே என் சாட்சிகள், நீங்கள் நான் தெரிந்தெடுத்த என் தாசன், இது யெகோவாவின் திருவாக்கு. நானே அவரென்று நீங்கள் அறிந்து நம்பி உணர வேண்டும்; எனக்கு முன் உண்டான தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே யெகோவா; ரட்சிப்பவர் என்னைத் தவிர இல்லை.”—ஏசாயா 43:10, 11, திருத்திய மொழிபெயர்ப்பு.
இயேசு பிறப்பதற்கு முன்னரே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யெகோவா தேவனுக்கு பூமியில் சாட்சிகள் இருந்தனர். எபிரெயர் 11-ம் அதிகாரம் அப்படிப்பட்ட விசுவாசிகள் சிலருடைய பெயர்களை பட்டியலிட்ட பிறகு, எபிரெயர் 12:1 இவ்வாறு சொல்கிறது: “ஆகையால், மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, . . . நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.” “சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்” என பொந்தியு பிலாத்துவிடம் இயேசு கூறினார். “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி” என்று அவர் அழைக்கப்படுகிறார். (யோவான் 18:37; வெளிப்படுத்துதல் 3:14) “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று இயேசு தமது சீஷர்களிடம் சொன்னார்.—அப்போஸ்தலர் 1:8.
ஆகவே, கிறிஸ்து இயேசுவால் ஆளப்படும் யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இன்று 235-க்கும் மேற்பட்ட நாடுகளில் சொல்லிவரும் சுமார் 61,00,000 பேர் தங்களை யெகோவாவின் சாட்சிகள் என்று அழைத்துக்கொள்வதை சரியானதாக கருதுகிறார்கள்.
[அடிக்குறிப்பு]
a எந்த மொழிபெயர்ப்பு என குறிப்பிடப்படாத பைபிள் மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. NW என்பது ஆங்கில பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன்
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
கடவுளுடைய சித்தத்தைச் செய்ய தங்களை அர்ப்பணித்திருக்கிறார்கள்
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
பைபிளை கடவுளுடைய வார்த்தை என நம்புகிறார்கள்
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
ஒரு நீதிமன்ற காட்சியோடு தொடர்புடைய பெயர்
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
235-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 61,00,000 சாட்சிகள்
[பக்கம் 3-ன் படம்]
அவர்கள் உங்கள்மீது அக்கறையுள்ளவர்கள்
[பக்கம் 4-ன் படம்]
பூர்வ எபிரெயுவில் கடவுளுடைய தனிப்பட்ட பெயர்